3. யசோதர காவியம்

**தற்சிறப்புப்பாயிரம்

@0. கடவுள் வாழ்த்து

#1
உலகம் மூன்றும் ஒருங்கு உணர் கேவலத்து
அலகு_இலாத அனந்த குண_கடல்
விலகி வெவ்_வினை வீடு விளைப்பதற்கு
இலகு மா மலர்ச் சேவடி ஏத்துவாம்

#2
நாதன் நம் முனி சுவ்வதன் நல்கிய
தீது தீர் திகழ் தீர்த்தம் செல்கின்ற நாள்
ஏதம் அஃகி யசோதரன் எய்தியது
ஓத உள்ளம் ஒருப்படுகின்றதே.
**அவையடக்கம்

#3
உள் விரிந்த புகைக் கொடி உண்டு என
எள்ளுகின்றனர் இல்லை விளக்கினை
உள்ளுகின்ற பொருள் திறம் ஓர்பவர்
கொள்வர் எம் உரை கூறுதற்பாலதே.
**நூல் நுவல் பொருள்

#4
மருவு வெவ்_வினை வாயில் மறுத்து உடன்
பொரு_இல் புண்ணியம் போகம் புணர்ப்பதும்
வெருவுசெய்யும் வினைப் பயன் இற்று எனத்
தெரிவுறுப்பதும் செப்புதல் உற்றதே.

@1. முதற் சருக்கம்
**நாட்டுச் சிறப்பு

#5
பைம்பொன் நாவற்பொழில் பரதத்திடை
நம்பு நீரணி நாடு உளது ஊடுபோய்
வம்பு வார் பொழில் மா முகில் சூடுவது
இம்பர் ஈடு இலது ஔதயம் என்பதே.
**நகரச் சிறப்பு

#6
திசை உலாம் இசையும் திருவும் நிலாய்
வசை_இலா நகர் வானவர் போகம் அஃது
அசைவு_இலா அளகாபுரி-தான் அலால்
இசைவு_இலாத இராசபுரம் அதே.

#7
இஞ்சி மஞ்சினை எய்தி நிமிர்ந்தது
மஞ்சு உலாம் மதி சூடின மாளிகை
அம் சொலார் அவர் பாடலொடு ஆடலால்
விஞ்சையார் உலகத்தினை வெல்லுமே.
**அரசனியல்பு

#8
பார் இதத்தினைப் பண்டையின் மும் மடி
பூரிதத்து ஒளிர் மாலை வெண் பொன் குடை
வாரிதத்தின் மலர்ந்த கொடை_கரன்
மாரிதத்தன் என்பான் உளன் மன்னவன்.

#9
அரசன் மற்று அவன்-தன்னொடும் அ நகர்
மருவும் மானுயர் வானவர் போகமும்
பொரு_இல் வீடு புணர் திறமும் இவை
தெரிவது ஒன்று இலர் செல்வ மயக்கினால்.
**வேனில் வரவு

#10
நெரிந்த நுண் குழல் நேர் இமையார் உழை
சரிந்த காதல் தடை இலதாகவே
வரிந்த வெம் சிலை மன்னவன் வைகும் நாள்
விரிந்தது இன் இளவேனில் பருவமே.
**வசந்தமன்னனை வரவேற்றல்

#11
கோங்கு பொன் குடை கொண்டு கவித்தன
வாங்கு வாகை வளைத்தன சாமரை
கூம் குயில் குலம் இன்னியம் கொண்டு ஒலி
பாங்கு வண்டொடு பாடின தேன் இனம்.

#12
மலர்ந்த பூம் சிகை வார் கொடி மங்கையர்
தலம்தலம்-தொறும் ஆடினர் தாழ்ந்தனர்
கலந்த காதன்மை காட்டுநர் போலவே
வலந்த வண் தளிர் மா இனமே எலாம்.
**அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்

#13
உயர்ந்த சோலைகளூடு எதிர்கொண்டிட
வயந்த மன்னவன் வந்தனன் என்றலும்
நயந்த மன்னனும்’ நல் நகர் மாந்தரும்
வயந்தம் ஆடுன் வகையினர் ஆயினர்.

#14
கானும் வாவியும் காவும் அடுத்து உடன்
வேனில் ஆடல் விரும்பிய போழ்தினில்
மான யானைய மன்னவன்-தன் உழை
ஏனை மாந்தர் இறைஞ்சுபு’ கூறினார்.
**ஏனைமாந்தர் மன்னனிடம் மாரியின் வழிபாடு வேண்டுமெனல்

#15
என்றும் இப் பருவத்தினோடு ஐப்பசி
சென்று தேவி சிறப்பு-அது செய்தும் அஃது
ஒன்றும் ஓரலம் ஆயினம் ஒன்று_அலா
நன்று_அலாதன நங்களை வந்துறும்.

#16
நோவு செய்திடும் நோய் பல ஆக்கிடும்
ஆவி கொள்ளும் அலாதனவும் செயும்
தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்
காவல் மன்ன கடிது எழுக என்றனர்.
**அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்

#17
என்று கூறலும் ஏதம் இது என்றிலன்
சென்று நல் அறத்தில் தெளிவு இன்மையால்
நன்று இது என்று தன் நல் நகரப் புறத்
தென் திசைக்-கண் சிறப்பொடு சென்றனன்.
**தேவியின் கோயிலை அடைதல்

#18
சண்ட கோபி தகவு_இலி தத்துவம்
கொண்ட கேள்வியும் கூர் அறிவும் இலாத்
தொண்டர் கொண்டு தொழும் துரு_தேவதை
சண்டமாரி-தனது இடம் எய்தினான்.
**அரசன் மாரிதேவதையை வணங்குதல்

#19
பாவ_மூர்த்தி படிவம் இருந்த அத்
தேவி மாடம் அடைந்து செறி கழல்
மா வலோன் வலம்கொண்டு வணங்கினன்
தேவி எம் இடர் சிந்துக என்று அரோ.

#20
மன்னன் ஆணையின் மா மயில் வாரணம்
துன்னு சூகரம் ஆடு எருமைத் தொகை
இன்ன சாதி விலங்கில் இரட்டைகள்
பின்னி வந்து பிறங்கின கண்டனன்.

#21
யான் இ வாளினின் மக்கள் இரட்டையை
ஈனம்_இல் பலியாக இயற்றினால்
ஏனை மானுயர்-தாம் இ விலங்கினில்
ஆன பூசனை ஆற்றுதல் ஆற்று என

#22
வாடல் ஒன்று_இலன் மக்கள் இரட்டையை
ஈடு_இலாத இயல்பினில் இ வழி
ஏட சண்ட கரும தந்தீக என
நாட ஓடினன் நல் நகர்-தன் உளே.
**அந்நகர்ச் சோலையின்கண் முனிவர்சங்கம் வருதல்

#23
ஆயிடைச் சுதத்தன் ஐஞ்ஞூற்றுவர் அரும் தவர்களோடும்
தூய மா தவத்தின் மிக்க உபாசகர் தொகையும் சூழச்
சேயிடைச் சென்று ஓர் தீர்த்த வந்தனைசெய்யச் செல்வோன்
மாயம்_இல் குண_குன்று அன்ன மா தவர்க்கு இறைவன் வந்தான்.
**சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்

#24
வந்து மா நகர்ப்புறத்து ஓர் வள மலர்ப் பொழிலுள் விட்டுச்
சிந்தையால் நெறி-கண் தீமை தீர்த்திடும் நியமம் முற்றி
அந்தில் ஆசனம் கொண்டு அண்ணல் அனசனத் தவம் அமர்ந்தான்
முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும் மாதோ.
**சிராவகர்கூட்டத்திலுள்ள இளைஞரிருவர்களின் வணக்கம்

#25
உளம் கொள மலிந்த கொள்கை உபாசகர் குழுவினுள்ளார்
அளந்து அறிவரிய கேள்வி அபய முன் உருசி தங்கை
இளம்பிறை அனைய நீராள் அபயமாமதி என்பாளும்
துளங்கிய மெய்யர் உள்ளம் துளங்கலர் தொழுது நின்றார்.
**சுதத்தாசாரியர் கருணையால் இளைஞரைச் சரியை செல்லப் பணித்தல்

#26
அ முனி அவர்கள்-தம்மை அருளிய மனத்தன் ஆகி
வம்-மின் நீர் பசியின் வாடி வருந்திய மெய்யர் ஆனீர்
எம்முடன் உண்டி மாற்றாது இன்று நீர் சரியை போகி
நம்மிடை வருக என்ன நல் தவன் தொழுது சென்றார்.
**இளைஞர் சரிகை செல்லுதல்

#27
வள்ளிய மலரும் சாந்தும் மணி புனை கலனும் இன்றாய்
வெள்ளியது உடை ஒன்று ஆகி வென்றவர் உருவம் ஏலார்
கொள்ளியல் அமைந்த கோலக் குல்லக வேடம் கொண்ட
வள்ளலும் மடந்தை-தானும் வள நகர் மருளப் புக்கார்.

#28
வில்லினது எல்லை கண்ணால் நோக்கி மெல் அடிகள் பாவி
நல் அருள் புரிந்து உயிர்க்-கண் நகை முதலாய நாணி
இல்லவர் எதிர்கொண்டு ஈயின் எதிர்கொள் உண்டியரும் ஆகி
நல் அற அமுதம் உண்டார் நடந்தனர் வீதியூடே.
**மன்னவனேவல் பெற்ற சண்டகருமன் இளைஞர்களைக் கண்டு கலங்குதல்

#29
அண்டலர் எனினும் கண்டால் அன்புவைத்து அஞ்சும் நீரார்க்
கண்டனன் கண்டு சண்ட கருமனும் மனம் கலங்காப்
புண்டரீகத்தின் கொம்பும் பொரு_இல் மன்மதனும் போன்று
கொண்டு இளம் பருவம் என்-கொல் குழைந்து இவண் வந்தது என்றான்.
**இளைஞரைப் பலியிடப் பிடித் தேகுதல்

#30
என மனத்து எண்ணி நெஞ்சத்து இரங்கியும் மன்னன் ஏவல்-
தனை நினைந்து அவர்கள்-தம்மைத் தன் உழையவரின் வவ்விச்
சினம் மலி தேவி கோயில் திசைமுகம் அடுத்துச் சென்றான்.
இனையது பட்டது இன்று என்று இளையரும் எண்ணினாரே.

#31
வன்சொல் வாய் மறவர் சூழ மதியம் ஓர் மின்னொடு ஒன்றித்
தன் பரிவேடம்-தன்னுள் தான் நனி வருவதே போல்
அன்பினால் ஐயன் தங்கை அஞ்சுதல் அஞ்சி நெஞ்சில்
தன் கையால் முன்கை பற்றித் தான் அவள்கொண்டு செல்வான்.

#32
நங்கை அஞ்சல் நெஞ்சில் நமக்கு இவண் அழிவு ஒன்று இல்லை
இங்கு நம் உடம்பிற்கு ஏதம் எய்துவது இவரின் எய்தின்
அங்கு அதற்கு அழுங்கல் என்னை அது நமது அன்று என்று அன்றோ
மங்கை யாம் அதனை முன்னே மனத்தினில் விடுத்தது என்றான்.

#33
அஞ்சினம் எனினும் மெய்யே அடைப வந்து அடையுமானால்
அஞ்சுதல் அதனின் என்னை பயன் நமக்கு அதுவும் அன்றி
அஞ்சுதல் துன்பம்-தானே அல்லதும் அதனில் சூழ்ந்த
நஞ்சு அன வினைகள் நம்மை நாள்-தொறும் நலியும் என்றான்.

#34
அல்லதும் அன்னை நின்னோடு யானும் முன் அனேக வாரம்
தொல்_வினை துரப்ப ஓடி விலங்கிடைச் சுழன்ற போழ்தின்
நல் உயிர் நமர்கள்-தாமே நலிந்திட விளிந்தது எல்லாம்
மல்லல் மாதவனின் நாமே மறித்தும் உணர்ந்தனமும் அன்றோ.

#35
கறங்கு என வினையின் ஓடிக் கதி ஒரு நான்கினுள்ளும்
பிறந்த நாம் பெற்றபெற்ற பிறவிகள் பேசல் ஆகா
இறந்தன இறந்து போக எய்துவது எய்திப் பின்னும்
பிறந்திட இறந்தது எல்லாம் இதுவும் அ இயல்பிற்றேயாம்.

#36
பிறந்த நம் பிறவி-தோறும் பெறும் உடம்பு அவைகள் பேணாத்
துறந்து அறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன அல்ல தோகாய்
சிறந்ததை இது என்று எண்ணிச் செம்மையே செய்யத் தாமே
இறந்தன இறந்த_காலத்து எண்_இறந்தனகள் எல்லாம்.
**(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும் உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)
**நரககதி வரலாறு

#37
முழம் ஒரு மூன்றில் தொட்டு மூரி வெம் சிலைகள் ஐஞ்ஞூறு
எழு முறை பெருகி மேன்மேல் எய்திய உருவம் எல்லாம்
அழலினுள் மூழ்கி அன்ன அரு நவை நரகம்-தம்முள்
உழை_விழி நம்மொடு ஒன்றி ஒருவின உணரலாமோ.
**விலங்குகதி வரலாறு

#38
அங்குலி அயங்கம் பாகம் அணு முறை பெருகி மேன்மேல்
பொங்கிய ஈரைஞ்ஞூறு புகை பெறும் முடை உடம்பு
வெம் கனல் வினையின் மேல்_நாள் விலங்கிடைப் புக்கு வீழ்ந்து
நங்களை வந்து கூடி நடந்தன அனந்தம் அன்றோ.
**மனுஷ்யகதி வரலாறு

#39
ஓரின் ஓர் முழங்கை-தன் மேல் ஓரொரு உபதேசம் ஏறி
மூரி வெம் சிலைகள் மூவிராயிரம் முற்ற உற்ற
பாரின் மேல் மனிதர் யாக்கை பண்டு நாம் கொண்டு விட்ட
வாரி வாய் மணலும் ஆற்றா வகையின வல்லவோ-தான்.
**தேவகதி வரலாறு

#40
இரு முழம் ஆதி ஆக எய்திய வகையின் ஓங்கி
வரு சிலை இருபத்தைந்தின் வந்துறும் அங்கம் எல்லாம்
திரு மலி தவத்தின் சென்று தேவர்-தம் உலகில் பெற்றது
ஒருவரால் உரைக்கல் ஆமோ உலந்தன அனந்தம் அன்றோ.
**தேவ நரக யாக்கையின் விருப்பும் வெறுப்பும்

#41
துன்ப காரணம் இது என்றே துடக்கு அறுக எனவும் துஞ்சா
அன்புறா நரகர் யாக்கை அவைகளும் அமரர் கற்பத்து
இன்பக் காரணம் இது என்றே எம்முடன் இயல்க என்றே
அன்புசெய்தனகள்-தாமும் அழியும் நாள் அழியும் அன்றே.

#42
வந்து உடன் வணங்கும் வானோர் மணி புனை மகுட கோடி
தம் திரு_அடிகள் ஏந்தும் தமனிய பீடம் ஆக
இந்திர விபவம் பெற்ற இமையவர் இறைவரேனும்
தம் திரு_உருவம் பொன்றத் தளர்ந்தனர் அனந்தம் அன்றோ.

#43
மக்களின் பிறவியுள்ளும் மன்னர்-தம் மன்னர் ஆகித்
திக்கு எலாம் அடிப்படுத்தும் திகிரி அம் செல்வரேனும்
அக் குலத்து உடம்பு தோன்றி அன்று தொட்டு இன்று காறும்
ஒக்க நின்றார்கள் வையத்து ஒருவரும் இல்லை அன்றே.

#44
ஆடை முன் உடீஇயது இட்டு ஓர் அம் துகில் அசைத்தல் ஒன்றோ
மாடம் முன்னது விடுத்து ஓர் வள மனை புதிதின் வாழ்தல்
நாடின் எவ்வகையும் அஃதே நமது இறப்பொடு பிறப்பும்
பாடுவது இனி என் நங்கை பரிவு ஒழிந்திடுக என்றான்.
**அபயமதி தன் உள்ளக்கிடக்கையே வெளியிடல்

#45
அண்ணல் நீ அருளிற்று எல்லாம் அருவருப்பு உடைய மெய்யில்
நண்ணிய நமது என் உள்ளத்தவர்களுக்கு உறுதி நாடி
விண்ணின் மேல் இன்பம் அல்லால் விழை பயன் வெறுத்து நின்ற
கண்_அனாய் நங்கட்கு இன்ன கட்டுரை என்னை என்றாள்.

#46
அரு_வினை விளையுள் ஆய அரும் துயர்ப் பிறவி-தோறும்
வெருவிய மனத்து நம்மை வீடு_இல விளைந்தவாறும்
திரு_உடை அடிகள் தந்த திரு_அறப் பயனும் தேறி
வெருவி நாம் விடுத்த வாழ்க்கை விடுவதற்கு அஞ்சல் உண்டோ.

#47
பெண் உயிர் எளியது ஆமே பெரும் திறல் அறிவும் பேராத்
திண்மையும் உடைய வல்ல சிந்தையின் என்பது எண்ணி
அண்ணல் நீ அருளிச் செய்தாய் அன்றி நல் அறத்தில் காட்சி
கண்ணிய மனத்தர் இம்மைக் காதலும் உடையரோ-தான்.

#48
இன்று இவண் ஐய என்-கண் அருளிய பொருள் இது எல்லாம்
நன்று என நயந்து கொண்டேன் நடுக்கமும் அடுத்தது இல்லை
என்று எனக்கு இறைவன் நீயே என இரு கையும் கூப்பி
இன்று யான் யாது செய்வது அருளுக தெருள என்றாள்.
**இறுதியில் நினைக்கவேண்டிய திதுவெனல்

#49
ஒன்றிய உடம்பின் வேறாம் உயிரினது உருவம் உள்ளி
நன்று என நயந்து நங்கள் நல் அறப் பெருமை நாடி
வென்றவர் சரணம் மூழ்கி விடுதும் நம் உடலம் என்றான்
நன்று இது செய்கை என்றே நங்கையும் நயந்து கொண்டாள்
**இருவரும் உயிரின் இலக்கணம் உன்னுதல்

#50
அறிவொடு ஆலோகம் உள்ளிட்டு அனந்தம் ஆம் இயல்பிற்று ஆகி
அறிதலுக்கு அரியது ஆகி அருவம் ஆய் அமலம் ஆகிக்
குறுகிய தடற்றுள் வாள் போல் கொண்டு இயல் உடம்பின் வேறாய்
இறுகிய வினையும் அல்லது எமது இயல்பு என்று நின்றார்.
**இருவரும் மும்மணிகளை எண்ணி மகிழ்தல்

#51
உறுதியைப் பெரிதும் ஆக்கி உலகினுக்கு இறைமை நல்கிப்
பிறவி செற்று அரிய வீட்டின் பெருமையைத் தருதலானும்
அறிவினில் தெளிந்த மாட்சி அரதனத்திரயம் என்னும்
பெறுதலுக்கு அரிய செல்வம் பெற்றனம் பெரிதும் என்றார்.
**சித்தர் வணக்கம்

#52
ஈங்கு நம் இடர்கள் தீர்க்கும் இயல்பினார் மேல் இ
ஓங்கிய உலகத்து உம்பர் ஒளி சிகாமணியின் நின்றார்
வீங்கிய கருமக் கேட்டின் விரிந்த எண்_குணத்தர் ஆகித்
தீங்கு எலாம் அகற்றி நின்ற சித்தரே செல்லல் தீர்ப்பார்.
**அருகர் வணக்கம்

#53
பெரு மலை அனைய காதிப் பெரும் பகை பெயர்த்துப் பெற்ற
திரு மலி கடையில் நான்மைத் திருவொடு திளைப்பரேனும்
உரிமையின் உயிர்கட்கு எல்லாம் ஒருதனி விளக்கம் ஆகித்
திரு_மொழி அருளும் தீர்த்தகரர்களே துயர்கள் தீர்ப்பார்.
**ஆசாரியர் வணக்கம்

#54
ஐ வகை ஒழுக்கம் என்னும் அரும் கலம் ஒருங்கு அணிந்தார்
மெய் வகை விளக்கம் சொல்லி நல் அறம் மிக அளிப்பார்
பவ்வியர்-தம்மைத் தம் போல் பஞ்ச நல் ஒழுக்கம் பாரித்து
அவ்வியம் அகற்றும் தொல்_ஆசிரியர் எம் அல்லல் தீர்ப்பார்.
**உபாத்தியாயர் வணக்கம்

#55
அங்க நூல் ஆதி யாவும் அரில்_தபத் தெரிந்து தீமைப்
பங்கு அவிழ் பங்கம் ஆடிப் பரம நல் நெறி பயின்றிட்டு
அங்க பூ ஆதி மெய்ந்நூல் அமிழ்து அகப்படுத்து அடைந்த
நங்களுக்கு அளிக்கும் நீரார் நம் வினை கழுவும் நீரார்.
**சர்வசாது வணக்கம்

#56
பேதுறு பிறவி போக்கும் பெரும் திரு உருவுக்கு ஏற்ற
கோது_அறு குணங்கள் பெய்த கொள்கலம் அனையர் ஆகிச்
சேதியின் நெறியின் வேறு சிறந்தது சிந்தைசெய்யாச்
சாதுவர் அன்றி யாரே சரண் நமக்கு உலகின் ஆவார்.

#57
இனையன நினைவை ஓரும் இளைஞரை விரைவில் கொண்டு
தனை அரசு அருளும் பெற்றிச் சண்டன் அச் சண்டமாரி
முனை முக வாயில் பீடம் முன்னர் உய்த்திட்டு நிற்பக்
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே.
**மாரிதத்தன் இருவரையும் பலிபீடத்துய்க்க எனப் பணித்தல்

#58
முனை_திறம் முருக்கும் ஆற்றல் மூரித் தேன் தாரினாய் நின்
வினை_திறம் நன்று யாமே விழை நர_பலி ஈதற்கு இன்று
இனையவர்-தம்மைத் தேவி இரும் பலியிடத்து உய்க்க என்றான்
கனை கழல் அரசன் ஐயோ கையில் வாள் உருவினானே.
**இளைஞர் புன்முறுவல் செய்தல்

#59
கொலைக்களம் குறுகி நின்றும் குலுங்கலர் குணங்கள்-தம்மால்
இலக்கணம் அமைந்த மெய்யர் இருவரும் இயைந்து நிற்ப
நிலத்து இறை மன்னன் வாழ்க நெடிது என உரை-மின் என்றார்.
மலக்கு_இலா மனத்தர்-தம் வாய் வறியதோர் முறுவல் செய்தார்.
**இளைஞர் மன்னனை வாழ்த்துதல்

#60
மறவியின் மயங்கி வையத்து உயிர்களை வருத்தம்செய்யாது
அறவியல் மனத்தை ஆகி ஆர்_உயிர்க்கு அருள் பரப்பிச்
சிறையன பிறவி போக்கும் திரு_அறம் மருவிச் சென்று
நிறை புகழ் உலகம் காத்து நீடு வாழ்க என்று நின்றார்.
**மன்னவன் மனமாற்ற மடைதல்

#61
நின்றவர்-தம்மை நோக்கி நிலைதளர்ந்திட்டு மன்னன்
மின் திகழ் மேனியார்-கொல் விஞ்சையர் விண்ணுளார்-கொல்
அன்றி இ உருவம் மண்_மேலவர்களுக்கு அரியது என்றால்
நின்றவர் நிலைமை-தானும் நினைவினுக்கு அரியது என்றான்.
**அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர்
** விடையிறுத்தல்

#62
இடுக்கண் வந்து உறவும் எண்ணாது எரி சுடர் விளக்கின் என்-கொல்
நடுக்கம் ஒன்று இன்றி நம்-பால் நகுபொருள் கூறுக என்ன
அடுக்குவது அடுக்குமானால் அஞ்சுதல் பயன் இன்று என்றே
நடுக்க-அது இன்றி நின்றாம் நல் அறத் தெளிவு சென்றாம்.

#63
முன் உயிர் உருவிற்கு ஏதம் முயன்று செய் பாவம்-தன்னால்
இன்ன பல் பிறவி-தோறும் இடும்பைகள் தொடர்ந்து வந்தோம்
மன் உயிர்க் கொலையினால் இ மன்னன் வாழ்க என்னும் மாற்றம்
என்னதாய் விளையும் என்றே நக்கனம் எம்முள் என்றான்.
**அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்

#64
கண்ணினுக்கு இனிய மேனி காளை-தன் கமல_வாயின்
பண்ணினுக்கு இனிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே
அண்ணலுக்கு அழகு இது ஆண்மை அழகினுக்கு அமைந்ததேனும்
பெண்ணினுக்கு அரசி ஆண்மை பேசுதற்கு அரியது என்றார்.
**மன்னனும் வியத்தல்

#65
மன்னனும் அதனைக் கேட்டே மனம் மகிழ்ந்து இனியன் ஆகி
என்னை நும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனும் என்னை வளர் இளம் பருவம்-தன்னில்
என்னை நீர் இனையர் ஆகி வந்ததும் இயம்புக என்றான்.
**அபயருசியின் மறுமொழி

#66
அருள் உடை மனத்தர் ஆகி அறம்_புரிந்தவர்கட்கு அல்லால்
மருள் உடை மறவருக்கு எம் வாய்மொழி மனத்தில் சென்று
பொருள் இயல்பு ஆகி நில்லா புரவல கருதிற்றுண்டேல்
அருள் இயல் செய்து செல்க ஆகுவது ஆக என்றான்.
**வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்

#67
அன்னணம் அண்ணல் கூற அருள் உடை மனத்தன் ஆகி
மன்னவன்-தன் கைவாளும் மனத்திடை மறனும் மாற்றி
என் இனி இறைவன் நீயே எனக்கு என இறைஞ்சி நின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான்.
**அபயருசியின் அறவுரை

#68
மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக்கு ஏதம் நீங்கப்
பொன்_வரை முன்னர் நின்று புயல் பொழிந்திடுவதே போல்
அன்ன மெல்_நடையினாளும் அருகு அணைந்து உருகும் வண்ணம்
மன்னவ_குமரன் மன்னற்கு அற_மழை பொழியலுற்றான்.
**அபயருசி நிரைசெய்து கூறுவல் என்றல்

#69
அரைச நின் அகத்து மாட்சியது பெரிது அழகு இது ஆயிற்று
உரைசெய்தால் உறுதியாயது உணர்ந்து கொண்டு உய்தி போலும்
விரை செய் தார் வரை செய் மார்ப வினவிய பொருள் இது எல்லாம்
நிரைசெய்தே புகல்வன் யான் நீ நினைவொடு கேள் இது என்றான்.
**இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்

#70
எவ்வளவு இதனைக் கேட்பார் இரு_வினை கழுவும் நீரார்
அவ்வளவு அவருக்கு ஊற்றுச் செறித்து உடன் உதிர்ப்பை ஆக்கும்
மெய் வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை எய்தும்
செவ்வியராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.

#71
மலம் மலி குரம்பையின்-கண் மனத்து எழு விகற்பை மாற்றும்
புலம் மலி போகத்தின்-கண் ஆசையைப் பொன்றுவிக்கும்
கொலை மலி கொடுமை-தன்னைக் குறைத்திடும் மனத்தில் கோலச்
சிலை மலி நுதலினார்-தம் காதலில் தீமை செப்பும்.

#72
பிறந்தவர் முயற்சியாலே பெறு பயன் அடைவர் அல்லால்
இறந்தவர் பிறந்தது இல்லை இரு_வினை-தானும் இல் என்று
அறைந்தவர் அறிவிலாமை அது விடுத்து அற நெறி-கண்
சிறந்தன முயலப்பண்ணும் செப்பும் இப் பொருண்மை என்றான்
**இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்

#73
அறப் பொருள் விளைக்கும் காட்சி அரும் தவர் அருளிற்று அன்றிப்
பிறப்பு உணர்ந்ததனின் யாமே பெயர்த்து உணர்ந்திடவும்பட்டது
இறப்புவம் அதன்-கண் தேற்றம் இனிது வைத்திடும்-மின் என்றான்
உறப் பணிந்து எவரும் உள்ளத்து உவந்தனர் கேட்கலுற்றார்.

@2 இரண்டாவது சருக்கம்
**உஞ்சயினியின் சிறப்பு

#74
வள வயல் வாரியின் மலிந்த பல் பதி
அளவறு சன பதம் அவந்தியாம் அதின்
விளை பயன் அமரரும் விரும்பும் நீர்மையது
உளது ஒரு நகர் அது உஞ்சயினி என்பவே.
**அசோகன் சிறப்பு

#75
கந்து அடு களி மத யானை மன்னவன்
இந்திரன் எனும் திறல் அசோகன் என்று உளன்
சந்திரமதி எனும் மடந்தை-தன்னுடன்
அந்தம்_இல் உவகையின் அமர்ந்து வைகும் நாள்.
**இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு

#76
இந்து ஓர் இளம்பிறை பயந்தது என்னவே
சந்திரமதி ஒரு தனயன் தந்தனள்
எம் துயர் களைபவன் எசோதரன் என
நந்திய புகழ் அவன் நாமம் ஓதினான்.
**யசோதரன் மணம்

#77
இளம்களிறு உழுவையின் ஏதம் இன்றியே
வளம் கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்
விளங்கு_இழை அமிழ்த முன் மதியை வேள்வியால்
உளம்கொளப் புணர்ந்து உடன் உவகை எய்தினான்.
**யசோமதியின் பிறப்பு

#78
இளையவள் எழில் நலம் ஏந்து கொங்கையின்
விளை பயன் எசோதரன் விழைந்து செல்லும் நாள்
கிளையவர் உவகையின் கெழும ஈன்றனள்
வளையவள் எசோமதி மைந்தன்-தன்னையே.
**இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்

#79
மற்று ஒர் நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி
பற்றுவான் அடி தொழ படிவம் நோக்குவான்
ஒற்றை வார் குழல் மயிர் உச்சி வெண்மையை
உற்று உறா வகை அதை அளைந்து கண்டனன்.
**இளமை நிலையாமை

#80
வண் தளிர் புரை திரு மேனி மாதரார்
கண்டு அகலுற வரு கழிய மூப்பு இது
உண்டு எனில் உளைந்து இகல் உருவ வில்லி-தன்
வண்டு உள கணை பயன் மனிதர்க்கு என்றனன்.
**துறவின் இன்றியமையாமை

#81
இளமையின் இயல்பு இது ஆய என்னின் இ
வளமை_இல் இளமையை மனத்து வைப்பது என்
கிளைமையும் அனையதே கெழுமும் நம் உளம் அ
தளைமையை விடுவதே தகுவதாம் இனி.

#82
முந்து செய் நல்_வினை முளைப்ப இத் தலை
சிந்தைசெய் பொருளொடு செல்வம் எய்தினாம்
முந்தையின் மும்மடி முயன்று புண்ணியம்
இந்திர உலகமும் எய்தற்பாலாதே.
**யசோதரனுக்கு முடி சூட்டுதல்

#83
இனையன நினைவுறீஇ யசோதரன் எனும்
தனையனை நில_மகள் தலைவன் ஆக எனக்
கனை மணி வனை முடி கவித்துக் காவலன்
புனை வளை மதிமதி புலம்பப் போயினான்.
**யசோதரன் அரசியல்
**அசோகன் துறவு

#84
குரை கழல் அசோகன் மெய்க் குணதரன் பணிந்து
அரைசர்கள் ஐம்பதிற்றிருவர்-தம்முடன்
உரை செய அரும் தவத்து உருவு கொண்டு போய்
வரை உடை வனம்-அது மருவினான் அரோ.

#85
எரி மணி இமைக்கும் பூணான் இசோதரன் இரு நிலத்துக்கு
ஒரு மணி திலதம் போலும் உஞ்சயினிக்கு நாதன்
அரு மணி முடி கொள் சென்னி அரசு அடிப்படுத்து உயர்ந்த
குரு மணி குடையின் நீழல் குவலயம் காவல்கொண்டான்.
**மன்னனின் மனமாட்சி

#86
திருத் தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு
மருத்து எறி கடலின் பொங்கி மறுகிய மனத்தன் ஆகி
உருத்து எழு சினத்தின் சென்ற உள்ளம் மெய் மொழியோடு ஒன்றி
அருத்திசெய்து அருத்த காமத்து அறத் திறம் அறத் துறந்தான்.

#87
அஞ்சுதல்_இலாத தெவ்வர் அவிய மேல் அடர்த்துச் சென்று
வஞ்சனை பலவும் நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளும் நாடும் புணர் திறம் புணர்ந்து நெஞ்சில்
துஞ்சுதல்_இலாத கண்ணன் துணிவன துணிந்து நின்றான்.

#88
தோடு அலர் கோதை மாதர் துயரியில் தொடுத்து எடுத்தப்
பாடலொடு இயைந்த பண்ணின் இசைச் சுவைப் பருகிப் பல் கால்
ஊடல் அங்கு இனிய மின்னின் ஒல்கிய மகளிர் ஆடும்
நாடகம் நயந்து கண்டும் நாள் சில செல்லச் சென்றான்.
**யசோதரன் பள்ளியறை சேர்தல்

#89
மற்று ஓர் நாள் மன்னர்-தம்மை மனை புக விடுத்து மாலைக்
கொற்ற வேலவன் தன் கோயில் குளிர் மணிக் கூடம் ஒன்றில்
சுற்று வார் திரையின் தூமம் கமழ் துயில் சேக்கை துன்னி
கற்றை வார் கவரி வீசக் களி சிறந்து இனிது இருந்தான்.
**அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்

#90
சிலம்பொடு சிலம்பித் தேனும் திரு மணி வண்டும் பாடக்
கலம் பல அணிந்த அல்குல் கலை ஒலி கலவி ஆர்ப்ப
நலம் கவின்று இனிய காமர் நறு மலர்த் தொடையலே போல்
அலங்கல் அம் குழல் பின் தாழ அமிழ்த முன் மதி அணைந்தாள்.
**இருவரும் இன்பம் நுகர்தல்

#91
ஆங்கு அவள் அணைந்த போழ்தின் ஐங்கணைக் குரிசில் தந்த
பூம் கணை மாரி வெள்ளம் பொருது வந்து அலைப்பப் புல்லி
நீங்கலர் ஒருவர் உள் புக்கு இருவரும் ஒருவர் ஆகித்
தேம் கமழ் அமளி தேம்பச் செறிந்தனர் திளைத்து விள்ளார்.

#92
மடம் கனிந்து இனிய நல்லாள் வன முலைப் போகம் எல்லாம்
அடங்கலன் அயர்ந்து தேன் வாய் அமிர்தமும் பருகி அம் பொன்
படம் கடந்து அகன்ற அல்குல் பாவையே புணை-அது ஆக
இடம் கழித்து ஒழிவு_இல் இன்ப_கடலினுள் மூழ்கினானே.
**இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்

#93
இன் அரிச் சிலம்பும் தேனும் எழில் வளை நிரையும் ஆர்ப்ப
பொன் அவிர் தாரோடு ஆரம் புணர் முலை பொருது பொங்க
மன்னனும் மடந்தை-தானும் மதன கோபத்தின் மாறாய்த்
தொல் நலம் தொலைய உண்டார் துயில் கொண்ட விழிகள் அன்றே
**பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்

#94
ஆயிடை அத்தி கூடத்து அயல் எழுந்து அமிர்தம் ஊறச்
சேயிடைச் சென்று ஓர் கீதம் செவி புக விடுத்தலோடும
வேயிடை_தோளி மெல்ல விழித்தனள் வியந்து நோக்காத்
தீயிடை மெழுகின் நைந்த சிந்தையின் உருகினாளே.
**அரசி மதிமயங்குதல்

#95
பண்ணினுக்கு ஒழுகும் நெஞ்சின் பாவை இப் பண் கொள் செவ்வாய்
அண்ணலுக்கு அமிர்தம் ஆய அரிவையர்க்கு உரிய போகம்
விண்ணினுக்கு உளது என்று எண்ணி வெய்து உயிர்த்து உய்தல் செல்லாள்
மண்ணினுக்கு அரசன் தேவி மதி மயக்குற்றிருந்தாள்.
**பெண்மையின் புன்மை

#96
மின்னினும் நிலையின்று உள்ளம் விழைவுறின் விழைந்த யாவும்
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியும் ஒழிய நிற்கும்
பின்னுறு பழியிற்கு அஞ்சா பெண் உயிர் பெருமை பேணா
என்னும் இ மொழிகட்கு அந்தோ இலக்கியம் ஆயினாளே.
**குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்

#97
துன்னிய இரவு நீங்கத் துணை முலை தமியள் ஆகி
இன் இசை அவனை நெஞ்சத்து இருத்தினள் இருந்த எல்லை
துன்னினள் தோழி துன்னித் துணைவர் இல் தமியரே போன்று
என் இது நினைந்தது உள்ளத்து இறைவி நீ அருளுக என்றாள்.
**அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்

#98
தவழும் மா மதி செய் தண் தார் மன்னவன் தகைமை என்னும்
கவளம் ஆர் அகத்து என் உள்ளக் கரும் களி மத நல் யானை
பவள வாய் மணிக் கை கொண்ட பண் இயல் தோட்டி பற்றித்
துவளுமாறு ஒருவன் எல்லி தொடங்கினன் நோவ என்றாள்.
**தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்

#99
அங்கு அவள் அகத்துச் செய்கை அறிந்தனள்_அல்லளே போல்
கொங்கு அவிழ் குழலி மற்று அக் குணவதி பிறிது கூறும்
நங்கை நின் பெருமை நன்றே நனவு எனக் கனவில் கண்ட
பங்கம்-அது உள்ளி உள்ளம் பரிவுகொண்டனை என் என்றாள்.
**அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்

#100
என் மனத்து இவரும் என் நோய் இவண் அறிந்திலை-கொல் என்றே
தன் மனத்தினை அவட்குத் தான் உரைத்திடுதலோடும்
நின் மனத்து இலாத சொல்லை நீ புனைந்து அருளிற்று என்-கொல்
சில் மலர்க் குழலி என்றே செவி புதைத்து இனிது சொன்னாள்.
**அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்

#101
மாளவ பஞ்சமப் பண் மகிழ்ந்து அவன் அமுத வாயில்
கேளலன் ஆயின் நாமும் கேளலம் ஆதும் ஆவி
நாள் அவம் ஆகி இன்னே நடந்திடும் நடு ஒன்று இல்லை
வாள் அளவு உண்கண் மாதே மறுத்து உரை மொழியின் என்றாள்.
**அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்

#102
என் உயிர்க்கு அரணம் நின்னோடு இன் இசை புணர்த்த காளை-
தன்னின் மற்று ஒருவர் இல்லை தக்கது துணிக என்ன
என் உயிர்க்கு ஏதம் எய்தின் இது பழி பெருகும் என்றே
துன்னும் வாய் அவளோடு எண்ணித் தோழியும் உன்னினாளே.
**தோழி, பாகனைக் கண்டு மீளல்

#103
மழுகு இருள் இரவின் வைகி மாளவ பஞ்சமத் தேன்
ஒழுகிய மிடற்று ஓர் காளை_உள்ளவன் யாவன் என்றே
கழுது உரு அவனை நாடிக் கண்டனள் கண்டு காமத்து
ஒழுகிய உள்ளம் தையற்கு ஒழியும் என்று உவந்து மீண்டாள்.
**(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்

#104
மன்னன் மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத்து
அன்னவன் அத்தி பாகன் அட்டமாபங்கன் என்பான்-
தன்னை மெய் தெரியக் கண்டே தளர்ந்து கண் புதைத்து மீண்டேன்
என்னை நீ முனிதி என்றிட்டு இசைக்கலன் அவற்கு இது என்றாள்.

#105
நரம்புகள் விசித்த மெய்யன் நடையினில் கழுதை நைந்தே
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீர்_இல்
குரங்கினை அனைய கூனன் குழிந்து புக்கு அழிந்த கண்ணன்
நெருங்கலும் நிரலும் இன்றி நிமிர்ந்து உள சில பல் என்றாள்.

#106
பூதி கந்தத்தின் மெய்யில் புண்களும் கண்கள் கொள்ளா
சாதியும் தக்கது அன்றால் அவன்-வயின் தளரும் உள்ளம்
நீ தவிர்ந்திட்டு நெஞ்சின் நிறையினைச் சிறைசெய்க என்றாள்
கோது அவிழ்ந்திட்ட உள்ளக் குணவதி கொம்பு_அனாளே.
**அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்

#107
என்றலும் இவற்றினால் என் இறை_வளை அவன்-கண் ஆர்வம்
சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலும் தேசும்
ஒன்றிய அழகும் கல்வி ஒளி அமை குலத்தோடு எல்லாம்
நின்று செய்பயனும் நல்லார் நெஞ்சமும் பெறுதல் அன்றோ.

#108
காரியம் முடிந்த பின்னும் காரண முடிவு காணல்
காரியம் அன்று இது என்றே கருதிடு கடவுள் காமன்
ஆர் உழை அருளைச் செய்யும் அவன் நமக்கு அனையன் ஆக
நேர்_இழை நினைந்து போகி நீடலை முடி இது என்றாள்.
**தோழியின் அச்சம்

#109
தேவி நீ கமலை ஆவாய் திரு உளத்து அருளப்பட்டான்
ஆவி செல்கின்ற வெந்நோய் அரு நவை ஞமலி ஆகும்
பூவின் வார் கணையன் என்னே புணர்த்தவாறு இதனை என்னா
நாவினால் உளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள்.
**இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்

#110
ஆடவர் அன்றி மேலார் அருவருத்து அணங்கு_அனாரும்
கூடலர் துறந்து நோன்மைக் குணம் புரிந்து உயர்தற்காகப்
பீடு உடை அயனார் தந்த பெரு_மகள் இவள் என்று உள்ளே
தோடு அலர் குழலி தோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்றாள்.
**குணவதி அட்டபங்கன்பால் தேவியின் விழைவைத் தெரிவித்தல்

#111
முடைப்படு நாற்றம் மேனி முழுது அழுக்கு ஆடை போர்த்துக்
கடைப்படு துகளும் மண்ணும் கஞலிய கூடத்து ஆங்கு ஓர்
புடைக் கிடந்து உறங்குவானைப் புழுங்கிய மனத்தோடு அண்மி
விடைப்பு_அரும் தானை வேந்தன் தேவியின் விழைவு சொன்னாள்.
**அட்டபங்கன் உடன்படாது வெகுளுதல்

#112
கேட்டலும் அஞ்சும் நெஞ்சன் கேடு எனக்கு எய்திற்று என்றே
வாட்டமும் நடுக்கும் உற்றே மாண்பு_இல மொழிந்தாய் மன்னன்
வீட்டிடும் செல்க என்று ஏவ வேய் புரை தோளி தோழி
காட்டுவ காட்டி அன்னான் கருத்தையும் கலைத்திட்டாளே.
**அட்டபங்கன் மனங்கலைந்து மகிழ்ந்துரைத்தல்

#113
பண் பெற்ற மொழியாய் யானும் பண் பெற்ற பயனும் பெற்றேன்
புண் பெற்ற மெய்யன் பொல்லாப் புழுதியில் துளையும் கையன்
மண் பெற்ற இறைவன் தேவி மனம் பெற்று மகிழ்வேன் என்னின்
எண் பெற்ற தவம் யார் பெற்றார் யான் பெற்ற பேறு இது என்றான்.
**குணவதி போந்து அரசியைக் காண்டல்

#114
இவ்வகை மொழிவோன்-தன்னை இறையவன் தேவி மேவும்
செவ்வியும் குறியும் செப்பிச் சென்றவள் எய்தலோடும்
கவ்விய காமத் தீயால் கயங்கிய மாலை_ஒப்பாள்
நவ்வி நேர் விழியாய் நன்றோ நவில்க நின் கருமம் என்றாள்.
**குணவதி நிகழ்ந்தது கூறக்கேட்டு மகிழ்தல்

#115
பட்டது நலம் காண் என்பாள் பாகனைக் கண்டவாறும
அட்ட மா பங்கன் சீறி அழன்றிட்டவாறும் தேவி
இட்டத்திற்கு அவனை ஆங்கே இயைவித்தவாறும் கூடற்கு
ஒட்டிய குறியும் சொன்னாள் ஒள்_இழை உவப்புற்றாளே.
**அமிர்தமதி அரசன்பால் முனிவு கொண்டொழுகுதல்

#116
தனி வயின் இகுளை யானே தரப்படு சாரனோடு
கனி புரை கிளவி காமம் கலந்தனள் கனிந்து செல் நாள்
முனிவினை மன்னன்-தன் மேல் முறுகினள் ஒழுகும் முன் போல்
இனியவள்_அல்லள் என்-கொல் என மனத்து எண்ணினானே.
**மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்

#117
அரசவை விடுத்து மெய்யால் அறு_சினன் ஒப்ப மன்னன்
உரையலன் அமளி-தன் மேல் உறங்குதல் புரிந்த போழ்தின்
விரை கமழ் குழலி மேவி மெய்த் துயில் என்று காம_
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடம் துன்னினாளே.
**மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்

#118
துயிலினை ஒருவி மன்னன் சுடர்க் கதிர் வாள் கை ஏந்தி
மயிலினை வழிச்செல்கின்ற வாள் அரி ஏறு போலக்
கயல் விழி அவள்-தன் பின்னே கரந்தனன் ஒதுங்கி ஆங்கண்
செயலினை அறிதும் என்று செறிந்தனன் மறைந்து நின்றான்.
**அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்

#119
கடையன் அக் கமல_பாவை கரும் குழல் பற்றிக் கையால்
இடை நிலஞ் செல்ல ஈர்த்திட்டு இரு கையினாலும் ஓச்சிப்
புடை பல புடைத்துத் தாழ்த்த பொருள் இது புகல்க என்றே.
துடி இடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே.
**அரசி மூர்ச்சை யெய்துதல்

#120
இருளினால் அடர்க்கப்பட்ட எழில் மதிக் கடவுள் போல
வெருளியால் மிதிப்புண்டு ஐயோ விம்மிய மிடற்றள் ஆகித்
தெருள்கலாள் உரையும் ஆடாள் சிறிது போது அசையக் கண்டே
மருளி-தான் மயங்கி மாதர் மலர்_அடி சென்னிவைத்தான்.
**அரசி மூர்ச்சை தெளிந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்

#121
தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி
வெய்ய நீ முனிவு செல்லல் மேதினிக்கு இறைவன்-தன்னோடு
ஐய ஆசனத்தின் உம்பர் அரசவை இருந்து கண்டாய்
வெய்ய பாவங்கள் செய்தேன் விளம்பலன் விளைந்தது என்றாள்.
**அரசியின் உறுதிமொழி

#122
பொற்பு அகம் கழுமி யாவும் புரந்து இனிது அரந்தை தீர்க்கும்
கற்பகம் கரந்து கண்டார் கையகன்றிடுதல் உண்டோ
எற்பு அகம் கொண்ட காதல் எனக்கு இனி நின்னின் வேறு ஓர்
சொல் பகர்ந்து அருளு காளை துணைவர் ஆபவரும் உண்டோ.
**மறைந்து நின்ற மன்னனின் செயல்

#123
என்றலும் ஏனை மன்னன் எரி எழ விழித்துச் சீறிக்
கொன்று இவர்-தம்மை வாள் வாய்க் கூற்று உண விடுவல் என்றே
ஒன்றினன் உணர்ந்த அது உள்ளத்து உணர்ந்தது கரத்து வாளும்
சென்று இடை விலக்கி நின்று ஓர் தெளிந்த உணர்வு எழுந்தது அன்றே.

#124
மாதரார் எனையரேனும் வதையினுக்கு உரியர்_அல்லர்
பேதை-தான் இவனும் பெண்ணின் அனையனே பிறிதும் ஒன்று உண்டு
ஏதிலார் மன்னர் சென்னி இடுதலுக்கு உரிய வாளில்
தீது செய் சிறு புன் சாதி சிதைத்தலும் திறம் அன்று என்றான்.

#125
இனையன பலவும் சிந்தித்து இழிப்பொடு பழித்து நெஞ்சில்
புனை வளையவர்கள் போகம் புறக்கணித்திட்டு மீண்டே
கன வரை அனைய மார்பன் கடி கமழ் அமளி ஏறித்
தனி முனி களிறு போலத் தான் நினைவு எய்துகின்றான்.
**மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்

#126
எண்ணம்-அது அலாமை பண்ணும் இற்பிறப்பு இடிய நூறும்
மண்ணிய புகழை மாய்க்கும் வரும் பழி வளர்க்கும் மானத்
திண்மையை உடைக்கும் ஆண்மை திருவொடு சிதைக்கும் சிந்தை
கண்ணொடு கலக்கும் மற்று இக் கடைப்படு காமம் என்றான்.

#127
உருவினொடு அழகு-தானும் ஒளி அமை குலனும் பேசின்
திரு_மகள் அனைய மாதர் இவளையும் சிதையச் சீறிக்
கரு மலி கிருமி அன்ன கடைமகற்கு அடிமைசெய்த
துரு மதி மதனன் செய்கை துறப்பதே சிறப்பது என்றான்.
**மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்

#128
மண்ணியல் மடந்தை-தானும் மருவினர்க்கு உரியள்_அல்லள்
புண்ணியம் உடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும்
பெண் இயல்-அது அது அன்றோ பெயர்க மற்று இவர்கள் யாமும்
கண்ணிய இவர்கள்-தம்மைக் கடப்பதே கருமம் என்றான்.
**மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்

#129
மற்றை நாள் மன்னன் முன் போல் மறை புறப்படாமை இன்பச்
சுற்றம் ஆயவர்கள் சூழத் துணிவு_இலன் இருந்த எல்லை
மற்று மா மன்னன் தேவி வரும் முறை மரபின் வந்தே
கற்றை வார் குழலி மெல்லக் காவலன் பால் இருந்தாள்.

#130
நகை_விளையாடல் மேவி நர_பதி விரகில் நின்றே
மிகை விளைகின்ற நீல மலரினின் வீசலோடும்
புகை கமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த்தாள்
மிகை கமழ் நீரில் தேற்ற மெல்_இயல் தேறினாளே.

#131
புரைபுரை-தோறும் நீர் சோர் பொள்ளல் இ உருவிற்றாய
இரு நிற மலரினால் இன்று இவள் உயிர் ஏகலுற்றது
அரிதினில் வந்தது இன்று என்று அவளுடன் அசதியாடி
விரகினில் விடுத்து மன்னன் வெய்து உயிர்த்தனன் இருந்தான்.
**மன்னன், தாயிடம் சேறல்

#132
ஆயிடை அரசன் உள்ளத்து அரசினை விடுப்ப எண்ணித்
தாய் அமர் கோயில் எய்திச் சந்திரமதி-தன் முன்னர்ச்
சேயிடை இறைஞ்ச மற்று இத் திரை செய் நீர் உலகம் எல்லாம்
நீ உயர் குடையின் வைகி நெடிது உடன் வாழ்க என்றாள்
**சந்திரமதி ஐயுறல்

#133
மணி மருள் உருவம் வாடி வதன பங்கயமும் மாறா
அணி முடி அரசர் ஏறே அழகு அழிந்து உளது இது என்-கொல்
பிணி என எனது நெஞ்சில் பெரு நவை உறுக்கும் ஐய
துணியலென் உணரச் சொல்வாய் தோன்றல் நீ என்று சொன்னாள்
**அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்

#134
விண்ணிடை விளங்கும் காந்தி மிகு கதிர் மதியம் தீர்ந்தே
மண்ணிடை மழுங்கச் சென்று ஓர் மறை இருள் பகுதி சேரக்
கண்ணிடை இறைவி கங்குல் கனவினில் கண்டதுண்டு அஃது
எண்ணுடை உள்ளம்-தன்னுள் ஈர்ந்திடுகின்றது என்றான்.
**உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால்
** விளைந்ததெனக் கூறல்

#135
கரவினில் தேவி தீமை கட்டுரைத்திட்டது என்னா
இரவினில் கனவு தீமைக்கு ஏது என்று அஞ்சல் மைந்த
பரவி நற்கு இறைவி தேவி பணிந்தனை சிறப்புச்செய்தால்
விரவி மிக்கிடுதல் இன்றி விளியும் அத் தீமை எல்லாம்.
**தேவிக்குச் சிறப்பெடுத்தற்குரிய காலமும் இயல்பும் தெரிவித்தல்

#136
ஐப்பசி மதியம் முன்னர் அட்டமி பக்கம்-தன்னில்
மைப்படல் இன்றி நின்ற மங்கலக் கிழமை-தன்னில்
கைப் பலி கொடுத்துத் தேவி கழல் அடி பணியில் காளை
மெய்ப் பலி கொண்டு நெஞ்சின் விரும்பினள் உவக்கும் என்றாள்

#137
மண்டு அமர் தொலைத்த வேலோய் மனத்து இது மதித்து நீயே
கொண்டு நின் கொற்ற வாளில் குறு மறி ஒன்று கொன்றே
சண்டிகை மனம் தளிர்ப்பத் தகு பலி கொடுப்பத் தையல்
கண்ட நின் கனவின் திட்பம் தடுத்தனள் காக்கும் என்றாள்.
**மன்னன் நெறியறிந்து கூறல்

#138
ஆங்கு அவள் அருள் ஒன்று இன்றி அவண் மொழிந்திடுதலோடும்
தேங்கலன் அரசன் செம் கை செவி முதல் செறியச் சேர்த்தி
ஈங்கு அருள்செய்தது என்-கொல் இது புதிது என்று நெஞ்சில்
தாங்கலன் உருகித் தாய் முன் தகுவன செப்புகின்றான்.

#139
என் உயிர் நீத்ததேனும் யான் உயிர்க்கு உறுதி சூழாது
என் உயிர்க்கு அரணம் நாடி யான் உயிர்க்கு இறுதிசெய்யின்
என்னை இ உலகு காவல் எனக்கு இனி இறைவி கூறாய்
மன் உயிர்க்கு அரணம் மண் மேல் மன்னவர் அல்லரோ தான்.

#140
யான் உயிர் வாழ்தல் எண்ணி எளியவர்-தம்மைக் கொல்லின்
வான் உயர் இன்பம் மேலால் வரும் நெறி திரியும் அன்றி
ஊன் உயிர் இன்பம் எண்ணி எண்ணம் மற்று ஒன்றும் இன்றி
மானுயர் வாழ்வு மண்ணில் மரித்திடும் இயல்பிற்று அன்றே.

#141
அன்றியும் உன்னின் முன்னர் அன்னை நின் குலத்து_உளோர்கள்
கொன்று உயிர் கன்றும் உள்ளக் கொடுமை செய் தொழிலர் அல்லர்
இன்று உயிர் கொன்ற பாவத்து இடர் பல விளையும் மேலால்
நன்றி ஒன்று அன்று கண்டாய் நமக்கு நீ அருளிற்று எல்லாம்.
**மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்

#142
என்றலும் எனது சொல்லை இறந்தனை கொடியை என்றே
சென்றனள் முனிவுச் சிந்தைத் திரு_இலி பிறிது கூறும்
கொன்று உயிர் களைதல் அஞ்சில் கோழியை மாவில் செய்து
சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி என்றாள்.

#143
மனம் விரி அல்குல் மாய மனத்ததை வகுத்த மாயக்
கனவு உரை பிறிது தேவி கட்டுரை பிறிது ஒன்று ஆயிற்று
எனை வினை உதயம்செய்ய இடர் பல விளைந்த என்-பால்
வினைகளின் விளைவை யாவர் விலக்குநர் என்று நின்றான்.

#144
உயிர்ப் பொருள் வடிவு கோறல் உயிர்க் கொலை போலும் என்னும்
பயிர்ப்பு உளம் உடையனேனும் பற்று அறத் துணிவின் மன்னன்
செயிர்த்தவள் உரைத்த செய்கை செய்வதற்கு இசைந்தது என்றான்
அயிர்ப்பது என் அறத்தின் திண்மை அறிவதற்கு அமைவு_இலாதான்.

#145
மாவினில் வனைந்த கோழி வடிவுகொண்டு அவ்வையாய
பாவி-தன்னோடு மன்னன் படு கொலைக்கு இடமதாய
தேவி-தன் இடைச் சென்று எய்திச் சிறப்பொடு வணக்கம்செய்தே
ஆவயின் தன் கை வாளால் எறிந்து கொண்டு அருள் இது என்றான்.
**மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்

#146
மேல் இயல் தெய்வம் கண்டே விரும்பினது அடையப்பட்ட
சாலியின் இடியின் கோழி தலை அரிந்திட்டது ஓடி
கோல் இயல் அரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ
மால் இயல் அரசன் தன் கை வாள் விடுத்து உருகினானே.

#147
என்னை-கொல் மாவின் செய்கை இ உயிர்பெற்ற பெற்றி
சென்னி வாள் எறிய ஓடிச் சிலம்பிய குரல் இது என்-கொல்
பின்னிய பிறவி மாலைப் பெரு நவை தருதற்கு ஒத்த
கொன் இயல் பாவம் என்னைக் கூவுகின்றது-கொல் என்றான்.

#148
ஆ தகாது அன்னை சொல்லால் அறிவு_இலேன் அருள்_இல் செய்கை
ஆ தகாது அழிந்த புள் வாய் அரி குரல் அரியும் நெஞ்சை
ஆ தகாது அமிர்தம் முன்னா மதி-அவள் களவு கொல்லும்
ஆ தகா வினைகள் என்னை அடர்த்துநின்று அடும்-கொல் என்றான்.
**அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்

#149
இனையன நினைவு-தம்மால் இசோதரன் நகரம் எய்தித்
தனையனில் அரசுவைத்துத் தவ வனம் படரல் உற்றான்
அனையதை அறிந்து தேவி அவமதித்து எனை விடுத்தான்
என நினைந்து ஏது செய்தாள் எரி நரகத்து வீழ்வாள்.

#150
அரசு நீ துறத்தியாயின் அமைக மற்று எனக்கும் அஃதே
விரைசெய் தார் இறைவ இன்று என் வியன் மனை மைந்தனோடும்
அரச நீ அமுது கைக்கொண்டு அருளுதற்கு உரிமைசெய்தால்
அரசு-தான் அவனது ஆக விடுதும் நாம் அடிகள் என்றாள்.

#151
ஆங்கு அவள் அகத்து மாட்சி அறிந்தனன் அரசனேனும்
வீங்கிய முலையினாய் நீ வேண்டியது அமைக என்றே
தாங்கலன் அவ்வை-தன்னோடு அவள் மனை தான் அமர்ந்தான்
தீங்கு_அது குறுகின் தீய நயமும் நல் நயம்-அது ஆமே.

#152
நஞ்சொடு கலந்த தேனின் நறும் சுவை பெரிய ஆக
எஞ்சல்_இல் அட்டுகங்கள் இருவரும் அருந்துக என்றே
வஞ்சனை வலித்து மாமி-தன்னுடன் வரனுக்கு ஈந்தாள்
நஞ்சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள்.
**மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்

#153
நஞ்சு-அது பரந்த போழ்தின் நடுங்கினர் மயங்கி வீழ்ந்தார்
அஞ்சினர் மரணம் சிந்தை அடைந்தது முதலது ஆங்கண்
புஞ்சிய வினைகள் தீய புகுந்தன பொறிகள் பொன்றித்
துஞ்சினர் துயரம் துஞ்சா விலங்கிடைத் துன்னினாரே.
**உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்

#154
எண்களுக்கு இசைவு_இலாத இறைவியாம் இவள்-தன் செய்கை
கண்களுக்கு இசைவு இலாத கடையனைக் கருதி நெஞ்சின்
மண்களுக்கு இறைவன் ஆய வரனுக்கு மரணம் செய்தாள்
பெண்களில் கோது_அனாளே பெரிய பாவத்தள் என்றார்.
**விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம்
** நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்

#155
தீது அகல் கடவுளாகச் செய்தது ஓர் படிமையின்-கண்
காதரம் உலகு இதன்-கண் கருதிய முடித்தல் கண்டும்
சேதன வடிவு தேவிக்கு எறிந்தனர் தெரிவு ஒன்று இல்லார்
ஆதலால் வந்தது இன்று என்று அழுங்கினர் சிலர்கள் எல்லாம்.
**நகரத்து அறிஞர் கூறுதல்

#156
அறப் பொருள் நுகர்தல் செல்லான் அரும் தவர்க்கு எளியன்_அல்லன்
மறப் பொருள் மயங்கி வையத்து அரசு இயல் மகிழ்ந்து சென்றான்
இறப்பவும் இளையர் போகத்து இவறினன் இறுதியின்-கண்
சிறப்பு உடை மரணம் இல்லை செல் கதி என்-கொல் என்றார்.

#157
இனையன உழையர்-தாமும் எழில் நகரத்துளாரும்
நினைவன நினைந்து நெஞ்சின் நெகிழ்ந்தனர் புலம்பி வாடக்
கனை கழல் அரசன் தேவி கருதியது-அது முடித்தாள்
மனம் நனி வலிதின் வாடி மைந்தனை வருக என்றாள்.

#158
இனையல் நீ தனியை ஆகி இறைவனில் பிரிந்தது என்-கண்
வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்
புனை முடி கவித்துப் பூமி பொதுக் கடிந்து ஆள்க என்றே
மனம் நனி மகிழ்ந்து இருந்தாள் மறை பதிக்கு அமுதம் ஆவாள்.
**யசோமதி முடிபுனைந்து அரசனாதல்

#159
வார் அணி முரசம் ஆர்ப்ப மணி புனை மகுடம் சூடி
ஏர் அணி ஆர மார்பன் இசோமதி இறைமை எய்திச்
சீர் அணி அடிகள் செல்வத் திரு அறம் மருவல் செல்லான்
ஓர் அணி ஆர மார்பர் உவகை அம் கடலுள் ஆழ்ந்தான்.

#160
இனையன வினையின் ஆகும் இயல்பு இது தெரிதியாயின்
இனையன துணைவர் ஆகும் இளையரின் விளையும் இன்பம்
இனையது தெளிவு_இலாதார் இரு நில அரசு செய்கை
வனை மலர் மகுட மாரிதத்தனே மதி இது என்றான்.

@3..மூன்றாஞ் சருக்கம்
**யசோதரனும் சந்திரமதியும் மயிலும் நாயுமாய்ப் பிறந்தசெய்த கூறல்

#161
மற்று அ மன்னன் மதிமதி என்று இவர்
நல் தவத்து இறை நல் அறம் புல்லலாப்
பற்றினோடு முடிந்தனர் பல் பிறப்பு
உற்றது ஆகும் உரைக்கு உறுகின்றதே.

#162
விந்த நாம விலங்கலில் மன்னவன்
வந்து ஒர் மா மயிலின் வயிற்று அண்டமாய்
வந்து நாளிடை நாயொடு கண்டகன்
வந்து ஒர் வாளியினால் மயில் வாட்டினான்.

#163
அம்பின் வாய் விழும் அண்டம் எடுத்து அவன்
வம்பு வாரண முட்டையின் வைத்து உடன்
கொம்பு_அனாய் இது கொண்டு வளர்க்க என
நம்பு காமர் புளிஞி கை நல்கினான்.

#164
சந்திரம்மதி ஆகிய தாய்-அவள்
வந்து மா நகரப் புறச் சேரி வாய்
முந்து செய்வினையால் முளை வாள் எயிற்று
அந்தம் மிக்க சுணங்கம்-அது ஆயினாள்.

#165
மயிலும் நாயும் வளர்ந்த பின் மன்னனுக்கு
இயல் உபாயனம் என்று கொடுத்தனர்
மயரி ஆகும் இசோமதி மன்னவன்
இயலும் மாளிகை எய்தின என்பவே.

#166
மன்னன் ஆகிய மா மயில் மாளிகை
தன்னின் முன் எழுவார்க்கு முன் தான் எழாத்
தன்னை அஞ்சினர்-தங்களைத் தான் வெருண்டு
இன்ன ஆற்றின் வளர்ந்திடுகின்றதே.

#167
அம்_சில்_ஓதியர் தாம் அடி தைவரப்
பஞ்சி மெல் அணை பாவிய பள்ளி மேல்
துஞ்சும் மன்னவன் மா மயில் தோகையோடு
அஞ்சி மெல்ல அசைந்தது பூமி மேல்.

#168
சுரைய பால் அடிசில் சுவை பொன் கலத்து
அரைய மேகலையாரின் அமர்ந்து உணும்
அரையன் மா மயிலாய்ப் புறப் பள்ளி வாய்
இரை அவாவி இருந்து அயில்கின்றதே.

#169
வந்து குப்பையின் மா சனம் உண்ட பின்
சிந்தும் எச்சில்கள் சென்று கவர்ந்து தின்று
அந்துளும் அகழ் அங்கணத்தூடுமாய்ச்
சந்திரம்மதி நாய் தளர்கின்றதே.

#170
நல் வதத்தொடு அறத் திறம் நண்ணலார்
கொல்வதற்கு உளம் முன் செய் கொடுமையால்
ஒல்வதற்கு அரும் மா துயர் உற்றனர்
வெல்வதற்கு அரிதால் வினையின் பயன்.

#171
மற்று ஒர் நாள் மணிமண்டபத்தின் புடை
அற்றமா இருந்து அட்டபங்கன்-தனை
முற்று வார் முலையாள் முயங்கும் திறம்
மற்று அ மா மயில் வந்தது கண்டதே.

#172
அப் பிறப்பில் அமர்ந்த தன் காதலி
ஒப்பு_இல் செய்கை உணர்ந்தது உணர்ந்த பின்
தப்பு_இல் அன்னது சாரன்-தன் கண்களைக்
குப்புறா மிசைக் குத்தி அழித்ததே.

#173
முத்த வாள்_நகையாள் முனிவு உற்றனள்
கைத்தலத்து ஒரு கல் திரள் வீசலும்
மத்தகத்தை மடுத்து மறித்தது
தத்தி மஞ்ஞை தரைப்பட வீழ்ந்ததே.

#174
தாய் முன் ஆகி இறந்து பிறந்தவள்
நாய் பின் ஓடி நலிந்தது கவ்விய
வாய் முன் மஞ்ஞை மடிந்து உயிர்போயது
தீமை செய் வினை செய்திறம் இன்னதே.

#175
நாயின் வாயில் நடுங்கிய மா மயில்
போயது இன் உயிர் பொன்றின மன்னவன்
ஆயும் ஆறு அறியாத இசோமதி
நாயை எற்றினன் நாய் பெய் பலகையால்.
**யசோதரனாகிய மயில் (2-வது) முள்ளம் பன்றியாய்ப் பிறத்தல்

#176
மன்னன் மா மயில் வந்து விந்தக்கிரி
துன்னும் சூழலுள் சூழ் மயிர் முள் உடை
இன்னல் செய்யும் ஓர் ஏனம்-அது ஆகியது
அன்னது ஆகும் அரு வினையின் பயன்.

#177
சந்திரம்மதி நாயும் அச் சாரலின்
வந்து கார் இருள் வண்ணத்த நாகம் ஆய
அந்தில் ஊர்தர வேர்த்து உருளக் குடர்
வெந்து எழும் பசி விட்டது பன்றியே.

#178
தாய் கொல் பன்றி தளர்ந்து அயர் போழ்தினில்
சீயம் ஒன்று எனச் சீறு உளியம் எதிர்
பாய நொந்து பதைத்து உடன் வீழ்ந்து அரோ
போயது இன் உயிர் பொன்றுபு பன்றியே.
**மன்னனாகிய முட்பன்றி (3-வது) லோகிதமீனாய்ப் பிறத்தல்

#179
மன்னன் மா மயில் சூகரம் வார் புனல்
இன்னல் செய்யும் சிருப்பிரை ஆற்றினுள்
உன்னும் ஒப்பு_இல் உலோகித இப் பெயர்
மன்னும் மீனின் வடிவினது ஆயிற்றே.
**சந்திரமதியாகிய நாகம் (வது) முதலையாகப் பிறத்தல்

#180
சந்திரம்மதி நாய் கருநாகமாய்
முந்து சென்று முதலை-அது ஆயது
வெந்து வேர்த்து இன மீனை விழுங்குவான்
உந்தியுந்தி உளைந்திடு போழ்தினில்.

#181
அந்தரத்து ஒரு கூனி நின்று ஆடுவாள்
வந்து வாயின் மடுத்து அது கொண்டது
கொந்து வேய் குழல் கூனியைக் கொல் கராத்
தந்து கொல்க என மன்னவன் சாற்றினான்

#182
வலையின் வாழ்நரின் வாரில் பிடித்த பின்
சிலர் சலாகை வெதுப்பிச் செறித்தனர்
கொலை_வலாளர் குறைத்தனர் ஈர்ந்தனர்
அலை செய்தார் பலர் யார் அவை கூறுவார்.
**சந்திரமதியாகிய முதலை (4-வது) பெண் ஆடாய்ப் பிறத்தல்

#183
சந்திரம்மதி நாய் கருநாகமாய்
வந்து வார் வலைப்பட்ட கரா மரித்து
அந்தில் வாழ் புலையாளர்-தம் சேரி-வாய்
வந்து ஒர் ஆட்டின் மடப் பிணை ஆயதே.

#184
மற்றை மீனும் ஓர் வார் வலைப் பட்டதை
அற்றம் இல் அருள் அந்தணர் கண்டனர்
கொற்ற மன்னவ நின் குலத்தார்களுக்கு
உற்ற செய்கைக்கு உரித்து என ஓதினார்.

#185
அறுத்த மீனின் அவயவம் ஒன்றினைக்
கறித்து இசோமதி இப் புவி காக்க ஓர்
இறப்பு_அரும் துறக்கத்தில் இசோதரன்
சிறக்க என்றனர் தீவினையாளரே.

#186
நின்ற கண்டத்து நீள் உயிர் போம் அது
சென்ற தன் பிறப்பு ஓர்ந்து தெளிந்தது
தின்றுதின்று துறக்கத்து இருத்துதல்
நன்றுநன்று என நைந்து இறந்திட்டதே
**மன்னனாகிய லோகித மீன் (4-வது) தகராய்ப் பிறத்தல்

#187
மன்னன் மா மயில் சூகரம் ஆய மீன்
முன்னை ஆட்டின் வயிற்றில் முடிந்தது ஓர்
மன்னும் ஆண் உரு எய்தி வளர்ந்த பின்
தன்னை ஈன்ற அத் தாய் மிசைத் தாழ்ந்ததே.
**தகர் (ஆவது) மீண்டும் தன் தாயின் கருவில் தகராதல்

#188
தாயின் நல் நலம் தான் நுகர் போழ்தினில்
ஆய கோபத்து அடர்த்து ஒரு வன் தகர்
பாய ஓடிப் பதைத்து உயிர்போய பின்
தாய் வயிற்றினில் தாதுவில் சார்ந்ததே.

#189
தாய்-வயின் கருவுள் தகர் ஆயது
போய் வளர்ந்துழிப் பூ முடி மன்னவன்
மேய வேட்டை விழைந்தனன் மீள்பவன்
தாயை வாளியில் தான் உயிர்போக்கினான்.

#190
வாளி வாய் விழும் வன் தகர்க் குட்டியை
நீள நின்ற புலை_குலத்தோன்-தனைத்
தாள் வருத்தம் தவிர்த்து வளர்க்க என
ஆளி மொய்ம்பன் அருளினன் என்பவே.
**யசோமதி பலியிடும் செய்தி கூறல்

#191
மற்று ஒர் நாள் மற_மாதிற்கு மன்னவன்
பெற்றியால் பரவிப் பெரு வேட்டைபோய்
உற்ற பல் உயிர் கொன்று வந்து எற்றினான்
கொற்றம் மிக்க எருமைப் பலி ஒன்று அரோ.

#192
இன்று எறிந்த எருமை இது-தனைத்
தின்றுதின்று சிராத்தம் செயப்பெறின்
நன்று இது என்றனர் அந்தணர் நல்கினார்
நின்று பின் சில நீதிகள் ஓதினார்.

#193
ஆதபத்தில் உலர்ந்ததை ஆதலால்
காது காகம் கவர்ந்தனவாம் எனின்
தீது தாமும் சிராத்தம் செயற்கு என
ஓதினார் இனி ஒன்று உளது என்றனர்.

#194
தீது இது என்ற பிசிதமும் தேர்ந்துழி
சாதம் நல்ல தகர் முகத்துப் படின்
பூதம் என்றனர் புண்ணிய நூல்களின்
நாதனார் அத் துராதிகள் நன்று அரோ.

#195
என்றலும் இணர் பெய் முடி மன்னவன்
நன்று நாம் முன் வளர்க்க விடுத்தது
சென்று தம் எனச் சென்றனர் ஒற்றர் பின்
நன்று இது என்று நயந்தனர் அந்தணர்.

#196
சென்று நல் அமிர்து உண்டு அது தின்றனர்
அன்று மன்னன் இசோதரன் அன்னையோடு
ஒன்றி உம்பர் உலகினுள் வாழ்க என
நன்று சொல்லினர் நான்மறையாளரே.
**இதுமுதல் ஏழுகவிகளில் யசோதரனாகிய ஆடு எண்ணியது கூறப்படும்

#197
அத் தலத் தகர் ஆங்கு அது கேட்ட பின்
ஒத்த தன் பிறப்பு உள்ளி உளைந்து உடன்
இத் தலத்து இறையான இசோமதி
மத்த யானையின் மன்னவன் என் மகன்.

#198
இது என் மா நகர் உஞ்சயினிப் பதி
இது என் மாளிகையாம் என் உழைக்கலம்
இது எலாம் இவர் என் உழையாளராம்
இது என் யான் இவண் இன்னணம் ஆயதே.

#199
யான் படைத்த பொருள் குவையாம் இவை
யான் வளர்த்த மதக் களிறாம் இவை
யான் அளித்த குலப் பரியாம் இவை
யான் விளைத்த வினைப் பயன் இன்னதே.

#200
இவர்கள் என் கடைக் காவலர் ஆயவர்
இவர்கள் என் படை நாயகர் ஆயவர்
இவர்கள் என் இசை பாடுநர் ஆடுநர்
இவர்களும் இவர் என் பரிவாரமே.

#201
என்னை நஞ்சு பெய்து இன்னணமாய் இழைத்த
அன்ன மெல் நடையாள் அமிர்தம்மதி
மன்னு தன் மறையானொடு வைகுமோ
என்னை செய்தனளோ இவண் இல்லையால்.

#202
அசை அது ஆகி அரும் படர் ஒன்று இலா
இசை_இலாதன யான் உற இத் தலைத்
தசை_தினாளர்கள்-தங்களின் என்னை இ
வசையின் மன்னவன் வான்_உலகு உய்க்குமோ.

#203
பேதை மாதர் பெய் நஞ்சினில் எஞ்சி இ
மேதினிப் பதி ஆதல் விடுத்த பின்
யாது செய்தனனோ வினையேன் இடை
யாது செய்குவனோ உணரேன் இனி.
**சந்திரமதியாகிய பெண்யாடு (5-வது) எருமையாய்ப் பிறத்தல்

#204
இனைய ஆகிய சிந்தைகள் எண்_இலா
வினையின் ஆகிய வெம் துயர் தந்திடத்
தனையன் மாளிகை தன் உளம் நோக முன்
சினைகொண்ட ஆடு உயிர் சென்று பிறந்ததே.

#205
சந்திரம்மதி நாய் கருநாகமாய்
வந்து இடங்கரும் ஆகிய ஆடு-அது
நந்து பல் பொருள் நாடு கலிங்கத்து
வந்து மாயிடம் ஆகி வளர்ந்ததே.

#206
வணிகர்-தம்முடன் மா மயிடம்-அது
பணிவு_இல் பண்டம் பரிந்து உழல்கின்ற நாள்
அணி கொள் உஞ்சயினிப் புறத்து ஆற்று அயல்
வணிகர் வந்து மகிழ்ந்து விட்டார்களே.

#207
தூர பாரம் சுமந்த துயர்-அது
தீர ஓடும் சிருப்பிரை ஆற்றினுள்
ஆர மூழ்குவது அ மயிடம் கரை
சேரும் மாவினைச் சென்று எறிந்திட்டதே.

#208
வரை செய் தோள் மன்ன வணிகர் மயிடத்தால்
அரைச அன்னம் எனும் பெயர் ஆகும் நம்
அரைச வாகனம் ஆயது போயது என்று
உரைசெய்தார் அரசற்கு உழையாளரே.
**ஏவலர் வணிகர்எருமையால் நம் குதிரை இறந்த தென்று அரசனுக்கு
**அறிவித்தன ரென்க

#209
அணி கொள் மா முடி மன்னன் அழன்றனன்
வணிகர்-தம் பொருள் வாரி மயிடமும்
பிணிசெய்து எம் உழை வம் எனப் பேசினான்
கணிதம்_இல் பொருள் சென்று கவர்ந்தனர்.

#210
அரசன் ஆணை அறிந்து அருள்_இல்லவர்
சரணம் நான்கினையும் தளைசெய்தனர்
கரணமானவை யாவும் களைந்தனர்
அரணமாம் அறன்_இல்லது-தன்னையே.

#211
கார நீரினைக் காய்ச்சி உறுப்பு அரிந்து
ஆர ஊட்டி அதன் வயிறு ஈர்ந்து அவர்
சார நெய் பெய் சலாகை கடைந்த பின்
கூர் முள் மத்திகையில் கொலைசெய்தனர்.

#212
ஆயிடைக் கொடியாள் அமிர்தம்மதி
மேய மேதித் தசை மிக வெந்ததை
வாயில் வைத்து வயிற்றை வளர்த்தனள்
மாயை செய்தனள் என்றனர் மற்றையார்.

#213
இன்னும் ஆசை எனக்கு உளது இ வழித்
துன்னி வாழ் தகர் ஒன்று உளது இன்று அது-
தன்னினாய குறங்கு கடித்து அது
தின்னின் ஆசை சிதைந்திடும் என்றனள்.
**இதுமுதல் ஐந்துகவிகள் ஆட்டின் அருகே சேடியர் பேசிக்கொள்ளுதல்

#214
அனங்கனான பெருந்தகை அண்ணலைச்
சினம்கொளா உயிர் செற்றனள் நஞ்சினில்
கனம் கொள் காமம் கலக்கக் கலந்தனள்
மனம்கொளா ஒரு மானுட நாயினை.

#215
குட்டமாகிய மேனிக் குலம் இலா
அட்டபங்கனோடு ஆடி அமர்ந்த பின்
நட்டமாகிய நல் எழில் மேனியள்
குட்டநோயில் குளித்திடுகின்றனள்.

#216
அழுகி நைந்து உடன் அஃகும் அவயவத்து
ஒழுகு புண்ணின் உருவினள் ஆயினள்
முழுகு சீயின் முடைப் பொலி மேனியள்
தொழு வல் பல் பிணி நோய்களும் துன்னினாள்.

#217
உம்மை வல்_வினையால் உணர்வு ஒன்று_இலாள்
இம்மைச் செய்த வினைப் பயனே இவை
எம்மையும் இனி நின்றிடும் இ வினை
பொய்ம்மை_அன்று இவள் பொன்றினும் பொன்றல.

#218
நோயின் ஆசை-கொல் நுண்ணுணர்வு_இன்மை-கொல்
தீய வல்_வினை தேடுதலே-கொலோ
மேய மேதிப் பிணத்தை மிசைந்தனள்
மாய மற்று இது-தன்னையும் வவ்வுமே.
**பவஸ்ம்ருதி யடைந்த ஆடு ஆகலின், சேடியர் கூறியதனை அறிந்து வருந்துதல்

#219
என்று தன் புறத்து இப்படிக் கூறினர்
சென்று சேடியர் பற்றிய அத் தகர்
ஒன்றும் முற்ற உணர்ந்து அவள்-தன்னையும்
சென்று கண்டது சிந்தையின் நொந்து அரோ.

#220
தேவி என்னை முனிந்தனை சென்று ஒரு
பாவி-தன்னை மகிழ்ந்த பயன்-கொலோ
பாவி நின் உரு இன்னணம் ஆயது
பாவி என்னையும் பற்றினை இன்னணம்.

#221
நஞ்சில் அன்னையொடு என்னை நலிந்தனை
எஞ்சல்_இல் சினம் இன்னம் இறந்திலை
வஞ்சனை மடவாய் மயிடம்-அது
துஞ்சும் நின் வயிற்று என்னையும் சூழ்தியோ.

#222
என்று கண்டு மொறுமொறுத்து என் செயும்
நின்று நெஞ்சம்-அது உள் சுட நின்றது
அன்று தேவி அலைப்ப அழிந்து உயிர்
சென்றது அ மயிடத்தொடு செல் கதி.
**எருமையும் ஆடும் (6) கோழிகளாய்ப் பிறத்தல்

#223
மற்று அ மா நகரத்து மருங்கினில்
சிற்றில் பல் சனம் சேர் புறச்சேரியின்
உற்று வாரணப் புள் உரு ஆயின
வெற்றி வேலவன் கண்டு விரும்பினான்.

#224
கண்டு மன்னவன் கண் களி கொண்டனன்
சண்டகன்மியைத் தந்து வளர்க்க எனக்
கொண்டு போய் அவன் கூட்டுள் வளர்த்தனன்
மண்டு போர் வினை வல்லவும் ஆயவே.

#225
தரளமாகிய நயனத்தொடு அம் சிறை சாபம் போல் சவி என்ன
மருளும் மா சனம் வளர் விழி சுடர் சிகை மணி முடி-தனை ஒத்த
ஒளிரு பொன் உகிர்ச் சரணங்கள் வயிர முள் ஒப்பு_இல போரின்-கண்
தளர்வு_இல் வீரியம் தகைபெற வளர்ந்தன தமக்கு இணை அவை-தாமே.

@4..நான்காஞ் சருக்கம்

#226
செம் தளிர் புதைந்த சோலைத் திரு மணி வண்டும் தேனும்
கொந்துகள் குடைந்து கூவும் குயிலொடு குழுமி ஆர்ப்பச்
செம் துணர் அளைந்து தென்றல் திசைதிசை சென்று வீச
வந்து உளம் மகிழ்ந்தது எங்கும் வளர் மதுப் பருவம் மாதோ.

#227
இணர் ததை பொழிலின் உள்ளால் இசோமதி என்னும் மன்னன்
வணர் ததை குழலி புட்பாவலி எனும் துணைவியோடு
வணர் ததை வல்லி புல்லி வளர் இளம் பிண்டி வண்டு ஆர்
இணர் ததை தவிசின் ஏறி இனிதினின் அமர்ந்திருந்தான்.

#228
பாடகம் இலங்கு செம் கேழ்ச் சீறடிப் பாவை பைம்பொன்
சூடக மணி மென் தோளின் தொழுதனர் துளங்கத் தோன்றி
நாடக மகளிர் ஆடும் நாடகம் நயந்தும் நல்லார்
பாடலின் அமிர்த ஊறல் பருகினன் மகிழ்ந்து இருந்தான்.

#229
வளையவர் சூழல் உள்ளால் மனம் மகிழ்ந்து இருப்ப மன்னன்
தளை அவிழ் தொடையன் மார்பன் சண்ட முன் கருமன் போகி
வள மலர் வனத்துள் தீய மனிதரோடு அனைய சாதி
களைபவன் கடவுள் கண்ணில் கண்டு கை தொழுது நின்றான்.

#230
அரு வினை முனை கொல் ஆற்றல் அகம்பனன் என்னும் நாமத்து
ஒரு முனி தனியன் ஆகி ஒரு சிறை இருந்த முன்னர்த்
தரு முதல் யோகு கொண்டு தன் அளவு இறந்த பின்னர்
மருவிய நினைப்பு மாற்றி வந்தது கண்டிருந்தான்.

#231
வடி நுனைப் பகழியானும் மலர்_அடி வணங்கி வாழ்த்தி
அடிகள் நீர் அடங்கி மெய்யில் அருள் புரி மனத்திர் ஆகி
நெடிதுடன் இருந்து நெஞ்சில் நினைவதோர் நினைவு-தன்னால்
முடி பொருள்-தானும் என்-கொல் மொழிந்து அருள்செய்க என்றான்.

#232
ஆர் அருள் புரிந்த நெஞ்சின் அ முனி அவனை நோக்கிச்
சீர் அருள் பெருகும் பான்மைத் திறத்தனே போலும் என்றே
பேரறிவாகித் தம்மில் பிறழ்வு_இலா உயிரை அன்றே
கூர் அறிவு உடைய நீரார் குறிப்பது மனத்தினாலே.

#233
அனந்தமாம் அறிவு காட்சி அரு வலி போகம் ஆதி
நினைந்த எண்_குணங்களோடு நிருமல நித்தம் ஆகிச்
சினம் செறு ஆதி இன்றித் திரிவித உலகத்து உச்சி
அனந்த காலத்து நிற்றல் அப் பொருள் தன்மை என்றான்.

#234
கருமனும் இறைவ கேளாய் களவு_செய்தோர்கள்-தம்மை
இரு பிளவாகச் செய்வன் எம் அரசு அருளினாலே
ஒருவழியாலும் சீவன் உண்டு எனக் கண்டது இல்லை
பெரியதோர் சோரன்-தன்னைப் பின்னமாய்ச் சேதித்திட்டும்.

#235
மற்றொரு கள்வன்-தன்னை வதைசெய்யும் முன்னும் பின்னும்
இற்று என நிறைசெய்திட்டும் இறைவனே பேதம் காணேன்
உற்றதோர் குழியின் மூடி ஒருவனைச் சில நாள் வைத்தும்
மற்று அவன் உயிர் போயிட்ட வழி ஒன்றும் கண்டிலேனே.
**முனிவர் தளவரன்ஐயத்தைப் போக்குதல்.

#236
பையவே காட்டம்-தன்னைப் பல பின்னம் செய்திட்ட அன்று
வெய் எரி கண்டது உண்டோ விறகொடு விறகை ஊன்ற
ஐயென அங்கி தோன்றி அதனையும் எரிக்கலுற்றது
இவ்வகைக் காணலாகும் என்று நீ உணர்தல் வேண்டும்.
**இதுவும் அது

#237
சிக்கென வாயு ஏற்றித் தித்தி வாய் செம்மித் தூக்கிப்
புக்க அ வாயு நீங்கிப் போய பின் நிறைசெய்தாலும்
ஒக்குமே ஒருவன் சங்கோடு ஒரு நில மாளிகைக் கீழ்த்
திக்கெனத் தொனிசெய்திட்டது எவ்வழி வந்தது ஆகும்.

#238
இவ்வகை ஆகும் சீவன் இயல்பு-தான் இயல்பு வேறாம்
வெய்ய தீ_வினைகளாலே வெருவுறு துயரின் மூழ்கி
மையலுற்று அழுந்தி நான்கு கதிகளுள் கெழுமிச் செல்வர்
ஐயம்_இல் சாட்சி ஞானத்து ஒழுக்கத்தோர் அறிவது ஆகும்.

#239
ஆகமத்து அடிகள் எங்கட்கு அது பெரிது அரிது கண்டீர்
ஏகசித்தத்தர் ஆய இறைவர்கட்கு எளிது போலும்
போக சித்தத்தோடு ஒன்றிப் பொறி வழிப் படரும் நீரார்க்கு
ஆகும் மற்று உறுதிக்கு ஏது அருளுக தெருள என்றான்.

#240
அற்றம்_இல் அறிவு காட்சி அரும் தகை ஒழுக்கம் மூன்றும்
பெற்றனர் புரிந்து பேணிப் பெரும் குணத்து ஒழுகுவாருக்கு
உற்றிடும் உம்பர் இன்பம் உலகு இதற்கு இறைமை-தானும்
முற்ற முன் உரைத்த பேறும் வந்துறும் முறைமை என்றான்.

#241
உறு பொருள் நிலைமை-தன்னை உற்று உணர்வு அறிவு-அது ஆகும்
அறி பொருள்-அதனில் தூய்மை அகத்து எழு தெளிவு காட்சி
நறு மலர்ப் பிண்டி_நாதன் நல் அறப் பெருமை-தன் மேல்
இறுகிய மகிழ்ச்சி கண்டாய் இதனது பிரிவும் என்றான்.

#242
பெருகிய கொலையும் பொய்யும் களவோடு பிறன்_மனை-கண்
தெரிவு_இலாச் செலவும் சிந்தை பொருள்-வயின் திருகு பற்றும்
மருவிய மனத்து மீட்சி வதம் இவை ஐந்தோடு ஒன்றி
ஒருவின புலைசு தேன் கள் ஒழுகுதல் ஒழுக்கம் என்றான்.

#243
கொலையினது இன்மை கூறின் குவலயத்து இறைமை செய்யும்
மலைதல்_இல் வாய்மை யார்க்கும் வாய்மொழி மதிப்பை ஆக்கும்
விலை_இல் பேர்_அருளின் மாட்சி விளைப்பது களவின் மீட்சி
உலைதல்_இல் பெருமை திட்பம் உறு வலி ஒழிந்தது ஈயும்.

#244
தெருள் உடை மனத்தில் சென்ற தெளிந்த உணர்வு ஆய செல்வம்
பொருள்-வயின் இறுக்கம் இன்மை புணர்த்திடும் புலைசு தேன் கள்.
ஒருவிய பயனும் அஃதே ஒளியினோடு அழகு வென்றி
பொருள் மிகு குலனோடு இன்பம் உணர்தலும் ஆகும் மாதோ.

#245
சிலை பயில் வயிரத் தோளாய் செப்பிய பொருள் இது எல்லாம்
உலைதல்_இல் மகிழ்வோடு உள்ளத்து உணர்ந்தனை கொள்க என்னக்
கொலையினில் ஒருவல் இன்றிக் கொண்டனென் அருளிற்று எல்லாம்
அலைசெய்வது ஒழியின் வாழ்க்கை அழியும் மற்று அடிகள் என்றான்.
**அகம்பனர் கூறல்

#246
என்று அடி பணிந்து சண்டன் இசைத்தது கடவுள் கேட்டு
நன்று இனித் தெளிந்தாய்_அல்லை நவில் இசை அமுத நல் யாழ்
ஒன்றிய செவிடும் ஊமும் ஒருவனால் பெறுதல் உண்டோ
இன்று நீ உரைத்தது அற்றே இயம்புவது உளது கேண்மோ.
**முனிவரர் மீண்டும் கூறல்

#247
ஆர் உயிர் வருத்தம் கண்டால் அருள் பெரிது ஒழுகிக் கண்ணால்
ஒர் உயிர் போல நெஞ்சத்து உருகி நைந்து உய்ய நிற்றல்
வாரியின் வதங்கட்கு எல்லாம் அரச மா வதம் இதற்கே
சார் துணையாகக் கொள்க தகவும் அத் தயவும் என்றான்.

#248
இறந்த நாள் என்றும் உள்ளத்து இரங்குதல் இன்றி வெய்தாய்க்
கறந்து உயிர் உண்டு கன்றிக் கரு_வினை பெருகச் செய்தாய்
பிறந்து நீ, பிறவி-தோறும் பெரு நவையுறுவது எல்லாம்
சிறந்த நல் அறத்தின் அன்றித் தீரும் ஆறு உளதும் உண்டோ.

#249
நிலை_இலா உடம்பின் வாழ்க்கை நெடிது உடன் நிறுவ என்று இக்
கொலையினால் முயன்று வாழும் கொற்றவரேனும் முற்றச்
சில பகல் அன்றி நின்றார் சிலர் இவண் இல்லை கண்டாய்
அலை தரு பிறவி முந்நீர் அழுந்துவர் அனந்தம் காலம்.

#250
இன்னும் ஈது ஐய கேட்க இசோமதி தந்தை ஆய
மன்னவன் அன்னையோடு மாவின் நல் கோழி-தன்னைக்
கொன் நவில் வாளில் கொன்ற கொடுமையில் கடியது உன்
பின் அவர் பிறவி-தோறும் பெற்றன பேசலாமோ.

#251
வீங்கிய வினைகள்-தம்மால் வெருவரத்தக்க துன்பம்
தாங்கினர் பிறந்து இறந்து தளர்ந்தனர் விலங்கின் செல்வார்
ஆங்கு அவர் தாங்கள் கண்டாய் அரு வினை துரப்ப வந்தார்
ஈங்கு நின் அயலக் கூட்டில் இருந்த கோழிகளும் என்றான்.

#252
உயிர் அவண் இல்லையேனும் உயிர்க் கொலை நினைப்பினால் இ
மயரிகள் பிறவி-தோறும் வருந்திய வருத்தம் கண்டால்
உயிரினில் அருள் ஒன்று இன்றி உவந்தனர் கொன்று சென்றார்
செயிர் தரு நரகின் அல்லால் செல்லிடம் இல்லை என்றான்.

#253
மற்று அவன் இனைய கூற மனம் நனி கலங்கி வாடிச்
செற்றமும் சினமும் நீக்கித் திரு அறத் தெளிவு காதல்
பற்றினன் வதங்கள் முன்னம் பகர்ந்தன அனைத்தும் கொண்டு
பெற்றனன் அடிகள் நும்மால் பெரும் பயன் என்று போந்தான்.

#254
கேட்டலும் அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்-தம்மைக்
கூட்டினுள் இருந்த மற்று அக் கோழிகள் பிறப்பு உணர்ந்திட்டு
ஓட்டிய சினத்த ஆகி உறு வதம் உய்ந்து கொண்ட
பாட்டு அரும் தன்மைத்து அன்றே பான்மையின் பரிசு-தானும்.

#255
பிறவிகள் அனைத்தும் நெஞ்சில் பெயர்ந்தன நினைத்து முன்னர்
மறவியின் மயங்கி மாற்றில் மறுகினம் மறுகு சென்றே
அற இயல் அடிகள்-தம்மால் அற அமிர்து ஆரப் பெற்றாம்
பிறவியின் மறுகு வெம் நோய் பிழைத்தனம் என்ற அன்றே.

#256
அறிவரன் சரணம் மூழ்கி அறத்து எழு விருப்பம் உள்ளாக்
குறைவு_இல அமுதம் கொண்டு குளிர்ந்து அகம் மகிழ்ந்து கூவச்
செறி பொழில்-அதனுள் சென்று செவியினுள் இசைப்ப மன்னன்
முறுவல் கொள் முகத்து நல்லார் முகத்து ஒரு சிலை வளைத்தான்.

#257
சொல் அறி கணையை வாங்கித் தொடுத்து அவன் விடுத்தலோடும்
நல் இறைப் பறவை-தம்மை நடுக்கியது அடுத்து வீழச்
சில்_அறிவினகளேனும் திரு அறப் பெருமையாலே
வல்லிதின் மறைந்து போகி மானுடம் பாய அன்றே.

#258
விரை செறி பொழிலின் உள்ளால் வேனிலின் விளைந்த எல்லாம்
அரைசனும் அமர்ந்து போகி அகநகர்க் கோயில் எய்தி
முரைசொலி கழுமப் புக்கு மொய் மலர்க் குழலினாரோடு
உரைசெயல் அரிய வண்ணம் உவகையின் மூழ்கினானே.

#259
இன்னணம் அரசச் செல்வத்து இசோமதி செல்லும் நாளுள்
பொன் இயல் அணி கொள் புட்பாவலி எனும் பொங்கு கொங்கை
இன் இயல் இரட்டையாகும் இளையரை ஈன்று சில் நாள்
பின்னும் ஓர் சிறுவன்-தன்னைப் பெற்றனள் பேதை-தானே.

#260
அன்னவர்-தம்முள் முன்னோன் அபய முன் உருசி தங்கை
அன்ன மெல் நடையினாளும் அபய முன் மதி என்பாளாம்
பின் அவர் வளரும் நாளுள் பிறந்தவன் நிறம் கொள் பைம் தார்
இன் இளங்குமரன் நாமம் இசோதரன் என்பது ஆகும்.

#261
பரி மிசைப் படை பயின்றும் பார் மிசைத் தேர் கடாயும்
வரிசையில் கரி மேல் கொண்டும் வாள் தொழில் பயின்றும் மன்னர்க்கு
உரிய அத் தொழில்களோடு கலைகளின் செலவை ஓர்ந்தும்
அரசிளங்குமரன் செல்_நாள் அடுத்தது கூறலுற்றேன்.

@5..ஐந்தாவது சருக்கம்

#262
நூல் படு வலைப் பொறி முதல் கருவி நூற்றோடு
ஏற்று இடை எயிற்று ஞமலிக் குலம் இரைப்ப
நாற்படை நடுக் கடல் நடுச் செய் நமனே போல்
வேல் படை பிடித்து அரசன் வேட்டையின் விரைந்தான்.

#263
இதத்தினை உயிர்க்கு இனிது அளித்திடும் இயற்கைச்
சுதத்தமுனி தொத்து இரு வினைத் துகள் உடைக்கும்
பதத்து அயன் மதக் களிறு எனப் படிமம் நிற்பக்
கதத்துடன் இழித்து அடு கடத்திடை மடுத்தான்.

#264
கூற்றம் என அடவி புடை தடவி உயிர் கோறற்கு
ஏற்றபடி பெற்றது_இலன் இற்றை வினை முற்றும்
பாற்றியவன் இன் உயிர் பறிப்பன் என வந்தான்
மாற்ற அரிய சீற்றமொடு மாதவனின் மேலே.

#265
கொந்து எரி உமிழ்ந்து எதிர் குரைத்து அதிர்வ கோள் நாய்
ஐந்தினொடு பொருத தொகை ஐயம்பதின்_இரட்டி
செம் தசைகள் சென்று கவர்க என்று உடன் விடுத்தான்
நந்தி அருள் மழை பொழியும் நாதன்-அவன் மேலே.

#266
அறப் பெருமை செய்து அருள் தவப் பெருமை-தன்னால்
உறப் புணர்தல் அஞ்சி ஒரு வில்-கண் அவை நிற்பக்
கறுப்பு உடை மனத்து எழு கதத்து அரசன் ஐயோ
மறப் படை விடக் கருதி வாள் உருவுகின்றான்.
**இதுமுதல் நான்கு கவிகளில் வணிகன் முனிவன் சிறப்புரைத்தல்

#267
காளை தகு கல்யாணமித்திரன் எனும் பேர்
ஆளி அடு திறல் வணிகன் அரசன் உயிர் அனைய
கேள் ஒருவன் வந்து இடை புகுந்து அரச கெட்டேன்
வாள் உருவுகின்றது என் மாதவன் முன் என்றான்.

#268
வெறுத்து உடன் விடுத்து அரசினைத் துகள் எனப் பேர்
அறப் பெரு மலைப் பொறை எடுத்தவன் அடி-கண்
சிறப்பினை இயற்றிலை சினத்து எரி மனத்தால்
மறப் படை எடுப்பது என் மாலை மற வேலோய்.

#269
ஆக எனின் ஆகும் இவர் அழிக எனின் அழிப
மேகம் இவண் வருக எனின் வரும் அதுவும் விதியின்
ஏக மனராம் முனிவர் பெருமை இது ஆகும்
மாக மழை வண் கை மத யானை மணி முடியோய்.

#270
அடைந்தவர்கள் காதலினொடு அமரர் அரசர் ஆவர்
கடந்தவர்கள் தமது இகழ்வில் கடை_நரகில் வீழ்வர்
அடைந்த நிழல் போல் அருளும் முனிவும் இலர் அடிகள்
கடந்தது இவண் உலக இயல்பு கடவுளவர் செயலே.

#271
இந்திரர்கள் வந்து அடி பணிந்து அருளுக எனினும்
நிந்தையுடன் வெம் துயர்கள் நின் அனர்கள் செயினும்
தந்தம் வினை என்று நமர் பிறர் எனவும் நினையார்
அந்தரம் இகந்து அருள் தவத்து அரசர் தாரோய்.

#272
இ உலகின் எவ்வுயிரும் எம் உயிரின் நேர் என்று
அவ்வியம் அகன்று அருள் சுரந்து உயிர் வளர்க்கும்
செவ்விமையின் நின்றவர் திருந்து அடி பணிந்து உன்
வெம்_வினை கடந்து உயிர் விளங்கு விறல் வேலோய்.

#273
என்று இனிது கூறும் வணிகன் சொல் இகழாதே
கன்று சினமும் கரதலப் படையும் மாற்றி
இன்று இவனை என்னை தொழுமாறு அளியன் யாவன்
கன்று துகள் துன்று கரு_மேனியினன் என்றான்.

#274
இங்கு உலகு தொழும் முனியை யாவன் எனின் இது கேள்
கங்கை குல திலகன் இவன் கலிங்க_பதி அதனைப்
பொங்கு புய வலியில் பொது_இன்றி முழுது ஆண்ட
சிங்கம் இவன் என்று தெளி தேர்ந்து உணரின் வேந்தே.
**இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு முனிவர்பெருமையைத் தெளி
** விக்கின்றான்

#275
மேகம் என மின்னினொடு வில்லும் என வல்லே
போகமொடு பொருள் இளமை பொன்றும் நனி என்றே
ஆக துறவு அருள் பெருகும் அறனொடு அதன் இயலே
போகம் மிகு பொன்_உலகு புகுவன் என நினைவான்.

#276
நாடு நகரங்களும் நலம்கொள் மடவாரும்
ஆடு கொடி யானை அதிர் தேர் புரவி காலாள்
சூடும் முடி மாலை குழை தோள்_வளையொடு ஆரம்
ஆடை முதலாயினவொடு அகல்க என விட்டான்.

#277
வானவரும் மண்ணின் மிசை அரசர்களும் மலை மேல்
தானவரும் வந்து தொழு தவ உருவு கொண்டான்
ஊன மனம் இன்றி உயிர்கட்கு உறுதி உள்ளிக்
கான மலை நாடுகள் கலந்து திரிகின்றான்.

#278
யானும் அலது எனதும் அலது இதமும் அலது என்று
மானம் உடை மாதவனின் மேனி மகிழானாய்
ஏனை வினை மாசு தனது உருவின் நிறுவாதே
ஞான ஒளி நகைசெய் குணம் நாளும் அணிகின்றான்.

#279
ஈடு_இல் முனி யோகினது பெருமையினில் இறைவ
காடு படு கொலையினொடு கடிய வினை நின்னைக்
கூடுவது ஒழிந்தது-கொல் இன்று கொலை வேலோய்
நாடுவது என் ஞமலி இவை நணுகலகள் காணாய்.

#280
என்று அவன் உளம்கொள இயம்பினன் இயம்பச்
சென்று திரு அடி_மலர்கள் சென்னி மிசை அணியா
இன்று எனது பிழை தணிய என் தலை அரிந்து
நின்ற முனி சரணில் இடல் என்று நினைகின்றான்.

#281
இன்னது நினைந்தது இவன் என்று கையெடுத்தே
மன்ன நின் மனத்தது விடுத்திடு மனத்தில்
தன் உயிரின் மன் உயிர் வளர்க்கை தகவு ஆனால்
நின் உயிரை நீ களையின் இன் அருள் அது என்னாம்.

#282
முன்னம் உரை செய்த பொருள் முடிந்திலது முடியப்
பின்னும் மிகை பிறவும் உரை பேசு திறம் நினைவும்
துன் உயிரின் முன் இது துணிந்த பிழை தூரப்
பின்னை நினைக்கின்ற இது பிழை பெரிதும் என்றான்.

#283
மன்னவன் மனத்ததை விரித்து அருள் வளர்க்கும்
சொல் நவில் சுதத்தமுனி தொன் மலர்_அடி-கண்
சென்னி முடி துன்னு மலர் சென்று உற வணங்கிப்
பன்னி அருள் இறைவ எமர் பவம் முழுதும் என்றான்.

#284
ஆங்கு முனி அவதியின் அறிந்த பொருள்-அதனை
வாங்கி அவன் உணரும் வகை வைத்து அருள்செய்கின்றான்
ஈங்கு முன் இயற்றிய தவத்தினில் அசோகன்
ஓங்கு புகழ் அமர்_உலகம் ஒன்றினுள் உவந்தான்.
**சுருங்கக் கூறிய அசோகன் வரலாற்றை விளங்க உரைத்தல்

#285
அரு மணியின் ஒளி திகழும் அமரனவன் ஆகிப்
பிரமன் உலகு-அதனுள் மிகைபெறு கடல்கள் பத்தும்
திரு மணிய துணை முலைய தெய்வ மடவாரோடு
அருமை_இலன் அகம் மகிழ்வின் மருவும் அவன் மாதோ.

#286
வஞ்சனையில் அன்னையுடன் மன்னவனை நஞ்சில்
துஞ்சும் வகை சூழ்ந்து தொழுநோய் முழுதும் ஆகி
அம் சில் மொழி அமிர்தமதி அரு நரகில் வீழ்ந்தாள்
நஞ்சு அனைய வினை நலிய நாம நகை வேலோய்.

#287
இருளின்_இருள் இருள் புகையொடு அளறு மணல் பரலின்
மருள்செய் உருவின பொருளின் வரு பெயரும் அவையே
வெருள்செய் வினை தரு துயரம் விளையும் நிலம் இசையத்
தெருளின் எழு வகை நரக குழிகள் இவை தாரோய்.

#288
மேருகிரி உய்த்து இடினும் வெப்பமொடு தட்பம்
நீர் என உருக்கிடும் நிலப் புரைய ஐந்தாம்
ஓரின் உறு புகை_நரகின் உருகி உடன் வீழ்ந்தாள்
ஆரும்_இலள் அறனும்_இலள் அமிர்தமதி-அவளே.

#289
ஆழ்ந்த குழி வீழ்ந்த பொழுது அரு நரகர் ஓடிச்
சூழ்ந்து துகையா எரியுள் இட்டனர்கள் சுட்டார்
போழ்ந்தனர்கள் புண் பெருக வன் தறி புடைத்தார்
மூழ்ந்த வினை முனியும் எனின் முனியலரும் உளரோ.

#290
செம் தழலின் வெம் தசைகள் தின்றனை முன் என்றே
கொந்து அழலின் வெந்து கொதுகொது என உருகுஞ்
செம் தழலின் நிந்திதர்கள் செம்புகள் திணிப்ப
வெம் தழலின் நைந்து உருகி விண்டு ஒழுகும் முகனே.

#291
கருகரு கரிந்தனன் உருவின் ஒரு பாவை
பெருகு எரியின் இட்டு உருகும் இதுவும் இனிதே என்று
அருகு அணைய நுந்துதலும் அலறி அது தழுவி
பொருபொரு பொரிந்து பொடி ஆம் உடலம் எல்லாம்.

#292
நா அழுகி வீழ் அமுது நஞ்சு உண மடுத்தார்
ஆ அலறி அது உருகி அலமரினும் ஐயோ
சாவ அரிது இவண் அரசி தகவு_இல் வினை தரும் நோய்
யாவும் விளை நிலம்-அதனில் இனிய உளவாமோ.

#293
முன்னும் நுமர்-தம் தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்கு
இன்னும் இனிது உன் அவயவங்கள் தினல் என்றே
தன் அவயவம் பல தடிந்து உழல வைத்துத்
தின்ன என நொந்து அவைகள் தின்னும் மிகைத் திறலோய்.

#294
தில_பொறியின் இட்டனர் திரிப்புவும் நெருப்பின்
உலைப் பெருகு அழல் தலை உருக்கவும் உருத்துக்
கொலைக் கழுவின் இட்டனர் குலைப்பவும் உருக்கும்
உலைப்ப அரு வருத்தம்-அது உரைப்ப அரிது கண்டாய்.

#295
ஒரு பதினோடு ஒரு பதினை உந்தி அதன் உம்பர்
இரு பதினொடு ஐந்தினில் உயர்ந்த புகை என்னும்
பொருவ அரிய துயரினவை பொங்கி உடன் வீழும்
ஒரு பதினொடு எழு கடல்கள் அளவும் ஒளித் தாரோய்.

#296
தொல்லை வினை நின்று சுடுகின்ற நரகத்துள்
அல்லல் இவை அல்லனவும் அமிழ்தமதி உறுவள்
எல்லை_இல இதுஇது என எண்ணி ஒரு நாவில்
சொல்ல உலவா ஒழிக சுடரும் நெடு முடியோய்.

#297
எண்ணம்_இல் இசோதரனொடு அன்னை இவர் முன் நாள்
கண்ணிய உயிர்க் கொலை வினைக் கொடுமையாலே
நண்ணிய விலங்கிடை நடுங்கு அஞர் தொடர்ந்த
வண்ணம் இது வடிவம் இவை வளர் ஒளிய பூணோய்.

#298
மன்னன் மயிலாய் மயிரி முள்_எயினம் மீனாய்
பின் இரு முறைத் தகரும் ஆகியவன் ஏகி
மன்னு சிறை வாரணம்-அது ஆகி வதம் மருவி
மன்னவ நின் மகன் அபயன் ஆகி வளர்கின்றான்.

#299
சந்திர முன் மதி ஞமலி நாகமொடு இடங்கர்
வந்து மறி மயிடமுடன் வாரணமும் ஆகி
முந்தை வினை நெகிழ முனி மொழியும் வதம் மருவி
வந்து உன் மகள் அபயமதி ஆகி வளர்கின்றாள்.

#300
இது நுமர்கள் பவம் வினைகள் விளையும் இயல்பு இது என்று
எதுவின் முனி அருளும் மொழி அவையவைகள் நினையா
விதுவிது விதிர்த்து அகம் நெகிழ்ந்து மிகை சோரா
மது மலர் கொள் மணி முடிய மன்னவன் மருண்டான்.
**மக்கள் இருவரும் முனிவன்பால் வருதல்

#301
இன்ன வகை மன்னன் முனி இயம்பியது கேளாத்
தன் அருகு நின்ற ஒரு சண்டனை விடுப்ப
மன் அபயவுருசியொடு மதி-அவளும் வந்தே
சொல் நவில் அருள் குரவன் துணை அடி பணிந்தார்.

#302
ஆங்கு அபயவுருசியுடன் அபயமதி-தானும்
தாங்கலர்கள் சென்று தவ அரசன் அருளாலே
நீங்கிய பவங்களை நினைந்தனர் உணர்ந்தார்
ஆங்கு அவர்கள் உறு கவலை யாவர் பிறர் அறிவார்.
**இருவரும் வருந்துதல்

#303
மக்களுள் இரட்டையாக மாறினம் பிறந்த யாம் முன்
மிக்க தீ_வினையால் உற்ற விளைவினை உணர்ந்தேம் ஐய
துக்கமே தொடர நோற்றுத் துணை அறம் துறந்த பெற்றி
இக் கதி துன்னிக் கண்டேம் இனிக் கதிக்கு என் செய்வோமே.

#304
தந்தையும் தந்த தாயும் ஆகிய தழுவு காதல்
மைந்தனும் மடந்தை-தானும் மாற்றிடைச் சுழன்ற பெற்றி
சிந்தையில் நினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு
கொந்து எரி அழலுள் வீழ்ந்த கொள்கையன் மன்னன் ஆனான்.

#305
எந்தையும் எந்தை தாயும் எய்திய பிறவி-தோறும்
வெம் துயர் விளைவு செய்த வினையினேன் என் செய்கேனோ
அந்தம்_இல் உயிர்கள் மாய அலை பல செய்து நாளும்
வெம் துயர் நரகின் வீழ்க்கும் வினை செய்தேன் என் செய்கேனோ.

#306
அருளொடு படர்தல் செய்யாது ஆர் உயிர்க்கு அழிவு செய்தே
பொருளோடு போகம் மேவிப் பொறி_இலேன் என் செய்கேனோ
அருளினது உருவம் ஆய அடிகள் நும் அடிகட்கேயும்
தெருள்_அலன் நினைந்த தீமைச் சிறியனேன் என் செய்கேனோ.

#307
மா இயல் வடிவு-தன்னை வதைசெய்தார் வண்ணம் ஈதேல்
ஆ இனி அளியன் ஏதும் அஞ்சிலேன் அவதி என்-கொல்
காவல அருளுக என்னக் கலங்கினன் அரசன் வீழ
மா வல அஞ்சல் என்று அ மாதவன் உரைவளர்த்தான்.

#308
அறிவு_இலராய காலத்து அமைவு_இல செய்த எல்லாம்
நெறியினில் அறிவது ஊற நின்றனர் விலகி நிற்பர்
அறியலர் வினைகளாலே அரு நவைபடுநர்க்கு ஐய
சிறிய நல் வதங்கள் செய்தே தீ_வினை அகல்வர் காணாய்.

#309
அருள் புரி மனத்தர் ஆகி ஆர் உயிர்க்கு அபயம் நல்கிப்
பொருள் கொலை களவு காமம் பொய்யொடு புறக்கணித்திட்டு
இருள்புரி வினைகள் சேரா இறைவனது அறத்தை எய்தின்
மருள் செய வருவது உண்டோ வானவர் இன்பம் அல்லால்.

#310
என்றலும் அடிகள் பாதத்து எழில் முடி மலர்கள் சிந்தக்
கன்றிய வினைகள் தீரக் கருணையின் உருகி நெஞ்சில்
சென்றனன் அறிவு காட்சி திருவறத்து ஒருவன் ஆனான்
வென்றவர் சரண் அடைந்தார் விளைப்பது வென்றி அன்றோ.

#311
வெருள் செயும் வினைகள்-தம்மை வெருவிய மனத்தன் ஆகி
மருள் செயும் உருவ மாட்சி மகனொடு மங்கை-தன்னை
அருள் பெருகு உவகை-தன்னால் அமைவு_இலன் அளியன் உம்மைத்
தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க என்றான்.

#312
ஓர் உயிர்_தோழன் ஆகி உறுதி சூழ் வணிகன்-தன்னை
ஆர் உயிர்க்கு அரணம் ஆய அடிகளோடு ஐய நீயும்
நேர் எனக்கு இறைவன் ஆக நினைவல் என்று இனிய கூறிப்
பார் இயல் பொறையை நெஞ்சில் பரிந்தனன் மன்னன் ஆனான்.

#313
மணி முடி மகனுக்கு ஈந்து மன்னவன் தன்னோடு ஏனை
அணி முடி அரசர்-தாமும் அவன் உயிர்_துணைவன் ஆய
வணிகனும் மற்றுளாரும் மா தவத்து இறையை வாழ்த்தித்
துணிவினர் துறந்து மூவார் தொழுது எழும் உருவம் கொண்டார்.

#314
தாதை-தன் துறவு முற்றத் தான் உடன்பட்டது அல்லால்
ஓத நீர் வட்டம்-தன்னை ஒரு துகள் போல உள்ளத்து
ஆதரம்பண்ணல் செல்லா அபயனும் அரசு-தன்னைக்
காதலன் குமரன் தம்பி கைப்படுத்தனன் விடுத்தான்.

#315
மாதவன் மலர்ந்த சொல்லால் மைந்தனும் மங்கை ஆய
பேதை அம் பிணை_அனாளும் பிறப்பு இனிது உணர்ந்த பின்னர்
ஆதரம்பண்ணல் போகத்து அஞ்சினர் நெஞ்சில் நஞ்சாய்
மாதவன் சரணம் ஆக வனம்-அது துன்னினாரே.

#316
வினைகளும் வினைகள்-தம்மால் விளை பயன் வெறுப்பு மேவித்
தனசரண் அணையுளார்க்குத் தவ அரசு அருளத் தாழ்ந்து
வினையின விளைவு-தம்மை வெருவினம் அடிகள் மெய்யே
சினவரன் சரணம் மூழ்கிச் செறி தவம் படர்தும் என்றார்.

#317
ஆற்றல்-அது அமையப்பெற்றால் அரும் தவம் அமர்ந்து செய்-மின்
சாற்றிய வகையில் மேன்மேல் சய்யம் மா சய்யமத்தின்
ஏற்ற அ நிலைமை-தன்னை இது பொழுது உய்-மின் என்றான்
ஆற்றலுக்கு ஏற்ற ஆற்றால் அ வழி ஒழுகுகின்றார்.

#318
அரும் கலம் மும்மை-தம்மால் அதிசயம் உடைய நோன்மைப்
பெரும் குழு ஒருங்கு சூழப் பெறற்கு அரும் குணங்கள்-தம்மால்
சுருங்கல்_இல் சுதத்தன் என்னும் துறவினுக்கு அரசன் இ நாள்
அரும் கடி கமழும் சோலை-அதனுள் வந்து இனிது இருந்தான்.

#319
அனசனம் அமர்ந்த சிந்தை அரும் தவன் இசோமதிக்குத்
தனயர்கள்-தம்மை நோக்கித் தரியலீர் சரியை போ-மின்
என அவர் இறைஞ்சி மெல்ல இ நகரத்து வந்தார்
அனையவராக எம்மை அறிக மற்று அரச என்றான்.

#320
இனையது பிறவி மாலை எமரதும் எமதும் எண்ணின்
இனையது வினைகள் பின் நாள் இடர்செய்த முறைமை-தானும்
இனையது வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின்
இனையது பெருமை-தானும் இறைவனது அறத்தது என்றான்.

#321
செய்த வெந்தியக் கொலை ஒரு துகள்-தனில் சென்று உறு பவம்-தோறும்
எய்துமாயிடில் தீர்ந்திடாக் கொலை இஃது இரு நில முடி வேந்தே
மையல்கொண்டு இவண் மன் உயிர் எனைப் பல வதைசெய வரும் பாவத்து
எய்தும் வெம் துயர் எப்படித்து என்று உளைந்து இரங்குகின்றனம் என்றான்

#322
ஐய நின் அருளால் உயிர்_கொலையினில் அரு வினை நரகத்து ஆழ்ந்து
எய்தும் வெம் துயர் எனைப் பல கோடி கோடியின் உறு பழி தீர்ந்தேன்
பொய்யது-அன்று இது புரவல_குமர நின் புகழ் மொழி புணையாக
மை_இல் மா தவத்து ஒரு கடல் ஆடுதல் வலித்தனன் இது என்றான்.

#323
இன் சொல் மாதரும் இளம் கிளைச் சுற்றமும் எரித் திரள் என அஞ்சிப்
பொன் செய் மா முடிப் புதல்வருள் புட்பதந்தற்கு இது பொறை என்றே
மின் செய் தாரவன் வெறுத்தனன் அரசியல் விடுத்து அவருடன் போகி
முன் சொல் மா மலர்ப் பொழிலினுள் முனிவரன் தொழுது நல் முனி ஆனான்.

#324
வெய்ய தீ_வினை வெருவுறு மா தவம் விதியின் நின்று உதிகொண்டான்
ஐயதாம் அதிசயமுற அடங்கினன் உடம்பினை இவண் இட்டே
மையல் வானிடை அனசனர் குழாங்களுள் வானவன்-தான் ஆகித்
தொய்யில் மா முலைச் சுரவரர் மகளிர்-தம் தொகுதியில் மகிழ்வுற்றான்.

#325
அண்ணலாகிய அபயனும் தங்கையும் ஆயுகம் மிகை_இன்மை
நண்ணி நாயக முனிவனின் அறிந்தனர் நவின்ற நற்குணம் எல்லாம்
கண்ணினார் தமது உருவினது உடலங்கள் கழிந்தன கழி போகத்து
எண்_இல் வான்_உலகத்து இரண்டாவதில் இமையவர்-தாம் ஆனார்

#326
அம் பொன் மா முடி அலர் கதிர்க் குண்டலம் அரு மணி திகழ் ஆரம்
செம்பொன் மா மணி தோள்_வளை கடகங்கள் செறி கழல் முதலாக்
நம்பும் நாள் ஒளி நகு கதிர்க் கலங்களின் நலம் பொலிந்து அழகு ஆர்ந்த
வம்பு வான் இடு தனு என வடிவு உடை வானவர் ஆனாரே.

#327
வந்து வானவர் திசை-தொறும் வணங்கினர் வாழ்த்தினர் மலர்_மாரி
மந்தமாருதம் துந்துபி வளர் இசை மலிந்தன மருங்கு எங்கும்
அந்தில் ஆடினர் பாடினர் விரும்பிய அரம்பையர் அருகு எல்லாம்
வந்து தேவியர் மன்மத_வாளியின் மகிழ்ந்து உடன் புடைசூழ்ந்தார்

#328
மாசு_இல் மா மணி மேனியின் வாசம் ஒர் ஓசனை மணம் நாறத்
தேசு ஒர் ஓசனை திளைத்திட முளைத்து எழு தினகரன் அனையார்கள்
ஆசு_இல் எண்_குணன் அவதியொடு அமைந்தனர் அலை கடல் அளவு எல்லாம்
ஏசு_இல் வான்_உலகு இணை_இல் இன்பத்தினில் இசைந்து உடன் இயல்கின்றார்
**நூற்பயன்

#329
வெருவுறு வினை வலி விலக்குகிற்பது
தருவது சுர_கதி தந்து பின்னரும்
பொருவு_அறு சிவகதி புணர நிற்பது
திருவற நெறியது செவ்வி காண்-மினே.
**ஆசிரியர் அறங்கூறல்

#330
ஆக்குவது ஏது எனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏது எனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏது எனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏது எனில் விரதம் காக்கவே.
*