1 உதயணகுமார காவியம்


@1. உஞ்சைக் காண்டம்
**கடவுள் வாழ்த்து

#1
மணியுடன் கனக முத்தம் மலிந்த முக்குடை இலங்க
அணி மலர்ப் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமிநாதர் பாதம்
பணிபு பின் வாணி பாதம் பண்ணவர் தாள்களுக்கு எம்
இணை கரம் சிரத்தில் கூப்பி இயல்புறத் தொழுதும் அன்றே.

#2
பொன் எயில் நடுவண் ஓங்கும் பூ நிறை அசோக நீழல்
இன் இயல் ஆலயத்துள் ஏந்து அரியாசனத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கான் உதயணன் கதை விரிப்பாம்.
**அவையடக்கம்

#3
மணி பொதி கிழியும் மிக்க மணியுடன் இருந்த போழ்தில்
மணி பொதி கிழி-அதன்னை மணியுடன் நன்கு வைப்பார்
துணிவினில் புன்சொலேனும் தூய நற்பொருள் பொதிந்தால்
அணி எனக் கொள்வார் நாமும் அகத்தினுள் இரங்கல் செல்லாம்.
**பயன்

#4
ஊறும் தீவினை வாய்-தன்னை உற்று உடன் செறியப்பண்ணும்
கூறு நல் விதி புணர்ந்து குறைவு இன்றிச் செல்வம் ஆம் முன்
மாறுறு கருமம்-தன்னை வரிசையின் உதிர்ப்பை ஆக்கும்
வீறுறும் உதிர்ப்பின் தன்மை விளம்புதற்பாலது ஆமோ.
** நூல் – நாட்டுச் சிறப்பு

#5
இஞ்சி மூன்று உடைய கோமான் எழில் வீரநாதன் இந்தப்
புஞ்சிய நிலத்தோர்க்கு எல்லாம் பொற்பு நல் அற நல் மாரி
விஞ்சவே சொரியும் காலம் வெண்மதிக் குடைக் கீழ் வாழும்
எஞ்சல்_இல் காட்சி மன்னன் இருக்கை நாடு உரைத்தும் அன்றே.
**நாவலந்தீவு

#6
பூவும் நல் தளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்
நாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவு நல் கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த
நாவலந்தீவு நந்தினன் மணி போன்றது அன்றே.
**வத்தவநாடு

#7
வேதிகை சிலை வளைத்து வேதண்ட நாணேறிட்டுப்
போதவும் வீக்கினால் போல் பொற்பு உடைப் பரதம்-தன்னில்
ஓதிய தரும கண்டத்து ஓங்கிய காவு நின்று
வாதத்தால் சுகந்தம் வீசும் வத்தவ நாடு அதாமே.
**கோ நகரம்

#8
இஞ்சி மிக்கு எழுந்தே ஓங்கி இலங்கிய அமரலோகம்
எஞ்சல்_இல் எல்லை காணா எழில்பெற நிற்றல் நோக்கி
அஞ்சல் இல் வருக என்றே அணிபெற இலங்கி நீண்ட
குஞ்சி நல் கொடிக் கரத்தால் கூவியிட்டு அழைக்கும் அன்றே.

#9
முகில் தவழ் மாட மீதில் முத்து அணி மாலை நான்றே
இகலுறும் அமளியின் மேல் எழில் மங்கை மைந்தர் தாமும்
பகல்_இரவு இன்றிப் போகம் பண்பினால் துய்த்திருப்பார்
நகரி கௌசாம்பி என்னும் நாமம் ஆர்ந்து இலங்கும் அன்றே.
**அரசன்

#10
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து
வான் உமிழ் வாரி அன்ன வண்_கையன் வண்டு அரற்றும்
தேன் உமிழ் அலங்கல் தோளான் செல்வத்தில் குபேரன் அன்னான்
தான் உமிழ் கிரண மார்பன் சதானிகன் அரசன் ஆமே.
**கோப்பெருந்தேவி

#11
மன்னவன் உள்ளத்து_உள்ளாள் மா மணி மயில் அம் சாயல்
அன்ன மெல் நடை வேல்_கண்ணாள் அருந்ததி அனைய நங்கை
பொன் அணி சுணங்கு பூத்த புணர் முலை அமிர்தம்_அன்னாள்
மின்னு நுண்_இடையாள் நாமம் மிகாவதி என்று மிக்காள்.

#12
கற்பு உடைத் திருவில் நங்கை காரிகை-தன் வயிற்றில்
சற்புருடு ஒருவன் வந்து சார்ந்து அவதரித்து மிக்க
நற்பு உடைத் திங்கள் ஒன்பான் நன்கு அமைந்திருக்கும் ஓர் நாள்
பொற்பு உடை மஞ்சம் மீதில் பொலிவுடன் இருந்த போழ்தில்.
**மிருகாபதியை பறவை தூக்கிச் செல்லல்

#13
செந்துகில் மூடிக்கொண்டு திரு நிலாமுற்றம்-தன்னில்
அந்தமாய் துயில்கொள்கின்ற ஆய்_இழை-தன்னைக் கண்டே
அந்தரத்து ஓடுகின்ற அண்டபேரண்டப்புள் ஒன்று
அம் தசை என்று பற்றி அன்று வான் போயிற்று அன்றே.

#14
மற்று அவள் தந்தை-தானும் மா முனி ஆகி நிற்கும்
சற்கிரி விபுலம் மன்னும் சாரல் அம் வனத்தில் சென்று
நல் தவன் அருகில் வைப்ப நல் துயில்விட்டு எழுந்தாள்
பற்று உயிர் உண்ணாப் புள்ளும் பறந்து வான் போயிற்று அன்றே.
**அரசி கருவுயிர்த்தல்

#15
நிறை_மதி முக நல் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்
பொறை-வயின் நோய் மீக்கூரப் பொருவு_இல் வான் கோள்கள் எல்லாம்
முறையின் நல் வழியை நோக்க மொய்ம்பன் அத் தினத்தில் தோன்ற
அறை அலை கடலில் சங்கம் மாணி முத்து ஈன்றது ஒத்தாள்.

#16
பொரு கயல்_கண்ணினாள் தான் போந்ததை அறிந்து அழுங்கித்
திரு மணி கிடந்தது என்னச் செழு மகன் கிடப்பக் கண்டு
பெருகிய காதலாலே பெரும் துயர் தீர்த்து இருப்ப
மருவும் நல் தாதையான மா முனி கண்டு வந்தான்.
**குழந்தைக்குப் பெயரிடல்

#17
தவ முனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி
அவண் இனிது ஓம்ப அப்பால் அருக்கனன் உதய காலத்து
உவமை இன்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார்
இ வணம் அத் தாயும் சேயும் இருடி-பால் இருந்தார் அன்றே.
**உதயணன் பெற்ற பேறுகள்

#18
பிரமசுந்தர யோகிக்குப் பிறந்தவன் யூகியோடும்
இருவரும் வளர்ந்தே இன்பக் கலைக் கடல் நீந்திக் காணக்
கரிணமும் புள்ளும் மற்றும் கண்டு அடி வீழும் கீதப்
புரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனி அருளில் பெற்றான்.
**உதயணன் கோடபதியின் உதவியால் தெய்வ யானை பெறுதல்

#19
மை வரை மருங்கில் நின்ற மலை என இலங்குகின்ற
தெய்வ நல் யானை கண்டு சென்று தன் வீணை பாடப்
பையெனக் களிறும் கேட்டுப் பணிந்தபடி இறைஞ்சி நின்று
கை-அது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான்.
**தெய்வ யானை உதயணன் கனவில் கூறுதல்

#20
நன்று இருள் கனவினாக நயம் அறிந்து இனிது உரைக்கும்
பன்னிடும் பாகன் வந்து பற்றியே ஏறினாலும்
இன்றை நாள் முதலா நீ நான் இன்றியே முன் உண்டாலும்
அன்று உன்-பால் நில்லேன் என்றே அக் கரி உரைப்பக் கேட்டான்.
**உதயணன் மாமனாகிய விக்கிரமன் அந்த தவப் பள்ளிக்கு வருதல்

#21
செல்லும் அக் காலம்-தன்னில் செறிந்தவன் புதல்வனான
வெல் களிற்றி யானை வேந்தன் விக்கிரன்-தனக்கு மக்கள்
இல்லை என்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல
சொல் அருள் முனிவன் பாதம் தொழுது நன்கு இருந்தான் அன்றே.
**விக்கிரமன் உதயணன் யூகியைப் பற்றி முனிவரிடம் வினவுதல்

#22
புரவலனில் இனியராம் இப் புதல்வர்கள் யார்-கொல் என்ன
வரமுனி அருளக் கேட்டு மகிழ்ந்து தன் ஆயம் எல்லாம்
சிரசு அணி முடியும் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப் போக்கி
விரவிய தவத்தனாக வேண்டுவது எண்ணம் என்றான்.
**உதயணன் அரசுரிமை பெறுதல்

#23
முனியொடு தங்கை-தன்னை முயன்று இரந்து எய்தி நாகம்-
தனை அன வெம் கயத்தில் தனயனை ஏற்றிப் போய்த் தன்
மனன் நிறை நாட்டை அந்த மருகனுக்கு ஈந்து போந்து
முனி வனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றான் அன்றே.
**சாதானிகன் மிருகாபதியைக் காணல்

#24
இளமையை இகந்து மிக்க இனிய நல் குமரன் ஆகி
வளமையில் செங்கோல்-தன்னை வண்மையின் நடத்தினான் ஆங்கு
இள மயில் அனைய தேவிக்கு இரங்கிய சாதானிகன் தான்
உளம் மலி கொள்கை ஆன்ற ஒரு தவன் கண்டு உரைத்தான்.
**மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்

#25
தேவியின் வரவும் நல்ல திருமகன் செலவும் கேட்டு
மாவலன் மனம் மகிழ்ந்து வந்து ஊர் புக்கு இருக்கும் நாளில்
தேவியும் வந்து கூடிச் சிறந்த நல் புதல்வர்-தம்மைத்
தேவிளங்குமரர் போலச் செவ்வியில் பயந்தாள் அன்றே.

#26
பிங்கல கடகர் என்று பேர் இனிது இட்டு மன்னன்
தங்கிய காதலாலே தரணி ஆண்டு இனிது செல்லக்
குங்குமம் அணிந்த மார்பக் குமரனும் யூகியும் போய்
அங்கு உள தேசம் எல்லாம் அடிப்படுத்து இனிது இருந்தார்.
**சதானிகன் துறவியாதல்

#27
உதயணகுமரன்-தன்னை உற்று உடன் அழைத்துப் பூமிப்
பதம் உனக்காக என்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்
கதம் உறு கவலை நீங்கும் காட்சி நல் தவத்தன் ஆகி
இதமுறு யோகம்-தன்னில் எழில்பெற நின்றான் அன்றே.
**உதயணனுடைய அமைச்சர்கள்

#28
மணி முடி கவித்த போழ்தின் வத்தவர்க்கு இறைவன் ஆனான்
அணியும் நாற்படையும் சூழ்ந்த அமைச்சரும் நால்வர் நாமம்
தணிவு_இல் சீர் யூகியோடு சார் உருமண்ணுவாவும்
துணை வயந்தகனும் தொல் சீர் இடபகனும் என்ப ஆமே.
**உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்

#29
அரசனுக்கு இனியர் ஆகி அமைச்சியல் நடத்திச் செற்றே
வரு பகை பலவும் தேய வரச் செங்கோல் உய்க்கும் காலை
அரிய நாடகங்கள் கண்டே அரசனும் உளம் ஆழாந்து
கரிணத்தை மறந்துவிட்டுக் காதலின் அடிசில் உண்டான்.
**தெய்வ யானை மறைந்து போதல்

#30
மன்னிய தெய்வ யானை மாயமாய் மறைந்துபோக
மன்னனும் மனம் தளர்ந்து மணி இழந்த அரவு போலத்
துன்னிய சோகம் மேவித் துயர் எய்தித் தேடுக என்றான்
பன்ன அரும் சேனை சென்று பார் எங்கும் தேடித்து அன்றே
**உஞ்சை நகர்

#31
சிந்து கங்கை நீர் சேர்ந்து வளம்படும்
அந்தம் ஆகும் அவந்தி நல் நாட்டினுள்
இந்து சூடிய விஞ்சி வள நகர்
உந்து மாளிகை உஞ்சை எனும் பதி.
**பிரச்சோதன மன்னன்

#32
உரைப்ப அரும் படையோர் பிரச்சோதனன்
நிரைத்த மன்னர் நிதி மிக்கு அளப்பவே
தரித்த நேமி உருட்டித் தரணி ஆண்டு
உரைத்த மாக் களிற்று ஏறோடு மன்னுவான்.

#33
பொரு_இல் மன்னவன் பொன் திறை கேட்புழித்
திருவ மன்னர் திறை தெரி ஓலையுள்
ஒரு மகன் புள்ளியிட்டது அறிந்திலன்
மருவிக் கூறலும் மன்னன் வெகுண்டனன்.
**பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்

#34
தாமரைக் கண் தழல் எழ நோக்கி அத்
தீமை செய்த திறைக் கடன் மன்னனை
நாம் மறந்திட நன்கு மறைத்தது என்
னாம் அமைச்சர் என்று அண்ணல் வினவினான்.
**அமைச்சர் விடை

#35
உறு களத்தினில் உன்னிய ஆண்மையும்
பெறு பொருள் செறி பீடு உடைக் கல்வியும்
தறுகண் வேழம் தகைக்கு உறு பெற்றியும்
மறு_இல் வீணையின் வாய்த்த நல் விஞ்சையும்.

#36
வளமையின் வந்த மன்னிய செல்வமும்
இளமை இன்பம் எழில் நல நல் குலம்
உளவன் ஆதலின் உற்ற கடன் என
அளவு நீதி அமைச்சர் உரைத்தனர்
**பிரச்சோதனன் சினவுரை

#37
வேந்தன் கேட்டு வெகுண்டு உரைசெய்தனன்
போந்து அவன் பற்றிப் போதருவீர் எனச்
சேர்ந்து அமைச்சர்கள் செய்பொருள் என் என்று
மாந்தி மற்று அவர் மற்றொன்று செய்கின்றார்.
**அமைச்சர் சூழ்ச்சி

#38
ஊன மாற்றர் மேல் யூகி போர்போனதும்
ஆனை போக அரசன் இரக்கமும்
கான யானையைக் காட்டிப் பிடிப்பதும்
மான வேலவர் மந்திரித்து ஒன்றினார்.
**அமைச்சர் மாய யானை செய்தல்

#39
அரக்கினும் மெழுகு ஆக்கிய நூலினும்
மரத்தினும் கிழி மாவின் மயிரினும்
விரித்த தோலினும் வேண்டியவற்றினும்
தரித்த யானையைத் தாம் மிக்கு இயற்றினார்.
**அமைச்சர்கள் யானையை செலுத்துதல்

#40
பொறி அமை கரிப் பொங்கும் உதரத்தில்
உறையும் மாந்தர் ஓர் தொண்ணூற்றறுவரை
மறையும் ஆயுதம் வைத்து அதன் ஓர் உடல்
நெறி கண்டு ஊர்ந்தனர் நீலமலை என.
**சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்

#41
கார் முழக்கில் களிறு ஒலிசெய்யவே
போர் மிக்க ஆனையைப் பொற்பு உடை மன்னன் முன்
ஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள்
சார்ந்த மந்திரி சாலங்காயன் என்பவன்.
**சாலங்காயன் உதயணனைச் சிறைப் பிடிக்கச் செல்லல்

#42
சாலங்காய நீ சார்ந்து தருக என
ஞாலம் காக்கும் நர_பதி செப்பலும்
வேலும் கொண்டு நல் வேந்தர்கள் வெண்குடைக்
கோலும் பிச்சமும் கொண்டு பறந்தனன்.
**நாற்பெரும் படையின் அளவு

#43
ஈரெண்ணாயிரம் எண் வரை யானையும்
ஈரெண்ணாயிரம் ஈடு_இல் புரவியும்
ஈரெண்ணாயிரம் இன் மணித் தேருடன்
ஈரெண்ணாயிர விற்படையாளரே.

#44
இத்தனையும் இயல்புடன் கூடியே
மெத்தெனா வருக என்று விடுத்தனன்
ஒத்த நல் பொறி ஓங்கிய யானையும்
வத்தவன்-தன் வனத்திடை வந்ததே.
**பொய் யானையை வேடர்கள் கண்டு உதயணனுக்கு அறிவித்தல்

#45
அ வனத்தினில் ஆன பிடிகளும்
கவ்வு கைத் தழைக் கார் இடி யானை-தன்
மவ்வல் அம் மதம் வண்டு எழ வீசலும்
அ வனச் சரர் அன்புடன் கண்டனர்.

#46
எம் இறையது வேழம் என எண்ணித்
தம்மில் ஓடி உதையற்கு உரைத்தலும்
கொம்மை வண் மணிக் கோலக் கலினமாச்
செம்மலும் சிறந்து ஏறி நடந்தனன்.
**உதயணன் தேவ யானை என்று கருதி யாழ் மீட்டல்

#47
புள் இடை தடுப்பத் தீய பொய்க்குறி செய்யக் கண்டும்
வள்ளலும் நடப்பானாக வயந்தகன் விலக்கப் போந்து
கள் அவிழ் மலர்க் கானத்துக் கள்ள நல் யானை கண்டே
உள்ளம் மெய் மொழிகள்-தம்மால் உணர்ந்தவன் இனியன் ஆனான்.

#48
நக் கணத்தை நயந்துடன் நோக்கிலன்
அக்கணத்தில் அகம் மகிழ்வு எய்தித் தன்
மிக்க வீணையை மெய் நரம்பு ஆர்த்து உடன்
தக்க ராகத்தில் தான் மிக வாசித்தான்.
**பொய்யானை உதயணன் பால் வருதல்

#49
பொறியின் வேழத்தின் பொங்கு செவியுற
உறு மனத்துடன் ஊர்ந்து முன்னே வர
மறையும் மாந்தர் கைம்மாவை அழித்திடப்
பொறி கழன்றது போர்ப் படை ஆனதே.
**போர் நிகழ்ச்சி

#50
செறுநர் செய்தது சித்திரமாம் என
முறுவல் கொண்ட முகத்தினனாகத் தன்
உறு வயந்தகன் உற்ற ஐந்நூற்றுவர்
மறு_இல் வீரியர் வந்து உடன் கூடினார்.

#51
கரந்திருந்த களிற்றினுள் சேனையும்
பரந்து முன்வந்து பாங்கில் வளைத்த பின்
விரிந்து வத்தவன் வெகுண்டு வில் நூறினான்
முரிந்து சேனை முனையின் மடிந்ததே.

#52
சாலங்காயனும் சார்ந்து வெகுண்டிட
நாலு மாப் படை வந்து நால் திக்கிலும்
மேல் எழுந்து மிகவும் வளைத்தன
காலன் போல் மன்னன் கண்கள் சிவந்தவே.

#53
புல்வாய்க் கூட்டத்துப் புக்க புலி எனக்
கொல் வாள் ஓச்சியே கூற்றம் விருந்து உண
வில் வாள்-தம்முடன் வீரர் அழிந்திட
வல் வாள் வத்தவன் வாட்கு இரையிட்டனன்.

#54
கொன்ற போரில் குருதி ஆறு ஓடவும்
நின்ற மாந்தர்கள் நீங்கி விட்டு ஓடவும்
கன்றி உள் சாலங்காயனும் மேல் வர
மன் தன் வாள் அவன் சென்னியில் வைத்தனன்.

#55
மந்திரீகளை மன்னர் வதைசெயார்
புந்தி_மிக்கோர் உரை பொருட்டு ஏறித் தன்
செந்தி வாளை அழுத்திலன் செல்வனும்
அந்த அமைச்சனை அன்பின் விடுத்தனன்.
**உதயணன் எதிரி யானை, குதிரைப் படை அழித்தல்

#56
திரளுடைக் கரி சேர்ந்து வளைத்தலும்
வரைகள் வீழ்வு என வாரணம் வீழவும்
நிரை மணித் தேர் நிலத்தில் புரளவும்
புரவிகள் பொங்கிப் பூமியில் வீழவும்.

#57
வெம் சினம் மனன் வேறு அணி நூறலும்
குஞ்சரத்தின் நல் கோட்டின் வாள் ஒடிய அத்
தஞ்சம் இன்றிய தார் உடை வேந்தனை
வெம் சொல் மாந்தர் வெகுண்டு உடன் பற்றினார்.

#58
நங்கைமார் குழல் நாள்_மலர் சூட்டும் கை
திங்கள் போலத் திலதம் எழுதும் கை
பொங்கு கொங்கையில் குங்குமம் பூசும் கை
பங்கயத்து அடிப் பாடகம் பூட்டும் கை.

#59
கீத வீணை செங்கெந்தம் அளையும் கை
ஈதல் மேவி இரவலர்க்கு ஆற்றும் கை
ஏதம்_இல் குணத்து எல் முடி மன்னன் கை
போத வெண் துகிலால் புறத்து ஆர்த்தனர்.
**உதயணன் வயந்தகனுக்கு ஓலையனுப்புதல்

#60
சிலந்தி நூலில் செறித்த நல் சிங்கம் போல்
அலங்கல் வேலினான் அன்பு உடை யூகிக்கே
இலங்க ஓலை எழுதி வயந்தகன்
நலம் கொள் கையில் நவின்று கொடுத்தனன்.
**பிரச்சோதனன் மகள் வாசவதத்தையின் கனவு

#61
காசு_இல் தேர் மிசைக் காவலுடன் செலப்
பேச அரும் பெருமைப் பிரச்சோதனன்
ஆசையின் மகள் ஆடகப் பாவை போன்ம்
வாசவதத்தை வண்மைக் கனவிடை.

#62
பொங்கு இளம் கதிர் போந்தது அமளியில்
கொங்கையைத் தழீஇக்கொண்டு உடன் செல
நங்கை கண்டு நல் தாதைக்கு உரைத்தனள்
அங்கு அ நூலின் அறிந்தவர்க் கேட்டனன்.

#63
இவள் முலைக்கு இயைந்த நல் எழில் மணம்மகன் வந்தே
துவள் இடை இள முலை தோய்ந்து கொண்டு போம் என
அவள் கனவு உரைப்பக் கேட்ட அண்ணலும் மகிழ்ந்த பின்
திவளும் மாலைத் தேர் மிசைச் செம்மல் வந்தடைந்தனன்.
**உதயணன் சிறைப் புக, வயந்தகன் யூகியைக் காணல்

#64
மன்னனை மிகவும் நொந்து மாநகர் இரங்கவும்
துன்னி வெம் சிறை_மனையில் தொல்_வினை துரப்பவும்
இன்ன நற்படி இருப்ப இயல் வயந்தகனும் தான்
சென்று யூகி-தன்னிடைத் திருமுகத்தைக் காட்டினான்.
**ஓலையைக் கண்டு யூகி துன்புறுதல்

#65
அண்ணல் கோயில் எங்கணும் அரற்றினும் புலம்பினும்
கண்ணில் நீர் அருவிகள் கால் அலைத்து ஒழுகவும்
அண்ணல் ஓலை வந்த செய்தி மான யூகி கேட்டு உடன்
புண்ணில் வேல் எறிந்து எனப் பொற்பு அழிந்து வீழ்ந்தனன்.
**யூகியின் கோட்பாடு

#66
தேறினன் எழுந்திருந்து தீயவர்கள் யானையை
மாறுதரக் காட்டி எம் மன்னனைப் பிடித்தனர்
வீறு தர அ நகரை வெம் கயத்து அழித்துப் பின்
கூறும் மன் மகளுடன் கொற்றவனை மீட்குவம்.

#67
மீள்குவம் யாம் என்று எணி வெகுண்டு போர்க்களத்தினில்
வாள் முனை கடந்தவர்க்கு வஞ்சனை செய்வோம் என
நீள் விழி நல் மாதரோடு நின்ற சுற்றத்தோர்களைக்
கோள் களைந்து புட்பகத்தில் கொண்டுவந்து வைத்தனன்.

#68
உருமண்ணுவாவினுடன் இடபகன் சயந்தியும்
திரு நிறைந்த புட்பகமும் சேர்ந்து இனிது இருக்க என்
பெருமகன் கணிகை மைந்தர் பிங்கலக் கடகரை
அரசு நாட்டி ஆள்க என்றே அன்புடன் கொடுத்தனன்.
**யூகியின் சூழ்ச்சி

#69
மன்னவற்கு இரங்கி யூகி மரித்தனன் என் வார்த்தையைப்
பன்னி எங்கணும் முறை பரப்பி வையகம்-தனில்
அன்ன தனது ஒப்புமை அமைந்ததோர் சவம்-தனை
உன்னி யூகி கான் விறகில் ஒள் எரிப்படுத்தினன்.
**யூகி அவந்தி நாடு ஏக பகை மன்னன் நாட்டினை கைப்பற்றுதல்

#70
தன் நகர் புலம்ப எங்கும் தன்னையும் கரத்தலின்
உன்னி வந்து மாற்றரசர் ஓங்கு நாடு பற்றினர்
என்று அறிந்து யூகியும் இனிச் சிறையின் மன்னனைச்
சென்று அவனைக் காண்டும் என்று தேசம் முன்னிச் சென்றனன்.

#71
துன்ன அரும் நல் கானமோடு தொல் மலையில் சார்தலும்
செந்நெல்கள் விளை வயல் செழும் புனல் நதிகளும்
மன்னும் நாடும் தான் கடந்து மா கொடி நிறைந்து இலங்கும்
நல் நகர் உஞ்சேனையின் நன்கு அமைச்சன் சென்றனன்.
**உஞ்சையில் யூகியின் செயல்கள்

#72
ஒலி கடல் அன்ன ஓசை உஞ்சேனை-தன்
புலிமுக வாயில் பொன் புடைத்து இலங்கும்
மலி குடிப் பாக்க மதில் மறைந்து இருக்க
வலிய தன் சேனை வைத்தனன் அன்றே.
**யூகி மாறுவேடத்தில் நகர் வீதியில் வருதல்

#73
இன்னவை கேட்கின் இன்னவை தருக என
மன்னவன் அறியும் அருளுரை பயிற்றி
மன்னிய வேடம் வகுத்து உடன் கொண்டு
நல் நகர் வீதி நடுவினில் வந்தான்.

#74
இருள் படு குஞ்சி இயல்படத் தூற்றி
மருள்செய மாலை வகுத்து உடன் சுற்றி
உரு நிறச் சுண்ணம் உடலினில் பூசிப்
பொருள் நலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி.

#75
செம்பொன் பட்டம் சேர்த்தினன் நுதலில்
அம் பொன் சாந்தம் அணிந்த நல் மார்பன்
செம்பொன் கச்சைச் சேர்த்தினன் அரையில்
அம் படக் கீறி அணிந்த உடையான்.

#76
கோதை உத்தரியம் கொண்ட கோலத்தன்
காதில் குழையினன் காலில் சதங்கையன்
ஊதும் குழலினன் உலரிய உடுக்கையன்
போதச் சிரசில் பொரு நீர்க் கலசன்.

#77
கொடி அணி மூதூர்க் கோல நல் வீதி
நடுவண் தோன்றி நாடகமாடிப்
படி மிசைக் கரணம் பாங்கில் தாண்டி
இடி என முழக்கி இனிதினின் வந்தான்.
**யூகியின் கூற்று

#78
இந்திரலோகம் விட்டு இந்திரன் வந்தனன்
அந்தரத்து இருந்து யான் அன்பினில் வந்தேன்
இந்திரன் எனக்கு இறை ஈண்டும் புதல்வர்க்குத்
தந்திரக்கு உமக்குத் தான் இறையாம் என.

#79
புற்றினில் உறையும் பொறி வரி ஐம் தலைப்
பற்ற அரும் நாகம் பற்றி வந்து இனிதா
உற்ற இ நகரத்துள் சிறைவைத்தார்
அற்று அதை எங்கும் அறியக் காட்டினர்.

#80
மருளும் தெருளும் வரம்பு_இல பயிற்றித்
திரளுறு செனங்கள் திறவதில் சூழப்
பெரும் தெரு எல்லாம் பிற்படப் போந்தே
அரும் சிறை_பள்ளி அருகினில் சேர்ந்தான்.
**யூகி தன் வரவினை உதயணனுக்கு உணர்த்தல்

#81
கிளைத்தலை இருவர் கற்ற கிளர் நரப்பு இசையும் கீதம்
தளைச் சிறை மன்னன் கேட்பத் தான் மகிழ் குழலின் ஊத
உளத்து இயல் பாட்டைக் கேட்டு யூகியாம் என மகிழ்ந்து
களைந்தனன் கவலை எல்லாம் காவலர்க்கு உணர்த்திப் போந்தான்.
**வீரர்கள் யூகியை அணுகி ஆராய்ந்து போதல்

#82
பல கொடி வாயில் செல்லப் பார் மன்னன் சேனை வந்து
நலமுறு வடிவு நோக்க நாகத்தின் கோடு பாய்ந்த
கலன் அணி மார் வடுவ்வைக் கஞ்சுகத் துகிலின் மூடத்
தலை முதல் அடி ஈறாகத் தரத்தினால் கண்டு போந்தார்.
**யூகி யானைக்கு வெறியூட்டுதல்

#83
பித்தன் நல் பேயன் என்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு
வெற்றி நல் சேனை மற்றும் வெம் சிறை காக்க என்றான்
மற்று இனி யூகி போந்து மலி குடிப் பாக்கம் சேர்ந்தே
அற்றை நாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான்.

#84
வாளொடு கை வில் ஏந்தி வயந்தகன்-தன்னோடு எண்ணித்
தோள் அன தோழன் கூடத் தூபத்துக்கு ஏற்ற வத்தும்
வேளை ஈது என்று கொண்டு விரகினால் கயிறு பற்றித்
தாள் ஒத்த கொம்மை மீதில் தரத்தினால் இழிந்தான் அன்றே.
**நளகிரியின் செயல்

#85
ஆனை-தன் நிலை கண்டு எய்தி அகில் இடும் புகையும் மூட்டிச்
சேனை மன் நகர் அழித்துச் சிறைவீடு உன் கடனே என்று
மான நல் யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப
யானை தன் மதக் கம்பத்தில் அரும் தளை உதறிற்று அன்றே
**யானை பாகரைக் கொல்லுதல்

#86
நீங்கிடம் இது என்று எண்ணி நிலை மதில் ஏறிப் போகத்
தூங்கு இருள்-தன்னில் ஆனை சுழன்று அலைந்து ஓடப் பாகர்
பாங்கினால் வளைப்பப் பொங்கிப் படு முகில் முழக்கம் என்ன
ஆங்கு அது பிடுங்கிக் கையால் அவரைக் கொன்றிட்டது அன்றே.
**பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயலைக் கானல்

#87
வேழமும் மதம்கொண்டு ஓட வேந்தன் கேட்டு இனிது எழுந்து
வேழ நல் வேட்டம் காண வெம் முலை மாதரோடும்
ஆழி நல் இறைவன் தானும் அணி மிகு மாடம் ஏறிச்
சூழ நல் மாதர் நிற்பத் துளக்கு இன்றி நோக்கினானே.
**நளகிரியின் தீயச் செயல்கள்

#88
கூட மாளிகைகள் எல்லாம் கோட்டினால் குத்திச் செம்பொன்
மாடமும் மதிலும் மற்று மறித்து அஃது இடித்துச் செல்ல
ஆடவர் கூடி ஓடி அயில் குந்தம் தண்டம் ஏந்தி
நாடி நல் கையால் தட்டி நால் திசை சூழ்ந்து நின்றார்.

#89
கூற்று உரு எய்தி ஓடிக் கோட்டிடைக் குடர்கள் ஆடக்
காற்று என முழக்கி வேழம் கண்ட மாந்தரைத் தன் கையால்
நாற்பத்தெண்பேரைக் கொன்று நடுவுறப் பிளந்திட்டு ஓடி
மாற்ற அரும் கோட்டை வாயில் மதில்புறம் போந்தது அன்றே.

#90
அறுநூற்றின் மீதில் ஐம்பது ஆன நல் சேரி-தானும்
உறு நூற்றில் ஏழை மாற உள்ள நால் பாடியோடும்
நறு மலர் கந்தம் வீசும் நன்கு உள காவும் மற்றும்
பெறு மத யானை கோட்டால் பெருநகர் அழித்தது அம்மா.
**உஞ்சை மாந்தர் அலறல்

#91
பாடும் நல் மகளிர் எல்லாம் பாட்டு ஒழிந்து அரற்றி ஓட
ஆடும் நல் மாதர்-தாமும் ஆடல் விட்டு உலந்து செல்லக்
கூடும் நல் மங்கை மைந்தர் குலைந்தவர் ஏகிச் செம்பொன்
மாட நல் மேனிலைப்பால் மன்னினார் பலரோடு ஆங்கே.
**அமைச்சர் அக்களிற்றினை அடக்க உதயணனால் மட்டுமே முடியும் எனல்

#92
மத்துறு கடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும்
வெற்றி நல் வேந்தனோடு வினவினார் அமைச்சர் எண்ணி
இத் தினம் நகரம் பட்ட விடர்-அது விலக்கல் நல்ல
வத்தவன் கையது என்ன வகுத்து உரை கேட்ட மன்னன்.
**மன்னன் மறுத்துக் கூறுதல்

#93
போரினில் நிற்கல் ஆற்றாம் பொய்யினில் தந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்தது அன்றிப்
பேர்_இடிக் கரி முன் விட்டால் பெரும் பழி ஆகும் என்று
தார் உடை வேந்தன் சொல்லத் தரத்தினால் அமைச்சர் சொல்வார்.
**அமைச்சர்கள் அது பழியன்று புகழே ஆகுமெனல்

#94
இந்திரன் ஆனை-தானும் இவன் கை யாழ் இசைக்கு மீறாது
இந்திரன் வேழமும் கேட்டு ஏழு அடி செல்லும் மற்று இக்
கந்து இறு கைம்மா இக் கோன் கை வீணை கடவாது என்ன
மந்திரித்தவர் சொல் கேட்டு மன்னன் அப்படிச் செய்கின்றான்.
**பிரச்சோதனன் அமைச்சன் சீவகன் என்பவன் உதயணனைக் கண்டு கூறல்

#95
சீவகன் வத்தவற்குச் செவ்விதில் செப்புகின்றான்
தேவ இ நகரின் இடுக்கண் தீர்க்கை நின் கடன்-அது ஆகும்
போவது உன் தேசத்து என்றல் புரவலன் கடன்-அது ஆகும்
பூவலன் உரைத்தான் என்னப் புகழ்ந்து அவன் சிறை விடுத்தான்.

#96
உரு உள சிவிகை ஏறி உயர் மன்னன் மனை புகுந்து
திரு மயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீரும் ஆடி
மருவி நல் பட்டு உடுத்து மணிக் கலன் இனிது தாங்கித்
தெருவிடைத் திகழப் புக்கான் திரு நகர் மகிழ அன்றே.
**உதயணன் யாழ் இசைத்தலும் களிறு அடங்குதலும்

#97
பருந்து பின்தொடர யானை பறவைகள் மற்றும் சூழப்
பெரும் தெரு நடுவுள் தோன்றப் பீடு உடைக் குமரன் தானும்
திரு வலித் தடக் கை வீணை சீருடன் பாடலோடும்
மரு வலிக் களிறும் கேட்டு வந்து அடிபணிந்தது அம்மா.
**உதயணன் நளகிரியின் மேல் ஏறுதல்

#98
பிரிந்த நல் புதல்வர் வந்து பெற்ற தன் தந்தை பாதம்
பரிந்த நல் காதாலே பணிந்திடுமாறு போல
இருந்து தன் பணிந்த யானை எழில் மருப்பு அடிவைத்து ஏறிப்
பெருந்தகை ஏவிக் கோட்டு பெரும் கையால் தோட்டி கொண்டான்.
**உதயணன் அக்களிநூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்

#99
வைத்த நல் மணியும் யாழும் வரிக் கயிறு-அதுவும் நீட்ட
வெற்றி நல் வேந்தன் வாங்கி வீக்கி மிக்கு ஆர்த்துக்கொண்டே
உற்ற நல் வீதி-தோறும் ஊர்ந்து நல் சாரிவட்டம்
பற்றி நன்கு ஓட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சிகொண்டான்.
**பிரச்சோதனன் உதயணனுக்கு பரிசு வழங்குதல்

#100
பிடிப்புப் பொன் விலை மட்டு_இல்லாப் பெரு வலி ஆரம்-தன்னை
முடிப் புவி அரசன் ஈய மொய்ம்பனும் அணிந்துகொண்டு
கொடிப் புலிமுகத்து வாயில் கோட்டையுள் கொண்டுவந்தான்
இடிக் குரல் சீயம் ஒப்ப இலங்கிய குமரன்-தானே.
**பிரச்சோதனன் உதயணனைத் தழுவுதல்

#101
சால்க என்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையின் ஓச்சி
கால்களின் விரலின் நெற்றி கனக்க நன்கு ஊன்றி நின்று
மால் கரி கால் கொடுப்ப மன்னனும் மகிழ்ந்து போந்து
வேல் கவின் வேந்தன் காண வியந்து உடன் தழுவிக்கொண்டான்.
**பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன் கூறி உறவு கொள்ளல்

#102
மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி
வருமுறை நயந்துகொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து
திரு_மகள் கனவு கூறிச் செல்வ நீ கற்பி என்னப்
பெருவலி உரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான்.
**உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்

#103
வேந்தன்-தன் மக்கட்கு எல்லாம் வேல் முதல் பயிற்றுவித்தும்
பூம்_துகில் செறி மருங்குல் பொரு கயல்_கண்ணி வேய்த் தோள்
வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணை-தன்னைச்
சேர்ந்து அவண் நிகர்_இல் இன்பில் செல்வனும் மகிழ்வுற்றானே.
**மன்னன் மைந்தர் அரங்கேறுதல்

#104
உரையினில் அரியன் ஆய உதயணகுமரன் ஓர் நாள்
அரசிளங்குமரர் வித்தை அண்ணல் நீ காண்க என்ன
வரை நிகர் யானை ஊர்ந்து மாவுடன் தேரில் ஏறி
வரிசையில் காட்டி வாள் வில் வகையுடன் விளக்கக் கண்டான்.
**வாசவதத்தை யாழ் அரங்கேற்றம்

#105
வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல் யாழ்
பேசு அவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியன் ஆகி
ஆசு_இலா வித்தை எல்லாம் ஆய்_இழை கொண்டாள் என்றே
ஏச வன் சிறைசெய் குற்றம் எண்ணுறேல் பெருக்க என்றான்.
**வாசவதத்தை யாழ் இசையின் மாண்பு

#106
விசும்பு இயல் குமரர்-தாமும் வியந்து உடன் இருப்பப் புள்ளும்
பசும்பொனின் நிலத்தில் வீழப் பாவையர் மயக்கமுற்றார்
வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையில் பாடலோடும்
அசும்பு அறாக் கடாத்து வேழத்து அரசனும் மகிழ்ந்தான் அன்றே.
**பிரச்சோதனன் உதயணனை வத்தவநாட்டிற்கு அனுப்பத் துணிதல்

#107
வத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி
வத்தவன் ஓலை தன்னுள் வளமையில் புள்ளியிட்டும்
வத்தவ நாட்டுக்கு ஏற வள்ளலைப் போக என்ன
வத்தவ நாளை என்றே மறையவர் முகிழ்த்தமிட்டார்.
**பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்

#108
ஓரிரண்டாயிரங்கள் ஓடை தாழ் மத்த யானை
ஈரிரண்டாயிரங்கள் எழில் மணிப் பொன்னின் தேரும்
போர் இயல் புரவி மானம் பொரு விலை ஆயிரம்மும்
வீரர்கள் இலக்கம் பேரும் வீறு நல் குமரற்கு ஈந்தான்.
**யூகி குறத்தி வேடம் புனைந்து குறிசொல்லல்

#109
யூகியும் வஞ்சம்-தன்னை உற்றுச் சூழ் வழாமை நோக்கி
வாகுடன் குறத்தி வேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்
நாகத்தின் நகர் அழிந்த நடுக்கங்கள் தீர எண்ணிப்
போக நல் நீரில் ஆடப் புரத்தினில் இனிது உரைத்தான்.
**பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்கு தீயிடுதல்

#110
மன்னவன்-தன்னோடு எண்ணி மாநகர் திரண்டு சென்று
துன்னிய நீர்க் கயத்தில் தொல்புரப் புறத்தில் ஆட
நல் நெறி வத்தவன்-தான் நல் பிடி ஏறி நிற்ப
உன்னிய யூகி மிக்க ஊரில் தீயிடுவித்தானே.
**உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்

#111
பயந்து தீக் கண்டு சேனை பார்த்திபன்-தன்னோடு ஏக
வயந்தகன் வந்து உரைப்ப வத்தவகுமரன்-தானும்
நயந்து கோன்_மகளை மிக்க நல் பிடி ஏற்றத் தோழி
கயம்-தனை விட்டு வந்த காஞ்சனை ஏறினாளே.

#112
வயந்தகன் வீணை கொண்டு வன் பிடி ஏறிப் பின்னைச்
செயம் தரக் கரிணி காதில் செல்வன் மந்திரத்தைச் செப்ப
வியந்து பஞ்சவனம் தாண்ட வேயொடு பற்ற வீணை
வயந்தகன் கூற மன்னன் மாப் பிடி நிற்க என்றான்.

#113
நலம் மிகு புகழ் ஆர் மன்ன நாலிருநூற்று வில்லும்
நிலம் மிகக் கடந்தது என்ன நீர்மையில் தந்த தெய்வம்
நலம் மிகத் தரும் இன்று என்ன பண்ணுகை நம்மால் என்னக்
குலம் மிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்தது அன்றே.
**பிடி வீழ்தல்

#114
அசைந்த நல் பிடியைக் கண்டே அசலித மனத்தர் ஆகி
இசைந்தவர் இழிந்த பின்னை இரு நிலம் மீதில் வீழத்
தசைந்த கை உதிரம் பாயச் சால மந்திரம் அம் காதில்
இசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவு ஆயிற்றே.
**உதயணன் முதலியோர் ஊர் நோக்கி செல்லல்

#115
உவளகத்து இறங்கிச் சென்றே ஊர் நிலத்து அருகு செல்லப்
பவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சி மெல் அடியில் தோன்றத்
தவளைக் கிண்கிணிகள் மிக்க தரத்தினால் பேசல் இன்றித்
துவள்_இடை அருகில் மேவும் தோழி தோள் பற்றிச் செல்வாள்.
**வயந்தகன் அவர்களை விட்டுப் புட்பகம் போதல்

#116
பாவை-தன் வருத்தம் கண்டு பார்த்திபன் பாங்கின் ஓங்கும்
பூவை வண்டு அரற்றும் காவுள் பூம் பொய்கை கண்டு இருப்ப
வாவு நாற்படையும் கொண்டு வயந்தகன் வருவேன் என்றான்
போவதே பொருள் ஊர்க்கு என்று புரவலன் உரைப்பப் போந்தான்.
**வேடர்களை உதயணன் வளைத்துக் கொள்ளுதல்

#117
சூரியன் குட-பால் சென்று குட வரை சொருகக் கண்டு
நாரியைத் தோழி கூட நன்மையில் துயில்க என்று
வீரியன் இரவு-தன்னில் விழித்து உடன் இருந்த போழ்து
சூரியன் உதயம்செய்யத் தொக்கு உடன் புளிஞர் சூழ்ந்தார்.
**உதயணனுடன் வேடர் போர் செய்தல்

#118
வந்தவர் அம்பு_மாரி வள்ளல் மேல் தூவத் தானும்
தன் தனு மேவிச் சாராத் தரத்தினால் விலக்கிப் பின்னும்
வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனைப் பகழி வீழ
நந்திய சிலை வளைத்து நல் பிறை அம்பின் எய்தான்.
**வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும் வயந்தகன் வரவும்

#119
செய்வகை இன்றி வேடர் தீவனம் கொளுத்த மன்னன்
உய்வகை உங்களுக்கு இன்று உறு பொருள் ஈவன் என்ன
ஐவகை அடிசில் கொண்டே ஆன நாற்படையும் சூழ
மெய்வகை வயந்தகன்-தான் வீறு அமைந்து இனிதின் வந்தான்.
**உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்

#120
அன்பு உறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கு இருந்தார்
இன்புறு மற்றை நாளின் எழில் களிற்று_அரசன் ஏற
நன்புறச் சிவிகை ஏற நங்கை நாற்படையும் சூழப்
பண்புறு சயந்தி புக்குப் பார்த்திபன் இனிது இருந்தான்.

@2. இலாவாண காண்டம்

#121
உஞ்சை நகர் விட்டு அகன்று உதயணகுமாரனும்
தஞ்சமாய்ச் சயந்தியில் தளர்வு இன்றிப் புகுந்த பின்
என் செய்தனன் என்றிடின் இயம்புதும் அறியவே
கொஞ்சு பைங்கிளி_மொழி-தன் கூடலை விரும்பினான்.
**உதயணன் வாசவதத்தை திருமணம்

#122
இலங்கு இழை நல் மாதரை இனிமை வேள்வித் தன்மையால்
நலம்கொளப் புணர்ந்தனன் நாக நல் புணர்ச்சி போல்
புலங்களின் மிகுந்த போகம் பொற்புடன் நுகர்ந்தனன்
அலங்கல் அணி வேலினான் அன்பு மிகக் கூரினான்.

#123
கைம்மிகு காமம் கரை காண்கிலன் அழுந்தலில்
ஐம் மிகும் கணை மதன் அம்பு மீக் குளிப்பவும்
பைம் மிகும் பொன் அல்குலாள் படா முலை புணை என
மைம் மிகும் களிற்று_அரசன் மாரன் கடல் நீந்துவான்.
**உதயணன் கழிபெருங்காமத்து அழுந்தி கடமையை புறக்கணித்தல்

#124
இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பு_இலன்
கழிந்த அறமும் மெய்ம்மறந்து கங்குலும் பகல் விடான்
அழிந்தி அன்பில் புல்லியே அரிவையுடைய நல் நலம்
விழுந்த வண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான்.

#125
ஒழுகும் காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன்
எழில் பெருகும் சூழ்ச்சிக்கண் இனிய தன் வரவு-அதால்
பழுது இன்றிச் சிறைவிடுத்துப் பாங்கு புகழ் வத்தவன்
எழில் மங்கை இளம் பிடி ஏற்றி ஏகக் கண்டவன்.

#126
மிஞ்சி நெஞ்சில் அன்புடன் மீண்டுவர எண்ணினன்
உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டு உள்ளகத்து அழுங்கினன்
விஞ்சு படை மேல் எழாமை விரகுடன் அறிந்து அந்த
உஞ்சை எல்லை விட்டு வந்து யூகி புட்பகம் சென்றான்.
**யூகி இடபகனிடம் உதயணனைப் பற்றி வினாதலும் அவனின் விடையும்

#127
இடபகற்குத் தன் உரை இனிது வைத்து உரைத்துப் பொன்
முடி உடைய நம் அரசன் முயற்சி-அது என் என
பிடி மிசை வருகையில் பெரு நிலம் கழிந்த பின்
அடியிட விடம் பொறாமை யானை மண்ணில் சாய்ந்ததே.

#128
சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும்
உவமை_இல் வயந்தகன் தன் ஊர் வந்து உடன் போந்ததும்
தவள வெண் கொடி மிடை சயந்தியில் புகுந்ததும்
குவி முலை நல் கோதை அன்பு கூர்ந்து உடன் புணர்ந்ததும்.

#129
இழந்த பூமி எண்ணிலன் இனிய போகத்து அழுந்தலும்
குழைந்து அவன் உரைப்ப யூகி கூர் எயிறு இலங்க நக்கு
விழைந்த வேந்தன் தேவியை விரகினால் பிரித்திடின்
இழந்த மிக்கு அரசியல் கைகூடும் என எண்ணினான்.
**யூகியின் செயல்

#130
சாங்கிய மகள் எனும் தபசினியைக் கண்டு உடன்
ஆங்கு அவள் அறியக் கூறியான யூகி தன் உயிர்
நீங்கினது போலவும் நின்று அமைச்சர் மூவரும்
பாங்கு அரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன்.

#131
படத்து உருவில் ஒன்றினைப் பரந்த மேல் கண்ணாக வைத்து
இடக் கண் நீக்கி இட்டு மிக்கு இயல்புடன் கொடுத்து உடன்
முடிக்கு அரசற்கு அறிவி என்ன முதுமகளும் போயினள்
இடிக் குரல் நல் சீயமாம் இறைவனையே கண்டனள்.
**சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்

#132
வேந்தனும் கண்டே விரும்பி வினயம்செய்து இருக்க என
பாந்தவக் கிழவியும் பண்பு இனிய சொல்லிய பின்
சேந்த நின் சிறைவிடுத்த செல்வ யூகி நின்னுடன்
போந்து பின் வராதது என்ன புரவல நீ கூறு என்றாள்.
**உதயணன் செயல்

#133
அவன் உரை அறிந்திலன் அறிந்த நீ உரைக்கு எனத்
தவிசிடை இருந்தவள்-தான் படத்தைக் காட்டினள்
புவியரசன் கண்டு உடன் புலம்பி மிக வாடிப் பின்
தவம் மலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன்.
**உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்

#134
முடி முதல் அரசினோடு முனிவு_அற நின் துணைவனை
வடிவுடன் பெறுவை என்ன வன்மையினில் தேறி மீக்
கடி கமழ்ச் சாரலில் கண்ட மா தவன் மகள்
துடி இடை விரிசிகையைத் தோன்றல் மாலை சூட்டினான்.
**உதயணன் தழைகொண்டுவரப் போதல்

#135
கலந்தனன் இருந்த பின் கானகத் தழை தர
நலம் திகழ் மாதர் செப்ப நர_பதியும் போயினன்
கலம் திகழும் யூகியும் காவலன்-தன் தேவியை
சில தினம் பிரிவிக்கச் சிந்தை கூரத் தோன்றினான்.
**யூகியின் செயல்

#136
மன்னவன் மனை-தனில் மறைந்திருக்கும் மாதரைத்
துன்னும் நன்கு இருவரைத் தொக்கு உடன் இருக்க என்று
மன்னன் மனை-தன் மனைக்கு மா நிலச் சுருங்கை செய்து
அன்னவன் மனை முழுதும் மறைந்து அவர் தீயிட்டனர்.
**சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்

#137
நிலம் திகழ் சுருங்கையில் நீதி_மன்னன் தேவியை
இலங்கு சாங்கியம் மகள் எழில்பெறக் கொண்டுவந்து
அலங்கல் அணி வேலினான் அமைச்சன் மனை சேர்த்தனள்
துலங்கி வந்து அடி பரவிச் சொல் இனிது கூறுவான்.
**யூகி வாசவதத்தையை வரங்கேட்டல்

#138
என்னுடைய நல் தாயே நீ எனக்கு ஒரு வரம்கொடு
நின் அரசன் நின்னை விட்டு நீங்கும் சில நாள் அன்றி
நல் நில_மடந்தை நமக்கு ஆகுவதும் இல்லையே
என்ன உடன்பட்டனள் இயல்புடன் கரந்தனள்.
**உதயணன் மீண்டும்வந்து வருந்துதல்

#139
சவரர் வந்து தீயிட்டுத் தம் செயலின் ஆக்கி மிக்கு
அவ குறிகள் கண்டு அரசன் அன்பில் தேவிக்கு ஏதம் என்று
அவள் அகத்து அழுங்கி வந்து உற்ற கருமம் சொலக்
கவற்சியுள் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன்.

#140
பூண்ட மார்பன் நல் நிலம் புரண்டு மிக்கு எழுந்துபோய்
மாண்ட தேவி-தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான்
நீண்ட தோள் அமைச்சரும் நின்று அரசன் பற்றியே
வேண்டித் தான் உடன் இருந்த வெந்த உடல் காட்டு என்றான்.
**உதயணன் வாசவதத்தையின் அணிகலன் கண்டழுதல்

#141
கரிப் பிணத்தைக் காண்கிலர் காவலர்கள் என்ற பின்
எரிப் பொன் அணி காட்டு என எடுத்து முன்பு வைத்தனர்
நெருப்பிடை விழுந்தமை நினைப்ப மாயம் அன்று என
விருப்பு உடை நல் தேவிக்கு வேந்தன் மிக்கு அரற்றுவான்.
**மனம் வருந்தி உதயணன் அழுது புலம்பல்

#142
மண் விளக்கம் ஆகி நீ வரத்தின் எய்தி வந்தனை
பெண் விளக்கம் ஆகி நீ பெறற்கு_அரியை என்று தன்
கண் விளக்கு காரிகையைக் காதலித்து இரங்குவான்
புண் விளக்கு இலங்கு வேல் பொற்பு உடைய மன்னவன்.

#143
மான் எனும் மயில் எனும் மரை மிசைத் திரு எனும்
தேன் எனும் கொடி எனும் சிறந்த கொங்கை நீ எனும்
வான் நில மடந்தையே மா தவத்தின் வந்தனை
நான் இடர்ப்படுவது நன்மையோ நீ வீந்ததும்.

#144
நங்கை நறும் கொங்கையே நல்ல மைக் குழலி எம்
கொங்கு உலவ கோதை பொன் குழை இலங்கு நல் முகம்
சிங்காரம் உனது உரையும் செல்வி சீதளம் மதி
பொங்கு ஆரம் முகம் எனப் புலம்பினான் புரவலன்.

#145
வீணை நல் கிழத்தி நீ வித்தக உருவி நீ
நாணின் பாவை-தானும் நீ நலம் திகழ் மணியும் நீ
காண என்றன் முன்பதாய்க் காரிகையே வந்து நீ
தோணி முகம் காட்டு எனச் சொல்லியே புலம்புவான்.
**அமைச்சர் தேற்றுதல்

#146
துன்பம் மிகவும் பெருகச் சொற்கு அரிய தேவிக்கா
அன்பு மிக்கு அரற்றுவதை அகல்வது பொருள் என
நன்புறும் அமைச்சர் சொல்ல நர_பதியும் கேட்டனன்
இன்புறும் மனைவி காதல் இயல்புடன் அகன்றனன்.
**யூகி உருமண்ணுவாவிடம் உரைத்தல்

#147
அண்ணல்-தன் நிலை அறிந்த யூகியும்
திண்ணிதின் இயல் செய்கை என்று உரு
மண்ணுவாவினை மன்னன் அண்டையில்
எண்ணும் காரியம் ஈண்டும் செய்க என்றான்.
**வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்

#148
தன் நிலைக்கு அமைந்த தத்துவ ஞானத்தான்
துன்ன அரும் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்
மன்னற்கு உறுதி மறித்து இனிக் கூறும்
பொன் அடி வணங்கிப் புரவலன் கேட்ப.

#149
வெற்றி வேல் மகதவன் வேந்தன் தேசத்தில்
இற்றவர்க் காட்டும் இயல்பின் நன் நூல் உரை
கற்று வல்லவன் நல் காட்சி அறிவுடன்
தத்துவ முனி உளன் நாம் இனிச் சார்வோம்.
**உதயணன் மகதநாடு செல்லல்

#150
வத்தவகுமரன் கேட்டு வயந்தகன்-தன்னை நோக்கி
அத் திசை போவோம் என்றே அகம் மகிழ்ந்து இனிய கூறி
வெற்றி நாற்படையும் சூழ வெண்குடை கவரி மேவ
ஒத்து உடன் இசைந்து சென்றான் உதயணகுமரன்-தானே.

@3 மகத காண்டம்
**வாசவதத்தையை நினைத்து உதயணன் வருந்துதல்

#151
சயந்தியின் எல்லை விட்டுச் சாலவும் மகதநாட்டுக்கு
இயைந்து நன்கு எழுந்துசென்றே இரவியின் உதயம் உற்றான்
நயந்தனன் தேவி காதல் நல் மனத்து அழுங்கிப் பின்னும்
வியந்து நல் அமைச்சர் தேற்ற வெம் கடும் கானம் புக்கான்.

#152
செத்த நல் தேவி-தன்னைத் திருப்பவும் மீட்கலாம் என்று
அத் திசை முன்னி நல்ல வருவழிப்பட்டுச் செல்ல
அத்தியும் பிணையும் ஏக ஆண்_மயில் ஆடக் கண்டு
வத்தவன் கலுழ்ந்து உரைக்கும் மனன் அமை மனையை ஓர்ந்தே.
**உதயணன் மகதநாடு அடைதல்

#153
கோட்டுப்பூ நிறைந்து இலங்கும் கொடி வகைப் பூவும் கோலம்
காட்டும் நம் தேவி என்று கால் விசை நடவா மன்னன்
காட்டினன் குன்றம் ஏறிக் கானகம் கழிந்து போந்து
சேட்டு இளம் சிங்கம் அன்னான் திரு நிறை மகதம் சேர்ந்தான்.
**அனைவரும் இராசகிரி நகர பூஞ்சோலையில் தங்குதல்

#154
மருவிய திருவினான் அ மகதவர்க்கு இறைவன் நாமம்
தருசகன் என்னும் மன்னன் தானை வேல் தலைவன் மாரன்
இருந்து இனிது உறையும் மிக்க இராச நல் கிரியம்-தன்னில்
பொருந்திச் செல் நகர்ப்புறத்தில் பொலிவுடன் இருந்தான் அன்றே.
**காகதுண்ட முனிவனிடம் வயந்தகன் தங்கள் சூழ்ச்சி பற்றிக் கூறுதல்

#155
காமன் நல் கோட்டம் சூழக் கன மதில் இலங்கும் வாயில்
சோம நல் தாபதர்கள் சூழ்ந்து அமர் பள்ளி-தன்னில்
நாம நல் வயந்தகன்னும் நன்கு அறி காகதுண்ட
மாமறையாளன் கண்டு வஞ்சகம் செப்பினானே.
**காகதுண்ட முனிவர் உதயணனிடம் உரைத்தல்

#156
திரு நிறை மன்னன்-தன்னைச் சீர் மறையாளன் கண்டே
இரு மதி எல்லை நீங்கி இப் பதி இருப்ப என்றும்
தருவன் நீ இழந்த தேவி தரணியும் கூட என்ன
மருவி அங்கு இருக்கும் ஓர் நாள் மகதவன் தங்கை-தானும்.
**பதுமாவதியும் உதயணனும் காமுறுதல்

#157
பருவம் மிக்கு இலங்கும் கோதைப் பதுமை தேர் ஏறி வந்து
பொரு_இல் காமனையே காணாப் புரவலன் கண்டு உகந்து
மருவும் வாசவதத்தை-தான் வந்தனள் என்று உரைப்பத்
திரு நகர் மாது கண்டு திகைத்து உளம் கவன்று நின்றாள்.
**உதயணனும் பதுமாவதியும் களவுமணம் செய்தல்

#158
யாப்பியாயினியாள் என்னும் அவளுடைத் தோழி சென்று
நாப் புகழ் மன்னன் கண்டு நலம் பிற உரைத்துக் கூட்டக்
காப்பு உடைப் பதுமையோடும் காவலன் கலந்து பொன்னின்
சீப்பிடக் கண் சிவக்கும் சீர் மங்கை நலம் உண்டானே.
**உதயணன் அமைச்சர்களிடம் வினவுதல்

#159
எழில்பெறு காமக்கோட்டத்து இயற்கையில் புணர்ந்து வந்து
வழிபெறும் அமைச்சரோடு வத்தவன் இனிய கூறும்
மொழி அமிர்தம் நலாளை மோகத்தில் பிரியேன் என்னத்
தொழுது அவர் பெறுக போகம் தோன்றல் நீ என்று சொன்னார்.
**பதுமாவதியுடன் உதயணன் கன்னிமாடம் புகல்

#160
மாட்சி நல் சிவிகை ஏறி மடந்தை-தன்னோடும் புக்குத்
தாழ்ச்சியின் மாளிகைக்குள் தக்கவள் மனம் குளிர்ப்பக்
காட்டினன் வீணை-தன்னைக் காவலன் கரந்து இருப்ப
ஓட்டிய சினத்தனாய உருமண்ணு இதனைச் செய்யும்.
**அமைச்சன் உருமண்ணுவாவின் உரை

#161
ஆகியது அறிந்து செய்யும் அருள் உடை மனத்தனான
யூகி அங்கு உஞ்சை-தன்னை உற்று அரும் சிறைவிடுக்கப்
போக நல் தேவியோடும் போந்தது போல நாமும்
போகுவம் மன்னன் மாதைப் புது மணம் புணருவித்தே.
**அமைச்சன் உருமண்ணுவாவின் செயல்

#162
உருமண்ணுவா அனுப்ப உற்ற முந்நூறு பேர்கள்
மருவிய விச்சை-தன்னால் மன்னவன் கோயில்-தன்னுள்
மருவினர் மறைந்து சென்றார் மன்னவன் தாதை வைத்த
பெருநிதி காண்கிலாமல் பேர்க்குநர்த் தேடுகின்றான்.
**உதயணன் மகத மன்னன் தருசகனுடன் நட்பு கொள்ளல்

#163
யான் அறிந்து உரைப்பன் என்றே அரசனைக் கண்டு மிக்க
மாநிதி காட்டி நன்மை மகதவனோடும் கூடி
ஊனம்_இல் விச்சை-தன்னால் உருமண்ணுப் பிரிதல் இன்றிப்
பால் நலம் கிளவி-தன்னால் பரிவுடன் இருக்கும் நாளில்.
**சங்க மன்னர்கள் ஏழுவரின் படையெடுப்பு

#164
அடவியாம் அரசன் மிக்க அயோத்தியர்க்கு இறைவன் தானைப்
படை உறு சாலி என்பான் பலம் உறு சத்தி என்பான்
முடி விரிசிகையன் மல்லன் முகட்டு எலிச்செவியன் என்பான்
உடன் வரும் எழுவர் கூடி ஒளிர் மகதத்து வந்தார்.
**மகதத்தை அழிக்கத் துவங்குதல்

#165
தருசகற்கு இனிதின் தாங்கள் தரு திறை இடுவது_இல் என்று
எரி என வெகுண்டு வந்தே இனிய நாடு அழிக்கலுற்றார்
தருசகராசன் கேட்டுத் தளர அப் புறத்து அகற்ற
உருமண்ணுவா மனத்தில் உபாயத்தில் உடைப்பன் என்றான்.
**அமைச்சன் உருமண்ணுவாவின் சூழ்ச்சி

#166
கள்ள நல் உருவினோடும் கடியகத்து உள்ளே உற்ற
வள்ளலை மதியில் கூட்டி வாணிக உருவினோடு
தெள்ளிய மணி தெரிந்து சில மணி மாறப் போந்து
பள்ளிப் பாசறை புகுந்து பல மணி விற்று இருந்தார்.

#167
மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத் தம்
இன் உரைகள் இயல்பின் வரவரத்
துன்னும் நாற்படை வீடு தோன்று இரவிடை
உன்னினர் கரந்து உரைகள் பலவிதம்
**பகைவர் ஐயுற்று ஓடுதல்

#168
உரை உணர்ந்து அவர் உள்ளம் கலங்கிப் பின்
முரியும் சேனை முயன்றவர் ஓடலின்
தெருளினர் கூடிச் சேர வந்து அத் தினம்
மருவி ஐயம் மனத்திடை நீங்கினார்.
**பகைவர் கூடி விவாதித்தல்

#169
இரவு பாசறை இருந்தவர் போனதும்
மருவிக் கூடியே வந்து உடன் விட்டதும்
விரவி ஒற்றர்கள் வேந்தற்கு உரைத்தலின்
அரசன் கேட்டு மிக்கு ஆர் செயல் என்றனன்.
**அமைச்சன் உருமண்ணுவா மன்னன் தருசகனைக் கண்டு உண்மை உரைத்தல்

#170
வார் அணிக் கழல் வத்தவன்-தன் செயல்
ஓர் அணி மார்பன் உருமண்ணுவாவும் மிக்கு
ஏர் அணி அரசருக்கு இயல் கூறலும்
தார் அணி மன்னன் தன்னுள் மகிழ்ந்தனன்.
**தருசகன் உதயணனை எதிர்கொண்டு வரவேற்றல்

#171
ஆரா உவகையுள் ஆகி அரசனும்
பேராம் இனிய யாழ்ப் பெருமகன்-தன்னையே
சேரா எதிர்போய்ச் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவன் நான் என்றான்.
**படையெடுத்துச் சென்று உதயணன் பகைவரை வெல்லுதல்

#172
உலம் பொருத தோள் உடை உதயணகுமரனும்
நலம் பொருத நாற்படையும் நன்குடனே சூழப் போய்ப்
புலம் பொருத போர்ப்படையுள் பொருது தவத் தொலைத்து உடன்
நலம்பெறத் திறையுடன் நர_பதியும் மீண்டனன்.
**உதயணன் பதுமாவதி மணம்

#173
வருவ விசையத்துடன் வத்தவற்கு இறைவனைத்
தருசகன் எதிர்கொண்டு தன் மனை புகுந்து பின்
மருவ நல் பதுமையாம் மங்கை தங்கை-தன்னையே
திரு நிறை நல் வேள்வியால் செல்வற்கே அளித்தனன்.
**தருசகன் உதயணனுக்கு படை அளித்து உதவுதல்

#174
புதுமணக்கோலம் இவர் புனைந்தனர் இயற்றிப் பின்
பதியுடை ஐயாயிரம் பரு மதக் களிற்றுடன்
துதி மிகு புரவிகள் தொக்க இரண்டாயிரம்
அதிர் மணி ஆற்றும் தேர் ஆயிரத்திருநூறே.

#175
அறுபதினெண்ணாயிரம் ஆன படைவீரரும்
நறு மலர் நல் கோதையர் நான்கிருநூற்றிருபதும்
பெறுக என்று அமைத்து உடன் பேர் வருடகாரியும்
உறு வடி வேல் சத்தியும் உயர் தருமதத்தனும்.

#176
சத்தியகாயன்னுடன் சாலவும் அமைச்சரை
வெற்றி நாற்படைத் துணை வேந்து-அவன் பின் செல்க என்று
முற்று இழை அரிவைக்கு முகம் மலரச் சீதனம்
பற்றி அன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன்.

#177
வெல்லும் அண்ணலை மிக வேந்தன் நல் நயம் சில
சொல்லி நண்பினால் உரைத்துத் தோன்றலை மிகப் புல்லிச்
செல்க என விடுத்தரச் செல்வன் அங்குப் போந்தனன்
எல்லை தன் நாடு எய்திப் பின் இனியர் தம்பி வந்தனர்.
**பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல்

#178
பிங்கல கடகர் எனப் பீடு உடைக் குமரரும்
தங்கு பன்னீராயிரம் தானை வல்ல வீரரும்
அங்கு வந்து அ அண்ணலை அடி வணங்கிக் கூடினர்
பொங்கு புறம் கௌசாம்பியில் போர்க்களத்தில் விட்டனர்.
**வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல்

#179
வருடகாரனை அழைத்து வத்தவன் இயம்பும் இப்
பருமித நல் சேனை உள்ள பாஞ்சாலராயனிடம்
திரு முடி அரசரைத் திறத்தினால் அகற்று எனப்
பொருளின் அவன் போந்த பின்பு போர்_வினை தொடங்கினர்.
**உதயணன் ஆருணி அரசன் போர்

#180
அமைச்சனும் சென்று அவ்வண்ணம் அதிர் கழல் நல் வேந்தரைச்
சமத்தினில் அகற்றினன் சாலவும் பாஞ்சாலனும்
அமைந்த நாற்படையுடன் அமர்ந்து வந்து எதிர்த்தனன்
அமைத்து இருவர் வில் கணைகள் அக் கதிர் மறைத்தவே.
**போர்க் காட்சிகள்

#181
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுற ஏறவும்
பரிந்து பேய்க் கணம் ஆடவும் பல நரி பறைந்து உண்ணவும்
முரிந்த முண்டங்கள் ஆடவும் முரிந்த மாக் களிறு உருளவும்
வரிந்த வெண் சிலை மன்னவன் வத்தவன் கண்கள் சிவந்தவே.
**உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல்

#182
மாற்றவன் படை முறிந்து என மன்னவன் படை ஆர்த்திடத்
தோற்ற மன்னன் வந்து எதிர்த்தனன் தூய காளை தன் வாளினால்
மாற்றலன்-தனைக் கூற்று உண வண்மையில் விருந்து ஆர்க என
ஏற்ற வகையினில் இட்டனன் இலங்கு வத்தவராசனே.
**உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல்

#183
பகை அறவே எறிந்து உடன் பாங்கில் போர் வினை தவிர்க என
வகை அறவே படுகளம் கண்டு நண்ணிய மற்றது
தொகையுறும் தன தொல் படை சூழ ஊர்முகம் நோக்கினன்
நகையுறும் நலம் தவ மார்பனும் நகர வீதியில் வந்தனன்.
**உதயணன் அரண்மனை புகுதல்

#184
மாடமாளிகை மிசை மங்கையரும் ஏறி மீக்
கூடி நின்று இரு மருங்கும் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திடப் பல கொடி மிடைந்த நல்
ஆடக நல் மாளிகை அரசனும் புகுந்தனன்.
**உதயணன் திருமுடி சூடுதல்

#185
படுகளத்தின் நொந்தவர்க்குப் பல கிழி நெய் பற்றுடன்
இடு மருந்து பூசவும் இனிப் பொருள் அளித்த பின்
தொடு கழல் அரசர்கள் சூழ்ந்து அடிபணிந்திட
முடி தரித்து அரசியல் முகம் மலர்ந்து செல்லும் நாள்.

@4 வத்தவ காண்டம்
**உதயணன் அரசு வீற்றிருத்தல்

#186
மின் சொரி கதிர் வேல் தானை வீறு அடிபணிய வெம்மைப்
பொன் சொரி கவரி வீசப் பொங்கு அரியாசனத்தில்
தண் சொரி கிரண முத்தத் தவள நல் குடையின் நீழல்
மின் சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின்
**உதயணனின் கொடை

#187
மாற்றலர் தூதர் வந்து வரு திறை அளந்து நிற்ப
ஆற்றலர் வர அவர்க்கேயான பொன் துகில் அளித்தே
ஏற்ற நல் சனங்கட்கு எல்லாம் இனிப் பொருள் உவந்து வீசிக்
கோல் தொழில் நடத்தி மன்னன் குறைவு இன்றிச் செல்லுகின்றான்.
**உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும் உருவம் செய்தலும்

#188
மதுர வண்டு அறாத மாலை மகதவன் தங்கையாய
பதுமை-தன் பணை முலை மேல் பார்த்திபன் புணர்ந்து செல்லத்
துதிக்கை மா வீழ்ந்த கானம் தோன்றலும் மாடம் பண்ணிப்
பதியினும் அமைத்துப் பாங்கில் படிமமும் அமைத்தான் அன்றே.
**உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல்

#189
அரு மறை ஓதி நாமம் அருஞ்சனன் அந்தணன்-தான்
திரு உறை உஞ்சை நின்று திகழ் கொடிக் கௌசாம்பிக்கு
வரும் நெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு
பொருந்தவே கொண்டு வந்து புரவலற்கு ஈந்தான் அன்றே.
**பதுமாவதி யாழ் கற்க விரும்புதல்

#190
மது மலர்க் குழலி விண் மின் மாலை வேல் விழி மென் தோளி
பதுமை வந்து அரசன் கண்டு பன்னுரை இனிது கூறும்
மதியின் வாசவதத்தை-தன் வண் கையின் அதனைப் போல
விதியின் நான் வீணை கற்க வேந்த நீ அருள்க என்றாள்.
**உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல்

#191
பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொரு மனத்து உருகி மன்னன்
ஒள் இதழ்த் தத்தை-தன்னை உள்ளியே துயிலல்செய்ய
வெள்ளை ஏறு இருந்த வெண்தாமரையினைக் கொண்டு வந்து
கள் அவிழ் மாலைத் தெய்வம் கனவிடைக் கொடுப்பக் கண்டான்.
**உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல்

#192
கங்குலை நீங்கி மிக்கு ஓர் கடவுளை வினவச் சொல்வார்
அங்கயற்கண்ணி-தானும் ஆர் அழல் வீந்தாள்_அல்லள்
கொங்கை நல் பாவை-தன்னைக் கொணர நீ பெறுவை இன்பம்
இங்கு உலகு எங்கும் ஆளும் எழில் சுதன் பெறுவள் என்றார்.
**உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல்

#193
வெள்ளிய மலையின் மீதே விஞ்சையர் உலகம் எல்லாம்
தெள்ளிய ஆழி கொண்டு திக்கு அடிப்படுத்தும் என்ன
ஒள்ளிய தலத்தின் மிக்கோர் உறு தவர் உரைத்த சொல்லை
வள்ளலும் மகிழ்ந்து கேட்டு மா முடி துளக்கினானே.
**அமைச்சர் உருமண்ணுவா விடுதலை

#194
என்று அவர் உரைப்பக் கேட்டே இறைஞ்சி நன்கு அடிபணிந்து
சென்று தன் கோயில் புக்குச் சே இழை பதுமை-தன்னோடு
ஒன்றினன் மகிழ்ந்து செல் நாள் உருமண்ணுவாவும் முன்பு
வென்றி வேல் மகதன் மாந்தரால் விடுபட்டிருந்தான்.
**உருமண்ணுவா உதயணனை அடைதல்

#195
மீண்டவன் வந்து ஊர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக்
காண்டு அறிவாளன் என்றே காவலன் புல்லிக்கொண்டு
மாண்டவன் வந்தது ஒப்ப வரிசையின் முகமன் கூறி
வேண்டு அவாம் தனிமை தீர்ந்தே விரகுடன் இன்புற்றானே.
**வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல்

#196
வார் அணி கொங்கை வேல் கண் வாசவதத்தை-தானும்
ஊர் அணி புகழினான யூகியும் மற்றுள்ளாரும்
தார் அணி கொடி இலங்கும் சயந்தியின்-நின்றும் போந்து
பார் அணி கோசம்பி-பால் பல் மலர்க் காவுள் வந்தார்.
**உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல்

#197
நயந்த நல் கேண்மையாளர் நன்கு அமைந்த அமைச்சர்-தம்முள்
வயந்தகன் உரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப்
பயந்து அவர் அடியில் வீழப் பண்புடன் தழுவிக்கொண்டு
வியந்து அரசு இயம்பும் நீங்கள் வேறு உடல் மறைந்தது என்னை.
**யூகியின் உரை

#198
இரு நிலம் முழுதும் வானும் இனிமையில் கூடினாலும்
திரு நில மன்னர் அன்றிச் செய்பொருள் இல்லை என்று
மருவு நூல் நெறியின் அன்றி வன்மையால் சூழ்ச்சிசெய்தேன்
அருளுடன் பொறுக்க என்றான் அரசனும் மகிழ்வுற்றானே.
**உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல்

#199
ஆர்வம் மிக்கு கூர்ந்து நல்ல அற்புதக் கிளவி செப்பிச்
சீர்மை நல் தேவியோடும் செல்வனும் மனை புகுந்தே
ஏர் பெறும் வாச வெண்ணெய் எழிலுடன் பூசி வாச
நீர் மிக ஆடி மன்னன் நேர் இழை மாதர்க் கூட.
**பதுமாவதியின் வேண்டுகோள்

#200
யூகியும் நீரின் ஆடி உற்று உடன் அடிசில் உண்டான்
நாகம் நேர் கால மன்னன் நன்கு உடன் இருந்த போழ்தில்
பாக நேர் பிறையா நெற்றிப் பதுமையும் இதனைச் சொல்வாள்
ஏகுக செவ்வித் தத்தை எழில் மனைக்கு எழுக என்றான்.
**வாசவதத்தையின் ஊடல்

#201
என்று அவள் சொல்ல நன்று என்று எழில் முடி மன்னன் போந்து
சென்று அவள் மனை புகுந்து செல்வனும் இருந்த போழ்தில்
வென்றி வேல்_கண்ணினாளும் வெகுண்டு உரை செப்புகின்றாள்
கன்றிய காமம் வேண்டா காவல போக என்றாள்.
**உதயணன் ஊடலைப் போக்குதல்

#202
பாடகம் இரங்கும் பாதப் பதுமையினோடு மன்னன்
கூடிய கூட்டம் தன் போல் குணம்-தனை நாடி என்ன
ஊடிய தேவி தன்னை உணர்வினும் ஒளியினாலும்
நாடி உன்றனக்கு அன்னாள்-தான் நந்து இணை அல்லள் என்றான்.
**இருவரும் ஊடல் தீர்ந்து கூடுதல்

#203
நங்கை-தன் மனம் கலங்கா நலம் புகழ்ந்து ஊடல் நீக்கி
வெம் களி யானை மற்று அப் பிடியொடு மகிழ்வவே போல்
பொங்கு இள முலையில் வாசப் பூசு சாந்து அழியப் புல்லிச்
சிங்க ஏறு அனைய காளை செல்வியைச் சேர்ந்தான் அன்றே.

#204
உரு_இலி மதன் கணைகள் உற்று உடன் சொரியப் பாய
இருவரும் பவளச் செவ்வாய் இன் அமிர்து உண்டு வேல் போல்
திரு நெடும் கண் சிவப்ப வடிச் சிலம்பு ஓசைசெய்ய
மருவிய வண்டு நீங்க மலர்க் குழல் சரிய அன்றே.

#205
கோதையும் சுண்ணத் தாதும் குலைந்து உடன் வீழ மிக்க
காதலிற்கு அழுமி இன்பக் கரை அழிந்து இனிதின் ஓடப்
போதவும் விடாது புல்லிப் புரவலன் இனியன் ஆகி
ஏதம் ஒன்று இன்றிச் செங்கோல் இனிதுடன் செலுத்தும் நாளில்.
**உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்

#206
ஆன தன் நாமம் இட்ட ஆழி மோதிரத்தை ஈந்தே
ஊன் உமிழ் கதிர் வேல் மன்னன் உருமண்ணுவாவு-தன்னைச்
சேனை நல் பதி நீ என்று திரு நிகர் பதுமை தோழி
ஈனம்_இல் இராசனையை எழில் வேள்வியால் கொடுத்தான் .
**உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் உதயணன் ஊர் வழங்குதல்

#207
சயந்தி அம் பதியும் சால இலாவாண நகரும் ஈந்தே
இயைந்த நல் இடபகற்கும் இனிய புட்பகத்தைச் சூழ்ந்த
செயம் தரு வள நல் நாடு சிறந்த ஐம்பதும் அளித்து
வயந்தகன்-தனக்கு வாய்ந்த பதினெட்டு ஊர் கொடுத்தான் அன்றே.
**யூகிக்கு உதயணன் ஊர் வழங்குதல்

#208
ஆதி நல் மாமன் வைத்த அரும் திறை அளக்கும் நல்ல
சேதி நல் நாட்டை யூகிக்காக நல் திறத்தின் ஈந்து
சோதி நல் அரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க்கு எல்லாம்
வீதி நல் நகர்கள் விட்டு வீறுடன் வீற்றிருந்தான்.
**உதயணனுக்கு பிரச்சோதனன் ஓலையனுப்புதல்

#209
பேச அரும் பெருமை சால் ப்ரச்சோதனன் தூதர் வந்து
வாசகம்-தன்னைக் காட்ட வத்தவன் மனம் மகிழ்ந்து
வாசவதத்தையோடு மன்னிய அமைச்சர் கூட
வாசகம் சொல்க என்று வரிசையில் கேட்கின்றானே
**ஓலையில் வந்த செய்தி

#210
பிரச்சோதனன் தான் என்னும் பெருமகன் ஓலை-தன்னை
உரவுச் சேர் கழல் கால் மிக்க உதயணகுமரன் காண்க
வரவுச் சீர்க் குருகுலத்தின் வண்மை யான் கோடல் வேண்டி
வரை வனச் சாரல்-தன்னில் வன் பொறி யானை விட்டேன்.

#211
கலந்து அவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச்
சிலந்திநூல்-தன்னால் ஆர்த்த சிங்கம் போல் ஆர்த்துக்கொண்டு
நலம் திகழ் தேரின் ஏற்றி நன்கு உஞ்சையினி-தன்னில்
பெலம் திரி சிறையில் வைத்த பிழை-அது பொறுக்க என்றும்.

#212
கோமானே எனவே என்னைக் கோடல் நீ வேண்டும் என்றும்
மாமன் நான் மருகன் நீ என் மா முறை ஆயிற்று என்றும்
ஆம் ஆகும் யூகி-தன்னை அனுப்ப யான் காண்டல் வேண்டும்
பூ_மாலை மார்ப என்றும் பொறித்த வாசகத்தைக் கேட்டான்.
**உஞ்சைக்குச் சென்ற யூகியை பிரச்சோதனன் வரவேற்றல்

#213
மன்னவன் அனுப்ப யூகி மா நகர் உஞ்சை புக்கு
மன்னர் மா வேந்தன்-தன்னை வணங்கினன் கண்டு இருப்ப
மன்னனும் முடி அசைத்து அமைச்சனை நெடிது நோக்கி
மன்னிய உவகை-தன்னால் மகிழ்வுரை விளம்பினானே.
**பிரச்சோதனன் முரசறைவித்தல்

#214
சீர்ப் பொழில் உஞ்சையும் சீர்க் கெளசாம்பியும்
பார்-தனில் வேற்றுமைபண்ணுதல் வேண்டோம்
ஆர் மிகு முரசம் அறைக என நகரில்
தார் மிகு வேந்தன் தரத்தினில் செப்பினன்.
**யூகியின் சொற்போர் வெற்றியும், மன்னனின் பாராட்டும்

#215
தரும நல் நூல் வகை சாலங்காயனோடு
அரு மதி யூகியும் அன்பின் உரைத்தான்
பெரு விறல் வேந்தனும் பெறுதல் அரிது எனத்
திரு நிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான்.

#216
கல்வியது அகலமும் காட்சிக்கு இனிமையும்
சொல்ல அரும் சூட்சியும் சொல் பொருள் திண்மையும்
வல்லமை இவன் அலான் மாந்தர் இல்லை இன்று
எல்லை_இல் குணத்தினன் என்று உரைசெய்தனன்.

#217
இன்னவன் பெற்றவர்க்கு ஏற்ற அரசியல்
இன்னவர் இன்றி இலை அரசு என்றே
இன்னன நீடிய இயல்பில் பிற உரை
மன்னவன் நாடி மகிழ்வித்திருந்த பின்
**யூகியின் திருமணம்

#218
சாலங்காயன் சகோதரம் ஆன நல்
நீலம் காய்ந்த நெடு வேல் விழி நுதல்
பால் அங்கு ஓர் பிறையாம் படா வெம் முலைக்
கோலம் கார் அன்ன கூர் எயிறு ஆப்பியும்.

#219
பரதகன் தங்கை பால் மொழி வேல் கணி
திரு நிலம் புகழ் திலதமாசேனையும்
பெரு நிலம் அறிய மணம் மிகப் பெற்று உடன்
அரிய யூகிக்கு அரசன் கொடுத்தனன்.

#220
செல்-மதி நீ எனச் செல்ல விடுத்தனன்
நல் முது நகர் முன் நாடிப் போ எனப்
பல் மதி சனங்கள் பரவி வழிபட
வெல் மதி யூகி போய் வேந்தனைக் கண்டனன்.
**யூகி உதயணனை அடைதல்

#221
வத்தவகுமரன் பாதம் வந்தனைசெய்து அமைச்சன்
இத் தலம் முழுதும் ஆளும் இனிய நல் மாமன் சொன்ன
ஒத்த நல் மொழியைக் கேட்டே உவந்து உடன் இருந்த போழ்தில்
சித்திரப் பாவைமார்கள் செல்வனை வணங்கிச் சொல்வார்.
**உதயணன் மாந்தர்களின் பந்து விளையாட்டைக் காணல்

#222
பந்தடி காண்க என்னப் பார்த்திபன் இனியன் ஆகிக்
கந்துகப் பூசல் காணக் களிற்றின் மீது ஏறி வந்து
கொந்து அலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப
வந்தனள் பதுமை தோழி வனப்பு இராசனை என்பாளாம்.
**மகளிரின் பந்துப் போர்

#223
ஓர் எழு பந்து கொண்டே ஒன்று ஒன்றின் எற்றிச் செல்ல
பார் எழு துகளும் ஆடப் பல கலன் ஒலிப்ப ஆடிச்
சீர் எழும் ஆயிரம் கை சிறந்தவள் அடித்துவிட்டாள்
கார் எழு குழலி நல்ல காஞ்சனமாலை வந்தாள்.

#224
வேய் மிகு தடக் கை-தன்னால் வியந்து பந்துடனே ஏந்திக்
காய் பொனின் கலன்கள் ஆர்ப்பக் கார் மயில் ஆட்டம் போல
ஆயிரத்து ஐஞ்ஞூறு ஏற்றி அடித்தனள் அகல அப்பால்
ஆய் புகழ்ப் பதுமை தாதி அயிராபதி பந்து கொண்டாள்.

#225
சீர் ஏறும் இமில் போல் கொண்டைச் சில்வண்டும் தேனும் பாடப்
பாரோர்கள் இனிது நோக்கும் பல கலம் சிலம்போடு ஆர்ப்ப
ஈராயிரம் கை ஏற்றி இரு கரத்து அடித்துவிட்டாள்
தோராத அழகி தத்தை தோழி விச்வலேகை வந்தாள்.

#226
கரும் குழல் நெடு வேல்_கண்ணாள் காரிகை பந்து எடுத்துப்
பெரும் கலன் இனிதின் ஆர்ப்பப் பெய் வளை கலகலென்ன
ஒருங்கு முன் கையின் மீதில் ஓர் ஐஞ்ஞூறு அடித்துவிட்டாள்
கரும் கணி பதுமை தோழி காரிகை ஒருத்தி வந்தாள்.

#227
ஆரியை என்னும் நாம அரிவை கைக்கொண்டு பந்தைச்
சேர மின் சிலம்பும் ஆர்ப்பச் சிறு நுதல் முத்து அரும்பச்
சீரின் மூவாயிரம் கை சிறந்தவள் அடித்த பின்பு
பேர்_இசைத் தத்தை ஆயம் பெரும் குழாத்து இனிதின் நோக்காள்

#228
ஒருவரும் ஏற்பார் இன்றி ஓர்ந்து அவள் நெஞ்சம் கூர்ந்து
திரு நுதல் மாது நொந்து சிறப்பு இன்றி இருந்த போழ்தின்
மருவு கோசலத்து மன்னன் மகள் உரு அரிவை நாமம்
சுரி குழல் மானனீகை சொலற்கு அரும் கற்பினாளே.

#229
இளம் பிறை நுதல் வேல்_கண்ணி இனிய வில் புருவம் வேய்த் தோள்
இளம் கிளி மொழி நல் கொங்கை ஈடு_இல் பொன் கலசம் அல்குல்
இளம் மணிப் படம் பொன் வாழை இரு குறங்கு ஆலம் பண்டி
இளம் புற அடிகள் ஆமை இடை மின் பூம்_குழலினாளே.

#230
ஆங்கு ஒரு காரணத்தில் தத்தை-பால் வந்திருந்தாள்
பூம்_கொடி தோல்வி கண்டு பொறுப்பு_இலா மனத்தள் ஆகித்
தீங்கு உறு தத்தை-தன்னைச் சீருடன் வணங்கிப் போந்து
பாங்குறும் இலக்கணங்கள் பந்தடி பலவும் சொன்னாள்.

#231
மூன்று_பத்து_இரண்டு நல் மூரிப் பந்து எடுத்து உடன்
தோன்று இரண்டு கையினும் தொடுத்து இனிது அடித்தலும்
ஆன்ற கையின் ஓட்டலும் அலங்கலுள் கரத்தலும்
ஈன்ற அரவின் ஆடலும் இறைஞ்சி நிமிர்ந்து ஆடினாள்.

#232
முட்டு_இல் கோல வட்டணை முயன்று பத்தியிட்டு உடன்
நட்டணை நடனமும் நயந்து இனிதின் ஆடவும்
பட்டுடையின் வேர் நுதல் பாங்கினில் துடைப்பவும்
இட்டு இடை துவளவும் இனிய பந்து அடித்தனள்.
**மானனீகையின் பந்தாட்டத்தை அனைவரும் பாராட்டுதல்

#233
பரிவுகொண்டு அனைவரும் பண்டு அறியோம் என்மரும்
விரிவு வான் மடந்தையோ வியந்திரியோ என்மரும்
தரிவு விச்சை மங்கையோ தான் பவண நாரியோ
விரிவுறு இ நிலத்திடை வேறு கண்டது இல் என்பார்.

#234
காந்தள் நல் நறு முன்கைக் கன்னி அ விரலினின்
ஏந்தினள் எடுத்து அடிக்க இறை வளை ஒலிவிடப்
போந்தன விசும்பினும் பொங்கு நல் நிலத்தினும்
சூழ்ந்து உகந்து எழுந்தன சூறாவளிகள் என்னவே.
**பந்தாடும் மானனீகையின் நிலை

#235
சிலம்பு கிண்கிணி சில சீர்க் கலன்கள் ஆர்ப்பவும்
வலம்புரி மணி வடம் வளர் இள முலை மிசை
நலம்பெற அசைந்திட நங்கை பந்து அடித்திடப்
புலம்பு வண்டு தேன் இனம் பூம்_குழல் மேல் ஆடவே.
**மானனீகையின் மீது உதயணனின் காதல்

#236
பாடகச் சிலம்பு ஒலி பண்ணினும் இனிது எனச்
சூடகத்து ஒலி நல சுரருடைய கீதமே
ஆடக மணித் தொனி அரசு உளம் கவர்ந்து உடன்
கூடக மனத்தினற்கும் அரன் இனியன் ஆயினான்.
**மானனீகையின் பந்து ஆடும் திறம்

#237
மாறுமாறு எழுவதும் வகையுடன் இழிவதும்
வீறு மாதர் ஆடவும் வேந்தனுடன் மாந்தரும்
கூறும் இவள் அல்லது குவலயத்தின் இல்லை என்று
ஏறு பந்தின் எற்றிக்கை எண்ணாயிரம் அடித்தனள்.
**வாசவதத்தையின் சினம்

#238
பிடி மிசை மாதர் போந்து பெரு மணக் கோயில் புக்கார்
கடி மலர்க் கோதை மன்னன் காவி நல் விழி மானீகை
இடி மின்னின் நுசுப்பினாளை இன்புறப் புணர்ந்திருப்பத்
துடி இடைத் தத்தை கேட்டுத் தோற்றிய சீற்றத்தானாள்.
**உதயணன் மானனீகை மணம்

#239
துன் இருள் நீங்கிக் காலை தூ மலர் கொண்டு தத்தை
மன்னவன் அடி வணங்க மனம் மகிழ்வு இன்றி நின்ற
அன்ன மெல் நடையினாளை அகம் மகிழ் குளிரக் கூறி
மன்னன் மானீகை-தன்னை மணம் மிகச் செய்துகொண்டான்.
**உதயணன் விரிசிகை மணம்

#240
தேவியர் மூவர் கூடத் தேர் மன்னன் சேர்ந்து செல் நாள்
காவின் முன் மாலை சூட்டிக் காரிகை கலந்து விட்ட
பூவின் மஞ்சரியைப் போலும் பொற்பு நல் விரிசிகையைத்
தா_இல் சீர் வேள்வி-தன்னால் தரணீசன் மணந்தான் அன்றே.
**உதயணனின் ஆட்சிச் சிறப்பு

#241
நட்பு உடைக் கற்பு மாதர் நால்வரும் மன்னன் உள்ளத்து
உள் புடை இருப்ப நாளும் ஒரு குறைவு இன்றித் துய்த்துத்
திட்பு உடை மன்னர் வந்து திறை அளந்து அடி வணங்க
நட்பு உடை நாட்டை எல்லாம் நர_பதி ஆண்டு சென்றான்.

@5. நரவாகன காண்டம்
**வாசவதத்தை மசக்கை எய்துதல்

#242
எத்திக்கும் அடிப்படுத்தி எழில்பெறச் செங்கோல் செல்லும்
பெற்றிசெய் வேந்தன்-தன்னைப் பெருமை வேல் தானை மன்னை
வித்தை செய் சனங்கள் மாந்தர் வியந்து அடி வணங்க மின்னும்
முற்று இழை மாலைத் தத்தை முனிவு_இல் சீர் மயற்கையானாள்
**வாசவதத்தையின் விருப்பம்

#243
நிறை புகழ் வனப்பு நங்கை நிலவிய உதரம்-தன்னுள்
பிறை என வளரச் செல்வன் பேதையும் விசும்பில் செல்லும்
குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தின் எண்ணி
அறை புகழ் அமைச்சர்-தம்மை அழைத்தனன் வினவினானே.
**உருமண்ணுவாவின் உரை

#244
உருமண்ணு இதனைச் செப்பும் முன் ஒரு தினத்தின் வேட்டைப்
பெரு மலை வனத்தில் நீரின் வேட்கையால் பிறந்த துன்பம்
மருவுறு வருத்தம் கண்டு ஓர் வானவன் வந்து தோன்றிப்
பெரும நீர் உண்ணக் காட்டிப் பேர்_இடர் தீர்த்தான் அன்றே.

#245
இன்னம் ஓர் இடர் வந்தாலும் என்னை நீர் நினைக்க என்று
மன்னும் ஓர் மந்திரம்-தான் வண்மையின் அளித்துப் போந்தான்
சொன்ன மா மந்திரத்தைச் சூழ்ச்சியின் நினைக்க என்றான்
பின் அவன் நினைத்த போழ்தே பீடு உடை அமரன் வந்தான்.
**தேவன் கூற்று

#246
பல உபசாரம் சொல்லிப் பார் மன்னற்கு இதனைச் செப்பும்
நலிவுசெய் சிறையில் பட்ட நாளிலும் சவரர் சுற்றி
வலிய வந்து அலைத்த போதும் வாசவதத்தை நின்னைச்
சில தினம் பிரிந்த போதும் செற்றோரைச் செகுத்த போதும்.

#247
மித்திரன் என்றே என்னை வேண்டி முன் நினைத்தாய்_இல்லை
பொன் திரு மார்ப இ நாள் புதுமையின் நினைத்தது என்னை
உத்தரம் சொல்க என்ன ஒளி உமிழ் அமரன் கேட்கச்
சித்திரப்பாவை வானில் செலவினை வேட்டாள் என்றான்.
**உதயணன் உரை

#248
எங்களில் கருமமாக்கும் இயல்பு உள தீர்த்துக்கொண்டோம்
திங்களின் முகத்தில் பாவை செலவு நின்னாலே அன்றி
எங்களில் ஆகாது என்று இப்பொழுது உனை நினைத்தேன் என்ன
நன்கு இனி அமரன் கேட்டு நர_பதி கேள் இது என்றான்.
**தேவன் மந்திரம் செவியறிவுறுத்தல்

#249
வெள்ளிய மலையில் தேவன் விரைக் குழலாள் வயிற்றின்
உள்ள இன்பத்தினாலே உலவுவான் சிந்தையானாள்
கள் அவிழ் மாலை வேந்தன் கதிர் மணித் தேரின் ஏறிப்
புள் எனப் பறக்க மந்த்ரம் ஈது எனக் கொடுத்துப் போந்தான்.
**அனைவரும் தேரேறி வானத்தே செல்லல்

#250
வெற்றித் தேர் ஏறி வென் வேல் வேந்தனும் தேவி-தானும்
மற்று நல் தோழன்மாரும் வரிசையின் ஏறி வானம்
உற்று அந்த வழியது ஏகி உத்தர திக்கில் நின்ற
பெற்றி நல் இமயம் கண்டு பேர்ந்து கீழ்த் திசையும் சென்றார்.

#251
உதய நல் கிரியும் கண்டே உற்று உடன் தெற்கில் சென்று
பொதிய மா மலையும் காணாப் பொரு_இல் சீர்க் குட-பால் நின்ற
மதி கதிர் அவியும் அத்த வான் கிரி கண்டு மீண்டும்
இதம் உள தேசம் பார்த்தே இனிய தம் புரி அடைந்தார்.
**நரவாகனன் பிறப்பு

#252
மாது தன் வயா_நோய் தீர்ந்து வள நகர் புக்க பின்பு
தீது இன்றிக் கோள்கள் எல்லாம் சிறந்து நல் வழியை நோக்கப்
போதின் நல் குமரன் தோன்றப் புரவலன் இனியன் ஆகிச்
சோதிப் பொன் அறை திறந்து தூவினன் சனங்கட்கு எல்லாம்.
**மக்கட்குப் பெயரிடுதல்

#253
நரவாகனன்னே என்று நர_பதி நாமம்செய்தான்
விரிவாகு மதி அமைச்சர் மிக்க நால் குமரர் பேர்-தாம்
பரிவு ஆர் கோமுகனும் பாங்காம் தரிசகன் நாகதத்தன்
குரவம்பூ மேனியான குலம் அறி பூதியாமே.
**நரவாகனன் கலைபயிலுதல்

#254
நால்வரும் துணைவர் ஆகி நறு நெய் பாலுடன் அருந்தி
பால் மரத் தொட்டில் இட்டுப் பரவியும் தவழ்ந்தும் மூன்றாம்
மால் பிறை போல் வளர்ந்து வரிசையின் இளமை நீங்கிப்
பால் மொழி வாணி-தன்னைப் பாங்கினில் சேர்த்தார் அன்றே.
**நரவாகனன் உலாப் போதல்

#255
ஞான நல் குமரி-தன்னை நலம் முழுது உண்டு மாரன்
மான வில் கணைக்கு இலக்கா மன்மதன் என்னக் கண்டோர்
வானவக் குமரர் போல வாரணம் ஏறித் தோழர்
சேனை முன் பின்னும் செல்லச் சீர் நகர் வீதி சென்றான்.
**நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்

#256
ஒளிர் குழல் கலிங்க சேனை உதரத்தின் உற்பவித்த
வளி நறும் பூம் சுகந்தம் மதனமஞ்சிகை-தன் மேனி
குளிர் இளம் தென்றல் வீசக் கோல முற்றத்துப் பந்தைக்
களி கயல்_கண்ணி ஆடக் காவல_குமரன் கண்டான்.
**நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்

#257
மட்டு அவிழ் கோதை-தன்னை மன்னவ_குமரன் கண்டு
இட்ட நன் மாரன் அம்பால் இருவரும் மயக்கமுற்று
மட்டு அவிழ் மலர்ச் சோலைக்குள் மன்னவ_குமரன் மின்னின்
இட்டு இடை மாதைத் தந்தே இன்புறப் புணர்ந்தான் அன்றே.
**மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்

#258
இருவரும் போகம் துய்த்தே இளைத் துயில் கொள்ளும் போழ்து
மருவிய விச்சை மன்னன் மானசவேகன் என்பான்
திரு நிற மாதைக் கண்டு திறத்தினில் கொண்டுசென்று
பெரு வரை வெள்ளி மீதில் பீடுறு புரம் புக்கானே.
**மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்

#259
தன்னுடை நோய் உரைக்கத் தையலும் மோனம் கொண்டே
இன் உயிர்க் கணவன்-தன்னை இனிமையின் நினைத்து இருப்ப
மின் இடைத் தங்கையான வேக நல் வதியை ஏவி
மன்னிய நிறை அழிக்க வாஞ்சையின் விடுத்தான் அன்றே.
**வேகவதி நரவாகனன் மீது காமுறுதல்

#260
அன்புற அவளும் சொல்ல அசலித மனத்தள் ஆகி
இன்புறும் தன் ஓர் நாதன் இந்திரன் போலும் என்னப்
பண்பு உணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்தள் ஆகி
நண்பொடு விசும்பின் வந்து நரவாகனனைக் கண்டாளே.
**வேகவதி மதனமஞ்சிகை வடிவம் பூணுதல்

#261
கண்ட பின் காமம் கூர்ந்து கார் விசும்பு-அதனில் நிற்பப்
புண் தவழ் வேலின் காளை பூம்_குழலாட்கு இரங்கி
வண்டு அலர் சோலை மாடம் வனம் எங்கும் தேடுகின்றான்
தொண்டை வாய் உடைய வேகவதியும் சூதினிலே வந்தாள்.
**மதனமஞ்சிகையென நினைத்து வேகவதியுடன் நரவாகனன் கூடுதல்

#262
மதனமஞ்சிகை மான் விழி ரூபம் போல்
வதன நல் மதி வஞ்சி அம் கொம்பு அனாள்
இத நல் வேடத்தை இன்பில் தரித்து உடன்
புதரின் மண்டபம் புக்கு அங்கு இருந்தனள்.

#263
தாது உதிர்ந்து தரணியில் பம்பிட
மாதவிப் பொதும்பின் மயில் தோகை போல்
பேதையைக் கண்டு பீடு உடைக் காளையும்
தீது அறும் திறம் தேர்ந்து புணர்ந்தனன்.
**மன்னவன் வேகவதி மீது ஐயுறுதல்

#264
ஆங்கு ஒர் நாளில் அரிவை துயிலிடைத்
தேம் கொள் கண்ணியைச் செல்வனும் கண்டு உடன்
பூம்_குழாஅல் நீ புதியை மற்று யார் எனப்
பாங்கில் வந்து பல உரை செய்தனள்.
**நரவாகனன் வேகவதியுடன் கூடுதல்

#265
கேட்ட வள்ளலும் கேடு_இல் நல் மாதரை
வேட்ட வேடம் விரும்பி நீ காட்டு எனக்
காட்டவே கண்டு காளை கலந்தனன்
ஊட்டவே கணை உன்னத மாரனே.
**மானசவேகன் இருவரையும் மயக்கி கொண்டு போதல்

#266
மன்னு விஞ்சையின் மானசவேகனும்
துன்னு தங்கையாம் தோகையைக் காண்கிலன்
உன்னி வந்து அவள் போனது அறிந்து உரை
பன்னி வந்து இருவோரையும் பற்றினன்.
**மானசவேகன் நரவாகனனை நிலத்தில் தள்ளி விடுதல்

#267
வானகம் சென்று வள்ளலை விட்ட பின்
ஈனகம் செல ஏலக் குழலியும்
தான் அகம் விஞ்சை தான் உடன் விட்டனள்
கானகத்திடைக் காளையும் வீழ்ந்தனன்.
**நரவாகனனைச் சதானிக முனிவர் காணுதல்

#268
வெதிர் இலை என வீழ்ந்தவன்-தன்னிடைக்
கதிர் வேல் வத்தவன் காதல் நல் தந்தையாம்
எதிர்வரும் பிறப்பு எறிகின்ற மா முனி
கதிர் இலங்கு வேல் காளையைக் கண்டனன்.

#269
போதி தன் வலிப் போத உணர்ந்து தன்
காதலில் சென்று காளை-தன் நாமமும்
ஏதம்_இல் தந்தை எய்திய நாமமும்
போதச் செப்பலும் போந்து பணிந்தனன்.
**நரவாகனன் முனிவரிடம் வேண்டுதல்

#270
தந்தை என் முதல் தாம் அறிந்து இங்கு உரை
அந்தம்_இல் குணத்து ஐய நீர் ஆர் என
முந்து நல் முறையாம் முனி தாம் சொலச்
சிந்தை கூர்ந்து சிறந்து ஒன்றும் கேட்டனன்.

#271
விஞ்சை அம் பதி வெற்றிகொண்டு ஆளும் என்
தஞ்சம் என்ற நல் தக்கோர் உரை உண்டு
எஞ்சல்_இல் இன் நிலைமை-அது என்று என
விஞ்சு மா தவன் மெய்ம்மையில் கூறுவான்.
**முனிவனின் கூற்று

#272
வெள்ளி அம் மலை மேல் நின்ற ராச்சியம்
உள்ளது எல்லாம் ஒருங்கே அடிப்படுத்து
எள்_இல் செல்வமும் ஈண்டு உனக்கு ஆம் என்றான்
கள் அவிழ் கண்ணிக் காளையும் கேட்ட பின்
**நரவாகனன் தாய் தந்தையரிடம் நடந்தவை கூறல்

#273
மா தவன் விட வள்ளல் நகர்ப் புக்குத்
தாதை தாய் முதல் தான் கண்டு இருந்த பின்
தீது தீர்ந்ததும் செல்வி பிரிந்ததும்
ஆதரித்தவர்க்கு அன்னோன் விளம்பினன்.

#274
மேல் நிகழ்வு என மெய்த் தவர் கூறினது
ஆல் நவின்று தன் தாய் துயர் தீர்த்தனன்
வான் உழைச் செல்லும் மன்னிய தேர் மிசை
ஈனம்_இல் குமரன் இனிது ஏறினான்.
**நரவாகனன் வித்தியாதர உலகஞ் செல்லுதல்

#275
அன்பால் வான் வழியாய் மணித் தேர் செலத்
தென்-பால் சேடியில் சீதரலோகத்தில்
இன் பால் பொய்கை எழில் கரை வைகு என
மின் பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன்.
**நரவாகனனை வித்தியாதரன் காணுதல்

#276
நெடும் கரை மிசை நீர்மையின் நின்றனன்
நடுங்கல் இன்றி வாய் நான நீர்பூசியே
கடி கமழ் கண்ணிக் காளை இருந்தனன்
அடி கண்டு ஓர் மகன் அன்பில் தொழுதனன்
**நரவாகனன் வினாவும் வித்தியாதரன் விடையும்

#277
அண்ணல் கண்டு நீ யார் உரை என்றலும்
தண் என் வாய்மொழித் தானவன் சொல்லுவான்
அண்ணல் கேட்க அரிய வரை மிசைக்
கண் ஒளிர் கொடிக் கந்தருவப்புரம்.

#278
காவலன் நீலவேகற்குக் காரிகை
நா விளங்கும் சீர் நாகதத்தை எனும்
பூ இளம் கொடி புத்திரி நாமமும்
மே விளங்கும் அநங்கவிலாசனை.

#279
சுரும்பு ஆர் மாலை அமளித் துயிலிடைக்
கரும்பு ஆர் நல் மொழி காதல் கனவிடை
விரும்பு சிங்கம் ஈன் வீரியச் சாபம்-தான்
பரம்பு மண்-நின்று பாங்கின் எழுந்ததே.

#280
வரை மிசை வந்து மன்னிய தன் முலை
அரிய முத்து அணி ஆரத்தைக் கவ்வியே
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டு தன் ஐயர்க்கு உரைத்தனள்

#281
வெல்ல அரும் வேலின் வேந்தனும் கேட்டு உடன்
சொல்ல அரும் தவச் சுமித்திர நல் முனி
புல்ல அரும் பதம் பொற்பின் இறைஞ்சினன்
நல்ல அரும் தவன் நல் கனாக் கேட்டனன்.

#282
அறிந்து அருள்செய்தனன் அ முனிவனும்
செறிந்த பூமி வாழ் திரு மருகன் வரும்
அறைந்த நின் மகட்கு ஆகும் மணவரன்
நிறைந்த நேமி இ நிலமும் ஆளுவன்.

#283
அ முனிவன் சொல் அரசன் கேட்டு உடன்
தம் இல் எண்ணினன் சார்ந்து காண்க எனச்
செம்மை எண்ணியே செப்பி விட்டனன்
உம்மைக் கண்டனன் செல்க என்றனன்.
**நரவாகனனை நீலவேகன் வரவேற்றல்

#284
போவதே பொருள் புண்ணியன் கொண்டு
தேவனே எனச் செல்வனும் செலும்
காவலன் எதிர்கண்டு கண் மகிழ்
ஏவலாளரோடு இனிதின் எய்தினான்.
**நீலவேகனின் ஆசை

#285
கன்னல் வில் கணை இல்லாக் காமனை
இன் இலக்கணம் ஏற்ற காளையை
மன்னன் இன் உரை மகிழ்ந்து கூறினான்
பின் அமைச்சரைப் பேணிக் கேட்டனன்.
**அநங்கவிலாசனை சுயம்வரம்

#286
தனித்து இவர் மணம் தரத்து இயற்றினால்
சினத்தொடு மன்னர் சேர்வரால் என
மனத்து அமைச்சரும் மகிழ்ந்து மன்னரை
இனத்தோர் மாவரம் இயம்பி விட்டனர்.
**அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலையிடல்

#287
மன்னர் ஈண்டியே வந்திருக்கையில்
அன்ன மெல் நடை அமிர்தம் அன்னவள்
மின்னின் மாலையை விரகின் ஏந்தி முன்
சொன்ன காளை மேல் சூட்டி நின்றனள்.
**மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்

#288
அரசன் மிக்கு நன்கு அமைத்த வேள்வியின்
திருமணம்செய்து செல்வன் இன்புற
இருவரும் புணர்ந்து இன்பம் ஆர்ந்தனர்
வெருவும் மானசவேகன்-தன் மனம்
**நரவாகனனின் திருவுலா

#289
வேக யானை மேல் ஏறி வீரனும்
நாக நீள்புர நடுவில் தோன்றலும்
காமனே எனக் கன்னி மங்கையர்
தாமரைக் கணால் தான் பருகும் நாள்.
**நரவாகனின் சிறப்புகள்

#290
நேமி ஆளவே நினைத்த தோன்றலும்
வாமநாகர்-தம் மலையில் சென்றனன்
தாம மார்பனைத் தரத்தில் கண்டவர்
நேமி தான் முதல் நிதிகள் ஒன்பதும்

#291
நாம இந்திரன் நன்கு அருள்செயக்
காமனுக்கு ஈந்து கண்டு சேவித்துத்
தாம அந்தரர் தாம் பணிந்திடத்
தோம்_இல் நாலிரண்டு ஒன்று ஆயிரம்.
**நரவாகனனை சக்கரப் படை வணங்குதல்

#292
சக்கரம் வலம் சார்ந்து இறைஞ்சின
மிக்க புண்ணியன் மீட்டு வந்து உடன்
தக்க விஞ்சையர்-தம் பதி எல்லாம்
அக்கணத்தினில் அடிப்படுத்தினன்.
**நரவாகனனின் வெற்றி

#293
விஞ்சையர் திறை வெற்றி கொண்டவன்
தஞ்சம்_என்றவர் தரத்தின் வீசியே
எஞ்சல்_இல் புரம் இந்திரன் என
மிஞ்சு மாளிகை வீரன் சென்றனன்.
**நரவாகனனின் மாட்சி

#294
மதனமஞ்சிகை மனம் குளிர்ந்திட
விதனம் இன்றி நல் வேகவதியுடன்
அதிக போக அநங்கவிலாசனை
அதிக எண்ணாயிரமான தேவியர்

#295
இனிய வேள்வியால் இன்பம் ஆர்ந்து பின்
இனிய புண்ணியம் ஈண்டி மேல்வரத்
தனி அரசினைத் தான் இயற்றியே
நனியது ஒன்றினன் நாம வேலினான்.
**நரவாகனன் தந்தையைக் காண வருதல்

#296
விஞ்சையர் தொழ வீறும் தேவியர்
பஞ்சின் மெல் அடிப் பாவைமாருடன்
மஞ்சு சூழ் மலை விட்டு வானவர்
தஞ்சமான தன் தந்தை-பால் சென்றான்.

#297
புரம் மதிக்கப் பூ_மாலை தோரணம்
வரம்பு_இல் நாற்றியே வான் கொடி மிடை
அரும்பு மாலை வேல் அரசன் சென்று எதிர்
விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன்.
**நரவாகனன் தாய் தந்தையரை வணங்குதல்

#298
தந்தை_தாய் பதம் தான் பணிந்த பின்
இந்து வாள் நுதல் எழில் மடந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை
அந்தம்_இல் வனத்து அடி இறைஞ்சினார்.
**உதயணன் செயல்

#299
மகிழ்ந்து புல்லியே மனை புகுந்த பின்
நெகிழ்ந்த காதலால் நேமிச் செல்வனும்
மிகுந்த சீருடன் வீற்றிருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவழைத்தனன்.
**பதுமாவதியின் மைந்தன் கோமுகனுக்கு முடிசூட்டல்

#300
பதுமை-தான் மிகப் பயந்த நம்பியாம்
கொதி நுனை வேலின் கோமுகன்-தனை
இதம் அளித்திடும் இளவரைசு என
அதுல நேமியன் அரசு நாட்டினான்.
**நரவாகனன் வித்தியாதர உலகம் செல்லல்

#301
தந்தை மேல் மிகும் தளர்வு_இல் காதலால்
தந்த தான் பிரிதலைக் கருத்து எணி
வெம் துயர் கொடு விடுப்பச் செல்வனும்
இந்திரன்-தன் ஊர் இயல்பின் ஏகினான்.

#302
செல்வ நல் குமரன் சென்று தெய்வ இந்திரனைக் கண்டு
செல்வ நல் வாமன் பூசைச் சீர் கண்டு வணக்கம்செய்து
செல்வ இந்திரன் அனுப்பத் திரு மணித் தேரின் ஏறிச்
செல்வம் ஆர் புரம் புகுந்து சிறப்பினோடு இருந்தான் அன்றே.

@6. துறவுக் காண்டம்
**உதயணனின் தவ எண்ணம்

#303
வளம் கெழு வத்தவற்கு மன்னிய காதல் மிக்க
உளம் கெழு கற்பினார்கள் ஓதிமம் போலும் நீரார்
இளம் கிளி மொழியினார்கள் இனிமையில் நால்வரோடும்
துளங்கல்_இல் திருமின் போர்மின் தூய சொல் மடந்தை-தாமும்.

#304
மண் இயல் மடந்தையோடு மருவினார் மிக்க மன்னன்
புண்ணியம் முன்_நாள் செய்த போதந்தே உதவிசெய்ய
எண்ணிய கருமம் எல்லாம் இயைபுடனாகப் பின்னும்
புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்தன் ஆனான்.
**உதயணன் தவத்தின் பெருமையை எண்ணுதல்

#305
ஆசை என்றனக்கு அருளும் தோழனா
ஓசை வண் புகழ் யூகி ஆனதும்
வாசவதத்தை மனைவி ஆனதும்
பேச அரும் மகப் பெற்றெடுத்ததும்.

#306
நரவாகனன் மகன் நாமம் ஆனதும்
வரை மிசைத் தானவர் வாழும் நாட்டை அம்
கரண நேமியால் அடிப்படுத்ததும்
பொரு_இல் வேந்தர்கள் புகழ்ந்து அடைந்ததும்

#307
மிக்க இந்திரன் மேவி விட்டதும்
தக்க புத்திரன் தரத்தில் சென்றதும்
தொக்க வானவர் தொல் சிறப்புடன்
அக்கணம் விட அண்ணல் போந்ததும்.

#308
போந்து புண்ணியன் பொரு_இல் போகத்துச்
சேர்ந்திருந்ததும் செய் தவத்து எனா
வேந்தன் எண்ணியே வெறுத்து மாதரைக்
காந்தி வாமனைக் கண்டு அடி தொழும்
**உதயணனை மகளிர் மயக்குதல்

#309
எண்ணம் வந்து நல் எழில் பெரும்மகன்
புண்ணிய நோன்பு போந்த வேளை வேல்
கண்ணின் மாதர்கள் காவலன் மனம்
உண்ணக் காமத்தை உருவு காட்டினார்.
**உதயணன் மீண்டும் காமத்தில் திளைத்தல்

#310
மன்னும் அன்பில் நீள் மாதர் மோகத்தில்
துன்னும் மால் கடல் தோன்றல் நீந்து நாள்
சொன்ன மும்மதம் தோன்ற வேழமும்
உன்னிக் கால் தளை உதறி விட்டதே.
**மதவெறி கொண்ட யானை

#311
காய்ந்து வெம்மையில் காலன் போலவே
பாய்ந்து பாகரைப் பல சனங்களைத்
தேய்த்துக் காலின் நேர் தீ உமிழ்வ போல்
ஆய்ந்த கண்களும் அரு வரை என.

#312
வெடிபடும் முழக்கு இடி என விடும்
கொடி உடை மதில் கிடுகிடென்றிடும்
விடு பல் கோட்டினில் வெட்டி விட்டிடப்
படபடென்னவே பயணமானதே.
**நகர மாந்தர் செயல்

#313
அடிஅடி என ஆயுதர் செலப்
படுபடு எனப் பறைகள் கொட்டிடத்
திடுதிடு என்று ஒலி தெறித்த பேரிகை
நடுநடுங்கினார் நகர மாந்தரே.
**களிற்றின் வெறிச்செயல்

#314
பிடி சில் பாகரைப் பிளந்து எறிந்திடக்
குடரின் மாலைகள் கோட்டு அணிந்து உடன்
கடவுள் யானையைக் காலில் தேய்த்திட
இடர்படும் களிறு எய்தி ஓடுமே.
**நகரமாந்தர் அரசனுக்கு செய்தி தெரிவித்தல்

#315
நகர மாந்தர்கள் நடுங்கிச் சென்று நல்
சிகரம் போல் முடிச் சீர் அரசற்குப்
பகர வாரணம் பலரைக் கொன்றது என்
சிகர மாடம் நீர் சேர்ந்திருக்க என்றான்.
**யானை, சோலை முதலிய அனைத்தையும் அழித்தல்

#316
நீல நல் கிரி நெடிய யானையும்
மாலை நல் போது மாய்ந்து பின் உறக்
காலை நல் போதால் கனன்று தோன்றின
சோலை நல் வயல் துகைத்து அழித்ததே.

#317
வழி வருவாரை மார் கிழித்திடும்
எழில் வனம் பொய்கை ஈடு அழித்திடும்
இழிவுறும் தொழில் ஈண்டிச் செய்யும் நாள்
பொழிலுள் மா தவர் பொருந்தினார்களே.
**சாரணர் சார்ந்திருந்த பொழில்

#318
வேதம் நான்கையும் விரித்து அருளுவர்
மா தவர் வினை மாயச்செய்குவார்
ஏது_இல யாத்திரைக்கு எழுந்து வந்து அந்தப்
போது அவிழ் பொழில் புகுந்து இருந்தனர்.
**சாரணரின் பெருமை

#319
இன மலர் மிசை ஏகுவார்களும்
புனல் அலை மிசைப் போகுவார்களும்
கனிகள் காய் மிசை காணும் சாரணர்
இனிய நூல் மிசை இசைந்து செல்வரும்

#320
மலைத் தலை மிசை வானில் செல்வரும்
நிலத்தில் நால் விரல் நீங்கிச் செல்வரும்
தலத்தில் நல் முழம் தரத்தில் செல்வரும்
பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும்

#321
மலை முழஞ்சுள் மன்னி நான்மறை
உலகு எலாம் அவர் ஒருங்கிட விடும்
அலம்-அது தீரவே அற மழை பெய்யும்
மலம் அறும் தர மா முனிவரும்.

#322
பக்க நோன்பு உடைப் பரம மா முனி
மிக்க பாணி மீது அடிசில் மேதினி
புக்கும் உண்டிடப் போதுவார் பகல்
தக்கவர் குணம் சாற்ற அரிது என்றே
**தருமவீரர் அறம் கூறுதல்

#323
தருமவீரர் என்ற அருள் தலைவன்-பால்
வெருவரும் துன்பம் விலங்கும் வாழ்க்கையை
மருவி ஓதவே வந்த யாவரும்
திரு மொழியினைத் திறத்தில் கேட்டனர்
**யானையின் செயல்

#324
வரும் தசை நசை வானில் புள்ளுகள்
இரைந்து மேலும்கீழினும் படர்ந்திடப்
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்
விருந்து அவை உண விட்டது யானையே.
**யானை சாரணர் மூலம் பழம் பிறப்புணர்தல்

#325
கூற்று எழும் கரி கொதித்து எழுந்ததால்
ஆற்றல் அம் முனி அறவுரை உற
ஏற்று அரும் செவி இறைஞ்சித் தன்னுடை
மாற்ற அரும் பவம் அறிந்து உணர்ந்ததே.
**யானையின் வருத்தம்

#326
குருதி ஆறிடக் கொன்ற தீ_வினை
வெருவு துக்கமும் விளங்கின் உய்த்திடும்
அரு நரகினுள் ஆழ்ந்து விட்டிடும்
பெரும் துயர் எனப் பேதுறுக்குமே.
**யானை மெய்யுணர்வு பெற்று அமைதியுறல்

#327
நெஞ்சு நொந்து அழும் நெடும் கண் நீர் உகும்
அஞ்சும் மாவினுக்கு அறிவு தோன்றிடக்
குஞ்சரம் இனிக் கோ நகர் உன்னி
இஞ்சி வாய்தலின் எய்தி நின்றதே.
**களிற்றினைக் காண உதயணன் வருதல்

#328
கடையுடைக் காவலாளர் கதவினைத் திறக்கப் போந்தே
நடு நகர் வீதி சென்று நர பதி மனையைச் சேர்ந்து
நெடு வரை போல நின்ற நீர்மையை வாயிலாளர்
முடி மனற்கு உரைப்ப முன்னிப் பெருமகன் எழுந்து வந்தான்.
**உதயணன் களிற்றின் மீது ஏறல்

#329
திரு முடி மன்னன் நின்ற திரு நிறை யானை கண்டு
மருவிய அமைச்சர்-தம்மை மன்னவன் இனிதின் நோக்கப்
பெரு விறல் யூகி சொல்வான் பெரும் தவர்-பால் அறத்தை
மருவியே கேட்டது ஆகும் மன்ன நீ ஏற என்றான்.
**யானை உதயணனை முனிவரிடம் கொண்டு செல்லல்

#330
வேந்தனும் கேட்டு வந்து வெண் கோட்டின் அடிவைத்து ஏறிச்
சேந்தனன் எருத்தின் மீதில் திரும்பிக்கொண்டு ஏகி வேழம்
பூம் தளிர் நிறைந்து இலங்கும் பொழில் வலம் சுற்ற வந்து
காந்து நல் மணிப் பூண் மார்பன் கைம்மா விட்டு இழிந்தான் அன்றே.
**உதயணன் துறவியிடம் அறங்கேட்டல்

#331
விரை கமழ் பூவும் நீரும் வேண்டிய பலமும் ஏந்திப்
பரிசனம் சூழச் சென்று பார்த்திபன் இனியன் ஆகி
மரு மலர் கொண்டு வாழ்த்தி மா தவர் அடி இறைஞ்ச
இரு என இருக்கை காட்ட இருந்து நல் அறத்தைக் கேட்டான்.
**முனிவர் கூறிய அறவுரைகள்

#332
அறத் திறம் முனிவன் சொல்ல அரசனும் கேட்கலுற்றான்
பெறற்கு அரும் அரும் கலங்கள் பேணுதற்கு அரிய ஆகும்
திறத்து அறி பொருள்கள் ஆறும் தேர்ந்து பஞ்சத்திகாயம்
மறித்து அறி தத்துவங்கள் வரிசையின் ஏழது ஆமே.

#333
சீரிய நவபதங்கள் செப்பிய காயம் ஆறும்
வீரியப் பொறிகள் ஆறும் வேண்டிய அடக்கம் ஆகும்
ஓர் இயல் அறம் பத்தோடும் ஒருங்கு பன்னிரண்டு சிந்தை
ஆரியர் அறிந்து நம்பி அதன் வழி ஒழுக்கம் ஆகும்.

#334
தலைமகார் சிறப்புச் செய்து தன்மை நல் வாய்மையான
கலையில் நல் கரையைக் கண்டு காதல் நூல் வழியைச் சென்று
மலைவு_இல் சீர் மா தவர்க்கு வண்மையில் தானம்செய்தார்
தொலைவு_இலா பிறவி நீங்கித் தொல் சுகக் கடலுள் ஆழ்வார்.

#335
தருமவீரர் தருமம் உரைத்திடப்
பெருமை மன்னனும் பேர்ந்து வணங்கினன்
மருவு வல்_வினை மாசின் உதிர்த்திடத்
தெரிசன் அ விளக்கம் சிறப்பானதே.
**முனிவர் களிற்றின் வரலாறு கூறல்

#336
காது வேல் மன்னன் களிறு கதம் எழற்கு
ஏது என் என எதிர் வரன் சொலும்
தாது பூம் பொழில் சாலி நல் நாட்டிடை
வேதியர் குழுவாய் விளங்கும் புரம்.

#337
கடகம் என்பது ஊர் காதல் பிராமணன்
விடபகன் என்னும் பேரினன் மற்று அவன்
இடை மின் தேவியும் சானகி என்பவள்
கடை_இல் காமம் கலந்து உடன் செல்லும் நாள்.

#338
அமரி என்னும் மணி முலை வேசி-தன்
அமையும் காமத்து அழுங்கி விழுந்தவன்
சமைய வேள்வியும் சார்ந்த ஒழுக்கமும்
அமைவிலன் பவம் அஞ்சினன்_இல்லையே.

#339
காமம் கள் உண்டு கைவிடல் இன்றியே
தாம நல் குழலாள் துணை ஆகவும்
யாமமும் பகலும் அறியாதவன்
ஆ மரணத்தின் பின் ஆனை-அது ஆயினன்.
**மன்னனின் செயல்

#340
அ நிலை உணர்ந்து அடங்கியது என்றனர்
மன்னன் கேட்டு உடன் வந்து நல் பாகர்க்குச்
சொன்ன யானையைத் தூய நீராட்டு எனும்
அன்னம் பால் நெய்யின் அன்புடன் ஊட்டு எனும்.

#341
கவளம் நாள்-தொறும் ஊட்டு எனும் காவலன்
பவளமாம் எனும் பண்ணவர்-தம் அடி
திவளும் மா முடி சேர்த்து வணங்கியே
உவள் அகத்து உன்னி மற்றொன்று கேட்டனன்.
**உதயணன் முனிவரை வினவுதல்

#342
மதக் களிற்றின் மேல் மன்னிய அன்பு எனக்கு
உதவக் காரணம் என் எனக் கூறலும்
சிதைவு_இல் காட்சி நல் சீர்_ஒழுக்கத்தவர்
மதம்_இல் மாட்சியர் மன்ன நீ கேள் என்றார்.
**முனிவர் கூற்று

#343
உள்ள நல் தவர் உற்று உரைசெய்கின்றார்
கள் அவிழ் பொழில் கார் முகில் சூடியே
வெள்ளி அம் மலை மேல் வட சேடியில்
வள்ளல் ஆர் பொய்கை மத்திம நாட்டினுள்.

#344
சுகந்தி ஊர்க்கு இறை சொல் புகழ் மா தவன்
அகம் தெளிந்த வயந்தன் மனைவியாம்
செகம் தனிப் புகழ் சீர் ஆர் குலாங்கனை
உகந்து பெற்றனள் ஓர் புகழ்க் கோமுகன்.

#345
காமன் என்னும் அக் காளை கைத்தாய் பெயர்
சோமசுந்தரி என்னும் சுரி குழல்
நாம வேல் மகன் நன்மை விசையனும்
சேம மித்திரராகச் சிறந்தனர்.

#346
ஒழியாக் காதலுடன் விளையாடியே
வழு_இல் போகம் வரம்பு_இன்றித் துய்த்தலும்
நழு_இல் காட்சியன் நாம வேல் கோமுகன்
ஒழிய நல் உயிர் ஓங்கி நீ ஆயினை.

#347
விசையன் தன் உயிர் விட்டு அந்தணனாய்
வசை_இல் காமம் மயங்கிய மோகத்தின்
இசையினால் உயிர் நீங்கியே இங்கு வந்து
அசை உணாக் களிறு ஆயினது ஆகுமே.

#348
மித்திரன் முன்பு வீறு நல் காதலால்
அத்திமேல் உனக்கு அன்பும் உண்டானதால்
வெற்றி வெண்குடை வேந்தே இ வேழத்தின்
ஒத்த வாயுவும் ஓர் ஏழு நாள் என்றார்.
**உதயணன் வருந்திக் கூறுதல்

#349
திருந்து ஞானத்தில் தேர்ந்த முனி உரை
பொருந்தக் கேட்ட புரவலன் துக்கமாய்
வருந்திச் சென்று அந்த வாரணம்-தன்னிடைச்
சரிந்த காதலில் தான் உரைசெய்கின்றான்.
**உதயணன் செயல்

#350
வஞ்சகத்தின் வரிந்தும் கயிற்றினால்
வெம் செம் முள்ளினை வீறிட ஊன்றியும்
மிஞ்சிக் கால் விலங்கில் சிறைசெய்தனன்
குஞ்சரம் பொறைகொள்ளுதி என்னவே.

#351
காதல் யானையைக் கையில் மெய் தீண்டியே
போத எங்கும் புரவலன் தைவரப்
போதகம் மிகப் பொற்பின் இறைஞ்சலின்
காதலின் திண் களிற்று இயல் கூறு எனா.
**உதயணன் அரண்மனை புகுதல்

#352
யானையாளர்க்கு உரைத்து எழில் மன்னவன்
தேன் நெய் தோய்ந்த திரு மொழி மா தவர்
ஆனவர் பதம் அன்பில் தொழுது போய்ச்
சேனை சூழத் திரு_மனை சேர்ந்தனன்.
**உதயணனின் வழிபாடு

#353
சீலமும் வளங்களும் செறிந்த வேழத் தன்மையை
காலை அ உழையர் வந்து கண்டு உரைப்ப மன்னனும்
ஆலையம் வலம்-அதாய் அருகனை வணங்கிப் பின்
பால் அடிசில் நெய் அருந்திப் பார் அரசன் செலும் நாள்.
**உதயணனின் செயல்

#354
சல்லகீணை கொண்டு உடன் சமாதி வந்தே எய்தலும்
நல்ல வானில் தேவனாய் நாகம் முறைசெய்யக் கேட்டுச்
சொல்ல அரிய வேந்தனும் சூழ்ந்து அவனி போகமும்
நில்லல என்று உணர்ந்தனன் நேமியனை வா என்றனன்.
**நரவாகனனிடம் உதயணன் கூறுதல்

#355
அவனும் வந்து தந்தையை அடி_இணை வணங்கினான்
அவனி உனதாக ஆள் என்ன மன்னன் செப்பினன்
தவ_வனிதை ஆள நான் தாங்குதற்குப் போவனே
உவமம்_இலா ராச்சியம் உற்றது எதற்கு என்றனன்.
**கோமுகனுக்கு முடிசூட்டுதல்

#356
வத்தவன் இறைவனாக மன்னு கோமுகனுக்கு
வெற்றி நல் மணி முடியை வீறுடனே சூட்டியே
ஒத்து உலகம் ஆள்க என்று உரை பல உரைத்த பின்
சித்திர நேர் மாதரைச் செல்வன் நோக்கிக் கூறுவான்.
**உதயணனன் மனைவிகளிடத்து கூறலும் அவர்களின் பதில் உரையும்

#357
தேவியீர் நீர் வேண்டியது என் திரு_மனை துறந்து பின்
மேவுவன் நல் தவம் என்ன மின் இடைய மாதரும்
போவது பொருள் எமக்குப் புரவலனே நின்னுடன்
தா_இல் சீர் விழுத் தவமும் தாங்குதும் என்றிட்டனர்.
**உதயணனுடன் தேவியரும் செல்லல்

#358
உருமண்ணு இடபகன் யூகி நல் வயந்தகன்
பொரு_இல் நால் அமைச்சரும் பொற்பு அரசன் மாதரும்
மருவு நல் மலர்ப் பொழில் வண்மை வலம்கொண்டு மிக்கு
அருள் முனிவர் பாதத்தில் அன்புடன் பணிந்தனர்.
**உதயணன் முனிவரிடம் வேண்டுதல்

#359
நாத்தழும்ப மன்னனும் நயமுறும் இனிமையின்
தோத்திரங்கள் கொண்டு மீத் தொடுத்து ஒலியின் வாழ்த்தியே
ஏத்து அறம் உரைத்திட இனிமை வைத்துக் கேட்டனன்
ஏத்த அரிய நல் தவமும் எங்களுக்கு அளிக்க என்றான்.
**உதயணன் முதலியோரின் தவக்கோலம்

#360
காலம் இது காட்சி தலை கண்டு உணர்த்தக் கைக்கொண்டு
ஞாலம் நிகழ் ஞானமும் நன்கு மிகவே உணர்த்திச்
சீலம் ஆதியாய் ஒழுக்கம் சீருடன் அளித்துப் பின்
கோலமான குஞ்சி முதல் வாங்கித் தவம்கொண்டனர்.
**அனைவரின் தவநிலை

#361
அறு வகைய காயங்களை அருள் மிக்குற்று ஓம்பியும்
பொறிகளை மனத்து அடக்கிப் புண்ணிய மா நோன்புகள்
அறிகுறி அநசனம் ஆற்றுதற்கு அரிது என
மறு_அறு தியானமும் மதியகம் தெளிந்தவே.

#362
புறத்தினும் அகத்தினும் போகத் தொடர்ப்பாடு விட்டு
அறத்திடை அருளினால் ஆர்_உயிரை ஓம்பியும்
திறத்துடன் சமிதியும் சிந்தையின் அடக்கமும்
திறத்திறத்து உணர்ந்து பின் தியானம் முற்றினார்களே.

#363
ஒருவகை எழில் மனம் இரு வகைத் துறவுடன்
மருவுகுத்தி மூன்றுமே மாற்றி நான்கு சன்னையும்
பொரு_இல் ஐம்புலம் அடக்கிப் பொருந்தி அவா அச்சம் மூ
விரு வகைச் செவிலியும் எழுவரையும் வைத்தனர்.

#364
சுத்தி மிக எட்டினோடும் சூழ்ந்த யோகு ஒன்பதாம்
பத்து வகை ஊற்று அடைத்துப் பயின்ற அங்கம் பத்தொன்றும்
சித்தம் பனிரெண்டு சீர்க் கிரியை பதின்மூன்றுடன்
ஒத்த பங்கம் ஈரேழும் ஒருங்குடன் பயின்றனர்.
**உதயணன் கேவல ஞானம் எய்துதல்

#365
உதயண முனிவனும் ஓங்கும் மா வரை-தனில்
இதயம் இனிதாகவே எழில்பெற நல் யோகமாய்
இதமுறு தியானத்தின் இரு_வினை எரித்து உடன்
பதம் இனிது சித்தி எய்திப் பரமசுகத்து இருந்தனன்.
**தேவியரும் அமைச்சரும் நோன்பிருந்து தேவராதல்

#366
அமைச்சராம் அநகரும் ஆன அன்ன மாதரும்
சமைத்த நோன்பு நோற்று உயர்ந்து சமாதி நல் மரணத்தின்
இமைத்தல்_இல் அமரரா நிறைந்த சோதம் ஆதியாய்
அமைத்த அச்சுதம் அளவானபடி இன்புற்றார்.
**தேவியரும் அமைச்சரும் தேவலோகத்தில் இன்புற்றிருத்தல்

#367
பொற்பு உடை நல் மாதரைப் புணர்ந்து மேனி தீண்டலும்
அற்புதமாய்க் காண்டலும் ஆன இன் சொல் கேட்டலும்
கற்பு உடை மனத்தில் எண்ணிக் காணற்கு அரிதாகவே
விற்பன நல் மா தவர் வேண்டு சுகம் துய்த்தனர்.
*