திருவருட்பா – தனிப் பாசுரப் பகுதி


@1.குடும்ப கோஷம் - காப்பு

#1
பூ_உலகும் பொன்_உலகும் புகழ் தவத்தில் பெரியர் உளம் புனிதமான
தே_உலகு என்று அமர்ந்து அருளும் சிவ களிற்றை ஐந்து_கர_தெய்வம்-தன்னை
மூவுலகும் துதி ஆறு முகத்து அமுதை எம் குருவை முக்கண் கோவை
நா_உலகு நயப்பு எய்த வழுத்தி எமது உறு வினையின் நவைகள் தீர்ப்பாம்.

#2
ஆனை_முகத்தனை ஆறு_முகத்தனை ஐ_முகத்தனைப் பாலவளைப் பூதச்
சேனை முகத் தலைவனைச் சண்டேசுரனைக் கவுணிய கோத்திர நம் கோவைச்
சோனை முகத்து அருள் திரு_தாண்டகம் புனைந்த அப்பனை வன் தொண்டத் தேவை
வானை_முகத்தவர் வழுத்தும் வாதவூர் அடிகளை யாம் வணங்கி வாழ்வாம்.

#3
தெறுங்கை ஆனனம் உரித்த சிவனே இக் குடும்பத்தின் செய்கை சொல்லப்
பெறும் கையாம் வகை ஒன்றும் தெரியாமே சொலப் புகுந்த பேதையேனைக்
குறுங்கையால் மலை அணைத்துக்கொள நினைத்தோன் என்கேனோ கொளும் தூசு இன்றி
வெறுங்கையால் முழம்போடும் வேலையிலா வீணன் என விளம்புகேனோ.

#4
சீர் பாட்டில் சிறந்த சிவ குருவே இக் குடும்பத்தின் திறம் பாடற்கே
ஓர் பாட்டிற்கு ஒரு கோடிப் பசும்பொன் வரும் ஆனாலும் உன் பேர் அன்றிப்
பார் பாட்டில் சிறுதெய்வப் பேர்களை முன்னிலை வைத்துப் பாடேன் இந்த
நேர்பாட்டில் பிழை குறியேல் அருள் செவிக்கு ஏற்பித்தல் அருள் நீர்மை அன்றோ.
** அவையடக்கம்

#5
மாநிலம் மீது இ நூல் முறை செய்தது மனை மேவும்
நான் எனில் நானே நாணம்_இலேனை நகுகின்றேன்
ஈனம்_இல் புலவீர் என் உள் அமர்ந்து அருள் இறை எம்மான்
தான் எனில் அடியேன் அவை சொல் அடக்கம் சதுர் அன்றே

@2. 1.குருதரிசனப் படலம்

#1
நீர் வளம் நில வளம் நிறைந்த பொற்பு அது
கார் வளர் பொழில் புடை கவின்ற காட்சிய
தேர் வளர் நலன் எலாம் என்றும் உள்ளது
சீர் வளர் தலங்களுள் திலகம் என்பது.

#2
திரு வளர் புயத்தனும் திசைமுகத்தனும்
தரு வளர் மகத்தனும் சார்ந்து நாள்-தொறும்
மரு வளர் மலர் கொடு வழிபட்டு எண்ணிய
உரு வளர் சிறப்பு எலாம் உற்ற மாண்பு அது.

#3
அற்றம்_இல் சண்பையர் ஆதி மூவரும்
சொல் தமிழ்ப் பதிகங்கள்-தோறும் சேர்வது
நல் தவர் புகழ்வது நாயினேனுக்கும்
கற்றவர் உறவினைக் காட்டி நின்றது.

#4
தவ நெறி தழைத்து மெய்ச் சாந்தம் பூத்து வன்
பவ நெறி காய்த்து அருள் பழம் பழுத்திடும்
நவ நெறி தரும் பர நவிற்றும் சைவமாம்
சிவ நெறி தரும் தருச் சிறந்த சீர் அது.

#5
சோலையும் தடங்களும் துரிசு_இலா அறச்
சாலையும் மடங்களும் சத்திரங்களும்
பாலையும் பழத்தையும் பருகல் ஒத்த சொல்_
மாலையும் தொடுப்பவர் வாழ்வும் உள்ளது.

#6
அந்தணர் அறு_தொழில் ஆற்றும் சால்பு அது
மந்தணம் மறை முடி வழுத்தும் மாண்பு அது
சுந்தர நீற்றணி துலங்கும் அன்பர்கள்
வந்து வந்தனைசெய்து வசிக்கும் பேறு அது.

#7
பூ எலாம் புது மணம் பொலியும் ஒண் தளிர்க்
கா எலாம் சிவ மணம் கமழுகின்றது
தே எலாம் செறிவது சிவம் கனிந்த மெய்
நா எலாம் புகழ்வது நன்மை சான்றது.

#8
சாலியும் போலிய தழை கொள் கன்னலின்
வேலியும் முக்கனி விளைவும் தாழைகள்
கோலிய பொங்கரும் குறைவு இலாதது
பாலியின் வடகரைப் படியின் மேலது.

#9
எண் திசை புகழ நின்று இலங்குகின்றது
அண்டர்கள் முடிவினும் அழிவு_இலாதது
தொண்ட மண்டல வடல் தூய கீழ்த் திசை
கண்டல் சூழ் கடற்கரை காண உள்ளது.

#10
திரு_மகள் கலை_மகள் சிறந்த ஞானமாம்
குருமகள் மூவரும் கூடி வாழ்வது
தெருமரல் அகற்றும் எம் சிவபிரான் மலை
ஒரு மகள் உடன் உறை ஒற்றி மாண் பதி.

#11
அப் பெரும் பதியிடை அயன் முன் ஆகிய
முப்பெரும் தலைவரும் முடி வணங்கிட
ஒப்ப அரும் சிவபிரான் உருவு கொண்டு அருள்
செப்ப அரும் கோயிலைச் சேர்ந்த சூழலில்.

#12
கிள்ளைகள் ஆகமம் கிளக்கக் கேட்டதற்கு
உள்ளுணர் பூவைகள் உரை விரித்திடத்
தெள்ளிய மயில் இனம் தேர்ந்து உள் ஆனந்தம்
கொள்ளைகொண்டு அயல் நடம் குயிற்ற உள்ளது.

#13
சைவ யாகங்களும் சாற்றும் மற்றைய
தெய்வ யாகங்களும் செய்ய ஓங்கிய
மை விடாப் புகையொடு மழையும் கூடினும்
மெய் விடார் உளம் என விளங்குகின்றது.

#14
கண்டவர் உளம் எலாம் கட்டுகின்றது
தண் தமிழ்க் கவிதை போல் சாந்தம் மிக்கது
விண்டு அயன் பதம் முதல் விரும்பத்தக்கது
எண் தரும் தவம் அரசு இருக்கும் சீர் அது.

#15
வந்தியார் அமுதையும் வாங்கி உண்டு அருள்
அந்தியார் வண்ணர்-தம் அருளில் நின்றது
நந்தி ஆச்சிரமமாம் நாமம் பெற்றது
நிந்தியா நெறியதோர் நிலை உண்டாயிடை.

#16
வேதமும் ஆகம விரிவும் மற்றை நூல்
போதமும் மன்னுறப் போதிப்போர்களும்
வாதமும் விதண்டமும் மருவுறா வகைப்
பேதமும் அபேதமும் பேசுவோர்களும்.

#17
பவம் எலாம் தவிர்த்து அருள் பதம் அளிப்பது
தவம் அலாது இலை எனச் சார்ந்துளோர்களும்
அவம் எலாம் அகன்ற பின் அனுபவிப்பது
சிவம் அலாது இலை எனச் சேர்ந்துளோர்களும்

#18
ஞான யோகத்தினை நண்ணினோர்களும்
மோனமே பொருள் என முன்னினோர்களும்
வானமே பெறினும் இ மாய வாழ்க்கையில்
ஊனமே இருத்தல் என்று உவட்டினோர்களும்.

#19
மறந்திலர் உலகர் இ வஞ்ச வாழ்க்கையைத்
துறந்திலர் என் எனச் சொல்கின்றோர்களும்
இறந்திலர் பிறந்திலர் இன்பம் எய்தினர்
வறந்திலர் தவர் என வகுக்கின்றோர்களும்.

#20
தென்சொலும் வடசொலும் தெரிந்துளோர்களும்
இன் சொலும் வாய்மையும் இசைக்கின்றோர்களும்
வன் சொலும் மடமையும் மறமும் வஞ்சமும்
புன் சொலும் உடையர்-பால் பொருந்துறார்களும்.

#21
கரு நெறித் தமிழ் எலாம் கையகன்று மெய்த்
திரு_நெறித் தமிழ் மறை தேர்ந்துளோர்களும்
அரு நெறித் தனி எழுத்து ஐந்தின் உட்பொருள்
குரு நெறித் தகவுறக் குறிக்கின்றோர்களும்.

#22
இரவொடு பகல் இலாது இருக்கின்றோர்களும்
வரவொடு போக்கு_இலா வழி நின்றோர்களும்
கரவொடு மாயையைக் கடிந்த சீலரும்
உரவொடு மெய்ந்நிலை ஓங்குவோர்களும்

#23
பொறி வழி மனம் செலாப் புனித சித்தரும்
அறி வழி அ வழி அகன்றுளோர்களும்
செறி வழி யா வகைச் சிறந்த முத்தரும்
குறி வழி திறம்புறாக் கொள்கையோர்களும்.

#24
மால் வகை முழுவதும் நீக்கி மன் அருள்
நூல் வகை ஞானத்தின் நுவலுகின்றதோர்
நால் வகை நிலைகளின் நண்ணுவோர்களும்
ஏல் வகை இணை_அடி ஏத்திச் சூழ்ந்திட.

#25
தெள்ளிய அமுத வெண் திங்களோ நறை
துள்ளிய நறு மணம் சூழ்ந்து அலர்ந்திடும்
ஒள்ளிய கமலமோ என்ன ஓங்கிய
வள்ளிய திரு_முக மண்டலத்திலே.

#26
கடை வரை நிறைபெறும் கருணை வெள்ளம் மேல்
மடை திறந்து ஒழுகி வான் வழிந்து பார் எலாம்
தடைபடாத் தண் அளி ததும்பி ஆனந்தக்
கொடை தரும் விழி மலர் குலவி வாழ்ந்திட.

#27
சிறை தெறும் சிவ சிவ சிவ என்று அன்பொடு
மறைமொழி சிறக்கும் வாய் மலரும் விண்ணக
நிறை அமுது ஒழுகி வெண் நிலவு அலர்ந்து அருள்
இறை பெறும் புன்னகை எழிலும் ஓங்கிட.

#28
வேத புத்தகம் திகழ் மென் கையும் திருப்
பாத_பங்கயங்களும் பரவும் நீற்று ஒளி
போத உத்தூளனம் பொலிந்த மேனியும்
ஓது கல் மரங்களும் உருகத் தோன்றிட.

#29
அரும் சிவ ஞானமும் அமல இன்பமும்
திருந்த ஓர் உருக்கொடு சேர்ந்தது என்னவே
தரும் சிவ குரு எனும் தக்க தேசிகன்
இருந்தனன் இருந்தவாறு இருந்த நாளினே.

#30
ஒரு நாளில் ஒரு மகன் ஓர் பதினாறு ஆண்டு அகவை நலம்_உடையான் ஒற்றித்
திரு_நாளில் எம் பெருமான் தியாகேசன் திரு_பவனிச் சேவைசெய்து
மருநாள் அ மலர்த் தடம் சூழ்ந்து எழில் பெறும் அ ஆச்சிரம வனத்துள் போந்து
கருநாளின் கரிசு அறுக்கும் குருநாதன் இருக்கை எதிர் கண்டான்-மன்னோ.

#31
கண்டவன் அக் குருநாதன் கடைக்கணிக்கப்பெற்றதனால் கடத்தில் சற்றே
திண் தகு தேறு இடச் சிறிது தெளி நீர் போல் தெளிந்து அறிவு சிறிது தோன்றத்
தண்டம் எனக் கீழ் விழுந்து வணங்கி எதிர் நின்று கரம் தலை மேல் கூப்பிப்
பண்டுறும் அன்பொடு விழிகள் நீர் சொரிய வியந்து துதிபண்ணுவானால்.

#32
கருணை நெடும் கடல் என்கோ கல்_ஆலின் அடி அமர்ந்த கடவுள் என்கோ
அருணகிரிக்கு அருள்புரிந்த ஆறுமுகக் குரு என்கோ அமுதம் என்கோ
மருள் நலிய வரும் பிறவி மருந்து என்கோ அடியேன் கண்மணி என்கோ மெய்த்
தெருள் நிறைந்த சிவகுருவே நின்-தனை ஈண்டு எவ்வாறு சிந்திக்கேனே

#33
என்றானைக் கருணையொடும் சிவகுரு அங்கு எதிர்நோக்கி இளையோய் உன்றன்
நன்றான சரிதம் எது நவிலுதி என்று உரைத்து அருள ஞான யோகம்
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும்
பொன்றாத நிலை அருள்வோய் கேட்டு அருள்க என வணங்கிப் புகல்வான்-மாதோ

#34
கற்றவர் சூழ் இத் தலத்துக்கு ஐங்கடிகை எல்லை-தனில் கவின் சேர் சென்னை
உற்று அடியேன் இருக்கும் ஊர் சூத்திரர்-தம் குலத்து ஆசை உடையான் என்னைப்
பெற்றவன் பேர் வினைச்சி எனைப் பெற்றவள் பேர் எனக்கு முன்னே பிறந்தார் மற்றும்
சுற்றம் மிக உடையேன் சஞ்சலன் எனும் பேர் என் பெயராச் சொல்வராலோ.

#35
குடி_பேறில் தாய் முலை_பால் ஏழு ஆண்டு மட்டு மிகக் குடித்து நாக்குத்
தடிப்பேறிற்று ஆதலினால் படிப்பு ஏறிற்றிலை அடியேன்-தனக்குக் கல்விப்
பிடிப்பு ஏறிச் சிறியேன் முன் பிறந்தவர்-தம் பெயர் எழுதப் பெரிதும் கற்ற
நடிப்பு ஏறினார் அவர் முன் நொடிப்பு ஏற நின்றேன் இ நாயினேனே.

#36
தந்தை உணர்ந்து இவன் மிக நாத் தடிப்பேறினான் உடம்பும் தடித்தான் மற்றைப்
புந்தியிலும் கார் இருப்புப் பொருப்பு உலக்கைக் கொழுந்து ஆனான் போதம் சாரா
மந்தன் எனப் பயின்ற கலைச்சாலையின்-நின்று அகற்றி அவ்வை வாக்கு நாடிப்
பந்தம் அனைப் பண்டம் எலாம் கடை உழன்று சுமந்துவரப் பணித்தான் எந்தாய்

#37
அண்ணுறும் என் தந்தை_தாய்க்கு அடியனேன் கடைப்பிள்ளை ஆனது ஒன்றோ
கண்ணுறு நல் கல்வியினும் கடைப்பிள்ளை ஆனேன் பின் கருதும் வாழ்க்கை
நண்ணுறு பல் பண்டம் எலாம் கொள்வதினும் கடைப்பிள்ளை நானே ஆனேன்
உண்ணுறும் இ உடல் ஓம்பி ஒதியே போல் மிக வளர்ந்தேன் உணர்வு_இலேனே.

#38
பெரும் செல்வப் பெருக்கத்தில் பிறந்தேன் நான் பிள்ளையாப் பிறந்த நாள் தொட்டு
இரும் செல்வத்து இ நாள் மட்டு அயல் வேறு குறை சிறிதும் இல்லை எந்தாய்
அரும் செல்வம் எனும் கல்வி அறிவு இல்லாக் குறை ஒன்றே அடைந்திட்டேன் அ
அரும் செல்வத்து ஆசை உளேன் பேடி மணம் நாடி மனம் வருந்தல் போன்றே.

#39
இன்ன வகை உழல்கின்றேன் இத் தலத்தில் திரு_நாள் என்று இசைக்கக் கேட்டு இங்கு
என் அனைய சிறுவர்களோடு எய்தினேன் திரு_பவனி இனிது கண்டேன்
பின்னர் எனது உடனுற்றோர் பிரிந்தனர் நாய்_அடியேன் முன் பிறப்பில் செய்த
தன் அனைய தவப் பயனால் தேவே நின் திரு_சமுகம் தரிசித்தேனே.

#40
ஈது எனது சரிதம் ஒரு தெய்விகத்தால் களர் நிலத்தின் இடையே செந்நெல்
பேதம் அற முளைத்தது போல் தேவே நின் திரு_சமுகப் பெருமையாலே
மூதறிவு சிறிது என்னுள் முளைத்தது அது பயிராக முழுதும் கல்விக்
காதலுறு சிறியேனைக் காத்து அருள வேண்டும் எனக் கழறினானே.

#41
அன்னவன் சொல் மொழி கேட்டுச் சிவகுரு அங்கு இளநிலா அரும்ப உள்ளே
புன்னகைகொண்டு உன் அகத்தில் புரிந்தது நன்று ஆயினும் இப்போது நீ உன்
மன் நகருக்கு ஏகி அவண் தந்தை_தாய்க்கு உரைத்து அவர் சம்மதம் பெற்று ஈண்டு இத்
தொல் நகருக்கு எய்துதி என்று உரைத்து அருளச் சஞ்சலன் கை தொழுது சொல்வான்.

#42
வேர்ப்பு உலகு இன்பு உவப்புறும் என் தந்தை_தாய் சம்மதத்தை வேண்டி மீண்டே
ஆர்ப்பு உலவாச் சென்னை நகர் அடைந்தேனேல் பெரும் குகையில் அமர்ந்த செங்கண்
போர்ப் புலியைப் பார்த்துவரப் போன கதையாய் முடியும் பொருளாய் என்னைச்
சேர்ப்பு உடைய குருமணியே என் செய்கேன் அறிவு அறியாச் சிறியனேனே.

#43
கண் பார் என்று அயர்ந்து பணிந்து அழுது இரு கண் நீர் சொரியக் கலங்கினானை
நண்பு ஆர் மெய்க் குருநாதன் நோக்கி இவண் இருந்திட நீ நயப்பாய் அப்பா
பண்பார் இங்கு உறும் அவர்-தாம் பிச்சைச்சோறு உச்சியிலே பரிந்து வாங்கி
உண்பார் மற்று அ வகை நீ உண்ணுதியோ உண்ணுதியேல் உறைதி என்றான்.

#44
உச்சியிலே பிச்சையெடுத்து உண்பதுவோ பெரிது எளியேற்கு ஓவாது ஓடிக்
கச்சியிலே பிச்சைகொண்டு காசியிலே நீராடிக் கடிது போகிக்
கொச்சியிலே செபம் முடித்துக் கொங்கணத்திலே புசித்துக்கொள் என்றாலும்
மெச்சி உளே மிக மகிழ்ந்து செய்வேன் என்றனை ஐயா விட்டிடேலே.

#45
புல் அமுதே நல் அமுது புரைக் குடிலே புனை மாடம் புடைக்கும் பாறைக்
கல் அணையே மெல் அணை நாள் கழிந்த பழம் கந்தையே கலை என்றாலும்
அல்லலுறேன் அரசே நின் சொல்_அமுது உண்டு அரும் தவ மாடத்தே வைகி
ஒல்லும் மனோதிட அணை கொண்டு அருள் போர்வை போர்த்து நலம் உடுக்கின்-மாதோ.

#46
சைவ நீறு அணி விளங்கி நகை துளும்பி உபசாந்தம் ததும்பிப் பொங்கித்
தெய்வ நீடு அருள் கருணை நிறைந்து வழிந்து அழகு ஒழுகிச் செம்பொன் கஞ்சப்
பொய்கை வாய் மலர்ந்த செழும் போது அனைய நின் முகத்தின் பொலிவு நோக்கும்
செய்கையேன் உலகு உறு புன் சுகம் பொசித்தல் மிகை அன்றோ தேவ தேவே.

#47
எவ்வகை நின் திருவுளப் பாங்கு இருப்பது எளியேன் அளவில் எந்தாய் எந்தாய்
அவ்வகை நின்றிடச் சிறிதும் அஞ்சேன் என்றன்னை விடேல் ஆள்க என்றே
இவ்வகையில் பல பகர்ந்து விழுந்து இறைஞ்சி எழுந்திராது இரு கண் நீரால்
செவ்வகையில் குருநாதன் திரு_அடிக் கீழ் நிறை ஆறு செய்தான்-மன்னோ.

#48
தெருளுறும் அ ஆச்சிரமத்து இருந்து துறவறம் காக்கும் செல்வர் எல்லாம்
அருளுறு மெய்ச் சிவகுருவின் அடி வணங்கிச் சிறியோமை அடர்ந்த பாச
மருளுறுவன் கடல் கடத்தி வாழ்வித்த குண_கலமே மணியே இந்த
இருளுறும் ஓர் சிறுவனையும் காத்து அருள வேண்டும் என இரந்தார் ஐயன்.

#49
மற்று அவனை எழுக எனக் கருணைபுரிந்து அமல முகம் மலர்ந்து நோக்கிப்
புற்று அரவம் அரைக்கசைத்த ஒற்றி நகர்ப் பெருமானைப் போது மூன்றும்
நற்றகை அன்புடன் தரிசித்து அவன் கோயில் பணியாற்றி நாளும் நம்-பால்
கற்றவர்-தம் சொல்வழியில் கலை பயின்று நெறி நிற்கக் கடவாய் என்று.

#50
தனி மலர் வாய்_மலர்ந்து அருளிப் பின்னர் அவண் மாணாக்கர்-தம்மை நோக்கிப்
புனித நெறியீர் இவனைப் புதியன் எனக் கருதாமல் புரிந்து நாளும்
கனிவுற ஈண்டு இவன் அகத்தில் கல்லாமை எனும் இருளைக் கடியும் வண்ணம்
இனிய கலை விளக்கிடுவீர் என்றான் சஞ்சலன் அது கேட்டு இன்பம் எய்தா.

#51
அடியனேன் உய்ந்தனன் நின் அருள் நோக்கம் பெறற்கு ஏதுவாய தூய
நெடிய மா தவம் எது செய்திருந்தேன் என்று அகம் குளிர்ந்து நெஞ்சம் தேறி
முடியினால் பல் முறை தாழ்ந்து உடம்பு ஒடுக்கித் தூசு ஒடுக்கி முறையால் பேசும்
படியின் வாய்ப் பொத்தி எதிர் நின்றான் பின் குருநாதன் பணித்தவாறே.

#52
வேதம் முதல் கலை அனைத்தும் விதிப்படி கற்று உணர்ந்து அறிவால் மேலோர் ஆகிப்
போத மனச் செறிவு உடைய மாணாக்கர் சஞ்சலனைப் புரிந்து நோக்கி
மூதறிவன் தேசிகன்-தன் திரு_வாக்கின்படி இன்று முதல் ஓர் கன்னல்
போது கலை பயின்று மற்றைப் போது எலாம் சிவ பணியே புரிதி என்றார்.

#53
என்ற அருள் சிதம்பர மா முனிவர் அவன்றனை அருகே இருத்தி அன்பால்
ஒன்றிய வெண்_நீறு அணிந்து தூல எழுத்து ஐந்து உணர்த்தி உடையான் கோயில்
சென்று தொழும் நெறி அனைத்தும் விளக்கி அருள் சிவ பணியும் தேற்றி உள்ள
மன்ற அவன் பருவம் அறிந்து அதற்கு இயைந்த கலை பயிற்றி மகிழ்வித்தாரால்.

@3. 2.முயற்சிப் படலம்

#1
அவ்வண்ணம் சஞ்சலன்-தான் புரிந்து இயற்றும் முயற்சி எலாம் அளவிட்டு ஓதச்
செவ்வண்ணம் பழுத்த ஒற்றிச் சிவ_கொழுந்தின் திரு_அருளைச் சேர்ந்தோர்க்கு அன்றி
இவ்வண்ணம் எனப் பகர்தல் பிறர்க்கு அரிதே ஆயினும் அ இறைவன் தாளை
வெவ்வண்ணச் சிறியேன் உள் அமர்த்தி ஒருசிறிது அறிய விளம்புவேனால்.

#2
மேலையிலே படுத்திருந்த வெம் சுடரோன் குண-பாலின் விழித்துப் பூவோர்
வேலையிலே முயலுறக் கீழ் வேலையிலே எழுவதற்கு மேவும் ஆதி
காலையிலே எழுந்து ஏகிக் கங்கையிலே மிக்கது எனக் கருதி மேலோர்
ஓலையிலே பொறித்த நந்தி ஓடையிலே தெய்வ நல் நீர் ஓடி ஆடி.

#3
வெண்ணிலவு ததும்பு திரு வெண்_நீறு ஐந்தெழுத்து ஓதி மிகவும் பூசி
உள் நிலவு சிவகுருவின் அடித் துணையும் திருவொற்றி உவந்து மேவும்
கள் நிலவு நுதல் கரும்பின் கழல் பதமும் அன்பினொடு கருதிச் சென்றே
எண் நிலவு குருபரன்-தன் திருமுன் அடைந்து அஞ்சலிசெய்து இறைஞ்சி-மன்னோ.

#4
முன்_அறியான் பின்_அறியான் முழு மூடன் என்று என்னை முனியாது ஆண்ட
நின் அருளை என் என யான் நிகழ்த்துறுவேன் பெரும் கருணை நிறைவே தூய
நல் நெறியே நடக்க அருள் போதம் எனும் செங்கோலை நடத்தாநின்ற
மன்னவனே சிவகுருவாம் வள்ளலே நின் துணைப் பொன் மலர்_தாள் போற்றி.

#5
அரும் தவரும் உணவின் இயல் எது என்றால் இது எனவும் அறிய நீ நின்று
இருந்த திசை எது என்றால் இது எனச் சுட்டவும் தெரியாது இருந்த என்னைத்
திருந்த அருள் கடை நோக்கம் செய்து அளித்த பெரும் கருணைச் செல்வமே நல்
மருந்து அமுதம் அனைய அருள் சிவகுருவே போற்றி என வழுத்திப் பின்னர்.

#6
ஆங்கு விடைகொண்டு குரு அருள் நோக்கால் சிவயோகம் ஆதி நண்ணி
ஓங்கு திரு_கூட்டத்தைத் தனித்தனி நின்று இறைஞ்சி எனை உவக்கும் வண்ணம்
தீங்கு அகற்றும் சிவகுருவின் திருவுளத்தை நாயேன் மேல் திருப்பி இன்பம்
வாங்கி எனக்கு அளித்த அருள் மா தவரே நும்முடைய மலர்_தாள் போற்றி.

#7
குரு எல்லை கடவாத குண_குன்றம் அனையீரே கோது_இல் வாய்மை
மரு எல்லை நெறி நின்ற மனத்தீரே போற்றி என வழுத்திப் பின்னர்ப்
பொரு எல்லை அகன்று ஓங்கும் அன்பினொடும் அவண் நின்று போந்து அ ஒற்றித்
திரு_எல்லை-தனை மகிழ்வில் கரு எல்லை கடக்க வலம்செய்து-மாதோ.

#8
தொழும் தகைய முனிவரரும் சுரரும் மிகத் தொழுது ஏத்தத் துலங்கும் திங்கள்
கொழுந்து அசையச் சடை அசையக் கூத்தாடிக்கொண்டே எம் கோமான் நாளும்
எழுந்தருளும் பெரும் செல்வத் திரு_மாட வீதி-தனை இறைஞ்சி ஏத்தி
அழுந்திய சற்பத்தியுடன் மூன்று முறை வலம்செய்து அங்கு அதற்குப் பின்னர்.

#9
உளம் தெளிந்து விளங்குகின்ற உத்தமர் செய் தவமே போல் ஓங்கி வானம்
அளந்த திரு_கோபுரம் கண்டு அஞ்சலிசெய்து இறைஞ்சி முகில் ஆதி சூடி
இளம் கதிர் வெண் திங்கள் அணி எம்பெருமான் சடை முடி மேல் இலங்கும் தூய
வளம் கெழும் ஓர் திரு_மதிலை ஐந்து முறை வலமாக வந்து-மாதோ.

#10
உட்புகுந்து திரு_வாயல் இடை ஓங்கும் விடைக் கொடியை உவந்து நோக்கிக்
கள் புனலில் குளித்து இரண்டு கை குளிரத் தொழுது இறைஞ்சிக் கருணைசெய்யும்
ஒட்பு உடைய நம் பெருமான் மாளிகையை வலம் ஏழின் உவந்து செய்து
நட்பு உடைய மனம் கசிய ஐந்தெழுத்துள் நினைந்து மெல்ல நடந்து-மாதோ.

#11
அம்பு ஒடித்துப் பகை துரக்கும் கயமுகனைக் கருணையினால் ஆளும் வண்ணம்
கொம்பு ஒடித்து வீசி அவன் கோள் ஒடித்துக் கோல் ஒடித்துக் கோது_இல் விண்ணோர்
வம்பு ஒடித்து வாழ்வித்த ஆனைமுக_பெருமானை வணங்கித் தன் தே
கம் பொடித்துக் கைகுவித்துக் கருத்து உருகிக் கண்களில் நீர் காண நின்றே.

#12
தடை உடைக்கும் தனி முதலே தண் அமுதே எங்கள் பெருந்தகையே ஓங்கி
மடை உடைக்கும் பெரும் கருணை மத_மலையே ஆனந்த_மலையே உள்ளத்து
இடை உடைக்கும் துயர் நீக்கி இன்பு அளிக்கும் ஐந்து கரத்து இறையே மாயைக்
கடை உடைக்கும் கழல் புனை தாள் கணபதியே போற்றி எனக் கனிந்து-மன்னோ.

#13
திறம் பழுத்த அருணந்திதேவர் அடி வணங்கி அருள் சிவத்தின் செய்ய
நிறம் பழுத்த மலர்_அடியை மால் முதலோர் அழுக்காறு நிரம்ப மேற்கொண்டு
அறம் பழுத்த விடை உருவத்து அண்ணலே எனப் பரவி அனுக்ஞை பெற்று
மறம் பழுத்தார்க்கு அரிய திரு_விமானத்தை அனந்த முறை வலம்செய்து ஏத்தி.

#14
வன் நிதியை மருவாத மா தவரும் மால் அயனும் வணங்கிப் போற்றும்
சந்நிதியைச் சார்ந்து விழி ஆனந்த நீர் வெள்ளம் ததும்பப் பல் கால்
நல் நிதி பெற்றிடப் பணிந்து கரம் குவித்துப் படம்பக்கநாதன் என்னும்
செம் நிதியில் பரஞ்சுடரைப் பொன் நிதி கண்டவன் போல் கண் செழிக்கக் கண்டு.

#15
உடல் முழுதும் புளகம் எழ உளம் முழுதும் உருக்கம் எழ உவந்து ஆனந்தக்
கடல் முழுதும் கண்கள் எழக் கர சரணம் கம்பம் எழக் கருத்தினோடு
மடல் முழுதும் எழ மலர்ந்த மலரின் முகம் மகிழ்ச்சி எழ மலிந்த பாசத்
திடல் முழுதும் அகன்று அன்பே வடிவாக நின்று துதிசெய்வான்-மாதோ.

#16
உடையானே எவ்வுயிர்க்கும் ஒரு முதலே இளம்பிறை கொண்டு ஓங்கும் கங்கைச்
சடையானே அன்பர் உளத் தாமரையில் அமர்ந்த பெருந்தகையே வெள்ளை
விடையானே மறை முடிபின் விளங்கிய மெய்ப்பொருளே மெய் விளங்கார்-தம்மை
அடையானே திருவொற்றி ஆலயத்து எம் அரசே நின் அடிகள் போற்றி.

#17
கலை_மகளும் திரு_மகளும் கழுத்து அணிந்த மங்கலநாண் கழற்றா வண்ணம்
அலை கடலின் எழு விடத்தை அடக்கி அருள் மணி மிடற்று அம் அமுதே தெய்வ
மலை_மகளை ஒரு புறம் வைத்து அலை_மகளை முடியிட்ட மணியே மேருச்
சிலை வளைத்துப் புரம் எரித்த சிறு_நகை எம் பெருமான் நின் திரு_தாள் போற்றி.

#18
மறை தேட அயன் தேட மால் தேட அன்பர் உள மலரின் உள்ளே
இறையேனும் பிரியாமல் இருந்து அருளும் பெரு வாழ்வே இறையே என்றும்
குறையாத குளிர் மதியே கோவாத ஒளி மணியே குணப் பொன்_குன்றே
பொறையாளர் வழுத்தும் ஒற்றிப் பூங்கோயில் பெருமானே போற்றி போற்றி.

#19
எனப் பெரிதும் துதித்து இறைஞ்சி ஆடுகின்ற பெருமான் முன் எய்தித் தூக்கும்
வனப்பு உடைய மலர்_பதமும் மாயை-தனை மிதித்து ஊன்றும் மலர்ப் பொன்_தாளும்
மனப் பருவ மலர் மலரக் கண் குளிரக் கண்டு மிக வணங்கிப் பல் கால்
இனப் பெரியார்க்கு இன்பு அருளும் கூத்து உடைய மா மணியே இன்ப வாழ்வே.

#20
காரண முக்கண் கொளும் செங்கரும்பே செங்கனியே என் கண்ணே மேலை
ஆரணத்துள் பொருள் ஆகி அனைத்துமாய் யாதொன்றும் அல்லாது ஆகிப்
பூரண சின்மய வெளியில் சச்சிதாநந்த நடம்புரியும் தேவே
ஏரணவு நடராயப் பெருமானே எம்மானே என்று வாழ்த்தி.

#21
சடை ஆடச் சடை மீதில் சலமகளும் இளமதியும் ததும்பக் கொன்றைத்
தொடை ஆடக் கருணை விழிக் கடை துளும்பப் புன்னகை உள் துலங்க வெள்ளைக்
கொடை ஆட இமய மட_கொடி ஆடத் தனி நெடு வேல் குழந்தை மேவி
இடை ஆடப் பவனிவரும் எம் பெருமான் தியாகன் எதிர் இறைஞ்சி நின்று.

#22
இருந்தே என் உளத்து இலங்கும் செழும் சுடரே ஓவாத இன்பமேயா
வருந்து ஏறா நிலை நின்ற வான் பொருளே பவ_பிணியை மாற்றும் தெய்வ
மருந்தே என் கண்ணே கண்மணியே செம்மணியே என் வாழ்வே எங்கள்
பெரும் தேவே தரும் தியாக_பெருமானே கடவுளர்-தம் பிரானே போற்றி.

#23
என்று துதித்து அருள் வடிவில் கல்_ஆலின் அடி அமர்ந்த இறைவன் முன் நின்று
ஒன்றும் மனத்து அன்புடன் கீழ் விழுந்து பணிந்து எழுந்து இரு கை உச்சி கூப்பி
நன்று உணர்ந்த நால்வருக்கு அன்று அருள் மொழிந்த குரு மணியே நாயினேனை
இன்று மகிழ்ந்து ஆட்கொண்ட சிவகுருவே சற்குருவே என்று வாழ்த்தி.

#24
மயில் ஏறும் பெருமான் முன் இறைஞ்சி மலர்க் கரம் கூப்பி வணங்கி நின்றே
அயில் ஏறும் கதிர் வேல் கை ஐயா என் அப்பா என் அரசே அன்பர்
கையில் ஏறும் கனியே முக்கண் ஏறு பெற்ற இளங்காளாய் நீலக்
குயில் ஏறு மொழிக் கடவுள் குஞ்சரம் தோய் களிறே என் குருவே போற்றி.

#25
ஓடுகின்ற சிறுவர்களோடு உடன் கூடி விளையாட்டே உவந்து நாளும்
ஆடுகின்ற பருவத்தே அடியேன் உள் அமர்ந்து அருளி அன்பால் நின்னை
நாடுகின்ற வகை சிறிதே அளித்து ஈண்டு குரு ஆகி நலம் தந்து உள்கிப்
பாடுகின்ற வகை அளித்த பர குருவே போற்றி எனப் பரவி-மன்னோ

#26
பல் முறை நாத் தழும்பேறத் துதித்து நெடும் கடல் முழுதும் பருகிக் கந்நாள்
நல் முறை செய் மணக்கோலம் காட்டி அருள் பெருமான் முன் நண்ணி நின்று
தொன் முறை மாறாமல் அருள் சுந்தரி சேர் கல்யாண சுந்தரர் முன்
சொல் முறை சேர் சுந்தரன்-தன் தோழா என்று அகம் குளிர்ந்து துதித்து வாழ்த்தி.

#27
மான்_மகனை நான்முகனா வைத்தவன்-தன் சிரம் நகத்தால் வகிர்ந்து வாங்கித்
தேன் மலர்ப் பொன் கரத்து ஏந்தும் காபாலி முன் பணிந்து திருமால் வேதன்
வான்_மகன் ஆதியர்-தம்மை வருத்திய அந்தகன் செருக்கு மாளச் சூலத்து
ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி.

#28
நிலையாய் நின்று உயர்ந்தவர்கட்கு அருள்புரியும் பரம்பரையை நிமலை-தன்னைத்
தலையால் மெய்யுற வணங்கி உலகம் எலாம் அளித்த பெரும் தாயே மேருச்
சிலையான்-தன் இடத்து அமர்ந்த தெள் அமுதே ஆனந்தத் தேனே மானே
மலையான்-தன் ஒரு மகளே வடிவு உடைய இளங்குயிலே மயிலே போற்றி.

#29
வான் வளர்த்த மலர்_கொடியே மலை வளர்த்த மடப் பிடியே மணியே வாசக்
கான் வளர்த்த மலர்க் கோதைக் கனியே முக்கனியே பைங்கரும்பே செங்கை
மான் வளர்த்துச் சடையில் இளமதி வளர்த்த ஒரு கிழவன் மகிழ வாய்த்த
தேன் வளர்த்த மொழிக் குமரி கௌரி என மறை புகழ் மா தேவி போற்றி.

#30
போற்றி எனப் புகழ்ந்து சண்பைப் புனித மறைக் குல_மணியைப் போந்து போற்றி
நால் திசையும் புகழ்கின்ற நாவரசைப் பணிந்து சிவஞானம் தேறித்
தோற்றிய ஓர் சங்கிலியால் துடக்குண்ட யானை-தனைத் தொழுது மாயை
மாற்றிய நம் மாணிக்கவாசகப் பொன் மலை அடியை வணங்கி-மாதோ.

#31
தொண்டு நிலை சேர்ந்து உயர்ந்த சண்டேசர் முதலோரைத் தொழுது போற்றி
விண்டு முதல் நெருங்கு திரு_வாயலிடை அன்பினொடு மேவி ஆங்குத்
தண்டு விழுந்து என விழுந்து பணிந்துபணிந்து இரு விழியில் தரள மாலை
கொண்டு நடம் கொண்டு நெறி கொண்டு மகிழ் கொண்டு மனம் குளிர்ந்தான் பின்னர்.

#32
கரு அலகிட்டு அருள்புரியும் கண்_உடையான் விமானத்தின் கனகச் சூழல்
மரு அலகின் மணித் திரள் மாளிகை மண்டபங்கள் முதல் வகுத்த எல்லாம்
திரு அலகிட்டு அணி சாந்தத் திரு மெழுக்கிட்டு அன்பினொடும் திரு_வாயற்கண்
ஒரு அலகில் திரணமொடு புல் ஆதிகளைக் களைந்து ஆங்கு வந்து-மாதோ.

#33
புறத்து அணுகித் திரு_மதிலின் புறத்தினும் நல் திரு_குளத்தின் புறத்தும் ஞானத்
திறத்தர் மகிழ்ந்து ஏத்துகின்ற திரு_மாடவீதியினும் தெரிந்து காலின்
உறத்தரு முள் கல்லொடு புல் ஆதிகளை நீக்கி நலமுறுத்திப் பாசம்
அறத் தொழும் நல் அறத்து ஒழுகும் சிவனடியர்க்கு ஏவல் பல அன்பால் செய்து.

#34
கரு முடிக்கும் களம்_உடையான் கண்_உடையான் எம்முடைய கருத்தன் செய்ய
திரு முடிக்கும் செங்கமலத் திரு_அடிக்கும் புனைந்திடுவான் சிறப்ப வைத்த
மரு முடிக்கு மலர் நந்தவனத்தினை உள் அன்புடனே வணங்கித் தூ நீர்
உரு முடி-கண் சுமந்து கொணர்ந்து உள் குளிர விடுத்துவிடுத்து ஊட்டி-மாதோ

#35
தேம் கமழ் பொன் கொன்றை நறும் பாடலம் மாலதி வகுளம் சிறந்த சாதிக்
கோங்கு வழை மயிலை நறு மல்லிகை ஒண் தளவ மலர்க் குரவம் தும்பைப்
பாங்கு அறுகு கூவிளம் நல் பத்திரம் ஆதிய மிகு சற்பத்தி உள்ளத்து
ஓங்குற மெய்ப் புனிதமொடும் உவந்து பறித்து ஐந்தெழுத்தும் உன்னி ஆங்கே.

#36
பொன் மாலை அனைய கொன்றைப் பூ_மாலை முதல் பிணையல் புனித மாலை
என் மாலை அகற்று_உடையான் திரு_முடிக்குச் சாத்து திரு இண்டை மாலை
கல் மாலை நெஞ்சம் உறான் கழல் மாலை தோள் மாலை கன்னி மாலை
மன் மாலை தார் மாலை வகை மாலை தொடுத்து எடுத்து வந்து-மாதோ.

#37
மீண்டும் அருள் கோயிலினுள் புகுந்து உச்சிப் பூசனைசெய் வேலை-தன்னில்
ஆண்டவனுக்கு அணிவித்து வலம்புரிந்து தொழுது துதித்து ஆடிப் பாடி
ஆண்டு அமரும் பரிவாரத்தேவர் முதல் அனைவரையும் அன்பால் ஏத்தி
வேண்டு விருப்புடன் பிரியாவிடை கொண்டு புறத்து அணுகி மேவி ஆங்கண்.

#38
சீரேனம் அறியாத திரு_அடியும் குரு அடியும் சிந்தித்து ஏகி
யாரேனும் கொலை குறியார் எமக்கு உரியார் என அவர்-தம் இல்லம்-தோறும்
போர் ஏர் நெற்சோறேனும் புதுக் கஞ்சியேனும் அன்றிப் புளித்த காடி
நீரேனும் கூழேனும் கிடைத்தது கை ஏற்று வந்து நின்று வாங்கி.

#39
அம் குருவின் தகை தெரிக்கும் ஆச்சிரமத்திடை அணுகி அன்பினோடும்
தம் குருவின் அடி முடி மண்ணுற வணங்கி இரு கரமும் தலை மேல் கூப்பி
எம் குருவே சிவகுருவே எழில் குமர_குருவே இ எளியேன்-தன்பால்
இங்கு உருவில் கருணைபுரி திரு_வாக்கின்படி பிச்சை ஏற்றது ஈதால்.

#40
எனத் தொழுது நின்றானைக் கருணையொடும் கடைக்கணித்தே இறைவன் கோயில்
கனத்த பணிபுரிந்தனை நின் இளைத்த உடல் ஆங்கு அதனைக் காட்டுகின்ற
தினத்தவரோடு உண்ணுதி பின் பெய்துதி ஈண்டு என உரைப்ப இறைஞ்சி வாழ்த்திச்
சினத் தழல் நீத்து அருள் மிகுத்த திரு_கூட்டம்-தனை வணங்கிச் சிந்தித்து ஏத்தி.

#41
அ கூட்டம்-தனில் உண்ணா அரும் தவரை வினவி அவர் அடியில் தாழ்ந்து 
மிக்கு ஊட்டும் அன்னையினும் மிகப் பரிவின் அவர்க்கு ஊட்டி மிகுந்த சேடம்
கைக்கூட்டக் காணாதே ஆயினும் மற்று அது குருவின் கழல்கள் ஏத்தி
மெய்க்கூட்டம் விழைந்தவன்தான் மிக மகிழ்ச்சியுடன் உண்டு விரைந்து-மாதோ.

#42
வாய்பூசிக் கைபூசி வந்து சிவகுருவின் அடி வணங்கி நின்றான்
தாய் பூசித்து எதிர் நிற்கும் தனையனைப் பார்த்து உரைப்பது போல் தயவால் நோக்கிப்
பேய் பூசித்திடும் சிறிய பேதையர் போல் அல்லாது பெரிதும் மிக்கு அன்
பாய் பூசித்து இறைவன் அடி வணங்குகின்ற நல்லோரைப் பணிந்து வாழ்த்தி.

#43
அன்பு இரக்கம் அறிவு ஊக்கம் செறிவு முதல் குணங்கள் உற அமைந்து நாளும்
இன்புறக் கண்_நுதலான்-தன் திரு_கோயில் பணிபுரிந்து ஈண்டு இருக்கும் நல்லோர்
துன்பு அறச் சொல் வழி எந்த வழி அந்த வழி நடந்து துகள்_இல் கல்வி
பொன் புரக்கும் தொழில் வணிகர் போல் பயில்க எனக் குரவன் புகன்றான்-மன்னோ.

#44
அம் மொழியாம் செம்மணியை அடி முடியின் அணிந்து மனம் மலர்ந்து நாயேன்
இ மொழி ஆர்_அமுது அருந்த என்ன அரும் தவம் முன்னர் இயற்றினேனோ
செம்மொழி ஆரணம் பரவும் சிவகுருவே எனத் துதித்துச் சினம்கொண்டு ஓதும்
வெம் மொழி ஒன்று இல்லாத திரு_கூட்டத்தவர்களொடும் மேவினானால்.

#45
கொற்றவர் புகழும் அ கூட்டம்-தன்னில் வாழ்
முற்றவர் சிதம்பர முனிவர்-தம் முனர்
உற்றிடும் சஞ்சலன் உளத்தை ஓர்ந்து அவன்
கற்றிடற்கு ஏற்ற நல் கலைகள் தேற்றவே.

#46
உளம்கொண்டு அங்கு அவன்றனை உழை இருத்தி ஓர்
வளம் கெழு கன்னலின் மட்டும் இன் சுவை
அளந்து அறிந்து ஊட்டும் நல் அன்னை போல் மனக்
களங்கு அறப் பருவ நேர் கலை பயிற்றிட.

#47
பயின்றனன் சஞ்சலன் பரிந்து தெள் அமுது
அயின்றனன் ஆம் என அகம் களித்தனன்
வியந்தனன் ஆங்கு அவர் விடுக்க மீண்டும் நல்
வயம்தரு கோயிலின் மருங்கு நண்ணினான்.

#48
அன்புடன் புனித நீராடி நீறு அணிந்து
இன்புடன் கண்டிகை எடுத்துப் பூண்டு தன்
துன்பு அறக் குரு பதம் துதித்துக் கோபுரம்
முன்புறப் பணிந்து மாமுகனைப் போற்றியே.

#49
அந்தி ஆர் வண்ணனை அந்திப் பூசனை
சந்தியாநின்ற அ சமயத்து எய்தி உள்
புந்தியால் நினைந்து உடல் புளகம் போர்த்திட
வந்தியாநின்று அடி வணங்கி ஏத்தியே.

#50
பாங்கு அமர் சிவ_பரம்பரையை வாழ்த்திக் கை
ஓங்கு அயில் பிள்ளையை உவந்து போற்றி நின்
றாங்கு அமர் மற்று உள அமல மூர்த்திகள்
பூங்கழல் வணங்கி ஓர் புறத்து இருந்தரோ.

#51
வரு நெறி மூலமாம் மந்திரத்தினை
மருவிய அக்க மா மணி வடம் கொடு
இருமைகொள் ஆயிரத்தெட்டின் எல்லையாம்
உருவுறச் செபம் முடித்து உளத்தின் உன்னியே.

#52
எழுந்து வீழ்ந்து இறைஞ்சி நின்று ஏத்தி அன்பினில்
அழுந்து நெஞ்சகத்தொடு அமலமாம் சிவ_
கொழுந்து அமர் தளி வலம்கொண்டு கண்ணடி
உழுந்து உருள் அளவும் வேறு உன்னல் இன்றியே.

#53
மால் அயற்கு அரிய நம் வள்ளலார் வளர்
ஆலயத்து இரவிடை ஆற்றத் தக்கன
ஏல நெய்த் திரு_விளக்கு ஏறப் பார்த்திடும்
மூல மெய்த் திரு_பணி முதல ஆற்றியே.

#54
விடை கொடு புறத்து உறீஇ விமலன் அன்பர்கட்கு
அடைவுறப் பணிகள் செய்து அகம் குளிர்ந்து வான்
தடை பொழில் ஆச்சிரமத்தில் சார்ந்து அவண்
இடை மகிழ் குரு அடி இறைஞ்சி ஏத்தியே.

#55
எண்ணுறு தவர் அடிக்கு ஏவல் ஆற்றியும்
கண்ணுறு பாடம் உள் கருதியும் அவை
நண்ணுறக் கேட்டும் சொல் நயங்கள் நாடியும்
பண்ணுறு பொருள் நலம் பாங்கின் ஓர்ந்துமே.

#56
காமமும் வெகுளியும் கடும் சொல் ஆதிய
நாமமும் கனவினும் நண்ணல் இன்றியே
சேமமும் ஒழுக்கமும் செறிவும் ஆதிய
தாமமும் மணியும் போல் தாங்கி ஓங்கியும்.

#57
கண்வளர்ந்திடுதல் ஐங்கடிகை மற்றைய
திண் வளர் பொழுது எலாம் தேசிகப்பிரான்
பண் வளர் திரு_அடிப் பணியும் எம்பிரான்
ஒண் வளர் பணிகளும் உஞற்றி வைகினான்.

#58
மாசு_அறு தவர்கள் உள் மகிழ்ந்து நோக்கவும்
தேசிகன் திருவுளம் திரும்பித் தேக்கவும்
ஆசு_அறு கலை பயின்று அமர்ந்துளான் இவன்
ஏசு_அற இவ்வணம் இயற்றும் நாளினே.
** தனிப் பாசுரங்கள்

@4. 1.மூத்த பிள்ளையார் திருப் பாசுரங்கள்
** (1) காப்பு

#1
ஐங்கரன் அடி_மலர்
இங்கு உற நினைதி நின்
பொங்குறு துயர் அறும்
மங்கல் இன் மனனனே

#2
திருமால் அறியாச் சேவடியால் என்
கருமால் அறுக்கும் கணபதி சரணம்

@5. (2) தெய்வத் தனித் திரு மாலை

#1
துதி பெறு கணபதி இணை அடி_மலரும்
பதி தரு சரவணபவன் மலர்_அடியும்
கதி தரு பரசிவன் இயல் அணி கழலும்
மதியுற மனன் இடை மருவுதும் மிகவே

#2
அருள் உறும் கய முகத்து அண்ணல் பாதமும்
பொருள் உறு சண்முகப் புனிதன் தாள்களும்
தெருள் உறு சிவபிரான் செம்பொன் கஞ்சமும்
மருள் அற நாள்-தொறும் வணங்கி வாழ்த்துவாம்

#3
அற்புதக் கணபதி அமல போற்றியே
தற்பர சண்முக சாமி போற்றியே
சிற்பர சிவ மகாதேவ போற்றியே
பொற்பு அமர் கௌரி நின் போற்றி போற்றியே

#4
மாதங்க முகத்தோன் நம் கணபதி-தன் செங்கமல மலர்_தாள் போற்றி
ஏதங்கள் அறுத்து அருளும் குமர_குருபரன் பாத இணைகள் போற்றி
தா தங்க மலர்க் கொன்றைச் சடை உடைய சிவபெருமான் சரணம் போற்றி
சீதம் கொள் மலர்க் குழலாள் சிவகாமசவுந்தரியின் திரு_தாள் போற்றி

#5
கலை நிறை கணபதி சரணம் சரணம் கஜ முக குண பதி சரணஞ் சரணம்
தலைவ நின் இணை அடி சரணம் சரணம் சரவணபவ குக சரணம் சரணம்
சிலை மலை_உடையவ சரணம் சரணம் சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவு அறும் ஒரு பரை சரணம் சரணம் உமை சிவை அம்பிகை சரணம் சரணம்

#6
திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவம் உணர்ந்த
இரு மா தவர் தொழ மன்றகத்து ஆடும் இறை வடிவாக்
குரு மா மலர்ப் பிறை வேணியும் முக்கணும் கூறும் ஐந்து
வரு மா முகமும் கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே

@6. (3).மங்களம்

#1
புங்கவர் புகழும் மாதங்க முகம் திகழ்
எங்கள் கணேசராம் துங்கற்கு மங்களம்

#2
போதம் திகழ் பரநாதம்-தனில் நின்ற
நீதராம் சண்முகநாதற்கு மங்களம்

#3
பூசைசெய்வார் உளம் ஆசை செய்வார் தில்லை
ஈசர் எமது நடராஜற்கு மங்களம்

#4
பூமி புகழ் குரு சாமி-தனை ஈன்ற
வாமி எனும் சிவகாமிக்கு மங்களம்

#5
புங்கம் மிகும் செல்வம் துங்கம் உறத் தரும்
செங்கமலத் திரு_மங்கைக்கு மங்களம்

#6
பூண் இலங்கும் தன வாணி பரம்பர
வாணி கலைஞர் கொள் வாணிக்கு மங்களம்

#7
புண்ணியர் ஆகிய கண்ணியராய்த் தவம்
பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு மங்களம்
**. 2. முருகவேள் திருப் பாசுரங்கள்

@7 . (1). கந்தர் திருப் பதிகம் - சிங்கபுரி

#1
பொன்_மகள் வாழ் சிங்கபுரி போதன் அறு மா முகன் மேல்
நன்மை மிகு செந்தமிழ்ப் பா நாம் உரைக்கச் சின்மயத்தின்
மெய் வடிவாம் நம் குரு தாள் வேழ_முகன்-தன் இரு தாள்
பொய் அகலப் போற்றுவம் இப்போது

#2
சீர் ஆரும் மறை ஒழுக்கம் தவிராது நான் மரபு சிறக்க வாழும்
ஏர் ஆரும் நிதி_பதி இந்திரன் புரமும் மிக நாணும் எழிலின் மிக்க
வார் ஆரும் கொங்கையர்கள் மணவாளர் உடன் கூடி வாழ்த்த நாளும்
தேர் ஆரும் நெடு வீதிச் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#3
உம்பர் துயர் கயிலை அரற்கு ஓதிடவே அப்பொழுதே உவந்து நாதன்
தம் பொவு இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில்
நம்புமவர் உய விடுத்து வந்து அருளும் நம் குகனே நலிவு தீர்ப்பாய்
திங்கள் தவழ் மதில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#4
பொல்லாத சூர்க் கிளையைத் தடிந்து அமரர் படும் துயரப் புன்மை நீக்கும்
வல்லானே எனது பிணி நீ நினைந்தால் ஒரு கணத்தில் மாறிடாதோ
கல்லாதேன் எனினும் எனை இகழாதே நினது அடியார் கழகம் கூட்டாய்
செல்லாதார் வலி அடக்கும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#5
பண்டுறு சங்கப் புலவர் அரும் சிறையைத் தவிர்த்து அருளும் பகவனே என்
புண் தரு இ நோய் தணிக்கப் புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ
தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய்த்
தெண்டனிடச்செய்து அருள்வாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#6
தாவாத வசியர் குலப் பெண்ணினுக்கு ஓர் கரம் அளித்த சதுரன் அன்றே
மூவாத மறை புகலும் மொழி கேட்டு உன் முண்டகத் தாள் முறையில் தாழ்ந்து
தேவாதி_தேவன் எனப் பலராலும் துதி புரிந்து சிறப்பின் மிக்க
தீ வாய் இப் பிணி தொலைப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#7
வானவர்_கோன் மேல்_நாளில் தரம் அறியாது இகழ்ந்துவிட விரைவில் சென்று
மானம்-அதில் வீற்றிருந்தே அவன் புரிந்த கொடுமை-தனை மாற்றும் எங்கள்
தானவர்-தம் குலம் அடர்த்த சண்முகனே இப் பிணியைத் தணிப்பாய் வாசத்
தேன் அவிழும் பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#8
மட்டு ஆரும் பொழில் சேரும் பரங்கிரி செந்தூர் பழனி மருவு சாமி
நட்டாரும் பணி புரியும் ஆறு தலை மலை முதலாய் நணுகி எங்கள்
ஒட்டாதார் வலி அடக்கி அன்பர் துதி ஏற்று அருளும் ஒருவ காவாய்
தெட்டாதார்க்கு அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#9
முன் செய்த மா தவத்தால் அருணகிரிநாதர் முன்னே முறையிட்டு ஏத்தும்
புன் செயல் தீர் திருப்புகழை ஏற்று அருளும் மெய்ஞ்ஞான புனிதன் என்றே
என் செயலில் இரவு_பகல் ஒழியாமல் போற்றியிட இரங்காது என்னே
தென் திசை சேர்ந்து அருள் புரியும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#10
விண்ணவர் கோன் அரும் துயரம் நீங்கிடவும் மாது தவ விளைவும் நல்கும்
கண் அகன்ற பேர்_அருளின் கருணையினால் குஞ்சரியைக் காதலோடு
மண்_உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும் மணம் புரிந்த வள்ளலே என்
திண்ணிய தீ_வினை ஒழிப்பாய் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

#11
மாசு அகன்ற சிவமுனிவர் அருளாலே மானிடமாய் வந்த மாதின்
ஆசு இல் தவப் பேறு அளிக்க வள்ளிமலை-தனைச் சார்ந்தே அங்குக் கூடி
நேசம் மிகு மணம் புரிந்த நின்மலனே சிறியேனை நீயே காப்பாய்
தேசு உலவு பொழில் சூழும் சிங்கபுரி-தனில் அமர்ந்த தெய்வக் குன்றே

@8 (2).திருப்பள்ளித் தாமம் தாங்கல்

#1
வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணை ஆமோ தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவும் திரு_தணிகை உயர் மா மலை மேல் இருப்பவர்க்குத்
தும்பைக் குடலை எடுக்காமல் துக்க உடலை எடுத்தேனே

#2
தொல்லைக் குடும்பத் துயர்-அதனில் தொலைத்தேன் அந்தோ காலம் எலாம்
அல்லல் அகற்றிப் பெரியோரை அடுத்தும் அறியேன் அரும் பாவி
செல்லத் தணிகைத் திரு_மலை வாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
வில்வக் குடலை எடுக்காமல் வீணுக்கு உடலை எடுத்தேனே

#3
அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும்_பகலும் அதின் நினைவாய்க்
கவலைப்படுவதன்றி சிவ_கனியைச் சேரக் கருதுகிலேன்
திவலை ஒழிக்கும் திரு_தணிகைத் திருமால் மருகன் திரு_தாட்குக்
குவளைக் குடலை எடுக்காமல் கொழுத்த உடலை எடுத்தேனே

@9. (3).முருகவேள் தனித் திருத் தொடை

#1
திருமால் ஆதியர் உள்ளம் கொள்ளும் ஓர் செவ்விய வேலோனே
 குரு மா மணியே குண மணியே சுரர் கோவே மேலோனே
கரு மா மலம் அறு வண்ணம் தண் அளி கண்டே கொண்டேனே
 கதியே பதியே கன_நிதியே கற்கண்டே தண் தேனே
அரு மா தவர் உயர் நெஞ்சம் விஞ்சிய அண்ணா விண்ணவனே
 அரசே அமுதே அறிவுருவே முருகையா மெய்யவனே
உருவாகிய பவ பந்தம் சிந்திட ஓதிய வேதியனே ஒளியே வெளியே
 உலகம் எலாம் உடையோனே வானவனே

#2
கூழுக்கு அழுவேனோ கோ தணிகை கோவே என்
ஊழுக்கு அழுவேனோ ஓயாத் துயர்ப் பிறவி
ஏழுக்கு அழுவேனோ என் செய்கேன் என் செய்கேன்
பாழுக்கு இறைத்தேன் ஈது உன் செயலோ பார்க்கும் இடம்

#3
சிந்தைக்கும் வழியில்லை உன் தன்மையைத் தெரிதற்கு என்றும் திரு_தணிகேசனே
உந்தைக்கும் வழியில்லை என்றால் இந்த உலகில் யாவர் உனை அன்றி நீர் மொள்ள
மொந்தைக்கும் வழியில்லை வர திரு_முண்டைக்கும் வழியில்லை அரையில் சாண்
கந்தைக்கும் வழியில்லை அரகர கஞ்சிக்கும் வழியில்லை இங்கு ஐயனே

#4
கறி பிடித்த ஊன்_கடையில் கண்டவர்-தம் கால் பிடித்துக் கவ்வும் பொல்லா
வெறிபிடித்த நாய்க்கேனும் வித்தை பயிற்றிடலாகும் வேண்டிவேண்டி
மறி பிடித்த சிறுவனைப் போல் வாத்தியார் மனம் மறுகி வருந்தத் தங்கள்
குறி பிடித்துக் காட்டுவோர்க்கு யாவர் படிப்பிக்க வல்லார் குமர_வேளே

#5
தாதாதாதாதாதாதாக் குறைக்கு என் செய்குதும் யாம்
ஓதாது அவமே உழல் நெஞ்சே மீதாத்
ததிதி என மயிலில் தான் ஆடி நாளும்
திதிதி தரும் தணிகைத் தே

#6
ஓர் இரண்டாம் நல் தணிகை உத்தமன்-தன் ஓங்கல் தோள்
தார் இரண்டார் போல் நின்ற தையன்மீர் வார் இரண்டாத்
தொய்யில் அழிக்கும் துணை முலையாள் உள்ளகத்தாம்
மையல் அழிக்கும் மருந்து

#7
ஏலும் தயங்கு என்னும் ஏவற்கு எதிர்மறைதான்
ஆலும் தொழிற்கு ஏவல் ஆகுமோ மால் உந்தி
மாற்றும் தணிகையர்க்கு மா மயில் மேல் நாள்-தோறும்
தோற்றும் தணிகையன் பொன் தோள்

#8
நின் நிலையை என் அருளால் நீ உணர்ந்து நின்று அடங்கின்
என் நிலையை அ நிலையே எய்துதி காண் முன் நிலையை
இற்குருவின் ஆட்டாதே என்று உரைத்தான் ஏரகம் வாழ்
சற்குரு என் சாமிநாதன்.
** 3.சிவபெருமான் திருப் பாசுரங்கள்

@10. (1).அருண்மொழி மாலை

#1
பொது நின்று அருள்வீர் ஒற்றி_உளீர் பூ உந்தியது என் முலை என்றேன்
இது என்று அறி நாம் ஏறுகின்றது என்றார் ஏறுகின்றது-தான்
எது என்று உரைத்தேன் எது நடு ஓர் எழுத்து இட்டு அறி நீ என்று உரைத்தார்
அது இன்று அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#2
மரு கா ஒற்றி_வாணர் பலி வாங்க வகை உண்டே என்றேன்
ஒரு கால் எடுத்தேன் காண் என்றார் ஒரு கால் எடுத்துக் காட்டும் என்றேன்
வரு காவிரிப் பொன்_அம்பலத்துள் வந்தால் காட்டுவேம் என்றார்
அருகா வியப்பாம் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#3
விட்டு ஒற்றியில் வாழ்வீர் எவன் இ வேளை அருள நின்றது என்றேன்
சுட்டும் சுதனே என்றார் நான் சுட்டி அறியச் சொல்லும் என்றேன்
பட்டு உண் மருங்கே நீ குழந்தைப் பருவம்-அதனின் முடித்தது என்றார்
அட்டு உண்டு அறியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#4
வேலை ஞாலம் புகழ் ஒற்றி விளங்கும் தேவர் நீர் அணியும்
மாலை யாது என்றேன் அயன் மால் மாலை அகற்றும் மாலை என்றார்
சோலை மலர் அன்றே என்றேன் சோலையே நாம் தொடுத்தது என்றார்
ஆலும் மிடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#5
உயிருள் உறைவீர் திருவொற்றி_உள்ளீர் நீர் என் மேல் பிடித்த
வயிரம்-அதனை விடும் என்றேன் மாற்றாள் அல நீ மாதே யாம்
செயிர்-அது அகற்று உன் முலைப்பதி வாழ் தேவன் அலவே தெளி என்றார்
அயிர மொழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#6
தண் கா வளம் சூழ் திருவொற்றித் தலத்தில் அமர்ந்த சாமி நும் கை
எண் கார்முகம் மா பொன் என்றேன் எடையிட்டு அறிதல் அரிது என்றார்
மண் காதலிக்கும் மாடு என்றேன் மதிக்கும் கணை வில் அன்று என்றார்
அண் கார்க் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#7
அலங்கும் புனல் செய் ஒற்றி_உளீர் அயன் மால் ஆதி யாவர்கட்கும்
இலங்கும் ஐ காண் நீர் என்றேன் இதன் முன் ஏழ் நீ கொண்டது என்றார்
துலங்கும் அது-தான் என் என்றேன் சுட்டு என்று உரைத்தார் ஆ கெட்டேன்
அலங்கல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#8
விண்டு வணங்கும் ஒற்றி_உளீர் மென் பூ இருந்தும் வன் பூவில்
வண்டு விழுந்தது என்றேன் எம் மலர்_கை வண்டும் விழுந்தது என்றார்
தொண்டர்க்கு அருள்வீர் நீர் என்றேன் தோகாய் நாமே தொண்டர் என்றார்
அண்டர்க்கு அரியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#9
மட்டு ஆர் மலர்க் கா ஒற்றி_உளீர் மதிக்கும் கலை மேல் விழும் என்றேன்
எட்டாம் எழுத்தை எடுக்கும் என்றார் எட்டாம் எழுத்து இங்கு எது என்றேன்
உள் தா அகற்றும் அந்தணர்கள் உறை ஊர் மாதே உணர் என்றார்
அட்டார் புரங்கள் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#10
ஒற்றி நகரீர் மனவாசி உடையார்க்கு அருள்வீர் நீர் என்றேன்
பற்றி இறுதி தொடங்கியது பயிலும்-அவர்க்கே அருள்வது என்றார்
மற்று இது உணர்கிலேன் என்றேன் வருந்தேல் உணரும் வகை நான்கும்
அற்றிடு என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#11
வான் தோய் பொழில் சூழ் ஒற்றி_உளீர் வருந்தாது அணைவேனோ என்றேன்
ஊன் தோய் உடற்கு என்றார் தெரிய உரைப்பீர் என்றேனோ இது-தான்
சான்றோர் உம்-கண் மரபு ஓர்ந்து தரித்த பெயர்க்குத் தகாது என்றார்
ஆன் தோய் விடங்கர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#12
தீது தவிர்க்கும் ஒற்றி_உளீர் செல்லல் அறுப்பது என்று என்றேன்
ஈது நமக்கும் தெரியும் என்றார் இறை ஆமோ இங்கு இது என்றேன்
ஓதும் அடியர் மன_கங்குல் ஓட்டும் யாமே உணர் என்றார்
ஆது தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#13
ஒண் கை மழுவோடு அனல்_உடையீர் ஒற்றி நகர் வாழ் உத்தமர் நீர்
வண் கை ஒருமை நாதர் என்றேன் வண் கைப் பன்மை நாதர் என்றார்
எண்-கண் அடங்கா அதிசயம் காண் என்றேன் பொருள் அன்று இதற்கு என்றார்
அண்கொள் அணங்கே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#14
ஒருவர் என வாழ் ஒற்றி_உளீர் உமக்கு அ மனை உண்டே என்றேன்
இருவர் ஒரு பேர் உடையவர் காண் என்றார் என் என்றேன் என் பேர்
மருவும் ஈறு அற்று அயல் அகரம் வயங்கும் இகரம் ஆனது என்றார்
அருவும் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#15
பேர் ஆர் ஒற்றியீர் உம்மைப் பெற்றார் எவர் என்றேன் அவர்-தம்
ஏர் ஆர் பெயரின் முன்பின் இரண்டு இரண்டு அகத்தார் என்றார் என்
நேரா உரைப்பீர் என்றேன் நீ நெஞ்சம் நெகிழ்ந்தால் ஆம் என்றார்
ஆர் ஆர் சடையர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#16
தளி நான்மறையீர் ஒற்றி நகர் தழைத்து வாழ்வீர் தனி ஞான
ஒளி நாவரைசை ஐந்தெழுத்தால் உவரி கடத்தினீர் என்றேன்
களி நாவலனை ஈர்_எழுத்தால் கடலில் வீழ்த்தினேம் என்றார்
அளி நாண் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#17
ஓம் ஊன்று எழிலீர் ஒற்றி_உளீர் உற்றோர்க்கு அளிப்பீரோ என்றேன்
தா மூன்று என்பார்க்கு அயல் மூன்றும் தருவேம் என்றார் அம்ம மிகத்
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார்
ஆ மூன்று அறுப்பார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#18
மன்னி வளரும் ஒற்றி_உளீர் மடவார் இரக்கும் வகை அது-தான்
முன்னில் ஒரு தா ஆம் என்றேன் முத்தா எனலே முறை என்றார்
என்னில் இது-தான் ஐயம் என்றேன் எவர்க்கும் தெரியும் என்று உரைத்தார்
அல் நில் ஓதி என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#19
வளம் சேர் ஒற்றியீர் உமது மாலை கொடுப்பீரோ என்றேன்
குளம் சேர் மொழியாய் உனக்கு அது முன் கொடுத்தேம் என்றார் இலை என்றேன்
உளம் சேர்ந்தது காண் இலை_அன்று ஓர் உருவும் அன்று அங்கு அரு என்றார்
அளம் சேர் வடிவாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#20
வீற்று ஆர் ஒற்றியூர் அமர்ந்தீர் விளங்கும் மதனன் மென் மலரே
மால் தார் என்றேன் இலை காண் எம் மாலை முடி மேல் காண் என்றார்
சாற்றாச் சலமே ஈது என்றேன் சடையின் முடி மேல் அன்று என்றார்
ஆற்றா இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#21
புயப் பால் ஒற்றியீர் அச்சம் போமோ என்றேன் ஆம் என்றார்
வயப் பாவலருக்கு இறை ஆனீர் வஞ்சிப்பா இங்கு உரைப்பது என்றேன்
வியப்பு ஆ நகையப்பா எனும் பா வெண்பா கலிப்பாவுடன் என்றார்
அயப் பால் இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#22
தண் அம் பொழில் சூழ் ஒற்றி_உளீர் சங்கம் கையில் சேர்த்திடும் என்றேன்
திண்ணம் பல மேல் வரும் கையில் சேர்த்தோம் முன்னர் தெரி என்றார்
வண்ணம் பல இ மொழிக்கு என்றேன் வாய்ந்து ஒன்று எனக்குக் காட்டு என்றார்
அண் அஞ்சுகமே என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#23
உகம் சேர் ஒற்றியூர்_உடையீர் ஒரு மா தவரோ நீர் என்றேன்
முகம் சேர் வடி வேல் இரண்டு உடையாய் மும்மாதவர் நாம் என்று உரைத்தார்
சுகம் சேர்ந்தன உம் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றார்
அகம் சேர் விழியாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#24
ஊராம் ஒற்றியீர் ஆசை உடையேன் என்றேன் எமக்கு அலது
நேரா வழக்குத் தொடுக்கின்றாய் நினக்கு ஏது என்றார் நீர் எனக்குச்
சேரா வணம் ஈது என்றேன் முன் சேர்த்து ஈது எழுதித் தந்தவர்-தாம்
ஆர் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#25
வருத்தம் தவரீர் ஒற்றி_உளீர் மனத்து அகாதம் உண்டு என்றேன்
நிருத்தம் தரும் நம் அடியாரை நினைக்கின்றோரைக் கண்டு அது தன்
திருத்தம் தரும் முன் எழுத்து இலக்கம் சேரும் தூரம் ஓடும் என்றார்
அருத்தம் தெரியேன் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#26
மையல் அகற்றீர் ஒற்றி_உளீர் வா என்று உரைப்பீரோ என்றேன்
துய்ய அதன் மேல் தலைவைத்துச் சொன்னால் சொல்வேம் இரண்டு என்றார்
உய்ய உரைத்தீர் எனக்கு என்றேன் உலகில் எவர்க்கும் ஆம் என்றார்
ஐய இடையாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#27
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற
வா என்று உரைப்பீர் என்றேன் பின் வரும் அ எழுத்து இங்கு இலை என்றார்
ஓ என் துயர் தீர்த்து அருளுவது ஈதோ என்றேன் பொய் உரைக்கின்றாய்
ஆ என்று உரைத்தார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#28
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன்
இயலாய் இட்ட நாமம் அதற்கு இளைய நாமமே என்றார்
செயல் ஆர் காலம் அறிந்து என்னைச் சேர்வீர் என்றேன் சிரித்து உனக்கு இங்கு
அயல் ஆர் என்றார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#29
என் மேல் அருள் கூர்ந்து ஒற்றி_உளீர் என்னை அணைய நினைவீரேல்
பொன் மேல் வெள்ளியாம் என்றேன் பொன் மேல் பச்சை அறி என்றார்
மின் மேல் சடையீர் ஈது எல்லாம் விளையாட்டு என்றேன் அன்று என்றார்
அல் மேல் குழலாய் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#30
நால் ஆரணம் சூழ் ஒற்றி_உளீர் நாகம் வாங்கி என் என்றேன்
கால் ஆங்கு இரண்டில் கட்ட என்றார் கலைத் தோல் வல்லீர் நீர் என்றேன்
வேல் ஆர் விழி மாத் தோலோடு வியாளத் தோலும் உண்டு என்றார்
ஆல் ஆர் களத்தர் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

#31
முடியா வளம் சூழ் ஒற்றி_உளீர் முடி மேல் இருந்தது என் என்றேன்
கடியா உள்ளங்கையின் முதலைக் கடிந்தது என்றார் கமலம் என
வடிவு ஆர் கரத்தில் என் என்றேன் வரைந்த அதன் ஈறு அற்றது என்றார்
அடியார்க்கு எளியார் என்னடி அ ஐயர் மொழிந்த அருள்_மொழியே.

@11. (2).இன்ப மாலை

#1
ஒன்றும் பெரும் சீர் ஒற்றி நகர்_உள்ளார் உவந்து இன்று உற்றனர் யான்
என்றும் பெரியீர் நீர் வருதற்கு என்ன நிமித்தம் என்று உரைத்தேன்
துன்றும் விசும்பே என்றனர் நான் சூதாம் உமது சொல் என்றேன்
குன்றும் குடமும் இடை உனது கொங்கை எனவே கூறினரே.

#2
கான் ஆர் சடையீர் என் இரு கைக் கன்றும் பசுப் போல் கற்றது என்றேன்
மான் ஆர் விழியாய் கற்றது நின் மருங்குல் கலையும் என்றார் நீர்-தான்
ஆர் என்றேன் நனிப்பள்ளித் தலைவர் எனவே சாற்றினர் நான்
ஆனால் ஒற்றி இரும் என்றேன் அங்கும் இருந்தேன் என்றாரே.

#3
வானம் கொடுப்பீர் திருவொற்றி வாழ்வீர் அன்று வந்தீர் என்
மானம் கெடுத்தீர் என்றேன் முன் வனத்தார் விடுத்தார் என்றார் நீர்
ஊனம் தடுக்கும் இறை என்றேன் உலவாது அடுக்கும் என்றார் மால்
ஏனம் புடைத்தீர் அணை என்பீர் என்றேன் அகலார் என்றாரே.

#4
இரு மை அளவும் பொழில் ஒற்றி_இடத்தீர் முனிவர் இடர் அற நீர்
பெருமை நடத்தீர் என்றேன் என் பிள்ளை நடத்தினான் என்றார்
தருமம் அல இ விடை என்றேன் தரும விடையும் உண்டு என்றார்
கருமம் எவன் யான் செய என்றேன் கருது ஆண்பால் அன்று என்றாரே.

#5
ஒசிய இடுகும் இடையாரை ஒற்றி இருந்தே உருக்குகின்ற
வசியர் மிக நீர் என்றேன் என் மகனே என்றார் வளர் காமப்
பசி-அது உடையேன் என்றேன் உள் பணி அல்குலும் அப்படி என்றார்
நிசிய மிடற்றீராம் என்றேன் நீ கண்டதுவே என்றாரே.

#6
கலை ஆளுடையீர் ஒற்றி நின்றீர் காமம் அளித்தீர் களித்து அணையீர்
மலையாள் உமது மனைவி என்றேன் மலைவாள் உனை நான் மருவின் என்றார்
அலையாள் மற்றையவள் என்றேன் அலைவாள் அவளும் அறி என்றார்
நிலை ஆண்மையினீர் ஆ என்றேன் நீயா என்று நின்றாரே.

#7
சீலம் படைத்தீர் திருவொற்றித் தியாகரே நீர் திண்மை மிகும்
சூலம் படைத்தீர் என் என்றேன் தொல்லை உலகம் உண என்றார்
ஆலம் படுத்த களத்தீர் என்று அறைந்தேன் அவள் இ ஆன் என்றார்
சால் அம்பு எடுத்தீர் உமை என்றேன் தாரம் இரண்டாம் என்றாரே.

#8
ஞாலர் ஆதி வணங்கும் ஒற்றி_நாதர் நீரே நாட்டமுறும்
பாலராம் என்று உரைத்தேன் நாம் பாலர் அல நீ பார் என்றார்
மேல் அரா வந்திடும் என்றேன் விளம்பேல் மகவும் அறியும் என்றார்
கோலராம் என்று உரைத்தேன் யாம் கொண்டோம் முக்கண் என்றாரே.

#9
வண்மை தருவீர் ஒற்றி நின்று வருவீர் என்னை மருவீர் நீர்
உண்மை_உடையீர் என்றேன் நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு என்றார்
கண்மை_உடையீர் என்றேன் நான் களம் மை_உடையேம் யாம் என்றார்
தண்மை அருளீர் என்றேன் நாம் தகையே அருள்வது என்றாரே.

#10
ஒன்னார் புரம் மூன்று எரிசெய்தீர் ஒற்றி_உடையீர் உவப்புடனே
என் ஆகுலத்தை ஓட்டும் என்றேன் இடையர் அல நாம் என்று உரைத்தார்
பொன் ஆல் சடையீர் என்றேன் என் புதிய தேவி மனைவி என்றார்
சொல் நால் கேள்வி வியப்பு என்றேன் சுத்த வியப்பு ஒன்று என்றாரே.

#11
கனி மான் இதழி முலைச் சுவடு களித்தீர் ஒற்றிக் கடி நகரீர்
தனி மான் ஏந்தி என்றேன் என் தலை மேல் ஒரு மான் ஏந்தி என்றார்
துனி மால் துகிலீர் என்றேன் நல் துகில் கோவணம் காண் என்றார் என்
பனி மால் வரையீர் என்றேன் என் பனி மால் வரை காண் என்றாரே.

@12. (3).பழமலையார் திருப் பதிகம்

#1
திருமால் கமலத் திரு_கண் மலர் திகழும் மலர்_தாள் சிவ_கொழுந்தைக்
கரு மால் அகற்றும் தனி மருந்தைக் கனகசபையில் கலந்த ஒன்றை
அரு மா மணியை ஆர்_அமுதை அன்பை அறிவை அருள் பெருக்கைக்
குரு மா மலையைப் பழமலையில் குலவி ஓங்கக் கண்டேனே

#2
வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதி அமுதைத்
தேனை அளிந்த பழச் சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை
ஊனம் அறியார் உளத்து ஒளிரும் ஒளியை ஒளிக்கும் ஒரு பொருளை
ஞான_மலையைப் பழமலை மேல் நண்ணி விளங்கக் கண்டேனே

#3
தவள நிறத்துத் திரு_நீறு தாங்கும் மணித் தோள் தாணுவை நம்
குவளை விழித் தாய் ஒரு புறத்தே குலவ விளங்கும் குரு மணியைக்
கவள மத_மா கரி உரிவைக் களித்த மேனிக் கற்பகத்தைப்
பவள மலையைப் பழமலையில் பரவி ஏத்திக் கண்டேனே

#4
இளைத்த இடத்தில் உதவி அன்பர் இடத்தே இருந்த ஏம வைப்பை
வளைத்த மதில் மூன்று எரித்து அருளை வளர்த்த கருணை_வாரிதியைத்
திளைத்த யோகர் உளத்து ஓங்கித் திகழும் துரியாதீதம் மட்டும்
கிளைத்த மலையைப் பழமலையில் கிளர்ந்து வயங்கக் கண்டேனே

#5
மடந்தை மலையாள் மனம் மகிழ மருவும் பதியைப் பசுபதியை
அடர்ந்த வினையின் தொடக்கை அறுத்து அருளும் அரசை அலை கடல் மேல்
கிடந்த பச்சைப் பெரு மலைக்குக் கேடு இல் அருள்தந்து அகம் புறமும்
கடந்த மலையைப் பழமலை மேல் கண்கள் களிக்கக் கண்டேனே

#6
துனியும் பிறவித் தொடு வழக்கும் சோர்ந்துவிடவும் துரிய வெளிக்கு
இனியும் பருக்கும் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும்
பனி உந்து இமயமலைப் பச்சைப் படர்ந்த பவளப் பருப்பதத்தைக்
கனியும் சிலையும் கலந்த இடம் எங்கே அங்கே கண்டேனே

#7
கருணை_கடலை அ கடலில் கலந்த அமுதை அ அமுதத்
தருணச் சுவையை அச் சுவையில் சார்ந்த பயனைத் தனிச் சுகத்தை
வருணப் பவளப் பெரு மலையை மலையில் பச்சை மருந்து ஒரு பால்
பொருள் நச்சுறவே பழமலையில் பொருந்தி ஓங்கக் கண்டேனே

#8
என் ஆர்_உயிரில் கலந்து கலந்து இனிக்கும் கரும்பின் கட்டி-தனைப்
பொன் ஆர் வேணிக் கொழும் கனியைப் புனிதர் உளத்தில் புகும் களிப்பைக்
கல் நார் உரித்துப் பணிகொண்ட கருணைப் பெருக்கைக் கலைத் தெளிவைப்
பல் நாகப் பூண் அணி மலையைப் பழையமலையில் கண்டேனே

#9
நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம் புரிந்து என்
அல்லல் அகற்றும் பெரு வாழ்வை அன்பால் இயன்ற அரு_மருந்தைச்
சொல்ல முடியாத் தனிச் சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற
வல்ல மலையைப் பழமலையில் வயங்கி ஓங்கக் கண்டேனே

#10
ஆதி நடுவும் முடிவும் இலா அருளானந்தப் பெரும் கடலை
ஓதி உணர்தற்கு அரிய சிவயோகத்து எழுந்த ஒரு சுகத்தைப்
பாதி ஆகி ஒன்று ஆகிப் படர்ந்த வடிவைப் பரம்பரத்தைச்
சோதி மலையைப் பழமலையில் சூழ்ந்து வணங்கிக் கண்டேனே

@13. (4).ஆநந்த நடனம்

#1
பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம்
 முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த
சர்வ மங்கள சச்சிதானந்த செளபாக்ய சாம்பவ விநாசரகித
 சாஸ்வத புராதர நிராதர அபேத வாசா மகோசர நிரூபா
துருவ கருணாகர நிரந்தர துரந்தர சுகோதய பதித்வ நிமல
 சுத்த நித்திய பரோக்ஷாநுபவ அபரோக்ஷ சோமசேகர சொரூபா
அரஹர சிவாயநம என்று மறை ஓலமிட்டு அணுவளவும் அறிகிலாத
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#2
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல்
 துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே
 சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே
நீதி மணியே நிருவிகற்ப மணியே அன்பர் நினைவில் அமர் கடவுள் மணியே
 நின்மல சுயம் பிரகாசம் குலவும் அத்வைத நித்ய ஆனந்த மணியே
ஆதி மணியே எழில் அநாதி மணியே எனக்கு அன்பு உதவும் இன்ப மணியே
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#3
தேன் அமர் பசும் கொன்றை மாலை ஆடக் கவின் செய்யும் மதி வேணி ஆட
 செய்யும் முப்புரிநூலும் ஆட நடு வரி உரி சிறந்து ஆடவே கரத்தில்
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட
 மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை
ஞான அறிவாளர் தினம் ஆட உலகு அன்னையாம் நங்கை சிவகாமி ஆட
 நாகமுடன் ஊக மனம் நாடி ஒரு புறம் ஆட நந்தி மறையோர்கள் ஆட
ஆனை_முகன் ஆட மயில் ஏறி விளையாடும் உயர் ஆறுமுகன் ஆட மகிழ்வாய்
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#4
பொய்யான வாழ்க்கையினை மெய்யாக நம்பி வீண்போக்கி நல் நாளை மடவார்
 போகமே பெரிது எனக் கொண்டு அறிவு அழிந்து நின் பொன்_அடிக்கான பணியைச்
செய்யாத பாவியேன் என்னை நீ கைவிடில் செய்வது அறியேன் ஏழையேன்
 சேய் செய்த பிழை எலாம் தாய் பொறுப்பது போல சிந்தை-தனில் எண்ணிடாயோ
மெய்யான நிலை பெறக் கையால் அணைத்து அருளவேண்டும் மறை ஆகமத்தின்
 மேலான சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த மேதையர்கள் பரவி வாழ்த்தும்
ஐ ஆனனம் கொண்ட தெய்வமே கங்கை அரவு அம்புலியும் ஆட முடி மேல்
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#5
போது ஆரும் நான்முகப் புத்தேளினால் பெரிய பூமியிடை வந்து நமனால்
 போகும் உயிர்கள் வினையை ஒழி-மின் என்றே குரவர் போதிக்கும் உண்மை மொழியைக்
காதாரவே பல தரம் கேட்டும் நூற்களில் கற்றும் அறிவு அற்று இரண்டு
 கண் கெட்ட குண்டை என வீணே அலைந்திடும் கடையனேன் உய்வது எ நாள்
மாதாவுமாய் ஞான உருவுமாய் அருள் செயும் வள்ளலே உள்ள முதலே
 மால் ஆதி தேவர் முனிவோர் பரவியே தொழுது வாழ்த்தி முடி தாழ்த்தும் உன்றன்
ஆதாரமான அம்போருகத்தைக் காட்டி ஆண்டு அருள வேண்டும் அணி சீர்
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#6
பண் ஆரும் மூவர் சொல்_பா ஏறு கேள்வியில் பண்படா ஏழையின் சொல்_
 பாவையும் இகழ்ந்திடாது ஏற்று மறை முடிவான பரமார்த்த ஞான நிலையை
கண்ணார நெல்லி அம் கனி எனக் காட்டி நல் கருணைசெய்து ஆளாவிடில்
 கடையனேன் ஈடேறும் வகை எந்த நாள் அருள் கடவுளே கருணைசெய்வாய்
தண் ஆர் இளம்பிறை தங்கும் முடி மேல் மேனி தந்த ஒரு சுந்தரியையும்
 தக்க வாமத்தினிடை பச்சை மயிலாம் அரிய சத்தியையும் வைத்து மகிழ் என்
அண்ணா என் அப்பா என் அறிவே என் அன்பே என்று அன்பர் எப்பொழுதும் வாழ்த்தும்
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#7
பவமான எழு வகைப் பரப்பான வேலையில் பசுவான பாவி இன்னும்
 பற்றான குற்றம்-அதை உற்று அலை துரும்பு எனப் படராது மறை அனைத்தும்
உவமானம் உரைசெய்ய அரிதான சிவநிலையை உற்று அதனை ஒன்றி வாழும்
 உளவான வழி ஈது எனக் காட்டி அருள்செய்யில் உய்குவேன் முடிவான நல்
தவமான நெறி பற்றி இரண்டு அற்ற சுக_வாரி-தன்னில் நாடி எல்லாம்
 தான் ஆன சுத்த சன்மார்க்க அனுபவ சாந்த தற்பரர்கள் அகம் நிறைந்தே
அவமான கருணைப் பிரகாச நின் அருள்-தனை அடியனுக்கு அருள்செய்குவாய்
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#8
சந்ததமும் அழியாமல் ஒருபடித்தாய் இலகு சாமி சிவகாமியிடம் ஆர்
 சம்புவாம் என்னும் மறை ஆகமத் துணிவான சத்ய மொழி-தன்னை நம்பி
எந்தையே என்று அறிஞர் யாவரும் நின் புகழை ஏத்தி வினை-தனை மாற்றியே
 இன்ப மயமாய் இனிது வாழ்ந்திடப் புவியினிடை ஏழையேன் ஒருவன் அந்தோ
சிந்தையானது கலக்கம்கொண்டு வாடல் என் செப்புவாய் வேதன் ஆதி
 தேவர் முனிவர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர்களும் ஏவல் புரிய
அந்தணர்கள் பல கோடி முகமனாடப் பிறங்கு அருள் முக விலாசத்துடன்
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#9
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி பூண்டு சன்மார்க்க நெறி நிற்கும் அன்பர் மனமாம்
 நிலம் மீது வளர் தேவதாருவே நிலையான நிறைவே மெய் அருள் சத்தியாம்
வீறு அணிந்து அழியாத நிதியமே ஒழியாத விண்ணே அகண்ட சுத்த
 வெளியே விளங்கு பர ஒளியே வரைந்திடா வேதமே வேத முடிவே
தூறு அணிந்து அலைகின்ற பாவியேன் நின் திருத் துணை மலர்த் தாட்கு உரியனாய்த்
 துயர் தீர்ந்து இளைப்பாறும் இன்ப அம்போதியில் தோய அருள் புரிதி கண்டாய்
ஆறு அணிந்திடு வேணி அண்ணலே அணி குலவும் அம்மை சிவகாமியுடனே
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

#10
மணி கொண்ட நெடிய உலகாய் அதில் தங்கும் ஆன்மாக்களாய் ஆன்மாக்களின்
 மலம் ஒழித்து அழியாத பெரு வாழ்வினைத் தரும் வள்ளலாய் மாறா மிகத்
திணி கொண்ட முப்புராதிகள் எரிய நகை கொண்ட தேவாய் அகண்ட ஞானச்
 செல்வமாய் வேல் ஏந்து சேயாய் கஜானனச் செம்மலாய் அணையாக வெம்
பணிகொண்ட கடவுளாய்க் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம்
 பரமேட்டியாய்ப் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய்
அணி கொண்ட சுத்த அனுபூதியாய்ச் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய்
 அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே

@14. (5).ஞான சிதம்பர வெண்பா

#1
அன்னை அப்பன் மா இனத்தார் ஆய் குழலார் ஆசையினால்
தென்னை ஒப்ப நீண்ட சிறு நெஞ்சே என்னை என்னை
யா வகை சேர் வாயில் எயில் தில்லை என்கிலையே
ஆ வகை ஐந்தாய்ப் பதம் ஆறு ஆர்ந்து.

#2
நீர்க்கு இசைந்த நாமம் நிலை மூன்று கொண்ட பெயர்
போர்க்கு இசைந்தது என்று அறியாப் புல் நெஞ்சே நீர்க்கு இசைந்தே
ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று ஒன்று தில்லை மணி
மன்று ஒன்றுவானை மகிழ்ந்து.

#3
ஈற்றில் ஒன்றாய் மற்றை இயல் வருக்கம் ஆகிய பேர்
ஏற்ற பறவை இருமைக்கும் சாற்று அமை
அன்றே தலைமகட்கா அம்பலவர்-தம்பால் ஏகு
என்றே எனக்கு நினக்கும்.

#4
கைத்தலை மேலிட்டு அலை இல் கண்_உடையான் கால்_மலர்க்குக்
கைத் தலை மேல் இட்டு அலையில் கண்ணீர் கொண்டு உய்த்தலை மேல்
காணாயேல் உண்மைக் கதி நிலையைக் கைக் கணியாக்
காணாயே நெஞ்சே களித்து.

#5
கல்லோ மணலோ கனியோ கரும்போ என்று
எல்லோமும் இங்கே இருக்கின்றோம் சொல்லோம்
அதுவாய் அதன் பொருளாய் அப்பாலாய் யார்க்கும்
பொதுவாய் நடிக்கின்ற போது.

#6
அது பார் அதிலே அடைந்து வதி மற்று ஆங்கு
அதில் ஏழையைப் புர மெய் அன்பால் அதிலே
நலம் மேவு அதிலே நில் நா ஊர் திரு_அம்
பலம் மேவக் காட்டும் பரிசு.

#7
நம் பார்வதி பாகன் நம் புரத்தில் நின்று உவந்தோன்
அம்பாரத் தென்கிழக்கே அம்பலத்தான் வெம்பாது
பார்த்தால் அளிப்பான் தெரியும் சிதம்பரம் நீ
பார்த்தாய் இப் பாட்டின் பரிசு.

#8
நடிப்பார் வதி தில்லை நல் கோபுரத்தின்
அடிப் பாவையும் வடக்கே ஆர்ந்து கொடிப் பாய
நின்று வளர் மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும்
இன்று எவ்விடத்து என்னில் இப் பாட்டில்.

#9
பூமி பொருந்து புரத்தே நமது சிவ
காமி-தனை வேட்டுக் கலந்து அமர்ந்தான் நேமி
அளித்தான் மால் கண்_மலருக்கு ஆனந்தக் கூத்தில்
களித்தான் அவன்-தான் களித்து.

@15. (6).வைத்தியநாதர் பதிகம்

#1
ஓகை மடவார் அல்குலே பிரமபதம் அவர்கள் உந்தியே வைகுந்தம் மேல்
 ஓங்கு முலையே கைலை அவர் குமுத வாயின் இதழ் ஊறலே அமுதம் அவர்-தம்
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம்
 பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த
யூகம் அறியாமலே தேகம் மிக வாடினீர் உறு சுவைப் பழம் எறிந்தே
 உற்ற வெறு_வாய் மெல்லும் வீணர் நீர் என்று நல்லோரை நிந்திப்பர் அவர்-தம்
வாகை வாய் மதம் அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#2
உண்டதே உணவு தான் கண்டதே காட்சி இதை உற்று அறிய மாட்டார்களாய்
 உயிர் உண்டு பாவ புண்ணியம் உண்டு வினைகள் உண்டு உறு பிறவி உண்டு துன்பத்
தொண்டு-அதே செயும் நரக வாதை உண்டு இன்பமுறு சொர்க்கம் உண்டு இவையும் அன்றித்
 தொழு கடவுள் உண்டு கதி உண்டு என்று சிலர் சொலும் துர்_புத்தியால் உலகிலே
கொண்டதே சாதகம் வெறுத்து மட மாதர்-தம் கொங்கையும் வெறுத்துக் கையில்
 கொண்ட தீம் கனியை விட்டு அந்தரத்து ஒரு பழம் கொள்ளுவீர் என்பர் அந்த
வண்டர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#3
உம்பர் வான் அமுது அனைய சொற்களால் பெரியோர் உரைத்த வாய்மைகளை நாடி
 ஓதுகின்றார்-தமைக் கண்டு அவமதித்து எதிரில் ஒதி போல நிற்பதும் அலால்
கம்பர் வாய் இவர் வாய்க் கதைப்பு என்பர் சிறு கரும் காக்கை வாய்க் கத்தல் இவர் வாய்க்
 கத்தலில் சிறிது என்பர் சூடு ஏறு நெய் ஒரு கலம் கொள்ளவேண்டும் என்பர்
இம்பர் நாம் கேட்ட கதை இது என்பர் அன்றியும் இவர்க்கு ஏது தெரியும் என்பர்
 இவை எலாம் எவனோ ஓர் வம்பனாம் வீணன் முன் இட்ட கட்டு என்பர் அந்த
வம்பர் வாய் அற ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#4
கல்லையும் உருக்கலாம் நார் உரித்திடலாம் கனிந்த கனியாச் செய்யலாம்
 கடு விடமும் உண்ணலாம் அமுது ஆக்கலாம் கொடும் கரடி புலி சிங்கம் முதலா
வெல்லும் மிருகங்களையும் வசமாக்கலாம் அன்றி வித்தையும் கற்பிக்கலாம்
 மிக்க வாழைத்தண்டை விறகு ஆக்கலாம் மணலை மேவு தேர் வடம் ஆக்கலாம்
இல்லை ஒரு தெய்வம் வேறு இல்லை எம்-பால் இன்பம் ஈகின்ற பெண்கள் குறியே
 எங்கள் குல_தெய்வம் எனும் மூடரைத் தேற்ற எனில் எத்துணையும் அரிதரிது காண்
வல்லை அவர் உணர்வு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#5
படி அளவு சாம்பலைப் பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணைப்
 பழமோ எனக் கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர்
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார்
 பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன்
செடி அளவு ஊத்தை வாய்ப் பல் அழுக்கு எல்லாம் தெரிந்திடக் காட்டி நகை-தான்
 செய்து வளையாப் பெரும் செம்மரத் துண்டு போல் செம்மாப்பர் அவர் வாய் மதம்
மடி அளவதா ஒரு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#6
பெண் கொண்ட சுகம்-அதே கண்கண்ட பலன் இது பிடிக்க அறியாது சிலர் தாம்
 பேர் ஊர் இலாத ஒரு வெறுவெளியிலே சுகம் பெறவே விரும்பி வீணில்
பண் கொண்ட உடல் வெளுத்து உள்ளே நரம்பு எலாம் பசை அற்று மேல் எழும்பப்
 பட்டினிகிடந்து சாகின்றார்கள் ஈது என்ன பாவம் இவர் உண்மை அறியார்
கண் கொண்ட குருடரே என்று வாய்ப் பல் எலாங் காட்டிச் சிரித்து நீண்ட
 கழுமரக் கட்டை போல் நிற்பார்கள் ஐய இக் கயவர் வாய் மதம் முழுதுமே
மண் கொண்டுபோக ஓர் மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#7
திருத்தம்_உடையோர் கருணையால் இந்த உலகில் தியங்குவீர் அழியாச் சுகம்
 சேர் உலகமாம் பரம பதம்-அதனை அடையும் நெறி சேர வாருங்கள் என்றால்
இருத்து இனிய சுவை உணவு வேண்டும் அணி ஆடை தரும் இடம் வேண்டும் இவைகள் எல்லாம்
 இல்லை ஆயினும் இரவு_பகல் என்பது அறியாமல் இறுகப் பிடித்து அணைக்கப்
பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ
 பேசிடீர் அப் பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார்
வருத்தும் அவர் உறவு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#8
பேதை உலகீர் விரதம் ஏது தவம் ஏது வீண் பேச்சு இவை எலாம் வேதனாம்
 பித்தன் வாய்ப் பித்து ஏறு கத்து நூல் கத்திய பெரும் புரட்டு ஆகும் அல்லால்
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை
 உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும்
மேதை உணவு ஆதி வேண்டுவ எலாம் உண்டு நீர் விரை மலர்த் தொடை ஆதியா
 வேண்டுவ எலாம் கொண்டு மேடை மேல் பெண்களொடு விளையாடுவீர்கள் என்பார்
வாதை அவர் சார்பு அற மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#9
ஈனம் பழுத்த மன வாதை அற நின் அருளை எண்ணி நல்லோர்கள் ஒரு பால்
 இறைவ நின் தோத்திரம் இயம்பி இரு கண் நீர் இறைப்ப அது கண்டு நின்று
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே
 ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ
ஊனம் குழித்த கண்ணாம் என்பர் உலகத்தில் உயர் பெண்டு சாக்கொடுத்த
 ஒருவன் முகம் என்ன இவர் முகம் வாடுகின்றது என உளறுவார் வாய் அடங்க
மானம் பழுத்திடு மருந்து அருள்க தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#10
கற்பவை எலாம் கற்று உணர்ந்த பெரியோர்-தமைக் காண்பதே அருமை அருமை
 கற்ப_தரு மிடியன் இவன் இடை அடைந்தால் எனக் கருணையால் அவர் வலிய வந்து
இல் புறன் இருப்ப அது கண்டும் அந்தோ கடிது எழுந்து போய்த் தொழுது தங்கட்கு
 இயல் உறுதி வேண்டாது கண் கெட்ட குருடர் போல் ஏமாந்திருப்பர் இவர்-தாம்
பொற்பின் அறு_சுவை அறியும் அறிவு_உடையர் அன்று மேல் புல் ஆதி உணும் உயிர்களும்
 போன்றிடார் இவர்களைக் கூரை போய்ப் பாழாம் புறச் சுவர் எனப் புகலலாம்
வற்புறும்படி தரும வழி ஓங்கு தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#11
மெய் ஓர் தினைத்தனையும் அறிகிலார் பொய்_கதை விளம்ப எனில் இ உலகிலோ
 மேல்_உலகில் ஏறுகினும் அஞ்சாது மொழிவர் தெரு மேவு மண் எனினும் உதவக்
கையோ மனத்தையும் விடுக்க இசையார்கள் கொலை களவு கள் காமம் முதலாக்
 கண்ட தீமைகள் அன்றி நன்மை என்பதனை ஒரு கனவிலும் கண்டு அறிகிலார்
ஐயோ முனிவர்-தமை விதிப்படி படைத்த விதி அங்கை தாம் கங்கை என்னும்
 ஆற்றில் குளிக்கினும் தீ மூழ்கி எழினும் அ அசுத்தம் நீங்காது கண்டாய்
மை ஓர் அணுத்துணையும் மேவுறாத் தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

#12
இளவேனில் மாலையாய்க் குளிர் சோலையாய் மலர் இலஞ்சி பூம் பொய்கை அருகாய்
 ஏற்ற சந்திரகாந்த மேடையாய் அதன் மேல் இலங்கும் அரமிய அணையுமாய்த்
தளவேயும் மல்லிகைப் பந்தராய்ப் பால் போல் தழைத்திடும் நிலாக் காலமாய்த்
 தனி இளந்தென்றலாய் நிறை நரம்பு உள வீணை-தன் இசைப் பாடல் இடமாய்
களவே கலந்த கற்பு உடைய மடவரல் புடை கலந்த நய வார்த்தை உடனாய்க்
 களி கொள இருந்தவர்கள் கண்ட சுகம் நின் அடிக் கழல் நிழல் சுகம் நிகருமே
வள வேலை சூழ் உலகு புகழ்கின்ற தவ சிகாமணி உலக நாத வள்ளல்
 மகிழ வரு வேளூரில் அன்பர் பவ ரோகம் அற வளர் வைத்தியநாதனே

@16. (7).சிவபெருமான் தனித் திருஅலங்கல்

#1
மையல் அழகீர் ஊர் ஒற்றிவைத்தீர் உளவோ மனை என்றேன்
கையில் நிறைந்த தனத்தினும் தம் கண்ணின் நிறைந்த கணவனையே
மெய்யின் விழைவார் ஒரு மனையோ விளம்பின் மனையும் மிகப் பலவாம்
எய்யில் இடையாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடி

#2
சோடு இல்லை மேல் வெள்ளைச் சொக்காய் இலை நல்ல சோமன் இல்லை
பாடு இல்லை கையில் பணம் இல்லை தேகப் பருமன் இல்லை
வீடு இல்லை யாதொரு வீறாப்பும் இல்லை விவாகம்-அது
நாடில்லை நீ நெஞ்சமே எந்த ஆற்றினில் நண்ணினையே

#3
வன் மூட்டைப்பூச்சியும் புன் சீலைப்பேனும் தம் வாய்க் கொள்ளியால்
என் மூட்டைத் தேகம் சுறுக்கிடவே சுட்டு இரா முழுதும்
தொன் மூட்டையினும் துணியினும் பாயினும் சூழ்கின்றது ஓர்
பொன் மூட்டை வேண்டி என் செய்கேன் அருள் முக்கண் புண்ணியனே.

#4
மான் முடி மேலும் கமலத்தான் முடி மேலும் தேவர்_
கோன் முடி மேலும் போய்க் குலாவுமே வான் முடி நீர்
ஊர்ந்து வலம்செய்து ஒழுகும் ஒற்றியூர்த் தியாகரை நாம்
சார்ந்து வலம்செய் கால்கள் தாம்.

#5
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலாச் சுகமாம்
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கு ஓர்
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மன_குறிப்பு அறியேன்
சேறு வேண்டிய கயப் பணைக் கடல் சார் திகழும் ஒற்றியூர்ச் சிவ_பரஞ்சுடரே.

#6
ஆதி மலை அனாதி மலை அன்பு மலை எங்கும் ஆன மலை ஞான மலை ஆனந்த_மலை வான்
ஜோதி மலை துரிய மலை துரிய முடிக்கு அப்பால் தோன்றும் மலை தோன்றாத சூதான மலை வெண்
பூதி மலை சுத்த அனுபூதி மலை எல்லாம் பூத்த மலை வல்லி எனப் புகழும் மலை-தனை ஓர்
பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையைக் கிழமலையாய்ப் பகருவது என் உலகே

#7
சாக்கியனார் எறிந்த சிலை சகித்த மலை சித்தசாந்தர் உளம் சார்ந்து ஓங்கித் தனித்த மலை சபையில்
தூக்கிய காலொடு விளங்கும் தூய மலை வேதம் சொன்ன மலை சொல் இறந்த துரிய நடு மலை வான்
ஆக்கி அளித்து அழிக்கும் மலை அழியாத மலை நல் அன்பருக்கு இன்பம் தரும் ஓர் அற்புதப் பொன்_மலை நல்
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையைக் கிழமலையாய்ப் பகருவது என் உலகே

#8
ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலாப்
பேறு விளங்க உளம் பெற்றது-மன் கூறுகின்ற
ஒன்றிரண்டு தாறு புடை ஓங்கும் பழமலையார்
மின் திரண்டு நின்ற சடை மேல்

#9
திரு விளங்கச் சிவயோக சித்தி எலாம் விளங்கச் சிவஞான நிலை விளங்கச் சிவாநுபவம் விளங்கத்
தெரு விளங்கு திரு_தில்லைத் திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம்
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு அருணகிரி விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே

#10
இறகு எடுத்த அமணர் குலம் வேரறுத்த சொக்கே ஈது என்ன ஞாயம்
அறுகு அடுத்த சடை முடி மேல் மண் எடுக்க மாட்டாமல் அடிபட்டையோ
பிறகு எடுத்தீர் வளையல் விற்றீர் சொல் கேளாப் பிள்ளைகளைப் பெற்ற தோஷம்
விறகு எடுத்தீர் என் செய்வீர் விதிவசம்-தான் யாவரையும் விடாது தானே

#11
சச்சிதாநந்த சிற்சபையில் நாடகம்
பச்சிதாம் திரு_உருப் பாவை நோக்கிட
மெச்சிதாகாரமா விளைப்பர் மெல் அடி
உச்சி தாழ்குவர் நமக்கு_உடையர் நெஞ்சமே

#12
உருத்திரன் திருமால் அயன் ஒப்ப முக்குணமாய்
இருத்தல் இன்றி அக் குணங்களை என்றும் ஆண்டருளும்
கருத்தன் ஆகையில் குணேசன் அக் குணவிகாரத்தில்
பொருத்தம்_இன்மையன் ஆகையால் புகல் குணரகிதன்

#13
களங்க அ குணம் கடந்து இருத்தலில் குணாதீதன்
வளம் கொளத் தகும் உலகு எலாம் மருவி நிற்றலினால்
விளங்கு விச்சுவவியாபி இ விசுவத்தை யாண்டு
துளங்குறா நலம் தோற்றலின் விச்சுவகருத்தன்

#14
வெய்யனாய் உலகு அழித்தலின் விசுவசங்காரி
பைய மேலெனப்படுவன பலவற்றின் மேலாம்
ஐயன் ஆதலின் பராபரனாம் எனப்பட்ட
செய்யன் ஆகிய சிவபிரான் ஒருவன் உண்டு அமரீர்

#15
உய்வதாம் இது நம் குரு ஆணை ஒன்று உரைப்பேன்
சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடித் தலத்தும்
நைவது இன்றி ஆங்கு அது அதுவாய் அது நமது
தெய்வம் ஆகிய சிவ_பரம்பொருள் எனத் தெளிவீர்

#16
உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேல் இலை உண்ணவோ உணவுக்கும் வழி இலை
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இலை பாரில் நல்லவர்-பால் சென்று பிச்சை-தான்
எடுக்கவோ திடம் இல்லை என்-பால் உனக்கு இரக்கம் என்பதும் இல்லை உயிரை-தான்
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் வெண் பிறைச் சடை வித்தக வள்ளலே

#17
நாராயணனும் நான்முகனும் நயந்து வியக்க நிற்கின்றேன்
ஏர் ஆர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை இயம்புகவே.

#18
பிறந்தேற்கு என்றும் இறவாது பிறவாது ஓங்கும் பெருமை தந்து
சிறந்தே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
திறம் தேர் முனிவர் தேவர் எலாம் தேர்ந்து நயப்ப நிற்கின்றேன்
அறம் தேர் உலகில் இனி அடியேன் செய்யும் பணியை அருளுகவே

#19
சத்திமான் என்பர் நின்றன்னை ஐயனே
பத்திமான்-தனக்கு அலால் பகர்வது எங்ஙனே.

#20
இ மை அறை அனைய ஏசு ஊர மாதருமா
இம்மை உமை இம்மை ஐயோ என் செய்த தம்மை மதன்
மாமாமாமாமாமா மாமாமாமாமாமா
மாமாமாமாமாமாமா

#21
தத்தா தனத் தத்தைத்தா என்று அரங்கன் தனி நடிப் பா
தத்தா தன் அத்தத்தைத் தா என்று அரங்கன் தனி நடிப் பா
தம் தா தன் அத்தத்தைத் தா என்று அரங்கன் தனி நடிப் பா
தத்து ஆதனத்தத்தைத் தா என்று அரங்கு அன்று அனம் சொல்லுமே
**. திருமால் திருப் பாசுரங்கள்

@17 (1).திவ்வியநாம சங்கீர்த்தனம்

#1
காராய வண்ண மணி வண்ண கண்ண கன சங்கு சக்ரதர நீள்
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே
தாராய வாழ்வு தரும் நெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம்
நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே.

@18. (2).இராமநாமப் பதிகம்

#1
திரு_மகள் எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் செழும் கனியே கொழும் பாகே தேனே தெய்வத்
தரு_மகனைக் காத்து அருளக் கரத்தே வென்றித் தனு எடுத்த ஒரு முதலே தருமப் பேறே
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின்
மரு மலர்ப் பொன்_அடி வழுத்தும் சிறியேன் அந்தோ மனம் தளர்ந்தேன் அறிந்தும் அருள் வழங்கிலாயே.

#2
கலை_கடலே கருணை நெடும் கடலே கானம் கடத்த தடம் கடலே என் கருத்தே ஞான
மலை-கண் எழும் சுடரே வான் சுடரே அன்பர் மனத்து ஒளிரும் சுயம் சுடரே மணியே வானோர்
தலைக் கண்ணுறு மகுட சிகாமணியே வாய்மைத் தசரதன்-தன் குல_மணியே தமியேன் உள்ள
நிலைக் கண்ணுறும் ஸ்ரீராம வள்ளலே என் நிலை அறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே.

#3
மண் ஆளாநின்றவர்-தம் வாழ்வு வேண்டேன் மற்றவர் போல் பற்று அடைந்து மாள வேண்டேன்
விண் ஆளாநின்ற ஒரு மேன்மை வேண்டேன் வித்தக நின் திரு_அருளே வேண்டி நின்றேன்
புண் ஆளாநின்ற மனம்_உடையேன் செய்த பொய் அனைத்தும் திருவுளத்தே பொறுப்பாய் அன்றிக்
கண்ணாளா சுடர்க் கமலக் கண்ணா என்னைக் கைவிடில் என் செய்வேனே கடையனேனே.

#4
தெவ்_வினையார் அரக்கர் குலம் செற்ற வெற்றிச் சிங்கமே எங்கள் குல_தெய்வமேயோ
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடயக் காட்டில்
இ வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க்கு இலக்கு ஆனேன் துணை ஒன்றும் இல்லேன் அந்தோ
செய் வினை ஒன்று அறியேன் இங்கு என்னை எந்தாய் திருவுளத்தில் சேர்த்திலையேல் செய்வது என்னே.

#5
வான் வண்ணக் கரு முகிலே மழையே நீல மணி வண்ணக் கொழும் சுடரே மருந்தே வானத்
தேன் வண்ணச் செழும் சுவையே ராம நாமத் தெய்வமே நின் புகழைத் தெளிந்தே ஓதா
ஊன் வண்ணப் புலை வாயார்-இடத்தே சென்று ஆங்கு உழைக்கின்றேன் செய் வகை ஒன்று உணரேன் அந்தோ
கான் வண்ணக் குடும்பத்திற்கு இலக்கா என்னைக் காட்டினையே என்னே நின் கருணை ஈதோ.

#6
பொன்_உடையார் வாயிலில் போய் வீணே காலம் போக்குகின்றேன் இ உலகப் புணர்ப்பை வேண்டி
என்னுடையாய் நின் அடியை மறந்தேன் அந்தோ என் செய்கேன் என் செய்கேன் ஏழையேன் நான்
பின்_உடையேன் பிழை_உடையேன் அல்லால் உன்றன் பேர்_அருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
உன்னுடைய திருவுளத்து என் நினைதியோ என் ஒரு முதல்வா ஸ்ரீராமா உணர்கிலேனே.

#7
அறம் பழுக்கும் தருவே என் குருவே என்றன் ஆர்_உயிருக்கு ஒரு துணையே அரசே பூவை
நிறம் பழுக்க அழகு ஒழுகும் வடிவக் குன்றே நெடும் கடலுக்கு அணை அளித்த நிலையே வெய்ய
மறம் பழுக்கும் இலங்கை இராவணனைப் பண்டு ஓர் வாளினால் பணிகொண்ட மணியே வாய்மைத்
திறம் பழுக்கும் ஸ்ரீராம வள்ளலே நின் திரு_அருளே அன்றி மற்று ஓர் செயல் இலேனே.

#8
கல் ஆய வன்_மனத்தர்-தம்பால் சென்றே கண் கலக்கம்கொள்கின்றேன் கவலை வாழ்வை
எல்லாம் உள் இருந்து அறிந்தாய் அன்றோ சற்றும் இரங்கிலை எம் பெருமானே என்னே என்னே
பொல்லாத வெவ் வினையேன் எனினும் என்னைப் புண்ணியனே புரப்பது அருள் புகழ்ச்சி அன்றோ
அல் ஆர்ந்த துயர்_கடல்-நின்று எடுத்திடாயேல் ஆற்றேன் நான் பழி நின்-பால் ஆக்குவேனே.

#9
மை ஆன நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே மனம் தளர்ந்தேன் வருந்துகின்ற வருத்தம் எல்லாம்
ஐயா என் உளத்து அமர்ந்தாய் நீ-தான் சற்றும் அறியாயோ அறியாயேல் அறிவார் யாரே
பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப் புறம்விடுத்தல் அழகேயோ பொருளா எண்ணி
மெய்யா என்றனை அ நாள் ஆண்டாய் இ நாள் வெறுத்தனையேல் எங்கே யான் மேவுவேனே.

#10
கூறுவதோர் குணம் இல்லாக் கொடிதாம் செல்வக் குருட்டு_அறிவோர் இடைப்படும் என் குறைகள் எல்லாம்
ஆறுவதோர் வழி காணேன் அந்தோ அந்தோ அவலம் எனும் கரும்_கடலில் அழுந்துகின்றேன்
ஏறுவதோர் வகை அறியேன் எந்தாய் எந்தாய் ஏற்றுகின்றோர் நின்னை அன்றி இல்லேன் என்னைச்
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தைத் தெரியேனே சிறியனேனே.

@19. (3).வீரராகவர் போற்றித் திருப்பஞ்சகம்

#1
தண் அமர் மதி போல் சாந்தம் தழைத்த சத்துவனே போற்றி
வண்ண மா மணியே போற்றி மணி வண்ணத் தேவா போற்றி
அண்ணலே எவ்வுளூரில் அமர்ந்து அருள் ஆதி போற்றி
விண்ணவர் முதல்வா போற்றி வீரராகவனே போற்றி.

#2
பாண்டவர் தூதனாகப் பலித்து அருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்து மா நிதியே போற்றி
தூண்டல் இல்லாமல் ஓங்கும் ஜோதி நல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி.

#3
மேதினி புரக்கும் வேந்தர் வீறு எலாம் நினதே போற்றி
கோது இலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி
ஓதிய எவ்வுளூரில் உறைந்து அருள் புரிவாய் போற்றி
வேதியன்-தன்னை ஈன்ற வீரராகவனே போற்றி.

#4
இளம் கொடி-தனைக் கொண்டு ஏகும் இராவணன்-தனை அழித்தே
களங்கம்_இல் விபீடணர்க்குக் கன அரசு அளித்தாய் போற்றி
துளங்கும் மா தவத்தோர் உற்ற துயர் எலாம் தவிர்த்தாய் போற்றி
விளங்கும் நல் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி.

#5
அற்புதத் திருவை மார்பில் அணைத்த பேர்_அழகா போற்றி
பொற்பு உறு திகிரி சங்கு பொருந்து கைப் புனிதா போற்றி
வற்புறு பிணி தீர்த்து என்னை மகிழ்வித்த வரதா போற்றி
வெற்பு உயர் எவ்வுளூர் வாழ் வீரராகவனே போற்றி.
**. 5.அம்மை திருப் பாசுரங்கள்

@20 (1) பெரியநாயகியார் ஸ்தோத்திரம்

#1
உரிய நாயகி ஓங்கு அதிகைப் பதித்
துரிய நாயகி தூய வீரட்டற்கே
பிரிய நாயகி பேர்_அருள் நாயகி
பெரியநாயகி பெற்றியைப் பேசுவாம்

#2
உலகம் தழைக்க உயிர் தழைக்க உணர்வு தழைக்க ஒளி தழைக்க
 உருவம் தழைத்த பசும்_கொடியே உள்ளத்து இனிக்கும் தெள் அமுதே
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வத் திருவே கலைக் குருவே
 சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன
 வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே
அலகம் தழைக்கும் திரு_வதிகை ஐயர் விரும்பும் மெய் உறவே
 அரிய பெரியநாயகிப் பெண் அரசே என்னை ஆண்டு அருளே

#3
தன் நேர் அறியாப் பர வெளியில் சத்தாம் சுத்த அநுபவத்தைச்
 சார்ந்து நின்ற பெரியவர்க்கும் தாயே எமக்குத் தனித் தாயே
மின்னே மின் ஏர் இடைப் பிடியே விளங்கும் இதய_மலர் அனமே
 வேதம் புகலும் பசுங்கிளியே விமலக் குயிலே இள மயிலே
பொன்னே எல்லாம்_வல்ல திரிபுரையே பரையே பூரணமே
 புனிதமான புண்ணியமே பொற்பே கற்பகப்பூவே
அன்னே முன்னே என் நேயத்து அமர்ந்த அதிகை அருள் சிவையே
 அரிய பெரியநாயகிப் பெண் அரசே என்னை ஆண்டு அருளே

@21. (2) இரேணுகை தோத்திரம்

#1
சீர் வளர் மதியும் திரு வளர் வாழ்க்கைச் செல்வமும் கல்வியும் பொறையும்
பார் வளர் திறனும் பயன் வளர் பரிசும் பத்தியும் எனக்கு அருள் பரிந்தே
வார் வளர் தனத்தாய் மரு வளர் குழலாய் மணி வளர் அணி மலர் முகத்தாய்
ஏர் வளர் குணத்தாய் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

#2
உவந்து ஒரு காசும் உதவிடாக் கொடிய உலுத்தர்-தம் கடை-தொறும் ஓடி
அவம்-தனில் அலையா வகை எனக்கு உன்றன் அகம் மலர்ந்து அருளுதல் வேண்டும்
நவம் தரு மதியம் நிவந்த பூங் கொடியே நலம் தரு நசை மணிக் கோவை
இவந்து ஒளிர் பசும் தோள் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு  ச்

#3
விருந்தினர்-தம்மை உபசரித்திடவும் விரவுறும் உறவினர் மகிழத்
திருந்திய மனத்தால் நன்றி செய்திடவும் சிறியனேற்கு அருளுதல் வேண்டும்
வருந்தி வந்து அடைந்தோர்க்கு அருள்செயும் கருணை_வாரியே வடிவுறு மயிலே
இரும் திசை புகழும் இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

#4
புண்ணியம் புரியும் புனிதர்-தம் சார்பும் புத்திரர் மனைவியே முதலாய்
நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கு அருள் புரிவாய்
விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கு அருள் ஒழுகிய விழியாய்
எண்ணிய அடியர்க்கு இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

#5
மனம் மெலியாமல் பிணியடையாமல் வஞ்சகர்-தமை மருவாமல்
சினம் நிலையாமல் உடல் சலியாமல் சிறியனேன் உற மகிழ்ந்து அருள்வாய்
அனம் மகிழ் நடையாய் அணி துடி இடையாய் அழகுசெய் காஞ்சன உடையாய்
இனம் மகிழ் சென்னை இசை துலுக்காணத்து இரேணுகை எனும் ஒரு திருவே.

@22. (3).இலட்சுமி ஸ்தோத்திரம்
** திருக் கண்ணமங்கை

#1
உலகம் புரக்கும் பெருமான்-தன் உளத்தும் புயத்தும் அமர்ந்து அருளி
 உவகை அளிக்கும் பேர்_இன்ப உருவே எல்லாம் உடையாளே
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே
 தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே
மல கஞ்சுகத்தேற்கு அருள் அளித்த வாழ்வே என் கண்மணியே என்
 வருத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே ஞான மணி_விளக்கே
சல கந்தரம் போல் கருணை பொழி தடம் கண் திருவே கணமங்கைத்
 தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தருவாயே

@23 (4) சரஸ்வதி ஸ்தோத்திரம்

#1
அன்பர்-பால் நீங்கா என் அம்மையே தாமரை மேல்
பொன் பொருவு மேனி அயன் பூவின் மன் பெரிய
வாக்கு இறைவி நின் தாள்_மலர்ச் சரணம் போந்தேனைக்
காக்கக் கடன் உனக்கே காண்.
** திருஞானசம்பந்தர் திருப் பாசுரங்கள்

@24. (1). சமரச சாநுப வாநுக்கிரக அருட்குரு ஸ்தோத்திரம்

#1
உலகியலின் உறு மயலின் அடைவு பெறும் எனது இதயம் ஒளி பெற விளங்கு சுடரே
உதய நிறை_மதி அமுத உணவு பெற நிலவு சிவயோக நிலை அருளும் மலையே
உனது செயல் எனது செயல் உனது உடைமை எனது உடைமை உணர் என உணர்த்தும் நிறைவே
உள எனவும் இல எனவும் உரை உபய வசனம் அற ஒரு மொழியை உதவு நிதியே
ஒன்றுடன் இரண்டு என விதண்டை இடும் மிண்டரொடும் ஒன்றல் அற நின்ற நிலையே		5
உன்னல் அற உன்னும் நிலை இன்னது என என்னுடைய உள் உணர உள்ளும் மதியே
உன் நிலையும் என் நிலையும் அன்னியம் இலைச் சிறிதும் உற்று அறிதி என்ற பொருளே
உண்மை நெறி அண்மை-தனில் உண்டு உளம் ஒருங்கில் என ஓதும் மெய்ப் போத நெறியே
அலகின் மறை மொழியும் ஒரு பொருளின் முடிபு என எனது அகம் தெளிய அருள்செய்து அருளே
ஐம்பூதம் ஆதி நீ அல்லை அத் தத்துவ அதீத அறிவு என்ற ஒன்றே				10
அத்துவா ஆறையும் அகன்ற நிலை யாது அஃது அதீத நிலை என்ற நன்றே
ஆணை எமது ஆணை எமை அன்றி ஒன்று இல்லை நீ அறிதி என அருளும் முதலே
அன்பு என்பதே சிவம் உணர்ந்திடுக என எனக்கு அறிவித்த சுத்த அறிவே
அத்துவித நிலை துவித நிலை நின்ற பின்னல்-அது அடைந்திடாது என்ற இறையே
ஆனந்தம்-அது சச்சிதானந்தமே இஃது அறிந்து அடைதி என்ற நலமே				15
அட்ட_சித்திகளும் நினது ஏவல்செயும் நீ அவை அவாவி இடல் என்ற மணியே
இலகு பரிபூரண விலாசம் அலது இலை அண்டம் எங்கணும் எனச் சொல் பதியே
இரவு_பகல் அற்ற இடம் அது சகல கேவலம் இரண்டின் நடு என்ற பரமே
இச்சை மன மாயையே கண்டன எலாம் அவை இருந்து காண் என்ற தவமே
யான் பிறர் எனும் பேத நடை விடுத்து என்னோடு இருத்தி என உரைசெய் அரைசே		20
என் களைகணே எனது கண்ணே என் இரு கண் இலங்கு மணியே என் உயிரே
என் உயிர்க்குயிரே என் அறிவே என் அறிவூடு இருந்த சிவமே என் அன்பே
என் தெய்வமே எனது தந்தையே எனை ஈன்று எடுத்த தாயே என் உறவே
என் செல்வமே எனது வாழ்வே என் இன்பமே என் அருள் குரு வடிவமே
கலக மனம் உடைய என் பிழை பொறுத்து ஆட்கொண்ட கருணை அம் கடல் அமுதமே		25
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும்
கைகுவித்து அருகில் நின்று ஏத்த மூ ஆண்டில் களித்து மெய்ப் போதம் உண்டு
கனி மதுரம் ஒழுகு செம் பதிகச் செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில்
கண்டு பொழி அருள் முகில் சம்பந்த வள்ளலாம் கடவுளே ஓத்தூரினில்
கவினுற விளங்கு நல் பணிகள் சிவ புண்ணியக் கதி உலகு அறிந்து உய்யவே			30
கரையற்ற மகிழ்வினொடு செய்து அருள் புரிந்திடும் காட்சியே சிவஞானியாம்
கருத வரும் ஒரு திரு_பெயர் கொள் மணியே எமைக் காப்பது உன் கடன் என்றுமே

@25. (2). ஞானசிகாமணி திருச்சீர் அஷ்டகம்

#1
அணிவாய் உலகத்து அம்புயனும் அளிக்கும் தொழில் பொன் அம்புயனும்
 அறியா அருமைத் திரு_அடியை அடியேம் தரிசித்து அகம் குளிர
மணி வாய்_மலர்ந்து எம்_போல்வார்க்கு மறையுள் முடிபை வகுத்து அருள
 வயங்கும் கருணை வடிவெடுத்து வந்து விளங்கு மணிச் சுடரே
பிணி வாய் பிறவிக்கு ஒரு மருந்தே பேர்_ஆனந்தப் பெரு விருந்தே
 பிறங்கு கதியின் அருள் ஆறே பெரியோர் மகிழ்வின் பெரும் பேறே
திணி வாய் எயில் சூழ் திருவோத்தூர் திகழ அமர்ந்த சிவநெறியே
 தேவர் புகழும் சிவஞானத் தேவே ஞான_சிகாமணியே

#2
நின்-பால் அறிவும் நின் செயலும் நீயும் பிறிது அன்று எமது அருளே
 நெடிய விகற்ப உணர்ச்சி கொடு நின்றாய் அதனால் நேர்ந்திலை காண்
அன்பால் உன்-பால் ஒரு மொழி தந்தனம் இ மொழியால் அறிந்து ஒருங்கி
 அளவா அறிவே உருவாக அமர் என்று உணர்த்தும் அரும் பொருளே
இன்பால் என்-பால் தரு தாயில் இனிய கருணை இரும் கடலே
 இகத்தும் பரத்தும் துணை ஆகி என் உள் இருந்த வியல் நிறைவே
தென் பால் விளங்கும் திருவோத்தூர் திகழும் மதுரச் செழும் கனியே
 தேவர் புகழும் சிவஞானத் தேவே ஞான_சிகாமணியே

#3
அசையும் பரிசாம் தத்துவம் அன்று அவத்தை அகன்ற அறிவே நீ
 ஆகும் அதனை எமது அருளால் அலவாம் என்றே உலவாமல்
இசையும் விகற்ப நிலையை ஒழித்து இருந்தபடியே இருந்து அறி காண்
 என்று என் உணர்வைத் தெளித்த நினக்கு என்னே கைம்மாறு அறியேனே
நசையும் வெறுப்பும் தவிர்ந்தவர்-பால் நண்ணும் துணையே நல் நெறியே
 நான்-தான் என்னல் அறத் திகழ்ந்து நாளும் ஓங்கு நடு நிலையே
திசையும் புவியும் புகழ் ஓத்தூர்ச் சீர் கொள் மதுரச் செழும் பாகே
 தேவர் புகழும் சிவஞானத் தேவே ஞான_சிகாமணியே

#4
கண் மூன்று_உடையான் எவன் அவனே கடவுள் அவன்றன்
 கருணை ஒன்றே கருணை அதனைக் கருதுகின்ற கருத்தே கருத்தாம் அக் கருத்தை
மண் மூன்று அறக் கொண்டு இருந்தவரே வானோர் வணங்கும் அரும் தவராம்

@26. (3) திருஞானசம்பந்தர் ஸ்தோத்திரம்

#1
திருத் தகு சீர்த் தமிழ்_மறைக்கே முதல் ஆய வாக்கு-அதனால் திரு_பேர் கொண்டு
கருத்தர் நமது ஏகம்பக் கடவுளை உள் புறம் கண்டு களிக்கின்றோய் நின்
உருத் தகு சேவடிக்கு அடியேன் ஒரு கோடி தெண்டனிட்டே உரைக்கின்றேன் உன்
கருத்து அறியேன் எனினும் உனைக் கொடு முயல்வேன்-தனை அன்பால் காக்க அன்றே
** 7. குருட்டாட்டம்

@27 (1).குருட்டு மாணாக்கர் புல்லொழுக்கம்

#1
திங்கள் அணி சடை மவுலிச் சிவனே இக் கலி மகிமைத் திறத்தில் இங்கே
எங்கள் உலகியலின் உறு பிரமசரியத்தின் நெறி என் சொல்கேனோ
தங்கள் உபநயன விதிச் சடங்குசெயும் பருவம் இது-தானே என்றால்
உங்களுக்கு இங்கு எது தெரியும் ஒன்பது தொட்டு ஐம்பது மட்டு உண்டு என்பாரே.

#2
இ வகை இங்கு ஆபாச உபநயனம் அல்லாமல் எள்ளில் பாதிச்
செவ்வகையும் பருவம் அதில் இச் சடங்கின் விதி ஒன்றும் செய்யக் காணேன்
உவ்வகையோர் நரைத் தலைக்கு விளக்கெண்ணெய் கிடைத்த பரிசு ஒத்து மேவும்
அவ்வகையோர்-தமைச் சிவனே எவ்வகையோர் எனக் கலியின் அறைவது அன்றே.

#3
பெரும் சவுசம் செய்தல் எனும் சங்கடத்துக்கு என் செய்வோம் பேய் போல் பல் கால்
வரும் குள நீர் கொண்டு அலம்பல் அமையாதே மண் எடுத்து வருந்தித் தேய்த்து
இரும் கரம் ஆசனம் தேய்ந்தோம் என்பர் சில மாணிகள் ஈது என்னேஎன்னே
கரும் கள மா மணியே இக் கலிகால மகிமை என்னால் கழறற்பாற்றோ.

#4
இந்த ஜபம் அடிக்கடி இங்கு ஆராலே செய முடியும் அந்தோ நீரில்
வந்து உயிர்க்கும் உயிர்களுக்கும் சலிப்பாமே முப்பொழுதும் மலி நீராட
நிந்தை என்பது எங்கே நாம் இங்கே வந்து அகப்பட்டோம் நிலையல் தம் ஓர்
இந்திரவில்லாய்ச் சொல்வம் என்பர் சில மாணிகள் மா தேவ என்னே.

#5
சந்தியாவந்தனை யாம் ஏழரைநாள்சனி ஒன்றும் தானே போதும்
சிந்தியாப் பெரும் சுமை வெம் தீயினிடைச் சமிதை கொடு செய்யும் செய்கை
புந்தியால் நினைக்கில் உளம் திடுக்கிடுவது என்பர் சிலர் போதம் மிக்கோர்
வந்தியார் பிட்டு அருந்து மா மணியே கலிகால மகிமை ஈதே.

#6
காகம் போல் நான்கு மறை என்னும் பேர் அவதியை நாம் கதறும் வெப்பம்
மேகம் போல் நெய் குடித்தும் போகாதே என் செய்வோம் ஓவாது ஒத்த
தேகம் எலாம் நோகின்றது எம்மாலே முடியாது ஈது என்பார் சில்லோர்
மோகம் இலாது அளித்த நுதல்_கண் கரும்பே கலிகால முறைமை நன்றே.

#7
முத்து அனைய நகை மாதர் இன்பம் இலை முடிக்கு மலர் முடித்தல் இல்லை
இத்தனையும் அழகுசெய்யும் தாம்பூல தாரணமும் இல்லை அந்தோ
எத்தனை நாள் இவை எல்லாம் இல்லாமல் இருப்பது நாம் என்பார் சில்லோர்
சித்து அனையர் உளம் அமர்ந்த சிவ_கொழுந்தே இது கலியின் சீர்மை தானே.

#8
முருக்கும் நாணரை எங்கே பொன் அரைநாண் வேண்டி இவண் முயல்கின்றார்க்கு
இருக்கன் மான் தோல் உடுக்கை எங்கே பொன் சரிகை உடை ஏற்கின்றார்க்கு
விருக்கம் கோல் என்பு அடு நெடும் பொன் சித்திரக் கோல் விழைகின்றோர்-பால்
கருக்கு அணி கண்டத்தோய் இக் கலிகால மாணிகள் சீர் நவிலற்பாற்றோ.

#9
இந்த மட்டும் போதும் இனி இல்_ஒழுக்கம் சொல்லும் என இசைக்கின்றோரும்
வந்த மட்டும் சொல்வம் அன்றி வாராது நிறுத்தும் என வகுக்கின்றோரும்
எந்த மட்டும் நுழைந்தது என்றால் வால் மட்டும் நுழைந்தது என இசைக்கின்றோரும்
சிந்தை மட்டாம் சிவ_கொழுந்தே இக் கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே.

#10
இல்லறத்தார் ஆக எமக்கு இச்சை உமக்கு இச்சை என்ன என்கின்றோரும்
சொல்_அறத்தில் நிற்க இனி முடியாது விடுக எனச் சொல்கின்றோரும்
நல் அறத்தில் நல் அறம் ஒன்று எமக்கு உரையும் சுளுவில் என நவில்கின்றோரும்
செல் அறத்தில் சிவ_கொழுந்தே இக் கலியின் உண்டு சில சீடர்க்குள்ளே.

#11
குருவின் சொல் வழிநின்று பணிபுரிவது எங்கே அக் குருவானோன்-தான்
மருவினிய நற்சொல் மொழிந்திடினும் வளையாத பனைமரம் போல் நிற்பார்
கருவின்-கண்ணே இவர்-தாம் கற்று முடிந்திட்டார் சொல் கபடம் பேசி
உரு அதனின் மிகச் சிறியர் போல் பழிப்பர் தெழிப்பர் நகைத்து உலவுவாரே.

#12
சீர்க் குருவுக்கு உபசாரம்செய்வது எங்கே சிவனே உள் சிரிப்புத் தோன்ற
வேர்க்குருவோ முகக்குருவோ நம் குரு என்று ஏளனமே விரிப்பார் அன்றிப்
பார்க்கு உரிய மறை ஓதுகின்றோர் போல் மெணமெணப் பழிச்சொல் ஓதி
ஊர்க்குருவி போல் கிளைப்பர் மாணிகள் இக் கலிகாலத்து உவப்பாம் அன்றே.

#13
அற்பம்-அதும் சுதந்தரம்-தான் இல்லாமல் இக் குருவுக்கு அடங்கி முன்னே
நிற்பதுவும் இவன் பின்னே நடப்பதுவும் இவன் குறிப்பில் நின்று வேதம்
கற்பதுவும் போலாம் இக் கட்டை எலாம் விட்டு மெள்ளக் கடப்போம் என்பார்
பொன் பொதுவில் நடம் இயற்றும் புனிதா இ மாணிகள்-தம் புதுமை என்னே.

#14
எவ்வாறு இப் பிரமசரியாம் சனியை இழப்போம் என்று இரங்கிநிற்பார்
இவ்வாறு நிகழ்கின்ற மாணி சிலர் நல்லோர் காண் இவ்வாறு அன்றி
ஒவ்வாத கொடும் சொல்லால் குருவை எதிர்க்கின்றோரும் உண்டே பல்லோர்
செவ்வாம்பல் கனி வாய் மா தேவி ஒரு புடையாய் இத் திறம்-தான் என்னே.

@28. (2).குருட்டு ஆசிரியர் புல்லொழுக்கம்

#1
பொய்-அதனை உரைப்பர்கள் இப் பிரமசாரிகள் நெறி-தான் புதிதே முக்கண்
ஐயனே இவர் மீதில் குறை ஒன்றும் இலை இவர்கட்கு அறிவு சாற்றிச்
செய்யும் ஆசிரியர் செயல் உரைக்கில் பிணமும் நின்று சிரிக்கும் மிகச் சிறியர் நின்று
வையும் அவர் சீடர் அவர்க்கு எழு கோடி மடங்கு அதிகம் என்னலாமே.

#2
எய்கின்றான் குரு அம்பால் எறிகின்றான் சீடன் கல் எடுத்து வஞ்சம்
செய்கின்றான் குரு இடித்துச் சிரிக்கின்றான் சீடன் மிகத் தீய சொல்லால்
வைகின்றான் குரு அவனை வலிக்கின்றான் சீடன் நடுவழியில் நின்று
பெய்கின்றான் குரு ஓடிப் பெய்கின்றான் சீடன் என்னோ பிறை_வேய்ந்தோனே.

#3
வன்பு_இடுவார் குரு அவர்-பால் வழக்கிடுவார் சீடர் அயல் மனையை வேண்டித்
துன்பு அடைவார் குருத் தாம் போய்ச் சுகித்திடுவார் சீடர் பின் சுளித்துக் கையால்
முன் படுவார் குரு அவரை மொத்திடுவார் சீடர் இந்த முறைமை அன்றோ
உன்பு_உடையார் கலி மகிமை கண்டாய் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே.

#4
இருந்து உறங்கும் ஆசிரியர் இயல் கண்டே படுத்து உறங்கியிடுவார் சீடர்
கருத் தடம் கண் பெண் முலை மேல் கண்வைப்பர் ஆசிரியர் கண்டு சீடர்
இரும் தடம் கை வைத்திடுவார் ஆசிரியர் சித்திரம் பேசிடுவார் கேட்டு உள்
வருந்தி விளையாடிடுவார் சீடர்கள் முக்கண்ணுடன் என் உளம் கொண்டோயே.

#5
சூதினையே கொண்டு மறை சொல்லுவிப்பர் ஆசிரியர் சூழ்ந்தாரோடு
வாதினையே கொண்டு அதனை வாசிப்பார் மாணாக்கர் வஞ்சம் கொண்டு
காதினையே கொண்ட மணிக் கடுக்கன் இட்ட முகம் அன்றிக் கருணை அன்புப்
போதினையே கொண்ட முகம் இலை இவர்-பால் கலி அன்றே விடை_ஊர்ந்தோயே.
** 3.சாற்றுக் கவிகள்

@29 (1) நிஷ்டானுபூதி உரை

#1
நலம்கொள் சிவயோக மணம் நால் திசையும் மணக்கும்
 ஞான மணம் கந்திக்கும் மோன மணம் நாறும்
விலங்கல்_இல் சித்தாந்த மணம் பரிமளிக்கும் இன்பா
 வேதாந்த மணம் கமழும் வேத மணம் வீசும்
தலம்கொளும் மெய் அத்துவிதத் திருமணமும் பரவும்
 தனி முத்துக்கிருட்டினப் பேர் தங்கிய நம் பிரமம்
வலம்கொளும் நல் நிட்டானுபூதி எனும் நூற்கே
 வாய்_மலர்ந்த உரை எனும் ஓர் மா மலரினிடத்தே.

@30. (2). சிதம்பர புராணப் பதிவு
* காப்பு

#1
சிதம்பர புராணம் இதம்பெறத் திருத்திய
சிதம்பர முனிவன் பதம் பரவியது.

#2
செம்மலர்ச் செம்மலும் திருத்தகு நிறத்தனும்
அ மலர்_கரத்திற்கு அம் மலர்_கடவுளும்
படைத்திடல் முன்னாப் பயனுறு பெரும் தொழில்
நடைத் திறம் மூன்றும் நடாஅய்ப் பிறங்கிய
தத்தம் தலைமையில் தாழ்வு இன்றி ஓங்குபு		5
சித்தம் திறமுறத் திரு_அருள் சார்த்திச்
சின்மய வடிவில் சிதாகாயத்திடைத்
தன் மய இன்பத் தனி நடம்புரியும்
காரண எண்_குணா கார அகண்ட
பூரண பராபர புனித சிற்பர			10
சிவ நிலை இஃது எனத் தெளிவித்து அழியா
நவ நிலை ஞாங்கர் நண்ணிய அனுபவத்
தனிச் சிவஞானம்-தன்னை மூ ஆண்டில்
பனிப்பு அறச் சிவை முலை_பாலொடும் அளாஅய்
ஊட்டிட உண்டு இ உலகு எலாம் தழைப்ப		15
வாட்டம்_இல் அமுத வாய் மலர் மலர்ந்து
தோடு உடை என மறைச் சொல் அமுது அளித்து
நாடு உடைத் தாதையை நயப்பித்து அருளிப்
பற்பல சைவப்பதி-தொறும் அணுகிச்
சொல் பல பதிகச் சுருதிகள் புனைந்து		20
பொன் திரு_தாளமும் புது மணிச் சிவிகையும்
கொற்றவர் புகழ் மணிக் குடையும் சின்னமும்
சுந்தரக் காளமும் சந்த நல் தாரையும்
சிந்தரும் வெண் மணிப் பந்தரும் காசும்
பரம்பரன் அளிக்கப் பண்புடன் பெற்றோன்		25
வரம் பெறு மழவன் மகள் பிணி சவட்டி
மருகல்_இல் வசியன் வல் விடம் தீர்த்து
வரும் நெறி பற்பல மகத்துவம் புரியாக்
கூடலில் தென்னன் கூனும் குற்றமும்
வாடல்_இல் அமணர்-தம் மதமும் வாழ்க்கையும்	30
எளிதினின் முருக்கி இயல்புறும் ஆண்_பனை
அளியுறு பெண்_பனையாகக் காட்டி ஒண்
மயிலையில் என்பினை மங்கையாக்கி உள்
அயர்வு அறு திருமணத்து அடைந்தவர்-தமக்கு எலாம்
பெறல் அரும் சோதிப் பேர்_உரு அளித்து இ		35
வையமும் வானமும் மறையும் சைவமும்
உய்ய ஓங்கிய ஒரு பெரும் குரவன்
ஞானசம்பந்த நாயகன் அருளால்
ஈன சம்பந்தம் எல்லாம் ஒழித்தோன்
நரை வரும் என்று எணி நல் அறிவாளர்		40
இரைவுறு குழவியிடத்தே துறந்தார்
என்னும் நாலடிக்கு இலக்கியம் ஆனவன்
மன்னும் மா தவர் எலாம் வழுத்தும் அரும் தவன்
எல்லா உயிர்க்கும் இதம் செயல் அன்றிப்
பொல்லாமை ஒன்றும் புணராப் புண்ணியன்		45
வாய்மையும் மாண்பும் வயம் பெறு மனனும்
தூய்மையும் தெளிவும் சுற்றமாக் கொண்டோன்
கனவினும் உலகைக் கருதாக் கருத்தினன்
நனவினில் சுழுத்தி நண்ணிய திறத்தோன்
முப்பொருள் திறனும் முழுது உணர் முனிவன்	50
எப்பொருள்-கண்ணும் மெய்ப்பொருள் உணர்ந்தோன்
சிவம் அலாது ஒன்றும் சிந்தைவைத்து அறியான்
பவம் இலா நெறியே பற்றிய நிலையினன்
காமம் வெகுளி மயக்கு எனும் கரிசினை
நாமம் கெட உள் நலிவித்த வித்தகன்		55
துறவரில் துறவன் சுத்த மெய்ஞ்ஞானி
அறவரின் அறவன் அன்பரின் அன்பன்
திகழ் சிவயோகி ஜீவன் முக்தன்
புகழ் இகழ் ஒன்றும் பொருந்தாப் புனிதன்
சிவநூல் முழுதும் தெளிந்த சத்துவன்		60
பவநூல் மறந்தும் பாராத் திறலோன்
என்_போன்றவர்க்கும் இன் அருள் புரிவோன்
தன்_போன்றவர் இலாச் சாந்த வேந்தன்
சைவம் பழுத்த தனித்த அரு நம் குல_
தெய்வமாம் மதுரைச் சிதம்பர தேவன்			65
புண்ணிய சிதம்பர புராணம்-தன்னை
நுண்ணிய அறிவால் நோக்குபு திருத்தம்
ஏர்பெற இயற்றி யாவரும் பயின்று உயப்
பாருறும் அச்சில் பதிப்பித்து அருளிய
உதவியை நினைந்து உளம் உவந்து முப்பொழுதும்	70
பதம் அருள் அவன் அருள் பதம் இறைஞ்சுதுமே.

#3
உலகு எலாம் புகழும் சிதம்பர வரலாறு உயிர் எலாம் உணர்ந்து வீடு அடைவான்
அலகுறா மடல்-கண் எழுதுறா எழுத்தின் அமைவித்த அருள் பெரும் கடலே
இலகு சீர்க் கூடல் மடாலயத்து அமர்ந்த எழில் திரு_ஞானசம்பந்தத்
திலக சற்குருவின் அருள் பெறும் பொருளே சிதம்பர மா தபோநிதியே.

#4
சிதம்பர வரலாறு உலகு எலாம் உணரத் திருத்தி எம்_போன்றவர்-தமக்கும்
இதம் பெறும் அழியாப் பதம் பெற அளித்த இன்பமே என் தனி அன்பே
கதம் பெறு மதங்கள் அதம் பெறப் புரிந்த கவுணியற்கு இனிய உள் களிப்பே
சிதம் பெறு ஞானாமுதம் தரும் மதுரைச் சிதம்பர மா தபோநிதியே.

#5
சத். இறை உயிர்-தான் சத். அசத். ஆகும் தடை மலம் அசத். இவற்றிடை நீ
இத் திறை அபர நோக்கலை பர நோக்கு எய்துதி இறை நிறை உறைவாய்
புத்தி ஈது என என் புத்தியைத் திருத்தும் போத சின்மய ஒளி மணியே
சித்தி எண் வகையும் பெறத் தரு மதுரைச் சிதம்பர மா தபோநிதியே.

#6
மறை நெறிப் பொதுவும் ஆகமச் சிறப்பும் வகுப்பது சிவத்தொடு மருவிக்
குறை நிறைவு அகலக் கூடுதல் இதனைக் குறிப்பு அறக் குறி எனக் குறிக்கக்
கறை மிடற்று ஒளித்துச் சடை முடியோடும் காட்சிதந்து அருள் செழும் கதிரே
சிறை மலம் அகற்றி அருள்தரு மதுரைச் சிதம்பர மா தபோநிதியே.

#7
ஒன்று எனில் இரண்டாம் குறு மயல் அதனால் ஒன்று எனக் குறித்தலும் ஒழித்தே
நின்றனை எனில் நீ நின்றனை அறிதி நெறி இது என்று உணர்த்திய நிறைவே
மன்றில் ஆனந்த வாரி வாய் அமுதம் வாரி உண்டு எழும் செழு முகிலே
தென் திசைக் கணி கொண்டு ஓங்கிய மதுரைச் சிதம்பர மா தபோநிதியே.

@31. (3). தேவநாதபிள்ளை ஸ்தோத்திரங்கள்

#1
இரும்பு உருக்க உலைக்களம்-தோறு உழல்கின்றீர் இரும்பு ஒன்றோ இளகாக் கல்லும்
விரும்பி ஒரு கணத்து உருக்கம் உள ஒன்று கேட்க வளம் மேவு கூடல்
பெரும் புகழான் தேவநாதன் பரனைக் குறித்து அன்பு பிறங்கப் பாடும்
கரும்பு இயைந்த சுவைப் பாட்டில் ஒன்று அவைக்கு முன் பாடிக் காணுவீரே.

@32. (4). முத்துசாமி முதலியார் ஸ்தோத்திரங்கள்

#1
ஒரு வகைப் பொருள் தெரித்து உயவு தீர் மறைகள் நான்கு ஒன்றி வாழ்க
 உயர் அரன் தரும் ஏழு நான்கு-அதாம் ஆகமம் உலகின் மல்க
இரு வகைப் பவம் ஒழித்து இலகும் வெண்_நீற்று இனம் எங்கும் ஓங்க
 இணை_இல் நல் அறம் முன் ஆம் பயன் ஒரு நான்கும் ஈடேறி வெல்க
பொரு வலற்று அரையர் எத்திசையுளும் நீதியால் பொலிக யாரும்
 புகழ் சிவாத் துவித சித்தாந்த மெய்ச் சரணர் எண் புல்க நாளும்
திரு_அருள் பனுவல் சொற்றிடும் அவர்க்கு எண் திரு சேர்க வாதைச்
 செப்பு முத்துச்சுவாமிக் கவிக் குரிசில் சீர் செழிக-மாதோ.

@33. (5). வேதநாயகம் பிள்ளை நீதிநூல்

#1
வளம் கொள் குளத்தூர் அமர்ந்த வேதநாயகன் அருளால் வயங்க முன்_நாள்
உளம்கொள் மனு உரைத்தனன் ஓர் நீதிநூல் அ நூல் பின் உறு நூலாக
துளங்கிடும் அ ஊர் உறை அத் தோன்றல் ஓர் நீதிநூல் சொன்னான் இந்நாள்
விளங்கும் இ நூல் முன்னர் மற்றை நூல் எல்லாம் கிழி படத்தின் வெண்_நூல் அன்றே.
*