1. அசைவுகள்

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும்
அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில்
இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. (எ.டு)

நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83
நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த …

சிறு குழை துயல்வரும் காதின் ———– – பெரும் 161
தாளுருவி அசையும் காதினையும் —

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330
நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும்,

இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன.
அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன.
எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது.
சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட இச்சொற்கள், காலப்போக்கில் வழக்கிழந்து
ஒரே பொருளாகக் கொள்ளப்பட்டன.
எனினும், இந்த மூன்று சொற்களும் வெவ்வேறான அசைவுகளைக் குறிப்பிடுகின்றன.
அவற்றின் உண்மையான பொருளோடு இந்த அடிகளைப் படிக்கும்போதுதான் மெய்யான இலக்கிய இன்பத்தைப்
பெறமுடியும்.
இச் சொற்களுக்கு பலவிதப் பொருள் அமைந்தாலும், அசைதல் என்ற பொருளில் வரும் இடம்
அல்லது சூழலை ஆய்வோம்.

முதலாவதாக இந்தச் சொற்களுக்குத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) தரும் பொருள்களைப் பார்ப்போம்.

அலங்கு – தல் To move, shake, swing, dangle, to be in motion;
அசைதல். அலங்குளைப் புரவி (புறநா.2).

துயல்(லு) – தல் To sway, wave, swing;
அசைதல். மணிமயில் … துயல்கழை நெடுங்கோட்டு (சிறுபாண. 265).

துளங்கு – தல் To move; to sway from side to side, as an elephant; to shake;
அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).

இப்போது பத்துப்பாட்டில் இவற்றின் வழங்கிடங்களைப் பார்ப்போம்.

அலங்குதல் – இது பெரும்பாலும் மரக்கிளைகள் ஆடும் அசைவைக் குறிக்கிறது.

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு – திரு 298
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே – மலை 144
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 161

ஒரு மரத்தின் கிளைகள் நீண்டு உயர்ந்திருக்கலாம். காற்றினில் அவை சாய்ந்து ஆடுவதே அலங்குதல்.
தொலைவிலிருந்து நாம் பார்க்கும்போது அவை நமக்கு இடப்பக்கமும் வலப்பக்கமும் சாய்ந்து ஆடுவதை
நன்கு காணலாம்.
எனவே, உயரமான ஒரு பொருள் தன் அடிப்பக்கத்தை நிலையாகக் கொண்டு (fixed point) பக்கவாட்டில்
ஆடுவது அலங்குதல்.
அலங்கு கழை (மலை 161) என்ற சொல்லையும் கவனியுங்கள். கழை என்பது இங்கே மூங்கில்.
அடுத்து, ஒரு மரத்தின் கிளைகள் அதன் நடுப்பக்கத்தினின்றும் இரண்டு பக்கங்களிலும் கிளைத்துப் பிரியும்.
அவ்வாறு கிடைநிலையில் (horizontal) இருக்கும் கிளைகள் மேலும் கீழும் ஆடுவதும் அலங்கலே.
இப்போது மரத்தினின்றும் அவை கிளைக்கும் இடங்களே நிலைப்புள்ளிகள். இவற்றோடு இன்னொன்றையும்
சேர்த்துக்கொள்ளலாம்.
உயரமான ஓர் இடத்திலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பொருள் பக்கவாட்டில் ஆடுவதும் இந்த வகைப்படும்.
அதாவது, பழைய சுவர்க் கடிகாரங்களில் இருக்கும் பெண்டுலங்கள் ஆடுவதும் அலங்கல்தான்.

கீழ்க்கண்ட படங்களைப் பாருங்கள்.

கழுத்தில் தொங்கும் பூமாலையும் அலங்கல் எனப்படுகிறது. கழுத்தில் தொங்கியிருக்கும் மாலை
பெண்டுலம் போல் பக்கவாட்டில் அசைவதால் அதன் அசைவை வைத்து ஆகுபெயராக மாலை
அலங்கல் எனப்பட்டது எனலாம்.
அலங்கல், அலங்கு என்பது எட்டுத்தொகைப் பாடல்களில் 58 முறை வருகிறது. இரண்டு இடங்களில்
அது ஒளிவிடு என்ற பொருளில் வருகிறது. ஏனைய இடங்களில் எல்லாம் இச்சொல் மேலே குறிபிட்ட
ஒருவகை அசைவையே குறிக்கிறது.
அவற்றில் சில:

அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக – நற் 359/2
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை – குறு 76/3
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை – ஐங் 185/1
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் – கலி 139/8
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு – அகம் 84/12
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ – புறம் 2/13

பரிபாடல் அடியைப் பாருங்கள்.
அருவி எப்படி அலங்கும்?
இதைப் புரிந்துகொள்ள அடியின் முன்பின் பார்ப்போம்.

அராஅணர் கயந்தலத் தம்முன் மார்பின்
மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15: 19-21

பலராமனின் மார்பினில் கிடக்கும் மராமலர் மாலையைப் போல, அசைகின்ற அருவி ஆர்த்துக்கொண்டு இழிகிறதாம்!
ஓர் ஆணின் கழுத்திலிருந்து தொங்கும் மாலை மார்பினில் கிடந்து பக்கவாட்டில் ஆடிக்கொண்டிருக்கும்.
அதைப் போல மிகவும் உயரத்திலிருந்து அருவி கீழே விழும்போது, அருவியின் நீர் காற்றின் வேகத்தால்
அவ்வப்போது அலைகழிக்கப்பட்டு ஆடுவதையே அலங்கும் அருவி என்கிறார் புலவர்.
இவ்வாறு ஆடுவது அருவியின் அடிப்பாகத்தில்தானே நடக்கும்? அதுதான் மாலை ஆடுவதுபோல் இருக்கிறது.

2. துயல்(லு) – (வி) அலை, அசை, ஊஞ்சலாடு, swing, wave, sway

துயல், துயல்வரும் ஆகிய சொற்களும் அலங்கல் போன்று ஒரு நிலைப்புள்ளியைச் சார்ந்த
அசைவையே குறிப்பன. எனினும் இயக்கத்தில் இவை வேறுபட்டன.

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86
செயலை தண் தளிர் துயல்வரும் காதினன் – திரு 207
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க – பொரு 164
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல – சிறு 2
துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு – சிறு 265
சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் – பெரும் 161
வான் கழல், துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ – குறி 127

இங்கு வரும் முதல் அடியிலேயே மாலை துயல்வர என்று காண்கிறோம்.
இங்கு, திருச்சீரலைவாயிலில் விரைந்துவரும் களிற்றின் மீதமர்ந்து வரும் முருகனைப் பற்றிக் கூறும் புலவர்,
அவ்வாறு விரைந்து வரும் களிற்றின் நெற்றியில் கிடக்கும் வாடாத மாலையாகிய பொன்னரி மாலையின்
அசைவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். ஓடை என்பது யானையின் நெற்றிப்பட்டம் – முகபடாம் எனப்படும்.
இந்த நெற்றிப்பட்டத்திற்கு மேலே தங்க மாலை அணியப்பட்டுள்ளது. யானை தலையைக் கீழும் மேலும்
ஆட்டிக்கொண்டு விரைந்துவரும்போது முகபடாத்துடன் சேர்ந்து மாலையும் குதித்துக் குதித்து ஆடும் அல்லவா?
அந்த முன்-பின்னான ஆட்டமே துயல்வருதல். குதிரையின் தலையில் இருக்கும் உளை எனப்படும்
தலையாட்டம் (hair plume) குதிரை நடக்கும்போது எவ்விதம் ஆடும்?
ஊட்டு உளை துயல்வர என்று பொருநராற்றுப்படை கூறுவதும் இதுவே.
காது வளர்த்த பாட்டிமார், தங்கள் தலைகளை ஆட்டிப் பேசும்போது அவர்களின் காதுகளில் தொங்கும் தண்டட்டி
எனப்படும் குழைகள் எவ்வாறு ஆடும்? சிறு குழை துயல்வரும் காதின் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதுவும் இதுவே.
சிறுபாணாற்றுப்படையின் புகழ்பெற்ற ஆரம்ப உருவகமான நிலமடந்தையின் அணிமுலை துயல்வரும்
ஆரத்தின் ஆட்டமும் இதுவே.

எனவே, ஒரு புள்ளியை நிலையாகக் கொண்டு முன்னும் பின்னும் ஆடுவது துயல்தல் ஆகும்.

அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ – புறம் 2/13
ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க – பொரு 164

என வரும் அடிகளில் அலங்கு, துயல்வருதல் ஆகிய இருவித அசைவுகளும் உளை எனப்படும் குதிரையின் தலையாட்டத்திற்குக்
கூறப்பட்டுள்ளன. மோனை அழகுக்காக அலங்கு உளை .. ஐவரொடு என்றும், ஊட்டு உளை .. ஓரி என்றும் கூறப்பட்டுள்ளதாக
எண்ண இடமுண்டு. எனினும் புற அழகுக்காகப் பொருள் பொருத்தத்தைச் சங்கப்புலவர்கள் மாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்
இக்கூற்றுகளை ஆராயவேண்டும். குதிரை வேகமாக நடக்கும்போது தலையைக் கீழும் மேலும் ஆட்டும் பொழுது உளை
முன்னும் பின்னும் ஆடும். இதுவே துயல்வரும் உளை. குதிரை நின்றுகொண்டிருக்கும்போது, காற்றினாலோ,
குதிரை தன் முகத்தைப் பக்கவாட்டில் ஆட்டுவதாலோ உளை இட-வலப் பக்கம் ஆடலாம். அப்போது அது அலங்கு உளை.
இது குதிரையைச் சார்ந்த இயக்கம். பார்ப்பவரைச் சார்ந்த இயக்கமாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
குதிரையின் முன்னே நின்று பாக்கும்போது, உளை நம்மை நோக்கி முன்னும் பின்னும் ஆடுகிறது. இது துயல்வருதல்.
நாம் குதிரையின் பக்கவாட்டில் நின்று பார்க்கும்போது, குதிரையின் தலையாட்டம் ஆடும்பொழுது அது நமக்கு
இடது-வலது பக்கமாக ஆடுவதாகத்தானே தெரியும்! பொருநராற்றுப்படையில் நாம் காணும் குதிரை, தேரில் பூட்டப்படுவதற்காகக்
கொண்டுவரப்படுவது. இந்தக் காட்சியைத் தேருக்கு முன்பக்கம் நின்றுகொண்டு பார்க்கும் புலவருக்குக் குதிரை உளையின் ஆட்டம்
துயல்வருவதாகத்தான் தெரியும். புறநானூற்றுக் குதிரையோ மகாபாரதப் போரில் காணப்படுவது. தொலைவிலிருந்து,
ஓடுகிற குதிரையைப் பார்க்கிற புலவருக்கு அதன் உளையின் ஆட்டம் அலங்கல்தானே!

துயல், துயல்வருதல் என்ற சொற்கள் எட்டுத்தொகை நூல்களில் 30 முறை வருகின்றன. அவற்றில் சில:

புன்பூங் கலிங்கமொடு, வாடா மாலை துயல்வர ஓடி – நற் 89,90/5
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர – அகம் 86/27

பொலம்பிறையுள் தாழ்ந்த புனைவினை உருள்கலன்
நலம்பெறு கமழ்சென்னி நகையொடு துயல்வர – கலித்தொகை 81:3,4

நோன் கழை துயல்வரும் வெதிரத்து – புறம் 277/5

புறநானூற்று நோன்கழை துயல்வருதலும், நாம் ஏற்கனவே கண்ட அலங்கு கழையும் (மலைபடுகடாம்),
பார்ப்பவரைச் சார்ந்து தெரியும் அசைவுகளே எனலாம்.

3. துளங்கு – (வி) அசை, அசைந்தாடு, move, shake, sway from side to side

துறைமுகத்தில் நின்றுகொண்டிருக்கும் கப்பல் எவ்வாறு அசையும்?
நன்கு வளரப்பெற்ற திமிலைக் கொண்ட ஒரு காளை நடந்துவரும்பொழுது அதன் திமில் எவ்வாறு அசையும்?
பொங்கலன்று கிராமத்தார் வாசலில் அடுப்பு வைத்துப் பானை நிறையப் பொங்கல் ஆக்கும்போது, ‘தளக் புளக்’
என்ற சத்தத்துடன் பொங்கல் பொங்கி வழியும்போது பானை எவ்வாறு அசையும்? அதுதான் துளங்குதல்.

ஒரு பருத்த அமைப்பைக் கொண்ட பொருள் முழுதுமாக அசைவதுதான் துளங்குதல்.
இதற்குப் பல்வேறு பொருள்கள் இருப்பினும் அசைதல் என்ற பொருளில் இது பயன்படுத்தப்படும்போது அது இத்தகைய
அசைவைத்தான் குறிக்கிறது. துளங்கல் என்ற சொல் காணப்படும் பத்துப்பாட்டு அடிகள் இவைதாம்.

துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் – சிறு 262
தொல் பசி அறியா துளங்கா இருக்கை – பெரும் 253
துறை முற்றிய துளங்கு இருக்கை – மது 85
துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடி – மலை 43
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330
துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463

பாண்டிய நாட்டுத் துறைமுகத்தில் இறக்குமதி செய்ய, வெளிநாட்டுப் பண்டங்களைக் கொண்டுவரும் நாவாய்கள்,
கடலில் பலவாறாக ஆடிக்கொண்டு வந்து, மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல துறைகளைச் சூழ்ந்து நின்றவண்ணம்
ஆடிக்கொண்டு நிற்கின்றன என்று கூறவரும் மதுரைக்காஞ்சி அடிகளைப் பாருங்கள்.

பொன்மலிந்த விழுப்பண்டம்
நாடுஆர நன்கு இழிதரும்
ஆடுஇயல் பெருநாவாய்
மழைமுற்றிய மலைபுரையத்
துறைமுற்றிய துளங்கு இருக்கை – மதுரைக்காஞ்சி – 81-85

கடற்பயணத்தின்போது பல்வேறு வகைகளிலும் ஆடுகின்ற தன்மையையுடைய நாவாய்கள் துறைமுகத்தில்
துளங்கிக்கொண்டு நிற்கின்றன என்பது இதன் பொருள். இந்தத் துளங்கு இருக்கை என்னும் தொடர்
இதன் பொருளை முழுதும் உணர்த்தி நிற்கிறது.

துளங்கு என்ற சொல் எட்டுத்தொகை நூல்களில் 31 முறை வருகிறது. அவற்றுள் சில:
துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர – நற் 20/4

சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை – பதி 42/11
துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் – கலி 106/9
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே – அகம் 71/18
கடி மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/9

ஒரு மரத்தின் கிளைகள் காற்றினால் அசைந்தால் அதனை அலங்கு சினை என்கிறோம்.
பெருங்காற்றால் அந்த மரமே அசைந்தால் அதனைத் துளங்கு மரம் என்கிறது அகநானூறு (71).

நற்றிணையில் ஒரு பாடலில் ஒரே அடியில் துளங்கு, துயல்வரல் ஆகிய இரு சொற்களும் உள்ளன.
எனவே, இதன் முழுப் பொருளைக் காண்போம்.

மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ்இணர்த்
தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கியல் அசைவரக் கலிங்கம் துயல்வரச்
செறிதொடி தெளிர்ப்ப வீசி ——- நற்றிணை 20: 2 – 5

முதல்நாள் பரத்தையின் வீட்டுக்குச் சென்று வருகிறான் தலைவன். மறுநாள் அந்தப் பரத்தை தலைவியின் வீட்டுப்பக்கம்
கைகளை வீசிக்கொண்டு பெருமையுடன் நடைபோட்டு வருகிறாள். அதைப் பார்த்த தலைவியின் கூற்றாக அமைந்த பாடல் இது.
இங்கு துளங்கியல், துயல்வரல் என்பதற்குப் பலவாறாக உரைகள் அமைந்துள்ளன.

(கூந்தல்) துளங்கிய துவட்சியோடு சிறுபுறத்து வீழ்ந்தசையாநிற்ப, இடையிற் கட்டிய உடை சரிந்து அசையாநிற்ப (பின்னத்தூரார்),
(கூந்தல்) துவண்ட மேனிமேல் சரிந்து விளங்க, உடுத்த ஆடை புறத்தே அசைய (ஔவை சு.),
(கூந்தல்) விளங்கிய வகையில் அசையுமாறும், இடையிற் கட்டிய உடை சரியவும் (கு.வே.பா).

இங்கு, சிறுபுறத்து (வீழ்ந்தசைய), மேனிமேல் (சரிந்து விளங்க) என்பதற்குப் பாடலில் சொற்கள் இல்லை.
உரைகாரர்கள் சேர்த்துக்கொண்டவை இவை. துளங்கியலில் வரும் இயல் என்பதற்கு நடை அல்லது தன்மை என்ற
பொருள்கொள்ளலாம். கூந்தல் துளங்கியல் அசைவர என்பதால் துளங்கியல் என்பதைக் கூந்தலின் அசைவுக்கு
அடையாகக் கொள்ளலாம். அசைதல் என்பது ஆடுதல், நகர்தல், இடம்பெயர்தல் என்பதற்குப் பொதுவான சொல்.
கூந்தல் எவ்வாறு அசைந்தது என்பதையே இது விளக்குவதாகக் கொள்ளலாம். கூந்தல் என்பது பெண்களின்
தலை மயிர் – அதுவும் இது தலையின் பின்புறமாக நீண்டு தொங்கும் பகுதியையே குறிக்கும்.
பொதுவாகத் தமிழ்நாட்டுப் பெண்கள் கூந்தலை விரித்துப்போட்டுக்கொண்டு வெளியில் வரமாட்டார்கள்.
தலைமயிரை வாரி இழுத்துக் குறைந்த அளவு ஒரு சிறு முடிச்சாவது போட்டுத் தொங்கவிட்டிருப்பார்கள்.
இந்தக் கூந்தல் அசையும்போது, தொங்கும் பகுதிதான் அலங்கும் அல்லது துயல்வரும்.
ஆனால் இங்கு துளங்கும் என்று புலவர் கூறுவதன் காரணம் என்ன? முந்தின நாள் தலைவன் தன்னுடன் தங்கியிருந்ததனால்,
மறுநாள் காலையில் பரத்தை தலைக்கு நீர் ஊற்றிக் குளிக்கிறாள். பின்னர் தலையை நன்றாக உலர்த்திய பின்னர்,
ஒரு சிறிய முடிச்சினைப் போட்டுக்கொண்டு பெருமையுடன் வீதியில் கைகளை வீசிக்கொண்டு நடக்கிறாள்.
தலையை இறுக்க வாராது இருந்ததினால் தலையைச் சுற்றிலும் கூந்தல் தளரத் தொங்கிக்கொண்டு இருக்கிறது.
எனவே, தொங்குகின்ற பகுதி மட்டும் அல்லாமல், தலையில் உள்ள அத்துணை மயிர்களும் அசையும்படி
அவள் நடந்து சென்றாள் என்பதைக் குறிக்கவே துளங்கியல் அசைவர என்கிறார் புலவர் எனலாம்.
ஆகவே, நமது வரையரையின்படி இது முழுவதுமான அசைவாக இருப்பதினால் இது துளங்கும் தன்மையில் அசையும்
கூந்தல் என்பது பொருத்தமான சொல்லாட்சியாகவே இருக்கிறது.

அடுத்து, கலிங்கம் துயல்வர என்கிறார் புலவர். அவள் வேகமாக நடக்கும்போது இடையிலிருந்து தொங்கும் ஆடை,
கொசுவத்துடன் முன்னும் பின்னும் ஆடும் அல்லவா? இதுவும் ஒருவிதத்தில் யானையின் ஓடை துயல்வருவது
போலத்தானே! இந்த சொல்லாட்சிகளின் உண்மைப் பொருளை உணர்ந்து படிக்கும்பொதுதான்,
கவிஞன் தான் மனக்கண்ணால் கண்ட காட்சியை எவ்வாறு ஒரு சொல்லோவியமாகப் படைத்திருக்கிறான்
என்பதை நம் மனக்கண்ணால் பார்க்கமுடியும்.

இந்த மூன்றுவித அசைவுகளின் இயக்கத்தைக் கீழ்க்கண்ட படம் விளக்குகிறது.

அலங்குதல், துயல்வருதல் என்ற இரு அசைவுகளுமே ஒரு பொருளின் ஒரு பகுதி அசையும் இயக்கங்களே.
இவற்றுக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கலாம். உரையாசிரியர்கூட, சிலவிடங்களில் தமது பொருளைக்
கூறிவிட்டு, வேறு ஒரு பொருளைக் கூறி, “என்பாரும் உளர்” எனக் கூறுவர் இல்லையா? அதைப் போல,
ஒருவரே இரண்டுவிதக் காரணங்களைக் கூறலாம் அல்லவா!

அலங்கு என்பது, மிகப்பெரும்பாலும் மரக்கிளை அல்லது செடியின் பூ போன்றவற்றின் ஆட்டத்தைக் குறிக்கிறது.
இவை எப்படி அசையும்? இதற்கு ஒரு புறவிசை (external force) வேண்டும். பெரும்பாலும் இவை காற்றினால் அசைகின்றன.
எனவே, ஒரு பொருளின் ஒரு பகுதி, ஒரு புறவிசையினால் ஆடுவதே அலங்கல் எனலாம்.

அலங்கல் = the movement of a part of a body by external force.

துயல்வரல் என்பது காதில் நீண்டு தொங்கும் குழையின் ஆட்டத்தைப் போன்றது.
யானையின் முகபடாம் அது நடக்கும்போது குதித்துக் குதித்து ஆடுவது, குதிரை நடக்கும்போது அதன் தலையாட்டம் ஆடுவது
போன்றவற்றைக் கூர்ந்து நோக்கினால், அவற்றை எந்தப் புறவிசையும் இயக்கவில்லை என்பதை உணரலாம்.
அவை எந்தப் பொருளின் பகுதியாக இருக்கின்றனவோ அந்தப் பொருளின் அசைவால் உண்டாகும்
அகவிசையே (internal force) இதற்குக் காரணம். காட்டாக, ஒரு பெண் தலையை ஆட்டும்போது அவளின் காதணிகள்
துயல்கின்றனவே யொழிய, அந்தக் காதணிகளை ஆட்டிவிடுவதால் அல்ல. குதிரையின் தலையாட்டமும் அவ்வாறே.
எனவே, துயல்வருதல் என்பது, ஒரு பொருளின் ஒரு பகுதி, ஓர் அகவிசையினால் ஆடுவதே எனலாம்.

துயல்வருதல் = the movement of a part of a body by internal forces.

காற்றினால் ஆடும் கழையை அலங்கு கழை எனவும், அது தன்னுடைய எடையைப் பொறுக்கமாட்டாது ஆடும்போது
துயல் கழை எனவும் கொள்ளலாம். ஒரு மயில் நடக்கும்போது அதன் தோகை மேலும் கீழும் அசையும். அதனை,

ஒலி நெடும் பீலி துயல்வர இயலி – குறு 264/2

என்கிறது குறுந்தொகை.

இந்த ஆட்டத்திற்குக் காரணம் மயிலின் உடம்பில் ஏற்படும் அசைவே.
இந்த அசைவினால் ஏற்படும் அகவிசை காரணமாகத் தோகை துயல்வருகிறது.
ஒரு பெண் நடந்து செல்லும்போது அவளின் பின்புறத்தில் கூந்தல் அசைவதை,

துயல்வரும் கூந்தல் – ஐங் 72/2

என்கிறது ஐங்குறுநூறு. ஆனால்,

தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர்
ஆடுமயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற்றிணை 262: 1,2

என்கிறது நற்றிணை.
தோகையை விரித்து ஆடுகின்ற மயில், தன் பீலிகளை இயக்குகிறது. பீலிகளைப் பொருத்தமட்டில் இது அகவிசையே.
ஆனால், அதைப் போல, கண் போன்ற தோற்றமுடைய கருவிளை மலர் வாடையுடன் துயல்வருகிறது என்கிறார் புலவர்.

கரிய மலர், வாடைக்காற்று வீசுதலானே கூத்தாடுகின்ற மயிலின் பீலி போல ஆடா நிற்ப – பின்னத்தூரார்.
பெரிய பூ, ஆடுகின்ற மயிலின் பீலி போல வாடைக்காற்றால் அசைய – ஔவை. சு.
கரிய மலர், வாடைக்காற்று வீசுவதால், ஆடுகின்ற மயிலின் தோகை அசைவது போல அசைந்து விளங்க – கு.வெ.பா

இங்கே பூவின் ஆட்டம் வாடைக்காற்றால் ஏற்படுவது என்று உரைகள் கூறுகின்றன.
அப்படியெனில் இது புறவிசையால் ஏற்பட்ட அசைவு. ஆனால், இந்த அசைவு ஆடுகின்ற மயிலின் பீலி போல என்று கூறப்பட்டுள்ளது.
மயிற்பீலியின் அசைவு அகவிசையால் ஏற்படுவது. எனவே இங்கு உவமையிலேயே தவறு உள்ளது. இதற்குக் காரணம்,
மலர் வாடைக்காற்றால் ஆடுகிறது என்று உரைகாரர்கள் கொண்டதுவே. இங்கே புலவர் வாடையொடு துயல்வர என்று
கூறியிருப்பதைக் கவனிக்கவேண்டும். கீழ்க்கண்ட அடிகளைப் பாருங்கள்.

நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 30
பாலொடு வந்து கூழொடு பெயரும் – குறு 221/3
காலொடு பட்ட மாரி – நற் 2/9 – காற்றொடு கலந்த மழை (பின்னத்)
காலொடு வந்த கமம் சூல் மா மழை – குறு 158/3 – காற்றோடு வந்த நிறைந்த நீராகிய சூலையுடைய பெரிய மழை (நச்)

இங்கெல்லாம் ‘ஒடு’ என்பது ‘உடன்’ என்ற பொருளில்தான் கையாளப்பட்டுள்ளது.
எனவே, வாடையொடு துயல்வர என்ற தொடருக்கு, வாடைக்காற்றுடன் அசைய என்ற பொருள் கொள்ளவேண்டும்.
எப்படியென்றாலும், மலரின் அசைவுக்குக் காரணம் காற்றுதானே என நினைக்கலாம்.
வாடைக்காற்று கருவிளைக் கொடியை அசைக்கிறது. கருவிளைக்கொடிக்கு இது புறவிசை.
கொடியின் இந்த அசைவினால், மலர் ஆடுகிறது. மலருக்கு இது அகவிசை. எனவே மலரின் ஆட்டம் துயல்வருதல்தான்.

அடை இறந்து அவிழ்ந்த தண்கமழ் நீலம்
காலொடு துயல்வந்து அன்ன நின் – அகம் 357/14,15

என்ற அடிகளுக்கும் இதே விளக்கம்தான். இந்த நற்றிணைக் காட்சியைப் பாருங்கள்.

——— ———– கொன்றையந் தீங்கனி
பறைஅறை கடிப்பின் அறைஅறையாத் துயல்வர
வெவ்வளி வழங்கும் ——— ——— – நற் 46/6-8

கொடிய காற்று வீசுகின்றது. கொன்றை மரத்தின் கிளைகள் அலைப்புண்டு ஆடுகின்றன (அலங்கல்).
அப்போது அந்தக் கிளைகளில் காய்த்துத் தொங்கும் கொன்றைக்காயின் நெற்றுகள் ஆடுகின்றன (துயல்வருதல்).
அவ்வாறு ஆடிக்கொண்டு அவை பக்கத்துப் பாறையில் மோதுவது முரசை அறையும் குறுந்தடி போல் இருக்கிறது
என்கிற நற்றிணைக் காட்சி நம் ஐயத்தைத் தெளிவிக்கிறது.
கொன்றையின் இனிய சுவையை உடைய கனிகள், பறையை முழக்கும் குறுந்தடி போலப் பாறையில் விழுமாறு
கிளைகள் மிகத் துவண்டாடக் கொடிய காற்று வீசாநின்ற என்கிறது பின்னத்தூரார் உரை. இங்கே கொன்றைக் கிளைகளின்
ஆட்டம் காற்று என்னும் புறவிசையால். இதனால் ஆடும் நெற்றுகளின் ஆட்டம் கிளைகளில் உண்டான அகவிசையால்.
கழனியில் நெற்பயிர் உயர்ந்து கிளைத்து வளர்ந்திருக்கிறது. அதன் உச்சியில் இருக்கும் நெற்கதிர்கள் காற்றால் அசைகின்றன (அலங்கல்).
வரப்போரத்தில் இருக்கும் சில நெற்பயிர்கள் வரப்பினில் மோத, அப்போது அந்தப் பயிர் வரப்புமேல் அசைகின்றது (துயல்வரல்).

கழனி நெல்ஈன் கவைமுதல் அலங்கல்
நிரம்புஅகன் செறுவில் வரம்புஅணையாத் துயல்வர
புலம்பொடு வந்த பொழுதுகொள் வாடை – அகம் 13/19-21

அலங்கல், துயல்வரல் ஆகிய இரு சொற்களும் காணப்படும் இந்தப் பகுதி, நம் வாதத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறது எனலாம்.