இனியவை நாற்பது

பாடல் எண் எல்லைகள்


#0
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய் மாலையானை தொழல் இனிதே
முந்துற பேணி முகம் நான்கு உடையானை
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது

#1
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது ஆங்கு இனிதே
தெற்றவும் மேலாயார் சேர்வு

#2
உடையான் வழக்கு இனிது ஒப்ப முடிந்தால்
மனை வாழ்க்கை முன் இனிது மாணாதாம்ஆயின்
நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
தலையாகத்தான் இனிது நன்கு

#3
ஏவது மாறா இளம் கிளைமை முன் இனிதே
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே
ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே
தேரின் கோள் நட்பு திசைக்கு

#4
யானையுடை படை காண்டல் மிக இனிதே
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே
கான் யாற்று அடைகரை ஊர் இனிது ஆங்கு இனிதே
மானம் உடையார் மதிப்பு

#5
கொல்லாமை முன் இனிது கோல் கோடி மாராயன்
செய்யாமை முன் இனிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும்
பொல்லாங்கு உரையாமை நன்கு

#6
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே
பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பு இனிதே
வாய்ப்பு உடையாராகி வலவைகள் அல்லாரை
காப்பு அடைய கோடல் இனிது

#7
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே
தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது

#8
ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெம் சமத்து
கார் வரை போல் யானை கதம் காண்டல் முன் இனிதே
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை
பேதுறார் கேட்டல் இனிது

#9
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே
அம் கண் விசும்பின் அகல் நிலா காண்பு இனிதே
பங்கம் இல் செய்கையர் ஆகி பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது

#10
கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு

#11
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே
உயிர் சென்று தாம் படினும் உண்ணார் கைத்து உண்ணா
பெருமை போல் பீடு உடையது இல்

#12
குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே
மயரிகள் அல்லராய் மாண்புடையார் சேரும்
திருவும் தீர்வு இன்றேல் இனிது

#13
மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிதே
தானம் அழியாமை தான் அடங்கி வாழ்வு இனிதே
ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது

#14
குழவி தளர் நடை காண்டல் இனிதே
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே
வினையுடையான் வந்து அடைந்து வெய்து உறும் போழ்து
மனன் அஞ்சான் ஆகல் இனிது

#15
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது ஆற்ற
வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே
மற மன்னர் தம் கடையுள் மா மலை போல் யானை
மத முழக்கம் கேட்டல் இனிது

#16
கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
மிக்காரை சேர்தல் மிக மாண முன் இனிதே
எள் துணையானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்ற இனிது

#17
நட்டார்க்கு நல்ல செயல் இனிது எத்துணையும்
ஒட்டாரை ஒட்டி கொளல் அதனின் முன் இனிதே
பற்பல தானியத்ததாகி பலர் உடையும்
மெய் துணையும் சேரல் இனிது

#18
மன்றில் முது மக்கள் வாழும் பதி இனிதே
தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பு இனிதே
எஞ்சா விழு சீர் இரு முது மக்களை
கண்டு எழுதல் காலை இனிது

#19
நட்டார் புறங்கூறான் வாழ்தல் நனி இனிதே
பட்டாங்கு பேணி பணிந்து ஒழுகல் முன் இனிதே
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது
தக்குழி ஈதல் இனிது

#20
சலவரை சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க்கு எல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது

#21
பிறன்கை பொருள் வெளவான் வாழ்தல் இனிதே
அறம்புரிந்து அல்லவை நீக்கல் இனிதே
மறந்தேயும் மாணா மயரிகள் சேரா
திறம் தெரிந்து வாழ்தல் இனிது

#22
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே
பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார்
திரிபு இன்றி வாழ்தல் இனிது

#23
காவோடு அற குளம் தொட்டல் மிக இனிதே
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே
பாவமும் அஞ்சாராய் பற்றும் தொழில் மொழி
சூதரை சோர்தல் இனிது

#24
வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே
இல்லது காமுற்று இரங்கி இடர்ப்படார்
செய்வது செய்தல் இனிது

#25
ஐ வாய் வேட்கை அவா அடக்கல் முன் இனிதே
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே
நில்லாத காட்சி நிறை இல் மனிதரை
புல்லா விடுதல் இனிது

#26
நச்சி தற்சென்றார் நசை கொல்லா மாண்பு இனிதே
உட்கு இல்வழி வாழா ஊக்கம் மிக இனிதே
எ திறத்தானும் இயைவ கரவாத
பற்றினில் பாங்கு இனியது இல்

#27
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே
மானம் பட வரின் வாழாமை முன் இனிதே
ஊனம் கொண்டாடார் உறுதி உடையவை
கோள் முறையால் கோடல் இனிது

#28
ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியில் தேர்வு இனியது இல்

#29
கயவரை கை இகந்து வாழ்தல் இனிதே
உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே
எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
ஒளி பட வாழ்தல் இனிது

#30
நன்றி பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே
மன்ற கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே
அன்று அறிவார் யார் என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கு இனியது இல்

#31
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே
சிறந்து அமைந்த கேள்வியர்ஆயினும் ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது

#32
கற்று அறிந்தார் கூறும் கரும பொருள் இனிதே
பற்று அமையா வேந்தன்கீழ் வாழாமை முன் இனிதே
தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா
பத்திமையின் பாங்கு இனியது இல்

#33
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே
தானே மடிந்து இரா தாளாண்மை முன் இனிதே
வாள் மயங்கு மண்டு அமருள் மாறாத மா மன்னர்
தானை தடுத்தல் இனிது

#34
எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே
சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே
புல்லி கொளினும் பொருள் அல்லார்தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது

#35
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்று இலனாய் பல்லுயிர்க்கும் பார்த்து உற்று பாங்கு அறிதல்
வெற்றி வேல் வேந்தர்க்கு இனிது

#36
அவ்வித்து அழுக்காறு உரையாமை முன் இனிதே
செவ்வியனாய் செற்று சினம் கடிந்து வாழ்வு இனிதே
கவ்வி தாம் கொண்டு தாம் கண்டது காமுற்று
வவ்வார் விடுதல் இனிது

#37
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே
தட மென் பணை தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது

#38
சிற்றாள் உடையான் படைக்கல மாண்பு இனிதே
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே
எ துணையும் ஆற்ற இனிது என்ப பால் படும்
கற்றா உடையான் விருந்து

#39
பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இனிதே
துச்சில் இருந்து துயர் கூரா மாண்பு இனிதே
உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது

#40
பத்து கொடுத்தும் பதி இருந்து வாழ்வு இனிதே
வித்து குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே
பற்பல நாளும் பழுது இன்றி பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல்
*