5. நீலகேசி


@0. கடவுள் வாழ்த்து

#1
நல்லார் வணங்கப்படுவான் பிறப்பு ஆதி நான்கும்
இல்லான் உயிர்கட்கு இடர் தீர்த்து உயர் இன்பம் ஆக்கும்
சொல்லான் தருமச் சுடரான் எனும் தொன்மையினான்
எல்லாம் உணர்ந்தான் அவனே இறை ஆக ஏத்தி.

#2
அன்னான் பயந்த அற ஆர் அமிர்து உண்டு நின்றார்
இன்னார் இனையர் என வேண்டுவது இல்லை யார்க்கும்
பன்னாந்துணையும் பணிந்து ஆகிய பத்தியினால்
என்னால் உரைக்கப்படுகின்றது ஒன்று ஈங்கு உளதே.
**அவையடக்கம்

#3
பண்டு ஆகமத்துள் பயிலா உரை என்று மிக்கார்
விண்டு ஈங்கு இதனை வெகுளார் விடல் வேண்டுவன் யான்
தண் தாமரை மேல் நடந்தான் தடம் தாள் வணங்கிக்
கண்டேன் கிடந்தேன் கனவில் இது கண்டவாறே.

#4
ஆய் நீல உண்கண்ணவளாய் அடங்காமை செய்யும்
பேய் நீலகேசி பெரியோன் அறம் கொண்ட பின்னைத்
தீ நீல உள்ளம் திரிந்து ஏறு திருவத்தளாய்
மா ஞாலம் எல்லாம் மறம் மாற்றிய மாட்சியளா.

#5
தேவன் உரைப்பத் தெளிந்தேன் பின் தெளிந்த எல்லாம்
மா என்று கொண்டேன் மடனே வலியாக நின்று
நா வல் புலவர் அவை நாப்பண்ணின் நாட்டல் உற்றேன்
பா இன்ன என்று பழிப்பார் இனி இல்லை அன்றே.

#6
கண்டு இங்கு நாளும் கடல் வையகம் காதல் செய்யும்
வெண் திங்கள்-தானும் விமலம் தனக்கு இல்லது அன்றே
கொண்டு என் சொல் எல்லாம் குணனே எனக் கூறுக என்னேன்
உண்டு இங்கு ஓர் குற்றம் எனில் யானும் ஒட்டாமை உண்டோ.

#7
தெள்ளி நரைத்துத் தெருளாது உறு தீமை செய்யும்
புள்ளின் உரையும் பொருளாம் எனக் கோடலினால்
எள்ளும் திறத்த அஃது உரை என்று இது நீக்கல் இன்றாய்க்
கொள்ளும் உலகம் குணம் மாண் அறம் வேண்டும் என்றால்.
**பதிகம்

#8
நாடும் அ நாடு ஆள் அரசும் நகரும் நகர் சூழ்
காடும் கடவுள் புகல் நீக்குதல் காரணம்மாத்
தேடும் சிறு பேய் பெரும் பேய்த்தியைச் சென்று பற்றும்
பாடும் அவள்-தான் பகைகொண்டு பல்கால் வெருட்டி.

#9
தான் கண்டவன் செய் தவம்-தன்னைக் கலக்ககில்லா
மான் கொண்ட நோக்கின்னவளாய் மறம் மாற்றிய பின்
ஊன் கொண்ட காட்சி முதலாக உடைத்து அது எல்லாம்
யான் கண்டவாறே உரைப்பன் அவையார்க்கு இதனை.

@1. தர்ம உரைச் சருக்கம்

#10
மாஞ்சோலை பொங்கி மருதம் கிளிப்பிள்ளைகள் வாய்த்
தீம் சாறு ஒழுகும் திணையின் அணி தங்கி ஏங்கும்
தாம் சால வாழ்நாள் தளிர் ஈனும் தகையது உண்டு
பாஞ்சாலம் என்று பலரும் புகழ் பார்த்திநாடே.

#11
வாடா வளத்தால் மலர் ஞாலம் மதிப்பின் மிக்க
நாடாவது இஃதாம் அதன் நல் நலம் சொல் நலத்தால்
கூடாது எனினும் சில கூறலும் வேண்டும் அன்றே
பாடாவிருந்தார் பரிவு அஞ்சும் படியது அன்றே.

#12
வரு புனலன வள வயலிடை மறிவன இன வாளை
மருவு இனியன மகிழ் தகையன மலர் சிறையன நாரை
கரு வரியன கடு நடையன கனை குரலன கம்புள்
திரு உருவின தெரி கதிரின திசைதிசை-தொறு செந்நெல்.

#13
பணை நிலையன கமுகொடு படு பழம் உதிர்வன தெங்கம்
இணை நிலையன சுளை கனி இவை இனியன பல வாழை
மணன் அயர்வன மனை அயலன மது விரி மணி நீலம்
திணி நிலையன திரள் அரையன தெரி மலரன மருதம்.

#14
கரை தழுவிய கழி மடலின கடி கமழ்வன கைதை
புரை தழுவிய பொதி அவிழ்வன பொன் மலர்வன புன்னை
விரை தழுவிய விழை தகையன வெறி மலர் விரி ஞாழல்
நிரை தழுவிய நெறி கழியிடை நிகர் அலரன நெய்தல்.

#15
குரு உடையன கொடி மிடைவொடு குலை விரிவன கோடல்
தரு சுடரன தளவு அயலின தகை மலரன தோன்றி
அருகு உடையன அணி உருவின அயலன அலர் காயா
முருகு உடையன முகை விரிவன முறி அலர்வன முல்லை.

#16
நனை சினையன நகு விரையன நலன் உடையன நாகம்
வினை உடையன பொழுது இவை என விரிவன கணி வேங்கை
கனை சுடர் விடு கதிர் மணி அறை களன் அயர்வன காந்தள்
இனியன பல சுனை அயலன இறுவரையன குறிஞ்சி.

#17
ஆடலொடு பாடல் அவை தாம் அறுதல் இன்றிக்
கேடு_இல் புகழ் ஆர் அவைகள் கண்டும் இசை கேட்டும்
ஊடலொடு கூடல் உணர்வார்கள் புணர்வாராய்ச்
சேடரொடு சேடியரும் செல்வம் மிக நல்கி.

#18
தானமொடு சீலம் அவை தாங்கி நலம் ஓங்கி
மானமொடு மாயம்_இலராய மனையாரும்
கானமொடு கல் அடருள் இல் இடரும் நீங்கி
ஞானமொடு செய் வினைகள் நைய முயல்வாரும்.

#19
அந்தணரும் அல்லவரும் ஆகி உடனாய
மந்தம் அறும் நால் வருண மாட்சியினர் ஆகித்
தம்தம் நெறியில் திரிதல்-தானும் இலர் ஆகி
நந்தி மிசை சேறல் உடை நன்மையது அ நாடே.

#20
ஞாலம் அறி நன்மை உடை நாடு அது எனலானும்
ஆலும் மழை மூன்றும் உடை மாதம் எனலானும்
காலம் அவை தாம் கடுமை காண்பு அருமையாலும்
பாலை நிலம் ஒன்றும் அவண் இன்மை பழுது அன்றே.

#21
இன்ன தன்மையின் நாடு இனிது ஆளும் அ
மன்னவன் அவன் யார் எனில் வானிடைச்
சொன்ன நீர்மைச் சுரேந்திரன் போன்று இவண்
தன் அனார்_இல் சமுத்திரசாரனே.

#22
ஆற்றலால் அரிமா அவன் ஆணையால்
கூற்றமே எனக் கூறலும் ஆம் குடி
போற்றல் தாய்_அனையான் பொருந்தார்கள் மேல்
சீற்றத்தால் தெறு தீத் திரளே_அனான்.

#23
தீய தீரத் திரு விளையாடிய
தேயம் காவலனாய்த் திசை யாவினும்
ஈய நீண்ட கை ஏந்தல் நகர் திசை
போய புண்டவருத்தனம் என்பதே.

#24
வளம் கெழு நெடு மதில் வாயில் யாவையும்
உளம் புக விழுங்கியிட்டு உமிழ்வ ஒத்து மேல்
விளங்கி வெண் மதி செலல் விலக்கி நீள் விசும்பு
அளந்து அதன் துணைமையும் அறிவது ஒத்தவே.

#25
விரை செலல் இவுளியும் வேழ ஈட்டமும்
நிரை செலல் கொடுஞ்சி நல் நேமி ஊர்தியும்
அரசு உடைப் பெரும் கடை நெருங்கும் ஆர்கலி
திரை பொரு கடல் ஒலி அன்ன செம்மற்றே.

#26
அகில் புகை அளாவியும் அணி கொள் வீதியில்
துகில் கொடித் தொகுதியும் தூய சுண்ணமும்
முகில் தலைக் கலவி வான் மூடி மா நகர்
பகற்கு இடை கொடாதது ஓர் பான்மை மிக்கதே.

#27
ஆங்கு அ மா நகர் அணைந்தது பலாலையம் என்னும்
பேம் கொள் பேரது அ ஊரது பிணம் படு பெருங்காடு
ஏங்கு கம்பலை இரவினும் பகலினும் இகலி
ஓங்கு நீர் வையத்து ஓசையில் போயது ஒன்று உளதே.

#28
விண்டு நீண்டன வேய்களும் வாகையும் விரவி
இண்டும் ஈங்கையும் இருள்பட மிடைந்து இவற்றிடையே
குண்டு கண்ணின பேய்களும் கூகையும் குழறிக்
கண்ட மாந்தர்-தம் மனங்களைக் கலமலக்குறுக்கும்.

#29
ஈமத் தூமமும் எரியினும் இருளொடு விளக்கா
ஊமைக் கூகையும் ஓரியும் உறழ் உறழ் கதிக்கும்
யாமத்து ஈண்டி வந்து ஆண்டலை மாண்பு_இல அழைக்கும்
தீமைக்கே இடம் ஆயது ஓர் செம்மலை உடைத்தே.

#30
வெள்ளில் மாலையும் விரிந்த வெண் தலைகளும் கரிந்த
கொள்ளி மலையும் கொடிபடு கூறையும் அகலும்
பள்ளி மாறிய பாடையும் எலும்புமே பரந்து
கள்ளி ஆர் இடைக் கலந்தது ஓர் தோற்றமும் கடிதே.

#31
காக்கை ஆர்ப்பன கழுது தம் கிளையொடு கதறித்
தூக்கள் ஈர்ப்பன தொடர்ந்த பல் பிணங்களும் தூங்கச்
சேக்கை கொள்வன செம் செவி எருவையும் மருவி
யாக்கை கொண்டவர்க்கு அணைதலுக்கு அரிது அது பெரிதும்.

#32
கோளி ஆலமும் கோழ் அரை மரங்களும் குழுமித்
தூளி ஆர்த்து எழு சுடலையும் உடலமும் துவன்றி
மீளி யாக்கைய தாக்கி உண் பேய்க் கணம் மிகை சூழ்
கூளிதாய்க்கு என ஆக்கிய கோட்டம் ஒன்று உளதே.

#33
இறைவி கோட்டத்துள் ஈர்_இரு திங்களது அகவை
உறையுள் ஆக அ உறை அரும் காட்டகத்து உறைவான்
பொறையும் ஆற்றலும் பூமியும் மேருவும் அனையான் தான்.
சிறை செய் சிந்தையன் அந்தம்_இல் பொருள்களைத் தெரிந்தான்

#34
அத்திகாயங்கள் அளவைகளால் அளந்து அறிவான்
குத்தி ஆதிய குணங்களில் பெரியவன் அரிய
பத்தின் மேல் இரு தவத்தினில் பவத் தொடர் அறுக்கும்
முத்தியான் முனிச்சந்திரன் எனும் பெயர் முனிவன்.

#35
அன்று அக் கோட்டத்துள் அறிவு இலா மறி தலை அறுப்பான்
சென்று அ தெய்வதைக்கு எனச் சிலர் சிறப்பு அயர் பொழுதின்
நின்று அக் கோள்-மினம் எனச் சொல்லி நெறி அறிவுறுவோன்
ஒன்றல் பல் வகை உயிர்க் கொலை உரை-மினம் எனவே.

#36
பண்டு இ நின்ற பணை_தோளி பாலன் பெறாமையைக்
கண்டு யாம் இக் கணம் ஓடி தன்-பால் சொன்னோமாக
உண்டதாயிற்று ஓர் குழவி என்ன உவப்பித்தற்குக்
கொண்டு வந்தேம் மறி அறுக்க என்றார் கொலையாளர்.

#37
ஊனுடம்போ உயிரோ உறு குழவி ஆதல்
தேன் ஒடுங்கும் குழலாட்குத் தேவர் மன்னும் தந்தது
ஊன் உடம்பு என்னில் உதிரமாம் உயிர் என்னின்
மானிடமாம் வினை மேலைச் செய்து அன்றோ வந்தது என்றான்.

#38
ஏறு யானை இரும் கலைகள் நேர்ந்தார் அவை இவை என்று
ஊறு அங்கி உரு உரு செய்தாலும் உவந்து ஒழிபவால்
மாறுகோள் இலை மண்ணால் மறி உரு செய்து ஈர்ந்தக்கால்
பாறினீர்க்கும் அவர்க்கும் பழி பாவம் ஒன்று இலையே

#39
கொன்றவன்னே கொடியன் என உலகம் கூறும் அதனாலும்
ஒன்ற நூலார் உரைகளோடு ஒப்ப முடியும் அதனாலும்
இன்றின்-நின்றும் இது ஒழிதிர் ஆயின் உங்கட்கு இருமைக்கு
நன்று இது என்றான் வெம் நரகம் புகுதல் விலக்கும் நாவினான்.

#40
கோறல் பொய்த்தல் கொடும் களவு நீக்கிப் பிறர் மனைகள் மேல்
சேறல் இன்றிச் செழும் பொருள் மேல் சென்ற சிந்தை வேட்கையினை
ஆறுகிற்பின் அமர்_உலகம் நுங்கட்கு அடியதாம் என்றான்
நீறும் ஓடும் நிழல் மணியும் பொன்னும் நிகரா நோக்குவான்.

#41
ஏத்துதற்கு ஏற்றான் இரங்கி இன்னவை சொல்லக் கேட்டுப்
பாத்தியோய் எம் பழ_வினையும் பாறுக என்று பணிந்து தாம்
யாத்து நின்ற அ மறியும் அறமும் உடனே கொண்டுபோய்க்
காத்தும் என்றார் கரு_வினையுள் நீங்கும் நல்ல கருத்தினார்.

#42
ஆயம் எல்லாம் அது சொல்லிப் போக அவணே வாழ்கின்ற
பேயும் கூடிப் பெரிதும் மகி சூழ்ந்து தம் பெற்றி சொல்லின்
ஆயுமாக் கருத்தும் இலன் ஆவன் இவன் நங்கட்கு என்னில்
தீயும்-மன் என்று ஏற்ற கருமையால் எனும் சிந்தை இலவாய்

#43
நிரந்து வெம் கதிர் எழுதலின் நிற்றலை இலதாய்க்
கரந்த கார் இருள் போல் கணம் காண்டலுக்கு அரிதாய்ப்
பரந்த நாம் பல நாடுகள் பாடிகள் நாடி
இரந்து ஓர் வல் தெய்வம் கொணர்ந்து இவன் கடிதும் என்று எண்ணி

#44
ஆசும் இங்கு இருந்து இனி என்னை எழுக என்று அயல
காசி நாட்டினும் சேடிய நாட்டினும் காணா
தேசம் தாம் பல திரிய அத் தென்திசை நீல
கேசி மா தெய்வம் தலைப்பட்டுக் கிளர்ந்து இன்ன உரைக்கும்.

#45
வலிசெய்து எம்மிடம் புகுந்து அடு மடையொடு முடை சேர்
பலியும் ஊட்டுதல் பாவம் ஈது எனப் பலர்க்கு உரைத்துக்
கலி கொள் காடு தன் கால் பொடியாகவும் கருதான்
அலைசெய்தான் எமை யாம் உனக்கு அபயம் என்று அழுத.

#46
அழுவது என் செய அரும் தவம் வலித்தவன் இருந்து
பொழுது போக்குதல் புரிந்தனன் பொருத்தம் அஃது உடைத்தே
கழுகு-தாம் உணக் காட்டுவன் எனக் கைகள் புடையா
எழுக என்று சென்று இடு பிணப் பறந்தலை இருந்தாள்.

#47
இருட்டு இருட்டு என நடந்து சென்று எழுந்து எழுந்து இருக்கும்
வெருட்டலன் நினை விழுங்குவன் எனத் தன்னை வியக்கும்
மருள் திறம் இலன் அறி இனி அரு வரை நெடும் கோட்டு
உருட்டுவேன் என உயர் தவத்தவன் முன்னை உரைக்கும்.

#48
சீலம் நல்லன சினவரன் திரு மொழி தெளிந்தான்
காலம் மூன்றினும் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையான்
மேலும் இன்ன பல் வியந்தரம் வெருட்டுதல் அறிவான்
நீலகேசி தன் நெறி_இன்மை இது என நினைந்தான்.

#49
வெருட்டுமாகிலும் வெருட்டுக விகுர்வணைகளினால்
தெருட்டுவேன் இவள் திறம்_இன்மை சிறிது இடைப்படலும்
பொருள் திறங்களைப் புலமையில் புனைந்துரை பெறுமேல்
அருள் திறம் நல அற நெறி பெறுதலும் அறிந்தான்.

#50
மாகமே உற மலை அன்ன சிலையொடு சிலையா
மேகமே என விசும்பிடை வெடிபட இடியா
நாகமே என நாவினை நீட்டுவ காட்டாப்
பாகமே எனப் பல எனச் சில என உலவும்.

#51
இலங்கும் நீள் எயிற்று இடையிடை அழல் எழச் சிரியாக்
கலங்கும் ஆர்ப்பொடு கார்ப் படு மழை எனத் தெழியாப்
பிலம் கண்டு அன்ன தன் பெரு முழை வாய் திறந்து அழையா
மலங்க நின்று தன் மடல் நெடு மயிர்க் கை இட்டு உயிர்க்கும்.

#52
பொங்கு பூமியுள் பொடி பட அடி இணை புடையாப்
பங்கமே செய்து படபட வயிறு அடித்து இறுகி
அங்கி போல வீழ்ந்து அலறி நின்று உலறி அங்காக்கும்
எங்கும் தான் என எரி கொள்ளி வளை எனத் திரியும்.

#53
கல்லினால் கடும் கனலினும் கடுகென வெடிக்கும்
வில்லின் வாய்ப் பெய்து விளங்கு வெண் பகழிகள் விடுக்கும்
மல்லினால் சென்று மறித்திடுவேன் என நெறிக்கும்
பல்லினால் பல பிணங்களின் நிணங்களைப் பகிரும்.

#54
ஓடும் உட்கு உடை உருவு கொண்டு அரு என ஒளிக்கும்
பாடு பாணியில் பலபல கலகல ஒலியா
ஆடும் நாடகம் அரும் பசி களைகு என விரும்பி
ஊடு போவன் என்று உரைத்துரைத்து உள்ளம் செய்து ஒழியும்.

#55
குஞ்சரம் பெரும் கொடுவரி கடு விடை கொலை சூழ்
அஞ்சு தன்மைய அடல் அரி என இன்ன பிறவும்
வெம் சினம் பெரிது உடையன இவையினும் வெருளான்
தஞ்சம் அன்று இவன் தவ நிறை சுடும் எனத் தவிர்ந்தாள்.

#56
அச்சமே உறுத்து அழிக்குவன் தவம் என அறியேன்
விச்சை வேறு இலன் விழுக் குணம் உடையன் இ விறலோன்
இச்சையால் அன்றி இவன் முன்னை நிலை எனக்கு அரிதாம்
நச்சு மெய் என நடுங்கும் என் உடம்பு என ஒடுங்கி.

#57
ஆற்றல் சான்றவன் அரும் தவ அழல் எனை அடுமால்
மாற்றும் ஆறு என்-கொல் என நனி மனத்தினுள் நினையாச்
சீற்றம் தீர்ந்து என் செய் கரு_வினை தணிக எனப் பணிந்தாள்
கூற்றம் போல்வது ஓர் கொடுமையை உடையவள் குறைந்தே.

#58
சிந்தித்தாள் இது செறி எயிற்று அரிவையது உருவாய்ப்
பந்தித்தாகிய பழ_வினை கெடுக எனப் படிற்றால்
வந்தித்து யான் கொண்ட வடிவினின் மன நிறை அழித்தால்
நொந்து இத் தீ நிகர் நோன்பு கைவிடும் இவன் எனவே

#59
யாமம் நீங்கலும் அரசன்-தன் ஒரு மகள் உரை சால்
காமலேகை-தன் உருவொடு திரு எனத் தோன்றித்
தாமம் சாந்து தண் மலர் இன்ன பல கொண்டு துணை சால்
சேமம் காவல சேவடி போற்று எனச் சென்றாள்.

#60
வணங்கி வந்து இடம் வலம்கொண்டு வழிபடு பொழுதில்
கணங்கள் தாம் பல கடன் சொல்லிக் கலந்து எடுத்து ஏத்தித்
துணங்கை ஆடத் தன் துகிலிடை மேகலை துளங்க
அணங்கு மெய்யவள் அரும் தவன் உழை வர நினைந்தாள்.

#61
காவலாளரும் கடை இறந்து இவண் வரவு ஒழிக
ஏவலாளரும் இதற்கு எய்தும் இயல் குறை முயல்க
கூவி யான் குறை உளது எனக் குறுகு-மின் நமர் என்று
ஓவு_இல் பல் புகழ் உறு தவன் அறிய நின்று உரைக்கும்.

#62
ஆண்டைக் கோட்டத்தை அணைந்தது ஓர் அகல் இலை ஆலம்
ஆண்டைக்கு ஆயது ஓர் மரம் முதல் இருந்த மா தவனைக்
காண் தக்காய் என் செய் கரு_வினை தணிக்க எனப் பணிந்தாள்
வேண்டிக் கொண்ட அ வியத்தகு விளங்கு உரு உடையாள்

#63
வேண்டிய உரு அதனாலும் வேட்கை செய் உரு அதனாலும்
காண் தகு மடவரல் உருவம் காமுறுவது நனி தாங்கி
ஈண்டிய மிகு குணத்து இறைவன் இயல்பினை எனையதும் நினையா
நீண்டது ஓர் கொடி அயல் கொடி போல் நிறை தவ அருள் என நின்றாள்.

#64
உடம்பொடும் உயிரிடை மிடைந்த ஒற்றுமை வேற்றுமை விகற்பின்
தொடர்ந்த பல் வினைகளைத் துணிக்கும் சுத நெறி முறைமையும் அறிவான்
படர்ந்த தன் யோகினை நிறுவிப் பணிந்தவட்கு ஆசிடை மொழிந்தான்
இடம்பக_மகள் இவள் பெரிதும் இராசபுத்திரி அலள் எனவே.

#65
என்னை ஈண்டைக்கு வரவு என்று அரும் தவன் வினவலும் எழில் ஆர்
பொன்_அனாள் புடைபெயர்த்திட்ட பொலம் கலம் மனம் கலக்குவ போல்
மின் ஒளியோடு உற மிழற்ற மிழற்றுவ கிளி என மொழிந்தாள்
முன்னம் நான் பரவிய வரங்கள் முடி குறை கொடுப்பதற்கு எனவே.

#66
யாது நீ கொண்ட வரம் என்று அரும் தவன் இயல்பினின் வினவ
ஏதில் நாட்டு இறை எங்கள் இறை மேல் இயல்பு இன்றி எழல் ஒழிக எனவே
போது சாந்து அவியொடு புகையும் பொருந்திய பொரும் தெய்வக்கு எனலும்
ஓதி ஞானி இது ஆயின் உரை அழகு ஈது என மொழிந்தான்.

#67
தோடு கொண்டு ஒரு செவி விளங்கத் துளங்குவ மகரம் ஒன்று ஆடப்
பாடு வண்டோடு சுரும்பு அரற்றப் பல் கலம் வயிரம் வில் வீச
ஆடு கொம்பு_அனையவள் உரைக்கும் அச்சமோ பெரிது உடைத்து அடிகள்
காடு கண்டால் பிறர்க்கு அறியேன் கவற்றுவது ஒக்கும் ஈது எனக்கே.

#68
மணி நகு நெடு முடி மற வேல் மன்னவன் மகள் எனின் மடவாய்
அணி நகை ஆயமோடு ஆடி அரும் பெறல் சுற்றமோடு இருப்பாய்
பிணி மிகு பேய் வனம் இதனுள் பேதுறல் ஒருதலை பிறவோ
துணிவொடு துறந்தவர்க்கு அல்லால் துன்னுதற்கு அரிது இது பிறர்க்கே.

#69
வேணுவோடு இனையன பிறவும் வியப்புறு பெரு வனம் வினவின்
பேணுதற்கு அரிது இது பெரிதும் பிணி தரு பேய் வனம் எனவே
வாள்_நுதல் மயிர் குளிர்த்து உரைக்கும் மா தவத்து அடிகள் என்றானும்
காணுதற்கு அரியன உருவம் கண்டு அறிவனகளும் உளவோ.

#70
புக்கு இருந்து ஒரு மனை உறைவார் போவதும் வருவதும் கண்டால்
மக்களும் தாயரும் தம்முள் மருள்வதும் வெருள்வதும் உளதோ
மிக்க பல் கதிகளும் உயிரின் மெய்ம்மையும் உணர்ந்தவர்க்கு அரிதே
ஒக்கும் மற்று அவை உளவேனும் உரைப்பது பொருத்தம்_இன்று எமக்கே.

#71
சந்திர முனிவரன் உரைப்பத் தளிர்_இயல் சாவுகள் சாரா
மந்திரம் உளது எனின் அடிகள் மனத்தொடு பணி-மினம் எனவே
அந்தரத்தவர்களும் வணங்கும் அரும் தவன் அவை உனை அடையா
இந்திரன் வேண்டினும் பேய்கள் என்ன மற்று இலங்கு இழை மடவோள்

#72
துப்பு அடு துவர் இதழ் துடிக்கும் துகில் இடை அகல் அல்குல் துளக்கும்
செப்பு அடு வன முலை செறிக்கும் சிதர் அரி மழைக் கணும் சிறைக்கும்
ஒப்பு அடு துடி இடை ஒசிக்கும் உவவு உறு மதி முகம் உழற்றும்
இப்படி அவள் இவை செயலும் இவை எனை எமக்கு என உரைத்தான்.

#73
காதின கனகப் பைம் தோடும் கை வெள் வளைகளும் கழலத்
தாதின இன மலர் பலவும் தலையன நிலம் மிசை உதிரப்
போது அன புணர் அரி நெடும் கண் புனல் வரப் பூம் துகில் புடையா
வேதனை பெரிது உடைத்து அடிகள் விளிக இப் பிறப்பு என உரைத்தாள்.

#74
பிறவியும் பிறவியுள் பிறக்கும் பிணியும் அப் பிணியினைத் துணிக்கும்
மறவி_இல் மருந்தும் அ மருந்தின் மாட்சியும் கேட்குறின் மடவாய்
அறவிய மனத்தினை ஆகி அலம் கழித் தொழில் ஒழிந்து அடங்கி
உறவினை ஓம்பினை இரு என்று உயர் தவன் உரைத்தலும் இருந்தாள்.

#75
நால் கதி உள்ள நரகரை நாம் சொல்லின் மூன்று வகைக்
காற்று வலையங்கள் ஏந்தும் நிரையக் கதி நிலம்-தாம்
ஏற்ற நிகோதத்தின் இம்பர் இருளின் இருள் இருள் மேல்
ஆற்றப் புகை அளறு ஆர் மணல் கூர்ம் பரல் ஆய் மணியே.

#76
ஏழாய் அவை விரிந்து எண்பத்துநான்கு நூறாயிரமாம்
போழாம் அவற்று அப் புரையின் விகற்பமும் பொன்_தொடியாய்
கீழார் அலி கண் முழுச் செவி கிண்ணர்கள் எண்_இகந்த
ஊழாம் பிறப்பும் உவ்வாதம்_அல்லார் உரு ஒப்பினரே.

#77
விலங்கின் வகையும் விரிவன யான் சொல்ல வேண்டுதியேல்
அலங்கல் அம் பூணாய் இரு வகையாம் அவை என்-கொல் என்னின்
நிலங்களில் நிற்பவும் செல்பவும் ஆம் என நிற்பன-தாம்
இலம்படல் இன்றி இ வையகத்து ஐந்தாய் இயன்றனவே.

#78
இயங்குவனவும் இரு பொறி ஐ_அறிவு எல்லையவாய்
மயங்கி இ மத்திம நல் உலகத்தின மற்று இவற்றுள்
நயம்படு நாவின மூக்கு_இல நந்து முரள் முதலா
வயங்கு இயங்கு ஓடியவாய் இரண்டாய அறிவினவே.

#79
உண்ணி முகுட்டை எறும்பு எறி தேள் முதலா உடைய
எண்_இல் பல் கோடியவாய் அ இரண்டொடு மூக்கு உடைய
கண் இயல் மூவறிவாம் அவை பெற்றால் கருணம் இலா
நண்ணிய வண்டொடு தேனீ அனையவும் நால் அறிவே.

#80
இறப்பப் பல் காலின எட்டின் இரண்டிரண்டே இழிந்த
பறப்ப நடப்ப தவழ்வன ஊர்வன பற்பலவாச்
சிறப்பு உடை இந்தியம் ஐந்து என வந்த செவி உடைய
மறப்பு_இல் கடலொடு தீவினும் மல்கிய பல் விலங்கே.

#81
வெப்பமும் தட்பமும் மிக்கு விரவிய யோனியவாய்ச்
செப்புவ செப்பு_இல செய்கைகளால் தம செய்_வினையைத்
துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்தும் முன் தோன்றுவன
ஒப்பவும் ஒப்பு_இல் உடம்பு உடம்பே கொண்டு உழல்வனவும்.

#82
நல்லவர் தீயவர் திப்பியர் ஒப்பு_இல் குமானுயரோடு
அல்லவர் உள்ளுறுத்து ஆடவர் ஐவருள் ஆதியினார்
சொல்லுக தன்மை என்பாய் எனில் சொல்லுவன் பல் வகையால்
புல்லிய போகப் பெரு நிலம்-தன்னைப் பொருந்தினரே.

#83
தீமானுயர் திறம் தேற்றிடில் தீவின் சிறு நிலத்தார்
கோமான் முதலார் குணங்களில் குன்றிய குற்றத்தராய்த்
தாம் ஆம் பெரிய தவம் தலைநிற்பினும் தன்மை பெறார்
ஆமான் மடப் பிணை அன்ன மெல் நோக்கி அவர் திறமே.

#84
திப்பியர் என்னப்படுபவர் தீர்த்தம் திறப்பவரும்
அப்பிய புண்ணியத்து ஆழியர் ஆழி அரையவரும்
வெப்பிய வான் செல் அ விஞ்சையர் எஞ்சல்_இல் வெள்ளியரும்
பப்பியரே அவர் பான்மை வினவினும் பைம்_தொடியே.

#85
கோலம்_இல் நோன்றல் குமானுயர்-தம்மையும் கூறுவன் கேள்
வாலமும் கோடும் வளை பல்லும் பெற்ற வடிவினராய்ச்
சீலமும் காட்சியும் தீண்டலர் அந்தரத் தீவின் உள்ளார்
நீலமும் வேலும் கயலும் நிகர்த்த நெடும் கண்ணினாய்.

#86
மானுயர் என்னப்படுபவர்-தாம் மா விதையம் என்னும்
கான் உயர் சோலைக் கரும நிலத்தார் கரு_வினை போய்த்
தான் உயர் இன்பம் தவத்தால் தலைப்படும் தன்மையினார்
வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய்.

#87
தூ மாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பர் உப்பால்
வேமானியர் என ஐவர் இத் தேவர் விரித்து உரைப்பின்
தீ மாண் குமரரோடு ஈர்_ஐவர் முன்னவர் அன்னவர் பின்
பூ மாண் புனை குழலாய்க்கு இனிச் சொல்லல் பொல்லாது-கொல் ஆம்.

#88
இன்_குரலார் முதலா நுமர் ஈறா இவரும் எண்மர்
பொன் பிதிர்ந்து அன்ன பொறி சுணங்கு ஆகத்துப் பூண் முலையாய்
என்றலும் ஈர் இழுது ஆர் அழல் உற்றாங்கு இனைபவளை
நின் திறம் பின் அறிவாம் அறம் கேள் என நேர்ந்தனளே.

#89
அந்தர வாழ்க்கையர் சோதிடர்-தாங்களும் ஐ_வகையர்
சந்திர சூரியர் கோளவர் நாளவர் அல்லவராய்
மந்தர மா மலை-தன்னை வலம் முறை சூழ்பவரும்
சிந்துபு நின்று செல்லாதே விளங்கும் திறலவரும்.

#90
ஆரணன் அச்சுதன் சோதமன் அந்தமும் ஆதியுமாய்ப்
பாரணை நல்ல பதினறு கற்பத்தவர் அவர் மேல்
ஓர் இணராய மும்மூன்று ஒன்பது ஐந்துகளுள் உறைவோர்
வீரியர் வைமானிகர் எனக் கொள் நீ விளங்கு_இழையாய்.

#91
இப்படிப் பிறவியுள்
ஒப்பு_இல் தீய நாரகர்
துப்பு அரிய மா துயர்
செப்புவாம் சிறிது இனி.

#92
ஈரிருள் உள்ளினார்கள்-தம்
பேர்_அளவு ஐஞ்ஞூறு வில்
ஓரும் ஓசனை அவை
ஊரும் வேதனையரே.

#93
காளமான மெய்கள்-தாம்
வாள வாய்களால் பல
கீள ஆப ஆயினும்
மீளும் மேனி நீரினே.

#94
மல்லவர் மறம் செய்தும்
கொல்ல ஆவ வல்ல மெய்
பல்ல ஆவும் உள்ளன
சொல்ல ஆவ அல்லவே.

#95
பண்டை வேரியர்கள் தாம்
கண்டு கண் கனல்களாய்
மண்டி மா மறம் செய்ப
எண் தவப் பலவுமே.

#96
பேடி வேதனை பெரிது
ஓடி ஊரும் ஆதலால்
சேடி ஆடு அன்மையின்
கூடி ஆவது இல்லையே.

#97
கொன்ற பாவம் என்றும் ஊன்
தின்ற பாவம் என்று தீச்
சென்று வேவ வாயினுள்
நின்று கூவ வாக்குவார்.

#98
உண்ண ஆஅ நீர் எனக்
கண் அவாவ ஆபவர்
நண்ணல் ஆவ வல்ல தேர்
எண்ணல் ஆவது இல்லையே.

#99
கரிவ கன்றி நின்று அகம்
பொரிவ பொங்கி வீழ்ந்து அழைத்து
எரிவ இன்ன மா துயர்
பரிபவரும் இல்லையே.

#100
அங்கு வெம் கனலினுள்
தங்கியும் தலைத்தலை
பொங்கியும் புகை புக
நுங்கியும் நுகர்வவே.

#101
ஓசனைய பல் உயிர்
வீ_வினை உற வரும்
காய் சினக் கடு விடம்
பேசினார்க்கு அருள் உணா.

#102
சாதி வேதனை அவை
ஆதியாக ஆறினும்
ஓதி நாணம் அல்லன
நீதியில் சுருங்குமே

#103
நலங்கள்_இல் பிறவியுள் நஞ்சு உண் நாரகர்கள் பின்
விலங்கின் வேதனைகளும் விரிக்கல் வேண்டும் எனில்
கலங்கி ஒன்று ஒன்றினைக் கண்டு காற்று என்னப் போம்
மலங்கி நின்றும் மனம் மன்னும் அஞ்சுங்களே.

#104
தண்ணென் மா மழையினால் தாம் அழிந்து உழல்பவும்
புண்ணினால் அழிய மெய்ப் போரிடைப் புகுத்தவும்
உண்ணல் காரணத்தினால் ஓட்டியிட்டு ஒறுக்கவும்
எண்_இல் பல் வலையினும் இழக்கும் அ உயிர்களே

#105
வேதவாதியர்கள்-தம் வேள்வி-வாய் விட்டவும்
பூத தேவர்கட்கு எனாப் புல்லியோர்கள் கொல்லவும்
ஓதும் நோய் மருந்து என ஊட்டுதற்கு உரைப்பவும்
சாதலால் வரும் இடர்-தாம் எனைப் பலவுமே.

#106
நடுக்கம் உறும் நால் கதியுள் நரர்கள் படும் துன்பம்
எடுக்கில் அவை-தாம் இரண்டு பாகினவும் ஆகும்
அடக்கம்_இலர்க்கு ஆவனவும் அன்றிப் பொது என்றும்
வடுப் பிளவு வாள் பகழி வாட்டிய ஒண்_கண்ணாய்.

#107
தீ_வினை செய் வாயிலொடு செற்ற மனக் குற்றம்
மா வினையின் ஆம் வெகுளி மானமொடு மாயம்
ஓவினை_இல் பற்று அவலம் அச்சமொடு மற்றும்
ஆவன எலாம் அடக்கம்_இல்லவர்-தம் நோவே.

#108
இழுக்கலுறு தீ_கதியில் உய்க்கும் என எண்ணார்
விழுக் குலங்கள் மாசுபடும் என்பதனை வேண்டார்
புழுக் குலங்களால் நிறைத்த போர்வை என ஓரார்
அழுக்கு உடம்பிற்கே கெடுவர் ஆடவர்கள் அந்தோ.

#109
மது ஒன்றும் கோதை மலர் அன்ன கண்ணாய்
பொது என்ற நோயும் புணர்ந்து இரண்டு பாகு ஆம்
இது ஒன்று இடையூறு இரண்டாய் விரியும்
அது அன்றி மெய்ப் பிணியும் மூன்றாய் அலரும்.

#110
பெடை ஊடு சாயல் பிணை அன்ன நோக்கி
இடையூறு இரண்டும் இனி யாவை என்னின்
அடையா உயிரதுவும் அல்லதுவும் அன்ன
நடையாய் முதலதுவும் நால் பூதம் ஆமே.

#111
பெரு மழையும் நீரும் பெரிது எறியும் காற்றும்
கரு மலையும் கல்லும் கடு நவையும் நஞ்சும்
செரு மலையும் பல் படையும் செம் தீயும் வந்து இங்கு
உரும் இடியும் எல்லாம் உயிர்_அல்ல ஊறே.

#112
செத்துவங்கள் தாக்கிச் செயிரின் அணங்குதலும்
மக்கள் பல வகையின் மன்னும் அலை கொலையும்
துக்கம் செய் பல் விலங்கின் தோன்றும் இடையூறும்
ஒக்க இவை மூன்றும் உயிர் உடைய ஊறே.

#113
தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய் மருந்தின்
ஊர்வனவும் போலாது உவசமத்தின் உய்ப்பனவும்
யார் வினவுங்காலும் அவை மூன்று கூற்றவா
நேர்வனவே ஆகும் நிழல் திகழும் பூணாய்.

#114
நல்லாய் நார்_இன்றியே நாம் முன் விரிசெய்த
எல்லா இமையோர்க்கும் என்றும் இறுதி சார்ந்தது
அல்லால் அகல் துன்பம் ஆகா நுமர் அன்றிப்
பொல்லாதவர்கள் உறும் அல்லைப் புகலுறுங்கால்.

#115
தீயே என எவர்க்கும் செல்லல் பல ஆக்கி
வேயே புரை தோளாய் மிக்க இடம் எங்கும்
பேயே எனப்பட்டுப் பேணாதன செய்வர்
நீயே எனின் நல்லை நின் போல்வர் அன்றோ.

#116
பேர்தற்கு அரும் பிணி-தாம் இவை அப் பிணி
தீர்தற்கு உரிய திரியோக மருந்து இவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவை உண்டார்
பேர்த்து அ பிணியுள் பிறவார் பெரிது இன்பமுற்றே.

#117
மான் ஒத்த நோக்கி மருந்து என்றவை மூன்றினுள்ளும்
ஞானத்தின் நன்மை நனி கேட்குவையாயின் அக்கால்
ஊனத்தை இன்றி உயிர் ஆதிய உள் பொருள்கள்
தான் நற்கு உணர்தல் இதுவாம் அதன் தத்துவம்மே.

#118
காண்டலும் அல்லதே அளவை காண்டல் முன்
பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம்
மாண் தகு மனப்பரியாயம் கேவலம்
நாண் தகும் அரிவையர் உருவம் நண்ணினாய்.

#119
நினைவு மீட்டுணர்வு ஊகம் நேர்தரு
புனைவு சேர் அணுமை பொய்_இன்மை மெய் உரை
முனைவர்-தம் ஆகமம் மொழியும் ஆகும் என்று
அனையன காட்சி_இல் அளவை ஐந்துமே.

#120
வைப்பு நயன் அளவை புகுவாயில் என்றும்
பொய்ப்பு_இல் உயிரே பொருவு_இல் குணம் மார்க்கணை
செப்பின் இவற்றின் திரியாது உள் புகுபவாயின்
ஒப்பு_இல் பெருமை உணர்விற்கு உயர் மாட்சி ஆமே.

#121
காட்சி வகை தான் கடவுள் முதலாய
மாட்சி அமைந்த பொருள் எட்டும் மனத்து வைத்து
மீட்சி இலதாய் விரிந்து உந்திய இன்ப வெள்ள
வேட்கையதுவாம் தெளிவு என்றனர் வென்றவரே.

#122
முந்துற்ற மூடப் புலி மூன்றும் பிழைத்த பின்னை
அன்பு அச்சம் ஆசை உலகோடு இலிங்கு ஆத்தர் ஒப்பும்
என் பெற்றும் ஏத்தல்_இலராய் எண் மயத்து நீங்கல்
இன்புற்ற காட்சி_உடையார்க்கு இயல்பு ஆகும் அன்றே.

#123
ஐயுற்றல் வேட்கை உவர்ப்பே மயக்கு யாதும்_இன்மை
செய் குற்றம் நீக்கல் திரிந்தாரை நிறுத்தல் இன்றிப்
பொய் அற்ற காதல் பொருவு_இல் அறம் காட்டல் எட்டும்
கையுற்றவாயில் அது காட்சியின் மாட்சி ஆமே.

#124
நன்றாய காட்சியுடன் ஆகிய ஞானம்-தன்னோடு
ஒன்றாகி உள்ளத்து ஒழியாமை ஒழுக்கம் என்ப
குன்றாத ஒன்றும் குறைபாட்டதும் கூறுபவ்வே
வென்றார்-தம் நூலின் விதி மெய்ம்மை உணர்ந்தவரே.

#125
போற்றல் செறிவே பொறை ஆதிய நல் அறமும்
ஏற்ற நினைப்போடு இரு சார் விழுத் தவமும்
ஆற்றல் பரிசை முதலாகிய அன்ன எல்லாம்
மாற்றம் அறுக்கும் ஒழுக்கத்தின் மாட்சி ஆமே.

#126
யோகம் இவற்றை உடன் உண்ட உயிர்கள் எல்லாம்
மாக விசும்பினவர்-தம்மொடு மன்னரும்மாய்ப்
போகம் நுகர்ந்து பொருந்தா வினை புல்லல் இன்றி
ஏக நல் இன்பம் இயைந்தால் இழவு இல்லை நல்லாய்.

#127
பிறவி ஆமாறும் பிணியாம் திறமும்
மறவி-தான் இல்லா மருந்தாம் வகையும்
திறவியாள் கேட்டுத் தெரிந்து உள்ளம் கொள்ள
அறவியான்-தானும் அற அமிர்தம் ஈந்தான்.

#128
வண்டு அவாம் வார் குழலும் வாள் எயிறும் பூண் முலையும்
தொண்டை வாய் நல் நலமும் தோளும் துடி இடையும்
கண்டு அவாம் காமுகரும் யாமும் கண நரியும்
விண்டு அவாக் கொண்டு உணரின் வேறுவேறாம் அன்றோ.

#129
கரையவா வாங்கும் கய_மகன் கைத் தூண்டில்
இரை அவாப் பல் மீன் இடர் உறுவதே போல்
நுரையவா நுண் துகிலும் மேகலையும் சூழ்ந்த
அரை அவாய்ப் பட்டார்க்கும் ஆழ் துயரே கண்டீர்.

#130
மட்டு ஆர் மலர் புனைவும் வாள் நெடும் கண் மை அணிவும்
பட்டு ஆர் கலை உடையும் பல் வளையும் பைம் தோடும்
நட்டாரை எல்லா நரகுக்கே உய்க்கும் நாய்க்
கொட்டு ஆர்த்தார் செய்யும் கோலங்கள் வண்ணம்.

#131
ஆடினாய் நானம் அணிந்தாய் கலன் மாலை
சூடினாயேனும் சுணங்கு ஆர் வன முலையாய்
ஊடினாய் ஆக ஒழுக்கு ஊற்றைப் பல் பண்டம்
மூடினாய் தோலின் முகமன் உரையேனே.

#132
மின் போல் நுடங்கு இடையும் வேய் ஏய் திரள் தோளும்
என்றே இவை மகிழ்ந்து ஈங்கு என் முன்னே வந்தாயால்
புன் தோலும் பல் என்பும் போர்த்த புறங்காட்டுள்
அன்றே உறைவன் அவற்றால் மருள்வேனோ.

#133
மெழுகு உருகும் மண் பாவை மேதையான் காய்த்தி
ஒழுகு உருகு செம்பொன்னால் உள் நிறைந்ததே போல்
புழுகு உருகு மெய் காட்டிப் பொல்லாத போக்கி
அழகு உருவு கொண்டாள் அற அமிர்தம் உண்டாள்.

#134
காய்வ செயினும் குழவிக்-கண் கவன்று கழி கண்ணோட்டத்தால்
தாய் தன் முலையில் அமுது ஊட்டும் தகையன் அறவோன்-தான் என்று
மாய உருவம் மாறித் தன் மற்றை உருவமே கொண்டு
பேயேன் செய்த பிழை எல்லாம் பெரும பொறு என்று இறைஞ்சினான்.

#135
முழங்கும் முந்நீர் வையத்து முனிதக்கார் தம் முன் நின்று
வழங்க வாட்டம் ஒழிவர் நீ மன்னும் பொறாத வகை உண்டோ
அழுங்கல் என்ற அறவோன்-தன் அலர் கொள் பாதம் பெரிது ஏத்தித்
தொழும் கையாள் அக் குண_குன்றைத் துதிப்பன் என்று தொடங்கினாள்.

#136
வெள்ள மாரி தரித்தோய் நீ வினையின் வாயில் அடைத்தோய் நீ
உள்ளம் மாட்சி உடையோய் நீ உயப் போம் வண்ணம் உரைத்தோய் நீ
நள்ளென் யாமத்து யான் செய்த நவைகள் எல்லாம் நனி கண்டும்
எள்ளல் இல்லாப் பெரியோய் நின் இணை_இல் பாதம் அணைவல் யான்.

#137
மூடம் மூன்றும் உரைத்தோய் நீ முரண் செய் தோற்றம் முனிந்தோய் நீ
வீடும் கட்டும் விரித்தோய் நீ வினையின் இன்பம் வெறுத்தோய் நீ
காடு கிளர்ந்து காட்டி யான் கலக்க ஒன்றும் கலங்காத
பாடற்கு அரிய பெரியோய் நின் பழிப்பு_இல் பாதம் பணிவல் யான்.

#138
அல்லல் பிறவி அகன்றோய் நீ ஆசை வெம் வேர் அறுத்தோய் நீ
வெல்லற்கு அரிய அனங்கனை மெய் வெண் நீறு ஆக வெகுண்டோய் நீ
கொல்லக் கருதி வந்தேனைக் குணங்களாலே வணங்குவித்த
சொல்லற்கு அரிய பெரியோய் நின் தோம்_இல் பாதம் தொழுவல் யான்.

#139
உடம்பின் மெய்ம்மை உணர்ந்தோய் நீ உறங்கல் ஆர்வம் மறுத்தோய் நீ
இடம் கொள் இன்னா வினை எல்லாம் எரிக்கும் வாயில் விரித்தோய் நீ
அடங்கல்_இல்லேற்கு அருளினால் அறம் கூர் மாரி பொழிந்தோய் நின்
தடம் கொள் செந்தாமரை அடி என்று தலையவே என் தலையவே.

#140
தடம்படு மாரி தலைத்-தலை நூற
விடம்படு பல் உயிர் மெய் வழி ஏற
உடம்பொடு வேறு எனும் ஓர்ப்பினை ஆகி
அடங்கிய நின் அடி அஞ்சலி செய்வேன்.

#141
கல் உருகக் கடும் காற்று எறி போதினில்
அல் இருள் கூர் சுடுகாட்டு இடமாகப்
பல் வினையும் பறிப்போய் நின் பாதம்
நல்_வினையின் தொழுவேன் இனி நாளும்.

#142
மங்குல் மழை பொழி மாரி பெய் நாளில்
கங்குல் எண் இல்லம் கவலை செய் காட்டுள்
எங்கும் இயங்கலன் என்று இருந்தோய் நின்
பங்கயம் போல்வன பாதம் பணிவேன்.

#143
இற்றவர்-தம் உடல் தின்றிட யாமம்
முற்ற நரி முரலும் முதுகாட்டுள்
பற்று அறவே நினைவோய் இரு பாதம்
சுற்றுபு யான் விதியில் தொழுவேனே.

#144
திண் திறல் சேர் சிறு பேய் அறை கீறி
வெண் தலையால் விளையாடிய காட்டுள்
எண் துகளும் எரிப்போய் நின பாதம்
வண்டு அறை பூவொடு வந்தனை செய்வேன்.

#145
பிணங்கள் இடையிடை பேர்_அழல் ஈமத்து
அணங்கு துணங்கை செய்து ஆடிய காட்டுள்
குணங்கள் உடையன குன்றுதல்_இல்லாய்
வணங்குவன் நின் அடி வைகல்_இல் நாளும்.

#146
நுனித்தகு நல் நெறி நோக்கினள் ஆகி
முனிப் பிறையோன் அடி மும்மையின் ஏத்திப்
பனிக் கடல் அன்னது ஒர் பாவமும் செய்தேன்
இனிச் செய்வது என் உரையாய் எனக்கு என்றாள்.

#147
விலங்கு வெம் நரகு ஆதிகள்-தம்முள் விளிந்து தோன்றி விழு நோயொடும் உற்றுக்
கலங்கி எங்கும் கண் இல ஆகிக் கவலை வெள்ளக் கடலில் குளித்து ஆழும்
நலங்கள் இல்லா உயிர்-தங்களுக்கு எல்லா நடுக்கம் நீக்கி உயர் நல் நிலை ஈயும்
சலங்கள் இல்லாப் பெரியோன் சரண் கொள் நீ சனங்கட்கு எல்லாம் அவன் சரண் என்றான்.

#148
உய்தல் வாய் உரைத்தாய் அதன் மேலும் உயிர் உள்ளிட்ட பல உள்பொருள் சொன்னாய்
நைதல்_இல்லாத் தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம்
பெய்து தந்தாய் பிழைத்தேற்கு இனிதா ஓர் பிராயச்சித்தம் பெரியோய் அருள் என்னச்
செய்த தீமை கெடக் கடல் நாட்டில் சினவரன் நெறியே தெருட்டு என்றான்.

#149
யாஅது அடிகள் அது அருளால் அரும் துயர் அகல் வகை அதனால்
மாஅது உடை அடி இவை-தாம் மறவலென் என வலம்கொண்டு
வேஎதட வியன் மலை மேல் விரி கதிர் மணி விளக்கு ஆதி
தீஇது அடுதலை விலங்கும் சினகரம் உவகையில் சென்றாள்.

@2. குண்டலகேசி வாதச் சருக்கம்

#150
கொல்லை முல்லை பைம் கோங்கு குருந்தம் கோடல் தண் குரவம்
நல்ல மல்லிகை நறவம் ஞாழல் தாழை புன்னாகம்
பல் இதழ்ப் பனிக் குவளை பானல் பாதிரி பிறவும்
எல்லை_இல் மலர் ஏந்தி இறைவனது இட வகைக்கு எழுந்தாள்.

#151
நீட்சி ஓக்கமோடு அகலம் நினைய நின்று எங்கணும் நோக்கி
மாட்சியால் வலம்கொண்டு மா தவத்து இறைவனில் பிழையாக்
காட்சியேன் எனில் எல்லாக் கதவமும் திறக்க எனத் திறப்ப
ஆட்சி மூவுலகு உடைய அடிகள்-தம் அடி இணை தொழுதாள்.

#152
அத்தி ஆளியோடு ஆமான் அட்டமங்கலம் அரிய
பத்தி பாவை பல் பறவை பயில் கொடி திமிசொடு பிறவும்
வித்தகம் பெரிது உடைய விசித்திர உருவ நல் மலரால்
சித்த நல் நெறி பயந்தான் திரு_அடிக்கு அருச்சனை செய்தாள்.

#153
தூமம் சாந்தொடு சுண்ணம் துதியொடு பரவுபு தொழுதே
தாமம் தாழ்தர நாற்றித் தத்துவதரிசியது உருவே
ஆம் என்று ஐ என வியந்து ஆங்கு அன்ன ஆயிரத்தோர் எண்
நாம நல் இசை தொடுத்து நாத கீதங்களை நவிற்றும்.

#154
கன்று காலனைக் கடந்தாய் காதல் காமனைக் கடிந்தாய்
தொன்று மூத்தலைத் துறந்தாய் தோற்ற மாக் கடல் இறந்தாய்
ஒன்று அ நோய் பகை ஒருங்கே உடைந்து வெம் களத்து உதிர
வென்று இருந்தனை நீயே வீரர்-தம் வீரர்க்கும் வீரா.

#155
சாதல் நோய் சரை பிறவி-தாம் செய் தீ_வினைக் கடலுள்
மா துயர் உழந்து உறும் நோய் மறுகும் மன் உயிர்க்கு எல்லாம்
தீது_இல் நல் நெறி பயந்து திரை செய் நீள் கரை ஒருவிப்
போதரும் புணை படைத்தாய் புலவர்-தம் புலவர்க்கும் புலவா.

#156
அரியவாயின செய்திட்டு அமரர் துந்துபி அறைந்து
புரிய பூ_மழை பொழியப் பொன் எயில் மண்டிலம் புதைந்த
விரி கொள் தண் தளிர்ப் பிண்டி மர நிழல் இருந்து இரு_வினையும்
பிரியும் பெற்றியை உரைத்தாய் பெரியவர்ப் பெரியவர்ப் பெரியாய்.

#157
பொங்கு சாமரை ஏந்திப் புடைபுடை இயக்கர் நின்று இரட்டச்
சிங்க ஆசனத்து இருந்து தெளிந்து ஒளி மண்டிலம் நிழற்றத்
திங்கள் முக்குடை கவிப்பத் தேவர்-தம் திருந்து அவை தெருள
அங்க பூவம்-அது அ/றைந்தாய் அறிவர்-தம் அறிவர்க்கும் அறிவா.

#158
ஊறு யாவதும் உணராய் உறல் வகை இது என உரைத்தி
கூறுவேன் எனக் கூறாய் குரல் முரசு அனையது ஓர் குணத்தை
சேறல் உள்ளமும் இல்லையாய்த் திரு மலர் மிசை அடி இடுதி
தேறும் ஆறு என்னை நின்னைத் தேவர்-தம் தேவர்க்கும் தேவா.

#159
கண்ணினால் ஒன்றும் காணாய் காணவும் உள பொருள் ஒருங்கே
பெண்ணும் அல்லவும் சாராய் பிரிதல்_இல் பேர்_இன்பம் உடையை
உண்ணல் யாவதும் இலையாய் ஒளி திகழ் உருவம் அஃது உனதால்
எண்ணில் யார் நினை உணர்வார் இறைவர்-தம் இறைவர்க்கும் இறைவா.

#160
சொற்றி யாவதும் கேளாய் சுதம் நயம் துணிவும் அங்கு உரைத்தி
கற்று யாவதும் இலையாய்க் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையை
பற்று யாவதும் இலையாய்ப் பரந்த எண் செல்வமும் உடையை
முற்ற யார் நினை உணர்வார் முனைவர்-தம் முனைவர்க்கு முனைவா.

#161
அன்மையாரவர் தாம்தாம் அறிந்தன உரைத்த பொய் ஆக்கி
நின் மெய் ஆகிய ஞான நிகழ்ச்சி நீ விரித்து உரைத்த
சொன்மை யார் இடை தெரிந்தார் தொடர் வினை முழுவதும் சுடும் நின்
தன்மை யார் பிறர் அறிவார் தலைவர்-தம் தலைவர்க்குந் தலைவா.

#162
ஆதி அந்து அளப்பு அரிய அருகந்தபகவர்-தம் அறம் சால்
சேதியம் புக்கு அவர்-தம் திருந்து அடிகளைப் பெரும் துதி சேர்
போதியில் பணிந்திருந்தாள் புல் நெறி-தாம் பல அவற்றுள்
யாது-கொல் தான் முன் என்னால் அடர்க்கற்பாலது என்றாள்.

#163
ஊன் தின்றல் இழுக்கு என்னான் உயிரினையும் உளது என்னான்
நோன்றலையும் நோன்பு என்னான் நோக்கு உடைய கணிகையரே
போன்று இருந்து பொதி அறுக்கும் புத்தன்-தன் புல் நெறியை
யான் சென்று அஃது அடிப்படுப்பன் அறக் கருமம் இது என்றாள்.

#164
மண்டலத்தின் நோக்குவாள் மடுத்த தனது அவதியால்
கண்டனள் தான் காம்பிலிக் காவலன் கடை முகத்து ஓர்
தண் தழைய பொழில் நாவல் சாகை நட்டு உரைபெறாக்
குண்டலகேசிப் பெயரைக் குறியாகவே கொண்டாள்.

#165
தருமத்தில் திரிவு_இல்லாள் தயாச்செய்தல் பொருட்டாக
நிருமித்த வகையினதாம் நெடு நகரை வலம்செய்து
திரு முத்தப் பீடிகைக்-கண் சித்தரையும் சிந்தித்து ஓர்
பெரு முத்தப் பெண் உருவம் கொண்டு இயைந்த பெற்றியளாய்.

#166
அந்தரமே ஆறாச் சென்று அழல் நுதி வேல் அரசர்கட்கு
இந்திரனே போன்று இருந்த இறை_மகனது இடம் எய்திக்
கந்திருவ_மகளேன் யான் காவலனைக் காண்குறுவேன்
வந்திருந்தது உரை விரைந்து வாயிலோய் எனச் சொன்னாள்.

#167
கரும் களிறும் களி மாவும் கந்தோடு பந்தியவே
நெருங்குபு போய் நீர் உண்ணா தேர் பண்ணா நெடும் கடைக்குப்
பெரும் படையும் சாராது இப் பெண் பாவி மரம் நட்டு இங்கு
இருந்ததன் திறத்தினால் எனக்கு அரிது புகல் என்றான்.

#168
வாயிலோன் உரை கேட்டு வடி_கண்ணாள் முகம் நோக்கி
கோயிலை யான் புக விலக்கும் குறை என்னை முறை திருத்தும்
பூசல் இங்கு உடையையோ பொருள் இழவோ உயிர் இழவோ
நீ இலை ஆர் புதல் நடற்கு நிமித்தம் இங்கு என் என்றாள்.

#169
என் கருமம் வினவுதியேல் இலிங்கியருள் என்னோடு
நன்கு உரைப்பார்த் தரல் வேண்டி நாவல் கொம்பு இது நட்டேன்
உன் கருமம் நீ செய்வாய் நுழைந்து அறிவும் உடையையேல்
மன் பெரியான் திருந்து அவையுள் மாற்றம் தா எனச் சொன்னாள்.

#170
அப்படித்தே எனின் வாயில் அடைப்பு ஒழிக யானை தேர்
எப்படியும் இயங்குக நும் இறை_மகற்கும் இசை-மின் என்று
இப்படியால் இவை உரையா இலை நாவல் இறுத்திட்டாள்
துப்போடு கனி தொண்டை துயில் கொண்ட துவர்_வாயாள்.

#171
வேந்தனும் அது கேட்டே விம்மு உயிர்த்த உவகையனாய்ப்
பூம் தடம் கண் நல்லார் புகுதுக எனப் புகலும்
போந்து இருக்க என இருக்கை பொருந்தியவாறு அவர்கட்கு
ஈந்து உலகத்து இயற்கையும் இனிதினில் செய்திருந்தான்.

#172
முதலவனோடு அவன் நூலும் அ நூலின் முடி பொருளும்
நுதலிய பொருள் நிகழ்வும் நும் கோளும் எமக்கு அறியத்
திதலை மாண் அல்குலீர் தெருட்டு-மின் எனச் சொன்னான்
அ தலை அம் பெரும் கதவம் அடைப்பு ஒழித்திட்டு அலை வேலான்.

#173
நன்றாக உரைத்தனை நீ நர_தேவ நின் அவையுள்
வென்றார்க்கு ஓர் விழுப் பொருளும் தோற்றார்க்கு ஓர் பெரும் துயரும்
ஒன்றாக உரையாக்கால் உரையேன் யான் எனச் சொன்னாள்
குன்றாத மதி முகத்துக் குண்டலமாகேசியே.

#174
அறத் தகை அ அரசனும் அது கேட்டு ஆங்கு அவர்க்கு உரைப்பான்
சிறப்பு அயர்வன் நன்றாக வென்றார்கட்கு இன்றே யான்
புறப்படுப்பன் தோற்றாரைப் பொல்லாங்கு செய்து என்றாற்கு
இறப்பவும் பெரிது உவந்தார் இலங்கு_இழையார் இருவருமே.

#175
வேல் நிரைத்த விரி தானை வேத்து அவையார் வியப்பு எய்தக்
கோன் உரைத்த உரை கேட்டே குண்டலமாகேசியும்
தான் உரைத்தாள் தான் வேண்டும் தலைவன் நூல் பொருள் நிகழ்ச்சி
தேன் நிரைத்த கரும் குழலாள்-தானும் பின் தெருட்டினாள்.

#176
ஆதி தான் பெரியனாய் அறக் கெடும் அளவு எல்லாம்
ஊதியமே உணர்ந்தவன் உறு தருமமே உரைத்தான்
யாதனையும் தான் வேண்டான் அயலார்க்கே துன்புற்றான்
போதியான் எம் இறைவன் பொருந்தினார் உயக் கொள்வான்.

#177
முந்து உரைத்தான் முந்நூலும் அ நூலின் முடிபொருள் தாம்
ஐந்து உரைப்பில் உரு உழப்பு அறிவோடு குறி செய்கை
சிந்தனைக்-கண் செலவோடு வரவுமே நிலை இல்ல
தந்து உரைப்பின் எரி நுதி போல் தாம் கேடு நிகழ்வு என்றாள்.

#178
சொல்லிய அ நான்மை மேல் துணிவினையும் தான் பெயர்த்து
நல் அவையை மனம்கொளீஇ நான்மையின் முதல் வைத்த
எல்லை_இல் குணத் தலைவர் இலக்கணம் என்று எடுத்ததன் மேல்
பல் வகைய பெரும் குற்றம் பதம்பதமாய்க் கேள் என்றாள்.

#179
முன் எனப்படுவது-தான் முதல் இல்லாத் தடுமாற்றம்
அன்னதன்-கண் பெரியனேல் அறம் கொண்டது அவம் ஆகும்
பின்னதன்-கண் பெரியனேல் பிறழ்வு எய்தும் காலச் சொல்
என்னென் தான் பெரியவாறு இருமையினும் திரிந்து என்றாள்.

#180
பெருமை முன் பெற்றனனேல் பின்னைத் தான் முடிப்பது ஓர்
கருமம் இங்கு எவன் ஆகும் காட்டுதியேல் பெற்றிலன் முன்
தருமம்-தான் கருதி நீ சொன்னாயேல் தலைவரே
ஒருமையால் அறம் தெளிந்த உழப் புலையர் முதலானார்.

#181
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க என்பதனை
ஊன் கொடுமை உரைத்தான் அஃது உணர்ந்திலனே ஆகாதோ
தான் கெடும் அளவு எல்லாம் நினைந்து உரைத்த தத்துவம்-தான்
மான் கடியும் நோக்கினாய் வழி அறக் கெட்டு ஒழிவதோ.

#182
வழி வாழக் கெடுகின்றார் மாந்தருள் மேலாயார்
பழி பாவம் ஓராதான் பற்றினார்ப் பாழ் செய்வான்
ஒழி பாவி தலைவன் என்று உரைப்பதனை உலகத்தார்
கிழியோடு மாறாக்காசு என்றான் சொல் கேட்பவோ.

#183
நுனைத் தலைய நுண் மயிரை நுனி உறீஇ விதிர்த்திட்டால்
அனைத்துணைய தடம் கடலும் அறக் கிடந்த பிறந்து உழப்பும்
நினைக்கும்கால் பிறர்க்கேயாம் என்றியால் நீ அன்னாய்
அனைத்துணைய பெரும் பாவம் அவன் செய்தான் ஆகானோ.

#184
துன்பம்-தான் தீ_வினையின் வழித் தோன்றும் துன்பேயாம்
என்பதனை நுமர் ஏடி எப்பொழுதும் உரைப்பவால்
பின்பும் தான் பிறர்பிறர்க்குப் பிறந்து உழப்பே ஆக்கினால்
அன்பினான் முன் செய்தது அரு_வினையே ஆகாதோ.

#185
தனக்கு ஒன்றும் பயன் இன்றித் தளையாள் என்றான் வருந்தி
எனைப் பெரும் குப்பையும் எருச் சுமப்பான் கண்டக்கால்
நினைப்பது ஒன்று உடைத்து அவன் செய் நெடும் பாவம் நிச்சலும்
மனக்கு இனிதா அவன்-தன்னை ஆள்வார் மாண்பு உரையாயோ

#186
அவ்வகையால் உழக்கின்றான் அயலார்கள் படுகின்ற
உய் வகை_இல் பேர்_இடரை ஒழிப்பதன் பொருட்டாக
இவ்வகையால் அருள் செய்யும் என்பதனை எடுத்துரைத்தாள்
கொவ்வை அம் துவர்ச் செவ்வாய்க் குண்டலமாகேசியே.

#187
அருளினால் பிறர்க்கு உழக்கும் அவன் என்ற அ உரையைப்
புரளல் நீ பிறப்பு ஒழியும் பொழுதின்-கண் அ அருளைப்
பொருள்_அன்மை கண்டானோ புற்கலர்-தாம் உலர்ந்தாரோ
தெருள நீ உரைத்துக் காண் திருந்து அவையாரிடை என்றாள்.

#188
ஊடு புக்கு உயிர் அடும் துயரம்-தான் ஒழிக்கின்றான்.
வீடுபெற்று இறந்தனனேல் விளிக அவனது அருள் பாவி
ஓடுகிற்றிலன் ஒன்றும் தாதையையே உழப்பித்தோன்
ஆடை பற்று என உரைத்த அவன் போன்றான் ஆகாதோ.

#189
அங்கு இருவர் உளர் அன்றோ அறப் போக்கிப் போவார் என்று
இங்கிருந்து நீ உரைத்தால் இவன் அருள் யார் தெளிகிற்பார்
அங்கு இருவர் உளர் எனினும் அவரின் முன் அவையீரே
நம் கருமம் உலைப்பித்து நாம் போதும் என நக்காள்.

#190
முன் கொன்றான் தன் தாயை முழு மெய்யும் போர்த்திருந்து
தின்கின்றான் பிணம் வீடும் தெருட்டுங்கால் சூனியமே
என்கின்றான் இவன் போல்வார் இறைவர் இல் என உரைப்பாய்
தன் கன்று சாக் கறப்பான் தயாப் பிறிதிற்கு உடையவனோ.

#191
கண்ணொடு காது இவை இலள் கரந்தன முலை இரண்டும்
உண்ணும் வாய் உதட்டோடு மூக்கு இலள் உறு நோய்த்தி
பெண் அழகிற்கு இவள் பிறரால் பேசவும் படுவாளோ
எண்ணுங்கால் என் பேதை என உரைக்கும் அவன் ஒத்தாள்.

#192
பருவரல் ஒன்று இலன் தாயைப் பழுப்பறித்தான் தலைவன் இவள்
கருவரை மேல் தன் கணவன் காலனையும் கவிழ்த்திட்டாள்
இருவரையும் போல்வார் இ இரு நிலத்தின் மேல் எங்கும்
பெருவழியார் பேர்_அருளார் பிறர் யாரே என நக்காள்.

#193
ஒள்_நுதலாய் உன் தலைவன் ஒழிவு_இன்றி உணர்கலான்
கண் முதலா உடைய இக் கருவியில் கண்டு கேட்டு
எண்ணியும் உணர்தலால் இலை சுமக்கும் ஒருவன் போல்
நுண் உணர்வு தனக்கு இல்லான் உரைத்தது-தான் நூல் ஆமோ.

#194
ஐம்_கந்தம் எனல் பிழைப்பாம் அறிவினின் வேறு ஆதலால்
சிங்கும் தன் குறி உழப்புச் செய்கை என்று இவை மூன்றும்
இங்கு ஒன்றும் உருவினோடு இரண்டு என்னாய் மிக உரைத்தாய்
சங்கம்-தாம் அல்லவேல் தத்துவமும் தலைப்பட்டாய்.

#195
முன்னைத் தன் முழுக் கேடும் முழுக் கேட்டின் வழித் தோன்றும்
பின்னைத் தன் பிறிது அறிவும் பெயர்த்து உரைத்தல் பெரும்_பேதாய்
என் ஒக்கும் எனின் நெருநல் இல் புகுந்தான் இடை இராத்
தன்னைத் தந்து எனைக் கொண்டு தான் சென்றான் எனல் அன்றோ.

#196
கள்ளனும் தானே ஆய்க் கை யாப்புண்டவனே போல்
உள்ளம்-தான் நின்றவற்றை உணர்ந்து அவற்றோடு அறக் கெட்டு இங்கு
எள் அனைத்தும் இல் என்றால் இறப்பு அறிதல் எவன் ஆகும்
தெள்ளியாய் தெளிந்து இருந்து சிந்தித்துக் காணாயோ.

#197
கோன் பட்டான் குந்தத்தால் கத்துண்டான் ஏனாதி
தான் பட்டான் தள வீரன் தப்பி ஓடு அவன் அருகே
யான் பட்டேன் என்பவன் போல் யாத்திருந்தே சொல்லுதியால்
தான் பட்டான் பட்டார்க்குத் தன் பாட்டை உரைக்குமோ!

#198
பிறைப் பிறப்பும் பிள்ளைகள்-தம் பிறப்பினையும் எடுத்துரைப்பின்
மறைபொருள்கள் வெளிப்பட்டாம் மன்னும் தாம் கருதுபவால்
குறை என்னை வான் வயிற்றால் குண்டலமாகேசி இத்
தறையகத்துப் பிறப்பு உரைத்தால் தத்துவமாக் கொள்வாமோ.

#199
பின்ன சந்தானமும் பிறிதில் சந்தானமும்
இன்ன என்று இரண்டு உரைத்து எத்துணையோ பொழுது ஓதிச்
சொன்னதன் பொருள் எல்லாம் சுவடு இன்றி அறக் கெடுத்தற்கு
அன்னதே எனில் ஆதன் ஆழிநாட்டு ஆகாதோ.

#200
எண்_இலாப் பல கந்தம் இடையறா என்று உரைப்பின்
கண்ணுறாது ஒன்றுதலால் கலப்பு_இலவாம் ஆகவே
திண்ணிதாம் இடையறவு தீண்டுமேல் திரண்டு ஒன்றாய்
அண்ணல்-தான் முடிந்து அறக் கேடு அரியதே போலுமால்.

#201
வாசனையின் ஆம் எனினும் வழி-அதனின் முதலது ஒன்று
ஆசு அனைத்தும் இல்லையேல் அறிந்து உரைப்பும் அரிது அரோ
பேசினை நீ உளது எனினும் பெரும் தாமத்து உள் நூல் போல்
லோசனை_இல் நெடியது ஓர் உயிர் உரைத்தாய் ஆகாயோ.

#202
பாதிரிப் பூப் புத்தோடு பாழ்ப்பினும் தான் பல் வழியும்
தாது உரித்தாம் கேடு_இன்மை என்பது நுன் தத்துவமோ
போது உரைத்த ஓடு நீர் போல் உடம்பு பொன்றிடினும்
மூது உரைத்த வாசம் போல் முடிவு உயிர்க்கே ஆகாதோ.

#203
சத்தி-தான் சென்றதே என்றியேல் ஐந்து அன்றிப்
பொத்தி நீ உரைக்கின்ற பொருளோடு ஆறு ஆகாவோ
சத்தி-தான் அது அன்றி ஐந்துமே ஆயினும்
பித்தியாய் முழுக் கேடு பேசினாய் ஆகாயோ.

#204
அலை பலவே உரைத்தாள் என்று அருகு இருந்தோர் கருதுதலும்
தலைவன் நூல் பொருள் நிகழ்ச்சி-தங்கள் மேல் குற்றங்கள்
நிலைபெற உரைத்து இன்மை நிறுத்துவன் யான் என்று தன்
தலைவன் ஈ பொருள்களே தான் நாட்டல் உறவினால்.

#205
கண் கொடுத்தான் தடி கொடுத்தான் கயப் புலிக்குத் தன் கொடுத்தான்
பெண் கொடுத்தான் உடம்பினையும் பிளந்திட்டுப் பிறர்க்கு ஈந்தான்
மண் கொடுத்தான் மகக் கொடுத்தான் மன்னும் தன் சேர்ந்தார்க்கு
விண் கொடுத்தான் அவன் கொடுத்த விரித்து உரைப்பன் கேள் என்றாள்.

#206
ஏதிலார் இடர் தீர்க்கும் எம இறை
சாதகம் இவை என்று தலைத்தலை
ஓதினாள் நின்று ஒரு பகல் எல்லையும்
கோதை வார் குழல் குண்டலகேசியே.

#207
நூலும் நாரும் இசைத்தன ஒத்தலால்
நீலகேசி நெடும்_கணாள் சொல்லும்
மாலும் பேயும் உடையவர் செய்கையே
போலும் நீ சொன்ன புத்தர் சரிதையை.

#208
போழும் கண்ணும் தலையும் தடிகளும்
தாழம் இன்றி இவை தம்-மினோ என
வாழும் மாந்தர் உழை வருவார் இல்லை
கூழன்-தன் உழையே கொளச் செல்பவோ.

#209
பிளத்தல் உள்ளிட்டவாய்ச் செல்வது இந்திரன்
அளத்தற்கேல் அவன் தான் அறியும் பிறன்
உளத்தை ஓரலனேல் அவன் தேவனாக்
கிளத்தல்-தான் ஓர் கிழமையும் போலுமே.

#210
யாவன் ஆயினும் அன்னவன் இன்மையின்
தேவன் என்று தெளியும் தெளிந்த பின்
சாவன் என்பது ஓர் சங்கையும் இன்றியே
ஈவன் என்பது ஓர் இச்சையும் தோன்றுமே.

#211
உறுதி அல்லது உணர்வு_உடையான்-தனக்கு
இறுதியேல் என்றும் இந்திரன் எண்ணலன்
மறுதி இன்மையின் மாண்_இழை நீ எங்குப்
பெறுதி முன்னொடு பின் இயையாதவே.

#212
ஆதன் ஆற்கு உறந்தாங்கு எழுவான் தும்ம
ஏதம்_இல் சுமை ஏற்று எருதாம் என்றான்
சாதகம் இவற்றான் அருள் சாதிப்பான்
ஓதினார்க்கும் உணர்வு ஒருப்பு ஆயதே.

#213
எருது பால் இன்மை எண்ணலன் தும்மலே
கருதும் ஆதனும் கண் முதலாயின
தருதல் அல்லது தம் குறை ஈது எனார்
மருதின் வாழ் பகையான இ மாந்தரே.

#214
பாகமே பிளந்தால் பரகாயம் ஒன்
றாகுமே என ஈவஃது ஆதன்மை
காகமே உண்ணும் கண்ணும் மற்று அன்னதே
ஏக மெய்யும் விண்டால் இயையார்களே.

#215
உள்ளம் தான் இரு பாகினும் உண்மையால்
கொள்கின்றான் இவனே கொல்லுவான் தனை
எள்ளி நேரும் அறிவு இல்லையேல் பிணம்
கொள் என்று ஈர்ந்து கொடுப்பினும் கூடுமே.

#216
கூறுகூறு செய்தால் உடம்புள் உயிர்
வேறுவேறு செலல் வெளிறாக் கொளாய்
பாறுவாய் உரைக்கும் பரமாத்தங்கள்
தேறுவார் உளரோ தெருண்டார்களே.

#217
புத்தனார் வண்ணம் கண்ட புனை_இழை
சித்தனே என்னைச் சேர்-மினம் என்றலின்
அத் தகன் அருள் செய்கலன் ஆய்விடின்
மத்தகம் பிளந்தான் என்றல் மாயமே.

#218
ஆவது இன்மை அறிந்தும் அவத்தமே
சாவதே உங்கள் சத்துவர் சால்பு எனின்
காவல் பூண்ட கணவனோடு ஈமத்தின்
வேமவட்கும் விழுக் குணம் ஆம்-கொலோ.

#219
சாந்தி ஆகத் தருமம் உரைப்புழிக்
காந்திபாலியைக் கண்டு கலகன்-தான்
ஏந்தி வெம் படையால் எறிந்தாற்கு இடம்
போந்து கொண்டதும் பொய்யினுள் பொய் அன்றோ.

#220
யானையுள் அரசு எங்கு உளது அங்கு எலாம்
வானம் நின்று வழிபடல் காண்டுமால்
மீனும் அல்லவும் வேதனை எய்துழித்
தான் அது ஆதல் தாதாகதர் தன்மையோ.

#221
குரங்குமாய் அவை கொல்லிய செல்வுழி
இரங்கியே உயக்கொண்டதும் என்றியால்
குரங்கு நேர் குதியாக் குரங்கு எங்கு உள
மரங்கள் பாய்ந்திடும் மாண்பின அல்லவோ.

#222
சீலம் நல்லவர் நீள்குவர் சேண் எனில்
கோலம்_இல் குரங்கு ஆட்டிக் கொல்வார்களைக்
காலும் கையும் எழற்க எனக் காண்கிலான்
வாலை நீட்டிக் கிடத்தல் தன் மாட்சியோ.

#223
தாய்க் கொன்றான் தங்கு செம் குருதிப் புனல்
பேய்க்கு ஒன்று ஈதல் பெரும் கொடை என்பதை
வாய்க்கின்றாய் இனி மானுயர் மாசு எலாம்
நாய்க்கு என்றால் இது நல் அறமாம்-கொலோ.

#224
யான் செயும் பொருள் என்று அங்கு ஒர் ஏகாந்தன்
தான் செய்திட்டனன் சாதக கற்பங்கள்
மான் செய் நோக்கி மதிப்பு ஒழி நீ எனக்
கோன் சொனான் இது குண்டலகேசிக்கே.

#225
முயல் உரை இது என மூடிக்கொண்டு இருந்து
அயலார்க்கு உரைப்பவர் ஆதர் அல்லரோ
புயல் இரும் கூந்தலி பொருந்தச் சொல்லினாள்
வியலவர் உரையொடு விரோதம் இல்லையே

#226
அரசு இறை இது சொல அவையினார்களும்
உரை செறிவு உடையன உரைத்த நீர்மையள்
முரைசொடு நெடும் கொடி முழங்க நாட்டுக
விரைவொடு படுக என வேந்தன் ஏயினான்.

#227
இருப்பது என் இனி அன்னாய் இது நுமக்கு உரைத்தார் யார்
சுருக்கினைக் கடிதாகச் சொல் எனக்கு எனலோடும்
திருக் கிளர் மதில் உஞ்சை தென் திசை அகல் நகருள்
அருக்கசந்திரன் என்னும் அவாச்சியன் எனச் சொன்னாள்

#228
கட்டுரை பல சொல்லிக் காவல் நெடும் கடை நாவலை முன்
நட்டு இவண் நகரிடை நகைசெய்து புகுந்த இ நல்_நுதலை
வட்டிகொள் பறை கொட்டி வழுவுரை பல சொல்லி வாரல் என்று
பெட்டன பல செய்து பெரு நகர் வாயிலைப் புறப்படுத்தார்.

#229
புனத்திடை நறு மலர்ப் பூம் கொடி அன்னது ஓர் பொற்பினளாய்
எனைப் பல நூல்களும் இயல்பினின் அறிபவள் ஏதம்_இல்லாள்
தனக்கு இனி யான் செயற்பாலது-தான் என்னை என உரைத்தான்
இனத் தகை ஏற்று அரி இடி உரும் ஏறு எனும் இவற்றை ஒப்பான்.

#230
ஆண்டகை அரசு இறை அது சொல்லக் கேட்ட அ அறத்தகையாள்
தீண்டலன் அணி பிற புனைவு எனும் நினைவு_இலன் தினையனைத்தும்
வேண்டலன் நிலனொடு விழு நிதி இனையவும் விறல் தகையாய்
ஈண்டு இனி அற நெறி உறுக என ஏந்து_இழை இயம்பினளே.

#231
வந்ததும் இது பொருள் மன்னவ யான் என நல்_நுதலாள்
இந்திரன் அனைய நின் இறைமையின் அற நெறி இகழல் என்று ஆங்கு
அந்தர நெறி செலற்கு ஆய்_இழை அரசனை விடுத்து அருக்க
சந்திரன் இருந்த அத் திசை முன்னித் தளிர்_இயல் தான் எழுந்தாள்.

@3. அருக்கசந்திர வாதச் சருக்கம்

#232
உஞ்சை மா நகர் எய்தினளாய் அதன்
இஞ்சி மாட்சியும் எல்லை_இல் செம்மலும்
மஞ்சு தோய் நெடு மாடமும் வீதியும்
அம்_சில்_ஓதி அவையவை கண்ட பின்

#233
பருக் கை மால் களி யானைப் பல் வேந்தரும்
இருக்க போதக என்னும் பெருமையான்
தருக்க நீட்டமும் தன் நிகர் இல்லவன்
அருக்கசந்திரன் என்னும் அவாச்சியன்.

#234
போதிசத்துவர் புத்தர் எனப்படும்
நீதியில் பெரியார் அன நீர்மையான்
ஓதி நூல் மும்மை ஒப்ப உணர்ந்தவன்
வாதிகட்கு ஓர் வயப் புலி ஏறு அனான்.

#235
மாடம் ஓங்கி மழை நுழைந்து இன் குயில்
பாடு பூம் பொழில் பாங்கர் ஓர் பள்ளியுள்
பீடம் ஏறிப் பெருந்தகையார்க்கு எலாம்
வீடுபேறும் வினையும் உரைப்புழி.

#236
சென்று தான் எய்திச் சிற்பிடத்தால் புக்குத்
துன்று நீள் மணித் தூண் அணிந்து எண் என
நின்று நீல ஐம்பால் பெயராளும் அங்கு
ஒன்று பல் வகை ஓத்துரை கேட்டனள்.

#237
கொள்ளும் ஆறும் தன் கோரகையுள் கஞ்சி
மொள்ளும் ஆறும் முதுகு நெளித்து உண்டு ஊன்
அள்ளுமாறும் அணல் எடுத்திட்டவை
மெள்ள மெள்ள விழுங்கும் அவைகளும்.

#238
வழிக்கும் ஆறும் தம் மண்டையின் உண்டு மன்
ஒழிக்கும் ஆறும் அஃது ஊட்டும் அவைகளும்
மழிக்கும் ஆறும் தலைகளை மை இட்டு
விழிக்கும் ஆறும் வினைய விதியினால்.

#239
இனையவே சொல்லி இட்ட தலையராய்
வினைய நூலை வியப்பெய்துவார்க்கு எலாம்
அனையதே நும் அற நெறி என்றனள்
முனைவன்-தன் நெறி முன்னம் உணர்ந்தவள்.

#240
அ உரை அமரான் உயர் ஆசனச்
செவ் வரை மிசைத் தீ திரள் போல்பவன்
இ உரை இவண் என் எனச் சொல்லினான்
தெவ்வரைத் திறல் வாட்டிய திண்மையான்.

#241
வீரம்செய்து விழியல் வினைய நூல்
பேரது அஃதேல் பெரிதும் அழகிதே
ஓரும் அஃது ஓர் உறு வினை என்பதைத்
தேரச் சொல்லு நின் திண் பொருள் என்றனள்.

#242
வினையது ஆகிய பெற்றி விரித்து நீ
தினையின் நேரும் தெருட்டு எனக்கு என்னவே
அனைய அ விரதத்தோடு அறிசலம்
இனைய கேள் என்று எடுத்தன சொல்லுமே.

#243
தன்னை ஈந்ததும் தாரங்கள் ஈந்ததும்
அன்னதன் பொருள் கேட்டு அறம் கொண்டவன்
மன்னும் இல் அயன் மாந்தரைக் காணுமேல்
பின்னைச் செய்வன பேசலும் ஆகுமோ.

#244
காமம் ஊரின் கணிகையரோடு அன்ன
தூய்மை உண்மையின் தோற்றம் கரந்து அவண்
சேமமா வகைச் செல்க மற்று என்பதும்
வாம நூலின் மறைபொருள் அல்லவோ.

#245
சிங்கதத்தர் எனப்படும் தேரனார்
சங்க போதியிலாள்-கண் தயாச்செய
இங்கு இது என் என ஏழாய் தவசிகட்கு
எங்கெங்கு ஆம் இல் என உரைத்தான் அரோ.

#246
யாதும் இல்லை உயிர் என்று அற நெறி
ஓதினான் அ உயிரிலி-தன்னொடு
வேதனை தணிப்பான் வினை வீட்டிற்கும்
சாதனை நிற்கும் சத்துவன் ஆம் என்றீர்.

#247
சித்தம் ஓடிக் கலங்கித் திரியாத
நத்தம் பெற்றது நல் தவம் மேற்கொண்டான்
பத்தின் மேலும் பழி செய்யுமேல் பள்ளி
வத்தன் கண்டீர் வழக்கின்-கண் கூரியீர்.

#248
போதியார் உரு எய்திய புற்கலர்
வேதியால் கிடந்தார் உளராயினான்
ஞாதியார் என நாட்டிய கூட்டமும்
ஓதி வைத்தது ஒன்று உண்மை உணர்த்துமால்

#249
ஆரம்பிச்சி அலி விலங்கு அ உருச்
சீரிற்கு ஒத்தாள் கணிகை தெருண்டாள் பெண்
ஓரும்_இல்லாள் உயிரிலி ஊமையும்
தாரமாக் கொஃடிர் என்றல் சலமதோ.

#250
பிறந்த இல்லினுள் வாழ்க்கை பிழைப்பு எனும்
அறம் கொண்டான் கொண்ட அவாச்சிய வேடத்தால்
சிறந்த_அல்லன சிங்கின எங்கணும்
துறந்த வான் பொருள் சொல்லவும் வல்லையோ.

#251
உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன்
திரைப்ப மெல் அணை செய்வ விழுத் தவம்
கரைப்ப தீ_வினை கண்டது சூனியம்
புரைப்பு_இல் மார்க்கம் பொருத்தம் உடைத்து அரோ.

#252
எல்லாம் அசுசியும் என்ப அனவால்
அல்லால் அழுக்குற்று அவன் அடிக்கு ஏத்தலர்
சொல்லார் சுகமும் சுகதன் அவன் என்று
பல்லார் வருத்தம் பழுது எனப் பண்ணுப.

#253
நிலையா எனச் சொல்லி நேர்ப்ப பொருள் தூய
மலை ஓர் அனைய மாடம் எடுப்ப
இலையே உயிர் என்று இறந்த நினைப
புலை சேய் அமர்ந்தவர் புத்தியின் வண்ணமே

#254
மயித்திரம் பாவித்து மற்று அவற்று ஊனை
அசிப்பனவே போல் அமர்ந்து இருந்து உண்ணும்
சயித்தியம் காணின் தலையினை முட்டும்
பயித்தியம் கொண்டவர் பண்பும் அஃது ஒக்கும்

#255
புத்தர் உருவுக்கும் போலிக்கும் போலியை
மத்தகத்து ஏத்தி வணங்கி வழிபடும்
செத்த பொழுதின் அச் செம் தடி மென்றிடும்
அத்தனுடைய அருள் வகை வண்ணம்.

#256
பேன் அறாக் கூறை பெரு முடுகு நாறுமேல் துக்கம் துக்கம்
மான் அறா நோக்கி மணல் சுமையும் தான் பெரிதால் துக்கம் துக்கம்
கூன் இறாக் கண்டாலும் கொள்ள முடியாதேல் துக்கம் துக்கம்
தான் அறாப் பல் தொழிலும் தான் துக்கம் ஆதலால் சருவ்வம் துக்கம்.

#257
பொய் பொத்திச் சொல்லினவும் போம் கூலி கொண்டனவும்
வை அத்தம் சுட்டனவும் வாழ் மருது கொன்றனவும்
கையத்தின் ஊனுக்கே கன்றிக் கலாய்த்தனவும்
ஐயத்தை இன்றி அடுபவாலோ அழல் நரகத்துள்ளே படுபவாலோ.

#258
பற்றே மிகப் பெருக்கிப் பல் தொடர்ப்பாடே ஆக்கி
அற்றீர் போல் காட்டி அடைக்கலமே வவ்வும் நீர்
பெற்றீரே பேய் உடம்பு அன்றேல் பெரும்பாலும்
எற்றே இருள் நரகிற்கு ஈர்க்குமாலோ
இரக்கம் ஒன்று இல்லீரை ஈர்க்குமாலோ.

#259
ஆங்கு அவள் அறம் கூறக் கேட்ட அவாச்சியன்-தான்
தேம் கமழ் ஒலி கோதாய் சித்தமே அல்லது இல்லை
தீங்கு ஒழுக்கு என்றது எல்லாம் தீ_வினை என்னல் வேண்டார்
பூம் கமழ் கார் ஆடை போர்த்த எம் புத்தர் என்றான்

#260
துத்தலே வேண்டி நின்று தோம் தொடர்ப்பாடு நீக்காய்
சித்தமே நல்லது என்றால் தேற்றலும் ஆவது உண்டோ
கத்தி கொண்டு இல்லில் வாழ் பேய் கால் தலை வேறு செய்து
குத்தவ தின்னும் போழ்தில் கூடுமோ நன்மை ஏடா.

#261
உள்ளமும் பாயிரம்மும் ஒக்குமேல் வீடும் உண்டாம்
கொள்ளுமேல் குற்றம் அஃதாக் கூடுமே பற்றும் ஆங்கண்
விள்ளுமேல் வேறதாய வேடமும் அன்னதேயாம்
கள்ளமே சொல்லி நின்று கன்றினால் காட்டலாமோ.

#262
புனைந்து நீ சொல்லும் வீடும் போக உண்டாக தந்தேம்
நினைந்து நாம் காணில் எல்லாம் நின்றது ஒன்று இல்லை என்றால்
துனைந்து தான் உண்மை நன்று சூனியம் ஆதற்கு என்றாட்கு
இனைந்தினைந்து ஏங்கி நல்லாய் என் செயற்பாலது என்றான்.

#263
செத்தவர் அப்பொழுதே தேவருள் செல்பவேனும்
அத்தலை இன்பம் நோக்கார் அஞ்சுவ மாக்கள் அந்தோ
தொத்து உள ஆக என்னான் சூனிய வீடு சொன்ன
புத்தனை நோதும் அத்த புலம்பல் நீ போக என்றாள்.

#264
புல் நெறி அவைகள் எல்லாம் போக்கிய பாக்கியத்தாய்
நல் நெறி நல் ஞானம் காட்சியும் நன்கு கொண்டு என்
சொல் நெறி திரிவாயேல் சோர்வு_இல் பேர்_இன்பம் எய்தி
மன்னுதி என்று மற்றும் கூறினாள் மாதராளே.

#265
காட்டு உழல் களி நல் யானை கால் கையின் ஓர்ப்பித்து ஏறித்
தோட்டியிட்டு ஊர்வதே போல் சூரிய சோமன்-தானும்
வாள் தடம் கண்ணி நல்லாள் வாக்கு எனும் தூக் கயிற்றால்
பூட்டுபு கொள்ளப்பட்டான் போதியார்க்கு ஆதி_அன்னான்.

#266
அருக்கமாசந்திரனை அறம் கொளீஇ ஆங்கு அவனை
இருக்கும் வாய் ஒருப்படுத்தி இங்கு ஈது நுனக்கு உரைத்தாரைப்
பொருக்க நீ சொல் என்னப் புத்தனார் முதல் மாணி
முருக்குவாய் சென்று அவன் நாமம் மொக்கலன் எனச் சொன்னான்.

@4. மொக்கல வாதச் சருக்கம்

#267
நீ வருதல் ஒழி என்று நிறை பதுமபுரத்துக்கே
மாதிரம்-தான் நெறியாக மனம் போலச் சென்று எய்தி
மூதுரையும் காரணமும் முழுது எழுதி அழகிதாய்ப்
போதுகளும் பொன் மணலும் புனைந்து இனிய பொலிவிற்றாய்.

#268
கொடி மகரக் கோபுரமும் நெடு மதிலும் குடிஞைகளும்
தொடி மகரத் தூண் நிரையும் சொலற்கு அரிதாய்ச் சுவர்க்கத்தின்
படி மகரப் படிமையது அப் பள்ளி கண்டு அளியள் போய்க்
கடி மகரக் கடல் கடந்து கலம் தந்த நலம் என்றாள்.

#269
ஒழுக்கமும் கல்விகளும் உரைத்தனவே ஒப்பனகள்
இழுக்கு_இல்லாப் பெரும் தவத்து இலிங்கிகளைத் தான் கண்டு
முழுத் தாளதாய்ப் பள்ளி முற்றத்து ஓர் அரை மரத்தின்
குழுக் கொம்பர் பிடித்து ஒரு கால் குஞ்சித்து நின்று-தான்.

#270
துன்னம் செய்து ஆடையைத் துவர் தோய்த்துக் கொட்டியும்
பொன் அம் செய் பத்து அங்கப் புகை ஊட்டிக் கைசெய்து
தன்னமும் அளித்தாய தலை சொறியும் இடை இலையால்
என் அவற்றின் ஆம் பயனை எனக்கு அறிய உரை என்றாள்.

#271
ஆங்கு அவள் அது உரைப்ப அதற்கு உரிய மறுமாற்றம்
தாங்களும் உரைக்கில்லார் தலை சாய்த்து அங்கு இருந்தார்
மூங்கைமையான் மொழி கொண்டேல் மொக்கல நல் தேர யான்
பாங்கினால் வினவுவன் படிறு இன்றி உரை என்றாள்.

#272
வீடிற்கே எனின் ஞானம் வேண்டாதே முடியுமால்
பீடிற்கே எனின் நின்னில் பெரும் செல்வர் திருந்தினார்
மூடிற்றின் பயன் என்னை என வினவ மொக்கலனும்
மூடிற்றும் சிறிது உளதால் உரு அறிதற்கு என மொழிந்தான்.

#273
படைப்பு எளிதால் கேடு அறிதால் பல கள்வர் நவையாரால்
உடைக்கு இயைந்த ஒலி அற்றால் ஊன் தருவார்க்கு உணர்த்துமால்
விடக்கு அமர்ந்த உள்ளத்தாய் வேடமும் அறிவிக்கும்
தொடர்ப்பாடும் பெரிது அன்றால் தொட்டை நீ பூணியோ.

#274
பொன் கொண்டார் ஆயினும் போர்வை பூச்சு எனில் புலையன்
வன்கண்மையால் செய்த வஞ்சமே என வளைப்பர்
தன் தன்மை ஆகிய தான் பழிப்பார்-தாம் உளரோ
என் கண்டு வந்து இங்கண் இது கொண்டாய் எனச் சொன்னாள்.

#275
உள் நன்மை தவம் என்று அங்கு உறுப்பு எல்லாம் மறைக்கின்றாய்
திண் என்ற மனம் இலை நீ சிறை பலவும் செய்தலால்
பெண் என்றும் பிற என்றும் தான் நோக்கிப் பெரும் பேதாய்
கண் அன்றோ உள்ளத்தைக் கலக்குவன அவை காவாய்.

#276
பெண்பாலார் கண்டக்கால் பேதுறுவர் என உரைப்பாய்
திண்பான்மை அவர்க்கு அழியச் சிதையும் நின் தவம் ஆயின்
மண்பாலார் அவர் உள்ளம் மாண்பு உளதாய் உரையாரால்
எண்பாலும் படாது ஆகி இழுக்கு நின் குணம் அந்தோ.

#277
இழுக்கினும் இழத்தியால் இடறினும் அதுவேயால்
விழுக் கலமால் வினை பெரிதால் வினைக் கேடு ஆம் தொழில் தருமால்
ஒழுக்கிற்கும் உரித்து அன்று ஊண் ஓர் இடையூறு உடன் கொடுக்கும்
வழுக்கு இன்றித் தவம் செய்யின் மண்டையால் பயன் என்னோ.

#278
நிறம் தூய்தாம் நீரினால் வாய் தூய்தாம் பாகால்
பறைந்து போய் மெல் கோலால் பல் எலாம் தூயவாம்
புறம் தூய்மை செய்தக்கால் புரி உள்ளம் தூய்து ஆமேல்
அறம் தூய்மை கணிகையர்க்கே ஆற்றவும் உளதாமால்.

#279
சவர் உடைய மனை வாழ்க்கை எனப் போந்து தவம்புரிந்தாய்
பவர் உடைய விறகு இறுத்துப் பல கலங்கள் ஒருப்படுத்து உற்று
உவரோடு பல் கூறை உடன் புழுக்கி ஒலித்திடும் நீ
துவர் அடுதி பூ அடுதி சோறு அடலே முனிந்தாயோ.

#280
வண்ணாரம் துன்னாரம் மச்சிகமே கச்சாரம்
சண்ணாரம் எனப் பிறவும் தவத்துள் நீ கற்றனவால்
எண் ஆர்ந்த காரங்கள் இல்லகத்தே பயின்றாயேல்
உண்ணாயே வயிறு ஆர ஓர்ப்பு ஒன்றும் இலையே காண்.

#281
சிறந்தாய்க்கு ஈது உரைக்கலாம் சிந்தனையை முடிப்பதே
துறந்தார்க்குக் கடன் ஆகில் சோறு அலால் பிற வேண்டா
இறந்தார்க்கும் எதிரார்க்கும் இவண் காலத்து உள்ளார் வான்
பிறந்தார்க்கும் இது அன்றிப் பிறிது ஒன்று சொல்லாயோ.

#282
உண்டியால் உடம்பு உளதால் உடம்பினால் உணர்வு ஆம் என்று
எண் திசையும் பரந்து இசைப்ப ஈது உனக்கே தெரியாதோ
தண்டியாய்க் கழியாது தவம்செய்தல் உறுதியேல்
பண்டியால் போக்கு நின் பல் தொடர்ப்பாடு எனச் சொன்னாள்.

#283
அருள்_உடையாள் உரைப்பக் கேட்டு ஆங்காரித்து அவனும் தன்
பொருள்_உடைமைத் தருக்கினும் புல் ஞானக் களிப்பினும்
மருள்_உடையார் மதிப்பினும் மாற்றம்-தான் செயல்பொருட்டால்
இருள் உடைந்த கூந்தலாள் இட்டத்தை எண்ணுவான்.

#284
தரண் என்றும் நன்று என்றாள் என் தன்மை உரு என்றாள்
அரண் என்னத் தெளிந்தது-தான் ஆருகதமே மன்னும்
முரண் நின்றது உண்மையால் மொக்கலனும் முனிந்து உரைப்பான்
இரணியனைப் போல் வந்து இங்கு இடர்ப்பட்டாய் என்றானே.

#285
என்னாலும் வெலப்பட்டார் இருவர் உளர் இங்கு அவரைச்
சொன்னாலும் அறிதி நீ துடி கடியும் இடை உடைய
கொல் நாணும் நெடு வேல் கண் குண்டலமாகேசியும்
அன்னாளுக்கு அறம் உரைத்த அருக்கமாசந்திரனும்.

#286
என்றாளை முகம் நோக்கி இது பெரிதும் பொய்த்தனை நீ
ஒன்றாத கொள்கையார் உலகின் உள யாவரையும்
வென்றாள் மற்று இவள் சம்பு_விரதியாய்த் திரிந்து எங்கும்
தன் தாரம் பிறர்க்கு ஈந்தான் தருமம் கொண்டு என்றானாய்.

#287
வேதியரை முதலாக வெலப்பட்டார் இவர் இவர் என்று
ஓதி ஆங்கு அவை அவை-தாம் இவை இவை என்று உரைப்பக் கேட்டு
ஆதிகால் ஆவணத்துள் ஆர்கதரை வென்றதனை
நீதியால் உரைத்தியேல் நின்னை யான் வெல்லேனோ.

#288
எனக் கேட்டு ஆங்கு எடுத்துரைப்பான் இந்திரர்கள் தொழப்படுவான்
தனக்கு ஆய தர்மமும் அதர்மமும் காலமும்
கனப் பாட்டின் காயமே உயிர் உருவே புண்ணியமே
நினைக்கும்கால் பாவமே கட்டு வீடு என நிறுத்தி.

#289
இப் பொருள்-கண் நிகழ்ச்சியும் இவை இவையாம் என விரித்துச்
செப்பினான் ஆதன் தன் சிந்தைக்கு எழுந்தவாறு
அப் பொருளும் அ நிகழ்வும் அவை அவையா அறியாதே
வப்பு இள வன முலையார் மணல் விளையாட்டு அதுவே போல்.

#290
மொக்கலனும் இது கூற முல்லை நாறு இரும் குழலாள்
நக்கனளாய் இது கூறும் நாதனது இயல்பு அறியா
இக் கிரமத்து இந்திரன் இருடிகளைத் தேவியரைத்
தக்கதாத் தொழுதக்கால் அவர் தலைவர் எனலாமோ.

#291
எம் தலைவர் இயல்பொடு நூல் இன்னணம் என்று அறியாதாய்
சிந்தனைக்-கண் ஆயினும் தீமையும் உரைத்திலையால்
தந்துரைத்த தலைவன் நூல் தத்துவமாம் ஆகவே
முந்து உரைத்த பொருள் நிகழ்வு பிழைப்பு_இன்மை முடியாவோ.

#292
அத்தி ஐந்து எனின் அல்ல அறு பொருளும் அவை ஆகா
உத்தியால் எடுத்து ஓதும் ஒன்பதனோடு ஒட்டலவால்
குத்திய பல் குறையே அன்றியும் இப் பொருள் எல்லாம்
பொத்தியும் காட்டுவாய் பொருள் இயைவோ பெரிது என்றாள்.

#293
சலம்படவே உரைத்தனை நீ தருமத்தில் செல்லுதும் என்று
இலம்படுமேல் இயக்கு இல்லை என்பது எம் உரை என்போம்
கலம் செல்லும் கடல் அதனைக் காற்றே போல் உந்தாதாம்
பலம்படும் உரை நினக்குப் பாம்பு உண்ட பாலே போல்.

#294
அல்லதற்கும் அப்படியே ஆம் என்றல் அது கொள்ளாய்
செல்லவும் செலுத்தவும் நில்லவும் நிறுத்தவும்
சொல்லிய வாய் தேய்க்குறுவாய் சொல்லிக்கொள் வலி-அதனால்
பல்லொடும் படத் தேய்த்தால் பயம் பெரிதும் படும் அன்றோ.

#295
கடல் நிலம் ஆகாயமே அமையாவோ இவை இரண்டும்
உடன் இல்லை ஆயினும் ஊனம் இங்கு எவன் என்பாய்
மடன் உடையை நீ பெரிதும் மன் உயிர்க்கும் புற்கலக்கும்
இடன் எல்லா உலகின் எல்லையும் புறப்படுமோ.

#296
பல சொல்லிக் குறை என்னைப் பஞ்சமா கந்தமே
அலகு_இல்லாப் பெரும் பரப்பின் ஆகாயம் நினக்கு இல்லை
நிலை செலவிற்கு இவை வேண்டா நின் பொருளும் இவை அல்லா
உலகு எல்லை உரைப்பான் புக்கு உணர்வினையே வருத்துதியால்.

#297
காலம் நீ வேண்டாயாய்க் கணிகமும் கற்பமும்
சாலமும் புனைந்து உரைத்தி சமழ்ப்பு என்னும் இலை ஆகிப்
பால மா பண்டிதனே பழ நோன்பி இவன் என்பாய்
மாலும் இங்கு உடையையோ மயக்குவது ஒன்று உண்டனையோ.

#298
இக் கோள்கள் எழல் நோக்கி இவை இவையே ஆம் என்றால்
அக் கோள்கள் எழல் நோக்கி அவை அவையாக் கண்டிருந்து
எக் கோளும் இல் என்பாய் யாண்டு எண்ணி ஏத்துதியால்
மெய்க் கோளால் என்றி யான் மிகை தெருட்டும் திறம் காணேன்.

#299
கருத்தினால் பெற்றாமோ கண்கூடாக் கண்டோமோ
பொருத்தனை என்று உரைக்கின்றாய் உறு நோயைத் தீர்ப்பது ஓர்
மருத்து நூல் இல்லை யான் மயங்கியே சொல்லாது
திருத்திய நின் உணர்வு_இன்மை தெருட்டிக் காண் என்னச் சொன்னாள்.

#300
பொறி உணர்வின் புலம் ஆய புற்கலமே உயிர் அறியும்
அறிவினால் அறியாதே ஆம் ஆகாது என உரைப்பாய்
நெறி என்னை இந்திரன்-தன் நெடு நகர்க்கு அவன் தேவி
குறியளோ நெடியளோ நூல் ஒழிப்பாய் கூறிக்காண்.

#301
மெய் அளவிற்று உயிர் என்று மெய் அகத்து அடக்கு உரைத்தல்
பொய் அளவைக் குடம் குடத்தில் புகல் அருமை போல் என்பாய்
மெய் அளவ்¢ன் மெய் உணர்வை மெய் அகத்து அடக்கு உரைத்தி
ஐயனையே அடங்கான் என்றது ஆதன் வண்ணக்கால்.

#302
அருவு ஆதலால் அடங்கும் உணர்வு-தான் அங்கு என்னில்
பெரு வாதம் அங்கு இல்லை பெற்றி ஒன்று அறியாத
திருவாளன் உரை வண்ணம் தீட்டு ஒட்டுக் கலப்பு யாப்பு
உருவு ஆய உடம்பினோடு உணர்வினுக்குள் உளது ஆமோ.

#303
யாப்புண்டால் உழப்பது அ உயிர் என்றேற்கு அது அன்று
போய்ப் பிண்டத்து உழப்பு உழப்பப் புலம்புவது என் செயல் என்பாய்
ஏப் புண் பட்டான் பட நோய் ஏதிலர்க்காய்ச் சோமாகிச்
சாப் புண்பட்டேன் என்று சாற்றுவது உன் தத்துவமோ.

#304
உழப்பு உழப்பச் செய்கையான் உறு துயருற்றேன் என்றல்
பிழைப்பதுவாக் கருதாதே பெரு வழியுள் இடறுதியால்
உழப்பு அறிவு குறி செய்கை ஒருவனவே எனச் சொன்னார்க்கு
இழிக்குவது இங்கு இல்லாமை இதனாலே அறியன் என்றாள்.

#305
அருவு ஆயில் யாப்பு இல்லை அன்று ஆயின் குறைபடூஉம்
இரு ஆறின் கூட்டமும் தீது என்பது எம் இடமே
மருவாதாய் உரைத்ததனை மனம்கொள்ளா அது அன்றிப்
பொருவு ஆறு ஒன்று உரைத்தாலும் ஒருவாறும் உணராயால்.

#306
அறிவு எழுந்து அவலிக்கும் என்பதூஉம் அது எழப்
பிறிது ஒன்று பேதுறும் அங்கு என்பதூஉம் பெரும் பேதாய்
குறிகொண்டார் உரை அன்றால் குற்றமே கொளல் உறுவாய்
பொறி கொண்டு காற்றினையும் போகாமல் சிமிழாயோ.

#307
பிறன் சுமவான் தான் நடவான் பெரு வினையும் உய்க்கில்லா
அறம் செய்தான் அமர்_உலகில் செல்லும் வாய் அரிது என்று
புறம் புறம்பே சொல்லி எம் பொருள் நிகழ்ச்சி அறியாயால்
கறங்குகளும் அல்லனவும் காற்று எறியத் திரியாவோ.

#308
மகனேயாய்ப் பிறப்பினும் மா துயரம் கேடு இல்லை
அவன் ஆகான் ஆயினும் அறம் செய்தல் அவம் ஆகும்
எவன் ஆகும் என்று எமது இட்டமே உரைத்தியால்
நகை நாணி நீ நின்னை நல் பகலே மறைக்கின்றாய்.

#309
வீ உடம்பு இட்டு உயிர் சென்று வினை உடம்பும் உளதாகத்
தாய் உடம்பின் அகத்து உடம்பு தான் வைத்தது இன்றியே
நீ உடம்பு பெற்ற ஆறு உரை என்பாய் நிழல் போலும்
பேய் உடம்பு பிறிது உடம்பில் புகல் பேதாய் காணாயோ.

#310
எப்பொருளும் ஒன்று ஒன்றிற்கு இடங்கொடுத்தல் இரும்பு உண் நீர்
புக்கு இடம் கொண்டு அடங்குதலே போலவும் தந்தை தாய்
சுக்கிலமும் சோணிதமும் தழீஇச் சுதையுள் நெய் அனைத்தாய்
ஒத்து உடம்பின் அகத்து அடங்கி உடன் பெருகும் என உரைத்தாள்.

#311
செய் வினை-தான் நிற்பவே பயன் எய்தும் என்பதூஉம்
அ வினை அறக் கெட்டால் அது விளையும் என்பதூஉம்
இ இரண்டும் வேண்டுதல் எமக்கு இல்லை எடுத்துரைப்பின்
ஐ_வினை இல் நிலை தோற்றம் நாசம்-தான் நாட்டுங்கால்.

#312
பைம்பொன் செய் குடம் அழித்து பல் மணி சேர் முடி செய்தால்
செம்பொன்னா நிலையுதலும் சிதைவு ஆக்கம் அவை பெறலும்
நம்பு ஒன்று இங்கு இவை போல நரர் தேவர் உயிர்களையும்
வம்பு என்று கருதல் நீ வைகலும் யாம் உரையாமோ.

#313
பெரும் பாவம் அறத் துய்த்துப் பெறுதும் யாம் வீடு என்னோம்
அரும் பாவகாரி நீ யாவர் வாய் அது கேட்டாய்
வரும் பாவம் எதிர்காத்து மன்னும் தம் பழ_வினையும்
ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த் தூய்மை வீடு என்றாள்

#314
சொன்ன சூனைத் துறந்து அவற்று அட்டன
பின்னை உண்டல் பிழைப்பு உடைத்து என்றியால்
நல்_நுதல்லைத் துறந்து அவள் அட்டது
தன்னை உண்டும் தவசியை அல்லையோ

#315
கொன்ற பாவம் கெடுக எனக் கையிட்டு
நின்றது என்பது நீ உரைப்பாய் எனின்
நன்று துன்னினது ஆதன்மையால் சொன்னாய்
சென்றும் வந்தும் தியானம் புகல் என்றாள்.

#316
இன்ப துன்பம் இரு_வினைக் காரியம்
என்பவர்க்கு என்னை ஏதம் உண்டு என்றியேல்
பின்பு பேணும் தவத்தினின் ஆகிய
துன்பு அவர்க்கும் துதாங்கனத்து ஒன்றுமே.

#317
செய்த தீ_வினை சென்று இன்பம் ஆக்கும் என்று
இஃது உரைப்பவர் ஈங்கு இல்லை ஆயினும்
பொய்கள் சொல்லிப் புலை_மகனே எம்மை
வைதல் காரணமா நின்று வைதியோ.

#318
இந்திரியங்களை வென்றல் பொருட்டு என
வந்து உடம்பு வருத்தல் பழுது என்பாய்
தந்து உரைத்த தலை மழி ஆதிய
சிந்தனைக்கு இவை செய்வது எனோ சொல்லாய்.

#319
புனைவு வேண்டலர் போகம் நுகர்வு_இலர்
நினைவிற்கே இடைகோள் என நேர்தலால்
இனையவும் மலம் ஏறினும் என் செய
அனையது ஆன்மாக்கள் யாக்கையின் வண்ணமே.

#320
பாவம் துய்த்தும் என்றோம் அல்ல துய்ப்பினும்
ஆவது இன்மைக்கு அரசு உரைத்தாய் அன்றோ
ஓவு_அல் இன்பம் தரும் என் உயிர் என்பாய்
தேவன் ஆகித் திரிந்து தான் காட்டிக்காண்.

#321
அழிவு காலத்து அறத் தொடர்ப்பாடு எலாம்
ஒழியல் வேண்டும் என்று ஒற்றுமை-தாம் கொளீஇ
வழியும் காட்டும் அ மாண்பு_உடையார்கள் மேல்
பழி இங்கு இட்டு உரைத்தால் பயன் என்னையோ.

#322
சிந்தனையினும் தீ_வினை ஆம் என்பார்க்கு
கந்தில் காமம் அமையும் என்றீர் என்பாய்
சுந்தமாகச் சுவடு அறுவீர் என
அந்தி-தோறும் புடைக்க அமையுமோ.

#323
பெண் மகள்ளிர் பிறகிட உண்பவர்
கண்ணினால் இல்லுள் கந்தியைக் காணினும்
உண்ணலம் எனும் ஓத்து_உடையார்களைத்
திண்ணதா வைது தீ_வினை கோடியோ.

#324
பிள்ளை பெண் அலி ஆயினும் ஆண் வயிற்று
உள்ளதே என்று ஒழுக்கம் கொடுத்தியால்
பிள்ளை பெண் அலி அன்மையை யாதினால்
உள்ளம்கொண்டு இழவு ஊசி உரைப்பதே.

#325
மோனம் பொய் அஞ்சிக் கொண்டவன் மெய் உரைக்கு
ஊனம் தோன்றில் உரைத்தனன் என்றியேல்
தானம் யாவர்க்கும் செய்வது நன்று என்பாய்
ஈனம் என் ஓது எருச்சுமக்கிற்றியோ.

#326
உய்யக் கொள்வன் எனச் சொல்லி உள்ளத்தால்
கையில் காட்டல் கரவு உளதாம் எனில்
பொய் சிதைத்தது என் சொல்லிப் பெயர்ந்து உரை
பொய் உரைத்திலன் என்றல் பொருந்துமோ.

#327
கொல்_வினை அஞ்சிப் புலால் குற்றம் என்பதை
நல்_வினையே என நாட்டலுமாம் என்னை
வில்லினை ஏற்றி நும் மெய்ம்மை கொளீஇயது
சொல்லினை ஆதலின் சொல்லுவன் யானே.

#328
புத்தர்-கண் பத்தியின் போதி மரம் தொழில்
புத்தர்-கண் பத்தரையே தொழு புத்தர்-கண்
பத்தியை ஆக்கும் அது எனில் பற்றிய
பத்தம் குடை செருப்பும் தொழு பாவீ.

#329
ஆங்கு அவர் போல அருள்செய்பவர்களை
நீங்கு-மின் என்பது நீர்மை எனின் அது
ஈங்கு இதற்கு எய்தாவிடின் இலை போதிக்கும்
தீங்கே நுமர் செய்கை தேர மற்று என்றாள்.

#330
பல்லுடையான்-தன்னைப் பண்டு கண்டு ஏத்தினும்
தொல் உரை கேட்டு உறுப்பே தொழுதாலும் பின்
நல்_வினையாம் என்று நாட்டுதியாய்விடின்
கொல்வதும் தின்பதும் குற்றம் மற்று என்னாய்.

#331
ஏத்தினர் ஏத்துக என்று இறை போல்வன
பாத்து_இல பைம்பொன் படிமை செய்தால் அவை
ஏத்துநர் செய்தவர் எய்துவ நன்று எனின்
வீத்தவர் தின்பவர் வெவ்_வினைப் பட்டார்.

#332
வெற்றுடம்பு உண்பதும் வேலின் விளிந்தவை
தெற்றென உண்பதும் தீமை தரும் என்னை
ஒற்றை_நின்றாள் துணை ஊறுபடுத்தவள்
குற்றம் அன்றோ சென்று கூடுவது ஏடா.

#333
பிடிப்பது பீலி பிற உயிர் ஓம்பி
முடிப்பது அருள் அது போல் முடை தின்று
கடிப்பது எலும்பு அதன் காரணம் மேனி
தடிப்பது அலால் அருள்-தான் உனக்கு உண்டோ.

#334
ஆட்டு ஒருகால் மயில் பீலி உகும் அவை
ஈட்டுதல் போல் உதிர்ந்து உக்க இறைச்சியைக்
காட்டியும் தின்னும் கருத்து இலை நீ தசை
வேட்டு நின்றே அழைத்தீ வினையாளோ.

#335
மானொடு மீன் இல மன்னும் உடம்படல்
ஊன் அடுவார் இடுவாரை ஒளித்தலில்
தான் அடையா வினை ஆம் என்றல் தத்துவம்
தீனிடை நீ பட்ட தீச் செய்கை என்னோ.

#336
குறிக்கப்டாமையின் கொல் வினை கூடான்
பறித்துத் தின்பான் எனின் பாவமாம் பூப் போல்
செறிக்கப்படும் உயிர் தீ_வினை பின்னும்
நெறிக்-கண் சென்று ஆறலைப்பார் ஒப்பன் நேர் நீ.

#337
விலை அறம் போலும் எனின் வினை ஆக்க
நிலையும் ஈறு என்பது நேர்குவை ஆயின்
வலையினின் வாழ்நர்க்கும் வைகலும் ஈந்தால்
கொலை என்றும் வேண்டல் அன்றோ குணம் இல்லாய்.

#338
நும் பள்ளிக்கு ஈ பொருளால் உணர்வு_இல்லவர்
எம் பள்ளி-தாம் சென்று எடுப்ப எனின் அது
கம்பலையாம் வினை_இல் கறிக்கு ஈ பொருள்
செம்பகலே கொலையாளரில் சேரும்.

#339
நாவின்-கண் வைத்த தசை பயனே என
வே வினை நீயும் மற்று இன்பம் அஃது ஆதலின்
தேவன்-கண் வைத்த சிரத்தை செயல் அன்று
தூவென வெவ்_வினையைத் துடைத்தாயால்.

#340
கன்றிய காமம் துய்ப்பான் முறைக் கன்னியை
என்று-கொல் எய்துவதோ எனும் சிந்தையன்
முன் தினப்பட்ட முயல் முதலாயின
நின்றனவும் தின நேர்ந்தனை நீயே.

#341
தூய்மை_இலா முடை சுக்கில சோணிதம்
ஆம் அது போன்ம் எனின் ஆன் முலைப் பால் அன்னது
தூய்மையது அன்று அது சொல்லுவன் சோர்வு_இல
வாமன் உரை வையம்-தன்னொடு மாறே.

#342
மேன்மக்கள் நஞ்சொடு கள் வரைந்தார் அது
போல் மக்கள் ஆரும் புலால் வரையார் எனில்
தான் மெய்க்-கண் நின்ற தவசி மற்று எங்கு உளன்
ஊன் மெய்க் கொண்டு உண்பவன் உன் அலது என்றாள்.

#343
பார்ப்பனி ஓத்தும் நின் ஓத்தும் பயம் எனின்
நீப்பவும் கொள்பவும் நேர்தும் அவை அவை
தூப்பு எனும் இல்லனவே சொல்லி நிற்கும் ஓர்
கூர்ப்பினை நீ என்றும் கோள்_இலை என்றாள்.

#344
தூவினின் நுண் புழுத் துய்ப்பன் என்னாமையின்
தீ_வினை சேர்ந்திலன் தின்பவன் என்னினும்
ஓ எனும் ஊன் விலை வாணிகர் என்று இனர்
மேவினர் தாம் விலையே வினை வேண்டார்.

#345
அடங்கிய அம்பு பறித்தல் முதலா
உடங்கு_செய்தார் வினை ஒட்டலர் என்பாய்
மடங்கினர் வாழ்க எனும் ஆற்றார் போல்
சடம் சொல்லித் தின்பது இங்கு யார்-கண் தயாவோ.

#346
தின்னும் மனம் உடைப் பேய் எய்தும் தீ_வினை
மன்னும் மிக உடைத்தாய் வினைப் பட்டில்லாள்
என்னும் உரை பெரிது ஏற்கும் இகழ்ச்சி
தன்னை வினைப்பட நீ சொல்லினாயால்.

#347
அறம் சொல்லக் கொள்ளும் அறம் என்று அறிந்து ஆங்கு
அறம் சொல்லினார்க்கு அறமாம் என்று அறியாய்
புறஞ்சொல் இது அன்று புலால் குற்றம் என்று
துறந்து ஒழிந்தால் கொலை துன்னினர் யாரோ.

#348
அறம்-தலை நின்று ஆங்கு அருளொடு கூடித்
துறந்தனள் யான் என்னும் சொல்லும் உடையாய்
மறம் கொண்டு இது உண்டு என்னை மன் உயிர்க்கு ஆமே
சிறந்தது உண்டோ இது சிந்தித்துக் காணாய்.

#349
பேய் ஒப்ப நின்று பிணங்கிக் கண்டார்க்கு எனும்
மாயத்தின் ஊன் உண்ண மன்னும் அருமையின்
நாய் ஒப்பச் சீறி நறு_நுதலாளொடு
காயக்கிலேசத்தில் கட்டுரைக்கின்றான்.

#350
வெயில் தெற உணங்கியும் வெள்ளிடை நனைந்தும் ஊன்
பயிறல்_இல் பட்டினிகள் விட்டும் இன்ன கட்டமாய்த்
துயில் துறந்து இராப்பகல் துன்ப வெம் கடலினார்க்கு
அயில் தெறும் நெடும்_கணாய் ஆவது இல்லை அல்லதும்.

#351
காயம் வாட்டி உய்த்தலின் கண்ட நன்மை உண்டு எனின்
தீயினால் சுடுதலும் தெற்றி ஏறி வீழ்தலும்
நோயினால் திரங்கலும் நோன்மை என்னலாம் பிற
நீ அனாய் இதற்கு இனி நேமி என்று சொல் என.

#352
புண்ணினைத் தடிதலும் போழ ஆற்றி நிற்றலும்
கண்ணினைக் கழிகள்ளால் மிண்டிக் கொண்டு நீட்டலும்
விண் உயர் நெடு வரை வீற்றுவீற்று வீழ்தலும்
அண்ணலார்-தம் செய்கையும் ஆவது இல்லை அல்லதும்.

#353
தூக்கள் தம்மை ஆக்கலே தொல்லை நல் அறம் எனின்
நாக்களைப் பறித்தலும் நான்று வீழ்ந்து பொன்றலும்
தீக்கள் பாய்ந்து சாதலும் தீய செம் கழுவ்வின் மேல்
மேக்கினைக் கொண்டு ஏறலும் மேன்மை என்னலாம் பிற.

#354
தானம் சீலமும் பொறை தக்கது ஆய வீரியம்
ஊனம்_இல் தியானமே உணர்ச்சியோடு உபாயமும்
மானம்_இல் அருளினை வைத்தலே வலிம்மையும்
ஞானம் ஈர்_ஐம் பாரமீதை நாடும்கால் இவைகளும்.

#355
விருக்கமூலி ஆகலும் வெள்ளிடை உறைதலும்
இருத்தல் நிற்றல் அன்றியும் இட்ட கூறை எய்தலும்
மருக்கை_இல் மயானத்துள் சேக்கையும் மனைகளை
வருச்சியார் புகுதலும் மற்று அவற்றொடு உண்டலும்.

#356
அத்து இட்டு ஆடை கோடலும் அமையும் என்ன நீங்கலும்
பெற்றதன்னில் சேக்கையும் பேர்த்து உண்ணாது ஒழிதலும்
குற்றம் என்னப் பிச்சையும் குறித்துழிப் புகாது தான்
துற்றி உய்த்தல்-தன்னொடு துதாங்கு என்று ஆத்தர் சொன்னவே.

#357
பாரமீ துதாங்கொடு பற்பல கிலேசமும்
நேரும் மனையில் உண்மையால் நீரும் வேண்டினீர் எனக்
கூர் இமம் வெயில் பசி கூடலம் கூடினால்
சேர்தல் இல்லை நல் அறம் சிந்தை என்று செப்பலும்.

#358
அரும் தடிகள் ஈரவும் மறம் செய் வாளின் போழவும்
வருந்தவானது உள்ளம் நீ மாட்சி நன்றும் என்றியால்
இருந்து நின்று நல் நெறிக்கு இடைப்படாத சிந்தையால்
பெரும் தவங்கள் செய்ந்நரைப் பேசுவாய் ஓர் பேதையே.

#359
புத்தர் ஆகும் மாண்பினார் போதிசத்துவர்கட்கு ஆம்
பத்தும் ஆய பாரமீதை பாரவிட்டம் என்றலும்
சித்தர் ஆகும் மாண்பினால் சீலமும் வதங்களும்
எத்துணையும் ஆயிரம் ஆம் என்றும் யாமும் என்றனள்.

#360
உடம்பின் உள்ள பல் உயிர் சாவ ஊன் உண் மானுக்குத்
தடம் கொள் மா வரை மிசைத் தன்னை ஈதல் நன்மையேல்
படம் புனைந்தவர்கள்-தாம் பலரும் உண்ணும் நீரினுள்
விடம் பெய்தாற்கு நன்று-கொல் வியாதியாளன் தீர்க என.

#361
அல்லவர்கள் சாதலை அறிந்தனன் அவன் எனில்
நல்லது இல்லை நஞ்சினால் என்று நாட்டுவாய் எனின்
எல்லை_இல்ல பல் உயிர் தன்-கண் உள்ள எஞ்சலும்
கொல்ல வந்த ஊன்களும் குற்றம் என்றவாறு-கொல்.

#362
நீட்சி திரிவு ஆம் மயிர் உகிர் காட்டினை
மாட்சி இல்லா மயிர் மன் உயிர் உள்வழித்
தாள்-கண் நிமிரும் தலை நிமிரா எழல்
காட்சி மரத்திற்குக் கால் தலை எங்கும்.

#363
மரங்கள் வளரும் என மன்னும் கூம்பி
விரிந்த இலையின் வேற்றுமை சொன்னாய்
பொருந்தும் இவையும் அல்லவும் அன்றோ
ஒருங்கு இ உலகத்து உயிர்களும் என்றாள்.

#364
வயாத் திரு ஆக்கி வளர் பூசணிக்குத்
தயாச்செய்கை தீது என்னும் தத்துவம் கண்டாய்
உயாப் பிழைத்தாய் மெழுகு ஊனொடு பட்ட
வயா அதற்கு ஈண்டுப் பயத்தல் இல் அன்றே.

#365
யாதினும் மாழ்கும் அ மாழ்கியும் என்றுழி
நீ தின்னும் தோலை நெருப்பொடு கூட்டத்தின்
ஓதினை தேறுற நீர்க்கு உரைத்தாய் மற்றும்
சேதனை_இல்லாய் திரிவு என்னை வண்ணம்.

#366
அரும்பும் மலரும் அரும் பிணி தீர்வும்
ஒருங்கு தம் காரணத்து ஆக்கம் உணர்த்தும்
மரங்களும் மன் உயிர் எய்தின என்ன
இரும்பொடு காந்தம் இயைவு இல் திரிவே.

#367
ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை ஆம் இனி
இப்படித் தோன்றும் இருதுக்கள் சார்ந்து எனச்
செப்பிய ஏதுத் திரிவு எனக் காட்டிய
வெப்பம் குளிர் அவை-தாம் அவையேயால்.

#368
மரம் கிளை ஒப்புமையால் உயிர் என்னக்
கிரந்தியும் வெப்பும் கிளக்குவை ஆயின்
நிரந்த உடம்பின் விகாரம் நினக்குப்
பரந்து உணர் உண்மையைப் பார்ப்படுத்தாயால்.

#369
வாட்டங்கள் உண்மையின் வாழ் மரம் சேர்ந்தவை
நாட்டிய ஆதலின் நல் உயிரோ எனக்
காட்டிய தோல் ஒத்திராமையும் வாடும் அத்
தோட்டம் செய் சேம்பு உயிர் தொல் முடிவு அன்றோ.

#370
அற்ற உடம்புகள் ஆறுதலால் மரம்
தெற்ற உயிர் உண்மை செப்பத்தின் ஆம் எனப்
பெற்ற பிழை சொல்லிப் பித்து எழுந்தார் ஒப்பக்
குற்றம் இவை எனக் கூறிதி அன்றோ.

#371
காட்டின மண்ணை முதலா உடையன
ஓட்டி உரைத்த உயிர் என ஒட்டலர்
நாட்டினுள் வாழ்பவர் இன்னர் என்றா அந்த
நாட்டை அவர் என்ன நாட்டிய ஆறே.

#372
தாவரம் ஆய மரம் இவை-தாம் என
யாவரும் சொல்லுப அஃதும் அறிந்திலை
நீவிர் எவர் சொல்லச் சொல்லினீர் என்று நின்
சீவரம் போல் கட்டில் செப்புவது என்னோ.

#373
மக்களுள் தோன்றிய போழ்து அ மர உயிர்க்கு
ஒப்ப உடம்பு அறிவு அன்றி ஒன்று இல் எனில்
தக்கது அன்று அன்மை உடைப் போதிசத்துவன்
மிக்கது என் ஓதிக்கு வேற்றுமை வேண்டார்.

#374
நாணம் உடைய மரம் முதல் யாவையும்
ஊணின வாழ்ந்தும் உண்ணாவிடின் சாதலைக்
காணவும் பட்டது கஞ்சியோடு அல்லதை
ஆணம் இலாப் பொருள் ஆட்சியர் போன்றே.

#375
மயக்கு உடை ஆட்சியினார்க்கும் மரங்கட்கும் மன் உயிர் தாம்
பயப்பட ஒக்கும் எனவே என மன்னும் பற்று_இலனாய்
வியப்பு உடை ஆகமம் ஈது என நீயும் விரித்து உரைக்கும்
நயப் பிரமாணங்கள் மேல் குற்றம் நாடுவன் யான் எனவே.

#376
நிற்றலும் கேட்டினோடு உண்மையும் இன்மையும் நேர்தலினும்
ஒற்றுமை வேற்றுமை தம்மையும் ஒட்டப்படுதலினும்
குற்றம் இவையிவை ஆதலைக் கேள் எனக் கூறினனே
முற்றும் அவளது பக்கம் அறிதல்_இல் மொக்கலனே.

#377
வேய் ஒத்த தோளி நிலையுதல் வேண்டப்படுதலினால்
காயத்தின் தன்மையவாய் எக் கருமமும் காண்பு அரிதாம்
நாசத்தவம் எனில் தோன்றுவ தாமும் நவநவமாம்
தோசத்தவாம் நின் பொருள் எனக் கேட்டு இது சொல்லினளே.

#378
நின்றனவே என்றும் நில்லலவே என்றும் நேர்பவர்க்கும்
ஒன்று எனவேயும் பின் வேறு எனவேயும் தம் உண்மையின்-கண்
சென்றனவே என்றும் செல்லலவே என்றும் செப்பினர்க்கே
அன்று எனலாமோ அறைந்த பல் குற்றம் அவையவையே.

#379
நின்ற குணங்களின் நித்தியம் என்றும் நிலை_இலவாம்
என்ற குணங்கள் அநியதம் என்றும் இயம்புதலால்
சென்ற குணங்கள் இருமையும் அல்லது அவற்றினில் தீர்ந்து
ஒன்று அங்கு நின்ற பொருள் உள்ளது ஏலாது என உரைத்தான்.

#380
கேடு இலவாய குணத்தின் நிலையும் கெடும் குணத்தின்
நீடு அல என்பதும் நேர்ந்து இனி அப் பொருள் நேர்தல்_இல்லாய்
மூடலை ஆவதன் காரணம் என்னை முடி குணத்தின்
கூடலது ஆய குணிப் பொருள் கூறினர் யாவர் என்றாள்.

#381
குணங்கள் அல்லால் பொருள் வேறு இல்லை ஆயின் குறிப் பொருள் ஆம்
பிணங்கலவாகிப் பிறபிற ஆயின் பிற பொருளாம்
உணர்ந்தனதாம் இரு சொல்லினும் ஒன்று எனின் ஒன்று அவை ஆம்
நுணங்கிய கேள்வியினாய் ஒன்று உரை என நோக்கினனால்.

#382
நிலையாது எனவும் உயிர் இல்லை என்றும் நெறிமையினால்
தொலையாத் துயரொடு தூய்து_அன்மை என்று இன்ன தொக்கு உளவாக்
கலையா விழுப் பொருள் கந்தங்கள் ஐந்திற்கும் காட்டுதலான்
மலையாது இது நுங்கள் மார்க்கத்தொடு என்றனள் மாண்_இழையே.

#383
ஆரியசத்தை அலால் கந்தம் வேறு இல்லையேல் குறியாம்
ஆரியசத்தையும் கந்தமும் வேறு எனின் வேறு அவை ஆம்
பேர் இவை-தாம் இரண்டு ஒன்றினுக்கே எனின் ஒன்று அவை ஆம்
கூரிய சிந்தையினாய் ஒன்று சொல் என்று கூறினளே.

#384
சொல்லலன் யான் எனச் சொல்லுவையாயினும் சொல் மலைவாம்
சொல்லலன் என்ன வினவினும் என்னினும் சொல் இலையாம்
சொல்லுவன் அல்லன் ஒரு வகையாச் சொலின் அ வகையால்
சொல்லிய குற்றங்கள் துன்னும் என அது சொல்லினனே.

#385
தன்மையின் அன்மையும் தன் அல் பொருள்களின் உண்மையும் தம்
பன்மை உடைய அப் பண்புகள் எல்லாம் உடன் உரையும்
சொன்மை உணராதவர்கட்குத் தான் சொலற்பாடு இன்மையான்
புன்மை உடைய புறத்தீர் உரைக்கும் உரையும் என்றாள்.

#386
சேல் பொருள் போல் அரி சிந்திய கண்ணாய் சிதர்ந்து உரைக்கும்
நூல் பொருள் தாம் பரிணாமத் திரிவு என நோக்குதியேல்
பால் பொருள் தான் தயிர் ஆய பொழுதின்-கண் பாழ்த்திலதேல்
பால் பொருளே இன் தயிர் எனச் சொல்லப் பழுதது என்றான்.

#387
உருவப் பிழம்பு அப் பொருள் என்று உரைப்பன் இப் பால் தயிர் மோர்
பருவத்தின் ஆம் பரியாயப் பெயர் என்பன் பால் அழிந்து
தருவித்து உரைத்த தயிர் உருவாய் மும்மைத் தன்மையது ஆம்
திருவத்தது என் பொருள் ஆதலைத் தேர தெளி இது என்றாள்.

#388
பெற்றது தானும் கும்மாயத் திரிபு பயற்று இயல்பே
இற்று அது இது எனது இட்டம் என்பாய் இ இருமையினும்
தெற்றெனத் தீர்ந்து ஓர் பொருள் என்னை தேற்று இனித் தேற்றலையேல்
மற்று அது ஆமை மயிர் எனச் சொல்லுவன் மன்னும் என்றான்.

#389
கெட்ட திரட்சியும் தோன்றிய சாந்தும் பொருள் எனவும்
பட்டன அப் பொருள் பையைகளே என்னும் பான்மையினால்
விட்ட திரள்வினும் தோன்றிய சாந்தினும் வேற்றுமையாம்
நட்டமும் தோற்றமும் நாட்டேன் உருவிற்கு நானும் என்றாள்.

#390
திரியும் பொருள்கள் திரிந்து ஆம் பயறு கும்மாயமுமாய்
விரியும் என அது வேண்டுகின்றாய் அறக் கெட்டமைக்கேல்
கரியும் உடையன் பயறொடு நீரும் கலந்து பெய்தால்
எரியுறுகின்றது அன்றே இதுவோ ஒப்ப இற்றது என்றான்.

#391
பருமை உடைய பயற்றின் வழி ஒன்று பாவி உண்டாய்
அருமை உடைய அ நீருக்கும் ஆவி அன்றோ அது அன்றி
இருமையும் கெட்டு உடன் ஆயின் கும்மாயமும் இல் அற்கல் நும்
பெருமையினால் ஒன்று பெற்று ஒன்று பேறு_இன்மை பேதைமையே.

#392
கெடுவன தோன்றுவ நிற்பன-தாமும் குணம் என்றியேல்
கெடுவன தோன்றுவ நிற்பன-தாம் குணம் ஆயினக்கால்
கெடுவது தோற்றம் நிலையுதல்-தான் அப் பொருள் எனவும்
படுவஃதாக உரைப்பது யாதின் பயத்தது என்றான்.

#393
கூறியது எக் குணம் அக் குணம்-தான் அக் குணிப் பொருளே
தேறியது எக் குணி அக் குணி தீர்ந்து இல பல் குணமும்
வேறு என ஒன்று என இ வகை வேண்டுகின்றேற்கு அவை-தாம்
மாறு என்னும் கொள்ளா முடிபும் ஒழி நின் மயக்கம் என்றாள்.

#394
புற்கலம் ஆய முதற்பொருள் தத்தம் உள் புல்லினவாய்க்
கற்களும் நீரும் நிலத்தொடு காற்று அழல் என்று இனைய
பற்பல கூற்றால் பிறங்கிப் பரக்கும் திறம் என்னையோ
உற்று அவை ஒன்று ஒன்றின் உள் புகும் ஓத்து_உடையாய்க்கு எனலும்.

#395
யாத்தற்கு அமைந்த குணத்தின ஆய அணுப்பொருள்கள்
நீத்தற்கு அரியன நீத்த அருக்க நெறிமையினால்
ஏத்தற்கு இயைந்த இரண்டு அணு ஆதியின் இன்னணம் ஆம்
ஓத்தில் கிடந்த வகை இது கேள் என்று உரைத்தனளே.

#396
இரண்டு அணு ஆதியின் இன்னணம் ஏறும் நின் கந்தம் எனின்
திரண்டனவாய்த் தம்முள் சென்று உடன் தீண்டும் இடத்து அவை-தாம்
உருண்டன தாம் ஒன்றின் உள்ளும் புடையும் உடைமையினால்
தெருண்டனம் பாகுபாடு உற்றற்கும் என்றனன் தேரனுமே.

#397
ஓர் இடம் ஆய முதற்பொருட்கு உள்ளும் புடையும் சொல்லிப்
பேர்_இடம் ஆக்கிப் பிளப்பன் எனவும் பிதற்றுகின்றாய்
ஆர் இடம் ஆய அறிவிற்கும் இன்னணம் ஆதலினால்
நேர் இடத்தால் பன்மை எய்தி உருவு ஆம் நெறியும் என்றாள்.

#398
வண்டு ஆயும் கோதாய் வரை நெல்லியின் காயது அங்கை
உண்டாய போதே உறையூர் அகத்து இல்லை என்பாய்
கண்டாய் இ மெய்ம்மை பிறர் காண்டற்கு அரியது என்றான்
பெண் தானம் ஈயும் அறம் கொண்ட பெருமையினான்.

#399
வெய்து ஆய தீயும் குளிர் ஆகிய நீரும் விண் தோய்ந்து
ஐது ஆய காற்றும் அவை யாரும் அறிப என்றால்
பொய் ஆகும் என்னாய் அவை புத்த வசனம் என்பாய்
செய்தாய் முழுக் கூழ் அது போலச் சிதைக்க என்றாள்.

#400
கந்தின்-கண் காணாய் களி யானையை இல்லை என்பாய்
வந்து இங்கண் நின்ற பொழுது உண்மை மறுக்கலாமோ
தந்து இங்கு உரைத்த உரை-தானும் கெடுக என்றான்
வெந்து இங்கு வித்தின் அனைத்து ஆகிய வீடு கண்டான்.

#401
ஆண்டு இல்லை என்பன் அது உள்வழி உண்டும் என்பன்
ஈண்டு இன்மை உண்மை இவையாக இசைத்து நின்றேன்
வேண்டியனவே முடிப்பாய் விரி பொன் எயிலுள்
ஈண்டி இமையோர் தொழுவான் எம் இறையும் என்னாய்.

#402
கொல் ஏற்றின் கோடு குழக்கன்று அது ஆயின் அக்கால்
இல் ஆகும் என்றி இவை இங்ஙனம் உண்மை இன்மை
சொல்லேனும்_அல்லேன் அது சொல்லுவன் யானும் அன்னாய்
கொல் ஏறு அது ஆகாப் பொழுதே உடன் கூறுக என்றான்.

#403
ஏறு ஆய காலத்து எழின் அல்லது வத்துபேதம்
கூறார் எழாத குழக்கன்றினுக்கு இன்மை முன்னா
ஈறாகி நிற்கும் முதல் உண்மையிற்கு இன்மை எங்கும்
மாறு யாதும் இல்லை கலைக்கு உண்மையும் மற்றும் என்றாள்.

#404
கன்றும் முயலும் கழுதைப் பெயர் பெற்றனவும்
குன்றும் தலையுள் பெறப்பாடு எய்தல் கோடு உறுப்பா
என்றும் அவற்றுக்கு எழல் இல்லை நின் பேதம் என்றால்
சென்றும் சிலவின் சில இன்மையும் ஆகும் என்றான்.

#405
இல்லாத கோட்டை உளதாக எடுத்தும் என்று
சொல்லார்கள் பேதம் சொல வேண்டுவை ஆயின் அக்கால்
புல்லாது நில்லாப் பொருள்-தங்களுக்கு உண்மைக்கு இன்மை
கல்லாது நீயும் கழுதைக்கு அருள் செய்தி என்றாள்.

#406
இல்லை வலக்கை இடக்கை வகையால் அது என்றும்
சொல்லின் அதற்கும் அதுவே எனும் சூழ்ச்சி மிக்காய்
ஒல்லை இரண்டும் உளவாக உணர்ந்தனை நீ
நல்லை பெரிதும் என மொக்கலன் நக்கனனே.

#407
இக் கை வகையால் அது-தான் உளது ஆயின் அக்கால்
தொக்க இரண்டும் உடன் ஆதலின் தூய்து ஒரு பால்
பக்கம் அதுவும் படு பாழ் இனிக் காலும் அற்றாய்ச்
செக்கின் கணை போன்று இனிச் சென்று உருள் சேமம் என்றாள்.

#408
கை கால் வகையால் பெறப்பாடு இலை காலும் அற்றாய்
மெய்-தாம் ஒழிய அவை பாறு எய்தல் வேண்டுதலால்
கொய் தார் நறும் பூம் குழலாய் குழமண்ணர்களாச்
செய்தாய் உலகில் சிறு மானுயர்-தம்மை என்றான்.

#409
கால் கால் வகையால் உள கைகளும் கையின் அற்றாய்ப்
பாலாய் முடியும் அவை பண்டை இயல்பினாலே
ஏலாது இவை-தாம் உள எத்திறத்தானும் என்னில்
நால் ஆவது ஆன முடிவின் நாயொடு நண்டும் ஒத்தாய்..

#410
அல் என்று உரைத்த உரை-தானும் எம் ஆகமத்துள்
இல் என்றவாறு என்று இவை இங்ஙனம் வேண்டுகின்றாய்
சொல் அன்று நாயை நரி-தான் என்னச் சொல்லுகின்றான்
இல் என்றவாறோ நரி-தன்னையும் என்றனனே.

#411
நாய்-கொல் நரி-கொல் எனத் தோன்றும் உணர்வு நண்ணி
ஆய் சொல் இரண்டின் உணர்ந்து அல்லது அன்மை என்றாய்
நீ சொல் அறியாய் அறிவார் நெறி நேடுகில்லாய்
பேய் சொல்லுபவே பல சொல்லிப் பிதற்றல் என்றாள்.

#412
பேரும் உணர்வும் பொருள் இல்லதற்கு இல்லை என்றி
சார்வும் அகல்வும் தலைப்பெய்தலோடு உள்ளம் இன்மை
நேர் இங்கு இவையும் உணராமை இற்கு என்றனனாய்த்
தேரன் சிறிதே தெரி கோதையை நக்கனனே.

#413
ஆத்தன் உரைத்த பொருள்-தன்னை அ வாசகத்தால்
சாத்தன் பயின்றால் அறியாவிடும் தன்மை உண்டோ
ஈர்த்து இங்கு உரைத்த பல தம்முள் ஒன்று இன்னது என்னாய்
ஓத்தின் வகையால் பெயரோடு உணர்வு இன்மைக்கு என்றாள்

#414
ஒன்றின் இயற்கை ஒரு வான் பொருட்கு இல்லை என்றே
என்றும் உரைத்தி இரும்பு எய்திய வெம்மை அ நீர்
சென்றும் மறுகித் தெறு தீக் குணம் சேர்ந்தது அற்றேல்
குன்றும் பிறவோ இனி நீ கொண்ட கோளும் என்றான்.

#415
கொண்ட உடம்போடு உயிர் தான் உடன் கூடி நின்றால்
கண்டும் உணர்ந்தும் அவை ஆவது என் கல்வி_இல்லாய்
உண்டு அங்கண் நின்ற உயிர்க்கு ஆக உரைப்பது ஒக்கும்
பிண்டம் நிகழ்ச்சி பிழைப்பு ஆகும் நினக்கும் என்றாள்.

#416
மெச்சி இடத்தால் பிறிது_இன்மை விளம்புகின்றாய்
பிச்சை முதலாப் பெரிதா அறம் செய்தவன்-தான்
அச் செல் கதியுள் அமரன் எனப்பாடும் இன்றே
இச் செய்கை எல்லாம் இகழ்வாம் பிற என்றனனே.

#417
ஊனத்தை இன்றி வழங்கா உழல்கின்ற போழ்தும்
மானத்தின் நீங்கி வதம் காத்து வருந்தும் போழ்தும்
வானத்தது ஆய பொழுதும் மன் உயிர் அது என்றாள்
தானத்தின் உண்மை இது தத்துவமாக் கொள் என்றாள்.

#418
காலம் பிறிதில் பொருள் இல் எனக் காட்டுகின்றாய்
ஞாலம் அறியத் தவம்செய்தவன் நல் உயிர்-தான்
ஏலம் கொள் கோதாய் எதிர்காலத்தில் இன்மையாமேல்
சீலங்கள் காத்தல் வருத்தம் சிதைவு ஆக என்றான்.

#419
ஆற்ற வருந்தித் தவம்செய்தும் அரிய காத்தும்
நோற்றும் பெரிதும் நுணுகாநின்ற பொழுதினானும்
ஏற்றம் உடைய இமையான் எனப்பட்ட போழ்தும்
சாற்றின் உயிர் தன் பொழுதே உண்மை தங்கும் என்றாள்.

#420
நூல் தான் இரும்பாய் நிகழாமை நொடிதி ஆங்கே
பால்-தான் தயிர் ஆம் என நின்று பயிற்றுதியால்
மால்தான்_உடையார் உரை ஒக்கும் நின் மாற்றம் என்னாத்
தேறார் தெருண்டார் எனச் சொல்லினன் தேரனும்மே.

#421
தத்தம் நிமித்தம் தலைப்பெய்து தம் காரியம்மா
ஒத்த பொருள்கள் நிகழ்வு ஆக்கம் உரைத்து நின்றேன்
பித்தனின் ஒப்பப் பிறிதில் பிறிது ஆம் என்பனோ
வித்தின் வழியான் உரை நீயும் வெள்யானை என்றாள்.

#422
கூடா பொருள்கள் பிறிதின் குணத்து உண்மை என்பாய்
பாடாலப் புட்பத்தன ஆகிய பண்பு நாற்றம்
ஓடு ஆவது எய்திற்று என வையம் உரைக்கின்றது அஃதால்
நாடாது சொன்னாய் அதன் நன்மை ஒழிக என்றான்.

#423
போது உக்க வாசம் புது ஓட்டைப் பொருந்தினாலும்
மே தக்க நாற்றம் இது பூவினது என்ப மிக்கார்
தாது உக்க நின்றும் அவை போக்கும் ததாகதற்கு என்று
ஏதுக்கள் காட்டி முடித்தாள் இணை_இல்ல நல்லாள்.

#424
வீட்டிடம் என்று நின்னால் வேண்டவும் பட்டதன்னை
நாட்டுவன் அதுவும் நாய் இற்கு என்று நன்று என்றியாயின்
சூட்டு அடு நரகம்-தானும் சுடர்ந்த நல் சுவர்க்கம்-தானும்
பூட்டினம் உரைத்த அக்கால் போந்தது அங்கு என்னை என்றான்.

#425
கதியின வகைய ஆறும் கந்த பிண்டங்கள் சொன்னான்
பதி இன என்ன நின்றாய் பாக்கன் நாய் காட்டுதீயால்
விதியினின் வினை அட்டார்-தம் வீட்டிடம் இன்னது என்றால்
கது என்னை என்னச் சொன்னால் ஆகமம் அல்லது ஆமோ.

#426
பேர்த்து இவண் வாரல் இல்லாப் பிறவி ஆம் தானம் என்னின்
தீர்த்து இவண் வாரல்_இன்மை சேர்வு இடக்கு உண்மை ஆமோ
கூர்த்தல்_இல் வினையின் இன்மை கூறுவன் என்றியாயின்
ஆர்த்து உளன் அவனே ஆயின் நண்ணுமே வினையும் என்றான்.

#427
பிறப்பதை வீடும் என்னேன் அ இடம் பேர்ப்பு_இன்று என்னேன்
உறத்தகும் வினைகள்-தாமும் உண்மையால் ஒட்டும் என்னேன்
மறத்தல்_இல் யோகபாவ மாசுதாம் மீட்டும் என்பது
இறப்பவும் வேண்டுகின்றேற்கு எய்தல நின் சொல் என்றாள்.

#428
பிறக்கும் தன் ஞானத்தாலும் பின்னும் தன் உண்மையாலும்
புறப்பொருள் கொண்டு நின்று புல்லிய சிந்தையாலும்
சிறப்பு உடை வீடு இது என்று செப்பும் நீ தீ_வினையைத்
துறக்கும் ஆறு இல்லை நல்லாய் சொல்லு நீ வல்லது என்றான்.

#429
நன்றி_இல் காரணங்கள் நாட்டி நீ காட்டினவ்வும்
ஒன்றும் நான் ஒட்டல் செல்லேன் யோகொடு பாவம் நின்றால்
குன்றினில் கூர்ங்கை நட்டால் கூடும் நோய் யாதிற்கு உண்டோ
ஒன்றும் நீ உணரமாட்டாய் ஒழிக நின் உரையும் என்றாள்.

#430
கருவி-தான் ஒன்றும் இன்றிக் கடை_இலாப் பொருளை எல்லாம்
மருவிய ஞானம்-தன்னால் அறியும் எம் இறைவன் என்பாய்
கருவி-தான் அகத்தின் ஆய கடை_இலா ஞானம் அன்றோ
மருவியார்க்கு அமிர்தம் ஒப்பாய் மாற்றம் தா இதனுக்கு என்றான்.

#431
வினையும் அ வினையின் ஆய விகல ஞானங்கள்-தாமும்
இனையவே கருவி என்றால் இங்கு நின் உள்ளம் வையாய்
முனைவனாய் மூர்த்தி_அல்லான் மூடுமே மாசும் என்பாய்
கனை கடல் எல்லை காணும் காக்கை ஒத்தாய்-கொல் என்றாள்.

#432
கொண்ட தன் கரணம்-தானும் இல்லையேல் கூற்றும் இல்லை
மண்டினர் வினவுவார்க்கு மலைச் சிலம்பு_அனையன் என்றால்
உண்டு தன் கரணம்-தானும் உரைக்குநர்க்கு உறுவன் என்னில்
பண்டு செய் நல்_வினையைப் பகவனே என்றும் என்றான்.

#433
தனு எனும் கருவி-தன்னால் தன் அடைந்தார்கள் தன்னை
வினவின உணர்ந்து சொல்லும் வினையினுக்கு இன்னது உண்டோ
சினவினும் தேர ஒன்று செப்புவன் செல் கதீயுள்
கனவினும் நின்_அனாரைக் காணலன் ஆக என்றாள்.

#434
முறையினால் அறியலன்னேல் மூத்தலே இளமை சாக்காடு
உறையல ஒருவன் கண்ணே உடன் அவை ஆக ஒட்டி
இறைவனார் உணர்வு-தானும் இன்மை மேல் எழலும் வேண்டி
அறைதும் நாம் அன்னம்_அன்னாய் அன்னணம் ஆக என்றான்.

#435
சீல வான் தெய்வ யாக்கை திண்ணிதா எய்திநின்றார்
காலம் மூன்றானும் உய்த்துக் காட்டலும் காண்டும் அன்றோ
ஞாலம் மூன்றானும் மிக்க ஞானவான் ஆன நாதன்
போலும் என்று ஓர்தல் செல்லாய் போர்த்தனை அகமும் என்றாள்.

#436
நாள் எல்லாம் ஆகி நின்ற நல் பொருள்-தம்மை எல்லாம்
கோள் எல்லாம் தான் ஒருங்கே கொள்ளுமேல் ஈர்ம் குவள்ளைத்
தாள் எல்லாம் தான் ஒருங்கே தானும் நல்லான் ஓர் நல்ல
வாளினால் ஏறும் உண்டேல் வாய்க்கும் நின் உரையும் என்றான்.

#437
நீரும்நீர்-தோறும் ஒவ்வா நிலையிற்றே திங்கள் என்றும்
ஊரின் ஊர்-தோறும் ஒவ்வா ஒளியிற்றே ஞாயிறு என்றும்
யாரின் யார் கேட்டு அறீவார் அன்னனே அண்ணல் என்றார்
தேரன் நீ சொன்ன தன்னம் சேரல ஆக என்றாள்.

#438
அளவு_இலாப் பல் பொருள்கட்கு ஆகு பண்பு ஆகிநின்ற
உள எலாப் பொதுக் குணத்தான் ஒருங்கு கோளீயும் என்னில்
பிளவு எலாம் ஆகும் அன்றே பெற்றி-தாம் ஒத்தல் இல்லேல்
கொள எலா ஞானம்-தானும் கொள்ளுமாறு எவன்-கொல் என்றான்.

#439
ஒன்று அல்லாப் பல பொருளும் ஒத்து ஒவ்வாப் பெற்றியாலே
நின்று கோள் செய்யும் என்றால் நீடிய குற்றம் ஆகாது
என்றலால் இன்ன தன்மை இறைவனது அறிவு மெய்ம்மை
இன்று எலாம் கேட்டும் ஓராய் ஏட நீ என்று சொன்னாள்.

#440
எல்லை_இல் பொருள்கள்-தம்மை எல்லை_இல் அறிவினாலே
எல்லை இன்று அறியும் எங்கள் எல்லை_இல் அறிவன் என்பாய்
எல்லை_இல் பொருள்கள்-தம்மை எல்லை இன்று அறியின் நின்ற
எல்லை_இல் அறிவு-தானும் எங்ஙனம் எய்தும் என்றான்.

#441
துளக்கு இல்லாப் பல பொரூளும் தொக்கதன் தன்மை எல்லாம்
விளக்குமே ஞாயிறு ஒப்ப என்பது மேலும் சொன்னேற்கு
அளக்குமே அன்னம் அன்னாய் ஆத்தனது அறிவும் என்று என்று
இளக்கி நீ இன்னும் அஃதே சொல்லுதி ஏழை என்றாள்.

#442
ஓதல்_இல் உணர்வும் இன்றேல் ஊறு அவற்கு உண்டும் ஆகும்
ஓதல்_இல் உணர்வும் உண்டேல் ஒன்றுமே பலவும் வேண்டாம்
ஓதல்_இல் உணர் பொரூள்-தாம் உள்ளவும் இல்லவும் மேல்
ஏதமாம் இல் பொருள் மேல் நிகழ்ச்சி-தான் இறைவற்கு என்றான்.

#443
சென்ற அக் குணங்கள்-தாமும் செல்லும் அக் குணங்கள்-தாமும்
அன்றை அக் குணங்கள்-தாமும் அப் பொருள் தன்மையாலே
நின்றதன் ஞானம்-தன்னால் நிருமலன் உணரும் என்றால்
பொன்றின எதிர்வ என்றல் பொருள்களுக்கு இல்லை என்றாள்.

#444
பிறவி-தான் ஒன்றும் இல்லான் பெரியனே என்று நின்றான்
மறவி-தான் இல்லை யோனி மன்னும் நான்கு என்னும் இல்லான்
அறவியாய் உந்தம் நூலுள் ஆத்தன் ஆம் ஆயின் அக்கால்
புறவினில் புரளும் கல்லும் புண்ணியன் ஆக என்றான்.

#445
பிறத்தலே தலைமை ஆயின் பிள்ளைகள் அல்லது என்னை
அறக் கெடல்-தான் அது என்னில் அட்டக வித்து வெந்து ஆம்
புறப்படும் போர்வையாலேல் புண் தொழு நோயர் ஆகச்
சிறப்பு உடை அண்ணல்-தன்னைக் கல் எனச் சொல்லுவாய்க்கே.

#446
அடைவு_இலா யோனியானாய் யாரும் ஒப்பாரும் இன்றிக்
கடை_இலா ஞானம் எய்திக் கணங்கள் நான் மூன்றும் சூழ்ந்து
புடை எலாம் போற்றி ஏத்தப் பொன் எயில் பிண்டி மூன்று
குடையினான் இறைவன் என்றால் குற்றம் இங்கு என்னை என்றாள்.

#447
கோதியிட்டு உள்ளது எல்லாம் குண்டலகேசி என்பாள்
ஆதி சால் ஆவணத்துள் ஆர்கதர்-தம்மை வென்ற
வீதி ஈது என்று சொல்லி வீழ்ந்தனை நீயும் என்றாள்
நீதியால் சொல்லி வென்ற நீலமாகேசி நல்லாள்.

#448
பேதைகள் உரைப்பனவே சொல்லிப் பெரிது அலப்பாட்டினை நீ
பேதை மற்று இவன் பெரிது எனப்படும் கருத்து உடை மிகுதியினாய்
தாதையைத் தலைவனைத் தத்துவதரிசியைத் தவ நெறியின்
நீதியை அருளிய நிருமலன் தகை நினக்கு உரைப்பன் என்றாள்.

#449
பகை பசி பிணியொடு பரிவு இன பல கெட
முகை மலர் தளிரொடு முறி மரம் வெறிசெய
மிசை நிலம் விளைவு எய்த விழைவொடு மகிழ்வன
திசை-தொறும் இவை பிற சுகதன செலவே.

#450
குழுவன பிரிவன குறைவு இல நிலையின
எழுவன விழுவன இறுதி_இல் இயல்பின
வழுவல்_இல் பொருள்களை மலர் கையின் மணி என
முழுவதும் உணரும் எம் முனைவரன் அறிவே.

#451
நிறை பொறி உள அவை அறிதல்_இல் நெறிமைய
முறை பொருள் நிகழினும் முறைபடும் அறிவு_இலன்
மறை பொருள் உள அவன் அறிவினை மறையல
இறை பொருள் முழுவதும் அறி திறம் இதுவே.

#452
பிணி தரு பிறவிய மறு சுழி அறுவது ஒர்
துணிவு இது என நம துயர் கெடு முறைமையும்
அணி தரு சிவகதி அடைதலும் அருளுதல்
பணி தரு பரமனது அருள் படு வகையே.

#453
சொரிவன மலர் மழை துளிகளும் நறு விரை
புரிவன அமரர்கள் புகழ் தகு குணம் இவை
விரிவன துதி ஒலி விளைவது சிவகதி
எரிவன மணி இது எம் இறைவனது இடமே.

#454
அரசரும் அமரரும் அமர்வனர் வினவலின்
வரைவு_இல பிறர்களும் மன நிலை மகிழ்வு எய்த
உரை பல வகையினும் உள பொருள் உணர ஒர்
முரைசு என அதிரும் எம் முனைவரன் மொழியே.

#455
வினை இருள் அடுவன விரி கதிர் இயல்பொடு
கனை இருள் கடிவன கடு நவை அடுவன
மனை இருள் நெறி பெற மதி கெட அடைவன
இனைய மெய் இறையவன் இணை அடி இவையே.

#456
ஆத்தன் இவன் என்று அடிகள் அடி மிசைப்
பூத்-தனைத் தூவிப் பொருந்து துதிகளின்
ஏத்துநர் கண்டாய் இரு_வினையும் கெடப்
பாத்து_இல் சிவகதிப் பான்மையர் என்றாள்.

#457
ஏந்தல் திறங்கள் இவையேல் அமைந்தன
போந்த வகையால் பொருளும் பிழைப்பு_இல
ஈந்த இவற்றினின் வேற்றுமை வீட்டிற்கும்
ஆய்ந்த வகையால் அறிவி மற்று என்றான்.

#458
வித்து என்றும் வெந்தால் முளையலதாய் எண்மை
ஒத்து இனிது உண்டாம் உயிரும் பிறப்பு_இன்றிச்
சித்தி அகத்துச் சிதைவு_இல் எண் தன்மையின்
நித்தியம் ஆகி நிலை உளது என்னாய்.

#459
ஒக்கும் இது என உள்ளம் குளிர்ந்து இனி
மொக்கலன் சொல்லும் இ மோக்கத்தைப் பாழ்செய்த
தக்கிலது ஆகும் தலைவர் இயல்பு என
நக்கனன் ஆய்க்கு என்று நல்_நுதல் என்றான்.

#460
பண்டே எனக்கு இ மயக்கம் பயந்தவன்
கண்டார் மயங்கும் கபிலபுரம் என்பது
உண்டு ஆங்கு அதன் அகத்து ஓத்து உரைக்கின்றனன்
தண்டாது அவனொடு தாக்கு எனச் சொல்லி.

#461
சிறப்பு இனது என்பதைச் செப்பலும் தெற்றெனப்
பிறப்பு அறுத்து இன்பு எய்தும் பெற்றியின் மிக்க
அறப் புணை ஆகிய ஆய்_இழையாய் யான்
மறப்பிலன் என்று வலம்செய்து ஒழிந்தான்.

#462
அருளே உடையள் அறனே அறிவாள்
தெருளாதவரைத் தெருட்டல் அதுவே
பொருளா உடையாள் புலனே நிறைந்தாள்
இருள் தீர் சுடர் போல் எழுந்தாள் அவன் மேல்.

@5. புத்த வாதச் சருக்கம்

#463
அணி நாடு இவை-தாம் அறல் யாறு இவை-தாம்
பிணி நாடு இவை-தாம் பெரும் காடு இவை-தாம்
மணி மா மலை-தாம் எனவே வருவாள்
அணி ஆர் சுகதன் நகர் எய்தினளே.

#464
அறையும் கடலும் அரவக் குரலும்
பறையின் ஒலியும் படு கண்டிகையும்
சிறையின் மிகுமால் இது செம்படர்கள்
இறைவன் உறையும் இடமாம் எனலும்.

#465
மழை சேர் நகரம் மலை போன்றனவே
கழை சேர் கொடியும் கதலி வனமே
விழை தாரவரும் விரி கோதையரும்
முழை வாழ் புலியே மயிலே மொழியின்.

#466
நெடு வெண் திரை மேல் நிமிரும் திமிலும்
கடு வெம் செலவின் உலவும் கலனும்
படு வண்டு அறையும் பொழிலும் எழில் ஆர்
மடுவும் திடரும் மணல் வார் புறவும்

#467
கயல் மீன் இரியக் கழுநீர் விரியும்
வயல் மாண்பு உடைய வளமைத்து எனவும்
முயல் மீன் எறியும் முறியும் கறியாது
அயல் மேய் உறையாது அணியிற்று எனவும்.

#468
கழுகின் இனமும் கழுதின் இனமும்
முழுதும் அறுவை பல மூடினரும்
கொழு தின் நிணனும் பிணனும் குலவி
இழுது என் எலும்பு ஆர் இடுகாடு எனவும்.

#469
சாதியே மிக்க தடுமாற்ற வெம் துயரம்
ஓதியே வைத்தார் அ ஓத்து எலாம் மீக் கிடந்த
வீதியே காணலாம் என்றாளால் நின்றாரும்
போதியார் ஈண்டைப் புலால் பழியார் என்றலும்.

#470
அங்காடிப் பண்ட ஊன் தின்ன அறம்_உரைத்தார்க்கு
இங்கு ஆடி வாழ்வனவும் ஊனாய் வந்து ஈண்டியவால்
கொங்கு ஆடத் தேன் அறையும் கொய் மருதம் பூ அணிந்த
பொங்கு ஆடை போர்த்தார்க்குப் பொல்லாதே என்னீரோ.

#471
விலை படைத்தார் ஊன் வேண்ட அ விலை-தான் வேண்டி
வலை படைத்தார்க்கு எம் உயிரை வைக்கின்றாம் இன்ன
கொலை படைத்தான் ஓ கொடியன் என்பனவே போலத்
தலை எடுத்து வாய் திறப்பதாம் இவை ஓ காணீர்.

#472
தன் தாரம் ஈந்தான் தனக்கு உறுதியாவதனை
ஒன்றானும் வேண்டான் பிறர்க்கே உழந்தான் ஊன்
தின்றானும் தீ_வினையைச் சேரும் எனச் சொன்னால்
பொன்றாவாய்ப் பல் விலங்கும் பூமி மேல் வாழாவோ.

#473
உரிதா உணர்ந்தான் ஒன்று ஓராது உரையான்
பரிவே இதுவும் தன் பாலரோடு எல்லாம்
எரி தோய் நரகம் பாழ் ஏற்றுவானே ஆம்
பெரிதாம் அளியன் பெரும் தகையனே காண்.

#474
கொடைக்கு ஒட்டி விற்பானும் கொள்வானும் அன்றி
இடைச் செட்டினால் பொருளை எய்துவான் போல
முடைக்கு ஒட்டி முத்து உரைத்து மூடிக்கொண்டு ஏகும்
குடைச் சிட்டன் ஆர் உயிர்க்கு ஓர் கூற்றமே கண்டீர்.

#475
ஆடுவார் காண்பார் அவர் அருகே தான் சென்று
தோடு வார்ந்தால் ஒப்பச் சொல் விரிப்பான் போல் பாவம்
கூடுவார் கூடாதார் கொன்றார் தின்றார் என்னும்
சேடனார்க் காண்டும் நாம் என்று தான் சென்றாளே.

#476
அணி செய் கோழ் அரை அரை நிழல் அழகனைப் பொருந்தி
மணிகள்-தாம் பல கதிர் விடு மலர் உடை மணை மேல்
துணிவு தோற்றினை எனச் சிலர் துதியொடு தொழுது
பணிய யாதும் ஓர் பரிவு_இலன் படம் புதைத்து இருந்தான்.

#477
ஆத்தனே எனத் தெளிந்து அவண் அமர்ந்திருந்தவர்க்குச்
சூத்திரம் இது வினையமும் இது இது பிறிது ஆம்
சாத்திரம் இவை மூன்று என வல் தவத் தோன்றல்
பாத்து உரைக்கும் தன் பதப் பொருள் பல வகைப்படவே.

#478
கந்தம் ஐந்து இவை கணிகத்த ஆம் எனக் கரைந்தும்
முந்தி நாடின் ஓர் உணர வல்லது இல்லை என்று உரைத்தும்
புந்தியால் அங்கு ஓர் புற்கலன் உளன் எனப் புணர்த்தும்
அந்திலால் சொலாப் பாட்டினோடு யாதும் இல் எனவும்.

#479
தத்துவம் இவை-தாம் எனத் தமர்களுக்கு உரைக்கும்
புத்தனார்-தம்மை புயல் இரும் கூந்தலி பொருந்திப்
பித்தர் போல் பல பிதற்றினீர் பிதற்றிய இவை-தாம்
எத்திறத்தினும் இசைவு_இன்மை இசைக்குவன் எனவே

#480
ஓதினீர் சொன்ன கந்தம் ஐந்து உள எனின் உருவே
வேதனையொடு குறி செய்கை இல என விரிப்பும்
போதியால் அங்கு ஓர் புற்கலன் உளன் எனப் புணர்ப்பும்
யாதும் இன்மையோடு அவாச்சியம் அறும் பிற எனவே.

#481
ஐந்தில் யான் சொன்ன பலகளும் அமைவு_இல எனினும்
கந்தம் உண்மைக்-கண் கருத்து உளதாம் பிற அதனால்
சிந்தமாயவும் உள எனத் தெளி இனி எனலும்
நந்தனார்க்கு அறம் உரைத்திர் நீரோ என நக்காள்.

#482
இட்ட நீ பல உரைத்தனை இவற்றுள் ஒன்று ஒழிய
நட்டம் ஆயினும் நன்மையை நின்-வயின் தருவோய்
குட்டமே முழு மெய்யினும் எழுந்தவன் குடுமி
தொட்டு யான் எனினும் தூயனோ அதும் ஆமோ.

#483
நல்லவே என நாட்டிய கந்தம் இ ஐந்தும்
இல்லவே எனத் தெருட்டுவன் எடுத்து உரை எனத் தான்
சொல்லவே துவர் ஆடைகள் மூடிய சேடன்
மெல்லவே இவை கேள் என விரித்தவன் உரைக்கும்.

#484
உருவே திரி வேதனை ஆறு உணர்வும்
மருவாதன மாண் குறி அத்துணை செய்
இரு வேறு அவை செய்கை இருபதுமாம்
திருவே இவை எம் பொருள் தேர் எனவும்.

#485
முறை செப்பிய ஐந்தினுள் முன்னை உரு
வரை_இல் பல அட்டகம் உள்ளுறுத்த
இறைபட்டன எட்டு என ஒட்டின கேள்
நறையில் பொலி கோதை நறு_நுதலே.

#486
நிலம் நீர் எரி காற்றோடு உரு இரதம்
நலம் ஆகிய நாற்றமொடு ஊறு இவை-தாம்
இலவே அவை எட்டினும் விட்ட திறம்
சொலவாம் உடன் கேட்டொடு தோற்றமும் ஆம்.

#487
வலிது ஆம் நிலம் ஐயது நீர் வெய்து தீக்
கலியே தரு காற்று இயக்கம் கருமப்
பொலிவேல் பொறை அயர்த்தல் புலர்த்து உளர்த்தல்
மலி பூதங்கள் நான்கின் மாண்பின்னவையே.

#488
இனி வேதனையாவன இன்பமொடு
துனிவே தரு துன்பமும் ஆம் இடையும்
நனி தாம் நல தீ வினை அன்மையின் ஆம்
பனி வேய் இணை பன்னிய தோள் மடவாய்.

#489
அறிவு ஆவன-தாம் இனி யா எனின் ஐம்_
பொறியோடு மனம் இவை புல்லினவேல்
குறி-தாம் இவை ஆறினும் கூறுவது என்
நெறி ஆம் இவை நீலம் நிகர்த்த கணாய்.

#490
குயலாகுயலம் எனக் கூறும் வினைப்
பயனால் பல பாகு எனப்பட்டு அவை-தாம்
மயல் ஆம் மனமே வசி காயத்தின் ஆம்
அயலார் இவை-தாம் இனி யார் அறிவார்.

#491
கடன் ஆகிய கந்தம் இ ஐந்துகளும்
உடனே அவை தோன்றி ஒரு கணத்துள்
கெடுமே அவை கேட்டினும் வாள் கண் நல்லாய்
சுடர் மேய சுடர் நுதி போன்ம் எனவும்.

#492
கவை ஒப்பன கை_விரல் ஐந்துகளும்
இவை இப்படிக் கைப்பிடி என்றது போல்
அவை அப்படிக் கந்தங்கள் ஐந்துகளும்
நவையைப்படு நல் உயிராம் எனவும்.

#493
அவை-தாம் நிலையா துயராம் அசுவம்
நவை ஆர் உயிர் நாட்டில் அங்கு ஆட்டம் இலை
இவை நான்மை என் வாய்மை இவ்வாறு உணர்வார்
எவையே செய்தும் எய்துப வீடும் என்றான்.

#494
பல் இயல்பு ஆகிப் பரந்த ஐம்_கந்தமும் கந்தங்கள்-தாம்
புல்லிய ஒற்றுமையில் குறி ஆகிய பொய் உயிரும்
சொல்லிய கேட்டவள் வேட்டக் குரம்பை சுடுபவர் போல்
அல்லி அம் கோதை நின் காட்சி அழித்திடுவேன் எனத்-தான்.

#495
பிண்டம் பிரிவு இலவே எனச் சொல்லுதலால் அவற்றுக்கு
உண்டு அங்கு ஒரு குணி ஆங்கு அவை-தாம் குணம் ஆகும் அன்றேல்
விண்டு அங்கு அவையவை வேறு உளது ஆதலும் வேண்டும் அன்றோ
பண்டு அங்கு நீ சொன்ன முட்டியில் பஞ்சாங்குலிகளும் போல்.

#496
பூதங்கள் நான்கும் புகுந்தே தெருட்டலுற்றாய் அவற்றுக்கு
ஏதம்_இல் தன்மை கருமம் இரண்டா இயைந்தவை-தாம்
பேதமும் ஆம் என்ற பெற்றியினால் பொருள் இற்று என்றலால்
சாதமாம் உயிர் தன்மையில் தேற்றத் தவறு எவனோ

#497
நின் சொல்லப்பட்ட வலிப்பும் தரிப்பும் நிலத்தினவேல்
என் சொல்லப்பட்ட உணர்வொடு காட்சி உயிரன ஆம்
முன் சொல்லப்பட்ட நிலம்-தாம் முடியின் முடிவு உளது ஆம்
பின் சொல்லப்பட்ட உயிரும் பெரிய பிரச்சையினாய்.

#498
வற்பம் அல்லால் நிலம் இல் எனச் சொல்லுவன் ஆங்கு அது போல்
பொற்பம் இலா உயிர்-தானும் இல் புத்தி அலால் எனலும்
வற்பம் அலால் நிலம் மன்னும் தரிக்கும் என்பாய் அல்லையோ
கற்பம் எல்லாம் பிறர்க்கே நின்று உழந்த கருணையினாய்.

#499
உரிய வலிமை அல்லால் நிலம் ஓரலன் என்று இருந்தால்
பெரிய நிலத்தை அறிவிக்கும் பெற்றி இல்லாய் பெரிதும்
அரிய உயிரை அறிவுறக் காட்டு என்றி எப்பொருளும்
தெரியக் குணமுகத்தால் அன்றி என்றும் தெருட்டு உளதோ.

#500
விருத்த நிலைமையும் வேண்டலம் யாம் என வேண்டுகின்றீர்
அருத்தம் எனக் கொண்ட அட்டகம் யாவையும் விட்டிலவால்
திருத்தம்_இல் தீ-வயின் நீர் உறை திட்ட விரோதம் அன்றோ
பொருத்தம் அலாதனவே சொல்லும் புத்த நின் புத்தி இதோ.

#501
தன்மை கருமம் அவற்றனவே என்றல்-தான் என்னை வேறு
இன்மை முடியின் என் இட்டம் உரைப்பினும் கெட்டது என்னோ
மன்னும் அ நான்கும் மறுதலை தத்தமுள் ஆதலினால்
என்னும் இயல்பும் பயனும் அழிக்கும் என்பேன் அல்லனோ

#502
ஊர் இது காடு இது-தான் எனல் என்னை ஒருங்கு உளவேல்
நீர் இது தீ இது-தான் எனல் ஆமோ நிகழ்வுடனே
யார் இவை கேட்டு அறிவார் அவை அட்டகம் என்னின் அலால்
பேர் இதுவே எனச் சொல்லுதல்-தானும் பிழைக்கும்-கொலோ.

#503
தொக்கவையாய் உடனே அவை நிற்பினும் ஆங்கு அவற்றுள்
மிக்கதனால் பெயர் சொல்லுவன் யான் என்று வேண்டுதியேல்
புக்கனதாம் பொறியால் நின் புலம் அன்றிப் பொய் எனத் தான்
நக்கனர் சாக எனும் நீ உரைக்கும் நயங்கள் என்றாள்.

#504
உருவு உடை அட்டகம் அன்றியும் ஐந்தினுள் பட்ட எல்லாம்
அருவொடு கூடியும் தீண்டியும் ஆக்கும் திறம் அரிதால்
மருவு_உடையார்களை மாயங்கள் சொல்லி மருட்டி உண்ணும்
திரு_உடையாய் அவகாயத்துத் தேரை அடித் தெருட்டாய்.

#505
திரி வேதனைகளும் தீரா நுமக்கு உளவாதல் அன்றே
கரி வேதனையவர் காமுறு காமம் கடிந்தது-தான்
பரிவே பெரிது_உடையீர் முன் உரைத்த பல் செய்கைகளின்
விரிவே அவை ஓரின் வேதனை வேறு இல்லையாம் பிறவே.

#506
உணர்ச்சியினால் செய்கை ஆக்கி அச் செய்கையினால் உழப்பு ஆம்
உணர்ச்சியின் ஆங்கு ஓர் பொருள் சுவடு உள்ளது போல்கின்றதால்
உணர்ச்சியொடு அல்லன ஒன்று ஒன்றில் நோக்கு இலவாம் எனினும்
இணர்ச்சி இழந்து பிறபிற ஆகிப் பெறல் இலவே

#507
ஆறினின் ஒன்றே நிகழும் பொழுதின் அல்லா உணர்வு
தேறின ஆறு அவற்று உண்மை எனக்குத் தெருட்டல் நலிந்து
ஆறினவோ இல்ல தாழ்ச்சியினால் உளதாம் எனின் நீ
கூறியவாற்றால் உயிர் உண்மை கூறலும் குற்றம் என்னோ.

#508
ஓர் உணர்வு உள்ள பொழுதின் ஒழிந்த உணர்வுகள்-தம்
பேரும் உணரப்படாமை பெற்றாம் என்னும் பேச்சும் உண்டால்
ஈர் உணர்வு இல்லை இரு_மூன்று ஒருங்கு உள என்று உரைக்கும்
ஓர் உணர்வே உடையீர் சொற்கள் ஒன்று ஒன்று அழிப்பனவே.

#509
ஒன்றே உணர்வாய் நிகழற்குக் காரணம் அ உணர்வாய்
நின்றே அறிவான் தனிமையினால் எனத் தேர் இனி நீ
அன்றே எனின் அவை ஆறும் தம் உண்மையின் வேறு என்னலால்
சென்றே புலந்தலைப் பெய்தல் அறிவு உடன் சீர்க்கும் அன்றே.

#510
இச்சை இல்லாமையின் எல்லாம் ஒருங்கு உணரா எனினும்
இச்சை எல்லாத்திற்கும் வேறேல் ஒருங்குடன் எய்தும் அன்றி
இச்சை எல்லாத்திற்கும் ஒன்றேல் குணிப் பொருள் இச்சை என்றாய்
தச்சன் அஞ்சிச் சார் அகழ் கள்வன் என்கின்ற தன்மையினாய்.

#511
பிறந்து பிறந்து நின் இச்சை கெடல் அன்றிப் பின் ஒன்றின் மேல்
சிறந்து சிறந்து ஆங்கு உணர்ச்சி விரியும் திறம் அரிதால்
கறந்த கறந்த கலம் சுவைத்திட்டால் கறைக் கலங்கள்
நிறைந்து நிறைந்து அவை பால் தயிர் மோர் எனத்-தான் என்னையோ.

#512
எல்லா உணர்ச்சியும் இச்சை வழியால் எழும் எனலால்
இல்லாம் பிற நுனது இச்சையும் இச்சை முன் இன்மையினால்
வல்லாய் இதற்கும் உண்டாயின் வரம்பு_இன்மையாம் அதனால்
சொல்லா விடும் திறம் என்னோ விரிவிற்குச் சூனியமே.

#513
வெளிப்பட்டு நின்றது ஒன்று அன்றி ஒழிந்த விஞ்ஞானங்கள் தாம்
குளித்தன-தாம் கொள்ளப்பாடு_இன்மையால் இன்மை கூறி நின்றேற்கு
அளித்தவை-தங்களுக்கு ஆலயம் ஆலயம் ஆம் என நீ
ஒளித்தனை கொள்ளலுற்றாய் உயிர்-தன்னை ஓர் பேர் உரைத்தே.

#514
இருள் உடை மாலைக்கண் தோன்றாது எனக்கு என நண்பகலே
பொருள்_உடையார் பொருள் கொள்வான் அகழுநன் போன்று இலையோ
அருள்_உடையார் சொல்லும் ஆர்_உயிர் ஆலயம் என்று இருக்கும்
மருள்_உடையாய் நின் மாண்பு அழிந்து எற்றான் மயங்கினையோ.

#515
மூக்கொடு நா மெய் இ மூன்றும் தம் மூன்று புலன்களையும்
தாக்கிய போழ்தே அறிதலும் தத்துவம் ஆம் என்றியால்
ஆக்கிய மூன்றில் அறிவும் அருவால் அவை ஒருவாப்
பாக்கியம் செய்தாய் பரிசங்கள் கொள்ளும் பரிசு என்னையோ.

#516
உற்றிலவாய் ஒலி கொள்ளும் செவி என ஓதுகின்றாய்
கற்றிலை மெய்ம்மை நீ கட்புலம்-தன்னோடு ஓர் காலத்தினால்
பெற்றிலம் நாம் அதன் பின் கொளல்-தானும் பெரும் தவத்தாய்
மற்று இது தான் தன் பொறி உறுகாறும் வரலின் அன்றே.

#517
வாய்த்துரை ஈது என வாமன் இது சொல்லும் வந்து உறுமேல்
சேய்த்து எனக் கோடலும் சேராது ஒலி செவிக்கண்ணது எனின்
ஈத்தனதாம் அலவாயினும் நீ சொல்லும் உற்று அறிவின்
தீத்தனைப் போலவும் தேறு என்று அவனைத் தெருட்டினளே.

#518
பெற்ற எழுத்தேல் பிரிவின்-கண் ஆறாம் பெயர் நுனது
முற்ற உணர்ந்து முடித்து உரை என்னை முதல் எழுத்துப்
பற்றின சித்தம் பல உணர்ந்தே அவை பாழ்படலால்
கற்று இனி எல்லாக் கணக்கும் கலந்து உரை காண்பு என்னையோ.

#519
ஓதிய கந்தங்கள் ஒற்றுமையால் உயிர் என்றது போல்
போதியனாய் நின்னைப் புத்தன் என்றால் அது பொய் பிறவோ
ஆதியின் ஆம் புத்தி ஆவது அல்லால் அந்தத்து அன் களையா
நீதியினால் சொல்லி நின்று நின் பேரும் உணர்வு_இலையே.

#520
அன்றியும் நின் சொல் அறி பொருள்-தான் இல ஆதலினால்
ஒன்றி உரைத்த உனக்கும் எனைத்தும் உணர்வு அருமை
என்று இனி யாமும் தெளிந்தோம் இதனால் என உரைத்தாள்
வென்றி உடையன அல்லது சொல்லா விரி_குழலே.

#521
ஆறு குறி ஆவனவும் ஆய புலம்-தாமும்
கூறு குறி ஆறும் அவை கொள்ளும் வகை-தாமும்
மாறு குறி மாறிக் குறி என்று மயக்காதே
வேறு குறி-தாம் உணர்வின் விள்ளுவல் இனிக் கேள்.

#522
கண்ணின் குறி மூக்கின் குறி மெய்யின் குறி செவியின்
நண்ணும் குறி நாவின் குறி நாடின் மனத்தோடு
எண்ணும் குறி ஆவன இ ஆறும் எனக் கொள் நீ
பண்ணின் குறி ஏசும் மொழிப் பாவை எனச் சொல்லும்.

#523
அறிவு குறி என்பனவின் ஆய புலம் ஒன்றேல்
அறிவு குறி என்பனவும் ஆகும் அவை ஒன்றே
பிறிது கொளு புலம் உள்ளது ஆகும் எனில் பேதம்
சிறிது நெறி காட்டின் அது செல்லும் எனச் சொல்லும்.

#524
உண்மை குறி கொள்ளும் உணர்வின் புலம் அது எய்தாது
எண்ணின் உணர்வோடு குறி இ வகைய என்னில்
உண்மை உணர்வின் புலமோடு ஒன்று எனில் அது ஒன்றே
நண்ணல் இலவேல் உணர்வின் ஆய புலன் இன்றே.

#525
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றி உடன் கொள்க
ஒருங்கு புலம் தோன்றி அவை ஒத்த கெடல் ஆனால்
ஒருங்கு குறியோடு உணர்வு தோன்றல் இல ஆமே
ஒருங்கு புலம் தோன்றுதலின் ஒன்றும் உணர்வு இல்லை.

#526
உள்ளம் சொல் உடம்பு என்று இவை மூன்றினால்
கொள்ளும் நும் குசலாகுசலங்கள்-தாம்
எள்ளின் நேரும் இவை இன்மை காட்டுவேன்
உள்ளக்கு ஆக உரைத்த அ மூன்றினுள்.

#527
வேண்டலே என்றும் வெஃகுதல் ஆயினால்
ஈண்டி நின்ற நின் இத் தொடைப்பாடு எலாம்
தீண்டலன் எனத் தீண்டிய வந்தவோ
ஈண்டையே நிற்ப இஃதும் அறிகிலை.

#528
நன்மை வெஃகுதல் நன்று எனச் சொல்லலும்
அன்மை வெஃகுதல் அன்று எனக் கூறலும்
இன்மையால் வெஃகல் என்றதும் தீமையின்
இன்மை ஆய நெறி மொழி நீ இனி.

#529
தீய ஆய வெகுளியை ஒப்பன
மாய மானம் உலோபம் மனத்தன
காய்வு செய்திலை கண்டு நின் கள்ளமே
நீ அவையவை நேர்தலின் ஆம் பிற.

#530
காட்சி நல்லன காண்டல் அனைத்தினும்
மாட்சி ஆம் எனின் மன்னும் அஃது ஒட்டுவேன்
வேட்கையால் இது நன்று என வேண்டினும்
ஆட்சி ஒட்டி அழித்தனன் அல்லனோ.

#531
பொய் குறள்ளை கடும் சொல் பயன்_இல் சொல்
நைதல்_இல்லன நான்கு இவை நாவினாம்
செய்கை தீயனவாம் எனச் செப்பினீர்
ஐய நன்மை என்றீர் அவற்றுப் புடை.

#532
மண்டை கெண்டிகை மாடம் மடாமனை
கொண்டை குண்டிகை கூறை குடம் குடை
உண்டி கட்டில் உடம்பு உயிர் ஆதிய
பிண்டம் ஆய பிறபிற யாவையும்.

#533
கூட்டமான குறி எனின் அலதை
பூட்டல் அங்கு ஓர் பொருள்_இன்மை வேண்டியும்
மீட்டு மீட்டு இவை சொல்லின மெய்யுரை
நாட்டும் ஆறு என்-கொலோ விளி நாச நீ.

#534
நிலம் பொய் நீர் பொய் நெடு நகர்-தாமும் பொய்
கலம் பொய் காற்றொடு தீயும் பொய் காடும் பொய்
குலம் பொய்யே எனக் கூறும் செம் கூறையாய்
சலம் பொய் அன்று இது ஒன்றே நுங்கள் சத்தையே.

#535
குற்றம் என்ற குறளையே ஒப்பன
மற்றும் சால உள பிற மாண்பு_இல
ஒற்றைப் பெண் உரையாடுதல் போகங்கள்
கற்றலே கடும் சொல் இன்ன காத்தலும்.

#536
பையச் சொல்லுதல் நல்_வினைப்பால் என்றால்
எய்யக் குற்ற எறியப் புணர்க்கும் கால்
வையத்து யாவரும் மந்திரமாம் அவை
செய்யச் சொல்லுநர் செவ்வியர் ஆபவோ.

#537
கடுக்கத்தாம் அடிகள் எனக் காய்ஞர் யார்
ஒடுக்கச் சாம்பி வைதால் உவப்பார் இல்லை
கொடுக்க என்றல் குசலம் அன்று என்பதோ
படுக்கலுற்ற பதக நின் பாடமே.

#538
பாவம் ஆம் பயன்_இல்லன சொல்லலேல்
பூவமே பொருள் கைக்கொண்டு புற்கலர்
சாவச் சொல்லுவ தத்துவமாம் பிற
ஏவல் நன்று என்றி ஒப்ப ஒன்று இல்லையேல்.

#539
காயத்தால் கொலை காமம் களவு என
நீ அத்தா சொன்ன நேரும் திறம் என்னோ
மாயத்தால் மனம் இன்றி அவையவை
தேயத்து யார் உளர் செய்பவர் என்பவே.

#540
வழி முள் ஊன்றல் மனை சுடல் மாந்தரைக்
குழியுள் உந்துதல் கோயில் கலம்செய்தல்
ஒழிவு_இல் யானை முன் ஓட்டலோடு இன்னவும்
பழியும் பாவமும் ஆக்குவ அல்லவோ.

#541
ஒன்றி நின்ற உயிரை உயிர் இது
என்று சிந்தித்து அழிப்பன் என எண்ணி
நன்றி_இல் தொழில் தோற்ற நவையினால்
கொன்றதே கொலை என்று ஐந்தில் கூறினாய்.

#542
தேவனை இவன் தேவன் என எண்ணிப்
பாவனையில் பணியும் மனத்தனாய்த்
தூவென மும்மையே தோற்றித் தொழான் அங்கு ஓர்
தாவனை தொழுதான் தவறு எய்துமோ.

#543
ஒத்தவன்-தனை உறு பகையே எனக்
குத்தினாற்கும் கொலை வினை இல் எனப்
புத்தனீர் உரைத்தீர் அங்கு ஓர் புற்கலன்
செத்தவாறு அது சிந்திக்கற்பாலதே.

#544
கொன்ற பாவம் உண்டாயின் குறள்-கண்ணும்
ஒன்றுமே என்று உரைப்பன் ஒப்பார் யார்
பொன்றினும் புத்தரே நீவிர் சொல்லின
சென்று சேர்தலைச் சித்தம் அது இன்மையால்.

#545
பட்டிலன் பகையால் எய்து பாவம் அங்கு
ஒட்டி நீ அ உயிர்க் கொலையால் என்னில்
துட்டனைத் தொழுதோன் துறந்தான் எனக்
கெட்டனன் இது கேட்க வினை நிலை.

#546
ஆய்ந்த ஐந்தினும் ஆம் வினை ஆர்ப்பு எனின்
வீய்ந்தது இன்மையின் வெய்ய அவீசி-தான்
காந்திபாலி இரங்கக் கலகனைப்
போழ்ந்து கோடல் பொருந்தலது ஒக்குமே.

#547
கொல்வன் என்றவன் கூர்ம் படை குன்றினும்
செல்வன் என்று அயலார் மனைச் சேரினும்
கல்லுவானொடு எல்லார்க்கும் கரு_வினை
சொல்லுவானோடு உலகமும் சுற்றமே.

#548
துப்பினால் வினை சொல்லலன் யான் என்று
வப்பின் ஆர் முலை காய்வது வாமன் நீ
இப் பலாரிடை என்னை இது என்பதோ
செப்பினாலும் சிதைகின்றது இல்லையால்.

#549
பண்டு தான் வைத்து அப் பண்டத்தை ஒப்பது ஒன்று
உண்டதாயின் அது அதுவே எனக்
கொண்டுபோகினும் கொள்ளினும் குற்றம் இல்
கண்ட போழ்தும் களவு அன்று அது என்றலால்.

#550
பஞ்சி மெல் அடி நோவப் பகல் நடந்து
அம்_சில்_ஓதியும் அல்க அவள் எனத்
துஞ்சும் இல் உடையாளைச் சுமந்து போய்
வஞ்சியான் கொள்க வாழ்க புத்தன் என.

#551
கந்தம் ஆவன காக தந்தம் எனப்
பந்தன் இன்மையின் பாழ்செய்திட்டேன் இனி
அந்தில் நீ சொன்ன ஆரியசத்தையும்
சிந்தையும் சிதைப்பேன் சில சொல்லினால்.

#552
பிண்டம் ஒன்று ஆயினும் பிரிய நோக்கின் அது
கொண்டு நின்றாம் பிற கூறின் ஐந்தே எனக்
கண்ட நாம் மெய்ம்மையும் காட்டுவாய் ஈங்கு எனின்
உண்டு தாம் ஆகுலம் உணர்வு-தான் கூறுவேம்.

#553
முழுதும் துன்பம் என மொழியின் அஃது ஆகிய
பொழுதினான் அல்லவும் புல்லுமாம் ஆதலால்
பழுது-தான் அ உரை பன்மை-தான் இன்மையில்
இழுதையால் நான்கு உள என்று சொன்னாய் என.

#554
உழப்பு மூன்றும் உடன் ஒக்க நோக்கின் அது
வழுக்கு இல்லா வாய்மையேல் வாய்மை சொல்லி இனி
இழுக்கினாய் நீ பிறர்க்கு இன்பம் ஈந்தேன் எனல்
பழுக்களே காய்வது பண்டும் உண்டே பிற.

#555
துக்கமே ஆயினால் தொழிலும் ஒன்றாய்ப் பயம்
ஒக்கவே வேண்டுமால் உயர்வு இலாக் கீழ்க் கதி
புக்கு வீழ்ந்தார் பிறர் பொங்கி நின்றார் எமர்
மிக்கதே என் நெறி என்று வேண்டல் எவன்.

#556
உறுதி கூறல் ஒழி ஒழுக்கம் காத்தல் ஒழி
இறுதியில் துன்பமே இன்பம் இல் ஆயினால்
சிறிதும் நீ தீப் புகாய் சேர்வது என்னை நிழல்
இறுதி இல்லாத் துயர் இன்ன செய்யாய் இனி.

#557
தூய்மை இல்லை முழுவதும் என்பதை
வாயும் நீ சொல்லும் வாய்மையது ஆயினால்
தாமம் சாந்தம் புனைபவர்-தாம் எலாம்
ஏம நல் நெறி கண்டிலரே பிற.

#558
ஓதும் ஓத்தும் ஒழுக்கும் நின் உண்டியும்
கோது_இல் தூய்மைய ஆம் எனக் கூறியும்
யாதும் நீ அசுவாம் எனச் சொல்லுவாய்
நாதன் நீ பிற நன்கு அறிந்தாய் அவை.

#559
நீ இனே சொன்ன மெய்ம்மையை நோக்கலார்
தூய்மை யாம் பிறர் தூய்மை_இலர் என்று
காய்பவே கவி_மண்டைகள் என்றனள்
வேயின் நன்மை விலக்கிய தோளினாள்.

#560
சென்று சென்று உன செம் நெறி கண்டவர்
பின்றைத் தூய்மை பெறுவதும் இல்லையேல்
இன்றும் இன்றும் இயல்வு அதுவாக் கொள்வாய்க்கு
இன்று இத் தூய்து_அன்மை என்னை இழைத்ததோ.

#561
அழுகு பூசு-மின் அங்கணம் ஆடு-மின்
கழுகு உண் ஊத்தையோடு ஏனவும் கவ்வு-மின்
மெழுகு-மின் இடை மெச்சியம் அல்லதின்
முழுதும் தூய்து_அன்மை சொல்லிய மூடர்கள்.

#562
நில்லா என்னின் நில்லன்மையாலும் நில்லாவாய்
இல்லாம் என்றல் இன்புறும் மேற்கோள் இழுக்கு ஆகும்
எல்லாம் தானே என்றலின் ஏன இழவு எய்தி
நல்லாய் சொன்ன நான்மையை நாட்டும் திறம் என்னோ.

#563
உழுவார் வணிகர் என்று இவர் உள்ளிட்டு உலகத்துள்
வழுவார்க்கு ஈய வான் பொருள் வேறாய் மறியும்மேல்
அழுவார்-தமையும் காண்டும் அஃது ஆம் ஆறு உரையீரோ
புழு வாழ்க என்று புனல் மழை தந்த புகழ்_உள்ளீர்.

#564
தெய்வதம் என்று தேறினர் செய்யும் சிறப்பு என்றும்
கையது வீயக் காமுறு தானக் கலப்பு என்றும்
எய்தலரே இன் இவையிவை எல்லாம் இழுக்காவோ
மெய் பிளந்திட்டு வேண்டுநர்க்கு ஈயும் விழுமிய்யீர்.

#565
ஒள்_இழையாரே உறு பொருள் பிச்சைக்கு உரியார்கள்
தள்ளின போழ்தின் அவையவை-தன்னைத் தலைநிற்பார்
கள்ளர்கள் அன்மை காட்டலும் ஆமோ கருணையால்
பிள்ளைகள் ஏங்கப் பிறர்களுக்கு ஈந்த பெருமைய்யீர்.

#566
நில்லாதாகக் கூறுதல்-தன்னை நெறி என்றீர்
பல் வகையானும் பாழ்செய்து பின்னே பரிகாரம்
சொல்லுவிர் ஆயின் சொல்லிய மெய்ம்மை துறவு ஆம்-மன்
கொல் சின வேழம் குறி நிலை செய்த குணத்தின்னீர்.

#567
ஓதி யாதும் உயிர் இல்லை என்பது உரைத்துநின்றாயேல்
கோது_இல் அங்கு ஓர் குறி உயிரே கொள்ளின் நும் கோள் அழிவாம் அ
ஏதிலார் சொல் பரி கற்பனையினால் இன்மை சொல்லின்
நீதியா நின் கருத்தினால் உண்மையும் நேர்ந்தாய் அன்றோ.

#568
ஒன்றும் இல்லை உயிர் என்று உரைத்த நீ உண்மை இன்மை
நின்ற ஆறே நெறியாக நேர்கின்றாய் நீ யாவனோ
அன்றி முன் சொன்ன அத் திறம் எத்திறத்தானும் ஆகாமையால்
இன்றும் நின்றும் நீ மொழிந்தாய் எம் இறையே இறையாகவே.

#569
போறலானும் அது போலாது என்றும் புனைவினாலும்
வேறு அல்லது இல்லை எனவும் வினை வலியும் யோகின்னாலும்
தேறி நின்ற பொழுதோடு இ ஏழு ஆம் திறத்தினாலும்
கூறலாமோ மீட்டுணர்வு கொண்டு உணர்வான் இல்லாக்கால்.

#570
நாம சீவன் முதலாய நான்மைகளின் முன் மூன்றிலும்
தூய்மை சீவன் உடைத்தாகும் அன்றேல் நின் சொல் மாறுமாம்
தாம் அசீவன் முழுவதும் என்று தருக்குகின்றாய்
வாம சீவன் இவற்றினால் உண்மை மறுக்கல் ஆகுமோ.

#571
அறியும் மெய்ம்மையும் ஐம்_கந்தம் மாட்சிய்யும் அல்லவையும்
சிறிதும் என் முன் நிலை_இன்மை காட்டிச் சிதைத்தேனால் இனிப்
பிறிது ஒன்று உண்டேல் உரை என உரைத்தாள் புத்தன்-தான் பெரிதும்
எறிபட்டு என் நெறியினாலே அடக்குவன் நினையும் என்றான்.

#572
ஆதி_அலாத அகன் தடுமாற்றமும்
சாதி அறுக்கும் தகையும் இவை என
ஓதி வினைப் பயத்து ஒப்பு உரைப்பார்க்கு அன்றி
நீதி_இலா நெறி நேரலன் என்றாள்.

#573
வித்தின் வழி வழித் தோன்றும் முளை கிளை
சத்தியின் ஆய சந்தானத்தை மாற்று என்பன்
வெத்த அ வித்தினின் வேறு அன்று வீடு இது
தத்துவமாக் கொள் தளிர்_இயலாயே.

#574
வினையும் உளது பயனும் உளது
தினையனைத்தாயினும் செய்ஞ்ஞனும் இல்லை
எனையவும் கந்தம் இரு கணம் நில்லா
நினையின் மற்று என்றான் நெறி பயந்தானே.

#575
குணம் பொருள் என்றி கொடை பொருள் என்றி
உணர்ந்து செய்து உண்பான் ஒருவன் இல் என்றி
கணம்-தனிலே நிலை கந்தமும் ஆயக் கால்
பிணங்குவது ஒக்கும் நின் பேர் எமக்கு என்றாள்.

#576
தீது உள்ளமேல் அது தீ_உழப்பே செய்யும்
யாது உள்ளம் மாண்பு உளமேல் இன்பம் ஆம் என்னை
மாதுளம் பீசம் உண் மாண் அரக்கின் நிறம்
போதுள் அம் காண்பது போல மற்று என்றான்.

#577
எட்டின் இயன்ற இரண்டினுள் ஆங்கு அவை
அட்ட அரத்தமும் அல்லது ஆய் பயம்
மட்டு ஆர் மலர்க்-கண்ணும் செம்மையும் மற்றும் ஆ
இட்டமும் காட்டுவன் ஈங்கு இது போல.

#578
ஐந்தின் இயன்றவர் பிண்டத்தர் ஆகிய
மைந்தர் இருவர் குசலாகுசலத்தர்
சிந்தையின் நல்லவன்-தன் வழித் தேவனும்
வெம் தொழிலான் வழி வீறு_இல் நரகனும்.

#579
பீசம் எனப்பட்டது எட்டே பிறிது அங்கு ஒன்று
ஆசு ஒன்றும் இல்லை அ ஐந்திற்கும் அன்னது
நீ சொன்ன ஆறு இது நேரும் திறம் என்னை
ஏசுவன் கேள் யான் எடுத்து இனி என்றாள்.

#580
அயல் அரக்கு அட்டக பீசம் உண்டாங்கு
வியலகத்து ஐந்திற்கும் வேறொன்று காட்டாய்
குயலமும் அல்லதும் ஆயின் நன்று ஆகும்
மயல் படைத்தாய் ஒழி மாதுளம் காட்டல்.

#581
பூவின்-கண் காட்டல் பொருந்தாது அதன் வழி
மாவின்-கண் ஆக மகன் செய் வினைப் பயன்
தேவன்-கண் போலத் திருந்திய மாதுளம்
சாவின்-கண் செய்கையும் சாம் களைந்தாயோ.

#582
வித்தொடு பூவின்-கண் வேற்றுமை காட்டினும்
துத்தல் குழவி கிழவன்-கண் சொல் என்பன்
பித்து_உடையார் போல் பிதற்றி வினைப் பயம்
எத்திறத்தின்னும் இயைத்து உரைக்கில்லாய.

#583
அங்குரம்-தன்-கண்ணும் செல்லாது அரக்கொடு
மங்கின பீசத்து உருவம் மலரின்-கண்
தங்கின என்னும் சொல் தத்துவமாக் கொண்ட
அங்குலிமாரனை ஆதன் மற்று என்னாய்.

#584
அப்படியால் அரக்கு ஆம் அது போன்ம் எனின்
தப்பு_அடையான் உழப்பு எய் வழித் தங்குதல்
துப்பு_உடையான் சுரன் ஆகி அவன் துய்க்கல்
இப்படி ஆயின் நீ என்று உரையாயோ.

#585
எம்மை உவப்ப வினை வழித் துப்பு எனின்
செம்மை வழியது தீம் சுவை என்று இல்லை
எம்மை வினை வினை ஆக்கும் நின் பூ உரை
இம்மையோடு உம்மை இவை இலையாலோ.

#586
உண்டது போலும் உறு பயன் பல் மலர்
கண்டது காரணம் ஆகக் கருதினும்
மண்டையாம் மான் தசை மீன் தடி தோன்றிய
அண்டு உணவு ஆகலும் ஆம் அதனாலே.

#587
தீ_உழப்பே செயும் தீ_வினை என்பது
வாய் உழப்பாம் வழியே புகுந்தாய் இனி
நோய் உழப்பு ஆகிய நும் செய்கை யாவையும்
நீ உழப்பாய் பிறர்க்கே உழந்தாயால்.

#588
உள்ளம் வினை என ஓதினையேல் செய்கை
எள்ளின்துணையும் அஃது இன்மையின் ஐந்து எனக்
கொள்ளும் திறம் என்னை கூறாய் குணந்து இனிக்
கள்ளம் அல்லால் என்றும் கட்டுரையாயால்.

#589
நின் உடை உள்ளமும் செய்கையும் ஒன்று எனில்
தன் இடை எய்தும் தரும தருமி மற்று
என் இடைக் கொண்டு இலை எங்குப் பெற்றாய் இது
முன் உடம்பாட்டின் முரண் உளது ஆமால்.

#590
சித்தமும் செய்கையும் வேறு என்றியே எனில்
ஒத்த வினை உடம்பாடு இன்றி ஆம் இனித்
துத்தலை யாதின் வழித்து எனச் சொல்லுதி
ஒத்திய அல்லது உரையலையாயால்.

#591
கண்டு உணர்ந்து ஆர்வத்தில் செய்கை ஆதலை
உண்டு எனின் நால் குணம் ஒன்றினுக்கு ஒட்டினை
பிண்டி நீழலவன் பேர்_அறம் சார்தலின்
கொண்ட நின் கோளின்-கண் குற்றம் உண்டாமோ.

#592
விளைவதனால் வினை ஆக்கும் என்பார் சொல்
உளைவது இங்கு என் செயவோ உணர்வு_இல்லாய்
தளை பெய்துவைத்து என்னைத் தம் பொறி எல்லாம்
அளைவது நன்று இது-தான் அறம் ஆமேல்.

#593
ஆர்வத்தினால் வினை ஆக்கும் எனச் சொல்லின்
ஆர்வத்தைச் சித்தம் என்று ஆர் உரைப்பார் இனிச்
சேர்வித்த துப்பினில் செய்கையும் ஆதலை
நேர்வித்தவாறு அது நீ அறியாயால்.

#594
உணர்வினை ஆர்வம் என உரைப்பாயேல்
புணரும் பிறர்கள்-தம் பொன்_தொடியார் மேல்
உணர்வு அன்று அது ஆர்வம் உழப்பு எனச் சொல்லின்
இணர் பிரியாத் துப்பினால் வினை அன்றாய்.

#595
சித்தம் உடைச் செய்கை செய் வினை ஆதலின்
சித்தம் உடைத் துப்பும் செய் வினையாம் பிற
சித்தம் வினை எனச் செப்புதலால் எங்குச்
சித்தம் உண்டு அ வழிச் செய்கையும் உண்டே.

#596
செய்கையினால் துப்பும் ஆக்கி அத் துப்பினில்
செய்கையும் ஆம் வகை செப்புவித்தேன் இனிப்
பொய் கைசெய்தே சொன்ன பூவொடு வித்து உரை
வைக என்றாள் மலர் உண்கண் மடவாள்.

#597
இரு வகைப் பீசத்து இயல்வும் அழித்துத்
திரு வகைத் தேவொடு பூவும் சிதைத்தேன்
மருவுகையாய் நின் மதுரம் செய் மாவும்
தருவனை ஆயின் தகரும் அது போல்.

#598
வலிசெய்து பீசத்தின் மாண்பும் அழித்திட்டு
அலி செய்துவிட்டேன் அமையும் அதன் மேல்
பலிசையின் நீ சொல்லும் பாடங்கள் எல்லாம்
நலிவன் ஒன்றொன்றா நடுவு உணர்ந்து என்றாள்.

#599
பிறந்த அப் பிண்டம் வினையினோடு ஆங்கே
இறந்தன எத்திறத்தின்னும் மற்று என்றால்
சிறந்த அத் தேவு எய்திச் சேர்தலும் சீராது
அறம்செய்தல்-தானும் அவம் பிற அன்றே.

#600
உரம்-தனை யாதும் ஒடுக்ககிலள் ஆகிச்
சுரந்த பல் குற்றம் சொலக் கேட்டிருந்தான்
பரந்து இனி நீ சொன்ன பல் வழி எல்லாம்
கரந்தன போதலைக் காட்டுவன் கேள் நீ.

#601
அரக்கொடு பீசம் அறக் கெட்டு அ ஆற்றல்
கரப்பது போல் இடைக் காண்பு அரிது ஆகி
மரத்து இடை சென்று மலரின்-கண் தோன்றிப்
பரக்கும் என்றேன் பயம் பைம்_தொடி என்றான்.

#602
அன்னணம் செய்தான் அறம் கெட்டவன் வழித்
துன்னும் சந்தானத் தொடர்ச்சி நிகழ்ச்சியில்
பின்னை அது பெறும் ஆதலின் யான் கண்ட
நல் நெறி நின்னால் அறிவு அரிது என்றான்.

#603
கந்தங்கள் எல்லாம் கடை அறக் கெட்டக்-கண்
அந்தம்_இலாக் குற்றம் ஆம் எனச் சொல்லும்
சந்தங்கள்-தம்முள் சவலைச் சந்தானமும்
வந்தது அஃது எவன் செய்யும் வாம மற்று என்றாள்.

#604
ஆற்று அ மகன் கெட்ட போழ்தே அமரில்
தோற்றமும் என்னை துடித விமானத்துள்
ஏற்ற தவத்தவன் தேவு எனல் என்-கொல்
சாற்றும் சந்தானத்தைச் சந்தித்துக் காட்டாய்.

#605
மக்கள் உடம்பொடு தேவர் உடம்பு இடை
மிக்க இடம் பெரும் வெள்ளிடையால் இது
புக்க தொடர்வு இல்லை ஆதலின் நீ கொண்ட
பக்கம் உடன் கெடுமால் என்னை பாவம்.

#606
புளி பொறி ஆடி நிழல் தண் மதி இன்ன
தெளிவு உளது ஆம் செலவின் முடிவு என்னில்
விளிபவன் உள பொழுதே வினை துய்க்கும்
ஒளி கிளர் தேவன் உளன் என்னும் ஆறோ.

#607
சென்றிலதேல் இடை அற்றுழித் தோன்றுக
என்றலும் இங்கு உளதோ அது-தான் எனின்
ஒன்று அல பல் பொருள்-தாம் ஒளி ஆதிய
நின்ற அலவோ உலகு எங்கும் நிறைந்தே.

#608
தண் மதி கெட்டு அதன் சாயை உடன் பெறல்
உண்மை உண்டாயின் நின் ஒத்துரை ஒட்டுவன்
கள் மதியாதது எ காரியமே இன்ன
வெண்மதியாயை விலக்குநர் யாரோ.

#609
மதி என்றும் இல் எனின் இல் ஒளி-தானும்
புதியதும் பாழ் அது பொன்றிய போழ்தே
கதியினை நாட்டிய காட்டி எமக்கு இங்கு
அது என்னை சொல்லியவாறு உரை ஆத்தா.

#610
அடியொடு பூவின் இடை அறவு இன்றி
நெடியது ஓர் கொம்பினை நீ மறந்தாயோ
மடி_இலார் செய்த மானுயர் தெய்வப்
படி இது என்று இடை பாழ்செய்திட்டாயால்.

#611
தோற்றம் இடையறவு இல்லாத் தொடர்ச்சியைச்
சாற்றுதும் யாமும் சந்தானம் என என்னின்
காற்றும் சுடரும் கரகத்துள் தாரையும்
ஏற்றன அல்ல இரண்டு உண்மையாலே.

#612
பித்தொடு கனவு இடைப் பேயின் மயங்குநர்க்கு
ஒத்த உணர்வு உண்மை ஒட்டலது என் செய
தத்துவம் ஆய சந்தானம் உளது எனின்
புத்த நின் சொற்கள் பொருள் இலவேயால்.

#613
மூத்தல் வகையும் முதல் அதன் ஐம்மையும்
ஆத்த கணம்-தோறு அலர்ந்த நிகழ்ச்சியும்
சாத்திரத்தால் அத் தவிரன்-கண் தாழ்ச்சியும்
போத்தந்து காட்டும் திறம் என்னை புத்தா.

#614
கப்பம் பலபல கண்_இமையானுக்குத்
துப்பும் உரைத்து என்னை தோன்றிய அக் கணம்
தொக்க விளைவு உரைப்பாய் பின் வழிவழிச்
செப்புதியேல் செய்கை சென்று சென்று உண்டே.

#615
காரணம் என்னினும் சென்று இன்மையால் இல்லை
ஏரண தேவ இழுதைமை சொல்லுதி
ஊருணி நீர் நிறைவு உண்டோ உறு புனல்
வாரண வாய்க்கால் வரவு இல்லையாக் கால்.

#616
நில்லாது அறக் கெடும் தோன்றிற்றும் தோற்றமும்
எல்லா வகையினும் இல்லதற்கேல் இல்லை
சொல்லாய் தொடர்ச்சி தொடர்ச்சி என்றே நின்று
பல்லார்களையும் படுத்து உண்ணும் பண்பா.

#617
சுடர் உடைத் தோற்றத் தொடர்ச்சியைச் சொல்லி
இடர் உடைத்து ஆக இவையிவை காட்டி
அடர் படுத்திட்டாட்கு அதற்கு ஒன்று நாடிச்
சடர் உடை வாசனை சாதிக்கலுற்றான்.

#618
கெட்ட பின் ஆற்றல்கள் எல்லாம் வழியதற்கு
ஒட்டும் நறு மலர் வாசமோடு ஓட்டின்-கண்
சுட்டுவது ஒப்ப எனச் சொல்லும் நீ கண்ட
இட்டம் இவற்றோடு இயையலது என்றாள்.

#619
முன்னையது உள்ள பொழுதத்து மற்று அதன்
பின்னையது இல்லை அது பெற்ற போழ்து
தன்னையும் இல்லை எனச் சொல்லின் வாசனை
என்னை இயையும் திறம் இவை-தானே.

#620
ஓடும் மலரும் ஒருங்கு உள ஆதலின்
கூடும் அ வாசமும் குற்றம் ஒன்று இல் எனின்
கேடும் பிறப்பும் உடன் இல்லை ஆதலின்
கூடல என்பது கூறினம் அன்றே.

#621
கெடுவதன் உள் நின்று தோன்றுவதன்-கண்
வடு அறச் செல்வது வாசனை என்னப்
படுவது ஒன்று அன்று நின் பக்கத்தை எல்லாம்
சுடுவது ஓர் கொள்ளி சுவடித்தவாறே.

#622
போதின்-கண்-நின்றும் புத்தோட்டில் பொருந்திய
தாதின நாற்றம் தண்ணீருக்குச் சொல்லுதி
ஓதின கந்தம் உடன் கெடின் வாசனை
யாதினது ஆகும் அறிந்து உரை ஏழாய்.

#623
வாசனை வாசனை என்று வழி வழி
நீ சொன்ன நீ சொன்ன நேர்வது இங்கு என் செய்ய
பாசனம் ஆகிய பாதிரிப் பூவினைப்
பூசினது எப் பொருள் போத்தந்து காட்டாய்.

#624
பூவின்-கண் கேடும் புத்தோட்டின்-கண் தோன்றியும்
மேவிய வாசனை எங்கும் உண்டாம் எனின்
சோபனமாகச் சுவாகதம் போந்தது என்
தேவன் திருந்து அடி சிந்தி மற்று என்றாள்.

#625
அதற்கும் அறக் கேடு உளது எனின் வாசம்
அதற்கும் உண்டாய் இனி எல்லை இன்று ஓடும்
இதற்கு எண்ணும் இல் எனின் இல்லை அதற்கும்
முதல் சொன்ன குற்றம் முடிந்தனவாமே.

#626
சென்றது என்றால் அதன் கேடு_இன்மை ஆம் செலவு
இன்று அது என்றால் அதன் நாற்றமும் இல்லற்க
நன்று இது என்றே சொல்ல நல்லது நாம் அறிந்து
அன்று இது என்று எம் முனே யார் உரைக்கிற்பார்.

#627
கேடது-தான் முழுது ஆதலின் நீ சொல்லும்
வீடு அது ஆகலும் வேண்டும் விழுத் தவம்
கூடுபவர்க்கும் குணம்_இல்லவர்க்கும்
நீடு_அலதே உளதாம் நிருவாணம்.

#628
தோற்றம் வழி என்று சொல்லுதலால் தடு
மாற்றம் அது இதன் மார்க்கத்து மாண்பு எனச்
சாற்றுதியேலும் தவறு அது ஆதலைத்
தேற்றுவன் கேள் நீ தெருண்டிருந்து என்றாள்

#629
தன் வழித் தோற்றிக் கெடுமோ அது கெடப்
பின் வழித் தோற்றம் பெறுமோ இரண்டனுள்
என் வழித் தோற்றம் அஃது ஆம் மாறு இருள் அற
நின் வழித் தோற்றத்தை நீ உரை என்றாள்.

#630
வழி ஒன்று தோற்றிக் கெடுமேல் மகப் பெற்று
அழிகின்றவள் போல் அணைவு உளது ஆகும்
மொழிகின்றது ஏயது காணலது என்னின்
கழிகின்ற கன்னிக்கு ஓர் காதலன் காட்டாய்.

#631
பிறப்பித்துக் கேடும் பின் தோற்றக் கெடலும்
இறப்பவும் கூடாது இரு திறத்தானும்
துறப்பித்தவாறு இது தூ எனக் கேட்டை
மறப்பித்து உரைத்தது உண்டோ சொல்லு வாம.

#632
சுலாப் பல சொல்லிச் சுழன்று விடாதே
துலாத் தலைத் தூக்கமும் ஓக்கமும் காட்டின்
நிலாத்-தலை அல்லா இரண்டுள் ஒன்று உண்டாய்
இலாத் தலை இல்லேல் அமைவது மன்னோ.

#633
இல்லதற்கே இல்லை கேடு என்னை காக்கையின்
பல்-அதற்கு ஓதார் பருமையும் நுண்மையும்
சொல் இதற்கு ஆவது உண்டேல் எனச் சொல்லினள்
நல்லதற்கு அல்லது நாப் பெயராதாள்.

#634
துலாம் இல்லை அட்டகமே அது-தானும்
இல் ஆம் இரு பால் தலையே தலை தாமும்
நிலாம் வகையில் உயர்வோடு இழிவு எங்கும்
கலாம் அவை ஆய்க் கடை கண்டது பாழே.

#635
ஓல குளவி குருட்டு எண்ணெய் வாணிச்சி
கோலம் சிதையும் என்று எண்ணெய் அட்டாள் என்னும்
பாலகர் பாட்டு உரை போன்றது மற்று நின்
நூல் உரை எல்லாம் நுழைந்து உணர்வார்க்கே.

#636
கோல் திரள் ஒன்றாய் அதன் தலைக்கே உடன்
நாற்றியும் ஓக்கமும் நாட்டினை அஃது ஒப்பத்
தோற்றமும் கேடும் தொகு பிண்டம் ஒன்றிற்குச்
சாற்றுதியாய்விடின் தக்கது என்னேனோ.

#637
தலையன தாழ்ச்சியும் எழுச்சியும் அன்றி
நிலை இலை கோல் இடை நீக்கலும் நீங்கும்
இலை என எட்டின் இடுகுறி அன்று எனில்
பல இனி இங்குப் படுவன கேள் நீ.

#638
கோலும் தலையும் உடன் இல்லையாம் எனின்
மேலும் உரைத்தனம் மேய தன் மேல் பழி
வாலும் தலையும் நடுவும் அவை இன்றிப்
பாலும் படுவது ஓர் ஆ உளது என்னாய்.

#639
புணரிய தாம் அவை பொய் எனச் சொன்னேற்கு
உணர்வது அங்கு உண்மையும் ஒட்டுவை ஆயின்
குண குணி ஆயும் அவயவி ஆயும்
பிண பிணக்கு எய்தும் அப் பேர்_இடர் செய்தாய்.

#640
இரு பிண்டம் முப் பிண்டம் எண்ணில் பல் பிண்டம்
வரு பிண்டம் மேல் பல மற்று அவை நீங்க
ஒரு பிண்டம் கொண்டு ஆங்கு உயிர்க்கு உறுதியிட்டுத்
திரு உண்ட செய்கையின் செய்தவன் ஆக.

#641
வினை செய்தான் துய்க்குமோ வேறு ஒருவனேயோ
அனைவருமோ இல்லையோ சொல்லாயோ என்னக்
கனை கடலின் நுண் மணலின் கண்ணினையும் ஈந்தான்
இனை வகைய கேள் என்று எடுத்துரைக்கலுற்றான்.

#642
அவனேயும் என்னேன் பிறனேயும் என்னேன்
அவனும் பிறனும் அவரேயும் என்னேன்
அவனேயும் எய்தான் எனலேயும் ஆகா
எவனோ இது துய்ப்பான் இன்னணம் கேள் என்றான்.

#643
அதுவேயும் என்னேன் பிறிதேயும் என்னேன்
அதுவும் பிறிதும் அவையேயும் என்னேன்
அது பொன்ற அல்லது அதன் வழியின் மற்றொன்று
இது போல என்பேன் எடுத்துரையும் கேள் நீ.

#644
இடு பீசம் அன்றால் இறுங்கு ஆதி அன்றால்
வடுவு ஆய அ இரண்டும் வந்தனவும் அன்றால்
நெடிது ஆய தீம் கரும்பும் நெல்லுமே போல
நடுவாக நோக்காய் நறு_நுதலாய் என்ன.

#645
ஆத்தா அது அன்றேல் பிறிது ஆம் அரும் பெறல்
நாத்தான் வருத்த நீ நாட்டியது யாம் காணேன்
போத்து ஆகாதேல் குதிரை பெட்டையது போல் என்
சாத்து ஆகும் ஆகாமை சாதிக்க வல்லையோ.

#646
அவன் போறலானும் அவன் அன்மையானும்
அவன்-தன் வழியான் அவன் ஆதலானும்
அவன்-தான் பிறனே அவன் என்றலானும்
அவன்-தான் பிறனே என அழிவது உண்டோ.

#647
கண் போலக் கயல் எனினும்
காடு அன்றித் தூறு எனினும்
பெண்பாலால் பல்கியும்
எல்லாம் பிறவேயாம்.

#648
அயலானே துய்க்கும் அவன் துவ்வான் என்பாய்
முயல் ஆனும் இல்லான் முகம் சிறிதே ஒப்பான்
வயல் ஆமை போல்வது ஓர் மக்குளி இலான் என்று
இயலாதனவே எடுத்துரைத்தி என்றாள்.

#649
அயல் பிறனும் அல்லன் அவன்-தானும் அல்லன்
புயல் திறல் ஐம்_கூந்தல் தன் போலப் பிறனுக்கேல்
முயல் பிறவி மேயினீர் முன் செய்தான் அங்கு ஓர்
பயம் பெறுவது இல்லையேல் பாழ் பயன் இது என்னோ.

#650
தன் பிறிதே ஆகிப் பிற பிறிது-தான் அல்லா
நெல் பிறிது போன்ம் எனவும் நீ உரைத்தாய் அஃது ஒழிந்து
சொல் பிறிது சொன்னாய் சுவர்க்கத்தவர்க்கு உரைப்
பின் பிறனே ஆகிப் பெறப் பிறனே ஆகானோ.

#651
நெல்லின் வழிக் கரும்பும் நீள் கரும்பினால் நெல்லும்
சொல்லு நீ சொல்லாயேல் சொல்லிய நின் சொல் எய்தா
வல்லனாய்ச் செய்த மகன் வழியினால் மகன்-தான்
அல்லனாய்ச் சொல்லின் உலங்கருவாமே.

#652
செய்தானும் செய்தானே துப்பானும் துப்பானே
இஃதால் என் மெய்ம்மை கிடந்த ஆறு என்றானுக்கு
எய்தார் பிறவோ இரு சார் வினைப் பயனும்
செய்தார்கள்-தாம் எனலும் சிந்தித்து இருந்தானால்

#653
கண்ணும் தலையும் பிறவும் கரும் தடியும்
பெண்ணும் கொடுத்துப் பிறர்க்கே உழந்தாய் முன்
எண்ணுங்கால் இன்னும் நீ எ வினையும் செய்தாரை
உண்ணும் திறம் ஒன்றும் ஓதாது ஒழிந்தாயோ.

#654
எனைத்துணையும் நீ வருந்தி எத்துணை ஓர் காலம்
நினைத்திருப்பின் அல்லது நின் காட்சி-தன்னால்
வினைப் பயத்தின் கூட்டம் விரித்து உரைப்பன் என்னின்
தினைத்துணையும் ஆகாமை தேர் இது நீ என்றாள்.

#655
முழுக் கேடு வேண்டாயேல் முன் நின்றது உண்டாம்
வழுக்குமேல் அ உரைக்கு மாறுகோள் இஃது ஆம்
இழுக்காமை புத்தீர் எனைப் பலரும் கூடிக்
குழுக்களாய் வந்து நும் கோள் இறு-மின் என்றாள்.

#656
நின்றே நிலையும் எனின் நித்தியமே ஆய் ஒழியும்
அன்றே அஃது ஆயில் அநித்தியமாம் அ இரண்டும்
என்றே உரைக்கில் இரு வழிக் குற்றமும் ஆம்
என்றே உரைக்கின்றாய் ஏகாந்தன் ஆகுதியோ.

#657
உச்சேதம்-தானும் ஒரு வகையால் அ வகையே
அச் சேதம் இன்மையும் அ இரண்டுமாய் நிகழ்ந்து
பொய்ச் சேதம் அல்லாப் பொருள் முடிபு ஒன்று உண்டு ஆக
மெச்சாயே நீ என யான் மெச்சுவனே என்றான்

#658
இறைவன்-தன் நூல் உணரின் எ உருவினாரும்
முறையினால் எய்துவர் தாம் முன்னிய வீடு என்றாள்
மறையினால் ஆயினும் மற்று ஒருவாறேனும்
நிறையினால் செல் என்று நேர்_இழையும் சென்றாள்.

@6. ஆசீவக வாதச் சருக்கம்

#659
கண் ஆர் சிறப்பில் கபிலபுரம் கடந்து
விண் ஆறு செல்வாள் வியன் மலை போல் தோற்றத்தாள்
உள் நால் வினையும் ஒருவி ஒளிர் மேனி
எண்ணாது உணர்ந்தானை ஏத்தத் தொடங்கினாள்.

#660
அங்கம் பயந்தான் அறைந்த சுதக் கடலுள்
பங்கங்கள் சாராப் பரசமையர் சொல் உளவோ
பங்கங்கள் சாராப் பரசமையர் சொல்லே போல்
புங்கவன்-தன் சேவடியைச் சேராத பூ உளவோ.

#661
பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுதக் கடலுள்
சார்த்திப் பிறவாத் தவ நெறிகள்-தாம் உளவோ
சார்த்திப் பிறவாத் தவ நெறிகள்-தம்மே போல்
தீர்த்தன் திரு நாமம் கொள்ளாத தேவு உளவோ.

#662
புலவன் உரைத்த புறக் கேள்வி சாராது
உலகம் நவின்று உரைக்கும் ஓத்து எங்கு உளதோ
உலகம் நவின்று உரைக்கும் ஓத்தேயும் அன்றிப்
பலவும் பகர்வாப் பயந்தனவே அன்றோ.

#663
அலரோடு சாந்தம் அணிந்து எம் இறைவர்
மலர்_அடியை அல்லது யாம் மற்று அறிவது இல்லை
மற்று அறிவது இல்லாத எம்மை மலர்_அடிகள்
முற்றவே செய்து முடிவிக்கும் அன்றே.

#664
புனை உலகிற்கு ஆதிய புங்கவனார்-தம்
இணை அடியை அல்லது யாம் இன்புறுவது இல்லை
இன்புறுவது இல்லாத எம்மை இணை அடிகள்
துன்புறவு_இல் அக் கதியுள் தோற்றுவிக்கும் அன்றே.

#665
இரவு இடை நல் மணி போலும் எண்ணாது உணர்ந்தான்
திரு_அடியே அல்லது என் சிந்தனையில் இல்லைச்
சிந்தனை ஒன்று இல்லாத எம்மைத் திரு_அடிகள்
அந்து இணை_இல் பேர்_ஆற்றல் ஆக்குவிக்கும் அன்றே.

#666
தொக்கு உடன் ஆய என் தொல் வினை தீர்க என
முக்குடையான் அடி மூன்றினும் வந்தித்துக்
குக்குடமாநகர்-நின்று கொடி மினின்
தக்கதின் தான் போய்ச் சமதண்டம் புக்காள்.

#667
ஈண்டி இருந்த இலிங்கியர்-தங்கட்கு
மாண்ட துகில் அல்குல் மாதர் இது சொல்லும்
காண்டற்கு இனிதே கடி மலர்ப் பூம் பள்ளி
ஈண்டு உறைவார் இவர் யாவர்-கொல் என்றாள்.

#668
காரணம் வேண்டாக் கடவுள் குழாம்-தன்னில்
பேர்_உணர்வு எய்திப் பெரிதும் பெரியவன்
பூரணன் என்பான் பொருவு_அறக் கற்றவன்
ஆரணங்கு அன்னாட்கு அறிய உரைக்கும்.

#669
புயல் இரும் கூந்தல் பொலம் கொடி அன்னாய்
அயலியர்-தாம் அல்ல ஆசீவகர்கள்
வியலிடத்து யாரும் வியக்கும் தகையார்
மயல்_அறு காட்சி இ மா தவர் என்றான்.

#670
ஆத்தனும் நூலும் பொருளும் நிகழ்ச்சியும்
பாத்தன சொல்லப் பயம் பெரிது ஆகலின்
ஓத்து உரையே இங்கு உரை என்று உரைத்தனள்
சாத்திரம் யாவையும் தன்_நிகர் இல்லாள்.

#671
என்றலும் மற்கலி-தானே இறை இனி
ஒன்பது ஆம் கதிர் நூல் யாமுடையன
மன் பெறு நுண் பொருள் ஐந்து இயல்பாய் அவை
என்ப நிகழ்ச்சியும் காழ்ப்பாடு எனச் சொல.

#672
அறிந்தான் இறைவன் அவன் ஆகுதலால்
செறிந்தான் பெரிதும் செறியாது உரைப்பின்
எறிந்தான் அனைய இயல்பு ஆகுதலான்
மறிந்தான் தடுமாற்று அகத்தே மயங்கி.

#673
உரையான் இறைவன் உணலும் இலனாய்த்
திரையான் நரையான் தெரிவில் உருவம்
வரையா வகை வான் இடு வில் அனையன்
புரையா அறிவில் புகழ் பூரணனே.

#674
அடங்கல் குறிக்கோள் முதலாயினவாய்க்
கிடந்த கதிருள் கிளந்த பொருளும்
தொடங்கி உரையாம் தொகை ஆகுவதே
உடங்கே அணு ஐந்து உருவாய் உளவே.

#675
நிலம் நீர் எரி காற்று உயிரின் இயல்பும்
பல நீர் அவற்றின் படு பால் அவை-தாம்
புலம் ஆகு ஒலி ஒன்று ஒழிய முதற்கு ஆம்
சலம் ஆயது தண்மையையே முதல் ஆம்.

#676
எறித்தல் முதல் ஆயின தீயின ஆம்
செறித்தல் இரையோடு இவை காற்றின ஆம்
அறித்தல் அறிதல் அவை-தாம் உயிர் ஆம்
குறித்த பொருளின் குணமால் இவையே.

#677
அணு மேயின ஐந்து அவை-தாம் அனைத்தும்
குணமே இலவாம் குழுவும் பிரியும்
உணல் மேயினும் உள் புகுதல் உரையேம்
கணமே எனினும் ஒரு காலம் இலை.

#678
இவையே பொருள்கள் இவற்றின் இயல்பும்
சவையே அறியச் சில சாற்றுவன் கேள்
சுவையே உடையம் என நீ இகழல்
அவையே பிறரால் அழிதற்கு அரிய.

#679
அண்ணலும் நூலும் பொருளும் நிகழ்வும் இவை எனலும்
எண்ணினும் ஏனை எழுத்தினும் மிக்கு ஆங்கு இருந்தவர் முன்
கண்ணினும் அன்றிக் கருத்தினும் வேறு எனக் காட்டலுற்றுப்
பண் நலம் கொண்ட சொல்லாள் அவை பேர்த்தும் பகர்ந்தனளாய்.

#680
முற்ற அறிந்து உரையாது அவன் மோனாந்து இருந்தனனேல்
செற்றம் பெரிதும் உடையன் அச் சீவன்கள்-தம்மொடு எல்லாம்
அற்றம்_உடையவர் சொல்லின ஆகமம் அன்மையினால்
பெற்ற வகை என்னை பேதாய் அதனைப் பெயர்த்து எனவே.

#681
ஒக்கலி ஓகலி என்று இரு தெய்வம் உரைத்தனவேல்
மற்கலியார் போல் அறிந்தன ஆயின் செறிந்தனவாம்
தக்கிலவே அறியாதன சொல்லுதல் தத்துவத்தை
இக் கலியாளர் உரைத்தவும் ஏதம் எனாய் பிறவோ.

#682
அறிந்தான் அறிந்தன தான் சொல்லின் ஆர்வச் சினத்தனனாய்
எறிந்தான் அனையது ஓர் ஏதத்தை எய்தும் அ ஏதத்தினான்
மறிந்தான் அகன் தடுமாற்றத்து அகத்து எனின் மாண்பு_உணர்ந்தாய்
செறிந்து ஆங்கு இருக்கிற்பின் நீயும் சிற்றாத்தனை ஆகிற்றியே

#683
ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லலனாய்விடின் இச்
சாத்தனும் யானும் அவன்-தன்னின் சால இசையுடையம்
நாத்-தனை ஆட்டி ஓர் நன்மை கண்டாலும் நினக்கு உரைத்தும்
ஈத்தனம் உண்டும் இருமைக்கும் ஏதம் இலம் பிறவோ.

#684
வான் இடு வில்லின் வரவு அறியாத வகையன் என்பாய்
தான் உடம்போடு பொறியினன் ஆதலின் சாதகன் ஆம்
மீன் அடைந்து ஓடும் விடு சுடரான் கதிர் வீழ் புயல் மேல்
தான் அடைந்தால் தனு ஆம் இது வாமதன் தத்துவமே.

#685
முற்ற அறிந்தனன் யான் என்று மோனம் கொண்டே இருந்தான்
அற்றம் அகல என்றால் நீ அறிந்தமை யாதினின் ஆம்
பெற்ற வகை எனப் பேச்சு_இன்மையால் எனின் பிள்ளைகளும்
மற்று இ மரமும் மலையும் அ மாண்பின ஆம் பிறவோ.

#686
முடக்கும் எனினும் நிமிர்க்கும் எனினும் தன் மூக்கு உயிர்த்து
நடக்கும் எனினும் இருக்கும் எனினும் தன் நல் உறுப்பின்
அடக்கும் இயல்பு_அல்லன் அன்னவற்று ஆர்வத்தன் ஆகும் அன்றி
உடக்கும் இவை இல்லையேல் உயிர்-தான் உண்மை ஒட்டுவனோ.

#687
நிலப்-பாலும் நீர்ப்-பாலும் தீப்-பாலும் காற்றின்
புலப்-பாலும் நெட்டு உயிரின் போக்கு இல்லாப்-பாலும்
சொலற்பால அல்லாத சொல்லுதலால் யானும்
அலப்பாது ஒழியேன் இ ஆசீவகனை
அருகு இருந்தார் தாம் அறிய ஆ சீவகனை.

#688
வண்ண ஆதி எல்லாம் வகுப்பின் நிலப்-பால் ஆம்
நண்ணாத மூன்றிற்கும் நல் பால் பிற ஆகிக்
கண் ஆதியால் அவற்றைக் காணப்பாடு இல்லையாய்
எண்ணாதே இந்தியக் கோள் எய்தாமை வேண்டும்
எனைத்தும் பெறப்பாடும் இல்லாத வேண்டும்.

#689
நீர்ப்-பாலும் தீப்-பாலும் நில்லா வளிப்-பாலும்
பேர்ப்பாலே பற்றிப் பிறப்பிறவாம் நீ பெருக்கி
ஓர்ப்பு யாதும் செய்யாது உரைத்தாய் உரைத்தமையின்
கூர்ப்பு யாதும் இன்றி நின் கோள் அழியும் அன்றே
கொணர்ந்து நீ ஐந்து என்ற கோள் அழியும் அன்றே.

#690
பொருள்-தாம் இ ஐந்து ஒழியப் போத்தந்து உரைப்பாய்
இருள்-தாம் இ ஐந்தனுள் எக் கூற்றதாமோ
இருள்-தாம் இ ஐந்தனுள் எ கூற்றும் இல்லேல்
அருள் தாழ்ந்து நீ இருப்பது யாதின்-பால் ஆமோ
அணுமயமாம் கந்தங்கள்-தாம் அனந்தம் அன்றோ.

#691
பலவாக நீ சொன்ன பால் எல்லாம் தம்முள்
கலவாவாய் அப் பொருளே ஆதலையும் கண்டாய்
உலவாதோ ஒற்றுமையும் வேற்றுமையும் என்றால்
சலவாதி ஒன்றும் சமழலையே கண்டாய்
சமத்திடை ஒன்றும் சமழலையே கண்டாய்.

#692
பால்-தாம் பல ஆகிப் பால் ஆகும் அப் பொருளே
வேறு ஆதும் இல்லை எனவே விளம்புவாய்
நீறு ஆக நின்ற நிலப் பால் பெற ஏலா
நாறா வகை எனக்கு நன்கு உரைக்கல் வேண்டும்
நலிந்தால் பிற பொருட்கு நாட்டலே வேண்டும்.

#693
இன்றே அது ஆயின் இவை பால் இவை பொருள்கள்
என்றே பலவா எடுத்து உரைப்பது என் செய்யக்
குன்றோ மலையோ குவடோ அடுக்கலோ
அன்றோ அதன்றால் அஃது யாப்பாதல் வேண்டும்
அவை அவையே சொன்னால் அது யாப்பாதல் வேண்டும்.

#694
நோய் இல்லை வாழி கடவுள் என உரைத்தான்
ஆயின் நோய்_இன்மையின் நேர்ந்தாய் அ வழி ஒருநாள்
தீயினும் வெய்ய நோய் சேர்தலையும் காண்டும் நீ
சாயினும் தத்துவத்தைச் சாராதாய் அன்றோ
தடுமாற்றக் காழ்ப்பாடும் தாம் உளவே அன்றோ.

#695
கடும் கதிரோன் மீதூரக் காணாக் கோள் எல்லாம்
படும் பொழுதும் எழுச்சியினும் தம் பயனே செய்யும்
நெடும் காலம் பல் பிறவி நின்றன எல்லாம்
ஒடுங்காதே ஏய்ந்து உண்டு உழிதரலே வேண்டும்
உதவாத ஆர்தலையும் ஒட்டலே வேண்டும்.

#696
எப்பாலும் தான் கெடா இல்லனவும் தோன்றா என்று
ஒப்பு யாதும் இல்லது உரைத்து அளியின் தான் உண்ணும்
துப்பு ஆய தூச் சோற்றுத் தூய்து அல்லாது ஆழ்ந்து உளது என்று
இப் பாவி செய்யும் இழிதகவு இது என்னோ
இழுதை-தான் செய்யும் இழிதகவு இது என்னோ.

#697
நின்று ஈக கொண்டு ஈக உண்டு ஈக தின்று ஈக
என்று இவைகள் கூறி இடுவார்க்கு அறம் வேண்டான்
கொன்றீகை தீது என்றும் கொல் பாவம் இல் என்றும்
தன் தீகை உண்ணாதான் தான் கண்டது என்னோ
தவத்தினும் இல் வாழ்க்கை தான் கண்டது என்னோ.

#698
இல்லாத தோன்றா கெடா உள்ளன என்பாய்
சொல்லாயே நெய் சுடராய்ச் சுட்டிடும் ஆறு என்றேனுக்கு
அல்லாந்து அயிர்த்து ஓடி ஆழ் மிதப்புச் சொல்லுதியால்
எல்லாம் ஒன்று ஒன்றிற்கு இடங்கொடா அன்றே
இழிவு உயர்ச்சிக் காரணமும் இல்லாதாய் அன்றே.

#699
ஓட்டும் குதிரையும் ஒன்றே எனின் குதிரை
ஊட்டும் பொழுதொடு தான் புல் உண்ணும் போழ்தின் கால்
நாட்டிய வீதி அதிசயத்தை நீ எமக்குக்
காட்டி உரைப்பின் நின் காட்சியைக் கோடும்
கடவுள் குழாத்தார்-தம் காழ்ப்பு எலாம் கோடும்.

#700
வண்ணம் முதலா உடைய குணம் எல்லாம்
எண்ணும் கால் அப் பொருளேல் ஈந்தின் இளங்காய்க்-கண்
கண்ணினால் கண்ட பசுமை கனிக்-கண்ணும்
திண்ணிதாக் காட்டின் தெருண்டாயே என்றும்
திரிந்து ஒழிந்த காட்டினால் தேவனே என்றும்.

#701
வட்டம் முதலா உடைய பொருள் எல்லாம்
ஒட்டி நீ அப் பொருளே ஒன்றும் வேறு இல் என்பாய்
தட்டம் அழித்து ஓடம் செய்தால் அதன்-கண்ணும்
விட்ட வடிவு விரித்து நீ காட்டாய்
விகாரம் அனைத்தும் விரித்து நீ காட்டாய்.

#702
மிதப்பனவும் ஆழ்வனவும் வேண்டுவன் யான் என்னின்
பதப் பொருள்-தான் நான்கின் பன்மை முடித்தாய் ஆம்
மிதப்பனவே ஆழ்வன-தாம் வேறு யாதும் இல்லேல்
உதப்பேனும் நின் சொல் உதவலவே கண்டாய்
உடனே நின் பக்கம் உடைத்திட்டாய் கண்டாய்.

#703
தொழில் சொல் குணச் சொல் வடிவுச் சொல் மூன்றும்
பிழைப்பு_இல் பதமாப் பிரிவிடத்துக் காண்டும்
இழுக்கு_இல் பொருளோடு இயைத்தக்கால் சந்தி
எழுத்தியலில் கூட்டமும் எப்பொழுதும் காண்டும்
இலக்கணம் நின் சொல் இயையலவே கண்டாய்.

#704
அது ஆவதுவும் அது ஆம் வகையும்
அது ஆம்துணையும் அது ஆம் பொழுதும்
சதுவாம் நியதத்தனவா உரைத்தல்
செது ஆகுதலும் சில சொல்லுவன் யான்.

#705
அரிவையவள் ஆம் குழவி அவளை
உரிய வகையால் உவந்து ஆங்கு எடுத்தல்
அரிய முழம் மூன்று அளவாம் பொழுதும்
வரிசை உரைத்த வருடம் அதன் பின்.

#706
குழவித் திறமும் துறவாள் அவளும்
முழு வித்து-அதுவும் முளையாது உளது ஆம்
இழவு எத்துணையும் இயல்பேல் முடியாது
அழிவித்திடுவேன் அய நீ விரையல்.

#707
முலையும் மகவும் முறுவல்லவையும்
தலையுள் மயிரும் உகிரும் உடனே
நிலையில்லமையும் இலதாம் எனினே
அலையும் நின கோள் உடனே எனலும்.

#708
உளவே எனின் முன் உரைத்த அ நியதம்
களவே எனலாம் கடையாம் என நீ
கிளவாது ஒழியாய் கிளந்த குழவிக்கு
அளவே முழம் ஆ அவை-தாம் பலவால்

#709
உடையள் இவள் தன் உதரத்து ஒரு பெண்
அடையும் அவளுக்கு அவள் அ வகையால்
கடை_இல் குழவி அவை தன் இயல்பாய்
நடையும் அதுவேல் நகையாம் பிறவோ.

#710
இனி ஆம் வகையும் இசைத்தி எனினும்
நனி காரணமாய் நடுக்கும் நின கோள்
தனி காரியமும் உளதேல் தவறு ஆம்
முன் இலாம் ஒரு வன் பொழுதும் முடிவு ஆம்.

#711
நியதம் நிகழ்ச்சி நியதா உரைப்பது
அயதி எனின் நீ அமையும் சலமேல்
வியதி எனினும் வெகுளல் இழுதை
பயதி எனினும் நினக்கு ஓர் பயனே.

#712
பாலைப் பழத்தின் நிறத்தனவாய்ப் பல மாட்டொடு கண்
ணால் எத்துணையும் அகன்று ஐந்து_நூறாம் புகை உயர்ந்து
ஞாலத்து இயன்றன நல் உயிர் என்பது நாட்டுகின்றாய்
மால் இத்துணை உளவோ நீ பெரிதும் மயங்கினையோ.

#713
ஒன்றினுள் ஒன்று புகல்_இல என்ற உயிர்கள் எல்லாம்
நின்றன தம்தம் அகலமும் நீளமும் பெற்றனவாய்
நன்று நீ சொல்லுதி நாம் தொக்கு இருந்துழி நல் உயிர்கள்
துன்றின என்பது சொல்லாது இனி என்ன சொல்லுதியோ.

#714
தான் உளது ஆய வழி அதன்-தன் பால் இயல்பு எனல் ஆம்
ஊன் உளதாய உயிர்ப் பிரதேசம் உணர்வு-அது போல்
வான் உளம் போயுழி மன்னும் அறிவு இலையேல் அதனை
நான் உளது என்று உரையேன் அதற்கு யார் இனி நாட்டுகிற்பார்.

#715
ஒன்று என நின்ற உயிர்-தான் உருவினது ஆதலினால்
பொன்றுந்துணையும் பல் போழ் எய்தும் பூசணிக்காயினைப் போல்
இன்று எனின் ஆகம மாறு அது ஆம் இனி அ இரண்டும்
இன்று எனின் சால எளிது ஆம் பிற அதன் இன்மையுமே.

#716
எண்-தனை ஆக்கி இட வகையுள் பொருள் ஈறு சொல்லி
மண்டலம் ஆக்கி மறுத்தும் கொணரும் மனத்தினையேல்
கண்டிலை நீ மெய்ம்மை காழ்ப்பட்டு நின்ற கன உயிர்க்கு எண்
உண்டு எனின் இல்லை அகன் தடுமாற்றம் உலப்பு_இன்மை போல்.

#717
மேல் சீர தீயோடு உயிர் காற்று விலங்கு சீர் ஆம்
பால் சீர நீரும் நிலம்-தானும் பணிந்த சீர் ஆம்
மேல் சீர மேல் போம் விலங்கு ஓடு விலங்கு சீர் கீ
ழால் சீர வீழுமவை என்னினும் ஆவது என்னோ.

#718
தீயும் உயிரும் தமக்கு ஆய திசையினாலே
போயும் ஒழியாது இவண் நிற்றல் பொருத்தம் அன்றால்
வீயும் வகையும் வினை ஆக்கும் திறமும் எல்லாம்
நீயும் அவற்றை நினைவாய் உளவாக அன்றோ.

#719
தென்றை உளையத் திசை-தான் உறப் போய காற்றேல்
பின்றை ஒருநாள் பெயராதது ஓர் பெற்றியஃதால்
முன் தை தழுவி முனிவு ஆக்கும் வடந்தை அஃதா
இன்றைப் பகலே இதன் மெய்ம்மை இசைக்கிற்றியோ.

#720
முன் சென்று வீழும் நில நீரை முகிலுள் நின்று
பின் சென்று பெய்யும் துளி-தானும் பெரும் தவத்தாய்
என் சென்று அது எய்தும் திறம்-தன்னை எனக்கு உணர
நின் சென்ற ஆற்றால் உரைத்தால் நெறி ஆற்ற நன்றே.

#721
பால் எங்கும் ஓதப்படுகின்ற பதப் பொருட்குக்
காலங்கள் சொல்லாய் அது-தான் உன் கணக்கும் என்றால்
சீலங்கள் காத்துக் குணன்_இன்மையைச் செப்புகின்றாய்
மால் இங்கு உடையை அது தீர்க்கும் மருந்தும் உண்டோ.

#722
நோயுற்ற நுன் போல் குணம் ஒன்று இலன் ஆய யானும்
பேய் மற்று இவள்-தான் எனக் கண்டோர் பெரியவன்-தான்
நீ மற்று இது உண் என்று அறம் நல்க விளங்கப் பெற்றேன்
வாமத்து உண் நீயும் அது போலும் மருந்து இல்லையே.

#723
நோயைத் துணிந்தே உறும் நோய் முதல் நாடி அ நோய்க்கு
ஆய மருந்தே அறிந்து ஊட்டும் அஃது உண்டு காட்டின்
பாய மறுக்கும்படி ஆம் அது பல் உயிர்க்கும்
கூய் அத்தின் என்னை குரவர் உபதேசம் என்றாள்.

#724
சாதி முதலாப் பிணி-தாம் இவை அப் பிணியிற்கு
ஆதி அறியில் அவை தீ_வினை ஊண் அதனால்
தீது இன்றி இதனில் அழுந்தல் திரி தோடத்தினால்
வேதனை-அது தீர்ப்பது மெய்யுணர்வு ஆமே.

#725
மான் நின்ற நோக்கின் மற வேல் நெடும் கண்ணின் நல்லாய்
மேல் நின்ற எல்லாம் மிக நல்ல இ மெய்யுணர்ச்சி
தான் நின்ற தன்மை தவிராது உரைக்கிற்றியேல் நின்
நூல் நின்றவாறே பொருள் நோக்குவன் யானும் என்றான்.

#726
நின்ற விரலும் நிலை ஆழ்ந்து முடங்கல் ஆயின்
சென்று அ விரலும் எனத் தான் நின் கூற்றது ஆயிற்று
ஒன்று அ விரலே உறல் உண்மையும் இன்மையும் ஆம்
என்று அ விரலே இது என்றனள் வேல் கண் நல்லாள்.

#727
ஆழ்ச்சி ஒரு பாலது அல்லன தம்மோடு ஆழாது
ஏழ்ச்சி ஒரு பால் அது தன்னொடும் இன்னது என்னச்
சூழ்ச்சி அமைந்த துணை_தோளியர் சொற்கள் என்று
தாழ்ச்சி மனத்தால் இது தத்துவம் என்றனனா.

#728
பொய் நின்ற எல்லாம் புரைத்தாய் இனிப் பூரணன்னே
மெய் நின்ற பெற்றி அறிந்தாய் இதன் மேலும் நன்றாக்
கைந்நின்றும் உண்டும் கடைப் பள்ளி வழியும் ஆக்கிச்
செய் நின்று நீ செய் தவம்-தான் எனச் செப்பினளே.

#729
கல்லாது அறிந்த கடவுள் இறை ஆகும் மெய்ந்நூல்
சொல்லானும் அல்லன் அவன் சொல்லினது ஆகும் மும்மூன்று
எல்லாப் பொருளும் தம் பான்மை இயல்பும் ஏன்று
பொல்லாத போக்கி இனிப் பூரண சென்-மின் என்றாள்.

@7. சாங்கிய வாதச் சருக்கம்

#730
ஆங்கு அவன் சொல்ல அ அத்தினபுரத்துள்
ஓங்க ஒரு கொடி நட்டு உரைக்கிற்பவன்
ஆங்கண் எவர்க்கும் அறை என்று இருந்த அச்
சாங்கியன்-தன்னைத் தலைப்பெயச் சென்றாள்.

#731
சென்றாள் அவன்-தன் சிரத்தையைக் கண்டு ஓத
நின்றாள் அவன்-தான் நெறி பகர்கின்றனன்
பின் தான் பிரளையத்து ஆக்கமும் பேர்ச்சியும்
ஒன்றா வகையால் உரைகளை ஒட்டா

#732
பால் ஒத்து நின்ற பரமாத்துமனொடு
மூலப் பகுதியும் அல்லாப் பகுதியும்
மேல் ஒத்து இயன்ற விதி விகற்போடு
நூலில் கிடந்த அ நுண் பொருள் அன்றே.

#733
ஒருங்கு இருந்தார்கட்கு உடன் அவை எல்லாம்
பருங்கினன் மெய்யும் பராசரன்-தன்னை
விரும்பினள் போல வினவினள் அன்றே
அரும் கலம் ஆய அறிவினுள் மிக்காள்.

#734
என்னைப் பயந்தீர் இஃது என் எனக் கேட்டனள்
நல்_நுதலாய் இது என் நெறி என்றனன்
அன்னன் அஃது ஆயின் அறிவி எனச் சொல
இன்னன கேள் என்று எடுத்தனன் சொல்லும்.

#735
மன் உயிர் தெற்றென இல்லது மான் செருக்கு
என்னவும் இந்தியம் ஐந்து ஐந்து ஒரு மனம்
அன்ன தன்மாத்திரை ஐந்து ஐந்து பூதமும்
பன்னிய ஐ ஐம்பதப் பொருள் என்றான்

#736
எத்திறத்தின்னும் செய்யான் குணம் ஒன்று_இலன்
தத்துவன் இன்பன் அபேதன் அலேபகன்
நித்தியன் எங்கும் உளன் நெடும் காட்சியன்
துத்தல்_உடையன் என் தோன்றலும் என்றான்.

#737
நின்று பரந்து அருவாய்ப் பொறி ஏதும் மிக்கு
ஒன்று கிரிகை இன்று அப்பியத்தம் அது
சென்று செய் மானில் செருக்கு அத்தின் ஈர்_எட்டும்
அன்றியும் ஐ_வகைப் பூதமும் அன்றே.

#738
ஐ_ஐம் பொருளும் இவை இவை அல்லது
தையல் மடவரல் தத்துவம் இல் என
மையல்_உடையவர்க்கு ஆம் மற்றையார்க்கு இவை
பொய் என்று உரைத்தனள் போது அரிக் கண்ணாள்

#739
கதக் களி யானை முன் கல் எறிந்தால் போல்
பதப் பொருள்-தம்மைப் பழுது என்று உரைப்ப
மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி
உதப்பி என்னும் குற்றம் உரை எனக்கு என்ன.

#740
செய்யாது உயிர் எனச் செப்புகின்றாய் நின்னை
வையாய் உயிருள் அது அன்று எனின் வாக்கு இவை
மெய் ஆம் பிற செய்கை ஆதலினால் இவை
மை ஆம் இனி நின்-தன் மார்க்கமும் அன்றே.

#741
எத்திறத்தின்னும் செய்யான் அவன் என்றலின்
தத்துவம் சொல்லும் தலைமகன் ஆகிய
சித்தியும் இல்லாம் திருட்ட விரோதமும்
பொய்த்தல் உள்ளிட்டவும் புல்லும் மற்று என்ன.

#742
பெருமை உயிர்க்கு உரையேன் செய்கை பின்னும்
இருமை உயிர் எனது ஆம் இடை ஒன்றும்
கரும உயிரும் இவற்றினின் அன்றே
அருமை உடைச் செய்கை ஆக்கமும் என்றான்

#743
செய்யும் உயிர்களும் செய்யா உயிரும்
மெய்யின் உள எனின் மேற்கோள் அழிதலும்
பொய்யும் பொதியறைமையும் மற்று அல்லவும்
எய்தும் இதற்கு இனி என் செய்தி என்றாள்.

#744
சோம்பன் குணம்_இலன் தோன்றா ஒளிப்பினன்
ஓம்பற்கு அருமையின் உண்ணும் ஆற்றாமையின்
நாம் பின்னைச் செய்தது என் நன்கு அவன் இன்றியும்
போம் பொழுதேல் அவனால் பொருள் என்னோ.

#745
ஆண்டு அருவாய்த் தொழில் யாதும் இல் ஆயின்
வேண்டின் மெய் ஆதி விகிர்தி விகற்பொடு
தீண்டலும் ஒட்டலும் தேரின் இலாதவன்
காண்டற்கும் துத்தற்கும் காரணம் என்னோ.

#746
முத்தாத்துமனை முனிந்தோ அது அன்றிப்
புத்தாத்துமாக்-கண் புரிந்தோ விரிந்து எங்கும்
சித்தாத்துமனாய்த் திரிவு இன்றி நின்ற
சுத்தாத்துமனைச் சுழற்றுவது என்றாள்.

#747
பரமாத்துமனைப் பளிங்கு அடை போல
வரும் ஆத்துமாக்களின் மன்னும் விகாரம்
தரும் மாத்திரை அன்றித் தக்கது ஒன்று ஆக
ஒரும் ஆத்துமனை உரைத்திடுக என்றாள்.

#748
செல்லும் எனினும் சிதையும் செல்லான் என்று
சொல்லும் எனினும் முன் சொல்லிய தாம் எய்தும்
பல்லும் நுன் நாவும் பதையாது உரை அன்றி
எல்லுந்துணையும் இருவினை என்றே.

#749
யான் எனது என்னும் செருக்கினை ஈன்பது
மான் எனப்பட்டது மன்னும் ஓர் சேதனை-
தானினை ஆக்குதல் தக்கின்று அசேதனை
மேல் நினைத்தான் உரைத்தான்_அல்லன் என்றாள்

#750
மான்-தான் பகுதி வழித்தோ வழித்து அன்றித்
தான்-தான் பிறிது ஓர் பொருளோ இரண்டொடு
மூன்றாவது ஒன்று இனி இன்றா இருந்த இச்
சான்றார் அறியவும் சாற்று இனி என்றாள்.

#751
முதற்பொருளே ஆம் குணம் அது ஆகின்
அதன் பிறிது என்னின் அது மன்னும் உண்டாம்
இதற்கு இனி நீ சொலற்பாலது என் என்றாள்
சுதப் பொருள் மேல் நன்றும் சொல்லுதல் வல்லாள்.

#752
அருவாய் அகாரணமாய் அவ்வியத்தம்
உருவு ஆம் மறுதலை ஒப்பிக்கும் என்பாய்
மருவாத சொல்லினை மாதிரம்-தானே
பருவாய்ப் பதக படைத்திடும் என்னாய்.

#753
பகைக் குணம் ஆகிய பகுதி விகுதி
மிகைக் குணம் தோன்றும் நின் மேற்கோள் அழித்துத்
தொகைக் கணம் யாவையும் சூனியம் ஆமால்
நகைக் குணம் அல்லது நம்பலை என்றாள்.

#754
புத்தேந்திரியமும் கம்மேந்திரியமும்
பத்தேந்திரியத்தோடு ஒன்றாய்ப் படைத்தனை
பித்தேந்திரியமும் பேயேந்திரியமும்
குத்தேந்திரியமும் கொண்டிலை அன்றே.

#755
தந்திரம் ஆவன தாம் இடைத் தோன்றுவ
அந்தர ஆத்துமன் ஐந்து என வேண்டினை
சிந்தனை உள்ளிட்டுச் சீவன் குணம் எனின்
இந்திரன்-தானும் இணை நுனக்கு ஆமோ.

#756
கைகளும் காலும் இரு சார் இடக்கரும்
எய்திய வாக்கும் மற்று இந்தியம் ஆம் எனின்
செய்யும் புலனும் அறியும் அறிவும் மற்று
எய்த உணர்ந்து இங்கு எடுத்து உரை என்றாள்.

#757
காட்டியவாறு உம் கருமத்தின் ஆம் எனின்
ஊட்டும் முலையும் உதடும் புருவமும்
ஆட்டும் கவுளும் அற மெல்லும் பற்களும்
கூட்டி மிடறும் கொளக் குற்றம் என்னோ.

#758
ஐந்து தன் மாத்திரை-தாம் அணுவால் தொடர்
கந்தம் கண் ஆதியிற்கு ஆம் புலனே அவை
வந்து பெருகி வரிசையினால் மிகும்
புந்தியில் நால் வகைப் பூதமும் என்றாள்.

#759
ஒன்று ஆய்ப் பரந்து இ உலகும் அலோகமும்
சென்றாய்க் கிடந்தது அசேதனை-தான் என்றும்
அன்று ஆய் அருவு ஆயது அ ஆகாயமும்
என்றாள் எழில் நெடும் கண் இணை நல்லாள்.

#760
தான் அருவு ஆய பொருளதுவாம் ஒலி
மேல் மருவாது உருவு ஆதலினால் மெய்ம்மை
நூல் மருவாது சொன்னாய் இது என்றனள்
மான் மருவா அந்த நோக்கும் அரியாள்.

#761
பகுதியில் மான் இல்லை இஃதினும் அஃது இல்லை
தொகுதி செய் பல் குணம் தோற்றமும் இல் ஆம்
மிகுதி செய் பூதத்து மெய்ம்மை பெறாமல்
தகுதி இன்று அத்த நின் தத்துவம் என்ன.

#762
குருடனும் பங்குவும் கூட்டத்தில் கூட்டிப்
பொருள்-தமது ஆக்கமும் போத்தந்து உரைப்பின்
தெருடல் இலை அவர் செய்கை இல் செய்கை
இருள்-தன்னை இன்றி இவை எய்தும் என்றாள்.

#763
எவ்வகையின்னும் விகாரம் இலாப் பொருட்கு
இ வகை-தம்மை எடுத்து உரை என் செயும்
மெய் வகையால் ஒப்பு_இல் மேற்கோள் முதலிய
அ வகை எல்லாம் அழிவு உளது ஆமே.

#764
கூடியும் ஆகாக் குணத்தின நீ அவண்
பாடி உரைத்த உயிரும் பகுதியும்
பேடிகள் சாரினும் பிள்ளை பெறாமையை
நாடியும் காண் என்று நல்_நுதல் நக்காள்.

#765
இல் உளி இன்றி மற்று எங்கும் இவை முன்னும்
புல்லினவேயால் புணர்ச்சி புதிது எனச்
சொல்லினது என் செயத் தோற்றப்படு பொருள்
பல்லன-தாம் அவை பண்டும் உளவே.

#766
ஆடல் அழித்தல் படைத்தல் அடங்குதல்
வீடுபெற்று ஆங்கண் விளங்கும் நிலைமையும்
கூடிய ஐந்து குணத்தினன் ஆதலின்
நாடிய குற்றங்கள் நண்ணல என்ன.

#767
ஓதிய எல்லாம் ஒருவனின் அங்கு ஒரு
நீதி வகையால் நெறிமைப்படுதலும்
வாதுசெய்வார்கள் பிறராய் வருவதும்
ஊதியம் இல்லை ஒழி என்று உரைத்தாள்.

#768
யானை குதிரை முதலாப் படை குடி
ஏனைய தாங்களும் எல்லாம் அவன் எனின்
தான் என்றும் ஆள்வது தன்னை எனின் நங்கள்
கோன் இவன் ஆம் எனக் கூறினார் யாரோ.

#769
என்னை ஒழித்து இனி எல்லாம் அவன் எனச்
சொன்ன முறைமையன் ஆகும் அவன் எனின்
தன்னை ஒழித்துத் தபுத்து உடன் தின்றிடின்
பின்னை அவனை ஓர் பித்தன் என்னாமோ

#770
தன் கையின் தன் கண்ணைத் தானே பொதக் குத்தி
என் செயக் குத்தினை என்பார் பிறர் இல்லை
தன் கையில் தன் கண்ணைத் தான் பொதக் குத்துவது
என் செயவோ இதன் காரணம் சொல்லாய்.

#771
தன்னைப் படைப்பின் முன் தான் இன்மையால் இல்லை
பின்னைப் படைக்கின் படைக்கப்படுவதின்
முன்னைப் படைப்பு என் முடிவு இல்லை மூடனே
நுன்னைப் படைத்தவர் யார் இனி நோக்காய்.

#772
கொன்று கொன்றிட்டுத் தவம்செய்யின் அத் தவம்
பொன்றும் மற்று ஆதலின் அஃதும் பொருத்தம்_இன்று
தின்று தின்றிட்டுப் படைப்பின் தெருட்சி மற்று
என்றும் இலன் பெரிது ஏழையும் ஆமே

#773
ஓர்ப்பவன் சொல் அவன் ஊன் அவன் தீன் அவன்
தீர்ப்பவன் நோய் அவன் சீறுமவன் உயிர்
நீப்பவன் சாபவன் ஈப்பவன் ஏற்பவன்
பேர்ப்பவன் ஆயும் பெறுகின்றது என்னோ.

#774
நாயாய்க் கடிக்கும் நரியாய்ப் பல கொல்லும்
பேயாய்ப் புடைத்து உண்ணும் பெற்றமுமாய்க் குத்தும்
ஈயாய் நலியும் எறும்பாய்த் தெறும் எங்கும்
தீயான் ஒருவன் நின் தேவனும் என்றாள்.

#775
வீடு தலைபெற வெந்து நெஞ்சு ஆண்டிடத்
தாடி தவம்செய தன் கால் அழித்திடப்
பாடிய கையில் படைக்கும் இவன் எனின்
மூடர்-கண் தேற்ற முடிவும் உண்டாமோ.

#776
நித்தியம் ஆய பொருள் நின ஆதலின்
வித்தினுள் உண்டு என வேண்டுதி நீள் பனை
எத்துணையோ அது என்னின் நுன் கைக்குள்
இத்துணை உண்டு என்பது என்னை-கொல் ஏழாய்.

#777
இப்பொழுது இல்லை எதிரதற்கு உண்டு எனின்
அப்பொழுது உண்மையும் இன்மையும் ஆக்கின்
எப்பொருள்-தாங்களும் இன்னனவே எனச்
செப்பினள் தத்துவம் சே அரிக் கண்ணாள்.

#778
உருவோடு அருவம் ஆகாயமும் மூன்றும்
இருபதின் மேலும் ஐந்து ஆக இசைத்தனை
அருவோடு அலோகம் அசேதனம் மூன்றில்
செருவோடு உரிமையில் சேர்பவும் அன்றே

#779
ஒன்று ஒன்றின் ஒன்றி உலகு உள் வழி எங்கும்
சென்று அவன் உண்மை பகுதி இது மன்னும்
என்றனை எண் முறை அன்றி மற்று ஈண்டுபு
நின்றன ஈறா நிலம் முதல் நான்கே.

#780
பத்தனை ஆய் நின் பரமாத்துமனையும்
சித்தனை ஆகக் கருது இயல் சீவன்கட்கு
அத் தன்மை ஞானமும் என்னாய் அவனுக்குத்
துத்தலும் காண்டலும் சொல்லினை அன்றோ.

#781
வண்டு ஆர் குழல் பெயர் மாண் இழை இற்று எனக்
கொண்டேன் என அவன் கூறினன் கூறலும்
பண்டேல் அறி எனப் பராசர நீ இனிக்
கண்டாய் எனச் சொல்லிக் காட்சி கொடுத்தாள்.

#782
ஐந்தும் இருபதும் ஆகிய சொற்பொருள்
தந்து இவை அல்லது தத்துவம் இல் என்ற
சிந்தை ஒழித்துச் சினவரன் சேவடி
வந்தனையேசெய்து வாழி நீ என்றாள்.

@8. வைசேடிக வாதச் சருக்கம்

#783
ஆட்டினாள் அவனையும் ஆக்கிச் செல்பவள்
வீட்டின் ஆர் நெறி என விரித்த மேலையோர்
காட்டினார் பலருளும் கணாதனே எனும்
ஈட்டினான் உலோகனது இடத்தை எய்தினாள்.

#784
வனப்பு உடை மாதரைக் கண்டு மா தவன்
சினப்பு உடைக் கருத்தினள் என்னச் சிந்தித்தே
நினக்கு இனி நெறி-வயின் நின்ற மெய்ம்மையை
மனக்கொளக் கிளக்குவேன் மன்னும் கேள் என.

#785
நெறி எனப்படுவது நின்ற மெய்ம்மை அங்கு
அறிதலுக்கு அரியன ஆறு சொற்பொருள்
செறிய யான் சொலின் திரப்பியம் குணம் தொழில்
பொறியினாய் பொது சிறப்பு உடன் புணர்ப்பு அதே.

#786
பூதம் ஐந்தொடு திசை மனம் பொழுது உயிர்
ஓதின் அப் பொருள்கள்-தாம் ஒன்பது ஆம் அவை
நீதியில் குணம் அவற்று இயல்பு செய்கையும்
போதரும் பொருள் புடை பெயர்ச்சி ஆகுமே.

#787
பெரியதும் பின்னதும் ஆயது அப் பொது
உரிதினில் பொருள்களைச் செலுத்தும் ஒற்றுமை
தெரிவுற வருவது சிறப்பது ஆம் குணக்
கிரியைகள் இதற்கு எனக் கிளத்தல் கூட்டமே.

#788
ஆறின் முதல் மூன்று அத்தி மற்று அவற்று
ஈறின் மும்மையும் இன்மையை எய்தின
கூறின பொருள்களும் குணனும் செய்கையும்
வேறு என விரித்தனன் விசேடவாதியே.

#789
தத்துவம் இவை எனத் தலையும் தூக்கினாட்கு
ஒத்தது அன்றோ என உரை நல்லாய் இனி
இத் தவம் இப் பொருள் தேறி யான் செயின்
பொய்த் தவம் ஆதலின் போவன் என்னவே.

#790
மெய்ந்நெறி இது என விரிப்பக் கேட்டிருந்து
இ நெறி அமைதி_இன்று என்னும் சொல்லினாய்
பொய்ந்நெறி ஆதலைத் தேற்றிப் போகு எனக்
கைந்நிறுத்தாள் அது காட்டக் கேள் என.

#791
நிலம் முதல் பூதமாய் நின்ற நான்மையும்
குல முதல் மூர்த்தியாய்க் கூறின் ஒன்று அவை
அல முதற்பொருள்களாய்ப் பன்னினாய் அவை
வல முறை இட முறை வருதல் காட்டுகோ.

#792
உரியது ஓர் நீர் அணைந்து உப்பு அது ஆகும் நெய்
எரி எழும் உளர்ச்சியால் இரைக்கும் காற்றது ஆம்
பெரியது ஓர் உருமும் நீர்ப் பிண்டம் வந்தும் நீர்
வரிசையின் படலமாய் வந்த அல்லவோ.

#793
ஒலி-அதன் குணம் என உரைத்தி ஆதலால்
வலி உடை நிலை_இல மற்று எப் பூதமும்
ஒலியொடு முதல் தம்முள் புல்லல் இன்மையால்
கலி செயல் ஒழிக நின் காயம் என்றனள்.

#794
சுட்டின திசைத் திறம் சொல்லில் சூரியன்
பட்டதும் எழுந்ததும் பற்றி நான்கும் ஆய்
எட்டு எனப் பல என இன்ன தன்மையால்
கட்டினர் வழங்கினும் காயம் எய்துமே.

#795
மண்டிலம் பலரையும் நிறுவி மத்திமம்
கொண்டு நின்றான் திசை கூறு-மின் என
எண் திசை அவன்-வயின் பிறக்கும் என்பவேல்
கண்டிலம் நின் பொருள் காட்ட வல்லையோ.

#796
அத்திசையவனுமா அல்லனும் என
எத்திசையவர்களும் இசைப்பின் ஏகம் நீ
பத்திசெய்து இனி என்னைப் பரமன் பாதமே
சித்தியும் முடிவு எனச் சேர்ந்து வாழ்தியே.

#797
மன்னும் அ மனம் எனப்படுவதாவதே
இன் உயிர் உருவினோடு இயைந்த ஒற்றுமை
இன்னும் அக் காலமும் இருமைத்து ஆகலின்
நின்னுடைப் பொழுது அவண் நிற்றல் இல்லையே.

#798
குணங்களும் தொழில்களும் கூறி வேறு எனின்
பிணம்-தனைச் சீவனாய்ப் பெற்றது என்னையோ
உணர்ந்திலன் உரையும் ஒன்றிலன் எனின் உறுதி நாம்
புணர்ந்திலம் அவன்-வயின் போந்தது இல்லையே.

#799
எப்பொருள் எக்குணத்தானும் இல்லையேல்
அப் பொருள் அக் குணத்து அயலது ஆதலால்
செப்பில் அக் குளிரினால் தீயது உண்மை போல்
துப்பு எனப் பொருள்களும் தோற்றம் இல்லையே.

#800
குணத்தொடு குணிகளைக் கூறி வேறு எனப்
புணர்ப்பது ஓர் பொருளினை வேண்டின் பொய் எனின்
குணத்தொடு குணிகளும் கூட்டம் இன்மையால்
உணர்த்துதற்கு அரிது அவை உளவும் அல்லவே.

#801
ஒன்பதும் தத்தமது உண்மையால் பல
என்பதும் எனைத்து என எண்ணப்பட்டதும்
வன்பு இதன் குணம் இது என்னப்பெற்றதும்
அன்பு அதற்கு உடைமையின் அறியப்பட்டதே.

#802
அதனது குணம் அதற்கு அயல் ஆதலால்
இதனது குணம் என இழுக்கிற்று என்னையோ
உதனமும் உணர்வு இலை ஒன்று அது என்றக்கால்
விதனமும் படாய் அது மெய்யும் ஆகுமே.

#803
கெடக் கெடும் பொருள் எனில் கேடும் உண்டு எனப்
படப்பெறும் அதற்கு நீ பரிவது என்னையோ
அடக்கும் தன் தோற்றமும் ஒட்டி மும்மையும்
அடக்கிலும் அது பெரிது அழகிது ஆகுமே.

#804
குணங்கள்-தாம் குணி எனும் கூற்றும் உண்மையின்
பிணங்கலாய்ப் பொருள்-வயின் பேறும் உள்ளதே
இணங்கலாய் இருமையது இன்மை உண்மையும்
வணங்கல் ஆம் வகையது ஓர் மாட்சி மிக்கதே.

#805
பண்பினால் பொருள்களுக்கு ஆய பல் பயம்
செண்பினான் அறிவினான் செறிவினான் என
மண் பொனால் குண நிலைக்கு ஆய மாட்சியாம்
நண்பினான் அல்லது நடத்தல் இல்லையே.

#806
விலைபெறும் நன்மையால் வெறுப்ப தீமையால்
கொலைபெறும் களவினால் குணத்தின் அக் குணம்
நிலைபெறும் பொருளினால் நின்ற ஒற்றுமை
அலைபெறும் வேறு எனின் ஆவது இல்லையே.

#807
நல்_வினைப்படுதலும் தீ_வினைப்படுதலும்
பல் வினைப் பாகினால் பயங்கள் எய்தலும்
இல் வினைக் குணங்கள்-தாம் என்றும் வேறு எனின்
சொல் இல சுழற்சியும் வீடும் தோற்றமே.

#808
ஆட்டு_உடையாள்-தன ஆடல்-தாங்களும்
ஓட்டு உடைக் குதிரையும் ஓட்டும் என்று இன்ன
கூட்டிய அப் பொருள் கொடைய ஆதலான்
மீட்டு அவை ஒன்று என வேண்டல் வேண்டுமே.

#809
கூத்தர் ஆடலும் குதிரை ஓடலும்
ஓத்து உரை உள்பட ஒழிந்த யாவையும்
நீத்தனவே அல்ல நிலையும் உண்மையில்
போத்தரல் வேண்டின் அப் பொழுதின் ஆகுமே.

#810
பிணங்கலவாய்த் தம்முள் பிறகள் ஆகிய
குணங்களும் தொழில்களும் குழுமிக் கெட்டன
புணர்ந்து உடன் பொருள்-வயின் போந்தவாறும் நீ
உணர்ந்திலை அதுவும் நின்னுடையதே பிற.

#811
பொது எலாப் பொருளொடும் பொருந்தி நின்றதேல்
அது எலாப் பொருள்களை ஆக்கும் ஒற்றுமை
இது அலால் அவை தம்முள் இயைதல் இல்லையேல்
செதுவல் ஆம் பிற அது சென்றது என்றலே.

#812
அன்றியும் பொதுவது அந்தம்_இல் பொருள்
சென்றதே என்றலால் சிதர்ந்து பன்மையாய்க்
குன்றியும் கூடியும் நின்றும் கொள் பயம்
இன்றியும் போதலால் என்னை ஆயதோ.

#813
பொது எனப்படுவது ஓர் போலி ஆதலால்
பொது எனப்படுவன போன்ற தாங்களே
அது என மீட்டு இருந்து ஆறு என்று எண்ணுவாய்
இது என என்னை இங்கு இதனோடு ஏழு எனாய்.

#814
சிறப்பு எனப்படுவது தெரியின் அப் பொருள்
அறம் பெற நின்ற அக் குணமது ஆதலின்
இறப்பவும் இது-தனது இன்மை ஏயினாய்
புறப்படுத்திடுவன் உன் பொருளுள் எண்ணலே.

#815
கூட்டினால் அல்லது கூட்டம் இல்லையேல்
கூட்டுவான் செல்வதும் கூட்டம் இல்லையே
பாட்டினால் பலவும் ஆம் பயம் இலாதன
மூட்டினால் உரைத்தியோ முனிவு போக்கு இதோ.

#816
கொக்கொடுக் கருமையைக் கூட்டுவித்தலும்
சுக்கொடுத் துவர்ப்பினைத் துன்னுவித்தலும்
சிக்கென வேற்றுமை தீர்ப்பி நீ என
நக்கனள் அளியனோ நயவன் என்னவே.

#817
என்றும் அப் பொருள்களும் இயல்பும் தங்களோடு
ஒன்று என வருதலால் ஒன்றும் ஆகுமே
என்றலின் இருமையும் தெரியின் இன்மையால்
இன்று இனிக் கூட்டுவது இல்லை இல்லதே.

#818
ஒன்று நல் பொருள்கள்-தாம் குணங்கள்-தாம் பல
என்றும் நீ ஏகம் வேறு என்பது என் எனப்
பொன்றும் அக் குணம் எனின் பொருட்கும் ஆம் என
நன்று இனிக் குணம் உண்மை நாட்டம் ஆம் என.

#819
குணிக்கணால் நோக்கினால் குணங்கள் இல் குணத்து
அணிக்கணால் நோக்கினால் அதுவும் அன்னதே
பிணிக்கல் ஆம் பிரிக்கல் ஆம் பெற்ற நான்மையின்
துணிக்கலாம் துரு நெறி துன்னும் நன்மையே.

#820
இல்லை அக் குணம் குணிக்கு உண்மை-தான் எனச்
சொல்லின் அக் குணி குணத்து ஒன்றும் ஆதலால்
அல்லது அக் குணங்களும் அவைகள் ஆம் என
நல்லது இத் துணிவு என நயத்தில் எய்தினான்.

#821
பொருளொடு அக் குணம் தொழிற்கு உண்மை ஒன்று எனத்
தெருள்வதும் மும்மையின் தெரியவைப்பதும்
அருள் உடை அற நெறி அண்ணல் சேவடி
இருள் கெட நினைத்தலும் இனையை ஆகு என.

#822
ஓம்படுத்து உலோகனை ஒழியச் சொல்லி யான்
காம்பு உடைக் கட நெறி கடப்பன் என்னவே
பேம்படுப்பவரொடும் பிரிவு இன்னாமையைத்
தேம்படு கிளவி நீ சிந்தி என்னவே.

#823
ஒக்கும் அ உரை என உள்ளதே என
நக்கனள் ஆகி அ நாதன் சேதியம்
சிக்கென ஏத்துதல் சிறந்தது என்னவே
தக்கது என்று அவன் சொலத் தானும் நீங்கினாள்.

@9 வேத வாதச் சருக்கம்

#824
காதம் பலவும் கடந்த பின் காகந்திக் கடி நகருள்
வேதமும் அங்கமும் விச்சைகள் நிலைமையும் வேண்டுநர்கட்கு
ஓதவும் கேட்பவும் உரைத்தலின் உலகினுள் அறியப்பட்டான்
பூதிகன் எனப்படும் அந்தணன் ஓத்திடம் புக்கனளே.

#825
என்னை இங்கு நும் பொருள் என வினவலும் இ இருந்த
அன்னை-தன் வரவு இதேல் ஆதி_இல் அரு மறையது முதலாப்
பின்னை வந்தனகளும் இவை எனப் பையவே பெயர்த்து உரைத்தான்
முன்னம் அங்கு இருந்த ஓர் முதுமகன் அவை-தன் முறைமையினே.

#826
நாத்திகம் அல்லது சொல்லலை ஆயின் முன் நான் பயந்த
சாத்திரமாவது வேதம் அன்றோ அது-தான் சயம்பு
சூத்திரி நீ அது அல்லை அலாமையின் சொல்லுகிலாய்
போத்தந்தியோ அதன் தீமை என்றான் பொங்கிப் பூதிகனே.

#827
பூதிகன்-தான் அது சொல்லலும் யான் அது வல்லன் எல்லாம்
சாதி கண்டாய் எனத் தான் தளராது சாற்றுக என்றாட்கு
ஆதி என்றானும் ஓர் அந்தம் என்றானும் உண்டேல் அதற்கு
நீதியினால் உரை நீ இனி யான் அது நேர்வன் என்றான்.

#828
செய்கையும் புதுமையும் உடைமையின் திருட்டத்தின் மறுதலையின்
பொய்யொடும் பொருளொடும் குவகொடும் சாலவும் பொருந்துதலின்
மையறு மயக்கமும் மாற்றொடு கொலை மன்னும் மருவுதலின்
ஐயம்_இல் தீ_கதிச் செலுத்துவது அது என்னை ஆவது என்றாள்.

#829
யார் அது செய்தவர் அறியில் இங்கு உரை எனில் அங்கு ஒருவன்
ஊரது நடுவண் ஒரு உறையுளில் மலம்பெய்திட்டு ஒளித்து ஒழியின்
பேரினும் உருவினும் பெறல் இலன் ஆதல் இன்றாக் குறித்துத்
தேரினும் இனி அது செய்தவர் இல் எனச் செப்புவவே.

#830
தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி
ஆற்றவும் ஆயிரு வேதம் வல்லார்கள் அஃது அறிந்து உரைப்ப
மேற்குலத்தாரோடு இழிந்தவர் என்பது மெய்ம்மைபெறா
நூல் திறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு_உடையவரே.

#831
முயற்சியின் இசைத்தலின் எழுத்தினில் பதத்தினில் முடிவதனால்
செயற்படல் உடையதன் இயற்கையின் செய்தவர் பெயர் பெறலால்
இயற்கையது அன்று நின் வேதம் என்று ஏதுவின் எடுத்துரைத்தாள்
புயல் திறல் இகலிய கூந்தலின் பெயர் உடைப் புலமையினாள்.

#832
கதியவர் தம் பெயர் இன்னவை சுட்டின காட்டலினும்
முதியவர் நாள்களொடு ஒப்பு_இல இப்பொழுது ஒத்தலினும்
விதி அது ஆதலின் வேதத்தை யாம் சொல்லும் கீதத்தைப் போல்
புதியதுவே எனச் சொல்லுதும் நாம் அது பொருந்தும் என்றாள்.

#833
கொல்வது தீது எனப் பொருள் வழி வேள்வியில் கொலப்படுவ
எல்லை ஒன்று இலது என்ப இணை_விழைச்சு ஒழிக என்ப அ முகத்தால்
செல்கதி உளது என்ப தீர்த்திக நெறி என்றும் தீய என்று
பல்லவர் துணிவும் எம் வேதத்தின் உள எனப் பயின்று உரைப்ப.

#834
சாதிக்-கண் பயவா தவப் பயம் தரும் எனத் தந்து உரைப்ப
ஆதிக்கணான் வழி நால்வரது அமைதியை அமர்ந்து உரைப்ப
சூதித்த தோற்றமும் பிழைப்பு எனச் சூத்திரப் பிறவி கொள்ளார்
வாதித்தவாறு என்று தெருண்டவர்க்கு இவையிவை மயா மயக்கே.

#835
மறுதலை தத்தம் உள் ஆக்கி மயக்கமும் செய்தமையால்
பெறுதலை என்னை-கொல் தத்துவம்-தனை அன்று பேறும் உண்டே
உறுதியும் சால்பும் உடையன யாவையும் உண்மையினால்
செறுதலையே இல்ல சீர்த்தன செய்விக்கும் சிட்டி இதுவே.

#836
வசுக்களொடு உருத்திரர் பிதிரரோடு இவர் முதலாப் பலர்க்கும்
பசுக்களோடு எருமைகள் குதிரைகள் புலியொடு நாய் முதலா
இசுக் கழிந்தன பல கொலைகளும் இரங்கலிர் கொன்று அவரை
அசிப்பவர் போன்றனிர் ஆயினும் அரு வினையாம் நுமக்கே.

#837
தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளில் தீ_வினை-தாம்
மேவர அல்லன வேண்டுவல் யான் என வேண்டுதியேல்
யாவரையும் நுதலியும் அவரவர் செய்தன அவரவர்க்கே
யாய் வரின் அடையும் அ அரு வினை நுமக்கு அறிவு அரியது என்றாள்.

#838
ஊட்டுதும் யாம் என்று நுமர்களை நுதலி ஓர் சாலை வைத்தால்
வீட்டின் அங்கு இடல் இன்றி வினை நிலை நுமக்கு அறிவு அரியது போல்
கூட்டி மற்று அவர்களை நுதலிய கொலை வினை-தங்களையும்
காட்டுகில்லார் அவர் தாம் அவை அறிவது ஓர் கணக்கிலரே.

#839
சிறந்தவர்-தங்களுக்கு எய்துக சென்று என்னும் சிந்தையராய்
அறம் பல செய்தவர்க்கு அல்லது அங்கு அவர்களுக்கு ஆகும் என்றால்
துறந்தவர் வீடுபெற்றார்களை நுதலிய தொடர் வினையும்
பிறங்கி இப் பிறவியில் போக்கும் மற்று இவை என்ன பேதைமையே.

#840
நண்பரை நுதலியும் பகைவரை நுதலியும் அமிர்தொடு நஞ்சு
உண்பவர்க்கு அல்லது அங்கு அவர்களுக்கு ஆம் என உரைக்குநர் யார்
பண்பு_இலி தேவரை நுதலிய கொலையினில் பல் வினை-தான்
உண் பல வகையினின் அடைந்தவை விளையுங்கள் நுமக்கும் என்றாள்.

#841
கொன்றவர்க்கு அல்லது நுதலப்பட்டார்களைக் கூடலவேல்
தின்றவர்க்கு யாவையும் தீ_வினை சேரல தேவர்க்குப் போல்
என்று உரைப்பாய்க்கு எய்தும் ஏழைமை உண்குவவேல் இமையார்க்கு
ஒன்றுவியேன்_அலனோ வினை ஊன் தின்பவர்க்கு ஒப்ப என்றாள்.

#842
ஈகளும் நாய்களும் கொன்று அவர் ஈவ கண்டு இன்புறலின்
தீயவையே செய்யும் தேவர் அத் தீ_வினை தீர்க்கிற்பவோ
நோய்களும் பேய்களும் ஒழிக்குவம் எனின் அவை நுங்களுக்கும்
ஆய்விடின் உணரின் அஃது ஆம் வினை அகற்றுதற்கு அரியது என்றாள்.

#843
நம் உறு துன்பங்கள் நாம் ஒழிக்கல்லலம் பிறர் உறுப
எம்முறையாயினும் போக்குதற்கு அரிய இங்கு இவர்களைப் போல்
தம் உறு துன்பமும் தாம் ஒழிக்கில்லலர் பிறர்களையேல்
எம்முறை நோய்களும் செய்குப அவர் என இகழ்ந்தனளே.

#844
நாம் கொன்று கொடுக்கும் அ விலங்கினை நலிவது ஓர் பசியினரேல்
தாம் கொன்று தின்குவராய்விடின் அவர்களைத் தவிர்க்குநர் யார்
தீங்கு ஒன்றும் உரையன்-மின் தேவர் தம் ஊணினைச் சேண் நின்று தாம்
வாங்குதல் அல்லது முடையொடு சோறு உண்ணும் வயிற்றினரே.

#852
பொய்த்து உரையாம் நன்மை போதுவதேல் இல்லை பூதிகனே
சத்தியமே உரை நீ எனத் தானும் அஃதே உரைத்தான்
எத்திசையார்களும் ஏத்துதற்கு ஏற்றனன் இவனும் என்றார்
தத்துவரே நின்று தத்துவர் எனப்படும் தன்மையினார்.

#853
நன்_பொருள் ஆவன இவை என அவனோடு நகரத்துள்ளார்
இன்புறும் வகையினில் எடுத்தனள் உரைத்த பின் விடுக்கலுற்றாட்கு
அன்புபட்டவர்களும் அற நெறி அறிவித்த ஆர்வத்தினால்
பின்பு சென்று ஒழிதும் என்று அது செய்து வலம்கொண்டு பெயர்ந்தனரே.

@10. பூத வாதச் சருக்கம்

#854
வேத வாதம் வெளிறு செய்தாள் அங்கு ஓர்
பூதவாதியும் பொங்கினன் மேல் செல
ஆதவாதி இவனை அடக்கினால்
ஏத ஊதியம் இல் என எண்ணித்-தான்.

#855
நில் அப்பா இனி நீ கண்ட தத்துவம்
சொல்லற்பாலை இங்கு என்னலும் சொல்லுவான்
மல்லல் தானை மதனசித்தன் எனும்
கல் ஒத்து ஓங்கிய தோள் களி யானையான்.

#856
அணி கொள் ஆரத்து அரசு அவை கேட்க எனப்
பிணி கொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான்
குணி குணம் எனும் கூற்று_இலனால் அது என்
துணிவு ஐம்_பூதங்களே தொழில் சொல்லுவேன்.

#857
திண்ணென் தீ நிலம் நீர் வளி காயத்தால்
கண்ணும் மூக்கொடு நா மெய் செவிகளாய்
வண்ணம் நாற்றம் சுவையினொடு ஊறு ஒலி
எண்ணுங்காலை இயைந்துழி எய்துமே.

#858
ஐந்தும் கூடி அறிவு இன்பம் ஆதியாய்
வந்து தோன்றி மது மயக்கு ஆற்றலின்
நந்தி நாளும் குடம் சுடர் நாட்டம் போல்
சிந்தினால் அவை சென்று இனம் சேருமே.

#859
உலகு எலாம் அவையே உயிர் உண்டு எனச்
சொல வலார் அன சொல் தெளிந்தே நின்று
பல கலாங்களும் செய்வ பயன் இலார்
புலவர் ஆவது அன்றோ அங்குப் போந்ததே.

#860
சென்ற காலத்தும் செல்கின்ற காலத்தும்
நின்ற காலத்திலும் இ நிகழ்ச்சியே
என்றும் இ உலகு இத் தன்மைத்தே இது
அன்றது என்று உரைப்பார் அயர்ப்பார்களே.

#861
இட்டம் ஆவது இது எனக் கேட்டவள்
சிட்டர் அன்றியும் சென்றிருந்தார்க்கு எலாம்
ஒட்டி மீட்டும் உரைத்து உளம்-தான் கொளீஇக்
கட்டுரை எடுத்தாள் கயல்_கண்ணினாள்.

#862
வினையின் நீங்கி விளங்கிய ஞானத்து ஓர்
முனைவன் இன்மையினான் முதல் நூல் இல்லை
அனைய மாண்பினது ஆகமம் ஆதலால்
புனைவன் நின் உரை பொய் எனச் சொல்லியே.

#863
கவைத்த கோலொடு கட்டில் கடிஞை காத்
தவத்திற்கு ஒத்தன தாங்கின் இத் தாபதம்
அவத்தமே பிற ஆர்_உயிர் இல்லையேல்
சுதத்தினால் உய்த்தல் சூது அது ஆகுமே.

#864
பூதம் அல்லது பொய் பிற நூல் என்று
வாதம்செய்து வருந்தி முடிப்பது என்
நாதன் நல் நெறி நல் வினை நற்பயன்
யாதும் இல்லை எனின் அஃது அவத்தமே.

#865
யாதும் இல்லை உயிர் இவை யாம் சொல்லும்
பூதமே எனப் போந்திருந்து என்னொடு
வாதம்செய்கின்ற பூதம் அ வாதமோ
யாது ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் அஃது இனி.

#866
அளித்த ஐந்திற்கு அறிவு இன்பம் ஆக்குவான்
களித்தற்கு ஆற்றல் உடையன காட்டினாய்
களித்தல் காரண காரியம் மூர்த்தியால்
ஒளித்து நின்ற உணர்வு உருவு என்றியோ.

#867
உருவின் காரியமேல் உரு என்று உணர்
அருவின் காரியமேல் அ ஆகாயக்கு ஆம்
ஒருவன் காரியம் அன்று உணர்வு என்கின்றாய்
மருவும் காரண காரியம் மற்று எனோ.

#868
வையும் மண்ணும் மயிரும் மலமும் ஓர்
பையுள் வைக்கப் பளிங்கும் பயக்குமோ
பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம்
செய்யும் என்பது சிந்திக்கற்பாலதோ.

#869
கள்ளப் பூதமும் காமிக்கும் பூதமும்
வள்ளல் பூதமும் அல்லவும் அல்லவாம்
உள் அப் பூதம் ஒன்று ஆக்குவது உண்மையைக்
கொள் அப் பூதக் குணம் அவை அல்லவே.

#870
பொறி ஐந்தால் ஐந்து பூதத்தின் ஆகிய
அறிவு ஐந்தால் ஐந்தும் அ ஐந்திற்கு ஆகுமோ
பிறிது ஒன்றோ பொருள் பெற்றி மற்று இற்று எனக்
குறிகொண்டாய் ஒன்று கூறு எனக்கு என்னவே.

#871
ஒன்றன் காரியம் ஒன்று என ஒட்டினும்
சென்று எலாம் அவை சேதனை ஆகுமே
அன்று எலாம் அவை ஆக்கம் ஒன்றே இனி
என்றலானும் அஃது இன் உயிர் எய்துமே.

#872
அனைத்துப் பூதமுமே அறிவு ஆக்கினால்
மனத்துக்கு இன்னும் ஓர் பூதத்தை மன்னும் நீ
நினைத்துக் காண் அன்றி நேடியும் காண் ஐயா
எனக்கு நீ செய்வது இத்துணையே இனி.

#873
பிண்டம் ஆகிப் பிறந்தன யாவையும்
உண்டும் கண்டும் உணர்ந்தவும் செய்தவும்
கொண்டு மீட்டு அவை கூறுதல் கூறுங்கால்
கண்ட பூதத்துக் காரியம் என்றியோ.

#874
பிறந்த நாள்களுள் பிள்ளையும் அல்லவும்
அறிந்து தாய் முலையோடு அல்ல உண்டிகள்
அறிந்த ஆறு என்-கொலோ ஐந்து பூதமும்
செறிந்த நாள்களுள் செய்வன அல்லவால்.

#875
புத்தியான் இன்றிப் பூதத்தின் ஆயவேல்
பத்தும் அல்லவும் பன்றிக்கும் நாய்கட்கும்
ஒத்தது அன்மைய பன்மைய குட்டிகள்
வித்தின் ஆய வினை விகற்பாம் பிற.

#876
குறைந்து பூதங்கள் கூட்டம் உண்டாம் அவண்
உறைந்த பூதத்து உணர்வு அல்லது இன்மையால்
அறைந்த பூதங்கள் ஐந்தும் அங்கு இல் எனின்
மறைந்த பூதத்தில் உண்மை வந்து எய்துமால்.

#877
நீரும் காற்றும் அல்லால் நிலம் இல்லையோ
ஊரும் சங்கினோடு ஊர்மச்சி மூக்கு இல
தேரி உண்டலின் தீயும் உண்டு இல்லை கண்
காரியம் செவி காணலம் காயக்கு என்.

#878
ஒன்றொன்றாக உணர்ச்சி முறைமையால்
சென்று பூதங்கள் சேர்வதற்கு ஏது என்
குன்றித் தத்தமுள் யாவையும் கூடுமேல்
நின்ற மெய்ம்மை நினது என நேர்வல் யான்.

#879
ஐந்து பூதம் அவற்று அவற்றால் ஐந்து
இந்தியங்கள் இயையும் இவை எனும்
சிந்தனை ஒழி நீ எனச் செப்பினாள்
உய்ந்து வாழும் உயிர் உண்மை ஒட்டினாள்.

#880
உணர்வும் இன்பமும் ஓரறிவு ஆதிக்-கண்
புணருமே எனின் பொய் தொகைக்-கண் எனல்
உணர்வும் இன்பமும் உள் வழியே உயிர்
புணரும் என்றனள் போது_அன_கண்ணினாள்.

#881
காற்றினால் உடம்பு ஆம் எனின் காற்றினே
தோற்றினால் உயிர்-தான் தொகை என் செயும்
மாற்று இ ஐந்தினும் ஆர்_உயிர் ஆம் எனும்
மாற்றம் ஆயின் மனம்கொளற்பாலதே.

#882
வேறு வேறு ஐந்து பூதமும் மெய்ம்மையால்
ஈறும் தோற்றமும் இல் உயிர் ஆயின
பாறி யாவையும் பாழ்த்து ஒழியும் எனக்
கூறினாய் அது குற்றம் உடைத்து அரோ.

#883
குழவிக் காலத்துக் கூறின யாவையும்
கிழவுக் காலத்துக்-கண் அவை கேட்டலால்
இழவு எக்காலும் இலான் இனியார்களைத்
தொழுவிப்பான் அங்கு ஓர் தோன்றலும் தோன்றுமே.

#884
துன்பம் தூய்மையும் துட்கென உட்கலும்
அன்பும் மானமும் மாயமும் ஆண்மையும்
இன்பும் என்று இவை ஆக்கியது ஈது என
முன்பு நின்றும் உறுக்கவும் வல்லையோ.

#885
கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள்
வினவு சோதிடம் கேட்டு உரை புட்குரல்
அனகள் யாவையும் என்னை நின் பூதங்க
ளன-கொல் நீ இங்கு அறிந்தனை சொல் என.

#886
வைத்த வத்து மறுபிறப்பில் தமர்க்கு
உய்த்துக் காட்டுதலேல் உலகு ஒட்டுமால்
எத்திறத்தினும் இல் உயிர் என்றி நீ
செத்துவம் எய்தின் சில்லைமை செய்பவால்.

#887
பேயும் இல்லை பிறப்பதும் இல் என்பாய்
வாயும் கிள்ளிப் புடைப்ப வருவது என்
மாயத்தால் அன்றி மந்திரத்தால் தெய்வம்
கூயக்கால் அறம் கோடலை ஒட்டு என.

#888
ஒட்டினேன் என்று உரைப்ப உணர்வு இலா
முட்டை காண்க என முன்கை முறுக்கியே
சுட்டினாள் அங்குத் தோற்றமும் நோக்கு என
விட்டுத் தான் தன் விகுர்வணை காட்டுவாள்.

#889
கழுதும் காணலர் ஆகிக் கலங்கியே
அழுதும் சாப அகல்_இடத்தார் இவன்
முழுதும் காணின் முடியும் என முன்னி
வழு_இல் வாயும் வளை பல்லும் தோற்றலும்.

#890
கண் புதைத்துக் கவிழ்ந்தனன் வீழவே
திண் பதத்தில் தெருட்டி எடுத்து இரீஇப்
பண்பு தக்கன சொல்லிப் பரியல் நின்
நண்பு அது என்று நடுக்கமும் தீர்த்த பின்.

#891
பேய் கண்டாய் அதன் பெற்றி உரை என
வாய் கண்டேன் என்னை வாழ்க்கை வலியன்-மின்
நோய் கொண்டேன் என அஞ்சல் நுனக்கு அவள்
தாய் கண்டாய் என்றும் சாதல் இல்லை என.

#892
பெற்ற பேரும் பிசாசிகன் என்பதே
அற்றம் இன்றி அவட்கு மகனை நீ
குற்றம் இல் அறம் கொள்ளின் மற்று எம்மொடு
சுற்றம் ஆதலின் சொல் எனச் சொல்லுவான்.

#893
பிறப்பும் பேயும் முதலாப் பிறகளும்
திறத்தின் நீ சொன்ன யாவையும் தேறி நின்று
அறத்தை யானும் அமைவரக் கொண்டனென்
மறக்கலேன் இனி மன் உமை யான் என.

#894
பேம் தரு தோற்றப் பிசாசிகன் இற்று என
வேந்தும் அ வேத்தவையாரும் வியப்பு எய்தி
ஆய்ந்த கேள்வியினாளை ஐ ஆய் என
மாந்தர் யாரும் மதித்தனர் என்பவே.
*