திருவருட்பா – திருமுகப் பகுதி


9 திருமுகப் பகுதி.
** 1. திருமுகம்

@1. எல்லா முடையானுக்கு விண்ணப்பம்

#1
அகண்ட மெய்ஞ்ஞான அற்புத அமல 
பரம்பர அனாதி பகவ பராபர 
புண்ணிய சைவ போத பூரண 
சச்சிதாநந்த சாக்ஷாகார 
நித்திய நிரஞ்சன நிமல நிராமய		5
எண்_குண விநோத இன்ப சுபாவ 
சுத்த நிட்கள சுயம்பிரகாச 
சிவக்கியான சித்தி சித்தோபதேச 
பதி பசு பாசப் பண்பு உரை தேசிக 
விபூதி ருத்திராக்க பூடண வடிவ		10
சர்வ வல்லப சாந்த சித்த 
தயாநிதி என வளர் சாமியவர்கள் 
ஸ்ரீதிவ்வியோபய செந்தாமரையாம் 
திரு_அடிக்கு அடியேன் திரு_சிற்றம்பலம் 
காசு_அறு காவிரி கங்கை ஆதிய 		15
வாச நீரால் மஞ்சனம் ஆட்டி 
மல்லிகை முல்லை மா மலர்க் கொன்றை 
மயிலை முதல் பூ_மாலை சாத்தி 
தூய வாசத் தூப தீப 
நைவேத்திய முதல் நண் உபசாரம்	20
கூடுற இயற்றிக் கூவிள பத்திரம் 
ஆயிரம் அவையால் அருச்சனைசெய்து 
உள்ளம் குழைய உரோமம் சிலிர்ப்பப் 
பாடி ஆடிப் படி மிசை வீழ்ந்து 
அன்புறும் அங்கம் ஐந்தொடும் எட்டொடும் 	25
இன்புறத் தெண்டனிட்ட விண்ணப்பம் 
திரு வளர் உலகில் சீர் பூரணம் என்று
ஒரு பெயர் நிறீஇ ஓங்கிய தணிகைக் 
குன்றிடை விளங்கும் குமார_தேசிகன் 
நன்று இடையா வகை நவின் மணி வார்த்தை	30
கார் நிகர் வண்கையும் கல்விப் பெருக்கும் 
பார் நிகர் பொறையும் பண்பும் பான்மையும் 
சீரும் சிறப்பும் திறனும் செல்வமும் 
யாரும் புகழ் தரும் இயல்பு நல் அறிவும் 
எம்-பால் அன்பும் எமது அருள்_உடையோர் 		35
தம்-பால் சார்பும் தணப்புறாத் தன்மையன் 
தானம் ஈர்_எட்டும் தருவோர் நாண 
ஈனம்_இல் அவற்றின் எல்லை மேல் ஒன்றின் 
நான்கில் ஓர் பாகம் நண்ணிய தானம் 
தான் கிளர் உலகில் சால்பு_உடையவர்-தம்		40
கண் களிப்புறவும் காது இசை பெறவும் 
ஒண் களிப்பொடு மனம் உவந்து வந்து உருகவும் 
தருபவன் புரசைச் சபாபதி எனும் பெயர் 
மருவிய கலை_வலோன் மகிழ்வொடும் கேட்க 
எம்மிடை ஒருவன் எளிமையில் சிறந்தோன் 		45
செம்மையில் போந்து என் சிறுமனைக் கிழத்தி 
எந்தாய் நுந்தமை ஈன்ற நற்றாயின் 
நந்தா அருள் திரு_நாமம் கொண்டனள் 
ஆங்கு அவள்-தன்னை அப் பெயரால் அழைத்(து) 
ஈங்கு எவ்வேலையும் இடுதற்கு அஞ்சினேன்		50
ஈது அலது உமக்கும் ஓர் இழிவு உண்டு இதனால் 
ஆதலின் அப் பெயர் அகற்றுதற்கு ஆயிரம் 
பொன் வேண்டும் என்றனன் பொன் வடிவு அல்லது 
பொன் வேறு இலையால் பொன்_உடையவன் எம் 
மாதுலன் ஆதலின் வலிவு_இல் கைக்கடன் 		55
வாதுறக் கேட்டலும் வாங்கலும் ஈனம் 
தரம் பெறும் உமது தந்தையோ எனில் அவர் 
இரந்து உழல்கின்றதை யாவரும் அறிவர் 
நின்மலர் ஆகிய நீரோ என்றால் 
நெல் மலி உலகில் நின் கண் காண		60
ஒரு மணம் செய்தோர்க்கு உறு துயர் பல உள 
இரு மணம் செய்த எமக்கு எத்தனையோ 
சங்கடம் அது நின்றனக்குந் தெரியும் 
எங்கணும் நின் போல் எமக்கு அன்பினர் இலை 
அதனால் நின்-பால் அவனை அனுப்பினம் 		65
இதமே அன்றி அகிதம் இசையா 
நெடும் பொற்பு_உடையோய் நீயும் எம் போல் 
குடும்ப பாரம் கொண்டனை ஆதலின் 
ஆயிரம் என்றதில் அரைப் பங்கேனும் 
காயகம் அறியோய் கால் பங்கேனும்		70
இல்லை என்னாமல் எம் முகம் நோக்கி 
நல்லை நீ அவற்கு நல்குவிப்பாயே. 

@2. ஞான பந்த நிலை

#1
திரு வளர் மார்பனும் திசைமுகத்தவனும் 
உரு வளர் தேவரும் உணர்ந்திடப்படாத 
சச்சிதானந்த சாக்ஷாத்கார 
சொச்ச நித்திய சுயம்பிரகாச 
நிர்க்குண நிச்சல நிமல நிராமய 		5
சிற்குண தற்பர சிற்பர சின்மய 
அகள அற்புத அனந்தானந்த 
சகள மத்திய சத்திய சத்துவ 
அகண்ட பூரண அருளானந்த 
மகண்ட விண்டல வாணர்கள் வந்தித	10
தத்துவ சொரூப தத்துவாதீத 
தத்துவ காரண தத்துவரகித 
விச்சுவ சொரூப விச்சுவ காரண 
விச்சுவ ரகித விச்சுவாதீத 
பிரணவ சொரூப பிரணவ காரண 	15
பிரணவ ரகித பிரணவாதீத 
பஞ்சாக்கரப் பொருள் பாங்குறு வடிவ 
எஞ்சாக் கருணை எனும் திரு_உருவ 
நாத வடிவ நாத நாதாந்த 
வேத வடிவ வேத வேதாந்த		20
உள் அமர் ஒளிய ஒளியினுள் ஒளிய 
கள்ளம்_இல் அன்பர் கண் அமர் வெளிய 
பெரியதில் பெரிய பெரும் குண_கடல 
அரியதில் அரிய அனாதி போதக 
ஆகம வடிவ ஆகம முடிவ 		25
ஆகம நிலய ஆகம காரண 
சைவ சித்தாந்த ஸ்தாபகம் செய்த 
தெய்வ மகத்துவ சிறப்புறு நெறிய 
ஞான காரண ஞான மெய்ச் சொருப 
ஞான நாடக ஞானசம்பந்த		30
தேவ தேவ சிவசிவசிவ என 
யாவரும் துதிக்க இனிய தென்_பாண்டி 
நாட்டிடை மதுரா நகர்த் திரு_மடாலயத்து
ஈட்டிய அருளால் எழில் அருள் வடிவம்
கொண்டு எமை அடிமைகொண்டு அருள்புரிந்த 	35
தண் தமிழ் மறைமொழி தரும் தனி முதலே 
மூவாண்டு-அதனில் மூவுலகும் தொழத் 
தே ஆண்ட ஞானத் தெள் அமுது அருந்திய 
மணியே என் கண்மணியே சைவ 
மணியே தெய்வ மணியே அணியே	40
முத்துச் சிவிகையின் முளைத்து எழும் இளங்கதிர் 
ஒத்துத் தனி அமர்ந்து அருளிய ஒளியே 
சைவம் தழைக்கச் சமண் கழுவேறத் 
தெய்வ நீறு அளித்த திரு_அருள் குன்றே 
பிழைத்தலில் என்பைப் பெண்_உரு ஆக 	45
அழைத்து அருள்புரிந்த அற்புத அமுதே 
சரியை ஆதிய சாதுர்ப் பாதமும் 
தெரிய நல்லோர்க்குத் தெரித்து அருள் தெளிவே 
பாலொடு கலந்த பழம் போல் இனிக்க 
நூலொடு மெய்ம்மொழி நுவன்று அருள் பதியே	50
தவமே தவத்தில் சார்தரும் பயனே 
நவமே சாந்த நகை முக மதியே 
செவ்விய கரும்பே தேனே கனியின் 
திவ்விய சுவையே தெவிட்டா மருந்தே 
அஞ்செழுத்து உண்மையை அறிந்திட அடியேன் 	55
நெஞ்சு அழுத்துற அருள் நீள் தயாநிதியே 
என் ஒரு தாயே என்னை ஈன்றோனே 
என் உயிர்க்குயிரே என் பெரும் பொருளே 
என்னுடை அறிவே என் உளத்து அன்பே 
என் உயிர் கதியே என்னுடைக் குருவே	60
அடியேன் புரியும் ஆயிரம் பிழையும் 
படியால் பொறுத்துப் பாங்கு அருள் பரமே 
எல்லாம் வல்ல இறையே அடைந்தவர் 
பொல்லாங்கு எல்லாம் பொறுத்து அருள் பொறையே 
முற்றும் உணர்ந்த முதலே உலகப் 	65
பற்றை அகன்ற நல்_பண்பினர் உறவே 
ஆன சம்பந்த நல் ஆறு முகத் திரு_
ஞானசம்பந்த ஞான தேசிகனே 
போற்றி நின் சேவடி போற்றி நின் பூம்_பதம் 
போற்றி நின் தாள்_மலர் போற்றி நின் கழல் கால்	70
குற்றமும் குணமாக் கொண்டு அருள்புரியும் 
பெற்றி நின் கருணைப் பெரும்_பெயல் அதற்கு 
அட்டமாக அனந்தந் தெண்டன் 
இட்டமா அடியேன் இட்ட விண்ணப்பம் 
திரு_செவிக்கு ஏற்றுத் திருவுளத்து எளியேன் 	75
உருச் செவி அறியா உறு பிழை பொறுத்திட 
வேண்டும் நின் அருள் வேண்டும் நின் கருணை 
வேண்டும் வேண்டும் வேண்டும் என் எனில் 
என் என உரைக்கேன் என் என உரைக்கேன் 
பொன் அன நினது பூம்_பதம் தரிசித்து		80
அன்பர்கள் எல்லாம் அவ்விடை வாழ 
நல் பயன் அறியா நாயேன் ஒருவனும் 
நல் நிதி அனைய நின் சந்நிதி-அதனில் 
மன்னும் நின் கருணை வடிவக் காட்சியைத் 
தரிசித்து இன்பத் தனிக் கடல் ஆடப் 		85
பிரியத்துடனே பெற்றிலாது அந்தோ 
தகவு_இலேன் நெடுநாள் தனித்துச் சேய்மையில் 
புருடனைப் பிரிந்த பூவையைப் போல 
வாழ்வில் குறைந்து மனம் தளர்வு எய்தித் 
தாழ்வுறு நாணம் தலைக்கொள நின்றேன்		90
ஆதலால் சுவாமிகள் அருளில் புரிந்த 
தீது_இலாத் திரு_முகத் தெய்வம்-தன்னை
தரிசித்து உள்ளம் தழைத்து வணங்கிப் 
பரிசித்து அன்பொடு பரவிப் போற்றி 
வணங்கிவணங்கி வாசித்து உடம்பும்		95 
உயிரும் தழைக்க உவந்து ஆனந்தக் 
கூத்து இதுவரையில் குயிற்றிநிற்கின்றேன் 
என்னினும் அந்தோ என் செய்வேன் பிரிந்த 
புல் நெறி நினைத்துப் போந்த நாணமும் 
அச்சமும் என்னை அடிக்கடி தகைக்க		100
நச்சிய இத்தனை நாளும் விண்ணப்
பத்திரம் செய்து பரவத் தாழ்த்தேன் 
குத்திர மனத்துக் கொடியேன் செய் பிழை 
மலையினும் கடலினும் மண்ணினும் பெரிதே 
நிலையினும் அறியா நெடும் பிழை எந்தாய் 		105
என் செய்தால் தீரும் என் செய்வேன் எளியேன் 
பொன் செய்தால் அன்ன நின் பொன் மலர்_அடியை 
இரவும் பகலும் இடைவிடாது உன்னிப் 
பரவும் பரிசே பரிசு என அருளே.

@3. அநுபவ சித்தாந்தம்

#1
அணி வளரும் உயர் நெறி கொள் கலைகள் நிறை மதி மகிழ்வை அடையும் ஒளி உடைய சடையோய் 
அருள் ஒழுக அமுது ஒழுக அழகு ஒழுக இளநிலவின் அளி ஒழுக ஒளிர் முகத்தோய் 
அமல நிலை உறவும் உறு சமல வலை அறவும் உணர்வு அருள் கருணை மிகு குணத்தோய் 
அடியர் வினை அகல ஒரு பரம சுக நிலை அருளும்-அது கருது திருவுளத்தோய் 
அநக சுப விபவ சுக சரிதரக சிரகம் அந அதுல அதுலித பதத்தோய் 				5
அகில சர அசர அபரிமித மித அணுவும் அணு அணுவும் இவை என உரைத்தோய் 
அகித இத விவித பரிசய சகல விகல ஜக வர ஸரஜதளம் இழைத்தோய் 
அகள மன ரமண அபிநிகட அபிநிபிட தட அநதிசய சுகம் அளித்தோய் 
அணு பக்ஷம் இது சம்பு பக்ஷம் இது காண்க என்று அன்புடன் உரைத்த பெரியோய் 
அதிக்கிராந்தத்து இயல்பு திக்கிராந்தத்து இயல்பின் அமைதி இஃது என்ற அறவோய் 		10
அதிகார போக இலயங்கள் இரு வகை இயல் அறிந்திட உணர்த்தும் உணர்வோய் 
அருவம் இஃது உருவம் இஃது அருவுருவம் இஃது என அறைந்து அறிவுறுத்தும் அறிவோய் 
அபேத சம்வேதந சுயம் சத்தி இயல் எலாம் அலைவு அற விரித்த புகழோய் 
அநநிய பரிக்கிரக சத்தி விளைவு எல்லாம் கை ஆமலகம் என இசைத்தோய் 
அத்துவா நெறி ஆறும் ஒத்து வான் நெறி ஆறு அடைந்திடுக என்ற பரிசோய்			15 
அவுத்திரியின் உத்தரம் உனக்கு இசைவுறுத்துதும் அமர்ந்திடுக என்ற இனியோய்
பணி வளரும் நிபுண கண பண கரண பரண வண பரத யுக சரண புரண 
பரம்பர சிதம்பர திகம்பர நிரந்தர பரம் தர விளங்கு பரம 
பகட படதட விகட கரட கட கரி உரி கொள் பகவ அரகர என்னவே 
பவன் தகு சிவன்-தனை உவந்தனை சுவந்தனை பகர்ந்திடுக என்ற அமுதே 			20
பகர் அபர உகர பர மகர குண குணிகள் உறு பரிசு அறிய உரை செய் அரசே 
பயன்தரு வயிந்துவத்துவம் திகழ் சிவம் புகல் பதம் தெளிய அருள்செய் இறையே 
பத சிகர வகர நெறி அகர நகர மகர உபய அபய நிலை சொல்_மலையே 
பவம் தெறு நவம் தருகுவம் பரிபவம் பொடிபடும்படி எனும் புனிதமே 
பதி உதவு பதி-தனது பரிசும் அஃது அடையும் ஒரு பசு இயலும் அருள்செய் பொருளே 		25
பந்த நிலை அந்த நிலை இந்த நிலை என்று பரபந்த மொழி தந்த மணியே 
படியும் இடர் வடியும் இருள் விடியும் மணிமொழி மறைகள் படியும் என நொடி மருந்தே 
பஞ்ச_மல கஞ்சுகமும் எஞ்சும் வகை பஞ்சம் இலை பஞ்சமகம் என்ற நிதியே 
பதித நெறி விடுக ஒரு பதி-தன் நெறி தொடுக ஒளி படரும் வகை எனும் என் உறவே 
பங்கம் அற அங்கும் உள இங்கும் உள எங்கும் உள பண்டை வெளி என்ற ஒளியே 		30
பலித அநுசித உசித யுகள இக_பரம் இரவு_பகல் என விளம்பும் வளமே 
பல் நிலையும் முன்னிலையும் நின் நிலையும் என் நிலை படிந்துவிடுக என்ற நன்றே
திணி வளரும் அறிவு கொடு தொடர்வு அரிது பெரிது பரசிவம் அது எனும் செல்வமே 
சிவ சாதனம் பெறார் பவ சாதனம் பெறுவர் தெளிக எனும் அளி கொள் குருவே 
திரு_நீறு காண் நினது கரு நீறு காணுவது தேர்ந்து உணர்க என்ற தெளிவே 			35
சிவம் மேவு சமயம் அது தவம் மேவு சமயம் இது சித்தம் என ஓது முதலே 
சிவன் அடியை வாழ்த்தாத வாய் ஊத்தைவாய் கொடிய செவ்வாய் எனச் சொல் நிறைவே
சிவ மான்மியம் புகாக் காது காது என்னும் தெலுங்கமொழி என்ற ஒன்றே 
சிவன் அடி வணங்காத தலை சிதலை அவன் விழாத் தெரிசியாக் கண்கள் புண்கள் 
சிவனை நினையாச் சிந்தை நிந்தையாம் இது நமது சித்தாந்தம் என்ற திருவே 			40
திகழ் பரமன் நடவும் விடை மனை இனமும் அவன் முனோர் செறி கமரின் அமுது உண்ட நாள் 
சேர்வுறவிடேல் என்ற ஒரு மரக்கறியும் அச் சிவபிரான் விடயமாகத் 
திருவாதவூரடிகள் திருவாய்_மலர்ந்து அருள் திருக்கோவையார் செய்கையும் 
செப்புக எனக் கடாஅய் நின்றவர்க்கு இறைமொழி தெரிக்கும் சிறப்பு வாய்ந்தே 
சீர் ஐந்தெழுத்தினால் இலகு நகரின்-கண் ஓர் திரு_ஐந்தெழுத்தின் ஓங்கும் 			45
தேசிகத் தண் அமுத வான் கடல் படிந்து அருள் தெள் அமுதம் உண்டு தேக்கிச் 
செறி பவக் கோடை அற அருள்_மழை பொழிந்து ஒளி சிறந்து ஓங்கு சீர்க் கொண்டலே 
செய்ய தாண்டவராய தூய வாழ்வே நினது திரு_அடிக்கு அன்பு கொண்டே
தணி வளர் விராகம்-அது பெற்றிலேன் காமரம்-தானும் அறியேன் துன்பினைத் 
தலிதம்செயேன் மங்குலம் கொண்டு நகபதம்-தன்னில் பருத்து வினையைத் 			50
தாங்கு சும்மாடு ஆயினேன் நவ விர'¡க முதல் சாற்று சும்மாடு மட்டும்
தங்கும் மொழி முதலை உடையேன் முதல் கயலில் தயங்கும் ஒரு நாமம் உடையேன் 
தகும் முறைக் கடை மூன்றினும் சுவசியுற்றிலேன் சதுர்_இலேன் பஞ்சம் நயவேன் 
சட்டியில் இரண்டின் ஒன்று ஏய்ந்திலேன் ஒன்று போற்றான் உழைத்து உழலுகின்றேன் 
தண்டன் ஆயிரம் இட்டு உரைக்கும் விண்ணப்பம்-அது தான் என்னை எனில் உன் அடியார் 		55
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் 
தட்டுறா ஞானம்_உடையார் நினது தொண்டர் யான்-தானும் அது சுட்ட உடையேன் 
சாந்த நெஞ்சு_உடையர் நினது அன்பர் யான் மணம் வீசு சாந்த நெஞ்சு-அதுவும் உடையேன் 
சகச நியமம் பெறுவர் நின் அடியர் அடிமையும் சகச நியமம் பெற்றுளேன் 
தனிவீடு விழைவர் நின் அன்பர் யான் பல கூட சாலை உள வீடு விழைவேன் 			60
சார் புலக் கள்வர் வரின் அஞ்சுவர் நின் அடியர் யான் தனி வரினும் மிக அஞ்சுவேன் 
தாழ் பொறி அடக்குவர் நின் அன்பர் யான் உயர் பொறிகள்-தமை அகம் அடக்க வல்லேன் 
தமியனேன்-தன்னை நீ கைவிடேல் விடினும் நின்றன்னை நான் விடுவன்_அல்லேன் 
தகு வழக்கிட்டெனினும் நின்-பால் எனக்கும் ஒரு சார்புறச் செய்குவேனே.

#2
பண்டு குலம் பேசப் பரிந்ததில்லை ஈண்டு என்னைக் 
கொண்டு குலம் பேசக் குறிப்பானோ தொண்டுசெய 
நீண்டவர் ஆயப் பெருமான் நீக்கும் திருத்துறைசைத் 
தாண்டவராயப் பெருமான்-தான்.

@4. குடும்ப கோரம்

#1
திரு வளர் கமலக் குரு மலர் தவிசினன்
முதல் பெரும் தேவர் மூவரும் பணியப்
பொதுவிடைத் திரு_நடம் புரியும் நம் பெருமான்
அடி_மலர்க்கு அன்புசெய் அன்பர்கட்கு அன்பன்
சீர் விளை தூய்மை நீர் விளையாடிச்		5
சொல் தரு வாய்மைப் பொன் துகில் உடுத்துக்
கரிசில் வெண்_நீற்றுக் கவசம் தரித்துத்
தத்துவ சிற்பர சற்குண அகண்ட
அற்புத சிற்குண அங்க லிங்கேசனை
அகத்தும் புறத்தும் அருச்சனை புரிந்து		10
சிவம் தரு சுகம் எனும் திரு_அமுது உண்டு
சீலம் எனும் தாம்பூலம் தரித்தே
அளவு_இல் இன்பம் அனுபவிக்கின்றவன்
மூதறிவாளன் முத்துசாமி என்று
இயற்பெயர் உடைய இத் திருவாளனுக்கு		15
இராமலிங்கம் எழுதி விடுத்த
மயலுறு சோபன வாசகம் ஆவது
ஐய நின் புடை இப் பொய்யனேன் போதர
தடை பல உள அவை சாற்றிட என்றால்
ஆயிரம்கோடி நா ஆயினும் முடியா		20
இருந்து மற்றவை எண்ணிட என்றால்
உள்ளம் உடம்பு எலாம் கொள்ளினும் போதா
எழுத என்றாலும் ஏட்டுக்கு அடங்கா
என்னினும் சிறிதே எழுதத் துணிந்தனன்
** (புருஷன்)
என் எனில் யான் ஓர் ஏழை என்பதும்		25
தெளிவு_இலாச் சிறியரில் சிறியனேன் என்பதும்
இன்பு உடை அறிவே இல்லை என்பதும்
அன்பு_உடையாய் நீ அறியாதது அன்றே
** (அவன் முதன் மனைவி)
செம்பொடு களிம்பு செறிந்தது போன்று ஓர்
ஆணவக் கிழத்தி அநாதியில் இறுகப்		30
பிரமராக்ஷசி போல் பிடித்துக்கொண்டனள்
சிவ_பூரணத்தைச் சிறிதும் காட்டாள்
ஜெகம் எனும் ஏகதேசமும் தெரிக்காள்
எவ்விடத்து இருளும் என் அகச் சுவர் எனக்
கன இருள் வடிவம் காட்டும் கொடியாள்		35
இரவு இது பகல் இது இன்பு இது துன்பு இது
ஒளி வெளி இது என ஒன்றும் தெரிக்காள்
இறுக்கும் அரக்கி இவளொடும் இருந்தே
எளியேன் முயங்கிடல் என் தவம் என்கோ
** (அவள் பெற்ற பிள்ளை)
முற்றும் அஞ்ஞான மூட_பிள்ளை			40
ஒருவன் பிறந்தனன் ஒடிவான் அவன்றனால்
பானுவின் ஒளியைப் படர் இருள் மூடல் போல்
என் அக_கண்ணையும் என் புற_கண்ணையும்
அங்கையால் மூடி அலக்கழிப்பான் எனைத்
தன்னை இன்னான் எனத் தானும் காட்டான்		45
என்னை இன்னான் என எண்ணவும் ஒட்டான்
ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான்
தாயினும் கொடியன் ஆயினும் என்றன்
விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன்
இவன்றன் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ன	50
மதிப்பவர் ஆர் எனை வையகம் மகிழ்ந்தே
வையக மகிழ்ச்சி வையகம் நெருப்பாம்
மருளுறு சிறுவன் வளர் நாள் தொடுத்தே
உறவு அகன்றார் யான் அறிவு அகன்றிட்டேன்
** (அவனுடைய இரண்டாம் மணவினைக் கர்த்தா)
செப்புறும் தெய்வச் செயல் என்கேனோ		55
இரு தொடக்குகள் இயலாது என்றே
தொடக்குப் பற்பல அடுக்கடுக்கு ஆயின
ஆரோ பசுபதி அவன் வடிவு அழலாம்
அம் கண் மூன்றாம் அருள் சத்திமானாம்
மண்ணும் விண்ணும் மால் அயனோரால்		60
நேடியும் காணா நீள் பத முடியனாம்
எழு மலை எழு கடல் எழு புவி எழு கார்
ஆன எவையும் அளித்து நோக்குவனாம்
ஊர் தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம்
உயிர் எழு வகுப்பையும் ஊட்டி உறக்குவனாம்	65
ஊழிகள்-தோறும் உள்ள ஒருவனாம்
உரை கொண்டு ஓதரும் உயர் வேதாகமம்
உற்ற கலைகள் உயரிய நிலைகள்
அண்ட பிண்டம் அவற்றின் துறைகள்
சாரும் இறைகள் சராசரங்கள்			70
வளமுறு வர்ணாசிரம வகைகள்
வகுக்குறு வகுப்பினும் வதி வாழ்க்கையனாம்
சதிர் மா மாயை சத்திகள் கோடி
மன்னிய அரங்கிடை வதி பெற்றியனாம்
அவன்-தான் யாரோ அறியேன் யானே		75
அறிதர வேண்டும் அப் பருவத்தே
மாயை என்னும் மாதினைக் கொணர்ந்தே
சிறு கருங்காக்கைக் குறுகுறும் கழுத்தில்
கனம்பெறு பனங்காய் கட்டியவாறு எனக்
கட்டிப் புண்ணியம்கட்டிக்கொண்டனன்		80
** (அவன் இரண்டாம் மனைவி)
விடுத்து எனைப் புண்ணியன் விலகலும் அவள்-தான்
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு
கொள்ளிவாய்_பேய்கள் ஓர் கோடி நின்றே
தடித்த குழவியைப் பிடித்தது போல
மற்றவள் என்னை மணந்து கொண்டனள்		85
பெண் நடை அனைத்தும் பெருங்கதை ஆகும்
அடுத்தவர் என்னை அந்தோ கொடிய
அரும் தளை ஏன் என அறைந்து எனை அகன்றனர்
அகம் எலாம் பகீரென அனந்த உருவாய்
அவ்வவ் உருகொண்டு அணைத்துக் கெடுப்பள்	90
காற்றினை ஒருசிறு கரகத்து அடைப்பள்
கடல் ஏழினையும் கடுகிடை முகப்பள்
வகைவகையாய் உடல் வனைந்து வகுப்பள்
வையகம் முற்றும் வாயில் மடுப்பள்
பகலிடை நள்ளிருள் இருக்கப்பண்ணுவள்		95
இருளில் பானுவை எவர்க்கும் காட்டுவள்
அண்டம் எல்லாம் அணுவில் செறிப்பள்
அணுவை அண்டமாய் ஆக்கி நகைப்பள்
பொய்யை மெய்யாப் பொருந்தி மகிழ்வள்
பொருந்தும் மெய்யைப் பொய்யாச் செய்வள்		100
அடர் வஞ்சகக் கழங்காடல் பிரியாள்
காணாப் பல் நிலை கலையுடன் காட்டுவள்
இருளை இரிக்கும் இந்து ரவிகளைப்
படைத்து இங்கு இயற்றுவள் பற்பல ஜாலம்
பிரமனை வலக்கைப் பிடிக்குள் அடக்குவள்		105
இடக்கையில் மால் பதி ஏந்தித் தரிப்பள்
தலையிடை உருத்திரன் தன் பதி தெரிப்பள்
குளிர் எழு_கடல் இவள் குளிக்கும் தடமே
அண்டம் எல்லாம் கொண்டையில் முடிப்பள்
ஜெகம் எலாம் கலைக்குள் சேர்த்துக் கட்டுவள்	110
உடம்பிடை உரோமம் ஒவ்வொன்றிடையே
புவனம் ஒன்றாகப் பொருந்தச் சமைப்பள்
எவரையும் கணத்தில் எய்தி மயக்குவள்
இக் கொடும் பாவி என் மனையானது
பிடாரியைப் பெண்டாய்ப் பெற்றது போலும்		115
அனுகூலச் சொலை அகத்திடை மதியாள்
அடி_மடி பிடிப்பள் அரிய வம்பு இசைப்பள்
உறங்கவிடாள் அவள் உறங்கு பாய் சுருட்டாள்
மடிமாங்காய் இடும் கொடுமைக்கு இளையாள்
சாகவும் விடாள் அவள் சார் பழி தளராள்		120
தவத்தில் இசையாள் பவத்தின் நசையால்
மருள்_பேய் என்ன மதித்திட வாட்டிப்
படைத்து என் மானம் பறக்கச்செய்வள்
மானம் அகற்றியும் மனை விட்டு ஏகாள்
இரவும் பகலும் எனை இழுத்து அணைப்பள்		125
இவளால் படும் இடர் இம்மட்டு_இலவே
புகலப்படுமோ புகலின் இரு செவி
பொருந்து உளம் கைத்திடும் போதும்போதும்
மல்லாந்து உமிழின் மார்பின் மேல் எனச்
சொல்லுவர் அதனால் சொல்வது மரபு அல		130
** (அவள் பெற்ற பிள்ளைகள்)
** (மூத்த பிள்ளை)
கொடும் தவம் புரிந்து ஒரு குரங்கு பெற்றால் போல்
மலைக்கப்பெற்றிட மனம் எனும் இளைஞன்
உலக்கைக் கொழுந்து என ஒருவன் பிறந்தனன்
வரும் இவன் சேட்டை வகுக்க வாய் கூசும்
விதிவிலக்கு அறியா மிகச் சிறியன் ஆயினும்	135
விண் மண் நடுங்க வினைகள் இயற்றிக்
காம_குழியில் கடுகிப் படு_குழி
விழும் மதக் களிறு என விழுந்து திகைப்பன்
பதியை இழந்த பாவையின் செயல் போல்
கோப வெம் கனலில் குதித்து வெதும்புவன்		140
நிதி கவர் கள்வர் நேரும் சிறை என
உலோபச் சிறையில் உழன்று வாழ்வன்
வெற்பு எனும் யானையை விழுங்கும் முதலை
முழுகிக் கடலில் முளைத்திடல் போல
மோக_கடலில் மூழ்கி மயங்குவன்			145
மது குடித்து ஏங்கி மயக்குறுவார் போல்
மதத்தால் வீறி மதங்களில் வியப்பன்
பட்டினியிருக்கும் வெட்டுணி போல
மச்சரம் கொண்டு மகிழ்கூர்ந்து அலைவன்
காசில் ஆசை கலங்குறா வேசை			150
எனினும் விழி முனம் எதிர்ப்படில் அக்கணம்
அரிய தெய்வம் என்று ஆடுவன் பாடுவன்
அணிகள் அணிவன் அடியும் பணிவன்
எலும்பைச் சுரண்டும் எரி_நாய் போலச்
சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன்		155
கணத்தில் உலகு எலாம் கண்டே இமைப்பில்
உற்ற இடத்தில் உறுவன் அம்மா
சேய்மை எல்லாம் செல்லற்கு இளையான்
பித்து ஓங்கிய உன்மத்தனாய்த் திரிவான்
சொல்_வழி நில்லான் நல்_வழி செல்லான்		160
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன்
வெட்டிலும் துணியான் கட்டிலும் குறுகான்
மலக்கி ஈன்ற மாதினும் பாவி
கள்_அது குடித்துத் துள்ளுவான் போல
மதத்தால் பொங்கி வழிந்து துள்ளுவன்		165
முத்தம்தரல் போல் மூக்கைக் கடிப்பன்
மறை சொல்வான் போல் வளர் செவி கிள்ளுவன்
சற்றும் இரங்கான் தனித் துயில் கொள்ளான்
கூவிளிச் செய்வன் கூடுவன் பலரை
கூவி அதட்டினும் கோபம்கொள்வான்		170
இங்கும் உள்ளான் அங்கும் உள்ளான்
படைக்கு முன்னே பங்கு கொள்வான்
மடியில் நிறுத்தி வாய்மை வழங்கினும்
வண்ணான் கல்லிடை வறிஞர் சீலையை
ஒலித்திடல் போல உரத்திக் கத்துவன்		175
என்னைத் தாதை என்று எண்ணான் சொல்லும்
வாய்மை எல்லாம் வண் புனல் ஓவியம்
ஆகக் கொள்வான் அவன் பரிசு உரைக்கேன்
பிறந்த இப் பாவி இறந்தான்_இலையே
சென்ற_நாள் எலாம் இச் சிறுவனால் அன்றோ	180
வரு சுகம் காணா வைச்சுமை நேர்ந்தேன்
திறந்து இவன் செயலைத் தினைத்துணை விடாது
செப்பின் கற்கள் சிதைந்து கசியும்
கனத்த மரங்கள் கண்ணீர் பொழியும்
கடவுளர் இவன் செயல் காணுவாரேல்		185
இமையாக் கண்களை இமைத்திடுவாரால்
** (இரண்டாவது பிள்ளை)
காசிபன் மனைவி முன் கடும் தவம்புரிந்து
பை உடைப் பாம்பைப் பயந்தது போன்று
புத்தி என்னும் புத்திரன்-தன்னை
ஈன்றனள் அவனோ எளியரில் எளியன்		190
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன்
தாயொடும் பழகான் தமையனோடு அணையான்
தறுகணாளரில் குறுகி உறவாடான்
பாவம் என்னில் பதறி அயர்வான்
பாடுபடற்குக் கூடான் உலகர்			195
கயங்கு நெறியில் உயங்கி மயங்குவன்
பாழ் நிகர் புந்தியர்-பாலில் பொருந்தான்
எப்பாடும் படான் எவரையும் கூடான்
கபடரைக் காணில் காதம் போவான்
கங்குலும் பகலும் கருது விவகாரத்		200
தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள்
சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும்
அடங்குவன் வறிதே அமைதல் இல்லான்
இவனை மடியில் இருத்தித் திடமொழி
செப்பிடச் சோர்வு செறிவது எனக்கே		205
இவன்-பால் செய்வது ஏதும் அறியேன்
** (மூன்றாவது பிள்ளை)
செறிதரு கோள் உள சே_இழையாள் பினும்
நையப் புணர்ந்து நாள்பட வருந்தி
நாடிநாடி நாயை ஈன்றது போல்
உணர்வு_இலி என்றே உலகர் ஓதும்		210
சித்தம் என்னும் சிறிய குழவியைப்
பயந்து கரத்தில் பதற எடுத்தனள்
கரைதரு விண் நீர்க் கடி தடம் ஆகக்
கதிர் விடும் உடுக்கள் கறங்கு மீன் ஆக
மதியைத் தாமரை மலராய் மதித்து அதில்		215
மூழ்கப் பிடிக்க முன்னம் கொய்திட
எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும்
நேராது இளைத்தே நிலைகள் பற்பல
வான் கண்டவன் போல் வாயால் கொஞ்சுவன்
எனையும் கூவுவன் இவன் இடர் பலவே		220
இடர் பல இயற்றி இழுக்கும் கொடியன்
** (இளைய பிள்ளை)
இவன் செயல் நிற்க இவன் தாய் வயிற்றில்
தாருகன் என்னும் தறுகண் களிற்றைத்
தந்த மாயைக்குத் தனி மூத்தவளாய்
அகங்காரம் எனும் அடங்காக் காளை		225
அவனி மூன்றும் அதிர்ந்து கவிழக்
கடைமுறை பெற்றுக் களித்தனள் அவன் செயல்
கருதவும் பேசவும் கனி வாய் கூசுமே
கூற்றுவர் கோடி கொண்டு உதித்தால் என
முளைத்து வளர்ந்தனன் மூத்தவன் மூழை		230
இளையவன் காளை எனும் இலக்கியமாய்
முன் உள மூவரை முடுகி ஈர்த்தே
எண்_இல் விளையாட்டு எழுப்பும் திறத்தன்
எல்லா ஆற்றலும் என்-பால் உளது எனத்
தருக்குவன் இவன்றன் சங்கடம் பலவே		235
தன்னைத்தானே தகைமையில் மதிப்பன்
தரணியில் பெரியார்-தாம் இலை என்பான்
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது
தானே பிறந்த தன்மை போல் பேசுவன்
விடியும் அளவும் வீண் வாதிடுவன்		240
வாயால் வண்மை வகை பல புரிவன்
ஓது அவன் பெருமை ஈது அவன் இயல்பே
சொல்லினும் கேளாத் துரியோதனன் என
வானவர்-தமக்கும் வணங்காமுடியன்
முன்_வினை யாவும் முற்றும் திரண்டே		245
உருக்கொடு இங்கு இயம்பொணா ஊறுகள் இயற்றுவன்
பிள்ளையும் அல்லன் கொள்ளியும் அல்லன்
இன்னும் இவன் செயும் இடர் பலவற்றை
எவர்-பால் சொல்லி என் துயர் ஆற்றுவேன்
** (அவனது மூன்றாம் மணவினைக் கர்த்தாவும் மூன்றாம் மனைவியும்)
பாதகி துன்பம் பவ_கடல் ஏழும்			250
மக்கள் துன்பம் மலை ஓர் எட்டும்
நீளல் போதாது என நெஞ்சில் நினைத்தோ
அவளது சூழ்ச்சி அற்புதம் அற்புதம்
தொல்லை மரபில் தொழில் பல கற்ற
உலவுறு காமிய ஒண்_தொடி என்னும்		255
கபட வஞ்சகியாம் களத்தினைக் கொணர்ந்து
பேய்பிடித்தவன்-பால் பெரும் பூதம் கூட்டித்
தான் மணந்தது போதாது இங்கு என்று பின்
மாற்று காலுக்கு மறு கால் ஆக
மாட்டி மிக மனம் மகிழ்ந்தாள் கூர் வேல்		260
கண்_இணையாள் நெடும் கடல் சூழ் உலகில்
நிறைந்து உள யாரையும் நெருங்குவள் கணத்தில்
இவள் செயும் வீரம் எண்ணி விளம்ப
உடல் எலாம் நாவாய் உறினும் ஒண்ணா
ஒருத்தியே இரண்டு அம் குருகொடு அவ்வவற்றில்	265
பலவாய்ப் பலவுளும் பற்பலவாய் உரு
பொருத்தமுறவே புரிவள் அவ்வவற்றில்
பல கால் புணர்ந்து பயன் வலி போக்கி
ஓர் உருக் கரும்பும் ஓர் உருக் காஞ்சியும்
ஓர் உரு அமுதமும் உண்ண அளிப்பாள்		270
விட்டு இவை எல்லாம் பட்டினியாக்குவள்
ஓர் உரு வடிவால் உயர் பஞ்சணை மேல்
அகம் மகிழ் சுரதம் அளித்துக் களிப்பள்
ஓர் உருத் தன்னால் உறு நிலப் பாய் மேல்
என்பு நோவ இழுத்தே அணைவள்			275
இங்ஙனம் பற்பல ஏழைக் குறும்புகள்
இயற்றி எவருமே ஏக்கம்கொளவே
இவள் முன் நம் செபம் என்றும் சாயா
அரகர என்றே அரற்றி மெலிவேன்
** (அவள் பெற்ற மூவர்)
இவ்வாறு என்னை இழைத்திடும் கொடியாள்		280
முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே
வயிறு கிழிய வந்த சிறார்கள்
மூவர்-தமையும் அ மூவரும் அறியார்
வெல வரும் இவரால் மேலொடு கீழ் நடு
ஆய உலகும் அ உலகு உயிரும்			285
பற்பல நெறியில் பாடுபட்டார் எனில்
எளியேன் பாடு இங்கு இயம்பவும் படுமோ
இவர்கள்-தம் இயல்பை எண்ணவும் பயமாம்
பார் எலாம் தாமாய்ப் பரவும் இவர்-தாம்
ஏற்றுவர் இறக்குவர் எங்கு நடத்துவர்		290
இயற்றுவர் கீழ்_மேல் எங்குமாக
உவகை ஊட்டுவர் உறு செவி மூடத்
திட்டுவர் பலவாய்த் திரண்டு திரண்டே
ஆற்றுறும் ஆற்றலை ஆற்றல் அரிதாம்
இவ்வுலகு-அதனில் என் கண் காண		295
ஆய்_இழையாளை ஆய்ந்து மணந்த
நாளில் தொடங்கி இ நாள் பரியந்தம்
மனம் சலித்திடவே வலிய விலங்கினைத்
தாளில் இட்டுத் தயங்கி அலைந்தேன்
வீண் சஞ்சலம் என விளம்பும் துகளை		300
முடி மூழ்க வாரி முடித்திட்டேனால்
ஈட்டிய பொருளால் இல்_பசு ஈந்தே
எருமை-தன்னை அருமையாய் அடைந்தனோ
ஆற்ற முடியாது அலைவேன் எனவும்
குறித்து அங்கு எடுத்திடும் கூவல் நீரை		305
விழற்கு முத்துலை வேண்டிட்டு இறைத்துத்
துணைக் கரம் சலித்தே துயருற்றேனோ
காற்றினும் விரைந்தே காரான் பாலைக்
கமரிடை ஏனோ கவிழ்த்தும் கலங்குவேன்
கல நீர்-தன்னைக் கண்ணில் சிந்திக்		310
கழறிக் குழறிக் கனி உடல் களைக்கச்
சிலை நேர் நுதலில் சிறு வியர்வு அரும்ப
அரும் தொழில் செய்து இங்கு அடைந்த பொருளைச்
சிவ புண்ணியத்தில் செலவில் கலவாது
பெண்_சிலுகுக்குப் பெரிதும் ஒத்தேன்		315
பகலும் இரவும் பாவிகள் அலைத்தனர்
இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆர் எனக்
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன்
கிணற்றில் மண்ணைக் கெல்லப் பூதம்
தோன்றியது என்னும் சொல்லை ஒத்தது		320
இவரூடு ஆட என்னால் முடியுமோ
அவளுக்கு இவள்-தான் அறிய வந்தாள் எனும்
மூன்று மாதரும் முழு_பாய்_சுருட்டிகள்
இவர்களில் ஒருவரும் இசைய வந்தார்_அலர்
இச்சை வழியே இணங்கி வலிவில்		325
மணம்-அது கொண்டு வாழ்ந்து வருகையில்
சண்டன் மிண்டன் தலைவர் என்ன
புவி மிசைப் பாதகர் போந்து இங்கு உதித்தனர்
இவரால் நேர்ந்த எண்_இலாத் துயரைப்
பொறுப்பது அரிதாம் வெறுப்பது விதியே		330
பாவம் இன்னும் பற்பல உளவே
** (இக் குடும்பம் குடியிருக்கக் கொண்ட வீடு)
குடும்பத்துடனே குடித்தனம்செய்யக்
குடிக்கூலிக்குக் கொண்ட மனையில்
கண்ட காட்சிகள் கன விரோதங்கள்
இராமாயணத்தும் பாரதத்தும் இலை		335
இழிவினும் இழிவது எண்_சாண் உள்ளது
மலமும் சலமும் மாறா ஒழுக்கது
சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது
சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது
என்பு தோல் இறைச்சி எங்கும் செந்நீர்		340
ஆய்ந்து செய்த ஆகரம் உற்றது
அகலல் அணுகல் புகலல் இகலல்
அணிகள் துணிகள் அணிவது ஆய
சால வித்தைகள் சதுரில் கொண்டது
கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல		345
பகர் இ மனையால் படும் பாடு அதிகம்
** (அவ்வீட்டுத் தலைவரும் குடிக்கூலி நிர்ப்பந்தமும்)
இ மனை_தலைவராய் எழுந்த மூவர்
தறுகண் கடையர் தயவே_இல்லார்
பணி சிரம் முதலாய்ப் பாதம் வரையில்
வாது செய்திடும் வண் காலவாதி			350
பெருகுறு கள்ளினும் பெரிது உறு மயக்கம்
பேதைமை காட்டும் பெரும் தீப் பித்தன்
கொடு விடம் ஏறிடும் கொள்கை போல் இரக்கம்
கொள்ளாது இடர்செய் குளிர்ந்த கொள்ளி
இவர்கள் என்னோடு இகல்வர் இரங்கார்		355
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார்
பிண்டம் என்னும் பெரும் குடிக்கூலி
அன்றைக்கு அன்றே நின்று வாங்குவர்
தெரியாது ஒருநாள் செலுத்தாவிட்டால்
உதரத்து உள்ளே உறும் கனல் எழுப்பி		360
உள்ளும் புறத்தும் எண் எரி ஊட்டி
அரு நோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர் கொடும் செய்கை எண்ணும்-தோறும்
பகீரென உள்ளம் பதைத்துக் கொதித்து
வெதும்பும் என்னில் விளம்புவது என்னே		365
** (குடும்பத்தலைவனின் வெளி விவகாரம்)
சினம் மிகும் இவர்-தம் செய்கைகள் கனவிலும்
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர்
மற்போர் கருதி வந்தவர் போல
ஓதும் வேதாந்தம் உரைப்பர் சில பேர்
வாள்_போரினுக்கு வந்தவர் போல			370
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சில பேர்
தண்டாயுத_போர் தாங்குவார் போல
இதிகாசத்தை இசைப்பவர் சில பேர்
உலக்கை_போரை உற்றார் போல
இலக்கண நூலை இயம்புவர் சில பேர்		375
கற்போர் விளைக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சில பேர்
விவகாரங்கள் விளம்புவர் சில பேர்
மடிபிடி_போர்க்கு வாய்ந்தவர் போல
மத தூஷணைகள் வழங்குவர் சில பேர்		380
கள்_குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூலைக் கழறுவர் சில பேர்
விழற்கு நீரை விடுவார் போல
வீண்_கதை பேச விழைவார் சில பேர்
இவர்கள் முன்னே இவருக்கு ஏற்ப		385
குரல் கம்மிடவும் குறு நா உலரவும்
அழலை எழவும் அவரவர்-தம்பால்
சமயோசிதமாய்ச் சந்ததம் பேசி
இயன்ற மட்டில் ஈடுதந்து அயர்வேன்
** (அவனது உள் விவகாரம்)
பின்னர் மனையின் பின்புறத்து ஏகிக்		390
கலக்கும் மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச்
சோமனைப் போல வெண் சோமனைத் துவைத்து
நல் நீர் ஆடி நறு மலர் கொய்து			395
தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப்
பாவையை வைத்துப் பாடி ஆடும்
சிறாரைப் போலச் செய் பணியாற்றி
மண்ணின் சுவர்க்கு வண் சுதை தீட்டல் போல்
வெண்_நீறு-அதனை விளங்கப் பூசிப்		400
புகழ் ருத்ராக்கப் பூனை என்ன
உற்ற செப வடம் உருட்டிஉருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம்
செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியில் பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி		405
ஊன் பிண்டத்தில் குறு_பிண்டம் ஈந்து
குடிக்கூலிக் கடன் குறை_அறத் தீர்த்துப்
பகல்வேடத்தால் பலரை விரட்டி
** (அவன் பரத்தையோ டயர்தல்)
நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின்றதுவே.		410

@5.  2. திருமுகக் குறிப்பு
** (1). திருநெறி வேட்கை

#1
வான் ஏர் அமரர் வருந்திக் கடைந்த மருந்து உவந்து 
தானே ஒரு சிறு நாய்க்குக் கிடைத்த தகவு என எம் 
மான் நேர் துறைசை நல் தாண்டவராயமணி எனது 
பால் நேர் கிடைத்தும் பயன் கொள்கிலேன் வெறும் பாவியனே.

#2
வருந்துக் கனவினும் சோறு_அறியானை மணத்தி ... 
விருந்துக்கு அழைப்பது போலே நின் பொன்_பத ... 
மருந்துக்கு மெய் சொல வாராத என்றனை ... 
தரும் துக்க ஊழ் விட_மாட்டாது தாண்டவ ...

#3
மின் நேர் சடை முடித் தாண்டவராய வியன் தவ நின்று
அல் நேர் அடைதற்கு எளிதாக நான் பெற்றுந் தாழ்த்துகின்றேன் 
பொன்னே கொடுத்தும் எனும் நாலடியின் பொருட்கு இலக்காய் 
என்னே இருந்து உழல் என் ஏழை வன் மதி என் மதியே.

#4
வாய் மட்டுமோ மனம் மட்டோ என் ஆர்_உயிர்
போய் மட்டு உறு-மின் சுவைமயம் ஆக்கும் நின் பொன்_மலர்
ஆய் மட்டு அமுதம் செவிக்கு ஏற முன் முயலாமை
நாய் மட்டுமோ தந்தை_தாய் மட்டுமாம் சைவ

#5
** (2). உலகியல்
சோடு இல்லை மேல் வெள்ளைச் சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேகப் பருமன் இல்லை
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே

#6
** (3) அன்புநெறி
படிப்பது நன்று எனத் தெரிந்த பாங்கு_உடையாய் மன்றுள் வெளிப் பரமன் அன்பே 
தடிப்பது நன்று எனத் தேர்ந்த சதுர்_உடையாய் அறம் நவின்ற தவத்தாய் வீணில் 
துடிப்பது_இலாத் தூய மனச் சுந்தரப் பேர்_உடையாய் என் தோழ கேள் நீ 
அடிப்பதும் அச் சிறுவர்களை அடிப்பதும் நன்று_அல என் மேல் ஆணைஆணை

#7
** (4) இறைவன்
திரு ஓங்கு பொன்_சபையும் சிற்சபையும் நம் பெருமான் செய்யாநின்ற 
உரு ஓங்கும் ஆனந்தத் தாண்டவமும் கண்டு இனிது ஆங்கு உறைக யானும் 
தரு ஓங்கு தில்லை நகர்க்கு ஓரிரு பானாள் வரைக்கு உட்சார்கின்றேன் நம் 
இருவோங்கள் குறையும் இறைக்கு உரைத்து அகற்றிக்கொளலாம் நீ இளையேல் ஐயா

#8
** (5) தீவிர நட்பு
பண்பு அனேகமும் திரண்டு உருவாகி எம் பாக்கியம் போல் வந்த 
நண்பனே நினைப் பிரிந்த நாள் முதல் இந்த நாள் வரை உணவு எல்லாம் 
புண் பல் நேர்ந்த போது உண்டவாம் கண்டு நின் புல்லி நின்னுடன் இங்கே 
உண்பனேல் அஃது உணவு என மதிப்பன் ஈது உண்மை என்று உணர்வாயே.

#9
** (6). பரிவு
திரு வளரும் திறத்தாய் என் கண்_அனையாய் நீ அனுப்பச் சிறியேன்-தன்பால் 
வரு கடிதம்-தனை எதிர்கொண்டு இரு கை விரித்து அன்பினொடு வாங்கிநின்றேன் 
உரு வளரும் மணி முடியாய்ச் சூட்டினேன் கண்களிலே ஒற்றிக்கொண்டேன் 
பொருவு அரும் ஓர் முத்தமிட்டேன் பூசித்தேன் வாசித்தேன் புளகுற்றேனே.

#10
** (7) அருமருந்து
இறை_அருள் நிரம்ப இருத்தலான் மகிழ்ந்து 
பிறை என வளரும் நம் பிள்ளை மணிக்கு 
ஊருவில் கட்டி உடனே உடையும் 
அது குறித்து ஐய நீ அஞ்சலை அஞ்சலை 
இது குறித்து அருள் நீறு இதற்குள் அடக்கம்		5
செய்து வைத்தனன் அத் திரு_நீறு எடுத்து 
எய்து முப்போதும் இடுக மற்று அதன் மேல் 
கொவ்வைச் சாறும் கோள் வெடியுப்பும் 
கவ்வக் கலந்து காய்ச்சிப் பூசுக 
பூசுக உடைந்த பின் பூரம் பூசுக			10 
பாசுறு முருங்கைப்பட்டைச் சாற்றினில்

#11
** (8).அருள்நிலை விளக்கம்
மெய் விளக்கே விளக்கு அல்லால் வேறு விளக்கு இல்லை என்றார் மேலோர் நானும்
பொய் விளக்கே விளக்கு என உள் பொங்கி வழிகின்றேன் ஓர் புதுமை அன்றே
செய் விளக்கும் புகழ்  உடைய சென்ன நகர் நண்பர்களே செப்பக் கேளீர்
நெய் விளக்கே போன்று ஒரு தண்ணீர் விளக்கும் எரிந்தது சந்நிதியின் முன்னே

#12
** (9) கனிவு
திரு_மயிலாபுரி ஈசன் திரு_அருளால் வேல் எனும் பேர் சிறக்க வாழ்வோய் 
ஒருமை_இலா மற்றவர் போல் எமை நினைத்தல் வேண்டாம் எம் உள்ளம் நின்றன் 
கருமை_இலாக் கருணை முகம் காண்பதற்கு விழைந்து அங்கே கலந்தது இங்கே 
அருமை_இலாப் பெருமையிலே இருக்கின்றேம் இது கடவுள் ஆணை என்றே.
*