வே – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வேங்கடம்
வேங்கை
வேங்கைமார்பன்
வேசரி
வேசனை
வேட்கும்
வேட்குவை
வேட்கை
வேட்கோ
வேட்ட
வேட்டது
வேட்டம்
வேட்டல்
வேட்டவை
வேட்டனை
வேட்டாய்
வேட்டார்
வேட்டு
வேட்டுவன்
வேட்டேம்
வேட்டேன்
வேட்டை
வேட்ப
வேண்மாள்
வேண்மான்
வேணவா
வேத்தவை
வேத்து
வேதல்
வேதாளிகர்
வேதியர்
வேதினம்
வேது
வேந்திர்
வேந்து
வேப்பு
வேம்
வேம்பி
வேம்பு
வேய்
வேய்த்திறம்சேர்
வேய்தரு(தல்)
வேய்வை
வேர்
வேரல்
வேரி
வேலம்
வேலன்
வேலாழி
வேலி
வேலூர்
வேலை
வேவது
வேவை
வேழம்
வேள்
வேள்வி
வேளாண்
வேளாண்மை
வேளார்
வேளாளர்
வேளிர்
வேளூர்
வேளை
வேறல்
வேனல்
வேனில்

வேங்கடம்

(பெ) பண்டைத் தமிழகத்தின் வடவெல்லையான இன்றைய திருப்பதிமலை
The Tirupati Hills which formed the northern boundary of the ancient Tamil country

1.

இந்த வேங்கட மலையில் யானைகள் மிகுதியாக இருந்தன என அறிகிறோம்.

வட_வயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை
மற போர் பாண்டியர் – அகம் 27/6-8

வடக்கிலிருக்கும்
வேங்கடமலையில் பிடித்த வெண்மையான தந்தங்களையுடைய யானைப்படையுள்ள,
வீரப் போர் புரியும் பாண்டியர்,

2.

தொண்டைநாட்டு மன்னனான திரையன் திருவேங்கடமலைப் பகுதி நாட்டுக்கு அரசனாக இருந்தான்.

வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை – அகம் 85/9

3.

இப்பகுதியைப் புல்லி என்பவன் ஒருகாலத்தில் ஆண்டுவந்தான்.
சங்ககாலத்தில், பொருள்தேடிச் சொல்வோர், இந்த வேங்கடத்தையும் கடந்து வடக்கே சென்றனர்

அவரே
மால் யானை மற போர் புல்லி
காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர்
அறை இறந்து அகன்றனர் – அகம் 209/7-10

நம் தலைவர்
பெரிய யானையையும் வீரத்துடன் புரியும் போரினையுமுடைய புல்லி என்பானது
மூங்கில்களையுடைய நீண்டசாரல் பொருந்திய வேங்கடமலையின் அப்பாலுள்ள
குன்றுகளைக் கடந்து சென்றுளார்

4.

வேங்கடத்துக்கும் அப்பாலுள்ள பகுதி வேற்றுமொழி பேசும் பகுதியாக இருந்தது.

பனி படு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயட் தேஎத்தராயினும் நல்குவர் – அகம் 211/7,8

குளிர்ச்சி பொருந்தியசோலைகளையுடைய வேங்கடமலையின் அப்பாலுள்ள
வேற்றுமொழி வழங்கும் நாட்டின்கண்ணராயினும் விரைந்து வந்து அருள்செய்வார்.

5.

வேங்கடமலைக்கும் அப்பாலுள்ள இடம் வடுகர் நாடு எனப்பட்டது.

வினை நவில் யானை விறல் போர் தொண்டையர்
இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்
——————– ———————-
வால் நிண புகவின் வடுகர் தேஎத்து – அகம் 213/1-8

போர்த்தொழில் பயின்ற யானைகளையுடைய வலிய போர் வல்ல தொண்டையரது
கூட்டமாய மேகங்கள் தவழும் ஏறுதற்கு அரிய நெடிய உச்சியினின்று இழியும்
உயர்ந்து தோன்றும் வெள்ளிய அருவிகளையுடைய வேங்கடமலைக்கு அப்பாலுள்ள
—————————————————-
வெள்ளிய நிணச்சோற்றினையுடைய வடுகரது தேயத்தேயுள்ள

மேல்


வேங்கை

(பெ) 1. நீண்ட உடலமைப்புள்ள புலி, tiger with a long body
2. ஒரு மரம், அதன் பூ, East Indian kino tree, Pterocarpus marsupium

1.

சிறுத்தைப்புலியின் ஆசிய வகையையே (Acinonyx jubatus) தமிழகத்தில் வேங்கைப்புலி என
அழைக்கின்றனர் என்பர்.

வேங்கை
அடு முரண் தொலைத்த நெடு நல் யானை – அகம் 307/6,7

வேங்கைப்புலியின்
கொலைத்தொழிலுக்குக் காரணமான வலிமையை அழித்த நீண்ட நல்ல யானை

2.1.

இம் மரத்தின் அடிப்பகுதி கரியதாகவும், கிளைகள் பெரிதாகவும் இருக்கும்.

கரும் கால் வேங்கை இரும் சினை பொங்கர்
நறும் பூ கொய்யும் பூசல் – மது 296,297

கரிய அடிமரத்தைக்கொண்ட வேங்கையின் பெரியதாய்க் கிளைத்த கொம்புகளில்(பூத்த)
நறிய பூவைப் பறிக்கும் ஆரவாரமும்

2.2

இது பொன்னிறத்தில் கொத்துக்கொத்தாகப் பூக்கும்.

தலை நாள் பூத்த பொன் இணர் வேங்கை
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 305,306

முதல்நாளில்(=முதன்முதலில்) பூத்த பொன் போன்ற கொத்தினையுடைய வேங்கை மலர்களைச் 305
சூடுவதற்குப் (பெண்கள்)போடும் (தீங்கற்ற)மகிழ்ச்சி ஆரவாரமும்;

2.3

இதன் ஒருவகை மரம் சிவப்பாகவும் பூக்கும்.

செ வீ வேங்கை பூவின் அன்ன
வேய் கொள் அரிசி – மலை 434,435

சிவந்த மலர்களைக் கொண்ட வேங்கை மரத்தின் பூக்களைப் போன்ற
மூங்கிலினின்றும் கொண்ட அரிசி

2.4

இதன் பூக்கள் மணம் மிக்கவை, இதன் மணம் ஊர்முழுக்க மணக்கும்.

வேங்கை கமழும் எம் சிறுகுடி – குறு 355/6

வேங்கைப் பூக்கள் மணக்கும் எமது சிறுகுடி

2.5

இந்தப் பூ புலியின் புள்ளிகளைப் போன்றிருக்கும்.

புலி பொறி வேங்கை பொன் இணர் கொய்து – ஐங் 396/1

புலியின் புள்ளிகளைப் போன்ற வேங்கையின் பொன்னிறப் பூங்கொத்துகளைக் கொய்து

2.6

பூத்திருக்கும் வேங்கை மரம் புலியைப் போல் தோற்றமளிப்பதால், யானை அம் மரத்தைக் குத்தும்.

உறு புலி உரு ஏய்ப்ப பூத்த வேங்கையை
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை – கலி 38/6,7

மிகப்பெரிய புலியின் நிறத்தைப் போன்று பூத்த வேங்கையைச்
சினங்கொண்டு அந்த மரத்தின் அடிப்பகுதியைக் குத்திய மதயானை

மேல்


வேங்கைமார்பன்

(பெ) சங்ககாலச் சிற்றரசன், a chieftain of sangam period
சங்க காலத்தில் “கானப்பேர்’ என்று வழங்கிவந்த ஊர், இன்று காளையார் கோயில் என்று வழங்கி வருகிறது.
அவ்வூரை ஆட்சிபுரிந்தவன் வேங்கைமார்பன். பாண்டியன் உக்கிரப் பெருவழுதியிடம் பகை கொண்டான் அவன்.
போர் நிகழ்ந்தது; பாண்டியன் வெற்றி பெற்றான். வேங்கைமார்பன் தோல்வியுற்றான். தோல்வியுற்ற தன்
கானப்பேரெயிலை இனி பாண்டியனிடம் இருந்து அவன் மீட்க முடியாது என்று வருந்தினான்.

அரும் குறும்பு உடுத்த கானப்பேரெயில்
கரும் கை கொல்லன் செம் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என
வேங்கைமார்பன் இரங்க – புறம் 21/6-9

அணைதஏகரிய சிற்றரண்களால் சூழப்பட்ட கானப்பேர் என்னும் அரண்
வலிய கையினையுடைய கொல்லனால் செந்தீயின்கண்ணே மாட்டப்பட்ட
இரும்பு உண்ட நீரினும் மீட்டற்கு அரிது எனக் கருதி
வேங்கைமார்பன் வருந்த

மேல்


வேசரி

(பெ) கோவேறு கழுதை, mule

மாவும் களிறும் மணி அணி வேசரி
காவு நிறைய கரை நெரிபு ஈண்டி – பரி 22/24,25

குதிரைகளும், களிறுகளும், மணிகள் அணிந்த கோவேறு கழுதைகளும்
ஆற்றங்கரைச் சோலை நிறையவும், கரையையும் நெருக்கமாக வந்து கூடி

மேல்


வேசனை

(பெ) புகுதல், entering

வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/13

வெம்மையான மணலில் புதுநீர் பரவுவதால் புதிதாய் புகுந்து பரவும் நாற்றம் குளிர்ந்த வாடையாய் மாற,
வேசனை – புகுதல் – பொ.வே.சோ.உரை விளக்கம்

மேல்


வேட்கும்

1. (வி.எ) வேள்விசெய்யும், யாகம் செய்யும், offering sacrifices
2. (வி.மு) விரும்புகின்றன, (they) long for

1

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
மா இரும் பெடையோடு இரியல் போகி – பட் 54-56

ஒளிவிடும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,

2

துஞ்சா கண்ணே துயிலும் வேட்கும் – புறம் 280/4

உறங்குதல் ஒழிந்த என் கண்களும் உறக்கத்தை விரும்புகின்றன

மேல்


வேட்குவை

(வி.மு) விரும்புவாய், (you) long for

விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 204,205

செல்வப் பெருக்கை
வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்;

மேல்


வேட்கை

(பெ) intense desire, longing, A feeling of craving something

1

முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ
ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை
கடும் சூல் மகளிர் போல – குறு 287/3-5

பன்னிரண்டு திங்கள் நிரம்பிய கருவினைத் தாங்கித் தளர்வெய்தி
நடக்கவியலாத பச்சைப் புளியின்மீது கொண்ட வேட்கையையுடைய
முதிர்ந்த சூல் கொண்ட மகளிர் போல

விளர் ஊன் தின்ற வேட்கை நீங்க – அகம் 265/15

வெளுத்த ஊனைத் தின்றதாலாய நீர்வேட்கை நீங்க

மேல்


வேட்கோ

(பெ) மண்பாண்டம் செய்பவர், potter

நல் மதி
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த
பசு மண் குரூஉ திரள் போல – புறம் 32/7-9

நல்ல அறிவையுடைய
குயக்குலத்து இளையோர் கலம் வனைதற்குத் தம் சக்கரத்தின்கண்ணே வைத்த
பச்சை மண்ணாகிய கனத்த திரள் போல

மேல்


வேட்ட

1. (வி.எ) 1. வேள் – யாகம்செய் என்பதன் இறந்தகால வினையெச்சம்,
past verbal participle for the verb – offer sacrifices
2. வேள் – விரும்பு என்பதன் இறந்தகால வினையெச்சம்,
past verbal participle for the verb – long for
– 2. (பெ.அ) வேட்டையை மேற்கொண்ட, hunting (dog)

1.1

அரசு பட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடு திறல் உயர் புகழ் வேந்தே – மது 128-130

அரசர்கள் விழும்படி போர்செய்து,
முரசைக்கொண்டு களவேள்வி செய்த
கொல்லுகின்ற ஆற்றல் மிக்க உயர்ந்த புகழையுடைய வேந்தனே

1.2

புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் – புறம் 177/8

புளிச்சுவையை விரும்பிய சிவந்த கண்ணையுடைய ஆண்மக்கள்

2

வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில் – குறு 56/1

வேட்டையை மேற்கொண்ட செந்நாய் தோணி உண்டு எஞ்சியதாகிய
வேட்டம் – வேட்டை

மேல்


வேட்டது

(பெ) விரும்பியது, that which is liked

அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – நற் 136/2,3

அரிய நோயினையுற்றார்க்கு அவர் விரும்பியதைக் கொடாமல்
மருந்தினை ஆராய்ந்து கொடுக்கும் மருத்துவனைப் போல

மேல்


வேட்டம்

(பெ) வேட்டை, hunting

தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு – பொரு 142

(தன்)கன்னிவேட்டையிலேயே களிற்றியானையைக் கொன்றாற் போன்று,

வரூஉம்
பன் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே – குறு 123/4,5

வருகின்றன
நிறைய மீன்களை வேட்டையாடிக்கொண்டு என் தமையன்மாருடைய படகுகள்.

மேல்


வேட்டல்

(பெ) வேள்விசெய்தல், performing sacrifices

ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் – பதி 24/6

மறையோதல், வேள்விசெய்தல், இவை ஒவ்வொன்றையும் பிறரைச் செய்வித்தல்

மேல்


வேட்டவை

(பெ) விரும்பியவை, those which are liked

அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்
வேட்டவை செய்து ஆங்கு காட்டி – கலி 141/1,2

அரிதாகக் கிட்டிய இந்த உடம்பின்மேல் ஆசைகொண்டு, தாம்
விரும்பியவற்றைச் செய்து, அவற்றை மற்றவர்க்கும் காட்டி,

மேல்


வேட்டனை

(வி.மு) 1. விரும்பினாய், (you) liked
2. வேள்விசெய்தாய், (you) performed sacrifices

1

கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/9,10

கடல் சூழ்ந்த மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை
நீதான் விரும்பினாய் இல்லை, எனவே உன்பொருட்டு இழந்த என் நலத்தைத் தந்துவிட்டுச் செல்வாயாக!

2

கேள்வி கேட்டு படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப – பதி 74/1,2

வேதங்களைச் சொல்லக்கேட்டு, விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு
வேள்விகளைச் செய்து முடித்தாய், உயர்ந்தவர்கள் மனம் மகிழ;

மேல்


வேட்டாய்

(வி.மு) விரும்பினாய், (You)liked

பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி – கலி 3/4,5

தாங்க முடியாத காம நோயோடு பொலிவிழந்த நெற்றியைக் கொண்ட இவள்
தனது சிறந்த பேரழகை இழந்துபோகுமாறு, பொருளீட்டும் வினைமேற்கொண்டாய், கேட்பாயாக இப்போது,

மேல்


வேட்டார்

(பெ) வேட்கைகொண்டார், those who crave for

வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று
உண்பவோ நீர் உண்பவர் – கலி 62/10,11

நீர்வேட்கையுள்ளோர்க்கு இனிப்பதனால்தான் அன்றி நீருக்கு இனிக்கும் என்று
குடிக்கிறார்களோ நீரைக் குடிப்பவர்கள்?

மேல்


வேட்டு

1. (வி.எ) 1. விரும்பி, வேள் – விரும்பு என்பதன் அடியாகப் பிறந்த இறந்த கால வினையெச்சம்
verbal past participle for the verb desire, like
2. வேட்டையாடுதற்கு, to hunt
3. வேள்விசெய்யத்(தீ)மூட்டி, make fire to perform rituals
– 2 (பெ.அ) 1. வேட்டுவரின், of the Hunters
2. வேட்டையின், of the Hunting
– 3. (பெ) வேட்டுவர், hunters

1.1

தூறு இவர் துறுகல் போல போர் வேட்டு
வேறு பல் பூளையொடு உழிஞை சூடி – பட் 234,235

புதர்கள் படர்ந்த பாறைக்குன்றுகள் போல, போரை விரும்பி,
(சிறுபூளை,பெரும்பூளையாகிய)பலவாகிய பூளைகளோடே, உழிஞையைச் சூடி,
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு – பெரும் 43
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு – பெரும் 449

1.2

முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய் – நற் 252/10

முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்

1.3

கடும் தெறல் செம் தீ வேட்டு
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே – புறம் 251/6,7

மிக்க வெம்மையையுடைய செந்தீயை மூட்டி
முதுகின்கண்ணே தாழ்ந்த புரிந்த சடையைப் புலர்த்துவோன்

2.1

வேட்டு புழை அருப்பம் மாட்டி – முல் 26

வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து

2.2

வேட்டு வலம் படுத்த உவகையன் – நற் 285/6

வேட்டையிலே தான் பெற்ற வென்றியாலாய உவகையுடையவனாகி

3.

ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய் பயில் அழுவத்து பிரிந்த நின்
நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே – அகம் 318/13-15

சிறிது ஊதுதல் வேண்டும், வேட்டுவர்களோடு
மூங்கில் மிக்க காட்டில் பிரிந்த உனது
நாய்களை அழைக்கும் குறிப்பினைக் கொண்டுள்ள ஊதுகொம்பை

மேல்


வேட்டுவன்

(பெ) வேடன், hunter

எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்ட தொடை மறந்து – நற் 59/3,4

பகல்நேரத்து முயலை தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேடன் தன் தோள்களில் சுமந்துவந்த
பல்வேறு பண்டங்களின் தொகுதியை மறந்து

கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கான புறவின் சேவல் – நற் 189/7,8

கொலைத்தொழிலில் வல்ல வேடன் விரித்த வலையினின்றும் தப்பிப்பறந்துபோன
காட்டுப்புறாவின் சேவல்

பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்து
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி
————- ————- ———————-
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது – அகம் 36/1-6

பிளந்த வாயையுடைய வராலின், பல வரிகளைக் கொண்ட ஆண்மீன்
வளைந்த வாயையுடைய தூண்டில்முள்ளில் மாட்டிய இரையை விழுங்கி,
——————— ——————- ————————
தூண்டில்காரன் வளைத்து இழுக்க வராமல்,

இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெரும் கல் அடார் – புறம் 19/5,6

பெரும் புலியைப் படுக்கும் வேட்டுவன் எந்திரம் அறிந்து கொளுத்திய
பெரிய கல்லையுடைய அடாரையும்

யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே – புறம் 214/4,5

யானை வேட்டைக்குப்போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்
குறும்பூழ் வேட்டைக்குப்போவோன் வறிய கையினனாயும் வருவன்.

நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116

வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்

இல் வழங்கு மட மயில் பிணிக்கும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/4,5

மனையின்கண் இயங்கும் மடப்பத்தையுடைய மயில் போன்ற மனைவியை அகப்படுத்திக்கொள்ளும்
சொல்லாகிய வலையையுடைய வேட்டைக்காரனாயினன் முன்பு

மேல்


வேட்டேம்

(வி.மு) விரும்பினோம், we longed for

வாழி ஆதன் வாழி அவினி
நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க
என வேட்டோளே யாயே யாமே
நனைய காஞ்சி சினைய சிறு மீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே– ஐங் 1

வாழ்க ஆதன்! வாழ்க அவினி!
நெல் பலவாக விளைக; பொன்வளம் பெரிதும் சிறப்பதாக
என்று தாய் விரும்பி வேண்டினாள் தலைவி; நாங்களோ
அரும்புகள் கொண்ட காஞ்சி மரமும், கருவுற்று முட்டைகளையுடைய சிறிய மீன்களும் வாழும்
புதுவருவாய் மிகுந்த ஊரினைச் சேர்ந்த எம் தலைவன் வாழ்க,
அவனது பாணனும் வாழ்க என்று விரும்பி வேண்டினோம்.

மேல்


வேட்டேன்

(வி.மு) விரும்பினேன், I longed for

இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு – கலி 51/5,6

“வீட்டிலுள்ளோரே!
உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன்” என்று சொல்லி வந்தவனுக்கு,

மேல்


வேட்டை

(பெ) வேட்டையாடும் தொழில், Hunting

அரியல் அம் புகவின் அம் கோட்டு வேட்டை
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே – குறு 258/5-8

கள்ளாகிய உணவையும், அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடுதலையும்,
வரிசைப் பட்ட ஒளிவிடும் வாளைக் கொண்ட இளைஞர்களையும் கொண்ட பெருமகனான
அழிசி என்பானின் ஆர்க்காடு போன்ற இவளின்
குற்றம் தீர்ந்த சிறந்த பெண்மைநலம் தொலைவதைக் கண்டபின்னர் –

மேல்


வேட்ப

(வி.எ) விரும்புமாறு, to one’s liking

வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 75

(தன்)உபசரிப்பிற்கு வழிமுறையாக (யான்)விரும்புமாறு (முகமன்)பொழிந்து,

மேல்


வேண்மாள்

(பெ) பேய்மகள், demon

ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின்
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/7-9

மண்டையோட்டை அகப்பையாகவும், வன்னிமரத்தின் கொம்பை அதின் காம்பாகவும் துடுப்பினால்
ஈனாத பேய்மகள் தோண்டித் துழாவிச் சமைத்த
மாக்களும் மறுக்கும் ஊன்சோறாலிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துப்படைக்க

மேல்


வேண்மான்

(பெ) வேளிர்குலத்தவன், male member of the vELir tribe
பொதுவாக வேளிர்குல அரசர்கள் தங்கள் பெயருடன் வேண்மான் என்ற பட்டப்பெயரையும் கொண்டிருந்தனர்.

வீரை வேண்மான் வெளியன் தித்தன் – நற் 58/5
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் – அகம் 36/19
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் – அகம் 97/12
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/5
நெடும் கை வேண்மான் அரும் கடி பிடவூர் – புறம் 395/20

மேல்


வேணவா

(பெ) மிகுந்த விருப்பம், Ever-increasing desire; intense desire;

கேளாய் எல்ல தோழி அல்கல்
வேணவா நலிய வெய்ய உயிரா
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக – நற் 61/1-3

கேட்பாயாக, ஏடீ, தோழி! நேற்று இரவு
நான் மிகுந்த வேட்கையினால் வருந்திப் பெருமூச்சுவிட்டு
அம்புபட்ட பெண்மானைப் போல வருந்தினேனாக,

மேல்


வேத்தவை

(பெ) அரசசபை, king’s court, Royal assembly

இசை பெறு திருவின் வேத்தவை ஏற்ப – மலை 39

இசை கேட்கும் சிறப்புடைய அரசவை(யிலுள்ளோர்) ஏற்றுக்கொள்ளும் விதத்தில்

மேல்


வேத்து

(பெ) வேந்தரின், kings’

வேத்து அமர் கடந்த வென்றி நல் வேல் – அகம் 27/15

மன்னரின் போர்களை வென்ற வெற்றியை உடைய நல்ல வேல்

மேல்


வேதல்

(பெ) வெந்துபோதல், getting burnt

பொறி வரி தட கை வேதல் அஞ்சி
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா – ஐங் 327/1,2

புள்ளிகளையும், வரிகளையும் உடைய நீண்ட கையானது சுடுமே என்று பயந்து
சிறிய கண்களைக் கொண்ட யானை, நிலத்தைத் தொடாமல் செல்லும்,

மேல்


வேதாளிகர்

(பெ) வைதாளிகர், A class of panegyrists attached to kings;
அரசரைப் புகழ்ந்து பாடுவோருள் ஒருவகையினர்.
வைதாளிகர் – வரிக்கூத்துட்பட்ட வேதாளிக்கூத்தினை ஆடுவோர் – பொ.வே.சோ. விளக்கம்

சூதர் வாழ்த்த மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப – மது 670,671

நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல,
வைதாளிகர் (தத்தம் துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப

மேல்


வேதியர்

(பெ) பார்ப்பனர், Brahmins

ஊதை ஊர்தர உறை சிறை வேதியர்
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின்
தையல் மகளிர் ஈர் அணி புலர்த்தர – பரி 11/84-86

குளிர்வாடை தவழ்ந்து வருதலால், கரையில் இருக்கும் அந்தணரால்
வேதநெறியின்படி வளர்க்கப்பட்ட நிமிர்ந்தும் வளைந்தும் எரியும் தீயினை வழிபடும் சிறப்பான
ஒப்பனையையுடைய அந்தக் கன்னியர், தம் ஈர உடையை அந்தத் தீயில் உலர்த்திநிற்க,

மேல்


வேதினம்

(பெ) பன்னரிவாள், ஈர்வாள், ரம்பம், serrated sickle, saw

வேதின வெரிநின் ஓதி முது போத்து – குறு 140/1

பன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது
வேதினம் – கருக்கரிவாள் – நச்.உரை

மேல்


வேது

(பெ) சூடான ஒற்றடம், Fomentation

பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது
கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே – கலி 145/25,26

‘நல்ல காரியங்கள்’ தந்த தொடர்ச்சியான காமநோய் என்னும் கடுங்குளிருக்கு (இந்த நண்பகல்) வேது
கொடுப்பது போல் இருக்கிறது, இந்த வேதினைக் கொடுக்கும் கடுமையான பகலைச் செய்யும் ஞாயிறே!

மேல்


வேந்திர்

(வி.வே) வேந்தர்களே, (you)kings!

கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர் – புறம் 367/14

வெண்கொற்றக்குடையும் கொடி உயர்த்திய தேரும் உடைய வேந்தர்களே

மேல்


வேந்து

(பெ) வேந்தன், king

பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/9

சிறிய கண்ணையுடைய யானைப்படையுடன் பகைமன்னன் மதிற்புறத்தே தங்கியிருக்க

மேல்


வேப்பு

(பெ) வேம்பு, வேப்பமரம், Neem, margosa, Azadirachta indica

வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு – அகம் 176/8

வேம்பின் அரும்பினை ஒத்த நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டு

கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/2

கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்

மேல்


வேம்

(வி.மு) வேகும் என்பதன் இடைக்குறை, வெந்துபோகும், be boiled

உள்ளின் உள்ளம் வேமே உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என்
அணி இயல் குறு_மகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/6-9

நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது – மையுண்ட கண்களின்
மணிகளில் வாழும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என்
அழகிய சாயலையுடைய சிறுமகள் விளையாடிய
நீல மணி போன்ற நொச்சியையும் திண்ணையையும் கண்டு –

உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே – குறு 102/1,2

(பிரிந்து சென்ற தலைவரை) நினைத்தால் உள்ளம் வேகின்றது. நினைக்காமல்
இருந்தால் அது என்னால் முடிவது அன்று;

மேல்


வேம்பி

(பெ) சங்ககால ஊர், a city in sangam period
வேம்பி என்பது சங்ககாலத்தில் சிறந்து விளங்கிய ஊர்களில் ஒன்று.
வேம்பற்றூர் என்னும் பெயரின் மரூஉ ‘வேம்பு’. இந்த வேம்பற்றூர் மதுரை அருகே உள்ளது. இன்று
வேம்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது.க்
இதனை முசுண்டை என்பவன் ஆண்டான். இவன் ஒரு சிறந்த வள்ளல்.

பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என்
நல் எழில் இள நலம் தொலையினும் – அகம் 249/9,10

பல வேற்படையுள்ள முசுண்டை என்பானது வேம்பி என்னும் ஊரைப் போன்ற
எனது நல்ல அழகிய இளைமைச் செவ்வி தொலைந்தவழியும்

மேல்


வேம்பு

(பெ) வேப்பமரம், அதன் பூ, இலை முதலியன, Neem, margosa, Azadirachta indica

மோகூர் மன்னன் முரசம் கொண்டு
நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து – பதி 44/14,15

பகை மன்னனாகிய மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப்பற்றி,
அவன் கூறிய வஞ்சினத்தை முறித்து அவனைப் பணிவித்து, அவனது காவல்மரமாகிய வேம்பினை அடியோடு
வீழ்த்தி

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144

அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும்

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176
வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே

மேல்


வேய்

1. (வி) 1. இலை – தழை, ஓலை, ஓடு ஆகியவற்றால் கூரை அமை, roof, thatch
2. சூழ், surround
3. பதி, set, as gems
4. பொருந்தியிரு, be fitted with
5. சூடு, அணிந்திரு, put on, as a string of flowers; to wear, as crown
6. மூடு, cover
– 2. (பெ) 1. மூங்கில், bamboo
2. மூங்கில் கட்டை, bamboo rod

1.1

இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310

குழையால் வேய்ந்த குடியிலிருக்கும் மான் தோலாகிய படுக்கையினையும்,

எத்தனை விதமாகக் கூரை வேயப்பட்டிருக்கிறது பாருங்கள்.

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50
ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88
ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122
கற்றை வேய்ந்த கழி தலை சாம்பின் – பெரும் 150
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் – பெரும் 191
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் – பெரும் 225
தாழை முடித்து தருப்பை வேய்ந்த/குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 264,265
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த/மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153
முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2

1.2

பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்து – பெரும் 19

பொழியும் மழை புறக்கணித்த (நிலத்தில் எழுந்த)ஆவி சூழ்ந்த மலையிலுள்ள

1.3

பூ வேய் கண்ணி – நற் 122/11

கருங்குவளை மலர்களைப் பதித்தது போன்ற கண்களையுடையவளே
– இதனை, பூ ஏய் கண்ணி – பூக்களைப் போன்ற கண்களையுடையவளே என்றும் கூறுவர்.

1.4

அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி – அகம் 390/13

செவ்வரி பொருந்திய மையுண்ட கண்களால் மாறுபட்டனள் போல் எம்மை நோக்கி

1.5

தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் – நற் 52/2

தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின்

1.6

கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக – கலி 98/16

கார்காலத்து மலர்கள் மேலாக மூடிய கமழ்கின்ற பூக்களாலான நீர்ப்பரப்பாக

2.1

வேய் புரை மென் தோள் இன் துயில் – குறி 242

மூங்கிலைப் போன்ற மென்மையான தோளிடத்துப் பெறும் இனிய துயிலை

2.2

வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171

மூங்கில் குழாய்க்குள் பெய்தலுற்று விளைவித்ததான தேனால் செய்த கள்ளின் தெளிவை

மேல்


வேய்த்திறம்சேர்

(வி) ஏறடு, மேல்வை, place over

ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண
வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் மற்று இவன்
வாய் உள்ளின் போகான் அரோ – கலி 81/19-21

ஓயாமல் அடுத்தடுத்து ‘அப்பா, அப்பா’ என்று சொல்லும் மகனை, மாட்சிமைப்பட
நம் மூங்கில்போன்ற மென்மையான தோள்களில் தூக்கி அமர்த்திக்கொண்டாலும், இவன்
வாயிலிருந்து போகமாட்டான் நம் தலைவன்?
– மாண வேய் மென் தோள் வேய்த்திறம் சேர்த்தலும் – வேய் போலும் மெல்லிய தோள்களிலே மாட்சிமைப்பட
ஏறட்டுக்கொள்ளுங் கூற்றிலே ஏறட்டுக்கொண்ட அளவிலும் – நச்.உரை
– என் தோள்மீது ஏற்றிவைத்திருக்கும்போதும் – மா.இராச. உரை
– மகிழ்ச்சியால் மெல்லிய தோளில் தூக்கிவைத்தாலும் – ச.வே.சு.உரை

மேல்


வேய்தரு(தல்)

(வி) சூட்டு(தல்), adorn, as with string of flowers

காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி
ஏதிலாள் கூந்தலிடை கண்டு மற்று அது
தா தா என்றாளுக்கு தானே புறன் தந்து
வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது
நோதலே செய்யேன் நுணங்கு இழையாய் இ செவ்வி
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது
ஓஓ பெரிதும் வியப்பு – பரி 24/34-40

ஒரு காதற்பரத்தையின் காதலன் தன் மார்பில் கிடந்த மணங்கமழும் மாலையைக் கழற்றி நீரில் விட, அதனை
நீர் இழுத்துச் செல்ல,
அவனது இல்பரத்தை அதனை எடுத்துச் சூடிக்கொள்ள, ஓர் அயலாளின் கூந்தலில் தன் காதலன் மாலையைக்
கண்டு, அதனைக்
கொடு, கொடு என்று கேட்ட காதற்பரத்தைக்கு, “இது தானாகவே எங்கிருந்தோ வந்து
என் கூந்தலில் சூட்டிக்கொண்டது” என்று சொல்ல, “இது எப்படி நடந்தது? அவ்வாறு விளைந்ததற்கு
வருந்தமாட்டேன், நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்களையுடையவளே! இத்தகைய தருணத்தில்
நீ இங்கு இருப்பாய் என அறிந்து அந்த மாலையை நீர் கொண்டுவந்து சேர்த்தது
ஓஓ இது பெரிதும் வியப்பிற்குரியது”

ஆய் தொடி அரிவை கூந்தல்
போது குரல் அணிய வேய்தந்தோயே – அகம் 104/16,17

ஆராய்ந்த வளையலையுடைய தலைவியின் கூந்தலில்
மலர்க் கொத்தை அணியச் சூட்டினாய்

மேல்


வேய்வை

(பெ) 1. யாழ்நரம்புக்குற்றவகை, A defect in lute string
2. பறை முகப்புத்தோல்களில் உள்ள குற்றம், a defect in the leather face of a drum.

1

ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் – பொரு 16,17

ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்

யாழ் நரம்பில் தினையரிசியைப் போலச் சிறியதாய் இருக்கும் முண்டுகள் அல்லது பிசிறுகள் எனலாம்.
அவற்றை விரலால் நீவிவிட்டுச் சரிசெய்வர்.

2

தேய்வை வெண்காழ் புரையும் விசி பிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரி குரல் தடாரி – புறம் 369/19-21

கல்லில் தேய்த்து அரைக்கப்படும் வெள்ளிய சந்தனக்கட்டை போலும் இறுக இழுத்துக் கட்டப்பட்ட
குற்றமில்லாத புதிதாகப் போர்க்கப்பட்ட அரித்த ஓசையையுடைய தடாரிப்பறை.

அரைத்த சந்தனக் குழம்பில் நன்கு அரைபடாமல் இருக்கும் சிறிய துகள்களைப் போலப்
பறையின் தோல்பகுதிகளில் காணப்படும் முண்டுகள் அல்லது பிசிறுகள் இங்கே வேய்வை எனப்படுகின்றன.

மேல்


வேர்

(பெ) 1. தாவரங்களின் மண்ணின் கீழான பகுதி, root
2. உடம்பில் முளைத்தெழும் உறுப்பின் அடிப்பகுதி, the root bottom of a shoot of a body
3. வியர்வை, sweat, perspiration

1

வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1

வேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில் காற்றினால் மோதப்படும்போது எழும்பும் நரலும் ஓசை

2

அலகை அன்ன வெள் வேர் பீலி
கலவ மஞ்ஞை – மலை 234,235

சோழியைப் போன்ற வெண்மையான வேர்களையுடைய மயிலிறகுகளைக்கொண்ட
தோகையையுடைய மயில்கள்

3.

வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் – புறம் 69/3

வேற்று இழை ஊடுபோன வியர்வையால் நனைந்த சீரையை

மேல்


வேரல்

(பெ) சிறு மூங்கில், small bamboo
Swollen node-ringed semi-solid medium bamboo, Dendrocalamus strictus;

முழு நெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் – மலை 223,224

முழுப் பாதையும் பின்னி வளர்ந்த நுண்ணிதான கோல்களையுடைய வேரல் என்னும் சிறுமூங்கிலுடன்
எருவை என்னும் நாணலின் மெல்லிய கோல்களையும் (பிடித்துக்)கொண்டவர்களாய்ச் செல்லுங்கள்

விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71

விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ, சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ

மேல்


வேரி

(பெ) 1. தேன், honey
2. மது, கள், toddy

1

கடி புகு வேரி கதவம் இல் தோட்டி – பரி 23/32

மணம் பொருந்திய தேன் நிரம்பிய மலர்மாலைகளில் மறைவின்றி மொய்த்திருந்த அழகு மிக்க (அந்த வண்டுகள்)

2

ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி – புறம் 152/27

ஆவின் நெய்யை உருக்கினாற் போன்ற மதுவைத் தந்து

மேல்


வேலம்

(பெ) வேலமரம், babul, Vachellia nilotica

வெளிறு இல் காழ வேலம் நீடிய – நற் 302/8

உட்புழல் இல்லாமல் நன்கு வயிரமேறிய வேலமரங்கள் உயர்ந்து வளர்ந்த

இதன் இலை மிகச் சிறியதாக இருக்கும்.

சிறியிலை வேலம் பெரிய தோன்றும் – பதி 58/14
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து – அகம் 89/6

இதன் உச்சி பரட்டைத்தலை போல் இருக்கும்.

அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/12

சிதைந்துபோன தலையையுடைய வேலமரத்தின் காய்ந்துபோன கிளைகளில்,

மேல்


வேலன்

(பெ) முருக வழிபாடு செய்பவன், priest worshiping Murugan

மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன்
வென்றி நெடுவேள் என்னும் – குறு 111/1,2

எனது மென்மையான் தோள்களை மெலியச்செய்த வருத்தத்தை, பூசாரி
வெற்றியுடைய முருகனால் வந்தது என்று சொல்வான்;

மேல்


வேலாழி

(பெ) கடற்கரை, seashore

வேலாழி வியன் தெருவில் – பட் 119

கடற்கரையின் (அருகே இருக்கும்)அகன்ற தெருவிடத்து,
– வேலா – கரை, ஆழி – கடல். ஆழிவேலா என மாறிக் கடற்கரையின் தெரு என்க.

மேல்


வேலி

(பெ) 1. முள், கழி போன்றவற்றால் ஓர் இடத்தைச் சுற்றி அமைக்கப்படும் அரண்,
fence, hedge
2. இருபது மா கொண்ட ஒரு நில அளவு (= 6.67 acres)

1

வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126

உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்

விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க – சிறு 114

பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி

2

சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக – பொரு 246,247

செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,
ஓராயிரம் கலம் என்னும் அளவில் நெல்லை விளைச்சல் ஆக

வேலி ஆயிரம் விளைக நின் வயலே – புறம் 391/21

மேல்


வேலூர்

(பெ) ஒரு சங்ககால ஊர், a city in Sangam period
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், ஓய்மா நாட்டு நல்லியக்கோடனைப்பாடிப் பரிசில் பெற ஒரு பாணன்
செல்வதாகக் கூறும் வழியில் உள்ள ஓர் ஊர். சென்னைக்குத் தெற்கே உள்ள பகுதி இடைக்கழிநாடு.
ஓய்மாநாடு எனப்படுவது திண்டிவனப்பகுதி. இவற்றுக்கு இடைப்பட்ட வெளியில் உப்புவேலூர் என்று ஓர் ஊர்
இன்றும் உண்டு. இங்கு கூறப்படும் வேலூர் அது ஆகலாம்.

விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் – சிறு 173

வலிமை மிக்க வேலால் வெற்றி (பொருந்திய)வேலூரைச் சேரின்

மேல்


வேலை

(பெ) கடல், sea

ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18

ஆரவாரிக்கும் கடலின் முழக்கத்தைக் கொண்டுள்ளது அந்தப் பயணம் செல்கின்ற வழி;

மேல்


வேவது

(வி.மு) வெந்துபோவது, get burnt

நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு
வேவது அளித்து இ உலகு – கலி 142/51-54

காம நோய் தீயாக என்னைச் சுட்டாலும், கண்ணீரை என் கண்களுக்குள் சுழலச் செய்து என்
அழகிய கண்ணிமைகளுக்குள் அடக்கிக்கொள்ளுவேன், அவ்வாறு மறைத்துக்கொள்வதால், கண்களில் தோன்றும்
காமத்தால் உண்டான சூடான நீரை நிலத்தில் சிந்தினால், அழியும்படி
வெந்துபோகும் இரங்கத்தக்க இந்த உலகம்;

ஒழிந்து யான்
ஊதுலை குருகின் உள்ளுயிர்த்து அசைஇ
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேஎன் கனவ – அகம் 55/6-9

யான் அவளைப் பிரிந்திருந்து
உலைக்கண் ஊதும் துருத்தி போல வெய்துயிர்த்து உள் மெலிந்து
தீயில் வெந்துபோவது போலும் வெவ்விய நெஞ்சமொடு
கண் துயிலேனாய் வாய் வெருவிப் புலம்ப

மேல்


வேவை

(பெ) வெந்தது, that which is cooked or boiled in water or fried in oil

துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின்
பராஅரை வேவை பருகு என தண்டி – பொரு 103,104

அறுகம் புல் கட்டுக்களை கவ்வித்தின்ற செம்மறிக்கிடாயின் அழகிய புழுக்கப்பட்ட(இறைச்சியின்)
பெரிய (மேல்)தொடை நெகிழ வெந்ததனைத் ‘உண்பாயாக’ என்று வற்புறுத்தி,

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉ கண் இறடி பொம்மல் பெறுகுவிர் – மலை 168,169

பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,
(மிகுந்த)நிறங்கொண்ட கண்போன்ற (பருக்கைகளாலான)தினைச்சோற்றுக் குவியலைப் பெறுவீர்

மேல்


வேழம்

(பெ) 1. யானை, elephant
2. பேய்க்கரும்பு, a large coarse grass, kaus
3. கொறுக்கை, European bamboo reed.
4. மூங்கில், bamboo
5. கரும்பு, sugarcane

1

வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படு மணி இரட்டும் மருங்கின் கடு நடை
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 78-82

கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,
தாழ்கின்ற மணி மாறிமாறி ஒலிக்கின்ற பக்கத்தினையும், கடிய நடையினையும்,
கூற்றுவனை ஒத்த பிறரால் தடுத்தற்கரிய வலிமையினையும் உடைய,
காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி

2

குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு
வேழ வெண் புணை தழீஇ – அகம் 6/7,8

குழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன்
வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி,

3.

மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1

வீட்டில் நடப்பட்ட வயலைக்கொடி வெளியிற் சென்று கொறுக்கச்சியைச் சுற்றிக்கொண்டிருக்கும்
2, 3,

4.

வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ
தாழை முடித்து தருப்பை வேய்ந்த
குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 263-265

மூங்கில்கோலை நெடு வரிசையாகச் சார்த்தி, வெண்மையான மரக்கொம்புகளை குறுக்காகப் பரப்பி,
தாழைநாரால் (இரண்டையும்)முடித்துத் தருப்பைப்புல்லை (அதன் மேல்)வேய்ந்த
குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில்
வேழம் – வேழக்கோல் – பேய்க்கருப்பந்தட்டை; கொறுக்கைச்சியுமாம்; மூங்கிற்கோல் எனினுமாம் –
பொ.வே.சோ உரை விளக்கம்.

5.

வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்
வேழ வெண் பூ விரிவன பல உடன் – நற் 241/4,5

மெல்லென வீசும் வாடை கோதிவிடுவதாக ஊன்றித் தீண்டுவதால்
கரும்பின் வெள்ளையான பூக்கள் பலவும் சேர்ந்து விரிவனவாய்

மேல்


வேள்

1. (வி) 1. வேள்விசெய், offer sacrifices
2. விரும்பு, long for
3. மணம்புரி, marry
– 2. (பெ) 1. வேளிர் குலத்தான், One belonging to the VELir class
2. முருகன், Lord Muruga
3. வேட்கை, craving

1.1

வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/1,2

வேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற

1.2

நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/21

உண்மையில் உன் மனம் வேறிடத்தில் இருக்கும் நீ விரும்பாத முயக்கத்தை

1.3

விளங்கு இழை பொலிந்த வேளா மெல் இயல்
சுணங்கு அணி வன முலையவளொடு நாளை
மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/9-11

விளங்குகின்ற இழைகளால் பொற்புமிக்க மணமாகாத மெல்லிய இயல்பினையும்
சுணங்கு பரந்த அழகிய முலையினையுடைய அவளுடனே நாளையே
மணம்புரிந்துகொள்ளும் நாள் ஆகுதல் ஒன்று

2.1

விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் – மது 344,345

விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மான விறல் வேள்(என்னும் குறுநில மன்னனுடைய)
அழும்பில் என்னும் ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும்,

2.2

ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள்
பூண் தாங்கு இள முலை அணங்கியோனே – ஐங் 250/4,5

ஆண்தகைமை உள்ள வெற்றி சிறக்கும் முருகவேள் அல்லன் – இவளின்
பூண் விளங்கும் இளமையான முலைகளை நோயுறச் செய்தவன்

2.3

தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர
வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் – கலி 23/9

தோள்களை அணைத்துச் சுகம் கண்டபின் கைவிடப்பட்டவர்கள்
மிக்க அவாவுடன் நீர் குடித்துவிட்டுத் தூக்கியெறிந்துவிட்ட பனையோலைக் குடைக்கு ஒப்பானவர்கள்;
வேணீர் உண்டோர் – வேட்கையால் நீர் உண்டோர் – மா.இரா.உரை விளக்கம்.

மேல்


வேள்வி

(பெ) 1. யாகம், sacrifice
2. யாகசாலை, place to perform sacrifice/rituals

1

கேள்வி கேட்டு படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப – பதி 74/1,2

வேதங்களைச் சொல்லக்கேட்டு, விரதங்களை இடைவிடாமல் கைக்கொண்டு
வேள்விகளைச் செய்து முடித்தாய், உயர்ந்தவர்கள் மனம் மகிழ;

2

இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த
வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும் – பெரும் 313-318

இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனைமரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல்,
நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த
வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரி
அன்ன(த்தைப்போன்ற தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில்
இடங்கொண்ட
வைகறை வெள்ளிமீன் போலவும் மினுக்மினுக் என்று ஒளிவிட்டும் தோன்றும்

மேல்


வேளாண்

(பெ) உபகாரம், உபசரிப்பு, courtesy, assistance

கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்ப கூறி – பொரு 74,75

உறவினரைப் போல என்னுடன் உறவுகொள்ளுதலை விரும்பி,
(தன்)உபசரிப்பிற்கு வழிமுறையாக (யான்)விரும்புமாறு (முகமன்)பொழிந்து

கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4

உறவு அல்லாத உறவினருடைய உபகாரத்தால் வந்த தண்ணீரை

மேல்


வேளாண்மை

(பெ) உதவி, உபகாரம், help, act of benevolence

கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள்
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு
வேளாண்மை செய்தன கண் – கலி 101/43-46

காளையை அடக்குபவரில் என்னைப் போன்றவர் யாரும் இல்லை என்று நம் மாடுகளுக்குள்
தன் முயற்சியை எடுத்துக்கூறும் தலைவன் நமக்கு என்றேனும் ஒருநாள்
உறவினன் ஆவான். அவனைக் கண்டு
உபகாரத்தைச் செய்தன நமது கண்கள்;
வேளாண்மை செய்தன கண் – நம் கண்களும் அவனை வரவேற்று விருந்தளித்தன – மா. இரா. உரை
கண் வேளாண்மை செய்தலாவது, இடக்கண் துடித்தல் – நச்.உரை விளக்கம்

மேல்


வேளார்

(வி.மு) விரும்பார், won’t like

அருகில் கண்டும் அறியார் போல
அகன் நக வாரா முகன் அழி பரிசில்
தாள் இலாளர் வேளார் அல்லர் – புறம் 207/3-5

தம் அருகே கண்டுவைத்தும் கண்டறியாதார் போல
உள்ளம் மகிழ் வாராத தம் முகம் மாறித் தரப்பட்ட பரிசிலை
வேறோரிடத்துச் செல்ல முயலும் முயற்சியில்லாதோர் விரும்பார் அல்லர்

மேல்


வேளாளர்

(பெ) வேளாண்மை செய்வோர், a community

தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட
விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம் – பரி 20/62,63

உன்னைப் பின்தொடர்ந்தோம், எருதானது தனது தொழிலாகிய உழவைச் செய்யாமல் வேறிடத்திற்கு ஓடிவிட
விட்டுவிடும் முறைமை வேளாளர்க்கு இல்லையாதலால் நாங்கள் உன் பின்வந்தோம்

மேல்


வேளிர்

(பெ) ஒரு பண்டைய அரச குலத்தவர், A class of ancient chiefs in the Tamil country

வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள். வேளிர் குடிமக்களின் அரசன்
வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல்லும் சேர்ந்துவரும். இவர்கள் பெரும்பாலும் வள்ளல்களாக
இருந்தனர்.
சங்ககாலத்தில் வேளிர்கள் மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில
வேந்தர்கள் இவர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

1.

பதினொரு வேளிர் சேர, பாண்டியனுடன் சேர்ந்து சோழனை எதிர்த்தது.

காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை – அகம் 246/8-13

மிக்க சினமும் வலியுமுடைய பெரிய புகழினைக் கொண்ட கரிகால் வளவன்
ஆரவாரமிக்க கள் வளமுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்தே
சிறப்பு வாய்ந்த பகையரசர் மாறுபட்டெழுந்த போரின்கண்
மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தே ஒழிந்து கிடக்க
வேளிர் பதினொருவருடன் இருபெரு வேந்தரும் (சேரனும் பாண்டியனும்)நிலைகெட
அவர்தம் மிக்க வலியைக் கெடுத்த நாளில்

2.

வேளிர் சேர, சோழருடன் சேர்ந்து பாண்டியனை எதிர்த்தது.

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய
பொருது அவரை செரு வென்றும் – மது 55,56

(சேர சோழர் என்ற)இரண்டு பெரிய (முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ
பொருது அவரைப் போரில் வென்றும்,

3.

வேளிர் சோழ, பாண்டியருடன் சேர்ந்து சேரனை எதிர்த்தது.

களிறு பரந்து இயல கடு மா தாங்க
ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார்
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/4-9

யானைப்படை பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள் தாங்கித்தாங்கி நடக்க,
ஒளிவிடும் கொடிகள் அசைந்து ஆட, தேர்கள் விலகி விலகி வளைந்து செல்ல,
வேல்களை எறிந்துகொண்டு மேற்செல்லும், பகைவரின் பக்கவாட்டுப் படைகளை அழிக்கின்ற விரைவான
முன்னணிப்படையும்,
வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,

4.

வேளிர்கள் பதினால்வர் சென்று காமூரைத் தாக்கியது.

அடு போர்
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போல
கலங்கின்று – அகம் 135/10-14

அடும் போரினையும்
நீங்காத சிறப்பினையும் வானை அளாவிய பெரிய குடையினையுமுடைய
பதினான்கு வேளிர் ஒன்றுகூடித் தாக்கியதுமாகிய
கழுவுள் என்பானுடைய காமூரைப் போலக்
கலங்கியது

5.

இந்த வேளிர்கள் நீண்ட காலம் தமிழகத்தில் அரசாண்டு வந்தனர் என்பது அவரைத் தொன்று முதிர் வேளிர்
என்று குறிப்பதால் உணரலாம்.

தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் – நற் 280/8
தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது – குறு 164/3
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த – அகம் 258/2
பொன் அணி யானை தொன் முதிர் வேளிர் – புறம் 24/21

மேல்


வேளூர்

(பெ) ஒரு சங்ககால ஊர், a city in sangam period
இந்த ஊர் சோழநாட்டைச் சேர்ந்தது என்றும் கள் வளமும், நெல் வளமும் மிக்கது என்றும் ஓர்
அகப்பாடல் குறிப்பிடுகிறது. இது இன்றைய வைத்தீஸ்வரன்கோயில் என்பர். இது புள்ளிருக்குவேளூர்
என்றும் குறிப்பிடப்படுகிறது. ‘புள்’ என்னும் சொல் கருடனையும், ‘இருக்கு’ என்னும் சொல் ரிக் வேதத்தையும்
‘வேள்’ என்னும் சொல் முருகப்பெருமானையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார்.
இடையன் நெடுங்கீரனார் என்னும் இந்த அகப்பாடல் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர்
உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.

பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் – அகம் 166/4

பழைய பலவகை நெற்களையுடைய வேளூரின் வாயிலிடத்து

மேல்


வேளை

(பெ) தைவேளை, நாய்க்கடுகுச்செடி, Gynandropsis pentaphylla

குப்பை வேளை உப்பு இலி வெந்ததை – சிறு 137

உப்பில்லாமல் வேகவைத்த குப்பைக்கீரையை
– குப்பையினின்ற வேளைக்கீரை உப்புமின்றி வெந்ததனை – பொ.வே.சோ.உரை விளக்கம்

1.

இது ஏழை எளியோரின் உணவாக இருந்தது. இதன் பூ வெண்மையாக இருக்கும்.

வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட – சிறு 136-140

வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு;

கவை கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகில் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/1-4

கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்
தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த
வேளையினது வெள்ளிய பூவை வெள்ளிய தயிரின்கண் பெய்து
இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும்
– வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத்
தாளிதம் செய்யப்பட்ட புளிங்கூழ் ஈண்டு அம்புளி மிதவை எனப்பட்டது – ஔவை.சு.து.விளக்கம்

2.

கைம்பெண்கள் உண்ணும் எளிய உணவாக இருந்தது.

அடை இடை கிடந்த கை பிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளி பெய்து அட்ட
வேளை வெந்ததை வல்சி ஆக – புறம் 246/6-8

இலையிடையே பயின்ற கையால் பிழிந்துகொள்ளப்பட்ட நீர்ச்சோற்றுத் திரளுடனே
வெள்ளிய எள் அரைத்த விழுதுடனே புளி கூட்டி அடப்பட்ட
வேளை இலை வெந்த வேவையுமாகிய இவை உணவாகக் கொண்டு

3.

காட்டில் மான்கள் கொறித்துத் தின்னும்.

சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூ கறிக்கும் – புறம் 23/19-21

சிறிய மறியை அணைத்துக்கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய மான்பிணை
பூளை ஓங்கிய அஞ்சத்தக்க பாழிடத்து
வேளையினது வெளிய பூவைத் தின்னும்

மேல்


வேறல்

(பெ) வெல்லுதல், conquering

வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே – புறம் 111/2

வேலினால் வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது

மேல்


வேனல்

(பெ) வெயில் காலம்,

வேனல் வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4

வேனிற் காலத்தில் வரிகளையுடைய அணிலினது வாலைப் போன்ற

மேல்


வேனில்

(பெ) கோடைக்காலம், summer
சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் இளவேனில் எனப்படும்.
ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் முதுவேனில் எனப்படும்.

வேனில் நின்ற வெம் பத வழி நாள் – சிறு 9

இளவேனிற்பருவம் நிலைபெற்ற வெம்மையான நிலைக்கு அடுத்த(முதுவேனிற்)காலத்தில்

காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 3

சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்

மேல்