யா – முதல் சொற்கள்

யா

1. (வி) கட்டு, பிணி, bind, tie, fasten
– 2. (பெ) ஒரு மரம், ஆச்சா மரம், சால் மரம், a tree, Shorea robusta
– 3. (வி.பெ) யாவை, what, which things

1

செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர்
மூதா தின்றல் அஞ்சி காவலர்
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ
காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும்
தீம் புனல் ஊர திறவிது ஆக – அகம் 156/3-7

செழுமை வாய்ந்த வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளங்கதிரை
முதிய பசு தின்பதைக் கண்டு அஞ்சி, வயற்காவலர்
பாகலின் சிறந்த கொடியைப் பகன்றையின் கொடியுடன் அறுத்து (அவற்றால் அந்தப் பசுவைக்)
காஞ்சி மரத்திடத்துக் கரும்பினை உணவாக இட்டுக் கட்டிவைக்கும்
நீர்வளம் பொருந்திய ஊரையுடைய தலைவனே

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142

வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,

பிணித்தல் வேறு, யாத்தல் வேறு என்பதை அடியிற்காணும் அடிகள் உணர்த்தும்.

மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/8,9

நீலமணி போன்ற பீலியைக் கட்டிய நூலில், ஏனைய
அழகிய பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி,

இந்த யாத்தல் உள்ளங்களைக் கட்டுவதற்கும் ஆகிவரும்.

பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே – குறு 313

பெரிய கடற்கரையில் இருக்கும் சிறிய வெள்ளைக் கடற்காக்கை
நீந்தக் கூடிய நீரையுடைய பெரிய கழியில் இரையைத் தேடி உண்டு
பூ மணக்கும் சோலையில் தங்கும் துறையைச் சேர்ந்த தலைவனோடு
எம்மைச் இணைத்துக்கொண்டோம், இணைந்த நட்பினை
அவிழ்த்துவிட முடியாது; அது முடிச்சிடப்பட்டு நன்றாக அமைந்துள்ளது

இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் – புறம் 216/6

அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய இனிய குணங்களையுடையவன், பிணித்த நட்பினையுடையவன்

2.

யா என்ற மரம் இன்னது என்று அகராதிகள் குறிப்பிடவில்லை. எனவே இது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.
சிலர், இது ஆச்சாஅல்லது சால் எனப்படும் shorea robusta மரம் என்பர். இந்த ‘யா’மரம் யாஅம், விளாம், மரா,
சாலம், குங்கிலியம், ஆச்சா எனவும் அறியப்படுகிறது என்றும் கூறுவர்.
இந்த யாமரம் கூந்தற்பனை என்றும் கூறுவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘உலத்தி’ என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் கூந்தற்பனை
என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Caryota urens. ‘யா மரம்’ என்று குறுந்தொகையிலும்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ்
-சாந்தி மாரியப்பன், http://image-thf.blogspot.com/2013/07/blog-post_19.html

2.1.

யா மரங்கள் மிக்க உயரமானவை.

யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம் – நற் 198/1,2

யா மரங்கள் உயர்ந்து
ஓமை மரங்கள் நெடுகிலும் காணப்படும் பாலைக்காட்டு வழியில்

யாஅ உயர் நனம் தலை – அகம் 65/13
யா மரங்களுயர்ந்துள்ள அகன்ற இடத்தில்

2.2

யா மரங்கள் இடையில் கிளைகளை விடாமல் செங்குத்தாக ஓங்கி உயர்ந்து மேலே கிளைவிடுபவை

கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/3-5

கவடுகளில் முளைவிடும் தளிர்களும் இல்லாத, செங்குத்தாக நிற்கும் யாமரத்தின்
ஒரே தண்டாக ஓங்கி உயர்ந்த மரத்தின் (உச்சிக்) கிளையில் இருக்கும், வலிய பறத்தலையுடைய
சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை

2.3

யா மரங்கள் பாலைநிலத்தில் வளர்பவை.

பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை – அகம் 19/2,3

(பாலைத்திணைப் பாடல்)
பருந்து இருந்து
வருந்தும் குரலில் பலமுறை அழைக்கும் யாமரங்களின் உயர்ந்த அகன்ற இடத்தில்

2.4

இதன் இலை யானைகளின் விருப்பமான உணவு. இது நிழல் தரும் அளவுக்குப் பரந்த கிளைகளைக் கொண்டது.

மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும் – குறு 232/3-5

மரல்கொடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்
உரலைப் போன்ற காலைக் கொண்ட யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாமரத்தின் வரிவரியான நிழலில் துயிலும்

புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே – அகம் 59/7-9

புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை
உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில்
படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை

2.5

யா மரத்தின் இளம் தளிர்கள் மங்கையரின் மேனி நிறத்தவை. இது மாரிக்காலத்தில் தளிர்விடும்.

யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்
ஆகம் மேனி அம் பசப்பு ஊர – அகம் 333/1,2

யா மரத்தின் ஒள்ளிய தளிரில் அரக்குப்பொடியிபைச் சிதறினாற் போன்ற நின்
உடம்பினது மேனியின்கண் அழகிய பசலை பரக்க

சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈந்தளிர் அன்ன மேனி – அகம் 337/1,2

பக்க மலையின்கண் யா மரத்தின் உயர்ந்த கிளையில் தளிர்த்த
மாரிக்காலத்து குளிர்ந்த தளிரை ஒத்த மேனியையும்

2.6

யா மரத்தின் அடிமரம் வைரம்பாய்ந்து கெட்டியாக இருக்கும். இதன் மேலுள்ள பட்டை பொரிந்துபோய் இருக்கும்.
இந்தப் பட்டையை யானைகள் விரும்பி உண்ணும்.

பொத்து இல் காழ அத்த யாஅத்து
பொரி அரை முழு_முதல் உருவ குத்தி
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி – குறு 255/1,2

பொந்துகள் இல்லாத வயிரம்பாய்ந்த, பாலைவழியில் உள்ள யாமரத்தின்
பொரிந்த அடிமரத்தை முற்றவும் உருவிச் செல்லக் குத்தி
வலிமையுள்ள தன் அகன்ற கையினால் வளைத்து, வருத்தமிக்க நடையையும்,
சிறுத்த கண்களையும் கொண்ட பெருங் கூட்டத்தின் மிகுந்த பசியைத் தீர்க்கும்
அகன்ற கொம்புகளைக் கொண்ட யானையைக் கண்டனர் தோழி!

பிடி பசி களைஇய பெரும் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும் – குறு 37/2,3

(தன்)பெண்யானையின் பசியைப் போக்க ,பெரிய கையையுடைய களிறுகள்
மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரிக்கும்

2.7

யாமரத்துப் பட்டை நீர்ப்பசையுள்ளதாக இருக்கும். இதனை யானைகள் உரித்துச் சப்பிப்போடும்.

கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் – அகம் 257/14-17

கவர்த்த தளிர்களையுடைய யா மரத்தின்
நாரினையுடைய அடிமரத்தில் நீர்வரும்படி உரித்து
களிற்றியானை சுவைத்துப்போட்ட சக்கையான சுள்ளிகள்
கல்லாத உப்பு வணிகர்க்குத் தீமூட்டப் பயன்படும்

2.8

கோடையில் இதன் இலைகள் உதிர்ந்துவிட, உச்சிக்கிளைகளில் கழுகுகள் கூடுகட்டும்.

மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இட
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி – அகம் 31/4-11

உலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்
இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின்
உச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு
கல்லை உடைய சிற்றரணில் இருக்கும் மறவர்கள் வில்லால் (அம்பினை) எய்ய
நிணம் ஒழுகும் பொலிவற்ற நிறமுள்ள வழிகள்தோறும்
செவ்வலரி மாலை இட்டவாறு இறந்துகிடந்தாற் போல
புண் சொரியும் குருதி சூழ்ந்து பரவக் கிடந்தோரின்
கண்களை (க் கொத்திச் சென்று) ஊட்டிவிடும் கழூகுகளையுடைய காட்டைக் கடந்து

2.9

யா மரத்தின் அடிமரம் கருமையாக இருக்கும். வேனில் காலத்திலும் கிளைகளின் கவட்டில் தளிர் விடும்.

கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து
வேனில் வெற்பின் கானம் காய – அகம் 187/15,16

கவர்ந்த ஒள்ளிய தளிரினையும், கரிய அடியினையும் உடைய யா மரங்களுடைய
வேனில் வெப்பம் வாய்ந்த மலையை அடுத்த காடு காய்ந்திட

2.10

இதன் அடிமரம் வெகு உயரமாக இருப்பதால், இதில் ஏறி உச்சிக்கிளையில் அமர்ந்தவாறு வழிப்பறி செய்வோர்
வழிப்போக்கர் வரவினை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பர்.

வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் – அகம் 263/5-8

பலவகைப்பட்ட வழிகளையுடைய அச்சம் பொருந்திய பெரிய காட்டில்
வழிப்போக்கர்கள் வருவதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள
வில்வன்மையுடைய ஆறலைக் கள்வர் மேலிடத்தில் மறைந்து
நீண்ட நிலையுடைய யா மரத்தின் கொம்பை இடமாகக் கொள்ளும் அரிய பாலைநில வழியில்

2.11.

வேனிற்காலத்தில் இலைகளை உதிர்ப்பதற்கு முன்னர் இதன் இலைகள் வெகு அடர்த்தியாக நல்ல நிழலைத்
தருவனவாக இருக்கும்

நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் – அகம் 343/10,11

அகன்ற இடத்தின்கண்ணே யா மரத்தின் அழகிய தளிர்களையுடைய பெரிய கிளைகளின்
இல்லின்கண் இருப்பது போன்ற நிழலில் தாம்வந்த வெயிலின் வெப்பம் ஒழிதற்கு

2.12

யா மரங்கள் குறிஞ்சிநிலப் பகுதியிலும் வளரும். இவற்றை வெட்டி, நிலத்தைச் சீர்திருத்திக் குறவர்கள்
தினைப்புனம் அமைப்பர்.
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்

கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை
மட பிடி தட கை அன்ன பால் வார்பு
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல்
படு கிளி கடிகம் சேறும் – குறு 198/1-5

யா மரத்தை வெட்டிய மரங்களைச் சுட்ட வழியில்
கரும்பைப் போன்ற அடியைக் கொண்ட பசிய தாளைக் கொண்ட செந்தினையின்
இளமையான பெண்யானையின் அகன்றுருண்ட கையைப்போன்றனவாகி, பால் நிரம்பி
கரியை எடுக்கும் குறடுபோல வளைந்த, செறிந்த குலைகளையுடைய பசிய கதிரில்
வீழ்கின்ற கிளிகளை ஓட்டுவதற்கு அங்குச் செல்வோம்;

இந்த அடிகளைக் காணும்போது யா என்பது கூந்தல்பனையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
எனவே, இது சால் எனப்படும் ஆச்சா மரமாக (shorea robusta) இருக்க அதிக வாய்ப்புண்டு.

3.

நீயே
——————— ————————
கேள்விக்கு இனியை காட்சிக்கு இன்னாயே
அவரே
——————————— —————
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே
அதனால்
————- ————————–
ஒவ்வா யா உள மற்றே – புறம் 167/1-9

நீதான்
————————– ——————
கேட்ட செவிக்கு இனியை, கண்ணுக்கு இன்னாய்
பகைவராகிய அவர்தாம்
——————- —————————
கண்ணுக்கு இனியர், செவிக்கு இனியர் அல்லர்
அதனால்,
—————- ———————-
அவர் ஒவ்வாதன வேறு யாவை உள

மேல்


யாக்கை

(பெ) உடம்பு, body

குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 313

கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி

புல்லென் யாக்கை புலவு வாய் பாண – பெரும் 22

பொலிவழிந்த உடம்பினையும் புலவு நாறும் வாயினையுமுடைய பாணனே –

வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 61

வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,

பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் – பட் 260

பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் நெருங்கிச்செல்லவும்

கை கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி – மலை 311-313

(குட்டியைக்)கையில் பிடிப்பதை மறந்த கரிய விரலையுடைய மந்தி,
எளிதாய் அணுகமுடியாத பிளவுக்குள் விழுந்துவிட்ட தன் (தாவுதலை முற்றிலும்)கற்றுக்கொள்ளாத குட்டிக்காக
தளிர்களை மேய்ந்து (வளர்ந்த) உடம்பினையுடைய சுற்றத்தோடே கூடிநின்று

நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/14

நாணம் மிகுந்த உடம்பும், ஒளி திகழும் நெற்றியும் கொண்ட உன் மனைவிக்கு

கழை தின் யாக்கை விழை களிறு தைவர – அகம் 328/13

மூங்கிலைத் தின்னும் தன் உடம்பினை தன்பால் விருப்பமுற்ற தன் ஆண் யானை தடவிக்கொண்டிருக்க

மேல்


யாங்கணும்

(வி.அ) 1. எங்கும், எல்லா இடத்திலும், everywhere
2. எங்கேயும், எங்கணும், anywhere

1

இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ் – அகம் 77/5,6

இடிகளை உமிழும் மழை பெய்யாது நீங்குதலால் எவ்விடத்தும்
குடிகள் தத்தம் பதிகளினின்றும் பெயர்ந்து போகற்கு ஏதுவாய பலரும் சுட்டிக்கூறும் மிக்க பாழியமாகிய பாலையில்

2

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3

சுழன்று திரியும் ஆயத்தாருடன் எங்கும் செல்லாதே

மேல்


யாங்கனம்

(வினா பெ) எவ்வாறு, எத்தன்மையில், How, in what manner, of what nature

நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை
யாங்கனம் தாங்குவென் – நற் 381/5,6

நடுங்கிக்கொண்டே இருக்கும் நெஞ்சத்தோடு, துன்பத்தை
எவ்வாறு தாங்குவேன்?

மேல்


யாங்கு

(வினா பெ) 1. எங்கு, எந்த இடம், where
2. எவ்வாறு, எத்தன்மையில், How, in what manner, of what nature

1

சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/3,4

சந்தனமெல்லாம் அழிந்துகிடக்கிறது வியர்வையால்! தலைமாலை தோள்வரை தொங்குகிறது!
எங்கு சென்றுவிட்டு இங்கு வருகிறாய்?” “இப்போது கேள்

2

மான்ற மாலை வழங்குநர் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர் சிறு நெறி
யாங்கு வல்லுநள்-கொல் தானே – நற் 29/4-6

இருள் மயங்கிய மாலைப்பொழுதில் வழிச்செல்வோரைத் தாக்கிக்கொல்ல
ஆண்புலி வழியை நோக்கிக்கொண்டிருக்கும் புல்லிய வழித்தடமான சிறிய பாதையில்
நடந்துசெல்ல எவ்வாறு ஆற்றலுள்ளவள் ஆனாளோ அவள்?

மேல்


யாங்கும்

(வி.அ) யாங்கணும், எங்கும், எல்லா இடத்திலும், everywhere

ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும்
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – நற் 322/1,2

இவ்வாறு தணியுமானால், எங்குமே
இதனைக்காட்டிலும் கொடியது வேறு ஒன்றும் இல்லை;

மேல்


யாங்ஙனம்

(வினா பெ) பார்க்க : யாங்கனம்

ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு
பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள்
இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/1-5

ஒரே ஒரு மகளை உடையவள் நான்; அவளும்
போர்க்களத்தில் மிக்குச் செல்லும் வலிமையையுடைய கூரிய வேலையுடைய காளையோடு
பெரிய மலைகளினூடே செல்லும் அரிய வழியில் நேற்றுச் சென்றுவிட்டாள்;
இப்பொழுது தாங்கிக்கொள் உன் வருத்தத்தை என்று சொல்கிறீர்! அது
எவ்வாறு சாத்தியமாகும்? அறிவுள்ள மக்களே!

மேல்


யாடு

(பெ) ஆடு, goat, sheep

பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே – மலை 416

பலவித ஆட்டினங்களைக்கொண்ட மந்தைகள்(இருக்கும் இடத்தில்) இராத்தங்குபவராய்ச் சேர்ந்தால்,

மேல்


யாண்டு

1. (வினா பெ) எங்கு, where
– 2. (பெ) ஆண்டு, year

1

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/9

இல்லறத்துக்குரிய அறிவையும் ஒழுக்கத்தையும் எங்கிருந்து கற்றுக்கொண்டாளோ?

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5

எனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் தந்தையைப் போன்றவன் எங்கு உள்ளானோ?

2

யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து – மது 150

ஆண்டுகள் பல கழியுமாறு (நீ)விரும்பும் இடத்திலே தங்கி,

மேல்


யாண்டும்

(வி.அ) எந்த இடத்திலும், anywhere, everywhere, in all plaees

மள்ளர் குழீஇய விழவினானும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண் தக்கோனை – குறு 31/1-3

மறவர்கள் கூடியுள்ள சேரி விழாக்களிலும்,
மகளிர் தழுவியாடும் துணங்கைக்கூத்திலும்,
எங்குமே கண்டேனில்லை மாண்புக்குரிய தலைவனை!

மேல்


யாண்டையன்

(வினா) எங்கு இருக்கின்றான்? where is he?

இன்று யாண்டையனோ தோழி – குறு 379/1

இன்று எங்கிருக்கின்றானோ? தோழி!

மேல்


யாண்டோர்

(பெ) எங்கும் இருப்பவர், people living in all places

யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் – கலி 100/6

எந்நாட்டவரும் தொழுது போற்றும் முழங்கும் ஒலியையுடைய முரசையுடையவனே!

மேல்


யாணது

(பெ) அழகுள்ளது, that which is beautiful
யாண் அழகு, beauty
யாணது பசலை என்றனன் – நற் 50/7
“அழகாக இருக்கிறது உன் பசலை” என்று கூறினான்

மேல்


யாணர்

(பெ) 1. புதிய வருவாய், fresh income
2. புதிதுபடல், freshness

1.

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1
இடையறாத புதிய வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,

பாணர் வருக பாட்டியர் வருக
யாணர் புலவரொடு வயிரியர் வருக என – மது 749,750

‘பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
கவியாகிய புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து

2

யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி – சிறு 25

புதிதாய்ப் பூத்தலையுடைய கோங்கின் ஒளிரும் மொட்டுக்களை இகழ்ந்து

மேல்


யாணு

(பெ) அழகு, beauty

வரி அரி யாணு முகிழ் விரி சினைய
மா தீம் தளிரொடு வழையிலை மயக்கி – பரி 10/5,6

வரிகளையுடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டு அழகிய மொட்டுக்கள் மலர்ந்த கொம்புகளையுடைய
மாமரத்தினது காண்பதற்கினிய தளிர்களோடு வாழையின் இலைகளையும் மயக்கி

யாணு – அழகு – ”யாணுக் கவினாகும்” – தொல்.சொல்.உரி.82 – பொ.வே.சோ உரை விளக்கம்

இந்த ‘யாணு’ என்ற சொல் சில பதிப்புகளில் ‘ஆணு’ என்று பிரிக்கப்பட்டுள்ளது.

மேல்


யாத்திரை

(பெ) பயணம், journey

ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18

ஆரவாரிக்கும் கடலின் முழக்கத்தைக் கொண்டுள்ளது அந்தப் பயணம் செல்கின்ற வழி;

மேல்


யாப்பு

(பெ) கட்டு, கட்டப்பட்டது, கவசம், பின்னல், tie, bond, that which is tied

1

பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன – நற் 265/4,5

பொலிவுள்ள தோளில் கவசம் மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும்
பாரம் என்னும் ஊரைப் போன்ற

சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம்
முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் – நற் 297/7,8

வண்டுகள் மொய்க்கும் அரும்புகளைக் கொத்தித் தூக்கியெறிந்த, கிளறுகின்ற கால்களையுடைய கோழி
முதிர்ந்த மிளகுக்கொடிகளின் பின்னலில் உறங்கிக் கிடக்கும் மலைநாட்டைச் சேர்ந்தவன்

மேல்


யாம்

(பெ) 1. ஒரு மரம், பார்க்க : யா -2 (பெ)
2. நாம், wa

1

களிறு தன்
உயங்கு நடை மட பிடி வருத்தம் நோனாது
நிலை உயர் யாஅம் தொலைய குத்தி
வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் – குறு 307/4-8

ஆண்யானை தன்
வருந்திய நடையையுடைய இளம் பெண்யானையின் வருத்தத்தைப் பொறுக்கமாட்டாமல்
நிற்பதில் உயர்ந்த யா மரம் அழியும்படி குத்தி
வெண்மையான பட்டையை உரித்து, தன் துதிக்கையைச் சுவைத்துக்கொண்டு மேல்நோக்கி
வருந்திய நெஞ்சத்தோடு முழங்கும்

2

அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு
அறிக தில் அம்ம இ ஊரே மறுகில்
நல்லோள் கணவன் இவன் என
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14

அமிழ்தத்தின் இனிமை பொதிந்துள்ள செம்மையான நாவானது அஞ்சும்படி வந்த
நேராக வளர்ந்து ஒளிரும் கூரிய பற்களையுடைய, சில சொல் சொல்லும் பெண்ணைப்
பெறுவேனாக நானே! பெற்ற பின்பு
அறியட்டும் இந்த ஊரே! வீதியில்
நல்லவளின் கணவன் இவன் என்று
பலரும் கூற நான் சிறிதே வெட்கப்படுவேன்

குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12

பல சிற்றூர்களையும் உடையது நாம் செல்லும் இந்த வழி.

மேல்


யாமம்

(பெ) நள்ளிரவு, midnight
தமிழர்கள் ஒரு நாளுக்குரிய காலத்தை ஆறு பிரிவுகளாகப் பிரித்தனர். அவை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை,
யாமம், வைகறை எனப்படும். இவை சிறுபொழுது எனப்படும். ஒவ்வொரு பிரிவும் 4 மணி நேரம் கொண்டது.
நாழிகைக் கணக்கில் 10 நாழிகைகளைக் கொண்டது ஒரு சிறுபொழுது. காலை என்பது காலை 6 மணி முதல்
10 மணி வரை. இந்தக் கணக்கில் யாமம் என்பது இரவு 10 முதல் அதிகாலை 2 மணி வரை உள்ள பொழுது.
எனவே யாமம் என்பது நள்ளிரவு என்றும் பொருள்படும். இந்த யாமத்தை மூன்றாகப் பகுத்து, முதல், இடை, கடை
யாமம் என்றனர். அதாவது 10 – 11.20 என்பது முதல் யாமம். 11.20 – 12.40 இடையாமம் அல்லது நடு யாமம்.
12.40 – 2.00 கடை யாமம்.

காலையும் பகலும் கையறு மாலையும்
ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இ
பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/1-3

காலையும் பகலும் செயலற்ற மாலையும்
ஊர் உறங்கும் நள்ளிரவும் விடியலும் என்று இந்தப்
பொழுதுகள் இடையே தெரியின் பொய்யானது காமம்!

இந்தப் பாடலை வைத்துச் சிறுபொழுது ஐந்தே என்பாரும் உளர். ஆனால் ஓர் ஆண்டிற்குரிய பெரும்பொழுது
ஆறு என்று கொள்ளும்போது, ஒரு நாளுக்குரிய சிறுபொழுதும் ஆறுதான் எனக் கொள்ளல் தகும்.

யாமம் என்பது தமிழ்ச்சொல். அது நாட்டுப்புற மக்களால் சாமம் என்று அழைக்கப்படுகிறது. வடசொல்லான ஜாமம்
என்பது வேறு. மூன்று மணி நேர அளவைக் குறிப்பது.

மேல்


யாமை

(பெ) ஆமை, tortoise

குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
அரி_பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் – ஐங் 81/1,2

நாரை உடைத்து உண்டு கழித்த வெள்ளை வயிற்றினைக் கொண்ட ஆமையின் தசையை
அரித்து எழும் ஓசையைக் கொண்ட பறையையுடைய உழவர்கள் தமக்கு வைத்துண்ணும் உணவாகக் கொண்டுச்
செல்லும்

மேல்


யாய்

(பெ) என் தாய், my mother

யாயும் ஞாயும் யார் ஆகியரோ – குறு 40/1

என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ

மேல்


யாரீர்

(வினா) நீர் யார்? who are you?

யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23

நீர் யார் எனக் கேட்பப் பெயரும் சொல்லிற்றிலன்

மேல்


யாரேம்

(வினா) யாராய் இருக்கின்றனம்? who are we? Who am I?

அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள – கலி 95/29

“அருளுவோம்! உனக்கு அருள்செய்ய நாங்கள் யார்? ஏடா!

மேல்


யாவண்

(வினா பெ) எங்கு, எவ்விடம், where, which place

திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை இருள்
யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே – புறம் 102/6-8

நீ திங்களாகிய
நாள் நிறைந்த மதியத்தை ஒப்பை; இருள்
எவ்விடத்தில் உள்ளது நின் நிழலின்கண் வாழ்பவர்க்கு?

மேல்


யாவது

(வினா பெ) எவ்வாறு, எப்படி, how

உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/13

தப்பிப்பிழைப்பது எவ்வாறு உன்னைச் சினமூட்டியவர்கள்?

மேல்


யாவதும்

1. (வி.அ) ஒரு சிறிதும், even a little
– 2. (பெ) யாவும், எல்லாம், அனைத்தும், all

1

கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் – திரு 135,136

கடிய சினத்தை(யும்) விலக்கிய காண்பதற்கினியரும், மனவருத்தம்
ஒருசிறிதும் அறியாத இயல்பினரும்,

2

செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் – திரு 132,133

கோபத்தை(யும்) நீக்கிய மனத்தினரும், பலவற்றையும்
கற்றோரும் அறியாத அறிவினையுடையவரும்,

மேல்


யாழ்

(பெ) வீணையைப் போன்ற பண்டைய இசைக்கருவி,
a kind of lute, an ancient string musical instrument
யாழ் என்ற இசைக்கருவியைப் பற்றிய விரிவான விளக்கங்கள் பொருநராற்றுப்படையிலும் (பாடல் வரிகள் 4-22),
பெரும்பாணாற்றுப்படையிலும் (பாடல் வரிகள் 3-15) கிடைக்கின்றன.

மேல்


யாழ

(இ.சொ) ஒரு முன்னிலை அசைச்சொல், an expletive of the second person

அலமரல் வருத்தம் தீர யாழ நின்
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின் – நற் 9/3,4

மனத்தைச் சுழற்றும் வருத்தம் தீர, உன்னுடைய
நலம் மிக்க மென்மையான மூங்கில்போன்ற தோள்களைப் பெற்றோமாதலின்

மேல்


யாளி

(பெ) சிங்கத்தின் முகமும், யானையின் தந்தமும்,துதிக்கையும் கொண்ட புராணகால விலங்கு,
a mythical lion-faced animal with elephant like tusks and trunk.

மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை – பெரும் 257-260

முகில்கள் விளையாடும் மூங்கில் வளர்கின்ற பக்கமலையில்,
(தம்மை)வருத்துதலையுடைய யாளி தாக்குகையால், பலவும் கூடிக்
கூட்டமான யானைகள் கலங்கிக் கதறினாற் போன்று,
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசை

மேல்


யாறு

(பெ) ஆறு, river

யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – மது 359

ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருவில் –


யானையங்குருகு

(பெ) நாரை வகை, a species of heron

யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய அணி மயில் அகவ – மது 674,675

யானையங்குருகு எனும் நாரையின் சேவல்களோடு விருப்பத்தையுடைய
அன்னச்சேவல்களும் (தம் பேடைகளை)அழைக்க, அழகிய மயில்கள் கூவ

யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு – குறு 34/5

யானைக்கொக்கு எனப்படும் பறவைகளின் கடற்கரையின் பெருங்கூட்டம்

இதனை வண்டாழ்ங்குருகு என்பர் நச்-உம் பொ.வே.சோ-வும் தம் உரைகளில். மேலும் பொ.வே.சோ அவர்கள் தம்
உரை விளக்கத்தில், யானையங்குருகு – சக்கரவாகப்புள் என்பார். திருப்பாவையுள் கூறப்படும் ஆனைச்சாத்தன்
என்பதுவும் இது என்பார் அவர்.
குஞ்சரக் குரல குருகு எனஒரு பறவை அகநானூற்றில் (145:15) கூறப்படுகிறது. அக்குருகே யானையங்குகுருகாயின்
யானையைப் போன்ற குரல் உடைமை பற்றி இப்பெயர் பெற்றது கொள்வதற்கு இடமுண்டு என்பார் உ.வே.சா தம்
உரை விளக்கத்தில்.

மேல்