5. பாடல் 40 – யாயும் ஞாயும்

செம்புலப்பெயல் நீர்

	ஆயிற்று; திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் இனிதே நிறைவேறி முடிந்தன. மணமகனின் வீடு பக்கத்தூரில்தான். எனவே வில்வண்டியில்
 மணமகள் முல்லையின் பெற்றோர் மணமகனின் வீட்டுக்கு வந்து பெண்ணை விட்டுச்செல்ல வந்திருந்தனர். அங்கும் எல்லாப் பேச்சுகளும் 
முடிந்தபின்னர் பொழுதுசாயும் நேரத்தில் முல்லையின் பெற்றோர் தம் ஊருக்குப் புறப்பட்டனர். வில்வண்டி ஆயத்தமாக நின்றது. முல்லையின் 
நெற்றியில் கலைந்துகிடந்த கூந்தலைத் தூக்கிவிட்டு வருடியவாறு அவளையே சற்று நேரம் உற்றுப்பார்த்தாள் அவளது தாய். இருவரின் கண்களும் 
கலங்கின. சமாளித்துக்கொண்ட தாய், “வர்ரோம்’மா” என்று சொல்லியவாறு வண்டியருகே சென்றாள். தந்தையின் பெருமிதத்தோடு 
நின்றுகொண்டிருந்த முல்லையின் தந்தையும் சற்று உணர்ச்சிவசப்பட்டவராகவே காணப்பட்டார்.

“வர்’ரோம் மதினி, பாத்துக்கங்க” 

“ஒண்ணுக்கும் கவலப்படாதீங்க, மதினி, முல்லை இனி எங்க பொண்ணு” என்று சிரித்தாள் முல்லையின் மாமியார்.

“என்ன மச்சான் இது” என்று முல்லையின் தந்தையின் தோளைத் தழுவினார் முல்லையின் மாமனார். “பொண்ணு இல்லாத வீடு, இப்பத்தான் 
களையே வந்திருக்கு. முல்லை எனக்கும் பொண்ணுதான், நாங்க பாத்துக்கறோம்” என்று தழுவிய கைகளைத் தளர்த்தித் தோளைத் தட்டிக்கொடுத்தார். 

முல்லையின் பெற்றோர் எல்லாருக்கும் பொதுவாக வணக்கம் செலுத்தும் வண்ணம் கைகளைக் கூப்பிவிட்டு வண்டியில் ஏறினர். வண்டிக்காரன் 
மாடுகளை விரட்ட, ‘சல் சல்’-என்ற சதங்கை ஒலியுடன் வண்டி புறப்பட்டுச் சற்று நேரத்தில் தெருக்கோடியில் திரும்பி மறைந்தது.

தன் மனைவியின் காதில் குனிந்து ஏதோ கூறினார் முல்லையின் மாமனார். “சரி சரி” என்று தலையை ஆட்டிவிட்டு முல்லையின் மாமியார் 
வீட்டுக்குள் வேகமாக நுழைந்தார்.

ஏறக்குறைய ஐந்து நாழிகைக்குப் பிறகு, சாப்பாட்டுக்கடையெல்லாம் முடிந்த பின்னர் மணமகன் தன் அறைக்குள் நுழைந்தான். மல்லிகை, முல்லை 
ஆகிய மலர்களின் நறுமணம் அறையெங்கும் ‘கமகம’-த்தது. மலர்ச் சரங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் அமர்ந்தவண்ணம் அவன் 
வாசற்கதவையே பார்த்துக்கொண்டிருந்தான். கதவும் திறந்தது. இருக்கிற மணத்தைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மலர்களைத் தலைமுழுதும் 
சூடிக்கொண்டு முல்லை அறைக்குள் நுழைந்தாள். நாணத்துடன் அவனருகே வந்து அமர்ந்த அவளின் நாடியைச் சற்றுத் தூக்கிப்பிடித்தவன், 
“இதென்ன புது வெட்கம்? இன்னிக்கித்தான் பாக்குறயா?” என்றான். அவன் தோள்களில் முகம் புதைத்தாள் அவள். மெத்தென்ற அந்த 
மலர்க்குவியலை அப்படியே அள்ளித் தழுவிக்கொண்ட அவன் ‘கல கல’-வென்று சத்தம்போட்டுச் சிரித்தான். திடுக்கிட்டு நிமிர்ந்துபார்த்தாள் 
முல்லை. அவன் சிரிப்பு ஓயவில்லை. சற்று நேரத்தில் அவனாக அடங்கியவன் கேட்டான்,

“ஆமாம், உன் அம்மா என் அம்மாவப் பாத்து என்ன சொன்னாங்க?”

“ ‘வர்ரோம் மதினி, பாத்துக்கங்க’ –ன்னு சொன்னாங்க”. 

“அதென்ன மதினி? எங்கம்மா ஒங்கம்மாவுக்கு அண்ணன் பொஞ்சாதியா?”

அவள் விழித்தாள்.

“சரி அது கெடக்கட்டும், எங்கப்பா ஒங்கப்பாவப் பாத்து என்ன சொன்னார்?”

“ஒங்கப்பா ‘என்ன மச்சான் இது’-ன்னு எங்கப்பாவைத் தட்டிக்கொடுத்தாரு”

“அதென்ன மச்சான்? எங்கப்பா ஒங்கப்பாவுக்குத் தங்கச்சி புருசனா?”

“இதென்னங்க பேச்சு, நமக்குத்தான் கலியாணமாகிப்போச்சுல்ல”

“நமக்கு-ன்னா? நீ கம்பங்கொல்லையில கிளிவிரட்ட கவண வீசுறப்ப, குறிதவறி கல்லு என் நெத்தியில பட்டு நெலம்முழக்க சிவப்பாகிப்போச்சே, 
அதுக்கு முன்னால நீ யாரு நான் யாரு?”

அவன் பழைய கதையைக் கிளறியதும் முல்லையின் மனம் கிறங்கிப்போனது.

தனது தினைப்புனத்தில் மேயவந்த இளம் மானை விரட்டிக்கொண்டு நெடுந்தொலைவுக்கு வந்த அவன், முல்லையின் கம்பங்கொல்லைப் பக்கம் 
வந்தபோது எங்கிருந்தோ வந்த ஒரு கல்லுருண்டை அவன் நெற்றியைத் தாக்கியது. கொஞ்சம் தவறி நெற்றிப்பொட்டில் பட்டிருந்தால் அவன் கதை 
அன்றோடு முடிந்திருக்கும். “அம்மா” என்று காடே அதிரும்வண்ணம் அவன் அலறிக்கொண்டு சாய்ந்தான். பதறிக்கொண்டு ஓடிவந்த முல்லை தன் 
முன்தானையைச் ‘சரக்’-கென்று கிழித்து அவன் நெற்றியைச் சுற்றிக் கட்டுப்போட்டாள். இரத்தம் வடிவது நின்றவுடன் அவனைக் கைத்தாங்கலாக 
எழுப்பி உட்காரவைத்தாள். அப்படி ஆரம்பித்ததுதான் அவர்கள் உறவு. மூன்று திங்களுக்கு முன் தொடங்கிய அந்த உறவு இன்று திருமண உறவாக 
இறுகிவிட்டிருக்கிறது.

 “கிளி வெரட்ட விட்ட கல்லு, குறிதவறி ….” என்று இழுத்தாள் அவள்.

“அந்தக் கிளி பறந்துபோச்சு, இந்தக் கிளி மாட்டிக்கிருச்சு” என்று அவன் சிரித்தான்.

“ஆமா, நான் நுழையறபோது சிரிச்சுக்கிட்டு இருந்தீங்களே, அது என்னத்துக்கு?” என்றாள் அவள்.

“சொல்றேன் கேளு. போன திங்கள் என் அம்மாவும், ஒன் அம்மாவும் சந்தயில பாத்திருத்தாங்கனா, யாரோ’-ன்னுதான் அவங்கபாட்டுக்குப் போய்க்கிட்டு 
இருந்திருப்பாங்க”.

“ஆமா!”

“மாட்டுச் சந்தையில எங்கப்பாரும் ஒங்கப்பாரும் துண்டப்போட்டு வெலப் பேசியிருந்தாக்கூட ஒருத்தருக்கொருத்தரத் தெரிஞ்சிருக்காது” 

“ஆமா”

“கம்பங்கொல்லயில பாத்துக்கிறதுக்கு முன்னாடி நீயும் நானும் யார் யாரோதானே!”

“ஆமா”

“எனக்கொரு பாட்டு நெனவுக்கு வருது”

“சொல்லுங்க!”

“யாயும் ஞாயும் யாராகியரோ – என்ன புரியுதா?

“புரியுதே என் தாயும் உன் தாயும் யார் யாரோ – சரிதானே , மேலே சொல்லுங்க”

“எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?”

“என் தந்தையும் உன் தந்தையும் எந்தவழியில் உறவினர் – சரியா?”

“யானும் நீயும் எவ்வழி அறிதும்?”

“நானும் நீயும் ஒருவரையொருவர் எப்படி அறிவோம்?”

“செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!”

“புரிஞ்ச மாதிரி இருக்கு – ஆமா அதென்னங்க உவமை?”

“செம்புலம் என்கிறது செம்மண் நிலம். பெயல் என்கிறது மழை. உழுதுபோட்ட செங்காட்டுல ஓங்கி மழை பேஞ்சா என்னாகும்?”

“செக்கச் சிவீருன்னு சேறும் சகதியுமாப் போகும்”

“அந்த மழைத் தண்ணி?”

“ரத்தங் கெணக்கா செவப்பாப் போயிரும்”

“அப்புறம் அந்தத் தண்ணியிலிருந்து அந்தச் செவப்பு நெறத்தப் பிரிக்க முடியுமா?”

“முடியவே முடியாது, கலந்தது கலந்ததுதான்”

“வானமும் பூமியும் யார் யாரோ?

மேகமும் காடும் எம்முறையில் உறவு?

நீருக்கும் நிறத்துக்கும் எப்படி அறிமுகம்?

‘டொப்’-புன்னு வந்து விழுந்த பிறகு உண்டாகும் சேர்க்கை – அதுதான் இந்தக் காதல்’-ங்கிற மாயம்” என்று இறுகத் தழுவிய அவனோடு 
ஒன்றுகலந்தாள் முல்லை.

பாடல்:குறுந்தொகை 40 ஆசிரியர்:செம்புலப்பெயல்நீரார் திணை:குறிஞ்சி

	யாயும் ஞாயும் யாராகியரோ?
	எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
	யானும் நீயும் எவ்வழி அறிதும்?
	செம்புலப் பெயல்நீர் போல,
	அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!

அருஞ்சொற்பொருள்: 

யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்; எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்; 
செம்புலம் = செம்மண் நிலம்; பெயல் = மழை;

அடிநேர் உரை:-

	என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ
	என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் உறவினர்?
	நானும் நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?
	செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
	அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே

	My mother and yours, what relationship they have to each other?
	My father and yours, what order of relatives they are? 
	You and I, in what way we know each other?
	Like the rain water pouring on the red soil,
	Our hearts with love mingled as one.