இலாவாண காண்டம், பெருங்கதை

1.நகர் கண்டது
2.கடிக்கம்பலை
3.கட்டில் ஏற்றியது
4.ஆறாந்திங்கள் உடல்மயிர் களைந்தது
5.மண்ணு நீராட்டியது
6.தெய்வச் சிறப்பு
7.நகர் வலம் கொண்டது
8.யூகி போதரவு
9.யூகி சாக்காடு
10.யூகிக்கு விலாவித்தது
11.அவலம் தீர்ந்தது
12.மாசனம் மகிழ்ந்தது
13.குறிக்கோள் கேட்டது
14.உண்டாட்டு
15.விரிசிகை மாலைசூட்டு
16.ஊடல் உணர்த்தியது
17.தேவியைப் பிரித்தது
18.கோயில் வேவு
19.தேவிக்கு விலாவித்தது
20.சண்பையுள் ஒடுங்கியது


# 1 நகர் கண்டது
சயந்தி அம் பெரும் பதி இயைந்து அகம் புகுதலின்
தாது மலர் அணிந்த வீதி-தோறும்
பழு குலை கமுகும் விழு குலை வாழையும்
கரும்பும் இஞ்சியும் ஒருங்கு உடன் நிரைத்து
முத்து உத்தரியமும் பவழ பிணையலும் 5
ஒத்த தாமம் ஒருங்கு உடன் பிணைஇ
பூரண பெரும் கடை தோரணம் நாட்டி
அருக்கன் வெவ் அழல் ஆற்றுவ போல
விரித்த பூம் கொடி வேறு பல நுடங்க

எண் வகை சிறப்போடு கண் அணங்கு எய்த 10
விடாஅ விளக்கு ஒளி வெண் பூம் தாமமொடு
படாகையும் விதானமும் பால்_கடல் கடுப்ப
இரு மயிர் முரசம் உரும் என உரற
கடம் முழக்கு இன் இசை இடையிடை இயம்ப
வெம் துயர் அரு வினை வீட்டிய அண்ணலை 15
இந்திர_உலகம் எதிர்கொண்டாங்கு
மகளிரும் மைந்தரும் துகள் நிலம் துளங்க
நல் பெரும் கடை முதல் நண்ணுவனர் குழீஇ
பொன் பெரும் குடத்தில் புது நீர் விலங்கி

இருள் கண் புதைத்த இரும் கண் ஞாலத்து 20
விரி கதிர் பரப்பிய வெய்யோன் போல
வெம் கண் இருள் துயர் இங்கண் நீக்கிய
பொங்கு மலர் தாரோய் புகுக என்போரும்
உட்காது ஒழுகின்
பகைவர் எண்ணம் பயம் இல என்னும் 25
நீதி பெருமை நூல் ஓதியும் ஓராய்
யானை வேட்கையின் சேனை நீக்கி
பற்றா மன்னனின் பற்றவும் பட்டனை
பொன் தொடி பாவையை உற்றது தீர

கொற்றம் எய்தி கொண்டனை போந்த 30
மிகுதி வேந்தே புகுக என்போரும்
பயம் கெழு நல் நாடு பயம் பல தீர
புகுந்தனை புகன்று நின் புதல்வரை தழீஇ
ஒன்னா மன்னனை ஓடு புறம் கண்டு
நின் நகர் நடுவண் மன்னுக என்போரும் 35
மாயோன் மார்பில் திரு_மகள் போல
சேயோன் மார்பில் செல்வம் எய்தற்கு
நோற்ற பாவாய் போற்று என புகழ்நரும்
திரு மலர் செம் கண் செல்வன்-தன்னொடு

பெருமகன் மட மகள் பின்வர கண்டனம் 40
உம்மை செய்த புண்ணியம் உடையம்
இம்மையின் மற்று இனி என் ஆகியர் என
அன்புறு கிளவியர் இன்புறுவோரும
மண் மீக்கூரிய மன்னவன் மட மகள்
பெண் மீக்கூரிய பெரு நல வனப்பின் 45
வளை பொலி பணை தோள் வாசவதத்தை
உளள் என மற்று யாம் உரையில் கேட்கும்
அவள் நலம் காண இவண்-வயின் தந்த
மன்னருள் மன்னன் மன்னுக என்போரும்

கருத்தில் சூழ்ச்சியொடு கானத்து அக-வயின் 50
பெரும் திறல் வேந்தன் எம் பெருமான் சிறைகொள
மாய சாக்காடு மனங்கொள தேற்றி
ஆய மூதூர் அகம் புக்கு அவன் மகள்
நாகு வளை முன்கை நங்கையை தழீஇ
போக என புணர்த்த போகா பெரும் திறல் 55
யூகியும் மன்னுக உலகினுள் என்மரும்
வியன் கண் ஞாலத்து இயன்றவை கேள்-மின்
நன்றாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு
நன்றே ஆகி நந்தினும் நந்தும்

நன்றாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு 60
அன்றாய் மற்று அஃது அழுங்கினும் அழுங்கும்
தீதாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு
தீதே ஆகி தீயினும் தீயும்
தீதாய் வந்த ஒரு பொருள் ஒருவற்கு
ஆசு_இல் பெரும் பொருள் ஆகினும் ஆம் என 65
சேயவர் உரைத்ததை செவியின் கேட்கும்
மாயி காஞ்சனம் வத்தவர் இறைவற்கு
பெரும் சிறை பள்ளியுள் அரும் துயர் ஈன்று
தீயது தீர்ந்து அ தீ பொருள் தீர்ந்து அவன்

செல்வ பாவையை சேர்த்தி செம் நெறி 70
அல்வழி வந்து நம் அல்லல் தீர
நண்ண தந்தது நன்று ஆகியர் என
கண்ணில் கண்டு அவன் புண்ணியம் புகழ்நரும்
ஓங்கிய பெரும் கலம் தருக்கிய உதயணன்
தேம் கமழ் கோதை என் திரு நுதல் மாதரை 75
வேண்டியும் கொள்ளான் வேட்டனென் கொடுப்பின்
குலத்தில் சிறியவன் பிரச்சோதனன் என
நிலத்தின் வாழ்நர் இகழ்ச்சி அஞ்சி
யானை மாயம் காட்டி மற்று நம்

சேனை கிழவனை சிறை என கொண்டு 80
வீணை வித்தகம் விளங்கு_இழை கற்க என
மாண் இழை அல்குல் மகள் நலம் காட்டி
அடல் பேர் அண்ணலை தெளிந்து கைவிட்டனன்
கொடுப்போர் செய்யும் குறிப்பு இஃது என்மரும்
மற்றும் இன்னன பற்பல பயிற்றி 85
மகளிரும் மைந்தரும் புகழ்வனர் எதிர்கொள
அமரர் பதி புகும் இந்திரன் போல
தமர் நகர் புக்கனன் தானையில் பொலிந்து என்
* 2 இலாவாண காண்டம்

#2 கடிக்கம்பலை
பொலிந்த சும்மையொடு பொன் அணி மூதூர்
மலிந்து அகம் புக்க பின் மண் பொறை கூர
பெறல்_அரும் பெரும் கிளை இறைகொண்டு ஈண்டி
இன் மகிழ் இருக்கை ஏயர் மகனோடு
தண் மகிழ் நெடும் குழல் தத்து ஒளி தாமத்து 5
மதி கவின் அழித்த மாசு_அறு திரு முகத்து
அணி கவின் கொண்ட ஐ அரி தடம் கண்
வனப்பு வீற்றிருந்த வாசவதத்தை
வதுவை செல்வம் விதியின் கூறுவென்

எண் தரும் பெரும் கலை ஒண் துறைபோகி 10
கண் அகன் புணர்ப்பில் கவின் பெற நந்தி
விண்ணகம் விளங்கு மேதகு நாட்டத்த
நூல் பொருள் உணர்ந்து பாற்பொருள் பன்னி
நூல் பொருள் இனித்து தீ பொருள் ஒரீஇ
அலகை வேந்தற்கு உலகம் கொண்ட 15
ஒழுக்கம் நுனித்த வழுக்கா மரபின்
புணர்ப்பு இயல் காட்சியன் புரையோர் புகழ
நிழல் பெரும் குடையும் நேர் ஆசனமும்
செருப்பொடு புகுதலும் சேனை எழுச்சியும்

யானையும் தானையும் ஏனைய பிறவும் 20
மண்ணக கிழவர் மனக்கோள் அறாது
விண்ணக கிழவனின் விழுப்பம் கூறி
தம்மின் பெற்ற தவம் புரி தருக்கத்து
அரும் பரிசாரத்து பெரும் கணி வகுத்த
நல் நாள் இது என பல் நாடு அறிய 25
பசும்பொன் பல வார் விசிந்து பிணியுறீஇ
கோதை முத்தொடு தாமம் ததைஇ
ஏற்று உரி போர்த்த இடி உறழ் தழங்குரல்
கோல் தொழில் வேந்தன் கொற்ற முரசம்

பெரும் பணை கொட்டிலுள் அரும் பலி ஓச்சி 30
முற்றவை காட்டி கொற்றவை பழிச்சி
திரு நாள் படை நாள் கடி நாள் என்று இ
பெரு_நாட்கு அல்லது பிற நாட்கு அறையா
செல்வ சேனை வள்ளுவ முது மகன்
நறு வெண் சாந்தொடு மாலை அணிந்து 35
மறு_இல் வெண் துகில் மருங்கு அணி பெறீஇ
அணை மிசை அமர்தந்து அஞ்சுவரு வேழத்து
பணை எருத்து ஏற்றி பல்லவர் சூழ
தேர் திரி மறுகு-தோறு ஊர் முழுது அறிய

பொலிக வேல் வலம் புணர்க பூ_மகள் 40
மலிக மண்_மகள் மன்னுக மன்னவன்
மல்லல் மூதூர் பல் அவர் கேள்-மின்
திருவொடு புணர்ந்து தீயவை நீக்கி
உருவொடு புணர்ந்த ஒளியினர் ஆகு-மின்
பல் களிற்று யானை படை பெரு வேந்தன் 45
மெல் இயல் குல_மகள் மிடை மணி பைம் பூண்
சிலம்பு ஒலி சீறடி சென்று ஏந்து புருவத்து
இலங்கு ஒளி வாள் கண் இன் நகை துவர் வாய்
வாசவதத்தையொடு வதுவை கூடி

கோல நீள் மதில் கொடி கோசம்பி 50
மாலை மன்னவன் மணமகன் ஆகும்
காலை இது என கதிர் மணி கடுப்பின்
கண் அதிர்ந்து இயம்ப இன் மொழி பயிற்றி
கல்லென அறையும் ஒல்லென் கம்பலை
அறைந்து அறிவுறீஇய பின்றை நிறைந்த 55
பெரும் பெயர் மூதூர் விரும்புபு துவன்றி
படை அமை நெடு மதில் கடை முகம்-தோறும்
பசும்பொன் தோரணம் விசும்புற நாட்டி
அரும் பொன் தாரோடு அணி கதிர் முத்தின்

இரும் பெரும் தாமம் ஒருங்கு உடன் வளைஇ 60
உத்தம வேழத்து உயர் புறம் பொலிய
வித்தக வெண் குடை விரகுளி கவிப்ப
மணி கை கவரி மரபின் வீசுநர்
புடை களிறு ஒருங்கு உடன் புகூஉம் அகலத்து
அடைப்பு அமை பெரும் பொறி யாப்பு முதல் கொளீஇ 65
பத்திரம் அணிந்த சிந்திர கதவின்
வாயில்-தோறும் வலத்தும் இடத்தும்
நாயில் மாடத்து தாள் முதல் எல்லையுள்
சதிர திண்ணை தண் பூம் பந்தருள்

பழு காய் குலையும் பழம் காய் துணரும் 70
களி காய் பறியும் துவர் காய் உம்பலும்
பளி காய் குப்பையும் பலம் பெய் பேழையும்
தளிர் இலை வட்டியொடு தாது பல அமைத்து
சுண்ண பெரும் குடம் பண் அமைத்து இரீஇ
எண்ணாது ஈயுநர் இன் மொழி கம்பலும் 75
தண் நிழல் பொதிந்த வெண் மணல் பந்தர்
கண்ணுற கவினி கைப்புடை நிறைந்த
செல்வ சாலையொடு பல் வழி எல்லாம்
அந்தணாளரொடு அல்லோர் பிறர்க்கும்

அமுதின் அன்ன அறு_சுவை அடிசில் 80
நெய் சூட்டு அமைந்த சிற்றூண் பந்தரோடு
எப்பொழுது ஆயினும் அப்பொழுது ஈயும்
தூமம் நவின்ற நாம கைவினை
மடை தொழில் வழாஅ வாழ்க்கையர் பயின்ற
அற சோற்று அட்டில் அகத்தும் புறத்தும் 85
முரண் கோல் இளையர் அரண்-மாட்டு இயற்றி
முட்டாது நடாஅம் அட்டூண் கம்பலும்
பவழ பட்டத்து பளிக்கு மணி தூணின்
திகழ் பொன் போதிகை செம்பொன் செழும் சுவர்

வெள்ளி வேயுள் வெள்ளி அம் பலகை 90
பீடிகை நிரைத்த மாட மறுகில்
கொடுப்போர் வீழ்த்த குங்கும குழையலும்
தொடுப்போர் வீழ்த்த தூ வெள் அலரும்
வேதியர் கடை தலை வேள்வி சமிதையும்
வாதிகர் கடை தலை வாச சுண்ணமும் 95
கலந்தோர் உதிர்த்த கலவை சாந்தமும்
புலந்தோர் பரிந்த புது பூ மாலையும்
சிறாஅர் வீழ்த்த செம்பொன் கண்ணியும்
அறாஅ மறுகின் ஆவண பலியும்

பசும் காய் தெவிட்டும் பல்_கூட்டு_அரத்தமும் 100
இயங்குநர் இன்புற இன்னவை பிறவும்
காட்டு என கமர்ந்து கூட்டுநர் அமைத்த
கலவை கொழும் களி எழு துகள் அவித்து
வெறி_களம் கடுப்ப வீதியும் முற்றமும்
நிறை போது பரப்பி நெடும் கடை-தோறும் 105
அணி தகை சிதைத்தனர் இவர் என ஆடும்
முனி தலை சிறாரை முன்னில் வாங்கி
தாயரை காட்டி அவர் தவறு எடுத்துரைக்கும்
ஏவல் மகளிர் வாய் மொழி கம்பலும்

வண்ண கலிங்கத்து கண் அறை கண்டம் 110
தலையொடு தலைவர இலை அடுக்கு இரீஇ
கச்சு வாய் கோடித்து முத்து புரி நாற்றி
ஒள் மணி தாரொடு பல் மணி புளகம்
விலங்கும் நீளமும் இலங்கி தோன்றி
மிழற்றுபு விளங்கும் எழில் பொலிவு எய்த 115
வல்லவன் புனைந்த பல் வகை கம்மத்து
மங்கல பெரும் கொடி மங்குல் வானத்துள்
உரற்றும் மழை கிழிக்கும் ஒள் மணி உச்சி
பல்லோர் காணும் பரூஉ திரள் அடியில்

பல் மணி கண்டத்து கண் நிழல் கலங்கி 120
ஓங்குபு நிமிர்ந்த காம்பொடு கவ்வி
பயில் பூம் பத்தி குயில் புரை கொளுவின
வட்டு அமைத்து இயற்றிய வலம்புரி சாற்றி
ஆடக பொன் கயிற்று அரும் பொறி யாப்பின
வயிர பல் அரி பயில் பூம் பத்தி 125
கிண்கிணி தாரொடு கலவிய கதிர் அணி
கொளுவொடு படாஅ கொடி பவழத்து
தாமம் தாழ்ந்து தலை முதல் கோத்த
நீல காழ் மிசை நெற்றி மூழ்கி

உள் நுகுப்பு ஓலையுள் கண் விரித்து இயற்றிய 130
பாத சக்கரம் மாறு எதிர் நீர்தர
கோதை தாமமொடு கொட்டை முதல் கோத்த
இலங்கு ஒளி மு_குடை எந்திரத்து இயங்க
அறிவர் சரிதம் முறையில் சுட்டி
உரையும் ஓத்தும் புரையா புலமை 135
பெரியோர் நடாவும் திரியா திண் நெறி
ஒராஅ உலகிற்கு ஓங்குபு வந்த
அராஅந்தாணத்து அருச்சனை கம்பலும்
கண்ணில் கண்ட நுண் வினை கம்மம்

கையில் புனையும் கழி நுண்ணாளர் 140
ஏட்டினும் கிடையினும் மூட்டு அமை கிழியினும்
நாற்றமும் தோற்றமும் வேற்றுமை இன்றி
ஏற்ப விரீஇய இலையும் கொழுந்தும்
கொழுந்திற்கு ஏற்ப அழுந்துபடு குலாவும்
குலாவிற்கு அமைந்த கோல சந்தியும் 145
முகிழும் போதும் மகிழ் சுழல் அலரும்
அன்னவை பிறவும் பல் மரம் பண்ணி
தீட்டினர் அன்றியும் நாட்டினர் நிறீஇ
கழை முதல் கொளீஇ கை புனை வனப்பின்

இழை முதல் கொளீஇய எழில ஆகி 150
காமவல்லியும் கதலிகை அணிந்த
தாமவல்லியும் தண் பெரும் படாகையும்
காலேந்திரமும் கை-வயின் பிரியா
நூலேந்திரமும் நோக்கினர் போகா
பத்திப்படாமும் சித்திர கொடியும் 155
இன்னோர் அன்ன என்னோர் சேரியும்
உறப்புணர்த்து ஆர்க்கும் சிறப்பு ஒலி கம்பலும்
இடி உறழ் முரசின் இறை_மகன் அணியும்
முடி அணி ஒழிய முற்று அணி பெரும் கலம்

யாவர் வேண்டினும் யாவரும் ஈ-மின் 160
ஈத்ததின் இரட்டி கோத்தரும் நுமக்கு என
நால் பெரும் திசையும் நகர் அங்காடியுள்
வாய்த்த செய் தொழில் வாணிகர்க்கு அறையும்
கோப்பெரு முதியர் வாய்ப்பறை கம்பலும்
குடிக்கு அணி கொடுக்கும் கொற்ற தானை 165
இடி கண் முரசின் ஏயர் பெருமகன்
வதுவை நாப்பண் புதுவது புணர்ந்து
நுந்தையர் தம்மொடு செலீஇ எந்தையர்
வருக ஈண்டு என வறிதின் ஓடும்

தம் அமர் புதல்வரை தலை அடி-காறும் 170
கம்ம பல் கலம் கை புனைந்து அணிந்து
செம்மலின் விடுக்கும் சிறந்த சாயல்
அம் மென் கூந்தல் அரிவையர் கம்பலும்
வத்தவர் இறைவன் வதுவையுள் நம்மோடு
ஒத்தவர் வரிசை ஒத்து புகுதலின் 175
பத்திப்பட நிரைத்த பைம் குலை தாறும்
தேங்கின் ஊறலும் தேம் பிழி தேறலும்
தாங்க_அரும் பெண்ணை பூம் குலை அமுதமும்
மதுவும் சீதமும் புது மலர் வேரியும்

உக்கிர ஊறலும் சிக்கர தெளியலும் 180
காஞ்சிய தெளிவும்
கரும்பின் ஊறலும் பெரும் பொதி தேனும்
இவையும் பிறவும் சுவை தெரியாளர்
விட்டு உணல் ஆற்றா மட்டு மலி நறும் கள்
பெய்-மின் தம்-மின் ஈ-மின் பிறர்க்கு என 185
தம் இல்-தோறும் உள் மகிழ்ந்து உரைக்கும்
கள் உண்ணாளர் ஒள் ஒலி கம்பலும்
மாற்று தொழில் மன்னர் மயங்கிய ஞாட்பினுள்
கூற்று தொழில் இளையர் குடர் சூடு மருப்பின

வெம் படை மிக பலர் மெய் மிசை எறியினும் 190
தம் படைக்கு ஒல்கா பண்புடன் பயிற்றி
மூத்தோர் பெண்டிர் நீத்தோர் மகாஅர் என
நாற்பாலோரையும் நூல்-பால் செய் தொழில்
பாகர் வேண்டினும் பையுள் செய்யா
வேக உள்ளத்து வேழம் தெரிந்து 195
நிரந்தன காட்டிய நேயம் தோன்ற
பார்படு முத்தொடு தார் உடன் பூட்டி
ஐ வகை வண்ணத்து கை_வல் கம்மியர்
கொடியும் பத்தியும் வடிவு பட எழுதி

சூழியும் ஓடையும் சுடர் மணி கோவையும் 200
ஊழ் அறிந்து உயர்ந்த உத்தம உயர்ச்சிய
மண்ணு நீர் சுமக்கற்கு பண்ணு முறை பிழையா
கோல யானை நால்_இரண்டு மிகையா
ஆயிரம் அணிந்தவை கோயிலுள் தரூஉம்
பாகு இயல் உள்ளத்து பாகர் கம்பலும் 205
மணி அரி அடக்கிய மாண் வினை பகு வாய்
அணி மிழற்று அரவத்து அம் பொன் கிண்கிணி
சிலம்பொடு சீறடி புறம் புதைந்து அரற்றவும்
அம் மென் மருங்குல் அசைய அடி பரந்த

கொம்மை கொண்ட தன்மைய ஆகி 210
கோங்கு அரும்பு அழித்த வீங்கு இள மென் முலை
உட்பட விட்ட வட்ட நுடக்கத்து
சுண்ண இலேகை வண்ணம் சிதைய
மண்ணிய நித்தில வடத்தொடு புரளும்
பல் கலம் சுமத்தல் ஆற்றாது பையென 215
ஒல்குபு நுடங்கும் ஒரு_பிடி நுசுப்பினர்
மண்ணக மருங்கின் மதி பல பயின்றன
விண்ணகம் என்னையும் விடுக்கும்-கொல் என
மதி அகம் வெள்க வனப்பொடு புணர்ந்த

கதிர் விடு திரு முகத்து எதிர்வன போல 220
சென்று வந்து உலாவும் சே அரி கண்ணினர்
ஈன்றோர்-மாட்டும் எதிர் முகம் நோக்காது
மான் தோம் கூறும் மம்மர் நோக்கினர்
பொன் அணி கொண்ட பூம் தண் சிகழிகை
கன்னி மகளிர் கண் அணங்குறூஉம் 225
ஒவ்வா அணியினர் ஒப்ப கூடி
மண்ணக கிழவற்கு மண்ணு நீர் சுமக்கும்
புண்ணியம் உடையீர் போது-மின் ஈங்கு என
வாயில்-தோறும் வந்து எதிர்கொள்ள

போர்வை மடக்கார் பொலிய புகுதரும் 230
கோயில் மகளிர் கோல மெல் அடி
நூபுரம் கலந்த பாடக கம்பலும்
அன்னவை பிறவும் பல் நூறாயிரம்
ஒடிவு_இல் கம்பலை ஒருங்கு தலைக்கூடி
கடி கமழ் செல்வம் கலந்தன்றால் நகர் என் 235
*2 இலாவாண காண்டம்

#3 கட்டில் ஏற்றியது
கடி கமழ் செல்வம் கலந்த-காலை
இடி உறழ் முரசின் ஏயர் பெருமகற்கும்
பிடி மகிழ் யானை பிரச்சோதனன் மகள்
வடி மலர் தட கை வாசவதத்தைக்கும்
ஓர் உயிர் கிழமை ஓரை அளக்கும் 5
பேரியலாளர் பிழைப்பு_இலர் நோக்கி
வழு_இல் செம் தீ பழுது_இல வேட்கும்
பொழுது மற்று இது என புரையோர்க்கு உரைப்ப
அறு_தொழில் மு_தீ அரும் துறை போகிய

மறை நவில் நாவின் மரபு இயல் அந்தணன் 10
பல் பூம் பந்தருள் செல்வம் சிறக்கும்
இரு நிலத்து இலக்கணம் இயற்பட நாடி
வெண் மணல் நிரப்பம் கொளீஇ கண்ணுற
புண்ணிய பலாசின் கண் நிறை சமிதை
மு குழி கூட்டத்து உட்பட ஓக்கி 15
ஆற்றா செம் தீ அமைத்தனன் மேற்கொள
ஐ_ஒன்பதின் வகை தெய்வம் நிலைஇய
கை புனை வனப்பில் கான் முதல்-தோறும்
ஆர் அணங்கு ஆகிய அணி முளை அகல்வாய்

பூரண பொன் குடம் பொலிய இரீஇ 20
வெண் மணல் ஞெமிரிய தண் நிழல் பந்தருள்
ஐஇய வாச ஆன் நெய்யொடு கலந்த
ஐ வகை உணவொடு குய் வளம் கொளீஇ
நறிய ஆகிய அறு_சுவை அடிசில்
பெரும் சோற்று அமலை பரந்து பலர் மிசையும் 25
மிச்சில் எய்தா உட்குவர் ஒருசிறை
விசை அம்மி குண திசை கோணத்து
ஈடு அமை பீடிகை பாடு பெற இருந்த
பொன் அயிராணி முன்-வயின் பேணி

பன்னிய பனுவல் பார்ப்பன முது_மகன் 30
அம் தண் ஆவிரை அலரும் அறுகையும்
நந்தி வட்டமும் இடையிடை வலந்த
கோல மாலை நாற்றி வானத்து
அருந்ததி அரிவையோடு ஆணிகன் பரவும்
பொருந்து மொழி புற நிலை புணர்ந்து பலர் வாழ்த்தி 35
நூன் முறை படைத்த நான்முக கடவுள்
தாள் முதல் தானத்து தகை பெற இரீஇ
பால் உலை வெந்த வால் அவிழ் கலவையும்
தேன் உலை வெந்த தூ நிற துழவையும்

புளி உலை வெந்த பொன் நிற புழுக்கலும் 40
கரும்பு உலை வெந்த கன்னல் துழவையும்
நெய் உலை வெந்த மை நிற புழுக்கொடு
பொன் அகல் மணி அகல் செப்பு அகல் வெள்ளி
ஒண் நிற போனகம் மண்ணகம் மலிர
அரிவையர் அடுமடை அமிழ்து கொண்டு ஓச்சி 45
பஞ்ச வாசமொடு பாகு வலத்து இரீஇ
அம் செம் சாந்தமொடு மஞ்சள் நீவி
இருப்பு அகல் நிறைந்த நெருப்பு நிறை சுழற்றி
தேவர் தூமம் மேவர எடுப்பி

மலையினீர் ஆயினும் மண்ணினீர் ஆயினும் 50
அலை திரை பௌவத்து அகத்தினீர் ஆயினும்
விசும்பினீர் ஆயினும் விரும்புபு வந்து நும்
பசும்பொன் உலகம் பற்று விட்டு ஒழிந்து
குடை நிழல் தானை கொற்றவன் மட மகள்
மடை அமைந்து உண்டு மங்கலம் தம் என 55
ஒப்ப கூறி செப்புவனர் அளிப்ப
கன்னி மகளிர் துன்னுவனர் சூழ
நான்முக கடவுளொடு தாள் முதல் தானம்
அன்ன தொழுதியின் மென்மெல வலங்கொண்டு

அம் மென் சாயல் செம் முது பெண்டிர் 60
உழுந்தும் சாலியும் உப்பும் மலரும்
பசுங்கிளி சிறை என பக்கம் நிறைத்த
பாகும் சாந்தமும் போகமொடு புணர்ந்த
மங்கல மரபின அங்கையுள் அடக்கி
கொழு முகை செம் விரல் போது என கூப்பி 65
எழு முறை இறைஞ்சுக என்று ஏத்துவனர் காட்ட
ஐது ஏந்து அல்குலர் செய்கையில் திரியா
மடை தொழில் கழிந்த பின் நடை படம் நாட்டி
அரம் போழ் அம் வளை அணிந்த முன்கை

சுருங்கா சுடர் ஒளி செம்பொன் பட்டம் 70
சூளாமணியொடு துளங்கு கடை துயல்வரும்
புல்லகம் பொருந்திய மெல்லென் ஓதி
பொன் அணி மாலை பொலிந்த பூ முடீஇ
வண்ண பூ முடி வாசவதத்தையை
செண்ண காஞ்சனை செவ்விதின் தழீஇ 75
இலக்கம் திரியாது இயற்பட இரீஇ
நல தகை மன்னவன் நட்பொடு புணர்த்த
புண்ணிய புற நடை பண் அமை இருக்கையன்
உறு வரை உதயத்து உச்சி முகம் நோக்கி

அமைதிக்கு ஒப்ப அளந்து கூட்டு அமைத்த 80
சமிதை கிரிகை சால்புளி கழிப்பி
மந்திர விழு நெறி தந்திரம் பிழையாது
துடுப்பில் தோய்த்த சேதா நறு நெய்
அடுத்த செம் தீ அங்கு அழல் ஆர்த்தி
பைம்பொன் கிண்கிணி பாட்டு மிசை ஆர்க்கும் 85
செம் தளிர் சீறடி செல்வனம் பற்றி
போகமும் கற்பும் புணர்ந்து உடன் நிற்க என
ஆகு பொருள் கூறி அம்மி முதல் உறீஇ
நல் நெய் தீட்டிய செம் மலர் அங்கை

பொம்மல் வெண் பொரி பொலிய பெய்த பின் 90
நல் நிலை உலகினுள் நாவல் போலவும்
பொன் அணி நெடு மலை போலவும் பொழில்-வயின்
மன்னுக இவர் என தன் நெறி பிழையான்
விதியில் கூறிய விளங்கு_இழை வேட்கும்
அதிரா நெறியின் அ தொழில் கழிந்த பின் 95
மதியின் அன்ன வாள் முகம் பொலிய
ஓடு கொடி மூக்கின் ஊடு போழ்ந்து ஒன்றாய்
கூடுதல் வலித்த கொள்கைய போல
பொருது போந்து உலாம் போது அரி தடம் கண்

அமிழ்து சேர்ந்தன அக இதழ் நாண் இறக்கமொடு 100
பிறந்த இல் பெரும் கிளை நிறைந்து ஒருங்கு ஈண்ட
பால குமரர் தோள் புகன்று எடுப்ப
நாடும் நகரமும் கூடுதற்கு அருளி
யாயும் எந்தையும் தீ முன் நின்று
வாயில் கூடுதல் வராது இவண் வந்து என 105
வலி புணர் வதுவைக்கு சுளியுநள் போல
நடத்தல் தேற்றா மட தகை மாதரை
வளை பொலி முன்கை வருந்த பற்றி
தளை அவிழ் தாரோன் வல முறை வந்து

மறுவு_இல் காதல் மக்களை பெறுக என 110
முறைமையில் பிழையாது முகிழ் விரல் பற்றி
தகாஅ காலம் தலைவரும் எனினும்
பகாஅ காதலொடு பத்திமை
செம் சுடர் போன்ற அங்குலி நுழையா
வெம் சுடர் வீரன் நெஞ்சு முதல் நீவி 115
தென் மருங்கு மடுத்த தீர்த்த புல் மிசை
மெல் மருங்கு எழிலியை மெல்லென நடாஅய்
வதுவை தானம் பொதுவந்து ஒன்றி
அந்தணாளர் ஆசிடை கூற

வெம் திறல் வேந்தன் பைம்_தொடியோடும் 120
உத்தர கோணத்து அத்தக அமைத்த
ஏற்று உரி அதல் மிசை ஆற்றுளி இருந்து
படு சுடர் செக்கர் பசலை தீர
விடு சுடர் மதியமொடு வெண் மீன் இவர்ந்த
வட-பால் மருங்கில் சுடர் மீக்கூரிய 125
கற்பு உடை விழு மீன் காண காட்டி
பொன்_தொடி நுதல் மிசை புனை விரல் கூப்பி
மன்னிய உலகினுள் நின் இயல்பு ஆக
என்-வயின் அருள் என மு முறை இறைஞ்சுவித்து

எதிர்த்த விரதமொடு இயல்பில் பிழையாது 130
சதுர்த்தி இருந்து கதிர்த்த காப்பொடு
மெய் முதல் திரியாது வேண்டும் கிரிகையில்
கை முதல் கேண்மை கழுமி கழிந்த பின்
மருப்பினும் பொன்னினும் மணியினும் புனைந்த
திரு தகு திண் கால் திரு நிலைபெற்ற 135
வெண் பூம் பட்டின் திண் பிணி அமைந்த
பள்ளி கட்டில் வெள்ளிதின் விரிந்த
கோடு உயர் பல் படை சேடுற சேர்த்தி
வயிரமும் வெள்ளியும் பவழமும் பொன்னும்

மணியும் முத்தும் அணிபெற பரப்பி 140
அடி நிலை அமைத்து முடி நிலை-காறும்
தாமம் நாற்றி காமம் குயின்ற
கோல செய்கை வால் அணி பொலிந்த
எட்டி காவிதி பட்டம் தாங்கிய
மயில் இயல் மாதர் இயல்பில் படுத்த 145
கட்டில் மீமிசை கட்டு அலர் கமழும்
ஒண் தார் மார்பின் உதயணகுமரற்கு
தண்டா காதலொடு தக்கவை அறிந்து
விண்ணவர் கிழவன் வீற்றிடம் கடுப்ப

மண்ணக மன்னர் மரபு அறிந்து இயற்ற 150
அம் வளை பணை தோள் அதி நாகரிகியை
கை-வயின் பிழையாது காஞ்சனை தழீஇ
உண்மை உணரா நுண்மை போர்வை இவள்
பெண்மை காணினோ பிழைப்பு_இலன் யான் என
தன் ஒளி சமழ்த்து இவள் பெண் ஒளி புகற்ற 155
மண் ஆர் மணி பூண் மாதரை இரீஇய பின்
கண் ஆர் குருசிலை கவின்பெற ஏற்றி
தகை மலர் தாரோன் தட கை பற்றி அவள்
முகை மலர் கோதை முடி முதல் தீட்டி

செம்பொன் தாலம் மலிர பெய்த 160
மங்கல அயினி மரபுளி உறீஇ
ஒல்லென் சும்மையொடு பல் வளம் தரூஉம்
உருமண்ணுவாவின் பெரு நகர் மாந்தர்
ஆசு_இல் செங்கோல் அவந்தியன் மட மகள்
வாசவதத்தையொடு வத்தவர் இறைவனை 165
முட்டில் செல்வமொடு முறையில் பிழையாது
கட்டில் ஏற்றினரால் கருதியது முடித்து என்
*2 இலாவாண காண்டம்

#4 ஆறாந் திங்கள் உடல் மயிர் களைந்தது
கருதியது முடித்த கடி_நாள் கோலமொடு
பகுதி ஞாயிற்று உரு ஒளி திகழ
கலி கெழு மூதூர் கைதொழுது ஏத்த
வலி கெழு நோன் தாள் வந்தவர் இறைவன்
முது நீர் பொழில் உகந்து எதிர் இன்று ஓத 5
பதினாறாயிரம் பதினறு வகைய
சுருக்கம் இன்றி சூழ்ந்து உடன் திரியா
பெருக்க தானை பிரச்சோதனற்கு
பெரு நில மன்னர் திரு நகர் பிறந்து தம்

நாட்டு பெயர் பொறித்த குட்டு பொலி சுடர் நுதல் 10
கொடி பூண் திளைக்கும் கோல ஆகத்து
வடி போழ்ந்து அன்ன வாள் அரி தடம் கண்
அரும் தவர்க்கு ஆயினும் திருந்து முகம் இறைஞ்சாது
செம் கதிர் விரும்பும் பைம் கொடி நெருஞ்சி
பொன் புனை மலரின் புகற்சி போல 15
வெறுத்த வேட்கை தாம் உளம் சிறப்ப
காதலற்கு அவாஅம் காம நோக்கத்து
ஈர்_எண்ணாயிரர் பேர் எணப்பட்ட
ஓவியர் உட்கும் உருவ கோலத்து

தேவியர்க்கு எல்லாம் தேவி ஆகி 20
கோ வீற்றிருப்புழி பூ வீற்றிருந்த
திரு_மகள் போல ஒருமையின் ஒட்டி
உடன்முடி கவித்த கடன் அறி கற்பின்
இயல் பெருந்தேவி வயிற்றகத்து இயன்ற
வட்ட பெரும் பூண் வாசவதத்தையொடு 25
கட்டில் ஏற்றம் கடந்த பின்னர்
உயர்ந்த நண்பின் உருமண்ணுவாவும்
வயந்தககுமரனும் வத்தவர்க்கு இயற்றிய
கழிந்து மூதூர் வாயில்

தம் பெயர் நிறீஇய மன் பெரு மாந்தரும் 30
நிறை ஓம்பு ஒழுக்கத்து மறை ஓம்பாளரும்
பல் நகர்-தோறும் மன்னவன் வேண்ட
முனைவர் வகுத்த புனை பூண் அகலத்து
காழக தொல் நூல் கருது நெறி நுனித்து அதன்
ஆழமைக்கு அடங்கா அமைவரு காட்சி 35
அரும் பொருள் உணரும் பெரும் கணி சங்கமும்
திணைகளும் கணக்கரும் இனையவர் மொய்த்து
நால் கயிறு அமைத்து கோல் கயிறு கொளீஇ
நன்கு நிலைபெற்ற நாற்பத்தை அணங்கு

உண்_பதம் எட்டு_எட்டு எண் வர வாங்கி 40
எண்பத்தெழு கோல் தண் கையில் தழீஇ
கணக்க மாந்தர் கயிறு இட்டு அளந்த
மணக்கால் பந்தருள் வடம் மென் மருங்குல்
குலத்தொடு புணர்ந்த நலத்தகு நண்பின்
அழுக்காறு அகன்ற ஒழுக்காறு ஓம்பி 45
கைவினை ஐந்தும் கற்று அகத்து அடக்கி
மெய்யில் தூய்மையொடு மேதகு வனப்பின்
செயிர் வினை கடிந்து தம் சிறப்பு வழி தாங்கி
மயிர் வினை நுனித்த மாசு_இல் கம்மத்து

சிற்பியல் புலவர் நற்கு என நாட்டி 50
பதர் சொல் பருப்பொருள் பன்னுபு நீக்கி
பொருள் சொல் நிரப்பும் புலவர் போல
கல்லும் ஓடும் புல்லும் கரியும்
உமியும் மயிரும் என்பும் உட்பட
அமைவு_இல் தன்மைய அரித்து உடன் களைந்து 55
விண் மேம்படூஉம் விழு தகவு உடைத்தாய்
மண் மேம்படுத்து மணி நிழல் உறீஇ
வடக்கும் குணக்கும் வகையுளி பணித்து
குடக்கும் தெற்கும் கோணம் உயரி

நிரப்பம் கொளீஇ நின்ற நிலம் மிசை 60
விசும்பு உறை தேவர் வேள்வி சேதான்
பசும் சோற்று அமலை பாசம் கொளீஇ
மறு இன்று அமைந்த நறு வெண் சாந்தில்
பத்தியும் கொடியும் பல் வழி எழுதி
முத்தமும் மணியும் சித்திரத்து இயற்றிய 65
ஆடக பொன்னும் அகல் நில முது பொழில்
தன் பெயர் கொளீஇய மன் பெரும் சீர்த்தி
மரக்களி அன்ன திரு தகு பொன்னும்
இரத்தின குப்பையும் இலங்கு ஒளி பவழமும்

இன்னவை பிறவும் பல் முறை பண்ணி 70
தொல்லோர் வகுத்த நூல் துறை முறை போகிய
நல் ஆசிரியர் நடுவுநிலை அமைத்து
கீழ் திசை முதலா வாழ்த்துபு வணங்கி
தெய்வம் பேணி கைவினை கம்மத்து
சத்தி முகமே சக்கர வட்டம் 75
பத்தி வரிப்பே பாவை நுடக்கம்
குஞ்சர முகமே நந்தி மலரவை
எஞ்சா திரு வடிவு என பெயர் இவற்றுள்
போர் அடும் மன்னர்க்கு புரையோர் புகழ்ந்த

பாசடை தாமரை தாதகத்து உறையும் 80
மாசு_இல் மட மகள் மருங்கின் வடிவாய்
குலாஅய் கிடந்த கோல கோணத்து
கலாஅய் கிடந்து கவ்விய கொழுந்தின்
வள்ளியும் மலரும் கொள்வழி கொளீஇ
வல முறை வகுத்த நல முறை நல் நகர் 85
நால் பெரு வாயில் முதல்-தொறும் ஏற்ப
தமனிய பேரில் தலை நிலம் தழீஇய
கொழும் களி உழுந்தும் செம் கதிர் செந்நெலும்
உப்பும் அரிசியும் கப்புர பளிதமொடு

ஐ வகை வாசமும் கை புனைந்து இயற்றிய 90
முக்கூட்டு அமிர்தும் அ கூட்டு அமைத்து
தேனும் பாலும் தயிரும் கட்டியும்
ஆன் நெயும் வெண்ணெயும் அனையவை பிறவும்
பதினறு மணியும் பைம்பொன் மாலையும்
நுதியில் பெய்து விதியுற இரீஇ 95
பொதியில் சந்தனம் போழ்ந்துகொண்டு இயற்றி
கதிர் ஒளி பயின்ற கம்ம கைவினை
நால் கால் அமைத்த பால் பெரும் படு மனை
பொங்கு மயிர் தவிசொடு பூ மலர் புனைஇ

நண்ணிய சிறப்பொடு நால் பெரும் திசையும் 100
பண்ணிய உணவின் திண் நிலை குப்பையுள்
முடி முதல் குத்தி அடி நிலைக்கு அமைந்த
பைம்பொன் விளக்கில் செம் சுடர் மாட்டி
குறைவு_இன்று அமைந்த கோல நுட்பத்து
மறு_இன்று அமர்ந்த மங்கல பேரணி 105
மன்ன குமரன் தன்னோர் சூழ
உருத்த மன்னர் ஊர்ச்சி வேழத்து
மருப்பு கை அமைத்து வாய் முதல்-தோறும்
உருக்குறு தமனியத்து ஒழுகு கொடி ஓட்டி

பவழ கொட்டை பல் வினை நுனித்த 110
திகழ் அணி செருப்பில் சேவடி இழிந்து
கடவுள் தானம் வல முறை வந்த பின்
அடர் பொன் திரு நகர் அறிய காட்டி
நிலத்து மிசை இழிந்த நிகர்_இல் நெடு முடி
நல தகை இந்திரன் எழில் பொலிவு ஒப்ப 115
இலக்கண இருக்கை திருத்திய பின்றை
நாணு கவின் கொண்ட நனி நாகரிகத்து
யாணர் பூம் துகில் அணிந்த அல்குல்
இலை பூண் கவைஇ முலை புறம் புதைஇ

பொன் கொடி இழையொடு நற்கு உடன் தாழ 120
ஏக உத்தரியம் இடைச்சுவல் வருத்த
வட்டு உடை பொலிந்த வண்ண கலாபமொடு
பட்டு சுமந்து அசைந்த பரவை அல்குல்
இயைந்து அணி பெற்ற ஏன்ற அம் வயிற்று
அசைந்து அணிகொண்ட அம் மென் சாயல் 125
தாமரை எள்ளிய காமரு திரு முகத்து
இன்ப காமன் எய் கணை போல
செம் கடை போழ்ந்த சிதர் அரி மழை கண்
வண்ண கோதை வாசவதத்தையை

செண்ண காஞ்சனை செவ்விதின் தழீஇ 130
இகல் வரை மார்பற்கு இயைய இரீஇய பின்
அகல் மனை காவல் ஆற்றுளி நிறீஇ
எண் திசை மருங்கினும் இவர் திரை ஏய்ப்ப
கண்ட பூம் திரை காழ் முதல் கொளீஇ
எழுது வினை கம்மத்து முழு முதல் கோத்த 135
முத்த மாலை முடி முதல் வருட
ஒத்த ஓரை நோக்கி ஓங்கிய
கைத்தொழில் நுனித்த வித்தக வாளர்
பொன் புனை நன் கலத்து இன்_பதம் ஆர்ந்த பின்

மணி அறைந்து அன்ன மாண் இரும் குஞ்சி 140
அணி வலம் சுரிந்த அமைதிக்கு ஏற்ப
வளர் பிறை அன்ன மல்லிகை கத்திகை
கிளர் பொன் போதொடு களை அற பிணித்த
வாக்கு அமை சிகை முதல் பாற்பட அடைச்சி
மகரம் கவ்விய மணி குழை காதினர் 145
தகரம் கலந்த தண் நறும் சாந்தினர்
பால் நிற வெண் துகில் ஆன தானையர்
இறைமகற்கு இயன்ற குறைவு_இல் செல்வமொடு
அந்தணர் ஈண்டி அடி துகள் ஆற்றி

மந்திர விதியின் வாய்_பூச்சு இயற்றி 150
தம் தொழில் முடித்து தலைவனை குறுகி
வெண் நிற மலரும் தண் நறும் சாலியும்
புண்ணிய புல்லும் பொன்னொடு முறைமையின்
மண் ஆர் மணி பூண் மன்னனொடு மாதரை
சென்னியும் உச்சியும் சேடுபட தெளித்து 155
கூப்பிய கையர் காப்பொடு பொலிந்த
அமரரும் முனிவரும் அமர்வனர் ஆகி
ஆயுளும் திருவும் போகமும் பொலிவும்
மேயினர் தருக என மிக பல வாழ்த்தி

மறையின் கிரிகையின் முறை அறிந்து ஓதி 160
மின் வாள் அழித்த மேதகு கைவினை
பொன் வாள் பற்றி பல் மாண் பொலிக என
வல-பால் சென்னி வகைபெற தீட்டி
இலக்கணம் பிழையா எஃகு அமை இருப்பின்
நீர் அளந்து ஊட்டிய நிறை அமை வாளினை 165
பஞ்சி பட்டொடு துரூஉ கிழி நீக்கி
பைம் கதிர் அவிர் மதி பாகத்து அன்ன
அம் கேழ் கல் மிசை அறிந்து வாய் தீட்டி
வெம் கேழ் துகில் மிசை விதியுளி புரட்டி

செம் கேழ் கையில் சிறந்து பாராட்டி 170
ஆசு_அறு நறு நீர் பூசனை கொளீஇ
வாள் தொழில் கம்மம் வல்லிதின் பிழையாது
சேட்டு எழில் பொலிந்த திரு முகக்கு ஏற்ப
மூரி கொள்ளான் முனிதல் செல்லான்
ஆவி கொள்ளான் அயர்ந்தும் பிறர் நோக்கான் 175
சீர் கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான்
கண்ணினும் மனத்தினும் கையினும் அமைத்த
மண்ணு வினை மயிர் தொழில் நல் நல நாவிதன்
எல்லை வகுப்ப

எதிர்நோக்கு ஆற்றா இலங்கு_இழை முகத்தையும் 180
மதி மாசு கழீஇய வண்ணம் போல
கதிர் மேல் இலங்க கைவினை முடித்த பின்
அடி வினை கம்மியர் வெடிபட அடுக்கிய
உயர் நல கோலத்து ஒள் ஒளி திகழ
வகை அமை கொல்லியின் வசை_அற துடைத்து 185
சேவடிக்கு ஏற்ப செழும் மதி பாகு என
வார் உகிர் குறைத்து வனப்பு வீற்றிரீஇய
ஒள் நிற கல்லின் நல் நிறம் பெறீஇ
விரலில் கொண்ட வெண் நிற நுண் தாது

விரி கதிர் மதியின் விளங்கு ஒளி அழிப்ப 190
நிறம் பெற உரிஞ்சி நேர் துகில் துடைத்தும்
தண் தாமரையின் அக இதழ் போல
பண்டே சிவந்த படிய ஆயினும்
கண்டோர் மருள கை வளம் காட்டி
அரத்த பஞ்சின் அணி நிறம் கொளீஇ 195
பரப்பும் விதிர்ப்பும் பருப்பும் இன்றி
அணி தலை சார்ங்கம் அணிபெற எழுதி
இரு வகை கம்மம் உரு ஒளி திகழ
வல்லோர் முடித்த பின்றை பல்லோர்

அரும் கல வெறுக்கை ஆர வீசி 200
விருப்புறு மனத்தவர் விண்ணவர் காப்ப
மன்னுக வேந்தே மண் மிசை நீடு என
அன்னவை கலந்த ஆர்வ நாப்பண்
எண்ணு வரம்பு அறியா இன்ப செல்வமொடு
மண்ணு வினை முடிந்தன்றால் மயிர் வினை மகிழ்ந்து என் 205
*2 இலாவாண காண்டம்

#5 மண்ணு நீராட்டியது
மயிர்_வினை_கம்மம் மரபுளி முடித்த பின்
வயிர கொடும் குழை வார்ந்த காதின்
பெருமகன் ஆடும் பீடு கெழு சிறப்பின்
திரு மண்ணு நறு நீர் விரைவதின் வருக என
உருமண்ணுவாவொடு வயந்தகன் உரைப்ப 5
ஐம்பெரும்குழுவும் எண்பேராயமும்
மன் பெரும் சுற்றமும் வம்ப மாந்தரும்
நிலை இடம் பெறாஅர் நெருங்குபு செற்றி
தலை இட மருங்கின் தமனிய தண் குடம்

ஆயிரத்து_ஓர்_எட்டு அணி மலர் வாய 10
முத்து தாமமொடு பொன் புரி அணிந்து
வித்தகர் புனைந்த சித்திர நெடும் குடை
எண் நறும் கோலமொடு கண்ணுற கவிப்ப
காரிகை வனப்பின் கன்னி மகளிர்
சீர் கெழு மெல் விரல் செறிய பற்றி 15
இடு மணி யானை இரும் புறத்து இருப்ப
படு கண் முழவொடு பல்_இயம் கறங்க
ஏம முரசம் இழும் என சிலைப்ப
காமர் சங்கம் வாய்வதின் முழங்க

வரித்த பூம் கொடி விரித்து விசும்பு இவர 20
பத்திர படாகை பல-வயின் நுடங்க
சாதிங்குலிகமொடு சமரம் ஒழுகிய
மேதகு முளை கால் கோதை துயல்வர
குத்து முளை செறித்த வித்தக விதானத்து
தண் எழில் நடுவண் நுண் எழில் நுனித்த 25
அயில் முனை வாளும் வயிர தோட்டியும்
கொற்றக்குடையும் பொன் பூம் குடமும்
வலம்புரி வட்டமும் இலங்கு ஒளி சங்கும்
வெண் கண்ணாடியும் செம் சுடர் விளக்கும்

கவரியும் கயலும் தவிசும் திருவும் 30
முரசம் படாகையும் அரசியல் ஆழியும்
ஒள் வினை பொலிந்த ஓமாலிகையும் என்று
எண்_இரண்டு ஆகிய பண் அமை வனப்பின்
கடி மாண் மங்கலம் கதிர் வளை மகளிர்
முடி மிசை ஏந்தி முன்னர் நடப்ப 35
வேலும் வாளும் கோலும் கொண்ட
காவல் இளையர் காவல் கொள்ள
மருப்பு நிலை கந்தின் இருப்பு எழு போக்கி
வயவர் காக்கும் வாயில் செல்வமொடு

கயவர் துன்னா கட்டிற்று ஆகி 40
படை அமை இட்டிகை பாடு அமை படுகால்
இடம் அமைத்து இயற்றிய ஏந்து நிலை கோணத்து
கழறு கால் அமைத்த கட்கு இன் வாவியுள்
நிழல் திகழ் தெள் நீர் நீலம் சூழ
பறவை தொழுதி பக்கம் நீக்கி 45
நிறைய முகந்து முறைமையின் ஏந்தி
ஐஞ்ஞூற்று_இரட்டி அணி இதழ் தாமரை
செம் நீர் போதொடு செறிய வீக்கி
பூம் சுமடு இரீஇ போற்றுவனர் தந்த

தேம் கமழ் நறு நீர் திறவதின் பற்றி 50
பணை முரசு இயம்பும் படை பெரு முற்றத்து
துணை நல தோழர் துன்னினர் சூழா
மண்ணு நீராட்டின் மலைந்தனர் ஆகி
வண்ண மணியும் வயிரமும் முத்தும்
இட்டன கொள்ளும் முட்டினர் ஆதலின் 55
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
தானம்-தோறும் தகைபெற குழீஇ
வித்தகர் வரித்த சித்திர நகர்-வயின்
பொன் பெரும் படு மணை முத்தொடு விரவி

சாலியும் உழந்தும் கால் வழி பரப்பி 60
பாஅய் அமைந்த பின்றை சேஎய்
செவ்வியின் சேர்ந்து சிறப்பொடு வணங்கி
எவ்வழியோரும் ஏத்தினர் எதிர்கொள
அவ்வழி இரீஇய பின்றை மெய்பெற
சங்கினும் பாலினும் சலம்_இல் வாய்மை 65
விழுத்திணை பிறந்த ஒழுக்கு உடை மரபினர்
நெய் தலைப்பெய்தற்கு எய்திய சிறப்பு அணி
ஏந்திய சென்னி மாந்தர் கூடி
அறுகை புல்லினும் வாகை தளிரினும்

நறு நெய் தோய்த்து முறை முதல் நீவி 70
நின் ஓர் அன்ன நீப்ப_அரும் காதல்
பொன் அணி புலவரொடு செம்மலை ஆகி
கொற்றம் கொண்டு கோல் இனிது ஓச்சு என
வெற்ற வெள் வேல் வீரியன் புகழ்ந்து
மடவரல் மாதரை மணம்புரி காதலற்கு 75
இட-வயின் இருத்தல் கடவது ஆகலின்
தம் கர செல்வம் தலைத்தலை தரூஉம்
மங்கல மணை மிசை வெண் துகில் புதைஇ
இருக்கை திருத்திய பின்றை திருத்தகு

மறு_இல் தொல் குடி மங்கல மடந்தையர் 80
நறு வெண் சாந்தின் நல் நலம் குயில
கொடி பல எழுதிய கோல தோளினர்
முடி மிசை அணிந்த முல்லை அம் கோதை
கொடும் குழை திளைக்கும் காதினர் கடும் கதிர்
கலாவம் புதைத்த நிலா வெண் துகிலினர் 85
நுரை புரை கலிங்கம் ஒரு முலை புதைப்ப
திரு கொடி சாலி செம்பொன் வாகை என்று
ஒருப்படுத்து ஊழூழ் முறைமையின் ஏந்தி
நானம் கலந்த நறு நெய் தோய்த்து

தானம்-தோறும் தலை முதல் உறீஇ 90
கொண்டோன் வேட்கும் குறிப்பினை ஆகி
தண்டா புலமொடு மகளிரை தழீஇ
திரு மனை கிழமையின் ஒரு மீக்கூரி
கற்பு மேம்படீஇயர் பொன்_தொடி பொலிந்து என
நல் பல கிளவி பற்பல பயிற்றி 95
நெய் தலைப்பெய்த பின்றை மெய்-வயின்
மென்மையும் நேயமும் நன்மையும் நாற்றமும்
ஒரு நாள் பூசினும் ஓர் யாண்டு விடாஅ
திரு மாண் உறுப்பிற்கு சீர் நிறை அமைத்து

கரும வித்தகர் கை புனைந்து இயற்றிய 100
வாச வெண் நெய் பூசினர் போற்றி
நூல் வழி நுனித்த நுழை நுண் உணர்வினர்
நால் வகை கோலத்து நால் வகை மாக்கள்
தாமரை மூய தமனிய குட நீர்
தாம் முறை சொரிந்து தம் முறைமையின் ஆட்டி 105
செய்த கோலம் சிதைய மறலி
பெய்தல் நாடி பேதையர் பிணங்கி
அத்தின் எறிந்து முத்து பரிந்திட்டும்
சித்திர நுண் துகில் சேர்ந்த அல்குல்

பத்தி பல் காசு பரிந்தனர் உகுத்தும் 110
கோதை பரிந்தும் குட நீர் தூயும்
மான் ஏர் நோக்கியர்
போது விரி பொய்கையுள் புக்கனர் புரிந்தும்
குளித்த மகளிரொடு திளைத்தல் ஆனார்
குடைந்த வெண் நுரை குடங்கையின் வாரி 115
தடம் கண் சிவப்ப எறிதலின் நடுங்கி
விம்முவனர் தளர்ந்து மென்மெல ஒதுங்கி
கூந்தல் சோர பூம் துகில் அசைஇ
வேந்தன் மகளொடு விளையாட்டு விரும்பி

வண்ண மகளிரும் மைந்தரும் மயங்கி 120
மண்ணு நீராட்டின் மரபுளி கழிந்த பின்
திருமணுத்தானம் பெரு மண் உள்ளிட்டு
மண்ணுறு மணியும் மாலையும் தூசும்
கண்ணுற மொய்த்த கழி பேர் அவாவினின்று
ஏற்கும் மாந்தர்க்கு ஆற்ற வீசி 125
பூவினுள் பொலிந்த தாமரை போல
தா_இல் அணியின் தான் மீக்கூரிய
அறுவைக்கு ஓதிய ஐ வகை வண்ணத்து
துறை விதி நுனித்த தூ தொழிலாளர்

கண் துளங்கு அவிர் ஒளி கழூஉ நிறம் பெறீஇய 130
வெண் துகில் இணை மடி விரித்தனர் உடீஇ
செய்த கோலத்து சித்திரம் காண
வெய்யொன் கதிர் ஒளி வீசு வளி நுழையா
இரும் பணி பெற்ற அரும் பணை படுகால்
மேற்புறம் அமைந்த விளங்கு மணி வேயுள் 135
யாப்புறு மண்டபத்து ஆசனத்து இரீஇ
கோப்புறு விழு கலம் ஏத்துவனர் காட்டி
கன மணி முடியும் கதிர் முத்தாரமும்
இன மணி பூணும் ஏக வட்டமும்

வயிர குழையும் வல் வினை பொலிந்த 140
நெடும் தோள் வளையும் கடும் கதிர் கடகமும்
நாமர வளியும் காமர் கைவினை
சித்திர புனையலும் பத்திர சுரிகையும்
பத்தி கச்சினொடு ஒத்தவை பிறவும்
ஆர் அணங்கு ஆகிய பேர் அணிகலங்களும் 145
உழை பெரும் சிலதியர் பிழைப்பு இலர் நீட்ட
அரு வரை பிளந்த அஞ்சுவரு நெடு வேல்
ஒரு வலத்து உயரிய பொரு_இல் புள் கொடி
தளை அவிழ் நறும் தார் தனக்கு இணை இல்லா

இளையவன் படிவம் ஏற்ப இயல்புறீஇ 150
சித்திர இருநிதி செம் நெறி நுனித்த
வித்தக வினைஞர் தம்முடன் வந்து
வடிவு கண்டிடும் வத்தவர் பெருமகன்
ஒடிவு_இல் வென்றி உதயணகுமரன்
ஒரு மெய் சேர்ந்து இவை பெருமை பெறுக என 155
அருளின் அணியின் அல்லதை இவற்கு இவை
உரு என அணியா உறுப்பு முதல் அணிதலின்
புண்ணியம் உடைய இ பொன் அணிகலன் என
எண்ணிய நெஞ்சமொடு நுண் வினை பொலிந்த

கோல வித்தகர் வால் அணி புனைய 160
ஆரா காதல் அவந்திகை-தன்னையும்
நீராட்டு இடத்தின் நீக்கி நடுவிற்கு
பாரம் ஆகிய பல் காசு புதைஇ
ஈர நுண் துகில் அகற்றி ஏர் உடை
கோடி பூம் துகில் கொய்து விளிம்பு உரீஇ 165
சேடார் அல்குல் சேடுபட உடீஇ
வல்லவர் வகுத்த மல் வினை நகர்-வயின்
பொன் மணை பொலிய போற்றுவனர் இரீஇ
நல் மண கோலத்து கை நலம் நுனித்த

அம் கலுழ் பணை தோள் மங்கல மகடூஉ 170
கட்டிய கச்சையள் கைவிரல் கூப்பி
நெட்டு இரும் கூந்தல் நீர் அற வாரி
பன்னு முறை விரித்து பின்னுபு தொகுத்து
கோட்டிடை வளைஇய குஞ்சர தட கையின்
சூட்டொடு விரைஇ சுற்றுபு முடித்து 175
பத்தி பலகை பரிசார கைவினை
வித்தக பத்தி வேறுபட விரித்தவை
ஒழுக்க முறை அறிந்து வழக்கு இலள் வைத்து
முடி கலம் முதலா முறைமுறை தோன்றும்

அடி கலம் ஈறா அணிந்து அழகு பெறீஇ 180
வாச நறும் சாந்து வகைபெற பூசி
மாசு_இல் திரு_மகள் வண்ணம் பழிப்பதோர்
கோலம் செய்து கொண்டு அகம் புக்கு
கடி நகர் வரைப்பில் கல்லென் சும்மையொடு
அடிசில் அயினி ஆர்_பதம் அயின்று 185
மன் பெரும் போகத்து மகிழ்ந்து விளையாடி
இன்புற்றனரால் இருவரும் இயைந்து என்
*2 இலாவாண காண்டம்

#6 தெய்வச் சிறப்பு
இன்புற்று இருவரும் இயைந்து உடன் போகிய
நன் பெரும் காலை நல்லோர் குழீஇ
கண் கெழு பெரும் சிறப்பு இயற்றி பண்புளி
பூ புரி மாடத்து போற்று என புகாஅ
தேவ குலத்தொடு திரு நகர் வலம் செயல் 5
காவல குமரர் கடி_நாள் கடன் என
வென்றி முழக்கம் குன்றாது வழங்குநர்
முன்னர் நின்று முன்னியது முடிக்க என
மங்கல மரபினர் மரபில் கூற

காவல குமரனும் கடி நகர் வலஞ்செய 10
மேவினன் அருள மேவர புனைந்த
பசும்பொன் அலகில் பவழ திரள் கால்
விசும்பு இவர் மதி உறழ் வெண் பொன் போர்வை
தாம நெடும் குடை தகைபெற கவிப்ப
காமர் கோலம் காண்-மின் நீர் என 15
ஏம செங்கோல் ஏயர் பெருமகன்
செம்பொன் செருப்பில் சேவடி இழிந்து
வெண் பூ நிரந்த வீதியுள் இயங்கி
நகர் வலம் கொள்ளும் நாள் மற்று இன்று என

பகல் அங்காடியில் பல்லவர் எடுத்த 20
பல் வேறு கொடியும் படாகையும் நிரைஇ
ஆறு புகு கடலின் மாறு திரை மான
கண்ணுற்று நுடங்கி கார் இருள் கழுமி
விண்ணுற்று இயங்கும் வெய்யோன் அழுங்க
மரீஇய மாந்தரும் மனை கெடுத்து உழன்று இது 25
பொரீஇ காணின் போக பூமிக்கு
இரு மடங்கு இனிது என பெரு நகர் உற்ற
செல்வ கம்பலை பல் ஊழ் நிறைந்து
மாண் பதி உறையுநர் காண்பது விரும்பி

தன்னின் அன்றியும் தமக்கு வழி வந்த 30
குல பெரும் தெய்வம் கூப்புதலானும்
அரி மலர் கண்ணியொடு அக நாட்டு பெயரும்
கரும காலை பெரு வரம் பெறுக என
உள்ளகத்து உணர்ந்ததை உண்மையானும்
சுருக்கம் இன்றி சுடர் பிறை போல 35
பெருக்கம் வேண்டி பெரு நில மன்னவன்
ஆர் அணங்கு ஆகிய அறிவர் தானத்து
பூரண படிமை காண்டலானும்
இன்னவை பிறவும் தன் இயல் ஆதலின்

ஆண பைம்பொன் அடி தொடை பலகை 40
கோணம் கொண்ட கொளூஉ திரள் சந்து மிசை
உறுப்பு பல தெரிந்த சிறப்பிற்று ஆகி
செம்பொன் இட்டிகை திண் சுவர் அமைத்து
குடமும் தாமமும் கொழும் கொடி பிணையலும்
அடர் பூம் பாலிகை அடி முதல் குளீஇ 45
புடை திரண்டு அமைந்த போதிகை பொன் தூண்
வேண்டு அக மருங்கில் காண் தக நிறீஇ
வரி மான் மகர மகன்றில் யானை
அரி மான் அன்ன மணி நிற எண்கு இனம்

குழவி பாவையொடு அழகுபெற புனைந்து 50
பொரு_இல் பூதத்து உருவுபட வரீஇ
மரகத மாலை நிரல் அமைத்து இரீஇ
எரி மலர் தாமரை இலங்கு ஒளி எள்ளிய
திரு மணி கபோதம் செறிய சேர்த்தி
பத்தி பல் வினை சித்திர குலாவின் 55
ஒத்து அமைத்து இயன்ற சத்தி கொடி உச்சி
வித்தக நாசி வேண்டு இடத்து இரீஇ
தூண் மிசைக்கு ஏற்ப ஏண் முள் அழுத்திய
போதிக்கு ஒத்த சாதி பவழ

கொடும் காழ் கோவை கடும் கதிர் பணி திரள் 60
அம் வயிற்கு ஏற்று கவ்விதின் பொலிந்து
நீல உண் மணி கோல குழிசி
புடை துளைக்கு ஏற்ற இடை துளை யாப்பின்
அமைத்து உருக்கு இயற்றிய ஆடக பொன்னின்
விசித்திரத்து இயற்றிய வித்தக வேயுள் 65
தீம் சுவை நெல்லி திரள் காய் தாரையுள்
கூப்புபு பிணித்த கூட பரப்பில்
கட்டளை அமைத்து கட்கு இனிது ஆகி
எட்டு வகை பெரும் சிறப்பு ஏற்ப எழுதி

ஒட்டிய வனப்பினோர் ஓட உத்தரத்து 70
ஒண் மணி புதவில் திண்ணிதின் கோத்த
பொறி நிலை அமைந்த செறி நிலை பலகை
வள்ளியும் பத்தியும் உள் விரித்து எழுதி
ஒள் ஒளி திகழும் வெள்ளி கதவின்
பக்கம் வளைஇய நித்தில தாமம் 75
சித்திர மாலையொடு சிறந்து ஒளி திகழ
வளவிற்கு அமைந்தவாயிற்று ஆகி
நிலவிற்கு அமைந்த நிரப்பம் எய்தி
மண்ணினும் மரத்தினும் மருப்பினும் அன்றி

பொன்னினும் மணியினும் துன் எழில் எய்தி 80
அடியிற்கு ஏற்ற முடியிற்று ஆகி
அம் கண் மாதிரத்து அணி அழகு உமிழும்
பைம் கதிர் செல்வனொடு செம் கதிர்க்கு இயன்ற
வால் ஒளி மழுங்க மேல் ஒளி திகழ
பரூஉ பணை பளிங்கில் பட்டிகை கொளீஇ 85
வேல் தொழில் பொலிந்த மாற்று மருங்கு அமைத்து
காம்பும் கதிரும் கூம்பு மணி குமுதமும்
பாங்குற நிரைத்த பயிற்சித்து ஆகி
பத்தி சித்திர பல் மணி கண்டம்

வித்தக வண்ணமொடு வேண்டிடத்து அழுத்தி 90
அரும்பும் போதும் திருந்து சினை தளிரும்
பெரும் தண் அலரொடு பிணங்குபு குலாஅய்
உருக்குறு பசும்பொன் உள் விரித்து ஓட்டி
கருத்தின் அமைந்த காமவள்ளி
கோண சந்தி தோரணம் கொளீஇ 95
மாலை அணி நகை மேலுற வளைஇ
நீல திரள் மணி கோல கரு நிரை
இடையிற்கு ஏற்று புடையில் பொலிந்து
விழைதகும் விழு சீர் மந்த மா மலை

முழையின் போதர முயற்சி போல 100
முதல் நிலை பலகை சுவன் முதல் ஓச்சி
மூரி நிமிர்வன போல ஏர் பெற்று
வைந்நுதி அமைந்த வயிர வாயில்
கண் நிழல் இலங்கும் ஒளியிற்று ஆகி
பவழ நாவின் திகழ் மணி பகு வாய் 105
பசு மணி பரூஉ செவி பல் மணி கண்டத்து
உளை மயிர் அணிந்த உச்சிக்கு ஏற்ப
வாய் புகு அன்ன வந்து ஒசி கொடி போல்
சென்று செறிந்து இடுகிய நன்று திரள் நடுவில்

தகை மணி கோவை தன் கைக்கு ஏற்ப 110
பரூஉ திரள் குறங்கின் பளிக்கு மணி வள் உகிர்
திருத்தம் செறிந்து திகழ்ந்து நிழல் காட்டும்
உருக்குறு தமனியத்து ஒண் பொன் கட்டில்
அணி பொலிந்து இயன்ற அழல் உமிழ் அரிமான்
உச்சியில் சுமந்துகொண்டு ஓங்கு விசும்பு இவர்தற்கு 115
நச்சி அன்ன உட்குவரு உருவின்
தரு மாண் ஆசன திரு நடு இலங்க
இருந்த வேந்தை பொருந்து மருங்குல்
தலை வாய் உற்று தலை எழில் பொலிந்து

சிலை கவிழ்த்து அன்ன கிம்புரி கவ்வி 120
நிழல் காட்டு ஆடி நிழல் மணி அடுத்து
கோலம் குயின்ற நீல சார்வு அயல்
வாடா தாரினர் சேடு ஆர் கச்சையர்
வட்டு உடை பொலிந்த கட்டு உடை அல்குலர்
மலர்ந்து ஏந்து அகலத்து இலங்கு மணி ஆரத்து 125
உடன் கிடந்து இமைக்கும் ஒரு காழ் முத்தினர்
முழவு உறழ் மொய்ம்பினர் முடி அணி சென்னியர்
கழு மணி கடிப்பினர் கடக கையினர்
புடை திரண்டு அமைந்த பொங்கு சின நாகம்

இடை நிரைத்து அன்ன எழில் வளை கவ்விய 130
எழு உறழ் திணி தோள் எடுத்தனர் ஏந்தி
புடை இரு பக்கமும் போதிகை பொருந்தி
தொடை அமை கோவை துளங்கு மணி பல் நகை
முகிழ் முடி சிறு நுதல் முதிரா இளமை
மகிழ் நகை மங்கையர் மருங்கு அணியாக 135
புடை திரண்டு இயங்கும் பொங்கு மணி கவரி
அடை வண்டு ஓப்பும் அவாவினர் போல
எழில் மணி இயக்க தொழில் கொண்டு ஈய
மணி விளக்கு உமிழும் அணி நிலா சுவர் மிசை

வல தாள் நீட்டி இட தாள் முடக்கி 140
பொன் பொலிந்து இயலும் பொங்கு பூம் தானை
பசும்பொன் கச்சை பத்தியில் குயின்ற
விசும்பகம் நந்தும் வேட்கையர் போல
தாமரை தட கையில் தாமம் ஏந்தி
விச்சாதரர் நகர் எ சாரும் மயங்கி 145
நீல் நிற முகில் இடை காமுற தோன்ற
திரு முடி இந்திரர் இரு நில கிழவர்
உரிமை மகளிரொடு உருபுபட புனைந்த
பொத்தக கைவினை சித்திர செய்கை

தம்தம் தானத்து அத்தக நிறீஇ 150
அழகுபட புனைந்த அலங்கு மணி தவிசின் மிசை
நிறை கதிர் வெண் மதி நிலா ஒளி விரிந்து
முறையின் மூன்று உடன் அடுக்கின போல
தாம மு_குடை தாம் முறை கவிப்ப
உலக வெள்ளத்து ஆழும் பல் உயிர்க்கு 155
அலகை ஆகிய அரும் தவ கிழவனை
இருக்கை இயற்றிய திரு தகு செல்வத்து
ஆர் அணங்கு ஆகிய அணி கிளர் வனப்பின்
பூரணம் பொலிமை புகழ்ந்து மீக்கூறி

திரு மணி அடக்கிய செம்பொன் செப்பின் 160
அரு மணி சுடரும் அராஅந்தாணம்
உரிமை சுற்றமொடு ஒருங்கு உடன் துவன்றி
கதி விளக்குறூஉம் கருத்தினன் போல
விதியில் சேர்ந்து துதியில் துதித்து
பெறற்கு_அரும் பேதையை பெறுக என பரவி 165
சிறப்பு எதிர் கொள்கை சித்தி கிழவன்
பேர் அறம் பேணிய சீர் நெறி சிறப்பின்
தெய்வதை அமர்ந்து என கைம்முதல் கூப்பி
விரவு மலர் போதொடு வேண்டுவ வீசி

பரவு கடன் கழித்தனன் பைம் தாரோன் என் 170
* 2 இலாவாண காண்டம்

#7 நகர் வலம் கொண்டது
பரவு கடன் கழிந்து விரவு பகை தணிந்த
தாமம் துயல்வரும் காமர் கைவினை
கோயில் முற்றத்து வாயில் போந்து
குன்று கண் கூடிய குழாஅம் ஏய்ப்ப
ஒன்று கண்டு அன்ன ஓங்கு நிலை வனப்பின் 5
மாடம் ஓங்கிய மகிழ் மலி மூதூர்
யாறு கண்டு அன்ன அகன் கனை வீதியுள்
காற்று உறழ் செலவில் கோல் தொழில் இளையர்
மங்கல மரபினர் அல்லது மற்றையர்

கொங்கு அலர் நறும் தார் குமரன் முன்னர் 10
நில்லன்-மின் நீர் என நீக்குவனர் கடிய
மல்லல் ஆவணத்து இரு புடை மருங்கினும்
நண்ணா மாந்தர் ஆயினும் கண்ணுறின்
இமைத்தலுறாஅ அமைப்பின் மேலும்
புது மண கோலத்து பொலிவொடு புணர்ந்த 15
கதிர் முடி மன்னனை காண்பது விரும்பி
மணி அறைந்து அன்ன மா வீழ் ஓதி
அணிபெற கிடந்த அம் பொன் சூட்டினர்
சூடுறு பொன் வினை சுவணர் புனைந்த

தோடும் கடிப்பும் துளங்கு காதினர் 20
வெம்மை பொதிந்த பொம்மென் இள முலை
இடைப்படீஇ பிறழும் ஏகவல்லி
அணி கலை புனைந்த அரசிலை பொன் அடர்
புனல் சுழி புரையும் பொலிவிற்று ஆகி
வனப்பு அமை அம் வயிற்று அணி தக கிடந்த 25
உந்தி உள்ளுற வந்து உடல் நடுங்கி
அளைக்கு இவர் அரவின் தளர்ச்சி ஏய்ப்ப
முளைத்து எழு முலை கச்சு அசைத்தலின் அசைந்த
மருங்குல் நோவ விரும்புபு விரைந்து

மை வரை மீமிசை மகளிர் போல 30
செய் வளை மகளிர் செய் குன்று ஏறினர்
உணர்ந்தோர் கொண்ட உறு நன்று ஏய்ப்ப
வணர்ந்து ஏந்து வளர் பிறை வண்ணம் கடுப்ப
திரு நுதற்கு ஏற்ற பரிசர கைவினை
நீடிய பின்றை கூடாது தாங்கும் 35
கொற்றவன் காண்ம் என வெற்றி வேல் தட கையர்
கோல வித்தகம் குயின்ற நுட்பத்து
தோடும் கடிப்பும் துயல்வரும் காதினர்
வால் இழை மகளிர் வழிவழி விலக்கவும்

ஒன்பது விருத்தி நல் பதம் நுனித்த 40
ஓவ வினையாளர் பாவனை நிறீஇ
வட்டிகை வாக்கின் வண்ண கைவினை
கட்டளை பாவை கடுப்ப தோன்றி
குறை வினை கோலம் கூடினர்க்கு அணங்காய்
நிறை மனை வரைப்பில் சிறை என செய்த 45
சுவர் சார்வு ஆக துன்னுபு நிரைத்த
நகர் காண் ஏணி விரைவனர் ஏறினர்
ஒரு புடை அல்லது உட்குவரு செங்கோல்
இரு புடை பெயரா ஏயர் பெருமகன்

சிதை பொருள் வலியா செறிவு உடை செய் தொழில் 50
உதயணகுமரன் வதுவைக்கு அணிந்த
கோலம் கொண்ட கோல் வளை மகளிருள்
ஞாலம் திரியா நல் நிறை திண் கோள்
உத்தம மகளிர் ஒழிய மற்றை
கன்னியர் எல்லாம் காமன் துரந்த 55
கணை உளம் கழிய கவின் அழிவு எய்தி
இறை வளை நில்லார் நிறை வரை நெகிழ
நாண் மீது ஊர்ந்து நல் நெஞ்சு நடப்ப
தோள் மீது ஊர்ந்து தொலைவு இடம் நோக்கி

அற்றம் பார்க்கும் செற்ற செய் தொழில் 60
பற்றா மாந்தரின் பசலை பாய்ந்த
கரும் கண் புலம்ப வருந்தினர் அதனால்
காட்சி விரும்பன்-மின் மாட்சி இன்று என
ஈனா தாயர் ஆனாது விலக்கும்
ஆணை மறுத்து யாம் ஆணம் உடைமையின் 65
இ நகர் காண்க எம் அன்னைமார் என
கண்ணின வேட்கை பின் நின்று துரப்ப
வாயில் மாடத்து மருங்கு அணி பெற்ற
வரி சாலேகம் விரித்தனர் அகற்றி

ததும்பும் கிண்கிணி தகை மலர் சேவடி 70
பெதும்பை மகளிர் விதும்பி நோக்கினர்
நேர் இயல் சாயல் நிகர் தமக்கு இல்லா
காரிகை கடு நுனை தூண்டில் ஆக
உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும்
கட்கு இன் கோலமும் கட்டு இரை ஆக 75
இரும் கண் ஞாலத்து இளையோர் ஈட்டிய
அரும் கல வெறுக்கை அவை மீன் ஆக
வாங்குபு கொள்ளும் வழக்கு இயல் வழாஅ
பூம் குழை மகளிர் புனை மணி பைம் பூண்

ஒளி பெற்று இலங்கும் உதயணகுமரன் 80
அளி பெற்று அமர்ந்த அம் பூம் சேக்கையுள்
உவக்கும் வாய் அறிந்து ஊடி மற்று அவன்
நயக்கும் வாயுள் நகை சுவை புலவியுள்
நோக்கு அமை கடவுள் கூப்பினும் கதுமென
பூம் போது அன்ன தேங்கு வளை தட கை 85
வள் உகிர் வருட்டின் உள் குளிர்ப்புறீஇ
பஞ்சி அணிந்த அம் செம் சீறடி
பொன் அணி கிண்கிணி போழ் வாய் நிறைய
சென்னி தாமத்து பல் மலர் தாது உக

இரந்து பின் எய்தும் இன் சுவை அமிர்தம் 90
புணர கூடின் போகமும் இனிது என
மீட்டல் செல்லா வேட்ட விருப்பொடு
கோடு கொள் மயிலின் குழாஅம் ஏய்ப்ப
மாடம்-தோறும் மலிந்து இறைகொண்டனர்
சுவல் பொதி கூழையர் சுடர் பொன் தோட்டினர் 95
பெயலிடை பிறழும் மின் ஏர் சாயலர்
பாப்பு எயிற்று அன்ன பல் நிரை தாலி
கோப்பு முறை கொண்ட கோல கழுத்தினர்
மணி நில மருங்கின் முனிவு இலர் ஆடும்

பந்தும் கழங்கும் பட்டுழி கிடப்ப 100
அம் தண் மஞ்ஞை ஆடு இடம் ஏய்ப்ப
கோதையும் குழலும் துள்ளுபு விரிய
பேதை மகளிர் வீதி முன்னினர்
வெண் முகில் நடுவண் மீன் முகத்து எழுதரும்
திரு மதி என்ன திலக வாள் முகம் 105
அரு மணி மாடத்து அக-வயின் சுடர
வாள் கெழு மழை கண் வாசவதத்தை
தோட்கு தக்க தொடு கழல் குருசிலை
கண்டீர் நீங்கி காண் இடம் தம் என

விண் தீர் மகளிரின் வியப்ப தோன்றி 110
அரி மதர் நெடும் கண் அளவு இகந்து அகல
இரு முலை பொன் பூண் இட-வயின் திருத்தா
தெரிவை மகளிர் தே மொழி கிளவி
குழி தலை புதல்வர் எழில் புறம் வரித்த
அம் சாந்து அழிய ஆகத்து அடக்கி 115
நுண் சாலேகத்து எம்பரும் நோக்கினர்
அறம் புரி செங்கோல் அவந்தியர் பெருமகன்
மறம் புரி தானை மற மாச்சேனன்
பாவையர் உள்ளும் ஓவா வாழ்க்கை

ஏசுவது இல்லா வாசவதத்தையும் 120
காமன் அன்ன கண் வாங்கு உருவின்
தாமம் தாழ்ந்த ஏம வெண் குடை
வத்தவர் இறைவனும் முற்பால் முயன்ற
அ தவம் அறியின் எ திறத்து ஆயினும்
நோற்றும் என்னும் கூற்றினர் ஆகி 125
மணி நிற மஞ்ஞையும் சிங்கமும் மயங்கி
அணி மலை இருந்த தோற்றம் போல
மகளிரும் மைந்தரும் தொகை கொண்டு ஈண்டி
மாடம்-தோறும் மலர் மழை பொழிய

ஆடு அம்பலமும் ஆவண மறுகும் 130
கீத சாலையும் கேள்வி பந்தரும்
ஓது சாலையும் சூது ஆடு கழகமும்
ஐ வேறு அமைந்த அடிசில் பள்ளியும்
தம் கோள் ஒழிந்த தன்மையர் ஆகி
மண் காமுறூஉம் வத்தவர் மன்னனை 135
கண் காமுற்ற கருத்தினர் ஆகி
விண் மேல் உறையுநர் விழையும் கோலமொடு
மென் மெல நெருங்கி வேண்டு இடம் பெறாஅர்
அரும் பதி உறைநர் விரும்புபு புகழ

அரும் தவம் கொடுக்கும் சுருங்கா செல்வத்து 140
உத்தர குருவம் ஒத்த சும்மை
முத்து மணல் வீதி முற்று வலம் போகி
தெய்வ மாடமும் தேர் நிலை கொட்டிலும்
ஐயர் தானமும் அன்னவை பிறவும்
புண்ணிய பெயர் இடம் கண்ணின் நோக்கி 145
நாட்டகம் புகழ்ந்த நல் நகர் புகல
மீட்டு அகம் புக்கு மேவரு செல்வமொடு
மங்கல மண்ணு நீர் மரபின் ஆட
கொங்கு அலர் கோதையை பண்டு முன் பயின்ற

தோழி-தானே தாழாது விரும்பி 150
கை நவில் கம்மத்து கம்மியன் புனைந்த
செய் கலத்துள்ளும் சிறந்தவை நோக்கி
ஏற்கும் தானத்து பாற்பட அணிந்து
பால் நீர் நெடும் கடல் பனி நாள் எழுந்த
மேல் நீர் ஆவியின் மெல்லிது ஆகிய 155
கழு மடி கலிங்கம் வழு_இல வாங்கி
ஒண் மணி காசின் பல் மணி பாவை
கண்ணிய காதல் உள் நெகிழ்ந்து விரும்பி
ஆடற்கு அவாவும் அமிழ்தம் சோர

ஊடு போழ்ந்து உறழ ஒளி பெற உடீஇ 160
மாலையும் சாந்தும் மங்கல மரபின்
நூலின் திரியாது நுண் எழில் புரிய
புதுவது புனைந்த பூம் கொடி புரையும்
வதுவை கோலத்து வாசவதத்தை
புதுமை காரிகை புது நாண் திளைப்ப 165
கதிர் விளங்கு ஆரத்து காமம் கழுமி
அன்னத்து அன்ன அன்பு கொள் காதலொடு
பொன் நகர்க்கு இயன்ற புகர்_இல் புகழ் நகர்
வரைவு_இல் வண்மை வத்தவர் மன்னற்கு

பொரு_இல் போகம் புணர்ந்தன்றால் இனிது என் 170
* 2 இலாவாண காண்டம்

#8 யூகி போதரவு
போகம் புணர்ந்த பொன் நகர் அவ்வயின்
வேக தானை வேந்தன் மகளோடு
ஏக செங்கோல் ஏயர் பெருமகன்
போகம் கழுமி புணர்ந்து விளையாட
யூகிக்கு இப்பால் உற்றது கூறுவென் 5
கண் அகன் கிடக்கை கலி கெழும் ஊழியுள்
மண்ணகம் தழீஇ மன்னிய ஊழி-தொறும்
புண்ணிய உலகிற்கும் பொலிவிற்றாம் என
தொன்று ஓங்காளர் துணியப்பட்ட

பொன்றா இயற்கை புகழது பெருமையும் 10
ஆன் முலை பிறந்த வால் நிற அமிர்தம்
மலை பெய் நெய்யொடு தலைப்பெய்தாங்கு
வேறுபட்டு ஏகினும் கூறுபட்டு இயலா
அன்பினின் அளைஇய நண்பின் அமைதியும்
அசைவு_இல் தானை விசைய வெண் குடை 15
பெரு நில மன்னர் கருமம் காழ்த்த
அரு மதி நுனித்த அமைச்சின் ஆற்றலும்
இன்னவை பிறவும் தன்-வயின் தாங்கி
மன்று அணி வீதி மதில் உஞ்சேனையுள்

வென்ற கொற்றமொடு விசயம் எய்தி 20
இறைவன் பிரிக்கும் அறிவில் சூழ்ந்த
படிவ உருவம் பட்டாங்கு எய்தி
இடி உறழ் முரசின் ஏயர் இறைவன்
கண்ணியது முடித்து காரிகை பொலிந்த
வண்ண கோதை வாசவதத்தையொடு 25
வழி முதல் கொண்ட கழி முதல் கங்குலின்
மல்கு கடல் தானை மன்னரை வணக்கி
பில்கு களி யானை பிரச்சோதனன் எனும்
ஐ_தலை_நாகம் அழல வெகுட்டி

பைம் தளிர் கோதையை பற்றுபு தழீஇ 30
சிறை கொளப்பட்டு செல்வம் நீத்த
குறை_மகன் என்பது கோடல் செல்லாது
திரு மனன் நெகிழ்ந்த அருள் மலி அன்பொடு
தந்தனன் கோமான் என்று தலைவணங்கி
ஒண் தார் மார்பன் உதயணன் பணி மொழி 35
மந்திரமாக மகள்-மாட்டு இயைந்தவை
அன்று அவன் உள்ளத்து அகம் உண வராகன்
உரைத்த வண்ணமும் மிக பலவாக
தொல்லோர் முன்னர் தோன்ற காட்டி

ஒல்கா வென்றி உதயணன் தடைஇய 40
வெல் போர் பெரும் படை வேந்தன் விடுத்ததும்
விடுத்த பெரும் படை விளிய தாக்கி
உடைத்த தோழர் ஊக்க வென்றியும்
வென்றி வியல் நகர் வெம் துயர் உற்றதும்
பட்டாங்கு உணர்ந்தும் உள் தாங்கு இயற்றி 45
உணராதான் போல் ஒரு மீ கொற்றவன்
புணராதார் முன் பொச்சாப்பு அஞ்சி
வணங்கு கொடி மருங்குல் வாசவதத்தையை
பயந்து இனிது எடுத்த பத்தினி தெருட்டி

உயர்ந்த கோயிலுள் ஒடுங்கிய ஒடுக்கமும் 50
நளி வரை அன்ன நளகிரி ஏறி
ஒளி மணி கொடும் பூண் உதயணகுமரனை
பற்றுபு தம்-மின் செற்று என பகைகொண்டு
வெற்ற வேந்தன் வெகுண்டு எழல் இன்மையும்
இனையவை பிறவும் புனை நகர் வரைப்பினும் 55
கோயில் முற்றத்தும் வாயில் மருங்கினும்
வம்பலர் மொய்த்த அம்பலத்து அகத்தும்
யானை தானத்தும் அரும் தவ பள்ளியும்
தானை சேரியும் தான் எடுத்து உரைக்கும்

பாடை அறியா தேசிக சேரியும் 60
ஓதுநர் சாலை அகத்தும் ஓவா
சூது பொரு கழகத்து அருகலும் தோம்_இல்
நல்லதும் தீயதும் அறிந்து அகத்து அடக்கா
மட்டு மகிழ் மகளிர் துட்ட சேரியும்
காரிகை பகரும் கரும் கடை மழை கண் 65
வார் கொடி மகளிர் வள நகர் வரைப்பினும்
குதிரை பந்தியும் கோடிகர் வரைப்பினும்
மதி மயக்குறூஉம் மறுகு அணி கடையினும்
நீர் துறை கரையினும் கூத்து உறை சேரியும்

மன்றும் சந்தியும் ஒன்று கண்டு அன்ன 70
ஊர் முழுது உள்வழி கார் முழுது உலாஅம்
கடு வளி வரவின் ஒடியா கற்பின்
நறு நுதல் பணை தோள் நங்கையை நம் இறை
உறு வரை மார்பின் உதயணற்கு உள்ளத்து
அருளொடும் போக்கி பொருளொடும் புணர்த்தமை 75
யாவிரும் அறைவிர் அன்று எனின் மற்று இவன்
காவல் அ வழி காணலெம் யாம் என
மங்கையர் நாப்பண் மறவோர் எடுத்த
கம்பலை புற மொழி நன் பல கேட்டும்

கூற்ற வேழம் அடக்கிய குமரற்கு 80
காற்றும் எரியும் கலந்து கைகொடுப்ப
மயக்கம் எய்தி மாண் நகர் மாந்தர்
கயக்கம் இன்றி கடை இடை தெரியார்
தம்முள் தாக்கிய விம்ம வெகுட்சியுள்
பொரு முரண் அண்ணல் பூம் தார் அகலத்து 85
திரு_மகள்-தன்னின் தீராது இயைந்தனள்
இன்னும் அவனே கல் நிரை கானகத்து
காதலில் காப்ப தீது_இலள் ஆகி
புக்கனள் அவனொடு புனை பிடி ஊர்ந்து என

தொக்க மாந்தர் நல் பொருள் பொதிந்த 90
வாய்ப்புள் கொண்ட வலிப்பினன் ஆகி
யாப்பு உள்ளுறுத்த அமைதி சூழ்ச்சியன்
செறிந்த செய்கை அறிந்து மனத்து அடக்கி
செறுநன் போல செல்வ வேந்தனும்
உறுநர் வேண்டும் உள் பொருட்கு உடன்று ஒரு 95
மறுமொழி கொடுப்பின் அல்லது மனத்தில்
துன்-பால் பட்டமை நன்பால் நுனித்து
நூல் இயல் நெறியினும் மதியினும் தெளிந்து
சொல் வேறு குறியொடு சுழன்று அகத்து ஒடுங்கிய

பல் வேறு உருவில் தம் படைநரை பயிர்ந்து 100
பூ வளம் கவினிய பொழில் உஞ்சேனை
மாகளவனத்து மன் உயிர் நடுக்கும்
பணை பெரும் திரள் தோள் பகு வாய் கூர் எயிற்று
இணை பெரும் காதின் இலங்கு குழை அணிந்த
சேடு ஏந்து வனப்பின் செழு மலர் தடம் கண் 105
மோடு ஏந்து அரிவை முற்றத்து முனாது
பனம் செறும்பு அன்ன பல் மயிர் முன்கை
நிணம் பசை கொண்ட நீளி நெடும் பல்
சாஅய் நீங்கி சார்ந்தோர் துட்கெனும்

பேஎய் உருவம் பெற வகுத்து எழுதிய 110
அழி சுவர் மண்டபத்து அக-வயின் ஆர் இருள்
வழி படர் வலித்த மந்திர கோட்டியுள்
வென் வேல் வேந்தனை விடுத்தனிர் சிறை என
இன் உரை அமிர்தம் இயைந்தவர்க்கு ஈத்து
தான் செயப்படு பொருள் ஆங்கு அவர்க்கு உணர்த்தி 115
ஊன் சேர் கடு வேல் உதயணன் நீங்கிய
கான் சேர் பெரு வழி கடத்தல் செல்லீர்
நாடும் மலையும் காடும் பொருந்தி
கனி வளம் கவர்ந்து பதி-வயின் பெயரும்

பனி இறை வாவல் படர்ச்சி ஏய்ப்ப 120
படையினும் தொழிலினும் நடை வேறு இயன்ற
உருவினும் இயல்பினும் ஒருவிரும் பலரும்
கலி கெழு பண்டம் களை கலம் போல
வலி கெழு சிறப்பின் மதில் உஞ்சேனை
உள்ளகம் வறுமை எய்தி புல்லென 125
பெரும் தவம் உள்வழி விரும்புபு செல்லும்
பொருளும் போகமும் புகழும் போல
மறு_இல் மணி பூண் மன்னவன் உள்வழி
குறுகுதல் குணன் என உறுநரை ஒருப்படுத்து

ஏக செய்த பின் ஆகு பொருள் நாடி 130
கடவுள் பள்ளியுள் கள்ள ஒழுக்கொடு
நெடு நகர் மாந்தர் நெஞ்சு உண திரிதரும்
ஒட்டிய தோழரொடு கட்டுரை விரும்பி
மூன்று இடம் பிழையா ஆன்ற நுண் நெறி
பண்ணவர் முனிவர் பட்டதும் படுவதும் 135
எண்ணுவர் ஆயின் ஏதம் தரும் என
நினைத்தோன் பெயர்ந்து நெறியில் தீர்ந்தவர்
வினை துகள் அறுக்கும் வேட்கை அல்லது
வேண்டுவ உரையா மூங்கைகள் ஆம் எனும்

நீதியது நேர்மை உளனாய் ஓதிய 140
சமைய விகற்பம் சால காட்டி
அசைவிலாளர் அற நெறி வலித்தது
மருண்டும் தெளிந்தும் வந்தவை பிதற்றி
பெயரும் இயற்கை பெற்றியின் திரியான்
பூசுபு புலரா யாக்கையொடு பெயரிய 145
தோழரோடு மிக பல கழறி
வேற்றோன் போல மாற்றம் பெருக்கி
படிவ பள்ளியுள் பகல் இடம் கழித்து
குடி கெழு வள மனை குழீஇய செல்வத்து

கன்னி நல் மதில் கடி கோசம்பி 150
மன்முதல்-தோறும் தொன்முதல் பிழையாது
பெரும் கல கைவினை பேறு அது பெற்று
தானகம் தாங்கிய ஊனம்_இல் செலவின்
இட்டு இடர் பொழுதின் இன்பம் நீக்கி
கட்டு அழல் புகூஉம் சுட்டுறு கோல் போல் 155
நட்டை இட்டு நாட்டகம் துறந்து தம்
பெருமகன் கொள்ளும் வெட்கையில் போந்த
குய_மகன் இல்லம் குறுகினன் ஆகி
ஆங்கு இனிது இருந்த அரும் தவ ஒழுக்கின்

சாங்கிய மகளை பாங்கினில் தரீஇ 160
நிகழ்ந்ததை எல்லாம் நெறியில் கூறி
புகழ்ந்த வண்ணம் போகுதல் பொருள் என
பசியும் அழலும் பரிவு_அற எறியும்
மிசை மருந்து இயன்ற இசைவு கொள் இன்பத்து
தருப்பண கிழியும் தண்ணீர் கரகமும் 165
ஒருப்படுத்து அமைத்து புறப்பட போக்கி
அமரிய நண்பின் தமருளும் தமராம்
யவன பாடி ஆடவர் தலைமகன்
தமனிய பைம் பூண் தம் இறைக்கு இயன்ற

கண்மணி அன்ன திண் நட்பாளன் 170
கையில் புனைந்த கழி நுண் சிறப்பொடு
வையகத்து இயங்கும் வெய்யவன் ஊரும்
தேரின் அன்ன செலவிற்று ஆகி
யாவரும் அறியா அரும் பொறி ஆணியின்
இருப்பு பத்திரம் இசைய கவ்வி 175
மருப்பு பலகை மருங்கு அணிபெற்று
பூணி இன்றியும் பொறியின் இயங்கும்
மாண் வினை வைய மனத்தின் ஒய்ப்ப
கடுப்பும் தவிர்ப்பும் கண்டனன் ஆகி

படைத்து பெயர்த்தற்கு பாடு அமை வித்தகர் 180
கண்ணினும் கையினும் திண்ணிதின் அடக்கி
எண்ணிய கருமத்து அன்றியும் யூகி
சிறை வினை நீக்கி இறை வினை இரீஇ
கொடி கோசம்பி புகுத்துதற்கு இருந்து
கோடித்து அன்ன கோடு சால் வையத்து 185
மூ வகை யோகமும் சீரமைத்து இரீஇ
எந்திர ஊர்தியொடு ஏனவை இயற்றி
மந்திரம் ஆக தம் தமர் உளர் எனில்
போத்தந்து அல்லது போதாய் நீ என

ஆத்த வாரமோடு அவன் அவண் ஒழிய 190
தெய்வ படைக்கலம் கையகத்து அடக்கி
வத்தவன் நன்னாடு அ திசை முன்னி
வித்தக ஆணி வேண்டு-வயின் முருக்கி
விண்ணகத்து இழிந்து விமானம் ஏறி
மண்ணகத்து இயங்கல் மனத்தின் வேண்டிய 195
பூம் தார் மார்பின் புரந்தர குமரனின்
போந்தனன் மாதோ புற நகர் கடந்து என்
* 2 இலாவாண காண்டம்

#9 யூகி சாக்காட்டு
புற நகர் போந்த பின்றை செறு நீர்
அள்ளல் படப்பை அகல் நிலம் தழீஇ
புள் ஒலி பொய்கையொடு பூம் துறை மல்கி
வான் கண்டு அன்ன வனப்பின ஆகி
மீன் கண்டு அன்ன வெண் மணல் விரிந்த 5
கானும் யாறும் தலைமணந்து கழீஇ
அரும்பு அணி புன்னையும் சுரும்பு இமிர் செருந்தியும்
இலை அணி இகணையும் இன்னவை பிறவும்
குலை அணி கமுகொடு கோள் தெங்கு ஓங்கு

பழனம் அடுத்த கழனி கைப்புடை 10
போர் மாறு அட்ட பூம் கழல் மறவர்
தேர் மாறு ஓட்டி திண்ணிதின் அமைத்த
கோட்டம் இல்லா நாட்டு வழி-வயின்
ஆணி வையம் ஆர் இருள் மறைய
பூணி இன்றி பொறி விசை கொளீஇ 15
உள்ளிய எல்லை ஓட்டி கள்ளமொடு
ஒடுங்கும் தானமும் கடும் பகல் கரக்கும்
ஆள் அவி காடும் அரும் சுர கவலையும்
கோள் அவிந்து ஒடுங்கிய குழூஉ குடி பதியும்

வயவர் நாடும் கயவர் கானமும் 20
குறும்பும் குன்றமும் அறிந்து மதி கலங்காது
பகலும் இரவும் அகல போக்கி
இருநூற்றிருபது இரட்டி எல்லையுள்
அரு நூல் அமைச்சன் அயல் புறம் நிறீஇ
நட்பு உடை தோழன் நன்கு அமைந்திருந்த 25
புட்பகம்-தன்னை பொழுது மறை புக்கு
புறத்தோர் அறியா மறைப்பு அமை மாயமொடு
ஆணி வையம் அரும் பொறி கலக்கி
மாண வைத்து மகிழ்ந்தனன் கூடி

மாண் முடி மன்னன் தோள் முதல் வினவி 30
சிரமம் எல்லாம் செல் இருள் தீர்ந்து
கருமம் அறியும் கட்டுரை வலித்து
தோழனும் தானும் சூழ்வது துணியா
வெம் திறல் மிலைச்சர் விலக்குவனர் காக்கும்
மந்திர மாடத்து மறைந்தனன் இருந்து 35
தன் தொழில் துணியாது தானத்தின் வழீஇ
குஞ்சர வேட்டத்து கோள் இழுக்குற்ற
வெம் சின வேந்தனை விடுத்தல் வேண்டி
வஞ்ச இறுதி நெஞ்சு உண தேற்றி

உஞ்சை அம் பெரும் பதி ஒளி களம் புக்கு 40
மெய் பேய் படிவமொடு பொய் பேய் ஆகி
பல் உயிர் மடிந்த நள்ளென் யாமத்து
கூற்று உறழ் வேழம் குணம் சிதைந்து அழிய
சீற்ற வெம் புகை செருக்க ஊட்டி
கலக்கிய-காலை விலக்குநர் காணாது 45
நாவாய் கவிழ்த்த நாய்கன் போல
ஓவா அவலமொடு காவலன் கலங்கி
பண் அமை நல் யாழ் இன் இசை கொளீஇ அதன்
கண் அயல் கடாத்து களிப்பு இயல் தெருட்டின்

ஆழி தட கை அற்றம் இல் என 50
வருமொழி கட்டுரை முகமன் கூறி நம்
பெருமகன் தன் உழை பிரச்சோதனன் இ
மன் உயிர் உற்ற நடுக்கம் நீக்குதல்
இன் இயல் மான் தேர் ஏயற்கு இயல்பு என
உதையணகுமரனும் உள்ளம் பிறழ்ந்து அதன் 55
சிதைவு கொள் சீலம் தெளிந்தனன் கேட்டு
வீணை எழீஇ வீதியின் நடப்ப
ஆணை ஆசாற்கு உடியுறை செய்யும்
மாணி போல மத களிறு படிய

திரு தகு மார்வன் எருத்தத்து இவர 60
அண்ணல் மூதூர் ஆர்ப்பொடு கெழுமி
மன்னவன் வாழ்க வத்தவன் வாழ்க
ஒலி கெழு நகரத்து உறு பிணி நீக்கிய
வலி கெழு தட கை வயவன் வாழ்க என
பூ தூய் வீதி-தோறு ஏத்தினர் எதிர்கொள 65
அவந்தி அரசன் உவந்தனன் விரும்பி
பொலிவு உடை உரிமையொடு பரிசனம் சூழ
புலி முக மாடம் மலிர ஏறி
மையல் வேழம் அடக்கிய மன்னனை

ஆணை கூறாது அருள் மொழி விரவாது 70
காணலுற்றனன் காதல் இது என
சேனை வேந்தன் தானத்து விளிப்ப
அறியா பாழியும் அறிய காட்டி
குறியா கூற்றத்தை கோள்விடும்-கொல் என
சிறியோர் அஞ்ச பெரியோர் புகல 75
ஆனை ஏற்றம் அறிய காட்டி
இருள் தெறு சுடரின் அன்ன இறைவன் முன்
வருட்டுபு நிறுத்த மன்னனை நோக்கி
தெருட்டுதற்கு ஆய இ தீ குறி வேழம்

யாதின் சிதைந்தது அஃது அறிய உரைக்க என 80
ஏதில் வேந்தன் காதலின் வினவ
வேத முதல்வன் விளம்பிய நூல் வழி
மாதங்கம் என்று மதித்தலின் பெற்ற
பெயரது மற்று அதன் இயல்பு அறிந்து ஓம்பி
வெருட்டலும் தெருட்டலும் விடுத்தலும் விலக்கலும் 85
பணித்தலும் உயர்த்தலும் தணித்தலும் தாங்கலும்
தமர் பிறர் என்பது அறியும் திறனும்
நீலம் உண்ட நூல் இழை வண்ணம்
கொண்டது விடாமை குறிப்பொடு கொளுத்தல்

பண்டு இயல் தொல் நூல் பாகு இயல்பு ஆதலின் 90
முதற்கண் பிணித்தோர் சிதைப்பில் விடாது
கொண்டதை இது என சண்ட வேந்தற்கு
எதிர்மொழி கொடீஇ கதிர் முகம் எடுத்தோன்
தகை மலர் படலை தந்தை தலை தாள்
முகை மலர் கோதை முறுவல் செம் வாய் 95
கன்னி ஆயத்து பொன் அணி சுடர
வீசு வளி கொடியின் விளங்குபு நின்ற
வாசவதத்தை மதி முகத்து ஏற்றி
சிதர் அரி மழை கண் மதர்வை நோக்கம்

உள்ளகத்து ஈர அள்ளற்பட்ட 100
போதகம் போல போதல் ஆற்றா
காதல் குமரனை கரும காமத்து
கணிகை திற-வயின் பிணி பிறர்க்கு உணர்த்தி
இகழ்வொடு பட்ட புகழ் காண் அவையத்து
மல்லல் மூதூர் மலி புனல் விழவினுள் 105
சில் அரி கண்ணியொடு சிறு பிடி ஏற்றி
செயற்படு கருமத்து இயற்கை இற்று என
இப்பால் இறைமகன் போத்தந்து அப்பால்
நிகழ்ந்ததை அறிதந்து ஒளித்தனன் ஆகி

வேறல் செய்கை வேந்தற்கு உண்மை 110
தேறல் மாக்களை திறவிதின் காட்டி
பழம் தீர் மர-வயின் பறவை போல
செழும் பல் யாணர் சேனை பின் ஒழிய
நம் பதி புகுதர கங்குல் போத்தந்து
யான் பின் போந்தனன் இது என அவன்-வயின் 115
ஓங்கிய பெரும் புகழ் யூகி மேல்நாள்
பட்ட எல்லாம் பெட்டாங்கு உரைப்ப
கெட்ட-காலை விட்டனர் என்னாது
நட்டோர் என்பது நாட்டினை நன்று என

உறு துணை தோழன் மறுமொழி கொடுத்த பின் 120
தன் உரை ஒழித்து நுண் வினை அமைச்சனை
பெயர்ந்த-காலை பெருமகற்கு இப்பால்
உயர்ந்த கானத்து உற்றது உண்டு எனின் அதூஉம்
சில் மொழி தாதரை சேர்ந்ததற்கொண்டு
நிலையது நீர்மையும் தலையது தன்மையும் 125
உள் விரித்து உரை என ஊகி கேட்ப
அடல்_அரும் பல் படை இடபகன் உரைக்கும்
அழகு அமை மட பிடி ஐந்நூறு ஓடி
அழல் நிலை அத்தத்து அசைந்து உயிர் வைப்ப

தடம் பெரும் கண்ணியொடு நடந்தனர் போந்து 130
கடும் பகல் கழி துணை காட்டகத்து ஒடுங்கி
வெம் கதிர் வீழ்ந்த தண் கதிர் மாலை
வயந்தகன் என்-பால் வரீஇய போதர
தயங்கு மலர் தாரோன் தனியன் ஆகி
மாலை யாமம் கழிந்த-காலை 135
வெம் சொல் வேட்டத்து அஞ்சுவரு சீற்றத்து
சலம் புரி நெஞ்சின் சவரர் புளிஞர்
கலந்தனர் எழுந்து கானம் தெரிவோர்
ஊன் என மலர்ந்த வேனில் இலவத்து

கானத்து அக-வயின் கரந்தனன் இருந்த 140
அரச_குமரனை அகப்படுத்து ஆர்ப்ப
வெருவுறு பிணையின் விம்முவனள் நடுங்கும்
அம்_சில்_ஓதியை அஞ்சல் ஓம்பு என
நெஞ்சு வலிப்புறுத்து நீக்குவனன் நிறீஇ
விலக்கு அவண் கொளீஇ வில்லின் வாங்கி 145
ஓரோர் கணையின் உராஅய் வந்தவர்
ஏழேழ் மறவரை வீழ நூறலின்
ஆழும் நெஞ்சமொடு அச்சம் எய்தி
பட்டவர் தம் தமர் பகையின் நெருங்கி

கட்டு எரி கொளீஇ கரந்தனர் எனலும் 150
ஒட்டிய தோழற்கு உற்றதை அறியான்
பகை அடு தறுகண் இமை அகன்று பிறழ
உரை பெயர்த்து கொடாஅன் யூகி மாழ்க
வரை புரை மார்பனை வாங்குபு தழீஇ
கதுமென உரைத்தது கவன்றனன் ஆகி 155
எதிர் மலர் குவளை இடு நீர் சொரிந்து
சீத சந்தனம் தாதோடு அப்ப
ஏஎல் பெற்று எழுந்து இருந்தனன் உரைக்க என
மாஅல் அன்ன மன் உயிர் காவலன்

ஆட்டிடை பாயும் அரிமா போல 160
வேட்டிடை பாய்தலை வெரீஇ ஓடா
பஞ்சி மெல் அடி பரல் வடு பொறிப்ப
வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க
அஞ்சுபு நின்ற பைம் தொடி மாதரை
சிறு வரை நடாஅய் செல்லல் நீங்க 165
கறுவு கொளாளர் மறுவு வந்து ஓடி
உறுவு கொள் உரோணியொடு உடல் நிலை புரிந்த
மறுவு உடை மண்டில கடவுளை வளைத்த
கரந்து உறை ஊர்கோள் கடுப்ப தோன்றி

நிரந்தவர் நின்ற பொழுதில் பெயர்ந்து 170
குறி-வயின் குறித்து யாம் செல்லும் மாத்திரை
அறிவன் நாடி அரும் பொருள் உண்டு என
விரை முதல் கட்டிய விரும்பின் இமிழ்ப்பின்
உரை முதல் காட்டி உளமை கூறி
நின்ற பொழுதில் சென்று யாம் தலைப்பெய 175
எம் திறம் அறியா ஏதிலன் போல
வெம் திறல் வேந்தனும் அவரொடு விராஅய்
ஓடல் ஆற்றான் ஆகி ஒருசிறை
ஆடு அமை தோளியோடு அகன்றனன் நிற்ப

வேட்டுவர் அகல கூட்டம் எய்தி 180
கரும நுனித்த கடும் கண் ஆண்மை
உருமண்ணுவாவின் ஊரகம் புகீஇ
போக பெரு நுகம் பூட்டிய-காலை
மாக விசும்பின் மதியமும் ஞாயிறும்
எழுதலும் படுதலும் அறியா இன்பமொடு 185
ஒழுகு புனல் அகழினை உடை என கிடந்த
முழு மதில் நெடும் கடை முதல் பெரு நகரம்
தார் அணி யானை பரப்பி தலைநின்று
ஆருணி அரசன் ஆள்வதும் அறியான்

தன் உயிர் அன்ன தம்பியர் நினையான் 190
இன் உயிர் இடுக்கண் இன்னது என்று அறியான்
அவையும் கரணமும் அவை வகுத்து இருவான்
அந்தி மந்திரத்து அரு நெறி ஒரீஇ
தந்தையொடு ஒறுக்கப்படாஅன் சிந்தை
அகன் உணர்வு இல்லா மகனே போல 195
தன் மனம் பிறந்த ஒழுக்கினன் ஆகி
பொன் நகர் தழீஇய புது கோ போல
செவ்வியும் கொடாஅன் இ இயல் புரிந்தனன்
அண்ணல் ஆதலின் அசைவு_இலன் என்ன

தன் அமர் தோழன் பன்னினன் உரைப்ப 200
வேகம் தணியா வெம் சின நெடு வேல்
யூகந்தராயணன் ஒழிவு_இலன் கேட்டு
முறுவல் கொண்ட முகத்தினன் ஆகி
பெறுக போகம் பெருமகன் இனிது என
அறு வகை சமயத்து உறு பொருள் ஒழியாது 205
பன்னுபு தெரிந்த பழி_அறு வாய்மொழி
தொல் மூதாட்டியை துன்ன தரீஇ
தருமத்து இயற்கையும் கரும கிடக்கையும்
தலைமையது தன்மையு நிலைமையது நீர்மையும்

வேறுவேறாக கூறுகூறு உணர்த்தி 210
இது என் வலிப்பு என அது அவட்கு உணர
கூறுதல் புரிந்த குறிப்பினன் ஆகி
அகலாதோரையும் அகல்க என நீக்கி
உம்மை பிறப்பில் கொண்டும் செம்மற்கு
தாயோர் அன்ன தகையினிர் ஆதலின் 215
மேயோர்க்கு அல்லது மெய் பொருள் உணர்த்தல்
ஏதில் பெரும் பொருள் நீதியுள் இன்மையின்
தெரிய கேட்க என விரிய காட்டி
அற்றம் காத்தலின் ஆண்மை போலவும்

குற்றம் காத்தலின் குரவர் போலவும் 220
ஒன்றி ஒழுகலின் உயிரே போலவும்
நன்றி அன்றி கன்றியது கடிதற்கு
தகவு_இல செய்தலின் பகைவர் போலவும்
இனையன பிறவும் இனியோர்க்கு இயன்ற
படு கடன் ஆதியில் பட்டது நினையான் 225
தொடு கழல் குருசில் வடு உரை நிற்ப
இன்ப அளற்றுள் இறங்கினன் ஆதலின்
துன்பம் துடைத்த தொழிலே போல
அவலம் ஒழிப்பி அவன்-வயின் திசையா

இகல் அடு பேர் அரண் இலாவாணத்து அவன் 230
உகந்து உண்டாடி மகிழ்ந்த பின் ஒரு நாள்
வால் இழை மாதரை மன்னவன் அகல்விடை
கோல கோயில் கூர் எரி கொளீஇ
பொய் நில மருங்கில் போத்தந்து என்-வயின்
கண் என தருதல் கடன் என கூறி 235
இன்பம் துடைத்து அவற்கு இறைக்கடம் பூட்டுதல்
நிம் கடன் ஆம் என நினைந்து நெறி திரியாது
உருப்ப நீள் அதர்க்கு அமைத்து முன் வைத்த
தருப்பணம் செருமி தன் உயிர் வைத்தனன்

யூகி என்பது உணர கூறி 240
நிலம் குறைப்பட்ட மன்னனை நிறுவுதல்
புலம் துறை போகிய பொய்_இல் வாய்மொழி
நும்மின் ஆதல் எம்மில் சூழ்ந்தது
அறிய கூறினேன் யான் என அவளொடும்
செறிய செய்த தெளிவினன் ஆகி 245
உருமண்ணுவாவொடு வயந்தககுமரனை
கரும கிடக்கை காண்வர காட்டி
இன்னுழி வருக என அன்னவை பிறவும்
ஒரு பொருள் ஒழியாது அவளொடும் சூழ்ந்து

மறைப்பு இடன் அமைத்து புறத்தோர் முன்னர் 250
ஆத்திரை தருப்பணம் மாத்திரை கூட்டி
உண்புழி விக்கி கண் புக செருமி
உயிர்ப்பு நீங்கிய உடம்பினன் ஆகி
செயற்கை சாக்காடு தெளிய காட்ட
தோழனும் தமரும் சூழ்வனர் குழீஇ 255
வாழலம் இனி என வஞ்ச இரக்கம்
பல்லோர் முன்னர் கொள்ள காட்டி
சுடுதற்கு ஒவ்வா சூழ்ச்சி அண்ணலை
கடு வினை கழூஉம் கங்கா தீரத்து

இடுதும் உய்த்து என இசைத்தனர் மறைத்து 260
தவ முது_மகளை தலைமகன் குறுகி
முகனமர்ந்து உரைத்து முன்னையிர் ஆம்-மின் என்று
அகனமர் காதலொடு ஆற்றுளி விடுப்ப
காட்டகம் கடந்து காவலன் இருந்த
நாட்டகம் நணுகி நகரம் புக்கனள் 265
தெரி மதி அமைச்சனொடு திறவிதின் சூழ்ந்த
அரு மதி திண் கோள் அறம் புரி மகள் என்
* 2 இலாவாண காண்டம்

#10 யூகிக்கு விலாவித்தது
அறம்புரியாட்டி அமைச்சனின் நீங்கி
மறம் புரி தானை மன்னவன் இருந்த
தயங்கு இதழ் தாமரை தண் பணை தழீஇய
சயந்தியம் பெரும் பதி இயைந்து அகம் புக்கு
பொன் வரை அன்ன பொரு_இல் ஆகத்து 5
மன்ன_குமரனை மரபுளி குறுகி
தாய் காண் கன்றின் காவலன் விரும்பி
ஏற்ற செவ்வி மாற்றம் கூறி
சேடுபட புனைந்த சித்திர கம்மத்து

பீடம் காட்டலின் ஈடுபட இருந்து 10
மன்னவன் மகனே மாதரொடு போந்து
நின் நகர் புகுந்த பின்னர் கண்டனென்
என் ஆகியர் மற்று என்-வயின் இனி என
முகமன் கிளவி தகுவ கூறி
ஆடு இயல் யானை அவந்தியன் நகர்-வயின் 15
பாடி மாற்றமொடு பட்டதை உரைத்த பின்
முனி மூதாட்டியை முகனமர்ந்து நோக்கி
இனியவர் பெரும் கடம் இயல்பின் தீர்த்த
யூகி நும்மொடு போந்திலனோ என

போகிய புகழோற்கு பொருக்கென உரையாள் 20
ஆங்கு அவன் கேட்ப அறிவின் நாடி
சாங்கிய முது_மகள் தான் தெரிந்து உரைக்கும்
ஒலி உஞ்சேனையுள் வலியோரை வணக்கி
நங்கையை தழீஇ நீ போந்த கங்குல்
பட்டதை எல்லாம் பட்டாங்கு உணர்ந்து 25
மறுபிறப்பு உணர்ந்த மாந்தர் போல
உறு குறை கருமம் உள்ளகம் மருங்கின்
தானே உணரின் அல்லது புறப்பட்டு
ஏனோர் அறியா இயற்கைத்து ஆகி

காரிய முடிவின் ஆர் இருள் மறையா 30
அரும் பொறி வையத்து கரந்து அகத்து ஒடுங்கி
எம்மை கொண்டு வந்து ஏமம் சார்த்தி
வெம்மை வேட்டுவர் வியன் மலை வரைப்பின்
கோல் தொழில் கருமம் ஆற்றுளி முடித்து
சில பகல் கழிந்த பின் வருவன் நீர் சென்று 35
நலம் மிகு வேந்தனை நண்ணு-மின் விரைந்து என்று
ஒழிந்தனன் உதயண யூகி பின் என
மொழிந்தனள் அடக்கி முகிழ் விரல் பணை தோள்
வாசவதத்தையை வகையுளி காண்க என

தேச மன்னன் திறத்துளி கூற 40
கன்று காண் கறவையின் சென்று அவள் பொருந்தி
தளர் நடை இளமையில் தான் கொண்டு ஓம்பிய
வளர் கொடி மருங்குல் வருந்த புல்லி
உவகை தண் துளி ஊழூழ் சிதறி
அமிர்து கடை கடலின் அரவம் ஓவாது 45
தமர் தலை மணந்த தன் பெரும் கோயில்
கண்ணீர் வெள்ளம் கால் அலைத்து ஒழுக
வட்டிகை வாக்கின் வனப்பொடு புணர்ந்த
பட்ட சில் நுதல் பதினாறாயிரர்

நும்மோய்மார்களும் தம் இன மகளிரும் 50
ஒரு துணை ஆயமும் உடைவு கொண்டு ஒழிய
பெருமகன் தான் என பெற்றியில் பிழையான்
யாப்பு அமை காதலோடு ஆர் உயிர் அன்ன
கோப்பெருந்தேவிக்கு நீப்பிடம் உணர்த்தி
தந்தை உரை காட்ட உய்ந்தது முதலா 55
இன்ப கட்டுரை பைம்_தொடி கேட்ப
முறைமையின் விரிப்ப முகத்து ஒளி புல்லென
நிறை மலர் நெடும் கண் நீஇர் நெகிழ
தமர்-வயின் நினைஇய தன்மையள் ஆகி

புகர்_இல் கோலத்து புனை_இழை புலம்ப 60
தாழ் நகை ஆகத்து தண் சாந்து சிதைய
வீழ்தரு வெம் துளி விரலின் நீக்கி
செவிலி தவ_மகள் தேற காட்டி
அவலம் கோடல் அம் கண் ஞாலந்து
வெம் கண் வேந்தன் பைம் தொடி பாவாய் 65
மங்கல மகளிர்க்கு மரபு அன்று இது என
நீல பொய்கை பாசடை தாமரை
கதிர் வாய் திறந்து
பகு வாய் கிண்கிணி பரட்டு மிசை ஆர்ப்ப

கோடு வாய் சிலம்பின் கொழும் சிகை குன்றின் 70
பாடு அமை படுகால் பைய ஏறி
நங்காய் காண் உன் பெருமான் நல் நகர்
உந்த திசையது என்று ஒன்ற பிறவும்
உகப்ப கூறி மிக பல வருட்டி
உலகியல் வழாஅ உருமண்ணுவாவொடு 75
வலி கெழு நோன் தாள் வயந்தகன் குறுகி
நட்டோன் துணிந்த கட்டு அழல் கருமம்
மந்தணம் ஆக அந்தணி உரைத்தலும்
நல் நெறி நூல் வழி திண் அறிவாளன்

வருந்தி நோற்ற அரும் தவம் போல 80
பின் பயம் உடைமை தெற்றென தெளிந்து
தெரி மதியாட்டியை திட்பம் கொளீஇ
அரு மதி அமைச்சனை அன்பில் கெழீஇ
தோழற்கு உணர்த்தும் சூழ்வினை தொடங்கி
கட்டளை அமைந்த கண் ஆர் வனப்பினோர் 85
வட்டிகை பலகையுள் வாக்கு வகை அமைத்து
வத்தவன் வடிவின் ஓர் வண்ண பாவை
வித்தகம் சிறப்ப வேறுபட எழுதி
நால் கண் ஆக அமைத்து மற்று அவற்றுள்

மேல் கண் மழுகிய வினையிற்று ஆக 90
கைத்தொழில் அமைத்த பின் உய்த்து அவட்கு உணர்த்தி
விருத்தி அமைத்த வினை முடி பாவை
கருத்து மெய் தெரிதல் காவலன் கடன் என
தேவியோடு இருந்த செவ்வி கோட்டியுள்
ஓவிய பாவை உய்த்து அவள் காட்ட 95
நுண் உணர் மன்னன் தன் ஒப்பு ஆகிய
கண் உளர் நுட்பத்து கருத்து நோக்கி
இடம்படு ஞாலத்து உடம்பொடு புணர்ந்த
இன் இயல் மாந்தர் திண் இயல் உறுப்பினுள்

தாளே பெரும் கிளை தோளே துணைவி 100
பல்லே மக்கள் கண்ணே தோழர்
முடியே குரவர் அடியே ஆளாம்
ஆக்கையின் நாடி அங்ஙனம் காணின்
மேல் கண் குற்றத்து விதுப்பு இயல் வழாது
நூல்-கண் நுனித்த நுண் உணர் எண்ணத்தின் 105
யூகி தன்-வயின் உறுகண் வெம் தொழில்
ஆகியது உண்டு என ஐயம் தேறி
உதயணன் மாழாந்து உயிர்_வாழ்வு ஒழிக என
சிதர் பொறி எந்திரம் போல சிதர்ந்து

தாரும் பூணும் மார்பிடை துயல்வர 110
சோரும் கண்ணினன் துளங்கி மெய்ம்மறப்ப
இடியேறுண்ட நாகம் போல
கொடி ஏர் சாயல் கொழும் கவின் வாட
பூ இரும் கூந்தல் புல்லென விரிய
வாசவதத்தையும் வத்தவன் மார்பின் 115
மம்மர் எய்திய மயக்கம் நோக்கி
விம்மல் எய்தி வியன் பெரும் கோயில்
அழுகை ஆகுலம் கழுமிய பின்றை
அவல உயிர் பிணி அடி_அற எறியும்

தவல்_அரும் சாந்தம் தடியுற அப்பி 120
சீத செய்கையின் மா துயர் விடுப்ப
தீது_இல் பெருமகன் தெளிவு முந்துறீஇ
காதலின் கவலை பாசம் தட்ப
தண் தாமரை-கண் வெம் பனி வீழ
விண் தோய் கானத்து வேழ வேட்டத்து 125
சிறை கொளப்பட்டு யான் செல் சார்வு அறுத்த பின்
மறை கொள் மாயமொடு துறை நகர் விழவினுள்
ஏதில் மன்னன் காதலி பயந்த
மாதரை தழீஇ போதர புணர்த்து

போதுவல் என்றோய் பொய்த்தனையோ என 130
காதல் தோழனை காணாது கலங்கி
மா தாங்கு தட கை மன்னருள் மன்னவன்
நளி கதிர் மண்டிலம் நாள் முதல் தோன்றி
ஒளியிடப்பெறாஅ உலகம் போல
இருளகம் புதைப்ப மருள் அகத்து எய்தி 135
தருமமும் கருமமும் தளர சாஅய்
ஆழின் அல்லதை அரசியல் வழாமை
வாழ்தல் ஆற்றேன் யான் என மயங்கியும்
நிழல் பொலி காவின் நிரந்து உடன் ஆடி

குழல் சிகை அவிழ குண்டு நீர் யமுனை 140
கணை கடு நீத்து இடை புணை புறம் தழீஇ
விளையாட்டு விரும்பி அளையின ஆகிய
இன் சுவை அடிசில் உண்பதும் ஒரீஇ
மன் பெரும் கோயிலுள் வளர்ந்த-காலை
வேக நம்பிக்கு விலக்குக அடிசில் என்று 145
ஆகு பொருள் அறிவி அரும் பொருள் என் மகன்
யூகந்தராயன் உண்க என உண்ணாய்
குடி பெருந்தேவி அடி கலம் பற்றி
அருளினும் காயினும் ஒப்பது அல்லதை

பொருள் அஃது அன்று புரவலன்-மாட்டு என்று 150
என் செய் குற்றம் நின்-கண் தாங்கி
அன்பு அளி சிறப்பித்து இன் பதம் இயற்றல்
இளமை காலத்தும் இயல்போ உடையோய்
முதுமை காலத்து மதலையின் தாங்கி
பின் போக்கு உரிய பெருந்தகையாள 155
முன் போக்கு விரும்புதல் மூர்க்கரது இயல்பு என
கேட்டோர் உருக மீட்டுமீட்டு அரற்ற
பூம் தார் மார்ப புலம்பு கொண்டு அழீஇ
இரு நில வரைப்பின் இயற்கை ஓரா

பெரு நிலம் காவல பேணாது அவர் முன் 160
இனையை ஆகுதல் இறைமை அன்றால்
கொடும் காழ் சோரினும் கூடம் ஊன்றிய
நெடு காழ் போல நிலைமையின் வழாஅது
துன்பத்தில் துளங்காது இன்பத்தின் மகிழாது
ஆற்றுளி நிற்றல் ஆடவர் கடன் என 165
மாற்றம் பற்பல மரபின் கூறி
அடநடுதரூதடங்கண் தபுத்த
அந்தணாளரின் வெம் திறல் வீரன்
சொல் துணை தோழன் தொழில் பாராட்டி

நல் துணை மாந்தர் முன் துணை ஆக 170
அரசியல் ஆக்கம் கூடும் ஆயினும்
பெரு விறல் தோழன் வருதலும் உண்டு என
தான் அயர் பெரு நெறி தலை நின்றனனால்
வீணை வித்தகன் விலாவணை தொடர்ந்து என்
* 2 இலாவாண காண்டம்

#11 அவலம் தீர்ந்தது
விலாவணை ஒழியான் வீணை கைவினை
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை நினைந்து
வைகல்-தோறும் வான் மதி மெலிவின்
பையுள் கொண்ட படிமை நோக்கி
அரும் பெறல் அமைச்சரொடு ஒருங்கு உடன் குழீஇ 5
காவலன் அதிர்ந்த-காலை மண் மிசை
தா_இல் பல் உயிர் தளர்ச்சி எய்தலின்
எத்திறத்து ஆயினும் அத்திறம் அகற்றுதல்
மந்திர மாந்தர் தந்திரம் ஆதலின்

வத்தவர் கோமாற்கு ஒத்த உறு தொழில் 10
உத்தம மந்திரி யூகியின் பின்னர்
அருமை சான்ற ஆய் பொருள் கேள்வி
உருமண்ணுவாவிற்கு உறு கடன் இது என
தாழா தோழர் தன் மேல் வைத்த பின்
வீழா காதலொடும் விரும்புவனன் ஆகி 15
செய் பொருள் இதுவென ஐயம் தீர
மன் உயிர் ஞாலக்கு இன் உயிர் ஒக்கும்
இறை படு துன்பம் குறைபட எறியும்
மருந்தின் பிண்டம் தெரிந்தனிர் கேள்-மின்

தணப்பு_இல் வேட்கை தலைத்தலை சிறப்ப 20
உணர்ப்ப உள்ளுறுத்த ஊடல் அமிர்தத்து
புணர்ப்பு உள்ளுறுத்த புரை பதம் பேணும்
காம காரிகை காதல் மகளிர்
தாம புணர் முலை தலை பிணி உறீஇ
யாம கோட்டத்து அரும் சிறை கோடல் 25
வணங்கா மன்னரை வாழ்வு கெட முருக்கி
அணங்க_அரும் பெரும் திறை கொணர்ந்து முன் இடுதல்
பூ மலர் பொதுளிய புனல் வரை சோலை
மா மலை சாரலொடு கானம் காட்டுதல்

யானையும் சுரி உளை அரிமான் ஏறும் 30
மானின் பெடையும் வாள் வரி உழுவையும்
புள்ளும் மாக்களும் உள்ளுறுத்து இயன்ற
நொய் மர நெடும் புணை கைம்முதல் தழீஇ
கூறு ஆடு ஆயமொடு குழூஉக்கொண்டு ஈண்டி
ஆறு ஆடு ஆயமொடு அணி விழவு அமர்தல் 35
இன்னது ஒன்றினுள் என்னது ஒன்றாயினும்
காமுறு கருமம் கால் வலை ஆக
ஏமுறவு ஒழியா ஏயர் மன்னனை
உடுத்து வழிவந்த உழுவல் அன்பின்

வடு தீர் கைவினை வாசவதத்தையொடு 40
ஒருப்படுத்து ஒழியாது ஓங்கு மலை மருங்கில்
கடி கமழ் கானம் காண காட்டி
படிவ பள்ளியுள் பாவ பெரு மரம்
விரத மழுவின் வேர்_அற துணிக்கும்
குறி கோள் உறு தவன் உண்மை கூறி 45
இன்றே அன்றியும் தொன்று வழி வந்த
குன்றா கற்பின் எம் கோ பெரும் கிழவோள்
நித்திலம் பொதிந்த இப்பி போல
திரு வயிற்று அக-வயின் உரு ஒளி அறாஅ

நின்னை தாங்கிய நல் நாள் அமயத்து 50
கண் நிழல் ஞாறிய காமர் பள்ளியுள்
வெண் நிலா முற்றத்து விரும்பி அசைதலின்
ஒள் ஒளி அரத்தம் ஊன் என நசைஇ
பல் வலி பறவை பற்றுபு பரிந்து
விபுலம் என்னும் வியன் பெரும் குன்றத்து 55
அரு வரை அருகர் ஆய் நலம் கவினிய
ஆலங்கானத்து அணியொடு பொலிந்த
ஞாலம் காவல் நஞ்சு என நீக்கி
பாய் பரி இவுளி ஏயர் பெருமகன்

தன்-கண் கொற்றம் எல்லாம் தன் மகன் 60
வென்றி தானை விக்கிரற்கு அருளி
மறு_இல் நெஞ்சமொடு மா தவம் தாங்கி
உறு பெரும் காட்சி ஓங்கிய படிவத்து
அறம் புரி தந்தை பள்ளியது அருகர்
பறந்து செல் சிம்புள் பையென வைத்தலும் 65
கயல் ஏர் கண்ணி துயில் ஏற்று எழவே
உயிர் போயுறாமையின் உறு புள் போக
அச்ச வகையினும் அந்தர செலவினும்
பொன் தொடி மாதர் பொறை நோய் கூர

எல்லா கோளும் நல் வழி நோக்க 70
திரு மணி விளக்கம் திசை-நின்று அழல
பெரு மணி பாவையின் பிறந்தனை கிடந்தோய்
திருமெய் தழீஇ அருமைத்து ஆக
நிகழ்ந்ததை அறியாள் கவன்றனள் இரங்க
ஆத்திரை போந்த அரும் தவன் கண்டு தன் 75
ஆத்த காதல் மகள் ஆவது அறிந்து சென்று
அஞ்சல் ஓம்பு என நெஞ்சகம் புகல
பள்ளி கொண்டு புக்கு உள் அழிவு ஓம்பி
அதிரா ஞாலத்து அரசு வீற்றிருந்த

கதை உரைக்கு எல்லாம் காரணன் ஆதலின் 80
புதை இருள் அகற்றும் பொங்கு ஒளி மண்டிலம்
உதயம் இவர்தர உதித்தோன் மற்று இவன்
உதயணன் ஆக என பெயர் முதல் கொளீஇ
பரம இருடிகள் பல்லோர்க்கு தலைவன்
தருமம் தாங்கிய தவாஅ கொள்கை 85
பிரமசுந்தரன் எனும் பெரும் பெயர் முனிவற்கு
பழிப்பு_இல் கற்பின் பரமசுந்தரி எனும்
விழு தகு பத்தினி விரும்பி பெற்ற
புத்திரன் தன்னொடு வத்தவர் தோன்றலும்

இருவிரும் அ வழி மருவி விளையாடி 90
செல்லாநின்ற சில்லென் காலை
வெம் சின வேழ வெகுளி நீக்கும்
மந்திர நாமம் வந்து நீர் கன்ம் என
தேவ இந்திரனின் திருந்த பெற்ற
ஆய் பெரு நல் யாழ் அமைவர எழீஇ 95
கான யானையும் கரந்து உறை புள்ளும்
ஏனைய பிறவும் ஆனா உவகையொடு
கேட்டவை எல்லாம் வேட்டவை விரும்பி
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன்

வரத்தின் வல்லே வல்லை ஆக என 100
உரைத்து அ முனிவன் உவந்தனன் கொடுத்து
பெறல்_அரும் பேரியாழ் பெற்றவாறும்
ஆர்வ நெஞ்சினன் ஆகிய கல்வி
நேர் தனக்கு இல்லா நெஞ்சு உண் அமைதி
யூகி நினக்கு இங்கு அடைக்கலம் என்பதும் 105
போகிய புகழோன் பணிப்ப கொண்டு
தோழன் ஆகி தோம்_இல் கேள்வி
யாழும் பாட்டும் அவை துறைபோகி
கல்லா நின்ற சில்லென் காலத்து

மை வரை மருங்கின் மட பிடி சூழ 110
தெய்வ யானை நின்றது நோக்கி
கண்டே நின்று காதல் ஊர்தர
மந்திர வாய்ப்பும் வல்ல யாழின்
தந்திர வகையும் காண்பல் யான் என
எழீஇ அவண் இயக்க பொழி மத யானை 115
வேண்டிய செய்தலின் ஈண்டிய மாதவன்
பள்ளிக்கு உய்ப்ப நள்ளிருள் கூறும்
பாகர் ஏறினும் தோல் கயிறு இடினும்
நீ முன் உண்ணினும் நீங்குவல் யான் என

ஆகு பொருள் கேட்டு அறிவுற்று எழுந்து 120
போதும்-காலை மாதவன் ஒரு மகன்
வீயா செங்கோல் விக்கிரன் ஒரு நாள்
எச்சம் இன்மையின் எவ்வம் கூரா
துப்புரவு எல்லாம் துறப்பென் யான் என
தன் பயந்து எடுத்தவன் தாள் நிழல் வந்தோன் 125
மதலை ஆகும் இ புதல்வன் யார் என
செரு மிகு சீற்றத்து குரு குலத்து அரசன்
சாயா செங்கோல் சதானிகன் தேவி
அருமை சால் கற்பின் மிருகாபதி எனும்

நுங்கை-தன் நகர் கங்குல் கிடந்தோட்கு 130
இன்னது நிகழ இவ்வயின் தந்த
பொன் அணி பைம் பூண் புதல்வன் தான் இவன்
ஐ ஆண்டு நிறைந்தனன் ஆதலின் இவனை
தெய்வ ஞானம் திறம்பட காட்டி
தன் நகர்க்கு உய்ப்பென் என்றலும் அடிகள் 135
என்னுழை தம்-மின் இறை என இயற்றி
தாயம் எல்லாம் தனக்கு உரித்து ஆக
ஏயர் கொற்றம் இவன்-வயின் கொடுத்து
பெறல்_அரும் பெரும் தவத்து உறு பயன் கொள்வல் என்று

ஆய் புகழ் முனிவனொடு தேவியை இரந்து 140
செரு மிகு குருசில் தன் மருமகன் தழீஇ
நீல யானை நின்றது பண்ணி
கோல எருத்தம் குலவ ஏற்றி
வள நகர் புக்கு தன் உள மனைக்கு எல்லாம்
உதயணன் இறை என அறிவர சாற்றி 145
வேத்தவை நடுவண் வீற்று இனிது இருத்தி
ஏயர் குலமுதற்கு இறைவன் ஆகி
அ வழி மற்று நீ வளர இ வழி
பட்டதை அறியான் பய நிலம் காவலன்

கட்டு அழல் எவ்வமொடு கடவுளை வினவ 150
கடும் புள் எதிர்ந்து காட்டகத்து இட்டதூஉம்
நெடும் தோள் அரிவை நின்னை பெற்றதூஉம்
தகை உடை முனிவன் தலைப்பட்டதூஉம்
வகை உடை நல் யாழ் வரத்தில் பெற்றதூஉம்
விசை உடை வேழம் வணக்கும் விச்சையும் 155
மாமன் கொண்டு தன் மாண் நகர் புக்கதூஉம்
ஏயர்க்கு இறை என இயற்றிய வண்ணமும்
மாசு_இல் கொற்றவன் மறுத்து இவண் வரவும்
ஆண்டகை மொய்ம்பின் ஓர் அரசு அடிப்படுப்பதூஉம்

ஈண்டு இவண் வந்து நீ வீற்றிருப்பதூஉம் 160
உள்ளுறுத்து ஓதியான் உள்ளம் உவப்ப
முற்பால் நிகழ்ந்தவும் பிற்பால் பெருக்கமும்
இனையவை எல்லாம் இயற்பட பிழையாது
வினவிய பொழுதின் விரித்து உரைத்தனன் ஓர்
பனுவலாளனை பணிந்து கைகூப்பி 165
கண் போல் காதல் நின் கழி பேர் அமைச்சன்
முன் போல் விளிந்து முடிக்கும் காரியம்
உண்டும் ஆம்-கொல் கண்டு வந்தோர்களை
கண்டிலம் ஆதலின் பண்பொடு புணர

கேட்ட பின் அறிதும் யாம் என வேட்ப 170
இன்னவை கிளந்து பின் தன்-வயின் தழீஇ
என் கூற்றினையும் நும் கூற்று ஆக
தேன் சுவை கொளீஇ வேம்பின் ஊட்டும்
மகாஅர் மருந்தாளரின் மற தகை அண்ணலை
நகாஅர் பல்லவர் நலம் புகழ்ந்து ஏத்தும் 175
விழுப்பம் எய்தி ஒழுக்கு இயல்பு ஓம்பி
இழுக்காது இயன்ற இலாவாணத்து அயல்
உண்டாட்டு அயர்தல் உறுதி உடைத்து என
வண் தார் மார்பனை வலி உள்ளுறீஇ

ஏழ்ச்சி வேண்டும் சூழ்ச்சி கொடுக்க என 180
உள்ள தோழரும் ஒருப்பட்டு எய்தி
வள் இதழ் நறும் தார் வத்தவற்கு உறுகி
முறைபட உணர்ந்த குறைவு_இல் கட்டுரை
கொள்ள கூறலும் வள்ளலும் விரும்பி
நிதிய கலத்தொடு பதி பல அருளி 185
கொற்ற முரசின் கோடணை கொட்டி
ஓசை போக்கினரால் உவகையின் மகிழ்ந்து என்
* 2 இலாவாண காண்டம்

#12 மாசனம் மகிழ்ந்தது
ஓசை போக்கிய பின்றை ஓவாது
மாசு_இல் சிறப்பின் வான் பூத்து அன்ன
நகரம் வறுவிதாக நாள்கொண்டு
தகரம் கமழும் தண் வரை சாரல்
தக்கோர் உறையும் தாபத பள்ளியும் 5
கற்றோர் உறையும் கடவுள் தானமும்
புக்கோர் புறப்படலுறாஅ பொலிவின்
சுனையும் யாறும் இனையவை மல்கி
மேவர அமைத்த மேதகு வனப்பின்

கோல கோயிலொடு குரம்பை கூடி 10
பலவும் மாவும் நல மா நாகமும்
மகிழும் பிண்டியும் வரி இதழ் அனிச்சமும்
வேங்கையும் ஆவும் விளவும் வேயும்
கோங்கமும் குரவும் கொடி குருக்கத்தியும்
நறையும் நந்தியும் அறை பயில் அகிலும் 15
வழையும் வாழையும் கழை வளம் கவினிய
திகிரியும் தில்லையும் பயில் பூம் பயினும்
முல்லையும் பிடாவும் குல்லையும் கொன்றையும்
குருந்தும் வெட்சியும் நரந்தையும் நறவும்

நறும் பாதிரியும் நாள் மலர் கொகுடியும் 20
இறும்பு அமல் ஏலமும் ஏர் இலவங்கமும்
பைம் கூதாளமும் வெண் பூம் சுள்ளியும்
கொய்து அகை போந்தும் கைதகை காந்தளும்
திமிசும் தேக்கும் ஞெமையும் ஆரமும்
சேபாலிகையும் செங்கொடுவேரியும் 25
தீ வாய் தோன்றி திலகமும் திரி கோல்
பகன்றையும் பலாசும் அகன் தலை புழகும்
குளவியும் குறிஞ்சியும் வளவிய மௌவலும்
சிறுசெங்குரலியும் சிறுசெண்பகமும்

நறும் பொன் கொட்டமும் துறும்புபு கஞலி 30
இன்னவை பிறவும் பல் மரம் பயின்று
கொடி பூம் பந்தரிடை பரந்து இயன்ற
இடம்_இடம்-தோறும் கடன் அது ஆகி
தண்டா காதலின் உண்டாட்டு உரைப்பேன்
தேரும் வையமும் சிவிகையும் பண்டியும் 35
ஊரும் ஊர்தியும் பிடிகையும் உயர் வரை
மை அணி வேழமும் மாவும் பண்ணி
மட மொழி மகளிரும் மைந்தரும் ஏறி
கடல் மலை பெயரும் காலம் போல

தேனில் பூ நகர் புல்லென 40
நீர் அணி பெரு மலை சாரல் எய்தி
மாசு_இல் வானத்து மதி விரிந்து அன்ன
தூசு குடிஞையும் துலா மண்டபமும்
பல் காழ் திரையும் படாகையும் கொட்டிலும்
ஒல்கா கூடமும் ஒருங்கு தலை பிணங்கி 45
மன்றும் வீதியும் துன்றி வீறு எய்தி
எவ்விடம்-தோறும் அவ்விடத்து ஆகி
உயர் மிசை உலகம் நீங்கி நிலம் மிசை
அந்தர மருங்கின் நந்தன வனத்தொடு

இந்திரன் உரிமையொடு எண் கொண்டு இறங்கின 50
இன்பம் பயந்த இலாவாணத்து அயல்
மன் பெரும் சோலை மலை-வயின் போகா
அறை வாய் முரசின் அதிர் கண் அன்ன
நிறை வாய் தண் சுனை நிவந்த நீலத்து
ஒண் மலர் குற்ற மகளிர் அவை நம் 55
கண் மலர் அழித்த கவின போன்ம் என
நீலமோடு இகன்ற நேர் இழை மகளிரை
கோலமொடு கலந்த குமரர் மற்று அவை
தேம் புடை விரிய கூம்பு இடம் காட்டி நும்

கண் நிழல் எறிப்ப கலக்கமொடு நடுங்கி 60
ஒண் நிழல் இழந்த ஒளிய ஆகி
தொழுவன இரக்கும் தோழி கை கொடீஇ
ஒழிக உள் அழிவு இவற்றொடு நீர் என
கழுமிய வெகுளியர் காண காட்டி
மாறா தானை மன்னனை வழுத்தி 65
ஆறா காதலொடு ஆடினர் ஒருசார்
பூம் தண் சாரல் பொங்கு குலை எடுத்த
காந்தள் கொழு முகை கண்ட மகளிர் நம்
கைவிரல் எழில் நலம் கவர்ந்தன இவை என

கொய் பூம் காந்தள் கொண்ட கையினர் 70
எமக்கு அணி உடையர் என்று எம்மொடு உறையும் நீர்
நுமக்கு அணி உடையரை எதிர்ந்தனிர் ஈங்கு என
எழில் விரல்-தோறும் இயைந்து அணி ஆகிய
கழு மணி மோதிரம் கழித்தனர் களைந்து
கவற்சி கொண்ட காம துணைவியர் 75
இயற்கை ஓரின் இற்று என மதித்து
கால காந்தள் கதழ்வு இடம் காட்டி
கோல கொழு விரல் ஏல் ஒளி எறிப்ப
அரும்பு என நில்லா அஞ்சின அளிய

விரிந்த இவற்றொடு விடு-மின் வேர்வு என்று 80
இரந்தனர் தெருட்டி இயைந்தனர் ஒருசார்
தேம் கமழ் சிலம்பில் பாங்குபட நிவந்த
வேங்கை விரி இணர் விரும்புபு கொய்து
புணர் வெம் காதலர் புனை இரும் கூந்தற்கு
இணர் இவை அணி-மின் என்று இரந்தனர் நீட்ட 85
விரும்பினர் கொண்டு வீ என உணரார்
அரும்பு இள வன முலை ஆகத்து அருகர்
சிதர்வன கிடந்த சில் அரி சுணங்கு இவை
புதல்வர் பயப்பின் புலந்து கை நீங்கி

மலையக மருங்கின் மரம் பொருந்தின என 90
சிலை அணி அழித்த சென்று ஏந்து புருவத்து
அரி மலர் நெடும் கண் அழல் எழ நோக்கி
தெரிவை மகளிர் திண் பார் வீசிட
மாலை ஓதி மடவரல் மகளிர்க்கு
காலை கழியினும் கழியாது இது என 95
உவந்த உள்ளமொடு நயந்து பாராட்டி
அன்மையை உணர்த்த வண்மையில் தாழ்ந்து
வீழ் பூம் கொம்பின் வேங்கை நிரந்த
ஆய் பூம் கானத்து ஆடினர் ஒருசார்

அரும் பெறல் காதலொடு அணி நமக்கு ஆகி 100
மருங்குலும் ஆகமும் வருந்த போந்த
கரும் கண் வெம் முலை அரும்பின் அழித்து
வண் பொன் தட்டம் மலர்ந்த ஆதலின்
நண்பிற்கு ஒத்தில நம்மோடு இவை என
கோங்கம் குறுகல் செல்லார் அயல 105
மாம் பொழில் சோலை மகிழ்ந்து உடன் ஆடும்
ஒள் இழை மகளிர்க்கு ஒளிர் மதி அன்ன
சுள்ளி வெண் சூழ்ச்சி சுரும்பு உண தொடுத்து
நெறி பல கூந்தல் நேயம் தோன்ற

குறிப்பு அறிந்து அணிந்து கூடினர் ஒருசார் 110
நாக நறு மரம் நவியத்தில் துணித்து
வேக வெவ் அழல் விளிய மாட்டி
மான் நிண புழுக்கலொடு தேன் நெய் விதவையின்
பல் முறை பகர்ந்து தொல் முறை பிழையார்
நல் நாள் கொண்டு தன் ஐயர் பரிய 115
பொன் நேர் சிறுதினை விளைந்த புனம்-தொறும்
சாயலும் கிளவியும் தம்மொடு நிகர்த்த
தோகையும் கிளியும் தொக்கவை அகல
துறுகல் வேயின் குறை கண்டு அன்ன

தடம் தோள் அசைய தட்டை புடைத்து 120
முடம் தாள் பலவின் முன்றில் நின்ற
கானவர் மகளிர் காரிகை நோக்கி
வானவர் மகளிர் அல்லர் ஆயின்
வள மலை சாரல் வரை மிசை உறையும்
இள நல மகளிர் இவர் என எண்ணி 125
அம்_சில்_ஓதியர் அஞ்சினர் ஒருசார்
எ சார் மருங்கினும் இன்னோர் பிறரும்
விச்சாதரியரின் வியப்ப தோன்றி
சுனை பூ குற்றும் சுள்ளி சூடியும்

சினை பூ அணிந்தும் கொடி பூ கொய்தும் 130
மகிழின் வட்ட வார் மலர் தொடுத்தும்
பவழ பிண்டி பல் இணர் பரிந்தும்
செண்ண தளிரில் கண்ணி கட்டியும்
மாலை தொடுத்தும் மலை வளம் புகழ்ந்தும்
கோல குறிஞ்சி குரவை ஆடியும் 135
மணி மயில் பீலி மா மயில் தொழுதி
அணி நலம் நோக்கியும் ஆடல் கண்டு உவந்தும்
மாதர் பைங்கிளி மழலை கேட்டும்
மகளிர் நாப்பண் மன்னவன் போல

துகள் அணி இரும் பிடி துன்னுபு சூழ 140
அம் தண் மராஅத்த பைம் தளிர் வாங்கி
கண் அயல் பிறந்த கவுள் இழி கடாஅத்து
தண் நறு நாற்றம் தாழ்ப்ப தவிர்த்து
பெருமையில் பிறப்பினும் பெற்றி போகா
சிறுமையாளர் செய்கை போல 145
மூசுதல் ஓவா மிஞிற்றினம் இரிய
வீசுதல் ஓவா விழு தகு தட கை
இரும் களிற்று இன நிரை விரும்புபு நோக்கியும்
கொய் குரல் ஏனலும் குளிர் சுனை பாறையும்

மை வளர் சென்னி மரம் பயில் கானமும் 150
மலர் பூம் சோலையும் திளைத்தல் ஆனார்
ஆடியும் பாடியும் கூடியும் பிரிந்தும்
ஊடியும் உணர்ந்தும் ஓடியும் ஒளித்தும்
நாடியும் நடந்தும் நலம் பாராட்டியும்
மைந்தரும் மகளிரும் மணந்து விளையாடி 155
மைந்துற்றனரால் வள மலை புகழ்ந்து என்
* 2 இலாவாண காண்டம்

#13 குறிக்கோள் கேட்டது
மைந்தரும் மகளிரும் மலை-வயின் ஆடி
வெம் திறல் வேந்தன் வீழ்பவை காட்டி
ஐம்பெரும்குழுவும் எண்பேராயமும்
கண்ணுற கவவி கலந்து விடாஅ
அருமைக்கு ஒத்த அஞ்சுவரு காப்பின் 5
உரிமை சுற்றம் பின்பட உய்த்து
தீது_அற எறியும் தெரி பொருள் கேள்வி
மூது அறி முனிவன் பள்ளி முன்னர்
அரணம் வேண்டாது அச்சம் நீக்கி

வருணம் ஒன்றாய் மயங்கிய ஊழி 10
சிறுமையும் வறுமையும் தின்மையும் புன்மையும்
இறுபும் புலம்பும் இன்மையும் இரக்கமும்
அறியும் மாந்தரின் உறு வளம் கவினி
ஐம்_திணை மரனும் பைம் தளிர் கொடியும்
தம் துணை செல்வம் தலைத்தலை பெருகி 15
அரு மதி முனிவர் நிருமிதம் போல
அழல் கண் அகற்றி நிழல் மீக்கூரி
நீர் புக்கு அன்ன நீர்மைத்து ஆகி
ஊர் புக்கு அன்ன உள் உவப்பு உறீஇ

மலர் தவிசு அடுத்து தளிர் குடை ஓங்கி 20
பூம் கொடி கவரி புடைபுடை வீசி
தேம் கொடி பறவையும் திருந்து சிறை மிஞிறும்
விரும்புறு சுரும்பும் பெரும் பொறி வண்டும்
குழல் வாய் தும்பியும் குயிலும் கூடி
மழலை அம் பாடலின் மனம் பிணியுறீஇ 25
முதிர் கனி அமிர்தம் எதிர்கொண்டு ஏந்தி
மேவன பல பயின்று ஈவன போன்ற
பய மரம் அல்லது கய மரம் இல்லா
காவினுள் இரீஇ காவல் போற்றி

மா தவ முனிவர்க்கு மன்னவன் காணும் 30
கருமம் உண்மை மரபின் கிளப்ப
பெரும் குல பிறப்பினும் அரும் பொருள் வகையினும்
இரும் கண் ஞாலத்து இன் உயிர் ஓம்பும்
காவல் பூண்ட கடத்தினும் விரும்பி
இமையோர் இறைவனை எதிர்கொண்டு ஓம்பும் 35
அமையாது ஈட்டிய அரும் தவ முனிவரின்
வியலக வேந்தனை இயல்புளி எதிர்கொண்டு
அணி தகு பள்ளி அசோகத்து அணி நிழல்
மணி தார் மார்பனை மணல் மிசை அடுத்த

பத்தி பல் மலர் சித்திரம் குயின்ற 40
இயற்றா தவிசின் மிசை இருக்கை காட்ட
கவற்சி மனத்தொடு காண் தக இருந்த தன்
தாள் முதல் சார்ந்து தோள் முதல் தோழனை
உள்ளி உள் அழிந்து ஒழுகு வரை தட கையின்
வெள் இதழ் நறு மலர் வீழ பையாந்து 45
நினைப்பு உள்ளுறுத்த அ நிலைமை நோக்கி
இனத்தின் இரிந்தாங்கு எ வகை நிமித்தமும்
மனத்தின் உற்றவை மறை இன்று உணர்தலின்
துனிவு கொள் மன்னற்கு முனிவன் கூறும்

பசு மரம் சார்ந்தனை ஆதலின் மற்று நின் 50
உசிர் பெரும் தோழன் உண்மையும் கூட்டமும்
கண் அகன்று உறைந்த கடி நாள் அமையத்து
திண்ணிது ஆகும் தெளிந்தனை ஆகு-மதி
விரும்பி நீ பிடித்த வெண் மலர் வீழ்ச்சி
பொருந்தி நீ அளக்கும் பொரு_இல் போகத்து 55
இடையூறு உண்மை முடிய தோன்றும்
வீழ்ந்த வெண் மலர் வெறு நிலம் படாது
தாழ்ந்த கச்சை நின் தாள் முதல் தங்கலின்
பிரிந்த போகம் பெயர்த்தும் பெறுகுவை

நிலத்து மிசை இருந்தனை ஆதலின் மற்று நின் 60
தலை பெரு நகரமொடு நல் நாடு தழீஇ
கொற்றம் கோடலும் முற்றியது ஆகி
முன்னிய நின்றவை முடிய தோன்றும் என்று
எண்ணிய இ பொருள் திண்ணிதின் எய்தும்
பெறும் பயம் இது என பிழைத்தல் இன்றி 65
உறும் பெரும் சாரணர் உரை வேறு உண்மையும்
இறுவா எழுச்சியும் இத்துணை அளவு என
உறு தவ முனிவன் உள் விரித்து ஒழியாது
வத்தவர் பெருமகன் தத்துறவு அகல

கழி பொருள் எதிர் பொருட்கு ஏதுவாக 70
அழி பொருள் அன்றி ஆகு பயம் கூற
தக்கது-மன்ற மிக்கோன் கூற்று என
நட்பு உடை தோழனை நண்ணி அன்னது ஓர்
உள் புகன்று எழுதரும் உவகையன் ஆகி
பள்ளி மருங்கில் பாவம் கழீஇ 75
வள்ளி மருங்கில் வாசவதத்தையை
கூடுதல் ஆனா குறிப்பு முந்துறீஇ
ஆடுதல் ஊற்றமொடு அமர்ந்தனன் உவந்து என்
*2 இலாவாண காண்டம்

#14 உண்டாட்டு
ஆடுதல் ஆனா அளப்பினன் ஆகி
நாடு தலைமணந்த நல் நகர் நினையான்
மாயோன் மார்பின் மன்னுபு கிடந்த
ஆரம் போல அணி பெற தோன்றி
பசும்பொன் தாதொடு பல் மணி வரன்றி 5
அசும்பு சோர் அரு வரை அகலம் பொருந்தி
ஞால மாந்தரை நாணி அன்ன
நடுங்கு செலல் கான்யாற்று கடும் புனல் ஆடி
மணி நிழல் பாறை மரங்கில் பல்கி

அணிகல பேழை அகம் திறந்து அன்ன 10
நறு மலர் அணிந்த குறு வாய் குண்டு சுனை
நீள் நீர் முழவின் பாணியில் பாடியும்
குழையர் கோதையர் இழையர் ஏர் இணர்
தழையர் தாரினர் உழை-வயின் பிரியார்
பல் வகை மகளிரொடு செல்வம் சிறந்தும் 15
கான் உறை மகளிரின் கவின் பெற தோன்றி
தேன் உறை சிலம்பின் தானம்-தோறும்
விரவு மலர் கோதையர் வேறுவேறு இயலி
குரவம் பாவை கொண்டு ஓலுறுத்து ஆடியும்

விரிந்து வேய் உடைத்த வெண் கதிர் முத்தம் 20
தெரிந்து வேறு அமைத்து சிற்றில் இழைத்தும்
பூம் கண் பாவைக்கு பொன் கலம் இவை என
தேம் கண் சாரல் திருந்து சினை மலர்ந்த
கோங்கம் தட்டம் வாங்கினர் வைத்தும்
செப்பு அடர் அன்ன செம் குழை பிண்டி 25
கப்பு உடை கவி சினை நல் புடை நான்ற
தழை கயிற்று ஊசல் விருப்பிற்று ஊக்கியும்
பைம் கொடி முல்லை வெண் போது பறித்தும்
கத்திகை தொடுத்தும் பித்திகை பிணைத்தும்

சித்திரமாக செம் தளிர் வாங்கி 30
பத்திர சேதம் பற்பல கிள்ளியும்
உறியோர்க்கு உதவுதல் செல்லாது ஒய்யென
சிறியோர் உற்ற செல்வம் போல
பொரு சிறை வண்டினம் பொருந்தாது மறக்க
நறு மலர் செல்வமொடு நாள் கடி கமழும் 35
செண்பக சோலை தண் தழை தைஇயும்
பேறு அரும் கற்பின் பிரச்சோதனன் மகள்
மாறு அடு வேல் கண் வாசவதத்தை
செல்வமும் சிறப்பும் பல் ஊழ் பாடி

குராஅ நீழல் கோல் வளை ஒலிப்ப 40
மராஅம் குரவை மகிழ்ந்தனர் மறலியும்
ஆடு பொன் கிண்கிணி அடி மிசை அரற்ற
நீடி அன்ன நிழல் அறை மருங்கில்
பந்து எறிந்து ஆடியும் பாவை புனைந்தும்
அம் தளிர் படை மிசை அயர்ந்தனர் ஒடுங்கியும் 45
ஏனல் குறவர் இரும் குடி சீறூர்
மான் அமர் நோக்கின் மகளிரொடு மரீஇ
வெம் கண் மறவர் வில்லின் வீழ்த்த
பைம் கண் வேழத்து பணை மருப்பு உலக்கையின்

அறை உரல் நிறைய ஐவன பாசவல் 50
இசையொடு தன் ஐயர் இயல்பு புகழ்ந்து இடிக்கும்
அம்மனை வள்ளை இன் இசை கேட்டும்
கோயில் மகளிர் மேயினர் ஆட
பொரு_இல் போகமொடு ஒரு மீக்கூறிய
உருவ பூம் தார் உதயணகுமரனும் 55
வள்ளி அம் பணை தோள் முள் எயிற்று அமர் நகை
வாள் மணி கொழும் பூண் வாசவதத்தையும்
இயல்பின் செய்ய ஆயினும் உயர் வரை
அருவி ஆட்டினும் அறல் சுனை திளைப்பினும்

பூம் குழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய 60
தேம் கமழ் தேறலொடு தெளி மது மடுப்பினும்
தாமரை செவ் இதழ் தலை கேழ் விரித்த
காமர் நெடும் கண் கைம்மீ சிவப்ப
கனிந்த காதலொடு முனிந்து
மயக்கம் ஆகி முயக்கம் இல்லாது 65
பிரிவு_அரும் புள்ளின் ஒருமையின் ஒட்டி
வண்டு ஆர் சோலை வள மலை சாரல்
உண்டாட்டு அயர்பவால் உவகையுள் மகிழ்ந்து என்
* 2 இலாவாண காண்டம்

# 15 விரிசிகை மாலை சூட்டு
வண்டு ஆர் சோலை வள மலை சாரல்
உண்டாட்டு அயரும் பொழுதின் ஒரு நாள்
வழை அமல் முன்றிலொடு வார் மணல் பரப்பி
கழை வளர் கான்யாறு கல் அலைத்து ஒழுகி
ஊகம் உகளும் உயர் பெரும் சினைய 5
நாக படப்பையொடு நறு மலர் துறுமி
சந்தன பலகை சதுர கூட்டமொடு
மந்திர சாலை மருங்கு அணி பெற்ற
ஆத்திரையாளர் சேக்கும் கொட்டிலும்

நெடியவன் மூவகை படிவம் பயின்ற 10
எழுது நிலை மாடமும் இடுகு கொடி பந்தரும்
கல் அறை உறையுளொடு பல் இடம் பயின்றே
துறக்க கிழவனும் துன்னிய-காலை
இறக்கல் ஆகா எழில் பொலிவு எய்தி
தண் பூம் தணக்கம் தமாலம் தகரம் 15
ஒண் பூம் காந்தள் வெண் பூம் சுள்ளி
வீயா நாற்றமொடு அணி வளம் கொடுப்ப
கை அமைத்து இயற்றிய செய் சுனை-தோறும்
வராலும் வாளையும் உராஅய் மறல

கழுநீர் ஆம்பல் கரும் கேழ் குவளையொடு 20
கொழு நகை குறும் போது குறிப்பில் பிரியா
புணர்ச்சி மகளிர் போகத்து கழுமி
துயில் கண் திறந்த தோற்றம் போல
நறவு வாய் திறந்து நாள் மது கமழ
அறு கால் வண்டு இனம் ஆர்ப்ப அயலே 25
அம் தீம் பலவும் அள் இலை வாழையும்
முதிர் கோள் தெங்கொடு முன்றில் நிவந்து
மணி கண் மஞ்ஞையும் மழலை அன்னமும்
களி குரல் புறவும் கரும் குயில் பெடையும்

பூவையும் கிளியும் யூகமும் மந்தியும் 30
மருளி மாவும் வெருளி பிணையும்
அன்னவை பிறவும் கண்ணுற குழீஇ
நலிவோர் இன்மையின் ஒலி சிறந்து உராஅய்
அரசு இறைகொண்ட ஆவணம் போல
பொலிவொடு புணர்ந்த பொழிலகம் புதைஇ 35
பெரும் தகு படிவமொடு பிறப்பு_அற முயலும்
அரும் தவ நோன்மையர் ஆத்திரை கொட்டிலில்
கேள்வி முற்றி கிரிசை நுனித்த
வேள்வி கல பை விழு பொருள் விரதத்து

சீரை உடுக்கை வார் வளர் புன் சடை 40
ஏதம்_இல் காட்சியோர் மா தவர் உறையும்
பள்ளி குறுகி ஒள் இழை மகளிரொடு
வான் பொன் கோதை வாசவதத்தையும்
காஞ்சனமாலையும் காண்டற்கு அகல
பெரும் தண் பிண்டி பிணங்கிய நீழல் 45
அரும் படை தானை அகன்ற செவ்வியுள்
வயந்தககுமரனொடு வத்தவன் இருந்துழி
ஏதம் இன்றி இறைக்கடன் கழித்து
காதல் பெரும் தொடர் களைதல் ஆற்றான்

மாதர் தேவியொடு மாதவம் புரிந்த 50
மன்னவ முனிவன் தன் அமர் ஒரு மகள்
அணி தகு பேர் ஒளி அரத்தம் அடுத்த
மணி பளிங்கு அன்ன மாசு_இல் வனப்பின்
உகிர் அணி பெற்ற நுதி முறை சுருங்கி
நிரல் அளவு அமைத்த விரலிற்கு ஏற்ப 55
செம்மையில் சிறந்து வெம்மைய ஆகி
ஊன் பெற பிறங்கி ஒழுகு நீர் ஆமை
கூன் புறம் பழித்த கோல புற அடி
குவிந்த அடிமையில் கோபத்து அன்ன

பரட்டின் நன்னர் பாய சீறடி 60
திரட்டி அன்ன செல்வ கணை கால்
செறிந்து வனப்பு எதிர்ந்த தேன் பெய் காம்பின்
நிறம் கவின் பெற்ற கால் அமை குறங்கின்
கை வரை நில்லா கடும் சின அரவின்
பை அழித்து அகன்ற பரந்து ஏந்து அல்குல் 65
துடி நடு அன்ன துளங்கிய நுசுப்பின்
கொடி அடர்ந்து ஒழுகிய கோல மருங்கின்
புனல் சுழி அலைத்து பொருந்திய கொப்பூழ்
வனப்பு வீற்றிருந்த வாக்கு அமை அம் வயிற்று

அம் சில் ஆகத்து எஞ்சுதல் இன்றி 70
திணை முதல் இட்ட செம் கண் முகிழ் முலை
அணை புரை மென்மை அமைபடு பணை தோள்
காம்பு அமை சிலம்பின் கடி நாள் காந்தள்
பூம் துடுப்பு அன்ன முன்கையின் பொலிந்து
கொழு முகை குவித்த செழு மென் சிறு விரல் 75
கிளி வாய் அன்ன ஒளி வாய் உகிரின்
விரிந்து நிலா நிறைந்த மேதகு கமுகின்
எருத்திற்கு ஏற்ற திரு தகு கழுத்தின்
கூடு மதி அன்ன சேடு அணி திரு முகத்து

அகழ் கடல் பிறந்த ஆசு_அறு பேர் ஒளி 80
பவழ கடிகை பழித்த செம் வாய்
முருந்து ஒளி முருக்கிய திருந்து ஒளி முறுவல்
நேர் கொடு சிவந்த வார் கொடி மூக்கின்
பொரு கயல் போல புடை சேர்ந்து உலாஅய்
செரு வேல் பழித்த சே அரி நெடும் கண் 85
கண்ணிற்கு ஏற்ப நுண்ணிதின் ஒழுகி
முரிந்து ஏந்து புருவம் பொருந்திய பூ நுதல்
நாள் வாய் வீழ்ந்த நறு நீர் வள்ளை
தாள் வாட்டு அன்ன தகை அமை காதின்

நீல மா மணி நிமிர்ந்து இயன்று அன்ன 90
கோலம் கொண்ட குறு நெறி கூழை
ஒரு சிகை முடித்த உறுப்பு அமை கோலத்து
விரிசிகை என்னும் விளங்கு இழை குறு_மகள்
இருந்து இனிது ஒழுகும் இயல் மலை பள்ளியுள்
அரும் தவர் அல்லதை ஆடவர் அறியாள் 95
தவிர்வு_இல் காதலொடு தன் வழி படூஉம்
கவர் கணை நோன் சிலை காமன் இவன் எனும்
மையல் உள்ளமொடு பைய இயலி
பிள்ளைமை கலந்த பேதை பெரும் பிணை

வெள்ளை நோக்கமொடு விரும்புபு விதும்பி 100
பவழ பாவையும் பந்தும் கிடைஇ
புகழப்பட்ட பூ மர காவினுள்
நந்திவட்டமும் நாகத்து அலரும்
சிந்துவாரமும் சேபாலிகையும்
மணி குருக்கத்தியும் மணி பூம் சுள்ளியும் 105
நாள் சிறு சேடமும் நறும் செண்பகமும்
கோட்கு அமைந்து ஏந்திய கோல பல் மலர்
அம் பூம் குடம் கை அக-வயின் அடக்கி
கொம்பு ஏர் மருங்குல் கோமகன் குறுகி

திருந்து வாய் திறந்து தேன் என மிழற்றி 110
பெரும் தண் மலரில் பிணையல் தொடுத்து என்
பாவையும் யானும் பண்புளி சூடுகம்
ஈ-மின் ஐய என்று இரந்தனள் நீட்ட
நூலொடு புணர்ந்த வால் இயல் மார்பின்
தவத்து இயல் பள்ளி சார்ந்தனள் உறையும் 115
இயற்கை திரு_மகள் இவள் என எண்ணி
இணை மலர் நெடும் கண் இமைத்தலும் வாடிய
துணை மலர் கோதை தோற்றமும் கண்டே
முனிவர் மகள் என தெளிவு முந்துறீஇ

ஐயம் இன்றி ஆணை ஓட்டிய 120
தெய்வ திகிரி கைவலத்து உயரிய
நில பெரு மன்னர் மகளிர்க்கு அமைந்த
இலக்கண கூட்டம் இயல்பட தெரியா
அரும் படை வழக்கின் அன்றியும் முனியாது
நரம்பு பொர தழும்பிய திருந்து விரல் அங்கையில் 125
புரி நூல் மீ கோள் பூம் புறத்து ஏற்ற தன்
தெரி நூல் வாங்கி இரு நூல் கொளீஇ
பவழமும் வெள்ளியும் பசும்பொன் அடரும்
திகழ் கதிர் முத்தமும் திரு மணி காசும்

உறழ்பட கோத்த ஒளியின போல 130
வண்ணம் வாடாது வாசம் கலந்த
தண் நறும் பல் மலர் தானத்து இரீஇ
வாள் தொழில் தட கையின் வத்தவர் பெருமகன்
சூட்டு நலம் புனைந்து சுடர் நுதற்கு ஈய
ஈய கொண்டு தன் எழில் முடிக்கு ஏற்ப 135
சூடுதல் தேற்றாள் சுற்றுபு திரியும்
ஆடு அமை தோளி அலமரல் நோக்கி
மடவரல் மாதரை வா என அருளி
தட வரை மார்பன் தாள் முதல் உறீஇ

உச்சிக்கு ஏற்ப ஒப்பனை கொளீஇ 140
பக்க சில் மலர் பத்தியில் கட்டுபு
நீல நாகம் பை விரித்து அன்ன
கோல சிகழிகை தான் முதல் சேர்த்தி
அம் செம் கத்திகை அணி பெற அடைச்சி
பைம் கேழ் தாமம் பக்கம் வளைஇ 145
இருள்_அறு மதியின் திரு முகம் சுடர
அமை புரி தோளியை அன்பின் அளைஇ
புனை மலர் பிணையல் சூட்டினன் புகன்று என்
* 2 இலாவாண காண்டம்

#16 ஊடல் உணர்த்தியது
புனை மலர் பிணையல் புரவலன் சூட்டி
இன மடல் பெண்ணை ஈர்ம் தோடு திருத்தி
செல்க நங்கை மெல்ல நடந்து என
அடுத்த காதலொடு அண்ணல் விடுப்ப
வேண்டிடத்து ஆடும் விருப்புறு நீக்கம் 5
யாண்டு கழிந்து அன்ன ஆர்வம் ஊர்தர
தழையும் கண்ணியும் விழைவன ஏந்தி
பொன் பூம் கிண்கிணி புற அடி பிறழ
நல் பூம் கொம்பர் நடைபெற்றாங்கு

கவவுறு காதலில் கண்ணுற வரூஉம் 10
உவவுறு மதி முகத்து ஒளி வளை முன்கை
கண் ஆர் கனம் குழை கதுமென கண்டே
மண் ஆர் மார்பன் மாதரை சூட்டிய
காமர் பிணையல் கதுப்பு அணி கனற்ற
தாமரை அன்ன தன் தகை முகம் மழுங்கா 15
ஓடு அரி சிதரிய ஒள் அரி மழை கண்
ஊடு எரி உமிழும் ஒளியே போல
சிவப்பு உள்ளுறுத்து செயிர்ப்பு முந்துறீஇ
நயப்பு உள்ளுறுத்த வேட்கை நாணி

உருத்து அரி வெம் பனி ஊழூழ் சிதரி 20
விருப்பு மறைத்து அடக்கி வேக நோக்கமொடு
பனி பிறை அழித்த படுமைத்து ஆகிய
அணி தகு சிறு நுதல் அழன்று வியர் இழிய
உருவ வானத்து ஒளி பெற குலாஅய
திரு வில் அன்ன சென்று ஏந்து புருவம் 25
முரிவொடு புரிந்த முறைமையில் துளங்க
இன்பம் பொதிந்த ஏந்து அணி வன முலை
குங்கும கொடியொடு குலாஅய் கிடந்த
பூம் தாது ஒழுக்கம் சாந்தொடு திமிர்ந்து

தளிர் பூம் கண்ணியும் தழையும் வீசியிட்டு 30
ஒளி பூம் தாமம் உள் பரிந்து சிதறி
முழு நீர் பொய்கையுள் பொழுதொடு விரிந்த
செழு மலர் தாமரை செவ்வி பைம் தாது
வைகல் ஊதா வந்த கடைத்தும்
எவ்வம் தீராது நெய்தற்கு அவாவும் 35
வண்டே அனையர் மைந்தர் என்பது
பண்டே உரைத்த பழமொழி மெய்யா
கண்டேன் ஒழிக இனி காம கலப்பு என
பிறப்பிடை கொண்டும் சிறப்பொடு பெருகி

நெஞ்சில் பின்னி நீங்கல் செல்லா 40
அன்பின் கொண்ட ஆர்வ வேகமொடு
நச்சு உயிர்ப்பு அளைஇ நண்ணல் செல்லா
கச்ச தானை காவலன் மட மகள்
பெருமகன் மார்பில் பிரியாது உறையும் ஓர்
திரு_மகள் உளள் என செவியில் கேட்பினும் 45
கதுமென பொறாஅள் ஆதலின் கண்கூடு
அது அவண் கண்டு அகத்து அறாஅ அழற்சியில்
தன் புடை சார்ந்த தவ முது_மகளையும்
கை புடை நின்ற காஞ்சனை-தன்னையும்

அற்பிடை அறாஅ எந்தை அணி நகர் 50
உய்த்தனிர் கொடு-மின் என்று ஊழ் அடி ஒதுங்கி
சிதர் மலர் அணிந்து செம் தளிர் ஒழுகிய
புது மலர் சோலையுள் புலந்து அவள் அகல
அகலும் மாதரை அன்பின் கெழீஇ
கலை உணர் கணவனொடு காஞ்சனை பிற்பட 55
கண்ணில் காட்டி காம வெகுளி
நண்ணின் மற்று இது நயந்து வழி ஓடி
மாசு_அற கழீஇ மனத்திடை ஆம் நோய்
ஆரா வாய் முத்து ஆர்த்தின் அல்லது

தீராது உயிர்க்கு என தெளிவு முந்துறீஇ 60
ஊராண் குறிப்பினோடு ஒரு-வயின் ஒதுங்கும்
தன் அமர் மகளொடு தாய் முன் இயங்க
நற விளை தேறல் உறு பிணி போல
பிறிதின் தீரா பெற்றி நோக்கி
குறிப்பு-வயின் வாராள் ஆயினும் கூடி 65
பொறி பூண் ஆகத்து புல்லுவனன் ஒடுக்கி
அருமை காலத்து அகலா நின்ற
திரு_மகள் பரவும் ஒரு மகன் போல
உரிமை தேவி உள்ளகம் நெகிழும்

வழிமொழி கட்டளை வழிவழி அளைஇ 70
முடி அணி திருத்தியும் முலை முதல் வருடியும்
அடி மிசை கிண்கிணி அடை துகள் அகற்றியும்
கதுப்பு அணி புனைந்தும் கதிர் வளை ஏற்றியும்
மது களி கொண்ட மதர் அரி நெடும் கண்
கடை துளி துடைத்தும் கடிப்பு பெயர்த்து அணிந்தும் 75
புது தளிர் கொடுத்தும் பூம் புறம் நீவியும்
செயிர் இடையிட்டு இது சிறக்குவது ஆயின்
உயிர் இடையிட்ட உறுகண் தரும் என
தன் உயிர் கணவன் உள் நெகிழ்ந்து உரைக்க

அ மொழி கேளாது அசைந்த மாதரை 80
அருவி அரற்று இசை அணி முழவு ஆக
கரு விரல் மந்தி பாட கடுவன்
குரவை அயரும் குன்ற சாரல்
துகில் இணை பொலிந்த பகல் அணை பள்ளியுள்
முகிழ்ந்து ஏந்து இள முலை முத்தொடு முழீஇ 85
திகழ்ந்து ஏந்து அகலத்து செம் சாந்து சிதைய
பூண் வடு பொறிப்ப புல்லு-வயின் வாராள்
நாணொடு மிடைந்த நடுக்குறு மழலையள்
காம வேகம் உள்ளம் கனற்ற

தாமரை தட கையின் தாமம் பிணைஇ 90
ஆத்த அன்பின் அரும்_பெறல் காதலிக்கு
ஈத்ததும் அமையாய் பூத்த கொம்பின்
அவாவுறு நெஞ்சமொடு கவான் முதல் இரீஇ
தெரி மலர் கோதை திகழ சூட்டி
அரி மலர் கண்ணி நின் அகத்தனள் ஆக 95
அருளின் நீ விழைந்த மருளின் நோக்கின்
மாதரை யாமும் காதலெம் பெரும
பொம்மென் முலையொடு பொன் பூண் நெருங்க
விம்மம் உறும் அவள் வேண்டா முயக்கு என

பண் நெகிழ் பாடலின் பழத்திடை தேன் போல் 100
உள் நெகிழ்ந்து கலவா ஊடல் செவ்வியுள்
தாழ் வரை அடுக்கத்து தளிர் சேர் தே மாத்து
ஊழ் உறு தீம் கனி உண்ணா இருத்தலின்
இவறினை நீ என தவறு முந்துறீஇ
இன பெரும் தலைமகன் ஆணையின் ஆட்டி 105
தனக்கு அரண் காணுது தட வரை தத்தி
பெருமகன் கோயில் திரு முன் பாய்ந்து எனக்கு
அரண் நீ அருள் என்று அடைவது போன்று ஓர்
கரு முக முசு கலை கதுமென தோன்ற

இன்னது என்று உணரா நல்_நுதல் நடுங்கி 110
அழல் கதிர் பரப்பி உழல் சேர் வட்டமொடு
நிழல் அவிர் கதிர் மதி நிரந்து நின்றாங்கு
திலக திரு முகம் செல்வன் திருத்தி
ஒழுகு கொடி மருங்குல் ஒன்றாய் ஒட்டி
மெழுகு செய் பாவையின் மெல் இயல் அசைந்து 115
மன்னவன் மார்பில் மின்னென ஒடுங்கி
அச்ச முயக்கம் நச்சுவனள் விரும்பி
அமிழ்துபடு போகத்து அன்பு வலைப்படுத்த
மாதரை மணந்த தார் கெழு வேந்தன்

வழி தொழில் கருமம் மனத்தின் எண்ணான் 120
விழு தகு மாதரொடு விளையாட்டு விரும்பி
கழிக்குவன் மாதோ கானத்து இனி என்
* 2 இலாவாண காண்டம்

# 17 தேவியைப் பிரித்தது
கழிக்கும்-காலை கானத்து அக-வயின்
வழுக்கு_இல் தோழரொடு இழுக்கு இன்று எண்ணி
வந்து அவண் ஒடுங்கிய வெம் திறல் அமைச்சன்
பொய் நிலம் அமைத்து புரிசை கோயில்
வெவ் அழல் உறீஇ விளங்கு இழை பிரித்து 5
நல தகு சேதா நறு நெய் தீம் பால்
அலைத்து வாய் பெய்யும் அன்பு உடை தாயின்
இன்னா செய்து மன்னனை நிறூஉம்
கரும கடுக்கம் ஒருமையின் நாடி

உருமண்ணுவாவொடு வயந்தகற்கு உணர்த்தி 10
தவ முது_மகளை தக்கவை காட்டி
உயர் பெரும் கோயிலுள் தேவியை ஒழியா
நிலா மணி கொடும் பூண் நெடுந்தகை குருசிலை
உலா எழ போக்கி ஒள் அழல் உறீஇய பின்
இன்னுழி தம்-மின் என்று அன்னுழி அவளொடு 15
பின் கூட்டு அமைவும் பிறவும் கூறி
கல் கூட்டு எய்தி கரந்தனன் இருப்ப
மந்திர நாவின் அந்தணாட்டி
தேர் உடை மன்னர் திறல்பட கடந்த

போர் அடு குருசிலை பொழுதில் சேர்ந்து 20
வரை உடை சாரலில் வரூஉம் குற்றத்து
உரை உடை முது_மொழி உரைத்தவற்கு உணர்த்தி
தோல் கை எண்கும் கோல் கை குரங்கும்
மொசி வாய் உழுவையும் பசி வாய் முசுவும்
வெருவு தன்மைய ஒரு-வயின் ஒரு நாள் 25
கண்ணுற காணில் கதுமென நடுங்கி
ஒண் நுதல் மாதர் உட்கலும் உண்டாம்
பற்றார் உவப்ப பனி வரை பழகுதல்
நல் தார் மார்ப நன்றி இன்று ஆகும்

இன் எயில் புரிசை இலாவாணத்து நின் 30
பொன் இயல் கோயில் புகுவது பொருள் என
உறு வரை மார்பன் உவந்தனன் ஆகி
இறு வரை இமயத்து உயர் மிசை இழிந்து
பல் முகம் பரப்பி பௌவம் புகூஉம்
நல் முக கங்கையின் நகரம் நண்ணி 35
பல் மலர் கோதையை பற்று விட்டு அகலான்
சில் நாள் கழிந்த-காலை சிறந்த
நல் மாண் தோழர் நண்ணுபு குறுகி
செய் வினை மடிந்தோர் சேர்ந்து உறைவிலளே

மை_அறு தாமரை மலர்_மகள்-தான் எனல் 40
வையகத்து உயர்ந்தோர் வாய் மொழி ஆதலின்
ஒன்னா மன்னர்க்கு ஒற்று புறப்படாமை
பல் நாள் பிரிந்து பசைந்துழி பழகாது
வருவது பொருள் என வாசவதத்தையை
பிரிதல் உள்ளம் பெருந்தகை மறுப்ப 45
தாழ் இரும் கூந்தலை தணப்ப நின்றது ஓர்
ஊழ் வினை உண்மையின் ஒளி வளை தோளியும்
வேட்டகம் போகி அடிகள் காட்டகத்து
அரும்பினும் மலரினும் பெரும் செம் தளிரினும்

கண்ணி கட்டி தம்மின் எனக்கு என 50
வள் இதழ் நறும் தார் வத்தவ மன்னனும்
உள்ளம் புரிந்தனன் ஒள்_இழை ஒழிய
கழி நாள் காலை கானம் நோக்கி
அடு போர் மா ஊர்ந்து அங்கண் நீங்க
வடு நீங்கு அமைச்சர் வலித்தனர் ஆகி 55
பிணை மலர் படலை பிரச்சோதனன்-தன்
இணை மலர் பாவையை இயைந்ததற்கொண்டும்
ஊக்கம்_இலன் இவன் வேட்கையின் வீழ்ந்து என
வீக்கம் காணார் வேட்டுவர் எள்ளி

கலக்கம் எய்த கட்டு அழல் உறீஇய 60
தலைக்கொண்டனர் என தமர்க்கும் பிறர்க்கும்
அறிய கூறிய செறிவு உடை செய்கை
வெம் சொல் மாற்றம் வந்து கைகூட
வன்கண் மள்ளர் வந்து அழல் உறீஇ
போர் பறை அரவமொடு ஆர்ப்பனர் வளைஇ 65
கோப்பெருந்தேவி போக்கு_அற மூடி
கையிகந்து பெருகிய செய்கை சூழ்ச்சியுள்
பொய் நிலம் அமைத்த பொறி அமை மாடத்து
இரும்பும் வெள்ளியும் இசைந்து உருக்குறீஇ

அரும் கலம் ஆக்கி யாப்பு பிணி உழக்கும் 70
கொலை சிறை இருவரை பொருக்கென புகீஇ
நல தகு மாதர் அடி கலம் முதலா
தலைக்கலம்-காறும் தந்து அகத்து ஒடுக்கி
சிந்திர பெரும் பொறி உய்த்தனர் அகற்றி
வத்தவர் கோமான் மனத்து அமர் துணைவியொடு 75
தத்துவ செவிலியை தலை பெரும் கோயில்
மொய்த்து அழல் புதைப்பினும் புக்கு அவண் போ-மின் என்று
அ தக அமைத்த யாப்புறு செய்கையொடு
அரு மனை வரைப்பகம் ஆர் அழல் உறீஇய

கரும கள்வரை கலங்க தாக்கி 80
உருமண்ணுவாவும் ஒருபால் அகல
பொறி வரி தவிசில் பொன் நிற பலகை
உற நிறைத்து இயற்றி உருக்கு அரக்கு உறீஇய
மாடமும் வாயிலும் ஓடு எரி கவர
இளையரும் மகளிரும் களைகண் காணார் 85
வேகுறு துயரமொடு ஆகுலம் எடுப்ப
தடம் கண் பிறழ தளர் பூம் கொடியின்
நடுங்கி வெய்து உயிர்க்கும் நல் நுதல் பணை தோள்
தேவியை பற்றி தெரி மூதாட்டி

யூகி கூறிய ஒளி நில மருங்கில் 90
பெரும் கல நிதியம் பெய்து வாய் அமைத்த
அரும் பிலத்து யாத்த அச்ச மாந்தர்
வாயில் பெற்று வழி படர்ந்தாங்கு
போக அமைத்த பொய் நில சுருங்கையுள்
நற்பு உடை அமைச்சனை நண்ணிய பொழுதில் 95
கற்பு உடை மாதரை காதல் செவிலி
அற்பு உடை பொருள் பேர் அறிவின் காட்டி
அம்_சில்_ஓதி அஞ்சல் நும் பெருமான்
நெஞ்சு புரை அமைச்சன் நீதியின் செய்த

வஞ்சம் இது என வலிப்ப கூறி 100
அரும் திறல் அமைச்சனொடு ஒருங்கு தலைப்பெய்த பின்
இன் நகை முறுவலொடு எண்ணியது முடிந்தது என்று
எதிர் எழுந்து விரும்பி யூகி இறைஞ்சி
மதி புரை முகத்திக்கு மற்று இது கூறும்
இரும் கடல் உடுத்த இ பெரும் கண் ஞாலத்து 105
தன்னின் அல்லது தாம் மீக்கூரிய
மன்னரை வணக்கும் மற மாச்சேனன்
காதல் மகளே மாதர் மடவோய்
வத்தவர் பெருமகன் வரை புரை அகலத்து

வித்தக நறும் தார் விருப்பொடு பொருந்தி 110
நுகர்தற்கு அமைந்த புகர் தீர் பொம்மல்
கோல வன முலை கொடி புரை மருங்குல்
வால் வளை பணை தோள் வாசவதத்தாய்
அருளி கேண்மோ அரசியல் வழாஅ
இருள்_அறு செங்கோல் ஏயர் இறைவன் 115
சேனை நாப்பணும் பெருமான் செய்த
யானை மாயத்து அரும் தளைப்படுதலின்
கொங்கு அலர் நறும் தார் கோல மார்பில்
பிங்கல கடகர் பெற்றியின் பிழைப்ப

பாஞ்சாலராயன் பரந்த படையொடு 120
மாண் கோசம்பி வௌவியதும் அறியான்
அரும் சுழி நீத்தத்து ஆழும் ஒருவன்
பெரும் புணை பெற்ற பெற்றி போல
நின் பெறு சிறப்பொடு நெடு நகர் புகல
முற்பட தோன்றிய முகை பூண் மார்பன் 125
தன் படு துயரம் தன் மனத்து அணையான்
மட்டுறு கோதாய் மற்று நின் வன முலை
விட்டு உறைவு ஆற்றா வேட்கையில் கெழுமி
பட்டு உறை பிரியா படிமையின் அ வழி

ஒட்டு இடை விட்ட பின் அல்லதை ஒழிதல் 130
வாள் நுதல் மடவோய் அரிதும் மற்று அதனால்
சேண் வரு பெரும் குடி சிறுசொல் நீங்க
ஆர்வ நெஞ்சத்து ஆவது புகலும்
இன் உயிர் அன்ன என்னையும் நோக்கி
மன்னிய தொல் சீர் மரபின் திரியா 135
நலம் மிகு பெருமை நின் குலமும் நோக்கி
பொருந்திய சிறப்பின் அரும்_பெறல் காதலன்
தலைமையின் வழீஇய நிலைமையும் நோக்கி
நிலம் புடைபெயரினும் விசும்பு வந்து இழியினும்

கலங்கா கடவுள் நின் கற்பு நோக்கி 140
அருளினை ஆகி அறியா அமைச்சியல்
பொருள் என கருதி பூம் குழை மடவோய்
ஒன்னா மன்னனை உதயணகுமரன்
இன்னா செய்து தன் இகல் மேம்பட நினை
சில் நாள் பிரிய சிதைவது ஒன்று இல்லை 145
வலிக்கற்பாலை வயங்கு_இழை நீ என்று
ஒலிக்கும் கழல் கால் யூகி இரப்ப
நெறி தாழ் ஓதி நெஞ்சின் அகத்தே
பொறி தாழ் மார்பின் புரவலற்கு இயைந்த

நூல் வல்லாளர் நால்வருள்ளும் 150
யூகி முடிந்தனன் உருமண்ணுவாவொடு
வாய் மொழி வயந்தகன் இடபகன் என்ற
மூவரும் அல்லன் முன் நின்று இரப்போன்
யாவன்-கொல் இவன் என்று அவற்கு எதிர்மொழி
யாவதும் கொடாஅள் அறிவில் சூழ 155
விம்முறு நிலைமை நோக்கி துன்னிய
உறுதி வேண்டும் யூகி மற்று இவன்
இறுதி செப்பி இவண் வந்தோன் என
தாய் தெரிந்து உரைப்ப சே_இழை தேறி

உரைத்த கருமத்து உறுதி விழுப்பமும் 160
கருத்து நிறை காணாது கண் புரை தோழன்
வலித்த கருமமும் வத்தவர் பெருமகன்
உதயணகுமரன் யூகி என்பதை
உரையினும் உடம்பினும் வேறு எனின் அல்லது
உயிர் வேறு அல்லா செயிர் தீர் சிறப்பும் 165
திண்ணிதின் அறிந்த செறிவினள் ஆயினும்
பெண் இயல்பு ஊர்தர பெரும் கண் பில்கி
குளிர் முற்று ஆலி குளிர்ப்பு உள்ளுறாஅது
ஒளி முத்தாரத்து உறைப்பவை அரக்கி

அரிமான் அன்ன அஞ்சுவரு துப்பின் எம் 170
பெருமான் பணி அன்று ஆயினும் தெரி மொழி
நூலொடு பட்ட நுனிப்பு இயல் வழாமை
கால வகையில் கருமம் பெரிது எனல்
நெறியின் திரியா நீர்மையில் காட்டி
உறு குறை அண்ணல் இவன் வேண்டு உறு குறை 175
நன்றே ஆயினும் தீதே ஆயினும்
ஒன்றா வலித்தல் உறுதி உடைத்து என
கை வரை நில்லாது கனன்று அகத்து எழுதரும்
வெய்து உயிர்ப்பு அடக்கி நீ வேண்டியது வேண்டா

குறிப்பு எமக்கு உடைமை கூறலும் உண்டோ 180
மற தகை மார்வன் மாய யானையின்
சிறைப்படு பொழுதில் சென்று அவன் பெயர்க்க
மாய இறுதி வல்லை ஆகிய
நீதியாள நீ வேண்டுவ வேண்டு என
முகிழ் நகை கிளவி முகமன் கூறி 185
அண்ணல் அரசற்கு ஆகு பொருள் வேண்டும்
ஒள் நுதல் மாதர் ஒருப்பாடு எய்தி
அரிதின் வந்த பெரு விருந்தாளரை
சிறப்பு பலி அறா செல்வனின் பேணும்

பெறற்கு_அரும் பெரும் பண்பு எய்தியது எனக்கு என 190
அசதி கிளவி நயவர மிழற்றி
நேர்ந்த மாதரை நெடுந்தகை குருசில்
பெயர்ந்த-காலை பிழைப்பு_இலன் ஆகுதல்
அறியும் மாத்திரம் அ வழி அமைத்து
செறிய செய்த செவிலியும் தானும் 195
மறுதரவு உடைய மாய சூழ்ச்சி
உறுதியொடு ஒளித்தனர் உள்ளியது முடித்து என்
* 2 இலாவண காண்டம்

#18 கோயில் வேவு
உள்ளியது முடித்த யூகியும் செவிலியும்
ஒள் இழை மாதரோடு ஒளித்த பின்னர்
பலா அமல் அசும்பின் பய மலை சாரல்
உலா வேட்டு எழுந்த உதயணகுமரன்
குழை அணி காதில் குளிர் மதி முகத்திக்கு 5
தழையும் தாரும் கண்ணியும் பிணையலும்
விழைபவை பிறவும் வேண்டுவ கொண்டு
கவவிற்கு அமைந்த காம கனலி
அவவுறு நெஞ்சத்து அகல்வு இடத்து அழற்ற

தனி கன்று உள்ளிய புனிற்றா போல 10
விரைவில் செல்லும் விருப்பினன் ஆகி
கலினம் கவவி கான்று நுரை தெவிட்டும்
வலி உடை உரத்தின் வான் பொன் தாலி
படலி அம் பழுக்கமொடு பல் தகைவு இல்லா
பரும காப்பின் படு மணை தானத்து 15
அருமை கருவி அலங்கு மயிர் எருத்தின்
வயமா பண்ணி வாய் கயிறு பிணித்து
குறுக்கை புக்க கொளு அமை கச்சையன்
அறைக்கண் மருங்கின் அக துளை இன்றி

கண் அளவு அமைந்து கதிர்ந்த மூங்கில் 20
பண் அமை காழ் மிசை பசும்பொன் வலக்கும்
அடி நிலை சாத்தோடு யாப்பு பிணியுறீஇ
வடி இலை கதிர் வாள் வை நுனை குந்தமொடு
வார்ப்பின் அமைத்த யாப்பு அமை அரும் பொறி
மணி கை மத்திகை அணி தக பிணித்து 25
கோற்கு அமைவுறும் நடை குதிரைக்கு ஓதிய
நூற்கணாளரொடு நுனித்து கதி வினாய்
வாக்கமைவாளன் கூப்புபு வணங்கி
கடு நடை புரவி கைம்முதல் கொடுப்ப

அடு திறல் அண்ணல் அணி பெற ஏறி 30
மறு_இல் மா நகர் குறுக வரு வழி
இடுக்கண் தருதற்கு ஏது ஆகி
இட கண் ஆடலும் தொடி தோள் துளங்கலும்
ஆர் உயிர் கிழத்தி அகன்றனள் இவண் இலள்
நீர் மலர் படலை நெடுந்தகையாள 35
காணாய் ஆகி ஆனா இரக்கமொடு
இழுக்கில் தோழரொடு இயங்குவை இனி என
ஒழுக்கும் புள் குரல் உட்பட கூறிய
நிமித்தமும் சகுனமும் நய குணம் இன்மையும்

நினைத்தனன் வரூஉம் நேரத்து அமைத்த 40
தண் நிதி பலகை சந்தன சார்வு அணை
கண்ணுற நினைத்த கை புடை ஆவணத்து
திரு மணி அரும் கலம் எளிதினின் தரீஇ
காலத்தின் நடக்கும் கூல கொழும் கடை
கடுவும் கோட்டமும் காழ் அகில் குறையும் 45
அரக்கும் அதிங்கும் அரும்_பெறல் பயினும்
நறையும் நானமும் நாறு இருவேரியும்
அறை வெள் ஆரமும் அன்னவை பிறவும்
அண்_அரும் பேர் அழல் ஆக்கிய கமழ் புகை

மாதிரத்து இயங்கும் சோதிடர் விமானமும் 50
வாசம் ஊட்டும் வகையிற்று ஆகி
மஞ்சொடு நிரைஇ வெம் சுடர் மழுக்க
இருள் பட பரந்த மருள் படு பொழுதின்
கண்டான் ஆகி திண் தேர் உதயணன்
வண்டு ஆர் கோதை வாசவதத்தை 55
இருந்த இடமும் பரந்து எரி தோன்ற அவட்கு
ஏது-கொல் உற்றது என்று எஞ்சிய நெஞ்சின்
ஊறு அவண் உண்மை தேறினள் ஆகி
செல்லா நின்ற-காலை வல்லே

மாய மள்ளரை ஆயமொடு ஓட்டி 60
உருமண்ணுவாவும் வயந்தககுமரனும்
பொரு முரண் அண்ணல் புகுதரும் வாயிலுள்
பொச்சாப்பு ஓம்புதல் புரிந்தனர் நிற்ப
எ சார் மருங்கினும் எரி புரை தாமரை
கண்ணுற மலர்ந்த தெள் நீர் பொய்கையுள் 65
நீப்ப_அரும் சேவலை நிலை-வயின் காணாது
பூ கண் போழும் புள்ளின் புலம்பி
எரி தவழ் கோயில் எ வழி மருங்கினும்
திரிதரல் ஓவாள் தீய்ந்து நிறம் மழுங்கி

கட்டு அழல் கதிய நெட்டு இரும் கூந்தல் 70
புதை எரி பற்ற புன்சொல் கேட்ட
பெரியோர் போல கருகி வாடிய
தகை அழி தாமமொடு தாழ்வன பரப்பி
தோழியை காணாள் சூழ்_வளி சுழற்சியள்
செவ்விய தன் கையின் அம் வயிறு அதுக்கா 75
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஓட்டிய
காவலன் மகளே கனம் குழை மடவோய்
மண் விளக்கு ஆகி வரத்தின் வந்தோய்
பெண் விளக்கு ஆகிய பெறல்_அரும் பேதாய்

பொன்னே திருவே அன்னே அரிவாய் 80
நங்காய் நல்லா கொங்கு ஆர் கோதாய்
வீணை கிழத்தீ வித்தக உருவீ
தேன் நேர் கிளவீ சிறுமுதுக்குறைவீ
உதயணகுமரன் உயிர் துணை தேவீ
புதை அழல் அக-வயின் புக்கனையோ என 85
கான தீயிடை கண மயில் போல
தான தீயிடை தான் உழன்று ஏங்கி
காணல் செல்லாள் காஞ்சனை புலம்பி
பூசல் கொண்டு புறங்கடை புரளும்

ஆகுலத்திடையே அண்ணலும் கதுமென 90
வாயில் புகுந்து வளம் கெழு கோயில்
தீ உண விளியும் தே மொழி செம் வாய்
காஞ்சனமாலை கலக்கமும் காணா
பூம் குழை மாதர் பொச்சாப்பு உணர்ந்து
கருவி அமைத்த கால் இயல் செலவின் 95
புரவியின் வழுக்கி பொறி_அறு பாவையின்
முடி மிசை அணிந்த முத்தொடு பல் மணி
விடு சுடர் விசும்பின் மீன் என சிதற
சாந்து புலர் ஆகத்து தேம் தார் திவள

புரி முத்தாரமும் பூணும் புரள 100
எரி மணி கடகமும் குழையும் இலங்க
வாய் மொழி வழுக்கி வரையின் விழுந்தே
தே மொழி கிளவியின் திறல் வேறு ஆகி
இரு நில மருங்கில் பெரு நலம் தொலைய
சோரும் மன்னனை ஆர்வ தோழர் 105
அடைந்தனர் தழீஇ அவலம் தீர்க்கும்
கடும் கூட்டு அமைத்து கை-வயின் கொண்ட
போக கலவை ஆகத்து அப்பி
சந்தனம் கலந்த அம் தண் நறு நீர்

தண் தளி சிதறி வண்டு இனம் இரிய 110
குளிரி முதல் கலவையின் கொடி பெற குலாஅய்
ஒண் மணி தட்ட
பவழ பிடிகை பக்கம் கோத்த
திகழ் பொன் அலகின் செஞ்சாந்தாற்றியின்
பல் முறை வீச தொல் முறை வந்த 115
பிறப்பிடை கேண்மை பெரு மனை கிழத்தியை
மற படை மன்னன் வாய் சோர்ந்து அரற்றா
சேற்று எழு தாமரை மலரின் செம் கண்
ஏற்று எழுந்தனனால் இனியவரிடை என்
* 2 இலாவாண காண்டம்

#19 தேவிக்கு விலாவித்தது
ஏற்று எழுந்ததன் பின் இனியோர் குழீஇ
ஆற்றல் சான்ற நூல் துறை மருங்கின்
பழையவும் புதியவும் உழை-வயின் பிரியார்
காரணம் உரைப்பவும் ஓர் வரை நில்லான்
அம் தீம் கிளவி என் அம் பிணை மூழ்கிய 5
செம் தீயானும் புகுவென் சென்று என
முரிந்த கந்தின் எரிந்த வேயுள்
அரிந்த யாப்பில் சொரிந்த கடும் காழ்
கரிந்த மாடம் காவலன் குறுக

ஆர் அளை செறிந்த அரும் சின நாகத்து 10
பேர் அழல் காணிய பேதை மாந்தர்
வாயில் மருங்கின் தீ எரி கொளீஇ அது
செயிர்ப்படு பொழுதில் செம் முகம் நின்று தம்
உயிர் ஒழிந்தது போல் உறுதி வேண்டார்
அடங்கார் அடக்கிய அண்ணல் மற்று நின் 15
கடும் சினம் பேணா கன்றிய மன்னர்
இகப்ப எண்ணுதல் ஏதம் உடைத்தே
ஆகியது அறியும் அரும் பொருள் சூழ்ச்சி
யூகியின் அல்லதை உதயணகுமரன்

உள்ளம் இலன் என வெள்ளைமை கலந்த 20
புறத்தோர் உரைக்கும் புன்சொல் மாற்றம்
அகத்தோர்க்கு என்றும் அகம் சுடல் ஆனாது
ஆங்ஙனம் அ நிலை அறிந்து மனம் கவலாது
ஓங்கிய பெரும் குலம் தாங்குதல் கடனா
பூண்டனை ஆகுதல் பொருள் மற்று இது என 25
மாண்ட தோழர் மாற்றுவனர் விலக்க
காலம் கலக்க கலக்கமொடு உராஅய்
ஞாலம் முழுதும் நவைக்குற்று எழினும்
ஊர் திரை உடைய ஒலி கெழு முந்நீர்

ஆழி இறத்தல் செல்லாது ஆங்கு 30
தோழரை இகவா தொடு கழல் குருசில்
சூழ் வளை முன்கை சுடர் குழை மாதர்
மழை கால் அன்ன மணி இரும் கூந்தல்
அழல் புகை சூழ அஞ்சுவனள் நடுங்கி
மணி கை நெடு வரை மா மலை சாரல் 35
புன தீ புதைப்ப போக்கிடம் காணாது
அளை செறி மஞ்ஞையின் அஞ்சுவனள் விம்மி
இன் உயிர் அன்ன என்-வயின் நினைஇ
தன் உயிர் வைத்த மின் உறழ் சாயல்

உடப்பு சட்டகம் உண்டு எனில் காண்கம் 40
கடுப்பு அழல் அவித்து காட்டு-மின் விரைந்து என
கரி பிணம் காணார் காவலர் என்னும்
மொழி பல காட்டவும் ஒழியான் அழிய
முன்னையர் ஆதலின் முதற்பெருந்தேவி
இன் உயிர் இகப்ப விடாஅர் இவர் என 45
மன்ன_குமரன் மதித்தனன் ஆயின்
எண்ணிய சூழ்ச்சிக்கு இடையூறு ஆம் என
தவல்_அரும் பெரும் பொருள் நிலைமையின் எண்ணி
உலைவு_இல் பெரும் புகழ் உருமண்ணுவா விரைந்து

ஆய் புகழ் அண்ணல் மேயது விரும்பி 50
நீள் புடை இகந்துழி ஞாயில் ஒதுங்கி
கோயில் வட்டத்து ஆய் நலம் குயின்ற
பள்ளி பேர் அறை உள்ளகம் புக்காங்கு
அழிவுறு சுருங்கை வழி முதல் மறைஇ
விம்முறு துயரமொடு விளிந்து உயிர் வைத்த 55
குய்ம் மனத்தாளர் குறை பிணம் காட்டி
தாயும் தையலும் தீ உண விளிந்தமை
மாயம் அன்று என மன்னனை தேற்றி
மணியும் முத்தும் அணியும் இழந்து உதிர்ந்து

ஆர கம்மம் சார வீற்றிருந்து 60
கொள்கை கூட்டு அழல் உள்ளுற மூட்டி
மாசு வினை கழித்த மா தவர் போல
தீயகத்து இலங்கி திறல் விடு கதிர் ஒளி
சேடுற கிடந்த செம்பொன் செய் கலம்
பொன் அணி மார்பன் முன் நண விடுதலின் 65
ஒண் செந்தாமரை ஒள் இதழ் அன்ன
பண் கெழு விரலில் பல் முறை தொகுத்து
நானம் மண்ணி நீல் நிறம் கொண்டவை
விரித்தும் தொகுத்தும் வகுத்தும் வாரியும்

உளர்ந்தும் ஊறியும் அளந்து கூட்டு அமைத்த 70
அம் புகை கழுமிய அணி மாராட்டம்
வெம் புகை சூழ்ந்து மேல் எரி ஊர
விளிந்தது நோக்கி ஒழிந்தனை ஆதலின்
நல் நுதல் மாதர் பின் இரும் கூந்தல்
பொன் அரி மாலாய் பொருள் இலை என்றும் 75
கொடியும் மலரும் கொழுந்தும் குலாஅய்
வடிவு பெற வகுத்த மயிர் வினை சிப்பத்து
வத்தவ மகடூஉ சித்திரத்து இயற்றிய
பல் வினை பரிசரத்து எல்லை ஆகி

மதி புறம் கவைஇய வானவில் போல 80
நுதல் புறம் கவவி மிக சுடர்ந்து இலங்கும்
சிறப்பு உடை பட்டம் சிறியோர் போல
இறப்பு காலத்து துறப்பு தொழில் துணிந்த
வன்கண்மை பெரிது என தன் கணும் நோக்கான்
பட்ட பேர் அணி விட்டு எறிந்து இரங்கியும் 85
பனி நாள் புண்ணியத்து அணி பெறு திங்கள்
அந்தியுள் முளைத்த வெண் பிறை போல
செம் தீ சிறு நுதல் மூழ்க தீந்து
நிலம் மிசை மருங்கின் வீழ்ந்தனையோ என

திலகம் நோக்கி பல பாராட்டியும் 90
வெண் மதி கைப்புடை வியாழம் போல
ஒண் மதி திகழ ஊசலாடி
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய
வார் நல காதினுள் வனப்பு வீற்றிருந்த
நன் பொன் குழை நீ நல் நுதல் மாதரை 95
அன்பில் கரந்தே அகன்றனையோ என
போது அணி கூந்தல் பொன் பூம் பாவை
காது அணிகலத்தொடு கவன்றனன் கலங்கியும்
பொய்கையில் தீர்ந்து புன்கண் கூர

எவ்வ மாந்தர் எரிவாய் உறீஇய 100
பொரும் கயல் போர வருந்துபு மிளிரா
களைகண் பெறாஅ கலக்க நோக்கமொடு
தளை அவிழ்ந்து அகன்ற தாமரை நெடும் கண்
அகை_அற அருளாய் ஆகி கலிழ்ந்து
செ அழல் புதைத்திட சிதைந்தனையோ என 105
அ இழிக்கு இரங்கி வெவ் அழல் உயிர்த்தும்
செம் சாந்து வரித்த சில் மெல் ஆகத்து
அஞ்சாய் மருங்குல் வருந்த அடி பரந்து
வீங்குபு செறிந்த வெம் கண் வன முலை

பூம் கொடி பொன் கலம் போழ்ந்து வடு பொறிப்ப 110
மகிழ்ச்சி எய்தி மனம் ஒன்றாகிய
புணர்ச்சி காலத்து மதர்த்து முகம் சிவப்ப
நோய்கூர்ந்து அழியும் நீயே அளியை
வேக வெவ் அழல் வெம் புகை அணிந்த
பொங்கு அழல் போர்வை போர்த்ததோ எனவும் 115
இலை பெரும் பூணும் இதய வாசனையும்
நல பெரும் களிகையும் நன் முத்தாரமும்
பல் மணி பூணும் சில் மணி தாலியும்
முத்து அணி வடமும் சித்திர உத்தியும்

நாணும் தொடரும் ஏனைய பிறவும் 120
மெய் பெற புனைந்து கை_வல் கம்மிய
செய்கையில் குயிற்றிய சித்திரம் கொளீஇ
பூண் அணியுள்ளும் மாண் அணி உடையவை
ஆகக்கு ஏற்ப அணிகம் வாராய்
வேக தானை வேந்தன் மகளே 125
தனித்தாய் இயங்கலும் தாங்கினையோ என
பனி தார் மார்பன் பல பாராட்டியும்
ஓங்கு வரை மருங்கின் ஒளி பெற நிவந்த
காம்பு ஒசிந்து அன்ன கவினை ஆகிய

நலம் கிளர் தடம் தோள் நவை_அற சேஎந்து 130
அலங்கு மலர் தாமரை அக-வயின் அமர்ந்த
திரு_மகள் இருக்கை உருவு பட குயிலா
காமுற புனைந்த தாமம் உளப்பட
பொறி வரி ஒழுக்கம் போலும் மற்று இ
மறி இலை கம்மமொடு மகரம் கவ்வி 135
கொடியொடு துளங்கி அடி பெற வகுத்த
அரு மணி கடகமொடு அங்குலி அழிய
செற்றுபு சிறந்த சிறப்பும் உள்ளாது
கற்றது என் அமர்ந்த கலப்பின ஆகியும்

பற்று விட்டு அகறல் பண்போ எனவும் 140
பவழ காசொடு பல் மணி விரைஇ
திகழ கோத்த செம்பொன் பாண்டில்
கைவினை கொளுவின் செய்து நலம் குயின்ற
எண்_நால் காழ் நிரை கண் உமிழ்ந்து இலங்க
உருவ கோலமொடு உட்கு வீற்றிருந்த 145
அரவு பை அன்ன ஐது ஏந்து அல்குல்
புகை கொடி புத்தேள் பொருக்கென ஊட்டி
அழல் கொடி அரத்தம் மறைத்தவோ எனவும்
மணி கண் அன்னம் அணி தகு பெடையை

பயில் இதழ் பனி நீர் பக்கம் நீக்கி 150
வெயில் கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு
மணி அரி கிண்கிணி சிலம்பொடு மிழற்ற
நின் அணி காண்கம் சிறிது_சிறிது உலாஅய்
மராஅ துணரும் மாவின் தழையும்
குராஅம் பாவையும் கொங்கு அவிழ் முல்லையும் 155
பிண்டி தளிரும் பிறவும் இன்னவை
கொண்டு யான் வந்தேன் கொள்குவை ஆயின்
வண்டு இமிர் கோதாய் வாராய் எனவும்
அணி வரை சாரல் அருவி ஆடியும்

பணி மலர் கொய்தும் பாவை புனைந்தும் 160
திரு விழை மகளிரோடு ஒரு வழி வருவோய்
மருவு இன் மா தவன் மாசு_இல் மட மகள்
விரிசிகை வேண்ட வேறுபடு வனப்பின்
தாமம் தொடுத்து யான் கொடுத்தது தவறு என
காம வேகம் கடுத்த கலப்பிடை 165
முகத்தே வந்து ஓர் முசுக்கலை தோன்ற
அகத்தே நடுங்கி அழல்பட வெய்து உயிர்த்து
அஞ்சி அடைந்த அஞ்சில் தே மொழி
பஞ்சி மெல் அடி பாவாய் பரந்த

கடும் தீக்கு அஞ்சாது கரத்தியோ எனவும் 170
அம் கண் மா நிலத்து அகன்று உயிர் வாழ்வோர்
வன்கணாளர் என்று பண்டு உரைப்போய்
நின்-கண் அ மொழி நிற்ப என்-கண்
புன்கண் நோக்காது போதியோ எனவும்
இளைப்புறு ஞமலி நல தகு நாவில் 175
செம்மையும் மென்மையும் சிறந்து வனப்பு எய்தி
அம்மை முன்னம் அணி பெற பிணங்கி
இலை பட குயிற்றிய எழில் ஒளி கம்மத்து
தலை விரல் சுற்றும் தாது அணி வளையமும்

வட்ட ஆழியும் கட்டு வட இணையும் 180
மகர வாயொடு நகை பெற புனைந்த
விரல் அணி கவ்வி நிரல் ஒளி எய்தி
பூ அடர் மிதிப்பினும் புகைந்து அழலுறூஉம்
சேவடிக்கு ஏற்ற செம்பொன் கிண்கிணி
பாட குரலொடு பரடு பிறழ்ந்து அரற்ற 185
கழனி கண்பின் காய் என திரண்ட
அழகு அணி சிறு துடை அசைய ஒதுங்கி
ஆயத்து இறுதி அணி நடை மட பிடி
கானத்து அசைந்து தானத்தின் தளர்ந்த பின்

கரி புல் பதுக்கையும் கடு நுனை பரலும் 190
எரிப்பு உள்ளுறீஇ எஃகின் இயலவும்
என் காமுறலின் ஏதம் அஞ்சி
கல் கால் பயின்ற கால் அவி சில் அதர்
நடுக்கம் எய்தி நடப்பது நயந்தோய்
இடுக்கண் யான் பட என்னையும் நினையாது 195
கடுப்பு அழல் அக-வயின் கரத்தியோ எனவும்
படி கடந்து அடர்ந்த பல் களிற்று யானை
இடி உறழ் முரசின் இறைமகன் பணிப்ப
நூல் அமை வீணை கோல் அமை கொளீஇ

கரணம் பயிற்றினும் காந்தள் முகிழ் விரல் 200
அரணம் காணா அஞ்சின போல
பயத்தின் நீங்கா சிவப்பு உள்ளுறுவின
அடைதற்கு ஆகா ஆர் அழல் செம் கொடி
தொடுதற்கு ஆற்ற துணிந்தவோ எனவும்
வடி கண் மாதர் முடி கலம் முதலா 205
அடி கலம் தழீஇ முடி தார் மார்பன்
அரற்றியும் அயர்ந்தும் உரற்றியும் உயிர்த்தும்
வீழ்ந்தும் எழுந்தும் தாழ்ந்தும் தளர்ந்தும்
செரு அடு செம் கண் தெள் பனி சிதறி

உருவு உடை அகலத்து ஊழூழ் உறைத்தர 210
கோல இரும் பிடி குழிப்பட்டு ஆழ
நீல வேழம் நினைந்து உழன்றாங்கு
மாலை மார்பன் மாதரை காணாது
இன்னவை பிறவும் பல் முறை அரற்ற
செறுநர் முன்னர் சீர்மை அன்று என 215
உறுநர் சூழ்ந்த ஒருபால் ஒடுங்கி
தேரும் புரவியும் வார் கவுள் யானையும்
மற படை இளையரோடு திறப்பட வகுத்து
போர் அணிகலமும் பொருளும் நல்கி

ஆருணி அரசன் அடு திறல் ஆண்டகை 220
அற்றம் அறியா செற்ற செய்கையோடு
மேல் வரவு உண்டு எனின் மீளி வாட்டி
சென்று நெருங்காது பின்றியும் விடாது
குன்றகம் அடுத்து கூழ் அவண் ஒடுக்கி
யாப்புற நிற்க என காப்புறு பெரும் படை 225
திசை செல போக்கி அசைவு_இல் ஆண்மை
மன் பெரும் குமரனை மரபுளி காட்டி
துன்பம் தீரிய தொடங்கினர் துணிந்து என்
* 2 இலாவாண காண்டம்

#20 சண்பையுள் ஒடுங்கியது
துணிவுடையாளர் துன்னினர் குழீஇ
அணி உடை அண்ணற்கு அமைந்தமை காட்டி
படு திரை பௌவத்து கடு வளி கலக்க
பொறி அவிழ்ந்து கவிழ்ந்த பொரு கலத்து உய்ந்தோர்
நெறி திரிந்து ஒரீஇ நீத்து உயிர் வழங்கா 5
தீவகம் புக்கு தாவகம் கடுப்ப
பெரும் துயர் உழக்கும் அருந்து பசி மூள
திண் நிலை வரைப்பில் சினை-தொறும் செறிந்து
கண் நவையுறூஉம் கனி பல கண்டு அவை

நயவரும் நஞ்சு என பெயர் தெரிவின்மையின் 10
ஊழுறுத்து அ கனி தாழ்விலர் வாங்கி
துன்பம் நீக்கும் தோற்றமும் அன்றி
இன்ப நாற்றமும் இயைந்தன இவை என
நச்சுபு தெரிந்த நாற்றமும் சுவையும்
ஒப்புமை இன்மையின் உயிர் முதல் தாங்க 15
அமரர் காட்டிய அமுது நமக்கு இவை என
பசி நோய் தீர அயிறலின் கதுமென
தசை போழ்ந்து கழற்றி தபுத்திசினாங்கு
தாமரை செம் கண் தகை மலி மார்ப

காமத்து இயற்கையும் காணும்-காலை 20
இறுதியில் இன்பமொடு இனியது போல
உறு பயன் ஈனா உடம்பு முதல் தபுத்தலின்
பெறு பயம் இது என பேணார் பெரியோர்
வெற்றி தானையொடு விசயம் பெருக்கி
கொற்றம் வேண்டாய் பற்றொடு பழகிய 25
ஆர்வ புனலகத்து அழுந்துவை ஆயின்
ஊர் கடல் வரைப்பின் ஆர் உயிர் நடுக்குறீஇ
பெரும் பேதுற்று விளியும் மற்று அதனால்
கரும் பேர் கிளவி கனம் குழை திற-வயின்

கழுமிய காதல் கைவிடல் பொருள் என 30
காமத்து கடையும் காதல் குற்றமும்
ஏமாப்பு இல என எடுத்துரை நாட்டி
அமைச்ச தொழிலர் விலக்குபு காட்ட
இகுப்பம் ஒடுங்கிய இயல்பினன் ஆகிய
அண்ணல் நிலைமை திண்ணிதின் அறிந்து 35
வண்ண கோதை வாசவதத்தைக்கு
காதல் கணவன் ஏதம் இன்மை
அறிய கூறி அகல்வது பொருள் என
பொறி அமைத்து இயற்றிய பொய்ந்நிலம் போகி

வேண்டிய அளவில் காண் தக கூட்டி 40
கரந்து நிறம் எய்தும் அரும்_பெறல் யோகம்
யாவரும் அறியா தன்மைத்து ஆக
மூவரும் உண்டு வேறு நிறம் எய்தி
அந்தண உருவொடு சந்தன சாரல்
பெரு வரை அடுக்கத்து அருமைத்து ஆகிய 45
கல் சூழ் புல் அதர் மெல் அடி ஒதுங்கி
பிரிவு தலைக்கொண்ட எரி புரை வெம் நோய்
தலைமை நீரின் தண்ணென தெளித்து
முலை முதல் கொழுநன் நிலைபெற வேண்டும்

உள்ள ஊர்தி ஊக்கம் பூட்ட 50
கள்ள காதல் தாங்கினள் ஆகி
இமிழ் வினை விச்சையின் இடுக்கண் பட்ட
மகிழ் மணி நாகர் மட மகள் போல
யூகி நீதியில் பேதை பிணிப்புண்டு
வேண்டு-வயின் சென்ற-காலை ஆண்டே 55
தண் கோல் அல்லது வெம் கோல் புகாஅ
செங்கோலாளன் சேதி அம் பெரு மலை
தாள் முதல் தழீஇ நாள் மது கமழும்
கல் சுனை நீலமும் கணி வாய் வேங்கையும்

நல் சினை நறவமும் நாகமும் நந்தியும் 60
பருவம் அன்றியும் பயன்கொடுப்பு அறாஅ
பலவும் மாவும் குலை வளர் வாழையும்
இரும் கனி நாவலும் இள மாதுளமும்
ஒருங்கு உடன் கஞலி உள்ளம் புகற்றும்
மாசு_இல் முனிவரொடு மகளிர் குழீஇயது ஓர் 65
ஆசு_இல் பள்ளி அறிந்து முன் நாடி
மற்று அதன் அக-வயின் தெற்றென தெரியும்
உருமண்ணுவாவின் பெரு முதுகுரவன்
அவம்_இல் சூழ்ச்சி தவ முது_மகனொடு

கருமம் கூறி கண்ணுற்று பிரியார் 70
அணித்தும் சேய்த்தும் அன்றி அமைவுற
மணி பூண் மாதரும் மனம் புரி தோழனும்
காதல் செவிலியும் கரந்து அவண் ஒடுங்கி
மா தவர் தெரீஇ மரீஇ ஒழுக
பள்ளியும் பதியும் மலையும் சேண் இடத்து 75
உள்ளவை உரைத்து தள்ளா தவ நெறி
அற்றம் தீர உற்று பிரிந்து ஒழுகிய
உருவு உடை முது_மகள் ஒரு வயிற்று இயன்றமை
நீப்பிடம்-தோறும் யாப்புற அறிவுறீஇ

நாட்ட ஒழுக்கொடு நல்_நுதல் இவளை 80
வேட்டோன் விட்டு காட்டகம் நீந்தி
குண்டு நீர் குமரி தெண் திரை ஆடிய
போயினன் என்னும் பொய்ம்மொழி பொத்தி
தீவினையாளரை தெளிய கூறி
வாய் மொழி ஆக வலித்தனள் வழங்கி 85
மறு_இல் மன்னற்கு உறுதி வேண்டி
தண் தழை மகளிரொடு தலைநின்று ஒழுக
கண்டனிர் உளிரோ காவலன் மகளை என்று
ஒண் தொடி காஞ்சனை உயிர் நனி நில்லா

செல்லல் நோக்கி செயற்பாற்று இது என 90
ஒல்லும் நண்பின் உருமண்ணுவா அவள்
கொண்டனன் வந்து கோமகள் காட்டி
கரும காரணம் அவள்-வயின் பேசி
விண்டு அலர் கழுநீர் வென்ற கண்ணியொடு
தலைப்படுத்தனனா தான் அவண் போகி 95
வண்டு உளர் ஐம்பால் வயங்கு இழை மாதரை
ஆற்றுவித்து ஓம்பி போற்றுபு தழீஇ
நீங்கல் செல்லா நெறிமையின் ஓங்கி
யாங்கு இனிது இருத்தும் என்று அறிவினில் சூழ்ந்து

பற்றார் ஆயினும் உற்றார் ஆயினும் 100
ஒற்றுவர் உளர் எனின் அற்றம் தரும் என
மற்று அவண் ஒடுங்கார் மறைந்தனர் போகி
உருமண்ணுவாவின் பெரு முதுகுரவன்
அவம்_இல் சூழ்ச்சி தவறு_இல் தோழன்
பெரும் புனல் கங்கை பெரு வளம் கொடுக்கும் 105
அங்க நல் நாட்டு அணி பெற இருந்தது
எங்கும் நிகர் இல்லது எழில் கிடங்கு அணிந்தது
பொங்கு மலர் நறும் தார் புனை முடி பொன் கழல்
விச்சாதரரும் தேவ_குமரரும்

அச்சம் கொள்ள ஆடு கொடி நுடங்கி 110
சத்தி குடத்தொடு தத்துறல் ஓம்பி
விளங்குபு துளங்கும் வென்றித்து ஆகி
அளந்து வரம்பு அறியா அரும் படை அடங்கும்
வாயிலும் வனப்பும் மேவி வீற்றிருந்து
மதில் அணி தெருவிற்று ஆகி மற்றோர்க்கு 115
எதிரில் போக இயல்பு அமை மரபொடு
குதிரையும் களிறும் கொடுஞ்சி தேரும்
அடு திறல் மள்ளரும் வடு இன்று காப்ப
நெடு முடி மன்னருள் மன்னன் நேரார்

கடு முரண் அழித்த காய் சின நெடு வேல் 120
படு மணி யானை பைம் தார் வெண் குடை
உக்கிர குலத்துள் அரசருள் அரசன்
வில் திறல் தானை விசயவரன் என்னும்
நல் திறன் மன்னன் நாளும் காக்கும்
சண்பை பெரு நகர் சால்பொடும் விளங்கிய 125
முட்டு_இல் வாழ்க்கை செட்டியர் பெருமகன்
மித்திரகாமன் மிக்கு உயர் பெரு மனை
வத்தவன் காதலி வாசவதத்தை என்று
அ தகவு அறிந்தோர் அ இடத்து இன்மையின்

ஆப்பு உடை நண்பின் அந்தணாட்டியும் 130
நீப்ப_அரும் காதல் நிலைமை தோழியும்
ஓங்கிய பெரும் புகழ் யூகியும் உகவா
காப்பொடு புற நகர் மேற்படி பிழையா
பூம் குழல் மாதரொடு புகுந்தனர் ஆகி
ஆங்கு இனிது இருந்தனர் அ வழி மறைந்து என் 135
*