சீவக சிந்தாமணி

0. கடவுள் வாழ்த்து,
பதிகம்

1. நாமகள்
இலம்பகம்

2. கோவிந்தையார்
இலம்பகம்

3. காந்தருவதத்தையார்
இலம்பகம்

4. குணமாலையார்
இலம்பகம்

5. பதுமையார்
இலம்பகம்

6. கேமசரியார்
இலம்பகம்

7. கனகமாலையார்
இலம்பகம்

8. விமலையார்
இலம்பகம்

9. சுரமஞ்சரியார்
இலம்பகம்

10. மண்மகள்
இலம்பகம்

11. பூமகள்
இலம்பகம்

12. இலக்கணையார்
இலம்பகம்

13. முக்தி
இலம்பகம்

@0 கடவுள் வாழ்த்து

#1 சித்தர் வணக்கம்
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்த
தாவாத இன்பம் தலையாயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள்_நிதி_செல்வன் என்ப
தேவாதி தேவன்-அவன் சேவடி சேர்தும் அன்றே

#2 அருகர் வணக்கம்
செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
அம் பொன் முடி மேல் அடி_தாமரை சென்னி வைப்பாம்

#3 மாண்பமைந்த குழுவினருக்கு வணக்கம்
பல் மாண் குணங்கட்கு இடனாய் பகை நண்பொடு இல்லான்
தொல் மாண்பு அமைந்த புனை நல்லறம் துன்னி நின்ற
சொல் மாண்பு அமைந்த குழுவின் சரண் சென்று தொக்க
நல் மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன்

#4 அவை அடக்கம்
கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
நற்பால் அழியும் நகை வெண் மதி போல் நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியால் கழூஉவி
பொற்பா இழைத்து கொளல்-பாலர் புலமை மிக்கார்

#5
முந்நீர் பிறந்த பவழத்தொடு சங்கும் முத்தும்
அ நீர் உவர்க்கும் எனின் யார் அவை நீக்குகிற்பார்
இ நீர என் சொல் பழுது-ஆயினும் கொள்ப அன்றே
பொய்ம் நீர அல்லா பொருளால் விண் புகுதும் என்பார்

#6 பதிகம்
மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பில்
தான் ஏறு அனையான் உளன் சீவகசாமி என்பான்
வான் ஏற நீண்ட புகழான் சரிதம் தன்னை
தேன் ஊற நின்று தெருண்டார் அவை செப்பல் உற்றேன்

#7
கோடாத செங்கோல் குளிர் வெண்குடை கோதை வெள் வேல்
ஓடாத தானை உருமு குரல் ஓடை யானை
வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப மன்னன்
வீடாத கற்பின் அவன் தேவி விசயை என்பாள்

#8
சேந்து ஒத்து அலர்ந்த செழும் தாமரை அன்ன வாள் கண்
பூம் தொத்து அலர்ந்த பசும் பொன் கொடி அன்ன பொற்பின்
ஏந்து ஒத்து அலர்ந்த முலையின் அமிர்து அன்ன சாயல்
வேந்தற்கு அமுதாய் விளையாடுதற்கு ஏது வாமே

#9
கல்லார் மணி பூண் அவன் காமம் கனைந்து கன்றி
சொல்லாறு கேளான் நனி சூழ்ச்சியில் தோற்றவாறும்
புல்லார் புகல பொறி மஞ்ஞையில் தேவி போகி
செல் ஆறு இழுக்கி சுடுகாடு அவள் சேர்ந்தவாறும்

#10
நாள் உற்று நம்பி பிறந்தான் திசை பத்தும் நந்த
தோள் உற்று ஓர் தெய்வம் துணையாய் துயர் தீர்த்தவாறும்
கோள் உற்ற கோன் போல் அவன் கொண்டு வளர்த்தவாறும்
வாள் உற்ற கண்ணாள் மகன் வாழ்க என நோற்றவாறும்

#11
நெஞ்சம் புணையா கலை மா கடல் நீந்தி ஆங்கே
வஞ்சம் மறவர் நிரை வள்ளல் விடுத்தவாறும்
விஞ்சைக்கு இறைவன் மகள் வீணையில் தோற்றவாறும்
நஞ்சு உற்ற காம நனி நாகரில் துய்த்தவாறும்

#12
முந்நீர் படு சங்கு அலற முரசு ஆர்ப்ப மூதூர்
செந்நீர் கடியின் விழவாட்டினுள் தேம் கொள் சுண்ணம்
மை நீர் நெடும் கண் இரு மங்கையர் தம்முள் மாறாய்
இ நீர் படியேம் இவை தோற்றனம் என்றவாறும்

#13
சுண்ணம் உடைந்து சுரமஞ்சரி சோர்ந்து தோழி
வண்ணம் நெடும் கண் குணமாலையை வைது மாறி
புண் மேல் புடையில் புகைந்து ஆண் உரு யாதும் நோக்காள்
கண் நோக்கு உடைந்து கடி_மாடம் அடைந்தவாறும்

#14
பொன் துஞ்சு மார்பன் புனல் ஆட்டிடை புன்கண் எய்தி
நின்று எஞ்சுகின்ற ஞமலிக்கு அமிர்து ஈந்தவாறும்
அன்றை பகலே குணமாலையை அச்சுறுத்த
வென்றி களிற்றை விரி_தார்_அவன் வென்றவாறும்

#15
தேன் ஊறு தீம் சொல் குணமாலையை சேர்ந்தவாறும்
கோன் ஊறு செய்வான் கருதி சிறை கொண்டவாறும்
வான் ஆறு இழிந்து மழை மின் என வந்த ஓர் தேவன்
ஊன் நாறு ஒளி வேல் உரவோன் கொண்டு எழுந்தவாறும்

#16
தேங்காத மள்ளர் திரள் தோள் இணை சிக்க யாத்த
பூம் கச்சு நீக்கி பொறி மாண் கலம் நல்ல சேர்த்தி
நீங்காத காதல் உடையாய் நினைக்க என்று பின்னும்
பாங்கு ஆய விஞ்சை பணித்து ஆங்கு விடுத்தவாறும்

#17
பை நாக பள்ளி மணி வண்ணனின் பாயல் கொண்டு
கை நாகம் துஞ்சும் கமழ் காந்தள் அம் சாரல் போகி
மை நாக வேலி மணி பல்லவ தேயம் நண்ணி
கொய் நாக சோலை கொடி அ நகர் புக்கவாறும்

#18
அத்தம் அனைய களிற்று அ நகர் மன்னன் மங்கை
முத்தம் உரிஞ்சும் முகிழ் மென் முலை மின் அனாளை
பைத்து அங்கு ஓர் நாகம் பனி மா மதி என்று தீண்ட
சித்தம் குழையற்க என தீர்த்து அவள் சேர்ந்தவாறும்

#19
பொன் பூண் சுமந்த புணர் மெல் முலை கோடு போழ
நல் பூம் கழலான் இரு திங்கள் நயந்தவாறும்
கல் பாடு அழித்த கன மா மணி தூண் செய் தோளான்
வெற்பு ஊடு அறுத்து விரைவின் நெறி கொண்டவாறும்

#20
தள்ளாத சும்மை மிகு தக்க நல் நாடு நண்ணி
விள்ளா விழு சீர் வணிகன் மகள் வேல் கண் நோக்கம்
உள் ஆவி வாட்ட உயிர் ஒன்று ஒத்து உறைந்தவாறும்
கள் ஆவி நாறும் கமழ் கோதையின் போயவாறும்

#21
இன் நீர் அமிர்து அன்னவள் கண் இணை மாரி கற்ப
பொன் ஊர் கழலான் பொழி மா மழை காடு போகி
மின் நீர் வெள் வேலவன் மத்திம தேய மன்னன்
கொன் ஊர் கொடு வெம் சிலை கண்டு எதிர்கொண்டவாறும்

#22
திண் தேர் அரசர் திறல் சிங்கங்கள் வில்லும் வாளும்
கண்டு ஆங்கு உவந்து கடி பெய்து இவண் காத்தும் என்று
கொண்டார் குடங்கை அளவே உள கண்ணினாளை
புண் தாங்கு எரி வேல் இளையோற்கு புணர்த்தவாறும்

#23
மதியம் கெடுத்த வய மீன் என தம்பி மாழாந்து
உதிதற்கு உரியாள் பணியால் உடன் ஆயவாறும்
நிதியின் நெறியின் அவன் தோழர் நிரந்தவாறும்
பதியின் அகன்று பயந்தாளை பணிந்தவாறும்

#24
கண் வாள் அறுக்கும் கமழ்_தார்_அவன் தாயொடு எண்ணி
விண் வாள் அறுக்கும் நகர் வீதி புகுந்தவாறும்
மண் மேல் விளக்காய் வரத்தில் பிறந்தாள் ஓர் கன்னி
பெண் ஆர் அமிர்தின் பெரு வாரியுள் பட்டவாறும்

#25
துஞ்சா மணி பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து
அம் சாயல் பூத்த அகிலார் துகிலாய் பொன் அல்குல்
எஞ்சாத இன்ப கொடி தாழ்த்ததும் பன்றி எய்து
நஞ்சு ஊறும் வேலான் பகை நாம் அற கொன்றவாறும்

#26
புண் தோய்த்து எடுத்த பொரு வேல் என சேந்து நீண்ட
கண் போன்ற மாமன் மகள் கண் மணி பாவை அன்ன
பெண் பால் அமிர்தின் நலம் பெற்றதும் பொற்ப செங்கோல்
தண் பால் மதி தோய் குடை தண் நிழல் பாயவாறும்

#27
திறை மன்னர் உய்ப்ப திரு நிற்ப செங்கோல் நடப்ப
குறைவு இன்றி கொற்றம் உயர தெவ்வர் தேர் பணிய
உறைகின்ற காலத்து அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின்
அறிவன் அடி கீழ் அரசு அஞ்சி துறந்தவாறும்

#28
கோணை களிற்று கொடி தேர் இவுளி கடல் சூழ்
வாள் மொய்த்த தானை அவன் தம்பியும் தோழன்மாரும்
பூண் மொய்த்த பொம்மல் முலையாரும் புலம் துறப்ப
வீணை கிழவன் விருந்து ஆர் கதி சென்றவாறும்

#29
தேன் வாய் உமிழ்ந்த அமிர்து உண்டவன் போன்று செல்வன்
வான் வாய் வணக்கும் நலத்தார் முலை போகம் வேண்டான்
ஏனோரும் ஏத்த அவன் எய்திய இன்ப வெள்ளம்
ஈனோர்க்கு உரைப்பாம் பதிகத்துள் இயன்றவாறே
@1 நாமகள் இலம்பகம்

#30
நா வீற்றிருந்த புல_மா_மகளோடு நன் பொன்
பூ வீற்றிருந்த திரு_மா_மகள் புல்ல நாளும்
பா வீற்றிருந்த கலை பார் அற சென்ற கேள்வி
கோ வீற்றிருந்த குடி நாட்டு அணி கூறல் உற்றேன்

#31
காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி
பூ மாண்ட தீம் தேன் தொடை கீறி வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழை பழங்கள் சிந்தும்
ஏமாங்கதம் என்று இசையால் திசை போயது உண்டே

#32
இலங்கல் ஆழியினான் களிற்று ஈட்டம் போல்
கலங்கு தெண் திரை மேய்ந்து கண மழை
பொலம் கொள் கொன்றையினான் சடை போல் மின்னி
விலங்கல் சேர்ந்து விண் ஏறி விட்டு ஆர்த்தவே

#33
தேன் நிரைத்து உயர் மொய் வரை சென்னியின்
மேல் நிரைத்து விசும்பு உற வெள்ளி வெண்
கோல் நிரைத்தன போல் கொழும் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தவே

#34
குழவி வெண் மதி கோடு உழ கீண்டு தேன்
முழவின் நின்று அதிர் மொய் வரை சென்னியின்
இழியும் வெள் அருவி திரள் யாவையும்
குழுவின் மாட துகில் கொடி போன்றவே

#35
இலங்கு நீள் முடி இந்திரன் மார்பின் மேல்
விலங்கி வீழ்ந்த முத்தாரமும் போன்றவை
நலம் கொள் பொன்னொடு நல் மணி சிந்தலால்
கலன் பெய் பேழை கவிழ்த்தவும் போன்றவே

#36
வள்ளல் கைத்தல மாந்தரின் மால் வரை
கொள்ளை கொண்ட கொழு நிதி குப்பையை
உள்ளம் இல்லவர்க்கு ஊர்-தொறும் உய்த்து உராய்
வெள்ளம் நாடு மடுத்து விரைந்ததே

#37
மையல் யானையின் மு மதம் ஆர்ந்து தேன்
ஐய பொன் அசும்பு ஆடி அளைந்து உராய்
செய்ய சந்தனம் தீம் பழம் ஆதியா
நைய வாரி நடந்தது நன்று-அரோ

#38
வீடு இல் பட்டினம் வௌவிய வேந்து என
காடு கையரி கொண்டு கவர்ந்து போய்
மோடு கொள் புனல் மூரி நெடும் கடல்
நாடு முற்றியதோ என நண்ணிற்றே

#39
திரை பொரு கனை கடல் செல்வன் சென்னி மேல்
நுரை எனும் மாலையை நுகர சூட்டுவான்
சரை எனும் பெயர் உடை தடம் கொள் வெம் முலை
குரை புனல் கன்னி கொண்டு இழிந்தது என்பவே

#40
பழம் கொள் தெங்கு இலை என பரந்து பாய் புனல்
வழங்க முன் இயற்றிய சுதை செய் வாய் தலை
தழங்குரல் பம்பையில் சாற்றி நாடு எலாம்
முழங்கு தீம் புனல் அகம் முரிய மொய்த்தவே

#41
வெலற்கு அரும் குஞ்சரம் வேட்டம் பட்டு என
தலை தலை அவர் கதம் தவிர்ப்ப தாழ்ந்து போய்
குல தலை மகளிர்-தம் கற்பின் கோட்டகம்
நிலை படா நிறைந்தன பிறவும் என்பவே

#42
கவ்வையும் கடும் புனல் ஒலியும் காப்பவர்
செவ்வன் நூறு_ஆயிரம் சிலைக்கும் பம்பையும்
எ எலா திசைகளும் ஈண்டி காரொடு
பவ்வம் நின்று இயம்புவது ஒத்த என்பவே

#43
மாமனும் மருகனும் போலும் அன்பின
காமனும் சாமனும் கலந்த காட்சிய
பூமனும் அரிசி புல் ஆர்ந்த மோட்டின
தாம் இனம் அமைந்து தம் தொழிலின் மிக்கவே

#44
நெறி மருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம்
செறி மருப்பு ஏற்று இனம் சிலம்ப பண்ணுறீஇ
பொறி வரி வராலினம் இரிய புக்கு உடன்
வெறி கமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே

#45
சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை
வீறொடு விளைக என தொழுது வித்துவார்
நாறு இது பதம் என பறித்து நாள்செய்வார்
கூறிய கடைசியர் குழாம் கொண்டு ஏகுவார்

#46
முலை தடம் சேதகம் பொறிப்ப மற்று அவர்
குலைத்து உடன் பதித்தலின் குதித்த வாள் கயல்
புலத்து-இடை கவரி கன்று ஊட்ட போந்த பால்
நிலத்து-இடை பாய்ந்து அவை பிறழும் நீரவே

#47
பால் சுவை அறிந்து அவை பழன தாமரை
மேல் செல பாய்தலின் வெரீஇய வண்டு இனம்
கோல் தொடி நுளைச்சியர் முத்தம் கோப்பவர்
ஏற்றிய மாலை தேன் இரிய பாய்ந்தவே

#48
இரிந்த தேன் குவளையின் நெற்றி தைவர
முரிந்து போது அவிழ்ந்து கொங்கு உயிர்க்கும் முல்லையின்
அரும்பு சேர்ந்து அணி ஞிமிறு ஆர்ப்ப வாய் பதம்
விருந்து எதிர்கொண்ம் என தழுவி வீழ்ந்தவே

#49
வள முடி நடுபவர் வரம்பு இல் கம்பலை
இள மழை முழக்கு என மஞ்ஞை ஏங்கலின்
அளமரு குயிலினம் அழுங்கி பூம் பொழில்
உளம் மெலி மகளிரின் ஒடுங்கும் என்பவே

#50
வளை கையால் கடைசியர் மட்டு வாக்கலின்
திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழி
களிப்ப உண்டு இள அனம் கன்னி நாரையை
திளைத்தலின் பெடை மயில் தெருட்டும் செம்மற்றே

#51
கண் என குவளையும் கட்டல் ஓம்பினார்
வண்ண வாள் முகம் என மரையின் உள் புகார்
பண் எழுத்து இயல் பட பரப்பி இட்டனர்
தண் வயல் உழவர்-தம் தன்மை இன்னதே

#52
நித்தில பந்துடன் ஈன்று பாதிரி
ஒத்த பூ உடற்றிய நாவின் நாகினால்
தத்து நீர் நாரை மேல் எறிய தண் கடல்
பைத்து எழு திரை என பறவை ஆலுமே

#53
சொல் அரும் சூல் பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கரு இருந்து ஈன்று மேல் அலார்
செல்வமே போல் தலை நிறுவி தேர்ந்த நூல்
கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சி காய்த்தவே

#54
மீன் கணின் அளவும் வெற்று இடங்கள் இன்மையால்
தேன் கண கரும்பு இயல் காடும் செந்நெலின்
வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும்
ஊன் கணார்க்கு உரைப்ப அரிது ஒல் என் சும்மைத்தே

#55
ஆய் பிழி விருத்து வண்டு அயிற்றி உண்டு தேன்
வாய் பொழி குவளைகள் சூடி மள்ளர்கள்
தேய் பிறை இரும்பு தம் வலக்கை சேர்த்தினர்
ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே

#56
வலி உடை கைகளால் மலர்ந்த தாமரை
மெலிவு எய்த குவளைகள் வாட கம்பலம்
பொலிவு எய்த பூம் பொய்கை சிலம்பி பார்ப்பு எழ
மலை பட அரிந்து கூன் குயம் கை மாற்றினார்

#57
வாளையின் இனம் தலை இரிய வண்டு அலர்
தாள் உடை தாமரை கிழிய வண் சுமை
கோள் உடை இளையவர் குழாம் கொண்டு ஏகலில்
பாளை வாய் கமுகு இனம் பழங்கள் சிந்துமே

#58
சோர் புயல் முகில் தலை விலங்கி தூ நிலம்
மார்பு கொண்டு ஆர்ந்து அது நரல வண் சுளை
ஆர்புறு பலா பழம் அழிந்த நீள் களம்
போர்பினால் மலிந்து உடன் பொலிந்த நீரவே

#59
ஈடு சால் போர் பழித்து எருமை போத்தினால்
மாடு உற தெளித்து வை களைந்து கால் உறீஇ
சேடு உற கூப்பிய செந்நெல் குப்பைகள்
கோடு உயர் கொழும் பொனின் குன்றம் ஒத்தவே

#60
கரும்பு கண் உடைப்பவர் ஆலை-தோறெலாம்
விரும்பி வந்து அடைந்தவர் பருகி விஞ்சிய
திருந்து சாறு அடுவுழி பிறந்த தீம் புகை
பரந்து விண் புகுதலின் பருதி சேந்ததே

#61
கிணை நிலை பொருநர் தம் செல்லல் கீழ் பட
பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும்
கணை நிலை கரும்பினில் கவரும் பண்டியும்
மண நிலை மலர் பெய்து மறுகும் பண்டியும்

#62
மல்லல் அம் தெங்கு இளநீர் பெய் பண்டியும்
மெல் இலை பண்டியும் கமுகின் மேதகு
பல் பழுக்காய் குலை பெய்த பண்டியும்
ஒல்கு தீம் பண்டம் பெய்து ஒழுகும் பண்டியும்

#63
கரும் கடல் வளம் தர கரையும் பண்டியும்
நெருங்குபு முதிரையின் நிறைந்த பண்டியும்
பெரும் கலி பண்டிகள் பிறவும் செற்றுபு
திருந்தி எ திசைகளும் செறிந்த என்பவே

#64
கிளி வளர் பூ மருது அணிந்து கேடு இலா
வள வயல் வைகலும் இன்னது என்ப தேன்
துளியொடு மது துளி அறாத சோலை சூழ்
ஒளி அமை இருக்கை ஊர் உரைக்க நின்றவே

#65
சேவல் அன்னம் தாமரையின் தோடு அவிழ்ந்த செவ்வி பூ
காவில் கூடு எடுக்கிய கவ்வி கொண்டு இருந்தன
தா இல் பொன் விளக்கமா தண் குயில் முழவமா
தூவி மஞ்ஞை நன் மணம் புகுத்தும் தும்பி கொம்பரோ

#66
கூடினார் கண் அம் மலர் குவளை அம் குழி-இடை
வாடு வள்ளை மேல் எலாம் வாளை ஏற பாய்வன
பாடு சால் கயிற்றில் பாய்ந்து பல் கலன் ஒலிப்ப போந்து
ஆடு கூத்தி ஆடல் போன்ற நாரை காண்ப ஒத்தவே

#67
காவி அன்ன கண்ணினார் கயம் தலை குடைதலின்
ஆவி அன்ன பூம் துகில் அணிந்த அல்குல் பல் கலை
கோவை அற்று உதிர்ந்தன கொள்ளும் நீரர் இன்மையின்
வாவி யாவும் பொன் அணிந்து வானம் பூத்தது ஒத்தவே

#68
பாசவல் இடிப்பவர் உலக்கை வாழை பல் பழம்
ஆசினி வருக்கை மா தடிந்து தேம் கனி உதிர்த்து
ஊசல் ஆடும் பைம் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ
வாச தாழை சண்பகத்தின் வான் மலர்கள் நக்குமே

#69
மன்றல் நாறு இலஞ்சி மேய்ந்து மா முலை சுரந்த பால்
நின்ற தாரையால் நிலம் நனைப்ப ஏகி நீள் மனை
கன்று அருத்தி மங்கையர் கலம் நிறை பொழிதர
நின்ற மேதியால் பொலிந்த நீர மாட மாலையே

#70
வெள்ளி போழ் விலங்க வைத்து அனைய வாய் மணி தலை
கொள் பவளம் கோத்த அனைய கால குன்றி செம் கண
ஒள் அகில் புகை திரண்டது ஒக்கும் மா மணி புறா
கிள்ளையோடு பால் உணும் கேடு இல் பூவை பாடவே

#71
காடி உண்ட பூம் துகில் கழும ஊட்டும் பூம் புகை
மாட மாலை மேல் நலார் மணி குழலின் மூழ்கலின்
கோடு உயர்ந்த குன்றின் மேல் குழீஇய மஞ்ஞை-தம் சிறகு
ஆடும் மஞ்சினுள் விரித்து இருந்த வண்ணம் அன்னரே

#72
கண் உளார் நும் காதலர் ஒழிக காமம் ஈங்கு என
உள் நிலாய வேட்கையால் ஊடினாரை ஆடவர்
வண்ண மேகலைகளை பற்ற அற்று உதிர்ந்தன
எண் இல் பொன் சுடு நெருப்பு உக்க முற்றம் ஒத்தவே

#73
கோட்டு இளம் தகர்களும் கொய் மலர தோன்றி போல்
சூட்டு உடைய சேவலும் தோணி கோழி ஆதியா
வேட்டவற்றின் ஊறு உளார் வெருளி மாந்தர் போர் கொளீஇ
காட்டி ஆர்க்கும் கௌவையும் கடியும் கௌவை கௌவையே

#74
இறு நுசுப்பின் அம் நலார் ஏந்து வள்ளத்து ஏந்திய
நறவம் கொப்புளித்தலின் நாகு புன்னை பூத்தன
சிறகர் வண்டு செவ்வழி பாட மாடத்து ஊடு எலாம்
இறைகொள் வானின் மீன் என அரம்பை முலையின் இருந்தவே

#75
விலக்கு இல் சாலை யாவர்க்கும் வெப்பின் மு பழ சுனை
தலை தணீர் மலர் அணிந்து சந்தனம் செய் பந்தரும்
கொலை தலைய வேல் கணார் கூத்தும் அன்றி ஐம்பொறி
நில தலைய துப்பு எலாம் நிறை துளும்பும் ஊர்களே

#76
அடிசில் வைகல் ஆயிரம் அற புறமும் ஆயிரம்
கொடி அனார் செய் கோலமும் வைகல்-தோறும் ஆயிரம்
மடிவு இல் கம்மியர்களோடு மங்கலமும் ஆயிரம்
ஒடிவு இலை வேறு ஆயிரம் ஓம்புவாரின் ஓம்பவே

#77
நல் தவம் செய்வார்க்கு இடம் தவம் செய்வார்க்கும் அஃது இடம்
நல் பொருள் செய்வார்க்கு இடம் பொருள் செய்வார்க்கும் அஃது இடம்
பெற்ற இன்பம் விழைவிப்பான் விண் உவந்து வீழ்ந்து என
மற்ற நாடு வட்டம் ஆக வைகும் மற்ற நாடு-அரோ

#78
கண் வலை காமுகர் என்னும் மா படுத்து
ஒள் நிதி தசை தழீஇ உடலம் விட்டிடும்
பெண் வலை படாதவர் பீடின் ஓங்கிய
அண்ணல் அம் கடி நகர் அமைதி செப்புவாம்

#79
விண் புகு வியன் சினை மெலிய பூத்தன
சண்பகத்து அணி மலர் குடைந்து தாது உக
வண் சிறை குயிலொடு மயில்கள் மாறு கூஉய்
கண் சிறைப்படு நிழல் காவு சூழ்ந்தவே

#80
கை புனை சாந்தமும் கடி செய் மாலையும்
மெய் புனை சுண்ணமும் புகையும் மேவிய
நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினால்
பொய்கைகள் பூம் படாம் போர்த்த போன்றவே

#81
கடி நல கரும்பொடு காய் நெல் கற்றையின்
பிடி நலம் தழீஇ வரும் பெரும் கை குஞ்சரம்
அடி நிலை இருப்பு எழு அமைந்த கல் மதில்
புடை நிலை வாரிகள் பொலிந்த சூழ்ந்தவே

#82
சல சல மு மதம் சொரிய தம் தம்முள்
கொலை மருப்பு இரட்டைகள் குளிப்ப பாய்ந்து இரு
மலை திளைப்பன என நாகம் ஆன்ற போர்
குலவிய நிலைக்களம் கோலம் ஆர்ந்தவே

#83
முத்து உடை வெண் மருப்பு ஈர்ந்து மொய்கொள
பத்தியில் குயிற்றிய மருங்கில் பல் வினை
சித்திர கிம்புரி வைரம் சேர்த்துநர்
ஒத்து இயல் இடங்களும் ஒழுங்கு நீண்டவே

#84
ஓடு தேர் சாரிகை உகு பொன் பூமியும்
ஆடகம் ஆற்றும் தார் புரவி வட்டமும்
கேடக வாள் தொழில் இடமும் கேடு இலா
கோடு வெம் சிலை தொழில் இடமும் கூடின்றே

#85
புடை நகர் தொழில் இடம் கடந்து புக்க பின்
இடை நகர் புறம் பணை இயம்பும் ஓசை ஓர்
கடல் உடைந்தது என கலந்தது அ கடல்
மடை அடைத்து அனையது அ மாக்கள் ஈட்டமே

#86
சிந்துர பொடிகளும் செம்பொன் சுண்ணமும்
சந்தன நீரோடு கலந்து தையலார்
பந்தொடு சிவிறியில் சிதற பார் மிசை
இந்திரவில் என கிடந்த வீதியே

#87
பாத்தரும் பசும்பொன்னின் மாடத்து உச்சி மேல்
தூ திரள் மணி குடம் நிரைத்து தோன்றுவ
பூத்தன வேங்கை மேல் பொலிந்து கார் நினைந்து
ஏத்தரும் மயில் குழாம் இருந்த போன்றவே

#88
நெடும் கொடி நிழல் மதி நெற்றி தைவர
உடம்பு வேர்த்து இன மழை உரறி நோக்கலின்
நடுங்குபு நல் வரை மாடத்து உச்சியில்
அடங்கி வீழ்ந்து அருவியின் அழுவ போன்றவே

#89
பொன் சிறு தேர் மிசை பைம்பொன் போதகம்
நல் சிறார் ஊர்தலின் நங்கைமார் விரீஇ
உற்றவர் கோழி மேல் எறிந்த ஒண் குழை
மற்று அ தேர் உருள் கொடா வளமை சான்றவே

#90
மாலையும் பசும்பொனும் மயங்கி வார் கணை
கோல் எய்யும் குனி சிலை நுதலினாரொடு
வேல் இயல் ஆடவர் விரவி விண்ணவர்
ஆலயம் இது என ஐயம் செய்யுமே

#91
கல் சுணம் செய்த தோள் மைந்தர் காதலால்
நல் சுண பட்டு உடை பற்ற நாணினால்
பொன் சுணத்தால் விளக்கு அவிப்ப பொங்கிய
பொன் சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்றே

#92
நலத்தகு நானம் நின்று இடிக்கும் நல்லவர்
உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம்
நிலத்து அவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞை போய்
கலத்து உயர் கூம்பின் மேல் ஆடும் கௌவைத்தே

#93
இட்ட எள் நிலம்படா வகையில் ஈண்டிய
முட்டு இலா மூ_அறு பாடை மாக்களால்
புள் பயில் பழு மரம் பொலிவிற்று ஆகிய
மட்டு இலா வள நகர் வண்ணம் இன்னதே

#94
தங்கு ஒளி நித்தில தாமம் சூடிய
வெம் களி இள முலை வேல் கண் மாதரார்
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கு அலர் தாமரை கிடங்கு கூறுவாம்

#95
கோள் சுறா இனத்தொடு முதலை குப்பைகள்
ஆள் பெறா திரிதர அஞ்சி பாய்வன
மோட்டு இறா பனி கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
ஈட்டறா புள் இனம் இரற்றும் என்பவே

#96
சிறை அன பெடையினோடு ஊடி சேவல் போய்
அறு பத வண்டு இனம் ஆர்ப்ப தாமரை
உறைவது குழுவின் நீங்கி யோகொடு
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே

#97
அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது
கரும் கலம் தோய்வு இலா காமர் பூம் துறை
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்
விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே

#98
பட்டவர் தப்பலின் பரவை ஏந்து அல்குல்
அட்டு ஒளி அரத்தம் வாய் கணிகை அல்லது
மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்
கட்டு உடை காவலின் காமர் கன்னியே

#99
நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்
விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்
குரை மது குவளைகள் கிடங்கில் பூத்தவும்
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே

#100
தாய் முலை தழுவிய குழவி போலவும்
மா மலை தழுவிய மஞ்சு போலவும்
ஆய் முகில் தழீஇ அசும்பு அறாத நெற்றிய
சேய் உயர் மதில் வகை செப்புகின்றதே

#101
மாற்றவர் மற படை மலைந்து மதில் பற்றின்
நூற்றுவரை கொல்லியொடு நூக்கி எறி பொறியும்
தோற்றமுறு பேய் களிறு துற்று பெரும் பாம்பும்
கூற்றம் அன கழுகு தொடர் குந்தமொடு கோண்மா

#102
வில் பொறிகள் வெய்ய விடு குதிரை தொடர் அயில் வாள்
கல் பொறிகள் பாவை அனம் மாடம் அடு செம் தீ
கொல் புனை செய் கொள்ளி பெரும் கொக்கு எழில் செய் கூகை
நல் தலைகள் திருக்கும் வலி நெருக்கும் மர நிலையே

#103
செம்பு உருகு வெம் களிகள் உமிழ்வ திரிந்து எங்கும்
வெம்பு உருகு வட்டு உமிழ்வ வெம் நெய் முகத்து உமிழ்வ
அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகி
தம் புலங்களால் யவனர் தாள்படுத்த பொறியே

#104
கரும் பொன் இயல் பன்றி கத நாகம் விடு சகடம்
குரங்கு பொரு தகரினொடு கூர்ந்து அரிவ நுண் நூல்
பரந்த பசும்பொன் கொடி பதாகையொடு கொழிக்கும்
திருந்து மதி தெவ்வர் தலை பனிப்ப திருந்தின்றே

#105
வயிர வரை கண் விழிப்ப போன்று மழை உகளும்
வயிர மணி தாழ் கதவு வாயில் முகம் ஆக
வயிரம் அணி ஞாயில் முலை வான் பொன் கொடி கூந்தல்
வயிர கிடங்கு ஆடை மதில் கன்னியது கவினே

#106
செம்பொன் மழை போன்று அடி-தொறு ஆயிரங்கள் சிந்தி
பைம்பொன் விளை தீவில் நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி
அம் பொன் நிலத்து ஏகு குடி அக நகரம் அதுதான்
உம்பர் உலகு ஒப்பது அதன் தன்மை சிறிது உரைப்பாம்

#107
துப்பு உறழ் தொண்டை செ வாய் தோழியர் காம தூதின்
ஒப்ப ஒன்று ஆதி ஆக ஆயிரத்தோர் எட்டு ஈறா
செப்பி தம் செம்பொன் அல்குல் நலம் வரைவு இன்றி விற்கும்
உப்பு அமை காம துப்பின் அவர் இடம் உரைத்தும் அன்றே

#108
குங்குமம் மெழுகி சார்பும் திண்ணையும் குயிற்றி உள்ளால்
தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி
எங்கும் நல் சுவர்கள்-தோறும் நாடகம் எழுதி ஏற்ப
பொங்கு மென் மலர் பெய் சேக்கை பொலிந்து விண் புகற்சி உண்டே

#109
தூசு சூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன வீழ்த்த
காசு சூழ் கோவை முத்தம் கதிர் முலை திமிர்ந்த சாந்தம்
வாச நல் பொடிகள் மாலை வண்டு உண வீழ்ந்த முற்றம்
ஆசைப்பட்டு அரசு வைக அரும் கடி கமழும் அன்றே

#110
அம் சிலம்பு ஒலியோடு அல்குல் கலை ஒலி அணிந்த முன்கை
பஞ்சி மெல் விரலில் பாணி பண் ஒலி பவழ செ வாய்
அஞ்சி நேர்ந்து உயிர்க்கும் தேன் சேர் குழல் ஒலி முழவின் ஓசை
துஞ்சல் இல் ஓசை தம்மால் துறக்கமும் நிகர்க்கலாதே

#111
தேன் உலாம் மது செய் கோதை தேம் புகை கமழ ஊட்ட
வான் உலாம் சுடர் கண் மூடி மாநகர் இரவு செய்ய
பால் நிலா சொரிந்து நல்லார் அணிகலம் பகலை செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேல் உலகு அனையது ஒன்றே

#112
இட்ட நூல் வழாமை ஓடி யோசனை எல்லை நீண்டு
மட்டுவார் மாலை வேய்ந்து சதுக்கங்கள் மலிந்த சும்மை
பட்டமும் பசும்பொன் பூணும் பரந்து ஒளி நிழற்றும் தீம் தேன்
அட்டும் தார் அணிந்த மார்பர் ஆவணம் விளக்கல் உற்றேன்

#113
மணி புனை செம்பொன் கொட்டை வம்பு அணி முத்த மாலை
கணி புனை பவழ திண் காழ் கம்பல கிடுகின் ஊன்றி
அணி நிலம் மெழுகி சாந்தின் அகில் புகைத்து அம் பொன் போதில்
திணி நிலம் அணிந்து தேம் கொள் ஐயவி சிதறினாரே

#114
பொன் சொரி கதவு தாளின் திறந்து பொன் யவன பேழை
மின் சொரி மணியும் முத்தும் வயிரமும் குவித்து பின்னும்
மன் பெரும் பவழ குப்பை வால் அணிகலம் செய் குப்பை
நன் பகல் இரவு செய்யும் நன் கலம் கூப்பினாரே

#115
விழு கலம் சொரிய சிந்தி வீழ்ந்தவை எடுத்துக்கொள்ளா
ஒழுக்கினர் அவர்கள் செல்வம் உரைப்பரிது ஒழிக வேண்டா
பழ குலை கமுகும் தெங்கும் வாழையும் பசும்பொன்னாலும்
எழில் பொலி மணியினாலும் கடை-தொறும் இயற்றினாரே

#116
மூசு தேன் இறாலின் மூச மொய் திரை இயம்பி யாங்கும்
ஓசை என்று உணரின் அல்லால் எழுத்து மெய் உணர்த்தல் ஆகா
பூசு சாந்து ஒருவர் பூசிற்று எழுவர் தம் அகலம் பூசி
மா சனம் இடம் பெறாது வண் கடை மலிந்தது அன்றே

#117
மெய் அணி பசும்பொன் சுண்ணம் மேதகு நான நீரின்
ஐதுபட்டு ஒழுகி யானை அழி மதம் கலந்து சேறாய்
செய் அணிகலன்கள் சிந்தி மாலையும் மதுவும் மல்கி
வெய்து அடி இடுதற்கு ஆகா வீதிகள் விளம்பல் உற்றேன்

#118
முழவு அணி முது நகர் முரசொடு வளை விம
விழவு அணி மகளிர் தம் விரை கமழ் இள முலை
இழை அணி ஒளி இள வெயில் செய விடு புகை
மழை என மறையின பொலிவினது ஒருபால்

#119
குடையொடு குடை பல களிறொடு நெரி தர
உடை கடல் ஒலியினொடு உறுவார் பலி செல
முடியொடு முடியுற மிடைதலின் விடு சுடர்
கொடி உடை மழை மினின் குலவியது ஒருபால்

#120
பூத்தலை வாரண போர் தொழில் இளையவர்
நா தலை மடி விளி கூத்தொடு குயில் தர
காய்த்துறு தமனிய துகளொடு கடி கமழ்
பூ துகள் கழுமிய பொலிவினது ஒருபால்

#121
மைந்தரோடு ஊடிய மகளிரை இளையவர்
அம் துகில் பற்றலின் காசு அரிந்து அணி கிளர்
சுந்தர நில மிசை சொரிதலின் மின் அணிந்து
இந்திர திருவிலின் எழிலினது ஒருபால்

#122
வளை அறுத்து அனையன வால் அரி அமை பதம்
அளவு அறு நறு நெய்யொடு கறி அமை துவை
விளைவு அமை தயிரொடு மிசை குவிர் விரையும்-மின்
உள அணி கலம் எனும் உரையினது ஒருபால்

#123
வரை நிரை அருவியின் மதம் மிசை சொரிவன
புரை நிரை களிறொடு புனை மணி இயல் தேர்
விரை நிரை இவுளியொடு இளையவர் விரவுபு
குரை நிரை குளிர் புனல் ஆற்றினது ஒருபால்

#124
வரி வளை அரவமும் மணி முழவு அரவமும்
அரி வளர் கண்ணியர் அணிகல அரவமும்
புரி வளர் குழலொடு பொலி மலி கவினிய
திரு விழை கடி மனை திறவிதின் மொழிவாம்

#125
பாவை அன்னவர் பந்து புடைத்தலில்
தூவி அன்னம் வெரீஇ துணை என்று போய்
கோவை நித்தில மாட குழாம் மிசை
மேவி வெண் மதி தன்னொடு இருக்குமே

#126
திருவ நீள் நகர் செம்பொனின் நீடிய
உருவ ஒண் கொடி ஊழின் நுடங்குவ
பரவை வெம் கதிர் செல்வன பன் மயிர்
புரவி பொங்கு அழல் ஆற்றுவ போன்றவே

#127
இழை கொள் வெம் முலை ஈரம் உலர்த்துவார்
விழைய ஊட்டிய மேதகு தீம் புகை
குழை கொள் வாண் முகம் சூழ் குளிர் அம் கதிர்
மழையுள் மா மதி போன்ம் என தோன்றுமே

#128
செம்பொன் கண்ணி சிறார் களைந்திட்டவும்
அம் பொன் மாலை அவிழ்ந்து உடன் வீழ்ந்தவும்
தம் பொன் மேனி திமிர்ந்த தண் சாந்தமும்
வம்பு உண் கோதையர் மாற்றும் அயல்-அரோ

#129
வேரி இன் மெழுக்கு ஆர்ந்த மென் பூ நிலத்து
ஆரி ஆக அம் சாந்தம் தளித்த பின்
வாரி நித்திலம் வைப்ப பொன் பூவொடு
சேரி-தோறு இது செல்வத்து இயற்கையே

#130
கருனை வாசமும் கார் இருள் கூந்தலார்
அருமை சான்ற அகில் புகை வாசமும்
செருமி சேர்ந்து கண்ணீர் வர தேம் பொழில்
உரிமை கொண்டன ஒண் புறவு என்பவே

#131
நறையும் நானமும் நாறும் நறும் புகை
விறகின் வெள்ளி அடுப்பின் அம் பொன் கலம்
நிறைய ஆக்கிய நெய் பயில் இன் அமுது
உறையும் மாந்தர் விருந்தொடும் உண்பவே

#132
பாளை மென் கமுகின் பழம் மெல் இலை
நீள் வெண் மாடத்து நின்று கொண்டு அம் நலார்
ஆளிய மொய்ம்பர்க்கு அளித்து அணி சண்பகம்
நாள்செய் மாலை நகை முடி பெய்பவே

#133
எழுது வாள் நெடும் கண் இணை அம் நலார்
மெழுகு குங்கும மார்பு-இடை வெம் முலை
உழுது கோதையும் சாந்தும் உவந்து அவை
முழுதும் வித்தி விளைப்பர் திளைப்பவே

#134
குஞ்சி மேல் அனிச்ச மலர் கூட்டுணும்
அம்_சில்_ஓதியர் அம் மலர் சீறடி
மஞ்சு தோய் மணி மாடத்து மல்கு பூம்
பஞ்சி மேலும் பனிக்கும் பனிக்குமே

#135
தூமமே கமழும் துகில் சேக்கை மேல்
காமமே நுகர்வார் தம் காதலால்
யாமமும் பகலும் அறியாமையால்
பூமி மாநகர் பொன் உலகு ஒத்ததே

#136
அரவு கான்றிட்ட அம் கதிர் மா மணி
உரவு நீர் முத்தும் உள்ளுறுத்து உள்ளன
இரவல் மாந்தர்க்கும் இன்னவை ஈவது ஓர்
புரவு பூண்டனர் பொன் நகர் மாந்தரே

#137
முல்லை அம் குழலார் முலை செல்வமும்
மல்லல் மாநகர் செல்வமும் வார் கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர் போல்
எல்லியும் இமையார் இமையாததே

#138
முழவும் சங்கமும் முன்றில் முழங்குவ
விழவும் வேள்வும் விடுத்தல் ஒன்று இன்மையால்
புகழலாம் படித்து அன்று இது பொன்னகர்
அகழ்தல் மா கடல் அன்னது ஓர் சும்மைத்தே

#139
திங்கள் முக்குடையான் திரு மாநகர்
எங்கும் எங்கும் இடம்-தொறும் உண்மையால்
அம் கண் மாநகர்க்கு ஆக்கம் அறாதது ஓர்
சங்க நீள் நிதியால் தழைக்கின்றதே

#140
தேன்தலை துவலை மாலை பைம் துகில் செம்பொன் பூத்து
ஞான்றன வயிர மாலை நகு கதிர் முத்த மாலை
கான்று அமிர்து ஏந்தி நின்ற கற்பக சோலை யார்க்கும்
ஈன்று அருள் சுரந்த செல்வத்து இராசமாபுரம் அதாமே

#141
வேக யானை மீளி வேல் வெய்ய தானை ஐய கோல்
மாகம் நீள் மணிமுடி மாரி வண் கை மாசு இல் சீர்
ஏக ஆணை வெண்குடை இ நகர்க்கு மன்னவன்
நாக நீர நல் நகர் நன்மை தன்னம் செப்புவாம்

#142
நீள் நிலம் வகுத்து நீர் நிரந்து வந்து இழிதர
சேண் நிலத்து இயற்றிய சித்திர சுருங்கை சேர்
கோள் நிலத்து வெய்யவாம் கொடும் சுற தடம் கிடங்கு
பூண் நிலத்து வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்ததே

#143
இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின்
மஞ்சு சூழ்ந்து கொண்டு அணிந்து மாக நீண்ட நாகமும்
அஞ்சு நின்னை என்றலின் ஆண்டு நின்று நீண்ட தன்
குஞ்சி மாண் கொடி கையால் கூவி விட்டது ஒத்ததே

#144
முத்து மாலை முப்புரி மூரி மா மணி கதவு
ஒத்த நான்கு கோபுரம் ஓங்கி நின்று ஒளிர்வன
சத்தி நெற்றி சூட்டிய தாம நீள் மணிவணன்
தத்து ஒளி மணிமுடி தாமம் நால்வ போலுமே

#145
சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலை
கொங்கு விம்மு கோதை தாழ் கூந்தல் ஏந்து சாயலார்
இங்கித களிப்பினால் எய்தி ஆடும் பூம் பொழில்
செம் கண் இந்திரன் நகர் செல்வம் என்னது அன்னதே

#146
வெள்ளி யானை மென் பிடி மின் இலங்கு பைம்பொனால்
துள்ளும் மான் ஒருத்தலும் செம்பொன் அம் பொன் மான் பிணை
உள்ளு காமம் உள் சுட வேந்தன் ஆங்கு உறைவது ஓர்
பள்ளிமாட மண்டபம் பசுங்கதிர்ப்ப வண்ணமே

#147
கோழ் அரை மணி மடல் கூந்தல் நெற்றி ஏந்திய
மாழை அம் திரள் கனி மா மணி மரகதம்
சூழ் குலை பசும் கமுகு சூலு பாளை வெண்பொனால்
ஊழ் திரள் மணி கயிறு ஊசல் ஆட விட்டதே

#148
மென் தினை பிறங்கலும் மிளிர்ந்து வீழ் அருவியும்
குன்று அயல் மணி சுனை குவளை கண் விழிப்பவும்
நின்று நோக்கு மான் பிணை நீல யானை மன்னவன்
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே

#149
தீம் குயில் மணந்து தேன் துஞ்ச வண்டு பாண் செய
வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த சந்தனம்
ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறு நாகமும்
நீங்க நீங்கும் இன் உயிர் நினைப்பின் நின்று இளஃகுமே

#150
முத்தம் வாய் புரித்தன மொய் கதிர் பசும்பொனால்
சித்திரத்து இயற்றிய செல்வம் மல்கு பன் மணி
பத்தியில் குயிற்றி வான் பதித்து வைத்த போல்வன
இ திறத்த பந்து எறிந்து இளையர் ஆடு பூமியே

#151
வைத்த பந்து எடுத்தலும் மாலையுள் கரத்தலும்
கைத்தலத்தின் ஓட்டலும் கண்ணி நெற்றி தீட்டலும்
பத்தியில் புடைத்தலும் பை அரவின் ஆடலும்
இ திறத்த பந்தினோடு இன்பம் எல்லை இல்லையே

#152
கூற்றம் அன்ன கூர் நுதி குருதி வான் மருப்பு-இடை
சீற்றம் உற்ற மன்னர் தம் சென்னி பந்து அடிப்பன
ஊற்று இருந்த மு மதத்து ஓடை யானை பீடுசால்
காற்று இயல் புரவி தேர் கலந்து கௌவை மல்கின்றே

#153
கவ்வை அம் கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும்
தெவ்வர் தந்த நீள் நிதி செம்பொன் மாடமும்
மவ்வல் அம் குழலினார் மணி கலம் பெய் மாடமும்
இ வலந்த அல்லவும் இடங்கள் எல்லை இல்லையே

#154
பூத்த கோங்கும் வேங்கையும் பொன் இணர் செய் கொன்றையும்
காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார்
கூத்து அறாத பள்ளியும் கொற்றம் அன்ன மங்கையர்
ஏத்தல் சான்ற கோயிலும் இடைப்படுத்து இயன்றவே

#155
கந்து மா மணி திரள் கடைந்து செம்பொன் நீள் சுவர்
சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனால்
இந்திரன் திருநகர் உரிமையோடு இ வழி
வந்து இருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே

#156
ஆடலின் அரவமும் அங்கை கொட்டி நெஞ்சு உண
பாடலின் அரவமும் பணை முழவு அரவமும்
கூடு கோல தீம் சுவை கோல யாழ் அரவமும்
வாடல் இல்ல ஓசையால் வைகல் நாளும் வைகிற்றே

#157
நச்சு நாகத்தின் ஆர் அழல் சீற்றத்தன்
அச்சம் உற்று அடைந்தார்க்கு அமிர்து அன்னவன்
கச்சு உலாம் முலையார்க்கு அணங்கு ஆகிய
சச்சந்தன் எனும் தாமரை செம் கணான்

#158
வண் கையால் கலி மாற்றி வை வேலினால்
திண் திறல் தெவ்வர் தேர் தொகை மாற்றினான்
நுண் கலைக்கு இடனாய் திரு_மா_மகள்
கண்களுக்கு இடன் ஆம் கடி மார்பனே

#159
கோதை நித்திலம் சூழ் குளிர் வெண்குடை
ஓத நீர் உலகு ஒப்ப நிழற்றலால்
தாதையே அவன் தாள் நிழல் தங்கிய
காதலால் களிக்கின்றது இ வையமே

#160
தருமன் தண் அளியால் தனது ஈகையால்
வருணன் கூற்று உயிர் மாற்றலின் வாமனே
அருமையால் அழகின் கணை ஐந்து உடை
திருமகன் திரு மா நில மன்னனே

#161
ஏனை மன்னர் தம் இன் உயிர் செற்ற வேல்
தானை மன்னரில் தான் இமில் ஏறு அனான்
தேனை மாரி அன்னான் திசை காவலன்
வானம் தோய் புகழான் மலிவு எய்தினான்

#162
செல்வற்கு இன்னணம் சேறலில் தீம் புனல்
மல்கு நீர் விதையத்து அரசன் மகள்
அல்லி சேர் அணங்கிற்கு அணங்கு அன்னவள்
வில்லின் நீள் புருவத்து எறி வேல் கணாள்

#163
உருவும் சாயலும் ஒப்ப உரைப்பதற்கு
அரிய-ஆயினும் அ வளை தோளி கண்
பெருகு காரிகை பேசுவல் பெண் அணங்கு
அரிய தேவரும் ஏத்து அரு நீரளே

#164
எண்ணெயும் நானமும் இவை மூழ்கி இருள் திருக்கிட்டு
ஒள் நறும் துகில் கிழி பொதிந்து உறை கழித்தன போல்
கண் இருண்டு நெறி மல்கி கடை குழன்ற கரும் குழல்கள்
வண்ண போது அருச்சித்து மகிழ்வு ஆனா தகையவே

#165
குழவி கோட்டு இளம் பிறையும் குளிர் மதியும் கூடின போல்
அழகுகொள் சிறு நுதலும் அணி வட்ட மதி முகமும்
தொழுதற்கு வரம் கொடுக்கும் தொண்டை வாய் தூ முறுவல்
ஒழுகு பொன் கொடி மூக்கும் உருப்பசியை உருக்குமே

#166
வண் சிலையை வனப்பு அழித்து வார்ந்து ஒழுகி நிலம் பெறா
நுண் கருமை கொண்டு ஒசிந்து நுதல் இவர்ந்து போந்து உலாய்
கண் கூடா கடை புடைத்து கைவல்லான் எழுதிய போல்
பண்பு ஆர்ந்த கொடும் புருவம் பழிச்சு ஆனா படியவே

#167
சேல் அனைய சில் அரிய கடை சிவந்து கரு மணி அம்
பால் அகத்து பதித்து அன்ன படியவாய் முனிவரையும்
மால் உறுப்ப மகிழ் செய்வ மாண்பில் நஞ்சும் அமிர்தமுமே
போல் குணத்த பொரு கயல் கண் செவி உற போந்து அகன்றனவே

#168
மயிர் எறி கத்தரிகை அனையவாய் வள்ளை வாடு
உயிர் செகுத்து முன் ஒன்றி பின் பேராது உரு அமைந்த
செயிர் மகர குண்டலமும் திளைப்பு ஆனா வார் காதும்
வயிரவில் முகம் சூடி வண்ணம் வீற்று இருந்தனவே

#169
ஈனாத இளம் கமுகின் மரகத மணி கண்ணும்
ஆனாதே இருள் பருகும் அரு மணி கடைந்ததூஉம்
தான் ஆகி இருளொடு ஓர் தாமரை பூ சுமந்து அன்ன
கான் ஆர்ந்த திரள் கழுத்து கவின் சிறை கொண்டு இருந்ததே

#170
மணி மகரம் வாய் போழ்ந்து வாழ் முத்த வடம் சூழ்ந்து ஆங்கு
அணி அரக்கு ஆர் செம் பஞ்சி அணை அனைய ஆடு அமை தோள்
துணி கதிர் வளை முன் கை தொகு விரல் செங்காந்தள்
மணி அரும்பு மலர் அங்கை குலிகம் ஆர் வனப்பினவே

#171
தாம செப்பு இணை முகட்டு தண் கதிர் விடு நீல
மா மணி தாபித்தன போல் மனம் பருகு கரும் கண்ண
ஏமுற அடி பரந்து இளம் பிறை வடம் சூடி
ஆம் அணங்கு குடியிருந்து அம் சுணங்கு பரந்தனவே

#172
அம் கை போல் வயிறு அணிந்த வலம் சுழி அமை கொப்பூழ்
கங்கையின் சுழி அலைக்கும் கண் கொளா நுடங்கு இடையை
உண்டு என தமர் மதிப்பர் நோக்கினார் பிறர் எல்லாம்
உண்டு இல்லை என ஐயம் அல்லது ஒன்று உணர்வு அரிதே

#173
மன் நாக இணை படமும் தேர் தட்டு மதி மயக்கி
பொன் ஆல வட்டமும் போல் கலை இமைக்கும் அகல் அல்குல்
கொன் இளம் பருதியும் குறு முயலின் குருதியும் போன்று
இன் அரத்த பட்டு அசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே

#174
வேழ வெண் திரள் தட கை வெருட்டி மற்று இளம் கன்னி
வாழை தண்டு என திரண்டு வால் அரக்கு உண் செம் பஞ்சி
தோழமை கொண்டு என மென்மை உடையவாய் ஒளி திகழ்ந்து
மாழை கொள் மணி மகரம் கௌவி வீற்று இருந்தனவே

#175
பக்கத்தால் கவிழியவாய் மேல் பிறங்கா பாண்டில் ஆ
ஒக்க நன்கு உணராமை பொருந்திய சந்தினவாய்
நெக்கு பின் கூடாது நிகர் அமைந்த முழந்தாளும்
மக்களுக்கு இல்லாத மாட்சியின் மலிந்தனவே

#176
ஆடு தசை பிறங்காது வற்றாது மயிர் அகன்று
நீடாது குறுகாது நிகர் அமைந்த அளவினவாய்
சேடு ஆவ நாழிகையின் புடை திரண்டு தேன் நெய் பெய்
வாடாத காம்பே போல் கணைக்கால் இன் வனப்பினவே

#177
பசும்பொன் செய் கிண்கிணியும் பாடகமும் பாடு அலைப்ப
நயந்து எரி பொன் சிலம்பு முத்து அரி பெய்து அகம் நக
இயைந்து எழிலார் மணி ஆமை இளம் பார்ப்பின் கூன் புறம் போல்
அசைந்து உணர்வு மடிந்து ஒழியும் அடி இணை புகழ்வார்க்கே

#178
அரக்கு இயல் செங்கழுநீர் அக இதழ் போல் உகிர் சூடி
பரப்பு இன்றி நுதி உயர்ந்து பழிப்பு அற திரண்டு நீண்டு
ஒருக்குற நெருங்கி பொன் ஒளி ஆழி அகம் கௌவி
திரு கவின் கொள் மெல் விரல்கள் தேன் ஆர்க்கும் தகையவே

#179
என்பொடு நரம்பு இன்றி இலவம் பூ அடர் அனுக்கி
இன்புற வரம்பு உயர்ந்து இரு நிலம் உற புல்லி
ஒன்பதின் சாண் நடப்பினும் ஒரு காதம் என்று அஞ்சும்
மென் பஞ்சி சீறடியும் மேதக்க விழைவினவே

#180
இ உருவு நெஞ்சு என்னும் கிழியின் மேல் இருந்து இலக்கித்து
அ உருவு நினைப்பு என்னும் துகிலிகையால் வருத்தித்து
கவ்விய தன் நோக்கினால் கண் விடுத்து காதல் நீர்
செவ்விதில் தெளித்து ஆனா காம பூ சிதறினான்

#181
மெய் பெறா எழுத்து உயிர்க்கும் மழலை வாய் இன் முறுவல்
தையலாள் நெடும் தடம் கண் வலைப்பட்டு சச்சந்தன்
ஐயுறான் அணங்கு எனவே அகத்து அடக்கி செல்கின்றான்
மொய் அறா களி யானை முழங்கி தேன் இமிர் தாரான்

#182
வண்டு இனம் முகபடாம் அணிந்து வார் மதம்
உண்டு உகுத்திடு களிற்று உழவன்-தன் மகள்
பெண்டிர்-தம் பெரு நலம் கடந்து பெற்ற பேர்
விண்டலர் கோதைக்கு விசயை என்பவே

#183
அரு மணி மரகதத்து அம் கண் நாறிய
எரி நிற பொன் இதழ் ஏந்து தாமரை
திருமகள் இவள் என திலக வெண்குடை
பெருமகன் கோயிலுள் பேதை வைகுமே

#184
கலம் புரி அகல் அல்குல் தாயர் தவ்வையர்
சிலம்புரி திருந்து அடி பரவ செல்பவள்
வலம்புரி சலஞ்சலம் வளைஇயது ஒத்தனள்
குலம் புரிந்து அனையது ஓர் கொடியின் நீர்மையள்

#185
இன் அகில் கொழும் புகை உயிர்க்கும் ஈர்ம் குழல்
மென் மலர் கோதை தன் முலைகள் வீங்கலின்
மின் உருக்குறும் இடை மெலிய மெல்லவே
கன்னி தன் திரு நலம் கனிந்தது என்பவே

#186
முந்து நாம் கூறிய மூரி தானை அ
கந்து கொல் கடா களி யானை மன்னவன்
பைம் தொடி பாசிழை பரவை ஏந்து அல்குல்
தந்தை-மாட்டு இசைத்தனன் தனது மாற்றமே

#187
மருமகன் வலந்தது மங்கை ஆக்கமும்
அரு மதி சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டவர் கலத்தல் பான்மையில்
பெருமகன் சேர்த்தினார் பிணை அனாளையே

#188
பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடும் குன்று அனானும்
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே

#189
காதலால் காம பூமி கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்

#190
தன் அமர் காதலானும் தையலும் மணந்த-போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆக புகழ் வெய்யோன் பருகியிட்டான்
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப்பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்

#191
பவழ வாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
தவழ் மது கோதை மாதர் தாமரை பூ அது ஆக
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான்

#192
பளிக்கு அறை பவழ பாவை பரிசு என திகழும் சாயல்
களி கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ஒளி கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறை பறவை ஒத்தான்

#193
துறு மலர் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறு மலர் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திட பெரியர் வைகினார்

#194
துடி தலை கரும் குழல் சுரும்பு உண் கோதை தன்
அடித்தலை சிலம்பினோடு அரவ மேகலை
வடி தலை கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே

#195
இழை கிளர் இள முலை எழுது நுண் இடை
தழை வளர் மது மலர் தயங்கு பூம் சிகை
குழை முக கொடியொடு குருதி வேலினான்
மழை முகில் மாரியின் வைகும் என்பவே

#196
படு திரை பவழ வாய் அமுதம் மாந்தியும்
கொடி வளர் குவி முலை தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மண கிழமை ஓர் கடலின் மிக்கதே

#197
கப்புர பசும் திரை கதிர் செய் மா மணி
செப்பொடு சிலதியர் ஏந்த தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே

#198
மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஒள் நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே

#199
குங்கும தோளினானும் கொழும் கயல் கண்ணினாளும்
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அற பருகும் நாளுள்
திங்கள் வெண்குடையினாற்கு திரு இழுக்குற்ற வண்ணம்
பைம் கதிர் மதியில் தெள்ளி பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே

#200
களிறு அனான் அமைச்சர்-தம்முள் கட்டியங்காரன் என்பான்
ஒளிறு வாள் தடக்கையானுக்கு உயிர் என ஒழுகும் நாளுள்
பிளிறு வார் முரசின் சாற்றி பெரும் சிறப்பு இயற்றி வேந்தன்
வெளிறு இலா கேள்வியானை வேறு கொண்டு இருந்து சொன்னான்

#201
அசைவு இலா புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி
வசை இலாள் வரத்தின் வந்தாள் வான் சுவை அமிர்தம் அன்னாள்
விசையையை பிரிதல் ஆற்றேன் வேந்தன் நீ ஆகி வையம்
இசை பட காத்தல் வேண்டும் இலங்கு பூண் மார்ப என்றான்

#202
அண்ணல் தான் உரைப்ப கேட்டே அடு களிற்று எருத்தின் இட்ட
வண்ண பூம் தவிசு தன்னை ஞமலி மேல் இட்டது ஒக்கும்
கண் அகல் ஞாலம் காத்தல் எனக்கு என கமழும் கண்ணி
மண் அகம் வளரும் தோளான் மறுத்து நீ மொழியல் என்றான்

#203
எழுதரு பருதி மார்பன் இற்று என இசைத்தலோடும்
தொழுது அடி பணிந்து சொல்லும் துன்னலர் தொலைத்த வேலோய்
கழி பெரும் காதலாள்-கண் கழி நலம் பெறுக வையம்
பழி படா வகையில் காக்கும் படு நுகம் பூண்பல் என்றான்

#204
வலம்புரி பொறித்த வண் கை மதவலி விடுப்ப ஏகி
கலந்தனன் சேனை காவல் கட்டியங்காரன் என்ன
உலந்தரு தோளினாய் நீ ஒருவன் மேல் கொற்றம் வைப்பின்
நிலம் திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியில் சொன்னான்

#205
எனக்கு உயிர் என்ன பட்டான் என் அலால் பிறரை இல்லான்
முனை திறம் உருக்கி முன்னே மொய் அமர் பலவும் வென்றான்
தனக்கு யான் செய்வ செய்தேன் தான் செய்வ செய்க ஒன்றும்
மனக்கு இனா மொழிய வேண்டா வாழியர் ஒழிக என்றான்

#206
காவல குறிப்பு அன்றேனும் கருமம் ஈது அருளி கேண்மோ
நாவலர் சொல் கொண்டார்க்கு நன்கு அலால் தீங்கு வாரா
பூ அலர் கொடியனார் கண் போகமே கழுமி மேலும்
பாவமும் பழியும் உற்றார் பற்பலர் கேள் இது என்றான்

#207
பெரும் பெயர் பிரமன் என்னும் பீடினால் பெரிய நீரான்
அரும்பிய முலையினாளுக்கு அணி முகம் நான்கு தோன்ற
விரும்பி ஆங்கு அவளை எய்தான் விண்ணகம் இழந்தது அன்றி
திருந்தினாற்கு இன்று-காறும் சிறு சொல்லாய் நின்றது அன்றே

#208
கை மலர் காந்தள் வேலி கண மலை அரையன் மங்கை
மை மலர் கோதை பாகம் கொண்டதே மறுவது ஆக
கொய் மலர் கொன்றை மாலை குளிர் மதி கண்ணியாற்கு
பெய் மலர் அலங்கல் மார்ப பெரும் பழி ஆயிற்று அன்றே

#209
நீல் நிற வண்ணன் அன்று நெடும் துகில் கவர்ந்து தம்முன்
பால் நிற வண்ணன் நோக்கில் பழி உடைத்து என்று கண்டாய்
வேல் நிற தானை வேந்தே விரி புனல் தொழுனை ஆற்றுள்
கோல் நிற வளையினார்க்கு குருந்து அவன் ஒசித்தது என்றான்

#210
காமமே கன்றி நின்ற கழுதை கண்டு அருளினாலே
வாமனார் சென்று கூடி வருந்தினீர் என்று வையத்து
ஈமம் சேர் மாலை போல இழித்திடப்பட்டது அன்றே
நாம வேல் தட கை வேந்தே நாம் இது தெரியின் என்றான்

#211
படு பழி மறைக்கல் ஆமோ பஞ்சவர் அன்று பெற்ற
வடு_உரை யாவர் பேர்ப்பார் வாய் பறை அறைந்து தூற்றி
இடுவதே அன்றி பின்னும் இழுக்கு உடைத்து அம்ம காமம்
நடுவு நின்று உலகம் ஓம்பல் நல்லதே போலும் என்றான்

#212
ஆர் அறிவு இகழ்தல் செல்லா ஆயிரம் செம் கணனானும்
கூர் அறிவு உடைய நீரார் சொல் பொருள் கொண்டு செல்லும்
பேர் அறிவு உடையை நீயும் பிணை அனாட்கு அவலம் செய்யும்
ஓர் அறிவு உடையை என்றான் உருத்திரதத்தன் என்பான்

#213
அளந்து தாம் கொண்டு காத்த அரும் தவம் உடைய நீரார்க்கு
அளந்தன போகம் எல்லாம் அவர் அவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும் அது எனக்கு உரையல் என்றான்
விளங்கு ஒளி மணிகள் வேய்ந்து விடு சுடர் இமைக்கும் பூணான்

#214
மூரி தேம் தாரினாய் நீ முனியினும் உறுதி நோக்கி
பாரித்தேன் தரும நுண் நூல் வழக்கு அது ஆதல் கண்டே
வேரி தேம் கோதை மாதர் விருந்து உனக்காக இன்பம்
பூரித்து ஏந்து இளைய கொங்கை புணர்க யான் போவல் என்றான்

#215
இனமாம் என்று உரைப்பினும் ஏதம் எணான்
முனம் ஆகிய பான்மை முளைத்து எழலால்
புன மா மலர் வேய் நறும் பூம் குழலாள்
மனமாம் நெறி ஓடிய மன்னவனே

#216
கலை ஆர் துகில் ஏந்து அல்குலும் கதிர் சூழ்
முலை ஆர் தடமும் முனியாது படிந்து
உலையா திருவின் அமிர்து உண்டு ஒளி சேர்
மலை ஆர் மணி மார்பன் மகிழ்ந்தனனே

#217
விரி மா மணி மாலை விளங்கு முடி
திரு மா மணி சிந்து திளைப்பினர் ஆய்
எரி மா மணி மார்பனும் ஏந்து_இழையும்
அரு மா மணி நாகரின் ஆயினரே

#218
நறவு ஆர்ந்தது ஓர் நாகு இளம் தாமரை வாய்
உற வீழ்ந்தது ஓர் ஒண் மணி போன்று உரவோன்
அறவு ஆக்கிய இன்பம் அமர்ந்த இருள்
கறை வேல் கணினாள் கனவு உற்றனளே

#219
பஞ்சி அடி பவள துவர் வாய் அவள்
துஞ்சும் இடை கனவு மூன்று அவை தோன்றலின்
அஞ்சி நடுங்கினள் ஆய்_இழை ஆயிடை
வெம் சுடர் தோன்றி விடிந்ததை அன்றே

#220
பண் கெழு மெல் விரலால் பணை தோளி தன்
கண் கழூஉ செய்து கலை நலம் தாங்கி
விண் பொழி பூ மழை வெல் கதிர் நேமிய
வண் புகழ் மால் அடி வந்தனை செய்தாள்

#221
இம்பர் இலா நறும் பூவொடு சாந்து கொண்டு
எம் பெருமான் அடிக்கு எய்துக என்று ஏத்தி
வெம் பரி மான் நெடும் தேர் மிகு தானை அ
தம் பெருமான் அடி சார்ந்தனள் அன்றே

#222
தான் அமர் காதலி தன்னொடு மா_வலி
வானவர் போல் மகிழ்வுற்ற பின் வார் நறும்
தேன் என பால் என சில் அமிர்து ஊற்று என
கான் அமர் கோதை கனா மொழிகின்றாள்

#223
தொத்து அணி பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது எண்
முத்து அணி மாலை முடிக்கு இடன் ஆக
ஒத்து அதன் தாள் வழியே முளை ஓங்குபு
வைத்தது போல வளர்ந்ததை அன்றே

#224
வார் குழை வில் இட மா முடி தூக்குபு
கார் கெழு குன்று அனையான் கனவின் இயல்
பார் கெழு நூல் விதியால் பயன் தான் தெரிந்து
ஏர் குழையாமல் எடுத்து உரைக்கின்றான்

#225
நன் முடி நின் மகனாம் நறு மாலைகள்
அன்னவனால் அமரப்படும் தேவியர்
நல் முளை நின் மகன் ஆக்கம் அதாம் என
பின்னதனால் பயன் பேசலன் விட்டான்

#226
இற்று அதனால் பயன் என் என ஏந்து_இழை
உற்றது இன்னே இடையூறு எனக்கு என்றலும்
மற்று உரையாடலளாய் மணி மா நிலத்து
அற்றது ஓர் கோதையின் பொன்_தொடி சோர்ந்தாள்

#227
காவி கடந்த கண்ணீரொடு காரிகை
ஆவி நடந்தது போன்று அணி மாழ்க
பாவி என் ஆவி வருத்துதியோ என
தேவியை ஆண் தகை சென்று மெய் சார்ந்தான்

#228
தண் மலர் மார்புறவே தழீஇயினான் அவள்
கண் மலர் தாள் கனவின் இயல் மெய் எனும்
பெண் மயமோ பெரிதே மடவாய்க்கு என
பண் உரையால் பரவி துயர் தீர்த்தான்

#229
காதலன் காதலினால் களித்து ஆய் மலர்
கோதை அம் கொம்பு அனையார் தம் குழாம் தொழ
தாது உகு தாமம் அணிந்து அகில் விம்மிய
போது உகு மெல் அணை பூ மகள் சேர்ந்தாள்

#230
பண் கனிய பருகி பயன் நாடகம்
கண் கனிய கவர்ந்து உண்டு சின்னாள் செல
விண் கனிய கவின் வித்திய வேல் கணி
மண் கனிப்பான் வளர தளர்கின்றாள்

#231
கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செ வாய் விளர்த்து கண் பசலை பூத்த காமம்
விரும்பு ஆர் முலை கண் கரிந்து திங்கள் வெண் கதிர்கள் பெய்து இருந்த பொன் செப்பே போல்
அரும்பால் பரந்து நுசுப்பும் கண்ணின் புலன் ஆயிற்று ஆய்ந்த அனிச்ச மாலை
பெரும் பாரமாய் பெரிது நைந்து நல் சூல் சலஞ்சலம் போல் நங்கை நலம் தொலைந்ததே

#232
தூம்பு உடை நெடும் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல்
தேம்பு உடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக
ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான்

#233
காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப்பட்ட
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியை சேர்ந்து
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான்

#234
அந்தரத்தார் மயனே என ஐயுறும்
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன்
வெம் திறலான் பெரும் தச்சனை கூவி ஓர்
எந்திர ஊர்தி இயற்று-மின் என்றான்

#235
பல் கிழியும் பயினும் துகில் நூலொடு
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடை
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே

#236
பீலி நல் மா மயிலும் பிறிது ஆக்கிய
கோல நல் மா மயிலும் கொடு சென்றவன்
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது
ஆலும் இ மஞ்ஞை அறிந்து அருள் என்றான்

#237
நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என
மின் நெறி பல் கலம் மேதக பெய்தது ஓர்
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன்

#238
ஆடு இயல் மா மயில் ஊர்தியை அ வழி
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செல
பாடலின் மேன்மேல் பயப்பய தான் துரந்து
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள்

#239
பண் தவழ் விரலின் பாவை பொறி வலம் திரிப்ப பொங்கி
விண் தவழ் மேகம் போழ்ந்து விசும்பு-இடை பறக்கும் வெய்ய
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்ப தோகை
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே

#240
காதி வேல் வல கட்டியங்காரனும்
நீதியால் நிலம் கொண்ட பின் நீதி நூல்
ஓதினார்-தமை வேறு கொண்டு ஓதினான்
கோது செய் குண கோதினுள் கோது அனான்

#241
மன்னவன் பகை ஆயது ஓர் மா தெய்வம்
என்னை வந்து இடம் கொண்ட அஃது இரா பகல்
துன்னி நின்று செகுத்திடு நீ எனும்
என்னை யான் செய்வ கூறு-மின் என்னவே

#242
அருமை மா மணி நாகம் அழுங்க ஓர்
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன்
கருமம் காழ்த்தமை கண்டவர் தம்முளான்
தருமதத்தன் என்பான் இது சாற்றினான்

#243
தவளை கிண்கிணி தாமரை சீறடி
குவளையே அளவுள்ள கொழும் கணாள்
அவளையே அமிர்து ஆக அ அண்ணலும்
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான்

#244
விண்ணினோடு அமிர்தம் விலை செல்வது
பெண்ணின் இன்பம் பெரிது என தாழ்ந்து அவன்
எண்ணம் இன்றி இறங்கி இ வையகம்
தண் அம் தாமரையாளொடும் தாழ்ந்ததே

#245
தன்னை ஆக்கிய தார் பொலி வேந்தனை
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள்
அன்னவன் வழி செல்லின் இ மண் மிசை
பின்னை தன் குலம் பேர்க்குநர் இல்லையே

#246
திலக நீள் முடி தேவரும் வேந்தரும்
உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன்
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர்

#247
அருளுமேல் அரசு ஆக்கும்-மன் காயுமேல்
வெருள சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம்
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும்
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ

#248
உறங்கும்-ஆயினும் மன்னவன் தன் ஒளி
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால்
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார்

#249
யாவர்-ஆயினும் நால்வரை பின்னிடின்
தேவர் என்பது தேறும் இ வையகம்
காவல் மன்னவர் காய்வன சிந்தியார்
நாவினும் உரையார் நவை அஞ்சுவார்

#250
தீண்டினார்-தமை தீ சுடும் மன்னர் தீ
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும்
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான்
மாண்டது அன்று நின் வாய் மொழி தெய்வமே

#251
வேலின் மன்னனை விண்ணகம் காட்டி இ
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல்
வாலிது அன்று என கூறினன் வாள் ஞமற்கு
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான்

#252
குழல் சிகை கோதை சூட்டிக்கொண்டவன் இருப்ப மற்று ஓர்
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும்
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரை பேணல் செய்யா
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகள் ஆவார்

#253
நட்பு-இடை குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தை சேர்ந்தான்
கட்டு அழல் காம தீயில் கன்னியை கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய்

#254
பிறை-அது வளர தானும் வளர்ந்து உடன் பெருகி பின் நாள்
குறைபடு மதியம் தேய குறு முயல் தேய்வதே போல்
இறைவனா தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும்
நிறை மதி இருளை போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான்

#255
கோள் நிலை திரிந்து நாழி குறைபட பகல்கள் மிஞ்சி
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகி பசியும் நீடி
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி
ஆணை இ உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான்

#256
தார் பொலி தருமதத்தன் தக்கவாறு உரப்ப குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவள பந்தார்
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள்ளென வியர்த்து பொங்கி
நீர் கடல் மகர பேழ் வாய் மதனன் மற்று இதனை சொன்னான்

#257
தோளினால் வலியர் ஆகி தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன்
காள மேகங்கள் சொல்லி கருனையால் குழைக்கும் கைகள்
வாள் அமர் நீந்தும்-போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான்

#258
நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின்
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கி
கண் எரி தவழ வண் கை மணி நகு கடகம் எற்றா
வெண் நகை வெகுண்டு நக்கு கட்டியங்காரன் சொன்னான்

#259
என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார்
உன் அலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார்
மன்னன் போய் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான்

#260
விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா
களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும்
வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்பு கொல்லும்
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான்

#261
நில தலை திரு_அனாள் தன் நீப்பரும் காதல் கூர
முலை தலை போகம் மூழ்கி முகிழ் நிலா முடி கொள் சென்னி
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கி
குலத்தொடும் கோறல் எண்ணி கொடியவன் கடிய சூழ்ந்தான்

#262
கோன் தமர் நிகளம் மூழ்கி கோட்டத்து குரங்க தன் கீழ்
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத்து உச்சி சுடர் பழி விளக்கு இட்ட அன்றே

#263
பருமித்த களிறும் மாவும் பரந்து இயல் தேரும் பண்ணி
திரு மிக்க சேனை மூதூர் தெருவு-தொறும் எங்கும் ஈண்டி
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்தி
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே

#264
நீள் நில மன்ன போற்றி நெடு முடி குருசில் போற்றி
பூண் அணி மார்ப போற்றி புண்ணிய வேந்தே போற்றி
கோள் நிலை குறித்து வந்தான் கட்டியங்காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சி சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான்

#265
திண் நிலை கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும்பொன் தேரும் படு மத களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான்

#266
புலி பொறி போர்வை நீக்கி பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலி கழல் மன்னர் உட்கும் உரு சுடர் வாளை நோக்கி
கலிக்கு இறை ஆய நெஞ்சின் கட்டியங்காரன் நம் மேல்
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான்

#267
நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்ன
கொங்கு அலர் கோதை மாழ்கி குழை முகம் புடைத்து வீழ்ந்து
செம் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள்

#268
மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்தி
புல்லி கொண்டு அவலம் நீக்கி பொம்மல் வெம் முலையினாட்கு
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே

#269
சாதலும் பிறத்தல்-தானும் தம் வினை பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளை தோளி என்றான்

#270
தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கி
செல்லும் அ கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளை சுற்றமே இரங்கல் வேண்டா

#271
வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர விம்மு உயிர்த்து இனையை ஆதல்
ஒண்_தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான்

#272
உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளம் சிங்கம் அன்னான்

#273
என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆருயிர் கிழத்தி-தன்னை
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறி
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள்

#274
நீர் உடை குவளையின் நெடும் கண் நின்ற வெம் பனி
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின்
சீர் உடை குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீ திரள்
பார் உடை பனி கடல் சுடுவது ஒத்து உலம்பினான்

#275
முழை முகத்து இடி அரி வளைத்து அன்ன மள்ளரில்
குழை முக புரிசையுள் குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல்-இடை
மழை முகத்த குஞ்சரம் வாரியுள் வளைத்தவே

#276
அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர் பரு மணி பன் மயிர் செய் கேடகம்
வெயில் என திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணி கதிர் நகை கடவுள் ஒத்து உலம்பினான்

#277
மாரியின் கடும் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரிய குரிசிலும் விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன் படை
பேர் இயல் பெரும் களிறு பின்னி வந்து அடைந்தவே

#278
சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதி வாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்றரும் மத களிறு மத்தகம் பிளந்தவே

#279
வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடை குருதியுள் உழக்குபு திரிதர
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே

#280
உப்பு உடைய மு நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறைமகன் இரும் களிறு நூற
அ படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி

#281
நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்தி
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பி
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்

#282
நெய் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வை முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மை முகம் அணிந்த மத யானை தவ நூறி
கை முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்

#283
மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழிய
சோலை மயிலார்கள் துணை வெம் முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்

#284
புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள் வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே

#285
ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக_உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மை கட்டியங்காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்தி கப்பணம் சிதறினானே

#286
குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கி
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான்

#287
நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறி கொலை வாள் ஒடித்து நின்றான்

#288
ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்
பேர் அமருள் அன்று பெரும் தாதையொடும் பேரா
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்

#289
போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்த
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான்

#290
தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது புலம்பு எய்தி மைந்தர் மாழ்க
ஏந்து முலையார் இனைந்து இரங்க கொடும் கோல் இருள் பரப்பவே ஏ பாவம்
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த அற செங்கோலாய் கதிரினை
வேந்தர் பெருமானை சச்சந்தனை மந்திரி மா நாகமுடன் விழுங்கிற்று அன்றே

#291
பால் அருவி திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின் நெடும் குடை கீழ் பாய் பரி மான் தேர்
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணி கேடகமும் மறமும் ஆற்றி
வால் அருவி வாமன் அடி தாமரை மலர் சூடி மந்திர மென் சாந்து பூசி
வேல் அருவி கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய் விண்ணோர்க்கு விருந்து ஆயினானே

#292
செம் தீ கரும் துளைய தீம் குழல் யாழ் தேம் தேம் என்னும் மணி முழவமும்
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்ட தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும்
அம் தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறைபோய் ஆடல் அரம்பை அன்னார்
எந்தாய் வெறு நிலத்து சேர்தியோ என்று இனைந்து இரங்கி பள்ளி படுத்தார்களே

#293
மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணி செப்பகம் கடைகின்றவே போல்
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் உள் அரங்கி மூழ்க காமன்
படை அவிழ்ந்த கண் பனி நீர் பாய விம்மா பரு முத்த நா மழலை கிண்கிணியினார்
புடை அவிழ்ந்த கூந்தல் புலவு தோய பொழி மழையுள் மின்னு போல் புலம்பினாரே

#294
அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழ கிடந்து ஆங்கு வேந்தன் கிடந்தானை தான்
கரி மாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின்
எரி மாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் ஏற்ப சொரிந்து அலறி எம்
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னா பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார்

#295
கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலை மேல் ஆரம் பரிந்து அலறுவார்
நெய்யார் கரும் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் நின்று திருவில் வீசும்
மையார் கடி பிணையும் வார் குழையும் களைந்திடுவார் கையால் வயிறு அதுக்குவார்
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது என்பார் கோல் வளையினார்

#296
பானாள் பிறை மருப்பின் பைம் கண் வேழம் பகு வாய் ஓர் பை அணல் மா நாகம் வீழ்ப்ப
தேன் ஆர் மலர் சோலை செ வரையின் மேல் சிறு பிடிகள் போல துயர் உழந்து தாம்
ஆனாது அடியேம் வந்து அ உலகினில் நின் அடி அடைதும் என்று அழுது போயினார் எம்
கோனார் பறிப்ப நலம் பூத்த இ கொடி இனி பூவா பிறர் பறிப்பவே

#297
செம் கண் குறுநரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு அதன் இடத்தை சேர்ந்தால் ஒப்ப
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் எரியின் வாய் பெய்து அவன் பெயர்ந்து போய்
பைம் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் பூமகளை எய்தினானே

#298
களி முக சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர
வளி முக சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால்
சுளி முக களிறு அனான்-தன் சொல் நய நெறியில் போய
கிளி முக கிளவிக்கு உற்றது இற்று என கிளக்கல் உற்றேன்

#299
எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண்
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம்மறந்து சோர்ந்தாள்

#300
மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம்
பீடு உடையவரும் உட்க பிணம் பல பிறங்கி எங்கும்
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல்
பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே

#301
மஞ்சு சூழ்வதனை ஒத்து பிண புகை மலிந்து பேயும்
அஞ்சும் அ மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சி மேல் வீழ்வதே போல் பல் பொறி குடுமி நெற்றி
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே

#302
வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கி
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள்

#303
உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனி தெளிக என்று காட்டுவாள் போல ஆகி
விண் தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்_தலை பயின்ற காட்டுள் விளங்கு_இழை தமியள் ஆனாள்

#304
இருள் கெட இகலி எங்கும் மணி விளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த ஆகி அணங்கு எலாம் வணங்கி நிற்ப
பொரு கடல் பருதி போல பொன் அனான் பிறந்த-போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே

#305
பூம் கழல் குருசில் தந்த புதல்வனை புகன்று நோக்கி
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மி திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தி திலகனை திருந்த வைத்தாள்

#306
கறை பன்னீர் ஆண்டு உடன் விடும்-மின் காமர் சாலை தளி நிறும்-மின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கி சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீ-மின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்-தோறு உய்த்து ஈ-மின்

#307
மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றி கொள பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்கு
கோடி மூன்றோடு அரை செம்பொன் கோமான் நல்கும் என அறை-மின்

#308
அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்ப கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடி சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கி
கரும் கை களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி
விரும்ப பிறப்பாய் வினை செய்தேன் காண இஃது ஓஒ பிறக்கும் ஆ

#309
வெம் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வா சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கி பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கி கூகை குழறி பாராட்ட
இவ்வாறு ஆகி பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே

#310
பற்றா மன்னன் நகர் புறமால் பாயல் பிணம் சூழ் சுடுகாடால்
உற்றார் இல்லா தமியேனால் ஒதுங்கல் ஆகா தூங்கு இருளால்
மற்று இ ஞாலம் உடையாய் நீ வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே

#311
பிறந்த நீயும் பூம் பிண்டி பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர் கடலை நீந்தும் புணை மற்று ஆகா-கால்
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தாமணியே கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ

#312
அந்தோ விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல்
கந்தார் களிற்று தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போல புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள்
சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே

#313
அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இரும் கண் ஞாலத்து இருள் பருகி
சுடர் போய் மறைய துளங்கு ஒளிய குழவி மதி பெற்று அகம் குளிர்ந்த
படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டு படா முலையாள்

#314
தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த-போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்கா சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே

#315
விம்முறு விழும வெம் நோய் அவண் உறை தெய்வம் சேர
கொம்மென உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
எம் அனை தமியை ஆகி இ இடர் உற்றது எல்லாம்
செம் மலர் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள்

#316
பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
காவி அம் கண்ணினாய் யாம் மறைவது கருமம் என்றாள்

#317
சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
பன் மணி விளக்கின் நீழல் நம்பியை பள்ளி சேர்த்தி
மின் மணி மிளிர தேவி மெல்லவே ஒதுங்குகின்றாள்
நன் மணி ஈன்று முந்நீர் சலஞ்சலம் புகுவது ஒத்தாள்

#318
ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலை பால் மடுத்து
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்தி
கோதை தாழ் குழலினாளை கொண்டு போய் மறைய நின்றாள்

#319
நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகி
கொல் வினை மாக்கள் சூழ கிடத்தியோ என்று விம்மா
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள்

#320
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து என
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான்

#321
வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே

#322
அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து என கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான்

#323
புனை கதிர் திரு மணி பொன் செய் மோதிரம்
வனை மலர் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்ப தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே

#324
என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன் பழ கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள்

#325
ஒழுக்கு இயல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்ப அரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மா மணி
விழு தகு மகனொடும் விரைவின் ஏகினான்

#326
மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலிய புக்க பின்
தன் உடை மதி சுட தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான்

#327
பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே

#328
கள் அலைத்து இழிதரும் களி கொள் கோதை-தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான்

#329
சுரி முக வலம்புரி துவைத்த தூரியம்
விரி முக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரி முக நித்திலம் ஏந்தி சேந்த போல்
கரி முக முலையினார் காய் பொன் சிந்தினார்

#330
அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழு கிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழி பெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெரு நிதி உவப்ப நல்கினான்

#331
திருமகன் பெற்று என செம்பொன் குன்று என
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செரு நிலம் பயப்பு உற செல்வன் செல்லுமே

#332
நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழி புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்ப கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம்

#333
பொறி அறு பாவையின் பொம்மென விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள்

#334
பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றி கேட்டே
திருமகள் தான் இனி செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே

#335
மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம்

#336
அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரி கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்று அது நண்ணலம் ஆகி

#337
வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்து தாபத பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள்

#338
பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அ திசை முன்னி
இருள்-இடை மின்னின் இலங்கு_இழை சென்றாள்

#339
உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகர குழை
திருவிலும் இவை தே மொழி மாதரை
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே

#340
சிலம்பு இரங்கி போற்று இசைப்ப திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறி வேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவள கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்து செல்லுற்றாள்

#341
பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்டு அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே

#342
தடம் கொள் தாமரை தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே

#343
எல்லை எய்திய ஆயிர செம் கதிர்
மல்லல் மா கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்பட தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே

#344
நுணங்கு நுண் கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள்-அரோ
நிணம் கொள் வை நுதி வேல் நெடும் கண்ணினாள்

#345
வைகிற்று எம் அனை வாழிய போழ்து என
கையினால் அடி தைவர கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே

#346
தூவி அம் சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியை கண்டுகண்டு
ஆவித்து ஆற்றுகிலாது அழுதிட்டவே

#347
கொம்மை வெம்முலை போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இ இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவ பள்ளியே

#348
வாள் உறை நெடும் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உற புல்லுவார் போல் தொக்கு எதிர்கொண்டு புக்கு
தாள் உறு வருத்தம் ஓம்பி தவ நெறி படுக்கல் உற்று
நாள் உற திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார்

#349
திருந்து தகர செம் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கரும் காழ் அகிலின் நறும் புகையில் கழுமி கோதை கண் படுக்கும்
திருந்து நான குழல் புலம்ப தேனும் வண்டும் இசை புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள்

#350
திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கி
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும் அரும் பொன் பூணும் அகற்றினாள்

#351
பஞ்சி அனைய வேய் மென் தோள் பகு வாய் மகரம் கான்றிட்ட
துஞ்சா கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை என துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணி காந்தள்
அஞ்ச சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள்

#352
பூ பெய் செம்பொன் கோடிகமும் பொன் ஆர் ஆலவட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழி-மின் என துறந்தாள்

#353
பிடி கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கி பிணை அன்னாள்
அடி கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடி பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ள தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே

#354
பால் உடை அமிர்தம் பைம்பொன் கலத்து-இடை பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்கா
சேல் அடு கண்ணி காந்தள் திரு மணி துடுப்பு முன் கை
வால் அடகு அருளி செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள்

#355
மெல் விரல் மெலிய கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவி திங்கள் பொழி கதிர் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே

#356
பெண்மை நாண் வனப்பு சாயல் பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே

#357
உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆயிடை
மறுவில் வெண்குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையை சேர்ந்து அறிந்து இ வழி
குறுக வம் என கூனியை போக்கினாள்

#358
நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்ப சென்று
இஞ்சி மாநகர் தன் இடம் எய்தினாள்

#359
தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே

#360
மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம்மிக நீக்கி களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப்பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்க பகர்கு உற்றேன்

#361
கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றி தந்த புண்ணியர் கூடி புகழோனை
சீற்ற துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார்

#362
மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்த
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான்

#363
அம் பொன் கொம்பின் ஆய்_இழை ஐவர் நலன் ஓம்ப
பைம்பொன் பூமி பல் கதிர் முத்து ஆர் சகடமும்
செம்பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே

#364
பல் பூம் பொய்கை தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்புற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்க குட்டியும் போன்று இ உலகு ஏத்த
செல்லும் மன்னோ சீவகன் தெய்வ பகை வென்றே

#365
மணியும் முத்தும் மாசறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கி
கணிதம் இல்லா கற்பகம் கந்துக்கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்ப கொடி ஒத்தாள்

#366
சாதி பைம்பொன் தன் ஒளி வௌவி தகை குன்றா
நீதி செல்வம் மேன்மேல் நீந்தி நிறைவு எய்தி
போதி செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்

#367
நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்

#368
முழவு என திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும்
அழல் என கனலும் வாள் கண் அ வளை தோளினாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியை புணர்க்கல் உற்றார்

#369
அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆக
பரந்து எலா பிரப்பும் வைத்து பைம்பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம்பொன் ஊசியால் எழுதி ஏற்ப
திருந்து பொன் கண்ணியாற்கு செல்வியை சேர்த்தினாரே

#370
நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லா படை கல தொழிலும் முற்றி
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர்
பூமகள் பொலிந்த மார்பன் புவி மிசை திலகம் ஒத்தான்

#371
மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புற பசலை மூழ்கி
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்கும தோளினாற்கு
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார்

#372
விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார்
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும்
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார்

#373
வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்ன
தான் சுவை கொண்டது எல்லாம் தணப்பு அற கொடுத்த பின்றை
தேன் சுவைத்து அரற்றும் பைம் தார் சீவககுமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான்

#374
நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமை
பால் நெறி பலவும் நீக்கி பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான்

#375
அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற
நெறியினை குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய் பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார் வேதனை கடலுள் நின்றார்

#376
கூற்றுவன் கொடியன் ஆகி கொலை தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்றுற போதல் தேற்றாம் அளியமோ பெரியமே காண்

#377
பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம்பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றை
கூர் எரி கவரும்-போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம்

#378
தழங்கு குரல் முரசின் சாற்றி தத்துவம் தழுவல் வேண்டி
செழும் களியாளர் முன்னர் இருள் அற செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற
கொழும் களி உணர்வினாரை குணவதம் கொளுத்தல் ஆமோ

#379
பவழ வாய் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்தி
குழவி நாறு எழுந்து காளை கொழும் கதிர் ஈன்று பின்னா
கிழவுதான் விளைக்கும் பைம் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன் மா
உழவிர்காள் மேயும் சீல வேலி உய்த்திடும்-மின் என்றான்

#380
சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணி பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான்

#381
காட்சி நல் நிலையில் ஞான கதிர் மணி கதவு சேர்த்தி
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிர தாழ் கொளுவி பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏற திறந்தனன் அலர்ந்த தாரான்

#382
நல் அறத்து இறைவன் ஆகி நால் வகை சரணம் எய்தி
தொல் அற கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்கு
புல் அற நெறி கண் நின்று பொருள்-வயின் பிழைத்தவாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அற கூறி இட்டான்

#383
எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கி
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா
விரி மலர் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர் காவு சேர்ந்து பிறப்பினை தெருட்டல் உற்றான்

#384
பூவையும் கிளியும் மன்னர் ஒற்று என புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சி பொலிவினோடு இருந்த-போழ்தில்
ஏ இயல் சிலையினானை இ பொருள் கேண்மோ என்றான்

#385
வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்கு தேவி
பை விரி பசும்பொன் அல்குல் பைம்_தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியை பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப்பட்டான்

#386
புலம்பொடு தேவி போகி புகற்கு அரும் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னை பயந்து பூம் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள்

#387
வானத்தின் வழுக்கி திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழ
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும் இரட்டுற தோன்றினானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதியானே

#388
அரும் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போக
திருந்திய நம்பி ஆர தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள்

#389
கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினை தேற்றி ஆங்கு அ
பெரியவன் யாவன் என்ன நீ என பேசலோடும்
சொரி மலர் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோர
திரு மலர் கண்ணி சிந்த தெருமந்து மயங்கி வீழ்ந்தான்

#390
கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழ
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலை சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால் நவை அற தேற்ற தேறி
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர் கடலுள் பட்டான்

#391
இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று நெடும் கண் நீர் துடைத்து நீவி
புனை இழை மகளிர் போல புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே

#392
மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் முழங்கி மா நீர்
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்று
சிலையொடு பகழி ஏந்தி கூற்று என சிவந்து தோன்றும்
இலை உடை கண்ணியானை இன்னணம் விலக்கினானே

#393
வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப்பொருள் என்று சொல்ல
ஆண் தகை குரவீர் கொண்ம்-மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான் வில்_வலான் அதனை நேர்ந்தான்

#394
வெவ்வினை வெகுண்டு சாரா விழு_நிதி அமிர்தம் இன் நீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கம் இல் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இ இயல் ஒருவற்கு உற்றது இற்றென கிளக்கல் உற்றான்

#395
வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமாபாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணி சிறுவனுக்கு அரசு நாட்டி
பால் நிற குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான்

#396
வெம் சினம் குறைந்து நீங்க விழு தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்கு பாவம் வந்து அடைந்தது ஆக
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இ மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான்

#397
உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் யார் அவன் வாழி என்ன
விரை விளையாடும் தாரோய் யான் என விரும்பி தீம் பால்
திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க என்றான்

#398
பூ தின்று புகன்று சேதா புணர் முலை பொழிந்த தீம் பால்
நீத்து அற செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும்பொன் தாலம் பரப்பிய பைம்பொன் பூமி
ஏத்தரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே

#399
புடை இரு குழையும் மின்ன பூம் துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும்-போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கி போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார்

#400
கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டி
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெரும் கடல் வெள்ளி குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலா புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன்

#401
சுரும்பு உடை அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன்-தானும்
விரும்பினர் எதிர்கொண்டு ஓம்ப வேழ வெம் தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடை காளை அன்ன காளை நின் வலைப்பட்டு என்றான்

#402
நிலம் பொறுக்கலாத செம்பொன் நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னை கண்டேன்

#403
ஐயனை கண்ணில் காண யானை_தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கி
தெய்வம்-கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்க கேட்டேன்

#404
கோட்டு இளம் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அள பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னை
சேட்டு இளம் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான்

#405
கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயா தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவ பூணோய் படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான்

#406
மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார் பேரறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான்

#407
கை வரை அன்றி நில்லா கடும் சின மடங்கல் அன்னான்
தெவ்வரை செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதி செம்பொன்
பை விரி அல்குலாட்கும் படு கடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும் மனம் உற தேற்றி இட்டான்

#408
அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனை தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான்
@2 கோவிந்தையார் இலம்பகம்

#409
ஆர்வ வேர் அவிந்து அச்சணந்தி போய்
வீரன் தாள் நிழல் விளங்க நோற்ற பின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண் தொழ
சோர்வு இல் கொள்கையான் தோற்றம் நீங்கினான்

#410
நம்பன் இத்தலை நாக நல் நகர்
பைம்பொன் ஓடை சூழ் பரும யானையும்
செம்பொன் நீள் கொடி தேரும் வாசியும்
வெம்ப ஊர்ந்து உலாம் வேனிலானினே

#411
கலையினது அகலமும் காட்சிக்கு இன்பமும்
சிலையினது அகலமும் வீணை செல்வமும்
மலையினின் அகலிய மார்பன் அல்லது இ
உலகினில் இலை என ஒருவன் ஆயினான்

#412
நாம வென்றி வேல் நகை கொள் மார்பனை
காமனே என கன்னி மங்கையர்
தாமரை கணால் பருக தாழ்ந்து உலாம்
கோமகன் திறத்து உற்ற கூறுவாம்

#413
சில் அம் போழ்தின் மேல் திரைந்து தேன் உலாம்
முல்லை கார் என பூப்ப மொய் நிரை
புல்லு கன்று உளி பொழிந்து பால் படும்
கல்லென் சும்மை ஓர் கடலின் மிக்கதே

#414
மிக்க நாளினால் வேழம் மு மதம்
உக்க தேனினோடு ஊறி வார் சுனை
ஒக்க வாய் நிறைந்து ஒழுகு குன்றின் மேல்
மக்கள் ஈண்டினார் மடங்கல் மொய்ம்பினார்

#415
மன்னவன் நிரை வந்து நண்ணுறும்
இன்ன நாளினால் கோடும் நாம் என
சொன்ன வாயுளே ஒருவன் புள் குரல்
முன்னம் கூறினான் முது உணர்வினான்

#416
அடைதும் நாம் நிரை அடைந்த-காலையே
குடையும் பிச்சமும் ஒழிய கோன் படை
உடையும் பின்னரே ஒருவன் தேரினால்
உடைதும் சுடுவில் தேன் உடைந்த வண்ணமே

#417
என்று கூறலும் ஏழை வேட்டுவீர்
ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே
என்று கூறினும் ஒருவன் என் செயும்
இன்று கோடும் நாம் எழுக என்று ஏகினார்

#418
வண்டு மூசு அறா நறவம் ஆர்ந்தவர்
தொண்டக பறை துடியோடு ஆர்த்து எழ
விண்டு தெய்வதம் வணங்கி வெல்க என
மண்டினார் நிரை மணந்த-காலையே

#419
பூத்த கோங்கு போல் பொன் சுமந்து உளார்
ஆய்த்தியர் நலக்கு ஆ செல் தூண் அனான்
கோத்த நித்தில கோதை மார்பினான்
வாய்த்த அ நிரை வள்ளுவன் சொனான்

#420
பிள்ளை உள் புகுந்து அழித்தது ஆதலால்
எள்ளன்-மின் நிரை இன்று நீர் என
வெள்ளி வள்ளியின் விளங்கு தோள் நலார்
முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார்

#421
காய மீன் என கலந்து கான் நிரை
மேய வெம் தொழில் வேடர் ஆர்த்து உடன்
பாய மாரி போல் பகழி சிந்தினார்
ஆயர் மத்து எறி தயிரின் ஆயினார்

#422
குழலும் நவியமும் ஒழிய கோவலர்
சுழல காடு போய் கன்று தாம்பு அரிந்து
உழலை பாய்ந்து உலா முன்றில் பள்ளியுள்
மழலை தீம் சொல்லார் மறுக வாய்விட்டார்

#423
மத்தம் புல்லிய கயிற்றின் மற்று அவர்
அத்தலை விடின் இத்தலை விடார்
உய்த்தனர் என உடை தயிர் புளி
மொய்த்த தோள் நலார் முழுதும் ஈண்டினார்

#424
வலை படு மான் என மஞ்ஞை என தம்
முலை படு முத்தொடு மொய் குழல் வேய்ந்த
தலை படு தண் மலர் மாலை பிணங்க
அலைத்த வயிற்றினராய் அழுதிட்டார்

#425
எம் அனைமார் இனி எங்ஙனம் வாழ்குவிர்
நும் அனைமார்களை நோவ அதுக்கி
வெம் முனை வேட்டுவர் உய்த்தனரோ என
தம் மனை கன்றொடு தாம் புலம்புற்றார்

#426
பாறை படு தயிர் பாலொடு நெய் பொருது
ஆறு மட பள்ளி ஆகுலம் ஆக
மாறு பட மலைந்து ஆய் படை நெக்கது
சேறு படு மலர் சிந்த விரைந்தே

#427
புறவு அணி பூ விரி புன்புலம் போகி
நறவு அணி தாமரை நாட்டகம் நீந்தி
சுறவு அணி சூழ் கிடங்கு ஆர் எயில் மூதூர்
இறை அணி கேட்க உய்த்திட்டனர் பூசல்

#428
கொடு மர எயினர் ஈண்டி கோட்டு இமில் ஏறு சூழ்ந்த
படு மணி நிரையை வாரி பைம் துகில் அருவி நெற்றி
நெடு மலை அத்தம் சென்றார் என்று நெய் பொதிந்த பித்தை
வடி மலர் ஆயர் பூசல் வள நகர் பரப்பினாரே

#429
காசு இல் மா மணி சாமரை கன்னியர்
வீசு மா மகர குழை வில் இட
வாச வான் கழுநீர் பிடித்து ஆங்கு அரி
ஆசனத்து இருந்தான் அடல் மொய்ம்பினான்

#430
கொண்ட வாளொடும் கோலொடும் கூப்புபு
சண்ட மன்னனை தாள் தொழுது ஆயிடை
உண்டு ஓர் பூசல் என்றாற்கு உரையாய் என
கொண்டனர் நிரை போற்று என கூறினான்

#431
செம் கண் புன் மயிர் தோல் திரை செம் முகம்
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனை
செம் கண் தீ விழியா தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான்

#432
கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கி
காற்றின் விரைந்து தொறு மீட்க என காவல் மன்னன்
ஏற்றை அரிமான் இடி போல இயம்பினானே

#433
கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம்
போர் விளை இவுளி திண் தேர் புனை மயிர் புரவி காலாள்
வார் விளை முரசம் விம்ம வான் உலா போந்ததே போல்
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே

#434
கால் அகம் புடைப்ப முந்நீர் கடல் கிளர்ந்து எழுந்ததே போல்
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க
வால் வளை அலற வாய்விட்டு இரலையும் துடியும் ஆர்ப்ப
பால் வளைந்து இரவு செற்று பகலொடு மலைவது ஒத்தார்

#435
வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனை பகழி மைந்தர்
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைக செம் நா
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றி
கொல் பழுத்து எரியும் வேலார் கொடும் சிலை குழைவித்தாரே

#436
வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கி
கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனை பகழி-தம்மால்
வீட்டினார் மைந்தர்-தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர்
பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனி வரை குனிவது ஒத்தே

#437
வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடை படுத்து என்று எண்ணி
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல்
பொன் தவழ் களிறு பாய் மா புன மயில் குஞ்சி பிச்சம்
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே

#438
பல்லினால் சுகிர்ந்த நாரில் பனி மலர் பயில பெய்த
முல்லை அம் கண்ணி சிந்த கால் விசை முறுக்கி ஆயர்
ஒல் என ஒலிப்ப ஓடி படை உடைந்திட்டது என்ன
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங்காரன் ஆழ்ந்தான்

#439
வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலை தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழும் கயல் தடம் கண் போலும்
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆ கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டு அன்ன இஞ்சி திருநகர் செல்வ என்றார்

#440
மன் நிரை பெயர்த்து மைந்தர் வந்தனர் கொள்க வாள் கண்
பொன் இழை சுடரும் மேனி பூம் கொடி அனைய பொற்பில்
கன்னியை தருதும் என்று கடி முரசு இயம்ப கொட்டி
நல் நகர் வீதி-தோறும் நந்தகோன் அறைவித்தானே

#441
வெதிர்ம் குதை சாபம் கான்ற வெம் நுனை பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும்
கரும் தடம் கண்ணி அன்றி காயம் ஆறு ஆக ஏகும்
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார்

#442
கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சின் ஓடும்
தேர் பரி கடாவி தேம் தார் சீவகன் அருளில் போகி
தார் பொலி புரவி வட்டம் தான் புக காட்டுகின்றாற்கு
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே

#443
தன் பால் மனையாள் அயலான் தலை கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கை பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான்

#444
போர் பண் அமைத்து நுகம் பூட்டி புரவி பண்ணி
தேர் பண் அமைத்து சிலை கோலி பகழி ஆய்ந்து
கார் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில்
பார் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே

#445
இழுது ஒன்று வாள் கண் இளையார் இளையார்-கண் நோக்கின்
பழுது இன்றி மூழ்கும் பகழி தொழில் வல்ல காளை
முழுது ஒன்று திண் தேர் முகம் செய்தவன் தன்னொடு ஏற்கும்
பொழுது அன்று போதும் என புள்_மொழிந்தான் மொழிந்தான்

#446
மோட்டும் முது நீர் முதலைக்கு வலியது உண்டேல்
காட்டுள் நமக்கு வலியாரையும் காண்டும் நாம் என்று
ஏட்டை பசியின் இரை கவ்விய நாகம் போல்
வேட்டு அ நிரையை விடல் இன்றி விரைந்தது அன்றே

#447
கடல் படை அனுங்க வென்ற கானவர் என்னும் கூற்றத்து
இடை படாது ஓடி போ-மின் உய்ய என்று இரலை வாய் வைத்து
எடுத்தனர் விளியும் சங்கும் வீளையும் பறையும் கோடும்
கடத்து-இடை முழங்க காரும் கடலும் ஒத்து எழுந்த அன்றே

#448
கை விசை முறுக்கி வீசும் கொள்ளியும் கறங்கும் ஏய்ப்ப
செய் கழல் குருசில் திண் தேர் விசையொடு திசைகள் எல்லாம்
ஐ என வளைப்ப வீரர் ஆர்த்தனர் அவரும் ஆர்த்தார்
மொய் அமர் நாள்செய்து ஐயன் முதல் விளையாடினானே

#449
ஆழியான் ஊர்தி புள்ளின் அம் சிறகு ஒலியின் நாகம்
மாழ்கி பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும்
சூழ் துகள் மயக்கத்தானும் புளிஞர் உள் சுருங்கி சேக்கை
கோழி போல் குறைந்து நெஞ்சின் அறம் என மறமும் விட்டார்

#450
புள் ஒன்றே சொல்லும் என்று இ புன் தலை வேடன் பொய்த்தான்
வெள்ளம் தேர் வளைந்த நம்மை வென்றி ஈங்கு அரிது வெய்தா
உள்ளம் போல் போது நாம் ஓர் எடுப்பு எடுத்து உய்ய என்னா
வள்ளல் மேல் அப்பு மாரி ஆர்ப்பொடு சிதறினாரே

#451
மால் வரை தொடுத்து வீழ்ந்த மணி நிற மாரி-தன்னை
கால் இரைத்து எழுந்து பாற கல்லென புடைத்ததே போல்
மேல் நிரைத்து எழுந்த வேடர் வெம் நுனை அப்பு மாரி
கோல் நிரைத்து உமிழும் வில்லால் கோமகன் விலக்கினானே

#452
கானவர் இரிய வில்-வாய் கடும் கணை தொடுத்தலோடும்
ஆன் நிரை பெயர்ந்த ஆயர் ஆர்த்தனர் அணி செய் திண் தோள்
தான் ஒன்று முடங்கிற்று ஒன்று நிமிர்ந்தது சரம் பெய் மாரி
போல் நின்ற என்ப மற்று அ பொருவரு சிலையினார்க்கே

#453
ஐந்நூறு நூறு தலை இட்ட ஆறாயிரவர்
மெய் நூறுநூறு நுதி வெம் கணை தூவி வேடர்
கை நூறு வில்லும் கணையும் அறுத்தான் கணத்தின்
மை நூறு வேல் கண் மடவார் மனம் போல மாய்ந்தார்

#454
வாள் வாயும் இன்றி வடி வெம் கணை வாயும் இன்றி
கோள் வாய் மதியம் நெடியான் விடுத்த ஆங்கு மைந்தன்
தோள் வாய் சிலையின் ஒலியால் தொறு மீட்டு மீள்வான்
நாள் வாய் நிறைந்த நகை வெண் மதி செல்வது ஒத்தான்

#455
ஆள் அற்றம் இன்றி அலர் தார் அவன் தோழரோடும்
கோள் உற்ற கோவன் நிரை மீட்டனன் என்று கூற
வாள் உற்ற புண்ணுள் வடிவேல் எறிந்திற்றதே போல்
நாள் உற்று உலந்தான் வெகுண்டான் நகர் ஆர்த்தது அன்றே

#456
இரவி தோய் கொடி கொள் மாடத்து இடு புகை தவழ சுண்ணம்
விரவி பூம் தாமம் நாற்றி விரை தெளித்து ஆரம் தாங்கி
அரவு உயர் கொடியினான் தன் அகன் படை அனுங்க வென்ற
புரவி தேர் காளை அன்ன காளையை பொலிக என்றார்

#457
இன் அமுது அனைய செ வாய் இளம் கிளி மழலை அம் சொல்
பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் தம்
மின் இவர் நுசுப்பு நோவ விடலையை காண ஓடி
அன்னமும் மயிலும் போல அணி நகர் வீதி கொண்டார்

#458
சில் அரி சிலம்பின் வள் வார் சிறுபறை கறங்க செம்பொன்
அல்குல் தேர் அணிந்து கொம்மை முலை எனும் புரவி பூட்டி
நெல் எழில் நெடும் கண் அம்பு ஆ புருவ வில் உருவ கோலி
செல்வ போர் காமன் சேனை செம்மல் மேல் எழுந்தது அன்றே

#459
நூல் பொர அரிய நுண்மை நுசுப்பினை ஒசிய வீங்கி
கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி
கோல் பொர சிவந்த கோல மணி விரல் கோதை தாங்கி
மேல் வரல் கருதி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்

#460
ஆகமும் இடையும் அஃக அடி பரந்து எழுந்து வீங்கி
போகமும் பொருளும் ஈன்ற புணர் முலை தடங்கல் தோன்ற
பாகமே மறைய நின்ற படை மலர் தடம் கண் நல்லார்
நாகம் விட்டு எழுந்து போந்த நாகர்-தம் மகளிர் ஒத்தார்

#461
வாள் அரம் துடைத்த வை வேல் இரண்டு உடன் மலைந்தவே போல்
ஆள் வழக்கு ஒழிய நீண்ட அணி மலர் தடம் கண் எல்லாம்
நீள் சுடர் நெறியை நோக்கும் நிரை இதழ் நெருஞ்சி பூ போல்
காளை-தன் தேர் செல் வீதி கலந்து உடன் தொக்கது அன்றே

#462
வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும்
கடகமும் குழையும் பூணும் கதிர் ஒளி கலந்து மூதூர்
இடவகை எல்லை எல்லாம் மின் நிரைத்து இட்டதே போல்
பட அரவு அல்குலாரை பயந்தன மாடம் எல்லாம்

#463
மாது உகு மயிலின் நல்லார் மங்கல மரபு கூறி
போதக நம்பி என்பார் பூமியும் புணர்க என்பார்
தோதகம் ஆக எங்கும் சுண்ணம் மேல் சொரிந்து தண்ணென்
தாது உகு பிணையல் வீசி சாந்து கொண்டு எறிந்து நிற்பார்

#464
கொடையுளும் ஒருவன் கொல்லும் கூற்றினும் கொடிய வாள் போர்
படையுளும் ஒருவன் என்று பயம் கெழு பனுவல் நுண் நூல்
நடையுளார் சொல்லிற்று எல்லாம் நம்பி சீவகன்-கண் கண்டாம்
தொடையல் அம் கோதை என்று சொல்லுபு தொழுது நிற்பார்

#465
செம்மலை பயந்த நற்றாய் செய் தவம் உடையாள் என்பார்
எம் மலை தவம் செய்தாள்-கொல் எய்துவம் யாமும் என்பார்
அம் முலை அமுதம் அன்னார் அகம் புலர்ந்து அமர்ந்து நோக்கி
தம் உறு விழும வெம் நோய் தம் துணைக்கு உரைத்து நிற்பார்

#466
சினவுநர் கடந்த செல்வன் செம் மலர் அகலம் நாளை
கனவினில் அருளி வந்து காட்டி யாம் காண என்பார்
மனவு விரி அல்குலார் தம் மனத்தொடு மயங்கி ஒன்றும்
வினவுநர் இன்றி நின்று வேண்டுவ கூறுவாரும்

#467
விண்ணகத்து உளர்-கொல் மற்று இ வென்றி வேல் குருசில் ஒப்பார்
மண்ணகத்து இவர்கள் ஒவ்வார் மழ களிறு அனைய தோன்றல்
பண் அகத்து உறையும் சொல்லார் நல் நலம் பருக வேண்டி
அண்ணலை தவத்தில் தந்தார் யார்-கொலோ அளியர் என்பார்

#468
வட்டு உடை பொலிந்த தானை வள்ளலை கண்ட-போழ்தே
பட்டு உடை சூழ்ந்த காசு பஞ்சி மெல் அடியை சூழ
அட்ட அரக்கு அனைய செ வாய் அணி நலம் கருகி காம
கட்டு அழல் எறிப்ப நின்றார் கை வளை கழல நின்றார்

#469
வார் செல செல்ல விம்மும் வன முலை மகளிர் நோக்கி
ஏர் செல செல்ல ஏத்தி தொழுது தோள் தூக்க இப்பால்
பார் செல செல்ல சிந்தி பைம்_தொடி சொரிந்த நம்பன்
தேர் செல செல்லும் வீதி பீர் செல செல்லும் அன்றே

#470
வாள் முகத்து அலர்ந்த போலும் மழை மலர் தடம் கண் கோட்டி
தோள் முதல் பசலை தீர தோன்றலை பருகுவார் போல்
நாள் முதல் பாசம் தட்ப நடுங்கினார் நிற்ப நில்லான்
கோள் முக புலியோடு ஒப்பான் கொழு நிதி புரிசை புக்கான்

#471
பொன் நுகம் புரவி பூட்டி விட்டு உடன் பந்தி புக்க
மன்னுக வென்றி என்று மணி வள்ளம் நிறைய ஆக்கி
இன் மது பலியும் பூவும் சாந்தமும் விளக்கும் ஏந்தி
மின் உகு செம்பொன் கொட்டில் விளங்கு தேர் புக்கது அன்றே

#472
இட்ட உத்தரியம் மெல்லென்று இடை சுவல் வருத்த ஒல்கி
அட்ட மங்கலமும் ஏந்தி ஆயிரத்து எண்மர் ஈண்டி
பட்டமும் குழையும் மின்ன பல் கலன் ஒலிப்ப சூழ்ந்து
மட்டு அவிழ் கோதை மாதர் மைந்தனை கொண்டு புக்கார்

#473
தாய் உயர் மிக்க தந்தை வந்து எதிர்கொண்டு புக்கு
காய் கதிர் மணி செய் வெள் வேல் காளையை காவல் ஓம்பி
ஆய் கதிர் உமிழும் பைம் பூண் ஆயிர செம் கணான்-தன்
சேய் உயர் உலகம் எய்தி அன்னது ஓர் செல்வம் உற்றார்

#474
தகை மதி எழிலை வாட்டும் தாமரை பூவின் அம் கண்
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலை கண்டு வண் தார்
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும்

#475
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறை பாரம் எல்லாம் கட்டியங்காரன்-தன்னை
பூட்டி மற்று அவன்-தனாலே பொறி முதல் அடர்க்கப்பட்டான்

#476
கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறி
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கரும் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று-ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன்

#477
குலத்தொடு முடிந்த கோன்-தன் குடி வழி வாரா நின்றேன்
நல தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள்

#478
வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்ப
கொம்படு நுசுப்பினாளை குறை இரந்து உழந்து நின்ற
நம் படை-தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன்

#479
பாடகம் சுமந்த செம்பொன் சீறடி பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன்கை சுடர் மணி பூணினாளை
ஆடக செம்பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்

#480
வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள்
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வன முலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய்

#481
சேதா நறு நெய்யும் தீம் பால் சுமை தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைம் தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்

#482
குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்கு கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே

#483
கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலை கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலை
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே

#484
கோட்டு இளம் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டு இள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சகம் குளிர்ப்ப சொன்னான்

#485
தேன் சொரி முல்லை கண்ணி செம் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகி குடை தயிர் குழும புக்கு
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலை பந்தர்
கான் சொரி முல்லை தாரான் கடிவினை முடிக என்றான்

#486
கனி வளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையை கொன்ற குவளை கண் கயலை கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர் என சிலம்பு அரற்ற தந்து
பனி வளர் கோதை மாதர் பாவையை பரவி வைத்தார்

#487
நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி-தோறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய் தலைப்பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆய்த்தியர் ஆட்டினாரே

#488
நெய் விலை பசும்பொன் தோடும் நிழல் மணி குழையும் நீவி
மை விரி குழலினாளை மங்கல கடிப்பு சேர்த்தி
பெய்தனர் பிணையல் மாலை ஓர் இலை சாந்து பூசி
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்

#489
ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்து கொண்டு ஏகி மூதூர்
சாறு எங்கும் அயர புக்கு நந்தகோன் தன் கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வை வேல் பதுமுக குமரற்கு என்றே

#490
நல தகை அவட்கு நாகு ஆன் ஆயிரம் திரட்டி நன் பொன்
இலக்கண பாவை ஏழும் கொடுத்தனன் போல இப்பால்
அலைத்தது காமன் சேனை அரு நுனை அம்பு மூழ்க
முலை குவட்டு இடை பட்டு ஆற்றான் முத்து உக முயங்கினானே

#491
கள் வாய் விரிந்த கழுநீர் பிணைந்து அன்ன ஆகி
வெள் வேல் மிளிர்ந்த நெடும் கண் விரை நாறு கோதை
முள் வாய் எயிற்று ஊறு அமுதம் முனியாது மாந்தி
கொள்ளாத இன்ப கடல் பட்டனன் கோதை வேலான்

#492
தீம் பால்கடலை திரை பொங்க கடைந்து தேவர்
தாம் பால் படுத்த அமிர்தோ தட மாலை வேய் தோள்
ஆம் பால் குடவர் மகளோ என்று அரிவை நைய
ஓம்பா ஒழுக்கத்து உணர்வு ஒன்று இலன் ஆயினானே
@3 காந்தருவதத்தையார் இலம்பகம்

#493
இங்கு இவர்கள் இவ்வாறு இருந்து இனிது வாழ
சங்கு தரு நீள் நிதியம் சால உடை நாய்கன்
பொங்கு திரை மீது பொரு மால் களிறு போன்றோர்
வங்கமொடு போகி நிதி வந்து தரல் உற்றான்

#494
மின் ஒழுகு சாயல் மிகு பூண் பதுமை கேள்வன்
கொன் ஒழுகு வேல் யவதத்தன் குளிர் தூங்கும்
தன் வழிய காளை சீதத்தன் அவன் தன் போல்
பொன் ஒழுகு குன்றில் உறை போர் புலியொடு ஒப்பான்

#495
இம்மியன நுண் பொருள்கள் ஈட்டி நிதி ஆக்கி
கம்மியரும் ஊர்வர் களிறு ஓடை நுதல் சூட்டி
அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது அறம் சால்க என்று
உம்மை வினை நொந்து புலந்து ஊடல் உணர்வு அன்றே

#496
உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே
வெள்ள நிதி வீழும் விளையாதது அதனின் இல்லை
தொள்ளை உணர்வு இன்னவர்கள் சொல்லின் மடிகிற்பின்
எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது அன்றே

#497
செய்க பொருள் யாரும் செறுவாரை செறுகிற்கும்
எஃகு பிறிது இல்லை இருந்தே உயிரும் உண்ணும்
ஐயம் இலை இன்பம் அறனோடு அவையும் ஆக்கும்
பொய்யில் பொருளே பொருள் மற்று அல்ல பிற பொருளே

#498
தூங்கு சிறை வாவல் உறை தொல் மரங்கள் என்ன
ஓங்கு குலம் நைய அதனுள் பிறந்த வீரர்
தாங்கல் கடன் ஆகும் தலை சாய்க்க வரு தீ சொல்
நீங்கல் மடவார்கள் கடன் என்று எழுந்து போந்தான்

#499
மோதுபடு பண்டம் முனியாது பெரிது ஏற்றி
மாதுபடு நோக்கினவர் அவர் வாள் கண் வடு உற்ற
தாது படு தார் கெழிய தங்கு வரை மார்பன்
கோது படல் இல்ல குறி கொண்டு எழுந்து போந்தான்

#500
வானம் உற நீண்ட புகழ் மாரி மழை வள்ளல்
தானம் என வேண்டுநர்கள் வேண்டுவன நல்கி
நானம் மிக நாறு கமழ் குஞ்சியவன் ஏறி
ஊனம் எனும் இன்றி இனிது ஓடுக இது என்றான்

#501
ஆடு கொடி உச்சி அணி கூம்பின் உயர் பாய் மூன்று
ஈடுபட செய்து இளையர் ஏத்த இமிழ் முந்நீர்
கோடு பறை ஆர்ப்ப கொழும் தாள் பவழம் கொல்லா
ஓடு களிறு ஒப்ப இனிது ஓடியதை அன்றே

#502
திரைகள் தரும் சங்கு கலம் தாக்கி திரள் முத்தம்
கரை கடலுள் கால கணை பின் ஒழிய முந்நீர்
வரை கிடந்து கீண்டது என கீறி வளர் தீவின்
நிரை இடறி பாய்ந்து இரிய ஏகியது மாதோ

#503
மின்னும் மிளிர் பூம் கொடியும் மென் மலரும் ஒப்பார்
அன்னமொடும் தோகை நடை சாயல் அமிர்து அன்னார்
துன்னி இனிது ஆக உறை துப்புரவின் மிக்க
நன்மை உடை நல் பொன் விளை தீவம் அடைந்தது அஃதே

#504
தீவினுள் இழிந்து தேன் தார் செம்மலும் திரு முத்தாரம்
கோவினை குறிப்பில் கண்டு கொடுத்து அருள் சுமந்து செம்பொன்
பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இள முலையினார்-தம்
நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து சின்னாள்

#505
புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா போகம் ஈன்று அளிக்கும் சாயல்
அணங்கினுக்கு அணங்கு அனாரோடு அறு மதி கழிந்த பின்றை
கொணர்ந்தன பண்டம் விற்ற கொழு நிதி குப்பை எல்லாம்
உணர்ந்து தன் மதலை ஏற்றி ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான்

#506
அரசனை கண்டு கண்ணுற்றவர்களை விடுத்து நல் நாள்
இரைவதி வியாழ ஓரை இரும் சிலை முளைப்ப ஏறி
கரை கடல் அழுவம் நீந்தி காற்றினும் கடுகி ஐஞ்ஞாறு
உரை உடை காதம் ஓடி யோசனை எல்லை சார்ந்தே

#507
களி தலை மயங்கி இப்பால் இருத்தலும் கலந்து ஓர் காற்றில்
துளி தலை முகில்கள் ஈண்டி தூங்கு இருள் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி வெடிபட முழங்கி கூற்றும்
ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப நாய்கன்

#508
எண் திசை வளியும் ஈண்டி எதிரெதிர் கலாவி பவ்வம்
கொண்டு மேல் எழுவது ஒப்ப குளிறி நின்று அதிர்ந்து மேகம்
தண் துளி பளிக்கு கோல் போல் தாரையாய் சொரிந்து தெய்வம்
கொண்டது ஓர் செற்றம் போலும் குலுங்கன்-மின் என்று கூறும்

#509
இடுக்கண் வந்து உற்ற காலை எரிகின்ற விளக்கு போல
நடுக்கம் ஒன்றானும் இன்றி நகுக தாம் நக்க போழ்து அ
இடுக்கணை அரியும் எஃகாம் இருந்து அழுது யாவர் உய்ந்தார்
வடுப்படுத்து என்னை ஆண்மை வருப வந்து உறுங்கள் அன்றே

#510
ஆடக செம்பொன் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர்
கூடகம் கொண்ட வாழ் நாள் உலந்ததேல் கொல்லும் பவ்வத்து
ஊடகம் புக்கு முந்நீர் அழுந்தினும் உய்வர் நல்லார்
பாடகம் போல சூழ்ந்த பழவினை பயத்தின் என்றான்

#511
வினை அது விளைவின் வந்த வீவு அரும் துன்பம் முன்னீர்
கனை கடல் அழுவம் நீந்தி கண் கனிந்து இரங்கல் வேண்டா
நனை மலர் பிண்டி நாதன் நலம் கிளர் பாத மூலம்
நினையும்-மின் நீவிர் எல்லாம் நீங்கும்-மின் அச்சம் என்றான்

#512
பருமித்த களிறு அனானும் பை என கவிழ்ந்து நிற்ப
குருமித்து மதலை பொங்கி கூம்பு இற பாய்ந்து வல்லே
நிருமித்த வகையின் ஓடி நீர் நிறைந்து ஆழ்ந்த போதில்
உரும் இடித்திட்டது ஒப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார்

#513
ஓம்பி படைத்த பொருளும் உறு காதலாரும்
வேம்பு உற்ற முந்நீர் விழுங்க விரையாது நின்றான்
கூம்பு இற்ற துண்டம் தழுவி கிடந்தான் கொழித்து
தேம் பெற்ற பைம் தார் அவனை திரை உய்த்தது அன்றே

#514
நாவாய் இழந்து நடு யாரும் இல் யாமம் நீந்தி
போவாய் தமியே பொருளை பொருள் என்று கொண்டாய்
வீவாய் என முன் படையாய் படைத்தாய் வினை என்
பாவாய் என போய் படு வெண் மணல் திட்டை சேர்ந்தான்

#515
பொரி அரை ஞாழலும் புன்னையும் பூத்து
வரி தரு வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
திரு விரி பூம் பொழில் செவ்வனம் சேர்ந்து ஆங்கு
அரு வரை மார்பன் அவலித்து இருந்தான்

#516
ஓடும் திரைகள் உதைப்ப உருண்டு உருண்டு
ஆடும் அலவனை அன்னம் அருள் செய
நீடிய நெய்தல் அம் கானல் நெடும் தகை
வாடி இருந்தான் வரும் கலம் நோக்கா

#517
ஆளிய மொய்ம்பன் இரும் தவ பூம் பொழில்
தாள் வலியான் ஓர் மகனை தலைப்பட்டு
கேளிர் எனக்கு உற்ற கேண்ம்-மின் நீர் என
தோள் வலி மிக்கான் தொடர்ந்து உரைக்கின்றான்

#518
கரும் கடல் போயிற்றும் காற்றில் கவிழ்ந்து
திருந்திய தன் பொருள் தீது உற்றவாறும்
அரும் புணை சார்வா அவண் உய்ந்தவாறும்
இருந்த அவற்கு எல்லாம் எடுத்து மொழிந்தான்

#519
மானும் மரனும் இரங்க மதவலி
தான் உற்ற துன்பம் தரனுக்கு உரைத்த பின்
தேனும் அமிழ்தும் திளைத்து ஆங்கு இனியன
ஊனம் இல் கட்டுரைக்கு உள்ளம் குளிர்ந்தான்

#520
விஞ்சைகள் வல்லேன் விளிந்த நின் தோழரொடு
எஞ்சிய வான் பொருள் எல்லாம் இமைப்பினுள்
வஞ்சம் ஒன்று இன்றி மறித்தே தருகுவன்
நெஞ்சில் குழைந்து நினையன்-மின் என்றான்

#521
உரை அகம் கொள்ள உணர்த்தினன் ஆகி
வரை அகம் ஏற வலி-மின் என்னா
விரை செலல் வெம் பரி மேழகம் ஏற்றி
குரை கழல் மைந்தனை கொண்டு பறந்தான்

#522
விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து
பசும் புயல் தண் துளி பக்கம் நனைப்ப
நயந்தனர் போகி நறு மலர் சோலை
அசும்பு இவர் சாரல் அரு வரை சார்ந்தார்

#523
கண்டால் இனியன காண்டற்கு அரியன
தண் தாமரை அவள் தாழும் தகையன
கொண்டான் கொழும் கனி கோட்டு-இடை தூங்குவ
உண்டான் அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான்

#524
மழை தவழ் சோலை மலை மிசை நீண்ட
குழை தவழ் குங்குமம் கோழ் அரை நாகம்
தழை தவழ் சந்தன சோலையின் நோக்கி
இழை தவழ் மார்பன் இனிதின் உவந்தான்

#525
கோதை அருவி குளிர் வரை மேல் நின்று
காதம் கடந்த பின் கன்னி கொடி மதில்
நாதன் உறைவது ஓர் நல் நகர் உண்டு அங்கு
போதும் எழுக என போயினர் சார்ந்தார்

#526
மேகமே மிடைந்து தாழ இருள் கொண்ட வெள்ளி குன்றம்
மாகத்து விளங்கி தோன்றும் வனப்பு நாம் வகுக்கல் உற்றால்
நாகம் தான் கரியது ஒன்று கீழ் நின்று நடுங்க கவ்வி
பாகமே விழுங்கப்பட்ட பால் மதி போன்றது அன்றே

#527
துளங்கு பொன் நகரின் தன்மை சொல்லலாம் சிறிது ஓர் தேவன்
விளங்கு பொன் உலகத்து உள்ள துப்புரவு இடங்கள் எல்லாம்
அளந்து கொண்டு இன்பம் பூரித்து அணி நகர் ஆக்கி மேலால்
இளம் கதிர பருதி சூட்டி இயற்றியது என்னல் ஆமே

#528
பொங்கி ஆயிரம் தாமரை பூத்த போல்
செம் கண் ஆயிரம் சேர்ந்தவன் பொன் நகர்
கொங்கு தோய் குழலாரொடும் குன்றின் மேல்
தங்குகின்றது போல் தகை சான்றதே

#529
கிடங்கு சூழ் மதில் கேழ் கிளர் பூம் கொடி
மடங்கல் நோக்கியர் வாள் முகம் போலும் என்று
உடங்கு வெண் மதி உள் குளிர தம்
குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்றவே

#530
திருவ மேகலை தெள் அரி கிண்கிணி
பரவை யாழ் குழல் பண் அமை மென் முழா
உருவம் யார் உடையார் என்று ஒளி நகர்
அரவம் வாய் திறந்து ஆர்ப்பது போன்றதே

#531
செம்பொன் மாடங்கள் சென்னி அழுத்திய
அம் பொன் திண் நிலை ஆய் மணி தூவிகள்
வெம்பு நீள் சுடர் வீழ்ந்து சுடுதலின்
பைம்பொன் கொப்புள் பரந்தன போன்றவே

#532
உருளி மா மதி ஓட்டு ஒழித்து ஓங்கிய
வெருளி மாடங்கள் மேல் துயில் எய்தலின்
மருளி மான் பிணை நோக்கின் நல்லார் முகத்து
அருளினால் அழல் ஆற்றுவ போன்றவே

#533
அசும்பு பொன் வரை ஆய் மணி பூண்களும்
பசும்பொன் மாலையும் பட்டுழி பட்டவை
நயந்து கொள்பவர் இன்மையின் நல் நகர்
விசும்பு பூத்தது போன்றன வீதியே

#534
தேக்கண் இன் அகில் தேனொடு கூட்டு அமைத்து
ஆக்க பட்ட அளவில் கொழும் புகை
வீக்கி மாடம் திறந்திட மெல்லவே
ஊக்கி வாய் விட்டு உயிர்ப்பன போன்றவே

#535
தப்பு இல் வாய் மொழி தானவர் வைகிய
ஒப்பு இல் மாநகர் ஒண்மை மற்று யாது எனில்
கப்பத்து இந்திரன் காமுறும் மாமணி
செப்பு வாய் திறந்த அன்னது ஓர் செம்மற்றே

#536
நல் நகர் நோக்கி நாய்கன் நாகம்-கொல் புகுந்தது என்ன
பொன்னகர் பொலிய புக்கு பொங்கு மா மழைகள் தங்கும்
மின் அவிர் செம்பொன் மாடத்து இருவரும் இழிந்து புக்கு
பின் அவன் விருந்து பேணி பேசினன் பிறங்கு தாரான்

#537
மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆக
கேடு இல் சீர் கலுழன் ஆய கலுழ வேகற்கு தேவி
தோடு அலர் கோதை தொல் சீர் தார் அணி சுரும்பு உண்கண்ணி
ஆடவர் அறிவு போழும் அணி முலை அணங்கின் அன்னாள்

#538
விண்ணகம் வணங்க வெண் கோட்டு இளம் பிறை முளைத்ததே போல்
பண்ணகத்து இனிய சொல்லாள் பாவையை பயந்த ஞான்றே
எண் இடம் இன்றி மன்னர் இ மலை இறைகொண்டு ஈண்டி
அண்ணல் அம் களிற்றின் உச்சி அரும் கலம் வெறுக்கை ஈந்தார்

#539
மந்திரத்து அரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற்கு
அந்தரத்து ஓடு கோளின் சாதகம் அவனும் செய்தான்
இந்திர திருவில் ஏய்ப்ப குலவிய புருவத்தாட்கு
வந்து அடை பான்மை மண் மேல் இராசமாபுரத்து என்றான்

#540
அவன் உரை தெளிந்து வேந்தன் ஆசையுள் அரசர் நிற்ப
கவனம் கொள் புரவி கொட்பின் காதலும் கரந்து வைத்தான்
அவன் அதே கருத்திற்றாம்-கொல் அன்று-கொல் அறியல் ஆகாது
இவண் அதும் அறிதும் என்று கோயிலுக்கு ஏகினானே

#541
பால் பரந்து அன்ன பட்டு ஆர் பூ அணை பசும்பொன் கட்டில்
கால் பரந்து இருந்த வெம் கண் கதிர் முலை கச்சின் வீக்கி
வேல் பரந்து அனைய கண்ணார் வெண் மதி கதிர் பெய் கற்றை
போல் இவர் கவரி வீச மன்னவன் இருந்த போழ்தின்

#542
என் வரவு இசைக்க என்ன வாயிலோன் இசைப்ப ஏகி
மன்னர் தம் முடிகள் வேந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த
பொன் அவிர் கழல் கொள் பாதம் பொழி மழை தட கை கூப்ப
இன் உரை முகமன் கூறி தானத்தில் இருக்க என்றான்

#543
முதிர் பெயல் மூரி வானம் முழங்கி வாய் விட்டது ஒப்ப
அதிர் குரல் முரசம் நாண அமிர்து பெய் மாரி ஏய்ப்ப
கதிர் விரி பூணினாற்கு தந்தை தாய் தாரம் காதல்
மதுர மா மக்கள் சுற்றம் வினவி மற்று இதுவும் சொன்னான்

#544
இன்றையது அன்று கேண்மை எமர் நுமர் எழுவர்-காறும்
நின்றது கிழமை நீங்கா வச்சிர யாப்பின் ஊழால்
அன்றியும் அறனும் ஒன்றே அரசன் யான் வணிகன் நீயே
என்று இரண்டு இல்லை கண்டாய் இது நினது இல்லம் என்றான்

#545
மந்திர மன்னன் சொல் நீர் மாரியால் வற்றி நின்ற
சந்தனம் தளிர்த்ததே போல் சீதத்தன் தளிர்த்து நோக்கி
எந்தைக்கு தந்தை சொன்னான் இன்னணம் என்று கேட்ப
முந்தை தான் கேட்டவாறே முழுது எடுத்து இயம்புகின்றான்

#546
வெள்ளி வேதண்டத்து அம் கண் வீவில் தென் சேடி பாலில்
கள் அவிழ் கைதை வேலி காசு இல் காந்தார நாட்டு
புள் அணி கிடங்கின் விச்சாலோக மாநகரில் போகா
வெள்ளி வேல் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன்

#547
சங்கு உடைந்து அனைய வெண் தாமரை மலர் தடங்கள் போலும்
நம் குடி தெய்வம் கண்டீர் நமரங்காள் அறி-மின் என்ன
கொங்கு உடை முல்லை பைம் போது இருவடம் கிடந்த மார்ப
இங்கு அடி பிழைப்பது அன்றால் எம் குலம் என்று சொன்னான்

#548
பெரும் தகை குருசில் தோழன் பெரு விலை கடகம் முன்கை
திருந்துபு வணங்க பற்றி சென்று தன் உரிமை காட்ட
பொருந்துபு பொற்ப ஓம்பி பொன் இழை சுடர நின்ற
கரும் கண்ணி திறத்து வேறா கட்டுரை பயிற்று நின்றான்

#549
எரி மணி பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காமவல்லி
அரு மணி கொடி-கொல் மின்-கொல் அமரர் கோன் எழுதி வைத்த
ஒரு மணி குயின்ற பாவை ஒன்று-கொல் என்று நாய்கன்
திரு மணி கொடியை ஓரான் தெருமர மன்னன் சொன்னான்

#550
தூசு உலாய் கிடந்த அல்குல் துப்பு உறழ் தொண்டை செ வாய்
வாச வான் குழலின் மின் போல் வரு முலை சாந்து நக்கி
ஊசல் பாய்ந்து ஆடி காதில் குண்டலம் இலங்க நின்றாள்
காசு இல் யாழ் கணம் கொள் தெய்வ காந்தர்வதத்தை என்பாள்

#551
விளங்கினாள் உலகம் எல்லாம் வீணையின் வனப்பினாலே
அளந்து உணர்வு அரிய நங்கைக்கு அரு மணி முகிழ்த்தவே போல்
இளம் கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த மின்னின்
துளங்கு நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டே

#552
நின் மகள் இவளை நீயே நின் பதி கொண்டு போகி
இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக
அன்னவற்கு உரியள் என்ன அடி பணி செய்வல் என்றான்
தன் அமர் தேவி கேட்டு தத்தைக்கே தக்கது என்றாள்

#553
முனிவு அரும் போக பூமி போகம் முட்டாது பெற்றும்
தனியவர் ஆகி வாழ்தல் சா துயர் அதனின் இல்லை
கனி படு கிளவியார் தம் காதலர் கவானில் துஞ்சின்
பனி இரு விசும்பில் தேவர் பான்மையிற்று என்று சொன்னான்

#554
நூல் படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்து யானும்
வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன்
சேல் கடை மதர்வை நோக்கின் சில் அரி தடம் கண் நங்கை
பால் படு காலம் வந்தால் பான்மை யார் விலக்குகிற்பார்

#555
படைப்பு அரும் கற்பினாள் தன் பாவையை பரிவு நீக்கி
கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்த பின் கூற்றும் உட்கும்
விடைப்பு அரும் தானை வேந்தன் வேண்டுவ வெறுப்ப நல்கி
தொடுத்து அலர் கோதை வீணா பதிக்கு இது சொல்லினானே

#556
உடம்பினொடு உயிரில் பின்னி ஒருவயின் நீங்கல் செல்லா
நெடும் கணும் தோளும் போலும் நேர் இழை அரிவை நீ நின்
தடம் கணி தனிமை நீங்க தந்தையும் தாயும் ஆகி
அடங்கு அலர் அட்ட வேலான் ஆணையிர் ஆ-மின் என்றான்

#557
அரு மணி வயிரம் வேய்ந்த அரும் கல பேழை ஐந்நூறு
எரி மணி செம்பொன் ஆர்ந்த ஈர்_ஆயிரம் யவன பேழை
திரு மணி பூணினாற்கு சினம் தலை மழுங்கல் இன்றி
குரு மணி முடியின் தேய்த்த தரன் தமர் கொள்க என்றான்

#558
பல் வினை பவள பாய் கால் பசு மணி இழிகை வம்பு ஆர்
நல் அகில் விம்மு கட்டில் தவிசொடு நிலை கண்ணாடி
மெல்லிய தூபமுட்டி மேதகு நான செப்போடு
அல்லவும் கொள்க என்றான் அணங்கு உடை நிணம் கொள் வேலான்

#559
விளக்கு அழல் உறுத்த போலும் விசியுறு போர்வை தீம் தேன்
துளக்கு அற ஒழுகி அன்ன துய்யற திரண்ட திண் கோல்
கொளத்தகு திவவு திங்கள் கோள் நிரைத்து அனைய ஆணி
அளப்ப அரும் சுவை கொள் நல் யாழ் ஆயிரம் அமைக என்றான்

#560
அரக்கு எறி குவளை வாள் கண் அம் வளை தோளினாளை
பரப்பு அமை கதல் தாயர் பற்பல்-கால் புல்லி கொண்டு
திரு புற கொடுத்த செம்பொன் தாமரை போன்று கோயில்
புரி குழல் மடந்தை போக புலம்பொடு மடிந்தது அன்றே

#561
காம்பு பொன் செய்த பிச்சம் கதிர் மணி குடையொடு ஏந்தி
தாம் பலர் கவரி வீச கிண்கிணி ததும்ப நாக
பாம்பு பைத்து அனைய அல்குல் பல் கலை மிழற்ற ஏகி
ஆம்பல் நாறு அமுத செ வாய் அரசனை தொழுது நின்றாள்

#562
அடி கலம் அரற்ற ஏகி அரும் பெறல் தாதை பாதம்
முடி கலம் சொரிய சென்னி இறைஞ்சலும் முரிந்து மின்னு
கொடி பல நுடங்கி ஆங்கு தோழியர் குழாத்துள் நிற்ப
அடுத்தனன் புல்லி வேந்தன் ஆற்றுகிலாது சொன்னான்

#563
வலம்புரி ஈன்ற முத்தம் மண் மிசை அவர்கட்கு அல்லால்
வலம்பரி பயத்தை எய்தாது அனையரே மகளிர் என்ன
நலம் புரிந்து அனைய காதல் தேவி தன் நவையை நீங்க
குலம் புரிந்து அனைய குன்றிற்கு அதிபதி கூறினானே

#564
இன் சுவை யாழொடு அன்னம் இளம் கிளி மழலை மஞ்ஞை
பொன் புனை யூகம் மந்தி பொறி மயிர் புறவம் பொன்னார்
மென் புனம் மருளின் நோக்கின் மான் இனம் ஆதி ஆக
தன் புறம் சூழ போகி தளிர் இயல் விமானம் சேர்ந்தாள்

#565
வெற்றி வேல் மணி முடி கொற்றவன் ஒரு மகள்
அற்றம் இல் பெரும் படை சுற்றமோடு இயங்கினாள்

#566
கண் அயல் களிப்பன அண்ணல் யானை ஆயிரம்
விண்ணகத்து இயங்கு தேர் எண் அவற்று இரட்டியே

#567
வில்படை விலக்குவ பொன் படை புரவியும்
முற்பட கிளந்த அவற்றின் நல் புடைய நாற்றியே

#568
பாறு உடை பருதி வேல் வீறு உடை இளையரும்
ஆறு இரட்டி ஆயிரர் கூறுதற்கு அரியரே

#569
மாகம் நீள் விசும்பு-இடை மேகம் நின்று இடித்தலின்
நாகம் நின்று அதிர்ந்து அவர்க்கு ஏகல் ஆவது இல்லையே

#570
வெம் சின வெகுளியில் குஞ்சரம் முழங்கலின்
மஞ்சு தம் வயிறு அழிந்து அஞ்சி நீர் உகுத்தவே

#571
வேழம் மும்மதத்தொடு தாழ் புயல் கலந்து உடன்
ஆழ் கடல் அகம் புறம் வீழ் தர விரைந்ததே

#572
மல்லல் மா கடல்-இடை கல் என கலம் கவிழ்த்து
அல்லல் உற்று அழுங்கிய செல்வன் உற்ற செப்புவாம்

#573
பால் நிற பனி வரை மேல் நிறம் மிகுத்தன
நீல் நிற நிழல் மணி தான் நிரைத்து அகம் எலாம்

#574
வஞ்சம் இல் மனத்தினான் நெஞ்சு அகம் புகன்று உக
விஞ்சை அம் பெருமகன் வஞ்சம் என்று உணர்த்தினான்

#575
நங்கை தன் நலத்தினால் மங்குல் வெள்ளி மால் வரை
எங்கும் மன்னர் ஈண்டினர் சங்கு விம்மு தானையார்

#576
ஈர் அலங்கல் ஏந்து வேல் ஆர் அலங்கல் மார்பினான்
கார் கலந்த கை கணி சீர் கலந்து செப்பினான்

#577
மாதர் வாழ்வு மண்ணதே ஆதலால் அலங்கல் அம்
தாது அவிழ்ந்த மார்ப நின் காதலன் கடல் உளான்

#578
என்று கூற என்னையே துன்று காதல் தோழனை
சென்று நீ கொணர்க என அன்று வந்த வண்ணமே

#579
துன்பம் உற்றவர்க்கு அலால் இன்பம் இல்லை ஆதலின்
அன்ப மற்று யான் நினை துன்பத்தால் தொடக்கினேன்

#580
பீழை செய்து பெற்றனன் வாழி என்று மா கடல்
ஆழ்வித்திட்ட அம்பியை தோழர் சுட்டி காட்டினான்

#581
தேன் தரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மால்
ஊன் தரு குருதி வேலான் உள் அகம் குளிர்ந்து விஞ்சை
கோன் தரு துன்பம் மற்று என் குலத்தொடு முடிக என்றான்
கான்று வில் வயிரம் வீசும் கன மணி குழையினானே

#582
தோடு அலர் தெரியலான் தன் தோழரை கண்டு காதல்
ஊடு அலர்ந்து எழுந்து பொங்க உருவ தார் குழைய புல்லி
பாடு இரும் பௌவம் முந்நீர் பட்டது பகர்தலோடும்
நாடகம் நாங்கள் உற்றது என்று கையெறிந்து நக்கார்

#583
கட்டு அழல் கதிய புண்ணில் கருவரை அருவி ஆரம்
பட்டது போன்று நாய்கன் பரிவு தீர்ந்து இனியர் சூழ
மட்டு அவிழ் கோதையோடு மண்கனை முழவம் மூதூர்
கட்டு அவிழ் தாரினான் தன் கடி மனை மகிழ்ந்து புக்கான்

#584
பெரு மனை குறுகலோடும் பிறை என இலங்கி தோன்றும்
திரு நுதல் மனைவி செம்பொன் கொடி என இறைஞ்சி நிற்ப
வரு முலை பொதிர்ப்ப வாங்கி வண்டு இனம் இரிய புல்லி
கதிர் நகை முறுவல் மாதர் கண் உறு கவலை தீர்த்தான்

#585
சந்திரகாந்தம் என்னும் தண் மணி நிலத்தின் அங்கண்
வெந்து எரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி
கந்து எரி மணியில் செய்த கன்னியா மாடம் எய்தி
பைம் தொடி பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாளே

#586
பாசிழை பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க
காசு கண் பரிய வைகி கடன் தலை கழிந்த பின்னா
தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை
ஆசு அறு வரவும் தந்தை வலித்ததும் அறிய சொன்னான்

#587
வண்டு உண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேர
தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு என செறிந்து வீங்கி
பெண்டிரும் ஆண்மை வெஃகி பேதுறு முலையினாளை
கண்டவர் மருள நாளை கடிவினை முடித்தும் என்றான்

#588
மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியில் தந்த
பால் வரை மணியும் பொன்னும் பற்பல கொண்டு புக்கு
கால் பொரு கழலினானும் காவலன் கண்டு சொன்னான்
வேல் பொரு தானையானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான்

#589
மையல் மத யானை நிரை மன்னவன் மகிழ்ந்து ஆனா
பொய் இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி
நொய்தின் மனை எய்தி இது செய்க என நொடித்தான்
மொய் கொள் முலை பாய முகை விண்டு அலர்ந்த தாரான்

#590
நான கிடங்கு ஆடை நகர் நாகத்து-இடை நன் பொன்
வான் நக்கிடும் மாட்சியது ஓர் மண்டபம் செய்க என்ன
மீனத்து-இடை நாள் கிழமை வெள்ளி சயை பக்கம்
கானத்து-இடை வேங்கை எழ கண்ணினர்கள் அன்றே

#591
நட்பு பகை உட்கினொடு நன் பொன் விளை கழனி
பட்டினொடு பஞ்சு துகில் பைம்பொன்னொடு காணம்
அட்ட சுவை வல்சியினொடு யாதும் ஒழியாமல்
ஒட்டி பதினாயிரவர் உற்று முயல்கின்றார்

#592
வண்டு படு தேறல் நறவு வாய்விடொடு பருகி
கண்ட தொழில் கணிச்சிகளின் கயம்பட நன்கு இடித்து ஆங்கு
எண் திசையும் ஏற்ப படுத்து ஏற்றி அதன் மேலால்
கண்டு உருகு பொன்னின் நிலம் காமுறுவ புனைந்தார்

#593
பொன் செய் குடம் கோத்த அனைய எருத்தில் பொலி பொன் தூண்
மின் செய் பசும்பொன் நிலத்து வீறு பெற நாட்டி
மன் பவள மேல் நவின்று பளிக்கு அலகு பரப்பி
நன் செய் வெளி வேய்ந்து சுவர் தமனியத்தின் அமைத்தார்

#594
பாவை அவள் இருக்கும் இடம் பளிக்கு சுவர் இயற்றி
கோவை குளிர் முத்தின் இயல் கோதையொடு கொழும் பொன்
மாலையொடு மாலை தலை மணந்து வர நாற்றி
ஆலையம் இது ஓவியர்கட்கு என்ன அணி அமைத்தார்

#595
ஆய் இதழ் பொன் அலங்கல் கால் அசைப்ப ஒல்கி
வாய் அருகு வந்து ஒசித்து மறிய மழை மின் போல்
சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய்
பாய திரை முத்த மணல் பரந்து பயின்று உளதே

#596
காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும்
தாமரைய வாவிகளும் புள்ளும் தகை நலத்தின்
ஏமுறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி
ஆம் ஓர் ஐயம் காண்பவர்க்கு இது அகம் புறம் இது எனவே

#597
உழந்தவரும் நோக்கி மகிழ் தூங்க ஒளி வாய்ந்து
விழுங்கும் என பறவைகளும் பிற விலங்கும் அடையா
முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய் கொண்டு
எழுந்து கொடி ஆடும் இது அ எழில் நகரின் இயல்பே

#598
ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்தே
மாடம் அது வார் சடைய வள்ளலையும் ஒக்கும்
நாடி முகம் நான்கு அதனின் நான்முகனை ஒக்கும்
நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும்

#599
கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும்
கொண்டு உலகம் ஏத்தலின் அ கொற்றவனை ஒக்கும்
வண் தெரியல் ஆரம் முலை மாதார் மகிழ் அமுதம்
உண்டவர்கள் எவ்வகையர் அவ்வகையது ஒன்றே

#600
முகில் தலை மதியம் அன்ன முழு மணி மாடத்து இட்ட
அகில் புகை தவழ்ந்து வானத்து அரு விசும்பு அறுத்து நீண்டு
பகல் கதிர் பரப்பிற்று ஆகி பஞ்சவர் விமானம் முட்டி
புகற்கு அரும் அமரர் கற்பம் புக்கு அயா உயிர்த்தது அன்றே

#601
அரைசனது அருளினொடு அகல் மனை அவன் எய்தி
உரை செலல் வகையினொடு உலகம் அறிவுற
முரைசு அதிர் இமிழ் இசை முதுநகர் அறைக என
விரை செலல் இளையரை வியவரின் விடவே

#602
விடு கணை விசையொடு வெரு வரு தகையவர்
படு பணையவர் உறை பதி அது குறுகி
நெடு மதி அகடு உற நிழல் தவழ் கொடி உயர்
கடி நகர் இடி முரசு அறை-மின்அம் எனவே

#603
மங்கல அணியினர் மலர் கதிர் மதி அன
புங்கவன் அற நெறி பொலிவொடு மலிக என
அம் கதிர் மணி நகை அலமரும் முலை வளர்
கொங்கு அணி குழல் அவள் கோடணை அறைவாம்

#604
வான் தரு வளத்தது ஆகி வையகம் பிணியில் தீர்க
தேன் தரு கிளவியாரும் கற்பினில் திரிதல் இன்றி
ஊன்றுக ஊழி-தோறும் உலகின் உள் மாந்தர் எல்லாம்
ஈன்றவர் வயத்தர் ஆகி இல்லறம் புணர்க நாளும்

#605
தவம் புரிந்து அடங்கி நோற்கும் தத்துவர் தலைப்பட்டு ஓம்பி
பவம் பரிக எமக்கும் என்று பணிந்து அவர் உவப்ப ஈ-மின்
அவம் புரிந்து உடம்பு நீங்காது அரும் தவம் முயல்-மின் யாரும்
சிவம்புரி நெறியை சேர செப்பும் இ பொருளும் கேள்-மின்

#606
அம் மலர் அனிச்சத்து அம் போது அல்லியோடு அணியின் நொந்து
விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந்து அணங்கு சேர்ந்த
வெம் முலை பரவை அல்குல் மிடை மணி கலாபம் வேய் தோள்
செம் மலர் திருவின் சாயல் தே மொழி தத்தை என்பாள்

#607
மற்று அவள் தந்தை நாய்கன் வண் கை சீதத்தன் என்பான்
கொற்றவன் குலத்தின் வந்தான் கூறிய பொருள் இது ஆகும்
முன் தவம் உடையள் ஆகி மூரி நூல் கலைகள் எல்லாம்
கற்றவள் கணம் கொள் நல் யாழ் அனங்கனை கனிக்கும் நீராள்

#608
தீம் தொடை மகர வீணை தெளி விளி எடுப்பி தேற்றி
பூம் தொடி அரிவை தன்னில் புலம் மிகுத்து உடைய நம்பிக்கு
ஈந்திடும் இறைவர் ஆதி மூவகை குலத்து உளார்க்கும்
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை தாதை என்றான்

#609
மண்ணக மடந்தை ஆகம் மார்புற முயங்கி நின்ற
அண்ணலை ஆதி ஆக அரும் கடி நகரை வாழ்த்தி
விண்ணகம் முழக்கின் ஏய்ப்ப வீதி-தொறும் எருக்கி எங்கும்
கண் ஒளிர் கடிப்பின் ஓச்சி கடி முரசு அறைந்த-காலை

#610
வணக்கரும் தானை மன்னர் மத்தகம் பிளந்து வாய்த்த
நிண கொழும் குருதி வாள் கை நிலம் புடைபெயர்க்கும் ஆற்றல்
அணைப்ப அரும் களி கொள் வேழத்து அத்தினபுரத்து வேந்தன்
கணை கவின் அழித்த உண்கண் கன்னியை கருதி வந்தான்

#611
சிதைப்ப அரும் சீற்ற துப்பின் செய் கழல் நரல வீக்கி
மத களிறு அடர்த்து குன்றம் மணி வட்டின் உருட்டும் ஆற்றல்
கத களி ஒளிறு வை வேல் காம்பிலி காவல் மன்னன்
பதைப்பு அரும் பரும யானை பாலமாகுமரன் வந்தான்

#612
இலை பொர எழுதி அன்ன எரி மணி கடக முன்கை
சிலை பொர திரண்ட திண் தோள் சில் அரி சிலம்பினார்-தம்
முலை பொர உடைந்த தண் தார் மொய் மது துளிப்ப வந்தான்
மலை பொர அரிய மார்பின் வாரணவாசி மன்னன்

#613
கதிர் முடி மன்னர் சூழ்ந்து கைதொழுது இறைஞ்சி மாலை
திரு முடி வயிர வில்லால் சேவடி திளைப்ப ஏத்தி
அரு முடி அணிந்த கொற்றத்து அவந்தியன் முரசம் ஆர்ப்ப
ஒரு பிடி நுசுப்பினாளை உள்ளுபு வந்துவிட்டான்

#614
வெள் அணி அணிந்த ஞான்றே வேந்தர்-தம் முடியில் கொண்ட
கள் அணி மாலை மோந்து கனை கழல் இலங்கும் நோன் தாள்
புள் அணி கொடியினானின் போர் பல தொலைத்த ஆற்றல்
அள் இலை அணிந்த வை வேல் அயோத்தியர் இறையும் வந்தான்

#615
நீள் நிதி வணிகர் ஈறா நில மிசை அவர்கள் எல்லாம்
வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி மூதூர்
கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து அம் மாந்தர்
மாண் மது நசையின் மொய்த்த மதுகர ஈட்டம் ஒத்தார்

#616
உருக்கு அமைந்து எரியும் செம்பொன் ஓர் ஐவில் அகலம் ஆக
திரு குழல் மடந்தை செல்ல திரு நிலம் திருத்தி பின்னர்
விரை தகு நான நீரால் வெண் நிற பொடியை மாற்றி
பரப்பினர் படு வண்டு ஆர்ப்ப பல் மலர் பக்கம் எல்லாம்

#617
விலை வரம்பு அறிதல் இல்லா வெண் துகில் அடுத்து வீதி
அலர் தலை அனிச்சத்து அம் போது ஐம் முழ அகலம் ஆக
பல பட பரப்பி பாவை மெல் அடி பரிவு தீர
நில வரை தன் அனாரை நிதியினால் வறுமை செய்தான்

#618
மண்டலம் நிறைந்த மாசு இல் மதி புடை வியாழம் போன்று ஓர்
குண்டலம் இலங்க நின்ற கொடியினை குறுகி தோழி
விண்டு அலர் கோதை விம்மும் விரை குழல் தொழுது நீவி
பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அற பணிந்து சொன்னாள்

#619
எரி மணி நெற்றி வேய்ந்த இளம் பிறை இது-கொல் என்ன
புரி மணி சுமந்த பொன் பூண் பொறுக்கலா நுசுப்பில் பாவை
திரு மணி வீணை குன்றத்து இழிந்த தீம் பாலை நீத்தத்து
அரு முடி அரசர் ஆழ்வர் அம்மனை அறிவல் என்றாள்

#620
மண் இடம் மலிர எங்கும் மாந்தரும் வந்து தொக்கார்
ஒள் நிற உரோணி ஊர்ந்த ஒளி மதி ஒண் பொன் ஆட்சி
தெள் நிற விசும்பில் நின்ற தெளி மதி முகத்து நங்கை
கண்ணிய வீணை வாள் போர் கலாம் இன்று காண்டும் என்றே

#621
பசும் கதிர் கடவுள் யோகம் பழிப்பு அற நுனித்து வல்லான்
விசும்பு இவர் கடவுள் ஒப்பான் விரிச்சிகன் அறிந்து கூற
அசும்பு தேன் அலங்கல் ஐம்பால் அரிவையோடு ஆய்ந்து நாய்கன்
விசும்பு போல் மாந்தர் ஆர விழு நிதி சிதறினானே

#622
வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப
பூசி வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
காசு அறு குவளை காமர் அக இதழ் பயில மட்டித்து
ஆசு அற திமிர்ந்து மாதர் அணி நலம் திகழ்வித்தாரே

#623
கங்கையின் களிற்றின் உச்சி கதிர் மணி குடத்தில் தந்த
மங்கல வாச நல் நீர் மணி நிறம் கழீஇயது ஒப்ப
நங்கையை நயப்ப எல்லாம் விரையொடு துவரும் சேர்த்தி
அங்கு அரவு அல்குலாளை ஆட்டினார் அரம்பை அன்னார்

#624
வெண் நிற மழையின் மின் போல் வெண் துகில் கலாபம் வீக்கி
கண் நிறம் முலையும் தோளும் சந்தன தேய்வை கொட்டி
தெள் நிற சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
பண் நிற சுரும்பு சூழும் பனி முல்லை சூட்டு வேய்ந்தார்

#625
எரி மணி சுண்ணம் மின்னும் இரும் சிலை முத்தம் சேர்த்தி
திரு மணி முலையின் நெற்றி சிறுபுறம் செறிய தீட்டி
புரி மணி ஆகத்து ஐதா விரல் நுதி கொண்டு பூசி
விரி மணி வியப்ப மேனி ஒளிவிட்டு விளங்கிற்று அன்றே

#626
அரும் கயம் விசும்பில் பார்க்கும் அணி சிறு சிரலை அஞ்சி
இரும் கயம் துறந்து திங்கள் இடம் கொண்டு கிடந்த நீலம்
நெருங்கிய மணி வில் காப்ப நீண்டு உலாய் பிறழ்வ செம் கேழ்
கரும் கயல் அல்ல கண்ணே என கரி போக்கினாரே

#627
பொருந்து பொன் தூண்கள் நான்கின் பொலிந்து நூல் புலவர் செந்நா
வருந்தியும் புகழ்தல் ஆகா மரகத மணி செய் கூடத்து
இருந்து இளையார்கள் கோலம் இந்திரன் நிருமித்தால் போல்
திருந்த செய்து அதன் பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள்

#628
மண் கனை முழவம் விம்ம வரி வளை துவைப்ப வள் வார்
கண் கனைந்து இடியின் வெம்பி கடல் என முரசம் ஆர்ப்ப
விண் கனிந்து உருகு நீர்மை வெள் வளை தோளி போந்தாள்
பண் கனிந்து உருகு நல் யாழ் படை பொருது உடைக்கல் உற்றே

#629
பரந்து ஒளி உமிழும் பைம்பொன் கண்ணடி பதாகை தோட்டி
விரிந்து இருள் மேயும் செம்பொன் விளக்கு வெண் முரசு கும்பம்
சுரந்த வெண் மதியை சூன்று கதிர் கொண்டு தொகுத்த போலும்
பொருந்து பொன் கதிர் பெய் கற்றை புணர் கயல் போந்த அன்றே

#630
வென்றவன் அகலம் பூட்ட விளங்கு ஒளி மணி செய் செப்பின்
நின்று எரி பசும்பொன் மாலை போந்தது நெறியில் பின்னர்
ஒன்றிய மணி செய் நல் யாழ் போந்தன உருவம் மாலை
தின்று தேன் இசைகள் பாட திருநகர் சுடர அன்றே

#631
ஆரம் துயல்வர அம் துகில் சோர்தர
வீரம் பட கையை மெய்-வழி வீசி
தேரை நடப்பன போல் குறள் சிந்தினொடு
ஓரும் நடந்தன ஒண்_தொடி முன்னே

#632
வட்ட சூரையர் வார் முலை கச்சினர்
பட்டு வீக்கிய அல்குலர் பல் கணை
விட்ட தூணியர் வில்லினர் வாளினர்
ஒட்டி ஆயிரத்து ஓர் எண்மர் முன்னினார்

#633
வம்பு வீக்கி வரு முலை உள் கரந்து
அம்பின் நொய்யவர் ஆண் உடை தானையர்
பைம்பொன் கேடகம் வாளொடு பற்றுபு
செம்பொன் பாவையை சேவித்து முன்னினர்

#634
ஆணை ஆணை அகலும்-மின் நீர் என
வேணு கோலின் மிடைந்தவர் ஒற்றலின்
ஆணை இன்று எமதே என்று அணி நகர்
காணும் காதலில் கண் நெருக்கு உற்றவே

#635
கண்ணினோடு பிறந்தது காரிகை
வண்ணம் காண்டற்கு அன்றோ என்று வைது அவர்
விண்ணும் மண்ணும் விருந்து செய்தால் ஒப்ப
எண்ணின் எண் இடம் இன்றி நெருங்கினார்

#636
இனம் சேரா ஆகி இளையார் உயிரின் மேல் எண்ணம் கொள்வான்
புனம் சேர் கொடி முல்லை பூம் பவளத்துள் புக்கு பூத்த போலும்
வனம் சேர் துவர் செ வாய் வாள் எயிறும் கண் மலரும் வளையல் ஆகா
கனம் சேர் கதிர் முலையும் கண்டார்கள் வீட்டுலகம் காணார் போலும்

#637
மீன் சேர் குழாம் அனைய மேகலையும் வெம் முலையும் கூற்றம் கூற்றம்
ஊன் சேர் உயிர் உய்ய கொண்டு ஓடி போ-மின்கள் உரைத்தேம் என்று
கான் சேர் கமழ் கோதை கால் தொடர்ந்து கைவிடாது அரற்றுகின்ற
தேன் சேர் திருவடி மேல் கிண்கிணி பொன் ஆவதற்கே தக்கது என்பார்

#638
கள் வாய் பெயப்பட்ட மாலை கரும் குழல்கள் கண்டார் நைய
உள் வாய் பெயப்பட்ட வெம் மது செப்பு ஓர் இணை மெல் ஆகம் ஈன்ற
புள் வாய் மணி மழலை பொன் சிலம்பின் இ கொடியை ஈன்றாள் போலும்
கொள்வான் உலகுக்கு ஓர் கூற்று ஈன்றாள் அம்மவோ கொடியவாறே

#639
செய்ய தாமரை மேல் திருவே-கொலோ
வெய்ய நோக்கின் விச்சாதரியே-கொலோ
மையில் வானவர்-தம் மகளே-கொல் என்று
ஐயம் உற்று அலர் தார் மன்னர் கூறினார்

#640
வீணை வென்று இவள் வெம் முலை பூம் தடம்
ஆணை தோய்வது அல்லால் பிறன் வெளவுமேல்
கோணை போரில் குளிக்குவம் அன்று-எனின்
மாண நல் தவம் செய்குவம் என்மரும்

#641
குலிக செப்பு அன கொம்மை வரி முலை
நலியும் எம்மை என்பார் நல்ல கண்களால்
வலிய வாங்கி எய்தாள் எம்மை வாழ்கலேம்
மெலிய ஆவி விடுக்கும் மற்று என்மரும்

#642
ஊட்டி அன்ன உருக்கு அரக்கு ஆர் அடி
நீட்டி மெல் மலர் மேல் வந்து நின் நலம்
காட்டி எம்மை கொன்றாய் என கைதொழுது
ஓட்டை நெஞ்சினராய் உழல்வார்களும்

#643
திங்கள் மதி முகத்த சேலும் பவளமும் சிலையும் முத்தும்
கொங்கு உண் குழலாள் மெல் ஆகத்த கோங்கு அரும்பும் கொழிப்பில் பொன்னும்
அம் கை குழியா அரக்கு ஈத்த செம் தளிர் நெய் தோய்த்த போலும்
மங்கை மலர் அடியும் தாமரையே யாம் அறியேம் அணங்கே என்பார்

#644
பொன் மகரம் வாய் போழ்ந்த முத்த நூல் தோள் யாப்பில் பொலிந்த ஆறும்
மின் மகரம் கூத்தாடி வில்லிட்டு இரும் குழை கீழ் இலங்கும் ஆறும்
மன் மகர வெல் கொடியான் மால் கொள்ள கால் கொண்ட முலையினாளை
என் அரம்பை என்னாவாறு என்பார் இமைக்கும் கண் இவையோ என்பார்

#645
கோள் வயிர நீள் அருவி குன்று இவர்ந்த செம்_சுடர் போல் கொலை வேல் மன்னர்
நீள் வயிர வெண் மருப்பின் நீல களிற்றின் மேல் நிரை தார் பொங்க
தோள் வயிரம் தோன்ற தொழுவார் அழுது நைவார் தொக்கோர் கோடி
வாள் வயிரம் விற்கும் மட நோக்கி யார்-கொலோ பெறுவார் என்பார்

#646
பைம்பொன் நிமிர் கொடி பாவை வனப்பு என்னும் தளிரை ஈன்று
செம்பொன் மலர்ந்து இளையார் கண் என்னும் சீர் மணிவண்டு உழல சில் என்று
அம் பொன் சிலம்பு அரற்ற அன்னம் போல் மெல்லவே ஒதுங்கி அம் பூம்
செம்பொன் புரிசை அடைந்தாள் செந்தாமரை மேல் திருவோடு ஒப்பாள்

#647
பட்டு இயன்ற கண்ட திரை வளைத்து பல் மலர் நல் மாலை நாற்றி
விட்டு அகலா சாந்தின் நிலம் மெழுகி மெல் மலர்கள் சிதறி தூமம்
இட்டு இளையர் ஏத்த இமையார் மட மகள் போல் இருந்து நல் யாழ்
தொட்டு எழீஇ பண் எறிந்தாள் கின்னரும் மெய்ம்மறந்து சோர்ந்தார் அன்றே

#648
புன் காஞ்சி தாது தன் புறம் புதைய கிளி என கண்டு
அன்பு கொள் மட பெடை அலமந்து ஆங்கு அகல்வதனை
என்பு உருகு குரல் அழைஇ இரும் சிறகர் குலைத்து உகுத்து
தன் பெடையை குயில் தழுவ தலைவந்தது இளவேனில்

#649
தண் காஞ்சி தாது ஆடி தன் நிறம் கரந்ததனை
கண்டு ஆனா மட பெடை கிளி என போய் கை அகல
நுண் தூவி இளம் சேவல் நோக்கோடு விளி பயிற்றி
தன் சிறகால் பெடை தழுவ தலைவந்தது இளவேனில்

#650
குறும் தாள் குயில் சேவல் கொழும் காஞ்சி தாது ஆடி
வெறுத்து ஆங்கே மட பெடை விழைவு அகன்று நடப்பதனை
மறுத்து ஆங்கே சிறகு உளர்ந்து மகிழ்வு ஆனா கொள தேற்றி
உறுப்பினால் அடி பணிய தலைவந்தது இளவேனில்

#651
தளை அவிழ் கோதை பாடி தான் அமர்ந்து இருப்ப தோழி
விளை மது கண்ணி வீணாபதி எனும் பேடி வேல் கண்
இளையவள் பாட வீரர் எழால் வகை தொடங்கல் அன்றேல்
வளையவள் எழாலின் மைந்தர் பாடுக வல்லை என்றாள்

#652
வேயே திரள் மென் தோள் வில்லே கொடும் புருவம்
வாயே வளர் பவளம் மாந்தளிரே மா மேனி
நோயே முலை சுமப்பது என்றார்க்கு அருகு இருந்தார்
ஏஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்
எரி மணி பூண் மேகலையாள் பேடியோ என்றார்

#653
பலி கொண்டு பேராத பாசம் இவள் கண்
ஒலி கொண்டு உயிர் உண்ணும் கூற்றம் என்று எல்லே
கலி கொண்டு தேவர் முலை கரந்து வைத்தார்
இலை கொண்ட பூணினீர் என்று எழினி சேர்ந்தாள்
இலங்கு பொன் கிண்கிணியாள் நக்கு எழினி சேர்ந்தாள்

#654
நுண் துகில் அகல் அல்குல் நொசித்த வெம் முலை
உண்டு இவள் நுசுப்பு என உரைப்பின் அல்லது
கண்டு அறிகிலா இடை காமவல்லி யாழ்
கொண்டவர் குழாத்து-இடை கொடியின் ஒல்கினாள்

#655
பளிக்கு ஒளி மணி சுவர் எழினி பையவே
கிளி சொலின் இனியவர் நீக்க கிண்கிணி
ஒளிக்கும் இன்று ஆடவர் உயிர்கள் என்ன நொந்து
அளித்து அவை இரங்க சென்று அணையில் ஏறினான்

#656
உறை கழித்து இலங்கு வாள் உடற்றும் கண்ணினாள்
மறை ஒளி மணி சுவர் இடையிட்டு இத்தலை
இறை வளை யாழ் தழீஇ இருப்ப அத்தலை
கறை கெழு வேலினார் கண்ணி தீந்தவே

#657
சிலை தொழில் சிறு நுதல் தெய்வ பாவை போல்
கலை தொழில் பட எழீஇ பாடினாள் கனிந்து
இலை பொழில் குரங்கின ஈன்ற தூண் தளிர்
நிலத்து-இடை பறவை மெய்ம்மறந்து வீழ்ந்தவே

#658
கரும் கொடி புருவம் ஏறா கயல் நெடும் கண்ணும் ஆடா
அரும் கடி மிடறும் விம்மாது அணி மணி எயிறும் தோன்றா
இரும் கடல் பவள செ வாய் திறந்து இவள் பாடினாளோ
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்

#659
இசை திறத்து அனங்கனே அனைய நீரினார்
வசைத்திறம் இலாதவர் வான் பொன் யாழ் எழீஇ
விசைத்து அவர் பாடலின் வெருவி புள் எலாம்
அசிப்ப போன்று இரு விசும்பு அடைந்த என்பவே

#660
மாதர் யாழ் தடவர வந்த மைந்தர் கை
கீதத்தான் மீண்டன கேள்வி கின்னரம்
போதர பாடினாள் புகுந்த போயின
தாது அலர் தாரினார் தாங்கள் பாடவே

#661
சுரும்பு எழுந்து இருந்து உணும் தொங்கல் வார் குழல்
அரும் பெறல் அவட்கு இசை அரசர் தோற்ற பின்
நரம்பு உறு தெள் விளி நவின்ற நான்மறை
வரம் பெறு நெறியவர் மலைதல் மேயினார்

#662
திரு மலர் கமலத்து அம் கண் தேனின் முரல்வது ஒப்ப
விரி மலர் கோதை பாட எழால் வகை வீரர் தோற்றார்
எரி மலர் பவள செம் வாய் இன் நரம்பு உளர மைந்தர்
புரி நரம்பு இசை கொள் பாடல் உடைந்தனர் பொன் அனாட்கே

#663
வால் அரக்கு எறிந்த காந்தள் மணி அரும்பு அனைய ஆகி
கோல் பொர சிவந்த கோல குவி விரல் மடந்தை வீணை
நூல் பொர புகுந்த நுண் நூல் வணிகரும் தொலைந்து மாதோ
கால் பொர கரிந்த காமர் பங்கய பழனம் ஒத்தார்

#664
தேன் உயர் மகரவீணை தீம் சுவை இவளை வெல்வான்
வான் உயர் மதுகை வாட்டும் வார் சிலை காமன் ஆகும்
ஊன் உயர் நுதி கொள் வேலீர் ஒழிக ஈங்கு இல்லை என்றான்
கான் உயர் அலங்கல் மாலை கட்டியங்காரன் அன்றே

#665
மறு முயற்கு இவர்ந்த வேக மாசுணம் அடைய பட்ட
நிறை மதி போன்று மன்னர் ஒளி குறைந்து உருகி நைய
அறு பகல் கழிந்த பின்றை அ நகர்க்கு ஆதி நாய்கன்
சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவகசாமி என்பான்

#666
தம்பியும் தோழன்மாரும் தானும் மற்று எண்ணி சூழ்ந்து
வெம்பிய வீணை போருள் செல்குவம் யாமும் முன்னே
தும்பு அற புத்திசேனன் சொல் இது குரவற்கு என்ன
கந்துகற்கு அவனும் சொன்னான் அவன் இது விளம்பினானே

#667
ஐயனுக்கு அமைந்த நீரார் அறுபத்து நால்வர் அம் பொன்
வையகத்து அமிர்தம் அன்னார் வாக்கு அமை பாவை ஒப்பார்
எய்திய இளமை மிக்கார் இயைந்தனர் என்று பின்னும்
கை அமை சிலையினாற்கு கந்துகன் இதுவும் கூறும்

#668
மறைவல்லாற்கு உரைக்கும் போழ்தில் கோயிலுள் நின்று மாலை
பிறை வெல்லும் நுதலினாள் ஓர் பெண்_கொடி வந்து கூந்தல்
உறை செல நீக்கி பைம் தாள் ஒண் மணி குவளை நீட்ட
நறை வெல்லும் நாக மாலை நோக்கொடு பூ கொண்டானே

#669
நல்லவள் நோக்கம் நாய்கன் தேர்ந்து பூம் குவளை போதின்
அல்லியுள் கிடந்த ஓலை தாள் அது சலாகை ஆதல்
சொல்லும் என்றும் ஆய்ந்து கொண்டு துகிலிகை கணக்கு நோக்கி
வல்லிதின் சலாகை சுற்றி ஓலையை வாசிக்கின்றான்

#670
நம்பனை நகரின் நீக்கி சேமத்தால் வைக்க தீயுள்
செம்பொன் போல் பெரிதும் சேந்து செகுத்திடல் உற்று நின்றான்
வெம்பினான் காரி உண்டி கடவுளின் கனன்று வேந்தன்
இம்பர் இன்று எனக்கு சொன்னான் இது பட்டது அடிகள் என்றான்

#671
ஓலையை அவட்கு நீட்டி ஒண் மணி குழையும் முத்தும்
மாலையும் படுசொல் ஒற்றி வம் என மறைய நல்கி
வேலை நெய் பெய்த திங்கள் விரவிய பெயரினாற்கு
மேலை நாள் பட்டது ஒன்று விளம்புவல் கேள் இது என்றான்

#672
கடி அரங்கு அணிந்து மூதூர் கடல் கிளர்ந்தது அனையது ஒப்ப
நடை அறி புலவர் ஈண்டி நாடகம் நயந்து காண்பான்
குடை உடையவனொடு எண்ணி சீவகன் கொணர்-மின் என்ன
தொடையல் சூழ் வேலினானும் தோழரும் காண சென்றார்

#673
நிலம் அறிந்து அணிக ஐயன் சீவகன் நெறியின் என்ன
நல் நுதல் பட்டம் கட்டி நகை முடி கோதை சூட்டி
அலர் முலை குருதி சாந்தும் ஆரமும் பூணும் சேர்த்தி
குலவிய குருதி பட்டின் கலை நலம் கொளுத்தி இட்டான்

#674
திருவிலே சொரிந்து மின்னும் குண்டலம் செம்பொன் ஓலை
உருவு கொள் மதியம் அன்ன ஒளி முகம் சுடர ஆக்கி
பரி அகம் சிலம்பு செம்பொன் கிண்கிணி பாதம் சேர்த்தி
அரிவையை அரம்பை நாண அணிந்தனன் அனங்கன் அன்னான்

#675
தோல் பொலி முழவும் துளை பயில் குழலும் ஏங்க
காற்கு ஒசி கொம்பு போல போந்து கை தலங்கள் காட்டி
மேல் பட வெருவி நோக்கி தானையை விட்டிட்டு ஒல்கி
தோற்றினாள் முகம் செய் கோலம் துளக்கினாள் மனத்தை எல்லாம்

#676
தெள் மட்டு துவலை மாலை தேனொடு துளிப்ப திங்கள்
உள் நட்ட குவளை போலும் உருவ கண் வெருவி ஆட
விண் விட்டு கடவுள் வீழ நுடங்கின புருவம் நெஞ்சம்
பண் விட்டது இருந்து காணும் பல் மணி கழலினார்க்கே

#677
செம் கதிர் சிலம்பு செம்பொன் கிண்கிணி சிலம்ப கோதை
பொங்க பொன் ஓலை வட்டம் பொழிந்து மின் உகுப்ப போர்த்த
குங்கும சாந்து வேய்ந்து குண்டலம் திருவில் வீச
அம் கதிர் ஆரம் மின்ன அரிவை கூத்து ஆடுகின்றாள்

#678
மருங்குலும் ஒன்று தாய்க்கு ஒரு மகள் ஆதல் ஓர்ந்தும்
இரும்பினால் இயன்ற நெஞ்சத்து இவர்களோ இருந்து காண்க
அரங்கின் மேல் இவளை தந்த தாய்-கொலோ கயத்தி அன்றேல்
சுரும்பு சூழ் கண்ணி சூட்டி அவர்-கொலோ கயவர் சொல்லீர்

#679
அகிலார் புகை அலால் சாந்து அணியாள் பூச்சார செல்லாள் செல்லின்
பகலே பகை வளர்த்த பாவை சிறு நுசுப்பு ஒன்று உண்டே பாவம்
இகல் ஏந்து இள முலை மேல் சாந்து எழுதி முத்து அணிந்து பூவும் சூட்ட
முகில் ஏந்து மின் மருங்குல் மொய் குழல் தாய் இது கண்டும் உளளே பாவம்

#680
தேம் தாமம் செம் பவள தாமம் செம்பொன் எரி தாமம் மின்னு திரள் தாமங்கள்
தாம்தாம் தாம் என தாழ்ந்த பொன் மேகலை தாம அரங்கின் மேல் தாது ஆர் முல்லை
பூம் தாம கொம்பு ஆட கண்டார் எல்லாம் புன மயிலே அன்னமே பொன்னம் கொம்பே
ஆம் தாமரை மகளே அல்லள் ஆயின் அமரர் மகள் என்பாரும் ஆயினாரே

#681
கொடியார் குளிர் முத்தம் சூட்டி வைத்தார் கொல்வானே குங்கும சேறு ஆட்டினார்கள்
அடி சார்ந்து வாழ்வாரை அம் முலைகள்-தாமே அழித்திடுமேல் தாமே அழித்திடுக என்று
ஒடியாத மாத்திரையால் உண்டே நுசுப்பு இருந்து காண்பாரும் உளரே செம் கண்
நெடியான் மகன் சிலையும் அம்பும் வைத்த நிழல் மதியோ வாள் முகமோ நோக்கி காணீர்

#682
நெய் பருகி நீண்ட இருள் கற்றை போலும் குழல் கற்றை கண்டு நிறை
கலங்குவார் மை பருகி நீண்டு மதர்த்த உண்கண் வாள் ஏறு பெற்று நைவார் மா நாகத்தின்
பை பருகு அல்குல் இலயம் பற்றி பதன் அமைத்த பாவை நிருத்தம் நோக்கி
மெய் உருகி கண் உருகி நெஞ்சு உருகி காம வெயில் வெண்ணெய் பாவை போல் மெலிகின்றாரே

#683
ஆடவர் மனங்கள் என்னும் அரங்கின் மேல் அனங்க மாலை
ஆடினாள் முறுவல் என்னும் தோழியை ஐயன் காண
ஓடு அரி நெடும் கண் என்னும் ஓலையை எழுதிவிட்டாள்
வாடியவாறு நோயும் உரைத்து வார் கொடி அனாளே

#684
வள மலர் அணியப்பெற்றேன் வால் வளை திருத்தப்பெற்றேன்
களன் என கரையும் அல்குல் கையினால் தீண்டப்பெற்றேன்
இள முலை சுமந்து பெற்ற வருத்தமும் இன்று தீர்ந்தேன்
உள மெலி மகளிர் எய்தும் இன்பமும் இன்று பெற்றேன்

#685
என்றவள் அரசன் தன்னை நோக்கலள் இவன்-கண் ஆர்வம்
சென்றமை குறிப்பில் தேறி கூத்து எலாம் இறந்த பின்றை
நின்றது மனத்தில் செற்றம் நீங்கி தன் கோயில் புக்கான்
மன்றல் மடந்தை-தன்னை வலிதில் கொண்டு ஒலி கொள் தாரான்

#686
தேன் உடைந்து ஒழுகும் செவ்வி தாமரை போது புல்லி
ஊன் உடை உருவ காக்கை இதழ் உக குடைந்திட்ட ஆங்கு
கான் உடை மாலை தன்னை கட்டியங்காரன் சூழ்ந்து
தான் உடை முல்லை எல்லாம் தாது உக பறித்திட்டானே

#687
கலையினில் கன்னி நீக்கி தாமரை கண்கள் தம்மால்
முலையினில் எழுதி செ வாய் பயந்த தேன் பருகி முள்கும்
சிலை வலாய் புல்லு நம்பி சீவகசாமியோ என்று
அலை கடல் புலம்பின் ஓவாது அரற்றுமால் அணங்கின் அன்னாள்

#688
பிறன் நலம் அரற்ற கேட்டும் பீடினால் கனிந்த காம
நறு மலர் அணிந்த மாலை நாற்றக்கு ஓர் நான்கு காதம்
உற நடந்து அறிதல் இல்லான் ஒண்_தொடிக்கு உருகி பின்னும்
திறன் அல தமர்க்கு செப்பும் தீ உமிழ்ந்து இலங்கும் வேலான்

#689
விலங்கல் அன்ன வேக வேழம் நான்கு வெல்லும் ஆற்றலான்
கலம் கலந்து இலங்கும் மார்பின் கந்துகன் மகன் என
நலம் கலந்து உரைக்குமால் இ நல் நகர்க்கு மன்னனோ
உலம் கலந்த தோளினீர் நீர் உரை-மின் நீவிர் என்னவே

#690
மட்டு அவிழ்ந்த தாரினான் இ மாநகர்க்குள் ஆயிரர்
தொட்டு எடுக்கலா உலம் ஓர் தோளின் ஏந்தி ஆடினான்
ஒட்டி நாகம் ஓர் இரண்டு எடுக்கலாத கல்லினை
விட்டு அலர்ந்த போது போல ஏந்தல் ஏந்தி நீக்கினான்

#691
வெம் சிலையின் வேடர் வெள்ளம் அப்பு மாரி தூவலின்
எஞ்சல் இன்றி நம் படை இரு முறையும் உடைந்த பின்
மஞ்சு சூழ் கணை மழை பொழிந்து மா நிரை பெயர்த்து
அம்_சில்_ஓதியார் புனைந்த செம் சொல் மாலை சூடினான்

#692
தீம் பயறு இயன்ற சோறு செப்பின் ஆயிரம் மிடா
நீங்கலா நறு நெய் வெள்ளம் கன்னல் ஆயிரம் குடம்
ஏந்து வித்து நாம் மிசைய வந்து தந்து நீக்கினான்
ஆங்கு நாம் பசித்து அசைந்த-காலை அன்று அ அண்ணலே

#693
இன்னன் என்ன இன்புறான் இழந்தனன் அன்ன அரசு என
என்னை வெளவும் வாயில் தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்
அன்னதால் அரில் தப அறிந்து கூத்தி கூறினாள்
இன்னதால் படை அமைத்து எழு-மின் என்று இயம்பினான்

#694
தாதை தான் உரைத்த எல்லாம் தன் உயிர் தோழன் கூற
கோதை முத்து அணிந்த மார்பன் கூர் எயிறு இலங்க நக்கு ஆங்கு
ஏதம் ஒன்று இல்லை சேறும் என்றலும் இலங்கு வாள் கை
போது உலாம் கண்ணி மைந்தர் போர் புலி குழாத்தின் சூழ்ந்தார்

#695
கண் நுதல் கடவுள் சீற கனல் எரி குளித்த காமன்
மண் மிசை தோன்றி அன்ன வகை நலம் உடைய காளை
தெள் மணி ஆர மார்பன் திரு நுதல் மகளிர் நெஞ்சத்து
உள் நிறை பருகும் வண் தார் உரு அமை திருவின் மிக்கான்

#696
கரு நெறி பயின்ற குஞ்சி காழ் அகில் கமழ ஊட்டி
வரி நிற வண்ண மாலை வலம்பட மிலைச்சி வாள் ஆர்
திரு நிற முகத்திற்கு ஏற்ப செம்பொன் ஓர் ஓலை சேர்த்தி
எரி நிற குழை ஓர் காதிற்கு இருள் அற சுடர வைத்தான்

#697
தென் வரை பொதியில் தந்த சந்தன தேய்வை தேம் கொள்
மன் வரை அகலத்து அப்பி வலம்புரி ஆரம் தாங்கி
மின் விரித்து அனையது ஒத்து விலை வரம்பு அறியல் ஆகா
இன் நுரை கலிங்கம் ஏற்ப மருங்குலுக்கு எழுதி வைத்தான்

#698
இரும்பு அற கழுவி எஃகின் இருள் அற வடிக்க பட்ட
அரும் பெறல் சுரிகை அம் பூம் கச்சு-இடை கோத்து வாங்கி
பெரும் தகை குருசில் கொண்டு பெரு வலம் சுடர வீக்கி
திருந்து இழை மகளிர் வெஃகும் தே இளம் குமரன் ஒத்தான்

#699
வரை விழித்து இமைப்பது ஒக்கும் வாள் ஒளி ஆர மார்பின்
விரை வழித்து இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி
நுரை கிழித்து அனைய நொய்ம்மை நுண் துகில் மருங்குல் சேர்த்தி
உரை கிழித்து உணரும் ஒப்பின் ஓவிய பாவை ஒத்தார்

#700
அரக்கு நீர் எறியப்பட்ட அஞ்சன குன்றம் அன்ன
திரு கிளர் ஓடை சூழ்ந்த செம் புகர் நெற்றித்து ஆகி
உருக்கி ஊன் உண்ணும் வேகத்து உறு புலி அனைய நாகம்
அருக்கன் ஓர் குன்றம் சேர்ந்த ஆங்கு அண்ணல் தான் ஏறினானே

#701
விடு கணை விசையின் வெய்ய விளங்கு ஒளி இவுளி திண் தேர்
கடு நடை கவரி நெற்றி கால் இயல் புரவி காய்ந்து
வடி நுனை ஒளிறும் மாலை வாள்படை மறவர் சூழ
அடு திரை சங்கம் ஆர்ப்ப அணி நகர் முன்னினானே

#702
தோற்றனள் மடந்தை நல் யாழ் தோன்றலுக்கு என்று நிற்பார்
நோற்றனள் நங்கை மைந்தன் இள நலம் நுகர்தற்கு என்பார்
கோல் தொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையும் மின்ன
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணும் ஆயினாரே

#703
சுறா நிற கொடும் குழை சுழன்று எருத்து அலைத்தர
அறா மலர் தெரியலான் அழன்று நோக்கி ஐ என
பொறா மன பொலிவு எனும் மணி கை மத்திகையினால்
அறாவி வந்து தோன்றினான் அனங்கன் அன்ன அண்ணலே

#704
குனிகொள் பாக வெண் மதி கூர் இரும்பு தான் உறீஇ
பனி கொள் மால் வரை என படு மத களிறு இரீஇ
இனிது இழிந்து இளையர் ஏத்த இன் அகில் கொழும் புகை
முனிய உண்ட குஞ்சியான் முரண் கொள் மாடம் முன்னினான்

#705
புதிதின் இட்ட பூம் தவிசின் உச்சி மேல் நடந்து அவண்
புதிதின் இட்ட மெல்லணை பொலிந்த வண்ணம் போகு உயர்
மதி-அது ஏறி வெம் சுடர் வெம்மை நீங்க மன்னிய
உதயம் என்னும் மால் வரை உவந்து இருந்தது ஒத்ததே

#706
முருகு விம்மு கோதையார் மொய் அலங்கல் வண்டு போல்
பருகுவான் இவள் நலம் பாரித்திட்ட இ நகர்
உருகும் ஐங்கணை ஒழித்து உருவின் ஐய காமனார்
கருதி வந்தது என்று தம் கண்கள் கொண்டு நோக்கினார்

#707
முனை திறத்து மிக்க சீர் முனைவர் தம் முனைவனார்
வனப்பு மிக்கவர்களின் வனப்பு மிக்கு இனியனா
நினைத்து இருந்து இயற்றிய நிருமித மகன் இவன்
கனைத்து வண்டு உளர்ந்த தார் காளை சீவகன்-அரோ

#708
பொன்னை விட்ட சாயலாள் புணர் முலை தடத்தினால்
மின்னை விட்டு இலங்கு பூண் விரை செய் மார்பம் ஓலையா
என்னை பட்டவாறு-அரோ எழுதி நங்கை ஆட்கொள்வான்
மன்னும் வந்து பட்டனன் மணி செய் வீணை வாரியே

#709
இனைய கூறி மற்று அவள் தோழிமாரும் இன்புற
வனையலாம் படித்து அலா வடிவிற்கு எல்லை ஆகிய
கனை வண்டு ஓதி கை தொழும் கடவுள் கண்ணில் கண்டவர்
எனையது எனையது எய்தினார் அனையது அனையது ஆயினார்

#710
குட்ட நீர் குவளை எல்லாம் கூடி முன் நிற்கல் ஆற்றா
கட்டழகு அமைந்த கண்ணாள் நிறை எனும் சிறையை கைபோய்
இட்ட நாண் வேலி உந்தி கடல் என எழுந்த வேட்கை
விட்டு எரி கொளுவ நின்றாள் எரி உறு மெழுகின் நின்றாள்

#711
நலத்தை மத்து ஆக நாட்டி நல் வலி இளமை வாரா
குல பிறப்பு என்னும் கையால் கோல பாசம் கொளுத்தி
கலக்கி இன் காமம் பொங்க கடைந்திடுகின்ற காளை
இலை பொலி அலங்கல் மார்பம் இயைவது என்று ஆகும்-கொல்லோ

#712
தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன்
நாம் கணால் பருகியிட்டு நலன் உணப்பட்ட நம்பி
பூம் குழல் மகளிர் முன்னர் புலம்பல் நீ நெஞ்சே என்றாள்
வீங்கிய காமம் வென்றார் விளைத்த இன்பத்தோடு ஒப்பாள்

#713
கண் எனும் வலையின் உள்ளான் கை அகப்பட்டு இருந்தான்
பெண் எனும் உழலை பாயும் பெரு வனப்பு உடைய நம்பி
எண்ணின் மற்று யாவன்-ஆம்-கொல் என் இதில் படுத்த ஏந்தல்
ஒள் நிற உருவ செம் தீ உருவுகொண்ட அனைய வேலான்

#714
யாவனே யானும் ஆக அரு நிறை கதவம் நீக்கி
காவல் என் நெஞ்சம் என்னும் கன்னிமாடம் புகுந்து
நோவ என் உள்ளம் யாத்தாய் நின்னையும் மாலையாலே
தேவரின் செறிய யாப்பன் சிறிது இடைப்படுக என்றான்

#715
கழித்த வேல் ஏறு பெற்ற கடத்து-இடை பிணையின் மாழ்கி
விழித்து வெய்துயிர்த்து மெல்ல நடுங்கி தன் தோழி கூந்தல்
இழுக்கி வண்டு இரிய சேர்ந்து ஓர் கொடி புல்லும் கொடியின் புல்லி
எழில் தகை மார்பற்கு இன் யாழ் இது உய்த்து கொடுமோ என்றாள்

#716
தடம் கணாள் பணியினால் தான் அ வீணை ஒன்றினை
நெடும் கணால் எழினியை நீக்கி உய்த்து நீட்டினாள்
மடங்கல் அன்ன மொய்ம்பினான் வருக என்று கொண்டு தன்
கிடந்த ஞானத்து எல்லையை கிளக்கல் உற்று நோக்கினான்

#717
சுரந்து வானம் சூல் முதிர்ந்து மெய் நொந்து ஈன்ற துளியே போல்
பரந்த கேள்வி துறைபோய பைம் தார் மார்பன் பசும்பொன் யாழ்
நரம்பு தேன் ஆர்த்து என தீண்டி நல்லாள் வீணை பொல்லாமை
இருந்த முலையாள் நின்றாளை நோக்கி இசையின் இது சொன்னான்

#718
நீர் நின்று இளகிற்று இது வேண்டா நீரின் வந்தது இது போக
வார் நின்று இளகும் முலையினாய் வாள் புண் உற்றது இது நடக்க
ஓரும் உரும் ஏறு இது உண்டது ஒழிக ஒண் பொன் உகு கொடியே
சீர் சால் கணிகை சிறுவன் போல் சிறப்பு இன்று அம்ம இது என்றான்

#719
கல் சேர் பூண் கொள் கதிர் முலையாய் காம தீயால் வெந்தவர் போல்
கொல்லை உழவர் சுடப்பட்டு குரங்கி வெந்தது இது களிறு
புல்ல முரிந்தது என போக்கி தூமம் ஆர்ந்த துகில் உறையுள்
நல் யாழ் நீட்ட அது கொண்டு நங்கை நலத்தது இது என்றான்

#720
இரு நில மடந்தை ஈன்றது இரு விசும்பு என்னும் கைத்தாய்
திரு நலம் மின்னு பொன் ஞாண் முகில் முலை மாரி தீம் பால்
ஒரு நலம் கவின் ஊட்ட உண்டு நோய் நான்கும் நீங்கி
அரு நலம் கவினி வாள் வாய் அரிந்து இது வந்தது என்றான்

#721
தீம் தொடை நரம்பின் தீமை சிறிது அலா பொழுதும் ஓதி
பூம் தொடை அரிவை காண புரி நெகிழ்த்து உரோமம் காட்ட
தேம் கமழ் ஓதி தோற்றாள் செல்வனுக்கு என்ன மைந்தன்
வாங்குபு நபுலன் கையுள் வார் புரி நரம்பு கொண்டான்

#722
பணிவரும் பைம்பொன் பத்தர் பல் வினை பவள ஆணி
மணி கடை மருப்பின் வாளார் மாடக வயிர தீம் தேன்
அணிபெற ஒழுகி அன்ன அமிழ்து உறழ் நரம்பின் நல் யாழ்
கணி புகழ் காளை கொண்டு கடல் அகம் வளைக்கலுற்றான்

#723
குரல் குரல் ஆக பண்ணி கோதை தாழ் குஞ்சியான் தன்
விரல் கவர்ந்து எடுத்த கீதம் மிடறு என தெரிதல் தேற்றார்
சுரரொடு மக்கள் வீழ்ந்தார் சோர்ந்தன புள்ளும் மாவும்
உருகின மரமும் கல்லும் ஓர்த்து எழீஇ பாடுகின்றான்

#724
கன்னி நாகம் கலங்க மலங்கி
மின்னும் இரங்கும் மழை என்கோ யான்
மின்னும் மழையின் மெலியும் அரிவை
பொன் நாண் பொருத முலை என்கோ யான்

#725
கருவி வானம் கான்ற புயலின்
அருவி அரற்றும் மலை என்கோ யான்
அருவி அரற்றும் மலை கண்டு அழுங்கும்
மருவார் சாயல் மனம் என்கோ யான்

#726
வானம் மீன் அரும்பி மலர்ந்து
கானம் பூத்த கார் என்கோ யான்
கானம் பூத்த கார் கண்டு அழுங்கும்
தேன் ஆர் கோதை பரிந்து என்கோ யான்

#727
அண்ணல் யாழ் நரம்பை ஆய்ந்து மணி விரல் தவழ்ந்தவாறும்
பண்ணிய இலயம் பற்றி பாடிய வனப்பும் நோக்கி
விண்ணவர் வீணை வீழ்த்தார் விஞ்சையர் கனிந்து சோர்ந்தார்
மண்ணவர் மருளின் மாய்ந்தார் சித்தரும் மனத்துள் வைத்தார்

#728
வீழ் மணி வண்டு பாய்ந்து மிதித்திட கிழிந்த மாலை
சூழ் மணி கோட்டு வீணை சுகிர் புரி நரம்பு நம்பி
ஊழ் மணி மிடறும் ஒன்றாய் பணி செய்தவாறு நோக்கி
தாழ் மணி தாம மார்பின் கின்னரர் சாம்பினாரே

#729
விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி ஏத்த
மண்ணவர் மகிழ வான் கண் பறவை மெய்ம்மறந்து சோர
அண்ணல்தான் அனங்கன் நாண பாடினான் அரசர் எல்லாம்
பண் அமைத்து எழுதப்பட்ட பாவை போல் ஆயினாரே

#730
பருந்தும் நிழலும் போல் பாட்டும் எழாலும்
திருந்து தார் சீவகற்கே சேர்ந்தன என்று எண்ணி
விருந்தாக யாழ் பண்ணி வீணை தான் தோற்பான்
இருந்தாள் இளம் மயில் போல் ஏந்து இலை வேல் கண்ணாள்

#731
கோதை புறம் தாழ குண்டலமும் பொன் தோடும்
காதின் ஒளிர்ந்து இலங்க காமர் நுதல் வியர்ப்ப
மாதர் எருத்தம் இடம் கோட்டி மா மதுர
கீதம் கிடை இலாள் பாட தொடங்கினாள்

#732
இலையார் எரி மணி பூண் ஏந்து முலையும்
சிலையார் திரு நுதலும் செம் பசலை மூழ்க
மலையார் இலங்கு அருவி வாள் போல மின்னும்
கலையார் தீம் சொல்லினாய் காணார்-கொல் கேள்வர்

#733
பிறையார் திரு நுதலும் பேர் அமர் உண்கண்ணும்
பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க
நிறை வாள் இலங்கு அருவி நீள் வரை மேல் மின்னும்
கறை வேல் உண்கண்ணினாய் காணார்-கொல் கேள்வர்

#734
அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும்
திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க
நெருங்கார் மணி அருவி நீள் வரை மேல் மின்னும்
கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர்

#735
பண் ஒன்று பாடல் அது ஒன்று பல் வளை கை
மண் ஒன்று மெல் விரலும் வாள் நரம்பின் மேல் நடவா
விண் நின்று இயங்கி மிடறு நடுநடுங்கி
எண் இன்றி மாதர் இசை தோற்று இருந்தனளே

#736
மையார் நெடும் கண்ணாள் மா மணி யாழ் தான் உடைந்து
நையா நடுநடுங்கா நனி நாணம் மீது ஊரா
பொய்யாது ஓர் குன்று எடுப்பாள் போல் மெலிந்து பொன் மாலை
பெய் பூம் கழலாற்கு பெண் அரசி ஏந்தினளே

#737
மெல் என்று சிலம்பு அரற்ற மேகலைகள் மின் உமிழ
நல்ல பெடை அன்னம் நாண அடி ஒதுங்கி
ஒல்லென் உயர் தவமே செய்ம்-மின் உலகத்தீர்
எல்லீரும் என்பாள் போல் ஏந்தல் மேல் வீழ்ந்தனளே

#738
நாகத்து படம் கொள் அல்குல் நலம் கிளர் செம்பொன் மாலை
மேகத்து பிறந்தது ஓர் மின்னு மணி வரை வீழ்ந்ததே போல்
ஆகத்து பூட்டி மைந்தன் அடி தொழுது இறைஞ்சி நின்றாள்
போகத்து நெறியை காட்டும் பூமகள் புணர்ந்தது ஒப்பாள்

#739
செம் மலர் அடியும் நோக்கி திரு மணி அல்குல் நோக்கி
வெம் முலை தடமும் நோக்கி விரி மதி முகமும் நோக்கி
விம்மித பட்டு-மாதோ விழுங்குவான் போல ஆகி
மை மலர் தடம் கண் நங்கை மரை மலர் தேவி என்றான்

#740
கோதையும் தோடும் மின்ன குண்டலம் திருவில் வீச
மாதரம் பாவை நாணி மழை மினின் ஒசிந்து நிற்ப
காதல் அம் தோழிமார்கள் கரும் கயல் கண்ணினாளை
ஏதம் ஒன்று இன்றி பூம் பட்டு எந்திர எழினி வீழ்த்தார்

#741
வெள் இலை வேல் கணாளை சீவகன் வீணை வென்றான்
ஒள்ளியன் என்று மாந்தர் உவா கடல் மெலிய ஆர்ப்ப
கள்ளரால் புலியை வேறு காணிய காவல் மன்னன்
உள்ளகம் புழுங்கி-மாதோ உரைத்தனன் மன்னர்க்கு எல்லாம்

#742
வட திசை குன்றம் அன்ன வான் குலம் மாசு செய்தீர்
விடு கதிர் பருதி முன்னர் மின்மினி விளக்கம் ஒத்தீர்
வடு உரை என்று மாயும் வாள் அமர் அஞ்சினீரேல்
முடி துறந்து அளியிர் போகி முனிவனம் புகும்-மின் என்றான்

#743
மல்லு பூத்து அகன்ற மார்பீர் புகழ் எனும் போர்வை போர்த்து
செல்வ பூமகளும் நாளை அவன் உழை செல்லும் என்றான்
முல்லை பூம் பந்து தன்னை மும்மத களிற்று வேலி
கொல்லை பூம் குன்றம் செய்தீர் குங்கும குழங்கல் மாலை

#744
திருமகள் இவளை சேர்ந்தான் தெண் திரை ஆடை வேலி
இரு நில மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவன் ஆகும்
செரு நிலத்து இவனை வென்றீர் திருவினுக்கு உரியீர் என்றான்
கரு மனம் நச்சு வெம் சொல் கட்டியங்காரன் அன்றே

#745
அனிச்ச பூம் கோதை சூட்டின் அம்மனையோ என்று அஞ்சி
பனிக்கும் நுண் நுசுப்பின் பாவை ஒருத்தி நாம் பலர் என்று எண்ணி
துனித்து நீர் துளங்கல் வேண்டாம் தூ மணி சிவிறி நீர் தூய்
தனி கயத்து உழக்கி வென்றீர் தையலை சார்-மின் என்றான்

#746
வெம் திறலாளன் கூற வேகமோடு உரறி மன்னர்
பந்து அணி விரலினாள் தன் படா முலை போகம் வேண்டி
கந்து என திரண்ட திண் தோள் கந்துகன் சிறுவன் காயும்
ஐம் தலை அரவின் சீற்றத்து ஆர் அழல் குளிக்கலுற்றார்

#747
பண்ணியல் யானை மேலான் பதுமுகன் பரவை தானை
கண்ணியது உணர்ந்து கல்லா கட்டியங்காரன் நெஞ்சில்
எண்ணியது எண்ணி மன்னர் இகல் மலைந்து எழுந்த போழ்தில்
தண்ணிய சிறிய வெய்ய தழல் சொலால் சாற்றுகின்றான்

#748
இசையினில் இவட்கு தோற்றாம் யானையால் வேறும் என்னின்
இசைவது ஒன்று அன்று கண்டீர் இதனை யான் இரந்து சொன்னேன்
வசை உடைத்து அரசர்க்கு எல்லாம் வழிமுறை வந்தவாறே
திசை முகம் படர்க வல்லே தீ தொட்டால் சுடுவது அன்றே

#749
தோளினால் மிடைந்து புல்லும் தொண்டை வாய் அமிர்தம் வேட்டோர்
வாளினால் மலைந்து கொள்ளின் வாழ்க நும் கலையும்-மாதோ
கோள் உலாம் சிங்கம் அன்னான் கொடியினை எய்தப்பெற்றீர்
தாளினால் நொய்யீராகி தரணி-தாம் விடும்-மின் என்றான்

#750
நாறும் மும்மதத்தினாலே நாகத்தை இரிக்கும் நாகம்
ஆறிய சினத்தது அன்றி அதிங்கத்தின் கவளம் கொண்டால்
வேறு நீர் நினைந்து காணீர் யாவர்க்கும் விடுக்கல் ஆகாது
ஊறி தேன் ஒழுகும் கோதை நம்பிக்கும் அன்னள் என்றான்

#751
இள வள நாகு புல்லி இனத்து-இடை ஏறு நின்றால்
உள வளம் கருதி ஊக்கல் உழப்பு எருது உடையது ஆமே
தள வள முகை கொள் பல்லாள் சீவகன் தழுவி நின்றால்
கொள உளைந்து எழுவது அல்லால் கூடுதல் நுங்கட்கு ஆமோ

#752
எழுந்து விண் படரும் சிங்கம் பெட்டை மேல் இவர்ந்து நின்றால்
மழுங்க மேல் சென்று பாய்தல் மற புலி-தனக்கும் ஆமோ
கொழும் கயல் கண்ணினாளை சீவககுமரன் சூழ்ந்தால்
அழுங்க சென்று அணைதல் பேய்காள் அநங்கற்கும் ஆவது உண்டோ

#753
மத்திரிப்பு உடைய நாகம் வாய் நிறை கடாத்தது ஆகி
உத்தம பிடி-கண் நின்றால் உடற்றுதல் களபக்கு ஆமே
பத்தினி பாவை நம்பி சீவகன்-பாலள் ஆனால்
அத்திறம் கருதி ஊக்கல் அரசிர்காள் நுங்கட்கு ஆமோ

#754
தூமத்தால் கெழீஇய கோதை தோள் துணை பிரித்தல் விண் மேல்
தாமத்தால் கெழீஇய மார்பன் இந்திரன் தனக்கும் ஆகாது
ஏம் உற்றீர் இன்னும் கேண்ம்-மின் இரதியை புணர்தும் என்று
காமத்தால் கெழுமினார்க்கு காமனில் பிரிக்கல் ஆமே

#755
எம்மை நீர் வெல்ல பெற்றீர் வென்ற பின் இருந்த வேந்தன்
நும்மையும் வேறு செய்து நும்முளே பொருது வீந்தால்
வெம்மை செய்து உலகம் எல்லாம் ஆண்டிட விளைக்கும் நீதி
அம்ம மற்று அதனை ஓரீர் அவன் கருத்து அன்னது என்றான்

#756
சொல் திறல் அன்றி மன்னீர் தொக்கு நீர் காண்ம்-மின் எங்கள்
வில் திறல் என்று வில் வாய் வெம் கணை தொடுத்து வாங்கி
கல் திரள் கழிந்து மண்ணுள் கரந்து அது குளிப்ப எய்திட்டு
இற்று எமர் கல்வி என்றான் இடி உருமேற்றொடு ஒப்பான்

#757
ஆழி அம் கழனி தன்னுள் அம்பொடு கணையம் வித்தி
சூழ் குடர் பிணங்கள் மல்க விளைத்த பின் தொழுதி பல் பேய்க்கு
ஊழ்படு குருதி நெய்யின் இறைச்சி சோறு ஊட்டி வென்றி
வீழ்தர வேட்டு நின்றார் எய்துப வெகுளல் வேண்டா

#758
போர் பறை முழங்கி எங்கும் பொரு வளி புடைக்கப்பட்ட
கார் கடல் போன்று சேனை கலக்கமோடு உரறி ஆர்ப்ப
தார் பொலி மார்பன் ஓர்த்து தன் கையில் வீணை நீக்கி
வார் பொலி முலையினாட்கு வாய் திறந்து இதனை சொன்னான்

#759
தேய்ந்து நுண் இடை நைந்து உக செப்பினை
காய்ந்த வெம் முலையாய் நின கண்கள் போல்
ஆய்ந்த அம்பினுக்கு ஆர் இரை ஆகிய
வேந்தர் வேண்டி நின்றார் விம்மல் நீ என்றான்

#760
அண்ணல் கூறலும் அம்மனையோ எனா
துண்ணென் நெஞ்சினளாய் துடித்து ஆய்_இழை
கண்ணின் நீர் முலை பாய கலங்கினாள்
வண்ண மா கவின் சொல்லொடு மாய்ந்ததே

#761
மேவி நம்பிக்கு வெம் பகை ஆக்கிய
பாவியேன் உயிர் பாழ் உடல் பற்று விட்டு
ஆவியோ நடவாய் என்று அழுது தன்
காவி வாள் கண் கலங்க அதுக்கினாள்

#762
பாழி நம் படை மேல் அது இ பார் எலாம்
நூழிலாட்டி நுடக்கி குடித்திடும்
வாழி நங்கை கண்டாய் என்று வாள் கண் நீர்
தோழி தூ துகில் தோகையின் நீக்கினாள்

#763
எங்கள் பெண்மையும் ஈர் மலர் தார் மன்னர்
தங்கள் ஆண்மையும் சால்வது காண்டும் என்று
இங்கு வார் முரலும் கலை ஏந்து அல்குல்
நங்கை வாள் படை நங்கையை சூழ்ந்ததே

#764
கூன்களும் குறளும் அஞ்சி குடர் வெந்து கொழும் பொன் பேழை
தான் கொள பாய ஓடி சாந்து கோய் புகிய செல்வ
தேன் கொள் பூ மாலை சூடி தாமம் ஆய் திரண்டு நிற்ப
வான் பளிங்கு உருவ தூணே மறைபவும் ஆய அன்றே

#765
இங்கித நிலைமை நோக்கி முறுவலித்து எரி பொன் மார்பன்
நங்கையை காக்கும் வண்ணம் நகா நின்று மொழிந்து பேழ் வாய்
சிங்கம் தான் கடியது ஆங்கு ஓர் செழும் சிங்க முழக்கின் சீறி
பொங்கி மேல் செல்வதே போல் பொலம் கழல் நரல சென்றான்

#766
பதுமுக குமரன் மற்று இ பாவையை காவல் ஓம்பி
மது முக மாலை நெற்றி மத களிறு உந்தி நிற்ப
நுதி முக வாளும் வில்லும் நுண் இலை வேலும் ஏந்தி
சதுமுகம் ஆக சேனை நமர் தலை பெய்க என்றான்

#767
வட்டு உடை மருங்குல் சேர்த்தி வாள் இரு புடையும் வீக்கி
தட்டு உடை பொலிந்த திண் தேர் தனஞ்செயன் போல ஏறி
கட்டளை புரவி சூழ்ந்து கால் புடை காப்ப ஏவி
அட்டு உயிர் பருகும் கூற்றம் கோள் எழுந்த அனையது ஒத்தான்

#768
புள் இரைப்பு அன்ன பொன் தார் புரவி தேர் இரவி போலா
உள் உறுத்து எழுந்து பொங்கி உடல் சினம் கடவ நோக்கி
முள் எயிறு இலங்க நக்கு முடி குழாம் மன்னர் கேட்ப
கள் அவிழ் அலங்கல் மார்பன் கார் மழை முழக்கின் சொன்னான்

#769
முருகு உலா முல்லை மாலை மூப்பு இலா முலையினார் நும்
அருகு உலாம் புலவி நோக்கத்து அமிர்தம் இன்று உகுப்ப-கொல்லோ
கருதலாம் படியது அன்றி கலதி அம்பு இவையும் காய்ந்த
பொருது உலாம் புகழை வேட்டு இ எஃகமும் புகைந்த என்றான்

#770
வாணிகம் ஒன்றும் தேற்றாய் முதலொடும் கேடு வந்தால்
ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் நெஞ்சத்து
ஏண் இகந்து இலேசு நோக்கி இரு முதல் கெடாமை கொள்வார்
சேண் இகந்து உய்ய போ நின் செறி_தொடி ஒழிய என்றார்

#771
தம்முடை பண்டம்-தன்னை கொடுத்து அவர் உடைமை கோடல்
எம்முடையவர்கள் வாழ்க்கை எமக்கும் அஃது ஒக்கும் அன்றே
அம் முடி அரசிர்க்கு எல்லாம் என் கையில் அம்பு தந்து
நும்முடை திருவும் தேசும் நோக்கு-மின் கொள்வல் என்றான்

#772
மட்டு உலாம் தாரினாய் நின் வனப்பினோடு இளமை கல்வி
கெட்டு உலாய் சிலம்பு செம்பொன் கிண்கிணி மகளிர் கோங்க
மொட்டு உலாய் முலைகள் பாய்ந்த அகலத்து சரங்கள் மூழ்க
பட்டு உலாய் கிடக்கல் உற்றாய் என் சொலாய் பாவி என்றார்

#773
எரி சுடர் பருதி முன்னர் இருள் என உடைந்து நீங்க
பொரு படை மன்னர் நுங்கள் புற கொடை கண்டு மற்று இ
முருகு உடை குழலினாள் தன் முகிழ் முலை கலப்பல் அன்றேல்
இரு_சுடர் வழங்கும் வையத்து என் பெயர் கெடுக என்றான்

#774
ஆள் மர வாள் நிலத்து அப்பு வேல் செய்முள்
காண் வரு காட்டு இன களிற்று நீள் வரை
நீள் நில வேந்து எனும் வேழ பேரினம்
பூண் முலை பிடிக்கு அவாய் போர் செய்குற்றவே

#775
தாழ் இரும் தட கையும் மருப்பும் தம்பியர்
தோழர் தன் தாள்களா சொரியும் மும்மதம்
ஆழ் கடல் சுற்றமா அழன்று சீவக
ஏழ் உயர் போதகம் இனத்தொடு ஏற்றதே

#776
குடை உடை வேந்து எனும் குழாம் கொள் நாகமும்
கொடி எனும் பிடி உடை குமர வேழமும்
வெடிபடு போர் தொழில் காண விஞ்சையர்
இடி உடை இன மழை நெற்றி ஏறினார்

#777
கரை பொரு கடலொடு கார் கண்ணுற்று என
முரைசொடு வரி வளை முழங்கி ஆர்த்தன
அரைசரும் அமர் மலைந்து அரணம் வீசினார்
குரை கடல் தானை போர் கோலம் செய்தவே

#778
தெய்வதம் வணங்குபு செம்பொன் வாயுள் இட்டு
எய் கணை படு மழை சிதறி எங்கணும்
மொய் அமர் மலைந்தனர் முருகு விம்மு தார்
செய் கழல் சீவகன் வாழ்க என்னவே

#779
கலந்தது பெரும் படை கணை பெய் மாரி தூய்
இலங்கின வாள் குழாம் இவுளி ஏற்றன
விலங்கின தேர் தொகை வேழம் காய்ந்தன
சிலம்பின இய மரம் தெழித்த சங்கமே

#780
சுற்று அணி கொடும் சிலை மேகம் தூவிய
முற்று அணி பிறை எயிற்று அம்பு மூழ்கலின்
அற்று வீழ் குழை முகம் அலர்ந்த தாமரை
மற்று அவை சொரிவது ஓர் மாரி ஒத்தவே

#781
மற படை பசித்தன வயிறு இன்று ஆர்க என
குறைத்தனர் குஞ்சரம் கூந்தல் மா துணித்து
இறக்கினரோடு தேர் மைந்தர் இன் உயிர்
துறக்கம் போய் புகுக என துணிய நூறினார்

#782
ஆற்றுவீர் வம்-மின் எம்மோடு ஆண்மை மேம்படீஇய என்பார்
ஏற்றவர் மார்பத்து அல்லால் இரும்பு மேல் விடாது நிற்பார்
கூற்றம் போல் கொடிய யானை கோடு உழுது அகன்ற மார்பம்
கீற்று பட்டு அழகிதாக கிடக்க என கொடுத்து நிற்பார்

#783
கழித்து வாள் அமலை ஆடி காட்டுவார் கண்கள் செம் தீ
விழித்து மேல் சென்ற வேழம் வேலினால் விலக்கி நிற்பார்
தெழித்து தேர் கயிறு வாளால் அரிந்திட்டு புரவி போக்கி
பழிப்பு இல கொணர்ந்து பூட்டு பாக நீ என்று நிற்பார்

#784
ஐம் கதி கலின பாய் மா சிறிது போர் களை ஈது என்பார்
வெம் கதிர் வேலில் சுட்டி வேந்து எதிர்கொண்டு நிற்பார்
நங்கை கல்யாணம் நன்றே நமக்கு என நக்கு நிற்பார்
சிங்கமும் புலியும் போன்றார் சீவகன் தோழன்மாரே

#785
ஒருங்கு அவன் பிறந்த ஞான்றே பிறந்தவர் உதயத்து உச்சி
இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவு தோளார்
விரும்புவார் வேழ வேல் போர் நூற்றுவர் நூறு கோடிக்கு
இருந்தனம் வருக என்பார் இன்னணம் ஆயினாரே

#786
கூட்டுற முறுக்கி விட்ட குய மகன் திகிரி போல
வாள் திறல் தேவ தத்தன் கலின மா மாலை வெள் வேல்
ஈட்டம் போழ்ந்து யானை நெற்றி இரும் குளம்பு அழுத்தி மன்னர்
சூட்டொடு கண்ணி சூளாமணி சிந்தி திரியும் அன்றே

#787
பாய்ந்தது கலின மாவோ பறவையோ என்ன உட்கி
வேந்தர்-தம் வயிறு வேவ நபுல மா விபுலர் என்பார்
காய்ந்து தம் புரவி காமர் குளம்பினால் களிற்றின் ஓடை
தேய்ந்து உக சேர்த்தி மாலை திருமுடி திலகம் கொண்டார்

#788
காயத்தின் குழம்பு தீற்றி கார் இரும்பு எறிய மேகம்
தோயும் முள் இலவின் கூன் காய் சினை-தொறும் உதிர்வவே போல்
மாயம்-கொல் மறவர் மாலை பைம் தலை உதிர்ந்த செம் கண்
சேய் அனான் திருவின் பேரான் செழும் சிலை பகழியாலே

#789
நீல் நிற பௌவம் மேய்ந்து சூல் முற்றி நீல மேகம்
வால் நிற விசும்பின் நின்ற மாரியின் மறை_வலாளன்
போன் நிற புத்தி சேனன் பொன் அணி பகழி சிந்தி
வேல் நிற மன்னர் சேனை கூற்றிற்கு விருந்து செய்தான்

#790
வீர வேல் உடம்பு எலாம் சூழ வெம் புலால்
சோரும் செம் குருதியுள் மைந்தர் தோன்றுவார்
ஒருமேல் ஒண் மணி சூட்டு வைக்கிய
ஆரமே அமைந்த தேர் குழிசி ஆயினார்

#791
பொன் அனாள் புணர் முலை போகம் வேண்டிய
மன்னரோடு இளையவர் மறலி வாள் அமர்
இன்னணம் இத்தலை மயங்க அத்தலை
கொல் நவில் வேலினான் நிலைமை கூறுவாம்

#792
தம்பியை சீவகன் நோக்கி சாமரை
வெம் பரி மான் செவி வீர மந்திரம்
இம்பர் நம் இடர் கெட இரண்டும் வல்லையாய்
நம்பி நீ மொழிக என நயந்து கூறினான்

#793
மந்திரம் கேட்டு நான்கும் வான் எட்டி புகுவவே போல்
அந்தரத்து இவர்ந்த ஆழி கால் நிலம் விட்ட மாலை
சுந்தர சுண்ண மேனி மகளிர்-தம் கண்ணுள் இட்ட
மைந்தரும் இரும்பும் ஒவ்வா வான் புலம் காவல் கொண்டார்

#794
வடி கயிறு ஆய்ந்து முள் கோல் வல கையால் தாங்கி வென்றி
முடிகென புரவி முள்ளால் உறுத்தினான் மொழிதல் தேற்றேன்
கடுகிய வண்ணம் மாவின் தார் ஒலி காமர் பொன் தேர்
படையது செவியும் கண்ணும் பற்றி நின்றிட்ட அன்றே

#795
அண்ணல் தேர் பறவை என்பார் அருவமே உருவம் என்பார்
மண்ணதே வான் அது என்பார் மனத்ததே முகத்தது என்பார்
கண்ணதே செவி அது என்பார் கலங்க நூல் கழிய நோக்கி
பண்ணிய வீதி பற்றி மண்டலம் பயிற்றினானே

#796
அகில் கொண்ட கொள்ளி வட்டம் ஆருயிர் மேயும் நேமி
முகில் கொண்ட மின்னு தோற்ப முறுகிய விசையிற்று ஆகி
மிகல் கொண்ட இகலை தானே விழுங்கிய சிறகர் தோற்றி
பகல் கொண்டு பறக்கும் தேரால் காளை-தன் பைம்பொன் தேரே

#797
கால் அற்ற வயிர மாலை வெண்குடை கவிழ்ந்த பிச்சம்
மேல் அற்ற கவசம் வீழ்ந்த சாமரை அற்ற வில் ஞாண்
மால் உற்ற மன்னர் தங்கள் மனம் கையற்று ஒழிந்த வள்ளல்
கோல் ஒற்ற குனிந்தவாறே சிலை குனிந்து ஒழிந்தது அன்றே

#798
நுங்களை வீணை வென்ற நூபுர அடியினாள் தன்
வெம் களி தடம் கண் கண்டீர் விருந்து எதிர்கொள்-மின் என்னா
அம் களி அரசர்க்கு எல்லாம் ஓர் ஒன்றும் இரண்டும் ஆக
செம் களி பகழி ஒப்பித்து உள்ளவாறு ஊட்டினானே

#799
நன் மன வேந்தர்-தங்கள் நகை மணி மார்பம் நக்கி
புன் மன வேந்தர்-தங்கள் பொன் அணி கவசம் கீறி
இன் உயிர் கவர்ந்து தீமை இனி கொள்ளும் உடம்பினாலும்
துன்னன்-மின் என்பவே போல் சுடு சரம் பரந்த அன்றே

#800
மீன் எறி தூண்டில் போன்ற வெம் சிலை நாண்கள் அற்ற
தேன் எறி குன்றம் ஒத்த திண் கச்சை துணிந்த வேழம்
மான் நெறி காட்டும் திண் தேர் கயிறு அற்று மறிய வேந்தர்
ஊன் எறி ஆழி ஏந்தி ஒய்யென உலம்பி ஆர்த்தார்

#801
ஆர்ப்பு எதிர்மாரி பெய்யும் அணி நெடும் குன்றம் போல
போர்க்கு எதிர்ந்தவரும் ஆர்த்தார் ஆர்த்தலும் பூண்ட வல் வில்
கார்க்கு எதிர் மேகம் போல கணை மழை கான்றது இப்பால்
ஈர்த்தது குருதி வெள்ளம் இறைச்சி குன்று ஆக்கினானே

#802
மன்னர்கள் வெகுண்டு விட்ட மற படை அழுவ மாரி
கொல் நுனை எஃகின் நீக்கி குனிந்து வில் பகழி கான்ற
மின் அவிர் இலங்கும் ஒள் வாள் விழித்து உயிர் விழுங்க இன்ன
தன்மையால் தானை நீந்தி தான் விளையாடுகின்றான்

#803
வேழ வெண்கோட்டு மெல் கோல் தின்று கூன் குருதி வாளால்
ஆழ நா வழித்து நெய்த்தோர் கொப்புளித்து அழிந்த மாவின்
சூழ் குடர் கண்ணி சூடி நிண துகில் உடுத்து வெள் என்பு
ஊழ் பெற அணிந்து சூல் பேய் ஆட கண்டு உவந்து நக்கான்

#804
வெளிற்று உடல் குருதி வெள்ள நிலை இது என்பவே போல்
களிற்று உகிர் பிறழ் பல் பேய்கள் கைகளை உச்சி கூப்பி
அளித்தவை பாடி ஆட குறுநரி நக்கு வேழம்
விளித்தன கழுகும் பாறும் விலா இற்றுக்கிடந்த அன்றே

#805
கடல் விளை அமுதம் கண்ட பொழுதின் நெய் கனிந்த தீம் சோற்று
அடிசில் அம் சுவை மிக்கு ஆங்கு அண்ணல் அம் குமரன் ஒன்னார்
உடலின் மேல் திரியும் திண் தேர் காண்டலும் மைந்தர் நெஞ்ச
திடல் பிளந்து இட்ட எஃகம் சுமந்து அமர் திறத்தின் மிக்கார்

#806
கடாம் திறந்திட்டு வானின் களகள முழங்கும் வேழம்
படாம் திறந்து ஊழி தீயின் பதுமுகன் காட்டியிட்டான்
தடாம் பிறை மருப்பு திண் கை அபரகாத்திரங்கள்-தம்மால்
கொடாம் பிற குமரி போருள் பிறர்க்கு என கொன்றது அன்றே

#807
மருப்பினால் வேழம் வீழா மன்னரை வாலில் சீறா
முருக்கி தேர் தட கை-தன்னால் முழங்கி பாய் மாக்கள் காலின்
நெரித்திடா கண்ணுள் தீயால் சுட்டு நீறு ஆக்கி நெய்த்தோர்
ஒருக்கி பேய் பாடி ஆட உறு சிலை உடன்று கொண்டான்

#808
கொண்டான் பகழி தொடுத்தான் சிலை கால் குனிந்தது
ஒண் தேர் மிசையும் உருவ களிற்று உச்சி மேலும்
வண் தார் புரவி நிறுத்தும் மற மன்னர் மேலும்
கண்டான் சொரிந்தான் கணை மாரி கலந்தது அன்றே

#809
பைம்பொன் புளக பரும களி யானை ஈட்டம்
செம்பொன் நெடும் தேர் தொகை மா கடல் சேனை வெள்ளம்
நம்பன் சிலை வாய் நடக்கும் கணை மிச்சில் அல்லால்
அம் பொன் மணி பூண் அரசும் இலை என்று நக்கான்

#810
ஒருவனே சிலையும் ஒன்றே உடையது ஓர் களிற்றின் மேலான்
அரு வரை மார்பில் சென்றது அறிந்திலன் எஃகம் இன்னும்
பொருவரோ மன்னர் என்றான் பொரு சிலை மடக்கி இட்டார்
வரு களி யானை மீட்டார் வாள் படை வாங்கி கொண்டார்

#811
செம் கண் மால் தெழிக்க பட்ட வலம்புரி துருவம் கொண்ட
சங்கு வாய் வைத்து நம்பன் தெழித்தலும் தறுகண் ஆளி
பொங்கிய முழக்கில் வேழ பேரினம் புலம்பினால் போல்
தங்கு தார் மன்னர் எல்லாம் தளர்ந்து கண் சாம்பினாரே

#812
அரு வரை நாகம் சுற்றி ஆழியான் கடைய அன்று
கருவரை குடையப்பட்ட கடல் என கலங்கி வேந்தர்
திருவரை மார்பன் திண் தேர் மஞ்ஞையே முருகன்தான் என்று
ஒருவரோடு ஒருவர் கூடா வண்ணமே உடையல் உற்றார்

#813
முளி மர காடு மேய்ந்த முழங்கு அழல் போன்று மைந்தன்
தெளி நல குமரர் கூற்றின் தெழித்தனர் பகழி சிந்தி
ஒளி நலம் உப்பு குன்றம் ஊர் புனற்கு உடைந்ததே போல்
களி நல மன்னர் தங்கள் கடல் படை உடைந்தது அன்றே

#814
உறு படை மன்னர் தம்மை உடற்றி ஒன்றானும் இன்றி
சிறு படையவர்கள் வென்று செகுப்பவோ என்ன வேண்டா
செறி எயிற்று ஆளி வேழ பேரினம் செகுத்தது அன்றே
உறு புலி ஒன்றுதானே கலை இனம் உடற்றிற்று அன்றே

#815
நல்லவை புரியும் மாந்தர் நாந்தகம் பிழைத்து வீழா
அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்திரம் ஒன்றும் வாயா
வெல்வதோ குணத்தின் மிக்கார் வெற்றிலை விடினும் வேலாம்
இல்லையே வென்றி தீமை இடம் கொண்ட மனத்தினார்க்கே

#816
குழை உடை முகத்தினாள்-கண் கோணை போர் செய்த மன்னர்
மழை-இடை மின்னின் நொய்தா மறைந்தனர் விஞ்சை வேந்தர்
முழை உடை சிங்கம் அன்னான் மொய் அமர் ஏத்தி ஆர்த்தார்
விழவு உடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்தது அன்றே

#817
பார் மிசை உலகம் ஏத்தும் படுகளம் கண்டு பற்றார்
போர்முக களிற்று வெண்கோடு உழுத செம் சால் கொள் மார்பின்
சீர் முக தோழர் சூழ சீவகன் திருவின் சாயல்
வார் முக முலையினாளை மனை-வயின் கொண்டு புக்கான்

#818
நெய் கிழி வைக்கப்பட்டார் நெய் பத்தல் கிடத்தப்பட்டார்
புக்குழி எஃகம் நாடி இரும்பினால் போழப்பட்டார்
மைக்கு இழிந்து ஒழுகும் கண்ணீர் மா நிலத்து உகுக்கப்பட்டார்
கை கிழி கொடுக்கப்பட்டார் கலம் பல நல்கப்பட்டார்

#819
முது மர பொந்து போல முழு மெயும் புண்கள் உற்றார்க்கு
இது மருந்து என்ன நல்லார் இழுது சேர் கவளம் வைத்து
பதுமுகன் பரவை மார்பின் நெய் கிழி பயில சேர்த்தி
நுதி மயிர் துகில் குப்பாயம் புகுக என நூக்கினானே

#820
பார் கெழு பைம்பொன் தன்னால் பண்ணவன் உருவம் ஆக்கி
ஊர் கெழு விழவு செய்து ஆங்கு உறு பொருள் உவப்ப நல்கி
தார் கெழு மின்னு வீசி தனி வடம் திளைக்கும் மார்பன்
போர் கெழு களத்து பாவம் புலம்பொடு போக்கினானே

#821
செய்த அ பாவம் எல்லாம் தீர்த்திடும் தீர்த்தன் பாதம்
எய்திய சேடம் கூவித்து இறைஞ்சுபு தொழுது வாழ்த்தி
மை அறு மணியின் செய்த வலம்புரி அதன் நீர் கொண்டான்
வையகம் அளிக்க நீண்ட வலம்புரி தடக்கையானே

#822
கரு மணி அழுத்திய காமர் செம் கதிர்
திரு மணி செப்பு என செறிந்த வெம் முலை
அரு மணி அலம் வரும் அம் பொன் கொம்பு அனாள்
பெரு மண கிழமை யாம் பேசுகின்றதே

#823
நான்கு நூறு_ஆயிரம் குடத்து நல்லன
ஆன் தயிர் பால் நெயொடு அழகிதா நிறைத்து
ஊன் திகழ் வேலினான் வேள்விக்கு ஊர் மருள்
கோன் தொறு காவலன் கொண்டு முன்னினான்

#824
வளை நிற வார் செம் நெல் அரிசி பண்டியோடு
அளவு அறு சருக்கரை பண்டி ஆர்ந்தன
பிளவு இயல் பயறு பெய் பண்டி உப்பு நீர்
விளைவு அமை பண்டியின் வெறுத்தது ஆங்கு ஓர் பால்

#825
சினை துணர் முழவு அன பலவின் தீம் கனி
கனைத்து வண்டு உழல்வன வாழை மாங்கனி
எனைத்து உள கிழங்கு காய் குருகொடு ஏந்திய
சனத்தினால் தகைத்து இடம் பெறாது தான் ஓர் பால்

#826
மரகத மணி பசும் காய் கொள்வான் குலை
கவர் பழு காய் குலை கனிய கா உறீஇ
இவர் தரு மெல் இலை காவும் ஏந்திய
உவரியாய் சொரிந்து இடம் பெறாது தான் ஓர் பால்

#827
சண்பகம் தமநகம் தமாலம் மல்லிகை
தண் கழுநீரொடு குவளை தாமரை
வண்டு இனம் மிசை கொள வாச பூ சுமை
கொண்டவர் குழாம் பொலிவுற்றது ஆங்கு ஓர் பால்

#828
ஆர் கெழு குறடு சூட்டு ஆழி போன்றவன்
சீர் கெழு வள மனை திளைத்து மாசனம்
கார் கெழு கடல் என கலந்த அல்லதூஉம்
பார் கெழு பழு மர பறவை ஒத்தவே

#829
கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து
ஐ என இருப்ப மற்று அன்னது ஆதலான்
வையக மருங்கினில் வாழ்நர் மற்று இவன்
செய் தவம் நமக்கு இசைக என்ன சென்றதே

#830
வால் அரி கழுவிய வண்ண செம் புனல்
கால் இயல் இவுளியும் களிறும் ஆழ்ந்து அவண்
கோல நீர் குவளையும் மரையும் பூத்து வண்டு
ஆலி இவண் குருகு பாய் தடங்கள் ஆனவே

#831
உடுப்பன துகில்களும் உரைக்கும் நானமும்
தொடுத்தன மாலையும் குழையும் சாந்தமும்
கொடுப்பவர் கொள்பவர் வீழ்த்த பல் கலம்
அடுத்து விண் பூத்தது ஓர் அழகின் மிக்கதே

#832
இலங்கு பொன் கிண்கிணி இரங்கும் ஓசையும்
உலம்பு மால் உவர் கடல் ஒலியின் மிக்கவே
கலம் கழும் அரவமும் கருனை ஆக்குவார்
சிலம்பு ஒலி அரவமும் மிச்சில் சீப்பவர்

#833
மூழி வாய் முல்லை மாலை முருகு உலாம் குழலினாளும்
ஊழி வாய் தீயொடு ஒக்கும் ஒளிறு வாள் தடக்கையானும்
ஆழி வாய் விரலில் காமன் அம்பொடு சிலை கை ஏந்த
தாழி வாய் குவளை வாள் கண் தையலார் பரவ சார்ந்தார்

#834
இன்னியம் முழங்கி ஆர்ப்ப ஈண்டு எரி திகழ வேதம்
துன்னினர் பலாசில் செய்த துடுப்பின் நெய் சொரிந்து வேட்ப
மின் இயல் கலசம் நல் நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்து எழ முருகன் அன்னான்

#835
இட்ட உத்தரியம் மின்னும் எரி மணி பரு முத்து ஆரம்
மட்டு அவிழ் கோதை வெய்ய வரு முலை தாங்கல் ஆற்றா
நெட்டு இரும் கூந்தலாள் தன் நேர் வளை முன்கை பற்றி
கட்டு அழல் வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே

#836
மந்திரத்து அரசன் காதல் மாதர் அம் பாவை-தன்னை
கந்துகன் சிறுவன் வேட்ட கடிவினை நொடியின் மற்று ஓர்
அந்தர விசும்பில் தேவர்க்கு அதிபதி ஆய கோமான்
இந்திரன் தனக்கும் ஆகாது என்பது நடந்தது அன்றே

#837
அடி மனை பவளம் ஆக அரும் பொன்னால் அலகு சேர்த்தி
முடி மணி அழுத்தி செய்த மூரி காழ் நெற்றி மூழ்க
கடி மலர் மாலை நாற்றி கம்பல விதானம் கோலி
இடு புகை மஞ்சில் சூழ மணவறை இயற்றினாரே

#838
ஐந்து மூன்று அடுத்த செல்வத்து அமளி மூன்று இயற்றி பூம் பட்டு
எந்திர எழினி வாங்கி இன் முக வாச செப்பும்
சந்தன சாந்த செப்பும் தண் மலர் மாலை பெய்த
இந்திர நீல செப்பும் இளையவர் ஏந்தினாரே

#839
கடைந்து பெய் மணி கை செம்பொன் காசு அறு தட்டின் சூழ்ந்து
மிடைந்து பெய் மணி கண் பீலி மின்னு சாந்து ஆற்றி பொன்னார்
அடைந்து வீசு ஆல வட்டம் அரிவையர் ஏந்தி ஆற்ற
தடம் கண்கள் குவளை பூப்ப தையலோடு ஆடும் அன்றே

#840
பஞ்சு சூழ் பரவை அல்குல் பசும் கதிர் கலாபம் வீங்க
செம் தளிர் கோதை சோர கிண்கிணி சிலம்பொடு ஏங்க
மைந்தருள் காமன் அன்னான் மகளிருள் திரு அனாளை
அந்தரத்து அமரர் பெற்ற அமிர்து என பருகினானே

#841
இள முலை மணி கண் சேப்ப எழுது வில் புருவம் ஏற
கிளை நரம்பு அனைய தீம் சொல் பவள வாய் திகழ தேன் சோர்
வள மலர் கோதை தன்னை வாய்விடான் குழைய புல்லி
அளமரல் இலாத இன்ப கடல் அகத்து அழுந்தினானே

#842
இன்னணம் ஒழுகு நாளுள் இளமரக்காவு காண்பான்
பொன் அணி மார்பன் சென்று புகுதலும் ஒருவன் தோன்றி
துன்னி ஓர் ஓலை நீட்டி தொழுதனன் பெயர்ந்து நிற்ப
மன்னிய குருசில் கொண்டு மரபினான் நோக்குகின்றான்

#843
உருமு கதிர் வேல் கலுழன் ஓலை உலகு என்னும்
பருமை குரு பளிங்கில் புகழ் பஞ்சி முழுது அடுத்த
திரு மிக்கு உடை செல்வன் திறல் சாமி நனி காண்க
அருமை அறன் இன்பம் பொருள் ஆக என விடுத்தேன்

#844
தத்தையொடு வீணை மனர் தாம் பொருது தோற்ப
மொய்த்த கலை நம்பி முகிழ் முலையை இசை வெல்ல
வைத்த கதிர் வேலின் வலியார்க்கு உரியள் என்ன
சித்தம் கரிந்து ஆங்கு கொடியான் செரு விளைத்தான்

#845
தேன் முழங்கு தார் குரிசில் செம்பொன் நெடும் தேர் மேல்
வான் முழங்கு வெம் சிலையின் வாளி மழை தூவி
ஊன் முழங்கு வெம் குருதி வேழமுடன் மூழ்க
வேல் முழங்கு தானை விளையாடியதும் கேட்டேன்

#846
வந்து தரன் கூறிய இ வாய் மொழியும் அன்றி
முந்து வரன் மொழிந்த பொருள் முற்றும் வகை நாடி
பந்து புடை பாணி என பாயும் கலி மான் தேர்
எந்தை திறம் முன்னம் உணர்ந்து இன்னணம் விடுத்தேன்

#847
எள்ளுநர்கள் சாய என தோள் இரண்டு நோக்கி
வெள்ளி மலை முழுதும் கொடி எடுத்தது இகல் ஏத்தி
கள் செய் மலர் மார்பன் உறு காப்பு இகழ்தல் இன்றி
உள்ளு பொருள் எம் உணர்த்தி அன்றி உள வேண்டா

#848
ஆம் பொருள்கள் ஆகும் அது யார்க்கும் அழிக்கொண்ணா
போம் பொருள்கள் போகும் அவை பொறியின் வகை வண்ணம்
தேம் புனலை நீர் கடலும் சென்று தரல் இன்றே
வீங்கு புனல் யாறு மழை வேண்டி அறியாதே

#849
மன் பெரிய மாமன் அடி மகிழ்ந்து திசை வணங்கி
அன்பின் அகலாதவனை விடுத்து அலர்ந்த கோதைக்கு
இன்ப நிலத்து இயன்ற பொருள் இவை இவை நும் கோமான்
தந்த என சொல்லி நனி சாமி கொடுத்தானே

#850
குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா
வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி
கொங்கு உண் மலர் கோதையொடு குருசில் செலும் வழிநாள்
அங்கண் நகர்ப்பட்ட பொருள் ஆகியது மொழிவாம்
@4 குணமாலையார் இலம்பகம்

#851
காசு அறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசு அறு விசும்பின் வெய்யோன் வட திசை அயணம் முன்னி
ஆசு அற நடக்கும் நாளுள் ஐம்_கணை_கிழவன் வைகி
பாசறை பரிவு தீர்க்கும் பங்குனி பருவம் செய்தான்

#852
தோடு அணி மகளிர் போன்ற துணர் மலர் கொம்பர் கொம்பின்
ஆடவர் போல வண்டும் அடைந்தன அளியிற்கு ஒல்கி
ஊடிய மகளிர் போல ஒசிந்தன ஊடல் தீர்க்கும்
சேடரின் சென்று புல்லி சிறுபுறம் தழீஇய தும்பி

#853
நானம் மண்ணிய நல் மண மங்கையர்
மேனி போன்று இனிதாய் விரை நாறிய
கானம் காழ் அகிலே கமழ் கண்ணிய
வேனிலாற்கு விருந்து எதிர்கொண்டதே

#854
கொம்பர் இன் குயில் கூய் குடை வாவியுள்
தும்பி வண்டொடு தூ வழி யாழ் செய
வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து
உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்ததே

#855
நாக நாள்மலர் நாறு கடி நகர்
ஏக இன்பத்து இராசபுரத்தவர்
மாகம் நந்து மணம் கமழ் யாற்று அயல்
போகம் மேவினர் பூ மர காவினே

#856
முழவம் கண் துயிலாத முதுநகர்
விழவு நீர் விளையாட்டு விருப்பினால்
தொழுவில் தோன்றிய தோமறு கேவல
கிழவன் மூதெயில் போல் கிளர்வுற்றதே

#857
வள்ள நீர் அரமங்கையர் அம் கையால்
உள்ளம் கூர திமிர்ந்து உகுத்து இட்ட சாந்து
அள்ளலாய் அடி யானை இழுக்கின
வெள்ள நீர் வளை வெள்ளம் முரன்றவே

#858
நீந்தும் நித்தில ஊர்தி நிழல் மருப்பு
ஏந்து கஞ்சிகை வையம் இள வெயில்
போந்து காய் பொன் சிவிகை நல் போதகம்
கூந்தல் மாலை குமரி பிடி குழாம்

#859
ஏறுவார் ஒலி ஏற்று-மினோ என
கூறுவார் ஒலி தோடு குலைந்து வீழ்ந்து
ஆறின் ஆர்ப்பு ஒலி அம் சிலம்பின் ஒலி
மாறுகொண்டது ஓர் மா கடல் ஒத்தவே

#860
பொன் செய் வேய் தலை பூ மரு மண்டலம்
மின் செய் வெண்குடை பிச்சம் மிடைந்து ஒளி
என் செய்கோ என்று இரிந்தது இழை நிலா
மன் செய் மாண் நகர் வட்டம் விட்டிட்டதே

#861
திருந்து சாமரை வீசுவ தெண் கடல்
முரிந்த மொய் திரை போன்ற அகில் புகை
புரிந்த தாமங்கள் ஆக அ பூம் துகள்
விரிந்து வானின் விதானித்தது ஒத்ததே

#862
சோலை சூழ் வரை தூங்கு அருவி திரள்
மாலை ஊர்திகள் வையம் இவற்று-இடை
சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன
நீல மேகம் நிரைத்தன போன்றவே

#863
வழங்கு வங்க கலிங்க கடகமும்
அழுங்கும் மாந்தர்க்கு அணிகல பேழையும்
தழங்கு வெம் மது தண்டும் தலைத்தலை
குழங்கல் மாலையும் கொண்டு விரைந்தவே

#864
வாச வெண்ணெயும் வண்டு இமிர் சாந்தமும்
பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும்
காசு இல் போக கலப்பையும் கொண்டு அவண்
மாசு இல் மாசனம் வாயில் மடுத்தவே

#865
பாடல் ஓசையும் பண் ஒலி ஓசையும்
ஆடல் ஓசையும் ஆர்ப்பு ஒலி ஓசையும்
ஓடை யானை உரற்று ஒலி ஓசையும்
ஊடு போய் உயர் வான் உலகு உற்றவே

#866
பூக்கள் நீர் விளையாடிய பொன் உலகு
ஓக்கம் நீள் விசும்பு ஊடு அறுத்து ஒய்யென
வீக்க மாநகர் வீழ்ந்தது போன்று அவண்
மாக்கள் மா கடல் வெள்ளம் அடுத்ததே

#867
மின்னு வாள் தடம் கண்ணியர் வெம் முலை
துன்னு வாட்டம் தணித்தலின் தூ நிறத்து
அன்ன வாட்டத்து அணி மலர் பூம் பொழில்
என்ன வாட்டமும் இன்றி சென்று எய்தினார்

#868
அள் உடை குவளை கயம் நீடிய
கள் உடை கழுநீர் புனல் பட்டமும்
புள் உடை கனியின் பொலி சோலையும்
உள் உடை பொலிவிற்று ஒருபால் எல்லாம்

#869
செம் புற கனி வாழையும் தேன் சொரி
கொம்பு உற பழுத்திட்டன கோ அரை
வம்புற கனி மா தொடு வார் சுளை
பைம் புற பலவிற்று ஒருபால் எல்லாம்

#870
கள்ள வானரமும் கன்னி யூகமும்
துள்ளும் மானொடு வேழ தொகுதியும்
வெள்ளை அன்னமும் தோகையும் வேய்ந்து அவண்
உள்ளும் மாந்தரை உள்ளம் புகற்றுமே

#871
கோக்கணம் கொதித்து ஏந்திய வேல் என
நோக்கு அணங்கு அனையார் நுகர்வு எய்தலின்
தாக்கு அணங்கு உறையும் தடம் தாமரை
பூ கணம் பொழில் பட்டது போன்றதே

#872
கூறப்பட்ட அ கொய் மலர் காவகம்
ஊறி தேன் துளித்து ஒண் மது ஆர் மணம்
நாறி நாள்மலர் வெண் மணல் தாய் நிழல்
தேறி தெண் கயம் புக்கது போன்றதே

#873
காவில் கண்ட திரை வளைத்து ஆயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்று தம்
பூவையும் கிளியும் மிழற்ற புகுந்து
ஆவி அம் துகிலார் அமர்ந்தார்களே

#874
பௌவ நீர் பவள கொடி போல்பவள்
மௌவல் அம் குழலாள் சுரமஞ்சரி
கொவ்வை அம் கனி வாய் குணமாலையோடு
எவ்வம் தீர்ந்து இருந்தாள் இது கூறினாள்

#875
தூமம் சூடிய தூ துகில் ஏந்து அல்குல்
தாமம் சூடிய வேல் தடம் கண்ணினாள்
நாமம் சூடிய நல்_நுதல் நீட்டினாள்
காமம் சூடிய கண் ஒளிர் சுண்ணமே

#876
சுண்ணம் என்பது ஓர் பேர் கொடு சோர் குழல்
வண்ண மாலை நுசுப்பு வருத்துவான்
எண்ணி வந்தன கூறு இவையோ என
நண்ணி மாலையை நக்கனள் என்பவே

#877
பைம்பொன் நீள் உலகு அன்றி இ பார் மிசை
இம்பர் என் சுண்ணம் ஏய்ப்ப உள-எனில்
செம்பொன் பாவை அன்னாய் செப்பு நீ என
கொம்பு அனாளும் கொதித்து கூறினாள்

#878
சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம்
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே

#879
மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல்
கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள்
வெல்வது சூது என வேண்டி விடுத்தார்

#880
இட்டிடையார் இரு மங்கையர் ஏந்து பொன்
தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர்
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே

#881
சீர் தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர்
ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர்
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார்

#882
வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில்
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே

#883
காளை சீவகன் கட்டியங்காரனை
தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல்
வாளை வவ்விய கண்ணியர் வார் கழல்
தாளை ஏத்துபு தம் குறை செப்பினார்

#884
சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல்
வண்ண மாலையினீர் என கூறினான்

#885
மற்று இ மாநகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை
பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி
கற்றதும் அவர் தங்களொடே-கொலோ

#886
ஐயனே அறியும் என வந்தனம்
பொய் அது அன்றி புலமை நுணுக்கி நீ
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம்
கையினால் தொழுதார் கமழ் கோதையார்

#887
நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே

#888
வாரம் பட்டுழி தீயவும் நல்ல ஆம்
தீர காய்ந்துழி நல்லவும் தீய ஆம்
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடுங்கண்ணி விளம்பினாள்

#889
உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால்
வள்ளல் நீங்க பெறாய் வளைத்தேன் என
கள் செய் கோதையினாய் கரி போக்கினால்
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான்

#890
கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும்
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை
நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள்

#891
காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி
போவர் பொன் அனையாய் என கைதொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள்

#892
மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது
உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள்

#893
சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மட மயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான்

#894
வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே

#895
தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர்
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான்

#896
நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ
கோலம் ஆக எழுதிய போல் குலாய்
ஞாலம் விற்கும் புருவத்து நங்கை கண்
போலும் வேலவனே புகழ்ந்தேன் என்றாள்

#897
சோலை அம் சுரும்பின் சுண்ணம் தேற்றிய தோன்றல்-தன்னை
வேல் ஐயம் படுத்த கண்ணார் தொழுதனர் விரைந்து போகி
மாலைக்கு வென்றி கூற மழை இடிப்புண்டு ஓர் நாகம்
ஆலையத்து அழுங்கி ஆங்கு மஞ்சரி அவலம் உற்றாள்

#898
திங்கள் அம் கதிர் செற்று உழக்கப்பட்ட
பங்கய படு ஒத்து உளை பாவாய்
நங்கை என்னொடு உரையாய் நனி ஒல்லே
இங்கண் என்று அடி வீழ்ந்து இரந்திட்டாள்

#899
மாற்றம் ஒன்று உரையாள் மழை வள்ளல் என்
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்ற சொல்
தோற்று வந்து என் சிலம்பு அடி கைதொழ
நோற்பல் நோற்றனை நீ என ஏகினாள்

#900
கன்னி மாநகர் கன்னியர் சூழ் தர
கன்னிமாடம் அடைய கடி மலர்
கன்னி நீல கண் கன்னி நற்றாய்க்கு அவள்
கன்னிக்கு உற்றது கன்னியர் கூறினார்

#901
கண்கள் கொண்ட கலப்பின ஆயினும்
பெண்கள் கொண்ட விடா பிற செற்றம் என்று
ஒண் கணாள் அவள் தாய் அவள் தந்தைக்கு
பண் கொள் தே மொழியால் பய கூறினாள்

#902
விண்ணில் திங்கள் விலக்குதல் மேயினார்
எண்ணம் நும் மகள் எண்ணம் மற்று யாது எனில்
கண்ணின் ஆடவர் காணினும் கேட்பினும்
உண்ணலேன் இனி என்று உரையாடினாள்

#903
இன்று நீர் விளையாட்டினுள் ஏந்து_இழை
தொன்று சுண்ணத்தில் தோன்றிய வேறுபாடு
இன்று என் ஆவிக்கு ஓர் கூற்றம் என நையா
நின்று நீல கண் நித்திலம் சிந்தினாள்

#904
பட்டது என் நங்கைக்கு என்ன பாசிழை பசும்பொன் அல்குல்
மட்டு அவிழ் கோதை சுண்ணம் மாலையோடு இகலி தோற்றாள்
கட்டு அவிழ் கண்ணி நம்பி சீவகன் திறத்தில் காய்ந்தாள்
அட்டும் தேன் அலங்கல் மார்ப அது பட்டது அறிமோ என்றாள்

#905
பள்ளி கொள் களிறு போல பரிவு விட்டு உயிர்த்து என் பாவை
உள்ளிய பொருள் மற்று அஃதேல் ஓ பெரிது உவப்ப கேட்டேன்
வள் இதழ் கோதை மற்று நகரொடும் கடியுமேனும்
வெள்ள நீள் நிதியின் இன்னே வேண்டிய விளைப்பல் என்றான்

#906
இன்னது ஓர் காலத்து இன்னான் ஒரு மகள் இன்னது ஒன்றிற்கு
இன்னது ஓர் இடத்தின் எல்லை ஆள் கடிந்து ஒழுகினாள் போல்
இன்னது ஓர் நகரில் என்றாங்கு என் பெயர் நிற்க வேண்டும்
இன்னது ஓர் ஆரம் தம்மோ என்று கொண்டு ஏகினானே

#907
வையகம் மூன்றும் விற்கும் மா மணி ஆரம் ஏந்தி
செய் கழல் மன்னற்கு உய்த்து தன் குறை செப்பலோடும்
ஐ என மன்னன் ஏவ ஆள் வழக்கு அற்றது என்ப
கை புனை பாவை எல்லாம் கதிர் முலை ஆக்கினானே

#908
சென்று காலம் குறுகினும் சீவகன்
பொன் துஞ்சு ஆகம் பொருந்தின் பொருந்துக
அன்றி என் நிறை யார் அழிப்பார் எனா
ஒன்று சிந்தையள் ஆகி ஒடுங்கினாள்

#909
இன்ப காரணம் ஆம் விளையாட்டினுள்
துன்ப காரணமாய் துறப்பித்திடும்
என்பதே நினைந்து ஈர் மலர் மாலை தன்
அன்பினால் அவலித்து அழுதிட்டாள்

#910
தண் அம் தீம் புனல் ஆடிய தண் மலர்
வண்ண வார் தளிர் பிண்டியினான் அடிக்கு
எண்ணி ஆயிரம் ஏந்து பொன் தாமரை
வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள்

#911
ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என
மாசை மா கடல் மன்னவன் ஆடலின்
மீசை நீள் விசும்பில் தலைச்சென்றது ஓர்
ஓசையால் சனம் ஒள் நிதி உண்டதே

#912
மகர வெல் கொடி மைந்தனை வாட்டிய
சிகர செவ்வரை தீ நிற பொன் எயில்
நிகர் இல் நேமி-தன் நீள் நகர்க்கு ஆகு எனா
நகரம் நால் இரு கோடி நயந்ததே

#913
உவா முதல் இரவலர்க்கு உடைமை உய்த்தவர்
கவான் முதல் கூப்பிய கனக மாழையால்
தவா வினை அடைகரை தயங்கு சிந்தை நீர்
அவா எனும் உடை கடல் அடைக்க பட்டதே

#914
சீர் அரவ சிலம்பு ஏந்தும் மென் சீறடி
யார் அரவ கழல் ஆடவரோடும்
போர் அரவ களம் போன்று பொன்னார் புனல்
நீர் அரவம் விளைத்தார் நிகர் இல்லார்

#915
கார் விளையாடிய மின் அனையார் கதிர்
வார் விளையாடிய மென் முலை மைந்தர்
தார் விளையாட்டொடு தங்குபு பொங்கிய
நீர் விளையாட்டு அணி நின்றதை அன்றே

#916
விடா களி வண்டு உண விரிந்த கோதையர்
படா களி இள முலை பாய விண்ட தார்
கடா களிற்று எறுழ் வலி காளை சீவகன்
அடா களியவர் தொழில் காண ஏகினான்

#917
ஒன்றே உயிரை உடையீர் ஒருவி போ-மின் இவள் கண்
அன்றே கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது
என்றே கலையும் சிலம்பும் இரங்க இன வண்டு ஆர்ப்ப
பொன் தோய் கொடியின் நடந்து புனல் சேர்பவளை காண்-மின்

#918
அழல் செய் தடத்துள் மலர்ந்த அலங்கல் மாலை-அதனை
நிழல் செய் நீர் கொண்டு ஈர்ப்ப நெடும் கண் இணையின் நோக்கி
குழையும் பூணும் நாணும் கொழுநன் உவப்ப அணிக என்று
இழை கொள் புனலுக்கு ஈயும் இளையோள் நிலைமை காண்-மின்

#919
கோல நெடும் கண் மகளிர் கூந்தல் பரப்பி இருப்ப
பீலி மஞ்ஞை நோக்கி பேடை மயில் என்று எண்ணி
ஆலி சென்று புல்லி அன்மை கண்டு நாணி
சோலை நோக்கி நடக்கும் தோகை வண்ணம் காண்-மின்

#920
மின் ஒப்பு உடைய பைம் பூண் நீருள் வீழ காணாள்
அன்ன பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டாய்
என்னை அடிமை வேண்டின் நாடி தா என்று இறைஞ்சி
பொன் அம் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்-மின்

#921
தூமம் கமழும் கோதை தொடுத்த துயரின் முலையா
தே மென் கீதம் பாலா சுரந்து திறத்தின் ஊட்டி
காம குழவி வளர்ப்ப கணவன் புனலுள் நீங்கி
பூ மென் பொழிலுக்கு இவர்வான் புகற்சி காண்-மின் இனிதே

#922
கடல் அம் பவளம் மணையில் கன பொன் கயிற்றில் காய் பொன்
மடல் அம் கமுகின் ஊசல் மடந்தை ஆட நுடங்கி
நடலை நடுவின் மகளிர் நூக்க பரிந்த காசு
விடலில் விசும்பின் மின் போல் மின்னி வீழ்வ காண்-மின்

#923
நான நீரில் கலந்து நலம் கொள் பூம் பட்டு ஒளிப்ப
மேனி தோன்ற விளங்கி வெளிப்பட்டதற்கு நாணி
மான மகளிர் போல மணி மேகலைகள் பேசா
தானம் தழுவி கிடப்ப செல்வோள் தன்மை காண்-மின்

#924
தீம் பால் பசியின் இருந்த செ வாய் சிறு பைங்கிளி தன்
ஓம்பு தாய் நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடி
பாம்பால் என்ன வெருவி பைம்பொன் தோடு கழல
காம்பு ஏர் தோளி நடுங்கி கரை சேர்பவளை காண்-மின்

#925
துணை இல் தோகை மஞ்ஞை ஈயற்கு இவரும் வகை போல்
மணி ஆர் வளை சேர் முன்கை வலனும் இடனும் போக்கி
இணை இல் தோழிமார்கள் இறுமால் இடை என்று இரங்க
அணி ஆர் கோதை பூம்பந்து ஆடும் அவளை காண்-மின்

#926
திருவின் சாயல் ஒருத்தி சேர்ந்த கோலம் காண்பான்
குருதி துகிலின் உறையை கொழும் பொன் விரலின் நீக்கி
அரவம் முற்றும் விழுங்கி உமிழும் பொழுதின் மதி போன்று
உருவ தெண் கணாடி காண்-மின் தோன்றும் வகையே

#927
பலகை செம்பொன் ஆக பளிங்கு நாயா பரப்பி
அலவன் ஆடும் வகை போல் அரும் பொன் கவறு அங்கு உருள
குலவும் பவழ உழக்கில் கோதை புரள பாடி
இலவம் போது ஏர் செ வாய் இளையோர் பொருவார் காண்-மின்

#928
தீம் பால் அடிசில் அமிர்தம் செம்பொன் வண்ண புழுக்கல்
ஆம் பால் அக்காரடலை அண் பல் நீர் ஊறு அமிர்தம்
தாம் பாலவரை நாடி தந்து ஊட்டு அயர்வார் சொரிய
ஓம்பா நறு நெய் வெள்ளம் ஒழுகும் வண்ணம் காண்-மின்

#929
அள்ளல் சேற்றுள் அலவன் அடைந்து ஆங்கு அனைய மெய்யின்
கள் செய் கடலுள் இளமை கூம்பின் கடி செய் மாலை
துள்ளு தூம கயிற்றில் பாய் செய்து உயரி நிதியம்
உள்ளு காற்றா உழலும் காம கலனும் காண்-மின்

#930
தாய் தன் கையின் மெல்ல தண் என் குறங்கின் எறிய
ஆய் பொன் அமளி துஞ்சும் அணி ஆர் குழவி போல
தோயும் திரைகள் அலைப்ப தோடு ஆர் கமல பள்ளி
மேய வகையில் துஞ்சும் வெள்ளை அன்னம் காண்-மின்

#931
நீல துகிலில் கிடந்த நிழல் ஆர் தழல் அம் மணிகள்
கோல சுடர்விட்டு உமிழ குமரி அன்னம் குறுகி
சால நெருங்கி பூத்த தடம் தாமரை பூ என்ன
ஆலி சுடர்கள் கௌவி அழுங்கும் வண்ணம் காண்-மின்

#932
வடி கண் மகளிர் வைத்த மரகத நல் மணிகள்
ஒடிக்க சுடர் விட்டு உமிழ உழை அம் பிணை ஒன்று அணுகி
கொடி புல் என்று கறிப்பான் நாவின் குலவி வளைப்ப
தொடி கண் பூவை நோக்கி நகுமாறு எளிதோ காண்-மின்

#933
இவை இன்னனவும் பிறவும் எரி பொன் ஆர மார்பன்
கவிஞர் மதியின் அகன்று காட்சிக்கு இனிய விழவில்
சுவையின் மிகுதி உடைய சோர்வு இல் பொருள் ஒன்று அதுதான்
நவை இல் அகல நோக்கி நயந்த வண்ணம் மொழிவாம்

#934
அந்தணர்க்கு ஆக்கிய சோற்று குவாலினை
வந்து ஒரு நாய் கதுவிற்று அது கண்டு அவர்
உய்ந்து இனி போதி என கனன்று ஓடினர்
சிந்தையில் நின்று ஒளிர் தீயன நீரார்

#935
கல்லொடு வன் தடி கையினர் காற்றினும்
வல் விரைந்து ஓடி வளைத்தனர் ஆகி
கொல்வது மேயினர் கொன்றிடு கூற்றினும்
வல்வினையார் வலைப்பட்டதை அன்றே

#936
வேள்வியில் உண்டி விலக்கிய நீவிர்கள்
ஆள் எனக்கு என்று அறைவதும் ஓரார்
தாள் இற மூர்க்கர் அதுக்கலின் தண் துறை
நீள் கயம் பாய்ந்து அது நீந்துதலோடும்

#937
மண் குடம் அல்லன மதியின் வெள்ளிய
கள் குட கன்னியர் இருவரோடு உடன்
துட்கென யாவரும் நடுங்க தூய்மை இல்
உட்கு உடை களிமகன் ஒருவன் தோன்றினான்

#938
தோன்றிய புண் செய் வேலவற்கு தூமது
வான் திகழ் கொடி அனார் வெள்ளி வட்டகை
ஊன்றி வாய் மடுப்ப ஓர் முழையுள் தீம் கதிர்
கான்றிடு கதிர் மதி இரண்டு போன்றவே

#939
அழல் அம் பூ நறவு ஆர்ந்து அழல் ஊர்தர
சுழலும் கண்ணினன் சோர்தரும் மாலையன்
கழலன் காழகம் வீக்கிய கச்சையன்
மழலை சொற்களின் வைது இவை கூறினான்

#940
புடைத்து என் நாயினை பொன்றுவித்தீர் உயிர்
கடுக்க பேர்த்தனிர் தம்-மின் கலாய்க்குறின்
தட கை மீளிமை தாங்கு-மின் அன்று-எனின்
உடைப்பென் கள் குடம் என்று உரையாடினான்

#941
நல்வினை ஒன்றும் இலாதவன் நான்மறை
வல்லவர் தம்மை வருத்தலின் வல்லே
செல் சுடர் வேல் வல சீவகசாமி சென்று
அல்லல் அகற்றி அரும் துயர் தீர்த்தான்

#942
மீண்டு அவர் ஏகுதலும் விடை அன்னவன்
ஈண்டிய தோழரோடு எய்தினன் ஆகி
மாண்ட எயிற்று எகினம் மறம் இல்லது
காண்டலும் கட்கு இனியான் கலுழ்ந்திட்டான்

#943
நாய் உடம்பு இட்டு இவண் நந்திய பேர் ஒளி
காய் கதிர் மண்டலம் போன்று ஒளி கால்வது ஓர்
சேய் உடம்பு எய்துவை செல்கதி மந்திரம்
நீ உடம்பட்டு நினை-மதி என்றான்

#944
என்றலும் தன் செவியோர்த்து இரு கண்களும்
சென்று உகு நீரொடு செம்மலை நோக்கி
ஒன்றுபு வால் குழைத்து உள் உவப்பு எய்தலும்
குன்று அனையான் பதம் கூற வலித்தான்

#945
நல் செய்கை ஒன்றும் இல்லார் நாள் உலக்கின்ற போழ்தின்
முன் செய்த வினையின் நீங்கி நல்வினை விளைக்கும் வித்து
மல் செய்து வீங்கு தோளான் மந்திரம் ஐந்தும் மாதோ
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து ஆங்கு அதன் செவி செப்புகின்றான்

#946
உறுதி முன் செய்தது இன்றி ஒழுகினேன் என்று நெஞ்சில்
மறுகல் நீ பற்றொடு ஆர்வம் விட்டிடு மரண அச்சத்து
இறுகல் நீ இறைவன் சொன்ன ஐம்பத அமிர்தம் உண்டால்
பெறுதி நல் கதியை என்று பெரு நவை அகற்றினானே

#947
மனத்து-இடை செறும்பு நீக்கி மறவலை ஆகி ஐந்தும்
நினைத்திடு நின்-கண் நின்ற நீல் நிற வினையின் நீங்கி
எனை பகல்-தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு
அனை பத அமிர்தம் நெஞ்சின் அயின்று விட்டு அகன்றது அன்றே

#948
பாடு பாணி முகம் எனும் பான்மையின்
ஓடி ஆங்கு ஓர் உயர் வரை உச்சி மேல்
கூடி கோலம் குயிற்றி படம் களைந்து
ஆடு கூத்தரின் ஐயென தோன்றினான்

#949
ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர்
கோயில் வட்டம் எல்லாம் கொங்கு சூழ் குழல்
வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி அங்கு
ஆயினார் பரியாளம் அடைந்ததே

#950
மிடைந்த மா மணி மேகலை ஏந்து அல்குல்
தடம் கொள் வெம் முலை தாமரை வாள் முகத்து
அடைந்த சாயல் அரம்பையர் தம் உழை
மடங்கல் ஏறு அனையான் மகிழ்வு எய்தினான்

#951
கற்ற ஐம்பதங்கள் நீரா கருவினை கழுவ பட்டு
மற்று அவன் தேவன் ஆகி வான் இடு சிலையின் தோன்றி
இற்ற தன் உடம்பும் இன்னா இடர் ஒழித்து இனியன் ஆகி
உற்றவன் நிலையும் எல்லாம் ஓதியின் உணர்ந்து கண்டான்

#952
இரும்பின் நீர்மை கெடுத்து எரி தன் நிறத்து
அரும் பொன் ஆக்கிய ஆருயிர் தோழனை
விரும்பி விண் இறுத்து ஒய்யென தோன்றினான்
சுரும்பு உண் கண்ணி சுதஞ்சணன் என்பவே

#953
ஓசனை நறும் புகை கமழ் ஒள் நிலா
வீசிய கதிர் பரந்து இமைக்கும் மேனியன்
மாசு அறு மணிமுடி மிடைந்த மாலையன்
பூசு உறு பருதியில் பொலிந்து தோன்றினான்

#954
குன்று என திரண்ட தோளான் குறுகலும் குமரன் நோக்கி
நின்றவன் நெடும் கண் ஒன்றும் இமைப்பு இல நிழல் இல் யாக்கை
அன்றியும் கண்ணி வாடாது அமரனே என்று தேறி
நன்று அவன் வரவு கேட்பான் நம்பி நீ யாரை என்றான்

#955
குங்கும குவட்டின் வீங்கி கோலம் வீற்றிருந்த தோளாய்
இங்கு நின் அருளில் போகி இயக்கருள் இறைவன் ஆகி
சங்க வெண் மலையின் மற்று சந்திர உதயத்தின் உச்சி
அங்கு யான் உறைவல் எந்தை அறிக மற்று என்று சொன்னான்

#956
என்று அவன் உரைப்ப கேட்டே இமயமும் நிகர்க்கல் ஆற்றா
பொன் தரு மாரி வண் கை புரவலன் புகன்று நோக்கி
வென்றவர் உலகம் பெற்ற வேந்து உடை இன்பம் எல்லாம்
இன்று எனக்கு எதிர்ந்தது என்றான் எரி உமிழ்ந்து இலங்கும் வேலான்

#957
சூடுறு கழலினாற்கு சுதஞ்சணன் இதனை சொன்னான்
பாடல் வண்டு அரற்றும் பிண்டி பகவனது இறைமை போல
மூடி இ உலகம் எல்லாம் நின் அடி தருவல் இன்னே
ஆடியுள் பாவை போல் நீ அணங்கியது அணங்க என்றான்

#958
வாளொடு வயவர் ஈண்டி வாரண தொழுவின் முற்றி
மீளிமை செய்யின் வெய்ய நண்ப நின் நினைப்பது அல்லால்
நாளொடு பக்கம் நைந்து வீழினும் வீழ்தல் இல்லா
கோள் உடை கிழமை ஒப்பாய் குறைவு இலன் பிறவின் என்றான்

#959
இன் நிழல் இவரும் பூணான் இரு விசும்பு இவர்தலுற்று
பொன் எழு அனைய தோளான் புல்லி கொண்டு இனைய கூறி
நின் நிழல் போல நீங்கேன் இடர் வரின் நினைக்க என்று
மின் எழூஉ பறப்பது ஒத்து விசும்பு இவர்ந்து அமரன் சென்றான்

#960
சொல்லிய நன்மை இல்லா சுணங்கன் இ உடம்பு நீங்கி
எல் ஒளி தேவன் ஆகி பிறக்குமோ என்ன வேண்டா
கொல் உலை அகத்து இட்டு ஊதி கூர் இரும்பு இரதம் குத்த
எல்லை இல் செம்பொன் ஆகி எரி நிறம் பெற்றது அன்றே

#961
எரி மாலை வேல் நுதியின் இறக்கி காமன் அடு கணையால்
திருமாலை வெம் முலை மேல் திளைக்கும் தேவர் திரு உறுக
அரு மாலை எண் வினையும் அகற்றி இன்ப கடல் ஆக்கி
தரும் மாலை அல்லது யான் தலையின் தாழ்ந்து பணிவேனோ

#962
ஒன்று ஆய ஊக்க ஏர் பூட்டி யாக்கை செறு உழுது
நன்று ஆய நல் விரத செந்நெல் வித்தி ஒழுக்க நீர்
குன்றாமல் தாம் கொடுத்து ஐம்பொறியின் வேலி காத்து ஓம்பின்
வென்றார் தம் வீட்டு இன்பம் விளைக்கும் விண்ணோர் உலகு ஈன்றே

#963
இத்தலை இவர்கள் ஏக இமயம் நட்டு அரவு சுற்றி
அத்தலை அலற முந்நீர் கடைந்தவர் அரவம் ஒப்ப
மை தலை நெடும் கணாரும் மைந்தரும் மறலி ஆட
மொய்த்து இள அன்னம் ஆர்க்கும் மோட்டு இரும் பொய்கை புக்கார்

#964
கலந்து எழு திரை நுண் ஆடை கடி கய மடந்தை காமர்
இலங்கு பொன் கலாபத்து அல்குல் இரு கரை பரப்பும் ஆக
அலர்ந்த தண் கமலத்து அம் போது அணிதக்க முகத்திற்கு ஏற்ப
நலம் கெழு குவளை வாள் கண் நன்_நுதல் நலத்தை உண்டார்

#965
தண்ணுமை முழவம் மொந்தை தகுணிச்சம் பிறவும் ஓசை
எண்ணிய விரலோடு அங்கை புறங்கையின் இசைய ஆக்கி
திண்ணிதின் தெறித்தும் ஓவார் கொட்டியும் குடைந்தும் ஆடி
ஒண் நுதல் மகளிர் தம்மோடு உயர் மிசை அவர்கள் ஒத்தார்

#966
சிவிறியின் மாறு தூயும் குங்குமம் எறிந்தும் தேம் கொள்
உவறு நீர் உழக்கி ஓட்டி உடை புறம் கண்டு நக்கு
தவறு என தாமம் பூட்டி தரு திறை கொண்டும் இன்பத்து
இவறினார் காம வெள்ளத்து ஏத்து அரும் தன்மையாரே

#967
சாந்து அகம் நிறைந்த தோணி தண் மலர் மாலை தோணி
பூம் துகில் ஆர்ந்த தோணி புனை கலம் பெய்த தோணி
கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டுகொண்டு எறிய ஓடி
தாம் திரை கலங்கள் போல தாக்குபு திரியும் அன்றே

#968
கலி வளர் களிறு கை நீர் சொரிவ போல் முத்த மாலை
பொலிவொடு திவண்டு பொங்கி பூம் சிகை அலமந்து ஆட
குலிக நீர் நிறைந்த பந்தின் கொம்பனார் ஓச்ச மைந்தர்
மெலிவு கண்டு உவந்து மாதோ விருப்பொடு மறலினாரே

#969
வண்ண ஒண் சுண்ணம் பட்டும் மாலையும் சாந்தும் ஏந்தி
எண் அரும் திறத்து மைந்தர் எதிரெதிர் எறிய ஓடி
விண் இடை நுடங்கு மின்னும் மீன்களும் பொருவ போல
மண் இடை அமரர் கொண்ட மன்றல் ஒத்து இறந்தது அன்றே

#970
உரைத்த வெண்ணெயும் ஒள் நறும் சுண்ணமும்
அரைத்த சாந்தமும் நானமும் மாலையும்
நுரைத்து நோன் சிறை வண்டொடு தேன் இனம்
இரைத்து நீர் கொழித்து இன்பம் இறந்ததே

#971
கத்தி கை கண்ணி நெற்றி கைதொழு கடவுள் அன்ன
வித்தக இளையர் எல்லாம் விழு மணி கலங்கள் தாங்கி
முத்து அணிந்து ஆவி ஊட்டி முகிழ் முலை கச்சின் வீக்கி
பித்திகை பிணையல் சூழ்ந்து பெண் கொடி பொலிந்த அன்றே

#972
திருந்து பொன் தேரும் செம்பொன் சிவிகையும் மிடைந்து தெற்றி
கரும் கய களிறும் மாவும் கால் இயல் பிடியும் ஈண்டி
நெருங்குபு மள்ளர் தொக்கு நெடு வரை தொடுத்த வெள்ளம்
கரும் கடற்கு இவர்ந்த வண்ணம் கடி நகர்க்கு எழுந்த அன்றே

#973
கடல் என காற்று என கடும் கண் கூற்று என
உடல் சின உரும் என ஊழி தீ என
தொடர் பிணி வெளில் முதல் முருக்கி தோன்றியது
அடல் அரும் கடா களிற்று அசனி வேகமே

#974
பொருது இழி அருவி போன்று பொழி தரு கடாத்தது ஆகி
குருதி கொள் மருப்பிற்று ஆகி குஞ்சரம் சிதைந்தது என்ன
கருதிய திசைகள் எல்லாம் கண் மிசை கரந்த மாந்தர்
பருதியின் முன்னர் தோன்றா மறைந்த பல் மீன்கள் ஒத்தார்

#975
கரும்_தடம்_கண்ணி-தன் மேல் காமுகர் உள்ளம் போல
இரும் களிறு எய்த ஓட சிவிகை விட்டு இளையர் ஏக
அரும் பெறல் அவட்கு தோழி ஆடவர் இல்லையோ என்று
ஒருங்கு கை உச்சி கூப்பி களிற்று எதிர் இறைஞ்சி நின்றாள்

#976
என்னை கொன்று இவள் கண் ஓடும் எல்லையில் ஒருவன் தோன்றி
இன் உயிர் இவளை காக்கும் அன்று எனில் என்-கண் மாய்ந்தால்
பின்னை தான் ஆவது ஆக என்று எண்ணி பிணை கொள் நோக்கி
மின்னு போல் நுடங்கி நின்றாள் வீ ததை பொன் கொம்பு ஒப்பாள்

#977
மணி இரு தலையும் சேர்த்தி வான் பொனின் இயன்ற நாணால்
அணி இரும் குஞ்சி ஏற கட்டியிட்டு அலங்கல் சூழ்ந்து
தணி அரும் தோழர் சூழ தாழ் குழை திருவில் வீச
பணி வரும் குருசில் செல்வான் பாவை-அது இடரை கண்டான்

#978
பெண் உயிர் அவலம் நோக்கி பெருந்தகை வாழ்வில் சாதல்
எண்ணினன் எண்ணி நொய்தா இன மலர் மாலை சுற்றா
வண்ண பொன் கடகம் ஏற்றா வார் கச்சில் தானை வீக்கா
அண்ணல் அம் களிற்றை வையா ஆர்த்து மேல் ஓடினானே

#979
குண்டலம் குமரன் கொண்டு குன்றின் மேல் விழும் மின் போல்
ஒண் திறல் களிற்றின் நெற்றி எறிந்து தோடு ஒலித்து வீழ
மண்டில முத்தும் தாரும் மாலையும் குழலும் பொங்க
விண்டலர் கண்ணி சிந்த மின்னில் சென்று எய்தினானே

#980
படம் விரி நாகம் செற்று பாய் தரு கலுழன் போல
மடவரல் அவளை செற்று மத களிறு இறைஞ்சும் போழ்தில்
குட வரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து
உடல் சினம் கடவ குப்புற்று உரும் என உரறி ஆர்த்தான்

#981
கூற்று என முழங்கி கையால் கோட்டு-இடை புடைப்ப காய்ந்து
காற்று என உரறி நாகம் கடாம் பெய்து கனலின் சீறி
ஆற்றல் அம் குமரன்-தன் மேல் அடு களிறு ஓட அஞ்சான்
கோல் தொடி பாவை-தன்னை கொண்டு உய போ-மின் என்றான்

#982
மதியினுக்கு இவர்ந்த வேக மா மணி நாகம் வல்லே
பதி அமை பருதி-தன் மேல் படம் விரித்து ஓடி ஆங்கு
பொதி அவிழ் கோதை-தன் மேல் பொரு களிறு அகன்று பொன் தார்
கதி அமை தோளினானை கையகப்படுத்தது அன்றே

#983
கையகப்படுத்தலோடும் கார் மழை மின்னின் நொய்தா
மொய் கொள பிறழ்ந்து முத்தார் மருப்பு-இடை குளித்து கால் கீழ்
ஐயென அடங்கி வல்லான் ஆடிய மணி வட்டு ஏய்ப்ப
செய் கழல் குருசில் ஆங்கே கரந்து சேண் அகற்றினானே

#984
மல்லல் நீர் மணிவண்ணனை பண்டு ஓர் நாள்
கொல்ல ஓடிய குஞ்சரம் போன்றது அ
செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம் போல்
பில்கும் மும்மத வேழம் பெயர்ந்ததே

#985
ஒரு கை இரு மருப்பின் மும்மதத்தது ஓங்கு எழில் குன்று அனைய வேழம்
திருகு கனை கழல் கால் சீவகன் வென்று இளையாட்கு உடைந்து தேன் ஆர்
முருகு கமழ் அலங்கல் முத்து இலங்கும் மார்பினன் ஐந்நூற்று நால்வர்
அருகு கழல் பரவ தனியே போய் உய்யானம் அடைந்தான் அன்றே

#986
மணி செய் கந்து போல் மருள வீங்கிய
திணி பொன் தோளினான் செல்லல் நீக்கிய
அணி பொன் கொம்பினை அழுங்கல் என்று தன்
தணிவு இல் காதலார் தாம் கொடு ஏகினார்

#987
முழங்கு தெண் திரை மூரி நீள் நிதி
வழங்க நீண்ட கை வணிகர்க்கு ஏறு அனான்
விழுங்கு காதலாள் வேல் கண் பாவை தாய்
குழைந்த கோதையை கண்டு கூறினாள்

#988
நெய் பெய் நீள் எரி நெற்றி மூழ்கிய
கை செய் மாலை போல் கரிந்து பொன் நிறம்
நைய வந்தது என் நங்கைக்கு இன்று என
உய்தல் வேட்கையால் உரைத்தல் ஓம்பினார்

#989
முருகு விண்டு உலாம் முல்லை கத்திகை
பருகி வண்டு உலாம் பல் குழலினாள்
வருக என்று தாய் வாள் கண் நீர் துடைத்து
உருகும் நுண் இடை ஒசிய புல்லினாள்

#990
கடம்பு சூடிய கன்னி மாலை போல்
தொடர்ந்து கைவிடா தோழிமாரொடும்
குடங்கை உண்கணாள் கொண்ட பண்ணையுள்
அடைந்த துன்பம் என்று அறிவின் நாடினாள்

#991
கம்ம பல் கலம் களைந்து கண்டு தெறூஉம்
விம்ம பல் கலம் நொய்ய மெய் அணிந்து
அம் மென் மாலையும் அடைச்சி குங்குமம்
கொம்மை மட்டித்தார் கொடி அனாளையே

#992
அம் பொன் வள்ளத்துள் அமிர்தம் ஏந்தும் எம்
கொம்பின் அவ்வையை கொணர்-மின் சென்று என
பைம்பொன் அல்குலை பயிரும் பைங்கிளி
செம்பொன் கொம்பின் எம் பாவை செல்க என்றாள்

#993
நிறத்து எறிந்து பறித்த நிணம் கொள் வேல்
திறத்தை வெளவிய சேய் அரி கண்ணினாள்
பிறப்பு உணர்ந்தவர் போல் தமர் பேச்சு எலாம்
வெறுத்து யாவையும் மேவலள் ஆயினாள்

#994
குமரி மாநகர் கோதை அம் கொம்பு அனாள்
தமரின் நீங்கிய செவ்வியுள் தாமரை
அமரர் மேவர தோன்றிய அண்ணல் போல்
குமரன் ஆக்கிய காதலின் கூறினாள்

#995
கலத்தல் காலம் கல்லூரி நல் கொட்டிலா
முலை தடத்து இடை மொய் எரு குப்பையா
இலக்கம் என் உயிரா எய்து கற்குமால்
அலைக்கும் வெம் சரம் ஐந்து உடையான்-அரோ

#996
பூமியும் பொறை ஆற்ற அரும் தன்மையால்
வேம் என் நெஞ்சமும் வேள்வி முளரி போல்
தாம மார்பனை சீவகசாமியை
காமனை கடிதே தம்-மின் தேவிர்காள்

#997
கையினால் சொல கண்களின் கேட்டிடும்
மொய் கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேன்
செய் தவம் புரியா சிறியார்கள் போல்
உய்யல் ஆவது ஓர் வாயில் உண்டாம்-கொலோ

#998
கண்ணும் வாள் அற்ற கை வளை சோருமால்
புண்ணும் போன்று புலம்பும் என் நெஞ்சு-அரோ
எண் இல் காமம் எரிப்பினும் மேல் செலா
பெண்ணின் மிக்கது பெண் அலது இல்லையே

#999
சோலை வேய் மருள் சூழ் வளை தோளி தன்
வேலை மா கடல் வேட்கை மிக்கு ஊர்தர
ஓலை தாழ் பெண்ணை மா மடல் ஊர்தலை
கால வேல் தடம் கண்ணி கருதினாள்

#1000
உய்யுமாறு உரை உன்னை அல்லால் இலேன்
செய்ய வாய் கிளியே சிறந்தாய் என
நையல் நங்கை இ நாட்டு அகத்து உண்டு எனில்
தையலாய் சமழாது உரை என்றதே

#1001
தெளி கயம் அம் மலர் மேல் உறை தேவியின்
ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள்
களி கொள் காமத்தில் கையறவு எய்தி தன்
கிளியை தூதுவிட்டான் கிளந்து என்பவே

#1002
பூணொடு ஏந்திய வெம் முலை பொன் அனாள்
நாணும் தன் குலனும் நலம் கீழ்ப்பட
வீணை வித்தகன் காணிய விண் படர்ந்து
ஆணு பைங்கிளி ஆண்டு பறந்ததே

#1003
கூட்டினான் மணி பல தெளித்து கொண்டவன்
தீட்டினான் கிழி மிசை திக வாள்_நுதல்
வேட்ட மால் களிற்று-இடை வெருவி நின்றது ஓர்
நாட்டமும் நடுக்கமும் நங்கை வண்ணமே

#1004
நெகிழ்ந்து சோர் பூம் துகில் நோக்கி நோக்கியே
மகிழ்ந்து வீழ் மணி குழல் மாலை கால் தொடும்
முகிழ்ந்து வீங்கு இள முலை முத்தம் தைவரும்
புகழ்ந்து தன் தோள்களில் புல்லும் மெல்லவே

#1005
படை மலர் நெடும் கணாள் பரவை ஏந்து அல்குல்
மிடை மணி மேகலை நோற்ற வெம் தொழில்
புடை திரள் வன முலை பூணும் நோற்றன
அடி மலர் தாமரை சிலம்பு நோற்றவே

#1006
மின் அணங்குறும் இடை மேவர் சாயலுக்கு
இன்னணம் இறைமகன் புலம்ப யாவதும்
தன் அணங்குறு மொழி தத்தை தத்தையை
மன் அணங்குறலொடு மகிழ்ந்து கண்டதே

#1007
ஆடும் பாம்பு என புடை அகன்ற அல்குல் மேல்
சூடிய கலை புறம் சூழ்ந்த பூம் துகில்
ஓடிய எரி வளைத்து உருவ வெண் புகை
கூடி மற்று அதன் புறம் குலாய கொள்கைத்தே

#1008
கொன் வளர் குவி முலை கோட்டில் தாழ்ந்தன
மின் வளர் திரள் வடம் விளங்கு பைம் கதிர்
இன் வளர் இளம் பிறை எழுதப்பட்டன
பொன் வளர் செப்பின் மேல் பொலிந்த போன்றவே

#1009
குண்டலம் ஒருபுடை குலாவி வில்லிட
விண்டு அலர்ந்து ஒருபுடை தோடு மின்செய்
மண்டலம் நிறைந்தது ஓர் மதியம் அன்னதே
ஒண்_தொடி திருமுகத்து உருவ மாட்சியே

#1010
பூண் நிறம் முலையவள் பொருவில் பூ நுதல்
மாண் நிற கரும் குழல் மருங்கில் போக்கிய
நாள் நிறம் மிகு கதிர் பட்டம் நல் ஒளி
வாள் நிறம் மின் இருள் வளைத்தது ஒத்ததே

#1011
கடி கமழ் பூம் சிகை காமர் மல்லிகை
வடிவு உடை மாலை கால் தொடர்ந்து வாய்ந்தது
நடு ஒசிந்து ஒல்கிய நாறும் மா மலர்
கொடியின் மேல் குயில் குனிந்து இருந்தது ஒத்ததே

#1012
சிலம்பொடு மேகலை மிழற்ற தேன் இனம்
அலங்கல் உண்டு யாழ் செயும் அம் பொன் பூம் கொடி
நலம்பட நல் நடை கற்றது ஒக்கும் இ
இலங்கு அரி தடம் கணாள் யாவள் ஆம்-கொலோ

#1013
யாவளே-ஆயினும் ஆக மற்று இவள்
மேவிய பொருளொடு மீண்ட பின் அலால்
ஏவலால் சேர்கலேன் என்று பைங்கிளி
பூ அலர் சண்பகம் பொருந்திற்று என்பவே

#1014
மது களி நெடும் கணாள் வான் பொன் கிண்கிணி
ஒதுக்கிடை மிழற்ற சென்று எய்தி ஊன் கவர்
கத களி வேலினான் கண்டு காம நீர்
புது தளிர் அனையவள் புலந்து நோக்கினாள்

#1015
இது என உரு என இயக்கி என்றலும்
புதிது இது பூம் துகில் குழல்கள் சோர்தலால்
மது விரி கோதை அம் மாலை நின் மனம்
அது முறை இயக்கலின் இயக்கி ஆகுமே

#1016
முளைத்து எழு மதியம் முத்து அரும்பி யாங்கு என
விளைத்தது திருமுகம் வியர்ப்பு வெம் சிலை
வளைத்தன புருவமும் முரிந்த வல்லையே
கிளை கழுநீர் கணும் சிவப்பில் கேழ்த்தவே

#1017
பாவை நீ புலவியில் நீடல் பாவியேற்கு
ஆவி ஒன்று இரண்டு உடம்பு அல்லது ஊற்று நீர்
கூவல் வாய் வெண் மணல் குறுக செல்லுமே
மேவி பூம் கங்கையுள் விழைந்த அன்னமே

#1018
பேரினும் பெண்டிரை பொறாது சீறுவாள்
நேர் மலர் பாவையை நோக்கி நெய் சொரி
கூர் அழல் போல்வது ஓர் புலவி கூர்ந்ததே
ஆர்வுறு கணவன்-மாட்டு அமிர்தின் சாயற்கே

#1019
புலந்தவள் கொடி என நடுங்கி பொன் அரி
சிலம்பொடு மேகலை மிழற்ற சென்னி மேல்
அலங்கல் வாய் அடி மலர் அணிந்து குண்டலம்
இலங்க பேர்ந்து இன மலர் சிதறி ஏகினாள்

#1020
துனிப்புறு கிளவியால் துணைவி ஏகலும்
இனி பிறர்க்கு இடம் இலை எழுவல் ஈங்கு எனா
கனிப்புறு சொல் அளைஇ பறந்து காளை தன்
பனி கதிர் பகை மலர் பாதம் சேர்ந்ததே

#1021
வாழ்க நின் கழல் அடி மைந்த என்னவே
தோழியர் சுவாகதம் போதுக ஈங்கு என
சூழ் மணி மோதிரம் சுடர்ந்து வில் இட
யாழ் அறி வித்தகன் அங்கை நீட்டினான்

#1022
பொன் இயல் குரும்பையின் பொலிந்த வெம் முலை
கன்னியர் தூதொடு காமர் பைங்கிளி
முன்னமே வந்து என முறுவல் நோக்கமோடு
என்னை-கொல் வரவு என இனிய செப்பினான்

#1023
மையல் அம் களிற்றொடு பொருத வண் புகழ்
ஐயனை செவ்வி கண்டு அறிந்து வம் என
பை அரவு அல்குல் எம் பாவை தூதொடு
கை இலங்கு எஃகினாய் காண வந்ததே

#1024
வெம் சின வேழம் உண்ட வெள்ளிலின் வெறியம் ஆக
நெஞ்சமும் நிறையும் நீல நெடும் கணால் கவர்ந்த கள்வி
அஞ்சன துவலை ஆடி நடுங்கினாள் நிலைமை என்னை
பைம் சிறை தத்தை என்ன பசுங்கிளி மொழியும் அன்றே

#1025
பூ அணை அழலின் மேல் சேக்கும் பொன் செய் தூண்
பாவை தான் பொருந்துபு நிற்கும் பல் பல்கால்
ஆவியா அழல் என உயிர்க்கும் ஐயென
மேவி பூ நிலம் மிசை இருக்கும் மெல்லவே

#1026
பணி தகு கோலமும் பந்தும் பார்ப்புறாள்
மணி கழங்கு ஆடலள் மாமை தான் விளர்த்து
அணி தகை யாழினோடு அமுதம் விட்டு ஒரீஇ
துணை பெரு மலர் கணில் துயிலும் நீங்கினாள்

#1027
திருந்து வேல் சீவகசாமியோ எனும்
கரும் கடல் வெள் வளை கழல்பவோ எனும்
வருந்தினேன் மார்புற புல்லு வந்து எனும்
பொருந்து பூம் கொம்பு அன பொருவின் சாயலே

#1028
கன்னியர் உற்ற நோய் கண் அனார்க்கும் அஃது
இன்னது என்று உரையலர் நாணின் ஆதலான்
மன்னும் யான் உணரலேன் மாதர் உற்ற நோய்
துன்னி நீ அறிதியோ தோன்றல் என்றதே

#1029
புள்ளின் வாய் உரை கேட்டலும் பொன் செய்வேல்
எள்ளி நீண்ட கண்ணாள் திறத்து இன் உரை
உள்ளினார் உழை கண்டது ஒத்தான்-அரோ
வள்ளல் மா தடிந்தான் அன்ன மாண்பினான்

#1030
சொல் மருந்து தந்தாய் சொல்லு நின் மனத்து
என் அமர்ந்தது உரைத்து கொள் நீ என
வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில் தோள் அவட்கு
இன் மருந்து இவை வேண்டுவல் என்றதே

#1031
பொன் குன்று-ஆயினும் பூம் பழனங்கள் சூழ்
நெல் குன்று ஆம் பதி நேரினும் தன்னை யான்
கல் குன்று ஏந்திய தோள் இணை கண் உறீஇ
சொல் குன்றா புணர்கேன் சொல்லு போ என்றான்

#1032
சேலை வென்ற கண்ணாட்கு இவை செப்ப அரிது
ஓலை ஒன்று எழுதி பணி நீ என
மாலை மார்பன் கொடுப்ப தினை குரல்
ஓலையோடு கொண்டு ஓங்கி பறந்ததே

#1033
திருந்து கோதை சிகழிகை சீறடி
மருந்தின் சாயல் மணம் கமழ் மேனியாள்
பொருந்து பூம் பொய்கை போர்வையை போர்த்து உடன்
கரும் கண் பாவை கவின் பெற வைகினாள்

#1034
மறம் கொள் வெம் கதிர் வேலவன் வார் கழல்
கறங்க ஏகி தன் காதலி ஊடலை
உறைந்த ஒண் மலர் சென்னியின் நீக்கினான்
நிறைந்தது இன்ப நெடும் கணிக்கு என்பவே

#1035
தன் துணைவி கோட்டியினின் நீங்கி தனி இடம் பார்த்து
இன் துணைவன் சேர்வான் இருந்தது-கொல் போந்தது-கொல்
சென்றது-கொல் சேர்ந்தது-கொல் செவ்வி அறிந்து உருகும்
என் துணைவி மாற்றம் இஃது என்றது-கொல் பாவம்

#1036
செம் தார் பசுங்கிளியார் சென்றார்க்கு ஓர் இன் உரைதான்
தந்தாரேல் தந்தார் என் இன் உயிர் தாம் தாராரேல்
அந்தோ குணமாலைக்கு ஆ தகாது என்று உலகம்
நொந்து ஆங்கு அழ முயன்று நோற்றானும் எய்துவனே

#1037
சென்றார் வரைய கருமம் செரு வேலான்
பொன் தாங்கு அணி அகலம் புல்ல பொருந்துமேல்
குன்றாது கூடுக என கூறி முத்த ஆர் மணல் மேல்
அன்று ஆங்கு அணி இழையாள் ஆழி இழைத்தாளே

#1038
பாக வரை வாங்கி பழுதாகின் பாவியேற்கு
ஏகுமால் ஆவி என நினைப்ப பைங்கிளி யார்
மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தாள்
ஆகும் யான் சேர்வல் என சென்று அடைந்ததே

#1039
கண்டாள் நெடிது உயிர்த்தாள் கைதொழுதாள் கை அகத்தே
கொண்டாள் தினை குரல் தான் சூடினாள் தாழ் குழல் மேல்
நுண் தார் பசுங்கிளியை நோவ அகட்டு ஒடுக்கி
வண் தாரான் செவ்வி வாய் கேட்டாள் தன் மெய் மகிழ்ந்தாள்

#1040
தீம் பால் அமிர்து ஊட்டி செம்பொன் மணி கூட்டில்
காம்பு ஏர் பணை தோளி மென் பறவை கண்படுப்பித்து
ஆம்பால் மணி நாம மோதிரம் தொட்டு ஐயென்ன
தேம்பா எழுத்து ஓலை செவ்வனே நோக்கினாள்

#1041
கொடும் சிலையான் ஓலை குணமாலை காண்க
அடும் துயரம் உள் சுட வெந்து ஆற்றாதேன் ஆற்ற
விடுந்த சிறு கிளியால் விம்மல் நோய் தீர்ந்தேன்
நெடும் கணாள் தானும் நினைவு அகல்வாள் ஆக

#1042
ஈட்டம் சால் நீள் நிதியும் ஈர்ம் குவளை பைம் தடம் சூழ்
மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து
வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய வேய் மென் தோள்
பூட்டார் சிலை நுதலாள் புல்லாது ஒழியேனே

#1043
குங்குமம் சேர் வெம் முலை மேல் கொய்தார் வடு பொறிப்ப
செம் கயல் கண் வெம் பனியால் சிந்தை எரி அவித்து
மங்கை மகிழ உறையேனேல் வாள் அமருள்
பங்கப்பட்டார் மேல் படை நினைந்தேன் ஆக என்றான்

#1044
நூல் புடைத்தால் போல் கிடந்த வித்தகம் சேர் நுண் வரிகள்
பால் மடுத்து தீம் தேன் பருகுவாள் போல் நோக்கி
சேல் படுத்த கண்ணீர் சுமந்து அளைஇ மெய்ம்மகிழ்ந்து
மால் படுத்தான் மார்பில் மணந்தாளே போல் மகிழ்ந்தாள்

#1045
பால் அவியும் பூவும் புகையும் படு சாந்தும்
கால் அவியா பொன் விளக்கும் தந்து உம்மை கைதொழுவேன்
கோல் அவியா வெம் சிலையான் சொல் குன்றான் ஆக எனவே
நூல் அவையார் போல் நீங்கள் நோக்கு-மினே என்றாள்

#1046
மவ்வல் அம் குழலினாளை மதியுடன்படுக்கலுற்று
செவ்வியுள் செவிலி சொல்லும் சிலை இவர் நுதலினாய் நின்
அவ்வைக்கு மூத்த மாமன் ஒரு மகற்கு இன்று உன் தாதை
நவ்வியம் பிணை கொள் நோக்கி நகை முக விருந்து செய்தான்

#1047
பண்டியால் பண்டி செம்பொன் பல் வளை பரியம் ஆக
கொண்டு வந்து அடிமை செய்வான் குறை உறுகின்றது அன்றி
கண்டவர் கடக்கல் ஆற்றா கிழி மிசை உருவு தீட்டி
வண்டு இமிர் கோதை நின்னை வழிபடும் நாளும் என்றாள்

#1048
மைத்துனன் வனப்பின் மிக்கான் வளர் நிதி கிழவன் காளை
உத்தமன் உனது நாமம் அல்லது ஒன்று உரைத்தல் தேற்றான்
இத்திறத்து இவன்-கண் நின்னை எண்ணினார் என்னலோடும்
தத்தை அம் கிளவி கையால் செவி முதல் அடைச்சி சொன்னாள்

#1049
மணி மத களிறு வென்றான் வருத்த சொல் கூலி ஆக
அணி மத களிறு அனானுக்கு அடி பணி செய்வது அல்லால்
துணிவது என் சுடு சொல் வாளால் செவி முதல் ஈரல் என்றாள்
பணிவரும் பவள பாவை பரிவு கொண்டு அனையது ஒப்பாள்

#1050
கந்துக புடையில் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு
எந்தையும் யாயும் நேராராய்விடின் இறத்தல் ஒன்றோ
சிந்தனை பிறிது ஒன்று ஆகி செய் தவம் முயறல் ஒன்றோ
வந்ததால் நாளை என்றாள் வடு என கிடந்த கண்ணாள்

#1051
தேன் நெய் போன்று இனிய சொல்லாள் சிறுமுதுக்குறைமை கேட்டே
ஊன் நைந்து உருகி கைத்தாய் உள் நிறை உவகை பொங்க
ஆன் நெய் பாற்கு இவர்ந்தது ஒத்தது அழேற்க என் பாவை என்று
தானையால் தடம் கண் நீரை துடைத்து மெய் தழுவி கொண்டாள்

#1052
துகள் மனத்து இன்றி நோற்ற தொல் வினை பயத்தின் அன்றே
தகண் இலா கேள்வியான் கண் தங்கியது என்று பின்னும்
மகள் மனம் குளிர்ப்ப கூறி மறுவலும் புல்லி கொண்டு ஆங்கு
அகல் மனை தாய்க்கு சொன்னாள் அவளும் தன் கேட்கு சொன்னாள்

#1053
வினையமாமாலை கேள்வன் குபேரமித்திரற்கு சொல்ல
அனையதே பட்டது என்றால் ஐயனே நங்கைக்கு ஒத்தான்
வனையவே பட்ட போலும் மணி மருள் முலையினாளை
புனையவே பட்ட பொன் தார் புண்ணியற்கு ஈதும் என்றான்

#1054
கற்றார் மற்றும் கட்டுரை வல்லார் கவி என்னும்
நல் தேர் மேலார் நால்வரை விட்டாற்கு அவர் சென்றார்
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழல் நாய்கன்
பொன் தார் மார்பீர் போது-மின் என்று ஆங்கு எதிர்கொண்டான்

#1055
சீந்தா நின்ற தீ முக வேலான் மணி செப்பின்
ஈந்தான் கொண்டார் இன் முக வாசம் எரி செம்பொன்
காந்தா நின்ற கற்பகம் அன்னீர் வர பெற்றேன்
சேர்ந்தேன் இன்றே வீடு என நாய்கற்கு அவர் சொன்னார்

#1056
யாம் மகள் ஈதும் நீர் மகள் கொள்-மின் என யாரும்
தாம் மகள் நேரார்-ஆயினும் தண் என் வரை மார்பில்
பூமகள் வைகும் புண்ணிய பொன் குன்று அனையானுக்கு
யாம் மகள் நேர்ந்தேம் இன்று என நாய்கற்கு அவர் சொன்னார்

#1057
சுற்றார் வல் வில் சூடுறு செம்பொன் கழலாற்கு
குற்றேல் செய்தும் காளையும் யானும் கொடியாளை
மல் சேர் தோளான் தன் மருமானுக்கு அருள் செய்ய
பெற்றேன் என்ன பேசினன் வாசம் கமழ் தாரான்

#1058
விடை சூழ் ஏற்றின் வெல் புகழான் தன் மிகு தாதை
கடல் சூழ் வையம் கை படுத்தான் போன்று இது கூற
குடர் சூழ் கோட்ட குஞ்சரம் வென்ற வகையும் அ
படர் சூழ் நெஞ்சின் பாவை-தன் பண்பும் அவர் சொன்னார்

#1059
மறையார் வேள்வி மந்திர செம் தீ கொடியே போல்
குறையா கற்பில் சீவகன் தாயும் கொலை வேல் கண்
பொறை ஒன்று ஆற்றா போது அணி பொன் கொம்பு அனையாளை
நறையார் கோதை நன்று என இன்புற்று எதிர்கொண்டாள்

#1060
பொன் கச்சு ஆர்த்த பூண் அணி பொம்மல் முலையாளை
அற்க செய்த யாப்பினர் ஆகி அவண் வந்தார்
பொற்ப கூறி போகுதும் என்றார்க்கு எழுக என்றார்
வற்கம் இட்ட வண் பரி மாவின் அவர் சென்றார்

#1061
மடந்தை திறத்தின் இயைய அம் மகள் கூறி வந்தார்
விடம் தைத்த வேலாற்கு உரைத்தார்க்கு அவன் மெய்ம்மகிழ்ந்தான்
நுடங்கும் கொடி போல்பவள் நூபுரம் ஆர்ப்ப வந்து
தடம் கண்ணவள் தாய் அது கேட்டலும் தக்கது என்றாள்

#1062
திருவிற்கு அமைந்தான் திசை பத்தும் அறிந்த தொல் சீர்
உருவிற்கு அமைந்தாற்கு அமைந்தாள் என யாரும் ஒட்ட
பெருகும் கணியின் கணி பேசிய பேது இல் நாளால்
பருகற்கு அமைந்த அமிர்தின் படர் தீர்க்கலுற்றார்

#1063
கரை கொன்று இரங்கும் கடலில் கலி கொண்டு கல் என்
முரசம் கறங்க முழவு விம்ம வெண் சங்கம் ஆர்ப்ப
பிரசம் கலங்கிற்று என மாந்தர் பிணங்க வேட்டான்
விரை சென்று அடைந்த குழலாளை அ வேனிலானே

#1064
மழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார்
இழை முற்று அணிந்தார் எழு நூற்றவர் கோடி செம்பொன்
கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர்
குழை முற்று காதின் மணி கொம்பொடு நாய்கன் ஈந்தான்

#1065
கண்ணார் கதிர் மென் முலை காம்பு அடும் மென் தோள்
விண்ணோர் உலகினொடும் இ நிலத்து இல்லா
பெண்ணார் அமிர்தே அவன் பெற்ற அமிர்தே
பண்ணார் கிளவி பவழம் புரை செ வாய்

#1066
தேதாவென வண்டொடு தேன் வரி செய்ய
போது ஆர் குழலாள் புணர் மென் முலை பாய
தாது ஆர் கமழ் தார் மது விண்டு துளிப்ப
ஈதாம் அவர் எய்திய இன்பம் அதே

#1067
முந்நீர் பவளத்து உறை நித்தில முத்தம்
அ நீர் அமிர்து ஈன்று கொடுப்ப அமர்ந்தான்
மை நீர் நெடும் கண் புருவங்கள் மலங்க
பொன் ஆர் அரி கிண்கிணி பூசல் இடவே

#1068
கம்பு ஆர் களி யானை கலக்க மலங்கி
அம்பேர் அரிவாள் நெடும் கண் புதைத்து அஞ்சி
கொம்பே குழைவாய் எனக்கே குழைந்திட்டாய்
வம்பே இது வையகத்தார் வழக்கு அன்றே

#1069
பூவார் புனல் ஆட்டினுள் பூ நறும் சுண்ணம்
பாவாய் பணை தோள் சுரமஞ்சரி தோற்றாள்
காவாது அவள் கண்ணற சொல்லிய வெம் சொல்
ஏவோ அமிர்தோ எனக்கு இன்று இது சொல்லாய்

#1070
நல் தோளவள் சுண்ண நலம் சொல்லுவான்
உற்றீர் மறந்தீர் மனத்துள் உறைகின்றாள்
செற்றால் அரிதால் சென்-மின் போ-மின் தீண்டாது
எற்றே அறியாத ஓர் ஏழையேனோ யான்

#1071
தூமம் கமழ் பூம் துகில் சோர அசையா
தாமம் பரிந்து ஆடு தண் சாந்தம் திமிர்ந்திட்டு
ஏமன் சிலை வாள் நுதல் ஏற நெருக்கா
காமன் கணை ஏர் கண் சிவந்து புலந்தாள்

#1072
மின் நேர் இடையாள் அடி வீழ்ந்தும் இரந்தும்
சொல் நீர் அவள் அற்பு அழலுள் சொரிந்து ஆற்ற
இ நீரன கண் புடைவிட்டு அகன்று இன்பம்
மன் ஆர்ந்து மதர்ப்பொடு நோக்கினள்-மாதோ

#1073
இன் நீர் எரி மா மணி பூண் கிடந்து ஈன்ற
மின் ஆர் இள மென் முலை வேய் மருள் மென் தோள்
பொன் ஆர் கொடியே புகழின் புகழ் ஞாலம்
நின் வாள் நெடும் கண் விலை ஆகும் நிகர்த்தே

#1074
தோளால் தழுவி துவர் தொண்டை அம் செ வாய்
மீளா மணிமேகலை மின்னின் மிளிர
வாள் ஆர் மணி பூண் அவன் மாதர் அம் பாவை-தன்னை
நாளால் பெற்ற நல் அமிர்து என்ன நயந்தான்

#1075
சித்திர மணி குழை திளைக்கும் வாள் முகத்து
ஒத்து ஒளிர் பவள வாய் ஓவ கைவினை
தத்தரி நெடும் கணாள் தன்னொடு ஆடும் நாள்
வித்தகற்கு உற்றது விளம்புகின்றதே

#1076
அரும் பெறல் குருசிற்கு அஞ்ஞான்று ஓடிய நாகம் நாணி
கரும்பு எறி கடிகையோடு நெய் மலி கவளம் கொள்ளாது
இரும்பு செய் குழவி திங்கள் மருப்பு-இடை தட கை நாற்றி
சுரும்பொடு வண்டு பாட சுளிவொடு நின்றது அன்றே

#1077
பகை புறம் கொடுத்த வேந்தின் பரிவொடு பகடு நிற்ப
தகை நிற குழைகள் தாழ்ந்து சாந்தின் வாய் நக்கி மின்ன
புகை நிற துகிலில் பொன் நாண் துயல் வர போந்து வேந்தன்
மிகை நிற களிற்றை நோக்கி வேழம் என் உற்றது என்றான்

#1078
கொற்றவன் குறிப்பு நோக்கி குஞ்சர பாகன் கூறும்
இற்றென உரைத்தல் தேற்றேன் இறைவ நின் அருளினாம்-கொல்
செற்றம் மிக்கு உடைமையால்-கொல் சீவகன் இன்ன நாளால்
மற்று இதற்கு உடற்சி செய்ய மதம் இது செறித்தது என்றான்

#1079
ஈண்டு அழல் குட்டம் போல எரி எழ திருகி நோக்கி
கோண் தரு குறும்பர் வெம் போர் கோக்குழாம் வென்றது உள்ளி
மாண்டது இல் செய்கை சூழ்ந்த வாணிகன் மகனை வல்லே
ஆண் திறம் களைவென் ஓடி பற்றுபு தம்-மின் என்றான்

#1080
கன்றிய வெகுளி வேந்தன் கால் வலி இளையர் காய்ந்து
கொன்று உயிர் கொணர ஓடும் கொழும் குடர் கண்ணி மாலை
ஒன்றிய உதிர செச்சை ஒள் நிணம் மீக்கொள் தானை
தென் திசைக்கு இறைவன் தூதின் செம்மலை சென்று சேர்ந்தார்

#1081
சண்பக மாலை வேய்ந்து சந்தனம் பளிதம் தீற்றி
விண் புக நாறு சாந்தின் விழு முலை காமவல்லி
கொண்டு எழுந்து உருவு காட்டி முகத்து-இடை குளித்து தோள் மேல்
வண் தளிர் ஈன்று சுட்டி வாள்_நுதல் பூப்ப வைத்தான்

#1082
பண் அடி வீயும் தீம் சொல் பாவை நின் வனப்பிற்கு எல்லாம்
கண்ணடி கரும் கண் என்னும் அம்பறாத்தூணி தன்னால்
புண் உடை மார்பத்து ஓவாது எய்தியால் எங்கு பெற்றாய்
பெண் உடை பேதை என்று ஓர் நாள் முற்றும் பிதற்றினானே

#1083
திங்கள் சேர் முடியினானும் செல்வியும் போன்று செம்பொன்
இங்கு வார் கழலினானும் கோதையும் இருந்த போழ்தில்
சிங்க ஏறு எள்ளி சூழ்ந்த சிறு நரி குழாத்தின் சூழ்ந்தார்
அங்கு அது கண்ட தாதி ஐயனுக்கு இன்னது என்றாள்

#1084
என்று அவள் உரைப்ப கேட்டே இடிபட முழங்கி செம் தீ
நின்று எரிவதனை ஒத்து நீள் முழை சிங்க ஏறு
தன் துணை பெட்டையோடு தான் புறப்பட்டது ஒத்தான்
குன்று இரண்டு இருந்த போலும் குங்கும குவவு தோளான்

#1085
பொன் அரி மாலை தாழ போது அணி கூந்தல் ஏந்தி
பன்னரு மாலையாற்கு பட்டதை எவன்-கொல் என்னா
பின்னரும் மாலை ஓராள் பெரு நடுக்குற்று நின்றாள்
மன்னரு மாலை நாகம் மழை இடிப்பு உண்டது ஒத்தாள்

#1086
கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி
அடு சிலை அழல ஏந்தி ஆருயிர் பருகற்கு ஒத்த
விடு கணை தெரிந்து தானை வீக்கற விசித்து வெய்தா
தொடு கழல் நரல் வீக்கி சொல்லு-மின் வந்தது என்றான்

#1087
அடி நிழல் தருக என்று எம் ஆணை வேந்து அருளி செய்தான்
வடி மலர் தாரினாய் நீ வருக என வானின் உச்சி
இடி உரும் ஏற்றின் சீறி இரு நிலம் சுடுதற்கு ஒத்த
கடி மதில் மூன்றும் எய்த கடவுளின் கனன்று சொன்னான்

#1088
வாள் இழுக்குற்ற கண்ணாள் வரு முலை நயந்து வேந்தன்
கோள் இழுக்குற்ற பின்றை கோ தொழில் நடாத்துகின்றான்
நாள் இழுக்குற்று வீழ்வது இன்று-கொல் நந்த திண் தேர்
தோள் இழுக்குற்ற மொய்ம்ப பண் என சொல்லினானே

#1089
வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழில் அது ஆகும்
காய்ந்திடு வெகுளி நீக்கி கை கட்டி இவனை உய்த்தால்
ஆய்ந்து அடும் அழற்சி நீங்கும் அது பொருள் என்று நல்ல
சாந்து உடை மார்பன் தாதை தன் மனத்து இழைக்கின்றானே

#1090
ஊன் பிறங்கு ஒளிறும் வேலான் ஓர்த்து தன் உவாத்தி சொல்லால்
தான் புறம் கட்டப்பட்டு தன் சினம் தணிந்து நிற்ப
தேன் பிறங்கு அலங்கல் மாலை சுநந்தையும் துணைவன் தானும்
கோன் புறம் காப்ப சேறல் குணம் என கூறினாரே

#1091
ஈன்ற தாய் தந்தை வேண்ட இ இடர் உற்றது என்றால்
தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்ற சொல் இமிழின் பூட்டி
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முட்டினும் முருக்கும் ஆற்றல்
வான் தரு மாரி வண் கை மதவலி பிணிக்கப்பட்டான்

#1092
குழல் உடை சிகழிகை குமரன் தோள் இணை
கழல் உடை இளையவர் கச்சின் வீக்கலின்
அழல் உடை கடவுளை அரவு சேர்ந்து என
விழவு உடை முதுநகர் விலாவிக்கின்றதே

#1093
தோள் ஆர் முத்தும் தொல் முலை கோட்டு துயல் முத்தும்
வாள் ஆர் உண்கண் வந்து இழி முத்தும் இவை சிந்த
காளாய் நம்பி சீவகசாமி என் நல் தாய்
மீளா துன்ப நீள் கடல் மின்னின் மிசை வீழ்ந்தாள்

#1094
பாலார் ஆவி பைம் துகில் ஏந்தி பட நாகம்
போல் ஆம் அல்குல் பொன் தொடி பூம் கண் குணமாலை
ஏலாது ஏலாது எம் பெருமானுக்கு இஃது என்னா
நூலார் கோதை நுங்கு எரிவாய்ப்பட்டது ஒத்தாள்

#1095
எரி தவழ் குன்றத்து உச்சி இரும் பொறி கலாப மஞ்ஞை
இரிவன போன்று மாடத்து இல் உறை தெய்வம் அன்னார்
பரிவுறு மனத்தின் ஓடி பட்டதை உணர்ந்து பொன் தார்
அரி உறழ் மொய்ம்பவோ என்று ஆகுல பூசல் செய்தார்

#1096
கங்கையின் சுழியில் பட்ட காமரு பிணையின் மாழ்கி
அங்கு அவர்க்கு உற்றது உள்ளி அவல நீர் அழுந்துகின்ற
குங்கும கொடியோடு ஏந்தி கோலம் வீற்றிருந்த கொம்மை
பொங்கு இள முலையினார்க்கு புரவலன் இதனை சொன்னான்

#1097
கண் துயில் அனந்தர் போல கதிகளுள் தோன்றுமாறும்
விட்டு உயிர் போகுமாறும் வீடு பெற்று உயருமாறும்
உள்பட உணர்ந்த யானே உள் குழைந்து உருகல் செல்லேன்
எள் பகவு அனைத்தும் ஆர்வம் ஏதமே இரங்கல் வேண்டா

#1098
நல் மணி இழந்த நாகர் நல் இளம் படியர் போல
இன் மணி இழந்து சாம்பி இரு நிலம் இவர்கள் எய்த
மின் அணி மதியம் கோள் வாய் விசும்பு-இடை நடப்பதே போல்
கல் மணி உமிழும் பூணான் கடை பல கடந்து சென்றான்

#1099
வெந்தனம் மனம் என வெள்ளை நோக்கின் முள் எயிற்று
அந்துவர் பவள வாய் அம் மழலை இன்சொலார்
பந்து பாவை பைம் கழங்கு பைம்பொன் முற்றில் சிற்றிலுள்
நொந்து வைத்து நூபுரம் ஒலிப்ப ஓடி நோக்கினார்

#1100
மல்லிகை மலிந்த மாலை சோர ஆர்ந்த குண்டலம்
வில் இலங்க மின்னு கோட்ட வீணை விட்டு வெய்து உராய்
ஒல் என சிலம்பு அரற்ற வீதி மல்க ஓடினார்
சில் சுணங்கு இள முலை செழு மலர் தடம் கணார்

#1101
நெய் தலை கரும் குழல் நிழன்று எருத்து அலைத்தர
முத்து அலைத்து இள முலை முகம் சிவந்து அலமர
கைத்தலம் கடுத்து அடித்த பந்து நீக்கி வந்து அவண்
மை தலை நெடும் தடம் கண் மங்கையர் மயங்கினர்

#1102
கோதை கொண்ட பூம் சிகை கொம்மை கொண்ட வெம் முலை
மாது கொண்ட சாயல் அம் மடந்தையர் மனம் கசிந்து
ஓதம் முத்து உகுப்ப போல் உண்கண் வெம் பனி உகுத்து
யாது செய்கம் ஐய என்று அன்பு மிக்கு அரற்றினர்

#1103
செம்பொன் ஓலை வீழவும் செய் கலங்கள் சிந்தவும்
அம் பொன் மாலையோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும்
நம்பன் உற்றது என் எனா நாடகம் மடந்தையர்
வெம்பி வீதி ஓடினார் மின்னின் அன்ன நுண்மையார்

#1104
பூ அலர்ந்த தாரினான் பொற்பு வாடும் ஆயிடின்
போ உடம்பு வாழ் உயிர் பொன்று நீயும் இன்று எனா
வீ கலந்த மஞ்ஞை போல் வேல் நெடும் கண் நீர் மல்க
ஆகுலத்து அரிவையர் அம் வயிறு அதுக்கினார்

#1105
தேன் மலிந்த கோதை மாலை செய் கலம் உகுத்து உராய்
கால் மலிந்த காமவல்லி என்னது அன்னர் ஆயரோ
பால் மலிந்த வெம் முலை பைம் துகில் அரிவையர்
நூல் மலிந்த நுண் நுசுப்பு நோவ வந்து நோக்கினார்

#1106
மாதரார்கள் கற்பினுக்கு உடைந்த மா மணி கலை
தீது இல் ஆரம் நூல் பெய்வார் சிதர்ந்து போக சிந்துவார்
போது உலாம் அலங்கலான் முன் போந்து பூம் தெரிவையர்
ஆ தகாது என கலங்கி அம் வயிறு அதுக்கினார்

#1107
வட்டிகை மணி பலகை வண்ண நுண் துகிலிகை
இட்டு இடை நுடங்க நொந்து இரியல் உற்ற மஞ்ஞையின்
கட்டு அழல் உயிர்ப்பின் வெந்து கண்ணி தீந்து பொன் உக
மட்டு அவிழ்ந்த கோதையார்கள் வந்து வாயில் பற்றினார்

#1108
வினையது விளைவு காண்-மின் என்று கை விதிர்த்து நிற்பார்
இனையனாய் தெளிய சென்றால் இடிக்கும்-கொல் இவனை என்பார்
புனை நலம் அழகு கல்வி பொன்றுமால் இன்றோடு என்பார்
வனை கல திகிரி போல மறுகும் எம் மனங்கள் என்பார்

#1109
நோற்றிலர் மகளிர் என்பார் நோம் கண்டீர் தோள்கள் என்பார்
கூற்றத்தை கொம்மை கொட்டி குலத்தொடு முடியும் என்பார்
ஏற்றது ஒன்று அன்று தந்தை செய்த இ கொடுமை என்பார்
ஆற்றலள் சுநந்தை என்பார் ஆ தகாது அறனே என்பார்

#1110
தூக்கு-மின் காளை சீறின் துற்று இவன் உளனோ என்பார்
காக்குமால் வையம் எல்லாம் காவலன் ஆகி என்பார்
பாக்கியமே பெரிது காண் இதுவும் ஓர் பான்மை என்பார்
நோக்கன்-மின் நாணும் கண்டீர் நுதி கொள் நாகரிகன் என்பார்

#1111
பூ வரம்பு ஆய கோதை பொன் அனார் புலவி நீக்கி
நூபுரம் திருத்தி சேந்த நுதி விரல் நொந்த என்பார்
யாவரும் புகழும் ஐயன் அழகு கெட்டு ஒழியும்-ஆயின்
கோபுர மாட மூதூர் கூற்று உண விளிக என்பார்

#1112
கரும் சிலை மறவர் கொண்ட கண நிரை விடுக்க வல்ல
இரும் சிலை பயின்ற திண் தோட்கு இது தகாது என்று குன்றில்
கரும் கடல் துளுப்பிட்டு ஆங்கு கல் என கலங்கி காமர்
அரும் கடி அரண மூதூர் ஆகுலம் மயங்கிற்று அன்றே

#1113
இங்ஙனம் இவர்கள் ஏக எரி அகம் விளைக்கப்பட்ட
வெம் கணை விடலை தாதை வியன் நகர் அவலம் எய்தி
அங்கு அவர் உகுத்த கண்ணீர் அடி துகள் அவிப்ப நோக்கி
பொங்கு அமர் உழக்கும் வேலான் புலம்பு கொண்டு அழேற்க என்றான்

#1114
மின்னினால் மலையை ஈர்ந்து வேறு இரு கூறு செய்வான்
துன்னினான் துளங்கின் அல்லால் துளங்கல் அ மலையிற்கு உண்டே
அன்னதே துணிந்த நீதி அரு நவை நமனும் ஆற்றான்
என்னை நேர் நின்று வாழ்தல் இரு நிலத்து ஆவது உண்டே

#1115
வளை கடல் வலையின் சூழ்ந்து மால் வரை வேலி கோலி
உளை அரி படுக்கல் உற்றான் படுப்பினும் படுக்க மற்று என்
கிளை அழ என்னை வாள் வாய் கீண்டிடல் உற்று நின்றான்
தளை அவிழ் கண்ணி சிந்த தன் தலை நிலத்தது அன்றே

#1116
நீர் அகம் பொதிந்த மேகம் நீல் நிற நெடு நல் யானை
போர் முகத்து அழலும் வாள் கை பொன் நெடும் குன்றம் அன்னான்
ஆர் கலி யாணர் மூதூர் அழுது பின் செல்ல செல்வான்
சீர் உறு சிலம்பி நூலால் சிமிழ்ப்பு உண்ட சிங்கம் ஒத்தான்

#1117
மன்னர் தம் வெகுளி வெம் தீ மணி முகில் காணம் மின்னி
பொன் மழை பொழியின் நந்தும் அன்று எனின் புகைந்து பொங்கி
துன்னினார் தம்மை எல்லாம் சுட்டிடும் என்று செம்பொன்
பன்னிரு கோடி உய்த்து கந்துகன் பணிந்து சொன்னான்

#1118
மன்னவ அருளி கேண்மோ மடந்தை ஓர் கொடியை மூதூர்
நின் மத களிறு கொல்ல நினக்கு அது வடு என்று எண்ணி
என் மகன் அதனை நீக்கி இன் உயிர் அவளை காத்தான்
இன்னதே குற்றம் ஆயின் குணம் இனி யாது வேந்தே

#1119
நாண் மெய் கொண்டு ஈட்ட பட்டார் நடுக்குறும் நவையை நீக்கல்
ஆண் மக்கள் கடன் என்று எண்ணி அறிவு இன்மை துணிந்த குற்றம்
பூண் மெய் கொண்டு அகன்ற மார்ப பொறு-மதி என்று பின்னும்
நீண்மை கண் நின்று வந்த நிதி எலாம் தருவல் என்றான்

#1120
வாழியர் இறைவ தேற்றான் மா நிரை பெயர்த்த காளை
பீழைதான் பொறுக்க என்ன பிறங்கிணர் அலங்கல் மாலை
சூழ் கதிர் ஆரம் வீழ் நூல் பரிந்து அற நிமிர்ந்து திண் தோள்
ஊழ் பிணைந்து உருமின் சீறி உடல் சினம் கடவ சொன்னான்

#1121
ஆய் களிற்று அசனி வேகம் அதன் மருப்பு ஊசி ஆக
சீவகன் அகன்ற மார்பம் ஓலையா திசைகள் கேட்ப
காய்பவன் கள்வர் என்ன எழுதுவித்திடுவல் இன்னே
நீ பரிவு ஒழிந்து போய் நின் அகம் புகு நினையல் என்றான்

#1122
நஞ்சு அனான் உரைப்ப கேட்டே நாய்கனும் நடுங்கி உள்ளம்
வெம் சின வேழம் உண்ட விளங்கனி போன்று நீங்கி
எஞ்சினன் போல நின்றான் ஏத்த அரும் தவத்தின் மிக்க
வஞ்சம் இல் கொள்கையான் சொல் அமிர்தினால் வற்புற்றானே

#1123
மின் இலங்கு எஃகினானை பெறுகலான் தந்தை மீண்டு
தன் இலம் குறுகலோடும் தாய் அழுது அரற்றுகின்றாள்
என் நிலை ஐயற்கு என்ன யாவதும் கவல வேண்டா
பொன் நலம் கொடியனாய் ஓர் பொருள் உரை கேள் இது என்றான்

#1124
மது மடை திறந்து தீம் தேன் வார் தரு கோதை நீ முன்
செது மக பலவும் பெற்று சிந்தை கூர் மனத்தை ஆகி
இது மகவு அழியின் வாழேன் இறப்பல் யான் என்னும் ஆங்கண்
கதுமென கடவுள் தோன்றி கடை முகம் குறுக வந்தான்

#1125
கறவை காண் கன்றின் வெஃகி கண்டு அடி பணிந்து காமர்
நறவு அயா உயிர்க்கும் மாலை நாற்றிய இடத்துள் ஏற்றி
அறவியாற்கு ஆறும் மூன்றும் அமைந்த நால் அமிர்தம் ஏந்த
பறவை தாது உண்ட வண்ணம் பட்டினி பரிவு தீர்ந்தான்

#1126
ஆய் மணி பவள திண்ணை அரும் பெறல் கரகத்து அங்கண்
தூய் மணி வாசம் நல் நீர் துளங்கு பொன் கலத்துள் ஏற்று
வேய் மணி தோளி நிற்ப விழுத்தவன் நியமம் முற்றி
வாய் மணி முறுவல் தோன்ற வந்தனை விதியின் செய்தேன்

#1127
ஆறு எலாம் கடலுள் வைகும் அரும் தவத்து இறைவன் நூலுள்
வேறு எலா பொருளும் வைகும் விழு தவ அறிதி நீயே
ஊறு இலா உணர்வின் நோக்கி உரை-மதி எவன்-கொல் மக்கள்
பேறு இலாள் அல்லள் பெற்ற உயிர் சென்று பிறக்கும் என்றேன்

#1128
வம்பு அவிழ் கோதை தந்த வான் துவர் காயை வீழ்த்து ஓர்
செம் பழு காயை வாங்கி திருநிலத்து எடுத்து கொண்டு ஆங்கு
அம்பு அழ நீண்ட வாள் கண் அலமரும் அணி செய் அம் பூம்
கொம்பு அடு நுசுப்பினாய்க்கு தந்தனென் பேணி கொண்டாய்

#1129
பெற்ற அ நிமித்தத்தானும் பிறந்த சொல் வகையினானும்
அற்றம் இல் மணியை அம் கை கொண்டு அவர் கண்டு காட்ட
கற்பகம் காமவல்லி அனைய நீர் கேண்-மின் என்று
முற்றுபு கனிந்த சொல்லான் முனிவரன் மொழியும் அன்றே

#1130
ஒன்றும் நீர் கவலல் வேண்டா உலகு எலாம் ஆளும் சீர்த்தி
பொன் திகழ் உருவினான் ஓர் புண்ணியன் பெறுதிர் என்ன
நின்ற நீ உவந்து நீங்க நிகழ் பொருள் எனக்கு செப்பி
பின்றையும் நிகழ்வது உண்டு பேசுவல் கேள் இது என்றான்

#1131
நிலவு உறழ் பூணினானை நெடு நகர் இரங்க கையாத்து
அலபல செய்து கொல்வான் அருளிலான் கொண்ட போழ்தில்
குலவிய புகழினானை கொண்டு போம் இயக்கன் அஞ்சல்
சில பகல் கழிந்து காண்டி சிந்தி ஈது என்று சொன்னான்

#1132
வசை அற நிறைந்த கற்பின் மாலையும் மாமி-தானும்
தசை அற உருகி வெந்து தம் உயிர் நீங்கும் ஆங்கண்
நொசி தவன் சொற்கள் என்றும் நோன் புணை தழுவி நெஞ்சில்
கசிவு எனும் கடலை நீந்தி கரை எனும் காலை கண்டார்

#1133
திரு குழல் மகளிர் நைய சீவகசாமி திண் தோள்
வரி கச்சில் பிணிக்கப்பட்டான் மன்னனால் என்ன கேட்டே
தருக்கு உடை வேழம் வாளார் ஞாட்பினுள் தகைமை சான்ற
மருப்புடன் இழந்தது ஒத்தார் மன் உயிர் தோழன்மாரே

#1134
நட்டவற்கு உற்ற கேட்டே பதுமுகன் நக்கு மற்று ஓர்
குட்டியை தின்னலாமே கோள் புலி புறத்தது ஆக
கட்டியங்காரன் என்னும் கழுதை நம் புலியை பாய
ஒட்டி இஃது உணரலாமே உரைவல்லை அறிக என்றான்

#1135
சிலையொடு செல்வன் நின்றால் தேவரும் வணக்கல் ஆற்றார்
முலை உடை தாயொடு எண்ணி தந்தை இ கொடுமை செய்தான்
கலை வல்லீர் இன்னும் கேண்-மின் இன்னது என்று உரைக்கும் ஆங்கண்
விரைவொடு சென்ற ஒற்றாள் விளைந்தவா பேசுகின்றான்

#1136
இட்டி வேல் குந்தம் கூர்வாள் இரும் சிலை இருப்பு சுற்றார்
நெட்டிலை சூலம் வெய்ய முளைத்தண்டு நெருங்க ஏந்தி
எட்டு எலா திசையும் ஈண்டி எழாயிரத்து இரட்டி மள்ளர்
கட்டு அழல் கதிரை ஊர்கோள் வளைத்தவா வளைத்து கொண்டார்

#1137
பிடியொடு நின்ற வேழம் பெரு வளைப்புண்ட வண்ணம்
வடி மலர் கோதையோடும் வளைத்தலின் மைந்தன் சீறி
விடு கணை சிலையொடு ஏந்தி வெருவர தோன்றலோடும்
அடு புலி கண்ட மான் போல் ஆறல ஆயினாரே.

#1138
சூழ் கழல் மள்ளர் பாற சூழ்ச்சியின் தந்தை புல்லி
வீழ்தரு கண்ணள் தம்மோய் விளங்கு தோள் பிணிப்ப மற்று என்
தோழரை வடு செய்திட்டேன் என்று தான் துளங்கி நின்றான்
ஊழ் திரை பாம்பு சேர்ந்த ஒளி மிகு பருதி ஒத்தான்

#1139
ஒற்றன் வந்து உரைப்ப கேட்டே ஒத்ததோ என் சொல் என்னா
சுற்றினார் முகத்தை நோக்கி சூழி மால் யானை அன்னான்
உற்ற இ இடரை தீர்க்கும் உபாயம் நீர் உரை-மின் என்றான்
பொன் திரள் குன்றம் போல பொலிவு கொண்டு இருந்த தோளான்

#1140
நிறை திங்கள் ஒளியோடு ஒப்பான் புத்திசேன் நினைந்து சொல்லும்
மறைத்து இங்கண் நகரை வல்லே சுடுதும் நாம் சுடுதலோடும்
இறை குற்றேல் செய்தல் இன்றி எரியின் வாய் சனங்கள் நீங்க
சிறை குற்றம் நீங்க செற்றான் செகுத்து கொண்டு எழுதும் என்றான்

#1141
கால தீ நகரை மேய கடி அரண் கடிந்த அம்பின்
சால தீ சவரர் கோலம் செய்து நம் மறவர் ஈண்டி
கோல தீ வேலினானை கோயிலுள் வளைப்ப இப்பால்
ஆலை தீ இடங்கள்-தோறும் ஆகுலம் செய்தும் என்றான்

#1142
சிறை புறம் காத்து செல்லு மதனனை தெருவில் வீழ
பிறை தலை அம்பில் சென்னி பெருநிலத்து இடுவல் இட்டால்
மறுக்கு உற்று மள்ளர் நீங்க மைந்தனை கொண்டு போகி
அறை தொழிலார்க்கும் செல்லா அரு மிளை புகு-மின் என்றான்

#1143
மாற்றவர் மலைப்பின் ஆங்கே வாள் கடா கொண்டு நொய்தா
வேற்று உலகு ஏற்றி நும் பின் விரை தர்வேன் உலகிற்கு எல்லாம்
ஆற்றிய நட்பு வல்லே வலிப்பு உறீஇ இடு-மின் என்றான்
கூற்றங்கள் பலவும் தொக்க கூற்றத்தில் கூற்றம் ஒப்பான்

#1144
காலனை சூழ்ந்த நோய் போல் நபுல மா விபுலர் சூழ
வேலினை ஏந்தி நந்தன் வெருவர தோன்றலோடும்
மாலை தன் தாதை தானும் மக்களும் வந்து கூடி
பாலவர் பிறரும் ஈண்டி பாய் புலி இனத்தின் சூழ்ந்தார்

#1145
மட்டு வாய் அவிழ்ந்த தண் தார் தாமரை நாமன் சொன்ன
கட்டமை நீதி தன் மேல் காப்பு அமைந்து இவர்கள் நிற்ப
பட்டு உலாய் கிடந்த செம்பொன் கலை அணி பரவை அல்குல்
இட்டு இடை பவள செ வாய் தத்தையும் இதனை கேட்டாள்

#1146
மணி இயல் யவன செப்பின் மங்கல துகிலை வாங்கி
கணை புரை கண்ணி ஏற்ப உடுத்த பின் செம்பொன் செப்பில்
பிணையலும் நறிய சேர்த்தி பெரு விலை ஆரம் தாங்கி
துணைவனுக்கு உற்ற துன்பம் சொல்லிய தொடங்கினாளே

#1147
பொன் அணி மணி செய் ஓடை நீரின் வெண்சாந்து பூசி
தன்னுடை விஞ்சை எல்லாம் தளிர் இயல் ஓதலோடும்
மின் அடு வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும்
மன்னுடன் ஏந்தி தெய்வ மாதரை சூழ்ந்த அன்றே

#1148
ஆரம் மின்னும் பணை வெம் முலை ஆடு அமை தோளினாள்
வீரன் உற்ற துயர் மின் என நீக்கிய மெல்லவே
நேர மன்னும் வருக என்று நின்றாள் நினைந்தாள்-அரோ
பாருள் மன்னும் பழி பண்பனுக்கு இன்று விளைந்ததே

#1149
மன்னன் செய்த சிறை மா கடலுள் குளித்து ஆழ்வுழி
தன்னை எய்தி சிறை மீட்டனள் தன் மனையாள் எனின்
என்னை ஆவது இவன் ஆற்றலும் கல்வியும் என்று உடன்
கொன்னும் வையகம் கொழிக்கும் பழிக்கு என் செய்கோ தெய்வமே

#1150
செல்வன் உற்ற சிறை செய்யவள் நீக்கும் என்றால் பழி
இல்லை-ஆயின் அவள் யான் எனும் வேற்றுமை இல்லையே
சொல்லின் வெள்ளி மலை தோடு அவிழ் தாமரை பொன் மலர்
எல்லை ஆகும் பொது பெண் அவள் யான் குல மங்கையே

#1151
ஆவது ஆக புகழும் பழியும் எழும் நாள் அவை
தேவர் மாட்டும் உள மக்களுள் இல்வழி தேர்கலேன்
நோம் என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்ட தன்
காவல் கன்றின் புனிற்று ஆ அன கார் மயில் சாயலே

#1152
மாநகர் சுடுதல் ஒன்றோ மதனனை அழித்தல் ஒன்றோ
வான் நிகர் இல்லா மைந்தர் கருதியது அதுவும் நிற்க
வேய் நிகர் இல்ல தோளி விஞ்சையால் விடுத்து கொள்ள
போய் உயிர் வாழ்தல் வேண்டேன் என பொருள் சிந்திக்கின்றான்

#1153
கச்சு அற நிமிர்ந்து மாந்தர் கடாவிடு களிறு போல
உச்சியும் மருங்கும் பற்றி பிளந்து உயிர் பருகி கோண்மா
அச்சுற அழன்று சீறி ஆட்டு இனம் புக்கது ஒப்ப
குச்சென நிரைத்த யானை குழாம் இரித்திடுவல் என்றான்

#1154
மின் இலங்கு எயிற்று வேழம் வேழத்தால் புடைத்து திண் தேர்
பொன் இலங்கு இவுளி தேரால் புடைத்து வெம் குருதி பொங்க
இன் உயிர் அவனை உண்ணும் எல்லை நாள் வந்தது இல்லை
என்னை இ கிருமி கொன்று என் தோழனை நினைப்பல் என்றான்

#1155
தோழனும் தேவிமார் தம் குழாத்து உளான் துளும்பும் முந்நீர்
ஏழ் தரு பருதி-தன் மேல் இளம் பிறை கிடந்ததே போல்
தாழ் தகை ஆர மார்பின் சீவகன் குணங்கள் தம்மை
யாழ் எழீஇ பாட கேட்டு ஓர் அரம்பையை சேர்ந்து இருந்தான்

#1156
வயிரம் வேய்ந்த மணி நீள் முடி வால் ஒளி வானவன்
செயிரின் தீர்ந்த செழும் தாமரை கண் இடன் ஆடலும்
உயிர் அனானை நினைந்தான் உற்றது ஓதியின் நோக்கினான்
மயில் அனார்க்கு படி வைத்தவன் மால் விசும்பு ஏறினான்

#1157
இடியும் மின்னும் முழக்கும் இவற்றான் உலகம் நிறைந்து
ஒடியும் ஊழி இவண் இன்று உறு கால் வரை கீழ்ந்து என
நடலை நோக்கி கதிர் நாணுவது ஒப்ப மறைந்த பின்
கடலை ஏந்தி நிலத்து இட்டு என மாரி கலந்ததே

#1158
விண்ணும் மண்ணும் அறியாது விலங்கொடு மாந்தர்-தம்
கண்ணும் வாயும் இழந்து ஆம் கடல் கொண்டது காண்க என
பெண்ணும் ஆணும் இரங்க பெருமான் மகன் சாமியை
அண்ணல் ஏந்தி அகம் புலி கொண்டு எழுந்து ஏகினான்

#1159
குன்று உண்டு ஓங்கு திரள் தோள் அவன் கொண்டு எழுந்து ஏகலும்
நன்று உண்டாக என நல் நுதல் வாழ்த்தினள் வாழ்த்தலும்
ஒன்று உண்டாயிற்று அவள் உள் அழி நோயுறு காளையை
என்று உண்டாம்-கொல் இனி கண்படும் நாள் எனும் சிந்தையே

#1160
சந்த மாலை தொகை தாழ்ந்து சாந்தம் கமழ் பூமியுள்
வந்த விண்ணோர்களை வாழ்த்தி ஏத்தி இ மலர் மாலை தூய்
எந்தைமார்கள் எழுக என்ன ஏக விடுத்தாள் குரல்
சிந்தை செய்யும் சிறகர் கிளி தோற்கும் அம் தீம் சொலாள்

#1161
மலை தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான்
கொலை தொகை வேலினானை கொல்லிய கொண்டு போந்தான்
நலத்தகை அவனை காணான் நஞ்சு உயிர்த்து அஞ்சி நோக்கி
சிலை தொழில் தட கை மன்னற்கு இற்றென செப்புகின்றான்

#1162
மன்னனால் சீறப்பட்ட மைந்தனை கொல்ல போந்தாம்
என் இனி சொல்லி சேறும் என் செய்தும் யாங்கள் எல்லாம்
இன்னது பட்டது என்றால் எரி விளக்கு உறுக்கும் நம்மை
துன்னுபு சூழ்ந்து தோன்ற சொல்லு-மின் செய்வது என்றான்

#1163
வாழ்வதோர் உபாயம் நாடி மதி உடம்பட்டு வல்லே
சூழ்வினையாளர் ஆங்கண் ஒருவனை தொடர்ந்து பற்றி
போழ் பட பிளந்து வாளின் புரட்டி இட்டு அரிய கண்டே
ஆழ் கல மாந்தர் போல அணி நகர் அழுங்கிற்று அன்றே

#1164
காய் சின வெகுளி வேந்தே களிற்றொடும் பொருத காளை
மாசனம் பெரிதும் மொய்த்து மழையினோடு இருளும் காற்றும்
பேசின் தான் பெரிதும் தோன்ற பிழைத்து உய்ய போதல் அஞ்சி
வாசம் கொள் தாரினானை மார்பு போழ்ந்து உருட்டி இட்டேம்

#1165
அருள் வலி ஆண்மை கல்வி அழகு அறிவு இளமை ஊக்கம்
திரு மலி ஈகை போகம் திண் புகழ் நண்பு சுற்றம்
ஒருவர் இ உலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார்
பெரிது அரிது இவனை கொன்றாய் பெறுக என சிறப்பு செய்தான்
@5 பதுமையார் இலம்பகம்

#1166
வீட்டரும் சிறையில் தேவன் விடுத்து உய கொள்ளப்பட்ட
கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான்-கொல் என்னில்
கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் கூடிய பளிங்கில் தோன்றும்
தீட்டரும் படிவம் அன்னான் திறம் கிளந்து உரைத்தும் அன்றே

#1167
விலங்கி வில் உமியும் பூணான் விழு சிறைப்பட்ட-போழ்தும்
அலங்கல் அம் தாரினான் வந்து அரும் சிறைவிடுத்த-போழ்தும்
புலம்பலும் மகிழ்வும் நெஞ்சில் பொலிதலும் இன்றி பொன் ஆர்ந்து
உலம் கலந்து உயர்ந்த தோளான் ஊழ்வினை என்று விட்டான்

#1168
வானரம் உகள நாக மலர் துதைந்து ஒழுக அஞ்சி
தேன் இரைத்து எழுந்து திங்கள் இறால் என சென்று மொய்க்கும்
கான் அமர் அருவி குன்றில் காய் கதிர் சுமந்து ஓர் திங்கள்
மேல் நிமிர்ந்து ஏறி ஆங்கு தேவன் வெற்பு ஏறினானே

#1169
திங்களை தெளித்திட்டு அன்ன பால்கடல் திரை செய் தெண்ணீர்
வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் உரிமை-தன்னால்
மங்கல வகையின் ஆட்டி மணி அணி கலங்கள் சேர்த்தி
பங்கய நெடும் கணாளை பவித்திர குமரன் என்றான்

#1170
பொன் அணி காம்பு செய்த பொழி கதிர் திங்கள் போலும்
பின்னிய முத்த மாலை பிணையல் தாழ் குடையின் நீழல்
கன்னியர் கவரி வீச கன மணி குழை வில் வீச
இன் இசை கூத்து நோக்கி இருந்தனன் திலகம் அன்னான்

#1171
இரு மலர் குவளை உண்கண் இமைப்பு இலா பயத்தை பெற்ற
அரி மலர் தாரினான் தன் அழகு கண்டு அளிய என்னா
திரு மலர் கோதை ஐம்பால் தேவியர் தொடர்பு கேட்ப
எரி மணி பூணினானும் இன்னணம் இயம்பினானே

#1172
பிணி குலத்து அக-வயின் பிறந்த நோய் கெடுத்து
அணி தகை உடம்பு எனக்கு அருளி நோக்கினான்
கணிப்பு அரும் குண தொகை காளை என்றனன்
மணி கலத்து அகத்து அமிர்து அனைய மாண்பினான்

#1173
கடல் சுறவு உயரிய காளை அன்னவன்
அடற்கு அரும் பகை கெடுத்து அகன்ற நீள் நிலம்
மடத்தகை அவளொடும் வதுவை நாட்டி நாம்
கொடுக்குவம் என தெய்வ மகளிர் கூறினார்

#1174
செரு நிலத்து அவன் உயிர் செகுத்து மற்று எனக்கு
இரு நிலம் இயைவதற்கு எண்ணல் வேண்டுமோ
திருநில கிழமையும் தேவர் தேயமும்
தரும் நிலத்து எமக்கு எனில் தருகும் தன்மையீர்

#1175
மண் மிசை கிடந்தன மலையும் கானமும்
நண்ணுதற்கு அரியன நாடும் பொய்கையும்
கண் மனம் குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு
எண்ணம் ஒன்று உளது எனக்கு இலங்கு பூணினாய்

#1176
ஆற்றினது அமைதி அங்கு அறிய கூறினான்
ஊற்று நீர் கூவலுள் உறையும் மீன் அனார்
வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார்
போற்று நீ போவல் யான் என்று கூறினாற்கு

#1177
இ மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் இருண்டு தோன்றும்
அ மலை அரண பாதம் என்ப அதன் தாள் வாய் தோன்றும்
தம் வினை கழுவுகின்றார் சாரணர் தரணி காவல்
வெம்மையின் அகன்று போந்து விழைவு அற துறந்து விட்டார்

#1178
சிந்தையில் பருதி அன்னார் சேவடி இறைஞ்சலோடும்
வெம் திறல் இயக்கி தோன்றி விருந்து எதிர்கொண்டு பேணி
தந்து அவள் அமிர்தம் ஊட்ட உண்டு அவள் பிரிந்த-காலை
சந்து உடை சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய்

#1179
அங்கு நின்று அகன்ற பின் ஐ ஐம் காவதம்
வெம் களி விடும் மத வேழ பேரினம்
தங்கிய காடு அது தனி செல்வார் இலை
கங்கையின் கரையது கடலின் தோன்றுமே

#1180
புனல் எரி தவழ்ந்து என பூத்த தாமரை
வனம் அது வாள் என வாளை பாய்வன
மனம் மகிழ் பெரும் தடம் வலத்து இட்டு ஏகுதி
இன மலர் தாரினாய் இரண்டு காதமே

#1181
காந்திய மணியொடு வயிரம் பொன் கலந்து
ஏந்தல் நின் தோள் என இரண்டு குன்று போய்
பூம் துகில் மகளிரில் பொலிந்து போர்த்தது ஓர்
பேம் தரு பேய் வனம் பெரிய காண்டியே

#1182
இள வெயில் மணி வரை எறித்திட்டு அன்னது ஓர்
அளவு அரு குங்குமத்து அகன்ற மார்பினாய்
களவினின் அணி நலம் கவர்ந்த கள்வ என்று
உளர் மணி கொம்பனார் உருகி நைபவே

#1183
பழம் குழைந்து அனையது ஓர் மெலிவின் பை என
முழங்கு அழல் வேட்கையின் முறுகி ஊர்தர
தழும் பதம் இது என சார்ந்து புல்லலும்
பிழிந்து உயிர் உண்டிடும் பேய்கள் ஆபவே

#1184
கண்ட பேய் நகரின் நீங்கி காவதம் கடந்து தோன்றும்
வெண் தலை புணரி வீசி கிடந்த பொன் தீவிற்று ஆகி
கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடி கரும்பு உடுத்த வேலி
நுண் துகில் நுழைந்த அல்குல் பவளம் ஒத்து இனியது ஒன்றே

#1185
படு மழை பருவம் பொய்யா பல்லவ தேயம் என்னும்
தட மலர் குவளை பட்டம் தழுவிய யாணர் நல் நட்டு
இடை நெறி அசைவு தீர இருந்து அவண் ஏகல் உற்றால்
கட நெறி கடத்தற்கு இன்னா கல் அதர் அத்தம் உண்டே

#1186
நுதி கொண்டன வெம் பரல் நுண் இலை வேல்
பதி கொண்டு பரந்தன போன்று உளவால்
விதி கண்டவர் அல்லது மீது செலார்
வதி கொண்டது ஓர் வெவ் அழல் வாய் சொலின் வேம்

#1187
குழவி பிடி குஞ்சரம் மாழ்கும் என
தழுவி சுடு வெவ் அழல் தாங்குவன
கெழுவி பெடையை கிளர் சேவல் தழீஇ
தொழுதி சிறகில் துயர் ஆற்றுவன

#1188
கலை இன் பிணை கன்றிடும் என்று கசிந்து
இலையின் நிழல் அவ்வயின் இன்மையான்
நிலையின் நிழல் தான் அது நின்று கொடுத்து
உலையும் வெயில் நின்று உருகும் உரவோய்

#1189
கட நாகம் மதம் கலந்து உக்க நிலத்து
உடை நாண் என மின் என ஒண் மணி அம்
பட நாகம் அழன்று பதைத்து வரும்
மடனாம் அயலார் மனம் வைப்பதுவே

#1190
நெறியில் தளர்வார் தம நெஞ்சு உருகி
பொறியில் தளர்வார் புரிவார் சடையார்
அறி மற்றவர் தாபதர் அவ்வழியார்
கறை முற்றிய காமரு வேலவனே

#1191
குலை வாழை பழுத்த கொழும் பழனும்
நிலை மாத்தன தேம் உறும் தீம் கனியும்
பலவு ஈன்றன முள் உடை அள் அமிர்தும்
மலை யாற்று அயல் யாவும் மடுத்து உளவே

#1192
வளர் பைம்பொனும் வாள் ஒளி நீள் மணியும்
ஒளிர்கின்றன ஓசனை நீள் நிலமும்
தளர்வு ஒன்று இலர் தாபதர் தாம் விழையும்
குளிர் கொண்டது ஓர் சித்திர கூடம் அதே

#1193
முழவின் இசை மூரி முழங்கு அருவி
கழையின் துணி சந்தொடு கல் என ஈர்த்து
இழியும் வயிரத்தொடு இனம் மணி கொண்டு
அழியும் புனல் அஞ்சனமாநதியே

#1194
இது பள்ளி இடம் பனி மால் வரைதான்
அது தெள் அறல் யாறு உவை தே மர மா
கதி தள்ளி இராது கடைப்பிடி நீ
மதி தள்ளி இடும் வழை சூழ் பொழிலே

#1195
வருந்தும் நீர்மை அ மாதவர் பள்ளியுள்
குருந்தம் ஏறிய கூர் அரும்பார் முல்லை
பொருந்து கேள்வரை புல்லிய பொன் அனார்
மருங்கு போன்று அணி மா கவின் கொண்டதே

#1196
குரவம் நீடிய கொன்றை அம் கானின் வாய்
வரகு வாளில் தொலைச்சுநர் பாடலின்
அரவ வண்டொடு தேன் இனம் யாழ் செயும்
பரவை மா நிலம் பன்னிரு காதமே

#1197
ஆங்கு அ எல்லை இகந்து அடு தேறலும்
பூம் கள் பொன் குடமும் நிறைத்து ஈண்டிய
ஏங்கு கம்பலத்து இன் இசை சூழ் வயல்
தாங்கு சீர் தக்க நாட்டு அணி காண்டியே

#1198
பாளை வாய் கமுகின் நெற்றி படு பழம் உதிர விண்டு
நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி
வாளை வாய் உறைப்ப நக்கி வராலொடு மறலும் என்ப
காளை நீ கடந்து செல்லும் காமரு கவின் கொள் நாடே

#1199
அங்கு அதன் தனது இடம் கடந்து போம் வழி
பொங்கு பூம் சண்பக போது போர்த்து உராய்
அங்கு அ நாட்டு அரிவையர் கூந்தல் நாறி தேன்
எங்கும் மொய்த்து இழிவது ஓர் யாறு தோன்றுமே

#1200
மின் உடை மணி பல வரன்றி மேதகு
தன் உடை நலம் பகிர்ந்து உலகம் ஊட்டலின்
பொன் உடை கலை அல்குல் கணிகை பூம் புனல்
மன் உடை வேலினாய் வல்லை நீந்தினால்

#1201
யானை வெண் மருப்பினால் இயற்றி யாவதும்
மான மா கவரி வெண் மயிரின் வேய்ந்தன
தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய
கானவர் குரம்பை சூழ் காடு தோன்றுமே

#1202
கடும் துடி குரலொடு கடையும் கள் குரல்
நெடும் கை மான் குரல் மணி அருவி நீள் குரல்
அடும் புலி குரலொடு மயங்கி அஞ்சிய
இடும்பை மான் குரல் விளி எங்கும் மிக்கவே

#1203
பொன் அணி திகிரி அம் செல்வன் பொற்பு உடை
கன்னிய மகளிரின் காண்டற்கு அரியன
நல் மணி புரித்தன வாவி நான்கு உள
கல் நவில் தோளினாய் காட்டு-வாயவே

#1204
அரும் கல சே இதழ் ஆர்ந்த வாவி ஒன்று
இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று
ஒருங்கு நோய் தீர்ப்பது ஒன்று அமிர்தம் அல்லது ஒன்று
அரும்பு அவிழ் குவளை நீர் வாவி ஆகுமே

#1205
கை அடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்
பை உடை யாக்கையர் பாவ மூர்த்தியர்
ஐ என தோன்றுவர் தோன்றி ஆள் அழித்து
உய் வகை அரிது என உடலம் கொள்பவே

#1206
அண்ணல் மேல் அரிவையர் கண்ணின் மொய்த்து அவண்
மண்ணின் மேல் மாந்தர்கள் மொய்க்கும் வாவியை
எண்ணம் ஒன்று இன்றியே இடத்து இட்டு ஏகினால்
துண்ணென சிலையவர் தொழுது காண்பவே

#1207
பாடல் வண்டு யாழ் செயும் பசும்பொன் கிண்கிணி
தோடு அலர் கோதை மின் துளும்பும் மேகலை
ஆடிய கூத்தி தன் அசைந்த சாயல் போல்
ஊடு போக்கு இனியது அங்கு ஓர் ஐம் காதமே

#1208
கோதை வீழ்ந்தது என முல்லை கத்திகை
போது வேய்ந்து இன மலர் பொழிந்து கற்பு உடை
மாதரார் மனம் என கிடந்த செந்நெறி
தாதின் மேல் நடந்தது ஓர் தன்மைத்து என்பவே

#1209
மணி இயல் பாலிகை அனைய மா சுனை
அணி மணி நீள் மலர் அணிந்தது ஆயிடை
இணை மலர் படலிகை போலும் ஈர்ம் பொழில்
கணை உமிழ் சிலையினாய் கண்டு சேறியே

#1210
இலை பொலி பூண் முலை எரி பொன் மேகலை
குலத்தலை மகளிர்-தம் கற்பின் திண்ணிய
அலைத்து வீழ் அருவிகள் ஆர்க்கும் சோலை சூழ்
வலத்தது வனகிரி மதியின் தோன்றுமே

#1211
கரியவன் திருமுடி கவிழ்த்த சேவடி
பெரியவன் திருமொழி பிறழ்தல் இன்றியே
மரியவர் உறைதலின் மதன கீதமே
திரிதர பிறந்தது ஓர் சிலம்பிற்று என்பவே

#1212
ஏற்றரு மணி வரை இறந்து போன பின்
மாற்றரு மண நெறி மகளிர் நெஞ்சமே
போல் பல கவர்களும் பட்டது ஆயிடை
ஆற்றல் சால் செந்நெறி அறிய கூறுவாம்

#1213
சுரும்பு சூழ் குவளை ஓர் சுனை உண்டு அ சுனை
மருங்கில் ஓர் மணி சிலா வட்டம் உண்டு அவண்
விரும்பி வண்டு இமிர்வது ஓர் வேங்கை வேங்கையின்
மருங்கில் ஓர் செந்நெறி வகுக்க பட்டதே

#1214
கை மலர்ந்து அனைய காந்தள் கடி மலர் நாறு கானம்
மொய் மலர் குவளை கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி
வை மலர்த்து இலங்கும் வெள் வேல் மத்திம தேயம் ஆளும்
கொய் மலர் தாரினானை கண்ணுறு குணம் அது என்றான்

#1215
மண்ணகம் காவல் மன்னன் மாதரம் பாவை மாசு இல்
ஒண் நுதல் மகளை தந்து ஈங்கு உறைக என ஒழுகும் நாளுள்
வெண் மதி இழந்த மீன் போல் புல் என எய்தி நின்ற
அண்ணல் நின் தோழர் எல்லாம் அவ்வழி அடைவர் என்றான்

#1216
நெட்டு-இடை நெறிகளும் நிகர் இல் கானமும்
முட்டு உடை முடுக்கரும் மொய் கொள் குன்றமும்
நட்பு உடை இடங்களும் நாடும் பொய்கையும்
உட்பட உரைத்தனன் உறுதி நோக்கினான்

#1217
செல்கதி மந்திரம் செவியில் செப்பிய
மல்லல் அம் குமரனை வாழ நாட்டவே
வல்லவன் மந்திரம் மூன்றும் கொள்க என
சொல்லினன் அவற்றது தொழிலும் தோன்றவே

#1218
கடும் தொடை கவர் கணை காமன் காமுற
படும் குரல் தரும் இது பாம்பும் அல்லவும்
கடும் திறல் நோய்களும் கெடுக்கும் வேண்டிய
உடம்பு இது தரும் என உணர கூறினான்

#1219
கந்து அடு களிறு கொல்லும் கருவரை உழுவை அன்னான்
மந்திரம் மூன்றும் ஓதி வானவில் புரையும் பைம் தார்
இந்திரன் தன்னை நோக்கி இயக்கியர் குழாத்தை நோக்கி
சிந்தையின் செல்வல் என்றான் தேவனும் செலவு நேர்ந்தான்

#1220
மனை பெரும் கிழத்தி மாசு இல் மலை மகள் தன்னை யான் சென்று
எனைத்தொரு மதியின்-ஆம்-கொல் எய்துவது என்று நெஞ்சில்
நினைத்தலும் தோழன் நக்கு நிழல் உமிழ்ந்து இலங்கு செம்பொன்
பனை திரண்டு அனைய தோளாய் பன்னிரு மதியின் என்றான்

#1221
ஆறு இரு மதியின் எய்தி அரட்டனை அடர்த்து மற்று உன்
வீறு உயர் முடியும் சூடி விழு நில கிழமை பூண்டு
சாறு அயர்ந்து இறைவன் பேணி சார்பு அறுத்து உய்தி என்று
கூறினன் கதிர்கள் பொங்கும் குளிர் மணி முடியினானே

#1222
சொல் திறல் சூழ்ச்சி மிக்க சுதஞ்சணன் சுருங்க நாடி
வில் திறல் குருசிற்கு எல்லாம் வேறுவேறு உரைப்ப கேட்டே
சுற்றிய தோழிமாரை விடுத்தனன் தொழுது நின்றான்
கற்பக மரமும் செம்பொன் மாரியும் கடிந்த கையான்

#1223
சேட்டு இளம் செம் கயல் காப்ப செய்து வில்
பூட்டி மேல் வைத்து அன புருவ பூமகள்
தீட்டரும் திரு நுதல் திலகமே என
மோட்டு இரும் கதிர் திரை முளைத்தது என்பவே

#1224
அழல் பொதிந்த நீள் எஃகின் அலர் தார் மார்பற்கு இ மலை மேல்
கழல் பொதிந்த சேவடியால் கடக்கல் ஆகாது என எண்ணி
குழல் பொதிந்த தீம் சொல்லார் குழாத்தின் நீங்கி கொண்டு ஏந்தி
நிழல் பொதிந்த நீள் முடியான் நினைப்பில் போகி நிலத்து இழிந்தான்

#1225
வண் தளிர் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி
விண்டு ஒழுகு தீம் கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை
மண் கருதும் வேலானை மறித்தும் காண்க என புல்லி
கொண்டு எழுந்தான் வானவனும் குருசில் தானே செலவு அயர்ந்தான்

#1226
வாள் உழலை பாய்ந்து இளைய வள நாகிட்டு இனம் என்னும்
தாள் ஒழிய போர் ஏறு தனியே போந்தது என எண்ணி
நீள் அருவி கண்ணீர் வீழ்த்து அலறி வண்ணம் கரிந்து உருகி
கோள் உழுவை அன்னாற்கு குன்றமும் நின்று அழுதனவே

#1227
மிக்கார் தம் கேட்டின் கண் மேன்மை இல்லா சிறியார் போல்
நக்கு ஆங்கே எயிறு உடைந்த நறவ முல்லை நாள் வேங்கை
தக்கார் போல் கைம்மறித்த காந்தள் அந்தோ தகாது எனவே
தொக்கார் போல் பல் மாவும் மயிலும் தோன்றி துளங்கினவே

#1228
கொல்லை அகடு அணைந்து குறும்பு சேர்ந்து தமியாரை
முல்லை முறுவலித்து நகுதிர் போலும் இனி நும்மை
பல்லை உகுத்திடுவம் என்று பைம் போது அலர் சிந்தி
தொல்லை நிறம் கருகி தும்பி பாய்ந்து துகைத்தனவே

#1229
தோடு ஏந்து பூம்_கோதை வேண்டேம் கூந்தல் தொடேல் எம் இல்
பீடு ஏந்து அரிவையர் இல் பெயர்க என்று ஊடும் மடவார் போல்
கோடு ஏந்து குஞ்சரங்கள் தெருட்ட கூடா பிடி நிற்கும்
காடு ஏந்து பூம் சாரல் கடந்தான் காலின் கழலானே

#1230
காழகம் ஊட்டப்பட்ட கார் இருள் துணியும் ஒப்பான்
ஆழ் அளை உடும்பு பற்றி பறித்து மார்பு ஒடுங்கி உள்ளான்
வாழ் மயிர் கரடி ஒப்பான் வாய்க்கு இலை அறிதல் இல்லான்
மேழக குரலினான் ஓர் வேட்டுவன் தலைப்பட்டானே

#1231
கொடி முதிர் கிழங்கு தீம் தேன் கொழும் தடி நறவொடு ஏந்தி
பிடி முதிர் முலையினாள் தன் தழை துகில் பெண்ணினோடும்
தொடு மரை தோலன் வில்லன் மரவுரி உடையன் தோன்ற
வடி நுனை வேலினான் கண்டு எ மலை உறைவது என்றான்

#1232
மாலை வெள் அருவி சூடி மற்று இதா தோன்றுகின்ற
சோலை சூழ் வரையின் நெற்றி சூழ் கிளி சுமக்கல் ஆற்றா
மாலை அம் தினைகள் காய்க்கும் வண் புனம் அதற்கு தென்மேல்
மூலை அம் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான்

#1233
ஊழின் நீர் உண்பது என் என்று உரைத்தலும் உவந்து நோக்கி
மோழலம் பன்றியோடு முளவுமா காதி அட்ட
போழ் நிண புழுக்கல் தேன் நெய் பொழிந்து உக பெய்து மாந்தி
தோழ யாம் பெரிதும் உண்டும் தொண்டிக்கள் இதனை என்றான்

#1234
ஊனொடு தேனும் கள்ளும் உண்டு உயிர் கொன்ற பாவத்து
ஈனராய் பிறந்தது இங்ஙன் இனி இவை ஒழி-மின் என்ன
கானில் வாழ் குறவன் சொல்லும் கள்ளொடு ஊன் தேன் கைவிட்டால்
ஏனை எம் உடம்பு வாட்டல் எவன் பிழைத்தும்-கொல் என்றான்

#1235
ஊன் சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ
ஊன் தினாது உடம்பு வாட்டி தேவராய் உறைதல் நன்றோ
ஊன்றி இ இரண்டின் உள்ளும் உறுதி நீ உரைத்திடு என்ன
ஊன் தினாது ஒழிந்து புத்தேள் ஆவதே உறுதி என்றான்

#1236
உறுதி நீ உணர்ந்து சொன்னாய் உயர் கதி சேறி ஏடா
குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்கு உண காட்டுள் இன்றே
இறைவன் நூல் காட்சி கொல்லா ஒழுக்கொடு ஊன் துறத்தல் கண்டாய்
இறுதி கண் இன்பம் தூங்கும் இரும் கனி இவை கொள் என்றான்

#1237
என்றலும் தேனும் ஊனும் பிழியலும் இறுக நீக்கி
சென்று அடி தொழுது செல்கு என் தேம் பெய் நீள் குன்றம் என்று
குன்று உறை குறவன் போக கூர் எரி வளைக்கப்பட்ட
பஞ்சவர் போல நின்ற பகட்டு இன பரிவு தீர்த்தான்

#1238
இலங்கு ஒளி மரகதம் இடறி இன் மணி
கலந்து பொன் அசும்பு கான்று ஒழுகி மான் இனம்
சிலம்பு பாய் வருடையொடு உகளும் சென்னி நீள்
விலங்கல் சென்று எய்தினான் விலங்கல் மார்பினான்

#1239
அந்தர அகடு தொட்டு அணவு நீள் புகழ்
வெந்து எரி பசும்பொனின் விழையும் வெல் ஒளி
மந்திர வாய்மொழி மறு இல் மாதவர்
இந்திரர் தொழும் அடி இனிதின் எய்தினான்

#1240
முனிவரும் முயன்று வான் கண் மூப்பு இகந்து இரிய இன்ப
கனி கவர் கணனும் ஏத்த காதி கண் அரிந்த காசு இல்
தனி முதிர் கடவுள் கோயில் தான் வலம் கொண்டு செல்வான்
குனி திரை முளைத்த வெய்யோன் குன்று சூழ்வதனை ஒத்தான்

#1241
தண் கயம் குற்ற போதும் தாழ் சினை இளிந்த வீயும்
வண் கொடி கொய்த பூவும் வார்ந்து மட்டு உயிர்ப்ப ஏந்தி
திண் புகழ் அறிவன் பாதம் திருந்து கைத்தலத்தின் ஏற்றி
பண்பு கொள் குணம் கொள் கீதம் பாணியில் பாடுகின்றான்

#1242
ஆதி வேதம் பயந்தோய் நீ அலர் பெய்ம் மாரி அமைந்தோய் நீ
நீதி நெறியை உணர்ந்தோய் நீ நிகர் இல் காட்சிக்கு இறையோய் நீ
நாதன் என்ன படுவோய் நீ நவை செய் பிறவி கடலகத்து உன்
பாத கமலம் தொழுவேங்கள் பசை யாப்பு அவிழ பணியாயே

#1243
இன்னா பிறவி இகந்தோய் நீ இணை இல் இன்பம் உடையோய் நீ
மன்னா உலகம் மறுத்தோய் நீ வரம்பு இல் காட்சிக்கு இறையோய் நீ
பொன்னார் இஞ்சி புகழ் வேந்தே பொறியின் வேட்கை கடல் அழுந்தி
ஒன்னா வினையின் உழல்வேங்கள் உயப்போம் வண்ணம் உரையாயே

#1244
உலகம் மூன்று உடையோய் நீ ஒண் பொன் இஞ்சி எயிலோய் நீ
திலகம் ஆய திறலோய் நீ தேவர் ஏத்தப்படுவோய் நீ
அலகை இல்லா குண கடலே யாரும் அறியப்படாய் ஆதி
கொலை இல் ஆழி வலன் உயர்த்த குளிர் முக்குடையின் நிழலோய் நீ

#1245
அடி உலகம் ஏத்தி அலர் மாரி தூவ
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் யாரே
முடி உலக மூர்த்தி உற நிமிர்ந்தோன் மூன்று
கடி மதிலும் கட்டு அழித்த காவலன் நீ அன்றே

#1246
முரண் அவிய வென்று உலகம் மூன்றினையும் மூன்றின்
தரணி மேல் தந்து அளித்த தத்துவன்-தான் யாரே
தரணி மேல் தந்து அளித்தான் தண் மதி போல் நேமி
அரண் உலகிற்கு ஆய அறிவரன் நீ அன்றே

#1247
தீரா வினை தீர்த்து தீர்த்தம் தெரிந்து உய்த்து
வாரா கதி உரைத்த வாமன்-தான் யாரே
வாரா கதி உரைத்த வாமன் மலர் ததைந்த
கார் ஆர் பூம் பிண்டி கடவுள் நீ அன்றே

#1248
அ மலை சினகரம் வணங்கி பண்ணவர்
பொன் மலர் சேவடி புகழ்ந்த பின்னரே
வெம் மலை தெய்வதம் விருந்து செய்த பின்
செம்மல் போய் பல்லவ தேயம் நண்ணினான்

#1249
அரியல் ஆர்ந்து அமர்த்தலின் அனந்தர் நோக்கு உடை
கரிய வாய் நெடிய கண் கடைசி மங்கையர்
வரி வரால் பிறழ் வயல் குவளை கட்பவர்
இருவரை வினாய் நகர் நெறியின் முன்னினான்

#1250
அன்னமும் மகன்றிலும் அணிந்து தாமரை
பன் மலர் கிடங்கு சூழ் பசும்பொன் பாம்புரி
கன்னி மூதெயில் கடல் உடுத்த காரிகை
பொன் அணிந்து இருந்து என பொலிந்து தோன்றுமே

#1251
அகில் தரு கொழும் புகை மாடத்து ஆய் பொனின்
முகில் தலை விலங்கிய மொய் கொள் நீள் கொடி
பகல் தலை விலங்கு சந்திராபம் பான்மையின்
இகல் தலை விலங்கு வேல் காளை எய்தினான்

#1252
மலர் அணி மணி குடம் மண்ணும் நீரொடு
பலர் நலம் பழிச்சுபு பரவ ஏகினான்
அலர் கதிர் கரும்பிளை மடுப்ப ஆய் நகர்
உலகு அளந்தவன் என உள்புக்கான்-அரோ

#1253
சந்தன காவு சூழ்ந்து சண்பகம் மலர்ந்த சோலை
வந்து வீழ் மாலை நாற்றி மணி அரங்கு அணிந்து வானத்து
இந்திர குமரன் போல இறைமகன் இருந்து காண
அந்தர மகளிர் அன்னார் நாடகம் இயற்றுகின்றார்

#1254
குழல் எடுத்து யாத்து மட்டார் கோதையின் பொலிந்து மின்னும்
அழல் அவிர் செம்பொன் பட்டம் குண்டலம் ஆரம் தாங்கி
நிழல் அவிர் அல்குல் காசு சிலம்பொடு சிலம்ப நீள் தோள்
அழகி கூத்து ஆடுகின்றாள் அரங்கின் மேல் அரம்பை அன்னாள்

#1255
தண்ணுமை முழவம் வீணை குழலொடு குயில தண் பூம்
கண்ணொடு புருவம் கை கால் கலை அல்குல் நுசுப்பு காமர்
ஒள்_நுதல் கொண்ட ஆடல் தொட்டிமை உருவம் நோக்கி
வெண்ணெய் தீ உற்ற வண்ணம் ஆடவர் மெலிகின்றாரே

#1256
பாடலொடு இயைந்த ஆடல் பண் அமை கருவி மூன்றும்
கூடுபு சிவணி நின்று குழைந்து இழைந்து அமிர்தம் ஊற
ஓடு அரி நெடும் கண் அம்பால் உளம் கிழிந்து உருவ எய்யா
ஈடு அமை பசும்பொன் சாந்தம் இலயமா ஆடுகின்றாள்

#1257
வாள் நுதல் பட்டம் மின்ன வார் குழை திருவில் வீச
பூண் முலை பிறழ பொன் தோடு இட-வயின் நுடங்க ஒல்கி
மாண் இழை வளை கை தம்மால் வட்டணை போக்குகின்றாள்
காண் வரு குவளை கண்ணால் காளை மேல் நோக்கினாளே

#1258
நோக்கினாள் நெடும் கண் என்னும் குடங்கையால் நொண்டு கொண்டு
வாக்கு அமை உருவின் மிக்கான் வனப்பினை பருக இப்பால்
ஆக்கிய இலயம் நீங்கிற்று அணங்கு அனாள் நெடும் கண் பில்கி
வீக்கு வார் முலையின் நெற்றி வெண் முத்தம் சொரிந்த அன்றே

#1259
செரு கயல் நெடும் கணாள் அ திருமகன் காண்டல் அஞ்சி
நெருக்கி தன் முலையின் மின்னும் நிழல் மணி வடத்தை மாதர்
பொருக்கு நூல் பரிந்து சிந்தா பூ எலாம் கரிந்து வாட
தரிக்கிலாள் காம செம் தீ தலை கொள சாம்பினாளே

#1260
கன்னிமை கனிந்து முற்றி காமுற கமழும் காமத்து
இன் நறும் கனியை துய்ப்பான் ஏந்தலே பிறர்கள் இல்லை
பொன்னினால் உடையும் கற்பு என்று உரைத்தவர் பொய்யை சொன்னார்
இன் இசை இவற்கு அலால் என் நெஞ்சு இடம் இல்லை என்றாள்

#1261
கரும் சிறை பறவை ஊர்தி காமரு காளை-தான்-கொல்
இரும் சுறவு உயர்த்த தோன்றல் ஏத்த அரும் குருசில்-தான்-கொல்
அரும் பெறல் குமரன் என்று ஆங்கு அறிவு அயர்வுற்று நின்றாள்
திருந்து இழை அணங்கு மென் தோள் தேசிக பாவை அன்னாள்

#1262
போது என கிடந்த வாள் கண் புடை பெயர்ந்து இமைத்தல் செல்லாது
யாது இவள் கண்டது என்று ஆங்கு அரசனும் அமர்ந்து நோக்கி
மீது வண்டு அரற்றும் கண்ணி விடலையை தானும் கண்டான்
காதலில் களித்தது உள்ளம் காளையை கொணர்-மின் என்றான்

#1263
கை வளர் கரும்பு உடை கடவுள் ஆம் எனின்
எய் கணை சிலையினோடு இவன்-கண் இல்லையால்
மெய் வகை இயக்கருள் வேந்தன் ஆகும் என்று
ஐயம் உற்று எவர்களும் அமர்ந்து நோக்கினார்

#1264
மந்திரம் மறந்து வீழ்ந்து மா நிலத்து இயங்குகின்ற
அந்தரகுமரன் என்று ஆங்கு யாவரும் அமர்ந்து நோக்கி
இந்திர திருவற்கு உய்த்தார்க்கு இறைவனும் எதிர்கொண்டு ஓம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துன தோழன் என்றான்

#1265
போது அவிழ் தெரியலானும் பூம் கழல் காலினானும்
காதலின் ஒருவர் ஆகி கலந்து உடன் இருந்த-போழ்தின்
ஊது வண்டு உடுத்த மாலை உணர்வு பெற்று இலயம் தாங்கி
போது கண்டு அனைய வாள் கண் புருவத்தால் கலக்குகின்றாள்

#1266
தேன் உகுக்குகின்ற கண்ணி திருமகள் ஆட இப்பால்
ஊன் உகுக்குகின்ற வை வேல் ஒரு மகன் உருமின் தோன்றி
வான் உகுக்குகின்ற மீன் போல் மணி பரந்து இமைக்கும் மார்பில்
கான் உகுக்குகின்ற பைம் தார் காவலன் தொழுது சொன்னான்

#1267
கொய்தகை பொதியில் சோலை குழவிய முல்லை மௌவல்
செய்ய சந்து இமய சாரல் கருப்புரக்கன்று தீம் பூ
கை தரு மணியின் தெள் நீர் மது கலந்து ஊட்டி மாலை
பெய்து ஒளி மறைத்து நங்கை பிறை என வளர்க்கின்றாளே

#1268
பவழம் கொள் கோடு நாட்டி பைம்பொனால் வேலி கோலி
தவழ் கதிர் முத்தம் பாய்த்தி தன் கையால் தீண்டி நல் நாள்
புகழ் கொடி நங்கை தன் பேர் பொறித்தது ஓர் கன்னி முல்லை
அகழ் கடல் தானை வேந்தே அணி எயிறு ஈன்றது அன்றோ

#1269
வம்பு அலர் கோதை சிந்த மயில் என ஒருத்தி ஓடி
கொம்பு அலர் நங்கை பூத்தாள் பொலிக என குனிந்த வில் கீழ்
அம்பு அலர் கண்ணி ஆர நிதி அறைந்து ஒகை போக்கி
கம்பலம் போர்த்த போலும் கடி மலர் காவு புக்காள்

#1270
நற விரி சோலை ஆடி நாள்மலர் குரவம் பாவை
நிறைய பூத்து அணிந்து வண்டும் தேன்களும் நிழன்று பாட
இறைவளை தோளி மற்று என் தோழி ஈது என்று சேர்ந்து
பெறல் அரும் பாவை கொள்வாள் பெரிய தோள் நீட்டினாளே

#1271
நங்கை தன் முகத்தை நோக்கி நகை மதி இது என்று எண்ணி
அங்கு உறை அரவு தீண்டி ஒளவையோ என்று போக
கொங்கு அலர் கோதை நங்கை அடிகளோ என்று கொம்பு ஏர்
செம் கயல் கண்ணி தோழி திருமகள் சென்று சேர்ந்தாள்

#1272
அடிகளுக்கு இறைஞ்சி ஐயன் அடிகளை தொழுது நங்கை
அடிகளை புல்லி ஆர தழுவிக்கொண்டு ஒளவைமாரை
கொடி அனாய் என்னை நாளும் நினை என தழுவிக்கொண்டு
மிடை மின்னின் நிலத்தை சேர்ந்தாள் வேந்த மற்று அருளுக என்றான்

#1273
பதுமையை பாம்பு தீண்டிற்று என்றலும் பையுள் எய்தி
கொதி நுனை வேலினாய் இங்கு இருக்க என குருசில் ஏகி
கதுமென சென்று நோக்கி காய் சினம் கடிதற்கு ஒத்த
மதி மிகுத்து அவலம் நீக்கும் மந்திரம் பலவும் செய்தான்

#1274
வள்ளல் தான் வல்ல எல்லாம் மாட்டினன் மற்றும் ஆங்கண்
உள்ளவர் ஒன்றலாத செயச்செய ஊறு கேளாது
அள் இலை பூணினாளுக்கு ஆவி உண்டு இல்லை என்ன
வெள் எயிற்று அரவு கான்ற வேகம் மிக்கிட்டது அன்றே

#1275
பைம் கதிர் மதியம் என்று பகை அடு வெகுளி நாகம்
நங்கையை செற்றது ஈங்கு தீர்த்து நீர் கொள்-மின் நாடும்
வங்க மா நிதியம் நல்கி மகள் தரும் மணி செய் மான் தேர்
எங்களுக்கு இறைவன் என்று ஆங்கு இடி முரசு எருக்கினானே

#1276
மண்டலி மற்றிது என்பார் இராசமாநாகம் என்பார்
கொண்டது நாகம் என்பார் குறை வளி பித்தொடு ஐயில்
பிண்டித்து பெருகிற்று என்பார் பெரு நவை அறுக்கும் விஞ்சை
எண் தவ பலவும் செய்தாம் என்று கேளாது இது என்பார்

#1277
சிரை ஐந்தும் விடுதும் என்பார் தீற்றுதும் சிருங்கி என்பார்
குரை புனல் இடுதும் என்பார் கொந்து அழல் உறுத்தும் என்பார்
இரை என வருந்த கவ்வி என்புற கடித்தது என்பார்
உரையன்-மின் உதிரம் நீங்கிற்று உய்யலள் நங்கை என்பார்

#1278
கையொடு கண்டம் கோப்பார் கனை சுடர் உறுப்பின் வைப்பார்
தெய்வதம் பரவி எல்லா திசை-தொறும் தொழுது நிற்பார்
உய் வகை இன்றி இன்னே உலகு உடன் கவிழும் என்பார்
மையல் அம் கோயில் மாக்கள் மடைதிறந்திட்டது ஒத்தார்

#1279
வெந்து எரி செம்பொன் பூவும் விளங்கு பொன் நூலும் பெற்றார்
மந்திரம் மறையும் வல்லார் எழாயிரர் மறு இல் வாய்மை
அந்தரத்து அறுவை வைப்பார் அந்தணர் அம் கை கொட்டி
பைம் தொடி பாவை இன்னே பரிவு ஒழிந்து எழுக என்பார்

#1280
பாம்பு எழ பாம்பு கொண்டால் பகவற்கும் அரிது தீர்த்தல்
தேம் பிழி கோதைக்கு இன்று பிறந்தநாள் தெளி-மின் என்று
காம்பு அழி பிச்சம் ஆக கணி எடுத்து உரைப்ப கல்லென்
தூம்பு அழி குளத்தின் கண்ணீர் துகள் நிலத்து இழிந்தது அன்றே

#1281
நங்கைக்கு இன்று இறத்தல் இல்லை நரபதி நீயும் கோண்மோ
கொங்கு அலர் கோங்கின் நெற்றி குவி முகிழ் முகட்டின் அங்கண்
தங்கு தேன் அரவ யாழின் தான் இருந்து ஆந்தை பாடும்
இங்கு நம் இடரை தீர்ப்பான் இளையவன் உளன் மற்று என்றான்

#1282
பன் மணி கடகம் சிந்த பருப்பு உடை பவள தூண் மேல்
மன்னவன் சிறுவன் வண் கை புடைத்து மாழாந்து சொன்னான்
இன்னும் ஒன்று உண்டு சூழ்ச்சி என்னோடு அங்கு இருந்த நம்பி
தன்னை கூய் கொணர்-மின் என்றான் தர வந்து ஆங்கு அவனும் கண்டான்

#1283
பறவை மா நாகம் வீழ்ந்து பல உடன் பதைப்ப போன்றும்
சிறகுற பரப்பி மஞ்ஞை செருக்குபு கிடந்த போன்றும்
கறவை கன்று இழந்த போன்றும் கிடந்து அழுகின்ற கண்ணார்
இறை வளையவரை நோக்கி என் கொடிது உற்றது என்றான்

#1284
ஊறு கொள் சிங்கம் போல உயக்கமோடு இருந்த நம்பி
கூறினான் கொற்ற வேந்தன் கொழு நிதி நிலத்து மற்று உன்
வீறு உயர் புகழை வித்தி கேண்மையை விளைத்தி இன்னே
நாறு பூம் கொம்பு அனாளை நோக்கு என நம்பி சொன்னான்

#1285
புற்று-இடை வெகுளி நாகம் போக்கு அற கொண்டதேனும்
மற்று இடையூறு செய்வான் வானவர் வலித்ததேனும்
பொன்_தொடிக்கு இறத்தல் இல்லை புலம்பு கொண்டு அழேற்க என்றான்
கற்று அடிப்படுத்த விஞ்சை காமரு காமன் அன்னான்

#1286
பொழிந்து நஞ்சு உகுத்தல் அச்சம் இரை பெரு வெகுளி போகம்
கழிந்து மீது ஆடல் காலம் பிழைப்பு என எட்டின் ஆகும்
பிழிந்து உயிர் உண்ணும் தட்டம் அதட்டம் ஆம் பிளிற்றின் உம்பர்
ஒழிந்து எயிறு ஊனம் செய்யும் கோள் என மற்றும் சொன்னான்

#1287
அந்தணன் நாறும் ஆன் பால் அவியினை அலர்ந்த காலை
நந்தியாவட்டம் நாறு நகை முடி அரசன் ஆயின்
தந்தியாம் உரைப்பின் தாழை தட மலர் வணிகன் நாறும்
பந்தியா பழுப்பு நாறின் சூத்திரன்-பாலது என்றான்

#1288
கன்னியை கடித்த நாகம் கன்னியே கன்னி நோக்கம்
அன்னதே அரசர் சாதி மூன்று எயிறு அழுந்தி ஆழ்ந்த
கொன்னும் மா நாகம் கொண்டால் கொப்புள் ஆம் விரலின் தேய்த்தால்
மன்னிய தெள் மட்டு-ஆயின் மண்டலி-பாலது என்றான்

#1289
குன்று இரண்டு அனைய தோளான் கொழு மலர் குவளை போது அங்கு
ஒன்று இரண்டு உருவம் ஓதி உறக்கு-இடை மயில் அனாள் தன்
சென்று இருண்டு அமைந்த கோல சிகழிகை அழுத்தி செல்வன்
நின்று இரண்டு உருவம் ஓதி நேர் முகம் நோக்கினானே

#1290
நெடும்தகை நின்று நோக்க நீள் கடல் பிறந்த கோல
கடும் கதிர் கனலி கோப்ப கார் இருள் உடைந்ததே போல்
உடம்பு-இடை நஞ்சு நீங்கிற்று ஒண்_தொடி உருவம் ஆர்ந்து
குடங்கையின் நெடிய கண்ணால் குமரன் மேல் நோக்கினாளே

#1291
நோக்கினாள் நிறையும் நாணும் மாமையும் கவினும் நொய்தில்
போக்கினாள் வளையும் போர்த்தாள் பொன் நிற பசலை மூழ்கிற்று
ஆக்கினாள் அநங்கன் அப்பு தூணியை அமருள் ஆனாது
ஓக்கிய முருகன் எஃகம் ஓர் இரண்டு அனைய கண்ணாள்

#1292
ஆட்சி ஐம்பொறியாளன் உடம்பு எனும்
பூட்சி நீள் கொடி புற்றின் அகத்து உறை
வாள் கண் நோக்கு எனும் வை எயிற்று ஆர் அழல்
வேட்கை நாகத்தின் மீட்டும் கொளப்பட்டாள்

#1293
மாழ்கி வெய்து உயிர்த்தாள் மடவாள் என
தோழிமார்களும் தாயரும் தொக்கு உடன்
சூழி யானை அன்னாய் தொடின் நஞ்சு அறும்
வாழி என்றனர் வம்பு அலர் கோதையர்

#1294
கண்ணின் காணினும் கட்டுரை கேட்பினும்
நண்ணி தீண்டினும் நல் உயிர் நிற்கும் என்று
எண்ணி ஏந்து_இழை தன்னை உடம்பு எலாம்
தண் என் சாந்தம் வைத்தால் ஒப்ப தைவந்தான்

#1295
மற்ற மாதர் தன் வாள் தடம் கண்களால்
உற்ற நோக்கம் உறாதது ஓர் நோக்கினில்
சுற்றி வள்ளலை சோர்வு இன்றி யாத்திட்டாள்
அற்றம் இல் அமிர்து ஆகிய அம் சொலாள்

#1296
விஞ்சையர் வீரன் என்பார் விண்ணவர் குமரன் என்பார்
எஞ்சிய உயிரை மீட்டான் இவன் அலால் இல்லை என்பார்
மஞ்சு சூழ் இஞ்சி மூதூர் மா முடி குரிசில் நாளை
நஞ்சு சூழ் வேலினாற்கே நங்கையை கொடுக்கும் என்பார்

#1297
விளங்கு ஒளி விசும்பில் வெண் கோட்டு இளம் பிறை சூழ்ந்த மின் போல்
வளம் கெழு வடத்தை சூழ்ந்து வான் பொன் நாண் திளைப்ப சேந்த
இளம் கதிர் முலைகள் தம்மால் இவனை மார்பு எழுதி வைகின்
துளங்கு பெண் பிறப்பும் தோழி இனிது என சொல்லி நிற்பார்

#1298
அரும் தவம் செய்து வந்த ஆய் இழை மகளிர் யார்-கொல்
பெருந்தகை மார்பில் துஞ்சி பெண்மையால் பிணிக்கும் நீரார்
கரும் கணின் யாமும் கண்டாம் காமனை என்று சொல்லி
திருந்து ஒளி முறுவல் செ வாய் தீம் சொலார் மயங்கினாரே

#1299
பல் மலர் படலை கண்ணி குமரனை பாவை நல்லார்
மன்னவன் பணியின் வாழ்த்தி வாச நெய் பூசி நல் நீர்
துன்னினர் ஆட்டி செம்பொன் செப்பினுள் துகிலும் சாந்தும்
இன் நறும் புகையும் பூவும் கலத்தொடும் ஏந்தினாரே

#1300
ஏந்திய ஏற்ப தாங்கி எரி மணி கொட்டை நெற்றி
வாய்ந்த பொன் குயிற்றி செய்த மரவடி ஊர்ந்து போகி
ஆய்ந்த நல் மாலை வேய்ந்த அரும் பெறல் கூடம் சேர்ந்தான்
பூம் தொடி மகளிர் போற்றி பொன் கலம் பரப்பினாரே

#1301
கன்னியர் கரக நீரால் தாமரை கழீஇயது ஒப்ப
பொன் அடி கழீஇய பின்றை புரிந்து வாய் நன்கு பூசி
இன் மலர் தவிசின் உச்சி இருந்து அமிர்து இனிதின் கொண்டான்
மின் விரிந்து இலங்கு பைம் பூண் வேல் கணார் வேனிலானே

#1302
வாச நல் பொடியும் நீரும் காட்டிட கொண்டு வாய்ப்ப
பூசறுத்து அம் கை நீரை மும்முறை குடித்து முக்கால்
காசு அற துடைத்த பின்றை கை விரல் உறுப்பு தீட்டி
தூசினால் அம் கை நீவி இருந்தனன் தோற்றம் மிக்கான்

#1303
சீர் கொள செய்த செம்பொன் அடைப்பையுள் பாகு செல்ல
வார் கழல் குருசில் கொண்டு கவுள் அடுத்து இருந்த ஆங்கண்
போர் கொள்வேல் மன்னன் எல்லா கலைகளும் புகன்று கேட்டு
நீர் கொள் மா கடல் அனாற்கு நிகர் இல்லை நிலத்தில் என்றான்

#1304
பரிதி பட்டது பன் மணி நீள் விளக்கு
எரிய விட்டனர் இன்னியம் ஆர்த்தன
அரிய பொங்கு அணை அம் என் அமளி மேல்
குரிசில் ஏறினன் கூர்ந்தது சிந்தையே

#1305
பூம் கண் அவ்வயின் நோக்கம் பொறாத போல்
வீங்கி வெம்மை கொண்டு ஏந்தின வெம் முலை
ஈங்கு இது என் என இட்டு இடை நைந்தது
பாங்கு இலாரின் பரந்து உள அல்குலே

#1306
முருகு வார் குழலாள் முகிழ் மெல் முலை
பெருகு நீர்மையின் பேதுறவு எய்தி நின்று
உருகும் நுண் இடை ஓவிய பாவை-தன்
அருகும் நோக்கம் என் ஆவி அலைக்குமே

#1307
புகை அவாவிய பூம் துகில் ஏந்து அல்குல்
வகைய ஆம் மணி மேகலை வார் மது
முகை அவாவிய மொய் குழல் பாவியேன்
பகைய வாய் படர் நோய் பயக்கின்றவே

#1308
போது உலாம் சிலையோ பொரு வேல் கணோ
மாது உலாம் மொழியோ மட நோக்கமோ
யாது நான் அறியேன் அணங்கு அன்னவள்
காதலால் கடைகின்றது காமமே

#1309
அண்ணல் அவ்வழி ஆழ் துயர் நோய் உற
வண்ண மா மலர் கோதையும் அவ்வழி
வெண்ணெய் வெம் கனல் மீமிசை வைத்தது ஒத்து
உள் நையா உருகா உளள் ஆயினாள்

#1310
பெயல் மழை பிறழும் கொடி மின் இடை
கயல் மணி கணின் நல்லவர் கை தொழ
பயன் இழைத்த மென் பள்ளியுள் பைம் தொடி
மயன் இழைத்த அம் பாவையின் வைகினாள்

#1311
வணங்கு நோன் சிலை வார் கணை காமனோ
மணம் கொள் பூ மிசை மை வரை மைந்தனோ
நிணந்து என் நெஞ்சம் நிறை கொண்ட கள்வனை
அணங்குகாள் அறியேன் உரையீர்களே

#1312
கடை கந்து அன்ன தன் காமரு வீங்கு தோள்
அடைய புல்லினன் போன்று அணி வெம் முலை
உடைய ஆகத்து உறு துயர் மீட்டவன்
இடையது ஆகும் என் ஆரும் இல் ஆவியே

#1313
இறுதி இல் அமிர்து எய்துநர் ஈண்டி அன்று
அறிவின் நாடிய அம் மலை மத்தமா
நெறியின் நின்று கடைந்திடப்பட்ட நீர்
மறுகும் மா கடல் போன்றது என் நெஞ்சமே

#1314
நகை வெண் திங்களும் நார் மடல் அன்றிலும்
தகை வெள் ஏற்று அணல் தாழ் மணி ஓசையும்
பகை கொள் மாலையும் பையுள் செய் ஆம்பலும்
புகை இல் பொங்கு அழல் போல் சுடுகின்றவே

#1315
பூ மென் சேக்கையுள் நாற்றிய பூம் திரள்
தாமம் வாட்டும் தகைய உயிர்ப்பு அளைஇ
காமர் பேதை தன் கண்தரு காமநோய்
யாமத்து எல்லை ஓர் யாண்டு ஒத்து இறந்ததே

#1316
மாது யாழ் மழலை மொழி மாதராள்
தாதி அவ்வையும் தன் அமர் தோழியும்
போது வேய் குழல் பொன் அவிர் சாயலுக்கு
யாது நாம் செயல்-பாலது என்று எண்ணினார்

#1317
அழுது நுண் இடை நைய அலர் முலை
முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்த பின்
தொழுது கோதையும் கண்ணியும் சூட்டினார்
எழுது கொம்பு அனையார் இளையாளையே

#1318
வேந்து காயினும் வெள் வளை ஆயமோடு
ஏந்து பூம் பொழில் எய்தி அங்கு ஆடுதல்
ஆய்ந்தது என்று கொண்டு அம் மயில் போல் குழீஇ
போந்தது ஆயம் பொழிலும் பொலிந்ததே

#1319
அலங்கல் தான் தொடுப்பார் அலர் பூ கொய்வார்
சிலம்பு சென்று எதிர் கூவுநர் செய் சுனை
கலங்க பாய்ந்து உடன் ஆடுநர் காதலின்
இலங்கு பாவை இரு மணம் சேர்த்துவார்

#1320
தூசு உலாம் நெடும் தோகையின் நல்லவர்
ஊசல் ஆடுநர் ஒண் கழங்கு ஆடுநர்
பாசம் ஆகிய பந்து கொண்டு ஆடுநர்
ஆகி எத்திசையும் அமர்ந்தார்களே

#1321
முருகு விம்மிய மொய் குழல் ஏழை-தன்
உருகும் நோக்கம் உளம் கிழித்து உள் சுட
அரிவை ஆடிய காவகம் காணிய
எரி கொள் வேலவன் ஏகினன் என்பவே

#1322
மயிலின் ஆடலும் மந்தியின் ஊடலும்
குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண்
வெயிலின் நீங்கிய வெண் மணல் தண் நிழல்
பயிலும் மாதவி பந்தர் ஒன்று எய்தினான்

#1323
காது சேர்ந்த கடி பிணை கையது
தாது மல்கிய தண் கழுநீர் மலர்
ஓத நித்தில வட்டம் ஓர் பொன் செய் நாண்
கோதை வெம் முலை மேல் கொண்ட கோலமே

#1324
விண் புதைப்பன வெண் மலர் வேய்ந்து உளால்
கண் புதைப்பன கார் இரும் பூம் பொழில்
சண்பகத்து அணி கோதை நின்றாள் தனி
நண்பனை நினையா நறு மேனியே

#1325
கறந்த பாலினுள் காசு இல் திரு மணி
நிறம் கிளர்ந்து தன் நீர்மை கெட்டு ஆங்கு அவள்
மறைந்த மாதவி மாமை நிழற்றலின்
சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான்

#1326
வரையின் மங்கை-கொல் வாங்கு இரும் தூங்கு நீர்
திரையின் செல்வி-கொல் தே மலர் பாவை-கொல்
உரையின் சாயல் இயக்கி-கொல் யார்-கொல் இ
விரை செய் கோலத்து வெள் வளை தோளியே

#1327
மாலை வாடின வாள் கண் இமைத்தன
காலும் பூமியை தோய்ந்தன காரிகை
பாலின் தீம் சொல் பதுமை இ நின்றவள்
சோலை வேய் மருள் சூழ் வளை தோளியே

#1328
தேவர் பண்ணிய தீம் தொடை இன் சுவை
மேவர் தென் தமிழ் மெய் பொருள் ஆதலின்
கோவத்து அன்ன மென் சீறடி கொம்பு அனாள்
பூவர் சோலை புகுவல் என்று எண்ணினான்

#1329
அல்லி சேர் அணங்கு அன்னவட்கு ஆயிடை
புல்லி நின்ற மெய்ந்நாண் புறப்பட்டது
கல் செய் தோளவன் காமரு பேர் உணர்வு
எல்லை நீங்கிற்று இயைந்தனர் என்பவே

#1330
களித்த கண் இணை காம்பு என வீங்கு தோள்
தெளிர்த்த வெள் வளை சேர்ந்தது மாமையும்
தளித்த சுண்ணம் சிதைந்தன குங்குமம்
அளித்த பூம் பட்டு அணிந்து திகழ்ந்ததே

#1331
குவளை ஏய்ந்த கொடும் குழை கூந்தலுள்
திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ
தவள மெல் இணர் தண் கொடி முல்லையே

#1332
பொன் துஞ்சு ஆகத்து பூம் கண்கள் போழ்ந்த புண்
இன்று இ பூண் கொள் இள முலை சாந்து அலால்
அன்றி தீர்ப்பன யாவையும் இல்லையே
என்று மாதர் எழில் நலம் ஏத்தினான்

#1333
கண்ணி வேய்ந்து கரும் குழல் கைசெய்து
வண்ண மாலை நடு சிகையுள் வளைஇ
செண்ண அம் சிலம்பு ஏறு துகள் அவித்து
அண்ணல் இன்புறுத்து ஆற்றலின் ஆற்றினாள்

#1334
திங்களும் மறுவும் என சேர்ந்தது
நங்கள் அன்பு என நாட்டி வலிப்பு உறீஇ
இங்கு ஒளித்திடுவேன் நுமர் எய்தினார்
கொங்கு ஒளிக்கும் குழலாய் என கூறினான்

#1335
மழை-இடை குளித்திட்டது ஓர் வாள் மினின்
தழை-இடை குளித்தான் தகை வேலினான்
இழை-இடை குளித்து ஏந்திய வெம் முலை
வழை-இடை குளித்தார் வந்து தோன்றினார்

#1336
மின் ஒர் பூம் பொழில் மேதக செல்வது ஒத்து
அன்னம் நாண அசைந்து சிலம்பு அடி
மென் மெல மலர் மேல் மிதித்து ஏகினாள்
நல் நலம் அவற்கே வைத்த நங்கையே

#1337
திங்கள் சூழ்ந்த பல் மீன் என செல் நெறி
நங்கை தவ்வையும் தோழியும் நண்ணினார்
அங்கு அ ஆயம் அடிப்பணி செய்த பின்
தங்கள் காதலினால் தகை பாடினார்

#1338
தழையும் கண்ணியும் தண் நறு மாலையும்
விழைவ சேர்த்துபு மெல் என ஏகினார்
முழையுள் மூரி முழங்கு அரி ஏறு அனான்
பழைய நண்பனை பண்புளி எய்தினான்

#1339
பூமியை ஆடற்கு ஒத்த பொறியினன் ஆதலானும்
மா மகள் உயிரை மீட்ட வலத்தினன் ஆதலானும்
நேமியான் சிறுவன் அன்ன நெடும்தகை நேரும் ஆயின்
நாம் அவற்கு அழகிதாக நங்கையை கொடுத்தும் என்றான்

#1340
மதிதரன் என்னும் மாசு இல் மந்திரி சொல்ல கேட்டே
உதிதர உணர்வல் யானும் ஒப்பினும் உருவினானும்
விதி தர வந்தது ஒன்றே விளங்கு பூண் முலையினாளை
கொதி தரு வேலினாற்கே கொடுப்பது கருமம் என்றான்

#1341
உள் விரித்து இதனை எல்லாம் உரைக்க என மொழிந்து விட்டான்
தெள்ளிதின் தெரிய சென்று ஆங்கு உரைத்தலும் குமரன் தேறி
வெள் இலை அணிந்த வேலான் வேண்டியது ஆக என்றான்
அள் இலை வேல் கொள் மன்னற்கு அமைச்சன் அஃது அமைந்தது என்றான்

#1342
பொன்றிய உயிரை மீட்டான் பூஞ்சிகை போது வேய்ந்தான்
அன்றியும் மா மெய் தீண்டி அளித்தனன் அழகின் மிக்கான்
ஒன்றிய மகளிர் தாமே உற்றவர்க்கு உரியர் என்னா
வென்றி கொள் வேலினாற்கே பான்மையும் விளைந்தது அன்றே

#1343
கோப்பெருந்தேவி கொற்ற கோமகன் இவைகள் நாடி
யாப்பு உடைத்து ஐயற்கு இன்றே நங்கையை அமைக்க என்ன
தூ புரி முத்த மாலை தொடக்கொடு தூக்கி எங்கும்
பூ புரிந்து அணிந்து கோயில் புதுவது புனைந்தது அன்றே

#1344
கணி புனைந்து உரைத்த நாளால் கண்ணிய கோயில் தன்னுள்
மணி புனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
அணி உடை கமலம் அன்ன அம் கை சேர் முன்கை-தன் மேல்
துணிவு உடை காப்பு கட்டி சுற்றுபு தொழுது காத்தார்

#1345
மழ களிற்று எருத்தில் தந்த மணி குடம் மண்ணும் நீரால்
அழகனை மண்ணு பெய்து ஆங்கு அரும் கடிக்கு ஒத்த கோலம்
தொழுதக தோன்ற செய்தார் தூ மணி பாவை அன்னார்
விழு மணி கொடி அனாளும் விண்ணவர் மடந்தை ஒத்தாள்

#1346
கயல் கணாளையும் காமன் அன்னானையும்
இயற்றினார் மணம் எத்தரும் தன்மையார்
மயற்கை இல்லவர் மன்றலின் மன்னிய
இயற்கை அன்பு உடையார் இயைந்தார்களே

#1347
வாளும் வேலும் மலைந்து அரி ஆர்ந்த
கண்ணாளும் வார் கயல் மைந்தனும் ஆயிடை
தோளும் தாளும் பிணைந்து உரு ஒன்று எய்தி
நாளும் நாகர் நுகர்ச்சி நலத்தரோ

#1348
தணிக்கும் தாமரையாள் நலம் தன்னையும்
பிணிக்கும் பீடு இனி என் செயும் பேதை தன்
மணி கண் வெம் முலை தாம் பொர வாய் அவிழ்ந்து
அணி கந்து அன்னவன் தார் அங்கு உடைந்ததே

#1349
பரிந்த மாலை பறைந்தன குங்குமம்
கரிந்த கண்ணி கலந்த மகிழ்ச்சியின்
அரிந்த மேகலை ஆர்த்தன அம் சிலம்பு
பிரிந்த வண்டு இளையார் விளையாடவே

#1350
கொழு மென் இன் அகில் கூட்டுறும் மென் புகை
கழுமு சேக்கையுள் காலையும் மாலையும்
தழுவு காதல் தணப்பு இலர் செல்பவே
எழுமையும் இயைந்து எய்திய அன்பினார்

#1351
நாறியும் சுவைத்தும் நரம்பின் இசை
கூறியும் குளிர் நாடகம் நோக்கியும்
ஊறு இன் வெம் முலையால் உழப்பட்டும் அ
ஏறு அனான் வைகும் வைகலும் என்பவே

#1352
விரி கதிர் விளங்கு பன் மீன் கதிரொடு மிடைந்து திங்கள்
தெரி கதிர் திரட்டி வல்லான் தெரிந்து கோத்து அணிந்த போலும்
சொரி கதிர் முத்தம் மின்னும் துணை முலை தடத்தில் வீழ்ந்தான்
புரி கதிர் பொன் செய் மாலை புகை நுதி புலவு வேலான்

#1353
எழில் மாலை என் உயிரை யான் கண்டேன் இத்துணையே முலையிற்று ஆகி
குழல் மாலை கொம்பு ஆகி கூர் எயிறு நா போழ்தல் அஞ்சி அஞ்சி
உழல் மாலை தீம் கிளவி ஒன்று இரண்டு தான் மிழற்றும் ஒரு நாள்-காறும்
நிழல் மாலை வேல் நாண நீண்ட கண்ணே நெய் தோய்ந்த தளிரே மேனி

#1354
மா நீர் மணி முகிலின் மின்னு கொடி நுசுப்பின் மயில் அம் சாயல்
ஏ நீர் இரு புருவம் ஏறி இடை முரிந்து நுடங்க புல்லி
தூ நீர் மலர் மார்பன் தொல் நலம் தான் பருகி துளும்பும் தேறல்
தேனீர் மலர் மாலை தேன் துளித்து மட்டு உயிர்ப்ப சூட்டினானே

#1355
தேன் அடைந்து இருந்த கண்ணி தெண் மட்டு துவலை மாலை
ஊன் அடைந்து இருந்த வேல் கண் ஒண் தொடி உருவ வீணை
தான் அடைந்து இருந்த காவில் பாடினாள் தனிமை தீர்வான்
கூன் அடைந்திருந்த திங்கள் குளிர் முத்த முலையினாளே

#1356
வார் தளிர் ததைந்து போது மல்கி வண்டு உறங்கும் காவில்
சீர் கெழு குருசில் புக்கான் தேசிகப்பாவை என்னும்
கார் கெழு மின்னு வென்ற நுடங்கு இடை கமழ் தண் கோதை
ஏர் கெழு மயில் அனாளை இடை-வயின் எதிர்ப்பட்டானே

#1357
சிலம்பு எனும் வண்டு பாட மேகலை தேன்கள் ஆர்ப்ப
நலம் கவின் போது பூத்த பூம்_கொடி நடுங்கி நாண
கலந்தனன் காம மாலை கலையினது இயல்பில் சூட்ட
புலம்பு போய் சாயல் என்னும் புது தளிர் ஈன்றது அன்றே

#1358
சாந்து-இடை குளித்த வெம் கண் பணை முலை தாம மாலை
பூம் தொடி அரிவை பொய்கை பூமகள் அனைய பொற்பின்
வேந்து அடு குருதி வேல் கண் விளங்கு இழை இவர்கள் நாளும்
ஆய்ந்து அடி பரவ வைகும் அரிவையர்க்கு அநங்கன் அன்னான்

#1359
இங்ஙனம் இரண்டு திங்கள் ஏகலும் ஏக வேலான்
அங்ஙனம் புணர்ந்த அன்பின் அவள் முலை போகம் நீக்கி
எங்ஙனம் எழுந்தது உள்ளம் இருள்-இடை ஏகல் உற்றான்
தங்கிய பொறியின் ஆக்கம் தனக்கோர் தேராக நின்றான்

#1360
தயங்கு இணர் கோதை-தன் மேல் தண் என வைத்த மென் தோள்
வயங்கு இணர் மலிந்த தாரான் வருந்துறா வகையின் நீங்கி
நயம் கிளர் உடம்பு நீங்கி நல் உயிர் போவதே போல்
இயங்கு இடையறுத்த கங்குல் இருள்-இடை ஏகினானே

#1361
நீல் நிற குழல் நேர் வளை தோளியை
தான் உறக்கு-இடை நீத்தலும் தன் பினே
வேல் நிற கண் விழித்தனள் என்பவே
பால் நிற துகில் பை அரவு அல்குலாள்

#1362
ஆக்கை உள் உறை ஆவி கெடுத்து அவண்
யாக்கை நாடி அயர்வது போலவும்
சேக்கை நாடி தன் சேவலை காணிய
பூக்கள் நாடும் ஓர் புள்ளும் ஒத்தாள்-அரோ

#1363
புல்லும் போழ்தின் நும் பூண் உறின் நோம் என
மல்லல் காளையை வைது மிழற்று வாய்
இல்லின் நீக்கம் உரைத்திலை நீ என
செல்வ பைங்கிளி தன்னையும் சீறினாள்

#1364
ஓவிய கொடி ஒப்பு அரும் தன்மை எம்
பாவை பேதுற பாயலின் நீங்கி நீ
போவதோ பொருள் என்றிலை நீ என
பூவையோடும் புலம்பி மிழற்றினாள்

#1365
தன் ஒப்பாரை இல்லானை தலைச்சென்று எம்
பொன் ஒப்பாளொடும் போக என போகடாய்
துன்னி தந்திலை நீ என தூ சிறை
அன்ன பேடையொடு ஆற்ற கழறினாள்

#1366
மை இல் வாள் நெடும் கண் வளராதன
மெய் எலாம் உடையாய் மெய்ம்மை காண்டி நீ
ஐயன் சென்றுழி கூறுக என்று ஆய் மயில்
கையினால் தொழுதாள் கயல் கண்ணினாள்

#1367
வளர்த்த செம்மையை வாலியை வான் பொருள்
விளக்குவாய் விளக்கே விளக்காய் இவண்
அளித்த காதலொடு ஆடும் என் ஆர் உயிர்
ஒளித்தது எங்கு என ஒண் சுடர் நண்ணினாள்

#1368
பருகி பாய் இருள் நிற்பின் அறாது என
கருகி அ இருள் கான்று நின் மெய் எலாம்
எரிய நின்று நடுங்குகின்றாய் எனக்கு
உரியது ஒன்று உரைக்கிற்றி என்று ஊடினாள்

#1369
கோடி நுண் துகிலும் குழையும் நினக்கு
ஆடு சாந்தமும் அல்லவும் நல்குவேன்
மாடமே நெடியாய் மழை தோய்ந்து உளாய்
நாடி நண்பனை நண்ணுக நன்று-அரோ

#1370
ஆடக கொழும் பொன் வரை மார்பனை
கூட புல்லிவையா குற்றம் உண்டு எனா
நீடு எரி திரள் நீள் மணி தூணொடு
சூடக திரள் தோள் அணி வாட்டினாள்

#1371
கொலை கொள் வேலவன் கூடலன் ஏகினான்
இலை கொள் பூண் நுமக்கு என் செயும் ஈங்கு எனா
மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன்
முலை கொள் பேர் அணி முற்றிழை சிந்தினாள்

#1372
அரும் கலம் கொடி அன்னவன் ஏகினான்
இருந்து இ ஆகத்து எவன் செய்வீர் நீர் எனா
மருங்குல் நோவ வளர்ந்த வன முலை
கரும் கண் சேந்து கலங்க அதுக்கினாள்

#1373
மஞ்சு சூழ் வரை மார்பனை காணிய
துஞ்சல் ஓம்பு-மின் என்னவும் துஞ்சினீர்
அஞ்சனத்தொடு மை அணி-மின் என
நெஞ்சின் நீள் நெடும் கண் மலர் சீறினாள்

#1374
அரக்கு உண் தாமரை அன்ன தன் கண் மலர்
விருத்தி மாதர் விலக்க வெரீஇ-கொலோ
வருத்தம் உற்றனள் என்று-கொல் மேகலை
குரல் கொடாது குலுங்கி குறைந்ததே

#1375
துனியாயின துன்னுபு செய்து அறியேன்
தனியேன் ஒரு பெண் உயிர் என்னொடு-தான்
இனியான் இங்ஙனே உளனே உரையீர்
பனி ஆர் மலர் மேல் படு வண்டு இனமே

#1376
நிரை வீழ் அருவி நிமிர் பொன் சொரியும்
வரையே புனலே வழையே தழையே
விரையார் பொழிலே விரி வெண் நிலவே
உரையீர் உயிர் காவலன் உள் வழியே

#1377
எரி பொன் உலகின் உறைவீர் இதனை
தெரிவீர் தெரிவில் சிறு மானிடரின்
பரிவு ஒன்றிலிரால் படர் நோய் மிகுமால்
அரிதால் உயிர் காப்பு அமரீர் அருளீர்

#1378
புணர்வின் இனிய புலவி பொழுதும்
கணவன் அகலின் உயிர் கை அகறல்
உணர்வீர் அமரர் மகளீர் அருளி
கொணர்வீர் கொடியேன் உயிரை கொணர்வீர்

#1379
நகை மா மணி மாலை நடை கொடி நின்
வகை மா மணி மேகலை ஆயினதேல்
அகையாது எனது ஆவி தழைக்கும் என
தகை பாட வலாய் தளர்கோ தளர்கோ

#1380
புனை தார் பொர நொந்து பொதிர்ந்த என
வினை ஆர் எரி பூண் முலை கண் குளிர
உன கண் மலரால் உழுது ஓம்ப வலாய்
நினையாது நெடும்தகை நீத்தனையே

#1381
அருள் தேர் வழி நின்று அறனே மொழிவாய்
பொருள் தேர் புலன் எய்திய பூம் கழலாய்
இருள் தேர் வழி நின்று இனைவேற்கு அருளாய்
உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே

#1382
மிக ஆயது ஒர் மீளிமை செய்தனனோ
உகவா உனது உள்ளம் உவர்த்ததுவோ
இகவா இடர் என்-வயின் நீத்திட நீ
தகவா தகவு அல்லது செய்தனையே

#1383
குளிர் துன்னிய பொன் நிலம் ஏகுதலால்
தளர் அன்ன நடையவள் தாங்கலளாய்
ஒளிர் பொன் அரி மாலை ஒசிந்து இஙனே
மிளிர்-மின் என மின் நிலம் எய்தினளே

#1384
தழும் மாவலி மைந்த என தளரா
எழும் ஏழ் அடி ஊக்கி நடந்து செலா
விழும் மீ நிலம் எய்தி மிளிர்ந்து உருகா
அழுமால் அவலித்து அ அணங்கு_இழையே

#1385
கரப்பு நீர் கங்கை அம் கள் கடி மலர் கமல பள்ளி
திருத்தகு திரைகள் தாக்க சேப்புழி சேவல் நீங்க
பரல் தலை முரம்பின் சில் நீர் வறும் சுனை பற்று விட்ட
அரத்த வாய் பவள செம் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள்

#1386
மெழுகினால் புனைந்த பாவை வெய்து உறுத்தாங்கு ஓவாது
அழுது நைந்து உருகுகின்ற ஆயிடை தோழி துன்னி
கெழீஇயினாள் கேள்வி நல் யாழ் கிளை நரம்பு அனைய சொல்லாள்
கழி பெரும் கவலை நீங்க காரண நீர சொன்னாள்

#1387
தெள் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி
அள் உற அளிந்த காமம் அகமுற பிணித்ததேனும்
உள்ளுற வெந்த செம்பொன் உற்ற நீர் புள்ளி அற்றால்
கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காதல் என்றாள்

#1388
ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளி மலர் நெடும் கணாரை
கூடு அரி உழுவை போல முயக்கு இடை குழைய புல்லி
ஆடவர் அழுந்தி வீழ்ந்தும் பிரிவு-இடை அழுங்கல் செல்லார்
பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையார் இல்லை என்றாள்

#1389
பேதைமை என்னும் வித்தில் பிறந்து பின் வினைகள் என்னும்
வேதனை மரங்கள் நாறி வேட்கை வேர் வீழ்த்து முற்றி
காதலும் களிப்பும் என்னும் கவடு விட்டு அவலம் பூத்து
மா துயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும்

#1390
தேன் சென்ற நெறியும் தெள் நீர் சிறு திரை போர்வை போர்த்து
மீன் சென்ற நெறியும் போல விழித்து இமைப்பவர்க்கு தோன்றா
மான் சென்ற நோக்கின் மாதே மாய்ந்து போம் மக்கள் யாக்கை
ஊன் சென்று தேய சிந்தித்து உகுவதோ தகுவது என்றாள்

#1391
பிரிந்தவற்கு இரங்கி பேதுற்று அழுத நம் கண்ணின் நீர்கள்
சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடு கடல் வெள்ளம் ஆற்றா
முரிந்த நம் பிறவி மேல் நாள் முற்றிழை இன்னும் நோக்காய்
பரிந்து அழுவதற்கு பாவாய் அடியிட்டவாறு கண்டாய்

#1392
அன்பினின் அவலித்து ஆற்றாது அழுவதும் எளிது நங்கள்
என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது சேர்ந்த
துன்பத்தால் துகைக்கப்பட்டார் துகைத்த அ துன்பம் தாங்கி
இன்பம் என்று இருத்தல் போலும் அரியது இ உலகில் என்றாள்

#1393
மயற்கை இ மக்கள் யோனி பிறத்தலும் பிறந்து வந்து ஈங்கு
இயற்கையே பிரிவு சாதல் இமைப்பு-இடை படாதது ஒன்றால்
கயல் கணின் அளவும் கொள்ளார் கவற்சி உள் கவற்சி கொண்டார்
செயற்கை அம் பிறவி நச்சு கடல் அகத்து அழுந்துகின்றார்

#1394
இளமையில் மூப்பும் செல்வத்து இடும்பையும் புணர்ச்சி-போழ்தில்
கிளைநரில் பிரிவும் நோயில் காலத்து நோயும் நோக்கி
விளை மது கமழும் கோதை வேலினும் வெய்ய கண்ணாய்
களை துயர் அவலம் வேண்டா கண் இமைப்பு அளவும் என்றாள்

#1395
முத்து இலங்கு ஆகம் தோய்ந்த மொய் மலர் தாரினான் நம்
கைத்தலத்து அகன்ற பந்தின் கைப்படும் கவல வேண்டா
பொத்து இலத்து உறையும் ஆந்தை புணர்ந்து இருந்து உரைக்கும் பொன்னே
நித்தில முறுவல் உண்டான் நீங்கினான் அல்லன் கண்டாய்

#1396
வடி மலர் காவின் அன்று வண் தளிர் பிண்டி நீழல்
முடி பொருள் பறவை கூற முற்றிழை நின்னை நோக்கி
கடியது ஓர் கௌவை செய்யும் கட்டு எயிற்று அரவின் என்றேன்
கொடியனாய் பிழைப்பு கூறேன் குழையல் என்று எடுத்து கொண்டாள்

#1397
அலங்கலும் குழலும் தோழி அம் கையின் அடைச்சி அம் பூம்
பொலம் கல கொடி அனாள் தன் கண் பொழி கலுழி ஒற்றி
கலந்து அகில் நாறும் அல்குல் கவான் மிசை கொண்டிருந்தாள்
புலர்ந்தது பொழுது நல்லாள் நெஞ்சமும் புலர்ந்தது அன்றே

#1398
கண் கனிந்து இனிய காம செவ்வியுள் காளை நீங்க
தெண் பனி அனைய கண்ணீர் சே_இழை தாயர் எல்லாம்
தண் பனி முருக்கப்பட்ட தாமரை காடு போன்றார்
பண் கனிந்து இனிய பாடல் படு நரம்பு இளகி ஆங்கு

#1399
சில் அரி சிலம்பு சூழ்ந்த சீறடி திருவின் நற்றாய்
முல்லை அம் குழலினாய் நின் முலை முதல் கொழு நன் மேல் நாள்
சொல்லியும் அறிவது உண்டோ என குழைந்து உருகி நைந்து
மெல் இயல் கங்குல் சொல்லிற்று இற்று என மிழற்றுகின்றாள்

#1400
வினைக்கும் செய்பொருட்கும் வெயில் வெம் சுரம்
நினைத்து நீங்குதல் ஆண் கடன் நீங்கினால்
கனைத்து வண்டு உணும் கோதையர் தம் கடன்
மனை கண் வைகுதல் மாண்பொடு என சொன்னாள்

#1401
விரை செய் தாமரை மேல் விளையாடிய
அரைச அன்னம் அமர்ந்துள-ஆயினும்
நிரை செய் நீல நினைப்பில என்றனன்
வரை செய் கோல மணம் கமழ் மார்பினான்

#1402
பொன் விளைத்த புணர் முலையாள் சொல
இன் அளி குரல் கேட்ட அசுணமா
அன்னள் ஆய் மகிழ்வு எய்துவித்தாள்-அரோ
மின் வளைத்தன மேகலை அல்குலாள்

#1403
அன்னம் தான் அவன் தாமரை போது நீ
நின்னை நீங்கினன் நீங்கலன் காதலான்
இன்னதால் அவன் கூறிற்று என சொன்னாள்
மன்னன் ஆருயிர் மா பெரும் தேவியே

#1404
சொரி பனி முருக்க நைந்து சுடர் முகம் பெற்ற-போதே
பரிவுறும் நலத்த அன்றே பங்கயம் அன்னதே போல்
வரி வளை தோளி கேள்வன் வரும் என வலித்த சொல்லால்
திரு நலம் பிறந்து சொன்னாள் தேனினும் இனிய சொல்லாள்

#1405
நஞ்சினை அமுதம் என்று நக்கினும் அமுதம் ஆகாது
அம் சிறை கலாப மஞ்ஞை அணங்கு அரவு அட்டதேனும்
அம் சிறை கலுழன் ஆகும் மாட்சி ஒன்றானும் இன்றே
மஞ்சனுக்கு இனைய நீரேன் வாடுவது என்னை என்றாள்

#1406
பொய்கையுள் கமலத்து அம் கண் புள் எனும் முரசம் ஆர்ப்ப
வெய்யவன் கதிர்கள் என்னும் விளங்கு ஒளி தட கை நீட்டி
மை இருள் போர்வை நீக்கி மண்ணக மடந்தை கோலம்
பையவே பரந்து நோக்கி பனி வரை நெற்றி சேர்ந்தான்

#1407
செவ்வழி யாழின் ஊறும் தீம் சொலாட்கு உற்றது எல்லாம்
அவ்வழி அரசற்கு உய்த்தார்க்கு அரசனும் அவலம் எய்தி
எவ்வழியானும் நாடி இமைப்பினது எல்லை உள்ளே
இவ்வழி தம்-மின் என்றான் இவுளி தேர் தானையானே

#1408
மின் உளே பிறந்த ஓர் மின்னின் மேதக
தன் உளே பிறந்தது ஓர் வடிவு தாங்குபு
முன்னினான் வட திசை முகம் செய்து என்பவே
பொன் உளே பிறந்த பொன் அனைய பொற்பினான்

#1409
வீக்கினான் பைம் கழல் நரல வெண் துகில்
ஆக்கினான் இரு துணி அணிந்த பல் கலன்
நீக்கினான் ஒரு மகற்கு அருளி நீள் நெறி
ஊக்கினான் உவவுறும் மதியின் ஒண்மையான்

#1410
வேந்தனால் விடுக்கப்பட்டார் விடலையை கண்டு சொன்னார்
ஏந்தலே பெரிதும் ஒக்கும் இளமையும் வடிவும் இஃதே
போந்ததும் போய கங்குல் போம் வழி கண்டது உண்டேல்
யாம் தலைப்படுதும் ஐய அறியின் ஈங்கு உரைக்க என்றார்

#1411
நெய் கனிந்து இருண்ட ஐம்பால் நெடும் கணாள் காதலானை
ஐ_இரு திங்கள் எல்லை அகப்பட காண்பிர் இப்பால்
பொய் உரை அன்று காணீர் போ-மினம் போகி நுங்கள்
மையல் அம் களிற்று வேந்தன் மைந்தனுக்கு உரை-மின் என்றான்
@6 கேமசரியார் இலம்பகம்

#1412
வானின் வழங்கும் வண் கை மணி செய் ஆர மார்பின்
தேனும் வழங்கும் பைம் தார் விசையை சிறுவன் தேம் கொள்
நானம் வழங்கும் கோதை நைய வெய்ய ஆய
கானம் வழங்கல் மேவி காலின் ஏகினானே

#1413
சிலை கொள் நாணின் தீரா திருந்து கற்பின்னவர்-தம்
இலை கொள் பூம் தார் உழுத இன்ப வருத்தம் நீங்க
முலை கொள் கண்கள் கண்ணின் எழுதி முள்கு மொய்ம்பன்
மலை கொள் கானம் முன்னி மகிழ்வோடு ஏகுகின்றான்

#1414
கனி கொள் வாழை காட்டுள் கருமை மெழுகியவை போன்று
இனிய அல்லா முகத்த முசுவும் குரங்கும் இரிய
துனிவு தீர நோக்கி தோன்றல் செல்லும் முன்னால்
பனி வெண் திரை சூழ் கடல் போல் பழுவம் தோன்றிற்று அவணே

#1415
பருகுவாரின் புல்லி பயம் கண்மாற துறக்கும்
முருகு விம்மு குழலார் போல மொய் கொள் தும்பி
உருவ பூம் கொம்பு ஒசிய புல்லி தீம் தேன் பருகி
அருகு வாய்விட்டு ஆர்ப்ப வண்ணன் மெல்ல சென்றான்

#1416
செல்வர் மனத்தின் ஓங்கி திரு இல் மாந்தர் நெஞ்சின்
எல்லை இருளிற்று ஆகி பூம் தாது இனிதின் ஒழுகி
கொல்லும் அரவின் மயங்கி சிறியார் கொண்ட தொடர்பின்
செல்ல செல்ல அஃகும் நெறி சேர் சிலம்பு சேர்ந்தான்

#1417
சுனைகள் கண்கள் ஆக சூழ்ந்த குவளை விழியா
அனையல் ஆகா உருவ நோக்கி மைந்தற்கு இரங்கி
இனைவ போலும் அருவியின் அருவி இனிதின் ஆடி
நனை கொள் போது வேய்ந்து நாதன் பாடுகின்றான்

#1418
செய்தான் இருவினையின் பயத்தை சேரும் சென்று என்றி
எய்தான் அதன் பயத்தை பிறனே துய்த்தல் இயல்பு என்றி
கொய் தாமம் தாழ்ந்து ஒசிந்த குளிர் பூம் பிண்டி கோமனே
இஃதே நின் சொல் இயல்பு என்றால் அடியேன் நின்னை தொழுதேனே

#1419
உண்டே தனது இயல்பின் உணரும்-காலை உயிர் என்றி
உண்டாய அ உயிரே பிறிதின் இல்லை என உரைத்தி
வண்டு ஆர்ந்து நால் காதம் வண்ண மாலை சுமந்து ஒசிந்து
கொண்டு ஏந்து பூம் பிண்டி கோமான் நின்னை தொழுதேனே

#1420
காதலால் எண் வினையும் கழிப என்றி அ காதல்
ஆதலால் எண் வினையும் கழியா என்றும் அறைதியால்
போது உலாய் தேன் துளித்து பொழிந்து வண்டு திவண்டு உலாம்
கோதை தாழ் பூம் பிண்டி கோமன் நின்னை தொழுதேனே

#1421
இனிதின் இங்ஙனம் ஏத்தி வலம்கொண்டு
முனிவர் சித்திர கூடம் முனாது என
தனிதின் ஏகுபு தாபதர் வாழ்வது ஓர்
பனி கொள் பூம் பொழில் பள்ளி கண்டான்-அரோ

#1422
புல்லும் அல்லியும் போகு உயர் நீள் கழை
நெல்லும் நீர் விளை கேழலும் தோரையும்
அல்ல தீம் பழம் காய் கிழங்கு ஆதியா
நல்லவே நுகர்வார் பள்ளி நண்ணினான்

#1423
அரிய கொள்கையர் ஆர் அழல் ஐந்தினுள்
மருவி வீடு வளைக்குறும் மாட்சியர்
விரிய வேதம் விளம்பிய நாவினர்
தெரிவு இல் தீ தொழில் சிந்தையின் மேயினார்

#1424
வள்ளி இன் அமுதும் வரை வாழையின்
தெள்ளு தீம் கனியும் சில தந்த பின்
வெள்ள மாரி அனாய் விருந்து ஆர்க என
உள்ள மாட்சியினார் உவந்து ஓம்பினார்

#1425
பாங்கின் மாதவர் பால் மதி போன்று இவன்
வீங்கு கல்வியன் மெய்ப்பொருள் கேள்வியன்
ஆங்கு நாமும் அளக்குவம் என்று தம்
ஓங்கு கட்டுரை ஒன்று இரண்டு ஓதினார்

#1426
ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான்
சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான்
உய்யுமேல் தொடர்ப்பாட்டின் இங்கு யாவையும்
எய்தினார்களும் உய்ப என்று ஓதினான்

#1427
வீடு வேண்டி விழு சடை நீட்டல் மெய்
மூடு கூறையின் மூடுதல் வெண் தலை
ஓடு கோடல் உடுத்தல் என்று இன்னவை
பீடு இலா பிறவிக்கு வித்து என்பவே

#1428
ஏம நல் நெறி எ நெறி அ நெறி
தூய்மை இல் நெறி யாமும் துணிகுவம்
காமன் தாதை நெறியின்-கண் காளை நீ
தீமை உண்டு எனில் செப்பு என செப்பினான்

#1429
தூங்கு உறி கிடந்து காயும் பழங்களும் துய்ப்ப நில்லா
பாங்கு அலா வினைகள் என்றார் பகவனார் எங்கட்கு என்னின்
ஓங்கு நீள் மரத்தில் தூங்கும் ஒண் சிறை ஒடுங்கல் வாவல்
பாங்கரில் பழங்கள் துய்ப்ப பழ வினை பரியும் அன்றே

#1430
அல்லியும் புல்லும் உண்டு ஆங்கு ஆர் அழல் ஐந்துள் நின்று
சொல்லிய வகையின் நோற்ப துணியும் வெம் வினைகள் என்னின்
கல் உண்டு கடிய வெம்பும் கான் உறை புறவம் எல்லாம்
புல்லிய வினையை வென்று புறக்கொடை காணும் அன்றே

#1431
நீட்டிய சடையம் ஆகி நீர் மூழ்கி நிலத்தில் சேர்ந்து
வாட்டிய உடம்பின் யாங்கள் வரகதி விளைத்தும் என்னின்
காட்டு-இடை கரடி போகி கய மூழ்கி காட்டில் நின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்று உரை விடு-மின் என்றான்

#1432
கலை வளர் கிளவியார்-தம் காமர் மென் சேக்கை நீங்கி
இலை வளர் குரம்பை அங்கண் இரு நிலம் சேக்கை ஆக
முலை வளர் ஆகம் தோய முழு வினை முரியும்-ஆயின்
மலை வளர் குறவர்க்கு அ மா வினைகளும் மாயும் அன்றே

#1433
வெள் நிற துகிலின் ஆங்கண் வீழ்ந்து மாசு ஆகி நின்ற
ஒள் நிற உதிரம்-தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே
பண் நிற கிளவியார்-தம் பசையினால் பிறந்த பாவம்
கண் நிற முலையினார்-தம் கலவியால் கழிக்கலாமே

#1434
நுண் துகில் வேதல் அஞ்சி நெருப்பு அகம் பொதிந்து நோக்கி
கொண்டுபோய் மறைய வைத்தால் கொந்து அழல் சுடாதும் ஆமே
கண்டத்தின் நாவியார் தம் கடி மனை துறந்து காட்டுள்
பண்டை செய் தொழிலின் பாவம் பறைக்குற்றால் பறைக்கலாமே

#1435
நோய் முதிர் குரங்கு போல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா
காய் முதிர் கனியின் ஊழ்த்து வீழும் இ யாக்கை இன்னே
வேய் முதிர் வனத்தின் வென்றான் உருவொடு விளங்க நோற்று
போய் முதிர் துறக்கத்து இன்பம் பருகுவ புரி-மின் என்றான்

#1436
மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மை
பொய் வகை இன்றி தேறல் காட்சி ஐம்பொறியும் வாட்டி
உய் வகை உயிரை தேயாது ஒழுகுதல் ஒழுக்கம் மூன்றும்
இ வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்

#1437
குன்று அனான் உரைப்ப கேட்டே பாகத்தார் குடும்பம் நீக்கி
இன்று கண்விடுக்கப்பட்டேம் யாம் என எழுந்து போகி
வென்றவன் பாதம் சேர்ந்து வீட்டு நன்னெறியை பெற்றார்
சென்றது பருதிவட்டம் செம்மலும் அசைவு தீர்ந்தான்

#1438
அசைவு தீர்ந்து இருள் அஃகிய காலையே
வசையின் நீங்கியினார் வழி காட்டலின்
திசையும் யாறும் தெரிந்துகொண்டு ஏகினான்
மிசையும் இல்லது ஓர் மெய்ப்பொறி யாக்கையான்

#1439
படம் புனைந்து எழுதிய வடிவில் பங்கய
தடம் பல தழீஇயது தக்க நாடு அது
வடம் கெழு வரு முலை மகளிர் மாமை போன்று
இடம் பெரிது இனிது அதன் எல்லை எய்தினான்

#1440
தேம் கயத்து அணி மலர் தெகிழ்த்த நாற்றமும்
பூம் குழல் மடந்தையர் புனைந்த சாந்தமும்
ஆங்கு எலாம் அகில் புகை அளாய வசமும்
தாங்கலால் தக்க நாடு ஆயது என்பவே

#1441
சண்பக நறு மலர் மாலை நாறு சாந்து
ஒண் பழுக்காயினோடு உருவம் மெல் இலை
உண்பதம் யாவர்க்கும் ஊனம் இல்லது
வண் புகழ் நாட்டாது வண்ணம் இன்னதே

#1442
கரும்பு அணி வள வயல் காமர் தாமரை
வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல்
அரங்கு அணி நாடக மகளிர் ஆய் நுதல்
சுரும்பு சூழ் இலம்பக தோற்றம் ஒத்ததே

#1443
வண்டு வாழ் கொடும் துறை கன்னி வாளை மேல்
நண்டு உகிர் உற்றென நடுங்கி நாணினால்
விண்டு ஒளித்து ஊண் துறந்து ஒடுங்கும் வீழ் புனல்
கொண்ட பூம் கிடங்கு அணி நகரம் கூறுவாம்

#1444
அகழ் கிடங்கு அம் துகில் ஆர்ந்த பாம்புரி
புகழ் தகு மேகலை நாயில் பூண் முலை
திகழ் மணி கோபுரம் திங்கள் வாள் முகம்
சிகழிகை நெடும் கொடி செல்விக்கு என்பவே

#1445
நாட்டிய மணி வரை கடைந்து நல் அமிர்து
ஊட்டினும் அதனை விட்டு உறைநர் இன்மையால்
ஈட்டிய வள நிதி இறைகொள் மா நகர்
சூட்டு வைத்து அனையது அ சுடர் பொன் இஞ்சியே

#1446
எறி சுறாவு இளையவர் ஏந்து பூம் கொடி
மறி திரை வரை புரை மாடம் மா கலம்
பெறல் அரும் திரு அனார் அமுதம் பேர் ஒலி
அறை கடல் வள நகர் ஆயது என்பவே

#1447
மதி அகடு உரிஞ்சும் சென்னி மாடம் நீள் மறுகு-தோறும்
பொதி அவிழ் மாலை வீழ்ந்து பொன் செய் நன் கலன்கள் சிந்தி
நிதி அறை திறந்து நோக்கி அன்னது ஓர் நீர்மை எய்தி
புதியவர்க்கு இயங்கல் ஆகா பொற்போடு பொலிந்தது அன்றே

#1448
கேமமாபுரம் எனும் கேடு இல் நல் இசை
பூமி மேல் திலகம் வைத்து அனைய பொன் நகர்
தாமம் நீள் நெடும் குடை தரணி காவலன்
நாமம் வேல் நரபதி தேவன் என்பவே

#1449
அ நகர்க்கு அரசனே அனைய ஆண்டகை
மெய் நிகர் இலாதவன் வேத வாணிகன்
கை நிகர் அமைந்த வேல் கமழும் தாரினான்
மை நிகர் மழை கணார் மருட்ட வைகுவான்

#1450
வார் சிலை வடிப்ப வீங்கி வரை என திரண்ட தோளான்
சோர் புயல் தொலைத்த வண் கை சுபத்திரன் மனைவி பெற்ற
சீர் நலம் கடந்து கேமசரி என திசைகள் எல்லாம்
பேர் நலம் பொறித்த பெண்மை பெரு விளக்கு ஆகி நின்றாள்

#1451
மாசு இலாள் பிறந்த ஞான்றே மதி வலான் விதியின் எண்ணி
காசு இலாள் கண்ட-போழ்தே கதுமென நாணப்பட்டான்
தூசு உலாம் அல்குலாட்கு துணைவனாம் புணர்-மின் என்று
பேசினான் அன்று கொண்டு பெரு விருந்து ஓம்புகின்றான்

#1452
தாழ்தரு பைம்பொன் மாலை தட மலர் தாமம் மாலை
வீழ் தரு மணி செய் மாலை இவற்றிடை மின்னின் நின்று
சூழ் வளை தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும்
ஊழ்படு காதலானை ஒரு பிடி நுசுப்பினாளே

#1453
சே_இழை கணவனாகும் திருமகன் திறத்து நாளும்
ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆர் அமுது அடிசில் ஊட்டி
ஏயின வகையினாலே ஆறிரண்டு எல்லை ஆண்டு
போயின என்ப மற்று அ பூம் கொடி சாயலாட்கே

#1454
முருக்கு இதழ் குலிகம் ஊட்டி வைத்து அன முறுவல் செ வாய்
திரு கவின் நிறைந்த வெம் கண் பணை முலை தேம் பெய் கோதை
புரி குழல் பொன் செய் பைம் பூண் புனை_இழை கோலம் நோக்கி
தரிக்கிலாது உருகி நையும் தட மலர் கோதை நற்றாய்

#1455
மாவடு மருட்டும் நோக்கின் மதி முகம் மழை கண் மாசு இல்
பூவொடு புரையும் சாயல் புனை நலம் தனித்து வைக
ஏ அடு பிணையின் நோக்கி இறை வளை கழல நின்ற
தாய் படும் துயரம் எல்லாம் தாரவன் நீக்கினானே

#1456
போது வாய் திறந்த போதே பூம் பொறி வண்டு சேர்ந்து ஆங்கு
ஊதுமே மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே
யாதும் நீ கவல வேண்டா ஆர் அழகு உடைய நம்பி
காதலான் தவத்தின் மிக்கான் கண்ணுறும் நாளை என்றான்

#1457
பொன் நிலத்து எழுந்தது ஓர் பொரு இல் பூம் கொடி
மின்னு விட்டு எரிவது ஓர் நலத்தள் வீங்கு இருள்
பின்னிவிட்டு அன குழல் பெரும் கண் பேதை ஊர்
துன்னினன் தொடு கழல் குருசில் என்பவே

#1458
மல்லிகை மணம் கமழ் மாலை வார் குழல்
சில் சுணங்கு இள முலை சிறுமி தந்தையும்
செல்வனை திருநகர் சேட்பட்டான்-அரோ
பல் கதிர் மணி ஒளி பரந்த பூணினான்

#1459
தென் திசை முளைத்தது ஓர் கோல செம் சுடர்
ஒன்றி மற்று உத்தரம் வருவது ஒத்து அவண்
மன்றல் கொள் மார்பினான் வந்து ஒரு ஆல் நிழல்
நன்று உவந்து இருந்தனன் நாதன் சிந்தியா

#1460
குடை கவித்து அனையது கோல மா முடி
அடி இணை யாமையின் வடிவு கொண்டன
புடை திரள் விலாவும் வில் வளைந்த பொற்பின
கடி கமழ் தாமரை கண்ணின் வண்ணமே

#1461
குறங்கு அணி மயிலொடு கோலம் ஆர்ந்தன
பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின
கறங்கு இசை மணி முழா எருத்தம் காண்தகு
மறம் கெழு பெரும் புலி வாயின் வண்ணமே

#1462
வரை அகல் மார்பு-இடை வரியும் மூன்று உள
புரை தபு பொன் புரை நாவும் முள் உடைத்து
அரு வரை தோள்களும் அமரர் கோன் களிற்று
உருவு கொள் தட கையின் உருவு கொண்டவே

#1463
இலங்கு பொன் இறுவரை அனைய ஏந்தலுக்கு
அலங்கு இதழ் தாமரை கொட்டை அன்னதாய்
வலம் சுழிந்து அமைவர குழிந்த வாய்ப்பொடு
நலம் கிளர் நாபியும் இனிது நாறுமே

#1464
தடித்து இறை திரண்டு தம் அளவிற்கு ஏற்ற சூல்
கெடிற்று அழகு அழிப்பன கிளர் பொன் தோரைய
கடிப்பகை நுழைவு அற கதிர்த்த கை விரல்
அடுத்த மூக்கு அரு மணி வயிர தோட்டியே

#1465
வார்ந்து இலங்கு எயிறு அணி பவழம் மாண்ட வாய்
ஆர்ந்த பூ அங்கையும் அடியும் தாமரை
தேர்ந்தனன் திருமகள் கணவனாம் என
தீர்ந்தனன் சொல் அளைஇ தேர் கொண்டு ஏறினான்

#1466
தேர் இவர் ஊர்ந்தனர் செல்ல இல் தலை
கூர் உகிர் விடுத்தது ஓர் கோலம் மாலையை
பேர் இசை வீணையில் சூட்டி பெண் கொடி
கரிகை உலகு உணர் கடவுள் பாடுமே

#1467
வீங்கு ஓத வண்ணன் விரை ததும்பு பூம் பிண்டி
தேங்கு ஓதம் முக்குடை கீழ் தேவர் பெருமானை
தேவர் பெருமானை தேன் ஆர் மலர் சிதறி
நாவின் நவிற்றாதார் வீட்டுலகம் நண்ணாரே

#1468
அடல் வண்ண ஐம்பொறியும் அட்டு உயர்ந்தோர் கோமான்
கடல் வண்ணன் முக்குடை கீழ் காசு இன்று உணர்ந்தான்
காசு இன்று உணர்ந்தான் கமல மலர் அடியை
மாசு இன்றி பாடாதார் வானுலகம் நண்ணாரே

#1469
பூத்து ஒழியா பிண்டி கீழ் பொங்கு ஓத வண்ணனை
நா தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே
வீட்டுலகம் நண்ணார் வினை கள்வர் ஆறலைப்ப
ஓட்டிடுப எண் குணனும் கோட்பட்டு உயிராவே

#1470
முத்து உமிழும் முந்நீர் மணி வண்ணன் மூன்று உலகும்
பத்திமையால் பாடப்படுவான் தாள் பாட கேட்டு
ஒத்து அரம்பை அன்னாள் உவந்து இவளொடு ஒப்பான் ஓர்
வித்தகனை இன்னே பெறுக என உரைத்தாள்

#1471
நிலம் தின கிடந்து அன நிதி அ நீள் நகர்
புலம்பு அற பொலிவொடு புக்க-காலையே
இலங்கு பூம் கொடி அன ஏழை நோக்கமும்
உலம் கொள் தோள் உறு வலி நோக்கும் ஒத்தவே

#1472
கண்ணுற காளையை காண்டலும் கை வளை
மண் உற தோய்ந்து அடி வீழ்ந்தன மாமையும்
உள் நிறை நாணும் உடைந்தன வேட்கையும்
ஒள் நிற தீ விளைத்தாள் உருக்குற்றாள்

#1473
வாக்கு அணங்கு ஆர் மணி வீணை வல்லாற்கு அவள்
நோக்கு அணங்காய் மனநோய் செய நொந்து அவன்
வீக்கு அணங்கு ஆர் முலை வேய் நெடும் தோளி ஓர்
தாக்கு அணங்கோ மகளோ என தாழ்ந்தான்

#1474
நல் வளம் தாமரை நாணிய வாள் முகம்
கொல் வளர் வேல் கணினாள் குழைந்தாள் என
சொல் வளர்த்தார் அவள் தோழியர் சோர் குழல்
மல் வளர் மார்பனை வந்து வளைந்தார்

#1475
நினைப்பரு நீள் நிறை நிப்புதி சேர்ந்து ஆங்கு
இனத்து-இடை ஏறு அனையான் எழில் நோக்கி
புன கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
வனப்பினையே கண்டு வாள் கண் அகன்றாள்

#1476
வள்ளலை வாச நெய் பூசி மணி குடம்
தெள் அறல் நீர் சொரிந்து ஆட்டினர் தேம் புகை
உள்ளுற உண்ட கலிங்கம் உடுத்த பின்
கள் அவிழ் கண்ணி கலத்தொடு அணிந்தார்

#1477
மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்த பின்
கொங்கு அலர் கோதையர் கண்டு அகம் எய்தி
அம் கதிர் பொன் கலத்து ஆர் அமிர்து ஏந்தினர்
செம் கயல் கண்ணியர் சீரின் அயின்றான்

#1478
பத்தியில் குயிற்றிய பைம்பொன் திண்ணை மேல்
சித்திர தவிசினுள் செல்வன் சீர் பெற
நித்தில மணி உறழ் கரக நீரினால்
அ துறை விடுத்தனன் அலர்ந்த தாரினான்

#1479
இளிந்த காய் கமழ் திரை வாசம் ஈண்டி ஓர்
பளிங்கு போழ்ந்து அருகு பொன் பதித்த பத்தியின்
விளிம்பு முத்து அழுத்திய யவன கைவினை
தெளிந்த பொன் அடைப்பையுள் பாகு சென்றவே

#1480
பாசிலை சுருட்டுபு கறித்து பல்லினை
தேசிகம் பட துடைத்து உமிழ்ந்து தேம் கமழ்
வாசம் வாய்க்கொண்டனன் மணி செய் குண்டலம்
வீசி வில் விலங்கி விட்டு உமிழ என்பவே

#1481
பண் உலாம் கிளவி-தன் பரவை ஏந்து அல்குல்
வண்ண மேகலை இவை வாய்ந்த பூம் துகில்
உள் நிலாய் பசும் கதிர் உமிழ்வ பாவியேன்
கண்ணையும் மனத்தையும் களம் கொண்டிட்டவே

#1482
கடி கமழ் குழலினால் கட்டி மெய் எலாம்
நடு ஒசி நோன் சிலை புருவத்தால் புடைத்து
அடும் மலர் நெடும் கணால் ஆவி போழ்ந்திடா
கொடியவள் இள முலை கொல்லும் கொல்லுமே

#1483
கடியன கச்சினால் கட்டப்பட்டன
கொடியன குங்குமம் கொட்டப்பட்டன
வடி நிலம் பரந்து முத்து அணிந்த வெம் முலை
இடை நிலம் செகுப்பன என்னை என் செயா

#1484
கரிய உள் வெறியன கட்டப்பட்டன
புரிவொடு புறத்து இடப்பட்ட பூம் குழல்
தெரியின் மற்று என் செயா செய்ய நீண்டன
பெரிய கண் போலவும் பேது செய்யுமே

#1485
காதன்மை கண்ணுளே அடக்கி கண் எனும்
தூதினால் துணிபொருள் உணர்த்தி தான் தமர்க்கு
ஏதின்மைபட கரந்திட்ட வாள் கண் நோக்கு
ஓத நீர் அமுதமும் உலகும் விற்குமே

#1486
மிகு கொடா முத்தம் சூட்டி மீளிமை தீர்த்து மின்னும்
நகுகொடா மணிகள் நல்ல தெளித்துக்கொண்டு எழுதி நல் பொன்
முகபடாம் வைப்ப ஆள் செற்று அழன்று கண் கரிந்த முல்லை
தொகு கள் தாம் கோதை வெய்ய துணை மணி முலைகள் தாமே

#1487
தேன் கறி கற்ற கூழை செண்பக மாலை வேல் கண்
ஊன் கறி கற்ற காலன் ஒள் மணி தட கை வை வேல்
கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் குவி முலை நமன் கை பாசம்
யான் பிறன் அளியன் வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே

#1488
திருவிற்கும் கற்பக தெரியல் மாலையார்
உருவிற்கு ஓர் விளக்கமாம் ஒண் பொன் பூம்_கொடி
முருகற்கும் அநங்கற்கும் எனக்கும் மொய் சடை
ஒருவற்கும் பகைத்தியால் ஒருத்தி வண்ணமே

#1489
கலை தொகை நலம் பல கடந்த காளை-தான்
நலத்தகையவள் நலம் நினைப்ப நாய்கனும்
மலை தொகை மதம் தவழ் யானை மன்னவன்
நிலத்தவர்க்கு அறிவுற நெறியின் செப்பினான்

#1490
இடி உமிழ் எறி திரை முழக்கில் பல்லியம்
கொடி அணி வியல் நகர் குழுமி ஆர்த்து எழ
கடி மணம் இயற்றினார் கடவுள் நாளினால்
வடி மலர் கோதையை மைந்தற்கு என்பவே

#1491
மணி குடம் அழுத்தி வைத்த அனைய தோளினான்
கணிக்கு இடம் கொடா நலம் கதிர்த்த காரிகை
அணிக்கு இடன் ஆகிய அரிவை தன்னொடும்
பிணித்து இடைவிடாது அவன் பெற்ற இன்பமே

#1492
பூம் துகில் பொரு திரை பொம்மல் வெம் முலை
ஏந்திய மணி வரை இரக்கம் நீர்த்தரங்கு
ஆய்ந்த வன் தோள் இணை நாகம் ஆக வைத்து
ஈந்தது அ கடல் அவற்கு அமுதம் என்பவே

#1493
சந்தன சேற்று-இடை தாம வார் குழல்
பைம் தொடி படா முலை குளிப்ப பாய்தலின்
மைந்தன தார் குழைந்து உடைய வாய் திறந்து
அம் சிலம்பு அணி அல்குல் கலையொடு ஆர்த்தவே

#1494
கோதையும் குழலும் பொங்க குவி முலை குழங்கன் மாலை
போது உக பொருது பூணும் பொரு கடல் முத்தும் மூழ்க
காதலும் களிப்பும் மிக்கு கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பும் இல்லா தன்மை பெற்றவர்கள் ஒத்தார்

#1495
புனை மலர் தாரினானும் போது அணி கொம்பு அனாளும்
நனை மலர் காவும் அம் தண் வாவியும் நல்ல ஆடி
சுனை மலர் குவளை குற்று சூழ் மலர் கண்ணி சூட்டி
வினை நலம் நுகர்ந்து செல்வார் விதியினால் மிக்க நீரார்

#1496
பொழிந்து உகு காதல் பூண்டு புல்லுகை விடாது செல்ல
கழிந்தன இரண்டு திங்கள் காளையும் மற்றோர் நாளால்
பிழிந்து கொள்வு அனைய பெண்மை பெய் வளை தோளி-தன்னோடு
அழிந்து வீழ் அருவி குன்றில் ஆய் மலர் காவு புக்கான்

#1497
காஞ்சன கமுகு காய் பொன் கனி குலை வாழை சூழ்ந்து
பூம் சினை நாகம் தீம் பூ மரம் கருப்பூர சோலை
மா சினை மயில்கள் ஆட சண்பக மலர்கள் சிந்தும்
தீம் சுனை அருவி குன்றம் சீர் பெற ஏறினானே

#1498
தினை விளை சாரல் செ வாய் சிறு கிளி மாதர் ஓப்ப
புனை வளை தோளி சொல்லை கிளி என கிள்ளை போகா
நனை விளை கோதை நாணி பொன் அரி மாலை ஓச்ச
கனை கழல் குருசில் நண்ணி கவர் கிளி ஓப்பினானே

#1499
கொந்து அழல் வேல் கணால் என் ஆவி கூட்டுண்ட கொம்பே
செம் தழை அலங்கல் ஏந்தி சீறடி பரவ வந்தேன்
உய்ந்து இனி பணி செய்வேனோ உடம்பு ஒழித்து ஏகுவேனோ
பைம் தழை அல்குல் பாவாய் பணி என பரவினானே

#1500
வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும்
பாணி யாழ் கனியும் வென்ற பைம் கிளி மழலை தீம் சொல்
வாணிக மகளிர் தாமே வாணிகம் வல்லர் என்னா
பூண் முலை பொதிர்ப்ப புல்லி புனை நலம் பருகினானே

#1501
திங்கள் அம் குளவி செ வான்-இடை கிடந்து இமைப்பதே போல்
குங்குமம் மார்பில் பூண்ட குளிர் கதிர் ஆரம் மின்ன
மங்கையோடு இருந்த போழ்து ஓர் மணி வண்டு கண்டு சொன்னான்
கங்குல் தான் நீங்கலுற்று கமழ் மலர் அணிந்த தாரான்

#1502
மணி வண்டு இ மாதர் கோதை மது உண வந்த போழ்து அங்கு
இணை வண்டு அங்கு இறந்து பாடு இன்று இருக்குமே இரங்கல் இன்றாய்
துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று நின்-கண்
பணிகொண்டது இன்மையால் தான் பரிவொடும் இருக்கும் அன்றே

#1503
குழவியாய் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகி இப்பால்
விழைவு தீர் கிழவன் ஆகி விழு கதிர் உலந்து வீழ
மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி
குழல் புரை கிளவியோடும் கொழும் புகை அமளி சேர்ந்தான்

#1504
திரு துயில் பெற்ற மார்பன் திருந்து தார் உழக்க இன்ப
வருத்தமுற்று அசைந்த கோதை வாள் ஒளி தடம் கண் நீலம்
பொருத்தலும் பொன் அனாளை புறக்கணித்து எழுந்து போகி
பரு சுதர் பவழம் நோன் தாழ் பல் மணி கதவு சேர்ந்தான்

#1505
அல்லியுள் பாவை அன்னாள் அறிவுறா வகையின் ஒற்றி
மெல்லவே திறந்து நீக்கி மின்னுவிட்டு இலங்கு பைம் பூண்
கொல் சின மடங்கல் அன்னான் கொழு நிதி மாடம் நீந்தி
பல் கதிர் பருதி போல பாய் இருள் ஏகினானே

#1506
தாள் உடை தடம் கொள் செவ்வி தாமரை போது போலும்
வாள் உடை முகத்தினாள் தன் வரு முலை தடத்தின் வைகி
நாளினும் பெருகுகின்ற நகை மதி அனைய காதல்
கேள்வனை கனவில் காணாள் கிளர் மணி பூணினாளே

#1507
அரம் தின பிறந்த பைம்பொன் அரும்பிய முலையினாளை
கரந்தவன் கங்குல் நீங்க கதிர் வளை அணங்கும் மென் தோள்
வரம் தரு தெய்வம் அன்னாள் வைகு இருள் அனந்தல் தேறி
பரந்து எலா திசையும் நோக்கி பையவே பரிவு கொண்டாள்

#1508
திரு மணி குயின்ற செம்பொன் திருந்து பூம் கொம்பு அனாள் தன்
கரு மணி பாவை அன்னான் கரந்துழி காண்டல் செல்லாள்
எரி மணி விளக்கம் மாடத்து இருள் அறு-காறும் ஓடி
அரு மணி இழந்து ஓர் நாகம் அலமருகின்றது ஒத்தாள்

#1509
யாண்டையாய் ஐய அஞ்சினென் ஆருயிர்
ஈண்டு உடம்பு ஒழித்து ஏக வலிக்குமால்
நீண்ட தோளவனே நிறை யான் இலேன்
தீண்டு வந்து என தேனின் மிழற்றினாள்

#1510
கனி கொள் காமம் கலந்து உயிர் ஒன்றலின்
இனியர் மங்கையர் என்பது கூறுவாய்
பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான்
தனியள் ஆவது தக்கதுவோ சொலாய்

#1511
கழலும் நெஞ்சொடு கை வளை சோருமால்
சுழலும் கண்களும் சூடு உறு பொன் என
அழலும் மேனியும் ஆற்றலென் ஐயவோ
நிழலின் நீப்பரும் காதலும் நீத்தியோ

#1512
திருந்தும் மல்லிகை தேம் கமழ் மாலை யான்
புரிந்து சூடினும் பூம் கொடி நுண் இடை
வருந்துமால் மடவாய் எனும் வஞ்ச நீ
கரிந்து யான் நைய காண்டலும் வல்லையோ

#1513
தொண்டை வாய் இவள் தொய்யில் வன முலை
கண்டு தேவர் கனிப என்று ஏத்துவாய்
வண்டு கூறிய வண்ணம் அறிந்திலேன்
விண்டு தேன் துளிக்கும் விரை தாரினாய்

#1514
முலை வைத்த தடத்து-இடை முள்கலுறின்
தலை வைத்து நிலத்து அடி தைவருவாய்
சிலை வித்தகனே தெருளேன் அருளாய்
உலைவித்தனை என் உயிர் காவலனே

#1515
கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின்
இடன் எத்துணை அத்துணையும் எழுதி
உடன் ஒத்து உறைவான் உழை வாரலனேல்
மடன் ஒத்து உளது என் உயிர் வாழ்வதுவே

#1516
பெறும் அன்பினள் என்பது பேசின் அலால்
அறும் அன்பினள் என்று அறைவார் இலையால்
இறும் என்பொடு இனைந்து நைவேற்கு அருளி
நறு மென் கமழ் தாரவனே நணுகாய்

#1517
நுன சீறடி நோவ நடந்து செலேல்
எனது ஆவி அகத்து உறைவாய் எனும் நீ
புனை தாரவனே பொய் உரைத்தனையால்
வினையேன் ஒழிய தனி ஏகினையே

#1518
பரு முத்து உறையும் பணை வெம் முலை நின்
திரு முத்து அகலம் திளையாது அமையா
எரி மொய்த்து அனலும் இகல் வேல் எரி புண்
மருமத்து அனலும் வகை செய்தனையே

#1519
புன மா மயிலே பொழிலே புனலே
வனம் ஆர் வழையே வரையே திரையே
இன மா மணி சூழ் எரி பூணவனை
துன யான் பெறுகோ தொழுதேன் உரையீர்

#1520
கொடு வெம் சிலை வாய் கணையில் கொடிதாய்
நடுநாள் இரவின் நவை-தான் மிகுமால்
நெடு வெள் நிலவின் நிமிர் தேர் பரியாது
அடுமால் வழிநின்று அறனே அருளாய்

#1521
கயலால் இவை என்று கவிழ்ந்து கிடந்து
அயலேன் அறியாமை உரைத்தது எலாம்
இயலாததுவோ இனியேற்கு இனியீர்
உயலாவது கண் மலர்காள் உரையீர்

#1522
நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும்
பொறி நீர புனைந்து எழுதி புகழும்
வெறி தாரவன் எ வழி ஏகினன் நீர்
அறிவீர் உரையீர் அமர் தோள் இணைகாள்

#1523
இழுது ஆர் சுடர் வேல் இளையான் அகலத்து
உழு நீர் உடன் வெம் முலைகாள் வயிர
தொழுவாய் விடையை தொடர்கிற்றிலிர் என்று
அழுதாள் தடம் ஆக அணங்கு_இழையே

#1524
தகை வாடிய தன் நிழல் கண் உகு நீர்
வகை வாடி வருந்தி அழுவது கண்டு
அகையேல் அமர் தோழி அழேல் அவரோ
பகையாபவர் என்றனள் பால் மொழியே

#1525
வெறி மலைகள் வீழ்ந்து நிலம் புதைய
பொறி மாலை புனை நிழல் காணலளாய்
நெறி நாடிய போயினள் நீடினள் கண்டு
எறி வால் வளை கொண்டுவரும் இனியே

#1526
மட மா மயிலே குயிலே மழலை
நடை மாண் அனமே நலம் ஆர் கிளியே
உடன் ஆடும் என் ஐயனை என்று உருகா
தொடை யாழ் மழலை மொழி சோர்ந்தனளே

#1527
மல் உறை அலங்கல் மார்பன் பிரிவு எனும் எரியுள் வீழ்ந்து
கல் உறை நாகு வேய் தோள் கதிர் மணி முறுவல் செ வாய்
வில் உறை புருவம் மாதர் வெந்தனள் கிடப்ப மின் தோய்
இல் உறை தெய்வம் நோக்கி இரங்கி நின்று உரைக்கும் அன்றே

#1528
புண் அவாம் புலவு வாள் கை பொலன் கழல் புனைந்த பை தார்
கண் அவாம் வனப்பினானை காமனே கண்ட-போழ்தும்
பண் அவாம் பவள செ வாய் படா முலை பரவை அல்குல்
பெண் அவா நிற்கும் என்றால் பிணை அனாட்கு உய்தல் உண்டோ

#1529
கடத்து-இடை கவளம் தேன் நெய் கனியை தோய்த்து இனிய துற்ற
தட கையால் கொடுத்து புல்லும் தவழ் மத களிறு நீங்கின்
மட பிடிக்கு உய்தல் உண்டோ வால் அடி குஞ்சி சூட்டும்
கொடைக்கையான் பிரிந்த பின்றை கோதையாட்கு உய்தல் உண்டோ

#1530
முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ் முலை தெய்வம் சேர
உயங்குவாள் உணர்ந்து கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி
இயங்குவான் நின்ற ஆவி தாங்கினள் என்ப போலும்
வயங்கு பொன் ஈன்ற நீல மா மணி முலையினாளே

#1531
வஞ்ச வாய் காமன் சொன்ன மணி நிற வண்டுகாள் நீர்
துஞ்சுவேன் துயரம் தீர தொழு தகு தெய்வம் ஆவீர்
மஞ்சு தோய் செம்பொன் மாடத்து என் மனை-தன்னுள் என்றாள்
பஞ்சி மேல் மிதிக்கும் போதும் பனிக்கும் சீறடியினாளே

#1532
நொந்து எடுக்கலாது வீங்கும் வன முலை நுசுப்பின் தேய்ந்த ஓர்
பந்து எடுக்கலாத நங்கை பால் கடை வெண்ணெய் பாவை
வெந்து உடன் வெயிலுற்ற ஆங்கு மெலிந்து உக விளங்கும் வெள்ளி
வந்து வான் இட்ட சுட்டி வனப்பொடு முளைத்தது அன்றே

#1533
எரி நுதி உற்ற மாவின் இளம் தளிர் போன்று மாழ்கி
புரி நரம்பு இசையின் தள்ளி புன்கணுற்று அழுதலாலே
அரி குரல் கொண்ட பூசல் அகத்தவர்க்கு இசைப்ப ஈண்டி
திரு விரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள்

#1534
விழு திணை பிறந்து வெய்ய வேட்கை வேர் அரிந்து மெய் நின்று
இழுக்கம் ஒன்றானும் இன்றி எய்திய தவத்தின் வந்து
வழுக்குதல் இன்றி விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட
எழுத்து அனான் தந்த இன்பம் இன்னும் நீ பெறுதி என்றாள்

#1535
பிறங்கின கெடுங்கள் யாவும் புணர்ந்தவர் பிரிவர் பேசின்
இறங்கின வீழும் மேலாய் ஓங்கிய எண்ணில் யோனி
பிறந்தவர் சாவர் செத்தார் பிறப்பவே என்ன நோக்கி
கறங்கு இசை வண்டு பாடும் கோதை நீ கவலல் என்றாள்

#1536
எரி தலை கொண்ட காமத்து இன்பம் நீர் புள்ளி அற்றால்
பிரிவின்-கண் பிறந்த துன்பம் பெரும் கடல் அனையது ஒன்றால்
உருகி நைந்து உடம்பு நீங்கின் இம்மையோடு உம்மை இன்றி
இருதலை பயனும் எய்தார் என்று யாம் கேட்டும் அன்றே

#1537
மன்னும் நீர் மொக்குள் ஒக்கும் மானிடர் இளமை இன்பம்
மின்னின் ஒத்து இறக்கும் செல்வம் வெயில் உறு பனியின் நீங்கும்
இன் இசை இரங்கும் நல் யாழ் இளியினும் இனிய சொல்லாய்
அன்னதால் வினையின் ஆக்கம் அழுங்குவது என்னை என்றாள்

#1538
பஞ்சு இறைகொண்ட பைம்பொன் கலை புறம் சூழ்ந்து வைத்து
நஞ்சு இறைகொண்ட நாக படம் பழித்து அகன்ற அல்குல்
வெம் சிறை பள்ளியாக விழு முலை தடத்து வைக
தம் சிறைப்படுக்கலாதார் தம் பரிவு ஒழிக என்றாள்

#1539
வாசம் மிக்கு உடைய தாரான் வண்டினுக்கு உரைத்த மாற்ற
பாசத்தால் ஆக்கப்பட்ட ஆவியள் அல்லது எல்லாம்
பேசின் ஓர் பிணையல் மாலை பிசைந்திடப்பட்டது ஒத்தாள்
தூசு உலாம் பரவை அல்குல் தூ மணி பாவை அன்னாள்

#1540
பை அர விழுங்கப்பட்ட பசும் கதிர் மதியம் ஒத்து
மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும்
மை இரும் குழலினாள் தன் மைந்தனை வலையின் சூழ்ந்து
கை அரிக்கொண்டும் காணாள் காளையும் காலின் சென்றான்

#1541
காழக சேற்றுள் தீம் பால் கதிர் மணி குடத்தின் ஏந்தி
வீழ்தர சொரிவதே போல் விளங்கு ஒளி திங்கள் புத்தேள்
சூழ் இருள் தொழுதி மூழ்க தீ கதிர் சொரிந்து நல்லார்
மாழை கொள் முகத்தின் தோன்றி வளை கடல் முளைத்தது அன்றே

#1542
ஏறு அனாற்கு இருளை நீங்க கைவிளக்கு ஏந்திய ஆங்கு
வீறு உயர் மதியம் தோன்ற விரைவொடு போய பின்றை
மாறு இலா பருதிவட்டம் வரு திரை முளைத்த ஆங்கண்
ஆறு செல் ஒருவற்கு அண்ணல் அணிகலம் அருளலுற்றான்

#1543
எ ஊரீர் எ பதிக்கு போந்தீர் நும் மனைவியர்-தாம் எனைவர் மக்கள்
ஒவ்வாதார்-தாம் எனைவர் ஒப்பார் மற்று எனைவர் நீர் உரை-மின் என்றாற்கு
இ ஊரேன் இ பதிக்கு போந்தேன் என் மனைவியரும் நால்வர் மக்கள்
ஒவ்வாதார்-தாம் இல்லை ஒப்பான் ஒருவன் என உரைத்தான் சான்றோன்

#1544
ஒப்பான் ஒரு மகனே நால்வர் ஒரு வயிற்றுள் பிறந்தான் என்ன
நக்கான் பெரும் சான்றோன் நம்பி போல் யார் உலகில் இனி யார் என்ன
மிக்கான் உரைப்பதுவும் மிக்கதே போலுமால் வினவி கேட்பேன்
தக்காய் குறித்தது உரை என்றான் தான் உரைப்ப கேட்கின்றானே

#1545
நல் தானம் சீலம் நடுங்கா தவம் அறிவர் சிறப்பு இ நான்கும்
மற்று ஆங்கு சொன்ன மனைவியர் இ நால்வரவர் வயிற்றுள் தோன்றி
உற்றான் ஒரு மகனே மேற்கதிக்கு கொண்டுபோம் உரவோன் தன்னை
பெற்றார் மக பெற்றார் அல்லாதார் பிறர் மக்கள் பிறரே கண்டீர்

#1546
பட நாகம் தோல் உரித்தால் போல் துறந்து கண்டவர் மெய் பனிப்ப நோற்றிட்டு
உடன் ஆக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்து ஈதல் தானமாகும்
திடனாக தீம் தேனும் தெள் மட்டும் உயிர் குழாம் ஈண்டி நிற்றற்கு
இடன் ஆகும் ஊனும் இவை துறத்தலே சீலம் என்று உரைத்தார் மிக்கார்

#1547
ஓவாது இரண்டு உவவும் அட்டமியும் பட்டினி விட்டு ஒழுக்கம் காத்தல்
தாவா தவம் என்றார் தண் மதி போல் முக்குடை கீழ் தாதை பாதம்
பூவே புகை சாந்தம் சுண்ணம் விளக்கு இவற்றால் புனைதல் நாளும்
ஏவா இவை பிறவும் பூசனை என்று ஈண்டிய நூல் கரைகண்டாரே

#1548
இ நால்வர் துணைவியரா காதல் மகன் இவனா உடையார் போகி
பொன் ஆர மார்பின் புரந்தரராய் பூமி முழுதும் ஆண்டு
மன் ஆகி முக்குடை கீழ் வாமன் சிறப்பு இயற்றி வரம்பு இல் இன்பம்
பின்னா விளைவித்து பிறவா உலகு எய்தல் பேசலாமே

#1549
மட்டு ஆர் பூம் பிண்டி வளம் கெழு முக்குடை கீழ் மாலே கண்டீர்
முட்டாத இன்ப புதா திறக்கும் தாள் உடைய மூர்த்தி பாதம்
எட்டானும் பத்தானும் இல்லாதார்க்கு இ உலகில் இன்பமே போல்
ஒட்டாவே கண்டீர் வினை அவனை தேறாதார்க்கு உணர்ந்தீர் அன்றே

#1550
வேற்றுவர் இல்லா நுமர் ஊர்க்கே செல்லினும் வெகுண்டீர் போல
ஆற்று உணா கொள்ளாது அடி புறத்து வைப்பீரே அல்லீர் போலும்
கூற்றம் கொண்டு ஓட தமியே கொடு நெறி-கண் செல்லும்-போழ்தின்
ஆற்று உணா கொள்ளீர் அழகு அலால் அறிவு ஒன்றும் இலிரே போலும்

#1551
அளைவது காமம் அடு நறவு நெய் ஒழுகும் ஊனும் பின்னா
விளைவது தீவினையே கண்டீர் இவை மூன்றும் விடு-மின் என்றால்
தளை அவிழ் கோதையார் தாமம் சேர் வெம் முலை போல் வீங்கி கண் சேந்து
உளைய உறுதி உரைப்பாரை ஓ பாவம் உணராரே காண்

#1552
இழுது அன்ன வெள் நிணத்த செம் தடிக்கே ஏட்டைப்பட்டு இரும்பில் போர்த்த
பழுது எண்ணும் வன் மனத்தார் ஓட்டை மர செவியர் கேளார் பால் போன்று
ஒழுகி அமுது ஊறும் நல் அறத்தை ஓர்கிலர் ஊன் செய் கோட்டக்கு
கழுகு உண்ண வள்ளூரமே சுமந்து புள்ளிற்கே புறம் செய்கின்றார்

#1553
கையால் பொதி துணையே காட்ட கயல் கண்ணாள் அதனை காட்டாள்
ஐயா விளாம்பழமே என்கின்றீர் ஆங்கு அதற்கு பருவம் அன்று என்
செய்கோ என சிறந்தாள் போல் சிறவா கட்டுரையால் குறித்த எல்லாம்
பொய்யே பொருள் உரையா முன்னே கொடுத்து உண்டல் புரி-மின் கண்டீர்

#1554
பனி மதியின் கதிர் பருகும் ஆம்பல் போல்
முனி மதி முகத்தியர் முறுவல் நம்பினார்
துனி வளர் கதிகளுள் தோன்றி நாடகம்
கனிய நின்று ஆடுவர் கடையில் காலமே

#1555
நிழல் நிமிர் நெடு மதி நிகர் இல் தீம் கதிர்
பழனம் வெள் தாமரை பனிக்கும் ஆறு போல்
குழல் நிமிர் கிளவியார் கோலம் அஞ்சினார்
தொழ நிமிர்ந்து அமரராய் துறக்கம் ஆள்வரே

#1556
இன்னவாறு உறுதி கூறி எரி மணி வயிரம் ஆர்ந்த
பொன் அவிர் கலங்கள் எல்லாம் பொலிவொடு புகன்று நீட்டி
செல்-மின் நீர் என்று கூற வலம்கொண்டு தொழுது சென்றான்
வில் மரீஇ நீண்ட தோளான் வெயில் கடம் நீந்தலுற்றான்
@7 கனகமாலையார் இலம்பகம்

#1557
இரங்கு மேகலை அல்குல் இன் கனி தொண்டை அம் துவர் வாய்
அரங்க கூத்திகண் அன்பின் மனையவள் துறந்து செல்பவர் போல்
பரந்த தீம் புனல் மருதம் பற்று விட்டு இன மயில் அகவும்
மரம் கொல் யானையின் மதம் நாறு அரும் சுரம் அவன் செலற்கு எழுந்தான்

#1558
கலவ மா மயில் எருத்தில் கடி மலர் அவிழ்ந்தன காயா
உலக மன்னவன் திருநாள் ஒளி முடி அணிந்து நின்றவர் போல்
பலவும் பூத்தன கோங்கம் பைம் துகில் முடி அணிந்து அவர் பின்
உலவு காஞ்சுகியவர் போல் பூத்தன மரவம் அங்கு ஒருங்கே

#1559
ஓங்கு மால் வரை வரையாடு உழக்கலின் உடைந்து உகு பெரும் தேன்
தாங்கு சந்தனம் தரள தழுவி வீழ்வன தகைசால்
ஆங்கண் மால் உலகு அளப்பான் ஆழி சங்கமொடு ஏந்தி
தேம் கொள் மார்பு-இடை திளைக்கும் செம்பொன் ஆரம் ஒத்து உளவே

#1560
வீழ்ந்து வெண் மழை தவழும் விண் உறு பெரு வரை பெரும் பாம்பு
ஊழ்ந்து தோல் உரிப்பன போல் ஒத்த மற்று அவற்று அருவி
தாழ்ந்து வீழ்ந்தவை முழவின் ததும்பின மதுகரம் பாட
சூழ்ந்து மா மயில் ஆடி நாடகம் துளக்குறுத்தனவே

#1561
கருவி தேன் என தூங்கும் கதிர் அணி இறுங்கொடு தினை சூழ்
பொருவில் யானையின் பழு போல் பொங்கு காய் குலை அவரை
அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும்
உருவ எள் பயறு உழுந்தும் அல்லவும் எல்லை இன்று உளவே

#1562
யானை வெண் மருப்பு உலக்கை அறை உரல் ஐவனம் இடித்த
தேன் நெய் வாசவல் குவவி தீம் கனி வாழையின் பழனும்
ஊனை உண்டவர் உருகும் பசும் தினை பிண்டியும் ஒருங்கே
மானின் நோக்கியர் நோக்கி வழி-தொறும் ஈவது அ வழியே

#1563
குறிஞ்சி எல்லையின் நீங்கி கொடி முல்லை மகள் மகிழ்ந்து ஆட
செறிந்த பொன் இதழ் பைம் தார் கொன்றை அம் செல்வற்கு குரவம்
அறிந்து பாவையை கொடுப்ப தோன்றி அம் சுடர் ஏந்த
நிறைந்த பூம் குருந்து உகு தேன் நீர் பெய்து ஆர்த்தன சுரும்பே

#1564
அரக்கு உண் பஞ்சிகள் திரட்டி அரு மணி மரகத பலகை
பரப்பி இட்டன போல கோபங்கள் பயிர் மிசை பரவ
உரைத்த மென் தயிர் பித்தை கோவலர் தீம் குழல் உலவ
நிரை கண் மா மணி கறங்க நீள் நிலம் கடந்தனன் நெடியோன்

#1565
வள்ளி வாரிய குழியின் வளர் பொன்னும் வயிரமும் இமைக்கும்
சுள்ளி வேலியின் நீங்கி துறக்கம் புக்கிடும் என சூழ்ந்து
வெள்ளி வெண் திரள் விசித்து நிலத்தொடு தறி புடைத்தவை போல்
துள்ளி வீழ் உயர் அருவி வன கிரி தோன்றியது அவணே

#1566
அண்ணல் தான் செலும் முன்னா அணி மலர் பூம் பொழில் அதனுள்
வண்ண மா சுனை மா நீர் மணி தெளித்து அனையது ததும்பி
தண் என் தாமரை கழுநீர் நீலம் தாது அவிழ் ஆம்பல்
எண் இல் பன் மலர் கஞலி இன வண்டு பாண் முரன்று உளதே

#1567
கானகத்தின் ஏகுகின்றான் கடி பொழில் கவின் கண்டு எய்தி
தானத்தில் இருத்தலோடும் தையலாள் ஒருத்தி-தானே
வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளும் ஒப்பாள்
நானமும் பூவும் சாந்தும் நாற வந்து அருகு நின்றாள்

#1568
குறிஞ்சி பூம் கோதை போலும் குங்கும முலையினாள் தன்
நிறைந்த பொன் கலாபம் தோன்ற நெடும் துகில் விளிம்பு ஒன்று ஏந்தி
செறிந்தது ஓர் மலரை கிள்ளி தெறித்திடா சிறிய நோக்கா
நறும் புகை தூதுவிட்டு நகை முகம் கோட்டி நின்றாள்

#1569
அணிகல அரவத்தாலும் அமிழ்து உறழ் நாற்றத்தாலும்
பணிவரும் சிங்க நோக்கில் பணை எருத்து உறழ நோக்கி
மணி மலர் நாகம் சார்ந்து வழையோடு மரவ நீழல்
துணிவரும் சாயல் நின்றாள் தோன்றல் தன் கண்ணின் கண்டான்

#1570
கண்டவன் கண்ணின் நோக்க நடுங்கி தன் காதில் தாழ்ந்த
குண்டலம் சுடர ஒல்கி கொடி நடுக்குற்றது ஒப்ப
நுண் துகில் போர்வை சோர நுழை மழை மின்னின் நிற்ப
எண் திசை மருங்கும் நோக்கி இயக்கி-கொல் இவள் மற்று என்றான்

#1571
எண்ணத்தில் இயக்கி என்றே இருப்ப மற்று எழுதலாகா
வண்ண பூம் கண்கள் அம்பா வாள் நுதல் புருவம் வில்லா
உள் நிறை உடைய எய்வான் உருவ சாதகத்துக்கு ஏற்ப
பெண் நலம் கிடந்த பேதை பெண் நலம் கனிய நின்றாள்

#1572
முறுவல் முன் சிறிய தோற்றா முகை நெறித்து அனைய உண்கண்
குறு நெறி பயின்ற கூந்தல் குறும் பல் கால் ஆவி கொள்ளா
சிறு நுதல் புருவம் ஏற்றா சேர் துகில் தானை சோர
அறியுநர் ஆவி போழும் அநங்கனை ஐங்கணையும் எய்தாள்

#1573
வடு பிளவு அனைய கண்ணாள் வல்லவன் எழுதப்பட்ட
படத்து-இடை பாவை போன்று ஓர் நோக்கினள் ஆகி நிற்ப
அடி பொலிந்தார்க்கும் செம்பொன் அணி மணி கழலினான் அம்
மடத்தகை குறிப்பு நோக்கி மனத்து இது சிந்திக்கின்றான்

#1574
கடி மாலை சூடி கருப்பூரம் முக்கி
தொடை மாலை மென் முலையார் தோள் தோய்ந்த மைந்தர்
கடை மாலை மற்று அவரே கண் புதைப்ப செல்லும்
நடை மாலைத்து இ உலகம் நன்று-அரோ நெஞ்சே

#1575
நாவி அகலம் எழுதி நறு நுதலார்
ஆவி தளிர்ப்ப அவர் தோள் மேல் துஞ்சினார்
தூவி ஒழி புள்ளின் தோன்றி துயர் உழப்ப
காவி நெடும் கண் புதைத்து ஆங்கு அகல்வார் நெஞ்சே

#1576
இன் புகை ஆர்ந்த இழுதார் மென் பள்ளி மேல்
அன்பு உருகு நல்லார் அவர் தேள் மேல் துஞ்சினார்
தம் புலன்கள் குன்றி தளர தம் காதலார்
அன்பு உருகு கண் புதைத்து ஆங்கு அகல்வர் நெஞ்சே

#1577
என்பினை நரம்பில் பின்னி உதிரம் தோய்த்து இறைச்சி மெத்தி
புன் புறம் தோலை போர்த்து மயிர் புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயில் ஆக்கி ஊன் பயில் குரம்பை செய்தான்
மன் பெரும் தச்சன் நல்லன் மயங்கினார் மருள என்றான்

#1578
வினை பெரும் தச்சன் நல்லன் மெய்ம்மை நாம் நோக்கல் உற்றால்
எனக்கு உற்று கிடந்தது என்று ஆங்கு இரு கணும் புதைத்து வைக்கும்
நினைப்பினால் பெரியர் என்னான் நீந்தினார் கலைகள் என்னான்
மனத்தையும் குழைய செத்தும் மாண்பினன் மாதோ என்றான்

#1579
என்று அவன் இருப்ப மாதர் என் வரவு இசைப்பின் அல்லால்
ஒன்றும் மற்று உருகல் செல்லான் என்று எடுத்து ஓதுகின்றாள்
மன்றல் அம் தோழிமாருள் வனத்து-இடை பண்ணை ஆட
குன்று-இடை குளிர்க்கும் மின் போல் குழாம் மழை முகட்டில் செல்வான்

#1580
மயில் இனம் இரிய ஆங்கு ஓர் மட மயில் தழுவி கொண்ட
வெயில் இளம் செல்வன் போல விஞ்சையன் என் கொண்டு ஏக
துயிலிய கற்பினாள் தன் துணைவி கண்டு இடுவித்திட்டாள்
அயில் இயல் காட்டுள் வீழ்ந்தேன் அநங்க மா வீணை என்பேன்

#1581
தாய் இலா குழவி போல சா துயர் எய்துகின்றேன்
வேய் உலாம் தோளினார்-தம் விழு துணை கேள்வ நின் கண்டு
ஆயினேன் துறக்கம் பெற்றேன் அளித்து அருளாதுவிட்டால்
தீயினுள் அமிர்தம் பெய்த ஆங்கு என் உயிர் செகுப்பல் என்றாள்

#1582
மணி எழு அனைய தோளும் வரை என அகன்ற மார்பும்
தணிவரும் கயத்து பூத்த தாமரை அனைய கண்ணும்
பணிவரும் பகுதி அன்ன முகமும் என்று அயர்ந்து காம
பிணி எழுந்து அவலிக்கின்ற பேதை நீ கேள் இது என்றான்

#1583
போதொடு நானம் மூழ்கி பூம் புகை தவழ்ந்து முல்லை
கோதை கண் படுக்கும் கூந்தல் குரை வளி பித்தோடு ஐயேய்
ஏதம் செய் மலங்கள் நெய்த்தோர் இறைச்சி என்பு ஈருள் மூளை
கோதம் செய் குடர்கள் புன் தோல் நரம்பொடு வழும்பிது என்றான்

#1584
விழுக்கொடு வெண் நஞ்சு அல்லா உகிர் மயிர் உமிழ் கண் பீளை
புழு பயில் குரம்பை பொல்லா தடி தடி கீழ்ந்த-போழ்தில்
விழித்து யார் நோக்குகிற்பார் பிள்ளையார் கண்ணுள் காக்கை
கொழிப்பரும் பொன்னின் தோன்றும் கொள்கைத்தால் கொடியே என்றான்

#1585
உருவம் என்று உரைத்தி-ஆயின் நிறைந்த தோல் துருத்தி தன்னை
புருவமும் கண்ணும் மூக்கும் புலப்பட எழுதி வைத்தால்
கருதுவது ஆங்கு ஒன்று உண்டோ காப்பிய கவிகள் காம
எரி எழ விகற்பித்திட்டார் இறைச்சிப்போர் இதனை என்றான்

#1586
காதல் மாமன் மட மகளே கரும் குழல் மேல் வண்டு இருப்பினும்
ஏதம் உற்று முரியும் நுசுப்பு என்று உன் இயல்பு ஏத்துவேன்
ஓதம் போல உடன்று உடன்று நைய நீ ஒண் தாமரை
கோதை போல்வாய் ஒளித்து ஒழிதல் கொம்பே குணன் ஆகுமே

#1587
வண்ண திங்கள் மதி முகத்த வாளோ கரும் கயல்களோ
உண்ணும் கூற்றோ ஒளி வேலோ போதோ உணர்கலேனால்
பண்ணின் தீம் சொலாய் படா முலை பாவாய் கொடியே பாங்கின்
உண்ணும் தேனே அமிர்தே என் இன்னுயிரே எங்கணாயோ

#1588
இலவம் போது ஏர் எழில் தகைய சீறடிகள் அஞ்சி ஒல்கி
புலவன் சித்திரித்த பொன் சிலம்பு நக பூ நிலத்து மேல்
உலவும்-போழ்தும் என் ஆவி மலர் மேல் மிதித்து ஒதுங்குவாய்
கலவ மஞ்ஞை அனையாய் கண் காதல் ஒழிகல்லேனால்

#1589
பணி செய் ஆயத்து பந்தாடுகின்றாயை கண்டு மாழ்கி
பிணி செய் நோயேன் யான் கிடப்ப பிறர்-வாய் அது கேட்டலும்
துணிக போதும் என விடுத்தாய் போந்தேன் துயர் உழப்ப நீ
மணி செய் மேகலையாய் மாற்றம் தாராய் மறைந்து ஒழிதியோ

#1590
இயக்கி நின்னோடு இணை ஒக்கும் என்று நலம் செகுப்பான்
மயக்கி கொண்டு போய் வைத்தாய் என் மாதரை தந்து அருள் நீ
நயப்ப எல்லாம் தருவல் என தொழுது நல் யானை தன்
வய பிடி கெடுத்து மாழாந்தது ஒப்ப மதி மயங்கினான்

#1591
மல்லல் தொல் வளத்து மத்திம நல் நாட்டு வண் தாமரை
புல்லும் பேரூர் புகழ் தத்தன் காதல் சின தத்தைக்கும்
செல்வ நாமற்கும் சித்திரமாமாலைக்கும் சுற்றத்தார்க்கும்
அல்லல் செய்தேன் அவண் சென்றால் என் உரைக்கேன் என் செய்கேனோ

#1592
உண்ணு நீர் வேட்டு அசைந்தேன் என உரைப்ப காட்டுள் நாடி
நண்ணி பொய்கை தலைப்பட்டு நல் தாமரை இலையினுள்
பண்ணி நீர் கொண்டு வந்தேன் படா முலை பாவாய் என்று
அண்ணல் ஆற்றாது அழுது அழுது வெந்து உருகி நைகின்றானே

#1593
குழை கொள் வாள் முகத்து கோல் வளையை காணான் குழைந்து அழுகின்ற
அழகன் சொல்லும் அணி செய் கோதை காமமும் கண்டும் கேட்டும்
முழவு தோளான் முறுவலித்து ஈங்கே இரு நீ என்று
இழைய சொல்லி இறையான் இளையானை எய்தினானே

#1594
என்னை கேளீர் என் உற்றீர் என்ன பெயரீர் என்றாற்கு
பொன் அம் குன்றின் பொலிந்த தோள் நம்பி ஒரு பொன் பூம் கொடி
என்னும் நீராளை ஈங்கே கெடுத்தேன் என் பாவத்தால்
பல் நூல் கேள்வி உடையேன் யான் பவதத்தன் என்பேன் என்றான்

#1595
கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்ற பின் கண்ணும் ஆகும்
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கு ஓர் துணையும் ஆகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழும் ஆம் துணைவி ஆக்கும்
இ பொருள் எய்தி நின்றீர் இரங்குவது என்னை என்றான்

#1596
அன்பு நூலாக இன் சொல் அலர் தொடுத்து அமைந்த காதல்
இன்பம் செய் காம சாந்தின் கைபுனைந்து ஏற்ற மாலை
நன் பகல் சூட்டி விள்ளாது ஒழுகினும் நங்கைமார்க்கு
பின் செலும் பிறர் கண் உள்ளம் பிணை அனார்க்கு அடியது அன்றே

#1597
பெண் எனப்படுவ கேண்மோ பீடு இல பிறப்பு நோக்கா
உள் நிறை உடைய அல்ல ஓர் ஆயிரம் மனத்தவாகும்
எண்ணி பத்து அங்கை இட்டால் இந்திரன் மகளும் ஆங்கே
வெண்ணெய் குன்று எரி உற்றால் போன்று மெலிந்து பின் நிற்கும் அன்றே

#1598
சாம் எனில் சாதல் நோதல் தன்னவன் தணந்த-காலை
பூமனும் புனைதல் இன்றி பொற்புடன் புலம்ப வைகி
காமனை என்றும் சொல்லார் கணவன் கைதொழுது வாழ்வார்
தே மலர் திருவோடு ஒப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பர்

#1599
அன்னள் நின் தோழி ஐயா அவள் என்னை கண்ட கண்ணால்
பின்னை தான் பிறரை நோக்கா பெரு மட மாது-தன்னை
என்னை யான் இழந்து வாழுமாறு என இரங்கினானுக்கு
அன்னளோ என்று நக்கான் அணி மணி முழவு தோளான்

#1600
இனையல் வேண்டா இ மந்திரத்தை ஓதி நீ ஒருவில் ஏ அளவு
அனைய எல்லை சென்றால் இயக்கி கொணர்ந்து அருளும் நீ
புனை செய் கோல் வளையை கைப்படுதி என்று ஆங்கு அவன் போதலும்
அனைய மாதரை கண்டு ஆங்கு அடி புல்லி வீழ்ந்து அரற்றினான்

#1601
பட்ட எல்லாம் பரியாது உரைத்தான் அவளும் கேட்டாள்
விட்டாள் ஆர்வம் அவன்-கண் இவன் மேல் மைந்து உறவினால்
மட்டார் கோதை மனை துறந்தாள் மைந்தனும் மங்கை மேலே
ஒட்டி விள்ளா ஆர்வத்தனன் ஆகி உருவம் ஓதினான்

#1602
மெழுகு செய் படம் வீழ் முகில் மத்தகத்து
ஒழுகும் வெள் அருவி திரள் ஓடை சூழ்ந்து
இழுகு பொன் மதத்தின் வரை குஞ்சரம்
தொழுது வேய் முதல் தூசம் கொண்டு ஏறினான்

#1603
நிரைத்த தீவினை நீங்க நெடும் கணார்
வரை-கண் ஏறலின் வால் அரி பொன் சிலம்பு
உரைத்து மின் இருள் மேல் கிடந்தாலும் ஒத்து
அரைத்து அலத்தகம் ஆர்ந்தது ஒர் பால் எலாம்

#1604
சாந்தும் கோதையும் தண் நறும் சுண்ணமும்
ஆய்ந்த பூம் புகையும் அவியும் சுமந்து
ஏந்து பொன் விளக்கு ஏந்தி இடம் பெறா
மாந்தர் சும்மை மலிந்த ஒர் பால் எலாம்

#1605
துறந்த மன்னவர் தூ முடி தோள் வளை
நிறம் கொள் ஆரம் பைம் பூண் நிழல் குண்டலம்
பிறங்கு வெம் கதிர் மின்னொடு பின்னி வீழ்ந்து
உறங்குகின்றன போன்ற ஒர் பால் எலாம்

#1606
கருவி தேன் கலை கையுற கீண்டுடன்
மருவி பைம் கறி வாரி பழம் தழீஇ
வெருவி நாகம் பிளிற்ற விரைந்து உராய்
அருவி நின்று அதிரும் ஒரு பால் எலாம்

#1607
வெம் கதிர் கடவுள் வியன் தேர் வரை
தங்கு சந்தன கோட்டு-இடை பட்டு என
பொங்கு மான் குளம்பின் குடை பொன் துகள்
மங்குலாய் திசை யாவையும் அல்கின்றே

#1608
சுனைய நீலமும் சுள்ளியும் சூழ் மலர்
நனைய நாகமும் கோங்கமும் நாறு இணர்
சினைய சண்பகம் வேங்கையோடு ஏற்றுபு
முனைவன் மேல் துதி முற்று எடுத்து ஓதினான்

#1609
முனிமை முகடு ஆய மூவா முதல்வன்
தனிமை தலைமை தனது தான் என்ப
தனிமை தலைமை தனது தான் என்றால்
பனி மலர் தூய் நின்று பழிச்சவாறு என்னே

#1610
மலர் ஏந்து சேவடிய மால் என்ப மாலால்
அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப்படுவான்
அலர் ஏந்தி அஞ்சலி செய்து அஞ்சப்படுமேல்
இலரே மலர் எனினும் ஏத்தாவாறு என்னே

#1611
களி சேர் கணை உடைய காமனையும் காய்ந்த
அளி சேர் அற வழி அண்ணல் இவன் என்பர்
அளி சேர் அற வழி அண்ணல் இவனேல்
விளியா குண துதி நாம் வித்தாவாறு என்னே

#1612
இன்னணம் ஏத்தி இறைவன் அடி தொழுது
அன்னம் உறங்கும் மணி வரை மேல் நின்று
பொன் அம் கழலான் இழிந்து பொழி மழை
மின்னின் நடந்து மிகு சுரம் சென்றான்

#1613
மாலை கதிர் வேல் மலங்க மணி மலர்க்கு
ஓலை விடு கண் உருகு கொடி இடை
ஏலம் கமழ் குழல் ஏழையவர் அன்ன
ஆலை கரும்பின் அக நாடு அணைந்தான்

#1614
வழைச்சறு சாடி மட்டு அயின்று மள்ளர் தாம்
கழை கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம்
மழை குரல் என மயில் அகவ வார் செந்நெல்
புழை கடை புனல் அலைத்து ஒழுகும் பொற்பிற்றே

#1615
தாமரை மலர் தலை அடுத்து தண் கமழ்
தூ மலர் குவளை கால் அணைத்து தோல் அடி
காமரு பெடை தழீஇ அன்னம் கண்படும்
தே மலர் தடம் தழீஇ திசைகள் மல்கின்றே

#1616
கண் பயில் இளம் கமுகு எருத்தின் காய் பரீஇ
கொண்டு இள மந்திகள் எறிய கோட்டு-இடை
திண் கனி முசு கலை சிதறும் தேம் பொழில்
மண்டு அமர் கடந்தவன் மகிழ்வொடு ஏகினான்

#1617
களிறு மாய் கதிர் செந்நெல் கழனி நாட்டு-இடை
ஒளிறு வேல் நரபதி நகரம் ஒய்யென
பிளிறு வார் இடி முரசு ஆர்ப்ப பெய் கழல்
வெளிறு இலா கேள்வியான் விருப்பொடு எய்தினான்

#1618
புற நகர் மணமகன் ஒருவன் போதர்வான்
இறைமகன் வினாயினான் என்ன பேரவே
துறை வளர் நாட்டொடு நகரம் சொல் என
அறிக என்று அலரி வாய் கமழ கூறினான்

#1619
மத்திம தேசமாம் நாடு மற்று இ நாட்டு
எ திசை நிதியமும் இறைகொண்டு இல்லவர்க்கு
உய்த்தும் ஊர் கொடுப்பவரே ஏமமாபுரம்
இ திசைக்கு ஐய நீ புதியை போன்ம் என

#1620
அன்னதே என்றலின் அடிசில் காலமால்
என்னொடு பேசினாய் தவிர் மற்று ஈங்கு என
பொன் நகர் புக்க பின் அறிவல் போக என்றான்
வில் மரீஇ வாங்கிய வீங்கு தோளினான்

#1621
புணர் மருப்பு யானையின் புயல் கொள் மும்மதம்
மணமகள் கதுப்பு என நாறும் மாநகர்
துணை மலர் கண்ணியும் செம்பொன் மாலையும்
இணை மலர் தாரினான் இடறி ஏகினான்

#1622
வண்டு கொப்புளித்து உணும் மாலை மார்பனை
கண்டு உவப்பு அளித்தவர் கடைக்கண் ஏக்கற
மண்டப பளிக்கு அறை மருங்கு ஒர் மா நிழல்
கொண்டு அவற்கு அளித்தது ஓர் குளிர் கொள் பொய்கையே

#1623
வண் சிறை பவள செ வாய் பெடை அன்ன மடமை கூர
தண் கய நீருள் கண்ட தன் நிழல் பிறிது என்று எண்ணி
கண்டனம் கள்வ மற்று உன் காதலி தன்னை நீர் கீழ்
பண்டையம் அல்லம் வேண்டா படுக்க என்று ஊடிற்று அன்றே

#1624
செயிர்ப்பொடு சிவந்து நோக்கி சேவலின் அகல சேவல்
அயிர்ப்பது என் நின்னை அல்லால் அறியலேன் அன்றி மூக்கின்
உயிர்ப்பது உன் பணியினாலே ஊடல் நீ என்று பல்-கால்
பயிர்ப்பு அற சிறகால் புல்லி பணிந்து பாண் செய்தது அன்றே

#1625
கலை உணர் மகளிர் நெஞ்சில் காமத்தின் கனிந்த ஊடல்
நிலை உணர் மைந்தர் நீக்கி நெறியினால் புணர்ந்தது ஒப்ப
அலர் மிசை பெடையின் ஊடல் அன்பு கொள் சேவல் நீக்கி
குலவிய புணர்ச்சி நோக்கி குன்று அனான் சிந்திக்கின்றான்

#1626
தன்னை யான் முகத்தை நோக்கின் தான் முலை முகத்தை நோக்கும்
பின்னை யான் பலவும் பேசில் தான் ஒன்று மிழற்றும் பைம் பூண்
பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இள முலையினாள் என்
முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள்

#1627
பரிவு உற்றால் பயன் இன்றியும் பாவைமார்
முரிவு உற்றார்களின் மூர்ச்சனை செய்பவால்
பிரிவில் தோன்றிய பேர் அன்பு எனப்படும்
எரியின் மூழ்கி இறந்துபடும்-கொலோ

#1628
வாளி அம்பு அன வாள் தடம் கண்ணி தன்
தோளும் மென் முலை பாரமும் தொல் நலம்
நாளும் நாளினும் நைந்து நைந்து உள் சுட
பூளை மெல் அணை மேல் புரளும்-கொலோ

#1629
உருகி வாடி என் உற்றது-கொல் என
கருகி வாடிய காமரு கோதை தன்
இரு கண் நீரும் இடை முலை பாய்ந்து உக
குருகு பாய் தடம் ஆக அழும்-கொலோ

#1630
வண்டு வாழ் பயில் கோதை மணம் முதல்
கண்ட ஞான்று தன் கண் எனும் கைகளால்
நொண்டு கொண்டு பருகிய நோக்கம் ஒன்று
உண்டு என் ஆவி உருக்கி இடுவதே

#1631
காதலாள் உடலுள் உயிர் கைவிடின்
ஏதம் என் உயிர் எய்தி இறக்கும் மற்று
ஆதலால் அழிவு ஒன்று இலள் அல்லதூஉம்
மாதர் விஞ்சையும் வல்லளும் அல்லளோ

#1632
காதல் மிக்குழி கற்றவும் கைகொடா
ஆதல் கண்ணகத்து அஞ்சனம் போலுமால்
தாது துற்றுபு தங்கிய வண்டு அனார்க்கு
ஏதம் இற்று என எண்ணும் என் நெஞ்சு-அரோ

#1633
நற வெம் கோதையர் நல் நலம் காதலான்
மற வெம் காமத்து வந்துற்ற தீவினை
பறவை தேர் நரகத்து பதைக்குங்கால்
அறிவன் அல்லது அங்கு ஆர் சரண் ஆகுவார்

#1634
வேட்கை ஊர்தர விம்முறவு எய்திய
மாட்சி உள்ளத்தை மாற்றி மலர் மிடை
காட்சிக்கு இன் பொய்கை காமர் நலன் உண்டு
மீட்டும் அங்கு இருந்தான் விடை ஏறு அனான்

#1635
நேரார் நேரும் நீள் நிதி துஞ்சும் நிறை கோயில்
ஆரா வெம் போர் ஆய் தடமித்தன் அரசற்கும்
நாரார் கற்பின் நாகு இள வேய் தோள் நளினைக்கும்
சீரால் தோன்றி செல்வமோடு எல்லாம் திருத்தக்கான்

#1636
விண்டார் தேய்க்கும் வெம் பரி மான் தேர் விசயன் என்று
உண்டா நின்றான் தன் புகழ் ஊழி உலகு ஏத்த
வண்டு ஆர் சோலை வார் மணம் நாற புகுகின்றான்
கண்டான் சேர்ந்தான் காளையை கல்வி கடலானே

#1637
இ நாட்டு இ ஊர் இவ்விடம் எய்தார் இவண் வாழ்வார்
எ நாட்டு எ ஊர் எ பெயராய் நீ உரை என்றாற்கு
அ நாட்டு அ ஊர் அ பெயர் அல்லா பெயர் சொன்னான்
பொய்ம் நாட்டேனும் பொய் அல ஆற்றால் புகழ் வெய்யோன்

#1638
வாமான் திண் தேர் வள்ளலும் உள்ளம் மிகை கொண்டு எம்
கோமாற்கு உய்ப்பன் கொள் பயன் மிக்கோன் கொலை வேலான்
ஏ மாறு இல்லா இந்திரனேயும் இவன் ஒவ்வான்
போமாறு ஆய்வென் பொற்போடு கூடும் வகை என்றான்

#1639
பூம் கழலானை புண்ணிய நம்பி முகம் நோக்கி
ஈங்கு இது நின் நாடு இ பதி நின் ஊர் இது நின் இல்
வீங்கிய திண் தோள் வெல் புகழாய் நின் கிளை என்றாற்கு
ஆங்கு அது எல்லாம் அண்ணலும் நேர்ந்து ஆங்கு அமைக என்றான்

#1640
மன்னவன் சிறுவன் ஆங்கு ஓர் மாங்கனி உண்ணல் உற்று
மின் அவிர் கணையின் பல்-கால் பிழைப்பு எய்து மீண்டு நிற்ப
பொன் அவிர் கழலினான் அ பொரு சிலை கணையின் வாங்கி
இன் அமிர்து ஊறுகின்ற இரும் கனி அற எய்திட்டான்

#1641
எய்த அ கணையும் மாவின் இரும் கனி அதுவும் பூமிக்கு
எய்த அ சிலையின் எல்லை அணுகலும் ஏந்தல் நோக்கி
எய்த அ இடத்து நின்றே எய்த அ தட கை கொண்டாற்கு
எய்த சென்று ஐயன் ஆர தழுவிக்கொண்டு இதனை சொன்னான்

#1642
வண் சிலை கொண்டவாறும் வார் கணை தொடுத்தவாறும்
கண் கணை வைத்தவாறும் கல் செய் தோள் இருந்தவாறும்
திண் சரம் விட்டவாறும் சென்ற கோல் போந்தவாறும்
கண்டு எலாம் வியந்து நோக்கி வில் உடை கடவுள் என்றான்

#1643
மரா மரம் ஏழும் எய்த வாங்கு வில் தட கை வல் வில்
இராமனை வல்லன் என்பது இசை அலால் கண்டது இல்லை
உரா மனம் இவன் கண் இன்றி உவக்குமா செய்வல் என்று
குரா மலர் காவின் நீங்கி கோயிலே கொண்டு புக்கான்

#1644
வழிவரல் வருத்தம் ஓம்பி வயிர பூண் அணிந்த மார்பன்
அழி கவுள் யானை வேந்தற்கு அவன் திறம் அறிய சொன்னான்
மொழி எதிர் விரும்பி மன்னன் மூரி வில் தடக்கையாற்கு
கழி பெரு முகமன் கூறி காதலம் காளை என்றான்

#1645
கிலுத்தம் கூர் பரங்கள் என்னும் இரண்டினுள் கிலுத்தம் சார்ந்து
நலத்தகு விரல்கள் ஐந்தின் இம்பர் மூ விரலின் நீளம்
சிலை தழும்பியானை தோலின் நூற்று உரை சிறுமீன் ஒத்த
இலக்கண கிடக்கை கண்டே ஏவினுக்கு அரசன் என்றான்

#1646
அண்ணல் அம் சிலை வலாருள் அமோக மா ஆசானின் பின்
விண் நகு வெள்ளி வெற்பின் விஞ்சையர் உலகின் அல்லால்
மண்ணகத்து இல்லை என்பார் வாயினை மடங்க வந்தான்
புண்ணகத்து உறையும் வேலான் என புகழ்ந்து அரசன் சொன்னான்

#1647
வில் திறல் நம்பி தேற்றான் விருந்தினன் இவனும் அன்றி
மற்றும் ஓர் நால்வர் உள்ளார் மாண்பினால் வளர்ந்தது இல்லை
கொற்றம் நீ கொடுக்கல் வேண்டும் குறை என குருசில் நேர்ந்தான்
அற்றை நாள் ஆதி ஆக அவர்களும் பயிலுகின்றார்

#1648
கழலின் செந்தாமரை அடிகள் புல்லி தம் காதல் கூர
நிழலின் நீங்கார் நினைத்தன நினைப்பின் அமைவான் ஆக்கி
அழலின் சாராது அகலாது ஒழுக ஒரு நாள் அவன் போகி
பொழிலின் மிக்கதனில் புக்கான் மணமகளிர் போல் பொலிந்ததே

#1649
பாசி பாசத்து பைம்பொன் நிரை தாலி பூத்த வேங்கை
மாசில் வெண் துகிலை நீர் தோய்த்து மேல் போர்த்த வண்ணமே போல்
காசில் மட்டு ஒழுக பூத்த அழிஞ்சில் கண் ஆர் கவின் கொண்டன
பேசில் செம் தலைய வெண் கறைய புன்கம் பொரி அணிந்தவே

#1650
கோடு தையா குழிசியோடு ஆரம் கொள குயிற்றிய
ஓடு தேர் கால் மலர்ந்தன வகுளம் உயர் சண்பகம்
கூடு கோழி கொழு முள் அரும்பின அம் கோசிக
ஆடை பூத்தன பாதிரி வெண்கடம்பு பந்து அணிந்தவே

#1651
வெருகு வேட்ப சிரிப்பன போல் முகைத்த முல்லை வெய்ய வாய்
அரவு பைத்து ஆவித்து அன்ன அம் காந்தள் அவிழ்ந்து அலர்ந்தன
குரவம் கொண்ட குறும்பூழ் போல் கொழும் கால் முகை சுமந்தன
குருதி கூர் எயிறு கூத்தியர் கண் கொண்ட கொடி தளவமே

#1652
சொன்ன நல் மலரும் அல்லனவும் வீழ் பலவின் சூழ் சுளைகளும்
நன்மை நூலின் நயம் தோன்ற நன் பொன் விரல் நுதியினால்
பன் மணியும் முத்தும் பவளமும் பைம்பொன்னும் கோத்தால் ஒப்ப
என்ன அமரரும் மருள தொடுத்தான் இன மாலையே

#1653
ஊன் உண் சிங்க குழவி எயிற்று ஏர் ஒளி எயிற்றினான்
தேன் உண் போதின் பிணையலும் பந்தும் புனைந்து தேம் ஆர்ந்த
நானம் தோய்த்து நனை கலவை நாறும் மதம் தெளித்த பின்
பால் நுண் தீம் சொல்லாள் ஓர் படுவி வண்டு ஆர்ப்ப வந்து இறைஞ்சினாள்

#1654
நெடிய வாள் கண்கள் வாயா இமைப்பு எனும் சொல்லின் மற்று எம்
கொடியிற்கு ஒத்த இவை என்றாள் நம்பியும் கொள்க என்றான்
வடுவும் வேலும் மலரும் கயலும் வனப்பு அழித்த கண்
அடி அம் சிலம்பினாட்கு உய்த்து இறைஞ்சி காட்ட அவள் கொண்டாள்

#1655
கொண்டு கோதை மலர் எழுத்து மெல் விரலின் மேல் தாங்கி நோக்கும்
வண்டு சேர்ந்த குழலாள் வரும் முலைகள் பாய வண் தார்
விண்டு தேன் துளிப்ப வேல் தடம் கண் தாம் ஆடும் நாடகம்
கண்டு வாழாதவர் வாழ்க்கை எல்லாம் சவரர் வாழ்க்கையே

#1656
ஆம்பல் நாறும் அரக்கார் பவள வாயார் அமுதம் அன்னார்
பாம்பு பைத்து ஆங்கு அனைய பவழ பட அரவு அல்குலார்
தாம்பலரும் மருட்ட அகில் தவழும் தண் பூவணை
காம்பின் மென் தோள் கவின் வளர வைகல் கலப்பு என்பவே

#1657
ஆகம் தான் ஓர் மணி பலகையாக முலைகள் நாய் ஆக
போகக்கு ஏற்ற புனை பவழ அல்குல் கழகம் ஆக
ஏக இன்ப காம கவறாடல் இயைவது அன்றேல்
ஆக நோற்றிட்டு அடங்கல் ஆண்மைக்கு அழகு என்பவே

#1658
பின்னிவிட்ட பிடி தட கை இரண்டு போன்று திரண்டு அழகார்
கன்னி கலிங்கம் அகில் ஆர்ந்து கவவி கிடந்த குறங்கினாள்
மின்னு குழையும் பொன் தோடும் மிளிர எருத்தம் இடம் கோட்டி
என்னும் இமையாள் நினைந்து இருந்தாள் இயக்கி இருந்த எழில் ஒத்தாள்

#1659
கொடு வெம் சிலையை கொளை அமைத்து கொதி நீர் பகழி கொள வாங்கி
கடு வெம் குறவன் எயப்பட்ட கன்னி பிணையின் நிலை கலங்கி
தொடி தோள் நடப்ப தோள் தேம்ப துணை வெம் முலைகள் பசப்பு ஊர
நெடு மா தோகை மென் சாயல் நெஞ்சிற்கு இவ்வாறு உரைக்கின்றாள்

#1660
ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் உலகத்தை அங்காந்து
நின்றால் போல நிழல் உமிழ்ந்து நெடு வெண் திங்கள் எயிறு இலங்க
இன்றே குருதி வான வாய் அங்காந்து என்னை விழுங்குவான்
அன்றே வந்தது இ மாலை அளியேன் ஆவி யாதாம்-கொல்

#1661
வருந்தி ஈன்றாள் மறந்து ஒழிந்தாள் வளர்த்தாள் சொல் கேட்டு இல் கடிந்தாள்
முருந்தின்-காறும் கூழையை முனிவார் நின்னை என் முனிவார்
பொருந்திற்று அன்றால் இது என்னாய் பொன்றும் அளித்து இ உயிர் என்னாய்
திருந்து சோலை கரும் குயிலே சிலம்ப இருந்து கூவுதியால்

#1662
பெரு வெண் திங்கள் மால் அக பூ மலைந்து பெட்ப நகுகின்றது
உருவு கொண்ட குரல் அன்றில் உயிர் மேல் ஆம்பல் உலாய் நிமிரும்
ஒரு பெண்பாலேன் யான் ஆக உலகம் எல்லாம் பகை ஆகி
எரி கொன்று ஈன்ற இலை பலி போல் இருத்தியால் என் இன்னுயிரே

#1663
வேம் என் நெஞ்சம் மெய் வெதும்பும் விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும்
பூ மென் குழலார் புறம் நோக்கி நகுவார் நகுவது ஆயினேன்
தாம மார்பன் தான் புனைந்த தண் என் மாலை புணை ஆக
யாம கடலை நீந்துவேன் யாரும் இல்லா தமியேனே

#1664
செம்பொன் கடம்பன் செ வேலும் காமன் சிலையில் தொடுத்து அலர்ந்த
அம்பும் வென்ற வரி நெடும் கண் அ மா மதி வாள் முகத்தினாள்
வம்பு பூத்து முருகு உலாய் தேன் கொப்புளித்து நின்றது ஓர்
கொம்பு வெம் தீயிடைப்பட்டது ஒத்தாள் விரை செய் கோதையே

#1665
மணி நிற மாமை சாயல் வளையொடு வண்டு மூசும்
அணி நிற போர்வை ஆய அரும் பெறல் நாணும் விற்று
பணி நலம் புதியது உண்டான் பன் மலர் மாலை கொண்டேன்
பிணி நிற புறம் சொல் என்னும் பெரும் ஞிமிறு ஆர்ப்ப என்றான்

#1666
காதலான் காதல் போல அகன்று நீண்டு அலர்ந்த வாள் கண்
போது உலாம் கோதை மாதர் புனைந்து அலர் தொடுத்த மாலை
ஆதலால் அலரது ஆகாது ஒழியுமே அழுங்கல் என்று
மாது உலாம் மழலை செ வாய் மட கிளி மொழிந்தது அன்றே

#1667
என்னை உள்ளம் பிணித்து என் நலம் கவர்ந்த ஈர்ம் தாரினான்
தன்னை யானும் பிணிப்பேன் என தன் மணி செப்பினுள்
மன்னும் மாலை கொடுத்து அவனுக்கு உய்த்து ஈ என தொழுது கொண்டு
அன்னம் என்ன ஒதுங்கி சிலம்பு அரற்ற சென்று அணுகினாள்

#1668
அணுகி முன் நின்ற அநங்கவிலாசினி அம் கை கூப்பி
பிணையல் நீட்ட பெரும் தகை அஃது ஏலான் முகம் நோக்கலும்
துணையில் தோகை என் நங்கைக்கு தொங்கல் தொடுப்பாயும் நீ
மணி செய் மென் தோள் மருந்து நீ ஆருயிரும் நீயேல் என்றாள்

#1669
மன்னர் கோயில் உறைவார் பொறி செறித்த மாண்பினரே
என்ன அஞ்சினாய் என்று அவனை நக்காட்கு அஃது அன்று கோதாய்
இன்ன கொள்கையேற்கு ஏலாது என்ன இலங்கு எயிற்றினாள்
அன்னம் அன்ன நடையினாள் தான் வருந்தும் என நேர்ந்தான்

#1670
குலிகம் ஆர்ந்த கொழும் தாமரை அன்ன வண் கை நீட்டி
ஒலியல் ஏற்றான் இஃது ஊழ் வினையால் உள்ளம் சுடுமால் என்ன
இலை கொள் பைம் பூண் இள முலையாள் போகி கனகமாலை
மெலிய வெம்பி நைகின்றாள் உய்யும் வகை தொடங்கினாள்

#1671
நீர் செய் காந்த மணி கூந்தளம் பாவை நீண்டு அழகிய
ஏர் செய் சாந்தின் கழுநீர் விரை கமழும் பூக்கள் கோத்த
வார் செய் தண் தாமரை வளை அமை வரையின் வெள் அருவி நீர்
சீர் செய் கோமகளை சேர்த்தினாள் சீதம் செய்யாது ஒழிந்தனவே

#1672
பவ்வ தங்கண் பிறந்து பனி பெயர்க்கும் தண் ஊற்றது ஆகி
எவ்வம் மன்னர் பட உலகம் விற்கும் அரு மணியினை
செவ்வன் நூலில் சித்திரிக்கப்பட்டதனை சேர்த்தி பின்னும்
மவ்வல் நாறும் குழலாட்கு மற்றும் இவைகள் நாடினாள்

#1673
களி செய் கோசிக நீர் விழ கடி மாலை மேல் தொடர்ந்து கீழ்
நளி செய் தண் பூஞ்சலம் சயனம் ஆக்கி நல் நீர் பிலிற்றும் வாய்
குளிர் கொள் சாந்து ஆற்றி பொன் ஆலவட்டம் கொண்டு ஏந்தி வீச
சளி கொள் சந்தின் கொழும் சாந்தம் ஆகம் முழுதும் மெழுகினாள்

#1674
கொம்மை வெம் முலையில் சாந்தம் குளிர் செயாது ஆவி வாட்ட
அம் மென் மாலை முகம் கரிய நீர் துளும்ப நின்று நீடி
வெம்மை மிக்கது வீரன் தொடுத்த விளங்கு மாலை
பொம்மல்_ஓதிக்கு தானே துணை ஆம் புணை ஆயிற்றே

#1675
வாச நீலம் கழுநீர் குவளை படை சாற்றி வந்து
ஓசனை கண் உடையும் நெடும் கண் கனகமாலை
தாசி தூது ஆக தாமம் புணை ஆக செல்லும் நாளுள்
காசில் கல்வி கடலை கரைகண்டார் காளைமாரே

#1676
பொரு சரம் சலாகை வெய்ய புகன்றனர் துரக்குமாறும்
வரு கணை விலக்குமாறும் வாள் அமர் நீந்துமாறும்
கருவியுள் கரக்குமாறும் கணை புறம் காணுமாறும்
விரிய மற்று அவர்க்கு காட்ட வீற்று இருந்து அவரும் கற்றார்

#1677
வேல் உடை தடக்கையார்கள் வேழ மேல் சென்ற-போழ்தில்
கால்-இடை கரக்குமாறும் கை-இடை திரியுமாறும்
வால்-இடை மறியுமாறும் மருப்பு-இடை குளிக்குமாறும்
நூல் இடை கிடந்தவாறே நுனித்தவன் கொடுப்ப கொண்டார்

#1678
கொடி நெடும் தேரின் போரும் குஞ்சரம் குறித்த போரும்
கடு நடை புரவி போரும் கரப்பற கற்று முற்றி
இடன் அறிந்து இலங்கும் வை வாள் இரும் சிலை குந்தம் மூன்றும்
உடன் அறிந்து உம்பரார்க்கு உரைப்பரும் தகையர் ஆனார்

#1679
தானையுள் அன்றி நின்ற தனி இடம் ஒற்றி மன்னர்
தானை மேல் சென்ற-போழ்தும் வென்றியில் தளர்தல் இன்றி
தானையை உடைக்கும் வெம் போர் தருக்கினார் மைந்தர் என்று
தானை சூழ் மன்னற்கு உய்த்தார் மன்னனும் தருக என்றான்

#1680
மழையொடு சூழ்ந்து கொண்ட வான் துகள் சிலையின் நீக்கி
குழை முகம் நெற்றி நக்க கோல வில் பகழி வாங்கி
இழை பக இமைப்பின் எய்திட்டு எறிந்து மின் திரிவவே போல்
விழைவுறு குமரர் புக்கு சாரியை வியத்தர் ஆனார்

#1681
விசயனே விசயன் வில் போர் கதம்பனே முருகன் வேல் போர்
திசை எலாம் வணக்கும் வாள் போர்க்கு அந்தணன் செம்பொன் நாமன்
அசைவு இலான் யானை தேர் போர்க்கு அலசனே அசல கீர்த்தி
வசை இலான் புரவி சேன் என்று யாவரும் புகழப்பட்டார்

#1682
காவலன் மக்கள் ஆக்கம் கண்டு கண் குளிர்ந்து நோக்கி
ஏவலான் அரசன் ஒன்றோ இரு_பிறப்பாளன் அல்லார்க்கு
ஆவது அன்று இன்ன மாட்சி அவனை யான் நிகளம் பெய்து
காவல் செய்திடுவல் வல்லே காளையை கொணர்-மின் என்றான்

#1683
கல்வியும் கொடிது போலும் காவலன் காளை-தன்னை
ஒல்லலன் சிறைசெய்கின்றான் என்றவன் கருதிற்று ஓரார்
பல் சனம் பரிந்து நிற்ப பார்த்திப குமரன் சேர்ந்தான்
வில் வலான் கொண்டு வேந்தன் வேறு இருந்து இதனை சொன்னான்

#1684
புள் முழுது இறைஞ்சும் கோட்டு பொரு களிறு அனைய தோன்றல்
மண் முழுது அன்றி வானும் வந்து கைகூட தந்தாய்
கண் முழுது உடம்பில் பெற்றேன் காளை கைம்மாறு காணேன்
பண் முழுது உடற்றும் தீம் சொல் பாவை நின் பாலள் என்றான்

#1685
முடி கெழு மன்னன் சொல்ல மொய் கொள் வேல் குருசில் தேற்றான்
வடிவு அமை மனன் ஒன்று ஆக வாக்கு ஒன்றா மறுத்தலோடும்
தடி சுவைத்து ஒளிறும் வேலான் தன் கையால் முன் கை பற்றி
இடி முரசு அனைய சொல்லால் இற்றென விளம்புகின்றான்

#1686
பூ இயல் கோயில் கொண்ட பொன் அனாள் அனைய நங்கை
காவியம் கண்ணி வந்து பிறத்தலும் கணிகள் ஈண்டி
மூவியல் திரிதல் இன்றி சாதக முறையில் செய்தார்
ஏ இயல் சிலையினாய்க்கே உரியள் என்று உரைப்ப நேர்ந்தான்

#1687
வார் உலாம் முலையினாட்கும் வரி சிலை தடக்கையாற்கும்
சீர் உலாம் கோலம் செய்தார் செப்பினார் வதுவை நல் நாள்
பார் எலாம் அறிய நின்று படா முரசு ஆர்ப்ப தீ வேட்டு
ஏர் உலாம் கோதை இன்பத்து இள நலம் பருகுகின்றான்

#1688
மோட்டு இளம் குரும்பை அன்ன முலை கடா களிறு முத்தம்
சூட்டிய ஓடை பொங்க நாண் எனும் தோட்டி மாற்றி
ஆட்டிய சாந்தம் என்னும் முகபடாம் அழித்து வெம் போர்
ஓட்டற ஓட்டி பைம் தார் உழக்கி இட்டு வந்த அன்றே

#1689
ஒண் மணி குழை வில் வீச ஒளிர்ந்து பொன் ஓலை மின்ன
வண்ண மேகலைகள் ஆர்ப்ப வான் சிலம்பு ஒலிப்ப முத்தும்
கண்ணியும் பசும்பொன் நாணும் கதிர் முலை புடைப்ப காமர்
அண்ணல் அம் குமரன் தன்னொடு ஆய்_இழை ஆடினாளே

#1690
மூசு தேன் வாரி அல்குல் பட்ட பின் முலைகள் என்னும்
மாசு அறு கந்தின் மென் தோள் மணி தொடர் கொளுத்தி வாள் கண்
ஆசு அறு வயிர தோட்டி நுதல் அணிந்து அமுத செ வாய்
காசு அறு கவளம் ஆக களிறு கோள் பட்டது அன்றே

#1691
ஒப்பு இணை தனக்கு இலாதான் உறு வரை அகலம் மூழ்கி
செப்பு இணை அனைய செம் கேழ் வன முலை பொருது சேப்ப
கற்பக மரத்தை புல்லி கைவிடாது ஒழிந்து காம
துப்புரவு உமிழும் காமவல்லியின் தோற்றம் ஒத்தாள்

#1692
காய்வுறு வேட்கை தன்னால் கங்குலும் பகலும் விள்ளான்
வேய் வெறுத்து அமைந்த தோளான் விழு திரை அமுதம் என்று
சேய் நலம் கடந்த செல்வன் திரு நலம் தெளித்திட்டு ஆற்ற
வாய்விடாள் பருகி இட்டாள் மட கிள்ளை மருட்டும் சொல்லாள்

#1693
திரை இடை கொண்ட இன் நீர் அமுது உயிர்பெற்றது என்னும்
உரை உடை கோதை மாதர் ஒளி நலம் நுகர்ந்து நாளும்
வரை உடை மார்பன் அங்கண் வைகினன் என்ப-மாதோ
கரை கடல் அனைய தானை காவலன் காதலானே

#1694
வாளினால் மிடைந்த கண்ணாள் வரு முலை தடத்துள் வைகி
தோளினால் மிடைந்து புல்லி தொண்டை வாய் அமுதம் மாந்தி
காளை செல்கின்ற நாளுள் கட்டியங்காரன் மூதூர்
மீளி வேல் குருசிற்கு உற்றார்க்கு உற்றது விளம்பலுற்றேன்

#1695
வெண் மதி இழந்த மீன் போல் விடலைக்கு தம்பி மாழாந்து
ஒண் மதி சூழ்ச்சி மிக்கான் உள்ளுழி உணர்தல் செல்லான்
புள் மதித்து உடைந்த போது பொழிந்து மட்டு ஒழுகும் நன் நாட்டு
உள் மதி வருந்த நாடி ஒளி நகர் எய்தினானே

#1696
வெள்ளி வெண் மலைக்கு வேந்தன் ஒரு மகள் வேல் கண் பாவை
ஒள் இழை அவளை கேட்பான் உறு வலி செல்லும் ஆங்கண்
வள் இதழ் கோதை தானே இட்டது ஓர் வண்ணம்-தன்னை
கொள்ள தான் முரலலுற்று கோல் அமை வீணை கொண்டாள்

#1697
ஆடக செம்பொன் ஆணி ஆன் நெய் வார்ந்து அனைய நுண் கோல்
மாடகம் நொண்டு கொண்டு மாத்திரை நிறைய வீக்கி
சூடகம் அணிந்த முன் கைத்தொகு விரல் சேப்ப எற்றி
தோடு அலர் கோதை கீதம் துணிவினில் பாடுகின்றாள்

#1698
இறும் மருங்குல் போது அணியின் என்று இனைந்து கையின்
நறு மலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்
நண்ணார் துறப்ப நனி வளையும் தோள் துறப்ப
கண் ஓவா முத்து உறைப்ப தோழி கழிவேனோ

#1699
பூ மாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல்
ஏமாராது என்று இனைவார் எண்ணார் துறந்தார்
எண்ணார் துறப்ப இன வளையும் தோள் துறப்ப
மண் ஆர் வேல் கண் துயிலா தோழி மருள்வேனோ

#1700
வண்டு ஊத அம் மருங்குல் நோம் என்று பூ மாலை
கொண்டு ஓச்சும் காதலார் கூடார் துறந்தார்
கூடார் அவர் துறப்ப கோல் வளையும் தோள் துறப்ப
தோடார் பூம் கண் துயிலா தோழி துயர்வேனோ

#1701
ஊன் தகர்த்த அனைய போன்றும் ஊடு எரி முளைப்ப போன்றும்
தோன்று பூ இலவத்து அங்கண் தொகை அணில் அனைய பைம் காய்
கான்ற மென் பஞ்சி ஆர்ந்த மெல்லணை யாழ் கை நீக்கி
தேன் தயங்கு இணர் பெய் கோதை சிந்தையின் நீட்டினாளே

#1702
நுண்ணிய வரியொடு திரண்டு நோக்குநர்
கண் மனம் கவற்றிய காமர் தொண்டை வாய்
அண்ணலை நினைந்து வெய்துயிர்ப்ப ஆய் நலம்
வண்ணத்தின் மழுங்கி வாள் கண்ணி வாடினாள்

#1703
மின் தவழ் மணி வரை மாலை மார்பனை
பொன் தவழ் இள முலை பொருது புல்லும் நாள்
என்று-கொல் என நினைந்து இருந்த செவ்வியுள்
சென்றனன் சீவகற்கு இளைய செல்வனே

#1704
ஐ விலின் அகல நின்று ஆங்கு அடி தொழுது இறைஞ்சினாற்கு
மை விலை பெற்ற கண்ணாள் மைந்தனை மருண்டு நோக்கி
கை விலும் கணையும் இல்லா காமன் போந்து இருக்க என்ன
மொய் வெல்லும் குருதி வேலான் மூவில் கண் இறைஞ்சி நின்றான்

#1705
திங்கள் வாள் முகமும் நோக்கான் திரு முலை தடமும் நோக்கான்
அம் கதிர் கலாபம் மின்னும் அணி அல்குல் பரப்பும் நோக்கான்
செம் கயல் கண்ணினாள் தன் சீறடி சிலம்பு நோக்கி
எங்கு உளார் அடிகள் என்னா இன்னணம் இயம்பினானே

#1706
பொறி குலாய் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றினானேல்
வெறி குலாய் கிடந்த மாலை வெள் வளை முத்தம் நீக்கி
நெறியினால் நோற்றல் என்றோ நீள் எரி புகுதல் ஒன்றோ
அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்றான்

#1707
காய் தழல் கவரப்பட்ட கற்பக மரத்தின் கன்றி
ஆய் கழல் குருசில் வாடி அற்பு தீ அழலுள் நிற்ப
வாய் மொழிந்து உரைக்கல் உற்றாள் வனை குழல் கற்றை வண் தார்
தோய் பிழி துளிக்கும் கண்ணி சுரும்பு சூழ் கொம்பு அனாளே

#1708
மது முகத்து அலர்ந்த கோதை மாற்றம் மைந்தற்கு உரைப்பாள்
கொதி முக குருதி வை வேல் குருசிலோ நம்மை உள்ளான்
விதி முக மணங்கள் எய்தி வீற்று இருந்து இன்பம் உய்ப்ப
மதி முகம் அறியும் நாமே வாடுவது என்னை என்றாள்

#1709
வேண்டியது எமக்கு நேரின் வில் வலாய் நும் ஐயனாரை
காண்டி என்று உரைப்ப காளை எழுமையும் அடிமை நேர
மாண்டது ஓர் விஞ்சை ஓதி மதி முகம் தைவந்திட்டாள்
நீண்டது பெரிதும் அன்றி நினைத்துழி விளக்கிற்று அன்றே

#1710
பொற்பு உடை அமளி அங்கண் பூவணை பள்ளி மேலால்
கற்பக மாலை வேய்ந்து கரும் குழல் கை செய்வானை
முற்பட கண்டு நோக்கி முறுவல் கொள் முகத்தன் ஆகி
வில் படை நிமிர்ந்த தோளான் தொழுது மெய் குளிர்ந்து நின்றான்

#1711
செய்த விஞ்சையை தே_மொழி மாற்றலும்
மையல் நெஞ்சொடு வண்டு இமிர் தாரினான்
பொய்யது அன்மையின் பூம் கழலான் அடிக்கு
எய்துகேன் அருளாய் என்று இறைஞ்சினான்

#1712
மதுக்கை மாலையும் வண்டு இமிர் சாந்தமும்
புது கச்சு ஆர்ந்த பொன் வாளும் சுரிகையும்
கதுப்பின் நானமும் காமர் கலங்களும்
பதி-கண் தம் என பாவையும் ஏவினாள்

#1713
மணியின் மேல் புறம் போர்த்து அன்ன மா கதிர்
துணிய வீசும் துளங்கு ஒளி மேனியன்
பணியின் பல் கலம் தாங்குபு சென்ற பின்
அணி செய் கோதை அம் காமினி ஓதினாள்

#1714
சாந்தினால் மெழுகி தட மா மலர்
ஆய்ந்த தாமங்கள் நாற்றி அகில் புகை
ஏந்தி இட்டு இளையாரொடு நீங்கினாள்
காந்தி வண்டு உணும் கற்பக கோதையே

#1715
தூமம் ஆர்ந்த துகில் அணை பள்ளி மேல்
காமன் தம்பியின் காளை கிடந்த பின்
ஏமமாபுரத்து இட்டது ஓர் மா தெய்வம்
நாம நல் ஒளி நந்தனை என்பவே

#1716
மின்னும் பூணும் மிளிர் கதிர் ஆரமும்
பொன்னும் பூத்தது ஓர் கற்பக பூ மரம்
அன்ன காளை அமர் துயில் தேறினான்
மன்னும் வெம் சுடர் மாக்கல் இவர்ந்ததே

#1717
செய்ய வாய் நெடிய கண்ணாள் செல்க என விடுக்கப்பட்ட
வெய்ய வாள் தட கை வீரன் இருத்தலும் விசயன் என்பான்
கையவாம் சிலையினானை கண்டு வந்து அருகு சேர்ந்தான்
பையவாய் பரந்த அல்குல் பாவையர்க்கு அமிர்தம் அன்னான்

#1718
தெய்வமே கமழும் மேனி திரு ஒளி கலந்த மார்பின்
ஐய நீ யாரை என்றாற்கு அவன் உரை கொடாதுவிட்டான்
பையவே பெயர்ந்து போகி பனி மலர் கோதை மார்பின்
மையல் அம் களிறு போலும் மைத்துனற்கு இதனை சொன்னான்

#1719
சந்தன களியும் பூவும் தமனிய குடத்துள் நீரும்
கெந்தம் நாறு அகிலும் முத்து கிளர் ஒளி விளக்கும் ஏந்தி
அந்தில் வில் பயிற்றும் தானம் வழிபட ஆங்கு சென்றாள்
மந்திர மடந்தை அன்னாள் வசுந்தரி வந்து சொன்னாள்

#1720
ஆர் அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
நீரிதின் கிடந்தது என்-கொல் என்று யான் நினைந்து போகி
சேர் துணை கழற சென்றேன் செல்வியோடு ஆங்கு கண்டேன்
போர் பல கடந்த வேலோய் மாயம்-கொல் போற்றி என்றாள்

#1721
கணை கடி கண்ணி சொல்ல காணிய யானும் சென்றேன்
மணி இலங்கு ஒண் பொன் வை வாள் கேடக மருங்கு வைத்த
இணை கடி சீயம் அன்னான் இளமையும் வனப்பும் ஏரும்
துணை அமை வடிவும் சொல்லி நின் பொறி ஒற்றிக்கொண்டான்

#1722
நீண்ட தோள் நெடிய செம் கண் நீலமாய் சுரிந்த குஞ்சி
பூண்டது ஓர் ஆர மேனி பொன் உரைத்து இட்டது ஒக்கும்
காண்தகு காதில் தாழ்ந்த குண்டலம் குவளை பைம் தார்
ஆண்தகை அழகன் யார்-கொல் அறியலன் அவனை என்றான்

#1723
இனத்து-இடை ஏறு போலும் எறுழ் வலி உரைத்த மாற்றம்
மனத்து-இடை மகிழ்ந்து கேட்டு மைந்தன் நந்தட்டனே ஆம்
புனத்து-இடை மயில் அனாளால் பொருள் உரை பெற்று வந்தான்
என தவிராது சென்று ஆங்கு எய்தினள் என்ப அன்றே

#1724
கரு முகில் பொடித்த வெய்யோன் கடல்-இடை நடப்பதே போல்
திருமுகம் சுடர நோக்கி சீவகன் சென்று சேர்ந்தான்
தருமனை அரிதின் கண்ட தனஞ்சயன் போல தம்பி
திரு மலர் தட கை கூப்பி சேவடி தொழுது வீழ்ந்தான்

#1725
தாமரை தட கை கூப்பி தாள் முதல் கிடந்த தம்பி
தாமரை தடத்தை ஒத்தான் தமையனும் பருதி ஒத்தான்
தாமரை குணத்தினானை மு முறை தழுவிக்கொண்டு
தாமரை செம் கணானும் தன் உறு பரிவு தீர்ந்தான்

#1726
என் உறு நிலைமை ஓராது எரி உறு தளிரின் வாடி
பொன் உறு மேனி கன்றி போயினீர் பொறி இலாதேன்
முன்னுற இதனை ஓரேன் மூரி பேர் ஒக்கல் எல்லாம்
பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன் கவலல் என்றான்

#1727
ஆக்கமும் கேடும் உற்றீர் அடிகளே அல்லீர் மேலை
பூ குலாம் அலங்கல் மாலை புள் கொடியாற்கும் உண்டே
வீக்கு வார் முலையினார் போல் வெய்துயிர்த்து உருகி நைய
நோக்கினீர் என்னை என்றான் நுதி அழல் குட்டம் ஒப்பான்

#1728
குரவரை பேணல் இன்றி குறிப்பு இகந்து ஆய பாவம்
தரவந்த பயத்தினால் இ தாமரை பாதம் நீங்கி
பருவரும் துன்பம் உற்றேன் பாவியேன் என்று சென்னி
திருவடி மிசையின் வைத்து சிலம்ப நொந்து அழுதிட்டானே

#1729
பரிந்து அழுகின்ற தம்பி பங்கயம் அனைய செம் கண்
பொருந்துபு துடைத்து வேண்டா புலம்புதல் காளை என்று
மருந்து அனாள் உறையும் கோயில் மடுத்து உடன் கொண்டு புக்கான்
அருந்ததி கற்பினாளை அடி பணிந்து அவனும் கண்டான்

#1730
கொழுநனை குறிப்பினாலே குமரன் யார் என்று நோக்க
கழுமிய கற்பினாய் நின் மைத்துனன் ஐயன் என்ன
எழுமையும் பெறுக இன்ன இளம் கிளை சுற்றம் என்றாள்
கொழு மலர் தடம் கண் செ வாய் குவி முலை கொம்பு அனாளே

#1731
குட வரை அனைய மார்பில் குங்குமம் எழுதி கோல
வட வரை வைர சாதி வால் ஒளி கலந்த பைம் பூண்
தட வரை மார்பின் மின்ன தம்பியோடு அமிர்தம் உண்டான்
பட அரவு அல்குலாளும் பான்மையால் விருந்து செய்தாள்

#1732
விருந்து அவள் செய்த பின்றை தம்பியும் தானும் வேறா
இருந்துழி என்னை காணது உற்றதை எவன்-கொல் என்று
பொருந்தினார் செய்தது எல்லாம் புரை விடுத்து உரைமோ என்ன
கரும் கழல் செம் கண் பைம் தார் காளை ஈது உரைக்கின்றானே

#1733
புண் உமிழ் குருதி போர்த்த பொரு களம் போன்று தோன்றி
அண்ணல் அம் கதிரும் அத்தம் அடைந்து செ வான் கொள் அந்தி
துண்ணென களத்தின் நீங்கி தொல் நகர் புறத்து தொக்கே
எண்ணு-மின் செய்வது என்றான் பதுமுகன் எரியும் வேலான்

#1734
மின் என மிளிரும் பைம் பூண் புத்திசேன் வெகுண்டு வெய்ய
கல் நவில் தோளினானை காண்கலேம்-ஆயின் இன்னே
மன்னனை வாளினாலே வானகம் காட்டி மூதூர்
தன்னையும் சவட்டி போகி சாமியை சார்தும் என்றான்

#1735
சிலையொடு திரண்ட திண் தோள் தேவ மாதத்தன் என்பான்
மலை உடை உருமின் சீறி மாற்றலன் உயிரை உண்டல்
இலை உடை கண்ணியீர்க்கு இஃது எளிது நம் குருசில் உண்மை
உலைவினோடு இன்மை ஆராய்ந்து ஒறுப்பதே துணி-மின் என்றான்

#1736
பவ்வத்து பிறந்த வெய்ய பருதி போல் திறலினாற்கு
தெவ்வரை கிழங்கினோடும் தின்று நீ சொன்னவாறே
எவ்வத்தை தணித்தும் என்றான் சீதத்தன் என்னலோடும்
மவ்வல் அம் மணந்த தண் தார் பதுமுகன் இதனை சொன்னான்

#1737
நம்பி நந்தட்டன் கேட்க நங்கட்கு குரவர் உள்ளார்
தம் பரிவு அகற்றி ஓம்பி நீர் கடன் மரபு தாங்கு இ
கம்பம் செய் பரிவு நீங்கி கற்பிப்பார்க்கு உவர்த்து சொல்லார்
இம்பர் இ உலகம் ஒப்பாய்க்கு என்னை யான் உரைப்பது என்றான்

#1738
ஓம் படை சாற்றல்-பாலது உள்ளவர்க்கு ஆகும் அன்றே
ஆம் புடை என்-கண் இல்லை அங்கை என் கண்களாக
தேம் படு தாரினீர்க்கும் செல்வற்கும் செய்வ செய்தேன்
காம்பு அடு காட்டு தீயின் கனன்று உடன் எழுக என்றேன்

#1739
கோட்டு இளம் குழவி திங்கள் இரண்டு அன்ன எயிற்று கோளே
வேட்ட ஓர் சிங்கம் சூழ்ந்த வேங்கையின் இனத்தின் வெய்ய
வாள் படை எழுந்து வாழ்க சீவகன் என்னும் ஆங்கண்
பாட்டினை ஒருவன் எங்கள் பரிவற பாடினானே

#1740
வருவர் நம் கேள்வர் இன்னே வாள் நுதல் பசலை தீர
உருகி நைந்து உடன்று முன் கை வளை உக மெலிய வேண்டா
அருவி மும்மதத்த யானை அதிர்ந்துழி கார் என்று எண்ணி
தெரிவில பேதை முல்லை பூத்தன தெளி இது என்றான்

#1741
பாட்டினை கேட்டலோடும் பழம் பகை நட்பும் ஆமே
ஓட்டியும் கோறும் அன்றே நம்பி தான் உண்மை பெற்றால்
நாட்டிடம் பரந்து போகி நாடுதும் நாங்கள் என்னா
ஈட்டமும் வேறும் ஆகி இலைப்புரை கிளைத்திட்டேமே

#1742
மணி பொதி துகிலின் தோன்றும் மஞ்சு சூழ் வரைகள் நாடி
அணி நகர் யான் சென்று எய்தி மாலை-தன் மனையை சேர்ந்தேன்
துணை மலர் காந்தள் ஊழ்த்து சொரிவ போல் தோன்றி முன்கை
அணி வளை நலத்தோடு ஏக அங்ஙனம் இருந்து நைவாள்

#1743
என்னை கண்டு அடிசில் ஆக்க ஐயர்க்கு என்று அவலம் நீங்க
பொன்னை கண்டு அனைய சாயலவர் புரிந்து அடிசில் ஏந்த
துன்னி நோய் உற்ற மஞ்ஞை தோற்றம் போல் இருந்த நங்கை
பின்னை நாள் குவளை நீர் வீழ் பெற்றிய கண்ணள் ஆகி

#1744
அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீர் ஆனீர்
கடியிர் நீர் ஐய நீரே என கசிந்து உருகி காய் பொன்
கொடி துகள் ஆர்ந்த வண்ணம் குழைந்து மாநிலத்து வீழ்ந்த
பெடை மயில் சாயலாள் தன் பேது கண்டு ஆங்கு மீண்டேன்

#1745
செல்வனை இன்று நாடி சேவடி தொழுதல் ஒன்றோ
அல்லது இ உடம்பு நீங்க வேற்றுலகு அடைதல் ஒன்றோ
எல்லை இ இரண்டின் ஒன்றை இ பகல் முடிப்பல் என்னா
மல்லிகை கோதை ஐம்பால் மலைமகள் மனையை சேர்ந்தேன்

#1746
மணி ஒலி வீணை பண்ணி மாண்ட கோல் தடவ மாதர்
அணி முலை தடத்தின் ஒற்றி வெப்பரால் தட்பம் மாற்றி
பிணை மலர் கோதை கீதம் பாட யான் பெரிதும் பேதுற்று
இணை மலர் கண்ணிக்கு ஒவ்வா இளி வரு கிளவி சொன்னேன்

#1747
சொல்லிய என்னை நோக்கி துளங்கல் நும் அடிகள் பாதம்
புல்ல யான் புணர்ப்பல் என்று பொழுது போய் பட்ட பின்றை
எல் இருள் விஞ்சை ஓதி இ வழி இடுவித்திட்டாள்
சொல்லு-மின் அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் என்றான்

#1748
தாதையார் உவப்ப செய்வான் தாழ் கச்சில் பிணிப்புண்டு ஐய
போதரா நின்ற-போழ்தில் போர் புலி குழாத்தின் சீறி
காதல் நம் சுற்றம் எல்லாம் கை இலங்கு எஃகம் ஏந்தி
சாதலே புரிந்து தோன்றும் தன்மை அ நகரில் கண்டேன்

#1749
கண்ட பின் நின்னை காண்பேன் கரு வரை உலம்பி பல்-கால்
விண்டுவும் உடைய வாலின் வெடித்துராய் வெகுண்டு நோக்கா
எண்திசையோரும் எள்க குஞ்சரம் இரிய பாயும்
ஒண் திறல் சிங்கம் அன்ன கதழ் ஒளி உடற்சி கண்டேன்

#1750
சினம் தலை பெருக்கி தீ கோள் உறுப்பினை சுருக்கி தீ போல்
அனன்று நில்லாத கண்ணால் நிறுத்தின செவியிற்று ஆகி
முனம் புக அடக்கி பின் போந்து இருந்து பாய்வான் அமைந்த
இனம் தலை புலியோடு ஒக்கும் தோழர் நின்னிடத்தில் கண்டேன்

#1751
கூட நீர் நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு ஓர்
கேடகம் வாளொடு ஏந்தி கெடுக இ நகரம் என்னா
மாடத்தின் உச்சி நின்ற மலை மகள் தன்மை கண்டே
ஆடவர்க்கு உழுவை ஒப்பாய் அஞ்சினேன் அதன்-கண் என்றான்

#1752
பெண் இடர் விடுப்ப வாழ்வின் சாதலே பெரிது நன்று என்று
எண்ணினேன் நமர்கள் வீயும் இயல்பினான் நெருங்கப்பட்டு
கண்ணி நான் இயக்கன் தன்னை சிந்தித்தேன் கடவுள் வாழ்த்தி
அண்ணல் வந்து அழுங்க தோன்றி ஆங்கு என்னை கொண்டு போந்தான்

#1753
மந்திரம் மூன்றும் தந்து வானவன் விடுப்ப செல்வேற்கு
இந்திர திருவில் சூழ்ந்த இன மழை குழாத்தின் வேழம்
கொந்து அழல் காட்டு தீயால் வளைப்புண்ட குழாத்தை நோக்கி
சிந்தித்து கவன்று நிற்ப திரு மழை பொழிந்தது அன்றே

#1754
வெல் களிற்று அச்சம் நீக்கி விரைவொடு வனத்தின் ஏகி
பல்லவ தேயம் நண்ணி தனபதி என்னும் மன்னன்
நல் வனப்பு உடைய தேவி திலோத்தமை பெற்ற நம்பி
செல்வன் மற்று உலோகபாலன் திருமகள் பதுமை என்பாள்

#1755
அரி குரல் கோழி நாமத்து அரவு அவள் கடித்தது ஆக
திரு விழை அவளை தீர்த்தேன் தீர்வு இலா நண்பு வேண்டி
பொரு களி யானை மன்னன் புனை இழை அவளை தந்தான்
இரு மதி கழிந்த பின்றை இடை இரா பொழுதில் போந்தேன்

#1756
வாவி புள் நடையினாளை வஞ்சித்து தக்க நாட்டை
மேவி யான் காணலுற்று சார்தலும் இப்பர் உள்ளான்
தூவி பொன் மாட மூதூர் சுபத்திரன் என்னை கண்டே
ஆவி கண் அறிவு போல அளவளாய் அன்புபட்டான்

#1757
பண் அமை தேரின் ஏறி அவனொடு யான் இருந்து போகி
விண் உயர் செம்பொன் மாடத்து இழிந்து அவண் விளங்க புக்கேன்
வெண்ணிலா முத்தம் சூழ்ந்த வெம் முலை தடம் கணாளை
மண் எலாம் செல்ல நின்ற மகிழ்ச்சியின் மகிழ்ந்து தந்தான்

#1758
அ வழி இரண்டு திங்கள் கழிந்த பின் அவள் இல் நீங்கி
இ வழி நாடு காண்பான் வருதலும் இறைவன் கண்டே
செ வழிபாடர் ஆகி சிலை தொழில் சிறுவர் கற்ப
மை வழி நெடும் கணாளை தந்தனன் மதலை என்றான்

#1759
தான் உழந்து உற்ற எல்லாம் தம்பியை உணர கூறி
தேன் உழந்து அரற்றும் தாரான் குரவரை சிந்தித்தாற்கு
வான் இழிந்து ஆங்கு கண்ணீர் மார்பகம் நனைப்ப கையால்
ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் ஒற்றி மற்று இதனை சொன்னான்

#1760
திண் பொருள் எய்தலாகும் தெவ்வரை செகுக்கல் ஆகும்
நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ணல் ஆகும்
ஒண் பொருள் ஆவது ஐயா உடன் பிறப்பு ஆக்கல் ஆகா
எம்பியை ஈங்கு பெற்றேன் என் எனக்கு அரியது என்றான்

#1761
தேனில் பால் என செல்வன் தம்பியோடு
ஆனியம் பல கழிய ஆயிடை
வேனில் குன்று என தோழர் வெந்து மெய்
ஊனின் நைகின்றார் செய்வது உன்னினார்

#1762
நாடு-மின் இனி நாங்கள் செய்வது என்று
ஈடினால் இருந்து எண்ணி நால்வரும்
ஆடும் மஞ்ஞை அம் சாயல் தத்தை மெய்
வாடல் ஒன்றிலள் வஞ்சம் ஆம்-கொலோ

#1763
கள்ளம் உண்டு எனில் காண்டும் நாம் என
மெள்ள எய்தினார் வினவ கூறினாள்
வள்ளற்கு உற்றதும் மறைந்த வண்ணமும்
வெள்ளி வெண் மலை வேந்தன் பாவையே

#1764
மற்று அவள் சொல்ல கேட்ட மைந்தர்கள்
இற்ற தம் உயிர் இயல்பின் பேர்த்து அவண்
பெற்ற மாந்தரின் பெரிது மெய் குளிர்ந்து
அற்றம் அன்மையின் அவலம் நீங்கினார்

#1765
திருவின் சாயல் தன் சீறடி சிலம்பு
உருவ குஞ்சி-வாய் உறுத்தி ஒய்யென
உருகும் உள்ளத்தின் உடம்பு வீங்கினார்
பருகு காதலின் பாடி ஆடினார்

#1766
பைத்து அரவ திரை சிந்திய பல் கதிர்
மொய்த்து எரி நித்திலம் வைத்து அன பல்லினள்
இ திருவின் உருவம் தொழுதார் தமது
எ துயரும் கெடும் என்று இன சொன்னார்

#1767
ஐயனை யாம் அவண் எய்துவம் ஆய்_இழை
நொய்தின் உரை பொருள் உண்டு எனின் நொய்து என
மை எழுத்து ஊசியின் மாண்டது ஓர் தோட்டு-இடை
கை வளர் கோதை கரந்து எழுத்திட்டாள்

#1768
ஆங்கு உருக்கார் அரக்கு இட்டு அதன் மீமிசை
பூம் குழையால் பொறி ஒற்றுபு நீட்ட
தேம் குழலாள் தொழுதாள் திசை செல்க என
பாங்கர் அங்கு படர்குற்றனர் அன்றே

#1769
வேந்து இரிய கணை வித்திய வெம் சிலை
காய்ந்து இரிக்கும் புருவ கரும் கண்ணியர்
ஆய்ந்து அரிக்கும் நறவம் மலர் மாலையை
வேய்ந்து அரிக்கும் மிஞிறு ஆர்ப்ப விடுத்தாள்

#1770
அலங்கு வெண் மதி ஐப்பசி அடைய அ பகலே
நிலம் கொண்டு ஓங்கின நிரம்பின புகர் சுழி உடைய
உலம்பி முன் இரு தாள்களும் உமிழ்வன போல்வ
விலங்கு பாய்வன விடு கணை விலக்குவ கலிமா

#1771
அள்ளல் சேறு அரு மணல் புனல் அரு வரை படினும்
உள்ளம் போல் செல்வ உரன் அசைவு இல்லன அமருள்
கொள்ளி மண்டிலம் போல் கொடிபட திரிந்திடுவ
வெள்ளி மால் வரை தாழ்வதில் மேம்பட பிறந்த

#1772
ஈர் ஐஞ்ஞூற்றினை இருபதின் முரணிய தொகைய
வீரர் ஏறின விளங்கு ஒளி பக்கரை அமைந்த
தாரும் புட்டிலும் அரற்றுவ சாமரை அணிந்த
ஓரும் கூடின மள்ளரும் ஒலித்து எழுந்தனரே

#1773
வடித்த போத்தொடு வன் செலல் அத்திரி
கடுத்த ஒட்டகம் கால் செல்வ யாவையும்
நொடிப்பின் மாத்திரை நூற்று வில் ஏகுவ
எடுத்த பண்டம் இயைந்து உடன் என்பவே

#1774
ஞாலம் விற்பன பைங்கிளி நல் நிறத்து
ஆலும் மா பவள குளம்பு ஆர்ந்தன
காலின் நொய்யன கண் வெளவு காட்சிய
நால்கு பண்ணினர் நால்வரும் ஏறினார்

#1775
நாளும் புள்ளும் நயத்தகு நல் நிலை
கோளும் ஓரையும் கொண்ட நிமித்தமும்
ஆளும் மாந்தரின் ஆய்ந்து கொண்டு ஆயிடை
தாளின் ஊக்குபு சாத்தொடு எழுந்தவே

#1776
பறையும் சங்கும் பரந்து ஒலித்து ஆர்த்து எழ
உறை கொள் வாளினோடு ஒண் சுடர் வேல் மின
சிறை அழிந்தது ஓர் செம் புனல் போன்று அவண்
அறை கடல் படை ஆர்ப்பொடு எழுந்தவே

#1777
காய்த்த செந்நெலின் தாழ் கதிர் நெற்றி மேல்
பூத்த முல்லையின் போது பொழிந்து உக
நீத்த நீர் வயல் அன்னமும் நாரையும்
ஏத்தல் சால் முருடு ஆர்ப்ப இரிந்தவே

#1778
அளகு சேவலொடு ஆடி அம் காய் குலை
மிளகு வார் கொடி ஊசல் விருப்புறூஉம்
சுளகு வார் செவி தூங்குகை குஞ்சரம்
இளகு காடு இளக பரி கொண்டவே

#1779
அருவி குன்றமும் ஐவன சாரலும்
குருவி ஆர்த்து எழு கொய் புன கானமும்
திரு இல் தீர்ந்தவர் தேயமும் தேர்ந்து போய்
பரிவின் மாதவர் பள்ளியுள் விட்டதே

#1780
வண்டு துயில் கொண்டு குயில் ஆலி மயில் அகவி
விண்டு மது விட்டு விரி போது பல பொதுளி
கொண்டு தளிர் வேய்ந்து சினை தாழ்ந்து நனை ஆர்ந்து ஒன்று
உண்டு பொழில் இமையவர்கள் உலகம் உறுவதுவே

#1781
காவி கழுநீர் குவளை ஆம்பல் கடி கமலம்
தூவி மட நாரை துணை அன்னம் பயில் முது மீன்
மேவி உறை வண்டினொடு மல்கி விழைதகைய
வாவியொடு காவின் இடை மாந்தர் பதி கொண்டார்

#1782
ஐயர் உறை பள்ளி இடம் ஆண்டு அழகர் காண
செய் கழலர் தாரர் அவர் எங்கும் திரிகின்றார்
கொய்தகைய பூம் பொதும்பர் குளிரும் மர பலகை
செய்யவளின் சிறிது மிகை சேயவளை கண்டார்

#1783
அ நுண் துகில் கல் அரத்தம் அல்குல் அது வருத்த
செம் நுண் துகில் உத்தரியம் புதைந்து சுவல் வருத்த
மை நுண் குழல் சிறுவன் மனம் வருத்த வடி வேல் கண்
கைந்நொண்டன கவற்சி நனி வருத்த கலுழ்ந்து ஆற்றாள்

#1784
மாசொடு மிடைந்து மணி நூற்று அனைய ஐம்பால்
பூசுதலும் இன்றி பிணி கொண்டு புறம் தாழ
வாச மலர் மறைந்த வழி வாமன் அடிக்கு ஏற்றி
தோசம் அற துதிகள் மனத்து ஓதி தொழுது இருந்தாள்

#1785
சிந்திப்பல் என் சிறுவன் திறம் இனி என்று எழில் நெடும் கண்
வந்து பனி வார்ந்து முலை கலிங்கம் அது நனைப்ப
அந்தில் இருந்தாள் அவளுக்கு அடைந்து மனம் நடுங்கி
வந்தித்து இருந்தார் மகிழ்ந்து காதல் மிக-மாதோ

#1786
வரை உடுத்த பள்ளி இடமாக அதில் மேயோள்
விரை உடுத்த போது உறையும் வேல் நெடும் கணாள்-கொல்
உரை உடுத்த நா உறையும் ஒள்_நுதல்-கொல் அன்றி
திரை உடுத்த தே_மொழி-கொல் என்று தெரிகல்லார்

#1787
மங்கலம் மடிந்த திரு மா மகளை ஒப்பீர்
இங்கு வரவு என்னை குலம் யாது அடிகட்கு என்ன
எம் குலமும் எம் வரவும் வேண்டில் எளிது அன்றே
நும் குலமும் நும் வரவும் நீர் உரை-மின் என்றாள்

#1788
மோட்டு முது நீர் மலங்கு மொய்த்த இள வாளை
பூட்டு சிலை இறவினொடு பொருது துயில் மடியும்
ஈட்டம் உடையவர்கள் உறை இராசபுரம் என்னும்
நாட்டம் உடை நகரம் எமது ஆகும் உறை பதியே

#1789
பொன் உடைய மார்பின் புகழ் மந்திரி பொலம் தார்
தன்னுடைய நுண் உணர்வின் சாகரற்கு தக்காள்
கொன் நெடிய வாள் கண் குருதத்தை சீதத்தன்
மன் நடுங்க வீங்கு திரள் தோள் மடங்கல் அன்னான்

#1790
அளப்பு அரிய நான்மறையினான் அசலன் என்பான்
திளைக்கும் திரு ஒப்பு உடைய திலோத்தமை-தன் சிறுவன்
விளைத்து இரும்பு மேய்ந்து ஒழிந்த மிச்சில் வரை மார்பன்
இளைப்பல் இவன் தேசு உரைப்பின் புத்திசேன் இ இருந்தான்

#1791
செட்டி தனபாலன் மனையாள் சினவு வாள் கண்
பட்டம் நுதல் மின்னின் நகு பவித்திரைக்கு தோன்றி
மட்டு மலர் மார்பின் மத யானை எயிறு உழுது ஆங்கு
இட்ட குறி தார் திவள பதுமுகன் இ இருந்தோன்

#1792
பொன் நகருள் வேந்தன் பெயரால் பொறியும் பெற்றான்
வில் மரிய தோள் விசயதத்தன் உயிர் கவசம்
பின் அரிய கற்பினவள் பிரீதிமதி காதல்
தன் மகனென் யான் அடிகள் தேவதத்தன் என்பேன்

#1793
எங்கள் வினையால் இறைவன் வீடிய அ ஞான்றே
எங்கள் உயிர் நம்பியொடு யாங்கள் பிறந்தேம் ஆக
எங்கள் தமர் நம்பிக்கு இவர் தோழர் என ஈந்தார்
எங்கு எழில் என் ஞாயிறு என இன்னணம் வளர்ந்தேம்

#1794
யாண்டு நிறைந்து ஏகிய பின் நந்தன் அவற்கு இளையார்
மாண்ட குணத்தார் நபுல விபுலரொடு மன்னும்
ஈண்ட வளர்ந்தேம் ஏந்து தவிசின் உச்சி மிசை எய்தி
தீண்ட அரிய வெம்மையொடு திக்கயங்கள் எனவே

#1795
வில் தொழிலும் வாள் தொழிலும் வீணை பொரு தொழிலும்
மல் தொழிலும் தேர் தொழிலும் வாரணத்தின் தொழிலும்
நல் தொழில வாசியொடு நன் கலைகள் நீந்தி
கற்றனங்கள் யாமும் உடன் கற்பனகள் எல்லாம்

#1796
வெம் சிலையின் வேடர் தொறு மீட்டு விசும்பு ஏகும்
விஞ்சை அரையன் மகளை வீணை பொருது எய்தி
குஞ்சரமும் வென்று குணமாலை நலன் உண்ட
நம்பி அவன் நாமம் எவன் என்னின் இது ஆமே

#1797
கந்துக்கடன் என்ற நகர்க்கு ஆதி முது நாய்கன்
முந்தி பெறப்பட்ட மகன் மூரி சிலை தட கை
சிந்திப்பவர் அவலம் அறு சீவகன் என் தோழன்
அந்தில் ஒருநாள் அவனை அரசன் ஒரு தவற்றால்

#1798
தொடிகள் தவழ் வீங்கு திரள் தோள் இறுக யாத்து
கடிகள் தவழ் குழல் மகளிர் கசிந்து மனம் கரிய
கொடிகள் தவழ் மாட நகர் கொல்ல என மாழ்கி
இடிகள் தவழ்ந்திட்ட பட நாகம் என வீழ்ந்தாள்

#1799
மாதவ பெருமை வண்ணம் மாநகர் நம்பிக்கு உற்ற
ஏதத்தை கேட்டலோடும் இரு கணும் பிறந்து மாழ்கி
காதல் தம் மகனுக்கு உற்ற நவை என கலங்கி வீழ்ந்தார்
ஆதலால் நங்கை யாரே அருள் பெரிது உடையர் என்றார்

#1800
மாழ்குபு மயங்கி வீழ்ந்த மாபெரும்தேவி-தன்னை
ஆழ் துயர் அவித்தற்கு ஒத்த அரும் பெறல் யோகம் நாடி
காழ் பரிந்து அரைத்த சாந்தின் களி தரு நீரில் தேற்ற
யாழ் புரை கிளவி ஆற்றாள் மயங்கி வீழ்ந்து அரற்றுகின்றாள்

#1801
கை மாண் கடல் படையுள் காவலனை ஆண்டு ஒழிய
பொய் மா மயில் ஊர்ந்து போகி புறங்காட்டுள்
விம்மாந்து யான் வீழ வீழ்ந்தேன் துணை ஆகி
எம்மானே தோன்றினாய் என்னை ஒளித்தியோ

#1802
கையார் இலங்கு எஃகின் கந்து கடன் கொடுபோய்
மொய்யார் உவகையனாய் முற்று_இழைக்கு தான் கொடுப்ப
நையாள் வளர்த்த சுநந்தை நவையுற என்
ஐயா என் ஐயா என் ஐயா அகன்றனையே

#1803
மின் நிரைத்த பைம் பூண் விளங்கு இலை வேல் வேந்தன்
முன் உரைத்த மூன்று கனவும் புணை ஆக
என் உயிரை தாங்கி இருந்தேன் வலி ஆகாது
என் அரசே என் பூசல் கேளாது இறந்தனையே

#1804
கோ அ மா ஆகி குடியோம்பி நின் குடை கீழ்
பாவமே செய்தேன் பரிவு எலாம் நீங்கினால்
போ அம்மா என்று உரைப்ப போவேன் முன் போயினாய்
ஆ அம்மா அம்மா என் அம்மா அகன்றனையே

#1805
கோமான் மகனே குரு குலத்தார் போர் ஏறே
ஏமாங்கதத்தார் இறைவா என் இன்னுயிரே
காமா கடலுள் கலம் கவிழ்த்தேன் கண்ணுள் நீர்
பூ மாண் புனை தாராய் நோக்காது போதியோ

#1806
கந்தார் களி யானை காவலனார் கான் முளையை
வந்தார் வாய் தீது இன்மை கேட்டு மறைந்திருந்து
நொந்தேன் பல-காலும் நோயோடே வீகின்றேன்
அந்தோ அறனே மற்று ஆற்றேனால் ஆற்றேனால்

#1807
முன் ஒரு-கால் என் மகனை கண்டேன் என் கண் குளிர
பின் ஒரு-கால் காண பிழைத்தது என் தேவிர்காள்
என் ஒப்பார் பெண் மகளிர் இ உலகில் தோன்றற்க என்று
அன்ன பெடை நடையாள் ஆய் மயில் போல் வீழ்ந்தனளே

#1808
புண் மல்கு மத்தகத்த போர் வேழம் பொற்பு அழித்த
மண் மல்கு தாரான் பெருமாட்டி வாய் மொழி கேட்டு
உள் மல்கு நெஞ்சினராய் ஒய்யெனவே வெய்துயிரா
கண் மல்கு நீரார் முக முகங்கள் நோக்கினரே

#1809
கண்டீர் கருமம் விளைந்த ஆறு என்றாராய்
வண் தாரார் வண் கடகம் மின்ன தம் கை மறித்து
கொண்டாம் கடல் வேலி கீழ் மகனை கூற்றம் ஆய்
உண்டாம் உயிர் என்று உவப்பு எழுந்து ஆடினரே

#1810
வீழ்ந்து மயில் போல் விசயை கிடந்தாளை
தாழ்ந்து பல தட்பம் தாம் செய்ய ஏல் பெற்று
போழ்ந்து அகன்ற கண்ணாள் புலம்பா எழுந்திருப்ப
சூழ்ந்து தொழுது இறைஞ்சி சொன்னார் அவன் திறமே

#1811
கொலைக்களம் குறுகலும் கொண்டு ஓர் தெய்வதம்
நிலைக்களம் இது என நீக்க நீங்கினான்
இலக்கண மட பிடி இயைந்து ஓர் போதகம்
மலைக்கணத்து-இடை மகிழ்ந்து அனைய மைந்தனே

#1812
பூ உடை தெரியலான் போர்வை நீத்து இனி
கோ உடை பெருமகன் ஆதல் கொண்டனம்
சேவடி சேர்ந்தனம் தொழுது சென்று என
மாவடு நோக்கி உள் மகிழ்ந்து கூறினாள்

#1813
தரணி காவலன் சச்சந்தன் என்பவன்
பரணி நாள் பிறந்தான் பகை யாவையும்
அரண் இலான் என்-கண் தங்கிய அன்பினால்
இரணியன் பட்டது எம் இறை எய்தினான்

#1814
விசயை என்று உலகு ஓடிய வீறு இலேன்
பசையினால் துஞ்சி யான் பட்ட தீது எலாம்
இசைய நம்பிக்கு எடுத்து உரைத்து என்னுழை
அசைவின்று ஐயனை தம்-மின் என சொன்னாள்

#1815
கோதை வேல் நம்பிக்கு அல்லதை இ பொருள்
யாதும் கூறன்-மின் யாரையும் தேறன்-மின்
ஏதம் இன்னன இன்னணம் எய்தலால்
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்-மின்

#1816
பகைவர் உள்ளமும் பாம்பின் படர்ச்சியும்
வகை கொள் மேகலை மங்கையர் நெஞ்சமும்
மிகை செல் மேகத்து மின்னும் செம் நில்லலா
புகை செய் வேலினீர் போற்றுபு செல்-மினே

#1817
வணக்கரும் சிலையினானை ஒரு மதி எல்லை நாளுள்
குணத்தொடு மலிந்த பாதம் குறுக யாம் கொணர்ந்த பின்றை
பணித்ததே செய்து பற்றார் பகை முதல் அடர்த்தும் என்றார்
மணி கொடி மாசு உண்ட அன்னாள் மற்றதே துணி-மின் என்றாள்

#1818
பொறி தவ நெருங்க நோற்று புகர் அற நிறைந்த கொள்கை
செறி தவ விசயை பாதம் சென்னியின் வணங்கி மீண்டு
வெறி கமழ் சோலை நண்ணி வேண்டிய அடிசில் கை தொட்டு
எறி படை எழுக என்றார் வளை எழுந்து ஆர்த்த அன்றே

#1819
பைம் துகில் மகளிர் தேன் சோர் பவள வாய் திகழ நாணி
சிந்தித்து கூந்தல் வாங்கி செவ்வணம் துடைப்பதே போல்
இந்திரகோபம் கௌவி இறகு உளர்கின்ற மஞ்ஞை
அந்தரத்து இவர்ந்த பாய் மா அரும் பொன் தார் அரவத்தாலே

#1820
சாந்தின் மேல் தொடுத்த தீம் தேன் தண் மதி கோடு போழ
போந்து மட்டு அருவி வீழும் பொன் நெடும் குன்றும் அம் தண்
ஏந்து பூம் காவு சூழ்ந்த இரும் புனல் ஆறும் நீந்தி
மாந்தரே மலிந்த நாடு மடுத்து உடன் சென்றது அன்றே

#1821
மது குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செம் தீ
புது கலத்து எழுந்த தீம் பால் பொங்கலின் நுரையின் பொங்கி
கதிர்த்து வெண் மாடம் தோன்றும் செவ்வையில் காதம் நான்கின்
நதி கரை வந்துவிட்டார் நச்சு எயிற்று அரவோடு ஒப்பார்

#1822
மான் அயா நோக்கியர் மருங்குல் போல்வது ஓர்
கான யாற்று அடைகரை கதிர் கண் போழ்கலா
தேன் அயாம் பூம் பொழில் திண்ணை வெண் மணல்
தானையாம் நால்வரும் தணப்பின்று எய்தினார்

#1823
வார்ந்து தேன் துளித்து மட்டு உயிர்த்து வார் மணல்
ஆர்ந்து போது அரும் தவிசு அடுத்தது ஒத்துமேல்
தூர்ந்து தேன் வண்டொடு துதைந்து உள் புக்கவர்
போந்து போக்கு அரியது அ பொழிலின் பெற்றியே

#1824
தாது அணி கொழு நிழல் இருந்து தண் மது
போது அணி அலங்கல் தாழ் பொரு இல் மார்பனை
யாது நாம் அடை திறம் உரை-மின் நீர் என
காதலால் பதுமுகன் கண்டு கூறினான்

#1825
திரு கிளர் மன்னவன் சேனை மாநகர்
பொருக்கு ஒளி இன நிரை கோடும் கொண்ட பின்
முருக்கு ஒளி மலர் அடி மூரி மொய்ம்பனை
செருக்களத்து எதிர்ப்பட சிதைவது இல்லையே

#1826
சேண் குலாம் சிலையொடு திளைத்த பின் அவர்
வாள் கலாம் வலித்து அமர் தொடங்கின் வல்லையே
மீட்கலாம் விருப்பு உடைத்து எழுக என்று தன்
ஆட்கு எலாம் செப்பினன் அலர்ந்த தாரினான்

#1827
இரும் கடல் மணி நிரை எய்தி நாம் கொண்ட பின்
அரும் கடி அணி நகர் ஐயன் அங்கு இல்லையேல்
பெரும் படை தான் வரின் பின்றி நீங்கின் பழி
தரும் படித்து அன்றியும் சாற்றுவல் கேள்-மினோ

#1828
மஞ்சு சூழ் விசும்பு-இடை மணந்து மின் மிளிர்வ போல்
வஞ்சம் இல் மறவர் வாள் மிளிர்ந்து பாய் குருதியுள்
குஞ்சரம் குளிப்பது ஓர் நீத்தமாம் ஆதலால்
எஞ்சல் இல் கொள்கையீர் எண்ணி சூழ்-மின்களே

#1829
என்றனன் புத்திசேன் என்னும் நான்மறையினான்
நன்று அதே பொருள் என நால்வரும் இருந்துழி
ஒன்றி முன் விடுத்தவர் மூவர் ஒற்று ஆட்கள் வந்து
இன்று இதால் பட்டது என்று இயம்புகின்றார்களே

#1830
வளையசுந்தரம் எனும் வாரண மால் வரை
முளை இளம் திங்கள் போல் முத்து உடை கோட்டது
கிளை இளம் பிடிகள் ஐஞ்நூற்று-இடை கேழ் அரக்கு
அளைய அஞ்சன வரை அனையது அ களிறு-அரோ

#1831
கடு மத களிப்பினால் கார் என முழங்கலின்
விடுகலார் பாகரும் வெருவர கொன்றிட
பிடியொடும் கந்து அணைவு இன்றி நீர் உருள் பிளந்து
அடு களிறு அந்த போதிகை பரிந்து அழன்றதே

#1832
கண் உமிழ் தீயினால் சுட நிறம் கரிந்த போல்
பண் உமிழ் வண்டு உலாய் பரத்தரா நின்ற சீர்
அண்ணல் அம் களிற்றினை அடக்கினான் சீவகன்
வண்ண மேகலையினார் மனம் என படிந்ததே

#1833
இறுவரை இவர்வது ஓர் இலங்கு எயிற்று அரி என
உறு வரை மார்பினான் தூசம் கொண்டு ஒய்யென
பெறலரும் குஞ்சரம் ஏறலின் பெரும் சனம்
அறை கடல் திரை ஒலித்து ஆங்கு என ஆர்த்ததே

#1834
அம் கை அம் தலத்தினால் அப்புது ஆது ஐ என
கொங்கு அலர் கண்ணியான் கொம்மை தான் கொட்டலும்
பொங்கிய உவகையில் பொலிந்து மா களிறு அவன்
தங்கிய பயிர் தொழில் தட கையால் செய்ததே

#1835
கொட்டை அம் புரோசைதான் இரு வடம் கொண்டு உடன்
கட்டினான் கரு வலி தட கையால் தோட்டியும்
இட்டனன் இரண்டுடன் இமிழ் கொளீஇ இலங்கு பொன்
பட்டமும் பனி வரை மின் என கட்டினான்

#1836
கச்சையும் வீக்கினன் கறங்கு இரு மணி அணிந்து
அச்சுறு கொழும் தொடர் யாப்பு அழித்து அடி இணை
உச்சியும் புரோசையுள் குளிப்ப உய்த்து உறு வலி
மெச்சி மேல் வேந்தனும் விழைதக தோன்றினான்

#1837
கோல் தொடி புரிசையுள் கொற்றவன் நின்று ஐயன்
ஏற்று இயல் காண்டும் நாம் இவண் தருக என்னவே
காற்று என கடல் என கரு வரை உரும் என
கூற்று என குஞ்சரம் கொண்டு புக்கான்-அரோ

#1838
குழவி அம் செல்வன் ஓர் குன்று கொண்டு ஒய்யென
அழகிதா பறப்பதே போலவும் ஆர் புயல்
மழையை ஊர்ந்து ஓடும் ஓர் வானவன் போலவும்
எழுதல் ஆகா-வணம் இருந்தனன் என்பவே

#1839
வனை கல திகிரியும் வாழ் உயிர் மேல் செலும்
கனை கடும் கதழ் பரி கால சக்கரமும் போல்
வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும்
இனையவை ஏமுற இமைப்பினின் இயற்றினான்

#1840
ஒருவனே களிறும் ஒன்று ஓர் நூறு ஆயிரம்
திரிவவே போன்றன திசை எலாம் குஞ்சரக்கு
உரியவன் இவன் அலால் உலகினில் இலன் என
அரிது உணர் வேத்து அவை அமைக மற்று என்றதே

#1841
வள் உகிர் நுதியினால் வரி நுதல் உறுத்தலும்
உள் உணர் குஞ்சரம் ஒய்யென நிற்றலும்
எள்ளரும் இரு மணி கிணினென இசைத்தன
வெள்ள நீர் பெரும் சனம் வியந்து கை விதிர்த்ததே

#1842
என் மனம் நின் மனம் என்று இரண்டு இல்லையால்
தன் மனத்து உள பொருள் தான் தனக்கு உரைப்பது ஒத்து
உன் மனம் என் மனம் என்பது ஒத்து இழைத்ததால்
நன் மன குஞ்சர நம்பியோடு என்மரும்

#1843
தேவனே மகன் அலன் செல்வன் மற்று என்மரும்
பாவையே நோற்றனள் பாரின் மேல் என்மரும்
கோவனும் மக்களும் குளிர்ந்து தோள் நோக்கினார்
ஓ என வையகத்து ஓசை போய் உயர்ந்ததே

#1844
பிண்டம் உண்ணும் பெரும் களிறு பூட்டி அவண்
வண்டரும் ஓவரும் பாட மாநகர் தொழ
கொண்ட தன் தம்பியும் தானும் கோயில் புக
கண்டனம் கண்ணினே என்று கண்டவர் சொனார்

#1845
பாத்தில் சீர் பதுமுகன் படிவ ஒற்றாளர் சொற்கு
ஓத்து என கொடுத்தனன் கொழு நிதி உவகையில்
தூ திரள் சுறா இனம் தொக்க போல் மறவரும்
ஏத்தரும் சிலை கை வாள் இலங்கு வேல் ஏந்தினார்

#1846
வேல் நிரை வாள் மதில் பிளந்து வெம் சமத்து-இடை
தேன் நிரை களிற்றின் மேல் திண் குளம்பு அழுத்துவ
ஆன் நிரை வளைப்பது ஓர் பொருள் என சிரித்து உடன்
மா நிரை பண்ணினார் வடித்த நூல் கேள்வியார்

#1847
விடை உடை இன நிரை விழுங்கல் மேயினார்
துடியொடு சிறுபறை துவைத்த வால் வளை
முடி உலகு உற நிமிர்ந்து ஆர்த்த மொய் கழல்
அடு படை இளையரும் அரணம் வீசினார்

#1848
காந்தள் அம் கடி மலர் கண்ணி நெற்றியர்
ஆய்ந்து அளந்து இயற்றிய அத்து உண் ஆடையர்
வேய் துணி அலமரும் புறத்தர் வெம் சுடர்
ஏந்து எழில் நவியமும் ஏந்து தோளினார்

#1849
கோன் உடை இன நிரை காக்கும் கோவலர்
தேனொடு கடி சுரும்பு அரற்றும் தே மலர்
கான் இடை இன நிரை காவல் போற்று-மின்
ஆன் இடை அழித்த புள் என்று கூறினார்

#1850
விடு பொறி அரவு என விளங்கு வெம் சிலை
அடு கணை சிதறினார் ஆர்த்த வால் வளை
கடுகின கால் இயல் இவுளி காண்டலும்
முடுகுபு கோவலர் முந்து கால் பெய்தார்

#1851
அளை செறி இரும் புலி அனைய ஆடவர்
வளைத்தனர் மணி நிரை வன்கண் ஆயரும்
விளைத்தனர் வெருவர தக்க வெம் சொலால்
உளைத்தனர் பூசல் விட்டு உணர்த்த ஓடினார்

#1852
தேர் தொகை தானை மன்னன் சீவகற்கு இளைய நம்பி
வார் தொகை முழவம் விம்ம மல் உறழ் தோளினானை
நீர் தொகை கழனி நாடு நெடு நகர் பெயரும் நுங்கள்
சீர் தொகை குலனும் எல்லாம் தெரிந்து எமக்கு உரைமோ என்றான்

#1853
திருக்குறிப்பு அன்னது ஆயின் செப்புவல் அடிகள் செம்பொன்
அரித்து அசும்பு ஒழுகு குன்றத்து அருவியின் வெரீஇய மஞ்ஞை
பரித்தவை பழன நாரை பார்ப்பொடு மருதில் சேக்கும்
உரைத்தகு நாடும் ஊரும் குலத்துடன் உணர என்றான்

#1854
பொரு கயல் உகளி பாய பூம் சிறை குமரி அன்னம்
குருகினோடு இரிய செந்நெல் கொழும் கதிர் குவளை எற்ற
முருகு விண்டு இரிய தீம் தேன் முழங்கு நீர் கழனி நல் நாடு
எரி உமிழ்ந்து இலங்கும் வேலோய் ஏமமாங்கதம் அது என்றான்

#1855
பூம் துகில் கொடுத்த தீம் தேன் அகில் புகை பொன் அனார்-தம்
கூந்தலில் குளித்த வண்டு கொப்புளித்து இட்ட வாசம்
மாந்தர் மேல் தவழ்ந்து மாடம் இருள் பட புதையும் செல்வத்து
ஏந்து பொன் இஞ்சி மூதூர் இராசமாபுரம் அது என்றான்

#1856
எம் குலம் அடிகள் கேட்க என்றலும் எழுந்த ஓர் பூசல்
பொங்கு உளை புரவி வெள்ளம் போக்கு அற வளைத்து முற்றி
இங்கு உள நிரையை எல்லாம் கவர்ந்தது என்று இட்ட-போழ்தே
திங்கள் வெண்குடையினான் தன் திரு செவிக்கு இசைத்தது அன்றே

#1857
எரி திறல் வென்றி வேந்தற்கு இற்றென இசைப்ப சீறி
மருப்புற கந்து பாய்ந்து முழங்கும் மால் களிறு போல
திரு கிளர் மணி செய் பொன் தூண் தீப்பட புடைத்து செம் கண்
உருத்து எரி தவழ நோக்கி உடல் சினம் கடவ சொன்னான்

#1858
நால் கடல் பரப்பும் வந்து நல் நகர் கண்ணுற்று என்ன
வேல் கடல் தானை பாய்மா விளங்கு ஒளி இவுளி திண் தேர்
கூற்று என முழங்கும் ஓடை குஞ்சர குழாத்தோடு ஏகி
பால்கடல் பரப்பின் வல்லே படு நிரை பெயர்க்க என்றான்

#1859
கண் அகன் கடல் அம் கோடும் பறைகளும் முழங்கி விம்ம
விண் அகத்து இயங்கும் மேக குழாம் என நிரைத்த வேழம்
திண் நுக புரவி திண் தேர் விரைந்தன நிரந்த பாய்மா
மண்ணகம் மலிர காலாள் கடல் கிளர்ந்து எழுந்தது அன்றே

#1860
பால் நிற கவரி நெற்றி பசுங்கிளி நிறத்த பாய்மா
தானுறப்பண்ணி திண் தேர் தம்பி கோல் கொள்ள ஏறி
கூன் நிற குழவி திங்கள் குளிர் கதிர் ஆர மார்பில்
தேன் நிறம் கொண்ட கண்ணி சீவககுமரன் சொன்னான்

#1861
மன்னவன் நிரை கொண்டாரை வள நகர் தந்து மன்னன்
பொன் அவிர் கழலில் தங்கள் புனை முடி இடுவியேனேல்
இன் இசை உலகம்-தன்னுள் என் பெயர் சேறல் இன்றாய்
கன்னிய மகளிர் நெஞ்சில் காமம் போல் கரக்க என்றான்

#1862
பார் மலி பரவை தானை பரப்பு-இடை பறப்பதே போல்
நீர் மலி கடாத்த கொண்மூ நெற்றி மேல் மின்னின் நொய்தா
தார் மலி மார்பன் திண் தேர் தோன்றலும் தறு கண் மைந்தன்
சீர் மலி பகழி ஏந்தி பதுமுகன் சிலை தொட்டானே

#1863
குடை நிழல் கொற்ற வேந்தன் ஒரு மகன் காண குன்றா
அடி நிழல் உறைய வந்தேம் அடியம் யாம் என்ன எய்த
விடு கணை சென்று தேர் மேல் பின் முனா வீழ்தலோடும்
தொடு கழல் குருசில் நோக்கி தூ துகில் வீசினானே

#1864
ஏந்தலை தோழர் எல்லாம் இணை அடி தொழுது வீழ
சேந்தன கண்ணினாலும் திண் எழில் தோளினாலும்
வாய்ந்த இன் சொல்லினாலும் மாலை தாழ் முடியினாலும்
ஆய்ந்தவன் சிறப்பு செய்தான் அவல நோய் அவரும் தீர்ந்தார்

#1865
கழல் அவாய் கிடந்த நோன் தாள் காளை தன் காதலாரை
நிழல் அவாய் இறைஞ்சி நீங்கா நெடும் களிற்று எருத்தம் மேல் ஏற்றி
அழல் அவாய் கிடந்த வை வேல் அரசிளங்குமரர் சூழ
குழல் அவாய் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான்

#1866
வான் நக்கி நின்று நுடங்கும் கொடி மாட மூதூர்
பால் நக்க தீம் சொல் பவளம் புரை பாவை அன்ன
மான் நக்க நோக்கின் மடவார் தொழ மைந்தர் ஏத்த
யானை குழாத்தின் இழிந்தார் அரிமானொடு ஒப்பார்

#1867
செம்பொன் புளகத்து இள ஞாயிறு செற்ற கோயில்
வம்பில் துளும்பு முலை வாள் நெடும் கண் மடவார்
நம்ப புகுந்து நரதேவன் அருளின் எய்தி
பைம்பொன் புளக களிற்றான் அடி தாம் பணிந்தார்

#1868
வல்லான் புனைந்த வயிர குழை வார்ந்து வான் பொன்
பல் பூண் எருத்தில் பரந்த அம் சுடர் கால மன்னன்
மல்லார் திரள் தோள் மருமான் முகம் நோக்க மைந்தர்
எல்லாம் அடிகள் எனக்கு இன்னுயிர் தோழர் என்றான்

#1869
வார் பொன் முடி மேல் வயிரம் உழ சேந்த செல்வத்து
ஆர் பொன் அடி சூழ் மணி அம் கழல் ஆனை வேந்தன்
கார் மின் நுடங்கும் இடை மங்கையை காண்க சென்று என்று
ஏர் மின்னு தாரான் அருள தொழுது ஏகினாரே

#1870
தழு முற்றும் வாரா திரள் தாமங்கள் தாழ்ந்த கோயில்
முழு முற்றும் தானே விளக்காய் மணி கொம்பின் நின்றாள்
எழு முற்றும் தோளார் தொழுதார் இன்னர் என்று நோக்க
கழுமிற்று காதல் கதிர் வெள் வளை தோளினாட்கே

#1871
துறக்கம் இதுவே எனும் தொல் நகர் மன்னன் மங்கை
தொறு கொண்ட கள்வர் இவரோ என சொல்லி நக்கு ஆங்கு
ஒறுக்கப்படுவார் இவர் என்று அங்கு அசதியாடி
வெறுக்கை கிழவன் மகள் என்ன விருந்து செய்தாள்

#1872
அரும் தீ தொழிலே புரிந்தான் மறை ஆய எல்லாம்
விருந்தா விரிப்பான் அவன் சீவகசாமி வேறா
இருந்தாற்கு ஓர் ஓலை கொடுத்தான் எரி குண்டலத்தால்
பொருந்தார் பொறியை புறம் நீக்குபு நோக்குகின்றான்

#1873
மற்று அடிகள் கண்டு அருளி செய்க மலர் அடி கீழ்
சிற்றடிச்சி தத்தை அடி வீழ்ச்சி திருவடிகட்கு
உற்ற அடிசில் மஞ்சனத்தை உள்ளுறுத்த காப்பும்
பொற்பு உடைய ஆக என போற்றி அடி வீழ்ந்தேன்

#1874
வயிர மணி கலன் கமழும் கற்பக நல் மாலை
உயிரை மதம் செய்யும் மது தண்டொடு உடை ஆடை
செயிரில் நறும் சாந்து சிலை அம்பு மணி அயில் வாள்
மயிர் எலியின் போர்வையொடு எம் மன்னன் விடுத்தானே

#1875
வந்தவனை யாரும் அறியாமல் மறையாக
தந்து தரன் கேட்ப இது சாமி வலித்தானா
ஐந்து மதி எல்லையினை ஆண்டு உடையன் ஆகி
அம் தில் அகன்றான் தமரொடு ஆங்கண் என சொன்னேன்

#1876
பட்ட பழி வெள்ளி மலை மேல் பரத்தல் அஞ்சி
தொட்டு விடுத்தேன் அவனை தூது பிற சொல்லி
பட்ட பழி காத்து புகழே பரப்பின் அல்லால்
விட்டு அலர்ந்த கோதை அவரால் விளைவது உண்டோ

#1877
அல்லதுவும் எங்கை குணமாலை அவள் ஆற்றாள்
செல்லும் மதி நோக்கி பகலே சிறியை என்னும்
பல் கதிரை நோக்கி மதியே பெரியை என்னும்
எல்லி இது காலை இது என்பது அறிகல்லாள்

#1878
அரவு வெகுண்டு அன்ன அகல் அல்குல் நிலம் புல்லி
திருவில் வளைந்து அனைய திரு மேகலையின் நீங்கி
புருவ மதி முகமும் புகழ் தோளும் புணர் முலையும்
உருவம் அழிந்து அடிச்சி உளள் ஆம்-கொல் உணர்கலனே

#1879
நாளை வரும் நையல் என நன்று என விரும்பி
நாளை எனும் நாள் அணிமைத்தோ பெரிதும் சேய்த்தோ
நாளை உரை என்று கிளியோடு நக சொல்லும்
நாளினும் இ நங்கை துயர் நாளினும் அற்று இதுவே

#1880
நோக்கவே தளிர்த்து நோக்காது இமைப்பினும் நுணுகும் நல்லார்
பூ கமழ் அமளி சேக்கும் மது மணவாளனார் தாம்
நீப்பு இலார் நெஞ்சின் உள்ளார் ஆதலான் இனைத்தல் செய்யேன்
போக்குவல் பொழுதும் தாம் தம் பொன் அடி போற்றி என்றாள்

#1881
இலவம் பூ அரக்கு உண்டு அன்ன பஞ்சி மெல் அடியினாள் தன்
புலவி சொல் பொறித்த ஓலை திரு முடி துளக்கி நோக்கி
தலை வைத்த காப்பு விஞ்சை கொண்ட பின் தாமம் சூழ்ந்து
கொலை வைத்த குருதி வேலான் தோழரை குறுகினானே

#1882
எம் கோ மற்று என் திறம் நீர் கேட்டது என்றாற்கு எரி மணி பூண்
செங்கோல் மணி நெடும் தேர் செல்வன் காதல் பெரும் தேவி
தங்கா தவ உருவம் தாங்கி தண்டாரணியத்துள்
அங்காத்து இருந்தாளை தலைப்பட்டு ஐய அறிந்தோமே

#1883
என்னே மற்று என்னே நீர் மொழிந்தது என்னே என விரும்பி
முன்னே மொழிந்தால் போல் முறை நின்று எல்லாம் உடன் மொழிய
மன் ஆரம் சிந்துவ போல் மலர்ந்த செந்தாமரை கண்ணீர்
பொன் ஆர மார்பின் மேல் பொழிய புன்கண் உற்றானே

#1884
அஃதே அடிகளும் உளரோ என்றாற்கு அருளுமாறு
இஃதா இருந்தவாறு என்றார்க்கு என்னை பெற வல்லார்க்கு
எய்தா இடர் உளவே எங்கு எங்கு என்று அ திசை நோக்கி
வெய்தா அடி தொழுது வேந்தன் கோயிற்கு எழுந்தானே

#1885
இலை விரவு பூம் பைம் தார் வேந்தன் ஏந்தல் குலம் கேட்பான்
மலை விரவு நீள் மார்பின் மைந்தன் தோழர் முகம் நோக்கி
கொலை விரவு கூர் நுதி வேல் குமரன் என்ன குருகுலத்தான்
கலை விரவு தீம் சொல்லார் காமன் என்றார் கமழ் தாரார்

#1886
அண்ணல் குருகுலத்தான் என்றால் யான் முன் கருதியது என்
எண்ணம் வெளிப்பட்டான் கரந்த மைந்தன் எரி செம்பொன்
வண்ண வரை மார்பம் முயங்கி நுண் நூல் மதியாரோடு
எண்ணி விய நெறியால் விடுத்தான் கோயில் புக்கானே

#1887
விள்ளா வியன் நெடும் தேர் வேந்தன் காதல் மட மகளே
கள் ஆவி கொப்புளிக்கும் கமழ் பூம் கோதாய் என் மனத்தின்
உள் ஆவி உள்ளாய் நீ ஒழிந்தாய் அல்லை என கையில்
புள் ஆவி செம் கழுநீர் குவளை செய்தாள் புனை பூணாள்

#1888
வார் முயங்கு மெல் முலைய வளை வேய் தோளாள் மனம் மகிழ
நீர் முயங்கு கண் குளிர்ப்ப புல்லி நீள் தோள் அவன் நீங்கி
தேர் முயங்கு தானையான் சிறுவர் சேடார் அகல் மார்பம்
தார் முயங்கி கூந்தல்மா இவர்ந்தான் சங்கம் முரன்றவே
@8 விமலையார் இலம்பகம்

#1889
முருகு கொப்புளிக்கும் கண்ணி முறி மிடை படலை மாலை
குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தல்மா இவர்ந்து செல்ல
உருவ வெம் சிலையினார்க்கு தம்பி இஃது உரைக்கும் ஒண் பொன்
பருகு பை கழலினாருள் பதுமுகன் கேட்க என்றே

#1890
விழு மணி மாசு மூழ்கி கிடந்தது இ உலகம் விற்ப
கழுவினீர் பொதிந்து சிக்க கதிர் ஒளி மறைய காப்பின்
தழுவினீர் உலகம் எல்லாம் தாமரை உறையும் செய்யாள்
வழுவினார்-தம்மை புல்லாள் வாழ்க நும் கண்ணி-மாதோ

#1891
தொழுத தம் கையினுள்ளும் துறு முடி அகத்தும் சோர
அழுத கண்ணீரினுள்ளும் அணிகலத்து அகத்தும் ஆய்ந்து
பழுது கண்ணரிந்து கொல்லும் படை உடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார்-கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே

#1892
தோய் தகை மகளிர் தோயில் மெய் அணி நீக்கி தூ நீர்
ஆய் முதுமகளிர்-தம்மால் அரில் தப திமிரி ஆட்டி
வேய் நிற தோளினார்க்கு வெண் துகில் மாலை சாந்தம்
தான் நல கலங்கள் சேர்த்தி தட முலை தோய்க என்றான்

#1893
வண்ண பூ மாலை சாந்தம் வால் அணிகலன்கள் ஆடை
கண் முகத்து உறுத்தி தூய்மை கண்டலால் கொள்ள வேண்டா
அண்ணல் அம் புள்ளோடு அல்லா ஆயிரம் பேடை சேவல்
உண்ணும் நீர் அமிழ்தம் காக்க யூகமோடு ஆய்க என்றான்

#1894
அஞ்சன கோலின் ஆற்றா நாகம் ஓர் அருவி குன்றின்
குஞ்சரம் புலம்பி வீழ கூர் நுதி எயிற்றில் கொல்லும்
பஞ்சியின் மெல்லிதேனும் பகை சிறிது என்ன வேண்டா
அஞ்சி தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான்

#1895
பொருந்தலால் பல்லி போன்றும் போற்றலால் தாயர் ஒத்தும்
அரும் தவர் போன்று காத்தும் அடங்கலால் ஆமை போன்றும்
திருந்து வேல் தெவ்வர் போல தீது அற எறிந்தும் இன்ப
அருந்தினால் மனைவி ஒத்தும் மதலையை கா-மின் என்றான்

#1896
பூம் துகில் மாலை சாந்தம் புனை கலம் பஞ்ச வாச
ஆய்ந்து அளந்து இயற்றப்பட்ட அடிசில் நீர் இன்ன எல்லாம்
மாந்தரின் மடங்கல் ஆற்றல் பதுமுகன் காக்க என்று ஆங்கு
ஏந்து பூண் மார்பன் ஏவ இன்னணம் இயற்றினானே

#1897
சிறு கண் யானையின் இனம் சேர்ந்து சேவகம் கொள
துறுகல் என்று உணர்கலா துள்ளி மந்தி மக
நறிய சந்தின் துணி நாற வெந்தனகள் கொண்டு
எறிய எள்கி மயிர் கவரிமா இரியுமே

#1898
புகழ் வரை சென்னி மேல் பூசையில் பெரியன
பவழமே அனையன பல் மயிர் பேர் எலி
அகழும் இங்குலிகம் அஞ்சன வரை சொரிவன
கவழ யானையின் நுதல் தவழும் கச்சு ஒத்தவே

#1899
அண்ணல் அம் குன்றின் மேல் வருடை பாய்ந்து உழக்கலின்
ஒண் மணி பல உடைந்து ஒருங்கு அவை தூளியாய்
விண் உளு உண்டு என வீழும் மா நில மிசை
கண் அகல் மரம் எலாம் கற்பகம் ஒத்தவே

#1900
மானிடம் பழுத்தன கிலுத்தம் மற்று அவற்று அயல்
பால் முரண் பயம்பு-இடை பனை மடிந்து அனையன
கான்-இடை பாந்தள் கண்படுப்பன துயில் எழ
ஊன் உடை பொன் முழை யாளி நின்று உலம்புமே

#1901
சாரல் அம் திமிசு இடை சந்தன தழை-வயின்
நீர தீம்பூ மரம் நிரந்த தக்கோலமும்
ஏர் இலவங்கமும் இன் கருப்பூரமும்
ஓரும் நாவி கலந்து ஓசனை கமழுமே

#1902
மைந்தரை பார்ப்பன மா மகள் மா குழாம்
சந்தனம் மேய்வன தவழ் மத களிற்று இனம்
அம் தழை காடு எலாம் திளைப்ப ஆமான் இனம்
சிந்த வால் வெடிப்பன சிங்கம் எங்கும் உள

#1903
வருக்கையின் கனி-தொறும் வானரம் பாய்ந்து உராய்
பொருப்பு எலாம் பொன் கிடந்து ஒழுகி மேல் திருவில் வீழ்ந்து
ஒருங்கு குலாய் நில மிசை மிளிர்வது ஒத்து ஒளிர் மணி
திரு கிளர் ஒளி குலாய் வானகம் செகுக்குமே

#1904
வீழ் பனி பாறைகள் நெறி எலாம் வெம் வெயில்
போழ்தலின் வெண்ணெய் போல் பொழிந்து மட்டு ஒழுகுவ
தாழ் முகில் சூழ் பொழில் சந்தன காற்று அசைந்து
ஆழ் துயர் செய்யும் அ அரு வரை சாரலே

#1905
கூகையும் கோட்டமும் குங்குமமும் பரந்து
ஏகல் ஆகா நிலத்து அல்கி விட்டு எழுந்து போய்
தோகையும் அன்னமும் தொக்கு உடன் ஆர்ப்பது ஓர்
நாக நல் காவினுள் நயந்துவிட்டார்களே

#1906
பூத்து அகில் தவழும் போர்வை பூசு சாந்து ஆற்றி பொன் நூல்
கோத்து நீர் பிலிற்றும் காந்தம் குங்கும வைர பொன் கோய்
சாத்துறி பவழ கன்னல் சந்தன ஆலவட்டம்
நீத்தவர் இடத்து நாற்றி நிழல் மணி உலகம் செய்தார்

#1907
நித்தில முலையினார் தம் நெடும் கணால் நோக்கப்பெற்றும்
கைத்தலம் தீண்டப்பெற்றும் கனிந்தன மலர்ந்த காண்க
வைத்து அலர் கொய்ய தாழ்ந்த மரம் உயிர் இல்லை என்பார்
பித்து அலர்-ஆயின் பேய்கள் என்று அலால் பேசலாமோ

#1908
பொறி மயில் இழியும் பொன் தார் முருகனின் பொலிந்து மாவின்
நெறிமையின் இழிந்து மைந்தன் மணி கை மத்திகையை நீக்கி
வெறுமையினவரை போக்கி வெள்ளிடை படாத நீரால்
அறி மயில் அகவும் கோயில் அடிகளை செவ்வி என்றான்

#1909
எல் இருள் கனவில் கண்டேன் கண் இடன் ஆடும் இன்னே
பல்லியும் பட்ட பாங்கர் வரும்-கொலோ நம்பி என்று
சொல்லினள் தேவி நிற்ப பதுமுகன் தொழுது சேர்ந்து
நல் அடி பணிந்து நம்பி வந்தனன் அடிகள் என்றான்

#1910
எங்கணான் ஐயன் என்றாட்கு அடியன் யான் அடிகள் என்னா
பொங்கி வில் உமிழ்ந்து மின்னும் புனை மணி கடம் ஆர்ந்த
தங்கு ஒளி தட கை கூப்பி தொழுது அடி தழுவி வீழ்ந்தான்
அங்கு இரண்டு அற்பு முன் நீர் அலை கடல் கலந்தது ஒத்தார்

#1911
திருவடி தொழுது வீழ்ந்த சிறுவனை கண்ட-போழ்தே
வரு பனி சுமந்த வாள் கண் வன முலை பொழிந்த தீம் பால்
முருகு உடை மார்பின் பாய்ந்து முழு மெயும் நனைப்ப மாதர்
வருக என் களிறு என்று ஏத்தி வாங்குபு தழுவிக்கொண்டாள்

#1912
காளை ஆம் பருவம் ஓராள் காதல் மீக்கூர்தலாலே
வாளை ஆம் நெடிய கண்ணாள் மகனை மார்பு ஒடுங்க புல்லி
தாள் ஐயா முன்பு செய்த தவத்தது விளைவு இலாதேன்
தோள் அயா தீர்ந்தது என்றாள் தொழு தகு தெய்வம் அன்னாள்

#1913
வாள் திறல் குருசில் தன்னை வாள் அமரகத்துள் நீத்து
காட்டகத்து உம்மை நீத்த கயத்தியேன் காண வந்தீர்
சேடு இளம் பருதி மார்பின் சீவகசாமியீரே
ஊட்டு அரக்கு உண்ட செந்தாமரை அடி நோவ என்றாள்

#1914
கெடலரும்-குரைய கொற்றம் கெட பிறந்ததுவும் அன்றி
நடலையுள் அடிகள் வைக நட்புடையவர்கள் நைய
இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த துன்ப
கடலகத்து அழுந்த வேண்டா களைக இ கவலை என்றான்

#1915
யான் அலன் ஔவை ஆவாள் சுநந்தையே ஐயற்கு என்றும்
கோன் அலன் தந்தை கந்துக்கடன் என குணத்தின் மிக்க
பால் நிலத்து உறையும் தீம் தேன் அனையவாய் அமிர்தம் ஊற
மான் நலம் கொண்ட நோக்கி மகன் மனம் மகிழ சொன்னாள்

#1916
எனக்கு உயிர் சிறுவன் ஆவான் நந்தனே ஐயன் அல்லை
வனப்பு உடை குமரன் இங்கே வருக என மருங்கு சேர்த்தி
புன கொடி மாலையோடு பூம் குழல் திருத்தி போற்றார்
இனத்து-இடை ஏறு அனானுக்கு இன் அளி விருந்து செய்தாள்

#1917
சிறகரால் பார்ப்பு புல்லி திரு மயில் இருந்ததே போல்
இறைவி தன் சிறுவர்-தம்மை இரு கையினாலும் புல்லி
முறைமுறை குமரர்க்கு எல்லா மொழி அமை முகமன் கூறி
அறுசுவை அமிர்தம் ஊட்டி அறு பகல் கழிந்த பின் நாள்

#1918
மரவம் நாகம் மணம் கமழ் சண்பகம்
குரவம் கோங்கம் குடம் புரை காய் வழை
விரவு பூ பொழில் வேறு இருந்து ஆய் பொருள்
உருவ மாதர் உரைக்கும் இது என்பவே

#1919
நலிவு இல் குன்றொடு காடு உறை நல் பொருள்
புலி அனார் மகள் கோடலும் பூமி மேல்
வலியின் மிக்கவர்-தம் மகள் கோடலும்
நிலை கொள் மன்னர் வழக்கு என நேர்பவே

#1920
நீதியால் அறுத்து அ நிதி ஈட்டுதல்
ஆதி ஆய அரும் பகை நாட்டுதல்
மோதி முள்ளொடு முள் பகை கண்டிடல்
பேது செய்து பிளந்திடல் பெட்டதே

#1921
ஒற்றர்-தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரை கண் என கோடலும்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது-அரோ
கொற்றம் கொள் குறி கொற்றவற்கு என்பவே

#1922
வென்றி ஆக்கலும் மேதகவு ஆக்கலும்
அன்றியும் கல்வியோடு அழகு ஆக்கலும்
குன்றினார்களை குன்று என ஆக்கலும்
பொன் துஞ்சு ஆகத்தினாய் பொருள் செய்யுமே

#1923
பொன்னின் ஆகும் பொரு படை அ படை
தன்னின் ஆகும் தரணி தரணியின்
பின்னை ஆகும் பெரும் பொருள் அ பொருள்
துன்னும்-காலை துன்னாதன இல்லையே

#1924
நிலத்தின் நீங்கி நிதியினும் தேய்ந்து நல்
குலத்தின் குன்றிய கொள்கையம் அல்லதூஉம்
கலைக்கணாளரும் இங்கு இல்லை காளை நீ
வலித்தது என் என வள்ளலும் கூறுவான்

#1925
எரியொடு நிகர்க்கும் ஆற்றல் இடி குரல் சிங்கம் ஆங்கு ஓர்
நரியொடு பொருவது என்றால் சூழ்ச்சி நல் துணையொடு என் ஆம்
பரிவொடு கவல வேண்டா பாம்பு அவன் கலுழன் ஆகும்
சொரி மது சுரும்பு உண் கண்ணி சூழ் கழல் நந்தன் என்றான்

#1926
கெலுழனோ நந்தன் என்னா கிளர் ஒளி வனப்பினானை
கலுழ தன் கையால் தீண்டி காதலின் களித்து நோக்கி
வலி கெழு வயிர தூண் போல் திரண்டு நீண்டு அமைந்த திண் தோள்
கலி கெழு நிலத்தை காவாது ஒழியுமோ காளைக்கு என்றாள்

#1927
இடத்தொடு பொழுதும் நாடி எ வினை-கண்ணும் அஞ்சார்
மடப்படல் இன்றி சூழும் மதி வல்லார்க்கு அரியது உண்டோ
கடத்து-இடை காக்கை ஒன்றே ஆயிரம் கோடி கூகை
இடத்து-இடை அழுங்க சென்று ஆங்கு இன்னுயிர் செகுத்தது அன்றே

#1928
இழை பொறை ஆற்றகில்லாது இட்டிடை தளர நின்ற
குழை நிற முகத்தினார் போல் குறித்ததே துணிந்து செய்யார்
முழை உறை சிங்கம் பொங்கி முழங்கி மேல் பாய்ந்து மை தோய்
வழை உறை வனத்து வன்கண் நரி வலைப்பட்டது அன்றே

#1929
ஊழி-வாய் தீயொடு ஒப்பான் பதுமுகன் உரைக்கும் ஒன்னார்
ஆழி-வாய் துஞ்ச மற்று எம் ஆற்றலால் நெருங்கி வென்று
மாழை நீள் நிதியம் துஞ்சும் மா நில கிழமை எய்தும்
பாழியால் பிறரை வேண்டேம் பணிப்பதே பாணி என்றான்

#1930
பொருவரும்-குரைய மைந்தர் பொம்மென உரறி மற்று இ
திரு இருந்து அகன்ற மார்பன் சேவடி சேர்ந்த யாங்கள்
எரி இருந்து அயரும் நீர்மை இரும் கதிர் ஏற்ற தெவ்வர்
வரு பனி இருளும் ஆக மதிக்க எம் அடிகள் என்றார்

#1931
கார் தோன்றவே மலரும் முல்லை கமலம் வெய்யோன்
தேர் தோன்றவே மலரும் செம்மல் நின் மாமன் மற்று உன்
சீர் தோன்றவே மலரும் சென்று அவன் சொல்லினோடே
பார் தோன்ற நின்ற பகையை செறல்-பாலை என்றாள்

#1932
நன்று அ பொருளே வலித்தேன் மற்று அடிகள் நாளை
சென்று அ பதியுள் எமர்க்கே எனது உண்மை காட்டி
அன்றை பகலே அடியேன் வந்து அடைவல் நீமே
வென்றி களிற்றானுழை செல்வது வேண்டும் என்றான்

#1933
வேல் தைவந்து அன்ன நுதி வெம் பரல் கானம் முன்னி
நூற்றைவரோடு நடந்தாள் நுதி வல் வில் மைந்தன்
காற்றில் பரிக்கும் கலிமான் மிசை காவல் ஓம்பி
ஆற்றற்கு அமைந்த படையோடு அதர் முன்னினானே

#1934
மன்றற்கு இடனாம் மணி மால் வரை மார்பன் வான் கண்
நின்று எ திசையும் அருவி புனல் நீத்தம் ஓவா
குன்றும் குளிர் நீர் தடம் சூழ்ந்தன கோல யாறும்
சென்று அ பழனம் படப்பை புனல் நாடு சேர்ந்தான்

#1935
காவின் மேல் கடி மலர் தெகிழ்ந்த நாற்றமும்
வாவியுள் இன மலர் உயிர்த்த வாசமும்
பூ விரி கோதையர் புனைந்த சாந்தமும்
ஏவலாற்கு எதிரெதிர் விருந்து செய்தவே

#1936
கரும்பின் மேல் தொடுத்த தேன் கலி கொள் தாமரை
சுரும்பின் வாய் துளித்தலின் துவைத்த வண்டொடு
திருந்தி யாழ் முரல்வது ஓர் தெய்வ பூம் பொழில்
பொருந்தினான் புனை மணி பொன் செய் பூணினான்

#1937
பொறை விலங்கு உயிர்த்தன பொன் செய் மா மணி
செறி கழல் இளைஞரும் செல்லல் நீங்கினார்
நறை விரி கோதையர் நாமவேலினாற்கு
அறுசுவை நால் வகை அமுதம் ஆக்கினார்

#1938
கட்டியின் அரிசியும் புழுக்கும் காணமும்
புட்டில்-வாய் செறித்தனர் புரவிக்கு அல்லவும்
நெட்டு இரும் கரும்பொடு செந்நெல் மேய்ந்து நீர்
பட்டன வள நிழல் பரிவு தீர்ந்தவே

#1939
குழி மது குவளை அம் கண்ணி வார் குழல்
பிழி மது கோதையர் பேண இன் அமுது
அழி மத களிறு அனான் அயின்ற பின்னரே
கழி மலர் விழித்த கண் கமலம் பட்டவே

#1940
எரி மணி இமைத்தன எழுந்த தீ புகை
புரி நரம்பு இரங்கின புகன்ற தீம் குழல்
திரு மணி முழவமும் செம்பொன் பாண்டிலும்
அரு மணியின் குரல் அரவம் செய்தவே

#1941
தெளித்த இன் முறுவல் அம் பவளம் செற்றவாய்
களி கயல் மழை கணார் காமம் காழ் கொளீஇ
விளித்த இன் அமிர்து உறழ் கீதம் வேனலான்
அளித்த பின் அமளி அம் சேக்கை எய்தினான்

#1942
தீம் கரும்பு அனுக்கிய திருந்து தோள்களும்
வீங்கு எழில் தோள்களும் மிடைந்து வெம் முலை
பூ குளிர் தாரொடு பொருது பொன் உக
ஈங்கனம் கனை இருள் எல்லை நீந்தினான்

#1943
கனை கதிர் கடவுள் கண் விழித்த-காலையே
நனை மலர் தாமரை நக்க வண் கையால்
புனை கதிர் திருமுகம் கழுவி பூ மழை
முனைவனுக்கு இறைஞ்சினான் முருகவேள் அனான்

#1944
நாள்கடன் கழித்த பின் நாமவேலினான்
வாள் கடி எழில் நகர் வண்மை கணிய
தோள் பொலி மணி வளை தொய்யின் மாதரார்
வேட்பது ஓர் வடிவொடு விரைவின் எய்தினான்

#1945
அலத்தக கொழும் களி இழுக்கி அம் சொலார்
புலத்தலின் களைந்த பூண் இடறி பொன் இதழ்
நிலத்து உகும் மாலை கால் தொடர்ந்து நீள் நகர்
செல குறைபடாதது ஓர் செல்வம் மிக்கதே

#1946
கத்திகை கழுநீர் கமழ் கோதையர்
பத்தியிற்படு சாந்து அணி வெம் முலை
சித்தியில் படர் சிந்தையினாரையும்
இ திசை படர்வித்திடு நீரவே

#1947
வஞ்சி வாட்டிய வாள் மின் நுசுப்பினார்
பஞ்சி ஊட்டிய பாடக சீறடி
குஞ்சி சூட்டிய மைந்தர் குழாம் அலால்
இஞ்சி வட்டம் இடம் பிறிது இல்லையே

#1948
மின்னின் நீள் கடம்பின் நெடுவேள்-கொலோ
மன்னும் ஐ கணை வார் சிலை மைந்தனோ
என்னனோ அறியோம் உரையீர் எனா
பொன் அம் கொம்பு அனையார் புலம்பு எய்தினார்

#1949
விண்ணகத்து இளையான் அன்ன மெய்ப்பொறி
அண்ணலை கழி மீன் கவர் புள் என
வண்ண ஆர் குழல் ஏழையர் வாள் நெடும்
கண் எலாம் கவர்ந்து உண்டிடுகின்றவே

#1950
புலா தலை திகழும் வை வேல் பூ கழல் காலினானை
நிலா தலை திகழும் பைம் பூண் நிழல் மணி வடத்தோடு ஏந்தி
குலாய் தலை கிடந்து மின்னும் குவி முலை பாய வெய்தாய்
கலாய் தொலை பருகுவார் போல் கன்னியர் துவன்றினாரே

#1951
வேல் நெடும் கண்கள் அம்பா வில் படை சாற்றி எங்கும்
தேன் நெடும் கோதை நல்லார் மைந்தனை தெருவில் எய்ய
மான் நெடு மழை கண் நோக்கி வானவர் மகளும் ஒப்பாள்
பால் நெடும் தீம் சொலாள் ஓர் பாவை பந்து ஆடுகின்றாள்

#1952
குழல் மலிந்த கோதை மாலை பொங்க வெம் கதிர் முலை
நிழல் மலிந்த நேர் வடம் நிழல் பட புடைத்தர
எழில் மணி குழை வில் வீச இன் பொன் ஓலை மின் செய
அழல் மணி கலாபம் அம் சிலம்பொடு ஆர்ப்ப ஆடுமே

#1953
அங்கை அம் தலத்து அகத்த ஐந்து பந்து அமர்ந்தவை
மங்கை ஆட மாலை சூழும் வண்டு போல வந்து உடன்
பொங்கி மீது எழுந்து போய் பிறழ்ந்து பாய்தல் இன்றியே
செம் கயல் கண் புருவம் தம்முள் உருவம் செய்ய திரியுமே

#1954
மாலையுள் கரந்த பந்து வந்து கை தலத்தவாம்
ஏலம் நாறு இரும் குழல் புறத்த வாள் முகத்தவாம்
நூலின் நேர் நுசுப்பு நோவ உச்சி மாலை உள்ளவாம்
மேல் எழுந்த மீ நிலத்த விரல கைய ஆகுமே

#1955
கொண்டு நீங்கல் கோதை வேய்தல் குங்குமம் அணிந்து உராய்
எண் திசையும் ஏணி ஏற்று இலங்க நிற்றல் பத்தியின்
மண்டிலம் வர புடைத்தல் மயிலின் பொங்கி இன்னணம்
வண்டும் தேனும் பாட மாதர் பந்து மைந்துற்று ஆடுமே

#1956
பந்து மைந்துற்று ஆடுவாள் பணை முலையின் குங்குமம்
சுந்தர பொடி தெளித்த செம்பொன் சுண்ணம் வாள் நுதல்
தந்து சுட்டி இட்ட சாந்தம் வேரின் வார்ந்து இடை முலை
இந்திர திருவில் நெக்கு உருகி என்ன வீழ்ந்தவே

#1957
நல் மணி சிலம்பினோடு கிண்கிணி நக நகும்
மின் மலர்ந்த முல்லை மாலை நக்கி மிக்கு இறந்து எழுந்து
பொன் மலர்ந்த கோதை பந்து பொங்கி ஒன்று போந்து பாய்ந்து
மின் மலர்ந்த வேலினான் முன் வீதி புக்கு வீழ்ந்ததே

#1958
வீழ்ந்த பந்தின் மேல் விரைந்து மின்னின் நுண் நுசுப்பினாள்
சூழ்ந்த காசு தோன்ற அம் துகில் நெகிழ்ந்து பூம் குழல்
தாழ்ந்து கோதை பொங்கி வீழ்ந்து வெம் முலைகள் தைவர
போழ்ந்து அகன்ற கண்ணி வந்து பூம் கொடியின் நோக்கினாள்

#1959
மந்தார மலை மலர் வேய்ந்து மகிழ்ந்து தீம் தேன்
கந்தாரம் செய்து களி வண்டு முரன்று பாட
பந்து ஆர்வம் செய்து குவளை கண் பரப்பி நின்றாள்
செந்தாமரை மேல் திருவின் உரு எய்தி நின்றாள்

#1960
நீர் தங்கு திங்கள் மணி நீள் நிலம் தன்னுள் ஓங்கி
சீர் தங்கு கங்கை திரு நீர் தண் துவலை மாந்தி
கார் தங்கி நின்ற கொடி காளையை காண்டலோடு
பீர் தங்கி பெய்யா மலரின் பிறிது ஆயினாளே

#1961
பெண்பாலவர்கட்கு அணியாய் பிரியாத நாணும்
திண்-பால் நிறையும் திரு மாமையும் சேர்ந்த சாயல்
கண்-பால் கவினும் வளையும் கவர்ந்திட்ட கள்வன்
மண்-பால் இழிந்த மலர் ஐ கணை மைந்தன் என்றாள்

#1962
என்றாள் நினைந்தாள் இது போலும் இ வேட்கை வண்ணம்
சென்றே படினும் சிறந்தார்க்கும் உரைக்கலாவது
அன்றாய் அரிதாய் அகத்தே சுட்டு உருக்கும் வெம் தீ
ஒன்றே உலகத்து உறு நோய் மருந்து இல்லது என்றாள்

#1963
நிறை யாதும் இல்லை நெருப்பின் சுடும் காமம் உண்டேல்
குறையா நிறையின் ஒரு குன்றியும் காமம் இல்லை
பறையாய் அறையும் பசப்பு என்று பகர்ந்து வாடி
அறைவாய் கடல் போல் அகன் காமம் அலைப்ப நின்றாள்

#1964
நெஞ்சம் கலங்கி நிறை ஆற்றுப்படுத்து நின்றாள்
அம் செம் கழுநீர் அலர்ந்த மதி வாள் முகத்தே
வஞ்சம் வழங்காதவன் கண்களின் நோக்க-மாதோ
தஞ்சம் வழங்கி தலைக்கொண்டது காம வெம் தீ

#1965
பூ உண்ட கண்ணாள் புருவ சிலை கோலி எய்ய
ஏ உண்ட நெஞ்சிற்கு இடு புண் மருந்து என்-கொல் என்னா
மா உண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கி
கோ உண்ட வேலான் குழைந்து ஆற்றலன் ஆயினானே

#1966
காம கடு நோய் கனல் சூழ்ந்து உடம்பு என்னும் மற்று இ
ஈமத்தினோடும் உடனே சுட ஏகல் ஆற்றான்
தூமத்தின் ஆர்ந்த துகில் ஏந்திய அல்குல் தாதை
பூ மொய்த்திருந்த கடை மேல் புலம்புற்று இருந்தான்

#1967
நாவி நோய் செய்த நறும் குழலாள் நாண் நீல
காவி நோய் செய்த கரும் கயல் கண் பூம் கொடி என்
ஆவி நோய் செய்த அணங்கு என்று அறியாதேன்
மேவி நோய் தீர வினா தருவார் இல்லையே

#1968
தெள் நீர் பனி கயத்து மட்டு அவிழ்ந்த தேன் குவளை
கண் நீர்மை காட்டி கடல் போல் அகன்ற என்
உள் நீர்மை எல்லாம் ஒரு நோக்கினின் கவர்ந்த
பெண் நீர்மை மேல் நாள் பிறந்தும் அறியுமோ

#1969
கரும் குழலும் செ வாயும் கண் மலரும் காதும்
அரும்பு ஒழுகு பூண் முலையும் ஆருயிர்க்கே கூற்றம்
விருந்தினராய் வந்தாரை வெற்று உடலாம் நோக்கும்
பெரும் திருவி யார் மகள்-கொல் பேர் யாதாம்-கொல்லோ

#1970
வார் உடுத்த வெம் முலைய வண்டு ஆர் பூ கோதையை
பேர் கொடுத்தார் பெண் என்றார் கூற்றமே என்றிட்டால்
தார் உடுத்த நீள் மார்பர் தம் உயிர்-தாம் வேண்டுபவேல்
நீர் உடுத்த இ நகரை நீத்திட்டு ஒழியாரோ

#1971
பைம் கண் மணி மகர குண்டலமும் பைம் தோடும்
திங்கள் முகத்து இலங்க செ வாய் எயிறு இலங்க
கொங்கு உண் குழல் தாழ கோட்டு எருத்தம் செய்த நோக்கு
எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே

#1972
வாள் ஆர் மதி முகத்த வாளோ வடு பிளவோ
தாள் ஆர் கழுநீரோ நீலமோ தாமரையோ
நீள் வேலோ அம்போ கயலோ நெடும் கண்ணோ
கோள் ஆர்ந்த கூற்றமோ கொல்வான் தொடங்கினவே

#1973
என்றாம்-கொல் மாதர் நலம் எய்துவது என்று சிந்தித்து
ஒன்றார் கடந்தான் புலம்பு உட்கொண்டு இருத்தலோடும்
அன்றே அமைந்த பசும்பொன் அடர் ஆறு கோடி
குன்றாமல் விற்றான் குளிர் சாகரதத்தன் என்பான்

#1974
திரு மல்க வந்த திருவே என சேர்ந்து நாய்கன்
செரு மல்கு வேலாய்க்கு இடமால் இது என்று செப்ப
வரி மல்கி வண்டு உண்டு அறை மா மலர் கண்ணி மைந்தன்
எரி மல்கு செம்பொன் இலம் மாமனொடு ஏறினானே

#1975
நம்பன் சிறிதே இடைதந்து இது கேட்க நாளும்
அம் பொன் நகருள் அமைந்தேன் மற்று எனக்கு அமைந்தாள்
கம்பம் இலாதாள் கமலைக்கு விமலை என்பாள்
செம்பொன் வியக்கும் நிறத்தாள் திரு அன்ன நீராள்

#1976
பூம் பாவை வந்து பிறந்தாள் அ பிறந்த-போழ்தே
ஆம் பால எல்லாம் அறிவார் அன்று எழுதியிட்டார்
தூம்பு யாதும் இல்லா குளம் போன்றது என் தோம் இல் பண்டம்
கூம்பாத செல்வ கொடியே இது கேண்மோ என்றான்

#1977
மங்கைக்கு உரியான் கடை ஏறும் வந்து ஏறலோடும்
வங்கம் நிதியம் உடன் வீழும் மற்று அன்றி வீழா
எங்கும் தனக்கு நிகர் இல்லவன் ஏற்ற மார்பம்
நங்கைக்கு இயன்ற நறும் பூ அணை பள்ளி என்றான்

#1978
ஏழு ஆண்டின் மேலும் இரண்டு ஆண்டு இரண்டு எய்தி நின்றாள்
வீழா நிதியும் உடன் வீழ்ந்தது வில் வலாய்க்கே
ஊழாயிற்று ஒல்கும் நுசுப்பு அஃக உருத்து வீங்கி
சூழ் ஆரம் வைத்த முலையாள் நலம் சூழ்க என்றான்

#1979
ஏற்ற கை தொடி வீழ்ந்து என ஏந்தலை
தேற்றினான் திரு மா நலம் செவ்வனே
தோற்ற மாதரும் தோன்றலை காண்டலும்
ஆற்றினாள் தனது ஆவியும் தாங்கினாள்

#1980
அம் பொன் கொம்பு அனையாளையும் வார் கழல்
செம்பொன் குன்று அனையானையும் சீர் பெற
பைம்பொன் நீள் நகர் பல்லியம் ஆர்த்து எழ
இம்பர் இல்லது ஓர் இன்பம் இயற்றினார்

#1981
கட்டில் ஏறிய காமரு காளையும்
மட்டு வாய் அவிழ் மா மலர் கோதையும்
விட்டு நீங்குதல் இன்மையின் வீவு இலார்
ஒட்டி ஈர் உடம்பு ஓர் உயிர் ஆயினார்

#1982
நிலவு வெண் கதிர் நீர்மைய பூம் துகில்
கலவம் கண் புதையாது கனற்றலின்
உலகம் மூன்றும் உறு விலைத்து என்பவே
புலவு வேல் கண்ணினாள் முலை போகமே

#1983
தேன் அவாம் கமழ் கண்ணியும் தெவ்வர்-தம்
ஊன் அவாம் கதிர் வேலுறு காளையும்
கான் அவாம் கடி நாறும் மென் பள்ளி மேல்
வான் அவாம் வகையால் வைகினார்களே

#1984
வெண் மதி நெற்றி தேய்த்து விழு தழும்பு இருப்ப நீண்ட
அண்ணல் நன் மாடத்து அங்கண் அகில் புகை அமளி ஏறி
பண் அமை மகர வீணை நரம்பு உரீஇ பாவை பாட
மண் அமை முழவு தோளான் மகிழ்ச்சியுள் மயங்கினானே

#1985
இன் அரி சிலம்பொடு ஏங்கி கிண்கிணி இகலி ஆர்ப்ப
பொன் அரி மாலை தாழ பூ சிகை அவிழ்ந்து சோர
மின் இரும் கலாபம் வீங்கி மிளிர்ந்து கண் இரங்க வெம்பி
துன்னரும் களி கொள் காம கொழும் கனி சுவைத்து விள்ளான்

#1986
தொழித்து வண்டு இமிரும் கோதை துணை முலை மூள்க பூம் பட்டு
அழித்து மட்டு ஒழுகும் தாரான் மணி வள்ளத்து ஆய்ந்த தேறல்
எழில் பொலி மாதர்க்கு ஏந்த இனிதினின் நுகர்ந்து காம
கொழித்து இரை கடலுள் மூழ்கி கோதை கண் துயின்ற அன்றே

#1987
பாசிலை சுருட்டி மைந்தன் கொடுக்கிய பரந்து மின்னும்
தூசு உலாம் அல்குல் தீண்ட துயில் கண்கள் விழித்த தோற்றம்
வாச வான் குவளை மெல்ல வாய்விடா நின்றது ஒக்கும்
ஏசுவது ஒன்றும் இல்லா இணை வட முலையினாட்கே

#1988
கங்குல்-பால் புகுந்த கள்வன் இவன் என கதுப்பில் தாழ்ந்த
தொங்கலான் முன்கை யாத்து சொல்லு நீ வந்தது என்ன
நங்கை யான் பசித்து வந்தேன் எ பொருள் நயப்பது என்றாட்கு
அம் கலுழ் மேனியாய் நின் அணி நல அமிழ்தம் என்றான்

#1989
செயிர்த்தவள் சிவந்து நோக்கி சீறடி சென்னி சேர்த்தி
அயிர்ப்பது என் பணி செய்வேனுக்கு அருளிற்று பொருள் அது என்ன
உயிர்ப்பதும் ஓம்பி ஒன்றும் உரையலை ஆகி மற்று இ
பயிர்ப்பு இல் பூம் பள்ளி வைகு பகட்டு எழில் மார்ப என்றாள்

#1990
உள் இழுது உடைய வெம்பி உற்பல உருவு கொண்ட
வெள்ளியின் புனைந்த கோல விளக்கு ஒளி வெறுவிது ஆக
வள் இதழ் கோதை வல்லான் வட்டிகை நுதியின் வாங்கி
பள்ளி மேல் எழுதப்பட்ட பாவை போல் ஆயினாளே

#1991
மங்கையர் பண்ணிய மருத யாழ் குழல்
நங்கையை பிரியும் இ நம்பி இன்று என
அங்கு அதற்கு இரங்கின ஆரும் பேதுற
கங்குல் போய் நாள்கடன் கழிந்தது என்பவே

#1992
ஏந்து பூ கோதைகள் திருத்தி ஏர்பட
சாந்து கொண்டு இள முலை எழுதி தையல் தன்
காந்தள் அம் முகிழ் விரல் கையினால் பிடித்து
ஆய்ந்து அவட்கு இது சொலும் அலங்கல் வேலினான்

#1993
பூவினுள் தாழ் குழல் பொன் செய் ஏந்து அல்குல்
மாவினுள் தாழ் தளிர் மருட்டும் மேனியாய்
காவினுள் தோழரை கண்டு போதர்வேன்
ஏவினுள் தாழ் சிலை எறிந்த கோலினே

#1994
என்று அவன் உரைத்தலும் எழுது கண் மலர்
நின்ற நீர்-இடை மணிப்பாவை நீந்தலின்
மன்றல் நாறு அரிவையை தெருட்டி மா மணி
குன்று அனான் கொடியவள் குழைய ஏகினான்
@9 சுரமஞ்சரியார் இலம்பகம்

#1995
வாள் இரண்டு மாறுவைத்த போல் மழை கண் மாதரார்
நாள் இரண்டு சென்ற என்று நைய மொய்கொள் காவினுள்
தோள் இரண்டும் அன்ன தோழர் தோன்றலை புணர்ந்த பின்
தாள் இரண்டும் ஏத்தி நின்று தையல் நாமம் வேண்டினார்

#1996
பாடு வண்டு இருந்த அன்ன பல் கலை அகல் அல்குல்
வீடு பெற்றவரும் வீழும் வெம் முலை விமலை என்று
ஆடுவான் அணிந்த சீர் அரம்பை அன்ன வாள்_நுதல்
ஊடினும் புணர்ந்தது ஒத்து இனியவள் உளாள்-அரோ

#1997
அம்பு ஒர் ஐந்து உடைய காமன் ஐயன் என்ன அந்தணன்
நம்பு நீரர் அல்லர் நன் குரங்கு நீரர்-ஆயினும்
தம் குரவர் தாம் கொடுப்பின் நெஞ்சு நேர்ந்து தாழ்வர் தாம்
பொங்கு அரவ அல்குலார் என புகன்று சொல்லினான்

#1998
அற்றும் அன்று கன்னி அம் மடந்தைமார் அணி நலம்
முற்றினாரை நீடு வைப்பின் மூள்கும் வந்து பாவமும்
குற்றம் மற்றும் ஆகும் என்று கோதை சூழ்ந்து கூறினார்க்கு
உற்று அடுத்து அயா உயிர்த்து ஒழிதல் யார்க்கும் ஒக்குமே

#1999
மது குடம் விரிந்த மாலையாரொடும்
புது கடி பொருந்துதி புக்க ஊர் எலாம்
விதி கிடை காணலாம் வீதி மா நகர்
மதி கிடை முகத்தியோர் மடந்தை ஈண்டையாள்

#2000
ஆடவர் தனது இடத்து அருகு போகினும்
நாடி மற்று அவர் பெயர் நயந்து கேட்பினும்
வீடுவல் உயிர் என வெகுளும் மற்று அவள்
சேடியர் வழிபட செல்லும் செல்வியே

#2001
காமனே செல்லினும் கனன்று காண்கிலாள்
வேம் எனக்கு உடம்பு எனும் வேய் கொள் தோளியை
ஏமுறுத்து அவள் நலம் நுகரின் எந்தையை
யாம் எலாம் அநங்கமாதிலகன் என்றுமே

#2002
தாசியர் முலைகள் தாக்க தளை அவிழ்து உடைந்த தண் தார்
வாசம் கொண்டு இலங்கும் முந்நூல் வலம்பட கிடந்த மார்ப
பேசிய பெயரினாளை பேதுறாது ஒழிவேன்-ஆகில்
ஆசும் அன்பு இலாத புன் பெண் கூந்தல் யான் அணைவல் என்றான்

#2003
வண்டு தேன் சிலை கொள் நாணா மா தளிர் மலர்கள் அம்பா
கொண்டவன் கோட்டம் தன்னுள் கொடியினை கொணர்ந்து நீலம்
உண்டது காற்றி ஆண் பேர் ஊட்டுவல் உருவ காமன்
கண்ட பொன் படிவம் சார்ந்து கரந்து இரு நாளை என்றான்

#2004
இழை-கண் வெம் முலை இட்டு இடை ஏந்து அல்குல்
மழை கண் மாதரை மாலுறு நோய்செய்வான்
முழை-கண் வாள் அரி ஏறு அன மொய்ம்பினான்
உழை கணாளர்க்கு உரைத்து எழுந்தான்-அரோ

#2005
சோரும் காரிகையாள் சுரமஞ்சரி
ஆரம் சூடிய அம் முலை பூம் தடம்
தாரும் மார்பமும் தண்ணென தோய்வதற்கு
ஓரும் உள்ளம் உடன்று எழுகின்றதே

#2006
கடைந்த பொன் செப்பு என கதிர்த்து வீங்கின
வடம் சுமந்து எழுந்தன மா கண் வெம் முலை
மடந்தை-தன் முகத்த என் மனத்தின் உள்ளன
குடங்கையின் நெடியன குவளை உண்கணே

#2007
ஏத்தரும் மல்லிகை மாலை ஏந்திய
பூ தலை கரும் குழல் புரியினால் புறம்
யாத்து வைத்து அலைக்கும் இ அருள் இலாள் நலம்
காய்த்தி என் மனத்தினை கலக்குகின்றதே

#2008
சில் அரி கிண்கிணி சிலம்பும் சீறடி
செல்வி-தன் திரு நலம் சேரும் வாயில் தான்
அல்லல் அம் கிழவன் ஓர் அந்தணாளனாய்
செல்லல் யான் தெளிதகவு உடைத்து என்று எண்ணினான்

#2009
அணங்கு அரவு உரித்த தோல் அனைய மேனியன்
வணங்கு நோன் சிலை என வளைந்த யாக்கையன்
பிணங்கும் நூல் மார்பினன் பெரிது ஓர் பொத்தகம்
உணர்ந்து மூப்பு எழுதினது ஒப்ப தோன்றினான்

#2010
வெண் நரை உடம்பினன் விதிர்த்த புள்ளியன்
நுண் நவிர் அறுவையன் நொசிந்த நோக்கினன்
கண் நவிர் குடையினன் கைத்தண்டு ஊன்றினன்
பெண் நலம் காதலின் பேயும் ஆயினான்

#2011
யாப்பு உடை யாழ் மிடறு என்னும் தோட்டியால்
தூப்பு உடையவள் நலம் தொடக்கும் பாகனாய்
மூப்பு எனும் முகபடாம் புதைந்து முற்று_இழை
காப்பு உடை வள நகர் காளை எய்தினான்

#2012
தண்டு வலியாக நனி தாழ்ந்து தளர்ந்து ஏங்கி
கண்டு கடை காவலர்கள் கழற முகம் நோக்கி
பண்டை இளம்-கால் உவப்பன் பாலடிசில் இ நாள்
கண்டு நயந்தார் தருவ காதலிப்பன் என்றான்

#2013
கையின் தொழுதார் கழிய மூப்பின் செவி கேளார்
மையலவர் போல மனம் பிறந்த வகை சொன்னார்
பைய நடக்க என்று பசிக்கு இரங்கி அவர் விடுத்தார்
தொய்யில் முலையவர்கள் கடை தோன்றல் நனி புக்கான்

#2014
கோதையொடு தாழ்ந்து குழல் பொங்கி ஞிமிறு ஆர்ப்ப
ஓத மணி மாலையொடு பூண் பிறழ ஓடி
ஏதம் இது போ-மின் என என்னும் உரை ஈயான்
ஊத உகு தன்மையினொடு ஒல்கியுற நின்றான்

#2015
கச்சு விசித்து யாத்த கதிர் முலையர் மணி அயில் வாள்
நச்சு நுனை அம்பு சிலை நடுங்க உடன் ஏந்தி
அச்சமுறுத்து அமுது புளித்த ஆங்கு தம தீம் சொல்
வெச்சென்றிட சொல்லி விரி கோதையவர் சூழ்ந்தார்

#2016
பாவம் இது நோவ உரையன்-மின் முது பார்ப்பார்
சாவர் தொடினே கடிது கண்ட வகை வண்ணம்
ஓவியர்-தம் பாவையினொடு ஒப்பு அரிய நங்கை
ஏவல் வகை கண்டு அறிதும் என்று சிலர் சொன்னார்

#2017
கைய வளை மைய குழல் ஐ அரிய வாள் கண்
நையும் இடை வெய்ய முலை நங்கை ஒரு பார்ப்பான்
உய்வது இலன் ஊழின் முது மூப்பினொடும் வந்தான்
செய்வது உரை நொய்தின் என சேறும் எழுக என்றாள்

#2018
மாலை பல தாழ்ந்து மது பிலிற்றி மணம் கமழும்
கோல அகில் தேய்வை கொழும் சாந்தம் முலை மெழுகி
பாலை மணி யாழ் மழலை பசும்பொன் நிலத்து இழிவாள்
சோலை வரை மேல் இழியும் தோகை மயில் ஒத்தாள்

#2019
சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப
வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்ற
சேறுபடு கோதை மிசை வண்டு திசை பாட
நாறு மலர் கொம்பர் நடை கற்பது என வந்தாள்

#2020
வந்த வரவு என்னை என வாள் கண் மடவாய் கேள்
சிந்தை நலிகின்ற திரு நீர் குமரி ஆட
வந்தில் அதின் ஆய பயன் என்னை மொழிக என்றாள்
முந்தி நலிகின்ற முது மூப்பு ஒழியும் என்றான்

#2021
நறவு இரிய நாறு குழலாள் பெரிது நக்கு
பிறரும் உளரோ பெறுநர் பேணி மொழிக என்ன
துறை அறிந்து சேர்ந்து தொழுது ஆடுநர் இல் என்றாற்கு
அறிதிர் பிற நீவிர் என ஐயம் இலை என்றான்

#2022
செத்த மரம் மொய்த்த மழையால் பெயரும் என்பார்
பித்தர் இவர் உற்ற பிணி தீர்த்தும் என எண்ணி
அத்தம் என மிக்க சுடர் அம் கதிர் சுருக்கும்
மொய்த்த மணி மாட மிசை அத்தக அடைந்தாள்

#2023
வடிவம் இது மூப்பு அளிது வார் பவள வல்லி
கடிகை துவர் வாய் கமலம் கண்ணொடு அடி வண்ணம்
கொடிது பசிகூர்ந்து உளது கோல் வளையினீரே
அடிசில் கடிது ஆக்கி இவணே கொணர்-மின் என்றாள்

#2024
நானம் உரைத்து ஆங்கு நறு நீர் அவனை ஆட்டி
மேனி கிளர் வெண் துகிலும் விழு பொன் இயல் நூலும்
பால் நலம் கொள் தீம் கிளவி பவித்திரமும் நல்க
தான் அமர்ந்து தாங்கி அமை தவிசின் மிசை இருந்தான்

#2025
திங்கள் நலம் சூழ்ந்த திரு மீன்கள் என செம்பொன்
பொங்கு கதிர் மின்னு புகழ் கலங்கள் பல பரப்பி
இங்கு சுவை இன் அமுதம் ஏந்த மிகு சான்றோன்
எங்கும் இலை இன்ன சுவை என்று உடன் அயின்றான்

#2026
தமிழ் தழிய சாயலவர் தங்கு மலர் தூ நீர்
உமிழ் கரகம் ஏந்த உரவோன் அமர்ந்து பூசி
அமிழ்து அனைய பஞ்ச முக வாசம் அமைத்து ஆய்ந்த
கமழ் திரையும் காட்ட அவை கண்டு கவுள் அடுத்தான்

#2027
வல்லது எனை என்ன மறை வல்லன் மடவாய் யான்
எல்லை எவன் என்ன பொருள் எய்தி முடி-காறும்
சொல்லு-மினும் நீவிர் கற்ற காலம் என தேன் சோர்
சில்லென் கிளி கிளவி அது சிந்தையிலன் என்றான்

#2028
இன்னவர்கள் இல்லை நிலத்து என்று வியந்து ஏத்தி
அன்னம் அன மெல் நடையினாள் அமர்ந்து நோக்க
பின்னை இவள் போகுதிறம் பேசும் என எண்ணி
தன்னம் சிறிதே துயின்று தாழ அவள் நக்காள்

#2029
கோல மணி வாய் குவளை வாள் கண் மடவாளை
சால முது மூப்பு உடைய சாமி முகம் நோக்கி
காலும் மிக நோம் சிறிது கண்ணும் துயில்குற்றேன்
ஏலம் கமழ் கோதை இதற்கு என் செய்கு உரை என்றான்

#2030
மட்டு விரி கோதை மது வார் குழலினாள் தன்
பட்டு நிணர் கட்டில் பரிவு இன்றி உரைக என்றாள்
இட்ட அணை மேல் இனிது மெல்லென அசைந்தான்
கட்டு அழல் செய் காம கடலை கடையலுற்றான்

#2031
காலையொடு தாழ்ந்து கதிர் பட்டது கலங்கி
மாலையொடு வந்து மதி தோன்ற மகிழ் தோன்றி
வேல் அனைய கண்ணியர் தம் வீழ் துணைவர் திண் தோள்
கோல முலையால் எழுதக்கூடியதை அன்றே

#2032
ஏந்து மலர் சேக்கை அகில் வளர்த்த இடு புகையும்
ஆய்ந்த மலர் கோதை அமிர்து உயிர்க்கும் நறும் புகையும்
கூந்தல் அகில் புகையும் துகில் கொழும் மென் நறும் புகையும்
வாய்ந்த வரை மழையின் உயர் மாடத்து எழுந்தனவே

#2033
ஆசு இல் அடு பால் அமிர்தம் சிறிய அயின்று அம் பூம்
காசு இல் கடி மாலை கலம் நொய்ய மதி கவற்கும்
தூசு நறும் சாந்து இனிய தோடு இவைகள் தாங்கி
மாசு இல் மடவார்கள் மணி வீணை நரம்பு உளர்ந்தார்

#2034
பூம் சதங்கை மாலை புகழ் குஞ்சி பொரு இல்லார்
வீங்கு திரள் தோளும் தட மார்பும் விரை மெழுகி
தீம் கரும்பு மென்று அனைய இன் பவள செ வாய்
தேன் கொள் அமிர்து ஆர்ந்து செழும் தார் குழைய சேர்ந்தார்

#2035
பொன் அறையுள் இன் அமளி பூ அணையின் மேலான்
முன்னிய தன் மன்றலது முந்துற முடிப்பான்
மன்னும் ஒரு கீத மதுரம்பட முரன்றாற்கு
இன் அமிர்தமாக இளையாரும் அது கேட்டார்

#2036
மன்மதன் மணி குரல் மருட்டும் என்று மால் கொள்வார்
இன்னது இன்று இயக்கரின் இயக்க வந்தது என்று தம்
பின்னும் முன்னும் நோக்குவார் பேது சால எய்துவார்
கன்னி தன் மனத்து இழைத்த காளை நாமம் வாழ்த்துவார்

#2037
கொம்பின் ஒத்து ஒதுங்கியும் குழங்கல் மாலை தாங்கியும்
அம்பின் ஒத்த கண்ணினார் அடி கலம் அரற்றவும்
நம்பி தந்த கீதமே நயந்து காண ஓடினார்
வெம்பு வேட்கை வேனிலானின் வேறு அலானும் ஆயினான்

#2038
தாம மாலை வார் குழல் தடம் கணார்க்கு இடம் கழி
காமன் அன்ன காளை தன் கருத்தொடு ஒத்தது ஆகலான்
மா மலர் தெரியலான் மணி மிதற்று-இடை கிடந்த
சாம கீதம் மற்றும் ஒன்று சாமி நன்கு பாடினான்

#2039
கள்ள மூப்பின் அந்தணன் கனிந்த கீத வீதியே
வள்ளி வென்ற நுண் இடை மழை மலர் தடம் கணார்
புள்ளுவம் மதிமகன் புணர்த்த ஓசை மேல் புகன்று
உள்ளம் வைத்த மா மயில் குழாத்தின் ஓடி எய்தினார்

#2040
இனி சிறிது எழுந்து வீங்கி இட்டு இடை கோறும் நாங்கள்
என கொறுகொறுப்ப போலும் இள முலை பரவை அல்குல்
கனி பொறை மலிந்த கமர் கற்பக மணி கொம்பு ஒப்பாள்
பனி பிறை பூணினான் தன் பாண் வலை சென்று பட்டாள்

#2041
அடி கலம் அரற்ற அல்குல் கலை கலந்து ஒலிப்ப வந்து
முடிப்பது என் பெரிதும் மூத்தேன் முற்று இழை அரிவை என்ன
வடி கணாள் நக்கு நாணி தோழியை மறைந்து மின்னு
கொடி குழாத்து-இடை ஓர் கோல குளிர் மணி கொம்பின் நின்றாள்

#2042
இளையவன் காணின்-மன்னோ என் செய்வீர் நீவிர் என்ன
விளை மது கண்ணி மைந்தர் விளிக என தோழி கூற
முளை எயிற்று இவளை யாரும் மொழிந்தனர் இல்லை என்றோ
உளைவது பிறிதும் உண்டோ ஒண் தொடி மாதர்க்கு என்றான்

#2043
வாய்ந்த இ மாதர் சுண்ணம் சீவகன் பழித்த பின்றை
காய்ந்தனள் என்று கூற காளை மற்று இவட்கு தீயான்
மாய்ந்தனன் போலும் என்ன மாதரார் ஒருங்கு வாழ்த்தி
ஆய்ந்தனம் ஐயன் உய்ந்தான் அறிந்தனம் அதனை என்றார்

#2044
காலுற்ற காமவல்லி கொடி என கலங்கி நங்கை
மாலுற்று மயங்க யாங்கண் மட கிளி தூதுவிட்டேம்
சேலுற்ற நெடும் கண் செ வாய் தத்தை-தன் செல்வம் கண்டே
பாலுற்ற பவள செ வாய் தத்தையால் பரிவு தீர்ந்தேம்

#2045
அன்பு ஒட்டி எமக்கு ஓர் கீதம் பாடு-மின் அடித்தியாரும்
முன் பட்டது ஒழிந்து நுங்கள் முகவியர் முனிவு தீர்ந்தார்
பொன் தொட்டேம் யாமும் நும்மை போகொட்டோம் பாடல் கேளாது
என் பட்டுவிடினும் என்றார் இலங்கு பூம் கொம்பொடு ஒப்பார்

#2046
பாடுதும் பாவை பொற்பே பற்றி மற்று எமக்கு நல்கின்
ஆடு அமை தோளினீர் அஃது ஒட்டுமேல் கேள்-மின் என்ன
நாடி யார் பேயை காண்பார் நங்கைகாள் இதுவும் ஆமே
ஆடுவது ஒன்றும் அன்று இ ஆண்மகன் உரைப்பது என்றார்

#2047
பட்டு உலாய் கிடந்த செம்பொன் பவளமோடு இமைக்கும் அல்குல்
ஒட்டினாள் அதனை ஓராது உலம் பொரு தோளினானும்
பட்ட வாள் நுதலினாய்க்கு பாடுவல் காமன் தந்த
தொட்டிமை உடைய வீணை செவி சுவை அமிர்தம் என்றான்

#2048
வயிர வில் உமிழும் பைம் பூண் வன முலை மகளிர்-தம்முள்
உயிர் பெற எழுதப்பட்ட ஓவிய பாவை ஒப்பாள்
செயிர் இல் வாள் முகத்தை நோக்கி தேன் பொதிந்து அமுதம் ஊற
பயிர் இலா நரம்பின் கீதம் பாடிய தொடங்கினானே

#2049
தொடி தோள் வளை நெகிழ தொய்யில் முலை மேல்
வடி கேழ் மலர் நெடும் கண் வார் புயலும் காலும்
வார் புயலும் காலும் வளை நெகிழு நம் திறத்தது
ஆர்வமுறும் நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை

#2050
ஐது ஏந்து அகல் அல்குல் ஆவித்து அழல் உயிரா
கை சோர்ந்து அணல் ஊன்றி கண்ணீர் கவுள் அலைப்ப
கண்ணீர் கவுள் அலைப்ப கையற்று யாம் இனைய
புண் ஈரும் வேலின் புகுந்ததால் மாலை

#2051
அவிழ்து ஏந்து பூங்கோதை ஆகத்து அலர்ந்த
முகிழ்ந்து ஏந்து இள முலை மேல் பொன் பசலை பூப்ப
பொன் பசலை பூப்ப பொரு கயல் கண் முத்து அரும்ப
அன்பு உருகும் நெஞ்சம் அழுங்குவிக்கும் மாலை

#2052
பாடினான் தேவ கீதம் பண்ணினுக்கு அரசன் பாட
சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை ஒத்தார்
ஆடக செம்பொன் பாவை அந்தணன் புகழ்ந்து செம்பொன்
மாடம் புக்கு அநங்கன் பேணி வரம் கொள்வல் நாளை என்றாள்

#2053
மடல் அணி பெண்ணை ஈன்ற மணி மருள் குரும்பை மான
உடல் அணி ஆவி நைய உருத்து எழும் முலையினாளும்
அடல் அணி தோழிமாரும் ஆர்வத்தில் கழும இப்பால்
கடல் அணி திலகம் போல கதிர் திரை முளைத்தது அன்றே

#2054
பொன் இயல் மணியும் தாரும் கண்ணியும் புனைந்து செம்பொன்
மின் இயல் பட்டம் சேர்த்தி ஆன் நெய் பால் வெறுப்ப ஊட்டி
மன் இயல் பாண்டில் பண்ணி மடந்தை கோல் கொள்ள வையம்
இன் இயல் பாவை ஏற்ப தோழியோடு ஏறினாளே

#2055
ஆடவர் இரிய ஏகி அம் சொல்லார் சூழ காமன்
மாடத்துள் இழிந்து மற்று அ வள்ளலை மறைய வைத்து
சூடு அமை மாலை சாந்தம் விளக்கொடு தூபம் ஏந்தி
சேடியர் தொழுது நிற்ப திருமகள் பரவும் அன்றே

#2056
பொன் நிலம் சென்னி புல்ல இட முழந்தாளை ஊன்றி
மின் அவிர் மாலை மென் பூம் குழல் வல தோளில் வீழ
கன்னி அம் கமுகின் கண் போல் கலன் அணி எருத்தம் கோட்டி
தன் இரு கையும் கூப்பி தையல் ஈது உரைக்கும் அன்றே

#2057
தாமரை செம் கண் செ வாய் தமனிய குழையினாய் ஓர்
காமம் இங்கு உடையேன் காளை சீவகன் அகலம் சேர்த்தின்
மா மணி மகரம் அம்பு வண் சிலை கரும்பு மான் தேர்
பூ மலி மார்ப ஈவல் ஊரொடும் பொலிய என்றாள்

#2058
மட்டு அவிழ் கோதை பெற்றாய் மனம் மகிழ் காதலானை
இட்டு இடை நோவ நில்லாது எழுக என ஏந்தல் தோழன்
பட்டிமை உரைத்தது ஓராள் பரவிய தெய்வந்தான் வாய்விட்டு
உரைத்திட்டது என்றே வேல் கணாள் பரவி மீண்டாள்

#2059
அடி இறைகொண்ட செம்பொன் ஆடக சிலம்பினாள் அ
கடி அறை மருங்கில் நின்ற மைந்தனை கண்டு நாணி
வடியுறு கடைக்கண் நோக்க நெஞ்சு துட்கென்ன வார் பூம்
கொடி உற ஒசிந்து நின்றாள் குழை முக திருவோடு ஒப்பாள்

#2060
இலங்கு பொன் ஓலை மின்ன இன் முகம் சிறிது கோட்டி
அலங்கலும் குழலும் தாழ அரு மணி குழை ஓர் காதில்
கலந்து ஒளி கான்று நின்று கதிர்விடு திருவில் வீச
நலம் கனிந்து உருகி நின்றாள் நாம வேல் காமர் கண்ணாள்

#2061
எரி மணி கலாபத்து இட்ட இந்திர நீலம் என்னும்
ஒரு மணி உந்தி நேரே ஒரு கதிர் உமிழ்வதே போல்
அரு மணி பூணினாள் தன் அம் வயிறு அணிந்த கோல
திரு மயிர் ஒழுக்கம் வந்து என் திண் நிறை கவர்ந்தது அன்றே

#2062
தேறினேன் தெய்வம் என்றே தீண்டிலேன்-ஆயின் உய்யேன்
சீறடி பரவ வந்தேன் அருள் என தொழுது சேர்ந்து
நாறு இரும் குழலினாளை நாகு அணை விடையின் புல்லி
கோல் தொடுத்து அநங்கன் எய்ய குழைந்து தார் திவண்டது அன்றே

#2063
கலை புறம் சூழ்ந்த அல்குல் கார் மயில் சாயலாளும்
மலை புறம்கண்ட மார்பின் வாங்கு வில் தட கையானும்
இலை புறம் கொண்ட கண்ணி இன் தமிழ் இயற்கை இன்பம்
நிலைபெற நெறியின் துய்த்தார் நிகர் தமக்கு இலாத நீரார்

#2064
குங்குமம் குயின்ற கும்மை குவி முலை குளிர்ப்ப தைவந்து
அம் கலுள் மேனி அல்குல் காசு உடன் திருத்தி அம் பொன்
பொங்கு பூம் சிலம்பில் போர்த்த பூம் துகள் அவித்து மாதர்
கொங்கு அலர் கோதை சூட்டி குழல் நலம் திருத்தினானே

#2065
வான் ஆர் கமழ் மதுவும் சாந்தும் ஏந்தி மது துளித்து வண்டும் சுரும்பும் மூசும்
தேன் ஆர் பூங்கோதாய் நினக்கு காமன் சிலை இரண்டும் செவ்வனே கோலி தந்தான்
தான் ஆர பண்ணி தடறு நீக்கி தண் குருதி தோய்த்து தகைமை சான்ற
ஊன் ஆர்ந்த ஓர் இணை அம்பும் தந்தான் என்னை உளன் ஆக வேண்டினானே

#2066
கள் நக்க கண்ணி கமழ் பூம் குழல் கரும்பு ஏர் தீம் சொலாள் கதிர் முலைகளின்
வண்ணக்கு வானும் நிலனும் எல்லாம் விலையே மழை மின்னும் நுசுப்பினாளை
பெண்ணுக்கு அணியாக வேண்டி மேலை பெரியோர் பெருமான் படைத்தான் என்று
புண் நக்க வேலான் புகழ நாணி பூ நோக்கி பூக்கு ஒசிந்த கொம்பு ஒத்தாளே

#2067
இறங்கிய மாதர்-தன்னை எரி மணி கடக கையால்
குறங்கின் மேல் தழுவி வைத்து கோதை அம் குருதி வேலான்
அறம் தலை நீங்க காக்கும் அரசன் யானாக நாளை
சிறந்த நின் நலத்தை சேரேன் ஆய்விடின் செல்க என்றான்

#2068
வில் இடு மணி செய் ஆழி மெல் விரல் விதியின் கூப்பி
நல் அடி பணிந்து நிற்ப நங்கை நீ நடுங்க வேண்டா
செல்க என சிலம்பு செம்பொன் கிண்கிணி மிழற்ற ஒல்கி
அல்குல் காசு ஒலிப்ப ஆயம் பாவை சென்று எய்தினாளே

#2069
பரு மணி பதம் கொள் நாக பை என பரந்த அல்குல்
எரி மணி பூணினானுக்கு இன் நலம் ஒழிய ஏகி
திரு மணி சிவிகை ஏறி செம்பொன் நீள் மாடம் புக்காள்
விரி மணி விளங்கும் மாலை வெம் முலை வேல் கணாளே

#2070
திருவில் தான் மாரி கற்பான் துவலை நாள்செய்வதே போல்
உருவிற்றாய் துளிக்கும் தேறல் ஓங்கு தார் மார்பன் தோழர்
பொருவிற்று ஆம் நம்பி காமதிலகன் என்று இருந்த-போழ்தில்
செருவில் தாழ் நுதலினாள் கண் மண திறம் செப்புகின்றார்

#2071
கனை கடல் அமுதும் தேனும் கலந்துகொண்டு எழுதப்பட்ட
புனை கொடி பூத்ததே போல் பொறுக்கலா நுசுப்பின் பாவை
நனை குடைந்து உண்டு தேக்கி நன் மணி வண்டு பாடும்
புனை கடி மாலை மாதர் திறத்து இது மொழிந்து விட்டார்

#2072
ஐயற்கு என்று உரைத்த மாற்றம் கேட்டலும் அலங்கல் நாய்கன்
வெய்ய தேன் வாய்க்கொண்டால் போல் விழுங்கலொடு உமிழ்தல் தேற்றான்
செய்வது என் நோற்றிலாதேன் நோற்றலாள் திறத்தின் என்று
மையல்கொண்டிருப்ப அப்பால் குமரி தன் மதியின் சூழ்ந்தாள்

#2073
பொற்பு அமை தாம கந்து பொருந்திய மின்னு போல
எல் பக எரியும் மாலை பவள தூண் பொருந்தி இன் நீர்
கற்பு எனும் மாலை வீசி நாண் எனும் களி வண்டு ஓப்பி
சொல் புகர் இன்றி தோழிக்கு அறத்தினோடு அரிவை நின்றாள்

#2074
வழி வளர் மயில் அம் சாயல் பவள பூம் பாவை அன்ன
கழி வளர் கயல் கண் நங்கை கற்பினை அறிந்து தோழி
அழி மது மாலை சேர்த்தி அடிபணிந்து ஆர வாழ்த்தி
பொழி மது புயல் ஐங்கூந்தல் செவிலியை பொருந்தி சொன்னாள்

#2075
நனை வளர் கோதை நற்றாய் நங்கைக்கு ஈது உள்ளம் என்று
சுனை வளர் குவளை உண்கண் சுமதிக்கு செவிலி செப்ப
கனை இருள் கனவில் கண்டேன் காமர் பூம் பொய்கை வற்ற
அனையது ஆம் கன்னி நீர் இன்று அற்றது ஆம் நங்கைக்கு என்றாள்

#2076
கெண்டையும் சிலையும் திங்கள் இளமையும் கிடந்து தேன் கொள்
தொண்டை அம் கனியும் முத்தும் தொழுதக அணிந்து தூங்கும்
குண்டலம் உடைய திங்கள் இது எனும் முகத்தி தாதை
வண் புகழ் குபேரதத்தன் கேட்டனன் மனைவி சொன்னாள்

#2077
செரு விளைத்து அனலும் வேலோய் சிறுமுதுக்குறைவி-தானே
பெரு வளைப்பு இட்டு காத்த கற்பு இது போலும் ஐயன்
கரி விளைத்து ஆய்ந்த சுண்ணம் காட்டினன் என்று கண்டாய்
திரு விளை தேன் பெய் மாரி பால்கடல் பெய்தது என்றாள்

#2078
கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கு எலாம் உணர்த்தி யார்க்கும்
வேட்பன அடிசில் ஆடை விழு கலன் மாலை சாந்தம்
கோள் குறைவு இன்றி ஆக்கி குழுமியம் கறங்கி ஆர்ப்ப
நாள் கடி மாலையாற்கு நங்கையை நல்கினானே

#2079
பரியகம் சிலம்பு பைம்பொன் கிண்கிணி ஆர்ந்த பாதத்து
அரிவையர் ஆடல் மிக்கார் அரு மணி வீணை வல்லார்
உரிய நூற்றெண்மர் செம்பொன் ஒன்றரை கோடி மூன்று ஊர்
எரி அழல் முன்னர் நேர்ந்தேன் என் மகட்கு என்று சொன்னான்

#2080
மாசறு மணியும் முத்தும் வயிரமும் ஒளிரும் மேனி
ஆசறு செம்பொன் ஆர்ந்த அலங்கல் அம் குன்று அனானும்
தூசுறு பரவை அல்குல் தூ மணி கொம்பு அனாளும்
காசு அற கலந்த இன்ப கடலகத்து அழுந்தினாரே

#2081
பொன் வரை பொருத யானை புணர் மருப்பு அனைய ஆகி
தென் வரை சாந்து மூழ்கி திரள் வடம் சுமந்து வீங்கி
மின் வளர் மருங்குல் செற்ற வெம் முலை மணி கண் சேப்ப
தொல் நலம் பருகி தோன்றல் துறக்கம் புக்கவர்கள் ஒத்தான்

#2082
வரி கழல் குருசில் மார்பும் மடந்தை வெம் முலையும் தம்முள்
செரு செய்து திளைத்து போரில் சிலம்பு ஒலி கலந்த பாணி
அரி பறை அனுங்க ஆர்க்கும் மேகலை குரலோடு ஈண்டி
புரி குழல் புலம்ப வைகி பூ அணை விடுக்கலானே

#2083
மணி இயல் வள்ளத்து ஏந்த மது மகிழ்ந்து அனந்தர் கூர
அணி மலர் குவளை பைம் போது ஒரு கையின் அருளி அம் பொன்
பிணை அனாள் அருகு சேரின் பேதுறும் நுசுப்பு என்று எண்ணி
துணை அமை தோள்கள் தம்மால் தோன்றல்-தான் புல்லினானே

#2084
மல்லல் அம் கங்கை போலும் பலர் முயங்கு ஆர மார்பின்
புல்லன்-மின் போ-மின் வேண்டா என்று அவள் புலந்து நீங்க
முல்லை அம் கோதை ஒன்றும் பிழைப்பு இலேன் முனியல் நீ என்று
அல்லலுற்று அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டானே

#2085
வட்டிகை பாவை நோக்கி மகிழ்ந்திருந்திலிரோ என்னா
தொட்டிமை உருவம் தோன்ற சுவரையே பொருந்தி நின்றாய்
கட்டழகு உடைய நங்கை நீ என கருதி கண்ணால்
ஒட்டி யான் நோக்கிற்று என்றான் ஒரு பிடி நுசுப்பினாட்கே

#2086
நுண் துகில் நெகிழ்ந்த அல்குல் மணி பரந்து இமைப்ப நொந்து
கண்களை இடுக கோட்டி காமத்தில் செயிர்த்து நோக்கி
குண்டலம் இலங்க கோதை கூந்தலோடு அவிழ்ந்து சோர
ஒண்_தொடி ஊடி நின்றாள் ஒளி மணி பூம் கொம்பு ஒப்பாள்

#2087
கிழவனாய் பாடி வந்து என் கீழ் சிறை இருப்ப கண்டேன்
எழுதிய பாவை நோக்கி இமை அவித்து இருப்ப கண்டேன்
ஒழிக இ காமம் ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று என்று ஆங்கு
அழுத கண்ணீர்கள் மைந்தன் ஆவி போழ்ந்திட்ட அன்றே

#2088
அலங்கல் தாது அவிழ அம் செம் சீறடி அணிந்த அம் பூம்
சிலம்பின் மேல் சென்னி சேர்த்தி சிறியவர் செய்த தீமை
புலம்பலர் பொறுப்பர் அன்றே பெரியவர் என்று கூறி
இலங்கு வேல் கண்ணி ஊடல் இளையவன் நீக்கினானே

#2089
யாழ் கொன்ற கிளவியாள் தன் அமிழ்து உறழ் புலவி நீக்கி
காழ் இன்றி கனிந்த காம கொழும் கனி நுகர்ந்து காதல்
தாழ்கின்ற தாம மார்பன் தையலோடு ஆடி விள்ளான்
ஊழ் சென்ற மதியம் வெய்யோன் ஒட்டி ஒன்றாயது ஒத்தான்

#2090
பச்சிலை பட்டும் முத்தும் பவளமும் இமைக்கும் அல்குல்
நச்சு இலை வேல் கண் மாதர் நகை முக முறுவல் மாந்தி
இச்சையும் குறிப்பும் நோக்கி எய்வதே கருமம் ஆக
கை சிலை கணையோடு ஏந்தி காமன் இ கடையை காப்பான்

#2091
கடிப்பிணை காது சேர்த்தி சிகழிகை காதம் நாற
தொடுத்து அலர் மாலை சூட்டி கிம்புரி முத்தம் மென் தோள்
அடுத்து அணிந்து ஆகம் சாந்தின் அணிபெற எழுதி அல்குல்
உடுத்த பொன் கலாபம் தைவந்து ஒளி வளை திருத்தினானே

#2092
இலங்கு வெள் அருவி குன்றத்து எழுந்த தண் தகர செம் தீ
நலம் கிளர் அகிலும் தேனும் கட்டியும் நன்கு கூட்டி
புலம்பு அற வளர்த்த அம் மென் பூம் புகை அமளி அங்கண்
விலங்கு அரசு அனைய காளை வெள்_வளைக்கு இதனை சொன்னான்

#2093
கருமம் நீ கவல வேண்டா கயல் கணாய் பிரிவல் சில் நாள்
அருமை நின் கவினை தாங்கல் அது பொருள் என்று கூற
பெரும நீ வேண்டிற்று அல்லால் வேண்டுவ பிறிது ஒன்று உண்டோ
ஒருமை நின் மனத்தின் சென்றேன் உவப்பதே உவப்பது என்றாள்

#2094
நாணொடு மிடைந்த தேன் கொள் நடுக்குறு கிளவி கேட்டே
பூண் வடு பொறிப்ப புல்லி புனை நலம் புலம்ப வைகேன்
தேன் மிடை கோதை என்று திருமகன் எழுந்து போகி
வாள் மிடை தோழர் சூழ தன் மனை மகிழ்ந்து புக்கான்

#2095
புரவியும் களிரும் நோக்கி பொன் நெடும் தேரும் நோக்கி
இரவினும் பகலும் ஓவாது என் மகன் யாண்டையேன் என்று
அழுத கண்ணீரினாலே கை கழீஇ அவலிக்கின்ற
மெழுகு எரி முகந்தது ஒக்கும் தாய் மெலிவு அகற்றினானே

#2096
ஒற்றரும் உணர்தல் இன்றி உரை அவித்து உறுப்பினாலே
சுற்றத்தார்க்கு உரைப்ப ஈண்டி தொக்கு உடன் தழுவிக்கொள்வார்
எற்றுவார் இனைந்து சோர்வார் நம்பியோ நம்பி என்னா
உற்று உடன்று அழுத கண்ணீர் கால் அலைத்து ஒழுகிற்று அன்றே

#2097
கந்துகன் கழற கல்லென் கடல் திரை அவிந்த வண்ணம்
வந்தவர் புலம்பு நீங்க மறை புறப்படும் என்று எண்ணி
எந்தை-தான் இறந்த நாள் இன்று என நகர் இயம்பி யாரும்
அந்தம் இல் உவகை-தன்னால் அகம் குளிர்ப்பு எய்தினாரே

#2098
செம் கயல் மழை கண் செ வாய் தத்தையும் மகிழ்ந்து தீம் சொல்
எங்கையை சென்று காண்-மின் அடிகள் என்று இரந்து கூற
மங்கல வகையில் சேர்ந்து மது துளி அறாத மாலை
கொங்கு அலர் கண்ணி சேர்த்தி குங்குமம் எழுதினானே

#2099
தீவினை உடைய என்னை தீண்டன்-மின் அடிகள் வேண்டா
பாவியேன் என்று நொந்து பரிந்து அழுது உருகி நைய
காவி அம் கண்ணி ஒன்றும் கவலல் யான் உய்ந்தது எல்லாம்
நாவியே நாறும் மேனி நங்கை நின் தவத்தின் என்றான்

#2100
அன்னம் மெல் நடையும் நோக்கும் சாயலும் அணியும் ஏரும்
மின்னின் நுண் நுசுப்பும் வெய்ய முலைகளும் முகமும் தோன்ற
என் மனத்து எழுதப்பட்டாய்-ஆயினும் அரிவை கேளாய்
உன்னை யான் பிரிந்த நாள் ஓர் ஊழியே போன்றது என்றான்

#2101
இளையவள் மகிழ்வ கூறி இன் துயில் அமர்ந்து பின் நாள்
விளை பொருள் ஆய எல்லாம் தாதைக்கே வேறு கூறி
கிளையவர் சூழ வாமான் வாணிகன் ஆகி கேடு இல்
தளை அவிழ் தாமம் மார்பன் தன் நகர் நீங்கினானே
@10 மண்மகள் இலம்பகம்

#2102
குடம் புரை செருத்தல் குவளை மேய் கய வாய் குவி முலை படர் மருப்பு எருமை
நடந்த வாய் எல்லாம் நறு மலர் மரையின் நாகு இலை சொரிந்த அம் தீம் பால்
தடம் சிறை அன்னம் குருகொடு நாரை பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம்
மடங்கல் போல் திறலார் மா மணி கறங்க வள வயல் புள் எழ கழிந்தார்

#2103
புரி வளை அலறி பூசல் இட்டு ஈன்ற பொழி கதிர் நித்திலம் உழக்கி
வரி வளை சூழும் வலம்புரி இனத்துள் சலஞ்சலம் மேய்வன நோக்கி
அரிது உணர் அன்னம் பெடை என தழுவி அன்மையின் அலமரல் எய்தி
திரிதரு நோக்கம் தீது இலார் நோக்கி நெய்தலும் கைவலத்து ஒழிந்தார்

#2104
கோட்டு இளம் கலையும் கூடும் மென் பிணையும் கொழும் கதிர் மணி விளக்கு எறிப்ப
சேட்டு இளம் கொன்றை திரு நிழல் துஞ்ச செம் பொறி வண்டு அவற்று அயலே
நாட்டு இளம் பிடியார் நகை முகம் பருகும் நல்லவர் போல் மலர் பருகும்
மோட்டு இள முல்லை மொய் மலர் கானம் முருகு வந்து எதிர்கொள நடந்தார்

#2105
குழவி வெண் திங்கள் கோட்டின் மேல் பாய குளிர் புனல் சடை விரித்து ஏற்கும்
அழல் அவிர் சூலத்து அண்ணலே போல அருவி நீர் மருப்பினின் எறிய
கழை வளர் குன்றில் களிறு நின்று ஆடும் கடி நறும் சந்தன சாரல்
இழை வளர் முலையார் சாயல் போல் தோகை இறை கொள் பூம் குறிஞ்சியும் இறந்தார்

#2106
ஊன் தலை பொடித்த ஆங்கு அனைய செம் சூட்டின் ஒளி மயிர் வாரணம் ஒருங்கே
கான்ற பூம் கடம்பின் கவட்டு-இடை வளை வாய் பருந்தொடு கவர் குரல் பயிற்றும்
ஆன்ற வெம் பாலை அழல் மிதித்து அன்ன அரும் சுரம் சுடர் மறை பொழுதின்
ஊன்றினார் பாய்மா ஒளி மதி கதிர் போல் சந்தனம் ஒருங்கு மெய் புதைத்தே

#2107
நிலை இலா உலகில் நின்ற வண் புகழை வேட்டவன் நிதியமே போன்றும்
இலை குலாம் பைம் பூண் இள முலை தூதின் இன் கனி தொண்டை அம் துவர் வாய்
கலை வலார் நெஞ்சில் காமமே போன்றும் கடவுளர் வெகுளியே போன்றும்
உலைவு இலார் நில்லாது ஒரு பகலுள்ளே உருப்பு அவிர் வெம் சுரம் கடந்தார்

#2108
புது கலம் போலும் பூம் கனி ஆலும் பொன் இணர் பிண்டியும் பொருந்தி
மது கலந்து ஊழ்த்து சிலம்பி வீழ்வன போல் மலர் சொரி வகுளமும் மயங்கி
கதிர்த்த தண் பூணி கம்புள் தாழ் பீலி கனை குரல் நாரை வண்டானம்
எதிர்த்த தண் புனல் சூழ் இன் நதி கரை மேல் இளையவர் அயா உயிர்த்து எழுந்தார்

#2109
அள் இலை பலவின் அளிந்து வீழ் சுளையும் கனிந்து வீழ் வாழையின் பழனும்
புள்ளி வாழ் அலவன் பொறி வரி கமம் சூல் ஞெண்டினுக்கு உய்த்து நோய் தணிப்பான்
பள்ளி வாய் நந்தும் ஆமையும் பணித்து பல் மலர் வழிபட குறைக்கும்
வெள்ள நீர் படப்பை விதையம் வந்து அடைந்தே வேந்தனுக்கு உணர்த்த முன் விடுத்தார்

#2110
வீட்டு இடம்-தோறும் வில்லக விரல் போல் பொருந்தி நின்று ஒருங்கு எதிர்கொள்க என்று
ஏட்டின் மேல் தீட்டி திரு எழுத்து இட்டு ஆங்கு இறைவனும் தமர்களை பணிப்ப
நாட்டகத்து அமிர்தும் நளி கடல் அமிர்தும் நல் வரை அமிர்தமும் அல்லா
காட்டு அகத்து அமிர்தும் காண்வர குவவி கண் அகன் புறவு எதிர்கொண்டார்

#2111
பொரு மத யானை புணர் மருப்பு ஏய்ப்ப பொன் சுமந்து ஏந்திய முலையார்
எரி மலர் செ வாய் திறந்து தேன் ஊற ஏத்துவார் பூக்கள் தூய் தொழுவார்
வரு குலை கமுகும் வாழையும் நடுவார் வரை உமிழ் ஆவி போல் மாடத்து
அரு நறும் புகையும் ஏந்துவார் ஊர்-தோறு அமரர்-தம் உலகம் ஒத்ததுவே

#2112
பாடு இன் அருவி பயம் கெழு மா மலை
மாட நகரத்து வாயிலும் கோயிலும்
ஆடு அம்பலமும் அரங்கமும் சாலையும்
சேடனை காணிய சென்று தொக்கதுவே

#2113
பல் கதிர் ஆரமும் பூணும் பருமித்து
கொல் சின வெம் தொழில் கோடு ஏந்து இள முலை
நல் எழில் மங்கையர் நல் நுதல் சூட்டிய
வெல் கதிர் பட்டம் விளங்கிற்று ஒருபால்

#2114
சுண்ணமும் சூட்டும் சொரிந்து வார் குழல்
கண்ணி மகாரோடு கால் சிலம்பு ஆர்த்து எழ
அண்ணலை காணிய ஆர்வத்தின் போதரும்
வண்ண மகளிர் வனப்பிற்று ஒருபால்

#2115
எதிர் நல பூம் கொடி எள்ளிய சாயல்
கதிர் நல மங்கையர் கால் தொடர்ந்து ஓட
முதிரா இள முலை முத்தொடு பொங்க
அதிர் அரி கிண்கிணி ஆர்க்கும் ஒருபால்

#2116
கரும் கண் இள முலை கச்சு அற வீக்கி
மருங்குல் தளர மழை மருள் மாடம்
நெருங்க இறைகொண்ட நேர்_இழையார்-தம்
பெரும் கண் அலமரும் பெற்றித்து ஒருபால்

#2117
மின்னு குழையினர் கோதையர் மின் உயர்
பொன் வரை மாடம் புதைய பொறி மயில்
துன்னிய தோகை குழாம் என தொக்கவர்
மன்னிய கோலம் மலிந்தது ஒருபால்

#2118
பாடல் மகளிரும் பல் கலை ஏந்து அல்குல்
ஆடல் மகளிரும் ஆவண வீதி-தொறும்
ஓட உதிர்ந்த அணிகலம் உக்கவை
நீடு இருள் போழும் நிலைமத்து ஒருபால்

#2119
கோதையும் தாரும் பிணங்க கொடும் குழை
காதல் மகளிரும் மைந்தரும் காணிய
வீதியும் மேலும் மிடைந்து மிடை மலர்
தாது அடுத்து எங்கும் தவிசு ஒத்ததுவே

#2120
மான கவரி மணி வண்டு அகற்ற அங்கு
ஆனை எருத்தத்து அமர குமரனின்
சேனை கடல் இடை செல்வனை கண்டு உவந்து
ஏனையவரும் எடுத்து உரைக்கின்றார்

#2121
தே மலர் அம் கண் திருவே புகுதக
மா மலர் கோதை மணாளன் புகுதக
காமன் புகுதக காளை புகுதக
நாம எழில் விஞ்சை நம்பி புகுதக

#2122
மின் தோய் வரை கொன்ற வேலோன் புகுதக
இன் தேன் கமழ் தார் இயக்கன் புகுதக
வென்றோன் புகுதக வீரன் புகுதக
என்றே நகரம் எதிர்கொண்டதுவே

#2123
இடி நறும் சுண்ணம் சிதறி எச்சாரும்
கடி கமழ் மாலையும் கண்ணியும் சிந்தி
துடி அடு நுண் இடை தொண்டை அம் செ வாய்
வடி அடு கண்ணியர் வாழ்த்துபு நிற்பார்

#2124
சுரும்பு இமிர் மாலை தொழுவனர் நீட்டி
இரும் பிடி நின் நடை கற்ற எமக்கு
விரும்பினை-ஆய்விடின் மெல்ல நடமோ
கரும் கணில் காமனை காண மற்று என்பார்

#2125
மட நடை பெண்மை வனப்பு என்பது ஓராய்
கடு நடை கற்றாய் கணவன் இழப்பாய்
பிடி அலை பாவி என பூண் பிறழ்ந்து
புடை முலை விம்ம புலந்தனர் நிற்பார்

#2126
மயிர் வாய் சிறு கண் பெரும் செவி மா தாள்
செயிர் தீர் திரள் கை சிறு பிடி கேள்வன்
அயிராவணத்தொடு சூள் உறும் ஐயன்
உயிர் காவலன் கொண்டு உதவ நில் என்பார்

#2127
கருனை கவளம் தருதும் கமழ் தார்
அருமை அழகிற்கு அரசனை நாளை
திரு மலி வீதி எம் சேரி கொணர்மோ
எரி மணி மாலை இளம் பிடி என்பார்

#2128
என்னோர் மருங்கினும் ஏத்தி எரி மணி
பொன் ஆர் கலையினர் பொன் பூம் சிலம்பினர்
மின் ஆர் குழையினர் கோதையர் வீதியுள்
மன்னகுமரனை வாழ்த்தி மகிழ்ந்தார்

#2129
விளங்கு பால்கடலில் பொங்கி வெண் திரை எழுவவே போல்
துளங்கு ஒளி மாடத்து உச்சி துகில் கொடி நுடங்கும் வீதி
உளம் கழித்து உருவ பைம் தார் மன்னவன் கோவில் சேர்ந்தான்
இளம் கதிர் பருதி பௌவத்து இறுவரை இருந்தது ஒத்தான்

#2130
இழை ஒளி பரந்த கோயிலின் இன மலர் குவளை பொன் பூ
விழை தகு கமல வட்டத்து இடை விராய் பூத்தவே போல்
குழை ஒளி முகமும் கோல கொழும் கயல் கண்ணும் தோன்ற
மழை மின்னு குழாத்தின் மாலை மங்கையர் மயங்கி நின்றார்

#2131
எரி குழாம் சுடரும் வை வேல் ஏந்தலை கண்டு கோயில்
திரு குழாம் அனைய பட்டத்தேவியர் மகிழ்ந்து செய்ய
வரி குழாம் நெடும் கண் ஆர கொப்புளித்து உமிழ அம் பூ
விரை குழாம் மாலை தேனும் வண்டும் உண்டு ஒழுக நின்றார்

#2132
அலங்கல் தாது அவிழ்ந்து சோர அல்குல் பொன் தோரை மின்ன
சிலம்பின் மேல் பஞ்சி ஆர்ந்த சீறடி வலத்தது ஊன்றி
நலம் துறைபோய நங்கை தோழியை புல்லி நின்றாள்
இலங்கு ஒளி மணி தொத்து ஈன்ற ஏந்து பொன் கொடியோடு ஒப்பாள்

#2133
தாமரை போதில் பூத்த தண் நறும் குவளை பூ போல்
காமரு முகத்தில் பூத்த கரு மழை தடம் கண் தம்மால்
தே மலர் மார்பினானை நோக்கினாள் செல்வன் மற்று அ
பூ மலர் கோதை நெஞ்சம் மூழ்கி புக்கு ஒளித்திட்டானே

#2134
விண்ணாறு செல்வார் மனம் பேது உற போந்து வீங்கி
பண்ணாறு சொல்லாள் முலை பாரித்த என்று நோக்க
கண்ணாறு சென்ற களி ஐங்கணை காமன் அன்ன
புண்ணாறு வேலான் மனம் மூழ்கினள் பொன் அனாளே

#2135
மை தோய் வரையின் இழியும் புலி போல மைந்தன்
பெய் தாம மாலை பிடியின் இழிந்து ஏகி மன்னர்
கொய் தாம மாலை கொழும் பொன் முடி தேய்த்து இலங்கும்
செய் பூம் கழலை தொழுதான் சென்னி சேர்த்தினானே

#2136
பொன் அம் குவட்டின் பொலிவு எய்தி திரண்ட திண் தோள்
மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லி
தன் அன்புகூர தடம் தாமரை செம் கண் முத்தம்
மின்னும் மணி பூண் விரை மார்ப நனைப்ப நின்றான்

#2137
ஆனாது வேந்தன் கலுழ்ந்தான் என கோயில் எல்லாம்
தான் யாதும் இன்றி மயங்கி தடம் கண் பெய் மாரி
தேன் ஆர் மலர் ஈர்த்து ஒழுக சிலம்பில் சிலம்பும்
கான் ஆர் மயிலின் கணம் போல் கலுழ்வுற்றது அன்றே

#2138
பகை நரம்பு இசையும் கேளா பைம் கதிர் பசும்பொன் கோயில்
வகை நலம் வாடி எங்கும் அழுகுரல் மயங்கி முந்நீர்
அக மடை திறந்ததே போல் அலற கோக்கு இளைய நங்கை
மிகை நல தேவி-தானே விலாவணை நீக்கினாளே

#2139
பல் கதிர் மணியும் பொன்னும் பவழமும் குயிற்றி செய்த
செல்வ பொன் கிடுகு சூழ்ந்த சித்திரக்கூடம் எங்கும்
மல்கு பூம் தாமம் தாழ்ந்து மணி புகை கமழ வேந்தன்
வெல் புகழ் பரவ-மாதோ விதியுளி எய்தினானே

#2140
எரி மணி அடைப்பை செம்பொன் படியகம் இலங்கு பொன் வாள்
கரு மணி முகடு வேய்ந்த கஞ்சனை கவரி கொண்ட
வரு முலை மகளிர் வைத்து வான் தவிசு அடுத்து நீங்க
பெருமகன் எண்ணம் கொள்வான் அமைச்சரோடு ஏறினானே

#2141
உலந்த நாள் அவர்க்கு தோன்றாது ஒளிக்கும் மீன் குளிக்கும் கற்பின்
புலந்த வேல் நெடும் கண் செ வாய் புதவி நாள் பயந்த நம்பி
சிலம்பும் நீர் கடல் அம் தானை சீதத்தற்கு அரசு நாட்டி
குலம் தரு கொற்ற வேலான் கொடி நகர் காக்க என்றான்

#2142
மாற்றவன் ஒற்றர் ஒற்றா வகையினில் மறைய நம்பிக்கு
ஆற்றின தோழர்க்கு எல்லாம் அணிகலம் அடிசில் ஆடை
வேற்றுமை இன்றி வேண்டு ஊட்டு அமைத்தனன் அருளி இப்பால்
ஏற்று உரி முரசம் நாண எறி திரை முழக்கின் சொன்னான்

#2143
கட்டியங்காரன் நம்மை காண்பதே கருமம் ஆக
ஓட்டித்தான் விடுத்த ஓலை உள பொருள் உரை-மின் என்ன
தொட்டு மேல் பொறியை நீக்கி மன்னனை தொழுது தோன்ற
விட்டு அலர் நாக பைம் தார் விரிசிகன் கூறும் அன்றே

#2144
விதையத்தார் வேந்தன் காண்க கட்டியங்காரன் ஓலை
புதைய இ பொழிலை போர்த்து ஓர் பொய் பழி பரந்தது என் மேல்
கதை என கருதல் செய்யான் மெய் என தானும் கொண்டான்
சிதைய என் நெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே

#2145
படு மணி பைம்பொன் சூழி பகட்டு இனம் இரிய பாய்ந்து
கொடி நெடும் தேர்கள் நூறி கொய் உளை மாக்கள் குத்தி
இடு கொடி அணிந்த மார்பர் இரு விசும்பு ஏற சீறி
அடு களிற்று அசனி வேகம் அலமர அதனை நோனான்

#2146
நூற்றுவர் பாகர் தம்மை பிளந்து உயிர் உண்டது என்னும்
மாற்றத்தை கேட்டு சென்று மத களிறு அடக்கி மேல் கொண்டு
ஆற்றல் அம் கந்து சேர்த்தி யாப்புற வீக்கும்-போழ்தில்
கூற்று என முழங்கி வீழ்த்து கொல்ல கோல் இளகிற்று அன்றே

#2147
தனக்கு யான் உயிரும் ஈவேன் தான் வர பழியும் நீங்கும்
எனக்கு இனி இறைவன் தானே இரு நில கிழமை வேண்டி
நினைத்து தான் நெடிதல் செல்லாது என் சொலே தெளிந்து நொய்தா
சின களி யானை மன்னன் வருக என செப்பினானே

#2148
ஓலையுள் பொருளை கேட்டே ஒள் எயிறு இலங்கு நக்க
காலனை அளியன் தானே கையினால் விளிக்கும் என்னா
நூல்வலீர் இவனை கொல்லும் நுண் மதி சூழ்ச்சி ஈதே
போல்வது ஒன்று இல்லை என்றான் புனை மணி பொன் செய் பூணான்

#2149
கள்ளத்தால் நம்மை கொல்ல கருதினான் நாமும் தன்னை
கள்ளத்தால் உயிரை உண்ண கருதினேம் இதனை யாரும்
உள்ளத்தால் உமிழ வேண்டா உறு படை வந்து கூட
வள்ளுவார் முரசம் மூதூர் அறைக என அருளினானே

#2150
கட்டியங்காரனோடு காவலன் ஒருவன் ஆனான்
விட்டு நீர் நெல்லும் பொன்னும் வழங்கு-மின் விளைவ கூறின்
ஒட்டலன் இறைவன் சொன்னீர் நா நும அல்ல என்ன
கொட்டினான் தடம் கண் வள் வார் குளிறு இடி முரசம் அன்றே

#2151
விண்டவர் உடலம் கீறி சுளித்து நின்று அழலும் வேழம்
ஒண் கொடி உருவ திண் தேர் ஒளி மயிர் புரவி பண்ணி
வண் கழல் அணிந்து மள்ளர் வாள் வலம் பிடித்து நாளை
தெண் திரை பரப்பு நாண திருநகர் தொகுக என்றான்

#2152
ஏற்று உரி போர்த்த வள் வார் இடி முரசு அறைந்த பின் நாள்
காற்று எறி கடலின் சங்கும் முழவமும் முரசும் ஆர்ப்ப
கூற்று உடன்று அனைய தானை கொழு நிலம் நெளிய ஈண்டி
பால்கடல் பரப்பின் வெள் வாள் சுடர் ஒளி பரந்த அன்றே

#2153
புதை இருள் இரிய பொங்கி குங்கும கதிர்கள் ஓக்கி
உதையத்தின் நெற்றி சேர்ந்த ஒண் சுடர் பருதி போல
சுதை ஒளி மாடத்து உச்சி வெண்குடை நீழல் தோன்றி
விதையத்தார் வென்றி வேந்தன் விழு படை காணும் அன்றே

#2154
அரும் பனை தட கை அபரகாத்திரம் வாய் வால் எயிறு ஐந்தினும் கொல்வ
கரும் கடல் சங்கும் கறந்த ஆன் பாலும் கனற்றிய கால் உகிர் உடைய
பெரும் புலி முழக்கின் மாறு எதிர் முழங்கி பெரு வரை கீண்டிடும் திறல
திருந்தி ஏழுறுப்பும் திண் நிலம் தோய்வ தீ உமிழ் தறுகணின் சிறந்த

#2155
கவிழ் மணி புடைய கண் நிழல் நாறின் கனன்று தம் நிழலொடு மலைவ
அவிழ் புயல் மேகம் அனைய மும்மதத்த அறுபதிற்று அறுபதாம் நாகம்
புகழ் பருந்து ஆர்ப்ப பூ மதம் பொழிவான் நின்றன இராயிரம் கவுள் வண்டு
இகழ் மதம் செறித்த இராயிரத்து ஐஞ்நூறு இளையவும் அ துணை களிறே

#2156
குந்தமே அயில் வாள் குனி சிலை மூன்றும் குறைவிலார் கூற்றொடும் பொருவார்
அந்தரம் ஆறா யானை கொண்டு ஏற பறக்க எனில் பறந்திடும் திறலார்
முந்து அமர் தம்முள் முழு மெயும் இரும்பு மேய்ந்திட வெம் சமம் விளைத்தார்
கொந்து அழல் அஞ்சா குஞ்சரம் இவர்ந்தார் கோடியே விருத்தியா உடையார்

#2157
குங்கும நறு நீர் பந்தி நின்று ஆடும் குதிரை ஆறு ஆயிரத்து இரட்டி
பொங்கு வெண் மயிர் சூழ் பொன் படை பொலிந்த அறுபதின் ஆயிரம் புரவி
வெம் கணை தவிர்ப்ப வெள்ளி வெண் படைய வாய்விடின் நிலவரை நில்லா
பைம் கதிர் கொட்டை கவரி சூழ்ந்து அணிந்த பகரின் அ தொகையன பாய்மா

#2158
வேய் நிற கரும்பின் வெண் நிற பூ போல் மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும்
தோம் நிலை அரவின் தோற்றமே போலும் சிலைகளும் பிறகளும் துறைபோய்
ஊனம் ஒன்று இல்லார் உயர் குடி பிறந்தார் ஆயிரம் அடுகளம் கண்டார்
பால் நிலா பூணார் படை தொழில் கலிமா பண் உறுத்து ஏறினார் அவரே

#2159
தறுகண் ஆண்மைய தாமரை நிறத்தன தகைசால்
மறு இல் வான் குளம்பு உடையன மாளவத்து அகத்த
பறையின் ஆலுவ படு சினை நாவலின் கனி போல்
குறைவு இல் கோலத்த குளிர் புனல் சிந்துவின் கரைய

#2160
பாரசூரவம் பல்லவம் எனும் பதி பிறந்த
வீர ஆற்றல விளை கடும் தேறலின் நிறத்த
பாரில் தேர் செலின் பழி பெரிது உடைத்து என நாணி
சோரும் வார் புயல் துளங்க விண் புகுவன துரகம்

#2161
பீலி மா மயில் எருத்து என பெரு வனப்பு உடைய
மாலை மாரட்டத்து அகத்தன வளர் இளம் கிளியே
போலும் மேனிய பொரு கடல் கலத்தின் வந்து இழிந்த
கோல நீர் பவள குளம்பு உடையன குதிரை

#2162
இன்ன பொங்கு உளை புரவி பண் உறுத்தன இயல் தேர்
பொன்னும் வெள்ளியும் மணியினும் பொலிந்து வெண் மதியம்
தன்னை ஊர் கொண்ட தகையன தொகை சொலின் அறுநூறு
என்னும் ஈறு உடை இருபதினாயிரம் இறையே

#2163
நொச்சி மா மலர் நிறத்தன நொடி வரும் முந்நீர்
உச்சி மா கதிர் போல் சுடும் ஒளி திகழ் அயில் வாள்
எச்சத்து அல்லவும் எறி படை பயின்று தம் ஒன்னார்
நிச்சம் கூற்றினுக்கு இடுபவர் தேர் மிசை அவரே

#2164
எயிற்று படை ஆண்மையினின் இடிக்கும் புலி ஒப்பார்
பயிற்றிய வில் வாள் பணிக்கும் வேலொடு உடன் வல்லார்
துயிற்றிய பல் கேள்வியினர் தூற்றிக்கொளப்பட்டார்
அயில் துப்பு அடையார்கள் மத யானை கதன் அறுப்பார்

#2165
காலனொடு சூழ்ந்த கடு நோய்களையும் ஒப்பார்
ஆலும் கடல் தூர்த்தல் மலை அகழ்தல் இவை வல்லார்
ஞாலம் அறி ஆண் தொழிலர் நான்கு இலக்கம் உள்ளார்
மேலும் நுமரால் உரிமையுள் சிறப்பு பெற்றார்

#2166
சிங்கத்து உரி போர்த்த செழும் கேடகமும் வாளும்
பொங்கும் அயில் வேலும் பொரு வில்லும் உடன் பரப்பி
மங்குல் இடை மின்னும் மதியும் சுடரும் போல
வெம் கண் தொழில் கூற்றும் அரண் சேர விரிந்து அன்றே

#2167
செம்பொன் நீள் முடி தேர் மன்னர் மன்னற்கு
பைம்பொன் ஆழி தொட்டான் படை காட்டினான்
அம் பொன் ஒண் கழலான் அயிராவணம்
வெம்ப ஏறினன் வெல்க என வாழ்த்தினார்

#2168
சிறு வெண் சங்கு முரன்றன திண் முரசு
அறையும் மா கடல் கார் என ஆர்த்தன
நெறியின் நல்கின புள்ளும் நிமித்தமும்
இறைவன் கண் வலன் ஆடிற்று இயைந்து-அரோ

#2169
மல்லல் யானை கறங்கும் மணி ஒலி
அல்லது ஐம் கதி மான் கொழும் தார் ஒலி
கல் என் ஆர்ப்பு ஒலி மிக்கு ஒளிர் வாள் மினின்
செல்லும் மா கடல் போன்றது சேனையே

#2170
மாலை மா மதி வெண்குடை மல்கிய
கோல குஞ்சி நிழல் குளிர் பிச்சமும்
சோலை ஆய் சொரி மும்மதத்தால் நிலம்
பாலை போய் மருதம் பயந்திட்டதே

#2171
மன்றல் மா மயில் ஆர்த்து எழ மான் இனம்
கன்றினோடு கலங்கின கால் பெய
வென்றி வேல் படை அஞ்சி வனத்தொடு
குன்று எலாம் குடி போவன போன்றவே

#2172
படு கண் முழவின் இமிழ் அருவி வரையும் காடும் பல போகி
இடு மண் முழவின் இசை ஓவா ஏமாங்கத நாட்டு எய்திய பின்
நெடு வெண்ணிலவின் நெற்றி தோய் நிழலால் செம்பொன் புரிசையே
கடி மண் காவல் கருதினான் கோயில் ஆக கருதினான்

#2173
போக மகளிர் வல கண்கள் துடித்த பொல்லா கனா கண்டார்
ஆகம் மன்னற்கு ஒளி மழுங்கிற்று அஞ்சத்தக்க குரலினால்
கூகை கோயில் பகல் குழற கொற்ற முரசம் பாடு அவிந்து
மாகம் நெய்த்தோர் சொரிந்து எங்கும் மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே

#2174
கூற்றம் வந்து புறத்து இறுத்தது அறியான் கொழும் பொன் உலகு ஆள்வான்
வீற்று இங்கு இருந்தேன் என மகிழ்ந்து வென்றி வேழம் இருநூறும்
காற்றின் பரிக்கும் தேர் நூறும் கடும் கால் இவுளி ஆயிரமும்
போற்றி விடுத்தான் புனை செம்பொன் படையே அணிந்து புனை பூணான்

#2175
மன்னன் ஆங்கு ஓர் மத வேழம் வாரி மணாளன் என்பதூஉம்
மின்னும் கொடி தேர் விசயமும் புரவி பவன வேகமும்
பொன்னின் புனைந்து தான் போக்க நிகழ்வது ஓரான் மகிழ்வு எய்தி
முன் யான் விட்ட இன களிற்றின் இரட்டி விடுத்தான் என புகழ்ந்தான்

#2176
வீங்கு நீர் விதையத்தார் கோன் கட்டியங்காரன் தன்னோடு
ஆங்கு அவன் ஒருவன் ஆகி அன்பு எனும் அயில் கொள் வாளால்
வாங்கிக்கொண்டு உயிரை உண்பான் வஞ்சத்தால் சூழ்ந்த-வண்ணம்
ஓங்கு நீர் ஓத வேலிக்கு உணர யாம் உரைத்தும் அன்றே

#2177
பெருமகன் காதல் பாவை பித்திகை பிணையல் மாலை
ஒரு மகள் நோக்கினாரை உயிரொடும் போகொடாத
திருமகள் அவட்கு பாலான் அரும் திரிபன்றி எய்த
அரு மகன் ஆகும் என்று ஆங்கு அணி முரசு அறைவித்தானே

#2178
ஆய் மத களிறு திண் தேர் அணி மணி புரவி அம் பொன்
காய் கதிர் சிவிகை செற்றி கலந்தவை நுரைகள் ஆக
தோய் மழை உலக வெள்ளம் தொல் நகர் தொக்கதே போல்
ஆய் முடி அரச வெள்ளம் அணி நகர் ஈண்டிற்று அன்றே

#2179
நல்லவள் வனப்பு வாங்க நகை மணி மாலை மார்பர்
வில் அன்றே உவனிப்பாரும் வெம் கணை திருத்துவாரும்
சொல்லு-மின் எமக்கும் ஆங்கு ஓர் சிலை தொட நாள் என்பாரும்
பல் சரம் வழங்குவாரும் பரிவு கொள்பவரும் ஆனார்

#2180
பிறை எயிற்று எரி கண் பேழ் வாய் பெரு மயிர் பைம்பொன் பன்றி
அறை என திரியும் ஆய் பொன் பூமியின் நிறைந்து மன்னர்
உறு கணை ஒன்றும் வில்லும் உடன் பிடித்து உருவ நேமி
பொறி திரிவதனை நோக்கி பூ முடி துளக்கி நின்றார்

#2181
ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதி காதில்
காய்ந்து எரி செம்பொன் தோடும் கன மணி குழையும் மின்ன
வேந்தருள் வினிதை வேந்தன் வெம் சிலை தளர வாங்கி
ஆய்ந்த பொன் பன்றி நெற்றி அரும் துகள் ஆர்ப்ப எய்தான்

#2182
குடர் தொடர் குருதி கோட்டு குஞ்சர நகரத்தார் கோன்
சுடர் நுதல் பட்டம் மின்ன சுரும்பு இமிர் கண்ணி சிந்த
அடர் கதிர் பைம்பொன் பூணும் ஆரமும் அகலத்து ஒல்க
படர் சிலை குழைய வாங்கி பன்றியை பதைப்ப எய்தான்

#2183
வார் மது துளிக்கும் மாலை மணி முடி தொடுத்து நால
கார் மதம் கடந்த வண் கை காம்பிலி காவல் மன்னன்
ஏர் மத கேழல் எய்வான் ஏறலும் பொறியின் ஏறுண்டு
ஆர் மத களிற்று வேந்தர்க்கு அரு நகையாக வீழ்ந்தான்

#2184
முலை வட்ட பூணும் முத்தும் முள்கலின் கிழிந்து பொல்லா
இலை வட்ட தாம மார்பின் கோசலத்து இறைவன் எய்த
குலை வட்ட குருதி அம்பு வானின் மேல் பூசல் உய்ப்பான்
சிலை வட்டம் நீங்கி விண் மேல் செவ்வனே எழுந்தது அன்றே

#2185
ஊடிய மடந்தை போல உறு சிலை வாங்க வாராது
ஆடு எழு அனைய திண் தோள் அவந்தியன் அதனை நோனான்
நாடு எழுந்து ஆர்ப்ப மற்று அ நன் சிலை முறித்திட்டு அம்பை
வாடினன் பிடித்து நின்றான் மணமகன் போல நின்றான்

#2186
பில்கி தேன் ஒழுகும் கோதை பிறர் மனையாள்-கண் சென்ற
உள்ளத்தை உணர்வின் மிக்கான் ஒழித்திட பெயர்ந்ததே போல்
மல்லல் நீர் மகதராசன் துரந்த கோல் மருள ஓடி
புல்லி அ பொறியை மோந்து புறக்கொடுத்திட்டது அன்றே

#2187
தென் வரை பொதியில் ஆரம் அகிலொடு தேய்த்த தேய்வை
மன் வரை அகலத்து அப்பி மணி வடம் திருவில் வீச
மின் என விட்ட கோலை விழுங்க கண்டு அழுங்கி வேர்த்து
கல் மலிந்து இலங்கு திண் தோள் கலிங்கர்கோன் மெலிந்து மீண்டான்

#2188
கல் மழை பொன் குன்று ஏந்தி கண நிரை அன்று காத்து
மன் உயிர் இன்று காக்கும் வாரணவாசிமன்னன்
மின் இழை சுடர வாங்கி விட்ட கோல் உற்று உறாதாய்
மன் உயிர் நடுங்க நாணி மண் புக்கு மறைந்தது அன்றே

#2189
எரி கதிர் பைம்பொன் சுண்ணம் இலங்க மெய் முழுதும் அப்பி
புரி கழல் அணிந்த நோன் தாள் போதனபுரத்து வேந்தன்
அரிதினில் திகிரி ஏறி திரிந்து கண் கழன்று சோர்ந்து
விரி கதிர் கடவுள் போல வெறு நிலத்து ஒலிப்ப வீழ்ந்தான்

#2190
மலைய செம் சாந்தும் முந்நீர் வலம்புரி ஈன்ற முத்தும்
இலை வைத்த கோதை நல்லார் இள முலை பொறியும் ஆர்ந்து
சிலை வைத்த மார்பின் தென்னன் திரு மணி பன்றி நோக்கி
தலை வைத்தது அம்பு தானும் தரணி மேல் பாதம் வைத்தான்

#2191
வில் திறல் விசயன் என்பான் வெம் கணை செவிட்டி நோக்கி
ஒற்றுபு திருத்தி கைம்மேல் உருட்டுபு நேமி சேர்ந்து ஆங்கு
உற்ற தன் சிலையின்-வாய் பெய்து உடு அமை பகழி வாங்க
இற்று வில் முறிந்து போயிற்று இமைப்பினில் இலங்கித்திட்டான்

#2192
குண்டலம் இலங்க வாங்கி குனி சிலை உறையின் நீக்கி
கொண்டு அவன் கொழும் பொன் தாரும் ஆரமும் மிளிர ஏறி
கண்டு கோல் நிறைய வாங்கி காதுற மறிதலோடும்
விண்டு நாண் அற்றது ஆங்கே விசயனும் வீக்கம் அற்றான்

#2193
உளை வனப்பு இருந்த மான் தேர் ஒளி முடி மன்னர் எல்லாம்
வளை வனப்பு இருந்த தோளாள் வரு முலை போகம் வேண்டி
விளை தவ பெருமை ஓரார் வில் திறல் மயங்கி யாரும்
களைகலார் பொறியை ஆங்கு ஓர் ஆறு நாள் கழிந்து அன்றே

#2194
பனை கை யானை மன்னர் பணிய பைம்பொன் முடியில்
கனைக்கும் சுரும்பு ஆர் மாலை கமழ மதுவும் தேனும்
நனைக்கும் கழலோன் சிறுவன் நாம வெள் வேல் வலவன்
நினைக்கலாகா வகையான் நேரார் உயிர் மேல் எழுந்தான்

#2195
காரின் முழங்கும் களிறும் கடலின் முழங்கும் தேரும்
போரின் முழங்கும் புரவி கடலும் புகை வாள் கடலும்
சீரின் முழங்கும் முரசும் அலறும் சிறு வெண் சங்கும்
நீரின் முழங்க முழங்கும் நீல யானை இவர்ந்தான்

#2196
கல்லார் மணி பூண் மார்பின் காமன் இவனே என்ன
வில்லார் கடல் அம் தானை வேந்தர் குழாத்துள் தோன்ற
புல்லான் கண்ணின் நோக்கி புலி காண் கலையின் புலம்பி
ஒல்லான் ஒல்லான் ஆகி உயிர்போயிருந்தான் மாதோ

#2197
புலி யாப்புறுத்தி கொண்டேன் போக்கி விட்ட பிழைப்பும்
வலியார் திரள் தோள் மதனன் அவனை பிழைத்த பிழைப்பும்
நலியும் என்னை நலியும் என்ன களிற்றின் உச்சி
இலையார் கடக தட கை புடைத்து மெய் சோர்ந்து இருந்தான்

#2198
மை பூத்து அலர்ந்த மழை கண் மாழை மான் நேர் நோக்கின்
கொய் பூம் கோதை மடவார் கொற்றம் கொள்க என்று ஏத்த
பெய் பூம் கழலான் வேழத்து இழிந்து பிறை போல் குலாய
செய் பூண் சிலை நாண் எறிந்தான் சேரார் நாள் உக்கனவே

#2199
கனிபடு மொழியினாள் தன் காரிகை கவற்ற வந்து
குனி சிலை தோற்ற மன்னர் கொங்கு கொப்புளிக்கும் நீல
பனி மலர் காடு போன்றார் படர் சிலை தொடாத வேந்தர்
இனிதினின் மலர்ந்த ஏர் ஆர் தாமரை காடு போன்றார்

#2200
போர் தகல் விசும்பில் வந்து பொறித்திரி பன்றி மூன்றும்
நீர்த்தக புணர்ந்த போதில் நெடும் தகை மூன்றும் அற்று
சூர்த்துடன் வீழ நோக்கி சுடு சரம் சிதற வல்லான்
ஓர்த்து ஒன்றே புணர்ப்ப நாடி ஒரு பகல்-காறும் நின்றான்

#2201
பொறியின் மேல் ஏறல் தேற்றான் நாணினால் போதல் செய்யான்
நெறியின் வில் ஊன்றி நிற்ப நிழல் மணி பன்றி அற்று
மறியுமோ என்று முன்னே மணி முடி சிதறி வீழ்ந்த
செறி கழல் மன்னர் நக்கு தீய தீ விளைத்து கொண்டார்

#2202
சிரல் தலை மணிகள் வேய்ந்த திருந்து பொன் திகிரி செம்பொன்
உரல் தலை உருவ பன்றி இடம் வலம் திரிய நம்பன்
விரல் தலை புட்டில் வீக்கி வெம் சிலை கணையோடு ஏந்தி
குரல் தலை வண்டு பொங்க குப்புற்று நேமி சேர்ந்தான்

#2203
ஒள் அழல் வைர பூணும் ஒளிர் மணி குழையும் மின்ன
ஒள் அழல் கொள்ளி வட்டம் போல் குலாய் சுழல பொன் ஞாண்
ஒள் அழல் நேமி நக்க மண்டலம் ஆக நின்றான்
ஒள் அழல் பருதி மேல் ஓர் பருதி நின்று அதனை ஒத்தான்

#2204
அரும் தவ கிழமை போல இறாத வில் அறாத நாண் வாய்
திருந்தினார் சிந்தை போலும் திண் சரம் சுருக்கி மாறாய்
இருந்தவன் பொறியும் பன்றி இயல்தரும் பொறியும் அற்று ஆங்கு
ஒருங்கு உடன் உதிர எய்தான் ஊழி தீ உருமொடு ஒப்பான்

#2205
இலங்கு எயிற்று ஏனம் ஏவுண்டு இரு நிலத்து இடித்து வீழ
கலங்கு தெண் திரையும் காரும் கடு வளி முழக்கும் ஒப்ப
உலம்புபு முரசம் கொட்டி ஒய்யென சேனை ஆர்ப்ப
குலம் பகர்ந்து அறைந்து கோமான் கோவிந்தன் கூறினானே

#2206
வான் ஒருவன் தோன்றி மழை என முழங்கி சொல்லும்
தேன் உடை அலங்கல் வெள் வேல் சீவகன் என்னும் சிங்கம்
கான் உடை அலங்கல் மார்பின் கட்டியங்காரன் என்னும்
வேல் மிடை சோலை வேழத்து இன்னுயிர் விழுங்கும் என்றான்

#2207
விஞ்சையர் வெம் படை கொண்டு வந்தாய் என
அஞ்சுவலோ அறியாய் எனது ஆற்றலை
வெம் சமம் ஆக்கிடின் வீக்கு அறுத்து உன்னொடு
வஞ்சனை வஞ்சம் அறுத்திடுக என்றான்

#2208
சூரியன் காண்டலும் சூரியகாந்தம் அஃது
ஆர் அழல் எங்ஙனம் கான்றிடும் அங்ஙனம்
பேர் இசையான் இசை கேட்டலும் பெய்ம் முகில்
கார் இடி போல் மதனன் கனன்றிட்டான்

#2209
கால் படையும் களிறும் கலிமாவொடு
நூல் படு தேரும் நொடிப்பினில் பண்ணி
நால் படையும் தொகுத்தான் மக்கள் நச்சு இலை
வேல் படை வீரர் ஒர் நூற்றுவர் தொக்கார்

#2210
வில் திறலான் வெய்ய தானையும் வீங்குபு
செற்று எழுந்தான் படையும் சின மொய்ம்பொடு
மற்று அவர் மண்டிய வாள் அமர் ஞாட்பினுள்
உற்றவர்க்கு உற்றது எலாம் உரைக்குற்றேன்

#2211
அத்த மா மணி வரை அனைய தோன்றல
மத்தகத்து அருவியின் மணந்த ஓடைய
முத்து உடை மருப்பின் முனை-கண் போழ்வன
பத்தியில் பண்ணின பரும யானையே

#2212
கோல் பொரு கொடும் சிலை குருதி வெம் படை
மேலவர் அடக்குபு வேழம் ஏறலின்
மால் இரு விசும்பு-இடை மணந்த ஒண் கொடி
கால் பொரு கதலிகை கானம் ஒத்தவே

#2213
குடை உடை நிழலன கோலம் ஆர்ந்தன
கிடுகு உடை காப்பின கிளர் பொன் பீடிகை
அடி தொடைக்கு அமைந்தன அரவ தேர் தொகை
வடிவு உடை துகில் முடி வலவர் பண்ணினார்

#2214
கொய் உளை புரவிகள் கொளீஇய திண் நுகம்
பெய் கயிறு அமைவர பிணித்து முள்ளுறீஇ
செய் கயிறு ஆய்ந்தன சிலையும் அல்லவும்
கை அமைத்து இளைஞரும் கருவி வீசினார்

#2215
பறந்து இயல் தருக்கின பரவை ஞாட்பினுள்
கறங்கு என திரிவன கவரி நெற்றிய
பிறந்துழி அறிக என பெரிய நூலவர்
குறங்கு எழுத்து உடையன குதிரை என்பவே

#2216
கொல் நுனை குந்தமும் சிலையும் கூர் நுதி
மின் நிலை வாளோடு மிலேச்சர் ஏறலின்
பொன் அரி புட்டிலும் தாரும் பொங்குபு
முன் உருத்து ஆர்த்து எழ புரவி மொய்த்தவே

#2217
மாலையும் கண்ணியும் மணந்த சென்னியர்
ஆலுபு செறி கழல் ஆர்க்கும் காலினர்
பாலிகை இடை அற பிடித்த பாணியர்
சாலிகை உடம்பினர் தறுகணாளரே

#2218
போர் மயிர் கேடகம் புளக தோற்பரம்
வயிர் மயிர் கிடுகொடு வள்ளி தண்டையும்
நேர் மர பலகையும் நிரைத்த தானை ஓர்
போர் முக புலி கடல் புகுந்தது ஒத்ததே

#2219
பார் நனை மதத்த பல் பேய் பருந்தொடு பரவ செல்லும்
போர் மத களிறு பொன் தேர் நான்கரை கச்சம் ஆகும்
ஏர் மணி புரவி ஏழ் ஆம் இலக்கம் ஏழ் தேவ கோடி
கார் மலி கடல் அம் காலாள் கற்பக தாரினாற்கே

#2220
நிழல் மணி புரவி திண் தேர் நிழல் துழாய் குனிந்து குத்தும்
அழல் திகழ் கதத்த யானை ஐந்தரை கச்சம் ஆகும்
எழில் மணி புரவி ஏழ் ஆம் இலக்கம் ஏழ் தேவ கோடி
கழல் மலிந்து இலங்கும் காலாள் கட்டியங்காரற்கு அன்றே

#2221
குலம் கெழு மகளிர் தம் கோலம் நீப்பவும்
அலங்கு உளை புரவியும் களிறும் மாளவும்
நிலமகள் நெஞ்சு கையெறிந்து நையவும்
புலமகன் சீறினன் புகைந்தது எஃகமே

#2222
குணில் பொர குளிறின முரசம் வெள் வளை
பணை பரந்து ஆர்த்தன பம்பை வெம்பின
இணை இல எழுந்த தாழ் பீலி எங்கணும்
முணையினால் கடலக முழக்கம் ஒத்தவே

#2223
முடி மனர் எழுதரு பருதி மொய் களிறு
உடை திரை மா கலம் ஒளிறு வாள் படை
அடு திறல் எறி சுறா ஆக காய்ந்தன
கடல் இரண்டு எதிர்ந்தது ஓர் காலம் ஒத்ததே

#2224
அரும் கணை அடக்கிய ஆவ நாழிகை
பெரும் புறத்து அலமர பிணித்த கச்சினர்
கரும் கழல் ஆடவர் கரு வில் வாய் கொளீஇ
சொரிந்தனர் கணை மழை விசும்பு தூர்ந்ததே

#2225
நிணம் பிறங்கு அகலமும் தோளும் நெற்றியும்
அணங்கு அரும் சரங்களின் அழுத்தி ஐயென
மணம் கமழ் வரு புனல் மறலும் மாந்தரின்
பிணங்கு அமர் மலைந்தனர் பெற்றி இன்னதே

#2226
கழித்தனர் கனல வாள் புகைந்து கண்கள் தீ
விழித்தன தீந்தன இமைகள் கூற்று என
தெழித்தனர் திறந்தனர் அகலம் இன்னுயிர்
அழித்தனர் அயிலவர் அரவம் மிக்கதே

#2227
பொரும் களத்து ஆடவர் பொருவில் பைம் தலை
அரும் பெறல் கண்ணியோடு அற்று வீழ்வன
கரும் கனி பெண்ணை அம் கானல் கால் பொர
இரும் கனி சொரிவன போன்ற என்பவே

#2228
பணை முனிந்து ஆலுவ பைம்பொன் தாரின
கணை விசை தவிர்ப்பன கவரி நெற்றிய
துணை அமை இளமைய தோற்றம் மிக்கன
இணை மயிர் புரவியோடு இவுளி ஏற்றவே

#2229
கூர் உளி முகம் பொர குழிசி மாண்டன
ஆர் ஒளி அமைந்தன ஆய் பொன் சூட்டின
கார் ஒளி மின் உமிழ் தகைய கால் இயல்
தேரொடு தேர் தம்முள் சிறந்து சேர்ந்தவே

#2230
அஞ்சனம் எழுதின கவளம் ஆர்ந்தன
குஞ்சரம் கூற்றொடு கொம்மை கொட்டுவ
அஞ்சன வரை சிறகு உடைய போல்வன
மஞ்சு இவர் குன்று என மலைந்த வேழமே

#2231
மா கடல் பெரும் கலம் காலின் மாறுபட்டு
ஆக்கிய கயிறு அரிந்து ஓடி எங்கணும்
போக்கு அற பொருவன போன்று தீப்பட
தாக்கின அரசு உவா தம்முள் என்பவே

#2232
விடு சரம் விசும்பு-இடை மிடைந்து வெய்யவன்
படு கதிர் மறைந்து இருள் பரந்தது ஆயிடை
அடு கதிர் அயில் ஒளி அரசர் மா முடி
விடு கதிர் மணி ஒளி வெயிலின் காய்ந்தவே

#2233
பூண் குலாம் வன முலை பூமி தேவி தான்
காண்கலேன் கடியன கண்ணினால் எனா
சேண் குலாம் கம்பலம் செய்யது ஓன்றினால்
மாண் குலாம் குணத்தினால் மறைத்திட்டாள்-அரோ

#2234
கலை கோட்ட அகல் அல்குல் கணம் குழையார் கதிர் மணி பூண்
முலை கோட்டால் உழப்பட்ட மொய் மலர் தார் அகன் மார்பர்
மலை கோட்ட எழில் வேழம் தவ நூறி மத யானை
கொலை கோட்டால் உழப்பட்டு குருதியுள் குளித்தனரே

#2235
மண மாலை மடந்தையர் தம் மெல் விரலால் தொடுத்து அணிந்த
இணர் மாலை இரும் குஞ்சி ஈர்ம் குருதி புனல் அலைப்ப
நிண மாலை குடர் சூடி நெருப்பு இமையா நெய்த்தோரில்
பிண மாலை பேய் மகட்கு பெரு விருந்து அயர்ந்தனரே

#2236
தோலா போர் மற மன்னர் தொடி தோள்கள் எடுத்து ஓச்சி
மேல் ஆள் மேல் நெருப்பு உமிழ்ந்து மின் இலங்கும் அயில் வாளால்
கால் ஆசோடு அற எறிந்த கனை கழல் கால் அலை கடலுள்
நீல நீர் சுறா இனம் போல் நெய்த்தோருள் பிறழ்ந்தனவே

#2237
கருவி ஊடு உளம் கழிந்து கணை மொய்ப்ப கதம் சிறந்து
குருவி சேர் வரை போன்ற குஞ்சரம் கொடி அணிந்த
உருவ தேர் இற முருக்கி உருள் நேமி சுமந்து எழுந்து
பருதி சேர் வரை போல பகட்டு இனம் பரந்தனவே

#2238
மாலை வாய் நெடும் குடை மேல் மத யானை கை துணிந்து
கோல நீள் கொழும் குருதி கொள வீழ்ந்து கிடந்தன
மேலை நீள் விசும்பு உறையும் வெண் மதியம் விசும்பு இழுக்கி
நீல மாசுணத்தோடு நிலத்து இழிந்தது ஒத்தனவே

#2239
அஞ்சன நிறம் நீக்கி அரத்தம் போர்த்து அமர் உழக்கி
இங்குலிக இறுவரை போன்று இன களிறு இடை மிடைந்த
குஞ்சரங்கள் பாய்ந்திடலின் குமிழிவிட்டு உமிழ் குருதி
இங்குலிக அருவி போன்று எவ்வாயும் தோன்றினவே

#2240
குஞ்சரம் தலை அடுத்து கூந்தல்மா கால் அணையா
செஞ்சோற்றுக்கடன் நீங்கி சினவுவாள் பிடித்து உடுத்த
பஞ்சி மேல் கிடந்து உடை ஞாண் பதைத்து இலங்க கிடந்தாரை
அஞ்சி போந்து இன நரியோடு ஓரி நின்று அலறுமே

#2241
காதலார்க்கு அமிர்து ஈந்த கடல் பவழ கடிகை வாய்
ஏது இலா புள் உண்ண கொடேம் என்று வாய் மடித்து
காது அணிந்த பொன் தோடும் குண்டலமும் நக நகா
வீ ததைந்த வரை மார்பர் விஞ்சையர் போல் கிடந்தனரே

#2242
குடர் வாங்கு குறுநரிகள் கொழு நிண புலால் சேற்றுள்
தொடர் வாங்கு கதநாய் போல் தோன்றின தொடி திண் தோள்
படர் தீர கொண்டு எழுந்த பறவைகள் பட நாகம்
உடனே கொண்டு எழுகின்ற உவண புள் ஒத்தனவே

#2243
வரையோடும் உரும் இடிப்ப வளை எயிற்று கொழும் குருதி
நிரை உளை அரி நல் மா நிலம் மிசை புரள்வன போல்
புரை அறு பொன் மணி ஓடை பொடி பொங்க பொருது அழிந்து
அரைசோடும் அரசுவா அடு களத்து ஆழ்ந்தனவே

#2244
தடம் பெரும் குவளை கண் தாழ் குழலார் சாந்து அணிந்து
வடம் திளைப்ப புல்லிய வரை மார்பம் வாள் புல்ல
நடந்து ஒழுகு குருதியுள் நகா கிடந்த எரி மணி பூண்
இடம்படு செ வானத்து இளம் பிறை போல் தோன்றினவே

#2245
காளம் ஆகு இருளை போழ்ந்து கதிர் சொரி கடவுள் திங்கள்
கோள் அரா விழுங்க முந்நீர் கொழும் திரை குளித்ததே போல்
நீள் அமர் உழக்கி யானை நெற்றி மேல் தத்தி வெய்ய
வாளின் வாய் மதனன் பட்டான் விசயன் போர் விசயம் பெற்றான்

#2246
மன்மதன் என்னும் காளை மணி ஒலி புரவி தேர் மேல்
வில் மழை சொரிந்து கூற்றின் தெழித்தனன் தலைப்பெய்து ஆர்ப்ப
கொன் மலி மார்பன் பொன் தேர் கொடும் சிலை அறுப்ப சீறி
பொன் வரை புலியின் பாய்ந்து பூமி மேல் தோன்றினானே

#2247
நெற்றி மேல் கோல்கள் மூன்று நெருப்பு உமிழ்ந்து அழுந்த எய்ய
சுற்றுபு மாலை போல தோன்றல் தன் நுதலில் சூடி
பொற்றது ஓர் பவழம் தன் மேல் புனை மணி அழுத்தி ஆங்கு
செற்று எயிறு அழுந்த செ வாய் கௌவி வாள் உரீஇனானே

#2248
தோளினால் எஃகம் ஏந்தி தும்பி மேல் இவர கையால்
நீள மா புடைப்ப பொங்கி நிலத்து அவன் கவிழ்ந்து வீழ
கீள் இரண்டு ஆக குத்தி எடுத்திட கிளர் பொன் மார்பன்
வாளினால் திருகி வீசி மருப்பின் மேல் துஞ்சினானே

#2249
நனை கலந்து இழியும் பைம் தார் நான்மறையாளன் பைம்பொன்
புனை கல குப்பை ஒப்பான் புத்திமாசேனன் பொங்கி
வனை கல திகிரி தேர் மேல் மன்னரை குடுமி கொண்டான்
கனை எரி அழல் அம்பு எய்த கண்_நுதல்_மூர்த்தி ஒத்தான்

#2250
செண்பக பூம் குன்று ஒப்பான் தேவமாதத்தன் வெய்தா
விண் புக உயிரை பெய்வான் வீழ்தரு கடாத்த வேழம்
மண் பக இடிக்கும் சிங்கம் என கடாய் மகதர் கோமான்
தெண் கடல் தானை ஓட நாணி வேல் செறித்திட்டானே

#2251
சின்ன பூ அணிந்த குஞ்சி சீதத்தன் சினவு பொன் வாள்
மன்னருள் கலிங்கர் கோமான் மத்தகத்து இறுப்ப மன்னன்
பொன் அவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான்
மின் அவிர் பருதி முந்நீர் கோளொடும் வீழ்வது ஒத்தான்

#2252
கொடும் சிலை உழவன் மான் தேர் கோவிந்தன் என்னும் சிங்கம்
மடங்கரும் சீற்ற துப்பின் மாரட்டன் என்னும் பொன் குன்று
இடந்து பொன் தூளி பொங்க களிற்றொடும் இறங்கி வீழ
அடர்ந்து எறி பொன் செய் அம்பின் அழன்று இடித்திட்டது அன்றே

#2253
கோங்கு பூத்து உதிர்ந்த குன்றின் பொன் அணி புளகம் வேய்ந்த
பாங்கு அமை பரும யானை பல்லவ தேச மன்னன்
தேம் கமழ் தெரியல் தீம் பூம் தாரவன் ஊர்ந்த வேழம்
காம்பிலிக்கு இறைவன் ஊர்ந்த களிற்றொடு மலைந்தது அன்றே

#2254
கொந்து அழல் பிறப்ப தாக்கி கோடுகள் மிடைந்த தீயால்
வெந்தன விலை இலாத சாமரை வீர மன்னன்
அந்தரம் புதைய வில்-வாய் அரும் சரம் பெய்த மாரி
குந்தத்தால் விலக்கி வெய்ய கூற்று என முழங்கினானே

#2255
மற்றவன் உலோகபாலன் வயங்கு பொன் பட்டம் ஆர்ந்த
நெற்றி மேல் எய்த கோலை பறித்திட உமிழ்ந்த நெய்த்தோர்
உற்றவன் களிற்றில் பாய தோன்றுவான் உதயத்து உச்சி
ஒற்றை மா கதிரை நீட்டி ஒண் சுடர் இருந்தது ஒத்தான்

#2256
கொடு மரம் குழைய வாங்கி கொற்றவன் எய்த கோல்கள்
நெடு மொழி மகளிர் கோல நிழல் மணி முலைகள் நேர்பட்டு
உடன் உழ உவந்த மார்பம் மூழ்கலில் சிங்கம் போல
கடல் மருள் சேனை சிந்த காம்பிலி மன்னன் வீழ்ந்தான்

#2257
பொன் நிற கோங்கம் பொன் பூம் குன்று என பொலிந்த மேனி
நல் நிற மாவின் மேலான் நலம் கொள் தார் நபுலன் என்பான்
மின் நிற எஃகம் ஏந்தி வீங்கு நீர் மகதையார் கோன்
கொன் நிற களிற்றின் நெற்றி கூந்தல்மா பாய்வித்தானே

#2258
ஏந்தல் தன் கண்கள் வெய்ய இமைத்திட எறிதல் ஓம்பி
நாந்தக உழவன் நாணி நக்கு நீ அஞ்சல் கண்டாய்
காய்ந்திலேன் என்று வல்லே கலின மா குன்றின் பொங்கி
பாய்ந்தது ஓர் புலியின் மற்று ஓர் பகட்டின் மேல் பாய்வித்தானே

#2259
கை படை ஒன்றும் இன்றி கை கொட்டி குமரன் ஆர்ப்ப
மெய் படை வீழ்த்தல் நாணி வேழமும் எறிதல் செல்லான்
மை படை நெடும் கண் மாலை மகளிர் தம் வனப்பின் சூழ்ந்து
கை படு பொருள் இலாதான் காமம் போல் காளை மீண்டான்

#2260
மண் காவலை மகிழாது இவண் உடனே புகழ் ஒழிய
விண் காவலை மகிழ்வீர் நனி உளிரோ என விபுலன்
வண் காரிருள் மின்னே உமிழ் நெய் வாயது ஓர் அயில் வாள்
கண் காவல கழுகு ஓம்புவது உயரா நனி வினவும்

#2261
வீறு இன்மையின் விலங்காம் என மத வேழமும் எறியான்
ஏறு உண்டவர் நிகர் ஆயினும் பிறர் மிச்சில் என்று எறியான்
மாறு அன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் எறியான்
ஆறு அன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன்

#2262
ஒன்று ஆயினும் பல ஆயினும் ஓர் ஓச்சினுள் எறிய
வென்று ஆயின மத வேழமும் உளவோ என வினவி
பொன் தாழ் வரை புலி போத்து என புனை தார் மிஞிறு ஆர்ப்ப
சென்றான் இகல் களிறு ஆயிரம் இரிய சின வேலோன்

#2263
புடை தாழ் குழை பெரு வில் உயர் பொன் ஓலையொடு எரிய
உடை நாணொடு கடி வட்டினொடு ஒளிர் வாளினொடு ஒருவன்
அடையா நிகர் எறி நீ என அதுவோ என நக்கான்
கிடை ஆயினன் இவனே என கிளர் ஆண் அழகு உடையான்

#2264
இன் நீரின திரை மேல் இரண்டு இள வெம் சுடர் இகலி
மின்னோடு அவை சுழன்று ஆயிடை விளையாடுகின்றன போல்
பொன் நாணினர் பொருவில் உயர் புனை கேடகம் திரியா
கொன் வாளினர் கொழும் தாரினர் கொடி மார்பினர் திரிந்தார்

#2265
விருந்து ஆயினை எறி நீ என விரை மார்பகம் கொடுத்தாற்கு
அரும் பூண் அற எறிந்து ஆங்கு அவன் நினது ஊழ் இனி எனவே
எரிந்து ஆர் அயில் இடை போழ்ந்தமை உணராது அவன் நின்றான்
சொரிந்தார் மலர் அர மங்கையர் தொழுதார் விசும்பு அடைந்தான்

#2266
நித்தில குப்பை போல நிழல் உமிழ்ந்து இலங்கும் மேனி
பத்தி பூண் அணிந்த மார்பின் பதுமுகன் பைம்பொன் சூழி
மொய்த்து எறி ஓடை நெற்றி மும்மத களிற்றின் மேலான்
கைத்தலத்து எஃகம் ஏந்தி காமுகன் கண்டு காய்ந்தான்

#2267
மாற்றவன் சேனை தாக்கி தளர்ந்த பின் வன்கண் மள்ளர்
ஆற்றலோடு ஆண்மை தோன்ற ஆருயிர் வழங்கி வீழ்ந்தார்
காற்றினால் புடைக்கப்பட்டு கடல் உடைந்து ஓட காமர்
ஏற்று இளம் சுறாக்கள் எங்கும் கிடந்தவை போல ஒத்தார்

#2268
தூசு உலாம் பரவை அல்குல் துணை முலை மகளிர் ஆடும்
ஊசல் போல் சேனை ஓட பதுமுகன் களிற்றை உந்தி
மாசில் சீர் மழையின் நெற்றி மா மதி நுழைவதே போல்
காய் சின களிற்றின் நெற்றி ஆழி கொண்டு அழுத்தினானே

#2269
பெரு வலி அதனை நோனான் பிண்டிபாலத்தை ஏந்தி
அரு வரை நெற்றி பாய்ந்த ஆய் மயில் தோகை போல
சொரி மத களிற்றின் கும்பத்து அழுத்தலின் தோன்றல் சீறி
கரு வலி தட கை வாளின் காளையை வெளவினானே

#2270
தீ முகத்து உமிழும் வேல் கண் சில் அரி சிலம்பினார்-தம்
காமுகன் களத்து வீழ கை விரல் நுதியின் சுட்டி
பூ முக மாலை மார்பன் பொன் அணி கவசம் மின்ன
கோமுகன் கொலைவல் யானை கூற்று என கடாயினானே

#2271
சாரிகை திரியும் யானை உழக்கலின் தரணி தன் மேல்
ஆர்கலி குருதி வெள்ளம் அரும் துகள் கழுமி எங்கும்
வீரிய காற்றில் பொங்கி விசும்பு போர்த்து எழுதப்பட்ட
போர் நிலை களத்தை ஒப்ப குருதி வான் போர்த்தது அன்றே

#2272
சென்றது தட கை தூணி சேந்த கண் புருவம் கோலி
நின்ற வில் குனிந்தது அம்பு நிமிர்ந்தன நீங்கிற்று ஆவி
வென்றி கொள் சரங்கள் மூழ்கி மெய் மறைத்திட்டு மின் தோய்
குன்றின் மேல் பவழம் போல கோமுகன் தோன்றினானே

#2273
பனி வரை முளைத்த கோல பருப்பு உடை பவழம் போல
குனி மருப்பு உதிரம் தோய்ந்த குஞ்சரம் கொள்ள உந்தி
கனி படு கிளவியார் தம் கதிர் முலை பொருது சேந்த
துனி வரை மார்பன் சீறி சுடு சரம் சிதறினானே

#2274
பன்னல் அம் பஞ்சி குன்றம் படர் எரி முகந்தது ஒப்ப
தன் இரு கையினாலும் தட கை மால் யானையாலும்
இன்னுயிர் பருகி சேனை எடுத்து கொண்டு இரிய ஓட்டி
கொன் முரண் தோன்ற வெம்பி கொலை களிற்று உழவன் ஆர்த்தான்

#2275
தருக்கொடு குமரன் ஆர்ப்ப தன் சிலை வளைய வாங்கி
ஒருக்கு அவன் கையும் வாயும் உளம் கிழித்து உடுவம் தோன்ற
சுருக்கு கொண்டிட்ட வண்ணம் தோன்றல் எய்திடுதலோடும்
மருப்பு இற களிறு குத்தி வயிரம் தான் கழிந்தது அன்றே

#2276
நித்தில மணி வண்டு என்னும் நெடு மத களிறு பாய
முத்து உடை மருப்பு வல்லே உடைந்து முத்து ஒழுகு குன்றின்
மத்தக யானை வீழ்ந்து வயிரம் கொண்டு ஒழிந்தது ஆங்கு
பத்திர கடிப்பு மின்ன பதுமுகன் பகடு பேர்த்தான்

#2277
பத்திர கடிப்பு மின்ன பங்கியை வம்பின் கட்டி
கொத்து அலர் தும்பை சூடி கோவிந்தன் வாழ்க என்னா
கை தலத்து எஃகம் ஏந்தி காளை போய் வேறு நின்றான்
மத்தக யானை மன்னர் வயிறு எரி தவழ்ந்தது அன்றே

#2278
மேகலை பரவை அல்குல் வெள் வளை மகளிர் செம் சாந்து
ஆகத்தை கவர்ந்து கொண்ட அணி முலை தடத்து வைகி
பாகத்தை படாத நெஞ்சின் பல்லவ தேய மன்னன்
சேவகன் சிங்கநாதன் செருக்களம் குறுகினானே

#2279
புனை கதிர் மருப்பு தாடி மோதிரம் செறித்து பொன்செய்
கனை கதிர் வாளை ஏந்தி கால் கழல் அணிந்து நம்மை
இனையன பட்ட ஞான்றால் இறையவர்கள் நினைப்பது என்றே
முனை அழல் முளி புல் கானம் மேய்ந்து என நீந்தினானே

#2280
தார் அணி பரவை மார்பில் குங்குமம் எழுதி தாழ்ந்த
ஆரமும் பூணும் மின்ன அரு விலை பட்டின் அம் கண்
ஏர் பட கிடந்த பொன் ஞாண் இருள் கெட விழிப்ப வெய்ய
பூரணசேனன் வண் கை பொரு சிலை ஏந்தினானே

#2281
ஊன் அமர் குறடு போல இரும்பு உண்டு மிகுத்த மார்பில்
தேன் அமர் மாலை தாழ சிலை குலாய் குனிந்தது ஆங்கண்
மான் அமர் நோக்கினாரும் மைந்தரும் குழீஇய போருள்
கான் அமர் காமன் எய்த கணை என சிதறினானே

#2282
வண்டு அலை மாலை தாழ மது உண்டு களித்து வண் கை
புண் தலை வேலை ஏந்தி போர்க்களம் குறுகி வாழ்த்தி
கண்படு-காறும் எந்தை கட்டியங்காரன் என்றே
உண்டு ஒலை ஆர்க வேல் என்று உறுவலி தாக்கினானே

#2283
கூற்று என வேழம் வீழா கொடி நெடும் தேர்கள் நூறா
ஏற்றவர் தம்மை சீறா ஏந்திர நூழில் செய்யா
ஆற்றல் அம் குமரன் செல்வான் அலை கடல் திரையின் நெற்றி
ஏற்று மீன் இரிய பாய்ந்த எறி சுறா ஏறு போன்றான்

#2284
மாலை கண் ஆம்பல் போல மகளிர் தம் குழாத்தில் பட்டார்
கோல வாள் போருள் பட்டால் குறு முயல் கூடு கண்டு
சால தாம் பனிக்கும் பொய்கை தாமரை நீரர்-ஆயின்
ஞாலத்தார் ஆண்மை என்னாம் என நகா வருகின்றானே

#2285
முடி சடை முனிவன் அன்று கேள்வியில் கொண்ட வேல் கண்
மடத்தகை மகளிர் கோல வரு முலை உழக்க சேந்து
கொடி பல அணிந்த மார்பின் கோவிந்தன் வாழ்க என்று
நடத்துவான் அவனை நோக்கி நகா சிலை பாரித்தானே

#2286
போர்த்த நெய்த்தோரன் ஆகி புலால் பருந்து ஆர்ப்ப செல்வான்
சீர் தகையவனை கண்டு என் சினவு வேல் இன்னும் ஆர்ந்தின்று
ஊர்த்து உயிர் உன்னை உண்ண குறை வயிறு ஆரும் என்று ஆங்கு
ஆர்த்த வாய் நிறைய எய்தான் அம்பு பெய் தூணி ஒத்தான்

#2287
மொய்ப்படு சரங்கள் மூழ்க முனை எயிற்று ஆளி போல
அப்பு அணை கிடந்த மைந்தன் அரு மணி திருவில் வீசும்
செப்பு இள முலையினார் கண் சென்று உலாய் பிறழ சிந்தி
கைப்பட எடுத்திட்டு ஆடும் பொலம் கழற்காயும் ஒத்தான்

#2288
புனை கதிர் பொன் செய் நாணின் குஞ்சியை கட்டி நெய்த்தோர்
நனை கதிர் எஃகம் ஏந்தி நந்தன் வாழ்க என்ன நின்ற
வினை ஒளிர் காளை வேலை கடக்கலார் வேந்தர் நின்றார்
கனை கடல் வேலை எல்லை கடக்கலா-வண்ணம் நின்றார்

#2289
நின்ற அ படை உளானே ஒரு மகன் நீல குஞ்சி
மன்றல மாலை நெற்றி மழ களிறு அன்றி வீழான்
வென்று இயங்கு ஒளிறும் வெள் வேல் மின் என வெகுண்டு விட்டான்
சென்ற வேல் விருந்து செம் கண் மறவன் நக்கு எதிர்கொண்டானே

#2290
மான் வயிறு ஆர்ந்து நோக்கும் வெருவுறு மருளின் நோக்கின்
தேன் வயிறு ஆர்ந்த கோதை தீம் சொலார் கண்கள் போலும்
ஊன் வயிறு ஆர்ந்த வெள் வேல் ஒய் என பறித்து நக்கான்
கான் வயிறு ஆர்ந்து தேக்கி களி வண்டு கனைக்கும் தாரான்

#2291
விட்டு அழல் சிந்தி வெள் வேல் விசும்பின் வீழ் மின்னின் நொய்தா
கட்டு அழல் நெடும் கண் யாதும் இமைத்திலன் மகளிர் ஓச்சும்
மட்டு அவிழ் மாலை போல மகிழ்ந்து பூண் மார்பத்து ஏற்று
கட்டு அழல் எஃகம் செல்ல கால் நெறி ஆயினானே

#2292
கவி மதம் கடந்து காமர் வனப்பு வீற்று இருந்த கண்ணார்
குவி முலை நெற்றி தீம் தேன் கொப்புளித்து இட்ட பைம் தார்
செவி மத கடல் அம் கேள்வி சீவகன் கழல்கள் வாழ்த்தி
சவி மது தாம மார்பின் சல நிதி தாக்கினானே

#2293
குஞ்சரம் குனிய நூறி தடாயின குருதி வாள் தன்
நெஞ்சகம் நுழைந்த வேலை பறித்து வான் புண்ணுள் நீட்டி
வெம் சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு
அஞ்சி மற்ற அரசர் யானை குழாத்தொடும் இரிந்திட்டாரே

#2294
தோட்டு வண்டு ஒலியல் மாலை துடி இடை மகளிர் ஆய்ந்த
மோட்டு வெண் முத்தம் மின்னும் முகிழ் முலை உழுது சாந்தம்
கோட்டு மண் கொண்ட மார்பம் கோதை வாள் குளித்து மூழ்கி
கோட்டு மண் கொள்ள நின்றான் குருசில் மண் கொள்ள நின்றான்

#2295
எரி மணி குப்பை போல இருள் அற விளங்கும் மேனி
திரு மணி செம்பொன் மார்பின் சீவகன் சிலை கை ஏந்தி
அரு மணி அரசர் ஆவி அழல் அம்பின் கொள்ளை சாற்றி
விரி மணி விளங்கு மான் தேர் விண் தொழ ஏறினானே

#2296
கரு வளி முழக்கும் காரும் கனை கடல் ஒலியும் கூடி
அரு வலி சிங்க ஆர்ப்பும் ஆங்கு உடன் கூடிற்று என்ன
செரு விளை கழனி மள்ளர் ஆர்ப்பொடு சிவணி செம்பொன்
புரி வளை முரசம் ஆர்ப்ப போர் தொழில் தொடங்கினானே

#2297
அரசர் தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி ஆர்க்கும்
முரசமும் குடையும் தாரும் பிச்சமும் சுமந்து மாவும்
விரை பரி தேரும் ஈர்த்து வேழம் கொண்டு ஒழுகி வெள்ள
குரை புனல் குருதி செல்ல குமரன் வில் குனிந்தது அன்றே

#2298
கேழ் கிளர் எரி கண் பேழ் வாய் கிளர் பெரும் பாம்பினோடும்
சூழ் கதிர் குழவி திங்கள் துறுவரை வீழ்வதே போல்
தாழ் இரும் தட கையோடும் தட மருப்பு இரண்டும் அற்று
வீழ் தர பரந்த அப்பு நிழலில் போர் மயங்கினாரே

#2299
ஆடவர் ஆண்மை தோற்றும் அணி கிளர் பவழ திண் கை
நீடு எரி நிலை கண்ணாடி போர்க்களத்து உடைந்த மைந்தர்
காடு எரி கவர கல் என் கவரிமா விரிந்த வண்ணம்
ஓட கண்டு உருவ பைம் தார் அரிச்சந்தன் உரைக்கின்றானே

#2300
மஞ்சு இவர் மின் அனார் தம் வால் அரி சிலம்பு சூழ்ந்து
பஞ்சி கொண்டு எழுதப்பட்ட சீறடி பாய்தல் உண்ட
குஞ்சி அம் குமரர் தங்கள் மறம் பிறர் கவர்ந்து கொள்ள
அஞ்சி இட்டு ஓடி போகின் ஆண்மை யார் கண்ணது அம்மா

#2301
உழை இனம் உச்சி கோடு கலங்குதல் உற்ற-போதே
விழைவு அற விதிர்த்து வீசி விட்டு எறிந்திடுவது ஒப்ப
கழலவர் உள்ளம் அஞ்சி கலங்குமேல் அதனை வல்லே
மழை மினின் நீக்கி இட்டு வன்கண்ணர் ஆபர் அன்றே

#2302
தன் புறம்தந்து வைத்த தலைமகற்கு உதவி ஈந்தால்
கற்பக மாலை சூட்டி கடி அர மகளிர் தோய்வர்
பொற்ற சொல் மாலை சூட்டி புலவர்கள் புகழ கல் மேல்
நிற்பர் தம் வீரம் தோன்ற நெடும் புகழ் பரப்பி என்றான்

#2303
பச்சிரும்பு எஃகு இட்டு ஆங்கு படையை கூர்ப்பு இடுதலோடும்
கச்சையும் கழலும் வீக்கி காஞ்சன தளிவம் வாய்க்கு இட்டு
அச்சு உற முழங்கி ஆரா அண்ணல் அம் குமரன் கையுள்
நச்சு எயிற்று அம்பு தின்ன நாள் இரை ஆகல் உற்றார்

#2304
வட திசை எழுந்த மேகம் வலன் உராய் மின்னு சூடி
குட திசை சேர்ந்து மாரி குளிறுபு சொரிவதே போல்
படர் கதிர் பைம்பொன் திண் தேர் பாங்குற இமைப்பின் ஊர்ந்தான்
அடர் சிலை அப்பு மாரி தாரை நின்றிட்டது அன்றே

#2305
அற்று வீழ் தலைகள் யானை உடலின் மேல் அழுந்தி நின்ற
பொற்ற திண் சரத்தில் கோத்த பொரு சரம் தாள்கள் ஆக
தெற்றி மேல் பூத்த செந்தாமரை மலர் போன்ற செம் கண்
மற்று அ தாது உரிஞ்சி உண்ணும் வண்டு இனம் ஒத்த அன்றே

#2306
திங்களோடு உடன் குன்று எலாம் துளங்கி மா நிலம் சேர்வ போல்
சங்கம் மத்தகத்து அலமர தரணி மேல் களிறு அழியவும்
பொங்கு மா நிரை புரளவும் பொலம் கொள் தேர் பல முறியவும்
சிங்கம் போல் தொழித்து ஆர்த்து அவன் சிறுவர் தேர் மிசை தோன்றினார்

#2307
சந்தனம் சொரி தண் கதிர் திங்கள் அம் தொகை தாம் பல
குங்கும கதிர் குழவி அம் செல்வனோடு உடன் பொருவ போல்
மங்குல் மின் என வள்ளல் தேர் மைந்தர் தேரொடு மயங்கலின்
வெம் கண் வில் உமிழ் வெம் சரம் மிடைந்து வெம் கதிர் மறைந்ததே

#2308
குருதி வாள் ஒளி அரவினால் கொள்ளப்பட்ட வெண் திங்கள் போல்
திருவ நீர் திகழ் வலம்புரி வாய் வைத்து ஆங்கு அவன் தெழித்தலும்
பொருவில் கீழ் வளி முழக்கினால் பூமி மேல் சனம் நடுங்கிற்றே
அரவ வெம் சிலை வளைந்ததே அண்ணல் கண் அழல் உமிழ்ந்ததே

#2309
கங்கை மா கடல் பாய்வதே போன்று காளை தன் கார் முகம்
மைந்தர் ஆர்த்து அவர் வாய் எலாம் நிறைய வெம் சரம் கான்ற பின்
நெஞ்சம் போழ்ந்து அழல் அம்பு உண நீங்கினார் உயிர் நீள் முழை
சிங்க ஏறுகள் கிடந்த போல் சிறுவர் தேர் மிசை துஞ்சினார்

#2310
நிவந்த வெண்குடை வீழவும் வேந்தர் நீள் விசும்பு ஏறவும்
உவந்து பேய் கணம் ஆடவும் ஓரி கொள்ளை கொண்டு உண்ணவும்
கவந்தம் எங்கணும் ஆடவும் களிறு மாவொடு கவிழவும்
சிவந்த சீவகசாமி கண் புருவமும் முரி முரிந்தவே

#2311
பொய்கை போர்க்களம் புற இதழ் புலவு வாள் படை புல் இதழ்
ஐய-கொல் களிறு அக இதழ் அரசர் அல்லி தன் மக்களா
மையில் கொட்டை அம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையால்
பைய உண்ட பின் கொட்டை மேல் பவித்திர தும்பி பறந்ததே

#2312
கலை முத்தம் கொள்ளும் அல்குல் கார் மழை மின் அனார்-தம்
முலை முத்தம் கொள்ள சாந்தம் அழிந்து தார் முருகு விம்மும்
மலை முத்தம் கொள்ளும் மார்பின் மன்னனும் கண்டு காய்ந்தான்
சிலை முத்தம் கொள்ளும் திண் தோள் செம்மலும் தீயின் சேந்தான்

#2313
தன் மதம் திவண்ட வண்டு தங்கிய காட்டுள் வேழம்
பின் மதம் செறித்திட்டு அஞ்சி பிடி மறந்து இரிந்து போகும்
வெல் மத களிற்று வெய்ய அசனி வேகத்தின் மேலான்
மின் உமிழ் மாலை வேந்தன் வீரற்கு விளம்பினானே

#2314
நல்வினை உடைய நீரார் நஞ்சு உணின் அமுதம் ஆகும்
இல்லையேல் அமுதும் நஞ்சாம் இன்னதால் வினையின் ஆக்கம்
கொல்வல் யான் இவனை என்றும் இவன் கொல்லும் என்னை என்றும்
அல்லன நினைத்தல் செல்லார் அறிவினால் பெரிய நீரார்

#2315
அகப்படு பொறியினாரை ஆக்குவார் யாவர் அம்மா
மிகப்படு பொறியினாரை வெறியரா செய்யலாமோ
நகை கதிர் மதியம் வெய்தா நடுங்க சுட்டிடுதல் உண்டே
பகை கதிர் பருதி சந்தும் ஆலியும் பயத்தல் உண்டே

#2316
புரி முத்த மாலை பொன் கோல் விளக்கினுள் பெய்த நெய்யும்
திரியும் சென்று அற்ற-போழ்தே திரு சுடர் தேம்பின் அல்லால்
எரி மொய்த்து பெருகல் உண்டோ இருவினை சென்று தேய்ந்தால்
பரிவு உற்று கெடாமல் செல்வம் பற்றி யார் அதனை வைப்பார்

#2317
நல் ஒளி பவள செ வாய் நல் மணி எயிறு கோலி
வில் இட நக்கு வீரன் அஞ்சினாய் என்ன வேந்தன்
வெல்வது விதியின் ஆகும் வேல் வரின் இமைப்பேன் ஆயின்
சொல்லி நீ நகவும் பெற்றாய் தோன்றல் மற்று என்னை என்றான்

#2318
பஞ்சி மெல் அடியினார்-தம் பாடகம் திருத்தி சேந்து
நெஞ்சு நொந்து அமுத கண்ணீர் துடைத்தலின் நிறைந்த கோல
அஞ்சன கலுழி அம் சேறு ஆடிய கடக வண் கை
வெம் சிலை கொண்டு வெய்ய உரும் என முழங்கி சொன்னான்

#2319
இல்லாளை அஞ்சி விருந்தின் முகம் கொன்ற நெஞ்சின்
புல்லாளன் ஆக மறம் தோற்பின் என புகைந்து
வில் வாள் அழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கி
கொல் யானை உந்தி குடை மேலும் ஓர் கோல் தொடுத்தான்

#2320
தொடுத்த ஆங்கு அ அம்பு தொடை வாங்கி விடாத முன்னம்
அடுத்து ஆங்கு அ அம்பும் சிலையும் அதன் நாணும் அற்று
கடுத்து ஆங்கு வீழ கதிர் வான் பிறை அம்பின் எய்தான்
வடி தாரை வெல் வேல் வயிரம் மணி பூணினானே

#2321
அம்பும் சிலையும் அறுத்தான் என்று அழன்று பொன் வாள்
வெம்ப பிடித்து வெகுண்டு ஆங்கு அவன் தேரின் மேலே
பைம்பொன் முடியான் பட பாய்ந்திடுகு என்று பாய்வான்
செம்பொன் உலகின் இழிகின்ற ஓர் தேவன் ஒத்தான்

#2322
மொய் வார் குழலார் முலை போர்க்களம் ஆய மார்பில்
செய்யோன் செழும் பொன் சரம் சென்றன சென்றது ஆவி
வெய்தா விழியா வெருவ துவர் வாய் மடியா
மை ஆர் விசும்பின் மதி வீழ்வது போல வீழ்ந்தான்

#2323
கட்டியங்காரன் என்னும் கலி அரசு அழிந்தது ஆங்கு
பட்ட இ பகைமை நீங்கி படை தொழில் ஒழிக என்னா
கொட்டினர் முரசம் மள்ளர் ஆர்த்தனர் குருதி கண்ணீர்
விட்டு அழுது அவன்-கண் ஆர்வம் மண்மகள் நீக்கினாளே

#2324
ஒல்லை நீர் உலகம் அஞ்ச ஒளி உமிழ் பருதி-தன்னை
கல் என கடலின் நெற்றி கவுள் படுத்திட்டு நாகம்
பல் பகல் கழிந்த பின்றை பல் மணி நாகம் தன்னை
வல்லை வாய் போழ்ந்து போந்து ஓர் மழ கதிர் நின்றது ஒத்தான்

#2325
கோட்டு மீன் குழாத்தின் மள்ளர் ஈண்டினர் மன்னர் சூழ்ந்தார்
மோட்டு மீன் குழாத்தின் எங்கும் தீவிகை மொய்த்த முத்தம்
ஆட்டு நீர் கடலின் ஆர்த்தது அணி நகர் வென்றி மாலை
கேட்டு நீர் நிறைந்து கேடு இல் விசையை கண் குளிர்ந்த அன்றே

#2326
அணி முடி அரசர் மாலை அழல் நுதி வாள்கள் என்னும்
மணி புனை குடத்தின் நெய்த்தோர் மண்ணு நீர் மருள ஆட்டி
பணை முலை பைம்பொன் மாலை பாசிழை பூமி தேவி
இணை முலை ஏகம் ஆக நுகரிய எய்தினானே
@11 பூமகள் இலம்பகம்

#2327
கண்ணாடி அன்ன கடி மார்பன் சிவந்து நீண்ட
கண் ஆடி வென்று களம் கண்டு நியமம் முற்றி
கள் நாடி வண்டு பருகும் கமழ் மாலை மூதூர்
கண் ஆடு யானை அவர் கை தொழ சென்று புக்கான்

#2328
கூடு ஆர் புலியும் முழை கோளரி ஏறும் அன்ன
கூடார் மெலிய கொலை வேல் நினைந்தானை ஏத்தி
கூடு ஆர மாலை குவி மென் முலை கோதை நல்லார்
கூடாரம் மாட மயில் போல குழீஇயினாரே

#2329
மாலை செற்றான் மக்களொடு எல்லாம் உடனே இ
மாலை செற்றான் வை நுனை அம்பின் இவன் என்பார்
மாலைக்கு இன்றே மாய்ந்தது மாயா பழி என்பார்
மாலைக்கு ஏற்ற வார் குழல் வேய் தோள் மடநல்லார்

#2330
நாகம் நெற்றி நல் மணி சிந்தும் அருவி போல்
நாகம் நெற்றி நல் மணி ஓடை நற விம்மும்
நாகம் நெற்றி நல் மலர் சிந்தி நளிர் செம்பொன்
நாகம் நெற்றி மங்கையர் ஒத்தார் மடநல்லார்

#2331
கோள் திக்கு ஓடும் கூம்பு உயர் நாவாய் நெடு மாடம்
கோடி பட்டின் கொள் கொடி கூட புனைவாரும்
கோடி தானை கொற்றவன் காண்பான் இழை மின்ன
கோடி செம்பொன் கொம்பரின் முன்முன் தொழுவாரும்

#2332
அம்பு உகை வல் வில் ஆர் கழல் மள்ளர் திறல் ஏத்த
அம்பு கை கொண்டால் ஆர் இவற்கு ஈண்டு நிகர் ஆவார்
அம் புகை ஆர்ந்த அம் துகில் அல்குல் அவிர் கோதாய்
அம்பு கை காணாம் ஐயனை கையில் தொழுது என்பார்

#2333
மை துன நீண்ட மா மணி மாடம் மிசை ஏறி
மைத்து உன நீண்ட வாள் தடம் கண்ணார் மலர் தூவ
மைத்துன மன்னர் மால் களிறு ஏறி புடை சூழ
மை துன நீண்ட மா மணி வண்ண அவன் ஒத்தான்

#2334
ஊது வண்டு அரற்றும் உயர் தாமரை
போது பூம் கழுநீரொடு பூத்து உடன்
வீதி மல்கின போல் மிளிர் வேல் கணும்
மாதரார் முக பூவும் அலர்ந்தவே

#2335
வீணை வித்தகன் வேந்து அடு வீங்கு தோள்
காணும் காரிகையார் கதிர் வெம் முலை
பூணும் ஆரமும் ஈன்று பொன் பூத்து அலர்ந்து
யாணர் ஊர் அமராபதி போன்றதே

#2336
தேம் பெய் கற்பக தாரவன் சேர்தலும்
பூம் பெய் கோதை புரிசை குழாம் நலம்
ஓம்பு திங்கள் உலந்து சுடர் கண்ட
ஆம்பல் ஆய் மலர் காடு ஒத்து அழிந்ததே

#2337
மாகம் முழக்கின் மணி நாகம் பதைப்பவே போல்
ஆகம் மறவர் அகன் கோயில் புக்கு அம் பொன் மாலை
தோகை மடவார் துவர் வாய் துடித்து அஞ்ச வெம்பா
வேகம் உடைத்தாய் விழியாது ஒழித்து ஏகுக என்றார்

#2338
செய் பாவை அன்னார் சிலம்பு ஆர்க்கும் மென் சீறடியார்
செய் பூம் தவிசின் மிசை அல்லது சேறல் இல்லார்
மை ஆர்ந்த கண்ணீர் மணி பூண் முலை பாய விம்மா
வெய்தா மடவார் வெறு வெம் நிலத்து ஏகினாரே

#2339
நெருப்பு உற்ற போல நிலம் மோந்துழி செய்ய ஆகி
பருக்கென்ற கோலம் மரல் பல் பழம் போன்று கொப்புள்
வருத்தம் மிழற்றி பசும்பொன் சிலம்பு ஓசை செய்ய
செருக்கு அற்ற பஞ்சி மலர் சீறடி நோவ சென்றார்

#2340
பொன் பூண் சுமந்து பொரு கோட்டை அழித்து வெம் போர்
கற்பான் எழுந்த முலையார் களம் கண்டு நீங்கி
நல் பூண் அணிந்த முலையார் நிலை கால் சரிந்து
நெற்றி நிறுத்து வடம் வைத்த முலையினாரும்

#2341
செம் கால் குழவி தழீஇயினார் திங்கள் புக்க நீரார்
அம் கான் முலையின் அரும் பால் வர பாயினாரும்
பைம் காசும் முத்தும் பவழத்தொடு பைம்பொன் ஆர்ந்த
பொங்கார் முலையார் திரு முற்றம் நிறைந்து புக்கார்

#2342
பெய் ஆர் முகிலில் பிறழ் பூம் கொடி மின்னின் மின்னா
நெய் ஆர்ந்த கூந்தல் நிழல் பொன் அரி மாலை சோர
கையார் வளையார் புலி கண்ணுற கண்டு சோரா
நையா துயரா நடுங்கும் பிணை மான்கள் ஒத்தார்

#2343
வட்டம் மலர் தார் அவனால் அருள் பெற்று வான் பொன்
பட்டம் அணிந்தாள் இவர் தங்களுள் யாவள் என்ன
மட்டு ஆர் அலங்கல் அவன் மக்களும் தானும்-மாதோ
பட்டார் அமருள் பசும்பொன் முடி சூழ என்றார்

#2344
மால் ஏறு அனையானொடு மக்களுக்கு அஃதோ என்னா
வேல் ஏறு பெற்ற பிணையின் நனி மாழ்கி வீழ்ந்து
சேல் ஏறு சின்னீர் இடை செல்வன போன்று செம் கண்
மேல் ஏறி மூழ்கி பிறழ்ந்து ஆழ்ந்த இறந்துபட்டாள்

#2345
ஐ வாய் அரவின் அவிர் ஆர் அழல் போன்று சீறி
வெய்யோன் உயிர்ப்பின் விடுத்தேன் என் வெகுளி வெம் தீ
மை ஆர் அணல மணி நாகம் கலுழன் வாய்பட்டு
உய்யா என நீர் உடன்று உள்ளம் உருகல் வேண்டா

#2346
மண் கேழ் மணியின் நுழையும் துகில் நூலின் வாய்த்த
நுண் கேழ் நுசுப்பின் மடவீர் நும்மை நோவ செய்யேன்
ஒண் கேழ் கழுநீர் ஒளி முத்தம் உமிழ்வதே போல்
பண் கேழ் மொழியீர் நெடும் கண் பனி வீழ்த்தல் வேண்டா

#2347
என் உங்கட்கு உள்ளம் இலங்கு ஈர் வளை கையினீரே
மன் இங்கு வாழ்வு தருதும் அவற்றானும் வாழ்-மின்
பொன் இங்கு கொண்டு புறம் போகியும் வாழ்-மின் என்றான்
வில் நுங்க வீங்கி விழு கந்து என நீண்ட தோளான்

#2348
தீ தும்மும் வேலான் திரு வாய் மொழி வான் முழக்கம்
வாய்த்து அங்கு கேட்டு மட மஞ்ஞை குழாத்தின் ஏகி
காய் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார்
சேய் செம் தவிசு நெருப்பு என்று எழும் சீறடியார்

#2349
காது ஆர் குழையும் கடல் சங்கமும் குங்குமமும்
போது ஆர் அலங்கல் பொறையும் பொறை என்று நீக்கி
தாது ஆர் குவளை தடம் கண் முத்து உருட்டி விம்மா
மாது ஆர் மயில் அன்னவர் சண்பக சாம்பல் ஒத்தார்

#2350
ஆய் பொன் புரிசை அணி ஆர் அகன் கோயில் எல்லாம்
காய் பொன் கடிகை கதிர் கை விளக்கு ஏந்தி மள்ளர்
மேய் பொன் அறையும் பிறவும் விரைந்து ஆய்ந்த-பின்றை
சேய் பொன் கமல மகள் கை தொழ சென்று புக்கான்

#2351
முலை ஈன்ற பெண்ணை திரள் தாமங்கள் தாழ்ந்து முற்றும்
மலை ஈன்ற மஞ்சின் மணி பூம் புகை மல்கி விம்ம
கலை ஈன்ற சொல்லார் கமழ் பூ அணை காவல் கொண்டார்
கொலை ஈன்ற வேல் கண்ணவர் கூடிய மார்பற்கு அன்றே

#2352
போர் கோலம் நீக்கி புகழ பொன்னின் எழுதப்பட்ட
வார் கோல மாலை முலையார் மண்ணுறுப்ப ஆடி
நீர் கோலம் செய்து நிழல் விட்டு உமிழ் மாலை மார்பன்
தார் கோலம் மான் தேர் தொகை மாமன் தொழுது சொன்னான்

#2353
எண் கொண்ட ஞாட்பின் இரும்பு எச்சில்படுத்த மார்பர்
புண் கொண்டு போற்றி புறம் செய்க என பொற்ப நோக்கி
பண் கொண்ட சொல்லார் தொழ பாம்பு அணை அண்ணல் போல
மண் கொண்ட வேலான் அடி தைவர வைகினானே

#2354
வாள்களாலே துகைப்புண்டு வரை புண் கூர்ந்த போல் வேழம்
நீள் கால் விசைய நேமி தேர் இமைத்தார் நிலத்தில் காண்கலா
தாள் வல் புரவி பண் அவிழ்த்த யானை ஆவித்தாங்கு அன்ன
கோள் வாய் எஃகம் இடம்படுத்த கொழும் புண் மார்பர் அயா உயிர்த்தார்

#2355
கொழு வாய் விழுப்புண் குரைப்பு ஒலியும் கூந்தல் மகளிர் குழை சிதறி
அழுவார் அழுகை குரல் ஒலியும் அதிர் கண் முரசின் முழக்கு ஒலியும்
குழுவாய் சங்கின் குரல் ஒலியும் கொலை வல் யானை செவி புடையும்
எழுவார் யாழும் ஏத்து ஒலியும் இறைவன் கேளா துயில் ஏற்றான்

#2356
தொடி தோள் மகளிர் ஒருசாரார் துயர கடலுள் அவர் நீந்த
வடி கண் மகளிர் ஒருசாரார் வரம்பு இல் இன்ப கடல் நீந்த
பொடித்தான் கதிரோன் திரை நெற்றி புகழ் மு_பழ நீர் பளிங்கு அளைஇ
கடி பூ மாலையவர் ஏந்த கமழ் தாமரை கண் கழீஇயினான்

#2357
முனைவன் தொழுது முடி துளக்கி முகந்து செம்பொன் கொள வீசி
நினையல் ஆகா நெடு வாழ்க்கை வென்றி கோலம் விளக்கு ஆக
புனையப்பட்ட அஞ்சனத்தை புகழ எழுதி புனை பூணான்
கனை வண்டு ஆர்க்கும் அலங்கலும் கலனும் ஏற்ப தாங்கினான்

#2358
முறிந்த கோலம் முகிழ் முலையார் பரவ மொய் ஆர் மணி செப்பில்
உறைந்த வெண் பட்டு உடுத்து ஒளி சேர் பஞ்ச வாசம் கவுள் கொண்டு
செறிந்த கழுநீர் பூ பிடித்து சேக்கை மரீஇய சிங்கம் போல்
அறிந்தார் தமக்கும் அநங்கனாய் அண்ணல் செம்மாந்து இருந்தானே

#2359
வார் மீது ஆடி வடம் சூடி பொற்பு ஆர்ந்து இருந்த வன முலையார்
ஏர் மீது ஆடி சாந்து எழுதி இலங்கு முந்நீர் வலம்புரி போல்
கார் மீது ஆடி கலம் பொழியும் கடக தட கை கழலோனை
போர் மீது ஆடி புறம் கண்ட புலால் வேல் மன்னர் புடை சூழ்ந்தார்

#2360
தொல்லை நால் வகை தோழரும் தூ மணி நெடும் தேர்
மல்லல் தம்பியும் மாமனும் மது விரி கமழ் தார்
செல்வன் தாதையும் செழு நகரொடு வள நாடும்
வல்லை தொக்கது வளம் கெழு கோயிலுள் ஒருங்கே

#2361
துளங்கு வெண் மதி உகுத்த வெண் கதிர் தொகுத்தது போல்
விளங்கு வெள்ளி அம் பெரு மலை ஒழிய வந்து எழிலார்
வளம் கொள் மாநகர் மழ கதிர் குழீஇயின போல
களம் கொண்டு ஈண்டினர் கதிர் முடி விஞ்சையர் பொலிந்தே

#2362
எண்ணம் என் இனி எழில் முடி அணிவது துணி-மின்
கண்ணனாரொடு கடிகையும் வருக என வரலும்
பண்ணினார் முடி பழிச்சிய மணி பொனில் குயிற்றி
அண்ணல் ஆய் கதிர் அலம்வர புலமகள் நகவே

#2363
விரியும் மாலையன் விளங்கு ஒளி முடியினன் துளங்கி
திருவில் மால் வரை குலவியது அனையது ஓர் தேம் தார்
அருவி போல்வது ஓர் ஆரமும் மார்பு-இடை துயல
எரியும் வார் குழை இமையவன் ஒருவன் வந்து இழிந்தான்

#2364
கொம்மை ஆர்ந்தன கொடிபட எழுதின குவிந்த
அம்மை ஆர்ந்தன அழகிய மணி வடம் உடைய
வெம்மை செய்வன விழுத்தகு முலை தடம் உடைய
பொம்மல் ஓதியர் பொழி மின்னு கொடி என இழிந்தார்

#2365
மையல் யானையின் படு மதம் கெட பகட்டு அரசன்
செய்த மும்மதம் போல் திசைதிசை-தொறும் கமழும்
தெய்வ வாசத்து திருநகர் வாசம் கொண்டு ஒழிய
வெய்யர் தோன்றினர் விசும்பு-இடை சிறப்போடும் பொலிந்தே

#2366
வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்து கை விதிர்ப்ப
பருதி போல்வன பால்கடல் நூற்று எட்டு குடத்தால்
பொருவில் பூ மழை பொன் மழையொடு சொரிந்து ஆட்டி
எரி பொன் நீள் முடி கவித்தனன் பவித்திரன் தொழுதே

#2367
தேவ துந்துபி தேவர்கட்கு ஓகை உய்த்து உரைப்பான்
ஆவி அம் புகை அணி கிளர் சுண்ணமோடு எழுந்த
நாவின் ஏத்தினர் அரம்பையர் நரம்பு ஒலி உளர்ந்த
காவல் மன்னரும் கடிகையும் கடவது நிறைத்தார்

#2368
திருவ மா மணி காம்பொடு திரள் வடம் திளைக்கும்
உருவ வெண் மதி இது என வெண்குடை ஓங்கி
பரவை மா நிலம் அளித்தது களி கயல் மழை கண்
பொருவில் பூ மகள் புணர்ந்தனன் இமையவன் எழுந்தான்

#2369
மின்னும் கடல் திரையின் மா மணி கை வெண் கவரி விரிந்து வீச
பொன் அம் குடை நிழற்ற பொன் மயம் ஆம் உழை_கலங்கள் பொலிந்து தோன்ற
மன்னர் முடி இறைஞ்சி மா மணி அம் கழல் ஏந்தி அடி ஈடு ஏத்த
சின்ன மலர் கோதை தீம் சொலார் போற்றி இசைப்ப திருமால் போந்தான்

#2370
மந்தார மா மாலை மேல் தொடர்ந்து தழுவவாரா தாமம் மல்கி
அந்தோ என்று அம் சிறை வண்டு ஏக்கற இன் புகை போய் கழுமி ஆய் பொன்
செந்தாமரை மகளே அல்லது பெண் சாராத திருவின் மிக்க
சிந்தாமணி ஏய்ந்த சித்திரமாமண்டபத்து செல்வன் புக்கான்

#2371
பைம் கண் உளை எருத்தின் பல் மணி வாள் எயிற்று பவள நாவின்
சிங்க ஆசனத்தின் மேல் சிங்கம் போல் தேர் மன்னர் முடிகள் சூழ
மங்குல் மணி நிற வண்ணன் போல் வார் குழைகள் திருவில் வீச
செம் கண் கமழ் பைம் தார் செழும் சுடர் போல் தேர் மன்னன் இருந்தான் அன்றே

#2372
வார் பிணி முரசம் நாண வான் அதிர் முழக்கம் ஏய்ப்ப
தார் பிணி தாம மார்பன் தம்பியை முகத்துள் நோக்கி
ஊர் பிணி கோட்டம் சீப்பித்து உறாதவன் ஆண்ட நாட்டை
பார் பிணி கறையின் நீங்க படா முரசு அறைவி என்றான்

#2373
கடவுளர் இடனும் காசு இல் கணி பெறு நிலனும் காமர்
தட வளர் முழங்கும் செம் தீ நான்மறையாளர் தங்கள்
இடவிய நிலத்தோடு எல்லாம் இழந்தவர்க்கு இரட்டி ஆக
உடன் அவை விடு-மின் என்றான் ஒளி நிலா உமிழும் பூணான்

#2374
என்றலும் தொழுது சென்னி நிலன் உறீஇ எழுந்து போகி
வென்று அதிர் முரசம் யானை வீங்கு எருத்து ஏற்றி பைம்பொன்
குன்று கண்டு அனைய கோல கொடி நெடு மாட மூதூர்
சென்று இசை முழங்க செல்வன் திரு முரசு அறைவிக்கின்றான்

#2375
ஒன்றுடை பதினை யாண்டைக்கு உறுகடன் இறைவன் விட்டான்
இன்று உளீர் உலகத்து என்றும் உடன் உளீர் ஆகி வாழ்-மின்
பொன்றுக பசியும் நோயும் பொருந்தல் இல் பகையும் என்ன
மன்றல மறுகு-தோறும் அணி முரசு ஆர்த்தது அன்றே

#2376
நோக்கு ஒழிந்து ஒடுங்கினீர்க்கும் நோய் கொள சாம்பினீர்க்கும்
பூ குழல் மகளிர் கொண்டான் புறக்கணித்து இடப்பட்டீர்க்கும்
கோ தரு நிதியம் வாழ கொற்றவன் நகரோடு என்ன
வீக்குவார் முரசம் கொட்டி விழு நகர் அறைவித்தானே

#2377
திருமகன் அருள பெற்று திரு நிலத்து உறையும் மாந்தர்
ஒருவனுக்கு ஒருத்தி போல உளம் மகிழ்ந்து ஒளியின் வைகி
பருவரு பகையும் நோயும் பசியும் கெட்டு ஒழிய இப்பால்
பெரு விறல் வேந்தர் வேந்தற்கு உற்றது பேசல் உற்றேன்
@12 இலக்கணையார் இலம்பகம்

#2378
அலங்கல் ஏந்திய குங்கும அரு வரை மார்பன்
கலந்த காரிகையவர்களை தருக என அருள
இலங்கு மாலை வெள் அருவிய எழில் வரை மணந்த
புலம்பு நீள் சுரம் போய் கொணர்ந்து அருளொடும் கொடுத்தார்

#2379
மோடு கொள் நிலா முளைத்து எழு பருதி கண்டு அறியா
பாடு வண்டொடு பறவையும் நடுக்குறும் காப்பின்
மாட மா மணி சிவிகையின் மயில் என இழிந்தார்
வீடு கண்டவர் போன்று மின்னிடு கொடி அனையார்

#2380
அன்று சூடிய மாலையர் ஆடிய சாந்தர்
பொன்றி வாடிய மேனியர் பொன் நிறை சுருங்கார்
சென்று காதலன் திரு விரி மரை மலர் அடி மேல்
ஒன்றி வீழ்ந்தனர் குவளை கண் உவகை முத்து உகவே

#2381
இலங்கு பூண் வரை மார்பு உற எடுத்து அவன் முயங்க
மலங்கி வாள் கண்கள் வரு பனி சுமந்து உடன் வெருவி
கலங்கு நீர் இடை கலக்குறு கரும் கயல் இணை போல்
புலம்பி ஓடின செவியுற நெடியன பொலிந்தே

#2382
வேனல் வாய்ப்பட்டு விரி முகை தளிரொடு கரிந்த
கான கார் முல்லை கார் மழைக்கு எதிர்ந்தன போல
மான மங்கையர் வாட்டமும் பரிவும் தம் கணவன்
தேன் நெய் மார்பகம் தீண்டலும் தீர்ந்து ஒளி சிறந்தார்

#2383
சேல் உண் கண்ணியர் சிலம்பொடு திலகமும் திருத்தி
மாலை நல்லன மது கமழ் தகையன மிலைச்சி
கோல மென் முலை குங்குமம் இடு கொடி எழுதி
சோலை வேய் மருள் தோள் முத்தும் தொழுதக அணிந்தார்

#2384
நஞ்சு மேய்ந்து இளம் களி கயல் மதர்ப்பன போல
அஞ்சி வாள் கண்கள் மதர்த்தன அலர்ந்து உடன் பிறழ
பஞ்சு சூழ் மணி மேகலை பரிந்து அவை சொரிய
வஞ்சி நுண் இடை கவின் பெற வைகினன் மாதோ

#2385
அரி பொன் கிண்கிணி அணி கிளர் சிலம்பொடு சிலம்பும்
திருவ சீறடி செழு மலர் கொழும் கயல் மழை கண்
உருவ நுண் இடை ஒளி மணி வரு முலை உரு ஆர்
எரி பொன் மேகலை இலக்கணை கடிவினை நொடிவாம்

#2386
ஆழி மால் கடல் அகன் பெரும் கேள்விகள் துறைபோய்
ஊழின் அன்றியும் உறுவினை ஓரையின் முடிப்பான்
சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான்
வேழ வேந்தற்கு விழு பெரும் கணி விரித்து உரைத்தான்

#2387
ஓங்கு கொற்றவற்கு ஓதிய உயர் பெருநாளால்
வீங்கு வெள்ளி அம் குன்று என விளங்கு ஒளி உடைய
தேம் கொள் மாலையும் திலகமும் அணிந்த திண் குணத்த
பாங்கின் பண்ணின நூற்றெட்டு படு மத களிறே

#2388
விளங்கு வெண் துகில் உடுத்து வெண் சாந்து மெய் பூசி
துளங்கு மஞ்சிகை துளை சிறு காதினுள் துளங்க
வளம் கொள் மாலைகள் சூடி முத்து அணிந்து வண் முரசம்
களம் கொள் வேழத்தின் ஏற்றினர் கடி முரசு அறைவான்

#2389
கேள்-மின் கேள்-மின்கள் யாவரும் இனியன கேள்-மின்
பூண்-மின் நித்தில மணி வடம் பூசு-மின் சாந்தம்
வாள் மின் நுண் இடை வருந்தினும் சூட்டு அணிந்து அழகு ஆர்
ஆணம் ஆகிய அரு விலை வண்ண பட்டு உடு-மின்

#2390
பிள்ளை வெண் பிறை சிறு நுதல் பெரும் பட்டம் அணி-மின்
உள்ள மேனியும் ஒளிர் மணி கலங்களின் புனை-மின்
வள்ளல் வாய்மொழி ஆன் படு பால் அமிர்து அல்லால்
உள்ளம் மேவினும் பிற உண பெறீர் எழு நாளும்

#2391
வாழை மல்கிய மணி குலை கமுகொடு நடு-மின்
தாழ நாற்று-மின் தாமங்கள் அகில் குடம் பரப்பி
யாழின் பாடலும் ஆடலும் அரங்கு-தோறும் இயற்றி
போழும் மால் விசும்பு என பல பொலம் கொடி எடு-மின்

#2392
மாலை வாள் முடி மன்னவன் மணவினை எழு நாள்
சீலம் இல்லன சின களிறு அகற்றுக என்று அணிந்த
கோலம் ஆர் முரசு இடி உமிழ் தழங்கு என முழங்க
நீல மா கடல் நெடு நகர் வாழ்க என அறைந்தார்

#2393
முரசம் ஆர்ந்த பின் மூ இரு நாள்கள் போய்
விரைவோடு எங்கணும் வெள் வளை விம்மின
புரை இல் பொன் மணி யாழ் குழல் தண்ணுமை
அரவ வானின் அதிர்ந்த அணி முழா

#2394
விண் விளக்குவ போல் விரி பூம் துகள்
கண் விளக்கி கலந்த வெண் சாந்தினால்
மண் விளக்கி மலர் பலி சிந்தினார்
பண் விளக்கிய பைங்கிளி இன் சொலார்

#2395
ஆய்ந்த மோட்டின ஆன்-படு பால் உலை
போந்து பொங்கிய ஆவியினால் பொலிந்து
ஏந்து மாடங்கள் தாம் இழின் என்பன
பூம் துகில் புறம் போர்த்தன போன்றவே

#2396
திருவின் நல்லவர் செம் மலர் சீறடி
பரவி ஊட்டிய பஞ்சு அரத்த களி
விரவி மீ நிலம் சேர்ந்து ஒளி பூத்து உராய்
குருதி வான் நிலம் கொண்டது போன்றதே

#2397
பால் வெண் திங்கள் மணி கை படுத்தவை
போலும் ஆடியில் நோக்கி பொலம் கல
கோலம் செய்பவர் கோல வெறிப்பினால்
மாலை வண்டினம் மாலை கண் கொண்டவே

#2398
போக மா மழை போழ்ந்து புத-தொறும்
மாகம் ஏந்துவ போல் மணி தோரணம்
ஆக நாற்றின தாமம் மணி குடம்
ஏக மாநகர் வீதி நிரைத்தவே

#2399
ஆடல் மங்கையர் கிண்கிணி ஆர்ப்பு ஒலி
பாடல் இன் ஒலி பண் அமை யாழ் ஒலி
மோடு கொள் முழவின் முழக்கு ஈண்டிய
மாட மாநகர் மா கடல் ஒத்ததே

#2400
சுந்தர துகள் பூம் துகள் பொன் துகள்
அந்தரத்து எழும் இன் புகையால்-அரோ
இந்திரன் நகர் சாறு அயர்ந்து இவ்வழி
வந்து இருந்தது போல் மலிவு உற்றதே

#2401
நிரந்து கன்னலும் நெய்யும் நீந்த பெய்து
இரந்து பால் அமிர்து எங்கும் ஊட்டுவார்
பரந்து பூம் துகில் பல் மணி கலம்
சுரந்து கொள்க என சுமக்க நல்குவார்

#2402
வருக்கையின் பழம் வாழையின் கனி
திரு கொள் மாங்கனி தெளித்த தேறலை
கருப்பு சாற்றொடு கலந்து கைசெய்து
புரிந்த தெங்கு இளநீரும் பூரிப்பார்

#2403
கூந்தல் ஏந்திய கமுகம் காய் குலை
ஆய்ந்த மெல் இலை பளிதம் ஆதியா
மாந்தர் கொள்ளை கொண்டு உண்ண மா நிலம்
ஏந்தலாம் படித்து அன்றி ஈட்டுவார்

#2404
தூமம் ஆர்ந்தன துப்புரவுகள்
ஏமம் ஆயின ஏந்தி நிற்றலால்
நாம நல் நகர் நல் பொன் கற்பகம்
காமவல்லியும் களம் கொண்டிட்டதே

#2405
வழு இல் மாந்தரும் மாவும் மல்கிய
தொழுதி தன்னை யான் சுமக்கலேன் எனா
முழுதும் மண்மகள் முற்றும் வாய் திறந்து
அழுதிட்டாள் நெய்யும் பாலும் ஆகவே

#2406
கொடி எழுந்து அலமரும் கோயில் வாயில்கள்
மடல் எழுந்து அலமரும் கமுகும் வாழையும்
மடி இரும் துகில் உடை மா கணாடியும்
புடை திரள் பூரண குடமும் பூத்தவே

#2407
கடி மலர் மங்கையர் காய் பொன் கிண்கிணி
உடை மணி பொன் சிலம்பு ஒலிக்கும் கோயிலுள்
குடை நிழல் மன்னர் தம் கோதை தாது வேய்ந்து
அடி நிலம் பெறாதது ஓர் செல்வம் ஆர்ந்ததே

#2408
துளங்கு பொன் குழைகளும் தோடும் சுண்ணமும்
கிளர்ந்து அகில் சாந்து பூ கமழ்ந்து கேழ் கிளர்
இளம் கதிர் எறி மணி பூணும் ஆரமும்
விளங்கி மேல் உலகினை வெறுப்பித்திட்டதே

#2409
விரிந்து வான் பூத்து என விதானித்து ஆய் கதிர்
அரும் கல பொடியினால் ஆய் பொன் பூ மகள்
மருங்குல் போல் குயிற்றிய நகரில் மங்கல
பெரும் தவிசு அடுத்தனர் பிணையல் மாலையார்

#2410
நலம் கிளர் காணமும் மணியும் நன் பொனும்
வலம்புரி முத்தமும் குவித்த மங்கலம்
இலங்கின மணி விளக்கு எழுந்த தீம் புகை
கலந்த ஆயிரத்து எண்மர் கவரி ஏந்தினர்

#2411
மங்கல பெரும் கணி வகுத்த ஓரையால்
மங்கல மன்னவன் வாழ்த்த ஏறலும்
மங்கல அச்சுதம் தெளித்து வாய் மொழி
மங்கல கருவி முன் உறுத்தி வாழ்த்தினார்

#2412
முழங்கின இன்னியம் மொய்த்தது ஏத்து ஒலி
கொழும் கயல் கண்ணினார் கொண்டு பொன் அகல்
இழிந்தனர் திரு மயிர் ஏற்ப நீரதில்
நிழன்றன சாமரை நிரை சங்கு ஆர்த்தவே

#2413
பால்கடல் முளைத்த ஓர் பவள பூம் கொடி
போல் சுடர்ந்து இலங்கு ஒளி பொன் செய் கோதையை
நாள் கடி மயிர் வினை நன் பொன் தாமரை
பூ கடி கோயிலாள் புலம்ப ஆக்கினார்

#2414
விரை தலை மாலை சூட்டி மின் அனார் அம் கை சேப்ப
அரைத்த சாந்து அணிந்த கோட்ட ஆயிரத்து எட்டு வேழம்
நிரைத்தன மண்ணு நீர்க்கு முரசொடு முழவம் விம்ம
வரை தலை துவலை போன்று மதம் நிலம் நனைப்ப அன்றே

#2415
கான் முகம் புதைத்த தெள் நீர் கவர்ந்து பொன் குடங்கள் ஆர்த்தி
ஊன் முகம் புதைத்த வேல் கண்ணவர் களிற்று உச்சி ஏற்றி
வான் முகம் புதைத்த பல் மீன் மதி என மருண்டு நோக்க
தேன் முகம் புதைத்த மாலை குடை நிழல் திருவில் தந்தார்

#2416
இழைத்த பொன் நகரின் வெள்ளி இடு மணை மன்னர் ஏத்த
குழை பொலிந்து இலங்கு காதின் கொற்றவன் இருந்த பின்றை
மழை கவின்று எழுந்த வார் கொள் மணி நிற அறுகை நெய் தோய்த்து
எழில் குழை திருவில் வீச மகளிர் நெய் ஏற்றுகின்றார்

#2417
மின் உமிழ் வைர கோட்டு விளங்கு ஒளி இமயம் என்னும்
பொன் நெடும் குன்றம் போல பூமி மேல் நிலவி வையம்
நின் அடி நிழலின் வைக நேமி அம் செல்வன் ஆகி
மன்னுவாய் திருவோடு என்று வாழ்த்தி நெய் ஏற்றினாரே

#2418
நீடு நீர் மணி நீரும் அல்லவும்
ஆடு நீரன அத்தும் மண்களும்
ஊடு மின் அனார் உரிஞ்சி ஆட்டினார்
கூடி இன்னியம் குழுமி ஆர்த்தவே

#2419
திருவ மன்னவன் சென்னி தேர் மன்னர்
பொரு வெண் பொன் குடம் உமிழும் பொங்கு நீர்
பருதி தன் ஒளி மறைய பால் மதி
சொரியும் தீம் கதிர் தோற்றம் ஒத்தவே

#2420
துளங்கு மா மணி தூண்கள் நான்கினால்
விளங்கு வெள்ளி வேய்ந்து ஆய்ந்த மாலை சூழ்
வளம் கொள் மா மணி கூடம் சேர்த்தினார்
இளம் கதிர்-கொலோ இருந்தது என்னவே

#2421
ஆய்ந்த பால் நிறம் ஆய் பொன் கம்பலம்
வேய்ந்த பொங்கு அணை வெண் பொன் கட்டில் மேல்
நீந்து நித்தில விதான நீழலாற்கு
ஏந்தினார் அணி ஏந்து நீர்மையார்

#2422
ஈரம் கொன்ற பின் இருள் மணி சுடர்
நீர வாய் நிழல் உமிழும் குஞ்சியை
ஆர் அகில் புகை வெறியினால் அமைத்து
ஏர்பட செய்தார் எழுதிற்று என்னவே

#2423
ஈடு இல் சந்தனம் ஏந்து தாமரை
தோடின் பயில்வினால் பூசி தூ மலர்
வீடு பெற்றன இன்றொடு என்னவே
சூடினான்-அரோ சுரும்பு உண் கண்ணியே

#2424
மல் பக மலர்ந்து அகன்ற மார்பின் மேல்
வில் பக குலாய் ஆரம் வில்லிட
கற்பகம் மலர்ந்து அகன்றதோ என
பொற்பு அக பொலம் கலங்கள் தாங்கினான்

#2425
உருவம் ஆர்ந்தன உரோம பட்டு உடுத்து
எரியும் வார் குழை சுடர இந்திர
திருவில் அன்ன தார் திளைப்ப தேம் குழல்
அரி பெய் கண்ணியர்க்கு அநங்கன் ஆயினான்

#2426
தா இல் தாழ் வடம் தயங்க நீர் உறீஇ
மேவி அச்சுதம் தெளித்த பின் விரைந்து
ஆவியும் புகை சுழற்றி ஆடியும்
வீவு இல் வெம் சுடர் விளக்கு காட்டினார்

#2427
உவரி மா கடல் ஒல்லென் வெண் திரை
இவரி எழுவ போன்று இலங்கு வெண் மயிர்
கவரி தொகை பல வீசும் காவலர்
இவர் இ தொகை என்பது இன்றி ஆயினார்

#2428
அறுகு வெண் மலர் அளாய வாச நீர்
இறைவன் சேவடி கழுவி ஏந்திய
மறு இல் மங்கலம் காட்டினார் மண
குறைவு இல் கைவினை கோலம் ஆர்ந்ததே

#2429
ஊன் நிமிர் கதிர் வெள் வேல் உறை கழித்தன போலும்
தேன் இமிர் குவளை கண் திருமகள் அனையாளை
பால் நிமிர் கதிர் வெள்ளி மணை மிசை பலர் வாழ்த்தி
வான் நிமிர் கொடி அன்னார் மணி அணை மிசை வைத்தார்

#2430
வரை விளை வளர் பொன்னே வலம்புரி ஒரு மணியே
திரை விளை அமிர்தமே திரு விழை என ஏத்தி
வரை வளை முழ விம்ம மணி கிளர் ஒலி ஐம்பால்
அரை விளை கலை நல்லார் அறுகின் நெய் அணிந்தனரே

#2431
கள் அவிழ் கமழ் கோதை காவலன் திருமகளை
வெள் அணி மத யானை விழு மணி குடம் ஏற்றி
தெள் அறல் மண்ணு நீர் ஆட்டினர் தே மலர் மேல்
ஒள் இழையவள் ஒத்தாள் உருவ நுண் நுசுப்பினாள்

#2432
வான் மலர் நுரை சூடி மணி அணி கலன் சிந்தா
தான் இள மணல் எக்கர் தவழ் கதிர் மணி ஆரம்
ஏனைய நறும் சுண்ணம் குங்குமம் இடும் களியா
தேன் இனம் இசை பாட தீம் புனல் நடந்ததே

#2433
நான்ற பொன் மணி மாலை நகு கதிர் பவள தூண்
ஊன்றின ஒளி முத்த மண்டபத்து ஒளிர் திங்கள்
கான்றன கதிர் காய்த்தும் வட்டணை கதிர் முத்தம்
ஈன்ற பொன் விதானத்தின் நீழல் உய்த்து இரீஇயினரே

#2434
மை அணி மத யானை மத்தக அகல் அல்குல்
நெய் அணி குழல் மாலை நிழல் உமிழ் குழை மங்கை
மெய் அணி கலன் மாலை மின் இரும் துகில் ஏந்தி
கை அணி குழல் மாலை கதிரி முலையவர் சூழ்ந்தார்

#2435
அம் வளை அவிர் ஆழி கால் பொலிந்து அழகார்ந்த
மை விளை கழுநீர் கண் விலாசியும் அணி அல்குல்
கை வளை அலங்காரமாலையும் கமழ் கோதை
நைவளம் மிகு சாயல் நங்கையை புனைகின்றார்

#2436
யானையுள் அரசன் தன் அணி கிளர் வல மருப்பு ஈர்ந்து
ஊனம் இல் ஒளிர் செம்பொன் பதித்து ஒளி மணி அழுத்தி
வான் மணம் உற செய்த மங்கல மணி சீப்பு
தான் முகில் கழி மதி போல் தன் உறை நீக்கினாளே

#2437
மை நூற்று அனைய மா வீழ் ஓதி வகுத்தும் தொகுத்தும் விரித்தும்
கை நூல் திறத்தின் கலப்ப வாரி கமழும் நான கலவை
ஐ நூல் திறத்தின் அகிலின் ஆவி அளைந்து கமழ ஊட்டி
எ நூல் திறமும் உணர்வாள் எழில் ஏற்று இமிலின் ஏற்ப முடித்தாள்

#2438
கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீம் சொல் மடவாட்கு
அரும்பும் இலையும் மயக்கி ஆய்ந்த முல்லை சூட்டு மிலைச்சி
திருந்து திங்கள் சூழ்ந்த மின்னின் செம்பொன் பட்டம் சேர்த்தி
விரும்பும் முத்தம் மாலை நான்ற விழு பொன் மகரம் செறித்தாள்

#2439
கள்ளும் தேனும் ஒழுகும் குவளை கமழ் பூ நெரித்து வாங்கி
கிள்ளை வளை வாய் உகிரின் கிள்ளி திலகம் திகழ பொறித்து
தெள்ளும் மணி செய் சுண்ணம் இலங்க திரு நீர் நுதலின் அப்பி
உள்ளம் பருகி மதர்த்த வாள் கண் உருவம் மையில் புனைந்தாள்

#2440
நாகம் மருப்பின் இயன்ற தோடும் நலம் கொள் சுறவு குழையும்
போக நீக்கி பொருவில் திருவில் உமிழ்ந்து மின்னு பொழியும்
ஏகம் ஆகி எரியும் மணியின் இயன்ற கடிப்பு வாங்கி
மேக விசும்பின் தேவர் விழைய விளங்க சேர்த்தினாளே

#2441
விலங்கு அரம் பொருத சங்கின் வெள் வளை தெளிர்க்கும் முன்கை
நலம் கிளர் பவளம் நன் பொன் விரல் மணி ஆழி மின்ன
கலம் தின்று பணைத்த தோளும் கவின் வளர் கழுத்தும் ஆர்ந்த
வலம்புரி ஈன்ற முத்தம் மணி நிலா நக்க அன்றே

#2442
மா மணி முகடு வேய்ந்த மரகத மணி செப்பு அன்ன
தூ மணி முலைகள் தம்மை தொழுதக கமழும் சாந்தின்
காமரு காமவல்லி கொடி கவின் கொண்டு பூத்து
தூ மணி கொழுந்து மென் தோள் துயல் வர எழுதினாளே

#2443
நாண் சுமக்கலாத நங்கை நகை மின்னு நுசுப்பு நோவ
பூண் சுமக்கலாத பொன் ஞாண் வடத்தொடு புரள நோக்கி
பாண் குலாய் வண்டு பாடும் படு கணை மறந்து காமன்
காண்கிலேன் கடிய என்னா உருகி மெய் கரந்திட்டானே

#2444
அவா கிடந்து அகன்ற அல்குல் அணி கிளர் திருவில் பூப்ப
தவா கதிர் காசு கண்டார் ஆவியை தளர சூட்டி
கவாய் கிடந்து அணங்கு நாறும் கண் கொளா பட்டு உடுத்தாள்
உவா கதிர் திங்கள் அம் மென் கதிர் விரித்து உடுத்தது ஒத்தாள்

#2445
இடை செறி குறங்கு கௌவி கிம்புரி இளக மின்னும்
புடை சிறு பரடு புல்லி கிண்கிணி சிலம்போடு ஆர்ப்ப
நடை சிறு பாதம் கோல மணி விரல் அணிந்து நாகத்து
உடை சிறு நாவின் தோகை இரீஇயினள் மாலை சேர்ந்தாள்

#2446
அம் மலர் அடியும் கையும் அணி கிளர் பவழ வாயும்
செம் மலர் நுதலும் நாவும் திருந்து ஒளி உகிரோடு அம் கேழ்
விம்மிதப்பட்டு வீழ அலத்தகம் எழுதியிட்டாள்
அம் மலர் கண்டம் உள் இட்டு அரிவையை தெரிவை தானே

#2447
வாள் மதர் மழை கண் நோக்கி வரு முலை தடமும் நோக்கி
காண் வர அகன்ற அல்குல் கண் விருப்புற்று நோக்கி
பாணு வண்டு அரற்றும் கோல சிகழிகை படியும் நோக்கி
ஆண் விருப்புற்று நின்றார் அம் வளை தோளினாரே

#2448
தெருள்கலான் படைத்தவன் காணில் செவ்வனே
மருள்கலாதவர்களும் மருள்வர் மம்மர் நோய்
இருள் இலார் எங்ஙனம் உய்வர் இன்னதால்
அருள் இலார் அவள் நலம் அணிந்த வண்ணமே

#2449
அலர்ந்த அம் தாமரை அல்லி பாவையை
புலந்து கண் சிவந்தன போன்று நீர் பிரிந்து
இலங்கி மின் உமிழ்ந்து உலாம் மேனி ஏந்து பொன்
மலர்ந்தது ஓர் கற்பக மணி கொம்பு ஆயினாள்

#2450
இருள் துணித்து இடைஇடை இயற்றி வெண்ணிலா
சுருள் துணித்து ஒரு வழி தொகுத்தது ஒத்ததே
மருள் தகு மல்லிகை மாலை வல்லவன்
பொருள் தக தொடுத்தன புனைந்த பூஞ்சிகை

#2451
கோ மகள் உருவம் ஆய் கூற்றம் போந்தது
போ-மின் உம் உயிர் உய கொண்டு போய் மனம்
கா-மினம் என கலை சிலம்பு கிண்கிணி
தாம் மனும் வாயினால் சாற்றுகின்றவே

#2452
அருள் இலார் இவள் தமர் அன்னர்-ஆயினும்
உருள் திரை உலகு எலாம் உருளும் இன்று என
கருதின கவரி சாந்து ஆற்றி வெண்குடை
அரிவையை மறைத்தன ஆலவட்டமே

#2453
கரும்பே தேனே அமிர்தே காமர் மணி யாழே
அரும்பு ஆர் மலர் மேல் அணங்கே மழலை அன்னமே
சுரும்பு ஆர் சோலை மயிலே குயிலே சுடர் வீசும்
பெரும் பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணை மானே

#2454
அம் மெல் அனிச்சம் மலரும் அன்ன தூவியும்
வெம்மை ஆம் என்று அஞ்சி மெல்ல மிதியாத
பொம்மென் இலவ பூம் போது அன நின் அடி போற்றி
இம்மென் கலையார் இடு என்று ஏத்த ஒதுங்கினாள்

#2455
தூ மாண் தூம குடம் ஆயிரம் ஆய் சுடர் பொன் தூண்
தாம் ஆயிரம் ஆய் தகையார் மணி தூண் ஒரு நூறு ஆய்
பூ மாண் தாம தொகையால் பொலிந்த குளிர் பந்தர்
வேமானியர் தம் மகளின் விரும்ப நனி சேர்ந்தாள்

#2456
தேன் ஆர் காமன் சிலையும் கணையும் திறை கொண்ட
வான் ஆர் மதி வாள் முகமும் மட மான் மதர் நோக்கும்
கோனார் மகள் தன் வடிவும் நோக்கி குடை மன்னர்
ஆனார் கண் ஊடு அழல் போய் அமையார் ஆனாரே

#2457
வண்டு அலர் கோதை வாள் கண் வன முலை வளர்த்த தாயர்
கண்டு உயிர் உண்ணும் கூற்றம் கயிறு உரீஇ காட்டியிட்டார்
உண்டு உயிர் சிலர் கண் வாழ்க என்று உத்தரா சங்கம் வைத்தார்
தெண் திரை வேலி எங்கும் தீதினது ஆக மாதோ

#2458
கண்ணினால் இன்று கண்டாம் கூற்றினை காமர் செ வாய்
ஒள் நுதல் உருவ கோலத்து ஒரு பிடி நுசுப்பின் தீம் சொல்
வண்ணித்தல் ஆவது இல்லா வரு முலை மதர்வை நோக்கின்
பெண் உடை பேதை நீர்மை பெரும் தடம் கண்ணிற்று அம்மா

#2459
அரத்தகம் அகம் மருளி செய்த சீறடி அளிய தம்மால்
குரல் சிலம்பு ஒலிப்ப சென்னி குஞ்சி மேல் மிதிப்ப நோற்றான்
திருக்குலாய் கிடந்த மார்பின் சீவகன் நாங்கள் எல்லாம்
தரித்திலம் தவத்தை என்று தார் மன்னர் ஏமுற்றாரே

#2460
கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின் மேல் பிறந்து கூர் வேல்
சீவகன் என்னும் செம் நீர் பவள மா கடலுள் பாய்வான்
பூ உந்தி அமுத யாறு பூம் கொடி நுடங்க போந்து
தா இரி வேள்வி சாலை மடுவினுள் தாழ்ந்தது அன்றே

#2461
சாண் இடை நெடிய வாள் கண் தளை அவிழ் குவளை பூப்ப
பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலா சுளிவின் மேலும்
நாண் அட நடுங்கி கையால் நகை முகம் புதைத்த தோற்றம்
சேண் இடை அரவு சேர்ந்த திங்களை ஒத்தது அன்றே

#2462
முத்து உமிழ் திரைகள் அங்கம் மொய் கொள் பாதாலம் முத்தீ
ஒத்தன வேலை வேள்வி ஒலி கடல் நான்கும் நாண
வைத்த நான் மறையும் நீந்தி வான் குணம் என்னும் சாலி
வித்தி மேல் உலகத்து இன்பம் விளைத்து மெய்கண்டநீரார்

#2463
தரு மணல் தருப்பை ஆர்ந்த சமிதை இ மூன்றினானும்
விரி மலர் அணிந்த கோல வேதிகை இயற்றி ஆன் நெய்
ஒரு மணி அகலுள் பெய்தோர் பொன் அகல் ஆர்ந்த தூபம்
இரு மணி அகலுள் நீர் பெய்து இட-வயின் இரீஇயினாரே

#2464
நெல் பொரி நிறைய பெய்து நிழல் உமிழ் செம்பொன் மூழி
கல் புரி கடவுள் ஆன் பால் அவியொடு கலப்ப வைத்து
முன் பெரியானை ஆக தருப்பையான் முடிந்து மூன்று
பொன் புரி வரையும் பொய்தீர் சமிதைகள் இரண்டும் வைத்தார்

#2465
மந்திர விதியின் மாண்ட சிறு விரல் தருப்பை சூழ்ந்து
முந்து நாம் மொழிந்த நெய்யை முனை முதிர் தருப்பை தன்னால்
மந்திரித்து அமைய முக்கால் மண்ணி மற்று அதனை நீக்கி
சிந்தித்து மறையின் செம் தீ தண்டிலத்து அங்கண் வைத்தார்

#2466
தண்டிலத்து அகத்தில் சாண் மேல் எண் விரல் சமிதை நானான்கு
எண்திசையவரும் ஏத்த துடுப்பு நெய் சொரிதலோடும்
கொண்டு அழல் கடவுள் பொங்கி வலம் சுழன்று எழுந்தது என்ப
தெண் திரை வேலி எங்கும் திரு விளையாட மாதோ

#2467
கரை உடை துகிலில் தோன்றும் காஞ்சன வட்டின் முந்நீர்
திரை இடை வியாழம் தோன்ற திண் பிணி முழவும் சங்கும்
முரசொடு முழங்கி ஆர்ப்ப மொய் கொள் வேல் மன்னர் ஆர்ப்ப
அரசருள் அரசன் ஆய் பொன் கலச நீர் அங்கை ஏற்றான்

#2468
குளிர் மதி கொண்ட நாகம் கோள் விடுக்கின்றதே போல்
தளிர் புரை கோதை மாதர் தாமரை முகத்தை சேர்ந்த
ஒளிர் வளை கையை செல்வன் விடுத்து அவள் இடக்கை பற்றி
வளர் எரி வலம் கொண்டு ஆய் பொன் கட்டில் தான் ஏறினானே

#2469
விளங்கு ஒளி விசும்பில் பூத்த அருந்ததி காட்டி ஆன் பால்
வளம் கொள பூத்த கோல மலர் அடி கழீஇய பின்றை
இளம் கதிர் கலத்தின் ஏந்த அயினி கண்டு அமர்ந்து இருந்தான்
துளங்கு எயிற்று உழுவை தொல் சீர் தோகையோடு இருந்தது ஒத்தான்

#2470
பொன் அம் காழில் பொலிந்த முத்து விதானம் புணர்ந்து தேன்
மன்னு மாலை பல தாழ்ந்து மண புகை விம்மி மல்கிய
அன்ன தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆக
பன்னி சொன்ன பதினைந்தும் படுத்தார் பாவைமார்களே

#2471
பனி மயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
கனி மயிர் குளிர்ப்பன கண் கொளாதன
எலி மயிர் போர்வை வைத்து எழினி வாங்கினார்
ஒலி மயிர் சிகழிகை உருவ கொம்பு அனார்

#2472
விழுத்தகு மணி செவி வெண்பொன் கைவினை
எழில் பொலி படியகம் இரண்டு பக்கமும்
தொழில்பட வைத்தனர் துளும்பும் மேகலை
கழித்த வேல் இரண்டு கண்டு அனைய கண்ணினார்

#2473
அம் கருங்காலி சீவி ஊறவைத்து அமைக்கப்பட்ட
செம் களி விராய காயும் செம் பழு காயும் தீம் தேன்
எங்கணும் குளிர்ந்த இன் நீர் இளம் பசும் காயும் மூன்றும்
தம் களி செய்ய கூட்டி தையலார் கைசெய்தாரே

#2474
கைசெய்து கமழும் நூறும் காழ்க்கும் வெள் இலையும் காமம்
எய்த நன்கு உணர்ந்த நீரார் இன் முக வாசம் ஊட்டி
பெய்த பொன் செப்பும் மாலை பெரு மணி செப்பும் சுண்ணம்
தொய் அற பெய்த தூ நீர் தொடு கடல் பவள செப்பும்

#2475
தா மணி நான செப்பும் சலஞ்சல கலன் பெய் செப்பும்
தூ மணி துகில்கள் ஆர்த்த வலம்புரி துலங்கு செப்பும்
காம நீர் காமவல்லி கவின் கொண்டு வளர்ந்ததே போல்
நாம வேல் நெடும் கண் பாவை நயப்பன ஏந்தினாரே

#2476
விரி கதிர் ஆரம் மின்னி தார் எனும் திருவில் வீசி
குரிசில் மா மேகம் பெய்த கொழும் புயல் காம மாரி
அரிவை-தன் நெஞ்சம் என்னும் அகன் குளம் நிறைந்து வாள் கண்
கரி அமை சேறு சிந்தி கலிங்குகள் திறந்த அன்றே

#2477
தோக்கை அம் துகிலினாள் தன் துணை முலை பொருது சேந்த
ஏக்கு ஒசிவு இலாத வில்லான் இடு கொடி அகலம் இன் தேன்
தேக்கி வண்டு இமிரும் கோதை செல்வன் தார் உழக்க நைந்து
பூ கொய்து துவண்ட கொம்பின் பொற்பினள் ஆயினாளே

#2478
அணி தகு பவளம் ஏற்ப கடைந்து முத்து அழுத்தி அம் பொன்
துணித்து அடி விளிம்பு சேர்த்தி தொழுதக செய்த வண் கை
மணி சிரல் சிறகு நாண வகுத்த சாந்து ஆலவட்டம்
பணி தகு மகளிர் வீசி பாவையை குளிர்ப்பித்தாரே

#2479
சேந்து நீண்ட செழும் தாமரை கண்களின்
ஏந்தி மாண்ட முலை கண்களின் எழுதி
சாந்தம் ஆகம் எழுதி தகை மா மலர்
ஆய்ந்து சூட்டி அவன் அஞ்சலி செய்தான்

#2480
மணிசெய் வீணை மழலை குழல் பாண்டிலொடு
அணி செய் கோதையவர் பாடிய கீதம்
பணிவு இல் சாயல் பருகி பவள கொடி
மணியும் முத்தும் மலர்ந்திட்டது ஒத்தாளே

#2481
எய்த்து நீர் சிலம்பு இன் குரல் மேகலை
வித்தி மாதர் வருத்தம் விளைத்தாள் என
தத்து நீர் தவளை குரல் கிண்கிணி
உய்த்து ஓர் பூசல் உடன் இட்டன அன்றே

#2482
ஏந்தி நாங்கள் உடனே இடு பூசலை
வேந்தர் வேந்தன் கொடும் கோலினன் ஆகி
ஆய்ந்து கேட்டும் அருளான் என்று அவிந்தன
சாந்தம் ஏந்து முலையாள் கலம்-தாமே

#2483
வீடு மலி உலகினவர் போல விளையாடும்
தோடு மலி கோதையொடு துதைந்த வரை மின் போல்
ஆடு கொடி அணிந்த உயர் அலங்கல் வரை மார்பன்
கூடு மயிர் களையும் வகை கூறலுறுகின்றேன்

#2484
உச்சி வரை வளர்ந்து இளமை ஒழிந்த உயர் திண் காழ்
இ சவிய அல்ல என எழுதியவை ஊன்றி
கச்சு விளிம்பு அணிந்த தொழில் கம்பல விதானம்
நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார்

#2485
முத்து அகம் நிறைந்த முளை எயிற்று மத யானை
மத்தகமும் திருமகள் தன் வடிவும்பட மாதோ
ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி நகர் இழைத்தார்
மொய்த்து எரி செம்பொன் துகளின் நூல் முடிவு கண்டார்

#2486
உழுந்து பயறு உப்பு அரிசி அப்பம் அரும் கலங்கள்
கொழுந்து பட கூப்பி நனி ஆயிர மரக்கால்
செழுந்துபட செந்நெல் நிறைத்து அம் நுண் கொடி அறுகின்
கொழுந்து குறைத்து அணிந்து கொலை வேல் கணவர் அமைத்தார்

#2487
செம் கயல் இரட்டை திருவார் சுடர் கணாடி
பொங்கு கொடி வார் முரசம் தோட்டி புணர் கும்பம்
மங்கலங்கள் எட்டும் இவை மணியின் புனைந்து ஏந்தி
அம் கயல் கண் அரிவையர்கள் தென்கிழக்கில் நின்றார்

#2488
வெள் உருவ மாலை வட கீழ் இருவர் மின் போல்
ஒள் உருவ வாள் உருவி நின்றனர் தென்மேல்-பால்
உள் உருக நோக்கி உயர் உழுத்து அகலும் ஏந்தி
கள் உருவ மாலையவர் கைதொழுது நின்றார்

#2489
தோரை மலர் நீர் அறுகு துளும்பும் மணி தாலம்
ஆர வட மேல் திசை-கண் இருந்த அவிர் பஞ்சி
சீர் நிறைய வரை அகலம் திருத்த திரு நோக்கும்
வார முறை கருவி வடக்கு இருந்தன கண் மாதோ

#2490
பால் நுரையின் நொய்ய அணை பைம் கதிர்கள் சிந்தி
தான் இரவி திங்களொடு சார்ந்து இருந்ததே போல்
வேல் நிரை செய் கண்ணியொடு மெல் என இருந்தான்
வான் உயர ஓங்கு குடை மன்னர் பெருமானே

#2491
குள நெல் முன்றில் கனி தேன் சொரி சோலை குளிர் மணி
வளமை மல்கி எரிய மட மந்தி கை காய்த்துவான்
இளமை ஆடி இருக்கும் வனத்து ஈர்ம் சடை மா முனி
கிளையை நீங்கி கிளர் சாபத்தின் நாவிதன் ஆயினான்

#2492
ஆய்ந்த கேள்வி அவன் கான் முளையாய் வழி தோன்றினான்
தோய்ந்த கேள்வி துறைபோய் அலங்காரமும் தோற்றினான்
வேந்தன் தன்னால் களிற்று ஊர்தி சிறப்பொடு மேயினான்
வாய்ந்த கோலம் உடையான் பெரு மஞ்சிகர்க்கு ஏறு அனான்

#2493
நித்தில வடமும் பூணும் ஆரமும் நிழன்று தாழ
ஒத்து ஒளிர் குழைகள் காதில் நான்று பொன் ஊசல் ஆட
பைத்து அரவு அல்குல் பாவை கரக நீர் சொரிய பாங்கின்
வித்தகன் பூசி வெள் வேல் வேந்தனுக்கு இறைஞ்சினானே

#2494
நச்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி
வச்சிர வண்ணன் காப்ப வாழியர் ஊழி என்னா
அச்சுதம் கொண்டு மன்னன் அடி முடி தெளித்து நங்கை
உச்சி வண்டு இமிரும் மாலை ஒளி முடி சிதறினனே

#2495
வாக்கினில் செய்த பொன் வாள் மங்கல விதியின் ஏந்தி
ஆக்கிய மூர்த்தத்து அண்ணல் வல கவுள் உறுத்தி ஆர்ந்த
தேன் கண் இன் அகிலின் ஆவி தேக்கிடும் குழலினாளை
நோக்கலன் நுனித்து நொய்தா இட கவுள் உறுத்தினானே

#2496
ஆய்ந்த பொன் வாளை நீக்கி அவிர் மதி பாக கல் மேல்
காய்ந்த வாள் கலப்ப தேய்த்து பூ நிறீஇ காமர் பொன் ஞாண்
தோய்ந்த தன் குறங்கில் வைத்து துகிலினில் துடைத்து தூய்தா
வாய்ந்த கை புரட்டி மாதோ மருள்தக பற்றினானே

#2497
ஏற்றியும் இழித்தும் இடை ஒற்றியும்
போற்றி சந்தனம் பூசுகின்றான் என
கூற்று அனான் முகம் கோலம் செய்தான் கடல்
தோற்றும் செம் சுடர் போல சுடர்ந்ததே

#2498
கோதை பாரத்தினாலும் தன் நாணினும்
ஏதிலான் முகம் நோக்கும் இளிவினும்
பாதம் நோக்கிய பால் மதி வாள் முகம்
ஏதம் இன்றி எடுத்தனள் மெல்லவே

#2499
உருவ செம் கயல் ஒள் நிற புள் வெரீஇ
இரியல் உற்றன போன்று இணை கண் மலர்
வெருவி ஓட விசும்பில் குலாவிய
திருவில் போல் புருவங்கள் திருத்தினான்

#2500
ஆரம் மின்ன அரும் குயம் தான் களைந்து
ஓரும் ஒண் திறல் கத்தரிகை தொழில்
நீரின் செய்து அடி ஏத்துபு நீங்கினான்
தாரன் மாலை தயங்கு இணர் கண்ணியான்

#2501
அன்ன பெடை நடுக்கி அசைந்து தேற்றா நடையாளும்
மன்னர் குடை நடுக்கும் மாலை வெள் வேல் மறவோனும்
மின்னும் மணி குடத்தின் வேந்தர் ஏந்த புனல் ஆடி
பொன் அம் கடி மலரும் துகிலும் சாந்தும் புனைந்தாரே

#2502
எம் சுற்றம் என்று இரங்காது ஆகம் எல்லாம் கவர்ந்து இருந்து
தம் சுற்றம் வேண்டாத முலை கீழ் வாழ்வு தளர்கின்ற
நஞ்சு உற்ற வேல் நெடும் கண் பாவை நல்கூர் சிறு நுசுப்பிற்கு
அஞ்சு உற்றுழி புலர்ந்து ஆங்கு அணிந்தார் அம் மணி வடமே

#2503
சுடுமண் மிசை மாரி சொரிய சூழ்ந்து சுமந்து எழுந்து
நெடு நல் நிமிர் ஆவி நாறும் நெய் தோய் தளிர் மேனி
துடி நுண் இடை பெரும் தோள் துவர் வாய் ஏழை மலர் மார்பன்
கடி நல் மலர் பள்ளி களிப்ப காம கடல் ஆழ்ந்தான்

#2504
வழங்கு தாரவன் மார்பு இடை மட்டு உக
புழுங்கு கோதை பொற்பின் திறம் பேசலாம்
விழுங்கு மேகம் விடாது தழீஇ கிடந்து
ஒழிந்த மின்னு கொடி ஒத்து ஒழிந்திட்டாள்

#2505
தாம மார்பனும் தையலும் மெய் உணர்வு
ஆம் இது என்று அறியாது களித்தவர்
தூமம் கொப்புளிக்கும் துகில் சேக்கை மேல்
காமன் அப்பு அணை கள் உக வைகினார்

#2506
மாதர் தன் வனப்பு நோக்கி மகிழ்ந்து கண் இமைத்தல் செல்லான்
காதலித்து இருப்ப கண்கள் கரிந்து நீர் வர கண்டு அம்ம
பேதைமை பிறரை உள்ளி அழுபவர் சேர்தல் என்றாள்
வேதனை பெருகி வேல் கண் தீ உமிழ்ந்திட்ட அன்றே

#2507
நாறு சாந்து அழித்து மாலை பரிந்து நன் கலன்கள் சிந்தி
சீறுபு செம்பொன் ஆழி மணி விரல் நெரித்து விம்மா
ஏறியும் இழிந்தும் ஊழ்ஊழ் புருவங்கள் முரிய நொந்து
தேறு நீர் பூத்த செந்தாமரை முகம் வியர்த்து நின்றாள்

#2508
இற்றது என் ஆவி என்னா எரி மணி இமைக்கும் பஞ்சி
சிற்றடி போது புல்லி திருமகன் கிடப்ப சேந்து
பொற்ற தாமரையின் போந்து கரு முத்தம் பொழிபவே போல்
உற்று மை கலந்து கண்கள் வெம் பனி உகுத்த அன்றே

#2509
கொண்ட பூண் நின்னை சார்ந்து குலாய் கொழுந்து ஈன்ற கொம்பே
கண்டு கண் கரிந்து நீராய் உகுவது கரக்கலாமே
பண்டு யான் செய்த பாவ பயத்தை யார்க்கு உரைப்பென் தேன்காள்
வண்டுகாள் வருடி நங்கை வரம் தர மொழி-மின் என்றான்

#2510
பூவையும் கிளியும் கேட்டு புழை முகம் வைத்து நோக்கி
காவலன் மடந்தை உள்ளம் கல்-கொலோ இரும்பு-கொலோ
சாவம் யாம் உருகி ஒன்றும் தவறு இலன் அருளும் நங்கை
பாவை என்று இரத்தும் என்ற பறவைகள் தம்முள் தாமே

#2511
பெற்ற கூழ் உண்டு நாளும் பிணி உழந்து இருத்தும் பேதாய்
முற்றிமை சொல்லின் நங்கை மூன்று நாள் அடிசில் காட்டாள்
பொன்_தொடி தத்தையீரே பொத்தும் நும் வாயை என்றே
கற்பித்தார் பூவையார் தம் காரண கிளவி தம்மால்

#2512
பழியொடு மிடைந்த தேனும் சீறடி பரவினாற்கு
வழிபடு தெய்வம் ஆகி வரம் கொடுத்து அருளல் வேண்டும்
ஒழி படை களிறு போல உயங்கவும் உருகி நோக்கா
பிழிபடு கோதை போல் ஆம் பெண்டிரை கெட பிறந்தாள்

#2513
ஈன்ற தாய் யானும் ஆக இதனை கண்டு உயிரை வாழேன்
நான்று யான் சாவல் என்றே நல கிளி நூலின் யாப்ப
மான்ற அவள் மருண்டு நக்காள் வாழிய வரம் பெற்றேன் என்று
ஆன்று அவன் ஆர புல்லி அணி நலம் பரவினானே

#2514
நிறை ஓத நீர் நின்று நீள் தவமே செய்யினும் வாழி நீலம்
அறையோ அரிவை வரி நெடும் கண் ஓக்கிலையால் வாழி நீலம்
கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி நின்
வண்ணம் இதுவோ மது உண்பார் சேரியையோ வாழி நீலம்

#2515
பாண்குலாய் படுக்கல் வேண்டா பைங்கிளி பூவை என்னும்
மாண்பு இலாதாரை வைத்தார் என் உறார் என்று நக்கு
நாண் குலாய் கிடந்த நங்கை நகை முக அமுதம் ஈந்தாள்
பூண் குலாய் கிடந்த மார்பின் பொன் நெடும் குன்று அனாற்கே

#2516
நலம் குவித்த அனைய மாதர் நல் நலம் ஆய எல்லாம்
புலம்புவித்து அருளின் நீங்கி பகைப்புலம் புக்க வேந்தின்
கலங்குவித்த அனைய நம்பி கவர்ந்திட கலாபம் ஏங்க
சிலம்பு நொந்து இரங்க தேன் தார் பரிந்து தேன் எழுந்தது அன்றே

#2517
திரு நிற காமவல்லி திரு கவின் கொண்டு பூத்து
பெரு நிறம் கவினி ஆர்ந்த கற்பகம் பிணைந்ததே போல்
அரு நிற குருசில் மார்பத்து அசைந்தனள் அலங்கல் வேலும்
நெரி புற தடற்று வாளும் நீலமும் நிகர்த்த கண்ணாள்

#2518
மணி கண் மா மயில் சாயல் மாதரும்
அணி கந்து அன்ன தோள் அரச சீயமும்
பிணித்த காதலால் பின்னி செல்வுழி
கணித்த நாள்கள் ஏழ் கழிந்த காலையே

#2519
சூட்டும் சுண்ணமும் அணிந்து சுந்தரம்
ஓட்டி ஒண் பொன் நூல் ஓங்கு தாரொடு
பூட்டி குண்டலம் பொற்ப பெய்த பின்
மோட்டு முத்து ஒளிர் வடம் வளாயினார்

#2520
பால் நுரை அன பைம் துகில் அணிந்து
ஆன் நிரை இனத்து அலங்கல் ஏறு அனான்
மான் நிரை இனம் மருளும் நோக்கினார்
ஊன் உயிர் உணும் ஒருவன் ஆயினான்

#2521
சுநந்தை தன் மகன் சுடர் பொன் சூழி தேன்
இனம் கவர்ந்து உண இலிற்றும் மும்மதத்து
அநந்தன் அன்ன கை யானை ஏறினான்
குனிந்த சாமரை குளிர் சங்கு ஆர்த்தவே

#2522
இரும் பிடி நூறு சூழ இறுவரை நின்றதே போல்
கரும்பொடு காய் நெல் துற்றி கருப்புர கந்தில் நின்ற
சுரும்பு சூழ் மதத்த சூளாமணி எனும் சூழி யானை
பெரும் தகை பிணையல் மன்னர் முடி மிதித்து ஏறினானே

#2523
சட்டகம் பொன்னில் செய்து தண் கதிர் வெள்ளி வேய்ந்து
வட்ட நல் வைரம் வாய்ப்ப நிரைத்து மேல் மணிகள் சேர்த்தி
சுட்டுதற்கு அரிய முத்தின் தொத்து வாய் நாற்ற முந்நீர்
பட்ட வான் பவள காம்பின் குடை நிழல் பருதி ஒத்தான்

#2524
மடல் பனை குழாத்தின் பிச்சம் நிரைத்தன மன்னர் சூழ்ந்து
புடை களிறு ஏறி திங்கள் பொழி கதிர் குப்பை அன்ன
எடுத்து எறி கவரி வீச இயம் பல முழங்கி ஆர்ப்ப
கடல் படை வெள்ளம் சூழ காவலன் வீதி சேர்ந்தான்

#2525
அடி நிலம் உறுதல் நாணி அருவருத்து அமரின் ஆலித்து
இடு மயிர் சிறகர் ஆக எழுந்து மேல் பறப்ப போல
படு மழை துளியின் பாய்மா பரந்தன நிரந்த பொன் தேர்
இடை நிலம் இன்றி வேழம் ஈண்டின மள்ளர் தொக்கார்

#2526
கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற
இழை முலை தடத்தினாள் தன் கணவனை காண ஏகி
கழும் ஒலி அரவ வானம் கனை பெயல் கடல் பெய்து அன்ன
குழும் ஒலி அரவம் ஈண்டி கொடி நகர் பொலிந்தது அன்றே

#2527
ஒள் இலை சூலம் தெள் நீர் உலா முகில் கிழிக்கும் மாட
கொள் கொடி குழாத்தினாலும் கொழு நறும் புகையினாலும்
தெள்ளுறு சுண்ணத்தாலும் தேன் மலர் துகளினாலும்
புள் இனம் பொழுது காணா புலம்பி கூடு அடைந்த அன்றே

#2528
பைம் தொடி மகளிர் பாங்கர் பரிந்து நூல் சொரிந்த காசு
சிந்தின தழல் என்று அஞ்சி சிறை அன்னம் நிலத்தை சேரா
இந்திரகோபம் ஆம் என்று இள மயில் குனிந்து குத்தி
சிந்தையில் தேம்ப தாமே திரு மணி நக்க அன்றே

#2529
வெள்ளைமை கலந்த நோக்கின் கிண்கிணி மிழற்றி ஆர்ப்ப
பிள்ளைமை காதல் கூர பிறழ்ந்து பொன் தோடு வீழ
துள்ளுபு செலீஇய தோற்றம் தொடு கழல் காமன் காமத்து
உள் உயிர் அறிய பெண்ணாய் பிறந்தது ஓர் தோற்றம் ஒத்தார்

#2530
தன் நெறி வளர காமன் தான் முலை இரண்டும் ஆகி
முன்னரே வளர்கின்றால் போல் முகிழ் முலை முத்தம் ஏந்தி
பொன் எறி மணியின் பொங்கி குழல் புறம் புடைப்ப ஓடி
பின் நிறீஇ வைத்த போல பெதும்பையர் விதும்பி நின்றார்

#2531
அணி நிலா வீசும் மாலை அரங்கு புல் என போகி
துணி நிலா வீசும் மாலை பிறை நுதல் தோழி சேர்ந்து
மணி நிலா வீசும் மாலை மங்கையர் மயங்கி நின்றார்
பணி நிலா வீசும் பைம்பொன் கொடி மணி மலர்ந்தது ஒத்தார்

#2532
வள் உகிர் வரித்த சாந்தின் வன முலை கோக்கினாரை
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கண் கரிந்து பொங்க
கள் உயிர் உண்ணும் மாலை கதுப்பு ஒரு கையின் ஏந்தி
நள்ளிருள் விளக்கு இட்டு அன்ன நங்கைமார் மல்கினாரே

#2533
மட்டு ஒளித்து உண்ணும் மாந்தர் மாண்பு போல் மறைந்து வண்ண
பட்டு ஒளித்து ஒழிய அல்குல் பசும் கதிர் கலாபம் தோன்ற
குட்ட நீர் குவளை கண்கள் விருந்து உண விரும்பி நின்றார்
அட்டும் தேன் அணிந்த மாலை பவள கொம்பு அணிந்தது ஒத்தார்

#2534
பெரும் பொருள் நீதி செங்கோல் பெருமகன் ஆக்கம் போல
பரந்து இடம் இன்றி மேலால் படா முலை குவிந்த கீழால்
அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும்
மருங்கு நொந்து ஒழிய வீதி மடந்தையர் இடம் கொண்டாரே

#2535
செல்வர்க்கே சிறப்பு செய்யும் திருந்து நீர் மாந்தர் போல
அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் அணிகம் ஆய எல்லாம்
நல்கூர்ந்தார்க்கு இல்லை சுற்றம் என்று நுண் நுசுப்பு நைய
ஒல்கி போய் மாடம் சேர்ந்தார் ஒரு தடம் குடங்கை கண்ணார்

#2536
கார் வளர் மின்னு வீசும் குண்டலம் காய் பொன் ஓலை
ஏர் வளர் பட்டம் ஏற்ப அணிந்து இருள் சுமந்து திங்கள்
நீர் வளர் நீலம் பூத்து நிரைத்த போல் நிரைத்த மேலால்
வார் வளர் முலையினார்-தம் மாழை வாள் முகங்கள் மாதோ

#2537
குறை அணி கொண்டவாறே கோதை கால் தொடர ஓடி
சிறை அழி செம்பொன் உந்தி தேன் பொழிந்து ஒழுக ஏந்தி
பறை இசை வண்டு பாட பாகமே மறைய நின்றார்
பிறை அணி கொண்ட அண்ணல் பெண் ஓர்பால் கொண்டது ஒத்தார்

#2538
பொன் அரி மாலை பூண்டு பூஞ்சிகை குலாவி முன்கை
மின் அரி சிலம்பு தொட்டு விருப்பொடு விரைந்து போவான்
கன்னியர் ஆடி நோக்கி தம்மை தாம் கண்டு நாணி
பின் அவை அணிந்து செல்வார் இடம் பெறாது ஒழிந்து போனார்

#2539
முத்து உலாய் நடந்த கோல முலை முதல் முற்றம் எல்லாம்
வித்திய வேங்கை வீயும் விழு பொனும் விளங்க காம
தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுட சுடர்ந்து நின்றார்
ஒத்து ஒளிர் காமவல்லி ஒருங்கு பூத்து உதிர்ந்தது ஒத்தார்

#2540
உகிர் வினை செய்து பஞ்சி ஒள் ஒளி அரத்தம் ஊட்டி
அகில் கமழ் அங்கை சேப்ப அரிவையர் அலங்கல் தாங்கி
வகிர்படு மழை கண் சின்னீர் மா கயல் எதிர்ந்தவே போல்
முகில் கிழி மின்னின் நோக்கி முரிந்து இடை குழைந்து நின்றார்

#2541
முனி தலை கண்ணி நெற்றி சிறார் முலை முழாலின் பில்கி
புனிற்று பால் பிலிற்றி தேமா வடு இறுத்து ஆங்கு பாய
நுனித்து கண் அரக்கி நோக்காது ஒசிந்து நின்றார்கள் அன்றே
கனி பொறை மலிந்து நின்ற கற்பக பூம் கொம்பு ஒத்தார்

#2542
அவிர் இழை சுடர முல்லை அலங்கல் அம் கூந்தல் சோர
தவிர் வெய்ய காமம் தாங்கி தட முலை கால்கள் சாய
இவர் தரு பிறவி எல்லாம் இன்னம் ஆக என்று நின்றார்
சுவர் செய்து ஆங்கு எழுதப்பட்ட துகிலிகை பாவை ஒத்தார்

#2543
மாரி மா மயில் அனாரும் மைந்தரும் மயங்கினாரே
வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி எங்கும்
பூரித்து புதவம்-தோறும் குவளையும் மரையும் பூத்து
பாரித்து பைம்பொன் நாகர் உலகு இவண் வீழ்ந்ததே போல்

#2544
கோதை தாழ் குடையின் நீழல் கொற்றவன் பருதி ஆக
மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த தெள் நீர்
காதம் நான்கு அகன்ற பொய்கை கடி நகர் குவளை பூத்து
பேதுறுகின்ற போன்ற பெரு மழை கண்கள் மாதோ

#2545
மாந்தரும் மாவும் செல்ல மயங்கி மேல் எழுந்த நீறு
தேம் தரு கோதையார் தம் தெள் மட்டு துவலை மாற்ற
ஆய்ந்த பொன் நகரம் எங்கும் அணிகல ஒளியினாலே
காய்ந்து கண் கலக்க பூத்த கற்பகம் ஒத்தது அன்றே

#2546
பெண் பெற்ற பொலிசை பெற்றார் பிணை அனார் பெரிய யாமும்
கண் பெற்ற பொலிசை பெற்றாம் இன்று என கரைந்து முந்நீர்
மண் பெற்ற ஆயுள் பெற்று மன்னுவாய் மன்ன என்னா
புண் பெற்ற வேலினான் மேல் பூ மழை தூவினாரே

#2547
சுண்ணம் மேல் சொரிவார் தொழுது தொங்கல் வீழ்ப்பார்
தண்ணென் சந்தன நீர் ஆர்ந்து தேன் துளும்பும்
வண்ண பந்து எறிவார் வளை ஒலிப்ப ஓச்சி
கண்ணி இட்டு எறிவார் கலவை நீர் தெளிப்பார்

#2548
முந்து சூர் தடிந்த முருகன் நம்பி என்பார்
ஐந்துருவ அம்பின் அநங்கன் என்று அயர்வார்
கந்துகன் வளர்த்த சிங்கம் காண்-மின் என்பார்
சிந்தையில் களிப்பார் சேண் நெடிய கண்ணார்

#2549
தேசிக முடியும் திருந்து பட்டு உடையும்
பாசம் ஆக நின்று பல் மலர் கழுநீர்
மூசி வண்டு இமிரும் மொய் அலங்கல் தாழ
காசு இல் காமம் செப்பி கண்ணினால் இரப்பார்

#2550
வண்டு அறைந்த தாரான் வண்ணம் கண்ட பின்றை
கண்டிலேன் என் மாமை கை வளையொடு என்பார்
ஒண்_தொடி இவன் தன் உருவு கண்டு வாழ்வார்
பெண்டிராய் பிறந்தார் பெரியர் போத என்பார்

#2551
கொழித்து இரை ஓத வேலி குமரனை பயந்த நங்கை
விழு தவம் உலகம் எல்லாம் விளக்கி நின்றிட்டது என்பார்
பிழி பொலி கோதை போல் ஆம் பெண்டிரில் பெரியள் நோற்றாள்
சுழித்து நின்று அறாத கற்பின் சுநந்தையே ஆக என்பார்

#2552
சாந்து அகம் கிழிய மாலை தட முலை ஞெமுங்க புல்லி
சேர்ந்து எழும் நங்கைமாரே திருநங்கைமார்கள் அல்லார்
கூந்தலும் முலையும் முத்தும் கோதையும் சுமந்து நைவான்
போந்த அ நங்கைமார்கள் பொய்ம் நங்கைமார்கள் என்பார்

#2553
இடம் பட அகன்று நீண்ட இரு மலர் தடம் கண் என்னும்
குடங்கையின் நொண்டு கொண்டு பருகுவார் குவளை கொம்பின்
உடம்பு எலாம் கண்கள்-ஆயின் ஒருவர்க்கும் இன்றி ஏற்ப
அடங்க வாய் வைத்திட்டு ஆர பருகியிட்டு ஈ-மின் என்பார்

#2554
முலை முதல் துறந்த அன்றே மூரித்தாள் ஆளி யானை
தலை நிலம் புரள வெண் கோடு உண்டதே போன்று தன் கை
சிலை இடம் பிடித்த ஞான்றே தெவ்வரை செகுத்த நம்பி
நிலவு உமிழ் குடையின் நீழல் துஞ்சுக வையம் என்பார்

#2555
இ நகர புறம் காட்டில் இவன் பிறந்தவாறும்
தன் நிகர் இல் வாணிகன் இல் தான் வளர்ந்தவாறும்
கை நிகர் இல் வேந்தர் தொழ போந்ததுவும் கண்டால்
என்னை தவம் செய்யாது இகழ்ந்து இருப்பது என்பார்

#2556
பெரு முழங்கு திரை வரைகள் நீந்தி பிணியுறினும்
திரு முயங்கல் இல்லை-எனில் இல்லை பொருள் ஈட்டம்
ஒரு முழமும் சேறல் இலரேனும் பொருள் ஊர்க்கே
வரும் வழி வினாய் உழந்து வாழ்க தவம் மாதோ

#2557
நஞ்சு குடித்தாலும் நவை இன்று தவம் நின்றால்
அஞ்சி ஒளித்தாலும் அரண் இல்லை தவம் உலந்தால்
குஞ்சரத்தின் கோட்டு இடையும் உய்வர் தவம் மிக்கார்
அஞ்சல் இலர் என்றும் அறனே களைகண் என்பார்

#2558
முரல் வாய சூல் சங்கம் முட முள் தாழை முகை விம்மும்
கரை வாய முத்து ஈன்று கானல் மேயும் கடல் சேர்ப்பன்
உரை வாய நகர் பரவ போகி ஒண் பொன் எயில் சூழ்ந்த
விரை வாய பூம் பிண்டி வேந்தன் கோயிற்கு எழுந்தானே

#2559
அருகு மயில் அகவ அன்னம் ஏங்க குயில் கூவ
குருகு பொறை உயிர்க்கும் கொடு முள் தாழை வெண் தோட்டு
முருகு பொறை உயிர்க்கும் மொய் பூங்காவில் படை நீக்கி
திருகு கனை கழலான் செம்பொன் கோயில் சேர்ந்தானே

#2560
திறந்த மணி கதவம் திசைகள் எல்லாம் மணம் தேக்கி
மறைந்த அகில் புகையான் மன்னர் மன்னன் வலம் செய்து
பிறந்தேன் இனி பிறவேன் பிறவா தாயை பெற்றேன் என்று
இறைஞ்சி முடி துளக்கி ஏத்தி கையால் தொழுதானே

#2561
திரு மறு மார்பினை திலக முக்குடையினை
அருமறை தாங்கிய அந்தணர் தாதையை
அருமறை தாங்கிய அந்தணர் தாதை நின்
எரி புரை மரை மலர் இணை அடி தொழுதும்

#2562
உலகு உணர் கடவுளை உருகெழு திறலினை
நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியினை
நில விரி கதிர் அணி நிகர் அறு நெறியை நின்
அலர் கெழு மரை மலர் இணை அடி தொழுதும்

#2563
மறு அற உணர்ந்தானை மலம் அறு திகிரியை
பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வனை
பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வ நின்
நறை விரி மரை மலர் நகும் அடி தொழுதும்

#2564
நந்தாவிளக்கு புறம் ஆக என நான்கு கோடி
நொந்தார் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்
கந்து ஆர் கடாத்த களிறும் கொடி தேர்கள் நூறும்
செந்தாமரை மேல் நடந்தான் அடி சேர்த்தினானே

#2565
வாடாத மாலை மணி மாலை பொன் மாலை முத்த
நீடு ஆர மாலை நிழல் மாண்ட பவழ மாலை
மாடு ஆர்ந்து இழியும் அருவி மலர் பொற்ப ஏற்றி
கூடார் கடந்தான் வலம் கொண்டு இடம் சென்று புக்கான்

#2566
உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை
வல மருப்பு ஈர்ந்து செய்த மணி கிளர் கட்டில் ஏறி
நிலமகள் கணவன் வேந்தர் குழாத்து இடை நிவந்து இருந்தான்
புலமகள் புகழ பொய் தீர் பூ மகள் புணர்ந்து மாதோ

#2567
எ துணை தவம் செய்தான்-கொல் என்று எழுந்து உலகம் ஏத்த
வித்திய புகழினாற்கு விருந்து அரசு இயற்றி நாடும்
ஒத்தன நல்கி தன்னை உழந்தனள் வளர்த்த தாய்க்கு
சித்திர தேவி பட்டம் திருமகன் நல்கினானே

#2568
இன களி யானை மன்னர் இள உடையான் என்று ஏத்த
தனக்கு இளையானை நாட்டி தான் தனக்கு என்று கூறி
சின களி யானை மன்னர் மகளிரை சேர்த்தி நம்பன்
மனக்கு இனிது உறைக என்று வளம் கெழு நாடும் ஈந்தான்

#2569
ஆழ் கடல் வையத்து இல்லா அரு நிதி அரசு நல்ல
சூழ் மணி ஆழி செம்பொன் சூட்டொடு கண்ணி காதல்
தோழர்கட்கு அருளி தொல்லை உழந்தவர் தம்மை தோன்ற
வாழ்க என நிதியும் நாடும் மன்னவன் கொடுப்பித்தானே

#2570
வளர்த்த கை தாயர் தம்மை வருக என அருளி தங்கள்
கிளைக்கு எலாம் சிறப்பு செய்து கேட்டவர் மருள ஐந்து ஊர்
விளைத்து உள கெடாத வைகல் ஆயிரம் இறுப்பு தண்ட
கொள கொடுத்து அயா உயிர்த்தான் கொற்றவன் என்ப அன்றே

#2571
கைத்தலம் மந்தி கொண்ட கைம்மக போன்று தன்-கண்
பத்திமை விடாது மேல் நாள் படை கலம் நவின்ற பொன் தேர்
மைத்துன மன்னர்க்கு எல்லாம் வள நிதி மணி செய் மான் தேர்
தத்து நீர் மிசை செல் மாவும் தவழ் மத களிறும் ஈந்தான்

#2572
கோமகன் கோல மான் தேர் கோவிந்தன் என்னும் கொய்தார்
மாமற்கு மடங்கல் ஆற்றல் கட்டியங்காரன் என்ற
தீமகன் உடைய எல்லாம் தேர்ந்தனன் கொடுத்து செல்வன்
ஓவல் இல் கறவை ஒத்தான் உலோகபாலற்கு மாதோ

#2573
பேர் இடர் தன்-கண் நீக்கி பெரும் புணை ஆய தோழற்கு
ஓர் இடம் செய்து பொன்னால் அவன் உரு இயற்றி ஊரும்
பார் இடம் பரவ நாட்டி அவனது சரிதை எல்லாம்
தார் உடை மார்பன் கூத்து தான் செய்து நடாயினானே

#2574
ஊன் விளையாடும் வை வேல் உறு வலி சிந்தித்து ஏற்ப
தான் விளையாடி மேல் நாள் இருந்தது ஓர் தகை நல் ஆலை
தேன் விளையாடும் மாலை அணிந்து பொன் பீடம் சேர்த்தி
ஆன் விளையாடும் ஐந்து ஊர் அதன் புறம் ஆக்கினானே

#2575
கொட்டமே கமழும் குளிர் தாமரை
மொட்டின் வீங்கிய வெம் முலை மொய் குழல்
அட்டும் தேன் அழியும் மது மாலையார்
பட்டம் எண்மரும் பார் தொழ எய்தினார்

#2576
பஞ்சி சூழ் அல்குல் பல் வளை வீங்கு தோள்
வஞ்சி நுண் இடை வம்பு அணி வெம் முலை
விஞ்சையன் மகள் சீறடி வீழ்ந்தனர்
அம் சில் ஓதி அரும்பு அவிழ் கோதையார்

#2577
வீடு இல் ஐந்தரை கோடி விருத்தி மேல்
நாடி ஆயிரம் நாள்-தொறும் நங்கைமார்க்கு
ஆடு சாந்து அடிசில் புறம் ஆக்கினான்
கோடு வால் ஒளி குங்கும குன்று அனான்

#2578
ஆனை மும்மதம் ஆடிய காடு எலாம்
மானை நோக்கியர் வாய் மது ஆடின
வேனல் மல்கி வெண் தேர் சென்ற வெம் நிலம்
பானல் மல்கி வெண் பால் அன்னம் பாய்ந்தவே

#2579
மாரி மல்கி வளம் கெழு மண்மகள்
வாரி மல்கி வரம்பு இலள் ஆயினாள்
ஆரிய அடிசில் தளி ஆன் நெய் வார்ந்து
ஏரி ஆயின எங்கணும் என்பவே

#2580
ஏக வெண்குடை இன் நிழல் தண் அளி
மாகமாய் கடல் எல்லை நிழற்றலால்
போக பூமியும் பொன் கிளர் பூமியும்
நாகர் நாகமும் நாணி ஒழித்தவே

#2581
வண்டு மேய்ந்து வரி முரல் பூம் சிகை
கெண்டை வென்ற கண்ணார்களும் கேள்வரும்
உண்டு மூத்து இடையூறு இலர் சேறலால்
பண்டை ஊழியின் பார் மலி உற்றதுவே

#2582
செரு நாடு செம் சுடர் வேல் திருகு செம்பொன் கனை கழல் கால்
திரு நாடு தேம் பைம் தார் செல்வன் செவ்வி பெறாது ஒழிந்து
பெரு நாட்டு அரும் கலங்கள் சுமந்து பேரும் இடம் பெறாஅது
ஒரு நாட்டு அரசு உணங்க உரவோன் கொற்றம் உயர்ந்ததே

#2583
வலையவர் முன்றில் பொங்கி வாள் என வாளை பாய
சிலையவர் குரம்பை அம் கண் மான் இனம் சென்று சேப்ப
நிலை திரிந்து ஊழி நீங்கி உத்தர குருவும் ஆகி
கொலை கடிந்து இவறல் இன்றி கோ தொழில் நடாத்தும் அன்றே

#2584
கதம் கனல் யானை நெற்றி கட்டிய பட்டமே போல்
மதம் கமழ் கோதை அல்குல் மனா கிடந்து இமைத்து காம
பதம் பல பார்க்கும் சாயல் பாவை மற்று அநங்க மாலை
விதம்பட கருதி மாதர் விளைத்தது விளம்பலுற்றேன்

#2585
ஈர்ம் தண் கோதை இளையார் குழாத்திடையாள் எம் கோன் அடி சேர்வல் என்று
ஆர்ந்த செந்தாமரை முகத்தினாள் அடிகள் வந்து ஈங்கு அகன் கடை உளாள்
சார்ந்த சாயல் தட மா முலை தையல் வல்லே வருக என்றான்
சேர்ந்து மன்னர் முடி வைர வில் திளைக்கும் செம்பொன் செறி கழலினான்

#2586
அரு விலை நன் கலம் செய் போர்வை அன்னம் நாண அடி ஒதுங்கி சென்று
உருவம் ஒவ்வாது ஒசியும் நுசுப்பு ஒல்கி கோமான் அடி தொழுத பின்
மருவு இன் சாயல் மணி மெல் விரல் கூப்பி ஓலை மரபின் நீட்ட
இரவி என்ன விளங்கும் ஒளி இறைவன் கொண்டு ஆங்கு அது நோக்குமே

#2587
அடிகள் கண்டு ஆங்கு உவந்து அருளுக அநங்கமாலை அடி வீழ்ச்சி முன்
கொடிய வேலான் கொதித்து அரங்கின் நீக்கி கோயில் சிறை வைத்த பின்
கடி செய் பைம் தார் கமழ் மாலை வேல் கந்துகற்கு சிறுவ யான் இ
படி அனல் காய் பசு மணிகள் வேய்ந்து ஓங்கும் பைம்பொன் செறி கழலினாய்

#2588
என்ன நாளும் அரற்ற பொறான் விடுப்ப போகி இன மழைகள் மொய்த்து
அன்னம் துஞ்சும் அடி குடிலினுள் அன்றி யான் கொண்ட நாடகத்தினை
துன்னி நம்பி உருவு தீட்டி தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற நீ
மன்னர் மன்ன மதி தோய் குடையாய் மகளிர் காமம் மறைத்து ஒழிதியோ

#2589
கண்கள் துஞ்சா கதிர் முத்தமே காலும் கை ஆர் வளை கழலுமால்
பண் கொள் சொல்லார் மாமை நீங்கி பைம்பொன் போர்த்த படா முலைகளும்
மண் கொள் வேல் மன்னர் நண்பின்மையை வையக்கு எல்லாம் உடன் அறையவோ
பெண்கள் ஆவி விடுத்து ஒழிபவோ பெரியோர் நண்பு அடைந்தார் பெயர்பவோ

#2590
அறன் நிழல் ஆய் உலகு அளிக்கும் நின் ஆர மாலை அணி வெண்குடை
புறன் நிழலின் அயலேனோ யான் புல்லா மன்னர் நிணம் பொழியும் வேல்
மறன் நிழல் மத யானையாய் வந்த என் தோழி வாமலேகை
திறன் அழியாமை இன்னே விடுத்து அருளுக தேர் வேந்தர் வேந்தனே

#2591
புள்ளும் யாழும் குழலும் ஏங்க புனைந்து வல்லான் நினைந்து இயற்றிய
பள்ளி செம்பொன் படை அமளி மேல் மழலை மணி யாழ் தான் வெளவி
கொள்ளும் தீம் சொல் அலங்கார பூம்_கொடியை புல்லி மணி குவட்டினை
எள்ளி வீங்கி திரண்ட தோள் மேல் குழை வில் வீச இருந்தானே

#2592
அம் கை சேப்ப குருகு இரங்க அலங்கல் அம் பூம் குழல் துயல் வர
மங்கை நல்லார் பவழ அம்மி அரைத்த சாந்தம் மலர் பெய் மாலை
பொங்கு தூம கொழு மென் புகை புரிந்த பஞ்சமுக வாசமும்
தங்கு தாம மார்பினாற்கும் தையலாட்கும் கொண்டு ஏந்தினாரே

#2593
அருளும் ஆறு என்னை அநங்கமாலை அடித்தி தோழி அன்றோ என
தெருளலான் செல்வ களி மயக்கின் நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி
மருளின் சொன்னாய் மறப்பேனோ யான் நின்னை என்ன மகிழ் ஐங்கணை
உருளும் முத்து ஆர் முகிழ் முலையினாள் உள்ளத்து உவகை தோற்றினாளே

#2594
முறுவல் திங்கள் முக அரங்கின் மேல் முரிந்து நீண்ட புருவ கைகள்
நெறியின் வட்டித்து நீண்ட உண்கண் சென்றும் வந்தும் பிறழ்ந்தும் ஆட
பொறி கொள் பூம் சிலம்பு மேகலைகளும் புணர்ந்த இன்னியங்கள் ஆர்ப்ப வேந்தன்
அறியும் நாடகம் கண்டான் பைம் தார் அலர்ந்து மாதர் நலம் குழைந்ததே

#2595
நால் மருப்பின் மத யானை நறிய பைம் தாமரை மடந்தையை
தேன் மதர்ப்ப திளைத்து ஆங்கு அவன் திருவின் சாயல் நலம் கவர்ந்த பின்
ஊன் மதர்த்த ஒளி வேல் கண்ணார் பரவ இவ்வாறு ஒழுகும் அன்றே
வான் அகத்தும் நிலத்தும் இல்லா-வண்ணம் மிக்க மணி பூணினான்

#2596
நரம்பு மீது இறத்தல் செல்லா நல் இசை முழவும் யாழும்
இரங்கு தீம் குழலும் ஏங்க கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப
பரந்த வாள் நெடும் கண் செ வாய் தேசிக பாவை கோல
அரங்கின் மேல் ஆடல் காட்டி அரசனை மகிழ்வித்தாளே

#2597
கடல் படை மன்னர் தம்மை காதலின் விடுத்து காமன்
தொடுத்த கோல் மார்பில் தங்க தூ மலர் கொம்பு அனாளை
வடித்த இன் அமிர்தின் ஆர பருகலின் மழை கண் செ வாய்
துடித்து வண்டு உண்ண தூங்கும் செம் தளிர் ஒத்தது அன்றே

#2598
இளைமை அம் கழனி சாயல் ஏர் உழுது எரி பொன் வேலி
வளை முயங்கு உருவ மென் தோள் வரம்பு போய் வனப்பு வித்தி
கிளை நரம்பு இசையும் கூத்தும் கேழ்த்து எழுந்து ஈன்ற காம
விளை பயன் இனிதின் துய்த்து வீணை வேந்து உறையும் மாதோ
@13 முத்தி இலம்பகம்

#2599
நீர் ஏந்தி நெய்ம் மிதந்து நிணம் வாய் பில்கி அழல் விம்மி
போர் ஏந்தி பூ அணிந்து புலவு நாறும் புகழ் வேலோன்
கார் ஏந்து இடி முரசம் ஆர்ப்ப காய் பொன் கலன் சிந்தி
பார் ஏந்தி செல்லும் நாள் பட்டதாம் நாம் பகர்வதே

#2600
விண்-பால் சுடர் விலக்கி மேகம் போழ்ந்து விசும்பு ஏந்தி
மண்-பால் திலகம் ஆய் வான் பூத்து ஆங்கு மணி மல்கி
பண்-பால் வரி வண்டும் தேனும் பாடும் பொழில் பிண்டி
எண் பால் இகந்து உயர்ந்தாற்கு இசைந்த கோயில் இயன்றதே

#2601
அடிசில் கலம் கழீஇ கருனை ஆர்ந்த இள வாளை
மடுவில் மதர்த்து உணரா வாழை தண்டில் பல துஞ்சும்
நெடு நீர் கழனி சூழ் நியமம் சேர்த்தி விழவு அயர்ந்து
வடி நீர் நெடும் கண்ணார் கூத்தும் பாட்டும் வகுத்தாரே

#2602
அல்லி அரும் பதமும் அடகும் காயும் குள நெல்லும்
நல்ல கொழும் பழனும் கிழங்கும் தந்து நவை தீர்த்தார்க்கு
இல்லையே கைம்மாறு என்று இன்பம் எல்லாம் அவர்க்கு ஈந்தாள்
வில்லோன் பெருமாட்டி விளங்கு வேல் கண் விசயையே

#2603
தனியே துயர் உழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள்
இனியாள் இடர் நீக்கி ஏமம் சேர்த்தி உயக்கொண்ட
கனியார் மொழியாட்கும் மயிற்கும் காமர் பதி நல்கி
முனியாது தான் காண மொய் கொள் மாடத்து எழுதுவித்தாள்

#2604
அண்ணல் பிறந்த ஆங்கு ஐந்நூற்று ஐவர்க்கு அளந்து ஆன் பால்
வண்ண சுவை அமுதம் வைக நாளும் கோவிந்தன்
வெண்ணெய் உருக்கி நெய் வெள்ளம் ஆக சொரிந்து ஊட்ட
பண்ணி பரிவு அகன்றாள் பைம் தார் வேந்தன் பயந்தாளே

#2605
தோடு ஆர் புனை கோதை சுநந்தை சேர்ந்து தொழுதாளை
பீடு ஆர் பெரும் சிறுவர் பயந்தீர் வம்-மின் என புல்லி
நாடு ஆர் புகழாளை நாண மொழிகள் பல கூறி
கோடா குருகுலத்தை விளக்கிட்டாளை விளக்கினாள்

#2606
மறை ஒன்று உரைப்பன போல் மலர்ந்து நீண்டு செவி வாய் வைத்து
உறைகின்ற ஓடு அரி கண் உருவ கொம்பின் எண்மரும்
இறைவி அடி பணிய எடுத்து புல்லி உலகு ஆளும்
சிறுவர் பயந்து இறைவன் தெளிவீர் என்றாள் திரு அன்னாள்

#2607
பொங்கும் மணி முடி மேல் பொலிந்து எண் கோதை தொகை ஆகி
கங்குல் கனவு அகத்தே கண்ணுள் தோன்றி வந்தீர் நீர்
எங்கும் பிரியற்பீர் என்று கண்கள் மலர்ந்து இருந்து
கொங்கு உண் நறும் பைம் தார் கோமான் இங்கே வருக என்றாள்

#2608
சிங்கம் நடப்பது போல் சேர்ந்து பூ தூய் பலர் வாழ்த்த
தங்கா விருப்பின் தம் பெருமான் பாதம் முடி தீட்டி
எங்கோ பணி என்னா அஞ்சா நடுங்கா இரு வில் கண்
பொங்க இடு தவிசில் இருந்தான் போர் ஏறு அனையானே

#2609
கொற்றவி மகனை நோக்கி கூறினள் என்ப நும் கோக்கு
உற்றதை பிறர்கள் கூற உணர்ந்தனை-ஆயின் நானும்
இற்று என உரைப்ப கேண்மோ இலங்கு பூண் அலங்கல் மார்பின்
செற்றவர் செகுத்த வை வேல் சீவகசாமி என்றாள்

#2610
நாகத்தால் விழுங்கப்பட்ட நகை மதி கடவுள் போல
போகத்தால் விழுங்கப்பட்டு புறப்படான் புன்சொல் நாணான்
ஆகத்தான் அமைச்சர் நுண் நூல் தோட்டியால் அழுத்தி வெல்லும்
பாகர்க்கும் தொடக்க நில்லா பகடு போல் பொங்கியிட்டான்

#2611
நுண் மதி போன்று தோன்றா நுணுகிய நுசுப்பினார்-தம்
கண் வலை பட்ட-போழ்தே கடு நவை அரவோடு ஒக்கும்
பெண்மையை பெண்மை என்னார் பேர் உணர்வு உடைய நீரார்
அண்ணலை தெருட்டல் தேற்றாது அமைச்சரும் அகன்றுவிட்டார்

#2612
கல் சிறை அழித்து வெள்ளம் கடற்கு அவாய் ஆங்கு கற்றோர்
சொல் சிறை அழித்து வேந்தன் துணை முலை துறத்தல் செல்லான்
வில் சிறை கொண்ட போலும் புருவத்து விளங்கு வேல் கண்
நல் சிறை பட்டு நாடும் நகரமும் காவல் விட்டான்

#2613
பிளிறுவார் முரசத்தானை பெருமகன் பிழைப்பு நாடி
களிறு மென்று உமிழப்பட்ட கவழம் போல் தகர்ந்து நில்லாது
ஒளிறு வேல் சுற்றம் எல்லாம் உடைந்த பின் ஒருவன் ஆனான்
வெளிறு முன் வித்தி பின்னை வச்சிரம் விளைத்தலாமோ

#2614
வனை கல குயவன் நாணின் மன்னரை அறுத்து முற்றி
கனை குரல் உருமின் ஆர்ப்ப காவலன் நின்னை வேண்டி
வினை மயில் பொறியில் என்னை போக்கி விண் விரும்ப புக்கான்
புனை முடி வேந்த போவல் போற்று என மயங்கி வீழ்ந்தான்

#2615
சீத நீர் தெளித்து செம்பொன் திருந்து சாந்து ஆற்றி தம்மால்
மாதரார் பலரும் வீச வளர்ந்து எழு சிங்கம் போல
போதொடு கலங்கள் சோர எழுந்து பொன் ஆர மார்பன்
யாது எனக்கு அடிகள் முன்னே அருளியது என்ன சொன்னாள்

#2616
பிறந்து நாம் பெற்ற வாழ்நாள் இத்துணை என்பது ஒன்றும்
அறிந்திலம் வாழ்தும் என்னும் அவாவினுள் அழுந்துகின்றாம்
கறந்து கூற்று உண்ணும் ஞான்று கண் புதைத்து இரங்கின் அல்லால்
இறந்த நாள் யாவர் மீட்பார் இற்று என பெயர்க்கலாமோ

#2617
சுமை தயிர் வேய்ந்த சோற்றின் துய்த்து இனிது ஆக நம்மை
அமைத்த நாள் என்னும் நாகம் விழுங்கப்பட்டு அன்னது அங்கண்
இமைத்த கண் விழித்தல் அன்றி இறந்து பாடு எய்துகின்றாம்
உமைத்துழி சொறியப்பெற்றாம் ஊதியம் பெரிதும் பெற்றாம்

#2618
கடு வளி புடைக்கப்பட்ட கண மழை குழாத்தின் நாமும்
விடு வினை புடைக்க பாறி வீற்றுவீற்று-ஆயின் அல்லால்
உடன் உறை பழக்கம் இல்லை ஒழி மதியத்தை காதல்
வடு உடைத்து என்று பின்னும் மாபெரும்தேவி சொன்னாள்

#2619
இருந்து இளமை கள் உண்டு இடை தெரிதல் இன்றி
கரும் தலைகள் வெண் தலைகள் ஆய் கழியும் முன்னே
அரும் தவமும் தானமும் ஆற்று-மினே கண்டீர்
முருந்து அனைய தூ முறுவல் முற்று_இழையார் சேரி

#2620
உடற்றும் பிணி தீ உடம்பின் உயிர் பெய்திட்டு
அடுத்து உணர்வு நெய் ஆக ஆற்றல் துவை ஆக
குடித்து உண்ணும் கூற்றம் குடில் பிரியா முன்னே
கொடுத்து உண்-மின் கண்டீர் குணம் புரி-மின் கண்டீர்

#2621
உழந்தாலும் புத்து அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது
இழந்தார் பலரால் இடும்பை நீர் யாற்றுள்
அழுந்துமால் அ பண்டி அச்சு இறா முன்னே
கொழும் சீலம் கூலியா கொண்டு ஊர்-மின் பாகீர்

#2622
பிறந்தவர்கள் எல்லாம் அவா பெரியர் ஆகி
துறந்து புகழ் வேண்டார் ஓர் துற்று அவிழும் ஈயார்
அறம் கரிது சேய்த்து என்பது யாதும் அறியாரேல்
வெறும் பொருள் அது அம்மா விடுத்திடு-மின் என்றாள்

#2623
முல்லை முகை சொரிந்தால் போன்று இனிய பால் அடிசில் மகளிர் ஏந்த
நல்ல கருனையால் நாள்வாயும் பொன் கலத்து நயந்து உண்டார்கள்
அல்லல் அடைய அடகு இடு-மின் ஓட்டு அகத்து என்று அயில்வார் கண்டும்
செல்வம் நமரங்காள் நினையன்-மின் செய் தவமே நினை-மின் கண்டீர்

#2624
அம் பொன் கலத்து அடு பால் அமர்ந்து உண்ணா அரிவை அந்தோ
வெம்பி பசி நலிய வெம் வினையின் வேறாய் ஓர் அகல் கை ஏந்தி
கொம்பின் கொள ஒசிந்து பிச்சை என கூறி நிற்பாள் கண்டு
நம்பன்-மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினை-மின் கண்டீர்

#2625
வண்ண துகில் உடுப்பின் வாய்விட்டு அழுவது போல் வருந்தும் அல்குல்
நண்ணா சிறு கூறை பாகம் ஓர் கை பாகம் உடுத்து நாளும்
அண்ணாந்து அடகு உரீஇ அந்தோ வினையே என்று அழுவாள் கண்டும்
நண்ணன்-மின் செல்வ நமரங்காள் நல் அறமே நினை-மின் கண்டீர்

#2626
மை திரண்ட வார் குழல் மேல் வண்டு ஆர்ப்ப மல்லிகை மெல் மாலை சூடி
கை திரண்ட வேல் ஏந்தி காமன் போல் காரிகையார் மருள சென்றார்
ஐ திரண்டு கண்டம் குரைப்ப ஓர் தண்டு ஊன்றி அறிவின் தள்ளி
நெய் திரண்டால் போல் உமிழ்ந்து நிற்கும் இளமையோ நிலையாதே காண்

#2627
என்றலும் சுநந்தை சொல்லும் இறைவி-தான் கண்டது ஐயா
நன்றும் அஃது ஆக அன்றே-ஆயினும் ஆக யானும்
ஒன்றினன் துறப்பல் என்ன ஓள் எரி தவழ்ந்த வெண்ணெய்
குன்று போல் யாதும் இன்றி குழைந்து மெய்ம்மறந்து நின்றான்

#2628
ஓர் உயிர் ஒழித்து இரண்டு உடம்பு போவ போல்
ஆரியன் ஒழிய அங்கு ஒளவைமார்கள் தாம்
சீரிய துறவொடு சிவிகை ஏறினார்
மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே

#2629
நல் மயில் பொறின் மேல் போய நாளினும்
புன்மை உற்று அழுகுரல் மயங்கி பூ பரிந்து
இ நகர் கால் பொரு கடலின் எங்கணும்
மன்னனில் ஆகுலம் மயங்கிற்று என்பவே

#2630
அழுது பின் அணி நகர் செல்ல ஆயிரம்
தொழு தகு சிவிகைகள் சூழ போய பின்
இழுது அமை எரி சுடர் விளக்கு இட்ட அன்னவள்
பழுது இல் சீர் பம்மை தன் பள்ளி நண்ணினாள்

#2631
அரும் தவ கொடி குழாம் சூழ அல்லி போல்
இருந்து அறம் பகர்வுழி இழிந்து கைதொழுது
ஒருங்கு எமை உய கொண்-மின் அடிகள் என்றாள்
கரும் கயல் நெடும் தடம் கண்ணி என்பவே

#2632
ஆர் அழல் முளரி அன்ன அரும் தவம் அரிது தானம்
சீர் கெழு நிலத்து வித்தி சீல நீர் கொடுப்பின் தீம் தேன்
பார் கெழு நிலத்துள் நாறி பல் புகழ் ஈன்று பின்னால்
தார் கெழு தேவர் இன்பம் தையலாய் விளைக்கும் என்றாள்

#2633
அறவுரை பின்னை கேட்டும் அடிகள் மற்று எமக்கு வல்லே
துறவு தந்து அருளுக என்ன தூ நகர் இழைத்து மேலால்
நற விரி தாமம் நாற்றி வானகம் விதானித்து ஆய்ந்து
திறவிதின் தவிசு தூபம் திரு சுடர் விளக்கு இட்டாரே

#2634
பாலினால் சீறடி கழுவி பைம் துகில்
நூலினால் இயன்றன நுனித்த வெண்மைய
காலனை கண்புதைத்து ஆங்கு வெம் முலை
மேல் வளாய் வீக்கினார் விதியின் என்பவே

#2635
தேன் உலாம் மாலையும் கலனும் சிந்துபு
பால் நிலா கதிர் அன அம் மென் பைம் துகில்
தான் உலாய் தட முலை முற்றம் சூழ்ந்து-அரோ
வேனிலான் வரு நெறி வெண் முள் வித்தினார்

#2636
முன்னுபு கீழ் திசை நோக்கி மொய் மலர்
நல் நிற தவிசின் மேல் இருந்த நங்கைமார்
இன் மயிர் உகுக்கிய இருந்த தோகைய
பன் மயில் குழாம் ஒத்தார் பாவைமார்களே

#2637
மணி இயல் சீப்பு இட சிவக்கும் வாள் நுதல்
அணி இரும் கூந்தலை ஒளவைமார்கள் தாம்
பணிவு இலர் பறித்தனர் பரமன் சொன்ன நூல்
துணிபொருள் சிந்தியா துறத்தல் மேயினார்

#2638
கன்னியர் ஆயிரர் காய் பொன் கொம்பு அனார்
பொன் இயல் படலிகை ஏந்தி பொன் மயிர்
நல் நிலம் படாமையே அடக்கி நங்கைமார்
தொல் மயிர் உகுத்த நல் மயிலின் தோன்றினார்

#2639
பொன் குடம் திரு மணி பொழிய பெய்த போல்
எற்பு உடம்பு எண் இலா குணங்களான் நிறைத்து
உற்று உடன் உயிர்க்கு அருள் பரப்பி ஓம்பினார்
முற்று உடன் உணர்ந்தவன் அமுதம் முன்னினார்

#2640
புகழ்ந்து உரை மகிழ்ச்சியும் பொற்பு இல் பல் சனம்
இகழ்ந்து உரைக்கு இரக்கமும் இன்றி அங்க நூல்
அகழ்ந்து கொண்டு அரும் பொருள் பொதிந்த நெஞ்சினார்
திகழ்ந்து எரி விளக்கு என திலகம் ஆயினார்

#2641
அலை மணி கவரி மான் தேர் அடு களி யானை பாய்மா
நிலம் நெளி கடல் அம் தானை நிரந்து பூ சுமப்ப மன்னன்
சில மலர் தானும் ஏந்தி சென்று சீர் பெருக வாழ்த்தி
இல மலர் பஞ்சி பாதத்து எழில் முடி தீட்டினானே

#2642
கடியவை முன்பு செய்தேன் கண்ணினால் காண சில் நாள்
அடிகள் இ நகரின் உள்ளே உறைக என அண்ணல் கூற
முடி கெழு மன்னற்கு ஒன்று மறுமொழி கொடாது தேவி
படிமம் போன்று இருப்ப நோக்கி பம்மை தான் சொல்லினாளே

#2643
காதலன் அல்லை நீயும் காவல நினக்கு யாமும்
ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை என்ன
தாது அலர் தாம மார்பன் உரிமையும் தானும் மாதோ
போது அவிழ் கண்ணி ஈர்த்து புனல் வர புலம்பினானே

#2644
ஏதிலன் ஆயினாலும் இறைவர் தம் அறத்தை நோக்க
காதலன் அடிகள் என்ன கண் கனிந்து உருகி காசு இல்
மா தவ மகளிர் எல்லாம் மா பெரும் தேவியாரை
ஏதம் ஒன்று இல்லை நம்பிக்கு இன் உரை கொடு-மின் என்றார்

#2645
திரை வளர் இப்பி ஈன்ற திரு மணி ஆர மார்பின்
வரை வளர் சாந்தம் ஆர்ந்த வைர குன்று அனைய திண் தோள்
விரை வளர் கோதை வேலோய் வேண்டிய வேண்டினேம் என்று
உரை விளைத்து உரைப்ப காளை உள்ளகம் குளிர்ந்து சொன்னான்

#2646
அடிகளோ துறக்க ஒன்றும் உற்றவர் யாதும் அல்லர்
சுடு துயர் என்-கண் செய்தாய் சுநந்தை நீ ஒளவை அல்லை
கொடியை நீ கொடிய செய்தாய் கொடியையோ கொடியை என்னா
இடர் உற்று ஓர் சிங்கம் தாய் முன் இருந்து அழுகின்றது ஒத்தான்

#2647
சென்றதோ செல்க இப்பால் திருமகள் அனைய நங்கை
இன்று இவள் துறப்ப யான் நின் அரசு உவந்து இருப்பேன்-ஆயின்
என்று எனக்கு ஒழியும் அம்மா பழி என இலங்கு செம்பொன்
குன்று அனான் குளிர்ப்ப கூறி கோயில் புக்கு அருளுக என்றான்

#2648
பந்து அட்ட விரலினார் தம் படா முலை கிழித்த பைம் தார்
நந்தட்டன் தன்னை நோக்கி நங்கையார் அடிகள் சொன்னார்
நொந்திட்டு முனிய வேண்டா துறந்திலம் நும்மை என்ன
கந்து அட்ட திணி திண் தோளான் கற்பகம் மலர்ந்தது ஒத்தான்

#2649
துறந்த இ நங்கைமார் தம் தூ மலர் அனைய பாதம்
உறைந்த என் சென்னி போதின் மிசைய என்று ஒப்ப ஏத்தி
கறந்த பால் அனைய கந்தி கொம்பு அடுத்து உருவ பைம் பூண்
பிறங்கு தார் மார்பன் போந்து பெரு மண கோயில் புக்கான்

#2650
வடி நிரை நெடிய கண்ணார் மாமிமார் விடுப்ப ஏகி
கடி நிரை சிவிகை ஏறி கதிர் மணி குடை பின் செல்ல
உடை திரை பரவை அன்ன ஒளிறு வேல் மறவர் காப்ப
கொடி நிரை கோயில் புக்கார் குங்கும கொடி அனாரே

#2651
முழுது உலகு எழில் ஏத்தும் மூரி வேல் தானை மன்னன்
தொழுதகு பெருமாட்டி தூ மணி பாவை அன்னாள்
பொழிதரு மழை மொக்குள் போகம் விட்டு ஆசை நீக்கி
வழி வரு தவம் எய்தி வைகினள் தெய்வம் அன்னாள்

#2652
உடை திரை முத்தம் சிந்த ஓசனிக்கின்ற அன்னம்
படர் கதிர் திங்கள் ஆக பரந்து வான் பூத்தது என்னா
அடர் பிணி அவிழும் ஆம்பல் அலை கடல் கானல் சேர்ப்பன்
குடை கெழு வேந்தற்கு இப்பால் உற்றது கூறல் உற்றேன்

#2653
துறவின் பால் படர்தல் அஞ்சி தொத்து ஒளி முத்து தாமம்
உறைகின்ற உருவ கோல சிகழிகை மகளிர் இன்பத்து
இறைவனை மகிழ்ச்சி செய்து மயக்குவான் அமைச்சர் எண்ணி
நிறைய நீர் வாவி சாந்தம் கலந்து உடன் பூரித்தாரே

#2654
நீர் அணி மாட வாவி நேர்ம் புணை நிறைத்து நீள் நீர்
போர் அணி மாலை சாந்தம் புனை மணி சிவிறி சுண்ணம்
வார் அணி முலையினார்க்கும் மன்னர்க்கும் வகுத்து வாவி
ஏர் அணி கொண்ட இ நீர் இறைவ கண்டு அருளுக என்றார்

#2655
கண மலை அரசன் மங்கை கட்டியங்காரன் ஆக
பணை முலை மகளிர் எல்லாம் பவித்திரன் படையது ஆக
இணை மலர் மாலை சுண்ணம் எரி மணி சிவிறி ஏந்தி
புணை புறம் தழுவி தூ நீர் போர் தொழில் தொடங்கினாரே

#2656
தூ மலர் மாலை வாளா சுரும்பு எழ புடைத்தும் தேன் சோர்
தாமரை சதங்கை மாலை சக்கரம் என்ன வீழ்த்தும்
காமரு கணையம் ஆக கண்ணிகள் ஒழுகவிட்டும்
தோமரம் ஆக தொங்கல் சிதறுபு மயங்கினாரே

#2657
அரக்கு நீர் சிவிறி ஏந்தி ஆயிரம் தாரை செல்ல
பரப்பினாள் பாவை தத்தை பைம் தொடி மகளிர் எல்லாம்
தரிக்கிலர் ஆகி தாழ்ந்து தட முகில் குளிக்கும் மின் போல்
செருக்கிய நெடும் கண் சேப்ப சீத நீர் மூழ்கினாரே

#2658
தானக மாடம் ஏறி தையலார் ததும்ப பாய்வார்
வானகத்து இழியும் தோகை மட மயில் குழாங்கள் ஒத்தார்
தேன் இனம் இரிய தெண் நீர் குளித்து எழும் திருவின் அன்னார்
பால் மிசை சொரியும் திங்கள் பனி கடல் முளைத்தது ஒத்தார்

#2659
கண்ணி கொண்டு எறிய அஞ்சி கால் தளர்ந்து அசைந்து சோர்வார்
சுண்ணமும் சாந்தும் வீழ தொழுதனர் இரந்து நிற்பார்
ஒண் மலர் மாலை ஓச்ச ஒசிந்து கண் பிறழ ஒல்கி
வெண்ணெயின் குழைந்து நிற்பார் வேல் கணார் ஆயினாரே

#2660
கூந்தலை ஒரு கை ஏந்தி குங்கும தாரை பாய
பூம் துகில் ஒரு கை ஏந்தி புகும் இடம் காண்டல் செல்லார்
வேந்தனை சரண் என்று எய்த விம்முறு துயரம் நோக்கி
காய்ந்து பொன் சிவிறி ஏந்தி கார் மழை பொழிவது ஒத்தான்

#2661
வீக்கினான் தாரை வெய்தா சந்தன தளிர் நல் மாலை
ஓக்கினார் கண்ணி சுண்ணம் உடற்றினார் உருவ சாந்தின்
பூ கமழ் துகிலும் தோடும் மாலையும் சொரிய போர் தோற்று
ஆக்கிய அநங்கன் சேனை ஆறு அல் ஆறு ஆயிற்று அன்றே

#2662
அன்னங்கள் ஆகி அம் பூம் தாமரை அல்லி மேய்வார்
பொன் மயில் ஆகி கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார்
இன் மலர் கமலம் ஆகி பூ முகம் பொருந்த வைப்பார்
மின்னும் மேகலையும் தோடும் கொடுத்து அடி தொழுது நிற்பார்

#2663
பண் உரை மகளிர் மாலை பைம் துகில் கவர்ந்து கொள்ள
கண் உரை மகளிர் சேர்ந்து கார் இருள் திவளும் மின் போல்
பெண் உரை பிடி கை கூந்தல் பொன் அரி மாலை தாழ
வெண் நுரை உடுத்து நின்றார் வேந்தன் நோக்கு உண்ண நின்றார்

#2664
தன் படை உடைய தத்தை சந்தன தாரை வீக்கி
ஒன்பது முகத்தின் ஓடி உறு வலி அகலம் பாய
பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இள முலையில் தூவான்
முன்பு அடு குலிக தாரை முழு வலி முறுக்கல் உற்றான்

#2665
மெய்ப்படு தாரை வீழின் நோம் இவட்கு என்ன அஞ்சி
கைப்படை மன்னன் நிற்ப கதுப்பு அயல் மாலை வாங்கி
செப்பட முன்கை யாப்ப திருமகன் தொலைந்து நின்றான்
பை புடை அல்குலாளை பாழியால் படுக்கல் உற்றே

#2666
அடுத்த சாந்து அலங்கல் சுண்ணம் அரும் புனல் கவர அஞ்சி
உடுத்த பட்டு ஒளிப்ப ஒண் பொன் மேகலை ஒன்றும் பேசா
கிடப்ப மற்று அரசன் நோக்கி கெட்டது உன் துகில் மற்று என்ன
மடத்தகை நாணி புல்லி மின்னு சேர் பருதி ஒத்தான்

#2667
விம் அகில் புகையின் மேவி உடம்பினை வேது செய்து
கொம்மென நாவி நாறும் கூந்தலை உலர்த்தி நொய்ய
அம் மலர் உரோம பூம் பட்டு உடுத்த பின் அனிச்ச மாலை
செம் மலர் திருவின் அன்னார் சிகழிகை சேர்த்தினாரே

#2668
கார் கொள் குன்று அன கண் கவர் தோளினான்
நீர் கொள் நீர் அணி நின்று கனற்றலின்
வார் கொள் மென் முலை வம்பு அணி கோதையார்
ஏர் கொள் சாயல் உண்டாடும் மற்று என்பவே

#2669
வேனில் வாய் கதிர் வெம்பலின் மேல் நிலை
தேன் உலாம் குளிர் சந்தன சேற்று-இடை
தான் உலாய் தடம் மென் முலை தங்கினான்
பால் நிலா கதிர் பாய்தரு பள்ளியே

#2670
முழுதும் மெய்ந்நலம் மூழ்கலின் நீர் சுமந்து
எழுது கண் இரங்க புருவ கொடி
தொழுவ போல் முரிய சொரி பூம் சிகை
அழுவ போன்று அணி நித்திலம் உக்கவே

#2671
எழுத்தின் பாடலும் ஆடலும் என்று இவை
பழுத்த கற்பக பன் மணி கொம்பு அனார்
அழுத்தி அன்ன அணி வளை தோள் மிசை
கழிக்கும் ஐங்கணை காமற்கும் காமனே

#2672
நீர் துளும்பு வயிற்றின் நிழல் முகில்
பார் துளும்ப முழங்கலின் பல் கலை
ஏர் துளும்ப வெரீஇ இறைவன் தழீஇ
கார் துளும்பு கொம்பின் கவின் எய்தினார்

#2673
இழிந்து கீழ் நிலை இன் அகில் சேக்கை மேல்
கிழிந்து சாந்து அழிய கிளர் மென் முலை
தொழிந்து மட்டு ஒழுக துதை தார் பொர
அழிந்த மேகலை அம் சிலம்பு ஆர்த்தவே

#2674
தேன் இறால் அன தீம் சுவை இன் அடை
ஆன் அறா முலை பால் அமுது அல்லது ஒன்றானும்
மேவலர் அச்சுறவு எய்திய
மான் அறா மட நோக்கியர் என்பவே

#2675
கூதிர் வந்து உலாவலின் குவவு மென் முலை
வேது செய் சாந்தமும் வெய்ய தேறலும்
போது அவிழ் மாலையும் புகையும் சுண்ணமும்
காதலித்தார் கரும் குவளை கண்ணினார்

#2676
சுரும்பு நின்று அறா மலர் தொங்கலார் கவின்
அரும்புகின்றார் கடல் அமிர்தமே எனா
விரும்புகின்றான் இளவேனில் வேந்தன் ஐம்
சரங்கள் சென்று அழுத்தலின் தரணி மன்னனே

#2677
குழை முகம் இட-வயின் கோட்டி ஏந்திய
அழல் நிற தேறல் உள் மதி கண்டு ஐயென
நிழல் முக பகை கெட பருகி நீள் விசும்பு
உழல் எனா நோக்குவாள் மதி கண்டு ஊடினாள்

#2678
பருகினேற்கு ஒளித்து நீ பசலை நோயொடும்
உருகி போய் இன்னும் அற்று உளை என்று உள் சுட
குருதி கண் கொள குணமாலை ஊடினாள்
உருவ தார் உற தழீஇ உடற்றி நீக்குவான்

#2679
நங்கை நின் முக ஒளி எறிப்ப நன் மதி
அங்கு அதோ உள் கருத்து அழகின் தேய்ந்தது
மங்கை நின் மனத்தினால் வருந்தல் என்று அவள்
பொங்கு இள வன முலை பொருந்தினான்-அரோ

#2680
கொங்கு விம்மு பூம் கோதை மாதரார்
பங்கய பகை பருவம் வந்து என
எங்கும் இல்லன எலி மயிர் தொழில்
பொங்கு பூம் புகை போர்வை மேயினார்

#2681
கூந்தல் இன் புகை குவவு மென் முலை
சாந்தம் ஏந்திய தமால மாலையும்
ஆய்ந்து தாங்கினார் அரவ மேகலை
காய்ந்து நித்திலம் கடிய சிந்தினார்

#2682
அளிந்த தீம் பழம் இஞ்சி ஆர்ந்த நீர்
விளைந்த வல் விளைவு அரிசி வேரியும்
வளைந்த மின் அனார் மகிழ்ந்து சண்பகம்
உளைந்து மல்லிகை ஒலியல் சூடினார்

#2683
தொத்து உடை மலர் தொங்கல் கண் பொர
முத்து உடை முலை கண் கண் நொந்த என்று
எய்த்து அடி சிலம்பு இரங்கும் இன் குரல்
கைத்து எடுத்தலின் காமம் தாழ்ந்ததே

#2684
பொன் பனிப்புறும் பொற்பினார் நலம்
அன்பன் இத்தலை அணங்க அத்தலை
முன்பனி தலை முழுதும் நீங்கி போய்
பின்பனி தலை பேண வந்ததே

#2685
வெள்ளிலோத்திரம் விளங்கும் வெண் மலர்
கள் செய் மாலையார் கண் கொளா துகில்
அள்ளி ஏந்திய அரத்த அல்குலார்
ஒள் எரி மணி உருவ பூணினார்

#2686
செம் நெருப்பு உணும் செ எலி மயிர்
அ நெருப்பு அளவு ஆய் பொன் கம்பலம்
மன்னர் உய்ப்பன மகிழ்ந்து தாங்கினார்
என்னர் ஒப்பும் இல்லவர்கள் என்பவே

#2687
ஆடல் இன் சுவை அமர்ந்து நாள்-தொறும்
பாடல் மெய்ந்நிறீஇ பருகி பண் சுவைத்து
ஓடு மா மதி உரிஞ்சும் ஒண் பொனின்
மாட கீழ் நிலை மகிழ்ந்து வைகினார்

#2688
புரி குழல் மடந்தையர் பொம்மல் வெம் முலை
திரு கழல் குருசில் தார் திளைக்கும் போரினுள்
செரு குரல் சிறுபறை சிலம்பு கிண்கிணி
அரி பறை மேகலை ஆகி ஆர்த்தவே

#2689
ஏ செயா சிலை நுதல் ஏழைமார் முலை
தூ செயா குங்குமம் துதைந்த வண்டு இனம்
வாய்ச்சியால் இட்டிகை செத்தும் மாந்தர்-தம்
பூ செயா மேனி போல் பொலிந்து தோன்றுமே

#2690
குரவம் பாவை கொப்புளித்து குளிர் சங்கு ஈர்ந்த துகளே போல்
மரவம் பாவை வயிறு ஆர பருகி வாடை அது நடப்ப
விரவி தென்றல் விடு தூதா வேனிலாற்கு விருந்து ஏந்தி
வரவு நோக்கி வயா மரங்கள் இலை ஊழ்த்து இணர் ஈன்று அலர்ந்தனவே

#2691
இளி வாய் பிரசம் யாழ் ஆக இரும் கண் தும்பி குழல் ஆக
களி வாய் குயில்கள் முழவு ஆக கடி பூம் பொழில்கள் அரங்கு ஆக
தளிர் போல் மடவார் தணந்தார் தம் தடம் தோள் வளையும் மாமையும்
விளியா கொண்டு இங்கு இள வேனில் விருந்தா ஆடல் தொடங்கினான்

#2692
வேனில் ஆடும் விருப்பினால் வியன் காய் நெல்லி சாந்து அரைத்து
நான எண்ணெய் கதுப்பு உரைத்து நறுநீர் ஆடி அமிர்து உயிர்க்கும்
தேன் ஆர் அகிலின் புகை சேர்த்தி வகுத்து நாவி குழம்பு உறீஇ
ஆனா பளித நறும் சுண்ணம் உகிரின் உழுது ஆங்கு அணிந்தாரே

#2693
முத்தார் மருப்பின் இடை வளைத்த முரண் கொள் யானை தட கையின்
ஒத்தேர் உடைய மல்லிகையின் ஒலியல் மாலை உறுப்பு அடக்கி
வைத்தார் மணி நூற்றன ஐம்பால் வளைய முடித்து வான் கழுநீர்
உய்த்து ஆங்கு அதனுள் கொள அழுத்தி குவளை செவி தாது உறுத்தாரே

#2694
புகை ஆர் வண்ண பட்டு உடுத்து பொன் அம் கலைகள் புறம் சூழ்ந்து
நகை ஆர் கவுள கிண்கிணியும் சிலம்பும் நாய் நா சீறடி மேல்
பகை கொண்டார் போல் சுமாஅய் கண்பின் பரூஉ காம்பு அனைய கணை கால் சூழ்ந்து
அகை ஆர்ந்து இலங்கும் பரியகம் தாமே கவின சேர்த்தினார்

#2695
பிடி கை வென்று கடைந்தன போல் பஞ்சி ஆர்ந்த திரள் குறங்கு
கடித்து கிடந்து கவின் வளரும் காய் பொன் மகரம் கதிர் முலை மேல்
உடுத்த சாந்தின் மிசை செக்கர் ஒளி கொள் முந்நாள் பிறை ஏய்ப்ப
துடிக்கும் கதிர் சேர் துணை முத்தம் திருவில் உமிழ்ந்து சுடர்ந்தனவே

#2696
குழிய பெரிய கோல் முன்கை மணி ஆர் காந்தள் குவி விரல் மேல்
கழிய பெரிய அரு விலைய சிறிய மணி மோதிரம் கனல
தழிய பெரிய தட மென் தோள் சலாகை மின்ன தாழ்ந்து இலங்கும்
விழி கண் மகர குண்டலமும் தோடும் காதில் மிளர்ந்தனவே

#2697
நாண் உள் இட்டு சுடர் வீச நல் மாணிக்க நகு தாலி
பேணி நல்லார் கழுத்து அணிந்து பெரும் கண் கருமை விருந்து ஊட்டி
நீள் நீர் முத்தம் நிரை முறுவல் கடு சுட்டு உரிஞ்ச கதிர் உமிழ்ந்து
தோள் நீர் கடலுள் பவள வாய் தொண்டை கனிகள் தொழுதனவே

#2698
மாலை மகளிர் அணிந்ததன் பின் பஞ்ச வாசம் கவுள் கொண்டு
சோலை மஞ்ஞை தொழுதி போல் தோகை செம்பொன் நிலம் திவள
காலில் சிலம்பும் கிண்கிணியும் கலையும் ஏங்க கதிர் வேலும்
நீல குவளை நிரையும் போல் கண்ணார் காவில் இருந்தாரே

#2699
மணி வண்டு ஒன்றே நலம் பருக மலர்ந்த செந்தாமரை தடம் போல
அணி வேல் மன்னன் நலம் பருக அலர்ந்த அம்பு ஆர் மழை கண்ணார்
பணி ஆர் பண்ணு பிடி ஊர்ந்து பரூஉ கால் செம் நெல் கதிர் சூடி
தணியார் கழனி விளையாடி தகை பாராட்ட தங்கினார்

#2700
எண்ணற்கு அரிய குங்கும சேற்று எழுந்து நான நீர் வளர்ந்து
வண்ண குவளை மலர் அளைஇ மணி கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார் ஒலியல் மாலை புறம் தாழ
கண்ண கழு நீர் மெல் விரலால் கிழித்து மோந்தார் கனி வாயார்

#2701
இவ்வாறு எங்கும் விளையாடி இளையான் மார்பின் நலம் பருகி
செ வாய் விளர்த்து தோள் மெலிந்து செய்ய முலையின் முகம் கருகி
அம் வாய் வயிறு கால் வீங்கி அனிச்ச மலரும் பொறை ஆகி
ஒவ்வா பஞ்சி மெல் அணை மேல் அசைந்தார் ஒண் பொன் கொடி அன்னார்

#2702
தீம் பால் சுமந்து முலை வீங்கி திரு முத்து ஈன்ற வலம்புரி போல்
காம்பு ஏர் தோளார் களிறு ஈன்றார் கடைகள்-தோறும் கடி முரசம்
தம் பால் பட்ட தனி செம் கோல் தரணி மன்னன் மகிழ் தூங்கி
ஓம்பாது ஒண் பொன் சொரி மாரி உலகம் உண்ண சிதறினான்

#2703
காடி ஆட்டி தராய் சாறும் கன்னல் மணியும் நறு நெய்யும்
கூட செம்பொன் கொள தேய்த்து கொண்டு நாளும் வாய் உறீஇ
பாடற்கு இனிய பகு வாயும் கண்ணும் பெருக உகிர் உறுத்தி
தேடி தீம் தேன் திப்பிலி தேய்த்து அண்ணா உரிஞ்சி மூக்கு உயர்த்தார்

#2704
யாழும் குழலும் அணி முழவும் அரங்கம் எல்லாம் பரந்து இசைப்ப
தோழன் விண்ணோன் அவண் தோன்றி வயங்கா கூத்து வயங்கிய பின்
காழ் ஆர் வெள்ளி மலை மேலும் காவல் மன்னர் கடி நகர்க்கும்
வீழா ஓகை அவன் விட்டான் விண் பெற்றாரின் விரும்பினார்

#2705
தத்தம் நிலனும் உயர்வு இழிவும் பகையும் நட்பும் தம் தசையும்
வைத்து வழு இல் சாதகமும் வகுத்த பின்னர் தொகுத்த நாள்
சச்சந்தனனே சுதஞ்சணனே தரணி கந்து கடன் விசயன்
தத்தன் பரதன் கோவிந்தன் என்று நாமம் தரித்தாரே

#2706
ஐ ஆண்டு எய்தி மை ஆடி அறிந்தார் கலைகள் படை நவின்றார்
கொய் பூ மாலை குழல் மின்னும் கொழும் பொன் தோடும் குண்டலமும்
ஐயன்மார்கள் துளக்கு இன்றி ஆலும் கலிமா வெகுண்டு ஊர்ந்தார்
மொய்யார் அலங்கல் மார்பற்கு முப்பது ஆகி நிறைந்ததே

#2707
பூ நிறை செய்த செம்பொன் கோடிகம் புரையும் அல்குல்
வீ நிறை கொடி அனாரும் வேந்தனும் இருந்த-போழ்தில்
தூ நிற துகிலின் மூடி படலிகை கொண்டு வாழ்த்தி
மா நிற தளிர் நல் மேனி மல்லிகை மாலை சொன்னாள்

#2708
தட முலை முகங்கள் சாடி சாந்து அகம் கிழிந்த மார்பின்
குட வரை அனைய கோல குங்கும குவவு தோளாய்
தொடை மலர் வெறுக்கை ஏந்தி துன்னினன் வேனில் வேந்தன்
இடம் அது காண்க என்றாள் இறைவனும் எழுக என்றான்

#2709
முடி தலை முத்தம் மின்னும் முகிழ் முலை முற்றம் எல்லாம்
பொடித்து பொன் பிதிர்ந்த ஆகத்து இளையவர் புகழ்ந்து சூழ
கடுத்த வாள் கனல ஏந்தி கன்னியர் காவல் ஓம்ப
இடி குரல் சீயம் ஒப்பான் இழை ஒளி விளங்க புக்கான்

#2710
இலங்கு பொன் ஆரம் மார்பின் இந்திரன் உரிமை சூழ
கலந்த பொன் காவு காண்பான் காமுற புக்கதே போல்
அலங்கு பொன் கொம்பு அனாரும் மன்னனும் ஆட மாதோ
நலம் கவின் கொண்ட காவு நல் ஒளி நந்திற்று அன்றே

#2711
புலவியுள் மகளிர் கூந்தல் போது உகுக்கின்றதே போல்
குலவிய சிறகர் செம் கண் கரும் குயில் குடைய கொம்பர்
நிலவிய தாது பொங்க நீள் மலர் மணலில் போர்த்து
கலவியில் படுத்த காய் பொன் கம்பலம் ஒத்தது அன்றே

#2712
காசு நூல் பரிந்து சிந்தி கம்பலத்து உக்கதே போல்
மூசு தேன் வண்டு மொய்த்து முருகு உண்டு துயில மஞ்ஞை
மாசு இல் பூம் பள்ளி வைகி வளர்ந்து எழு மகளிர் ஒப்ப
தூசு போல் சிறகர் அன்னம் தொழுதியோடு இரிய சேர்ந்தார்

#2713
காதி கண் அரிந்து வென்ற உலகு உணர் கடவுள் காலத்து
ஆதி கண் மரங்கள் போன்ற அம் சொலீர் இதனின் உங்கள்
காதலின் காணலுற்ற இடம் எலாம் காண்-மின் என்றான்
நீதி கண் நின்ற செம் கோல் நிலவு வீற்று இருந்த பூணான்

#2714
வானவர் மகளிர் என்ன வார் கயிற்று ஊசல் ஊர்ந்தும்
கானவர் மகளிர் என்ன கடி மலர் நல்ல கொய்தும்
தேன் இமிர் குன்றம் ஏறி சிலம்பு எதிர் சென்று கூயும்
கோன் அமர் மகளிர் கானில் குழாம் மயில் பிரிவது ஒத்தார்

#2715
நெடு வரை அருவி ஆடி சந்தனம் நிவந்த சோலை
படு மதம் கவரும் வண்டு பைம் தளிர் கவரி ஏந்தி
பிடி மகிழ்ந்து ஓப்ப நின்ற பெரும் களிற்று அரசு நோக்கி
வடி மதர் மழை கண் நல்லார் மன்னனை மகிழ்ந்து நின்றார்

#2716
கொழு மடல் குமரி வாழை துகில் சுருள் கொண்டு தோன்ற
செழு மலர் காமவல்லி செரு கயல் சிற்பம் ஆக
கழு மணி செம்பொன் ஆழி கை விரல் உகிரின் கிள்ளி
விழு முலை சூட்டி நின்றார் விண்ணவர் மகளிர் ஒத்தார்

#2717
கடை தயிர் குரல வேங்கை கண்ணுற சென்று நண்ணி
மிடை மயிர் கவரி நல் ஆன் கன்று உண கண்டு நிற்பார்
புடை திரண்டு எழுந்த பொம்மல் வன முலை பொறுக்கல் ஆற்றார்
நடை மெலிந்து இகலி அன்ன நல் நடை நயந்து நிற்பார்

#2718
எம்-வயின் வருக வேந்தன் இங்கு என இரங்கு நல்லியாழ்
வெம்மையின் விழைய பண்ணி எஃகு நுண் செவிகள் வீழ
செம்மையின் கனிந்த காம தூது விட்டு ஓத முத்தம்
வெம் முலை மகளிர் வீழ் பூம் பொதும்பருள் விதும்பினாரே

#2719
பிடி மருள் நடையினார்-தம் பெரும் கவின் குழைய புல்லி
தொடை மலர் கண்ணி சேர்த்தி சுரும்பு உண மலர்ந்த மாலை
உடை மது ஒழுக சூட்டி உருவ தார் குழைய வைகி
கடி மலர் மகளிர் ஒத்தார் காவலன் களி வண்டு ஒத்தான்

#2720
இழைந்தவர் நலத்தை எய்தி இனம் திரி ஏறு போல
குழைந்த தார் நெகிழ்ந்த தானை கொற்றவன் பெயர்ந்து போகி
வழிந்து தேன் வார்ந்து சோரும் வருக்கையின் நீழல் சேர்ந்தான்
விழைந்த அ கடுவன் ஆங்கு ஓர் மந்தியை விளித்தது அன்றே

#2721
அளித்து இள மந்தி-தன்னை ஆர்வத்தால் விடாது புல்லி
ஒளித்து ஒரு பொதும்பர் சேர்ந்து ஆங்கு ஒரு சிறை மகிழ்ச்சி ஆர்ந்து
தளிர் தலை பொதும்பர் நீங்கி தம் இனம் இரண்டும் சேர்ந்த
களி தலை கூட்டம் காதல் மந்தி கண்டு இருந்தது அன்றே

#2722
பரத்தையர் தோய்ந்த மார்பம் பத்தினி மகளிர் தீண்டார்
திருத்தகைத்து அன்று தெள் நீர் ஆடி நீர் வம்-மின் என்ன
உரைத்தது என் மனத்தில் இல்லை உயர் வரை தேனை உண்பார்
வருத்தும் காஞ்சிரமும் வேம்பும் வாய் கொள்வார் யாவர் சொல்லாய்

#2723
ஈகு இனி என்னை நோக்கி எவன் செய்தி எனக்கு வாழ்நாள்
நீங்கிற்று சிறிது நிற்பின் காண்டியால் நீயும் என்ன
தூங்கி தான் துளங்க மந்தி தொழுத்தையேன் செய்தது என்று
தாங்குபு தழுவிக்கொண்டு தன்னை தான் பழித்தது அன்றே

#2724
கண்ணினால் குற்றம் கண்டும் காதலன் தெளிப்ப தேறி
பெண்மையால் பழித்த மந்தி பெரு மகிழ் உவகை செய்வான்
திண் நிலை பலவின் தேம் கொள் பெரும் பழம் கொண்டு கீறி
பண் உறு சுளைகள் கையால் பகுத்து உண கொடுத்தது அன்றே

#2725
இன் கனி கவரும் மந்தி கடுவனோடு இரிய ஆட்டி
நன் கனி சிலதன் உண்ண நச்சு வேல் மன்னன் நோக்கி
என்பொடு மிடைந்த காமம் இழிபொடு வெறுத்து நின்றான்
அன்பு உடை அரிவை கூட்டம் பிறன் உழை கண்டது ஒத்ததே

#2726
கைப்பழம் இழந்த மந்தி கட்டியங்காரன் ஒத்தது
இ பழம் துரந்து கொண்ட சிலதனும் என்னை ஒத்தான்
இ பழம் இன்று போகத்து இன்பமே போலும் என்று
மெய்ப்பட உணர்வு தோன்றி மீட்டு இது கூறினானே

#2727
மெலியவர் பெற்ற செல்வம் வேரொடும் கீழ்ந்து வெளவி
வலியவர் கொண்டு மேலை வரம்பு இகந்து அரம்பு செய்யும்
கலி அது பிறவி கண்டாம் காலத்தால் அடங்கி நோற்று
நலிவு இலா உலகம் எய்தல் நல்லதே போலும் என்றான்

#2728
நல்வினை என்னும் நன் பொன் கற்பக மகளிர் என்னும்
பல் பழ மணி கொம்பு ஈன்று பரிசில் வண்டு உண்ண பூத்து
செல்வ பொன் சிறுவர் என்னும் தாமங்கள் தாழ்ந்து நின்றது
ஒல்கி போம் பாவ காற்றின் ஒழிக இ புணர்ச்சி என்றான்

#2729
வேட்கைமை என்னும் நாவின் காம வெம் தேறல் மாந்தி
மாட்சி ஒன்றானும் இன்றி மயங்கினேற்கு இருளை நீங்க
காட்டினார் தேவர் ஆவர் கை விளக்கு அதனை என்று
தோட்டியால் தொடக்க பட்ட சொரி மத களிற்றின் மீண்டான்

#2730
கை நிறை எஃகம் ஏந்தி கன மணி குழை வில் வீச
மை நிற மணி வண்டு ஆர்ப்ப வார் தளிர் கவரி வீச
மெய்ந்நெறி மகிழ்ந்து நின்றான் வேனில் வாய் காமன் ஒத்தான்
மொய் நிற மாலை வேய்ந்து முருகு உலாம் முடியினானே

#2731
நடு சிகை முத்துத்தாமம் வாள் நுதல் நான்று நக்க
படுத்தனர் பைம்பொன் கட்டில் பாடினார் கீதம் தூபம்
எடுத்தனர் எழுந்து தேன் ஆர் எரி மணி வீணை ஆர்த்த
கொடி பல பூத்து சூழ்ந்த குங்கும குன்றம் ஒத்தான்

#2732
மெள்ளவே புருவம் கோலி விலங்கி கண் பிறழ நோக்கி
முள் எயிறு இலங்க செ வாய் முறுவல் தூது ஆதி ஆக
அள்ளிக்கொண்டு உண்ண காமம் கனிவித்தார் பனிவில் தாழ்ந்த
வள் இதழ் மாலை மார்பன் வச்சிர மனத்தன் ஆனான்

#2733
முலை முகம் சுமந்த முத்த தொத்து ஒளிர் மாலையாரும்
மலை முகந்து அனைய மார்பின் மன்னனும் இருந்த-போழ்தில்
கொலை முக களிறு அனாற்கு நாழிகை சென்று கூற
கலை முக மல்லர் புல்லி கமழும் நீர் ஆட்டினாரே

#2734
வெண் துகில் மாலை சாந்தம் விழு கலம் வீதியில் சேர்த்தி
நுண் துகில் திரைகள் சேர்ந்த நூற்று உலா மண்டபத்து
கண் திரள் முத்தம் மென் தோள் காவி கண் மகளிர் போற்றி
எண் திசை மருங்கும் ஏத்த இனிதினின் ஏறினானே

#2735
நெய் வளம் கனிந்து வாசம் நிறைந்து வான் வறைகள் ஆர்ந்து
குய் வளம் கழுமி வெம்மை தீம் சுவை குன்றல் இன்றி
ஐவருள் ஒருவன் அன்ன அடிசில் நூல் மடையன் ஏந்த
மை வரை மாலை மார்பன் வான் சுவை அமிர்தம் உண்டான்

#2736
கைப்பொடி சாந்தம் ஏந்தி கரக நீர் வீதியில் பூசி
மை படு மழை கண் நல்லார் மணி செப்பின் வாசம் நீட்ட
செப்பு அடு பஞ்சவாசம் திசை எலாம் கமழ வாய்க்கொண்டு
ஒப்பு உடை உறுவர் கோயில் வணங்குதும் எழுக என்றான்

#2737
ஒரு பகல் பூசின் ஓர் ஆண்டு ஒழிவு இன்றி விடாது நாறும்
பெரியவர் கேண்மை போலும் பெறற்கு அரும் வாச எண்ணெய்
அரிவையர் பூசி ஆடி அகில் புகை ஆவி ஊட்டி
திரு விழை துகிலும் பூணும் திறப்பட தாங்கினாரே

#2738
நல் தவம் செய்த வீரர் உள வழி நயந்து நாடும்
பொற்ற தாமரையினாளின் பூம் சிகை முத்தம் மின்ன
கொற்றவன் தொழுது சேர்ந்தார் கொம்பு அனார் வாமன் கோயில்
மற்று அவன் மகிழ்ந்து புக்கு மணி முடி துளக்கினானே

#2739
கடி மலர் பிண்டி கடவுள் கமலத்து
அடி மலர் சூடியவர் உலகில் யாரே
அடி மலர் சூடியவர் உலகம் ஏத்த
வடி மலர் தூவ வருகின்றார் அன்றே

#2740
முத்து அணிந்த முக்குடை கீழ் மூர்த்தி திருவடியை
பத்திமையால் நாளும் பணிகின்றார் யாரே
பத்திமையால் நாளும் பணிவார் பகட்டு எருத்தின்
நித்தில வெண்குடை கீழ் நீங்காதார் அன்றே

#2741
கரும கடல் கடந்த கை வல செல்வன்
எரி மலர் சேவடியை ஏத்துவார் யாரே
எரி மலர் சேவடியை ஏத்துவார் வான் தோய்
திரு முத்து அவிர் ஆழி செல்வரே அன்றே

#2742
வண்ண மா மலர் மாலை வாய்ந்தன
சுண்ணம் குங்குமம் தூமத்தால் புனைந்து
அண்ணல் சேவடி அருச்சித்தான்-அரோ
விண் இல் இன்பமே விழைந்த வேட்கையான்

#2743
இலங்கு குங்கும மார்பன் ஏந்து சீர்
நலம் கொள் சாரணர் நாதன் கோயிலை
வலம் கொண்டு ஆய் மலர் பிண்டி மா நிழல்
கலந்த கல் மிசை கண்டு வாழ்த்தினான்

#2744
உரிமை-தன்னொடும் வலம்கொண்டு ஓங்கு சீர்
திருமகன் பணிந்து இருப்ப செய்தவர்
இரு நிலம் மனற்கு இன்பமே என
பெரு நிலம் மனன் பெரிதும் வாழ்த்தினான்

#2745
தெருளலேன் செய்த தீவினை எனும்
இருள் விலங்க நின்று எரியும் நீள் சுடர்
அருளு-மின் எனக்கு அடிகள் என்றனன்
மருள் விலங்கிய மன்னர் மன்னனே

#2746
பால்கடல் பனி மதி பரவை தீம் கதிர்
மேல் பட மிக நனி சொரிவது ஒப்பவே
நூல் கடன் மாதவன் நுனித்த நல் அறம்
கோல் கடன் மன்னனுக்கு உரைக்கும் என்பவே

#2747
தேன் நெய் தோய்ந்தன தீவிய திரு மணி அனைய
வானின் உய்ப்பன வரகதி தருவன மதியோர்
ஏனை யாவரும் அமுது என பருகுவ புகல்வ
மானம் இல் உயர் மணிவண்ணன் நுவலிய வலித்தான்

#2748
அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கையது அழிவும்
திரு மெய் நீங்கிய துன்பமும் தெளிபொருள் துணிவும்
குருமை எய்திய குண நிலை கொடை பெறு பயனும்
பெருமை வீட்டொடும் பேசுவல் கேள் இது பெரியோய்

#2749
பரவை வெண் திரை வட கடல் படு நுக துளையுள்
திரை செய் தென் கடல் இட்டது ஓர் நோன் கழி சிவணி
அரச அ துளை அக-வயின் செறிந்து என அரிதால்
பெரிய யோனிகள் பிழைத்து இவண் மானிடம் பெறலே

#2750
விண்டு வேய் நரல் ஊன் விளை கானவர் இடனும்
கொண்டு கூர்ம் பனி குலைத்திடும் நிலைக்கள குறும்பும்
உண்டு நீர் என உரையினும் அரியன ஒருவி
மண்டு தீம் புனல் வளம் கெழு நாடு எய்தல் அரிதே

#2751
வில்லின் மா கொன்று வெள் நிண தடி விளிம்பு அடுத்த
பல்லினார்களும் படு கடல் பரதவர் முதலா
எல்லை நீங்கிய இழி தொழில் இழி குலம் ஒருவி
நல்ல தொல் குலம் பெறுதலும் நரபதி அரிதே

#2752
கருவி மா மழை கனை பெயல் பொழிந்து என வழிநாள்
அருவி போல் தொடர்ந்து அறாதன அரும் பிணி அழலுள்
கருவில் காய்த்திய கட்டளை படிமையில் பிழையாது
உருவின் மிக்கது ஓர் உடம்பது பெறுதலும் அரிதே

#2753
காமன் அன்னது ஓர் கழி வனப்பு அறிவொடு பெறினும்
நாம நால் கதி நவைதரு நெறி பல ஒருவி
வாமன் நூல் நெறி வழு அற தழுவினர் ஒழுகல்
ஏம வெண்குடை இறைவ மற்று யாவதும் அரிதே

#2754
இன்ன தன்மையின் அருமையின் எய்திய பொழுதே
பொன்னும் வெள்ளியும் புணர்ந்து என வயிற்று அகம் பொருந்தி
மின்னும் மொக்குளும் என நனி வீயினும் வீயும்
பின்னை வெண்ணெயின் திரண்ட பின் பிழைக்கவும் பெறுமே

#2755
வெண்ணெய் ஆயது வீங்குபு கூன் புற யாமை
வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறும் அது வழுக்காது
ஒண்மை வாள் மதி உருவொடு திரு என தோன்றி
கண் அனார் அழ கவிழினும் கவிழும் மற்று அறி நீ

#2756
அழிதல் இன்றி அங்கு அரு நிதி இரவலர்க்கு ஆர்த்தி
முழுதும் பேர் பெறும் எல்லையுள் முரியினும் முரியும்
வழு இல் பொய்கையுள் மலர் என வளர்ந்து மை ஆடி
கெழீஇயினாரொடும் கிளை அழ கெடுதலும் கெடுமே

#2757
கெடுதல் அவ்வழி இல் எனின் கேள்விகள் துறைபோய்
வடி கொள் கண்ணியர் மனம் குழைந்து அநங்கன் என்று இரங்க
கொடையும் கோலமும் குழகும் தம் அழகும் கண்டு ஏத்த
விடையில் செல்வுழி விளியினும் விளியும் மற்று அறி நீ

#2758
எரி பொன் மேகலை இலங்கு அரி சிலம்பொடு சிலம்பும்
அரி பொன் கிண்கிணி அணி இழை அரிவையர் புணர்ந்து
தெரிவு இல் போகத்து கூற்றுவன் செகுத்திட சிதைந்து
முரியும் பல் சன முகம் புடைத்து அகம் குழைந்து அழவே

#2759
கோதை மங்கையர் குவி முலை தடத்து-இடை குளித்து
காதல் மக்களை கண்டு உவந்து இனிதினில் கழிப்ப
பேது செய் பிணி பெரும் புலி பாய்ந்திட பிணம் ஆம்
ஓத மா கடல் உடை கலத்தவர் உற்றது உறவே

#2760
காமம் பை பய கழிய தம் கடை பிடி சுருங்கி
ஊமர் போல தம் உரை அவிந்து உறுப்பினில் உரையா
தூய்மையில் குளம் தூம்பு விட்டு ஆம் பொருள் உணர்த்தி
ஈமம் ஏறுதல் ஒருதலை இகல் அமர் கடந்தோய்

#2761
தேம் கொள் பூம் கண்ணி திரு முடி திலக வெண்குடையோய்
ஈங்கு இது அன்றியும் இமையவர் அமையலர் கடந்த
தாங்கும் மா வண் கை சக்கரம் மிக்கு உயர் பிறரும்
யாங்கணார் அவர் ஊரொடு பேர் எமக்கு உரையாய்

#2762
வெவ்வினை செய்யும் மாந்தர் உயிர் எனும் நிலத்து வித்தி
அ வினை விளையுள் உண்ணும் அவ்விடத்து அவர்கள் துன்பம்
இவ்வென உரைத்தும் என்று நினைப்பினும் பனிக்கும் உள்ளம்
செவ்விதின் சிறிது கூற கேள்-மதி செல்வ வேந்தே

#2763
ஊழ் வினை துரப்ப ஓடி ஒன்றும் மூழ்த்தத்தின் உள்ளே
சூழ் குலை பெண்ணை நெற்றி தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து
வீழ்வன போல வீழ்ந்து வெருவர தக்க துன்பத்து
ஆழ் துயர் உழப்ப ஊணும் அரு நவை நஞ்சு கண்டாய்

#2764
இட்டி வேல் குந்தம் கூர் வாள் எரி நுனை சுரிகை கூட
நட்டவை நிரைத்த பூமி நவை உடை நரகர் பொங்கி
உட்பட எழுந்து வீழ்ந்து ஆங்கு ஊன் தகர்த்திட்ட வண்ணம்
எட்டு எலா திசையும் சிந்தி கிடப்பவால் அடக்கம் இல்லார்

#2765
வெம் தடி தின்ற வெம் நோய் வேகத்தால் மீட்டு மாலை
பைம் தொடி மகளிர் ஆடும் பந்து என எழுந்து பொங்கி
வந்து உடைந்து உருகி வீழ்ந்து மாழ்குபு கிடப்பர் கண்டாய்
கந்து அடு வெகுளி வேக கடா முக களிற்று வேந்தே

#2766
வயிர முள் நிரைத்து நீண்ட வார் சினை இலவம் ஏற்றி
செயிரில் தீ மடுப்பர் கீழால் செல் நுனை கழுவில் ஏற்றி
மயிருக்கு ஒன்று ஆக வாங்கி அகைத்து அகைத்திடுவர் மன்னா
உயிரை பேதுறுத்தும் மாந்தர் உயிரை பேதுறுக்கும் ஆறே

#2767
துடி குரல் குரல பேழ் வாய் தொடர் பிணி உறுத்த செந்நாய்
மடுத்திட வைர ஊசி வாள் எயிறு அழுந்த கௌவி
புடைத்திட அலறி ஆற்றார் பொன்றினும் பொன்றல் செல்லார்
உடுப்பு இனம் வேட்டம் செய்தார் உழப்பவால் துன்பம் மாதோ

#2768
வாளை மீன் தடிகள் தின்றார் வருக என உருக வெந்த
பாளத்தை கொடிற்றின் ஏந்தி பகுத்து வாய் புகுத்தல் ஆற்றார்
ஊளை கொண்டு ஓடுகின்றார் உள் அடி ஊசி பாய
தாள் ஒற்றி தப்பி வீழ்ந்தார் தறி வலை மானின் பட்டார்

#2769
காதலாள் கரிந்து நைய கடியவே கனைந்து கன்றி
ஏதிலான் தாரம் நம்பி எளிது என இறந்த பாவத்து
ஊது உலை உருக வெந்த ஒள் அழல் செப்பு பாவை
ஆ தகாது என்ன புல்லி அலறுமால் யானை வேந்தே

#2770
சிலையினால் மாக்கள் கொன்று செழும் கடல் வேட்டம் ஆடி
வலையினால் மீன்கள் வாரி வாழ் உயிர் கூற்றம் ஆன
கொலைநரை கும்பி தன்னுள் கொந்து அழல் அழுத்தி இட்டு
நலிகுவர் நாளும் நாளும் நரகரை நாம வேலோய்

#2771
பாரகம் கழுநர் போல பரூஉ தடி பலரும் ஏந்தி
வீர நோய் வெகுளி தோற்றி விழுப்பு அற அதுக்கி இட்டு
காரகல் பொரிப்பர் கண்ணுள் சுரிகையை நடுவர் நெஞ்சில்
பார கூர் தறிகள் நட்டு பனை என பிளப்பர் மாதோ

#2772
நா புடை பெயர்த்தல் ஆற்றார் நயந்து நீர் வேட்டு நோக்கி
பூ புடை அணிந்த பொய்கை புக்கு நீர் உண்ணல் உற்றால்
சீப்படு குழம்பது ஆகி செல்லல் உற்று அந்தோ என்ன
கூப்பிடு குரலாய் நிற்பர் குறை பனை குழாங்கள் ஒத்தே

#2773
நறு மலர் தாமம் நான்று நான நீர் பிலிற்றும் பந்தர்
குறுகலும் குட நெய் பெய்த கொந்து அழல் போன்று பொங்கி
பறை அலகு அனைய வெண் பல் பசும் கழல் குண்டு பைம் கண்
உறு துயர் நரகர் தம்மை உருக சுட்டிடுங்கள் அன்றே

#2774
வெந்து உருக்குற்ற செம்பின் விதவையுள் அழுத்தி இட்டும்
எந்திர ஊசல் ஏற்றி எரி உண மடுத்தும் செக்கில்
சுந்து எழுந்து அரைத்தும் போக சுண்ணமா நுணுக்கி இட்டும்
மந்தரத்து அனைய துன்பம் வைகலும் உழப்ப மாதோ

#2775
உழும் பகட்டு எருது போல உரன் அறு தாளர் ஆகி
கொழும் களி அளற்றுள் வீழ்ந்தும் கொழும் புகை மடுக்க பட்டும்
அழுந்தும் இ நரகம் தன்னுள் செல்பவர் யார்-கொல் என்னின்
எழுந்து வண்டு இமிரும் பைம் தார் இறைவ நீ கேண்மோ என்றான்

#2776
கொல்வதே கன்றி நின்றார் கொடியவர் கடிய நீரார்
இல்லையே இம்மை அல்லால் உம்மையும் உயிரும் என்பார்
அல்லதும் தவமும் இல்லை தானமும் இழவு என்பாரும்
செல்ப அ நரகம்-தன்னுள் தீவினை தேர்கள் ஊர்ந்தே

#2777
எரி நீரவே நரகம் அ நரக துன்பத்து
ஒரு நீரவே விலங்கு தாம் உடைய துன்பம்
பெரு நீர வாள் தடம் கண் பெண் அணங்கு பூம் தார்
அரு நீர வேந்து அடர்த்த அச்சு அணங்கு வேலோய்

#2778
கழை பொதிர்ப்ப தேன் சொரிந்து காய் தினைகள் ஆர்த்தும்
மழை தவமும் குன்றில் வயமா முழங்க
உழை அளிய தாம் உறூஉம் துன்பங்கள் நின் மேல்
விழைவு அயரா வேந்து உறூஉம் துன்பமே கண்டாய்

#2779
நிணம் பிலிற்றும் வாயர் நெருப்பு இமைக்கும் கண்ணர்
குணன் நஞ்சர் கூற்று அனைய கோள் நாய் மடுப்ப
கண மஞ்ஞை அஞ்சி கழுத்து ஒளிப்ப கண்டாய்
மணம் மல்கு பூம் தார் மழை தழீஇய கையாய்

#2780
மண் ஆர மஞ்சள் உரிஞ்சி மலர் சூட்டி
கண் ஆர் மறி அறுத்து கையால் உதிரம் தூய்
உண்ணீரே தேவீர் உவந்து என்பது இ உலகம்
நண்ணார் கடந்தோய் நமன் உலகின் நால் மடங்கே

#2781
மங்கை மனா அனைய மென் சூல் மட உடும்பு
செம் கண் வரி வரால் செம் நீர் இள வாளை
வெம் கருனை புல்லுதற்கு வேறு வேறா குறைப்ப
அங்காந்து அழுகின்றது ஆர் கண்ணே நோக்குமே

#2782
கடல் அரணம் ஆகாது காடு அரணம் ஆகா
குடல் அரணம் ஆகாது குன்று அரணம் ஆகா
அடு துயரம் ஊர்ந்து அலைப்ப ஆங்கு அரணம் காணா
படு துயரத்தாலே பதைத்து அளிய வேமே

#2783
முழு பதகர் தாள் துரந்து முள் தாற்றில் குத்தி
உழப்பு எருது பொன்ற புடைத்து உழுது விட்டால்
கழித்து உண்ணும் காக்கை கடிவோரும் இன்றி
புழு சொரிய துன்பம் பொறுக்கலா பொன்றும்

#2784
நிரம்பாத நீர் யாற்று இடுமணலுள் ஆழ்ந்து
பெரும் பார ஆடவர் போல் பெய் பண்டம் தாங்கி
மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றி தாள் தவழ்ந்து வாங்கி
உரம் கெட்டு உறுப்பு அழுகி புல் உண்ணா பொன்றும்

#2785
போழ் மதி போல் கூர் இரும்பின் பூ நுதல்கள் போழ்ந்திடவும்
காழ் நுதியின் குத்துண்டும் கார் மழை போல் நின்று அதிர்ந்தும்
வீழ் பிடிகள் சிந்தித்தும் வெம் நோய் தம் உள் சுட வெந்து
ஆழ்த்த கந்து இளக யானை அலம் வருமே

#2786
எரி வளைப்ப வெம் புகை உண்டு இன் உயிர் விட்டு ஏகும்
அரி வளைப்ப குஞ்சரமும் ஆலி போல் நீராம்
வரி வளைக்கும் வெண் மயிர்க்கும் முத்திற்கும் மாந்தர்
திரு வளைத்த மார்ப செகுத்திடுவர் தேங்கார்

#2787
வேள்வி-வாய் கண்படுத்தும் வெவ்வினை செய் ஆடவர் கை
வாளின்-வாய் கண்படுத்தும் வாரணத்தின் ஈர் உரி போல்
கோள் இமிழ்ப்பு நீள் வலை-வாய் கண்படுத்தும் இன்னணமே
நாள் உலப்பித்திட்டார் நமர் அலாதார் எல்லாம்

#2788
கொல்வாரும் கூட்டுள் செறிப்பாரும் ஆடவர்கள்
அல்லாரும் நாய் வேட்டம் ஆடாத மாத்திரையே
அல்லாத பைம் கிளியும் பூவையும் ஆதியா
எல்லாம் கிளை பிரித்திட்டு ஏமுறு நோய் செய்பவே

#2789
மல்லல் மலை அனைய மாதவரை வைது உரைக்கும்
பல்லவரே அன்றி பகுத்து உணா பாவிகளும்
அல்குல் விலை பகரும் ஆய் தொடியர் ஆதியார்
வில் பொரு தோள் மன்னா விலங்காய் பிறப்பவே

#2790
தம்மை நிழல் நோக்கி தாங்கார் மகிழ் தூங்கி
செம்மை மலர் மார்பம் மட்டித்து இளையார் தோள்
கொம்மை குழகு ஆடும் கோல வரை மார்பர்
வெம்மை மிகு துன்பம் வேந்தே சில கேளாய்

#2791
ஈருள் தடி மூடி ஈண்டும் மல பண்ட
போர்வை புழு மொய்ப்ப பொல்லா குடர் சூடி
சார்தற்கு அரிது ஆகி தான் நின்று அறா அள்ளல்
நீர்-வாய் சுரம் போந்தார் தம்மை நினையாரோ

#2792
அம் சொல் மடவார் தம் ஆர்வ களி பொங்க
நெஞ்சத்து அயில் ஏற்றும் நீள் வெம் கழு ஊர்ந்தும்
குஞ்சி களி யானை கோட்டால் உழப்பட்டும்
துஞ்சிற்று உலகு அந்தோ துன்ப கடலுள்ளே

#2793
பண்ணார் களிறே போல் பாய் ஓங்கு உயர் நாவாய்
கண்ணார் கடல் மண்டி காற்றில் கவிழுங்கால்
மண்ணார் மணி பூணோய் மக்கள் உறும் துன்பம்
நண்ணா நரகத்தின் நான்காம் மடி அன்றே

#2794
செம் தீ புகை உண்டும் சேற்றுள் நிலை நின்றும்
அந்தோ என மாற்றால் ஆற்ற புடை உண்டும்
தந்தீக எனா முன் கை வீக்க தளர்வுற்றும்
நொந்தார் குடி செல்வர் நோன்மை நுகம் பூண்டார்

#2795
கண் சூன்றிடப்பட்டும் கால் கை களைந்து ஆங்கே
அண் பல் இற கையால் ஆற்ற தகர் பெற்றும்
நுண் சாந்து அரைப்பார் போல் நோவ முழங்கையால்
புண் செய்திடப்பட்டும் புன்கண் உழப்பவே

#2796
மாலை குடை மன்னர் வையம் அகற்றுவான்
காலை கதி துன்பம் காவல் பெரும் துன்பம்
சோலை மயில் அன்னார் தோள் சேர்விலர்-ஆயின்
வேலை கடலே போல் துன்பம் விளையுமே

#2797
ஊன் சேர் உடம்பு என்னும் ஓங்கல் மர சோலை
தான் சேர் பிணி என்னும் செம் தீ கொடி தங்கி
கான் சேர் கவின் என்னும் காமர் மலர் வாட
தேன் சேர் மலர் மார்ப தீத்திட்டு இறக்குமே

#2798
கொட்டு பிடி போலும் கூனும் குறள் ஆமை
விட்டு நடப்பன போல் சிந்தும் விளைந்து சீ
அட்டும் உயவு நோய் அல்லா பிற நோயும்
பட்டார் உறு துன்பம் பன்னி சொலலாமோ

#2799
வேட்டன பெறாமை துன்பம் விழை நரை பிரிதல் துன்பம்
மோட்டு எழில் இளமை நீங்க மூப்பு வந்து அடைதல் துன்பம்
ஏட்டு எழுத்து அறிதல் இன்றி எள்ளற்பாடு உள்ளிட்டு எல்லாம்
சூட்டு அணிந்து இலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க்கு என்றான்

#2800
திருவில் போல் குலாய தேம் தார் தேவர் தம் தன்மை செப்பின்
கருவத்து சென்று தோன்றார் கால் நிலம் தோய்தல் செல்லார்
உருவ மேல் எழுதல் ஆகா ஒளி உமிழ்ந்து இலங்கும் மேனி
பருதியின் இயன்றது ஒக்கும் பன் மலர் கண்ணி வாடா

#2801
அம் கையும் அடியும் நோக்கில் தாமரை அலர்ந்தது ஒக்கும்
பங்கயம் அனைய செம் கண் பகு ஒளி பவழம் செ வாய்
செம் கதிர் முறுவல் முத்தின் தெளி நகை திகழும் செய்யாள்
வெம் கடை மழை கண் நோக்கி வெய்துற திரண்ட அன்றே

#2802
தாள் நெடும் குவளை கண்ணி தளை அவிழ் கோதை மாலை
வாள் முடி வைர வில்லும் வார் குழை சுடரும் மார்பில்
பூண் இடை நிலவும் மேனி மின்னொடு பொலிந்த தேவர்
ஊண் உடை அமிர்தம் வேட்டால் உண்பது மனத்தினாலே

#2803
சிதர் அரி ஒழுகி ஓடி செவியுற போழ்ந்து நீண்ட
மதர் அரி மழை கண் அம்பா வாங்கு வில் புருவம் ஆக
துதை மணி கலாபம் மின்ன தொல் மலர் காமன் அம்பு
புதை மலர் மார்பத்து எய்ய பூ அணை மயங்கி வீழ்வார்

#2804
பூ ததை கொம்பு போன்று பொன் இழை சுடரும் மேனி
ஏ தரும் கொடி அனாரை இரு நடு ஆக புல்லி
காய்த்தியிட்டு உள்ளம் வெம்பி கடைந்திடுகின்ற காமம்
நீத்து நீர் கடலை நீந்தும் புணை என விடுத்தல் செல்லார்

#2805
பொங்கல் வெம் முலைகள் என்னும் போதொடு பொருது பூம் தார்
அம் கலம் தொடையல் மாலை கிழிந்து அழகு அழிய வைகி
கொங்கு அலர் கோதை நல்லார் குரை கடல் அமிர்தம் ஆக
தங்கலர் பருகி ஆரார் தாழ்ந்து கண் இமைத்தல் செல்லார்

#2806
கருவியின் இசைகள் ஆர்ப்ப கற்பக மரத்தின் நீழல்
பொரு கயல் அனைய கண்ணும் புருவமும் அரவம் செய்ய
அரவ மேகலைகள் அம் பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப
திரு அனார் ஆடல் கண்டும் திருவொடு திளைத்தும் ஆனார்

#2807
பனி முகில் முளைத்த நான்கு பசும் கதிர் திங்கள் ஒப்ப
குனி மருப்பு உழுது மேகம் குஞ்சரம் குனிந்து குத்த
இனிதினின் இலங்கு பொன் தோடு ஏற்று-மின் குழைகள் பொங்க
துனிவு இலர் களிற்றோடு ஆடி தொழுதக கழிப்பர் வேந்தே

#2808
கடிகை வாள் ஆரம் மின்ன கற்பக காவு கண்டும்
தொடி கவின் அறாத மென் தோள் தேவியர் சூழ வாமன்
அடி கையின் தொழுது பூ தூய் அஞ்சலி செய்து வீடே
முடிக இ பிறவி வேண்டேம் முனைவ என்று இரப்ப அன்றே

#2809
மலம் குவித்து ஆவி வாட்டி வாய் நிறை அமிர்தம் பெய்த
இலங்கு பொன் கலசம் அன்ன எரி மணி முலைகள் பாய
கலந்தனர் சென்ற பின் நாள் கதிர் கழன்று இருந்த வெய்யோன்
புலம்பு போல் புலம்பி தேவர் பொற்பு உகுத்து இருப்ப அன்றே

#2810
எல்லை மூ_ஐந்து நாள்கள் உள என இமைக்கும் கண்ணும்
நல் எழில் மாலை வாடும் நஞ்சு உடை அமிர்து உண்டாரின்
பல் பகல் துய்த்த இன்பம் பழுது என கவல்ப கண்டாய்
பில்கி தேன் ஒழுகும் பைம் தார் பெரு நில வேந்தர் வேந்தே

#2811
தேவரே தாமும் ஆகி தேவரால் தொழிக்கப்பட்டும்
ஏவல் செய்து இறைஞ்சி கேட்டும் அணிகம் மா பணிகள் செய்தும்
நோவது பெரிதும் துன்ப நோயினுள் பிறத்தல் துன்பம்
யாவதும் துன்பம் மன்னோ யாக்கை கொண்டவர்கட்கு என்றான்

#2812
கொங்கு விம்மு குளிர் பிண்டி குழவி ஞாயிற்று எழில் ஏய்ப்ப
சிங்கம் சுமந்த மணி அணை மேல் தேவர் ஏத்தி சிறப்பு அயர
எங்கும் உலகம் இருள் நீங்க இருந்த எந்தை பெருமானார்
தங்கு செந்தாமரை அடி என் தலையவே என் தலையவே

#2813
இலங்கு செம்பொன் எயில் மூன்றும் எரி பொன் முத்த குடை மூன்றும்
வலம் கொண்டு அலர் தூஉய் அடி ஏத்தும் வையம் மூன்றும் படை மூன்றும்
கலங்காது உயர்ந்த அதிசயங்கள் மூன்றும் காமர் நூல் மூன்றும்
நலம் கொள் தீம் பால் குண கடலும் உடையார் நம்மை உடையாரே

#2814
மன்றல் நாறும் அணி முடி மேல் மலிந்த சூளாமணி போலும்
வென்றோர் பெருமான் அறவாழி வேந்தன் விரி பூம் தாமரை மேல்
சென்ற திருவார் அடி ஏத்தி தெளியும் பொருள்கள் ஓர் ஐந்தும்
அன்றி ஆறும் ஒன்பானும் ஆகும் என்பார் அறவோரே

#2815
பெரிய இன்பத்து இந்திரனும் பெட்ட செய்கை சிறு குரங்கும்
உரிய செய்கை வினை பயத்தை உண்ணும் எனவே உணர்ந்து அவனை
அரியர் என்ன மகிழாதும் எளியர் என்ன இகழாதும்
இருசார் வினையும் தெளிந்தாரே இறைவன் நூலும் தெளிந்தாரே

#2816
உறுவர் பேணல் உவர்ப்பு இன்மை உலையா இன்பம் தலை நிற்றல்
அறிவர் சிறப்பிற்கு எதிர் விரும்பல் அழிந்தோர் நிறுத்தல் அறம் பகர்தல்
சிறியார் இனத்து சேர்வு இன்மை சினம் கைவிடுதல் செருக்கு அவித்தல்
இறைவன் அறத்து உளார்க்கு எல்லாம் இனியர் ஆதல் இது தெளிவே

#2817
செறிய சொன்ன பொருள் தெளிந்தார் சேரார் விலங்கில் பெண் ஆகார்
குறுகார் நரகம் ஓர் ஏழும் கீழ் முத்தேவர் குழாம் தீண்டார்
அறியாது உரைத்தேன் அது நிற்க ஆறே நரகம் ஆகாத
பொறியார் போக பூமியுள் விலங்கும் ஆவர் ஒரு சாரார்

#2818
ஏத்தரும் திரு மணி இலங்கு நீர்மைய
கோத்தன போல் குணம் நூற்று கோடியும்
காத்தன காவல பதினெண்ணாயிரம்
பாத்தன பண்ணவர் சீலம் என்பவே

#2819
மொய் அமர் ஞாட்பினுள் முரண் கொள் மன்னவர்
மெய் புகு பொன் அணி கவசம் ஒப்பன
மையல் ஐம்பொறி மதம் வாட்டி வைகலும்
செய் வினை நுணுக்குவ சீலம் என்பவே

#2820
மணி துணர் அனைய தம் குஞ்சி வண் கையால்
பணித்தனர் பறித்தலின் பரவை மா நிலம்
துணித்து ஒரு துணி சுமந்து அனைய திண் பொறை
அணித்தகு முடியினாய் ஆதி ஆகவே

#2821
பெரிய வாள் தடம் கண் செ வாய் பிறர் மனை பிழைக்கும் மாந்தர்
மரீஇ அவாய் புறம் சொல் கூர் முள் மத்திகை புடையும் அன்றி
ஒருவர் வாய் உமிழ பட்ட தம்பலம் ஒருவர் வாய் கொண்டு
அரியவை செய்ப வையத்து ஆண் பிறந்தார்கள் அன்றே

#2822
ஒழுக்கமே அன்றி தங்கள் உள் உணர்வு அழிக்கும் மட்டும்
புழு பயில் தேனும் அன்றி பிறவற்றின் புண்ணும் மாந்தி
விழு பயன் இழக்கும் மாந்தர் வெறு விலங்கு என்று மிக்கார்
பழித்தன ஒழித்தல் சீலம் பார் மிசை அவர்கட்கு என்றான்

#2823
நல் நிலத்து இட்ட வித்தின் நயம் வர விளைந்து செல்வம்
பின் நிலம் பெருக ஈனும் பெறல் அரும் கொடையும் பேசின்
புன் நிலத்து இட்ட வித்தின் புற்கென விளைந்து போகம்
மின் என துறக்கும் தானத்து இயற்கையும் விரித்தும் அன்றே

#2824
ஐவகை பொறியும் வாட்டி யாமையின் அடங்கி ஐந்தின்
மெய் வகை தெரியும் சிந்தை விளக்கு நின்று எரிய விட்டு
பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றி
செய் தவம் நுனித்த சீல கனை கதிர் திங்கள் ஒப்பார்

#2825
வாய்ச்சி வாய் உறுத்தி மாந்தர் மயிர்-தொறும் செத்தினாலும்
பூச்சுறு சாந்தம் ஏந்தி புகழ்ந்து அடி பணிந்த போதும்
தூக்கி இ இரண்டும் நோக்கி தொல் வினை என்று தேறி
நா செறு பராவு கொள்ளார் நமர் பிறர் என்றும் உள்ளார்

#2826
பால் கதிர் திங்கள் கொட்பின் பருமித்த களிறு போல
நூல் கதி கொண்டு கண்ணால் நுகத்து அளவு எல்லை நோக்கி
மேல் கதிக்கு ஏணி ஆய விழுத்தவர் மனையில் வந்தால்
காற்கு ஒசி கொம்பு போல கைதொழுது இறைஞ்சி மாதோ

#2827
தொடி கையால் தொழுது வாழ்த்தி தூ மணி நிலத்துள் ஏற்றி
பொடி புனை துகிலின் நீக்கி புகழ்ந்து அடி கழீஇய பின்றை
அடுத்த சாந்து அகிலின் ஆவி ஆய் மலர் அருச்சித்து ஆனார்
கொடுப்பர் நால் அமிர்தம் மூன்றின் குணம் புரிந்து அடங்கினார்க்கே

#2828
ஒன்பது வகையின் ஓதிற்று உத்தமர்க்கு ஆகும் ஆர்ந்த
இன் பதம் அருளி ஈதல் இடை என மொழிப யார்க்கும்
துன்புற விலங்கு கொன்று சொரிந்து சோறு ஊட்டினார்க்கும்
நன் பொருள் வழங்கினார்க்கும் பயன் நமக்கு அறியல் ஆகா

#2829
கூற்று நா அலறுவது அனைய கூர் இலை
ஏற்ற நீர் துளும்பு வாள் இறைவ ஈங்கு இனி
போற்றினை கேள்-மதி பொரு இல் புண்ணியர்க்கு
ஆற்றிய கொடை பயன் அறிய கூறுவாம்

#2830
கடிப்பு வார் அங்குலி கொளீஇய கை துரந்து
அடுத்து வார் மயிர் துதி அலற ஊதலின்
பொடித்த பொன் தாமரை அனைய பொங்கு அழல்
இடை கிடந்து எவ்வளவு இரும்பு காய்ந்ததுவே

#2831
காய்ந்த அ அளவினால் கௌவும் நீரது ஒத்து
ஆய்ந்து அறி கொடையினது அளவில் புண்ணியம்
தோய்ந்து உயிர் உடம்பு இவண் ஒழிய தொக்க நாள்
வீந்து போய் வயிற்று அகம் விதியின் எய்துமே

#2832
திங்கள் ஒன்பதும் வயிற்றில் சேர்ந்த பின்
வங்க வான் துகில் பொதி மணி செய் பாவை போல்
அங்கு அவர் இரட்டைகள் ஆகி தோன்றலும்
சிங்கினார் இருமுதுகுரவர் என்பவே

#2833
இற்று அவர் தேவராய் பிறப்ப ஈண்டு உடல்
பற்றிய விசும்பு-இடை பரவும் மா முகில்
தெற்றென வீந்து என சிதைந்து போகுமால்
மற்ற அ மக்கள் தம் வண்ணம் செப்புவாம்

#2834
பிறந்த அ குழவிகள் பிறர்கள் யாவரும்
புறந்தரல் இன்றியே வளர்ந்து செல்லும் நாள்
அறைந்தனர் ஒன்று இலா ஐம்பது ஆயிடை
நிறைந்தனர் கலை குணம் உறுப்பு நீரவே

#2835
சோலை மீன் அரும்பி திங்கள் சுடரொடு பூத்ததே போல்
மாலையும் கலனும் ஈன்று வடகமும் துகிலும் நான்று
காலையும் இரவும் இல்லா கற்பக மரத்தின் நீழல்
பாலை யாழ் மழலை வேறாய் பல் மணி கொம்பின் நின்றாள்

#2836
இலங்கு பொன் குவடு சாந்தம் எழுதியது அனைய தோள் மேல்
நலம் கிளர் குழைகள் நான்று சாந்தின் வாய் நக்கி மின்ன
கலம் கலந்து அகன்ற மார்பில் கற்பக மாலை தாழ
விலங்கு அரசு அனைய காளை வேனில் வேந்து என்ன சேர்ந்தான்

#2837
குண்டலம் குலவி மின்ன பொன் அரி மாலை தாழ
தெண் கடல் அமிர்தின் செய்த பாவையின் பாவை நிற்ப
விண்டு அலர் மாலை மார்பன் விதியினால் சென்று மாதோ
கண்டனன் கலந்த உள்ளம் காதலின் ஒருவர் ஆனார்

#2838
கொதி நுனை காமன் அம்பு கொப்புளித்து உமிழ்ந்து காமம்
மது நிறை பெய்து விம்மும் மணி குடம் இரண்டு போல
நுதி முகம் முத்தம் சூடி நோக்குநர் ஆவி வாட்ட
விதி முலை வெய்ய ஆகி தாரொடு மிடைந்த அன்றே

#2839
இமைத்த நும் கண்கள் என்னை இகழ்ந்தனிர் என்று சீற
அமைத்து நின் அழகு கோலம் ஆர உண்டு அறுக்கல் ஆற்றாது
இமைத்தன வஞ்சி என்ன இளையவள் சிலம்பில் குஞ்சி
நமைத்த பூம் தாமம் தோய நகை முக விருந்து பெற்றான்

#2840
இன் அகில் ஆவி விம்மும் எழு நிலை மாடம் சேர்ந்தும்
பொன் மலர் காவு புக்கும் புரி மணி வீணை ஓர்த்தும்
நன் மலர் நான வாவி நீர் அணி நயந்தும் செல்வ
தொல் நலம் பருகி காம தொங்கலால் பிணிக்கப்பட்டார்

#2841
பூ முற்றும் தடம் கண்ணாளும் பொன் நெடும் குன்று அனானும்
காமுற்று நினைந்த எல்லாம் கற்பக மரங்கள் ஏந்த
தாம் உற்று கழிப்பர் தானம் இடையது செய்த நீரார்
ஏமுற்று கரும பூமி இருநிதி கிழமை வேந்தே

#2842
அடங்கலர்க்கு ஈந்த தான பயத்தினால் அலறும் முந்நீர்
தடம் கடல் நடுவுள் தீவு பல உள அவற்றுள் தோன்றி
உடம்பொடு முகங்கள் ஒவ்வார் ஊழ் கனி மாந்தி வாழ்வர்
மடங்கல் அம் சீற்ற துப்பின் மான வேல் மன்னர் ஏறே

#2843
செப்பிய சீலம் என்னும் திரு மணி மாலை சூழ்ந்தார்
கப்பத்துள் அமரர் ஆவர் காட்சி இன் அமிர்தம் உண்டார்
ஒப்ப நீர் உலகம் எல்லாம் ஒரு குடை நிழற்றி இன்பம்
கை படுத்து அலங்கல் ஆழி காவலர் ஆவர் கோவே

#2844
வீட்டினது இயற்கை நாம் விளம்பின் தீம் கதிர்
பாட்டு அரும் பனி மதி பழித்த முக்குடை
மோட்டு இரும் கொழு மலர் பிண்டி மூர்த்தி நூல்
ஈட்டிய பொருள் அகத்து இயன்றது என்பவே

#2845
உள் பொருள் இது என உணர்தல் ஞானம் ஆம்
தெள்ளிதின் அ பொருள் தெளிதல் காட்சி ஆம்
விள்ளற இருமையும் விளங்க தன் உளே
ஒள்ளிதின் தரித்தலை ஒழுக்கம் என்பவே

#2846
கூடிய மும்மையும் சுடர்ந்த கொந்து அழல்
நீடிய வினை மரம் நிரைத்து சுட்டிட
வீடு எனப்படும் வினை விடுதல் பெற்றது அங்கு
ஆடு எழில் தோளினாய் அநந்த நான்மையே

#2847
கடை இலா அறிவொடு காட்சி வீரியம்
கிடை இலா இன்பமும் கிளந்த அல்லவும்
உடைய தம் குணங்களோடு ஓங்கி விண் தொழ
அடைதலான் மேல் உலகு அறியப்பட்டதே

#2848
மாதவன் என பெயர் வரையின் அம் வரை
ஏதம் இல் எயிறு அணி பவள வாய் தொடுத்து
ஆதியில் அறவுரை அருவி வீழ்ந்து என
மா துயர் மலம் கெட மன்னன் ஆடினான்

#2849
எல்லையில் அறவுரை இனிய கேட்ட பின்
தொல்லை எம் பிறவியும் தொகுத்த பாவமும்
வல்லையே பணி-மின் அம் அடிகள் என்றனன்
மல்லை வென்று அகன்று பொன் மலர்ந்த மார்பினான்

#2850
கதிர் விடு திரு மணி அம் கை கொண்டது ஒத்து
எதிர்வதும் இறந்ததும் எய்தி நின்றதும்
அதிர்வு அறு தவ விளக்கு எறிப்ப கண்டவன்
பதர் அறு திரு மொழி பணிக்கும் என்பவே

#2851
முழு நீர் வளை மேய்தலின் முத்து ஒழுகி
பொழி நீர் நிலவின் இருள் போழ்ந்து அரிசி
கழு நீர் ஒழுக கழு நீர் மலரும்
தழு நீரது தாதகி என்று உளதே

#2852
கயல் பாய்ந்து உகள கடி அன்னம் வெரீஇ
வியன் நீள் சுடர் வெண் மதி சேர்வது போல்
அயலே அலர் தாமரை சேர்ந்து உறையும்
வயல் சூழ்ந்தன ஊர் வளம் ஆர்ந்தனவே

#2853
அவணத்தவர் கூந்தல் அகில் புகையை
சிவணி சிறுகால் கமுகம் பொழில் சேர்ந்து
உவண் உய்த்திட மஞ்சு என நின்று உலவும்
பவணத்து ஒரு பாங்கினதால் அளிதோ

#2854
மதியும் சுடரும் வழி காணல் உறா
பொதியும் அகிலின் புகையும் கொடியும்
நிதியின் கிழவன் இனிதா உறையும்
பதி பொன் நகரின் படி கொண்டதுவே

#2855
ஏமம் ஆகிய துப்புரவு எய்திய
பூமி மா திலகம் எனும் பொன் கிளர்
நாம நல் நகர் வீதிகள் தாம் எலாம்
காமவல்லி கிடந்தன போன்றவே

#2856
பைம் கழல் மன்னர் மன்னன் பவணமாதேவன் என்பான்
சங்கினுள் முத்தம் ஒப்பாள் சயமதி பயந்த நம்பி
ஐங்கணை காமன் அன்னான் அசோதரன் அரச சீயம்
தங்கிய கேள்வியாற்கு தையலார் சேர்த்தினாரே

#2857
இள முலை பொருது தேம் தார் எழில் குழைந்து அழிய வைகி
கிளை நரம்பு இசையும் கூத்தும் கிளர்ந்தவை கனற்ற நாளும்
வளை மயங்கு உருவ மென் தோள் வாய் நலம் பருகி மைந்தன்
விளை மது தேறல் மாந்தி வெற்றி போர் அநங்கன் ஆனான்

#2858
இலங்கு அரி பரந்த வாள் கண் இளையவர் புலவி நீங்க
சிலம்பு எனும் வண்டு பாட சீறடி போது புல்லி
அலங்கல் வாய் சென்னி சேர்த்தி அரி மதர் மழை கண் பில்க
நலம் கவர்ந்து உண்டு நண்ணார் நாமுற கழிக்கும் மாதோ

#2859
மங்கையர் தம்மொடு மடங்கல் மொய்ம்பினான்
பங்கய பனி தடம் சேர பார்ப்பு அனம்
செம் கயல் பேர் இனம் இரிய செவ்வனே
பொங்கி மேல் பறந்து விண் புதைந்தது என்பவே

#2860
வேய்ந்த வெண் தாமரை கோதை போல விசும்பில் பறக்கின்ற வெள்ளை அன்னம்
ஆய்ந்த முகில் ஆடை திங்கள் கண்ணி ஆகாயம் என்னும் அரிவை சாயல்
தோய்ந்த தன் காதலன் பற்ற அற்று சொரிகின்ற மேகலை போல் வீழ்ந்த வாளை
பாய்ந்து துகைப்ப கிழிந்த கூழை பனி தாமரை சூழ் பகல் கோயிலே

#2861
விரும்பு பொன் தட்டு-இடை வெள்ளி கிண்ணம் ஆர்ந்து
இருந்தன போன்று இள அன்ன பார்ப்பு இனம்
பொருந்து பொன் தாமரை ஒடுங்கி புக்கு ஒளித்து
இருந்த கண்டான் இளம் கோக்கள் நம்பியே

#2862
உரிமையுள் பட்டிருந்து ஒளிக்கின்றார்களை
பெரும நீ கொணர்க என பேசு காஞ்சுகி
ஒரு மகற்கு ஈந்தனன் கோயில் புக்கனன்
எரி முயங்கு இலங்கு வேல் காளை என்பவே

#2863
வட மலை பொன் அனார் மகிழ்ந்து தாமரை
தடம் உறைவீர்க்கு இவை தடங்கள் அல்லவே
வட முலை என நடாய் வருடி பால் அமுது
உடன் உறீஇ ஓம்பினார் தேம் பெய் கோதையார்

#2864
கண்டான் ஒரு நாள் கதிர் மா முடி மன்னர் மன்னன்
தண் தாமரை சூழ் தடத்தின் பிரித்தார்கள் யாரே
ஒண் தார் இளங்கோ என்று உழையவர் கூற வல்லே
கொண்டு ஈங்கு வம்-மின் கொலை வேலவன் தன்னை என்றான்

#2865
படு கண் முழவும் பசும்பொன் மணி யாழும் ஏங்க
இடுகும் நுசுப்பினவர் ஆட இருந்த நம்பி
அடிகட்கு அடிகள் அருள் இற்று என்று இறைஞ்ச வல்லே
கடி விம்மு தாரான் கழல் கையின் தொழுது சேர்ந்தான்

#2866
அணி சேர் இட கை விரலால் வல தோள்
மணி சேர் வளை வாய்வதின் வைத்து வலத்து
அணி மோதிரம் சூழ் விரல் வாய் புதையா
பணியா முடியால் பணிந்தான் இளையோன்

#2867
கிளை பிரிவு அரும் சிறை இரண்டும் கேட்டியேல்
விளைக்கிய வித்து அனாய் இரு மற்று ஈங்கு என
திளைக்கும் மா மணி குழை சுடர செப்பினான்
வளை கையார் கவரி கொண்டு எறிய மன்னனே

#2868
அறம் பெரிய கூறின் அலங்கல் அணி வேலோய்
மறம் புரி கொள் நெஞ்சம் வழியா புகுந்து ஈண்டி
செறும் பெரிய தீ வினைகள் சென்று கடிது ஓடி
உறும் பெரிய துன்பம் உயிர் கொலையும் வேண்டா

#2869
மெய் உரை விளங்கும் மணி மேல் உலக கோபுரங்கள்
ஐயம் இலை நின்ற புகழ் வையகத்து மன்னும்
மையல் விளை மா நரக கோபுரங்கள் கண்டீர்
பொய் உரையும் வேண்டா புறத்து இடு-மின் என்றான்

#2870
முளரி முகம் நாக முளை எயிறு உழுது கீற
அளவில் துயர் செய்வர் இவண் மன்னர் அதனாலும்
விளைவு அரிய மா துயரம் வீழ் கதியுள் உய்க்கும்
களவு கடன் ஆக கடிந்திடுதல் சூதே

#2871
மடத்தகைய நல்லார் மனம் கரிய மாற்றார்
பிடர்த்தலை ஒள் வாள் போல் பிறர் மனைகள் சேரின்
எடுப்ப அரிய துன்பத்து இடை படுவர் இன்னா
நடுக்கு உடைய காமம் விடுத்திடுதல் நன்றே

#2872
தெருளின் பொருள் வான் உலகம் ஏறுதற்கு செம்பொன்
இருளில் படு கால் புகழ் வித்து இல்லை எனின் எல்லா
அருளும் நக வையம் நக ஐம்பொறியும் நைய
பொருளும் நக ஈட்டும் பொருள் யாதும் பொருள் அன்றே

#2873
பொய்யொடு மிடைந்த பொருள் ஆசை உருள் ஆயம்
மை படும் வினை துகள் வழக்கு நெறி மாயம்
செய்த பொருள் பெய்த கலன் செம்மை சுடு செம் தீ
கை தவம் நுனித்த கவறு ஆடல் ஒழிக என்றான்

#2874
காமம் உடையார் கறுவொடு ஆர்வம் உடையாரும்
தாமமொடு சாந்து புனைவார் பசியின் உண்பார்
ஏமம் உடையார்கள் இவர் அல்லர் இவை இல்லா
வாமன் அடி அல்ல பிற வந்தியன்-மின் என்றான்

#2875
பூவை கிளி தோகை புணர் அன்னமொடு பன் மா
யாவை அவை தம் கிளையின் நீங்கி அழ வாங்கி
காவல் செய்து வைத்தவர்கள் தம் கிளையின் நீங்கி
போவர் புகழ் நம்பி இது பொற்பு இலது கண்டாய்

#2876
அல்லி தாள் அற்ற-போதும் அறாத நூல்-அதனை போல
தொல்லை தம் உடம்பு நீங்க தீவினை தொடர்ந்து நீங்கா
புல்லி கொண்டு உயிரை சூழ்ந்து புக்குழி புக்கு பின்னின்று
எல்லையில் துன்ப வெம் தீ சுட்டு எரித்திடுங்கள் அன்றே

#2877
அறவிய மனத்தர் ஆகி ஆருயிர்க்கு அருளை செய்யின்
பறவையும் நிழலும் போல பழவினை உயிரோடு ஆடி
மறவி ஒன்றானும் இன்றி மனத்ததே சுரக்கும் பால
கறவையின் கறக்கும் தம்மால் காமுறப்பட்ட எல்லாம்

#2878
நெடு மணி யூபத்து இட்ட தவழ் நடை யாமை நீள் நீர்
தொடு மணி குவளை பட்டம் துணையொடு நினைப்பதே போல்
கடு மணி கயல் கண் நல்லார் காமமும் பொருளும் சிந்தித்து
அடு மணி ஆவி நீப்பார் அறிவினால் சிறிய நீரார்

#2879
வீறு அழி வினை செய் காலன் வைர வாள் வலையில் பட்டால்
சாறு அழி குவளை மாலையவரையும் தனமும் நீக்கி
ஆறு இழி வரையின் தோன்றும் அறம் நனி நினைப்பர் செம்பொன்
ஏறு எழில் நெறியின் ஏறி இரு விசும்பு ஆளும் நீரார்

#2880
துன்னி மற்று அறத்தை கேட்டே துகில் நெருப்பு உற்றதே போல்
மின்னு தார் மார்பன் மெய் வெந்து ஆலியின் உருகி பெண்-பால்
அன்ன பார்ப்பு அன்று கொண்ட தடத்து-இடை விடுவித்து இட்டான்
பின்னை தன் கிளைகள் கூட்டம் பெருந்தகை வித்தினானே

#2881
மெய்ப்படு முது புண் தீர்ப்பான் மேவிய முயற்சி போல
ஒப்பு உடை காமம் தன்னை உவர்ப்பினோடு ஒழித்து பாவம்
இப்படித்து இது என்று அஞ்சி பிறவி நோய் வெருவினானே
மைப்படு மழை கண் நல்லார் வாய் கொண்ட அமுதம் ஒப்பான்

#2882
ஆளியால் பாயப்பட்ட அடு களி யானை போல
வாளி வில் தட கை மைந்தன் வாய்விட்டு புலம்பி காம
நாளினும் நஞ்சு துய்த்தேன் நச்சு அறை ஆக நன் பொன்
தோளியர் துறந்து தூய்தா தவம் செய்வல் அடிகள் என்றான்

#2883
சிறுவன் வாய்மொழியை கேட்டே தேர் மன்னன்-தானும் சொன்னான்
உறு களிற்று உழவ மற்று உன் ஒளி முடி தாயம் எய்தி
அறை கடல் வேலி காத்து உன் அலங்கல் வேல் தாயம் எல்லாம்
பெறு தகு புதல்வற்கு ஈந்து பின்னை நீ துறத்தி என்றான்

#2884
கொலை சிறை உய்ந்து போகும் ஒருவனை குறுக ஓடி
அலைத்தனர் கொண்டு பற்றி அரும் சிறை அழுத்துகின்றார்
தொலைப்பரும் சுற்றத்தாரோ பகைவரோ அடிகள் என்ன
விலை பெரு மணியை முந்நீர் நடு கடல் வீழ்த்தது ஒத்தான்

#2885
காதலம் அல்லம் மேல் நாள் கழிந்த நம் பிறவி தம்முள்
ஏதிலம் யாங்கள் எல்லாம் இனி கொளும் உடம்பினானும்
ஆதலால் சுற்றம் இல்லை அது பட்டவாறு என்று அம் பூம்
தாது அலர் மார்பன் அற்பு தளை அற பரிந்திட்டானே

#2886
நல் பொறி குயிற்றி வல்லான் செய்தது ஓர் நன் பொன் பாவை
பொன் பொறி கழல எல்லா பொறிகளும் கழல்வதே போல்
சொல் பொறி சோர எல்லா பொறிகளும் சோர்ந்து நம்பன்
இல் பொறி இன்பம் நீக்கி இராயிரர் சூழ சென்றான்

#2887
தணக்கு இற பறித்த போதும் தான் அளை விடுத்தல் செல்லா
நிணம் புடை உடும்பு அனாரை யாதினால் நீக்கல் ஆகும்
மணம் புடை மாலை மார்பன் ஒரு சொலே ஏது ஆக
கணை கவின் அழித்த கண்ணார் துறந்து போய் கடவுள் ஆனான்

#2888
தூமம் ஆர்ந்து அணங்கு நாறும் சுரும்பு சூழ் தாரினானும்
தாமம் ஆர் ஒலியல் ஐம்பால் சயமதி திருவும் ஆர்ந்த
காமம் மாசு உண்ட காதல் கதிர் வளை தோளினாரும்
நாமம் நால் கதியும் அஞ்சி நல் தவத்து உச்சி கொண்டார்

#2889
ஆசாரம் நாண தவம் செய்து அலர் கற்பக தார்
சாசாரன் என்னும் தகைசால் ஒளி தேவர் கோவாய்
மாசாரம் ஆய மணி வான் உலகு ஆண்டு வந்தாய்
தூசு ஆர்ந்த அல்குல் துளும்பும் நலத்தாரொடு என்றான்

#2890
மின் ஆர் சிலம்பின் சிலம்பும் குரல் அன்னம் மேல் நாள்
மன்னா பிரித்தாய் பிரிந்தாய் சிறைவைத்ததனால்
பொன் ஆர மார்ப சிறைப்பட்டனை போலும் என்றான்
இன்னா பிறவி பிணிக்கு இன் மருந்து ஆய சொல்லான்

#2891
மஞ்சு இவர் மணி வரை அனைய மாதவன்
வஞ்சம் இல் அறவுரை பொதிந்த வாய்மொழி
அஞ்சினன் இருந்துழி அம்பு வீழ்ந்து என
நஞ்சு உமிழ் வேலினான் நடுங்க வீழ்ந்ததே

#2892
வார் அணி மணி துடி மருட்டும் நுண் இடை
கார் அணி மயில் அனார் சூழ காவலன்
ஏர் அணி மணி முடி இறைஞ்சி ஏத்தினான்
சீர் அணி மாதவர் செழும் பொன் பாதமே

#2893
நல திரு மடமகள் நயந்த தாமரை
நிலத்து இருந்து இரு சுடர் நிமிர்ந்து செல்வ போல்
உலப்பரும் தவத்தினால் ஓங்கு சாரணர்
செல திரு விசும்பு ஒளி சிறந்தது என்பவே

#2894
சாரணர் போய பின் சாந்தம் ஏந்திய
வார் அணி வன முலை வஞ்சி கொம்பு அனார்
போர் அணி புலவு வேல் கண்கள் பூத்தன
நீர் அணி குவளை நீர் நிறைந்த போன்றவே

#2895
பொன் வரை நிலா கதிர் பொழிந்து போர்த்த போல்
தென் வரை சந்தனம் திளைக்கும் மார்பினான்
மின் இவர் நுசுப்பினார் மெலிய மெல்லவே
இன் உரை கொடான் கொடி கோயில் எய்தினான்

#2896
அம் சுரை பொழிந்த பால் அன்ன மென் மயிர்
பஞ்சி மெல் அணையின் மேல் பரவை அல்குலார்
மஞ்சு இவர் மதி முகம் மழுங்க வைகினார்
நஞ்சு உயிர்த்து அணி நலம் கரிந்து நையவே

#2897
வெள் எயிற்று அரவு மேய்ந்த மிச்சிலின் மெலிந்து மேக
புள்-வயின் பிறந்த புள் போல் ஒன்று அலாது உரைத்தல் தேற்றார்
கள் வயிற்று அலர்ந்த கோதை கலாப வில் உமிழும் அல்குல்
ஒள் எயிற்றவர்கள் பொன் பூத்து ஒளி மணி உருவம் நீத்தார்

#2898
கிளி சொலின் இனிய சொல்லார் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
குளித்து நீர் இரண்டு கோல கொழும் கயல் பிறழ்பவே போல்
களித்து நீர் சுமந்து வாள் கண் கலாஅய் பிறழ்ந்து அலமந்து ஆட
அளித்த தார் அலங்கல் ஆழி அவன் துறவு உரைத்தும் அன்றே

#2899
புனை மருப்பு அழுந்த குத்தி புலியொடு பொருது வென்ற
கனை குரல் உருமு சீற்ற கதழ் விடை உரிவை போர்த்த
துனை குரல் முரச தானை தோன்றலை தம்-மின் என்றான்
நனை மலர் அலங்கல் கண்ணி நந்தனும் தொழுது சேர்ந்தான்

#2900
கொடி அணி அலங்கல் மார்பில் குங்கும குன்றம் அன்னான்
அடி பணிந்து அருளு வாழி அரசருள் அரச என்ன
படு சின வெகுளி நாக பை தலை பனித்து மாழ்க
இடி உமிழ் முரசம் நாண இன்னணம் இயம்பினானே

#2901
ஊன் உடை கோட்டு நாகு ஆன் சுரி முக ஏற்றை ஊர்ந்து
தேன் உடை குவளை செம் கேழ் நாகு இளம் தேரை புல்லி
கான் உடை கழனி செந்நெல் கதிர் அணை துஞ்சும் நாடு
வேல் மிடை தானை தாயம் வீற்று இருந்து ஆள்மோ என்றான்

#2902
கரும்பு அலால் காடு ஒன்று இல்லா கழனி சூழ் பழன நாடும்
சுரும்பு உலாம் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன்
அரும்பு உலாய் அலர்ந்த அம் மென் தாமரை அனைய பாதம்
விரும்பி யான் வழிபட்டு அன்றோ வாழ்வது என் வாழ்க்கை என்றான்

#2903
குன்று என மருண்டு கோல மணி வண்டும் குழாம் கொள் தேனும்
சென்று மொய்த்து இமிரும் யானை சீவகற்கு இளைய நம்பி
மன்றல் வீற்று இருந்து மின்னும் மணி குவடு அனைய தோளான்
ஒன்றும் மற்று அரசு வேண்டான் உவப்பதே வேண்டினானே

#2904
பொலிவு உடைத்து ஆகுமேனும் பொள்ளல் இ உடம்பு என்று எண்ணி
வலி உடை மருப்பின் அல்லால் வாரணம் தட கை வையாது
ஒலி உடை உருமு போன்று நிலப்படாது ஊன்றின் வை வேல்
கலி கடிந்து உலகம் காக்கும் காளையை கொணர்-மின் என்றான்

#2905
கழு மணி ஆர மார்பின் காவலன் மக்கள் காய் பொன்
எழு வளர்ந்து அனைய திண் தோள் இளையவர் தம்முள் மூத்த
தழு மலர் கொம்பு போலும் தத்தை நாள் பயந்த நம்பி
விழு மணி பூணினான் வீற்று இரீஇ விதியின் சொன்னான்

#2906
பால் வளை பரந்து மேயும் படு கடல் வளாகம் எல்லாம்
கோல் வளையாமல் காத்து உன் குடை_நிழல் துஞ்ச நோக்கி
நூல் விளைந்து அனைய நுண் சொல் புலவரோடு அறத்தை ஓம்பின்
மேல் விளையாத இன்பம் வேந்த மற்று இல்லை கண்டாய்

#2907
வாய்ப்படும் கேடும் இன்றாம் வரிசையின் அரிந்து நாளும்
காய்த்த நெல் கவளம் தீற்றின் களிறு தான் கழனி மேயின்
வாய்ப்படல் இன்றி பொன்றும் வல்லன் ஆய் மன்னன் கொள்ளின்
நீத்த நீர் ஞாலம் எல்லாம் நிதி நின்று சுரக்கும் அன்றே

#2908
நெல் உயிர் மாந்தர்க்கு எல்லாம் நீர் உயிர் இரண்டும் செப்பின்
புல் உயிர் புகைந்து பொங்கு முழங்கு அழல் இலங்கு வாள் கை
மல்லல் அம் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய்
நல் உயிர் ஞாலம் தன்னுள் நாம வேல் நம்பி என்றான்

#2909
ஆர் வலம் சூழ்ந்த ஆழி அலை மணி தேரை வல்லான்
நேர் நிலத்து ஊரும் ஆயின் நீடு பல் காலம் செல்லும்
ஊர் நிலம் அறிதல் தேற்றாது ஊருமேல் முறிந்து வீழும்
தார் நில மார்ப வேந்தர் தன்மையும் அன்னது ஆமே

#2910
காய்ந்து எறி கடும் கல் தன்னை கவுள் கொண்ட களிறு போல
ஆய்ந்த அறிவுடையர் ஆகி அருளொடு வெகுளி மாற்றி
வேந்தர் தாம் விழைப எல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய்
நாந்தக உழவர் ஏறே நன் பொருள் ஆவது என்றான்

#2911
குடின் பழியாமை ஓம்பின் கொற்ற வேல் மன்னர் மற்று உன்
அடி வழி படுவர் கண்டாய் அரும் புகழ் கெடுதல் அஞ்சி
நொடியல் ஓர் எழுத்தும் பொய்யை நுண் கலை நீத்தம் நீந்தி
கொடி எடுத்தவர்க்கு நல்கு கொழித்து உணர் குமர என்றான்

#2912
சேல் நடந்தாங்கும் ஓடி சென்று உலாய் பிறழும் வாள் கண்
மான் மட நோக்கின் மாதர் மாலை நாள் பயந்த மைந்தன்
கால் நடந்து அனைய மான் தேர் காளையை காவல் மன்னன்
தான் உடன் அணிந்து தன் போல் இளவரசு ஆக்கினானே

#2913
கூர் எயிறு அணிந்த கொவ்வை கொழும் கனி கோல செ வாய்
ஏர் அணி மயில் அம் சாயல் இலக்கணை ஈன்ற சிங்கம்
சீர் உடை செம்பொன் கண்ணி சிறுவனை செம்பொன் மாரி
பேர் அறைந்து உலகம் உண்ண பெரு நம்பி ஆக வென்றான்

#2914
தன் கழல் தொழாத மன்னர் தாம் சுமந்து ஏத்தி நின்ற
பொன் திகழ் உருவில் தம்பி புதல்வனை தந்து போற்றி
மின் திகழ் முடியும் சூட்டி வீற்று இரீஇ வேந்து செய்தான்
குன்று இனம் குழீஇய போலும் குஞ்சர குழாத்தினானே

#2915
நிலம் செதிள் எடுக்கும் மான் தேர் நித்திலம் விளைந்து முற்றி
நலம் செய்த வைர கோட்ட நாறும் மும்மதத்த நாகம்
குலம் செய்த குமரர்க்கு எல்லாம் கொடுத்தனன் நிதியும் நாடும்
உலம் செய்த வைர குன்றம் ஓர் இரண்டு அனைய தோளான்

#2916
நூற்கு இடம் கொடுத்த கேள்வி நுண் செவி மண் கொள் ஞாட்பில்
வேற்கு இடம் கொடுத்த மார்பின் வில் வலான் தோழர் மக்கள்
நால் கடல் வளாகம் காக்கும் நம்பி-தன் கண்கள் ஆக
பால்கடல் கேள்வி யாரை பழிப்பு அற நாட்டினானே

#2917
காவலர் அகலம் என்னும் கழனியுள் உழுது காமர்
மா வலம் விளைத்த கோட்டு மழ களிற்று அரசன் அன்னான்
பூ அலர் கொடி அனாரை விடுக்கிய கோயில் புக்கான்
தூ அலர் ஒலியலார் தம் வல கண்கள் துடித்த அன்றே

#2918
செம்பொனால் செறிய வேய்ந்து திரு மணி முகடு கொண்ட
வெம்பு நீள் சுடரும் சென்னி விலங்கிய மாடம் எய்தி
அம் பொனால் தெளிந்த பாவை அனையவர் தம்-மின் என்றான்
பைம்பொனால் வளர்க்கப்பட்ட பனை திரண்டு அனைய தோளான்

#2919
தின் பளித மாலை திரள் தாமம் திகழ் தீம் பூ
நன்கு ஒளி செய் தாமம் நறும் பூ நவின்ற தாமம்
பொன் தெளித்த தாமம் புரி முத்தம் மிளர் தாமம்
மின் தெளித்த மின்னு மணி வீழ்ந்த திரள் தாமம்

#2920
ஈன்ற மயில் போல் நெடிய தாமத்து-இடை எங்கும்
மான்று மணம் விம்மு புகை மல்கி நுரையே போல்
தோன்றும் மணி கால் அமளி தூ அணையின் மேலார்
மூன்றுலகம் விற்கும் முலை முற்று_இழையினாரே

#2921
இன்னது அருள் என்று இளையர் ஏத்த ஞிமிறு ஆர்ப்ப
மின்னின் இடை நோவ மிளிர் மேகலைகள் மின்ன
பொன் அரிய கிண்கிணியும் பூம் சிலம்பும் ஏங்க
மன்னன் அடி சேர்ந்து இறைஞ்சி வாழி என நின்றார்

#2922
கலவ மயில் கால் குவித்த போலும் கமழ் ஐம்பால்
நிலவும் மணி மேகலை நிலா உமிழும் பைம் பூண்
இலவ மலர் வாயின் அணி கூர் எயிற்றினீரே
உலவும் மனம் வைத்து உறுதி கேண்-மின் இது என்றான்

#2923
வாய் அழல் உயிர்க்கும் ஆழி மன்னவன் குறிப்பு நோக்கி
வேய் அழ திரண்ட மென் தோள் வெம் முலை பரவை அல்குல்
தோய் பிழி அலங்கலார்-தம் தொல் நலம் தொலைந்து வாடி
காய் அழல் கொடியை சேர்ந்த கற்பக மாலை ஒத்தார்

#2924
கரும் கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணும்-காலை
பெரும் குளத்து என்றும் தோன்றா பிறை நுதல் பிணை அனீரே
அரும் கொடை தானம் ஆய்ந்த அரும் தவம் தெரியின் மண் மேல்
மருங்கு உடையவர்கட்கு அல்லால் மற்றையர்க்கு ஆவது உண்டே

#2925
விட்டு நீர் வினவி கேள்-மின் விழுத்தகை அவர்கள் அல்லால்
பட்டது பகுத்து உண்பார் இ பார் மிசை இல்லை கண்டீர்
அட்டு நீர் அருவி குன்றத்து அல்லது வைரம் தோன்றா
குட்ட நீர் குளத்தின் அல்லால் குப்பை மேல் குவளை பூவா

#2926
நரம்பு ஒலி பரந்த கோயில் நல் நுதல் மகளிர் தூவும்
பெரும் பலி சோற்றின் ஈதல் பெரிது அரிது ஆகுமேனும்
சுரும்பு ஒலி கோதையார் தம் மனை-வயின் தூண்-தொறு ஊட்டும்
அரும் பலி அனைத்தும் ஈயின் அது பொருள் குன்று கண்டீர்

#2927
அற்றவர் வருத்தம் நீக்கி ஆருயிர் கொண்டு நிற்கும்
துற்ற அவிழ் ஈதல் செம்பொன் துறக்கத்திற்கு ஏணி ஆகும்
முற்று உயிர் ஓம்பி தீம் தேன் ஊனொடு துறப்பின் யார்க்கும்
மற்று உரை இல்லை மண்ணும் விண்ணும் நும் அடிய அன்றே

#2928
மாலை பந்தும் மாலையும் ஏந்தி மது வார் பூம்
சோலை மஞ்ஞை சூழ் வளையார் தோள் விளையாடி
ஞாலம் காக்கும் மன்னவர் ஆவார் நறவு உண்ணா
சீலம் காக்கும் சிறு உபகாரம் உடையாரே

#2929
மாசி திங்கள் மாசின சின்ன துணி முள்ளின்
ஊசி துன்னம் மூசிய ஆடை உடை ஆக
பேசி பாவாய் பிச்சை என கை அகல் ஏந்தி
கூசிக்கூசி நிற்பர் கொடுத்து உண்டு அறியாதார்

#2930
காட்டு அகத்து ஒரு மகன் துரக்கும் மா கலை
ஓட்டு உடைத்தாம் எனின் உய்யும் நங்களை
ஆட்டியிட்டு ஆருயிர் அளைந்து கூற்றுவன்
ஈட்டிய விளை மது போல உண்ணுமே

#2931
புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள
கள் அவிழ் கோதையீர் காண்-மின் நல் வினை
ஒள்ளியான் ஒரு மகன் உரைத்தது என்னன்-மின்
தெள்ளியீர் அறத்திறம் தெரிந்து கொள்-மினே

#2932
மாய்தலும் பிறத்தலும் வளர்ந்து வீங்கலும்
தேய்தலும் உடைமையை திங்கள் செப்புமால்
வாய் புக பெய்யினும் வழுக்கி நல்லறம்
காய்வது கலதிமை-பாலது ஆகுமே

#2933
புள்ளி நீர் வீழ்ந்தது பெருகி புன் புலால்
உள் வளர்ந்து ஒரு வழி தோன்றி பேர் அறம்
உள்குமேல் முழு புலால் குரம்பை உய்ந்து போய்
வெள்ள நீர் இன்பமே விளைக்கும் என்பவே

#2934
பாற்றுளி பவளநீர் பெருகி ஊன் திரண்டு
ஊற்று நீர் குறும் புழை உய்ந்து போந்த பின்
சேற்று நீர் குழியுளே அழுந்தி செல்கதிக்கு
ஆற்று உணா பெறாது அழுது அலறி வீழுமே

#2935
திருந்திய நல் அற செம்பொன் கற்பகம்
பொருந்திய பொருளொடு போகம் பூத்தலால்
வருந்தினும் அறத்திறம் மறத்தல் ஓம்பு-மின்
கரும்பு என திரண்ட தோள் கால வேல் கணீர்

#2936
மந்திர மருந்து இவை இல்லையாய் விடின்
ஐம் தலை அரவினை யாவர் தீண்டுவார்
சுந்தர சுரும்பு சூழ் மாலை இல்லையேல்
மைந்தரும் மகளிரை மருங்கு சேர்கிலார்

#2937
பொன் துலாம் பொன் அனீர் தருதும் பாகு நீர்
தின்று அலால் சிறுவரை யானும் சொல் சில
இன்று எலாம் எம் மருங்கு இருந்து பேசினால்
வென்று உலாம் வேல் கணீர் விழுத்தக்கீர்களே

#2938
மெய் படு சாந்தும் பூவும் மிக நனி கமழுமேனும்
கைப்படு சாந்தும் பூவும் கொண்டு அலால் கலக்கல் ஆகா
ஐ படு பித்து நெய்த்தோர் அசும்பு சோர் அழுகல் புன் தோல்
பொய் பட உரைத்தது உண்டோ பொன் அனீர் நம்முள் நாமால்

#2939
அனிச்சத்து அம் போது போல தொடுப்பவே குழைந்து மாழ்கி
இனி செத்தாம் பிறந்த-போழ்தே என்று நாம் இதனை எண்ணி
தனி சித்தம் வைத்தல் தேற்றாம் தளர்ந்து கண் பரப்பி நோக்கி
பனித்தும் என்று உற்ற-போழ்தே பழுது இலா அறிவின் என் ஆம்

#2940
நீல் நிறம் கொண்ட ஐம்பால் நிழல் மணி உருவம் நீங்கி
பால் நிறம் கொண்டு வெய்ய படா முலை பையின் தூங்கி
வேல் நிற மழை கண் தாமும் இமை குறைந்து அழுகி மேனி
தான் நிறம் கரக்கும் காலம் தையலீர் மெய்யது அன்றே

#2941
குஞ்சரம் அயா உயிர்த்து அனைய குய் கமழ்
அம் சுவை அடிசிலை அமர்ந்து உண்டார்கள் தாம்
இஞ்சி மாநகர் இடும் பிச்சை ஏற்றலால்
அஞ்சினேன் துறப்பல் யான் ஆர்வம் இல்லையே

#2942
ஒருவர் தம் வலி கெடும் உடன்று பொங்கி மேல்
இருவர் மற்று இயைந்து எழுந்து இருப்பின் என்ப போல்
உருவ நுண் நுசுப்பு இற இருந்த ஒண் மணி
பரிய கண் படா முலை பைம்பொன் கொம்பு அனீர்

#2943
காதலம் கழிந்த நாள் இதனின் இப்புறம்
ஏதிலம் என்ற சொல் செவி சென்று எய்தலும்
மாதரார் மழை மலர் தடம் கண் மல்கு நீர்
போது உலாம் மார்பின் வாய் பொழிந்து வீழ்ந்தவே

#2944
செருக்கி நிணம் தின்று சிவந்து மன்னர் உயிர் செற்ற
நெருப்பு தலை நெடு வேல் கண்ணார் கண்ணீர் நிழல் மணி பூண்
பரப்பின்-இடை பாய்ந்து குளம் ஆய் பால் ஆர் படா முலையை
வருத்தி மணி நெடும் கோட்டு அருவி போல வீழ்ந்தனவே

#2945
அழல் ஏந்து வெம் கடும் சொல் உரும் ஏறு உண்டு ஆங்கு அலர் சிந்தி
நிழல் ஏந்து பூம் கொடிகள் நிலம் சேர்ந்து ஆங்கு நிலம் சேர்ந்து
கழல் ஏந்து சேவடி கீழ் கண்ணீர் வெள்ளம் கலம் நிரப்ப
குழல் ஏங்குமாறு ஏங்கி அழுதார் கோதை மடவாரே

#2946
குலிக அம் சேற்றுள் நாறி குங்கும நீருள் ஓங்கி
பொலிக என வண்டு பாட பூத்த தாமரைகள் போலும்
ஒலி கழல் அடிகள் நும் கீழ் பிழைத்தது என் உரை-மின் என்ன
புலி நிழல் பட்ட மான் போல் போகு உயிர் ஆகி நின்றார்

#2947
அரும் தவிசு ஆகி எம்மை சுமந்து அயா உயிர்த்த ஆண்மை
பெரும் தகு குறங்குகாள் நீர் பெண் உயிர் அளியதாமே
வருந்துமால் என்று நோக்கீர் வாடுமால் ஆவி என்னீர்
விருந்தினர் போல நின்றீர் வெற்று உடல் காண்-மின் என்பார்

#2948
கோதையும் துகிலும் ஏந்தி குங்குமம் எழுதி கொய் பூம்
தாது கொண்டு அளகத்து அப்பி தட முலை வருடி சேர்ந்து
காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும்
ஏதிலர் ஆகி கோமான் எண்ணமே எண்ணினீரே

#2949
பஞ்சி கொண்டு எழுதி ஆர்ந்த சீறடி பனித்தல் அஞ்சி
குஞ்சி மேல் ஏற்ற கோமான் கொப்புளித்திட்ட எம்மை
வஞ்சித்தீர் மணி செய் தோள்காள் வாங்குபு தழுவி கொள்ளீர்
நெஞ்சம் நீர் வலியீர் ஆகி நிற்பீரோ நீரும் என்பார்

#2950
முட்டு வட்டு அனைய கோல முத்து உலாய் கிடந்து மின்ன
மட்டு விட்டு அலர்ந்த கோதை மதுவொடு மயங்கி நாளும்
ஒட்டி இட்டு உறைய எங்கட்கு உயர் அணை ஆய மார்ப
நட்பு விட்டு ஒழியும்-ஆயின் நன்மை யார் கண்ணது அம்மா

#2951
மா கவின் வளர தீண்டி மணி நகை நக்கு நாளும்
பூ கவின் ஆர்ந்த பைம் தார் புனை மது தேனொடு ஏந்தி
தாக்கி எம் முலைகள் தம்மை நெருக்கினாய் தரணி மன்னின்
நீக்கி நீ எம்மை நோக்காய் நீத்தியோ நீயும் என்பார்

#2952
அன்னமே தோகை நல் யாழ் அமுதமே ஆய்ந்த தீம் தேன்
இன்னரே நங்கைமார் என்று ஏத்திய பவள செம் நா
என்னை நீ கண்டது எம்மை இரண்டு நா ஆயினாயே
மன்னன் போல் ஈரம் இன்றி வலித்தனை வாழி என்பார்

#2953
பூணினால் நெருங்க நொந்து பொதிர்த்தன வெம்பி என்று
நாணினால் வருத்தம் தீர்ப்பான் நல் முலை கண்கள் தம்மை
பேணி நீர் எழுதி ஓம்பி பேர் இன்பம் கொண்டு தந்தீர்
காண்-மினோ இன்று எம் வண்ணம் கண்ணிலீர் கண்கள் என்பார்

#2954
சென்னி மேல் மிதித்த அம் செம் சீறடி திருவில் வீச
மின்னி வாள் ஆரம் சிந்த வெறு நிலத்து உறைந்து நீ எம்
இன் நகை முறுவல் பார்த்தாய் இன்று எமது ஆவி பார்த்தாய்
மன்னிய மாலை வண்டார் மணி முடி வாழி என்பார்

#2955
வீங்கு பால்கடலும் நஞ்சாய் விளைந்ததால் விரிந்த வெய்யோன்
பாங்கு இலா இருளை ஈன்று பார் மறைத்து இட்டதாலோ
தீம் கதிர் திங்கள் செம் தீ சொரிந்ததால் திசைகள் எல்லாம்
தாங்குமாறு என்னை ஆவி தரிக்கிலேம் தேவீர்காளோ

#2956
விண்ணோர் மடமகள்-கொல் விஞ்சைமகளே-கொல்
கண்ணார் கழி வனப்பில் காந்தருவதத்தை என்று
எண் ஆய வான் நெடும் கண் மெய் கொள்ள ஏமுற்று
பண்ணால் பயின்றீர் இனி என் பயில்வீரே

#2957
கொல் வேல் நெடும் கண் குணமாலை குஞ்சரத்தால்
அல்லல் நோய் உற்றாளுக்கு அன்று களிறு அடர்த்து
புல்லி புணர் முலையின் பூம் குவட்டின் மேல் உறைந்தாய்
எல்லே மற்று எம் பெருமாற்கு இன்று இவளும் மின்னாளோ

#2958
தூம்பு உடைய வெள் எயிற்று துத்தி அழல் நாக
பாம்பு உடைய நோக்கி பதுமை பவள வாய்
தேம்பு உடைய இன் அமுதா சேர்ந்தாய்க்கு இனி அதுவே
ஆம்புடைய நஞ்சு அடங்கிற்று இன்று ஊறிற்று ஆகாதே

#2959
தாழ்ந்து உலவி மென் முலை மேல் தண் ஆரம் வில் விலங்க
போழ்ந்து அகன்ற கண்ணினால் ஏ பெற்று போகலாய்
தாழ்ந்து அமரர் இன் அமிர்தம் தக்க நாட்டு ஆகாதே
வீழ்ந்தது என வீழ்ந்தாய் நீ இன்று அதுவும் விட்டாயோ

#2960
கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
பெண்ணோ அமுதோ பிணையோ என பிதற்றி
துண்ணென் சிலை தொழிலும் காட்டி முன் இன்புற்றீர்
புண் மேல் கிழி போல் துறத்தல் பொருள் ஆமோ

#2961
பொன் நகர வீதி புகுந்தீர் பொழி முகிலின்
மின்னின் இடை நுடங்க நின்றாள் தன் வேல் நெடும் கண்
மன்னன் நகர் எல்லாம் போர்ப்ப வலைப்பட்டீர்க்கு
இன்னே ஒளி இழந்த இன்னா இடுகினவோ

#2962
செம் கச்சு இள முலையார் திண் கறை ஊர் பல்லினார்
மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீ மகிழ்ந்து
பங்கயமே போல்வாளை பார்ப்பானாய் பண் அணைத்து
தங்கினாய் கோவே துறத்த தகவு ஆமோ

#2963
புல்லார் உயிர் செகுத்த பொன் அம் திணி தோளாய்
மல் ஆர் அகன் மார்ப மட்டு ஏந்தி வாய் மடுத்திட்டு
எல்லாரும் காண இலக்கணையோடு ஆடினாய்
அல்லாந்து அவள் நடுங்க அன்பின் அகல்வாயோ

#2964
கல்லோ மரனும் இரங்க கலுழ்ந்து உருகி
எல்லா திசை-தோறும் ஈண்டி இன மயில் போல்
சொல்லா துயர்வார் தொழுவார் அழுவார் ஆய்
அல்லாந்து அகன் கோயில் ஆழ் கடல் போல் ஆயிற்றே

#2965
பூ பரிவார் பொன் செய் கலம் பரிவார் பொன் வளையை
நீப்பிர் என புடைப்பார் நீள் தாமம் சிந்துவார்
ஏ பெற்ற மான் பிணை போல் ஏங்குவார் இன் உயிரை
காப்பரேல் காவலனார் காவாரோ இன்று என்பார்

#2966
கழுநீரும் தாமரையும் கண்டனவே போலும்
முழு நீர் வேல் கண்ணும் முகமும் உலறி
செழு நீர் மணி கொடிகள் காழகம் சேர் கொம்பாய்
அழு நீர வாய் அலறி அல்லாப்ப போன்றாரே

#2967
பண்ணார் பணை முழவம் பாடு அவிந்து பல் மணி யாழ் மழலை நீங்கி
புண்ணார் புனை குழலும் ஏங்கா புனை பாண்டில் இரங்கா வான் பூம்
கண்ணார் ஒலி கவுள கிண்கிணியும் அம் சிலம்பும் கலையும் ஆரா
மண்ணார் வலம்புரியும் வாய் மடங்கி கோன் கோயில் மடிந்தது அன்றே

#2968
அணியார் மணி அரக்கு வட்டு அழுத்தி வைத்து அனைய செம் கண் மா தாள்
பிணியார் பெரும் துருத்தி அன்ன பெரும் கவுள பிறை ஏர் கோட்ட
பணியார் கமழ் கடாத்து அண்ணல் அரசுவா பண்ணார் பாய்மா
இணையாதும் இல்லாத கண்ணீர் வீழ்த்து உண்ணா நின்று இனைந்ததாமே

#2969
கழித்த கடி பிணையும் கை வளையும் மாலையும் களைந்து முத்தும்
தொழித்த நறும் சாந்தும் சுண்ணமும் பல் மணியும் கலனும் சிந்தி
விழித்து வியன் கோயில் பன் மீன் பரந்து இமைக்கும் பனியார் வானம்
பழித்து பசும்பொன் உலகு குடி போயிற்று ஒத்தது அன்றே

#2970
அழலார் சுரை எயிற்று வெம் சின ஐம் தலை சுமந்த வெகுளி நாகம்
நிழலார் திரு மணியும் தேவர் திரு முடி மேல் நிலவி வீசும்
சுழல் ஆர் பசும்பொன்னும் வேய்ந்து சொரி கதிர் மென் பஞ்சி ஆர்ந்த
கழலான் நகரம் அமுது கடை கடல் போல் கலங்கிற்று அன்றே

#2971
நீர் நிறை குளத்து மாரி சொரிந்து என நறு நெய் துள்ளும்
நேர் நிறை பொரியும் குய்யும் வறைகளும் நிவந்த வாசம்
பார் நிறை அடிசில் பள்ளி தளியொடு சாலை எல்லாம்
ஊர் நிறை உயிர்த்தல் இன்றி உயிர் சென்ற போன்ற அன்றே

#2972
கோள் புலி சுழல் கண் அன்ன கொழும் சுவை கருனை முல்லை
மோட்டு இள முகையின் மொய் கொள் கொக்கு உகிர் நிமிரல் வெண் சோறு
ஊட்டுறு கறி கொள் தேமாங்கனி சுவை தயிரொடு ஏந்தி
வேட்டவர் பெறாது வீதி வெறு நிலம் கிடந்த அன்றே

#2973
மைந்தர் தம் வண் கையால் முன் மணி வள்ளத்து எடுத்த தேறல்
பைம் துகில் மகளிர் மேவார் பாசிழை பசும்பொன் மாலை
சிந்தியே கரந்தார் சொல் போல் மெய்யின் கண் சேர்தல் இன்றாய்
சந்தன சாந்தொடு ஆரம் தாம் கவின் இழந்த அன்றே

#2974
தாழி வாய் மறைக்கும் தண் என் தடம் பெரும் குவளை கண்ணார்
மூழி வாய் முல்லை மாலை முலை முகம் முரிந்து நக்க
யாழின் வாய் முழவம் விம்ம ஆட்டு ஒழிந்து அயர்ந்து தீம் தேன்
ஊழி வாய் கொண்டது ஒக்கும் பாடலும் ஒழிந்தது அன்றே

#2975
அரும் கலம் நிறைந்த அம் பூம் பவழ கால் திகழும் பைம்பொன்
பெரும் கிடுகு என்னும் கோல பேர் இமை பொருந்தி மெல்ல
ஒருங்கு உடன் நகரம் எல்லாம் உறங்குவது ஒத்தது ஒல்லென்
கரும் கடல் கல் என் சும்மை கரந்ததும் ஒத்தது அன்றே

#2976
கலை உலாய் நிமிர்ந்த அல்குல் கடல் விளை அமுதம் அன்னார்
முலை உலாய் நிமிர்ந்த மொய் தார் முழவு முத்து உரிஞ்சி மின்ன
சிலை உலாய் நிமிர்ந்த மார்பன் திருநகர் தெருள்கலாதாய்
நிலை இலா உலகின் தன்மை நீர்மை மீக்கூறிற்று அன்றே

#2977
கூந்தல் அகில் புகையும் வேள்வி கொழும் புகையும்
ஏந்து துகில் புகையும் மாலைக்கு இடும் புகையும்
ஆய்ந்த பொருள் ஒருவர்க்கு ஈயா அதிலோப
மாந்தர் புகழே போல் தோன்றா மறைந்தனவே

#2978
புல் உண் புரவி புலம்பு விடு குரல் போல்
நல்ல வளை போழ் அரவம் நாரை நரல் குரல் போல்
கல்லா இளையர் கலங்கா சிரிப்பு ஒலியும்
கொல் யானை சங்கு ஒலியும் கூடாது ஒழிந்தனவே

#2979
பொற்பு உடைய பூ மாலை சாந்தம் புனை கலன்கள்
கற்பு உடைய மங்கையரின் காவல் அவை இழந்த
நற்பு உடைய தேன் ஆர் நறவு நயம் புல்லார்
சொல் பொருள் போல் வேட்கப்படா சோர்ந்து ஒழிந்தனவே

#2980
தீம் பால் கிளி மறந்து தேவர் அவி மடங்கி
தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய்
ஆம் பால் உரை மடங்கி யாரும் பிறர்பிறராய்
காம்பு ஆர் நடு இருள் கண் காடே போல் ஆயிற்றே

#2981
நீர் முழங்கு நீல நெடு மேக மால் யானை
தேர் முழங்கு தானை திருமாலின் முன் துறப்பான்
பார் முழங்கு தெண் திரை போல் செல்வம் தம் பாலர்க்கு ஈந்து
ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே

#2982
கொல் உலை பொங்கு அழல் கிடந்த கூர் இலை
மல்லல் வேல் இரண்டு ஒரு மதியுள் வைத்த போல்
செல்ல நீண்டு அகன்று அகம் சிவந்த கண்ணினார்
அல்லல் உற்று அழுபவர்க்கு அரசன் சொல்லினான்

#2983
நல் தவம் பரவை ஞாலம் நாம் உடன் நிறுப்பின் வையம்
அற்றம் இல் தவத்திற்கு என்றும் ஐயவி அனைத்தும் ஆற்றாது
இற்று என உணர்ந்து நிற்பின் திருமகள் என்றும் நீங்காள்
பற்றோடே நிற்பின் என்றும் திருமகள் பற்றல் செல்லாள்

#2984
உப்பு இலி புழுக்கல் காட்டுள் புலை மகன் உகுப்ப ஏக
கை பலி உண்டியானும் வெள்ளில் மேல் கவிழ நீரும்
மை பொலி கண்ணின் நீரால் மனை அகம் மெழுகி வாழ
இ பொருள் வேண்டுகின்றீர் இதனை நீர் கேண்-மின் என்றான்

#2985
கொல் சின யானை பார்க்கும் கூர் உகிர் தறுகண் ஆளி
இல் எலி பார்த்து நோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே
பல் வினை வெள்ளம் நீந்தி பகா இன்பம் பருகின் அல்லால்
நல்வினை விளையுள் என்னும் நஞ்சினுள் குளித்தல் உண்டே

#2986
ஆற்றிய மக்கள் என்னும் அரும் தவம் இலார்கள்-ஆகின்
போற்றிய மணியும் பொன்னும் பின் செலா பொன் அனீரே
வேற்றுவர் என்று நில்லா விழு பொருள் பரவை ஞாலம்
நோற்பவர்க்கு உரிய ஆகும் நோன்-மின் நீரும் என்றான்

#2987
காதல் அம் சேற்றுள் பாய்ந்த மதி எனும் கலங்கல் நீரை
ஊது வண்டு உடுத்த தாரான் உவர்ப்பினின் உரிஞ்சி தேற்ற
மாதரார் நெஞ்சம் தேறி மா தவம் செய்தும் என்றார்
காதலான் காதல் என்னும் நிகளத்தால் நெடும் கணாரே

#2988
தூமம் சால் கோதையீரே தொல் வினை நீத்தம் நீந்தி
நாமம் சால் கதியின் நீங்கி நன் பொன் மேல் உலகின் உச்சி
ஏமம் சால் இன்பம் வேண்டின் என்னொடும் வம்-மின் என்றான்
காமம் சாய்த்து அடர்த்து வென்ற காஞ்சன குன்றம் அன்னான்

#2989
நாடகம் நயந்து காண்பார் நலம் கிளர் கண்கள் சூன்றும்
ஆடக கலத்துள் ஆன் பால் அமிர்தினை நயந்து உண்பாரை
நீடு அகம் வெகுண்டும் கையால் பிடித்து நீறு அட்டி இட்டேம்
கோடகம் அணிந்த கோல முடியினாய் துறத்தும் என்றார்

#2990
சாந்தம் கிழிய முயங்கி தட மலரால்
கூந்தல் வழிபட்ட கோவே நீ செல் உலகில்
வாய்ந்து அடியேம் வந்து உன் வழிபடும் நாள் இன்றே போல்
காய்ந்து அருளல் கண்டாய் என தொழுதார் காரிகையார்

#2991
தெண் திரை நீத்தம் நீந்தி தீம் கதிர் சுமந்து திங்கள்
விண் படர்ந்து அனைய மாலை வெண்குடை வேந்தர் வேந்தன்
கண் திரள் முத்த மாலை கதிர் முலை நங்கைமாரை
வெண் திரை வியக்கும் கேள்வி விசயை-கண் அபயம் வைத்தான்

#2992
கடி மலர் நிறைந்து பூத்த கற்பக கொம்பும் காமர்
வடி மலர் மலர்ந்த காமவல்லியும் தம்மை தாமே
உடை மலர் கொய்து போக உகுத்திடுகின்றது ஒத்தார்
படை மலர் நெடும் கண் நல்லார் பாசிழை நீக்குகின்றார்

#2993
தழு மலர் தாமம் நான்று சந்து அகில் மணந்து விம்மும்
செழு மணி நிலத்து செம்பொன் திரு முத்த விதான நீழல்
எழுமையும் பெறுக என்னும் எழில் முலை நெற்றி சூழ்ந்தார்
கழுமிய துகிலின் காமன் கண் புடைத்து இரங்க மாதோ

#2994
நறும் புகை நான நாவி குழம்பொடு பளித சுண்ணம்
அறிந்தவர் ஆய்ந்த மாலை அணிந்த பைம் கூந்தலாய் பொன்
நிறம் தரு கொம்பு நீல கதிர் கற்றை உமிழ்வவே போல்
செறிந்து இருந்து உகுத்து செம்பொன் குண கொடி ஆயினாரே

#2995
இலம் பெரிது என இரந்தவர்கட்கு ஏந்திய
கலம் சொரி காவலன் கடக கை இணை
புலம் புரிந்து உயர்ந்தன இரண்டு பொன் நிற
வலம்புரி மணி சொரிகின்ற போன்றவே

#2996
என்பு அரிந்து எரி தலைக்கொள்ள ஈண்டிய
அன்பு அரிந்து இடுகலா உலகம் ஆர்க என
மின் சொரி வெண் கலம் வீசும் வண் கைகள்
பொன் சொரி தாமரை போது போன்றவே

#2997
பூம் துகில் புனை கலம் மாலை பூசு சாந்து
ஆய்ந்து உலகு உண உவந்து அருளி மா மணி
காந்திய கற்பக கானம் ஆயினான்
ஏந்திய மணி முடி இறைவன் என்பவே

#2998
தேய் பிறை உருவ கேணி தேறு நீர் மலர்ந்த தேனார்
ஆய் நிற குவளை அஞ்சி குறு விழி கொள்ளும் வாள் கண்
வேய் நிறை அழித்த மென் தோள் விசயையை தொழுது வாழ்த்தி
சேய் நிற சிவிகை சேர்ந்தான் தேவர் கொண்டு ஏகினாரே

#2999
நரம்பு எழுந்து இரங்கின வீணை நன் குழல்
பரந்து பண் உயிர்த்தன பைய மெல்லவே
விருந்துபட்டு இயம்பின முழவம் வீங்கு ஒலி
சுரந்தன சுடர் மணி பாண்டில் என்பவே

#3000
மங்குலாய் அகில் புகை மணந்து கற்பக
பொங்கு பூ மாலைகள் பொலிந்து பூஞ்சுணம்
தங்கி இ தரணியும் விசும்பும் தாமரோ
செம் கதிர் திரு மணி செப்பு போன்றவே

#3001
திலக முக்குடை செல்வன் திருநகர்
பலரும் ஏத்தினர் பாடினர் ஆடினர்
குலவு பல்லியம் கூடி குழுமி நின்று
உலக வெள்ளம் ஒலிப்பது போன்றவே

#3002
கான் நிரைத்தன காவொடு பூம் பொய்கை
தேன் நிரைத்தன செம்பொன் நெடு மதில்
மேல் நிரைத்தன வெண் கொடி அ கொடி
வான் உரிப்பன போன்று மணந்தவே

#3003
கோலம் முற்றிய கோடு உயர் தூபையும்
சூலம் நெற்றிய கோபுர தோற்றமும்
ஞாலம் முற்றிய பொன் வரை நன்று-அரோ
காலம் உற்று உடன் கண்ணுற்ற போன்றவே

#3004
வாயில் தோரணம் கற்பக மாலை தாழ்ந்து
ஏயிற்று இந்திரன் பொன் நகரின் புறம்
போயிற்றே அகிலின் புகை போர்த்து உராய்
ஞாயிற்று ஒள் ஒளி நைய நடந்ததுவே

#3005
செய்ய தாமரை பூவினுள் தேம் கமழ்
பொய் இல் சீர்த்தி வெண் தாமரை பூத்த போன்று
ஐயம் செய்து அடு பால் நிற புள் இனம்
மை இல் தாமரை மத்தகம் சேர்ந்தவே

#3006
மல்லன் மா கடல் அன்ன கிடங்கு அணிந்து
ஒல்லென் சும்மைய புள் ஒலித்து ஓங்கிய
செல்வ நீர் திரு கோயில் இ மண் மிசை
இல்லையேல் துறக்கம் இனிது என்பவே

#3007
விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து மின்னு தார்
துளங்கு ஒளி மணிவண்ணன் தொழுது துன்னினான்
வளம் கெழு மணி வரை நெற்றி பால்கடல்
இளம் கதிர் பருதி ஒத்து இறைவன் தோன்றினான்

#3008
வினை உதிர்த்தவர் வடிவு இன்னது என்னவே
வனை கதிர் தட கை வைத்து இருந்த வாமனார்
கனை கதிர் திரு முகம் அருக்கன் ஆக வான்
புனை மலர் தாமரை பூத்தது ஒத்தவே

#3009
இரிந்தன இருவினை இலிர்த்த மெய் மயிர்
சொரிந்தன கண் பனி துதித்து காதலால்
அரிந்தது மணி மிடறு அலர் பெய்ம் மாரி தூஉய்
திரிந்தனன் வல முறை திலக மன்னனே

#3010
முத்து ஒளிர் தாமமும் உருவ மா மணி
தொத்து ஒளிர் தாமமும் சொரி பொன் தாமமும்
தத்து நீர் தண் கடல் பவழ தாமமும்
வைத்த பூம் தாமமும் மலிந்து தாழ்ந்தவே

#3011
மணி வரை எறி திரை மணந்து சூழ்ந்த போல்
அணி மயிர் கவரிகள் அமரர் ஏந்தினார்
துணி மணி முக்குடை சொரிந்த தீம் கதிர்
பணி மணி காரிருள் பருகுகின்றதே

#3012
முழா திரள் மொய் மலர் தாமம் தாழ்ந்து மேல்
வழா திரு மலர் எலாம் மலர்ந்து வண்டு இனம்
குழாத்தொடும் இறைகொள குனிந்து கூய் குயில்
விழா கொள விரிந்தது வீரன் பிண்டியே

#3013
பிண்டியின் கொழு நிழல் பிறவி நோய் கெட
விண்டு அலர் கனை கதிர் வீரன் தோன்றினான்
உண்டு இவண் அற அமிர்து உண்-மினோ என
கொண்டன கோடணை கொற்ற முற்றமே

#3014
வானவர் மலர் மழை சொரிய மன்னிய
ஊன் இவர் பிறவியை ஒழிக்கும் உத்தமன்
தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி
கோன் அமர்ந்து ஏத்திய குறுகினான்-அரோ

#3015
குரு குலம் சீவககுமரன் கோத்திரம்
அருகல் இல் காசிபம் அடிகள் வாழி என்று
எரி மணி முடி நிலம் உறுத்தி ஏத்தினான்
புரி மணி வீணைகள் புலம்ப என்பவே

#3016
மன்னவன் துறவு என துறத்தல் மாண்பு என
பொன் வரை வாய் திறந்த ஆங்கு புங்கவன்
இன் உரை எயிறு வில் உமிழ வீழ்ந்தது
மின்னி ஓர் வியன் மழை முழங்கிற்று ஒத்ததே

#3017
காய் களிற்றின் இடை மருப்பின் கவளம் போன்று ஏமாரா கதியுள் தோன்றி
ஆய் களிய வெம் வினையின் அல்லாப்பு உற்று அஞ்சினேன் அறிந்தார் கோவே
வேய் களிய வண்டு அறைய விரிந்து அலர்ந்த தாமரையின் விரை சேர் போதின்
வாய் ஒளியே பெற நடந்த மலர் அடியை வலம் கொண்டார் வருந்தார் போலும்

#3018
சேடு ஆர் பொன் திரு மணி வைர தொத்து அணிந்து உலகு ஓம்பும்
வாடா மாலை வார் தளிர் பிண்டி வாம நின் குணம் நாளும்
பாடாதாரை பாடாது உலகம் பண்ணவர் நின் அடி பூ
சூடாதார் தாள் சூடார் மாலை சுடர் மணி நெடு முடியே

#3019
வையம் மூன்றும் உடன் ஏத்த வளரும் திங்கள் வாள் எயிற்று
ஐய அரிமான் மணி அணை மேல் அமர்ந்தோய் நின்னை அமராதார்
வெய்ய வெம் நோய் வினை உதைப்ப வீழ்ந்து துன்ப கடல் அழுந்தி
நெய்யும் நுண் நூல் நாழிகையின் நிரம்பா நின்று சுழல்வாரே

#3020
தொழுதி பன் மீன் குழாம் சூழ துளும்பாது இருந்த திங்கள் போல்
முழுதும் வையம் உடன் ஏத்த முதுவாய் வலவையாய் இருந்து
அழுது வினைகள் அல்லாப்ப அறைந்தோய் நின் சொல் அறைந்தார்கள்
பழுது இல் நறு நெய் கடல் சுடர் போல் பல்லாண்டு எல்லாம் பரியாரே

#3021
செழும் பொன் வேய்ந்து மணி அழுத்தி திருவார் வைரம் நிரைத்து அதனுள்
கொழுந்து மலரும் கொள குயிற்றி குலாய சிங்காதனத்தின் மேல்
எழுந்த பருதி இருந்தால் போல் இருந்த எந்தை பெருமானே
அழுந்தேன் வந்து உன் அடி அடைந்தேன் அருவாய் போதல் அழகிதோ

#3022
குண்டலமும் பொன் தோடும் பைம் தாரும் குளிர் முத்தும்
வண்டு அலம்பு மாலையும் மணி தொத்தும் நிலம் திவள
விண்டு அலர் பூம் தாமரையின் விரை ததும்ப மேல் நடந்த
வண்டு அலர் பூம் திருவடியை மணி முடியின் வணங்கினான்

#3023
நில விலகி உயிர் ஓம்பி நிமிர்ந்து ஒளிர்ந்து பசி பகை நோய்
உலகம் இருள் கெட விழிக்கும் ஒண் மணி அறவாழி
அலகை இலா குண கடலை அகல் ஞான வரம்பானை
விலை இலா மணி முடியான் விண் வியப்ப இறைஞ்சினான்

#3024
தூய் திரள் மணி தாமம் சொரிந்து பொன் நிலம் நக்க
பூ திரள் மணி மாலை போர் சிங்கம் போதகம் போல்
ஏத்தரிய குண கடலை இகல் இன்ப வரம்பானை
தோத்திரத்தால் தொழுது இறைஞ்சி துறப்பேன் என்று எழுந்திருந்தான்

#3025
முடி அணி அமரரும் முலை நல்லார்களும்
புடை பணிந்து இருந்த அ புலவன் பொன் நகர்
கடி மலர் கற்பகம் காமவல்லியோடு
இடை விராய் எங்கணும் பூத்தது ஒத்ததே

#3026
ஒத்து ஒளி பெருகிய உருவ பொன் நகர்
வித்தகன் வலம்செய்து விழு பொன் பூமி போய்
மத்தக மயிர் என வளர்த்த கைவினை
சித்திர காவகம் செல்வன் எய்தினான்

#3027
ஏம நீர் உலகம் ஓர் இம்மி பால் என
நாம வேல் நரபதி நீக்கி நன் கலம்
தூமம் ஆர் மாலையும் துறக்கின்றான்-அரோ
காமனார் கலம் கழிக்கின்றது ஒத்ததே

#3028
மணி உறை கழிப்பது போல மங்கல
பணி வரு பைம் துகில் நீக்கி பால்கடல்
அணிபெற அரும்பிய அருக்கன் ஆம் என
திணி நிலத்து இயன்றது ஓர் திலகம் ஆயினான்

#3029
மலிந்த நல் மாலைகள் வண்ண பூம் துகில்
நலிந்து மின் நகு மணி நன் பொன் பேர் இழை
மெலிந்தனென் சுமந்து என நீக்கி மேல் நிலை
பொலிந்தது ஓர் கற்பகம் போல தோன்றினான்

#3030
திருந்திய கீழ் திசை நோக்கி செவ்வனே
இருந்தது ஓர் இடி குரல் சிங்கம் பொங்கி மேல்
சுரிந்த தன் உளை மயிர் துறப்பது ஒத்தனன்
எரிந்து எழும் இளம் சுடர் இலங்கும் மார்பினான்

#3031
அம் சுடர் தாமரை கையினான் மணி
குஞ்சி வெண் படலிகை குமரன் நீப்பது
செம் சுடர் கரும் கதிர் கற்றை தேறு நீர்
மஞ்சு உடை மதியினுள் சொரிவது ஒத்ததே

#3032
வேலை வாய் மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது ஓர்
காலை-வாய் கற்பக மரத்தின் காவலன்
மாலை-வாய் அகில் தவழ் குஞ்சி மாற்றலின்
சோலை-வாய் சுரும்பு இனம் தொழுது சொன்னவே

#3033
தம் கிடை இலா திரு கேசம் தன்னையும்
கொங்கு உடை கோதையும் கொய்து நீக்கினாய்
நும் கடை நோக்கி நாம் வாழும் வாழ்க்கையம்
எம் கிடையவர் இனி எங்கு செல்பவே

#3034
என்றன தேன் இனம் இரங்கு வண்டொடு
சென்றன விடுக்கிய செல்வன் பொன் மயிர்
இன்றொடு தொழுதனம் நும்மை யாம் என
மன்றல் உண்டு அவை வலம் கொண்டு சென்றவே

#3035
மேல் படு கற்பக மாலை வேய்ந்து பொன்
ஏற்பு உடை படலிகை எடுத்து கொண்டு போய்
நால் கடல் கடந்து அவன் நமோ என்று இட்டிட
பால்கடல் பனி மதி போல வீழ்ந்ததே

#3036
ஏவா இருந்த அடிகள் இவர் வாய் சொல்
கோவா மணி கொழித்து கொண்டாலே போலுமால்
சாவா கிடந்தார் செவி சார்த்தின் அப்பொழுதே
மூவா அமரர் ஆய் முத்து அணிந்து தோன்றுவரே

#3037
தோளா மணி குவித்தால் போன்று இலங்கு தொல் குலத்து
சூளாமணியாய் சுடர இருந்தானை
வாள் ஆர் முடி வைர வில் திளைத்து வண்டு அரற்றும்
தாள் ஆர ஏத்தி போய் தன் கோயில் புக்கானே

#3038
புக்கான் சுதஞ்சணனும் பொன் தாமரை மகளிர்
தொக்காலே போலும் தன் தேவி குழாம் சூழ
மிக்கான் குணம் பாடி ஆடி மிகு தீம் பால்
தொக்க கடல் போல் சுதங்கள் நிறைந்தனவே

#3039
பற்று ஆர்வம் செற்றம் முதலாக பாம்பு உரி போல்
முற்ற துறந்து முனிகளாய் எல்லாரும்
உற்று உயிர்க்கு தீம் பால் சுரந்து ஓம்பி உள்ளத்து
மற்று இருள் சேரா மணி விளக்கு வைத்தாரே

#3040
கோமான் அடி சார குஞ்சரங்கள் செல்வன போல்
பூ மாண் திரு கோயில் புங்கவன் தாள் சேர்ந்து ஏத்தி
தாம் ஆர்ந்த சீல கடல் ஆடி சங்கு இனத்துள்
தூ மாண் வலம்புரியின் தோற்றம் போல் புக்காரே

#3041
மட்டு அலர் வன மலர் பிண்டி வாமனார்
விட்டு அலர் தாமரை பாதம் வீங்கு இருள்
அட்டு அலர் பருதியின் அளிக்க செல்லும் நாள்
பட்டது ஓர் பொருளின் இனி பழிச்சுகின்றதே

#3042
கயல் இனம் உகளி பாய முல்லை அம் பொதும்பில் காமர்
புயல் இனம் மொக்குள் வன்கண் குறு முயல் புலம்பி குன்றத்து
அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து செந்நெல்
வயல் வளர் கரும்பில் பாயும் மகதநாடு என்பது உண்டே

#3043
இரும் பிடி தழீஇய யானை இழி மதம் கலந்து சேறாய்
சுரும்பொடு மணி வண்டு ஆர்க்கும் துகில் கொடி மாட வீதி
பெரும் கடி நகரம் பேசின் இராசமாகிருகம் என்பர்
அரும் கடி அமரர் கோமான் அணி நகர் ஆயது ஒன்றே

#3044
எரி மிடைந்து அனைய மாலை இன மணி திருவில் வீசும்
திரு முடி ஆர மார்பின் சேணிகன் என்ப நாமம்
அரு முடி மன்னர் சூழ அலர் அணி பிண்டி வேந்தன்
திருவடி விருந்து செய்வான் திரள் முரசு அறைவித்தானே

#3045
பொன் நா வழியால் புகழ் நா வழித்து ஆய்ந்த மெல் கோல்
மின் ஆர் மணி பூணவன் மேவி விண்-காறும் நாறும்
முன்னோர் வகுத்த முக வாசம் பொதிந்த வெந்நீர்
மன் ஆர வாய் கொண்டு உமிழ்ந்தான் மணி மாலை வேலோன்

#3046
தீம் பால் நுரை போல் திகழ் வெண் பட்டு உடுத்து வண்டு ஆர்
தேம் பாய சாந்தம் மெழுகி கலன் தேறல் மாலை
தாம் பால தாங்கி புகழ் தாமரை குன்றம் அன்ன
ஆம் பால் மயிர் வேய்ந்து அயிராவணம் ஏறினானே

#3047
எறி சுரும்பு அரற்றும் மாலை எரி மணி செப்பு வெள்ளம்
பொறி வரி வண்டு பாடும் பூம் சுண்ணம் நிறைந்த பொன் செப்பு
அறிவரிது உணர்வு நாணி தலை பனித்து அஞ்சும் சாந்தம்
செறி இரும் பவழ செப்பு தெண் கடல் திரையின் நேரே

#3048
வந்து தேன் மயங்கி மூசு மலய செம் சாந்தம் ஆர்ந்த
சந்தன செப்பும் கங்கை தரு மணல் அலகை ஆற்றா
சுந்தரம் பெய்த யானை தூ மருப்பு இயன்ற வெண் செப்பு
அந்தரத்து அலர்ந்த பன் மீன் எனைத்து உள அனைத்தும் மாதோ

#3049
மை பொதி குவளை வாள் கண் மல்லிகை கோதை நல்லார்
நெய் பொதி நெஞ்சின் மன்னர் நிலம் பிறக்கிடுவ போலும்
கொய் சுவல் புரவி மான் தேர் குழு மணி ஓடை யானை
மெய் பொதிந்து உயர்ந்த கோமான் விரை பலி சுமந்த அன்றே

#3050
கொடி குழாம் குஞ்சி பிச்ச குழாம் நிறை கோல மாலை
முடி குழாம் மூரி வானம் பால் சொரிகின்றது ஒக்கும்
குடை குழாம் இவற்றின் பாங்கர் குளித்தது குளிர் சங்கு ஆர்க்கும்
படை குழாம் பாரில் செல்லும் பால்கடல் பழித்த அன்றே

#3051
கனை கடல் கவர செல்லும் கண மழை தொகுதி போலும்
நனை மலர் பிண்டி நாதன் நல் அறம் கொள்ளை சாற்றி
புனை முடி மன்னர் ஈண்டி பொன் எயில் புறத்து விட்டார்
வினை உடைத்து இன்ப வெள்ளம் விரும்பிய வேட்கையானே

#3052
வண்டு சூழ் பூ பலி சுமந்து தான் வலம்
கொண்டு சூழ்ந்து எழு முறை இறைஞ்சி கோன் அடி
எண்திசையவர்களும் மருள ஏத்தினான்
வெண் திரை புணரி சூழ் வேலி வேந்தனே

#3053
பகல் வளர் பவழ செம் தீ பருதி முன் பட்டதே போல்
இகல் வினை எறிந்த கோமான் இணை அடி ஒளியின் தோன்றாது
அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி அவிந்து இருப்ப மன்னன்
முகில் கிழி மதியம் போலும் முனி குழாம் நோக்கினானே

#3054
கண் வெறி போக ஆங்கு ஓர் கடும் தவன் உருவம் நோக்கி
ஒண் நெறி ஒருவி கோமான் ஒளி திரண்டு இருந்ததாம்-கொல்
விண் நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன்-கொல் என்று
எண் நெறி யாதும் ஓராது இருந்து இது கூறினானே

#3055
விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து விண்ணவன்
இளம் கதிர் என துறந்து இருப்ப கண்டனம்
வளம் கெழு முக்குடை அடிகள் வாய்மொழி
துளங்கினன் என தொழுது இறைஞ்சினான்-அரோ

#3056
மன்னவ கேள்-மதி வானில் வாழ்பவர்
பொன் இயல் கற்பக போக பூமியார்
என்னதும் துறவலர் இறைவன் வாய்மொழி
சொன்ன ஆறு அல்லது எப்பொருளும் தோன்றுமே

#3057
அடிகளுக்கு இடம் மருங்கு இருந்த ஆய் மலர்
கடி கமழ் தாமரை கண்ணினான் இவன்
வடிவமே வாய் திறந்து உரைக்கும் வானவன்
ஒடிவறு பேர் ஒளி உட்கத்தக்கதே

#3058
திருவினோடு அகன்ற மார்பின் சீவகசாமி என்பான்
உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை
மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார்
அரிது இவன் முகத்து நோக்கல் அழகு ஒளி அன்ன என்றான்

#3059
மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும்
ஏதம் இன்று இயம்பு-மின் அடிகளோ என
போது அலர் புனை முடி இறைஞ்சி ஏத்தினான்
காதலின் கணம் தொழ காவல் மன்னனே

#3060
பாட்டு அரும் கேவல பரவை மா கடல்
கூட்டரும் கொழும் திரை முகந்து மா முனி
மோட்டு இரு மணி முகில் முழங்கி பெய்தலின்
ஊட்டரும் அற அமிர்து உலகம் உண்டதே

#3061
சீவகன் திருவினம் ஆக யாம் என
நா அகம் தழும்ப நின்று ஏத்தி நன்று-அரோ
காவலன் ஆதியா கணங்கள் கைதொழ
பாவம் இல் சுதன்மரால் பாடப்பட்டதே

#3062
முல்லை சூழ் முல்லை வேலி முயலொடு கவரி மேயும்
கொல்லை சூழ் குன்றத்து உச்சி குருசில் நோற்று உயர்ந்தவாறும்
வில் உமிழ்ந்து இலங்கு மேனி விழு தவ நங்கைமார்கள்
மல்லல் அம் குமரர் வான் மேல் சென்றதும் வகுக்கல் உற்றேன்

#3063
முழுதும் முந்திரிகை பழ சோலை தேன்
ஒழுகி நின்று அசும்பும் உயர் சந்தன
தொழுதி குன்றம் துளும்ப சென்று எய்தினான்
பழுது இல் வாய்மொழி பண்ணவன் என்பவே

#3064
நணிதின் எண் வினை இன்னவை கண் நிறீஇ
துணிய ஈர்ந்திடும் துப்பு அமை சிந்தையான்
மணியின் மேல் மணி கட்டியது ஒத்து அதற்கு
அணியும் ஆய் அலர் ஞாயிறும் ஆயினான்

#3065
குன்றின் வீழ் அருவி குரல் கோடு அணை
சென்று எலா திசையும் சிலம்பின் மிசை
நின்றனன் இறை வம்-மினம் நீர் என
ஒன்றி நின்று அதிரும் ஒருபால் எலாம்

#3066
செம்பொன் பின்னிய போல் தினை காவலர்
வெம்பு மும்மத வேழம் விலக்குவார்
தம் புனத்து எறி மா மணி சந்து பாய்ந்து
உம்பர் மீன் என தோன்றும் ஓர்பால் எலாம்

#3067
யானை குங்குமம் ஆடி அரு வரை
தேன் நெய் வார் சுனை உண்டு திளைத்து உடன்
கான மா பிடி கன்றொடு நாடகம்
ஊனம் இன்றி நின்று ஆடும் ஓர்பால் எலாம்

#3068
வரிய நாக மணி சுடர் மல்கிய
பொரு இல் பொன் முழை போர் புலி போதகம்
அரிய கின்னரர் பாட அமர்ந்து தம்
உருவம் தோன்ற உறங்கும் ஓர்பால் எலாம்

#3069
பழுத்த தீம் பலவின் கனி வாழையின்
விழு குலை கனி மாங்கனி வீழ்ந்தவை
தொழித்து மந்தி துணங்கை அயர்ந்து தேன்
அழிக்கும் அம் சுனை ஆடும் ஓர்பால் எலாம்

#3070
நளி சிலம்பதனின் உச்சி நாட்டிய பொன் செய் கந்தின்
ஒளியொடு சுடர வெம்பி உருத்து எழு கனலி வட்டம்
தெளி கடல் சுடுவது ஒத்து தீ உமிழ் திங்கள் நான்கும்
விளிவரும்-குரைய ஞான வேழம் மேல் கொண்டு நின்றான்

#3071
பார் கடல் பருகி மேகம் பாம்பு இனம் பதைப்ப மின்னி
வார் பிணி முரசின் ஆர்த்து மண் பக இடித்து வானம்
நீர் திரள் பளிக்கு தூணி சொரிந்திட நின்று வென்றான்
மூர்த்தி ஆய் முனிவர் ஏத்தும் முனி களிறு அனைய கோமான்

#3072
திங்கள் நான்கு அவையும் நீங்க திசை செல்வார் மடிந்து தேம் கொள்
பங்கய பகை வந்து என்ன பனி வரை உருவி வீசும்
மங்குல் சூழ் வாடைக்கு ஒல்கான் வெள்ளிடை வதிந்து மாதோ
இங்கு நான்கு ஆய திங்களின் உயிர் ஓம்பினானே

#3073
வடி மலர் நெடும் கணாரும் மைந்தரும் வரவு பார்த்து அங்கு
அடி மலர் பரவ ஏறி ஆர் அமிர்து அரிதின் கொள்வான்
கடி மலர் கமலத்து அன்ன கையினை மறித்து கொள்ளான்
முடி தவ கடலை நீந்தி இன்னணம் முற்றினானே

#3074
ஒளிறு தேர் ஞானம் பாய்மா இன் உயிர் ஓம்பல் ஓடை
களிறு நல் சிந்தை காலாள் கருணை ஆம் கவசம் சீலம்
வெளிறு இல் வாள் விளங்கு செம்பொன் வட்டம் மெய் பொருள்களாக
பிளிறு செய் கரும தெவ்வர் பெரு மதில் முற்றினானே

#3075
உறக்கு எனும் ஓடை யானை ஊண் எனும் உருவ திண் தேர்
மறப்பு எனும் புரவி வெள்ளம் வந்து அடை பிணி செய் காலாள்
திறப்பட பண்ணி பொல்லா சிந்தனை வாயில் போந்து
சுற கடல் அனைய தானை துளங்க போர் செய்தது அன்றே

#3076
தெளிவு அறுத்து எழுவர் பட்டார் ஈர்_எண்மர் திளைத்து வீழ்ந்தார்
களிறு கால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர் களத்தின் உள்ளே
பிளிறி வீழ் பேடி பெண் நோய் அறு வகை துவர்ப்பும் பேசின்
அளிபடு சிந்தை என்னும் ஆழி-வாய் வீழ்ந்த அன்றே

#3077
மயக்க போர் மன்னன் மக்கள் மந்திரியவரும் வீழ
வியப்புறு வேத வில் வாய் வேட்கை அம்பு எடுத்திட்டு எய்ய
கலக்கம் இல் அசுபம் என்னும் குந்தத்தால் கணை பெய்ம் மாரி
விலக்கி திண் வெறுப்பு வாளால் விரைந்து உயிர் அவனை உண்டான்

#3078
கரும்பு எறி கடிகை போன்றும் கதலிகை போழ்கள் போன்றும்
அரும் பொறி பகைவர் தம்மை உறுப்பு அற துணித்தும் ஈர்ந்தும்
மருந்து எறி பிணியை கொல்லும் மருத்துவன் போன்று மாதோ
இருந்து எறிந்து எறியும் மூவர் மேல் படை இயற்றினானே

#3079
செழு மலர் ஆவி நீங்கும் எல்லையில் செறிந்து காயம்
கழுமிய உதிரம் போல இமைப்பினுள் கரந்து நீங்க
கொழு மலர் குவளை கண்ணி கூற்று உயிர் உண்பதே போல்
விழுமிய தெவ்வர் வாழ்நாள் வீழ்ந்து உக வெம்பினானே

#3080
குரோதனே மானன் மாயன் கூர்ப்பு உடை உலோபன் என்பார்
விரோதித்து விரலின் சுட்டி வெருவர தாக்க வீரன்
நிரோதனை அம்பின் கொன்றான் நித்தை நீள் பசலை பேரோர்
விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார்

#3081
புணரி போல் சிறு புன் கேள்வி படையொடு புகைந்து பொங்கி
உணர்வொடு காட்சி பேறு என்று இடை உறு கோக்கள் ஏற்றார்
இணர் எரி முழக்கம் அன்ன சுக்கில தியானம் என்னும்
கணை எறிந்து உகைப்ப வீழ்ந்து கால்படை சூழ பட்டார்

#3082
காதி போர் மன்னர் வீழ கணை எரி சிதறி வெய்யோன்
ஓதிய வகையின் ஒன்றி உலகு உச்சி முளைத்ததே போல்
வீதி போய் உலகம் மூன்றும் விழுங்கியிட்டு அலோகம் நுங்கி
ஆதி அந்த அகன்ற நான்மை கொடியெடுத்து இறைமை கொண்டான்

#3083
பசும்பொனின் உலகில் தேவர் பயிர் வளை முரசம் ஆர்ப்ப
அசும்பு சேர் களிறு திண் தேர் அலை மணி புரவி வேங்கை
விசும்பு இயங்கு அரியோடு ஆளி விடை மயில் அன்னம் நாகம்
நயந்தவை பிறவும் ஊர்ந்து நாதன் தாள் கோயில் கொண்டார்

#3084
நறு மலர் மாலை சாந்தம் பரூஉ துளி துவலை நல் நீர்
கறை முகில் சொரிய காய் பொன் கற்பக மாலை ஏந்தி
சிறகு உற பரப்பி அன்னம் பறப்பன போல ஈண்டி
நிறை கடல் விஞ்சை வேந்தர் நீள் நில மன்னர் சேர்ந்தார்

#3085
விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன் நிலம் கொள்வதே போல்
மண் எலாம் பைம்பொன் மாரி மலர் மழை சொரிந்து வாழ்த்தி
எண் இலா தொழில்கள் தோற்றி இந்திரர் மருள ஆடி
கண் முழுதும் உடம்பில் தோன்றி சுதஞ்சணன் களிப்புற்றானே

#3086
குளித்து எழு வயிர முத்த தொத்து எரி கொண்டு மின்ன
அளித்து உலகு ஓம்பும் மாலை அகன் குடை கவித்தது ஆங்கு
வளி பொர உளரும் திங்கள் கதிர் என கவரி பொங்க
தெளித்து வில் உமிழும் செம்பொன் ஆசனம் சேர்ந்தது அன்றே

#3087
மணி உமிழ் திரு கேசம் வானவர் அகில் புகையும்
பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓட கமழுமால்
துணியரு வினை எறிந்தாற்கு அது நாற்றம் சொல்லலாம்
அணி திகழ் அரசுவா அதன் கடாம் சாற்றாதோ

#3088
முழங்கு திரு மணி முறுவல் முருக்கு இதழ் கொடி பவழத்து
தழங்கு குரல் வாய் தளை அவிழ்ந்த மந்தாரம் தவ நாறும்
அழுங்கல் சூழ் வினை வெறுத்தாற்கு அது நாற்றம் அறியலாம்
வழங்கு பொன் வரை வளரும் பைம் கண் மா உரையாதோ

#3089
உறுப்பு எலாம் ஒளி உமிழ்ந்து உணர்வு அரிதாய் இரு சுடரும்
குறைத்து அடுக்கி குவித்தது ஓர் குன்றே போன்று இலங்குமால்
வெறுத்து இருவினை உதிர்த்தாற்கு அது வண்ணம் விளம்பலாம்
கறுப்பு ஒழிந்த கனை எரி வாய் கார் இரும்பே கரி அன்றே

#3090
வானோர் ஏந்து மலர் மாரி வண்ண சாந்தம் பூஞ்சுண்ணம்
கான் ஆர் பிண்டி கமழ் தாமம் கறை ஆர் முகிலின் நிறம் காட்டும்
தேன் ஆர் புகைகள் இவை எல்லாம் திகைப்ப திசைகள் மணம் நாறி
ஆனா கமழும் திருவடி போது அமரர் முடி மேல் அணிந்தாரே

#3091
சுறவு கொடி கடவுளொடு காலன் தொலைத்தோய் எம்
பிறவி அறுக என்று பிற சிந்தை இலர் ஆகி
நறவ மலர் வேய்ந்து நறும் சாந்து நிலம் மெழுகி
துறவு நெறி கடவுள் அடி தூமமொடு தொழுதார்

#3092
பால் அனைய சிந்தை சுடர படர் செய் காதி
நாலும் உடனே அரிந்து நான்மை வரம்பு ஆகி
காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள்
கோல மலர் சேவடிகள் கொண்டு தொழுதும் யாம்

#3093
முழங்கு கடல் நெற்றி முளைத்து எழுந்த சுடரே போல்
அழுங்கல் வினை அலற நிமிர்ந்து ஆங்கு உலகம் மூன்றும்
விழுங்கி உமிழாது குணம் வித்தி இருந்தோய் நின்
இழுங்கு இல் குண சேவடிகள் ஏத்தி தொழுதும் யாம்

#3094
ஏத்தரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி
நீத்த அருள் இந்திரனை நின்று தொழுது அமரர்
நா தழும்ப ஏத்தி தவ நங்கையவர் நண்ணி
தோத்திரங்கள் ஓதி துகள் மாசு துணிக்கின்றார்

#3095
செய்தவனே வினை சேரும் அதற்கு எனும்
ஐயம் இன்றாய் அலர் தாமரை மேல் அடி
மொய் மலர் தூய் முனியாது வணங்குதும்
மெய் உலகிற்கு விளம்பிய வேந்தே

#3096
நல்லனவே என நாடி ஓர் புடை
அல்லனவே அறைகின்ற புன் நாதர்கள்
பல் வினைக்கும் முலை தாய் பயந்தார் அவர்
சொல்லுவ நீ சுகதா உரையாயே

#3097
மதி அறியா குணத்தோன் அடி வாழ்த்தி
நிதி அறை போல் நிறைந்தார் நிகர் இல்லா
துதி அறையா தொழுதார் மலர் சிந்தா
விதி அறியும் படி வீரனை மாதோ

#3098
தீவினை குழவி செற்றம் எனும் பெயர் செவிலி கையுள்
வீ வினை இன்றி காம முலை உண்டு வளர்ந்து வீங்கி
தா வினை இன்றி வெம் நோய் கதிகளுள் தவழும் என்ற
கோவினை அன்றி எம் நா கோதையர் கூறல் உண்டே

#3099
நல் வினை குழவி நல் நீர் தயா எனும் செவிலி நாளும்
புல்லி கொண்டு எடுப்ப பொம்மென் மணி முலை கவர்ந்து வீங்கி
செல்லுமால் தேவர் கோவாய் எனும் இருள் கழிந்த சொல்லால்
அல்லி மேல் நடந்த கோவே அச்சத்துள் நீங்கினோமே

#3100
மணியினுக்கு ஒளி அக மலர்க்கு மல்கிய
அணி அமை அம் குளிர் வாசம் அல்லதூஉம்
திணி இமில் ஏற்றினுக்கு ஒதுக்கம் செல்வ நின்
இணை மலர் சேவடி கொடுத்த என்பவே

#3101
இகல் இருள் முழு முதல் துமிய ஈண்டு நீர்
பகல் சுமந்து எழுதரும் பருதி அன்ன நின்
இகல் இரு மரை மலர் அளித்த சேவடி
தொகல் அரும் கரு வினை துணிக்கும் எஃகமே

#3102
மீன் தயங்கு திங்கள் முக நெடும் கண் மெல் இயலார்
தேன் தயங்கு செம் நாவின் சில் மென் கிளி கிளவி
வான் தயங்கு வாமன் குணம் பாட வாழி-அரோ
கான் தயங்கி நில்லா கரு வினை கால் பெய்தனவே

#3103
மதியம் பொழி தீம் கதிர்கள் பருகி மலர் ஆம்பல்
பொதி அவிழ்ந்து தேன் துளிப்ப போன்று பொரு இல்லார்
விதியின் களித்தார் அறிவன் விழு குணங்கள் ஏத்தி
துதியின் தொழுதார் துளங்கு உள்ளம் அது நீத்தார்

#3104
ஆர்ந்த குண செல்வன் அடி தாமரைகள் ஏத்தி
சேர்ந்து தவ வீரர் திசை சிலம்ப துதி ஓதி
தூர்ந்த இருள் துணிக்கும் சுடர் தொழுது அருளுக என்றார்
கூர்ந்து அமிழ்த மாரி என கொற்றவனும் சொன்னான்

#3105
இன்பம் மற்று என்னும் பேர் ஆன் எழுந்த புல் கற்றை தீற்றி
துன்பத்தை சுரக்கும் நான்கு கதி எனும் தொழுவில் தோன்றி
நின்ற பற்று ஆர்வம் நீக்கி நிருமலன் பாதம் சேரின்
அன்பு விற்று உண்டு போகி சிவகதி அடையலாமே

#3106
வாள் கை அம் மைந்தர் ஆயும் வன முலை மகளிர் ஆயும்
வேட்கையை மிகுத்து வித்தி பிறவி நோய் விளைத்து வீயா
தேள் கையில் கொண்டது ஒக்கும் நிச்சம் நோய் செற்ற புன் தோல்
பூட்கையை முனியின் வாமன் பொன் அடி தொழு-மின் என்றான்

#3107
தன் உயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல்
மன் உயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன் உயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்
பொன் உயிராய் பிறந்து உயர்ந்து போகுமே

#3108
நெருப்பு உயிர்க்கு ஆக்கி நோய் செய்யின் நிச்சமும்
உருப்பு உயிர் இருவினை உதைப்ப வீழ்ந்த பின்
புரிப்புரி கொண்டு போய் பொதிந்து சுட்டிட
இருப்பு உயிர் ஆகி வெம் எரியுள் வீழுமே

#3109
மழை குரல் உருமு உவா ஓத மா கடல்
பிழைத்த ஓர் அரு மணி பெற்றது ஒக்குமால்
குழை தலை பிண்டியான் குளிர் கொள் நல்லறம்
தழை தலை சந்தன பொதும்பர் சார்ந்ததே

#3110
மல்கு பூம் கற்பக மரத்தின் நீழலான்
நல்குவான் ஒருவனை நயந்து நாடுமோ
பில்கு பூம் பிண்டியான் அமிர்து உண்டார் பிறர்
செல்வம் கண்டு அதற்கு அவா சிந்தை செய்யுமோ

#3111
மணி உயிர் பொன் உயிர் மாண்ட வெள்ளியின்
அணி உயிர் செம்பு உயிர் இரும்பு போல ஆம்
பிணி உயிர் இறுதியா பேசினேன் இனி
துணி-மினம் என தொழுது இறைஞ்சி வாழ்த்தினார்

#3112
விண்ணின் மேல் மலர் மழை பொழிய வீங்கு பால்
தெள் நிலா திரு மதி சொரிய தே மலர்
மண்ணின் மேல் மழ கதிர் நடப்பது ஒத்ததே
அண்ணலார் உலாய் நிமிர்ந்து அளித்த வண்ணமே

#3113
பால் மிடை அமிர்து போன்று பருகலாம் பயத்த ஆகி
வான்-இடை முழக்கின் கூறி வால் அற அமிழ்தம் ஊட்டி
தேன் உடை மலர்கள் சிந்தி திசை தொழ சென்ற பின் நாள்
தான் உடை உலகம் கொள்ள சாமி நாள் சார்ந்தது அன்றே

#3114
உழ வித்தி உறுதி கொள்வார் கொண்டு உய்ய போகல் வேண்டி
தொழு வித்தி அறத்தை வைத்து துளங்கு இமில் ஏறு சேர்ந்த
குழவி தண் திங்கள் அன்ன இருக்கையன் ஆகி கோமான்
விழ வித்தாய் வீடு பெற்றான் விளங்கி நால் வினையும் வென்றே

#3115
துந்துபி கறங்க ஆர்த்து துகில் கொடி நுடங்க ஏந்தி
அந்தரம் விளங்க எங்கும் அணிகம் ஊர்ந்து அமரர் ஈண்டி
வந்து பொன் மாரி சிந்தி மலர் மழை சொரிந்து சாந்தும்
கெந்தம் நாறு அகிலும் கூட்டி கிளர் முடி உறுத்தினரே

#3116
முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததே போல்
திளைத்து எழு கொடிகள் செம் தீ திரு மணி உடம்பு நுங்க
விளைத்த பின் விண்ணும் மண்ணும் மங்கலம் வகையில் செய்து
வளை பொலி கடலின் ஆர்த்து வலம் கொண்டு நடந்த அன்றே

#3117
கேவல மடந்தை என்னும் கேழ் கிளர் நெடிய வாள் கண்
பூ அலர் முல்லை கண்ணி பொன் ஒரு பாகம் ஆக
காவலன் தான் ஓர் கூறா கண் இமையாது புல்லி
மூ உலகு உச்சி இன்ப கடலினுள் மூழ்கினானே

#3118
பிரிதலும் பிணியும் மூப்பும் சாதலும் பிறப்பும் இல்லா
அரிவையை புல்லி அம் பொன் அணி கிளர் மாடத்து இன் தேன்
சொரி மது மாலை சாந்தம் குங்குமம் சுண்ணம் தேம் பாய்
விரி புகை விளக்கு விண்ணோர் ஏந்த மற்று உறையும் அன்றே

#3119
வல்லவன் வடித்த வேல் போல் மலர்ந்து நீண்டு அகன்ற வாள் கண்
மெல்லவே உறவி ஓம்பி ஒதுங்கியும் இருந்தும் நின்றும்
முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார்
மல்லல் குன்று ஏந்தி அன்ன மா தவம் முற்றினாரே

#3120
சூழ் பொன் பாவையை சூழ்ந்து புல்லிய
காழக பச்சை போன்று கண் தெறூஉம்
மாழை நோக்கினார் மேனி மாசு கொண்டு
ஏழை பெண் பிறப்பு இடிய சிந்தித்தார்

#3121
ஆசை ஆர்வமோடு ஐயம் இன்றியே
ஓசை போய் உலகு உண்ண நோற்ற பின்
ஏசு பெண் ஒழித்து இந்திரர்களாய்
தூய ஞானமாய் துறக்கம் எய்தினார்

#3122
காமவல்லிகள் கலந்து புல்லிய
பூ மென் கற்பக பொன் மரங்கள் போல்
தாம வார் குழல் தையலார் முலை
ஏமம் ஆகிய இன்பம் எய்தினார்

#3123
கலவி ஆகிய காமத்தின் பயன்
புலவி ஆதலால் பொன் அம் கொம்பு அனார்
உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு
இலை கொள் பூணினார் இதயம் போழ்ந்ததே

#3124
பூவின் உள்ளவள் புகுந்து உம் உள்ளத்தாள்
நாவில் பெண் பெயர் நவிற்றினீர் என
காவி கண் கடை இடுக கால் சிலம்பு
ஆவித்து ஆர்த்தன அம் மென் குஞ்சியே

#3125
நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று பூம்
குஞ்சி ஏற்றது குறி கொள் நீ எனா
பஞ்சின் மெல் அடி பாவை பூ_நுதால்
அஞ்சினார்க்கு அது ஓர் தவறது ஆகுமே

#3126
தவளை கிண்கிணி தாமம் சேர்த்தியும்
குவளை கண் மலர் கோலம் வாழ்த்தியும்
இவளை கண்ட கண் இமைக்குமோ எனா
திவள தே மலர் கண்ணி சேர்த்தியும்

#3127
பல் மணி கதிர் பரவை மேகலை
மின் அணிந்து உக திருத்தி வெம் முலை
பொன் அணிந்து பூஞ்சுண்ணம் தைவர
நல் மணி குழை இரண்டும் நக்கவே

#3128
செய்த நீர்மையார் செயப்பட்டார்கள் தாம்
எய்தி யாவையும் உணர்க என்ப போல்
மை அவாம் குழல் மடந்தை குண்டலம்
நைய நின்று எலாம் நாண நக்கவே

#3129
செல்வ கிண்கிணி சிலம்ப தேன் சொரி
முல்லை கண்ணிகள் சிந்த மொய் நலம்
புல்லி பூண்ட தார் புரள மேகலை
அல்குல் வாய் திறந்து ஆவித்து ஆர்த்தவே

#3130
இலங்கு கொம்பு அனார் காமம் என்னும் பேர்
கலந்த கள்ளினை கை செய்து ஐயென
மலர்ந்து வாய் வைத்தார் மணி கொள் வள்ளத்தே
நலம் கொள் சாயலார் நடுங்கி நையவே

#3131
வெம்மை கொண்ட தேன் அமிர்தம் மெல்லவே
அம்மை அம் சொலார் ஆர உண்டவர்
தம்மை தாம் மகிழ்ந்து உறைய இத்தலை
செம்மை மாதவர்க்கு உற்ற செப்புவாம்

#3132
நாள் கண் கூடிய நகை வெண் திங்கள் போல்
காளை நந்தனும் தோழன்மார்களும்
நாளும் நாளினும் நடுங்க நல் தவம்
தாளின் ஈட்டினார் தம்மை தாம் பெற்றார்

#3133
பாவனை மரீஇ பட்டினியொடும்
தீவினை கழூஉம் தீர்த்தன் வந்தியா
பூ உண் வண்டு அன கொட்பின் புண்ணியர்
நாவின் வேட்கையும் நஞ்சின் அஞ்சினார்

#3134
கருவில் கட்டிய காலம் வந்தென
உருவ வெண் பிறை கோட்டின் ஓங்கிய
அருவி குன்றின் மேல் முடித்திட்டு ஐவரும்
திருவின் தோற்றம் போல் தேவர் ஆயினார்

#3135
அனங்கனை தவம் செய அழன்று கண்டவர்
மனங்களை கவர்ந்திடும் மணி கண் வெம் முலை
பொனம் கொடி மயில் அனார் புல்ல மா பிடி
இனம் பயில் கடா களிற்று இன்பம் எய்தினார்

#3136
காது அணிந்த தோடு ஒருபால் மின்னு வீச கதிர் மின்னு குழை ஒருபால் திருவில் வீச
தாது அணிந்த தாமங்கள் ஒருபால் சோர தாமரை கண் தாம் இரங்க புருவம் ஆட
மாது அணிந்த நோக்கினார் அல்குல் காசும் மணி மழலை கிண்கிணியும் சிலம்பும் ஏங்க
போது அணிந்த தார் உடைய பொருது பொங்கி புணர் முலைகள் போர்க்களம் தாம் கண்ட அன்றே

#3137
முழுது ஆரம் மின்னும் முலை குவட்டினால் மொய் மார்பில் குங்கும சேறு இழுக்கி வீழ
உழுது ஆர்வம் வித்தி உலப்பு இலாத நுகர்ச்சி விளைத்து அலர்ந்த கற்பகத்தின் கீழ்
எழுது ஆர் மணி குவளை கண் வலையுள் பட்டு இமையார்கள் காமம் அறு சுழியுள் ஆழ்ந்து
இழுதார் மென் பள்ளி பூம் தாது பொங்க இருவர் பாலர் ஆகி இன்புறுபவே

#3138
மண் கனிந்த பொன் முழவ மழையின் விம்ம மா மணி யாழ் தீம் குழல்கள் இரங்க பாண்டில்
பண் கனிய பாவைமார் பைம்பொன் தோடும் குண்டலமும் தாம் பதைப்ப இருந்து பாட
விண் கனிய கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப முரி புருவ வேல் நெடும் கண் விருந்து செய்ய
கண் கனிய நாடகம் கண்டு அமரர் காம கொழுந்து ஈன்று தம் தவம் தாம் மகிழ்ந்தார் அன்றே

#3139
முருகு உடைந்த பூம் கோதை முத்து அணிந்த தோளார்
ஒரு குடங்கை கண்ணால் உளம் கழிய ஏவுண்டு
அருகு அடைந்த சாந்து அழிய அம் முலை மேல் வீழ்ந்தார்
திரு அடைந்த நீள் மார்பின் தேன் துளிக்கும் தாரார்

#3140
நிலவி ஒளி உமிழும் நீள் இலை வேல் கண்ணார்
கலவி தூது ஆகிய காம கை காய்த்தி
புலவி படை பயில பூ செய்த கோலம்
உலவி துறக்கம் ஒளி பூத்தது அன்றே

#3141
புருவ சிலை நுதல் பொன் துஞ்சும் அல்குல்
உருவ துடி இடையார் ஊடல் உப்பு ஆக
திருவின் திகழ் காம தேன் பருகி தேவர்
பொருவற்கு அரிய புல கடலுள் ஆழ்ந்தார்

#3142
முகடு மணி அழுத்தி முள் வயிரம் உள் வேய்ந்து முத்தம் வாய் சூழ்ந்து
அகடு பசு மணி ஆர்ந்து அங்காந்து இருள் பருகி அடு பால் விம்மி
பகடு பட அடுக்கி பண்ணவனார் தம் ஒளி மேல் நின்றால் போலும்
தகடு படு செம்பொன் முக்குடையான் தாள் இணை என் தலை வைத்தேனே

#3143
முந்நீர் வலம் புரி சோர்ந்து அசைந்து வாய் முரன்று முழங்கி ஈன்ற
மெய் நீர் திரு முத்து இருபத்தேழ் கோத்து உமிழ்ந்து திருவில் வீசும்
செம் நீர் திரள் வடம் போல் சிந்தாமணி ஓதி உணர்ந்தார் கேட்டார்
இ நீரர் ஆய் உயர்வர் ஏந்து பூம் தாமரையாள் காப்பாளாமே

#3144
செந்தாமரைக்கு செழு நாற்றம் கொடுத்த தேம் கொள்
அம் தாமரை ஆள் அகலத்தவன் பாதம் ஏத்தி
சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் தெருண்டார்
நந்தாவிளக்கு சுடர் நல் மணி நாட்ட பெற்றே

#3145
செய் வினை என்னும் முந்நீர் திரை-இடை முளைத்து தேம் கொள்
மை வினை மறு இலாத மதி எனும் திங்கள் மாதோ
மொய் வினை இருள் கண் போழும் முக்குடை மூர்த்தி பாதம்
கைவினை செய்த சொல் பூ கைதொழுது ஏத்தினனே

#3146
திங்கள் மும் மாரி பெய்க திரு அறம் வளர்க செங்கோல்
நன்கு இனிது அரசன் ஆள்க நாடு எலாம் விளைக மற்றும்
எங்கு உள அறத்தினோரும் இனிது ஊழி வாழ்க எங்கள்
புங்கவன் பயந்த நன்னூல் புகழொடும் பொலிக மிக்கே
*