திருவருட்பா – பாலகிருஷ்ண பிள்ளை பதிப்பு – ஆறாம் திருமுறை


&6 ஆறாம் திருமுறை

@1 பரசிவ வணக்கம்

#1
திரு விளங்கச் சிவயோக சித்தி எலாம் விளங்கச் சிவ ஞான நிலை விளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெரு விளங்கு திரு_தில்லைத் திரு_சிற்றம்பலத்தே திரு_கூத்து விளங்க ஒளி சிறந்த திரு_விளக்கே
உரு விளங்க உயிர் விளங்க உணர்ச்சி-அது விளங்க உலகம் எலாம் விளங்க அருள் உதவு பெரும் தாயாம்
மரு விளங்கு குழல் வல்லி மகிழ்ந்து ஒரு பால் விளங்க வயங்கு மணிப் பொது விளங்க வளர்ந்த சிவ_கொழுந்தே

@2. திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை

#1
அகர நிலை விளங்கு சத்தர் அனைவருக்கும் அவர்-பால் அமர்ந்த சத்திமாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகர வரும் அண்ட வகை அனைத்தினுக்கும் பிண்டப் பகுதிகள் அங்கு அனைத்தினுக்கும் பதங்கள் அனைத்தினுக்கும்
இகரம் உறும் உயிர் எவைக்கும் கருவிகள் அங்கு எவைக்கும் எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும் முத்தி எவைக்கும்
சிகரம் முதல் சித்தி வகை எவைக்கும் ஒளி வழங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#2
வண்ணம் மிகு பூத வெளி பகுதி வெளி முதலா வகுக்கும் அடி வெளிகள் எலாம் வயங்கு வெளி ஆகி
எண்ணமுறு மா மவுன வெளி ஆகி அதன் மேல் இசைத்த பர வெளி ஆகி இயல் உபய வெளியாய்
அண்ணுறு சிற்பர வெளியாய்த் தற்பரமாம் வெளியாய் அமர்ந்த பெருவெளி ஆகி அருள் இன்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனி இயற்கை உண்மை வெளியான திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#3
சார் பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் தத்துவங்கள் விளக்கம் எலாம் தரு விளக்கம் ஆகி
நேர் ஆதி விளக்கம்-அதாய்ப் பரை விளக்கம் ஆகி நிலைத்த பராபரை விளக்கம் ஆகி அகம் புறமும்
பேர்_ஆசை விளக்கம்-அதாய்ச் சுத்த விளக்கம்-அதாய்ப் பெரு விளக்கம் ஆகி எலாம் பெற்ற விளக்கம்-அதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கை விளக்கம்-அதாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#4
இடம் பெறும் இந்திரிய இன்பம் கரண இன்பம் உலக இன்பம் உயிர் இன்பம் முதல் எய்தும் இன்பம் ஆகித்
தடம் பெறும் ஓர் ஆன்ம இன்பம் தனித்த அறிவு இன்பம் சத்தியப் பேர்_இன்பம் முத்தி இன்பமுமாய் அதன் மேல்
நடம் பெறு மெய்ப்பொருள் இன்பம் நிர்_அதிசய இன்பம் ஞான சித்திப் பெரும் போக நாட்டு அரசு இன்பமுமாய்த்
திடம் பெற ஓங்கிய இயற்கைத் தனி இன்ப மயமாம் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#5
எல்லாம் தான் உடையதுவாய் எல்லாம்_வல்லதுவாய் எல்லாம் தான் ஆனதுவாய் எல்லாம் தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாதாய்த் துரிய வெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடும் கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திரு_சிற்றம்பலம்-தனிலே தெய்வம் ஒன்றே கண்டீர்.

#6
அயர்வு அறு பேர்_அறிவு ஆகி அ அறிவுக்கு அறிவாய் அறிவறிவுள் அறிவாய் ஆங்கு அதனுள் ஓர் அறிவாய்
மயர்வு அறும் ஓர் இயற்கை உண்மைத் தனி அறிவாய்ச் செயற்கை மன்னும் அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்த்
துயர் அறு தாரகம் முதலாய் அ முதற்கு ஓர் முதலாய்த் துரிய நிலை கடந்து அதன் மேல் சுத்த சிவ நிலையாய்
உயர்வுறு சிற்றம்பலத்தே எல்லாம் தாம் ஆகி ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#7
அண்டம் எலாம் பிண்டம் எலாம் உயிர்கள் எலாம் பொருள்கள் ஆன எலாம் இடங்கள் எலாம் நீக்கம் அற நிறைந்தே
கொண்ட எலாம் கொண்ட எலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பு இன்றிக்
கண்டம் எலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண் தகு சிற்றம்பலத்தே எல்லாம்_வல்லவராய் ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#8
பாரொடு நீர் கனல் காற்றா காயம் எனும் பூதப் பகுதி முதல் பகர் நாதப் பகுதி வரையான
ஏர்பெறு தத்துவ உருவாய்த் தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும் அ முடிவு அனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய் நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குண சிற்குணமாய்
ஓர்தரு சன்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#9
இரவி மதி உடுக்கள் முதல் கலைகள் எலாம் தம் ஓர் இலேசம்-அதாய் எண் கடந்தே இலங்கிய பிண்டாண்டம்
பரவு மற்றைப் பொருள்கள் உயிர்த் திரள்கள் முதல் எல்லாம் பகர் அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அப் புறத்தும்
விரவி எங்கும் நீக்கம் அற விளங்கி அந்தம் ஆதி விளம்ப அரிய பேர்_ஒளியாய் அ ஒளிப் பேர்_ஒளியாய்
உரவுறு சின்மாத்திரமாம் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#10
ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம்
பேற்றுறும் ஆன்மானந்தம் பரமானந்தம் சேர் பிரமானந்தம் சாந்தப் பேர்_ஆனந்தத்தோடு
ஏற்றிடும் ஏகானந்தம் அத்துவிதானந்தம் இயன்ற சச்சிதானந்தம் சுத்த சிவானந்த
ஊற்றம்-அதாம் சமரச ஆனந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#11
வகுத்த உயிர் முதல் பலவாம் பொருள்களுக்கும் வடிவம் வண்ண நல முதல் பலவாம் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதல் பலவாம் செயல்களுக்கும் தாமே புகல் கரணம் உபகரணம் கருவி உபகருவி
மிகுந்த உறுப்பு அதிகரணம் காரணம் பல் காலம் விதித்திடு மற்று அவை முழுதும் ஆகி அல்லார் ஆகி
உகப்புறும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#12
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்_இலார் குணங்கள் ஏதும்_இலார் தத்துவங்கள் ஏதும்_இலார் மற்று ஓர்
செயற்கை_இல்லார் பிறப்பு_இல்லார் இறப்பு_இல்லார் யாதும் திரிபு_இல்லார் களங்கம்_இல்லார் தீமை ஒன்றும்_இல்லார்
வியப்புற வேண்டுதல்_இல்லார் வேண்டாமை_இல்லார் மெய்யே மெய் ஆகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபை-தனிலே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

#13
ஒன்றும்_அலார் இரண்டும்_அலார் ஒன்று_இரண்டும் ஆனார் உருவும்_அலார் அருவும்_அலார் உரு_அருவும் ஆனார்
அன்றும்_உளார் இன்றும்_உளார் என்றும்_உளார் தமக்கு ஓர் ஆதி_இலார் அந்தம்_இலார் அரும் பெரும் சோதியினார்
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் யாவும்_இலார் யாவும்_உளார் யாவும்_அலார் யாவும்
ஒன்றுறு தாம் ஆகி நின்றார் திரு_சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்

@3. ஆற்றாமை

#1
எழுவினும் வலிய மனத்தினேன் மலம் சார் ஈயினும் நாயினும் இழிந்தேன்
புழுவினும் சிறியேன் பொய் விழைந்து உழல்வேன் புன்மையேன் புலைத் தொழில் கடையேன்
வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் மாண்பு இலா வஞ்சக நெஞ்சக்
குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#2
கற்ற மேலவர்-தம் உறவினைக் கருதேன் கலகர்-தம் உறவினில் களித்தேன்
உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் உலகியல் போகமே உவந்தேன்
செற்றமே விழையும் சிறு நெறி பிடித்தேன் தெய்வம் ஒன்று எனும் அறிவு அறியேன்
குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#3
கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் கல்_மன குரங்கு_அனேன் கடையேன்
நெடுமை ஆண்_பனை போல் நின்ற வெற்று உடம்பேன் நீசனேன் பாசமே உடையேன்
நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#4
நிலத்திலும் பணத்தும் நீள் விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்
புலத்திலும் புரை சேர் பொறியிலும் மனத்தைப் போக்கி வீண் போது போக்குறுவேன்
நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய நாயினும் கடையனேன் நவையேன்
குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#5
செடி முடிந்து அலையும் மனத்தினேன் துன்பச் செல்லினால் அரிப்புண்ட சிறியேன்
அடி முடி அறியும் ஆசை சற்று அறியேன் அறிந்தவர்-தங்களை அடையேன்
படி முடிவு அழித்துக் கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
கொடி முடிந்திடுவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#6
அரங்கினில் படை கொண்டு உயிர்_கொலை புரியும் அறக் கடையவரினும் கடையேன்
இரங்கில் ஓர்சிறிதும் இரக்கம் உற்று அறியேன் இயலுறு நாசியுள் கிளைத்த
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கு எனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#7
வாட்டமே உடையார்-தங்களைக் காணின் மனம் சிறிது இரக்கமுற்று அறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத் தொழில் புரியேன் அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#8
கலைத் தொழில் அறியேன் கள் உணும் கொடியேன் கறிக்கு உழல் நாயினும் கடையேன்
விலைத் தொழில் உடையேன் மெய் எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன் அசுத்தப்
புலைத் தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
கொலைத் தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#9
பணம்_இலார்க்கு இடுக்கண் புரிந்து உணும் சோற்றுப் பணம் பறித்து உழல்கின்ற படிறேன்
எணம் இலாது அடுத்தார்க்கு உறு பெரும் தீமை இயற்றுவேன் எட்டியே_அனையேன்
மணம் இலா மலரின் பூத்தனன் இரு கால் மாடு எனத் திரிந்து உழல்கின்றேன்
குணம் இலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

#10
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே.

@4. பிறப்பவம் பொறாது பேதுறல்

#1
குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியேன் குறிகளிலும் கொடியன் அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன் வன் மனத்துப் பெரும் பாவி வஞ்ச நெஞ்சப் புலையேன்
நலத்திடை ஓர் அணுவளவும் நண்ணுகிலேன் பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன் பேய்க்கும் மிக இழிந்தேன்
நிலத்திடை நான் ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராஜ நிபுண மணி_விளக்கே.

#2
விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிகப் பெரிதும் சிறியேன்
அளக்க அறியாத் துயர்க் கடலில் விழுந்து நெடும் காலம் அலைந்தலைந்து மெலிந்த துரும்பு-அதனின் மிகத் துரும்பேன்
கிளக்க அறியாக் கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன்
களக்கு அறியாப் புவியிடை நான் ஏன் பிறந்தேன் அந்தோ கருணை நடத்து அரசே நின் கருத்தை அறியேனே.

#3
அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்துத் துன்மார்க்கத்து அரசு செயும் கொடியேன்
குறியாத கொடும் பாவச் சுமை சுமக்கும் திறத்தேன் கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன்
செறியாத மனக் கடையேன் தீமை எலாம் உடையேன் சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன்
எறியாத புவியிடை நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதயம் அறியேன் மன்றில் இனித்த நடத்து இறையே.

#4
இனித்த பழச்சாறு விடுத்து இழித்த மலம் கொளும் ஓர் இழி விலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம் ஒன்றும் இல்லேன்
அனித்த நெறியிடைத் தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த அறக் கடையர்-தமக்கு எல்லாம் அறக் கடையன் ஆனேன்
பனித்த மன_குரங்காட்டிப் பலிக்கு உழலும் கொடியேன் பாதகமும் சூதகமும் பயின்ற பெறும் படிறேன்
தனித்த கடும் குணத்தேன் நான் ஏன் பிறந்தேன் நினது தனிக் கருத்தை அறிந்திலேன் சபைக்கு ஏற்றும் ஒளியே.

#5
ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதம் எலாம் நிறை மனத்தேன் இரக்கம் இலாப் புலையேன்
சீறுகின்ற புலி_அனையேன் சிறு தொழிலே புரிவேன் செய் வகை ஒன்று அறியாத சிறியரினும் சிறியேன்
மாறுகின்ற குணப் பேதை மதி-அதனால் இழிந்தேன் வஞ்சம் எலாம் குடிகொண்ட வாழ்க்கை மிக உடையேன்
வீறுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது மெய்க் கருத்தை அறிந்திலேன் விளங்கு நடத்து அரசே.

#6
அரசர் எலாம் மதித்திடப் பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிகக் கிளைத்தேன் அருள் அறியாக் கடையேன்
புரசமரம் போல் பருத்தேன் எட்டி எனத் தழைத்தேன் புங்கு எனவும் புளி எனவும் மங்கி உதிர்கின்றேன்
பரசும் வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன் பசை அறியாக் கருங்கல்_மனப் பாவிகளில் சிறந்தேன்
விரசு நிலத்து ஏன் பிறந்தேன் நின் கருத்தை அறியேன் வியக்கு மணி மன்று ஓங்கி விளங்கு பரம் பொருளே.

#7
பொருள் அறியேன் பொருள் அறிந்தார் போன்று நடித்து இங்கே பொங்கி வழிந்து உடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
மருள் அறியாத் திருவாளர் உளம் கயக்கத் திரிவேன் வை உண்டும் உழவு உதவா மாடு எனவே தடித்தேன்
வெருள் அறியாக் கொடு மனத்தேன் விழற்கு இறைத்துக் களிப்பேன் வீணர்களில் தலைநின்றேன் விலக்கு அனைத்தும் புரிவேன்
தெருள் அறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடத்தவனே.

#8
தவம் புரியேன் தவம்_புரிந்தார்-தமைப் போல நடித்துத் தருக்குகின்றேன் உணர்ச்சி இலாச் சடம் போல இருந்தேன்
பவம் புரிவேன் கமரினிடைப் பால் கவிழ்க்கும் கடையேன் பயன் அறியா வஞ்ச மனப் பாறை சுமந்து உழல்வேன்
அவம் புரிவேன் அறிவு அறியேன் அன்பு அறியேன் அன்பால் ஐயா நின் அடி_அடைந்தார்க்கு அணுத்துணையும் உதவேன்
நவம் புரியும் உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன் ஞான நடத்து இறையே.

#9
இறையளவும் அறிவு ஒழுக்கத்து இச்சை_இலேன் நரகில் இருந்து உழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறை அளவோ நன்மை எலாம் போக்கில் விட்டுத் தீமை புரிகின்றேன் எரிகின்ற புது நெருப்பில் கொடியேன்
நிறை அளவோ முறை அளவோ நிலை அளவும் தவிர்ந்த நெடுஞ் சால நெஞ்சகத்தேன் நீல விடம் போல்வேன்
கறை அளவா உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது கருத்து அறியேன் கருணை நடம் காட்டுகின்ற குருவே.

#10
காட்டுகின்ற உவர்க் கடல் போல் கலைகளிலும் செல்வக் களிப்பினிலும் சிறந்து மிகக் களித்து நிறைகின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவாப் படும் கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருள் பெருமை ஒருசிறிதும் தெரியேன் அச்சம்_இலேன் நாணம்_இலேன் அடக்கம் ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது குறிப்பு அறியேன் மன்றில் நடம் குலவு குல மணியே.

@5. மாயை வலிக் கழுங்கல்

#1
தாவும் மான் எனக் குதித்துக்கொண்டு ஓடித் தையலார் முலை_தடம் படும் கடையேன்
கூவு காக்கைக்குச் சோற்றில் ஓர் பொருக்கும் கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
ஓவுறாது உழல் ஈ எனப் பல கால் ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
சாவுறா வகைக்கு என் செயக் கடவேன் தந்தையே எனைத் தாங்கிக்கொண்டு அருளே.

#2
போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் அழியாத்
தேகம் ஆதியைப் பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன்
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன்
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

#3
விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
வழியைத் தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் மாயமே புரி பேயரில் பெரியேன்
பழியைத் தூர்ப்பதற்கு என் செயக் கடவேன் பரமனே எனைப் பரிந்துகொண்டு அருளே.

#4
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன்
குதத்திலே இழி மலத்தினும் கடையேன் கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன்
சிதத்திலே உறற்கு என் செயக் கடவேன் தெய்வமே எனைச் சேர்த்துக்கொண்டு அருளே.

#5
கொடிய வெம் புலிக் குணத்தினேன் உதவாக் கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த கழுதையேன் அவப் பொழுதையே கழிப்பேன்
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் முழு_மூடரில் பெரியேன்
அடியன் ஆவதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

#6
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன்
ஏங்குகின்றதே தொழில் எனப் பிடித்தேன் இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால்
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் வஞ்ச நெஞ்சினால் பஞ்சு எனப் பறந்தேன்
ஓங்குகின்றதற்கு என் செயக் கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே.

#7
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன்
பருத்த ஊனொடு மலம் உணத் திரியும் பன்றி போன்று_உளேன் நன்றி ஒன்று அறியேன்
கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாயினில் கடையனேன் அருட்குப்
பொருத்தன் ஆவதற்கு என் செயக் கடவேன் புண்ணியா எனைப் புரிந்துகொண்டு அருளே.

#8
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிரச் சூழ் கலோ எனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோடு உழல்வேன் சந்தை நாய் எனப் பந்தமுற்று அலைவேன்
திருக்கு எலாம் பெறு வெருக்கு எனப் புகுவேன் தீயனேன் பெரும் பேயனேன் உளம்-தான்
உருக்கல் ஆகுதற்கு என் செயக் கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே.

#9
கானமே உழல் விலங்கினில் கடையேன் காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன்
மானம் மேலிடச் சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன்
ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன்
ஞானம் மேவுதற்கு என் செயக் கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே.

#10
இருளையே ஒளி என மதித்து இருந்தேன் இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன்
மருளையே தரும் மன_குரங்கோடும் வனம் எலாம் சுழன்று இனம் எனத் திரிந்தேன்
பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன் பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே.

@6. முறையீடு

#1
மருந்து அறியேன் மணி அறியேன் மந்திரம் ஒன்று அறியேன் மதி அறியேன் விதி அறியேன் வாழ்க்கை நிலை அறியேன்
திருந்த அறியேன் திரு_அருளின் செயல் அறியேன் அறம்-தான் செய்து அறியேன் மனம் அடங்கும் திறத்தினில் ஓர் இடத்தே
இருந்து அறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் எந்தை பிரான் மணி மன்றம் எய்த அறிவேனோ
இருந்த திசை சொல அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#2
அகங்காரக் கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன்
நகம் கானம் உறு தவர் போல் நலம் புரிந்தும் அறியேன் நச்சுமரக் கனி போல இச்சை கனிந்து உழல்வேன்
மகம் காணும் புலவர் எலாம் வந்து தொழ நடிக்கும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
இகம் காணத் திரிகின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#3
கற்கும் முறை கற்று அறியேன் கற்பன கற்று அறிந்த கருத்தர் திரு_கூட்டத்தில் களித்து இருக்க அறியேன்
நிற்கும் நிலை நின்று அறியேன் நின்றாரின் நடித்தேன் நெடும் காமப் பெரும் கடலை நீந்தும் வகை அறியேன்
சிற்குண மா மணி மன்றில் திரு_நடனம் புரியும் திரு_அடி என் சென்னி மிசைச் சேர்க்க அறிவேனோ
இல்_குணம் செய்து உழல்கின்றேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#4
தேகம் உறு பூத நிலைத் திறம் சிறிதும் அறியேன் சித்தாந்த நிலை அறியேன் சித்த நிலை அறியேன்
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடைக் கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகம் உறு திரு_நீற்றின் ஒளி விளங்க அசைந்தே அம்பலத்தில் ஆடுகின்ற அடியை அறிவேனோ
ஏக அனுபவம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#5
வேதாந்த நிலை நாடி விரைந்து முயன்று அறியேன் மெய் வகையும் கை வகையும் செய் வகையும் அறியேன்
நாதாந்தத் திரு_வீதி நடந்திடுதற்கு அறியேன் நான் ஆர் என்று அறியேன் எம் கோன் ஆர் என்று அறியேன்
போதாந்தத் திரு_நாடு புக அறியேன் ஞான பூரணாகாயம் எனும் பொதுவை அறிவேனோ
ஏதாம் தீயேன் சரிதம் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#6
கலை முடிவு கண்டு அறியேன் கரணம் எலாம் அடக்கும் கதி அறியேன் கதி அறிந்த கருத்தர்களை அறியேன்
கொலை புலைகள் விடுத்து அறியேன் கோபம் மறுத்து அறியேன் கொடும் காம_கடல் கடக்கும் குறிப்பு அறியேன் குணமாம்
மலை மிசை நின்றிட அறியேன் ஞான நடம் புரியும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
இலை எனும் பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#7
சாதி மதம் சமயம் எனும் சங்கடம் விட்டு அறியேன் சாத்திரச் சேறு ஆடுகின்ற சஞ்சலம் விட்டு அறியேன்
ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியாக் கடல் போல் ஆனந்தப் பெரும் போகத்து அமர்ந்திடவும் அறியேன்
நீதி நெறி நடந்து அறியேன் சோதி மணிப் பொதுவில் நிருத்தம் இடும் ஒருத்தர் திரு_கருத்தை அறிவேனோ
ஏதிலர் சார் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#8
சாகாத தலை அறியேன் வேகாத_காலின் தரம் அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலை அறியேன் மாகாய நிலையும் அறியேன் மெய்ந் நெறி-தனை ஓர் அணுவளவும் அறியேன்
மா காதல் உடைய பெரும் திருவாளர் வழுத்தும் மணி மன்றம்-தனை அடையும் வழியும் அறிவேனோ
ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#9
தத்துவம் என் வசமாகத் தான் செலுத்த அறியேன் சாகாத கல்வி கற்கும் தரம் சிறிதும் அறியேன்
அத்த நிலை சத்த நிலை அறியேன் மெய் அறிவை அறியேன் மெய் அறிந்து அடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்த சிவ சன்மார்க்கத் திரு_பொதுவினிடத்தே தூய நடம் புரிகின்ற ஞாயம் அறிவேனோ
எத்துணையும் குணம் அறியேன் எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

#10
வரை அபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் மரண_பயம் தவிர்த்திடும் சன்மார்க்கம்-அதை அறியேன்
திரை அறு தண் கடல் அறியேன் அக் கடலைக் கடைந்தே தெள் அமுதம் உண அறியேன் சினம் அடக்க அறியேன்
உரை உணர்வு கடந்த திரு_மணி மன்றம்-தனிலே ஒருமை நடம் புரிகின்றார் பெருமை அறிவேனோ
இரையுறு பொய் உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன் யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே.

@7. அடியார் பேறு

#1
அடியார் வருத்தம்-தனைக் கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெரும் கடலார் என்ற பெரியர் வார்த்தை எலாம்
நெடியார்க்கு அரியாய் கொடியேன் என் ஒருவன்-தனையும் நீக்கியதோ
கடியாக் கொடு மா_பாதகன் முன் கண்ட பரிசும் கண்டிலனே.

#2
பை ஆர் பாம்பு கொடியது எனப் பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள்
ஐயா கருணை அளித்தனை என்னளவில் இன்னும் அளித்திலையே
மை ஆர் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்_வினையேன்
நையாநின்றேன் ஐயோ நான் பாம்பில் கொடியன் ஆனேனே.

#3
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிது அளிப்பான்
ஊழை அகற்றும் பெரும் கருணை உடையான் என்பார் உனை ஐயோ
மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும்
ஏழை அடியேன் வருத்தம் கண்டு இருத்தல் அழகோ எம் கோவே.

#4
மருள் நாடு உலகில் கொலை_புரிவார் மனமே கரையாக் கல் என்று
பொருள் நாடிய நின் திரு_வாக்கே புகல அறிந்தேன் என்னளவில்
கருணாநிதி நின் திருவுளமும் கல் என்று உரைக்க அறிந்திலனே
இருள் நாடிய இச் சிறியேனுக்கு இன்னும் இரங்காது இருந்தாயே.

#5
முன்னும் கொடுமை பல புரிந்து முடுகிப் பின்னும் கொடுமை செய
உன்னும் கொடியர்-தமக்கும் அருள் உதவும் கருணை உடையானே
மன்னும் பதமே துணை என்று மதித்து வருந்தும் சிறியேனுக்கு
இன்னும் கருணை புரிந்திலை நான் என்ன கொடுமை செய்தேனோ.

#6
அங்கே அடியர்-தமக்கு எல்லாம் அருளார் அமுதம் அளித்து ஐயோ
இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்-தான் அளிக்க இசைந்தாயேல்
செம் கேழ் இதழிச் சடைக் கனியே சிவமே அடிமைச் சிறு நாயேன்
எங்கே புகுவேன் என் செய்வேன் எவர் என் முகம் பார்த்திடுவாரே.

#7
அளியே அன்பர் அன்பே நல் அமுதே சுத்த அறிவான
வெளியே வெளியில் இன்ப நடம் புரியும் அரசே விதி ஒன்றும்
தெளியேன் தீங்கு பிறர் செயினும் தீங்கு நினையாத் திருவுளம்-தான்
எளியேன் அளவில் நினைக்க ஒருப்படுமோ கருணை எந்தாயே.

#8
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத் தெளிந்து
வாது நினைக்கும் மனக் கடையேன் மகிழ்வுற்று இருந்தேன் என்னளவில்
சூது நினைப்பாய் எனில் யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்
ஏது நினைப்பேன் ஐயோ நான் பாவி உடம்பு ஏன் எடுத்தேனே.

#9
பொது என்று அறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவது அன்றிக்
கதுவென்று அழுங்க நினையா நின் கருணை உளம்-தான் அறிவு என்பது
இது என்று அறியா எனை வருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எது என்று அறிவேன் என் புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.

#10
வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர்-தமையும் வினைத் துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளம்-தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்து இங்கு இருந்தது காண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.

#11
கல்லும் கனியத் திரு_நோக்கம் புரியும் கருணைக் கடலே நான்
அல்லும்_பகலுந் திரு_குறிப்பை எதிர்பார்த்து இங்கே அயர்கின்றேன்
கொல்லும் கொடியார்க்கு உதவுகின்ற குறும்புத் தேவர் மனம் போலச்
சொல்லும் இரங்கா வன்மை கற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.

#12
படி மேல் ஆசை பல வைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்து சுகக்
கொடி மேல் உறச்செய்து அருள்கின்றாய் என்-பால் இரக்கம் கொண்டிலையே
பொடி மேல் அணி நின் அருட்கு இது-தான் அழகோ பொதுவில் நடிக்கும் உன்றன்
அடி மேல் ஆசை அல்லால் வேறு ஆசை ஐயோ அறியேனே.

#13
நாயேன் உலகில் அறிவு வந்த நாள் தொட்டு இந்த நாள் வரையும்
ஏயேன் பிறிதில் உன் குறிப்பே எதிர்பார்த்து இருந்தேன் என்னுடைய
தாயே பொதுவில் நடம் புரி எந்தாயே தயவு தாராயேல்
மாயேன் ஐயோ எது கொண்டு வாழ்ந்து இங்கு இருக்கத் துணிவேனே.

#14
நயத்தால் உனது திரு_அருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை
உய-தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர் உலகத்தே
வயத்தால் எந்த உடம்பு உறுமோ என்ன வருமோ என்கின்ற
பயத்தால் ஐயோ இ உடம்பைச் சுமக்கின்றேன் எம் பரஞ்சுடரே.

#15
இன்பம் மடுத்து உன் அடியர் எலாம் இழியாது ஏறி இருக்கின்றார்
வன்பரிடத்தே பல கால் சென்று அவரோடு உறவு வழங்கி உன்றன்
அன்பர் உறவை விடுத்து உலகில் ஆடிப் பாடி அடுத்த வினைத்
துன்பம் முடுகிச் சுடச்சுடவும் சோறு உண்டு இருக்கத் துணிந்தேனே.

#16
எ நாள் கருணைத் தனி முதல் நீ என்-பால் இரங்கி அருளுதலோ
அ நாள் இ நாள் இ நாள் என்று எண்ணிஎண்ணி அலமந்தேன்
செல் நாள்களில் ஓர் நல் நாளும் திரு_நாள் ஆனது இலை ஐயோ
முன்_நாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே.

#17
எந்த வகை செய்திடில் கருணை எந்தாய் நீ-தான் இரங்குவையோ
அந்த வகையை நான் அறியேன் அறிவிப்பாரும் எனக்கு இல்லை
இந்த வகை இங்கு ஐயோ நான் இருந்தால் பின்னர் என் செய்வேன்
பந்த வகை அற்றவர் உளத்தே நடிக்கும் உண்மைப் பரம் பொருளே.

#18
அடுக்கும் தொண்டர்-தமக்கு எல்லாம் அருள் ஈந்து இங்கே என்னளவில்
கொடுக்கும் தன்மை-தனை ஒளித்தால் ஒளிக்கப்படுமோ குண_குன்றே
தடுக்கும் தடையும் வேறு இல்லை தமியேன்-தனை இத் தாழ்வு அகற்றி
எடுக்கும்துணையும் பிறிது இல்லை ஐயோ இன்னும் இரங்கிலையே.

#19
எல்லாம் உடையாய் நின் செயலே எல்லாம் என்றால் என் செயல்கள்
எல்லாம் நினது செயல் அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல்
வல்லாய் என்னைப் புறம் விடுத்தால் புறத்தும் உன்றன் மயம் அன்றே
நல்லார் எங்கும் சிவமயம் என்று உரைப்பார் எங்கள் நாயகனே.

#20
கூடும் கருணைத் திரு_குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து
வாடும் சிறியேன் வாட்டம் எலாம் தீர்த்து வாழ்வித்திடல் வேண்டும்
பாடும் புகழோய் நினை அல்லால் துணை வேறு இல்லைப் பர வெளியில்
ஆடும் செல்வத் திரு_அடி மேல் ஆணை முக்கால் ஆணை அதே.

@8. ஆன்ம விசாரத் தழுங்கல்

#1
போகமே விழைந்தேன் புலை மனச் சிறியேன் பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன்
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியாக்
காகமே எனப் போய்ப் பிறர்-தமை வருத்திக் களித்த பாதகத் தொழில் கடையேன்
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே.

#2
பூப்பினும் பல கால் மடந்தையர்-தமைப் போய்ப் புணர்ந்த வெம் புலையனேன் விடம் சார்
பாப்பினும் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும்
ஆப்பினும் வலியேன் அறத் தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள்
கூப்பினும் கூப்பாக் கொடும் கையேன் எனினும் கோபியேல் காத்து அருள் எனையே.

#3
விழுத் தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள்
வழுத்தலை அறியேன் மக்களே மனையே வாழ்க்கையே துணை என மதித்துக்
கொழுத்து அலை மனத்துப் புழுத் தலைப் புலையேன் கொக்கு_அனேன் செக்கினைப் பல கால்
இழுத்து அலை எருதேன் உழத்தலே உடையேன் என்னினும் காத்து அருள் எனையே.

#4
புலை விலைக் கடையில் தலை குனித்து அலைந்து பொறுக்கிய சுணங்கு_அனேன் புரத்தில்
தலை_விலை பிடித்துக் கடை_விலை படித்த தயவு இலாச் சழக்கனேன் சழக்கர்
உலைவு இலை எனவே இயக்க வெம் தொழிலில் உழன்றுஉழன்று அழன்றதோர் உளத்தேன்
இலை விலை எனக்கு என்று அகங்கரித்து இருந்தேன் என்னினும் காத்து அருள் எனையே.

#5
கொட்டிலை அடையாப் பட்டி_மாடு_அனையேன் கொட்டைகள் பரப்பி மேல் வனைந்த
கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த கடையனேன் கங்குலும் பகலும்
அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை அற உண்டு குப்பை மேல் போட்ட
நெட்டு இலை_அனையேன் என்னினும் வேறு நினைத்திடேல் காத்து அருள் எனையே.

#6
நேர்_இழையவர்-தம் புணர் முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன் வீணில்
போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியேன் புனை கலை இலர்க்கு ஒரு கலையில்
ஓர் இழை எனினும் கொடுத்திலேன் நீள உடுத்துடுத்து ஊர்-தொறும் திரிந்தேன்
ஏர் இழை விழைந்து பூண்டு உளம் களித்தேன் என்னினும் காத்து அருள் எனையே.

#7
அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் அசடனேன் அறிவு_இலேன் உலகில்
குளத்திலே குளிப்பார் குளிக்க வெம் சிறுநீர்க் குழியிலே குளித்த வெம் கொடியேன்
வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனம்கொண்ட சிறியனேன் மாயைக்
களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் என்னினும் காத்து அருள் எனையே.

#8
தொழுது எலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன் தூய்மை ஒன்று அறியேன்
கழுது எலாம் அனையேன் இழுது எலாம் உணவில் கலந்து உணக் கருதிய கருத்தேன்
பழுது எலாம் புரிந்து பொழுது எலாம் கழித்த பாவியேன் தீமைகள் சிறிதும்
எழுதலாம்படித்து அன்று என மிக உடையேன் என்னினும் காத்து அருள் எனையே.

#9
வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனை கவர் கருத்தினேன் ஓட்டைச்
சட்டியே எனினும் பிறர் கொளத் தரியேன் தயவு_இலேன் சூது எலாம் அடைத்த
பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் பெரியவர் மனம் வெறுக்கச்செய்
எட்டியே மண்ணாங்கட்டியே அனையேன் என்னினும் காத்து அருள் எனையே.

#10
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் என வந்து ஓதிய வறிஞருக்கு ஏதும்
கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பு_இலேன் உலகில் குணம் பெரிது உடைய நல்லோரை
அடுத்திலேன் அடுத்தற்கு ஆசையும் இல்லேன் அவனி மேல் நல்லவன் எனப் பேர்
எடுத்திலேன் எனினும் தெய்வமே துணை என்று இருக்கின்றேன் காத்து அருள் எனையே.

@9. அவா அறுத்தல்

#1
தால வாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம் தக்க முப்போதினும் தனித்தே
சீலம் ஆர் பூசைக் கடன் முடிக்கின்றார் சிறியனேன் தவம் செய்வான் போலே
ஞாலம் மேலவர்க்குக் காட்டி நான் தனித்தே நவிலும் இ நாய் வயிற்றினுக்கே
காலை ஆதிய முப்போதினும் சோற்றுக் கடன் முடித்து இருந்தனன் எந்தாய்.

#2
சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நல் தவம் எலாம் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளி எனப் போம் என்று அறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரம் சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என் செய்வேன் எந்தாய்.

#3
விருப்பு_இலேன் போலக் காட்டினேன் அன்றி விளைவு இலாது ஊண் எலாம் மறுத்த
கருப்பிலே எனினும் கஞ்சி ஆதிகளைக் கருத்து வந்து உண்ணுதற்கு அமையேன்
நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் நீர் இடாத் தயிரிலே நெகிழ்ந்த
பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை பற்றினேன் என் செய்வேன் எந்தாய்.

#4
உறியிலே தயிரைத் திருடி உண்டனன் என்று ஒருவனை உரைப்பது ஓர் வியப்போ
குறியிலே அமைத்த உணவு எலாம் திருடிக் கொண்டுபோய் உண்டனன் பருப்புக்
கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் கறியிலே கலந்த பேர்_ஆசை
வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு வீங்கிட உண்டனன் எந்தாய்.

#5
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த கீரையே விரும்பினேன் வெறும் தண்
நீரையே விரும்பேன் தெங்கு இளங்காயின் நீரையே விரும்பினேன் உணவில்
ஆரையே எனக்கு நிகர் எனப் புகல்வேன் அய்யகோ அடிச் சிறு நாயேன்
பேரையே உரைக்கில் தவம் எலாம் ஓட்டம்பிடிக்குமே என் செய்வேன் எந்தாய்.

#6
பாலிலே கலந்த சோறு எனில் விரைந்தே பத்தியால் ஒரு பெரு வயிற்றுச்
சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தகு பலா மா முதல் பழத்தின்
தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திடத் துணியேன்
வால்_இலேன் இருக்கில் வனத்திலே இருக்க வாய்ப்பு_உளேன் என் செய்வேன் எந்தாய்.

#7
உடம்பு ஒரு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன் பல கால்
கடம் பெறு புளிச்சோறு உண்டு உளே களித்தேன் கட்டி நல் தயிரிலே கலந்த
தடம் பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச்சம்பழ_சோற்றிலே தடித்தேன்
திடம் பெறும் மற்றைச் சித்திர_சோற்றில் செருக்கினேன் என் செய்வேன் எந்தாய்.

#8
மிளகு மேன்மேலும் சேர்த்த பல் உணவில் விருப்பு எலாம் வைத்தனன் உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம் என்று உண்டேன்
இளகிலா மனத்தேன் இனிய பச்சடிசில் எவற்றிலும் இச்சைவைத்து இசைத்தேன்
குளகு உணும் விலங்கின் இலை_கறிக்கு ஆசை கொண்டனன் என் செய்வேன் எந்தாய்.

#9
தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன்
கொண்டுபோய் வயிற்றுக் குழி எலாம் நிரம்பக் கொட்டினேன் குணம் இலாக் கொடியேன்
வண்டு போல் விரைந்து வயல் எலாம் நிரம்ப மலம் கொட்ட ஓடிய புலையேன்
பண்டு போல் பசித்து ஊண் வரு வழி பார்த்த பாவியேன் என் செய்வேன் எந்தாய்.

#10
வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி வைத்தலே துவட்டலில் சுவைகள்
உறுத்தலே முதலா உற்ற பல் உணவை ஒரு மல வயிற்றுப்பை உள்ளே
துறுத்தலே எனக்குத் தொழில் எனத் துணிந்தேன் துணிந்து அரை_கணத்தும் வன் பசியைப்
பொறுத்தலே அறியேன் மலப் புலைக் கூட்டைப் பொறுத்தனன் என் செய்வேன் எந்தாய்.

#11
பருப்பு_இடி அரி வால்_இடிகள் ஆதிகளால் பண்ணிய பண்ணிகாரங்கள்
உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒரு பெரு வயிற்றிலே அடைத்தேன்
கருப் பிடி உலகின் எரு பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
துருப் பிடி இருப்புத் துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய்.

#12
அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடம்-தொறும் அலைந்தே
தடிக் கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்துத் தவம் புரிந்தான் என நடித்தேன்
பொடிக் கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கு அடி புனைய முயன்றிலேன் அறிவில் மூடனேன் என் செய்வேன் எந்தாய்.

#13
உண்டியே விழைந்தேன் எனினும் என்றன்னை உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்ப நின் ஆணை நின்றனக்கே
தொண்டு_உறாதவர் கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணை நினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பது உன் கடன் காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.

@10. தற்சுதந்தரம் இன்மை

#1
இப் பாரில் உடல் ஆவி பொருளும் உன்-பால் கொடுத்தேன் மற்று எனக்கென்று இங்கே
எப்பாலும் சுதந்தரம் ஓர் இறையும் இலை அருள் சோதி இயற்கை என்னும்
துப்பாய உடல் ஆதி தருவாயோ இன்னும் எனைச் சோதிப்பாயோ
அப்பா நின் திருவுளத்தை அறியேன் இ அடியேனால் ஆவது என்னே.

#2
என்னே எம் பெருமான் இங்கு இன்னும் அணைந்திலன் என்றே ஏங்கிஏங்கி
மன்னே என் மணியே கண்மணியே என் வாழ்வே நல் வரத்தால் பெற்ற
பொன்னே அற்புதமே செம்பொருளே என் புகலே மெய்ப் போதமே என்
அன்னே என் அப்பா என்று அழைத்தல் அன்றி அடியேனால் ஆவது என்னே.

#3
பொடி எடுக்கப் போய் அதனை மறந்து மடி எடுத்து அரையில் புனைவேன் சில்லோர்
தடி எடுக்கக் காணில் அதற்கு உளம் கலங்கி ஓடுவன் இத் தரத்தேன் இங்கே
முடியெடுக்க வல்லேனோ இறைவா நின் அருள் இலதேல் முன்னே வைத்த
அடி எடுக்க முடியாதே அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#4
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் பணிகின்றேன் பதியே நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் குழைகின்றேன் குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் உறங்குகின்றேன் உறங்காது என்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#5
உடுப்பவனும் உண்பவனும் நானே என்னவும் நாணம் உறுவது எந்தாய்
தடுப்பவனும் தடை தீர்த்துக் கொடுப்பவனும் பிறப்பு_இறப்பு-தன்னை நீக்கி
எடுப்பவனும் காப்பவனும் இன்ப அனுபவ உருவாய் என்னுள் ஓங்கி
அடுப்பவனும் நீ என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#6
சாவது என்றும் பிறப்பது என்றும் சாற்றுகின்ற பெரும் பாவம்-தன்னை எண்ணி
நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி
ஈவது மன்றிடை நடிப்போய் நின்னாலே ஆகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றும் இல்லை என்றால் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#7
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிது அரிதாம் தனித் தலைமை இறைவா உன்றன்
நசைத்திடு பேர்_அருள் செயலால் அசைவது அன்றி ஐந்தொழில் செய் நாதராலும்
தசைத்திடு புன் துரும்பினையும் அகங்கரித்துத் தங்கள் சுதந்தரத்தால் இங்கே
அசைத்திடற்கு முடியாதேல் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#8
கல்லாய மனத்தையும் ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணையாலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவம் தந்து அருள் பதமும் பாலிக்கின்றோய்
எல்லாம் செய் வல்லோய் சிற்றம்பலத்தே ஆடல் இடுகின்றோய் நின்னால்
அல்லால் ஒன்று ஆகாதேல் அந்தோ இச் சிறியேனால் ஆவது என்னே.

#9
கரை சேரப் புரிந்தாலும் கடையேன் செய் குற்றம் எலாம் கருதி மாயைத்
திரை சேரப் புரிந்தாலும் திருவுளமே துணை என நான் சிந்தித்து இங்கே
உரை சேர இருத்தல் அன்றி உடையாய் என் உறவே என் உயிரே என்றன்
அரைசே என் அம்மே என் அப்பா இச் சிறியேனால் ஆவது என்னே.

#10
இன்பே நன்று அருளி அருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத்
துன்பே செய்வித்தாலும் என் செய்வேன் நின் அருளே துணை என்று அந்தோ
என் பேதை மனம் அடங்கி இருப்பது அன்றி எல்லாம் கண்டிருக்கும் என்றன்
அன்பே என் அம்மே என் அப்பா இச் சிறியேனால் ஆவது என்னே.

@11. அத்துவித ஆனந்த அநுபவ இடையீடு

#1
திருத் தகு பொன்_அம்பலத்தே திரு_நடம் செய்து அருளும் திரு_அடிகள் அடிச் சிறியேன் சென்னி மிசை வருமோ
உருத் தகு நானிலத்திடை நீள் மலத் தடை போய் ஞான உருப் படிவம் அடைவேனோ ஒன்று இரண்டு என்னாத
பொருத்தமுறு சுத்த சிவானந்த வெள்ளம் ததும்பிப் பொங்கி அகம் புறம் காணாது எங்கும் நிறைந்திடுமோ
அருத் தகும் அ வெள்ளத்தே நான் மூழ்கி நான் போய் அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன் மேல் விளைவே.

#2
கரணம் எலாம் கரைந்த தனிக் கரை காண்பது உளதோ கரை கண்ட பொழுது எனையும் கண்டு தெளிவேனோ
அரணம் எலாம் கடந்த திரு அருள் வெளி நேர்படுமோ அ வெளிக்குள் ஆனந்த அனுபவம்-தான் உறுமோ
மரணம் எலாம் தவிர்ந்து சிவ மயம் ஆகி நிறைதல் வாய்த்திடுமோ மூல மல வாதனையும் போமோ
சரணம் எலாம் தர மன்றில் திரு_நடம் செய் பெருமான் தனது திருவுளம் எதுவோ சற்றும் அறிந்திலனே.

#3
நாதாந்தத் திரு_வீதி நடந்து கடப்பேனோ ஞான வெளி நடு இன்ப நடம் தரிசிப்பேனோ
போதாந்தத் திரு_அடி என் சென்னி பொருந்திடுமோ புதுமை அறச் சிவ போகம் பொங்கி நிறைந்திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ வெறுவெளியில் சுத்த சிவ வெளி மயம்-தான் உறுமோ
பாதாந்த வரை நீறு மணக்க மன்றில் ஆடும் பரமர் திருவுளம் எதுவோ பரமம் அறிந்திலனே.

#4
சிதம்பரத்தே ஆனந்த சித்தர் திரு_நடம்-தான் சிறிது அறிந்தபடி இன்னும் முழுதும் அறிவேனோ
பதம் பெறத் தேம் பழம் பிழிந்து பாலும் நறும் பாகும் பசு நெய்யும் கலந்தது எனப் பாடி மகிழ்வேனோ
நிதம் பரவி ஆனந்த நித்திரை நீங்காத நித்தர் பணி புரிந்து இன்ப சித்தி பெறுவேனோ
மதம் பரவு மலைச் செருக்கில் சிறந்த சிறியேன் நான் வள்ளல் குருநாதர் திருவுள்ளம் அறியேனே.

#5
களக்கம் அறப் பொது நடம் நான் கண்டுகொண்ட தருணம் கடைச் சிறியேன் உளம் பூத்துக் காய்த்தது ஒரு காய்-தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பி உதிர்ந்திடுமோ வெம்பாது பழுக்கினும் என் கரத்தில் அகப்படுமோ
கொளக் கருதும் மல மாயைக் குரங்கு கவர்ந்திடுமோ குரங்கு கவராது எனது குறிப்பில் அகப்படினும்
துளக்கம் அற உண்ணுவனோ தொண்டை விக்கிக்கொளுமோ ஜோதி திருவுளம் எதுவோ ஏதும் அறிந்திலனே.

#6
திரு_பொதுவில் திரு_நடம் நான் சென்று கண்ட தருணம் சித்தி எனும் பெண்_அரசி எத்தி என் கை பிடித்தாள்
கருப்பு அறியாது எனை அதன் முன் கலந்த புத்தி எனும் ஓர் காரிகை-தான் கண்ட அளவில் கனிந்து மகிழ்ந்திடுமோ
விருப்பமுறாது எனை முனிந்து விடுத்திடுமோ நேயம் விளைந்திடுமோ இவர்க்கு நிதம் சண்டை விளைந்திடுமோ
தருப் பொதுவில் இருவர்க்கும் சந்ததி உண்டாமோ தடைபடுமோ திருவுளம்-தான் சற்றும் அறிந்திலனே.

#7
ஆனந்த நடம் பொதுவில் கண்ட தருணத்தே அரு_மருந்து ஒன்று என் கருத்தில் அடைந்து அமர்ந்தது அது-தான்
கானந்தமதத்தாலே காரம் மறைபடுமோ கடும் காரம் ஆகி என்றன் கருத்தில் உறைந்திடுமோ
ஊன் அந்தம் அறக் கொளும் போது இனிக்க ரசம் தருமோ உணக் கசந்து குமட்டி எதிரெடுத்திட நேர்ந்திடுமோ
நான் அந்த உளவு அறிந்து பிறர்க்கு ஈய வருமோ நல்ல திருவுளம் எதுவோ வல்லது அறிந்திலனே.

#8
தாய் கொண்ட திரு_பொதுவில் எங்கள் குருநாதன் சந்நிதி போய் வர விடுத்த தனிக் கரணப் பூவை
காய் கொண்டு வந்திடுமோ பழம் கொண்டு வருமோ கனிந்த பழம் கொண்டுவரும் கால் அதனை மதமாம்
பேய் கொண்டுபோய்விடுமோ பிலத்திடை வீழ்ந்திடுமோ பின் படுமோ முன் படுமோ பிணங்கி ஒளித்திடுமோ
வாய் கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை மறந்திடுமோ திருவுளத்தின் வண்ணம் அறிந்திலனே.

#9
தீட்டு மணிப் பொது நடம் செய் திரு_அடி கண்டு ஏத்தச் செல்கின்றேன் சிறியேன் முன் சென்ற வழி அறியேன்
காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்புக் கண்டிடுமோ காணாதோ களிப்பாம்
மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ விவேகம் எனும் துணை உறுமோ வேடர் பயம் உறுமோ
ஈட்டு திரு_அடிச் சமுகம் காணவும் நேர்ந்திடுமோ எப்படியோ திருவுளம்-தான் ஏதும் அறிந்திலனே.

#10
ஞான மணிப் பொது நடம் செய் திரு_அடி கண்டிடவே நடக்கின்றேன் அந்தோ முன் நடந்த வழி அறியேன்
ஊனம் மிகும் ஆணவமாம் பாவி எதிர்ப்படுமோ உடைமை எலாம் பறித்திடுமோ நடை மெலிந்து போமோ
ஈனம் உறும் அகங்காரப் புலி குறுக்கே வருமோ இச்சை எனும் இராக்கதப் பேய் எனைப் பிடித்துக்கொளுமோ
ஆன மலத் தடை நீக்க அருள் துணை-தான் உறுமோ ஐயர் திருவுளம் எதுவோ யாதும் அறிந்திலனே.

@12. பிள்ளைச் சிறு விண்ணப்பம்

#1
தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டு அடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால்
பிடித்து ஒரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித் திரு_மேனி அம்பலத்து ஆடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன்.

#2
பெற்ற தம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால்
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர் எண்_குணத்தவ நீ-தான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும் நன்கு அறிவாய் அறிந்தும் என்றனை நீ முனிவது என் முனிவு தீர்ந்து அருளே.

#3
வெம் மதிக் கொடிய மகன் கொடும் செய்கை விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக்கின்றார் அவன்றனைப் பெற்ற தந்தை தாய் மகன் விருப்பாலே
இ மதிச் சிறியேன் விழைந்தது ஒன்று இலை நீ என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம் மதிக் கருணைத் திரு_நெறி இது நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

#4
பொய் பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில் ஓர் புல்_முனை ஆயினும் பிறர்க்கு
நை பிழை உளதேல் நவின்றிடேன் பிறர்-பால் நண்ணிய கருணையால் பலவே
கை பிழையாமை கருதுகின்றேன் நின் கழல் பதம் விழைகின்றேன் அல்லால்
செய் பிழை வேறு ஒன்று அறிகிலேன் அந்தோ திருவுளம் அறியுமே எந்தாய்.

#5
அப்பு அணி முடி என் அப்பனே மன்றில் ஆனந்த நடம் புரி அரசே
இப் புவி-தனிலே அறிவு வந்தது தொட்டு இந்த நாள் வரையும் என்றனக்கே
எப் பணி இட்டாய் அப் பணி அலது என் இச்சையால் புரிந்தது ஒன்று இலையே
செப்புவது என் நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய்.

#6
முன்னொடு பின்னும் நீ தரு மடவார் முயக்கினில் பொருந்தினேன் அதுவும்
பொன்னொடு விளங்கும் சபை நடத்து அரசு உன் புணர்ப்பு அலால் என் புணர்ப்பு அலவே
என்னொடும் இருந்து இங்கு அறிகின்ற நினக்கே எந்தை வேறு இயம்புவது என்னோ
சொல் நெடு வானத்து அரம்பையர் எனினும் துரும்பு எனக் காண்கின்றேன் தனித்தே.

#7
இன்னும் இங்கு எனை நீ மடந்தையர் முயக்கில் எய்துவித்திடுதியேல் அது உன்
தன் உளப் புணர்ப்பு இங்கு எனக்கு ஒருசிறிதும் சம்மதம் அன்று நான் இதனைப்
பன்னுவது என்னே இதில் அருவருப்புப் பால் உணும் காலையே உளதால்
மன்னும் அம்பலத்தே நடம் புரிவோய் என் மதிப்பு எலாம் திரு_அடி_மலர்க்கே.

#8
அறிவு இலாச் சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்கு உள வெறுப்பைப்
பிறிவு இலாது என்னுள் கலந்த நீ அறிதி இன்று நான் பேசுவது என்னே
செறிவு இலாக் கடையேன் என்னினும் அடியேன் திரு_அருள் அமுதமே விழைந்தேன்
எறிவு இலாச் சுவை வேறு எவற்றினும் விழைவோர் எள்துணையேனும் இன்று எந்தாய்.

#9
இன் சுவை உணவு பலபல எனக்கு இங்கு எந்தை நீ கொடுப்பிக்கச் சிறியேன்
நின் சுவை உணவு என்று உண்கின்றேன் இன்னும் நீ தருவித்திடில் அது நின்
றன் சுதந்தரம் இங்கு எனக்கு அதில் இறையும் சம்மதம் இல்லை நான்-தானே
என் சுதந்தரத்தில் தேடுவேன் அல்லேன் தேடியதும் இலை ஈண்டே.

#10
செறிவது இல் மனத்தேன் காசிலே ஆசை செய்திலேன் இந்த நாள் அன்றி
அறிவு-அது இல்லாத சிறுபருவத்தும் அடுத்தவர் கொடுத்த காசு அவர் மேல்
எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் இருக்கின்ற நீ அறிந்ததுவே
பிறிவது இல்லா நின் அருள் பெரும் பொருளைப் பெற்றனன் பேசுவது என்னே.

#11
பணத்திலே சிறிதும் ஆசை ஒன்று இலை நான் படைத்த அப் பணங்களைப் பல கால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீ-தான் கொடுக்கின்ற பொருளை எறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும் நின் அருளைக் கண்டனன் இனிச் சொல்வது என்னே.

#12
கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு
திளைத்திடும்-தோறும் வெறுப்பொடும் உண்டேன் இன்றுமே வெறுப்பில் உண்கின்றேன்
தளைத்திடும் உடை ஊன் உடம்பு ஒருசிறிதும் தடித்திட நினைத்திலேன் இன்றும்
இளைத்திட விழைகின்றேன் இது நான்-தான் இயம்பல் என் நீ அறிந்ததுவே.

#13
இ உலகு-அதிலே இறை அரசாட்சி இன்பத்தும் மற்றை இன்பத்தும்
எவ்வளவெனினும் இச்சை ஒன்று அறியேன் எண்ணு-தோறு அருவருக்கின்றேன்
அ உலகு-அதிலே இந்திரர் பிரமர் அரி முதலோர் அடைகின்ற
கவ்வை இன்பத்தும் ஆசை சற்று அறியேன் எந்தை என் கருத்து அறிந்ததுவே.

#14
சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகம் ஓர் நான்கும்
புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்று அறியேன்
பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்தி பெற்றிடவும்
உறியதோர் இச்சை எனக்கு இலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்.

#15
இறக்கவும் ஆசை இல்லை இப்படி நான் இருக்கவும் ஆசை இன்று இனி நான்
பிறக்கவும் ஆசை இலை உலகு எல்லாம் பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்று இல்லை
துறக்கவும் ஆசை இலை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்று இலையே.

#16
சற்சபைக்கு உரியார்-தம்மொடும் கூடித் தனித்த பேர்_அன்பும் மெய் அறிவும்
நல் சபைக்கு உரிய ஒழுக்கமும் அழியா நல்ல மெய் வாழ்க்கையும் பெற்றே
சிற்சபை நடமும் பொன்_சபை நடமும் தினம்-தொறும் பாடிநின்று ஆடித்
தென்_சபை உலகத்து உயிர்க்கு எலாம் இன்பம் செய்வது என் இச்சையாம் எந்தாய்.

#17
உரு மலி உலகில் உன்னை நான் கலந்தே ஊழி-தோறு ஊழியும் பிரியாது
ஒருமையுற்று அழியாப் பெருமை பெற்று அடியேன் உன்னையே பாடிநின்று ஆடி
இரு நிலத்து ஓங்கிக் களிக்கவும் பிறருக்கு இடுக்கண் உற்றால் அவை தவிர்த்தே
திரு_மணிப் பொதுவில் அன்பு_உடையவராச் செய்யவும் இச்சை காண் எந்தாய்.

#18
எவ்வுயிர்த் திரளும் என் உயிர் எனவே எண்ணி நல் இன்புறச்செயவும்
அ உயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்றியே அச்சம் நீக்கிடவும்
செவ்வையுற்று உனது திரு_பதம் பாடிச் சிவசிவ என்று கூத்தாடி
ஒவ்வுறு களிப்பால் அழிவுறாது இங்கே ஓங்கவும் இச்சை காண் எந்தாய்.

#19
உலக அறிவு எனக்கு இங்கு உற்ற நாள் தொடங்கி உன் அறிவு அடையும் நாள் வரையில்
இலகி என்னோடு பழகியும் எனை-தான் எண்ணியும் நண்ணியும் பின்னர்
விலகிய மாந்தர் அனைவரும் இங்கே மெய்யுறக் கூடி நின்று உனையே
அலகு_இல் பேர்_அன்பில் போற்றி வாழ்ந்திடவும் அடியனேற்கு இச்சை காண் எந்தாய்.

#20
திரு வளர் திரு_சிற்றம்பலம் ஓங்கும் சிதம்பரம் எனும் பெரும் கோயில்
உரு வளர் மறையும் ஆகமக் கலையும் உரைத்தவாறு இயல்பெறப் புதுக்கி
மரு வளர் மலரின் விளக்கி நின் மேனி வண்ணம் கண்டு உளம் களித்திடவும்
கரு வளர் உலகில் திருவிழாக் காட்சி காணவும் இச்சை காண் எந்தாய்.

#21
தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார் திரு_கோயில் கண்டிடவும்
துங்கமே பெறும் சற்சங்கம் நீடூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சை காண் எந்தாய்.

#22
கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த கடும் துயர் அச்சம் ஆதிகளைத்
தருண நின் அருளால் தவிர்த்தவர்க்கு இன்பம் தரவும் வன் புலை கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகு எலாம் நடக்க உஞற்றவும் அம்பலம்-தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண் எந்தாய்.

#23
மண்ணுலகு-அதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திட_மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால் இசைத்த போது இசைத்த போது எல்லாம்
நண்ணும் அ வருத்தம் தவிர்க்கும் நல் வரம்-தான் நல்குதல் எனக்கு இச்சை எந்தாய்.

#24
இவை அலால் பிறிது ஓர் விடயத்தில் இச்சை எனக்கு இலை இவை எலாம் என்னுள்
சிவையொடும் அமர்ந்த பெரும் தயாநிதி நின் திருவுளத்து அறிந்தது-தானே
தவம்_இலேன் எனினும் இச்சையின்படி நீ தருதலே வேண்டும் இ இச்சை
நவை இலா இச்சை என அறிவிக்க அறிந்தனன் நவின்றனன் எந்தாய்.

@13. பிள்ளைப் பெரு விண்ணப்பம்

#1
தனிப் பெரும் சோதித் தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே
கனிப் பெரும் கருணைக் கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே
இனிச் சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர்ப் பொன் அடி ஆணை.

#2
திரிபு இலாப் பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே
உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே.

#3
தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லாத் தலைவனே திரு_சிற்றம்பலத்தே
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே
ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டு அருள் இதுவே.

#4
என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா
என் உளத்து இனிக்கும் தீம் சுவைக் கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே
என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே.

#5
கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பலக் கனியே
வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள் நிறை உளத்தே திகழ் தனித் தலைமைத் தெய்வமே திரு_அருள் சிவமே
தருணம் என் ஒருமைத் தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே.

#6
என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே.

#7
இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி
விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில்
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே.

#8
மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர்
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்குக் கொடுத்து உளே விளங்கு சற்குருவே
பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே.

#9
விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டு உடன்பிறந்தோர் அயலவர் எனும் இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.

#10
சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பைப்
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ.

#11
பரைத் தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே
தரைத் தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள்
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ.

#12
அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே
சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ.

#13
உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக்
கொண்ட போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ.

#14
காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமைக் கடவுளே சிற்சபை-தனிலே
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர்
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கிப் பதைத்தது உன் உளம் அறியாதோ.

#15
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே
ஏதம் நேர்ந்திடக் கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும்
தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ.

#16
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னைப்
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அப் பிரிவை
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.

#17
என்றும் நாடுறுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்று நாடிய நல்லோர் உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற
அன்று நான் அடைந்த நடுக்கமும் துயரும் அளவு இலை அளவு இலை அறிவாய்
இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய்.

#18
நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம்
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே
துலைபுரிந்து ஓடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீ அறிந்ததுவே.

#19
ஓர்ந்த உள்ளகத்தே நிறைந்து ஒளிர்கின்ற ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம்
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய்
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

#20
மறை முடி வயங்கும் ஒரு தனித் தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர்
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

#21
தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய்
வாய் மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய்.

#22
எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன்
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.

#23
பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும்
சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்கச் சொல்கின்றவோ எனச் சூழ்ந்தே
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய்
வல்லியக் குரல் கேட்டு அயர் பசுப் போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய்.

#24
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.

#25
வேறு பல் விடம் செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்ய நாய்க் குழுவின்
சீறிய குரலோடு அழு_குரல் கேட்டுத் தியங்கினேன் மற்றை வெம் சகுனக்
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்.

#26
நிறமுறு விழிக் கீழ்ப் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும்
உறவு தோல் தடித்துத் துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ
பிறர் துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன்
நறுவிய துகிலில் கறையுறக் கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய்.

#27
மங்கையர் எனைத் தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல்
தங்கிய பிறர்-தம் துயர்-தனைக் காண்டல் ஆகும் அத் துயருறத் தரியேம்
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய்.

#28
வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனைக் கண்டே நடுங்குறவரும் எனப் பயந்தே
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய்.

#29
களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்ட காலத்தும்
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.

#30
இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இச் சுகத்தால் இனி யாது
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கிச் சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய்.

#31
உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள்
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சிப் பேர்_உணவு உண்டனன் சில நாள்
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன்
மற்று இவை அல்லால் சுக உணாக் கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய்.

#32
தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும்
அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே.

#33
அந்தமோடு ஆதி இல்லதோர் பொதுவில் அரும் பெரும் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எக் காலம் என்று எழுந்தேன்.

#34
உடைய அம்பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ.

#35
பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய்
நகல் உறச் சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ.

#36
தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில்
சகிப்பு இலாமையினால் அடித்தனன் அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம்
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம்
மிகப் புகுந்து அடித்துப் பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ.

#37
ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே
அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்த வெம் சினம் என் உளம் உறக் கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய்.

#38
கோபமே வருமோ காமமே வருமோ கொடிய மோகங்களே வருமோ
சாபமே அனைய தடை மதம் வருமோ தாமதப் பாவி வந்திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ பயன் இல் மாற்சரியம் வந்திடுமோ
தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய்.

#39
காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம்
நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய்
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளைச் செறிந்தவர்-தங்களைக் கண்டே
ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும்.

#40
கருத்து வேறு ஆகிக் கோயிலில் புகுந்து உன் காட்சியைக் கண்ட போது எல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கிப்
பருத்த என் உடம்பைப் பார்த்திடாது அஞ்சிப் படுத்ததும் ஐய நீ அறிவாய்.

#41
புன் புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்
வன் புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல்
என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய்.

#42
இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலைத் தருக்கம்செய்திடவே
வந்தவர்-தம்மைக் கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தைத் தமியனேன் மீளவும் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய்.

#43
முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றித்
தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்று அவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பு_இலேன் மற்று இது குறித்தே
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய்.

#44
பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
மதி இலாமையினால் அகங்கரித்ததன் பின் வள்ளல் உன் அருளினால் அறிந்தே
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே.

#45
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்பு_உளார் வலிந்து எனக்கு ஈந்த
பொருளினை வாங்கிப் போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய்
மருளும் அப் பொருளைச் சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால்
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும்.

#46
பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால்
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் எனக் கருதி
வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய்
ஒருவும் அப் பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய்.

#47
தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே
நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன்
பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.

#48
சகப் புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் எனப் பயந்தே
நகர் புறத்து இருக்கும் தோட்டங்கள்-தோறும் நண்ணியும் பிற இடத்து அலைந்தும்
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே
மிகப் பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே.

#49
உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன்
ஒருவுளத்தவரே வலிந்திட வேறு ஓர் உவளகத்து ஒளித்து அயல் இருந்தேன்
கரு உளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே.

#50
பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்ற சங்கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.

#51
நயந்த பொன் சரிகைத் துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது
பயந்த அப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கைத் துகில் வீசி
அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய்.

#52
கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்
வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயம் மிகப் படைப்பேன்.

#53
வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனைக் கை பிடித்து இழுத்தும்
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனைப் பல விசை அறிந்தும்
பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும்
கை கலப்பு அறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்.

#54
எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம்
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
களியரைக் கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய்
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார்.

#55
இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடிக்
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம்
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வரக் கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால்.

#56
உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால்
கரத்தினால் உரத்துக் கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப் பிறர் புகன்ற சொல் புகுந்தே
தரத்தில் என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே.

#57
மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம்
கண்ணில் நீர் விடக் கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன்
நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது
எண்ணி யாது உற்றதோ எனக் கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய்.

#58
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே.

#59
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம்
துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய்
அன்பு_உடையவரைக் கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே.

#60
காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன்.

#61
பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள்
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர்
முதிர்ந்த தீம் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன்.

#62
வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமைக் கண்டே இளைத்தேன்.

#63
நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன்.

#64
துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத் தொடங்கிய போது எலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும்.

#65
நடு நிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
கெடு நிலை நினைக்கும் சிற்றதிகாரக் கேடரைப் பொய் அலால் கிளத்தாப்
படு நிலையவரைப் பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.

#66
ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்-பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

#67
காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன்
பாட்டு அயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குறக் களித்துக் கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.

#68
தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ
கலை நெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது எனக் கண்டு இரங்காது
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே.

#69
இவ்வணம் சிறியேற்கு உலகியல் அறிவு இங்கு எய்திய நாள் அது தொடங்கி
நை வணம் இற்றைப் பகல் வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும்
செவ்வணத் தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.

#70
தரைத் தலத்து எனை நீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான்
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால்
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ .

#71
கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ
மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம்
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம்.

#72
இன்னவாறு அடியேன் அச்சமும் துயரும் எய்திநின்று இளைத்தனன் அந்தோ
துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ.

#73
எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பு எலாம் இங்கு நான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன்
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய்.

#74
என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன்
றன் சுதந்தரமே அடுத்த இத் தருணம் தமியனேன்-தனைப் பல துயரும்
வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும்
இன் சுவைக் கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே.

#75
அறிவு ஒருசிறிது இங்கு அறிந்த நாள் முதல் என் அப்பனே நினை மறந்து அறியேன்
செறிவு இலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில்
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னைக்
குறியுறக் கொண்டே குலம் குறிப்பது நின் குணப் பெரும் குன்றினுக்கு அழகோ.

#76
ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம்
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே.

#77
தேர்வு இலாச் சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின்
சார்வு கொண்டு எல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன்
பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன்
ஓர்வு இலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்று நான் உரைப்பது இங்கு என்னே.

#78
பொறித்து உனைப் பதியாப் பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமைத் தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும்
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ எனப் பெற்றே
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறிக் குதித்தது என் கூறுக நீயே.

#79
பரிந்து உனைப் பதியாப் பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில்
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும்
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே.

#80
மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும்
வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ.

#81
ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம்
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமை நான் அறிந்தும்
தாரணியிடை இத் துன்பம் ஆதிகளால் தனையனேன் தளருதல் அழகோ.

#82
பார் முதல் நாதப் பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும்
ஓர் முதல் ஆகித் திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கிச்
சீர் பெற விளங்க நடத்தி மெய்ப் பொதுவில் சிறந்த மெய்த் தந்தை நீ இருக்க
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ.

#83
ஆர்ந்த வேதாந்தப் பதி முதல் யோகாந்தப் பதி வரையும் அப்பாலும்
தேர்ந்து அருள் ஆணைத் திரு_நெறிச் செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே
சார்ந்த பேர்_இன்பத் தனி அரசு இயற்றும் தந்தையே தனிப் பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ.

#84
சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞானத் திரு_சபை-தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனி அருள் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ.

#85
சாற்று பேர்_அண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்று மா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ.

#86
சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ் ஒளியாய் ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால்
நிறைந்த சிற்சபையில் அருள் அரசு இயற்றும் நீதி நல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ.

#87
எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலாத் தனி நெடும் செங்கோல்
நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே
தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.

#88
கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவு இலாச் சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ.

#89
ஆதியே நடுவே அந்தமே எனும் இ அடைவு எலாம் இன்றி ஒன்றான
சோதியே வடிவாய்த் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனிச் செங்கோல்
நீதியே நடத்தும் தனிப் பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன் நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.

#90
அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன் நான் மயங்கித் துயர்ந்து உளம் வாடுதல் அழகோ.

#91
உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனித் தந்தையே நின்-பால்
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அக் குற்றம்
இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ.

#92
குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே
உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே
தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி
மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ.

#93
மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கித்
தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவை என அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய்.

#94
கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம்
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய்
தெருள் நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே.

#95
கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால்
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம்
அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே.

#96
இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று எனப் பல கால்
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே
அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன்
துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும்.

#97
வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும்
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும்
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம்
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை.

#98
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும்
மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால்
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும்.

#99
ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்
போது அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய்.

#100
என்னையும் இரக்கம்-தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து இ உலகில்
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம்
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவாறு என நீ சொன்னவாறு இயற்றாது இருந்ததோர் இறையும் இங்கு இலையே.

#101
உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும்
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்குச்
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய்.

#102
தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காமச்
சிந்தையர் ஆகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும்
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு
தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன்.

#103
அம் புவி-தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவருடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே
இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன்.

#104
வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள் அருந்துதல் சூதாடுதல் காமக் கடை-தொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன்.

#105
மலைவு இலாத் திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடிக் கொடிய தீ_நெறியிலே மக்கள்
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன்.

#106
தனிப் பெரும் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும்
பனிப்புற ஓடிப் பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்றத்
தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன்.

#107
தன்னை நேர் இல்லாத் தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே
சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன்
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு எனக் கொள்கின்றேன் அல்லால்
பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன்.

#108
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா
ஏற்ற ஆபரணம் தா எனக் கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன்
தேற்றுவாய் நின்னைக் கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன்.

#109
குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரைப்
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே
மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும்
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன்.

#110
இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய்ப் புறம் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக்கின்றார் ஐயவோ வஞ்சம் நின்அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன்.

#111
தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
என் மனக் கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய்த் துணையே
நின் மனம் வெறுப்பப் பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன்.

#112
ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை
வைப்பில் வேறு ஒருவர் வைதிடக் கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன்
தப்பு இலாய் நினை வேறு உரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.

#113
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே
சித்தம் வேறு ஆகித் திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும்
அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத்து ஆடும்
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.

#114
பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன்
நை வகை தவிரத் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப்படல் எக் கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன்.

#115
அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான்
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான்
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும்
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

#116
பொய்படாப் பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே
தெய்வமே என நான் நின்னையே கருதித் திரு_பணி புரிந்து இருக்கின்றேன்
மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

#117
தன் நிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன்
மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

#118
திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழிப் பொருளும்
உரு வளர் திருமந்திரத் திருமுறையால் உணர்த்திய மெய் மொழிப் பொருளும்
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழிப் பொருளும்
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.

#119
உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இப்
பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.

#120
ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தைத் தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்து உளே கருதி மலை எனப் பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம்
தோய்ந்து நின்று ஆடிச் சுழன்றதும் இ நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.

#121
வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடித் துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான்
கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும்.

#122
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம்
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள்
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடிப் பார்த்து ஓடிப் பார்த்து இரவும்
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும்.

#123
கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம்
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும்
பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.

#124
இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம்
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனிப் பெருந் தந்தை
அமையும் நம் உயிர்க்குத் துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.

#125
அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல்
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அறப் பார்த்து இருக்கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய்.

#126
பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே.

#127
இதுவரை அடியேன் அடைந்த வெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின்
மது வளர் மலர்ப் பொன்_பதத் துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே
எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய்.

#128
என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ
இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது
அன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்து அருள் எனையே.

#129
பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயைப் பற்றொடு வினையும் ஆணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும்
உயத் தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே.

#130
ஐய நான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடும்-தோறும்
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன்
வையம் மேல் இனி நான் இவைகளால் இளைக்க வசம் இலேன் இவை எலாம் தவிர்த்தே
உய்யவைப்பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே.

#131
பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இப் பகை எலாம் பற்று அறத் தவிர்த்தே
நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே
வயம் தரக் கருதித் தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.

#132
என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.

#133
பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அறத் தவிர்த்து அருள் இனி நான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக் கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை
வரிக் கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே.

@14. மாயையின் விளக்கம்

#1
திடுக்கு அற எனை-தான் வளர்த்திடப் பரையாம் செவிலி-பால் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் என் செய்வேன் இன்னும் என்னிடை பால்
மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும் வந்து எனைப் பார்த்திலை அந்தோ
தடுக்க அரும் கருணைத் தந்தையே தளர்ந்தேன் தனையனேன் தளர்ந்திடல் அழகோ.

#2
தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர் தாய் கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று மாயமே புரிந்திருக்கின்றாள்
கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ
உளம் தரு கருணைத் தந்தையே நீயும் உற்றிலை பெற்றவர்க்கு அழகோ.

#3
தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் சூதையே நினைத்திருக்கின்றாள்
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ உளம் தளர்வு உற்றனன் நீயும்
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான் எந்தை நின் திரு_அருட்கு அழகோ.

#4
அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய் ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள்
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள் நீலியோ தன் புடை ஆடும்
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள் தனித்தனி அவரவர் எடுத்தே
கத்த வெம் பயமே காட்டினர் நானும் கலங்கினேன் கலங்கிடல் அழகோ.

#5
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற மகள் கையில் கொடுத்தனள் எனை-தான்
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ என் செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித் தொட்டிலும் ஆட்டிடுகின்றாள்
ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை ஈன்றவர் அறிவரே எந்தாய்.

#6
வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான் என் செய்வேன் என் உடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய் நீயும் இங்கு அறிந்திலையேயோ.

#7
தும்மினேன் வெதும்பித் தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள் காதுறக் கேட்டிருக்கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச் சிரித்திருக்கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல இருப்பதோ நீயும் எந்தாயே.

#8
துரு இலா வயிரத் தொட்டிலே தங்கத் தொட்டிலே பல இருந்திடவும்
திரு இலாப் பொத்தைத் தொட்டிலில் செவிலி சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவு இலாத் தனிமைத் தலைவ நீ பெற்ற பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ
கரு_இலாய் நீ இத் தருணம் வந்து இதனைக் கண்டிடில் சகிக்குமோ நினக்கே.

#9
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் கனிவு_இலாள் காமம் ஆதிகளாம்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப் பயம் புரிவித்தனள் பல கால்
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையாத் திரு_மதி என நினைந்து அறியாள்
சாய்ந்த இச் செவிலி கையிலே என்னைத் தந்தது சாலும் எந்தாயே.

#10
ஞான ஆனந்த வல்லியாம் பிரியாநாயகியுடன் எழுந்து அருளி
ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே இன் அமுது அனைத்தையும் அருத்தி
ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய்த் தலத்தில் உறப்புரிந்து எனைப் பிரியாமல்
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க மா மணி மன்றில் எந்தாயே.

@15. அபயத் திறன்

#1
ஆடக மணிப் பொன்_குன்றமே என்னை ஆண்டுகொண்டு அருளிய பொருளே
வீடகத்து ஏற்றும் விளக்கமே விளக்கின் மெய் ஒளிக்கு உள் ஒளி வியப்பே
வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம் தவிர்த்து அருள் வழங்கிய மன்றில்
நாடகக் கருணை_நாதனே உன்னை நம்பினேன் கைவிடேல் எனையே.

#2
வட்ட வான் சுடரே வளர் ஒளி விளக்கே வயங்கு சிற்சோதியே அடியேன்
இட்டமே இட்டத்து இயைந்து உளே கலந்த இன்பமே என் பெரும் பொருளே
கட்டமே தவிர்த்து இங்கு என்னை வாழ்வித்த கடவுளே கனக மன்றகத்தே
நட்டமே புரியும் பேர்_அருள் அரசே நம்பினேன் கைவிடேல் எனையே.

#3
புல் அவா மனத்தேன் என்னினும் சமயம் புகுதவா பொய் நெறி ஒழுக்கம்
சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிது ஓர் சொப்பனத்தாயினும் நினையேன்
கல்லவா மனத்து ஓர் உறவையும் கருதேன் கனக மா மன்றிலே நடிக்கும்
நல்லவா எல்லாம்_வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#4
புண்படா உடம்பும் புரைபடா மனமும் பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண் படாது இரவும்_பகலும் நின்றனையே கருத்தில்வைத்து ஏத்துதற்கு இசைந்தேன்
உண்பனே எனினும் உடுப்பனே எனினும் உலகரை நம்பிலேன் எனது
நண்பனே நலம் சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#5
புண்ணிலே புகுந்த கோல் எனத் துயரம் புகுந்து எனைக் கலக்கிய போதும்
கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால்
மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார்-தமையும்
நண்ணிலேன் வேறொன்று எண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#6
ஊன் பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான் பெறு தாயும் தந்தையும் குருவும் தனிப் பெரும் தெய்வமும் தவமும்
வான் பெறு பொருளும் வாழ்வும் நல் துணையும் மக்களும் மனைவியும் உறவும்
நான் பெறு நண்பும் யாவும் நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே.

#7
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்து என் வடிவமும் வண்ணமும் உயிரும்
தேட்டமும் நீயே கொண்டு நின் கருணைத் தேகமும் உருவும் மெய்ச் சிவமும்
ஈட்டமும் எல்லாம்_வல்ல நின் அருள் பேர்_இன்பமும் அன்பும் மெய்ஞ்ஞான
நாட்டமும் கொடுத்துக் காப்பது உன் கடன் நான் நம்பினேன் கைவிடேல் எனையே.

#8
வம்பனேன் பிறர் போல் வையமும் வானும் மற்றவும் மதித்திலேன் மதம் சார்
உம்பல் நேர் அகங்காரம் தவிர்ந்து எல்லா உலகமும் வாழ்க என்று இருந்தேன்
செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம் செய வல்ல சித்தனே சிவனே
நம்பனே ஞான நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#9
ஆய கால் இருந்தும் நடந்திட வலி இல்லாமையால் அழுங்குவார் என உன்
மேய கால் இருந்தும் திரு_அருள் உற ஓர் விருப்பு இலாமையின் மிக மெலிந்தேன்
தீய கான் விலங்கைத் தூய மானிடம் செய் சித்தனே சத்திய சபைக்கு
நாயகா உயிர்க்கு நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#10
அற்றமும் மறைக்கும் அறிவு இலாது ஓடி_ஆடிய சிறுபருவத்தே
குற்றமும் குணம் கொண்டு என்னை ஆட்கொண்ட குணப் பெரும் குன்றமே குருவே
செற்றமும் விருப்பும் தீர்த்த மெய்த் தவர்-தம் சிந்தையில் இனிக்கின்ற தேனே
நல் தகவு உடைய நாதனே உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#11
படம் புரி பாம்பில் கொடியனேன் கொடிய பாவியில் பாவியேன் தீமைக்கு
இடம் புரி மனத்தேன் இரக்கம் ஒன்று இல்லேன் என்னினும் துணை எந்தவிதத்தும்
திடம் புரி நின் பொன் அடித் துணை எனவே சிந்தனை செய்திருக்கின்றேன்
நடம் புரி கருணை_நாயகா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#12
படித்தனன் உலகப் படிப்பு எலாம் மெய் நூல் படித்தவர்-தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப் பெரியரில் பெரியர் போல் பேசி
நடித்தனன் எனினும் நின் அடித் துணையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#13
பஞ்சு நேர் உலகப் பாட்டிலே மெலிந்த பாவியேன் சாவியே போன
புஞ்செயே_அனையேன் புழுத் தலைப் புலையேன் பொய் எலாம் பூரித்த வஞ்ச
நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நெடியனேன் கொடியனேன் காம
நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#14
கயந்து உளே உவட்டும் காஞ்சிரங்காயில் கடியனேன் காமமே கலந்து
வியந்து உளே மகிழும் வீணனேன் கொடிய வெகுளியேன் வெய்யனேன் வெறியேன்
மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை மக்களை ஒக்கலை மதித்தே
நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#15
ஓடினேன் பெரும் பேர்_ஆசையால் உலகில் ஊர்-தொறும் உண்டியே உடையே
தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து தியங்கினேன் மயங்கினேன் திகைத்து
வாடினேன் சிறிய வாரியால் மகிழ்ந்தேன் வஞ்சமே பொருள் என மதித்து
நாடினேன் எனினும் பாடினேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#16
காட்டிலே திரியும் விலங்கினில் கடையேன் கைவழக்கத்தினால் ஒடிந்த
ஓட்டிலே எனினும் ஆசை விட்டு அறியேன் உலுத்தனேன் ஒரு சிறு துரும்பும்
ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன் எச்சிலும் உமிழ்ந்திடேன் நரக
நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#17
துனித்த வெம் மடவார் பகல் வந்த போது துறவியின் கடுகடுத்திருந்தேன்
தனித்து இரவு-அதிலே வந்த போது ஓடித் தழுவினேன் தட முலை விழைந்தேன்
இனித்த சொல் புகன்றேன் என்பினைக் கறித்தே இடர்ப்பட்ட நாய் என இளைத்தேன்
நனித் தவறு_உடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#18
தார்த் தட முலையார் நான் பலரொடும் சார் தலத்திலே வந்த போது அவரைப்
பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப் பாதகப் பூனை போல் இருந்தேன்
பேர்த்து நான் தனித்த போது போய் வலிந்து பேசினேன் வஞ்சரில் பெரியேன்
நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#19
பெண்மையே விழைந்தேன் அவர் மனம் அறியேன் பேய் எனப் பிடித்தனன் மடவார்க்கு
உண்மையே புகல்வான் போன்று அவர்-தமைத் தொட்டு உவந்து அகம் களித்த பொய்_உளத்தேன்
தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்று வாய் தடித்தேன்
நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#20
வன்மையில் பொருள் மேல் இச்சை_இல்லவன் போல் வாதி போல் வார்த்தைகள் வழங்கி
அன்மையில் பிறர்-பால் உளவினால் பொருளை அடிக்கடி வாங்கிய கொடியேன்
இன்மையுற்றவருக்கு உதவிலேன் பொருளை எனை விடக் கொடியருக்கு ஈந்தேன்
நன்மை உற்று அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#21
கட்டமே அறியேன் அடுத்தவரிடத்தே காசிலே ஆசை_இல்லவன் போல்
பட்டமே காட்டிப் பணம் பறித்து உழன்றேன் பகல் எலாம் தவசி போல் இருந்தேன்
இட்டமே இரவில் உண்டு அயல் புணர்ந்தே இழுதையில் தூங்கினேன் களித்து
நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#22
காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக் காட்டிடாது அம்பு எலாம் அடங்கும்
தூணியே எனச் சார்ந்திருந்தனன் சோற்றுச் சுகத்தினால் சோம்பினேன் உதவா
ஏணியே_அனையேன் இரப்பவர்க்கு உமியும் ஈந்திலேன் ஈந்தவன் எனவே
நாண்_இலேன் உரைத்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#23
அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் அடிக்கடி பொய்களே புனைந்தே
எடுத்தெடுத்து உரைத்தேன் எனக்கு எதிர் இலை என்று இகழ்ந்தனன் அகங்கரித்திருந்தேன்
கொடுத்தவர்-தமையே மிக உபசரித்தேன் கொடாதவர்-தமை இகழ்ந்து உரைத்தேன்
நடுத் தயவு அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#24
எளியவர் விளைத்த நிலம் எலாம் கவரும் எண்ணமே பெரிது உளேன் புன்செய்க்
களி உணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சு பால் கேட்டு உண்ட கடையேன்
துளி அவர்க்கு உதவேன் விருப்பு_இலான் போலச் சுவை பெறச் சுவைத்த நாக்கு உடையேன்
நளிர் எனச் சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#25
கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே
அலைதரு மனத்தேன் அறிவு_இலேன் எல்லாம் அறிந்தவன் போல் பிறர்க்கு உரைத்தேன்
மலைவுறு சமய வலை அகப்பட்டே மயங்கிய மதியினேன் நல்லோர்
நலை அல எனவே திரிந்தனன் எனினும் நம்பினேன் கைவிடேல் எனையே.

#26
ஈ எனப் பறந்தேன் எறும்பு என உழன்றேன் எட்டியே என மிகத் தழைத்தேன்
பேய் எனச் சுழன்றேன் பித்தனே என வாய்ப் பிதற்றொடும் ஊர்-தொறும் பெயர்ந்தேன்
காய் எனக் காய்த்தேன் கடை என நடந்தேன் கல் எனக் கிடந்தனன் குரைக்கும்
நாய் எனத் திரிந்தேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#27
ஒன்றியே உணவை உண்டு உடல் பருத்த ஊத்தையேன் நாத் தழும்புறவே
வென்றியே உரைத்து வினைகளே விளைத்த வீணனேன் ஊர்-தொறும் சுழன்ற
பன்றியே_அனையேன் கட்டுவார் அற்ற பகடு எனத் திரிகின்ற படிறேன்
நன்றியே அறியேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே.

#28
கவை எலாம் தவிர்ந்த வெறுமரம்_அனையேன் கள்ளனேன் கள் உண்ட கடியேன்
சுவை எலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன் துட்டனேன் தீது எலாம் துணிந்தேன்
இவை எலாம் அ நாள் உடையனோ அலனோ இந்த நாள் இறைவ நின் அருளால்
நவை எலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே நம்பினேன் கைவிடேல் எனையே.

@16. ஆற்ற மாட்டாமை

#1
இப் பார் முதல் எண்_மூர்த்தம்-அதாய் இலங்கும் கருணை எம் கோவே
தப்பாயின தீர்த்து என்னையும் முன் தடுத்தாட்கொண்ட தயாநிதியே
எப்பாலவரும் புகழ்ந்து ஏத்தும் இறைவா எல்லாம்_வல்லோனே
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#2
புரை சேர் துயரப் புணரி முற்றும் கடத்தி ஞான பூரணமாம்
கரை சேர்த்து அருளி இன் அமுத_கடலைக் குடிப்பித்திடல் வேண்டும்
உரை சேர் மறையின் முடி விளங்கும் ஒளி மா மணியே உடையானே
அரைசே அப்பா இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#3
கண் ஆர் அமுத_கடலே என் கண்ணே கண்ணுள் கருமணியே
தண் ஆர் மதியே கதிர் பரப்பித் தழைத்த சுடரே தனிக் கனலே
எண் நாடு அரிய பெரிய அண்டம் எல்லாம் நிறைந்த அருள் சோதி
அண்ணா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#4
பொய்யாது என்றும் எனது உளத்தே பொருந்தும் மருந்தே புண்ணியனே
கை ஆர்ந்து இலங்கு மணியே செங்கரும்பே கனியே கடையேற்குச்
செய்யா உதவி செய்த பெரும் தேவே மூவாத் தெள் அமுதே
ஐயா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#5
இத் தாரணியில் என் பிழைகள் எல்லாம் பொறுத்த என் குருவே
நித்தா சிற்றம்பலத்து ஆடும் நிருத்தா எல்லாம் செய வல்ல
சித்தா சித்திபுரத்து அமர்ந்த தேவே சித்த சிகாமணியே
அத்தா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#6
எ மேதகவும் உடையவர்-தம் இதயத்து அமர்ந்த இறையவனே
இ மேதினியில் எனை வருவித்திட்ட கருணை எம்மானே
நம் மேலவர்க்கும் அறிவு அரிய நாதா என்னை நயந்து ஈன்ற
அம்மே அப்பா இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#7
செப்பார் கலைகள் மொழிந்த பொருள் திறங்கள் அனைத்துந் தெரிந்து தெளிந்து
இப் பாரிடை நின் புகழ் பாடுகின்ற பெரியரின் மொழிப் பாட்டு
ஒப்பாச் சிறியேன் புன் மொழிப் பாட்டு எல்லாம் உவந்த உடையானே
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#8
துப்பு ஆர் கனகப் பொதுவில் நடத் தொழிலால் உலகத் துயர் ஒழிக்கும்
வைப்பாம் இறைவா சிவகாமவல்லிக்கு இசைந்த மணவாளா
ஒப்பார் உயர்ந்தார் இல்லாத ஒருவா எல்லாம் உடையானே
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#9
ஒப்பு ஆர் உரைப்பார் நின் பெருமைக்கு என மா மறைகள் ஓலமிடும்
துப்பு ஆர் வண்ணச் சுடரே மெய்ச் சோதிப் படிக வண்ணத்தாய்
வெப்பானவை தீர்த்து எனக்கு அமுத விருந்து புரிதல் வேண்டும் என்றன்
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

#10
வெப்பு ஆர் உள்ளக் கலக்கம் எலாம் இற்றைப் பொழுதே விலக்கி ஒழித்து
இப் பாரிடை என் கருத்தின் வண்ணம் எல்லாம் விரைவின் ஈந்து அருள்க
ஒப்பால் உரைத்தது அன்று உண்மை உரைத்தேன் கருணை உடையானே
அப்பா அரசே இனிச் சிறிதும் ஆற்ற_மாட்டேன் கண்டாயே.

@17. வாதனைக் கழிவு

#1
பொழுது விடிந்தது இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே
அழுது விழிகள் நீர் துளும்பக் கூவிக்கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும்
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே.

#2
உடையாய் திரு அம்பலத்து ஆடல் ஒருவா ஒருவா உலவாத
கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன்
தடையாயின தீர்த்து அருளாதே தாழ்க்கில் அழகோ புலை நாயில்
கடையாய்த் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணைக் கருத்தினுக்கே.

#3
கருணைக் கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இத்
தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான்
அருணச் சுடரே நின் அருளுக்கு அழகோ அழகு என்று இருப்பாயேல்
தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே.

#4
திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே
வகைப் பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்குத்
தகைப் பாரிடை இத் தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம்
நகைப்பார் நகைக்க உடம்பினை வைத்திருத்தல் அழகோ நாயகனே.

#5
நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை
ஈயில் கருணைப் பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர்
சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே.

#6
தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை
திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே
புரிந்து அ மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே
விரிந்த மனத்துச் சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ.

#7
வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றிக் கீழோரும்
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல்
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே.

#8
அருளே வடிவாம் அரசே நீ அருளாவிடில் இ அடியேனுக்கு
இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின்
பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும்
தெருளேயுற எத் தலைவருக்கும் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.

#9
திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
புகழ்ந்தார்-தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே
இகழ்ந்தேன்-தனைக் கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ
அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.

#10
எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய்
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என்
சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதித் திரு_பொதுவில்
நல்லாய் கருணை நடத்து அரசே தருணம் இது நீ நயந்து அருளே.

#11
நயந்த கருணை நடத்து அரசே ஞான அமுதே நல்லோர்கள்
வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
கயந்த மனத்தேன் எனினும் மிகக் கலங்கி நரகக் கடும் கடையில்
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே.

#12
பார்த்தார் இரங்கச் சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர்
தீர்த்தாய் அ நாள் அது தொடங்கித் தெய்வம் துணை என்று இருக்கின்றேன்
சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர்ப் பாவி
ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே.

#13
தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில்
நாயே_அனையேன் எவர் துணை என்று எங்கே புகுவேன் நவிலாயே.

#14
ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும்
பேயேன் எனினும் வலிந்து என்னைப் பெற்ற கருணைப் பெருமானே
நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான்
காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே.

#15
கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும்
தெருள் நாடு ஒளியே வெளியே மெய்ச் சிவமே சித்த சிகாமணியே
இருள் நாடு உலகில் அறிவு இன்றி இருக்கத் தரியேன் இது தருணம்
தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே.

#16
வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம்
தருவாய் தருணம் இதுவே மெய்த் தலைவா ஞான சபாபதியே
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய்
இரு வாய் அல நின் திரு_அடிப் பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே.

#17
தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என்
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ
தானே மகிழ்ந்து தந்தாய் இத் தருணம் கைம்மாறு அறியேனே.

#18
அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதிக்
குறியே குணமே பெற என்னைக் குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க
நெறியே விளங்க எனைக் கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும்
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே.

#19
சுகமே நிரம்பப் பெரும் கருணைத் தொட்டில் இடத்தே எனை அமர்த்தி
அகமே விளங்கத் திரு_அருள் ஆர் அமுதம் அளித்தே அணைத்து அருளி
முகமே மலர்த்திச் சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல்
சகம் மேல் இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.

#20
தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனித் தலைமை
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில்
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே.

@18. அபயம் இடுதல்

#1
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் உலவா ஒரு பேர்_அருள் ஆர் அமுதம்
தருவாய் இதுவே தருணம் தருணம் தரியேன் சிறிதும் தரியேன் இனி நீ
வருவாய் அலையேல் உயிர் வாழ்கலன் நான் மதி சேர் முடி எம் பதியே அடியேன்
குருவாய் முனமே மனமே இடமாக் குடிகொண்டவனே அபயம் அபயம்.

#2
என்னே செய்வேன் செய் வகை ஒன்று இங்கு இது என்று அருள்வாய் இதுவே தருணம்
மன்னே அயனும் திருமாலவனும் மதித்தற்கு அரிய பெரிய பொருளே
அன்னே அப்பா ஐயா அரசே அன்பே அறிவே அமுதே அழியாப்
பொன்னே மணியே பொருளே அருளே பொது வாழ் புனிதா அபயம் அபயம்.

#3
கருணாநிதியே அபயம் அபயம் கனகாகரனே அபயம் அபயம்
அருள் நாடு அகனே அபயம் அபயம் அழகா அமலா அபயம் அபயம்
தருண் ஆதவனே அபயம் அபயம் தனி நாயகனே அபயம் அபயம்
தெருள் நாடுறுவாய் அபயம் அபயம் திரு_அம்பலவா அபயம் அபயம்.

#4
மருளும் துயரும் தவிரும்படி என் மன மன்றிடை நீ வருவாய் அபயம்
இருளும் பவமும் பெறு வஞ்சக நெஞ்சினன் என்று இகழேல் அபயம் அபயம்
வெருளும் கொடு வெம் புலையும் கொலையும் விடுமாறு அருள்வாய் அபயம் அபயம்
அருளும் பொருளும் தெருளும் தருவாய் அபயம் அபயம் அபயம் அபயம்.

#5
இனி ஓர் இறையும் தரியேன் அபயம் இது நின் அருளே அறியும் அபயம்
கனியேன் என நீ நினையேல் அபயம் கனியே கருணை_கடலே அபயம்
தனியேன் துணை வேறு அறியேன் அபயம் தகுமோ தகுமோ தலைவா அபயம்
துனியே அற வந்து அருள்வாய் அபயம் சுக நாடகனே அபயம் அபயம்.

#6
அடியார் இதயாம்புயனே அபயம் அரசே அமுதே அபயம் அபயம்
முடியாது இனி நான் தரியேன் அபயம் முறையோ முறையோ முதல்வா அபயம்
கடியேன் அலன் நான் அபயம் அபயம் கருணாகரனே அபயம் அபயம்
தடியேல் அருள்வாய் அபயம் அபயம் தருண் ஆதவனே அபயம் அபயம்.

#7
மல வாதனை தீர் கலவா அபயம் வலவா திரு_அம்பலவா அபயம்
உலவா நெறி நீ சொல வா அபயம் உறைவாய் உயிர்-வாய் இறைவா அபயம்
பல ஆகுலம் நான் தரியேன் அபயம் பலவா பகவா பனவா அபயம்
நலவா அடியேன் அலவா அபயம் நட நாயகனே அபயம் அபயம்.

#8
கொடியேன் பிழை நீ குறியேல் அபயம் கொலை தீர் நெறி என் குருவே அபயம்
முடியேன் பிறவேன் என நின் அடியே முயல்வேன் செயல் வேறு அறியேன் அபயம்
படியே அறியும்படியே வருவாய் பதியே கதியே பரமே அபயம்
அடியேன் இனி ஓர் இறையும் தரியேன் அரசே அருள்வாய் அபயம் அபயம்.

#9
இடர் தீர் நெறியே அருள்வாய் அபயம் இனி நான் தரியேன் தரியேன் அபயம்
விடர் போல் எனை நீ நினையேல் அபயம் விடுவேன் அலன் நான் அபயம் அபயம்
உடலோடு உறு மா பொருள் ஆவியும் இங்கு உனவே எனவே அலவே அபயம்
சுடர் மா மணியே அபயம் அபயம் சுக நாடகனே அபயம் அபயம்.

#10
குற்றம் பல ஆயினும் நீ குறியேல் குணமே கொளும் என் குருவே அபயம்
பற்றம் பலமே அலதோர் நெறியும் பதியே அறியேன் அடியேன் அபயம்
சுற்றம் பலவும் உனவே எனவோ துணை வேறு இலை நின் துணையே அபயம்
சிற்றம்பலவா அருள்வாய் இனி நான் சிறிதும் தரியேன் தரியேன் அபயம்.

@19. பிரிவாற்றாமை

#1
போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம்
வேக_மாட்டேன் பிறிது ஒன்றும் விரும்ப_மாட்டேன் பொய்_உலகன்
ஆக_மாட்டேன் அரசே என் அப்பா என்றன் ஐயா நான்
சாக_மாட்டேன் உனைப் பிரிந்தால் தரிக்க_மாட்டேன் கண்டாயே.

#2
செல்ல_மாட்டேன் பிறரிடத்தே சிறிதும் தரியேன் தீ_மொழிகள்
சொல்ல_மாட்டேன் இனிக் கணமும் துயர_மாட்டேன் சோம்பன் மிடி
புல்ல_மாட்டேன் பொய் ஒழுக்கம் பொருந்த_மாட்டேன் பிற உயிரைக்
கொல்ல_மாட்டேன் உனை அல்லால் குறிக்க_மாட்டேன் கனவிலுமே

#3
வெறுக்க_மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர் சிறிதும்
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான்
சிறுக்க_மாட்டேன் அரசே நின் திரு_தாள் ஆணை நின் ஆணை
மறுக்க_மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே.

#4
கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுள் கலந்து ஒளிரும்
தருணச் சுடரே எனை ஈன்ற தாயே என்னைத் தந்தோனே
வருணப் படிக மணி_மலையே மன்றில் நடம் செய் வாழ்வே நல்
பொருள் மெய்ப் பதியே இனித் துயரம் பொறுக்க_மாட்டேன் கண்டாயே.

#5
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து உலவாச் சுயம் சோதி
வண்ணம் பழுத்த தனிப் பழமே மன்றில் விளங்கு மணிச் சுடரே
தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய் இதுவே தருணம் என்றன்
எண்ணம் பழுத்தது இனிச் சிறியேன் இறையும் தரியேன் தரியேனே.

#6
நாட்டுக்கு இசைந்த மணி மன்றில் ஞான வடிவாய் நடம் செய் அருள்
ஆட்டுக்கு இசைந்த பெரும் கருணை அப்பா என்றன் அரசே என்
பாட்டுக்கு இசைந்த பதியே ஓர் பரமானந்தப் பழமே மேல்
வீட்டுக்கு இசைந்த விளக்கே என் விவேகம் விளங்க விளக்குகவே.

#7
வேதம் தலை மேல் கொள விரும்பி வேண்டிப் பரவும் நினது மலர்ப்
பாதம் தலை மேல் சூட்டி எனைப் பணி செய்திடவும் பணித்தனை நான்
சாதம் தலை மேல் எடுத்து ஒருவர்-தம் பின் செலவும் தரம்_இல்லேன்
ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இச் சீர் கிடைத்தது எவ்வாறே.

#8
பொய் விட்டு அகலாப் புலைக் கொடியேன் பொருட்டா இரவில் போந்து ஒரு நின்
கை விட்டு அகலாப் பெரும் பொருள் என் கையில் கொடுத்தே களிப்பித்தாய்
மை விட்டு அகலா விழி இன்பவல்லி மகிழும் மணவாளா
மெய் விட்டு அகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய் அருளே.

#9
சாமத்து இரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கம் தடுத்து மயல்
காம_கடலைக் கடத்தி அருள் கருணை அமுதம் களித்து அளித்தாய்
நாமத் தடி கொண்டு அடிபெயர்க்கும் நடையார்-தமக்கும் கடை ஆனேன்
ஏமத்து அருள் பேறு அடைந்தேன் நான் என்ன தவம் செய்திருந்தேனே.

#10
பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருள்
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடம் செய் பேர்_இன்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என் போல் இ உலகம் பெறுதல் வேண்டுவனே.

@20. இறை பொறுப் பியம்பல்

#1
தேடியது உண்டு நினது உரு உண்மை தெளிந்திடச் சிறிது நின்னுடனே
ஊடியது உண்டு பிறர்-தமை அடுத்தே உரைத்ததும் உவந்ததும் உண்டோ
ஆடிய பாதம் அறிய நான் அறியேன் அம்பலத்து அரும் பெரும் சோதி
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் கூறவும் கூசும் என் நாவே.

#2
மடம் புரி மனத்தால் கலங்கியது உண்டு வள்ளலே நின் திரு_வரவுக்கு
இடம் புரி சிறியேன் கலங்கினேன் எனினும் இறையும் வேறு எண்ணியது உண்டோ
நடம் புரி பாதம் அறிய நான் அறியேன் நான் செயும் வகை இனி நன்றே
திடம் புரிந்து அருளிக் காத்திடல் வேண்டும் சிறிதும் நான் பொறுக்கலேன் சிவனே.

#3
நீக்கிய மனம் பின் அடுத்து எனைக் கலக்கி நின்றதே அன்றி நின்அளவில்
நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ
தூக்கிய பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிப் பொறுக்கலேன் சிறிதும்
தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னைத் தெளிவித்தல் நின் கடன் சிவனே.

#4
ஈன்ற நல் தாயும் தந்தையும் குருவும் என் உயிர்க்கு இன்பமும் பொதுவில்
ஆன்ற மெய்ப்பொருளே என்று இருக்கின்றேன் அன்றி வேறு எண்ணியது உண்டோ
ஊன்றிய பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும்
தோன்றி என் உளத்தே மயக்கு எலாம் தவிர்த்துத் துலக்குதல் நின் கடன் துணையே.

#5
மாயையால் கலங்கி வருந்திய போதும் வள்ளல் உன்றன்னையே மதித்து உன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவ வேறு எண்ணியது உண்டோ
தூய பொன் பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்
நாயகா எனது மயக்கு எலாம் தவிர்த்தே நன்று அருள் புரிவது உன் கடனே.

#6
வண்ணம் வேறு எனினும் வடிவு வேறு எனினும் மன்னிய உண்மை ஒன்று என்றே
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்து இறையும் வேறு எண்ணியது உண்டோ
அண்ணல் நின் பாதம் அறிய நான் அறியேன் அஞர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்
திண்ணமே நின் மேல் ஆணை என்றன்னைத் தெளிவித்துக் காப்பது உன் கடனே.

#7
ஊடல் செய் மதமும் சமயமும் இவற்றில் உற்ற கற்பனைகளும் தவிர்ந்தேன்
வாடல் செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்தது இங்கு உண்டோ
ஆடல் செய் பாதம் அறிய நான் அறியேன் ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன்
பாடல் செய்கின்றேன் படிக்கின்றேன் எனக்குப் பரிந்து அருள் புரிவது உன் கடனே.

#8
உள்ளதே உள்ளது இரண்டு இலை எல்லாம் ஒரு சிவ மயம் என உணர்ந்தேன்
கள்ள நேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்து அயல் கருதியது உண்டோ
வள்ளல் உன் பாதம் அறிய நான் அறியேன் மயக்கு இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்
தெள் அமுது அருளி மயக்கு எலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே.

#9
எ மத நிலையும் நின் அருள் நிலையில் இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் தனித்து வேறு எண்ணியது உண்டோ
செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன் சிறிதும் இங்கு இனித் துயர் ஆற்றேன்
இ மதிக்கு அடியேன் குறித்தவாறு உள்ளது இயற்றுவது உன் கடன் எந்தாய்.

#10
அகம் புறம் மற்றை அகப்புறம் புறத்தே அடுத்திடும் புறப்புறம் நான்கில்
இகந்ததும் இலை ஓர் ஏகதேசத்தால் இறையும் இங்கு எண்ணியது உண்டோ
உகந்த நின் பாதம் அறிய நான் அறியேன் உறுகண் இங்கு இனிச் சிறிதும்-தான்
இகம் பெறல் ஆற்றேன் மயக்கு எலாம் தவிர்த்து இங்கு என்னை ஆண்டு அருள்வது உன் கடனே.

@21. கைம்மாறின்மை

#1
இழை எலாம் விளங்கும் அம்மை இடம் கொள் நின் கருணை என்னும்
மழை எலாம் பொழிந்து என் உள்ள மயக்கு எலாம் தவிர்த்து நான் செய்
பிழை எலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கு என் புரிவேன் அந்தோ
உழை எலாம் இலங்கும் சோதி உயர் மணி மன்று_உளானே.

#2
போது-தான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத்
தீது-தான் பொறுத்த உன்றன் திரு_அருள் பெருமைக்கு அந்தோ
ஏது-தான் புரிவேன் ஓகோ என் என்று புகழ்வேன் ஞான
மாது-தான் இடம் கொண்டு ஓங்க வயங்கும் மா மன்று_உளானே.

#3
சிற்றறிவு_உடையன் ஆகித் தினம்-தொறும் திரிந்து நான் செய்
குற்றமும் குணமாக் கொண்ட குணப் பெரும் குன்றே என்னைப்
பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும நின் பெருமை-தன்னைக்
கற்று அறிவு_இல்லேன் எந்தக் கணக்கு அறிந்து உரைப்பேன் அந்தோ.

#4
மை அரி நெடும் கணார்-தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே
பொய்_அறிவு_உடையேன் செய்த புன்மைகள் பொறுத்து ஆட்கொண்டாய்
ஐயறிவு_உடையார் போற்றும் அம்பலத்து அரசே நின் சீர்
மெய் அறிவு அறியேன் எந்த விளைவு அறிந்து உரைப்பேன் அந்தோ.

#5
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக்கு எல்லை இல்லை
ஆயினும் பொறுத்து ஆட்கொண்டாய் அம்பலத்து அரசே என்றன்
தாயினும் இனிய உன்றன் தண் அருள் பெருமை-தன்னை
நாயினும் கடையேன் எந்த நலம் அறிந்து உரைப்பேன் அந்தோ.

#6
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்த நெஞ்சகத்தேன் செய்த
பெரும் பிழை அனைத்தும் அந்தோ பெரும் குணமாகக் கொண்டாய்
அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற
கரும்பினில் இனியாய் உன்றன் கருணை என் என்பேன் அந்தோ.

#7
வரை கடந்து அடியேன் செய்த வன்_பிழை பொறுத்து ஆட்கொண்டாய்
திரை கடந்து அண்ட பிண்டத் திசை எலாம் கடந்தே அப்பால்
கரை_கடந்து ஓங்கும் உன்றன் கருணை அம் கடல் சீர் உள்ளம்
உரை கடந்தது என்றால் யான் உணர்வது என் உரைப்பது என்னே.

#8
நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ
கனவினும் பிழையே செய்தேன் கருணை மா நிதியே நீ-தான்
நினைவினும் குறியாது ஆண்டாய் நின் அருள் பெருமை-தன்னை
வினவினும் சொல்வார் காணேன் என் செய்வேன் வினையனேனே.

#9
வன் செயல் பொறுத்து ஆட்கொண்ட வள்ளலே அடியனேன்-தன்
முன் செயல் அவைகளோடு முடுகு பின் செயல்கள் எல்லாம்
என் செயல் ஆகக் காணேன் எனைக் கலந்து ஒன்றாய் நின்றோய்
நின் செயல் ஆகக் கண்டேன் கண்ட பின் நிகழ்த்தல் என்னே.

#10
இருமையும் ஒருமை-தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன்
பெருமை என் என்று நான்-தான் பேசுவேன் பேதம் இன்றி
உரிமையால் யானும் நீயும் ஒன்று எனக் கலந்துகொண்ட
ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேனே.

@22. தலைமகளின் முன்ன முடிபு

#1
வெறுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் பொறுத்து அருளல் வேண்டும் விளங்கு அறிவுக்கு அறிவு ஆகி மெய்ப் பொதுவில் நடிப்போய்
கறுத்து_உரைத்தார்-தமக்கும் அருள் கனிந்து உரைக்கும் பெரிய கருணை நெடும் கடலே முக் கண் ஓங்கு கரும்பே
மறுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு அறியேன்
செறுத்து உரைத்த உரைகள் எலாம் திரு_அருளே என்று சிந்திப்பது அல்லாமல் செய் வகை ஒன்று இலனே

#2
மிகுத்து_உரைத்தேன் பிழைகள் எலாம் சகித்து அருளல் வேண்டும் மெய் அறிவு இன்பு உரு ஆகி வியன் பொதுவில் நடிப்போய்
தொகுத்து உரைத்த மறைகளும் பின் விரித்து உரைத்தும் காணாத் துரிய நடுவே இருந்த பெரிய பரம்பொருளே
பகுத்து உரைத்த பயன் உரைக்கு ஓர் பொருள் ஆகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே பசுபதியே அடியேன்
வகுத்து உரைப்பது எவன் அருள் நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னை அலால் மற்றொரு சார்பு இலனே

#3
முன்னவனே சிறியேன் நான் சிறிதும் அறியாதே முனிந்து உரைத்த பிழை பொறுத்துக் கனிந்து அருளல் வேண்டும்
என்னவனே என் துணையே என் உறவே என்னை ஈன்றவனே என் தாயே என் குருவே எனது
மன்னவனே என்னுடைய வாழ் முதலே என் கண் மா மணியே மணி மிடற்று ஓர் மாணிக்க_மலையே
அன்னவனே அம்பலத்துள் ஆடுகின்ற அமுதே ஆறு அணிந்த சடையாய் யான் வேறு துணை இலனே

#4
சினந்து_உரைத்தேன் பிழைகள் எலாம் மனம் பொறுத்தல் வேண்டும் தீன தயாநிதியே மெய்ஞ்ஞான சபாபதியே
புனைந்து_உரைப்பார் அகத்து ஒன்றும் புறத்து ஒன்றும் நினைத்தே பொய் உலகர் ஆங்கு அவர் போல் புனைந்து உரைத்தேன்_அலன் நான்
இனம் திருத்தி எனை ஆட்கொண்டு என் உள் அமர்ந்து எனை-தான் எவ்வுலகும் தொழ நிலை மேல் ஏற்றிய சற்குருவே
கனம் தரு சிற்சுக அமுதம் களித்து அளித்த நிறைவே கருணை நடத்து அரசே என் கண் இலங்கு மணியே

#5
ஊடுதற்கு ஓர் இடம் காணேன் உவக்கும் இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர் இடம் ஆதலினால்
வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமையாலும் மனம் பிடியாமையினாலும் சினந்து உரைத்தேன் சிலவே
கூடுதற்கு வல்லவன் நீ கூட்டி எனைக் கொண்டே குலம் பேச வேண்டாம் என் குறிப்பு அனைத்தும் அறிந்தாய்
நாடுதற்கு இங்கு என்னாலே முடியாது நீயே நாடுவித்துக் கொண்டு அருள்வாய் ஞான சபாபதியே

#6
என் உளம் நீ கலந்துகொண்டாய் உன் உளம் நான் கலந்தேன் என் செயல் உன் செயல் உன்றன் இரும் செயல் என் செயலே
பின் உள நான் பிதற்றல் எலாம் வேறு குறித்து எனை நீ பிழையேற்ற நினைத்திடிலோ பெரு வழக்கிட்டிடுவேன்
அன்னையினும் தயவு_உடையாய் அப்பன் எனக்கு ஆனாய் அன்றியும் என் ஆர்_உயிருக்கு ஆர்_உயிராய் நிறைந்தாய்
மன்னு மணிப் பொது நடம் செய் மன்னவனே கருணை மா நிதியே எனக்கு அருள்வாய் மனக் கலக்கம் தவிர்த்தே

#7
எணம் குறியேன் இயல் குறியேன் ஏது நினையாதே என்பாட்டுக்கு இருந்தேன் இங்கு எனை வலிந்து நீயே
மணம் குறித்துக் கொண்டாய் நீ கொண்டது-தொட்டு எனது மனம் வேறுபட்டது இலை மாட்டாமையாலே
கணம் குறித்துச் சில புகன்றேன் புகன்ற மொழி எனது கருத்தில் இலை உன்னுடைய கருத்தில் உண்டோ உண்டேல்
குணம் குறிப்பான் குற்றம் ஒன்றும் குறியான் என்று அறவோர் கூறிடும் அ வார்த்தை இன்று மாறிடுமே அரசே

#8
மனம் பிடியாமையினாலோ மாட்டாமையாலோ மறதியினாலோ எனது வருத்தம்-அதனாலோ
தினம் பிடியா மயக்காலோ திகைப்பாலோ பிறர் மேல் சினத்தாலோ எதனாலோ சில புகன்றேன் இதனைச்
சினம் பிடியாத் தேவர் திருவுளம் பிடியாது எனவே சிந்தை களித்து இருக்கின்றேன் திருவுளத்தை அறியேன்
இனம் பிடியாமையும் உண்டோ உண்டு எனில் அன்பு_உடையார் ஏசல் புகழ் பேசல் என இயம்புதல் என் உலகே

#9
நாயகரே உமது வசம் நான் இருக்கின்றது போல் நாடிய தத்துவத் தோழி நங்கையர் என் வசத்தே
மேயவர் ஆகாமையினால் அவர் மேல் அங்கு எழுந்த வெகுளியினால் சில புகன்றேன் வேறு நினைத்து அறியேன்
தூயவரே வெறுப்பு வரில் விதி வெறுக்க என்றார் சூழ விதித்தாரை வெறுத்திடுதல் அவர் துணிவே
தீயவர் ஆயினும் குற்றம் குறியாது புகன்றால் தீ_மொழி அன்று எனத் தேவர் செப்பியதும் உளதே

#10
குற்றம் ஒருசிறிது எனினும் குறித்து அறியேன் வேறு ஓர் குறை அதனால் சில புகன்றேன் குறித்து அறியேன் மீட்டும்
சற்று மனம் வேறுபட்டது இல்லை கண்டீர் எனது சாமி உம் மேல் ஆணை ஒரு சதுரும் நினைத்து அறியேன்
பெற்றவளும் உற்றவரும் சுற்றமும் நீர் என்றே பிடித்திருக்கின்றேன் பிறிது ஓர் வெடிப்பும் உரைத்து அறியேன்
இற்றை-தொடுத்து என்னளவில் வேறு நினையாதீர் என்னுடைய நாயகரே என் ஆசை இதுவே

@23. வேட்கைக் கொத்து

#1
விண் படைத்த பொழில் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேல் ஆனான் அன்பர் உளம் மேவும் நடராஜன்
பண் படைத்த எனை அறியா இளம் பருவம்-தனிலே பரிந்து வந்து மாலையிட்டான் பார்த்து அறியான் மீட்டும்
பெண் படைத்த பெண்கள் எல்லாம் அவமதித்தே வலது பேசுகின்றார் கூசுகின்றேன் பிச்சி எனல் ஆனேன்
கண் படைத்தும் குழியில் விழக் கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

#2
சீத்த மணி அம்பலத்தான் என் பிராண_நாதன் சிவபெருமான் எம் பெருமான் செல்வ நடராஜன்
வாய்த்த என்னை அறியாத இளம் பருவம்-தனிலே மகிழ்ந்து வந்து மாலையிட்டான் மறித்தும் முகம் பாரான்
ஆய்த்த கலை கற்று உணர்ந்த அணங்கு_அனையார்-தமக்குள் ஆர் செய்த போதனையோ ஆனாலும் இது கேள்
காய்த்த மரம் வளையாத கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

#3
என் உயிரில் கலந்து கலந்து இனிக்கின்ற பெருமான் என் இறைவன் பொதுவில் நடம் இயற்றும் நடராஜன்
தன்னை அறியாப் பருவத்து என்னை மணம் புரிந்தான் தனை அறிந்த பருவத்தே எனை அறிய விரும்பான்
பின்னை அன்றி முன்னும் ஒரு பிழை புரிந்தேன் இல்லை பெண் பரிதாபம் காணல் பெருந்தகைக்கும் அழகோ
கன்னல் என்றால் கைக்கின்ற கணக்கும் உண்டோ அவன்றன் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

#4
தெருள் அமுதத் தனி யோகர் சிந்தையிலும் ஞானச் செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன்
அருள் அமுதம் அளிப்பன் என்றே அன்று மணம் புணர்ந்தான் அளித்து அறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
மருள்_உடையான்_அல்லன் ஒரு வஞ்சகனும்_அல்லன் மனம் இரக்கம் மிக உடையான் வல்_வினையேன் அளவில்
இருள்_உடையார் போல் இருக்கும் இயல்பு என்னை அவன்றன் இயல்பு அறிந்தும் விடுவேனோ இனி-தான் என் தோழீ

#5
சின்மயமாம் பொதுவினிலே தன்மயமாய் நின்று திரு_நடம் செய் பெரும் கருணைச் செல்வ நடராஜன்
என் மயம் நான் அறியாத இளம் பருவம்-தனிலே என்னை மணம் புரிந்தனன் ஈது எல்லாரும் அறிவார்
இன்மயம் இல்லாதவர் போல் இன்று மணந்து அருளான் இறை அளவும் பிழை புரிந்தேன்_இல்லை அவன் இதயம்
கல் மயமோ அன்று சுவைக் கனி மயமே என்னும் கணக்கு அறிந்தும் விடுவேனோ கண்டாய் என் தோழீ

#6
எண்_குணத்தான் எல்லார்க்கும் இறைவன் எல்லாம்_வல்லான் என் அகத்தும் புறத்தும் உளான் இன்ப நடராஜன்
பெண் குணத்தை அறியாத இளம் பருவம்-தனிலே பிச்சேற்றி மணம் புரிந்தான் பெரிது களித்திருந்தேன்
வண் குணத்தால் அனுபவம் நான் அறிய நின்ற பொழுதில் வந்து அறியான் இன்பம் ஒன்றும் தந்து அறியான் அவனும்
வெண்_குணத்தான்_அல்லன் மிகு நல்லன் எனப் பல கால் விழித்து அறிந்தும் விடுவேனோ விளம்பாய் என் தோழீ

#7
பொய்யாத புகழ்_உடையான் பொதுவில் நடம் புரிவான் புண்ணியர்-பால் நண்ணிய நல் புனித நடராஜன்
கொய்யாத அரும்பு அனைய இளம் பருவம்-தனிலே குறித்து மணம் புரிந்தனன் நான் மறித்தும் வரக் காணேன்
செய்யாத செய்கை ஒன்றும் செய்து அறியேன் சிறிதும் திருவுளமே அறியும் மற்று என் ஒரு உளத்தின் செயல்கள்
நையாத என்றன் உயிர்_நாதன் அருள் பெருமை நான் அறிந்தும் விடுவேனோ நவிலாய் என் தோழீ

#8
கண்_அனையான் என் உயிரில் கலந்துநின்ற கணவன் கணக்கு அறிவான் பிணக்கு அறியான் கருணை நடராஜன்
தண் அனையாம் இளம் பருவம்-தன்னில் எனைத் தனித்துத் தானே வந்து அருள் புரிந்து தனி மாலை புனைந்தான்
பெண்_அனையார் கண்டபடி பேசவும் நான் கூசாப் பெருமையொடும் இருந்தேன் என் அருமை எலாம் அறிந்தான்
உள் நனையா வகை வரவு தாழ்த்தனன் இன்று அவன்றன் உளம் அறிந்தும் விடுவேனோ உரையாய் என் தோழீ

#9
ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன்
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலைப் பரிந்து அணிந்தான் தெரிந்த தனிப் பருவம்-இதில் பரியான்
தான் மறந்தான் எனினும் இங்கு நான் மறக்க மாட்டேன் தவத்து ஏறி அவத்து இழியச் சம்மதமும் வருமோ
கோன் மறந்த குடியே போல் மிடியேன் நான் அவன்றன் குணம் அறிந்தும் விடுவேனோ கூறாய் என் தோழீ

#10
தனித்த பரநாத முடித் தலத்தின் மிசைத் தலத்தே தலைவர் எலாம் வணங்க நின்ற தலைவன் நடராசன்
இனித்த சுகம் அறிந்துகொளா இளம் பருவம்-தனிலே என் புருவ நடு இருந்தான் பின்பு கண்டேன்_இல்லை
அனித்தம் இலா இச் சரிதம் யார்க்கு உரைப்பேன் அந்தோ அவன் அறிவான் நான் அறிவேன் அயல் அறிவார் உளரோ
துனித்த நிலை விடுத்து ஒரு கால் சுத்த நிலை-அதனில் சுகம் கண்டும் விடுவேனோ சொல்லாய் என் தோழீ

@24 தனித் திரு அலங்கல்
**1. திருச்சிற்றம்பலத் தீங்கனி நுகர்தல்

#1
கலை வளர் முடியது என்னை ஆட்கொண்ட கருணை அம் கண்ணது ஞான
நிலை வளர் பொருளது உலகு எலாம் போற்ற நின்றது நிறை பெரும் சோதி
மலை வளர்கின்றது அருள் வெளி நடுவே வயங்குவது இன்பமே மயமாய்த்
தலை வளர் திரு_சிற்றம்பலம்-தனிலே தனித்து எனக்கு இனித்ததோர் கனியே.

#2
சிறுநெறிக்கு எனை-தான் இழுத்ததோர் கொடிய தீ மன மாயையைக் கணத்தே
வெறுவியது ஆக்கித் தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன்
உறு நறும் தேனும் அமுதும் மென் கரும்பில் உற்ற சாறு அட்ட சர்க்கரையும்
நறு நெயும் கலந்த சுவைப் பெரும் பழமே ஞான மன்று ஓங்கும் என் நட்பே.

#3
புல்லிய நெறிக்கே இழுத்து எனை அலைத்த பொய் மன மாயையைக் கணத்தே
மெல்லியது ஆக்கித் தடுத்து எனை ஆண்ட மெய்ய நின் கருணை என் புகல்வேன்
வல்லி நின் அம்மை மகிழ மன்று ஓங்கும் வள்ளலே மறைகள் ஆகமங்கள்
சொல்லிய பதியே மிகு தயாநிதியே தொண்டனேன் உயிர்க்கு மெய்த் துணையே.
**2 மாயையின் முடிவு

#4
அருள் பெரும் கடலே என்னை ஆண்ட சற்குருவே ஞானப்
பொருள் பெரும் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
மருள் பெரு மாயை முற்றும் மடிந்தன வினைகளோடே
இருள் பெரும் தடையை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே.

#5
மாண் நவ நிலைக்கு மேலே வயங்கிய ஒளியே மன்றில்
தாள் நவ நடம் செய்கின்ற தனிப் பெருந் தலைவனே என்
கோண் அவ மாயை எல்லாம் குலைந்தன வினைகளோடே
ஆணவ இருளை நீக்கி அலரியும் எழுந்தது அன்றே.

#6
தற்பரம் பொருளே வேதத் தலை நின்ற ஒளியே மோனச்
சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைகளோடே
இல் படும் இருளை நீக்கி இரவியும் எழுந்தது அன்றே.
**3. நடராஜ அலங்காரம்

#7
இரண்டே கால் கை முகம் தந்தீர் இன்ப நடம் செய் பெருமானீர்
இரண்டே காற்கு ஐ முகம் கொண்டீர் என்னே அடிகள் என்று உரைத்தேன்
இரண்டே கால் கை முகம் புடைக்க இருந்தாய் எனைக்கு என்று இங்கே நீ
இரண்டே_கால் கை முகம் கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே

#8
இரண்டேகாற்கு ஐமுகம் கொண்டீர் என்னை_உடையீர் அம்பலத்தீர்
இரண்டே கால் கை முகம் தந்தீர் என்னை இது-தான் என்று உரைத்தேன்
இரண்டே கால்_கை முகம் கொண்டு இங்கு இருந்த நீயும் எனைக் கண்டே
இரண்டே கால் கை முகம் கொண்டாய் என்றார் தோழி இவர் வாழி

#9
ஆடும் கருணைத் திரு_நடத்தீர் ஆடும் இடம்-தான் யாது என்றேன்
பாடும் திருவும் சவுந்தரமும் பழமும் காட்டும் இடம் என்றார்
நாடும்படி நன்கு அருளும் என்றேன் நங்காய் முன் பின் ஒன்றேயாய்
ஈடு உந்திய பல் நடு உளதால் என்றார் தோழி இவர் வாழி
**4. சாவுறாப் பேறு பெற்று மகிழ்தல்

#10
சிற்றறிவு உடைய நான் செய்த தீமைகள்
முற்றவும் பொறுத்து அருள் முனிந்திடேல் இன்றே
தெற்றென அருள்_பெரும்_சோதிச் செல்வமும்
மற்றவும் வழங்குக வரதனே என்றேன்.

#11
என்ற சொல் செவிமடுத்து இறையும் அஞ்சிடேல்
இன்று உனக்கு அருள்_பெரும்_சோதி ஈந்தனம்
நன்றுற மகிழ்க எந்நாளும் சாவுறா
வென்றியும் அளித்தனம் என்று மேவினான்.

#12
மேவி என் உள்ளகத்து இருந்து மேலும் என்
ஆவியில் கலந்து இவன் அவன் என்று ஓதும் ஓர்
பூ இயல் பேதமும் போக்கி ஒன்று-அதாய்த்
தே இயல் புரிந்தனன் சிதம்பரேசனே.
**5. பேரிடர் நீக்கம்

#13
முந்தை நாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் என என் முன்னர் நீ தோன்றினை அந்தோ
அந்த நாள் தொடங்கி மகிழ்ந்து இருக்கின்றேன் அப்பனே அய்யனே அரசே
இந்த நாள் கவலை இடர் பயம் எல்லாம் என்னை விட்டு ஒழிந்திடப் புரிந்தாய்
எந்த நாள் புரிந்தேன் இப் பெரும் பேறு இங்கு எய்துதற்கு உரிய மெய்த் தவமே.

#14
வாய்க் குறும்பு உரைத்துத் திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட
நாய்க்கு உயர் தவிசு இட்டு ஒரு மணி முடியும் நன்று உறச் சூட்டினை அந்தோ
தூய்_குணத்தவர்கள் புகழ் மணி மன்றில் சோதியே நின் பெரும் தயவைத்
தாய்க்கு உறு தயவு என்று எண்ணுகோ தாயின் தயவும் உன் தனிப் பெருந் தயவே.

#15
பேர்_இடர் தவிர்த்துப் பேர்_அருள் புரிந்த பெரும நின்றன்னை என்றனக்கே
சாருறு தாயே என்று உரைப்பேனோ தந்தையே என்று உரைப்பேனோ
சீருறு குருவே என்று உரைப்பேனோ தெய்வமே என்று உரைப்பேனோ
யார் என உரைப்பேன் என் எனப் புகழ்வேன் யாதும் ஒன்று அறிந்திலேன் அந்தோ.
**6. ஞானப் பொருள் விழைவு

#16
மன் அப்பா மன்றிடத்தே மா நடம் செய் அப்பா என்
றன் அப்பா சண் முகம் கொள் சாமி_அப்பா எவ்வுயிர்க்கும்
முன் அப்பா பின் அப்பா மூர்த்தி அப்பா மூவாத
பொன் அப்பா ஞானப் பொருள் அப்பா தந்து அருளே.

#17
ஆதியே திரு_அம்பலத்து ஆடல் செய் அரசே
நீதியே எலாம் வல்லவா நல்லவா நினைந்தே
ஓதியே உணர்தற்கு அரிதாகிய ஒரு வான்
சோதியே எனைச் சோதியேல் சோதியேல் இனியே.
**7. கேட்பார் இலை என்று கீழ்மேல தாக்கியதை வியத்தல்.

#18
ஓங்கும் அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்
தூங்கிய என்றன்னை எழுப்பி அருள் தூய பொருள்
வாங்குக என்று என்-பால் வலியக் கொடுத்து அமுதும்
பாங்குற நின்று ஊட்டினையே எந்தாய் நின் பண்பு இதுவே.

#19
நாள் பாரில் அன்பர் எலாம் நல்குக என்று ஏத்திநிற்ப
ஆட்பாரில் அன்பு ஓர் அணுத்துணையும் இல்லேற்கே
நீட்பாய் அருள் அமுதம் நீ கொடுத்தாய் நின்னை இங்கே
கேட்பார் இலை என்று கீழ் மேலது ஆக்கினையே.
**8. அடிகளார் பாடுதலும் ஆண்டவர் திருத்தலும்

#20
தேன் பாடல் அன்பு_உடையார் செயப் பொதுவில் நடிக்கின்ற சிவமே ஞானக்
கான் பாடிச் சிவகாமவல்லி மகிழ்கின்ற திருக் கணவா நல்ல
வான் பாட மறை பாட என் உளத்தே வயங்குகின்ற மன்னா நின்னை
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய்.

#21
ஆன் பாலும் நறும் தேனும் சர்க்கரையும் கூட்டிய தெள் அமுதே என்றன்
ஊன்-பாலும் உள-பாலும் உயிர்-பாலும் ஒளிர்கின்ற ஒளியே வேதம்
பூம் பாடல் புனைந்து ஏத்த என் உளத்தே ஆடுகின்ற பொன்னே நின்னை
யான் பாட நீ திருத்த என்ன தவம் செய்தேனோ எந்தாய் எந்தாய்.
**9. வையக வாழ்விற்கு வருந்தல்

#22
வெட்டை மாட்டி விடாப் பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டிச் சென்றே தொழுக்
கட்டை மாட்டிக்கொள்வார் என வேண்டிப் பெண் கட்டை மாட்டிக்கொள்வார் தம் கழுத்திலே
துட்டை மாட்டின் கழுத்து அடிக்கட்டையோ துணிக்கும் கட்டை-அதாம் இந்தக் கட்டை-தான்
எட்டை மாட்டி உயிர்விடக் கட்டை மேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே

#23
புண்ணைக் கட்டிக்கொண்டே அதன் மேல் ஒரு புடவை கட்டிப் புதுமைகள் காட்டிடும்
பெண்ணைக் கட்டிக்கொள்வார் இவர் கொள்ளிவாய்_பேயைக் கட்டிக்கொண்டாலும் பிழைப்பர் காண்
மண்ணைக் கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடையப் பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால்
கண்ணைக் கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழக் கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே
**10. இறை திருவுள்ளம் காயோ பழமோ எனக் கவல்தல்

#24
அங்கே உன்றன் அன்பர்கள் எல்லாம் அமர்கின்றார்
இங்கே நீ-தான் என்னளவு இன்னும் இரங்காயேல்
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன்
செம் கேழ் வேணித் திங்கள் அணிந்து அருள் சிவனேயோ.

#25
ஈயோடு உறழும் சிறியேன்அளவில் எந்தாய் நின்
சேயோடு உறழும் பேர்_அருள் வண்ணத் திருவுள்ளம்
காயோ பழமோ யாதோ அறியேன் கவல்கின்றேன்
தீயோடு உறழும் திரு_அருள் வடிவச் சிவனேயோ.
**11. கைம்மாறு இலாத கருணை

#26
சிற்சபை-கண்ணும் பொன்_சபை-கண்ணும்
திரு_நடம் புரியும் திரு_நடராஜ
எனக்கு அருள் புரிந்த நினக்கு அடியேன் கைம்
மாற்றை அறிந்திலன் போற்றி நின் அருளே.

#27
நாயினும் சிறியேன் ஆயினும் பெரியேன்
யாதில் பெரியேன் தீதில் பெரியேன்
என்னை ஆண்டு அருளினை என்னை ஆண்டவனே
அம்பலத்து ஆடல் செய் எம் பெரும் பொருளே
**12. பெருந்தாய் மருள் தவிர்த்தது கருதி மகிழ்தல்

#28
திருவே திகழும் கலை_மகளே திருவே மலையான் திரு_மகளே
உருவே இச்சை மயமே மெய் உணர்வின் வணமே உயர் இன்பக்
குருவே ஆதித் தனித் தாயே குலவும் பரையாம் பெரும் தாயே
மருவே மலரே சிவகாமவல்லி மணியே வந்து அருளே

#29
அருளே அறிவே அன்பே தெள் அமுதே மாதர் அரசே மெய்ப்
பொருளே தெருளே மாற்று அறியாப் பொன்னே மின்னே பூங்கிளியே
இருள் ஏய் மனத்தில் எய்தாத இன்பப் பெருக்கே இ அடியேன்
மருளே தவிர்த்த சிவகாமவல்லி நினக்கே வந்தனமே
**13. பதமலர் கண் டுவத்தல்

#30
அம்பலத்தே ஆடுகின்ற ஆர்_அமுதே அரசே ஆனந்த மா கடலே அறிவே என் அன்பே
உம்பர்கட்கே அன்றி இந்த உலகர்கட்கும் அருள் வான் ஒளிர்கின்ற ஒளியே மெய்_உணர்ந்தோர்-தம் உறவே
எம் பலத்தே ஆகி எனக்கு எழுமையும் நல் துணையாய் என் உளத்தே விளங்குகின்ற என் இறையே நினது
செம் பதத்தே மலர் விளங்கக் கண்டுகொண்டேன் எனது சிறுமை எலாம் தீர்ந்தே மெய்ச் செல்வம் அடைந்தேனே.

#31
அடி விளங்கக் கனகசபைத் தனி நடனம் புரியும் அருள் சுடரே என் உயிருக்கு ஆன பெரும் துணையே
துடி விளங்கக் கரத்து ஏத்தும் சோதி மலை மருந்தே சொல் பதம் எல்லாம் கடந்த சிற்சொருபப் பொருளே
பொடி விளங்கத் திரு_மேனிப் புண்ணியனே ஞான_போனகரைச் சிவிகையின் மேல் பொருந்தவைத்த புனிதா
படி விளங்கச் சிறியேன் நின் பத_மலர் கண்டு உவந்தேன் பரிவு ஒழிந்தேன் அருள் செல்வம் பரிசு எனப் பெற்றேனே.
**14. இறைவன் இயலை அருள் ஒன்றே அறியும் எனல்

#32
செவ்வணத்தவரும் மறையும் ஆகமமும் தேவரும் முனிவரும் பிறரும்
இவ்வணத்தது என்று அறிந்திடற்கு அரிதாம் எந்தை நின் திரு_அருள் திறத்தை
எவ்வணத்து அறிவேன் எங்ஙனம் புகல்வேன் என் தரத்து இயலுவதேயோ
ஒவ்வணத்து அரசே எனக்கு என இங்கு ஓர் உணர்ச்சியும் உண்டு-கொல் உணர்த்தே.

#33
உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பதத் தலைவ நின் இயலைப்
புணர்ந்த நின் அருளே அறியும் நான் அறிந்து புகன்றிடும் தரம் சிறிது உளனோ
கொணர்ந்து ஒரு பொருள் என் கரம் கொளக் கொடுத்த குரு எனக் கூறல் என் குறிப்பே.
**15. இறை திரு அருட்பா இன்புலகம் எய்துவிக்கும் எனல்

#34
ஆடிய கால்_மலர்களுக்கே அன்பு_உடையார் யாவர் இங்கே அவர்க்கே இன்பம்
கூடியது என்று ஆரணமும் ஆகமமும் ஆணையிட்டுக் கூறும் வார்த்தை
ஓடியதோ நெஞ்சே நீ உன்னுவது என் பற்பலவாய் உன்னேல் இன்னே
பாடி அவன் திரு_பாட்டைப் படி கண்டாய் இன்பு உலகப் படி கண்டாயே.
**16. தித்திப்பூறு திகழ்வித்தான் எனல்

#35
அப்பு ஊறு செம் சடை அப்பா சிற்றம்பலத்து ஆடுகின்றோய்
துப்பு ஊறு வண்ணச் செழும் சுடரே தனிச் சோதியனே
வெப்பு ஊறு நீக்கிய வெண் நீறு பூத்த பொன்_மேனியனே
உப்பு ஊறு வாய்க்குத் தித்திப்பு ஊறு காட்டிய உத்தமனே.
**17. கலக்கம் அற்றுப் பாடும் நாள் எந்நாள் என இரங்கல்

#36
கலக்கம் அற்று நான் நின்றனைப் பாடியே களிக்கின்ற நாள் எந்நாள்
இலக்கம் உற்று அறிந்திட அருள் புரிகுவாய் எந்தை இ இரவின்-கண்
துலக்கமுற்ற சிற்றம்பலத்து ஆடும் மெய்ச் சோதியே சுக வாழ்வே
அலக்கண் அற்றிடத் திரு_அருள் புரியும் என் அப்பனே அடியேற்கே.
**18. இறைவன் பிஞ்சுண்ட வாய்க்குப் பழம் அளித்தான் எனல்

#37
நஞ்சு உண்டு உயிர்களைக் காத்தவனே நட நாயகனே
பஞ்சு உண்ட சிற்றடிப் பாவை_பங்கா நம் பராபரனே
மஞ்சு உண்ட செம் சடை மன்னா பொன்_அம்பலவா வலவா
பிஞ்சு உண்ட வாய்க்குப் பழம் அளித்து ஆண்ட பெரியவனே.
**19. தெய்வத் தாயிடம் தஞ்சம்

#38
அரங்கு ஆய மனம் மாயை அளக்கர் ஆழம் அறியாமல் கால் இட்டு இங்கு அழுந்துகின்றேன்
இரங்காயோ சிறிதும் உயிர் இரக்கம் இல்லா என் மனமோ நின் மனமும் இறைவி உன்றன்
உரம் காணும் அரசியல்_கோல் கொடுங்கோல் ஆனால் ஓடி எங்கே புகுந்து எவருக்கு உரைப்பது அம்மா
திரம் காணாப் பிள்ளை எனத் தாய் விடாளே சிவகாமவல்லி எனும் தெய்வத் தாயே
**20. அம்மையிடம் அடைக்கலம்

#39
தனத்தால் இயன்ற தனிச் சபையில் நடிக்கும் பெருமான்-தனக்கு அன்றே
இனத்தால் உயர்ந்த மண_மாலையிட்டுக் களித்த துரைப் பெண்ணே
மனத்தான் விளங்கும் சிவகாமவல்லிக் கனியே மாலொடும் ஓர்
அனத்தான் புகழும் அம்மே இ அடியேன் உனக்கே அடைக்கலமே
**21. தலைவன் அன்பற்றான் எனத் தலைவி வருந்தல்

#40
நல் வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் நான் செயத் தக்கது ஏது என்பாள்
செல் வினை ஒன்றும் தெரிந்திலன் ஐயோ தெய்வமே தெய்வமே என்பாள்
வெல் வினை மன்றில் நடம் புரிகின்றார் விருப்பு_இலர் என் மிசை என்பாள்
வல்_வினை உடையேன் என்று உளம் பதைப்பாள் வருந்துவாள் நான் பெற்ற மகளே.
**22. தலைவன் அன்பின்திறம் என் எனத் தலைவி மருளல்

#41
பூ ஆர் கொன்றைச் செஞ்சடையாளர் புகழாளர்
ஈவார் போல் வந்து என் மனை புக்கார் எழில் காட்டி
தே ஆர் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர்
ஆ வா என்றார் என்னடி அம்மா அவர் சூதே.
**23. ஏதும் அறியேன் எனால்

#42
மந்திரம் அறியேன் மற்றை மணி மருந்து அறியேன் வேறு
தந்திரம் அறியேன் எந்தத் தகவு கொண்டு அடைவேன் எந்தாய்
இந்திரன் முதலாம் தேவர் இறைஞ்சப் பொன் மன்றில் வேணிச்
சந்திரன் ஆட இன்பத் தனி நடம் புரியும் தேவே.
**24. இருளாயின தவிர்த்தருள் எனல்

#43
அருள் ஆர்_அமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவே என்
பொருளாய் அகத்தும் புறத்தும் என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பே மெய்த்
தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம்பலத்தே நடிக்கின்றோய்
இருளாயின எல்லாம் தவிர்த்து என் எண்ணம் முடிப்பாய் இப்போதே.
**25. இறைவழிபா டன்றிச் சித்திநிலை எய்தா தெனல்

#44
மதிக்கு அளவா மணி மன்றில் திரு_நடம்செய் திரு_தாளை வழுத்தல் இன்று
பதிக்கு அளவா நலம் தருவல் என்று நினை ஏத்துதற்குப் பணிக்கின்றேன் நீ
விதிக்கு அளவாச் சித்திகள் முன் காட்டுக இங்கு என்கின்றாய் விரைந்த நெஞ்சே
பொதிக்கு அளவா முன்னர் இங்கே சத்தத்துக்கு அளவு என்பார் போன்றாய் அன்றே.
**26. உயிரிரக்கம் அளித்துத் திருவடி தந்தான் எனல்

#45
கருணையாம் பெரும் கடல் அமுது அளித்தனை எனக்கே
தருண வாரிச மலர்_பதம் தந்தனை நின்னை
அருண வண்ண ஒண் சுடர் மணி மண்டபத்து அடியேன்
பொருள் நயப்புறக் கண்டுகண்டு உளம் மகிழ் போதே.
**27. தொண்டர் அடிப்பெருமை சொலற்கரியது எனல்

#46
வண்டு அணி பூம் குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லியொடு மணி மன்றில் வயங்கிய நின் வடிவம்
கண்டவரைக் கண்டவர்-தம் கால்_மலர் முத்தேவர் கன முடிக்கே முடிக்கின்ற கடி மலராம் என்றால்
பண் தகு நின் திரு_தொண்டர் அடிப் பெருமை எவரே பகர்ந்திடுவர் மறைகள் எலாம் பகர்ந்திடுவான் புகுந்தே
விண்டு உலர்ந்து வெளுத்த அவை வெளுத்த மட்டோ அவற்றை வியந்து ஓதும் வேதியரும் வெளுத்தனர் உள் உடம்பே.
**28. அருள் அடைய விழைதல்

#47
அணியே எனது மெய் அறிவே பொது வளர் அரசே திரு வளர் அமுதே
இனிது அருள்வாய் இது தருணம் அமுது அருளாய் இது தருணம்
மணியே எனது கண்மணியே பொது வளர் மதியே திரு_அருள் மதியே
அருள் புரிவாய் இது தருணம் அருள் புரிவாய் இது தருணம். .
**29. அன்று ஆட்கொண்ட இறைவன் இன்று தள்ளிவைத்தல் தகுமோ எனல்

#48
பண்டு நின் திருப் பாத_மலரையே பாடி ஆடிய பத்திமையோரைப் போல்
தொண்டு கொண்டு எனை ஆண்டனை இன்று-தான் துட்டன் என்று துரத்திடல் நன்று-கொல்
குண்டு நீர்க் கடல் சூழ் உலகத்து_உளோர் குற்றம் ஆயிரம்கோடி செய்தாலும் முன்
கொண்டு பின் குலம் பேசுவரோ எனைக் குறிக்கொள்வாய் எண்_குணம் திகழ் வள்ளலே.
**30. இரக்கம் அற்றவரின் இழிபொருள் அழியுமாறு

#49
மழவுக்கும் ஒரு பிடி சோறு அளிப்பது அன்றி இரு பிடி ஊண் வழங்கில் இங்கே
உழவுக்கு முதல் குறையும் என வளர்த்து அங்கு அவற்றை எலாம் ஓகோ பேயின்
விழவுக்கும் புலால் உண்ணும் விருந்துக்கும் மருந்துக்கும் மெலிந்து மாண்டார்
இழவுக்கும் இடர்க் கொடுங்கோல் இறை வரிக்கும் கொடுத்து இழப்பர் என்னே என்னே.
**31. இறை திருவடி எய்தும் உளவறியாமை உரைத்தல்

#50
மாது ஓர் புடை வைத்த மா மருந்தே மணியே என்மட்டில்
யாதோ திருவுளம் யான் அறியேன் இதற்கு என்ன செய்வேன்
போதோ கழிகின்றது அந்தோ நின்றன்னைப் பொருந்துகின்ற
சூது ஓர் அணுவும் தெரியேன் நின் பாதத் துணை துணையே. .
**32. ஆண்டவனுக்கு அபயம்

#51
கொழும் தேனும் செழும் பாகும் குலவு பசும்பாலும் கூட்டி உண்டால் போல் இனிக்கும் குணம் கொள் சடைக் கனியே
தொழும் தேவ மடந்தையர்க்கு மங்கலநாண் கழுத்தில் தோன்ற விடம் கழுத்தின் உளே தோன்ற நின்ற சுடரே
எழுந்து ஏறும் அன்பர் உளத்து ஏற்று திரு_விளக்கே என் உயிர்க்குத் துணையே என் இரு கண்ணுள் மணியே
அழுந்து ஏற அறியாது என் அவல நெஞ்சம் அந்தோ அபயம் உனக்கு அபயம் எனை ஆண்டு அருள்க விரைந்தே.
**33. ஆனந்த நடங் காணும் பேரவா உரைக்க ஒணா தெனல்

#52
அயல் அறியேன் நினது மலர்_அடி அன்றிச் சிறிதும் அம்பலத்தே நிதம் புரியும் ஆனந்த நடம் கண்டு
உயல் அறியேன் எனினும் அது கண்டு கொளும் ஆசை ஒரு கடலோ எழு கடலோ உரைக்கவொணாது உடையேன்
மயல் அறியா மனத்து அமர்ந்த மா மணியே மருந்தே மதி முடி எம் பெருமான் நின் வாழ்த்து அன்றி மற்று ஓர்
செயல் அறியேன் எனக்கு அருளத் திருவுளம் செய்திடுவாய் திரு_எழுத்து ஐந்து ஆணை ஒரு துணை சிறிது இங்கு இலனே.
**34. சன்மார்க்கப் பொதுநெறி இற்றெனல்

#53
சேய் போல் உலகத்து உயிரை எல்லாம் எண்ணிச் சேர்ந்து பெற்ற
தாய் போல் உரைப்பர் சன்மார்க்க சங்கத்தவர் சாற்றும் எட்டிக்
காய் போல் பிறர்-தமைக் கண்டால் கசந்து கடுகடுத்தே
நாய் போல் குரைப்பர் துன்மார்க்க சங்கத்தவர் நானிலத்தே.
**35. கள்அருந்தும் இழிவினுக்கு இரங்கல்

#54
மதிப் பாலை அருள் பாலை ஆனந்தப் பாலை உண்ண மறந்தார் சில்லோர்
விதிப் பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்பக்
கொதிப் பாலை உணர்வு அழிக்கும் குடிப் பாலை மடிப் பாலைக் குடிப்பார் அந்தோ
துதிப் பாலை அருள்தரும் நம் தேவ சிகாமணித் தேவைத் துதியார் அன்றே.
**36. திருவடிக் காட்சி கிடைக்கும் தருணம் இங்கிது எனல்

#55
ஒன்றும் முன் எண்-பால் எண்ணிடக் கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால்
நன்று கண்டு ஆங்கே அருள்_பெரும்_சோதி நாதனைக் கண்டவன் நடிக்கும்
மன்று கண்டு அதனில் சித்து எலாம் வல்ல மருந்து கண்டு உற்றது வடிவாய்
நின்றுகொண்டு ஆடும் தருணம் இங்கு இதுவே நெஞ்சமே அஞ்சலை நீயே.
**37. சித்தி நிலைகள் தெரித்தருள் எனல்

#56
கருணைக் கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனி அமுதில்
தருணச் சுவையே சுவை அனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே
பொருள் மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே
தெருள் மெய்க் கருத்தில் கலந்து எனையும் சித்தி நிலைகள் தெரித்து அருளே.
**38. உரு நிலைத்த வாழ்வுற வேண்டுதல்

#57
திரு நிலைத்து நல் அருளொடும் அன்பொடும் சிறப்பொடும் செழித்து ஓங்க
உரு நிலைத்து இவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்து நின் அருள்செய்வாய்
இரு நிலத்தவர் இன்புறத் திரு_அருள் இயல் வடிவொடு மன்றில்
குரு நிலைத்த சற்குரு எனும் இறைவ நின் குரை கழல் பதம் போற்றி.
**39. அம்மை அருள்தர அமயம் இது எனல்

#58
தருவாய் இது நல் தருணம் கண்டாய் என்னைத் தாங்கிக்கொண்ட
குருவாய் விளங்கும் மணி மன்ற_வாணனைக் கூடி இன்ப
உருவாய் என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மை எலாம்
திருவாய்_மலர்ந்த சிவகாமவல்லி நின் சீர் அருளே
**40. இறைவனே எல்லாம் எனல்

#59
மன்றுள் நின்று ஆடும் வள்ளலே எனது வள்ளல் என்று எனக்குளே தெரிந்த
அன்று-தான் தொடங்கி அம்மையே அப்பா ஐயனே அன்பனே அரசே
என்று நின்றனையே நினைத்து இருக்கின்றேன் எள்துணை எனினும் வேறு இடத்தில்
சென்று நின்று அறியேன் தெய்வமே இது நின் திருவுளம் தெரிந்தது-தானே.
**41. உளங் கலந்தருள் எனல்

#60
கண் எலாம் நிரம்பப் பேர்_ஒளி காட்டிக் கருணை மா மழை பொழி முகிலே
விண் எலாம் நிறைந்த விளக்கமே என்னுள் மேவிய மெய்ம்மையே மன்றுள்
எண் எலாம் கடந்தே இலங்கிய பதியே இன்று நீ ஏழையேன் மனத்துப்
புண் எலாம் தவிர்த்துப் பொருள் எலாம் கொடுத்துப் புகுந்து எனது உளம் கலந்து அருளே.
**42. வறியர் உறுபசிக்கு வருந்தல்

#61
உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறு பசி உழந்து வெம் துயரால்
வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்று இதை நினைத்திடும்-தோறும்
எள்ளலேன் உள்ளம் எரிகின்றது உடம்பும் எரிகின்றது என் செய்வேன் அந்தோ
கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக் குறை எலாம் தவிர்த்து அருள் எந்தாய்.
**43. இறைவன் என்பிலே கலந்தான் எனல்

#62
அன்பு_இலேன் எனினும் அறிவு_இலேன் எனினும் அன்று வந்து ஆண்டனை அதனால்
துன்பு_இலேன் என இ உலகு எலாம் அறியச் சொல்லினேன் சொல்லிய நானே
இன்பு_இலேன் என இன்று உரைத்திடல் அழகோ எனை உலகு அவமதித்திடில் என்
என்பிலே கலந்தாய் நினக்கும் வந்திடுமே எய்துக விரைந்து எனது இடத்தே.
**44. இனிப்பின் அருமை இயம்பல்

#63
சிரிப்பிலே பொழுது கழிக்கும் இ வாழ்க்கைச் சிறியவர் சிந்தை மாத்திரமோ
பொருப்பிலே தவம் செய் பெரியர்-தம் மனமும் புளிப்பிலே துவர்ப்பிலே உவர்ப்புக்
கரிப்பிலே கொடிய கயப்பிலே கடிய கார்ப்பிலே கார்ப்பொடு கலந்த
எரிப்பிலே புகுவது அன்றி எள்ளளவும் இனிப்பிலே புகுகின்றது இலையே.
**45. தனிக் கடவுள் ஒருவரே உளர் எனல்

#64
உருவர் ஆகியும் அருவினர் ஆகியும் உரு_அருவினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டு அறி-மினோ உலகுளீர் உணர்வு இன்றி
இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும் ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத்து உழல்வது என் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே.
**46. அருட்சோதி அடைய விரைதல்

#65
குற்றம் புரிதல் எனக்கு இயல்பே குணமாக் கொள்ளல் உனக்கு இயல்பே
சிற்றம்பலவா இனிச் சிறியேன் செப்பும் முகமன் யாது உளது
தெற்றென்று அடியேன் சிந்தை-தனைத் தெளிவித்து அச்சம் துயர் தீர்த்தே
இற்றைப் பொழுதே அருள் சோதி ஈக தருணம் இதுவாமே.
**47. கொலை புலையின் கொடும்பாடு கூறல்

#66
கடுகு ஆட்டு_கறிக்கு இடுக தாளிக்க எனக் கழறிக் களிக்காநின்ற
சுடுகாட்டுப் பிணங்காள் இச் சுகம் அனைத்தும் கணச் சுகமே சொல்லக் கேள்-மின்
முடுகாட்டுக் கூற்று வரும் சாவீரால் சாவதற்கு முன்னே நீவீர்
இடுகாட்டுப் பிணம் கண்டால் ஏத்து-மினோ எமையும் இவ்வாறு இடுக என்றே.
**48. உலகியல் நிகழ்ச்சிகளின் இழிவுரைத்தல்

#67
உணிக்கும் மூட்டுக்கும் கொதுகுக்கும் பேனுக்கும் உவப்புறப் பசிக்கின்றீர்
துணிக்கும் காசுக்கும் சோற்றுக்கும் ஊர்-தொறும் சுற்றிப் போய் அலைகின்றீர்
பிணிக்கும் பீடைக்கும் உடல் உளம் கொடுக்கின்றீர் பேதையீர் நல்லோர்கள்
பணிக்கும் வேலை செய்து உண்டு உடுத்து அம்பலம் பரவுதற்கு இசையீரே.
**49. சத்திய வார்த்தை

#68
சிவம் எனும் பெயர்க்கு இலக்கியம் ஆகி எச்செயலும் தன் சமுகத்தே
நவம் நிறைந்த பேர் இறைவர்கள் இயற்றிட ஞான மா மணி மன்றில்
தவம் நிறைந்தவர் போற்றிட ஆனந்தத் தனி நடம் புரிகின்றான்
எவன் அவன் திரு_ஆணை ஈது இசைத்தனன் இனித் துயர் அடையேனே.
**50. எந்தை என்னுள் உற்றான் எனல்

#69
சர்க்கரை ஒத்தான் எனக்கே தந்தான் அருள் என் மனக்
கல் கரையச் செய்தே களிப்பித்தான் கற்க
இனியான் அருள் சோதி எந்தை என்னுள் உற்றான்
இனி யான் மயங்கேன் இருந்து.
**51. சிற்றம்பலவனைத் துதித்து ஆடுவன் எனல்

#70
அப் பனை இப் பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன் சொல்
அப்பனை என் உயிர்க்கான செந்தேனை அமுதை அ நாள்
அப்பனை ஆழி கடத்திக் கரை விட்டு அளித்த சடை_
அப்பனைச் சிற்றம்பலவனை நான் துதித்து ஆடுவனே. .
**52. திறம் இன்மை தெரித்தல்

#71
தொடுக்கவோ நல்ல சொல்_மலர் இல்லை நான் துதிக்கவோ பத்தி சுத்தமும் இல்லை உள்
ஒடுக்கவோ மனம் என் வசம் இல்லை ஊடுற்ற ஆணவம் ஆதி மலங்களைத்
தடுக்கவோ திடம் இல்லை என் மட்டிலே தயவு-தான் நினக்கு இல்லை உயிரையும்
விடுக்கவோ மனம் இல்லை என் செய்குவேன் விளங்கும் மன்றில் விளங்கிய வள்ளலே
**53. மறைமொழிப் பேறு

#72
ஆவி ஈரைந்தை அபரத்தே வைத்து ஓதில்
ஆ வி ஈரைந்தை அகற்றலாம் ஆவி ஈ
ரைந்து உறலாம் ஆவி ஈர் ஐந்து அறலாம் ஆவி ஈ
ரைந்து இடலாம் ஓர் இரண்டோடு ஆய்ந்து
**54. இறை எண்ணத்தின் விளைவு சர்வ சித்தி எனல்

#73
அருள் சபை நடம் புரி அருள்_பெரும்_சோதி
தெருள் பெரும் சீர் சொலத் திகழ்வ சித்தியே

@25. நடராசபதி மாலை

#1
அருள் நிலை விளங்கு சிற்றம்பலம் எனும் சிவ சுகாதீத வெளி நடுவிலே
 அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரம் அனைத்தும் அவை ஆக்கல் முதலாம்
பொருள் நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடு விளங்கி ஓங்கப்
 புறப்புறம் அகப்புறம் புறம் அகம் இவற்றின் மேல் பூரணாகாரம் ஆகித்
தெருள் நிலைச் சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றித்
 திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே
சுருள் நிலைக் குழல் அம்மை ஆனந்தவல்லி சிவசுந்தரிக்கு இனிய துணையே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#2
என் இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்திலே தயவிலே
 என் உயிரிலே என்றன் உயிரினுக்கு_உயிரிலே என் இயல்_குணம்-அதனிலே
இன் இயல் என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என் செவிப் புலன் இசையிலே
 என் இரு கண்மணியிலே என் கண்மணி ஒளியிலே என் அனுபவம்-தன்னிலே
தன் இயல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே தானே கலந்து முழுதும்
 தன்மயம்-அது ஆக்கியே தித்தித்து மேன்மேல் ததும்பி நிறைகின்ற அமுதே
துன்னிய பெரும் கருணை_வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#3
உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வு எலாம் உள்ளன எலாம் கலந்தே
 ஒளி மயம்-அது ஆக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்தமானம் இன்றி
இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக
 இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே
கடல் எலாம் புவி எலாம் கனல் எலாம் வளி எலாம் ககன் எலாம் கண்ட பரமே
 காணாத பொருள் எனக் கலை எலாம் புகல என் கண் காண வந்த பொருளே
தொடல் எலாம் பெற எனக்கு உள்ளும் புறத்தும் மெய்த் துணையாய் விளங்கும் அறிவே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#4
மெய் தழைய உள்ளம் குளிர்ந்து வகை மாறாது மேன்மேல் கலந்து பொங்க
 விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவு அனுபவம் விளங்க அறிவு அறிவது ஆகி
உய் தழைவு அளித்து எலாம் வல்ல சித்து-அது தந்து உவட்டாது உள் ஊறிஊறி
 ஊற்றெழுந்து என்னையும் தான் ஆக்கி என்னுளே உள்ளபடி உள்ள அமுதே
கை தழைய வந்த வான் கனியே எலாம் கண்ட கண்ணே கலாந்த நடுவே
 கற்பனை இலாது ஓங்கு சிற்சபாமணியே கணிப்ப அரும் கருணை நிறைவே
துய் தழை பரப்பித் தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#5
எண்_இலா அண்ட பகிரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலே மேல்
 ஏற்றத்திலே அவையுள் ஊற்றத்திலே திரண்டு எய்து வடிவம்-தன்னிலே
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மை-தனிலே
 கலை ஆதி நிலையிலே சத்தி சத்து ஆகிக் கலந்து ஓங்குகின்ற பொருளே
தெள் நிலாக்காந்தமணி மேடை-வாய்க் கோடை-வாய்ச் சேர்ந்து அனுபவித்த சுகமே
 சித்து எலாம் செய வல்ல தெய்வமே என் மனத் திரு_மாளிகைத் தீபமே
துண்ணுறாச் சாந்த சிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளிசெய் ஒளியே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#6
அம்புவியிலே புவியின் அடியிலே முடியிலே அ மண்டலம்-தன்னிலே
 அகலத்திலே புவியின் அகிலத்திலே அவைக்கான வடிவாதி-தனிலே
விம்பமுறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவை அவை ஆகியே
 மேலும் அவை அவை ஆகி அவை அவை அலாததொரு மெய்ந் நிலையும் ஆன பொருளே
தம்பம் மிசை எனை ஏற்றி அமுது ஊற்றி அழியாத் தலத்தில் உறவைத்த அரசே
 சாகாத வித்தைக்கு இலக்கண இலக்கியம்-தானாய் இருந்த பரமே
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும் ஒன்றான சிவமே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#7
நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே
 நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே
ஊரிலே அ நீரின் உப்பிலே உப்பில் உறும் ஒண் சுவையிலே திரையிலே
 உற்ற நீர்க் கீழிலே மேலிலே நடுவிலே உற்று இயல் உறுத்தும் ஒளியே
காரிலே ஒரு கோடி பொழியினும் துணை பெறாக் கருணை_மழை பொழி மேகமே
 கனகசபை நடு நின்ற கடவுளே சிற்சபை-கண் ஓங்கும் ஒரு தெய்வமே
தூரிலே பலம் அளித்து ஊரிலே வளர்கின்ற சுக சொருபமான தருவே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#8
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பு_இலா ஒளியிலே சுடரிலே மேல்
 ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே உறும் ஆதி அந்தத்திலே
தெள்ளிய நிறத்திலே அருவத்திலே எலாம் செய வல்ல செய்கை-தனிலே
 சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞான மயமே
 மணியே என் இரு கண்ணுள் மணியே என் உயிரே என் வாழ்வே என் வாழ்க்கை_வைப்பே
துள்ளிய மனப் பேயை உள்ளுற அடக்கி மெய்ச் சுகம் எனக்கு ஈந்த துணையே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#9
அறைகின்ற காற்றிலே காற்று உப்பிலே காற்றின் ஆதி நடு அந்தத்திலே
 ஆன பலபல கோடி சத்திகளின் உரு ஆகி ஆடும் அதன் ஆட்டத்திலே
உறைகின்ற நிறைவிலே ஊக்கத்திலே காற்றின் உற்ற பல பெற்றி-தனிலே
 ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித்து அருளும் ஒளியே
குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம்கோடி கிரணங்கள் வீசிக்
 குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே
துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவால் கண்ட சொருபமே துரிய பதமே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#10
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின் அருவத்திலே வான் இயலிலே
 வான் அடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே கலையிலே
மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே
 வளர் அனந்தானந்த சத்தர் சத்திகள்-தம்மை வைத்த அருள் உற்ற ஒளியே
தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனித் திரளிலே தித்திக்கும் ஓர்
 தித்திப்பு எலாம் கூட்டி உண்டாலும் ஒப்பு எனச் செப்பிடாத் தெள் அமுதமே
தூ நிலா வண்ணத்தில் உள் ஓங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#11
என்று இரவி-தன்னிலே இரவி சொருபத்திலே இயல் உருவிலே அருவிலே
 ஏறிட்ட சுடரிலே சுடரின் உள் சுடரிலே எறி ஆதபத் திரளிலே
ஒன்று இரவி ஒளியிலே ஓங்கு ஒளியின் ஒளியிலே ஒளி ஒளியின் ஒளி நடுவிலே
 ஒன்று ஆகி நன்று ஆகி நின்று ஆடுகின்ற அருள் ஒளியே என் உற்ற_துணையே
அன்று இரவில் வந்து எனக்கு அருள் ஒளி அளித்த என் அய்யனே அரசனே என்
 அறிவனே அமுதனே அன்பனே இன்பனே அப்பனே அருளாளனே
துன்றிய என் உயிரினுக்கு இனியனே தனியனே தூயனே என் நேயனே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#12
அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே
 அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே
பணி மதியின் அமுதிலே அ அமுது இனிப்பிலே பக்க நடு அடி முடியிலே
 பாங்குபெற ஓங்கும் ஒரு சித்தே என் உள்ளே பலித்த பரமானந்தமே
மணி ஒளியில் ஆடும் அருள் ஒளியே நிலைத்த பெரு வாழ்வே நிறைந்த மகிழ்வே
 மன்னே என் அன்பான பொன்னே என் அன்னே என் வரமே வயங்கு பரமே
துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே பெரிய பொருளே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#13
அண்ட ஒருமைப் பகுதி இருமையாம் பகுதி மேல் ஆங்காரியப் பகுதியே
 ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகளின் நடு அடியினொடு முடியும் அவையில்
கண்ட பல வண்ண முதலான அக நிலையும் கணித்த புற நிலையும் மேன்மேல்
 கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும் விளங்கக் கலந்து நிறைகின்ற ஒளியே
கொண்ட பல கோலமே குணமே குணம் கொண்ட குறியே குறிக்க ஒண்ணாக்
 குரு துரியமே சுத்த சிவ துரியமே எலாம் கொண்ட தனி ஞான வெளியே
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#14
கரை இலாக் கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே
 கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே
வரை இலா வெள்ளப் பெருக்கத்திலே வட்ட வடிவிலே வண்ணம்-அதிலே
 மற்று அதன் வளத்திலே உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே
புரை இலா ஒரு தெய்வ மணியே என் உள்ளே புகுந்து அறிவு அளித்த பொருளே
 பொய்யாத செல்வமே நையாத கல்வியே புடம்வைத்திடாத பொன்னே
மரை இலா வாழ்வே மறைப்பு இலா வைப்பே மறுப்பு இலாது அருள் வள்ளலே
 மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#15
உற்று இயலும் அணு ஆதி மலை அந்தம் ஆன உடல் உற்ற கரு ஆகி முதலாய்
 உயிராய் உயிர்க்குள் உறும் உயிர் ஆகி உணர்வு ஆகி உணர்வுள் உணர்வு ஆகி உணர்வுள்
பற்றி இயலும் ஒளி ஆகி ஒளியின் ஒளி ஆகி அம்பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
 பண்புறு சிதம்பரப் பொன்_சபையுமாய் அதன் பாங்கு ஓங்கு சிற்சபையுமாய்த்
தெற்றி இயலும் அ சபையின் நடுவில் நடமிடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே
 சித்து எலாம் செய் எனத் திரு_வாக்கு அளித்து எனைத் தேற்றி அருள்செய்த குருவே
மற்று இயலும் ஆகி எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே என் வாழ்வின் வரமே
 மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#16
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாம் செய் வல்லது ஆகி
 இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பம் ஆகி
அவ்வையின் அனாதியே பாசம் இலதாய்ச் சுத்த அருள் ஆகி அருள் வெளியிலே
 அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்து அருள் அருள்_பெரும்_சோதி ஆகிக்
கவ்வை அறு தனி முதல் கடவுளாய் ஓங்கு மெய்க் காட்சியே கருணை நிறைவே
 கண்ணே என் அன்பில் கலந்து எனை வளர்க்கின்ற கதியே கனிந்த கனியே
வெவ் வினை தவிர்த்து ஒரு விளக்கு ஏற்றி என்னுளே வீற்றிருந்து அருளும் அரசே
 மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

#17
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே
 நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய்க் கொடி நாட்டியே
மூதாண்ட கோடிகளொடும் சராசரம் எலாம் முன்னிப் படைத்தல் முதலாம்
 முத்தொழிலும் இரு_தொழிலும் முன் நின்று இயற்றி ஐ_மூர்த்திகளும் ஏவல்கேட்ப
வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப
 மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே
சூது ஆண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரிய நடு நின்ற சிவமே
 சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே.

#18
ஒரு பிரமன் அண்டங்கள் அடி முடிப் பெருமையே உன்ன முடியா அவற்றின்
 ஓர் ஆயிரம்கோடி மால் அண்டம் அரன் அண்டம் உற்ற கோடாகோடியே
திருகல் அறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்_இறந்த
 திகழ்கின்ற மற்றைப் பெரும் சத்தி சத்தர்-தம் சீர் அண்டம் என் புகலுவேன்
உறுவுறும் இ அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில் உறு சிறு அணுக்களாக
 ஊடு அசைய அ வெளியின் நடு நின்று நடனம் இடும் ஒரு பெரும் கருணை அரசே
மருவி எனை ஆட்கொண்டு மகன் ஆக்கி அழியா வரம் தந்த மெய்த் தந்தையே
 மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#19
வரவு_செலவு அற்ற பரிபூரணாகார சுக வாழ்க்கை முதலா எனக்கு
 வாய்த்த பொருளே என் கண்மணியே என் உள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே
இரவு_பகல் அற்ற ஒரு தருணத்தில் உற்ற பேர் இன்பமே அன்பின் விளைவே
 என் தந்தையே எனது குருவே என் நேயமே என் ஆசையே என் அறிவே
கரவு நெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே
 கனியே அருள் பெரும் கடலே எலாம் வல்ல கடவுளே கலைகள் எல்லாம்
விரவி உணர்வு அரிய சிவ துரிய அனுபவமான மெய்ம்மையே சன்மார்க்க மா
 மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

#20
பார் ஆதி பூதமொடு பொறி புலன் கரணமும் பகுதியும் காலம் முதலாப்
 பகர்கின்ற கருவியும் அவைக்கு மேல் உறு சுத்த பரம் ஆதி நாதம் வரையும்
சீராய பரவிந்து பரநாதமும் தனது திகழ் அங்கம் என்று உரைப்பத்
 திரு_அருள் பெருவெளியில் ஆனந்த நடனம் இடு தெய்வமே என்றும் அழியா
ஊர் ஆதி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே என் உள்ளே
 உற்ற_துணையே என்றன் உறவே என் அன்பே உவப்பே என்னுடைய உயிரே
ஆராலும் அறியாத உயர் நிலையில் எனை வைத்த அரசே அருள் சோதியே
 அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே.

#21
உரை விசுவம் உண்ட வெளி உபசாந்த வெளி மேலை உறு மவுன வெளி வெளியின் மேல்
 ஓங்கும் மா மவுன வெளி ஆதி உறும் அனுபவம் ஒருங்க நிறை உண்மை வெளியே
திரை அறு பெரும் கருணை_வாரியே எல்லாம் செய் சித்தே எனக்கு வாய்த்த
 செல்வமே ஒன்றான தெய்வமே உய் வகை தெரித்து எனை வளர்த்த சிவமே
பரை நடு விளங்கும் ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்று எனக்கே
 பண்புற உரைத்து அருள் பேர்_அமுது அளித்த மெய்ப் பரமமே பரம ஞான
வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடமிடு வள்ளலே
 மாறாத சன்மார்க்க நிலை நீதியே எலாம் வல்ல நடராச பதியே.

#22
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ
 ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே
வாழி நீடூழி என வாய்_மலர்ந்து அழியா வரம் தந்த வள்ளலே என்
 மதியில் நிறை மதியே வயங்கு மதி அமுதமே மதி அமுதின் உற்ற சுகமே
ஏழினோடு_ஏழ் உலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப
 இரவு_பகல் இல்லாத பெரு நிலையில் ஏற்றி எனை இன்புறச்செய்த குருவே
ஆழியோடு அணி அளித்து உயிர் எலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே
 அகர நிலை முழுதுமாய் அப்பாலும் ஆகி ஒளிர் அபய நடராச பதியே.

#23
பூதம் முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழிப் பணிகள் கேட்பப்
 பொய்படாச் சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும்
ஏதம் அற என் உளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும்
 இறவாத பெரு நிலையில் இணை சொலா இன்புற்று இருக்க எனை வைத்த குருவே
நாதம் முதல் இரு_மூன்று வரை அந்த நிலைகளும் நலம் பெறச் சன்மார்க்கமாம்
 ஞான நெறி ஓங்க ஓர் திரு_அருள் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசே
வாதமிடு சமய மதவாதிகள் பெறற்கு அரிய மா மதியின் அமுத நிறைவே
 மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#24
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள்
 மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே
 நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே
ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக என்ற குருவே
 என் ஆசையே என்றன் அன்பே நிறைந்த பேர்_இன்பமே என் செல்வமே
வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்த சுகமே
 மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞானகலர் உளே மேவு நடராச பதியே.

#25
என் செய்வேன் சிறியனேன் என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்று
 எண்ணி இரு கண்ணில் நீர் காட்டிக் கலங்கி நின்று ஏங்கிய இராவில் ஒருநாள்
மின் செய் மெய்ஞ்ஞான உரு ஆகி நான் காணவே வெளி நின்று அணைத்து என் உள்ளே
 மேவி என் துன்பம் தவிர்த்து அருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே
நன்செய்-வாய் இட்ட விளைவு-அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த
 நல் மகிழ்வின் ஒரு கோடி பங்கு அதிகம் ஆகவே நான் கண்டுகொண்ட மகிழ்வே
வன் செய் வாய் வாதருக்கு அரிய பொருளே என்னை வலிய வந்து ஆண்ட பரமே
 மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே

#26
துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச் சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே
 சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்தரம்-அது ஆனது உலகில்
வன்பு எலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும்
 மன் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன் மன நினைப்பின்படிக்கே
அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக அருள் சோதியாம்
 ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திரு_வாக்கு அளித்து என் உள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே
 எல்லாம் செய் வல்ல சித்து ஆகி மணி மன்றினில் இலங்கு நடராச பதியே

#27
பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம் பேய்ப்பிடிப்புற்ற பிச்சுப்
 பிள்ளை_விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்குமிங்கும்
போருற்று இறந்து வீண்போயினார் இன்னும் வீண்போகாதபடி விரைந்தே
 புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏர் உற்ற சுக நிலை அடைந்திடப் புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே
 இ வேலை புரிக என்று இட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
 நிர்க்குணானந்த பர நாதாந்த வரை ஓங்கு நீதி நடராச பதியே

#28
சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்-தான் என அறிந்த அறிவே
 தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்
வேகாத_கால் ஆதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே
 மெய்த் தொழில்-அது ஆகும் இ நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மா காதலுற எலாம் வல்ல சித்து ஆகி நிறைவான வரமே இன்பமாம்
 மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தரும் முன் அருள்செய்து எனைத் தேற்றி அருள்செய்த சிவமே
 சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராச பதியே

#29
நீடு உலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் நமது
 நீள் வார்த்தை ஆகும் இது உண்மை மகனே சற்றும் நெஞ்சம் அஞ்சேல் உனக்கே
ஆடுறும் அருள்_பெரும்_சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே
 அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே
நாடு நடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய
 நல்கிய பெரும் கருணை அப்பனே அம்மையே நண்பனே துணைவனே என்
ஊடு பிரியாது உற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனே உள்
 ஊறும் அமுது ஆகி ஓர் ஆறு இன் முடி மீதிலே ஓங்கு நடராச பதியே.

#30
அந்நாளில் அம்பலத் திரு_வாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடியே
 அற்புதம் எலாம் வல்ல நம் அருள் பேர்_ஒளி அளித்தனம் மகிழ்ந்து உன் உள்ளே
இந்நாள் தொடுத்து நீ எண்ணியபடிக்கே இயற்றி விளையாடி மகிழ்க
 என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவன் ஆகி இயல் சுத்தம் ஆதி மூன்றும்
எந்நாளும் உன் இச்சைவழி பெற்று வாழ்க யாம் எய்தி நின்னுள் கலந்தேம்
 இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம் ஆணை என்ற குருவே
மன் ஆகி என் பெரிய வாழ்வு ஆகி அழியாத வரம் ஆகி நின்ற சிவமே
 மணி மன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம் வல்ல நடராச பதியே.

#31
காய் எலாம் கனி எனக் கனிவிக்கும் ஒரு பெரும் கருணை அமுதே எனக்குக்
 கண்கண்ட தெய்வமே கலி கண்ட அற்புதக் காட்சியே கனக_மலையே
தாய் எலாம் அனைய என் தந்தையே ஒரு தனித் தலைவனே நின் பெருமையைச்
 சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச் சார்கின்ற-தோறும் அந்தோ
வாய் எலாம் தித்திக்கும் மனம் எலாம் தித்திக்கும் மதி எலாம் தித்திக்கும் என்
 மன்னிய மெய் அறிவு எலாம் தித்திக்கும் என்னில் அதில் வரும் இன்பம் என் புகலுவேன்
தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருள் சுகம் எலாம் தோன்றிட விளங்கு சுடரே
 துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

#32
எய்ப்பு அற எனக்குக் கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய்
 என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே
கைப்பு அற என் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்கட்டியே கருணை அமுதே
 கற்பக வனத்தே கனிந்த கனியே எனது கண் காண வந்த கதியே
மெய்ப் பயன் அளிக்கின்ற தந்தையே தாயே என் வினை எலாம் தீர்த்த பதியே
 மெய்யான தெய்வமே மெய்யான சிவ போக விளைவே என் மெய்ம்மை உறவே
துய்ப்புறும் என் அன்பான துணையே என் இன்பமே சுத்த சன்மார்க்க நிலையே
 துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

#33
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்து ஒருபுறம் படுத்துத்
 தூங்கு தருணத்து என்றன் அருகில் உற்று அன்பினால் தூய திருவாய்_மலர்ந்தே
இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இரு கை_மலர் கொண்டு தூக்கி
 என்றனை எடுத்து அணைத்து ஆங்கு மற்றோர் இடத்து இயலுற இருத்தி மகிழ்வாய்
வன்பு அறு பெரும் கருணை அமுது அளித்து இடர் நீக்கிவைத்த நின் தயவை அந்தோ
 வள்ளலே உள்ளு-தொறும் உள்ளகம் எலாம் இன்ப_வாரி அமுது ஊறிஊறித்
துன்பம் அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும் இச் சுக வண்ணம் என் புகலுவேன்
 துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

#34
ஓங்கிய பெரும் கருணை பொழிகின்ற வானமே ஒருமை நிலை உறு ஞானமே
 உபய பத சததளமும் எனது இதய சததளத்து ஓங்க நடு ஓங்கு சிவமே
பாங்கியல் அளித்து என்னை அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே
 பாச நெறி செல்லாத நேசர்-தமை ஈசர் ஆம்படி வைக்க வல்ல பரமே
ஆங்கு இயல்வது என்றும் மற்று ஈங்கு இயல்வது என்றும் வாயாடுவோர்க்கு அரிய சுகமே
 ஆனந்த மயம் ஆகி அதுவும் கடந்த வெளி ஆகி நிறைகின்ற நிறைவே
தூங்கி விழு சிறியனைத் தாங்கி எழுக என்று எனது தூக்கம் தொலைத்த துணையே
 துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே அருள் சோதி நடராச குருவே.

@26. சற்குருமணி மாலை

#1
மாற்று அறியாத செழும் பசும்பொன்னே மாணிக்கமே சுடர் வண்ணக் கொழுந்தே
கூற்று அறியாத பெரும் தவர் உள்ள_கோயில் இருந்த குணப் பெரும் குன்றே
வேற்று அறியாத சிற்றம்பலக் கனியே விச்சையில் வல்லவர் மெச்சு விருந்தே
சாற்று அறியாத என் சாற்றும் களித்தாய் தனி நடராச என் சற்குரு மணியே.

#2
கல் கரையும்படி கரைவிக்கும் கருத்தே கண்மணியே மணி கலந்த கண் ஒளியே
சொல் கரை இன்றிய ஒளியினுள் ஒளியே துரியமும் கடந்திட்ட பெரிய செம்பொருளே
சிற்கரை திரை அறு திரு_அருள் கடலே தெள் அமுதே கனியே செழும் பாகே
சர்க்கரையே அது சார்ந்த செந்தேனே தனி நடராச என் சற்குரு மணியே.

#3
என் உயிரே எனது இன் உயிர்க்குயிரே என் அறிவே எனது அறிவினுக்கு அறிவே
அன்னையில் இனிய என் அம்பலத்து அமுதே அற்புதமே பதமே எனது அன்பே
பொன் இணை அடி_மலர் முடி மிசை பொருந்தப் பொருத்திய தயவு உடைப் புண்ணியப் பொருளே
தன் இயல் அறிவ அரும் சத்திய நிலையே தனி நடராச என் சற்குரு மணியே.

#4
காய் மனக் கடையனைக் காத்த மெய்ப்பொருளே கலைகளும் கருத அரும் ஒரு பெரும் பதியே
தேய் மதிச் சமயருக்கு அரிய ஒண் சுடரே சித்து எலாம் வல்லதோர் சத்திய முதலே
ஆய் மதிப் பெரியருள் அமர்ந்த சிற்பரமே அம்பலத்து ஆடல்செய் செம் பதத்து அரசே
தாய் மதிப்பு அரியதோர் தயவு உடைச் சிவமே தனி நடராச என் சற்குரு மணியே.

#5
உருவமும் அருவமும் உபயமும் உளதாய் உளது இலதாய் ஒளிர் ஒரு தனி முதலே
கருவினில் எனக்கு அருள் கனிந்து அளித்தவனே கண்_உடையாய் பெரும் கடவுளர் பதியே
திரு நிலைபெற எனை வளர்க்கின்ற பரமே சிவ குரு துரியத்தில் தெளி அனுபவமே
தரு வளர் பொழி வடல் சபை நிறை ஒளியே தனி நடராச என் சற்குரு மணியே.

#6
ஆறு அந்த நிலைகளின் அனுபவ நிறைவே அதுஅதுவாய் ஒளிர் பொதுவுறு நிதியே
கூறு எந்த நிலைகளும் ஒரு நிலை எனவே கூறி என் உள்ளத்தில் குலவிய களிப்பே
பேறு இந்த நெறி எனக் காட்டி என்றனையே பெரு நெறிக்கு ஏற்றிய ஒரு பெரும் பொருளே
சாறு எந்த நாள்களும் விளங்கும் ஓர் வடல்-வாய்த் தனி நடராச என் சற்குரு மணியே.

#7
சாகாத தலை இது வேகாத_காலாம் தரம் இது காண் எனத் தயவு செய்து உரைத்தே
போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே
ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே ஆகிய எனக்கு என்றும் ஆகிய சுகமே
தா காதல் எனத் தரும் தரும சத்திரமே தனி நடராச என் சற்குரு மணியே.

#8
தத்துவமசி நிலை இது இது-தானே சத்தியம் காண் எனத் தனித்து உரைத்து எனக்கே
எத் துவந்தனைகளும் நீக்கி மெய் நிலைக்கே ஏற்றி நான் இறவாத இயல் அளித்து அருளால்
சித்து வந்து உலகங்கள் எவற்றினும் ஆடச்செய்வித்த பேர்_அருள் சிவ_பரஞ்சுடரே
சத்துவ நெறி தரு வடல் அருள்_கடலே தனி நடராச என் சற்குரு மணியே.

#9
இது பதி இது பொருள் இது சுகம் அடைவாய் இது வழி என எனக்கு இயல்புற உரைத்தே
விது அமுதொடு சிவ அமுதமும் அளித்தே மேல் நிலைக்கு ஏற்றிய மெய் நிலைச் சுடரே
பொது நடமிடுகின்ற புண்ணியப் பொருளே புரை அறும் உளத்திடைப் பொருந்திய மருந்தே
சது_மறை முடிகளின் முடியுறு சிவமே தனி நடராச என் சற்குரு மணியே.

#10
என் நிலை இது உறு நின் நிலை இதுவாம் இரு நிலைகளும் ஒரு நிலை என அறிவாய்
முன் நிலை சிறிது உறல் இது மயல் உறலாம் முன் நிலை பின் நிலை முழு நிலை உளவாம்
இ நிலை அறிந்து அவண் எழு நிலை கடந்தே இயல் நிலை அடைக என்று இயம்பிய பரமே
தன் நிலை ஆகிய நல் நிலை அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

#11
காரணம் இது புரி காரியம் இது மேல் காரண_காரியக் கரு இது பலவாய்
ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடும் நீ அவை அளந்திடல் மகனே
பூரண நிலை அனுபவம் உறில் கணமாம் பொழுதினில் அறிதி எப் பொருள் நிலைகளுமே
தாரணி-தனில் என்ற தயவு உடை அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

#12
பல் நெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர் பவ நெறி இதுவரை பரவியது இதனால்
செல் நெறி அறிந்திலர் இறந்திறந்து உலகோர் செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ
புல் நெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன் நெறி செலுத்துக என்ற என் அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

#13
அடி இது முடி இது நடு நிலை இது மேல் அடி நடு முடி இலாதது இது மகனே
படி மிசை அடி நடு முடி அறிந்தனையே பதி அடி முடி இலாப் பரிசையும் அறிவாய்
செடி அற உலகினில் அருள் நெறி இதுவே செயலுற முயலுக என்ற சிற்பரமே
தடி முகில் என அருள் பொழி வடல் அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

#14
நண்ணிய மத நெறி பலபல அவையே நன்று அற நின்றன சென்றன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் அலைதருகின்றனர் அலைவு அற மகனே
புண்ணியம் உறு திரு_அருள் நெறி இதுவே பொது நெறி என அறிவுற முயலுதி நீ
தண்ணிய அமுது உணத் தந்தனம் என்றாய் தனி நடராச என் சற்குரு மணியே.

#15
அஞ்சலை நீ ஒருசிறிதும் என் மகனே அருள்_பெரும்_சோதியை அளித்தனம் உனக்கே
துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே சூழ்ந்த சன்மார்க்கத்தில் செலுத்துக சுகமே
விஞ்சுற மெய்ப்பொருள் மேல் நிலை-தனிலே விஞ்சைகள் பல உள விளக்குக என்றாய்
தஞ்சம் என்றவர்க்கு அருள் சத்திய முதலே தனி நடராச என் சற்குரு மணியே.

#16
வேதத்தின் முடி மிசை விளங்கும் ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன் முடிச் சுடரே
நாதத்தின் முடி நடு நடமிடும் ஒளியே நவை அறும் உளத்திடை நண்ணிய நலமே
ஏதத்தின் நின்று எனை எடுத்து அருள் நிலைக்கே ஏற்றிய கருணை என் இன் உயிர்த் துணையே
தாது உற்ற உடம்பு அழியா வகை புரிந்தாய் தனி நடராச என் சற்குரு மணியே.

#17
சந்திர சூரியர் ஒளி பெற விளங்கும் தனி அருள் பெருவெளித் தலத்து எழும் சுடரே
வந்து இரவிடை எனக்கு அருள் அமுது அளித்தே வாழ்க என்று அருளிய வாழ் முதல் பொருளே
மந்திரமே எனை வளர்க்கின்ற மருந்தே மா நிலத்திடை எனை வருவித்த பதியே
தந்திரம் யாவையும் உடைய மெய்ப்பொருளே தனி நடராச என் சற்குரு மணியே.

#18
அமரரும் முனிவரும் அதிசயித்திடவே அருள்_பெரும்_சோதியை அன்புடன் அளித்தே
கமம் உறு சிவ நெறிக்கு ஏற்றி என்றனையே காத்து எனது உளத்தினில் கலந்த மெய்ப் பதியே
எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பு அற வாழ்க என்று இயம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனி நடராச என் சற்குரு மணியே.

#19
நல் மார்க்கத்தவர் உளம் நண்ணிய வரமே நடு வெளி நடு நின்று நடம் செயும் பரமே
துன்மார்க்கவாதிகள் பெறற்கு அரு நிலையே சுத்த சிவானந்தப் புத்தமுது உவப்பே
என் மார்க்கம் எனக்கு அளித்து எனையும் மேல் ஏற்றி இறவாத பெரு நலம் ஈந்த மெய்ப்பொருளே
சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே.

#20
ஆதியும் அந்தமும் இன்றி ஒன்று ஆகி அகம் புறம் அகப்புறம் புறப்புறம் நிறைந்தே
ஓதியும் உணர்ந்தும் இங்கு அறிவ அரும் பொருளே உளம்கொள் சிற்சபை நடு விளங்கு மெய்ப் பதியே
சோதியும் சோதியின் முதலும் தான் ஆகிச் சூழ்ந்து எனை வளர்க்கின்ற சுதந்தர அமுதே
சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே தனி நடராச என் சற்குரு மணியே.

#21
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே கலந்துகொண்டு இனிக்கின்ற கற்பகக் கனியே
அற்பனை ஆண்டுகொண்டு அறிவு அளித்து அழியா அருள் நிலை-தனில் உற அருளிய அமுதே
பற்பல உலகமும் வியப்ப என்றனக்கே பத_மலர் முடி மிசைப் பதித்த மெய்ப் பதியே
தற்பர பரம்பர சிதம்பர நிதியே தனி நடராச என் சற்குரு மணியே.

#22
பவ நெறி செலுமவர் கனவினும் அறியாப் பரம்பொருள் ஆகி என் உளம் பெறும் ஒளியே
நவ நெறி கடந்ததோர் ஞான மெய்ச் சுகமே நான் அருள் நிலை பெற நல்கிய நலமே
சிவ நெறியே சிவ நெறி தரு நிலையே சிவ நிலை-தனில் உறும் அனுபவ நிறைவே
தவ நெறி செலும் அவர்க்கு இனிய நல் துணையே தனி நடராச என் சற்குரு மணியே.

#23
அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே அடையாமல் அடைகின்ற அடைவினுள் அடைவே
செறியாமல் செறிகின்ற செறிவினுள் செறிவே திளையாமல் திளைக்கின்ற திளைப்புறு திளைப்பே
பிரியாமல் என் உளம் கலந்த மெய்க் கலப்பே பிறவாமல் இறவாமல் எனை வைத்த பெருக்கே
தறி ஆகி உணர்வாரும் உணர்வ அரும் பொருளே தனி நடராச என் சற்குரு மணியே.

#24
கருதாமல் கருதும் ஓர் கருத்தினுள் கருத்தே காணாமல் காணும் ஓர் காட்சியின் விளைவே
எருதாகத் திரிந்தேனுக்கு இக_பரம் அளித்தே இறவாத வரமும் தந்து அருளிய ஒளியே
வரு தாகம் தவிர்த்திட வந்த தெள் அமுதே மாணிக்க_மலை நடு மருவிய பரமே
தரு தானம் உணவு எனச் சாற்றிய பதியே தனி நடராச என் சற்குரு மணியே.

#25
ஏகா அனேகா என்று ஏத்திடும் மறைக்கே எட்டாத நிலையே நான் எட்டிய மலையே
ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒரு நிலை ஆக்க என்று உரைத்த மெய்ப் பரமே
ஈ காதல் உடையவர்க்கு இரு_நிதி அளித்தே இன்புறப் புரிகின்ற இயல்பு உடை இறையே
சாகாத வரம் தந்து இங்கு எனைக் காத்த அரசே தனி நடராச என் சற்குரு மணியே.

@27. தற்போத இழப்பு

#1
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும் அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்தச்
செவ் வண்ணம் பழுத்த தனித் திரு_உருக் கண்டு எவர்க்கும் தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ
மவ்வண்ணப் பெரு மாயை-தன் செயலோ அறியேன் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#2
கள் இருந்த மலர் இதழிச் சடைக் கனி நின் வடிவம் கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார்
உள் இருந்த எனைத் தெருவில் இழுத்துவிடுத்தது-தான் உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன்
வள் இருந்த குணக் கடையேன் இதை நினைக்கும்-தோறும் மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#3
இகத்து இருந்த வண்ணம் எலாம் மிகத் திருந்த அருள் பேர் இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால்
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே
அகத்து இருந்த எனைப் புறத்தே இழுத்துவிடுத்தது-தான் ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன்
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#4
கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடைத் தலை-வாய்
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய் உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும் பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#5
நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில்
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும்
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும் என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#6
நதி கலந்த சடை அசையத் திரு_மேனி விளங்க நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள்
கதி கலந்துகொளச் சிறியேன் கருத்திடையே கலந்து கள்ளம் அற உள்ளபடி காட்டிடக் கண்டு இன்னும்
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்கப் பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#7
மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே
நஞ்சு அனைய கொடியேன் கண்டிடப் புரிந்த அருளை நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன்
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#8
அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில்
புரி புழுவில் இழிந்தேனைப் பொருள் ஆக்கி அருளாம் பொருள் அளிக்கப்பெற்றனன் இப் புதுமை பிறர் அறியாது
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால்
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#9
விழற்கு இறைத்துக் களிக்கின்ற வீணர்களில் சிறந்த வினைக் கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளிக்
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்துக் கருணை செயப்பெற்றனம் இக் கருணை நம்மை இன்னும்
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

#10
அடி பிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா அருள் வடிவைக் காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடி பிடித்த குரு மணியைக் கூடும் மட்டும் வேறு ஓர் குறிப்பு இன்றி இருப்பம் எனக் கொண்டு அகத்தே இருந்தேன்
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான் படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே
மடி பிடித்துப் பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.

@28. திருமுன் விண்ணப்பம்

#1
மாழை மா மணிப் பொது நடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற
வாழை வான் பழச் சுவை எனப் பத்தர்-தம் மனத்து உளே தித்திப்போய்
ஏழை நாயினேன் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் செயல் வேண்டும்
கோழை மானிடப் பிறப்பு இதில் உன் அருள் குரு உருக்கொளுமாறே.

#2
பொன்னின் மா மணிப் பொது நடம் புரிகின்ற புண்ணியா கனிந்து ஓங்கி
மன்னு வாழையின் பழச் சுவை எனப் பத்தர் மனத்து உளே தித்திப்போய்
சின்ன நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
இன்ன என் உடைத் தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே.

#3
விஞ்சு பொன் அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி
எஞ்சுறாத பேர் இன்பு அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி
அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி அமைத்து அருள் செயல் வேண்டும்
துஞ்சும் இ உடல் இம்மையே துஞ்சிடாச் சுக உடல் கொளுமாறே.

#4
ஓங்கு பொன் அணி அம்பலத்து அருள் நடம் உயிர்க்கு எலாம் ஒளி வண்ணப்
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பத_மலர் பணிந்து ஏத்தாத்
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி சேர்த்து அருள் செயல் வேண்டும்
ஈங்கு வீழ் உடல் இம்மையே வீழ்ந்திடா இயல் உடல் உறுமாறே.

#5
இலங்கு பொன் அணிப் பொது நடம் புரிகின்ற இறைவ இ உலகு எல்லாம்
துலங்கும் வண்ணம் நின்று அருளும் நின் திரு_அடித் துணை துணை என்னாமல்
கலங்கு நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
அலங்கும் இ உடல் இம்மையே அழிவுறா அருள் உடல் உறுமாறே.

#6
சிறந்த பொன் அணித் திரு_சிற்றம்பலத்திலே திரு_நடம் புரிகின்ற
அறம் தவாத சேவடி மலர் முடி மிசை அணிந்து அகம் மகிழ்ந்து ஏத்த
மறந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் செயல் வேண்டும்
பிறந்த இ உடல் இம்மையே அழிவுறாப் பெரு நலம் பெறுமாறே.

#7
விளங்கு பொன் அணிப் பொது நடம் புரிகின்ற விரை மலர்த் திரு_தாளை
உளம்கொள் அன்பர்-தம் உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலாப் பெருந்தன்மை
களம் கொள் நாயினேன் விண்ணப்பம் திரு_செவி கலந்து அருள் செயல் வேண்டும்
துளங்கும் இ உடல் இம்மையே அழிவுறாத் தொல் உடல் உறுமாறே.

#8
வாய்ந்த பொன் அணிப் பொது நடம் புரிகின்ற வள்ளலே மறை எல்லாம்
ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா நின் திரு அடி_மலர் பணியாமல்
சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
ஏய்ந்த இ உடல் இம்மையே திரு_அருள் இயல் உடல் உறுமாறே.

#9
மாற்று இலாத பொன்_அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை
சாற்றிடாத என் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் செயல் வேண்டும்
காற்றில் ஆகிய இ உடல் இம்மையே கதி உடல் உறுமாறே..

#10
தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர்த் திரட்கு இன்பம்
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திரு_செவி நேர்ந்து அருள் செயல் வேண்டும்
வாட்டும் இ உடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே.

@29. இனித்த வாழ் வருள் எனல்

#1
உரத்த வான் அகத்தே உரம் தவா ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்தி
புரத்தவா பெரியோர்_புரத்தவா குற்றம் பொறுத்து அடியேன்-தனக்கு அளித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆகமங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவு ஆதரத்தவா பொதுவில் தனித்தவா இனித்த வாழ்வு அருளே.

#2
முன்னவ அதிபர்க்கு முன்னவா வேத முடி முடி மொழிகின்ற முதல்வா
பின்னவ அதிபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும்
சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
மன்னவா அமுதம் அன்னவா எல்லாம்_வல்லவா நல்ல வாழ்வு அருளே.

#3
விடைய வாதனை தீர் விடையவா சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த
நடையவா ஞான நடையவா இன்ப நடம் புரிந்து உயிர்க்கு எலாம் உதவும்
கொடையவா ஓவாக் கொடையவா எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய என்
உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க்கு உரியவா பெரிய வாழ்வு அருளே.

#4
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனம் முதல் கடந்த
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞான நோக்கு அளித்த
நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற்கு அரிதாம்
பலத்தவா திரு_அம்பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்த வாழ்வு அருளே.

#5
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உரு-அதாய் இன்பம்
புணர்ந்திட எனை-தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொது நடம் புரிந்து எண்_
குணம் திகழ்ந்து ஓங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும்
தணந்த சன்மார்க்கத் தனி நிலை நிறுத்தும் தக்கவா மிக்க வாழ்வு அருளே.

#6
தத்துவம் கடந்த தத்துவா ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சத்துவ நெறியில் நடத்தி என்றனை மேல் தனி நிலை நிறுத்திய தலைவா
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்து எனது உளத்தே
ஒத்து நின்று ஓங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்த வாழ்வு அருளே.

#7
மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான மன்றிலே வயம்கொள் நாடகம் செய்
பதம் புகல் அடியேற்கு அருள்_பெரும்_சோதிப் பரிசு தந்திடுதும் என்று உளத்தே
நிதம் புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்த நிற்குணமாம்
சிதம் புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞான வாழ்வு அருளே.

#8
மூ_இரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து எனது உடம்பும்
ஆவியும் தனது மயம் பெறக் கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா
ஓவுரு முதலா உரைக்கும் மெய் உருவும் உணர்ச்சியும் ஒளி பெறு செயலும்
மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூய வாழ்வு அருளே.

#9
பங்கம் ஓர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே
தங்கும் ஓர் சோதித் தனிப் பெரும் கருணைத் தரம் திகழ் சத்தியத் தலைவா
துங்கமுற்று அழியா நிலை தரும் இயற்கைத் தொன்மையாம் சுத்த சன்மார்க்கச்
சங்கம் நின்று ஏத்தும் சத்திய ஞான சபையவா அபய வாழ்வு அருளே.

#10
இனித்த செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின் இளம் பதப் பாகொடு தேனும்
கனித்த தீம் கனியின் இரதமும் கலந்து கருத்து எலாம் களித்திட உண்ட
மனித்தரும் அமுத உணவுகொண்டு அருந்தும் வான_நாட்டவர்களும் வியக்கத்
தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு அளித்த தனியவா இனிய வாழ்வு அருளே.

@30. திருவருள் விழைதல்

#1
செய் வகை அறியேன் மன்றுள் மா மணி நின் திருவுளக் குறிப்பையும் தெரியேன்
உய் வகை அறியேன் உணர்வு_இலேன் அந்தோ உறுகண் மேலுறும்-கொல் என்று உலைந்தேன்
மெய் வகை அடையேன் வேறு எவர்க்கு உரைப்பேன் வினையனேன் என் செய விரைகேன்
பொய் வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் புலையனேன் புகல் அறியேனே.

#2
அறிவு_இலேன் அறிந்தார்க்கு அடிப் பணி புரியேன் அச்சமும் அவலமும்_உடையேன்
செறிவு_இலேன் பொதுவாம் தெய்வம் நீ நினது திருவுளத்து எனை நினையாயேல்
எறிவு_இலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் என் செய்வேன் யார் துணை என்பேன்
பிறிவு_இலேன் பிரிந்தால் உயிர் தரிக்கலன் என் பிழை பொறுத்து அருள்வது உன் கடனே.

#3
உன் கடன் அடியேற்கு அருளல் என்று உணர்ந்தேன் உடல் பொருள் ஆவியும் உனக்கே
பின் கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த பின்னும் நான் தளருதல் அழகோ
என் கடன் புரிவேன் யார்க்கு எடுத்து உரைப்பேன் என் செய்வேன் யார் துணை என்பேன்
முன் கடன்பட்டார் போல் மனம் கலங்கி முறிதல் ஓர் கணம் தரியேனே.

#4
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தளர்ச்சியும் துன்பமும் தவிர்த்தே
தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் தெரித்திடாய் எனில் இடர் எனை-தான்
எரித்திடும் அந்தோ என் செய்வேன் எங்கே எய்துகேன் யார் துணை என்பேன்
திரித்த நெஞ்சகத்தேன் சரித்திரம் அனைத்தும் திருவுளம் தெரிந்தது தானே.

#5
தான் எனைப் புணரும் தருணம் ஈது எனவே சத்தியம் உணர்ந்தனன் தனித்தே
தேன் உறக் கருதி இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்தது எந்தாயே
ஆன் எனக் கூவி அணைந்திடல் வேண்டும் அரை_கணம் ஆயினும் தாழ்க்கில்
நான் இருப்பு அறியேன் திரு_சிற்றம்பலத்தே நடம் புரி ஞான நாடகனே.

#6
ஞானமும் அதனால் அடை அனுபவமும் நாயினேன் உணர்ந்திட உணர்த்தி
ஈனமும் இடரும் தவிர்த்தனை அ நாள் இந்த நாள் அடியனேன் இங்கே
ஊனம் ஒன்று_இல்லோய் நின்றனைக் கூவி உழைக்கின்றேன் ஒருசிறிது எனினும்
ஏன் என வினவாது இருத்தலும் அழகோ இறையும் நான் தரிக்கலன் இனியே.

#7
இனிய நல் தாயின் இனிய என் அரசே என் இரு கண்ணினுள் மணியே
கனி என இனிக்கும் கருணை ஆர் அமுதே கனக அம்பலத்து உறும் களிப்பே
துனியுறு மனமும் சோம்புறும் உணர்வும் சோர்வுறு முகமும் கொண்டு அடியேன்
தனி உளம் கலங்கல் அழகு-அதோ எனை-தான் தந்த நல் தந்தை நீ அலையோ.

#8
தந்தையும் தாயும் குருவும் யான் போற்றும் சாமியும் பூமியும் பொருளும்
சொந்த நல் வாழ்வும் நேயமும் துணையும் சுற்றமும் முற்றும் நீ என்றே
சிந்தையுற்று இங்கே இருக்கின்றேன் இது நின் திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தை செய் உலகில் யான் உளம் கலங்கல் நீதியோ நின் அருட்கு அழகோ.

#9
அழகனே ஞான அமுதனே என்றன் அப்பனே அம்பலத்து அரசே
குழகனே இன்பக் கொடி உளம் களிக்கும் கொழுநனே சுத்த சன்மார்க்கக்
கழக நேர் நின்ற கருணை மா நிதியே கடவுளே கடவுளே என நான்
பழக நேர்ந்திட்டேன் இன்னும் இ உலகில் பழங்கணால் அழுங்குதல் அழகோ.

#10
பழம் பிழி மதுரப் பாட்டு அல எனினும் பத்தரும் பித்தரும் பிதற்றும்
கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ளக் கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய்
வழங்கு நின் புகழே பாடுறுகின்றேன் மற்றொரு பற்றும் இங்கு அறியேன்
சழங்கு உடை உலகில் தளருதல் அழகோ தந்தையும் தாயும் நீ அலையோ.

#11
தாயும் என் ஒருமைத் தந்தையும் ஞான சபையிலே தனி நடம் புரியும்
தூய நின் பாதத் துணை எனப் பிடித்தேன் தூக்கமும் சோம்பலும் துயரும்
மாயையும் வினையும் மறைப்பும் ஆணவமும் வளைத்து எனைப் பிடித்திடல் வழக்கோ
நாயினேன் இனி ஓர் கணம் தரிப்பு அறியேன் நல் அருள் சோதி தந்து அருளே.

#12
சோதியேல் எனை நீ சோதனை தொடங்கில் சூழ் உயிர்விடத் தொடங்குவன் நான்
நீதியே நிறை நின் திரு_அருள் அறிய நிகழ்த்தினேன் நிச்சயம் இதுவே
ஓதியே உணர்தற்கு அரும் பெரும் பொருளே உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
ஆதியே நடுவே அந்தமே ஆதி நடு அந்தம் இல்லதோர் அறிவே.

#13
இல்லை உண்டு எனும் இ இருமையும் கடந்து ஓர் இயற்கையின் நிறைந்த பேர்_இன்பே
அல்லை உண்டு எழுந்த தனிப் பெரும் சுடரே அம்பலத்து ஆடல் செய் அமுதே
வல்லை இன்று அடியேன் துயர் எலாம் தவிர்த்து வழங்குக நின் அருள் வழங்கல்
நல்லை இன்று அலது நாளை என்றிடிலோ நான் உயிர் தரிக்கலன் அரசே.

#14
அரைசு எலாம் வழங்கும் தனி அரசு அது நின் அருள் அரசு என அறிந்தனன் பின்
உரைசெய் நின் அருள் மேல் உற்ற பேர்_ஆசை உளம் எலாம் இடம்கொண்டது எந்தாய்
வரை செயா மேன்மேல் பொங்கி வாய் ததும்பி வழிகின்றது என் வசம் கடந்தே
இரை செய் என் ஆவி தழைக்க அ அருளை ஈந்து அருள் இற்றை இப்போதே.

#15
போது எலாம் வீணில் போக்கி ஏமாந்த புழுத் தலைப் புலையர்கள் புணர்க்கும்
சூது எலாம் கேட்கும்-தொறும் உனைப் பரவும் தூயர்கள் மனம்-அது துளங்கித்
தாது எலாம் கலங்கத் தளருதல் அழகோ தனி அருள் சோதியால் அந்த
வாது எலாம் தவிர்த்துச் சுத்த சன்மார்க்கம் வழங்குவித்து அருளுக விரைந்தே.

#16
விரைந்து நின் அருளை ஈந்திடல் வேண்டும் விளம்பும் இ தருணம் என் உளம்-தான்
கரைந்தது காதல் பெருகி மேல் பொங்கிக் கரை எலாம் கடந்தது கண்டாய்
வரைந்து எனை மணந்த வள்ளலே எல்லாம்_வல்லவா அம்பல_வாணா
திரைந்த என் உடம்பைத் திரு_உடம்பு ஆக்கித் திகழ்வித்த சித்தனே சிவனே.

#17
சிவம் திகழ் கருணைத் திரு_நெறிச் சார்பும் தெய்வம் ஒன்றே எனும் திறமும்
நவம் தரு நிலைகள் சுதந்தரத்து இயலும் நன்மையும் நரை திரை முதலாம்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தம் ஆதிய முச்சுக வடிவம் பெறும் பேறும்
தவம் திகழ் எல்லாம்_வல்ல சித்தியும் நீ தந்து அருள் தருணம் ஈது எனக்கே.

#18
தருணம் இஞ்ஞான்றே சுத்த சன்மார்க்கத் தனி நெறி உலகு எலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள் எனக் கருதும் கருத்தும் உற்று எம்_அனோர் களிப்பப்
பொருள் நிறை ஓங்கத் தெருள் நிலை விளங்கப் புண்ணியம் பொற்புற வயங்க
அருள் நயந்து அருள்வாய் திரு_சிற்றம்பலத்தே அருள்_பெரும்_சோதி என் அரசே.

#19
என் உள வரை மேல் அருள் ஒளி ஓங்கிற்று இருள் இரவு ஒழிந்தது முழுதும்
மன் உறும் இதய_மலர் மலர்ந்தது நல் மங்கலம் முழங்குகின்றன சீர்ப்
பொன் இயல் விளக்கம் பொலிந்தது சித்திப் பூவையர் புணர்ந்திடப் போந்தார்
சொன்ன நல் தருணம் அருள்_பெரும்_சோதி துலங்க வந்து அருளுக விரைந்தே.

#20
வந்து அருள் புரிக விரைந்து இது தருணம் மா மணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் சுத்த சன்மார்க்க சற்குருவே
தந்து அருள் புரிக வரம் எலாம் வல்ல தனி அருள் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித்து என்னொடும் கலந்தே செய்வித்து அருள்க செய் வகையே.

@31. திரு அருட் புகழ்ச்சி

#1
திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே திரு_அருளாம் பெரும் சோதித் திரு_உருக் காட்டாயோ
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும் ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ
கருக் கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ
செருக் கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#2
மணிக் கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே மாற்று அறியாப் பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ
கணிக்க அறியாப் பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை_கடந்த பெரும் போகம் கண்டிடச் செய்யாயோ
தணிக்க அறியாக் காதல் மிகப் பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனித் தலைமைப் பதியே
திணிக் கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#3
உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவைக் கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கித் ததும்பி என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கிக்
கரை_கடந்து போனது இனித் தாங்க முடியாது கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#4
உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன் அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர் என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன்
தென் புடை ஓர் முகம் நோக்கித் திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#5
இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என்
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்து இறந்து போய்க் கதியைப் பெற நினைந்தே மாந்த பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம்
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#6
பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன் விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே
பை உடைப் பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#7
கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல் நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உறப் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#8
வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள் விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர் எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#9
கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம் வாழ்ந்து ஓங்கக் கருதி அருள் வழங்கினை என்றனக்கே
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே
சிலை நிகர் வன் மனம்_கரைத்துத் திரு_அமுதம் அளித்தோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

#10
திருத் தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே திரு_அருள் பேர்_ஒளி காட்டித் திரு_அமுதம் ஊட்டிக்
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது ஒன்று ஆகிக் கால வரை உரைப்ப எலாம் கடந்தே
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

@32. சிற்சபை விளக்கம்

#1
சோறு வேண்டினும் துகில் அணி முதலாம் சுகங்கள் வேண்டினும் சுகம் அலால் சுகமாம்
வேறு வேண்டினும் நினை அடைந்து அன்றி மேவொணாது எனும் மேலவர் உரைக்கே
மாறு வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே

#2
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் இடுக்குண்டு ஐய நின் இன் அருள் விரும்பி
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் அப்ப நின் அலால் அறிகிலேன் ஒன்றும்
தஞ்சம் என்றவர்க்கு அருள் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#3
சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன் அருள் சுகப் பெரும் பதி நின்
வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
ஊழ் விடாமையில் அரை_கணம் எனினும் உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன்
தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#4
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் அலைதந்து ஐயவோ அயர்ந்து உளம் மயர்ந்து
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
நாட்டம் நின்-புடை அன்றி மற்று அறியேன் நாயினேன் பிழை பொறுத்து இது தருணம்
தாள் தலம் தருவாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#5
கருணை ஒன்று இலாக் கல்_மன_குரங்கால் காடு_மேடு உழன்று உளம் மெலிந்து அந்தோ
வருண நின்-புடை வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
அருணன் என்று எனை அகற்றிடுவாயேல் ஐயவோ துணை அறிந்திலன் இதுவே
தருணம் எற்கு அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனி பெரும் பதியே.

#6
கரண வாதனையால் மிக மயங்கிக் கலங்கினேன் ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
இரணன் என்று எனை எண்ணிடேல் பிறிது ஓர் இச்சை ஒன்று இலேன் எந்தை நின் உபய
சரணம் ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#7
தூய நெஞ்சினேன் அன்று நின் கருணைச் சுகம் விழைந்திலேன் எனினும் பொய் உலக
மாயம் வேண்டிலேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
ஈய வாய்த்த நல் தருணம் ஈது அருள்க எந்தை நின் மலர் இணை அடி அல்லால்
தாயம் ஒன்று இலேன் தனி வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#8
சிரத்தை ஆதிய சுப_குணம் சிறிதும் சேர்ந்திலேன் அருள் செயல்_இலேன் சாகா_
வரத்தை வேண்டினேன் வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
கரத்தை நேர் உளக் கடையன் என்று எனை நீ கைவிடேல் ஒரு கணம் இனி ஆற்றேன்
தரத்தை ஈந்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#9
பத்தியம் சிறிது உற்றிலேன் உன்-பால் பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
எத்தி அஞ்சலை என அருளாயேல் ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை
சத்தியம் புகன்றேன் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

#10
கயவு செய் மத கரி எனச் செருக்கும் கருத்தினேன் மனக் கரிசினால் அடைந்த
மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன் வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது உன் அடி ஆணை
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.

@33. திரு அருட் பேறு

#1
படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர் அப் பதி நடுவே விளங்கும்
கொடிகள் நிறை மணி மாடக் கோயிலையும் காட்டிக்கொடுத்தீர் அக் கோயிலிலே கோபுர வாயிலிலே
செடிகள் இலாத் திரு_கதவம் திறப்பித்துக் காட்டித் திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள் இது தருணம் இனி அரை_கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்து அருள்வீர் விரைந்தே.

#2
பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெறுக என அது திறக்கும் பெரும் திறவுக்கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்
அட்டி செய நினையாதீர் அரை_கணமும் தரியேன் அரை_கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடி ஆக
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம்புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே.

#3
கைக்கு இசைந்த பொருள் எனக்கு வாய்க்கு இசைந்து உண்பதற்கே காலம் என்ன கணக்கு என்ன கருதும் இடம் என்ன
மெய்க்கு இசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே விடுவேனோ இன்று அடியேன் விழற்கு இறைத்தேன் அலவே
செய்க்கு இசைந்த சிவ போகம் விளைத்து உணவே இறைத்தேன் தினம்-தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
மைக்கு இசைந்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே.

#4
பரி கலத்தே திரு_அமுதம் படைத்து உணவே பணித்தீர் பணித்த பின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர்
இரு நிலத்தே பசித்தவர்க்குப் பசி நீக்க வல்லார் இவர் பெரியர் இவர் சிறியர் என்னல் வழக்கு அலவே
உரிமையுற்றேன் உமக்கே என் உள்ளம் அன்றே அறிந்தீர் உடல் பொருள் ஆவிகளை எலாம் உம்மது எனக் கொண்டீர்
திரிவு அகத்தே நான் வருந்தப் பார்த்து இருத்தல் அழகோ சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகரே.

#5
பொய் கொடுத்த மன மாயைச் சேற்றில் விழாது எனக்கே பொன் மணி மேடையில் ஏறிப் புந்தி மகிழ்ந்து இருக்கக்
கைகொடுத்தீர் உலகம் எலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத
மெய் கொடுக்க வேண்டும் உமை விட_மாட்டேன் கண்டீர் மேல் ஏறினேன் இனிக் கீழ் விழைந்து இறங்கேன் என்றும்
மை கொடுத்த விழி அம்மை சிவகாமவல்லி மகிழ நடம் புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே.

#6
மின் போலே வயங்குகின்ற விரி சடையீர் அடியேன் விளங்கும் உமது இணை அடிகள் மெய் அழுந்தப் பிடித்தேன்
முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே
என் போலே இரக்கம் விட்டுப் பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே
பொன் போலே முயல்கின்ற மெய்த் தவர்க்கும் அரிதே பொய் தவனேன் செய் தவம் வான் வையகத்தில் பெரிதே.

#7
எது தருணம் அது தெரியேன் என்னினும் எம்மானே எல்லாம் செய் வல்லவனே என் தனி நாயகனே
இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும் இ எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும்
மது தருண வாரிசமும் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில்
விது தருண அமுது அளித்து என் எண்ணம் எலாம் முடிக்கும் வேலை இது காலை என விளம்பவும் வேண்டுவதோ.

#8
கோள் அறிந்த பெரும் தவர்-தம் குறிப்பு அறிந்தே உதவும் கொடையாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா
ஆள் அறிந்து இங்கு எனை ஆண்ட அரசே என் அமுதே அம்பலத்தே நடம் புரியும் அரும் பெரும் சோதியனே
தாள் அறிந்தேன் நின் வரவு சத்தியம் சத்தியமே சந்தேகம் இல்லை அந்தத் தனித்த திரு_வரவின்
நாள் அறிந்துகொளல் வேண்டும் நவிலுக நீ எனது நனவிடையாயினும் அன்றிக் கனவிடையாயினுமே.

#9
அன்று எனக்கு நீ உரைத்த தருணம் இது எனவே அறிந்திருக்கின்றேன் அடியேன் ஆயினும் என் மனம்-தான்
கன்று எனச் சென்று அடிக்கடி உள் கலங்குகின்றது அரசே கண்ணுடைய கரும்பே என் கவலை மனக் கலக்கம்
பொன்றிடப் பேர்_இன்ப_வெள்ளம் பொங்கிட இ உலகில் புண்ணியர்கள் உளம் களிப்புப் பொருந்தி விளங்கிட நீ
இன்று எனக்கு வெளிப்பட என் இதய_மலர் மிசை நின்று எழுந்தருளி அருள்வது எலாம் இனிது அருள்க விரைந்தே.

#10
இது தருணம் நமை ஆளற்கு எழுந்தருளும் தருணம் இனித் தடை ஒன்று இலை கண்டாய் என் மனனே நீ-தான்
மது விழும் ஓர் ஈப் போலே மயங்காதே கயங்கி வாடாதே மலங்காதே மலர்ந்து மகிழ்ந்து இருப்பாய்
குதுகலமே இது தொடங்கிக் குறைவு இலை காண் நமது குரு ஆணை நமது பெரும் குல_தெய்வத்து ஆணை
பொதுவில் நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் புணர்ந்து உரைத்த திரு_வார்த்தை பொன் வார்த்தை இதுவே.

@34. உண்மை கூறல்

#1
தனிப் பெரும் தலைவரே தாயவரே என் தந்தையரே பெரும் தயவு_உடையவரே
பனிப்பு அறுத்து எனை ஆண்ட பரம்பரரே எம் பார்வதிபுர ஞானப் பதி சிதம்பரரே
இனிச் சிறுபொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா இறையவரே உமை இங்கு கண்டு அல்லால்
அனிச்சய உலகினைப் பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#2
பெறுவது நுமை அன்றிப் பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றிப் பிறிது ஒன்றும் பேசேன்
உறுவது நும் அருள் அன்றிப் பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றிப் பிறிது ஒன்றும் உன்னேன்
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்துக் கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால்
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#3
கரும்பிடை இரதமும் கனியில் இன் சுவையும் காட்டி என் உள்ளம் கலந்து இனிக்கின்றீர்
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன்
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால்
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#4
தடுத்து எனை ஆட்கொண்ட தந்தையரே என் தனிப் பெரும் தலைவரே சபை நடத்தவரே
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன்
விடுத்திடில் என்னை நீர் விடுப்பன் என் உயிரை வெருவு உளக் கருத்து எல்லாம் திருவுளத்து அறிவீர்
அடுத்து இனிப் பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#5
காசையும் பணத்தையும் கன்னியர்-தமையும் காணியின் ஆட்சியும் கருதிலேன் கண்டீர்
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ
ஏசறல் அகற்றி வந்து என்னை முன் ஆண்டீர் இறையவரே உமை இன்று கண்டு அல்லால்
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#6
என் பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத்து எம்பெருமானீர்
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால்
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#7
திருந்தும் என் உள்ளத் திரு_கோயில் ஞான சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன்
இருந்து அருள்கின்ற நீர் என் இரு கண்கள் இன்புற அன்று வந்து எழில் உருக் காட்டி
வருந்தலை என்று எனைத் தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால்
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#8
கரைக் கணம் இன்றியே கடல் நிலை செய்தீர் கருணை_கடற்குக் கரைக்கு அணம் செய்யீர்
உரைக்கு அணவாத உயர்வு_உடையீர் என் உரைக்கு அணவிப் பல உதவி செய்கின்றீர்
வரைக் கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால்
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#9
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும்
கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்காலையினும் தந்து என் கடும் பசி தீர்த்து
எடுக்கும் நல் தாயொடும் இணைந்து நிற்கின்றீர் இறையவரே உம்மை இங்கு கண்டு அல்லால்
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

#10
கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை ஈது என்றே கருத்துள் அறிந்தேன்
நிறுத்து உரைக்கின்ற பல் நேர்மைகள் இன்றி நீடு ஒளிப் பொன் பொது நாடகம் புரிவீர்
செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர் சிற்சபையீர் எனைச் சேர்ந்திடல் வேண்டும்
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே.

@35. பிரியேன் என்றல்

#1
அப்பா நான் பற்பல கால் அறைவது என்னே அடியேன் அச்சம் எலாம் துன்பம் எலாம் அறுத்து விரைந்து வந்தே
இப் பாரில் இது தருணம் என்னை அடைந்து அருளி எண்ணம் எலாம் முடித்து என்னை ஏன்றுகொளாய் எனிலோ
தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியம் சத்தியம் நின் தாள் இணைகள் அறிக இது தயவு_உடையோய் எவர்க்கும்
துப்பு ஆகித் துணை ஆகித் துலங்கிய மெய்த் துணையே சுத்த சிவானந்த அருள் சோதி நடத்து அரசே.

#2
ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஐயா அரை_கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க_மாட்டேன்
கோணை நிலத்தவர் பேசக் கேட்டது போல் இன்னும் குறும்பு_மொழி செவிகள் உறக் கொண்டிடவும்_மாட்டேன்
ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன் நீ-தான் உவந்து வராய் எனில் என்றன் உயிரையும் விட்டிடுவேன்
மாணை மணிப் பொது நடம் செய் வள்ளால் நீ எனது மனம் அறிவாய் இனம் உனக்கு வகுத்து உரைப்பது என்னே.

#3
பட முடியாது இனித் துயரம் பட முடியாது அரசே பட்டது எல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து இப்பொழுது என்
உடல் உயிர் ஆதிய எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆதிய எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்
வடல் உறு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள் மணியே என் குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவ மணியே ஞான நல் மணியே பொன் மணியே நடராச மணியே.

#4
வாழையடி_வாழை என வந்த திரு_கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை அறியேன் இந்த
ஏழை படும் பாடு உனக்கும் திருவுளச் சம்மதமோ இது தகுமோ இது முறையோ இது தருமம்-தானோ
மாழை மணிப் பொது நடம் செய் வள்ளால் யான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலையோ
கோழை உலகு உயிர்த் துயரம் இனிப் பொறுக்க_மாட்டேன் கொடுத்து அருள் நின் அருள் ஒளியைக் கொடுத்து அருள் இப்பொழுதே.

#5
செய் வகை என் எனத் திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திரு_மேனி காட்டி எனைத் தெளிவித்தாய் நீயே
பொய் வகை அன்று இது நினது புந்தி அறிந்ததுவே பொன் அடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன்
எய் வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன்
ஐவகை இ உயிர்த் துயரம் இனிப் பொறுக்க_மாட்டேன் அருள் சோதிப் பெரும் பொருளை அளித்து அருள் இப்பொழுதே.

#6
முன் ஒருநாள் மயங்கினன் நீ மயங்கேல் என்று எனக்கு முன்னின் உருக் காட்டினை நான் முகம் மலர்ந்து இங்கு இருந்தேன்
இன்னும் வரக் காணேன் நின் வரவை எதிர்பார்த்தே எண்ணிஎண்ணி வருந்துகின்றேன் என்ன செய்வேன் அந்தோ
அன்னையினும் தயவு_உடையாய் நின் தயவை நினைத்தே ஆர்_உயிர் வைத்திருக்கின்றேன் ஆணை இது கண்டாய்
என் இரு கண்மணியே என் அறிவே என் அன்பே என் உயிர்க்குப் பெரும் துணையே என் உயிர்_நாயகனே.

#7
உன்னை மறந்திடுவேனோ மறப்பு அறியேன் மறந்தால் உயிர்விடுவேன் கணம் தரியேன் உன் ஆணை இது நீ
என்னை மறந்திடுவாயோ மறந்திடுவாய் எனில் யான் என்ன செய்வேன் எங்கு உறுவேன் எவர்க்கு உரைப்பேன் எந்தாய்
அன்னையினும் தயவு_உடையாய் நீ மறந்தாய் எனினும் அகிலம் எலாம் அளித்திடும் நின் அருள் மறவாது என்றே
இன்னும் மிகக் களித்து இங்கே இருக்கின்றேன் மறவேல் இது தருணம் அருள் சோதி எனக்கு விரைந்து அருளே.

#8
நான் மறந்தேன் எனினும் எனைத் தான் மறவான் எனது நாயகன் என்று ஆடுகின்றேன் எனினும் இது வரையும்
வான் மறந்தேன் வானவரை மறந்தேன் மால் அயனை மறந்தேன் நம் உருத்திரரை மறந்தேன் என்னுடைய
ஊன் மறந்தேன் உயிர் மறந்தேன் உணர்ச்சி எலாம் மறந்தேன் உலகம் எலாம் மறந்தேன் இங்கு உன்னை மறந்து அறியேன்
பால் மறந்த குழவியைப் போல் பாரேல் இங்கு எனையே பரிந்து நினது அருள் சோதி புரிந்து மகிழ்ந்து அருளே.

#9
தெருவிடத்தே விளையாடித் திரிந்த எனை வலிந்தே சிவ மாலை அணிந்தனை அச் சிறுவயதில் இந்த
உருவிடத்தே நினக்கு இருந்த ஆசை எலாம் இ நாள் ஓடியதோ புதிய ஒரு உருவு விழைந்ததுவோ
கருவிடத்தே எனைக் காத்த காவலனே உனது கால் பிடித்தேன் விடுவேனோ கை_பிடி அன்று அது-தான்
வெருவிடத்து என் உயிர்_பிடி காண் உயிர் அகன்றால் அன்றி விட_மாட்டேன் விட_மாட்டேன் விட_மாட்டேன் நானே.

#10
பெரியன் அருள்_பெரும்_சோதிப் பெரும் கருணைப் பெருமான் பெரும் புகழைப் பேசுதலே பெரும் பேறு என்று உணர்ந்தே
துரிய நிலத்தவர் எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல் பெரிது அல இங்கே துதித்திட என்று எழுந்த
அரிய பெரும் பேர்_ஆசைக் கடல் பெரிதே அது என் அளவுகடந்து இழுக்கின்றதாதலினால் விரைந்தே
உரிய அருள் அமுது அளித்தே நினைத் துதிப்பித்து அருள்வாய் உலகம் எலாம் களித்து ஓங்க ஓங்கும் நடத்து அரசே.

#11
கவலை எலாம் தவிர்ந்து மிகக் களிப்பினொடு நினையே கை குவித்துக் கண்களில் நீர் கனிந்து சுரந்திடவே
சவலை மனச் சலனம் எலாம் தீர்ந்து சுக மயமாய்த் தானே தான் ஆகி இன்பத் தனி நடம் செய் இணைத் தாள்
தவல் அரும் சீர்ச் சொல்_மாலை வனைந்துவனைந்து அணிந்து தான் ஆகி நான் ஆடத் தருணம் இது-தானே
குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் குருவே என் குற்றம் எலாம் குணமாக் கொண்டவனே.

@36. சிவ தரிசனம்

#1
திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியே
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே.

#2
சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே தூயவனே நேயவனே சோதி உருவவனே
நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம்
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே.

#3
துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே சுத்த சிவானந்த சபைச் சித்த சிகாமணியே
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரிய மணித் திறத்தினையும் காண வல்லேன் அல்லேன் கண்மணியே நின் திறத்தைக் காணுதல் வல்லேனோ
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

#4
மறப்பு அறியாப் பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே
இறப்பு அறியாத் திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும் என்னுடைய நல் தாயே எந்தாயே நினது
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்கப்
பிறப்பு அறியாப் பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய் பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே.

#5
முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின் முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என்
தன் உழைப் பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல் யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர்
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம் பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே.

#6
விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே
மொழித் திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில் சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே பரிந்து எனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்து அருளே.

#7
மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ
தேன் ஒருவா மொழிச்சியரைத் திளைக்க விழைந்தேனோ தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது நாயகனே பொது விளங்கும் நடராச பதியே
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே.

#8
பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன்
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன்
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன்
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே.

#9
கட்டு அவிழ்ந்த கமலம் எனக் கருத்து அவிழ்ந்து நினையே கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான்
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம்
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே.

#10
காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது கடி நகர்ப் பொன் மதில் காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டை எலாம் கொடி நாட்டிக் கோலம் இடப் பார்த்தேன் கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன்
சேட்டை அற்றுக் கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல்
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே.

#11
சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான் செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த
இத் தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம்
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல் சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய் நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே.

@37. அநுபோக நிலயம்

#1
இனிப் பிரிந்து இறையும் இருக்கலேன் பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கிப்
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ
தனிப்படு ஞான வெளியிலே இன்பத் தனி நடம் புரி தனித் தலைவா
கனிப் பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#2
பிரிந்து இனிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப் பேசினும் நெய் விடும் தீப் போல்
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ எங்கணும் கண் உடை எந்தாய்
புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும் புண்ணியா என் உயிர்த் துணைவா
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#3
மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய் மெய்யனே ஐயனே எனக்கு
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_வல்லனே நல்லனே அருள் செங்
கோலையே நடத்தும் இறைவனே ஓர் எண்_குணத்தனே இனிச் சகிப்பு அறியேன்
காலையே தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#4
பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத பண்பனே திரு_சிற்றம்பலத்தே
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும் தூயனே நேயனே பிரமன்
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே விளங்குறக் காட்டிய விமலா
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#5
தனித் துணை எனும் என் தந்தையே தாயே தலைவனே சிற்சபை-தனிலே
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே என் இரு கண்ணுள் மா மணியே
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே அண்ணலே இனிப் பிரிவு ஆற்றேன்
கனித் துணை தருதற்கு இது தகு தருணம் கலந்து அருள் கலந்து அருள் எனையே.

#6
துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே சோதியுள் சோதியே அழியா
இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை ஈன்ற நல் தந்தையே தாயே
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே அண்ணலே இனிப் பிரிவு ஆற்றேன்
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

#7
ஏதும் ஒன்று அறியாப் பேதையாம் பருவத்து என்னை ஆட்கொண்டு எனை உவந்தே
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த ஒருவனே என் உயிர்த் துணைவா
வேதமும் பயனும் ஆகிய பொதுவில் விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

#8
எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து இசைந்த பேர்_இன்பமே யான்-தான்
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே
தண்ணிய மதியே மதி முடி அரசே தனித்த சிற்சபை நடத்து அமுதே
புண்ணியம் அளித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

#9
மலப் பகை தவிர்க்கும் தனிப் பொது மருந்தே மந்திரமே ஒளிர் மணியே
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த நேயனே தாய்_அனையவனே
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய் பரமனே பரம சிற்சுகம்-தான்
புலப்படத் தருதற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

#10
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பகத் தீம் சுவைக் கனியே
வெளிப் புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே
ஒளிப்பு இலாது அன்றே அளித்த சிற்பொதுவில் ஒருவனே இனிப் பிரிவு ஆற்றேன்
புளிப்பு அற இனித்தற்கு இது தகு தருணம் புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.

@38. சிவயோக நிலை

#1
மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டே
பதி மண்டலத்து அரசுபண்ண நிதிய
நவ நேயம் ஆக்கும் நடராசனே எம்
சிவனே கதவைத் திற.

#2
இந்து ஆர் அருள் அமுதம் யான் அருந்தல் வேண்டும் இங்கே
நந்தா மணி_விளக்கே ஞான சபை எந்தாயே
கோவே எனது குருவே எனை ஆண்ட
தேவே கதவைத் திற.

#3
சாகா அருள் அமுதம் தான் அருந்தி நான் களிக்க
நாகாதிபர் சூழ் நடராசா ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்
சிவனே கதவைத் திற.

#4
அருள் ஓங்கு தண் அமுதம் அன்பால் அருந்தி
மருள் நீங்கி நான் களித்து வாழப் பொருளாம்
தவ நேயர் போற்றும் தயாநிதியே எங்கள்
சிவனே கதவைத் திற.

#5
வானோர்க்கு அரிது எனவே மா மறைகள் சாற்றுகின்ற
ஞானோதய அமுதம் நான் அருந்த ஆனாத்
திறப் பாவலர் போற்றும் சிற்றம்பலவா
சிறப்பா கதவைத் திற.

#6
எல்லாமும் வல்ல சித்து என்று எல்லா மறைகளும் சொல்
நல்லார் அமுதம்-அது நான் அருந்த நல்லார்க்கு
நல் வாழ்வு அளிக்கும் நடராயா மன்று ஓங்கு
செல்வா கதவைத் திற.

#7
ஏழ் நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண் அமுதம்
வாழ் நிலைக்க நான் உண்டு மாண்புறவே கேழ் நிலைக்க
ஆவா என்று என்னை உவந்து ஆண்ட திரு_அம்பல மா
தேவா கதவைத் திற.

#8
ஈன உலகத்து இடர் நீங்கி இன்புறவே
ஞான அமுதம்-அது நான் அருந்த ஞான
உருவே உணர்வே ஒளியே வெளியே
திருவே கதவைத் திற.

#9
திரையோதசத்தே திகழ்கின்ற என்றே
வரை ஓது தண் அமுதம் வாய்ப்ப உரை ஓது
வானே எம் மானே பெம்மானே மணி மன்றில்
தேனே கதவைத் திற.

#10
சோதி மலை மேல் வீட்டில் தூய திரு அமுதம்
மேதினி மேல் நான் உண்ண வேண்டினேன் ஓத அரிய
ஏகா அனேகா எழில் பொதுவில் வாழ் ஞான
தேகா கதவைத் திற.

@39. பெற்ற பேற்றினை வியத்தல்

#1
சீர் இடம் பெறும் ஓர் திரு_சிற்றம்பலத்தே திகழ் தனித் தந்தையே நின்-பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணைசெய்து அருள்செய்திடத் தாழ்க்கில்
யாரிடம் புகுவேன் யார் துணை என்பேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன்
போரிட முடியாது இனித் துயரொடு நான் பொறுக்கலேன் அருள்க இப்போதே.

#2
போது-தான் விரைந்து போகின்றது அருள் நீ புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
யாது-தான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன்
தீது-தான் புரிந்தேன் எனினும் நீ அதனைத் திருவுளத்து அடைத்திடுவாயேல்
ஈது-தான் தந்தை மரபினுக்கு அழகோ என் உயிர்த் தந்தை நீ அலையோ.

#3
தந்தை நீ அலையோ தனயன் நான் அலனோ தமியனேன் தளர்ந்து உளம் கலங்கி
எந்தையே குருவே இறைவனே முறையோ என்று நின்று ஓலிடுகின்றேன்
சிந்தையே அறியார் போன்று இருந்தனையேல் சிறியனேன் என் செய்கேன் ஐயோ
சந்தையே புகுந்த நாயினில் கடையேன் தளர்ச்சியைத் தவிர்ப்பவர் யாரே.

#4
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் என் பிழை பொறுப்பவர் யாரே
பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே பாவியேன் பிழை பொறுத்திலையேல்
ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி உடம்பை வைத்து உலாவவும் படுமோ
சேரினும் எனை-தான் சேர்த்திடார் பொதுவாம் தெய்வத்துக்கு அடாதவன் என்றே.

#5
அடாத காரியங்கள் செய்தனன் எனினும் அப்ப நீ அடியனேன்-தன்னை
விடாதவாறு அறிந்தே களித்து இருக்கின்றேன் விடுதியோ விட்டிடுவாயேல்
உடாத வெற்றரை நேர்ந்து உயங்குவேன் ஐயோ உன் அருள் அடைய நான் இங்கே
படாத_பாடு எல்லாம் பட்டனன் அந்தப் பாடு எலாம் நீ அறியாயோ.

#6
அறிந்திலையோ என் பாடு எலாம் என்றே அழைத்தனன் அப்பனே என்னை
எறிந்திடாது இந்தத் தருணமே வந்தாய் எடுத்து அணைத்து அஞ்சிடேல் மகனே
பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் பெரும் திறல் சித்திகள் எல்லாம்
சிறந்திட உனக்கே தந்தனம் என என் சென்னி தொட்டு உரைத்தனை களித்தே.

#7
களித்து எனது உடம்பில் புகுந்தனை எனது கருத்திலே அமர்ந்தனை கனிந்தே
தெளித்த என் அறிவில் விளங்கினை உயிரில் சிறப்பினால் கலந்தனை உள்ளம்
தளிர்த்திடச் சாகா_வரம் கொடுத்து என்றும் தடைபடாச் சித்திகள் எல்லாம்
அளித்தனை எனக்கே நின் பெரும் கருணை அடியன் மேல் வைத்தவாறு என்னே.

#8
என் நிகர் இல்லா இழிவினேன்-தனை மேல் ஏற்றினை யாவரும் வியப்பப்
பொன் இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும்
உன்னிய எல்லாம்_வல்ல சித்தியும் பேர் உவகையும் உதவினை எனக்கே
தன் நிகர் இல்லாத் தலைவனே நினது தயவை என் என்று சாற்றுவனே.

#9
சாற்றுவேன் எனது தந்தையே தாயே சற்குரு நாதனே என்றே
போற்றுவேன் திரு_சிற்றம்பலத்து ஆடும் பூரணா என உலகு எல்லாம்
தூற்றுவேன் அன்றி எனக்கு நீ செய்த தூய பேர்_உதவிக்கு நான் என்
ஆற்றுவேன் ஆவி உடல் பொருள் எல்லாம் அப்ப நின் சுதந்தரம் அன்றோ.

#10
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது தூய நல் உடம்பினில் புகுந்தேம்
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே இன்புறக் கலந்தனம் அழியாப்
பதம்-தனில் வாழ்க அருள்_பெரும்_சோதிப் பரிசு பெற்றிடுக பொன்_சபையும்
சிதம் தரு சபையும் போற்றுக என்றாய் தெய்வமே வாழ்க நின் சீரே.

@40. அழிவுறா அருள் வடிவப் பேறு

#1
சிவம் கனிந்த சிற்றம்பலத்து அருள் நடம் செய்கின்ற பெரு வாழ்வே
நவம் கனிந்த மேல் நிலை நடு விளங்கிய நண்பனே அடியேன்-தன்
தவம் கனிந்ததோர் விண்ணப்பம் திரு_செவி தரித்து அருள் புரிந்தாயே
பவம் கனிந்த இ வடிவமே அழிவுறாப் பதி வடிவு ஆமாறே.

#2
விளங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே
களங்கம்_இல்லதோர் உளம் நடு விளங்கிய கருத்தனே அடியேன் நான்
விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி வியந்து அருள் புரிந்தாயே
உளம்கொள் இ வடிவு இம்மையே மந்திர ஒளி வடிவு ஆமாறே.

#3
விஞ்சுகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் விளைக்கின்ற பெரு வாழ்வே
எஞ்சல் அற்ற மா மறை முடி விளங்கிய என் உயிர்த் துணையே நான்
அஞ்சல் இன்றியே செய்த விண்ணப்பம் ஏற்று அகம் களித்து அளித்தாயே
துஞ்சும் இ உடல் அழிவுறாது ஓங்கும் மெய்ச் சுக வடிவு ஆமாறே.

#4
ஓங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடம் ஒளிர்கின்ற பெரு வாழ்வே
தேம் குலாவிய தெள் அமுதே பெரும் செல்வமே சிவமே நின்
பாங்கனேன் மொழி விண்ணப்பம் திரு_செவி பதித்து அருள் புரிந்தாயே
ஈங்கு வீழ் உடல் என்றும் வீழாது ஒளிர் இயல் வடிவு ஆமாறே.

#5
இலங்குகின்ற சிற்றம்பலத்து அருள் நடமிடுகின்ற பெரு வாழ்வே
துலங்கு பேர்_அருள் சோதியே சோதியுள் துலங்கிய பொருளே என்
புலம்கொள் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தனை இஞ்ஞான்றே
அலங்கும் இ உடல் எற்றையும் அழிவுறா அருள் வடிவு ஆமாறே.

#6
சிறந்த பேர்_ஒளித் திரு_சிற்றம்பலத்திலே திகழ்கின்ற பெரு வாழ்வே
துறந்த பேர்_உளத்து அருள் பெருஞ் சோதியே சுகப் பெரு நிலையே நான்
மறந்திடாது செய் விண்ணப்பம் திரு_செவி மடுத்து அருள் புரிந்தாயே
பிறந்த இ உடல் என்றும் இங்கு அழிவுறாப் பெருமை பெற்றிடுமாறே.

#7
வயங்குகின்ற சிற்றம்பலம்-தன்னிலே வளர்கின்ற பெரு வாழ்வே
மயங்குறாத மெய் அறிவிலே விளங்கிய மா மணி_விளக்கே இங்கு
இயங்கு சிற்றடியேன் மொழி விண்ணப்பம் ஏற்று அருள் புரிந்தாயே
தயங்கும் இ உடல் எற்றையும் அழிவுறாத் தனி வடிவு ஆமாறே.

#8
தீட்டுகின்ற சிற்றம்பலம்-தன்னிலே திகழ்கின்ற பெரு வாழ்வே
காட்டுகின்றதோர் கதிர் நடு விளங்கிய கடவுளே அடியேன் நான்
நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திரு_செவி நிறைத்து அருள் புரிந்தாயே
பூட்டும் இ உடல் எற்றையும் அழிவுறாப் பொன் வடிவு ஆமாறே.

#9
தடை இலாத சிற்றம்பலம்-தன்னிலே தழைக்கின்ற பெரு வாழ்வே
கடை இலாப் பெரும் கதிர் நடு விளங்கும் ஓர் கடவுளே அடியேன் நான்
இடைவுறாது செய் விண்ணப்பம் திரு_செவிக்கு ஏற்று அருள் புரிந்தாயே
புடையின் இ உடல் எற்றையும் அழிவுறாப் பொன் வடிவு ஆமாறே.

#10
கையின் நெல்லி போல் விளங்கு சிற்றம்பலம் கலந்து அருள் பெரு வாழ்வே
மெய்யிலே விளைந்து ஓங்கிய போகமே மெய்ப் பெரும் பொருளே நான்
ஐய மற்று உரைத்திட்ட விண்ணப்பம் ஏற்று அளித்தனை இஞ்ஞான்றே
செய்யும் இ உடல் என்றும் இங்கு அழிவுறாச் சிவ வடிவு ஆமாறே.

@41. பேரருள் வாய்மையை வியத்தல்

#1
நன்றே தரும் திரு_நாடகம் நாள்-தொறும் ஞான மணி
மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார் கழலோய்
இன்றே அருள்_பெரும்_சோதி தந்து ஆண்டு அருள் எய்து கணம்
ஒன்றே எனினும் பொறேன் அருள் ஆணை உரைத்தனனே.

#2
தன் சோதி என் உயிர்ச் சத்திய சோதி தனித் தலைமைச்
சிற்சோதி மன்று ஒளிர் தீபக சோதி என் சித்தத்துள்ளே
நல் சோதி ஞான நல் நாடக சோதி நலம் புரிந்த
பொன் சோதி ஆனந்த பூரண சோதி எம் புண்ணியனே.

#3
திரை கண்ட மாயைக் கடல் கடந்தேன் அருள் சீர் விளங்கும்
கரை கண்டு அடைந்தனன் அக் கரை மேல் சர்க்கரை கலந்த
உரை கண்ட தெள் அமுது உண்டேன் அருள் ஒளி ஓங்குகின்ற
வரை கண்டதன் மிசை உற்றேன் உலகம் மதித்திடவே.

#4
மனக் கேதம் மாற்றி வெம் மாயையை நீக்கி மலிந்த வினை-
தனக்கே விடைகொடுத்து ஆணவம் தீர்த்து அருள் தண் அமுதம்
எனக்கே மிகவும் அளித்து அருள் சோதியும் ஈந்து அழியா
இனக் கேண்மையும் தந்து என் உள் கலந்தான் மன்றில் என் அப்பனே.

#5
வாதித்த மாயை வினை ஆணவம் எனும் வன் மலத்தைச்
சேதித்து என் உள்ளம் திரு_கோயிலாக் கொண்டு சித்தி எலாம்
போதித்து உடம்பையும் பொன் உடம்பு ஆக்கி நல் புத்தமுதும்
சாதித்து அருளிய நின் அருட்கு யான் செயத் தக்கது என்னே.

#6
செத்தார் எழுக எனச் சிந்தைசெய் முன்னம் சிரித்து எழவே
இத் தாரணியில் அருள்_பெரும்_சோதி எனக்கு அளித்தாய்
எத்தாலும் என்றும் அழியா வடிவு தந்து என்னுள் நின்னை
வைத்தாய் மணி மன்ற_வாண நின் பேர்_அருள் வாய்மை என்னே.

#7
ஆக்கல் ஒன்றோ தொழில் ஐந்தையும் தந்து இந்த அண்ட பிண்ட
வீக்கம் எல்லாம் சென்று உன் இச்சையின் வண்ணம் விளங்குக நீ
ஏக்கம் உறேல் என்று உரைத்து அருள் சோதியும் ஈந்து எனக்கே
ஊக்கம் எலாம் உற உள் கலந்தான் என் உடையவனே.

#8
என்னே என் மீது எம்பெருமான் கருணை இருந்த வண்ணம்
தன் நேர் இலாத அருள்_பெரும்_சோதியைத் தந்து உலகுக்கு
அன்னே என விளையாடுக என்று அழியாத செழும்
பொன் ஏர் வடிவும் அளித்து என் உயிரில் புணர்ந்தனனே.

#9
அச்சோ என் என்று புகல்வேன் என் ஆண்டவன் அம்பலத்தான்
எச் சோதனையும் இயற்றாது என்னுள் கலந்து இன் அருளாம்
மெய்ச் சோதி ஈந்து எனை மேல் நிலைக்கு ஏற்றி விரைந்து உடம்பை
இச் சோதி ஆக்கி அழியா நலம் தந்த விச்சையையே.

#10
வாழி என் ஆண்டவன் வாழி எம் கோன் அருள் வாய்மை என்றும்
வாழி எம்மான் புகழ் வாழி என் நாதன் மலர்ப் பதங்கள்
வாழி மெய்ச் சுத்த சன்மார்க்கப் பெரு நெறி மாண்பு கொண்டு
வாழி இ வையமும் வானமும் மற்றவும் வாழியவே.

@42 பொதுநடம் புரிகின்ற பொருள்

#1
அருள்_பெரும்_சோதி அமுதமே அமுதம் அளித்து எனை வளர்த்திட அருளாம்
தெருள் பெரும் தாய்-தன் கையிலே கொடுத்த தெய்வமே சத்தியச் சிவமே
இருள் பெரு நிலத்தைக் கடத்தி என்றனை மேல் ஏற்றிய இன்பமே எல்லாப்
பொருள் பெரு நெறியும் காட்டிய குருவே பொது நடம் புரிகின்ற பொருளே.

#2
சித்து எலாம் வல்ல சித்தனே ஞான சிதம்பர ஜோதியே சிறியேன்
கத்து எலாம் தவிர்த்துக் கருத்து எலாம் அளித்த கடவுளே கருணை அம் கடலே
சத்து எலாம் ஒன்றே சத்தியம் என என்றனக்கு அறிவித்ததோர் தயையே
புத்து எலாம் நீக்கிப் பொருள் எலாம் காட்டும் பொது நடம் புரிகின்ற பொருளே.

#3
கலைகள் ஓர் அனந்தம் அனந்தம் மேல் நோக்கிக் கற்பங்கள் கணக்கில கடப்ப
நிலைகள் ஓர் அனந்தம் நேடியும் காணா நித்திய நிற்குண நிறைவே
அலைகள் அற்று உயிருக்கு அமுது அளித்து அருளும் அருள் பெரும் கடல் எனும் அரசே
புலை களவு அகற்றி எனக்குளே நிறைந்து பொது நடம் புரிகின்ற பொருளே.

#4
தண்ணிய மதியே தனித்த செம் சுடரே சத்திய சாத்தியக் கனலே
ஒண்ணிய ஒளியே ஒளிக்குள் ஓர் ஒளியே உலகு எலாம் தழைக்க மெய் உளத்தே
நண்ணிய விளக்கே எண்ணியபடிக்கே நல்கிய ஞான போனகமே
புண்ணிய நிதியே கண்ணிய நிலையே பொது நடம் புரிகின்ற பொருளே.

#5
அற்புத நிறைவே சற்புதர் அறிவில் அறிவு என அறிகின்ற அறிவே
சொல் புனை மாயைக் கற்பனை கடந்த துரிய நல் நிலத்திலே துலங்கும்
சிற்பரம் சுடரே தற்பர ஞானச் செல்வமே சித்து எலாம் புரியும்
பொன் புலம் அளித்த நல் புலக் கருத்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

#6
தத்துவ பதியே தத்துவம் கடந்த தனித்ததோர் சத்திய பதியே
சத்துவ நெறியில் சார்ந்த சன்மார்க்கர்-தமக்கு உளே சார்ந்த நல் சார்பே
பித்துறு சமயப் பிணக்குறும் அவர்க்குப் பெறல் அரிது ஆகிய பேறே
புத்தமுது அளித்து என் உளத்திலே கலந்து பொது நடம் புரிகின்ற பொருளே.

#7
மேல் வெளி காட்டி வெளியிலே விளைந்த விளைவு எலாம் காட்டி மெய் வேத
நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும்
நால் வகைப் பயனும் அளித்து எனை வளர்க்கும் நாயகக் கருணை நல் தாயே
போல் உயிர்க்குயிராய்ப் பொருந்திய மருந்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

#8
அலப்பு அற விளங்கும் அருள் பெரு விளக்கே அரும் பெரும் சோதியே சுடரே
மலப் பிணி அறுத்த வாய்மை எம் மருந்தே மருந்து எலாம் பொருந்திய மணியே
உலப்பு அறு கருணைச் செல்வமே எல்லா உயிர்க்குளும் நிறைந்ததோர் உணர்வே
புலப் பகை தவிர்க்கும் பூரண வரமே பொது நடம் புரிகின்ற பொருளே.

#9
பரம்பர நிறைவே பராபர வெளியே பரம சிற்சுகம் தரும் பதியே
வரம் பெறு சிவ சன்மார்க்கர்-தம் மதியில் வயங்கிய பெரும் சுடர் மணியே
கரம் பெறு கனியே கனிவுறு சுவையே கருதிய கருத்துறு களிப்பே
புரம் புகழ் நிதியே சிரம் புகல் கதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

#10
வெற்புறு முடியில் தம்பம் மேல் ஏற்றி மெய் நிலை அமர்வித்த வியப்பே
கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணை வான் அமுதத் தெள் கடலே
அற்புறும் அறிவில் அருள் ஒளி ஆகி ஆனந்தமாம் அனுபவமே
பொற்புறு பதியே அற்புத நிதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

#11
தன்மை காண்ப அரிய தலைவனே எல்லாம் தர வல்ல சம்புவே சமயப்
புன்மை நீத்து அகமும் புறமும் ஒத்து அமைந்த புண்ணியர் நண்ணிய புகலே
வன்மை சேர் மனத்தை நன்மை சேர் மனமா வயங்குவித்து அமர்ந்த மெய் வாழ்வே
பொன்மை சார் கனகப் பொதுவொடு ஞானப் பொது நடம் புரிகின்ற பொருளே.

#12
மூவிரு முடிபின் முடிந்ததோர் முடிபே முடிபு எலாம் கடந்ததோர் முதலே
தாவிய முதலும் கடையும் மேல் காட்டாச் சத்தியத் தனி நடு நிலையே
மேவிய நடுவில் விளங்கிய விளைவே விளைவு எலாம் தருகின்ற வெளியே
பூ இயல் அளித்த புனித சற்குருவே பொது நடம் புரிகின்ற பொருளே

#13
வேதமும் பொருளும் பயனும் ஓர் அடைவும் விளம்பிய அனுபவ விளைவும்
போதமும் சுகமும் ஆகி இங்கு இவைகள் போனதுமாய் ஒளிர் புலமே
ஏதமுற்று இருந்த ஏழையேன் பொருட்டு இ இரு நிலத்து இயல் அருள் ஒளியால்
பூத நல் வடிவம் காட்டி என் உளத்தே பொது நடம் புரிகின்ற பொருளே.

#14
அடியனேன் பொருட்டு இ அவனி மேல் கருணை அருள் வடிவெடுத்து எழுந்தருளி
நெடியனே முதலோர் பெறற்கு அரும் சித்தி நிலை எலாம் அளித்த மா நிதியே
மடிவுறாது என்றும் சுத்த சன்மார்க்கம் வயங்க நல் வரம் தந்த வாழ்வே
பொடி அணி கனகப் பொருப்பு ஒளிர் நெருப்பே பொது நடம் புரிகின்ற பொருளே.

#15
என் பிழை அனைத்தும் பொறுத்து அருள் புரிந்து என் இதயத்தில் இருக்கின்ற குருவே
அன்பு உடை அரசே அப்பனே என்றன் அம்மையே அருள்_பெரும்_சோதி
இன்புறு நிலையில் ஏற்றிய துணையே என் உயிர்_நாதனே என்னைப்
பொன் புனை மாலை புனைந்த ஓர் பதியே பொது நடம் புரிகின்ற பொருளே.

#16
சத்திய பதியே சத்திய நிதியே சத்திய ஞானமே வேத
நித்திய நிலையே நித்திய நிறைவே நித்திய வாழ்வு அருள் நெறியே
சித்தி இன்பு உருவே சித்தியின் கருவே சித்தியில் சித்தியே எனது
புத்தியின் தெளிவே புத்தமுது அளித்துப் பொது நடம் புரிகின்ற பொருளே

#17
சிதத்து ஒளிர் பரமே பரத்து ஒளிர் பதியே சிவபத அனுபவச் சிவமே
மதத் தடை தவிர்த்த மதி மதி மதியே மதி நிறை அமுத நல் வாய்ப்பே
சதத் திரு_நெறியே தனி நெறித் துணையே சாமியே தந்தையே தாயே
புதப் பெரு வரமே புகற்கு அரும் தரமே பொது நடம் புரிகின்ற பொருளே.

#18
கலை வளர் கலையே கலையினுள் கலையே கலை எலாம் தரும் ஒரு கருவே
நிலை வளர் கருவுள் கரு என வயங்கும் நித்திய வானமே ஞான
மலை வளர் மருந்தே மருந்துறு பலனே மா பலம் தருகின்ற வாழ்வே
புலை தவிர்த்து எனையும் பொருள் எனக் கொண்டு பொது நடம் புரிகின்ற பொருளே.

#19
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே
கைம்மையே தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே கரிசு இலாக் களிப்பே
ஐம்மையே அதற்குள் அது அது ஆகும் அற்புதக் காட்சியே எனது
பொய்ம்மையே பொறுத்துப் புகல் அளித்து அருளிப் பொது நடம் புரிகின்ற பொருளே.

#20
காரண அருவே காரிய உருவே காரண காரியம் காட்டி
ஆரண முடியும் ஆகம முடியும் அமர்ந்து ஒளிர் அற்புதச் சுடரே
நாரண தலமே நாரண வலமே நாரணாகாரத்தின் ஞாங்கர்ப்
பூரண ஒளி செய் பூரண சிவமே பொது நடம் புரிகின்ற பொருளே.

@43. ஆனந் தானுபவம்

#1
கள்ளத்தை எல்லாம் கடக்கவிட்டேன் நின் அருளாம்
வெள்ளத்தை எல்லாம் மிக உண்டேன் உள்ளத்தே
காணாத காட்சி எலாம் காண்கின்றேன் ஓங்கு மன்ற_
வாணா நினக்கு அடிமை வாய்த்து.

#2
காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன் ஞாலம் மிசைச்
சாகா_வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கு அடிமை ஏற்று.

#3
மூவர்களும் செய்ய முடியா முடிபு எல்லாம்
யாவர்களும் காண எனக்கு அளித்தாய் மேவு கடை
நாய்க்குத் தவிசு அளித்து நல் முடியும் சூட்டுதல் எம்
தாய்க்குத் தனி இயற்கை தான்.

#4
கொள்ளை என இன்பம் கொடுத்தாய் நினது செல்வப்
பிள்ளை என எற்குப் பெயரிட்டாய் தெள் அமுதம்
தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய்
எந்தாய் கருணை இது.

#5
கண்டேன் களித்தேன் கருணைத் திரு_அமுதம்
உண்டேன் உயர் நிலை மேல் ஓங்குகின்றேன் கொண்டேன்
அழியாத் திரு_உருவம் அச்சோ எஞ்ஞான்றும்
அழியாச் சிற்றம்பலத்தே யான்.

#6
பார்த்தேன் பணிந்தேன் பழிச்சினேன் மெய்ப் புளகம்
போர்த்தேன் என் உள்ளம் எலாம் பூரித்தேன் ஆர்த்தே நின்று
ஆடுகின்றேன் பாடுகின்றேன் அன்பு உரு ஆனேன் அருளை
நாடுகின்றேன் சிற்சபையை நான்.

#7
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் நண்ணு திரு_
சிற்றம்பலத்தே திரு_நடம் செய்கின்றான் என்
குற்றம் பல பொறுத்துக்கொண்டு.

#8
கொண்டான் அடிமை குறியான் பிழை ஒன்றும்
கண்டான் களித்தான் கலந்து இருந்தான் பண்டாய
நான்மறையும் ஆகமமும் நாடும் திரு_பொதுவில்
வான் மயத்தான் என்னை மகிழ்ந்து.

#9
கண்டேன் களித்தேன் கருணைத் திரு_அமுதம்
உண்டேன் அழியா உரம் பெற்றேன் பண்டே
எனை உவந்து கொண்டான் எழில் ஞான மன்றம்-
தனை உவந்து கொண்டான்-தனை.

#10
தாதையாம் என்னுடைய தாயாம் என் சற்குருவாம்
மேதையாம் இன்ப விளைவுமாம் ஓது
குணவாளன் தில்லை அருள் கூத்தன் உமையாள்
மணவாளன் பாத_மலர்.

#11
திருவாம் என் தெய்வமாம் தெள் அமுத ஞானக்
குருவாம் எனைக் காக்கும் கோவாம் பரு வரையின்
தேப் பிள்ளையாம் எம் சிவகாமவல்லி மகிழ்
மாப்பிள்ளை பாத_மலர்.

#12
என் அறிவாம் என் அறிவின் இன்பமாம் என் அறிவின்
தன் அறிவாம் உண்மைத் தனி நிலையாம் மன்னு கொடிச்
சேலை இட்டான் வாழச் சிவகாமசுந்தரியை
மாலையிட்டான் பாத_மலர்.

@44. பரசிவ நிலை

#1
அருள் சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருள் சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருள் பாடு நீக்கி ஒளி ஈந்து அருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருள் பாடல் உவந்து எனையும் சிவம் ஆக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#2
எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் என் உயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்ல தெய்வம் நடுவான தெய்வம் நல் சபையில் ஆடுகின்ற நடராசத் தெய்வம்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் தெய்வம் காரணமாம் தெய்வம் அருள் பூரணமாம் தெய்வம்
செல்லாத நிலைகள் எலாம் செல்லுகின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#3
தாய் ஆகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் மலர்_அடி என் சென்னி மிசை வைத்த பெரும் தெய்வம்
காயாது கனி ஆகிக் கலந்து இனிக்கும் தெய்வம் கருணை நிதித் தெய்வம் முற்றும் காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம் சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#4
என் இதய_கமலத்தே இருந்து அருளும் தெய்வம் என் இரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன் அடி என் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம் இடர் செய்யாத தெய்வம்
அன்னியம் அல்லாத தெய்வம் அறிவான தெய்வம் அ அறிவுக்கு அறிவாம் என் அன்பான தெய்வம்
செல் நிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#5
எண்ணியவா விளையாடு என்று எனை அளித்த தெய்வம் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு ஈந்த தெய்வம்
நண்ணிய பொன்_அம்பலத்தே நடம் புரியும் தெய்வம் நான் ஆகித் தான் ஆகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணிய என் பூசையிலே பலித்த பெரும் தெய்வம் பாடுகின்ற மறை முடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன் என்று எனை உலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#6
இச்சை எலாம் எனக்கு அளித்தே எனைக் கலந்த தெய்வம் இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச் சமயத் தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம் எல்லாம் செய் வல்ல தெய்வம் எனது குல_தெய்வம்
பிச்சு அகற்றும் பெரும் தெய்வம் சிவகாமி எனும் ஓர் பெண் கொண்ட தெய்வம் எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சை மலர் என விளங்கும் திரு_மேனித் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#7
சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம் சன்மார்க்க சபையில் எனைத் தனிக்க வைத்த தெய்வம்
மா காதலால் எனக்கு வாய்த்த ஒரு தெய்வம் மா தவர் ஆதியர் எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலை-அதன் மேல் எனை ஏற்றும் தெய்வம் எண்ணு-தொறும் என் உளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகம் எலாம் செயப் பணித்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#8
தூண்டாத மணி_விளக்காய்த் துலங்குகின்ற தெய்வம் துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெரும் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம் மாணிக்கவல்லியை ஓர் வலத்தில் வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருள் சோதித் தெய்வம் ஆகம வேதாதி எலாம் அறிவ அரிதாம் தெய்வம்
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#9
எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாம் தெய்வம் அதற்கு அப்பாலாம் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாம் தெய்வம்
ஒவ்வு அகத்தே ஒளி ஆகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம் மிக நன்றான தெய்வம்
செவ் வகைத்து என்று அறிஞர் எலாம் சேர் பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

#10
சத்தியமாம் தனித் தெய்வம் தடை அறியாத் தெய்வம் சத்திகள் எல்லாம் விளங்கத் தான் ஓங்கும் தெய்வம்
நித்திய தன்மயம் ஆகி நின்ற தெய்வம் எல்லா நிலைகளும் தன் அருள் வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்தி வலைப்படுகின்ற தெய்வம் எனக்கு எல்லாப் பரிசும் அளித்து அழியாத பதத்தில் வைத்த தெய்வம்
சித்தி எலாம் தரு தெய்வம் சித்தாந்தத் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

@45. பேராநந்தப் பெரு நிலை

#1
அணி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் ஆனந்த போகமே அமுதே
மணி வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே மன்னும் என் ஆர்_உயிர்த் துணையே
துணிவுறு சித்தாந்தப் பெரும் பொருளே தூய வேதாந்தத்தின் பயனே
பணிவுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#2
திரு வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் தெய்வமே மெய்ப்பொருள் சிவமே
உரு வளர் ஒளியே ஒளியினுள் ஒளியே ஓங்கும் என் உயிர்ப் பெரும் துணையே
ஒரு தனித் தலைமை அருள் வெளி நடுவே உவந்து அரசு அளிக்கின்ற அரசே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#3
துதி வளர் திரு_சிற்றம்பலத்து ஆடும் சோதியுள் சோதியே எனது
மதி வளர் மருந்தே மந்திர மணியே மன்னிய பெரும் குண_மலையே
கதி தரு துரியத் தனி வெளி நடுவே கலந்து அரசாள்கின்ற களிப்பே
பதியுறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#4
சீர் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் செல்வமே என் பெரும் சிறப்பே
நீர் வளர் நெருப்பே நெருப்பினுள் ஒளியே நிறை ஒளி வழங்கும் ஓர் வெளியே
ஏர்தரு கலாந்தம் ஆதி ஆறு அந்தத்து இருந்து அரசு அளிக்கின்ற பதியே
பாருறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#5
உரை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒள்ளிய தெள்ளிய ஒளியே
வரை வளர் மருந்தே மவுன மந்திரமே மந்திரத்தால் பெற்ற மணியே
நிரைதரு சுத்த நிலைக்கு மேல் நிலையில் நிறைந்து அரசாள்கின்ற நிதியே
பரை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#6
மேல் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மெய் அறிவானந்த விளக்கே
கால் வளர் கனலே கனல் வளர் கதிரே கதிர் நடு வளர்கின்ற கலையே
ஆலுறும் உபசாந்தப் பர வெளிக்கு அப்பால் அரசாள்கின்ற அரசே
பால் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#7
இசை வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் இன்பமே என் உடை அன்பே
திசை வளர் அண்ட கோடிகள் அனைத்தும் திகழுறத் திகழ்கின்ற சிவமே
மிசை உறு மௌன வெளி கடந்து அதன் மேல் வெளி அரசாள்கின்ற பதியே
பசை உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#8
அருள் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் அரும் பெரும் சோதியே எனது
பொருள் வளர் அறிவுக்கு அறிவு தந்து என்னைப் புறம் விடாது ஆண்ட மெய்ப்பொருளே
மருவும் ஓர் நாத வெளிக்கு மேல் வெளியில் மகிழ்ந்து அரசாள்கின்ற வாழ்வே
பருவரல் நீக்கி இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#9
வான் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் மா பெரும் கருணை எம் பதியே
ஊன் வளர் உயிர்கட்கு உயிர்-அதாய் எல்லா உலகமும் நிறைந்த பேர்_ஒளியே
மால் முதல் மூர்த்திமான் நிலைக்கு அப்பால் வயங்கும் ஓர் வெளி நடு மணியே
பான்மையுற்று உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

#10
தலம் வளர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் தனித்த மெய்ப்பொருள் பெரும் சிவமே
நலம் வளர் கருணை நாட்டம் வைத்து எனையே நண்புகொண்டு அருளிய நண்பே
வலம் உறு நிலைகள் யாவையும் கடந்து வயங்கிய தனி நிலை வாழ்வே
பலம் உறும் உளத்தே இனித்திட எனக்கே பழுத்த பேர்_ஆனந்தப் பழமே.

@46. திருவடி நிலை

#1
உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள் உலப்பு இலா அண்டத்தின் பகுதி
அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த அவை எலாம் புறத்து இறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று இருந்து என இருந்தன மிடைந்தே
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து என்பர் வான் திரு_அடி நிலையே.

#2
தடையுறாப் பிரமன் விண்டு உருத்திரன் மாயேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள்
இடை உறாத் திரு_சிற்றம்பலத்து ஆடும் இடது கால் கடை விரல் நகத்தின்
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திரு_அடி நிலையே.

#3
அடர் மலத் தடையால் தடையுறும் அயன் மால் அரன் மயேச்சுரன் சதாசிவன் வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம் பரை பரம்பரன் எனும் இவர்கள்
சுடர் மணிப் பொதுவில் திரு_நடம் புரியும் துணை அடிப் பாதுகைப் புறத்தே
இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே ஏத்துவன் திரு_வடி நிலையே.

#4
இகத்து உழல் பகுதித் தேவர் இந்திரன் மால் பிரமன் ஈசானனே முதலாம்
மகத்து உழல் சமய வானவர் மன்றின் மலர்_அடிப் பாதுகைப் புறத்தும்
புகத் தரம் பொருந்தா மலத்து உறு சிறிய புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல்
செகத் தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில் தெரிந்தனன் திரு_அடி நிலையே.

#5
பொன் வணப் பொருப்பு ஒன்று அது சகுணாந்தம் போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல்
மன் வணச் சோதித் தம்பம் ஒன்று அது மா வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல்
என் வணச் சோதிக் கொடி பரநாதாந்தத்திலே இலங்கியது அதன் மேல்
தன் வணம் மணக்கும் ஒளி மலராகத் தழுவினன் திரு_அடி நிலையே.

#6
மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான் மற்று அவற்று உள் புறம் கீழ் மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம் என்று இவற்றின் அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும் கருது உரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று நவின்றனர் திரு_அடி நிலையே.

#7
தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதித் தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே மன்னி எங்கணும் இரு பாற்குத்
தகையுறு முதலா அணங்கு அடையாகத் தயங்க மற்று அதுஅது கருவிச்
சிகையுற உபயம் என மன்றில் ஆடும் என்பரால் திரு_அடி நிலையே.

#8
மன்ற ஓங்கிய மாமாயையின் பேத வகை தொகை விரி என மலிந்த
ஒன்றின் ஒன்று அனந்த கோடிகோடிகளா உற்றன மற்றவை எல்லாம்
நின்ற அ நிலையின் உருச் சுவை விளங்க நின்ற சத்திகளொடு சத்தர்
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில் என்பரால் திரு_அடி நிலையே.

#9
பேசும் ஓங்காரம் ஈறு-அதாப் பேசாப் பெரிய ஓங்காரமே முதலா
ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம் என்றவற்று அவண்அவண் இசைந்த
மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து மன் அதிகாரம் ஐந்து இயற்றத்
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும் என்பரால் திரு_வடி நிலையே.

#10
பரை தரு சுத்த நிலை முதல் அதீதப் பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி என உலகு உணர்ந்த
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர் திரு_உருக் கொண்டு பொன் பொதுவில்
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற என்பரால் திரு_அடி நிலையே.

@47. காட்சிக் களிப்பு

#1
அறிந்தானை அறிவறிவுக்கு அறிவானானை அருள்_பெரும்_சோதியினானை அடியேன் அன்பில்
செறிந்தானை எல்லாம் செய் வல்ல சித்தாய்ச் சிறந்தானைச் சிறுநெறியில் சென்றார்-தம்மைப்
பிறிந்தானை என் உளத்தில் கலந்துகொண்ட பிரியம் உள பெருமானைப் பிறவி-தன்னை
எறிந்தானை எனை எறியாது எடுத்து ஆண்டானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#2
பாலானைத் தேனானைப் பழத்தினானைப் பலன் உறு செங்கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலை சாகாத் தலையினானைக் கால் என்றும் தலை என்றும் கருதற்கு எய்தா
மேலானை மேல் நிலை மேல் அமுதானானை மேன்மேலும் எனது உளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என் பாடல் ஏற்றுக்கொண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3
உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என் பாட்டைக் குறிக்கொண்டானைக் கொல்லாமை விரதம் எனக் கொண்டார்-தம்மைத்
தள்ளானைக் கொலை புலையைத் தள்ளாதாரைத் தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#4
உறவானை என் உயிர்க்குள் உயிரானானை உறு பிழைகள் செயினும் அவை உன்னி என்னை
மறவானை அறவாழி வழங்கினானை வஞ்சகர்க்குத் திரு_கோயில் வழிக்க பாடம்
திறவானை என்னளவில் திறந்து காட்டிச் சிற்சபையும் பொன்_சபையும் சேர்வித்தானை
இறவானைப் பிறவானை இயற்கையானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#5
அகத்தானைப் புறத்தானை அணுவானானை அணுவினுக்குள் அணுவானை அதனுள்ளானை
மகத்தானை மகத்தினும் ஓர் மகத்தானானை மா மகத்தாய் இருந்தானை வயங்கா நின்ற
சகத்தானை அண்டம் எலாம் தானானானைத் தனி அருளாம் பெரும் கருணைத் தாயானானை
இகத்தானைப் பரத்தானைப் பொதுவில் ஆடும் எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#6
செய்யானைக் கரியானைப் பசுமையானைத் திகழ்ந்திடு பொன்மையினானை வெண்மையானை
மெய்யானைப் பொய்யானை மெய் பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்புவார்க்குக்
கையானை என்னை எடுத்து அணைத்துக்கொண்ட கையானை என்னை என்றும் கையாதானை
எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#7
மருந்தானை மணியானை வழுத்தாநின்ற மந்திரங்கள்_ஆனானை வான_நாட்டு
விருந்தானை உறவானை நண்பினானை மேலானைக் கீழானை மேல் கீழ் என்னப்
பொருந்தானை என் உயிரில் பொருந்தினானைப் பொன்னானைப் பொருளானைப் பொதுவாய் எங்கும்
இருந்தானை இருப்பானை இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#8
ஆன்றானை அறிவானை அழிவு_இலானை அருள்_பெரும்_ஜோதியினானை அலர்ந்த ஜோதி
மூன்றானை இரண்டானை ஒன்றானானை முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில்
தோன்றானைத் தூயர் உளே தோன்றினானைச் சுத்த சிவ சன்மார்க்கம் துலங்க என்னை
ஈன்றானை எல்லாமாய் அல்லாதானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#9
தோய்ந்தானை என் உளத்தே என்-பால் அன்பால் சூழ்ந்தானை யான் தொடுத்த சொல் பூ மாலை
வேய்ந்தானை என்னுடைய வினைதீர்த்தானை வேதாந்த முடி முடி மேல் விளங்கினானை
வாய்ந்தானை எய்ப்பிடத்தே வைப்பானானை மணி மன்றில் நடிப்பானை வரங்கள் எல்லாம்
ஈய்ந்தானை ஆய்ந்தவர்-தம் இதயத்தானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#10
நன்றானை மன்றகத்தே நடிக்கின்றானை நாடாமை நாடல் இவை நடுவே ஓங்கி
நின்றானைப் பொன்றாத நிலையினானை நிலை அறிந்து நில்லாதார் நெஞ்சு இலேசம்
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல்
என்றானை என்றும் உள இயற்கையானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

@48. கண்கொளாக் காட்சி

#1
அடுத்தானை அடியேனை அஞ்சேல் என்று இங்கு ஆண்டானைச் சிறு நெறிகள் அடையாது என்னைத்
தடுத்தானைப் பெரு நெறிக்குத் தடை தீர்த்தானைத் தன் அருளும் தன் பொருளும் தானே என்-பால்
கொடுத்தானைக் குற்றம் எலாம் குணமாக் கொள்ளும் குணத்தானைச் சமய மதக் குழி-நின்று என்னை
எடுத்தானை எல்லாம் செய் வல்ல சித்தே ஈந்தானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#2
விரித்தானைக் கருவி எலாம் விரிய வேதம் விதித்தானை மெய் நெறியை மெய்யே எற்குத்
தெரித்தானை நடம் பொதுவில் செய்கின்றானைச் சிறியேனுக்கு அருள் ஒளியால் சிறந்த பட்டம்
தரித்தானைத் தானே நான் ஆகி என்றும் தழைத்தானை எனைத் தடுத்த தடைகள் எல்லாம்
எரித்தானை என் உயிருக்கு இன்பானானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#3
நட்டானை நட்ட எனை நயந்து கொண்டே நம் மகன் நீ அஞ்சல் என நவின்று என் சென்னி
தொட்டானை எட்டிரண்டும் சொல்லினானைத் துன்பம் எலாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள் உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்துகொள்ள
எட்டானை என்னளவில் எட்டினானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#4
சோற்றானைச் சோற்றில் உறும் சுகத்தினானைத் துளக்கம் இலாப் பாரானை நீரானானைக்
காற்றானை வெளியானைக் கனலானானைக் கருணை நெடும் கடலானைக் களங்கர் காணத்
தோற்றானை நான் காணத் தோற்றினானைச் சொல் அறியேன் சொல்லிய புன் சொல்லை எல்லாம்
ஏற்றானை என் உளத்தில் எய்தினானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#5
சேர்த்தானை என்றனை-தன் அன்பரோடு செறியாத மனம் செறியச் செம்பொன்_தாளில்
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம்
பார்த்தானைப் பாராரைப் பாராதானைப் பார்ப்பு அறவே பார்த்திருக்கப் பண்ணி என்னை
ஈர்த்தானை ஐந்தொழில் நீ இயற்று_என்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#6
முளையானைச் சுத்த சிவ வெளியில் தானே முளைத்தானை மூவாத முதலானானைக்
களையானைக் களங்கம் எலாம் களைவித்து என்னைக் காத்தானை என் பிழையைக் கருதிக் கோபம்
விளையானைச் சிவபோகம்_விளைவித்தானை வேண்டாமை வேண்டல் இவை மேவி என்றும்
இளையானை மூத்தானை மூப்பு_இலானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#7
புயலானை மழையானை அதிர்ப்பினானைப் போற்றிய மின்_ஒளியானைப் புனித ஞானச்
செயலானைச் செயல் எல்லாம் திகழ்வித்தானைத் திரு_சிற்றம்பலத்தானைத் தெளியார் உள்ளே
அயலானை உறவானை அன்பு_உளானை அறிந்தாரை அறிந்தானை அறிவால் அன்றி
இயலானை எழிலானைப் பொழிலானானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#8
தாயானைத் தந்தை_எனக்கு_ஆயினானைச் சற்குருவும்_ஆனானைத் தமியேன் உள்ளே
மேயானைக் கண் காண விளங்கினானை மெய்ம்மை எனக்கு அளித்தானை வேதம் சொன்ன
வாயானை வஞ்சம் இலா மனத்தினானை வரம் கொடுக்க வல்லானை மணி மன்று அன்றி
ஏயானைத் துரிய நடு_இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#9
தழைத்தானைத் தன்னை ஒப்பார்_இல்லாதானைத் தானே தான்_ஆனானைத் தமியனேனைக்
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானைக் குறை கொண்டு நின்றேனைக் குறித்து நோக்கி
அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால்
இழைத்தானை என் இதயத்து இருக்கின்றானை எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

#10
உடையானை அருள் சோதி உருவினானை ஓவானை மூவானை உலவா இன்பக்
கொடையானை என் குறை தீர்த்து என்னை ஆண்டுகொண்டானைக் கொல்லாமை குறித்திடாரை
அடையானைத் திரு_சிற்றம்பலத்தினானை அடியேனுக்கு அருள் அமுதம் அளிக்கவே பின்
னிடையானை என் ஆசை எல்லாம் தந்த எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே.

@49. இறை திருக் காட்சி

#1
அருள் எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அரசை
மருள் எலாம் தவிர்த்து வாழ்வித்த மருந்தை வள்ளலை மாணிக்க மணியைப்
பொருள் எலாம் கொடுத்து என் புந்தியில் கலந்த புண்ணிய நிதியை மெய்ப்பொருளைத்
தெருள் எலாம் வல்ல சித்தை மெய்ஞ்ஞான தீபத்தைக் கண்டுகொண்டேனே.

#2
துன்பு எலாம் தவிர்த்த துணையை என் உள்ளத் துரிசு எலாம் தொலைத்த மெய்ச் சுகத்தை
என் பொலா மணியை என் சிகாமணியை என் இரு கண்ணுள் மா மணியை
அன்பு எலாம் அளித்த அம்பலத்து அமுதை அருள்_பெரும்_ஜோதியை அடியேன்
என்பு எலாம் உருக்கி இன்பு எலாம் அளித்த எந்தையைக் கண்டுகொண்டேனே.

#3
சிதத்திலே ஊறித் தெளிந்த தெள் அமுதைச் சித்து எலாம் வல்ல மெய்ச் சிவத்தைப்
பதத்திலே பழுத்த தனிப் பெரும் பழத்தைப் பரம்பர வாழ்வை எம் பதியை
மதத்திலே மயங்கா மதியிலே விளைந்த மருந்தை மா மந்திரம்-தன்னை
இதத்திலே என்னை இருத்தி ஆட்கொண்ட இறைவனைக் கண்டுகொண்டேனே.

#4
உணர்ந்தவர் உளம் போன்று என் உளத்து அமர்ந்த ஒரு பெரும் பதியை என் உவப்பைப்
புணர்ந்து எனைக் கலந்த போகத்தை எனது பொருளை என் புண்ணியப் பயனைக்
கொணர்ந்து ஒரு பொருள் என் கரத்திலே கொடுத்த குருவை எண்_குணப் பெருங் குன்றை
மணந்த செங்குவளை மலர் எனக்கு அளித்த வள்ளலைக் கண்டுகொண்டேனே.

#5
புல்லிய நெறி நீத்து எனை எடுத்து ஆண்ட பொன்_சபை அப்பனை வேதம்
சொல்லியபடி என் சொல் எலாம் கொண்ட ஜோதியைச் சோதியாது என்னை
மல்லிகை மாலை அணிந்து உளே கலந்து மன்னிய பதியை என் வாழ்வை
எல்லியும் இரவும் என்னை விட்டு அகலா இறைவனைக் கண்டுகொண்டேனே.

#6
பண்ணிய தவமும் பலமும் மெய்ப் பலம் செய் பதியுமாம் ஒரு பசுபதியை
நண்ணி என் உளத்தைத் தன் உளம் ஆக்கி நல்கிய கருணை_நாயகனை
எண்ணியபடியே எனக்கு அருள் புரிந்த இறைவனை மறை முடி இலங்கும்
தண்ணிய விளக்கைத் தன் நிகர் இல்லாத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

#7
பெண்மையை வயங்கும் ஆண்மையை அனைத்தும் பிறங்கிய பொதுமையைப் பெரிய
தண்மையை எல்லாம்_வல்ல ஓர் சித்த சாமியைத் தயாநிதி-தன்னை
வண்மையை அழியா வரத்தினை ஞான வாழ்வை என் மதியிலே விளங்கும்
உண்மையை என்றன் உயிரை என் உயிருள் ஒருவனைக் கண்டுகொண்டேனே.

#8
ஆதியை ஆதி அந்தம் ஈது என உள் அறிவித்த அறிவை என் அன்பைச்
சோதியை எனது துணையை என் சுகத்தைச் சுத்த சன்மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த நிலையிலே நிறைந்த மா நிதியை
ஓதியை ஓதாது உணர்த்திய வெளியை ஒளி-தனைக் கண்டுகொண்டேனே.

#9
என் செயல் அனைத்தும் தன் செயல் ஆக்கி என்னை வாழ்விக்கின்ற பதியைப்
பொன் செயல் வகையை உணர்த்தி என் உளத்தே பொருந்திய மருந்தை என் பொருளை
வன் செயல் அகற்றி உலகு எலாம் விளங்கவைத்த சன்மார்க்க சற்குருவைக்
கொன் செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில் கண்டுகொண்டேனே.

#10
புல் நிகர்_இல்லேன் பொருட்டு இருட்டு இரவில் போந்து அருள் அளித்த சற்குருவைக்
கல் நிகர் மனத்தைக் கரைத்து என் உள் கலந்த கருணை அம் கடவுளைத் தனது
சொல் நிகர் என என் சொல் எலாம் கொண்டே தோளுறப் புனைந்த மெய்த் துணையைத்
தன் நிகர் இல்லாத் தலைவனை எனது தந்தையைக் கண்டுகொண்டேனே.

#11
ஏங்கலை மகனே தூங்கலை என வந்து எடுத்து எனை அணைத்த என் தாயை
ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடைய என் ஒரு பெரும் பதியைப்
பாங்கனில் என்னைப் பரிந்துகொண்டு எல்லாப் பரிசும் இங்கு அளித்த தற்பரத்தைத்
தாங்கும் ஓர் நீதித் தனிப் பெருங் கருணைத் தலைவனைக் கண்டுகொண்டேனே.

#12
துன்புறேல் மகனே தூங்கலை என என் சோர்வு எலாம் தவிர்த்த நல் தாயை
அன்பு உளே கலந்த தந்தையை என்றன் ஆவியைப் பாவியேன் உளத்தை
இன்பிலே நிறைவித்து அருள் உரு ஆக்கி இனிது அமர்ந்து அருளிய இறையை
வன்பு இலாக் கருணை மா நிதி எனும் என் வள்ளலைக் கண்டுகொண்டேனே.

#13
நனவினும் எனது கனவினும் எனக்கே நண்ணிய தண்ணிய அமுதை
மனன் உறு மயக்கம் தவிர்த்து அருள் சோதி வழங்கிய பெரும் தயாநிதியைச்
சினம் முதல் ஆறும் தீர்த்து உளே அமர்ந்த சிவ குரு பதியை என் சிறப்பை
உனல் அரும் பெரிய துரிய மேல் வெளியில் ஒளி-தனைக் கண்டுகொண்டேனே.

#14
கரும்பில் இன் சாற்றைக் கனிந்த முக்கனியைக் கருது கோல்_தேன் நறும் சுவையை
அரும்_பெறல் அமுதை அறிவை என் அன்பை ஆவியை ஆவியுள் கலந்த
பெரும் தனிப் பதியைப் பெரும் சுகக் களிப்பைப் பேசுதற்கு அரும் பெரும் பேற்றை
விரும்பி என் உளத்தை இடம்கொண்டு விளங்கும் விளக்கினைக் கண்டுகொண்டேனே.

#15
களம் கொளும் கடையேன் களங்கு எலாம் தவிர்த்துக் களிப்பு எலாம் அளித்த சர்க்கரையை
உளம்கொளும் தேனை உணவு உணத் தெவிட்டாது உள்ளகத்து ஊறும் இன் அமுதை
வளம் கொளும் பெரிய வாழ்வை என் கண்ணுள் மணியை என் வாழ்க்கை மா நிதியைக்
குளம் கொளும் ஒளியை ஒளிக்கு உளே விளங்கும் குருவை யான் கண்டுகொண்டேனே.

#16
சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச் சிதம்பர நடம் புரி சிவத்தைப்
பதம் தரு பதத்தைப் பரம்பர பதத்தைப் பதி சிவ பதத்தைத் தற்பதத்தை
இதம் தரும் உண்மைப் பெரும் தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதம் தரும் சச்சிதானந்த நிறைவைச் சாமியைக் கண்டுகொண்டேனே.

#17
ஆரண முடி மேல் அமர் பிரமத்தை ஆகம முடி அமர் பரத்தைக்
காரண வரத்தைக் காரிய தரத்தைக் காரிய_காரணக் கருவைத்
தாரண நிலையைத் தத்துவ பதியைச் சத்திய நித்திய தலத்தைப்
பூரண சுகத்தைப் பூரண சிவமாம் பொருளினைக் கண்டுகொண்டேனே.

#18
சுத்த வேதாந்த பிரம ராசியத்தைச் சுத்த சித்தாந்த ராசியத்தைத்
தத்துவாதீதத் தனிப் பெரும் பொருளைச் சமரச சத்தியப் பொருளைச்
சித்து எலாம் வல்ல சித்தை என் அறிவில் தெளிந்த பேர்_ஆனந்தத் தெளிவை
வித்த மா வெளியைச் சுத்த சிற்சபையின் மெய்மையைக் கண்டுகொண்டேனே.

#19
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான சபை நடம் புரிகின்ற தனியைத்
தமை அறிந்தவர் உள் சார்ந்த மெய்ச் சார்வைச் சத்துவ நித்த சற்குருவை
அமைய என் மனத்தைத் திருத்தி நல் அருள் ஆர்_அமுது அளித்து அமர்ந்த அற்புதத்தை
நிமல நிற்குணத்தைச் சிற்குணாகார நீதியைக் கண்டுகொண்டேனே.

#20
அளவைகள் அனைத்தும் கடந்துநின்று ஓங்கும் அருள்_பெரும்_சோதியை உலகக்
களவை விட்டவர்-தம் கருத்து உளே விளங்கும் காட்சியைக் கருணை அம் கடலை
உளவை என்றனக்கே உரைத்து எலாம் வல்ல ஒளியையும் உதவிய ஒளியைக்
குள-வயின் நிறைந்த குரு சிவ பதியைக் கோயிலில் கண்டுகொண்டேனே.

#21
சார் கலாந்தாதிச் சடாந்தமும் கலந்த சமரச சத்திய வெளியைச்
சோர்வு எலாம் தவிர்த்து என் அறிவினுக்கு அறிவாய்த் துலங்கிய ஜோதியைச் சோதிப்
பார் பெறாப் பதத்தைப் பதம் எலாம் கடந்த பரம சன்மார்க்க மெய்ப் பதியைச்
சேர் குணாந்தத்தில் சிறந்ததோர் தலைமைத் தெய்வத்தைக் கண்டுகொண்டேனே.

#22
அடி நடு முடி ஓர் அணுத்துணையேனும் அறிந்திடப்படாத மெய் அறிவைப்
படி முதல் அண்டப் பரப்பு எலாம் கடந்த பதியிலே விளங்கும் மெய்ப் பதியைக்
கடிய என் மனனாம் கல்லையும் கனியில் கடைக்கணித்து அருளிய கருணைக்
கொடி வளர் இடத்துப் பெரும் தயாநிதியைக் கோயிலில் கண்டுகொண்டேனே.

#23
பயமும் வன் கவலை இடர் முதல் அனைத்தும் பற்று அறத் தவிர்த்து அருள் பரிசும்
நயமும் நல் திருவும் உருவும் ஈங்கு எனக்கு நல்கிய நண்பை நல் நாத
இயம் உற எனது குளம் நடு நடம் செய் எந்தையை என் உயிர்க்குயிரைப்
புயல் நடு விளங்கும் புண்ணிய ஒளியைப் பொற்பு உறக் கண்டுகொண்டேனே.

#24
கலை நிறை மதியைக் கனலைச் செங்கதிரைக் ககனத்தைக் காற்றினை அமுதை
நிலை நிறை அடியை அடி முடி தோற்றா நின்மல நிற்குண நிறைவை
மலைவு அறும் உளத்தே வயங்கும் மெய் வாழ்வை வரவு_போக்கு அற்ற சின்மயத்தை
அலை அறு கருணைத் தனிப் பெருங் கடலை அன்பினில் கண்டுகொண்டேனே.

#25
மும்மையை எல்லாம் உடைய பேர்_அரசை முழுது ஒருங்கு உணர்த்திய உணர்வை
வெம்மையைத் தவிர்த்து இங்கு எனக்கு அருள் அமுதம் வியப்புற அளித்த மெய் விளைவைச்
செம்மையை எல்லாச் சித்தியும் என்-பால் சேர்ந்திடப் புரி அருள் திறத்தை
அம்மையைக் கருணை அப்பனை என் பேர்_அன்பனைக் கண்டுகொண்டேனே.

#26
கருத்தனை எனது கண்_அனையவனைக் கருணை ஆர்_அமுது எனக்கு அளித்த
ஒருத்தனை என்னை உடைய நாயகனை உண்மை வேதாகம முடியின்
அருத்தனை வரனை அபயனைத் திரு_சிற்றம்பலத்து அருள் நடம் புரியும்
நிருத்தனை எனது நேயனை ஞான நிலையனைக் கண்டுகொண்டேனே.

#27
வித்து எலாம் அளித்த விமலனை எல்லா விளைவையும் விளைக்க வல்லவனை
அத்து எலாம் காட்டும் அரும்_பெறல் மணியை ஆனந்தக் கூத்தனை அரசைச்
சத்து எலாம் ஆன சயம்புவை ஞான சபைத் தனித் தலைவனைத் தவனைச்
சித்து எலாம் வல்ல சித்தனை ஒன்றாம் தெய்வத்தைக் கண்டுகொண்டேனே.

#28
உத்தர ஞான சித்திமாபுரத்தின் ஓங்கிய ஒரு பெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை உண்மையை ஒரு தனி உணர்வை
உத்தர ஞான நடம் புரிகின்ற ஒருவனை உலகு எலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் ஓதியைக் கண்டுகொண்டேனே.

#29
புலை கொலை தவிர்த்த நெறியிலே என்னைப் புணர்த்திய புனிதனை எல்லா
நிலைகளும் காட்டி அருள் பெரு நிலையில் நிறுத்திய நிமலனை எனக்கு
மலைவு அறத் தெளிந்த அமுது அளித்து அழியா வாழ்க்கையில் வாழவைத்தவனைத்
தலைவனை ஈன்ற தாயை என் உரிமைத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

#30
பனி இடர் பயம் தீர்த்து எனக்கு அமுது அளித்த பரமனை என் உளே பழுத்த
கனி_அனையவனை அருள்_பெரும்_சோதிக் கடவுளைக் கண்ணினுள் மணியைப்
புனிதனை எல்லாம்_வல்ல ஓர் ஞானப் பொருள் எனக்கு அளித்த மெய்ப்பொருளைத்
தனியனை ஈன்ற தாயை என் உரிமைத் தந்தையைக் கண்டுகொண்டேனே.

@50. உளம் புகுந்த திறம் வியத்தல்

#1
வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே திரு_அடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என்
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே.

#2
படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்திப் பல் மணிகள் ஒளி விளங்கப் பதித்த சிங்காதனத்தே
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும் அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும் மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்தக்
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே.

#3
உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும் ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய்
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும் வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின் வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

#4
தடை அறியாத் தகையினதாய்த் தன் நிகர் இல்லதுவாய்த் தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடை அறியாத் தனி முதலாய் விளங்கு வெளி நடுவே விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த
நடை அறியாத் திரு_அடிகள் சிவந்திட வந்து எனது நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய்
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

#5
இறையளவும் துரிசு இலதாய்த் தூய்மையதாய் நிறைவாய் இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும் முதல் இடமாய்
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய் மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன் நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெறச் செய்தனையே
குறைவு_இலது இப் பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

#6
உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய் உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய்
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே சிறியேன்-கண் அடைந்து அருளித் திரு அனைத்தும் கொடுத்தாய்
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

#7
மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய் வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய்
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில் மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய் இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞானக்
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

#8
சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும் செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய்ப் பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே
குரங்கு மனச் சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

#9
பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம் பான்மை ஒன்றே வடிவு ஆகிப் பழுத்த பெரியவரும்
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில் ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள்
பெற்று அறியப் பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.

#10
கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல் காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகிப் பழுத்த உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள் மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.

@51. வரம்பில் வியப்பு

#1
பொன் புனை புயனும் அயனும் மற்றவரும் புகல அரும் பெரிய ஓர் நிலையில்
இன்பு உரு ஆகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதி ஐந்தொழிலும்
தன் பொதுச் சமுகத்து ஐவர்கள் இயற்றத் தனி அரசு இயற்றும் ஓர் தலைவன்
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே.

#2
மன்பதை வகுக்கும் பிரமர் நாரணர்கள் மன் உருத்திரர்களே முதலா
ஒன்பது கோடித் தலைவர்கள் ஆங்காங்கு உறு பெரும் தொழில் பல இயற்றி
இன்புறச் சிறிதே கடைக்கணித்து அருளி இலங்கும் ஓர் இறைவன் இன்று அடியேன்
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே.

#3
தன் நிகர் இல்லாத் தலைவ என்று அரற்றித் தனித்தனி மறைகள் ஆகமங்கள்
உன்னி நின்று ஓடி உணர்ந்துணர்ந்து உணரா ஒரு தனிப் பெரும் பதி உவந்தே
புல் நிகர் இல்லாப் புலையனேன் பிழைகள் பொறுத்து அருள் பூரண வடிவாய்
என் உளம் புகுந்தே நிறைந்தனன் அந்தோ எந்தையைத் தடுப்பவர் யாரே.

#4
பால் வகை ஆணோ பெண்-கொலோ இருமை_பாலதோ பால் உறா அதுவோ
ஏல் வகை ஒன்றோ இரண்டதோ அனாதி இயற்கையோ ஆதியின் இயல்போ
மேல் வகை யாதோ என மறை முடிகள் விளம்பிட விளங்கும் ஓர் தலைவன்
மால் வகை மனத்தேன் உளக் குடில் புகுந்தான் வள்ளலைத் தடுப்பவர் யாரே.

#5
வரம் பெறும் ஆன்ம உணர்ச்சியும் செல்லா வரு பர உணர்ச்சியும் மாட்டாப்
பரம்பர உணர்ச்சி-தானும் நின்று அறியாப் பராபர உணர்ச்சியும் பற்றா
உரம் பெற உணர்வார் யார் எனப் பெரியர் உரைத்திட ஓங்கும் ஓர் தலைவன்
கரம் பெறு கனி போல் என் உளம் புகுந்தான் கடவுளைத் தடுப்பவர் யாரே.

#6
படைத்திடல் முதல் ஐந்தொழில் புரிந்து இலங்கும் பரம்பர ஒளி எலாம் அணுவில்
கிடைத்திடக் கீழ் மேல் நடு எனக் காட்டாக் கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம்
அடைத்த காரணமாய்க் காரணம் கடந்த அருள்_பெரும்_ஜோதியாம் ஒருவன்
கடைத் தனிச் சிறியேன் உளம் புகுந்து அமர்ந்தான் கடவுளைத் தடுப்பவர் யாரே.

#7
அளவு எலாம் கடந்த பெரும் தலை அண்ட அடுக்கு எலாம் அம்ம ஓர் அணுவின்
பிளவில் ஓர் கோடிக் கூற்றில் ஒன்று ஆகப் பேச நின்று ஓங்கிய பெரியோன்
களவு எலாம் தவிர்த்து என் கருத்து எலாம் நிரப்பிக் கருணை ஆர்_அமுது-அது அளித்து உளமாம்
வளவிலே புகுந்து வளர்கின்றான் அந்தோ வள்ளலைத் தடுப்பவர் யாரே.

#8
உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் உள உயிர் முழுவதும் ஒருங்கே
கொள்ளைகொண்டிடினும் அணுத்துணை எனினும் குறைபடாப் பெரும் கொடைத் தலைவன்
கள்ள நெஞ்சகத்தேன் பிழை எலாம் பொறுத்துக் கருத்து எலாம் இனிது தந்து அருளித்
தள்ள அரும் திறத்து என் உள்ளகம் புகுந்தான் தந்தையைத் தடுப்பவர் யாரே.

#9
அறிந்தன அறிந்தாங்கு அறிந்தறிந்து அறியாது ஐயகோ ஐயகோ அறிவின்
மறிந்தனம் அயர்ந்தேம் என மறை அனந்தம் வாய் குழைந்து உரைத்துரைத்து உரையும்
முறிந்திட வாளா இருந்த என்று அறிஞர் மொழியும் ஓர் தனிப் பெரும் தலைவன்
செறிந்து எனது உளத்தில் சேர்ந்தனன் அவன்றன் திருவுளம் தடுப்பவர் யாரே.

#10
கரு முதல் கருவாய்க் கருவினுள் கருவாய்க் கரு எலாம் காட்டும் ஓர் கருவாய்க்
குரு முதல் குருவாய்க் குரு எலாம் கிடைத்த கொள்கையாய்க் கொள்கையோடு அளவா
அரு முதல் அருவாய் அல்லவாய் அப்பால் அருள்_பெரும்_ஜோதியாம் தலைவன்
மருவி என் உளத்தில் புகுந்தனன் அவன்றன் வண்மையைத் தடுப்பவர் யாரே.

@52. கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்

#1
அருள் அரசை அருள் குருவை அருள்_பெரும்_சோதியை என் அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்
தெருள் உறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியை
மருவு பெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக்கு அளித்த வாழ் முதலை மருந்தினை மா மணியை என் கண்மணியைக்
கருணை நடம் புரிகின்ற கனக_சபாபதியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#2
திருத் தகு வேதாந்தமொடு சித்தாந்த முதலாத் திகழ்கின்ற அந்தம் எலாம் தேடியும் கண்டு அறியா
ஒருத்தனை உள் ஒளியை ஒளிர் உள் ஒளிக்குள் ஒளியை உள்ளபடி உள்ளவனை உடைய பெரும் தகையை
நிருத்தனை மெய்ப்பொருளான நின்மலனைச் சிவனை நித்தியனைச் சத்தியனை நிற்குணனை எனது
கருத்தனைச் சிற்சபை ஓங்கு கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#3
பாட்டு உவந்து பரிசு அளித்த பதியை அருள் பதியைப் பசுபதியைக் கனக_சபாபதியை உமாபதியைத்
தேட்டம் மிகும் பெரும் பதியைச் சிவபதியை எல்லாம் செய்ய வல்ல தனிப் பதியைத் திகழ் தெய்வப் பதியை
ஆட்டியல் செய்து அருள் பரம பதியை நவ பதியை ஆனந்த நாட்டினுக்கு ஓர் அதிபதியை ஆசை
காட்டி எனை மணம் புரிந்து என் கைபிடித்த பதியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#4
மதித்திடுதல் அரிய ஒரு மாணிக்க மணியை வயங்கிய பேர்_ஒளி உடைய வச்சிர மா மணியைத்
துதித்திடு வேதாகமத்தின் முடி முடித்த மணியைச் சுயம் சோதித் திரு_மணியைச் சுத்த சிவ மணியை
விதித்தல் முதல் தொழில் இயற்றுவித்த குரு மணியை விண் மணியை அம்மணிக்குள் விளங்கிய மெய்ம் மணியைக்
கதித்த சுக மய மணியைச் சித்த சிகாமணியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#5
மாற்றை அளந்து அறிந்திலம் என்று அரு_மறை ஆகமங்கள் வழுத்த மணி மன்று ஓங்கி வயங்கும் அருள் பொன்னை
ஆற்றல் மிகு பெரும் பொன்னை ஐந்தொழிலும் புரியும் அரும் பொன்னை என்றன்னை ஆண்ட செழும் பொன்னைத்
தேற்றம் மிகு பசும்பொன்னைச் செம்பொன்னை ஞான சிதம்பரத்தே விளங்கி வளர் சிவ மயமாம் பொன்னைக்
காற்று அனல் ஆகாயம் எலாம் கலந்த வண்ணப் பொன்னைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#6
ஆய் தரு வேதாகமத்தின் அடி முடி  நின்று இலங்கும் அரிய பெரும் பொருளை அவைக்கு அனுபவமாம் பொருளை
வேய் தரு தத்துவப் பொருளைத் தத்துவங்கள் விளங்க விளங்குகின்ற பரம்பொருளைத் தத்துவங்கள் அனைத்தும்
தோய்தரல் இல்லாத தனிச் சுயம் சோதிப் பொருளைச் சுத்த சிவ மயமான சுகாதீதப் பொருளைக்
காய்தரல் இல்லாது என்னைக் காத்த அருள் பொருளைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#7
திருத்தம் மிகு முனிவர்களும் தேவர்களும் அழியாச் சித்தர்களும் சிருட்டி செயும் திறத்தர்களும் காக்கும்
அருத்தம் மிகு தலைவர்களும் அடக்கிடல் வல்லவரும் அலைபுரிகின்றவர்களும் உள் அனுக்கிரகிப்பவரும்
பொருத்தும் மற்றைச் சத்திகளும் சத்தர்களும் எல்லாம் பொருள் எதுவோ எனத் தேடிப் போக அவரவர்-தம்
கருத்தில் ஒளித்து இருக்கின்ற கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#8
கோணாத நிலையினராய்க் குறி குணம் கண்டிடவும் கூடாத வண்ணம் மலைக் குகை முதலாம் இடத்தில்
ஊண் ஆதி விடுத்து உயிர்ப்பை அடக்கி மனம் அடக்கி உறு பொறிகள் அடக்கி வரும் உகங்கள் பல கோடித்
தூணாக அசைதல் இன்றித் தூங்காது விழித்த தூய சதா நிட்டர்களும் துரிய நிலை இடத்தும்
காணாத வகை ஒளித்த கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#9
நீட்டாய சித்தாந்த நிலையினிடத்து அமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத்து இருந்தும்
ஆட்டாய போதாந்தம் அலைவு அறு நாதாந்தம் ஆதி மற்றை அந்தங்கள் அனைத்தினும் உற்று அறிந்தும்
வேட்டாசைப் பற்று அனைத்தும் விட்டு உலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக்
காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.

#10
மருள் நெறி சேர் மல உடம்பை அழியாத விமல வடிவு ஆக்கி எல்லாம் செய் வல்ல சித்தாம் பொருளைத்
தருணம்-அது தெரிந்து எனக்குத் தானே வந்து அளித்த தயாநிதியை எனை ஈன்ற தந்தையை என் தாயைப்
பொருள் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியைப் புகல் அரிதாம் சுத்த சிவ பூரண மெய்ச் சுகத்தைக்
கருணை அருள்_பெரும்_சோதிக் கடவுளை என் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டே களித்தே.

@53. ஆண்டருளிய அருமையை வியத்தல்

#1
அம்பலத்து ஆடும் அமுதமே என்கோ அடியனேன் ஆர்_உயிர் என்கோ
எம் பலத்து எல்லாம்_வல்ல சித்து என்கோ என் இரு கண்மணி என்கோ
நம்பிடில் அணைக்கும் நல் துணை என்கோ நான் பெற்ற பெரும் செல்வம் என்கோ
இம்பர் இப் பிறப்பே மெய்ப் பிறப்பு ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

#2
அம்மையே என்கோ அப்பனே என்கோ அருள்_பெரும்_சோதியே என்கோ
செம்மையே எல்லாம்_வல்ல சித்து என்கோ திரு_சிற்றம்பலத்து அமுது என்கோ
தம்மையே உணர்ந்தார் உளத்து ஒளி என்கோ தமியனேன் தனித் துணை என்கோ
இம்மையே அழியாத் திரு உரு அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#3
எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ
துய்ப்பிலே நிறைந்த பெரும் களிப்பு என்கோ சோதியுள் சோதியே என்கோ
தப்பு எலாம் பொறுத்த தயாநிதி என்கோ தனிப் பெரும் தலைவனே என்கோ
இப் பிறப்பு-அதிலே மெய்ப் பயன் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#4
அச்சம் நீக்கிய என் ஆரியன் என்கோ அம்பலத்து எம்பிரான் என்கோ
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ
பிச்சனேற்கு அளித்த பிச்சனே என்கோ பெரியரில் பெரியனே என்கோ
இச் சகத்து அழியாப் பெரு நலம் அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#5
அத்தம் நேர் கிடைத்த சுவைக் கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ
சித்து எலாம் வல்ல சித்தனே என்கோ திரு_சிற்றம்பலச் சிவம் என்கோ
மத்தனேன் பெற்ற பெரிய வாழ்வு என்கோ மன்னும் என் வாழ் முதல் என்கோ
இத் தனிப் பிறப்பை நித்தியம் ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

#6
மறப்பு எலாம் தவிர்த்த மதி அமுது என்கோ மயக்கம் நீத்து அருள் மருந்து என்கோ
பறப்பு எலாம் ஒழித்த பதிபதம் என்கோ பதச் சுவை அனுபவம் என்கோ
சிறப்பு எலாம் எனக்கே செய்த தாய் என்கோ திரு_சிற்றம்பலத் தந்தை என்கோ
இறப்பு இலா வடிவம் இம்மையே அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#7
அன்பிலே பழுத்த தனிப் பழம் என்கோ அறிவிலே அறிவறிவு என்கோ
இன்பிலே நிறைந்த சிவ பதம் என்கோ என் உயிர்த் துணைப் பதி என்கோ
வன்பு இலா மனத்தே வயங்கு ஒளி என்கோ மன்னும் அம்பலத்து அரசு என்கோ
என் புரி அழியாப் பொன் புரி ஆக்கி என்னை ஆண்டு அருளிய நினையே.

#8
தடை இலாது எடுத்த அருள் அமுது என்கோ சர்க்கரைக்கட்டியே என்கோ
அடைவு உறு வயிரக் கட்டியே என்கோ அம்பலத்து ஆணி_பொன் என்கோ
உடைய மாணிக்கப் பெரு மலை என்கோ உள் ஒளிக்குள் ஒளி என்கோ
இடைதல் அற்று ஓங்கும் திரு அளித்து இங்கே என்னை ஆண்டு அருளிய நினையே.

#9
மறை முடி விளங்கு பெரும் பொருள் என்கோ மன்னும் ஆகமப் பொருள் என்கோ
குறை முடித்து அருள்செய் தெய்வமே என்கோ குணப் பெரும் குன்றமே என்கோ
பிறை முடிக்கு அணிந்த பெருந்தகை என்கோ பெரிய அம்பலத்து அரசு என்கோ
இறை முடிப் பொருள் என் உளம் பெற அளித்து இங்கு என்னை ஆண்டு அருளிய நினையே.

#10
என் உளம் பிரியாப் பேர்_ஒளி என்கோ என் உயிர்த் தந்தையே என்கோ
என் உயிர்த் தாயே இன்பமே என்கோ என் உயிர்த் தலைவனே என்கோ
என் உயிர் வளர்க்கும் தனி அமுது என்கோ என்னுடை நண்பனே என்கோ
என் ஒரு வாழ்வின் தனி முதல் என்கோ என்னை ஆண்டு அருளிய நினையே.

@54. இறைவனை ஏத்தும் இன்பம்

#1
கருணை மா நிதியே என் இரு கண்ணே கடவுளே கடவுளே என்கோ
தருண வான் அமுதே என் பெரும் தாயே தந்தையே தந்தையே என்கோ
தெருள் நிறை மதியே என் குரு பதியே தெய்வமே தெய்வமே என்கோ
அருள் நிறை தரும் என் அருள்_பெரும்_சோதி ஆண்டவ நின்றனை அறிந்தே.

#2
ஒட்டியே என்னுள் உறும் ஒளி என்கோ ஒளி எலாம் நிரம்பிய நிலைக்கு ஓர்
வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குறக் கிடைத்த ஓர் வயிரப்
பெட்டியே என்கோ பெட்டியின் நடுவே பெரியவர் வைத்ததோர் தங்கக்
கட்டியே என்கோ அம்பலத்து ஆடும் கருணை அம் கடவுள் நின்றனையே.

#3
துன்பு எலாம் தவிர்த்த துணைவனே என்கோ சோதியுள் சோதியே என்கோ
அன்பு எலாம் அளித்த அன்பனே என்கோ அம்மையே அப்பனே என்கோ
இன்பு எலாம் புரிந்த இறைவனே என்கோ என் உயிர்க்கு இன் அமுது என்கோ
என் பொலா மணியே என் கணே என்கோ என் உயிர்_நாத நின்றனையே.

#4
கருத்தனே எனது கருத்தினுக்கு இசைந்த கணவனே கணவனே என்கோ
ஒருத்தனே எல்லாம் உடைய நாயகனே ஒரு தனிப் பெரியனே என்கோ
திருத்தனே எனது செல்வமே எல்லாம் செய வல்ல சித்தனே என்கோ
நிருத்தனே எனக்குப் பொருத்தனே என்கோ நிறை அருள் சோதி நின்றனையே.

#5
தாயனே எனது தாதையே ஒருமைத் தலைவனே தலைவனே என்கோ
பேயனேன் பிழையைப் பொறுத்து அருள் புரிந்த பெருந்தகைப் பெரும் பதி என்கோ
சேயனேன் பெற்ற சிவ பதம் என்கோ சித்து எலாம் வல்ல சித்து என்கோ
தூயனே எனது நேயனே என்கோ சோதியுள் சோதி நின்றனையே.

#6
அரும்பிலே மலர்வுற்று அருள் மணம் வீசும் ஆனந்தத் தனி மலர் என்கோ
கரும்பிலே எடுத்த சுவைத் திரள் என்கோ கடையனேன் உடைய நெஞ்சகமாம்
இரும்பிலே பழுத்துப் பேர்_ஒளி ததும்பி இலங்கும் ஓர் பசும்பொனே என்கோ
துரும்பினேன் பெற்ற பெரும் பதம் என்கோ சோதியுள் சோதி நின்றனையே.

#7
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ
மோகம் வந்து அடுத்த போது கைப் பிடித்த முக நகைக் கணவனே என்கோ
போகம் உள் விரும்பும் போதிலே வலிந்து புணர்ந்த ஓர் பூவையே என்கோ
ஆகமுள் புகுந்து என் உயிரினுள் கலந்த அம்பலத்து_ஆடி நின்றனையே.

#8
தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ
சத்துவ நிரம்பும் சுத்த சன்மார்க்கம்-தனில் உறும் அனுபவம் என்கோ
ஒத்து வந்து எனைத் தான் கலந்துகொண்டு எனக்குள் ஓங்கிய ஒருமையே என்கோ
சித்து வந்து ஆடும் சித்தனே என்கோ திரு_சிற்றம்பலத்தவ நினையே.

#9
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ
சாகலைத் தவிர்த்து என்றன்னை வாழ்விக்கச் சார்ந்த சற்குரு மணி என்கோ
மாகமும் புவியும் வாழ்வுற மணி மா மன்றிலே நடிக்கின்றோய் நினையே.

#10
இரவு இலாது இயம்பும் பகல் இலாது இருந்த இயற்கையுள் இயற்கையே என்கோ
வரவு இலா உரைக்கும் போக்கு இலா நிலையில் வயங்கிய வான் பொருள் என்கோ
திரை இலாது எல்லாம்_வல்ல சித்து எனக்கே செய்ததோர் சித்தனே என்கோ
கரவு இலாது எனக்குப் பேர்_அருள் சோதி களித்து அளித்து அருளிய நினையே.

@55. பாமாலை ஏற்றல்

#1
நான் புனைந்த சொல்_மாலை நல் மாலை என்று அருளித்
தான் புனைந்தான் ஞான சபைத் தலைவன் தேன் புனைந்த
சொல்லாள் சிவகாமசுந்தரியைத் தோள் புணர்ந்த
நல்லான்-தன் தாட்கே நயந்து.

#2
சொல்லுகின்ற என் சிறு வாய்ச் சொல்_மாலை அத்தனையும்
வெல்லுகின்ற தும்பை என்றே மேல் அணிந்தான் வல்லி சிவ
காம சவுந்தரிக்குக் கண்_அனையான் ஞான சபைச்
சேம நடராஜன் தெரிந்து.

#3
ஏது ஆகுமோ என நான் எண்ணி இசைத்த எலாம்
வேதாகமம் என்றே மேல் அணிந்தான் பாதார
விந்தம் எனது சிரம் மேல் அமர்த்தி மெய் அளித்த
எந்தை நடராஜன் இசைந்து.

#4
இன் உரை அன்று என்று உலகம் எல்லாம் அறிந்திருக்க
என் உரையும் பொன் உரை என்றே அணிந்தான் தன் உரைக்கு
நேர் என்றான் நீடு உலகில் நின் போல் உரைக்க வல்லார்
ஆர் என்றான் அம்பலவன் ஆய்ந்து.

#5
என்பாட்டுக்கு எண்ணாதது எண்ணி இசைத்தேன் என்
றன் பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான் முன் பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான்.

#6
என்னே அதிசயம் ஈது இ உலகீர் என் உரையைப்
பொன்னே என மேல் புனைந்துகொண்டான் தன் நேர் இல்
நல் ஆரணங்கள் எலாம் நாணியவே எல்லாம் செய்
வல்லான் திரு_கருணை வாய்ப்பு.

#7
முன்பின் அறியாது மொழிந்த மொழி_மாலை எலாம்
அன்பின் இசைந்து அந்தோ அணிந்துகொண்டான் என் பருவம்
பாராது வந்து என் பருவரல் எல்லாம் தவிர்த்துத்
தாரா வரங்கள் எலாம் தந்து.

#8
பொன் ஒப்பதாம் ஒரு நீ போற்றிய சொல்_மாலை என்றே
என் அப்பன் என் சொல் இசைந்து அணிந்தான் தன் ஒப்பு இல்
வல்லான் இசைந்ததுவே மா மாலை அற்புதம் ஈது
எல்லாம் திரு_அருள் சீரே.

#9
பின்_முன் அறியேன் நான் பிதற்றிய சொல்_மாலை எலாம்
தன் முன் அரங்கேற்று எனவே தான் உரைத்தான் என் முன்
இருந்தான் என் உள்ளே இருக்கின்றான் ஞான
மருந்தான் சிற்றம்பலத்தான் வாய்ந்து.

#10
நீயே என் பிள்ளை இங்கு நின் பாட்டில் குற்றம் ஒன்றும்
ஆயேம் என்று அந்தோ அணிந்துகொண்டான் நாயேன் செய்
புண்ணியம் இ வானில் புவியின் மிகப் பெரிதால்
எண்ணிய எல்லாம் புரிகின்றேன்.

#11
எண்ணுகின்றேன் எண்ணு-தொறு என் எண்ணம் எலாம் தித்திக்க
நண்ணுகின்றது என் புகல்வேன் நானிலத்தீர் உண்ணுகின்ற
உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த
தெள் அமுதோ அம்பலவன் சீர்.

#12
ஆக்கி அளித்தல் முதலாம் தொழில் ஓர் ஐந்தினையும்
தேக்கி அமுது ஒரு நீ செய் என்றான் தூக்கி
எடுத்தான் அணைத்தான் இறவாத தேகம்
கொடுத்தான் சிற்றம்பலத்து என் கோ.

@56. உத்தர ஞான சிதம்பர மாலை

#1
அருள் ஓங்குகின்றது அருள்_பெரும்_சோதி அடைந்தது என்றன்
மருள் ஓங்குறாமல் தவிர்த்தது நல்ல வரம் அளித்தே
பொருள் ஓங்கி நான் அருள் பூமியில் வாழப் புரிந்தது என்றும்
தெருள் ஓங்க ஓங்குவது உத்தர ஞான சிதம்பரமே.

#2
இணை என்று தான் தனக்கு ஏற்றது போற்றும் எனக்கு நல்ல
துணை என்று வந்தது சுத்த சன்மார்க்கத்தில் தோய்ந்தது என்னை
அணை என்று அணைத்துக்கொண்டு ஐந்தொழில் ஈந்தது அருள் உலகில்
திணை ஐந்தும் ஆகியது உத்தர ஞான சிதம்பரமே.

#3
உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே
இலக எலாம் படைத்து ஆர்_உயிர் காத்து அருள் என்றது என்றும்
கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே.

#4
பவமே தவிர்ப்பது சாகா_வரமும் பயப்பது நல்
தவமே புரிந்தவர்க்கு இன்பம் தருவது தான் தனக்கே
உவமேயமானது ஒளி ஓங்குகின்றது ஒளிரும் சுத்த
சிவமே நிறைகின்றது உத்தர ஞான சிதம்பரமே.

#5
ஒத்தாரையும் இழிந்தாரையும் நேர் கண்டு உவக்க ஒரு
மித்தாரை வாழ்விப்பது ஏற்றார்க்கு அமுதம் விளம்பி இடு
வித்தாரைக் காப்பது சித்தாடுகின்றது மேதினி மேல்
செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே.

#6
எத்தாலும் மிக்கது எனக்கு அருள் ஈந்தது எல்லாமும் வல்ல
சித்தாடல் செய்கின்றது எல்லா உலகும் செழிக்கவைத்தது
இத் தாரணிக்கு அணி ஆயது வான் தொழற்கு ஏற்றது எங்கும்
செத்தால் எழுப்புவது உத்தர ஞான சிதம்பரமே.

#7
குரு நெறிக்கே என்னைக் கூட்டிக் கொடுத்தது கூற அரிதாம்
பெரு நெறிக்கே சென்ற பேர்க்குக் கிடைப்பது பேய் உலகக்
கரு நெறிக்கு ஏற்றவர் காணற்கு அரியது காட்டுகின்ற
திரு_நெறிக்கு ஏற்கின்றது உத்தர ஞான சிதம்பரமே.

#8
கொல்லா நெறியது கோடா நிலையது கோபம்_இலார்
சொல்லால் உவந்தது சுத்த சன்மார்க்கம் துணிந்தது உலகு
எல்லாம் அளிப்பது இறந்தால் எழுப்புவது ஏதம் ஒன்றும்
செல்லா வளத்தினது உத்தர ஞான சிதம்பரமே.

#9
காணாத காட்சிகள் காட்டுவிக்கின்றது காலம் எல்லாம்
வீண் நாள் கழிப்பவர்க்கு எய்த அரிதானது வெம் சினத்தால்
கோணாத நெஞ்சில் குலாவி நிற்கின்றது கூடி நின்று
சேண்_நாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே.

#10
சொல்வந்த வேத முடி முடி மீதில் துலங்குவது
கல் வந்த நெஞ்சினர் காணற்கு அரியது காமம்_இலார்
நல் வந்தனை செய நண்ணிய பேறது நன்று எனக்கே
செல்வம் தந்து ஆட்கொண்டது உத்தர ஞான சிதம்பரமே.

#11
ஏகாந்தம் ஆகி வெளியாய் இருந்தது இங்கு என்னை முன்னே
மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின்
மா காந்தமானது வல்_வினை தீர்த்து எனை வாழ்வித்து என்றன்
தேகாந்தம் நீக்கியது உத்தர ஞான சிதம்பரமே.

@57. செய் பணி வினவல்

#1
அருளே பழுத்த சிவ தருவில் அளிந்த பழம் தந்து அடியேனைத்
தெருளே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
மருளே முதலாம் தடை எல்லாம் தீர்ந்தேன் நின்-பால் வளர்கின்றேன்
பொருளே இனி நின்றனைப் பாடி ஆடும் வண்ணம் புகலுகவே.

#2
ஒருவாது அடியேன் எண்ணியவாறு எல்லாம் அருளி உளம் களித்தே
திரு ஆர் சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பெரு வாழ்வு அடைந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன்
உரு ஆர் உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் உரைத்து அருளே.

#3
அவமே புரிந்தேன்-தனை மீட்டு உன் அருள் ஆர் அமுதம் மிகப் புகட்டிச்
சிவமே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பவமே தொலைத்தேன் பெரும் களிப்பால் பதியே நின்-பால் வளர்கின்றேன்
நவமே அடியேன் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

#4
பல் வாதனையும் தவிர்த்து எனக்கே பரமானந்த அமுது அளித்துச்
செல்வா சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
வல் வாதனை செய் மனச் செருக்கை மாற்றி நின்-பால் வளர்கின்றேன்
நல் வாழ்வு அளித்தாய் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

#5
ஓவா இன்ப மயம் ஆகி ஓங்கும் அமுதம் உதவி எனைத்
தேவா சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பூ ஆர் மணம் போல் சுகம் தரும் மெய்ப்பொருளே நின்-பால் வளர்கின்றேன்
நாவால் அடியேன் நினைப் பாடி ஆடும் வண்ணம் நவிலுகவே.

#6
இளிவே தவிர்த்துச் சிறியேன்-தன் எண்ணம் முழுதும் அளித்து அருளித்
தெளிவே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஒளி வேய் வடிவு பெற்று ஓங்கி உடையாய் உன்-பால் வளர்கின்றேன்
தளி வேய் நினது புகழ் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.

#7
மறப்பே தவிர்த்து இங்கு எனை என்றும் மாளா நிலையில் தனி அமர்த்திச்
சிறப்பே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
பிறப்பே தவிர்ந்தேன் பெரும் களிப்பால் பெருமான் நின்-பால் வளர்கின்றேன்
திறப் பேர்_உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் செப்புகவே.

#8
ஊனே புகுந்து என் உளம் கனிவித்து உயிரில் கலந்தே ஒன்றாகித்
தேனே சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
நானே அழியா வாழ்வு உடையேன் நானே நின்-பால் வளர்கின்றேன்
தான் நேர் உலகில் உனைப் பாடி ஆடும் வண்ணம் சாற்றுகவே.

#9
ஆரா_அமுதம் அளித்து அருளி அன்பால் இன்ப நிலைக்கு ஏற்றிச்
சீர் ஆர் சிற்றம்பலவா நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஏர் ஆர் இன்ப அனுபவங்கள் எல்லாம் பொருந்தி இருக்கின்றேன்
தீரா உலகில் அடிச் சிறியேன் செய்யும் பணியைத் தெரித்து அருளே.

#10
மெய் வைப்பு அழியா நிலைக்கு ஏற்றி விளங்கும் அமுதம் மிக அளித்தே
தெய்வப் பதியே சிவமே நின் செல்வப் பிள்ளை ஆக்கினையே
ஐ வைப்பு அறிந்தேன் துரிசு எல்லாம் அறுத்தேன் நின்-பால் வளர்கின்றேன்
பொய் வைப்பு அடையேன் இ உலகில் புரியும் பணியைப் புகன்று அருளே.

@58. ஆன்ம தரிசனம்

#1
திரு எலாம் தரும் ஓர் தெய்வமாம் ஒருவன் திரு_சிற்றம்பலம் திகழ்கின்றான்
உரு எலாம் உணர்ச்சி உடல் பொருள் ஆவி உள எலாம் ஆங்கு அவன்றனக்கே
தெரு எலாம் அறியக் கொடுத்தனன் வேறு செயல்_இலேன் என நினைத்திருந்தேன்
அரு எலாம் உடையாய் நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

#2
நினைத்த போது எல்லாம் நின்னையே நினைத்தேன் நினைப்பு அற நின்ற போது எல்லாம்
எனைத் தனி ஆக்கி நின்-கணே நின்றேன் என் செயல் என்ன ஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன் எல்லாம் சிவன் செயலாம் எனப் புரிந்தேன்
அனைத்தும் என் அரசே நீ அறிந்ததுவே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

#3
களித்த போது எல்லாம் நின் இயல் உணர்ந்தே களித்தனன் கண்கள் நீர் ததும்பித்
துளித்த போது எல்லாம் நின் அருள் நினைத்தே துளித்தனன் சூழ்ந்தவர் உளத்தைத்
தெளித்த போது எல்லாம் நின் திறம் புகன்றே தெளித்தனன் செய்கை வேறு அறியேன்
ஒளித் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#4
உண்டதும் பொருந்தி உவந்ததும் உறங்கி உணர்ந்ததும் உலகியல் உணர்வால்
கண்டதும் கருதிக் களித்ததும் கலைகள் கற்றதும் கரைந்ததும் காதல்
கொண்டதும் நின்னோடு அன்றி நான் தனித்து என் குறிப்பினில் குறித்தது ஒன்று இலையே
ஒண் தகும் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#5
களவிலே களித்த காலத்தும் நீயே களித்தனை நான் களித்து அறியேன்
உளவிலே உவந்த போதும் நீ-தானே உவந்தனை நான் உவந்து அறியேன்
கொள இலேசமும் ஓர் குறிப்பு_இலேன் அனைத்தும் குறித்தனை கொண்டனை நீயே
அளவிலே எல்லாம் அறிந்தனை அரசே அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

#6
திலக வாள் நுதலார்-தமைக் கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த
உலக வாழ்வு-அதில் ஓர் அணுத்துணை எனினும் உவப்பு இலேன் உலகுறு மாயைக்
கலக வாதனை தீர் காலம் என்று உறுமோ கடவுளே எனத் துயர்ந்து இருந்தேன்
அலகு_இலாத் திறலோய் நீ அறிந்தது நான் அடிக்கடி உரைப்பது என் நினக்கே.

#7
சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன்
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்
ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருள்_பெரும்_சோதி என்று அறிந்தேன்
ஓதிய அனைத்தும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#8
பித்து எலாம் உடைய உலகர்-தம் கலகப் பிதற்று எலாம் என்று ஒழிந்திடுமோ
சத்து எலாம் ஒன்று என்று உணர்ந்த சன்மார்க்க சங்கம் என்று ஓங்குமோ தலைமைச்
சித்து எலாம் வல்ல சித்தன் என்று உறுமோ தெரிந்திலேன் எனத் துயர்ந்து இருந்தேன்
ஒத்து எலாம் உனது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#9
ஒன்று எனக் காணும் உணர்ச்சி என்று உறுமோ ஊழி-தோறு ஊழி சென்றிடினும்
என்றும் இங்கு இறவா இயற்கை என்று உறுமோ இயல் அருள் சித்திகள் எனை வந்து
ஒன்றல் என்று உறுமோ அனைத்தும் என் வசத்தே உறுதல் என்றோ எனத் துயர்ந்தேன்
உன் திருவுளமே அறிந்தது இ அனைத்தும் உரைப்பது என் அடிக்கடி உனக்கே.

#10
கள்ள வாதனையைக் களைந்து அருள் நெறியைக் காதலித்து ஒருமையில் கலந்தே
உள்ளவாறு இந்த உலகு எலாம் களிப்புற்று ஓங்குதல் என்று வந்து உறுமோ
வள்ளலே அது கண்டு அடியனேன் உள்ளம் மகிழ்தல் என்றோ எனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது உரைப்பது என் அடிக்கடி உனக்கே

@59. வேண்டுவன இவை இவை என விண்ணப்பித்தல்

#1
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆர்_உயிர்கட்கு எல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருள் புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேல் நிலை மேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருள் சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பு ஏதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.

#2
ஐயா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அடி முடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருள் சோதி என் கையுறல் வேண்டும் இறந்த உயிர்-தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம் உயிர் காத்திடுதல் வேண்டும் நாயக நின்றனைப் பிரியாது உறுதலும் வேண்டுவனே.

#3
அண்ணா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அழியாத தனி வடிவம் யான் அடைதல் வேண்டும்
கண்ணார நினை எங்கும் கண்டு உவத்தல் வேண்டும் காணாத காட்சி எலாம் கண்டுகொளல் வேண்டும்
பண் ஆர நின்றனையே பாடியுறல் வேண்டும் பரமானந்தப் பெரும் கூத்து ஆடியிடல் வேண்டும்
உள் நாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும் உனைப் பிரியாது உறுகின்ற உறவு-அது வேண்டுவனே.

#4
அத்தா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியைப் பெற்றே அகம் களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும் திரு_சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவு-அதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிது உறல் வேண்டுவனே.

#5
அரைசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அருள்_பெரும்_சோதியைப் பெற்றே அகம் மகிழ்தல் வேண்டும்
வரை சேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும் மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும்
புரை சேரும் கொலை நெறியும் புலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்து உவத்தல் வேண்டும்
உரை சேர் மெய்த் திரு_வடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.

#6
அடிகேள் நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அண்டம் எலாம் பிண்டம் எலாம் கண்டுகொளல் வேண்டும்
துடி சேர் எவ்வுலகமும் எத் தேவரும் எவ்வுயிரும் சுத்த சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படி வானும் படைத்தல் முதல் ஐந்தொழிலும் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான் புரிதல் வேண்டும்
ஒடியாத திரு_அடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டுவனே.

#7
அம்மா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும்
இ மாலைத் தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும்
எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமை அறல் வேண்டும் ஏக சிவபோக அனுபோகம் உறல் வேண்டும்
தம் மானத் திரு_அடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்து ஓங்குகின்ற தன்மையும் வேண்டுவனே.

#8
அச்சா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆறு அந்த நிலைகள் எலாம் அறிந்து அடைதல் வேண்டும்
எச் சார்பும் ஆகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும் எனை அடுத்தார்-தமக்கு எல்லாம் இன்பு தரல் வேண்டும்
இச் சாதி சமய விகற்பங்கள் எலாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொது அடைதல் வேண்டும்
உச்ச ஆதி அந்தம் இலாத் திரு_வடிவில் யானும் உடையாயும் கலந்து ஓங்கும் ஒருமையும் வேண்டுவனே.

#9
அறிவா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஐந்தொழில் நான் புரிந்து உலகில் அருள் விளக்கல் வேண்டும்
செறியாத கரணம் எலாம் செறித்து அடக்கல் வேண்டும் சித்தாந்த வேதாந்தப் பொது சிறத்தல் வேண்டும்
எறியாது என் எண்ணம் எலாம் இனிது அருளல் வேண்டும் எல்லாம் செய் வல்ல சித்தே எனக்கு அளித்தல் வேண்டும்
பிறியாது என்னொடு கலந்து நீ இருத்தல் வேண்டும் பெருமான் நின்றனைப் பாடி ஆடுதல் வேண்டுவனே.

#10
அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகம் எலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பு அடைதல் வேண்டும்
பொருளாம் ஓர் திரு_வடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே.

#11
அமலா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆடி நிற்கும் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமன் ஆதித் தடை என்றும் எய்தாமை வேண்டும் எல்லாம் செய் வல்ல திறன் எனக்கு அளித்தல் வேண்டும்
கமை ஆதி அடைந்து உயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திரு_பொதுவைக் களித்து ஏத்தல் வேண்டும்
விமல ஆதி உடைய ஒரு திரு_வடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டுவனே.

@60. அருள் விளக்க மாலை

#1
அருள் விளக்கே அருள் சுடரே அருள் சோதிச் சிவமே அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப் பொருளே
இருள் கடிந்து என் உளம் முழுதும் இடம்கொண்ட பதியே என் அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே
மருள் கடிந்த மா மணியே மாற்று அறியாப் பொன்னே மன்றில் நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள் அளித்த திருவாளா ஞான உருவாளா தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே.

#2
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீம் சுவைத் தண்ணீரே உகந்த தண்ணீர் இடை மலர்ந்த சுகந்த மண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே மென் காற்றில் விளை சுகமே சுகத்தில் உறும் பயனே
ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில் ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#3
இன்புற நான் எய்ப்பிடத்தே பெற்ற பெரு வைப்பே ஏங்கிய போது என்றன்னைத் தாங்கிய நல் துணையே
அன்புற என் உள் கலந்தே அண்ணிக்கும் அமுதே அச்சம் எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட குருவே
என் பருவம் குறியாதே எனை மணந்த பதியே இச்சையுற்றபடி எல்லாம் எனக்கு அருளும் துரையே
துன்பு அற மெய் அன்பருக்கே பொது நடம் செய் அரசே தூய திரு_அடிகளுக்கு என் சொல்லும் அணிந்து அருளே.

#4
ஒசித்த கொடி_அனையேற்குக் கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்றுத் திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே
நசித்தவரை எழுப்பி அருள் நல்கிய மா மருந்தே நான் புணர நான் ஆகி நண்ணிய மெய்ச் சிவமே
கசித்த மனத்து அன்பர் தொழப் பொது நடம் செய் அரசே களித்து எனது சொல்_மாலை கழலில் அணிந்து அருளே.

#5
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே
சின_முகத்தார்-தமைக் கண்டு திகைத்த பொழுது அவரைச் சிரித்த_முகத்தவர் ஆக்கி எனக்கு அளித்த சிவமே
அனம் உகைத்தான் அரி முதலோர் துருவி நிற்க எனக்கே அடி முடிகள் காட்டுவித்தே அடிமைகொண்ட பதியே
இனம் எனப் பேர்_அன்பர் தொழப் பொது நடம் செய் அரசே என்னுடைய சொல்_மாலை யாவும் அணிந்து அருளே.

#6
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே
செங்குவளை மாலையொடு மல்லிகைப்பூ மாலை சேர்த்து அணிந்து என்றனை மணந்த தெய்வ மணவாளா
எங்கும் ஒளி மயம் ஆகி நின்ற நிலை காட்டி என் அகத்தும் புறத்தும் நிறைந்து இலங்கிய மெய்ப்பொருளே
துங்கமுறத் திரு_பொதுவில் திரு_நடம் செய் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே.

#7
கரைந்துவிடாது என்னுடைய நாவகத்தே இருந்து கனத்த சுவை தருகின்ற கற்கண்டே கனிவாய்
விரைந்து வந்து என் துன்பம் எலாம் தவிர்த்த அருள் அமுதே மெய் அருளே மெய் ஆகி விளங்குகின்ற விளக்கே
திரைந்த உடல் விரைந்து உடனே பொன் உடம்பே ஆகித் திகழ்ந்து அழியாது ஓங்க அருள் சித்தே மெய்ச் சத்தே
வரைந்து என்னை மணம் புரிந்து பொது நடம் செய் அரசே மகிழ்வொடு நான் புனைந்திடும் சொல்_மாலை அணிந்து அருளே.

#8
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே என் கண்ணில் கலந்த மணியே மணியில் கலந்த கதிர் ஒளியே
விதிக்கும் உலகு உயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே மெய்_உணர்ந்தோர் கையகத்தே விளங்கிய தீம் கனியே
மதிக்கும் மதிக்கு அப்புறம் போய் வயங்கு தனி நிலையே மறை முடி ஆகம முடி மேல் வயங்கும் இன்ப நிறைவே
துதிக்கும் அன்பர் தொழப் பொதுவில் நடம் புரியும் அரசே சொல்_மாலை சூட்டுகின்றேன் தோளில் அணிந்து அருளே.

#9
அண்ட அளவு எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த சராசர அளவு எவ்வளவோ அவ்வளவும்
கண்டதுவாய் ஆங்கு அவைகள் தனித்தனியே அகத்தும் காண் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க
விண் தகு பேர்_அருள் சோதிப் பெருவெளிக்கு நடுவே விளங்கி ஒரு பெரும் கருணைக் கொடி நாட்டி அருளாம்
தண் தகும் ஓர் தனிச் செங்கோல் நடத்தி மன்றில் நடிக்கும் தனி அரசே என் மாலை தாளில் அணிந்து அருளே.

#10
நல்லார் சொல் யோகாந்தப் பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்தப் பதிகள் பல கோடி
வல்லார் சொல் கலாந்த நிலைப் பதிகள் பல கோடி வழுத்தும் ஒரு நாதாந்தப் பதிகள் பல கோடி
இல் ஆர்ந்த வேதாந்தப் பதிகள் பல கோடி இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள் பல கோடி
எல்லாம் பேர்_அருள் சோதித் தனிச் செங்கோல் நடத்தும் என் அரசே என் மாலை இனிது புனைந்து அருளே.

#11
நாட்டியதோர் சுத்த பராசத்தி அண்டம் முதலா ஞானசத்தி அண்டம்-அது கடையாக இவற்றுள்
ஈட்டிய பற்பல சத்தி சத்தர் அண்டப் பகுதி எத்தனையோ கோடிகளும் தன் நிழல் கீழ் விளங்கச்
சூட்டிய பொன் முடி இலங்கச் சமரச மெய்ஞ்ஞானச் சுத்த சிவ சன்மார்க்கப் பெரு நிலையில் அமர்ந்தே
நீட்டிய பேர்_அருள் சோதித் தனிச் செங்கோல் நடத்தும் நீதி நடத்து அரசே என் நெடும் சொல் அணிந்து அருளே.

#12
தன் பெருமை தான் அறியாத் தன்மையனே எனது தனித் தலைவா என் உயிர்க்குள் இனித்த தனிச் சுவையே
நின் பெருமை நான் அறியேன் நான் மட்டோ அறியேன் நெடுமால் நான்முகன் முதலா மூர்த்திகளும் அறியார்
அன்புறும் ஆகம மறைகள் அறியாவே எனினும் அவரும் அவைகளும் சில சொல் அணிகின்றார் நினக்கே
என் பருவம் குறியாதே எனை ஆண்ட அரசே யானும் அவர் போல் அணிகின்றேன் அணிந்து இங்கு அருளே.

#13
உண்ண உண்ணத் தெவிட்டாதே தித்தித்து என் உடம்போடு உயிர் உணர்வும் கலந்துகலந்து உள் அகத்தும் புறத்தும்
தண்ணிய வண்ணம் பரவப் பொங்கி நிறைந்து ஆங்கே ததும்பி என்றன் மயம் எல்லாம் தன்மயமே ஆக்கி
எண்ணிய என் எண்ணம் எலாம் எய்த ஒளி வழங்கி இலங்குகின்ற பேர்_அருளாம் இன் அமுதத் திரளே
புண்ணியமே என் பெரிய பொருளே என் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

#14
நாட்டார்கள் சூழ்ந்து மதித்திட மணி மேடையிலே நடு இருக்க என்றனையே நாட்டிய பேர்_இறைவா
பாட்டாளர் பாடு-தொறும் பரிசு அளிக்கும் துரையே பன்னும் மறைப் பாட்டே மெய்ப் பாட்டினது பயனே
கூட்டாளா சிவகாமக்கொடிக்கு இசைந்த கொழுநா கோவே என் கணவா என் குரவா என் குணவா
நீட்டாளர் புகழ்ந்து ஏத்த மணி மன்றில் நடிக்கும் நீதி நடத்து அரசே என் நெடு மொழி கொண்டு அருளே.

#15
கைக்கு இசைந்த பொருளே என் கருத்து இசைந்த கனிவே கண்ணே என் கண்களுக்கே கலந்து இசைந்த கணவா
மெய்க்கு இசைந்த அணியே பொன் மேடையில் என்னுடனே மெய் கலந்த தருணத்தே விளைந்த பெரும் சுகமே
நெய்க்கு இசைந்த உணவே என் நெறிக்கு இசைந்த நிலையே நித்தியமே எல்லாமாம் சத்தியமே உலகில்
பொய்க்கு_இசைந்தார் காணாதே பொது நடம் செய் அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

#16
கொடுத்திட நான் எடுத்திடவும் குறையாத நிதியே கொல்லாத நெறியே சித்து எல்லாம் செய் பதியே
மடுத்திடவும் அடுத்தடுத்தே மடுப்பதற்குள் ஆசைவைப்பது அன்றி வெறுப்பு அறியா வண்ணம் நிறை அமுதே
எடுத்தெடுத்துப் புகன்றாலும் உலவாத ஒளியே என் உயிரே என் உயிருக்கு இசைந்த பெரும் துணையே
தடுத்திட வல்லவர் இல்லாத் தனி முதல் பேர்_அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே.

#17
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாக் கூட்டிச் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே
தனித்த நறும் தேன் பெய்து பசும்பாலும் தேங்கின் தனிப் பாலும் சேர்த்து ஒரு தீம் பருப்பு இடியும் விரவி
இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே
அனித்தம் அறத் திரு_பொதுவில் விளங்கு நடத்து அரசே அடி_மலர்க்கு என் சொல்_அணியாம் அலங்கல் அணிந்து அருளே.

#18
மலைவு அறியாப் பெரும் சோதி வச்சிர மா மலையே மாணிக்க மணிப் பொருப்பே மரகதப் பேர் வரையே
விலை_அறியா உயர் ஆணிப் பெரு முத்துத் திரளே விண்ணவரும் நண்ண அரும் ஓர் மெய்ப்பொருளின் விளைவே
கொலை அறியாக் குணத்தோர்-தம் கூட்டு உறவே அருள் செங்கோல் நடத்துகின்ற தனிக் கோவே மெய் அறிவால்
நிலை அறிந்தோர் போற்றும் மணி மன்றில் நடத்து அரசே நின் அடிப் பொன்_மலர்களுக்கு என் நெடும் சொல் அணிந்து அருளே.

#19
கண் களிக்கப் புகை சிறிதும் காட்டாதே புருவக் கலை நடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே
பண் களிக்கப் பாடுகின்ற பாட்டில் விளை சுகமே பத்தர் உளே தித்திக்கப் பழுத்த தனிப் பழமே
மண் களிக்க வான் களிக்க மணந்த சிவகாமவல்லி என மறைகள் எலாம் வாழ்த்துகின்ற வாமப்
பெண் களிக்கப் பொது நடம் செய் நடத்து அரசே நினது பெரும் புகழ்ச் சேவடிகளுக்கு என் அரும்பும் அணிந்து அருளே.

#20
உருவெளியே உருவெளிக்குள் உற்ற வெளி உருவே உரு நடுவும் வெளி நடுவும் ஒன்றான ஒன்றே
பெருவெளியே பெருவெளியில் பெரும் சோதி மயமே பெரும் சோதி மய நடுவே பிறங்கு தனிப் பொருளே
மரு ஒழியா மலர் அகத்தே வயங்கு ஒளி மணியே மந்திரமே தந்திரமே மதிப்ப அரிய மருந்தே
திரு ஒழியாது ஓங்கும் மணி மன்றில் நடத்து அரசே சிறு மொழி என்று இகழாதே சேர்த்து மகிழ்ந்து அருளே.

#21
நான் என்றும் தான் என்றும் நாடாத நிலையில் ஞான வடிவாய் விளங்கும் வான நடு நிலையே
ஊன் என்றும் உயிர் என்றும் குறியாமே முழுதும் ஒரு வடிவாம் திரு_வடிவம் உவந்து அளித்த பதியே
தேன் என்றும் கரும்பு என்றும் செப்ப அரிதாய் மனமும் தேகமும் உள் உயிர் உணர்வும் தித்திக்கும் சுவையே
வான் என்றும் ஒளி என்றும் வகுப்ப அரிதாம் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே.

#22
எட்டிரண்டும் என் என்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலை எல்லாம் எட்டுவித்த குருவே
சுட்டு இரண்டும் காட்டாதே துரிய நிலை நடுவே சுக மயமாய் விளங்குகின்ற சுத்த பரம்பொருளே
மட்டு இது என்று அறிவதற்கு மாட்டாதே மறைகள் மவுனம் உறப் பரம்பரத்தே வயங்குகின்ற ஒளியே
தட்டு அறியாத் திரு_பொதுவில் தனி நடம் செய் அரசே தாழ் மொழி என்று இகழாதே தரித்து மகிழ்ந்து அருளே.

#23
சாதி குலம் சமயம் எலாம் தவிர்த்து எனை மேல் ஏற்றித் தனித்த திரு_அமுது அளித்த தனித் தலைமைப் பொருளே
ஆதி நடுக் கடை காட்டாது அண்ட பகிரண்டம் ஆர்_உயிர்கள் அகம் புறம் மற்று அனைத்தும் நிறை ஒளியே
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனை-தான் ஓதாமல் உணர்ந்து உணர்வாம் உருவுறச்செய் உறவே
சோதி மயமாய் விளங்கித் தனிப் பொதுவில் நடிக்கும் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே

#24
அடிக்கடி என் அகத்தினிலும் புறத்தினிலும் சோதி அருள் உருவாய்த் திரிந்துதிரிந்து அருள்கின்ற பொருளே
படிக்கு அளவு_இல் மறை முடி மேல் ஆகமத்தின் முடி மேல் பதிந்த பதம் என் முடி மேல் பதித்த தனிப் பதியே
பொடிக் கனகத் திரு_மேனித் திரு மணம் கற்பூரப் பொடி மணத்தோடு அகம் புறமும் புது மணம் செய் அமுதே
அடிக் கனக அம்பலத்தே திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#25
அறையாத மிகு பெருங்காற்று அடித்தாலும் சிறிதும் அசையாதே அவியாதே அண்ட பகிரண்டத்
துறை யாவும் பிண்ட வகைத் துறை முழுதும் விளங்கத் தூண்டாதே விளங்குகின்ற ஜோதி மணி_விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய் எவ்வுயிர் அகத்தும் அகப்புறத்தும் புறத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#26
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே
வேர்த்து ஆவி மயங்காது கனிந்த நறும் கனியே மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே.

#27
பற்றுதலும் விடுதலும் உள் அடங்குதலும் மீட்டும் படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே
உற்று ஒளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான உரு ஆகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திரு_சிற்றம்பலத்தே முயங்கும் நடத்து அரசே என் மொழியும் அணிந்து அருளே.

#28
ஐம்பூத பரங்கள் முதல் நான்கும் அவற்று உள்ளே அடுத்து இடு நந்நான்கும் அவை அகம் புறம் மேல் நடுக் கீழ்
கம் பூத பக்கம் முதல் எல்லாம் தன்மயமாய்க் காணும் அவற்று அப்புறமும் கலந்த தனிக் கனலே
செம் பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திட நல் கதிர் பரப்பித் திகழ்கின்ற சுடரே
வெம் பூதத் தடை தவிர்ந்தார் ஏத்த மணி மன்றில் விளங்கும் நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே.

#29
வாதுறும் இந்திய கரண பரங்கள் முதல் நான்கும் வகுத்திடு நந்நான்கும் அகம் புறம் மேல் கீழ் நடுப் பால்
ஓதுறும் மற்று எல்லாம் தன்மயமாகக் கலந்தே ஓங்க அவற்றின் அப்புறமும் ஒளிர்கின்ற ஒளியே
சூதுறும் இந்திய கரண லோகாண்டம் அனைத்தும் சுடர் பரப்பி விளங்குகின்ற சுயம் சோதிச் சுடரே
போதுறுவார் பலர் நின்று போற்ற நடம் பொதுவில் புரியும் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

#30
பகுதி பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் பரவி எலாம் தன்மயமாம்படி நிறைந்து விளங்கித்
தகுதி பெறும் அ பகுதிக்கு அப்புறமும் சென்றே தனி ஒளிச் செங்கோல் நடத்தித் தழைக்கின்ற ஒளியே
மிகுதி பெறு பகுதி உலகம் பகுதி அண்டம் விளங்க அருள் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே
தொகுதி பெறு கடவுளர்கள் ஏத்த மன்றில் நடிக்கும் துரிய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

#31
மாமாயைப் பரம் ஆதி நான்கும் அவற்றுள்ளே வயங்கிய நந்நான்கும் தன்மயத்தாலே விளக்கி
ஆமாறு அ மாமாயைக்கு அப்புறத்தும் நிறைந்தே அறிவு ஒன்றே வடிவு ஆகி விளங்குகின்ற ஒளியே
தாம் மாயா புவனங்கள் மாமாயை அண்டம் தழைத்து விளங்கிடக் கதிர் செய் தனித்த பெரும் சுடரே
தே மாலும் பிரமனும் நின்று ஏத்த மன்றில் நடிக்கும் தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#32
சுத்த பரம் முதல் நான்கும் அவற்றுறு நந்நான்கும் தூய ஒளி வடிவாகத் துலங்கும் ஒளி அளித்தே
நித்த பரம்பரம் நடுவாய் முதலாய் அந்தம்-அதாய் நீடிய ஓர் பெரு நிலை மேல் ஆடிய பேர்_ஒளியே
வித்தமுறும் சுத்த பர லோகாண்டம் அனைத்தும் விளக்கமுறச் சுடர் பரப்பி விளங்குகின்ற சுடரே
சத்திய ஞானானந்தச் சித்தர் புகழ் பொதுவில் தனித்த நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#33
சாற்றுகின்ற கலை ஐந்தில் பரம் ஆதி நான்கும் தக்க அவற்றூடு இருந்த நந்நான்கும் நிறைந்தே
ஊற்றுகின்ற அகம் புறம் மேல் நடுக் கீழ் மற்று அனைத்தும் உற்றிடும் தன்மயம் ஆகி ஒளிர்கின்ற ஒளியே
தோற்றுகின்ற கலை உலகம் கலை அண்டம் முழுதும் துலங்குகின்ற சுடர் பரப்பிச் சூழ்கின்ற சுடரே
போற்றுகின்ற மெய் அடியர் களிப்ப நடித்து அருளும் பொதுவில் நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

#34
நாட்டிய ஓங்காரம் ஐந்தில் பரம் முதல் ஓர் நான்கும் நந்நான்கும் ஆறிடத்தும் நயந்து நிறைந்து அருளி
ஈட்டிய செம்பொருள் நிலையோடு இலக்கியமும் விளங்க இனிது நின்று விளங்குகின்ற இன்ப மய ஒளியே
கூட்டிய ஓங்கார உலகு ஓங்கார அண்டம் குடி விளங்கக் கதிர் பரப்பிக் குலவு பெரும் சுடரே
பாட்டியல் கொண்டு அன்பர் எலாம் போற்ற மன்றில் நடிக்கும் பரம நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

#35
மன்னுகின்ற அபர சத்திப் பரம் ஆதி அவற்றுள் வகுத்த நிலை ஆதி எலாம் வயங்க வயின் எல்லாம்
பன்னுகின்ற பற்பலவாம் விசித்திர சித்திரங்கள் பரவி விளங்கிட விளங்கிப் பதிந்து அருளும் ஒளியே
துன் அபர சத்தி உலகு அபர சத்தி அண்டம் சுகம் பெறவே கதிர் பரப்பித் துலங்குகின்ற சுடரே
உன்னும் அன்பர் உளம் களிக்கத் திரு_சிற்றம்பலத்தே ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#36
விளங்கு பர சத்திகளின் பரம் ஆதி அவற்றுள் விரிந்த நிலை ஆதி எலாம் விளங்கி ஒளி வழங்கிக்
களங்கம்_இலாப் பர வெளியில் அந்தம் முதல் நடுத் தான் காட்டாதே நிறைந்து எங்கும் கலந்திடும் பேர்_ஒளியே
உளம் குலவு பர சத்தி உலகம் அண்டம் முழுதும் ஒளி விளங்கச் சுடர் பரப்பி ஓங்கு தனிச் சுடரே
வளம் குலவு திரு_பொதுவில் மா நடம் செய் அரசே மகிழ்ந்து எனது சொல் எனும் ஓர் மாலை அணிந்து அருளே.

#37
தெரிந்த மகா சுத்த பரம் முதலும் அவற்றுள்ளே சிறந்த நிலை ஆதிகளும் தெளிந்து விளங்குறவே
பரிந்த ஒரு சிவ வெளியில் நீக்கம் அற நிறைந்தே பரம சுக மயம் ஆகிப் பரவிய பேர்_ஒளியே
விரிந்த மகா சுத்த பர லோக அண்டம் முழுதும் மெய் அறிவானந்த நிலை விளக்குகின்ற சுடரே
புரிந்த தவப் பயன் ஆகும் பொதுவில் நடத்து அரசே புன்_மொழி என்று இகழாதே புனைந்து மகிழ்ந்து அருளே.

#38
வாய்ந்த பர நாதம் ஐந்தில் பரம் முதலும் அவற்றுள் மன்னு நிலை ஆதிகளும் வயங்கியிட நிறைந்தே
ஆய்ந்த பரசிவ வெளியில் வெளி உருவாய் எல்லாம் ஆகிய தன் இயல் விளக்கி அலர்ந்திடும் பேர்_ஒளியே
தோய்ந்த பர நாத உலகு அண்டம் எலாம் விளங்கச் சுடர் பரப்பி விளங்குகின்ற தூய தனிச் சுடரே
வேய்ந்த மணி மன்றிடத்தே நடம் புரியும் அரசே விளம்புறும் என் சொல்_மாலை விளங்க அணிந்து அருளே.

#39
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே.

#40
காட்சியுறக் கண்களுக்குக் களிக்கும் வண்ணம் உளதாய்க் கையும் மெய்யும் பரிசிக்கச் சுக பரிசத்ததுவாய்ச்
சூழ்ச்சியுற நாசிக்குச் சுகந்தம் செய்குவதாய்த் தூய செவிக்கு இனியதொரு சுக நாதத்ததுவாய்
மாட்சியுற வாய்க்கு இனிய பெரும் சுவை ஈகுவதாய் மறை முடி மேல் பழுத்து எனக்கு வாய்த்த பெரும் பழமே
ஆட்சியுற அருள் ஒளியால் திரு_சிற்றம்பலத்தே ஆடல் புரி அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#41
திரை இலதாய் அழிவு இலதாய்த் தோல் இலதாய்ச் சிறிதும் சினைப்பு இலதாய்ப் பனிப்பு இலதாய்ச் செறிந்திடு கோது இலதாய்
விரை இலதாய்ப் புரை இலதாய் நார் இலதாய் மெய்யே மெய்யாகி அருள் வண்ணம் விளங்கி இன்ப மயமாய்ப்
பரை வெளிக்கப் பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்கக் கிடைத்த தனிப் பழமே
உரை வளர் மா மறைகள் எலாம் போற்ற மணிப் பொதுவில் ஓங்கும் நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#42
கார்ப்பு இலதாய்த் துவர்ப்பு இலதாய் உவர்ப்பு இலதாய்ச் சிறிதும் கசப்பு இலதாய்ப் புளிப்பு இலதாய்க் காய்ப்பு இலதாய்ப் பிறவில்
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அத் தீமை ஒன்றும் இலதாய்ப்
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய்த் தவப் பயனால் கிடைத்த தனிப் பழமே
ஓர்ப்பு_உடையார் போற்ற மணி மன்றிடத்தே வெளியாய் ஓங்கிய பேர்_அரசே என் உரையும் அணிந்து அருளே.

#43
தெற்றியிலே நான் பசித்துப் படுத்து இளைத்த தருணம் திரு_அமுது ஓர் திரு_கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே
ஒற்றியில் போய்ப் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி உவந்து கொடுத்து அருளிய என் உயிர்க்கு இனிதாம் தாயே
பற்றிய என் பற்று அனைத்தும் தன் அடிப் பற்று ஆகப் பரிந்து அருளி எனை ஈன்ற பண்பு உடை எந்தாயே
பெற்றி_உளார் சுற்றி நின்று போற்ற மணிப் பொதுவில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் உவந்து அருளே.

#44
தாய் முதலோரொடு சிறிய பருவம்-அதில் தில்லைத் தலத்திடையே திரை தூக்கத் தரிசித்த போது
வேய் வகை மேல் காட்டாதே என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே
காய் வகை இல்லாது உளத்தே கனிந்த நறும் கனியே கனவிடத்தும் நனவிடத்தும் எனைப் பிரியாக் களிப்பே
தூய்_வகையோர் போற்ற மணி மன்றில் நடம் புரியும் சோதி நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

#45
ஓங்கிய ஓர் துணை இன்றிப் பாதி_இரவு-அதிலே உயர்ந்த ஒட்டு_திண்ணையிலே படுத்த கடைச் சிறியேன்
தூங்கி மிகப் புரண்டு விழத் தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்துக் கீழ்க் கிடத்திய மெய்த் துணையே
தாங்கிய என் உயிர்க்கு இன்பம் தந்த பெருந்தகையே சற்குருவே நான் செய் பெரும் தவப் பயனாம் பொருளே
ஏங்கிய என் ஏக்கம் எலாம் தவிர்த்து அருளிப் பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#46
தனிச் சிறியேன் சிறிது இங்கே வருந்திய போது அதனைத் தன் வருத்தம் எனக் கொண்டு தரியாது அக் கணத்தே
பனிப்புறும் அ வருத்தம் எலாம் தவிர்த்து அருளி மகனே பயம் உனக்கு என் என்று என்னைப் பரிந்து அணைத்த குருவே
இனிப்புறு நல் மொழி புகன்று என் முடி மிசையே மலர்க் கால் இணை அமர்த்தி எனை ஆண்ட என் உயிர் நல் துணையே
கனித்த நறும் கனியே என் கண்ணே சிற்சபையில் கலந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

#47
ஒரு மடந்தை வலிந்து அணைந்து கலந்து அகன்ற பின்னர் உளம் வருந்தி என் செய்தோம் என்று அயர்ந்த போது
பெரு மடம் சேர் பிள்ளாய் என் கெட்டது ஒன்றும் இலை நம் பெரும் செயல் என்று எனைத் தேற்றிப் பிடித்த பெருந்தகையே
திரு_மடந்தைமார் இருவர் என் எதிரே நடிக்கச்செய்து அருளிச் சிறுமை எலாம் தீர்த்த தனிச் சிவமே
கரு மடம் தீர்ந்தவர் எல்லாம் போற்ற மணி மன்றில் காட்டும் நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

#48
இருள் இரவில் ஒரு மூலைத் திண்ணையில் நான் பசித்தே இளைப்புடனே படுத்திருக்க எனைத் தேடி வந்தே
பொருள் உணவு கொடுத்து உண்ணச்செய்வித்தே பசியைப் போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணிய நல் துணையே
மருள் இரவு நீக்கி எல்லா வாழ்வும் எனக்கு அருளி மணி மேடை நடு இருக்க வைத்த ஒரு மணியே
அருள் உணவும் அளித்து என்னை ஆட்கொண்ட சிவமே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#49
நான் பசித்த போது எல்லாம் தான் பசித்தது ஆகி நல் உணவு கொடுத்து என்னைச் செல்வம் உற வளர்த்தே
ஊன் பசித்த இளைப்பு என்றும் தோற்றாத வகையே ஒள்ளிய தெள் அமுது எனக்கு இங்கு உவந்து அளித்த ஒளியே
வான்_பதிக்கும் நெடுமாற்கும் நான்முகற்கும் அரிதாம் வாழ்வு எனக்கே ஆகியுற வரம் அளித்த பதியே
தேன் பரித்த மலர் மணமே திரு_பொதுவில் ஞானத் திரு_நடம் செய் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#50
நடைக்கு உரிய உலகிடை ஓர் நல்ல நண்பன் ஆகி நான் குறித்த பொருள்கள் எலாம் நாழிகை ஒன்று-அதிலே
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய்க் கிளை எனும் பேர்_ஒளியே
படைப்பு முதல் ஐந்தொழிலும் கொள்க எனக் குறித்தே பயம் தீர்த்து என் உள்ளகத்தே அமர்ந்த தனிப் பதியே
கடைப்படும் என் கரத்தில் ஒரு கங்கணமும் தரித்த ககன நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

#51
நீ நினைத்த நன்மை எலாம் யாம் அறிந்தோம் நினையே நேர் காண வந்தனம் என்று என் முடி மேல் மலர் கால்
தான் நிலைக்கவைத்து அருளிப் படுத்திட நான் செருக்கித் தாள்கள் எடுத்து அப்புறத்தே வைத்திடத் தான் நகைத்தே
ஏன் நினைத்தாய் இவ்வளவு சுதந்தரம் என் மகனே எனக்கு இலையோ என்று அருளி எனை ஆண்ட குருவே
தேன் நிலைத்த தீம் பாகே சர்க்கரையே கனியே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#52
மூர்த்திகளும் நெடும் காலம் முயன்றாலும் அறிய முடியாத முடிவு எல்லாம் முன்னிய ஓர் தினத்தே
ஆர்த்தியுடன் அறிய எனக்கு அளித்து அருளி அடியேன் அகத்தினைத் தன் இடம் ஆக்கி அமர்ந்த அருள் குருவே
பார்த்திபரும் விண்ணவரும் பணிந்து மகிழ்ந்து ஏத்தப் பரநாத நாட்டு அரசு பாலித்த பதியே
ஏர்த் திகழும் திரு_பொதுவில் இன்ப நடத்து அரசே என்னுடைய சொல்_மாலை இலங்க அணிந்து அருளே.

#53
இச்சை ஒன்றும் இல்லாதே இருந்த எனக்கு இங்கே இயலுறு சன்மார்க்க நிலைக்கு இச்சையை உண்டாக்கித்
தச்சுறவே பிற முயற்சி செயும்-தோறும் அவற்றைத் தடை ஆக்கி உலகு அறியத் தடை தீர்த்த குருவே
எச்சமய முடிபுகளும் திரு_சிற்றம்பலத்தே இருந்த என எனக்கு அருளி இசைவித்த இறையே
முச்சகமும் புகழ மணி மன்றிடத்தே நடிக்கும் முதல் அரசே என்னுடைய மொழியும் அணிந்து அருளே.

#54
கையாத தீம் கனியே கயக்காத அமுதே கரையாத கற்கண்டே புரையாத கரும்பே
பொய்யாத பெரு வாழ்வே புகையாத கனலே போகாத புனலே உள் வேகாத_காலே
கொய்யாத நறு மலரே கோவாத மணியே குளியாத பெரு முத்தே ஒளியாத வெளியே
செய்யாத பேர்_உதவி செய்த பெருந்தகையே தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#55
எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேல் நிலை நின்று இறங்காத நிறைவே
பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே
நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே
அண்ணா என் அப்பா என் ஐயா என் அரசே அடி_இணைக்கு என் சொல்_மாலை அணிந்து மகிழ்ந்து அருளே.

#56
சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே
ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே
கூ கா என்று எனைக் கூடி எடுக்காதே என்றும் குலையாத வடிவு எனக்கே கொடுத்த தனி அமுதே
மா காதல் உடையார்கள் வழுத்த மணிப் பொதுவில் மா நடம் செய் அரசே என் மாலையும் ஏற்று அருளே.

#57
சுத்த நிலை அனுபவங்கள் தோன்று வெளி ஆகித் தோற்றும் வெளி ஆகி அவை தோற்றுவிக்கும் வெளியாய்
நித்த நிலைகளின் நடுவே நிறைந்த வெளி ஆகி நீ ஆகி நான் ஆகி நின்ற தனிப் பொருளே
சத்தியமே சத்துவமே தத்துவமே நவமே சமரச சன்மார்க்க நிலைத் தலை நின்ற சிவமே
புத்தமுதே சித்தி எலாம் வல்ல திரு_பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

#58
நான் அளக்கும்-தோறும் அதற்கு உற்றது போல் காட்டி நாட்டிய பின் ஒருசிறிதும் அளவில் உறாது ஆகித்
தான் அளக்கும் அளவு-அதிலே முடிவது எனத் தோற்றித் தன் அளவும் கடந்து அப்பால் மன்னுகின்ற பொருளே
வான் அளக்க முடியாதே வான் அனந்தம் கோடி வைத்த பெரு வான் அளக்க வசமோ என்று உரைத்துத்
தேன் அளக்கும் மறைகள் எலாம் போற்ற மணி மன்றில் திகழும் நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#59
திசை அறிய மாட்டாதே திகைத்த சிறியேனைத் தெளிவித்து மணி மாடத் திரு_தவிசில் ஏற்றி
நசை அறியா நல் தவரும் மற்றவரும் சூழ்ந்து நயப்ப அருள் சிவ நிலையை நாட்டவைத்த பதியே
வசை அறியாப் பெரு வாழ்வே மயல் அறியா அறிவே வான் நடுவே இன்ப வடிவாய் இருந்த பொருளே
பசை அறியா மனத்தவர்க்கும் பசை அறிவித்து அருளப் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

#60
என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே
தன் உயிரும் தன் உடலும் தன் பொருளும் எனக்கே தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெரும் சுடரே
மன் உயிருக்குயிர் ஆகி இன்பமுமாய் நிறைந்த மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

#61
மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான் வடிவும் கொடுத்து எனக்கு மணி முடியும் சூட்டிப்
பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பணித்துப் பண்புற என் அகம் புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற-தோறும் எனக்கு உள்ளம் எலாம் இனித்தே ஊறுகின்ற தெள் அமுதே ஒரு தனிப் பேர்_ஒளியே
மின்னுகின்ற மணி மன்றில் விளங்கு நடத்து அரசே மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

#62
நன்மை எலாம் தீமை எனக் குரைத்து ஓடித் திரியும் நாய்க் குலத்தில் கடையான நாய்_அடியேன் இயற்றும்
புன்மை எலாம் பெருமை எனப் பொறுத்து அருளிப் புலையேன் பொய் உரை மெய் உரையாகப் புரிந்து மகிழ்ந்து அருளித்
தன்மை எலாம் உடைய பெரும் தவிசு ஏற்றி முடியும் தரித்து அருளி ஐந்தொழில் செய் சதுர் அளித்த பதியே
இன்மை எலாம் தவிர்ந்து அடியார் இன்பமுறப் பொதுவில் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#63
விழு_குலத்தார் அருவருக்கும் புழுக் குலத்தில் கடையேன் மெய் உரையேன் பொய் உரையை வியந்து மகிழ்ந்து அருளி
முழு_குலத்தோர் முடி சூட்டி ஐந்தொழில் செய் எனவே மொழிந்து அருளி எனை ஆண்ட முதல் தனிப் பேர் ஒளியே
எழுக் குலத்தில் புரிந்த மனக் கழு_குலத்தார்-தமக்கே எட்டாத நிலையே நான் எட்டிய பொன்_மலையே
மழு_குலத்தார் போற்ற மணி மன்றில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

#64
கலைக்கொடி கண்டு அறியாத புலைக் குடியில் கடையேன் கைதவனேன் பொய் தவமும் கருத்தில் உவந்து அருளி
மலைக்கு உயர் மாத் தவிசு ஏற்றி மணி முடியும் சூட்டி மகனே நீ வாழ்க என வாழ்த்திய என் குருவே
புலைக் கொடியார் ஒருசிறிதும் புலப்படக் கண்டு அறியாப் பொன்னே நான் உண்ணுகின்ற புத்தமுதத் திரளே
விலைக்கு அறியா மா மணியே வெறுப்பு அறியா மருந்தே விளங்கு நடத்து அரசே என் விளம்பும் அணிந்து அருளே.

#65
மதம் என்றும் சமயம் என்றும் சாத்திரங்கள் என்றும் மன்னுகின்ற தேவர் என்றும் மற்றவர்கள் வாழும்
பதம் என்றும் பதம் அடைந்த பத்தர் அனுபவிக்கப்பட்ட அனுபவங்கள் என்றும் பற்பலவா விரிந்த
விதம் ஒன்றும் தெரியாதே மயங்கிய என்றனக்கே வெட்டவெளியா அறிவித்திட்ட அருள் இறையே
சதம் ஒன்றும் சுத்த சிவ சன்மார்க்கப் பொதுவில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#66
என் ஆசை எல்லாம் தன் அருள் வடிவம்-தனக்கே எய்திடச்செய்திட்டு அருளி எனையும் உடன் இருத்தித்
தன் ஆசை எல்லாம் என் உள்ளகத்தே வைத்துத் தானும் உடன் இருந்து அருளிக் கலந்த பெருந்தகையே
அன்னா என் ஆர்_உயிரே அப்பா என் அமுதே ஆ வா என்று எனை ஆண்ட தேவா மெய்ச் சிவமே
பொன் ஆரும் பொதுவில் நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என் மொழிப் பூம் கண்ணியும் ஏற்று அருளே.

#67
தன் அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும் தனித்தனி என் வசம் ஆகித் தாழ்ந்து ஏவல் இயற்ற
முன் அரசும் பின் அரசும் நடு அரசும் போற்ற முன்னும் அண்ட பிண்டங்கள் எவற்றினும் எப்பாலும்
என் அரசே என்று உரைக்க எனக்கு முடி சூட்டி இன்ப வடிவு ஆக்கி என்றும் இலங்கவைத்த சிவமே
என் அரசே என் உயிரே என் இரு கண்மணியே இணை அடிப் பொன்_மலர்களுக்கு என் இசையும் அணிந்து அருளே.

#68
பர வெளியே நடு வெளியே உபசாந்த வெளியே பாழ் வெளியே முதலாக ஏழ் வெளிக்கு அப்பாலும்
விரவிய மா மறைகள் எலாம் தனித்தனி சென்று அளந்தும் மெய் அளவு காணாதே மெலிந்து இளைத்துப் போற்ற
உரவில் அவை தேடிய அ வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கிய அ வெளிகளைத் தன்னுள் அடக்கும் வெளியாய்க்
கரை அற நின்று ஓங்குகின்ற சுத்த சிவ வெளியே கனிந்த நடத்து அரசே என் கருத்தும் அணிந்து அருளே.

#69
வெய்யலிலே நடந்து இளைப்பு மேவிய அக்கணத்தே மிகு நிழலும் தண் அமுதும் தந்த அருள் விளைவே
மையல் சிறிது உற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்து வரச்செய்வித்த மாண்பு உடைய நட்பே
கையறவால் கலங்கிய போது அக்கணத்தே போந்து கையறவு தவிர்த்து அருளிக் காத்து அளித்த துரையே
ஐயமுறேல் என்று எனை ஆண்டு அமுது அளித்த பதியே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#70
கொலை_புரிவார் தவிர மற்றை எல்லாரும் நினது குலத்தாரே நீ எனது குலத்து முதல் மகனே
மலைவு அறவே சுத்த சிவ சமரச சன்மார்க்கம் வளர வளர்ந்து இருக்க என வாழ்த்திய என் குருவே
நிலை விழைவார்-தமைக் காக்கும் நித்தியனே எல்லா நிலையும் விளங்குற அருளில் நிறுத்திய சிற்குணனே
புலை அறியாப் பெரும் தவர்கள் போற்ற மணிப் பொதுவில் புனித நடத்து அரசே என் புகலும் அணிந்து அருளே.

#71
உயிர்க் கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக பரிந்து மற்றைப் பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையளவும் இது-தான் நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே
மயர்ப்பு அறு மெய்த் தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

#72
வன்பு_உடையார் கொலை கண்டு புலை_உண்பார் சிறிதும் மரபினர் அன்று ஆதலினால் வகுத்த அவரளவில்
அன்பு உடைய என் மகனே பசி தவிர்த்தல் புரிக அன்றி அருள் செயல் ஒன்றும் செயத் துணியேல் என்றே
இன்புற என்றனக்கு இசைத்த என் குருவே எனை-தான் ஈன்ற தனித் தந்தையே தாயே என் இறையே
துன்பு அறு மெய்த் தவர் சூழ்ந்து போற்று திரு_பொதுவில் தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

#73
கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது
படியில் அதைப் பார்த்து உகவேல் அவர் வருத்தம் துன்பம் பயம் தீர்த்து விடுக எனப் பரிந்து உரைத்த குருவே
நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண
அடியும் உயர் முடியும் எனக்கு அளித்த பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#74
தயை_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் சார்ந்தவரே ஈங்கு அவர்கள்-தம்மோடும் கூடி
நயமுறு நல் அருள் நெறியில் களித்து விளையாடி நண்ணுக என்று எனக்கு இசைத்த நண்புறு சற்குருவே
உயலுறும் என் உயிர்க்கு இனிய உறவே என் அறிவில் ஓங்கிய பேர்_அன்பே என் அன்பிலுறும் ஒளியே
மயல் அறு மெய்த் தவர் சூழ்ந்து போற்றும் மணி மன்றில் மா நடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே.

#75
அருள்_உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித்
தெருள் உடைய அருள் நெறியில் களித்து விளையாடிச் செழித்திடுக வாழ்க எனச் செப்பிய சற்குருவே
பொருள்_உடைய பெரும் கருணைப் பூரண மெய்ச் சிவமே போதாந்த முதல் ஆறும் நிறைந்து ஒளிரும் ஒளியே
மருள்_உடையார்-தமக்கும் மருள் நீக்க மணிப் பொதுவில் வயங்கு நடத்து அரசே என் மாலையும் ஏற்று அருளே.

#76
வெம் மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச் சிறிய பருவத்தே வியந்து நினை நமது
பெம்மான் என்று அடி குறித்துப் பாடும் வகை புரிந்த பெருமானே நான் செய்த பெரும் தவ மெய்ப் பயனே
செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெரு நெறியில் செலுத்திய நல் துணையே
அம்மானே என் ஆவிக்கான பெரும் பொருளே அம்பலத்து என் அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#77
ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து
நீள் நவமாம் தத்துவப் பொன் மாடம் மிசை ஏற்றி நிறைந்த அருள் அமுது அளித்து நித்தம் உற வளர்த்து
மாண் உற எல்லா நலமும் கொடுத்து உலகம் அறிய மணி முடியும் சூட்டிய என் வாழ் முதலாம் பதியே
ஏண் உறு சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#78
பால் மறுத்து விளையாடும் சிறுபருவத்திடையே பகரும் உலகு இச்சை ஒன்றும் பதியாது என் உளத்தே
மால் மறுத்து விளங்கு திரு_ஐந்தெழுத்தே பதியவைத்த பெரு வாழ்வே என் வாழ்வில் உறும் சுகமே
மீன் மறுத்துச் சுடர் மயமாய் விளங்கியதோர் விண்ணே விண் அனந்தம் உள் அடங்க விரிந்த பெருவெளியே
ஊன் மறுத்த பெரும் தவருக்கு ஒளி வடிவம் கொடுத்தே ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#79
மெய்ச் சுகமும் உயிர்ச் சுகமும் மிகும் கரணச் சுகமும் விளங்கு பதச் சுகமும் அதன் மேல் வீட்டுச் சுகமும்
எச்சுகமும் தன்னிடத்தே எழுந்த சுகம் ஆக எங்கணும் ஓர் நீக்கம் அற எழுந்த பெரும் சுகமே
அ சுகமும் அடை அறிவும் அடைந்தவரும் காட்டாது அது தானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே
பொய்ச் சுகத்தை விரும்பாத புனிதர் மகிழ்ந்து ஏத்தும் பொது நடத்து என் அரசே என் புகலும் அணிந்து அருளே.

#80
அண்ட வகை எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் அமைந்த உயிர் எவ்வளவோ அவ்வளவும் அவைகள்
கண்ட பொருள் எவ்வளவோ அவ்வளவும் அவற்றில் கலந்த கலப்பு அவ்வளவோ அவ்வளவும் நிறைந்தே
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்
கொண்டதுவாய் விளங்குகின்ற சுத்த சிவ மயமே குலவு நடத்து அரசே என் குற்றமும் கொண்டு அருளே.

#81
சத்திய நான்முகர் அனந்தர் நாரணர் மற்று உளவாம் தலைவர் அவரவர் உலகில் சார்ந்தவர்கள் பிறர்கள்
இத் திசை அத் திசையாக இசைக்கும் அண்டப் பகுதி எத்தனையோ கோடிகளில் இருக்கும் உயிர்த் திரள்கள்
அத்தனைபேர் உண்டாலும் அணுவளவும் குறையாது அருள் வெளியில் ஒளி வடிவாய் ஆனந்த மயமாய்ச்
சுத்த சிவ அனுபவமாய் விளங்கிய தெள் அமுதே தூய நடத்து அரசே என் சொல்லும் அணிந்து அருளே.

#82
பொறி கரணம் முதல் பலவாம் தத்துவமும் அவற்றைப் புரிந்து இயக்கி நடத்துகின்ற பூரணரும் அவர்க்குச்
செறியும் உபகாரிகளாம் சத்திகளும் அவரைச் செலுத்துகின்ற சத்தர்களும் தன் ஒளியால் விளங்க
அறிவறிவாய் அ அறிவுக்கு அறிவாய் எவ்விடத்தும் ஆனது வாய்த்தானதுவாய் அதுஅதுவாய் நிறைந்தே
நெறி வழங்கப் பொதுவில் அருள் திரு_நடம் செய் அரசே நின் அடியேன் சொல்_மாலை நிலைக்க அணிந்து அருளே.

#83
உண்ணுகின்ற ஊண் வெறுத்து வற்றியும் புற்று எழுந்தும் ஒரு கோடிப் பெரும் தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய்ச் சிறிய பயல்களினும் சிறியேற்குக் கிடைத்த பெரும் பதியே
நண்ணுகின்ற பெரும் கருணை அமுது அளித்து என் உளத்தே நான் ஆகித் தான் ஆகி அமர்ந்து அருளி நான்-தான்
எண்ணுகின்றபடி எல்லாம் அருள்கின்ற சிவமே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#84
கொள்ளை வினைக் கூட்டு உறவால் கூட்டிய பல் சமயக் கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
கள்ளம் உறும் அக் கலைகள் காட்டிய பல் கதியும் காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என நன்கு அறிவித்து இங்கு எனையே பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட பதியே
தள்ள அரிய மெய் அடியார் போற்ற மணி மன்றில் தனி நடம் செய் அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#85
நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்ற கலைச் சரிதம் எலாம் பிள்ளை_விளையாட்டே
மேல் வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இலை நீ விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே
கால் வருணம் கலையாதே வீணில் அலையாதே காண்பன எல்லாம் எனக்குக் காட்டிய மெய்ப்பொருளே
மால் வருணம் கடந்தவரை மேல் வருணத்து ஏற்ற வயங்கு நடத்து அரசே என் மாலை அணிந்து அருளே.

#86
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே என் ஆணை என் மகனே இரண்டு இல்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடு சேர்த்து இரண்டு எனக் கண்டு அறி நீ திகைப்பு அடையேல் என்று எனக்குச் செப்பிய சற்குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்தது போல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்கு நிறை பொருளே
ஒவ்விடச் சிற்சபை இடத்தும் பொன்_சபையின் இடத்தும் ஓங்கு நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#87
இயல் வேதாகமங்கள் புராணங்கள் இதிகாசம் இவை முதலா இந்திரசாலம் கடையா உரைப்பார்
மயல் ஒரு நூல் மாத்திரம்-தான் சாலம் என அறிந்தார் மகனே நீ நூல் அனைத்தும் சாலம் என அறிக
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என எனக்கே திருவுளம்பற்றிய ஞான தேசிக மா மணியே
அயல் அறியா அறிவு_உடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#88
தோன்றிய வேதாகமத்தைச் சாலம் என உரைத்தேம் சொற்பொருளும் இலக்கியமும் பொய் எனக் கண்டு அறியேல்
ஊன்றிய வேதாகமத்தின் உண்மை நினக்கு ஆகும் உலகு அறி வேதாகமத்தைப் பொய் எனக் கண்டு உணர்வாய்
ஆன்ற திரு_அருள் செங்கோல் நினக்கு அளித்தோம் நீயே ஆள்க அருள் ஒளியால் என்று அளித்த தனிச் சிவமே
ஏன்ற திரு_அமுது எனக்கும் ஈந்த பெரும் பொருளே இலங்கு நடத்து அரசே என் இசையும் அணிந்து அருளே.

#89
நான்முகர் நல் உருத்திரர்கள் நாரணர் இந்திரர்கள் நவில் அருகர் புத்தர் முதல் மதத் தலைவர் எல்லாம்
வான் முகத்தில் தோன்றி அருள் ஒளி சிறிதே அடைந்து வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியே
தேன் முகந்து உண்டவர் எனவே விளையாடாநின்ற சிறுபிள்ளைக் கூட்டம் என அருள்_பெரும்_சோதியினால்
தான் மிகக் கண்டு அறிக எனச் சாற்றிய சற்குருவே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#90
தவறாத வேதாந்த சித்தாந்த முதலாச் சாற்றுகின்ற அந்தம் எலாம் தனித்து உரைக்கும் பொருளை
இவறாத சுத்த சிவ சன்மார்க்க நிலையில் இருந்து அருளாம் பெரும் சோதி கொண்டு அறிதல் கூடும்
எவராலும் பிறிது ஒன்றால் கண்டு அறிதல் கூடாது என் ஆணை என் மகனே அருள்_பெரும்_சோதியை-தான்
தவறாது பெற்றனை நீ வாழ்க என்ற பதியே சபையில் நடத்து அரசே என் சாற்றும் அணிந்து அருளே.

#91
ஐயமுறேல் என் மகனே இப் பிறப்பில்-தானே அடைவது எலாம் அடைந்தனை நீ அஞ்சலை என்று அருளி
வையம் மிசைத் தனி இருத்தி மணி முடியும் சூட்டி வாழ்க என வாழ்த்திய என் வாழ்க்கை முதல் பொருளே
துய்ய அருள்_பெரும்_சோதி சுத்த சிவ வெளியே சுக மயமே எல்லாம் செய் வல்ல தனிப் பதியே
உய்யும் நெறி காட்டி மணி மன்றிடத்தே நடிக்கும் ஒருமை நடத்து அரசே என் உரையும் அணிந்து அருளே.

#92
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப் பதியே சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் மா நடத்து என் அரசே என் மாலையும் ஏற்று அருளே.

#93
சிற்பதமும் தற்பதமும் பொன்_பதத்தே காட்டும் சிவ பதமே ஆனந்தத் தேம் பாகின் பதமே
சொல் பதங்கள் கடந்தது அன்றி முப்பதமும் கடந்தே துரிய பதமும் கடந்த பெரிய தனிப் பொருளே
நல் பதம் என் முடி சூட்டிக் கற்பது எலாம் கணத்தே நான் அறிந்து தானாக நல்கிய என் குருவே
பல் பதத்துத் தலைவர் எலாம் போற்ற மணி மன்றில் பயிலும் நடத்து அரசே என் பாடல் அணிந்து அருளே.

#94
ஆதியிலே எனை ஆண்டு என் அறிவகத்தே அமர்ந்த அப்பா என் அன்பே என் ஆர்_உயிரே அமுதே
வீதியிலே விளையாடித் திரிந்த பிள்ளைப் பருவம் மிகப் பெரிய பருவம் என வியந்து அருளி அருளாம்
சோதியிலே விழைவுறச்செய்து இனிய மொழி மாலை தொடுத்திடச்செய்து அணிந்துகொண்ட துரையே சிற்பொதுவாம்
நீதியிலே நிறைந்த நடத்து அரசே இன்று அடியேன் நிகழ்த்திய சொல்_மாலையும் நீ திகழ்த்தி அணிந்து அருளே.

#95
கணக்கு_வழக்கு அது கடந்த பெருவெளிக்கு நடுவே கதிர் பரப்பி விளங்குகின்ற கண் நிறைந்த சுடரே
இணக்கம் உறும் அன்பர்கள்-தம் இதய வெளி முழுதும் இனிது விளங்குற நடுவே இலங்கும் ஒளி விளக்கே
மணக்கும் நறு மணமே சின்மயமாய் என் உளத்தே வயங்கு தனிப் பொருளே என் வாழ்வே என் மருந்தே
பிணக்கு அறியாப் பெரும் தவர்கள் சூழ மணி மன்றில் பெரு நடம் செய் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே.

#96
அடிச் சிறியேன் அச்சம் எலாம் ஒரு கணத்தே நீக்கி அருள் அமுதம் மிக அளித்து ஓர் அணியும் எனக்கு அணிந்து
கடிக் கமலத்து அயன் முதலோர் கண்டு மிக வியப்பக் கதிர் முடியும் சூட்டி எனைக் களித்து ஆண்ட பதியே
வடித்த மறை முடி வயங்கும் மா மணிப் பொன் சுடரே மனம் வாக்குக் கடந்த பெரு வான் நடுவாம் ஒளியே
படி_தலத்தார் வான்_தலத்தார் பரவியிடப் பொதுவில் பரிந்த நடத்து அரசே என் பாட்டும் அணிந்து அருளே.

#97
எத்துணையும் சிறியேனை நான்முகன் மால் முதலோர் ஏற அரிதாம் பெரு நிலை மேல் ஏற்றி உடன் இருந்தே
மெய்த் துணையாம் திரு_அருள் பேர்_அமுதம் மிக அளித்து வேண்டியவாறு அடி நாயேன் விளையாடப் புரிந்து
சுத்த சிவ சன்மார்க்க நெறி ஒன்றே எங்கும் துலங்க அருள்செய்த பெரும் சோதியனே பொதுவில்
சித்து உருவாய் நடம் புரியும் உத்தம சற்குருவே சிற்சபை என் அரசே என் சிறுமொழி ஏற்று அருளே.

#98
இருந்த_இடம் தெரியாதே இருந்த சிறியேனை எவ்வுலகில் உள்ளவரும் ஏத்திட மேல் ஏற்றி
அரும் தவரும் அயன் முதலாம் தலைவர்களும் உளத்தே அதிசயிக்கத் திரு_அமுதும் அளித்த பெரும் பதியே
திருந்து மறை முடிப் பொருளே பொருள் முடிபில் உணர்ந்தோர் திகழ முடிந்து உள் கொண்ட சிவபோகப் பொருளே
பெரும் தவர்கள் போற்ற மணி மன்றில் நடம் புரியும் பெரு நடத்து என் அரசே என் பிதற்றும் அணிந்து அருளே.

#99
குணம் அறியேன் செய்த பெரும் குற்றம் எலாம் குணமாக் கொண்டு அருளி என்னுடைய குறிப்பு எல்லாம் முடித்து
மணமுறு பேர்_அருள் இன்ப அமுதம் எனக்கு அளித்து மணி முடியும் சூட்டி எனை வாழ்க என வாழ்த்தித்
தணவில் இலாது என் உளத்தே தான் கலந்து நானும் தானும் ஒரு வடிவு ஆகித் தழைத்து ஓங்கப் புரிந்தே
அணவுறு பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

#100
தலை_கால் இங்கு அறியாதே திரிந்த சிறியேனைத் தான் வலிந்து ஆட்கொண்டு அருளித் தடை முழுதும் தவிர்த்தே
மலைவு அறு மெய் அறிவு அளித்தே அருள் அமுதம் அருத்தி வல்லப சத்திகள் எல்லாம் மருவியிடப் புரிந்து
நிலையுறவே தானும் அடியேனும் ஒரு வடிவாய் நிறைய நிறைவித்து உயர்ந்த நிலை-அதன் மேல் அமர்த்தி
அலர் தலைப் பேர் அருள் சோதி அரசு கொடுத்து அருளி ஆடுகின்ற அரசே என் அலங்கல் அணிந்து அருளே.

@61. தாய் கூறல்

#1
காதல் கைம்மிகுந்தது என் செய்வேன் எனை நீ கண்டுகொள் கணவனே என்றாள்
ஓதல் உன் புகழே அன்றி நான் ஒன்றும் உவந்திலேன் உண்மை ஈது என்றாள்
பேதை நான் பிறிது ஓர் புகல்_இலேன் செய்த பிழை எலாம் பொறுத்து அருள் என்றாள்
மா தயவு உடைய வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#2
மயங்கினேன் எனினும் வள்ளலே உனை நான் மறப்பனோ கனவினும் என்றாள்
உயங்கினேன் உன்னை மறந்திடில் ஐயோ உயிர் தரியாது எனக்கு என்றாள்
கயங்கினேன் கயங்கா வண்ணம் நின் கருணை_கடல் அமுது அளித்து அருள் என்றாள்
வயங்கு சிற்சபையில் வரதனே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#3
அஞ்சல் என்று எனை இத் தருணம் நீ வந்தே அன்பினால் அணைத்து அருள் என்றாள்
பஞ்சு போல் பறந்தேன் அய்யவோ துன்பம் பட முடியாது எனக்கு என்றாள்
செஞ்செவே எனது கருத்து எலாம் உனது திருவுளம் அறியுமே என்றாள்
வஞ்சகம் அறியா வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#4
பூமியோ பொருளோ விரும்பிலேன் உன்னைப் புணர்ந்திட விரும்பினேன் என்றாள்
காமி என்று எனை நீ கைவிடேல் காமக் கருத்து எனக்கு இல்லை காண் என்றாள்
சாமி நீ வரவு தாழ்த்திடில் ஐயோ சற்றும் நான் தரித்திடேன் என்றாள்
மா மிகு கருணை வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#5
அடுத்து நான் உன்னைக் கலந்து அனுபவிக்க ஆசை மேல் பொங்கியது என்றாள்
தடுத்திட முடியாது இனிச் சிறுபொழுதும் தலைவனே தாழ்த்திடேல் என்றாள்
தொடுத்து உலகுள்ளார் தூற்றுதல் வாயால் சொல முடியாது எனக்கு என்றாள்
மடுத்த வெம் துயர் தீர்த்து எடுத்து அருள் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#6
தடுத்திடல் வல்லார் இல்லை நின் அருளைத் தருக நல் தருணம் ஈது என்றாள்
கொடுத்திடில் ஐயோ நின் அருள் பெருமை குறையுமோ குறைந்திடாது என்றாள்
நடுத் தயவு_இலர் போன்று இருத்தல் உன்றனக்கு ஞாயமோ நண்பனே என்றாள்
வடுத் தினும் வாயேன்_அல்லன் நான் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#7
பொன் செய் நின் வடிவைப் புணர்ந்திட நினைத்தேன் பொங்கியது ஆசை மேல் என்றாள்
என் செய்வேன் எனையும் விழுங்கியது ஐயோ என்னளவு அன்று காண் என்றாள்
கொன் செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள்
வன் செயும் அவர் வாய் ஓய்வது என்று என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#8
மெலிந்த என் உளத்தை அறிந்தனை தயவு மேவிலை என்னையோ என்றாள்
நலிந்த போது இன்னும் பார்த்தும் என்று இருத்தல் நல்லவர்க்கு அடுப்பதோ என்றாள்
மலிந்த இ உலகர் வாய்ப்பதர் தூற்ற வைத்தல் உன் மரபு அல என்றாள்
வலிந்து எனைக் கலந்த வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#9
ஒன்று_இலேன் பிறிது ஒன்று உன் அருள் சோதி ஒன்றுற ஒன்றினேன் என்றாள்
நன்று_இலேன் எனினும் நின் திரு_அடியை நம்பினேன் நயந்து அருள் என்றாள்
குன்றிலே இருத்தற்கு உரிய நான் துயரக் குழியிலே இருந்திடேன் என்றாள்
மன்றிலே நடம் செய் வள்ளலே என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

#10
ஆடிய பாதத்து அழகன் என்றனைத் தான் அன்பினால் கூடினன் என்றாள்
கோடி மா தவங்கள் புரியினும் பிறர்க்குக் கூடுதல் கூடுமோ என்றாள்
பாடியபடி என் கருத்து எலாம் நிரப்பிப் பரிசு எலாம் புரிந்தனன் என்றாள்
வாடிய உளமும் தளிர்த்தனன் என்றாள் வரத்தினால் நான் பெற்ற மகளே.

@62. பாங்கி தலைவி பெற்றி உரைத்தல்

#1
அ மதவேள் கணை ஒன்றோ ஐ கணையும் விடுத்தான் அருள் அடையும் ஆசையினால் ஆர்_உயிர்-தான் பொறுத்தாள்
இ மதமோ சிறிதும் இலாள் கலவியிலே எழுந்த ஏக சிவ போக வெள்ளத்து இரண்டுபடாள் எனினும்
எ மதமோ எ குலமோ என்று நினைப்பு உளதேல் இவள் மதமும் இவள் குலமும் எல்லாமும் சிவமே
சம்மதமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

#2
அங்கு அல் இட்ட களத்து அழகர் அம்பலவர் திரு_தோள் ஆசை எனும் பேய் அகற்றல் ஆவது_இலை எனவே
பொங்கல் இட்ட தாயர் முகம் தொங்கலிட்டுப் போனார் பூவை முகம் பூ முகம் போல் பூரித்து மகிழ்ந்தாள்
எங்கள் இட்டம் திரு_அருள் மங்கலம் சூட்டல் அன்றி இரண்டுபடாது ஒன்றாக்கி இன்பு அடைவித்திடவே
தங்கள் இட்டம் யாது திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

#3
பனம் பழமே எனினும் இந்தப் பசி தவிர்த்தால் போதும் பாரும் எனப் பகர்கின்ற பாவையர் போல் பகராள்
இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம்
மனம் பழமோ காயோ என்று அறிந்து வர விடுத்தாள் மற்றவர் போல் காசு பணத்து ஆசைவைத்து வருந்தாள்
தனம் பழமோ தேவர் திருவாய்_மலர வேண்டும் சபையில் நடம் புரிகின்ற தனிப் பெரிய துரையே.

#4
புல்லவரே பொய் உலக போகம் உற விழைவார் புண்ணியரே சிவ போகம் பொருந்துதற்கு விழைவார்
கல்லவரே மணி இவரே என்று அறிந்தாள் அதனால் கனவிடையும் பொய் உறவு கருதுகிலாள் சிறிதும்
நல்லவரே எனினும் உமை நாடாரேல் அவரை நன்கு மதியாள் இவளை நண்ண எண்ணம் உளதோ
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே.

#5
தத்துவரும் தத்துவம் செய் தலைவர்களும் பிறரும் தனித்தனியே வலிந்து வந்து தன் எதிர்நிற்கின்றார்
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள் இரு விழிகள் நீர் சொரிவாள் என் உயிர்_நாயகனே
ஒத்து உயிரில் கலந்துகொண்ட உடையாய் என்று உமையே ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது
சித்தம் எது தேவர் திருவாய்_மலர வேண்டும் சிற்சபையில் பொன்_சபையில் திகழ் பெரிய துரையே.

#6
அன்னையைக் கண்டு அம்மா நீ அம்பலத்து என் கணவர் அடியவளேல் மிக வருக அல்லள் எனில் இங்கே
என்னை உனக்கு இருக்கின்றது ஏகுக என்று உரைப்பாள் இச்சை எலாம் உம்மிடத்தே இசைந்தனள் இங்கு இவளை
முன்னையள் என்று எண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் முடுகி உயிர்விடுத்திடுவாள் கடுகி வரல் உளதேல்
மன்னவரே உமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே.

#7
கரவு அறியா அம்பலத்து என் கணவரைக் கண்டு அலது கண் துயிலேன் உண்டி கொளேன் களித்து அமரேன் என்பாள்
இரவு அறியாள் பகல் அறியாள் எதிர்வருகின்றவரை இன்னவர் என்று அறியாள் இங்கு இன்னல் உழக்கின்றாள்
வரவு எதிர்பார்த்து உழல்கின்றாள் இவள்அளவில் உமது மனக் கருத்தின் வண்ணம் எது வாய்_மலர வேண்டும்
விரவும் ஒரு கணமும் இனித் தாழ்க்கில் உயிர் தரியாள் மெய்ப் பொதுவில் நடம் புரியும் மிகப் பெரிய துரையே.

#8
ஊர் ஆசை உடல் ஆசை உயிர் பொருளின் ஆசை உற்றவர் பெற்றவர் ஆசை ஒன்றும் இலாள் உமது
பேர்_ஆசைப் பேய்பிடித்தாள் கள் உண்டு பிதற்றும் பிச்சி எனப் பிதற்றுகின்றாள் பிறர் பெயர் கேட்டிடிலோ
நாராசம் செவி புகுந்தால் என்ன நலிகின்றாள் நாடு அறிந்தது இது எல்லாம் நங்கை இவள்அளவில்
நீர் ஆசைப்பட்டது உண்டேல் வாய்_மலர வேண்டும் நித்திய மா மணி மன்றில் நிகழ் பெரிய துரையே.

#9
என் உயிரில் கலந்துகொண்டார் வரில் அவர்-தாம் இருக்க இடம் புனைக என்கின்றாள் இச்சை மயம் ஆகித்
தன் உயிர் தன் உடல் மறந்தாள் இருந்து அறியாள் படுத்தும் தரித்து அறியாள் எழுந்தெழுந்து தனித்து ஒரு சார் திரிவாள்
அன்னம் உண அழைத்தாலும் கேட்பது_இலாள் உலகில் அணங்கு_அனையார் அதிசயிக்கும் குணங்கள் பல பெற்றாள்
மின் இவளை விழைவது உண்டேல் வாய்_மலர வேண்டும் மெய்ப் பொதுவில் நடம் புரியும் மிகப் பெரிய துரையே.

#10
அம்பலத்தே நடம் புரியும் எனது தனித் தலைவர் அன்புடன் என் உளம் கலந்தே அருள்_பெரும்_சோதியினால்
தம்பலத்தே பெரும் போகம் தந்திடுவார் இது-தான் சத்தியம் சத்தியம் அதனால் சார்ந்து அவர்-தாம் இருக்க
எம்பலத்தே மலர் அணையைப் புனைக எனப் பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம்
செம்பலத்தே உறு தருணம் வாய்_மலர வேண்டும் சிற்சபை பொன்_சபை ஓங்கித் திகழ் பெரிய துரையே.

@63. தலைவி வருந்தல்

#1
பருவம் இலாக் குறையாலோ பகுதி வகையாலோ பழக்கம் இலாமையினாலோ படிற்று வினையாலோ
இரு வகை மாயையினாலோ ஆணவத்தினாலோ என்னாலோ பிறராலோ எதனாலோ அறியேன்
சருவல் ஒழிந்து என் மனமாம் பாங்கி பகை ஆனாள் தனித்த பரை எனும் வளர்த்த தாயும் முகம் பாராள்
நிருவ மடப் பெண்கள் எலாம் வலது கொழிக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

#2
அம்பலத்தே திரு_நடம் செய் அடி_மலர் என் முடி மேல் அணிந்திட முன் சில சொன்னேன் அதனாலோ அன்றி
எம்பலத்தே எம் இறைவன் என்னை மணம் புரிவான் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வம்பு இசைத்தேன் என எனது பாங்கி பகை ஆனாள் வளர்த்தெடுத்த தனித் தாயும் மலர்ந்து முகம் பாராள்
நிம்ப மரக் கனி ஆனார் மற்றையர்கள் எல்லாம் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

#3
கண் உறங்கேன் உறங்கினும் என் கணவரொடு கலக்கும் கனவு அன்றி இலை என்றேன் அதனாலோ அன்றி
எண் உறங்கா நிலவில் அவர் இருக்கும் இடம் புகுவேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பெண் அடங்காள் எனத் தோழி பேசி முகம் கடுத்தாள் பெரும் தயவால் வளர்த்தவளும் வருந்து அயலாள் ஆனாள்
மண் அடங்காப் பழி கூறி மற்றவர்கள் இருந்தார் வள்ளல் நடராயர் திருவுள்ளம் அறிந்திலனே.

#4
எல்லாம் செய் வல்ல துரை என் கணவர் என்றால் எனக்கும் ஒன்று நினக்கும் ஒன்றா என்ற அதனாலோ
இல்லாமை எனக்கு இல்லை எல்லார்க்கும் தருவேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கல்லார் போல் என்னை முகம் கடுத்துநின்றாள் பாங்கி களித்து எடுத்து வளர்த்தவளும் கலந்தனள் அங்கு உடனே
செல்லாமை சில புகன்று சிரிக்கின்றார் மடவார் சித்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#5
இச்சை எலாம் வல்ல துரை என்னை மணம் புரிந்தார் ஏடி எனக்கு இணை எவர்கள் என்ற அதனாலோ
எச் சமயத் தேவரையும் இனி மதிக்க_மாட்டேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நச்சு மரக் கனி போலே பாங்கி மனம் கசந்தாள் நயந்து எடுத்து வளர்த்தவளும் கயந்து எடுப்புப் புகன்றாள்
அச்சம்_இலாள் இவள் என்றே அலர் உரைத்தார் மடவார் அண்ணல் நடராயர் திரு_எண்ணம் அறிந்திலனே.

#6
வஞ்சம் இலாத் தலைவருக்கே மாலையிட்டேன் எல்லா வாழ்வும் என்றன் வாழ்வு என்றேன் அதனாலோ அன்றி
எஞ்சல் உறேன் மற்றவர் போல் இறந்து பிறந்து உழலேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
அஞ்சு முகம் காட்டிநின்றாள் பாங்கி எனை வளர்த்த அன்னையும் அப்படி ஆகி என்னை முகம் பாராள்
நெஞ்சு உரத்த பெண்கள் எலாம் நீட்டி நகைக்கின்றார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

#7
அன்னம் உண அழைத்தனர் நான் ஆடும் மலர் அடித்தேன் அருந்துகின்றேன் என உரைத்தேன் அதனாலோ அன்றி
என் உயிர்_நாயகனொடு நான் அணையும் இடம் எங்கே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
துன்னு நெறிக்கு ஒரு துணையாம் தோழி மனம் கசந்தாள் துணிந்து எடுத்து வளர்த்தவளும் சோர்ந்த முகம் ஆனாள்
நென்னல் ஒத்த பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நிபுணர் எங்கள் நடராயர் நினைவை அறிந்திலனே.

#8
பொது நடம் செய் துரை முகத்தே தளதள என்று ஒளிரும் புன்னகை என் பொருள் என்றேன் அதனாலோ அன்றி
இதுவரையும் வரக் காணேன் தடை செய்தார் எவரோ எனப் புகன்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புது முகம் கொண்டு எனது தனித் தோழி மனம் திரிந்தாள் புரிந்து எடுத்து வளர்த்தவளும் புதுமை சில புகன்றாள்
மது உகந்து களித்தவர் போல் பெண்கள் நொடிக்கின்றார் வள்ளல் நடராயர் திருவுள்ளம் அறிந்திலனே.

#9
கண் கலந்த கள்வர் என்னைக் கை கலந்த தருணம் கரணம் அறிந்திலன் என்றேன் அதனாலோ அன்றி
எண் கலந்த போகம் எலாம் சிவ போகம்-தனிலே இருந்தது என்றேன் இதனாலோ எதனாலோ அறியேன்
விண் கலந்த மதி முகம்-தான் வேறுபட்டாள் பாங்கி வியந்து எடுத்து வளர்த்தவளும் வேறு சில புகன்றாள்
பண் கலந்த மொழி மடவார் பழி கூறலானார் பத்தர் புகழ் நடராயர் சித்தம் அறிந்திலனே.

#10
மாடம் மிசை ஓங்கு நிலா மண்டபத்தே மகிழ்ந்தேன் வள்ளலொடு நான் என்றேன் அதனாலோ அன்றி
ஈடு அறியாச் சுகம் புகல என்னாலே முடியாது என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
ஏடு அவிழ் பூம் குழல் கோதைத் தோழி முகம் புலர்ந்தாள் எனை எடுத்து வளர்த்தவளும் இரக்கம்_இலாள் ஆனாள்
நாடு அறியப் பெண்கள் எலாம் கூடி நகைக்கின்றார் நல்ல நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே.

#11
கற்பூரம் மணக்கின்றது என் மேனி முழுதும் கணவர் மணம் அது என்றேன் அதனாலோ அன்றி
இல் பூவை அறியுமடி நடந்த வண்ணம் எல்லாம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பொன் பூவின் முகம் வியர்த்தாள் பாங்கி அவளுடனே புரிந்து எடுத்து வளர்த்தவளும் கரிந்த முகம் படைத்தாள்
சொல்_பூவைத் தொடுக்கின்றார் கால்கள் களையாதே துன்னு நடராயர் கருத்து எல்லை அறிந்திலனே.

#12
மன்னு திரு_சபை நடுவே மணவாளருடனே வழக்காடி வலது பெற்றேன் என்ற அதனாலோ
இன்னும் அவர் வதன இளநகை காணச் செல்வேன் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மின்னும் இடைப் பாங்கி ஒருவிதமாக நடந்தாள் மிகப் பரிவால் வளர்த்தவளும் வெய்து உயிர்த்துப் போனாள்
அன்ன நடைப் பெண்கள் எலாம் சின்ன_மொழி புகன்றார் அத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#13
கள்_உண்டாள் எனப் புகன்றீர் கனகசபை நடுவே கண்டது அலால் உண்டது இலை என்ற அதனாலோ
எள்ளுண்ட மற்றவர் போல் என்னை நினையாதீர் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
உள்ளுண்ட மகிழ்ச்சி எலாம் உவட்டி நின்றாள் பாங்கி உவந்து வளர்த்தவளும் என்-பால் சிவந்த கண்ணள் ஆனாள்
துள்ளுண்ட பெண்கள் எலாம் சூழ்ந்து நொடிக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#14
காரிகையீர் எல்லீரும் காண வம்-மின் எனது கணவர் அழகினை என்றேன் அதனாலோ அன்றி
ஏர் இகவாத் திரு_உருவை எழுத முடியாதே என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கார் இகவாக் குழல் சோரக் கடுத்து எழுந்தாள் பாங்கி கண் பொறுத்து வளர்த்தவளும் புண் பொறுத்தாள் உளத்தே
நேர் இகவாப் பெண்கள் மொழிப் போர் இகவாது எடுத்தார் நிருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

#15
கண்ணேறு படும் என நான் அஞ்சுகின்றேன் எனது கணவர் வடிவு-அது காணற்கு என்ற அதனாலோ
எண்ணாத மனத்தவர்கள் காண விழைகின்றார் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நண்ணாரில் கடுத்த முகம் தோழி பெற்றாள் அவளை நல்கி எனை வளர்த்தவளும் மல்கிய வன்பு அடுத்தாள்
பெண் ஆயம் பலபலவும் பேசுகின்றார் இங்கே பெரிய நடராயர் உள்ளப் பிரியம் அறிந்திலனே.

#16
கற்பூரம் கொணர்ந்து வம்-மின் என் கணவர் வந்தால் கண்ணெச்சில் கழிக்க என்றேன் அதனாலோ அன்றி
எல் பூத நிலை அவர்-தம் திரு_அடித் தாமரைக் கீழ் என்று சொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வன் பூத வனம் போன்றாள் பாங்கி அவள்-தனை முன் மகிழ்ந்து பெற்று இங்கு எனை வளர்த்தாள் வினை வளர்த்தாள் ஆனாள்
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே.

#17
மனை அணைந்த மலர்_அணை மேல் எனை அணைந்த போது வடிவு சுக வடிவு ஆனேன் என்ற அதனாலோ
இனைவு அறியேன் முன் புரிந்த பெரும் தவம் என் புகல்வேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
புனை முகம் ஓர் கரி முகமாய்ப் பொங்கி நின்றாள் பாங்கி புழுங்கு மனத்தவளாகி அழுங்குகின்றாள் செவிலி
பனை உலர்ந்த ஓலை எனப் பெண்கள் ஒலிக்கின்றார் பண்ணவர் என் நடராயர் எண்ணம் அறிந்திலனே.

#18
தாழ் குழலீர் எனைச் சற்றே தனிக்கவிட்டால் எனது தலைவரைக் காண்குவல் என்றேன் அதனாலோ அன்றி
ஏழ் கடலில் பெரிது அன்றோ நான் பெற்ற இன்பம் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கூழ் கொதிப்பது எனக் கொதித்தாள் பாங்கி எனை வளர்த்த கோதை மருண்டு ஆடுகின்ற பேதை எனல் ஆனாள்
சூழ் மடந்தைமார்கள் எலாம் தூற்றி நகைக்கின்றார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#19
தனித் தலைவர் வருகின்ற தருணம் இது மடவீர் தனிக்க எனை விடு-மின் என்றேன் அதனாலோ அன்றி
இனித்த சுவை எல்லாம் என் கணவர் அடிச் சுவையே என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
பனித்த குளிர் காலத்தே சனித்த சலம் போன்றாள் பாங்கி எனை வளர்த்தவளும் தூங்கு முகம் கொண்டாள்
கனித்த பழம் விடுத்து மின்னார் காய் தின்னுகின்றார் கருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

#20
அரும் பொன்_அனையார் எனது துரை வரும் ஓர் சமயம் அகல நின்-மின் அணங்கு_அனையீர் என்ற அதனாலோ
இரும்பு மனம் ஆனாலும் இளகிவிடும் கண்டால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
கரும்பு_அனையாள் பாங்கியும் நாய்_கடுகு_அனையாள் ஆனாள் களித்து என்னை வளர்த்தவளும் புளி_தின்றாள் ஒத்தாள்
விரும்புகின்ற பெண்கள் எலாம் அரும்புகின்றார் அலர்-தான் வித்தகர் என் நடராயர் சித்தம் அறிந்திலனே.

#21
மணவாளர் வருகின்ற தருணம் இது மடவீர் மறைந்து இரு-மின் நீவிர் என்றேன் அதனாலோ அன்றி
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
குணம் நீடு பாங்கி-அவள் எம் இறையை நினையார் குணம் கொண்டாள் வளர்த்தவளும் பணம்_விண்டாள் ஆனாள்
மணம் நீடு குழல் மடவார் குணம் நீடுகின்றார் வள்ளல் நடராயர் திரு உள்ளம் அறிந்திலனே.

#22
பதி வரும் ஓர் தருணம் இது நீவிர் அவர் வடிவைப் பார்ப்பதற்குத் தரம்_இல்லீர் என்ற அதனாலோ
எதிலும் எனக்கு இச்சை இல்லை அவர் அடிக் கண் அல்லால் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
மதி முகத்தாள் பாங்கி ஒரு விதி முகத்தாள் ஆனாள் மகிழ்ந்து என்னை வளர்த்தவளும் இகழ்ந்து பல புகன்றாள்
துதி செய் மட மாதர் எலாம் சதி செய்வார் ஆனார் சுத்தர் நடராயர் திரு_சித்தம் அறிந்திலனே.

#23
மன்று ஆடும் கணவர் திரு_வார்த்தை அன்றி உமது வார்த்தை என்றன் செவிக்கு ஏறாது என்ற அதனாலோ
இன்று ஆவி_அன்னவர்க்குத் தனித்த இடம் காணேன் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
முன்றானை அவிழ்ந்து விழ முடுகி நடக்கின்றாள் முதல் பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன் செல்கின்றாள்
ஒன்றாத மனப் பெண்கள் வென்றாரின் அடுத்தார் ஒருத்த நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

#24
கூடிய என் கணவர் எனைக் கூடாமல் கலைக்கக் கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ
ஏடி எனை அறியாரோ சபைக்கு வருவாரோ என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்
நாடிய என் பாங்கி மனம் மூடி நின்று போனாள் நண்ணி எனை வளர்த்தவளும் எண்ணியவாறு இசைத்தாள்
தேடிய ஆயங்கள் எலாம் கூடி உரைக்கின்றார் திருத்தர் நடராயர் திரு_கருத்தை அறிந்திலனே.

@64 தனித் திருத் தொடை
**1 தமக்கெனப் பாடொன் றிலாதார்க்கு அருட்சோதி அளித்தருள் எனல்

#1
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்ற அரசே நின் அடி மேல் ஆணை
என் பாடு ஒன்று இலை என்னால் துரும்பும் அசைத்திட முடியாது இது கால் தொட்டுப்
பொன் பாடு எவ்விதத்தானும் புரிந்துகொண்டு நீ-தானே புரத்தல் வேண்டும்
உன்பாடு நான் உரைத்தேன் நீ இனிச் சும்மா இருக்க ஒண்ணாது அண்ணா.

#2
முன் பாடு பின் பயன் தந்திடும் எனவே உரைக்கின்றோர் மொழிகள் எல்லாம்
இன் பாடும் இ உலகில் என் அறிவில் இலை அதனால் எல்லாம்_வல்லோய்
அன்பு ஆடு திரு_பொதுவில் ஆடுகின்றோய் அருள் சோதி அளித்துக் காத்தல்
உன்பாடு நான் உரைத்தேன் எனக்கு ஒரு பாடு உண்டோ நீ உரைப்பாய் அப்பா.

#3
உன் ஆணை உன்னை விட உற்ற_துணை வேறு இலை என் உடையாய் அந்தோ
என் நாணைக் காத்து அருளி இத் தினமே அருள் சோதி ஈதல் வேண்டும்
அந்நாள் நையாதபடி அருள் புரிந்த பெரும் கருணை அரசே என்னை
முன்_நாள் நின் அடியவன் என்று உலகு அறிந்த இ நாள் என் மொழிந்திடாதே.

#4
தூங்காதே விழித்து இருக்கும் சூது அறிவித்து எனை ஆண்ட துரையே என்னை
நீங்காதே என் உயிரில் கலந்துகொண்ட பதியே கால் நீட்டிப் பின்னே
வாங்காதே விரைந்து இவண் நீ வரல் வேண்டும் தாழ்த்திடில் என் மனம்-தான் சற்றும்
தாங்காதே இது நினது தனித்த திருவுளம் அறிந்த சரிதம் தானே.

#5
இயங்கு ஆளி புலி கரடி எனப் பெயர் கேட்டு உளம் நடுங்கி இருந்தேன் ஊரில்
சயம் காளிக் கோயிலைக் கண்டு அஞ்சி மனம் தழுதழுத்துத் தளர்ந்தேன் இந்தப்
பயங்காளி_பயல் போலப் பயந்தவர்கள் எங்கு உளர் காண் பதியே என்னை
வயங்கு ஆளில் ஒருவன் என நினையேல் கைப்பிள்ளை என மதித்திடாயே.

#6
சிறு செயலைச் செயும் உலகச் சிறு நடையோர் பல புகலத் தினம்-தோறும்-தான்
உறு செயலை அறியா இச் சிறு_பயலைப் பிடித்து அலைத்தல் உவப்போ கண்டாய்
தெறு செயலைத் தவிர்த்து எல்லாச் சித்தியும் பெற்றிட அழியாத் தேகன் ஆகப்
பெறு செயலை எனக்கு அளித்தே மறு செயலைப் புரிக எனைப் பெற்ற தேவே.
**2. பொதுவளர் இறைவன் தம்மைத் தாங்கிக்கொள வேண்டும் எனல்

#7
ஆதி அப்பா நம் அனாதி அப்பா நங்கள் அம்மை ஒரு
பாதி அப்பா நிருபாதி அப்பா சிவ பத்தர் அனு
பூதி அப்பா நல் விபூதி அப்பா பொன் பொது நடம் செய்
சோதி அப்பா சுயம் சோதி அப்பா எனைச் சூழ்ந்து அருளே.

#8
அண்ட அப்பா பகிரண்ட அப்பா நஞ்சு அணிந்த மணி_
கண்ட அப்பா முற்றும் கண்ட அப்பா சிவகாமி எனும்
ஒண் தவப் பாவையைக் கொண்ட அப்பா சடை ஓங்கு பிறைத்
துண்ட அப்பா மறை விண்ட அப்பா எனைச் சூழ்ந்து அருளே.

#9
வேலை அப்பா படை வேலை அப்பா பவ வெய்யிலுக்கு ஓர்
சோலை அப்பா பரஞ்சோதி அப்பா சடைத் துன்று கொன்றை
மாலை அப்பா நல் சமரச வேத சன்மார்க்க சங்கச்
சாலை அப்பா எனைத் தந்த அப்பா வந்து தாங்கிக்கொள்ளே.

#10
மெச்சி அப் பாவலர் போற்றப் பொதுவில் விளங்கிய என்
உச்சி அப்பா என்னுடைய அப்பா என்னை உற்றுப் பெற்ற
அச்சி அப்பா முக்கண் அப்பா என் ஆர்_உயிர்க்கான அப்பா
கச்சி அப்பா தங்கக்கட்டி அப்பா என்னைக் கண்டுகொள்ளே.

#11
எக் கரையும் இன்றி ஓங்கும் அருள்_கடல் என்று உரைக்கோ
செக்கரை வென்ற பொன் என்கோ படிகத் திரள்-அது என்கோ
திக்கு அரை அம்பரன் என்கோ என் உள்ளத்தில் தித்திக்கின்ற
சக்கரைக்கட்டி என்கோ நினை-தான் மன்றில் தாண்டவனே.

#12
ஒட்டி என் கோது அறுத்து ஆட்கொண்டனை நினை ஓங்கு அறிவாம்
திட்டி என்கோ உயர் சிற்றம்பலம்-தனில் சேர்க்கும் நல்ல
வெட்டி என்கோ அருள் பெட்டியில் ஓங்கி விளங்கும் தங்கக்
கட்டி என்கோ பொன் பொது நடம் செய்யும் முக்கண்ணவனே.
**3. அருட் பெருஞ் சோதி அபயம்

#13
அருள்_பெரும்_சோதி அபயம் அபயம்
அருள்_பெரும்_சோதி அபயம் அருள்_பெரும்_
சோதி அபயம் சிற்சோதி அபயம் பொன்
சோதி அபயம் துணை.

#14
துணைவா அபயம் துயர் அகல என்-பால்
அணைவா அபயம் அபயம் பணை வாய்
வடலா அபயம் வரதா அபயம்
நட நாயகா அபயம் நான்.

#15
நான் ஆகித் தானாய் நடித்து அருள்கின்றாய் அபயம்
தேனாய் இனிக்கும் சிவ அபயம் வான்_நாடு
மெய்யா அபயம் விமலா அபயம் என்றன்
ஐயா அபயம் அபயம்.

#16
அபயம் பதியே அபயம் பரமே
அபயம் சிவமே அபயம் உபய
பதத்திற்கு அபயம் பரிந்து என் உளத்தே நல்
விதத்தில் கருணை விளை.

#17
கருணாநிதியே அபயம் கனிந்த
அருள் நாடகனே அபயம் மருள் நாடும்
உள்ளக் கவலை ஒழிப்பாய் என் வன் மனத்துப்
பொள்ளல் பிழைகள் பொறுத்து.
**4. அம்பலத் தரசிடம் அபயம் இடுதல்

#18
பொருள் பெரும் தனி மெய்ப் போகமே என்னைப் புறத்தினும் அகத்தினும் புணர்ந்த
தெருள் பெரும் சிவமே சுத்த சன்மார்க்கச் செல்வமே நான் பெற்ற சிறப்பே
மருள் பெரும் கடலைக் கடத்தி என்றன்னை வாழ்வித்த என் பெரு வாழ்வே
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம்.

#19
பொருள் பெரு மறைகள் அனந்தம் ஆகமங்கள் புகலும் ஓர் அனந்தம் மேல் போந்த
தெருள் பெருவெளி மட்டு அளவு இலாக் காலம் தேடியும் காண்கிலாச் சிவமே
மருள் பெரும் பகை தீர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே தெள்ளிய அமுதே
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம்.

#20
பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம்
தெருள் பெரு வேதாந்தம் திகழ் சித்தாந்தத்தினும் தித்திக்கும் தேனே
மருள் பெரு இருளைத் தீர்த்து எனை வளர்க்கும் மா பெரும் கருணை ஆர்_அமுதே
அருள்_பெரும்_சோதி அம்பலத்து அரசே அம்மையே அப்பனே அபயம்.
**5.(1) இறை இயல் போற்றல்

#21
போற்றி நின் அருள் போற்றி நின் பொது போற்றி நின் புகழ் போற்றி நின் உரு
போற்றி நின் இயல் போற்றி நின் நிலை போற்றி நின் நெறி போற்றி நின் சுகம்
போற்றி நின் உளம் போற்றி நின் மொழி போற்றி நின் செயல் போற்றி நின் குணம்
போற்றி நின் முடி போற்றி நின் நடு போற்றி நின் அடி போற்றி போற்றியே.

#22
போற்றி நின் இடம் போற்றி நின் வலம் போற்றி நின் நடம் போற்றி நின் நலம்
போற்றி நின் திறம் போற்றி நின் தரம் போற்றி நின் வரம் போற்றி நின் கதி
போற்றி நின் கலை போற்றி நின் பொருள் போற்றி நின் ஒளி போற்றி நின் வெளி
போற்றி நின் தயை போற்றி நின் கொடை போற்றி நின் பதம் போற்றி போற்றியே.
**5.(2) ஐம்பெரு முதல்களை அறியப்பெற்றேன் எனல்

#23
போற்றுகின்ற என் புன்மை யாவையும் பொறுத்த நின் பெரும் பொறுமை போற்றி என்
ஆற்றுவேன் உனக்கு அறிகிலேன் எனக்கு அறிவு தந்த பேர்_அறிவ போற்றி வான்
காற்று நீடு அழல் ஆதி ஐந்து நான் காணக் காட்டிய கருத்த போற்றி வன்
கூற்று தைத்து நீத்து அழிவு இலா உருக் கொள்ளவைத்த நின் கொள்கை போற்றியே.
**6(1). திருவடி அவனிபொருந்திய புதுமை புகலல்

#24
கலையனே எல்லாம்_வல்ல ஓர் தலைமைக் கடவுளே என் இரு கண்ணே
நிலையனே ஞான நீதி மன்றிடத்தே நிருத்தம் செய் கருணை மா நிதியே
புலையனேன் பொருட்டு உன் திரு_அடி அவனி பொருந்திய புதுமை என் புகல்வேன்
சிலையை நேர் மனத்தேன் செய் தவம் பெரிதோ திரு_அருள் பெரும் திறல் பெரிதே.
**6(2). மனித்த உடம் பழியா ஆறு

#25
உலகம் எலாம் போற்ற ஒளி வடிவன் ஆகி
இலக அருள்செய்தான் இசைந்தே திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து.

#26
தனித் துணையாய் என்றன்னைத் தாங்கிக்கொண்டு என்றன்
மனித்த உடம்பு அழியாவாறே கனித் துணையாம்
இன் அமுதம் தந்து எனக்கே எல்லாமும் வல்ல சித்தி-
தன்னையும் தந்து உள் கலந்தான் தான்.
**7. தான் நான் ஆன தன்மையை வியத்தல்

#27
வான் ஆகி வான் நடுவே மன்னும் ஒளி ஆகி அதில்
தான் ஆடுவான் ஆகிச் சன்மார்க்கர் உள் இனிக்கும்
தேன் ஆகித் தெள் அமுதாய்த் தித்திக்கும் தேவே நீ
யான் ஆகி என் உள் இருக்கின்றாய் என்னேயோ.

#28
ஞானாகரச் சுடரே ஞான மணி_விளக்கே
ஆனா அருள் பெரும் சிற்றம்பலத்தே ஆனந்தத்
தேன் ஆர் அமுதாம் சிவமே சிவமே நீ
நான் ஆகி என் உள் நடிக்கின்றாய் என்னேயோ.
**8. நான் வேண்டுமோ பழிதான் வேண்டுமோ எனல்

#29
வான் வேண்டு சிற்றம்பலத்தே வயங்கி வளர் அமுதத்
தேன் வேண்டினேன் இத் தருணத்து அருள்செய்க செய்திலையேல்
ஊன் வேண்டும் என் உயிர் நீத்து நின் மேல் பழியோ விளைப்பேன்
நான் வேண்டுமோ பழி-தான் வேண்டுமோ சொல்க நாயகனே.
**9. இறைவனுக்கு ஈய எதுவும் இன் றெனல்

#30
என் உடலும் என் உயிரும் என் பொருளும் நின்ன என இசைந்த அஞ்ஞான்றே
உன்னிடை நான் கொடுத்தனன் மற்று என்னிடை வேறு ஒன்றும் இலை உடையாய் இங்கே
புல் நிகரேன் குற்றம் எலாம் பொறுத்ததுவும் போதாமல் புணர்ந்து கொண்டே
தன் நிகர் என்று எனை வைத்தாய் இஞ்ஞான்று என் கொடுப்பேன் நின் தன்மைக்கு அந்தோ.
**10. இறைவன் கேட்பதன்முன் கொடுக்க வல்லான் எனல்

#31
கோது கொடுத்த மனச் சிறியேன் குற்றம் குணமாக் கொண்டே இப்
போது கொடுத்த நின் அருளாம் பொருளை நினைக்கும் போது எல்லாம்
தாது கொடுத்த பெரும் களிப்பும் சாலாது என்றால் சாமி நினக்கு
ஏது கொடுப்பேன் கேட்பதன் முன் எல்லாம் கொடுக்க வல்லாயே.
**11. அருட்சோதி அடைதல் சத்தியம் எனல்

#32
வரும் முன் வந்ததாக் கொள்ளுதல் எனக்கு வழக்கம் வள்ளல் நீ மகிழ்ந்து அருள் சோதி
தரும் முன் தந்தனை என்று இருக்கின்றேன் தந்தை நீ தரல் சத்தியம் என்றே
குரு முன் பொய் உரை கூறலேன் இனி இக் குவலையத்திடைக் கவலையைத் தரியேன்
திருமுன் விண்ணப்பம் செய்தனன் கருணைசெய்க வாழ்க நின் திரு_அருள் புகழே. .
**12. ஐவகைத் தொழிலும் அடைவித்த வியப்பு

#33
ஐ வகைத் தொழிலும் என்-பால் அளித்தனை அது கொண்டு இ நாள்
செய் வகை தெரிவித்து என்னைச் சேர்ந்து ஒன்றாய் இருத்தல் வேண்டும்
பொய் வகை அறியேன் வேறு புகல்_இலேன் பொதுவே நின்று
மெய் வகை உரைத்தேன் இந்த விண்ணப்பம் காண்க நீயே.
**13. கண்டனன் சாமியை எனல்

#34
பண்ணிய பூசை நிறைந்தது சிற்றம்பல நடம் கண்டு
எண்ணிய எண்ணம் பலித்தன மெய் இன்பம் எய்தியது ஓர்
தண் இயல் ஆர்_அமுது உண்டனன் கண்டனன் சாமியை நான்
நண்ணிய புண்ணியம் என் உரைக்கேன் இந்த நானிலத்தே.
**14. கருணைமன்றிலே கண்ட அமுதவாரி

#35
வள்ளலாம் கருணை மன்றிலே அமுத வாரியைக் கண்டனம் மனமே
அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி ஆடலாம் அடிக்கடி வியந்தே
உள் எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில் ஓங்கலாம் உதவலாம் உறலாம்
கள் எலாம் உண்ட வண்டு என இன்பம் காணலாம் களிக்கலாம் இனியே.
**15. அருட் பெரு வெளியின் ஆனந்தம்

#36
விண் எலாம் கலந்த வெளியில் ஆனந்தம் விளைந்தது விளைந்தது மனனே
கண் எலாம் களிக்கக் காணலாம் பொதுவில் கடவுளே என்று நம் கருத்தில்
எண்ணலாம் எண்ணி எழுதலாம் எழுதி ஏத்தலாம் எடுத்தெடுத்து உவந்தே
உண்ணலாம் விழைந்தார்க்கு உதவலாம் உலகில் ஓங்கலாம் ஓங்கலாம் இனியே.
**16.அன்றே உடைய மணவாளனை இன்று விடேன் எனல்

#37
கன்று உடைய பசுப் போலே கசிந்து உருகும் அன்பர் எலாம் காணக் காட்டும்
என்று உடைய நாயகனே எல்லாம் செய் வல்லவனே இலங்கும் சோதி
மன்று உடைய மணவாளா மன்னவனே என் இரு கண்மணியே நின்னை
அன்று உடையேன் இன்று விடேன் ஆணை உன் மேல் ஆணை உன் மேல் ஆணை ஐயா.
**17. புழுக்குரம்பை பொன்றாத வாழ் வெய்தும் எனல்

#38
பொத்திய மலப் பிணிப் புழுக் குரம்பை-தான்
சித்து இயல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால்
நித்தியம் ஆகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்து_உளீர்களே.
**18. சன்மார்க்க நன்னெறியின் சாவுறா இன்பம்

#39
ஓவுறாத் துயர் செயும் உடம்பு-தான் என்றும்
சாவுறாது இன்பமே சார்ந்து வாழலாம்
மாவுறாச் சுத்த சன்மார்க்க நல் நெறி
மேவுறார்-தங்களை விடுக நெஞ்சமே.
**19. அருட்சோதி உதயம் கிடைத்தது எனல்

#40
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே
சழக்கு வெளுத்தது சாதி ஆச்சிரமாசாரம் சமயமதாசாரம் எனச் சண்டை இட்ட கலக
வழக்கு வெளுத்தது பலவாம் பொய் நூல் கற்றவர்-தம் மனம் வெளுத்து வாய் வெளுத்து வாயுற வாதித்த
முழக்கு வெளுத்தது சிவமே பொருள் எனும் சன்மார்க்க முழு நெறியில் பரநாத முரசு முழங்கியதே.
**20. இறைவனது எளிமையை வியத்தல்

#41
அன்பு_உடையவரே எல்லாம் உடையவரே அருள்_பெரும்_சோதி என் ஆண்டவரே என்
வன்பு உடை மனத்தை நல் மனம் ஆக்கி எனது வசம் செய்வித்து அருளிய மணி மன்றத்தவரே
இன்பு_உடையவரே என் இறையவரே என் இரு கண் உள் மணிகளுள் இசைந்து இருந்தவரே
என்-புடை எனைத் தூக்கி எடுத்தீர் இங்கு இதனை எண்ணுகின்றேன் அமுது உண்ணுகின்றேனே.
**21. இறைவன் அருட்செயல் அடைவித்த பெருமிதம்

#42
கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில் கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எலாம் கண்டேன்
அடர் கடந்த திரு அமுது உண்டு அருள் ஒளியால் அனைத்தும் அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருள் செயலே.
**22. சித்திநிலை சேர்தல் சத்தியம் எனல்

#43
உண்மை உரைத்து அருள் என்று ஓதினேன் எந்தை பிரான்
வண்மையுடன் என் அறிவில் வாய்ந்து உரைத்தான் திண்மையுறு
சித்தி நிலை எல்லாம் தெரிவித்து அருள்கின்றேம்
இத் தருணம் சத்தியமே என்று.
**23. எண்ணியாங்கு இயங்குதலின் இறும்பூது

#44
என் தரத்துக்கு ஏலாத எண்ணங்கள் எண்ணுகின்றேன்
முன் தரத்தின் எல்லாம் முடித்துக்கொடுக்கின்றாய்
நின் தரத்தை என் புகல்வேன் நின் இட பால் மேவு பசும்
பொன் தரத்தை என் உரைக்கேன் பொன் பொதுவில் நடிக்கின்றோய்.
**24. அடுத்தவர்தம் சோர்ந்த முகம் பார்க்கத் துணியேன் எனல்

#45
ஆர்ந்த அருள்_பெரும்_சோதி அப்பா நான் அடுத்தவர்-தம்
சோர்ந்த முகம் பார்க்க இனித் துணியேன் நின் அருள் ஆணை
நேர்ந்தவர்கள் நேர்ந்தபடி நெகிழ்ந்து உரைக்கும் வார்த்தைகளும்
ஓர்ந்து செவி புகத் துணியேன் உன் ஆணை உன் ஆணை. .
**25. சுத்த சிவம் ஒன்றே எனல்

#46
சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் எனக் கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே புந்தி மயக்கு அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே தன் ஆணை என் ஆணை சார்ந்து அறி-மின் ஈண்டே.
**26. சித்திகள் சேர்ந்த எனல்

#47
அருள்_பெரும்_சோதி என் அகத்தில் ஓங்கின
மருள் பெரும் திரை எலாம் மடிந்து நீங்கின
இருள் பெரு மலம் முதல் யாவும் தீர்ந்தன
தெருள் பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே.
**27. என்னால் ஓர் துரும்பும் அசையா தெனல்

#48
என்னால் ஓர் துரும்பும் அசைத்து எடுக்க முடியாதே எல்லாம் செய் வல்லவன் என்று எல்லாரும் புகலும்
நின்னால் இ உலகிடை நான் வாழ்கின்றேன் அரசே நின் அருள் பெற்று அழியாத நிலையை அடைந்திட என்
றன்னால் ஓர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது சகல சுதந்தரத்தை என்-பால் தயவு செயல் வேண்டும்
பின்_நாள் என்றிடில் சிறிதும் தரித்திருக்க_மாட்டேன் பேர்_ஆணை உரைத்தேன் என் பேர்_ஆசை இதுவே.
**28. அருட்சோதி தனிஅரசு ஓங்கும் தருணம் இது எனல்

#49
இச்சை எலாம் புகன்றேன் என் இலச்சை எலாம் விடுத்தேன் இனிச் சிறிதும் தரியேன் இங்கு இது தருணத்து அடைந்தே
அச்சை எலாம் வெளிப்படுத்தி அச்சம் எலாம் அகற்றி அருள் சோதித் தனி அரசே ஆங்காங்கும் ஓங்க
விச்சை எலாம் எனக்கு அளித்தே அவிச்சை எலாம் தவிர்த்து மெய்யுற என்னொடு கலந்து விளங்கிடுதல் வேண்டும்
பச்சை எலாம் செம்மை எலாம் பொன்மை எலாம் படர்ந்த படிக மணி_விளக்கே அம்பலம் விளங்கும் பதியே.
**29. எவ்வுலகும் இன்படையும் தருணமிது எனல்

#50
உடைய நாயகன் பிள்ளை நான் ஆகில் எவ்வுலகமும் ஒருங்கு இன்பம்
அடைய நான் அருள் சோதி பெற்று அழிவு இலா யாக்கை கொண்டு உலகு எல்லாம்
மிடைய அற்புதப் பெரும் செயல் நாள்-தொறும் விளைத்து எங்கும் விளையாடத்
தடை-அது அற்ற நல் தருணம் இத் தருணமாத் தழைக்க இத் தனியேற்கே.
**30. தலைவர் வரவுணர்ந்து இருங்களிப் பெய்தல்

#51
நாதர் அருள்_பெரும்_சோதி நாயகர் என்றனையே நயந்துகொண்ட தனித் தலைவர் ஞான சபாபதியார்
வாத நடம் புரி கருணை மா நிதியார் வரதர் வள்ளல் எலாம் வல்லவர் மா நல்லவர் என் இடத்தே
காதலுடன் வருகின்றார் என்று பர நாதம் களிப்புறவே தொனிக்கின்றது அந்தர துந்துபி-தான்
ஏதம் அற முழங்குகின்றது என்று சொல்லிக்கொண்டே எழுகின்றாள் தொழுகின்றாள் என்னுடைய மகளே.
**31. உலகியல் புன்மைக் கிரங்கல்

#52
உழக்கு அறியீர் அளப்பதற்கு ஓர் உளவு அறியீர் உலகீர் ஊர் அறியீர் பேர் அறியீர் உண்மை ஒன்றும் அறியீர்
கிழக்கு அறியீர் மேற்கு அறியீர் அம்பலத்தே மாயைக் கேதம் அற நடிக்கின்ற பாதம் அறிவீரோ
வழக்கு அறிவீர் சண்டையிட்டே வம்பளக்க அறிவீர் வடிக்கும் முன்னே சோறு எடுத்து வயிற்று அடைக்க அறிவீர்
குழக் கறியே பழக் கறியே கூட்டு வர்க்கக் கறியே குழம்பே சாறே எனவும் கூற அறிவீரே.
**32. உடம்பெடுத்த கணக் கறியீர் என வருந்தல்

#53
இணக்கு அறியீர் இதம் அறியீர் இருந்த நிலை அறியீர் இடம் அறியீர் தடம் அறியீர் இ உடம்பை எடுத்த
கணக்கு அறியீர் வழக்கு அறியீர் அம்பலத்தே மாயைக் கலக்கம் அற நடிக்கின்ற துலக்கம் அறிவீரோ
பிணக்கு அறிவீர் புரட்டு அறிவீர் பிழை செயவே அறிவீர் பேர் உணவைப் பெரு வயிற்றுப் பிலத்தில் இட அறிவீர்
மணக் கறியே பிணக் கறியே வறுப்பே பேர்ப் பொரிப்பே வடை_குழம்பே சாறே என்று அடைக்க அறிவீரே.
**33. பரசிவம் அன்புரு எனல்

#54
அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பு எனும் குடில் புகும் அரசே
அன்பு எனும் வலைக்குள் படு பரம் பொருளே அன்பு எனும் கரத்து அமர் அமுதே
அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே
அன்பு எனும் அணுவுள் அமைந்த பேர்_ஒளியே அன்பு உருவாம் பர சிவமே.

@65 அருட்பெருஞ்ஜோதி அகவல்

#1
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_சோதி
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி
அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்
அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி
ஆகம முடி மேல் ஆரண முடி மேல்		5
ஆக நின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
இக நிலைப் பொருளாய்ப் பர நிலைப் பொருளாய்
அகம் அறப் பொருந்திய அருள்_பெரும்_ஜோதி
ஈனம் இன்று இக_பரத்து இரண்டின் மேல் பொருளாய்
ஆனலின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி		10
உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல்
அரைசு செய்து ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருள்_பெரும்_ஜோதி
எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என்	15
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி
ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி
ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி		20
ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை
அன்று என விளங்கிய அருள்_பெரும்_ஜோதி
ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர்		25
அ இயல் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி
திரு நிலைத் தனி வெளி சிவ வெளி எனும் ஓர்
அருள் வெளிப் பதி வளர் அருள்_பெரும்_ஜோதி
சுத்த சன்மார்க்க சுகத் தனி வெளி எனும்
அத்தகைச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி		30
சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளி எனும்
அத்துவிதச் சபை அருள்_பெரும்_ஜோதி
தூய கலாந்த சுகம் தரு வெளி எனும்
ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
ஞான யோகாந்த நட திரு_வெளி எனும்		35
ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும்
அமல சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
பெரிய நாதாந்தப் பெரு நிலை வெளி எனும்
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி		40
சுத்த வேதாந்தத் துரிய மேல் வெளி எனும்
அத் தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
சுத்த சித்தாந்த சுகப் பெருவெளி எனும்
அத் தனிச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
தகர மெய்ஞ்ஞானத் தனிப் பெருவெளி எனும்		45
அகர நிலைப் பதி அருள்_பெரும்_ஜோதி
தத்துவாதீதத் தனிப் பொருள் வெளி எனும்
அத் திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி
சச்சிதானந்தத் தனிப் பர வெளி எனும்
அச்சியல் அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி		50
சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும்
ஆகாயத்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி
காரண காரியம் காட்டிடு வெளி எனும்
ஆரணச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும்		55
ஆகமச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம்
ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி
என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது
அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி		60
சமயம் கடந்த தனிப் பொருள் வெளியாய்
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி
முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்து அருள்
அச் சுடராம் சபை அருள்_பெரும்_ஜோதி
துரியமும் கடந்த சுக பூரணம் தரும்		65
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி
எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்து அருள்
அவ்வகைச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம்
அயர்ப்பு இலாச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி	70
சாக்கிராதீதத் தனி வெளியாய் நிறை
வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும்
அட்ட மேல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய்	75
அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
உபய பக்கங்களும் ஒன்று எனக் காட்டிய
அபய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம்
ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி		80
மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
ஓதி நின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
வாரமும் அழியா வரமும் தரும் திரு		85
ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி
இழியாப் பெரு நலம் எல்லாம் அளித்து அருள்
அழியாச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி		90
எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய
அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி
பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள் புரி
ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி
எம் பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி	95
அம்பலத்து ஆடல் செய் அருள்_பெரும்_ஜோதி
தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர்
அம்பரத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
எச் சபை பொது என இயம்பினர் அறிஞர்கள்
அச் சபை இடம்கொளும் அருள்_பெரும்_ஜோதி	100
வாடுதல் நீக்கிய மணி மன்றிடையே
ஆடுதல் வல்ல அருள்_பெரும்_ஜோதி
நாடகத் திரு_செயல் நவிற்றிடும் ஒரு பேர்
ஆடகப் பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி
கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர்		105
அற்புதச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி
ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு
ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி
இன்புறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு
அன்புறத் தரு சபை அருள்_பெரும்_ஜோதி		110
எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது
அம்மை அப்பனுமாம் அருள்_பெரும்_ஜோதி
பிரிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என்
அறிவுக்கு அறிவாம் அருள்_பெரும்_ஜோதி
சாதியும் மதமும் சமயமும் காணா		115
ஆதி அனாதியாம் அருள்_பெரும்_ஜோதி
தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
அனுபவம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த
அனுபவாதீத அருள்_பெரும்_ஜோதி		120
பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே
அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி
உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின்
அளவினில் அளவா அருள்_பெரும்_ஜோதி
என்னையும் பணிகொண்டு இறவா_வரம் அளித்து	125
அன்னையில் உவந்த அருள்_பெரும்_ஜோதி
ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த
ஆதி ஈறு இல்லா அருள்_பெரும்_ஜோதி
படி அடி வான் முடி பற்றினும் தோற்றா
அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி		130
பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும்
அவனுக்கு அவனாம் அருள்_பெரும்_ஜோதி
திவள் உற்ற அண்டத் திரளின் எங்கெங்கும்
அவளுக்கு அவளாம் அருள்_பெரும்_ஜோதி
மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும்		135
அதனுக்கு அதுவாம் அருள்_பெரும்_ஜோதி
எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல்
அப்பாலும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும்
அல்லதாய் விளங்கும் அருள்_பெரும்_சோதி		140
எப் பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர்
அப் பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று
ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து		145
அத் திசை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்
அத் தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி		150
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருள்_பெரும்_ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அது தரும்
ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று		155
அன்புடன் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
இறவா_வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய
அறவாழியாம் தனி அருள்_பெரும்_ஜோதி
நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருள்_பெரும்_ஜோதி		160
எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை
அண்ணி உள் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது
ஆயினை என்று அருள் அருள்_பெரும்_ஜோதி
எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என	165
அண்ணித்து இனிக்கும் அருள்_பெரும்_ஜோதி
சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக எனத் தொழில்
ஐந்தையும் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கங்கிருந்து அருள் அருள்_பெரும்_ஜோதி		170
சகம் முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம் புறம் முற்றுமாம் அருள்_பெரும்_ஜோதி
சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும்
அகரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
உபரச வேதியின் உபயமும் பரமும்		175
அபரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி
மந்தணம் இது என மறு இலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி
எம் புயக் கனி என எண்ணுவார் இதய
அம்புயத்து அமர்ந்த அருள்_பெரும்_ஜோதி		180
செடி அறுத்தே திட தேகமும் போகமும்
அடியருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி
துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகம்-தனை
அன்பருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழயது என்று		185
அதுஅதுவாய்த் திகழ் அருள்_பெரும்_ஜோதி
சேதனப் பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை
ஆதனத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி
ஓம் மயத் திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு
ஆமயத் தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி		190
எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருள்_பெரும்_ஜோதி
எத் தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு
அத் தகை அருளிய அருள்_பெரும்_ஜோதி
இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு	195
அங்கையில் கனியாம் அருள்_பெரும்_ஜோதி
பார் உயப் புரிக எனப் பணித்து எனக்கு அருளி என்
ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி
தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது
ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி		200
எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம்
அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள்
ஐயறிவு அளித்த அருள்_பெரும்_ஜோதி
சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே	205
ஆமாறு அருளிய அருள்_பெரும்_ஜோதி
சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு
அத் திறல் வளர்க்கும் அருள்_பெரும்_ஜோதி
சாவா நிலை இது தந்தனம் உனக்கே
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி		210
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி
மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்
அயர்ந்திடேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி
தேசு உறத் திகழ்தரு திரு_நெறிப் பொருள் இயல்	215
ஆசு அறத் தெரித்த அருள்_பெரும்_ஜோதி
காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருள்_பெரும்_ஜோதி
எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு
அங்குலம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி	220
எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள்
அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி
கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல்
ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி
எண் தர முடியாது இலங்கிய பற்பல		225
அண்டமும் நிறைந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி
சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி
வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர்
ஆழியை அளித்த அருள்_பெரும்_ஜோதி		230
மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை
ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி
எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று
அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி
நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று		235
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி
முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும்
அத் திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
மூ வகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி		240
கரும சித்திகளின் கலை பல கோடியும்
அரசு உற எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
யோக சித்திகள் வகை உறு பல கோடியும்
ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும்	245
ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவது என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
முத்தி என்பது நிலை முன் உறு சாதனம்
அத் தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி		250
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
அத் திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி
ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம்
ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி
இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம்		255
அன்பருக்கு என்ற என் அருள்_பெரும்_ஜோதி
எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என
அட்ட நின்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
இப்படி கண்டனை இனி உறு படி எலாம்
அப்படியே எனும் அருள்_பெரும்_ஜோதி		260
படி முடி கடந்தனை பார் இது பார் என
அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி
சோதியுள் சோதியின் சொருபமே அந்தம்
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி		265
அந்தம் என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி
நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என்
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி		270
கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே
அற்புதம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி
கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே
அதிசயம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி
அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே		275
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி
பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே
அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி
வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி		280
ஆர் இயல் அகம் புறம் அகப்புறம் புறப்புறம்
ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி
சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று
ஆரியர் புகழ்தரும் அருள்_பெரும்_ஜோதி
பிறிவு ஏது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம்	285
அறிவே வடிவு எனும் அருள்_பெரும்_ஜோதி
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி
மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே
ஆண்டுகொண்டு அருளிய அருள்_பெரும்_ஜோதி	290
பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது
அற்றமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி
சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருள்_பெரும்_ஜோதி
வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால்	295
ஆய்தற்கு அரிய அருள்_பெரும்_ஜோதி
எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை
அல்லாது இலை எனும் அருள்_பெரும்_ஜோதி
நவை இலா உளத்தில் நாடிய நாடிய
அவை எலாம் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி	300
கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு
ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி
நன்று அறிவு அறியா நாயினேன்-தனையும்
அன்று வந்து ஆண்ட அருள்_பெரும்_ஜோதி
நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்		305
ஆயினும் அருளிய அருள்_பெரும்_ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருள்_பெரும்_ஜோதி
எச் சோதனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்று அருள் அருள்_பெரும்_ஜோதி		310
ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு
ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி
தாபத் துயரம் தவிர்த்து உலகு உறும் எலா
ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி
மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே	315
அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி
இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி
அருள் அமுது அளித்த அருள்_பெரும்_ஜோதி		320
தெருள் நிலை இது எனத் தெருட்டி என் உளத்து இருந்து
அருள் நிலை காட்டிய அருள்_பெரும்_ஜோதி
பொருள் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய
அருள் பதம் அளித்த அருள்_பெரும்_ஜோதி
உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை		325
அருள் வழி நிறுத்திய அருள்_பெரும்_ஜோதி
வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள்
அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி
சுருள் விரிவு உடை மனச் சுழல் எலாம் அறுத்தே
அருள் ஒளி நிரப்பிய அருள்_பெரும்_ஜோதி		330
விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே
அருள் பேறு அளித்த அருள்_பெரும்_ஜோதி
அருள் பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட
அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி
உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே		335
அலகு_இலா ஒளி செய் அருள்_பெரும்_ஜோதி
விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருள்_பெரும்_ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருள்_பெரும்_ஜோதி		340
காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி
காற்றுறு காற்றாய்க் கால் நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்		345
அனலுற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி
அனலுறும் அனலாய் அனல் நிலை அனலாய்
அனலுற வயங்கும் அருள்_பெரும்_ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருள்_பெரும்_ஜோதி		350
புனலுறு புனலாய்ப் புனல் நிலைப் புனலாய்
அனை எனப் பெருகும் அருள்_பெரும்_ஜோதி
புவியினுள் புவியாய்ப் புவி நடுப் புவியாய்
அவை தர வயங்கும் அருள்_பெரும்_ஜோதி
புவியுறு புவியாய்ப் புவி நிலைப் புவியாய்		355
அவை கொள விரிந்த அருள்_பெரும்_ஜோதி
விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி
அண்ணுற அமைந்த அருள்_பெரும்_ஜோதி
வளி நிலைச் சத்தியின் வளர் நிலை அளவி
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி		360
நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புவி நிலைச் சுத்தமாம் பொன் பதி அளவி		365
அவையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் திண்மையை வகுத்ததில் கிடக்கை
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி		370
மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் நாற்றம் வகுத்ததில் பல் வகை
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் பற்பல வகை கரு நில இயல்		375
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல் பயன்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணிடை அடி நிலை வகுத்ததில் பல் நிலை
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி		380
மண்ணில் ஐந்தைந்து வகையும் கலந்துகொண்டு
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணுருச் சத்திகள் மண் கலைச் சத்திகள்		385
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண் ஒளிச் சத்திகள் மண் கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மண் கணச் சத்திகள் வகை பலபலவும்
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி		390
மண் நிலைச் சத்தர்கள் வகை பலபலவும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண் கரு உயிர்த் தொகை வகை விரி பலவா
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு	395
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மண்ணியல் பலபல வகுத்ததில் பிறவும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி		400
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன் பல
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும்
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல		405
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடைப் பூ இயல் நிகழுறு திற இயல்
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரினில் சுவை நிலை நிரைத்து அதில் பல் வகை
ஆருறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி		410
நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை நான்கு இயல் நிலவுவித்து அதில் பல
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை அடி நடு நிலையுற வகுத்து அனல்		415
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை ஒளி இயல் நிகழ் பல குண இயல்
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ் வகை பலபல
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி		420
நீரினில் சத்தர்கள் நிறை வகை உறை வகை
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல		425
ஆர்கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
நீர் இயல் பலபல நிறைத்து அதில் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி		430
தீயினில் சூட்டு இயல் சேர்தரச் செலவு இயல்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயினில் வெண்மைத் திகழ் இயல் பலவாய்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடைப் பூ எலாம் திகழுறு திறம் எலாம்		435
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை ஒளியே திகழுற அமைத்து அதில்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி		440
தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை நடு நிலை திகழ் நடு நடு நிலை
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடைப் பெரும் திறல் சித்திகள் பலபல		445
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி		450
தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம்		455
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீயிடை உருக்கு இயல் சிறப்பு இயல் பொது இயல்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
தீ இயல் பலபல செறித்து அதில் பலவும்
ஆயுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி		460
காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல்
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடைப் பூ இயல் கருதுறு திற இயல்
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல		465
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி		470
காற்றினில் இடை நடு கடை நடு அகப் புறம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடைச் சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல	475
ஆற்றவும் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடை உயிர் பல கதி பல கலை பல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி		480
காற்றிடை நால் நிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடை உணர் இயல் கருது இயல் ஆதிய
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றிடைச் செயல் எலாம் கருதிய பயன் எலாம்	485
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் பக்குவக் கதி எலாம் விளைவித்து
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காற்றினில் காலம் கருதுறு வகை எலாம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி		490
காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடைப் பகுதியின் விரிவு இயல் அணைவு இயல்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடைப் பூ எலாம் வியப்புறு திறன் எலாம்	495
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியினில் ஒலி நிறை வியன் நிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடைக் கரு நிலை விரி நிலை அரு நிலை
அளி கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி		500
வெளியிடை முடி நிலை விளங்குற வகுத்தே
அளி பெற விளக்கும் அருள்_பெரும்_ஜோதி
வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள்
அளியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல		505
அளிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி
வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல்
அளி பெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி		510
வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
புறம் நடுவொடு கடை புணர்ப்பித்து ஒரு முதல்
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புறம் தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை	515
அறம் பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அகப் புற நடுக் கடை அணைவால் புறம் முதல்
அகப்பட வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அகப் புற நடு முதல் அணைவால் புறக் கடை
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி		520
கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம் முதல்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
தணி அகம் நடுவொடு தலை அணைந்து அகக் கடை
அணியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அக நடு புறக் கடை அணைந்து அகப்புறம் முதல்	525
அகமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அக நடு புறத் தலை அணைந்து அகப்புறக் கடை
அகலிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அக நடு அதனால் அகப்புற நடுவை
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி		530
அகப்புற நடுவால் அணி புற நடுவை
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி
புற நடு அதனால் புறப்புற நடுவை
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புகல அரும் அகண்ட பூரண நடுவால்		535
அக நடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புறப்புறக் கடை முதல் புணர்ப்பால் புறப்புறம்
அறக் கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
புறத்து இயல் கடை முதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக் கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி		540
அகப்புறக் கடை முதல் அணைவால் அக் கணம்
அகத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அகக் கடை முதல் புணர்ப்பு-அதனால் அகக் கணம்
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்		545
ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி		550
புனல் மேல் புவியும் புவி மேல் புடைப்பும்
அனல் மேல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத
அகல் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உயிர் வெளி இடையே உரைக்க அரும் பகுதி		555
அய வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில்
அயல்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
கலை வெளி-அதனைக் கலப்பு_அறு சுத்த
அலர் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி		560
சுத்த நல் வெளியைத் துரிசு_அறு பர வெளி
அத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பர வெளி-அதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பரம்பர வெளியைப் பராபர வெளியில்		565
அரம் தெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பராபர வெளியைப் பகர் பெருவெளியில்
அராவு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பெருவெளி அதனைப் பெரும் சுக வெளியில்
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி		570
குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலை வெளி		575
ஆலுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
துரிசு_அறு கருவிகள் சுத்த நல் வெளியிடை
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
இ வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்
அ-வயின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி		580
ஓங்கிய அண்டம் ஒளி பெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை
அருள் திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
காவல் செய் தலைவரைக் காவல் அண்டங்களை	585
ஆவகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி
அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை
அழுக்கு_அற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை
அறத்தொடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி		590
தெளிவு செய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளி பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை
அ திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி
ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை		595
ஆங்காக அமைத்த அருள்_பெரும்_ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நாதமாம் பிரமமும் நாத அண்டங்களை
ஆதரம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி		600
பகர் பரா சத்தியைப் பதியும் அண்டங்களும்
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண்டங்களை
அரசு உற அமைத்த அருள்_பெரும்_ஜோதி
எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை	605
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
அளவு_இல் பல் சத்தரை அளவு_இல் அண்டங்களை
அளவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல
அயர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி		610
களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல
அளவு_இல வகுத்த அருள்_பெரும்_ஜோதி
கடல்-அவை அனைத்தும் கரை இன்றி நிலையுற
அடல் அனல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி
கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்		615
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
கடலிடைப் பல் வளம் கணித்து அதில் பல் உயிர்
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
மலையிடைப் பல் வளம் வகுத்து அதில் பல் உயிர்
அலைவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி		620
ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
அன்று_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி
அத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி
நூற்றிடை இலக்கம் நுவல் அதில் அனந்தம்		625
ஆற்றிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி
கோடியில் அனந