உஞ்சைக் காண்டம், பெருங்கதை

32.கரடு பெயர்த்தது
33.மாலைப் புலம்பல்
34.யாழ் கைவைத்தது
35.நருமதை சம்பந்தம்
36.சாங்கியத்தாயுரை
37.விழாக்கொண்டது
38.விழாவாத்திரை
39.புனற்பாற் பட்டது
40 உவந்தவை காட்டல்
41.நீராட்டரவம்
42.நங்கை நீராடியது
43.ஊர் தீயிட்டது
44.பிடியேற்றியது
45.படைதலைக் கொண்டது
46.உழைச்சன விலாவணை
47.உரிமை விலாவணை
48.மருதநிலம் கடந்தது
49.முல்லைநிலம் கடந்தது
50.குறிஞ்சிநிலம் கடந்தது
51.நருமதை கடந்தது
52. பாலைநிலம் கடந்தது
53.பிடி வீழ்ந்தது
54.வயந்தகன் அகன்றது
55.சவரர் புளிஞர் வளைந்தது
56.வென்றி எய்தியது
57.படைவீடு
58.சயந்தி புக்கது


#32 கரடு பெயர்த்தது
பொருள்_புரி_நூலும்
அலகை சான்ற உலக புராணமும்
பலவகை மரபின் பாசண்டியர்கள்
சலசல மிழற்றும் சமய விகற்பமும்
இசையொடு சிவணிய யாழின் நூலும் 5
நாடக பொருளும்
உப்பால் பொருளும் உட்கொண்டு அடக்கி
உளப்பாடு உடைமை உதயணன் உரைத்தலும்
இனைத்து ஓர் இளமையொடு எனை பல கேள்வியும்

தவத்தது பெருமையில் தங்கின இவற்கு என 10
மருட்கை உற்ற தன் மனம் புரிந்து அருளி
எம்முடை அளவையில் பண்புற பேணி
நுன் பதி பெயர்க்கும் அளவையின் நும்பியர்
நின் வழிப்படுக என மன்னவன் உரையா
குலம் கெழு குமரரை குற்றேவல் அருளி 15
கலந்து அவண் நின்ற கட்டுரை காலத்து
தென் கடல் இட்டது ஓர் திரு மணி வான் கழி
வட கடல் நுக துளை வந்து பட்டாஅங்கு
நனி சேண் இட்ட நாட்டினர் ஆயினும்

பொறை_படு_கருமம் பொய்யாது ஆகலின் 20
சிறை படு விதியில் சென்று அவள் குறுகி
மதியமும் ஞாயிறும் கதி திரிந்து ஓடி
கடல் நிற விசும்பின் உடன் நின்றாங்கு
பைம்_தொடி சுற்றமொடு தந்தை தலைத்தாள்
ஆயத்து இடையோள் பாசிழை பாவை 25
யானை மிசையோன் மா முடி குருசில்
இருவரும் அ வழி பருகுவனர் நிகழ
யாதனில் சிதைந்தது இ அடல் பெரும் களிறு என
வேழ வேட்டம் விதியின் வினாய

கதிர் முடி வேந்தன் கண்ணிய நுண்_பொருட்கு 30
எதிர்_மொழி கொடீஇய எடுத்த சென்னியன்
மன்னவன் முகத்தே மாதரும் நோக்கி
உள்ளமும் நிறையும் தள்ளிட கலங்கி
வண்டு படு கடாஅத்த வலி முறை ஒப்பன
பண்டு கடம்படாஅ பறையினும் கனல்வன 35
விடற்கு_அரும் தெருவினுள் விட்ட செவ்வியுள்
துடக்குவரை நில்லாது தோட்டி நிமிர்ந்து
மத களிறு இரண்டுடன் மண்டி யாஅங்கு
இல் வழி வந்த தம் பெருமை பீடுற

தொல் வழி வயத்து தொடர்வினை தொடர 40
வழு_இல் போகமொடு வரம்பு_இன்று நுகரும்
உழுவல் அன்பின் உள்ளம் தாங்கி
இழையினும் கொடியினும் இடியினும் பிணங்கி
தேனினும் பாலினும் தீம் சுவைத்து ஆகி
குலத்தினும் குணத்தினும் கூடிய அன்பினும் 45
இனத்தினும் பிறவினும் இ வகை இசைந்த
அமைப்ப_அரும் காதலும் இமைப்பினுள் அடக்கி
ஒரு-வயின் போல உள்_அழி நோக்கமொடு
இரு-வயின் ஒத்து அஃது இறந்த பின்னர்

தார் அணி வேந்தன் தலைத்தாள் நிகழ்ந்தது 50
காரணமாக காதல் தேறி
ஓர்ப்புறு நெஞ்சம் தேர்ச்சியில் திருத்தி
பேர்த்து அவன் வினவிய பெரும் களிற்று இலக்கணம்
போர்_தொழில் வேந்தன் முன் பொருந்த காட்டி
நீல யானை நெஞ்சு புக்கனன் போல் 55
சீல விகற்பம் தெரிந்தனன் உரைக்கலும்
அது முன் அடக்கிய மதி அறி பாகரொடு
அங்கை விதிர்த்தாங்கு அரசவை புகழ
பைம்_தொடி சுற்றமொடு பரிசனம் போக்கி

விழு_நிதி அடுத்த கொழு மென் செல்வத்து 60
கணக்கரை வியன் நகர் கல_அறை காக்கும்
திணை தொழிலாளரை புகுத்து-மின் ஈங்கு என
புறங்கால் தாழ்ந்து போர்வை முற்றி
நிலம் தோய்பு உடுத்த நெடு நுண் ஆடையர்
தானை மடக்கா மான மாந்தர் 65
அண்ணாந்து_இயலா ஆன்று புரி அடக்கத்து
கண்ணி நெற்றியர் கைதொழூஉ புகுதர
களிறு வழங்கு தட கையில் காண்வர கொண்ட
வெள்_ஏட்டு அங்கண் வித்தகம் எழுதிய

கடை_எழுத்து ஓலை கணக்கு_வரி காட்டி 70
முன்னுறு கிளவியில் பண்ணுற பணிக்கலும்
பல் மணி விளக்கும் பள்ளி கட்டிலும்
பொன்னின் அடைப்பையும் பூரண கலசமும்
கவரியும் கடகமும் கதிர் முத்து ஆரமும்
நிகர்_இல் மாண் கலம் நிதியொடு நிறைந்த 75
ஆரிய செப்பும் யவன மஞ்சிகையும்
பொன் செய் பேழையொடு பொறி தாழ் நீக்கி
நன்கனம் படுத்து நகு மலர் பரப்பி
விரை விரியாளர் புரைவுற புணர்த்த

பண்டம் புதைத்த வண்டு படு வள நகர் 80
மடையரும் மகளிரும் மல்லரும் அமைச்சரும்
கடையரும் கணக்கரும் காப்பரும் உளப்பட
இறை_வினை திரியா பழவினையாளரை
வழிமுறை மரபில் தம் தொழில் முறை நிறீஇ
வாய்மொழி விதியின் மேவன எல்லாம் 85
நோக்கி மன்ன நுவல்_அரும் காப்பின்
அணிந்தது நகர் என பணிந்து அவர் உரைக்கலும்
குஞ்சர சேரி குமரற்கு இயற்றிய
வெண் சுதை நல் இல் உறையுள் ஆக

இடம் புகுதக்கன்று இருத்தல் நெடிது என 90
பேர் இயல் வையம் பின் செல அருளி
வீரிய வேந்தன் விடுத்து அகம் புக்க பின்
விட்டு உழல் யானை அச்சம் நீக்கி
வெறிகோள் பண்ணியும் தொழில் தலைப்பெயர்த்தவன்
கலிகொள் ஆவணம் கைதொழ போகி 95
அரை_மதி இரும்பொடு கவை முள் கரீஇ
பீலி சுற்றிய வேணு வெண் காழ்
யானை இளையரை தானத்து பிணிக்க என
தகை மலி வேழம் தலைக்கடை இழிதந்து

அகம் புக்கனனால் அரசவை விடுத்து என் 100
*1 உஞ்சைக் காண்டம்

#33 மாலைப் புலம்பல்
அரசவை விடுத்த பின் அணி நகர் முன்னி
தொடர் பூ மாலை கடை பல போகி
அந்த கேணியும் எந்திர கிணறும்
தண் பூங்காவும் தலைத்தோன்று அருவிய
வெண்_சுதை குன்றொடு வேண்டுவ பிறவும் 5
இளையோர்க்கு இயற்றிய விளையாட்டு இடத்த
சித்திர பூமி வித்தகம் நோக்கி
ஒட்டா கிளைஞரை நட்பினுள் கெழீஇய
ஐ_இரு பதின்மர் அரக்கின் இயற்றிய

பொய் இல் அன்ன பொறி இவன் புணர்க்கும் 10
கையும் கூடும் காலம் இது என
ஐயமுற்று மெய் வகை நோக்கி
சிறப்பு உடை மாண் நகர் செல்வம் காண்கம்
உழை சுற்றாளரை புகுத்து-மின் விரைந்து என
தலைக்கூட்டு உபாயமொடு தக்கோன் தெரிந்து 15
முட்டும் முடுக்கும் இட்டு இடைகழியும்
கரப்பு_அறை வீதியும் கள்ள பூமியும்
மரத்தினும் மண்ணினும் மதியோர் புணர்க்கும்
எந்திர மருங்கின் இழுக்கம் இன்மை

அ நிலை மருங்கின் ஆசு_அற நாடி 20
வஞ்சம் இன்மை நெஞ்சில் தேறி
சந்தன வேலி சண்பகத்து இடையது ஓர்
வேங்கையொடு தொடுத்த விளையாட்டு ஊசல்
தூங்குபு மறலும் உழை சிறு சிலதியர்
பாடல் பாணியொடு அளைஇ பல் பொறி 25
ஆடு இயல் மஞ்ஞை அகவ அயலது ஓர்
வெயில் கண் போழா பயில் பூம் பொதும்பில்
சிதர் தொழில் தும்பியொடு மதர் வண்டு மருட்ட
மாதர் இரும் குயில் மணி நிற பேடை

காதல் சேவலை கண்டு கண்களித்து 30
தளி பூம் கொம்பர் விளிப்பது நோக்கியும்
பால் நிற சேவல் பாளையில் பொதிந்து என
கோள் மடல் கமுகின் குறி-வயின் காணாது
பவழ செம் கால் பல் மயிர் எருத்தில்
கவர் குரல் அன்னம் கலங்கல் கண்டும் 35
தனித்து உளம் கவல்வோன் தான் வீழ் மாதர்
மணி கேழ் மாமை மனத்தில் நின்று அலைஇ
புள்ளும் புலம்புறுக்க உள்ளுபு நினைஇ
மன்றல் நாறு ஒரு சிறை நின்ற பாணியுள்

சென்றுசென்று இறைஞ்சிய சினம் தீர் மண்டிலம் 40
சூடுறு பாண்டிலில் சுருங்கிய கதிர்த்தாய்
கோடு உயர் உச்சி குட_மலை குளிப்ப
விலங்கும் பறவையும் வீழ் துணை படர
புலம்பு முத்து உகுத்த புன்மைத்து ஆகி
நிறை கடல் மண்டிலம் நேமி உருட்டி 45
இறை கெழு பெரு விறல் எஞ்சிய பின்றை
கடம் கண் எரிந்த கையர் ஆகி
இடம்-தொறும் பல்கிய மன்னர் போல
வரம்பு_இல் பல் மீன் வயின்வயின் விலங்கி

பரந்து மீது அரும்பிய பசலை வானத்து 50
தலை தேர் தானைக்கு தலைவன் ஆகி
முலை பால் காலத்து முடி முறை எய்தி
குடை வீற்றிருந்த குழவி போல
பொழில் கண் விளக்கும் தொழில் நுகம் பூண்டு
புயல் மாசு கழீஇ புனிற்று நாள் உலவாது 55
வியன் கண் மா நிலம் தாங்க விசும்பு ஊர்ந்து
பைம் தொடி மகளிர் பரவினர் கைதொழ
செம் கோட்டு இளம்பிறை செக்கர் தோன்றி
தூய்மை காட்டும் வாய்மை முற்றாது

மதர்வை ஓர் கதிர் மாடத்து பரத்தர 60
சுடர் வெண் நிலவின் தொழில் பயன் கொண்ட
மிசை நீள் முற்றத்து அசை வளி போழ
விதானித்து படுத்த வெண் கால் அமளி
சேக்கை மகளிர் செஞ்சாந்து புலர்த்தும்
தே கண் அகில் புகை திசை-தொறும் கமழ 65
கன்று கண் காணா முன்றில் போகா
பூ தின் யாக்கை
குரல் வேண்ட கொண்ட
சுரை பொழி தீம் பால் நுரை தெளித்து ஆற்றி

சுடர் பொன் வள்ளத்து மடல் விரல் தாங்கி 70
மதலை மாடத்து மாண் குழை மகளிர்
புதல்வரை மருட்டும் பொய் நொடி பகரவும்
இல் எழு முல்லையொடு மல்லிகை மயங்கி
பெரு மணம் கமழவும் பிடகை பெய்த
வதுவை சூட்டு அணி வண்டு வாய் திறப்பவும் 75
பித்திக கோதை செப்பு வாய் மலரவும்
அறவோர் பள்ளி அந்தி சங்கமும்
மறவோன் சேனை வேழ சங்கமும்
புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும்

மதுக்கோள் மாந்தர் எடுத்த வார்ப்பும் 80
மழை கடல் ஒலியின் மயங்கிய மறுகில்
விளக்கு ஒளி பரந்த வெறி கமழ் கூலத்து
கல கதவு அடைத்து மலர் கடை திறப்பவும்
ஒளிறு வேல் இளையர் தேர் நீறு அளைஇ
களிறு கால் உதைத்த புஞ்ச பூழியொடு 85
மான் துகள் அவிய மது_பலி தூவவும்
தெற்றி முது மரத்து உச்சி சேக்கும்
குரல் அளைஇ
சேக்கை நல் யாழ் செவ்வழி பண்ணி

செறி விரல் பாணியின் அறிவர பாடவும் 90
அகில் நாறு அங்கை சிவப்ப நல்லோர்
துகிலின் வெண் கிழி துய் கடை நிமிடி
உள் இழுது உறீஇய ஒள் அடர் பாண்டில்
திரி தலை கொளீஇ எரிதரு மாலை
வெம் துயர் கண்ணின் வேல் இட்டது போல் 95
வந்து இறுத்தன்றால் வலி எனக்கு இல் என
கையறு குருசிலை வைகியது எழு என
இலங்கு சுடர் விளக்கோடு எதிர்வந்து ஏத்தி
புறங்காப்பு இளையர் புரிந்து அகம் படுப்ப

எண்_நால் இலக்கணத்து நுண் நூல் வாங்கி 100
திணை விதியாளர் இணை_அற வகுத்த
தமனிய கூடத்து தலை அளவு இயன்ற
மயன் விதித்தது அன்ன மணி காழ் மல்லத்து
சித்திர அம்பலம் சேர்ந்து குடக்கு ஓங்கிய
அத்தம் பேரிய அணி நிலை மாடத்து 105
மடை அமைத்து இயற்றிய மணி கால் அமளி
படைஅகத்து ஓங்கிய பல் பூம் சேக்கை
பைதல் நெஞ்சத்து மையல் கொள்ளா
எஃகு ஒழி களிற்றின் வெய்து உயிர்த்து உயங்கி

உண்டு என கேட்டோர் கண்டு இனி தெளிக என 110
திருவின் செய்யோள் உருவம் மெய் தோன்ற
தீட்டு இரும் பலகையில் திருத்தி தேவர்
காட்டி வைத்தது ஓர் கட்டளை போல
கலன் பிற அணிந்து காண்போர் தண்டா
நலம் துறைபோகிய நனி நாள் ஒடுக்கத்து 115
மணி முகிழ்த்து அன்ன மாதர் மென் முலை
தணி முத்து ஒரு காழ் தாழ்ந்த ஆகத்து
இல மலர் செம் வாய் எயிறு விளக்குறுக்க
அலமரு திருமுகத்து அளகத்து அப்பிய

செம்பொன் சுண்ணம் சிதர்ந்த திரு நுதல் 120
பண்பில் காட்டி பருகுவனள் போல
சிதர் மலர் தாமரை செம் தோடு கடுப்ப
மதர் அரி நெடும் கண் வேல் கடை கான்ற
புள்ளி வெம் பனி கரந்த கள்வி-தன்
காரிகை உண்ட என் பேர் இசை ஆண்மை 125
செறுநர் முன்னர் சிறுமை இன்றி
பெறுவென்-கொல் என மறுவந்து மயங்கி
எவ்வம் மிக்கு அவனும் புலம்ப அ வழி
குழவி ஞாயிறு குன்று இவர்வது போல்

மழ களிற்று எருத்தின் மைந்துகொண்டு இருந்த 130
மன்ன_குமரன் தன் எதிர்நோக்கி
ஒழுகுபு சோர்ந்தாங்கு உக்கது என் நெஞ்சு என
மழுகிய திருமுகம் மம்மரோடு இறைஞ்சி
தரு மணல் பேர் இல் தமரொடு புக்கு
திருமணி மாடத்து ஒருசிறை நீங்கி 135
பெரு மதர் மழை கண் வரு பனி அரக்கி
கிளையினும் பிரித்தவன் கேடு தலை எய்தி
தளையினும் பட்டவன் தனியன் என்னான்
வேழம் விலக்கிய யாழொடும் செல்க என

சொன்னோன் ஆணை முன்னர் தோன்றி 140
உர களிறு அடக்குவது ஓர்த்து நின்ற
மரத்தின் இயன்ற-கொல் மன்னவன் கண் என
பைம் தார் தந்தையை நொந்த நோயள்
உள்ளகத்து எழுதரும் அருளினள் ஆகி
தெளிதல் செல்லாள் திண் நிறை அழிந்து 145
பொறி அறு பாவையின் அறிவு_அற கலங்கி
காமன் என்னும் நாமத்தை மறைத்து
வத்தவன் என்னும் நல் பெயர் கொளீஇ
பிறை கோட்டு யானை பிணிப்பதும் அன்றி

நிறை தாழ் பறித்து என் நெஞ்சகம் புகுந்து 150
கள்வன் கொண்ட உள்ளம் இன்னும்
பெறுவென்-கொல் என மறுவந்து மயங்கி
தீயுறு வெண்ணெயின் உருகு நெஞ்சமொடு
மறைந்து அவண் நின்ற மாதரை இறைஞ்சிய
வல் இருள் புதைப்ப செல் சுடர் சுருக்கி 155
வெய்யோன் நீங்கிய வெறுமைத்து ஆகி
கையற வந்த பைதல் மாலை
தீர்ந்து அவள் ஒழிந்த திரு நல் ஆயம்
தேர்ந்தனர் குழீஇ பேர்ந்தனர் வருவோர்

இணை_இல் ஒரு சிறை கணை உளம் கிழிப்ப 160
தனித்து ஒழி பிணையின் நினைப்பனள் நின்ற
எல் ஒளி பாவையை கல்லென சுற்றி
அளகமும் பூணும் நீவி சிறிது நின்
திலக வாள்_நுதல் திருவடி ஒக்கும்
பிறையது காணாய் இறை வளை முன்கை 165
திரு முகை மெல் விரல் கூப்பி நுந்தை
பெரும் பெயர் வாழ்த்தாய் பிணை என்போரும்
செம்பொன் வள்ளத்து தீம் பால் ஊட்டும்
எம் மனை வாராள் என் செய்தனள் என

பைம் கிளி காணாது பயிர்ந்து நின் கூஉம் 170
அம் சொல் பேதாய் அருள் என்போரும்
மதியம் கெடுத்து மா விசும்பு உழிதரும்
தெறுதரு நாகம் நின் திருமுகம் காணில்
செறுதலும் உண்டு இனி எழுக என்போரும்
பிசியும் நொடியும் பிறவும் பயிற்றி 175
நகை வல் ஆயம் நண்ணினர் மருட்டி
முள் எயிறு இலங்கு முறுவல் அடக்கி
சொல் எதிர்கொள்ளாள் மெல்_இயல் இறைஞ்சி
பந்து எறி பூமியுள் பாணி பெயர்ப்புழி

அம் செம் கிண்கிணி அடி அலைத்தன-கொல் 180
திரு கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து
மருப்பு இயல் செப்பும் குரும்பையும் இகலி
உருத்து எழு மென் முலை முத்து அலைத்தன-கொல்
பிணையல் அலைப்ப நுதல் நொந்தது-கொல்
இனையவை இவற்றுள் யாது-கொல் இ நோய் 185
பெரும் கசிவு உடையள் இ பெருந்தகை மகள் என
தவ்வையும் தாயும் தழீஇயினர் கெழீஇ
செவ்வி இலள் என சேர்ந்து அகம் படுப்ப
செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துற

திண் நிலை படுகால் திருந்து அடிக்கு ஏற்ற 190
மணி கலம் ஒலிப்ப மாடம் ஏறி
அணி கால் பவழத்து யவனர் இயற்றிய
மணி காழ் விதானத்து மாலை தொடர்ந்த
தமனியத்து இயன்ற தாமரை பள்ளி
கலன் அணி ஆயம் கைதொழ ஏறி 195
புலம்புகொள் மஞ்ஞையின் புல்லென சாம்பி
புனல் கொல் கரையின் இனைவனள் விம்மி
பாவையும் படரொடு பருவரல் கொள்ள
இருவர் நெஞ்சமும் இடைவிடல் இன்றி

திரிதரல் ஓயாது திகிரியின் சுழல 200
ஊழ்வினை வலிப்பின் அல்லது யாவதும்
சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய்
காம கனல் எரி கொளீஇ யாமம்
தீர்வது போலாது ஆகி திசை திரிந்து
ஈர்வது போல இருளொடு நிற்ப 205
சேர்ந்த பள்ளி சேர் புணை ஆகி
நீந்தி அன்ன நினைப்பினர் ஆகி
முழங்கு கடல் பட்டோர் உழந்து பின் கண்ட
கரை என காலை தோன்றலின் முகையின

பூ கண் மலர புலம்பிய பொய்கை 210
பால் கேழ் அன்னமொடு பல் புள் ஒலிப்ப
பரந்து கண் புதைஇய பாய் இருள் நீங்கி
புலர்ந்தது மாதோ பொழில் தலைப்பெயர்ந்து என்
*1 உஞ்சைக் காண்டம்

#34 யாழ் கைவைத்தது
பொழில் தலைப்பெயர்ந்த புலம்பு கொல் காலை
எழில் மணி விளக்கின் ஏமம் போகி
கலையினும் களியினும் காமுற கவைஇய
மழலை கிண்கிணி மடவோர் மருட்ட
புரிதார் நெடுந்தகை பூ அணை வைகிய 5
திரு வீழ் கட்டில் திறத்துளி காத்த
வல் வேல் சுற்றத்து மெய்ம்முறை கொண்ட
பெயர் வரி வாசனை கேட்ட பின் உயர் திறல்
ஊழின் அல்லது தப்புதல் அறியார்

காலனும் கடியும் நூல் ஒண் காட்சியர் 10
யாக்கை மருங்கின் காப்பு கடம்பூண்டு
அரும்_துறை போகிய பெருந்தகையாளர்
உணர்வும் எளியும் ஊக்கமும் உணர்ச்சியும்
புணர்வின் செல்வமும் போகமும் சிறப்ப
அமிழ்து இயல் யோகத்து அஞ்சனம் வகுத்து 15
கமழ் கொள் பூமியில் கபிலை முன்நிறீஇ
மகடூஉ துறந்த மாசு_அறு படிவத்து
துகள் தீராளர்க்கு துளக்கிய முடியன்
மலர் கண் அளைஇய மந்திர நறு நீர்

பலருடன் வாழ்த்த பண்புளி எய்தி 20
பால் பரந்து அன்ன வால் வெள் விதானத்து
மாலை தொடர்ந்த மங்கல பந்தர்
விரி_நூல் அந்தணர் வெண்_மணை சூழ்ந்த
திரு மணி கட்டில் திறத்துளி எய்தி
அறம் நிலைபெற்ற அருள் கொள் அவையத்து 25
நிறை_நூல் பொத்தக நெடு மணை ஏற்றி
வல்லோர் வகுத்து வாசனை வாக்கியம்
பல்லோர் பகர பயம் பல பருகி
தரும விகற்பமொடு தானை ஏற்பும்

கரும விகற்பமொடு காமமும் கெழீஇய 30
இன்ப கேள்வி இனிது கொண்டு எழீஇ
துன்பம் நீங்கும் தொழில் முறை போக்கி
முடி கெழு மன்னரொடு முற்றவை நீங்கி
கடி பெரும் கோயிலுள் காட்சி விரும்பி
உதயணகுமரனை உழைத்தரல் விரைந்து என 35
உழை_நிலையாளர் ஓடினர் இசைப்ப
இழை அணி இரும் பிடி எருத்தம் ஏறி
கடை அணி ஆவணம் கைதொழ போதந்து
எறி வேல் பெரும் கடை இயைந்தனன் நிற்ப

தருமணல் முற்றத்து தான் எதிர் சென்று 40
திரு மணி அம்பலம் கொண்டு ஒருங்கு ஏறி
இரட்டை தவிசின் இருக்கை காட்டி
இசைக்க வேண்டா இதை உனது இல் என
சிறப்பு உடை கிளவி செவ்விதில் பயிற்றி
தளர் இயல் ஆயமொடு தன் புடை நின்ற 45
பணியோள் பற்றிய பவழ செப்பின்
வாச நறும் திரை வகுத்து முன் நீட்டி
தாமரை அங்கையில் தான் பின் கொண்டு
குறிப்பின் இருக்க குமரன் ஈங்கு என

மடக்கு_இல் மனமொடு மாநகர் புக்கு 50
தான் பயில் வீணை தங்கையும் ஒருத்தி
காண் குறை உடைமையில் கவலும் ஆதலின்
வல்லோர் பெறாது தொல் குறை உழத்தும்
தாயும் யானும் எந்தை ஆதலின்
தீதொடு வரினும் தீர்த்தல் தன் கடன் என 55
மதி ஒண் காட்சி மா முது சிவேதனை
இது நம் குறையா இசைத்தி சென்று என
நல்_வினை அம்பலத்து இருந்த நம்பிக்கு
வல்லிதின் அ குறை உரைத்த பின்னர்

அதற்கு ஓர் உபாயம் அறியாது இருந்தோன் 60
மகள் குறை உணர்ந்து மன்னவன் விடுத்த
திரு மணி வீணை இசைத்தலும் தெருமந்து
ஒரு நிலை-காறும் உள்ளே ஒடுக்கி
விழுப்பமொடு பிறந்த வீறு உயர் தொல் குடி
ஒழுக்கம் காணிய உரைத்ததை ஒன்று-கொல் 65
ஒளி மேம்பட்டனன் ஒன்னான் என்று எனை
அளி மேம்படீஇய எண்ணியது ஒன்று-கொல்
உள்ள மருங்கின் உவத்தது செய்தல்
செல்வ மன்னவன் சீலம்-கொல்லோ

யாது-கொல் மற்று இ ஏந்தல் பணி என 70
நீதி மருங்கின் நினைவு அவன் சூழ்ந்து
யாது எனப்படினும் படுக இவன் பணி
மாதரை காட்டுதல் மங்கலம் எனக்கு என
நெஞ்சு தம் கூறி
அம் சொல் ஆயத்து அன்று யான் கண்ட 75
தாமரை முகத்தி தலைக்கை ஆக
பல் பெரும் தேவியர் பயந்த மகளிருள்
நல் இசை யார்-கொல் நயக்கின்றாள் என
சொல்லினன் வினவும் சுவடு தனக்கு இன்மையின்

யாரே ஆயினும் இவன் மகள் ஒருத்தியை 80
சீர் கெழு வீணை சிறப்பொடு காட்டி
பயிற்சி உள்வழி பல்லோர் வருதலின்
அழித்ததும் ஒரு நாள் அன்று யான் கண்ட
கதிர் மதி முகத்தியை காண்டலும் உண்டு என
முதிர் மதி சூழ்ச்சியின் முற்ற நாடி 85
செய்யேன் ஆகி சிறுமை நாணின்
உய்யேன் ஆதல் ஒருதலை அதனால்
உயிர் கெட வரு வழி ஒழுக்கம் கொள்ளார்
செயிர்_அறு கேள்வி தேர்ந்து உணர்ந்தோர் என

வெல்லினும் தோற்பினும் விதி என வகுத்தல் 90
பொருள்_நூல் ஆயும் புலவோர் துணிவு என
மதி வழி வலித்த மனத்தன் ஆகி
என் இதன் படுத்த நல் நுதல் மாதரை
பேரும் பெற்றியும் தேரும் மாத்திரம்
நேர்வது பொருள் என நெஞ்சு வலியுறீஇ 95
செறுநரை போல சிறையில் தந்து தன்
சிறுவரை போல செய்தோன் முன்னர்
தவல் முறை ஆயினும் தன் மனம் உவப்பன
இயல் முறை ஆற்றி என் கடன் தீர்ந்த

பின்னர் ஆகும் என் பெயர் முறை என்ன 100
ஆன் பால் தெள் கடல் அமுது உற வளைஇய
தேன் பெய் மாரியின் திறவது ஆக
பருகு அன்ன பயத்தொடு கெழீஇ
உருகு அன்ன உவகையன் ஆகி
இறந்தனன் இவன் என இளி பரந்துறாது 105
சிறந்தனன் இவன் என செல்வன் நோக்கி
கடம் தலை வைக்கும் காலம் இது என
அவன்-தலை வைக்கும் ஆணை ஏவலும்
உவந்ததை எல்லாம் உரை-மின் நீர் என

பேர்ந்தனன் விடுப்ப பெருமூதாளன் 110
நேர்ந்ததை எல்லாம் நெடுந்தகைக்கு உரைப்ப
திரு மலி ஆகத்து தேவியர் பயந்த
நங்கையருள்ளும் மங்கை முற்றா
பெதும்பை ஆயத்து பேதையர் வருக என
பளிக்கறை பூமியும் பந்து எறி களத்தும் 115
மணி கயிற்று ஊசல் மறலிய இடத்தும்
கொய் மலர் காவும் பொய்கை கரையும்
அந்த கேணியும் வந்து பெயர் கூவி
தவ்வை மகளிரும் தாய் கெழு பெண்டிரும்

அ வழி ஆயமும் நொய்து அகப்படுப்ப 120
முத்தினர் உத்தியர் மு_மணி காசினர்
கச்சினர் கண்ணியர் கதிர் வெள் வளையினர்
சில் கலத்து இயன்ற அணியினர் அல்லது
பல் கலம் சேரா மெல் என் யாக்கையர்
அசைவு_இல் குமரரை ஆடு இடத்து அணங்கும் 125
நசை உட்கொண்ட நன்மை இயன்று
விழுத்தகை தெய்வம் வழுத்தா மரபில்
தார் பொலி மேனி கூர்ப்பு அணங்கு ஒடுக்கிய
மண்டு தணி தோள் மாசு இல் மகளிர்

பெண் துணை சார்வா கண்டுழி கலங்கி 130
கடைக்கண் சிவப்பும் கதிர் முலை உருப்பும்
மடக்கா கூழையும் மருங்குலும் பற்றி
புதை இருந்து அன்ன கிளர் ஒளி வனப்பினர்
அரம் கொல் கிண்கிணி இரங்க ஒல்கி
பொன் கிடுகு செறிந்து போர்வை முற்றி 135
முத்து காழ் தொடர்ந்த சித்திர கூடத்து
பவழ கொடும் காழ் பத்தி முகத்து அழுத்தி
திகழ் கோட்டு இயன்ற திமிசு குட பொன் கால்
உரிமை சுற்றத்து உரியோர்க்கு திறந்த

திரு மணி அம்பலத்து இமிழ் முழா ததும்பும் 140
அரங்கம் நண்ணி அரிமா சுமந்த
மரகதத்து இயன்ற மணி கால் கட்டில்
நூல்_வினை நுனித்த நுண் தொழிலாளர்
வால் அரக்கு ஊட்டிய வால் நூல் நிணவை
பால் பரந்து அன்ன பஞ்சி மெல் அணை 145
சேக்கை மெலிய செம்மாந்து இருந்த
முடி கெழு தந்தை முன்னர் தோன்றி
அடி தொழுது இறைஞ்சிய அவரிடை எல்லாம்
தெய்வ தாமரை திரு_மகள் கெடுத்தோர்

ஐயப்படூஉம் அணியிற்கு ஏற்ப 150
ஒண்மையும் நிறையும் ஓங்கிய ஒளியும்
பெண்மையும் பெருமையும் பிறவும் உடைமையின்
பாசிழை ஆயத்து பையென நின்ற
வாசவதத்தை வல்லள் ஆக என
ஊழ் முறை பொய்யாது கருமம் ஆதலின் 155
யாழ் முறை கருமம் இவளது என்று அருளி
மற்று அவண் நின்ற பொன் தொடி மகளிரை
குற்றம்_இல் குறங்கில் கோ வலம் ஏற்றி
கோதை மார்பில் காதலின் ஒடுக்கி

பந்தும் கிளியும் பசும்பொன் தூதையும் 160
கந்து இயல் மயிலும் கரந்து உறை பூவையும்
கண்ணியும் கழங்கும் கதிர் முலை கச்சும்
வண்ண முற்றிலும் பவழ பாவையும்
தெளித்து ஒளி பெறீஇய பளிக்கு கிளிக்கூடும்
அவரவர் மேயின அவ்வயின் அருளி 165
அடிசில்_வினையும் யாழின் துறையும்
கடி மலர் சிப்பமும் கரந்துறை_கணக்கும்
வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்
கற்றவை எல்லாம் காட்டு-மின் எமக்கு என

மருளி ஆயம் அருளொடும் போக்கி 170
நங்கை கற்கும் மங்கல கருவிக்கு
நியம விஞ்சனம் அமை-மின் விரைந்து என
ஈன்ற தாயும் என் மகட்கு இ தொழில்
மாண்டது என்று மனத்தில் புகல
மழலை கிண்கிணி கழலோன் பெருமகள் 175
அரும்_பெறல் தத்தைக்கு ஆசான் ஆகி
போக வீணை புணர்க்க பெற்ற
தேசிக குமரன் திரு உடையன் என
அடியரும் ஆயமும் நொடிவனர் வியப்ப

ஏனை தாயரும் ஆனாது ஏத்த 180
வத்தவர் பெருமகன் வல்ல வீணை
தத்தை தனக்கே தக்கதால் என
வேட்டது பகரும் கோட்டி ஆகி
கோட்டம்_இல் முற்றம் குமிழ்குமிழ்த்து உரைப்ப
பொன் அகல் கொண்ட பூவும் புகையும் 185
அ அகல் கொண்ட அவியும் பிரப்பும்
செம் முது செவிலியர் கை புனைந்து ஏத்தி
சந்தன நறு நீர் மண்ணுறுத்தி ஆட்டி
மறு_இல் வெண் கோட்டு மங்கலம் பொறித்த

பெரு வெண் சீப்பின் திருவுற வாரி 190
சுருள் முறை வகுத்து சூட்டு புரி உறீஇ
கரும் குழல் கட்டி கன்னி கூழை
பொன்னின் நாணின் புடையெடுத்து யாத்து
பதர்_இல் செம்பொன் காய் அழலுறுத்த
கதழ்வு உறு சின்னம் சிதறிய மருங்கில் 195
திரு நுதல் சுட்டி திகழ சூட்டி
முத்த கலன் அணி மொய்ப்புற சேர்த்து
பொன் செய் ஓலையொடு பூம் குழை நீக்கி
மணி செய் கடிப்பிணை மட்டம் செய்து

தேய்வுற்று அமைந்த திரு வெள் ஆரத்து 200
ஏக விடு_கொடி எழில் தோள் எழுதி
கச்சு யாப்புறுத்த கால் வீங்கு இள முலை
முத்த வள்ளியொடு மு_மணி சுடர
மணி கால் கவைஇ
தணி பொன் தோரை தகை ஒளி சுடர 205
மட்டம் குயின்ற மங்கல அல்குல்
பட்டு உடை தானை பைம் பூண் சுடர
திரு முகை முருக்கின் விரி மலர் கடுப்ப
செறி மலர் படினும் சீறடி நோம் என

நெறி என படுத்த நில பெரும் தவிசின் 210
உள்ளகத்து ஒடு மெல் அடி
அரி பொன் கிண்கிணி ஆர்ப்ப அரங்கின்
உழை செல் மகளிர் உக்கம் ஏற்றி
சித்திரம் பயின்ற செம்பொன் ஓலை
முத்து வாய் சூழ்ந்த பத்திக்கோடு அசைஇ 215
சிரல் சிறகு ஏய்ப்ப சிப்பம் விரித்த
கவற்று_வினை பவழம் கடைந்து செய் மணி கை
ஆலவட்டம் நால் ஒருங்கு ஆட
பொன் இயல் ஆய் வளை கன்னியர் அசைப்ப

பொத்து இன்று அமைந்த புனைவிற்று ஆகி 220
சொத்துற்று அமைந்த சுதை_இல் செம் சுவர்
வெண் கோட்டு நெடும் தூண் விதானம் தூக்கி
தே நவின்று ஓங்கிய திரு நாறு ஒருசிறை
கீத சாலை வேதி நிறைய
மல்லல் சுற்றமொடு கல்லென புகுதந்து 225
அரக்கு பூமி ஆயமொடு ஏறி
பரப்பு மலர் ஒருசிறை பாவையை நிறீஇ
பண் அமை நல் யாழ் பலி_கடன் வகீஇய
அண்ணல் வருக என அவ்வயின் ஓடி

ஒண் தொடி மகளிர் கொண்டு அகம் புகுதர 230
தானை தவிசில் தகையோன் ஏற
ஏனை தவிசில் நங்கையை இருத்தினர்
இன்னாள் என்பது இவனும் அறியான்
நன்னர் கிளவி நயவர பயிற்றி
ஆசான் கொடுக்கும் அரும்_பெறல் விச்சை 235
காண்போர் செய்யும் கடப்பாடு இது என
வெள் வளை முன்கை தோழியர் பற்றி
ஒள் இழை மாதர் ஒழுக்கம் செய்க என
காந்தள் அழித்த கை முகிழ் கூப்பி

கஞ்சிகை திறந்த பொழுதின் அன்று தன் 240
காட்சிக்கு ஒத்த கள்வன் ஆதலின்
மேற்படு நோக்கமொடு இருவரும் எய்தி
ஏப்பெறு துயரமொடு இலங்கு_இழை இறைஞ்சி
பொன் கால் படுத்து பூம் துகில் வளைஇ
கை கோல் சிலதரொடு கன்னியர் காப்ப 245
தெய்வத்து அன்ன திறலோன் காட்ட
கை வைத்தனளால் கனம்_குழை யாழ் என்
*1 உஞ்சைக் காண்டம்

#35 நருமதை சம்பந்தம்
கைவைத்து அமைந்த கனம்_குழைக்கு அ யாழ்
வைகல்-தோறும் வத்தவன் காட்ட
நிகழ்வதை உரைக்கும் புகர் சொல் மாக்கள்
ஒன்னலர் நுழையா உரிமை மாண் நகர்
தன் மகள் ஒருத்தியை தான_யாழ் கற்க என 5
ஏதில் மன்னனை எண்ணான் தெளிந்த
பேதை மன்னன் பின்னும் காண்பான்
சென்றேயாயினும் சிதையின் அல்லது
நன்றொடு வாராது ஒன்று அறிந்தோர்க்கு என

அரசன் ஆசான் அரும்_பெறல் தந்தை என 10
கல்லா சனத்தொடு பல்லோர் சொல்ல
புகாஅர் இயல்பு உணர்ந்தோர் என
மதியோர் மொழிந்தது இது என்று எண்ணி
இன்னவை பிறவும் துன்னினர் கிளந்து
வேந்து இடையிட்ட வெம் சொல்லாதலின் 15
சேர்ந்தோர் மாட்டும் செப்பல் தீது என
உரைப்போர் நாவிற்கு உறுதி இன்மையின்
நினைத்தது மிகை என நெஞ்சு வலியுறீஇ
மனத்தகையாக மாந்தர் அடங்கலின்

வம்ப மாக்கள் வாயெடுத்து உரைக்கும் 20
கம்பலை இன்மையின் கடி நகர் தேறி
ஆங்கனம் ஒழுகும் காலை ஓங்கிய
மாணி படிவமொடு மதில் உஞ்சேனையுள்
ஓதிய காலத்து உடன் விளையாடி
தோழ மாக்கள் தொழுதியில் கூடி 25
பால குமரன் பணியின் ஒரு நாள்
மாலையும் சாந்து மடியும் பெய்த
கையுறை செப்பொடு கடி நகர் சென்ற
வயந்தககுமரனை நயந்து முகம் நோக்கி

பாண்டு யான் இவரை பயின்றுழி உண்டு என 30
கண்டு அறிவிலீர் என கரந்து அவன் மறுப்ப
போல
இசையா மாக்கள் முன் இயல்பு_இல சொல்லி
அன்று தலைப்பட்ட ஆர்வலர் போல
இன்று தலையாக என்றும் எம்-வயின் 35
இவரே வருக என ஏயினன் அருளி
மன்ன_குமரன் தன்-வயின் கோடலின்
அரும்_பெறல் தோழன் ஆங்கு வந்து ஒழுகி
பெரும் பெற்று அறையும் பேச்சினன் ஆகி

மாய யாக்கையொடு மதிலகத்து ஒடுங்கிய 40
ஆய மாக்கள் அவன்-வயின் அறிந்து
காவலாளர் அற்றம் நோக்கி
மேவனம் என்னும் சூழ்ச்சியர் ஆகி
பல் நாள் கழிந்த பின்னர் முன்நாள்
எண் மெய்ப்பாட்டினுள் இரக்கம் மெய்ந்நிறீஇ 45
ஒள் வினை ஓவியர் கண்ணிய விருத்தியுள்
தலையதன் உம்பர் தான் குறிக்கொண்ட
பாவை நோக்கத்து ஆர் அணங்கு எய்தி
முன் தான் கண்ட முகம் செய் காரிகை

உள்கொண்டு ஆற்றும் உறு பிணி தலைஇ 50
கள் கொண்டாங்கு களி_நோய் கனற்ற
தீ முகத்து இட்ட மெழுகின் தேம்பியும்
தாய் முகத்து யாத்த கன்றின் புலம்பியும்
உயல்_அரும் துன்பமொடு ஒருவழி பழகி
பயலை கொண்ட என் பையுள் ஆக்கை 55
பண்டு என் வண்ணம் பயின்றறி மாக்கள்
இன்று என் வண்ணம் இடைதெரிந்து எண்ணி
நுண்ணிதின் நோக்கி நோய்_முதல் நாடின்
பின் இது கரக்கும் பெற்றி அரிது என

மலர் ஏர் உண்கண் மாதர்க்கு அமைந்த 60
அலர் அவண் புதைக்கும் அரு_மறை நாடி
தெரிவுறு சூழ்ச்சியுள் இருவரும் எண்ணி
பிறன்-பால் பட்ட பெண்-பால் நாடி
அவள்-பால் பட்ட ஆர்வம் செய்கம்
அன்னாள் ஒருத்தியை அறிந்தனை வம் என 65
பல் வேல் முற்றம் பணியில் போகி
நகர் முழுது அறிய நாண் இகந்து ஒரீஇ
ஒருவன் பாங்கர் உளம்வைத்து ஒழுகும்
அதன்மி யார் என ஆங்கு அவன் வினவ

இரங்கு பொன் கிண்கிணி இளையோர் நடுவண் 70
அரங்கு இயல் மகளிர்க்கு ஆடல் வகுக்கும்
தலைக்கோல் பெண்டிருள் தவ்வை ஒரு மகள்
நாடக கணிகை நருமதை என்னும்
பாவை ஆகும் இ பழிபடு துணை என
ஒரு_நூற்று_ஒரு கழஞ்சு உரை கண்டு எண்ணிய 75
கன பொன் மாசை காண ஏந்தி
மன்றமும் மறுகும் கம்பலை கழும
வனப்பு முதலாக வழி வர அமைந்து
குணத்து முறை வகையின் கோலம் எய்தி

வீழ்ந்தோர் நல்கும் வெறுக்கை அன்றி 80
காணி கொண்டும் கடன் அறிந்து எண்ணிய
ஒன்று முதல் ஆக ஓர் எட்டு இறுத்த
ஆயிரம்-காறும் ஆத்த பரிசத்து
யாழ் முதலாக அறுபத்தொரு_நான்கு
ஏர் இள மகளிர்க்கு இயற்கை என்று எண்ணி 85
கலையுற வகுத்த காம கேள்வி
துறை நெறி போகிய தோழி தூதினர்
அரசர்க்கு ஆயினும் அடியர்க்கு ஆயினும்
அன்றைய வைகல் சென்றோர் பேணி

பள்ளி மருங்கில் படிறு இன்று ஒழுகும் 90
செல்வ மகளிர் சேரி நண்ணி
வயக்களிறு அடக்கிய வத்தவர் பெருமகன்
இயக்கு_அரும் வீதியின் எதிர்ப்பட ஒரு நாள்
நயப்புற்று அரற்றும் நருமதை என்னும்
நாடக கணிகை மாடம் யாது என 95
தாய் உறை வியல் நகர் தன் குறை உரைத்து
வாயில் ஆகிய வயந்தகன் புகலும்
செம் நூல் நிணந்த சித்திர கம்மத்து
வெண் கால் அமளி விருப்பின் ஏற்றி

அணி இழை மகளிரும் யானையும் வணக்கும் 100
மணி ஒலி வீணையும் சாபமும் மரீஇ
கழல் தொடி கவைஇய கலம் பொழி தட கை
உதயணகுமரன் உள்ளத்து உளன் எனின்
ஒண் தொடி மாதரும் ஒரு துணையோருள்
பெண் துணை சான்ற பெருமை பெற்றனள் என் 105
மருமகன் புகலும் மனம்_புரி கொள்கை
இரு மூதாட்டி எனக்கும் உண்டு என
தூண்டில் இரையின் துடக்கு உள்ளுறுத்து
தேன் தோய்த்து அன்ன தீம் சொல் அளைஇ

பொருள் என கருதி பொன் இவண் விடுத்தோன் 110
அருளியும் அருளான் அடித்தி மாட்டு என
காரண கிளவி நீர கூறி
தன் பெயர் பெயர்ப்ப மனத்தகை கரந்து
பின்பயம் கருதும் பெரு நசை கிளவி
இன் நகை தோழற்கு இனிய பயிற்றி 115
ஆங்கு இனிது இருந்த போழ்தில் பூம்_குழை
காமுறப்பட்ட சேணிக சிறு_தொழில்
கற்றதும் இல்லா சிற்றறிவாளன்
பொய்யொடு மிடைந்த பொருள் நசை கடும் சொல்

மையுண்டு கழுமிய மாசுபடு கலிங்கத்து 120
இளையோர் வைகா இழுக்கு_அரு வாழ்க்கையன்
கவறாடாளர்க்கு கலம் தொலைவு எய்தி
கொடையகத்தோன் என கடைகழிந்து ஓடி
கவலையின் செல்லும் கவ்வையின் விலக்கி
ஐயன் வந்த ஆசு_அறு கருமம் 125
கைவளை மாதர் களைந்து சென்றீ என
நிதியம் காட்ட பொதியொடு சிதறி
குறையொடு வந்த அ குமரன் கேட்க
சிறியனேன் வந்த அ சிறு_நில மன்னற்கு

அ மனை நயந்து யான் அவ்வயின் சேறல் 130
என் மனை மருங்கின் இல் என சீறி
தன் துறைக்கு ஒவ்வா தகை_இல் கிளவி
பைம் தொடி மாதர் பண்பு_இல பயிற்ற
தாய பெண்டிரும் தம் துணையோரும் என்று
ஓர் இல் எழு கிளை உடன் தொக்கு ஈண்டி 135
பழமையின் பசையாது கிழமையில் கெழுவாது
தவந்தீர் மருங்கில் திரு_மகள் போல
பயம் தீர் மருங்கில் பற்று விட்டு ஒரீஇ
இட்டதை உண்ணும் நீலம் போல

ஓட்டு இடத்து ஒட்டும் உறுதி வாழ்க்கையுள் 140
பத்திமை கொள்ளார் பைம்_தொடி கேள் என
எடுத்து இயல் கிளவியோடு ஏது காட்டி
தொடி கேழ் முன்கை தொகு விரல் மடக்கி
மா நிதி வழங்கும் மன்னர் இல் பிறந்து
வேண்டியது முடிக்கும் 145
காலம் இது என காரணம் காட்டும்
ஆர்வ சுற்றத்தவர் வரை நில்லாள்
தாய் கை விதிர்ப்ப தலை புடைத்து இரங்கி
ஏயது மறுக்கலும் இருந்தோன் கூய் நின்

அடியரின் பற்றி ஆணையின் கொள்க என 150
கடிது இயல் வையம் கவ்வையின் ஏற்றி
கொடி அணி கூலம் கொண்டனன் போவுழி
வலிதின் என்னை வத்தவர் பெருமகன்
கொலிய செய்வது குழுக்கள் காண்க என
பூசல் கிளவி சே_இழை பயிற்ற 155
மாரியும் திருவும் மகளிர் மனமும்
தக்குழி நில்லாது பட்டுழி படும் எனும்
கட்டுரை அன்றியும் கண்டனம் யாம் என
விச்சையும் வனப்பும் விழு குடி பிறப்பும்

ஒத்து ஒருங்கு அமைந்த உதயணகுமரனை 160
பெற்றனளாயினும் பிறர்க்கு நைந்து அழுவோள்
பெண்_இலி-கொல்லோ பெரியோர் பிழைப்பது ஓர்
கண்_இலி ஆகும் இ கணிகை மகள் என
கூத்தி மருங்கில் குணம் பழிப்போரும்
ஆற்றல் கொற்றமொடு அரசு வழி வந்ததன் 165
காத்து உயர் தொல் குடி கதுவாய் ஆக
பண்பு_இல் சிறு_தொழில் பயின்றதை அன்றியும்
தன்னோடு_படாளை தான் நயந்து அரற்றி
கண் அற்றனனால் காவலன் மகன் என

அண்ணல் மருங்கின் அறிவு இழிப்போரும் 170
எள்ளியும் இழித்தும் இன்னவை பயிற்றி
முள் எயிறு இலங்கும் ஒள் அமர் முறுவலர்
பட்டி_மாக்கள் கட்டுரை பகரும்
பெரும் கலி ஆவணம் பிற்பட போஒம்
வையத்து அவளொடும் வயந்தகன் கேட்ப 175
தேன் கவர்வு ஓப்பி திரு நுதல் சுருக்கி
பூ நறும் தேறல் பொலன் வள்ளத்து ஏந்தி
ஒழுகி நிலம் பெறாஅது ஒசிந்து கடைபுடைத்து
எழுது நுண் புருவம் ஏற்றி இயைவித்து

இல மலர் செம் வாய் ஒப்ப இதழ் விடுத்து 180
நரம்பு இசை தள்ளி வறிதினில் சுவைத்து
மகிழின் மம்மர் எய்தி முகிழின்
காலம் அன்றியும் கையின் நெரித்த
கழுநீர் குவளை பெரும் பொதி அவிழ்ந்த
வள் இதழ் வகைய ஆகி ஒள் இதழ் 185
செம் சிவப்பு உறுத்த சிதர் அரி மழை கண்
கொழும் கடை இடுக நோக்கி மணி பிறழ
விருப்பு உள் கூர விம்மி வெய்து உயிர்த்து
எருத்தம் சிறிய கோட்டி எம்மினும்

திருத்தம் சான்ற நும் துணைவி இல் செல்க என 190
புலவி தண்டம் தமர் வயின் ஏற்றி
இல்லையாயினும் சொல் வகை செருக்கி
தண்டி கொண்டு பெண்டிரை பொறாது
செயிர்வு உள்ளுறுத்த நோக்கமொடு நறவின்
வாசம் கமழும் ஓசைய ஆகி 195
கிளி பயிர் அன்ன களி பயில் மழலை
எய்தா ஒழுக்கமொடு ஐது அவண் பயிற்றி
எயிறு வெளிப்படாது இறைஞ்சி ஞிமிறு இனம்
மூசின கரிய கோதையின் புடைத்து

பூம் குழை மகளிர் புலவி கொள் திரு முகம் 200
தேர்ந்து உணர் காட்சியின் திரிந்து நலம் கரிய
பூம் துகில் தானை பற்றி காய்ந்தது
காட்டினை சென்மோ மீட்டின தெளிக என
படிற்று இயல் களைஇ பணி மொழி கிளவி
நடுக்குறு துயரமொடு நயவர பயிற்றி 205
குவி பூம் கை_இணை கூப்பி திரு குழல்
நான பங்கி கரம் மிசை திவள
பரட்டு அசை கிண்கிணி பக்கம் புல்லி
அரத்தகத்து ஈரத்து ஐது கொண்டு எழுதிய

சீறடி சுவட்டு எழுத்து ஏறிய சென்னியர் 210
நாள்_போது நயந்த வேட்கையவாயினும்
முகை_பதம் பார்க்கும் வண்டு இனம் போல
தகைப்பு_அரும் காமத்து தாம் வீழ் மகளிர்
நகை_பதம் பார்க்கும் நனி நாகரிகத்து
சொல்லின் நுண் பொருள் காட்டி இல்லின் 215
படு காழ் படுத்து தேய்வை உறீஇ
கலுழி நீக்கும் கம்மியர் போல
மகர வீணையின் மனம் மாசு கழீஇ
நகர நம்பியர் திரிதரு மறுகின்

ஆணையின் கொண்டு தன் அரசியல் செய்தோன் 220
காம விருந்தினன் கலையிற்கு இகந்தனன்
பிழைக்கவும் பெறூஉம் பெண்டிர் மாட்டு என
உரைத்தகு கிளவி ஓம்பார் பயிற்றி
நடம் நவில் மகளிர் நலத்திடை நம்பி
விருந்தினன் போன்ம் என புரிந்து அலர் தூற்றி 225
விடரும் தூர்த்தரும் விட்டேறு உரைப்ப
தருமம் நுவலாது தத்துவம் ஒரீஇ
கருமம் நுதலிய கள்ள காமம்
எ துறை மாக்களும் மெய்க்கொள பரப்பி

வனப்பும் இளமையும் வரம்பு_இல் கல்வியும் 230
தனக்கு நிகர் இல்லா தன்மையன் ஆதலின்
பொருந்தா புறஞ்சொல் நிறம் பார்த்து எறிய
வால் மயிர் துடக்கின் தான் உயிர் வாழா
பெருந்தகை கவரி அன்ன பீடு அழிந்து
நெடு வெண் நிலவின் நீர்மைக்கு இரங்கி 235
முறுவல் மகளிர் முற்றம் நிற்ப
பசும் கதிர் சுருங்கிய பசலைத்து ஆகி
விசும்பு எழ தேயும் வெண் மதி போல
வலியில் தீராது ஒளியில் குன்றி

பெருநல் கூர்ந்த பெரு வரை அகலத்து 240
எவ்வம் மறைத்தல் வேண்டி வையத்து
வலிதின் தந்த வால் வளை பணை தோள்
ஒரு மனம் புரிந்த நருமதை கேட்ப
வேட்கை கிளவி வெளிப்பட பயிற்றி
சேண்படு குருசில் சேர்-தொறும் பொறாஅள் 245
நச்சு உயிர்ப்பு அளைஇய நாகம் போல
அச்சு உயிர்ப்பு அளைஇ அமரா நோக்கமொடு
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற
அ இருள் அடக்கி வைகு இருள் போக்கி

போற்றா மாக்கள் தூற்றும் பெரும் பழி 250
மேற்கொண்டனனால் மின்_இழை பொருட்டு என்
*1 உஞ்சைக் காண்டம்

# 36 சாங்கியத்தாயுரை
மின்_இழை பொருட்டா மேலவன் கொண்ட
துன்ன_அரும் பெரும் பழி நல் நகர் கழும
கம்பலை மூதூர் வம்பலர் எடுத்த
படு_சொல் ஒற்றர் கடிது அவண் ஓடி
வானுற நிவந்த வசை_இல் மாநகர் 5
தாம் பெறு செவ்வியுள் தலைமகற்கு உணர்த்த
காமத்து இயற்கை காழ்ப்படல் உணர்ந்து
நகையும் நாணும் தொக ஒருங்கு எய்தி
இழிப்புறு நெஞ்சினன் ஆயினும் யார்கணும்

பழி புறம் சொல்லா பண்பினன் ஆதலின் 10
உருவு வழி நில்லாது ஆயினும் ஒருவர்க்கு
திருவு வழி நிற்கும் திட்பம் ஆதலின்
கேட்டது கரந்து வேட்டது பெருக்கி
பட்டது நாணாது பெட்டது மலையும்
காலம் அன்மை அல்லது காணின் 15
கோலம் அன்றோ குமரற்கு இது என
எள்ளியும் உரையான் இளமையது இயல்பு என
முள் எயிறு இலங்கு முறுவலன் ஆகி
தண் கய மருங்கில் தாமரை போல

அண்ணல் மூதூர்க்கு அணி என தோன்றி 20
சாமரை இரட்டையும் தமனிய குடையும்
மா மணி அடைப்பையும் மருப்பு இயல் ஊர்தியும்
பைம் தொடி ஆயமும் பட்டமும் உடையோர்
ஐம்பதினாயிரர் அரங்கு இயல் மகளிருள்
மன்னருள் பிறந்த மக்களுள் அரும் கலம் 25
தன் நயந்து அரற்ற தன் கடன் தீர்த்த
தகை சால் அரிவைக்கு தக்கன இவை என
இசை சால் சிறப்பின் இரும் கல பேழையொடு
மணியினும் பொன்னினும் மருப்பினும் அல்லது

மரத்தின் இயலா திரு தகு வையம் 30
முத்த மாலை முகம் மிசை அணிந்து
பொன் தார் புனைந்த புள் இயல் பாண்டில்
கடை மணை பூட்டி கணிகையில் விட்டு
பொய்தல் மகளிரொடு புனலாட்டு அயரினும்
தெய்வ விழவொடு தேர்ப்பின் இயலினும் 35
நகர் கடந்து இறத்தல் நருமதை பெறாள் என
எயில் மூதாளரை வயின்வயின் ஏஎய்
வாயில் சுட்டி வள நகர் அறிய
கோயில் கூத்தும் கொடும்_குழை ஒழிக என

தொன்று இயல் அவையத்து நன்று அவட்கு அருளி 40
தரு மணல் பந்தர் தான் செயற்கு ஒத்த
கருமம் மறுத்த கைதூ_அமையத்து
இரு நிலத்து இறைமை ஏயர் பெருமகன்
பெரும் களிறு அடக்கிய பெறற்கு_அரும் பேரியாழ்
கல்லா நின்றனள் கனம் குழையோள் என 45
எல்லா வேந்தரும் இசையின் விரும்பி
வழிமொழி கிளவியொடு வணக்கம் சொல்லி
கழி பெரு நன் கலம் களிற்றின் மிசை உயரி
துன்ன_அரும் கோயிலுள் தூதரை விடுத்தர

ஓலையுள் பொருளும் உரைத்த மாற்றமும் 50
நூலியலாளரொடு நுண்ணிதின் கேட்டு
நன்றும் என்னான் அன்று என மறாஅன்
மரன் இவர் குரங்கின் மக_கோள் போல
நிலைமையொடு தெரிதரு நீதியன் ஆகி
ஆவது துணி துணை ஆசையின் நிறீஇ 55
தார் கெழு வேந்தன் தமர்களை விடுத்த பின்
கோமகன் குறித்தது கொண்டு கை புனைந்து
தாய் மகள் தேரிய தன்-வயின் உரைக்க
நொதுமல் கிளவி கதுமென வெரீஇ

புது மர பாவை பொறி அற்றாங்கு 60
விதுப்புறு நடுக்கமொடு விம்முவனள் ஆகி
இது மெய் ஆயின் இன் உயிர் வேண்டி
வாழ்வோர் உளர் எனில் சூழ்க தன் வினை என
ஆவி நுண் துகில் யாப்புறுத்தாயினும்
சாவது உறுதி யான் தப்பிய பின்றை 65
என் பின் தீர்க எந்தை-தன் குறை என
அன்பின் கொண்ட அரற்றுறு கிளவி
வளை கை நெருக்கி வாய் மிக்கு எழுதர
கதிர் முத்து ஆரம் கழிவன போல

சிதர் முத்து ஆலி சிதறிய கண்ணள் 70
மாழ்குபு கலிழும் மகள்-வயின் தழீஇ
வீழ்தரு கண்ணீர் விரலின் நீக்கி
கவாஅன் கொண்டு காரணம் காட்டி
அழேற்க என் பாவாய் அதுவும் உண்டோ
யாயும் நீயும் யானும் எல்லாம் 75
இது முதலாக இ வகை நிகழின்
தலைமகன் துறந்து தவம் புரிவேம் என
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுறீஇ
சேய் உயர் உலகம் செம்மையின் கூறும்

தீது_அறு நோன்பின் தெய்வம் தேற்றிய 80
தீம் பால் காட்சி தெரிவு பல காட்டி
மாற்றா கவலையின் மனம் கொண்டாங்கு
நிறைமை சான்ற நின் நெஞ்சம் கொண்ட
பொறைமை காணிய பொய் உரைத்தேன் என
ஓதியும் நுதலும் மாதரை நீவி 85
தக்கது நோக்கான் பெற்றது விரும்பி
நுந்தை நேரா நெஞ்சு கொள் காரணம்
பைம் தொடி தோளி பரிவு_அற கேள் என
இளமையும் வனப்பும் இல்லொடு வரவும்

வளமையும் தறுகணும் வரம்பு_இல் கல்வியும் 90
தேசத்து அமைதியும் மாசு_இல் சூழ்ச்சியொடு
எண் வகை நிறைந்த நன் மகற்கு அல்லது
மகள்கொடை நேரார் மதியோர் ஆதலின்
அவை ஒருங்கு உடைமை அவர்-வயின் இன்மையின்
அது பொய் ஆதல் அதனினும் தேறு என 95
காரண கிளவி நீர காட்டி
செவிலி தெளிப்ப கவிழ் முகம் எடுத்து
நெடு வெண் தானை வாங்கி கொண்டு தன்
வடி வேல் உண்கண் வரு பனி அரக்கி

தோற்றம் நிகர்ப்போர் இன்றி ஆற்றல் 100
காலனோடு ஒக்கும் ஞால பெரும் புகழ்
புகர்_இன்று ஓங்கிய நிகர்_இல் கேள்வியன்
காமம் நுகர்வோர்க்கு ஆர் அணங்கு ஆகிய
ஏம வெண் குடை ஏயர் மகனொடு
வையகம் அறிய கையகம் புக்கு 105
தான் அறி வீணை தனி இடத்து எழீஇ
காணும் என்னும் கட்டுரை அன்றியும்
உலக மாந்தர் உள்ளம் கொண்ட
ஐய கிளவி தெய்வம் தேற்றினும்

தூயள் என்னா தீது உரை எய்தி 110
வாசவதத்தையும் வாழ்ந்தனள் என்னும்
ஓசை நிற்றல் உலகத்து அஞ்சுவன்
எமர் தர வாராது ஆயினும் இவண் நோற்று
அவன் உறை உலகத்து அழித்து பிறந்தாயினும்
எய்துதல் வலித்தனென் செய்வது கேள் என 115
தெய்வ மாதர் திட்பம் கூற
அண்ணல் மருங்கின் ஆவது வேண்டும்
தன் மனம் உவந்தது தலைவர நோக்கி
ஏற்ற முன்கை தொடி வீழ்ந்து அற்றால்

கோல்_தொடி கொண்ட கொள்கை என்று ஏத்தி 120
மிகுதியின் மிக்க தன் மேல் திணைக்கு ஏற்ப
தகுவன கூறும் தலைமகன் மகள் என
உவகை நெஞ்சமொடு உவப்பன கூறி
பைம்_தொடி ஆயமொடு பல் நொடி பகர்ந்து
கங்குல் யாமத்தும் கண்படுத்திலையால் 125
கல்வி சேவகம் கடவோன் வருந்துணை
பல் பூம் கோதாய் பள்ளி கொண்டு அருள் என
பூ மென் சேக்கையுள் புனை_இழை புகீஇ
யான் வரும் மாத்திரை யாரையும் விலக்கி

காஞ்சனமாலாய் காவல் போற்று என 130
தொகு வேல் முற்றம் சிவிகையில் போந்து
மயில் ஆடு இடைகழி மாடத்து ஒருசிறை
பயில் பூம் கொம்பர் பந்தர் முன் இழிந்து
கிளர்_இழை கற்கும் கேள்வி பொழுது என
தளர் இயல் ஆயமொடு தாய் முதல் இசைப்ப 135
கீத சாலை வேதிகை காக்கும்
கோல் கொள் சுற்றமொடு குமரன் புகுதர
இடு மணல் முற்றத்து இ வழி வருக என
கொடி முதிர் குருகின் கொம்பு தலைக்கொண்ட

உதிர் பூம் புன்கின் ஒருசிறை இரீஇ 140
இனைத்திறம் பகருறும் எந்தையொடு என்னிடை
கிளைத்திறம் பகருநர் தலைப்பெயல் அரிது என
கண்ணினும் செவியினும் நண்ணுநர் போற்றி
மண்ணகம் காவலன் மாபெருந்தேவி
திரு வயிற்று இயன்ற பெரு விறல் பொலிவே 145
இனையை யாவதும் எம்மனோர் வினை என
யாக்கையது இயல்பினும் அன்பினும் கொண்டதன்
காட்சி கண்ணீர் கரந்து அகத்து அடக்கி
இன்னள் என்று யான் என் முதல் உரைப்பேன்

மன்னவன் மகனே மனத்தில் கொள் என 150
செம்மல் செங்கோல் நுந்தை அவையத்து
என் இகந்து ஒரீஇயினன் இளமையில் கணவன்
தன் இகந்து ஒரீஇ யான் தகேஎன் ஆக
கொண்டோன் பிழைத்த தண்டம் தூக்க
வடிக்கண் இட்டிகை பொடி துகள் அட்டி 155
குற்றம் கொல்லும் எம் கோ பிழைப்பு_இலன் என
முற்றம்-தோறும் மூதூர் அறிய
நெய்தல் புலையன் நெறியில் சாற்றி
பைதல் பம்பை இடம் கண் நெருக்கி

மணல் குடம் பூட்டி மா நீர் யமுனை 160
இடைக்கயத்து அழுந்த இடீஇய செல்வுழி
புனல் கரைப்படீஇயர் புதல்வரொடு ஆர்க்கும்
தோணி அரவம் சேணோய்க்கு இசைப்ப
தழூஉ புணை ஆயமொடு குழூஉ திரை மண்டி
ஆவி நுண் துகில் யாப்புறுத்து அசைத்து 165
பாக வெண் மதியின் பதித்த குடுமி
களிற்றொடு புக்கு கயம் கண் போழ்வோய்
அவ்வயின் எழுந்த கவ்வை என் என
முந்தை உணர்ந்தோர் வந்து நினக்கு உரைப்ப

யாமும் காண்கம் கூம்-மின் சென்று என 170
கோல் கொள் மள்ளர் காலின் ஓடி
நம்பி வேஎண்ம் அம்பி வருக என
ஆணையின் திரீஇயர் அஞ்சன்-மின் நீர் என
தோணி இழிப்புழி துடுப்பு நனி தீண்டி
நெற்றி உற்ற குற்றம் இது என 175
இது முதலாக இன்னே இ மகள்
அழி தவப்படுதல் ஆற்றும் என்று உரைத்த
குறிகோளாளன் அறிவு இகழ்ந்து எள்ளி
எல்லை ஞாயிறு இரவு எழும் எனினும்

பல் கதிர் திங்கள் பகல் படும் எனினும் நின் 180
சொல் வரைத்து ஆயின் சொல்லுவை நீ என
இன் நகை முறுவலை ஆகி இரும் களிற்று
ஒண் நுதல் மத்தகத்து ஊன்றிய கையை
கொண்டோன் கரப்பவும் கொள்கையின் இகப்போன்
தன் குறிப்பு ஆயுழி தவம் இவட்கு எளிது என 185
வம்ப மாக்கள் வாய் எடுத்து உரைத்த
வெம் சொல் கிளவி நின் அங்கையின் அவித்து
வேண்டியது உரை-மின் ஈண்டு யான் தருக என
புலை_மகன் அறைய பூசலில் போந்தேன்

நிலைமை வேண்டி யான் நின் நகர் வாழ்வேன் 190
தலைமகன் மகனே தவம் என் துணிவு என
நிகழ்வதை உரைக்கும் நிமித்திக்கு அஞர்_அற
புகழ்வனை ஆகி பூ கொண்டு எறிந்த பின்
மற்றும் அவனே கற்றது நோக்கி
யானை அணி நிழல்படுதலின் அந்தணி 195
தான் கொண்டு எழுந்த தவ_துறை நீங்கி
தானை வேந்தன் தாள் நிழல் தங்கி
முற்று இழை மகளிர்க்கு முதுகண் ஆம் என
செம் வகை உணர்ந்தோன் சேனை கணி_மகன்

கோசிகன் என்றவன் குறி பெயர் கூறி 200
அடையாண் கிளவியொடு அறிய கூறலும்
கடி தார் மார்பனும் கலிழ்ச்சி நோக்கி
பிறப்பிடை இட்டேன் ஆயினும் எனக்கு ஓர்
சிறப்பினர் ஆதல் தேற்றும் என் மனன் என
கண்டதற்கொண்டு தண்டாது ஊறும் என் 205
அன்பு கரியாக அறிபு துணிகல்லேன்
இன்று இவை கரியாக இனி தெளிந்தனன் என
உதயணகுமரன் உணர்ந்தமை தேற்றலும
மறை மூதாட்டி மற்றும் கூறும்

கதிர் வினை நுனித்த நின் கணி எனை கூறிய 210
எதிர்_வினை எல்லாம் எஞ்சாது எய்தி
இ நகர் பயின்று யான் இ நிலை எய்திற்று
என்னின் ஆயிற்று என்குவை ஆயின்
என் முதல் கேள் என தொன் முதல் தொடங்கி
ஆக்கையின் இழிந்து நின் அருளில் பிறந்த என் 215
நோக்க_அரு நல்_வினை நுகரிய செல்க என
கொற்றவன் மகனே பற்றாது விடுவேன்
நீராட்டு இயல் அணி நின்-வயின் நீங்கி அ
பேரியாற்று ஒரு கரை பெயர்ந்தனென் போகி

கெங்கா தீரத்து தேசம் கெழீஇ 220
ஆங்காங்கு ஒல்வென் என்று ஆத்திரை முன்னி
வம்பலர் மொய்த்தது ஓர் வழி தலைப்பட்டு
வயிர சாத்தொடு வட திசை போகி
அயிர் இடு நெடு வழி அரசிடை இருந்துழி
பூதியும் மண்ணும் பொத்தக கட்டும் 225
மான்_உரி மடியும் மந்திர கலப்பையும்
கால் நெடு மணையும் கட்டுறுத்து யாத்த
கூறை வெள் உறி குண்டிகை காவினர்
தரும தருக்கர் தற்புறம் சூழ

பரிபு மெலிந்த படிவ பண்டிதன் 230
சாங்கியம் நுனித்த ஓர் சாறு அயர் முனிவனை
ஆங்கு எதிர்ப்பட்டாங்கு அவனொடும் போக
அ தவப்பட்டு ஆங்கு அறு வகை சமயமும்
கட்டுரை நுனித்த காட்சியேன் ஆகி
இமய பொருப்பகத்து ஈராண்டு உறைந்த பின் 235
குமரி தீர்த்தம் மரீஇய வேட்கையின்
அரும் தவம் நுனித்த அற ஆசிரியன்
தரும ஆத்திரை என தக்கணம் போந்துழி
மா உஞ்சேனை மதில் புறம் கவைஇய

காள வனத்து ஓர் கபால பள்ளியுள் 240
செலவு அயா_உயிர்த்த-காலை நூல் துறை
ஆற்றுளி கிளந்த அறு வகை சமயமும்
ஏற்றல் காணும் எம் இறைவன் தான் என
மாற்ற கோடணை மணி முரசு அறைதலின்
கற்றோர் மொய்த்த முற்று அவை நடுவண் 245
தாழா பெரும் புகழ் காள கடவுள் முன்
பாலகன் என்னும் பண்ணவர் படிவத்து
காள சமணன் காட்சி நிறுப்ப
ஐம் பெரும் சமயமும் அறம் தோற்றன என

வேந்து-அவன் நுதலிய வேத ஆசிரியரும் 250
தாம்தம் மருங்கிற்று ஆழம் காட்டி
சாங்கிய சமயம் தாங்கிய பின்னர்
நல்_வினை நுனித்தோன் நம்மொடு வாழ்க என
பல் வேல் வேந்தன் பரிவுசெய்து ஒழுகலின்
எழுந்த ஆத்திரை ஒழிந்து ஈண்டு உறைவுழி 255
கையது வீழினும் கணவன் அல்லது
தெய்வம் அறியா தேர்ந்து உணர் காட்சி
படிவ கற்பின் பல கோமகளிருள்
தொடியோடு தம் மனை தோழி என தன்

குடி வழியாக கொண்ட கொள்கையின் 260
இ தவம் உவக்கும் பத்தினி ஆதலின்
தவம் சார்வு ஆக தலைப்பெயல் விரும்பி
அறம் சார்வு ஆக அன்புசெய்து அருளி
இறை_மகன் அறிய இன் துணை ஆகி
பிறை நுதல் மாதர் பிறந்த யாண்டினுள் 265
நாவொடு நவிலா நகைபடு மழலையள்
தாய் கை பிரிந்து தன் தமர்-வயின் நீங்கி
என் கைக்கு இவரும் அன்பினள் ஆதலின்
தாய் என்று அறிந்தனன் நீ இனி வளர்க்க என

காதல் வலையா கைத்தர கொண்டு அவள் 270
பால் வகை அறிந்த பின் படர்வேன் தவம் என
மைத்துன மங்கை மரூஉமா கண்டு
நட்பு வலை ஆக நங்கையொடு உறைவேன்
ஒன்பதிற்று யாட்டை உதயண கேள் என
தன்-வயின் பட்டது அவ்வயின் கிளரி 275
அகம்புரி செம்மை அன்பின் காட்டி
மனம் உண கிளந்த மந்திர கோட்டியுள்
புள்ளும் மாவும் உள்ளுறுத்து இயன்ற
ஆண் பெயர் கிழவி நாள்_மகிழ் கடவ

வழுக்கி கூறினும் வடு என நாணி 280
ஒழுக்கம் நுனித்த ஊராண் மகளிர்
தாம் நயந்து அரற்றினும் தக்குழி அல்லது
காமுறற்கு ஒவ்வா கயக்கம்_இலாள நீ
ஒட்டா கணிகையை பெட்டனை என்பது
புலவோர் தெரியின் பொருத்தம் இன்று ஆகி 285
அலவலை நீர்த்தால் அத்தை நின் அலர் என
மற்று அவள் வினவவும் பற்றியது அவிழான்
பண்டு_அறிவு உண்டு என பகை நிலத்து உறைந்த
பெண்டிரை தெளிந்து பெரு மறை உரைத்தல்

நுண்_துறையாளர் நூல் ஒழுக்கு அன்று என 290
தேறா தெளிவொடு கூறாது அடக்கி
மாயம் என்று அஞ்சின் மற்று இது முடிக்கும்
வாயில் இல் என வலித்தனன் துணிந்து
தாய் முதல் இருந்து தன் நோய்_முதல் உரைப்ப
ஒள்_இழை கணவனும் உரிமையுள் தெளிந்த 295
கொள்கை அறிந்து யான் கூறவும் வேண்டா
அரு_மறை அன்மையின் அன்பின் காட்டி
ஒரு-வயின் ஒண்_தொடிக்கு உற்றது கேள் என
ஏதில் மன்னர் தூதுவ மாக்கள்

வந்தது வடு என தந்தையோடு ஊடி 300
அறத்தாறு அன்றியும் ஆகுவது ஆயின்
துறத்தல் வேண்டும் தூய்மையோற்கு என
துணிவு உள்ளுறுத்த முனிவினள் ஆக
நல் மணி ஐம்பால் நருமதைக்கு அரற்றிய
மன்ன_குமரன் மனம் பிறிது ஆயினும் 305
எந்தையும் யாயும் இன் நகை ஆயத்து
பைம்_தொடி சுற்றமும் பல பாராட்ட
மாசு_இல் வீணை மட_மொழிக்கு ஈந்தோன்
ஆசான் என்னும் சொல் பிறிது ஆமோ

அண்ணல் குமரற்கு அடி_செருப்பு ஆக என 310
தன் மனம் கொண்டவள் தாவம் முற்றி
சாவினை துணியும் மாத்திரை யாவதும்
மறுவொடு மிடைந்து மாண்பு_இல ஆகிய
சிறு_சொல் கிளவி கேளல செவி என
அங்கையின் புதைஇ அணி நிறம் மழுகிய 315
நங்கையை தழீஇ நல் நுதல் நீவி
மனம் கொள் காரணம் மருள காட்டி
இனம்_இல் ஒருசிறை இன் இனிது ஆக
பூ மலி சேக்கையுள் புகுத்தினென் போந்தேன்

பாயலுள் ஆயினும் பரிவு அவள் தீர்க என 320
இஃது அவள் நிலைமை இன்னினிக்கொண்டு
பரிவு மெய் நீங்கி பசலையும் தீர்க என
ஒண் நுதல் மாதர் கண் ஏ பெற்ற
புண்ணுறு நெஞ்சின் புலம்பு கையகல
மாதர் நுதலிய மருந்து இயல் கிளவி 325
ஆரும் இல் ஒருசிறை அன்புற பயிற்றி
நிலைமைக்கு ஒத்த நீதியை ஆகி
தலைமைக்கு ஒத்த வதுவை எண் என
இழுக்கம் இல்லா இயல்பொடு புணர்ந்த

ஒழுக்கம் எல்லாம் ஓம்படுத்து உரைஇ 330
பூட்டுறு பகழி வாங்கிய வேட்டுவன்
வில் விசை கேட்ட வெரூஉ பிணை போல
காவலாட்டியர் நா மிசை எடுத்த
சொல் இசை வெரீஇய மெல்லென் பாவை
என்-முகத்தேயும் இறைஞ்சிய தலையள் 335
நின்-முகத்தாயின் நிகழ்ந்ததை நாணி
நிலம் புகு அன்ன புலம்பினள் ஆகி
சிறுமையின் உணர்ந்த பெருமகன் இரங்க
மண் கெழு மடந்தாய் மறைவு_இடம் தா என

ஒன்றுபுரி கற்பொடு உலகு விளக்குறீஇ 340
பொன்றல் ஆற்றிய புகழாள் போல
கொண்ட கொள்கையின் ஒண் தொடியோளும்
துளி பெயல் மொக்குளின் ஒளித்தல் அஞ்சுவென்
இன்றை கேள்வி இடையிடும் எனினும்
சென்று அயா நங்கையை செவ்வி நோக்கி 345
இன் துணை மகளிரொடு ஒன்றி யான் விடுத்தரும்
சொல்லோடு படுத்து செல்க என் களிறு என
அவன்-வயின் நீங்கி ஆயம் கூஉய்
மகள்-வயின் புக்கு மம்மர் நோய் நீக்கி

நல்லோள் கற்கும் நாழிகை இறந்தன 350
வல்லோன் செல்க தன் வள நகரத்து என
காஞ்சனமாலாய் காவலற்கு உரை என
மணி படு மாடத்து வாயில் போந்து அவள்
பணித்த மாற்றம் அணித்தகைக்கு உரைப்ப
ஆர மார்பனும் போவனன் எழுந்து 355
கற்றிலள் என்னும் கவற்சி வேண்டா
பற்றிய கேள்வியும் முற்று_இழை முற்றினள்
குஞ்சர ஏற்றும் கொடி தேர் வீதியும்
பொங்கு மயிர் புரவியும் போர் படை புணர்ப்பும்

நீதியும் பிறவும் ஓதிய எல்லாம் 360
நம்பி_குமரரும் தம் துறை முற்றினர்
வல்லவை எல்லாம் வில்லோன் மக்களை
நல் அவை படுப்பது நாளை ஆதலின்
என் அறி அளவையின் ஒண்_நுதல் கொண்ட
தைவரற்கு இயைந்த தான் பயில் வீணையை 365
கையினும் செவியினும் செவ்விதின் போற்றி
ஆராய்க என்பது நேர்_இழைக்கு உரை என
விசும்பு ஆடு ஊசல் வெள் வளைக்கு இயற்றிய
பசும்பொன் நாகத்து பக்கம் பரந்த

நறும் புகை முற்றத்து நம்பி நடக்க என 370
குறும் புழை போயினன் கோலவர் தொழ என்
*1 உஞ்சைக் காண்டம்

#37 விழாக் கொண்டது
கோவலர் கைதொழ கோயில் போகி
வேல்கெழு முற்றமொடு வீதியின் நீங்கி
குஞ்சர சேரி தன் நகர் எய்தி
அன்றை வைகல் சென்ற பின்னர்
முரசு கடிப்பு இகுத்த மூரி முற்றத்து 5
அரசு இறைகொண்ட அகன் கண் வாரியுள்
கை ஆர் கடகத்து கதிர் வாள் கச்சையர்
ஐ_ஆயிரவர் அரச_குமரரொடு
பொன் தலை யாத்த பொதியில் பிரம்பின்

வண்ண செங்கோல் வல-வயின் பிடித்த 10
எண்_நூற்று_அறுவர் இளம் கிடை காப்பரொடு
புறம் சுற்று அமைந்த பிறங்கு கடை படுகால்
நித்திலம் தொடரிய நிகர்_இல் கம்மத்து
சித்திரம் பயின்ற செம்பொன் விதானத்து
சந்தன பீடிகை சார்வு அணை ஏறி 15
பல் மயிர் கவரியொடு பரிசனம் சுற்ற
பெருமகன் இருந்த திரு மலி அவையத்து
கொற்ற வேந்தன் குடி கெழு குமரரை
கற்றவை காட்டும் வத்தவர் கோ என

பல் பெரும் கேள்வி படைத்தோர் அன்ன 20
கல்வி மாந்தர் கலித்த கௌவையில்
ஆப்பு உறு பாடமொடு அருத்தம் கூறி
நா கொள் கேள்வி நவிற்றி காட்டி
மண்டல மருங்கில் கொண்டு அகம் புகுந்து
படை கெழு தெய்வம் புகல பலி வகுத்து 25
இடைநாள் பிறையின் ஏற்றிய திரு வில்
கண்ணால் உறுத்து கடவதின் தாங்கி
எண்_நால் அரணமும் ஈர்_எண் கரணமும்
துன்ன_அரும் பாசமொடு தொடங்குபு தோன்றி

அரிது இயல் சாரியை அந்தரத்து இயக்கமும் 30
பொரு வில் நாழிகை பூணும் ஆறும்
செரு வாள் ஆட்டும் சேடக பிண்டியும்
சாரியை விலக்கும் வேல் திரி வகையும்
இடுக்கண் போதின் ஏம பூமியுள்
வகுத்த வாயில் வகைவகை இவை என 35
ஒட்டும் பாய்த்துளும் கரந்து ஒருங்கு இருக்கையும்
செரு கொள் யானை மருப்பு_இடை திரிவும்
தாழா சிறப்பின் பாழியில் பயின்ற
காலாள் கரும விகற்பமும் காட்டி

கருவி தாக்கினும் காலாள் சுற்றினும் 40
தனியன் ஆயினும் தானையொடு ஆயினும்
புகவும் போக்கும் பொச்சாப்பு இன்றி
பகை வெல் சித்திரம் பல திறம் பயிற்றி
வண் பரி புரவியும் வால் நெடும் தேரும்
அண்ணல் யானையும் பண்ணுறுத்து ஏறி 45
இலைய இன பரி கொளீஇ சிலையின்
மதியோர் புகழ்ந்த மரபு இயல் வழாமை
நுதி அமை நுண் படை நூல் வழி சிதறி
மழைத்துளி படினும் வான் துகள் சூழினும்

விலக்கி தவிர்க்கும் வில் தொழில் உள்ளிட்டு 50
இலக்க திண் படை ஏறு பல காட்டலும்
தலைத்தேர் யானைக்கும் தருக்கினர் ஆயினர்
படை தேராள பாலகர் இவர் என
அவை புகழ்ந்து எடுத்த அரும்_பெறல் கிளவியொடு
தகை முடி வேந்தன் தாள் புகழ்ந்து ஏத்தி 55
தகை சால் சிறப்பின் தன்னொடு நம்மிடை
பகை முதல் ஆக பழிதர வந்த
செற்றம் நம்-வயின் கொள்ளான் சிறந்த
சுற்றம் ஆக சூழ்ச்சியின் விளக்கி

நன்று உணர் விச்சை நம்பியர்க்கு அருளி 60
அன்பு வழிப்படுத்த அரச_குமரற்கு
கைம்மாறு இது என கடவதின் இறையும்
செம்மாண் ஆற்றா சிறுமையம் ஆதலின்
ஒன்பதின் கோடி ஒண் பொருள் கொடுப்பினும்
பண்பு என கொண்டு இவன் பண்டம் செய்யான் 65
நம் குடி தலைமை இங்கு இவற்கு இயற்றி
நாம் இவன் குடை கீழ் காமுற கலந்து இவன்
வேண்டியது செய்யும் மாண்பு அலது இலம் என
மண் முதல் இழந்தோற்கு மறுமனம் அழித்து

தன் பதி புகுந்து தான் மணம் படுக என 70
குறையுறு கிளவி முறை பல பயிற்றி
செயப்படு கருமம் செய்ந்நரோடு உசாஅய்
முயற்சி உள்ளமொடு முந்து அவன் போக்கி
அவைக்களம் எழுந்து குவைக்களம் புக்கு
குல_மகள் பயந்த குடி கெழு குமரர் 75
நில_மகள் நயக்கும் நீதியர் ஆகி
வெறுமை நீங்கினர் விச்சையின் அமைந்து என
திரு நுதல் ஆயத்து தேவியர் நடுவண்
பெற்ற நாளினும் பெரும்பூண் புதல்வரை

கற்ற நாள்-வயின் கலி சிறந்து உரைஇ 80
மகிழ்ச்சி கிளவி மழை என இசைப்ப
முகிழ்த்தகை முறுவல் முனிவு இன்று பயிற்றி
கடவர் வகுத்த கரும நாளால்
கடவதை ஆதலின் மடவரல் ஆயத்து
நங்கை கேள்வியும் நல் அவை படுக்க என 85
வந்து உரைத்தனரால் வத்தவன் தமர் என
வெம் திறல் வேந்தனும் நன்று என அருளி
வாயில் கூத்தும் சேரி பாடலும்
கோயில் நாடக குழுக்களும் வருக என

யாழும் குழலும் அரி சிறுபறையும் 90
தாழ முழவும் தண்ணுமை கருவியும்
இசை சுவை தரீஇ எழுபவும் எறிபவும்
விசைத்து எறி பாண்டிலொடு வேண்டுவ பிறவும்
கருவி அமைந்த புரி வளை ஆயமொடு
பல் அவை இருந்த நல் ஆசிரியர் 95
அந்தர உலகத்து அமரர் கோமான்
இந்திரன் மாநகர் இறைகொண்டாங்கு
பொரு வேல் முற்றத்து புரிவனர் புகுதர
பாடல் மகளிர் பல் கலன் ஒலிப்ப

ஆடல் மகளிர் ஆயமொடு கெழீஇ 100
வேல் வேந்து இருந்த நூல் வேண்டு அவையத்து
துகிர் துலாம் மண்டபத்து அகில் புகை கமழ
கண்டம் குத்திய மண்டப எழினியுள்
தாய் உறை வியல் நகர் தமர் பாராட்ட
ஆயம் சுற்ற அணி_இழை புகுதந்து 105
ஒலி பெறு கீதத்து ஓதை போகிய
பலி கெழு நல் யாழ் பாங்குற தழீஇ
கின்னர கீதத்து கேள்வி மாந்தர்
முன்னுற நின்று மூது அறி செவிலி நும்

மகள் மாணாக்கி வணங்கும் நும் என 110
அவை பரிசாரம் கடத்துளி போக்கி
ஐ வகை கதியும் அற்றம் இன்றி
தெய்வ நல் யாழ் திருந்து_இழை தைவர
மெய் பனிபது போல் மொய் அவை மருள
நால் பெரும் பண்ணும் எழு வகை பாலையும் 115
மூ_ஏழ் திறத்தொடு முற்ற காட்டி
நலம் மிகு சிறப்பொடு நல் வை புகழ
இயம் வெளிபடுத்த பின் இசை வெளிப்படீஇய
எரி மலர் செம் வாய் எயிறு வெளிப்படாமை

திரு மலர் தாமரை தேன் முரன்றது போல் 120
பிறந்துழி அறியா பெற்றித்து ஆகி
சிறந்து இயம்பு இன் குரல் தெளிந்து அவண் எழுவ
சுருக்கியும் பெருக்கியும் வலித்தும் நெகிழ்த்தும்
குறுக்கியும் நீட்டியும் நிறுப்புழி நிறுத்தும்
மாத்திரை கடவா மரபிற்று ஆகி 125
கொண்ட தானம் கண்டத்து பகாமை
பனி விசும்பு இயங்குநர் பாடு ஓர்த்து நிற்ப
கனி கொள் இன் இசை கடவுள் வாழ்த்தி
தேவ கீதமொடு தேசிகம் தொடர்ந்த

வேத இன் இசை விளங்கு_இழை பாட 130
திருந்து இழை மாதர்-கொல் தெய்வம்-கொல் என
இருந்தவர் தெருளார் இசை புகழ்ந்து ஏத்தி
நூலும் செவியும் நுண்ணிதின் நுனித்தே
யாழும் பாடலும் அற்றம் இன்றி
விலக்கும் விடையும் விதியின் அறிந்து 135
துளக்கு_இல் கேள்வி தூய்மையின் முற்றி
வத்தவநாடன் வாய்மையின் தருக்கும்
கொற்ற வீணையும் கொடும்_குழை கொண்டனள்
இறை கெழு குமரரும் ஏனை விச்சை

துறை நெறி போகிய துணிவினர் ஆயினர் 140
தேயா திருவ நீயும் தேரின்
நிலம் கொடை முனியாய் கலம் கொடை கடவாய்
வேள்வியின் திரியாய் கேள்வியின் பிரியாய்
இனையோய் தாள் நிழல் தங்கிய நாடே
வயிர வெல் படை வானவர் இறைவன் 145
ஆயிரம் குஞ்சரத்து அண்ணல் காக்கும்
மீமிசை உலகினும் தீது இகந்தன்று என
தொல் இசையாளர் சொல் எடுத்து ஏத்த
புகழ் ஆர்வு எய்திய திகழ் முடி சென்னியன்

ஆசு_இல் பாடல் அமிழ்து உறழ் நல் யாழ் 150
கேள்வி நுனித்த கீத வித்தகத்து
ஆசாரியரொடு அரங்கு இயல் மகளிரை
ஏடு கோளாளர் எனையர் என்று எண்ணி
பேர் எழுத்து ஓலை பெறு முறை நோக்கி
கட்டு உடை கலனும் கதிர் முத்து ஆரமும் 155
பட்டு இயல் கலிங்கமொடு பாசிழை நல்கி
இலை தொழில் தட கையள் எழுந்தீக இனி என
கலை தொழில் அவையம் கைதொழ புக்கு ஆங்கு
இருந்த இறைவன் திருந்து அடி குறுகி

செம்பொன் நல் யாழ் சிலதி கைந்நீக்கி 160
அணங்கு உறை மெல் விரல் வணங்கினள் கூப்பி
இறைஞ்சிய மாதரை எடுத்தனன் தழீஇ
பிதிர் சுணங்கு ஆகமொடு பெரும் தோள் நீவி
கதிர் பொன் பட்டமொடு கனம் குழை திருத்தி
ஒண் நுதல் மாதரை ஒரு கை பற்றி 165
பொன்_இழை தாயுழை போக என புகலலும்
தான் முன் கண்ட தவற்றினள் ஆதலின்
சென்ற வாயிற்கு ஒன்றலள் ஊடி
புலவியில் கருகிய திரு முகம் இறை_மகட்கு

உவகையின் மகிழ்ந்த முறுவலள் ஆகி 170
கடைக்கண் தூதால் காவலன் கடைஇ
சுடர் குழை பயந்தோள் சொல்லா நிற்ப
இன் சொல் மகளிர் எனை பலருள்ளும்
நுந்தை நெஞ்சம் நீ அற பெற்றாங்கு
உர களிறு அடக்கிய ஓசைத்து ஆகி 175
வரத்தொடு வந்த வசை தீர் சிறப்பின்
வத்தவ குலத்து துப்பு என தோன்றிய
தகை ஒலி வீணையொடு அவை துறைபோகி
உருவிற்கு ஒத்த திருவினை ஆகி

குடி விளக்குறூஉம் கொடியே வா என 180
மாதர் ஆயத்து மகள்-வயின் கொளீஇ
தாயர் எல்லாம் தழீஇயினர் முயங்கி
சுற்ற மாந்தர் தொக்கனர் புகல
வத்தவர் இறைவனை வருக என கூஉய்
பொன் கோட்டு அம்பலம் பொலிய ஏறி 185
கற்றறிவாளர் சுற்றிய நடுவண்
தாம் உயல் வேட்கையின் மா நிலத்து உறையுநர்
மர முதல் சாய மருந்து கொண்டாஅங்கு
நம் குடி வலித்தல் வேண்டி நம்பி

தன் குடி கெடுத்த தகவிலாளனேன் 190
என் மனம் புகல வேண்டின் இவனை தன்
மண் மிசை நிறுக்கும் மந்திரம் இருக்க என
மதி_வலாளர் விதி வகை இது என
தண் உஞ்சேனையும் தகை கோசம்பியும்
பண்டு கண் அழிந்த பகையினை நீக்கி 195
பொன்னும் நெல்லும் புரிவின் வழங்குக என்று
ஒன்று என பயிற்றி உரும் இடித்து அன்ன
வென்றி முரசம் வீதி-தோறு எருக்கி
முன் யான் இவனை முருக்கலும் வேண்டினென்

பின் யான் இவனை பெருக்கலும் உற்றனென் 200
எமரன் ஆயின் இறை கொடுத்து அகல்க
அமரன் ஆயின் அமைவொடு நிற்க என
அடல் வேல் தானை ஆருணி அரசற்கு
ஞாலத்து இன் உயிர் வாழ்வோர் நாப்பண்
காலம் பார்க்கும் காலன் போல 205
வெல் போர் உதயணன் வெல் துணை ஆக
பல் கோடு யானை பாலகன் வரும் என
கணக்கு_துறை முற்றிய கடும் சொல் ஓலை
அரக்கு_பொறி ஒற்றி ஆணையின் போக்கி

எண் படை தலைவரும் இருபிறப்பாளரும் 210
எண்பதினாயிரம் இளம் பதுவாய்களும்
ஏற்று இனம் வரூஉம் நாற்றம் கழுமிய
மதம் கவுள் பிறந்த கதம் திகழ் படாத்த
ஐந்நூறு யானையும் ஆயிரம் புரவியும்
எண்பது தேரும் இரு வகை தொறுவும் 215
நல் மணி ஐம்பால் நருமதை உள்ளுறுத்து
இரங்கு பொன் கிண்கிணி அரங்கு இயல் ஆயத்து
நாடக மகளிர் நால்_எண்பதின்மரும்
கோடு இயல் ஊர்தியும் கொண்டு விசியுறுத்து

கோடி விழு_நிதி கொண்டு அகம் செறிக்க 220
பாடு இயல் பண்டியொடு படை செலல் விதித்து
வளம் கெழு தாயத்து வழியடை ஆகிய
இளங்கோ நம்பியும் இவனொடு செல்க என
மாண் மொழி குருசில் ஆணை வைத்து அகம் புக
நாள் கொண்டு எழுவது நாளை ஆம் என 225
அமைச்சனும் செவிலியும் அமைந்த வகையால்
நாள் கொளற்கு இருந்துழி நல் நகர் கேட்ப
கழிந்த யாண்டும் கய நீராட்டணி
ஒழிந்ததன் தண்டம் உயர் கொடி மூதூர்

குருதி வெள்ளம் கூலம் பரப்பி 230
அழு குரல் மயங்கிய அல்லற்று ஆக
மத வலி வேழம் மையலுறுத்த
கடவுள் யான் என கடவுள் காட்டி
பேர் இசை கடவுள் பெரு நகர் தோன்றி
சேரி ஆயத்து செம் முதிர் பெண்டிரொடு 235
கட்டு அறி மகடூஉ கடிமுறத்து இட்ட
வட்ட நெல்லும் மாண்பு இல பெரிது என
குற்றம் உண்டு எனில் கூறு-மின் எமக்கு என
கரும் கால் கலிங்கமொடு காஅழ் கலக்கி

பிட்ட வாயள் பெரும் பாகீரதி 240
பொய் பேய் ஏறி பொள்ளென நக்கு
முலை இடை துளங்கும் முத்து உறழ் ஆரமொடு
தகை எருத்து உரிஞ்சும் தமனிய குழையள்
கொடும் பூண் மார்பில் கூந்தல் பரப்பி
பிடி கை அன்ன பெரும் தோள் ஓச்சி 245
இடி குரல் முரசின் முன் எழுந்தனள் ஆடி
விழா கோளாளரை குழாத்திடை தரீஇ
திரு நீராட்டணி மருவீர் ஆயின்
பிணக்குறை படுத்து பிளிறுபு சீறிய

இன்றும் சென்று யான் குஞ்சரம் புகுவல் என்று 250
அம்_சில்_ஓதி அணங்கு வாய் கூற
பன்றி எறியுற்ற புண் கூர் ஞமலி
குன்றா அடிசில் குழிசி காணினும்
வெரீஇ அன்ன வியப்பினர் ஆகி
அலகை மூதூர் ஆன்றவர் எல்லாம் 255
உலகம் திரியா ஒழுக்கினர் ஆதலின்
காவல் மன்னற்கு கதுமென உரைத்தலின்
தேவர் சொல்லும் அது ஏது அதை ஆக என
வெண் முகை அடுத்து பைம் தோடு படுத்து

மாதர் அங்கையின் மங்கலத்து இயற்றிய 260
வாகை கண்ணி வலத்தில் சூட்டி
தானை சேரி தலை பெரும் திருவன்
நாள் நீராட்டணி நாளை என்று அறைதலும்
விளையாட்டு ஈரணி விற்றும் கொள்ளும்
தொலைவு_இல் மூதூர் தொன்றின மறந்து உராய் 265
தோணியும் மரமும் துறை நாவாயும்
நீர் இயல் மாடமும் நீந்து இயல் புணையும்
சுண்ணமும் சூட்டும் சுவை நறும் தேறலும்
செண்ண சிவிகையும் தேரும் வையமும்

கண் ஆர் பிடிகையும் கட்டு அமை ஊர்தியும் 270
பண் இரும் பிடியும் பண்ணுவனர் மறலி
செவ்வி பெறாஅ வைகலர் ஆகி
வான் கிளர்ந்து அன்ன வள நீராட்டணி
சேணிடை உறைநரும் சென்று காண்புழி
புதவகத்து உறைந்தோர் போம் பொழுது என்று என 275
உதயணகுமரனை ஓர்த்துற சொல்லி
நூலறிவாளர் நால்வரை விட்ட பின்
உவா கடல் பரப்பின் ஒல்லென மயங்கி
விழா கொண்டன்றால் வியல் நகர் விரைந்து என்
*1 உஞ்சைக் காண்டம்

#38 விழாவாத்திரை
விரைந்தனர் கொண்ட விரி நீர் ஆத்திரை
புரிந்து உடன் அயரும் பொலிவினது ஆகி
மல்லல் மூதூர் எல்லா சேரியும்
பயிர் வளை அரவமொடு வயிர் எடுத்து ஊதி
இடி முரசு எறிந்த எழுச்சித்து ஆகி 5
யாழும் குழலும் இயம்பிய மறுகில
மாலை அணிந்த மணி காழ் படாகையொடு
கால் புடைத்து எடுத்த கதலிகை நெடும் கொடி
ஆர்வ மகளிரும் ஆய் கழல் மைந்தரும்

வீர குமரரும் விரும்புவனர் ஏறிய 10
மாவும் களிறும் மருப்பு இயல் ஊர்தியும்
கால் இரும் பிடியும் கடும் கால் பிடிகையும்
தேரும் மாக்களும் தெருவகத்து எடுத்த
எழு துகள் சூழ்ந்து மழுகுபு மாழ்கி
பகலோன் கெடும் என பாற்றுவன போல 15
அகல் இரு வான துகள் துடைத்து ஆட
விசும்புற நிமிர்ந்த பசும்பொன் மாடத்து
வெண் சுடர் வீதி விலக்குவனர் போல
எண்ண_அரும் பல் படை இயக்கு இடம் பெறாஅ

நகர நம்பியர் அரச_குமரர் 20
நிறை களிறு இவை காண் நீங்கு-மின் எனவும்
இறைவன் ஆணை ஈங்கு எவன் செய்யும்
புதல்வர் ஆணை புது நீராட்டு என
சிறாஅர் மொய்த்த அறாஅ விருப்பின்
கம்பலை தெருவின் எம்பரும் எடுத்த 25
குடையும் கொடியும் கூந்தல் பிச்சமும்
அடல் வேல் யானை அடங்கும் காழும்
களிறு எறி கவிரியொடு காண் தக மயங்கி
பெரு நீர் கரும் கடல் துளுப்பிட்டது போல்

ஒண் நுதல் மகளிர் உண்கண் நிரைத்த 30
கஞ்சிகை துளங்க கயிற்று வரை நில்லா
செம் சுவல் பாண்டியம் செல் கதி பெறாஅ
குரைத்து எழுந்து உகளும் குரம் புவி நிரைத்து உடன்
சங்கு இசை வெரீஇ சால்பு_இல பொங்கலின
அவிழ்ந்த கூந்தல் அங்கையின் அடைச்சி 35
அரிந்து கால் பரிந்த கோதையர் ஆகத்து
பரிந்து காழ் உகுத்த முத்தினர் பாகர்க்கு
காப்பு நேரிய கூப்பிய கையினர்
இடுக்கண் இரப்போர் நடுக்கம் நோக்கி

அரறுவ போல ஆர்க்கும் தாரோடு 40
உரறுபு தெளித்து கழறும் பாகர்
வைய நிரையும் வய பிடி ஒழுக்கும்
கை புனை சிவிகையும் கச்சு அணி மாடமும்
செற்றுபு செறிந்தவை மொக்குள் ஆக
மக்கள் பெரும் கடல் மடை திறந்தது போல் 45
எ திசை மருங்கினும் இவர்ந்து மேலோங்கிய
கட்டு அளை வாயில் இவர்வனர் கழிந்த
வரம்பு_இல் பல் சனம் பரந்த பழனத்து
ஆற்று இரு கரையின் அசோகம் பொழிலினும்

காய்த்து ஒசி எருத்தின் கமுகு இளம் தோட்டமும் 50
மயிலும் குயிலும் மந்தியும் கிளியும்
பயில் பூம் பொதும்பினும் பல் மலர் காவு-தொறும்
உயர தொடுத்த ஊசலது ஆகி
மரம்-தொறும் மொய்த்த மாந்தர்த்து ஆகி
புறம் கவின் கொண்ட நிறம் கிளர் செல்வத்து 55
ஊர் அங்காடி உய்த்து வைத்தது போல்
நீர் அங்காடி நெறிப்பட நாட்டி
கூல வாழ்நர் கோல் முறை குத்திய
நீல கண்ட நிரைத்த மருங்கின்

உண்ண மதுவும் உரைக்கும் நானமும் 60
சுண்ணமும் சாந்தும் சுரும்பு இமிர் கோதையும்
அணியும் கலனும் ஆடையும் நிறைந்த
கண் அகன் கடைகள் ஒள்_நுதல் ஆயத்து
கன்னி மாண்டுழி துன்னுபு நசைஇய
தூதுவர் போல மூசின குழீஇ 65
ஆணை தடைஇய நூல் நெறி அவையத்து
கல்வி ஆளார் சொல் இசை போல
வேட்போர் இன்றி வெறிய ஆக
மாக்கள் உழிதரும் மணல் நெடும் தெருவில்

மடல் இவர் போந்தை மதர்வை வெண் தோட்டினும் 70
படலை வெண் சாந்தினும் படத்தினும் இயன்ற
பந்தரும் படப்பும் பரந்த பாடி
அந்தமும் ஆதியும் அறிவு அருங்குரைத்த
யோசனை அகலத்து ஒலிக்கும் புள்ளின்
தேவரும் விழையும் திரு நீர் பொய்கை 75
கரையும் கழியும் கானலும் துறையும்
நிரை வளை மகளிர் நீர் பாய் மாடமொடு
மிடைபு தலைமணந்த மேதகு வனப்பின்
கடல் கண்கூடிய காலம் போல

நூல் வினை நுனித்த நுண் வினை படாத்து 80
தானக மாடமொடு தலைமணந்து ஓங்கிய
வம்பு வரி கொட்டிலொடு வண் திரை மயங்கி
செம் வான் முகிலின் செறிந்த செல்வத்து
எவ்வாய் மருங்கினும் இடையற குழீஇ
ஊர் இறைகொண்ட நீர் நிறை விழவினுள் 85
இறைவன் பணி என்று இறைகொண்டு ஈண்டி
நிறை புனல் புகாஅர் நின் அகத்தோர் என
விழா கோளாளர் விரைந்து சென்று உரைத்தலும்
உவா கடல் ஒலியின் உரிமையொடு உராஅய்

விழா கொள் கம்பலின் வெகுண்டு வெளில் முருக்கி 90
எழா நிலை புகாஅ இனம் கடி சீற்றத்து
ஆணை இகக்கும் அடக்க_அரும் களிறு
சேண் இகந்து உறைந்த சேனையின் கடிக என
வேந்து பிழைத்து அகன்ற வினைவர் ஆயினும்
சேர்ந்தோர் தப்பிய செறுநர் ஆயினும் 95
கலம் கவர்ந்து அகன்ற கள்வர் ஆயினும்
நிலம் பெயர்ந்து உறைதல் நெடுந்தகை வேண்டான்
தொகுதந்து ஈண்டி கிளைஞர் ஆகி
புகுதந்தீக இ புனலாட்டு அகத்து என

சாற்றிட கொண்ட ஏற்று உரி முரசம் 100
திரு நகர் மூதூர் தெருவு-தோறு எருக்கி
மெய் காப்பு இளையர் அல்லது கைகூர்ந்து
இடைகொள வரினும் இருபத்தொரு நாள்
படை கொள பெறாஅ படிவ தானையன்
தாழ் புனல் தாரையும் தமரொடு தருக்கும் 105
நாழிகை தூம்பும் நறு மலர் பந்தும்
சுண்ண வட்டும் சுழி நீர் கோடும் என்று
எண்ணிய பிறவும் இளையோர்க்கு இயைந்த
புனலகத்து உதவும் போக கருவி

பணை எருத்து ஏற்றி பண்ணின ஆகி 110
மாலையும் மணியும் மத்தக பட்டும்
கோதையும் அணிந்த கோலம் உடையன
திரு நீராட்டினுள் தேவியர்க்கு ஆவன
மேவிய வனப்பொடு மிசை பிறர் பொறாதன
பாகர் ஊர பக்கம் செல்வன 115
ஆறாட்டு இள பிடி ஆயிரத்து அங்கண்
குறும் பொறை மருங்கில் குன்றம் போல
இரு நிலம் நனைப்ப இழிதரு கடாத்து
கைம்மிக களித்த கவுளது ஆயினும்

செயிர் கொள் மன்னர் செருவிடத்து அல்லது 120
உயிர் நடுக்குறாஅ வேழம் பண்ணி
அரசு கைகொடுப்ப அண்ணாந்து இயலி
கடிகை ஆரம் கழுத்தின் மின்ன
பயிர் கொள் வேழத்து பணை எருத்து இரீஇ
கடவுட்கு அல்லது கால் துளக்கு இல்லது 125
தடவு நிலை நிழற்றிய தாம வெண் குடை
ஏந்திய நீழல் சாந்து கண் புலர்த்திய
பரந்த கவரி படாகை சுற்றத்து
உயர்ந்த உழை கலத்து இயன்ற அணியின்

முந்நீர் ஒலியின் முழங்கு முரசமொடு 130
இன் நீர் வெள் வளை அலறும் ஆர்ப்பின்
மைத்துன மன்னரும் மந்திர துணைவரும்
அத்துணை சான்ற அந்தணாளரும்
சுற்றுபு சூழ முற்றத்து ஏறி
பிடியும் வையமும் வடிவு அமை பிடிகையும் 135
பெரும் தேன் ஒழுக்கின் பிணங்கிய செலவின்
வண்ண மகளிர் சுண்ணமொடு சொரியும்
மலர் தூம் மாடம் மயங்கிய மறுகின்
நாள் பெரு வாயில் நாறு நீர் ஆத்திரை

வாள் கெழு நெடுந்தகை வளம் பட எழலும் 140
உயவ கொண்ட ஓவிய தண்டிகை
இயை கொள் வெள்ளியோடு இரும்பு யாப்புறுத்து
வான் கொடி பவழமொடு வல்லோர் வகுத்த
ஆன் கண் சந்தனத்து அரி கவறு பரப்பி
முத்தும் மணியும் சித்திரத்து இயற்றி 145
பத்தி பயின்ற கட்டக கம்மத்து
மருப்பு இடை பயின்ற மாசு_அறு மணி தொழில்
பரப்பு அமை பலகையொடு பாசுணம் கோலி
ஐ வகை வண்ணமும் ஆகரித்து ஊட்டி

கைவினை நுனித்த கச்சு அணி கஞ்சிகை 150
பசும்பொன் குயின்ற பத்தி போர்வை
அசும்பின் தேயா அலர் கதிர் ஆழி
பாடு இன் படு மணி ஊடுறுத்து இரங்க
மாலை அணிந்த மணி தொழில் பாண்டியம்
நூல் பிணித்து இன் நுகம் நோன் சுவல் கொளீஇ 155
கோல் கொள் கன்னியர் மேல்கொண்டு ஏறி
விசி பிணியுறுத்த வெண் கோட்டு ஊர்தி
முரசு எறி முற்றத்து முந்து வந்து ஏறும்
அரச மங்கையர் அடி மிசை கொண்ட

கிண்கிணி மயங்கிய தண் பெரும் கோயில் 160
கடைப்பக செப்பே கவரி குஞ்சம்
அடைப்பை சுற்றமொடு அன்னவை பிறவும்
அணிகல பேழையும் ஆடை வட்டியும்
மணி செய் வள்ளமும் மது மகிழ் குடமும்
பூ பெய் செப்பும் புகை அகில் அறையும் 165
சீப்பு இடு சிக்கமும் செம்பொன் கலசமும்
காப்பிய கோசமும் கட்டிலும் பள்ளியும்
சுட்டி கலனும் சுண்ணக குற்றியும்
வட்டிகை பலகையும் வரு முலை கச்சும்

முட்டு இணை வட்டும் முகக்கண்ணாடியும் 170
நக்கிர பலகையும் நறும் சாந்து அம்மியும்
கழுத்து இடு கழங்கும் கவறும் கண்ணியும்
பந்தும் பாவையும் பைம் கிளி கூடும்
யாழும் குழலும் அரி சிறுபறையும்
தாழ முழவமும் தண்ணுமை கருவியும் 175
ஆயத்து உதவும் அரும்_பெறல் மரபின்
போக கலப்பையும் பொறுத்தனர் மயங்கி
கூனும் குறளும் மாண் இழை மகளிரும்
திரு நுதல் ஆயத்து தேவியர் ஏறிய

பெரும் கோட்டு ஊர்தி பின்பின் பிணங்கி 180
செலவு கண்ணுற்ற பொழுதில் பலருடன்
பண்டு இ வாழ்வினை தண்டியும் கொள்வோள்
இன்று இ நங்கை கண்டதை உண்டு-கொல்
பாணி செய்தனள் காண்-மின் சென்று என
ஏறிய வையத்து எடுத்த கஞ்சிகை 185
தேறு உவா மதியின் திரு முகம் சுடர
கதிர் விரல் கவியலுள் கண்_இணை பிறழ
நெருக்குறு சுற்றத்து விருப்பின் நோக்கி
ஒட்டு இழை மகளிரை விட்டனர் நிற்ப

சுட்டு உருக்கு அகிலின் வட்டித்து கலந்த 190
வண்ண இலேகை நுண்ணிதின் வாங்கி
இடை முலை எழுச்சித்து ஆகி புடை முலை
முத்து இடை பரந்த சித்திர செய் கொடி
முதலின் முன்னம் காட்டி நுதலின்
சுட்டியின் தோன்றிய சுருளிற்று ஆகி 195
வித்தகத்து இயன்ற தன் கை தொழில் காட்டி
இன் இசை வீணை அன்றியும் நின்-வயின்
உதயண நம்பி ஓவிய தொழிலின்
வகை அறி உபாயமும் வல்லை ஆக என

தந்ததும் உண்டோ பைம்_தொடி கூறு என 200
உற்ற புருவத்து ஒராஅர் ஆகி
முற்று இழை மகளிர் முறுவல் பயிற்ற
செழும் குரல் முரசின் சேனாபதி மகள்
ஒருங்கு உயிர் கலந்த உவகை தோழியை
நறு நீர் கோலத்து கதிர் நலம் புனைஇயர் 205
நீடு அகத்து இருந்த வாசவதத்தையை
நீ செலல் பாணி நின் தாயர் எல்லாம்
தார் அணி வையம் தலைக்கடை நிறீஇ
நின்றனர் திருவே சென்றிடு விரைந்து என

விளங்கு பொன் அறையுள் விழு நிதி பேழையுள் 210
இளம் கலம் தழீஇ எண்ணி மெய் நோக்கி
தோழியர்க்கு எல்லாம் ஊழூழ் நல்கி
வதுவை வையம் ஏறினள் போல
புதுவது மகிழ்ந்த புகற்சியள் ஆகி
பதும காரிகை மகள் முகம் நோக்கி 215
தனித்து உஞ்சேனை பனி துறை படியின்
நீரின் வந்த காரிகை நேர்த்தது
துகள் தீர் இரும் தவ துணிவின் முற்றி
முகடு உயர் உலகம் முன்னிய முனிவரும்

கண்டால் கண்டு அவாம் கதிர்ப்பின ஆகி 220
தண்டா பெரும் துயர் தரும் இவள் கண் என
உள் மலி உவகையள் ஆகி தன் மகள்
இன வளை ஆயத்து இளையர் கேட்ப
புனல் விளையாட்டினுள் போற்று-மின் சென்று என
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி 225
ஆங்கு அவருள்ளும் அடைக்கலம் நினக்கு என
காஞ்சனமாலைக்கு கைப்படுத்து ஒழிந்த பின்
ஏற்ற கோலத்து இயம்பும் கிண்கிணி
நூற்றுவர் தோழியர் போற்று இயல் கூற

தெய்வ சுற்றத்து திரு நடந்தது போல் 230
பையென் சாயலொடு பாணியின் ஒதுங்கி
உறைத்து எழு மகளிரொடு தலைக்கடை சார்தலும்
யவன கைவினை ஆரியர் புனைந்தது
தமனியத்து இயன்ற தாமரை போல
பவழமும் மணியும் பல் வினை பளிங்கும் 235
தவழ் கதிர் முத்தும் தானத்து அணிந்தது
விலை வரம்பு அறியா வெறுக்கையுள் மிக்க
தலை அளவு இயன்றது தனக்கு இணை இல்லது
தாயொடு வந்த தலை பெரு வையம்

வாயின் முற்றத்து வயங்கு_இழை ஏற 240
பாத பீடிகை பக்கம் சேர்த்தலும்
செம் நூல் விசித்த நுண் நுகம் நுழைந்த
இலக்கண பாண்டியம் வலத்தின் எற்றி
கண்ணி பரிந்து கடி குளம்பு இளகலும்
பண்ணிய வையம் பள்ளி புகுக என 245
மூது அறி பாகன் ஏறல் இயையான்
இலக்கணம் இன்று என விலக்கினன் கடிய
ஆடக பொன் கவறு அணி பெற பரப்பி
கூடம் குத்திய கொழும் காழ்க்கு ஏற்ப

நாசிகை தானத்து நகை முத்து அணிந்து 250
மாசு_அறு மணி கால் மருப்பு குடம் இரீஇ
அரக்கு உருக்கு ஊட்டிய அரத்த கஞ்சிகை
கரப்பு அறை விதானமொடு கட்டில் உடையது
கோதை புனைந்த மேதகு வனப்பின்
மல்லர் பூண்ட மாட சிவிகை 255
பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும்
செய்யோள் அமர்ந்த செம்பொன் தாமரை
வள் இதழ் பொதிந்த கொட்டை போல
மெல் இயல் மாதரை உள்ளகம் புகுத்தி

மல்லல் பெரும் கிளை செல்வழி படர 260
முனிவர் ஆயினும் மூத்தோர் ஆயினும்
எனையீர் பிறரும் எதிர்வரப்பெறீர் என
வான் உறை உலகினும் வையக வரைப்பினும்
தான விளைவினும் தவத்தது பயத்தினும்
எண்ண_அரும் பல் உயிர் எய்தும் வெறுக்கையுள் 265
பெண்டிருள் மிக்க பெரும் பொருள் இன்மையின்
உயிர் எனப்படுவது உரிமை ஆதலின்
செயிர் இடையிட்டது செல்வன் காப்பு என
ஆறு கடி முரசம் அஞ்சுவர கொட்டி

காவலாளர் கால் புறம் சுற்ற 270
புயல் மலை தொடுத்து பூ மலர் துதைந்து
வியன் கா மண்டிய வெள்ளம் போல
மாட மூதூர் மறுகு இடை மண்டி
கோடுற நிவந்து மாதிரத்து உழிதரும்
கொண்மூ குழாத்தின் கண்ணுற மயங்கி 275
ஒண் நுதல் மகளிர் ஊர்தி ஒழுக்கினம்
புள் ஒலி பொய்கை பூம் துறை முன்னி
தண் பொழில் கவைஇய சண்பக காவில்
கண்டோர் மருள கண்டத்து இறுத்த

விழா மலி சுற்றமொடு வெண் மணல் ஏறி 280
நாள் அத்தாணி வால் அவை நடுவண்
நிரந்த நீர் விழவினுள் இரந்தோர்க்கு ஈக்க என
பன்னீராயிரம் பசும்பொன் மாசையும்
குவளை கண்ணியும் குங்கும குவையும்
கலிங்க வட்டியும் கலம் பெய் பேழையும் 285
பொறி ஒற்று அமைந்த குறியொடு கொண்ட
உழை காப்பாளர் உள்ளுறுத்து இயன்ற
இழை கல மகளிர் இருநூற்றுவரோடு
யாழ் அறி வித்தகற்கு ஊர்தி ஆவது

கண்டு கொள் மாத்திரை வந்தது செல்க என 290
தனக்கு என்று ஆய்ந்த தலை இரும் பிடிகளுள்
இலக்கண கருமம் எட்டா முறையது
மதியோர் புகழ்ந்த மங்கல யாக்கையொடு
விதியோர் கொளுத்திய வீரியம் உடையது
சேய் செலல் நோன் பரி சீல செய் தொழில் 295
பூ செய் கோலத்து பொலிந்த பொன் படை
மத்தக மாலையொடு மணமகள் போல்வது
உத்தராபதத்தும் ஒப்புமை இல்லா
பத்திராபதியே பண்ணி செல்க என

உதயணகுமரற்கு இயைவன பிறவும் 300
உழை கலம் எல்லாம் தலைச்செல விட்டு
வல்லே வருக வில்லாளன் விரைந்து என
விட்ட மாற்றம் பெட்டனன் பேணி
சென்ற காட்சி சிவேதனை காட்டி
பொன் அறை காவலர் பொறி-வயின் படுக என 305
செண்ண மகளிர் செப்பில் காட்டிய
வண்ணம் சூட்டின கண்ணியில் கிடந்த
பனி பூம் குவளை பயத்தின் வளர்த்த
தனி பூ பிடித்த தட கையன் ஆகி

நெடு நிலை மாநகர் நில்லான் போதந்து 310
இடு மணல் முற்றத்து இளையருள் இயன்று
படு மணி இரும் பிடி பக்கம் நண்ணி
பொலிந்த திருவின் பொற்பு உடைத்து ஆகி
மலிந்த யாக்கையின் மங்கலம் மிக்க தன்
வனப்பிற்கு ஒவ்வா வாழ்விற்று ஆகி 315
வாழ்நாள் அற்ற வகையிற்று ஆயினும்
கணை செலவு ஒழிக்கும் கடுமைத்து இது என
மனத்தில் கொண்ட மதியன் ஆகி
கண்டே புகன்ற தண்டா உவகையன்

தார் அணி இரும் பிடி தலைக்கடை இரீஇ 320
ஏர் அணி எருத்தம் இறை_மகன் ஏறலும்
தூய்மை இன்று என மா நிலத்து இயங்கா
கடவுள் இயக்கம் கற்குவ போல
குளம்பு நிலன் உறுத்தலும் குறை என நாணி
கதழ்ந்து விசை பரிக்கும் கால ஆகி 325
உரத்தகை பொன் தார் அரற்றும் ஆர்ப்பின்
பந்து புடை பாணியின் பொங்கு மயிர் புரவி
மருங்கு இரும் மணி புடை நிரந்து உடன் மிளிர
நான் முகம் கவைஇய வான் செய் பச்சைய

தான செங்கோட்டு தோல் மணை படுத்த 330
சித்திர தவிசில் செறிந்த குறங்கில்
பொன் தொடர் பொலிந்த பூம் துகில் கச்சைய
கத்திகை சிதர் மணி கடகத்து தெரிப்ப
வித்தக நம்பியர் பக்கத்து வலித்த
கானத்து குலைந்த கவரி உச்சிய 335
தானை தலை படை பாணியில் பரிப்ப
அச்சு எறி புலவர் அளவு கொண்டு அமைத்து
கடகம் நுனித்த கடை கண் திண் நுகம்
கொய் சுவல் இரட்டை மெய்யுற கொளீஇ

ஒட்டு இடை விட்ட கட்டின ஆயினும் 340
ஒன்றி நின்று இயங்கா சென்று இடை கூடுவ
மாயம் காட்டுநர் மறைய புணர்த்த
கோவை நாழிகை கொழூஉ கண் கடுப்ப
வடு சொல் நீங்கிய வயங்கிய வருணத்த
இடி சொல் பொறாஅ இலக்கண வினையர் 345
உள்ளுற கோத்த வள்பு கொள் வலி தொழில்
பாகர் நின்ற பண் அமை நெடும் தேர்
ஆக புறம் சுற்ற
கால் இயல் புரவியொடு களிறு பல பரப்பி

பால_குமரர் படை அகப்படுப்ப 350
உருவ செம் கொடி தெருவத்து பரப்பி
செரு மிகும் தாமமொடு சேனையின் கூடி
மன்னவன் இருந்த தண் பொழில் காவில்
சென்று இறுத்தனரால் நம்பியர் ஒருங்கு என்
*1உஞ்சை காண்டம்

#39 புனற்பாற் பட்டது
நம்பியர் கூடிய நாளவை மருங்கில்
கம்பலை பந்தர் காழ் அகில் கழுமிய
திரு_நாள் இருக்கை திறல் கெழு வேந்தன்
பெரு நீராட்டணி பெட்கும் பொழுது என
செம்பொன் படத்து பேறு வலித்திருந்த 5
மங்கல கணிகள் மாதிரம் நோக்கி
புரை மீன் கூடிய பொழுது இயல் கூற
இருபது யானையும் எண்பது புரவியும்
அரு மணி மான் தேர் ஐ_ஐந்து இரட்டியும்

ஒரு நூறாயிரத்து ஒரு கழஞ்சு இறுத்த 10
தமனிய மாசையொடு தக்கணை உதவி
கடவது நிறைந்த தட வளர் செம் தீ
ஒடியா கேள்வி பெரியோர் ஈண்டிய
படிவ குழுவினுள் அடி முதல் வணங்கி
ஆசை மாக்களொடு அந்தணர் கொள்க என 15
மாசை வாரி மன்னவன் ஆடி
அறிநர் தானத்து ஆயிரம் பொன் பூ
கருவி நிலை பள்ளிக்கு தொழுதனன் போக்கி
சுண்ணம் விரவிய சுரி இரும் பித்தை

கண்ணி நெற்றி வெண் சூட்டு ஏற்றி 20
தூ துகில் உடுத்து தொடி உடை தட கை
கோ தொழில் இளையர் பூ பலி கொடுத்து
செம்பொன் நெல்லின் செல் கதிர் சூட்டி
வெண் துகில் இட்ட விசய முரசம்
பண்டு இயல் அமைந்த படு கடன் எல்லாம் 25
தண் தொழில் செங்கோல் தலைத்தலை சிறக்க என
வெம் திறல் வேந்தன் விட்டு இவை கூற
கண்டு ஒரு பாணியில் கடல் கிளர்ந்தது போல்
பல் படை மொய்த்த மல்லல் பெரும் கரை

மழை மலைத்து அன்ன மாண் இழை மிடைந்து 30
வம்பு விசித்து யாத்த செம்பொன் கச்சையர்
மாலை அணிந்த கோல் செய் கோலத்து
பூ போது உறுத்த மீ பொன் கிண்கிணி
இடு மணி பெரு நிரை நெடு மணில் கிடைஇ
இரும் புறம் புதைய எழில் மறைந்திருந்த 35
கரும் கால் கானத்து கண் மணி குழாத்திடை
ஏற்று அரி மாவின் தோற்றம் போல
மின் இழை மகளிரொடு மன்னவன் தோன்றி
விசைய வேழத்து இசை எருத்து ஏற்றி

பெரு விறல் வேந்தன் சிறுவரை எல்லாம் 40
ஓடு நீர் பெரும் துறை உள்ளம் பிறந்துழி
ஆடுக போய் என்று அவர்களை அருளி
உதயணகுமரனும் உவந்துழி ஆடி
துறை நகர் விழவின் தோற்றம் எல்லாம்
பரந்த செல்வம் காண்க என பணித்து 45
புரிந்த பூவொடு பொன் சுணம் கழும
எழுந்த ஆர்ப்பொடு இயம் பல துவைப்ப
புண்ணிய பெரும் துறை மன்னவன் படிந்த பின்
இறைகொண்டு ஈண்டிய ஏனை மாந்தரும்

துறைதுறை-தோறும் உறைவு இடம் பெறாஅர் 50
தண் புனலாட்டின் தக்கணை ஏற்கும்
அந்தணாளர் அடைக விரைந்து என
பயில் நூலாளரை பயிர்வனர் கூஉய்
கவர்வனர் போல காதலின் உய்த்து
நன் கலம் ஏற்றி நாள்_அணி அணிந்து 55
மங்கல வேள்வியுள் மகள் ஈவோரும்
செம்பொன் புரிசை வெண் சுதை மாடத்து
உழை கலம் பரப்பி உருவிய மகளிரொடு
இழை கலம் நிறீஇ இல் ஈவோரும்

ஆலை கரும்பும் அரியுறு செந்நெலும் 60
பாளை கமுகின் படுவும் சுட்டி
புயல் சேண் நீங்கினும் பூ வளம் குன்றா
வயலும் தோட்டமும் வழங்குவோரும்
நாகு சூல் நீங்கிய சேதா தொகுத்து
குளம்பும் கோடும் விளங்கு பொன் உறீஇ 65
தளையும் தாம்பும் அளை கடை மத்தும்
கழுவும் கலனும் வழு_இல பிறவும்
பைம்பொனின் இயன்றவை பாற்பட வகுத்து
குன்றா கோடி கொடுத்து உவப்போரும்

இன்னவை பிறவும் என்னோர்க்கு ஆயினும் 70
உடையவை தவாஅ கொடை புரி படிவமொடு
இலம் என் மாக்களை இரவு ஒழிப்பவர் போல்
கலம் கொடை பூண்ட கையர் ஆகி
வெண் துகில் பூட்டிய வேழ குழவியும்
ஒண் படை அணிந்த வண் பரி பரவியும் 75
உண்டியும் உடையும் கொண்டு அகம் செறித்த
பண்டியும் ஊர்தியும் கொண்டனர் உழிதந்து
அந்தணர் சாலையும் அரும் தவர் பள்ளியும்
தந்து அற மருங்கில் தலைவைப்போரும்

நிலம் பெய்வோரும் நிதி பெய்வோரும் 80
களிறு பெய்வோரும் பரி பெய்வோரும்
பெய்வோர் பெய்வோர் பெயர்வு_அற குழீஇ
கொள்வோர் அறியா குரலர் ஆகி
மணல் கெழு பெரும் துறை மயங்குபு தழீஇ
வனப்பொடு புணர்ந்த வகையிற்று ஆகி 85
புனல்-பால் பட்டன்றால் பூ நகர் புரிந்து என்
*1உஞ்சை காண்டம்

# 40 உவந்தவை காட்டல்
புரிந்த சுற்றமொடு புணர்ந்து உடன் கெழீஇ
விரி நீர் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய
மறு நீங்கு சிறப்பின் மதில் உஞ்சேனை
நறு நீர் விழவின் நாள் அணி கூறுவென்
பனையும் வெதிரும் பாசிலை கமுகும் 5
இனையன பிறவும் புனைவனர் நாட்டி
கிடையும் பீலியும் இடை வரித்து அழுத்தி
மிடை வெண் துகிலின் இடை_நிலம் கோலி
அரி சாலேகமும் ஆர வள்ளியும்

கதிர் சாலேகமும் கந்தும் கதிர்ப்ப 10
வம்ப படத்து பொன் உருக்கு ஊட்டி
அள் இலை வாழை அகம் போழ்ந்து இறுத்த
வெள்ளி வெண் திரள் வேண்டு இடத்து ஊன்றி
கட்டளை நாசியொடு கபோதம் காட்டி
எட்டு இறை எய்திய இலக்கண காட்சி 15
ஏர் அணி அமைந்த எழு நில நல் வினை
நீர் அணி மாடத்து நிலா நெடு முற்றத்து
அரி பொன் கிண்கிணி ஆர்ப்ப இயலி
கரும் கண் மகளிர் கை புடைத்து ஓப்ப

இரும் கண் விசும்பு_அகம் இறகு உற பரப்பி 20
கரும் கயல் கொண்ட கவுள ஆகி
பொங்கு இரும் புன்னை பூம் பொழில் முன்னி
செம் கால் நாரை செல்வன காண்-மின்
சாந்து அரை கூல பெரும் கடை
ஈண்டிய மாதரை ஈண்டு இடம் தம்-மின் எம் 25
பூம் குழை மாதர் புனலகம் புக்கனள்
ஆங்கு இயன்று அவளை தாங்குநர் இல் என
கூந்தல் நறு மண் சாந்தொடு கொண்டு
நான செப்பொடு கூன் பின் துளங்க

பெருங்கோ நங்கை பெட்ப ஏறிய 30
இரும் கை இளம் பிடி கட செருக்கு எய்தி
கடிற்று பாகன் கைப்புழி செல்லாது
தொடி கை மகளிர் நீர் குடை வெரீஇய
நெட்டு இரும் பொய்கை குட்டம் மண்டி
ஒளி செந்தாமரை பாசடை பரப்பில் 35
களி கயல் இரிய குளிப்பது காண்-மின்
ஞாழல் படு சினை தோழியர் நூக்க
ஆம்பல் பரப்பில் பாய்ந்த பைம்_தொடி
செண்ண சிகழிகை பின்னிடை சேர்ந்த

பொன் அரி மாலை-தன் புறம்பிடை புடைப்ப 40
செற்ற புதவு குத்தி வாங்கி
கொழுநன் கூந்தல் கொண்டு என கருதி
கழுநீர் உண்கண் கடையில் நோக்கி
அன்மையின் அழுங்கிய நல்_நுதல் உவப்ப
வள் இலை பரப்பின் வள்பு எறிந்து அன்ன 45
துள் இயல் வட்டிகை துடிப்பின் கடைஇ
உள் வழி உணராது உழிதரும் கணவன்
நனி பெரும் காதலொடு நண்ணு வழி அடைய
பனி வார் உண்கண் பைதல் மறைய

முகிழ்ந்து வீங்கு இள முலை முத்து இடை நாற்றி 50
கவிழ்ந்து எருத்து இறைஞ்சும் ஓர் காரிகை காண்-மின்
நீல குவளை நிரை இதழ் உடுத்த
கோல பாசடை பால் சொரிந்து அன்ன
தூ வெள் அரும் சிறை சேவலொடு உளரி
பள்ளி அன்னம் பகலில் துயிலா 55
வெள் வளை மகளிர் முள்குவநர் குடையும்
நீர் ஒலி மயக்கிய ஊர் மலி பெரும் துறை
கடல் திரை கண்டம் கானல் குத்தி
மடல் பனை ஊசலொடு மாடம் ஓங்கிய

உருவ வெண் மணல் பெரு வெண் கோயிலுள் 60
செம்பொன் கிண்கிணி சேனாபதி மகள்
கம்பல் சுற்றமொடு கன்னியர் காப்ப
பைம் தொடி கோமாள் நங்கையர் நடுவண்
வண்டு உளர் ஐம்பால் வாசவதத்தை
அரைச_மங்கையர் ஆயமொடு கெழீஇ 65
நிரை வெண் மாடத்து நீர் அணி காணிய
போதரும் என்னும் காதலின் விரும்பி
பெரும் கால் புன்னை கரும் கோட்டு அணைத்த
நாவாய் பண்ணு மா விறல் மள்ளர்க்கு

கள் அடு மகடூஉ கை சோர்ந்து இட்ட 70
வெள்ளி வள்ளம் பல் உற கவ்வி
கூட கூம்பின் நீள் திரள் ஏறி
உச்சிக்கு இவரும் கட்கு இன் கடுவன்
வீழ்ந்த திங்களை விசும்பு கொண்டு ஏறும்
தெய்வ மகாஅரின் ஐயுற தோன்றி 75
துள்ளுபு திரிதரும் தோற்றம் காண்-மின்
சுழலும் கண்ணினன் சோர்தரு மாலையன்
அழல் நறும் தேறல் ஆர மாந்தி
காழகம் மீ கொண்டு ஆழும் தானையன்

வாழ்க வாழ்க எம் மதில் உஞ்சேனை 80
மட்டு உண் மகளிர் சுற்றமொடு பொலிக என
துட்ட கிளவி பெட்டவை பயிற்றி
கள் பகர் மகடூஉ கள் குடை ஓசையும்
கன் அமர் பள்ளி கம்மியர் இடிக்கும்
பல் மலர் காவின் அம்மனை வள்ளையும் 85
குழலும் யாழும் மழலை முழவமும்
முட்டு_இன்று இயம்பும் பட்டினம் ஒரீஇ
துறக்கம் கூடினும் துறந்து இவண் நீங்கும்
பிறப்போ வேண்டேன் யான் என கூறி

ஆர்த்த வாயன் ஊர் களி மூர்க்கன் 90
செவ்வழி கீதம் சிதைய பாடி
அ வழி வரும் ஓர் அந்தணாளனை
செல்லல் ஆணை நில் இவண் நீ என
எய்த சென்று வைது அவண் விலக்கி
வழுத்தினேம் உண்ணும் இ வடி நறும் தேறலை 95
பழித்து கூறும் நின் பார்ப்பன கணம் அது
சொல்லாய் ஆயின் புல்லுவென் யான் என
கை அலைத்து ஓடும் ஓர் களி_மகன் காண்-மின்
பல் காசு நிரைஇய அல்குல் வெண் துகில்

ஈர தானை நீரிடை சோர 100
தோட்டார் திரு நுதல் சூட்டு அயல் சுடரும்
சுட்டி சிதைய குட்டத்து குளித்து
மகர குண்டலம் மறிந்து வில் வீச
கிளரும் பாசிழை கிண்கிணி கணை கால்
அம் செம் சீறடி அஞ்சுவர ஓடி 105
நிரை வளை மகளிர் நீர் குடைவு ஒரீஇ
புரை பூம் கொண்டையில் புகைப்பன காண்-மின்
கரும் கால் புன்னையொடு இரும் கரும்பு உடுத்து
நாணல் கவைஇய கானல் ஒருசிறை

மகிழ் பூ மாலையொடு மருது இணர் மிடைந்த 110
அவிழ் பூம் கோதையோடு அவிர் இழை பொங்க
எக்கர் தாழை நீர் துறை தாழ்ந்த
நெடு வீழ் ஊசல் முடி பிணி ஏறி
தொடு வேல் முற்றத்து தோழியோடு ஆடா
பட்டு இயல் கண்டத்து பலர் மனம் கவற்ற ஓர் 115
எட்டி குமரன் இனிதின் இயக்கும்
இன் ஒலி வீணை பண் ஒலி வெரீஇ
வஞ்சி கொம்பர் துஞ்சு அரித்து உளரி
ஒளி மயிர் கலாபம் பரப்பி இ ஓர்

களி மயில் கணம் கொண்டு ஆடுவன காண்-மின் 120
அதிரல் பரந்த அசோகம் தண் பொழில்
மணி கயத்து இயன்ற மறு_இல் தண் நிழல்
பனி பூம் குவளையொடு பாதிரி விரைஇ
வேதிகை எறிந்த வெண் மணல் திண்ணை
பாலிகை தாழியொடு பல் குடம் இரீஇ 125
முந்தீர் பந்தர் முன் கடை நாட்டி
வரைவின் மாந்தர்க்கு புரை பதம் பகரும்
கலம் பூச்சு அரவத்து இலஞ்சி முற்றத்து
கருப்பு கட்டியொடு தருப்பணம் கூட்டி

நெய் சூட்டு இயன்ற சிறு பல் உண்டி 130
நகை பதம் மிகுத்த கையர் ஆகி
தொகை கணம் போதரும் அற சோற்று அட்டில்
தளை உலை வெந்த வளை வால் அரிசி
வண்ண புழுக்கல் உண்ணாது சிதறி
ஊட்டு எமக்கு ஈத்த கோப்பெருந்தேவி 135
முன்னராக முன்னு-மின் கொண்டு என
தலை பெரு மடையனை தலை கடை வாங்கும்
எம் தயிர் வாரான் எமக்கு என சீறி
அந்தணாளர் அலைப்பது காண்-மின்

முன் துறை ஈண்டிய குன்ற வெண் மணல் 140
எக்கர் மீமிசை தொக்கு ஒருங்கு ஈண்டி
நுண் அயிர் வெண் துகள் குடங்கையின் வாரி
இலை பூண் கவைஇய எழுது கொடி ஆகத்து
முலை கச்சு இள முலை முகத்திடை அப்பி
மராஅம் மயிலின் மயங்குபு தூங்கும் 145
குழாஅம் மகளிர் குரவை காண்-மின்
புனைந்து ஏந்து அல்குல் காசு புதையாது
நனைந்து நிறம் கரந்த நார் நூல் வெண் துகில்
அரையது ஆகவும் ஆடை காணாது

நிரை வளை முன்கை தோழியர் குடைந்த 150
நுரை கை அரிக்கும் ஓர் நுடங்கு_இடை காண்-மின்
தொக்கனர் படியும் தொய்யில் மகளிர் தம்
கை கொள் நீரில் கண் நிழல் கயல் என
மெய் கண் மேவார் மெல்லென சொரிதந்து
எக்கர் கிளைக்கும் ஏழையர் காண்-மின் 155
நெடு நீர் மாடத்து ஏணி ஏறி
பொறி மயில் பெடையின் பொங்குபு பாய்தலின்
அணி கையில் தவழ்ந்த மணி குரல் ஐம்பால்
ஈர் முத்து ஆகத்து ஈரம் புலர்த்தி

அழல் நறும் தேறல் சுழல் வண்டு ஓப்பி 160
குறி வெம் காதலன் பொறி யாப்புறுத்த
தமனிய வள்ளத்து தன் நிழல் நோக்கி
பிறள் முகம் இது என பெண்மையின் மயங்கி
கள்ளினுள் தோன்றும் இ ஒள் இழை மாதரை
பண்டும் ஒரு-கால் கண்டு அகத்து அடக்கிய 165
ஐய பரத்தையை கையொடு கண்டேம்
இனி பொய் உண்ணும் ஏழையம் அல்லம் என்று
அணி தகு நுதல் வியர்த்து அரை எழுத்து அளைஇ
துனிப்பு உறு கிளவி பனி கடல் பிறந்த

அரும்_பெறல் அமிழ்து என விரும்பும் வேட்கையன் 170
முகிழ் நகை முகத்தன் ஆகி முற்று_இழை
அவிழ் குரல் கூந்தல் அங்கை அடைச்சி
கள் அமர் தேவி நின் கதிர் விடு நெடு முகத்து
ஒள் அணி காணிய உள்ளி வந்ததை
உணராது புலத்தல் புணர்குவை ஆயின் என் 175
உள்ளகம் சுடும் என உள் அவிழ்ந்து எழுதரும்
காம கட்டுரை கனி என அளைஇ
தாம கோதையொடு தாழ் சிகை திருத்தி
வளர்ந்து ஏந்து இள முலை மருங்கு இவர்ந்து கிடந்த

பொலன் கலம் மணி பூண் பொலிய புல்லி அவள் 180
மனம்கொள தேற்றும் ஓர் மைந்தனை காண்-மின்
ஏம முந்நீர் எறி சுறவு உயர்த்த
காமனும் விழையும் காமர் காரிகை
கலை உணர் மகளிர் உள்ளம் போல
நிலை_இன்று உழிதரும் நெடும் சுழி நீத்தத்து 185
வினை தீர் உயிரின் மிதந்தது கீழா
பண் அமை நெடும் புணை திண்ணிதின் தழீஇ
ஆய மாக்களொடு சேய் வழி ஓடி
கலந்து காதலின் ஆடலின் கை சோர்ந்து

மலர்ந்து கடை போழ்ந்து மாழை கழீஇ 190
காமம் கனிந்த கரும் தடம் கண்ணின்
இமை தீர் வெம் பனி முலை முகம் நனைப்ப
மாரி பிடி கை நால்புறல் கடுப்ப
நீர் பொறை ஆற்றாது நெகிழ்ந்து வீழ் இசைந்த
கார் இரும் கூந்தல் கையின் ஏந்தி 195
அகலின் அகலும் உயிரினள் ஆகி
தலை நீர் பெரும் துறை நிலை நீர் நின்ற
வண்டு ஆர் கோதையை கண்டனன் ஆகி
நீள் நீர் நீந்தி நெடும் புணை ஒழிய

தன்-வயின் செல்லும் இல் வள கொழுநனை 200
நின்-வயின் காதல் நில்லாது ஊர்தரும்
பூம் புனல் மடந்தையை புணர்ந்து விளையாடி
தேம்பட மொழிந்து வேம்பு மனத்து அடக்கி
வாரலோ என வாய் திறந்து மிழற்றி
ஓராது புலக்கும் ஓர் ஒள்_இழை காண்-மின் 205
நச்சு மன வேந்தர்க்கு துச்சில் அமைத்த
சிறு வலி ஒருவனின் தன் மனம் சுருங்கி
நறு மெல் ஆகம் நந்து பொறை எள்க
போக்கிடம் இன்றி வீக்கமொடு பெருகி

அம்மையும் அழகும் கொம்மையொடு கழுமி 210
கால் பரந்திருந்த கரும் கண் வெம் முலை
மேல் இருந்தன யான் பொறை ஆற்றேன் என்று
ஒசிவது போலும் நின் நொசி நுசுப்பு உணராது
இனக்கு இடை இ புனல் குடைகுவை ஆயின்
நினக்கு இடை மற்றொன்று உடையையோ என 215
காதல் செவிலி கழறுபு விலக்கவும்
போதல் கண்ணே புரிந்த வேட்கையின்
ஐ அரி பரந்த அரி மலர் நெடும் கண்
மை உண்டு மதர்த்த மணி ஒழுக்கு ஏய்ப்ப

கோல ஆகத்து கொடிபட எழுதிய 220
சாதிங்குலிகம் ஆதி ஆக
சுட்டி சுண்ணமொடு மட்டித்து கலந்த
குங்கும கொழும் சேறு கூட குழைத்திட்டு
இந்திர வில் நெகிழ்ந்து உருகியாங்கு
நீடு உர வழியினூடு நிமிர்ந்து ஒழுகி 225
பிணர் முரி பட்டு உடை பெரு நல அல்குல்
காசு நிழல் காட்டும் மாசு_இல் மாமை
ஆவி நுண் துகில் அணி நலம் நனைப்ப
பூவினுள் பிறந்த புனை_இழை போல

தண்ணீர் தோழியர் ஆட தான் தன் 230
கண்ணீர் ஆடும் ஓர் கனம்_குழை காண்-மின்
திரு வீற்றிருந்த திரு நகர் வரைப்பின்
உரு மீக்கூறும் மன்னவன் ஒரு மகள்
கண்டு கண் ஓரா காமர் காரிகை
வண்டு உளர் ஐம்பால் வாசவதத்தை 235
போணி ஆடும் பெரும் புனல் விழவினுள்
நாணி செல்லா நல்குரவு உடையோர்க்கு
அரும் பொறி அணிகலம் ஆர பெய்த
பெரும் பொறி பேழை இவை என கூறி

கறை வாய் முரசம் கண் அதிர்ந்து இயம்ப 240
அறையவும் கொள்ளும் குறை_இலர் ஆகி
துறைதுறை-தோறும் இறைகொண்டோருள்
அணியாதோரை ஆராய்ந்து உழிதரும்
பணியா வேந்தன் பணிநரை காண்-மின்
புழல் கால் தாமரை அழல் போது அங்கண் 245
அல்லி மெல் அணை பள்ளி கொண்ட
தார் பூம் பேடை தையலர் எடுத்த
நீர் போர் கவ்வையின் நீங்கி முனாஅது
ஒள் ஒளி பவளத்து உள் ஒளி அடக்கி

வெள்ளி பூம் தார் எள்ளும் தோற்றத்து 250
போது பொறை ஆற்றா புன்னை அம் பொதும்பர்
தாது புறத்து உறைப்ப தங்கலின் தலை பரிந்து
இகழ்வு_இல் நோக்கமொடு இரை வேட்டு எழுந்த
பவழ செம் கால் பால் நிற சேவல்
திரை உமிழ் பொய்கையுள் இரை உமிழ்ந்து மயங்கி 255
மதி புரை தாமரை பொதி போது புல்லி அஃது
அன்மையின் அழிந்து புன்மையின் புலம்பி
அருப்பு இள முலையவர் அடைகரை வைத்த
மருப்பு இயல் செப்பை மதித்தது ஆகி

அழல் வெம் காமத்து அன்பு தலைக்கொண்ட 260
மழலை தீம் குரல் மருட்டி அழைஇ
குறுக சென்று அதன் உறு நோக்கு பெறாது
புன்னை அம் பள்ளி பொழில்-தொறும் நாடும்
அன்ன புள்ளின் அலமரல் காண்-மின்
நானம் தோய்த்த நறு மென் கூந்தலுள் 265
ஆன் ஐந்து தெளித்து நீரிடை மூழ்கி
ஆவிரை அலரும் அறுகையும் செரீஇ
கொட்டு மடி விரித்த பட்டு உடை தானையள்
அம் கோல் தீம் தொடை செங்கோட்டுயாழின்

பத்தர் அன்ன மெத்தென் அம் வயிற்று 270
திரையொடு பட்டு நுரையொடு மறுகி
மட்டு ஊண் மறுத்த பட்டினி படிவமொடு
கட்டளை பிழையா பட்டு உடை அல்குலள்
பெட்ட வாய்மொழி பெரும் பாகு உதிர
எதிர்ப்புனல் ஆடுநர்க்கு ஏமம் ஆக 275
புனல் துறை விடுத்த பொங்கு மடை புழுக்கலை
காக்கை ஓட்டி நோக்கின் உண்டு
வேண்டலன் ஆயினும் விறல் உஞ்சேனையும்
நீண்ட இஞ்சியும் நிறை மணி மாடமும்

உருக்குறு நறு நெய் உள்ளுற பெய்த 280
புழுக்கலொடு பால் சோறு ஆயினவாயின்
வழுக்கல் இன்றி என் வயிற்றகம் ஆர
உண்பல் என்று தன் கண் பனி வார
கொள்ளா வயிற்றின் ஆண்ட கையன்
செல்வோன் கண்டு பொள்ளென நக்கு 285
நுரை புரை வெண் துகில் அரை மிசை வீக்கி
அவி இடப்படின் என் ஆர் உயிர் வைப்பது
கடிவோர் இல்லை முடிகுவென் இன்று என
செவி மடுத்து எற்றி சிவந்த கண்ணினன்

உண்டல் புண்ணியம் உடை என ஒளித்து 290
கொண்டனை போகின் கூடுமோ நினக்கு என
பிண்டம் பெரும் கவுள் பெரு வியர் இழிதர
கண்டோர் ஆர்ப்ப கலாஅம் காமுறூஉம்
பண்ட பார்ப்பான் பட்டிமை காண்-மின்
நுரையொடு பொங்கும் நுண் நூல் வெண் துகில் 295
அரையிடை நெகிழ அசைத்தல் செல்லார்
இறும் என நுடங்கும் சிறு கொடி மருங்கில்
மதுகை ஓரா மறம் கூர் மனத்தர்
எதிர் நீர் தூஉம் இளையோர் திரு முகத்து

ஆழம் இகவா அரி பரந்து அகன்ற 300
மாழை உண்கண் மலர் என மதித்து
தண் செங்கழுநீர் தகை மலர் தாதும்
ஒண் செந்தாமரை பைம்பொன் தாதும்
ஆராய்ந்து உழிதரும் அம் சிறை வண்டினம்
ஓராங்கு நிலைபெற்று உள் நெகிழ்ந்து அவிழ்ந்த 305
பேரா இவை என பேர்தல் செல்லா
மொய்த்தலின் மற்றவை மொய்ப்பின் நீங்க
தத்து அரி நெடும் கண் தகை விரல் புதைஇ
புது மண மகளிரின் கதுமென தோன்றும்

மதுர மழலை மடவோர் காண்-மின் 310
நிறைக்குறின் நிறைத்து போக்குறின் போக்கும்
பொறி படை அமைந்த பொங்கு இலவந்திகை
முன்னம் புக்க தன் அமர் காதலன்
பாடக சீறடி பைம் தொடி மாதரை
ஆடுக வாவி-தன் அக-வயின் என்றலின் 315
செம்சூட்டு இட்டிகை சுதை சுவர் படு-கால்
அம் சிறை அன்னத்தின் அணி பெற இயலி
மண்ணு மணி அன்ன ஒள் நிற தெள் நீர்
தண் நிழல் கண்டே என் நிழல் என்னும்

நுண் மதி நுணுகா பெண் மதி பெருக 320
எழுதி அன்ன ஏந்து நுண் புருவம்
முழுது நுதல் நெருங்க முரிய ஏற்றி
செதும்பல் தாமரை செவ் இதழ் போல
பதம் பார்த்து மலரும் பனி மலர் தடம் கண்
கையிகந்து சிவப்ப வெய்துபட உயிரா 325
நிரை கொள் அன்பு தளை நெரிய ஊர்தரும்
புலவி நோக்கத்து பூம்_தொடி புலம்பி
நீர் அர_மகளிரொடு நிரந்து உடன் நின்ற
சூரன் இவன் என சொல்லும் குறிப்பினள்

பேரும் உள்ளமொடு பிறக்கு அடி இடுதலின் 330
நண்ணிய காதலி கண்ணியது உணர்ந்து
காளை போந்து அவள் சிறுபுறம் கவைஇ
பூளை மெல் அணை பொதி அவிழ்ந்து அன்ன
மென் தோள் நெகிழ பற்றி குன்றா
அழல் புரை வேகத்துள் அன்பு நீராட்டி 335
சிறு வரை தணித்து அவள் திரு முகம் திருத்தி
நீர் அர_மடந்தையும் கணவனும் இதனுள்
ஆர்வ உள்ளமொடு ஆனோர் காண்கம்
ஏகு என உய்த்து தம் இரு நலம் காட்டி

வேக ஊடல் அவள்-வயின் நீக்கி 340
உருவ கோலமொடு ஓம்பல் செல்லாது
ஒரு-வயின் ஆடும் இருவரை காண்-மின்
ஒரு மீக்கொற்றவன் உடை பொருள் உடைய
செரு ஆர் சேனை பெரு வாணிகன் மகள்
தன்னொடு நவில தன் ஐமார்கள் 345
கலத்தில் தந்த நலத்தகு விழு சீர்
வேறுபடு திருவினுள் விளங்கு இழை மகளிரை
கூறுபட நிறீஇ குளித்தனள் எழுவோள்
மின் இரும் கூந்தல் மேதக புனைந்த

பொன் அரி மாலையை புனல் கொண்டு ஈர்ப்ப 350
அ துறை மருங்கின் அயல் துறை ஆடும்
மைத்துன மன்னன் கைப்படுத்து வந்து தன்
சென்னி சேர்த்து அவள் முன்னர் தோன்ற
நெடும் புணை தழீஇ நீத்தொடு மறல
தடம் பெரும் கண்ணி தலை கவிழ்த்து இறைஞ்சி 355
செறிப்பின் ஆகிய செய்கையின் ஒரீஇ அவள்
குறிப்பில் கொண்டனன் கோதை என்பது
அயலோர் கருதின் அற்றம் தரும் என
கயல் ஏர் நெடும் கண் கடும் பனி கால

மாலை கவர்ந்து மற்று அவற்கு ஈத்தனை 360
கோல வை வேல் ஏனைய குமரர்க்கு
அறிய கூறுவென் அஞ்சுவை ஆயின்
பெயர்த்து தம் என செயிர்த்து அவள் நோக்கி
நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும்
வாணிக மகளின் மட_தகை காண்-மின் 365
மின் அவிர் மணி பூண் மன்னவன் மட மகள்
அம் கலுழ் பணை தோள் செம் கடை மழை கண்
நங்கை ஆடும் பொங்கு புனல் பூம் துறை
குங்கும குழங்கல் கொழும் களி ஆக

இ துறை மேவ எ துறை ஆயினும் 370
ஆடல்-மின் யாவிரும் ஆடுவிர் உளிர் எனின்
ஆடக பொன்னின் நும் அளவின் இயன்ற
பாவை ஆகும் படு முறை அது எம்
கோவின் ஆணை போ-மின் நீர் என
தென்மலை பிறந்த பொன் மருள் சூரல் 375
கரும் கண்-தோறும் பசும்பொன் ஏற்றி
தொடி தலை படு கோல் பிடித்த கையர்
வரிக்கு பாயத்து வார் பொன் கச்சையர்
திரு புனல் ஆடி செயிர்த்த நோக்கினர்

முழு நீர் விழவின் மூ_எழு நாளும் 380
கழுநீர் பெரும் துறை காவல் நண்ணிய
வண்டும் சேரா அஞ்சுவரு சீற்றத்து
குண்டு துறை காவலர் குழாஅம் காண்-மின்
இன்னவை பிறவும் கண்ணொடு புணர்ந்த
புண்ணியம் உடைமையின் காண்-மின் நீர் என 385
பணிவு_இல் நல்_வினை பயன் உண்டு ஆயின்
மணி முடி மன்னன் அணி உஞ்சேனையுள்
எழுமை பிறப்பும் எய்துகம் யாம் என
கழுமிய காதலொடு கைதொழுது ஏத்தி

நகர மாந்தர் பகர்வரால் பரந்து என் 390
*1 உஞ்சைக் காண்டம்

#41 நீராட்டரவம்
பரந்த விழவினுள் உவந்தவை காட்டி
நகர மாந்தர் பகர்வனர் அறையும்
பாடு இமிழ் பனி துறை கோடணை அரவமும்
கிடை போழ் பந்தத்திடை புனைந்து இயற்றிய
அவிர் நூல் பூம் கிழி யாப்பினொடு சார்த்தி 5
கட்டளை அமைய சட்டகம் கோலி
கண்டோர் இன்றியும் கை நவில் வித்தகர்
கொண்டோர் மருள கோலம் குயிற்றி
அம்பு வாய் அணிந்த பெரும் தண் சக்கரம்

சாந்தின் செய்த ஏந்து இலை எறி வேல் 10
போதின் புனைந்த பூம் பொறி வளையம்
மலர் புறத்து அழுத்திய இலை அணி ஈர் வாள்
பிணையலின் பொலிந்த கணைய கப்பணம்
சுண்ணம் பொதிந்த வண்ண வட்டு இணை
உருக்குறு முள் வாய் சேர்த்தி 15
அரக்கு உறு நறு நீர் அம் செங்குலிகம்
குங்கும ஊறலொடு கொண்டு அகத்து அடக்கிய
எந்திர நாழிகை என்று இவை பிறவும்
ஏற்றி பண்ணிய இன களிறு நிரைஇ

மாற்று மன்னர் ஆகு-மின் என தம் 20
உரிமை மகளிரொடு செரு மீக்கூறி
கரை செல் மாக்கள் கலாஅம் காமுறூஉம்
அரைச_குமரர் ஆர்ப்பு ஒலி அரவமும்
வளை ஆர் முன்கை வை எயிற்று இன் நகை
இளையோர் குடைதலின் இரை கொள பெறாஅ 25
பைம் தாள் குருகின் மென் பறை தொழுதி
தடவு சினை-தொறும்
மேற்பட மிடைந்த மேதகு குடம்பையுள்
பார்ப்பொடு நரலும் பையுள் அரவமும்

அறை வரை சாரல் சிறுகுடி சீறூர் 30
குறவர் குறைத்த கொய் புன மருங்கின்
அம் தண் அகிலும் சந்தன குழையும்
கருவிளம் கோடும் காழ் இருள் வீடும்
திரு விழை கழையும் தேக்கும் திமிசும்
பயம்பும் கோட்டமும் கயம் பல கலங்க 35
அமிழ்ந்து கீழ் ஆழ அரும் கலம் சுமந்து
நுரை புனல் நீத்தத்து நூக்குவனர் புக்கு
கரை முதல் சார்த்தும் காளைகள் அரவமும்
இடை நீர்ப்பட்ட மட மான் அம் பிணை

மம்மர் நோக்கம் நோக்கி நையா 40
நம் இல் காலை என்ன என்று எண்ணி
புனல் சுழி நீத்தம் நீந்தி மற்றவை
இனத்திடை புகுத்தும் இளையோர் அரவமும்
தொடி அணி தோளியர் துன்னி ஏறிய
வடிவு அமை அம்பி அடியின் உள் வானத்து 45
ஆழல் தவிர்ந்து அரும் புனல் கவைஇயின
தாழ்தரும் வலி-மின் தையலீர் என
திரிதரல் ஓவாது தீயவை சொல்லிய
மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர்

அச்ச பணி மொழி அமிழ்து என மிழற்றி 50
நச்சுவனர் ஆடும் நல்லோர் அரவமும்
அணி அறல் அன்ன ஐம்பால் கூழையர்
மணி உமிழ்ந்து இமைக்கும் வயங்கு கொடி பைம் பூண்
முத்தொடு முரணி தத்தும் ஆகத்து
காமம் காலா ஏம நோக்கத்து 55
மாதர் ஆற்றா மழலை அம் கிளவி
பேதை மகளிர் சேதடி அணிந்த
கண் பிணி பகு வாய் கிண்கிணி அரவமும்
முகிழ் நிலா விரிந்த முத்து வட கழுத்தினர்

திகழ் நிலா விரிந்த திரு மதி முகத்தர் 60
செண்ணம் ஆகிய சிகழிகை முடியர்
வண்ண மகடூஉ வல்லவா வகுத்த
இரத பல் காழ் பரவை அல்குலர்
பொன் நிற கோங்கின் பொங்கு முகிழ்ப்பு என்ன
முன்னர் ஈன்ற முலை முதல் முற்றத்து 65
மின்னு கொடி பிறழும் கன்னி கோலமொடு
ஒதுங்கல் ஆற்றா ஒளி மலர் சேவடி
பெதும்பை மகளிர் சிலம்பு ஒலி அரவமும்
கொடி அணி பிறழும் கொம்மை வெம் முலை

கடிகை வேய் நலம் கழிக்கும் மென் தோள் 70
கொடி என நடுங்கும் கோல மருங்குலர்
அம்பு என கிடந்த ஐ அரி நெடும் கண்
மங்கை மகளிர் பைம் காசு அரவமும்
நீல் நிற கொண்மூ நெற்றி முள்கும்
வால் நிற வளர்_பிறை வண்ணம் கடுப்ப 75
சில் மெல் ஓதி சேர்ந்த சிறு நுதல்
குலாஅய் கிடந்த கொடு நுண் புருவத்து
உலாஅய் பிறழும் ஒள் அரி தடம் கண்
வம்பு மீக்கூரும் பொங்கு இள முலையின்

நுடங்கு கொடி மருங்கின் நுணுகிய நுசுப்பின் 80
மடந்தை மகளிர் குடைந்து ஆடு அரவமும்
கலம் கவின் பெற்ற கண் ஆர் களிகை
நலம் கவின் கொண்ட நனி நாகரிகத்து
அம் மென் சாயல் அரிவை மகளிர்
செம்மல் அம் சிறுவரை செவிலியர் காப்ப 85
பூம் புனல் ஆடு-தொறும் புலம்பும் புதல்வரை
தேம்படு கிளவியில் தீவிய மிழற்றி
பாலுறு வன முலை பகு வாய் சேர்த்தி
தோள் உற தழீஇ ஓலுறுப்பு அரவமும்

பொன் அரி மாலை புனல் பொதிந்து அசைதர 90
மின் ஒசிந்தது போல் பொன் அணி பிறழ
புனலகம் மூழ்கி பூம் துகில் களையார்
மணல் இகு நெடும் துறை மங்கலம் பேணி
பெரியோர் உரைத்த பெறல்_அரும் தானம்
உரியோர் தரீஇ உள் உவந்து ஈயும் 95
தெரிவை மகளிர் வரி வளை அரவமும்
தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர்
மட்ட பூம் துகில் கட்டளை கச்சையர்
நரை இடை படர்ந்த நறு மென் கூந்தலர்

திரை உடை கலுழி திறவதின் ஆடி 100
தாம் இள மகளிரை காமம் செப்பி
அஞ்சல் செல்லாது நெஞ்சு வலித்து ஆடும் இ
நங்கையர் நோற்ற பொங்கு புனல் புண்ணியம்
நுங்கட்கு ஆக என நுனித்தவை கூறி
நேர் இழை மகளிரை நீராட்டு அயரும் 105
பேர் இளம் பெண்டிர் பெரும் கலி அரவமும்
கை புனை பாண்டியம் கட்டளை பூட்டி
வையம் தரூஉம் வயவர் அரவமும்
புகுவோர் அரவமும் போவோர் அரவமும்

தொகுவோர் அரவமும் தொடர்ந்து கை தழீஇ 110
நடந்து இயல் மறுகில் நகுவோர் அரவமும்
மயங்கிய சனத்திடை மம்மர் நெஞ்சமொடு
நயந்த காதல் நல் நுதல் மகளிரை
தேருநர் அரவமும் திகைக்குநர் அரவமும்
பேருநர் பெறாஅ பெரியோர் அரவமும் 115
நெடும் துறை நீந்தி நிலைகொளல் அறியார்
கடும் கண் வேந்தன் காதலர் அரவமும்
கொலை தொழில் யானை சென்றுழி செல்லா
தலை கண் இரும் பிடி பிளிற்று இசை அரவமும்

துறை மாண்பு ஒராஅ தூ மணல் அடைகரை 120
நிறை மாண் குருகின் நேர் கொடி பந்தர்
பாடலொடு இயைந்த பல்லோர் அரவமும்
ஆடலொடு இயைந்த அணி நகை அரவமும்
யாற்று ஒலி அரவமொடு இன்னவை பெருகி
கூற்று ஒலி கேளா கொள்கைத்து ஆகி 125
அரைப்பு அமை சாந்தமும் உரைப்பு அமை நானமும்
ஒப்பு முறை அமைந்த ஓமாலிகையும்
வித்தகர் வனைந்த சித்திர கோதையும்
காதல் மங்கையர் ஆகத்து எறியும்

சாதிலிங்கமும் சந்தன தேய்வையும் 130
உரைத்த வெண்ணெயும் நுரைப்பு அமல் அரைப்பும்
பீடுடன் பேரா பெரும் துறை எங்கும்
ஆடவும் உண்ணவும் ஆதரமாக
பேரா காதலொடு பெரும் சிறப்பு இயற்றி
நீராட்டு அரவம் நிகழுமால் இனிது என் 135
*1 உஞ்சைக் காண்டம்

#42 நங்கை நீராடியது
நீராட்டு அரவம் நெடு நகர் வரைப்பகம்
ஆராட்டு அரவமொடு அமர்ந்து விழைவு அகற்றிய
பெரு நிலை நிதியம் பேணாது வழங்கி
இரு நில மடந்தைக்கு இறைவன் ஆகி
பெரும் சின மன்னர் அரும் சமம் வாட்டி 5
தம் மொழி கொளீஇ வெம் முரண் வென்றியொடு
வழு_இல் கொள்கை வானவர் ஏத்தும்
கழி பெரும் கடவுளை வழிபடின் அல்லது
வணக்கம் இல்லா அணி தகு சென்னி

திரு சேர் அகலத்து பிரச்சோதனன் மகள் 10
அரிமான் அன்ன தன் பெருமான் அகலத்து
திருவு நிறை கொடுக்கும் உருவு கொள் காரிகை
வால் வளை பணை தோள் வாசவதத்தையை
கோல் வளை மகளிர் கொட்டையை சூழ்ந்த
அல்லியும் இதழும் போல நண்ணி 15
பல் வகை மரபின் பசும்பொன் குயின்ற
ஊர்தியும் பிடிகையும் சீர் கெழு சிவிகையும்
வையமும் தேரும் வகை வெண் மாடமும்
பொறுப்பவும் ஊர்பவும் செறித்து இடம் பெறாஅர்

நேமி வலவன் ஆணை அஞ்சி 20
பூமி சுவர்க்கம் புறப்பட்டாங்கு
தீட்டு அமை கூர் வாள் கூட்டொடு பொலிந்த
வேல் திறலாளரும் மிலைச்சரும் சிலதரும்
கோல் தகை மாக்களும் நூற்று வில் அகலம்
குறுக செல்லா செறிவு உடை காப்பின் 25
பெரும் கடி மூதூர் மருங்கு அணி பெற்ற
அரும் கடி வாயிலொடு துறைதுறை-தோறும்
அம் பணை மூங்கில் பைம் போழ் நிணவையும்
வட்டமும் சதுரமும் முக்கோண் வடிவமும்

கட்டளை யானையும் மத்தக உவாவும் 30
வைய புறத்தொடு கை புனைந்து இயற்றி
பூ தூர் நிலையோடு யாப்புற அமைத்து
காமர் பலகை கதழ வைத்து இயற்றி
வண்ணம் கொளீஇய நுண் நூல் பூம் படம்
எழுது வினை கம்மமொடு முழுது முதல் அளைஇ 35
மென் கிடை போழ்வை சந்திய ஆகி
அரி சாலேகமும் நாசியும் முகடும்
விருப்பு நிலை தானமும் பிறவும் எல்லாம்
நேர்ந்து வனப்பு எய்திய நீரணி மாடம்

சேர்ந்த வீதியுள் சிறப்பொடு பொலிந்த 40
எவ்வெவ பண்டமும் அவ்வயின் போத்தந்து
ஒலி உஞ்சேனை இணை தனக்கு ஒவ்வா
மலி நீர் மாடத்து பொலிவு கொள் மறுகின்
வெயில் அழல் கவியாது வியலக வரைப்பின்
உயிர் அழல் கவிக்கும் உயர்ச்சித்து ஆகி 45
பூம் தார் அணிந்த ஏந்தல் வெண் குடை
வேந்தன்_மகளே விரையாது என்மரும்
பண்டை மகளிர் படிமையில் பிழையாது
தண்டம் தூக்கி தலை புனல் விழவினை

கொண்டு உவந்து ஆடும் கொழு மலர் தடம் கண் 50
பொங்கு மலர் கோதாய் போற்று என்போரும்
நின்னை உவக்கும் நின் பெருமான் ஏந்திய
வெல் வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்து
பொன்னே போற்றி பொலிக என்போரும்
பொரு வேள் பேணி பொலி உஞ்சேனையுள் 55
பெரு வேள் மறைந்து பெரும் புனல் ஆடும்
திருவே மெல்ல செல்க என்போரும்
பொங்கு திரை ஞாலத்து மயக்கம் நீக்கும்
திங்கள் அன்ன நின் திரு முகம் சுடர

துன்ப பேர் இருள் துமிக்க தோன்றிய 60
நங்காய் மெல்ல நட என்போரும்
வல்லவன் எழுதிய பல் பூம் பத்தி
கட்டெழில் சேர்ந்த வட்டணை பலகை
பளிக்கு மணி சிவிகையுள் விளக்குறுத்தது போல்
தோன்றும் மாதரை தோன்ற ஏத்தி 65
பைம் கேழ் சாந்தும் குங்கும குவையும்
மலர் பூம் பந்தும் தலை தளிர் போதும்
மல்லிகை சூட்டும் நெல் வளர் கதிரும்
இனி குறை இல்லை யாமும் ஆடுகம்

என துணிந்து இளையோர் இரு நூல் பெய்த 70
அனிச்ச கோதையும் ஆய் பொன் சுண்ணமும்
அந்தர மருங்கின் வண்டு கை விடாஅ
சுந்தர பொடியும் சுட்டி சுண்ணமும்
வித்தகர் கொடுத்த பித்திகை பிணையலும்
மத்த நல் யானை மதமும் நானமும் 75
வாச பொடியொடு காயத்து கழும
அந்தரத்து இயங்குநர் மந்திரம் மறப்ப
நறும் தண் நாற்றம் உடையவை நாடி
எறிந்தும் தூவியும் எற்றியும் தெளித்தும்

பல்லோர் பல் சிறப்பு அயர்வனர் ஏத்தி 80
வெல் போர் வேந்தன் மட மகள் விரும்பி
நில்லா தண் புனல் நெடும் கோட்டு ஒருசார்
துறை அமைத்து இயற்றிய குறைவு_இல் கூடத்து
அம் புகை மருங்கில் செம் சுடர் மழுங்க
சீயமும் ஏறும் பாய் பரி புரவியும் 85
யானையும் புலியும் அன்னமும் அகன்றிலும்
ஏனைய பிறவும் ஏஎர் உடையன
புனைவு கொண்டு ஏற்றி வினைவலர் இயற்றிய
கனல் சேர் புகை அகல் ஏந்திய கையின்

மூதறி பெண்டிர் காதலொடு பரவி 90
நீர் கால்கழீஇய வார் மணல் எக்கர்
முத்தும் மணியும் பொன் குறு சுண்ணமும்
வெள்ளியும் பவழமும் உள் விழுந்து இமைப்ப
வண்ண அரிசியொடு மலர் இடை விரைஇ
நுண்ணிது வரித்த அண்ணல் நகர்-வயின் 95
தமனிய தடத்து பவழ பாய் கால்
திகழ் மணி வெள்ளி புகழ் மணை சேர்த்தி
கதிர் நகை முறுவல் காரிகை மாதரை
எதிர்கொண்டு வணங்கி இழித்தனர் நிறீஇ

காஞ்சனமாலையும் செவிலியும் பற்றி 100
எஞ்சல்_இல் கம்மத்து இணை தனக்கு இல்லா
பஞ்ச வண்ணத்து பத்தி பல புனைந்த
பொங்கு மலர் தவிசில் பூ மிசை ஆயினும்
அஞ்சுபு மிதியா கிண்கிணி மிழற்ற
வேழ தாழ் கை காழொடு சேர்த்த 105
கண்ட பூம் திரை மண்டபத்து இழைத்த
நல் நகர் நடுவண் பொன் மணை ஏற்றி
பெரும் திசை நோக்கி இருந்து அவண் இறைஞ்சி
யாத்த காதலொடு ஏத்தல் ஆற்றாள்

அடி தலம் முதலா முடி தலம்-காறும் 110
மொய்யுற தோய்ந்த நெய் தயங்கு பைம் தாள்
மங்கல_புல் அவர் இன்புற பெய்த பின்
நீர் ஆடு பல் கலம் நெரிய ஏற்றி
ஆராடு தானத்து ஐந்நூறாயிரம்
பசும்பொன் மாலையும் தயங்கு கதிர் முத்தமும் 115
இரவல் மாக்கட்கு சொரிவன நல்கி
தீங்கு_அரும் காதல் செவிலியும் தோழி
காஞ்சனமாலையும் கை இசைத்து ஏந்த
அளற்று எழு தாமரை அள் இலை நீரில்

துளக்குறு நெஞ்சின் நடுக்கமொடு விம்மி 120
தோழியர் சூழ ஊழூழ் ஒல்கி
தலை_புனல் மூழ்குதல் இலக்கணம் ஆதலின்
மணல் இடு நிலை துறை துணை வளை ஆர்ப்ப
குடைவனள் குலாஅய் குறிப்பு நனி நோக்கி
படை ஏர் கண்ணியர் பணிந்து கை கூப்பி 125
புடை வீங்கு இள முலை பூண் பொறை ஆற்றாது
இடை ஏமாக்கும் என்று அடைவனர் விலக்கி
சீலத்து அன்ன தெய்வம் கவினி
கோலம் கொண்ட கூந்தலொடு குளித்து

பிடி கையின் வணரும் முடி குரல் ஆற்றாள் 130
செரு கயல் அன்ன சே அரி நெடும் கண்
அரத்தகம் பூப்ப அலமந்து எழலும்
வாழியர் எம் மனை வருந்தினை பெரிது என
மொழி அறி மகளிர் தொழுதனர் வணங்கி
அத்து முறை உரிஞ்சி ஆயிரத்துஎண் குடம் 135
முத்து உறழ் நறு நீர் முறைமையின் ஆட்டி
அங்கு அரவு அல்குல் நங்கைக்கு இன்று இவை
மங்கல மண்ணு நீர் ஆவன என்று
நெஞ்சம் நெகிழ்ந்து உவந்து அன்பு கலந்து ஆடு இயல்

அரவின் பரந்த அல்குல் மீமிசை 140
கலாஅய் கிடந்த குலாத்தரு கலிங்கம்
நிலா விடு பசும் கதிர் கலாவம் ஏய்ப்ப
நீர் அணி கொண்ட ஈரணி நீக்கி
கதிர் நிழற்கு அவாஅ பதும நிறம் கடுக்கும்
புது நூல் பூம் துகில் அரு மடி உடீஇ 145
கார் இரும் கூந்தல் நீர் அற வாரி
வனப்பொடு புணர வகுத்து அணி முடி மிசை
நீர் பூம் பிணையல் சீர்ப்பு அமை சிகழிகை
முல்லை அம் கோதை சில் சூட்டு அணிந்து

தண் நறும் சாந்தம் நுண்ணிதின் எழுதி 150
பதினோர் ஆண்டினுள் பாற்பட கிளந்த
விதி மாண் உறுப்பிற்கு வேண்டுவவேண்டுவ
கதிர் மாண் பல் கலம் கை புனைந்து இயற்றி
உறுப்பு எடுக்கல்லா உடம்பினள் ஆயினும்
சிறப்பவை ஆதலின் சீர்மையோடு இருந்து 155
காமர் கோலம் கதிர் விரித்து இமைப்ப
தாமரை உறையுள் மேவாள் போந்த
தே மலர் கோதை திரு_மகள் போல
கோமகள் போதும் குறிப்பு நனி நோக்கி

அரணி கான்ற அணி கிளர் செம் தீ 160
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மை
அளப்ப_அரும் படிவத்து ஆன்ற கேள்வி
துளக்கு_இல் நெஞ்சத்து துணிந்த வாய் மொழி
சால்வு அணி ஒழுக்கின் நூல் இயல் நுனித்த
மந்திர நாவின் அந்தண மகளிரும் 165
வரும் புனல் ஆடற்கு பரிந்தனர் வந்த
விரை பரி மான் தேர் அரைச_மகளிரும்
அறிவினும் செறிவினும் பொறியினும் புகழினும்
எறி கடல் தானை இறை மீக்கூறிய

செம்பொன் பட்டத்து சேனாபதி மகள் 170
நங்கை தோழி நனி நாகரிகியும்
அரும் திணை ஆயத்து அவ்வயின் வழாஅ
திருந்திய திண் கோள் பெரும் திணை மகளிரும்
செண்ணம் அமைத்த செம்பொன் பட்டத்து
வண்ண மணியொடு முத்து இடை விரைஇய 175
கண்ணி நெற்றி காவிதி மகளிரும்
காலினும் கலத்தினும் சால தந்த
மா நிதி செல்வத்து வாணிக மகளிரும்
நிலத்து ஓர் அன்ன நலத்தகு பெரும் பொறை

அரும் கடி மூதூர் பெருங்குடி மகளிரொடு 180
எண்ணல் ஆகத்து பெண் உலகு ஏய்ப்ப
கன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு
நல் மணி ஐம்பால் நங்கையொடு போந்தோர்
நீர் தலைக்கொண்ட நெடும் பெரும் துறை-வயின்
போர் தலைக்கொண்டு பொங்குபு மறலி 185
கொங்கு அலர் கோதை கொண்டு புறத்து ஓச்சியும்
அம் செம் சாந்தம் ஆகத்து எறிந்தும்
நறு நீர் சிவிறி பொறி நீர் எக்கியும்
முகிழ் விரல் தாரை முக நேர் விட்டும்

மதி மருள் திரு முகத்து எதிர் நீர் தூவியும் 190
பொதி பூம் பந்தின் எதிர் நீர் எறிந்தும்
சிவந்த கண்ணினர் வியர்ந்த நுதலினர்
அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த ஆடையர்
ஒசிந்த மருங்குலர் அசைந்த தோளினர்
நல்கூர் பெரும் புனல் கொள்க என்று தம் 195
செல்வம் எல்லாம் சேர்த்து இறைத்து அருளி
இளையா விருப்பில் தம் விளையாட்டு முனைஇ
கயம் பாடு அவிய புறங்கரை போந்து
பொறி மயில் தொழுதி புயல் கழி-காலை

செறி மயிர் உளர்த்தும் செய்கை போல் தம் 200
நெறி மயிர் கூந்தல் நீர்_அற வாரி
செழும் பூம் பிணையல் அடக்குபு முடித்து
குழங்கல் சாந்தம் அழுந்துபட அணிந்து
பைம் கூன் பாதிரி போது பிரித்து அன்ன
அம் கோசிகமும் வங்க சாதரும் 205
கொங்கு ஆர் கோங்கின் கொய் மலர் அன்ன
பைம் கேழ் கலிங்கமும் பட்டு தூசும்
நீலமும் அரத்தமும் வால் இழை வட்டமும்
கோலமொடு புணர்ந்த வேறுவேறு இயற்கை

நூலினும் உலண்டினும் நாரினும் இயன்றன 210
யாவையாவை அவைஅவை மற்று அவை
மேவனமேவன காமுற அணிந்து
கம்மியர் புனைந்த காமர் பல் கலம்
செம்மையின் அணியும் செவ்வி காலத்து
சிந்தையின் ஒழிக்கும் செலவிற்று ஆகி 215
அந்தர விசும்பின் அமரர் பொருட்டா
மந்திர முதல்வன் மரபின் படைத்த
இந்திரன் களிற்றொடு இணைந்து உடன் பிறந்த
இரும் பிடி தானும் இதற்கு இணை அன்று என

அரும் பிடி அறிவோர் ஆராய்ந்து அமைத்தது 220
காலினும் கையினும் படை தொழில் பயின்றது
கோலினும் வேலினும் மறலினும் குமைத்தது
தட்பமும் வெப்பமும் தாம் படின் தீர்ப்பது
பகலினும் இருளினும் பணியில் பயின்றது
இகல் இரும் கும்பத்து ஏந்திய சென்னியது 225
மேலில் தூயது காலில் கடியது
மத்தக மாலையொடு நித்திலம் அணிந்தது
உத்தராபதத்தும் ஒப்புமை இல்லா
பத்திராபதி மிசை பனி கடல் பிறந்த

வெம் சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து 230
முருகவேள் அன்ன உருவு கொள் தோற்றத்து
உதையணகுமரன் புதை வாள் அடக்கி
சிறை என கொண்ட மன்னவன் செல்வமும்
துறை-வயின் நாடுநர் துதைந்த போகமும்
நெய் பெய் அழலில் கை இகந்து பெருகி 235
புறப்படல் செல்லா ஆகி மற்று அவை
மனத்திடை நின்று கனற்றுபு சுடுதலின்
மாற்று செய்கை என்னும் நீரால்
ஆற்ற வெவ் அழல் அவிப்ப கூடுதல்

வயிர தோட்டி அன்றியும் பயிரின் 240
சொல்லியது பிழையா கல்வி கரணத்து
பிடியொடு புணர்ந்த இ பகல் ஆயினும்
முடியும் என்னும் முயற்சியன் ஆகி
பாப்பு உரி அன்ன மீ கொள் தானை
இரு புடை மருங்கினும் வரு வளிக்கு ஒசிந்து 245
வீச்சுறு கவரி தோற்றம் போல
மிக்கு வாய் கூரும் மீட்சி வேட்கையன்
கொக்கு வாய் அன்ன கூட்டு அமை விரலினன்
நண்ணா மன்னனை நலிவது நாடும்

எண்ணமோடு இருந்தனன் இரும் பிடி மிசை என் 250
*1 உஞ்சைக் காண்டம்

#43 ஊர் தீயிட்டது
எண்ணமொடு இருந்தோன் கண்ணியது கருதி
யாத்திரைக்கு அமைந்தன பாற்பட அடக்கி
போகு பொருள் உணர்ந்து பாகு செயற்கு எய்தி
நயம் தெரி நாட்டத்து வயந்தகன் கூறும்
பாகு இயல் உள்ளத்து படிமம் தாங்கிய 5
யூகி சூழ்ந்த உரைப்ப_அரும் சூழ்ச்சி
வாய் திறந்து இன்று இது கோமகற்கு உரை என
கூறினன் அருளி குறிப்பில் கேள்-மதி
செறுநர் சிறையகப்பட்டனன் ஆயினும்

உறு வலி நாகத்து ஒற்றிடம் பார்த்தல் 10
அறை கடன் ஞாலத்து இறை கடன் ஆதலின்
நம்மை எள்ளிய வெம்மை வேந்தன்
சூழ்ச்சி வெள்ளத்து ஆழ்ச்சி எய்தி
ஒன்னாதோரும் துன்னினர் ஆடும்
நெடு நீர் விழவில் படை பிடித்தோரை 15
கடி முறை கடிவது அல்லது இல் என
இடு மணி யானை எருத்தம் ஏற்றி
அடல் முரசு அறைந்தமை அறிந்தனம் ஆதலின்
உத்தராபதத்தும் ஒப்புமை இல்லா

பத்திராபதியை பண் அமைத்து இயற்றி 20
தான் மேற்கொண்ட தன்மையன் ஆதலின்
நூல் மேல் சூழ்ந்த நுனிப்பில் வழாமை
செரு அடு வேந்தனும் பெரு நடுக்கு எய்த
தொகை கொள் மாடத்து அக நகர் வரைப்பின்
நகை கொள் முறுவல் நம் நாட்டு ஆட்டியர் 25
புகை எரி பொத்திய புணர்ப்பு வகை உண்மையின்
ஊர்-வயின் கம்பலை அல்லது ஒருவரும்
நீர்-வயின் கம்பலை நினைக்குநர் இல்லை
இல்லை ஆதலின் வெல் சமம் பெருக்கி

வேந்தன் கோடல் வியல் நாடு கெடுத்தல் 30
ஆங்கு அவன் மகளை அரும் சிறை வௌவுதல்
மூன்றினுள் ஒன்றே காய்ந்தவர் கடும் தொழில்
தோன்ற கூறிய மூன்றினுள்ளும்
முன்னைய இரண்டும் முடியா மற்று அவன்
அரும்_பெறல் மட மகள் அமிழ்துபடு தீம் சொல் 35
ஏசுவது இல்லா எழில்படு காரிகை
வாசவதத்தைக்கு வலத்தன் ஆகி
செம் தீ வெம் புகை இம்பர் தோன்றலும்
அம் தீம் கிளவியை ஆண்மையில் பற்றி

கால் பிடி-தன்னொடு ஏற்றுக ஏற்றலும் 40
வேல் படை இளையர் நால் பெரும் திசையும்
வாழ்க உதயணன் வலிக்க நம் கேள் என
பாழினும் முழையினும் காழ்_இல் பொத்தினும்
ஒளித்த வெம் படை வெளிப்பட ஏந்தி
மலைக்குநர் உளர் எனின் விலக்குநர் ஆகி 45
தொலைக்கும் நம் படை துணிந்து இது கருதுக
இமைத்தோர் காணா இயற்கைத்து ஆக
அமைக்கப்பட்ட அணி நடை மட பிடி
நண்ணா மன்னன் நாடு தலைமணந்த

ஐந்நூற்று ஓடுதல் ஆற்றாது ஆயினும் 50
முந்நூற்றுஎழுபதும் முப்பதும் ஓடி
வீழினும் வீழ்க வேதனை இல்லை
கூழினும் உடையினும் குறிப்பினர் ஆகி
நாட்டுப்புற மாக்களும் வேட்டுவ தலைவரும்
குறும்பரும் குழீஇய குன்று உடை பெரு நாடு 55
அறிந்தோர்க்கு ஆயினும் அணுகுதற்கு அரிய
அரிய ஆயினும் உரியவை போல
இயற்றினன் பண்டே கவற்சி நீங்கி
இன்னன் என்று தன் அறிவுறீஇ பின்

குற்றப்படினும் அற்றம் ஓம்பி 60
போதத்தின் அகன்று சாதத்தின் வழி நின்று
அடு களி குரவை சேர் ஆர்கலியாளர்
நடுகல் படப்பை இடுகல் சீறூர்
கண்கூட்டிருந்த ஐம்பதிற்று இரட்டி
புல் பரந்து கிடந்த கல் அதர் கடந்த பின் 65
தமர்_அல் மாக்களை தருக்கின் நூறும்
அமர் அடு நோன் தாள் நமருளர் அவ்வயின்
இன்னவை பிறவும் தன் மனத்து அடக்கி
தான் அவண் ஒழிக மானவன் நகரில்

இழுக்கு உடைத்து என்னும் எண்ணம் உண்டாயினும் 70
வழுக்கு உடைத்து அதனை வலித்தல் நீங்குக
யாவை ஆயினும் யான் துணி கருமம்
தீயது இன்மை தெளிக எம் பெருமகன்
யூகி என்னும் உரை பரந்து ஓட
புல்வாய் இனத்தில் புலி புக்காங்கு 75
கொல்வாள் வீசி கூற்று தலை பனிப்ப
வெல் போர் வேந்தன் வீரரை சவட்டி
எய்த போதுவல் ஏதம் ஆயினும்
ஐயம் இன்றி யான் துணி கருமம்

செய்யான் ஆயின் வையம் இழக்கும் 80
மையல் யானை மன்னவன் தான் என
இயைந்த தோழன் எண்ணிய கருமம்
வயந்தககுமரன் வத்தவற்கு உரைப்ப
தானும் யானும் தீது இலம் ஆயின்
வானும் வணக்குவம் ஏனையது என் என 85
முறுவல் கொண்ட முகத்தன் ஆகி
நறு நீர் விழவின் நாள் அணி அகலம்
பூண் சேர் மார்பன் காண்பான் போல
கடைப்பிடி உள்ளமொடு மட பிடி கடைஇ

கோமகள் ஆடும் பூமலி பெரும் துறை 90
அகலாது அணுகாது பகலோன் விண் முனிந்து
இரு நில மருங்கின் இழி தந்தாங்கு
பெரு நலம் திகழும் திரு நல கோலமொடு
செய் குறி கருமம் தெவ்வ பட்டுழி
தாக்குநர் அசாஅய் பொர நேர்க்குநர் இரிவுழி 95
இருவரும் அ வழி பருவரல் தீர
பெரு வலி கிளையில் கூடுவது போல
விண்ணக மருங்கில் கண் அகன்று உராஅய்
மண்ணகம் மறிக்கும் மதுகைத்து ஆகி

பார் உடை பவ்வம் பருகுபு நிமிர்ந்த 100
நீர் உடை கொண்மூ நெகிழா காலொடு
எண் திசை பக்கமும் எதிர்_எதிர் கலாஅய்
கண்டவர் நடுங்க கடு வளி தோன்றலின்
கனவில் கண்ட கண் ஆர் விழு பொருள்
நனவில் பெற்ற நல்குரவன் போல் 105
உவந்த மனத்தின் விரைந்து எழுந்து யூகியும்
மறைய திரிதரு மாந்தர்க்கு எல்லாம்
அறிய கூறிய குறியிற்று ஆக
பத்திராபதத்து பகை அமை போர்வை

உட்குவரு முரசம் உரும் உறழ்ந்து அதிர 110
கொட்டினன் கொட்டலும் கொள் என உராஅய்
எவ்வெ தானத்தும் கவ்வை தோற்றி
உதையணகுமரனும் யூகியும் வாழ்க என
புதை_வாள் உரீஇ பூசல் விளைத்தலும்
மட்டு அணி மூதூர் மனை-தொறும் மரீஇய 115
கட்டு அணி கூந்தல் கள்ள மங்கையர்
அட்டிலும் அறையும் விட்டு எரி கொளுவலின்
எட்டு என கூறிய திசைதிசை-தொறூஉம்
ஐ தலை உத்தி அரவு நாண் ஆக

மந்தர வில்லின் அந்தணன் விட்ட 120
தீ வாய் அம்பு திரிதரு நகரின்
ஓவாது எழு மடங்கு உட்குவர தோன்றி
அரும் புனல் ஆடாது அக-வயின் ஒழிந்த
பெரும் பரிசாரத்து பெண்டிர் எல்லாம்
நறு நெய் தோய்ந்த நார் நூல் வெண் துகில் 125
செறி மென் கச்சை சேர்ந்த அல்குலர்
அசல மஞ்ஞையின் அணி நிறம் தழீஇ
பசலை பாய்ந்த திதலை தித்தி
அசைந்த அம் வயிறு அடைய தாழ்ந்த

கொடும் கால் குண்டிகை கொட்டம் ஏய்ப்ப 130
அறாஅது ஒழுகும் அம் முலை ஆரம்
பொறாஅ ஆயினும் புடைத்தல் ஆனார்
ஆற்றல் வேந்தன் அற்றம் நோக்கி
வேற்று வேந்தர் புகுந்தனர் உளர்-கொல்
கூற்ற வேழம் குணம் சிதைந்தது-கொல் என்று 135
ஈற்று பெண்டிர் இள மக தழீஇ
ஊற்று நீர் அரும்பிய உள் அழி நோக்கினர்
காற்று எறி வாழையில் கலங்கி மெய் நடுங்கி
ஆற்றேம் யாம் என்று அலறினர் ஒருசார்

போது கொண்டு அணியின் பொறுக்கல் ஆற்றா 140
தாது கொண்டிருந்த தாழ் இரும் கூந்தலர்
கரும் கேழ் உண்கண் கலக்கமொடு அலமர
பெரும் சூல் பெண்டிர் பேர் அழல் நோக்கி
வருவோர் கண்டு வணங்கினர் ஒருசார்
தவழும் புதல்வரை ஒரு கையால் தழீஇ 145
பவழம் சேர்ந்த பல் காழ் அல்குலர்
அவிழ்ந்த பூம் துகில் அங்கையின் அசைஇ
நகை பூம் கோதையொடு நான்ற கூந்தற்கு
மிகை கை காணாது புகை தீ எறிப்ப

படைத்தோன் குற்றம் எடுத்துரைஇ இறக்கேம் 150
அங்கி தேவன் அருள் என அயல் மனை
பொங்கு நீர் பொய்கை புக்கனர் ஒருசார்
பறைந்து இடை சோர்தரு பசலை வெண் நரை
குறைந்த கூந்தலர் கோசிகம் போல
புள்ளி விதிர்த்த உள்ளுறு மேனியர் 155
பை சொரிந்து அன்ன பால்_இல் தோல் முலை
நரை மூதாட்டியர் நடுக்கம் எய்தி
கால் இடு தளர்ச்சியர் கண் பிறர் ஆக
கோலொடு தளர்ந்து கூட்டுநர் இன்றி

ஆதி முற்றத்து வேதிகை முட்டி 160
சுழலும் நெஞ்சமொடு துயரம் எய்தி
அழல்_இல் முற்றம் அடைந்தனர் ஒருசார்
சீப்பு உள்ளுறுத்து திண் எழு போக்கி
காப்பு உள்ளுறுத்த கடி மதில் வாயில்
கால் கடியாளர் வேல் பிடித்து ஓடி 165
ஆணை ஆணை அஞ்சன்-மின் கரவொடு
பேணல் செல்லாது பெரும் தீ படுத்த
நாள்_இல் பெண்டிரை நாடு-மின் விரைந்து என
ஆய் புகழ் வேந்தன் அரசு அத்தாணி

கோயில் காவல் கொண்டனர் ஒருசார் 170
எப்பால் மருங்கினும் அப்பால் அவரவர்
பெரும் துயர் எய்தி கரிந்து கண் புதைப்ப
நறு நெய் பயந்த நல் நகர் மு_தீ
மறுமைக்கு எண்ணிய மயல்_அறு கிரிசை
அந்தணர் சேரியும் அரும் தவர் பள்ளியும் 175
வெண் சுதை மாடமும் வேந்தன் கோயிலும்
தெய்வ தானமொடு அ வழி ஒழிய
தண் நறும் காழ் அகில் நுண் அயிர் கூட்டி
அம் புகை தவழ்ந்த அரக்கு வினை மாடமும்

வெம் புகை தவழ்ந்து வேந்து கண் புதைப்ப 180
வால் வளை மகளிர் மணி நிலத்து அமைந்த
கால் வளர் சாலி ஆய் பத அரிசி
பொன் செய் கிண்கிணி புதல்வர் ஆடும்
கம்பலை வெரீஇ கவரல் செல்லா
அம்பல கொடும் காழ் அசைத்த யாப்பின் 185
கிடையும் பூளையும் கிழியும் பஞ்சியும்
படை அமைத்து இயற்றிய மடைஅணி பள்ளியுள்
பிணி குரல் பயிற்றும் பேடையை காணாது
அணி கண் புறவின் ஐம்பால் சேவல்

எரி வளை புகையிடை இறகு விரித்து அலற 190
மேல் எழு பேடை மீண்டு வந்து ஆட
கீழ் எழு செம் தீ கிளை பிரித்து அழற்ற
மா மயில் பெடையொடு மகளிர் நாப்பண்
தூவி மஞ்ஞை தோகை விரித்து அகவ
ஏற்று உரி முரசின் இறைவன் மூதூர் 195
காற்று துணை ஆக கனல் எரி கவர
படல் அணி வாயில் மடல் அணி வேயுள்
இடையறவு இல்லா இருக்கையில் பொலிந்த
பன்னாறாயிரம் பாடி கொட்டிலும்

முந்நூறாயிரம் முட்டிகை சேரியும் 200
ஐந்நூறாயிரம் கம்ம ஆலயமும்
சேனை வேந்தன் சிறப்பினொடு இருந்த
தானை சேரியும் தலைக்கொண்டு ஓடி
கான தீயின் கடுகுபு திசைப்ப
ஏனை மாடமும் எழுந்தன்றால் எரி என் 205
*1 உஞ்சைக்காண்டம்

#44 பிடியேற்றியது
எரி தலைக்கொண்டு ஆங்கு எயிலகம் எரிய
புற மதில் சேரி பூசலும் ஆர்ப்பும்
உறு நீர் பெரும் கடல் உவா உற்றாஅங்கு
ஆகுலம் பெருகலின் அரும் துறை-தோறும்
போகாது ஆடுநர் புன்கண் எய்தி 5
மேகலை விரீஇய தூசு விசி அல்குல்
நீர் உடை களைதல் செல்லார் கலங்கி
கான் இரி மயிலின் கவின் பெற இயலி
அயில் இடு நெடும் கண் அரும் பனி உறைத்தர

உயிர் ஏர் கணவரை தானை பற்றி 10
நல்லது தீது என்று அறியாது அ வழி
செல்வது பொருளோ செப்பீரோ என்ற
அல்லல் கூர அலமருவோரும்
மா குருக்கத்தியொடு மல்லிகை மணந்த
பூ பெரும் பந்தர் நூல் திரை வளைஇய 15
கால் பெரு மாடம் காற்றொடு துளங்க
விண்ணுலகு பெறினும் விடுத்தற்கு ஆகா
பண்ணியல் பாணி நுண் இசை ஓர்வார்
ஊரக வரைப்பின் ஒல்லென எழுந்தது ஓர்

பூசல் உண்டு எனலும் பொறை உயர் மா மலை 20
வேய் உயர் பிறங்கல் சேய் உயர்ந்து ஓடும்
சூர் உறு மஞ்ஞையின் சோர்ந்த கூந்தலர்
புதல்வரை ஒழிந்து யாம் போந்தனமே என
அதிர்வனர் நடுங்கி அழலின் உயிர்த்து
திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி 25
உதிர் பூம் கொம்பின் ஒடுங்குவோரும்
குட்டம் ஆடி குளிர்ந்த வருத்தம்
அட்டு_பதம் ஆக அறிந்தோர் அமைத்த
மட்டு மகிழ்ந்து உண்ணும் மாந்தர் அ வழி

பட்டது என் என பசும்பொனின் இயன்ற 30
வட்ட வள்ளம் விட்டு எறிந்து விதும்பி
எழுந்த கம்பற்கு இயைந்து செல்வோரை
அழிந்தது இல்லை அறிந்தோம் யாம் என
மொழிந்து இடை விலங்கி முன் நிற்போரும்
கம்ம பல் கலம் விம்ம பெய்த 35
பொறி அமை பேழையொடு பூம் துகில் தழீஇ
குறி-வயின் நின்ற குறள்-வயின் நோக்கார்
சோரும் கூந்தலர் வாரும் கண்ணினர்
ஆரும் துன்பமொடு ஊர்-வயின் நோக்கி

வீழ் பூம் கொடியின் விரைந்து செல்வோரும் 40
பழிப்பு இன்று புனைந்த பட்டு அணை படு கால்
கழி பட மாடம் காலொடு துளங்க
விழிப்பில் மேனி தம் இன் உயிர் விடும் என
வேக புள்ளின் வெவ் இசை கேட்ட
நாக மகளிரின் நடுங்குவோரும் 45
ஓடு விசை வெம் காற்று உருமொடு ஊர்தர
பாடல் தண்ணுமை பாணியில் பிழையாது
ஆடல் மகளிர் அரங்கம் புல்லென
சுவை சோர்ந்து அழிய நவை கூர்ந்து நடுங்கி

மஞ்சிடை புகூஉம் மகளிர் போல தம் 50
கஞ்சிகை எழினியில் கரந்து நிற்போரும்
நடுங்குவோரும் நவையுறுவோரும்
ஒடுங்குவோரும் ஒல்குவோரும்
இனையர் ஆக தம் புனை நலம் புல்லென
நங்கையும் சேயள் நம் இறைவனும் நண்ணான் 55
என்-கொல் ஈண்டு நம் இன் உயிர் துணை என
மங்கையர் எல்லாம் மம்மர் எய்த
கணிகை இரும் பிடி அணி நலம் நசைஇய
பிடியொடு போந்த பெரும் களிற்று ஒருத்தலை

வீரிய இளையர் வாரியுள் வளைஇ 60
மதம் தலை நெருங்கி மத களிறு வலியா
கதம் தலை அழிய கந்தொடு ஆர்த்து
சாம கீத ஓசையில் தணிக்கும்
நூல் அறி பாகரொடு மேல் அறிவு கொள்ளாது
இகழ்ச்சியின் விட்ட இறைவன் போல 65
மகிழ்ச்சி எய்தி மணி முடி வேந்தன்
வத்தவர் இறைவனை விட்டனன் உழிதரல்
நீதி அன்று நெறி உணர்வோர்க்கு என
ஓது இயலாளர் உடலுநர் உழிதர

பௌவம் எல்லாம் படரும் ஈண்டு என 70
கௌவை வேந்தனும் காற்று ஒலி அஞ்சி
யானையின் அரும் சிறை வளைஇ அதனுள் நம்
சேனையும் உரிமையும் செறிக வந்து என
பிறிதில் தீரா நெறியினன் ஆக
காற்றொடு கலந்த கார் முழக்கு இன் இசை 75
மாற்று களிற்று எதிர்வு என மறித்தன மயங்கி
அந்த போதிகை இடை பரிந்து அழிய
கந்து முதல் கிழித்து கார் என உரறி
மேல் இயல் முறைவர் நூல் இயல் ஓசை

எஃகு எறிந்து என்ன வெஃகு அறு செவிய 80
அடக்கவும் அடங்கா புது கோள் யானை
வால் வளை மகளிரொடு மைந்தரை உழக்கி
ஏர் இரும் குலிக புனல் பரந்து இழிதரும்
கார் இரும் குன்றின் கவின் பெற தோன்ற
கொன்னே சிதைந்து கோவின் குறிப்புடன் 85
நகரி முழக்கினும் மிகை எழு தீயினும்
அளவு_இல் ஆர்ப்பினும் அரும் தளை பரிந்து
கடல் என அதிர்ந்து கார் என தோன்றி
விடல்_அரும் சீற்றமொடு வேறுபட நோக்கி

களம் என கருதி கனன்ற உள்ளமொடு 90
நளகிரி கூற்றம் நகரம் உழக்க
எதிர் எழுவோரை அதிர நூறி
வத்தவர் கோமான் வயவர் திரிதர
எ திசை மருங்கினும் உட்குவர தோன்றிய
இன்னா காலை ஒன்னா மன்னனும் 95
தன் ஆண் தொழில் துணிவு எண்ணும் ஆயினும்
செறிய கொள்ளும் செய்கை ஓரான்
அறிய கூறிய அன்பினன் அல்லதை
தன்-வயின் நின்று தன் இன்_இயம் கொள்ளும்

என் மகள் உள் வழி இளையரொடு ஓடி 100
காவல் இன்று தன் கடன் என கூரி
மத்த வன் மான் தேர் வத்தவற்கு உரைம் என
பாய்மான் தானை பரந்த செல்வத்து
கோமான் பணித்த குறை மற்று இது என
ஏவல் இளையர் இசைத்த மாற்றம் 105
சேதியர் பெருமான் செவியில் கேட்டு
விசும்பு முதல் கலங்கி வீழினும் வீழ்க
கலங்க வேண்டா காவல் என் கடன் என
காற்றிற்கு உலையா கடும் பிடி கடைஇ

ஆற்று துறை குறுகிய அண்ணலை கண்டே 110
காவல் மாக்களும் காஞ்சுகி முதியரும்
ஏவல் இளையரும் எதிர் எழுந்து ஓடி
மாடமும் கடையும் மதில் புற சேரியும்
ஓடு எரி கவரலின் ஊர் புகல் ஆகாது
வையமும் சிவிகையும் கை புனை ஊர்தியும் 115
காற்று பொறி கலக்க வீற்றுவீற்று ஆயின
போக்கு இடம் எங்கட்கு புணர்க்கல் ஆகாது
ஆக்கு இடம் எமக்கும் உண்டாக அருளி
ஆய்ந்த நல் யாழ் தீம் சுவை உணர்ந்த நின்

மாணாக்கியை எம் மன்னவன் அருளால் 120
இரும் பிடி நின்னொடு ஒருங்கு உடன் ஏற்றி
கொடுக்குவ வேண்டும் என்று எடுத்து_எடுத்து ஏத்தி
அரும் திறல் காவலர் அச்சம் எய்தி
பெரும் திறல் மன்னர்க்கு பணிந்தனர் உரைப்ப
எவ்வாய் அமரும் இன் மொழி கிளவி 125
அ வாய் மங்கலம் ஆக என விரும்பி
கவ்வையும் பெருகிற்று உய்தலும் அரிதே
இ வழி மற்று இவள் நிற்றலும் ஏதம்
வருக ஈண்டு என வத்தவன் வலிப்ப

தவாஅ காதலொடு தகை யாழ் காட்டும் 130
உவாத்தி ஆதலின் உறுதியும் அது என
செய்கையின் அறியா சிதைவிற்று ஆகி
கௌவை எரியும் காற்றினொடு எழுந்தது
அரி மான் அன்ன நம் பெருமான் சேர
திரு மா நுதலியை தீதொடு வாராது 135
உதயணகுமரன் ஒரு பிடி ஏற்றி
போவது பொருள் என காவலர் இரப்ப
பெரியோர்க்கு உதவிய சிறு நன்று ஏய்ப்ப
கரவாது பெருகி கை இகந்து விளங்கும்

உள்ளத்து உவகை தெள்ளிதின் அடக்கி 140
மதர்வை வண்டொடு சுரும்பு மணந்து ஆடும்
குயில் பூம் கோதையொடு குழல் குரல் வணரும்
கயில் எருத்து இறைஞ்சி கால் நிலம் கிளைஇ
உருகும் நெஞ்சத்து உதயணகுமரனை
பருகும் வேட்கையள் பையுள் கூர 145
நிறையும் நாணும் நிரந்து முன் விலங்க
நெஞ்சு நேர்ந்தும் வாய் நேர்ந்து உரையா
அம்_சில்_ஓதியை நெஞ்சு வலியுற
பயிற்சி நோக்கின் இயற்கையின் திரியா

காஞ்சனமாலை கை இசைந்து ஒருங்கே 150
ஏந்தினள் ஏற்ற இரும் பிடி இரீஇ
முடியா ஆள்வினை முடித்தனம் இன்று என
வடி ஏர் தடம் கண் வாள் என மிளிரும்
கொடியேர் சாயலை குடங்கையில் தழீஇ
பிடி ஏற்றினன் ஆல் பெருந்தகை உவந்து என் 155
*1 உஞ்சைக் காண்டம்

#45 படைதலைக் கொண்டது
பெருந்தகை அண்ணல் பிடி மிசை ஏற்றி
திருந்து இழை அணிந்த பரந்து ஏந்து அல்குல்
நீர்மை பல் காசு நிழல் உமிழ்ந்து இமைப்ப
பார்வை முள்கிய பட்டு நிறம் பயப்ப
தானம் மீக்கூரி மேல் நிவந்து ஓங்கி 5
அமிழ்து பெய் செப்பின் அன்ன வெம் முலை
நுகர் பூம் காமத்து நுதி முகம் உரிஞ்சி
கடாஅ யானை கண்ணகம் மறைத்த
படாஅத்து அன்ன படிவத்து ஆகிய

வடக போர்வையை வனப்பொடு திருத்தி 10
கடக முன்கை காஞ்சனமாலை
உர தகை அண்ணல் வரத்தின் பெற்ற
வழி வரு நல் யாழ் வயந்தகற்கு ஈத்து
பொன் படை புளகம் மிசை பொங்கும் சாமரை
நல் பிடி நட-தொறும் நடுங்கும் தோழியை 15
பொன் கொடி மருங்குல் புல்லுவனள் அருளி
பவனத்து அரசன் உவனித்து எறிந்த
குந்த கடைமணி உறுதலின் முரிந்த
வல-பால் எயிற்றின் குற்றமும் மலைத்து உடன்

வலிந்து மேற்சென்ற கலிங்கத்து அரசன் 20
குஞ்சரம் மருப்பில் குறியிடப்பட்டு
செம் சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து
மார்பினது வனப்பும் தோளினது திரட்சியும்
நிறத்தது நீர்மையும் நெடுமையது அளவும்
சிறை துயர் நீக்கற்கு செய்த வேடமும் 25
குறிக்கொளற்கு அமைந்தவை பிறவும் திறப்பட
வாகு இயல் அமைச்சன் யூகிக்கு உள்ளவை
சாங்கிய முது_மகள் தான் தெரிந்து உணர
அறிவின் முன்னே செறிய செய்த

பொறி உடை ஓலை பொருக்கென வீழ்த்து 30
மட தகை பொருந்திய வய தகை மாதரை
நடுக்கம் ஓம்பி விடுக்குநள் போல
சார்ந்தனள் ஆகி அவட்கு ஓம்படை குறிப்பொடு
நண்ணிய பொழுதிடை கண்ணின் காட்ட
வயந்தககுமரன் மறைத்து நீட்டலும் 35
நயந்த நெஞ்சமொடு நன்கனம் அடக்கி
சேறல் ஆற்றாள் மாறினள் மறைந்த பின்
அம் கண் ஞாலத்து அன்புடையோரை
புன்கண் நீக்குதல் புகழ் உடைத்து ஆதலின்

உங்கள் அன்பின் யான்உறு நோயினை 40
பைம் கண் வேழத்து பகடு அன்று ஈர்ந்தது இவள்
செழும் கடை மழை கண் செரு கயல் புரைய
உள் நெகிழ்ந்து கலிழ்ந்த உறாஅ நோக்கின்
கண் நெகிழ் கடு நோய் கைவரு காலை
ஈர்வது போலும் இருள் உடை யாமத்து 45
தீர் திறம் அறியேன் தேர்வுழி தீர்திறம்
வந்து கைகூடிற்று ஆகலின் இன்று இது
நீக்கல் நின் கடன் என மா கேழ் இரும் பிடி
அம் தோல் செவியினுள் மந்திரம் ஆக

வழிமொழி கூறிய வத்தவர் பெருமகன் 50
கழி போக்கு எண்ணி கடவா நின்றோன்
கம்பலை கவற்சியில் கடும் கொளை கொளீஇ
அம்பொடு பிடித்த வில்லன் ஆகி
ஒராஅ உரிமைக்கு ஒரு புடை வரூஉம்
வராகன் என்னும் வயவனை கண்டே 55
வந்தனை இ-பால் அஞ்சல் ஆர்ப்போர்
கள்வர் ஆதலும் உண்டு என் கையகத்து
ஒள் வரி சிலையும் உடு ஆர் பகழியும்
தந்தனையாகி என் தகை வாள் ஏந்தி

ஊறு உண்டு எனினும் உழையின் பிரியாது 60
ஏறு இ இரும் பிடி என்னொடு என்று தன்
நெஞ்சம் நெகிழா வஞ்சம் மனத்து அடக்கி
அன்பு இன்று கிளந்த அருள்_இல் பொருள் மொழி
தோட்டியின் வணக்கம் வேட்டு அவன் விரும்பி
கொடும் சிலை கொடுத்து கூப்பிய கையன் 65
கடும் செலல் இரும் பிடி கால் முதல் பொருந்தி
ஏற்றம் விரும்பலும் இளம் பிடி எடுப்பி
ஆற்றல் மன்னன் காற்று என கடாவ
விசையின் வீழ்ந்து வெருளி ஆற்றான்

ஆய் பெரும் கடி நகர் வாயிலும் நோக்கான் 70
கோமகன் உள் வழி குறுகலும் குறுகான்
ஓவியம் உட்கும் உருவியை தழீஇ
போயினன் வத்தவன் புறக்கொடுத்து ஒய்யென
காவலாளர் கலக்கம் எய்தி
மண்ணகம் அழித்து மலைத்து சிறைகொண்ட 75
நண்ணா மன்னன் நாட்டம் ஓராம்
பண் அமை பிடி மிசை பை_அரவு_அல்குலை
ஏற்றல் வேண்டும் என்று இரந்து ஏற்றினமால்
கூற்ற ஆணை எம் கொற்றவன் தலைத்தாள்

என் சொலி சேறும் என்று எண்ணுபு நாணினர் 80
வெம் செலல் பகழியும் வில்லும் தழீஇ
தம் சினம் பெருக தாக்குநர் பெறாஅர்
பொங்கு புகழ் வேந்தன் வென்றி ஏத்தி
விண்ணகம் ஏறின் அல்லது விரி நீர்
மண்ணக வரைப்பின் எம் அண்ணலை பிழைத்தோர்க்கு 85
இன் உயிர்க்கு ஏமம் ஆகுதல் அரிது என
பின் நிலை முனியார் பிடி வழி படர
கரை வேட்டு உலாஅம் கரும் கடல் அழுவத்து
இரை வேட்டு உலாஅம் இன சுறவு இனத்தின்

வத்தவநாட்டு வித்தக வீரரும் 90
மலைக்கும் மாந்தரை தலைக்கொண்டு ஓடி
ஐ_தலை_நாகத்து அழலுறு கண்ணினர்
பைம் தலை துமித்து செம் குடர் சிதறி
பிடித்த வாளர் மடித்த வாயர்
திரு அமர் மூதூர் தெருவும் கோணமும் 95
ஒரு வழி ஒழியாது உயிர் நடுக்குறீஇ
திரிதருவர்-மாதோ திரு நகர் அகத்து என்
*1 உஞ்சைக் காண்டம்

#46 உழைச்சன விலாவணை
திரு நகர் அக-வயின் திறன் மீக்கூரி
ஒரு துணை வயவர் உள் வழி திரிதர
ஒடிவு_இல் தோற்றத்து உதயணன் ஊரும்
பிடி வழி படரும் பேணா மள்ளரை
அதிர தாக்குதற்கு அமைக்கப்பட்ட 5
பதி நிலம்-தோறும் பதிந்து முன் இருந்த
ஐந்நூற்றுஐம்பத்துஐவர் ஆடவர்
செம் நூல் பத்தி சேடக கையர்
மன்னிய மாதிரம் மறு_இன்று மயங்கி

மின் உமிழ்ந்தது போல் வீசிய வாளினர் 10
கரணம் நுனித்த அரண காப்பினர்
பின் செல் மாந்தரை முன் சென்று விலங்கி
அரதன நாகரின் சொரிதரு வெகுளியர்
ஏற்றோர் தாக்கி கூற்று உறை உலகினுள்
உறைகுவிர் ஆயின் குறுகு-மின் விரைந்து என 15
சிறை அழி புனலில் சென்று மேல் நெருங்கி
வேலும் கணையமும் வீழினும் இமையார்
வீரிய தறுகணர் வீக்கிய கச்சையர்
ஆர்வலாளர் ஆர்த்தனர் எறிய

ஓங்கு மடல் பெண்ணை தீம் குலை தொடுத்த 20
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி ஏய்ப்ப
தளை அவிழ் தாமமொடு தலை பல புரளவும்
வேக புள்ளின் வெவ் இசைக்கு உலந்த
நாக பிறழ்ச்சியின் தோள் முதல் துணியவும்
அம் செம் சாந்தம் எழுதிய அகலம் 25
ஒண் செம் குருதி பைம் தளி பரப்பவும்
குசை தொழில் கூத்தன் விசைத்து நனி விட்ட
பொங்கு பொறி தாரையின் தங்கல் செல்லாது
குருதி செம் புனல் தவிராது எக்கவும்

மிகை செலற்கு எழுந்த வேக வெவ் அழல் 30
அக-வயின் சுடுதலின் அவிந்த ஆற்றலர்
நிலத்தொடு நேரா நெஞ்சினர் போல
புல கமழ் புண்ணர் விண்ணிடை நோக்கி
கொலை பெரும் கூர் வாள் கோடுற அழுத்தலின்
பொறிப்படு வேங்கையின் குறிப்பிலர் குரங்கவும் 35
மத்தகத்து இழிதரு நெய்த்தோர் பெரும் புனல்
மொய்த்து முகம் புதைதலின் முன் அடி காணார்
மடித்த செம் வாய் அழுந்த கவ்வி
பிடித்த வாளொடும் பிறழ்ந்தனர் கவிழவும்

கையொடு துமித்த வை வாள் வாய் மிதித்து 40
அற்ற அடியினர் செற்றத்தில் கழுமி
கற்ற கரணம் அற்ற ஆக
உர தகை மழுங்கி உள்ளடி இன்றி
மரக்கால் கூத்தரின் மறிந்தனர் விழவும்
மட தகை மகளிர் மருங்குல் கடிந்த 45
முலை பூண் அழுத்திய மொய் சாந்து அகலம்
வாள் முகம் அழுத்தலின் வயவு நடை சுருங்கி
செம் நிற குருதியின் பைம் நிணம் கெழீஇ
செயிர்த்த நோக்கினர் செம் கண் ஆடவர்

வியர்த்த நுதலினர் வீழ்ந்தனர் அவியவும் 50
சுடரும் வாளினர் சோர் நிணர் இழுக்கி
அடர் பூண் அகலத்து அரும் படை உற்று
குடர்கள் தாக்க குழி படு களிற்றின்
படர் கூர் எவ்வமொடு பதைத்தனர் பனிப்பவும்
தலையும் தட கையும் தாளும் உடம்பும் 55
கொலை அமை வில்லும் கூர் வாய் சுரிகையும்
வேலும் ஈட்டியும் கோலும் குந்தமும்
சேடக வட்டமும் செம் நூல் பாரமும்
தண்டும் வாளும் தளை இடு பாசமும்

பொங்கு மயிர் கிடுகும் புளக தண்டையும் 60
அரக்கு வினை பலகையும் நிரைத்த வெண் குடையும்
கூந்தல் பிச்சமும் கோணா வட்டமும்
வாங்கு கை தறுகண் வாரண பிளவும்
பரவை செம் திரை விரவுபு முடுகி
அன்ன பிறவும் முன்முன் உருட்டி 65
கைந்நவிலாளர் காடு எறிந்து உழுத
செம் நிலம் மருங்கில் செம் சால் சிதைய
மரம் சுமந்து இழிதரும் கடும் புனல் கடுப்ப
குருதி செம் புனல் போர்க்களம் புதைப்ப

அடங்கா தானை அவந்தியர் இறைவற்கு 70
ஆர் உயிர் அன்ன அரும்_பெறல் மட மகள்
வால் வளை பணை தோள் வாசவதத்தையை
வலிதில் கொண்ட வத்தவர் இறைவனை
நலிதற்கு எழுந்த நண்ணா இளையரை
கடல் விலக்கு ஆழியில் கலக்கம் இன்றி 75
அடல் விலக்காளர் ஆர்த்தனர் அடர்ப்பவும்
உயிர் ஒன்று ஆகிய செயிர் தீர் காதல்
துணை நல தோழன் துயரம் அறுத்தற்கு
இணை மலர் தடம் கண் இமையகத்து ஒடுங்கிய

காட்சியின் கனையும் வேட்கையன் ஆகி 80
விம்முறு விழு நகர் வீதியில் கொண்ட
வெம்முறு படிவம் நீக்கி யூகி
பிணம் படு பெரும் காட்டு பேயும் உட்கும்
அணங்கு அரும் தானத்து அஞ்சுதக இரீஇ
தாழி படுத்து தமரையும் தெளியான் 85
பூழி படுத்த சாதனை அமைவின்
கல் படை போழினும் கதுவாய் போகாது
எற்பு உடம்பு அறுக்கும் இயற்கைத்து ஆகி
கொல் புனைந்து இயற்றிய கொலை அமை கூர் வாள்

வாய்-வயின் தெய்வம் வணங்குபு கொண்டு 90
தீ வயிறு ஆர்த்திய திறலோன் போல நின்
காய்வுறு கடும் பசி களைகுவென் இன்று எனை
காத்தல் ஓம்பு என ஆற்றுளி கூறி
பத்தி குயின்ற பல் வினை கம்மத்து
சித்திர சேடகம் செறிய பற்றி 95
உற்றோன் உற்ற உறுகண் தீர்க்க என
கற்றோய் கலிங்கம் கட்டிய கச்சையன்
ஊழி இறுதி உட்குவர தோன்றி
வாழ் உயிர் பருகும் வன்கண் செய்தொழில்

கூற்றம் போல வேற்றவர் முருக்கி 100
கடி கமழ் நறும் தார் காவலன் மகளை
பிடி மிசை கொண்டவன் பெயரும் நேரத்து
முடி முதல் அண்ணலை முந்தினன் குறுகி
தொடிமுதல் திணி தோள் தோன்ற ஓர்ச்சி
வல முறை வந்து பல முறை பழிச்சி 105
நும்-பொருட்டு ஆக நெடுந்தகை எய்திய
வெம் பெரும் துயரம் விடுத்தனை ஆகி
காட்டகத்து அசையாது கடுகுபு போகி
நாட்டகம் புகுக நண்பு இடையிட்ட

இரும் பிடி நினக்கு இது பெரும் கடன் மற்று என 110
பிடி ஓம்படுத்து பெருமை எய்தி
குடி ஓம்பு இயற்கை எம் கோமகன் எழுக என
வரத்தொடு புணர்ந்த வாரண காவல்
திறத்தொடு கொடுத்து செய் பொருள் கூறி
புற கொடுத்து ஒழியும் போழ்தில் திறப்பட 115
ஒரு நாட்டு பிறந்த ஆர்வம் அன்றியும்
கரும கிடக்கையும் கலங்கா சூழ்ச்சியும்
மறை புறப்படாமையும் அறையுண்ணாமையும்
வாசவதத்தைக்கு வலி துணை ஆய

தாய்மையும் தவமும் வாய்மையும் நோக்கி 120
விடுதற்கு அருமை முடிய கூறி
வடிவும் வண்ணமும் படிவமும் பிறவும்
அரும் தவ மகளை திருந்து மொழி தோழன்
உணர எழுதிய ஓலையும் வாங்கி
புணர அவள்-வயின் போக கொண்டு என 125
ஊகந்தராயற்காக நீட்டி
தமரது வென்றியும் தருக்கும் நிலைமையும்
அரிய தோழன் சூழ்ச்சியது அமைதியும்
எய்திய இன்பமும் கையிகந்து பெருக

வையக வரைப்பின் வத்தவர் இறைவற்கு 130
எவ்வம் தீர்க்க என இமையோர் இயற்றிய
தெய்வத்து அன்ன திண் பிடி கடைஇ
மன்னிய தோற்றமொடு வட கீழ் பெரும் திசை
முன்னிய பொழுதில் முன் நாம் கூறிய
வணங்கு சிலை கொடுத்த வலி கெழு வராகன் 135
இரும் பிடி கடாவலன் இவன் என எண்ணி
அரும் படையாளர் ஆர் உயிர் ஓம்பி
நயந்து கைவிடாஅன் பின் செல்வோனை
எறி படை தானை ஏயர் பெருமகன்

உறு படை இல்லா ஒரு திசை காட்டி 140
ஆற்றலும் வென்றியும் அறிவும் மூன்றும்
கூற்று திறை கொடுக்கும் கொற்ற தானை
அவந்தியர் பெருமகன் அடி முதல் குறுகி
பயந்து தான் வளர்த்த பைம் தொடி பாவையை
சிறை இவன் என்னும் சிந்தையின் நீக்கி 145
குறை உடை உள்ளமொடு கொள்க என தந்து தன்
காதலின் விடுப்ப போகுதல் வலித்தனென்
வணக்கம் இன்று யான் செய்தனன் தனக்கு என
கூறினை சென்ம் என தேற காட்டி

படிறு இடை மிடைந்த பணி கோள் ஈயா 150
ஆன் பால் செம் தேத்து அணியுறு கிளவி
அடு திறல் ஆற்றல் அறிய கூற
பிடி வழி படர்ந்து பெயர்ந்தவன் நிற்ப
தொடி உடை தட கையின் தொழுதனள் இறைஞ்சி
மீட்டு அவன் போக்கும் மாற்றம் கேட்டே 155
மணி முதல் கொளீஇய மாண் பொன் சந்தின்
எரி மணி இமைக்கும் இலங்கு பொன் கோணத்து
கதிர் நகை கோவை கைவினை பொலிந்த
மத்தக புல்லகம் நக்குபு கிடந்த

திலக திரு நுதல் வியர் பொடித்து இழிய 160
கலக்குறு சில் நீர் கரும் கயல் போல
நிலைக்கொளல் செல்லா நீர் சுமந்து அளைஇ
பிறழ்ச்சியொடு உலாவும் பெரு மதர் மழை கண்
அச்சம் நோக்கின் நச்சு எயிறு அணிந்த
நாக பிள்ளை அங்கண் பிறந்த 165
ஆவி போல ஐது வெய்து உயிரா
பருவரல் உறாஅ பையுள் நெஞ்சினள்
கண் திரள் வேய் தோள் காஞ்சனமாலையை
கொண்டு இழிக என்னும் குறிப்பினள் போல

செவ்வி இன்றி சே_இழை புலம்ப 170
எள்ளியது தீர உள்ளியது முடித்த
உலவா கேள்வி உதயணகுமரனை
தொகு விரல் கூப்பி தொழுவனள் ஆகி
தேன் பொதி செம் வாய் காஞ்சனை உரைக்கும்
பைம் தளிர் பொதுளிய பனி மலர் காவில் 175
செம் தளிர் பிண்டி சினை-தொறும் தொடுத்த
பின்னுறு பொன் ஞாண் பெரும் தொடர் கோத்த
பண்ணுறு பல் வினை பவழ திண் மணை
ஊக்கு அமை ஊசல் வேட்கையின் விரும்பினும்

திரு நல தோழியர் சிறுபுறம் கவைஇ 180
பரவை அல்குல் பல் காசு புரள
குரவை ஆயம் கூடி தூங்கினும்
தன் வரைத்து அல்லா விம்முறு விழுமமொடு
நோய்கூர்ந்து அழியும் எம் கோமகள் நடுங்க
எறி வளி புரையும் இரும் பிடி கடைஇ 185
பின் வழி படரும் எம் பெரும் படை பேணாய்
என் வலித்தனையோ இறைவ நீ என
நடுக்கம் வேண்டா நங்கையும் நீயும்
அடுத்த காவலன் இவளொடும் அமர்ந்து

விடுத்தமை உணரா வீரிய இளையர் 190
தருக்கொடு வந்து செரு செயல் துணிந்தனர்
பணி வகை இன்றி பண்டும் இன்னதை
அணி இழை மடவோய் துணிகுவென் ஆயின்
அரியவும் உளவோ அஞ்சல் ஓம்பு என
தெரிவனன் கூறிய தெளி மொழி கேட்டே 195
அன்னது ஆகிய அருள் உண்டாம் எனின்
அம் சொல் பேதாய் அது இதுவாம் என
பின் இரும் கூந்தலொடு பிறழ் கலம் திருத்தி
கலக்கம் நீங்கு என காஞ்சனை தெருட்டி

நல தகை மாதரும் நனி நடுக்கு ஒழிய 200
வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவ
திருமாதேவி பெரு நகர் வரைப்பினும்
செரு மாண் வென்றி செல்வன் பக்கமும்
மை ஆர் கண்ணியை ஒய்யான் ஆகி
கையிகந்தனனால் காவலன் மகன் என 205
காற்றினும் எரியினும் ஏற்ற ஆர்ப்பினும்
நால் திசை மருங்கினும் நண்ணல் செல்லார்
பகலிடம் மருங்கில் பகுதியை கெடுத்த
அகலிடம் போல அச்சம் எய்தி

படை மலர் தடம் கண் பனி சுமந்து வீழ 210
இடை முலை கிடந்த ஏகவல்லி
முற்றுறு கழங்கொடு முதல் அகடு பொருந்தி
பற்றிடம் பெறாது பாம்பு என பதைப்ப
வெருவுறு மஞ்ஞையின் தெருமந்து இகலி
பழிப்பு_இல் கம்மியன் பசும்பொனில் புனைந்த 215
கொடி பல இரீஇய கொழுந்துபடு கோலத்து
கொட்டம் கொண்டோர் கட்டு அழல் உயிரா
விட்டு அகன்றனையோ வேந்தனொடு இன்று எமை
மட்டு வார் கோதாய் மறந்து என மாழ்கவும்

சிறுபுறம் கவைஇ சீப்பின் வாரி 220
குறு நெறி கொண்ட கூழை கூந்தலுள்
நறு மலர் கோதை நான்றுவந்து அசைஇ
வடு போழ்ந்து அன்ன வாள் அரி நெடும் கண்
குமிழ்த்து எழு வெம் பனி கோங்கு அரும்பு ஏய்ப்ப
முகிழ்த்தல் முன்னிய முலை முதல் முற்றத்து 225
வரித்த சாந்தின் வண்ணம் சிதைப்ப
செறி தொடர் கொளீஇய சித்திர கம்மத்து
பொறி அமை புடை செவி போழ் வாய் மணி கண்
அரும் கயல் அடை பை அங்கையின் ஏந்தி

பெரும் கண் பேதையர் இரும் துயர் எய்தவும் 230
மறு அகத்து அடக்கிய மதியம் போல
சிறு முக சிகழிகை புடை முதல் புதைஇய
மல்லிகை நறும் சூட்டு வெள்ளிதின் விளங்க அதன்
ஊர்கோள் ஏய்ப்ப சூழ்பு உடன் வளைஇய
செம்பொன் பட்டம் பின்தலை கொளீஇ 235
சில்லென் கோலத்து சிறு கொடி மருங்கில்
தனி முத்து அணிந்த தண் சாந்து ஆகத்து
பனி முத்து ஆலி படை கண் கால
வெள்ளி போழை உள்ளகத்து அடக்கி

மணியினும் பொன்னினும் மருப்பினும் வல்லவர் 240
அணிபெற புனைந்த அமர் பெறு காட்சி
தின்மை செறிவு_இல் சேடக மகளிர்
தன்மை கடுக்கும் தானை கச்சையர்
வம்பு நெருக்குற்ற பொங்கு இள முலையர்
குவளை கோதை கொண்ட கூந்தலர் 245
தவளை கிண்கிணி ததும்பு சீறடியர்
விளக்குறு மணிக்கை முகட்டு முதல் வளைத்த
பொங்கு மயிர் கவரி பைம் தொடி மகளிர்
எரியுறு மெழுகின் உள்ளம் சோர

பரிவுறு நெஞ்சினர் பையாந்து ஏங்கவும் 250
கல் மிசை மருங்கில் மின் மிளிர்ந்தது போல்
திடர் சேர் ஆகத்து சுடர் மணி பிறழ
முத்து உறழ் ஆலி தத்துறு கண்ணொடு
பனிப்புறு கிளவியில் பக்கம் நோக்கி
மங்கல செப்பின் மாண ஏந்திய 255
குங்குமம் கொண்ட கூன் வழுக்குறவும்
அரும் கலம் துதைஇ பெரும் கலம் எல்லாம்
பேணி அணிந்த நாணு கோலத்து
பை அரவு அல்குல் பவழ பல் காசு

கை புனை கலிங்கத்து ஐது கலந்து ஒன்றி 260
நீல தெள் நீர் நீந்தும் ஆமையின்
கோல குறுக்கை வாள் கூட்டுள் கழீஇ
பாலிகை பற்றிய குறள் வழி படரவும்
மணி கிடந்து இமைக்கும் மாடம் மா நகர்
அணி கிடந்து இமைக்கும் அகன் பெரும் கோயிலுள் 265
காப்புற வகுத்த கன்னி அம் கடி மனை
யாப்புற வகுத்த போர் பெரும் கோணத்து
கழறு கால் அமைத்து கண் அகன் பரப்பின்
நிழல் தரு படு கால் நீரதில் புனைந்த

கல் பிறங்கு அடுக்கத்து நல் குறி யாவையும் 270
படு கல் சுரமும் பாறையும் படுவும்
நடுகல் அடுக்கலும் நறும் பூம் சாரலும்
தேன் உடை வரையும் கானக குறும்பும்
அருவி அறையும் உருவ ஏனலும்
குழியும் குவடும் வழி நீர் அசும்பும் 275
வள்ளியும் வகுந்தும் சுள்ளியும் சூரலும்
வழை சேர் வாழையும் கழை சேர் கானமும்
நாகமும் நறையும் ஊகமும் உழுவையும்
கடமான் ஏறும் கவரியும் கரடியும்

மட மான் பிணையும் மஞ்ஞையும் அகன்றிலும் 280
விட மா நாகமும் வேக யானையும்
கழனியும் பொய்கையும் பழன படப்பையும்
தெரி மலர் காவும் உருவின ஆக
அமைக்கப்பட்ட செயற்கு_அரும் செல்வத்து
மை தவழ் சென்னி கை செய் குன்றொடு 285
நால் வகை நிலனும் பால் வகுத்து இயற்றி
அறவை அல்லது பிற புகப்பெறாஅ
வள மரம் துறுமிய இள மர காவினுள்
கொண்ட கோலமொடு குரவை பிணைஇ

வண்டல் ஆடும் தண்டா காதல் 290
எம்மையும் உள்ளாது இகந்தனையோ என
மம்மர் கொண்ட மனத்தர் ஆகி
தோழியர் எல்லாம் பூழியுள் புரளவும்
அம் பொன் வள்ளத்து அமிழ்து பொதி அடிசில்
கொம்பின் ஒல்கி குறிப்பில் கொள்ளாய் 295
செம்பொன் கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப
மணி நிலம் மருங்கில் பந்தொடு மறலி நின்
அணி வளை பணை தோள் அசைய ஆற்றாய்
இன் தீம் கிளவி ஒன்றிரண்டு மிழற்றி

பண் சுவைத்து ஒழிந்து பால்_இல் தோல் முலை 300
ஒண் முக விரலில் கண் முகம் ஞெமிடி
மையார் நெடும் கண் மாலை யாமத்து
பையாந்து பொருந்தி பள்ளிகொள்வோய்
காதல் காளை கானத்து ஒய்ப்ப
போதல்-கண்ணே புரிந்தனையோ என 305
செவிலி தாயர் அவலித்து அழவும்
கற்ற மந்திரி காட்டவும் காணாது
பெட்டாங்கு ஒழுகும் பெருமகன் போலவும்
முறைமையில் தேயும் நிறை_மதி நீர்மை

நண்பு கொள் ஒழுக்கின் நஞ்சு பொதி தீம் சொல் 310
வளைஇய மடந்தையை தெளிவனன் ஒழுகி
வெறுக்கை இன்மையில் துறக்கப்பட்ட
இளையவன் போலவும் கிளைஞரும் பிறரும்
கண்டவர் எல்லாம் கையெறிந்து நகூஉம்
கம்பலை பெரும் பழி எய்திய காவலன் 315
வம்ப மன்னனை வழி தெளிந்தனன் என
வெண் நரை சூழ்ந்த தண்ணுமை பறை தலை
காஞ்சுகி முதியர் சாய்ஞ்சு அஞர் எய்தலும்
பொன் அணி பாவை போகிய புணர்ப்பு இன்று

தன்னின் ஆகிய தன்மைத்து என்று 320
தண்டார் வேந்தன் கொண்ட காலை
விடுத்தற்கு அரிது என நடுக்கம் எய்தி
ஓங்கிய ஒழுக்கின் உயர்ந்தோர் பேணி
சாங்கியம் தாங்கிய சால்பு அணி படிமை
வரு மதி நுனித்த பெரு மூதாட்டி 325
வேக வேந்தன் வெம் சமம் முருக்கி
போக வேந்தனை போக பண்ணி
பொரு படை பரப்பி உரு மறைந்து உழிதரும்
யூகி உள் வழி ஒற்றுநள் எய்தி

ஆகு பொருள் ஓலையின் இருவரும் அறிவுற்று 330
கண்கூடு எய்தும் காலம் கூறி
மண்_கூட்டாளன் மனை-வயின் மறையவும்
இன்னோர் பிறரும் மம்மருள் மயங்கிய
உழை கல மகளிரும் இழைப்பு இரிந்து அரற்றவும்
பேரியாறு மடுத்த பெரும் கடல் போல 335
ஓசை அறியா பூசலும் புலம்பும்
ஊரக மருங்கில் கூர் எரி கொளுவ
எதிர்த்த மாந்தர் இன் உயிர் இறுதியும்
கதிர்த்த முறுவல் கன்னியை தழீஇ

வத்தவன் அகற்சியும் அ வழி செலவும் 340
வித்தக_குமரர் வீழ்ச்சியும் பிறவும்
ஒத்தவை உணர்ந்தும் உற்று இறைக்கு உரையார்
பொய்ப்பொருள் ஆயினும் மெய்ப்பொருள் கண்ணும்
உய் வகை இல்லை வெய்யோன் மாட்டு என்று
அறிந்தோர் அறிந்தோர் செறிந்தனர் ஆகி 345
வெய்துறு விழுமமொடு விம்மம் கூர
செய்வதை அறியார் திரிவரால் பலர் என்
*1 உஞ்சைக் காண்டம்

#47 உரிமை விலாவணை
செய்வதை அறியார் ஆகி பல்லவர்
கைவிரல் பிசைந்து பையென வருவழி
வில் கை கொண்டவன் விடுக்கப்பட்ட
வல் வினை கொடும் தொழில் வராகன் வந்து தன்
கோமகன் இருந்த கோயில் நெடும் கடை 5
தோரண கந்தின் தாள் முதல் பொருந்தி
கடி கமழ் நறும் தார் காவலன் குறுகி
அடியுறை அருள் மொழி யான் பணிந்து உரைப்ப
செவ்வி அறிந்து நொவ்விதின் வருக என

கோல் தொழிலவற்கு கூறினன் நிற்ப 10
ஈர் இதழ் தாரோய் இற்றை நாளால்
காரொடு உறந்த இ கடு வளி நிமித்தம்
ஊரொடு உறந்த உறுகண் காட்டி
இன்னா இன்ப நின்-வயின் தரும் என
தொன்நூலாளன் தோன்ற கூற 15
இன்னா இன்பத்து இயற்கை என் என
மன்னவன் வினாய மாத்திரை கண்ணே
செறி இலை பொன் குழை சிறப்பொடு தூக்கிய
சிறு துளை காதின் செம் கண் செம் நோக்கு

அருளொடு படாஅ வறிது எழு சினத்தன் 20
ஆர மார்பன் அரு_மறை பள்ளியுள்
உற்றது கூறும் கொற்ற வாயிலன்
கோலொடும் வாளொடும் கூப்பிய கையன்
முன் பணிந்து இறைஞ்சிய தன்மை கண்டே
செந்தாமரை கணின் செவ்விதின் நோக்கி 25
வந்தது கூறு என வணங்கி வாய்புதைத்து
அந்தர விசும்பினும் அணி நில வரைப்பினும்
பெண் நேர் உருவம் பிறர் தமக்கு இல்லா
நுண் ஏர் மருங்கின் நும் மடித்தி எம் பெருமான்

வடி வேல் தடம் கண் வாசவதத்தைக்கு 30
அடிவழிப்படூஉம் உரிமையுள் கம்மியன்
வல் வில் இளையன் வராகன் என்போன்
சொல்லுவது உண்டு என செவ்வி வேண்டி
நின்றனன் பல்லாண்டு என்றவன் இறைஞ்ச
அகல் மொழி தெரியும் அரு_மறை பொழுதும் 35
மகள் மொழி அல்லது மற்றைய கேளா
இயற்கையன் ஆதலின் பெயர்த்து பிறிது உரையான்
வருக மற்று அவன் வல் விரைந்து என்றலின்
ஆணை வேந்தன் அரும் கல நிதியம்

பேணாது பிழைத்த காவலாளன் 40
திரு தகை மார்பற்கு உரைப்பது ஒன்று உள்ளான்
நின்றனன் இமைப்பிடை சென்றனன் உணர்த்த
கோயிற்கு ஓதிய கோலம் உடைத்தாய்
வாயிலும் தகைப்பும் வகை அமைத்து இயற்றிய
முளை கோல் பெரும் திரை வளைத்த வட்டத்து 45
நிலா வெண் மாடமொடு உள் அறை சூழ்ந்த
உலாவும் மண்டபத்து உலாவுதல் இன்றி
அம் கண் ஞாலத்து அழல் உமிழ்ந்து இமைக்கும்
செம் கதிர் செல்வனின் சீர் பெற தோன்றி

சீயம் சுமந்த செம்பொன் ஆசனத்து 50
ஆய் மணி அணை சார்ந்து அரத்தம் மீக்கோள்
தாள் முதல் அசைத்து ஓர் தாமரை கையன்
இருந்த மன்னவற்கு எழு கோல் எல்லையுள்
பொருந்தல் செல்லாது புக்கவன் இறைஞ்ச
வண்ணமும் வடிவும் நோக்கி மற்று அவன் 55
கண்ணி வந்தது கடுமை சேர்ந்தது என்று
எண்ணிய இறைவன் இரு கோல் எல்லையுள்
துன்ன கூஉய் மின்_இழை பக்கம்
மாற்றம் உரை என மன்னவன் கேட்ப

இரு நில மடந்தை திரு மொழி கேட்டு அவட்கு 60
எதிர்மொழி கொடுப்போன் போல இறைஞ்ச
பின்னும் தானே மன்னவன் வினவ
மறுமொழி கொடாஅ மம்மர் கண்டு அவன்
உறு மொழி கேட்கும் உள்ளம் ஊர்தர
நெஞ்சின் அஞ்சாது நிகழ்ந்தது கூறு என்று 65
ஆர் உயிர்க்கு அபயம் கோமான் கொடுப்ப
எரியுறு மெழுகின் உருகிய முகத்தன்
ஆர மார்ப நின் அருள் வகை ஆம்-கொல்
கார் முகத்து எழுந்தது கடு வளி வளி என

நகை தொழில் அறியா நல் நகர் வரைப்பகம் 70
புகைக்கொடி சுமந்து பொங்கு எரி தோன்ற
புற மதில் சேரியும் குறுகுதற்கு அரிதா
காற்றும் எரியும் கலந்து உடன் தோன்ற
எப்பால் மருங்கினும் அப்பால் மலைக்குநர்
தப்புதல் அல்லது மிக்கு உயல் காணேம் 75
கூற்றும் அஞ்சும் நின் ஆற்றல் ஆணை
உரைப்பவும் ஒழியாது தலைத்தலை சிறப்ப நின்
அடி நிழல் வட்டம் அடைய தரூஉம்
கடி அரண் இன்மையின் கையறவு எய்தி

வெம் முரண் வேழத்து வெம் சினம் அடக்கிய 80
உள் முரண் அறாஅ உதயணகுமரனொடு
உடன் பிடி ஏற்றல் உற்றனெம் ஆகி
தடம் பெரும் கண்ணியை தலை-வயின் பணிந்து இரந்து
ஏற்று இனம் ஏற்றலும் காற்று என கடாஅய்
எம்மொடு படாஅன் இ நகர் குறுகான் 85
தன் நகர் கெடுத்த தருக்கினன் ஆதலின்
ஆயிரத்துஐவர் காவல் காளையர்
மா இரு ஞாலத்து மன் உயிர் உண்ணும்
கூற்று என தொடர வேற்று முன் விலங்கி

வயவர் என்று யாம் வகுக்கப்பட்டோர் 90
பயவர் அன்றி பணிந்து அவர் தொலைய
வென்றி எய்தி கொன்று பலர் திரிதர
பின்றையும் நின்று யான் பிடி பின் செல்வுழி
அடுத்த காதல் அணங்கை தந்து அவன்
விடுக்க போந்தனென் மீண்டு இது கூறு என 95
தட கை கூப்பி நின் அடி திசைக்கு இறைஞ்ச
ஒழிந்து யான் வந்தனென் நிகழ்ந்ததை நினைப்பின் ஓர்
மாயம் போலும் காவல அருள் என
உரைத்த மாற்றம் உணர கேட்டே

செரு செய் நெடும் கண் தீ என சிவப்ப 100
பிரச்சோதனன் எனும் பெரும் பெயர் விளக்கம்
மகிழ்ச்சி எய்தி வத்தவன் தெளிந்த
இகழ்ச்சி அளற்றுள் இறங்கிற்று இன்று என
சுற்ற மாக்களை சுடுவான் போல
பொன் தார் மார்பன் பொங்குபு வெகுண்டு 105
முகை நகை முத்தொடு தகை முடி தயங்க
அரு வரை அகலத்து ஆரம் புரள
திரு முடி அண்ணல் தீப்பட சீறி
எழு உறழ் திணி தோள் எடுத்தனன் ஓச்சி

பொழி மணி திண் தூண் பொறிபட புடைத்து 110
மாற்று சிங்கத்து மற குரல் கேட்ட
ஏற்று சிங்கத்தின் இடித்து எழுந்து உரறி
கொடி அணி தேரும் குதிரையும் யானையும்
வடி வேல் இளையரும் வல் விரைந்து ஓடி
எய் கணை இயற்கை இயற்று அமை இரும் பிடி 115
கையகம் புக்கது அன்றி இ வையகத்து
அறத்தோடு புணர்ந்த துறை புனல் ஆட்டத்து
அற்றமும் பிறவும் ஒற்றுவன நோக்கி
வள்ளி மருங்கின் வயங்கு_இழை தழீஇ

எள்ளி இறந்த இன்னா மன்னனை 120
பற்றுபு தம் என படையுறப்படுத்து
ஞாலம் தரும் பொருள் இயற்பட நாடிய
சாலங்காயனை தலைக்கை ஆக்க
பல் பொருள் பொதிந்த பயம் தெரி பனுவல்
பரதகன் தன்னொடு பயம் தீர் நண்பின் 125
மந்திர மாக்களும் அந்தணாளரும்
அகத்தால் குழீஇய அவையன் ஆதலின்
முகை தார் வேந்தற்கு முகத்து எழு பெரும் சினம்
புனல்படு நெருப்பின் பொம்மென உரறி

ஆறிய வண்ணம் அணி முகம் நோக்கி 130
தெளிதகு கிளவி செவ்விதின் கேட்ப
உளைவன செய்த உதயணகுமரனை
தளை-வயின் அகற்றலும் கிளை-வயின் பெயர்த்தலும்
ஆர மார்ப அஃது யாவரும் அறிவர்
வரு முலை ஆகத்து வணங்கு கொடி மருங்கில் 135
திரு_மகள்-தன்-வயின் தெரிந்தனை காணில்
குலத்தினும் குணத்தினும் நலத்தகு நண்பினும்
நிலத்தினில் நின்னொடு நிகர்க்குநன் ஆதலின்
மேல் வகை விதியின் விழுமியோர் வகுத்த

பால் வகை மற்று இது பழிக்குநர் இல்லை 140
ஆறு என அருளாய் அண்ணல் மற்று அது நீ
வேறு என அருளிய வேட்கை உண்டு எனின்
முன் நிலை முயற்சியின் அன்றி மற்று இனி
பின் நிலை முயற்சியில் பெயர்த்தனம் தருதல்
திரு வளர் மார்ப தெளிந்தனை ஆக என 145
ஒரு பேர் அமைச்சன் உள் விரித்து உரைப்ப
எறி நீர் வரைப்பின் எ பொருள் ஆயினும்
என்னின் அறிவோர் இல் என மதிக்கும்
மன்னருள் மன்னன் மனத்தில் தேறி

இட தோள் அன்ன விடற்கு_அரும் காதல் 150
உரிமை தேவியர்க்கு ஒரு மீக்கூரிய
பட்ட தேவிக்கு பட்டதை எல்லாம்
ஏனோர் உணர்த்துதல் நீக்கி கோமான்
தானே உணர்த்தும் தன்மையன் ஆகி
அரசு கொற்றத்து அரும் கடம்பூண்ட 155
முரசு எறி வள்ளுவ முதியனை தரீஇ
கார் பனி துளித்து கதிர் கண் புதைஇய
வார் பனி மாலை நம் வள நகர் புகுதல்
புனல் ஆடு விழவில் பொலிவு இன்று ஆதலின்

கோலம் குயிற்றி கோடணை இயற்றி 160
காலை புகுதல் காவலன் பணி என
துறை நகர் அறிய பறை எடுத்து அறைக என
செல் சுடர் அந்தி நல் இயல் ஓம்பி
பள்ளி கோயிலுள் பல்_இயம் எடுப்ப
ஆய் பூம் சேக்கையுள் அரு மணி சுடர 165
பாயல் கோடல் பலர் அறிவுறீஇய
கை கோல் இளையரும் காஞ்சுகி முதியரும்
அக கோளாளரொடு அரு_மறை ஆக
பண்டு இவண் புகூஉம் பொங்கு புனல் விழவு அணி

அன்று அவண் இலனாய் ஆவித்து இழிந்த 170
இந்திர_குமரன் இயற்கையன் ஆகி
கஞ்சிகை சிவிகையுள் கரணத்து ஒடுங்கி
வேண்டிடம்-தோறும் தூண்டு திரி கொளீஇ
கை-வயின் கொண்ட நெய் அகல் சொரியும்
யவன பாவை அணி விளக்கு அழல 175
திருந்து சாலேகமொடு பொருந்து கதவு ஒற்றி
பளிக்கு மணி இழிகை பவழ கைவினை
புலி கால் அமளி பொங்கு பட்டு அசைஇ
எலி பூம் போர்வையொடு மயிர் படம் விரித்து

கலத்தின் அல்லது காலின் வாரா 180
நல தகு பல் படை அழற்றற்கு உரியவை
ஆய்வனர் படுத்த அம் பூம் பள்ளியுள்
பெரு மூதாட்டியர் பேணுவனர் சூழ
திருமாதேவி அரு நகர் உற்ற
ஆகுல பூசலும் அழலும் மற்று இவை 185
காவலன் அறிந்த கருத்தினன் ஆகி என்
வாசவதத்தையை வலிதில் கொண்டு ஏகினும்
தீது நிகழினும் ஏதம் இல் என
நினைப்பு உள்ளுறுத்த நெஞ்சினள் ஆகி

மனத்துள் ஓர்க்கும் மம்மர் தீர 190
அரும் கடி காவலர் அஞ்சினர் எதிர்கொள
இரும் சின வேந்தன் பெரும் சினம் அகற்றி
வாயிலுள் வரும்இடத்து எதிர்கொளல் பொருட்டா
கோயிலுள் இருந்த கோப்பெருந்தேவிக்கு
பொலம் பூம் குடத்தில் போற்றி தந்த 195
தலை பூ நறு நீர் சிறப்பு முந்துறீஇ
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து
வெண் முகில் பொடிக்கும் வெய்யோன் போல
கை புனை சிவிகையில் கஞ்சிகை நீக்கி

அம் பூம் தானை அடி முதல் தடவர 200
வெம் போர் வேந்தன் மெல்லென இழிந்து
நெடு வெண் திங்கள் அகடுற தழுவும்
கடி வெண் மாடத்து கன்னி அம் கடி மனை
இல்லா தன்மையில் புல்லென தோன்றும்
பையுள் செல்வத்து கையறவு எய்தி 205
பொன்னும் மணியும் புகர்_அற புனைந்த
தொல் நாடு அமர துணை முதல் பொறித்த
தோடு அமை கொளுவத்து ஊடுற வளைஇ
தாழ் காழ் நகையொடு தாமம் துயல்வரும்

மாசு_இல் திண் நிலை வாயில் பேர் அறை 210
பள்ளி மண்டபத்து ஒள் ஒளி கிளர
திருவு கொள் உரோணி உருவு நலம் விரும்பிய
விரி கதிர் செல்வனின் வியப்ப தோன்றி
பாயல்கொள்ளாள் பட்ட தேவி
சாயல் செல்வ தலையளித்து ஓம்பி 215
அணி இயல் அமிர்தம் மாற்றிய பின் அவள்
தெளிய காட்டும் தெரிவினன் ஆகி
பூம் கொடி புனைந்த வீங்கு முலை ஆகத்து
வாங்கு அமை பணை தோள் வாசவதத்தையை

நல் யாழ் நவிற்றிய நளி மணி கொடும் பூண் 220
உறு வரை மார்பின் உதயணகுமரன்
மறு_இல் தொன்று மனை வளம் தரூஉம்
செல்வி ஆக சிறப்பொடு சேர்த்தி அவன்
நாட்டகம் புகுத்தற்கு வேட்டது என் மனன்
ஒண் குழை மடவோய் உவத்தியோ என 225
அருமையில் பெற்ற நும் அடித்தி-தன்-வயின்
திருமண சூழ்ச்சி எழுமைத்து ஆயினும்
ஏதம் இன்றால் இன்பம் பயத்தலின்
யானைக்கு எழுந்த வெம் சினம் அடக்கி நின்

தானை தலை தாள் தந்த ஞான்று அவன் 230
நிலையில் திரியா இளமை கோலம்
உயர்பில் திரியாது ஒத்து வழி வந்த
மகள் உடை தாயர் மனத்தகம் புகற்றலின்
யானும் அன்றே பேணினென் அடிகள்
மானம் இல்லை மற்று அவன் மாட்டு என 235
உவந்த ஒள்_இழை உள்ளம் நோக்கி
நிகழ்ந்தது இற்று என நெருப்பு நுனை உறீஇ
சுடு நாராசம் செவி செறித்தாங்கு
வடி வேல் தானை வத்தவன் தன்னொடு

பாவை பிரிவினை காவலன் உணர்த்தலின் 240
இசை கொள் சீறியாழ் இன் இசை கேட்ட
அசுண நல் மா அ நிலை-கண்ணே
பறை ஒலி கேட்டு தன் படி மறந்தது போல்
நீலத்து அன்ன கோல தடம் கண்
முத்து உறழ் ஆலி தத்துவன தவழ 245
பெறல்_அரும் என் மகள் பிரிந்தனன் நம் என
கூறிய கிளவி கூற்றுவன் இமிழ்த்த
பாசம் போல பையுள் செய்ய
அலமந்து அழூஉம் அம்_சில்_ஓதியை

முகை மலர் பைம் தார் குழைய முயங்கி 250
மடவை மன்ற மடவோய் மண் மிசை
உடை-வயின் பிரியா உறைநரும் உளரோ
இற்றும் கேள்-மதி முற்று இழை மகளிர்
தத்து நீர் பெரும் கடல் சங்கு பொறை உயிர்த்த
நித்திலத்து அன்னர் நினைந்தனை காண் என 255
ஆர்வ காதலன் காரண கட்டுரை
இகப்ப விடாஅன் தெளிப்ப தேறி
கயல் புரை கண்ணி இயல்பு கிளந்து ஏத்தி
பொன் அணி நகரமொடு தம் மனை புலம்ப

வால் மதி இழந்த மீன் இனம் போல 260
பொலிவு இன்று ஆகி புல்லென் கோலமொடு
கலா வேல் காவலன் மட மகள் காணாது
விலாவித்தன்றால் விழவு அணி நகர் என்
*1 உஞ்சைக் காண்டம்

#48 மருத நிலம் கடந்தது
விழவு அணி விழு நகர் விலாவணை எய்த
முழவு அணி முன்றிலொடு முது நகர் புல்லென
அழுகை ஆகுலம் கழுமிய கங்குல்
மதியா மன்னனை பதி-வயின் தரும் என
வெல் போர் வேந்தன் விடுக்கப்பட்ட 5
பல் போர் மறவர் ஒல்லென உலம்பி
புடை போர் புளகத்து உடப்பு மறை பருமத்து
தீ படு கரணத்து கணை விடு விசைய
செய்வினை தச்சன் கைவினை பொலிந்த

வேற்றவர் ஒல்லென வேற்றினன் பாய்த்து உள 10
கண் திரள் கலினமொடு பிண்டிகை கவ்வி
திரை தலை பிதிர்வின் உரைக்கும் வாயின
கற்றோர்க்கு அமைந்த கருவி மாட்சிய
பொன் தார் உடுத்த பொங்கு மயிர் புரவி
புரவி பூண்ட பொன் நுக கொடுஞ்சி 15
பரவை தட்டில் பல் மணி பலகை
அடி தொடைக்கு அமைந்த கிடுகு உடை காப்பில்
காழ் அமை குழிசி கதிர்த்த ஆரத்து
சூழ் பொன் சூட்டில் சுடர் மணி புளகத்து

தாழா கடும் செலல் ஆழி திண் தேர் 20
திண் தேர்க்கு அமைந்த தண்டா காப்பின்
குன்று கண்டு அன்ன தோன்றல குன்றின்
அருவி அன்ன உருவு கொள் ஓடைய
ஓடைக்கு அமைந்த சூழி சுடர் நுதல்
கோடு இலவு எழுதிய கோல கும்பத்து 25
இடு பூம் தாமம் இரும் கவுள் இசைஇ
படு வண்டு ஓப்பும் பண் அமை கோலத்து
விண் உரும் அன்ன வெடிபடு சீற்றத்து
அண்ணல் யானை அவை_அவை-தோறும்

மேலாட்கு அமைந்த காலாள் காப்பில் 30
கருவி பல் படை கடல் கிளர்ந்து என உற
பரவை எழுச்சி பக்கமும் முன்னும்
வெருவர தாக்கி வீழ நூறி
நல் துணை தோழர் உற்றுழி உதவ
அமிழ்தின் அன்ன அம் சில் கிளவி 35
மதர்வை நோக்கின் மாதரை தழீஇ
ஓங்கிய தோற்றமொடு ஒருதான் ஆகி
நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவேன்
சேரா மன்னன் உஞ்சேனை அம் பெரும் பதிக்கு

ஓரிரு காவதம் ஊரா மாத்திரம் 40
விரி கதிர் பரப்பி வியலகம் விளக்கும்
பரிதி ஞாயிறு பல்லவர் காணின்
அற்றம் தரும் என அருள் பெற்றது போல்
கொற்ற வெம் கதிர் குளிர் கொள சுருக்கி
குண்டு அகன் கிடக்கை குட_கடல் குளிப்ப 45
வண்டு அகத்து அடக்கிய வாய ஆகி
கூல பொய்கையுள் நீலமொடு மலர்ந்த
கோல கழுநீர் குழி வாய் நெய்தல்
எழு நீர் குவளையொடு இன்னவை பிறவும்

தாமரை தலையா தன் நகர் வரைப்பகம் 50
ஏமம் ஆக இவன் எய்துவன் என்று தம்
தூய்மை உள்ளமொடு கோமகன் கூப்பும்
குறும் தொடி மகளிர் குவி விரல் கடுப்ப
நறும் தண் நாற்றம் பொதிந்த நல் மலர்
தடம் கயம் துறந்த தன்மைய ஆகி 55
குடம்பை சேர்ந்து குரல் விளி பயிற்றி
புள் புலம்புறுத்த புன்கண் மாலை
கட்புல மருங்கில் கலந்த ஞாயிற்று
வெப்ப நீக்கி தட்பம் தான் செய

கண்ணுறு பிறங்கல் கரு வரை நுனி தலை 60
வெண் நிற அருவி வீழ்ச்சி ஏய்ப்ப
மத்தக மருங்கின் மாலையொடு கிடந்த
நித்தில தாமம் நிலையின் வழாமை
வைத்த தலையிற்று ஆக வலி சிறந்து
வித்தக கோலத்து வீழ்ந்த கிழவற்கு 65
பத்தினி ஆகிய பைம் தொடி பணை தோள்
தத்தரி நெடும் கண் தத்தை-தம் இறை
ஆணை அஞ்சிய அசைவு நன்கு ஓம்பி
கோணை நீள் மதில் கொடி கோசம்பி

நகை துணை ஆயம் எதிர்கொள நாளை 70
புகுத்துவல் என்பது புரிந்தது போல
பறத்தரல் விசையினும் பண்ணினும் மண் மிசை
உற புனைந்து ஊரும் உதயணன் வலப்புறத்து
அறிய கூறிய செலவிற்று ஆகி
கோடுதல் செல்லாது கோமகன் குறிப்பு அறிந்து 75
ஓடுதல் புரிந்த உறு பிடி மீமிசை
கூந்தலும் கூந்தல் வேய்த்த கோதையும்
ஏந்து இளம் கொங்கையும் எடுக்கல் ஆற்றாள்
அம் மென் மருங்குல் அசைந்து_அசைந்து ஆட

பொம்மென உயிர்க்கும் பூ நுதல் பாவையை 80
கைம்முதல் தழீஇ காஞ்சனை உரைக்கும்
கட்டிலாளர் உளம் புகன்று உறையும்
நாகத்து அன்ன நல் நகர் வரைப்பின்
ஏக திகிரி இரு நிலத்து இறைவன்
நீப்ப_அரும் காதல் நின் பயந்து எடுத்த 85
கோப்பெருந்தேவியொடு கூடி முன் நின்று
பொன் குடம் பொருந்திய பொழி அமை மணி தூண்
நல் பெரும் பந்தருள் முத்து மணல் பரப்பி
நல்லோர் கூறிய நாள் அமை அமயத்து

பல்லோர் காண படுப்பு இயல் அமைந்த 90
செம் தீ அம் தழல் அந்தணன் காட்ட
சேதா நறு நெய் ஆசு இன்று உகுத்து
செழு மலர் தட கையில் சிறப்பொடு மேற்பட
கொழு மலர் காந்தள் குவி முகை அன்ன நின்
மெல் விரல் மெலிவு கொண்டு உள்ளகத்து ஒடுங்க 95
பிடித்து வலம் வந்து வடு தீர் நோன்பொடு
வழு_இல் வால் ஒளி வடமீன் காட்டி
உழுவல் அன்பின் உதயணகுமரன்
அருமறையாளர்க்கு அரு நிதி ஆர்த்தி

பெரு மறை விளங்க பெற்றனன் கொள்ள 100
கொடுத்திலன் என்பது கூறின் அல்லதை
அடுத்தனன் கண்டாய் அணி முடி அண்ணல்
வையத்து ஏனோர் வல்லர் அல்லா
தெய்வ பேரியாழ் கை-வயின் தரீஇ
எழுவு இயல் கரணம் வழு_இலன் காட்டும் நின் 105
ஆசான் இவன் என அருளிய அ சொல்
தூசு ஆர்ந்து துளும்பும் காசு விரி கலாபத்து
பை விரி அல்குல் பாவாய் மற்று இது
பொய் உரை அன்றி புணர்ந்தன்று அதனால்

பொருள் என இகழாது பொலம் கல மடவோய் 110
மருள் என கருதிய மடியுறை கேள்-மதி
எண் திசை மருங்கினும் எதிர்_எதிர் ஓடி
மண்டில மதியமொடு கதிர் மீன் மயங்கி
நிலைக்கொண்டு இயலா ஆகி தம்முள்
தலைக்கொண்டு இயலும் தன்மை போல 115
கண்ணகன் மருங்கின் விண்ணகம் சுழலும்
மண்ணக மருங்கின் விண்ணுற நீடிய
மலையும் மரனும் நிலையுறல் நீங்கி
கடுகிய விசையொடு காற்று என உராஅய்

முடுகிய இரும் பிடி முகத்தொடு தாக்கிய 120
எதிர் எழுந்து வருவன போலும் அதிர்வொடு
மண் திணி இரு நிலம் மன் உயிர் நடுங்க
துளக்கம் ஆனாது ஆசு_இல் நிலைதிரிந்து
கலக்கம் கொண்டு கைவரை நில்லாது
ஓடுவன போன்ற ஆதலின் மற்று நின் 125
நீடு மலர் தடம் கண் பாடு பிறழ்ந்து உறழ
நோக்கல் செல்லாது இரு என நுதல் மிசை
வேர் துளி துடைத்து வித்தக வீரன்
அரு வரை அகலத்து அஞ்சுவனள் நீட்டி

திரு வளர் சாயலை திண்ணிதின் தழீஇ 130
உவண புள் இனம் சிவணி செல்லும்
சிறகர் ஒலியின் திம்மென ஒலிக்கும்
பறவை இரும் பிடி பாவு அடி ஓசையின்
அவணை போதல் அஞ்சி வேய் தோள்
வாள் அரி தடம் கண் வால் இழை மாதர் 135
கேள்வி செவியில் கிழி துகில் பஞ்சி
பன்னி செறித்து பற்றினை இரு என
பிடியிடை ஒடுங்கும் கொடி இடை மருங்கில்
நோய் கொளல் இன்றி நொவ்விதின் கடாவல் என்று

ஆய் புகழ் அண்ணல் அசைதல் செல்லான் 140
அம் கண் அகல் வயல் ஆர்ப்பு இசை வெரீஇய
பைம் கண் எருமை படு கன்று ஓம்பி
செருத்தல் செற்றிய தீம் பால் அயல
உருவ அன்னமொடு குருகு பார்ப்பு எழ
பாசடை பிலிற்றும் பழன படப்பை 145
அறையுறு கரும்பின் அணி மடல் தொடுத்த
நிறை உறு தீம் தேன் நெய் தொடை முதிர்வை
உழை கவின்று எழுந்த புழல் கால் தாமரை
செம் மலர் அங்கண் தீ எடுப்பவை போல்

உள் நெகிழ்ந்து உறைக்கும் கண் அகன் புறவில் 150
பாளை கமுகும் பணையும் பழுக்கிய
வாழை கானமும் வார் குலை தெங்கும்
பலவும் பயினும் இலை உளர் மாவும்
புன்னையும் செருந்தியும் பொன் இணர் ஞாழலும்
இன்னவை பிறவும் இடையறவு இன்றி 155
இயற்றப்பட்டவை எரி கதிர் விலக்கி
பகல் இருள் பயக்கும் படிமத்து ஆகி
அகலம் அமைந்த அயிர் மணல் அடுக்கத்து
கால் தோய் கணை கதிர் சாறு ஓய் சாலி

வரம்பு அணி கொண்ட நிரம்பு அணி நெடு விடை 160
உழவர் ஒலியும் களமர் கம்பலும்
வள வயல் இடையிடை களை களை கடைசியர்
பதலை அரியல் பாசிலை பருகிய
மதலை கிளியின் மழலை பாடலும்
தண்ணுமை ஒலியும் தடாரி கம்பலும் 165
மண் அமை முழவின் வயவர் ஆர்ப்பும்
மடை வாய் திருத்தும் மள்ளர் சும்மையும்
இடையறவு இன்றி இரையாறு தழீஇ
வயல் புல சீறூர் அயல் புலத்து அணுகி

மருதம் தழீஇய மல்லல் அம் பெரு வழி 170
ஒரு நூற்றுஇருபத்தோரைந்து எல்லையுள்
வல-பால் எல்லை வயல் பரந்து கிடந்த
அளற்று நிலை செறுவின் அகல் நிலம் கெழீஇ
இட-பால் மருங்கில் பரல் தலை முரம்பில்
புன் புலம் தழீஇய புகற்சித்து ஆகி 175
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த
படை புற கிடங்கும் தொடை பெரு வாயிலும்
வாயிற்கு அமைந்த ஞாயில் புரிசையும்
இட்டு அமைத்து இயற்றிய கட்டளை காப்பின்

மட்டு மகிழ் நெஞ்சின் மள்ளர் குழீஇய 180
அருட்ட நகரத்து அல்கூண் அமயத்து
அம் சொல் மகளிர் அடி மிசை ஆற்றும்
பைம்பொன் பகு வாய் கிண்கிணி ஒலியும்
மை அணி இரும் பிடி மணியும் பாடு அவித்து
எய்தினன்-மாதோ இருளிடை மறைந்து என் 185
*1 உஞ்சைக் காண்டம்

#49 முல்லை நிலம் கடந்தது
இருளிடை மருங்கின் இரு நிலம் தழீஇய
அரு மதில் படப்பை அருட்ட நகரகம்
உருள்படல் ஒற்றி ஊடு எழு போக்கி
கரும் கண் பம்பை நெருங்க கொட்டி
அழல் படு சீற்றத்து அஞ்சு வளி செலவின் 5
கழல் கால் இளையர் கலங்கா காப்பின்
இயற்றப்பட்ட இயற்கை இற்று என
வயத்தகு நோன் தாள் வயந்தககுமரன்
ஆழ் கடல் பௌவத்து அரும் கலம் இயக்கும்

நீயான் போல நெஞ்சு உணர் மதிப்பினன் 10
தெய்வ பேரியாழ் கை-வயின் நீக்கி
வீக்குறு புரோசை வாய் பொன் பந்தத்து
யாப்புற அமைத்து காப்புறு தொழிலின்
நீர் நிறை கொளீஇய தாமரை கம்மத்து
கூர் இலை கொலை வாள் வார் மயிர் வட்டத்து 15
சேடக அரணமொடு ஈடுபட விரைஇ
இறை_மகன் கேட்ப இற்று என உரைக்கும்
துறை வளம் கவினிய நிறை வள படுவில்
செல்வ மருதத்து ஒல்லையுள் இருந்த

தொல் அரும் சிறப்பின் இ மல்லல் மா நகர் 20
அகப்பட்டு இயங்குநர் அச்சம் நீக்கி
புறப்பட்டு இயங்குநர் புன்கண் செய்யும்
காப்பு வினை உடைத்தே யாப்புற இதனை
இடத்து இட்டு ஏகுதும் எனினே எங்கும்
முட தாள் தாழை மொய்த்து எழு முழு சிறை 25
தோட்டமும் படுவும் கோட்டக கோடும்
பிரம்பு எழு பெரும் பார் அடைந்து மிசை செற்றி
செதும்பு பரந்து எங்கும் சேற்று இழுக்கு உடைத்தாய்
வாய்க்கால் நிறைந்த போக்கு_அரும் பணையொடு

வரம்பிடை விலங்கி வழங்குதற்கு அரிதாய் 30
நிரம்பா செலவின் நீத்து_அரும் சிறு நெறி
நல தகு புகழோய் நடத்தற்கு ஆகாது
வலத்து இட்டு ஊர்ந்து வழிமுதல் கோடும் என்று
உரைப்ப கேட்டே உதயணகுமரன்
குறி வழி காட்டிய கொலை தொழில் நகரம் 35
அறிதல் அஞ்சி அடி இசை கேட்கும்
எல்லை அகன்று வல்லை மருங்கு ஓட்டி
முதல் நெறி கொண்டு மு_நால் காவதம்
கதழ்வொடு கடக்கும் காலை அ வழி

ஒருபால் படாதோர் உள்ளம் போல 40
இரு பாற்பட்ட இயற்கைத்து ஆகிய
நெறி-வயின் ஏதம் குறி-வயின் காட்டி
வடு_இல் நண்பின் வயந்தகன் உரைக்கும்
இடு கல் முதலன இட-வயின் கிடந்தது
இன்னா பேர் தேர் இயற்கைத்து எண்-மதி 45
ஒன்னா மன்னற்கு உற்றது செய்யும்
யாப்பிலாளர் காப்பிற்று ஆகி
ஏற்றமும் இழிவும் இடையிடை பல்கி
ஊன நாடும் உளவழி சில்கி

நீரும் நிழலும் நீங்கிற்று ஆகி 50
வெவ் வினையாளர் அல்லது விழுமிய
செவ் வினையாளர் சேரார் நம் பதிக்கு
அணித்தும் அன்று அது மணி பூண் மார்ப
வலத்தில் கிடந்த வழிவகைதானே
வளைந்த செலவிற்று ஆகி தலைத்தலை 55
கடும் சின வென்றி காவல் ஆடவர்
கொடுஞ்சி நல் தேரும் குதிரையும் யானையும்
காலாள் குழாத்தொடு நால் வகை படையும்
ஒரு நிரல் செல்லும் உள் அகல்வு உடைத்தாய்

திரு நிலை பெற்று தீயோர் உன்னார் 60
நருமதை-காறும் நாட்டகம் அப்பால்
வஞ்சர் வாழும் அஞ்சுவரு தீ நிலத்து
அகலிடம்-தானும் பகலிடத்து இயங்குநர்க்கு
இன்பம் ஆகிய ஏம வெண் குடை
மன் பெரும் சிறப்பின் மண்ணக கிழமை 65
ஒரு கோல் ஓச்சிய திரு ஆர் மார்ப நின்
முன்னோர் காலை பல் நூல் பயிற்றிய
நல் இசை நாட்ட துல்லியன் கண்ட
குளமும் பொய்கையும் கூவலும் வாவியும்

அளவு_இறந்து இனியவை அசைவிடத்து உடைத்தாய் 70
பயப்பு_அறு பாலை நிலனும் ஒருபால்
இகக்கல் ஆகா இரண்டினுள் உவப்பதை
ஓட்டுக வல் விரைந்து என்றலின் உதயணன்
காட்டு பெரு வழி கடத்தல் மேவான்
நாட்டு பெரு வழி நணுக காட்டி 75
பொருள்-வயின் பிரிவோர் வரவு எதிர் ஏற்கும்
கற்பு உடை மாதரின் கதுமென உரறி
முற்று நீர் வையகம் முழுதும் உவப்ப
கருவி மா மழை பருவமொடு எதிர

பரவை பௌவம் பருகுபு நிமிர்ந்து 80
கொண்மூ விதானம் தண்ணிதின் கோலி
திரு வில் தாமம் உருவுபட நாற்றி
விடு சுடர் மின் ஒளி விளக்க மாட்டி
ஆலி வெண் மணல் அணிபெற தூஉய்
கோல வனப்பில் கோடணை போக்கி 85
அதிர் குரல் முரசின் அதிர்தல் ஆனாது
தூ நிற தண் துளி தான் நின்று சொரிந்து
வேனில் தாங்கி மேனி வாடிய
மண்ணக மடந்தையை மண்ணும் நீராட்டி

முல்லை கிழத்தி முன் அருள் எதிர 90
பல்லோர் விரும்ப பரந்து கண் அகன்று
பொருள்-வயின் பிரிந்து பொலம் கல வெறுக்கையொடு
இருள்-வயின் வந்த இன் உயிர் காதலன்
மார்பகம் மணந்த நேர் இழை மடந்தையர்
மருங்குல் போல பெரும் கவின் எய்திய 95
சிறு கொடி ஊழூழ் பரப்பி மற்று அவர்
முறுவல் அரும்பிய முல்லை அயல
குரவும் தளவும் குருந்தும் கோடலும்
அரவு கொண்டு அரும்ப அறு கால் வண்டினம்

அவிழ்_பதம் பார்த்து மகிழ்வன முரல 100
கார் வளம் பழுனி கவினிய கானத்து
ஏர் வளம் படுத்த எல்லைய ஆகி
உறங்கு பிடி தட கை ஒருக்கு நிரைத்தவை போல்
இறங்கு குரல் இறடி இறுங்கு கடை நீடி
கவை கதிர் வரகும் கார் பயில் எள்ளும் 105
புகர் பூ அவரையும் பொங்கு குலை பயறும்
உழுந்தும் கொள்ளும் கொழுந்துபடு சணாயும்
தோரையும் துவரையும் ஆயவும் பிறவும்
அடக்கல் ஆகா விடற்கு_அரு விளையுள்

கொல்லை பயின்று வல்லை ஓங்கிய 110
வரையின் அருகா மரையா மட பிணை
செருத்தல் தீம் பால் செதும்புபட பிலிற்றி
வெண் பூ முசுண்டை பைம் குழை மேய
சிறு பிணை தழீஇய திரி மருப்பு இரலை
செறி இலை காயா சிறுபுறத்து உறைப்ப 115
தடவு நிலை கொன்றையொடு பிடவு தலை பிணங்கிய
நகை பூம் புறவில் பகல் துயில் அமரா
வரித்தார் அணிந்த விரி பூம் தொழுதி
புல் உதள் இனத்தொடு புகன்று விளையாடும்

பல் இணர் படப்பை படி அணை பெரும் கடி 120
பகர் விலை பண்டமொடு பல்லோர் குழீஇ
நகரம் கூஉம் நாற்றம் நந்தி
பல் ஆ படு நிரை பயம்படு வாழ்க்கை
கொல்லை பெரும் குடி கோவலர் குழீஇய
முல்லை பெரும் திணை புல்லுபு கிடந்த 125
ஐம்பதின் இரட்டியொடு ஐ_ஐந்து எல்லையுள்
மன் பெரும் சிறப்பின் மாலை யாமத்து
சென்றது-மாதோ சிறு பிடி விரைந்து என்
*1 உஞ்சைக் காண்டம்

#50 குறிஞ்சி நிலம் கடந்தது
விரைந்தனன் ஆகிய விறல் கெழு வீரியன்
முகைந்த புறவின் முல்லை அம் பெரும் திணை
இகந்த பின்றை இரு-பால் பக்கமும்
அளப்ப_அரும் படிவத்து ஆன்றோர் போல
துளக்கம் இல்லா திரு தகு நிலைமைய 5
மதுரம் பொதிந்த மழலை அம் கிளவி
சதுர சந்தி சமழ்ப்பு_இல் கலாபத்து
தொட்டிமை கலந்த தூசு விரி அல்குல்
பட்டிமை ஒழுக்கில் பலர் தோய் சாயல்

அரம் போழ் அம் வளை மகளிர் மனத்தின் 10
நிரம்பா நெறியின ஆகி அரும்_பொருள்
கல்லா மாந்தர் உள்ளம் போல
நொய் நுரை சுமந்து மெய் நயம் தெரிந்த
மேலோர் நண்பின் தாழ இழிதரும்
அருவி அறாஅ ஆகலின் அயல 15
பருவி வித்திய பைம் தாள் புனம்-தோறும்
ஈரம்_இல் குறவர் இதண் மிசை பொத்திய
ஆர துணியொடு கார் அகில் கழுமிய
கொள்ளி கூர் எரி வெள்ளி விளக்கில்

கவரிமான் ஏறு கண்படை கொள்ளும் 20
தகரம் கவினிய தண் வரை சாரல்
நறையும் நாகமும் உறை இருவேரியும்
வருக்கையும் மாவும் வழையும் வாழையும்
அருப்பிடை நிவந்த ஆசினி மரமும்
பெரும் செண்பகமும் பிண்டியும் பிரம்பும் 25
கரும் கோல் குறிஞ்சியும் கடி நாள் வேங்கையும்
சுள்ளியும் சூரலும் வள்ளியும் மரலும்
வால் வெள் வசம்பும் வள் இதழ் காந்தளும்
பால் வெண் கோட்டமும் பனிச்சையும் திலகமும்

வேயும் வெதிரமும் வெட்சியும் குளவியும் 30
ஆய் பூம் தில்லையும் அணி மாரோடமும்
ஆரமும் சந்தும் அகிலும் தமாலமும்
ஏர் இலவங்கமும் ஏலமும் இருப்பையும்
ஓரி மீமிசை பாய்தலில் கிழிந்து
பொதி கண் இறாஅல் பூம் புறம் புதைஇ 35
மதி-கண் மறைந்த மாசுணம் மான
மணி வரை மருங்கின் அணி பெற ஒழுகி
முதிர் பூம் காவின் உதிர் தாது அளைஇ
மலை வாழ் குறவர் மகளிர் குடையும்

சுனை வாய் நிறைக்கும் சூர் உடை சிலம்பின் 40
பாடு பெயர்த்து அறியா பக்கம் பயின்ற
கோடு உயர் நிவப்பின் குளிர் மலை ஓங்கி
மாடம் நிரைத்த மறுகை போல
நிரப்பம் எய்தி முரப்பு நிலை முனாது
கல்லின் காட்டிய செல்லல் தூ வழி 45
பிண்டி பிணங்கி பிலம் புக்கது போல்
கண்டவர்க்கு ஆயினும் கடத்தற்கு ஆகா
அருமை எய்திய வரில் அமை ஆர் இடை
இறும்பு அமல் அடுக்க இன் தேன் கொளீஇய

பொங்கு எரி விளக்கம் 50
ஏனல் பெருந்தினை ஏனம் காவலர்
கானல் பெரு மரம் கண்ணுற மாட்டி
இருள்பட ஓங்கிய எல்லை வேலி-தொறும்
வெருள்பட போக்கிய வெண் தீ விளக்கம்
மங்குல் வானத்து மதி நிலா மழுங்க 55
கங்குல் யாமத்து கடை_அற எழுந்த
கதிரோன் போல எதிர்_எதிர் கலாஅய
நறும் பூம் சோலை நாற்றம் கழுமிய
குறிஞ்சி பெரும் திணை குலாஅய் கிடந்த

பதிற்றுப்பத்தொடு விதிப்பட எண்ணிய 60
ஐ_ஐந்து எல்லையும் அரை_இருள் நடுநாள்
எய்தி இகந்தன்றால் இயற்று அமை பிடி என்
*1 உஞ்சைக் காண்டம்

#51 நருமதை கடந்தது
எய்தி இகந்த இயற்று அமை இரும் பிடி
கொய் பூம் குறிஞ்சி கொழு நிலம் கைவிட்டு
ஐ_நான்கு எல்லையொடு ஆறு_ஐந்து அகன்ற பின்
மதியம் உரைஞ்சும் மால் வரை சென்னி
பொதி அவிழ் பூ மரம் பொதுளிய சோலை 5
அகலத்து எல்லையும் ஆழ்ச்சியது அந்தமும்
உயர்பின் ஓக்கமும் உணர்த்தற்கு ஆகா
விஞ்சை அம் பெரு மலை நெஞ்சகம் பிளந்து
கல்லுள் பிறந்த கழுவா கதிர் மணி

மண்ணுள் பிறந்த மாசு_அறு பசும்பொன் 10
வேய் உள் பிறந்த ஆய் கதிர் முத்தம்
வெதிரில் பிறந்த பொதி அவிழ் அரு நெல்
மருப்பினுள் பிறந்த மண்ணா முத்தம்
வரையில் பிறந்த வயிரமொடு வரன்றி
நுரையுள் பிறந்த 15
முடம் தாள் பலவின் குடம் புரை அமிழ்தமும்
நெடும் தாள் மாவின் நெய் படு கனியும்
கரும் தாள் வாழை பெரும் குலை பழனும்
பெரும் தேன் தொடையலும் விரைந்து கொண்டு அளைஇ

நறவம் சாரல் குறவர் பரீஇய 20
ஐவன நெல்லும் கை வளர் கரும்பும்
கருந்தினை குரலும் பெருந்தினை பிறங்கலும்
பாவை இஞ்சியும் கூவை சுண்ணமும்
நாகத்து அல்லியும் ஏலத்து இணரும்
கண் சாலேகமும் உள் காழ் அகிலும் 25
குங்கும தாதும் பைம் கறி பழனும்
கிழங்கும் மஞ்சளும் கொழும் கால் தகரமும்
கடு படு கனியும் காழ் திப்பிலியும்
சிற்றிலை நெல்லி சிறு காய் துணரும்

அரக்கின் கோலொடு அன்னவை பிறவும் 30
ஒருப்படுத்து ஒழியாது விருப்பின் ஏந்தி
மலை-வயின் பிறந்த மாண்புறு பெரும் கலம்
நிலை-வயின் வாழ்நர்க்கு தலைவியின் உய்க்கும்
பகர் விலை மாந்தரின் நுகர்_பொருள் அடக்கி
பல் மலை பிறந்த தண் நிற அருவிய 35
அமலை அரும் கலம் அடக்குபு தழீஇ
தன்னில் கூட்டிய தானை செல்வமொடு
இரு கரை மருங்கினும் பெருகுபு தழீஇ
அணி குருக்கத்தியும் அதிரலும் அனுக்கி

மணிச்சையும் மயிலையும் மௌவலும் மயக்கி 40
ஞாழலும் புன்னையும் வீழ நூக்கி
குருந்தும் கொன்றையும் வருந்த வணக்கி
தடவும் பிடவும் தாழ சாய்த்து
முளவும் முருக்கும் முருங்க ஒற்றி
மாவும் மருதும் வேர்_அற புய்த்து 45
சேவும் குரவும் சினை பிளந்து அளைந்து
நறையும் நாகமும் முறை நடு முருக்கி
வழையும் வாழையும் கழையும் கால் கீண்டு
ஆலும் அரசும் காலொடு துளக்கி

புன்கும் நாவலும் புரள எற்றி 50
கொங்கு ஆர் கோடலொடு கொய்யல் குழைஇ
அனிச்சமும் அசோகமும் அடர அலைத்து
பனிச்சையும் பயினும் பறிய பாய்ந்து
வள்ளியும் மரலும் தன் வழி வணக்கி
புள்ளிமானும் புல்வாய் தொகுதியும் 55
ஆமா இனமும் தாம் மாறு ஓடி
இடை புனல் பட்டவை புடை புனற்கு இவர
பொறி மயில் பேடை போத்தொடு புலம்ப
எறி மயிர் ஏனமொடு எண்கு இனம் இரிய

குரங்கும் முசுவும் மரம்-தொறும் வாவ 60
சுரும்பும் தும்பியும் விரும்புபு விரைய
அகத்து உறை பல் உயிர் அச்சம் எய்த
புறத்து உறை பல் உயிர் புகன்று விளையாட
படிவ பள்ளியொடு பாக்கம் கவர்ந்து
குடி கெழு வள நாடு கொள்ளை கொண்டு 65
கவ்வை ஓதம் கால் கிளர்ந்து உராஅய்
பௌவம் புகூஉம் படர்ச்சித்து ஆகி
கரும் கால் குருகும் கம்புளும் கழுமி
பெரும் பூண் பூணியும் பேழ் வாய் கொக்கும்

குளிவையும் புதாவும் தெளி கய கோழியும் 70
அன்றிலும் நாரையும் துன்புறு கெழீஇ
வாளையும் வராலும் நாள்_இரை ஆக
அயிரையும் பிறவும் அல்கு_இரை அமைத்து
பறவை பார்ப்பு இனம் சிறு மீன் செகுத்து
வார் மணல் அடைகரை பார்வலொடு வதியும் 75
சும்மை அறாஅ தன்மைத்து ஆகி
கயம் பல கெழீஇ இயங்கு துறை சில்கி
பெரு மத யானையொடு பிடி இனம் பிளிற்றும்
நருமதை பேரியாறு நண்ணிய பொழுதில்

தலைப்பெரும் தண் புனல் தான் வந்தன்று என 80
நிலைப்பு_அரும் நீள் நீர் நீத்திற்று ஆகி
மார் கடல் வரைப்பின் மன் உயிர்க்கு இயன்ற
ஆக்கமும் கேடும் சாற்றியது ஒப்ப
வள மலர் பைம் தார் வயந்தகன் இழிதந்து
இள மணல் படாஅது இயங்கு துறை நோக்கி 85
கால் நிலை கொள்உழி தான் நிலை காட்ட
அரி மதர் மழை கண் அனந்தர் எய்திய
திரு மா மேனியை திண்ணிதின் தழீஇ
செல் விசை கதுமென சுருக்கி மெல்லென

வரை ஏறு அரிமா போல மற்று அதன் 90
கரை ஏறினனால் கார் நீர் கடந்து என்
*1 உஞ்சைக் காண்டம்

#52 பாலை நிலம் கடந்தது
கார் நீர் நருமதை கரையகம் கடந்த பின்
வார் நீர் துடைத்து வயந்தகன் ஏறி
வானக நாள்_மீன் தானம் நோக்கி
ஆற்றினது அளவும் ஆர் இருள் எல்லையும்
ஏற்று அமை இரும் பிடி இயக்கமும் எண்ணி 5
அர நுதி அன்ன பரல் முரம்பு அடுக்கத்து
சுர முதல் அடைந்த சூழ் அகன் புரிசை
பாழ் நில வாழ்நர் பரவினர் தூஉம்
செம் தடி குருதி பைம் நிண கொழும் குடர்

எண் திசை மருங்கினும் கொண்டவர் எடுத்த 10
வேர் முதல் ஊசல் வேம்பின் சினை-தொறும்
கண் பாடு அவிந்த கருமணி பிறங்கலொடு
உழை கோடு அணிந்து பீலி நாற்றி
கழை கோல் தொடுத்த கதலிகை நுடங்க
செறி தோல் பரமும் எறி_கோல் வாளும் 15
அப்பு புதையும் அணி வரி சிலையும்
செப்புற செய்த செல்வ முன்றில்
திகழ் மதி முகத்தி
எண் வகை பொலிந்த ஒண் படை தடம் கை

கச்சு ஆர் வன முலை கண் மணி கொடும் பூண் 20
பச்சை பால் கிளி பவழ செம் வாய்
முத்து ஏர் முறுவல் முயங்கு கயல் தடம் கண்
சிலை ஏர் புருவ செம் கண் செல்வி
கலை காமுறுவி நிலை காமுற்ற
கல் சிறை கோட்டத்து நல் சிறை ஒடுங்கி 25
வில் ஏர் உழவர் செல் சாத்து எறிந்துழி
நல் ஆ படுத்த நடு கல் உழலையும்
ஆள் இடு படுக்கையும் அரில் பிணம் கடுக்கமும்
தாள் இடு குழியும் தலை சுரந்து யாத்த

புல்லும் பொள்ளலும் வெள்ளிடை களரும் 30
நீர்_இல் யாறும் நிரம்பா நிலனும்
ஊர்_இல் காடும் ஊழ் அடி முட்டமும்
வறும் சுனை பரவையும் குறும் பரல் குன்றமும்
இயற்கையின் அமைந்தவும் செயற்கையின் சிறந்தவும்
ஒன்று கண்டவை போல் சென்று உலப்பு அரிதாய் 35
தட்ப காலத்தும் வெப்பம் ஆனாது
ஓமையும் உழிஞ்சிலும் உலவையும் உகாயும்
கடுவும் தான்றியும் கொடு முள் தொடரியும்
அரவும் அரசும் ஆரும் ஆத்தியும்

இரவும் இண்டும் குரவும் கோங்கும் 40
கள்ளியும் கடம்பும் முள்ளியும் முருக்கும்
தணக்கும் பலாசும் கணை கால் ஞெமையும்
ஈங்கையும் இலவும் தேம் காய் நெல்லியும்
வாகையும் பிறவும் வன் மரம் ஒடுங்கி
தோகையும் குயிலும் துன்னல் செல்லா 45
நுண் பொறி புறவின் செம் கால் சேவல்
வெண் சிறை பெடையோடு விளையாட்டு விரும்பி
வன் பரல் ஆர்ந்த வயிற்ற ஆகி
கண் பொரி கள்ளி கவர் சினை ஏறி

கூப்பிடு குரல் இசை சேண் புலத்து இசைப்பவும் 50
கான பன்றி தோல் முலை பிணவல்
குரங்கு நடை களிற்றொடு திரங்கு மரல் சுவைத்து
நீர் நசைக்கு எள்கி தேர் மருங்கு ஓடவும்
உள் அழல் அறாஅது ஒள் அழல் அன்ன
செம் முக மந்தி கைம்மக தழீஇ 55
பைம் குழை பிரசம் அங்கையின் நக்க
நொதுமல் கடுவன் அது கண்டு ஆற்றாது
காஞ்சிரம் கவர் கோல் கவின் பெற தொடுத்த
தண் தான் ஊட்டி தாகம் தணிப்பவும்

வெம் கல் சாரல் வேய் விண்டு உதிர்த்த 60
அம் கதிர் முத்தம் அணி மழை துளி என
காட்டு_கோழி சூட்டு தலை சேவல்
குத்தல் ஆனாது தத்துற்று தளரவும்
கயம் தலை தழீஇய கறை அடி இரும் பிடி
நயம் தலை நீங்கிய நார்_இல் முருங்கை 65
வெண் பூம் கவள முனைஇ நெல்லி
பைம் காய் அமிழ்தம் பல்-வயின் அடக்கி
யாறு செல் வம்பலர் சேறு கிளைத்திட்ட
உவலை கேணி அவல் அடுத்து உலாவவும்

செந்தளிர் இருப்பை பைம் துணர் வான் பூ 70
தீம் சுவை நசைஇய தூங்கு சிறை வாவல்
கல்லென துவன்றி பல்-வயின் பறப்பவும்
இன்னவை பிறவும் வெம்மையின் வருந்தி
நடப்பவும் பறப்பவும் இடுக்கண் எய்தி
வேட்ட செந்நாய் வேண்டாது ஒழித்த 75
காட்டு மா வல்சியர் கரந்தை பாழ்பட
வெட்சி மிலைச்சிய வில்லுறு வாழ்க்கை
சிறு புல்லாளர் சீறூர்க்கு இயங்கும்
கல் குவி புல் அதர் பற்பல பயின்று

பாலை தழீஇய பயன்_அறு பெரு வழி 80
நீடு இருள் அல்லது நீந்துதல் அரிது என
எதிர் மலர் பைம் தார் ஏயர் பெருமகன்
அதிர் கயம் விட்ட காலை அ வழி
ஆய்ந்த கோலத்து அமரரும் விழையும்
தீம் தொடை பேரியாழ் திவவொடு கொளீஇ 85
யாப்புறு புரி ஞாண் வீக்கு முதல் அவிழ
ஓர்ப்பு_இல்-காலை உதயணகுமரனை
நீப்பிடம் இது என நினைப்பது போல
பஞ்சுரம் பழுனிய பண்முறை நிற்ப

வெம் சுர கான்யாற்று வேயொடு பிணங்கி 90
கொய்து அகை பொதும்பர் கை அகன்று ஒழிய
வலி கெழு வயந்தகன் வத்தவ நின் யாழ்
நிலம் மிசை வீழ்ந்தது நிற்க நின் பிடி என
நலம் மிகு புகழோய் நால்_இருநூற்று வில்
சென்றது கடிது இனி செய்திறன் இதன்-மாட்டு 95
ஒன்றும் இல்லை உறுதி வேண்டின்
தந்த தெய்வம் தானே தரும் என
பின் நிலை வலித்து முன் நிலை கூறிய
இன்னா போகுதற்கு ஆகும் பொழுது என

துன்னார் கடந்தோன் தோன்ற கூறி 100
பறந்து செல்வது போல் சிறந்து அவன் கடாவலின்
மன் பெரும் சிறப்பின் மா தாள் இரும் பிடி
எண்பதின் எல்லை ஓடி கண் சுழன்று
உதிர புள்ளி ஊழூழ் வீழ்தர
பொதி அவிழ் முட்டையின் புறப்பட தோன்றி 105
இறுதி இடும்பை எய்துபு மறுகி
தாழ்ந்த கையிற்று ஆகி தலைபணிந்து
ஆழ்ந்து செலவு இன்று ஆட்டம் தோன்ற
இன் உயிர் இன்னே விடும் இதற்கு இன்று என

மன் உயிர் காவலன் மனத்தின் எண்ணி 110
யானை வித்தகன் ஆதலின் அழல் நிலத்து
ஏனை நின்ற இருபதின் எல்லையும்
எய்துவன் என்னும் சிந்தையன் வெய்துற்று
ஏர் அலர் தாரோன் ஆற்றலின் ஊர்தர
கோல குமரன் குறிப்பு வரை நில்லாது 115
கால கரணத்து கடும் பிணி கனற்ற
ஊன் ததர்ந்து இழிந்த உதிர வெம் புனல்
தான் புறப்பட்டு தாங்குதற்கு அரிதாய்
வாயின் கூறியாங்கு மற்று தன்

நோயின் கடுமை நூக்குபு நலிய 120
என் உயிர் விடுவல் இழிந்தனை ஆகி
நின் உயிர்க்கு ஏமம் அறிந்தனை நீங்கு என
வடு தீர் பெரும் புகழ் வத்தவர் இறைவனை
விடுப்பது போல நடுக்கம் எய்திய
மெய்யின் கூறி கை வரை நில்லாது 125
வெம் நோய் முடுக வேற்றவன் நாடு இறந்து
ஐந்நூற்று எல்லையுள் அசைந்ததால் பிடி என்
*1 உஞ்சைக் காண்டம்

#53 பிடி வீழ்ந்தது
அசைந்த இரும் பிடி அற்றம் நோக்கி
வயந்தககுமரற்கு வத்தவன் உரைக்கும்
நொ புணை வலியா நுரை நீர் புக்கோற்கு
அணை அவல்-வயின் அவன் கை தீர்ந்தாஅங்கு
அவந்தியர் கோமான் அருள் முந்துறீஇ 5
கொலை-பாற்பட வகுத்து ஈந்த
அரும் பிடி நம்மை ஆற்று அறுத்தன்றால்
கரும்பு அடு தீம் சொல் காஞ்சனை எழீஇ
அவரப்பக்கம் விரைவனை இழிக என

கவர் கணை நோன் சிலை கை-வயின் அடக்கி 10
வருத்தமுற்று அலமரும் வாள் அரி தடம் கண்
திரு தகு தாமரை திரு புக்கு திளைக்கும்
அரு வரை அகலத்து அணிபெற தழீஇ
கரு வரை மிசை நின்று இரு நிலத்து இழிதரும்
உமையொடு புணர்ந்த இமையா நாட்டத்து 15
கண் அணங்கு அவிர் ஒளி கடவுள் போல
மத்தக மருங்கில் தத்துவனன் இழிதர
மருங்குற மண் மிசை வீழின் மற்று என்
இரும் புறத்து இருந்தோர்க்கு ஏதம் என்று எண்ணி

மல்கு நீர் உடுக்கை மண்ணக மடந்தையை 20
புல்லி கோடல் புரிந்தது போல
பா அடி நிலனுற பரப்பி உதயணன்
சேவடி தலையுற செய்தது பொறு என
வணக்கம் செய்வது போல மற்று தன்
அணி கேழ் பொறி செவி ஆடல் ஆற்றாது 25
செம் கேழ் துருத்தியின் அங்காந்து உயிர்த்த-தொறும்
பை சொரி பவழம் போல படி தாழ்
கை சொரி உதிரம் கான்று வந்து இழிதர
வீழ்ந்த ஆறும் அது நோக்கிய திசையும்

தேர்ந்த நூல்-வழி திண்ணிது ஆகலின் 30
அ நிலை எய்தும் இடுக்கணும் பின் நிலை
தன் நிலம் தழூஉதலும் தான் வலிப்பு எய்தி
மணியும் புரோசையும் அணி பூண் தவிசும்
கடித்தகம் உட்பட எடுத்தனன் களைஇ
இன் உயிர் இனி விடும் இதனுக்கு இன்று என 35
மன் உயிர் காவலன் மனத்தின் எண்ணி
துன்னிய தோழற்கு தோன்ற கூறி
வத்தவர் இறைவன் மத்தகம் பொருந்தி
குளிர்ப்ப தைவந்து அளித்தல் ஆனான்

இறுதி காலத்து உறுதி ஆகிய 40
ஓம்படை கிளவி பாங்குற பயிற்றி
செல் கதி மந்திரம் செவியில் செப்பி
எம்மை இடுக்கண் இம்மை தீர்த்தோய்
வரும் பிறப்பு எம்மோடு ஒருங்கு ஆகியர் என
செந்தாமரை கண் தெண் பனி உறைப்ப 45
நிறுத்தல் ஆற்றா நெஞ்சில் நிகழ் கவற்சியன்
மறுத்தும் உதயணன் வயந்தகற்கு உரைக்கும்
பெறற்கு_அரும் பேரியாழ் கை-வயின் பிரிந்ததும்
இயற்று அமை இரும் பிடி இன் உயிர் இறுதியும்

எள்ளும் மாந்தர்க்கு இன்பம் ஆக்கி 50
உள்ளு-தோறும் உள்ளம் சுடுதலின்
கவற்சியின் கையறல் நீக்கி முயற்சியின்
குண்டு துறை இடுமணல் கோடுற அழுந்திய
பண்டி துறை ஏற்றும் பகட்டு இணை போல
இருவேம் இ இடர் நீக்குதற்கு இயைந்தனம் 55
திரு ஏர் சாயலை தே மொழி துவர் வாய்
காஞ்சனமாலையொடு கண்படைகொளீஇ
காவல் ஓம்பு என காவலன் அருளி
கவர் கணை நோன் சிலை கை-வயின் நீட்டி

அரண கூர் வாள் அசைத்த தானையன் 60
கரண சேடகம் கை-வயின் அடக்கி
விச்சையின் மெலிந்து தன் விழு தகு நகர் இழந்து
அச்சமொடு ஒளித்த அணி தகு பேர் ஒளி
கோல குமரன் போல தோன்றி
மட பிடி-தனக்கு மா கடன் கழியாது 65
இயங்குதல் இலக்கணம் இறை_மகற்கு இன்மையின்
செய்வது துணியும் சிந்தை சூழ்ச்சியன்
வெவ் வழி நிலம் மிசை வில்லேப்பாட்டிடை
எவ்வெம் மருங்கினும் தெரிவோன் அ வழி

நல்கா கரவன் நடுவன் மேல் வர 70
ஒல்கா தவம் இலாது ஒளித்தது போல
குண்டு சுனை அடுக்கத்து கொழும் கனி வீழ்ச்சி
பண் அமை படை சுவர் கண் அகன்று அமைந்து
நால் பெரு வாயில் ஏற்ப இயற்றி
கற்படை அமைத்து கடு மழை மறப்பினும் 75
உட்படு நீரோடு ஊற்று உடைத்தாகி
வாசு அறவு அறியா அளப்ப_அரும் குட்டத்து
பாசடை தாமரை ஆம்பலொடு பயின்று
புள் புகன்று உறையும் ஓர் பூம் பொக்கரணியை

முற்பட கண்டே முகன் அமர் உவகையன் 80
விளக்குறு வெள்ளி முளைத்து முன் தோன்ற
வடகமீக்கோள் வாளொடு களைந்து அதன்
படு கரை மருங்கில் பாங்குற வைத்து
வரு திரை புகூஉம் வருணன் போல
இரு கரை மருங்கினும் புள் எழுந்து இயம்ப 85
தெளித்து அலை தண்ணீர் குளித்தனன் ஆடி
வாய்மைக்கு ஒத்த வாய் பூச்சு இயற்றி
தூய்மைக்கு ஒத்த தொழிலன் ஆகி
அரும் படை தானை அரசு ஊர்ந்து இயற்றிய

இரும் பிடி இனிதுழி ஏறுக சென்று என 90
போர்_கடம்_பூண்ட பொரு வலி தட கையின்
நீர்_கடன் ஆற்றிய நியம கிரிகையன்
பூம் போது அணிந்த வாங்கு கரை மருங்கின்
வழிபடு தெய்வம் வணங்குவனன் ஏத்தி
கழி பிடி வலங்கொண்டு ஒழிவிடத்து ஒழிந்து 95
துணை பிரிந்த_அனையன் இணை பிரி மகன்றிலின்
போதல் ஆற்றான் காதலின் கழுமி
பிடி-கண் நின்ற பேர் அன்பு ஆனான்
வடி கண் மாதர் வருத்தம் ஓம்பி

பகலிடத்து அற்றம் படாமை இருக்கும் 100
அகலிடம் அறிதல் அருமை உடைத்து என
தாழின் தாழ்ந்து சூழின் சூழ் இயல்
அந்தணாளனொடு மந்திரம் விரும்ப
வஞ்சம்_இல் நண்பின் வயந்தகன் உரைக்கும்
நஞ்சம் பொதிந்து நமக்கும் பிறர்க்கும் 105
அஞ்சல் செல்லா அரணகம் வலித்து
காட்டகத்து உறையும் கடு வினை வாழ்க்கை
வேட்டுவர் பயின்ற இடம் மற்று இ நிலம்
நாட்டு சந்து இது நாம் இவண் நீந்தி

ஒன்றிரு காவதம் சென்ற பின்றை 110
குன்றக சாரல் குறும்பு பல அடக்கி நம்
வன் தாள் இளையர் வாழ்பதிக்கு இயங்கும்
வழியது வகையும் தெரி வழி குறையும்
திகைத்திலேன் ஆதல் மதிக்கும் என் மனனே
மட தகை மாதர் வருந்தினும் நாம் இவண் 115
கடப்பது கருமம் காவல அருள் என
வாளொடு கேடகம் வயந்தகற்கு ஈத்து
கோலொடும் கொடும் சிலை கோமகன் கொண்டு
பள்ளி கொண்ட வள்ளி அம் சாயல்

கற்பொடு புணர்வியை காஞ்சனமாலாய் 120
நற்பொருள் இது என நன்கனம் எடுப்பி
நடக்கல்வேண்டும் நாம் இவண் நீங்கி
இடுக்கண் இல்லா இடம் புகும்-அளவு என
உற்றவன் உரைத்த உறுதி மாற்றம்
பொன் தார் வேந்தன் பூம் கொடி பாவையை 125
செவ்விதின் தேர்ந்து கைவிரல் கூப்பி
தோழி காஞ்சனை தோன்ற கூறி
காழ்_இல் பஞ்சி ஊழ் அறிந்து ஆற்றி
விரல் கொண்டு அமைத்து வித்தகர் ஊட்டிய

அரத்த அடர்மையும் அரம் தோய்ந்து என்ன 130
நோய் கொண்டு கறுக்கும் ஆய் மலர் சேவடி
ஏழ் அடி இடுதல் ஆற்றாது ஆயினும்
ஊர் திரை பௌவம் உலாவும் ஊக்கமொடு
பூ மலர் கோதையும் பொறை என அசைவோள்
மா மலை தாங்கும் மதுகையள் போல 135
இன்ப காதலற்கு ஏதம் அஞ்சி
பொன் புனை பாவையும் போகுதல் வலிப்ப
கொடி படை கோமகன் ஆக கூழை
வடு தீர் வயந்தகன் வாள் வலம் பிடித்து

கடி தக பூம் படை கை-வயின் அடக்கி 140
காவல் கொண்ட கருத்தினன் ஆக
புரிசை சுற்றம் காஞ்சனை ஆக
உரிமைக்கு ஒத்த திரு மா மேனியை
புன் புலர் விடியல் புறம் பனி ஒழுகிய
அம் புதல் அதர்வை அணி நடைக்கு இயலிய 145
வனப்பொடு புணரிய வடக போர்வையை
மணி பூண் வன முலையிடை கரை புதைஇ
பைம் தொடி பணை தோள் பைய வீசி
அம் செந்தாமரை அக இதழ அன்ன

சில் அரி தடம் கண் மெல்லென மிளிர 150
மானின் மட பெடை மம்மர் எய்த
வேனில் காலத்து தானம் நோக்கி
மணி கண் பீலி மா மயில் பேடை
அணி கவின் மெல் நடை அனுக்க அசைந்து_அசைந்து
இயலாநின்ற-காலை வியல் இடத்து 155
எல்லை ஆர் இருள் நல் வினை முன்னர்
பாவம் போல பறைந்து கையகல
கோவத்து அன்ன குழவி கோலமொடு
குண_மலை பிறந்து குட_வரை நிமிர்ந்து

கனல் கதிர் கான்று கடுமை கூரா 160
தனி கால் தேரோன் தனிமை எய்த
அனித்தம் மிதிப்பினும் பனித்தல் ஆனா
ஒளி செம் சீறடி உருக்கு அரக்கு ஏய்ப்ப
உளி தலை வெம்பரல் ஊன்றுபு நலிய
பவள கொப்புளம் பக்கம் பயில 165
தவளை கிண்கிணி தாங்குதல் ஆற்றாது
இவளது இடுக்கண் இசைத்தும் யாம் என
ததும்பு குரல் பூசல் இரங்குவன ஒலிப்ப
மணம் கமழ் நறும் தார் மன்ன_குமரன்

வயந்தகற்கு உரைக்கும் வால்_இழை வருந்தினள் 170
இயங்குதல் செல்லாது இருக்கும் இடம் காண் என
கார் பூ நீலம் கவினிய கலி துறை
நீர் பூம் பொய்கை நெறியின் கண்டு அதன்
படு கரை மருங்கின் படர் புறம் வளைஇ
கல் முரம்பு அடுத்து கவடு கால் தாழ்ந்து 175
புள் இனம் புகலினும் புகற்கு அரிது ஆகி
ஒள் எரி எழுந்த ஊழ் படு கொழு மலர்
முள் அரை இலவத்துள் முழை அரண் முன்னி
முள் அம் கோடும் ஊழ் இலை பிறங்கலும்

வள் இலை வாடலும் வயந்தகன் களைந்து 180
பாயல் அமைத்த பாசடை பள்ளியுள்
ஆய் வளை தோளியை அமர் துயில் கொளீஇ
தடம் பெரும் பொய்கை தண் நிழல் வலியா
ஒடுங்கினர்-மாதோ கடும் பகல் கரந்து என்
*1 உஞ்சைக் காண்டம்

#54 வயந்தகன் அகன்றது
கரந்தனர் ஒடுங்கிய கடும் பகல் கழிந்த பின்
பரந்த வானம் பசலை எய்த
அழல் உமிழ் கதிரோன் அத்தம் சேர
நிழல் உமிழ் செல்வன் நிலா விரித்து இமைப்ப
வான் தோய் இஞ்சி வள நகர் வரைப்பின் 5
தேன் தோய் கோதை திரு நிலை மகளிர்
வெள்ளி விளக்கத்து உள் இழுது உறீஇ
பள்ளி மாடத்து பரூஉ சுடர் கொளீஇ
காடி கலந்த கோடி கலிங்கம்

கழும ஊட்டும் காழ் அகில் நறும் புகை 10
முழு நிலா மாடத்து முடி முதல் தடவ
கேள்வி துறைபோகி வேள்வி முற்றிய
அந்தணாளர் தம் தொழில் தொடங்க
பால் வெண் குருகின் பல் மயிர் சேவல்
பூம் பொறி பெடையை புலவி உணர்த்தி 15
பொறி பூம் பள்ளி புகாஅது அயல
மதி தோய் மாடத்து மழலை அம் புறவொடு
வெள்ளி வெண் மாடத்து பள்ளிகொள்ளும்
பசும்பொன் நகர் அமர் விசும்பு பூத்தது போல்

செழும் சுடர் விளங்கும் சிறு புன் மாலை 20
வை எயிற்று துவர் வாய் வாசவதத்தை தன்
தார் பூண் மார்பில் தந்தை கடி மனை
சீர் பூண் களைந்த சில்லென் கோலமொடு
நிலா வெண் முற்றத்து உலாவி ஆடி
செம் முது செவிலியர் கைம்முதல் தழீஇய 25
சாலி வால் அவிழ் பாலொடு கலந்த
தமனிய வள்ளத்து அமிழ்தம் அயிலாள்
யானையும் புலியும் கூனல் கரடியும்
அரிமான் ஏறும் நரி மான் சூழ்ச்சியும்

காட்டமொடு எனையவை பிறவும் 30
தந்து_உரை_கிளவியின் தம் துறை முடித்த
தன் இணை ஆயம் பல் நொடி பகர
செவியின் கேட்கும் செல்வம் செய்யாது
நண்ணிய தோழியொடு கண்ணின் காண
கலவ மஞ்ஞை கவர் குரல் பயிற்றி 35
இலவம் கொம்பு-தோறு இறைகொண்டு ஈண்ட
பொறி வரி இரும் புலி போத்து நனி வெரீஇ
மறியுடன் தழீஇய மட மான் அம் பிணை
துள்ளு நடை இரலையொடு வெள்ளிடை குழும

பிடி கணம் தழீஇய பெரும் கை யானை 40
இடி குரல் இயம்பி எ வழி மருங்கினும்
நீர் வழிக்கு அணவரும் நெடும் கைய ஆகி
கார் இரு முகிலின் கானம் பரம்ப
செழு நீர் பொய்கையுள் கொழு மலர் கூம்ப
புள் இனம் குடம்பை சேர புல்லென 45
அம்புறு புண்ணின் அந்தி வந்து இறுப்ப
ஓங்கிய பெரும் புகழ் உருமண்ணுவா உறை
தேம் கமழ் திரு நகர் திசையும் எல்லையும்
ஆற்றது இடரும் அ வழி உள்ள

பொல்லா குறும்பும் போகுதற்கு அருமையின் 50
காலை நீங்கிய மாலை யாமத்து
பனி_பூம்_கோதையொடு தனித்தனம் இயங்கின்
அற்றம் தரூஉம் அஃது அமைச்சு இழுக்கு உடைத்து என
உற்ற தோழன் உதயணற்கு உரைக்கும்
கொடி மணி நெடு மதில் கொற்றவன் மட மகள் 55
பிடி மிசை இருந்து பெரும் கவின் வாடி
வருத்தம் எய்திய வண்ணமும் வழி நடந்து
அரத்தம் ஆர்ந்த அம் செம் சீறடி
கோவத்து அன்ன கொப்புளம் கூர்ந்து

நோவ ஒல்கி நொசிந்த மருங்குலள் 60
அமிழ்து உறழ் அடிசில் அயிலா அசைவொடு
நவை கொண்டு அழிந்து நடுக்கம் எய்தி
தாங்கல் ஆற்றாது தளர்தலும் ஆங்கே
உலைவு_இல் பெரும் புகழ் யூகி ஒட்டார்
நில வரை நிமிர்வுறு நீதி நிறீஇ 65
கூற்று உறழ் மொய்ம்பின் ஏற்று பெயர் அண்ணல்
பரந்த படையொடு இருந்து இனிது உறையும்
புகல்_அரும் புரிசை பொரு இல் புட்பகம்
இருளிடை எய்தி பொரு படை தொகுத்து

காலை வருவேன் காவல் ஓம்பி 70
போகல் செல்லாது புரவல இரு என
உள்ளத்து உள் பொருள் உணர்ந்தோன் போல
வள் இதழ் நறும் தார் வயந்தகன் உரைத்த
மாற்றம் கேட்டே மன்னவன் மனம் உவந்து
இற்றும் கேள் என மற்று அவற்கு உரைக்கும் 75
கொடி அணி நெடு மதில் கொடி கோசம்பி
படி அணி நெடும் கடை பகல் அங்காடியுள்
ஊறு களி யானை ஒருங்கு உடன் ஏற்றி
வீறுபடு கோலமொடு வியல் நகர் விழவு அணி

கொண்ட-காலை தண்டப்பாற்படுத்து 80
என் அணி பெரும் கலம் தன் அணிந்து ஏற்றி
குற்றம்_இல் பெரும் புகழ் கோப்பெருந்தேவி
கொற்ற கோயிலுள் மற்று பிறர் இன்றி தன்
பெரு மலர் சீறடி இரு நிலத்து இயங்க
தண்ட வேந்தன் தமராம் நமக்கு என 85
கொண்ட கொள்கையும் குறிப்பினது நிலைமையும்
யானை வாரியும் சேனை வீடும்
அடுத்தனை ஆராய்ந்து அறிய என்-வயின்
நெடித்தல் செல்லாய் விடுத்தல் நீ என

விடுத்தனன் விடுத்து வேந்தன் இருந்த 90
அந்த கோட்டியுள் மந்திரம் ஆக
பெரும் பொருள் இது என பொருந்த கூறி
அரும்_பெறல் யூகியும் உருமண்ணுவாவும்
வயந்தகன் வரினும் நயந்தனன் தெரியாது
இருக்க தான் என நெறிப்பட கூறி 95
குறிப்பு_எழுத்து ஓலை பொறி புனைந்து ஒற்றிய
அம் மடி அன்றியும் ஆகும் மெய் மொழி
வருவோர்க்கு அறிய கூறி மற்று என்
செரு வில் வேந்தன் செய்கை என்ற

பின்னர் அல்லது துன்னினர் இவர் என 100
துணிய பெறாய் என துணிந்து யான் கூறிய
பணி வகை உண்டது பண்டை காலத்து
இன்று இ நிலைமைக்கு அன்று அது நினைப்பின்
அற்றம் தரும் என உற்ற தோழற்கு
அடையாள் அருள் மொழி அறிய கூறிப 105
படை ஆள் கடும் தொழில் பற்றா மன்னன்
பாவையை தழீஇ பண்ணு பிடி ஏற்றி
எய்தா அரும்_பொருள் எய்திய பின்றை
பொய் வகை புணர்த்த புணர்ப்பும் போந்த பின்

செய் வகை அறிதல்-பொருட்டு உஞ்சேனையுள் 110
உய் வகை மற்று அவன் ஒழிந்த உறுதியும்
உறுதி ஓரான் பிறிது நினைந்து ஒற்றி
குஞ்சரம் கடாஅய் கொணர்-மின் சென்று எனும்
வெம் சின வீரன் வெகுட்சியும் வெகுட்சியின்
விடுத்த பல் படை பெயர்த்தல் பொருட்டா 115
நம் படை ஒழிந்த வண்ணமும் வெம் படை
காவலன் நாடு கங்குல் நீங்கி
சார வந்த தன்மையும் சார்ந்த பின்
அரும் பொறி அழிந்த எந்திரம் போல

இரும் பிடி வீழ்ந்ததன் இன் உயிர் இறுதியும் 120
இற்ற இரும் பிடி பக்கம் நீங்கி
இடுக்கண் எய்தி இலங்கு இழை மாதர்
நடக்கல் ஆற்றாள் நடுக்கம் எய்தி
கடக்க_அரும் கானத்து கரந்த சேக்கையும்
சேக்கையுள் நின்று நீ சென்ற செலவும் 125
வாய்ப்ப கூறி வாள் படை தொகுத்து
வையம் பூட்டி வழிவரல் விரைந்து என்
எவ்வம் தீர இருள் கழி-காலை
கோல் குறி எல்லையுள் குறி வழி வம் என

வாள் திறல் வத்தவன் வயந்தகன் போக்கி 130
பனி_வரை மார்பன் தனியன் ஆகி
வேழ வேட்டத்து வீழ நூறி
அரும் சிறை எய்தி யாப்பொடு புக்க
பெரும் சிறை பள்ளி பேர் இருள் போலும்
துன்ப பெருங்கடற்கு இன்பம் ஆகி 135
மாம் தளிர் மேனி ஏந்து புணை ஆக
நீந்துதல் வலித்த நெஞ்சினன் ஆகி
கணையொடு திரிதரும் காமன் போல
துணை நல மாதரை தோழியொடு துயிற்றி

துஞ்சல் செல்லான் வெம் சின விடலை 140
வாள் வலம் கொண்டு காவல் ஓம்ப
வரி நிற கோம்பி வால் இமிழ்ப்பு வெரீஇ
எரி மலர் இலவத்து இரும் சினை இருந்த
அலந்த மஞ்ஞை யாமம் கூவ
புலர்ந்தது மாதோ புரவலற்கு இரவு என் 145
*1 உஞ்சைக் காண்டம்

#55 சவரர் புளிஞர் வளைந்தது
புலர்ந்த காலை பூம் கழல் குருசில்
மலர்ந்த பொய்கையுள் மணி நிற தெள் நீர்
கொழு மலர் தட கையில் கூட்டுபு கொண்டு
குழவி ஞாயிற்று எழில் இகந்து எள்ளும்
திரு முக மருங்கில் செரு மீக்கூரி 5
ஒள் இழை மகளிர் உள்ளம் கவற்றும்
செந்தாமரை கண் கழீஇ மந்திரத்து
அந்தி கூப்பி தென்_புலக்கு இறைஞ்சி
தமரின் பிரிந்த தன் தனிமையை நினைஇ

அமரிய தோழி ஆகத்து அசைந்து 10
சுடர் முகம் புல்லென படரொடும் அயர்ந்து
வேனில் வள்ளியின் மேனி வாடி
உள்ளம் கனலும் ஒள் இழை மாதரை
குற்ற நலத்து குறிப்பு நனி காட்டி
உற்ற வெம் நோய் ஓம்பு என உற்ற 15
காஞ்சனமாலையை ஆங்கனம் அருளி
வரு படைக்கு அகன்ற வயந்தகன் வரு வழி
பொரு படை அண்ணல் பொழில்-வயின் இருப்ப
கடு விசை கனலி சுடு கதிர் மருங்கில்

குடுமி நெற்றி கூர் உளி அன்ன 20
வல் வாய் வயவன் வறள் மரத்து உச்சி
பல்-கால் குரைத்தது பகல் படை தரும் என
பாட்டின் கூற கேட்டனன் ஆகி
வெண் மதி நெடும் குடை வேற்றவன் படையொடு
நுண் மதி அமைச்சன் உள் மறைந்து ஒடுங்கி 25
மராவும் மாவும் குராவும் கோங்கும்
தண் நிழல் பொதும்பர் கண் அழல் காட்டும்
காழ் அமை கழை தொடர் கடும் பரி போர்வை
தாழ் அமை பெரும் பொறி தச்சு வினை பொலிந்த

அரக்கு ஊட்டு அம் புகர் மர கூட்டு யானையை 30
செறுவுபு நிறீஇய செய்கை ஓராது
எறி படையாளரோடு உறு முரண் செய்ய
காழ்த்த-காலை கீழ் திசை முற்பகல்
அன்று அவண் பாடிய அணி வரி வயவன்
இன்று இவண் இன்னே இகல் படை தருதல் 35
பொய்த்தல் இன்றி மெய்த்த தாம் என
அங்கு படு புள் குரல் ஆண்டகை அஞ்சி
வெம் கணை திருத்தி வில் இடம் தழீஇ
இரும்பு இடையிட்ட பெரும் புடை கச்சையன்

வளி சுழற்று அறாஅ முளி மர கானத்து 40
என்-கொல் நிகழும் ஏதம் இன்று என
நெஞ்சமொடு உசாவும் சிந்தையன் ஆகி
வெம் சின வீரன் நின்ற-காலை
மட பிடி வீழ்ந்த மணி மலை சாரல்
அடக்க_அரும் சீறூர் அரணக உறையுளர் 45
கணம் கொள் தலைவனை கைக்கொண்டு இயங்கா
அணங்க_அரும் பெரும் சாத்து அவிய நூறி
பல் விலை பண்டம் கவர்ந்து பயம் அறியார்
சில் விலைக்கு இடூஉம் செல்லா வாழ்க்கையர்

சுரம் செல் வம்பலர் அரும் பதம் மடக்கி 50
மாண் உறி யாத்த ஆண தானையர்
அடு கணை மறவர் அகல் இலை ஓமை
நெடு நிலை திரள் தாள் நேர் துணித்து அதர்வை
கொடி புரை கயிற்றொடு கொளுத்தினர் சமைப்ப
வடியின் அன்ன வாள் அரி தடம் கண் 55
பைம் குழை மகளிர் பல் காழ் கலையொடு
அம் குழை செயலை தண் தழை உடீஇ
காலின் இயங்குநர் கல் குழி கொளினும்
நூலின் இயன்றவை நோக்கார் சாபம் என்று

ஆடூஉவும் மகடூஉவும் மாடும் அறியார் 60
காடு தேர் முயற்சியர் கைப்பட்டோர்களை
பாடல் பாணி பல் இசை கேட்டும்
ஆடு என அணங்கிற்கு அரும் தலை துமித்தும்
வீளை ஓட்டின் வெருவ எய்து அவர்
ஊளை பூசலோடு ஆடல் கண்டு உவந்தும் 65
காட்டு உயிர் காணார் கை பயில் குறியொடு
வேட்டன செய்யும் வேட்டு வினை கடும் தொழில்
கவர் கணை வாழ்க்கை சவரர் புளிஞர்
காலை எழுந்து கணம் கொண்டு ஈண்டி

சோலை போதக சுவடுறுத்து உழல்வோர் 70
காஅட்டு பிடி மற்று அன்று இது கருதின்
நாஅட்டு பிடியே நடந்தது தான் என
முதிர் புலால் நாற்றமொடு முன்முன் வீசி
உதிர வழியே அதிர ஓடி
பிடியது வீழ்ச்சியும் பெண் பால் சுவடும் 75
அடு திறல் ஆடவர் அற்றமும் பிறவும்
படியின் ஆய்ந்து கடுகுவனர் ஓடி
வெள்ளிடை வெண் மணல் மிதித்த சுவடு-தொறும்
புள் அடி ஒழுக்கம் புரிவனர் நோக்கி

நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை 80
அருமை உடைத்து அவர் தலைப்படல் நமக்கு என
அடியுறின் அடையும் அம்பு உடை எயினர்
கடிகை வெள்ளிலும் கள்ளி வற்றலும்
வாடிய உவலொடு நீடு அதர் பரப்பி
உழை-வயின் தரியாது முழை-வயின் ஒடுங்கிய 85
ஆறலை இளையரை ஆண்மை எள்ளி
வேறு இனி நும்மொடு விளிக நும் களவு என
சேறல் வலியா செய்கை நோக்கி
வாய் சிறு புது புள் வீச்சுறு விழு குரல்

கேட்டு பொருள் தெரியும் ஓர் வேட்டுவ முது_மகன் 90
பெருமகன் என்ன பெறல்_அரும் கலத்தோடு
ஒரு மகன் உள வழி எதிர்த்தும் அ மகன்
நடுங்கு துயருறுத்தும் கடும் கண் ஆண்மையன்
ஆண்மை அழிய நாண் மீக்கூரி
மெய் பொருள் நேர்ந்து கைப்படும் நமக்கு என 95
காட்டக மருங்கின் அல்லது மற்றவர்
நாட்டகம் புகுதல் நன்கு இருள் கழியினும்
இல்லை எழுக என செல்வோர் முன்னர்
புர கூட்டு அமைந்த அரக்கு ஊட்டு அரத்தம்

பவள துணியின் பசுமையொடு கிடப்ப 100
இன் அணி புக்கோர் இ வழி அல்லது
மற்று அவர் எங்கும் மறைந்திலர் காண்க என
செல்வோர் ஒருங்கு உடன் வல்லையும் வழியும்
வான் மர பொதும்பும் கானமும் கடறும்
முழை வளர் குன்றும் கழை வளர் கானமும் 105
பயம்பும் பாழியும் இயங்குவனர் வதியும்
முது மர பொத்தும் புது மலர் பொய்கையும்
இனையவை பிறவும் அனையவர் உள்வழி
செரு கயல் உண்கண் சீதையை தேர்வுழி

குரக்கு இனத்து அன்ன பரப்பினர் ஆகி 110
பிடி முதல் கொண்டு மலர் அடி முதல் ஒற்றி
செல்வோர் கதுமென செம்மலை கண்டே
கல்லென துவன்றி கார் கிளர்ந்தது போல்
ஆர்ப்பும் வீளையும் அ வழி பரப்பி
கார் கலை கோட்டொடு ஆர்ப்பு ஒலி மயங்கி 115
அரவ செய்கையர் வெருவர தாக்க
பல் பனி பரந்த சில் அரி மழை கண்
நச்சு உயிர்ப்பு அளைஇய அச்ச நோக்கமொடு
விம்முவனள் நடுங்கும் பொம்மல்_ஓதியை

மாம் சினை இளம் தளிர் மணி நிற மேனி 120
காஞ்சனமாலாய் காவல் போற்று-மதி
அப்பால் புகுதரும் அற்றம் இன்மையின்
இப்பால் வருவநர் இன் உயிர் உண்கு என
கை சிலை வளைத்து கணை நாண் கொளீஇ
முற்றிய கோங்கின் முழு தாள் பொருந்தி 125
ஒற்றுபு நோக்கும் ஒற்றையாளன்
வார் கணை செவியுற வாங்கி மற்று அவர்
ஆர் உயிர் வௌவ அதன் தாள் முதல் பொருந்தி
உடும்பு எறிந்தது போல் கடும் கணை முள்க

விட்ட வேந்தன் வில் தொழில் கண்டும் 130
கண்டு கை விடுதல் கருமம் அன்று என
விண்டு அலர் இலவத்து அண்டை சார்ந்து அவனை
கண்ட வேட்டுவர் தண்டாது நெருக்கி
மை அணி இரும் பிடி வீழ மற்று நீ
உய்வல் என்று எண்ணி ஒளித்தனை போந்தனை 135
எ வழி போதி நின் இன் உயிர் உண்குவம்
யாரை நீ எமக்கு அறிய கூறு என
வீர வெம் மொழி நீர்_அல பயிற்றி
உடு அமை பகழி ஒருங்கு உடன் தூவ

விடு கணை விடலை வில்லின் விலக்கி 140
வதி பயின்று அடைந்த மறவரை அதிர
கை-வயின் கடும் கணை ஒவ்வொன்று கொண்டு அவர்
மெய்-வயின் கழிந்து வியல் நிலத்து இங்க
வீரருள் வீரன் விசைபெற விடுதலின்
வீர வேட்டுவர் சார்தல் ஆற்றார் 145
கோல உருவொடு குன்றிடை போந்த ஓர்
காலன்-கொல் இவன் கானத்தோர்க்கு என
பல் முகத்தானும் பற்று அடைந்து அன்னவன்
வில் முகம் புகாஅர் வேட்டுவர் அஞ்சி

புள் கூற்றாளனை உள் கூற்று ஆகி 150
அழித்தனை கொணர்ந்து என பழித்தனர் கழறி
உளை பொலி மான் தேர் உதயணகுமரனை
வளைத்து நின்றனரால் வலிப்பது தெரிந்து என்
*1 உஞ்சைக் காண்டம்

#56 வென்றி எய்தியது
தெரிவுறு சூழ்ச்சியர் செய்வதை அறியார்
ஒருவன் நாம் பலர் ஒழிவம் என்னாது
விசை உடை வெம் கணை வில் தொழில் நவின்ற
அசைவிலாளள் அழிக்கவும் பட்டனம்
உரை-மின் ஒல்லென உறுவது நோக்கி 5
கரு வினை நுனித்த அரு வினை ஆண்மை
புள் உணர் முது_மகன் தெள்ளிதின் தேறி
இளையவர் கேட்க இற்று என இசைக்கும்
கிளை உடை பூசலோடு முளை அரில் பிணங்கிய

முள் அரை இலவத்துள் அவர் இருப்ப 10
கேள் இழுக்கு அறியா தாள் இழுக்கு உறீஇயினிர்
கோள் இமிழ் கனலி சூழ் திசை பொத்தி
புகை அழல் உறீஇ புறப்படுத்து அவர்களை
நவையுறு நடுக்கம் செய்தல் உணரீர்
கள்ளம் இன்றி கட்டு ஆள் வீழ்த்த 15
வெள்ளை வேட்டுவீர் புள் எவன் பிழைத்தது என்று
உள் அழிந்தவர்கட்கு உறுதி கூற
கணையொடு பிடித்த கை கோல் அரணி
புடை இடு பூளை பூ புறம் மடுத்து

பிசைந்த சிறு தீ பெருக மூட்டி 20
இசைந்த முளரி எண் திசை பக்கமும்
வேனல் பேர் அழல் கானவர் கொளுத்தி
நோவ கூறி சாவது அல்லது
போதல் பொய்க்கும் இனி என போகார்
அரிமா வளைத்த நரி மா போல 25
இகல் முனை வேட்டுவர் இடுக்கண் செய்ய
புகை மிகு வெவ் அழல் பூம் பொழில் புதைப்ப
கான வெம் தீ கடும் புகைப்பட்ட
மான் அமர் பிணையின் மம்மர் எய்தி

தளை அவிழ் தாரோன் தனிமைக்கு இரங்கி 30
களை கண் காணாது கையறு துயரமொடு
பெய் வளை தோளி வெய்து உயிர்த்து ஏங்க
குலம் கெழு குருசில் கொடி கை மாறி
அலங்கு இதழ் கோதையொடு அவிழ் முடி திருத்தி
கலங்கல் ஓம்பி காஞ்சனமாலாய் 35
இலங்கு இழை மாதரை என் வழி படாது ஓர்
பக்கம் கொண்டு படர்-மதி இப்பால்
வில்லின் நீக்கி வெள்ளிடை செய்து அவர்
அல்லல் உறீஇ ஆர் உயிர் உண்கு என

கழை வளர் கானம் கடும் தீ மண்ட 40
முழை-வயின் போதரும் முளை எயிற்று இடி குரல்
புலவும் புலி போல் பொங்கு அழல் புதைஇய
இலவு அம் சோலையின் இறை_மகன் போதர
ஆளி கண்ட ஆனை இனம் போல்
வாளி வல் வில் வயவர் நீங்க 45
சில்_இரும்_கூந்தலை மெல்லென நடாஅய்
வெல் போர் விடலை வெள்ளிடை படுத்தலின்
அரணிடை அகற்றி அச்சம் நீங்கி
முரண் உடை வேட்டுவோர் மூழ்த்தனர் மூசி

முன்னும் பின்னும் பக்கமும் நெருங்கி 50
பொன் அணி மார்பன் போர் தொழில் அடங்க
கலை உணர் வித்தகர் கை புனைந்து இயற்றிய
சிலை நாண் அறுத்தலின் செய்வதை இன்றி
வலை நாண் இமிழ் புண் வய மா போல
காட்சிக்கு இன்னா ஆற்றலன் ஆகி 55
பேர் அமர் ஞாட்பினுள் பெரு முது தந்தை-தன்
வார் சிலை புரி நாண் வாளியின் அறுப்ப
தேர் மிசை திரிந்த திறலோன் போல
வீழ் தரு கடும் கணை வில்லின் விலக்கி

ஊழ் வினை துரப்ப உயிர் மேல் செல்லாது 60
தாழ் தரு தட கையும் தாளும் தழீஇ
வாய் அறைபோகிய வடு சேர் யாக்கையன்
ஆழி நோன் தாள் அண்ணலை கண்டே
தாழ் இரும் கூந்தல் தளிர் இயல் நடுங்கி
தான் அணி பெரும் கலம் தன்-வயின் களைந்து 65
கான வேட்டுவர் கை-வயின் கொடு என
கவிர் இதழ் செம் வாய் காஞ்சனமாலை கை
அவிர் இழை நன் கலம் அமைவர நீட்டி
அழியன்-மின் நீர் என அழுவனள் மிழற்றிய

காஞ்சனை நமை பொரு கானவர்-தமக்கு 70
கொடுத்திலம் ஆயின் கொடுமை விளைவு உண்டு என
கலக்க உள்ளமொடு கடும் சிலை கைத்தர
நலத்தகு மாதர் நடுக்கம் நோக்கி
வலத்தன் ஆகிய வத்தவன் அகப்பட்டு
இன் உயிர் போகினும் இன்னன் என்னாது 75
மன் உயிர் காவல் மனத்தின் எண்ணி
குன்ற சாரல் குறும்பினுள் உறையும்
வன் தோள் இளையீர் வந்து நீர் கேள்-மின்
பெரும் கலம் பெய்து யாம் பிடியொடும் போந்த

அரும் கல வாணிகர் அ பிடி வீழ 80
வருத்தம் எல்லாம் ஒருப்படுத்து ஒரு வழி
நெறி-வயின் நீக்கி குறி-வயின் புதைத்தனெம்
கொள்குவிர் ஆயின் கொலை தொழில் நீங்கு-மின்
உள் வழி அ பொருள் காட்டுகம் உய்த்து என
சொல் பொருள் கேட்டே வில் தொடை மடக்கி 85
அற வரை இழந்த செறுநரை விலக்கி
குறவருள் தலைவன் குருசிலை குறுகி
யாரே நீர் எமக்கு அறிய கூறு என
வீரருள் வீரனை வேட்டுவன் கேட்ப

வத்தவர் கோமான் வாணிகர் இ திசை 90
பெரும் பெயர் கிளவி பிரச்சோதனன் நாட்டு
அரும் பொருள் கொண்டு யாம் ஆற்றிடை போந்தனெம்
மட பிடி வீழ இடர்ப்பட்டு இருளிடை
பொழில்-வயின் புதைத்த தொழிலினெம் யாம் என
முகை தார் மார்பன் உவப்பதை உரைப்ப 95
வளம் கெழு வத்தவன் வாணிகர் எனவே
உளம் கழிந்து ஊர்தரும் உவகையர் ஆகி
கொல்லா தொழிலினர் கொலை படை அகற்றி
வல்ல ஆண் தோன்றலை வடகம் வாங்கி

கை யாப்புறுத்து காட்டிய எழுக என 100
உய் மருங்கு உபாயத்து பொய் மருங்கு ஓடி
அழல் வழி வந்து யாம் அசைந்தனம் வதிந்த
பொழில்-வயின் புதைத்தனம் புகற்கு அரிது ஆக
தெரிவு_இல் கொள்கையின் எரி தலை கொளீஇயினிர்
அ அழல் ஆறும்-மாத்திரம் இ வழி 105
நில்-மின் நீர் என மன்ன_குமரன்
தெளிய கூற புளிஞர் தேறி
எ வழி ஆயினும் எரி அவித்து அ வழி
காணலுறுதும் காட்டாய் ஆயின்

ஆணம் முன்கை அடுதும் யாம் என 110
நன் கை யாத்தது நன்று நொந்து இவன்
கவிகைக்கு ஏலாது கட்டு என கலிழ்ந்தோள்
அவிர் அழல் கானத்து அருள்_இலாளர்
அடுதும் எனவே அமர் பிணை போல
தீ உறு தளிரின் மா நிறம் மழுங்க 115
மாழை ஒண் கண் ஊழூழ் மல்க
மம்மர் உள்ளமொடு மடந்தை மாழ்க
மாழ்கிய மாதரை வாங்குபு தழீஇ
கன வளை பணை தோள் காஞ்சனமாலை

புன வளை தோளி பொழிலகம் காவல் நம் 120
பெருமான் செல்வம் பேணாய் மற்று இ
அரிமான் அன்னோற்கு ஆர் உயிர் கொடீஇய
போந்தனையோ என தான் பாராட்டி
இரங்குவது நோக்கி இறை_மகன் கூறும்
வருந்துதல் தவிர யாம் வழியிடை புதைத்த 125
அரும் கல பேர் அணி பெரும் கலம் கருதின் யாப்பு
உறு முறை பின் இடத்து அறி-மின் மற்று இவள்
நீப்ப_அரும் துயரம் நெறி-வயின் ஓம்பி
தீ புகை தீர்தலும் காட்டுதும் சென்று என

கையகப்பட்டோன் பொய் உரைத்தனன் எனின் 130
உய் வகை இலை இவன் உரைத்ததை எல்லாம்
செய்தும் யாம் என வெவ் வினையாளர்
மை அணி யானை தாங்கி தழும்பிய
கை யாப்பு ஒழித்து காத்தனர் நிற்ப
வாவி புள்ளின் தூவி விம்மிய 135
அணை மிசை அசைந்த அம் மென் சிறுபுறம்
மணல் மிசை அசைந்து மா கவின் வாட
அறியாது வருந்திய ஆர் உயிர் துணைவியை
பொறி ஆர் தட கையில் போற்றுபு தழீஇ

பூம் குழல் குருசில் தேம் கொள தீண்ட 140
நீல தண் மலர் நீர்ப்பட்டன போல்
கோல கண் மலர் குளிர் முத்து உறைப்ப
அவலம் கொள்ளும் அ வரை-கண்ணே
கவலை உள்ளமொடு கங்குல் போகிய
வயந்தககுமரன் வந்து காட்டு ஒதுங்கி 145
கன்று ஒழி கறவையின் சென்று அவண் எய்தி
காப்பு உடை மூதூர் கடைமுகம் குறுகி
யாப்பு உடை நண்பின் ஏற்று பெயரன்
வைகு புலர் விடியல் வயவர் சூழ்வர

பெரு நல தானை பிரச்சோதனன் தமர் 150
இரு நில கிழமை ஏயர் இறைவன்
வென்றியும் விறலும் விழு தகு விஞ்சையும்
ஒன்றிய நண்பும் ஊக்கமும் உயர்ச்சியும்
ஒழுக்கம் நுனித்த உயர்வும் இழுக்கா
அமைச்சின் அமைதியும் அளியும் அறனும் 155
சிறப்புழி சிறத்தலும் சிறந்த ஆற்றலும்
வெம் கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும்
செருக்கி செல்லும் செலவின என்று தம்
தருக்கிய தலை தாள் தானை செல்வ

பெருமகன் தெளீஇ தம் அரும் மதி மேம்பட 160
கய்ந்நவிலாளனை எஃகுள் அடக்கிய
பொய் நிலம் காட்டினர் என்பது ஓர் பொய் மொழி
வெம் நில மருங்கின் வேட்டுவர் எல்லாம்
போற்றாது உரைத்த மாற்றம் பட்டதை
நிலை கொண்டு அமைந்து நிரம்பா தம் நிலம் 165
கலக்கம் அறிந்த கவற்சியன் ஆகி
மன் உயிர் காவலற்கு அ மொழி மெய் எனின்
இன் உயிர் துறக்கும் என்று எண்ண_அரும் சூழ்ச்சியன்
உற்றதை உணரும் ஒற்றாள் இளையனை

வருக என நின்றோன் வயந்தகன் கண்டே 170
உயிர் துணை தோழன் உளன் என உவந்து
பெயர்ச்சி_இல் உலகம் பெற்றான் போல
செந்தாமரை கண் காவலன் செவ்வியை
முந்துற கேட்ட பின்றை மற்று அவன்
வந்ததை உணர்குநன் மந்திரம் இருந்துழி 175
சிறை கொள் மன்னவன் துறை கொள் விழவினுள்
இகழ்வொடு பட்ட இயற்கை நோக்கி
பவழ செம் வாய் பாவையை தழீஇ
இருளிடை போந்ததும் இரும் பிடி இறுதியும்

இற்ற இரும் பிடி பக்கம் நீங்கலும் 180
தெருள கூறி தீது_இல் காலத்து
பெருமுதுதேவி உரிமை பள்ளியுள்
செரு முரண் செல்வன் பெரு விரல் பிடித்து அவற்கு
அறிய கூறிய அடையாண் கிளவியும்
செறிய செய்த சிறப்பும் ஆண்மையும் 185
அரும் தொழில் அந்தணன் சுருங்க சொல்லலும்
விரைந்தனம் செல்க என வெம் படை தொகுத்து
வேழமும் புரவியும் பண்ணுக விரைந்து என
தாழம் பறையொடு சங்கம் மணந்து இயம்ப

கடல் கிளர்ந்தது போல் கால் படை துவன்றி 190
அடல்_அரும் குறும்பர்க்கு அறிய போக்கி
இடபகன் படையோடு எழுந்தனன் ஆகி
விண்ணோர் விழையும் செண்ண கோலத்து
கண்ணிய செலவின் கஞ்சிகை வையம்
கண்ணி சூட்டி கடை மணை பூட்டி 195
வண்ண மகளிர் கண்ணுற கவினிய
உழை கலம் ஏந்தி உழை படர்ந்து இயல
பொன் கலத்து இயன்ற நல் சுவை அடிசில்
காப்பு பொறி ஒற்றி யாப்புற ஏற்றி

தனிமை எய்திய மன்னனும் தையலும் 200
அணியும் கலனும் அகன் பரியாளமும்
துணிவு இயல் சுற்றமும் தொடர்ந்து உடன் விட்டு
பின் வர அமைத்து முன் வர போகி
வாள் தொழில் வயந்தகன் காட்டக மருங்கின்
அண்ணல் இருந்த அறிகுறி தானம் 205
நண்ணலுற்ற காலை மன்னவன்
அம்பு பட வீழ்ந்த வெம் கண் மறவர்
உதிர பரப்பின் உருவு கெட உண்ட
காக்கையும் கழுகும் தூப்பதம் துறந்து

கோடு கொண்டு இருந்த குழாஅம் நோக்கி 210
காடு கொள் மள்ளர் கதுமென நடுங்கி
போர்க்களம் உண்மை பொய்த்தல் இன்று என
நீர் கரை பொய்கை நெற்றி முன் நிவந்த
முள் அரை இலவம் ஒள் எரி சூழ
பொங்கு புகை கழுமிய பூம் பொழில் படாஅன் 215
இங்கு நம் இறைவன் இருந்த இடம் அவன்
ஏதம் பட்டனன் ஆதலின் இன்னே
சாதல் பொருள் என காதல் கழுமி
வரு படை உய்த்த வயந்தகன் மாழ்க

பொரு படையாளர் புல்லிடை தெரிவோர் 220
வேட்டுவர் ஆதல் வில்லின் காட்டி
வாள் தொழில் வயந்தகன் வருத்தம் ஓம்பி
பெரும் கணம் சென்ற பிறங்கு புல் கானம்
பரந்தனர் செல்வோர் பாவையை தழீஇ
காவி கவினிய தா_இல் பொய்கையுள் 225
தனி தாள் நிவந்த தாமரை போல
பனி தார் மார்பன் நிற்ப மொய்த்து உடன்
வளைத்தனர் வலக்கும் வயவரை கண்டே
உளை பொலி மாவும் வேழமும் ஊர்ந்து அவர்

போஒம் திசை-வயின் புதைந்தனர் நிற்ப 230
கதிரகத்து இருந்த முதிர் குரல் பறவை
போ-மின் வல்லே போதீர் ஆயின் நும்
உயிர் தவல் உரைக்கும் என்பதை உணர்ந்து
முந்து புள் உரைத்த முது_மகன் கூற
வெம் திறல் வேட்டுவர் விரைந்தனர் ஆகி 235
அல்லி நறும் தார் அண்ணலை நலிய
ஒல்லா மறவர் ஒலித்தனர் ஓடி
வேக புள்ளமொடு விசைத்தனர் ஆர்த்து
கோடும் வயிரும் குழுமின துவைப்ப அ

கரும் தொழிலாளர் இரும் தலை துமித்து 240
பெருந்தகை கிழவனை பேரா மறவரை
இடுக்கண் செய்யவும் இயல்பிலாளர்
நடுக்கம் எய்த குடை பெரும் தானை
வத்தவர் இறைவனும் மெய் தகைத்து ஆக
தமர் மேல் வந்தமை தான் அகத்து அடக்கி 245
நுமரோ மற்று இவர் பிறரோ தாம் என
கவர் கணை மொய்த்த கானத்திடை மறைத்து
எம் உயிர் கா-மின் எனவே ஆங்கு அவர்
அடையார் கடந்த உதயணன் மந்திரி

இடபகன் என்போன் எறி படை-தான் இது 250
கோள் உலாய் எழும் எனின் கூற்று என பரந்த
நாள் உலாப்புறுத்தும் வாள் வலி உடைத்தே
தெரிந்தனை நில்லாய் ஆகி எம்மொடு
புரிந்தனை போதும் போதாய் ஆயின்
பிரிந்து காண் பிறர் அரும் தலை துமிப்ப என்று 255
ஆர்வ வேட்டுவர் அண்ணற்கு உரைத்து
வார் சிலை அம்பொடு வாங்கி கொள்க என
வீர வேந்தற்கு விரைந்து அவர் ஈயா
முற்பகல் செய் வினை பிற்பகல் உறுநரின்

பார்வை நின்றும் பதுக்கையுள் கிடந்தும் 260
போர்வை புல்லுள் பொதிந்தனர் ஒளித்தும்
கழுக்கு நிரை இருந்தும் கால் இயல் புரவி
விழுக்கு நிணம் பரிய விடு கணை விட்டும்
கோலிய வல் வில் குமரரை மாட்டியும்
வேலியலாளரை வீழ நூறியும் 265
வெம் கணை வாளியுள் விளிந்தனர் வீழ
பைம் கண் வேழத்து படை திறல் வேந்தன்
தமர் வழங்கு படையும் அவர் வழங்கு வாளியும்
பொன் இழை மாதரொடு தன்-வயின் காத்து

மரம் பயில் அழுவத்து மறைந்தனன் நிற்ப 270
உரம் கெழு மறவலர் உதயணன் ஒழிய
மத்துறு கடலின் தத்துறு நெஞ்சினர்
பை வரி நாகத்து ஐ வாய் பிறந்த
ஒலிப்பு உயிர் பெற்ற எலி கணம் போல
ஒழிந்தோர் ஒழிய கழிந்தோர் காணா 275
ஆறு கொள் மாந்தர்க்கு அச்சம் எய்தி
ஏறு பெற்று இகந்த பின்றை வீறு பெற்று
அம் கண் விசும்பின் திங்களை
வெண் மீன் போல வென்றி எய்தி

பல் மாண் படைஞர் பரந்தனர் சூழ 280
மலிந்து அவண் ஏறி வத்தவர் பெருமகன்
கலிந்த துன்பம் கையிகந்து அகல
பொலிந்தனன் என்ப பொரு படையிடை என்
*1 உஞ்சைக் காண்டம்

#57 படைவீடு
பொரு படை இளையர் புகன்றனர் சூழ்ந்து
செரு அடு செம்மலை செல்லல் ஓம்பி
கூப்பிய கையினர் காப்பொடு புரிய
வண்டு அலர் படலை வயந்தககுமரனும்
தண்ட தலைவனும் தலைப்பெய்து ஈண்டி 5
கனி படு கிளவியை கையகப்படுத்து
துனிவொடு போந்த தோழனை துன்னி
இழுக்கா இயல்பின் ஒழுக்கம் ஓம்பி
வஞ்சம்_இல் பெரும் புகழ் வத்தவர் இறைவனும்

நெஞ்சம் மகிழ்ந்து நீத்து மிக உடைய 10
துன்ப பெரும் கடல் துறை-கண் பொருந்திய
இன்ப பெரும் புணை ஆயினிர் எமக்கு என
அன்பு உடை அருள் மொழி நன்பு பல பயிற்றி
ஆர்வ தோழரை ஆர்தல் ஆற்றான்
வீர தானை வேந்தன் விரும்பி 15
நறை மலர் சோலை இறைகொண்டிருப்ப
பெருமூதாளரும் பெரும் கிளை சுற்றமும்
திருமாதேவிக்கு தெரிவனர் அமைத்த
வண்ண மகளிரொடு வையம் முந்துறீஇ

வந்து ஒருங்கு ஈண்டிய பின்றை சயந்தி 20
நாடு வண்டு அரற்றும் கோடு உயர் சாரல்
இறை_மகன் விட்டிட உறையுள் முறைமையின்
மறுகு முற்றமும் மாண்பட வகுத்து
தறி மிசை கொளீஇய செறி நூல் மாடமொடு
நிரைநிரை கொண்ட நுரை புரை திரு நகர் 25
பசும்பொன் புளகம் விசும்பு பூத்தது போல்
பரந்த பாடி நிரந்தவை தோன்ற
பேணார் கடந்த பிரச்சோதனன்_மகள்
பூண் ஆர் ஆகத்து பொங்கு இள வன முலை

வள் இதழ் கோதை வாசவதத்தைக்கு 30
பள்ளி மாடமும் பால்பட அமைத்து
பாவையும் முற்றிலும் பூவையும் குழலும்
பைம்பொன் கவறும் பளிக்கு மணி நாயும்
சந்தன பலகையும் சந்த பேழையும்
சாந்து அரை அம்மியும் தேம் கண் காழ் அகில் 35
புகை துளை அகலும் சிகை தொழில் சிக்கமும்
கோதை செப்பும் கொடி கொட்டகரமும்
கிளியும் மயிலும் தெளி மொழி பூவையும்
செம்பொன் கரண்டமும்

மணி கல பேழையும் மணி கண்ணாடியும் 40
மணி திகழ் விளக்கும் மயிர் வினை தவிசும்
இருக்கை கட்டிலும் அடை பை தானமும்
செங்கோடிகமும் வெண் பால் தவிசும்
முட்டு இணை வட்டும் பட்டு இணை அமளியும்
ஆலவட்டமும் அணி சாந்தாற்றியும் 45
மாலை பந்தும் ஏனைய பிறவும்
ஏந்திய கையர் மாம் தளிர் மேனி
மட தகை மகளிர் படை பொலிந்து இயல
அரைசியல் முறைமையின் அண்ணற்கு அமைந்த

விரை பரி மாவும் வேழமும் தேரும் 50
தெள் ஒளி திரள் கால் திகழ் பொன் அல்கிய
வெள்ளி போர்வை உள் ஒளி படலத்து
வள்ளி கைவினை வனப்பு அமை கட்டிலும்
விளங்கு மணி முகட்டின் துளங்கு கதிர் நித்தில
கோவை தரளம் கொட்டையொடு துயல்வரும் 55
கொற்றக்குடையும் வெற்றி வேலும்
கொடியும் கவரியும் இடி உறழ் முரசும்
சங்க படவமும் கம்பல விதானமும்
அங்காந்து இயன்ற அழல் உமிழ் பேழ் வாய்

சிங்காசனமும் பொங்கு பூம் தவிசும் 60
பள்ளி பல வகை படுப்பவும் பிறவும்
வள்ளி போர்வையும் வகைவகை அமைத்து
தெளியப்படூஉம் முனிவு_இல் செய் தொழில்
சிலதரும் இயவரும் சிந்து தேச
பல வகை மரபின் பாடை மாக்களும் 65
ஆய் நல மகளிர் வேய் நலம் பழித்த
தோள் தர வந்த ஆய் தொழிலாளரோடு
என்னோர் பிறரும் துன்னினர் சுற்ற
ஏவற்கு அமைந்த காவல் தொழிலொடு

கை கோல் இளையரும் கணக்கு வினையாளரும் 70
மெய்கோள் மள்ளரும் மீளி மாந்தரும்
புற்றகத்து ஒடுங்கி முற்றிய-காலை
ஈரம் பார்க்கும் ஈயல் கணம் போல்
நேரம் பார்த்து நெடும் தகை குரிசிலை
மீட்டிடம் பெற்று கூட்டிடம் கூடி 75
கடிது செல் இயற்கை பிடி மிசை இருந்த
வருத்தம் அறிந்து மருத்துவர் வகுத்த
அரும்_பெறல் அடிசில் அவிழ்_பதம் கொள்ளும்
பெரும் பகல் நாழிகை பிழையாது அளக்குநர்

செவ்வி அறிந்து கவ்விதின் மொழிய 80
நள் இருள் நடை பிடி ஊர்ந்த நலிவினும்
பள்ளிகொள்ளா பரிவிடை மெலிவினும்
கவர் கணை வேடரொடு அமர் வினை வழியினும்
பல் பொழுது உண்ணா பசியினும் வருந்திய
செல்வ காளை வல்லவன் வகுத்த 85
வாச வெண்ணெய் பூசி புனைந்த
காப்பு உடை நறு நீர் காதலின் ஆடி
யாப்பு உடை தோழரொடு அடிசில் அயில
நிறை துவர் நறு நீர் சிறப்பொடு ஆடிய

தாமரை முகத்தியை தமனிய பாவையின் 90
காமர் கல் சுனை தானம் முதல் நிறீஇ
தன்ன மக-வயின் தவாஅ தாதைக்கு
முன்னர் எழுந்த முழு கதம் போல
புற-வயின் பொம்மென வெம்பி அக-வயின்
தண்மை அடக்கிய நுண் நிறை தெள் நீர் 95
வரி வளை பணை தோள் வண்ண மகளிர்
சொரிவனர் ஆட்டி தூசு விரித்து உடீஇ
கோங்கின் தட்டமும் குரவின் பாவையும்
வாங்கி கொண்டு வாருபு முடித்து

மணி மாராட்டத்து அணி பெற வழுத்தி 100
காவலன் மகளை கைதொழுது ஏத்தி
ஆய் பத அடிசில் மேயதை ஊட்டி
அவிழ் மலர் படலை தந்தை அக-வயின்
நிகழ்வதை நிகழ்த்தி புகழ்வு_அரும் பொலிவொடு
பரிசனம் சூழ்ந்து பரிவு நன்கு ஓம்ப 105
அன்றை அ பகல் அசைஇ ஒன்றிய
துன்ப பெரும் கடல் நீந்தி இன்பத்து
ஏம நெடும் கரை எய்தி யாமத்து
மதியம் பெற்ற வானகம் போல

பொதி அவிழ் பூம் தார் புரவலன் தழீஇ 110
சுர முதல் நிவந்த மர முதல்-தோறும்
பால் வெண் கடலின் பனி திரை அன்ன
நூல் வெண் மாடம் கோலோடு கொளீஇ
மொய்த்த மாக்கட்டு ஆகி எ திசையும்
மத்த யானை முழங்கு மா நகர் 115
உத்தர குருவின் ஒளி ஒத்தன்றால்
வித்தக வீரன் விறல் படை வீடு என்
*1 உஞ்சைக் காண்டம்

#58 சயந்தி புக்கது
விறல் படை சூழ விளங்கு மணி பைம் பூண்
மற படை நோன் தாள் வத்தவர் பெருமகன்
போரகத்து எழுந்த பூசல் வினைஞர்
மார்பகம் போழ்தலின் ஈரம் தீரா
நெய்த்தோர் கச்சையின் நித்திலம் போல 5
செம்மை சேர்ந்த வெண்மைய ஆகிய
ஏந்து எழில் ஆகத்து இறுவரை தாழ்ந்த
பாந்தள் அன்ன பரேர் எறுழ் தட கையின்
மிதி தோல் கொல்லன் பொதி உலை செம் தீ

ததர்வன போல சிதர்வன சிந்தி 10
புகர் அணிந்து ஓங்கிய நெற்றி பூம் கவுள்
அயறு அசும்பு இருந்த அம் தண் நாற்றத்து
மத களி சுவைக்கும் மணி நிற பறவை
தொகை தொழில் ஓப்பும் தகை செவிக்கு ஏற்ப
பணைத்த எருத்தின் பைம் கண் செயிர் நோக்கு 15
அணைப்ப கண்ட தன் அணி நிழல் சீற்றத்து
நீல மால் வரை நிமிர்ந்து நடந்து அன்ன
கோல குஞ்சரம் கொள்ள பண்ணி
பாகர் தருதலின் பணை எருத்து ஏறி

கரு முகில் மருங்கின் இருள் அறுத்து ஏர்தரும் 20
வெம்மை செல்வன் மேல் நிலை பெற்ற
தண்மை திங்களின் தகை குடை நிழற்ற
உதையணகுமரன் ஒளி பெற தோன்ற
புதை குப்பாயத்து பூண்ட வாளின்
கடும் கண் காவலர் கொடும் கோடு சிலைப்ப 25
எப்பால் மருங்கினும் மொய்ப்புற்று விளங்கி
கிழி இடம் பெறாஅர் வழி இடம் பார்ப்ப
யானையும் புரவியும் சேனையும் செல்ல
விடற்கு_அரும் தோழர் புடை களிறு ஏற

அம் தண் பொதியில் சந்தன மரமும் 30
நறும் தண் சோலை இரும் கால் திமிசும்
அடவி விந்தத்து யானை மருப்பும்
வட திசை மா மலை சுடர் விடு பொன்னும்
குட_கடல் பிறந்த படர் கொடி பவழமும்
தென் திசை பிறந்த வெண் சுடர் மணியும் 35
விஞ்சை அம் பெரு மலை விளங்கு ஒளி வெள்ளியும்
இலங்கை ஈழத்து கலம் தரு செப்பும்
இமயத்து பிறந்த வயிர சாதியும்
கடாரத்து இரும்பொடு கையகத்து அடக்கி

யவன தச்சரும் அவந்தி கொல்லரும் 40
மகதத்து பிறந்த மணி வினைக்காரரும்
பாடலி பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத்து இயன்ற ஓவிய தொழிலரும்
வத்த நாட்டு வண்ண கம்மரும்
தம்தம் கோள் மேல் தம் கைத்தொழில் தோன்ற 45
ஆரமும் சூட்டும் நேர் துணை குழிசியும்
அச்சும் ஆணியும் வச்சிர யாப்பும்
அக_வாய் கோடும் புற_வாய் பூணும்
பத்திர பந்தமும் சித்திர புளகமும்

புற மணை பலகையும் அக மணை தட்டும் 50
சந்தி கோணமும் எந்திர ஆணியும்
கஞ்சிகை கொளுவோடு கயிற்று நிலை அமைத்து
மூக்கும் கோடும் கோப்பு முறை கொளீஇ
முகத்தூண் அளவும் அகத்தூண் அமைதியும்
நூல் இட்டு அமைத்த கோல கூடத்து 55
நாள்_மீன் ஒழுக்கும் கோள்_மீன் கோப்பும்
கரந்து உறை கோளொடு நிரந்தவை நிறீஇ அவற்று
ஏழ்ச்சியும் இறுதியும் சூழ்ச்சியும் உணர
அரும் பொறி மண்டலம் அக-வயின் இயற்றி

புலமை உணர்ந்து புலம் கெழு நுட்பத்து 60
பெரும் பொறி பாவை மருங்கின் நிறீஇ
முடியும் அடியும் முறைமையில் புனைந்து
கொடியும் மலரும் கொள்வழி எழுதி
பிடியும் களிறும் பிறவும் இன்னவை
வடி மாண் சோலையொடு வகை பெற வரைந்து 65
நய திறம் பொருந்த நாடகம் கண்டும்
விசித்திர வனப்பின் வீணை எழீஇயும்
பொன்னும் மணியும் பல் மலர் தாரும்
திருத்தி அணிந்து மருப்பு நெய் பூசி

சேண் நெறி செல்ல கோள் நெறி கொளுத்தி 70
உலைவு_இல் ஊர்ச்சி வலவன் காத்தலின்
புது துணை மகளிர் ஒதுக்கு நடை ஏத்த
காஞ்சனமாலை பூம் புறத்து அசைஇ
மாசு_இல் விண்ணவன் மட மகள் போல
வாசவதத்தை வையம் ஏற 75
கோல் தொழிலாளர் மாற்று மொழி இயம்ப
கொடி பல நுடங்க குன்றம் சிலம்ப
இடி உறழ் முரசின் இரும் கண் எருக்கி
காட்டக மருங்கின் வீட்டிடம் அமைக என

பெரு மலை சாரல் சீறூர் வாழும் 80
கால குறும்பர் ஓலை தூதின்
பெரும் பொறி அண்ணல் அரும் பொறி ஒற்றி
குழிப்படு வேழ கூன் மருப்பு இரட்டையும்
வரைப்படு தேனும் சினைப்படு கனியும்
வீணை தண்டும் வேய்படு முத்தும் 85
கானத்து அகிலும் ஏனத்து எறியும்
பொறி புலி தோலும் மறுப்பு இயல் ஊகமும்
மந்தி பிணையொடு மற்றவை பிறவும்
தம் திறை தந்து முந்து சிறைப்பட்ட

அற்ற காலத்து முற்ற நோக்கி 90
அடியுறை செய் தொழில் குடி முதல் பிழைத்தல்
இரு நிலம் பெயரினும் எம்-மாட்டு இல என
பெருமகன் தமரொடு தெளிவனர் தேற்றி
உழை படை யாப்பின் புடை படை காப்ப
மிலைச்ச மன்னர் தலை படை ஒட்ட 95
நல் படை தோழர் வில் படை பின் வர
கடல் கிளர்ந்து அன்ன அடல்_அரும் தானை
இறும்பு அமல் அடுக்கத்து குறும்பு பல போகி
அரில் அறல் அக-வயின் ஆடுதல் ஆனா

வரி அகட்டு அலவன் வள் உகிர் உற்று என 100
கன்னி வாளை உண்ணாது ஒடுங்கும்
தண் பணை தழீஇய வண் பணை வள நாடு
அரு மிளை உடுத்த அமைவின் குன்றாது
பெரு மலை சூழ்ந்த அரிது இயல் அமைவோடு
இழிக்கப்படாஅ எழில் பொலிவு எய்தி 105
பெரு_மண் உலாவும் பேரா பல் படை
உருமண்ணுவாவுக்கு உரிமையின் இருந்த
சயந்தி அம் பெரும் பதி அமர்ந்து புக்கனரால்
இயைந்த செம்மையொடு இயைந்திசினோர் என்
*