3.இசிறத்துக் காண்டம்-2

தேவையான படலத்தின்
மீது சொடுக்குக

26.அபூத்தல்ஹா விருந்துப் படலம்
27.உகுதுப் படலம்
28.அமுறாப் படலம்
29.ககுபு வதைப் படலம்
30.சுகுறாப் படலம்
31.பதுறு சுகுறாப் படலம்
32.உசைனார் பிறந்த படலம்
33.தாத்துற் றஹ்ஹாக்குப்
படலம்

34.சாபிர் கடன் தீர்த்த படலம்
35.முறைசீக்குப் படலம்
36.கந்தக்குப் படலம்
37.உயை வந்த படலம்
38.பனீகுறைலா வதைப் படலம்
39.லுமாம் ஈமான்
கொண்ட படலம்

40.செயினபு நாச்சியார்
கலியாணப் படலம்

41.ஒட்டகை பேசிய படலம்
42.மழை அழைப்பித்த படலம்
43.அந்தகன் படலம்
44.கவுலத்தை விட்டுக்
கூட்டின படலம்

45.உமுறாவுக்குப் போன படலம்
46.சல்மா பொருத படலம்
47.உறனிக் கூட்டத்தார் படலம்

26. அபூத்தல்ஹா விருந்துப் படலம்


$3.26.1

#3749
மருவலர்கள் உயிர் அருந்தி ஊன் உணங்கும் கதிர் இலை வேல் மன்னர் சூழ
திரு மறை நம் நபி இருக்கும் பள்ளியிடத்து எய்தி முக செவ்வி நோக்கி
ஒருவருக்கும் தோன்றாது பசியுடன் இங்கு இருந்தனர் என்று உன்னி நீங்கா
விரைவின் அபூத்தல்கா சென்று இல்லவளை விளித்து ஒரு சொல் விளம்புவாரால்

மேல்
$3.26.2

#3750
பதலை முசலிகை உரைப்ப உரைத்த நபி பசி தீர பண்பினோடும்
உதவுதற்கு ஏதெனினும் மனையிடத்து உளவோ என உரைப்ப உள்ளம் கூர்ந்து
மதுரம் ஒழுகிய கோதும்பு உறட்டி மூன்று உள என மான் வழங்க வாங்கி
அதபுடன் அ நபியிடத்தில் நல்கும் என அனசு கையில் அளித்திட்டாரால்

மேல்
$3.26.3

#3751
மோதகத்தை வாங்கி அனசு உவந்து துகிலிடை பொதிந்து முருகு வாய்ந்த
போது எனும் மென் பத குரிசிலிடத்து ஏக முகம்மது நல் புளகத்தோடும்
கோது இல் அபூத்தல்காவோ அனுப்பினர் நீ கொணர்ந்தது எவை கூறு என்று ஓத
ஆதரத்தின் இவர் அவர் கை கொடுத்ததுவும் கொணர்ந்ததுவும் அறைந்திட்டாரால்

மேல்
$3.26.4

#3752
அனசு உரைத்த மொழி கேட்டு நன்கு என தீனவர் சூழ அரசர்_கோமான்
வனச மலர் பதம் பெயர்த்து வரிசை அபூத்தல்கா-தன் மனையின் ஏக
என புதுமை இஃது என வந்து எதிர் இறைஞ்சி கொடுபோய் அங்கு இருத்தி சார்ந்தோர்-
தமையும் உபசரித்து உறையும் இல் புகுந்து மனைவியர்க்கு சாற்றுவாரால்

மேல்
$3.26.5

#3753
இகத்தினும் அ பரத்தினும் பேறுடையர் நமது இல்லினில் வந்து இருந்தார் இந்த
ஒகுத்தினில் நன்கு உணவு அருள வறியவராய் இருந்தனம் என்று உரைத்தலோடும்
அகத்தினில் உள்ளதும் இலதும் இறையவனும் அவன் தூதும் அறிவர் நம்மால்
பகுத்து உரைப்பது என்-கொல் என பசும்_கொடியும் கணவனுடன் பகர்ந்தாள்-மன்னோ

மேல்
$3.26.6

#3754
துணைவனும் காதலியும் இவை உரைத்து மன துயரொடும் துன்புறும் அ போதின்
மணம் உலவு தனு வள்ளல் இனிதின் உம்மு சுலைம் என்னும் மயிலை கூவி
உணவு உளது ஏதெனினும் இவண் தருக வரும் தீனவர்களுடனும் யானும்
அணிபெற இங்கு இருந்து அருந்தி எழுவம் என முகமனொடும் அருளினாரால்

மேல்
$3.26.7

#3755
நனி புதுமை குரிசில் உரைதர மகிழ்ந்து கனி_மொழி நல் நுதலார் நின்ற
அனசு கையின் இருந்ததை ஓர் பாத்திரத்தில் நெய்யுடன் அம் கையின் ஏந்தி
மனன் உயிரின் மிக்க செழும் கணவரிடத்து இனிது அளிப்ப வாங்கி அன்னோர்
கனை கடல் உண்டு எழும் கவிகை நிழலில் வருபவர் இரு கண் களிப்ப வைத்தார்

மேல்
$3.26.8

#3756
முன்னர் வைத்த பாத்திரத்தின் இருந்த மோதகத்தை நறை முளரி கையால்
பன்ன அரும் துண்டப்படுத்தி நெய் தோய்த்து பதின்மர்-தமை பண்பு கூர
இன் அமுது செய்க என முகம்மது நம் நபி இசைப்ப இனிதின் நோக்கி
அன்னவர்கள் கையார வாயார வயிறார அருத்தினாரால்

மேல்
$3.26.9

#3757
பதின்மர் எடுத்து அருந்தியும் பாத்திரத்து அளவு குறைந்தில பின் பஃது மாந்தர்
இதமுற வந்து இருந்து அருந்தும் என உரைப்ப சொற்படியே இனிது மாந்த
புதுமையுடன் மேன்மேலும் வளர்ந்தன இப்படி உணவில் பொருவு இலாத
மதி_வலர் எண்பது பெயருக்கு அளித்தனர் விண்ணினும் புகலும் முகம்மது அன்றே

மேல்
$3.26.10

#3758
அரைவயிற்றுக்கு ஆற்றாத மூன்று உறட்டி எண்பதுபேர்க்கு அளித்தும் மீறி
கரை ததும்பி கிடந்த செழும் பாத்திரத்தை நோக்கி மனம் களிப்புற்று ஓங்கி
விரைவினுடன் மனையிடத்தில் கொண்டு அருந்தும் என உரைப்ப விரும்பி ஏந்தி
அரசர் அபூத்தல்காவும் மனையிடத்தின் உளர் எவர்க்கும் அளித்திட்டாரால்

மேல்
$3.26.11

#3759
வரிசை அபூத்தல்காவும் மனைவி உம்மு சுலைம் என்னும் மயில் அன்னாளும்
பரவி இரு பதம் போற்ற உயிர் துணைவர் எனும் அரசர் பலரும் சூழு
குரிசில் நபி எழுந்தருளி உவந்த திரு மனை குறுகி குறைகள் தீர
இரு நிலத்தில் புகழ் ஓங்க தீன் பெருக புவி புரந்து அங்கு இருந்தார் அன்றே

மேல்

27 உகுதுப்படலம்

$3.27.1

#3760
சிகர மேருவில் சுடர் என செழும் பொழில் மதீனா
நகரில் நம் நபி தீன் நெறி நடத்தும் அ நாளின்
மகர வாரியின் மலிதரு படையுடன் மருவார்
உகுதில் வந்து எதிர்ந்து அமர் விளைத்தவை எடுத்துரைப்பாம்

மேல்
$3.27.2

#3761
மடுவில் வாளைகள் உகள்தரும் மக்க மா நகரின்
சுடிகை மன்னவன் கறுபு உதவிய அபாசுபியான்
அடல் உறும் தனி அரசர்கள் எவரையும் அழைத்து
நடுவுறும்படி கருத்தினுற்றவை சில நவில்வான்

மேல்
$3.27.3

#3762
பதுறில் மாண்டவர் பழிகொளாது இருத்தலே வடுவால்
அதனினும் வடு போய் பொருள் அனைத்தையும் இழந்தது
இது அது அன்றியும் இனம் வடு எதிர் பொராது இருத்தல்
புது நறா துளித்து ஒழுகிய செழும் மலர் புயத்தீர்

மேல்
$3.27.4

#3763
உதிக்கும் மேலவர் ஒருவர்க்கு தீங்கு உறின் உறைந்த
பதிக்கும் அ பெரும் குலத்துக்கும் தீங்கு எனப்படுமால்
மதிக்கும் வெற்றி உண்டெனில் அவை முதல் வரன்முறையா
துதிக்கும் எ உலகிடத்தினும் சுடர் வடி வேலீர்

மேல்
$3.27.5

#3764
இறந்த மன்னவர் துணைவரும் புதல்வர் என்பவரும்
நிறைந்திருந்தனர் நிதியமும் கணிப்பில நிறைந்த
திறம் தரும் துணிவு உளவெனில் பகை எனும் தீனோர்
புறந்தரும்படி முடிப்பதும் அரிது அல புகழீர்

மேல்
$3.27.6

#3765
இந்த வல்விதம் அனைத்தும் நம்மிடத்தினில் இருந்தும்
புந்தி அற்று இவண் இருந்தனம் உணர்வு இலோம் புவியின்
மந்திர தொழில் ஒன்றலால் முகம்மது என்பவனுக்கு
எந்த வெல்விதம் இருந்தது கதிர் இலை வேலீர்

மேல்
$3.27.7

#3766
மதுகை மன்னவர் பதுறில் என்பொருட்டினின் மாண்டார்
எதிரும் வன் பழி சுமப்பதும் துடைப்பதும் யானே
புதல்வர்க்கும் உயிர் துணைவர்க்கும் தேடிய பொருட்கும்
பதியின் மன்னர்க்கும் என் என துணிவொடும் பகர்ந்தான்

மேல்
$3.27.8

#3767
கரைத்த மும்மத களிறு எனும் கறுபு அருள் புதல்வன்
உரைத்த வாசகம் கேட்டலும் அபூசகல் உதவும்
கிரி தட புயன் வீரத்தின் மறுவில் இக்கிரிமா
பரித்த சொல்லினை பகர்ந்தனை என பகருவனால்

மேல்
$3.27.9

#3768
தந்தையர்க்கு உறும் உறவினர்க்கு ஒரு தவறு அடுக்கின்
அந்த வேளையின் உயிரையும் அளித்திடல் அழகால்
தந்தை-தன் பழிகொளற்கு இசையாதவன்-தனையும்
அந்த மன் மகன் என்பதும் இதுவும் ஓர் அழகால்

மேல்
$3.27.10

#3769
வடுவும் தீமையும் தந்தையர் பழிகொளா வழுவும்
நடு இல் செய்கையும் தேயங்கள் நகைத்திடும் நகையும்
முடிவில் துன்பமும் முனை அறும் பேடி என்பதுவும்
இடு நிலத்தினில் எனக்கு அலால் பிறரவர்க்கு இலையால்

மேல்
$3.27.11

#3770
பிறங்கலும் அவன் பெயரெனில் பிதிர்த்து விட்டெறிவன்
கறங்கு வாரிதியாயினும் அவன் பெயர் கழறின்
நிறம் கெடுத்து அளறு ஆக்குவன் நேரலர் உயிர் உண்டு
உறங்கும் செம் கதிர் அயில் எடுத்து ஏந்திய உரவோய்

மேல்
$3.27.12

#3771
இன்று பற்பல வீரத்தின் வாய் கொளாது எடுத்து
மன்றுளோர் செவிக்கு இன்புற மாற்றங்கள் வழங்கல்
நன்று-அது அன்று தீன் எனுமவர் நாமங்கள் தொலைக்கும்
அன்று கண்டு அறி சமர் திறம் என எடுத்து அறைந்தான்

மேல்
$3.27.13

#3772
கொடிய வஞ்சகன் அபூசகல் சேய் இவை கூற
மடிவு இல் சிந்தை அபாசுபியான் உளம் மகிழ்ந்து
முடிவு கண்டனன் தீனவர்-தமக்கு என மொழிய
திட வய பரி கலபு அருள் புதல்வன் செப்புவனால்

மேல்
$3.27.14

#3773
வாள் திறத்தினும் வீரத்தின் வலியினும் மதியாது
ஆள் திறத்தினும் எடுத்தெடுத்து அறைந்ததேயன்றி
ஈட்டும் வஞ்சக முகம்மதின் மாயங்கள் எதிர்ந்து
கூட்டும் நம் படை உடைக்கும் என்பது குறித்திலிரால்

மேல்
$3.27.15

#3774
வினைய வஞ்சகன் முகம்மது விளைத்திடும் மாயம்-
தனை அழித்திட வல்லவர்-தமை சவதரித்து
நனி கொள் வெம் படை குழுவொடும் பேரமர் நடத்த
நினைவுவைத்திட வேண்டும் என்று உரை நிகழ்த்தினனால்

மேல்
$3.27.16

#3775
கறுபு புத்திரன் கழறிய மாற்றமும் கடிதின்
முறுகி வெம் சினத்து அபூசகல் மகன் மொழிந்ததுவும்
உறும் அமர் புலி கலபு அருள் உபை உரைத்ததுவும்
பொறை மனத்து உணர்ந்து இயைபுற காலிது புகல்வான்

மேல்
$3.27.17

#3776
மாய வஞ்சனை தொழில் வருமெனின் முகம்மதும் அன்று
ஆய தன் குலத்தவர்களும் வெறுப்ப அந்தரமாய்
ஏயும் வல் இருள் போதினில் நகரினை இழந்து
போயது என் ஒளித்தொளித்து முள் அடவியின் புறத்தில்

மேல்
$3.27.18

#3777
வஞ்சனை தொழில் என்று இவன் உரைத்தவை மதிக்கின்
அஞ்சும் ஆண்மையினவர் தொழில் உரைப்பதும் அலவால்
தஞ்சமற்றவன் உடைந்திட இனம் தளம் நடத்தி
அஞ்சலாது அமர் விளைத்திடல் வெற்றியின் அழகால்

மேல்
$3.27.19

#3778
உரு கொள் வெம் பொறி புரிசையும் வான் உறும் ஏறும்
நெருக்கிடா வரை இடங்களும் நீண்ட மா நிலத்தின்
மரு கொளும் பொழில் காத்திட வாரியின் வளைவின்
இருக்கும் பேரரண் எவைகளும் பெரும் படைக்கு இலையால்

மேல்
$3.27.20

#3779
அறபு மக்க நம் நகர் படை கொடு முகம்மதுவை
தெறுவதற்கு இடம் இலை இனி செழும் பொருள்-அதனால்
புறநகர் பெரும் படை எடுத்து ஒல்லையில் பொருது
மறமும் வெற்றியும் நிறுத்திட துணிவது வழக்கால்

மேல்
$3.27.21

#3780
முத்திரை பதம் இஃது என நினைத்திரேல் முனையும்
புத்தியும் நமர் செல்வமும் வலிமையும் புகழும்
பத்தியும் குல சமயமும் பழுது இலாது இனிதின்
எ தலத்தும் எ நாளினும் விளங்கும் என்று இசைத்தான்

மேல்
$3.27.22

#3781
வலிய வீரத்தில் சூழ்ச்சியில் திறத்தினில் மதிக்கும்
ஒலிது சேய் இவை உரைத்திட யாவரும் உவந்து
நிலைகொளும்படி உரைத்தனை என பல நிதியம்
அலகிலாது அவன் உரைப்படி இனிது எடுத்து அளித்தார்

மேல்
$3.27.23

#3782
குவிதரும் துணையவரொடும் ஒலீது அருள் குரிசில்
அபசி தேயத்தில் சென்று அரு நிதி அளித்து அடலின்
உவமை இல் என உறு சமர் வீரரை தெரிந்து
திவளும் வேல் படையுடன் நனி சேகரம்செய்தான்

மேல்
$3.27.24

#3783
அடரும் வெம் சமரிடத்தினில் அடி துணை பெயரா
மிடல் உடை திறல் அபசி வெம் படையொடும் விளைந்த
கட கயத்து அடலினர் கனானத்து எனும் கூட்ட
படையொடும் புறப்பட்டனன் காலிது என்பவனே

மேல்
$3.27.25

#3784
வீரம் மிக்க கனானத்து கூட்ட வெம் படையும்
கார் நிறத்து அபசி பெரும் படையுடன் கலப்ப
கோர வாம் பரி ஒலீது செய் தவத்து உறும் குரிசில்
மாரி அம் பொழில் மக்க மா நகரினில் வந்தான்

மேல்
$3.27.26

#3785
காலிது என்பவன் பெரும் படையுடன் வர களித்து
சூலின் வான மின் எனும் கதிர் வேல் அபாசுபியான்
பாலில் சூழ்தரு பாடியில் பெரும் படை திரட்டி
கோலம் ஆர் குரகதத்தொடும் கூட்டமிட்டனனால்

மேல்
$3.27.27

#3786
வரு கனானத்து கூட்டமும் வளைந்த வாரிதியை
பருகும் கார் குலம் என வரும் அபசி வெம் படையும்
பிரிவு இலா புறநகர் பெரும் படைகளும் பெருகி
அரிய மால் நகர் இடன் அற மலிந்தன அன்றே

மேல்
$3.27.28

#3787
மறம் தரும் கதிர் வேலொடும் களத்திடை பதுறில்
இறந்த மன்னவர் மைந்தரும் கேளிர் என்பவரும்
குறைந்திடா பெரும் குறைசி அம் காபிரின் குலமும்
அறம் தரா மனத்தொடும் சமர் கோலங்கள் ஆனார்

மேல்
$3.27.29

#3788
சுரிந்த பங்கியர் சேந்த கண்ணினர் மலை துளையின்
விரிந்த வாயினர் வெள் எயிற்றினர் இருள் விடத்தின்
கரிந்த மெய்யினர் திரள் துணை தாளினர் கபடம்
பொருந்து நெஞ்சினர் இரக்கம் எள்ளளவினும் பொருந்தார்

மேல்
$3.27.30

#3789
சீற்றம் கூண்டு உரு கொண்டு என தோன்றிய திறலோர்
சாற்றொணா தறுகண்மையும் மறனுமே தரித்தோர்
ஊற்றம் மிக்க வெவ் அரியினும் வலிமையர் உணர்வின்
மாற்றம் என்பது செவிப்புறந்தனினும் வைத்து அறியார்

மேல்
$3.27.31

#3790
இனைய தன்மையர் அபசிகள் குலத்தவர் இதய
துனிவிலாது மூவாயிரம் பெயரவர் சூழ
குனி சிலை கை கனானத்து என்பவர் பல குழும்ப
புனையும் வெற்றி கொண்டு எழுந்தனன் ஒலீது-தன் புதல்வன்

மேல்
$3.27.32

#3791
அடவியில் படை புறநகர் படை அவன் உறவி
னுடையர் மிக்கொடு வரும் படை பகையினில் உடைந்தோர்
படை படைக்கலத்தொடும் நெருங்கிட பரி செறிய
குடை கவித்திட எழுந்தனன் கறுபு-தன் குமரன்

மேல்
$3.27.33

#3792
மக்க மா நகர் குறைசி மன்னவர்களும் படையும்
ஒக்கலும் உயிர் துணைவரும் உறும் மக படையும்
மிக்க பேர் அறபி குல காபிரும் உடைய
தக்க வன் மனத்து எழுந்தனன் அபூசகல் தனையன்

மேல்
$3.27.34

#3793
அலங்கல் அம் புய வீரன் அபாசுபியானும்
கலன் கொள் மெய் ஒளி பிறழ்தர காலிது என்பவனும்
இலங்கு நீள் அயில் செழும் கரன் இக்கிரிமாவும்
நலன் கொளும் பெரு நகரம் விட்டு அணியொடும் நடந்தார்

மேல்
$3.27.35

#3794
நிலன் அதிர்ந்திட பணி தலை பணித்திட நீண்ட
மலை பிதிர்ந்திட சிறு பொறை அமிழ்ந்திட வழி போய்
குலவும் எண் திசை திடுக்கிட குல மணி சிதறி
சலதி மா நிலம் பரந்து என பரந்தது தானை

மேல்
$3.27.36

#3795
சேனையும் திறல் வேந்தரும் திரளொடு நடப்ப
வானும் வானகத்து உலவிய விசும்பும் மண்ணகமும்
கானும் பேர் வரை குடுமியும் திகந்தமும் கடலும்
பானு எல்லையும் மறைத்தன எழும் துகள் படலம்

மேல்
$3.27.37

#3796
குவளை மை விழி மாதர்கள் சுக தடம் குளித்து
கவளம் ஆர் கட கரியினும் மதத்து எழும் காபிர்
திவளும் வேலொடு நடந்திடும் சேனை அம் கடலுள்
தவள மா முகில் பரந்து என செறிந்த சத்திரங்கள்

மேல்
$3.27.38

#3797
குதை கொளும் கொடுமரம் கரம் பிடித்து வை கொழும் கோல்
புதையும் ஆவங்கள் வெரிநிடை பூட்டிய புருடர்
பதம் பெயர்த்திட இடம் அரிது எனும் படை நெருக்கின்
கதலி நீள் வனம் போன்றன கதலிகை கானம்

மேல்
$3.27.39

#3798
நெய் வழிந்த செம் கதிர் இலை வேல் கொடு நேடி
மை முகில் குடை முகம்மதை மாறுகொண்டு இகலி
மொய் அமர் செலல் பழுது என யாவையும் முனிந்து
கை மறித்தன போன்றன குழைந்த வெண் கவரி

மேல்
$3.27.40

#3799
வேத_நாயக முகம்மதின் தீன் நிலை விரும்பா
பாதக குபிரவர் உடல் பாழ்ங்குழி படுத்த
பூதலத்தினில் வம்-மின்கள் என தனி புழுங்கி
ஆதி வானவர்க்கு உரைத்து என முரசங்கள் அதிர்ந்த

மேல்
$3.27.41

#3800
பரவை மா நிலம் சுமந்த வெம் பரிகளை பரிகள்
விரைவின் வேகத்தில் சுமந்தன வேந்தரை வேந்தர்
மரு மலர் புயம் சுமந்தன வாள்களை வாள்கள்
பெருகும் ஊன் நிணம் சுமந்தன பிறங்கு ஒளி பிறங்க

மேல்
$3.27.42

#3801
பரியொடும் பரி மிடைதலில் பார் இடம் இலையால்
தெரியும் வீரர்கள் மிடைதலில் செலும் வழி இலையால்
விரியும் வெண் குடை மிடைதலில் வெயில் பகல் இலையால்
எரியும் செம் கதிர் வேல் மிடைதலில் இருள் இலையால்

மேல்
$3.27.43

#3802
வாய்ந்த வெற்றி சற்று உண்டு என காட்டின வதனம்
ஏய்ந்த துற்குறி காட்டின வேந்தர்கள் இட தோள்
காய்ந்த வெம் சினம் காட்டின வீரர்கள் கடைக்கண்
பாய்ந்து வெண் பணி சுமை பயம் காட்டின பரிகள்

மேல்
$3.27.44

#3803
ஆறு கொண்டு என திகை வெளி அடங்கலும் அரிதில்
சேறு கொண்டன வாசியின் வாய் நுரை சிதறி
நீறு கொண்டன வரைகளும் அடவியும் நெருங்கி
மாறுகொண்ட வன் காபிர்-தம் பெரும் படை வரலால்

மேல்
$3.27.45

#3804
கணிதம் இல் என தொகை பல வயிரங்கள் கலந்த
பணி இமைத்தன வேந்தர்கள் தோள் பருப்பதத்தின்
மணி இமைத்தன வாள் அயில் இமைத்தன மதித்த
அணி வகுத்து எழும் படையினை நோக்குதற்கு அமைந்தே

மேல்
$3.27.46

#3805
கொடியும் ஆலவட்டங்களும் விரிந்த வெண் குடையும்
புடை பரந்திட எழும் துகள் தூதினை போக்கி
அடி கொள் பல்லியம் உரும் என அதிர்ந்திட அகன்ற
படியும் உள் விழ நடந்தது சேனை அம் பரவை

மேல்
$3.27.47

#3806
கரை செய் மா நதி இடங்களும் கடங்களும் கடந்து
வரையும் அ வரை சாரலும் வனத்திடை கிடந்த
திரை செய் பேரொலி மடுக்களும் திடர்களும் குறுகி
அரசர்_நாயகம் முகம்மது சதுர்த்தலம் அடுத்தார்

மேல்
$3.27.48

#3807
புகர் அறும் பெரும் பாடியும் சிறுகுடி புறமும்
இகல் என தனி பயத்தொடும் வயிறு அலைத்து ஏங்கி
பகரும் மாதரும் மைந்தரும் அடவியில் படர
உகுது எனும் மலை இடத்தினில் படையொடும் உறைந்தார்

மேல்
$3.27.49

#3808
குவியும் வெள்ளி அம் பொருப்பு என படங்குகள் கோட்டி
பவுரி வாம் பரி தொகை பல நிரைநிரைப்படுத்தி
அவிரும் பொன் ஒளி விரித்த நிசானிகள் அமைத்து
திவளும் ஆவணம் வகுத்து அரும் பாசறை செய்தார்

மேல்
$3.27.50

#3809
கறுபு மைந்தனும் இக்கிரிமாவும் காலிதுவும்
திறல் அடல் பெரும் படையுடன் உகுதினில் செறிந்து
மறம் முதிர்ந்து இகற்கு இறங்கினர் என ஒரு வசனம்
உறு சமர் புலி முகம்மது காதினில் உரைத்தார்

மேல்
$3.27.51

#3810
பூதலம் புகழ் மதீன மா புரத்தின் கீழ் புறத்தில்
காதமாம் என காபிர்கள் அடைந்தவை கழற
ஏதிலர்க்கு அடல் அரி எனும் நபி இறசூல் கேட்டு
ஆதரத்து அஸ்காபிகள்-தமை அழைத்து உரைப்பார்

மேல்
$3.27.52

#3811
கருதலார் இவண் அடுத்து அடைந்தனர் குபிர் களைதற்கு
அரிய நாயகன் அருளும் நம்-பால் உள அடலில்
தெரியும் வீரத்தின் வான் உருமேறு எனும் திறலீர்
இரவினில் யான் ஒரு கனவு கண்டனன் என இசைப்பார்

மேல்
$3.27.53

#3812
கேடு இல் முன்றிலில் பசு அறுத்து இவண் கிடப்பவும் போ
ராடல் வாளின் வாய் தாரை சற்று அற உதிர்ந்திடவும்
மூடும் என் உடல் சோட்டினில் கரம் முழுகிடவும்
ஏடு அலம் புயத்தீர் இவை காண்டனன் இயைய

மேல்
$3.27.54

#3813
அகத்தின் வாயலில் பசு அறுத்திருப்ப கண்டதனால்
செகுத்திடற்கு அரும் என் உயிர்த்தோழரில் சிலபேர்
உகைத்து அடர்ந்து வெம் காபிர்கள் திரள் கெட ஒடுக்கி
மிகுத்த வீரத்தின் உயிர் இழந்திடுதலும் வேண்டும்

மேல்
$3.27.55

#3814
ஓங்கும் செம் கதிர் வாள்-அதின் தாரை சற்று உதிர
பாங்கில் கண்டது என் உதிரத்தின் கலப்பினர் பரிவால்
தாங்கும் வேல் எடுத்து அரிகளை செகுத்து வெம் சமரின்
வாங்கிடாது நின்று உயிரினை வழங்கவும் வேண்டும்

மேல்
$3.27.56

#3815
தரித்த சோட்டினில் கரம் புகுந்திருப்பது என் தனுவில்
விரித்த ஊறு பட்டு உதிரங்கள் ஒழுகவும் வேண்டும்
ஒருத்தன் நம்மிடத்து உளன் அவன் உதவி கொண்டு இவணில்
திருத்தும் வெற்றியும் உள செழும் சேவக திறத்தீர்

மேல்
$3.27.57

#3816
அறபி காபிர்-தம் தானையும் அபசி வெம் படையும்
புறநகர் பெரும் சேனையும் புரவியின் திரளும்
கறுபு மைந்தனும் அபூசகல் மகனும் காலிதுவும்
உறு சினத்தொடும் கொடு மலை உகுதின் உற்றனரால்

மேல்
$3.27.58

#3817
இற்றை போதினில் நாம் எழுந்து எடுத்து எதிர் ஏறி
பற்றலாருடன் எதிர் அமர் விளைத்திடல் பழுதால்
முற்றும் நம் படை கொண்டு இவணிருந்து நம் மூதூர்
சுற்றி எங்கணும் காத்து உடன் உறைவது துணிவால்

மேல்
$3.27.59

#3818
திருக்குறும் கருத்து அடையலர் சினத்தொடும் கெழுமி
இருக்கும் நம்மிடத்தினும் வருவாரெனில் எதிர்ந்து
முருக்கி நம் புகழ் நிறுத்துதல் கடன் என மொழிந்தார்
மரு கொழும் தொடை துயல் புய பூதர வள்ளல்

மேல்
$3.27.60

#3819
குரிசில் இ உரைதர பெரும் தீனவர் குலத்துக்கு
அரசர் நால்வரும் உயிர் எனும் தோழமையவரும்
தெரிய கேட்டு அரும் நினைவொடும் ஒளிர் சிரம் தூக்கி
உரையினான் உணர்ந்து ஏற்பவை இஃது என உரைப்பார்

மேல்
$3.27.61

#3820
தீனை மாறும் வெம் காபிர்கள் உறையிடம் தேடி
ஈனம் இன்றி வெம் திறன் மறம் கெட பொருது இகலி
ஊன் நிறைந்த வாய் பேய் மகிழ்தர விருந்து ஊட்டி
வானும் ஏத்திட புகழினை நாள்-தொறும் வளர்த்தோம்

மேல்
$3.27.62

#3821
அந்த நாள் ஒழிந்து அவர் அடு படையொடும் அரிதில்
சிந்தை தேறி இப்போது நம் தீனவர் திகைப்ப
வந்து பாசறை இறங்கினரெனில் அவை மறுத்து
புந்தியற்று இவண் உறைவது முறை அல புகழீர்

மேல்
$3.27.63

#3822
காதமாம் என தீமையர் பாசறை காண்டும்
வாதியாது இருந்தேமெனில் அவ மொழி வளரும்
கோது உறும் அஃது அன்றியும் முனை திறம் கோடும்
நீதம் அன்று இவண் இருத்தல் போய் பொருவது நினைவால்

மேல்
$3.27.64

#3823
என்னும் இ உரை இறையவன் அடியவர் இயம்ப
மன்னு மா மறை முகம்மது கேட்டு உளம் மகிழ்வுற்று
அன்னதே கருத்து என மொழிந்து இனிதொடும் அரிதில்
பொன் உலாம் தட தாள் பெயர்த்து எழில் மனை புகுந்தார்

மேல்
$3.27.65

#3824
இல்லிடத்தினில் உறைந்து அரும் செழும் துகில் எடுத்து
வில் உமிழ்ந்த மெய்யிடத்தினில் அழகுற விசித்து
செல் எனும் கரத்தால் சிர சபூகினை திருத்தி
அல் எனும் திற கரும்பொன் கஞ்சுகியையும் அணிந்தார்

மேல்
$3.27.66

#3825
வெருட்டும் மன்னவர் ஆண்மையும் நோக்கிய விழியும்
மருட்டும் மை கரும் கிடுகொடும் கொடுமரம் அணிந்தார்
அருட்டம் ஊறிய தொடையல் அம் புய அகுமது-பால்
இருட்டொடும் பிறை தோன்றிய என கிடந்து இலங்க

மேல்
$3.27.67

#3826
தரை திடுக்கிட பணி தலை நெளித்திட சதுர
வரையும் ஊடுருவி சென்று திசைகளும் மருட்டி
பரவை ஏழும் நீர் அற குடித்து அளறு எழப்படுத்தி
விரைவின் எய்து கோல் தூணியும் வெரிநிடை அணிந்தார்

மேல்
$3.27.68

#3827
பொரு தரத்தவர் மனத்தினில் வெருக்கொள புகலும்
திரு மருங்கினில் வாளொடும் காளகம் சேர்த்து
மருவலார் உயிர் பருகி ஊன் உண்டு உறை வடி வேல்
ஒரு கை ஏந்தினர் இரு கரம் பொருத்திய உரவோர்

மேல்
$3.27.69

#3828
அரிய வானவர் எவரும் நீள் புவியிடத்தவரும்
வருடுகின்ற செம் தாள் இணை தாமரை மலரை
பருதி வெம் கதிர் மூடுவ போன்றன பரிவில்
பொருவு இலாத செம் கபுசினை விரைவொடும் புனைந்தார்

மேல்
$3.27.70

#3829
ஆகம் எங்கணும் அழகுற படைக்கலன் அணிந்து
மாகம் மீது எழும் மதி தரை நடந்து என மனை விட்டு
ஓகை கூர்தர நடந்து பள்ளியினிடத்து உறைந்த
வாகை அம் திரு தோழர்களிடத்தினில் வந்தார்

மேல்
$3.27.71

#3830
அடு படை கொடும் காபிர்கள் அடைந்ததும் அரிதில்
கொடிது என கனவு உரைத்ததும் குறித்து எடுத்து ஆய்ந்து
முடிவிலா பெரும் காரணர் திரு முகம் நோக்கி
மடிவு இல் சிந்தையர் கேண்-மின் என்று ஒரு மொழி வகுப்பார்

மேல்
$3.27.72

#3831
பொருந்தும் நல் நெறி தீன் நிலை பயிற்றிய புகழோய்
திருந்திலா வழி தீமையர் படைக்கு எதிர் சேராது
உரம் ததும்பிய படையுடன் கெழுமி இ ஊரின்
இருந்து போர் பொருகுவது நன்கு என எடுத்து இசைத்தார்

மேல்
$3.27.73

#3832
இன்ன வாசகம் குறித்து எடுத்து ஆய்ந்து உளத்து எவரும்
முன்னி முன்னரில் செல பழுது என உரைத்தீர் இல்
முன்னி அ படைக்கு எதிர்தல் நன்று என முடித்தீரால்
அன்னவாறு இயைந்து அடு படைக்கலன் எடுத்து அணிந்தேன்

மேல்
$3.27.74

#3833
மெய்யின் ஆயுதம் சேர்த்து வந்தால் அமர் மேவி
வையகம் புகழ்தர பொருது இவண் வரவேண்டும்
ஐயமுற்று இருப்பது நபி முறைமையர்க்கு ஆகா
வெய்ய தன்மையாம் சீர்த்தியை நாள்-தொறும் விளைத்தீர்

மேல்
$3.27.75

#3834
ஆகையால் அமர் கோலம் விட்டு இருப்பது அன்று அடங்கா
வேகம் மீக்கொளும் படை எழ கடிதினில் வேண்டல்
ஓகை என்று உரைத்தருளினர் கேட்டனர் உவந்து
வாகு உறும்படி தெளிந்து சம்மதித்தனர் வயவர்

மேல்
$3.27.76

#3835
பொருந்தி நின்றவர் யாவரும் ஒருப்பட புகழும்
அரும் திறல் படையொடும் இனிது எழுக என்று அறைந்து
தரும் தட புயல் இபுனு உம்மி மக்த்தூமை தவம் கொண்டு
இருந்த நல் நகர்க்கு அரசு என இயற்றினர் அன்றே

மேல்
$3.27.77

#3836
பேதம் அற்ற சவ்வால் என உரைத்திடும் பெரிய
மாதம் ஏழிரண்டினில் வெள்ளி வாரத்தின் வணங்கி
ஓது குத்துபா தொழுத பின் மறையியம் ஒலிப்ப
தீது அறும்படி எழுந்தனர் கபீபு எனும் செம்மல்

மேல்
$3.27.78

#3837
நிரைநிரைப்படி தீனவர் இதயங்கள் நெகிழ்ந்து
விரைவினில் கைகள் ஏந்தி ஆமீன் ஒலி விளம்ப
தரு என தரும் தூதரும் தட கரம் மலர்த்தி
அரு மறை செழும் பாத்திகா ஓதினர் அன்றே

மேல்
$3.27.79

#3838
காயும் மேல் கனல் வடவையும் அவிதர காயும்
பாயும் மேல் திசை வெருவ வான் முகட்டினும் பாயும்
ஏயும் வன் கிரி உடைத்து அரும் குளம்பினால் எறிந்து
தோயும் வெண் திரை கடல் குழி ஏழையும் தூர்க்கும்

மேல்
$3.27.80

#3839
மருத்து வேகத்தின் முன்னும் வெம் கதிரினை மருட்டும்
கருத்தின் வேகத்தை ஏய்ந்த வெம் திறத்த கண் அடங்கா
திருத்து சித்திரத்து உடைய அச்சுவம் மகிழ் சிறப்ப
வர திறத்தினர் கொணர்ந்தனர் நபி முகம்மது முன்

மேல்
$3.27.81

#3840
மாதர்-தம் மனம் ஒத்த கந்துகத்தின் வத்திரத்தை
தாது உகுத்த செந்தாமரை கரத்தினால் தடவி
வேத மன்னர் தீன் தீன் என ஏத்திட விரைவின்
ஆதரத்துடன் மகிழ்ந்து இனிது ஏறினர் அன்றே

மேல்
$3.27.82

#3841
நிலை கொளும் தவத்து அறிவினன் மாக்களும் நீண்ட
கலை_வலாளரும் பத துணை ஏத்திட கவின் ஆர்ந்து
இலகு நல் நுதல் சிற்றிடையவர் பலாண்டு இசைப்ப
பொலன் முகட்டினின்று அமரர்கள் மலர்_மழை பொழிந்தார்

மேல்
$3.27.83

#3842
மறை விளையாடி நாளும் மறு தழும்பு இருந்த நாவார்
பொறையுடன் அறிவும் பின்னி புரண்டுகொண்டு இருந்த நெஞ்சார்
இறையவன் ஏவல் வண்மைக்கு அறத்தொடும் இயைந்தார் வேக
துறையினுக்கு உருமேறு ஆர்த்து தோன்றினும் துவைக்கும் நீரார்

மேல்
$3.27.84

#3843
வெற்றியில் புகழில் போரில் வேட்கை அறாது தேடும்
பற்றினர் நடுவின் உற்ற பண்பு உறும் தகையர் வேண்டும்
குற்றம் இல் அழகு மெய்யில் கொழும் படைக்கலன்கள் தாக்கி
சற்று ஒரு வடு உண்டு என்ன சாற்றவும் தகைமையோரே

மேல்
$3.27.85

#3844
இனையன கூறும் தன்மை தீனவர் ஏழுநூறு
புனை மணி திண் தோள் வேந்தர் பொரு படை குழுவில் நீண்ட
கனை பரி சூழ மற்ற காவலர் எவரும் தத்தம்
சினம் உறும் படையினோடும் இடம்-தொறும் திரண்டு மொய்த்தார்

மேல்
$3.27.86

#3845
அறம் தலை மணக்கும் செங்கோல் அரசு மேற்கொள்ள வாசி
நிறம் களித்து உவகை கூர வளை முகம் உயர்த்தி நீட்டி
திறம் கெழும் செறுநர் நெஞ்சம் திடுக்கிட கனைத்து தாளை
பிறங்கு எரி தவழ் கண் பாந்தள் வெருக்கொள பெயர்த்தது அன்றே

மேல்
$3.27.87

#3846
நெடும் துளை பெரு வாய் காளத்து ஒலி திசை நிமிர்ந்த வார் ஆர்
கடும் கடிப்பு இடு கண் பேரி இடி என கலித்த ஓசை
விடும் படை இயங்கள் யாவும் விரி திரை ஒடுங்க ஆர்த்த
திடம் கலுழ் வேந்தர் தண்டம் செறி இடம்-தோறும் அன்றே

மேல்
$3.27.88

#3847
கணை மழை பெய்யும் மூரி கார்முகம் கருதலார்-தம்
அணி உரம் கிழித்த நேமி அரத்த நீர் குடித்து சோரி
மணம் கமழ் அயில் நெய் உண்டு வாய் கிடந்து எரியும் சூலம்
தணிவு இலா திறம் செய் தண்டம் சேவகர் தாங்கினாரால்

மேல்
$3.27.89

#3848
கார் என செறிய தூளி கடல் என சலவாத்து ஓத
நீர் என பரக்க வாசி நெடு வரை மாடம் கொண்டோர்
பார் என கிடந்த வெற்றி பதி மறுகு எல்லை நீங்கி
போர் என களித்து வேட்டு பொரு படை படர்ந்தது அன்றே

மேல்
$3.27.90

#3849
மண் இயல் வளாகம் எல்லாம் வய படை தடவி நின்ற
பண் இயல் கொடிகள் எல்லாம் பயோதரம் தடவி நின்ற
எண்ணிய திசைகள் எல்லாம் எழும் துகள் தடவி நின்ற
விண்ணிடம் தடவி நின்ற மிகு சலவாத்தின் ஓதை

மேல்
$3.27.91

#3850
மாற்றலர் திறமும் கூறும் வாய்மையும் ஒடுங்க வெற்றி
ஊற்றமும் ஒடுங்க தேறா உள்ளமும் ஒடுங்க வந்த
தோற்றமும் ஒடுங்க நின்ற தொல் நெறி ஒடுங்க மாறா
சீற்றமும் ஒடுங்க வேத தீனவர் ஆர்த்து சென்றார்

மேல்
$3.27.92

#3851
திடம் தரும் தூதர்_கோமான் சேனை அம் பரவை பாரில்
நடந்த பேரார்ப்பின் எட்டு திசை நடுங்கினவே தண்டம்
அடங்கலும் அசைந்து விண்ணும் அடிக்கடி அதிர்ந்த கோர
விடங்களை அரிதில் கக்கி அனந்தனும் வெருக்கொண்டானால்

மேல்
$3.27.93

#3852
தண்டம் வேலொடு குந்தம் வாள் தனு படை மிடைந்த பாயும்
திண் திறல் பரியினோடும் சேவகர் மிடைந்த வண் கை
கொண்ட வெண் குடைகளோடும் கொடி திரள் மிடைந்த எங்கும்
மண்டு பேரியங்கள் யாவும் மஞ்சொடு மிடைந்த அன்றே

மேல்
$3.27.94

#3853
காரணம் என்ப யாவும் கபீபு தம்மிடத்தில் காட்ட
பூரண புளகம் யாவும் தீனவர் புயங்கள் காட்ட
ஈரம் இல் வெகுளி யாவும் இரு விழிக்கடைகள் காட்ட
ஆரண மொழிகள் யாவும் அணங்கு வாய் காட்டிற்று அன்றே

மேல்
$3.27.95

#3854
சுதிகள் ஒத்து இசைகள் பாடி சுரும்பு உணும் தொடையல் திண் தோள்
இதம் உறும் வேந்தர் சேனை இரை திரை பரவை ஒத்த
கதிரவன்-தன்னை ஒத்த கணிப்பில் ஆலவட்டம் கோடி
மதிகளை ஒத்த சூடும் சருவந்த மௌலி அன்றே

மேல்
$3.27.96

#3855
அல்லும் கல்லும் ஒத்தன மன குபிரவர் படையில்
செல்லும் செல்லும் என்று ஏவின சிவிறியின் திரள்கள்
கொல்லும் கொல்லும் என்று உரைத்தன பல்லியம் குமுறல்
வெல்லும் வெல்லும் என்று ஆடின விடு நெடும் கொடிகள்

மேல்
$3.27.97

#3856
வட்டமிட்டன வீதியில் திரிந்தன மகிழ்வில்
கொட்டமிட்டு நின்று ஆடின எண் திசை கூச
எட்டும் என்னவும் எழுந்தன போர் என இகலும்
விட்டிடா சின வேந்தரை சுமந்து வெம் பரிகள்

மேல்
$3.27.98

#3857
மேக வெண் குடை சுற்றினும் முற்றினும் விரைவில்
காகமும் சகுந்தமும் பறந்து ஓடின கடிதின்
ஏகும் வாம் பரியொடும் மறம் அனரொடும் இயைந்து
சோகும் கூளியும் நிறைந்துகொண்டு ஏகின தொடர்ந்தே

மேல்
$3.27.99

#3858
மலைய வெம் பகை முடித்து அரும் புகழ் உண்டு மறுத்தும்
உலகில் கான்று என வாய் நுரை தரும் பரி உடன்ற
அலை கடல் படை செல் வழி அடங்கில அதனால்
பல நெறி கொண்டு படர்ந்தனர் ஒரு நெறி படர்ந்தோர்

மேல்
$3.27.100

#3859
அரியவன் திரு வாக்கினால் உரைத்த ஆரணத்தின்
விரியும் நூல் கலை யாவும் ஈமானுமே வேண்டி
திருவின் நாள்-தொறும் மனத்தினில் தாங்கிய தீனோர்
புரவி மேற்கொண்டு தாங்கிட மகிழ்வொடும் போந்தார்

மேல்
$3.27.101

#3860
செருக்கு எனும் கடல் குடித்து நெய் கமழ்ந்து தீ தழல் கொண்
டிருக்கும் வெம் படை காபிர்-தம் திறத்தொடும் இதயம்
வெருக்கொளும்படி முகம்மதும் விறல் சகுபிகளும்
தருக்கினோடும் வந்து உற்றனர் சவுத் எனும் தலத்தில்

மேல்
$3.27.102

#3861
தீனை மாறி இ பெரும் பகை விளைத்திடும் சிறியோர்
தானையும் நமது அநீகமும் அடும் திறல் சமரை
ஈனம் இன்றி நோக்குவம் என சேயொடும் எழுந்தார்
மானையும் கயல் மீனையும் மருட்டு கண் மடவார்

மேல்
$3.27.103

#3862
தூதராகிய யூதபம் நோக்கியே தொடர்ந்த
நீதராம் எனும் மத கரி தொகுதியை நேடி
ஆதர கயமுனியொடும் பிடிகள் வந்து அனைய
மாதர் ஆவி மைந்தரும் கலந்து உவந்து வந்தனரால்

மேல்
$3.27.104

#3863
பொருவு இலா சவுத் எனும் தலத்து இறங்கும் அ பொழுதில்
அரிய வெம் படை தலைவரில் அப்துல்லா என்போன்
முரியும் புன்மனத்தவன் முனாபிக்கினின் முதியோன்
வெருவி வேறு ஒன்று நினைந்தனன் புகழினை வெறுத்தான்

மேல்
$3.27.105

#3864
மக்க நல் நகர்க்கு உடந்தை என்பது-தனை மதித்தும்
மிக்க சூமன்-தன் கலைப்பினில் அகப்பட்டு வெகுண்டும்
தக்க நல் மதி அகற்றியே உளம் தடுமாறி
ஒக்கலோர் முகம் பார்த்து இழி தரும் மொழி உரைப்பான்

மேல்
$3.27.106

#3865
இன்று மாற்றலர் தண்டினோடு எதிர்வதற்கு எழுவது
அன்று காண் என உரைத்தனன் யாவரும் அதனை
கன்றல் கொண்டனிர் மறுத்தனிர் இனி என்-கொல் கரைவது
ஒன்று யான் இனி வருவது இல் என சினந்து உரைத்தான்

மேல்
$3.27.107

#3866
உரைத்து தன்னை கொண்டு ஒழிந்திலன் நாள்-தொறும் ஊறு
நிரைத்த சிந்தையன் சிறிதுபேர் இதயமும் நெகிழ
திரைத்த வாசக மறையினில் பயம் பெற செவியில்
கரைத்து விட்டனன் முறித்தனன் போவதும் கலைத்தான்

மேல்
$3.27.108

#3867
கூட்டமிட்ட வெம் படையின் முப்பகுப்பினில் குறித்து
நாட்டி ஓர் பகுப்பு அரும் திறல் வீரரும் நணுக
வேட்டல் கொண்டு எழுந்து ஏகினன் அடங்கிலா விரி_நீர்
ஓட்டம் கூவல் நீர் கொண்டு எழுந்து ஓடியது ஒத்தே

மேல்
$3.27.109

#3868
வஞ்ச நெஞ்சு இபுலீசு-தன் மதலையை மானும்
வெம் சொல் நாவினன் உபை மகன் அப்துல்லா வெருள்வுற்று
அஞ்சி ஏகினன் என்று உளத்து எண்ணிலர் அழன்று
நஞ்சு உண் வேல் படை எழுக என்று அகுமது நவின்றார்

மேல்
$3.27.110

#3869
ஆர்த்தன பேரி தானை எழுந்தன அலரி வெண் தூள்
போர்த்தன கயங்கள் மூச்சுமுட்டின புழுங்கி எட்டும்
வேர்த்தன மேனி நீர் அற்று உலர்ந்தன மேகம் வாரி
தூர்த்தன பெயர்ந்த நேமி அனந்தனும் துணுக்கி அம்ம

மேல்
$3.27.111

#3870
காலினில் செறிந்து மீச்சென்று இலங்கிய கவிகை சோலை
மேவினில் புயலை ஒப்ப வெண் கொடி படர்ந்து செல்ல
வால் எழில் கவரி தூங்க நடந்த வாள் தானை எங்கும்
ஆலம் ஒத்து எழுந்த காபிர் தண்டினோடு அடுத்தது அன்றே

மேல்
$3.27.112

#3871
ஆண்டு வந்து எழுந்த சேனை கடலினை அளந்த கண்ணால்
காண்டலும் தொழுகை வல்லோர் தம் படை கடலும் நோக்கி
தூண்டும் அ படை முன் ஈது ஓர் துளித்துணை இல என்று எண்ணி
வேண்டிய மலைதல் கொண்டார் ஏது என விளம்புவேனே

மேல்
$3.27.113

#3872
அடுத்தவை காட்டுகின்ற பளிங்கு போல் அகத்தினூடு
தொடுத்திடும் நலிதல் யாவும் முகத்தினால் தோன்ற கண்டு
நடு திற நிலைமை பூண்ட நாயக குரிசில் அன்னோர்
விடுத்திடும் வீரம் பூண ஒரு மொழி விரைவில் சொல்வார்

மேல்
$3.27.114

#3873
இன்று நீர் காபிர்-தம்மோடு எதிர்ந்திடில் ஒரு முன்னூறு
நன்றி வானவர்கள் வந்து நம் படைக்கு உடன்று செல்வர்
அன்றெனில் காபிர் நம் மேல் அடர்ந்தனரெனில் ஐந்நூறு
வென்றி வானவர்கள் நின்று வென்றியை விளைப்பர் அன்றே

மேல்
$3.27.115

#3874
ஆதி-தன் அருளின் வண்ணத்து அமரர் ஈண்டு இழிந்து காபிர்
பேதுற பொருவரென்றால் ஈது அலால் பெலனும் உண்டோ
காதரம் நினைப்பது என்-கொல் என்றனர் காட்சி மேவும்
மா தவர் எவரும் போற்ற ஒருவனை வழிக்கொண்டாரால்

மேல்
$3.27.116

#3875
பூசல்செய்து இணங்கார் ஆவி போக்கிடில் புகழ் உண்டு அன்றி
பீசபீல் என்று வீந்தால் பேறு உண்டாம் என்ன நெஞ்சின்
நேசமுற்று இதுவும் எண்ணி தூதரும் நினைந்து சொன்ன
வாசகம்-அதுவும் காதில் கொண்டனர் மானம் பூண்டார்

மேல்
$3.27.117

#3876
யாவரும் ஒருப்பட்டு ஈண்ட எங்கணும் சேனை செல்ல
தேவர்கள் முன் பின் ஏக பல்லியம் சிலம்பி பொங்க
வாவிய பரியும் சூழ உகுது எனும் மலையில் போந்தார்
பாவையர் மைந்தரோடு வந்து ஒருபாலின் நின்றார்

மேல்
$3.27.118

#3877
துன் அடல் சுபையிறு ஈன்ற தூய அபுதுல்லா என்னும்
மன்னவரவரோடு ஐந்துபத்துடன் மாந்தர் சேர்த்து
பின் அணியாக ஓர்பால் நிறுத்தினர் பிரிவு இலாது
மின் அணிந்து இலங்கும் மேக குடை நிழல் விளங்கி நின்றார்

மேல்
$3.27.119

#3878
குற்றம் மேல் கொண்ட காபிர் கொடும் படை-அதனோடு உற்று
முற்றும் தோற்று ஓடினாலும் அல்லது முரண்டி யாங்கள்
வெற்றிகொண்டனம் என்றாலும் யாவரே வெருவினாலும்
மற்றொரு தலத்தில் கால்கள் வைத்திடீர் எனவும் சொன்னார்

மேல்
$3.27.120

#3879
சொல்லினான் நின்ற பின்னர் துணை அபூபக்கர் என்னும்
கல்லினால் ஊறுசெய் தோள் காளையும் உமறும் இன்னே
வெல்லலாம் காபிர்-தம்மை என வெகுண்டு இருவரும் போர்
எல்லையின் அமைந்து முன்னர் இரண்டு அணி என்ன நின்றார்

மேல்
$3.27.121

#3880
வெண் நிலா கரியது என்ன விளங்கி விண் நிமிர்ந்து வெய்யோன்
தண் உடல் தங்க வீசும் தவள வெண் கொடி முன் ஈண்ட
எண்ணிடத்து அடங்கா நின்ற பேரொளி இறையோன்-தன் முன்
நண்ணிய கபீபு-தாமும் நடு அணி என்ன நின்றார்

மேல்
$3.27.122

#3881
மலை அசைந்திடினும் நீண்ட மண் அதிர்ந்திடினும் உன்-தன்
நிலை அசைந்திடேல் நீ என்ன உபையினை நெடிது கூறி
அலை கடல் படையோடும் பின் அணி என நிறுத்தினான் பின்
உலைவு இலாது அவனும் நின்றான் வரும் விதி உணரமாட்டான்

மேல்
$3.27.123

#3882
கடு விடம் அனைய வேக காலிது வல பால் நிற்ப
இட மருங்கு எல்லை மேவி இக்கிரிமாவும் நிற்ப
அடு சமர்க்கு இடியேறு என்னும் அபாசுபியான் போர் வேட்டு
நடு அணி என்ன நின்றான் நடுநிலை அறிகிலாதான்

மேல்
$3.27.124

#3883
முன் அணி என்ன நின்ற மூவரும் ஊழி ஊதை
என்னவே உயிர்ப்பு வீங்கி எரி எழ சிவப்ப கண்கள்
உன்னிய சேனை எல்லாம் ஒருங்கு உற நடத்தல் செய்தார்
செம் நிற குருதி ஊர் வேல் தீனரும் தாக்கினாரால்

மேல்
$3.27.125

#3884
பேரி ஆர்த்தன திண்டிமம் ஆர்த்தன பெரும் மல்
லாரி ஆர்த்தன பம்பைகள் ஆர்த்தன அடங்கா
வீரிய முருடு ஆர்த்தன இடம்-தொறும் விரி_நீர்
வாரியும் முகில் அசனியும் ஆர்த்தன மான

மேல்
$3.27.126

#3885
வயங்கு வேல் படை மன்னரும் மாந்தரும் வாவும்
அயங்கள் ஓட்டின வீரரும் தாக்கினர் அதனால்
இயங்கு தூளி விண் உண்டு என மறைத்தன எங்கும்
தியங்கி வானொடும் சேட்டு இளம் பருதியும் திகைப்ப

மேல்
$3.27.127

#3886
தட வரை புயத்தினும் செழும் முடியினும் தாங்கும்
குடைகள் மீதினும் நெஞ்சினும் முதுகினும் கொழும் தீ
அடரும் கண்ணினும் பாய்ந்து உக திரிந்ததேயன்றி
புடவி மேல் குரம் பட மிதித்தில சில புரவி

மேல்
$3.27.128

#3887
வெண் நிறத்த வெம் பரி சில கொடிய போர் விளைப்ப
தண் நிலா தரு படைக்கலன் கொடு மைந்தர் தாக்க
புண் நிறைந்தன குருதி நீர் பொழிந்தன புதிய
திண்ண வெம் பரி என திசைதிசை-தொறும் திரிந்த

மேல்
$3.27.129

#3888
படை கணம் தலை கெட குதித்து எழுந்து முன் பாயும்
கடைக்கண் தீ உகும் மற மன்னர் முடியினை காலால்
உடைக்கும் சக்கரம் என சுழல்தரும் விண்ணின் உயரும்
துடைக்கும் போரினை அடிக்கடி சிலசில துரங்கம்

மேல்
$3.27.130

#3889
சூலம் வாள் தனு சக்கரம் பத்திரம் சுரிகை
வேல் அம் தோமரம் பட்டையம் கதை குந்தம் விசிகம்
பாலம் ஈட்டி கொண்டு இரு படை வீரரும் பரிவின்
ஞாலம் கீழ் விழ தாக்கினர் நோக்கினர் நடுங்க

மேல்
$3.27.131

#3890
எய்துநின்றனர் எறிந்தனர் அடித்தனர் இரும் கல்
பெய்துநின்றனர் குற்றினர் அறுத்தனர் பேசி
வைதுநின்றனர் பிளந்தனர் உடலங்கள் மகுடம்
கொய்துநின்றனர் படையினால் வீரர்கள் குழுமி

மேல்
$3.27.132

#3891
வசையொடும் பெரு வஞ்சனை பேசிய மன்னர்
தசையும் சோரியும் உண்டு உண்டு பேய் பசி தணிப்ப
விசை கொள் வாம் பரி நடத்தி வெம் போர் விளையாடி
அசனி ஏறு என திரிந்தனர் சிலசில அரசர்

மேல்
$3.27.133

#3892
திறம் ததும்பிய வேலினில் சரத்தினில் தேகம்
இறந்துபோகினும் வீரங்கள் இறந்திடாது இருந்த
மறம் கொள் மைந்தர்கள் ஒருவருக்கொருவர் போர் மலைப்ப
நிறம் திறந்தன நிறம் தெரிந்தில செந்நீர் நீத்தம்

மேல்
$3.27.134

#3893
எய்யும் என்று ஒரு வீரன் முன் நிற்ப ஓர் இளவல்
வெய்ய வன் சரம் விடுத்தனன் முதுகினும் விளங்க
பைய நோக்கினன் கடுத்திலன் பாவையர் படை கண்
செய்ய வேலினும் வலியதோ என களி சிறந்தான்

மேல்
$3.27.135

#3894
கொல்லும் கூர் கணை குதைமட்டும் மார்பிடை குளிப்ப
வல்லை வாங்கினன் நோக்கினன் வளைவு உற மறுத்தும்
செல்லும் புண் வழி ஓட்டியே வளைவினை திருத்தி
வில்லில் நாண் தொடுத்து எய்தனன் அவன் ஒரு வீரன்

மேல்
$3.27.136

#3895
பொருவது என்னை யான் சரி சரி திறத்திர் என் புயத்தில்
உருவ வாளியின் எய்தனீராயினில் உமக்கே
அரிய ஆரமும் படைக்கலன்களும் விருது-அதுவும்
தருவன் என்று அவண் கூறினன் அவன் ஒரு தலைவன்

மேல்
$3.27.137

#3896
சாலும் தண் கதிர் பரப்பி ஓர் தோளினில் தபனன்
வால் இளம் பிறை வைத்துக்கொண்டிருந்தன மான
ஆலம் ஊட்டிய சக்கரம் புயத்தினில் அடுப்ப
மேலில் சோணிதம் தர ஒரு வீரன் போர் விளைத்தான்

மேல்
$3.27.138

#3897
அற்ற சக்கரம் எறிந்தனன் ஒருவன் அங்கு அதனை
வெற்றி செய்குவன் என ஒரு வீரன் ஓர் வேலால்
எற்றினான் அவை எற்றலும் ஊடு புக்கு இருந்த
முற்றும் வாரண தோட்டியாம் என சமர் முனைந்தான்

மேல்
$3.27.139

#3898
சதை அராவிய வாளினில் வேலினில் தனுவில்
உதய வாம் பரி காலினில் கரும் தலை உருண்ட
குதை அம்பு எங்கணும் உருவிட இரும் குவலயத்தில்
புதைய வீழ்ந்து உடல் அடிக்கடி துடித்தன புரவி

மேல்
$3.27.140

#3899
செம் கை வாளி விடுப்ப ஓர் செம் மறன்
அங்கமும் பிளந்து ஆவியும் உண்டு அரோ
தங்கிலாது பின் அ புறம் தாவியே
மங்கைமார்-தம் மனத்தினும் தைத்ததால்

மேல்
$3.27.141

#3900
சுடு சரங்கள் துரந்தன சோரி நீர்
உடலில் எங்கணும் ஊற்றெடுத்து ஓடின
தடி விழுந்திட தாங்க அரும் தன்மையான்
முடி தகர்ந்தன கொட்டின மூளைகள்

மேல்
$3.27.142

#3901
விடம் அழுத்திய வேல்கள் பட துடர்
குடல் சரிந்தனர் மைந்தர் குரகதத்து
உடல் பிளந்து உதிரங்களை உண்டன
தட மலர் கையின் விட்டெறி சக்கரம்

மேல்
$3.27.143

#3902
தூண்டு வெம் பரி நெஞ்சும் துளைத்து உற
கீண்டு மைந்தனையும் கிழித்து ஏறி போய்
நீண்ட ஆணி சிறப்ப நிகர்த்தன
ஈண்டும் வீரர்கள் நீட்டிய ஈட்டிகள்

மேல்
$3.27.144

#3903
தாள் இரண்டு தலைகள் இரண்டு அடல்
தோள் இரண்டு துரகம் இரண்டு பேர்
ஆள் இரண்டு என ஆக்கின எங்கணும்
பாழி மொய்ம்பினர் வெட்டிய பட்டையம்

மேல்
$3.27.145

#3904
இருத்து தீப்பொறி ஏறிய கண்ணினும்
உருத்து வாயை மடித்த உதட்டினும்
பெருத்த தோளினும் வேகம் பிறங்கிய
கருத்தின் உள்ளினும் பட்ட கவண் கல்லே

மேல்
$3.27.146

#3905
பறந்து பாய் பரி வீரர் பறித்த வாள்
எறிந்த கையினும் மார்பினும் எங்கணும்
மறம் தரும் படை சூலத்தை மாட்டிட
துறந்த வாய்கள்-தொறும் நிணம் துன்னின

மேல்
$3.27.147

#3906
வெற்றி வாளினில் வீசிட வீரர் மீ
உற்ற சந்திரன் வீழ்ந்தனன் ஒத்து என
அற்று வெண் குடை வீழ்ந்தன அ நிலா
கற்றை வீழ்ந்தன போன்ற கவரிகள்

மேல்
$3.27.148

#3907
கண்ணின் எங்கும் திரிந்து இகல் காளையர்
திண் நிறைந்த உடல்-தொறும் சேர்த்திய
புண்ணின் எங்கும் பொழிந்தன சோரியால்
மண்ணின் எங்கும் மறைத்தனவாம் அரோ

மேல்
$3.27.149

#3908
வேகம் பற்றி கிடந்த கை வீரர்-தம்
ஆகம் பற்றி கிடந்த பல் அம்பினை
காகம் பற்றி இழுத்து உடல் கவ்விட
சோகம் பற்றி தொடர்வன எங்குமே

மேல்
$3.27.150

#3909
சுணங்கும் சம்பும் துரப்ப பறவையின்
கணங்கள் விண்ணில் பறப்ப கரும் கொடி
நிணங்கள் உண்டு வயிற்றை நிறைத்தன
பிணங்கள் தின்று கொழுத்தன பேய்களே

மேல்
$3.27.151

#3910
இன்னனம் மாந்தர் யாவரும் போர்செய்திடும் வேலை
மன்னிய சேனை யாதும் மலைப்ப பிறழ் வாசி
உன்ன நடத்தி சேண் உயர் குன்றின் உறை சீயம்
அன்ன குதாதா என்று ஒரு தோழர் அவண் வந்தார்

மேல்
$3.27.152

#3911
அந்தமில் கேள்வி ஆரணமும் பேரறிவு ஊரும்
மந்திரமும் கைவந்து கிடக்கும் மலர் வாயார்
புந்தி-தனில் பொய் என்ற சொல் ஒன்றும் புகலாதார்
செம் திரு அன்னாள் தன் குடி என்றும் திரள் தோளார்

மேல்
$3.27.153

#3912
ஒருவனை நாளும் சிந்தை-தனில் கொண்டு உணர்கின்றோர்
அரிய நபிக்கு ஓர் உயிர் என வந்தோர் அடல் ஊரும்
செரு நடு நின்று வெற்றி செயும் கை திறல் வல்லோர்
உரும் என ஆர்த்து தீப்பொறி சிந்தி உமிழ் கண்ணார்

மேல்
$3.27.154

#3913
மாவை நடத்தும் வேகம் உடைத்தீர் மதிகெட்டீர்
பாவம் உடைத்தீர் வேறு மனத்தீர் பகை நாளும்
கூவி அழைத்தீர் தீன் உணர்வித்தும் குறியாதீர்
யாவரும் என் முன் போர்செய்-மின் என்று அங்கு இவை சொன்னார்

மேல்
$3.27.155

#3914
சொன்ன மொழி தீ அங்கு அவர் காதில் சுட மேன்மேல்
வன்னி உயிர்த்தால் என்ன உயிர்த்து மற மன்னர்
முன்னம் எதிர்த்து ஓர் சின்னவன் ஈது மொழிகின்றது
என் என ஊழித்தீயினை ஒத்து அங்கு எதிர் வந்தார்

மேல்
$3.27.156

#3915
கல்லின் எறிந்தார் ஆழி எறிந்தார் கனல் என்ன
செல் அயில் குந்தம் பல் படை யாவும் செல விட்டார்
வில்லை வளைத்தார் அம்பினை இட்டார் மிக மேன்மேல்
சொல்லுவது என்-கொல் மை மழை மாரி துளி போல

மேல்
$3.27.157

#3916
வரி சிலையாலும் பகழியினாலும் வடிவு ஆரும்
சுரிகையினாலும் புரவியின் ஏறும் தொழிலாலும்
பரிசையினாலும் காபிர்கள் ஏவும் படை யாவும்
அரிது அரிது அம்ம பூழ்தி என செய்து அவண் நின்றார்

மேல்
$3.27.158

#3917
காலினை ஒத்த வாசி நடத்தி கடிது ஏறும்
ஆலம் எதிர்த்தது என்ன எதிர்த்து அங்கு அணி என்னும்
வேலை மறுக்கம் கொண்டிடவே வீசினர் விண்ணில்
சூல் உறு மஞ்சின் மின் என வீசும் சுடர் வாளால்

மேல்
$3.27.159

#3918
நிலைகள் இழந்தார் படைகள் இழந்தார் நெடிது அங்கை
சிலைகள் இழந்தார் உடல்கள் இழந்தார் திடர் என்ன
தலைகள் இழந்தார் குடர்கள் இழந்தார் தடம் ஆர் தோள்
மலைகள் இழந்தார் உயிர்கள் இழந்தார் மற மன்னர்

மேல்
$3.27.160

#3919
தெருட்டு சிங்கம் அன்ன குதாதா செரு மீதின்
அருள் தங்கில கண் அபசி திறன் மன்னவர் எல்லாம்
சுருட்டு பங்கி திண் உடல் துண்டம்பட வீழ்ந்தார்
இருட்டு துண்டம் எங்கணும் வீழ்ந்தது இணை என்ன

மேல்
$3.27.161

#3920
வீரர் ஒருத்தர் வந்தனர் எல்லாம் மிக வீழ்த்த
சூரம் மிகுத்த காபிர்கள் எல்லாம் தொலையாத
போரின் மிகுத்தார் சூழ வளைத்தார் பொருவு இல்லா
வீரம் மிகுத்த வெம் நரகத்தினிடை வீழ்வார்

மேல்
$3.27.162

#3921
வேலும் மழுவும் சூலமும் ஓட்டி விறல் செய்யும்
கோலும் வாளும் குந்தமும் கொண்டு ஓச்சினர் அம்ம
காலும் தோளும் முகமும் மெய்யும் களமும் கை
மேலும் எங்கும் மூடின மிகவும் தெரியாமல்

மேல்
$3.27.163

#3922
அன்னவை ஏவும் படையினில் ஓர் அம்பு அனல் என்ன
உன்னி விலக்கும் பரிசையினும் சென்று உருவி போய்
மன்னவர்_மன்னர் கண்ணினிடத்தும் அறிவுற்ற
பொன் நிறம் முற்றும் தாமரையுள் புக்கியது என்ன

மேல்
$3.27.164

#3923
ஆங்கு அது தைத்தும் கோபம் அனைத்தும் அகலாமல்
தாங்கினர் வாயை கவ்வி மடித்து தழல் அம்பை
வாங்கினர் வாங்கும் போதினில் பாவை மணியோடும்
தேங்கின கண்ணீர் ஓடின முற்றும் சிதைவுற்ற

மேல்
$3.27.165

#3924
வல்லை வல கண் இற்றதை ஓர் கை மலராலே
மெல்ல அமைத்து போரினை நீத்து வெளியுற்று
செல் உயர் வானில் கவிகை நிழற்ற திகழ்கின்ற
வில் உமிழ் மேனி தூதர் முன் வந்தார் விறல் கொண்டார்

மேல்
$3.27.166

#3925
விண்ணும் கண்டார் எண்ணார் எண்ண மிகு போர் செய்து
உண்ணும் கைவாள் கண்டார் தேகத்து ஒளிர்கின்ற
புண்ணும் கண்டார் கொல் நுனை அம்பில் புழைபட்ட
கண்ணும் கண்டார் வேத அறத்தின் கரைகண்டார்

மேல்
$3.27.167

#3926
வெற்றி உணர்ந்தீர் கற்றும் அறிந்தீர் மிகை பாவ
குற்றம் உணர்ந்தீர் தீன் நிலை முற்றும் குடிகொண்டீர்
துற்றிய காயம் பீசபீல் நீரும் துயர் எய்த
பற்றுதல் வேண்டாம் என்றனர் வேத பயகாம்பர்

மேல்
$3.27.168

#3927
வாசம் உணர்த்தி சோதி விளக்கும் வடிவத்தார்
பேசிய முற்றும் காதினில் உற்றும் பிரிவு இல்லா
நேச மனத்துள் கொண்ட குதாதா நிலை நின்று
தூசை ஒதுக்கி பைய ஒர் மாற்றம் சொல்கின்றார்

மேல்
$3.27.169

#3928
துய்ய போர் முன் நின்று அங்கம் துளைபட கீண்டு நீண்ட
கை இழந்திடினும் சேந்த கண் இழந்திடினும் என்றும்
ஐயனே துயர் கூர்ந்து உள்ளம் அஞ்சுவது ஆண்மை அன்றே
வெய்ய கோல் நீக்கி நாளும் செய்ய கோல் விளைத்து நின்றோய்

மேல்
$3.27.170

#3929
மன்னவன்-தன்னை போரின் வடுப்பட காட்டி விட்டு
பின்னர் ஓர் வழியின் எய்தும் பேடியில் பெரியன் ஆகும்
பன்னிய காயம் எய்தி பருவரல் எய்தி நின்றோன்
அன்னதால் அடியேன் துன்பத்து அழுங்கிலேன் இன்னும் கேளீர்

மேல்
$3.27.171

#3930
அன்று நான் கொண்டு வாழ்ந்த அரிவை தன் விதியினாலே
பொன்றினள் இன்று கொண்ட பூவையோ இளமை நாளும்
ஒன்றிய பருவத்து அன்னாள் ஊடல் ஓர்பொழுதும் தாங்காள்
மன்றினின் யாரும் கேட்க உடும்பினால் வசனம் கொண்டோய்

மேல்
$3.27.172

#3931
நஞ்சினை அமைத்து மெய்யா நாட்டம் என்று உரைத்த கண்ணாள்
கொஞ்சிய கிளியை போல குழறிய குதலை வாயாள்
மிஞ்சு இருள் படலம் துண்ட விதுவினுக்கு உடைந்து பின்னர்
அஞ்சி வந்து ஒளித்தது எல்லாம் அளகமா கொண்டு நின்றாள்

மேல்
$3.27.173

#3932
வாங்கு வெம் சிலை கை தன்னால் வல கணை மறைத்து தேடி
ஆங்கு அவளிடத்தில் போனால் அரும் துயர் எய்த நோக்கி
தீங்கு உறும் கண்ணன் என்றே சிந்தையில் கொள்வாள் என்ன
தாங்கினன் அல்லால் வேறு தாங்கிலேன் தமியேன் என்றார்

மேல்
$3.27.174

#3933
கேட்டு உளம் மகிழ்வு பூப்ப கரி என புயங்கள் ஓங்க
வாட்டம் இல் மனத்தின் ஈங்கு வம் என இருத்தி கையால்
நீட்டி ஊறுற்ற கண்ணை நீவினர் எவரும் காண
தோட்டு முண்டகத்தை மற்று ஓர் கமலத்தால் துடைத்தது ஒத்தே

மேல்
$3.27.175

#3934
ஊறுபட்டு உதிரம் கான்ற நயனம் உள் அகன்று செவ்வி
மீறி முன் இருந்த கண்ணின் வீறுகொண்டு அவனியுள்ளோர்
பேறு இது என்று அதிசயிப்ப யாவர்க்கும் பெரியனான
ஈறிலான் அருளின் வண்ணத்து ஒளி சிறந்து இலங்கிற்று அன்றே

மேல்
$3.27.176

#3935
மின் அவிர்ந்து ஒளிரும் வாள் கை விறல் குதாதாவில் தோன்றும்
மன்னவர் முதலாய் வந்த வழிவழி தோன்றல் யார்க்கும்
பின்னை நாள் எல்லைமட்டும் நோக்கு ஒன்று பெரியதாக
நம் நபி பறக்கத்தாலே நல்கினன் இறையோன் அன்றே

மேல்
$3.27.177

#3936
அரிய கண் வடுவும் தீர்ந்து உள்ளகம் மகிழ்ந்து அளவில்லாத
பெரு வலி எய்தி ஒன்னார் பெரும் சமர் கடப்பேன் என்ன
சொரி கனல் பொறி புரூரம் சுட விழித்து இமைப்பில் செல்லும்
புரவி எனும் காற்றின் ஏறி பதாகினி கடலுள் புக்கார்

மேல்
$3.27.178

#3937
தானையின் நடுவண் சென்று தாக்கினர் தாக்கலோடும்
சோனை மும்மாரி என்ன பொழிந்தன சோரி சென்னி
மீன் என திகழும் சோதி முடியொடும் வீழ்ந்த எங்கும்
தூ நிற பரிகள் வேகம் உயிரொடும் துறப்ப வீழ்ந்த

மேல்
$3.27.179

#3938
இனையன போர்செய் வேளை எண்ணலர்க்கு இடியேறு அன்னார்
முனை சமர் எதிர்த்தோர்-தங்கள் இறுதியின் முடிவு கண்டோர்
குனி சிலை தழும்பின் கையார் கொற்ற வேல் சகுசு மைந்தர்
வனை கழல் இலங்கு தாளார் அப்துல்லா என்னும் மன்னர்

மேல்
$3.27.180

#3939
கருத்தினும் சிரத்தின் மீதும் கபீபு செங்கமல பாதம்
இருத்தி நல் பிசுமில் ஓதி இலங்கும் வாள் கரத்தின் ஏந்தி
திரு திகழ் புய காலீது சேனையில் சீயம் ஒப்ப
ஒருத்தரும் தனி சென்றார் ஊங்கு உறு சமர் விளைந்தது அன்றே

மேல்
$3.27.181

#3940
தீய்ந்தன கவரி கண்ணில் தீப்பொறி தெரிக்க மைந்தர்
மாய்ந்தனர் பரிகள் மண்ணின் மடிந்தன புண்ணில் சோரி
சாய்ந்தன பிணத்தின் குப்பை தழைத்தன குன்றம் ஒப்ப
ஓய்ந்திலா சினத்தின் வீரர் ஓங்கிய தாரை வாளால்

மேல்
$3.27.182

#3941
அன்னது கண்டு ஓர் வீரன் அனல் என புழுங்கி யாவும்
வெந்நிடத்து ஒளிர வீக்கி ஊழி வெம் காலை ஒத்த
மன்னிய பரியின் ஏறி வஞ்சினம் கூறி வாள் கை
மின்னிட விரைவின் வந்தான் வீரத்தின் இறுதியில்லான்

மேல்
$3.27.183

#3942
இன்று நீ போர்செய்தாய் வந்து எதிர்த்தவர் யாரும் வீழ்ந்து
பொன்றினரல்லால் நின்று பொருகுனர் இல்லை கண்டாய்
வன் திறன் முற்றும் கொண்டாய் வாளினில் ஒப்பிலாதாய்
வென்றியை விளைத்து நின்றாய் இடியினை வெதுப்பும் கண்ணாய்

மேல்
$3.27.184

#3943
ஆதலால் உனது வீரம் அனைத்தையும் அறிவோம் என்ன
காதலாய் வேட்டு வந்தேன் வெம் சமர் திறனும் காண்டி
நீ தனி நிற்பது என்னோ நீண்ட வெம் படைகள் தாங்கி
பூதலம் அறிய இன்னே என்னுடன் பொருதி என்றான்

மேல்
$3.27.185

#3944
வந்து என் முன் நின்று சற்று மலைவு இலாது உரைத்த மாற்றம்
வெம் திறல் மன்னரேனும் விளம்புவது அரிது கண்டாய்
சுந்தர சிரமும் கையும் தோளொடு வலியும் அற்று
சிந்திடா முன்னம் வந்த நெறியினில் சேறி என்றார்

மேல்
$3.27.186

#3945
வீசு வாள் சகுசு பெற்ற சந்ததி வெகுளியோடும்
பேசிய மாற்றம் கேட்டு பெரு வரை நெரிய ஆசை
கூசிட உலகம் உட்க கொடுமரம் குழைய வாங்கி
மாசு அறு கணை ஒன்று எய்தான் மை முகில் இடியேறு என்ன

மேல்
$3.27.187

#3946
வெம் சரம்-அதனை தன் கை வெம் சரத்து அறுத்து மற்றும்
நஞ்சு உறு கணை ஒன்று எய்தார் நலிவிலாதவனும் ஆங்கு
பஞ்சு என விலக்கிவிட்டு பாய் பரி கடிதின் ஏவி
செம் சுடர் பரிதி என்ன சாரிகை திரிந்தான் மன்னோ

மேல்
$3.27.188

#3947
நிலம் கிழிபட மா தூண்டி நேர் எதிர்ந்து இதழ் அதுக்கி
விலங்கி வில் உமிழும் வாளால் வீசினர் வீசலோடும்
அலங்கு உளை கலின மாவும் ஆங்கு அவன் உடலும் செந்நீர்
இலங்கிய வாளும் கூட இரண்டு கூறு ஆயது அன்றே

மேல்
$3.27.189

#3948
வாள் தெறித்திட போர் நின்ற மன் அபுதுல்லா என்னும்
சேட்டு இளம் சிங்கம் காபிர் சேனை அம் கடலை நீந்தி
மூட்டு எரி கனல கண்கள் முகம் குறுவெயர்வு சிந்த
நாட்டு இசை கொண்ட வேத_நாயகர் முன்னர் வந்தார்

மேல்
$3.27.190

#3949
மண்டு அமர் கடந்த வை வேல் மன்னர் ஊன் உயிரை வாய் வைத்து
உண்ட செம் கதிர் வாள் துண்டமுற்றதை இரு கண் ஆர
கண்டு உளம் மகிழ்ந்து வேறு படைக்கலம் காண்கிலார் கை
கொண்டனர் ஈத்தம் பாளை ஈர்க்கினை குதா-தன் தூதர்

மேல்
$3.27.191

#3950
எடுத்தது ஓர் ஈத்தம் பாளை ஈர்க்கினை அப்துல்லா கை
கொடுத்தனர் விரும்பி வாங்கி கொண்டபோது எழில் குலாவும்
தடித்து என மிளிர்ந்து வெய்ய தழல் என கதிர்கள் மேன்மேல்
விடுத்து வெம் கூர்மை தாங்கி வாள் என விளங்கிற்று அன்றே

மேல்
$3.27.192

#3951
சுரிகையை கரத்தின் ஏந்தி சூறையில் சுழலும் வேக
பரியினை நடத்தி வேத நம் நபி பாதம் போற்றி
அரி ஒன்று மின் ஏறு ஏந்தி புகுந்து என அநீக வேலை
வெருவுற தாக்கினார் மேல் விண்ணவர் மகிழ அன்றே

மேல்
$3.27.193

#3952
பேயினுக்கு உணவு காட்டி உயிர் உண்டு பிறங்கும் செய்ய
ஆயுதம் கையில் காட்டி அடிக்கடி வெகுளி என்னும்
தீ அழல் விழியில் காட்டி சென்னியில் தும்பை காட்டி
வாயினில் சபதம் காட்டி வந்தனர் வீரர் எல்லாம்

மேல்
$3.27.194

#3953
புண் இடம் உற்ற மேனி காபிர்கள் புழுங்கி ஆர்த்து
மண் இடம் இல்லை என்ன வந்துவந்து உயிர்த்து கையால்
எண்ணிடம் இல்லை என்ன எறிந்தனர் படைகள் எல்லாம்
விண் இடம் இல்லை என்ன தூர்த்தன விரைவின் எங்கும்

மேல்
$3.27.195

#3954
வலத்தினும் இடத்தும் முன்னர் மருங்கினும் பின்னர் பாலும்
சொல தகாது என்ன வந்து சுற்றினர் அடர்த்து நின்றார்
நலத்தகு தீனர்-தாமும் நகையொடும் வெகுளியோடும்
வெல தகு வாள் கை ஏந்தி போர் விளையாடலுற்றார்

மேல்
$3.27.196

#3955
கற்றை அம் வால்கள் அற்ற கவி குளம்பு அற்ற வாமம்
உற்ற பேர் உடலும் அற்ற உரத்தொடு முதுகும் அற்ற
வற்ற நீள் செவியும் அற்ற வளை முகம் அற்ற காலும்
கொற்ற வெம் கோடை என்ன திரிதரு குரகதங்கள்

மேல்
$3.27.197

#3956
பீடு உறும் வலியினோடும் கிடந்தன பிறங்கல் தோள்கள்
சேடு உறும் நகையால் பூட்டும் இதழொடும் கிடந்த சென்னி
கேடகத்துடனும் கைகள் கிடந்தன விருதினோடும்
ஆடக கழலினோடும் கிடந்தன அடிகள் அம்ம

மேல்
$3.27.198

#3957
கொடியொடு கவரி வீழ்ந்த குடையொடு சிவிறி வீழ்ந்த
இடி என முழங்கி ஆர்த்த இயம் பல வீழ்ந்த செவ்வி
முடியொடும் தொங்கல் வீழ்ந்த வீழ்ந்த முத்தாரம் எங்கும்
படியினில் இடம் இல் என்ன பருந்தொடும் சகுந்தம் ஆர்ப்ப

மேல்
$3.27.199

#3958
வீரமும் உண்ட மாறா வெற்றியும் உண்ட ஏவும்
கோர வாம் பரியின் வேக குணத்தையும் உண்ட வெய்ய
போரையும் உண்ட மான புகழொடும் அறமும் உண்ட
காரணத்துடையார் தந்த காரண வடி வாள் மன்னோ

மேல்
$3.27.200

#3959
விண்ணினை பிளக்கும் நீண்ட மேருவை பிளக்கும் தாழ்ந்த
மண்ணினை பிளக்கும் வானத்து இடியையும் பிளக்கும் நோக்கும்
கண்ணினை பிளக்கும் நாளும் கருத்தினில் பொருவோம் என்னும்
எண்ணினை பிளக்கும் என்றால் யாவரே எதிர வல்லார்

மேல்
$3.27.201

#3960
கந்தர கவிகை வள்ளல் துணை அடி கமலம் நாளும்
வந்தனைசெய்யும் சிங்கம் கடைதரு மத்தை ஒத்தார்
சுந்தர புய காலீது மன் அபாசுபியான் ஏவும்
வெம் திறல் சேனை எல்லாம் வெண் தயிர் ஒத்த மன்னோ

மேல்
$3.27.202

#3961
குறைசி அம் காபிர்-தாமும் கனானத்து குழுவுள்ளோரும்
அறம் அணுகாத வன் நெஞ்சு அபசி மன்னவர்கள்-தாமும்
திறன் உடை தலைவர்-தாமும் செம்மை இல் அரசர்-தாமும்
முறைமுறை அணிகளோடும் முறிந்தனர் மலைந்து மாதோ

மேல்
$3.27.203

#3962
செரு மடிந்தன சிரம் மடிந்தன
கருதி எங்கணும் கழுது துன்றின
பருதி மண்டலம் அனைய பண்பு என
குருதி மண்டின குடர் மிதந்தன

மேல்
$3.27.204

#3963
வானம் மீதினும் பாயும் மா எலாம்
ஆன வேகமும் அவிய நூறின
சோனை மாரியில் சோரி வீழ்தர
சேனை வீரரும் சிதறி ஓடினார்

மேல்
$3.27.205

#3964
ஓடினார் சிலர் உள் மயங்கி மெய்
வாடினார் சிலர் வலிய கானினை
தேடினார் சிலர் செருவில் நின்று முன்
வீடினார் சிலர் வீரர் வீரரே

மேல்
$3.27.206

#3965
நின்று போர்செயும் நேரலார் எலாம்
சென்ற பின்னரும் தீனர் யாவரும்
வென்றி வாசியும் மின்செய் ஆரமும்
துன்று பாசறை சூறையாடினார்

மேல்
$3.27.207

#3966
பரிவொடும் சமர் பார்க்க வந்த மை
கரிய பூம் குழல் கால வேல் விழி
அரிவை மாதரும் ஆடல் மாந்தரும்
தரியலார்கள் பாசறையை மேவினார்

மேல்
$3.27.208

#3967
சித்திரம் திகழ் செய்ய மோலியும்
பத்தி பாய் ஒளி பைம் பொன் ஆரமும்
நித்திலங்களும் நிகர் இலாதன
வத்திரங்களும் வவ்வினார் அரோ

மேல்
$3.27.209

#3968
அலையெடுத்து எறி குருதி ஆற்றிடை
விலையிடற்கு அரிது அனை வேலொடு
சிலை எடுத்தனர் திறம் அடுத்த திண்
மலை அடுத்த தோள் வலிய வீரரே

மேல்
$3.27.210

#3969
கவரியும் பல கவிகையும் பல
சிவிகையும் பல சிவிறியும் பல
துவள்தரும் கொடி பலவும் தோன்றலால்
குவிதரும்படி கொள்ளை கொண்டனர்

மேல்
$3.27.211

#3970
சிறிய நூல் இடை தெரிவைமார்களும்
குறைவு இல் பாசறை கொள்ளை மேவி அங்கு
உறைதல் கண்டனர் ஈனம் என்னும் ஓர்
மறு இல் பின் அணி மைந்தர் யாருமே

மேல்
$3.27.212

#3971
அலையினும் திகழ் அறிவு தங்கிய
கலை உணர்ந்த மெய் கபீபு உரைத்திடும்
சொலை உணர்ந்தனர் அப்துல்லா நெடு
மலை அதிர்ந்தினும் மனம் அதிர்ந்திலார்

மேல்
$3.27.213

#3972
அல் துடைத்த வேல் அப்துல்லாவொடு
வெற்றி செய்துறும் வீரர் பத்து அலால்
மற்ற நாற்பது மைந்தரும் அவண்
துற்ற எங்கணும் சூறையாடினார்

மேல்
$3.27.214

#3973
சூதர் பாசறை சூறையாடிய
போது ஒலீது அருள் பூசல் ஏறு அனான்
வாது அபாசுபியானை வா என
ஓதியே மறுத்து ஓதுவான் அரோ

மேல்
$3.27.215

#3974
நெய் மறந்திலா நெடிய வேலொடு
வை மறம் திகழ் வாள் மறந்தனர்
மெய் மறப்ப நம் முதுகு வெட்டிய
கை மறந்தனர் கொள்ளை கண்டதால்

மேல்
$3.27.216

#3975
திரு உறும் தனி சீயம் ஒத்தவர்
மருளுறும் திறல் தீனின் மன்னவர்
அரியது எய்துறும் அளவில் பாசறை
பொருளை நாடினார் ஆவல் பொங்கியே

மேல்
$3.27.217

#3976
சீலம் மேவிலா சிறிதுபேரொடும்
ஆல மன்னவன் ஆங்கு நின்றனன்
சால நம்-தம் மா தானையாகிய
வேலையை கொடு மீளவேண்டுமால்

மேல்
$3.27.218

#3977
கண்டு போவது கவ்வை அன்று இனி
மண்டு தானையை வதைத்து வென்றியை
கொண்டுபோதலே குறிப்பு எனா இவண்
விண்டு உரைத்தனை மெய்மையே என்றான்

மேல்
$3.27.219

#3978
சொல்லி வாகினி தூண்டி காலிது
வில் உறும் கர வீரர்-தம்மொடும்
அல்லல் வந்து உற அப்துல்லாவையும்
வல்லை வந்து வளைந்து கொண்டனன்

மேல்
$3.27.220

#3979
அல்லினால் உருவெடுத்தன போன்று எழும் அபசி
பல்லர் சூழ்தர காலிது போரினில் படுப்ப
மல்லின் ஊறு தோள் அசைதர நகைத்து உடல் வளைந்த
வில்லினால் இனி தொலைப்பன் என்று அப்துல்லா வெகுண்டார்

மேல்
$3.27.221

#3980
வெப்பு வீசிய கனல் பொறி தெறித்திட விழித்து
செப்பு வாய் இதழ் கறித்து வெம் சினத்தினை காட்டி
அப்பு மாரி கொண்டு இறைத்தன போல் சரம் அளித்து
தப்புறாது ஒரு சரங்களில் தலைகளை தடிந்தார்

மேல்
$3.27.222

#3981
வெய்ய வன் சரம் யாவையும் விடுத்தனர் விரைவில்
கையில் வில் அன்றி படைக்கலன் மற்றொன்றும் காணார்
செய்வது ஏது என நின்றனர் திகைத்தனர் சிரித்தார்
உய்யலாம் வகை ஊழ் வந்து தொடர்ந்தக்கால் உண்டோ

மேல்
$3.27.223

#3982
திவளும் வேல் கணை இன்று என காலிது சினந்து
தவிர்கிலாது அற நெருக்கினன் பிடித்தனன் சணத்தின்
அபுதுல்லாவொடு பதின்மர்-தம் தலைகளும் அறுத்து
குவலயத்திடை வீழ்த்தினன் குருதி நீர் கொழிப்ப

மேல்
$3.27.224

#3983
ஆண்டு வீந்தவர் உடை கொண்டு மகிழ்ந்து அடல் அநீகம்
தூண்டி எண் திசை திடுக்கிட பேய் கணம் தொடர
கூண்ட தீனவரொடு முகம்மது-தமை கோறல்
வேண்டி வந்தனன் வளைந்தனன் வளைந்திடும் வேலை

மேல்
$3.27.225

#3984
மானமுள்ளவன் போலவும் வணக்கத்தின் மதித்த
தீனன் போலவும் அறபியை போலவும் சிதைந்த
ஈன வஞ்சக மாயவன் கொடியவன் இதம் இல்
ஊனமுற்ற கண்ணினன் தொடர்ந்து எவரையும் உலைப்போன்

மேல்
$3.27.226

#3985
வந்து தீனவருடன் நின்று மணி கரம் கோத்து
நொந்து சென்னி வைத்து அடிக்கடி யாரையும் நோக்கி
கொந்து உலாவிய முகம்மது சடம்-தொறும் குருதி
சிந்த வீந்தனர் காண் என கூவினன் திகைப்ப

மேல்
$3.27.227

#3986
திக்கு அனைத்தினும் தெரிதர கூவி உள் தெளியாது
அக்கம் நீர் தர கிடந்து ஐயகோ என அழன்று
விக்கி வாய் குழறிக்கொண்டு வயிற்றினை விரைவின்
எக்கி ஏங்கி நின்று அழுதனன் புலம்பினன் இரங்கி

மேல்
$3.27.228

#3987
படியில் வீழ்ந்து எழுந்து உடல் எங்கும் அடிக்கடி பதறி
கொடிய வஞ்சக சூமன் வந்து அழுது இவை கூற
மடிவு இலா மன தீனவர் யாவரும் மலைந்து
விடிவது என் என ஓடினர் முறிந்தனர் மிகவும்

மேல்
$3.27.229

#3988
முற்றும் தீனவர் சூமன்-தன் வாய்மையின் முறிய
உற்ற நம் நபி அபூபக்கர் அடல் உமறு உதுமான்
வெற்றி சேரும் அப்பாசு அமுசா மிசுஅபுவும்
மற்று நாலைந்து மைந்தரும் நின்றனர் மாதோ

மேல்
$3.27.230

#3989
காலிது ஓர் புறத்தினில் நின்று பொருவதும் கலைந்து
வேலை போவ போல் தீனவர் பறிந்ததும் மேன்மேல்
கோல மா நபி வீந்தனர் என்றதும் குறித்து
தாலம் கீழுற காபிர்கள் மீண்டு வந்தனரால்

மேல்
$3.27.231

#3990
பொன்றி ஊன் பொழி களத்திடை வருகின்ற போழ்தில்
வென்றி வெண் குடை கவரி பேரிகை பல வீழ்ந்தது
ஒன்றிலாது எடுத்து இரு படை தலைவரும் உயர்ந்த
நன்றி செய் நபி-தமை வந்து வளைந்தனர் நலிய

மேல்
$3.27.232

#3991
பட்டயத்தினும் வாளினும் வில்லினும் பரந்த
நெட்டு இலை தலை சூலத்தினும் தசை நிறைந்த
வட்ட நேமியினும் கவண் கல்லினும் வாய்ந்த
கட்டு பத்திரத்தினும் கொண்டு நீட்டினர் கடிதின்

மேல்
$3.27.233

#3992
வெம் திறல் கரம் கிழித்து அழன்று ஓடின வேல்கள்
சந்தனம் படர் உரங்களில் புகுந்தன சரங்கள்
சிந்த மைந்தர்-தம் சென்னியை உருட்டின திகிரி
கந்தரத்து உறும் இடி என வீழ்ந்தன கவண் கல்

மேல்
$3.27.234

#3993
இன்ன தன்மையின் வடுப்பட தீனவர் இதனால்
பின்னை ஏதும் அங்கு உணர்ந்திலர் சினம் கணால் பெய்து
மின் இலங்கு வேல் அடல் அமுசா எனும் வீரர்
சின்னம் ஆக்குவன் என்று கை கொண்டனர் சிலையை

மேல்
$3.27.235

#3994
எடுத்த வில் குணம் செவி உற வாங்கி முன் இகலி
அடுத்த சேனை மேல் விடுத்தனர் பல சரம் அவை போய்
தொடுத்த வில்லையும் சரத்தையும் வேலையும் துணித்து
கடுத்த வேந்தர்-தம் முடியொடு முடியையும் களைந்த

மேல்
$3.27.236

#3995
மாருதத்தினை ஒத்து எழும் பரியொடும் வலிய
வீரர்-தம்மையும் வீழ்த்தியும் ஊன் சுவை வேண்டி
ஆரம் வீற்றிருந்து இலகிய மணி முடி அரசர்
பார தோள் பருப்பதத்தினும் புகுந்தன பகழி

மேல்
$3.27.237

#3996
துற்று வெம் சரம் எய்து எய்து தூணியும் தொலைந்த
வெற்றி வாள் படை எறிந்து எறிந்து அழிந்தன விலக்கி
பற்றும் கேடகம் சிதைந்தன மற்றும் வெம் படையும்
முற்றும் போயின நின்றனர் அவண் விதி முடிய

மேல்
$3.27.238

#3997
விலகுதற்கு அரிது எனும் சரம் போயும் போர் வேட்ப
நிலையிலா சமையம்-தனை பொருள் என நினைந்த
இலகு திண் கழல் வேந்தர்கள் மூவரும் இரங்காது
அலகில் வேல் படை யாவையும் ஏவினர் அன்றே

மேல்
$3.27.239

#3998
கொடிய நஞ்சு என தீ என உரும் என கொதித்த
படைகள் யாவும் வந்து அடல் அமுசா உடல் பாங்கின்
இடம் உண்டு இல் என பாய்ந்தன துளைத்தன எங்கும்
உடையவன் விதிப்படி அலால் வேறு என்பது உண்டோ

மேல்
$3.27.240

#3999
கையும் குன்று எனும் தோளும் வல் உரத்தொடும் கழுத்து
மெய்யும் தாளும் பொன் நெற்றியும் துண்டமும் வெரிநும்
செய்ய நோக்கமும் ஈது என தெரிந்தில திரண்ட
குய்யம் பூண்டவர் படைக்கலன் விடுத்த வெம் கொடுமை

மேல்
$3.27.241

#4000
மெல்ல நின்று நின்று அசைந்து அசைந்து உணர்வு மேலாட
இல்லல்லாவையும் கபீபையும் உளத்தினில் இருத்தி
கல்லும் நல் மொழி வாக்கினில் அடிக்கடி கலிமா
சொல்லி வீழ்ந்தனர் போயினர் உறைந்தனர் சுவனம்

மேல்
$3.27.242

#4001
இன்னவாறு தீனவர் சிலர் ஆர்ப்பொடும் இகலி
சின்னபின்னம்பட்டு உயிர் விடுத்து அணி உடல் சிதைய
பொன்னின் மா நகர் புக்கினர் புக்கியும் காபிர்
பின்னரும் படையொடும் கவண் எறிந்தனர் பிறங்க

மேல்
$3.27.243

#4002
விசை கொண்டு ஈண்டிய கவண் கல் வெம் போரினை விளைப்ப
வசை இலாது அடல் முகம்மது மார்பினும் வாமம்
இசையும் நெற்றியினும் சென்று தாக்கின இதனால்
திசையும் ஆசையும் இரங்கிட இருந்தனர் தியங்கி

மேல்
$3.27.244

#4003
ஈது அலாது ஒரு கவண் கல் கீழ்வாய் புறத்து இலங்கும்
சோதி மூரலும் சிதைத்திட தைத்தது தொகுத்த
பூதலத்தினில் உணர்வுடன் சாய்ந்தனர் பொருவா
மாதிரத்தொடும் மதியொடும் பேசிய வள்ளல்

மேல்
$3.27.245

#4004
பத்தி மீறிய தீனவர் படவும் அ கவணால்
அத்து இதத்து இயல் படர் ஒளி முகம்மது-தமக்கும்
கத்தன் ஏவலில் துனி வந்து கருதியது என்றால்
எ தலத்தினும் யாவரே துன்பம் இலாதார்

மேல்
$3.27.246

#4005
வண்டு பாண்செயும் தொடை புய ககுபு எனும் மன்னர்
கண்டு வீந்தனரோ என மனத்தினில் கலக்கம்
கொண்டு தூதர் முன் அணுகினர் அணுகலும் குறித்து
விண்டிலாது உற நோக்கினர் தாமரை விழியால்

மேல்
$3.27.247

#4006
ஆய்ந்த நெஞ்சினர் ககுபு காண்டலும் அடல் நயினார்
வீய்ந்ததின்று நம் தீனவரே பெறு விசயம்
தீய்ந்து போம்படி சென்றனிரோ திகைத்தனிரோ
சாய்ந்து போகின்றது என் என கூவினர் தழைப்ப

மேல்
$3.27.248

#4007
வாரும் என்று அவர் அடிக்கடி விளிக்கின்ற வாய்மை
பாரும் நம்மையும் வகுத்து அளித்தவன் அருள்படியால்
தேரும் காவத வழி திசை கேட்டனர் தீனோர்
யாரும் மீண்டனர் கபீபை வந்து அணுகினர் எங்கும்

மேல்
$3.27.249

#4008
உன்னும் வஞ்சகன் கலபு அருள் மகன் உபை என்னும்
மன்னன் ஈது எலாம் உணர்ந்தனன் துணுக்குற்று மயங்கி
கன்னம் மீது கை வைத்தனன் கலங்கினன் முகம்மது
இன்னமே இருக்கின்றனனோ என எண்ணி

மேல்
$3.27.250

#4009
மறம் ததும்பிய முகம்மது சமய வெவ் வலியோடு
இறந்து போயினன் என்று இவண் இருந்தனன் இன்னே
பிறந்தது ஓர் மொழி என்று கண் சிவந்து கை பிசைந்து
சிறந்த வேல் எடுத்து ஆர்த்தனன் புழுங்கினன் சினந்தான்

மேல்
$3.27.251

#4010
கட்டு வாய்மையின் முகம்மது-தனை கயாத்துடனே
விட்டு போவதற்கு எளியனோ என மனம் வெகுண்டு
மட்டிலாத பல் பாசைகள் கூறி வெவ் வாசி
எட்டி ஏறினன் நடத்தினன் பணி பயந்து இரங்க

மேல்
$3.27.252

#4011
பண்டு தோன்றிய முகம்மது பரியினில் ஏறி
வண்டு உறுக்கி மேல் வருபவன்-தனை எதிர் மறியாது
எண் திசையினும் புகழ்தர விடு-மின்கள் என்ன
விண்டு நின்றனர் அவனும் ஆங்கு உற்றனன் விரைவின்

மேல்
$3.27.253

#4012
முன்னர் வந்து அடல் வாளினில் ஓங்கும் முன் முசுலிம்
மன்னர் ஆரிது வேலினை நபி கையின் வாங்கி
தென் உலாவிய பிடங்கினால் நீட்டினர் திறல் சேர்
அன்னவன் களத்திடையினில் பட்டன அன்றே

மேல்
$3.27.254

#4013
காயம் இன்று அரும் களத்திடை பட்டன கண்டான்
கூயினான் இனி என் செய்குவேன் என குழறி
பாயும் வெம் பரி புடைத்தனன் படையொடும் முறிந்து
போயினான் இதோ கொன்றனன் காண் என புலம்பி

மேல்
$3.27.255

#4014
போதுகின்றவன்-தனை விளித்து அடிக்கடி புலம்பி
ஓதுகின்றனை வெகுண்டனை பயந்தனை உடைந்தாய்
சீ தகாது உன்-தன் களத்திடை காயமும் தெரிவது
ஏதும் இல்லை என்று உணர்த்தினர் மருங்கினில் எவரும்

மேல்
$3.27.256

#4015
உற்ற வாசகம் கூறினிர் ஏது என உணர்ந்தீர்
குற்றினான் குறைத்தான் பெரும் வஞ்சனை கொலைசெய்து
எற்றினான் உய்வது ஏது வல் உயிரையும் எளிதில்
பற்றினான் என்று சாய்ந்தனன் விழுந்தனன் படியில்

மேல்
$3.27.257

#4016
ஒடுங்கி வாய் புலர்ந்து ஆ தெய்வமே உனை உவந்து
தொடங்கி பூசைசெய்திடு பலன் யாவுமே தோன்றி
இடம் கொண்டு இப்படியோ வந்து முடிந்தது என்று ஏங்கி
நடுங்கி துன்புற்று வீந்தனன் போயினன் நரகம்

மேல்
$3.27.258

#4017
மாறுகொண்டவன் இடத்தினில் ஏகினன் மருண்டு
கோறல் செய்தனன் காண் என திரும்பினன் குழறி
ஊறும் காண்கிலம் விழுந்தனன் வீந்தனன் உழன்ற
வாறு இது ஏது என கலங்கினர் பெரும் குபிர் வயவர்

மேல்
$3.27.259

#4018
என்ன பாவம் இங்கு என் செய்கை ஏது வன் மாயம்
வன்னி ஒத்து எழு சினத்தினன் வீந்திடும் வகை என்று
உன்னி உன்னி நெஞ்சகத்து எழும் அறிவையும் ஓட்டி
தன்னையும் மறந்து உடைந்தனர் கடைபடு தயிரின்

மேல்
$3.27.260

#4019
வீடி போனது அன்று அவன் விடும் வஞ்சம் நம் விதியும்
கூடி கொண்டு அங்ஙன் மூட்டுதல் துணிந்தது கோறல்
நேடி பாய் புலி அடங்கிய போல் நபி நின்றான்
ஓடிப்போவது கருமம் என்று அனைவரும் உரைத்தார்

மேல்
$3.27.261

#4020
விண் துளாவிய நறும் கொடி படலமும் விரிந்த
கொண்டல் கீழ்தர குலவிய குடைகளும் கொதித்து
மண்டு போர்செயும் படைக்கலன்களும் மண்ணில் வழங்கி
ஒன்றியாய் சென்று போயினர் அரசர் தம் ஊரின்

மேல்
$3.27.262

#4021
தூசு விட்டெறிந்து ஓடினர் சிலர் வழி தூண்டா
வாசி மேற்கொண்டு பறிந்தனர் சிலர் மனம் ஏங்கி
ஆசை-தோறினும் ஓடினர் சிலர் அகல் முதுகு
கூசி கூசி நின்று ஓடினர் சிலர் பெரும் குபிரர்

மேல்
$3.27.263

#4022
மூண்டு வந்து எழும் காபிர்கள் யாவரும் முறிய
மாண் தயங்கிய முகம்மதும் அமைத்து இகல் வாய்மை
தேண்ட தீனவர் யாரையும் ஒருப்பட திரட்டி
ஆண்டு இருக்கின்ற சகுபு எனும் தலத்தினில் ஆனார்

மேல்
$3.27.264

#4023
வீய்ந்த தீனவர் எவரெவர் என நபி வினவ
வாய்ந்த நெஞ்சினர் ஆறுபத்தைந்து எனும் அரசர்
மாய்ந்து போயினர் அவர்களில் தலைமை மன்னவர்கள்
காய்ந்த சீற்றத்தர் ஈரெழு பெயர் என கரைந்தார்

மேல்
$3.27.265

#4024
இந்த மன்னவர்-தம்மை அங்கு அறிந்து அறிந்து எடுத்து
விந்தையாம்படி அடக்குதற்கு எழுந்தனர் விரைவின்
வந்து செங்களம் நோக்கினர் நோக்கலும் மருண்டார்
சிந்தி வீழ்ந்தனர் உரு தெரியாது என தியங்கி

மேல்
$3.27.266

#4025
ஈறிலாதவன் திரு நபி இன்னணம் இருந்த
வாறு கண்டு ஒரு தீனவர்-தமை வரவழைத்து
தேறி இ கள நடு நின்று வாங்கினை திருந்த
கூறும் என்றனர் என்றலும் வாங்கினை குறித்தார்

மேல்
$3.27.267

#4026
உற்ற வாங்கு இதம் கேட்டலும் ஒரு தலை எடுத்து
சுற்றும் நோக்கின கண்டு அமுசா என துணிந்து
கொற்றம் மேல் கொண்ட தீனரும் முகம்மதும் குறித்து
வெற்றியாம்படி எடுத்து அடக்கினர் மண்ணில் விரைவின்

மேல்
$3.27.268

#4027
அரசர் அன்றி மற்று எவரையும் முகம்மது ஆண்டு ஆங்காங்கு
இருவர்-தம்மை ஓர் குழி-தொறும் அடக்கிவித்து இயல்பின்
முரசம் ஆர்த்து எழ வெற்றி வெண் கொடி செல முன்னி
வரை கடந்து பல் வள மதினாவினில் வந்தார்

மேல்

28 அமுறாப்படலம்

$3.28.1

#4028
செங்கோல் என்னும் கொழும் கொம்பில் செழும் தீன் என்னும் பயிர் ஏற்றி
எம் கோன் முகம்மது எனும் நயினார் எழில் சேர் மதீனத்து இனிது இருப்ப
சங்கு ஆமையின் மேல் தவழ்கின்ற தடம் சூழ் மக்க மா நகரில்
வெங்கோல் திருத்தும் அபாசுபியான் செய்கை அனைத்தும் விளம்புவமால்

மேல்
$3.28.2

#4029
ஓயா காற்றின் சருகு என்ன ஒதுங்கி மெலிந்து புறங்காட்டி
சாயா நின்ற தானையொடும் தன் ஊர் புக்கி துயர் என்னும்
மாயா கடலில் வீழ்ந்து மதி மயங்கி ஏதும் மறந்து என்றும்
வீயா சமயம் குலத்தோடும் அவிந்தது என்ன வெம்பினனால்

மேல்
$3.28.3

#4030
பாரை காட்டுமிடம்-தோறும் ஈமான் நீரில் படர் நறும் தீன்
வேரை காட்டி எழுந்த திறல் வீரன் முகம்மது எனும் முன்னர்
போரை காட்டும் நம் சேனை பொருது வெருவி உடைந்து பின்னர்
ஊரை காட்டி நின்றதல்லால் ஊக்கம் காட்டிற்றிலை அன்றே

மேல்
$3.28.4

#4031
காணா திறனும் கொடும் சமரும் காட்டும் காலாளொடும் இவுளி
மாண் ஆர் வயவரொடும் சுற்றூர் மற்ற வேந்தரொடும் சற்றும்
நாணாது என்றும் போர் வெஃகி நடந்தது எல்லாம் பார்க்கில் அவம்
வீணே போனதன்றி மற்று ஓர் வெற்றி கண்டோமிலை அன்றே

மேல்
$3.28.5

#4032
திறம்-தான் என்-கொல் துணிவு என்-கொல் செல்வம் என்-கொல் மானம் என்-கொல்
மறம்-தான் என்-கொல் படை என்-கொல் மன்னர் வய வாள் வலி என்-கொல்
அறம்-தான் என்-கொல் தெய்வம் என்-கொல் அந்தோ எல்லாம் அவமே என்று
இறந்தார் போல புலன் ஒடுங்கி இனைய மனத்தின் இயம்பினனால்

மேல்
$3.28.6

#4033
தனியே கிடந்து பெருமூச்சில் தளர்ந்து பலகால் எண்ணி மிக
துனியே பெருக உறைந்திடுதல் சூழ சமன்று சேனையொடும்
குனி ஆர் சிலை கை வேந்தரொடும் சென்று கோளார் குறும்பு அடக்கி
முனையோடு இன்னும் வரவேண்டும் என்ன எழுந்தான் முனையில்லான்

மேல்
$3.28.7

#4034
வேலை என்னும் சேனை வெள்ளம் விபுலை பரப்பின் மேல் பரப்ப
கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற
பாலை நிலமும் கான் நிலமும் கடந்து திறல் அபாசுபியான்
சாலை பொழில் சூழ் இறவுகா என்னும் தலத்தின் வந்தனனால்

மேல்
$3.28.8

#4035
கறுபு தரு சேய் மெலிந்து புறங்காட்டும் அறபி தளத்தோடும்
இறவுகாவின் வந்து இறங்கியிருந்தான் இருந்தான் என சொன்னார்
பொறுமை பயிர் மேன்மேல் வளர்த்து புகழாம் என்னும் மலர் காட்டி
மறுமை பதவி கனி உதவும் வள்ளல் கேட்டார் மகிழ்வுற்றார்

மேல்
$3.28.9

#4036
வீரம் போட்டு படைக்கலனும் போட்டு மிகுந்த பெரும் சமய
வாரம் போட்டு புறங்காட்டும் மன்னன் மீண்டும் வந்தனன் என்று
ஈரம் பூண்ட மனத்தவரோடு இயம்பி உகுதின் எழுந்த திறல்
வீரர் எவரும் எழுக என்றார் வென்றி சிரசின் மேல் கொண்டார்

மேல்
$3.28.10

#4037
சொன்ன மொழி கேட்டு எழுபது அடல் வேந்தர் தொகை இல் சேனையொடும்
துன்னும் பல வாச்சியம் முழங்க எழுந்தார் இனிய தோழரொடும்
மன்னர் முகம்மது எனும் நபியும் வாசி-அதனின் மேல் ஏறி
மின்னும் கவிகை நிழல் கவிப்ப எழுந்தார் விரி சாமரை ஓங்க

மேல்
$3.28.11

#4038
வெற்றி கொடி முன் செல சேனை வேலை நடப்ப வண்டு இனங்கள்
சுற்றும் இரங்க தீ என்ன தோன்றும் மரை வாவிகள் கடந்து
தெற்றும் வளமை தரு மதீனா தென் பால் இரு காது அரை ஆறு
முற்றும் மேவி அமுறாவின் இருந்தார் முகம்மது எனும் நபியே

மேல்
$3.28.12

#4039
ஆண்டு சிறந்த சிற்றூருக்கு அதிபன் குசாயி கூட்டத்து உளன்
வேண்டும் தீனோர்-தமக்கு நன்மை வேண்டா காபிர்-தமக்கு மிக
பூண்ட நண்பன் யாவருக்கும் பொதுவாய் நின்றோன் மகுபத் என
தூண்டும் பெயரோன் இவன் திரு மெய் தூதர் திருமுன் வந்தனனால்

மேல்
$3.28.13

#4040
வந்தான் அடியில் கை குவித்து வணங்கி ஆண்டு ஓர் பால் இருந்து
பிந்தாது அனேக மொழி வினவி பேசி மகிழ்ந்து பல வாழ்த்தி
கொந்து ஆர் அரசே என போற்றி எழுந்து கோரல் மேல் கொண்டு
கந்து ஆடு அசலம் என களித்து சென்றான் கருணை கடலானே

மேல்
$3.28.14

#4041
சிலையை தெய்வம் என வணங்கும் சிறுமை-அதனை தெருண்டு அறியாது
அலை உற்றிடு வன் குபிர் அரசர் அடைந்த பெரும் பாசறை ஏகி
இலையில் சிறந்த வேல் கை அபாசுபியான் இருக்கை எய்தி நறும்
குலன் உற்று ஒழுகார் முகம் நோக்கி சிறிது வசனம் கூறுவனால்

மேல்
$3.28.15

#4042
மானம் போக்கி திறன் அறியா வயவரொடு வாம் பரியோடும்
கானும் மலையும் கடந்து இங்ஙன் வந்தாய் வென்றி காண்ப அரிது
நானம் சிறந்த திரு தூதும் வந்தார் நலிந்து நின்றனையால்
ஊனம் இனிமேல் விளைவது என்னோ விதியை உணரமாட்டாதாய்

மேல்
$3.28.16

#4043
முன்னே வலிதின் எழுவர் உயிர் முடித்தாய் பழியும் மேற்கொண்டாய்
பின்னர் அளவிலா நிதியும் கெடுத்தாய் திறனும் பிழைப்பித்தாய்
இன்னும் இவர்-தம் ஆவி விண்ணில் ஏற்ற துணிந்தாய் இவண் இருந்தாய்
மன்னா பதியில் செல்க என்ன உரைத்தான் மகுபத் என்போனே

மேல்
$3.28.17

#4044
சொல்லாம் என்னும் இடி காதில் சொருக வாய் ஈரம் புலர்ந்து
கல்லாம் என்னும் நெஞ்சம் மிக கரைந்து உள் இருந்த மதி ஓட்டி
பல் ஆயுதமும் வெண் குடையும் பரியும் திறனும் மற்றும் உள்ளது
எல்லாம் மறந்து போயினன் ஆங்கு இருந்தார் ஒருவர் இலை அன்றே

மேல்
$3.28.18

#4045
கிள்ளை இருப்ப மறம் இருப்ப கிடையா கீர்த்தி-தான் இருப்ப
வெள்ளம் அனைய சேனையொடும் வேந்தன் வாய்மை-தனில் வெருவி
உள்ளம் கலங்கி ஓடினன் என்று உணர்த்த கேட்டு நபி என்னும்
வள்ளல் பெரும் பாசறை ஏகி பண்டம் அனைத்தும் வௌவினரால்

மேல்
$3.28.19

#4046
தேறா வறியோர் தனம் படைத்த செல்வர் என்ன மகிழ்வு எய்த
வீறு ஆர் நிதியம் பகுந்து அளித்து வேட்டு நாள் மூன்று இருந்து என்றும்
ஆறா புண்ணீர் குடித்து எரியும் அடல் ஊர் வேல் கை அகுமது தம்
மாறா ஓசை இயம் குமுற மதீனா நோக்கி எழுந்தனரால்

மேல்
$3.28.20

#4047
வெள்ளை கவரி திரள் இரட்ட மேக கவிகை விசும்பு ஓங்க
துள்ளி கவன பரி நடப்ப திரண்டு தொகையிலாத திறன்
மள்ளர் செறிய வரும் வேளை முன்னர் வலிதின் விதி பிடித்து
தள்ள அபாஅசா என்போன் வந்தான் கொடிய தறுகண்ணான்

மேல்
$3.28.21

#4048
கண்டார் அயிர்த்தார் கொடியன் என கனன்றார் பிடித்தார் மனத்து இரக்கம்
விண்டார் கயிற்றால் இரு கரமும் விசித்தார் விசித்து செழும் கரத்தில்
கொண்டார் நயினார் முன் விடுத்தார் நோக்கி இவன் போல் கொடியவன் எங்கு
உண்டா என்ன சிரம் அசைத்தார் சினந்தார் உளத்தில் நகைத்தனரால்

மேல்
$3.28.22

#4049
பொல்லா மனத்தன் வாய்மை இல்லா புலையன் எவர்க்கும் மிக பொய்யன்
கல்லா கசடன் முன் பதுறு களத்தில் பிடிபட்டு இரக்கம் உற
கொல்லாது அரிய தலைவிலையும் வாங்கா விட்டோம் குறி கொள்ளாது
எல்லாம் மறந்து காபிருடன் இகழ்ந்தான் வசையும் இயம்பினனால்

மேல்
$3.28.23

#4050
மின் ஆர் வேலீர் இ நாளும் வேவுபார்க்க இங்கு வந்தான்
கொன் ஆர் வாளால் இங்கு இவனை கோறல் செய்-மின் என சொன்னார்
பல் நா உற வாய் கடித்து உறுக்கி பற்றி கொடுபோய் ஓர் மருங்கில்
சென்னீர் ஒழுக வாள் எறிந்தார் திரும்பா நரகம்-தனில் போனான்

மேல்
$3.28.24

#4051
கொடியோன் அவனை விண்ணிடத்தில் ஏற்றி மனத்தின் குறை தீர்த்து
தடியோடு ஊன் உண்டு உடல் சிவந்த தட வேல் வேந்தர் பல சூழ
படியோடு எழுந்த மலையோடும் பகர்ந்த திரு நம் நபி இறசூல்
வடிவு ஆர் சோலை சூழ்ந்து இருந்த மதீனா நகரில் வந்தனரால்

மேல்

29 ககுபு வதைப்படலம்

$3.29.1

#4052
துய்ய நம் நபி இறசூல் வன் மா நகர்
வையகம் புகழ்தர இருப்ப வந்து ஒரு
செய்ய நல் தூதரில் திறமை பூண்டவர்
பொய்யிலர் ஓர் மொழி புகலுவார் அரோ

மேல்
$3.29.2

#4053
வண்டு அரிசு உண்டு இசை முரல மா மயில்
உண்டு இரு செவியினால் உறங்கும் மாடம் உள்
கொண்டு இலங்கிய சுகுறா என்று ஓதிய
விண்டு உறு பல வளம் விளங்கும் ஊரினில்

மேல்
$3.29.3

#4054
இருந்தனன் தீனருக்கு இடுக்கண் செய் நிலை
பொருந்தினன் கொலையொடு பழியும் பூண்டனன்
திருந்திலா வழியினில் சேறல் மேயினன்
அரும் தவம் யாவையும் அழித்த தீமையன்

மேல்
$3.29.4

#4055
ஆம் மதி இலன் அறம் மறுத்த புன்மையன்
கோ மதத்து உறைந்தனன் குணம் என்று உன்னிய
நாமமும் கெடுத்தனன் நரகம் தேடிய
சூமனும் மகிழ்வுற சூழ்ச்சி சொல்லுவன்

மேல்
$3.29.5

#4056
வடிவு உடை அசுறபு மதலை ஆயினன்
இடர் உறும் பகை ககுபு என்னும் பேரினன்
கொடியன் எகூதி அம் குலத்தில் தோன்றினன்
உடல் என பவத்தினால் உருவம் கொண்டனன்

மேல்
$3.29.6

#4057
இன்ன தன்மையன் நலீறு என்னும் கூட்டத்தோர்
மன்னன் வெம் குபிரினில் மனத்தை ஓட்டினன்
பன்னுவது என்-கொல் அ பாவி செய்கையை
உன்னவும் பழுது இது என்று உரைத்து நின்றனர்

மேல்
$3.29.7

#4058
வேய் உரை கேட்டலும் வேந்தர் மெல்ல வெம்
தீ என சினத்தினை வளர்ப்ப கண்ணினில்
காய் எரி உமிழ்ந்தனர் நகையும் காட்டினர்
வாயினை கறித்தனர் மன்னர் யாவரும்

மேல்
$3.29.8

#4059
புண் தரு படையொடு புரவி சூழ்தர
எண் திசையினும் துகள் எழுந்து போர்த்திட
மண்டலம் கீழுற மகிழ்ந்து போயினார்
அண்டம் ஓர் இரவினின் அரிதில் போயினார்

மேல்
$3.29.9

#4060
வெற்றி மேல் கொண்டு விண் எழுந்த மூதெயில்
சுற்றிய நகரினில் தொகையில் சேனை கொண்டு
உற்றனர் வளைந்தனர் உண்ணும் நீரையும்
பற்றினர் அடிக்கடி பகையை மூட்டினர்

மேல்
$3.29.10

#4061
கொள்ளை அம் குடி-தொறும் குறுகலார்கள்-தம்
உள்ளமும் நெருப்பு எழ நெருப்பை ஊட்டினர்
வெள்ளம் ஒத்து இருந்தனர் விரியும் ஒண் சிறை
புள்ளும் அ நகரில் புகாத வண்ணமே

மேல்
$3.29.11

#4062
ஆங்கு அது கண்டு கஃபு என்னும் ஆண்டகை
வீங்கினன் உயிர்ப்பினால் வெய்து உயிர்த்தனன்
தாங்கினன் மனத்தினில் வெருவல் சஞ்சலத்து
ஏங்கினன் என் செய்வோம் என்ன எண்ணியே

மேல்
$3.29.12

#4063
மல் அணி புயத்தினர் சூழ வஞ்சகன்
எல்லையில் விளங்கிய பதணம் ஏறினன்
செல் எனும் குடை நிழல் திகழும் மா நபி
ஒல்லையின் இருந்தனர் உற்றுநோக்கினான்

மேல்
$3.29.13

#4064
கொடி நெடு மூதெயில் கொம்மை ஏற்றிய
இடி எனும் கல்லினை ஏந்தி யாவரும்
புடையில் நின்றிடும் நபி பொன்றிப்போதர
பிடரியில் தள்ளுவம் என்ன பேசினான்

மேல்
$3.29.14

#4065
மறையினில் பேசிய வாய்மை விண்ணிடத்து
உறைதரு சபுறயீல் விரைவின் ஓர்ந்து போய்
முறையொடும் சொல்லினர் முடிவிலாத தீன்
நிறை அறிந்து அப்புறத்து ஏகி நின்றனர்

மேல்
$3.29.15

#4066
இதம் உற நின்றனன் கோறல் எய்தும் முன்
கதமொடும் ஏகினன் என்-கொல் காண் என
அதிசயம் எய்தினன் ஆதி முன் செயும்
விதியினை மதியினால் விலக்கல் ஆகுமோ

மேல்
$3.29.16

#4067
இங்கு இருந்து இனி பகை விளைத்திடா முனம்
அங்கு சென்று அகுமதின் அடியில் சேர்குதல்
தங்கிய அறிவு என தானை சூழ்தர
வெம் கடு மனத்தினன் விரைவின் எய்தினான்

மேல்
$3.29.17

#4068
ஆரண விளக்கினை அறிவின் கொண்டலை
பாரினை தாங்கிய பருப்பதத்தினை
காரண கடவுளை கரையிலா அருள்
வாரியை தொழுது அடி வணங்கினான் அரோ

மேல்
$3.29.18

#4069
செறுத்தனன் நினைத்த வெம் தீமை யாவையும்
பொறுத்தனர் இருத்தினர் புளகம் எய்தினர்
குறித்திடா கீழ்மையர் செய்யும் குற்றமே
வெறுப்பது பெரியர்-தம் மேன்மையாம் எனா

மேல்
$3.29.19

#4070
ஓர் இடத்து இருந்தனன் ஒக்கலோர் எனும்
வேரினை கல்லும் வேல் என்ன வந்தனன்
பாரிடத்து உறும் பழி செய்யும் பாதக
நீரினன் சிறிது உரை நீட்டுவான் அரோ

மேல்
$3.29.20

#4071
அரும் தவம் அழித்து எழும் அடையலாரொடும்
திருந்திய நெறி செலும் தீனர்-தம்மொடும்
பொருந்துதல் இல்லையாம் அரிய பூதல
வருந்தலை நீக்கிய புகழின் மாட்சியீர்

மேல்
$3.29.21

#4072
இதம் உற இரு வகை பெயர்கட்கு என்றுமே
பொது மனம் இயைந்தனம் பொய் இது அன்று ஒரு
விதி தவறு இலம் என மெய்மை பேசிலா
சிதைவுறு மனத்தினன் தெரிய கூறினான்

மேல்
$3.29.22

#4073
சொல்லிய வாசகம் இயைந்து தோம் அற
செல்லு நின் பதி என வணங்கி சென்றனன்
வில் உமிழ்ந்து இருட்டினை வெருட்டும் மெய் நபி
எல்லையில் படையொடும் மதீனம் எய்தினார்

மேல்
$3.29.23

#4074
வானவர் பரவும் துணை அடி கமல வள்ளல் ஆண்டு இருந்தனர் இப்பால்
ஈனம் இல் வலிக்கும் மறனொடு விதிக்கும் இறுதி நாள் தேடி வெம் கொலையும்
ஊனமும் பழியும் பாவமும் நாளும் உயிர் என தாங்கினன் வெய்ய
கோன் நிலை புரந்தோன் ககுபு எனும் நாம கொடுமையன் குறித்தவை உரைப்பாம்

மேல்
$3.29.24

#4075
வாய்மையும் மறந்தான் நன்றியும் நீத்தான் வரன்முறை வழி என்பது எறிந்தான்
தீமையே நினைந்தான் செய்வது துணிந்தான் தீனரை கோறல் மேல் கொண்டான்
ஆய் மதி பெரியோர் நன்றி ஆயிரந்தான் அருளினும் கீழ் மறந்து அவர்க்கும்
காய் மனத்துடனும் புன்மையே செய்ய கருதும் என்பவை விளக்கினனால்

மேல்
$3.29.25

#4076
நெய்யொடு தசையின் ஊனொடு பழகும் நெடிய வேல் ஏந்திய காபிர்
வையகம் மேவி எவரையும் கூவி வகைவகை மந்திரம் பேசி
வெய்ய போர் விளைத்து களம்-தனில் அலகை விருந்து உண்டு விருப்புற அளித்து
செய்ய தீனவர்-தம் மதத்தொடு வலியும் தேய்த்து எறிகுவன் என எழுந்தான்

மேல்
$3.29.26

#4077
புன்மை வேல் ஏந்தி கொலை எனும் கவச போர்வை மேல் போட்டு வெம் கபட
வன்மையாம் நெடிய காளகம் விசித்து வஞ்ச வெம் முடியினை தாங்கி
தொன் மத பரிசை ஓர் புறத்து அணிந்து துணிவு எனும் கழல் அடி சேர்த்து
தின்மையாம் படைகள் எங்கினும் நடப்ப எழுந்தனன் பாவமாய் திரண்டான்

மேல்
$3.29.27

#4078
மறத்தினில் சிறந்து அங்கு அறத்தினை கடந்த மள்ளர் நாற்பது பெயர் இனிதின்
புறத்திடை சூழ ககுபு எனும் சூதன் புரவியின் ஏறி அங்கு எளிதில்
சிறுத்த கண் பெரிய சுழல் செவி தூங்கல் திரி வனம் பலபல கடந்து
நறை தடம் சூழ கவின் பெறு மக்க நல் நகர் அடைந்தனன் அன்றே

மேல்
$3.29.28

#4079
இக்கிரிமாவை காலிது என்பவனை இசை உடை கறுபு அருள் சேயை
ஒக்கலில் சிறந்த தலைமையர் அவரை உவப்பொடும் அழைத்து இனிது இருத்தி
மிக்க நம் நயினார் வந்ததும் தன் மேல் வெகுண்டதும் போயதும் வெருவி
தக்க நல் நினைவில் தானும் அங்கு உற்ற தன்மையும் எடுத்தெடுத்து உரைத்தான்

மேல்
$3.29.29

#4080
சொல்லி ஆங்கு அவர்க்கு வாய்மையும் பேசி துணிவுடன் எழுந்து அணி மதீனத்து
எல்லையில் வேந்தர் சூதர்கள் யாரும் இருந்தனர் அவரொடும் இனிய
பல் உரை யாவும் பேசவும் வேண்டும் என நினைந்து அரத்தொடு பழகும்
கொல் உலை வேல் கை மள்ளர்கள் சூழ நடந்தனன் குவவு தோள் வீரன்

மேல்
$3.29.30

#4081
தண் நிலவு உமிழும் தரள வெண் மணிகள் தயங்கிய தடத்தொடும் நிறைந்த
பண்ணை சூழ் சுகுறா எனும் நகர் ஏகி பாவையர்க்கு அணி விளக்கு என்ன
எண்ணெய் ஆர்ந்து இருண்ட நெறி அறல் கூந்தல் இல்லவளுடன் வர எழுந்து
மண்ணிடத்து உதிக்கும் பொன்_உலகு என்னும் மதீன மா நகரில் வந்தனனால்

மேல்
$3.29.31

#4082
வாயினில் முகமன் கூறி உள் மனத்தின் வஞ்சகம் இயற்றி மேல் எரியும்
தீயினும் கொடிய தன்மையர் எவர்க்கும் செம்மை இலாத வெம் சூதர்
ஏயிடத்து ஒரு மா மனையிடத்து இருந்தார் என விட பணி விரிச்சிகமும்
ஆய அரு நரகம் புகுவதற்கு எழுவதல்லது வேற்றிடம் போகான்

மேல்
$3.29.32

#4083
கடன் எனும் நோன்பு நோற்றிடுமவரை காண்-தொறும் தொடும்-தொறும் விரைவில்
தடம்-தொறும் போய்ப்போய் மூழ்குவன் தொழுகை தகுமவர் காணினும் நயனம்
குடங்கையின் மறைத்து அங்கு ஏகுவன் தீனின் கோதையர்-தமை அழைத்து இருத்தி
சடம் தனி கருக இழிதரு வார்த்தை சாற்றுவன் சாற்றுதல் ஒழியான்

மேல்
$3.29.33

#4084
ஆரணம் ஓதும் திரு மொழி கேட்கின் அகல் துளை செவி புதைத்து அகல்வன்
காரண நயினார் இயற்றுதல் அறிந்தும் கட்டுரை வாய்மை என்று உரைப்பன்
தாரணி-தனில் ஓர் தூதரும் இன்று தனியவன் என்பதும் இன்று
நீர் அணி நகரத்து உறை குபல் அல்லால் நிகர் இனி வேறும் இன்று என்பான்

மேல்
$3.29.34

#4085
இன்னன பேசி தீனருக்கு இடுக்கண் செய்து அவண் இருந்தனன் இதனை
மன்னர்_மன் நபி கேட்டு அகம் கறுத்து அவன் தன் வாய்மையின் இணங்கிலன் இனிமேல்
உன்னுவது என்-கொல் தவம் உடை தீனர் இவர்களில் ஒருவரை ஏவி
கன்னியர் இரங்க பாதகன் ஆவி களைவது கருத்து என குறித்தார்

மேல்
$3.29.35

#4086
ஆதி_நாயகன்-தன் ஏவலின்படியேயன்றி மற்று ஏதொன்று நினையா
நீதியின் மருவும் தீனவர் யாரும் நிறைதர கூவி முன் இருத்தி
சூதரில் கொடிய சூதன்-தன் செய்கை துன்புற யாவையும் தொகுத்து
வேதமாம் அமுதம் ஒழுகிய வாயால் விடம் என உரைத்தனர் அன்றே

மேல்
$3.29.36

#4087
நஞ்சினும் கொடிய மொழி செவி ஓட நாட்டங்கள் சிவந்து அழல் தெறிப்ப
வெம் சினம் தலைப்பெய்து அகுமதை நோக்கி தீனினை வேண்டிலன் ஆவி
எஞ்சிட சடுதி முடித்து இவண் வருவன் என்றனர் ஒருவர் அது அறிந்து
தஞ்சம் என்று உலகம் தாங்கினர் அதனை சம்மதி என கழறினரால்

மேல்
$3.29.37

#4088
நன்று நீர் மொழிந்ததாயினும் அடியேன் நாவினால் தேவரீர் மேலும்
கன்றிய மனத்தோடு அரும் குறை இயம்பி களைகுவன் கொடுமையன் ஆவி
வென்றியாம்படிக்கு திருவுளம் அருளி விடைகொடுத்து அனுப்பவும் வேண்டும்
என்றனர் சல்மா எனும் உயிர் தோழர் ஈன்று அருள் முகம்மது என்பவரால்

மேல்
$3.29.38

#4089
அகத்தொடு முகமும் மிக களிப்பு ஏற அகுமது மகிழ்ந்து அணி விசயம்
தொகுத்து அடைகிடந்த பருப்பத தோளாய் நீ துணியாதது ஒன்று உளதோ
இகத்தொடு பரமும் சுகத்தொடு துயரும் எழு வகை பிறப்பொடு யாவும்
வகுத்தவன் உதவி அடுத்து உற ஏகி வா என விடைகொடுத்தனரால்

மேல்
$3.29.39

#4090
மையினும் இருண்ட கரும் சிரத்து அணி வெண் மதி கிடந்து என நறும் இழை பா
ஐயம் அற்று அணிந்து கஞ்சுகி மேனி அழகுற போர்த்து முண்டகமாம்
கையினில் அசா கோல் ஒன்றினை தாங்கி கால் இணை கபுசினில் புகுத்தி
வெய்யவன் ஆவி களைதர களித்து பிசுமில் என்று எழுந்தனர் வீரர்

மேல்
$3.29.40

#4091
வேதமும் ஞான நீதியும் ஓதும் வீதியும் யாவரும் மேவும்
போதமும் ஆயும் பாவலர் வீதி போக்கையும் கடந்து நல் மனத்தின்
ஆதரம் பெருக களபம் மெய் வீச அறிவொடு தருமமும் அகற்றும்
சூதரில் கொடிய பாதகன் இருந்த சுடர் மனை கடைத்தலை புகுந்தார்

மேல்
$3.29.41

#4092
ஆங்கு அவன் ஒருபால் விலைசொலற்கு அரிய அணி மயிர் படம் ஒன்று விரித்து
பாங்குடன் இலவம் பஞ்சணை அதன் மேல் பரப்பி ஓர் ஒருகினில் சாய்ந்து
வீங்கு இள முலையார் முலை குறி அணிந்த களபத்தின் வீற்று இரும் தடம் தோள்
தேம் கண்ணி சூடி அரி என இருந்தான் தீனரும் முன்னர் ஈண்டினரால்

மேல்
$3.29.42

#4093
காண்டனன் முகத்தை நோக்கினன் நெடிய கை குவித்து இரும் இரும் எனலும்
பூண்ட வெம் துயரின் வாடிய பெயரை போலவும் மிக முகம் ஒடுங்க
நீண்ட வெம் மூச்சும் அடிக்கடி உயிர்த்து நினைவினை அடக்கி முன் சமயம்
வேண்டினன் இறுதி_ஓலை கொண்டு வந்த வீரரும் ஓரிடத்து இருந்தார்

மேல்
$3.29.43

#4094
அடையலர்-தமக்கு ஓர் கொடுமை செய் இடியே அரும் குபிரவர்களுக்கு அரசே
குடி புறம் தழுவும் தட கை அம் களிறே கோல் நிலைக்கு உரிய வெம் கோவே
வட_வரை குவடு சாயினும் சாயா மனம் நிறைந்து எழும் மதி மலையே
மிடிமையின் தமியேன் மொழி செவி கேட்ப வேண்டும் என்று உரை விளம்புவரால்

மேல்
$3.29.44

#4095
இனத்தினில் போய்ப்போய் உரைப்பதற்கு உடலம் கூசுது அங்கு உரைப்பதும் இழிவு என்
மனத்தினுள் துயரம் நீங்கும் என்று உன்னி வந்தனன் ஆகையால் ஈண்டு
குனித்து எழு மதியம் தவழ்தரு கூட கோபுரம் இலங்கும் இ ஊரில்
துனித்தல் இல் இருந்தேன் முன்னர் அ நாளில் தோன்றினன் முகம்மது என்று ஒருவன்

மேல்
$3.29.45

#4096
தூது என தோன்றி வந்தனன் மாய தொடர் வலை சுருக்கினுள் ஆகி
மா தவம் இழந்தேன் ஆலயம் இழந்தேன் வணக்கம் என்று ஒரு முறை எடுத்து
தீது உற நிலத்தில் விழுந்து எழுந்து இருந்து சென்னியும் புண் உலைவுற்ற
வேதனை ஆனேன் கேளிரும் இழந்தேன் விதியினை விலக்குவது எவனோ

மேல்
$3.29.46

#4097
உலகினில் எவரும் செய்கிலா தன்மை உண்டுபண்ணிக்கொண்டு விதி என்று
அலகிலா நிதியம்-தனை சதக்கா என்று அவரவர்க்கு அளித்தனன் பறித்து
நிலையிலாது அடியேன் வெறுங்கையும் ஆனேன் என்பது நினைந்திலன் இன்னும்
மலைவு உற தீனர்க்கு அளித்திடும் என்றான் ஏது என அறைகுவன் ஐயா

மேல்
$3.29.47

#4098
தொன்றுதொட்டு வந்த வடிவு உறும் சமயம் தூடணித்திடும் பவம் எல்லாம்
இன்றுதொட்டு அடியேன் கவலை உள் அழிய இப்படி இயற்றிய இனிமேல்
பின்தொடராது கொடுமையும் செய்யா பேதையர் மனம் குழைந்து இரங்கும்
தென் திகழ் வடிவோய் நின் முகம் கண்டேன் தீர்ந்தது என் துன்பம் என்று இசைத்தார்

மேல்
$3.29.48

#4099
கண்ணில் நீர் ததும்ப மெய் என பேசும் கட்டுரை காதினில் கேட்டான்
திண்ணிய கரம் கால் தட்டியே சினத்தான் தீப்பொறி உக விழி சிவந்தான்
வெண் நிலா மௌலி தலையினை அசைத்தான் விலா இற வெடிபட சிரித்தான்
உண் நிறை மனத்தின் வெம் சினம் உற்றான் ஊழ் விதி முடிவினை அறியான்

மேல்
$3.29.49

#4100
வரை என திரண்டு பெருமையும் முரணும் வளர்தர எழும் புய சல்மா
அருமையின் உதித்து முகம்மது என்ன அழகுற அரும் செல்வ மகனே
விரைவுற நீயும் பேதுற வஞ்ச வேலியில் கிடந்து உழன்றனையோ
பரிவினில் அவனால் குறைசியோர் பட்ட பாட்டையும் கேட்டு அறிகிலையோ

மேல்
$3.29.50

#4101
பத்தி ஈது என்ன காரணம் என்று ஓர் பாசுரத்து எவரையும் விசித்து
வத்திரம் பலபல் மணியொடு நிதியும் வழக்கொடும் கணக்கொடும் வௌவி
நித்தமும் கெடுப்பன் தமரின் மேல் வாஞ்சை நினைவு அற கருத்தையும் கலைப்பன்
வித்தக அறி நீ முடிவினும் கூட்டி வேண்டிலா நரகினில் விடுவன்

மேல்
$3.29.51

#4102
தெள்ளிய மதியோய் யான் சொலும் வார்த்தை செயமலால் தீது என போகாது
உள் உறை அறியாய் துன்பு வந்து இன்னும் உலைப்பது பின்னரில் காண்பாய்
எள்ளி நான் உரைப்பது என்-கொல் ஆகையினால் இயம்புவது இருக்க என்னிடத்தில்
தள்ள அரும் துயரம் தாங்கி நீ வந்த தன்மையை உரை என உரைத்தான்

மேல்
$3.29.52

#4103
ஆலயம் மறந்த தீன் உடை கபீபுக்கு அன்பொடும் உவப்பொடும் சதக்கா
சாலவும் அருளி குடியொடு யானும் சஞ்சலம் புகட்டிய வணக்க
வேலையும் மறந்து நும்மிடம் சார வேண்டும் என்று எண்ணினன் அதற்கு
காலினும் வலியோய் பதின் கல தவசம் கடன்தர வேண்டும் என்று இசைத்தார்

மேல்
$3.29.53

#4104
சொல்லினை உணர்ந்து நீ மனம் மகிழ்ந்து தொல் நெறிப்படி கரம் பிடித்த
இல்லவள்-தனை என்னிடத்தினில் இனிதின் ஈடுவைத்திடின் உரைப்படியே
ஒல்லையில் தருவன் உறுதி என்று உரைத்தான் உமியொடு கரியை வைத்து ஊதும்
கொல் உலை வடி வேல் விட்டு எறிந்தன போல் கொடு நரகினில் குடிபுகுவான்

மேல்
$3.29.54

#4105
நிறையினில் பொறையின் நினைவினில் மான நிலைமையில் புகழினில் அருளில்
அறிவினில் பொருவு இலாத மெய் பெரியோய் அவ மொழி யாவரும் அறிய
குறைபட உரைத்தீர் சொல்வது அன்று என்றார் கொடியவன் கேட்டு உவந்து ஈன்ற
சிறுவர்கள் அவரையாயினும் என்றனிடத்தினில் சேர்த்தி என்று உரைத்தான்

மேல்
$3.29.55

#4106
ஆவி என்று உதித்த தனையரை பிடித்து அங்கு அடவுவைத்திடின் அவரவரே
மேவிய மானம் இழிதர துயரின் விற்றிடும் தொழும்பர் என்று உரைத்து
நாவினில் சுடுவார் ஆதலால் இஃது நன்மை அன்று இரும் கதிர் வீசி
தாவிய உடைவாள் உவமை இலாது தருவன் உம்மிடத்தினில் அடியேன்

மேல்
$3.29.56

#4107
தருவதும் பகலே கொடுவர மாட்டேன் தரணி மேல் திசை கடல் சார
இருள் உறும் பொழுதின் மறைதர இவண் வந்து ஈடுவைத்திடுவன் என்று உரைத்தார்
பிரியமுற்று அவனும் கேட்டு உளம் இயைந்து பிறழ்ந்து ஒளி வீசும் மெய் அணியோய்
விரைவுடன் மனையில் சேறி என்று உரைப்ப மிக மகிழ்ந்து எழுந்து போயினரால்

மேல்
$3.29.57

#4108
வீரனும் மனையில் புக்கினன் அரிய விரி சிறை பறவைகள் அனைத்தும்
ஆர்வமும் ஒடுங்கி குடம்பையின் அடைய ஆயிரம் கரங்களும் சுருக்கி
பார் எனும் கரையின் இருள் படம் எறிந்து படர் திரை செறி கடல் தடத்து
நீரிடை மறைய மூழ்கினன் சேந்த நெடும் கதிர் பருதி வெய்யவனே

மேல்
$3.29.58

#4109
ஆதவன் ஏக உடு கணம் அனைத்தும் அகல் இரு விசும்பிடம் செறிய
வேதமுள் உறைந்த நாயனை பறுலின் விதி முறை தொழுகையை முடித்து
கோது அறும் அமுதத்தொடும் உணவு அருந்தி குற்றுடைவாளினை ஏந்தி
மாதிர புய நல் முகம்மதை போற்றி எழுந்தனர் முகம்மது என்பவரால்

மேல்
$3.29.59

#4110
நட்பினுக்கு உரியோர் உயிர் என வாய்ந்த நால்வரை சடுதியின் அழைத்து
பெட்பு உற கூட்டி உடன் வர ஏகி பேதையன் மனை தலைக்கடையின்
உட்புறத்து ஒருபால் இருத்தி மற்றவரும் ஒரு புறத்து இருந்து வெம் புலி போல்
கட்புலன் கதுவா இருளினில் போற்றி ககுபு என கூவினர் அன்றே

மேல்
$3.29.60

#4111
கேட்டனன் மனையுள் இருந்தனன் பகலே கிளத்திய வாய்மையின்படியே
வேட்டலுற்று வந்தான் சொல் மொழி தவறா மேன்மையன் ஒழுக்கமும் உடையன்
ஈட்டிய புகழான் இவன் என மனத்தில் நினைந்தனன் களபமும் அணிந்து
நாட்டமுற்று இனிதின் எழுந்தனன் எழலும் நல் மொழி மனையவள் நவில்வாள்

மேல்
$3.29.61

#4112
மையினும் இருண்ட இருள் அற கொடிது மனத்தினில் நினைக்கொணா கபடும்
பொய்யும் வஞ்சகமும் கொலையொடு சூதும் பொருந்திய செறுநர் உண்டு அதலால்
செய்ய மாண்பு அமைந்த திறன் மிகு துணைவர் சேறலுக்கு ஒருவரும் இலையால்
ஐயகோ துணையே அரும் குல களிறே ஆருயிர் தாங்கிய அரசே

மேல்
$3.29.62

#4113
நோக்கிய விழியும் வேய் எனும் தோளும் நொய்துற வலத்தினில் துடித்த
தீ கொடும் கனவு ஒன்று எய்தவும் அறிந்தேன் செம் நிற குருதி வாசமும் என்
மூக்கினில் ஏதோ தோற்றியது இன்னே முற்றிய வினை பயன் யாது என்று
ஏக்கமுற்று இரங்கி அடிக்கடி நோக்கி இரும் இரும் இரும் என இசைத்தாள்

மேல்
$3.29.63

#4114
மனையவள் மொழி கேட்டு அணி முடி துளக்கி வாள் எயிறு இலங்கிட நகைத்து
கனி இதழ் தேனே பெண் மதி அதனால் கழறினை உலகினில் எனக்கு ஓர்
தனிமையும் உளதோ வினையும் இங்கு உளதோ சஞ்சல மதி-தனை அகற்று என்று
இனையன உரைத்து கடைத்தலை ஏகி முகம்மது முன்னர் வந்து இருந்தான்

மேல்
$3.29.64

#4115
வஞ்சகன் இறுதி கொண்டுவந்திருந்த முகம்மது ககுபினை நோக்கி
மிஞ்சிய நறை சேர் கலவை அற்புதமாய் வீசுவது ஏது என வினவ
கொஞ்சிய கிளியில் கூறும் என் மனையாள் கூட்டிய பரிமளம்-அதனை
எஞ்சல் இல் புகழோய் மிடற்றினில் அணிந்து இங்கு எய்தினன் வேறு இலை என்றான்

மேல்
$3.29.65

#4116
அ உரை கேட்டு மனம் மகிழ்ந்து இந்த அவனியில் பரிமளம் இவை போல்
எவ்விடத்தினும் யான் காண்கிலன் எளியேன் என எழுந்து அடுத்தவன் ஆவி
வவ்வுற நினைந்து மோந்துபார்ப்பவர் போல் வாள் கொடு வயிற்றிடை வழங்க
குவ்வுற வீழ்ந்தான் ஆருயிர் துறந்தான் குணம் இல்லா பாதக கொடியோன்

மேல்
$3.29.66

#4117
குருதி நீர் துடைத்து வாள் உறை புகுத்தி கூடிய நால்வரும் சூழ
விரைவுடன் எழுந்து அங்கு அவர் மனை போந்தார் வீந்தவன் மனையிடத்து உறையும்
சுரி குழல் பணை தோள் பிறை நுதல் கனி வாய் துணை முலை கொடி இடை கரிய
வரி விழி சிறு மான் மயில் அனாள் உரிய மன்னவன் வரவினை காணாள்

மேல்
$3.29.67

#4118
சென்றனர் இன்னே வந்திலர் கொடிய தீவினை பயன் அணுகினவோ
கன்றிய மனத்துள் தீன் எனும் செறுநர் கையுற கலங்கி நின்றனரோ
பொன் திகழ் முலையார் ஆசை அம் கடலுள் புக்கி மெய் சோர்ந்து உழன்றனரோ
என்று இவை புலம்பி பொருக்கென ஏகி எஞ்சினன்-தனை எதிர்ந்தனளால்

மேல்
$3.29.68

#4119
கண்டனள் பதறி வீழ்ந்தனள் ஆகம் கலங்கினள் சோர்ந்தனள் அறிவு
விண்டனள் உயிர்ப்பு வீங்கினள் பதைத்து விம்மினள் கதறினள் வெருவல்
கொண்டனள் யாவும் மறந்தனள் வயிற்றில் குற்றினள் எற்றினள் பூழ்தி
மண்டினள் புலனும் ஒடுங்கினள் கண்ணீர் வடித்தனள் துடித்தனள் மட_மான்

மேல்
$3.29.69

#4120
அய்யகோ தமியேன் அகத்து உறை நிதியே ஆடவர் திலகமே அரசே
வெய்ய கோள் அரியே மருவலர் இடியே வேண்டி யான் செய்த புண்ணியமே
செய்ய நன் மாற்றம் உரைத்தவை தடுத்தாய் தீங்குறும் என்பதும் தெளியாது
எய்தினை வீணின் இறந்தனை தனித்தேன் ஏழையேன் என புலம்பினளால்

மேல்
$3.29.70

#4121
இன்னன புலம்பும் எல்வையில் கேளிர் யாவரும் திரண்டு இவண் ஈண்டி
கன்னியே வரலாறு ஏது என கேட்ப கழறினள் உற்றவை அனைத்தும்
மன்னவர் எவரும் அதிசயித்து உரிய ஆரண விதிப்படி அரிதின்
மின் அனாள் இரங்க எடுத்து அடக்கினர் மேல் வெய்யவன் குண திசை எழுந்தான்

மேல்
$3.29.71

#4122
கதம் உறு வென்றி களிறு எனும் திறல் சேர் முகம்மது கபீபு செங்கமல
பத மலர் தொழுது வினையம் உள் நிறைந்த பாதக ககுபினை இரவின்
வதைசெயும் கபட மொழி முறை உரைப்ப வரும் பெரும் பகை முடிந்தன என்று
இதயமுள் உவந்து மணி பல தூசோடு இரு நிதி ஈந்தனர் அன்றே

மேல்

30 சுகுறாப்படலம்

$3.30.1

#4123
பொன்றினன் என தமது உடல் புளகு எறிந்து
நன்று உவகை கொண்டு உளம் நயந்து இனிய தூதர்
சென்று சுகுறாவினை வளைந்து சிறை கொண்டு
வென்றி கொடு எழுந்து வர வேண்டும் இனி என்றார்

மேல்
$3.30.2

#4124
மாற்றம்-அது கேட்டு மற மள்ளர்கள் எழுந்தார்
வேற்று உவமை சொல்ல அரிய வேதரும் எழுந்தார்
ஏற்று அமர் வய புரவி எண்ணில திரண்டு
நால் திசை-தொறும் துகள் பரந்திட நடந்த

மேல்
$3.30.3

#4125
விரி திரை என தொகுதி வெண் மரை இரட்ட
கரு முகில் உற கதலிகை திரள் நுடங்க
இருள் அறு மதி கவிகை எங்கணும் இலங்க
தரை-தொறும் இருண்டு என நிழல் குவை தழைத்த

மேல்
$3.30.4

#4126
வண்டு நறவு உண்டு இசை பயின்று வளர் காவும்
தண் தரு புனல் சிறை கிடந்த தடம் மற்றும்
கண்டு பல சேனையொடு காண அரிய தூதர்
கொண்டு எழில் இலங்கு சுகுறாவினை அடைந்தார்

மேல்
$3.30.5

#4127
விண்ணினை அடர்ந்து கதிர் மேவ அரிதாகி
மண்ணினில் உயர்ந்த பெரு மால் வரையை மான
திண்ணிய எயில் புறம் வளைந்தனர் சினத்து
கண்ணிய திரை கடல் பரந்தன கடுப்ப

மேல்
$3.30.6

#4128
மாசு அற விளங்கு திறன் மன்னவரும் வெற்றி
பேசும் மற மள்ளரொடு பெட்புற நடத்தும்
காசு ஒளி பரப்பு கலின புரவி சுற்று
பாசறை வகுத்தனர் படங்குகள் நிரைத்தே

மேல்
$3.30.7

#4129
தூவிய அன பெடை இனத்தொடு துயின்ற
வாவி மலர் ஓடை சிறை வண்டு இசை முரன்று
மேவி வளர்கின்ற பொழில் எங்கணும் விரும்பி
ஏ உறு சிலை கை வய வீரர்கள் இருந்தார்

மேல்
$3.30.8

#4130
முறித்தனர் குலை கதலி முத்தம் உதிர் கன்னல்
பறித்தனர் தட குவளை பைம் கமல நெய்தல்
தறித்தனர் சினை பலவு தாழை பனை சூதம்
குறித்து வயல் நெல் கதிர்கள் கொய்து குவை செய்தார்

மேல்
$3.30.9

#4131
கொந்து அலர் கடம்பு திமில் குங்குமம் அசோகு
கந்தம் நிறை செண்பகம் அகில் கடு உடுப்பை
சந்தனம் மகிழ் குரவு சாதி இவை எல்லாம்
இந்தனம் என துணிசெய்து எங்கணும் எரித்தார்

மேல்
$3.30.10

#4132
பத்தி ஒளிர் வெண் சுதை பரப்பி எழில் கொண்ட
பித்திகை-தொறும் படை பிறங்கி அனல் பெய்யும்
வித்தையின் இயற்று பொறி மேவி உயர் இஞ்சி
முத்திகைப்படுத்தினர் முகம்மது அவண் அன்றே

மேல்
$3.30.11

#4133
ஓத உணர் எண் இருபத்தோர் பகல் அடங்கா
சூதர் உறைகின்ற எயில் சுற்றினும் இருப்ப
போத மனம் அஞ்சினர் நடுங்கினர் புலம்பி
வேதனை உழன்றனர் மருண்டனர் வெகுண்டார்

மேல்
$3.30.12

#4134
மக்க நகரத்தின் உறை காபிரும் மதீனா
மிக்க முனாபிக்குகளுமே இவர்-தமக்கு
தக்க துணை உற்றிலர் என தனி சலித்தே
திக்கறியவே கவுல் கொடுத்தனர் திறத்தோர்

மேல்
$3.30.13

#4135
உடுத்த கலையன்று பொருள் ஒன்றையும் எடாமல்
எடுத்த கையில் ஆயுதம் எறிந்து செலும் என்றார்
விடுத்து அவர் நடப்ப நபி மெத்தவும் இரங்கி
கொடுத்தனர் ஐ ஒட்டகை சுமப்ப நெல் குறித்தே

மேல்
$3.30.14

#4136
குற்றம் உறு வல் நரகு சேர் கொடிய கஃபு
சுற்றம் எனும் மள்ளர் சிலர் சோபமொடு ஷாமின்
உற்றனர்கள் மற்றவர் ஒருங்கொடு திரண்டு
வெற்றி பெறு கைபர் நகர் மேவினர்கள் அன்றே

மேல்
$3.30.15

#4137
வாசி மணி தூசு பணி மாடை குடை வானில்
வீசு கொடி சாமரை கைவேல் படைகள் எல்லாம்
நேசம் உறு செல்வம் நிறை மன்னரை நிறுத்தி
பாசம் உறு பேதையர்கள்-பால் இனிது அளித்தார்

மேல்
$3.30.16

#4138
இஞ்சியின் இருந்த பொருள் எள்துணையும் இன்றி
நெஞ்சின் மகிழ்வுற்று மிடியார்க்கு உதவி நேசம்
மிஞ்சு பயகாம்பர் மற வேந்தர் படை சூழ
வஞ்சம் அறவே மதின மா நகரின் வந்தார்

மேல்
$3.30.17

#4139
பிறங்கு பதணத்து எயில் பிடித்து அவண் அடைந்த
மறம் கெழும் அன்சாரிகள் உவப்புற மகிழ்ந்தே
அறம் குலவு கத்தன் அருள் பெற்ற சில ஆயத்து
இறங்கின தவத்து உறை முகம்மதினிடத்தே

மேல்

31 பதுறு சுகுறாப்படலம்

$3.31.1

#4140
போற்றும் வேத நூல் புண்ணியர்
மாற்ற மீறவே வாழும் நாள்
சாற்று துல்கயிதா எனும்
ஏற்ற மாதமாம் ஏல்வையில்

மேல்
$3.31.2

#4141
உகுது எனும் படை உற்றிட
தகவு இலா புறம்தந்த நாள்
இகல் அபாசுபியான் எனும்
திகழ்தரும் பவ செய்கையன்

மேல்
$3.31.3

#4142
பதுறினில் பலர் வந்திடும்
சதுர் மிகுத்திடும் சந்தையில்
இதமொடு நபி எய்தினால்
கதம் உடை திறம் காணலாம்

மேல்
$3.31.4

#4143
என்ன வஞ்சினம் மீறவே
சொன்ன வஞ்சக துட்டனும்
அன்ன நாளினில் அன்புறு
மன்னர் சூழ்வர வந்தனன்

மேல்
$3.31.5

#4144
பொன் பல் மா மணி பூடணம்
என்ப யாவையும் மேயவன்
அன்பினால் அவிடத்தில் வைத்து
இன்பமாக இருந்தனன்

மேல்
$3.31.6

#4145
கறுபு பெற்றிடும் கான்முளை
மறு புறந்தர பதுறினின்
இறு புயத்தொடு ஈண்டினன் என
உறு புயத்தர் முன் ஓதினார்

மேல்
$3.31.7

#4146
செவியில் கேட்ட திறல் நபி
புவியுளோர்கள் புகழ்ச்சியால்
நவிலும் மா மதீனத்தினில்
அபுதுல்லாவை அமைத்தனர்

மேல்
$3.31.8

#4147
புரவி சுற்றிட போர் மனர்
பரவி மெய் பதம் பற்றிட
விரைவின் மெய் கதிர் வீசிட
இரவி ஒப்ப எழுந்தனர்

மேல்
$3.31.9

#4148
படி அதிர்ந்து எழு பல்லியம்
இடி முழக்கு என எங்கணும்
அடிபட பகிரண்டமும்
வெடிபட தொனி வீசின

மேல்
$3.31.10

#4149
குடை நிழற்ற வெண் கொடி செல
இடையிட கயம் எய்திட
வடம் மிகுத்த மனவர் எலாம்
புடை வர தனி போயினார்

மேல்
$3.31.11

#4150
விண் கடந்த வேதண்டமும்
கண் கடந்து எழு கானமும்
மண் கடந்து போய் பதுறினின்
எண்கடந்தவர் எய்தினார்

மேல்
$3.31.12

#4151
மறை முழக்குடன் பதுறினில்
இறையவன் நபி எய்தலும்
கறுபு சேய் உரம் கண்டிலான்
அறிவு போய் மனம் அஞ்சினான்

மேல்
$3.31.13

#4152
தீட்டு வேல் குடை திண் பரி
ஈட்டு பண்டம் மற்று என்பவும்
போட்டுவிட்டு அவன் பூமி பார்த்து
ஓட்டமாய் விழுந்தோடினான்

மேல்
$3.31.14

#4153
ஆசையுற்று முன் ஆயினார்
பூசல் முற்ற முன் போயினார்
மோசன பதம் முற்றினார்
பாசறை புறம் பற்றினார்

மேல்
$3.31.15

#4154
பற்று பல்பல பண்டமும்
மற்ற வெம் படை வாசியும்
கொற்ற வீரர் முன் கொண்டுவந்து
உற்ற பல் சரக்கு உள்ளதும்

மேல்
$3.31.16

#4155
ஆட்டைக்கு எண் தினம் அம் புவி
கூட்டத்தோர் பலர் கூடிய
பேட்டைக்கு ஏற்றி விற்பீர் என
சூட்டும் மோலியர் சொல்லினார்

மேல்
$3.31.17

#4156
கற்ற தீனரும் காபிரும்
உற்று பூசல் பார்ப்போம் என
மற்று உள்ளோர்களும் வந்ததால்
விற்றதே தொகை மிஞ்சவே

மேல்
$3.31.18

#4157
குதி கொளும் பரி குப்பமோடு
அதிக வீரர் மற்று அரசரும்
முதிய காரண முகம்மதும்
மதினம் மீதினில் வந்தனர்

மேல்

32 உசைனார் பிறந்த படலம்

$3.32.1

#4158
வந்தது எண்ணிய கிசுறத்து நான்கு எனும் வருடம்
சிந்தை கூர்தர கசுறு எனும் தொழுகையை செய்தல்
எந்த நாட்டினும் ஏகுவோர் மேல் பறுல் என்ன
அந்தமில்லவன் ஆரணம் இறங்கின அன்றே

மேல்
$3.32.2

#4159
கூறும் அ வருடம்-தனில் குல அபூவுமையா
பேறினால் வரும் பேதையர் உம்முசல்மாவை
மீறும் ஆரண விதிப்படி தீனவர் வியப்ப
ஈறிலான் நபி திருமண முடித்தனர் இயைந்தே

மேல்
$3.32.3

#4160
பின்னும் அ வருடம் சகுபான் என பேசும்
அன்ன திங்களில் தேதி ஓர் ஐந்தினில் அழகு ஆர்
மின்னு பூண் அணி பாத்திமா வயிற்றினில் விளங்கி
உன்னு காரணத்துடன் உசைனார் நிலத்து உதித்தார்

மேல்
$3.32.4

#4161
உயிர் என திரண்டு உவகை கூர் மகள் வயிற்று உதித்த
செயிர் அறும் புகழ் பேரனை மடி மிசை சேர்த்தி
வயம் மிகுந்த வாள் அசன்-தனக்கு அளித்த நல் வரிசை
வியனுறும்படி செய்தனர் தூதரின் மேலோர்

மேல்
$3.32.5

#4162
காயும் வெம் குபிர் பகையினை வேரற களைந்து
தேயம் எங்கணும் நீண்ட செங்கோலினை செலுத்தி
மேய வெண் புகழ் சுதையினால் திசை எலாம் விளக்கி
ஆயும் வேத நம் நபி மகிழ்ந்து இருக்கும் அ நாளில்

மேல்
$3.32.6

#4163
பொருவு இலா திறம் குடிபுகும் அடல் அலி புலியை
கரு என தரித்து ஈன்றெடுத்து வந்து நல் கதியின்
மருவி ஓர் உரு வழுத்திய பாத்திமா மயங்க
அருமை மேனியின் அடிக்கடி வந்தது ஆயாசம்

மேல்
$3.32.7

#4164
இருந்த நாள் சரி என மல சடத்தை இங்கு இருத்தி
வருந்தி நாள்-தொறு முகம்மதை மகவு என வளர்த்து
திருந்து மேன்மையர் விறல் அபித்தாலிபின் தேவி
பொருந்தினார் மனம் விசும்பினில் குடிபுக போத

மேல்
$3.32.8

#4165
காரணத்தொடும் தீன் மிக வாழ்க என கழறி
பூரண சசி எனும் இறசூலையும் போற்றி
ஆரண கலிமாவினை அடிக்கடி இயம்பி
தாரணி தலம் விடுத்து விண்ணுலகினை சார்ந்தார்

மேல்
$3.32.9

#4166
ஆவி போதர கேளிரும் பிறரும் மற்றவர் தம்
தேவிமார்களும் மக்களும் மனையிடம் செறிந்து
நாவினால் பல இரங்கி மெய் சோர்ந்து உளம் நலிய
மேவும் நீர் விழி வழிதர கலுழ்ந்தனர் மிகவும்

மேல்
$3.32.10

#4167
வண் திரை புனல் ஆட்டுவித்து சுறுமாவும்
துண்ட வாள் முக துணை விழி தீட்டி வெண் தூசு
கொண்டு மெய் உற போர்த்த பின் குலத்தவர் குழுமி
அண்டர் போற்றிய நபியுடன் எடுத்தனர் அன்றே

மேல்
$3.32.11

#4168
மன்னும் ஓர் இடத்தினில் வைத்து வல்லவன் விதித்தது
என்னும் ஆரண முறைப்படி தொழுவித்து அங்கு எடுத்தே
உன்னும் மந்திரம் எனும் கலிமா உரை ஒலிப்ப
தன்னில் யாவரும் துன்புற கபுறில் வைத்தனரால்

மேல்
$3.32.12

#4169
மரு உலாவிய கபுறில் வைத்திட முகம்மது உள்
உருகி வாடி மெய் சோர்ந்து நெட்டுயிர்ப்பு எறிந்து இரங்கி
அருகினில் படுத்து அங்கையினால் உற அணைத்து
திரு விளங்கிய முகத்தொடு முகத்தினை சேர்த்தார்

மேல்
$3.32.13

#4170
தந்தை வாட்டமும் தாய் எனும் வாட்டமும் தவிர்த்து
புந்தி கூர்தர வந்த தாயே என போற்றி
கந்த மான்மதம் வீசு குப்பாயத்தை கழற்றி
விந்தையாம்படி போர்த்து அவண் எழுந்து மண் வீழ்த்தார்

மேல்
$3.32.14

#4171
அடுத்து நின்றிடும் தீனவர் அகுமதை நோக்கி
கடுத்த வெம் குபிர் களைதரும் காரண கடலே
படுத்து எழுந்ததும் போர்வையில் போர்த்ததும் பரிவின்
விடுத்து இயம்பும் என்று உரைத்தலும் அவர் விளம்புவரால்

மேல்
$3.32.15

#4172
அன்பினால் உற படுத்தது கபுறு அடராமல்
பின்பு தூசினில் போர்த்தது பிருதவுசு இடத்தின்
மின் பிறந்த வெண் துகிலினை பெறுகவும் வேண்டி
இன்பமாய் இவை செய்தனன் யாதினால் என்றால்

மேல்
$3.32.16

#4173
அலை தட குவலயத்தினில் திறம் கெழும் ஆசீம்
குலத்து உதித்த மங்கையர்க்கு முன் தீனினை குறித்து
நலத்தின் மெய் கதி தரும் இசுலாமினை நணுகி
நிலைத்து வெம் குபிர் மதத்தினை நெகிழ்ந்ததனாலும்

மேல்
$3.32.17

#4174
சாபறு உகைல் அலி என்னும் தன்மை சேர்
மா புகழ் மைந்தர் மூவரையும் மங்கையர்
தீபம் என்று ஒளிர் சுமானாவை செவ்வி சேர்
தாபரமாம் உம்முகானி தாயையும்

மேல்
$3.32.18

#4175
ஈங்கு இவை உரைத்தவை வரையும் ஈன்றெடுத்து
ஓங்கிய வரிசையும் உயர்ந்த பேறுமே
தாங்கியதால் எனது அருமை தாயர்க்கு
பாங்கொடு வரிசை இப்படி செய்தேன் என்றார்

மேல்
$3.32.19

#4176
திரு நபி தரு மொழி செவியில் கேட்டலும்
ஒருவருக்கொருவர் உள் உவகை கூர்ந்து நல்
பரிவொடும் பாத்திகா ஓதி பண்புடன்
மருவிய மனையிடம் வந்து புக்கினர்

மேல்
$3.32.20

#4177
மறை முறைப்படி சடங்கு அமைத்து மாசு அற
குறைபடு துயரினை துடைத்து கோது இலாது
இறையவன்-தனை பணிந்து இன்பம் மாட்சி பெற்று
அறிவுடன் நபி அரசாளும் நாளினில்

மேல்

33 தாதுற் றஹ்ஹாக்குப் படலம்

$3.33.1

#4178
வதுவையில் கொடையில் போரில் மலிந்த மும்முரசம் மாறாது
அதிர்தரு மதீன மூதூர் அண்ணல் தாத்துற் றகாகு
பதியினில் வாழும் கத்துபான் எனும் கேளிர்-தம் மேல்
எதிர் பொரவேண்டும் என்ன எழுந்தனர் விரைவின் அன்றே

மேல்
$3.33.2

#4179
பேரிகை முரசம் ஆர்த்த பெரும் தவில் முருடும் ஆர்த்த
பூரிகை சின்னம் ஆர்த்த பொங்கு காகளங்கள் ஆர்த்த
வீரியர் தீன் தீன் என்ன விளம்பிய மொழிகள் ஆர்த்த
ஆரண கலிமா ஆர்த்த அண்டரும் ஆர்ப்ப அன்றே

மேல்
$3.33.3

#4180
பாய்ந்தன பரிகள் ஆடி பறந்தன கொடிகள் வானில்
தோய்ந்தன குடைகள் பாலில் துலங்கின மறைகள் ஒன்றி
தேய்ந்தன படைகள் எங்கும் சிறந்தன சிவிகை போரின்
வாய்ந்தன மள்ளர் தூளி மறைத்தன ஆசை அம்ம

மேல்
$3.33.4

#4181
செறுத்து அடர் தானை மீதில் சென்றுசென்று எதிர்த்தோர் மார்பை
அறுத்தறுத்து உதிர சேறு உண்டு அனல் குடியிருந்த வெள் வேல்
பொறுத்தன தட கை கண்கள் புகைந்தன சினம் மேல் கொண்டு
கறுத்தன தீனர் உள்ளம் கலங்கின காபிர் நெஞ்சம்

மேல்
$3.33.5

#4182
கண்ணறு சீற்றம் உள் கொண்டு எழுந்த தீனவர்கள் எங்கும்
மண்ணிடம் செறிந்து செல்ல வாய்மையே சிரசில் சூட்டும்
உண் நிறை உடைய வேந்தர் ஒண் திறல் பரியில் சூழ
கண் அகன் ஞாலம் காக்கும் காரண தூதர் போந்தார்

மேல்
$3.33.6

#4183
அரிவையர் மனத்தை ஒத்து உள் அலை செறி தடமும் மற்றும்
மரு மணம் கமழ் மெய் தூதர் மனம் என குளிர்ந்த காவும்
கருதலர் நெஞ்சின் தீய்ந்து கனல் எழும் சுரமும் நீந்தி
பொரு படை புணரியோடு நசுது எனும் தலத்தில் புக்கார்

மேல்
$3.33.7

#4184
வரை என சிமூதம் என்ன வாகினி என்ன முன்னீர்
கரை என படங்கு கோட்டி கால் பட கிடந்து உலாவி
திரை என ஒளிர்ந்து செம்மை சிறந்த வெண் கொடிகள் நாட்டி
அரசருக்கு அரசர் நீண்ட பாசறை அமைத்தார் அன்றே

மேல்
$3.33.8

#4185
திறன் நிறை பொறையும் ஒன்றாய் திரண்டு உரு என்ன தோன்றி
அறன் வழுவாத செங்கோல் அகுமது கேள்வரோடு
நறை மலர் தடம் சூழ் வண்மை நசுதின் ஈண்டினர்கள் என்ன
கறை கெழு வடி வேல் செம் கை கத்துபானவர் அறிந்தார்

மேல்
$3.33.9

#4186
ஆங்கு அவர் உணர்ந்து சேனை அனைவரும் ஒருங்கில் கூடி
தாங்க அரும் அயில் வாள் குந்தம் சக்கரம் பரிசை தண்டம்
ஈங்கு இவை யாவும் ஏந்தி இயம் பல ஆர்ப்ப மற்று ஓர்
பாங்கில் வந்து இறுத்தார் வெய்யோன் கரம் எதிர் பனி வந்து என்ன

மேல்
$3.33.10

#4187
முனைப்பதி அமைத்து காபிர் மொய்த்து இவண் இருக்கும் எல்வை
குனிப்பு உறும் சிலை கை தீனர் யாவரும் குழுமி நிற்ப
தனி பிறை அழைத்து முன்னம் சாற்றிய இறசூல் என்றும்
நினைப்ப அரும் பொருளை ஏத்தி லுகறினை தொழுது நின்றார்

மேல்
$3.33.11

#4188
அ அளவு வயின் ஓர் வீர அழுக்கு உறு மனத்தன் தீனர்
செவ்விதின் நோக்கி நிற்கும் செயல் அறிந்து உவகை பூத்து
வெவ் வினை தொகுதி முற்றும் வேரற களைதற்கு இன்னே
கவ்வை வந்து உதவிற்று என்ன கண் கடை சிவந்து போனான்

மேல்
$3.33.12

#4189
கடிதினில் போவான் தத்தம் காபிரை நோக்கி வீரம்
வடிவு எடுத்து அனைய மான மன்னர்காள் விசய வாகை
குடிபுகுந்து இருந்த திண் தோள் குரிசில்காள் மனத்தில் தூக்கி
அடியனேன் கூறும் மாற்றம் கேண்-மின் என்று அறைகுவானால்

மேல்
$3.33.13

#4190
வந்த வெம் புதிய மார்க்க முகம்மது முதல் மற்று உள்ளோர்
பந்தனையாக யாரும் படைக்கலன் துறந்து மோனம்
சிந்தையின் அமைத்து வேறு தெரிந்து இடை நோக்கா வண்ணம்
சுந்தர சென்னி மண்ணில் தோய்வுற தொழுது நின்றார்

மேல்
$3.33.14

#4191
இரு திறத்தவரும் போரில் எய்துவது என்-கொல் வீணின்
பெருமையில் நின்ற தெய்வம் பிரித்தது காணும் இன்னே
வரி சிலை உழவரோடும் போய் அவண் வணங்குவோரை
குருதி நீர் படியில் சிந்த கோறலே அழகு இது என்றான்

மேல்
$3.33.15

#4192
அன்னது கேட்ட வீரர் அணி முடி துளக்கி ஆகத்து
உன்னி இ தீனர்-தங்கள் ஊழ் முடிவு உணர்த்திற்று என்ன
புல் நினைவு-அதனை உற்று பொருக்கென எழுந்தார் ஆங்கு
மன்னிய பறுல் என்று ஏத்தும் வணக்கமும் முடிந்தது அன்றே

மேல்
$3.33.16

#4193
மண்ணினில் படிந்து எழுந்த வணக்கமும் முடிந்த பின்னர்
கண்ணினால் உணர்ந்து மேன்மேல் கருத்து அழிந்து உவகை போக்கி
தண்ணளி இல்லா நெஞ்சர் சஞ்சலத்து அழுங்கி நின்றார்
எண்ணியபடியே கைவந்து எய்துமோ எளிதின் அம்ம

மேல்
$3.33.17

#4194
துனி கிடந்து உழன்ற வஞ்ச சூதரில் ஒருவன் நாளும்
வினையம் உள் நிறைந்து நின்றோன் சூழ்ச்சியே விளைக்கும் நீரான்
மன வலி உடையீர் முற்றும் மதி மறந்து உடைவது என்-கொல்
இனியன மாற்றம் ஒன்று கேண்-மின் என்று இயம்புவானால்

மேல்
$3.33.18

#4195
அன்னது போயதால் என் அசறு எனும் தொழுகை ஒன்று உண்டு
உன்னும் அ தொழுகை தீனோர் என்பவர்க்கு உரியது அன்றோ
மன்னிய புலன்கள் ஐந்தும் மனவெளி வழியில் செல்ல
பன்னிய நிலத்தின் வீழ்ந்து பத்தியின் முடிக்க வேண்டும்

மேல்
$3.33.19

#4196
குத்திரம் விளைவித்தாலும் கொலை தொழில் அண்மினாலும்
பித்து உழன்றவர் போல் நின்ற நிலையன்றி பிறிது நோக்கார்
அ தருணத்தின் ஏகி ஆங்கு அவர் ஆவி சோர
சித்திர வகையின் வீழ்த்தி தெறுதலே கருமம் என்றான்

மேல்
$3.33.20

#4197
நன்று இது என்று உவகை கூர்ந்து நகை மணி தொடையல் வேய்ந்த
குன்று என பணைத்து வீங்கும் குவவு தோள் குமரர் எல்லாம்
இன்றொடும் பகை வேறு இன்றி இற்றுற துடைப்பேம் என்று
வன் திறல் தீனோர் செய்யும் வணக்கமே நோக்கி நின்றார்

மேல்
$3.33.21

#4198
ஈங்கு இவர் இருப்ப வானோர்க்கு இறை இறை அருளின் வண்ணத்து
ஓங்கிய விசும்பை நீந்தி உறு பொருள் உணர்த்தும் வேதம்
தாங்கிய எழில் ஆயத்து தலை மிசை கொண்டு இழிந்தார்
நீங்க அரும் பயம் வந்து எய்தும் நிலத்திடை தொழுதற்கு அன்றே

மேல்
$3.33.22

#4199
ஆரண பொருளை ஓர்ந்த அளவினில் அசறு தோன்ற
பூரண தொழுகை கொண்ட புணர்ப்பொடு பாங்கு எல்லோர்க்கும்
நேருற விளங்க வள்ளல் நின்ற தீனவர்கள்-தம்மை
தாரணி இடத்து இரண்டு பாகமாய் தனி பிரித்தார்

மேல்
$3.33.23

#4200
ஒன்னலர்க்கு எதிர் ஓர் கூட்டம் உற மற்று ஓர் கூட்டம் மௌமூம்
என்ன நின்று உற இமாமா இயல் நபி தக்பீர் கட்டி
நல் நிலை றுக்கூவினோடு சுசூதிவை நடத்தி இரண்டாம்
பின்னிலை எய்த அன்னோர் நிய்யத்தில் பிரிதல் கொண்டே

மேல்
$3.33.24

#4201
மற்றுள கருமம் எல்லாம் தாங்களா முடித்து மாற்றார்
உற்றுள திசை போய் நிற்க உற்ற அ கூட்டம் வந்து
பற்றி இன் தக்பீர் கட்டி தொடர்ந்திட பயில் றுக்கூவும்
நல் துறை சுசூதும் செய்து நாயகர் இருப்பின் மேவ

மேல்
$3.33.25

#4202
ஆங்கு இவர் எழுந்து இரண்டாம் றக்அத்தை அடுத்து செய்து
பாங்கினோடு இருப்பின் மேவி தொடர்ந்திட பரிவின் வள்ளல்
ஓங்கிய சலாமை கொண்டு முடித்தனர் உரைத்தவாறே
ஈங்கு இயற்றியது இரண்டு றக்அத்தின் கசுறாம் அன்றே

மேல்
$3.33.26

#4203
தீனர் ஈர் அணியாய் நின்று தொழுது எழும் செய்கை நோக்கி
ஆன இ தொழுகை ஏது என்று அறிந்திலேம் அரியதாம் மால்
மா நிலம்-தனில் முன்னேனும் கண்டது எ மதத்தும் காணேம்
ஏன் இவை செய்த தன்மை யாது என தெளிதல் அம்ம

மேல்
$3.33.27

#4204
மாயமோ கபடோ சூதோ வஞ்சமோ மதித்திடாத உ
பாயமோ வினையமோ மேல் பகையினை மூட்டல்-தானோ
தூய விஞ்சையின் இயற்றும் சூழ்ச்சியோ மாட்சியோ வெம்
தீ எனும் மதத்தில் செய்யும் செய்கையோ என திகைத்தார்

மேல்
$3.33.28

#4205
இன்று இவண் விளைந்த தன்மை யாது என தெளிவோம் என்பார்
நின்று இனி பயன் என் என்பார் நேரலர் தட கை வாளால்
பொன்றுதல் திண்ணம் என்பார் புகழொடு வலியும் வீட்டி
சென்று யாம் பிழைப்போம் என்பார் சேறலே கருமம் என்பார்

மேல்
$3.33.29

#4206
உடைந்துடைந்து இன்ன மாற்றம் உரைத்துரைத்து அவலித்து ஏங்கி
மடிந்த புன்மதியர் ஆகி வாய் வெரீஇ மனம் தள்ளாட
அடர்ந்து வந்து எதிர்ந்த காபிர் அனைவரும் வீரம் மானம்
தடிந்து கை படை துறந்து தம்மில்தாம் இரிந்து போனார்

மேல்
$3.33.30

#4207
கதி தரும் இசுலாம் நண்ணா கத்துபானவர்கள் தத்தம்
மதியினை வெறிதின் நோக்கி பறிந்தனர் என்னும் மாற்றம்
துதி தரும் வேத நீதி தூதர் காதார கேட்டு
மதின மா நகரை நாடி எழுந்தனர் வல்லை மன்னோ

மேல்
$3.33.31

#4208
காயும் நல் கனியும் பற்றி கறித்து உண்டு களித்து கொம்பில்
பாய மர்க்கடம் அம் கோல் தேன் பகுப்புற உடைந்து சிந்தி
வேய் உதிர் முத்தம் ஈர்க்கும் வெறி கமழ் விலங்கல் நீந்தி
தீய வெம் கானல் வேய்ந்த செம் நிற சுரத்தில் புக்கார்

மேல்
$3.33.32

#4209
நீர் வறந்து கனலே பரந்து தரு நீழல் இன்றி அடியோடு உற
பார் பிளந்து விடரே நிறைந்து பணியே மிகுந்து வெளி மீதில் வெண்
தேர் செறிந்து சுழல் கால் தொடர்ந்து உலவு சேண் நிமிர்ந்து வளர் தீய வெம்
சூர் மலிந்து விளையாடல் மிஞ்சு கழல் தோய்வு அரும் கொடிய கானமே

மேல்
$3.33.33

#4210
காரையும் பெரிய வாகையும் திருகு கள்ளியும் அரிய வெள்ளிலும்
வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும்
சீரையும் சிறிய பூளையும் சினைய மரவமும் பசிய குரவமும்
பாருள் நின்று உலவையோடு எரிந்து நிறை பத்திரங்களும் உதிர்த்தவால்

மேல்
$3.33.34

#4211
சூடு சுட்டு மிகவே குதித்து மறி சோபமுற்று அடிகள் பாவ மா
பாடுபட்டு வெளி ஓடி எய்த்து வெகு பார்வையுற்று இடையுமே-கொலோ
கோடு பட்டு மலர் காய் உதிர்த்து விளை கூவல் அற்று விடு வேரொடும்
வாடுபட்டு உலரவே மிகுத்த தரு மாறுபட்டது அ வனத்து அரோ

மேல்
$3.33.35

#4212
செம் தரை படு நிலம் சுட கழுகு சேனம் என்பது அடிவைத்திடாது
அந்தரத்தினில் எழுந்து அகட்டினில் அடித்து அடிக்கடி பறந்தன
சுந்தர கரி நெடும் கயத்தொடு சுருண்டு வெந்து உடல் சுரித்தன
வந்து கானல் சுட ஆசை யானை முகம் மாறுகொண்டு புறமிட்டவால்

மேல்
$3.33.36

#4213
ஆலம் மொய்த்த துளை மூரல் கண் செவி அணி பொறி சுடிகை நெட்டு அரா
ஞாலம் முற்றும் மணியே உமிழ்த்து உடல் எந்நாளும் விட்டு உரி கிடப்பவை
கால மொய்த்து எரிகளே இறைத்த சுடு கானல் வெப்பு மெய் பொறுக்கலாது
ஓலமிட்டு உதிர மாழை கக்கி உடலே எரித்து உரிவ போலுமே

மேல்
$3.33.37

#4214
உலை கிடந்த கனல் புகை எழும் பரல் உருப்பம் உற்று அவை தரிக்கிலாது
அலை எறிந்து வரு கடல் படிந்து குளிர் அறல் அருந்தி உடல் கருகி நீள்
மலை அடைந்து திசை-தொறும் உலைந்து வெளி வழி திரிந்து நனி கதறியே
குலைகுலைந்து நிறை பயம் மிகுந்து அழுது குயின் கணீரொடு திரிந்ததால்

மேல்
$3.33.38

#4215
பீடு கொண்ட புவி மாது வெம் பரல் பிறங்கு செம் தழல் வெதுப்பினால்
ஆடை என்று மிகு தண்மை எய்த உவர் ஆழி வேட்டு உற அணிந்தனள்
கோடுகின்ற துளை மூரல் நெட்டு உடல் குழைத்து இ வெம்மையில் நுணங்கி வெம்
சேடனும் தலை வெடித்து ஒர் ஆயிரமும் சென்னி என்ன வகிருற்றனன்

மேல்
$3.33.39

#4216
மங்குலில் திரிதரும் கதிர் பருதி வானவன் கரமுமே புகா
தங்கி அம் கடவுள் வெம் கதத்தொடும் அடர்ந்து வந்து அரசிருந்திடும்
பொங்கு கூளியிரதங்களல்லது பொருந்திடாத படு நிலம்-அதில்
திங்கள் மெய் புகழ் விளங்கு வள்ளல் நபி சேனை அம் கடல் நடந்ததால்

மேல்
$3.33.40

#4217
வாய் உலர்ந்து குளிர் நா வறந்து வெகுவாய் மயங்கி வதனம் கரீஇ
காயம் நொந்து அரு விடாய் மிகுந்து வரு கால் தளர்ந்து உளம் வருந்தியே
ஆய வெம் குபிர் துடைத்து வண் புகழ் அடைந்த தீனவர்கள் யாவரும்
தீய வன் சுரம் அகன்று இருந்தது ஒரு சிறிய கானிடை இறங்கினார்

மேல்
$3.33.41

#4218
காசு அடர்த்த சுரமே விடுத்து அழல் காய்தர சடுதி வந்ததால்
வாசம் மொய்த்த மகுமூதும் மெய்த்த திறலியார்கள் மற்றவர்கள் மன்னவர்
நேசமுற்ற கர வாள்கள் வைத்து நிறை நீள் தரு-தொறும் நிலா ஒளி
தூசினை தரையின் மேல் விரித்து மிகு சோபமுற்று விழி துஞ்சினார்

மேல்
$3.33.42

#4219
இன்ன வீரர் துயின்றிடும் எல்வையில்
துன்னு காபிரில் தோன்றும் ஒருத்தன் சூது
உன்னு வஞ்ச நிறைந்த உளத்தினன்
தன் இனத்தர் முன் தன் திறம் சாற்றினான்

மேல்
$3.33.43

#4220
ஆடல் மிக்க அறபி எனும் குலத்
தூடு உதித்த உழையர் உவப்புற
தேடி வன் திறல் தீனின் முகம்மதை
வீடல் செய்து இவண் மீள்குவன் யான் என்றே

மேல்
$3.33.44

#4221
கூறினான் எழுந்தான் கொடுமை குறித்து
ஊறு நீர் தடமும் மலர் ஓடையும்
நீறு பாலையும் முல்லையும் நீந்தியே
ஈறு இல் தீனர் துயிலிடம் எய்தினான்

மேல்
$3.33.45

#4222
சேனை முற்றும் தெரிவுற நோக்கினான்
ஆனம் உற்ற நபி உழை வாளை வைத்து
ஊன் அகற்றி உறங்குதல் கண்டன
ஈனம் உற்ற இழி தொழில் செய்கையான்

மேல்
$3.33.46

#4223
சிந்தை நன்கு அருள் கூர்ந்து திறன் மிகும்
அந்த வீரர் அனைவரையும் கடந்து
இந்து நேர் இறசூல் கண்வளர் இடம்
வந்து உவந்து மனத்தினின் உன்னினான்

மேல்
$3.33.47

#4224
மின் திறந்த வை வாள் கொடு இ வீரனை
இன்று கோறல் கருமம் என்று எண்ணியே
துன்ற அரும் குண தூதர் கை வாளினை
சென்று எடுத்து அடல் செம் கையில் சேர்த்தினான்

மேல்
$3.33.48

#4225
அ கணத்தின் அரு மறை உள் கொளும்
மிக்க தூதர் விரைவின் விழித்தனர்
புக்க வஞ்ச மனத்தன் பொருக்கென
உக்கிரத்தோடு ஒரு மொழி பேசுவான்

மேல்
$3.33.49

#4226
மண்டு செம்புனல் ஆடிய வாள் உரீஇக்
கொண்டு தீனர் குறைபடவே இரு
துண்டமாக உனை துணிப்பேன் அது
கண்டு யாவர் விலக்குவர் காண் என்றான்

மேல்
$3.33.50

#4227
உறை கொள் நாந்தகம் உன் கையின் ஆயின
விறல் கெழீஇ வய வீரரும் துஞ்சினர்
பெறுக நீ எதிர் இ மொழி பேசினை
இறைவனே எனை காப்பன் மற்று இல் என்றார்

மேல்
$3.33.51

#4228
அன்ன காலையின் ஆங்கு அவன் ஏந்திய
மின்னு கோணம் விரல்கள் சிவப்பு உற
மன்னு செம் கை பறித்து மண் வீழ்ந்தன
உன்னும் அப்படி கொல்லவும் ஒண்ணுமோ

மேல்
$3.33.52

#4229
விடுத்த மண்ணிடை வீழ்ந்த வை வாளினை
எடுத்து வள்ளல் இனி உனது ஆருயிர்
படுத்து விண்ணுலகு ஏற்றுவன் பாரினில்
தடுத்து நிற்பவர் யார் என சாற்றினார்

மேல்
$3.33.53

#4230
பேது அடர்த்தி பிடர் பிடித்து உந்த அவன்
சூது அமைத்து இத்துணை இவண் மேவலால்
வேதனைப்பட முன் செய் வினை பயன்
தீது அடுத்தது என திகைத்தான் அரோ

மேல்
$3.33.54

#4231
அறத்தின் மிக்க அருள் கடல் ஐயனே
குறித்திடாது குறை மொழி பேசி முன்
செறுத்து நின்ற வெம் தீமையன் யான் இனி
மறுத்து உரைப்பவும் வாயும் உண்டாகுமோ

மேல்
$3.33.55

#4232
படி பிடித்திட பாய் பரி ஏவி முன்
இடர் விளைத்த சுறாக்கத் எனும் மன
கொடியன் தீமை பொறுத்து அருள் கொற்றவ
அடியன் செய் பிழையும் பொறுத்து ஆட்கொள்வாய்

மேல்
$3.33.56

#4233
பிறர்க்கு அடாத பெரும் பிழை நெஞ்சினில்
குறிக்கு நீர்மையன் செய்த இ குற்றமே
மறை-கண் நின்று வளர் இறைக்காக நீர்
பொறுக்கவேண்டும் என சரண் பூண்டனன்

மேல்
$3.33.57

#4234
வீழ்ந்து நின்ற அறபி வெரு அற
வாழ்ந்த கேள்வி அகுமது இருத்தி முன்
சூழ்ந்த வாய்மை துணைவரை கூவியே
தாழ்ந்த செய்கையன் செய்வகை சாற்றினார்

மேல்
$3.33.58

#4235
வனை கழல் கழல் மைந்தர்கள் யாவரும்
துனி கொள் மாற்றம் செவியுற துன்னலார்
வினையமுற்று விடுப்ப வந்தோன் என
இனைய மாற்றம் எடுத்து எதிர் கூறுவார்

மேல்
$3.33.59

#4236
பாதம் பற்றிய கஃபு எனும் பாவியான்
ஏதம் முற்றும் இளைத்ததும் எண்ணிலா
நீதம் அற்று அபிறாபி செய் நிந்தையும்
பூதலத்துள் மறந்தனிர் போலுமே

மேல்
$3.33.60

#4237
கடம் உடைத்து எழு கை மலை மாவை உள்
விடம் மிகுத்த பணியை மின்னாரினை
படிறு இழைத்த பகைஞரை கொற்றவ
திடன் உற புவி தேற முடியுமோ

மேல்
$3.33.61

#4238
கருத்தில் வஞ்சகமும் கொலை கள்ளமும்
இருத்தி ஒன்றை முடிப்பர் இதம் உற
திருத்தி ஒன்றை முடிப்பர் திடத்துடன்
பொருத்தி ஒன்றை முடிப்பர் புகழ்ச்சியோய்

மேல்
$3.33.62

#4239
தணிந்திலாத வினையின் சமர் திறம்
துணிந்து செய்குவர் தூய புகழினை
அணிந்த மேலுளோய் கேட்டி அகப்படில்
பணிந்து தாழ்குவர் பற்றலர் செய்கையே

மேல்
$3.33.63

#4240
கவினும் அன்பும் இரக்கமும் காணுற
தவிர்கிலாத பயமும் தனிமையும்
புவியின் வீழ்ந்த வணக்கமும் போற்றலார்
நவிலும் வார்த்தையும் நஞ்சு என வேண்டுமால்

மேல்
$3.33.64

#4241
ஆகையால் இ அரும் கொலைபாதகன்
ஏகிலாது இவண் இன் உயிர் சோர்தர
சேகு அறும் தட வாளில் சிதைத்திடல்
ஓகை என்று இது உரைத்தனர் வீரரால்

மேல்
$3.33.65

#4242
அறனும் வாய்மையும் அன்பும் இரக்கமும்
திறனும் வீறும் குடிகொண்ட செய்கையோர்
மறம் மிகுத்தவர் வாய் மொழி கேட்டு உளம்
குறைவிலாது நிறை மொழி கூறுவார்

மேல்
$3.33.66

#4243
கொலையும் வஞ்சமும் கொண்டு வெம் கோறலின்
நிலையில் நின்றனர் நின் அபயம் என
வலிதின் வந்து வணங்கினரேயெனில்
நலிவு இலாது அவர் காக்கவும் நன்று அரோ

மேல்
$3.33.67

#4244
காட்டு திண் மறனும் கதிர் வாளையும்
போட்டுவிட்டு எதிர் நின்று புலம்பியே
தாள் துணை தலம் சார்ந்த இ ஏழையை
வீட்டினால் அதில் வெற்றி உண்டாகுமோ

மேல்
$3.33.68

#4245
மிஞ்சு தின்மை செய் மேலவர் கையுறின்
நஞ்சு என தெறல் இன்பம் அ நாள் அரோ
அஞ்சல் என்று அபயம் கொடுத்தால் உயிர்
துஞ்சினும் புகழ் வைகலும் துஞ்சுமால்

மேல்
$3.33.69

#4246
அன்பினுக்கு ஒரு வேலி அவம் எனும்
துன்பினுக்கு அரும் தூய மருந்து மீறு
இன்பம் முற்று உற ஈண்டிய மெய் தவம்
வன்பு அகற்றிய வாள் பொறை மாட்சியே

மேல்
$3.33.70

#4247
கல்வி ஆசு அற கற்று உணர்ந்து ஈகை சேர்
செல்வம் மீறு சிறப்புடையோரிடம்
சொல்லும் நீர்மை பொறை எனும் தூய்மை ஒன்று
இல்லையேல் உற்று எழும் புகழ் வீயுமால்

மேல்
$3.33.71

#4248
புன் தொழில் கொலை வித்தை பொருந்திய
வன் திறத்து மனத்தவர் மெய் உளம்
குன்றி நிற்ப குறைகள் பொறுத்து நல்
நன்று அளிக்கில் நசை பெரிது ஆகுமால்

மேல்
$3.33.72

#4249
ஆதியோன் முன் அருளிய வாய்மை சேர்
நீத வேத நெறி முறை நின்று நாம்
ஏதமே பொறுத்து இன்று விட்டால் அவன்
சூதும் பொய் மன நன்மையும் சூழுமால்

மேல்
$3.33.73

#4250
என்னும் நல் மொழி இன்னன பன்னியே
அன்னவன் துயர் ஆற்றி செலவிடுத்து
உன்னு தோழருடன் எழுந்து ஒல்லையின்
மன்னு கானகம் நீங்கி வழிக்கொண்டார்

மேல்
$3.33.74

#4251
வால் குழைத்து எழில் வளை நெடு மா முகம் கோட்டி
கால் வளைத்து இரு செவி நிமிர்த்து உந்து கந்துகங்கள்
சூல் படைத்த மை வரை நிகர் துணை புய வேந்தர்
மேல் வர பரித்து எழுந்தன வளியினும் விரைவின்

மேல்
$3.33.75

#4252
மதம் துறந்து ஒழுகு இரு கவுள் புகர் முக மலை போல்
விதம் பெறும் வரி உடல் வளை உகிர் வியாக்கிரம் போல்
கதம் தரும் முடங்கு உளை நெடு வால் அரி கணம் போல்
பதம் பெயர்த்து அழகொடு நடந்தனர் வய படைஞர்

மேல்
$3.33.76

#4253
வாய்ந்த நீண்ட கந்தரத்தின செறிதரு மயிரின்
வேய்ந்த கூன் புறத்தின பிடர் மதத்தின விரிந்து
சாய்ந்த வாலின கவை அடி சுவட்டின தளரா
தேய்ந்த மெய்யின ஒட்டைகள் விரைந்தன எழுந்தே

மேல்
$3.33.77

#4254
திரண்ட கூர் மருப்பு உடைய வல் விடை இன திரளும்
முரண் தயங்கிய வேசரி குலம் பல முழுதும்
இரண்டு பாலினும் சுமை பொறுத்து அணியணி எழுந்த
குரண்டம் மேவிய படுகரும் அடவியும் குறுக

மேல்
$3.33.78

#4255
தந்திராதிபர் சேனை காவலர் படை தலைவர்
மந்திராதிபர் திரண்டு இரு மருங்கினும் மலிய
கந்த மான்மதம் பொருந்தி எண் திசை-தொறும் கமழ
சுந்தர ஆனனம் ஒளிதர ஏகினர் தூதர்

மேல்
$3.33.79

#4256
ஆன காலையின் அற நெறி தவறிலா அருளார்
தீனராகிய வீரரில் சிறந்த மெய் புகழார்
மான வாய்மையர் மண்டு அமர் துடைத்த வை வாளார்
தானம் ஊறிய சாபிறு என்று ஒரு நெடுந்தகையார்

மேல்
$3.33.80

#4257
பரிவின் ஏறு பேர் ஒட்டகம் பதாகினி கடலுள்
விரைவின் ஏகிலாது அலக்கணுற்று அலைந்து மெல் அடியாய்
ஒருவி நிற்பது கண்டு தம் உயிர் துணை அனையார்
வருதல்மட்டு அவண் நின்றனர் முகம்மது நபியே

மேல்
$3.33.81

#4258
குறிய வால் நெடும் பத பெரும் கூன் தொறு நடத்தி
நறிய பூம் தொடை இணை புய சாபிர் முன் அணுக
நிறை பதாகினியுடன் வரல் இன்றி நீர் நெறியில்
தறுகி நின்றது என் உரை என எதிர் மொழி சாற்றும்

மேல்
$3.33.82

#4259
தாங்கிலாத அரு நோயினில் இடைந்து மெய் தளர்ந்து
நீங்குறாத அடர் வங்கொடு வரடுமே நிறைந்து
தேங்கின் நாள்-தொறும் மெலிந்து வன் மூப்பினில் தேய்ந்த
தூங்கல் ஒட்டகம் நடந்தில விரைந்திலன் தூயோய்

மேல்
$3.33.83

#4260
என்ற வாசகம் இரு செவி கேட்டு அயம் இழிந்து
வென்றி சேர் புகழ் சாபிர் சோகத்து முன் மேவி
நின்று நாசியின் வடத்தினை இழுத்து இனிதுடன் நீர்
கன்றிலாது சென்று ஏறும் என்று உரைத்தனர் கபீபே

மேல்
$3.33.84

#4261
தீய வங்கு நோய் வரடு மூப்பு உறு துனி சிதைந்து
போய் அகன்று உள மதத்து எழில் இளமையும் பொருந்தி
ஆய மெய் மயிர் சிலிர்த்து உடல் தடித்து அடல் மிகுத்து
தூய கொண்டலின் வேகம் உற்று எழுந்தது சோகம்

மேல்
$3.33.85

#4262
அடி பெயர்த்திடா மூப்பு உறு சோகம் என்பதனை
வடிவின் மிக்கு எழ இளமையின் இயற்றிய மகிமை
திடம் அடுத்த தீன் மன்னவர் கண்டு அதிசயிப்ப
கொடை படைத்த வண் கர நபி பரியின் மேல் கொண்டார்

மேல்
$3.33.86

#4263
காபிர் கட்டு அறா சேனை அம் கடலினை கடந்து
கோபம் முற்றிய வயவரும் பரியும் பின் குழும
தீபம் ஒப்பு இலா ஒளி தரும் நபி எனும் திறலோர்
சாபிறு ஒட்டகம் முன் செல மதீனத்தில் சார்ந்தார்

மேல்
$3.33.87

#4264
இலகு பல் வள மதீனத்தின் ஏக இப்பால் வெம்
கொலையில் நின்றனன் இயற்றிய தீமையை குறித்தும்
அலகில் கீர்த்தி சூழ் முகம்மது விடுத்தலும் அவனும்
நலிவு இலாது உளம் மகிழ்ந்து தன் திசையினில் நடந்தான்

மேல்
$3.33.88

#4265
இருந்த மாய வெம் குபிரிடை உழன்ற பேரிழிவும்
பொருந்து தீமையும் ஆய்வு இலா புன்மையும் போக்கி
மருந்து போன்ற நல் வழியினை மனத்தினின் மதித்து
திருந்தி நாள்-தொறும் கேளிர் சூழ் வாழ் பதி சேர்ந்தான்

மேல்
$3.33.89

#4266
உறவின் மிக்க மைந்தரை உறு துணைவரை உரிய
மறம் மிகுத்திடும் கேளிர்கள்-தமை வரவழைத்து
முறைமையாக ஓர் இடத்தினில் உவந்து முன் இருத்தி
அறிவு மீறிய வாய்மையீர் கேண்-மின் என்று அறைவான்

மேல்
$3.33.9

#4267
ஈங்கு வஞ்சினம் கூறிய சொற்படி எழுந்து
நீங்கிலாத கான்யாறும் வெம் பாலையும் நீந்தி
தீங்கு உறாது யான் ஏகிய நெறியினில் தீனோர்
ஆங்கு யாவரும் துயில்வது காண்டு அகம் மகிழ்ந்தேன்

மேல்
$3.33.91

#4268
தேட அரும் பொருள் அடித்தலத்து இடறிய திறம் போல்
நாடி இன்று இவர்-தமை தெற வரும் நடவையினில்
கூடும் வல் வினை மூட்டியது இவண் என குறிக்கொண்டு
ஆடல் வென்றி சேர் அகுமது துயில் இடம் அடுத்தேன்

மேல்
$3.33.92

#4269
தருவில் சாத்திய வாளினை தட கரத்து ஏந்தி
கரிய வள் உறை கழித்தலும் தூதர் கண் விழித்து
தெரிய நோக்கினர் நோக்கலும் கரதலம் திருகி
இரு நிலத்திடை விழுந்தது நாந்தகம் இமைப்பின்

மேல்
$3.33.93

#4270
கண்டகத்தை அ முகம்மது திரு செழும் கரத்தில்
கொண்டு அடர்த்திட தெருமந்து மருண்டு உளம் குழைந்து
மண்டலத்தில் என் பிழை தவிர்த்திடுக என வணங்கி
விண்டு உரைத்தனன் அவை பொறுத்து இருத்தினர் மேலோர்

மேல்
$3.33.94

#4271
மருங்கு இருந்த தீன் மன்னவர் அனைவரும் வலிதின்
நெருங்கி வந்து உருத்து ஆர்த்து எனை வீழ்த்த முன் நேர்ந்தார்
தரும் கை வள்ளலார் அங்கு அவர் கதத்தினை தவிர்த்தே
ஒருங்கு போ என விடுத்திட மீண்டு இவண் உறைந்தேன்

மேல்
$3.33.95

#4272
எண்ணுதற்கு அரும் பெரும் பிழை இயற்றியும் இரங்கி
தண் என் வாய் மொழி கொடுத்து அளித்து அடைக்கலம் தந்தார்
புண்ணியத்தின் மேல் நின்றவர்க்கல்லது இ பொறுமை
ஒண்ணுமோ மற்று யாவர்க்கும் உததி சூழ் உலகில்

மேல்
$3.33.96

#4273
வெருவு உறு மன துன்பமும் விளைவுறு பயமும்
அருளும் தீங்கு இலா மயக்கமும் மாற்றி அன்னோர் தம்
பெரியவன் அருளால் எனது உயிர் தந்த பெற்றி
அருளினுக்கு எதிர் உதவி நம்மால் செய்யலாமோ

மேல்
$3.33.97

#4274
சிறுமை செய்பவர் நாண் உற கொடிய வெம் தீமை
பெறுவர் என்பது நல் வினை இயற்றிய பெரியோர்
முறையின் நல் வழி பெறுவர் என்பதும் முனம் எடுத்த
உறை கழித்த வை வாள் எனக்கு உரைத்திட உணர்ந்தேன்

மேல்
$3.33.98

#4275
தகைமை சேர் மன பொறையினாலும் தயவாலும்
மகிமை மீறிய வரத்தினாலும் வலியாலும்
நிகர் இலாத பேரறிவினாலும் நெறியாலும்
அகம் உலாவிய இறையவன் நபி எனலாமால்

மேல்
$3.33.99

#4276
வையமும் திகையும் பெரு வானமும் வானத்து
ஐயரும் திரை ஆழியும் நரரும் அல் பகலும்
வெய்யனும் சசியும் பிறவும் விரை மேனி
செய்யர் இன்றெனில் இன்று என யாவும் தீய்வுறுமால்

மேல்
$3.33.100

#4277
வரன் முறை திறம் நடவிய மறை உரை கலிமா
உரைசெய தகா வானவராயினும் ஒழியா
நிரையம் உற்று உழன்று அழுந்தவரெனில் அவை நினையா
ஒருவிவிட்ட நாம் உய்வது எ திறம் அவை உரையீர்

மேல்
$3.33.101

#4278
சிந்தை கூர்ந்து அவர் அருள்செயின் சேணொடு இ உலகும்
முந்து வாழ் சராசரமும் ஓர் குறைவு இன்றி உவக்கும்
நொந்து நோக்கிடின் அவை எலாம் ஒருங்குடன் நூறி
வெந்து தாழ்ந்து ஒரு நொடியினில் துகள்-அதாய் வீழும்

மேல்
$3.33.102

#4279
குறைவு இல் வாய்மையும் வணக்கமும் கோது அறு குணமும்
நிறையும் மானமும் இரக்கமும் கொடையும் நல் நெறியும்
பொறையும் வீரமும் போதமும் நீதமும் புகழும்
மறையும் ஓர் உருவாய் திரண்டு எழு முகம்மதுவே

மேல்
$3.33.103

#4280
இன்ன தன்மையோர் உறை உழை மதீனத்தின் ஏகி
பொன் அம் தாமரை இணை அடி சிரசின் மேல் பூட்டி
கன்னல் போல் மொழி திரு கலிமா உரை கழறல்
அன்னதே கருத்து அன்னதே அழகு என அறைந்தான்

மேல்
$3.33.104

#4281
தேர்ந்து கூறிய மொழி உணர்ந்து அறிவினில் தேறி
ஓர்ந்து யாவரும் இவரொடும் ஒல்லையின் எழுந்து
வார்ந்து நீண்டு எழுந்து இ வனம் கடந்து அணி மருதம்
சார்ந்த பல் வள மதீன மா நகரத்தில் சார்ந்தார்

மேல்
$3.33.105

#4282
உம்பர்_கோன் அகத்து அணைத்திட ஆரணம் உணர்ந்த
இம்பர்_கோன் நபி கமல செம் சேவடி இறைஞ்சி
கும்பி மாற்றும் மந்திர கலிமா உரை கூறி
நம்பி உள்ளத்து இருத்தி ஈமானினில் நயந்தார்

மேல்
$3.33.106

#4283
ஒருவன் நாயன் அல்லால் இலை உரிய தூது இவரால்
இருமையும் பலன் எய்தும் என்று இயல்புறும் தொழுகை
கருதி நோன்பொடு பறுலு சுன்னத்துகள் கற்று
மருவி மற்று உள முறை எலாம் படித்தனர் வயவர்

மேல்
$3.33.107

#4284
பவமும் தீமையும் வஞ்சமும் கொலையொடு படிறும்
அவமும் வேரற துடைத்து அரும் தீனவர் ஆகி
புவியின் மீது அடி தோய்தரா முகம்மதை போற்றி
தவமும் காட்சியும் எய்தி அங்கு அவர் தலம் சார்ந்தார்

மேல்

34 சாபிர் கடன் தீர்த்த படலம்

$3.34.1

#4285
அனையவர் போய பின்னர் ஆசவ தொடையல் வேய்ந்த
பனி வரை அனைய தோளார் பகை தடிந்து இலங்கு வேலார்
தனி மழ அரி ஏறு அன்னார் சாபிறு என்று ஓதும் தக்கோர்
நனி புகழ் தழுவி நின்ற நபி முனம் வந்து சொல்வார்

மேல்
$3.34.2

#4286
அண்டர்_நாயக என் தந்தை அறிவிலா எகூதியோர்-பால்
பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை
கொண்டனர் பலிசையாக ஆங்கு அவை கொடுக்கும் முன்னம்
விண்டனர் உயிரை ஐய மேலவன் விதியின் வண்ணம்

மேல்
$3.34.3

#4287
என்னுழை அவர்கள் ஈண்டி பொலி கடன் ஈக என்று உன்னி
பன்னினர் முதல் கொண்-மியா என்று அடியனேன் பகர முன்னம்
சொன்ன சொற்படி நல்கு என்ன தடுத்தனர் துணிந்து நின்றார்
மன்ன இ வருடம் எற்கு வரு பலன் சிறிது மன்னோ

மேல்
$3.34.4

#4288
பலிசையும் முதலும் நூற்றைம்பதின் கலம் ஆகும் எண்ணி
அலைவு இலா ஆண்டு நான்கினாயினும் அருள மாட்டேன்
மலிதரு காட்சி எய்தி வானுளும் நடந்த மேலோய்
மெலிவுளேன் நலிதல் மாற்றவேண்டும் என்று இதனை சொன்னார்

மேல்
$3.34.5

#4289
வரையகத்து இருந்து பேறும் வரிசையும் பெற்ற வள்ளல்
புரை அடர் எகூதி என்னும் புன்மையோர் தம்மை கூவி
பரிவுடன் கடமை முற்றும் பற்று-மின் பொறையின் என்ன
உரைதர இதயத்து எண்ணா மறுத்தனர் உணர்விலாதார்

மேல்
$3.34.6

#4290
அறத்தினை திரட்டி வேறு ஓர் ஆண் உரு அமைத்தது என்னும்
திறத்தினர் ஆதி தூதர் உயிர் என சிறந்த கேளிர்
புறத்திடை சூழ சாபிர் பொறி வரி வண்டு கிண்ட
வெறி துணர் தாது துன்றும் வேரி அம் சோலை புக்கார்

மேல்
$3.34.7

#4291
அடல் புரி சாபிர்-தம்மை அருகினில் கூவி ஈந்தின்
துடவையின் கனிகள் தாரு-தொறும் பறித்து ஈட்டும் என்ன
படி புகழ் கபீபு சொன்ன சொற்படி படர்ந்து செம் தேன்
குடிபுகும் கனிகள் யாவும் மரம்-தொறும் குவித்து வைத்தார்

மேல்
$3.34.8

#4292
அக்கணத்து எகூதி காபிர்-தம்மை அங்கு அழைத்து முன்னம்
மிக்க நும் கடமை யாவும் விருப்புற எவரும் காண
இ குவை-தன்னில் நீவிர் அளந்துகொண்டு ஏகும் என்றார்
புக்கி ஆண்டு அன்னோர் தங்கள் பொலி கடன் அளந்து போனர்

மேல்
$3.34.9

#4293
விதம் பெறும் குவையின் மற்று ஓர் குவையினின் வேண்டு நூற்றைம்
பதின் கல பழமும் காபிர் பண்புடன் அளந்தும் நீடு அற்
புதம் தர கனிகள் ஒன்றும் குறைந்தில பொருவு இலா தீன்
மதம் தரு நபிகள் கோமான் மகிமை யார் வகுக்க வல்லார்

மேல்
$3.34.10

#4294
தரு-தொறும் குவித்து நின்ற பல குவை அனைத்தும் சாபிர்
கருத்தினில் களிப்பு மீறி மகிழ்ந்து கைக்கொண்டு போற்றி
சிரத்தினை அடியின் வீழ்த்தி சென்று தம் மனையில் புக்கார்
வரத்தின் மேல் நின்ற வேத வள்ளலும் மனையில் போந்தார்

மேல்

35 முறைசீக்குப் படலம்

$3.35.1

#4295
இன்ன காரணம் இயற்றி தீனின் மறை முறை ஒழுகி இருக்கும் எல்வை
நல் நிலைமை தவறாத சாரணரில் ஒருவர் அவண் அணுகி நாளும்
துன்னு தவ வானவர்கள் தொழும் அரிய ஒளி உருவாய் தோன்றி நின்றோய்
என் உரை கேட்டருள்தி என இணை அடியில் கரம் தாழ்த்தி இனைய சொல்வார்

மேல்
$3.35.2

#4296
சேல் பாய மேதி வெருண்டு ஓட வளை உடைந்து முத்தம் சிந்தி சோதி
கால் பாயும் கரை தடம் சூழ் முறைசீகு எனும் நகரில் கணிப்பிலாத
வேல் பாய வடு சிறந்த திண்மை நல மேனியர்கள் மேன்மேல் வென்றி
மால் பாய்ந்துகொண்ட குல முஸ்தலிகு கூட்டம் எனும் மாந்தர் மன்னோ

மேல்
$3.35.3

#4297
தேறி மனம் ஆங்கு அவர்கள் தாங்கள் தொழு தேவதமேயன்றி மற்றோர்
வேறும் ஒரு தேவதமே இல்லை என பாரிடத்தின் வெகுண்டு நாளும்
மாறுகொண்டு பெரியோருக்கு இடர் விளைத்து மறை நான்கும் அறைந்து யாரும்
கூறிய அ வாசகமும் இயம்பி மதத்திருந்தனர் வெம் கொடுமை பூண்டார்

மேல்
$3.35.4

#4298
தானம் அருள் இறை நீதி அறிவு பொறை எள்துணையும் தாங்கிலாதார்
ஈனம் உறு வெம் கொலையும் நிந்தனையும் வஞ்சகமும் இயைந்து நின்றார்
தீனவர்கள்-தமை காணில் கோறலன்றி வேறு மொழி செப்பிலாதார்
மானமிலர் புன்மை எழும் வஞ்ச நெஞ்சர் யாவருக்கும் வணங்கிலாதார்

மேல்
$3.35.5

#4299
இ தகைமை பூண்டு நம்-தம் தீனோருக்கு இடுக்கண் நிலை இயற்றி நாளும்
சத்துருவாம் என இருந்தார் இங்கு இதனை அறி-மின் என சாற்றலோடும்
பத்தி பெற நிறை மனத்தில் கொண்டு களிப்புற மகிழ்ந்து பரிவினோடும்
அத்திரியும் மள்ளரொடு மன்னவரும் எழுக என அறைந்திட்டாரால்

மேல்
$3.35.6

#4300
ஆரணத்தின் முறை தவறா அபாதற்றுல் கப்பாறை அளவிலாத
தோரண வண் மறுகு தரு மதீன நகர்க்கு ஆதி என தோன்ற நாட்டி
பூரண வெண் மதி அனையோர் கரைபோட்டு பார்ப்ப வினை பொருவு இலாத
காரணத்தில் நின்ற தவ ஆயிசாவுடன் போக கண்டது அன்றே

மேல்
$3.35.7

#4301
அன்ன நிறை மயில் எழுக கன்னியர்கள் புடைசூழ ஆதி தூதர்
என்னும் நபிக்கு அரசு எழுக காட்சியொடு காரணமும் எழுக தாழ்வு இல்
மன்னவர்கள் எழுக எழும் பரி வேந்தர் திரண்டு எழுக வரத்தின் யார்கள்
துன்னு பரியொடும் எழுக எழுந்தன போய் திசை-தோறும் தூளி அம்ம

மேல்
$3.35.8

#4302
துன்று அடல் வாம் பரி நடந்த துன்னலர்கள் தசையோடும் தோயும் ஆவி
தின்று உமிழும் வை வேலின் மன்னவர்கள் நடந்தனர் வெம் தீமை மற்றும்
வென்றி நடந்தன புடையின் வீரம் நடந்தன இறசூல் மேனி வீச
மன்றல் நடந்தன படைகள் யாவும் நடந்தன வானர் வாழ்த்த மன்னோ

மேல்
$3.35.9

#4303
சென்னி மதி என சருவந்து இலங்க வடிவு உறும் உடலில் சிறந்த வெள்ளை
மின் அணி கஞ்சுகி இலங்க பிடரிடை முத்திரை இலங்க விரும்பி நாளும்
பன்னும் மறை வாய் இலங்க கருணை விழி மீது இலங்க படையின் ஓசை
கன்னம் உறவே இலங்க பரி சுமப்ப ஏகினர் வண் கபீபு மன்னோ

மேல்
$3.35.10

#4304
பெரிய முலை சிறிய இடை பவள இதழ் தரள நகை பிறழும் வாள் கண்
கரிய குழல் பிடியின் நடை சிலையின் நுதல் செழுமை தரும் கணிப்பில் மாதர்
இரு புறத்தும் அடைப்பை மணி சிவிறி மரை நறும் பேழை இனைய ஏந்த
பொருவு அரிய அழகு மயில் ஆயிசா எனும் கொடியும் போனார் அன்றே

மேல்
$3.35.11

#4305
விண்ணை மறைத்தன கொடிகள் மேகம் மறைத்தன குடைகள் விரும்பி நோக்கும்
கண்ணை மறைத்தன கவரி கடலை மறைத்தன இயத்தின் கணிப்பில் ஓசை
மண்ணை மறைத்தன தூளி வெயிலை மறைத்தன ஒளி சேர் வாட்கள் பேசும்
எண்ணை மறைத்தன தானை இரவி மறைத்தன முகம்மது எழில் கொள் மேனி

மேல்
$3.35.12

#4306
வேந்தர் மறையோர்கள் முசுலிம்கள் தவ மாந்தர் நெடு வெய்யோன் என்ன
காந்து கதிர் வாள் உழவர் மற்று எவையும் காபிர் இகல் கருதாநின்று
நீந்து புவி தாரை இடம் சிறியது என்றோ தானை நெருக்குற்றது என்றோ
பாய்ந்து கவி குளம்பு படாது எழுந்து விண்ணில் ஏகின வெம் பரிகள் மன்னோ

மேல்
$3.35.13

#4307
தரணி சிறிது என கிடந்த பெரும் பதி ஈன்றெடுத்து உவந்த தரும வேந்தர்
மருத நிலம் கடந்து நெடும் கழுது குடியிருந்த சுர வனமும் நீந்தி
விரிதரு வாய் மலர் தேறல் அருவி சொரி வரை கடந்து விரி_நீர் என்ன
பொருவு அரிய வளம் படைத்த முறைசீகு எனும் நகர புறத்து உற்றாரால்

மேல்
$3.35.14

#4308
அந்தரத்தின் அகடு உரிஞ்ச நீண்ட நிசான் அமைத்து மதி அனைய காந்தி
சுந்தர வெண் படங்கு இயற்றி செவ்வி நிரைப்படி துரகம் துலங்க சேர்த்தி
விந்தை பெற பீடிகையும் வகுத்து மறை மாந்தரொடு வேந்தர் சூழ
கந்தம் உலவிய தூதர் உறைந்தனர் நல் தரும நெறி கடந்திலாதார்

மேல்
$3.35.15

#4309
மாறுகொண்டு தீனவரும் முகம்மதுவும் மற்று எவரும் மதீனம் நீந்தி
ஆறுகொண்டு வந்து மனத்து எண்ணாமல் முனை பதியும் அமைத்தார் என்ன
கூறு நகரவர்க்கு மனம் வெகுண்டன கண் சிவந்தன தீ கொதிப்ப வாயை
ஊறுதர கடித்தன பல் பிசைந்தன கை பொடித்தன உரோமம் எல்லாம்

மேல்
$3.35.16

#4310
தாங்கினர் வெம் மறம் ஊக்கம் அமையாத கோப தீ தழைப்ப மேன்மேல்
வீங்கினர் போர் கிடைத்தது என அடிக்கடி போய் மெலிந்திருந்த விலங்கல் தோள்கள்
ஓங்கினர்கள் யாம் எழு முன் அ படை மீண்டு எய்திடுமோ என்ன எண்ணி
வாங்கினர்கள் கூர்மையினை நோக்கினர்கள் படை யாவும் மாந்தர் மன்னோ

மேல்
$3.35.17

#4311
மெய்த்தலத்தில் கஞ்சுகியும் மேல் கவசமும் விசித்து விரி தீ சூலம்
நெய் தலை வேல் மறித்தறிகை தண்டு தனு சக்கரம் மின் நெடிய வாளும்
கைத்தலத்தின் ஏந்தி விசை பரி சூழ ஈண்டினர் வெண் கடி வாய் பாந்தள்
பைத்தலம் கீழ் உற நெளிய திரண்டு நடந்தன உததி பதாதி மன்னோ

மேல்
$3.35.18

#4312
படபடென கொடி ஆட குடை கவிப்ப மரை எறிய பரிகள் பாய
மடமடென பேரிகை மற்று இயம் குமுற காபிரொடு மதிப்பில் சேனை
திடுதிடென ஈண்டியது என்று அரிய மறை எழுது கொடி சீயம் இன்னே
எடும் எடு என தீன் உவந்த போர் வேந்தர் சேனையொடும் எதிர்ந்தார் அன்றே

மேல்
$3.35.19

#4313
அடுத்தன வெம் பரியினொடும் தானையொடும் சேனையொடும் அங்குமிங்கும்
மடுத்தன ஆண்டு இரு படையும் ஒரு படை ஈது என்ன அணி வயங்க மாந்தர்
கடுத்து விழி நெருப்பு எழ வாய் தின்று மணி செழும் கரத்தில் கணிப்பிலாது
விடுத்த படைக்கலன்கள் உயர் விண்ணொடும் மண்ணையும் மறைத்த வெளி இல் என்ன

மேல்
$3.35.20

#4314
குடர் துமிந்த சில நெடிய வால் துமிந்த சில வேகம் கொண்டு பாயும்
அடி துமிந்த சில உளையின் களம் துமிந்த சில மணி சூழ் அணியின் வேய்ந்த
உடல் துமிந்த சில நிமிர்ந்த செவி துமிந்த சில மூக்கின் உதிரம் கால
மடை திறந்தது என சொரிய தலை துமிந்து கிடந்த சில வாசி மன்னோ

மேல்
$3.35.21

#4315
கரம் அறுந்தும் அகடு அறுந்தும் முதுகு அறுந்தும் களம் அறுந்தும் கருத்தினோடும்
உரம் அறுந்தும் பதம் அறுந்தும் புயம் அறுந்தும் மருங்கு அறுந்தும் ஒளிரும் மோலி
சிரம் அறுந்தும் முகம் அறுந்தும் பிடர் அறுந்தும் துடை அறுந்தும் சிதைந்து நீண்ட
தரை கிடந்து உள் உயிர் துறந்து படை எறிந்து மாய்ந்தனர் போர் தலைவர் மன்னோ

மேல்
$3.35.22

#4316
கிள்ளையினது உடலினும் போர் மைந்தர் உறுபினும் சேந்து கிளர்ந்த சோரி
வெள்ளம் என பரந்து கரை அள்ளல் என கிடப்ப மனம் விரும்பி ஈண்டும்
கள்ளம் உறும் உள்ளனும் வெம் சூரனும் வேதாளமும் வீழ் கழுகும் காக
புள்ளினொடும் பிணங்கி நிண தசைகள் உண்டு திரிந்தன போர் களத்தில் அம்ம

மேல்
$3.35.23

#4317
மலையை ஒத்த பல் பிணங்கள் குவிந்தன பல் மீனொடு வான் உலவு வேந்தன்
கலையை ஒத்து விளங்கின வெண் சருவந்தம் மௌலி அணிகலன்கள் வாழை
இலையை ஒத்த கொடி திரள் வீழ்ந்து இலங்கின செம் சோரி செக்கர் என்ன தோன்றும்
நிலையை ஒத்த பனை கனியை ஒத்த கரும் தலை நிலத்தின் நிறைந்து மன்னோ

மேல்
$3.35.24

#4318
இன்னபடி மள்ளரொடு கிள்ளை மடிய போரின் இணங்கும் ஏல்வை
மின்னு கதிர் வாள் வீழ கொடி வீழ திறம் வீழ வீரம் வீழ
துன்னு பல இயம் வீழ ஓடாத சேனை பல தொடர்ந்து வீழ
மன்னு குல நெறி வீழ முறிந்தனர்கள் முஸ்தலிகு மாந்தர் மன்னோ

மேல்
$3.35.25

#4319
ஓடினர் மெய் முழுகு உதிரம் கால விழி பின் நோக்கி உழுக்க பாதம்
தேடினர் தம் மனைவி பெறும் சேய் நிதியம் தேடாது சிலையும் கானும்
பாடினர் செம் மறை வேந்தர் பயகாம்பர் மகிழ்ந்தனர் பாசறையின் எங்கும்
ஆடின பேய் களித்தன தீன் உவந்தன போர் வென்றியொடு மறம் கூத்தாட

மேல்
$3.35.26

#4320
போய் ஆறினர் பயம் ஒன்னலர் தசை உண்டு புகழ்ந்து
பேய் ஆறின அழல் வெம் பசி கவினும் பிறழ் கண்ணின்
தீ ஆறின செரு ஆறின சினம் ஆற வஞ்சினத்தின்
வாய் ஆறினர் கை ஆறினர் தீனின் மறை வல்லோர்

மேல்
$3.35.27

#4321
பவம் உந்திய படிறும் வெகு பழி உந்திய கொலையும்
அவம் முந்திய மன வெம் குபிரவர் வெண் கொடி ஒளியில்
திவள் வெண் கொடை பலபல் மணி சிவிகை திரள் எல்லாம்
தவம் உந்திய முசுலீமனர் கொண்டார் பறந்தலையின்

மேல்
$3.35.28

#4322
திக்கு தலை அறியா வகை சிந்தி செலும் முஸ்த
லிக்கு திரள் மற மைந்தர்கள் இணங்கா வகை நாளும்
புக்கி பவமே ஊட்டிய பொருவு இல் வள நகரை
கக்கன் அருள் முன் சுற்றிட வளைந்தார் குபிர் களைந்தார்

மேல்
$3.35.29

#4323
அடுத்தார் மறுகிடத்தே மனை இடித்தார் பணி யாவும்
எடுத்தார் கலை எடுத்தார் நிதி எடுத்தார் நகர் எங்கும்
மடுத்தார் அடி பெயர்த்து ஆடிய மருத்தே எனும் மாவும்
படுத்தார் வெடுவெடுத்தார் சிறைபிடித்தார் மறை படித்தார்

மேல்
$3.35.30

#4324
வரை எட்டொடு பல வெற்பு-அவை வந்தே நகரத்தில்
தரிபட்டு எனும் மாடம் பல தரைசெய்தனர் தரையில்
அரிபட்டு எழு பொழில் மா மனை என்னும் அவை எல்லாம்
எரியிட்டனர் கரிபட்டு உக மதி மன்னவர் எங்கும்

மேல்
$3.35.31

#4325
இடபம் கொறி சோகம் பணி எழில் ஆடை பல் நிதிய
திடரும் பல பண்டத்தொடு திருவும் அற வவ்வி
மடமை பிடி நடை மங்கையர் மழலை சிறு தனையர்
தொடர சிறைகொண்டார் அவண் எழுந்தார் துயர் அழுந்தார்

மேல்
$3.35.32

#4326
படை தாங்கிய கரத்தில் பலபல தாங்கினர் பண்டம்
முடி தாங்கிய சிரத்தின் அணி முறை தாங்கினர் பேழை
தொடை தாங்கிய புயத்தின் நிதி சுமை தாங்கினர் நாளும்
மிடல் தாங்கிய நபி முன் செல எழில் தாங்கிய வீரர்

மேல்
$3.35.33

#4327
சேனை கடல் ஓலத்தொடு பாரில் செல நாப்பண்
வானில் கதிர் போல் மெய் ஒளி மாயாது எழில் வீசும்
நான பொறை எனும் நம் நபி குளிர் நாரம் இலாத
ஈன சுர புயிதா எனும் இடத்தே வருமளவில்

மேல்
$3.35.34

#4328
நறு மேனியின் அசுமாவிடம் இரவல்கொளும் நளின
சிறு மெல் அடி மயில் ஆயிசா களம் மீதினில் சிறந்த
குறைவு இல் மணி நிறை மாலிகை குறியாது அவண் வீழ்ந்த
தறை மீதினில் தெரியா தினன் குட-பாலினில் சார்ந்தான்

மேல்
$3.35.35

#4329
வையத்தினின் வீழ்கின்ற நல் மணி மாலிகை கண்ணின்
எய்தும் அளவும் தோன்றிய இருள் போது அவண் இறுத்தார்
மெய்மை புகழ் நபி நாதரும் மிகு சேனையும் அப்பால்
பையப்பய அ எல்லியும் பட கீழ் திசை விளர்த்த

மேல்
$3.35.36

#4330
தேய்கின்றது இ இரவும் வெளி தெரிகின்றது கதிரும்
பாய்கின்றது கலனும் கணில் படுகின்றில பசுறும்
மாய்கின்றது தொழல் இவ்வுழை எவ்வாறு என மனத்துள்
ஆய்கின்றவர் மனையார் துடை அணை மேல் துயில்செய்தார்

மேல்
$3.35.37

#4331
மதி முற்றிய அபுபக்கர் தம் மகள்-பால் அவண் எய்தி
உதக தடம் இல இ தலம் உறைய தொழுகையுமே
சிதய தவ நயினாரொடு செறிந்தோரையும் தகைத்தாய்
அதி உத்தி உளாய் என்று அறிவு உணர குறை சொன்னார்

மேல்
$3.35.38

#4332
அடல் கொண்டு எழு பரி சோகம் மற்றவை யாவும் நல் புனலால்
இடர் கொண்டன மறை தீனவர் துயர் கொண்டு அவண் இருப்ப
முடிவின்றிய அருட்கு ஓர் மனை எனும் முண்டக விழியில்
படரும் துயில் ஒழித்தே ஒளிர் பயகாம்பரும் விழித்தார்

மேல்
$3.35.39

#4333
நெஞ்சு ஆகுலம் அற நீரகம் இல்லா இட நியமம்
துஞ்சா வகை தயமும் செய்து தொழ மேலவன் விதியின்
மிஞ்சு ஆரண மொழி ஆரமுது இஃது என்ன விரைந்து
மஞ்சு ஆர் வெளி வழியே கொடுவந்தார் சிபுரீலே

மேல்
$3.35.40

#4334
வரலும் பெரு மகிழ்கொண்டு அகுமது துன்புறும் அவரோடு
உரை விண்டனர் அவர் கொண்டனர் இவரும் பிறருளரும்
உருகும்படி பிறிது ஒன்றையும் நினையாது ஒரு பொருளை
தரும் மந்திர நெறியின்படி தயமும் செய்து தொழுதார்

மேல்
$3.35.41

#4335
செயிர் தீர்தர வணக்கத்தது செயலாகிய பின்னர்
அயில் வாள் அணி கரத்தோர் மறை அலர் வாள் முகம் நோக்கி
தயமும் செய்து தொழ காண்டது தரை மாதர்கள் திலதம்
மயில் ஆயிசா பறக்கத் என நபி கூறினர் மாதோ

மேல்
$3.35.42

#4336
ஆகத்து உவகை எய்திட இருக்கும் அளவையினின்
மாகத்து உடு ஒத்தே மிளிர்ந்து இமைக்கும் மணி வடமும்
சோகத்து அகடு உள்ளே கிடந்து எடுத்தார் துயர் விடுத்தார்
வேகத்தொடு வெய்யோன் எழ படையும் விரைந்து எழுந்த

மேல்
$3.35.43

#4337
செற்றே குருதி சாறு குடித்தே மெய் சிவக்கும்
எல் தாவு கதிர் கோணம் எடுத்தே மறை கற்றோர்
வில் தானையோடு உற்றார் புரவி தானை நடப்ப
வற்றாது அருள் மிக்கார் நபி புக்கார் மதினத்தில்

மேல்
$3.35.44

#4338
மதினா எனும் நகர் எய்திய வள்ளல் அடையலர்-தம்
பதி மேவிய சிறை ஆடை பல் மணி பாய் பரி சோகம்
நிதி யாவும் அங்கு உறு தீனர்கள் நெஞ்சம் மகிழ் மீற
விதமோடு அவரவர்க்கே அவை பகுந்தே இனிது ஈந்தார்

மேல்
$3.35.45

#4339
தருமம் திகழ் தாபித்து என வரும் மன்னவர் சார்பின்
வருமம் திகழ்தரு ஆரிது வரத்தால் அவதரித்த
திருவும் குண நலனும் பெறு செயலும் பொறை நிறையும்
உரு அந்தமும் உற வந்தனள் சுவைறா என ஒரு மான்

மேல்
$3.35.46

#4340
அறம் மேவினர் அ மாதினை அருள் பார்வையில் நோக்கி
தறை ஆள்வதும் இவளே வனிதையர் யாவர்கள் கற்புக்கு
இறை ஆவதும் இவளே சொலும் எழிலாவதும் இவளே
சிறை ஆளவும் ஒண்ணாது என மனத்தில் தெருமாந்தார்

மேல்
$3.35.47

#4341
பொருளே எனதிடமே அரு பொறையோடும் அளித்து
மருவே மரு மணமே வளர் மதியே மதி மாதர்
குருவே திரு மணியே குல மயிலே பெறு தாயே
உருவே வடிவு ஒளிவே உமது உடல் மீளுதி என்றார்

மேல்
$3.35.48

#4342
கேட்டாள் சிறை மீட்டு ஏகுதிர் என்னும் கிளவியினை
தாள் தாமரை மயில் அன்னவள் நலன் ஈது என தனியே
பேட்டு ஓதிமம் உறழ தரை நடந்தே பிறழ்கின்ற
தீட்டா உரு எய்தும் நபி திருமுன்னரின் வந்தாள்

மேல்
$3.35.49

#4343
வந்தாள் பணிந்து எழுந்தாள் அவணின்றே ஒரு மருங்கில்
கொந்து ஆர் தரு எனும் நம் நபி குளிர் வாள் முகம் நோக்கி
அம் தாரணி அரசே அடல் அரியே அதிசயமே
சந்தாடவி வரையே என புகழ்ந்தே உரை சாற்றும்

மேல்
$3.35.50

#4344
தவமும் பெறு நிறையும் வெகு தயவும் கன தனமும்
கவினும் பொறை அருளும் மதுகையும் நாளினும் உடையோன்
புவியும் புகழ்தர வல்லவன் பொருவில்லவன் ஆரிது
அவன் இல்லவள் பெறும் பந்தனை அடியாள் சுவைறாவே

மேல்
$3.35.51

#4345
தீனோர்களில் தாபித்து எனும் திறல் மன்னவர் சார்பில்
ஆனேன் தலைவிலை ஈந்து இனி நீ போக என அறைந்தார்
வான் ஊர் மதி அனையீர் மனம் மகிழ்ந்தே கயிறாக
யானே இவண் அடைந்தேன் சில பொருள் ஈகு-மின் ஐயா

மேல்
$3.35.52

#4346
செயிர் அற்று எனை ஈன்றாள் பிரிவு என்னும் கொடும் தீயால்
வெயில் பட்டிடும் மலர் ஒத்து அற மெலிவாள் உளம் அதனால்
அயர்வுற்றனன் அவண் ஏகுவன் எழில் வானவர்-அவரின்
உயர் மெய் தவம் உடையீர் அருள் இரங்கீர் என உரைத்தாள்

மேல்
$3.35.53

#4347
வடிவுக்கு ஒரு பொருளே பொழில் மழலை சிறு குயிலே
கடல் உற்று எழும் அமுதே விரி கதிருக்கு ஒரு மணியே
குடியில் பெறு சுடரே அதி குலனுக்கு அரு நிதியே
படியில் சசி எனவே அடிக்கடி நோக்கினர் பரிவின்

மேல்
$3.35.54

#4348
வெல்லும் சசி முகமும் வளை வில்லின் தர நுதலும்
செல்லும் பிடி நடையும் துவழ் சின்னஞ்சிறிது இடையும்
சொல்லும் திரு மொழியும் இணை துள்ளும் பிணை விழியும்
அல்லும் பொரு குழலும் இவை எல்லாம் உடல் அயர்த்த

மேல்
$3.35.55

#4349
மோக துயருடனே நினைவு அறியா வகை முழுதும்
ஆகத்தினின் மீற புகழ் ஆண்மை திறல் நயினார்
பாகு ஒத்த மெய் மொழியார் முகம் நோக்கி பயம் இல்லா
நாகத்தொடு பேசும் திரு வாய் விண்டு உரை நவில்வார்

மேல்
$3.35.56

#4350
கொலை வாள் கர தாபித்து எனும் குல மேலவர்-தமக்கே
விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும்
பலன் ஆம்படி நீயும் இனி பதி-தோறினும் போய்ப்போய்
அலையாவகை மகிழ்வாக இல்லவள் ஆகுதி என்றார்

மேல்
$3.35.57

#4351
மறுத்தாள் குபிர் துடைத்தாள் துயர் மதித்தாள் அற மதத்தை
பொறுத்தாள் உடல் தழைத்தாள் மயிர் பொடித்தாள் புளகிதத்தால்
அறுத்தாள் குலத்து இனத்தார் எனும் அக பாசமும் யாவும்
வெறுத்தாள் நபி மனை பாரி என்று உரைத்தார் எனும் விதத்தால்

மேல்
$3.35.58

#4352
அறிவும் பொறை அருளும் தரு மறையும் திரு அறமும்
நிறையும் பதவியும் எய்தின விதியின்படி நிகழாது
உறையும்படி மகிழ்வாய் உமது உரையின்படி நலன் என்று
இறு மென் கொடி இடையார் நபி எதிர் நின்று இவை இசைத்தார்

மேல்
$3.35.59

#4353
கொம்பு அன்னவர் நலன் ஈது என அறிவுக்கு ஒரு குவ்வின்
தம்பம் என மறை ஓதிய தாபித்து-அவர்தமக்கே
செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப
அம் பங்கய முகத்தார் மனைவியர் ஆக்கினர் அன்றே

மேல்
$3.35.60

#4354
மட்டு ஆர் தொடை புயத்து ஆரிது மகளார் சுவைறாவை
எட்டாத அரும் புகழ் மா நபி மணம் எய்தலும் எவரும்
கட்டாம்படி சிறை யாவையும் கடிதின் பயன் உரிமை
விட்டார் இவர் நகர் மேவிய சுற்றம் எனும் விருப்பால்

மேல்
$3.35.61

#4355
இகல் மன்னவர் சிறை எண்ணிலது எல்லாம் இனிது உரிமை
மிக எய்தியது உன்னால் என வேண்டும் நலன் யாவும்
தொகு மென் கொடி கவின் உந்திய திருவாம் சுவைறாவை
புகழ்கின்றனர் மகிழ்கொண்டனர் அபுபக்கர்-தம் புதல்வி

மேல்

36 கந்தக்குப்படலம்

$3.36.1

#4356
அணியினுக்கு அணி என்று ஓதும் அவிர் மதி முகத்தினாரை
மணம் முடித்து இனிது வந்து மதீனத்தின் இருக்கும் நாளில்
பணி விடம் அனைய வஞ்சர் அறம் எனும் பயிர்க்கு நாளும்
பிணி எனும் தகைய காபிர் செய்தவை பேசுவாமால்

மேல்
$3.36.2

#4357
நானிலத்து இருந்து நாளும் தேடியே நரகின் எய்தும்
ஈனவன் ககுபு கேளிர் என்பவர் சுகுறா நீந்தி
போன நாளளவும் ஷாமில் வஞ்சகம் புணர்த்தி நீதி
தீனரை இடுக்கண் காண இருந்தனர் திறமை இல்லார்

மேல்
$3.36.3

#4358
அவர்களில் தலைமை மிக்கோன் அகுத்தபு தனையன் நீண்ட
கவர் மன குயை என்று ஓதும் பெயரினன் கபடம் மூட்டும்
சுவை அறு மொழியான் நாளும் பகையினை தொடங்கி நின்றோன்
தவிர்கிலா நாணம் அற்றோன் தருமத்தின் தகைமை இல்லோன்

மேல்
$3.36.4

#4359
சந்திரன் ஒளியை ஓட்டி தன் ஒளி காட்டும் மேனி
சுந்தர தூதர் கோறல் துணிவது விருப்பமுற்றோன்
வெந்து எரி கலுழும் கண்ணார் வீழ்த்திட ககுபு விண்ணில்
உந்தினான் என்னும் புன்மை நோய்க்கு இடம் துளப்ப அன்றே

மேல்
$3.36.5

#4360
ஆற்றிலன் துயரம் கள்ளம் அடங்கிலன் அதிக வேக
சீற்றமும் ஒடுங்கிலன் போர் சிந்தனை எறிகிலன் தீ
காற்று எனும் உயிர்ப்பு வீக்கம் கழித்திலன் கருதா புன்மை
தேற்றிலன் இனைய நாளும் இருந்தனன் செயலை ஓரான்

மேல்
$3.36.6

#4361
வங்கிடத்து உரிய மாந்தர் வழி முறை நின்ற வேந்தர்
தங்கிய சூழ்ச்சி வல்லோர் போர் உடை தலைவர் மாறாது
எங்கினும் வஞ்சம் மூட்டும் எகூதிகள் இவரை நோக்கி
வெம் கடு மனத்தன் வாய்மை இனையன விரிக்கலுற்றான்

மேல்
$3.36.7

#4362
தாரணி-அதனில் வேறு பொருவு இலா சுகுறா என்னும்
ஊரிடை இருந்து வாழ்ந்தாம் முகம்மது என்று ஒருவன் தோன்றி
வீரமும் திறனும் வாய்ந்த ககுபையும் வதைத்து வீழ்த்தி
சீர் இலா நமரையும் இ புற நகர் திரிய விட்டான்

மேல்
$3.36.8

#4363
புதியது ஓர் சமயம் பூண்ட திருந்தலர் போரில் தாக்கி
கதம் உடை திறனும் காட்டி வெற்றியே காண வேண்டும்
மதி_வலீர் ஈது அன்றென்னில் வாழ் உயிர் துறப்பதல்லால்
இதம் உற இருத்தல் நம்-தம் விறலினுக்கு இழிவதாமால்

மேல்
$3.36.9

#4364
நாட்டினை துறந்து சார்ந்த நாணமும் துறந்து வாழ்ந்த
வீட்டினை துறந்து வீர வேடமும் துறந்து கேளிர்
கூட்டமும் துறந்து யாரும் அவ மொழி கூறும் புன்மை
சூட்டை ஒன்றெடுத்தாம் நம்மை போல் எவர் துணிய வல்லார்

மேல்
$3.36.10

#4365
அல்லொடு பகலும் மாறாது அடிக்கடி பூசை செய்யும்
வில் உமிழ் சிலையும் போக்கி வேலொடு வாளும் வீழ்த்தி
கல்லொடு மரமும் காலின் அடிபட கடிதின் ஓடி
வல் உயிர் காத்து வந்தாம் மதியினும் வல்லரேயாம்

மேல்
$3.36.11

#4366
அரும் தவத்துடையீர் தேர்ச்சி அறிவினில் பெரியராகி
இருந்த நம் குலத்துக்கு எல்லாம் இழிவொடு சிறுமை நாளும்
பொருந்திட இனைய செய்தோம் உலகினில் புகழ் ஈது அன்றி
திருந்திட வேறு நம்மால் செய்யவும் வேணுமோ-தான்

மேல்
$3.36.12

#4367
வேலினை வீழ்த்த கையும் வெருண்டு உலைந்து ஓடும் காலும்
காலு நீர் குருதி பாய காட்டிய முதுகும் போரில்
சாலவும் வெருவி தேம்பி சாற்றிய வாயும் தக்க
சேலினன் இவையும் சொன்னேன் நாணத்தால் சிறியனல்லேன்

மேல்
$3.36.13

#4368
இடுக்கண் உற்று உலைந்தோர் இன்பம் எய்துவர் எதிரில் நின்று
மிடுக்கு அற தோற்று நின்றார் வெற்றியும் பெறுவர் அன்றோ
கொடுக்கும் மை முகிலின் அன்னீர் கோது உற தீனர் வெம் போர்
தொடுக்குவன் விசயம் காண திசைகளும் துணுக்கம் கொள்ள

மேல்
$3.36.14

#4369
குன்று உறழ் வலிய மொய்ம்பின் கொற்றவர் வேந்தன் மிக்க
வென்றி சேர் மடங்கல் அன்னான் ககுபு எனும் வீரர்_வீரன்
பொன்றிய பழியும் வாங்கி பூவினில் சீர்த்தி வித்தி
துன்றிய பகையும் தீர்த்து தீமையும் துடைப்பன் மன்னோ

மேல்
$3.36.15

#4370
கான் எலாம் சிரம்-அது ஆக கடல் எலாம் குருதி ஆக
வான் எலாம் உயிர்-அது ஆக மண் எலாம் பிணம்-அது ஆக
ஊன் எலாம் படை-அது ஆக உடல் எலாம் கவந்தம் ஆக
தீன் எலாம் திசையின் ஓட செய்குவன் திறமை பார்-மின்

மேல்
$3.36.16

#4371
வெம் பசி தீண்டி நாளும் மெலிந்து கண் துயிலும் வாள் வேல்
அம்பினுக்கு உயிர் ஊன் என்னும் ஆரமுது ஊட்டி நீண்ட
உம்பரில் பறவை பாட உலகினில் அலகை ஆட
சம்பொடு ஞமலி கூடி விருந்து உண சமைப்பன் மன்னோ

மேல்
$3.36.17

#4372
ஈங்கு இவை உரைத்த பண்பின் இயற்றிலேனென்னில் வண்மை
தாங்கிய வீரம் என்-கொல் ஆண்மையின் தகைமை என்-கொல்
வீங்கிய சீற்றம் என்-கொல் விரித்த வஞ்சினம்-தான் என்-கொல்
ஓங்கிய புவியின் என்னை பேடி என்று உரைக்கலாமால்

மேல்
$3.36.18

#4373
வீரர் முன் இனைய மாற்றம் விளம்பி விண் உருமின் சீறி
மூரி அம் கரம் பிசைந்து முனை எயிறு இதழின் ஊன்றி
பார வெம் சிலை கை பற்றி படையொடும் கலன்கள் தாங்கி
போர் உடை தலைவர் சூழ எழுந்தனன் இயங்கள் பொங்க

மேல்
$3.36.19

#4374
தழல் சொரிதரு கண் பாந்தள் நெடு நிலம் பனிப்ப தாங்காது
ஒழுகு நெய் செறிந்த வெள் வேல் உழவர் முன் நடப்ப சீறி
எழும் அதி வேக பாய் மா ஏறி மன் குயை என்று ஓதும்
மழ களிறு அனையான் கஃபா மக்க மா நகரில் புக்கான்

மேல்
$3.36.20

#4375
வந்து ஒருபாலில் தானை யாவையும் இருத்தி வாய்ந்த
அந்தரத்து உருமேறு அன்ன அபாசுபியானை எய்தி
சிந்தையின் உவகை கூர செழும் கையால் தழுவி வாச
கொந்து எறி அலங்கல் திண் தோள் குயை அவண் இருந்தான் மன்னோ

மேல்
$3.36.21

#4376
தீயவன் கொலை சேர் வஞ்ச சிந்தையன் சிதையும் மாற்ற
வாயினன் பவத்தில் தோன்றும் அபூசகல் மகிழ்வின் ஈன்ற
சேயன் இக்கிரிமா என்னும் தோன்றலும் துணைவர் சேர்ந்த
நேய மன்னவர்கள்-தாமும் ஈண்டு அவண் நிறைந்தார் மன்னோ

மேல்
$3.36.22

#4377
குறைசி அம் காபிர் வாய்ந்த குணன் உடை மாந்தர் மிக்க
அறபிகள் உலக நீதி யாவையும் அறிந்த மேலோர்
மறையினை தெருண்டு நின்றோர் யாவரும் மருங்கு சூழ
கறை கெழு மனத்தன் கேண்-மின் ஈது என கழறலுற்றான்

மேல்
$3.36.23

#4378
சூரமும் இருப்ப தேரும் சூழ்ச்சியும் இருப்ப காபிர்
யாரும் ஈண்டு இருப்ப வென்றி அரசரும் இருப்ப மற்றும்
நீரும் இங்கு இருப்ப என் போல் நேசமும் இருப்ப இந்த
பாரினில் சமயம் ஒன்றும் தேயுமோ பகையின் ஒல்கி

மேல்
$3.36.24

#4379
காய்ந்து இகல் தொடங்கிநின்ற அபூசகல் ககுபு வேந்தன்
வீய்ந்தும் நா மனங்கொள்ளாது வாழ்வினை விருப்பமுற்றாம்
தோய்ந்தன பழியும் பாரும் சொல்லின வசையும் தோன்ற
தீய்ந்தன பெருமை நாளும் வளர்ந்தன சிறுமை அன்றோ

மேல்
$3.36.25

#4380
முன்னவர் யாரும் கூண்டு முரண் படை முகம்மது ஆனோன்
இ நகர்-அதனில் புக்காது ஈடு பட்டு இரிய செய்தார்
அன்னவர் திறமை நூற்றொன்றாயினும் அமைத்தாமின்றே
என் இனி செய்யலாகும் இசையினை அவித்து கொண்டாம்

மேல்
$3.36.26

#4381
ஆதி நூல் சமயம் வீணில் தேய்வுற அழகு இலாது
வாதியா வந்த மார்க்கம் விளங்குற வரைந்தது என்னே
நீதியும் பழி-அது ஆகும் நீடு அறம் பவத்தின் எய்தும்
பேதுற மரபின் வந்த பெரியரும் சிறியர் ஆவார்

மேல்
$3.36.27

#4382
மஞ்சினின்று இழிந்த தாரை மழை எனும் சரங்களானும்
விஞ்சையின் விதத்தினானும் வேண்டிய சூழ்ச்சியானும்
துஞ்சிட தீனோர் ஆவி மண்ணினில் தொலைப்போம் என்ன
வஞ்சினம் புகன்றது எல்லாம் மறந்து யாம் சொன்னதாமால்

மேல்
$3.36.28

#4383
மனையிடை பேதை போல கிடந்தனம் முகம்மது இன்னே
சினம் உற வருவனென்னில் வெருவுறல் திறம் அன்றாம் முன்
இனமொடும் தானை வீழ்த்தி மரவுரி இடுப்பில் சேர்த்தி
புனை மயிர் சடையும் தாங்கி போதுவம் கானில் வம்-மின்

மேல்
$3.36.29

#4384
அபுசகல் போன பின்னர் ஆர் உளர் தலைவர் என்ன
புவி புகழ் கறுபு மைந்தன் என்றன புவனம் எல்லாம்
அவை அறிந்து இவைகள் எல்லாம் அயர்த்தனம் என்னில் ஐயோ
திவள் அறச்சாலை புக்க தெய்வமும் குடி விட்டு ஓடும்

மேல்
$3.36.30

#4385
குலத்தினில் கிளையில் சான்றோர் கொள்கையில் கோது இலா நம்
தலத்தினில் சமயம்-தன்னில் தள்ள அரும் ஈனம் எய்தில்
உல தட புயத்தீர் உற்றது ஒருவர்க்கோ சிறுமை அன்றே
நலத்த மா மனிதர்க்கு எல்லாம் நணுகியது அன்றோ என்றான்

மேல்
$3.36.31

#4386
என்றலும் சீற்றம் மேன்மேல் எழுந்தது கரையிலாது
துன்றிய உரோமம் யாவும் தளிர்த்தன துணையா நின்ற
குன்று என புயங்கள் ஓடி வளர்ந்தன புருவம் கோட்டி
தென் திகழ் அரிய கண்கள் சிவந்தன தீயது என்ன

மேல்
$3.36.32

#4387
உயிர்த்தனன் நெடுமூச்சு உள்ளம் வெதுப்பினன் ஒளிரும் மேனி
வியர்த்தனன் கரிய மீசை துடித்தனன் விழியின் அங்கி
பெயர்த்தனன் இதழை வாயான் மென்றனன் பிழைகள் யாவும்
அயர்த்தனன் கறுபு மைந்தன் கோப தீ அடங்கிலாதால்

மேல்
$3.36.33

#4388
சேரலர் பகையும் மாய திறமையும் சிதைத்தோர் என் போல்
ஆர் உளர் என்ன எண்ணி இருந்தனன் எதிரின் வந்து
போரினை மூட்டி நின்றாய் நீ இங்கு புகுந்த போதே
வேரொடும் தீனை வீழ்த்தி வென்றியும் விளைப்பேன் என்றான்

மேல்
$3.36.34

#4389
கேட்டனன் குயை மன் தாங்கா சீற்றமே கிடந்த ஆகத்து
ஊட்டினன் உவகை எய்தா புது களிப்பு உடலம் கொண்டான்
தீட்டு வேலவரை எல்லாம் போரினில் சிந்தை ஆக்கி
மீட்டு எழுந்து அயிலான் என்னும் ஊரிடை விரைவில் போனான்

மேல்
$3.36.35

#4390
ஆண்டு இனிது அமர்ந்த கைசு குழுவினர்-அவரை எய்தி
வேண்டிய படையின் மக்கம் ஏயதும் அறபி வேந்தர்
கூண்டு போர் முடிப்போம் என்ன குறித்ததும் விரித்து சொன்னான்
காண் தகா திறத்து அன்னோரும் அன்னதே கருத்து என்றாரால்

மேல்
$3.36.36

#4391
பொருந்தினர் இவர்-கொல் என்ன அகுத்தபு புதல்வன் நெஞ்சம்
திருந்திட அ இடம் நீந்தி சேவகர் மருங்கில் சூழ
வருந்திட நரகத்து எய்தும் பனீக்குறைலா என்று ஓதும்
அரும் தவம் அழித்த மாந்தர் உறை நகர்-அதனில் சென்றான்

மேல்
$3.36.37

#4392
ஆங்கு அவர் இறையோன் தூதர்-அவரொடும் தீனரோடும்
பாங்கொடு நட்பில் நாளும் வைகுவம் பகையின்று என்ன
நீங்கிலா வாய்மை பேசி வல கையும் நீட்டி பின்னும்
தீங்கொடும் இருந்தார் எய்தும் விதியினை தெரிகிலாதார்

மேல்
$3.36.38

#4393
உறைந்தவர்-தம்மை எய்தி உற்றவை அனைத்தும் கூறி
திறம் தர மகிழ்வு பூப்ப அவரையும் போரில் சேர்த்தி
அறம் திகழாத நெஞ்சர் மற்று உள அரசர் யாரும்
நிறம் களிப்புற தன் வாய்மை உரையினில் நிறுத்தினானால்

மேல்
$3.36.39

#4394
வசை இலா கத்பான் என்னும் ஆயமும் மதிப்பில்லாத
அசத்து எனும் குழுவும் மிக்க அவுசு எனும் கணமும் மூரி
திசை புகழ்தரும் கனானா சங்கமும் திரட்டி என்றும்
இசை அறும் எகூதி காபிர்-தம்மொடும் ஈண்டினானால்

மேல்
$3.36.40

#4395
எண்ணிலா சேனை வெள்ளம் எங்கணும் பரந்து செல்ல
மண் எலாம் புகழும் மக்க மா நகர்-அதனின் எய்தி
உள் நிறம் களிப்ப ஓர் பால் இருந்தனன் உலகின் மேவும்
புண்ணியம் அவிக்க வந்த பாவத்தை பொருவும் நீரான்

மேல்
$3.36.41

#4396
ஈங்கு இவன் இனைய தன்மை இயற்றியது எல்லாம் மானம்
தாங்கிய தரும மேகம் ஒத்து என தகைமை சான்ற
ஓங்கலில் சிறந்த திண் தோள் முகம்மது ஆண்டு உணர கேட்டு
நீங்கிலாது உயிரின் ஏய்ந்த துணைவர் முன் நிகழ்த்தினாரால்

மேல்
$3.36.42

#4397
பெருமையில் நின்ற சோதி பெரியவன் ஏவல் நாளும்
மருவிய தீனோர் யாரும் கேட்டலும் வண்மை தக்க
தரு என உதவும் சல்மான் பாரிசி தபனன் மான
திரு ஒளி நிறைந்த சிங்க செழும் முகம் நோக்கி சொல்வார்

மேல்
$3.36.43

#4398
சாய்ந்து போகின்ற அகுத்தபு பெறும் பவ தனையன்
ஏய்ந்த தன் குலத்தவரொடும் அறபினில் ஏகி
ஓய்ந்து வீகின்ற சினத்தினை அவரவர்க்கு ஊட்டி
தேய்ந்த காபிர்கள் யாரையும் திரட்டினன் அன்றே

மேல்
$3.36.44

#4399
மற்றும் வாய்மை அபாசுபியானொடும் வழங்கி
சுற்று வேந்தரை முறைமுறை ஒரு தொகை சேர்த்தி
பற்று இலாத பல் குலத்தையும் சூழ்ச்சி உள்படுத்தி
முற்றும் சேனை அம் கடல் நடு இருந்தனன் முரணி

மேல்
$3.36.45

#4400
ஆனதால் மத பேதியர் அளவினில் அடங்கா
சேனையோடு வந்து அடருவர் காண் இனி திறத்தின்
வான_நாயக இஞ்சி யாம் வகுத்திட மாட்டேம்
தீனர் சூழ்தர அகழ் ஒன்று திருத்துவம் என்றார்

மேல்
$3.36.46

#4401
சொல்லும் வாசகம் நன்கு என யாவரும் துணிந்து
செல் உலாம் கர திரு நபி உடன் வர திரண்டே
எல்லை காணிலா வள நகர் புறத்தினில் ஏகி
அல்லல் இன்றியே புவி தொட தொடங்கினர் அன்றே

மேல்
$3.36.47

#4402
மட்டிலாது அகழ் வெட்டிய நீண்ட கை வாய்ந்த
கொட்டும் ஏந்து கூந்தாலமும் பலபல கொணர்ந்து
வெட்டுவார் அவை அடிக்கடி கூடையின் வீழ்த்தி
தட்டுவார் பல திடர் என முறைமுறை தாங்கி

மேல்
$3.36.48

#4403
ஒருவர்க்கு ஈரிரண்டு என முழமாக உள் உவப்ப
செருகி ஈரைந்து மைந்தர்கள் வகைவகை திரண்டு அங்கு
அரிய நாயனை புகழ்ந்து நல் பயித்துகள் அறைந்து
விரிவும் ஆழமும் பெற முறை எடுத்தனர் விரைவின்

மேல்
$3.36.49

#4404
ஊறும் நீர் புறம் காணுற தோண்டலும் ஒரு கல்
பாறை மா மலை முளைத்து என தோன்றின படியின்
வீறு மேவிய கரத்தினர் திடத்தொடும் வெகுண்டு
கூறு செய்திட நின்றனர் ஆங்கு அது குறுகி

மேல்
$3.36.50

#4405
இடி இடித்து என கல் எடுத்து ஏற்றினர் இரும்பின்
மடிய தாக்கினர் காய்த்திய கூர் உளி மாட்டி
அடி அடித்தனர் வெட்டினர் எறிந்தனர் அறுத்தார்
கடிது கொண்டன பிளந்தில தகர்ந்தில கருங்கல்

மேல்
$3.36.51

#4406
வெட்டு வெட்டியே கொட்டு வாய் மடிந்த தீ விளைத்த
நெட்டு உருக்கு உளி முறிந்த கூந்தாலமும் நிமிர
வெட்டி ஓங்கிட பொடிப்பொடி ஆயின ஏதும்
பட்டதன்றி எள்ளளவினும் நுறுங்கில பாறை

மேல்
$3.36.52

#4407
கையும் சேந்திட சலித்தனர் தோளொடு காலும்
மெய்யும் வேர்வு எழ சலித்தனர் வெதும்பினர் மேன்மேல்
நைய மா மனம் சலித்தனர் சலித்த தீன் நயந்த
செய்ய மாந்தர்கள் ஈது என்-கொல் காண் என தியங்கி

மேல்
$3.36.53

#4408
ஆன காலையின் ஆதமின் முதுகினில் அமர்ந்த
வான_நாயகம் வையக_நாயகம் மதித்த
தீனர்_நாயகம் யாவர்க்கும் முதலவன் திருமுன்
போன நாயகம் வந்தனர் அறம் தவம் புகழ

மேல்
$3.36.54

#4409
நோக்கினார் கரும் பாறையை இறுக நூல் கலையை
வீக்கினார் செழும் கரத்தினில் விளங்கு கூந்தாலம்
ஆக்கினார் பருப்பதத்தில் வீழ் இடியினும் அதிர
தாக்கினார் நெடும் பேரொலி திசை-தொறும் தழைப்ப

மேல்
$3.36.55

#4410
கரம் எடுத்து எறிந்திடுதலும் ககன வெண் முகடும்
வெருவல் கொண்டன பயந்தன ஒளித்தன மேகம்
அரவின் வேந்தனும் தரையொடும் அசைத்தனனென்னில்
பெரிய பாறை இங்கு என் படும் யான் எவன் பேசல்

மேல்
$3.36.56

#4411
பதலை மேல் ஏறி பட பிளந்தன அரும் பகுப்பில்
சிதறி துண்டங்கள் ஆயின தீ பொறி தெறிப்ப
பிதிர்விட்டு ஓடின தகர்ந்தன நுறுங்கின பெரும் தூள்
இது என போயின வள்ளல்-தம் கரத்தினால் எல்லாம்

மேல்
$3.36.57

#4412
மண்டு தூள் என வகுத்த மேலவர் அடிவயிற்றில்
விண்ட வெம் பசியால் ஒரு கல்லினை வீக்கிக்
கொண்டு நின்றனர் அன்னது குறிப்பினில் சாபிர்
கண்டு தேம்பினர் சலித்தனர் நிறை மனம் கலங்கி

மேல்
$3.36.58

#4413
கல் அகட்டினில் அமைத்தது காண்டும் இங்கு இருந்தோர்க்கு
அல்லல் எய்தும் என்று உணர்ந்து அவண் நீந்தி வாழ் அழகின்
இல்லம் புக்கினர் மனைவியர்க்கு உரைத்தனர் எளிதின்
நல்லதாம்படி விருந்து ஒன்று கொடுத்திட நயந்தே

மேல்
$3.36.59

#4414
சிறிய மை ஒன்று வளர்ந்தது அங்கு இருந்தது அ திறலோர்
குறைவு இலாது உற அறுத்து இரும் கொழும் தசை குறைத்து
நிறைய மாவும் சேர் எட்டு என கொடுத்து அவண் நீந்தி
அறிவும் மானமும் தயங்கிய முகம்மதை அடைந்தார்

மேல்
$3.36.60

#4415
தீயன் தோழரில் சிறியவன் வறியவன் தெளியா
வாயன் என் மனையிடத்தினில் வழி முறை திறம்பா
தூய வேந்து எனும் நீவிரும் பஃது எனும் தொகையின்
ஆய மன்னரும் விருந்து உண்டு போக என்று அறைந்தார்

மேல்
$3.36.61

#4416
தீங்கு இலாத அ சாபிர்-தம் செழும் முகம் நோக்கி
வாங்கு வெம் சிலை-அவரொடும் யான் வருமளவும்
தாங்கு வெள் நிண தசையொடு நுவணையும் சமையாது
ஆங்கு வைத்திரும் என்றனர் அரசருக்கு அரசர்

மேல்
$3.36.62

#4417
நன்று என தனி போயினர் மனையினில் நபியும்
வென்றி மன்னவர் சிறியவர் பெரியவர் விளைந்த
வன் திறத்தவர் எவரையும் மருங்கினில் கூட்டி
சென்று புக்கினர் இருந்தனர் வயின்வயின் சிறப்ப

மேல்
$3.36.63

#4418
எண்ணின் ஆயிரம் அரசரும் ஏவலின் ஏய்ந்த
திண்ண வீரரும் முறைமுறை தெரிதர இருப்ப
விண்ணும் ஏத்திட ஒளி தரு கபீபு எனும் மேலோர்
உண்ணும் ஆரமுது இவ்விடம் கொணர்க என உரைத்தார்

மேல்
$3.36.64

#4419
புலவும் பிண்டியும் முன்னரின் அமைத்தனர் பொருவா
கலை நிலா ஒளி தூதுவர் நோக்கினர் கதிர் வாய்
உலவும் ஆரமுது உகுத்தனர் பின்னரின் உவந்து
நிலைமை மன்னவ ஈது அடுக என நிகழ்த்தினரால்

மேல்
$3.36.65

#4420
இருந்த பார்ப்பு உடல் தடியினை அரிதில் கொண்டு ஏகி
மருந்தொடு நறும் கிருதமும் வாசமும் மாட்டி
திருந்த வேம் எரி மூட்டலும் பதலையில் சிறப்ப
வருந்திலாது அரும் கொதி-தொறும் கொதி-தொறும் மலிந்த

மேல்
$3.36.66

#4421
வெள் நிறம் தரு நுவணையும் சுடச்சுட மேன்மேல்
எண்ணிலாத பேர் இலட்டுகம் ஆயின இதனை
நண்ணி வண் கரத்து எடுத்தனர் வைத்தனர் நலத்தின்
உண்ணும் நல் கலம் சாபிர் என்று ஓதிய உரவோர்

மேல்
$3.36.67

#4422
மொய்த்த மாந்தர்கள் யாவரும் தொகைதொகை முறையின்
கைத்தலத்து எடுத்து அருந்தும் என்று இனிதொடு கழற
பத்திபத்தியின் வேந்தரும் தருவொடு பகர்ந்த
உத்தம குண நபியும் அங்கு உணவு உண சமைந்தார்

மேல்
$3.36.68

#4423
அப்ப வர்க்கமும் எடுத்தெடுத்து அளித்தலே வேலை
வெப்பு உறும் பசி அற இவர் அருந்தலே வேலை
செப்பும் தாழியில் கறி நனி சிறத்தலே வேலை
தப்பு இலா மொழி தூதர்-தம் காட்சியின் தகைமை

மேல்
$3.36.69

#4424
கையும் வாரி உண்டு ஓய்ந்தனர் வயிற்றொடு கமல
செய்ய வாயும் அங்கு ஓய்ந்தனர் தின்பவர் திரிந்த
துய்ய மைந்தரும் அளித்து அலுத்து ஓய்ந்தனர் சொரிந்த
நெய்யில் வெம் கறி இலட்டுகம் ஓய்ந்தில நிறைந்த

மேல்
$3.36.70

#4425
நிலைமை மன்னவர் ஆயிரம் பெயரொடும் நீண்ட
அலகிலா திறன் மைந்தரும் தூது எனும் அரியும்
புலனும் தேகமும் களித்து எழில் சிறந்திட புசித்தார்
பிலனும் வையமும் விசும்பும் மிக்கு அதிசயம் பிறப்ப

மேல்
$3.36.71

#4426
சம்பரத்தினில் வாய் கரம் பூசி நல் சாந்தம்
பம்ப மார்பினில் ஏற்றி அங்கு இருந்திட படியும்
உம்பரும் புகழ்ந்து ஏத்திய நபி கொறி புசித்த
கொம்பு தொல் குளம்பு என்பவை குவி-மின் என்று உரைத்தார்

மேல்
$3.36.72

#4427
சுடு நெருப்பினில் வெந்த என்பு எவையும் முன் துணித்து
விடு மருப்பையும் சிரத்தையும் காலையும் விரிந்த
வடகம் மற்றவும் எடுத்தனர் குவித்தனர் வாய்மை
திடம் அடுத்த தீன் விளக்கிய முகம்மது திருமுன்

மேல்
$3.36.73

#4428
கள் அறா செழும் கமல மென் கரத்தினில் சலிலம்
அள்ளி மேல் உற தெளித்து அரும் தூதுவர் அடங்கா
வெள்ளி மா மறை மேலவன் விதியினால் கொறியே
உள்ளம் கூர்தர நீ இவண் எழுந்திடு என்று உரைத்தார்

மேல்
$3.36.74

#4429
துண்டம் ஆகியது ஒன்று என பொருந்தி ஊன் தோய்ந்து
பண்டு போல் எழும் உயிரும் வந்து உடலினில் பரப்ப
கண்டு யாவரும் மகிழ்வுற காலினை மடக்கிக்
கொண்டு எழுந்து முன் குதித்தது காட்சியின் கொறியே

மேல்
$3.36.75

#4430
திருகி நீண்டு அற வளைந்து எழு மருப்பின் மெய் செறிந்து
பெருகுகின்ற செம் மயிர் உறுப்பினில் எழில் பிறங்கும்
கரு நிற கவை குளம்பில் நீண்டு எழு துளை காதின்
உருவின் மிக்கது என்று உணர நின்றது கொறி உழையின்

மேல்
$3.36.76

#4431
காலினால் தரை நடந்து உடல் முறுக்கி உள் கவிந்த
தோல் உடை செவி அசைத்து அசைபோட்டு வாய் துவளும்
வாலினை பைய ஆட்டி வாய் என தொனி வழங்கி
பாலின் நின்றது முன் உரு போன்று எழும் படிமை

மேல்
$3.36.77

#4432
நின்ற மையினை நடத்தி உள் களிப்பொடு நினது
வென்றி வாழ் மனை இடத்தினில் ஏகு என விரிப்ப
நன்று நன்று என கரத்தினில் பிடித்து இல்லம் நாடி
சென்று புக்கினர் ஆரணம் அனைத்தையும் தெருண்டோர்

மேல்
$3.36.78

#4433
வந்த போதினில் மனை மணவாளனை நோக்கி
அந்தமும் பெறும் உயர்ச்சியும் நிறமும் நீள் அடியும்
நம்-தம் வீட்டினில் இருந்த மை என தனி நணுகி
உந்தி நின்றது இங்கு ஏது என அதிசயித்து உரைத்தாள்

மேல்
$3.36.79

#4434
வடித்த தீனினை வானரும் மனம் மகிழ்வுற வைத்து
எடுத்த தூதுவர் ஆருயிர் கொறியினுக்கு இனிதின்
விடுத்து யாவரும் அதிசயம் பெற புவி விளங்க
கொடுத்தது ஈது என உரைத்தனர் கோளரி அனையார்

மேல்
$3.36.80

#4435
கூறும் நல் உரை கேட்டு அகம் குளிர்ந்து எந்தநாளும்
தேறிலாது யான் இருந்தனன் திடம் பெற இன்னே
பேறு கொண்ட நல் நபி என தெளிந்தனன் பெரியோன்
வீறு காண் என மதித்து உரைதனள் விருந்து அனையே

மேல்
$3.36.81

#4436
உரிமை இன்னனம் மகிழ்வுற சாபிர் என்று ஓதும்
அரிய வேந்தரும் தோழரும் அருகினில் சூழ
கரிய மை முகில் நிழற்றிட காரணம் காட்டும்
பொருவு இலா நபி கடல் எனும் அகழின்-பால் புக்கார்

மேல்
$3.36.82

#4437
விரைந்து மன்னவர் அவரவர் தனித்தனி மேவி
அரிந்து சூழ் அகழ் கிடங்கினை அழகு உற திருத்தி
சொரிந்த நீள் கரை புடவியும் வரை என தோன்ற
திருந்தவே அமைத்தனர் குபிர் திருந்தலர் திகைப்ப

மேல்
$3.36.83

#4438
ஆயிரம் தலை சேடனும் தெரிவுற ஆழ்ந்த
தூய பேர் அகழ் இயற்றி இங்கு இருந்தனர் தொலையா
மாய வெம் குபிரிடை உழன்று அறத்தினை வழுவி
தேயும் மன்னவர் திறத்தினை ஈது என தெரிப்பாம்

மேல்

37 உயைவந்த படலம்

$3.37.1

#4439
சுற்று உள வேந்தர் பல் பெரும் குலத்தில் தோன்றிய அரசரும் அவரோடு
உற்ற வெம் படையும் பனீக்குறைலா என்று ஓதிய மாந்தரும் கபடம்
பற்றிய எகூதி குழுவினர்-அவரும் பரிவொடும் மக்க மா நகரில்
தெற்றினர் வளைந்த முக குசை பரியும் செறிந்திட திரை கடல் சிவண

மேல்
$3.37.2

#4440
முறைமுறை எழுந்த முரண் உடை தானை முகில் துளைத்து அண்ட வான் முகடு
நிறைதர எழுந்த கதலிகை கானம் நெடும் பத கவிகையும் எழுந்த
அறைதரு பல் வாச்சிய தொனி எழுந்த அவ மொழி வாய்மையும் எழுந்த
குறைவு இலாது அவனி தூளியும் எழுந்த விசும்பொடு திசைகளும் குலவ

மேல்
$3.37.3

#4441
இரு கடை வளைப்ப உடல் குழைந்திருந்த இரும் சிலை நாண் உதைத்து எறியும்
பொரு சர தூணி முதுகினில் தாங்கி பொங்கிய சினத்தொடு மாலிக்
அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ
வரு விசை புரவி ஆயிரம் சூழ ஏகினன் மலர் குடை கவிப்ப

மேல்
$3.37.4

#4442
கனல் முகம் தெரியும் கவட்டு இலை சூலம் கை விசைத்து எறி கதிர் வேலும்
குனி தரு வாளும் மருங்கினில் விசித்து கத்துபான் குழுவினர் சூழ
புனை மயிர் புரவி ஆயிரம் நடப்ப அசன் பெறும் புதல்வன் கோளரியின்
சினம் உறு மனத்தன் உயையினா என்னும் செம்மலும் ஏகினன் சிறப்ப

மேல்
$3.37.5

#4443
செம் புண் நீர் ஆடி புலால் மணம் கமழும் திறல் நுனை கடுத்தலை தாங்கி
கும்பியில் வீழும் பனீக்குறைலா என்று ஓதிய குழாத்தவர் நாளும்
வெம்பிய சீற்றத்து எகூதியர்-அவரும் வேண்டிய படை கொடு செறிய
தும்பையும் சூடி அகுத்தபு பவத்தில் தோன்றிய குயையும் ஏகினனால்

மேல்
$3.37.6

#4444
அடி பெயர்த்து ஆடும் கவன வாம் பரி ஐந்தாயிரம் சூழ்தர அபசி
கடல் எனும் சேனை வேந்தர் கனானா தளத்தினர் கணிப்பிலர் செறிய
மிடல் உடை கவசம் உடலிடத்து அணிந்து வெண்டலை மூளையில் தோய்ந்த
வடி சுடர் திகிரி தாங்கி இக்கிரிமா மன்னனும் ஏகினன் மாதோ

மேல்
$3.37.7

#4445
பண் அமை பரி ஐயாயிரம் மலிய பற்பல தானையும் ஈண்ட
எண்ணரும் குறைசி தலைவரும் துறும எறி படை கலன்-அவை ஏந்தி
வெண் நிற கவிகை நிழற்றிட நீண்ட விரி மரை எறிதர விளங்கும்
வண்ண வெம் திறலார் கறுபு வந்து ஈன்ற மைந்தனும் வாசி மேல் போனான்

மேல்
$3.37.8

#4446
புதை இருள் படலம் அள்ளி விட்டெறிந்து பொங்கு செம் கதிர் மணி தாமம்
மதி ஒளி பழுத்த தரள வெண் தொடையும் மார்பகத்து அணிய விண் கான்ற
விது இளம் கதிரும் பருதியின் ஒளியும் விளங்கியது எனும்படி சிறப்ப
அதிதியர் சிவண போயினர் மற்ற அரசர்கள் ஈங்கு இவர் அருகின்

மேல்
$3.37.9

#4447
பூண்ட வெம் தானை அறிந்திலர் கழுத்தில் போட்ட நல் மணி வடம் உணரார்
நீண்ட நட்பினரை கண்டும் அங்கு அறியார் நிகழ்த்திய மாற்றமும் அறியார்
ஈண்டிய வேந்தர் யாவர் என்று அறியார் எழு கடல் சேனையும் அறியார்
தூண்டிய சீற்ற தீ ஒன்று தாங்கி ஏகினர் மிடல் உடை சூரர்

மேல்
$3.37.10

#4448
தடத்தினும் சாலி விளைதரும் இடத்தும் சந்தன காவினும் ஆலை
இடத்தினும் குவளை ஓடையின் மருங்கும் எழில் தரு கிடங்கினும் உயர்ந்த
திட திணை சார்பும் எங்கணும் மற்ற திசையினும் அளவில தானை
விடத்தினும் கரிய மனத்தினரோடும் விரைவொடும் திரண்டு எழுந்தனவால்

மேல்
$3.37.11

#4449
வாசியும் ஒருபால் மன்னரும் ஒருபால் வயம் கெழு மாந்தர்கள் ஒருபால்
வீசிய நெடும் கால் கொடிகளும் ஒருபால் விண்ணினில் செறி குடை ஒருபால்
ஓசையில் கலித்த பல்லியம் ஒருபால் உலவிய சாமரை ஒருபால்
தூசியும் ஒருபால் என அறியாது நெருங்கிய தொகு படை கணமால்

மேல்
$3.37.12

#4450
ஆறுபட்டு எழுந்த கழனியும் காவும் அடிக்கடி சேறலில் திடரும்
நீறுபட்டு எழுந்த பாய் பரி வாயின் விலாழி நீர் நீத்தத்தில் நனைந்து
சேறுபட்டு எழுந்த மலை மதில் நெடும் பார் செம் கதிர் பருதி வெய்யவனும்
வேறுபட்டு எழுந்தான் பூமியின் அடைந்து மேகமும் நீர் வறந்தனவால்

மேல்
$3.37.13

#4451
கோடின புருவம் நிமிர்ந்தன புயங்கள் வாவுற கொலை செயும் நெடும் போர்
தேடின மனங்கள் சிவந்தன விழிகள் செறிந்தன மயிர் புளகு யாவும்
ஓடின பெருமூச்சு அடைந்தன இதழ் வாய் ஒளி விரல் முறுக்கின கரங்கள்
நீடிய மூரி திறத்தொடும் பிறந்து குபிர் நிலை நின்ற மன்னவர்க்கே

மேல்
$3.37.14

#4452
அரும்பு வாய் ஒழுகும் பசு நறும் தேறல் அகல் பணை மருதமும் நீந்தி
இரும்பு என செறிந்த மோட்டு உடல் களிறு முழங்கிய இரு வரை கடந்து
கரும் புவி போல கதிர் சுட காய்ந்த கடும் பரல் பாலையும் முல்லை
குரம்பையும் குடில் சூழ் முல்லையும் நீந்தி கொடி நகர் மதீன நாடு அடைந்தார்

மேல்
$3.37.15

#4453
ஒலித்து இரங்கு அருவி வீழ் ஒலி மறாத உகுது எனும் பெரு வரை புறத்தில்
கலித்து எழு சேனை அசத்தொடு கத்பான் குழுவினர் செறிதர அவுபும்
சலித்து இளையாத வீரமும் துணிவும் தாங்கிய உயையினா வேந்தும்
பலித்திட விசயம் என அவண் இறங்கி பாளையம் வகுத்தனர் அன்றே

மேல்
$3.37.16

#4454
செம் தழல் வெதும்பி சீறிய சீற்ற வெம்மை எகூதிகள் தினமும்
புந்தியின் உணர்வு மாறிய பொய்மை பனீக்குறைலா என புகன்ற
வெம் திறலவரும் இரு புறம் சூழ ஓர் புறத்து இறங்கினன் விளைந்த
தந்திரத்து அமைந்த அகுத்தபு மகிழ்ந்த சந்ததி குயை எனும் கொடியோன்

மேல்
$3.37.17

#4455
குறைசி அம் குழுவும் அளவில் கனானா கூட்டமும் அபசி வெம் படையும்
இறுதி இல் வேக துரகதம் பதினாயிரமும் ஈண்டிட வரை கிடந்த
திறல் அரி ஏய்ந்த இக்கிரிமாவும் தீரன் அபாசுபியானும்
முறையொடும் றூமா என்னும் அ தலத்தில் இறங்கினர் முனைப்பதி அமைத்தார்

மேல்
$3.37.18

#4456
உடும்பினை அழைத்து மறைமொழி-அதனால் உலகு இருள் அகற்றிய நபியும்
விடம் புகு படைகள் தாங்கிய தரும வேந்தர் மூவாயிரர் குழுவும்
முடம் தரு முக பாய் பரி பல மலிய மொய்க்கின்ற வானவர் வாழ்த்த
தடம் பயில் நகர சுற்றினும் ஓம்பி இருந்தனர் தனியவன் அருளால்

மேல்
$3.37.19

#4457
நெற்றியும் கருமை எய்திட வணங்கு நீர்மையர் எதிரின் வந்து அமரின்
உற்றனரிலர் என்று அடங்கிலா சீற்றம் ஓங்கிட குபிரவர் எல்லாம்
சுற்று உள நகரும் கொள்ளைகொண்டு உவந்தார் தொடர்படு குளிர் நிழல் காவும்
இற்றுற முறித்து அங்கு எரித்தனர் ஒன்றோ வினை அன இடர் பல விளைத்தார்

மேல்
$3.37.20

#4458
நெல்லொடு சாமை வரகு செந்தினையும் நீண்ட கோதும்பையும் இறுங்கும்
எல்லையில் ஈத்தம் கனியும் முந்திரிகை கனியும் மற்று உள பொருள் எவையும்
செல்லல் இன்று என்ன தாரைகள் அனைத்தும் திகையுற காத்தனர் அதனால்
அல்லலுற்று அழுங்கல் மதீன மா நகர சுற்றினும் ஆனது மாதோ

மேல்
$3.37.21

#4459
எவ்வழியிடத்தும் முரணுறும் காபிர் இவுளியும் சேனையும் ஈண்ட
பவ்வம் ஒத்து அகரம் சூழ்தர இருப்ப பால் மதி கதிர் முகம்மது நல்
செவ்விய உணர்வும் ஞானமும் நாளும் தெருண்டவர் மஆது-தன் வரத்தில்
குவ்வினில் உதித்த சகுதினை அழைத்து சில மொழி கூறுவர் அன்றே

மேல்
$3.37.22

#4460
நஞ்சு எனும் கொடிய குபிரொடும் கூண்ட நட்பு இல என திட வாய்மை
என் சொலின் உவந்த கொடும் பனீக்குறைலா எனும் மற மாந்தர்கள் இதம் இல்
வஞ்சகம் பயின்ற குயையொடு கூடி உறுதியை மறுத்தனராம் போய்
எஞ்சல் இல் புகழோய் நன்கு அவை அறிந்து திடத்தொடும் இவண் வர வேண்டும்

மேல்
$3.37.23

#4461
பத்தியின் அமைந்து நம்மொடும் பகர்ந்த பண்பொடும் ஆங்கு வைகினரால்
உத்தரம் எவர்க்கும் தெரிதர என்னோடு உரைத்தருள் குயையொடும் உடன்று
சத்திய வாய்மை மறுத்தனரென்னில் தீனவர் சலிப்புறா வண்ணம்
உத்தம மறையின் நிகழ்த்து என உரைத்தார் உளம் மகிழ்ந்து அவரும் போயினரால்

மேல்
$3.37.24

#4462
அறபி அம் காபிர் அசத்து எனும் மாந்தர் அபசி மன்னவர்கள் கனானா
திறமையர் கத்பான் குழுவினர் இருந்த பாசறை தெரிவுற நோக்கி
துறுமிய கபடம் புணர் பனீக்குறைலா சூதர்கள் உறைந்து அவை வினவ
உறுதியில்லவராய் இருந்தனர் நரகத்துள் புகுந்து ஒளித்திடும் உணர்வால்

மேல்
$3.37.25

#4463
ஆங்கு அவர் திறமும் கேளிரும் நிதியும் அழிதர தூடணித்து இறையோன்
பாங்கினில் இரந்து முனைப்பதி நீந்தி பயகாம்பரிடத்தினில் அணுகி
தீங்கு உறும் வார்த்தை ஈது என மறையில் செப்பினர் அறத்தொடும் புகழும்
ஓங்கிய தவமும் பதவியும் பேறும் ஒழுக்கமும் நிறைந்திட உயர்ந்தோர்

மேல்
$3.37.26

#4464
தப்பிய வாய்மை கேட்டு உளம் வெகுண்டு தரியலர் ஒருப்பட கூறும்
ஒப்பினை முறிக்கவேண்டும் என்று உன்னி சான்றவர் ஒருவரை கூவி
இப்படி விளங்கு கீர்த்தியீர் என்ன விதமுற போற்றி அங்கு இருத்தி
முப்புவியவர்க்கும் தூது என வாய்ந்த முகம்மது ஆங்கு இனையன உரைப்பார்

மேல்
$3.37.27

#4465
கவை உறு கருத்தில் உவந்த வெம் காபிர் காட்டிய பாசறையிடத்தில்
அவுபு எனும் அரசும் உயையினா என்னும் அண்ணலும் இருந்தனர் ஆங்கு
பவமொடு படிறும் வெகுளியும் துடைத்து பதவியின் அடைந்த மெய் புகழோய்
இவுளி அம் சேனை மருவலர் அறியாது இனையவர் மருங்கினில் ஏகி

மேல்
$3.37.28

#4466
குறைசி அம் காபிர் கணத்தையும் நீங்கி கூறிய வாய்மையும் மறுத்து
திறனொடும் அன்னோர் போர் தொழில் ஒழிந்து ஓர் திசையினில் உறைந்தனரென்னில்
விறல் புரி மதீனா தரு பல பலனில் வேண்டு முப்பகுப்பில் ஓர் பாகம்
நிறைதர நாளும் அருள்குவோம் என்ன நிகழ்த்தும் என்று உரைத்தனர் அன்றே

மேல்
$3.37.29

#4467
நன்று என உவந்து முடி சிரம் துளக்கி நாயக குரிசிலை வாழ்த்தி
மின் தட வாள் கையிடத்தினில் தாங்கி அரி என விரைவினில் ஏகி
பொன் தொடை திரள் தோள் அன்ன மன்னவர் முன் புகன்றவை இவை என புகன்றார்
ஒன்றிய குணத்தில் நன்கு என கூறும் இருவரும் உளத்திடை மதித்தார்

மேல்
$3.37.30

#4468
அனையவரிடத்தில் நடந்தவை அனைத்தும் அடைந்தவர் சாற்றிய பின்னர்
தினை அளவெனினும் இறையவன் ஏவல் சிதைவு இலாது இயற்றும் நல் நயினார்
இனையன வார்த்தை மதீன மா நகர தலைமையின் சகுது இருவருக்கும்
நனிதர உரைத்திட்டு ஈகுவம் என்ன நலனொடும் வரவழைத்தனரால்

மேல்
$3.37.31

#4469
வித்தகர் திரள் அன்சாரியர்க்கு உவந்த வேந்தர் வெண் புகழினில் திரண்ட
சித்திரத்து அமைந்த வடிவினர் வீயா திடத்தினர் மஆது கண்மணியாம்
புத்திரர் சகுதும் கூறும் உபாதா புதல்வராம் சகுதும் வந்து இருப்ப
நித்திய வரம் பெற்று உயர்ந்த நல் நபியும் நிகழ்ந்தவை அனைத்தையும் உரைத்தார்

மேல்
$3.37.32

#4470
இருவரும் அதனை கேட்டு உளம் புழுங்கி இணை துளை நாசியின் உயிர்த்து
பொருவு அராது எழுந்த கபீபினை நோக்கி புண்ணிய துறையினில் உறைந்த
பெரியவன் செயலோ அன்றி நீர் நினைந்து பேசிய மாற்றமோ வரும் இ
கருமம் ஏது என்ன கேட்டனர் நபியும் கழறினன் யான் என உரைத்தார்

மேல்
$3.37.33

#4471
கருத்தினுள் தெளிந்து நினைத்த இ சூழ்ச்சி காட்சியீர் நும் பொருட்டோ தீன்
அருத்திய எளியேம் பண்புறும் பொருட்டோ என்றலும் அழகு உற உமக்கு ஓர்
வருத்தம் இல் வேண்டி ஈண்டு வந்து அடைந்த காபிர்கள் யாவரும் மறுகி
செரு தொழில் வீய நினைத்தது என்று உரைத்தார் தீனர்கள் நா அணை இருப்பார்

மேல்
$3.37.34

#4472
குறித்து இவை உரைத்த வாசகம் தாங்கி குழைந்து நல் மனத்தொடு மதியும்
மறுத்து எதிர் உரைப்பது என் என மறுகி மஆது அருள் சகுதொடு சகுதும்
அற துறை விளைந்த பேரொளி மணியே ஆதி-தன் அருளினில் திரண்ட
திற தனி பயனே எங்கள் கண் அகலா செல்வமே என்று உரை தெரிப்பார்

மேல்
$3.37.35

#4473
இயாங்களும் கத்பான் குலத்தவர்-அவரும் என்றும் ஓர் மார்க்கமாய் இருந்தும்
தேம் கமழ் ஈந்தின் கனியின் ஒன்றேனும் கொடுத்திலம் பயத்தொடும் திருந்த
வாங்கிய விலைக்கும் விருந்து எனும் அதற்கும் அன்றி ஓர் வரம்பு இலா அருளே
தாங்கிய தவத்தின் மேல் உளீர் சமயம் சலிப்புற யாதினை கொடுப்போம்

மேல்
$3.37.36

#4474
தருமமும் தவமும் துயருறும் வீர தகைமையும் அயருறும் விசயம்
வெருவுறும் மானம் தேய்வுறும் தீமை விளைவுறும் துனிவுறும் வேதம்
பெருகிய கீர்த்தி நொய்துறும் சமயம் பிழைவுறும் அழகு உறு நீதி
இரிவுறும் போரில் திரண்டு எழும் காபிர்க்கு இதம் உற ஈந்திடில் எமக்கே

மேல்
$3.37.37

#4475
நீங்கிலா மறையும் அணங்கு உறும் இசுலாம் நெறியும் தொல் இறையவனிடத்தில்
வாங்கினம் கிடையா பதவியும் அடைந்தேம் வரத்தினால் உயர்ந்த தூது என்ன
ஓங்கிய திரு பேர் நீவிர் எம்மிடத்தில் உறையவும் பெற்றனம் இனிமேல்
தீங்கு உறும் காபிர்-வயின் சிறிது எளியேம் கொடுப்பதும் உடைத்து அரும் திறலோய்

மேல்
$3.37.38

#4476
ஏது எனில் உரு ஒன்று இயற்றியே வெறிது ஈமானினை இகழ்ந்தவர் உடலில்
கோது செய் நெடிய வேலினில் வாளில் கோலினில் கொடுத்திடலன்றி
வேதனைப்பட மற்றொன்று இனிது ஈயேம் விளிகிலா வரத்தினை உடையீர்
ஆதி-தன் கிருபை ஆணை நும் ஆணை என்று உரைத்தருளினர் அன்றே

மேல்
$3.37.39

#4477
சினத்தொடும் படித்த அறிவொடும் உரைத்த செய்கை கேட்டு உவமை இல் அரசர்
மனத்தினில் களிப்புற்று அரிய ஈமானை வளர்த்தவராம் என புகன்று
கனைத்த மும்மத வாரண குலம் ஏய்ந்த கத்துபான் குழுவினரிடத்தில்
நினைத்து முன் உரைத்த வாய்மையை முறித்தார் நிசமுற ஒருவரை ஏவி

மேல்
$3.37.40

#4478
இசையும் வாய்மை முறித்து எழில் ஏந்திய
வசை இலா புகழ் மன் எனும் மா நபி
திசை விண் ஏத்த இருந்தனர் தீன் நெறி
அசறு அடுத்த பொழுதும் அடுத்ததால்

மேல்
$3.37.41

#4479
வணங்கும் முன்னர் எழ திரள் வாசியும்
முணங்கு பல் கொடி ஆட உரும் என
இணங்கு பல்லியம் ஆர்ப்ப இகல் உற
கணம் கொள் சேனையின் ஈண்டினர் காபிரால்

மேல்
$3.37.42

#4480
சிலை வளைத்து எழில் நாணினை சேர்த்தி ஊன்
மலி வண்டு ஏந்தி மின் வாழ்தரும் வாள் உரீஇ
தொலைவு இலா சினம் துன்ன வந்து ஆர்த்தனர்
அலையை ஒத்து எதிர்த்தார் அசுகாபிகள்

மேல்
$3.37.43

#4481
திரு நபிக்கு உயிர் என்னும் திறத்தினோர்
கரிய வன் குபிர் மள்ளரும் காதியே
பொருதுகின்றனரன்றி புலாலுள் நீர்
தர ஓர் காயம் அடுத்தில சற்றுமே

மேல்
$3.37.44

#4482
இனைய போர்செய்து இகலும் அளவையில்
சினம் உள் மீறி அபூசகல் தேடிய
தனையனும் அமுறும் சில தானையின்
நனி அகன்ற அகழினை நண்ணினார்

மேல்
$3.37.45

#4483
பாரை பற்றி படுகுழி போல் அகன்
ஊரை சுற்றி எடுத்து இங்கு உறைந்தனர்
காரை பற்றும் கவிகையன் காட்டு தீன்
வேரை பற்றி எழுந்த அ வீரரே

மேல்
$3.37.46

#4484
முன் இலாத கவுத்துவம் முற்று உற
இன்ன நாளில் இயற்றினர் ஈங்கு இதால்
பன்னு மாயம் ஏதோ என பாவியோர்
உன்னி மீண்டு ஓர் இடத்தினில் உற்றனர்

மேல்
$3.37.47

#4485
கிடங்கு அடுத்து அணி நிற்பது கேடு என
ஒடுங்கி அப்புறம் எய்தலும் ஊக்கம் ஊர்
மடங்கல் என்னும் அலி வளர் மா மறம்
தொடங்கி மீளியர் சூழ்தர தோன்றினார்

மேல்
$3.37.48

#4486
அபுதுவத்து அருள் மைந்தன் அடங்கிலா
பவம் உடற்று அமுறும் வரி பாய் புலி
சிவணும் இக்கிரிமாவும் செலும் வழி
கவிய கட்டினர் நின்றனர் காணவால்

மேல்
$3.37.49

#4487
மாதிர புய மன் அலியும் திறல்
சாது வேந்தரும் தாரையின் ஈண்டலும்
பேதியாது மனத்தில் பிரியமுற்று
ஏது இலாத இருவரும் தாக்கினார்

மேல்
$3.37.50

#4488
கடல் இரண்டு கலந்து என காதிய
படை இரண்டும் எதிர்ந்தன பாய் பரி
உடல் இரண்டு கிடந்த உகு தலை
இடம் இரண்டும் மலிந்த இமைப்பினே

மேல்
$3.37.51

#4489
தேன் பொழிந்த தொடை முடி தீது இலா
மீன் பொழிந்து என வெண் முத்து உகுத்தன
ஊன் பொதிந்த உதிர பெருக்கில் நீர்
வான் பொழிந்த மழை என கான்றன

மேல்
$3.37.52

#4490
செயிர் துறந்த திறத்தினர் திண் படை
கையில் விடுப்ப விரைந்து எழு கந்துகம்
உயிர் துறந்து கிடந்த உள் மூளையாம்
தயிர் சொரிந்து கிடந்த அதின் தலை

மேல்
$3.37.53

#4491
கண் தெரிந்தில சேந்த கடும் சரம்
புண் தெரிந்தில போர்த்த வயவருக்கு
எண் தெரிந்தில பட்ட இவுளிகள்
விண் தெரிந்தில மேவிய புள் அரோ

மேல்
$3.37.54

#4492
தரம் கிடந்த நெடும் சரம் தாக்கி உள்
உரம் கிடந்து உயிர் உண்டு எழுந்தோடலும்
அரம் கிடந்து உணும் வாளின் அறுத்தலும்
மரம் கிடந்து என வீழ்ந்தனர் மள்ளரால்

மேல்
$3.37.55

#4493
இரு திறல் படை இன்னன போர்செய
விருது கட்டிய சஃது எனும் வேந்தர் போய்
மருவும் மள்ளரை வீழ்த்தி விண் வாவிய
பரியின் மேல் கொண்டு நின்றனர் பாலினே

மேல்
$3.37.56

#4494
சேனையின் நடு நிற்ப சிறந்திலா
ஈன வெம் குபிர் என்பவர் எண்ணிலா
மான வேல் மழு சக்கரம் வாளுடன்
ஊன் உடை சரம் உள்ளவை ஏவினார்

மேல்
$3.37.57

#4495
விடுத்த பல் படையின் ஒரு வெம் சரம்
அடுத்து வந்து இவண் நின்றவர் அங்கையின்
மடுத்து உள் ஓடி வெளியினில் வாங்கின
தொடுத்த தாரையில் சோணிதம் துள்ளின

மேல்
$3.37.58

#4496
சாது வேந்தர் கரத்தில் சரம் பட
ஆதி ஏவல் இயைந்த அலி புலி
ஊதை பிற்பட உன்னிய உன்னியை
வீதிவிட்டு அமர் மேவுளர் தாக்கினார்

மேல்
$3.37.59

#4497
கனைக்கும் வானத்து இடி என காபிர் மேல்
முனைக்கும் ஆங்கு அவர் சோரியின் முற்றுமே
நனைக்கும் நேமியை நால் திசை எங்கும் போய்
நினைக்கும் முன்னம் வரும் முன்னர் நிற்குமால்

மேல்
$3.37.60

#4498
குதிக்கும் மள்ளர் கரும் தலை குப்புற
மிதிக்கும் நெஞ்சினில் வெட்டும் குளம்பு உற
பதிக்கும் ஆடும் பறக்கும் நடக்குமால்
மதிக்கும் வாள் அலி ஏறிய வாசியே

மேல்
$3.37.61

#4499
ஓடும் சேனை உழக்கும் உயிர்ப்பு என
சாடும் சென்னி தகர்க்கும் விறலினை
சூடும் நன்மையில் தோன்றிய தீனரை
கூடும் மெய் புலி ஏறும் குதிரையே

மேல்
$3.37.62

#4500
இ திறல் பரி தாங்கிய ஏந்தலும்
வை தட கதிர் கப்பு உறும் வாள் உரீஇ
கைத்தலத்தினில் ஏந்தி அ காபிரை
சித்திர கொலை செய்ய துணிந்தனர்

மேல்
$3.37.63

#4501
வெட்டினார் பகு வாளினில் வீரர்கள்
பட்டினார் என தோன்றிலர் பார்த்திடின்
ஒட்டினார் எவர் ஆவியொடு ஊழ் அற
கொட்டினார் குடர் வீழ்ந்தனர் குவ்வினே

மேல்
$3.37.64

#4502
உந்திஉந்தி வரும் பரி ஊனின் நீர்
சிந்தி நந்தி விழுந்தன தீ என
வந்துவந்து உருத்து ஆர்த்தனர் வாளினால்
பந்திபந்தியின் வீழ்ந்தனர் பாங்கு எலாம்

மேல்
$3.37.65

#4503
ஓங்கினார் பினும் வாளினில் ஊக்கம் அற்று
ஏங்கினார் மனம் எண்ணி வெருவுறல்
தாங்கினார் திறம் தாங்கிலர் பின் உற
வாங்கினார் பொரும் காபிர் வயவரால்

மேல்
$3.37.66

#4504
ஊக்கம் இன்று என உள்ளுற வாங்கலும்
நோக்கி வீசும் கடுத்தலை நொன் கரத்து
ஆக்கி மாவொடு அமுறும் வந்து ஆர்த்தனன்
மோக்குரைத்த வெம் கோளரி முன்னமே

மேல்
$3.37.67

#4505
நின்றநின்ற திசை-தொறும் நீள் படை
கொன்றுகொன்று பெரும் களம் கூட்டிய
வென்றி மன்னவ என்னொடு வென்றி நீ
ஒன்று செய்திடுக என்று இவை ஓதினான்

மேல்
$3.37.68

#4506
ஊதை வாம் பரியால் தெறவோ உடல்
கோதும் வாளில் தெறவோ கொடும் சர
தூதினால் தெறவோ இனி சொல்லு நீ
யாதினால் கொன்று இரும் சினம் தீர்குவேன்

மேல்
$3.37.69

#4507
சொல்லு சொல் என்று அலி அரி தூண்டலும்
நில்லு நில் என்று எதிர்ந்தனன் நேரலான்
கொல்லு கொல் என்று இடி என கூறினார்
வல்லை அஞ்சி மனத்துள் மயங்கினான்

மேல்
$3.37.70

#4508
மல்லினால் கொல்ல வேண்டுமோ வாங்கிய
வில்லினால் கொல்ல வேண்டுமோ வெம் பரி
செல்லினால் கொல்ல வேண்டுமோ திண்ணியன்
சொல்லினால் கொல்வன் என்று துணுக்குற்றான்

மேல்
$3.37.71

#4509
இடி பெயர்த்தன ஓர் சொல் எறிந்ததால்
அடி பெயர்த்தன சேனைகள் அந்தர
குடி பெயர்த்தன மேகம் குலைதர
படி பெயர்த்தன பாந்தள் பெயர்த்தன

மேல்
$3.37.72

#4510
திசை நடுங்கும் என்று எண்ணி சினத்தொடும்
விசையின் வாசி சுழற்றி விண் மேலவன்
வசை இலா புலி முன் சென்று வாளினால்
இசைய ஓங்கி எறிந்தனன் தீங்கினன்

மேல்
$3.37.73

#4511
எறிந்த தானை விலக்கி இவன் உடல்
பிறிந்து இரண்டு என போம்படி பேரெழில்
மறிந்த வாளில் வழங்கினர் சோரி நீர்
செறிந்து வீழ்தர நந்தினன் தீயவன்

மேல்
$3.37.74

#4512
ஆய்ந்த புன்மை அமுறு எனும் மன்னவன்
வீய்ந்து போயினன் கண்டு வெருவு உற
சாய்ந்து போயின தானை தறுகண்மை
வாய்ந்த இக்கிரிமாவும் பின்வாங்கினான்

மேல்
$3.37.75

#4513
வெருவு உற்று ஓடிய வேந்தரும் மள்ளரும்
திரு உலாவிய பாசறை சேர்ந்தனர்
ஒருவன் மாத்திரம் ஓட தவறியே
விரிவின் ஆழ்ந்த அகழினில் வீழ்ந்தனன்

மேல்
$3.37.76

#4514
நவுபல் என்னும் பெயரினன் நாளினும்
பவம் இழைத்த படிறனவன்-தனை
தவிர்கிலாது தட கையில் பற்றியே
திவளும் சென்னி தறித்தனர் தீனரே

மேல்
$3.37.77

#4515
உடை கொண்டு ஆடல் பரியொடும் ஓங்கிய
படை கொண்டு ஏகி பரம்பொருள் வேதத்தின்
நடை கொண்டே விளையாடும் நபி முனம்
அடல் கொண்டு ஆர்க்கும் அலி புலி நண்ணினார்

மேல்
$3.37.78

#4516
அலியை ஆர தழுவி அகுமது
நிலவு கால இருப்ப நிகழ்த்து தீன்
புலவர் பா அமுதம் பொழி வாக்கினர்
கலைகள் யாவும் உணர்ந்த கருத்தினர்

மேல்
$3.37.79

#4517
மதுர வாய்மை கசான் எனும் மா தவர்
கதி கொள் பேரினர் ஆசு அறு கல்வியாம்
உததி அம் கரை கண்டவர் ஓங்கிய
அதிக கேண்மையர் அன்பினர் ஆங்கு அவர்

மேல்
$3.37.80

#4518
ஓடினாரையும் உடலின் ஊன் உக
வீடினாரையும் வெருவி பாசறை
தேடினாரையும் காபிர் தீது உற
பாடினார் வசை பண் பிறக்கவே

மேல்
$3.37.81

#4519
கவியில் கூறிய காபிர் மேல் வசை
செவியில் கேட்டலும் தீனர்_கோன் நபி
அவிரும் மா மணி ஆடை மா நிதி
குவிய ஈந்தனர் குறைவிலாமலே

மேல்
$3.37.82

#4520
இன்ன எல்வையில் தீனர் யாவரும்
மன்னு மா மனை இடத்தின் மேவினார்
மன்னர் சகுதும் கோல் மடுத்த கையொடும்
பொன் உள் வாழும் இல்லிடத்தில் புக்கினர்

மேல்
$3.37.83

#4521
மருந்து மற்றவை வாளி படும் கரம்
பொருந்து புண்ணிடை சேர்த்திலர் போதம் உற்
றிருந்து சிந்தை இரங்கி இறைவனை
திருந்த வாழ்த்தி இனையன செப்புவார்

மேல்
$3.37.84

#4522
வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும் மறை தெளிந்த மற்றையோர்க்கும்
ஊன் உடைய பல் உயிர்க்கும் உணர்வு அரிய பேரொளியாய் ஓங்கி நின்ற
ஞானம் எனும் பரம்பொருளே அழியாத பெரும் பேறே நடு நின்று என்றும்
ஊனம் அற விளையாடி எவ்விடத்தும் எந்நாளும் உறையும் கோவே

மேல்
$3.37.85

#4523
நன்றி அஃது உறைவு இடமோ நடு இடமோ ஈறு இடமோ நலன் ஆர் போதம்
துன்று தவத்தின் இடமோ பொறை இடமோ அருள் இடமோ தொலையா வேத
மன்று இடமோ தருமம் எனும் வழி இடமோ பெரியோர்கள் வணங்கி நின்ற
வென்றி இடமோ அறியேன் மற்று இடமோ நீ உறைந்த விளக்கம் யாதோ

மேல்
$3.37.86

#4524
அருவோ நீ அருளோ நீ அறமோ நீ அழகோ நீ அடங்கிலாத
மருவோ நீ ஒளிவோ நீ மனமோ நீ ஊழோ நீ மறை மான் ஈன்ற
உருவோ நீ உயிரோ நீ உண்டோ நீ இன்றோ நீ உரைத்த வேத
திருவோ நீ செயலோ நீ உன் வடிவம் என்-கொல் என தெருள்வன் யானே

மேல்
$3.37.87

#4525
என்னுடைய புழுக்கூட்டை மல சடத்தை வீணே போம் இருக்க ஏதும்
இன்னது என அறியாது கிடந்து புவியிடத்து உழன்ற எளியேன் அந்தோ
உன்னுடைய திரு கூத்தை அறிவது என்-கொல் பதவி எனும் ஓயா இன்பம்-
தன்னை அடைந்து இருப்பது என்-கொல் கிருபை அளித்து எ பவமும் தடிய வேண்டும்

மேல்
$3.37.88

#4526
குறைசி எனும் குல காபிர் பகை நாளும் வளருமெனில் கோது இலாது
நிறையும் எனது உடல் உயிரை தர வேண்டும் எ தலத்தும் நீண்ட சோதி
இறையவனே அ காபிர் நாள்-தோறும் தேய்வரெனில் இலங்கும் வாளி
உறையும் மலர் கரத்துடனே பீசபீல் மவுத்தாக்க உதவி செய்வாய்

மேல்
$3.37.89

#4527
என்று இரு கை ஏத்தி நறும் துஆ ஓதி இறையவனை ஏத்தி வீரம்
துன்று புய சகுது இனைய இருப்ப நறை கமழ்ந்த ஒளி தூதரானோர்
அன்று பகல் இகல் குபிரரால் அசறு வணக்கம் கலாவானது என்ன
கன்றி மனம் அற வருந்தி அரியவனை பணிந்து இவரும் கரைவதானார்

மேல்
$3.37.90

#4528
அஞ்சு ஒகுத்தும் தப்பாது கடன்கழிப்ப நாள்-தோறும் அளித்தேற்கு அந்தோ
வஞ்சம் உறும் குபிரவரால் ஓர் வணக்கம் தாராது வருந்தி நின்றேன்
மிஞ்சு கதி வினை பயனோ உலகம் எங்கும் பெரும் காட்சி விரித்த கோவே
தஞ்சமுற உனை அடைந்தேன் இனி தகைமை பொறுத்து இரக்கம் தாங்குவாயே

மேல்
$3.37.91

#4529
தாய் அளித்த செல்வம் என்றும் தந்தை தரும் செல்வம் என்றும் தவத்தின் ஏய்ந்த
சேய் அளித்த செல்வம் என்றும் பிறர் அளித்த பலன் இது என்றும் திறமை வேந்தர்
கூய் அளித்த செல்வம் என்றும் சிறியோர்கள் அறியாது குரைப்பது எல்லாம்
நீ அளித்த செல்வம் அன்றோ பெரியோர்கள்-தம் மனத்துள் நிமிர்ந்து நின்றாய்

மேல்
$3.37.92

#4530
காணாத பெரியவனோ காண்பதற்கும் எளியவனோ கவினும் மேனி
ஆணாக அலியாக பெண்ணாக அமைந்தவனோ அவையும் என்றும்
பூணாத காட்சியனோ புணர்வு உணர்வு உண்டு இல்லவனோ புகலா நின்ற
வாழ்நாளும் உடையவனோ வல்லவனோ உன் பெருமை மதிப்பார் யாரே

மேல்
$3.37.93

#4531
பொல்லாத வஞ்சகரை தெளியாத மனத்தவரை புன்மையோரை
கல்லாத கயவர் எனும் குபிரவரை வேகம் அற களைந்து நாளும்
எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய்
அல்லாவே அல்லாவே என்று இரங்கி புகழ்ந்து புகழ்ந்து அறைந்தார் மன்னோ

மேல்
$3.37.94

#4532
இ தகைமை இரங்கி இரும் துஆ ஓதி தூதர் தனித்து இருக்கும் எல்வை
சத்துருவாகிய கத்பான் குழுவினரில் உண்மை எனும் தன்மை பூண்ட
வித்தகன் புண்ணியத்து உறைந்த மேன்மையுளன் ஓர்நாளும் வெளிறு இல்லாத
புத்தியினன் சூழ்ச்சியினன் என்று ஒருவன் வந்து அவணில் புக்கினானால்

மேல்
$3.37.95

#4533
வடி கதிர் மெய் சிறந்து ஒளிர மான்மதம் எங்கும் கமழ மறைகள் நாவின்
அடிக்க இசை பிறக்க இறை ஏத்தி அறத்தோடு இருந்த நபிகள் கோமான்
அடி கமல மிசை வணங்கி எழுந்து ஒருபால் நின்று அகங்கை ஏந்தி வானத்து
இடிக்கும் மழை குடை கவித்த வேந்து அரியே என போற்றி இனைய சொல்வான்

மேல்
$3.37.96

#4534
அந்தமிலா மாந்தர் பலர் ஈன்று புவியிடத்து அருளும் ஆதம் ஆன
தந்தை-அது பெருவிரலில் இருந்த பெரும் பேரொளியே தணப்பிலாத
விந்தை தரும் காரணத்தின் மேல் உதித்த திரு வடிவே மேலோன்-தன்னை
சிந்தை-தனில் குடிபுகுத்தும் செழும் தூதே காட்சி உறும் தேவர்_தேவே

மேல்
$3.37.97

#4535
அடியன் மன புந்தியில்லேன் கத்துபான் கேளிருள்ளேன் அடங்கிலாத
கொடுமையுளன் தருமம் அற்ற சிந்தையினன் யாவருக்கும் குறைகள் செய்தேன்
புவி-தனில் திறமை மசுகூது மகன் எனை எவரும் புகழும் வேத
நடை உணர் நாயக நாளும் குறித்து உரைக்கும் நாமமோ நுகைமு என்போன்

மேல்
$3.37.98

#4536
மாறாத பகை உடற்றும் பெரும் காபிரிடத்து உறைந்து மயங்கி ஆகம்
தேறாது கிடந்து உலைந்தேன் ஈமானை நயந்து மனம் சிறியேன் நாளும்
வீறு ஆரும் தானையொடும் கேளிரொடும் கூண்டும் அமர் மேவி இ நாள்
பாறு ஆரும் வெல் வேலீர் வந்து மகிழ்ந்து உறைந்தனன் பாசறையின் மன்னோ

மேல்
$3.37.99

#4537
அ பெரும் பாசறை நீந்தி ஒருவர் அறியாது எளியேன் அறிவிலாதேன்
இப்பொழுது இங்கு இனிது அடைந்தேன் கண்கள் பெற்ற பேறும் இன்னே எளிதில் கண்டேன்
முப்புவியும் விளங்க வரும் மெய் பதவியும் அடைந்தேன் முழுதும் சூழ்ந்து
வெப்பு உறும் தீமையும் துலைந்தேன் கிடையாத திரு சுவன வீடும் பெற்றேன்

மேல்
$3.37.100

#4538
அலை இல் இன்ப மழை உதவு கரு முகிலை ஞான மணி அருளும் ஓதை
சலதியினை சீல நிதி தரும் கலத்தை கனி பதவி தரு வான் ஈண்ட
நலன் உடைய காவகத்தை நா ஏறும் கலிமாவை நன்மை ஆற்றை
நிலைபெற யான் உரைத்தருளுக என்றனன் நன்கு என அவரும் நிகழ்த்தினாரால்

மேல்
$3.37.101

#4539
தொழுகை என வரும் வரலாறு எவையும் உணர்ந்து அகம் மகிழ்ந்து தூதரானோர்
பழுது அறு செங்கமல மலர் அடி பணிந்து முகம் நோக்கி பகையின் மேவி
அழிவு உறு வெம் காபிர் இகல் கெட ஒடுக்கி உள்பகையும் அமைத்து இப்போதே
அழிவினவர் புறங்காட்ட செய்குவன் யான் என உரைத்து அங்கு எழுந்தார் மன்னோ

மேல்
$3.37.102

#4540
ஈங்கு உரைத்து எழுதலும் இரவி எங்கணும்
ஓங்கிய கதிர்களை ஒடுக்கி மேல் திசை
வாங்கி அங்கு உறைந்தனன் வளரும் தீனிலை
தாங்கிய அறிஞரும் தகையில் போயினார்

மேல்
$3.37.103

#4541
பார் உடைத்து எறி அடி பரிகள் மேவிய
போர் உறு முனைப்பதி புக்கி நல் மதி
நீர் இலா நெஞ்சினர் நிகழ்த்தும் உண்மையும்
ஓர்கிலா எகூதிகள் உறை தலம் நண்ணினார்

மேல்
$3.37.104

#4542
நலிறு எனும் குழுவினர் சூழ நாப்பண் ஓர்
புலி இருந்து என தனி புழுங்கி சீற்றமே
மலிதர இருந்திடும் குயை முன் மாண் உடை
தலைவர் என்று ஏத்திய நுகைமு சார்ந்தனர்

மேல்
$3.37.105

#4543
இருத்தினன் கை குவித்து இருப்ப வஞ்சகம்
பொருந்திய குயை எனும் புன்மை மன்னவன்
வருத்தம் இல் மனத்தினிர் வந்தது என் என
உரைத்தலும் இவர் அதற்கு எதிரின் ஓதுவார்

மேல்
$3.37.106

#4544
குலத்தினில் இறந்தனன் கொடிய வெம் பழி
நலத்தொடும் வாங்குதற்கு எழுந்த நாயக
நிலைத்த வெம் மொழி சில நிகழ்ந்தது உண்டு அவை
வெல தக உணர்ந்து நீ கேட்க வேண்டுமால்

மேல்
$3.37.107

#4545
மல்லல் அம் படையொடும் இருந்த மா நபி
சொல்லிய சொற்படி எழுந்து ஒர் தூதுவன்
ஒல்லை எம் அரசர்-தம் உழையில் வேந்த கேள்
அல்லினின் நெருநல் நாள் அணுகினான் அரோ

மேல்
$3.37.108

#4546
ஈண்டிய சேனையோடு இகல்செய்யாவகை
மாண் தர ஓர் இடம் வாங்கினீரெனில்
வேண்டிய நிதி உமது அகம் விருப்புற
ஆண்டு-தோறினும் இனிது அருள்குவோம் என்றான்

மேல்
$3.37.109

#4547
அ மொழி கேட்டவர் பொருந்தி ஆடக
மம்மர் உற்று அவனொடும் வலக்கைநீட்டினார்
செம்மை அம் திறத்தினோய் பின்னர் தேய்தரும்
வெம் முனை அறபிகளிடத்தின் மேவினான்

மேல்
$3.37.110

#4548
ஆங்கு அவரிடத்தினும் அந்த வாய்மொழி
நீங்கிலாது உரைத்தனன் யாரும் நேருற
பாங்கொடு மதித்தனர் தீனர்-பாலினில்
தீங்கு உறாது ஏகினன் தூதர் செவ்வியோன்

மேல்
$3.37.111

#4549
இன்னன பேசிய பொழுதின் ஈண்டு உறு
மன்னவர் யாவரும் போர் மனம் கொளார்
உன்னி அங்கு அவரவர் ஊரின் மேவுவர்
பின்னர் மாற்றலர் உனை பிடித்து இங்கு ஏகுவார்

மேல்
$3.37.112

#4550
வந்து நின் படையொடும் அலகில் தீனவர்
அம் தர பொரப்படாது ஆகையால் அரோ
சிந்தையில் சிறிது உரை சிறியன் எண்ணினேன்
தந்திரம் என்ன நீ தரிக்க வேண்டுமால்

மேல்
$3.37.113

#4551
படை பொர அழைப்பவர் கையில் பண்பு உற
திடமொடும் உனை கொடுத்து இவர் செல்லாவகை
மிடலொடும் கிரி ஒன்று விரும்பி வாங்கி நீ
உடன் இனிது உறைதலே உபாயமாம் அரோ

மேல்
$3.37.114

#4552
இ திறம் முடித்தியேல் இடுக்கண் ஏகும் வெம்
பித்து உழன்றவர்களும் பிரிந்து போகிலர்
மித்துருக்கு உயிர் தரு வேந்தர்_வேந்த வாழ்
சத்தியம் என் மொழி என்ன சாற்றினார்

மேல்
$3.37.115

#4553
கேட்டனன் மெய் என கிலேசம் உற்றனன்
போட்டனன் உறவினை சீற்றம் பொங்கு எரி
மூட்டினன் முற்றினும் மூழ்கி நின்றனன்
வேட்டலுற்று அவிடம் விட்டு இவரும் மீண்டனர்

மேல்
$3.37.116

#4554
திவள்தரு சிலையின் மேல் சிந்தை ஓட்டிய
கவர் மன கறுபு வந்து ஈன்ற காதலன்
அவனிடம் மேவினர் அரிய வல் இருள்
குவிதரும் இரவினில் குணம் கொள் சூழ்ச்சியார்

மேல்
$3.37.117

#4555
வந்தவர்-தமை இடத்து இருத்தி மா மகிழ்
சிந்தையில் பூத்து எழில் சிறப்ப நோக்கியே
அந்தமில் அறிவினோய் அடைந்தது என் என
தந்திரம் உண்டு என்றார் இவனும் சாற்று என்றான்

மேல்
$3.37.118

#4556
சூதர் எகூதியர்க்கு ஆதி தோன்றல் என்று
ஓதிய குயை எனும் ஊன வஞ்சகன்
பாதகம் முடித்தனன் பழியும் பூட்டினன்
ஏது என விளம்புகேன் இவன்-தன் செய்கையை

மேல்
$3.37.119

#4557
முன்னர் நாள் இரு விசை போரில் மூழ்கிலாது
உன்னி அ முகம்மதுக்கு உடைந்து அங்கு ஓடினாய்
இன்னும் நீ தன்னை விட்டு ஏகிலாவகை
மன்னிய கிரி ஒன்று வாங்கிக்கொள்ளவும்

மேல்
$3.37.120

#4558
உயிர் எனும் கிரியுடன் உறையும் தன்மை போல்
செயம் உறு தீனவர் மகிழ தீமையோன்
தயவொடு அ கிரியினை ஈயவும் தனித்து
அயலினில் ஏகவும் அமர்செயாது அரோ

மேல்
$3.37.121

#4559
பிரியமுற்று உன் கிரி கொடுத்த பின் வளம்
தரு சுகுறாவினை சார்ந்த தூதுவன்
இருமையின் மகிழ்ந்து இனிது ஈயவும் இவன்
அரிதினில் ஏகி அங்கு அரசின் ஆளவும்

மேல்
$3.37.122

#4560
இன்னன செய்கை உள்ளிருந்து மாறு போல்
நல் நிலை கெடும் குயை என்னும் நாமத்தான்
பன்னினன் முடித்தனன் பகையும் காட்டினன்
மன்னவ உணர்க என வணங்கி கூறினார்

மேல்
$3.37.123

#4561
தாக்கிய தீ மொழி செவியில் சார்தலும்
மூக்கிடை விரலினை சேர்த்தி மா முடி
தூக்கினன் விழி துணை தோன்ற வெம் சினம்
ஆக்கினன் பின்னர் உள் அடக்கினான் அரோ

மேல்
$3.37.124

#4562
மொழி கொடுத்து அடல் வலி நுகைமு மொய் இருள்
தழுவிய இரவினில் சார்ந்து கத்துபான்
குழுவொடும் இனையன மொழிந்து கோது இல் தன்
உழையினில் உறைந்தனர் உவமை மற்று இலார்

மேல்
$3.37.125

#4563
கட்டுரை பேசினர் உறைய காயத்து உள்
முட்டிய இருள் குலம் முழுதும் தேய்தர
எட்டு எனும் திசையினும் இலங்க வெம் கதிர்
விட்டனன் எழுந்தனன் சிவந்த வெய்யவன்

மேல்
$3.37.126

#4564
துன்னிய கதிர் அரி தோன்ற மாற்றலர்
மன்னன் அபாசுபியான் சொல் வாய்மையும்
மன்னவர் வாய்மையும் அறிய வேண்டும் என்று
உன்னினன் மனத்தினில் ஒருவன் கூவினான்

மேல்
$3.37.127

#4565
விதி மொழி மறுத்து எழும் தீனர் மேல் இன்று
கதமொடும் இகல்செய சூதர் காளையர்
எதிர் பரியுடன் வர வேண்டும் என்று போய்
மதி மன குயையொடும் சொல்லி வா என்றான்

மேல்
$3.37.128

#4566
தூதினன் உணர்ந்து போய் சூதர்_கோனிடத்து
ஓதினன் இ மொழி உளைய கேட்டவன்
மா தவன் நுகைமு சொல் வாய்மை உண்மை என்று
ஈது என ஒரு மொழி எடுத்து காட்டுவான்

மேல்
$3.37.129

#4567
பாரிடை இன்று எமர்க்கு இனிய பண்பின் நாள்
வாரமும் சனி என வந்தது அன்றி உள்
ளார் எனும் கேளிரை கிரிவைத்தாலல்லால்
ஈரமுற்று அளவளாயிருப்பது இல்லையே

மேல்
$3.37.130

#4568
பாசறையிடத்தினில் வைத்து உபாயமாய்
தேசுற அவரவர் ஊரில் செல்குவீர்
கூசுவது இல்லை ஆகையின் இ கூற்றினை
வீசினன் நீயும் போய் விளம்புக என்றனன்

மேல்
$3.37.131

#4569
நன்கு என எழுந்துபோய் நவிலும் தூதுவன்
பொன் குவை மலிந்த தோள் பொருப்பின் மன்னவன்
முன் கிளத்தினன் அவை முடிய கேட்டனன்
கொன் கெழு வேல் புகுந்து என்னும் கொள்கை போல்

மேல்
$3.37.132

#4570
நகை-தொறும் மூச்சு உயிர்த்து இனிய நாவொடு
தகு நெடு மூக்கும் ஆருயிரும் தந்தனன்
மிகை மசுவூது அருள் வீரனே என
அகம் உடைந்து எவரொடும் அரிதில் கூறினான்

மேல்
$3.37.133

#4571
சொல்லினை யாவரும் உணர்ந்து தோம் அறு
மல்லல் அம் தளத்தொடும் மடிமை கூர்தர
எல்லையில் துயரினுள் இடைந்து வாடினர்
வில் உமிழ் முகம்மதின் துஆவின் மேன்மையால்

மேல்
$3.37.134

#4572
மாற்றலர் தனித்தனி துனியின் மாழ்வுற
நால் திசை-தொறும் கதிர் நடத்தி வெம்மையில்
தோற்றிய கதிரவன் சுடுதல் மாற்றியே
மேல் திசை போயினான் இருண்ட விண்ணிடம்

மேல்
$3.37.135

#4573
பார்த்த திக்கினும் அந்தரத்தினும் படி முழுதும்
வார்த்ததாம் என செறிந்தன இருள் குலம் மலிந்த
சூர் தட குழுவும் பயந்து ஒளித்திட தோன்றி
தீர்த்த வட்ட வான் மதியினது ஒளியையும் சிதைத்த

மேல்
$3.37.136

#4574
இருட்டு எனும் கடல் ஈண்டியது என படர் இரு வான்
மருட்டி ஓர் கரும் கஞ்சுகி அணிந்து என மதியை
உருட்டும் காபிர் செய் பாவம் வந்து உதித்து என உலகம்
தெருட்டும் மேலவன் முனிவு என நிறைந்தன திமிரம்

மேல்
$3.37.137

#4575
தறையும் தோன்றில வானமும் தோன்றில தட பா
சறையும் தோன்றில ககுபமும் தோன்றில தகைத்த
மறுகும் தோன்றில உறையிடம் தோன்றில மதியாது
அறியும் மேனியும் தோன்றில அவரவர்க்கு இருளால்

மேல்
$3.37.138

#4576
இருந்திடம் பெயர்ந்து ஏகினர் மீள்வதற்கு ஏலார்
வருந்தி எங்கணும் ஓடினர் உலைந்தனர் மகுடம்
பொருந்த முட்டியும் காலினில் தட்டியும் புழுங்கி
தெரிந்திலா விழி அந்தரில் திரிந்தனர் எவரும்

மேல்
$3.37.139

#4577
திங்கள் என்பதும் கணங்கள் என்பதும் வெளி திரிந்த
பொங்கு செம் கதிர் இரவி என்பதும் நிலை போக்கி
எங்கு இறந்தனவோ ஒளி இல்லையோ ஏதோ
மங்கி நின்றனவோ என மனம் மதி மறந்தார்

மேல்
$3.37.140

#4578
மேவி நின்ற வல் இருள் அலால் பின்னரும் மிகுந்து
தாவி கீழ் திசை ஊதையும் மேல் நின்ற தனியோன்
காவிலா கொடும் குளிரும் இ காபிர்கள்-தம் மேல்
ஏவினான் அவை நினைப்பதன் முன்னம் வந்து இறுத்த

மேல்
$3.37.141

#4579
கொண்டல் வேகம் மீக்கொண்டு என முனைப்பதி குறுகி
சண்டமாருதம் போல் விசைத்து அடிக்கடி தாவி
கண்ட திக்கினும் பரந்து வெம் குளிரொடும் காண
அண்டமும் பெரும் பூமியும் நடுங்கிட அடித்த

மேல்
$3.37.142

#4580
பாடிவீடன்றி மற்று இடம் இலை என பரந்த
கோடை நீள் தட நீரையும் வாரிக்கொண்டு எறிந்து
நீடு வேரொடும் பிடிங்கி சேண் நிலத்திடை கிடப்ப
ஏடு கொண்ட பூ மரங்கள் யாவையும் முறித்து எறிந்த

மேல்
$3.37.143

#4581
பற்றி நீண்ட வெண் கயிற்றொடும் முளையொடும் பறித்து
சுற்றும் வெண் படங்கு அந்தரத்து ஆடிய தோற்றம்
அற்ற பட்டங்கள் பறந்தன போலவும் அண்டத்து
உற்ற மேகங்கள் சுழன்றன போலவும் ஒளிரும்

மேல்
$3.37.144

#4582
குச்சு கொட்டகை வீட்டொடு வளை சிறு குடிலும்
பிச்சு கண்ட திக்கு எங்கணும் எறிந்து விண் பிணங்கி
உச்சம் நீண்ட நிசானிகள் யாவையும் ஒடித்து
கொச்சை மானிடர் வெருவுற அடித்தன கொண்டல்

மேல்
$3.37.145

#4583
திசைகள்-தோறும் மொண்டு எறிந்த கார் குறும் துளி திவலை
விசையினோடும் வந்து அடித்தலும் குளிரினால் மெலிந்து
குசை கொள் வாம் பரி ஒட்டகம் எருதொடு கொடுகி
நசை கொள் பாசறை இடம்-தொறும் அடிக்கடி நடுங்கும்

மேல்
$3.37.146

#4584
இனைய பற்பல விலங்கினம் ஈடுபட்டு இறப்ப
மனு மிகுத்தலால் சில பரி கயிற்றினை வலிதின்
நினையும் முன் அறுத்து அடு முளை நிலத்தினில் பிடுங்கி
துனியொடும் குதித்து அடிபட துள்ளியே திரியும்

மேல்
$3.37.147

#4585
கையும் காலும் பேர் உடலொடு நடுங்கிட கலங்கி
உய்வது இல் என வீரரும் அரசரும் ஒளிரும்
வெய்ய தீ எரித்து அரும் குளிர்காய்ந்தனர் மேன்மேல்
ஐயகோ முனைப்பதி முற்றும் எரிந்ததாம் எனவே

மேல்
$3.37.148

#4586
சடிலம் துஞ்சினும் கேளிர்கள் துஞ்சினும் தரித்த
விடுதியன்றி மற்றிடம் வராது உளம் மெலிபவரும்
குடிகள் விட்டு வீதியினிடம் வந்தவர் குளிரின்
அடி பெயர்த்திடாது அங்ஙனம் கிடந்து அழிபவரும்

மேல்
$3.37.149

#4587
கூதிரும் குறும் திவலையும் இருட்டொடும் கொணர்ந்து
ஊதை தாக்கலும் மனம் சலித்து ஒருவருக்கொருவர்
ஆதரத்தொடும் தழுவி வல் வினை அடைந்து என இப்
போது தப்பி யாம் போகுதும் என புகல்வாரும்

மேல்
$3.37.150

#4588
மன்னனாகிய முகம்மது மாய வித்தையினால்
என்-கொல் வஞ்சகம் செய்தனன் என இடைபவரும்
பன்னி கூட்டி வந்து ஒரு விசைக்கு ஒருவன் வெம் பழியாய்
உன்னி இ சணம் கொல்வது என்று உணர்ந்து உழைபவரும்

மேல்
$3.37.151

#4589
மாகம் மீது இழிந்து எண்ணில் வானவர் வந்து வளைந்து
பாகம் கூர்தர தக்குபீர் முழக்கலும் பரந்த
மேகம் யாவும் போய் ஒளித்திட இடி பல வெருவ
ஆகும் இ தொனி ஏது என பயந்து அயர்பவரும்

மேல்
$3.37.152

#4590
இனைய பாளையம் அலைதர மருவலர்க்கு இடியேறு
அனைய மா நபி காபிர்-தம் இடத்தினில் அணுகி
துனிவு இல் வேவுபார்த்து அடைந்தவர்க்கு அழிவிலா சொர்க்க
மனை களிப்புற உண்டு என தோழர்-பால் வகுத்தார்

மேல்
$3.37.153

#4591
நாவினால் உரைத்தலும் குதைபா எனும் நம்பி
வேவுபார்த்து யான் வருகுவன் சணத்தினில் விடை நீர்
ஆவலோடும் இங்கு அளித்திடும் என்னலும் அவரும்
மேவினார் பதம் பணிந்தனர் பிசுமில் என்று எழுந்தார்

மேல்
$3.37.154

#4592
ஊடு வார் அணி தூணியும் வெரிந் அணிந்து ஒரு சிங்
காடியும் திரு கரத்து எடுத்து உவகையில் கடிதின்
நாடி பாசறை எய்தினர் நஞ்சு எனும் கடல் உள்
வாடல் இல்லது ஓர் தெள்ளமுது அடைந்தது மான

மேல்
$3.37.155

#4593
இருந்த கானினை விடுத்து பின் வேறு கானிடத்தும்
திருந்த வெவ் அரி பயம் இலாது உலவுதல் சிவண
விரிந்த வீதிகள்-தொறுந்தொறும் திரிந்தனர் விளைந்த
அரும் தவத்தினர் நாயனுக்கு உவந்த பேரடியார்

மேல்
$3.37.156

#4594
கடிதின் மற்றொரு மறுகு உற கதிரவன்-தன்னை
புடையினில் பரிவேடம் சூழ் வளைந்தது போல
சுடர் கொள் வேலினர் வாளினரொடும் அபாசுபியான்
நடுவில் தீ வளர்த்து இருந்தனன் குளிரினால் நடுங்கி

மேல்
$3.37.157

#4595
ஒல்லை நோக்கினர் பிணை குலத்து எதிர்ப்படும் உழுவை
புல்லும் உள்ளக களிப்பு என புந்தி கூர்ந்து உடனே
அல்லல் கூறும் அபாசுபியானை இங்கு அரிதில்
கொல்லுவேன் என சரத்தினை கரத்தினில் கொண்டார்

மேல்
$3.37.158

#4596
சிறந்த மா நபி சொல்லிய சொல்லின்றி தேகம்
இறந்து போகினும் போர்செய்தல் தகுவது அன்று எனவும்
துறந்து கை படை இருந்தனன் எனவும் உள் துளங்காது
அறிந்து நாணியே தூணியில் சேர்த்தனர் அம்பை

மேல்
$3.37.159

#4597
கங்கம் தூணியில் சேர்த்து வாள் கை கொடு களிப்புற்று
அங்கு போய் அளப்பறிகுவம் என்று எண்ணி அவர்-பால்
சிங்கம் போல் நடந்து ஏகி வல் இருட்டினில் தீனோர்
எங்கும் கீர்த்தி கொண்டு இலங்கிட ஓர் புறத்து இருந்தார்

மேல்
$3.37.160

#4598
தீட்டும் வேல் கை அபாசுபியான் எனும் திறலோன்
கூட்டத்தோர் புறத்து உறைதலும் அசுகையா குறித்து
வேட்டலுற்று எரி மூட்டி மேல் காய்த்திடும் வீரர்
கேட்டு உளம் பயம் எய்திட ஒரு மொழி கிளத்தும்

மேல்
$3.37.161

#4599
ஒன்னலாரிடத்து உளவன் போல் இவணில் வந்து ஒருவன்
என்-கொல் கவ்வையின் இருந்தனனோ இருக்கின்றான்
மின் இல் வந்த வல் இருளுமோ வெளி தரவிலையால்
துன்னும் மாந்தர்-தம் முகங்களும் தோற்றவும் இலையால்

மேல்
$3.37.162

#4600
திருந்து வாள் கரம் தாங்கிய சேவக திறலீர்
கரிந்த புன் மன மாற்றலன் காணுற இன்னே
பரிந்து கைகளை பிடித்துக்கொண்டு அவரவர் பக்கத்து
இருந்த வீரர்கள் இடு பெயர் வினா-மின்கள் என்றான்

மேல்
$3.37.163

#4601
அரசன் சொல்லிய சொற்படி யாவரும் அங்ஙன்
விரைவின் உற்றவர் நாமமே தெரிதர விளம்ப
பரிவின் வேறு ஒரு சூழ்ச்சியால் தீனவர் பாங்கின்
ஒருவன் கை பிடித்து ஆரெடா நீ என உரைத்தார்

மேல்
$3.37.164

#4602
வாசகம் சொல கேட்டலும் அந்த மானிடனும்
பேசும் என் பெயர் முகையினா என்றலும் பெரிய
பாசம் உள்ள நம் முகையினாவோ என பகர்ந்து
வீசும் கையினை விட்டனர் தீனை விடாதார்

மேல்
$3.37.165

#4603
உற்ற வீரர்கள் யாவரும் கேட்டலும் உணர்ந்து
மற்ற மாந்தர்கள் இலை என அரசனும் வலிய
கொற்ற வேந்தரை இருத்தி என் உளத்தினில் குறித்த
பற்றும் வாசகம் கேண்-மின் என்று உரை பகருவனால்

மேல்
$3.37.166

#4604
ஏது மாயம் என்று அறிந்திலம் கூதிர் கால் அடித்து
வாதை காணுற வலிப்பெடுத்து ஒட்டகம் மடிந்த
தீது இலாத பாடலங்களும் நந்தியும் தெரியா
வீதி-தோறினும் எழுந்தில வீழ்ந்து உயிர் இறந்த

மேல்
$3.37.167

#4605
படங்கு பற்பல பறந்தன கிழிந்தன பலரும்
ஒடுங்கு குச்சொடு குடில்களும் அழிந்தன உலவு
நெடும் கொடி கம்பம் ஒடிந்தன சாய்ந்தன நெகிழாது
இடங்கொள் பந்தரும் நிலத்திடை படிந்தன எங்கும்

மேல்
$3.37.168

#4606
மறம் ததும்பியது என்-கொலோ குளிரும் வந்ததனால்
சிறந்த வாயொடு மூரலும் கிட்டியே தேகம்
இறந்து போயினர் சிலர் சிலர் இவண் இருக்கின்றார்
துறந்திலாது அரும் திறத்தினீர் ஏது என சொல்வேன்

மேல்
$3.37.169

#4607
பற்று இலா அகுத்தபு மகன் குயை எனும் பாவி
வெற்றி மா நபியுடன் ஒப்பு கூடினன் வெருவி
சுற்றும் காட்டிய பெரும் குளிர் எளிதினில் தொலையா
முற்றும் கோறலை துணிந்து இருக்கின்றது மொய்ம்பீர்

மேல்
$3.37.170

#4608
கொண்டலன்றி மற்று இரும் திசைதிசை-தொறும் கொடிய
அண்டமும் வெடித்திட தொனி அடிக்கடி அறைந்தது
உண்டு மற்று உரு கண்டிலம் ஊழ் விதி-அதுவும்
மிண்டு வல் வினை மூட்டுமோ அறிகிலம் மெய்யா

மேல்
$3.37.171

#4609
ஐயகோ உயிர் இருந்தல்லோ திடத்துடன் அடும் போர்
செய்ய வேண்டும் இங்கு இருப்பது பழுது இனி திறத்தீர்
உய்யலாம்படி ஊரினில் போ-மின் என்று உரைத்தான்
வையம் போற்றிய கறுபு வந்து ஈன்றிடும் மதலை

மேல்
$3.37.172

#4610
விடியும் முன்னமே யானும் ஏகுவன் என விரைவின்
நெடிய கால் தளை அவிழ்க்கும் முன் நெடும் பரி மேல் கொண்டு
அடியடித்து முன் நடத்தினன் நடந்தில அதுவும்
கடிய காலினால் திடத்துடன் குதித்தது கண்டான்

மேல்
$3.37.173

#4611
பதறி ஏறினன் கண்டனன் பின்னர் விண் பாயும்
குதிரையின் பத தளை விடுத்து ஏகினன் குழாத்தோடு
இது என பாவம் என்று ஏக மற்றவரும் இது எல்லாம்
மதியினால் அறிந்து இவரும் மால் நபியிடம் வந்தார்

மேல்
$3.37.174

#4612
மண்ணின் மீதிருந்து அந்தரத்து அப்புறம் வடிவில்
நண்ணும் பாதத்தில் பணிந்தனர் எழுந்தனர் நடந்து
கண்ணில் காண்டதும் கேட்டதும் படிப்படி கழறி
துண்ணென்று ஆகமும் குளிர்தர பின்னரும் சொல்வார்

மேல்
$3.37.175

#4613
அண்டமும் கிடந்து எங்கணும் நடுங்கிடும் அலையா
விண்டும் வேரொடு நடுங்கிடும் விபுலையும் நடுங்கும்
கண்டு பேசும் நா நடுங்கும் பின் யார் நடுங்காதார்
கொண்டல் காற்றொடு பொறுக்கிலா குளிர் வந்த கொடுமை

மேல்
$3.37.176

#4614
அன்ன வெம் குளிர் உற என்-தன் ஆகத்தின் நடுக்கம்
இன்னும் தீர்ந்தில நும் பறக்கத்தினால் எளியேன்
மன்னும் ஆவி கொண்டு அடைந்தனன் மற்று உண்டோ ஐய
என்னவே உரைத்தனர் குதைபா எனும் இளவல்

மேல்
$3.37.177

#4615
ஆடல் வாசகம் கேட்டலும் உம்பர்க்கும் அரசர்
சேடு கொண்ட மேற்போர்வையை திரு கரத்து எடுத்து
மூடினார் குளிர் கலக்கமும் நடுக்கமும் முழுதும்
ஓடிப்போயின உவந்தனர் களித்தனர் உளத்தில்

மேல்
$3.37.178

#4616
உள்ளம் கூர்தர மாற்றலர் முனைப்பதி எவரும்
கொள்ளை கொள்ளு முன் யான் கொளுவேன் என குறித்து
தெள்ளும் வெம் கதிர் கரத்தினை நீட்டியே சிறப்ப
வெள்ளி வெண் திரை முகட்டிடை எழுந்தனன் வெய்யோன்

மேல்
$3.37.179

#4617
மித்திரன் குட திசை எழ கறுபு அருள் வீரன்
உத்தரம் சொலாது ஏகினன் யாவரும் உளைய
இ திறத்தினை அறிந்து அகுத்தபு மகன் என்போன்
சித்திரத்தை ஒத்து இருந்தனன் சலித்தனன் திகைத்தான்

மேல்
$3.37.180

#4618
நய நுகைமு சொல் சொற்படி முகம்மதின் நளின
கயில் வெம் சூதுடன் எனை ஒப்புக்கொடுத்தனன் காண் என்று
அயில் மறந்து மற்று அரசரும் விட்டுவிட்டு ஆக்கை
உயிரினை பிழைத்து இவனும் பின் ஓடினன் ஊர்க்கே

மேல்
$3.37.181

#4619
கங்கு தப்பிய கத்துபான் குழுவும் கனானா
சங்கமும் பெரும் படை கடல் அசத்து எனும் சவையும்
பங்கம் எய்திடும் பனீகுறைலா எனும் படையும்
அங்கு இருந்தில சிதறின ஓடின அன்றே

மேல்
$3.37.182

#4620
இனைய மன்னர் நாள் இருபதும் சின்னமும் இருந்து
மனம் உழன்று அகம் வெருவி ஓடினர் எனும் வாய்மை
துனி இல் மா நபி கேட்டு நாயனை பல துதித்தார்
நனியொடும் சய வாக்கியம் இடம்-தொறும் நடந்த

மேல்
$3.37.183

#4621
ஒன்று அ ஆண்டினில் அப்துல் முத்தலிபு வந்து அருளும்
வென்றி வேந்தன் ஆரீது சேய் விறல் உடை நௌபல்
நன்றி தோன்றும் ஈமானை உள் கொண்டனர் நலியாது
என்றும் தீனினை விரும்பினர் குபலையும் இழந்தார்

மேல்

38 பனீகுறைலா வதைப் படலம்

$3.38.1

#4622
இனையன மகிழ்வும் எய்த இருந்தனர் மற்றை நாளில்
புனை மலர் தடத்தின் மூழ்கி சிரசிடம் புலர்த்தும் காலை
பனி அற சோதி காலும் பருதியும் மதியும் ஏய்ப்ப
தனியவன் அருளால் ஒல்லை சபுறயீல் அவணின் வந்தார்

மேல்
$3.38.2

#4623
வேத நம் நபியே மெய் புகழ் நபியே வாய்ந்த
மேக நீழல் சிறந்திடும் நபியே தீனின்
மா தவ நபியே மன்னும் வானவர் நபியே ஈறு
இல் ஆதி நம் நபியே கேண்-மின் என மொழி அருளி கூறும்

மேல்
$3.38.3

#4624
எல்லையில் அமரர் யாரும் யானும் பீசபீலுக்காக
வல்லவன் அருளால் கட்டும் கச்சையும் வடி வேல் யாவும்
ஒல்லையின் மறுத்திடாது இங்கு அடைந்தனம் உம்மோடு உற்ற
வில் அயில் படையும் நீரும் இருந்தது என் வெறிதின் அம்மா

மேல்
$3.38.4

#4625
வெவ்விய தொழில் நடாத்தி நரகிடை வீழும் பாவம்
வவ்விய மனத்தார் என்னும் பனீகுறைலா என்போர்-பால்
செவ்விதின் எழுக வேண்டும் என்றனர் தெளிய கேட்டு
குவ்வினில் சாய்கை இல்லா குரிசிலும் அழகு இது என்றார்

மேல்
$3.38.5

#4626
தீனவர்-தம்மை நோக்கி சிறந்த பாடலங்களோடும்
சேனையும் எழுக என்ன செப்பலும் கேட்டு அ வேந்தர்
ஆனனம் மலர்ந்து சாற்றும் வள்ளுவன் அழைத்து நீ போய்
வான் அதிர் முரசம் சாற்று என்று உரைத்தலும் மகிழ்ந்து போனான்

மேல்
$3.38.6

#4627
நீண்ட வள் வாரை செவ்வே நேர்பெற கட்டி ஓதை
தூண்டும் பேர் முரசம் கூனல் தொறுவினில் ஏற்றி ஏறி
காண் தரு முடிவில்லாத கடி மண மறுகு புக்கி
ஈண்டினர் யாரும் கேண்-மின் என மொழி கூறி கூறும்

மேல்
$3.38.7

#4628
வல்லவன் உண்மை தூதர் பனீகுறைலா என்போர்-பால்
பல்லியம் பம்ப போருக்கு எழுந்தனர் படைகளோடும்
செல்லு-மின் அசறு பாதை வணங்கு-மின் செறுநர் போரை
வெல்லு-மின் கிடையா கீர்த்தி வேண்டு-மின் என்ன சொன்னான்

மேல்
$3.38.8

#4629
மோட்டு மா முரசம் கொட்டி முறைமுறை இனைய சாற்ற
கேட்டலும் பிரியமுற்று யாவரும் கிளர்ந்து பொங்க
வாட்டம் இல் நகரம் என்னும் வாரி ஆங்கு உடைத்து மீறி
வேட்டலுற்று எழுந்தது என்ன எழுந்தது சேனை வெள்ளம்

மேல்
$3.38.9

#4630
வீரமும் தவமும் வாய்த்த மெய்மையும் அறிவும் நீதி
வாரமும் நெஞ்சில் கொண்டு வரும் புலி அலி முன் வெற்றி
சாரும் வெண் கொடி ஒன்று ஏக சார்ந்தனர் தானை சூழ
ஆரண நயினார் பின்னர் ஆதி-தன் அருளில் போனார்

மேல்
$3.38.10

#4631
அரு மறை உணரும் தீன் அன்சாரிகள் எவரும் சூழ
கரு முகில் இடியேறு என்ன பல்லியம் கலிப்ப நாளும்
தரையிடை வணக்கம் செய்து நெற்றியும் தழும்பு கொண்ட
மரு மலி வாகை திண் தோள் மன்னவர் சகுதும் போனார்

மேல்
$3.38.11

#4632
தெரி பனீகுறைலா செறி கூட்டத்தை தேடி
பொரும் அஸ்காபிகள் யாவரும் ஒரு முகம் போத
பெருகும் தூளியின் படலம் முன் பிறங்குவ கண்டு
மரு மலர் தொடை முகம்மதை வினவினர் மகிழ்ந்தே

மேல்
$3.38.12

#4633
வானவர்க்கு அரசு எமக்கு முன் தோன்றினர் வரிசை
சேனையின் திரள் செல எழும் துகள் என மொழிந்தார்
கோன் உவந்தவர் அதிசயித்து உளம் களி கூர்ந்தே
ஊனம் இன்றி அ பனீகுறைலா நகர் உற்றார்

மேல்
$3.38.13

#4634
சென்ற சேனையர் நபி அருள்படியினால் சினந்து
மன்றல் சேரும் அ நகரினை நெருங்குற வளைந்தார்
துன்றும் அ நகர்க்கு இறைவர்கள் துயர் மனத்து உற்று
வென்றி மேவிய கபீபினை கண்டுமே விளம்ப

மேல்
$3.38.14

#4635
நயம் மிகுந்த தானாபதி-தமை அவர் விடுத்தார்
தயவு கூர்தர முகம்மது நபி சரண் சார்ந்தான்
வயம் மிகுத்த அபாலுபானாவை மன் அருளால்
பயம் மிகுத்த எம் நகருக்கு என்னுடன் வர பணிப்பீர்

மேல்
$3.38.15

#4636
இருவரும் எங்கள் பனீகுறைலாவிடம் புகுந்து
பெருமையாகிய மொழி சில பேசுதல் பேசி
கருமம் முற்றி யாம் மீள்குவம் என உவன் கழற
பருவரல் உறாது அபாலுபானா-தமை பணித்தார்

மேல்
$3.38.16

#4637
வண்மை மிக்க அபாலுபானா பனீகுறைலா
தண்மை பெற்ற அ நகரிடை சார்ந்திட கண்டு
பெண்மை மிக்கவர் இளையர்கள் யாவரும் பெருத்த
கண் மலர் புனல் சொரிதர அழுது உளம் கரைந்தார்

மேல்
$3.38.17

#4638
அழுதல் கண்டு அவர்க்கு அன்னவர் அன்பு மிக்கு ஆனார்
குழுவதாய் நிறை பனீகுறைலா மதி கூர்ந்து
பழுது இலா நபி-தமை கண்டு நல் உரை பகர்ந்து
வழு இலா மொழி கேட்டு அவர்க்கு ஆள் என வாழ்வோம்

மேல்
$3.38.18

#4639
என்று கூறலும் கேட்டு அவர் இசைந்து நீர் நபி-பால்
சென்று கண்டு அடி தொழுது தீன் வழி படல் திறனாம்
அன்றி உங்களுக்கு அருள்செய உவந்திடார் அடர்ந்து
கொன்று தீர்குவர் என்றனர் கோது அறு மனத்தார்

மேல்
$3.38.19

#4640
அன்ன வாசகம் நினைந்து நாம் நபி மொழி அன்றி
முன்னமே பயம் உற்றவர்-தங்களை முனிந்து
பின்னமாய் கொடும் கொலைசெய்வர் என உரை பேசல்
நல் நயத்ததன்று என்று உளம் நாணமுற்று எழுந்தே

மேல்
$3.38.20

#4641
வந்து நின்றிடும் பனீகுறைலாவொடும் மொழியாது
அந்தம் மிஞ்சிய நபியிடத்து அணுகவும் நாணி
கந்தம் முங்கிய செழும் மலர் கான் மது துளிகள்
சிந்து சோலை சூழ் மதீனத்து பள்ளியில் சேர்ந்தார்

மேல்
$3.38.21

#4642
நாணும் பொய் உரை பிழையினால் பள்ளியில் நடு ஓர்
தூணில் சார்ந்து அனம் வனம் உணாது ஏழு நாள் சுருதி
பூணும் நேயத்தோடு உறும் துஆ இரந்திடும் போதில்
காணும் ஆயத்து ஒன்று இறங்கியது எழில் கபீபிடத்தில்

மேல்
$3.38.22

#4643
தீது உறும் படிறு அன்று அவர் உரைத்தது திடம் என்று
ஆதி_நாயகன் மறை மொழி வந்தது ஆய்ந்து அறிந்து
காதலாம் தவுபா கபூல் ஆயது என்று எண்ணி
கோது இலா மனத்து இருத்தினர் நபி அருள் கூர்ந்தே

மேல்
$3.38.23

#4644
எள்ளரும் திறல் அபாலுபானா இன்னதாக
உள்ளம் நொந்து அந்த பனீகுறைலா ஒருங்கு ஈண்டி
கள்ளம் இன்றியே கபீபு இறசூலினை கண்டு
விள்ள அரும் துயர் கூறிட மீண்டும் ஆள் விடுத்தார்

மேல்
$3.38.24

#4645
இனிய சீர் முகம்மதை இறைஞ்சி தூதுவன்
பனீநலிறுகளை முன் வந்த ஆண்டினில்
நனி நகர் அகன்று கான் அணுகுவீர் எனும்
துனி அறு மொழி எம்-பால் சொல்ல வேண்டுமே

மேல்
$3.38.25

#4646
உடுத்திடும் புடவை ஒன்று ஒழிந்து யாவையும்
கொடுத்து உயர் வனம் குடி கொள்ளுவோம் எமை
விடுத்திடும் என்று அவன் விளம்பவே நபி
தடுத்து அவர்க்கு இ உரை சாற்றுவார் அரோ

மேல்
$3.38.26

#4647
யாவரும் புகழ் இசுலாமில் வந்து நீர்
மேவிய பொழுதல்லால் விடுவதில் என
தாவ அரும் வாய் மொழி சாற்ற சாரணன்
மா வலாய் நாங்கள் ஈமானில் நண்ணலேம்

மேல்
$3.38.27

#4648
செய் தகை காண்குவோம் சித்தம் என்று அவன்
உய் திறம் இன்றியே உரைக்க அவ்விடத்து
எய்திய பனீயவுசு இவர்கள் நட்பினால்
பைதலுற்று இ உரை பகர்தல் ஆயினர்

மேல்
$3.38.28

#4649
ஈரம் மிக்க நபியை தொழுது எம்-பால்
வாரமுற்ற பனீகுறைலாக்கள் செய்
நேரம் எங்களுக்காக பொறுத்தருள்
கூரும் ஆவி கொடுத்திடும் என்னவே

மேல்
$3.38.29

#4650
பாங்கு நின்று இவர் கேட்ட பரிசினால்
தாங்கு கீர்த்தி நபியும் இ தன்மையை
ஓங்கும் உங்கள் கிளையில் ஒருவர்-பால்
நீங்கிலாத நெறியில் நிகழ்த்துவோம்

மேல்
$3.38.30

#4651
ஓதும் மன்னவர் சொல் எமக்கு உண்மையாய்
போதும் உங்கட்கும் போதுமதோ என
காதலாய் அவர் கொள்ள மஆது சொல்
ஏது இல் சஃதொடு சாற்றுவம் என்றனர்

மேல்
$3.38.31

#4652
மெத்த நன்று என்று அவர்கள் வியப்ப கோல்
தைத்த காயம் திகழ் கர சஃதுவை
முத்தம் ஈன்ற முகம்மது அருள்படி
அ தலத்தில் அழைத்து வந்தார்களே

மேல்
$3.38.32

#4653
மஆது மைந்தர் வர அஸ்காபிகாள்
அஃது நும் தலைவர்க்கு அறைவீர் என
முகம்மது ஓத முரண் தெவ்வர் செய்தியை
சகுதுவுக்கு அவர் தோற்றுபு சாற்றினார்

மேல்
$3.38.33

#4654
சாற்றும் அ மொழி கேட்டு அந்த சகுதுவும்
மாற்றம் இன்றி ஈமான் வழி நின்றிலார்க்கு
ஏற்றமாம் உறவு ஏது இனம் ஏது அவர்
ஆற்றல் ஏது அருள் ஏது அறம் ஏது அரோ

மேல்
$3.38.34

#4655
அஞ்ச ஆடவரை கொலைசெய்து அவர்
வஞ்சிமாரை மதலையர்-தம்மொடும்
செஞ்ச ஊழியம் செய்வித்து அவர் பொருள்
எஞ்சும் ஆதுலர்க்கு ஈந்திடல் வேண்டுமே

மேல்
$3.38.35

#4656
செய்யும் காரியம் ஈது அன்றியே செலும்
வையம் மீதில் வழக்கு ஒன்றும் இல் என
துய்ய சஃது சொல நபி இ உரைக்கு
ஐயம் இல்லை அல்லா அருள் ஈது என்றார்

மேல்
$3.38.36

#4657
ஏர் குலா அஸ்காபிகள் நோக்கியே
வாரம் அற்ற பனீகுறைலாவை இ
நேரமே கொடுவாரு-மின் நீர் என
சீர் குலாவு திரு நபி செப்பினார்

மேல்
$3.38.37

#4658
ஓது நல் மொழி உள் கொண்டு அஸ்காபிகள்
வாது செய்யும் பனீகுறைலா நகர்
பேதை ஆடவர் பிள்ளைகள்-தம்முடன்
ஏதம் உற்ற பொருளும் கொண்டு ஈண்டினார்

மேல்
$3.38.38

#4659
அக்கணத்து அஸ்காபிகளும் எழில்
மிக்க வாய்மை விளங்கும் யார்களும்
தொக்க காபிர் தொகுதியும் சூழ்வர
கக்கன் தூதர் கடிது எழுந்தார் அரோ

மேல்
$3.38.39

#4660
கான மால் வரையும் கடி மா மலர்
நான வாசம் கமழும் நதிகளும்
மீன் உலாவு கழனியும் மேவும் ம
தீனம் ஆகிய மா நகர் சேர்ந்தனர்

மேல்
$3.38.40

#4661
வந்திருந்து பனீகுறைலாக்களை
பந்தமா சிறைபண்ணு-மின் என்றலும்
கந்து அடர்ந்த களிற்று அசுகாபிகள்
சிந்தை கூர்ந்து அறையில் சிறைசெய்தனர்

மேல்
$3.38.41

#4662
சிறைசெய்தோம் என சென்று அவர் செப்பலும்
இறைகொளும் கடைவீதியில் சென்று ஒரு
சிறையினில் குழி செய்-மின் என்று உண்மை தேர்
இறைவன் தூதர் இனிதின் இயம்பினார்

மேல்
$3.38.42

#4663
அறையும் சொற்றலை மேற்கொண்டு அரு நெறி
மறையின் நன் முறையே செயும் மாண்பினோர்
நிறையும் பீடிகை சென்று ஓர் நிலத்தினில்
குறைவு இல் ஆழ்ந்த கொடும் குழி தொட்டனர்

மேல்
$3.38.43

#4664
ஆங்கு அவ்வாறு அது இயற்றி அரு மறை
ஓங்கும் வண்மை நபி முன் உரைத்திட
வாங்கு செல்வ பனீகுறைலாக்கள் முன்
நீங்கள் சென்று நெருக்கப்படுத்தியே

மேல்
$3.38.44

#4665
தோகைமார் மதி சூழ்ச்சியின் மைந்தர்கள்
போக மற்ற புருடரை கூய் பத
பாகமா சில பத்தஞ்சுமா கொணர்ந்து
ஓகை வேதத்துக்கு உட்பட சொல்லுவீர்

மேல்
$3.38.45

#4666
நாட்டும் வேத நவிலும் முறைப்படி
வேட்டிடார்களை வெட்டி படுகுழி
போட்டிடு-மின் என புகன்றார் எழில்
காட்டும் மா மறை காரண தூதரே

மேல்
$3.38.46

#4667
கூற கேட்டு உளம் கொண்டு மகிழ்ந்து எழுந்து
ஈறிலாத அசுகாபிகள் ஈண்டியே
மாறு காட்டும் பனீகுறைலாக்களை
மீறும் ஆவண வீதி கொண்டு ஏகினார்

மேல்
$3.38.47

#4668
மாயமும் படிறும் கொலை வஞ்சமும்
மேய காபிரை நோக்கி இறையவன்
தூய உண்மை சுருதி முறைப்படி
நேயமாம் கலிமா நிகழ்த்தும் என்றார்

மேல்
$3.38.48

#4669
மறம் திகழ்ந்த பனீகுறைலாக்கள் கேட்டு
அறம் திறம்பலேம் ஆக்கம் திறம்பலேம்
சிறந்த எம் நெறி செய்கையதன்றியே
இறந்து போகினும் வேறு ஒன்று இசைகிலேம்

மேல்
$3.38.49

#4670
என்று காபிர் இயம்பிட சீர் கெழு
வென்றி செய் வய வீரர் உருத்து உளம்
கன்றி நல் கலிமா உரையார்களை
கொன்று தீர்ந்து கொடும் குழி வீழ்த்தினார்

மேல்
$3.38.50

#4671
கடிந்த பேரை கணித்து எழுநூற்றின் மேல்
முடிந்தது ஆயிரத்து உள் என்றும் முன்னியே
அடர்ந்த வாள் படை கை அசுகாபிகள்
நடந்த செய்தி நபிக்கு உரை செய்தனர்

மேல்
$3.38.51

#4672
வாய்மை தவறாத புகழ் முகம்மது அசுகாபிகள்-தம் வதனம் நோக்கி
தூய நெறி இல்லாத பனீகுறைலா பெண்களொடும் சுதரும் கூட
ஏய தொகையாகியது ஓர் ஆயிரத்தைம்பதின்மரையும் இனிய கீர்த்தி
மேய நசுது எனும் தலத்தில் விற்று உறைவாள் குதிரை கொண்டு மீள்விர் என்றார்

மேல்
$3.38.52

#4673
அ மொழியின்படி சிலபேர் அ சிறை கொண்டு அ தலத்தில் அணுக இப்பால்
செம்மல் நபி பனீகுறைலா பொருள் நாலு பங்கு ஆக்கி திரி பால்-தன்னை
வெம் அலை போல் வாவு பரி நடத்துமவர்-தமக்கு அளித்து வீர வாள் கொண்டு
எம்மருங்கும் சூழ்ந்து நிற்கும் காலாள்கட்கு ஓர் கூறும் ஈந்திட்டாரால்

மேல்
$3.38.53

#4674
செல்வமுடன் நபியும் அவர் சேனைகளும் சூழ்ந்து இருப்ப செபுறயீலும்
வல் விரைவினுடன் எழுந்து வந்து சலாம் சொலி வணங்கி மறை_வலாய் கேள்
சொல் வசனத்து உவமை இல்லான் அறுசுகுறுசு அசைந்தது இன்று தூய்மை பெற்ற
நல்லவர்கள் எவரேனும் மவுத்தானது இன்று உளதோ நவில்வீர் என்றார்

மேல்
$3.38.54

#4675
அன்னவர் அ மொழி உரைக்க நபி இறசூல் மனத்து அறிவால் ஆய்ந்துபார்த்தே
உன்னி அருளுடன் எழுந்து யார்கள் அசுகாபிகளும் ஒருங்கு சூழ
மின் இலகும் அயில் வடி வாள் மஆது மகன் சகுது-தம்பால் விரைவில் சென்று
மன்னும் இரு விழியால் அன்புடன் நோக்கி பார்க்க அவர் மவுத்தானாரால்

மேல்
$3.38.55

#4676
அன்ன நடை சின்ன இடை ஆர நகை கார் அளகம் அரி சேர் வாள் கண்
கன்னல் மொழி பொன் அனையார் வயிறு அலைத்து கண் கலுழ்ந்து கதறி ஏங்க
இன்னல் மிகுந்து யார்கள் அசுகாபிகள் மற்று யாவர்களும் இரங்கி நிற்ப
பின்னம் அற செயும் சடங்கு முடிக்க நினைத்தார் அறத்தின் பெற்றியோரே

மேல்
$3.38.56

#4677
அ பரிசு அங்கு அவர் நினைப்ப அந்தரத்திலிருந்து கதிர் அனேக கோடி
ஒப்பமுற வந்தது என உருவு திகழ் மலக்குகள் வந்து உற்றார் வேதம்
செப்பு நெறிப்படியாக மலக்குகளும் அசுகாபி திரளும் சூழ
மெய் புகழின் சகுது-தமை தொழுவித்தார் அடக்குவித்தார் மேன்மையோரே

மேல்

39 லுமாமீமான் கொண்ட படலம்

$3.39.1

#4678
மலக்குகள் விண் நாடு அடைய நபி இறசூல் மதீன நகர் வாழும் நாளில்
விலக்க அரிய வருடம் ஒரு நான்கு நிறைந்து ஐந்து ஆண்டு மேவும் போதில்
அலக்கணுறா சுடர் ஒளியாம் அல்லாவின் பணிவிடையால் அவனி மீதில்
துலக்கமுற வந்த கச்சு பறுலானது இன்று முதல் தொழுவீர் என்றே

மேல்
$3.39.2

#4679
தள்ள அரிய மனத்து அறிவு-தனை அகற்றி மெய் மயக்கம் தந்து நட்பாய்
உள்ளவரை பகையாக்கி உரைப்பது இவை என அறியாது உரைக்கப்பண்ணும்
கள் உணவும் வெறி மதுவும் கறாம் என ஆயத்து வர கண்டு அன்பாகி
விள்ள அரிய மறை பொருளை சகுபிகளுக்கு உரைத்து எவர்க்கும் விளக்கினாரே

மேல்
$3.39.3

#4680
விளம்பி நெறி முறை தவறா வேத நபி அவண் இருப்ப மிக்க நீதி
வளம் பலவும் உயர்ந்த புகழ் வளர்ந்த குணம் நிறைந்த உலுமாம் ஆண்டு எய்தி
உளம் களிகூர்ந்து அருளும் நபி எவண் எனவே வினவ இதோ உற்றார் என்ன
களங்கம் அற அருகு இருந்தோர் சொல அடுத்து கண்டு சில கழறலுற்றான்

மேல்
$3.39.4

#4681
பேசு புகழ் தேர் அபுதுல் முத்தலிபு-தனக்கு உரிய பேரனாரே
மாசு அற ஓர் காரியத்தை துடுக்காக உமை கேட்க மதித்தேன் என் மேல்
நேசம் உற நீர் கோபம் இல்லாமல் சொல வேண்டும் நிசமாம் என்ன
தேசு உறு மெய் நபி அவனை வேண்டுவன கேள் எனவே செப்பினாரால்

மேல்
$3.39.5

#4682
ஓதும் மொழிக்கு அவர் உவந்த உண்மை கண்டு நின்ற இயல் உலுமாம் சொல்வான்
தீது இலா மறை பொருளாய் திகழ் ஒளியாய் நிறைந்த அல்லா செகத்தின் மேல் தன்
தூதராய் உமை இருக்க அனுப்பினதும் காலம் ஐந்தும் தொழுக என்றும்
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும் பறுல் எனவே கழறும் ஐந்தும்

மேல்
$3.39.6

#4683
மெய்யாமோ சரதம் எனில் இறையவன்-தன் மேல் ஆணை விளம்பும் என்ன
பொய்யாத நபி வசனம் ஐந்துக்கு ஐந்து தரம் இறை மேல் புகன்றார் ஆணை
அய்யா நீர் சொன்னது உண்மை என உலுமாம் ஈமானில் ஆகி நெஞ்சம்
மை ஆரும் குபிர் நீக்கி கலிமாவும் மொழிந்து மறை வழி நின்றாரே

மேல்
$3.39.7

#4684
அன்னவர் தாம் முகம்மதை பார்த்து ஐயா என் செய்தியை கேள் யான் ஆர் என்னில்
முன் உமக்கு முலைகொடுத்த அலிமாவின் கிளையில் உள்ள முல்லை சேரும்
மன்னும் நெறி முறை தவாற பனீசகுது கூட்டத்தார் பலரும் கூடி
என்னை உமது உள மகிமை அறிந்துவர விடுத்தனர் யான் இவண் வந்தேனால்

மேல்
$3.39.8

#4685
உண்மை நபி என அறிந்து கலிமா ஓதி தொழுகை உறுதி கொண்டு
தண்மை உறு நெறி முறைமை நன்மை தரு தூய தீன் சமயம் உற்றேன்
திண்மை பெறும் பனீசகுது கூட்டத்தாரிடத்தினில் யான் சென்று மிக்க
வண்மை பெற அவரை எல்லாம் ஈமானில் வழிப்படுத்தி வருவிப்பேனே

மேல்
$3.39.9

#4686
என்பன நல் மொழி பலவும் இயம்பி நபி பத மலரை இறைஞ்சி வாழ்த்தி
முன்பு இருந்த பதிக்கு ஏகி பனீசகுது கிளையில் உள்ளோர் முழுதும் வேதத்து
இன்பம் மிகும் கலிமாவை ஓதி இசுலாமில் உற இணக்கி நாளும்
துன்பம் அற ஒருபோதும் தொழுகை விடா முசிலிமாய் துலக்கிவித்தார்

மேல்

40 செயினபு நாச்சியார் கலியாணப்படலம்

$3.40.1

#4687
அரிது உணர் லுமாமின் செய்கை அவ்வண்ணம் ஆக நீதி
தெரிதரும் இறசூலுல்லா சிறந்து இனிது இருக்கும் நாளில்
பரிவுடன் ஐந்தாம் ஆண்டில் பண்புறும் சகுசு என்று ஓதும்
உரியவன் மகளை வேட்டற்கு உற்றதோர் தூது விட்டார்

மேல்
$3.40.2

#4688
தூயவர் விடுத்த தூது சொலும் முறை தவறிடாமல்
ஏயெனும் பொழுதில் நீதி இலகிய சகுசு மாட
வாயிலின் எய்தி அன்னோன் வரத்தினால் வந்து தோன்றும்
நாயகி-தன்னை கண்டு நலன் உறு மொழிகள் சொல்வார்

மேல்
$3.40.3

#4689
மரு மணம் கமழ்ந்து அறாது மது மழை பொழியும் செய்ய
திரு எழில் கமல போதில் திகழ் சிறை அனமே மின்னே
பொருவு அரு மணியே பொன்னே பூவையே கிளியே மானே
தரும் மரு கொழுந்தே தேனே தையலே எவர்க்கும் தாயே

மேல்
$3.40.4

#4690
அன்பு எனும் வித்தில் தோன்றி அறம் எனும் சடைகள் விட்டு
தன் புகழ் தழைத்து கற்பாம் தனி மலர் செறிந்து நாளும்
இன்பமாம் காய்கள் காய்த்திட்டு இறை அருள் பழுத்த கொம்பே
தென் பயில் சகுசு பெற்ற செயினபு நாச்சியாரே

மேல்
$3.40.5

#4691
பார் எலாம் புகழ வந்த பாவையீர் உமது சித்தம்
தேரலாம் தன்மை காணோம் செப்பும் உத்தரம் ஒன்று உண்டால்
கார் எழில் குடையார் நானம் கமழ் திரு மெய்யார் உம்மை
வாரமாய் வதுவை செய்ய மகிழ்ந்து உளம் வியந்தார் என்றார்

மேல்
$3.40.6

#4692
சொல்லும் அ மொழியை கேட்டு தோகையர் திலதம் என்ன
நல்ல கற்பு அலர்ந்த செல்வ செயினபு நாச்சியாரும்
வல்லவர் தூதீர் அல்லா மறை மொழிப்படியேயன்றி
கல் அக ஞாலம்-தன்னில் கடி மணம் விரும்பேன் என்றார்

மேல்
$3.40.7

#4693
அவர் அவை உரைத்து நாயன் அருள் பெற தொழுது வேறு
கவர் அற இருப்ப தூதர் கபீபு இறசூலை கண்டு
தவறு அற நடந்த செய்தி சாற்றிட கேட்டு யாதும்
உவமையில்லானை எண்ணி உளம் மகிழ்ந்து இருக்கும் போதில்

மேல்
$3.40.8

#4694
திருந்திய சபுறயீல் இ செகதலம் அனைத்தும் ஒன்றாய்
பொருந்து இறை குறான் ஆயத்தை பொற்புடன் கொண்டு பாரில்
பரந்திடும் இருளை ஓட்டும் பானுவின் கதிர்கள் கோடி
விரிந்தன என்ன சோதி விளங்கிட நபி முன் வந்தார்

மேல்
$3.40.9

#4695
தேறிய குறான் ஆயத்தின் செய்தி ஏது என்னில் அல்லா
மீறிய அறுசிலே தான் மிகும் ஒலியாக நின்று
மாறு இலா முதன்மையான மலக்குகள் நால்வர்-தாமும்
பேறு உறும் சாட்சியாக வைத்து அருள் பெருகி பின்னும்

மேல்
$3.40.10

#4696
தருமமும் அறிவும் நீதி தவமும் பெற்று உலகில் எய்தா
பெருமையும் பேறும் பெற்ற மலக்குகள் பெரிதாய் கூடி
அரு மறை பொருளாம் அல்லா அருளியபடியே வந்து
திருமணம் புரிதற்கு உள்ள சிறப்பு எலாம் மகிழ்ந்து செய்ய

மேல்
$3.40.11

#4697
கலக்கம் இல் கடலை சீறி கடை துடித்து இரண்டு காதும்
இலக்கு என நடந்து மீண்ட இணை விழி பவள செ வாய்
துலக்கு வெண் தரள மூரல் துடி இடை கரிய கூந்தல்
மலக்கம் இல் கூறுலீன்கள் வந்து நின்று ஏவல் செய்ய

மேல்
$3.40.12

#4698
செயினபு நங்கையார்க்கும் செம்மலே உமக்கும் நிக்காகு
உயர்நிலை-தனில் செய்தான் என்று உரைத்தனர் சபுறயீலும்
தயவுடன் நபியும் அன்னோர்-தமை மகிழ்ந்து அன்பு கூர்ந்தார்
வியன் உலகு-அதனில் சென்றார் விண்ணவர்க்கு இறைவர்-தாமே

மேல்
$3.40.13

#4699
வானவர்க்கு இறைவர் ஏக மனம் மகிழ்ந்து உரிமையான
தேனினும் இனிய இன் சொல் செயினபு மனையை நோக்கி
போனது ஓர் தூதும் இன்றி புகும் வழி தடையும் இன்றி
தீனவர் போற்றும் வேத திரு நபி இனிதில் சென்றார்

மேல்
$3.40.14

#4700
கந்தர குடையும் செய்ய கமல வாள் முகமும் மிக்க
சுந்தர விழியும் நீண்டு துலங்கிய கரமும் வாச
கொந்து அலர் மரவ மாலை குலவிய புயமும் வாடா
செம் தளிர் அடியும் பொற்பு ஆர் செயினபு நங்கை கண்டார்

மேல்
$3.40.15

#4701
அரியவன் தூதரான அகுமதின் வடிவை நீண்ட
இரு விழி ஆர நோக்கி இதயத்தின் மகிழ்ச்சி கூர்ந்து
திரு மலர் வதனம் கோட்டி செவ்விய நிறை போர்த்து அல்லா
ஒருவனை எண்ணி கற்பின் ஒல்கி ஆங்கு ஒருங்கு நின்றார்

மேல்
$3.40.16

#4702
தென் திகழ் மயிலை நோக்கி செபுறயீல் கொண்டு வந்த
நன்றி சேர் குறான் ஆயத்தை நவின்று மாராயம் சொல்ல
அன்று அவர் கிருபையாகி அகம் மகிழ்ந்து இவரோடு என்றும்
ஒன்றிய மனமாய் கற்பில் உயர்ந்தவர் என்ன வாழ்ந்தார்

மேல்
$3.40.17

#4703
உற்ற அ தினத்தில் உம்முசுலையும் என்று உரைக்கும் நங்கை
பெற்ற அருள் அனசை கூவி பிரியமாய் தயிரும் நெய்யும்
பற்று உற அருந்தும் ஈத்தம் பழமும் ஒன்றாக சேர்த்து
குற்றம் இல் பாத்திரத்தில் வைத்து இவை கூறுகின்றாள்

மேல்
$3.40.18

#4704
மைந்த நீ செயினபு இல்லின் முகம்மது நபி முன் வைத்து
முந்த என் சலாம் சொல் என்று மொழிந்து அவன்-தன்னை ஏவ
கந்தம் ஆர் மரவ மாலை கமழ் புயத்து அனசு சென்று
சுந்தர நபியை கண்டு துலங்கு பாத்திரத்தை வைத்தே

மேல்
$3.40.19

#4705
அருள் பெற சலாமும் கூறி அன்னை-தன் சலாமும் சொல்லி
திரு மிகு புயத்தீர் யாங்கள் கொடுத்தது சிறியதேனும்
பெரிய உள் அன்பால் கொள்ள வேண்டும் என்று உரைத்து பின்னர்
அருமையின் ஒடுங்கி அஞ்சி அதபுடன் நின்றான் அன்றே

மேல்
$3.40.20

#4706
ததியுடன் கனியும் நெய்யும் சார்ந்த பாத்திரத்தை கண்டு
மதி_வலோர் அனசை பார்த்து மகிழ்ந்து அசுகாபிமாரை
கதுமென அழை என்று ஓத கடி நகர் முழுதும் தேடி
பொதுமனை வீதி எங்கும் புகுந்து சென்று அழைத்து வந்தார்

மேல்
$3.40.21

#4707
எய்தினர் செறிந்து முன்றில் இடத்தினில் குழூஉக்கொண்டு ஈண்ட
மெய் முகம்மதுவும் கண்டு விருப்பு உற வனசை கூவி
நெய் அளை பலவு ஒன்றாக நிறைந்த பாத்திரத்தை தூய
சைலம் நேர் புயத்தாய் யார்க்கும் தறுகிடாது அளிப்பாய் என்றார்

மேல்
$3.40.22

#4708
சொற்படி அவரும் வைத்தார் சுருதி மா நபி முன் நின்ற
பற்பலபேரை பார்த்து பதின்மர் ஓர் குழுவாய் கூடி
நல் கனி அருந்தும் என்றார் நயந்து அவர் உரை தப்பாமல்
பொற்பு உற செறிந்து இருந்து புசித்து உளம் களித்து எழுந்தார்

மேல்
$3.40.23

#4709
முறைமுறை பதின்மராக மொய்த்திருந்து அருந்தும் போதும்
குறைவு அற வளர்ந்ததல்லால் குறைந்தில கனிகள் ஒன்றும்
துறை தவறாமல் உண்டோர் தொகை-தனை விரித்து கூறில்
திறனுற வரும் முந்நூற்றின் மேலும் சில்வானம் என்பார்

மேல்
$3.40.24

#4710
அனைவரும் அருந்தினார் வேறு அருந்திலர் இல்லை என்ன
மனது அறிந்து அனசை கூவி முகம்மது வரி வண்டு ஆர்க்கும்
புனை மலர் மகரம் தேனும் பொருவரா மென்மை நொய்ய
கனி உறு கலத்தை என் முன் கடிதினில் கொணர்தி என்றார்

மேல்
$3.40.25

#4711
பாத்திரம்-தன்னை வந்து பார்த்து நின்று அனசு முன்னம்
மாத்திரமல்ல மேன்மேல் வளர்ந்தன இதனை தீனர்
கோத்திரம் முழுதும் மாந்த கொடுப்பினும் குறையாது என்று
தோத்திரம் செய்து வள்ளல் துணை அடிக்கு அருகில் வைத்தார்

மேல்
$3.40.26

#4712
கனி புசித்து உள்ளம் மெத்த களித்து அசுகாபிமார்கள்
தனியவன் தூதை போற்றி தாம் செல சிறிது பேர்கள்
வனிதையின் மனை-தன் முன்றில் வாயில் விட்டு அகலா நிற்ப
அனையது ஓர் செயினபு என்போர் அகம் நிறை நிறை பூண்டுற்றார்

மேல்
$3.40.27

#4713
அப்படி அவரும் நாணுற்று அகத்து உளே இருப்ப மேலோன்
செப்பிய ஆயத்து ஒன்று சிபுரியீல் கொணர்ந்து இறங்கி
ஒப்பிலான் தூதர் முன்னர் உரைத்து அவர் விண்ணில் சேர்ந்தார்
தப்பு இலா குணத்தின் தோழர்-தங்களை தயவாய் பார்த்தே

மேல்
$3.40.28

#4714
கோது இலாது ஒசீவனம் தின்று உவந்தவர் கூண்டிராது
போதுக செயினபு என்னும் பூம் கொடி மனது நாணி
ஏதமுற்று இருந்ததாலே இரு நில கிழமை பூண்ட
மாதர்கள் எவர்க்கும் நாணம் மணி அணி பூணாம் என்றார்

மேல்
$3.40.29

#4715
வந்த ஆயத்தின் செய்தி வகை இவை என்ன வள்ளல்
சிந்தை கூர்ந்து உரைப்ப கேட்டு சிறந்த சீர் சகுபிமார்கள்
புந்தியில் பெரியோன்-தன்னை போற்றி பின் நபியை வாழ்த்தி
தந்தமக்கு உரிய இல்லில் புக்கினர் தகமை சார

மேல்

41 ஒட்டகை பேசிய படலம்

$3.41.1

#4716
விரை தரும் மரவ மாலை வெற்பு என திரண்ட தோளின்
நிரைதர பவள கொத்தின் நிறம் தரும் கனி வாய் வேதம்
உரைதர தீனர் வாழ்க்கை உயர்தர விளங்கு கீர்த்தி
தரை தர நபி நல் செல்வம் தழைதர இருக்கும் நாளில்

மேல்
$3.41.2

#4717
திரு வளர் மதீனம் தன்னில் திகழ்தரும் சகுபிமாரில்
ஒருவர்-தம் அகத்து வாழும் ஒட்டகம் மதமுற்று என்ன
பெரு வலி கயிற்றால் காலில் பிணித்ததை அறுத்து சீறி
மரு மலர் செறியும் சோலை வளாகத்தில் புகுந்தது அன்றே

மேல்
$3.41.3

#4718
மா மரம் முறித்து காய்த்த மது குலை அரம்பை தள்ளி
காமரம் முரல தேறல் கமழ் மலர் அசோகை முட்டி
சேமரம் அசைத்து காய்த்து செறிந்திடும் கமுகை எற்றி
தோம் அற செறிந்த சோலை துகள்பட திரிந்த அன்றே

மேல்
$3.41.4

#4719
செறி வனம் காவலாளர் செறுக்கும் ஒட்டகையை யாமே
குறுகுற அடுத்து பற்றி கொள்வம் என்று உருத்து செல்ல
வெறி தரு மதத்தால் பேழ் வாய் மிக திறந்து உருத்து பொங்கி
கறிதர வருதல் கண்டு கலக்கமுற்று இயக்கம் அற்றே

மேல்
$3.41.5

#4720
புடை வர பயந்து நொந்து பொருமலுற்று அயர்ந்து வாடி
மிடைபடும் கருத்தினோடும் மிகு மர காவை எல்லாம்
உடைபட முறித்த சோகை உடற்றுதற்கு உரியர் யார் என்று
இடர் உழந்து உருகி அஞ்சி என் செய்வோம் என்ன நின்றார்

மேல்
$3.41.6

#4721
வஞ்சரை மதியா வென்றி முகம்மது நபியை போற்றி
செம் சரண் புகுவோம் அன்னோர் தீர்ப்பர் அ சோகின் ஆற்றல்
துஞ்சலாம் அஞ்சல் என்ன துவன்றி மஞ்சு உறங்கும் சோலை
எஞ்சல் இலாத காவற்கு இடர் உறாது என்ன உன்னி

மேல்
$3.41.7

#4722
ஓடினர் சலாம் சலாம் என்று உரைத்தனர் பலரும் ஒன்றாய்
கூடினர் நபியே ஏத்தும் கொற்றவா யாங்கள் நாளும்
தேடிய பொருளே என்ன சென்னி மேல் இரண்டு தாளும்
சூடினர் நடந்த செய்தி சொல்லினர் மகிழ்ந்து எழுந்தே

மேல்
$3.41.8

#4723
நடந்தனர் பதம் தோயாமல் நண்ணினர் குடையாய் மேகம்
படர்ந்தன வேதம் எங்கும் பரந்தன நான வாசம்
தொடர்ந்தனர் சகுபிமார்கள் துதித்தனர் அமரர் அஞ்சி
கிடந்தனர் குபிரர் சோலை கிட்டினர் இறைவன் தூதர்

மேல்
$3.41.9

#4724
ஆய் சிறை தூவி புள்கள் அனைத்தும் ஒன்றாக கூடி
வாய் திறந்து அரற்றும் ஓதை முகம்மது நபியே எம்மை
தாய் என வளர்த்த சோலை-தனக்கு உறும் இடரை தீர்க்க
வே அருள்செய்வீர் என்ன விளம்புவ போலும் அன்றே

மேல்
$3.41.10

#4725
அத்திரி அலைத்த கொம்பின் அலர்களில் நறவம் மாந்த
மொய்த்திருந்து எழுந்த தும்பி முரன்று எழுந்து அயலில் போதல்
சித்தம் நல்குறவே நாளும் செழும் நிதி குவைகள் நல்கும்
வித்தகர் தளர உள்ளம் மெலிந்த யாசகரை போலும்

மேல்
$3.41.11

#4726
தளிர்களில் புனலும் போது-தனில் உறு மதுவும் வாடை
வளி அலைத்திடவே எங்கும் வார்ந்து எழுந்து ஒழுகும் தோற்றம்
அளியினுக்கு இருப்பாம் ஐயா அத்திரி அலைத்தது என்று
துளிதுளியாக கண்ணீர் சொரிந்து கா அழுதல் போலும்

மேல்
$3.41.12

#4727
சோகு சென்று அலைப்ப மாழ்கி துயருறும் பொழிலை கண்டு
பாகு உற இருந்த வாவி பாங்கியால் அலக்கண் எய்தி
ஏகுறா பயம் கொண்டு ஏங்கி இரும் சிறைக்குள்ளாய் உள்ளம்
ஆகமும் தெரியா வண்ணம் அடைபட கிடந்தாள் ஒத்த

மேல்
$3.41.13

#4728
இவ்வண்ணம் சோலை எல்லாம் எய்திய வருத்தம் கண்டு
மை வண்ண குடையார் அந்த மரு மலர் துடவை புக்கி
கைவண்ணம் காட்டி சோகை காத்து அருள் செய்து பாரில்
செவ்வண்ணப்படுத்த எண்ணி சிறப்புடன் வருக என்றார்

மேல்
$3.41.14

#4729
பருப்பதம் நடக்க காலும் படைத்து இரு கண்ணும் கண்ணில்
நெருப்பும் அ நெருப்புக்கு ஒத்த நெஞ்சமும் நெஞ்சில் வேறே
விருப்பமும் விருப்பம் இல்லா மேனியும் மேனிக்கு ஒவ்வா
கரு பிடித்து இறையோன் வைத்த கழுத்தும் கொண்டு எதிர்ந்தது அன்றே

மேல்
$3.41.15

#4730
வந்தவர் வதன கஞ்ச மலரை கண்டு உருகாநின்ற
சிந்தனை உருகி கண்ணீர் செனித்திட அழுது நீண்ட
கந்தரம் ஒடுக்கி முன்னம் காலினை மடக்கி வாலை
விந்தையாய் அசைத்து பாதம் மிசை சுசூதிட்டது அன்றே

மேல்
$3.41.16

#4731
கருத்து உற அயர்ந்து நொந்து கவலையுற்று உடம்பு வாடி
வருத்தமும் உயிர்ப்பும் எய்தி வணங்கும் அத்திரியை நோக்கி
திரு தகும் இறசூலுல்லா செறிந்து உனை பிடித்து கட்ட
பொருத்தமாய் வந்தபேரை பொருதது என் உரை நீ என்றார்

மேல்
$3.41.17

#4732
இடர் உறு மனத்ததாக எழுந்த ஒட்டகை மெய் பாச
துடர் அறுத்து உலகம் எல்லாம் துலங்கிய தீனர் வேதம்
படர் கொழுகொம்பாய் தன்மம் பழுத்த நல் தருவாய் அன்பு
கடல் என கருணைசெய்யும் கபீபு இறசூலை பார்த்தே

மேல்
$3.41.18

#4733
அய்யனே அடியேன்-தன்னை கொண்ட ஆண்டவனுக்கு அன்பாய்
செய்யும் ஊழியங்கள் ஓவாது ஆண்டு நாற்பதும் செய்து எய்த்து
மெய் எலாம் மெலிந்து காலின் விரைவு அற்று நெஞ்சு போக
கையறல் அடைந்து வீழும் காலமாய் தளர்ச்சியுற்றேன்

மேல்
$3.41.19

#4734
அவர் அது குறித்திடாமல் அடித்தடித்து அன்னை மேனாள்
எவன காலத்து தாங்கும் பாரமே ஏற்றி தின்ன
கவர் மரத்து இலையும் புல்லும் கால் வயிறு அளித்து தண்ணீர்
தவனமும் தீர்ந்திடாமல் தறுகண்மை செய்யலுற்றார்

மேல்
$3.41.20

#4735
ஈது அலால் அவர்கள் உள்ளம் இரங்கிடாது என்னை கொன்று
மேதையை அருந்த என்ன வியந்தனர் வியந்து நின்ற
காதலை அறிந்து காலில் கட்டிய பிணிப்பை வீழ்த்தி
பாதவ சோலை புக்கி படு மதம் உளங்கொண்டு என்ன

மேல்
$3.41.21

#4736
மண்டி நின்று எதிரே ஓடி வருமவர்-தம்மை எல்லாம்
திண் திறல் செய்து யானே திரிந்தனன் திரிந்தது எல்லாம்
கண்டித உலகம் மீது கலகம் உண்டாகின் ஞாயம்
உண்டு எனும் வார்த்தை-தன்னை உளம் நினைத்து என்றது அன்றே

மேல்
$3.41.22

#4737
கேட்டவர் அன்பு கூர்ந்து கிருபைசெய்து அதனை ஆள
வேட்டவர்-தம்மை கூவி மெலிந்த ஒட்டகை-தன் மெய்யை
போட்டு உயிர் போகும் மட்டும் புனலுடன் இரையும் நல்கி
ஈட்டிய சுமையும் நொய்தா பொருத்துவது இயற்கை என்றே

மேல்
$3.41.23

#4738
பரவும் அத்திரியை அன்னோர்-பால் செல புகுத்தி நின்ற
புரவலர்-தம்மை நோக்கி புள் இனம் முரலும் தூய
மரவ மாலிகையும் நான வாசமும் விரவி மாறா
விரை கமழ் புயத்தீர் உம்-தம் மேன்மை யார் வகுக்க வல்லார்

மேல்
$3.41.24

#4739
அறிவிலா நெடுங்காழுத்தற்கு அறிவு அளித்து அதனை காத்தீர்
நெறியுளீர் என்ன போற்றி நிகழ்த்தினர் சகுபிமார்கள்
மறி திரை உடுத்த பாரில் வளம் பெற பரந்த வேதம்
குறிகொளா சின்கள் மற்ற கொஞ்ச மானிடருமல்லால்

மேல்
$3.41.25

#4740
கல்லுடன் மரமும் பூடும் கருதிய விலங்கும் புள்ளும்
சொல்லிய எவையும் உண்மை தூதன் என்று அறியும் என்னை
மல் உறழ் புயத்தீர் என்ன மகிழ்ந்து அவர்க்கு உரைத்து வள்ளல்
செல் இனம் தவழும் மாட திரு நகர் புகுந்தார் அன்றே

மேல்

42 மழை அழைப்பித்த படலம்

$3.42.1

#4741
முனிவு அற அலிமா நல்கு முலையுறு நறும் பால் மாந்தி
பனி மதி கருணைசெய்து பட அரவு அழைத்து பேசும்
தனி முதல் தூதர் ஆறாம் ஆண்டினில் தகைமை பெற்ற
வனை கழல் சகுபிமார்கள் வழுத்திட இருக்கும் நாளில்

மேல்
$3.42.2

#4742
கீர்த்தி சேர் வள்ளல் வெள்ளிக்கிழமையில் குத்துபாவில்
ஆர்த்து எழுந்து ஓதி மின்பர்-அதனிடை இருக்கும் போதில்
கூர்த்த சீர் சகுபிமாரில் குரை கழல் சுலைக்கு என்போர்
பார்த்திவர்-தம்மை பார்த்து பரவி நின்று இனைய சொன்னார்

மேல்
$3.42.3

#4743
மாரி நீர் வறந்து சோலை மரம் இலை உதிர்ந்து மிக்க
பாரினில் எழுந்த பைங்கூழ் பசை அற கருகி கானல்
தேர் இனம் பரந்த பெற்ற சிறார்களுக்கு உணவு நல்கும்
வார் இள முலை பால் வற்ற வருந்தினர் மடவார் எல்லாம்

மேல்
$3.42.4

#4744
தருமமும் தவமும் உள்ள தயவும் போய் எவரும் கொஞ்ச
கருமமும் களவும் பாவக்காரிகள் உறவும் கொண்டு
வருவிருந்து ஒருவன் வந்தால் வாயிலை அடைத்து தூய
அரிவையர் தமக்கு நாணி ஆண்மை கெட்டு அலைந்தார் அன்றே

மேல்
$3.42.5

#4745
கருமை சேர் பெரிய மேதி கபிலையும் நறும் பால் வற்றி
அருமையாய் ஈன்ற கன்றும் வான்_உலகு-அதனில் செல்ல
ஒருவழி நடப்ப கால்கள் ஊதை கால் அடிப்ப மாழ்கி
தெரு-வழி கிடக்கும் வாட்டம் செப்புதற்கு அரியது அம்மா

மேல்
$3.42.6

#4746
பறவைகள் பறக்கிலாது பழுவங்கள் அடுக்கும் அங்கு
நிறை தளிர் இலாமை கண்டு நெட்டுயிர்ப்பு எறிந்து பார
சிறகினை விரித்து தண்ணீர் தேடி சென்று ஓடி விண்ணில்
உறை துளி இன்றி நாவும் உலர்ந்து மெய் புலர்ந்த மாதோ

மேல்
$3.42.7

#4747
மருத நல் நிலமும் பாலைவனம் என உலர்ந்து வாவி
பெருகிய கூவல் ஓடை பிறங்கு நீர் வறந்து யாதும்
பருக நல் நீரும் இன்றி பசி மிகுத்து அழகு குன்றி
அரிவையர் கற்பும் இன்றி அகலிடம் மெலிந்தது அன்றே

மேல்
$3.42.8

#4748
ஊன் அற மெலிந்து புலால் பொதிந்திருந்த உடலமும் என்பு உரு ஆகி
மேல் நிமிர் ஒளி போய் கரங்கள் தாள் அதைத்து மெலிந்து இறந்தனர் சிலர் சிலபேர்
கூனியும் குறைந்தும் திருந்து அடை கிழங்கும் கொணர்ந்து அவித்து உப்பு அற பிசைந்து
கானினில் அலைந்து திரிந்தனர் சாம காலமும் மிகுந்தன என்றே

மேல்
$3.42.9

#4749
திருத்தமாய் உரைப்ப கேட்டு திரு நபி இரங்கி பாரில்
வருத்தங்கள் நீக்கவேண்டி மனத்தினில் கிருபை மீறி
பொருத்த அரும் புறுக்கான் வேத பொருளினை எவரும் உள்ள
திரு தரும் ஒளியை உன்னி துஆ இரந்து இரு கை ஏந்தி

மேல்
$3.42.10

#4750
இறைவனே மறையின் வாழ்வே எங்கணும் பரந்து நின்ற
குறைவு இலா பொருளே சோதி குலவிய ஒளிவே நீதி
முறை குறைவு அற நின்றோனே முதல்வனே அழிவில்லாமல்
நிறை செழும் சுடரே என்று நிகழ்த்திட கிருபை செய்தான்

மேல்
$3.42.11

#4751
அகம் மிசை இருந்து புசித்திட கிடையாது ஆகுலம் மிகுத்து உளம் கலங்கி
செகதலம் முழுதும் திரிந்து அலைந்தவர்கள் திரவிய குவை பல எதிர
இகல் அற எடுத்து மனை மிசை புதைத்தோர் இதய பங்கையம் களிப்பு என்ன
மகிதலம் முழுதும் துதிசெய கரிய மழை முகில் கரு உதித்ததுவே

மேல்
$3.42.12

#4752
ஆதியின் அருளினால் வந்து அருள்செயும் முகிலாம் பிள்ளை
தீது அறு திசையில் தோன்றி செழும் கிரி தவழ்ந்து விண்ணின்
மீது உற நடந்து காலால் விரைந்து சென்று ஓடி கூடி
காதல் சேர் நிலத்தை நாளும் காத்திட செறிந்தது அன்றே

மேல்
$3.42.13

#4753
அலையொடு தழுவி சூல் முதிர்ந்து எழுந்தே அழகு உற விளங்கும் மை மாரி
தலைமகவு அளிக்க தாய்மனைக்கு உற்ற தனையள் போல் தரை மிசை அடுத்து
குலவி மெய் பதறி பயம் மிகுத்து அதிர்ந்த குரலொடு மின்னி வாய் வெருவி
துலைவு அற உற ஆண் மகவு அளித்தது போல் சொரிந்தது குளிர்ந்தது அ நிலமே

மேல்
$3.42.14

#4754
மின்னுடன் இடியும் முழக்கிட திகிரி மிசை திரி கதிரவன் மறைந்து
பின்னிட இரவும் பகலினும் இருளே பிறங்கிட கலங்கு நீர் பரந்து
முன் இட நதிகள் நிறைந்து மேல் எழுந்து மோதிட செறு கரை தகர்த்து
மன்னிய இரு பால் வகுத்திடும் காலை மடையுடன் எடுத்து எறிந்தனவே

மேல்
$3.42.15

#4755
வேயினை முறித்து வெடித்த முத்து அனைத்தும் முல்லை அம் புறவினுக்கு அளித்து
தூய நெய் தயிர் பால் கடத்துடன் எடுத்து சுடு நில பாலையில் செறித்து
நேய பைம் நாக மணியினை மருத நிலத்தினில் தொகுத்து நெல் குவி மேல்
போய் அதை நெய்தல் நிலத்தில் இட்டு உப்பை புணரியில் புகுத்தின வெள்ளம்

மேல்
$3.42.16

#4756
வீடுகள் துறந்து வெளியிடை புகுந்து வேண்டுவது இவை என விரும்பி
தேடுவ தேடி சமைத்து உண அரிதாய் சிறார் மனை-தொறும் இருந்து அலற
பாடு உறு பசி கண்டு அவர் அனைமார்கள் பயோதரம்-தனை முனிந்து இனிமேல்
கேடு அறு மழைதான் உலகு எலாம் பெய்து கெடுத்திட வந்தது என்று உரைப்பார்

மேல்
$3.42.17

#4757
நளிர் புனல் பரந்து தலைக்கடை கடந்து நலம் தரு மனை புறம் செய்ய
குளிருடன் வாடை காலும் வந்து அடிப்ப கொழுந்துவிட்டு எரி கனல் தழுவி
வெளி வர அரிதாய் இருந்தவரலது மெலிந்தவர் இளைஞர்கள் எவரும்
ஒளிவிடு நகைகள் கிடுகிடென்று அடிப்ப உடல் படபடவென மிடைவார்

மேல்
$3.42.18

#4758
காற்றொடு குளிரும் அடிப்பதால் தொறுக்கள் காடு எலாம் கிடந்து உயிர் விடுப்ப
ஏற்றமாய் அயங்கள் கயம் புக கமலம் இழுப்பன எண்ணிறந்தனவால்
ஆற்றினை கடந்து ஓர் ஆறு செல் அரிதாய் ஆறிரு நாள் மழை பெயலால்
வேற்று ஒரு நகர்க்கும் செலவு அரிதாகி மெலிந்தன உலகினில் எவையும்

மேல்
$3.42.19

#4759
பிறந்த தீவு இருட்டி பொழிந்தன உலகம் பேதுறல் தணிப்பதற்கு இனிமேல்
அறம் தவா வாய்மை முகம்மதே அன்றி ஆற்றுதற்கு யார் உளர் என்ன
சிறந்த அசுகாபிமார்களில் ஒருவர் சிந்தை கூர் புகர் தினம்-அதனில்
நிறைந்திடும் மொழி சேர் குத்துபா ஓதும் நேரத்தில் சென்று அடி வணங்கி

மேல்
$3.42.20

#4760
தருமமும் அறிவும் ஒழுக்கமும் பொறையும் தயவும் ஓர் வடிவு என எடுத்தே
வரு திரு நபியே இருசது தினமாய் மழை பொழிதர நில_வலையம்
வெருவரல் பெரிதாய் மெலிவது தவிர மேன்மையும் வளமையும் கொடுக்க
கரு முகில் அகல துஆ செயும் என்றார் கபீபு இறசூல் அவை செய்தார்

மேல்
$3.42.21

#4761
நன்மைகள் எவர்க்கும் நடத்திட வந்த நபி துஆ செய்திட முகிலும்
தென் வரை முதலாம் வரைகளில் புகுந்த தினகரன் விசும்பிடை செறிந்தான்
புல் மரம் முதலா மானிடர் ஈறா புவியினில் உயிர் உள அனைத்தும்
தன்மமும் நெறியும் தவறு இலா தீனர் குலம் என தழைத்து உயர்ந்தனவே

மேல்

43 அந்தகன் படலம்

$3.43.1

#4762
தாரணி முழுதும் தீன் எனும் வழியே தான் வர அருள்புரி வள்ளல்
ஆரண மறை சேர் சகுபிகள் பரவ அரசு செய்து இருக்கும் அ நாளில்
காரணம் எவரும் உணர்த்திட கேட்டு கருதி ஓர் பிறவி அந்தகனும்
பூரண கிருபை கடல் எனும் நபியை போற்றி நின்று அவர் அடி புகழ்ந்தே

மேல்
$3.43.2

#4763
தாய் முகம் அறியேன் பெற்ற தனையரை அறியேன் தந்தை
மேயது ஓர் வடிவம் காணேன் மின் இடை மடவார் முன்னம்
போய் அவர் நகைக்கப்பெற்றேன் புறத்து ஒரு பொருளும் காணேன்
தூயவ எவையும் காண துணை விழி தருவிர் என்றான்

மேல்
$3.43.3

#4764
கல் அடர்ந்த புயத்து கபீபு எனும்
நல்ல வாய்மை நபி அவன்-தன்னை நீ
ஒல்லையில் சென்று உலு செய்து மா மறை
சொல் இரண்டு இறக்ஆத்து தொழுத பின்

மேல்
$3.43.4

#4765
வாய்மை நீதி நபி பறக்கத்தினான்
நாயனே என் நயனம் தருதி என்று
ஏய வண்மை துஆ இரந்தாயெனில்
தூய கண்கள் துலங்கும் என்று ஓதினார்

மேல்
$3.43.5

#4766
அந்த நல் மொழி கேட்டு இசைந்து அந்தகன்
சிந்தை ஆர மகிழ்ந்து உலு செய்து இறை
தந்த வேத முறைப்படி தான் தொழுது
எந்தநாளும் இலங்கும் சுடரினை

மேல்
$3.43.6

#4767
உன்னி ஓதி துஆ இரந்து உண்மையின்
மன்னு மா நபி-தம் பறக்கத்தினால்
இன்னல் தீர இணை விழி ஈதி என்று
அன்ன வாய்மையினோடு அறைந்தான் அரோ

மேல்
$3.43.7

#4768
மற்று உவமையில்லான் நல் வரத்தினால்
குற்றமுற்ற விழியும் குவளையை
வெற்றி கொண்டு விரை மலர் பூ பய
முற்று ஒதுங்க உதித்து அது எழுந்ததே

மேல்
$3.43.8

#4769
மன்றில் அன்னை தர வரும் நாள் முதல்
அன்றளவுக்கும் அந்தகன் ஆனவன்
இன்று அ கண் வரப்பெற்று எதிர் நீங்கிய
கன்று கண்ட கபிலை ஒப்பாயினான்

மேல்
$3.43.9

#4770
பாங்கில் நின்று நபி பத தாமரை
தாங்கி சென்னி-தனில் வைத்து கைகளால்
ஓங்குகின்ற சலாம் உரைத்து அன்னவன்
நீங்கிடாத நெடு நகர்க்கு ஏகினான்

மேல்
$3.43.10

#4771
திரை செய் வாரி திசை செறிந்து ஈண்டிய
அரசர் போற்றிய ஆல நபி மறை
உரைசெய்து ஓங்கும் உயர் புகழ் யாவரும்
பரவ வாழ்வு பரிந்துறு நாளினில்

மேல்
$3.43.11

#4772
உந்து தீவினை ஊழ் வலியால் உளம்
நொந்து அயர்வுற்று யாதனை நோயினால்
சிந்தை வாடும் ஒருவன் ஓர் தேம் மலர்
கொந்து உலாவு புயனை முன் கூவியே

மேல்
$3.43.12

#4773
ஏய நோயில் யான் படும் பாடு எலாம்
தூயராம் பயகாம்பர்க்கு சொல் என
மேய தூதன் விரைந்து சென்று அன்னவர்
நேய பாதம் இறைஞ்சி நின்று ஏத்தியே

மேல்
$3.43.13

#4774
மேக நோவும் மிகுத்து வெளுவெளுத்து
ஆகம் முற்றும் அனல் என காந்தி நீர்
தாகம் மீறி தவிப்பும் இளைப்புமாய்
சோகம் எய்தி துயரில் துளங்கியே

மேல்
$3.43.14

#4775
தடை அறா புனல் தங்கிய ஏரியின்
மடை திறந்து வரும் வனம் போலவும்
இடைவிடாது சொரியினும் ஈடுபட்டு
உடையும் பாண்டத்து தகமும் ஆகியே

மேல்
$3.43.15

#4776
உரத்தை மாற்றி உள் ஊனை உருக்கி கா
தரத்தை நல்கும் சலக்கழிச்சல் பிணி
வருத்த வைகலும் வாடி மயக்கமுற்று
ஒருத்தன் ஆவி உண்டு இல்லை என்று ஓய்ந்தனன்

மேல்
$3.43.16

#4777
வையம் மீது மழை குடையாய் வர
பை அராவு பகர கிருபைசெய்
ஐயனே அவன் ஆருயிர்க்கு இன் அருள்
செய்ய வேண்டும் என மொழி செப்பினான்

மேல்
$3.43.17

#4778
இன்ன வாசகம் கேட்டு இதயம் மகிழ்ந்து
உன்னி அற்ப மண் அள்ளி உமிழ்ந்து இதை
அன்ன நோயற்கு அருள் என்று அளித்தனர்
பொன்னின் வார் கழல் போற்றிக்கொண்டு ஏகினான்

மேல்
$3.43.18

#4779
உயிர் தரும் மருந்தாம் என்று உதவ நோய்
பயிலும் அன்னவன் பார்த்து மறை நபி
செயிர் இல் தாளினை சிந்தித்து நோய் செயும்
துயரமும் பயமும் துரந்து ஏகவே

மேல்
$3.43.19

#4780
அண்ணல் வாய் உமிழ் நீரோடு அளித்திடும்
மண்ணை நீரில் கரைத்து மனத்தில் வேறு
எண்ணம் இன்றி பிசுமில் உரைத்து எடுத்து
உண்ண நல் உரு எய்தினன் உண்மையோன்

மேல்

44 கவுலத்தை விட்டுக்கூட்டின படலம்

$3.44.1

#4781
விள்ள அரும் பிணியும் நீங்கி வெற்பு என புயங்கள் பாரித்து
உள்ளமும் வியப்பதாகி உற்று அவன் இருப்ப இப்பால்
தெள்ளிய மறையுள் ஆய திரு நபி முகம்மது என்னும்
வள்ளல் தீனோர்கள் போற்ற மகிழ்ந்து இனிது இருக்கும் நாளில்

மேல்
$3.44.2

#4782
வானிடை கிராணம் தீண்ட முகம்மது நயினார் கண்டு
தீனவர் குழு கொண்டு ஈண்ட சென்று பள்ளியின் வாய் நண்ணி
ஊனம் இல் ஒளியாய் வேதத்து உள் உறை பொருளாய் எங்கும்
தான் என நின்ற கக்கன்-தன்னையே தொழுது நின்றார்

மேல்
$3.44.3

#4783
தொழுத பின் அவரை நோக்கி துனி மிகுந்து உலகம் எல்லாம்
மழை அற வறந்த போதும் வானகத்து உதித்து எந்நாளும்
கிழமை சேர் சுடர்கட்கு உற்ற கிராண காலத்தும் மிக்காய்
பழுதிலாதவனை நோக்கி பண்புடன் தொழு-மின் என்றார்

மேல்
$3.44.4

#4784
அ மொழி கேட்டு எல்லோரும் அகம் மகிழ்ந்து இருக்கும் நாளில்
செம்மையும் அறிவும் மிக்க ஆயிசா என்னும் செல்வி
மும்மையும் உணர வல்ல முழு மதி இறசூலுல்லா-
தம்மை நீராட்டும் போதில் சார்ந்தனள் கவுலத்து அன்றே

மேல்
$3.44.5

#4785
இறையவன் தூதே செல்வம் இலங்கிய கோவே வேத
மறைபடா கொம்பே என்ன வணங்கி வாய் புதைத்து ஒதுங்கி
கறை அற மாலிக் ஈன்ற கவுலத்து யான் என்று என்னை
அறை கழல் சாமித் ஈன்ற அவுசினுக்கு அளித்தார் அன்றே

மேல்
$3.44.6

#4786
இளமையும் எழிலும் செல்வத்து இயற்கையும் கிளையும் மிக்க
வளமையும் உற்று மேனாள் மகிழ்ந்து இனிது இருந்தோம் அன்பாய்
உளம் மகிழ் தனையர் தோன்றி உரிய வாலிபமும் மாறி
அளவிடற்கு அரிய வாழ்வும் அழிந்திட மெலிந்த பின்னர்

மேல்
$3.44.7

#4787
சீற்றமும் பகையும் பொல்லா செய்கையும் அன்றி வேறு
மாற்றம் ஒன்று உரையாது இல்லின் வரும்-தொறும் புலி போல் சீறி
கோல் தொடியாரை நோக்கி கொழுநர்கள் ஒருகாலத்தும்
சாற்ற அரு முறைகொண்டு என்னை தாய் என உரைத்தார் மன்னோ

மேல்
$3.44.8

#4788
ஆதலால் அவரும் என்னை அகன்றனர் அவரை நானும்
தீதுற அகன்றேன் பெற்ற சிறுவரும் பசியால் மிக்கு
பேதுற அடைந்து நொந்து பிதா என அடுத்தால் உள்ள
காதலால் புரவார் யானும் காக்க ஓர் வகையும் அற்றேன்

மேல்
$3.44.9

#4789
மைந்தர்கள் துயரம் என்-தன் வருத்தமும் அவர் சூழ் சொன்ன
பந்தமும் அகல யாங்கள் பண்டு போல் இருந்து வாழ
தந்திரம் உளவோ என்றாள் நபி அவள்-தன்னை நோக்கி
கொந்து அலர் குழலாய் எம்மால் கூட்டுதல் அரியது என்றார்

மேல்
$3.44.10

#4790
அகுமது ஆண்டு உரைத்த வார்த்தை அகம்-அதின் ஊடே காய
மகவுகள்-தம்மை பார்த்து வாய் திறந்து அழுது நொந்து
சகதலம் முழுதும் நின்ற தனி பெரும் பொருளை உன்னி
இகல் அறு மொழிகள் கூறி துஆ இரந்து இரங்கி நின்றாள்

மேல்
$3.44.11

#4791
இப்படி இரங்கி நிற்கும் ஏல்வையின் நான வாச
மெய் படும் இறசூலுல்லா விரும்பி நீராடும் முன்னர்
ஒப்பிலான் அருளினாலே உம்பரினிருந்து நீதி
செப்பிய ஆயத்து ஒன்று திகழுற இறங்கிற்று அன்றே

மேல்
$3.44.12

#4792
அழுது மெய் பதறி வாடி அலமரல் மிகுத்து கண்ணீர்
ஒழுக நின்று உருகுவாளை உவந்து அருகு அழைத்து கற்பின்
வழு இலா கொடியே நின்-தன் மணமகன் கொணர்தி என்றார்
தொழுது அவள் மகிழ்ந்து சென்று தூதர் முன் கூட்டி வந்தாள்

மேல்
$3.44.13

#4793
வர அவர்-தம்மை நோக்கி வந்த ஆயத்தில் உள்ள
உரை வழுவாமல் வள்ளல் உரைத்தனர் அவனி மீதில்
புரை தரு கோபம்-தன்னால் புருடர்கள் மனைவிமாரை
வரை அற தாய் நீ என்று வழுத்தும் தீது அகற்ற வேண்டில்

மேல்
$3.44.14

#4794
அடிமைகொண்டு உரிமையாக விட்டிடல் அவை இன்றென்னில்
இடையறாது இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும்
கடவதற்கு உரியரன்றேல் கருதிய அதிதிமார் என்று
அடகு கூழ் ஐயம் ஏற்போர் அறுபது பெயரை கூவி

மேல்
$3.44.15

#4795
தலைக்கு ஒரு படியால் உள்ள தவசமும் அவருக்கு ஈந்து
விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார்
அலக்கணுற்று அழுது நின்ற அரிவை தன் மெலிவை எல்லாம்
சொல கருத்து உன்னி வள்ளல் தூய் முகம் பார்த்து சொல்வாள்

மேல்
$3.44.16

#4796
ஆள் அடிமையர் கொண்டு ஏவ அரு நிதி சிறிதும் இல்லை
சூழுடன் விரதம் செய்ய துன்பு உறு கிழவன் எந்தநாளினும்
இரப்போர் கையில் தவசமே நல்க வேண்டில்
வாள் ஒளி பரந்த மெய்யாய் வகை பிறிது இல்லை என்றாள்

மேல்
$3.44.17

#4797
குறை அவள் இரந்து கூற நபி அருள் கூர்ந்து நாம் ஓர்
பறை நிறை நின்ற ஈத்தம் பழம் உனக்கு ஈதும் என்றார்
மறைபுகும் என்னை காக்க மகிழ்ந்து நீர் கொடுக்கில் என்-பால்
சிறிது உள பழம் என்று அன்னாள் செப்பிட அவரும் சொல்வார்

மேல்
$3.44.18

#4798
ஆசு இலா கற்பின் மிக்க அரிவை இ பழத்தை வாங்கி
தேச யாசகருக்கு ஈந்து செழும் மனையிடத்தில் உன்-தன்
நேச நாயகனை கூட்டி செல் என நிகழ்த்த யார்க்கும்
ஆசைகள் கொடுப்பார் போல வழங்கி தம் மனையில் புக்கார்

மேல்

45 உமுறாவுக்குப்போன படலம்

$3.45.1

#4799
இச்சையாய் அவர் இன்புற வாழ்ந்தனர்
நச்சு அராவை நலிந்து தடிந்து எதிர்
மச்சம் நல் உரை கூற மகிழ்ந்து மான்
அச்சம் தீர்த்தவர் ஆண்டு உறை நாளினில்

மேல்
$3.45.2

#4800
ஆதரத்தில் உவந்து அசுகாபிகள்
மா தவத்தொடு சூழ் வர மக்கத்தில்
ஓது கச்சு உமுறா செய்ய உன்னியே
போதும் தன்மை புகலலுற்றாம் அரோ

மேல்
$3.45.3

#4801
அருளும் ஏவல்செய் ஓர் அசுகாபியை
வருதி சென்று வலி மிகும் யார்களை
செருகு வெம் சின சேனையை கூய் இவண்
தருக என்று முகம்மது சாற்றினார்

மேல்
$3.45.4

#4802
ஏவும் இன் அருளால் எளியேன் செய்த
பாவம் அற்றனன் என்று பரிந்து அடி
சேவை செய்து விரைந்து சென்று அ நகர்
மேவும் மன்னர் எவர்க்கும் விளம்பினார்

மேல்
$3.45.5

#4803
ஏர் குலாவிய யார்களும் நாள்மலர்
தார் குலா அசுகாபிகள்-தம்மினால்
பேரும் கீர்த்தியும் பெற்று உயர் நீதியால்
ஊரும் நாடும் உவந்திடும் உண்மையார்

மேல்
$3.45.6

#4804
ஆற்றல் மிக்கவர் ஆயிரம் மேலும் நா
னூற்று இலக்கம் உடையரும் நோன் கழல்
ஏற்றம் மிக்க நபி இறசூலினை
போற்றி வந்து புடை செறிந்து ஈண்டினார்

மேல்
$3.45.7

#4805
இமய வெற்பு என்று இலங்கிய மாடங்கள்
அமையும் செல்வ மதீனத்தை ஆள்க என
நுமையிலாவை முன் நோக்கி உரைத்து அவர்-
தமை அ ஊர்க்கு தனி என வைத்தனர்

மேல்
$3.45.8

#4806
ஈனம் ஒன்று அற்று எழுபது என்று எண்ணிய
கூன ஒட்டகத்தை குறுபான்செய
ஊனம் அன்றி கொணர்தி என்று ஓதி நல்
தானை சூழ தலைக்கடைக்கு எய்தவே

மேல்
$3.45.9

#4807
பருப்பதத்தை சினந்து பனை கையால்
தரு பிடித்து ஒடித்து தறு கண் இணை
நெருப்பு உகுத்து நெருங்கும் ஒன்னார் எயில்
மருப்பு இடித்த மதாசலம் சூழவே

மேல்
$3.45.10

#4808
தூய மேரு கிரியினை சுற்றி வான்
மேய வாம் பரி வெம்மையை எய்தவே
வாயு வேகமும் வாதம் என்று ஓய்வுற
பாயும் வேக பரி புடை சூழவே

மேல்
$3.45.11

#4809
தான மாரி தரை நிறைய திகழ்
பேனம் என்ன விலாழி பெருக்குற
மான வீரர் சுறவின மான அ
சேனை அம் கடல் வீதி செறிந்தவே

மேல்
$3.45.12

#4810
புடை செறிந்து பரந்து புகுந்துற
மிடையும் சேனை இ வீதி பொறாது என
மடை திறந்த புனல் என வாழ் எயில்
கடை கடந்து நடந்து கலிக்கவே

மேல்
$3.45.13

#4811
வாயு வேகமும் வான் முகில் வேகமும்
போய் அகன்று புறந்தர கால் விசை
மேய அத்திரி மீதில் விருப்புற
தூயராம் இறசூல் நபி ஏறினார்

மேல்
$3.45.14

#4812
பேரி பம்பை பெரும் துடி திண்டிமம்
தூரியங்களும் ஒன்றி துவைத்தலின்
வாரி ஓசையை மாற்றி அ வானவர்
ஊரும் அஞ்சுதற்கு ஓசை உண்டானதே

மேல்
$3.45.15

#4813
புவனம் தாங்கும் பொருப்பு உறழ் யானையும்
கவன வேக கலின புரவியும்
அவனி மீது அரி ஏறு எனும் வீரராம்
எவரும் சூழ நபி விரைந்து ஏகினார்

மேல்
$3.45.16

#4814
அரிய பாலை வனமும் அடவியும்
விரியும் நீர் அருவி செழும் குன்றமும்
பிரசம் ஊறும் மலர் பெரும் சோலையும்
கரை கொள் மா நதியும் கடந்து ஏகினார்

மேல்
$3.45.17

#4815
மக்க மா நகர் நோக்கி வழிக்கொண்டு
புக்கு காலையில் பொற்பு உறும் வான் சிறை
தொக்க மேனி சுடர்விட வையமும்
திக்கும் போற்றும் சிபுரியீல் வந்தனர்

மேல்
$3.45.18

#4816
ஆண்டு சென்ற அகுமதை நோக்கி நின்று
ஈண்டு காலி திபுனுவலீது தான்
கூண்டு போர்செய் குறைசிகளோடு எறுழ்
வேண்டுகின்ற படையொடும் மேவியே

மேல்
$3.45.19

#4817
இணையிலா கமீம் என்னும் தலத்தின் முன்
அணியதாக வழிமறித்து ஆக்கம் உள்
துணிவின் உற்றனன் ஆங்கு என சொல்லி வான்
பணியும் வேந்தர் பரந்து எழுந்து ஏகினார்

மேல்
$3.45.20

#4818
அந்த நல் மறை வாக்கியம் கேட்டு அகம் மகிழ்ந்து
சிந்தை கூர்ந்து அசுகாபிகட்கு இ உரை செப்பி
வந்திருக்கும் காலிதுக்கு நேர் வலது பாரிசமா
நந்தல் இல் வழி செலும் என நடத்தினர் நபியே

மேல்
$3.45.21

#4819
இனைய செய்கை உணர்த்திலன் வஞ்சகம்
நினையும் காலிது நீள் நெறி யாவையும்
முனையில் காப்ப முகம்மதும் வென்றி சேர்
அனைவரும் வரும் தூளி கண்டு ஐயுற்றான்

மேல்
$3.45.22

#4820
பார்த்து வேக பரியை நடாத்தி போர்
கூர்த்திருந்த குறைசிகள் முன்பு சென்று
ஆர்த்த தூளி விசும்பின் அளாவ முன்
போர்த்த சேனையொடும் நபி புக்கினன்

மேல்
$3.45.23

#4821
என்று கூற அவர் எச்சரிக்கையாய்
சென்று பின் உற வாங்கி திரண்டனர்
நன்றி சேர் நபியும் படையும் பயம்
இன்றியே தனிய்யா மலைக்கு எய்தினார்

மேல்
$3.45.24

#4822
அ மலை கணவாய் வழியாய் வரில்
செம்மலை கொடு செல்கின்ற அத்திரி
மம்மருற்று மனத்தொடு தாழ்ந்து தான்
பம்மி வீழ்ந்து படுத்தது பாரினே

மேல்
$3.45.25

#4823
அலைத்து அதட்டி எழுப்பினும் ஆங்கு அவண்
நிலத்தில் வீழ்ந்த நிலை பெயராமையால்
புலத்து வீழ் இறும்பூது இவை ஏது என
மலைத்து நின்று மயங்கினர் யாவரும்

மேல்
$3.45.26

#4824
ஆய தன்மை அறிந்து அசுகாபிகள்
தூய நெஞ்சம் துளக்கு அறவே இறை
மேய சொற்படி வீழ்ந்ததன்றி வேறு
ஏய்வது இல்லை என நபி செப்பினார்

மேல்
$3.45.27

#4825
தரையில் வீழ் ஒட்டகம்-தனை நோக்கி நம்
மறை கொளா மக்க மா நகரார்கள் இம்
முறை தமக்கு எ மொழி சொல வேண்டும் என்று
அறைகினும் அவர்க்கு அன்பு உற கூறுவேம்

மேல்
$3.45.28

#4826
இறைவன் ஆணை இது தவறேம் என
குறைவு இலாத புகழ் நபி கூறிய
நறை கொள் வாய் மொழி கேட்டு நயந்து மெய்
பொறை கொள் ஒட்டை பொருக்கென்று எழுந்ததே

மேல்
$3.45.29

#4827
எழுந்த பின்னர் இறையவன் தூதர் தாள்
தொழும் தனி படை வீரர்கள் சூழ் வர
அழுந்து பாவ குபிரர் அடர்ந்து உறும்
செழும் திசையை விட்டு ஓர் வழி செல்குற்றார்

மேல்
$3.45.30

#4828
திண்மை மீறிய தீனர்கள் யாவரும்
உண்மை சேர் பயகாம்பரும் ஓங்கிய
வண்மை சேர் மக்க மா நகருக்கு அருகு
அண்மி சேர்ந்தனர் ஆண்டு குதைபிய்யா

மேல்
$3.45.31

#4829
அ தலத்தில் இறங்கி அசும்புற
பைத்தல் சூழி படு மலர் யாவையும்
மொய்த்து அடர்ந்து முன் சென்றவர் ஆர்தர
எய்த்து இளைத்து பின் எய்தினர் ஈண்டியே

மேல்
$3.45.32

#4830
ஆண்டு உறூம் அ அலந்தையினில் பயம்
கீண்டினார்க்கும் கிடைப்ப அரிதால் அவர்
வேண்டு திக்கும் விரைந்து சென்று எங்கணும்
காண்டம் இன்றி கபீபு முன் எய்தியே

மேல்
$3.45.33

#4831
வாய் புலர்ந்து மெய் வாடி விழி ஒளி
போய் மயங்கி புலம்பி கலங்கி யாம்
மேய தாகம் மிகுத்தனம் இ துயர்
நீயிரன்று எவர் நீக்குவர் நீதியீர்

மேல்
$3.45.34

#4832
என்று நின்றவர் யாவரும் இசைத்திட இரங்கி
நன்றி ஓர் வடிவு ஆகிய நாயகர் மகிழ்ந்து
துன்றி நாழிகை-தனில் ஒரு தூணியை துறந்து
குன்று நேர் புய சகுபியில் ஒருவர் கை கொடுத்து

மேல்
$3.45.35

#4833
மடுவினில் செறி கமலம் எய்திட சிறை வண்டை
இடுதி நள்ளிடை என்று அவர் ஏவிட ஏவை
கொடுசென்று அன்னவர் உறவியின் நனந்தலை குயிற்ற
தொடுவ அன்ன அ புழை திறந்தன வனம் சொரிந்தே

மேல்
$3.45.36

#4834
கொடுக்கும் வள்ளியோர் மனையினில் செறி நிதி குவை போல்
வடுப்படாத நல் நெறி உறு தீன் வளர்வது போல்
அடுக்கும் அன்பருக்கு உதவி செய் நபி மனத்து அருள் போல்
தடுக்கலா துறை பெருக்கு என பெருகின தாங்கல்

மேல்
$3.45.37

#4835
வாவி ஓடிய வாசியும் மத கரி திரளும்
காவலாளரும் கதம் மிகு சேனை அம் கடலும்
நாவலோர் புகழ் காரண முகம்மது நபியும்
ஆவி நீர் உண்டு பாசறை வகுத்து அவண் அமைந்தார்

மேல்
$3.45.38

#4836
இதயம் அன்புடன் மகிழ்ந்து இனிது இவ்விடத்து இருப்ப
ததையும் நாள்மலர் புய நபி-தமக்கு தன்னமையாம்
புதையில் என்பவன் தன் கிளை சிலரொடும் புகுந்து
கதம் இலா பயகாம்பரை கண்டு இவை கழறும்

மேல்
$3.45.39

#4837
ஓதும் மக்க மா நகர்-தனில் லுவை என்போன் ஈன்ற
காதல் வஞ்சகம் கடி கொண்ட ககுபும் ஆமிறுவும்
கோது உறும் பல சிற்றினத்தவரொடும் குழுமி
சீத வண் மலர் சிறை எலாம் சிறை செறித்தனரால்

மேல்
$3.45.40

#4838
அன்றியும் செழும் ககுபத்துல்லாவில் சென்று அணுகி
நன்றி சேர் கச்சு செய்திடாது இடர் சில நடத்தி
நின்று வெம் சமர் உம்முடன் பொர என நினைத்து
துன்றுகின்றனர் என்றனன் கபீபு எதிர் சொலுவார்

மேல்
$3.45.41

#4839
புரிசை சூழ் மக்க மா நகர் காபிர் முன் போரில்
வெருவி ஓடினர் நாலைந்து விசை அவர் மேல் நாம்
செரு விளைத்திட வந்திலம் மனம் மகிழ் சிறப்ப
அரிய கச்சு முறா செய வந்தனம் அடுத்தே

மேல்
$3.45.42

#4840
இயைந்திடாது அவர் போர்செய்ய வேண்டும் என்று இகலின்
நயந்து நான் ஒரு தலமும் நல் தவணையும் நவில்வன்
வியந்து காபிர்கள் அனைவரும் அவ்விடம் மேவி
வயம் தர பொர வருவரேல் வருதிர் என்று உரையும்

மேல்
$3.45.43

#4841
இருவரும் பொரும் போரினில் அவர் இடைந்து உடையில்
சுருதி கூறு இசுலாம் எனும் தூய நல் குலத்தில்
ஒருமையாய் வர சொலும் அவர் மறுப்பரேல் உடல் நாய்
பருக அன்னவர் உயிரினை விண்ணிடை படுப்போம்

மேல்
$3.45.44

#4842
அதற்கு இசைந்து அந்த நாள்வரை பொறாமல் நின்று அடர்ந்து
மத குறும்பினால் பொருவரேல் சுற்றினும் வளைந்து
கத கொடும் தொழில் காபிரை கருவற விரைவில்
சிதைத்து எந்நாள்-தொறும் தீன் நிலைநிறுத்துவோம் செகத்தில்

மேல்
$3.45.45

#4843
ஆதி ஆணை தப்பாது என அருள் நபி இயம்ப
போதம் மீறிய புதையில் கேட்டு உளம் களி பூண்டு
காதல் கூர்தர மக்கத்து காபிருக்கு இதனை
ஓதுவேன் என விடைகொண்டு போயினன் உடனே

மேல்
$3.45.46

#4844
வந்து மக்க மா நகர் உறும் காபிர்மாட்டு அணுகி
கந்த நாறும் மெய் முகம்மதை கண்டு அவண் இருந்து
சிந்தை கூர் சில செய்தி கேட்டு உம்முழை புகுந்தேன்
புந்தி மிக்கு உளீர் புகல் எனில் யான் அவை புகல்வேன்

மேல்
$3.45.47

#4845
என்று கூறலும் அவர்களில் சிறிது சிற்றினத்தார்
நின்று நீர் சொலும் சொலில் பொருந்தோம் என நிகழ்த்த
அன்றியும் சிலபெயர் மனத்து அறிவின் மிக்கு அவர்கள்
நன்று தீது என கேட்டு அறிவோம் என நயந்தே

மேல்
$3.45.48

#4846
சொல்லுவீர் என கேட்டலும் தூதர் முன் உரைத்த
வல்ல வாசகம் அனைத்தையும் புதையில் நேர் வழங்க
கல்லை நேர் புயன் காபிரில் ஒருவன் நல் கருத்தோன்
ஒல்லை நீதி கற்று உணர்ந்தவன் மஸ்வூது சொல் உறுவா

மேல்
$3.45.49

#4847
இருந்தவன் எழுந்து காபிர் எவரையும் போற்றி ஏத்தி
திருந்த யான் சொலும் விண்ணப்பம் செவி துணைக்கு ஏறாதேனும்
வருந்திய மழலை வார்த்தை கேட்ட தாய் மகிழ்வ போல் நீர்
பொருந்திட கேட்பிராகில் நன்குற புகல்வேன் என்றான்

மேல்
$3.45.50

#4848
அனைவரும் மகிழ்ந்து கேட்டு உன் அறிவினுக்கு இசைந்த மாற்றம்
எனையன உளவோ எல்லாம் இயம்புதி என்று சொல்ல
நனை மலர் செறியும் தாம நறு மணம் கமழ்ந்த மார்பன்
கனை கழல் உறுவா என்னும் காளை நின்று இனைய சொல்வான்

மேல்
$3.45.51

#4849
தழை செறி மரவ மாலை தயங்கு திண் புயத்தார் மிக்க
மழை செறி கவிகை வண்மை முகம்மது நபி சொல் வாய்மை
பழமையும் அறிவும் வேத பான்மையும் நீதி சேரும்
கிழமையும் பொருந்திற்றாமால் அ உரை கேட்டல் நன்றாம்

மேல்
$3.45.52

#4850
யாவரும் இசைந்து என்-தன்னை அவரிடத்து ஏவுவீரேல்
தா அறு மொழிகள் சொல்ல தகுவன உரைத்து மீள்வேன்
ஓவல் இல் குணத்தீர் உங்கட்கு உறுதி ஏது என்ன வல்லை
போ என விடைகொடுத்தார் போய் அவன் நபி-பால் புக்கான்

மேல்
$3.45.53

#4851
அவ்விடத்து உறுவா வந்த செய்தியை அறிந்து போற்றா
தெவ் அடர்த்து இகல்செய் வாள் கை திரு நபி அவனை நோக்கி
ஒவ்விட உவமை இல்லா புதையிலொடும் உரைத்தது எல்லாம்
இவ்விடத்து இயம்பினார் மற்று எதிர் மொழி அவனும் சொல்வான்

மேல்
$3.45.54

#4852
மறு இலா நீதி வாய்மை முகம்மது நபியே மக்கா
குறைசிகள் எல்லாம் உம்மை குழீஇயின கிளைகள் அன்றோ
அறம்-அதோ கிளையுள்ளோரை அறுத்து வேர் களைவது அன்றி
திறன் உறும் வெற்றிப்பாடும் சிறக்குமோ சிறந்திடாதே

மேல்
$3.45.55

#4853
குலத்தில் ஓர் மதலை தோன்றி குலத்தினை வளர்ப்பதல்லால்
அலக்கணுற்று அவர்கள் வாட அலைத்து போர் நடத்தி கொன்று
கலக்கலாம் என்ன நீதி கதையினும் கேட்டது உண்டோ
துலக்கு அற அவரை எல்லாம் துரந்து வேரறுக்க எண்ணில்

மேல்
$3.45.56

#4854
பலர்கள் உம்மிடத்தில் உற்ற படையினில் அவருக்கு உற்றார்
சிலர் உளர் அடர்ந்து வெட்டி சிதைத்திட பொருந்தார் சீறில்
கலகமிட்டு அகல்வர் என்று கருத்து உவந்து உறுவா என்போன்
மலர் தலை உலகம் போற்றும் கபீபு முன் வழுத்த கேட்டே

மேல்
$3.45.57

#4855
மஞ்சு அவிர் குடையின் வந்த முகம்மது நயினார்க்கு ஈமான்
எஞ்சல் இலாது புக்கி இருந்தவர் அகல்வார் என்ன
அஞ்சல் இல்லாது சொன்னாய் என மனம் அழன்று சீறி
மிஞ்சு தூஷணங்களாக வெகுண்டு அபூபக்கர் சொன்னார்

மேல்
$3.45.58

#4856
அசுகாபிமாரை நோக்கி யார் இவர் உரையிர் என்ன
உசாவினன் உறுவா அன்னோர் உண்மையாய் விளங்கி நின்ற
முசுகபின்படியே தீனின் முறை வழுவாத செம்மல்
புசாவல் ஒன்று இலாது வாழ் அபூபக்கர் என்று சொன்னார்

மேல்
$3.45.59

#4857
அடல் வலி உறுவா என்போன் அபூபக்கர்-தம்மை நோக்கி
திடமுடன் மதித்திடாது என் செவி சுட உரைத்தீர் முன்னம்
தொடர்வுற எனக்கு நீர் ஓர் நன்றி செய் சூழ்ச்சியாலே
உடன் உரையாது நின்றேன் அன்றியேல் உரைசெய்வேனால்

மேல்
$3.45.60

#4858
என்று உரை கூறி பின்னும் நபி எழில் வதனம் நோக்கி
நின்று கை ஆர தாடி தாங்கி சொல் நிகழ்த்தும் வேலை
மின் திகழ் வடி வாள் ஏந்தும் முகைறத்து விறல் செய் வாளால்
அன்று அவன் கரத்தை தட்டி அகல நின்று அறைதி என்றார்

மேல்
$3.45.61

#4859
இலங்கிய உறுவா என்போன் இருந்தவர்-தம்மை நோக்கி
சலம் தரும் இவன் ஆர் என்ன முகைறத்து என்று அவர்கள் சாற்ற
புலந்தவர்-தம்மை நோக்கி காபிராய் புகழ் சேர் மக்க
தலம்-தனில் இருக்கும் மேனாள் சிலரொடு தகமை கூர்ந்தே

மேல்
$3.45.62

#4860
இருக்கின்ற நாளில் அன்னோர் உயிரினுக்கு இறுதி செய்து
திரு கிளர் நிதியும் வவ்வி நீ இவண் சேர்ந்து தீனர்
வருக்கமாய் ஈமான் கொண்டு முகம்மது நபிக்கு மெத்த
உருக்கமானவர் போல் நின்றாய் உன்னை போல் உலகில் உண்டோ

மேல்
$3.45.63

#4861
உனக்கு நான் உடந்தையாக உற்று அவண் இருந்து உன்னாலே
எனக்கு உறும் துயரும் நெஞ்சம் இடைந்து நான் பட்ட பாடும்
மனம் கொளாது இருப்பது உண்டோ மறந்துபோயினையோ என்ன
சினத்துடன் நகைத்து நிந்தாதுதி மொழி செப்பி நின்றே

மேல்
$3.45.64

#4862
அலங்கல் அம் தொடையல் வேய்ந்த அகுமதின் திறனும் வீரம்
இலங்கிய வடி வாள் செம் கை யார்கள் வாசகமும் உள்ளம்
கலங்கல் இல்லாத வெற்றி சகுபிகள் கருத்தும் கண்டு
நலம் கிளர் நபியை போற்றி விடைகொடு நகரம் புக்கான்

மேல்
$3.45.65

#4863
குல வரை அனைய மாட கூடமும் நறை சேர் காவும்
மலர் செறி தடமும் வாய்ந்த மக்க மா நகரின் உள்ள
கலை பயில் அறிவில்லாத காபிர்-பால் சென்று சற்றும்
அலைவு இலா உறுவா என்ற மதி_வலோன் உரைக்கலுற்றான்

மேல்
$3.45.66

#4864
ஏற்ற மா நபி-பால் யான் சென்று எய்தினேன் புதையில் வந்து
சாற்றிய மொழியில் ஒன்றும் தவறு இலாது உரை என்று அந்த
மாற்றமே எனக்கும் சொன்னார் யான் அது மனம் கொண்டு உற்றேன்
தோற்றமாம் அவர்-தம் மேன்மை தொழில் இனம் விளம்ப கேளீர்

மேல்
$3.45.67

#4865
நாவினில் ஊறும் மிச்சில் உமிழ்ந்திடில் நான வாசம்
மேவியது என்ன பூச விரும்புவர் சிலபேர் பின்னும்
ஓவற தொழுகை காலத்து உலு செயும் புனலை வேட்டு
தா அற கரங்கள் ஏந்தி தளர்பவர் சிலபேர் அம்ம

மேல்
$3.45.68

#4866
செய் தொழிற்கு ஏவல் யாங்கள் செய்ததே பலனாம் என்ன
எய்துவர் சிலபேர் தங்கள் இரு கரம் ஒடுக்கி வாயை
கையினால் புதைத்து நின்று கடாட்ச வீடணமா நோக்க
மையல் அம் களிறு அன்னாரை வணங்குவர் அனேகம் பேர்கள்

மேல்
$3.45.69

#4867
இ தகை உடைய வள்ளல் கபீபு இறசூல் மகிழ்ந்து
சித்தம் அன்பு உறவே நம்மை புரந்திட செப்பும் வார்த்தை
உத்தமம் அவரை போற்றி உறவுகொண்டு இருந்து வாழ்தல்
மெத்தவும் விழுமிது ஆகும் என்றனன் அறிவின் மிக்கான்

மேல்
$3.45.70

#4868
அவன் அது கூற தான் கேட்டு அழன்று கனானி என்போன்
மனது உற உறுவா சொன்ன வார்த்தையான் ஆங்கு சென்று
வினவி இவ்விடத்தில் ஒல்லை மீள்குவன் என்ன காபிர்
அனைவர்கள்-தமக்கும் கூறி நபியிடத்து அவனும் வந்தான்

மேல்
$3.45.71

#4869
வந்தவன் நபியை கண்டே அவர் மனத்து இயல்பும் தேர்ந்து
விந்தையாய் குறுபான் செய்ய ஒட்டகம் மேவலாலே
பந்தமாய் உமுறா செய்ய பரிந்ததேயலது வேறு
சிந்தனை இல்லை என்று தெளிந்து அவன் மக்கம் சேர்ந்தான்

மேல்
$3.45.72

#4870
சேர்ந்தவன் காபிர்-தம்மை சிறப்புடன் நோக்கி தீனர்
வேந்தர்-தம் கருத்தும் முன்னோர் விளம்பியது எல்லாம் மெய்யே
ஆய்ந்து நான் பார்த்து வந்தேன் களங்கம் ஒன்று இல்லையாமால்
காய்ந்திடாது உமுறா செய்து போம் என கழறல் நன்றே

மேல்
$3.45.73

#4871
இவனும் அவ்வாறே கூற இடைந்து மெய் நடுங்கி தங்கள்
கவனம் வேறு ஆகி நின்ற காபிர்கள் உரைத்தார் நம்-பால்
தவனமாய் இருந்த உற்ற சனங்களும் நபி-பால் சென்றால்
அவனியில் அவன்-தன் மாயை கடலில் வீழ்ந்து அலைந்தார் என்றே

மேல்
$3.45.74

#4872
விளம்பிய மாற்றம் கேட்ட மிக்றசு என்னும் வீரன்
உளம் பெறு மதியின் மிக்கோன் எழுந்து யான் உவந்து சென்று
வளம் பெறு நபி-பால் ஏகி விரைந்து இவண் வருவேன் என்றான்
அளந்து அறி புகழாய் செல் என்று அனுப்பினர் காபிர் எல்லாம்

மேல்
$3.45.75

#4873
சொற்படி அவனும் சென்று சுருதி நேர் நபியை கண்டு
முற்பட இருந்து நல்ல மொழி பகர்ந்து இருக்கும் வேளை
பற்பல காபிர் தொக்க பாசறை வீட்டினின்று
சொல் பயின் மதியான் மிக்க சுகயில் என்று ஒருவன் வந்தான்

மேல்
$3.45.76

#4874
துதித்து அவண் அடுத்து நின்ற சுகயிலை கண்டு வள்ளல்
மதித்து இவன் வருதலாலே காபிர்க்கு ஓர் வருத்தம் இல்லை
பதித்து இவன் நாமசாரம் பார்த்திடில் லேசாம் தூதாய்
கதித்து இவன்-தன்னை விட்டோர் கருமமும் இலேசதாமே

மேல்
$3.45.77

#4875
சொல் பொருள் முகம்மது ஆய்ந்து சொல்லிட சுகயில் என்போன்
அற்புதர்-தம்மை நோக்கி அறைகுவன் இருவருக்கும்
விற்பனமாக செய்ய வேண்டு காரியங்கட்கு எல்லாம்
உற்பனமாக சீட்டு ஒன்று எழுதுதல் உறுதி என்றான்

மேல்
$3.45.78

#4876
ஆம் என மகிழ்ச்சியாகி அகுமதும் அலியார்-தம்மை
தாம் அருளுடனே கூவி எழுது என சாற்றுகின்றார்
கோ முறை வழுவா நீதி குலவிய அலியார் அப்போது
ஏம நல் புகழீர் சீட்டில் எழுது வக்கணை ஏது என்றார்

மேல்
$3.45.79

#4877
இன்புறும் பிசுமில்லா கிற்றகுமா னிற்றகீம் என்று
அன்பு உறு முதலில் கோட்டு என்று அகுமது வந்து கூற
முன்பு உறு சுகைல் என்போனும் மொழிகுவன் பிசுமில்லாவின்
தன் பெயர் நடக்கும் வண்ணம் அறிகுவம் தரணி மீதில்

மேல்
$3.45.80

#4878
அற்றகுமா னிற்றகீம் என்ன அறைகின்ற வார்த்தை யாங்கள்
திறனுற கேட்டது இல்லை அ மொழி தீட்ட வேண்டா
நிறை புகழுடையீர் என்று சுகைல் இனிது இயம்ப கேட்டு
மறை பயில் இறசூலுல்லா மகிழ்ந்து ஒரு வசனம் சொல்வார்

மேல்
$3.45.81

#4879
சொல்லிய இறையாம் அல்லா தூதராம் முகம்மது என்றும்
கல்வி சீர் உடைய வள்ளல் கவுல் கொடுத்திட்டவாறு என்று
ஒல்லையில் எழுதும் என்ன உரைத்தனர் சுகயில் உள்ளம்
மெல்லவே பொருந்திடாமல் விரைந்து ஒரு வசனம் சொல்வான்

மேல்
$3.45.82

#4880
ஆதி-தன் தூதர் என்ன உம்மை யாம் அறிந்தோமாகில்
வேதனைப்படுவது உண்டோ பகை சில விளைவது உண்டோ
காதலால் அவையும் வேண்டாம் என அவன் கழற அக்கன்
தூதரும் மறுத்து ஓர் மாற்றம் சொல நினைந்து உறுதி எண்ணி

மேல்
$3.45.83

#4881
அரியது ஓர் புகழ் சேர் வண்மை அப்துல்லா முகம்மது என்போர்
பரிவொடு கவுல் தாம் ஈந்தபடி உமுறா செய்து ஏக
வரிசையாய் மக்கத்து உள்ளோர் வழிவிட கடவது என்று
தெரிவுற தீட்டுக என்றார் சுகயில் பின் சிறிது சொல்வான்

மேல்
$3.45.84

#4882
அ மொழி பொருந்தாது இந்த ஆண்டினுக்கு அகன்று போய் இ
செம்மையாய் எதிர்ந்த ஆண்டின் மீண்டு இவண் செறிந்த காலை
உம்மை யாம் செறுத்திடாமல் உவந்து கச்சு உமுறா செய்ய
வெம்மை இலாது விட்டுவிடல் என எழுதும் என்றான்

மேல்
$3.45.85

#4883
சொல அரு மொழியை கூறும் சுகயிலை நோக்கி வள்ளல்
மலர் செறி மக்கத்துள் யாம் வர தடை யாதோ என்ன
உலகினில் எவரும் எம்மை உமக்கு உடைந்து இடைந்தோம் என்று
சில குறை சொல்வர் என்னும் நாணத்தால் செப்பினோமால்

மேல்
$3.45.86

#4884
ஆகையால் இந்த ஆண்டிற்கு அகன்று பின் மீள்விர் என்ன
ஓகை சேர் நபியும் வீழ்ந்த ஒட்டகம் எழுந்து செல்ல
சேகு அற உரைத்த வார்த்தை தீதுறா வண்ணம் எண்ணி
வாகுற சுகயில் சொற்ற சொற்படி வரையும் என்றார்

மேல்
$3.45.87

#4885
எழுதினர் அலியும் அன்னோர் இயைந்திடும்படியே சற்றும்
வழு அற கடுதாசின்-கண் வரைந்த உத்தரத்தை என்றும்
பழுதிலான் தூதர் நல்க பரிந்து அந்த சுகயில் வாங்கி
எழுக என மிக்றசோடு இ இருவரும் மக்கம் புக்கார்

மேல்
$3.45.88

#4886
மாயத்தின் வடிவு-அதாக வந்தவர் போய பின்னை
காயத்தில் நானம் வீசும் கபீபு கச்சு உமுறா செய்ய
நீயத்து நினைந்த தன்மை தடை அற நீங்க வேண்டி
தேயத்தோர் புகழ ஒட்டை அறுத்து நல் குறுபான் செய்தே

மேல்
$3.45.89

#4887
தலை முடி இறக்கி நீங்கள் சகலர் இ ஒழுங்கு செய்து
மலைவு அற இருப்பிர் என்றார் அனைவரும் மகிழ்ச்சி கூர்ந்து
கலை பயில் இறசூல் சொன்ன கட்டளைப்படியே செய்து
குல வரை அனைய திண் தோள் குரிசிலை புகழ்ந்து நின்றார்

மேல்
$3.45.90

#4888
அருள் பெறும் இசுலாமான அரிவையர் புதல்வர் மற்றோர்
தெருள் உறு கிளைகள்-தம்பால் சேரவே தடையாயுற்றோர்
பருவரல் ஒழித்து வள்ளல் பாசறை புகுந்த பின்னர்
பொருவு இலா மாந்தர் எல்லாம் மதீனத்தை நோக்கி போனார்

மேல்
$3.45.91

#4889
வடிவு உறு கதிர் வாள் செம் கை முகம்மது நபியும் மிக்க
படி புகழ் சகுபிமாரும் பாலரும் மடந்தைமாரும்
கடி கமழ் பொழிலும் வாவி கரைகளும் மலையும் நீந்தி
அடி நிலம் படர காந்தும் அரும் திறல் பாலை கண்டார்

மேல்
$3.45.92

#4890
செம்பு என வயங்கி அழல் செய் நிலம் அனைத்தும்
வெம் புகை பரந்தது என வேனல்கள் நிரம்ப
இம்பரின் உலர்ந்து அரவு எரிந்த முருடு ஆக
தம் பொறி என கதிர் தயங்கு மணி மின்ன

மேல்
$3.45.93

#4891
தேறு அரியதாக வெகு சீழ் உதிரம் ஓட
கூறுபடு புண்ணில் ஒரு கோல் இடுதல் போல
மீறு பரலால் அடி மெலிந்தவர்கள் ஆவி
சூறையிடல் போல அழல் சூறைவளி வீச

மேல்
$3.45.94

#4892
சொரிய அறல் வாரி வெகு சோனை பொழி மேகம்
விரியும் அழல் தாவு தரை மீது வர அஞ்சும்
உரிய நிலம் மீது கரு என்று உடல் வெதும்பி
அரிய கரி என்று பெயர் ஆன மத யானை

மேல்
$3.45.95

#4893
தேற்றமுற நாயின் நெடு நா திகழும் நீரை
மாற்றம் அற உண்ண வரும் மான் உடல் பிறந்த
காற்றினை அருந்தும் விட கட்செவியின் வாயை
தோற்று புழை என்று எலி சுழன்று செல எண்ணும்

மேல்
$3.45.96

#4894
சிந்து புனல் வாரி புடை சேர்த்தும் இதனாலே
இந்த நிலம் நாலு வகை ஆகியது இருந்த
அந்தரமும் இ அழலை ஆற்ற அரிதாகி
கந்தரமும் மிக்க புனல் கங்கையும் அடுத்த

மேல்
$3.45.97

#4895
பரக்கும் எளியர்க்கு அருள் பகுத்து அருள நெஞ்சில்
இரக்கம் அறு லோபியரிடத்தில் உறுவார் போல்
சுரத்து அழல் வருத்த அடி துன்ன வரும் முன்னம்
மரத்தினை அடுத்து உளம் வருந்தி மெலிவோரும்

மேல்
$3.45.98

#4896
ஊறு புனல் நா அற உலர்ந்து பசை அற்று
சாறுகள் பிழிந்து சிலர் தாம் பருகுவாரும்
கூறும் இரு காலின் மிசை கொப்புளம் நிரம்ப
தூறுகள் மிதித்து அடி துடித்து உழலுவாரும்

மேல்
$3.45.99

#4897
இவ்வணம் வருத்தம் மிக எய்தி அறல் இன்றி
மெய் வணம் வருத்தி மிக வெய்துற உலைந்தே
உய் வணம் நபிக்கு முன் உரைப்பது நமக்கே
செய் வணம் என பலர் திரண்டு அவண் அடைந்தார்

மேல்
$3.45.100

#4898
வந்து நபியை தொழுது வாழ்த்தி அடியேம் உ
வந்த புனல் தேடி அரை காத வழி சுற்றில்
இந்த நிலம் மீதில் அரிது எங்கள்-தமக்கு உம்-பால்
அந்தம் உறும் பாத்திரம் அமர்ந்த புனலல்லால்

மேல்
$3.45.101

#4899
என்று அவர் அடங்கலும் இரைந்து மொழி கூற
நன்று என நினைந்து நபி நல் மொழி பகர்ந்தே
வென்றி தரு பாத்திரம் விரைந்து கொடுவந்து என்
முன் தருதிர் என்று அவர் மொழிந்து உளம் மகிழ்ந்தார்

மேல்
$3.45.102

#4900
சொன்ன பொழுதே கடிகை-தன்னை ஒரு தூதன்
மன்னு மறை மா நபி முன் வைத்து அகல நின்றான்
தென் உலவு பங்கய மலர் கை கொடு தீண்ட
அம் நவம் என புனல்கள் ஆன விரல் நான்கும்

மேல்
$3.45.103

#4901
பாலைவனம் எங்கும் நிறை பானியம்-அதாக
மேலவனை உன்னி உளம் மீதினில் இருத்தி
சீல நபி பாதம் மிசை சென்னி கொடு சேர்த்தி
ஆலம் அமுதாக அசுகாபிகள் அயின்றார்

மேல்
$3.45.104

#4902
வாசியும் களிறும் ஏறும் வரி நெடுங்கழுத்தன் மற்றும்
காசு அற புனலும் உண்டு களித்து எழுந்து ஆர்த்து பொங்க
நேசமுற்று அஸ்காபிமார்கள் நெடு நெறி-அதனில் செல்ல
வீசிய புகழ் சேர் வள்ளல் விருப்பமுற்று எழுந்து போனார்

மேல்
$3.45.105

#4903
அடவியும் குன்றும் ஆறும் அருவியும் அகன்று பின்னர்
மடிவு இலா உதுமான் என்னும் வள்ளலை இனிது கூவி
துடவை சூழ் மக்கம் என்னும் தொல் நகர்க்கு ஏகும் என்ன
படி புகழ்ந்து ஏத்த அன்னோர் பரிவுற மகிழ்ந்து போனார்

மேல்
$3.45.106

#4904
விரி கடல் சேனை சூழ விரைந்து எழுந்து ஏகி சீத
வரை செறி மதீன மூதூர் வள நகர் அடுக்கும் போதில்
தரை புகழ் மக்கம்-தன்னில் தகை பெறும் உதுமான் என்னும்
குரை கழல் கோவை கொன்றார் எனும் மொழி பிறந்தது அன்றே

மேல்
$3.45.107

#4905
நனை மலர் ததும்பும் திண் தோள் நபி உளம் வெதும்ப கேட்டு
சினை தரு தருவின் நீழல் செறிந்து இனிது இருந்து மிக்க
மனை செறி மக்கத்து உற்ற வன் குபிர் தலைவரான
அனைவரை ஒருங்கு செற்று இங்கு அடைவது கருமம் அம்மா

மேல்
$3.45.108

#4906
ஆகையால் எனது தோழர் அனைவரும் ஒருமித்து அன்பாய்
வாகை நான் பெறுக எற்கு வாய்மை தம்-மின்கள் என்று
சாகை நூல் தழும்பு நாவார் கேட்ப வார்த்தைப்பாடு ஈது என்று
ஓகை மாறாத சான்றோர் கொடுத்தனர் உளம் மகிழ்ந்தே

மேல்
$3.45.109

#4907
சுரும்பு அடைகிடக்கும் தொங்கல் தூயவர் வாய்மை கேட்டு
கரும்பு அடைகிடக்கும் தீம் சொல் கதி மறை கபீபு அன்பாகி
அரும்பு அடைகிடக்கும் ஓடை அணி மதில் மக்க மீதில்
இரும் படை கடக்கும் வேலீர் எழுக என்று இயையும் காலை

மேல்
$3.45.110

#4908
மறை உணர் உதுமான் என்னும் மன்னவர் இறத்தல் பொய் என்று
அறைதரு வசனம் கேட்டு அங்கு அகம் மகிழ்ந்து இருந்த பின்னர்
நிறைதரு வாய்மைப்பாடு நிகழ்த்தினபேர்கட்கு எல்லாம்
இறையவன் அருளினாலே ஆயத்து ஒன்று இறங்கிற்று அன்றே

மேல்
$3.45.111

#4909
வந்த ஆயத்தை தேர்ந்து தீனவர் வதனம் நோக்கி
பந்தனை வாய்மை எற்கு பகர்ந்த தூயோர்கள் எல்லாம்
விந்தை சேர் உவணை மீதில் மேவுவர் நிறையம் இல் என்று
அந்தமில் இறைவன் தூதர் அறைந்தனர் உளம் கனிந்தே

மேல்
$3.45.112

#4910
மான்மதம் கமழ்ந்து வீச மலர் பதம் பெயர்த்து எழுந்து
தேன் உறை அலங்கல் திண் தோள் செல்வரோடு ஏகும் காலை
ஈனம் இல் ஆயத்து ஒன்று அங்கு இறங்கின கயவர் மீதில்
தீனவர் எவர்க்கும் அன்பாய் கொடுத்தனம் செயம்-அது என்றே

மேல்
$3.45.113

#4911
கதி மறை வசனம் கேட்ட காவலர் நபியுல்லாவும்
விதியவன் மொழி மறாத விறல் உடை தலைவர் யாரும்
மதி அகடு உரிஞ்சும் குன்றும் வளர் கழை காடும் நீந்தி
பதியினுக்கு அரசாய் வைகும் பணை மதீனாவில் சென்றார்

மேல்

46 சல்மா பொருத படலம்

$3.46.1

#4912
விண்ணவர்க்கு அரசர் நாளும் விரும்பி அர்ச்சனை செய்து ஏத்த
எண்ணரும் அரசர் ஈண்டி ஏவலின் இறைஞ்சி நிற்ப
பண் அரு மறையின் தீம் சொல் பாவலர் இனிது வாழ்த்த
கண் அகன் ஞாலம் போற்றும் காவலர் இருந்தார் இப்பால்

மேல்
$3.46.2

#4913
வரை நிகர் மாடம் ஓங்கும் மக்க மா புரத்து உள்ளோர்கள்
கரையிலா வளமை சேரும் கடு நகர் மதீனத்து எய்த
தரை நெறி மறாத தீன் அன்சாரிகள் மக்கத்து ஏக
புரை அற உள்ளம் ஒன்றாய் பொருந்தினர் உறவு-அது ஆகி

மேல்
$3.46.3

#4914
செருவினால் பொருது அடர்ந்து தீன் நெறி முறை மறையின்
மருவி நல் வழி வந்தவர்க்கு எண் மடங்காக
பரிவினால் இசுலாமினில் புக எனும்படியால்
அரிய திண் திறல் வயவர்கள் வந்தனர் அவரின்

மேல்
$3.46.4

#4915
ஊன் கிடந்த வேல் கரன் ஒலீது உதவு காலிதுவும்
மான் கிடந்த மை விழி மின்னார் மால் கொளும் அமுறும்
கான் கிடந்த மாலிகை அபீத்தாலிபு கையிலும்
ஆன் கிடந்த கைத்தல தல்கா அருள் உதுமானும்

மேல்
$3.46.5

#4916
வரி அளி அலம்பி பெடையொடும் துயிலும் மரவம் முங்கிய புய நபி-தம்
குரை கழல் பதத்தில் விழி இணை வைத்து கொழும் மணி அனைய வாய் முத்தி
கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை
உரைதர ஓதி தீன் நிலை நின்றார் நால்வர்கள் தவத்தினில் உயர்ந்தோர்

மேல்
$3.46.6

#4917
இவர்கள் போல் உயர்ந்தவர் கணம் பல எழுந்து ஏகி
கவர் அற கலிமாவினை உரைத்து உளம் களித்து
பவம் அறும் தொழுகையின் முறை வழி நெறி பயின்றே
உவமையில்லவன் தூது அடி வணங்கி அங்கு உறைந்தார்

மேல்
$3.46.7

#4918
வினை புறம்கண்ட வேல் கை விறல் நபி மகிழ்ந்து அன்பாகி
கனை கழல் சல்மா என்னும் காளை-தன் வதனம் நோக்கி
மனையினுக்கு உரியனாக வந்தவன் றபாகும் வெற்றி
புனை மலர் அணியும் திண் தோள் பொதுவனும் நீருமாக

மேல்
$3.46.8

#4919
ஒரு குடம் கவரி சோகம் உள்ளவை சாய்த்துக்கொண்டு
தரு உறை காபா என்னும் தலத்திடை-தன்னின் மேய்த்து
வருவிர்கள் நீவிர் என்று மறை கிடந்து அலம்பும் வாயால்
திருவுளம்பற்றினார் இ மூவரும் சென்னி தாழ்த்தார்

மேல்
$3.46.9

#4920
தொடை மழை பொழியும் வில் தோள் துணைவர்கள் இருவர் சூழ
கடை மணி கலின பாய் மா காவலர் சல்மா என்னும்
மடை செறி கடக தோளார் வரி சிலை ஒன்று தாங்கி
உடை கடல் அனைய காலேயம்முடன் உவந்து போந்தார்

மேல்
$3.46.10

#4921
திரை நுகர் கரும் சூல் கனம் கிடந்து அலற திகைத்து எழும் பிடி மடி சுரந்த
புரை சுரை சுவைத்து பால் வெடி மறாத புனிற்று இளம் கன்று மேய்ந்து உறங்கும்
வரை பல இறப்ப உளி குடைந்து அறுத்த வட்ட வாய் உரல் தலை கேழல்
பொரு களிறு உழக்க விரி கரம் கரிகள் போந்திடும் வனங்களும் கடந்தார்

மேல்
$3.46.11

#4922
மழை செறிந்து இருண்டு கதிரவன் தோன்றா வனங்களும் புனங்களும் கடந்து
தழை செறிந்து இலங்கும் வாவியும் ஓடை தடங்களும் நதிகளும் குறுகி
உழை இனம் ஓடி தவித்து உளைந்து அலைந்த ஒண் பரல் பாலையும் செம் தேன்
பொழிதரு சோலை படப்பையும் கடந்து போயினர் நிரை கண் முன் ஏக

மேல்
$3.46.12

#4923
நீங்க அரும் சேற்றில் ஈற்று உளைந்து அலறி நிலா என சங்கம் முத்து உயிர்க்க
பூம் கருங்குவளை அலர்ந்திடும் விரும்பி புள்ளறு கால் பட தகர்ந்து
தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும்
தாங்கல் சேர் வளமை செறிந்திடும் காபா என்னும் அ தலத்தினை சார்ந்தார்

மேல்
$3.46.13

#4924
நிரைநிரை செறிந்த குட்டியும் கன்றும் நெடும் கழுத்து ஒருத்தலும் சுரந்த
சுரை மடி வீங்கி நடை பெயர்த்து ஒதுங்கும் சுரபியும் புனிற்று இளம் தேனும்
விரை மலர் குவளை மணம் அறா கய வாய் மேதியும் கவை அடி கொறியும்
திரை என எழுந்து நடந்து புல் மேய்ந்து திரிந்தது திசைதிசை செறிந்தே

மேல்
$3.46.14

#4925
பணர் விரிந்து அடைகள் செறிந்து இருண்டு எழுந்த பாரரை பாதவமிடத்தும்
மணம் எழுந்து அலர்ந்த முள் அரை பசும் தாள் வனசம் ஏய்ந்து இலங்கு பல்வலத்தும்
துணர் வளைந்து ஓடி பாசடை கிடக்கும் துய்யது ஓர் பசும் புலினிடமும்
கணமுடன் தொறுக்கள் மேய்த்து அவண் உறைந்தார் காளையர் மூவரும் அன்றே

மேல்
$3.46.15

#4926
ஆண்டு உறைந்திருந்த போதினில் கத்பான் கூட்டத்தில் அமர்ந்து எழும் கயவர்
மாண் தயங்கிய வேல் உயையினாவும் போர் மல்கு அபுதுற் றகுமானும்
தாண்டு வாம் பரியின் விறலினர் வெற்றி தலைவர் நாற்பதின்மருமாக
காண்ட அரும் குன்றும் கடங்களும் கடந்து வந்தனர் கடும் சரம் கடுப்ப

மேல்
$3.46.16

#4927
வந்து காபாவில் செறிந்திடும் நிரையை சுற்றினர் வளைந்தனர் சோரி
சிந்திட பொதுவன் தலை தகர்ந்து ஓட வெட்டினர் செழும் திறல் வீரர்
கந்துகம் நடத்தி காலிகள் அனைத்தும் வவ்வினர் கலைந்து அலையாமல்
பந்திபந்தியதா நடத்தினர் கிடந்த பணி தலை நடுங்கிட அன்றே

மேல்
$3.46.17

#4928
விண் துகள் பரப்ப நடத்திடும் போதில் விறல் சல்மா என்னும் அ வேந்தர்
கண்டு உளம் வெகுண்டு திறல் இறபாகை கடிதினில் விளித்து தான் ஏறிக்
கொண்டு எழும் கவன வாம் பரி அளித்து குரு நபிக்கு அறைதி என்று ஓதி
திண் திறலவரை விடுத்து பின் நிரையை தொடர்ந்தனர் சிலை வய வீரர்

மேல்
$3.46.18

#4929
குயின் உறைந்து அலறும் வரை மிசை ஏறி குன்று உறழ் மாடங்கள் தோன்றும்
எயில் உடை மதீன மா நகர் நோக்கி இடித்து என கூக்குரலிட்டு
மயிர் புளகெழ வெம் கணை மழை பொழியும் வாங்கு வில் தட கை மேல் கொண்டு
செயிர் அற வளைத்து நாணினை எறிந்தார் திசை கரி செவி செவிடு எடுப்ப

மேல்
$3.46.19

#4930
நறை கமழ் அலங்கல் அக்வகு தவத்தின் உதித்து எழு நரபதி சல்மா
தொறுவினை கவர்ந்த கத்துபான் கூட்ட தொகை படை தலைவர்கள் திகைப்ப
தரையினில் சோரி கொட்டிட ஒருவன் தட கழல் கால் உடைந்து உழல
கறுவொடும் வெகுண்டு வடி கணை தெரிந்து விட்டனர் கார்முகம் குழைய

மேல்
$3.46.20

#4931
ஊறுபட்டு உடைந்த காளையை கண்டு அங்கு ஒண் திறல் புரவலர் பின்னும்
வேறுபட்டு எழுந்த மள்ளர்கள் வியப்ப விறலின் மேம்பாட்டு உரை கூறி
தாறுபட்டு எழுந்த மத மலை கூச தாலம் கீழ் விழ பணி பணிய
வீறுபட்டு எழுந்த கொடுமரம் குழைய விட்டனர் கணை மழை என்ன

மேல்
$3.46.21

#4932
குடை நிழல் அகலா மன்னவர் புயத்தும் கொய் உளை மீதினும் குணில் ஆர்ந்து
அடிபடும் பேரியிடத்தும் விண் தோய்ந்த அடல் செறி கதலிகையிடத்தும்
பிடி உடை உபய சாமரையிடத்தும் தோன்றிய பீலிகையிடத்தும்
கடி கமழ் மாலை வயவர்கள் மார்பும் பட்டன கடும் கணை நிறைந்தே

மேல்
$3.46.22

#4933
கோடை போல் சுழன்று வரும் பரி கடாவிக்கொண்டு எழும் தலைவரில் ஒருவன்
ஏடு அலர் மாலை புயன் கர வாளால் எறியும் முன் ஓர் மரத்து ஒதுங்கி
பாடலத்து அமர்ந்த கொடியவன் ஆவி பறிபட பகழியால் வீழ்த்தி
தேட அரும் வாகை சூடியே விரைவில் சென்றனர் ஒரு தனி சிங்கம்

மேல்
$3.46.23

#4934
பால் ஒரு குடம் காசு அத்திரி ஈன்ற பறழ்களும் குட்டியும் செறிந்த
காலிகள் அனைத்தும் சிதைவு இலாது அடர்ந்த கடும் பரல் பொலிதரு சாரல்
மேல் ஒரு தொண்டின் நெறியினில் மள்ளர் விரைவொடும் கொண்டு எழுந்து ஏக
சாலவும் நிவந்த பெரு வரை எருத்தில் சார்ந்தனர் திறல் வய வீரர்

மேல்
$3.46.24

#4935
சிலம்பினில் கிடந்த பருக்கை ஈறாக செறிந்திடும் சிராவணம் எவையும்
உலம் பொரு தோளால் தள்ளினர் கையால் எறிந்தனர் அவை உருண்டு ஓடி
வலஞ்சுழி நெற்றி வால் உளை கலின வாம் பரி கால்களை தகர்த்து
கலம் படு தடம் தோள் தெவ்வரை வீழ்த்தி பிதிர்த்தது தொனியொடும் மாதோ

மேல்
$3.46.25

#4936
தடம் செறிந்து இலங்கும் ஆறு பாய் அருவி ஆயிரம் திளைத்திடும் சாரல்
இடங்களும் களிற்று மும்மதம் நாறும் இரும் கழை வனங்களும் கடந்து
நடம் செறிந்திடும் காற்கு ஆகுர புரவி மன்னர்கள் நடந்திட தொடர்ந்து
கடும் புரி முறுக்கி கழுத்தினில் பிணித்த கார்முகம் எடுத்தனர் வியப்ப

மேல்
$3.46.26

#4937
இரு கடை வளைத்து அங்கு ஒரு சிலை ஏந்தி எதிர் பொரும் காபிரை நோக்கி
கரி அமை முகிலின் உரும் என விட்டார் விட்ட அ கடும் சரம் சென்று
பொரு திறல் வயவர் தலைகளை தள்ளி புரவியின் அகட்டினை பிளந்து
வரு குடை மன்னர் முடியினை வீழ்த்தி போயது மறிபடாது அன்றே

மேல்
$3.46.27

#4938
சரம் பட வெகுண்டு வயவர் எல்லோரும் தழல் எழ இரு விழி சிவந்து
கரம் பெறும் பரசு கப்பணம் சொட்டை கட்டு பத்திரம் அயில் நேமி
உரம் பெறும் பாலம் நெட்டு இலை சூலம் ஓங்கு தோமரம் கதிர் எழு வாள்
பரம் பரி நடத்தி யாவும் கொண்டு எறிந்தார் படியும் மை முகில் மழை போல

மேல்
$3.46.28

#4939
புடை செறி கிடுகினாலும் பொரு கணை தொழிலினாலும்
மடல் செறி தண்டினாலும் அமைந்திடு சோட்டினாலும்
படர் உல புயத்தினாலும் பரு வரை தனுவினாலும்
தொடை கழல் வீரர் ஒட்டி தட்டினர் தூள்-அது ஆக

மேல்
$3.46.29

#4940
சிவை கடை போலும் செம் தீ தழல் எழ விழித்து அடர்ந்து
பவ கடல் புகுது மள்ளர் பரு வரை புயத்தின் மீதும்
நவ கடைவாயின் மீதும் நகை முடி சென்னி மீதும்
கவை கடை கணைகள் பாய விட்டனர் குருதி கால

மேல்
$3.46.30

#4941
ஆண்டு உடைந்து ஊறுபட்ட பறந்தலை அதனின் வந்து
பூண் தரும் கலன்கள் பற்றி புனை கலை உடை கைக்கொண்டு
சேண்தரும் இடங்கள்-தோறும் தெரிதர போட்டு விட்டு
கூண்டு அரு நிரை பின் ஏகி சென்றனர் கூற்றும் அஞ்ச

மேல்
$3.46.31

#4942
மலை எழு திரண்ட தோள் மன்னர் ஆர்த்து எழுந்து
ஒலி உறழ் கொடும் கணை ஒன்று விட்டனர்
முலை திகழ் புயங்களின் மூழ்க வெட்சியார்
நிலைபெறல் இன்மையான் நிரையை விட்டனர்

மேல்
$3.46.32

#4943
தொறுவினை விட்டு இழிந்து ஓடி சூல் முகில்
நிறைதரு வரை நெறி முழைஞ்சில் சார்ந்தனர்
பிறழ் பறழ் காலிகள் அனைத்தும் பின்னர் விட்டு
அறை கழல் வீரர் அங்கு அவர் பின் ஏகினார்

மேல்
$3.46.33

#4944
கந்தரம் அடைகிடந்து அலறும் கந்தரத்து
உந்து தோல் எருத்தினில் உகளும் வெள் அறுகு
இந்து உழை வர கரும் இரலை என்று தாவு
அந்தர முகட்டினில் அமர்ந்து வைகினார்

மேல்
$3.46.34

#4945
தட வரை குடுமியில் சார்ந்த மாற்றலர்
புடை படும் அருவியின் வதிந்து அபூபம் உண்டு
இடை படும் இன்னலுற்றிருக்கும் காலையின்
மடமை சேர் காபிரில் ஒருவன் வந்தனன்

மேல்
$3.46.35

#4946
மாறு கொள் மனத்தினர் வதன நோக்கி நின்று
ஏறு கோளரி இவன் ஆர் என்று ஓதிட
கூறினர் புலரியில் தொடுத்து கொற்ற வெவ்
வீறு உடை வில் குனித்து அடர்ந்து விட்டனன்

மேல்
$3.46.36

#4947
விட்ட அ கணைகளால் மெலிந்து மன்னவர்
பட்டனர் அறுவர் அ பறந்தலையின் மேல்
மட்டிலா காயத்தின் வதைக்கின்றார் அவர்
தொட்டு அணி கலன்களும் தொடர்ந்து பற்றினான்

மேல்
$3.46.37

#4948
வீரரை வீழ்த்தி அ நிரையும் கொண்டு இவண்
தார் பெறும் எமரையும் தடிய என்று வந்து
ஏர் பெறு கூற்று என இருக்கின்றான் இவன்
சீர் பெறு திறலினை செப்ப வல்லதோ

மேல்
$3.46.38

#4949
சொற்ற சொல் அனைத்தையும் கேட்டு தோம் அற
இற்றையின் நான்குபேர் எழும் அன்னோன்-தனை
பற்றி இவ்வுழை புகபடுத்துவேன் என்றான்
அற்றம் இல் நால்வரோடு அவனும் எய்தினான்

மேல்
$3.46.39

#4950
ஈங்கு இவர் ஐவரும் எய்தும் காலையில்
வாங்கிய சிலையினார் வாய் திறந்து நின்று
ஏங்கிய மனத்தினீர் என்னை யார் என
தாங்கினிர் என்றனர் தவத்தின் மேலுளார்

மேல்
$3.46.40

#4951
கடல் நிலம் புரந்திட வந்த காவல
திடமுற அறிகிலோம் செப்புவீர் என்றார்
மடமை சேர் மனத்தினர் வதனம் நோக்கியே
தொடை கமழ் புயத்தினர் சொல்லல் உற்றனர்

மேல்
$3.46.41

#4952
அருள் கடம் பூண்டவர்க்கு அன்பர் ஆகிய
மரு கமழ் புயத்து அசுகாபிமார்களில்
திருக்கு அறும் பெயர் சல்மா என்னும் தீரன் யான்
தருக்கு உறும் அக்வகு தந்த சீயமே

மேல்
$3.46.42

#4953
குடை நிழல் கொண்டற்கு உள்ளே வீற்றிடும் கொற்றவர்க்கே
அடிகளா வலம் கொடுத்த ஆண்டவன் ஆணை நுங்கள்
உடல் செறி உயிரை எல்லாம் ஓட்டுவன் கணை ஒன்றாலே
நடம் உடை பரிகள் தாவி நடத்தினும் பிடிக்க மாட்டீர்

மேல்
$3.46.43

#4954
இன்னலுற்று உளம் மிகுந்த பசியினால் இடைந்ததாலே
கல் நவில் புயத்தீர் பாவம் புண்ணியம் கருத்தில் எண்ணி
நென்னலில் அடும் கஞ்சத்தை நுகர்ந்திட நேர்ந்தேனல்லால்
செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால்

மேல்
$3.46.44

#4955
வஞ்சமும் விள்ளலும் வளரும் பாவமும்
நெஞ்சகம் மாட்டியே நேரும் ஐவரும்
அஞ்சல் இலா உரைக்கு அஞ்சி பிண்டி சேர்
கஞ்சம் உண்டு ஆர்த்திடும் கயவர் சேர்ந்தனர்

மேல்
$3.46.45

#4956
சிலை பொருது அகன்ற தோள் சிங்க ஏறு அன்னார்
கலை நிலா தவழும் கந்தரத்து எருத்தினில்
மலைவு அற மனம் மகிழ்ந்து இருக்கும் ஏல்வையில்
நிலைபெறு மனத்தவர் செயல் நிகழ்த்துவாம்

மேல்
$3.46.46

#4957
பணி தலை மீதில் கிடந்த பார் அனைத்தும் பணிந்திட எழு மதீனாவின்
மணி குடம் துரந்த வாங்கு வில் தடம் தோள் வய அசுகாபிகள் சூழ
துணித்து இருள் துரக்கும் கதிர் எழும் மேனி தூயவர் இருக்கும் காலையினில்
அணித்து இறபாகு வந்தனர் அடி கீழ் பணிந்தனர் அகம் மிக மகிழ்ந்தே

மேல்
$3.46.47

#4958
இரு நிலம் அளக்கும் ஒரு தனி செங்கோல் இறையவன் தூதினை நோக்கி
பொரு திறல் கத்பான் கூட்ட நாற்பதின்மர் புகுந்து காபாவினை வளைந்து
வரு விறல் தொறுவன் தலை-தனை வீழ்த்தி ஆன் நிரை அனைத்தையும் வௌவி
தரு திரை கடல் போல் ஏகினர் என்று சாற்றினர் பவள வாய் திறந்தே

மேல்
$3.46.48

#4959
உலகம் மீக்கூறும் பெரும் புகழ் குரிசில் உள்ளகம் புழுங்கிட நக்கி
மலை எனும் புயங்கள் இனிது எழுந்து ஓங்க வரு படைக்கலன் எடுத்து அணிந்து
முலை திகழ் அயில் வேல் மன்னர்கள் சூழ்ந்து மொய்த்திட பரியின் மீது ஏறி
பலபல இயங்கள் முழங்கிட நடந்து போயினர் பயம் மழை நிழற்ற

மேல்
$3.46.49

#4960
ஏடு அலர் மாலை புயம் கிடந்து இலங்க எழில் நபி சகுதினை நோக்கி
தேட அரும் பரியும் நீரும் முன் அணியாய் திரண்டு எழுந்து ஒல்லையில் சென்று
கோடு கொண்டு எழுந்த நெடு வரை குடுமி இடங்களும் பலபல குறுகி
நேடிய நிரைகள் அனைத்தையும் மீட்டு வம் என நிகழ்த்தினர் அன்றே

மேல்
$3.46.50

#4961
கடல் கொள குறைந்த கண் அகன் ஞாலம் காத்திடும் முகம்மதை போற்றி
பட அரவு உலகம் இடிபட தாவும் பரிகளும் தானையும் செறிய
அடல் செறி வீரர் சகுது வெம் பரியை நடத்தினர் அதற்கு முன் விரைந்து
வட_வரை பிதிர்ந்து தூள் எழ தாவும் வாம் பரி அகுசம் போயினரால்

மேல்
$3.46.51

#4962
கலி இருள் உடைத்த வேல் கை காவலர் சல்மா என்போர்
அலை என வரும் பதாதி கண்டு பின் ஆர பாரித்து
உலைவு அற மனம் மகிழ்ந்தார் ஒண் திறல் அகுசம் என்னும்
புலி அதிர் உருமின் சீறி எய்தினர் புயங்கள் ஓங்க

மேல்
$3.46.52

#4963
அரிகள் மேல் தூசிபோட்டு அங்கு அட எழும் போதில் சல்மா
வரி பொரு வயமா என்ன மகிழ்ந்து எழுந்து ஓடி வந்து
பரியினை பிடித்துக்கொண்டு பற்றலர் மீதில் சென்றே
ஒருவரா அடர்ந்து புக்குற்று உடற்றுதல் அரியதாமால்

மேல்
$3.46.53

#4964
புனை மயிர் புரவி மீதில் போந்திடும் மள்ளர்-தம்மில்
கனை கழல் வீரர் மிக்கு கணிப்பிலர் அதனினாலே
அனையவரிடத்தில் சேறல் அன்று என உரைத்தது என்றார்
நனை மலர் செறிந்த திண் தோள் நரபதி உளம் மகிழ்ந்தே

மேல்
$3.46.54

#4965
அடு சமர்க்கு இடியேறு அன்ன அடல் சல்மா வதனம் நோக்கி
நடுநிலை நின்ற நாயன் ஆணை நீர் விலக்கல் அன்று ஏன்று
இடு கழல் அகுசம் என்போர் இயம்பிட அதனை கேட்டு
வடிவு உடை வேல் கை வீரர் வாசியை விட்டார் அன்றே

மேல்
$3.46.55

#4966
கூற்றொடு பொரு திறல் கொற்ற வீரர் மேல்
காற்று என சுழலும் வாம் பரி கடாவி வந்து
ஏற்று உரும் என சமர் இயையும் காலையில்
சாற்று அபுதுற் றகுமானும் சார்ந்தனன்

மேல்
$3.46.56

#4967
வட_வரை துகள் எழ நடத்தும் வாம் பரி
புடையினில் செறிந்திட பொடிபடும் துகள்
படலையில் கதிரவன் மறைய பார் அரா
உடல் நெளிநெளிய வந்து உருமின் சீறினான்

மேல்
$3.46.57

#4968
சீறி வாய் மடித்து இதழ் கவ்வி செம் கரம்
ஊறு எழ பிசைந்து வாள் ஓங்கி வீசினான்
ஏறு அரி என வரும் அகுசம் என்பவர்
வீறு எழ வாளினால் ஒட்டி வீசினார்

மேல்
$3.46.58

#4969
வீசலும் கிடுகினால் எற்றிவிட்டு எழும்
ஆசையும் திசைகளும் அதிர ஆர்த்திடும்
தூசியை நடத்தினன் சுற்றி வாள் எறிந்து
ஏசினன் நவை அகன் இகலும் சிந்தையான்

மேல்
$3.46.59

#4970
வட்ட ஒண் கிடுகினால் தாங்கி மன்னவர்
விட்டனர் தண்டம் ஒன்று ஏந்தி வீழ்ந்திட
தட்டு அலகு-அதனினால் தாங்கி வெய்யவன்
மட்டறும் படைகள் யாவையும் வழங்கினான்

மேல்
$3.46.60

#4971
எறிந்த அ படைகள் எல்லாம் இடும் கிடுகு-அதனால் வீழ்த்தி
செறிந்திடும் வாள் கொண்டு ஓங்கி வெட்டினர் பரியின் சென்னி
தறிந்திட வீழ்ந்து எழுந்த பாதகன் தட கை வாளால்
இறந்திட புயத்தின் மீது தாக்கினன் எருவை கால

மேல்
$3.46.61

#4972
திறல் உடை அகுசம் என்னும் செம்மல் வீழ்ந்து இறந்த போழ்தில்
கறுழ் வய பரியை வௌவி ஏறினன் பரி கடாவி
விறல் உடை அபூகு தாதா என்னும் அ வீரர் வந்து
மறம் உடை கயவன்-தன்னை வீழ்த்தினர் ஒருங்கு வாளால்

மேல்
$3.46.62

#4973
மடம் அபுதுற் றகுமான் இறந்திட
கட கரி நிகர் சல்மா என்னும் காவலர்
புடையினில் செறிந்திடும் புரவி மீதினில்
தொடை தொடுத்து ஆர்த்தனர் தொடர்ந்து பற்றியே

மேல்
$3.46.63

#4974
தனு உமிழ் சரத்தினால் தடியும் காலையில்
நனை மலர் அபூகு தாதா நயந்து பின்
மனம் மகிழ்தர அவையிடத்தின் வைகினார்
கனை கழலினர் சல்மா காலின் ஏகினார்

மேல்
$3.46.64

#4975
விரைவொடும் எழுந்து வில் குனித்து பின்தொடர்ந்து
இரை உரும் என சினந்து எய்யும் அம்பு எலாம்
பரர் உரம் மீதினில் படிய விட்டனர்
வரி அளி முரல் அறா மலர் புயத்தினார்

மேல்
$3.46.65

#4976
ஆயிரம் செம் கதிர் பருதி ஆதவன்
சாயை மேல் சாய்தருமளவும் பின்தொடர்ந்து
ஓய்வு இலா பகழி தொட்டு ஒருமித்து ஆர்த்திட
காய் மன காபிர்கள் கலைந்து உடைந்தனர்

மேல்
$3.46.66

#4977
வாள் திறல் வீரரும் வாம் பரி திரள்
கூட்டமும் விரைந்து போய் கோத்திரை-கணின்
பாட்டு உறை இலஞ்சியுள் படிந்த ஊற்றிடை
நாட்டமுற்று உறைந்தனர் நாரம் ஆர்ந்திட

மேல்
$3.46.67

#4978
மடுவினில் கமலம் மொண்டு அருந்தும் எல்வையில்
கட தட களிறு எனும் காளை பின்தொடர்ந்து
இடி படு மழை பொழிந்து என்ன எய்தனர்
அடு சரம் புயங்களில் அழுந்தி தைக்கவே

மேல்
$3.46.68

#4979
ஈரம் இல் மனத்தவர் இடைந்து புட்கரம்
ஆர்தல் இல்லாமையால் அற தவித்து அலைந்து
ஏர் கொள் வாம் பரியினோடு ஏகி ஓர் மலை
சார்புறு கடவையில் சார்ந்திட்டார்களால்

மேல்
$3.46.69

#4980
அரி என பின்தொடர்ந்து ஆண்டு ஓர் வீரன்-தன்
வரை புயம் கிழிதர வாளி எய்தலும்
வெருவி ஈர் அத்திரி விடுத்திட்டு ஏகினன்
வர நில காளையும் வௌவினார் அரோ

மேல்
$3.46.70

#4981
தெள்ளிய விறல் மன சிங்க ஏறு அனார்
எள்ள அரும் இடைவையின் இருத்தல் தீது என
விள்ள அரும் மனத்தொடும் மீளும் எல்வையின்
அள்ளு இலை வேலின் ஆமிறு வந்தார் அரோ

மேல்
$3.46.71

#4982
சிறியதந்தையர் எனும் செம்மல் அன்புடன்
நறை பய துருத்தி ஒன்றன்றி நானில
துறவியில் ஊறு நீர் துருத்தி ஒன்றுமா
நிறைவுற கொடுத்தனர் உரிய நீர்மையால்

மேல்
$3.46.72

#4983
ஆன்று இரு கரத்தினர் ஆமிறு அன்பு உற
ஊன்றிய சலிலத்தின் உலுவும் செய்து பின்
தேன் தரு பயசினை சிறப்பின் உண்டனர்
மான் திகழ் புய சல்மா என்னும் அன்னரே

மேல்
$3.46.73

#4984
மால் அளித்திடும் பசியினை போக்கி மாற்றலரோடு
ஓலமிட்டு எதிர் உடன்றிடும் உவளக்கத்து உழையில்
சீலமுற்றவர் வந்தனர் வந்தனர் திரு செங்
கோல் உயர்த்தி மண் நிலம் புரந்து அளித்திடும் கோமான்

மேல்
$3.46.74

#4985
சூல் முகில் குடை நிழற்றிட சுற்றி எம்மருங்கும்
மான்மதம் கமழ்ந்திட மறை வானவர் வாழ்த்த
சேனை வீரர்களொடும் செறிந்து எய்தும் அ போதில்
ஊன் நிறைந்திடும் வேல் சல்மா வந்தனர் உவந்தே

மேல்
$3.46.75

#4986
கந்தம் முங்கிய வரை புய வானவர் களித்து
சிந்தை கூர்தர போற்றிய நாயகர் திருமுன்
வந்து செம் மலர் அடி இணை இறைஞ்சி வவ்வியதை
முந்த விட்டனர் துதித்தனர் முறைமுறை வாழ்த்தி

மேல்
$3.46.76

#4987
குட வயிறு உளைந்து கூப்பிடும் பேழ் வாய் கூன் பிடர் சுரிமுக சங்கம்
மடல் அவிழ் முளரி பொகுட்டினில் உயிர்த்த மணியினை பவள வாய் அன்னம்
திடமுற சினை என்று இறையினால் அணைத்து திளைத்து அடைகிடக்கும் பல்வல-பால்
நடம் உடை கவன பரி புடை சூழ வதிந்தனர் நபி முகம்மதுவே

மேல்
$3.46.77

#4988
சே உயர் கடவுள் நாவலின் நிழல் கீழ் சிறப்புடன் சக_மகள் உவந்து
பாய் இருள் படம் போர்த்து உறைந்து கண்வளர படர் திரை குட திசை புகுந்தான்
மாய் இருள் குடம்பை சீத்து விட்டெறியும் வாள் மதி வெண் திரை முகட்டின்
ஆயிரம் அபிதானம் உடை குரிசில் ஆனனம் போல் உதித்ததுவே

மேல்
$3.46.78

#4989
முயல் அடைகிடக்கும் பால் நிலா மதி முன்னீர் அகட்டிடை உதித்து உலவி
புயல் செறிந்து ஏகா வியோமம் மீது எழுந்தான் புடை உடு கணம் பல மிளிர
கயவு உடை கமலம் திளைத்திடும் படு கா கடையினில் கலித்து எழும் வனசம்
செயிருற குவிய பானலம் விரிய திகழ்ந்தது அந்தரத்திடை செறிந்தே

மேல்
$3.46.79

#4990
மாற்றலர் அஞ்ச விறல் புரி சல்மா வவ்வி முன் கொணர்ந்தவை-தன்னில்
ஊற்றம் மிக்கு உளது ஓர் ஒட்டகை-அதனை உவப்பொடு பிலால் இனிது அறுத்து
தோற்றிய ஈரல் திணி பிடர் தசைகள் சுட்டு இனிது அளித்தனர் புகழின்
ஆற்றல்சால் வரிசை நபி நயினாரும் அருந்தினர் அகம் மிக மகிழ்ந்தார்

மேல்
$3.46.80

#4991
மற்றுளது எவையும் பலபல விதத்தில் சமைத்தனர் மனம் உற அருந்தி
துற்றிய மகிழ்வின் யாவரும் இருந்தார் துதி தரு முகம்மது நயினார்
நல் துறை விளக்கும் எழில் முகம் நோக்கி நனி புகழ் ஆரண கடலே
கற்றவர்க்கு ஆக்கம் தரும் பெரும் தவமே என்று எதிர் கழறுவர் சல்மா

மேல்
$3.46.81

#4992
மாண்டல் இல் அமரரும் வாவும் வாசியும்
சேண்-தனில் இறத்தல் இல் இறந்த காவதம்
ஆண்டு அகை ஆறு உண்டு ஓர் அகலுள் சேர்ந்தனர்
பாண் தரும் அளி இனம் படரும் மாலையீர்

மேல்
$3.46.82

#4993
திசை களிறு எருத்தில் வீற்றிருக்கும் சே_இழைக்கு
இசை கலன் என வரும் மதீனத்து இன் உறை
குசை பரி கொற்றவ நூறுபேருடன்
இசைத்து எனை விட்டிரால் அவர் பின் ஏகியே

மேல்
$3.46.83

#4994
வல்லையில் சென்று போய் வளைந்து மாற்றலர்
பல்லண பரிகள் இ படியில் வீழ்ந்திட
கொல் உலை வேலினால் கோறல் செய்து யான்
ஒல்லையில் அடைகுவன் உண்மை ஈது என்றார்

மேல்
$3.46.84

#4995
மறை வளம் பழுத்த நா வள்ளல் வால் எயிறு
இறை ஒளி இருள் அற இலங்க மூரல்செய்து
உறு பரி வீரர் மேல் சேறியோ என
அறைதர விறல் சல்மா அழகு இது எற்கு என்றார்

மேல்
$3.46.85

#4996
சொற்றிடு முறையினை கேட்டு தூய்மையின்
நல் தவம் உடைமையாய் நன்று நன்று நின்
வெற்றியும் வீரமும் விளம்ப அரீது என
முற்றிய தவத்தினர் மொழிந்திட்டார் அரோ

மேல்
$3.46.86

#4997
கோர வாம் பரி மேல் செல்லும் கொற்றவர்-தம்மில் மிக்க
வீரராம் அபூகு தாதா விறல் உடை வயவர்-தம்மில்
தார் உடை சல்மா என்னும் தலைவர் இ இருவர்க்கு ஒப்பா
பாரினில் இல்லை என்று பகர்ந்தனர் முகம்மது அன்றே

மேல்
$3.46.87

#4998
சேனையும் பரியின் மன்னரும் திண் தோள் செம்மலும் துயின்றனர் செறிந்த
மா நிலம் மீதில் உதித்த பல் உயிரும் துயின்றிட எழு பரி வாவி
பானு விண் ஏக திரை கடல் உடுத்த பார்_மகள் விழித்தனள் விழித்து
கோல் நெறி தவறா குரிசிலும் எழுந்தார் குரை கடல் சேனையும் எழுந்த

மேல்
$3.46.88

#4999
பற்றலர் போட்டு இறந்த படைக்கலன் பரிகள் யாவும்
வெற்றி கொள் வீரர் வௌவி விரைந்து முன் கொணர்ந்து அளிக்க
கற்றை வால் பாய்மாக்காரன் பங்கும் ஓர் காலாள் பங்கும்
கொற்ற வேல் சல்மாவுக்கு கொடுத்தனர் பிரியமாகி

மேல்
$3.46.89

#5000
ஆள் திறல் வீரர்க்கு எல்லாம் அருளி அச்சுவம் மீது ஏறி
வாள் திறல் சல்மா என்னும் மன்னரை பிறகே வைத்து
பூட்டு செம் சிலை கை வள்ளல் நடத்தினர் புயங்கள் விம்ம
நாட்டிய அரிதம் எல்லாம் கமழ்ந்தன நான வாசம்

மேல்
$3.46.90

#5001
உய் வண்ணம் அறியா காபிர் உரம் பறை கொட்ட ஆர்த்து
பெய் முகில் இடித்தது என்ன பேரிகை முழங்கி ஓங்க
வையக மடந்தை ஏறு மத களிறு எருத்தம் சாய
கொய் சுவல் பரிகள் செல்ல நடந்தது பதாதி கூட்டம்

மேல்
$3.46.91

#5002
பணை மருப்பு இரட்டை வேழ பகடு தொண்டலத்தில் நீண்ட
கணியருப்படை முறித்து கயமுனி திரளுக்கு ஈந்து
பிணையினை அணைத்து சென்று பிலம் படு நிகுஞ்சம் வீழ்த்தி
அணைவுற புணரும் சாரல் அரு வரை இடமும் கண்டார்

மேல்
$3.46.92

#5003
அலங்கு உளை உரல் வாய் கவை அடி கேழல் அருவி நீராடிடும் இடமும்
வலம் பட எழுந்த நெடு மயிர் கவரி பிணா மடு சுரை திறந்து அமுதம்
நிலம் பட தார தகடு என விளங்கும் நெடு வரை இடங்களும் குறுகி
சலம் புரி மந்தி தாவ அறியாத தரு இடங்களும் பல கடந்தார்

மேல்
$3.46.93

#5004
கலை கறித்து அருந்தும் மௌவலும் குருந்தும் கடுக்கையும் செறிந்திடும் நிழல் கீழ்
நிலைபெறாது அலையும் நெற்றி வெண் சுட்டி குருளையும் நெருநல் ஈன்று உலவும்
முலை மறா பறழும் புனிற்று இளம் கன்றும் மோட்டு இள மேதியும் கமம் சூல்
அலைவு உற கிடந்து மறிந்து உளைந்து அலறும் மான் இனம் பலவும் கண்டனரால்

மேல்
$3.46.94

#5005
உழை அதள் பள்ளி அணை மிசை பயில உவலையின் படல் கதவு அடைக்கும்
மழை பொரு கூந்தல் வால் தயிர் உடைத்த மத்தினால் உடைபடும் திவலை
இழை படு மார்பில் செறிந்திட தரள வடம் கிடந்து இலங்குவ போன்றும்
தழை படு குரம்பை முலை நிலம் கடந்து போயினர் சலதர குடையார்

மேல்
$3.46.95

#5006
ஊற்று நீர் வறந்த சேற்று நீர் கூவல் உடை இடத்து உழை இனம் மறுகி
நாற்றிடும் நாவால் அசும்பினை நக்க நறும் துளி ஒன்று இலாது எழுந்து
காற்று உருத்து எறியும் கடும் தழல் கானத்திடை விடர் கான்று எழும் புகையை
தோற்று நீர் என பாய்ந்து உலவியே திரியும் சுரங்களும் கடந்தனர் தோன்றல்

மேல்
$3.46.96

#5007
இரும்பினை வடித்த மோட்டு உடல் எருமை இரும் கருங்குவளை அம் கறித்து
கரும் பிணர் என கால் பெயர்த்து காய்த்து இறைஞ்சும் கதிர் உடை சாலியை உழக்கி
அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில
சுரும்பு இனம் கடைவாய் தவழ்ந்து பண் அலம்பி சூழ்ந்திடும் கழனியும் கண்டார்

மேல்
$3.46.97

#5008
இருள் பட கவிந்து கொண்டல்கள் தூங்கும் இள மர சோலையில் நீங்கா
கருவிள மலர் கள் கலாப மேகாரம் களித்து நின்று ஆடிட மாவின்
வரும் குயில் குடைந்து தளிரினை கறித்து மழலை வாய் மிழற்றிட விசையில்
திரு மகவு அகலாது அகடு உற மந்தி சிரகம்பம் செய்வதும் கண்டார்

மேல்
$3.46.98

#5009
வெண் நிற பேழ் வாய் கருமுகை சங்கம் விளைந்த சூல் முதிர்ந்து உளைந்து அலறி
பண் உற புலம்பும் மணி இனம் உயிர்த்த பங்கய அகழி நீர் உடுத்து
கண் அகன் ஞாலம் ஒருங்கு ஒரு புடையில் கவின் உற அமைத்து வானவர்கள்
எண்ணுற நிவந்த புரிசை சூழ் மதீனத்து ஏகினர் இடு முகில் கவிப்ப

மேல்
$3.46.99

#5010
இரு விசும்பு ஊர வலம் சுழன்று ஏகும் எழு பரி பருதி கண்டு ஏங்கி
வெருவுறும் வங்கூழ் ஆட்டிட நுடங்கும் வெண் கொடி மாடமும் சிறந்து
வரும் மலை மழலை சிறுவரின் நெடும் தேர் குழித்திடும் மணி மறுகிடமும்
கரு முகில் அகலா சுடு நிலத்து அமைத்த சாலையும் பலபல கடந்தார்

மேல்
$3.46.100

#5011
சொற்பொருள் சிதகா பாயிரம் பாகை சுருதி நூல் வல்லவர்-தம்பால்
கற்பவர் ஓதும் நனி அறச்சாலை கடைத்தலை மறுகையும் கடந்து
வில் பொதி தவள வெண் நிலா மணியால் வியன் உற திருத்திய றவுலா
வில் புகுந்து இருந்தார் இமையவர் பணி கேட்டு இறைஞ்சிட வரும் இறசூலே

மேல்

47 உறனிக்கூட்டத்தார் படலம்

$3.47.1

#5012
மறை விளையாடி நா தழும்பேறும் முகம்மது ஆண்டு இருக்கும் அ நாளில்
குறை படும் உறனி கூட்டத்தில் எண்மர் வந்தனர் குணமுடன் ஏகி
அறை கழல் அரசர் பணி பதாம்புயத்தில் அழுந்திட சிரசினை வைத்து
நிறைவற கலிமாவினை பகர்ந்து இருந்தார் நிறை அழல் புகுதும் நீர்மையினார்

மேல்
$3.47.2

#5013
கடை அளந்து அறியார் பெரு நகர்-அதனில் இருந்திடும் காலையில் சிறந்த
உடல் தடுமாற பருவரல் நோய் வந்து அடைந்திட உடைந்தனர் பெரிதாய்
பட அரவு உலகம் பொதுவற புரந்த பார்த்திவர் எண்மரை நோக்கி
மடை செறி மறை நால் அலம்பு செம் நாவால் மகிழ்வொடும் பார்த்து அருளினரால்

மேல்
$3.47.3

#5014
வரி நெடுங்கழுத்தன் நீரும் மருந்து எனும் அதனின் பாலும்
புரை அற அருந்தினீரேல் யாக்கையில் பொறுத்து தோன்றும்
பருவரல் அணங்கு நீங்கி படிவம் ஆர்ந்து உறைவிர் என்ன
சுருதி நூல் மறாத நாவால் சொற்றனர் அவர்கட்கு அன்றே

மேல்
$3.47.4

#5015
தொடு கடல் ஞாலம் முழுதும் ஓர் புயத்தில் பரித்திடும் தோன்றலை நோக்கி
பிடர் செறி மதத்த வரி நெடுங்கழுத்தன் மடியினில் பிலற்றிய பாலும்
முடை செறி நீரும் அருந்திட கிடையாது என மொழிந்தனர் அரும் பாவம்
அடைகிடந்து இருண்ட கொடிய புன் மனத்தராகிய எண்மரும் அன்றே

மேல்
$3.47.5

#5016
கறை குடியிருந்து புலால் வெறி கமழும் கவர் இலை வேல் உடை குரிசில்
நிறை பொறை அறியா கயவரை நோக்கி நிகழ்த்துதற்கு அரிய சக்காத்தின்
தொறு அமர்ந்து உறையும் அவண் இடம் மேவி தோன்றிடும் பிணி இன்னல் தவிர
உறை பசும் பாலும் உவர் படு நீரும் உண்டிட போதிர் என்று உரைத்தார்

மேல்
$3.47.6

#5017
மணி முடி இடறி வடு இருந்து ஒளிரும் மலர் கழல் இறைஞ்சி முள் செறிந்து
பணர் விரிந்து எழுந்த பாதவ கடத்துள் நிறைந்திடும் தொறுவிடம் உறைந்து
நிணம் உவர் கிடந்து முடை வெடி நாறும் நீருடன் பாலும் உண்டிட வெம்
பிணியொடும் மிடியும் உடைந்தன தேகம் பெருத்து இனிது இருக்கும் அ நாளில்

மேல்
$3.47.7

#5018
உடை திரை கடல் கான்று எழுந்த வெவ் விடம் போல் உரு எடுத்திடும் வய வீரர்
கடையுகமளவும் நின்றிடும் மறை நேர் கடந்து புன் குபிரினை தொடர்ந்து அங்கு
அடை உடைத்து எறியும் கோல் உடை தொறுவர் அனைவரும் மெலிதர வீழ்த்தி
நடை படிந்திடும் கால் தொறு கணம் கவர்ந்து போயினர் நரகு இருள் புகுவார்

மேல்
$3.47.8

#5019
தரும் மறை வேத மொழி செவி அறியா தறுகணர் கொடியவர் நாளும்
இருள் உறும் உறனி கூட்டத்தார் எண்மர் இயற்றிடும் பாதகம் அனைத்தும்
வரி அளி அலம்பும் மலர் தொடை வேய்ந்த மணி குடம் துரந்த தோள் செம்மல்
திரு மலர் அடியின் வீழ்ந்து வாய் புதைத்து செப்பினன் தொறுவரில் ஒருவன்

மேல்
$3.47.9

#5020
கலி புறம் துரக்கு ஒரு தனி கோலால் காத்திடும் நபி உளம் வெதும்பி
மலை என வளர்ந்த உலம் பொரு திண் தோள் மன்னவர் மதி முகம் நோக்கி
நிலையிலா உறனி கூட்டத்தார் என்னும் நீசரை பிடித்து வம் என்ன
ஒலி குரல் பேழ் வாய் மடங்கல் ஏறு என்ன உவந்து எழுந்தனர் சில வீரர்

மேல்
$3.47.10

#5021
வரை தட திண் தோள் முகம்மது கமல மலர் அடி இணையினை இறைஞ்சி
இரைத்திடும் கழல் கால் பூட்டினர் கவசம் இட்டனர் தொட்டனர் தொடுதோல்
நிறைத்த வில் கதிர் வாள் கணை கவண் சூலம் நேமி தோமரம் மழு தாங்கி
விரைத்து அவண் ஏகி வளைந்தனர் நிரையை மீட்டனர் எண்மரும் வெருவ

மேல்
$3.47.11

#5022
தாக்கினர் கரத்தை பின் உற பிணித்து தளர்வு அற கயிற்றினால் இறுக்கி
வீக்கினர் நடத்தி தொறு கணம் சாய்த்து விரி தலை பொரி அரை கானம்
நீக்கினர் வேலை அறல் அற பருகும் நிழல் மழை தவழ் கொடி நுடங்கு
கோ கடை மறுகும் கடந்து மா மதம் ஆர் குரு நபி மலர் அடி தொழுதார்

மேல்
$3.47.12

#5023
அருள் கடம் பூண்ட மலர் விழி குரிசில் அடி தொழும் மன்னரை நோக்கி
மரு கமழ் புயத்தீர் அற நிலை தவறும் வன்கணர்க்கு ஆக்கினை என் என
உரைத்தனர் காலை இறையவன் அருளால் உயர் நிலை இழிந்து வானவர்_கோன்
தரை தலத்து இறங்கி ஆயத்து ஒன்று உரைத்து சார்ந்தனர் நபி உளம் மகிழ

மேல்
$3.47.13

#5024
வீறு பெற்று உயர்ந்த ஆயத்தின் பொருளை விரித்து எடுத்து யாவர்க்கும் இயம்பி
மாறு கொண்டு எழுந்த கள்வர் எண்மரையும் வருந்திட கால் கரம் மாறாய்
கோறல் செய்திடு-மின் என்றனர் அறு_கால் குளித்திடும் மிதித்தலில் பிதிர்ந்து
தேறல் கொப்பிளிக்கும் நறு மலர் தெரியல் செம்மல் செம் மறை தவழ் வாயால்

மேல்
$3.47.14

#5025
சுணங்கு அணி கரும் கண் தட முலை உமிழும் துணை வரை புயத்தினர் கொடுபோய்
மணம் கெழு முரசம் முழங்கிடும் மதீன மா நகர் புறத்தினில் இருத்த
நிணம் கமழ் கருவி குரம்பைகள் சுமந்த மஞ்சிகன் நிழல் விரிந்து இலங்கும்
கணம் செறி கத்தி ஒன்றினை எடுத்து தீட்டினன் கனல் பொறி தெறிப்ப

மேல்
$3.47.15

#5026
பிறை என வளைந்த சாணையில் தீட்டி பெரும் சுவப்பிரமம் வீழ்ந்து உலவும்
கறை படும் கயவர் எண்மர் முன் இருந்து கால் கரம் பொருத்தினை அசைத்து
குறி வரை கோலி கதிர் விசித்து இலகும் கூன் செறி வாளினால் ஈர்ந்தான்
தறை இடம் நனைந்து சேறு எழ செந்நீர் ததும்பிட புலால் முடை கமழ

மேல்
$3.47.16

#5027
கால் கரம் மாறாய் ஈர்ந்திட வீழ்ந்து புலம்பினர் கதறினர் தேகம்
மேல் படு பரற்கல் அழுந்திட உருண்டு விம்மினர் பதறினர் விழி நீர்
சூல் படு மேகம் பொழிந்தன என்ன சொரிந்தனர் வாய் வெரீஇயினர் நல்
சீலமும் அறனும் தேய்த்து எறி தறுகண் தீமை செய் கொடும் கொலை மனத்தார்

மேல்
$3.47.17

#5028
கொலைபடும் உறனி கூட்டத்தில் உறைந்த கொடியவர் எண்மரை கொடுபோய்
அலை ஒலி என்ன சிதடிகை அலம்பும் அற்றா எனும் காட்டினுள் படுத்தி
இலை வடி வேல் கை வயவர்கள் எழுந்து வந்தனர் அவணிடை கிடந்தோர்
உலைவு உற மயங்கி வீழ்ந்தனர் சிலர் தம் உயிர் உடைந்து இறந்தனர் சிலரே

மேல்