8.பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்

@1 பொய்யடிமை இல்லாத புலவர் புராணம்

#1
செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்
மெய் உணர்வின் பயன் இதுவே என துணிந்து விளங்கி ஒளிர்
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்
பொய் அடிமை இல்லாத புலவர் என புகழ் மிக்கார்

#2
பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார்-தமை அல்லால்
சொல் பதங்கள் வாய் திறவா தொண்டு நெறி தலைநின்ற
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்
மற்றவர்-தம் பெருமை யார் அறிந்து உரைக்க வல்லார்கள்

#3
ஆங்கு அவர்-தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம்
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த
பூம் கழலார் புகழ் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்
&8 பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
@2 புகழ்ச் சோழ நாயனார் புராணம்

#1
குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கை குறி எழுதி
நிலவு தரு மதி குடை கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்
மலர் புகழ் வண் தமிழ் சோழர் வள நாட்டு மா மூதூர்
உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர்

#2
அளவு_இல் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும்
இள வெயிலின் சுடர் படலை இரவு ஒழிய எறிப்பனவாய்
கிளர் ஒளி சேர் நெடு வான_பேர்_ஆற்று கொடு கெழுவும்
வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம்

#3
நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்த
போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவு_இறந்த வளத்தினவாய்
மாகம் நிறைந்திட மலிந்த வரம்பு_இல் பல பொருள் பிறங்கும்
ஆகரம் ஒத்து அளவு_இல் ஆவண வீதிகள் எல்லாம்

#4
பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும்
போர் முக வெம் கறை_அடியும் புடை இனம் என்று அடைய வரும்
சோர் மழையின் விடு மதத்து சுடரும் நெடு மின் ஓடை
கார் முகிலும் பல தெரியா களிற்று நிரை களம் எல்லாம்

#5
படு மணியும் பரி செருக்கும் ஒலி கிளர பயில் புரவி
நெடு நிரை முன் புல் உண் வாய் நீர் தரங்க நுரை நிவப்ப
விடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால்
தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம்

#6
துளை கை ஐராவத களிறும் துரங்க அரசும் திருவும்
விளைத்த அமுதும் தருவும் விழு மணியும் கொடு போத
உளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பர் ஊர்
வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர் கிடங்கு

#7
கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர் சோலை
தேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணி
வார் ஏறும் முலை மடவார் மருங்கு ஏறும் மலர் கணை ஒண்
பார் ஏறும் புகழ் உறந்தை பதியின் வளம் பகர்வு அரிதால்

#8
அ நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்
மன்னும் திரு தில்லை நகர் மணி வீதி அணி விளங்கும்
சென்னி நீடு அனபாயன் திரு குலத்து வழி முதல்வோர்
பொன்னி நதி புரவலனார் புகழ் சோழர் என பொலிவார்

#9
ஒரு குடை கீழ் மண்_மகளை உரிமையினில் மணம் புணர்ந்து
பரு வரை தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்ப
திரு மலர்த்தும் பேர் உலகும் செங்கோலின் முறை நிற்ப
அரு_மறை சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில்

#10
பிறை வளரும் செம் சடையார் பேணும் சிவ ஆலயம் எல்லாம்
நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர்-தமை
குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்து அருளி
முறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப்பார்

#11
அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்றிருந்து
கொங்கரொடு குட புலத்து கோ மன்னர் திறை கொணர
தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில்
மங்கல நாள் அரசு உரிமை சுற்றம் உடன் வந்து அணைந்தார்

#12
வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ்
இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்தி
சிந்தை களிகூர்ந்து அரனார் மகிழ் திரு ஆனிலை கோயில்
முந்துற வந்து இறைஞ்சி மொய் ஒளி மாளிகை புகுந்தார்

#13
மாளிகை முன் அத்தாணிமண்டபத்தின் மணி புனை பொன்
கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்த
ஓளி நெடும் களிற்றின் அணி உலப்பு_இல் பரி துலை கனகம்
நீளிடை வில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார்

#14
திறை கொணர்ந்த அரசர்க்கு செயல் உரிமை தொழில் அருளி
முறை புரியும் தனி திகிரி முறை நில்லா முரண் அரசர்
உறை அரணம் உள ஆகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வு
நிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்து அருளி நிகழும் நாள்

#15
சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளி தாமம்
அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும்
கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் என
வென்றி வடிவாள் கொடுத்து திருத்தொண்டில் மிக சிறந்தார்

#16
விளங்கு திரு மதி குடை கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும்
துளங்கு ஒளி நீள் முடியார்க்கு தொன் முறைமை நெறி அமைச்சர்
அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் என
உளம் கொள்ளும் வகை உரைப்ப உறு வியப்பால் முறுவலிப்பார்

#17
ஆங்கு அவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்து ஆக
ஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்ப
ஈங்கு நுமக்கு எதிர்நிற்கும் அரண் உளதோ படை எழுந்த
பாங்கு அரணம் துகள் ஆக பற்று அறுப்பீர் என பகர்ந்தார்

#18
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்து
கடல் அனைய நெடும் படையை கைவகுத்து மேல் செல்வார்
படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆக
மிடல் உடை நால் கருவியுற வெம் சமரம் மிக விளைத்தார்

#19
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற
அளவு_இல் அரண குறும்பின் அதிகர் கோன் அடல் படையும்
உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏற
கிளர் கடல்கள் இரண்டு என்ன இரு படையும் கிடைத்தன-ஆல்

#20
கயமொடு கயம் எதிர் குத்தின
அயமுடன் அயம் முனை முட்டின
வயவரும் வயவரும் உற்றனர்
வியன் அமர் வியல் இடம் மிக்கதே

#21
மலையொடு மலைகள் மலைந்து என
அலை மத அருவி கொழிப்பொடு
சிலையினர் விசையின் மிசை தெறு
கொலை மத கரி கொலை உற்றவே

#22
சூறை மாருதம் ஒத்து எதிர்
ஏறு பாய் பரி வித்தகர்
வேறுவேறு தலை பெய்து
சீறி ஆவி செகுத்தனர்

#23
மண்டு போரின் மலைப்பவர்
துண்டம் ஆயிட உற்று எதிர்
கண்டர் ஆவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே

#24
வீடினார் உடலில் பொழி
நீடுவார் குருதி புனல்
ஓடும் யாறு என ஒத்தது
கோடு போல்வ பிண குவை

#25
வான் நிலாவு கரும் கொடி
மேல் நிலாவு பருந்து இனம்
ஏனை நீள் கழுகின் குலம்
ஆன ஊணொடு எழுந்தவே

#26
வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள்
சுரிகைப்படைசத்தி கழுக்கடை வேல்
எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல்
முரி உற்றன உற்றன மொய் களமே

#27
வடி வேல் அதிகன் படை மாள வரை
கடி சூழ் அரண கணவாய் நிரவி
கொடி மா மதில் நீடு குறும் பொறையூர்
முடி நேரியனார் படை முற்றியதே

#28
முற்றும் பொரு சேனை முனை தலையில்
கல் திண் புரிசை பதி கட்டு அழிய
பற்றும் துறை நொச்சி பரிந்து உடைய
சுற்றும் படை வீரர் துணித்தனரே

#29
மாறுற்ற விறல் படை வாள் அதிகன்
நூறுற்ற பெரும் படை நூழில் பட
பாறுற்ற எயில் பதி பற்று அற விட்டு
ஏறுற்றனன் ஓடி இரும் சுரமே

#30
அதிகன் படை போர் பொருது அற்ற தலை
பொதியின் குவை எண்_இல போயின பின்
நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா
எதிரும் கரி பற்றினர் எண்_இலரே

#31
அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள்-தாம்
இரண தொழில் விட்டு எயில் சூழ் கருவூர்
முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்
தரணி தலைவன் கழல் சார்வுறவே

#32
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்
முன் வந்த கரும் தலை மொய் குவை-தான்
மின்னும் சுடர் மா முடி வேல் வளவன்
தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர்

#33
மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்
எண்_இல் பெருகும் தலை யாவையினும்
நண்ணி கொணரும் தலை ஒன்றின் நடு
கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே

#34
கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கி கைதொழுது
கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்த
திண் திறலோன் கை தலையில் சடை தெரிய பார்த்து அருளி
புண்டரிக திரு கண்ணீர் பொழிந்து இழிய புரவலனார்

#35
முரசு உடை திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கி
உரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல்
திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து யான்
அரசு அளித்தபடி சால அழகு இது என அழிந்து அயர்வார்

#36
தார் தாங்கி கடன் முடித்த சடை தாங்கும் திரு முடியார்
நீர் தாங்கும் சடை பெருமான் நெறி தாம் கண்டவர் ஆனார்
சீர் தாங்கும் இவர் வேணி சிரம் தாங்கி வர கண்டும்
பார் தாங்க இருந்தேனோ பழி தாங்குவேன் என்றார்

#37
என்று அருளி செய்து அருளி இதற்கு இசையும்படி துணிவார்
நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்து
மன்றில் நடம் புரிவார்-தம் வழி தொண்டின் வழி நிற்ப
வென்றி முடி என் குமரன்-தனை புனைவீர் என விதித்தார்

#38
அ மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றி
கை மாற்றும் செயல்-தாமே கடனாற்றும் கருத்து உடையார்
செம் மார்க்கம் தலை நின்று செம் தீ முன் வளர்ப்பித்து
பொய் மாற்றும் திருநீற்று புனை கோலத்தினில் பொலிந்தார்

#39
கண்ட சடை சிரத்தினை ஓர் கனக மணி கலத்து ஏந்தி
கொண்டு திரு முடி தாங்கி குலவும் எரி வலம்கொள்வார்
அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு_எழுத்தும் எடுத்து ஓதி
மண்டு தழல் பிழம்பினிடை மகிழ்ந்து அருளி உள் புக்கார்

#40
புக்க பொழுது அலர்_மாரி புவி நிறைய பொழிந்து இழிய
மிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்ப
செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின்
அ கருணை திரு நிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார்

#41
முரசம் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்
பிரசம் கொள் நறும் தொடையல் புகழ் சோழர் பெருமையினை
பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்தி
நரசிங்கமுனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம்
&8 பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
@3 நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

#1
கோடாத நெறி விளக்கும் குல மரபின் அரசு அளித்து
மாடு ஆக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார்
தேடாத பெரு வளத்தில் சிறந்த திருமுனைப்பாடி
நாடு ஆளும் காவலனார் நரசிங்கமுனையரையர்

#2
இ முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்
தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறி பாங்கு அகல
மும்முனை நீள் இலை சூல முதல் படையார் தொண்டு புரி
அ முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேறு என அடைவார்

#3
சின விடையார் கோயில்-தொறும் திரு செல்வம் பெருக்கு நெறி
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து
மனவிடை ஆமை தொடையல் அணி மார்பர் வழி தொண்டு
கனவிடை ஆகிலும் வழுவா கடன் ஆற்றி செல்கின்றார்

#4
ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரைநாள்-தொறும் என்றும்
வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி
நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும்பொன்
நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார்

#5
ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில்
மேன்மை நெறி தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்
மான நிலை அழி தன்மை வரும் காம குறி மலர்ந்த
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார்

#6
மற்று அவர் தம் வடிவு இருந்தபடி கண்டு மருங்கு உள்ளார்
உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார்-தமை கண்டு
கொற்றவனார் எதிர் சென்று கை குவித்து கொடு போந்த
பெற்றியினார்-தமை மிகவும் கொண்டாடி பேணுவார்

#7
சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை
ஞாலம் இகழ்ந்த அரு நரகம் நண்ணாமல் எண்ணுவார்
பால் அணைந்தார்-தமக்கு அளித்தபடி இரட்டி பொன் கொடுத்து
மேல் அவரை தொழுது இனிய மொழி விளம்பி விடைகொடுத்தார்

#8
இ வகையே திருத்தொண்டின் அருமை நெறி எந்நாளும்
செவ்விய அன்பினில் ஆற்றி திருந்திய சிந்தையர் ஆகி
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாத மலர் நிழல் சோர்ந்து
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார்

#9
விட நாகம் அணிந்த பிரான் மெய் தொண்டு விளைந்த நிலை
உடன் ஆகும் நரசிங்கமுனையர் பிரான் கழல் ஏத்தி
தட நாகம் மதம் சொரிய தனம் சொரியும் கலம் சேரும்
கடல் நாகை அதிபத்தர் கடன் ஆகை கவின் உரைப்பாம்
&8 பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
@4 அதிபத்த நாயனார் புராணம்

#1
மன்னி நீடிய செம் கதிரவன் வழி மரபின்
தொன்மையாம் முதல் சோழர்-தம் திரு குலத்து உரிமை
பொன்னி நாடு எனும் கற்பக பூம் கொடி மலர் போல்
நன்மை சான்றது நாகப்பட்டின திரு நகரம்

#2
தாம நித்தில கோவைகள் சரிந்திட சரிந்த
தே மலர் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ்
காமர் பொன் சுடர் மாளிகை கரும் கடல் முகந்த
மா முகில் குலம் மலை என ஏறுவ மருங்கு

#3
பெருமையில் செறி பேர் ஒலி பிறங்கலின் நிறைந்து
திரு_மகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும்
தருதலின் கடல்-தன்னினும் பெரிது என திரை போல்
கரி பரி தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால்

#4
நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகி
கோடி நீள் தன குடியுடன் குவலயம் காணும்
ஆடி மண்டலம் போல்வது அ அணி கிளர் மூதூர்

#5
அ நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில்
பல் நெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த
தன்மை வாழ் குடி மிடைந்தது தட நுளைப்பாடி

#6
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை
அயல் அளப்பன மீன் விலை பசும்பொனின் அடுக்கல்
வியல் அளக்கரில் விடும் திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள்

#7
உணங்கல் மீன் கவர் உறு நசை குருகு உடன் அணைந்த
கணம் கொள் ஓதிமம் கரும் சினை புன்னை அம் கானல்
அணங்கு நுண் இடை நுளைச்சியர் அசை நடை கழிந்து
மணம் கொள் கொம்பரின் மருங்கு-நின்று இழியல மருளும்

#8
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்
அலை நெடும் கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய

#9
அனையது ஆகிய அ நுளைப்பாடியில் அமர்ந்து
மனை வளம் பொலி நுளையர்-தம் குலத்தினில் வந்தார்
புனை இளம் பிறை முடி அவர் அடி தொண்டு புரியும்
வினை விளங்கிய அதிபத்தர் என நிகழ் மேலோர்

#10
ஆங்கு அன்பர்-தாம் நுளையர்-தம் தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண் திரை கடலிடை பல படவு இயக்கி
பாங்கு சூழ் வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்
ஓங்கு பல் குவை உலப்பு_இல உடையராய் உயர்வார்

#11
முட்டில் மீன் கொலை தொழில் வளத்தவர் வலை முகந்து
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும்-தோறும்
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாத அன்புடன் என்றும் விருப்பால்

#12
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர்-தம் கழற்கு என விடும் இயல்பால்
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார்

#13
மீன் விலை பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று
மான் மறி கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார்

#14
சால நாள் இப்படி வர தாம் உணவு அயர்த்து
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையா
சீலமே தலை நின்றவர்-தம் திறம் தெரிந்தே
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார்

#15
ஆன நாள் ஒன்றில் அ ஒரு மீனும் அங்கு ஒழித்து
தூ நிற பசும் கனக நல் சுடர் நவ மணியால்
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்
பான்மை அற்புத படியது ஒன்று இடு வலை படுத்தார்

#16
வாங்கு நீள் வலை அலை கடல் கரையில் வந்து ஏற
ஓங்கு செம் சுடர் உதித்து என உலகு எலாம் வியப்ப
தாங்கு பேர் ஒளி தழைத்திட காண்டலும் எடுத்து
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார்

#17
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர் தொண்டர்
பொன் திரள் சுடர் நவ மணி பொலிந்த மீன் உறுப்பால்
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்
சென்று பொன் கழல் சேர்க என திரையொடும் திரிந்தார்

#18
அகிலலோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில்
புகலும் அ பெரும் பற்றினை புரை அற எறிந்த
இகல் இல் மெய் திருத்தொண்டர் முன் இறைவர் தாம் விடை மேல்
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகை பூ

#19
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்சலி கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை
நஞ்சு வாள் மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து
அம் சிறப்புடை அடியர் பாங்குற தலையளித்தார்

#20
தம் மறம் புரி மரபினில் தகும் பெரும் தொண்டு
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி
மும்மை ஆகிய புவனங்கள் முறைமையில் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்
&8 பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
@5 கலிக்கம்ப நாயனார் புராணம்

#1
உரிமை ஒழுக்கம் தலை நின்ற உயர் தொல் மரபில் நீடு மனை
தரும நெறியால் வாழ் குடிகள் தழைத்து வளரும் தன்மையதாய்
வரும் மஞ்சு உறையும் மலர் சோலை மருங்கு சூழ்ந்த வளம் புறவில்
பெருமை உலகு பெற விளங்கும் மேல்-பால் பெண்ணாகட மூதூர்

#2
மற்ற பதியினிடை வாழும் வணிகர் குலத்து வந்து உதித்தார்
கற்றை சடையார் கழல் காதலுடனே வளர்ந்த கருத்து உடையார்
அற்றைக்கு அன்று தூங்கானை மாடத்து அமர்ந்தார் அடி தொண்டு
பற்றி பணி செய் கலிக்கம்பர் என்பார் மற்று ஓர் பற்று இல்லார்

#3
ஆன அன்பர்-தாம் என்றும் அரனார் அன்பர்க்கு அமுது செய
மேன்மை விளங்கு போனகமும் விரும்பு கறி நெய் தயிர் தீம் பால்
தேனின் இனிய கனி கட்டி திருந்த அமுது செய்வித்தே
ஏனை நிதியம் வேண்டுவன எல்லாம் இன்பமுற அளிப்பார்

#4
அன்ன வகையால் திருத்தொண்டு புரியும் நாளில் அங்கு ஒரு நாள்
மன்னும் மனையில் அமுது செய வந்த தொண்டர்-தமை எல்லாம்
தொன்மை முறையே அமுது செய தொடங்குவிப்பார் அவர்-தம்மை
முன்னர் அழைத்து திருவடிகள் எல்லாம் விளக்க முயல்கின்றார்

#5
திருந்து மனையார் மனை எல்லாம் திகழ விளக்கி போனகமும்
பொருந்து சுவையில் கறி அமுதும் புனித தண்ணீர் உடன் மற்றும்
அருந்தும் இயல்பில் உள்ளனவும் அமைத்து கரக நீர் அளிக்க
விரும்பு கணவர் பெரும் தவத்தாள் எல்லாம் விளக்கும் பொழுதின்-கண்

#6
முன்பு தமக்கு பணி செய்யும் தமராய் ஏவல் முனிந்து போய்
என்பும் அரவும் அணிந்த பிரான் அடியார் ஆகி அங்கு எய்தும்
அன்பர் உடனே திரு வேடம் தாங்கி அணைந்தார் ஒருவர்-தாம்
பின்பு வந்து தோன்ற அவர் பாதம் விளக்கும் பெருந்தகையார்

#7
கையால் அவர்-தம் அடி பிடிக்க காதல் மனையார் முன்பு ஏவல்
செய்யாது அகன்ற தமர் போலும் என்று தேரும் பொழுது மலர்
மொய்யார் வாச கரக நீர் வார்க்க முட்ட முதல் தொண்டர்
மை ஆர் கூந்தல் மனையாரை பார்த்து மனத்துள் கருதுவார்

#8
வெறித்த கொன்றை முடியார்-தம் அடியார் இவர் முன் மேவு நிலை
குறித்து வெள்கி நீர் வாராது ஒழிந்தாள் என்று மனம் கொண்டு
மறித்து நோக்கார் வடி வாளை வாங்கி கரகம் வாங்கி கை
தறித்து கரக நீர் எடுத்து தாமே அவர் தாள் விளக்கினார்

#9
விளக்கி அமுது செய்வதற்கு வேண்டுவன தாமே செய்து
துளக்கு_இல் சிந்தை உடன் தொண்டர்-தம்மை அமுது செய்வித்தார்
அளப்பு_இல் பெருமை அவர் பின்னும் அடுத்த தொண்டின் வழி நின்று
களத்தில் நஞ்சம் அணிந்து அவர் தாள் நிழல் கீழ் அடியாருடன் கலந்தார்

#10
ஓத மலி நீர் விடம் உண்டார் அடியார் என்று உணரா
மாதரார் கை தடிந்த கலிக்கம்பர் மலர் சேவடி வணங்கி
பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங்களில் பொலிந்த
காதல் அன்பர் கலிநீதியார்-தம் பெருமை கட்டுரைப்பாம்
&8 பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
@6 கலிய நாயனார் புராணம்

#1
பேர் உலகில் ஓங்கு புகழ் பெரும் தொண்டை நல் நாட்டு
நீர் உலவும் சடை கற்றை நிருத்தர் திரு பதியாகும்
கார் உலவும் மலர் சோலை கன்னி மதில் புடைசூழ்ந்து
தேர் உலவு நெடு வீதி சிறந்த திருவொற்றியூர்

#2
பீடு கெழும் பெரும் தெருவும் புத்தர் உடன் பீலி அமண்
வேடம் உடையவர் பொருள் போல் ஆகாச வெளி மறைக்கும்
ஆடு கொடி மணி நெடு மாளிகை நிரைகள் அலை கமுகின்
காடு அனைய கடல் படப்பை என விளங்கும் கவின் காட்டும்

#3
பன்னு திருப்பதிக இசை பாட்டு ஓவா மண்டபங்கள்
அன்ன நடை மடவார்கள் ஆட்டு ஓவா அணி அரங்கு
பன் முறை தூரியம் முழங்கு விழவு ஓவா பயில் வீதி
செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள்

#4
கெழு மலர் மாதவி புன்னை கிளை ஞாழல் தளை அவிழும்
கொழு முகைய சண்பகங்கள் குளிர் செருந்தி வளர் கைதை
முழு மணமே முந்நீரும் கமழ மலர் முருகு உயிர்க்கும்
செழு நிலவின் துகள் அனைய மணல் பரப்பும் திருப்பரப்பு

#5
எயில் அணையும் முகில் முழக்கும் எறி திரை வேலையின் முழக்கும்
பயில் தரு பல்லிய முழக்கும் முறை தெரியா பதி-அதனுள்
வெயில் அணி பல் மணி முதலாம் விழு பொருள் ஆவன விளக்கும்
தயில வினை தொழில் மரபில் சக்கரப்பாடி தெருவு

#6
அ குலத்தின் செய் தவத்தால் அவனி மிசை அவதரித்தார்
மிக்க பெரும் செல்வத்து மீக்கூர விளங்கினார்
தக்க புகழ் கலியனார் எனும் நாமம் தலை நின்றார்
முக்கண் இறைவர்க்கு உரிமை திருத்தொண்டின் நெறி முயல்வார்

#7
எல்லை_இல் பல் கோடி தனத்து இறைவராய் இப்படி தாம்
செல்வ நெறி பயன் அறிந்து திருவொற்றியூர் அமர்ந்த
கொல்லை மழ_விடையார்-தம் கோயிலின் உள்ளும் புறம்பும்
அல்லும் நெடும் பகலும் இடும் திரு விளக்கின் அணி விளைத்தார்

#8
எண்_இல் திரு விளக்கு நெடு நாள் எல்லாம் எரித்து வர
புண்ணிய மெய் தொண்டர் செயல் புலப்படுப்பார் அருளாலே
உள் நிறையும் பெரும் செல்வம் உயர்த்தும் வினை செயல் ஓவி
மண்ணில் அவர் இருவினை போல் மாண்ட மாட்சிமைத்து ஆக

#9
திரு மலி செல்வ துழனி தேய்ந்து அழிந்த பின்னையும் தம்
பெருமை நிலை திருப்பணியில் பேராத பேராளர்
வரு மரபில் உள்ளோர்-பால் எண்ணெய் மாறி கொணர்ந்து
தரும் இயல்பில் கூலியினால் தமது திருப்பணி செய்வார்

#10
வளம் உடையார்-பால் எண்ணெய் கொடு போய் மாறி கூலி
கொள முயலும் செய்கையும் மற்று அவர் கொடாமையின் மாற
தளரு மனம் உடையவர் தாம் சக்கர எந்திரம் புரியும்
களனில் வரும் பணி செய்து பெரும் கூலி காதலித்தார்

#11
செக்கு நிறை எள் ஆட்டி பதம் அறிந்து திலதயிலம்
பக்கம் எழ மிக உழந்தும் பாண்டில் வரும் எருது உய்த்தும்
தக்க தொழில் பெறும் கூலி தாம் கொண்டு தாழாமை
மிக்க திரு விளக்கு இட்டார் விழு தொண்டு விளக்கிட்டார்

#12
அ பணியால் வரும் பேறு அ வினைஞர் பலர் உளராய்
எப்பரிசும் கிடையாத வகை முட்ட இடர் உழந்தே
ஒப்பு_இல் மனை விற்று எரிக்கும் உறு பொருளும் மாண்டதன் பின்
செப்ப_அரும் சீர் மனையாரை விற்பதற்கு தேடுவார்

#13
மனம் மகிழ்ந்து மனைவியார்-தமை கொண்டு வள நகரில்
தனம் அளிப்பார்-தமை எங்கும் கிடையாமல் தளர்வு எய்தி
சின விடையார் திரு கோயில் திரு விளக்கு பணி முட்ட
கனவினும் முன்பு அறியாதார் கையறவால் எய்தினார்

#14
பணி கொள்ளும் படம் பக்க நாயகர்-தம் கோயிலினுள்
அணி கொள்ளும் திரு விளக்கு பணி மாறும் அமையத்தில்
மணி வண்ண சுடர் விளக்கு மாளில் யான் மாள்வன் என
துணிவு உள்ளம் கொள நினைந்து அ வினை முடிக்க தொடங்குவார்

#15
திரு விளக்கு திரி இட்டு அங்கு அகல் பரப்பி செயல் நிரம்ப
ஒருவிய எண்ணெய்க்கு ஈடா உடல் உதிரம் கொடு நிறைக்க
கருவியினால் மிடறு அரிய அ கையை கண்_நுதலார்
பெருகு திரு கருணையுடன் நேர்வந்து பிடித்து அருளி

#16
மற்று அவர்-தம் முன் ஆக மழ விடை மேல் எழுந்தருள
உற்ற ஊறு அது நீங்கி ஒளி விளங்க உச்சியின் மேல்
பற்றிய அஞ்சலியினராய் நின்றவரை பரமர்-தாம்
பொற்பு உடைய சிவபுரியில் பொலிந்து இருக்க அருள்புரிந்தார்

#17
தேவர் பிரான் திரு விளக்கு செயல் முட்ட மிடறு அரிந்து
மேவு_அரிய வினை முடித்தார் கழல் வணங்கி வியன் உலகில்
யாவர் எனாது அரன் அடியார்-தமை இகழ்ந்து பேசினரை
நா அரியும் சத்தியார் திருத்தொண்டின் நலம் உரைப்பாம்
&8 பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
@7 சத்தி நாயனார் புராணம்

#1
களமர் கட்ட கமலம் பொழிந்த தேன்
குளம் நிறைப்பது கோல் ஒன்றில் எண் திசை
அளவும் ஆணை சய தம்பம் நாட்டிய
வளவர் காவிரி நாட்டு வரிஞ்சையூர்

#2
வரிஞ்சை ஊரினில் வாய்மை வேளாண் குலம்
பெரும் சிறப்பு பெற பிறப்பு எய்தினார்
விரிஞ்சன் மால் முதல் விண்ணவர் எண்ணவும்
அரும் சிலம்பு அணி சேவடிக்கு ஆள் செய்வார்

#3
அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை
இ தலத்தில் இகழ்ந்து இயம்பும் உரை
வைத்த நாவை வலித்து அரி சத்தியால்
சத்தியார் எனும் திரு நாமமும் தாங்கினார்

#4
தீங்கு சொற்ற திரு இலர் நாவினை
வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
ஓங்கு சீர் தொண்டின் உயர்ந்தனர்

#5
அன்னது ஆகிய ஆண்மை திருப்பணி
மன்னு பேர் உலகத்தில் வலி உடன்
பல் நெடும் பெரு நாள் பரிவால் செய்து
சென்னி ஆற்றினர் செம் நெறி ஆற்றினர்

#6
ஐயம் இன்றி அரிய திருப்பணி
மெய்யினால் செய்த வீர திருத்தொண்டர்
வையம் உய்ய மணி மன்றுள் ஆடுவார்
செய்ய பாத திரு நிழல் சேர்ந்தனர்

#7
நாயனார் தொண்டரை நலம் கூறலார்
சாய நா அரி சத்தியார் தாள் பணிந்து
ஆய மா தவத்து ஐயடிகள் எனும்
தூய காடவர்-தம் திறம் சொல்லுவாம்
&8 பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்
@8 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்

#1
வைய நிகழ் பல்லவர்-தம் குல மரபின் வழி தோன்றி
வெய்ய கலியும் பகையும் மிகை ஒழியும் வகை அடக்கி
செய்ய சடையார் சைவ திரு நெறியால் அரசு அளிப்பார்
ஐயடிகள் நீதியால் அடிப்படுத்தும் செங்கோலார்

#2
திரு மலியும் புகழ் விளங்க சேண் நிலத்தில் எ உயிரும்
பெருமையுடன் இனிது அமர பிற புலங்கள் அடிப்படுத்து
தரும நெறி தழைத்து ஓங்க தாரணி மேல் சைவமுடன்
அரு_மறையின் துறை விளங்க அரசு அளிக்கும் அந்நாளில்

#3
மன்னவரும் பணி செய்ய வட நூல் தென் தமிழ் முதலாம்
பன்னு கலை பணி செய்ய பார் அளிப்பார் அரசாட்சி
இன்னல் என இகழ்ந்து அதனை எழில் குமரன் மேல் இழிச்சி
நன்மை நெறி திருத்தொண்டு நயந்து அளிப்பார் ஆயினார்

#4
தொண்டு உரிமை புரக்கின்றார் சூழ் வேலை உலகின்-கண்
அண்டர் பிரான் அமர்ந்து அருளும் ஆலயங்கள் ஆன எலாம்
கண்டு இறைஞ்சி திருத்தொண்டின் கடன் ஏற்ற பணி செய்த
வண் தமிழின் மொழி வெண்பா ஓரொன்றா வழுத்துவார்

#5
பெருத்து எழு காதலினால் வணங்கி பெரும்பற்றத்தண்புலியூர்
திருச்சிற்றம்பலத்து ஆடல் புரிந்து அருளும் செய்ய சடை
நிறுத்தனார் திருக்கூத்து நேர்ந்து இறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பின் உடன் செந்தமிழின் வெண்பா மென் மலர் புனைந்தார்

#6
அவ்வகையால் அருள் பெற்று அங்கு அமர்ந்து சில நாள் வைகி
இ உலகில் தம் பெருமான் கோயில்கள் எல்லாம் எய்தி
செவ்விய அன்பொடு பணிந்து திருப்பணி ஏற்றன செய்தே
எவ்வுலகும் புகழ்ந்து ஏத்தும் இன் தமிழ் வெண்பா மொழிந்தார்

#7
இ நெறியால் அரன் அடியார் இன்பமுற இசைந்த பணி
பல் நெடு நாள் ஆற்றிய பின் பரமர் திருவடி நிழல் கீழ்
மன்னு சிவலோகத்து வழி அன்பர் மருங்கு அணைந்தார்
கன்னி மதில் சூழ் காஞ்சி காடவரை அடிகளார்

#8
பை அரவம் அணி ஆரம் அணிந்தார்க்கு பா அணிந்த
ஐயடிகள் காடவனார் அடி இணை தாமரை வணங்கி
கை அணி மான் மழு உடையார் கழல் பணி சிந்தனை உடைய
செய் தவத்து கணம்புல்லர் திருத்தொண்டு விரித்து உரைப்பாம்

#9
உளத்தில் ஒரு துளக்கம் இலோம் உலகு உய்ய இருண்ட திரு
களத்தர் முது குன்றர் தரு கனகம் ஆற்றில் இட்டு
வளத்தின் மலி ஏழ்_உலகும் வணங்கு பெரும் திருவாரூர்
குளத்தில் எடுத்தார் வினையின் குழிவாய் நின்று எனை எடுத்தார்