மே – முதல் சொற்கள்

மே

1. (வி) விரும்பு, desire
2. (பெ) மேன்மை, உயர்வு, eminence, excellence

1

வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என
கூறுவென் போல காட்டி
மற்று அவன் மேஎ வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24

அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று
கூறுவது போல் காட்டி
பின்னர் அவன் விரும்பும் வழியில் விரும்பிச் செல்வாயாக நெஞ்சமே!

2

புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர்
ஏ கல் மீமிசை மே தக மலரும்
பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் – நற் 296/4-6

உள்ளீடற்ற காயைக் கொண்ட கொன்றையின் கிளைகளில், அழகாகக் கொடிபோன்ற பூங்கொத்து
பெரிய மலையின் மிக உயர்ந்த இடத்தில் மேன்மை பொலிய மலர்கின்ற,
பிரிந்திருப்போர் வருந்தும், அரிதினில் பெறும், கார்காலத்திலும்

மேல்


மேஎம்

1. (வி.எ) பொருந்திய, மேவும் என்பதன் திரிபு, be fitted
change of one letter into another in syntactic coalescence of the word ‘mEvum’
– 2. (பெ.அ) 1. இன்னிசை அளபெடை, மேலுள்ள, covering
2. இன்னிசை அளபெடை – பொருந்திய, fitted on

1

இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1

பெரிய உப்பங்கழியில் உள்ள முதலையிடத்துப் பொருந்திய தோலை ஒத்த
– மேவும் என்பது மேஎம் எனத் திரிந்தது – ந.மு.வே.நாட்டார் உரை, விளக்கம்

2.1

இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1

பெரிய உப்பங்கழியில் உள்ள முதலையிடத்து மேலுள்ள தோலை ஒத்த
பார்க்க : மேம் -1

2.2

இரும் கழி முதலை மேஎம் தோல் அன்ன – அகம் 3/1

பெரிய கழியின்கண் வாழ்கின்ற முதலையினது முதுகிலே பொருந்திய தோல் போன்ற
– மேவும் என்னும் செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சத்து ஈற்று உயிர் மெய் கெட்டு மேம் என நின்று
‘இன்னிசை நிரைப்ப மேஎம்’ என அளபெடுத்தது – பொ. வே. சோமசுந்தரனார் உரை விளக்கம்

மேல்


மேஎய்

(வி.எ) மேவி என்பதன் திரிபு, நிலைகொண்டு, abiding, settled, பொருந்தி, having been fitted

பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டி கடவுளது இயற்கையும் – மலை 82,83

பெரும் புகழ்கொண்ட நவிரம் என்னும் மலையில் நிலைகொண்டு இருக்கும்
நஞ்சை உணவாகக் கொண்ட இறைவனது இயல்பையும்,

மேல்


மேக்கு

1. (பெ) உயரமான இடம், elevatted place
– 2. (வி.அ) மேலே, மேல்நோக்கி, over, on, upward

1

நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486

கண் பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து
– நச்.உரை

2

நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி – மது 486

கண் பார்வைக்கு நேரே இல்லாது மேல் உயர்ந்து இருந்தன
– ச.வே.சு.உரை

பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பை
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும் – நற் 91/2-7

ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடலில் துழாவித் தன் பெடையோடு
சேர்ந்து இரையைத் தேடும் அகன்ற பாதங்களையுடைய நாரை
மெல்லிய சிறுகண்ணில் சிவந்த கடைக்கண்ணையுடைய சிறிய மீன்களைப் பிடித்து
மேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்
– மேக்குயர்தல் – மேலோங்கி உயர்தல் : ஔவை.சு.து.உரை விளக்கம்

மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை – குறு 26/2

மேலே வளர்ந்த பெரிய கிளையில் இருந்த மயிலானது
– உ.வே.சா உரை

மேக்கு எழு பெரும் சினை ஏறி கண கலை
கூப்பிடூஉ உகளும்- அகம் 205/21,22

மேல் நோக்கி எழுந்த பெரிய கிளையில் ஏறி கூட்டமாய ஆண் குரங்குகள்
தன் இனங்களைக் கூப்பிட்டுத் தாவும்
– ந.மு.வே.நாட்டார் உரை

மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2

மழை மிகப் பெய்தலான் அப் பெயல் அமைந்து முகில் மேலே போவதாக வேண்டுமென
– ஔவை.சு.து.உரை.

மேல்


மேகலை

(பெ) பெண்கள் இடையில் அணியும் அணிவகை, A jewelled girdle of women

வார் அணி கொம்மை வகை அமை மேகலை
ஏர் அணி இலங்கு எயிற்று இலங்கு நகையவர் – பரி 22/30,31

கச்சணிந்த இளம் முலைகளையும், சிறப்பாக அமைந்த மேகலையையும்,
அழகிய வரிசையாய் ஒளிரும் பற்களையும், இனிய புன்முறுவலையும் உடைய மகளிரும்,

மேல்


மேதி

(பெ) எருமை, buffalo

மேதி அன்ன கல் பிறங்கு இயவின் – மலை 111

எருமையைப் போன்ற பாறைகள் மிகுந்திருக்கும் வழியில்,

மேல்


மேதை

(பெ) பேரறிவு, supreme intelligence

பேதை அல்லை மேதை அம் குறு_மகள் – அகம் 7/6

நீ பேதைப் பருவத்தினை அல்லை, அறிவினையுடைய இளைய மகளே

மேல்


மேந்தோன்று

(வி) மேம்பட்டு விளங்கு, சிறந்து விளங்கு, become eminent, be great

அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி
நோய் இலை ஆகியர் நீயே – பதி 89/12,13

அரசுமுறையில் பிழையாமல், போரில் வெற்றியால் மேம்பட்டு,
நோயின்றி இருப்பாயாக நீயே!

மேல்


மேம்

(பெ.அ) 1. மேலுள்ள, covering
2. மேன்மையான,

1

மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் – புறம் 321/2

மேலுள்ள தோல் நீக்கப்பட்ட இனிமை பொருந்திய வெள்ளிய எள்ளாகிய
– ஔவை.சு.து.உரை

2

உறி கா ஊர்ந்த மறு படு மயிர் சுவல்
மேம் பால் உரைத்த ஓரி – பெரும் 171,172

உறியினையுடைய காவடிகள் (மேலே)இருந்ததனால் தழும்பு உண்டான மயிருடைய தோளினையும்,
மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும்

மேல்


மேம்படு

(வி) மேலாகு, சிறந்து விளங்கு, rise high as in status, be great

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401

எல்லா ஊர்களிலும் மேலாம்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய பழைய ஊர்

தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே – குறு 125/3,4

தழையையுடுத்த அல்குலையுடைய மகளிர் பலருள்ளும்
திருவிழாவைப் போன்று மேன்மையுற்றுத் திகழ்ந்த எனது பெண்மை நலம்

மேல்


மேம்பாடு

(பெ) மேன்மை, சிறப்பு, grandeur, pre eminence

பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் – பரி 10/36

பூவின் சிறப்பினால் அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல

மேல்


மேய்

(வி) 1. பசு, மான் போன்றவை, புல், இலை, தழை ஆகியவற்றை உண்ணு, graze
2. விலங்குகள் உணவுகொள்ளு, feed
3. காய்ந்து போன புல் ஆகியவற்றைத் தீ பொசுக்கு, (fire) burn dry grass to ashes

1

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை – சிறு 42

இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல்
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/1,2

காய்ந்து இறுகிப்போன கொல்லையில் மேய்ந்த, உதிர்ந்த கொம்பினையுடைய, முதிர்ச்சியையுடைய
சேற்றில் குளித்தெழுந்த, புள்ளியையும் வரியையும் கொண்ட கலைமானை

மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி – ஐங் 261/1

முருங்கை மேய்ந்த பெரும் கை யானை – அகம் 167/11

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி – புறம் 132/4

2

வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் – அகம் 6/18

வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்

வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி – நற் 54/1-4

சங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
சிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும், தூய சிறகுகளுடன்
மிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து,
கரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக!

3.

ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை – ஐங் 356/3

ஒளிரும் நெருப்பு சுட்டுக் கருக்கிய தீர்த்த பாலை வழியிடையே

எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய்
பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான்
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட – கலி 13/2-4

நெருப்பு பரவலாய்ச் சுட்டதினால் கரியாகி வறண்டு போன நிலத்தில் பசித்த வாய்க்குப் பச்சை இலை கிடைக்காதவையாய்
பொரிகள் விரிந்து கிடப்பதைப் போன்ற புள்ளிகளையுடைய இளைய மான்
முறுக்கிய கொம்புகளையுடைய தன் ஆண்மானோடு பொய்த்தேர் எனப்படும் கானல் நீரைப் பார்த்து ஓட

மேல்


மேய

(வி.எ) 1. மேவிய என்பதன் திரிபு – பொருந்திய, attached
change of one letter into another in syntactic coalescence of the word ‘mEviya’
2. மேவிய என்பதன் திரிபு – தோன்றிய, வெளிப்படுத்திய, disclose, make known
3. மேவிய என்பதன் திரிபு – தங்கிய, நிலைகொண்ட, abiding
4. மேய் என்ற வினைச்சொல்லின் எச்சம்

1

பிரியினும் பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே – ஐங் 297/3,4

நீ பிரிந்து சென்றாலும் அவளைவிட்டுப் பிரிவதில்லை,
உன்னோடு பொருந்திய அந்த மடந்தையின் நட்பு.
– ஔவை.சு.து.உரை

2

தொன் முது கடவுள் பின்னர் மேய
வரை தாழ் அருவி பொருப்பின் பொருந – மது 41,42

பழமை முதிர்ந்த கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றிய
பக்க மலையில் வீழ்கின்ற அருவியினையுடைய மலைக்கு வேந்தனாகிய வீரர் பெருமானே
– பொ.வே.சோ-உரை

மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591

திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளிடத்தே
– உயிர்கள் பிறப்பது போலன்றித் தானே பிறத்தல் வேண்டும் எனக்கருதி வந்து பிறப்பன் என்பது தோன்ற மேய என்றார்.
– பொ.வே.சோ-உரை விளக்கம்

3.

படு மணி யானை நெடியாய் நீ மேய
கடி நகர் சூழ் நுவலும்_கால் – பரி 19/28,29

ஒலிக்கின்ற மணிகளைக்கொண்ட யானையையுடைய நெடியவனே! நீ எழுந்தருளிய (கோயில்கொண்டிருக்கும்)
திருக்கோயிலைச் சுற்றிவருதலைச் சொல்லும்போது;

4.

இழிபு அறியா பெரும் தண் பணை
குரூஉ கொடிய எரி மேய
நாடு எனும் பேர் காடு ஆக – மது 154-156

குன்றுதல் அறியாத பெரிய மருதநிலங்களை
(செந்)நிறக் கொழுந்துகளையுடைய நெருப்பு மேய்ந்துவிட,
நாடு என்னும் பெயர்(போய்) காடு என்னும் பெயராக,

மேல்


மேயல்

(பெ) 1. மேய்தல், grazing
2. மேய்வதற்கான உணவு, pasture

1

மா மேயல் மறப்ப மந்தி கூர – நெடு 9

விலங்குகள் மேய்தலை மறந்துபோக, குரங்குகள் (குளிரால்)கூனிப்போக

2

பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு – அகம் 341/7

அறுகம்புல்லாகிய மேய்ச்சல் உணவினை அருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள்

மேல்


மேரு

(பெ) ஏழு தீவுகளின் மத்தியிலுள்ளதும் கிரகங்கள் சுற்றிவருவதாகக் கருதப்படுவதுமான பொன்மலை.,
Mt.Meru, a mythical golden mountain round which the planets are said to revolve,
believed to be the centre of the seven concentric continents.

சுடரொடு சூழ்வரு தாரகை மேரு
புடை வரு சூழல் புலம் மாண் வழுதி
மட மயில் ஓரும் மனையவரோடும்
கடன் அறி காரிய கண்ணவரோடும் நின்
சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல்
பாடு வலம் திரி பண்பின் பழ மதி
சூடி அசையும் சுவல் மிசை தானையின்
பாடிய நாவின் பரந்த உவகையின்
நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/19-26

திங்கள் தன்னோடு சூழ்ந்துவரும் விண்மீன்களோடு மேருவின்
பக்கத்தே சுற்றிவரும் சூழலானது – அறிவிற் சிறந்த பாண்டியன்
இளமையான மயில் போன்ற தன் மனைவியரோடும்,
தமக்குரிய கடமைகளை நன்கு அறிந்து செயல்படும் கண்களைப் போன்ற அமைச்சர்களோடும், உன்
சூரர மகளிர் வாழும் குன்றின் உயர்ந்த மலையில் ஏறி, மேலே
பெருமையுண்டாக வலமாக வருகின்ற பண்பினோடே, பழமைச் சிறப்புள்ள் மதியினைச்
சூடியவனாய், அசைகின்ற, தோள்மீதுள்ள துகிலினை உடையவனாய்,
உன்னைப் புகழ்ந்து பாடும் நாவினையுடையவனாய், மிகுந்த மகிழ்ச்சியுடையவனாய்,
நாட்டிலுள்ளோரும், நகரத்திலுள்ளோரும் வந்து நெருக்கமாய்ச் சூழ்ந்திருப்பதை ஒத்தது

மேல்


மேல்வரு(தல்)

(வி) எதிர்த்து வருதல், advance against

அடங்கா தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 418,419

(எண்ணில்)அடங்காத படையுடன் சினந்து எதிர்த்து வந்த
(தன் ஏவலைப்)பொருந்தாத பகைவர் தோற்றவிடத்தே (வெற்றிக்களிப்புத் தோன்ற)ஆரவாரித்து,

மேல்


மேலோர்

(பெ) 1. மேலிடத்தில் இருப்பவர்கள், Those who are seated high, as on horses and elephants
2. தேவர்கள், celestials

1

கோலோர் கொன்று மேலோர் வீசி
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 381-383

கோல் கொண்டு அடக்குவோரைக் கொன்று, மேலே அமர்ந்திருக்கும் பாகரைத் தூக்கி எறிந்து,
மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்

2

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் – பரி 17/8

தேவர்கள் உலகத்தில் உறைவதை வேண்டுபவர் யாரிருக்கக்கூடும்?

மேல்


மேவரு(தல்)

(வி) 1. விரும்பு, like, desire
2. (மனம்) பொருந்து, இயைந்திரு, be harmonius
3. பொருத்தமாக இரு, be fitting

1

கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே – புறம் 344/9

வேங்கைத் தாதினை விரும்பும் இளையவளுடைய அல்குலிடத்தே பரந்த அழகிய வரிகள்
– மேவருதல் – விரும்புதல் – ஔவை.சு.து.உரை விளக்கம்

2

இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவர
துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 135-137

துன்பம் என்பதை
அறியாத தன்மையுடையவர் மனம் பொருந்த
வெறுப்பில்லாத ஞானத்தை உடைய முனிவர்கள் முதலில் புகுந்தனர்
– ச.வே.சு.உரை

3.

மென்தளிர்
கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர
நெடும் தொடர் குவளை வடிம்பு உற அடைச்சி – மது 586-588

மெல்லிய தளிர்களைக்
கொழுவிய கொம்புகளினின்றும் கொய்து நீர்க்கீழ் அரும்புகளோடே பொருந்துதல் வரக் (பொருத்தமாக இருக்கும்படி) கட்டின
நெடிய தொடரையுடைய வடிம்பிலே விழும்படி உடுத்து
– பொ.வே.சோ.உரை

மேல்


மேவல்

1. (வி.மு) மேவ வேண்டாம், பொருந்தியிருக்க வேண்டாம், கொள்ளவேண்டாம், do not be in
– 2. (பெ) 1. விருப்பம், ஆசை, wish, desire
2. பொருந்துதல், fitting

1

பெரும் துனி மேவல் நல்கூர் குறு_மகள் – அகம் 229/10

பெரும் வெறுப்பினைக் கொள்ளற்க, தவமிருந்த் பெற்றெடுத்த இளைய மகளே
மேவல் – கொள்ளற்க, மேவற்க – இரா.செயபால் உரை (NCBH)

2.1

ஊசல் மேவல் சே இழை மகளிர் – பதி 43/2

ஊஞ்சலாடுவதின் மேல் விருப்பத்தையும் கொண்ட செம்மையான இழை அணிந்த மகளிர்,

2.2

புரி மலர் துழாஅய் மேவல் மார்பினோய் – பரி 13/61

முறுக்குடைய மலரையுடைய துளசிமாலை பொருந்துதலையுடைய மார்பினையுடையவனே!

மேல்


மேவன

(பெ) விரும்புவன, likings

கையும் காலும் தூக்க தூக்கும்
ஆடி பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே – குறு 8/4-6

கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்கும்
கண்ணாடிப் பிம்பம் போல
விரும்பியவற்றைச் செய்வான் தன் மகனுடைய தாய்க்கே

மேல்


மேவார்

(பெ) இயைந்து செல்லாதவர், பகைவர், foes, enemies

மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2

மனச் சோர்வின்றி முன்னேறிச் சென்று பகைவர் நாட்டில் தனக்கு இடம் உண்டாக,

மேல்


மேவாள்

(வி.மு) விரும்பமாட்டாள், have no desire in

பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் – குறு 396/1

பாலைப் பருகமாட்டாள்; பந்து விளையாட்டை விரும்பமாட்டாள்

மேல்


மேவு

1. (வி) 1. விரும்பு, desire
2. பொருந்து, be attached
3. மேற்கொள், manifest, assume

1.1

மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் – கலி 62/2

விருப்பத்திற்கு இணங்கமாட்டோம் என்று சொல்வாரையும் விரும்பிக் கையினைப் பற்றிக்கொள்வான்”

1.2

ஒருமை வினை மேவும் உள்ளத்தினை – பரி 13/50

உயிர்களைக் காக்கும் ஒரு வினையில் பொருந்திய உள்ளத்தையுடையவன் நீ!

1.3

மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே – பரி 19/65

மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது

மேல்


மேழகம்

(பெ) செம்மறி ஆடு, sheep

மேழக தகரொடு சிவல் விளையாட – பட் 77

செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட

மேல்


மேழி

(பெ) கலப்பை, plough

கொடு மேழி நசை உழவர் – பட் 205

வளைந்த கலப்பை(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும்

மேல்


மேற்கொள்

(வி) 1. மேலேறு, mount, climb up

1

கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு – திரு 82

காற்று எழுந்ததைப் போன்ற (ஓட்டத்தையுடைய)களிற்றில் ஏறி

மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார்
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/4,5

மரல்கள்ளியின் மேலேறி நின்று மான் கூட்டங்களைத் தடுக்கும்பொருட்டு
கொடிய ஆற்றலையுடைய இளைஞர்கள் வேட்டைக்கு எழுந்தாற்போல

மேல்


மேற்செல்

(வி) முன்னேறிச்செல், go on, proceed

மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2

மனச் சோர்வின்றி முன்னேறிச் சென்று பகைவர் நாட்டில் தனக்கு இடம் உண்டாக,

மேல்


மேற்படு

(வி) அதிகமாகு, மிகுந்திரு, increase, be excessive

அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்பட
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/21,22

உள்ளம் உடைந்து, ஊராருக்கும் தெரிந்துவிட்ட வருத்தம் மிகுந்திட,
மிகவும் பித்துப்பிடித்தவளாய் ஆவதைத் தடுத்து நிறுத்துவாய் பெருமானே!

மேல்


மேன

(வி.மு) விரும்பி உறையும் இடம் ஆயின, are desirable living places

காடே கடவுள் மேன புறவே
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/20,21

காடுகள் முனிவர்கள் விரும்பி வாழும் இடமாக, முல்லைநிலங்கள்
ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக,
– ‘காடே கடவுள் மேன’ என்றது நின் நாட்டுப் பெருங்காடான இடங்களெல்லாம் முதற்காலத்துக் கோயில்களாயின எ-று;
புறவு மகளிரொடு மள்ளர் மேன என்றது சிறு காடான இடங்களெல்லாம் நின் படையாளர்கள் மகளிரொடு உறையும்
படைநிலைகளாயின எ – று – ஔவை.சு.து. உரை விளக்கம்.

மேல்


மேனி

(பெ) 1. உடம்பு, body
2. நிறம், colour, complexion

1

ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் – குறி 2,3

செழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்

2

தளிர் ஏர் மேனி தாய சுணங்கின்
அம் பணை தடைஇய மென் தோள் முகிழ் முலை
வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின்
மெல் இயல் மகளிர் நல் அடி வருட – நெடு 148-151

மாந்தளிரைப் போன்ற நிறத்தினையும், பரந்த அழகுத் தேமலையும்,
அழகான மூங்கில் (போலத்)திரண்ட மெல்லிய தோளினையும், (மொட்டுப்போல்)குவிந்த முலை
கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து நெளியும் இடையினையும்,
மென்மையான தன்மையினையும் உடைய சேடியர் (தலைவியின்)நல்ல அடியை வருடிக்கொடுக்க

மேல்