5. திருநின்ற சருக்கம்

அதிகாரங்கள்

  1. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் (429)
  2. குலச்சிறை நாயனார் புராணம் (11)
  3. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம் (11)
  4. காரைக்கால் அம்மையார் புராணம் (66)
  5. அப்பூதி அடிகள் நாயனார் புராணம் (45)
  6. திருநீலநக்க நாயனார் புராணம் (38)
  7. நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் (33)

1 திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்

#1
திருநாவுக்கரசர் வளர் திருத்தொண்டின் நெறி வாழ
வரு ஞான தவ முனிவர் வாகீசர் வாய்மை திகழ்
பெரு நாம சீர் பரவல்உறுகின்றேன் பேர் உலகில்
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்
#2
தொன்மை முறை வரு மண்ணின் துகள் அன்றி துகள் இல்லா
நன்மை நிலை ஒழுக்கத்து நலம் சிறந்த குடி மல்கி
சென்னி மதி புனைய வளர் மணி மாட செழும் பதிகள்
மன்னி நிறைந்து உளது திருமுனைப்பாடி வள நாடு
#3
புன பண்ணை மணியினோடும் புறவின் நறும் புது மலரின்
கனப்பு எண்_இல் திரை சுமந்து கரை மருங்கு பெரும் பகட்டு ஏர்
இன பண்ணை உழும் பண்ணை எறிந்து உலவி எவ்வுலகும்
வனப்பு எண்ண வரும் பெண்ணை மா நதி பாய் வளம் பெருகும்
#4
கால் எல்லாம் தகட்டு வரால் கரும்பு எல்லாம் கண் பொழி தேன்
பால் எல்லாம் கதிர் சாலி பரப்பு எல்லாம் குலை கமுகு
சால் எல்லாம் தரளம் நிரை தடம் எல்லாம் செங்கழுநீர்
மேல் எல்லாம் அகில் தூபம் விருந்து எல்லாம் திருந்து மனை
#5
கடைஞர் மிடை வயல் குறைத்த கரும்பு குறை பொழி கொழும் சாறு
இடை தொடுத்த தேன் கிழிய இழிந்து ஒழுகு நீத்தம் உடன்
புடை பரந்து ஞிமிறு ஒலிப்ப புது புனல் போல் மடை உடைப்ப
உடை மடைய கரும்பு அடு கட்டியின் அடைப்ப ஊர்கள்-தொறும்
#6
கரும் கதலி பெரும் குலைகள் களிற்று கைம் முகம் காட்ட
மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட
பெரும் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க
நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்பனவாம் நிறை மருதம்
#7
நறை ஆற்றும் கமுகு நவ மணி கழுத்தின் உடன் கூந்தல்
பொறை ஆற்றா மகளிர் என புறம்பு அலை தண்டலை வேலி
துறை ஆற்ற மணி வண்ண சுரும்பு இரைக்கும் பெரும் பண்ணை
நிறை ஆற்று நீர் கொழுந்து படர்ந்து ஏறும் நிலைமையது-ஆல்
#8
மரு மேவும் மலர் மேய மா கடலின் உள் படியும்
உரு மேகம் என மண்டி உகைத்த கரும் கன்று போல்
வரு மேனி செம் கண் வரால் மடி முட்டி பால் சொரியும்
கரு மேதி-தனை கொண்டு கரை புரள்வ திரை வாவி
#9
மொய் அளி சூழ் நிரை நீல முழு வலயங்களின் அலைய
செய்ய தளிர் நறு விரலில் செழு முகையின் நகம் சிறப்ப
மெய் ஒளியின் நிழல் காணும் ஆடி என வெண் மதியை
வைய_மகள் கை அணைத்தால் போல் உயர்வ மலர் சோலை
#10
எயில் குலவும் வளம் பதிகள் எங்கும் மணம் தங்கும் வயல்
பயிர் கண் வியல் இடங்கள் பல பரந்து உயர் நெல் கூடுகளும்
வெயில் கதிர் மென் குழை மகளிர் விரவிய மாடமும் மேவி
மயில் குலமும் முகில் குலமும் மாறு ஆட மருங்கு ஆடும்
#11
மறம் தரு தீ நெறி மாற மணிகண்டர் வாய்மை நெறி
அறம் தரு நாவுக்கரசும் ஆலாலசுந்தரரும்
பிறந்து அருள உளதானால் நம் அளவோ பேர் உலகில்
சிறந்த திருமுனைப்பாடி திறம் பாடும் சீர் பாடு
#12
இ வகைய திரு நாட்டில் எனை பல ஊர்களும் என்றும்
மெய் வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள்
சைவ நெறி ஏழ்_உலகும் பாலிக்கும் தன்மையினால்
தெய்வ நெறி சிவம் பெருக்கும் திரு ஆம் ஊர் திருவாமூர்
#13
ஆங்கு வன முலைகள் சுமந்து அணங்குவன மகளிர் இடை
ஏங்குவன நூபுரங்கள் இரங்குவன மணி காஞ்சி
ஓங்குவன மாடம் நிரை ஒழுகுவன வழு_இல் அறம்
நீங்குவன தீங்கு நெறி நெருங்குவன பெரும் குடிகள்
#14
மலர் நீலம் வயல் காட்டும் மைம் ஞீலம் மதி காட்டும்
அலர் நீடு மறுகு ஆட்டும் அணி ஊசல் பல காட்டும்
புலர் நீலம் இருள் காட்டும் பொழுது உழவர் ஒலி காட்டும்
கலம் நீடு மனை காட்டும் கரை காட்டா பெரு வளங்கள்
#15
தலத்தின் கண் விளங்கிய அ தனி பதியில் அனைத்து வித
நலத்தின் கண் வழுவாத நடை மரபில் குடி நாப்பண்
விலக்கு_இல் மனை ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண்
குலத்தின் கண் வரும் பெருமை குறுக்கையர்-தம் குடி விளங்கும்
#16
அ குடியின் மேல் தோன்றலாய பெருந்தன்மையினார்
மிக்க மனை அறம் புரிந்து விருந்து அளிக்கும் மேன்மையினார்
ஒக்கல் வளர் பெரும் சிறப்பின் உளர் ஆனார் உளர் ஆனார்
திக்கு நிலவும் பெருமை திகழ வரும் புகழனார்
#17
புகழனார் தமக்கு உரிமை பொருவு_இல் குல குடியின்-கண்
மகிழ வரு மணம் புணர்ந்த மாதினியார் மணி வயிற்றில்
நிகழும் மலர் செங்கமல நிரை இதழின் அக வயினில்
திகழ வரும் திரு அனைய திலகவதியார் பிறந்தார்
#18
திலகவதியார் பிறந்து சில முறை ஆண்டு அகன்றதன் பின்
அலகு_இல் கலை துறை தழைப்ப அரும் தவத்தோர் நெறி வாழ
உலகில் வரும் இருள் நீக்கி ஒளி விளங்கு கதிர் போல் பின்
மலரும் மருள் நீக்கியார் வந்து அவதாரம் செய்தார்
#19
மாதினியார் திரு வயிற்றின் மன்னிய சீர் புகழனார்
காதலனார் உதித்ததன் பின் கடன் முறைமை மங்கலங்கள்
மேதகு நல் வினை சிறப்ப விரும்பிய பாராட்டினுடன்
ஏதம் இல் பல் கிளை போற்ற இளம் குழவி பதம் கடந்தார்
#20
மருள்நீக்கியார் சென்னி மயிர் நீக்கும் மண_வினையும்
தெருள் நீர்ப்பன் மாந்தர் எலாம் மகிழ் சிறப்ப செய்ததன் பின்
பொருள் நீத்தம் கொள வீசி புலன் கொளுவ மன முகிழ்த்த
சுருள் நீக்கி மலர்விக்கும் கலை பயில தொடங்குவித்தார்
#21
தந்தையார் களி மகிழ்ச்சி தலை சிறக்க முறைமையினால்
சிந்தை மலர்ந்து எழும் உணர்வில் செழும் கலையின் திறங்கள் எல்லாம்
முந்தை முறைமையில் பயின்று முதிர அறிவு எதிரும் வகை
மைந்தனார் மறு ஒழித்த இளம் பிறை போல் வளர்கின்றார்
#22
அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு_இரண்டின்
முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடி தலைவர்
மின் ஆர் செம்_சடை_அண்ணல் மெய் அடிமை விருப்பு உடையார்
பொன் ஆரும் மணி மௌலி புரவலன்-பால் அருள் உடையார்
#23
ஆண் தகைமை தொழிலின் கண் அடல் அரியேறு என உள்ளார்
காண் தகைய பெரு வனப்பில் கலிப்பகையார் எனும் பெயரார்
பூண்ட கொடை புகழனார்-பால் பொருவு_இல் மகள் கொள்ள
வேண்டி எழும் காதலினால் மேலோரை செலவிட்டார்
#24
அணங்கு அனைய திலகவதியார்-தம்மை ஆங்கு அவர்க்கு
மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்ப
குணம் பேசி குலம் பேசி கோது_இல் சீர் புகழனார்
பணம் கொள் அரவு அகல் அல்குல் பைம்_தொடியை மணம் நேர்ந்தார்
#25
கன்னி திரு தாதையார் மணம் இசைவு கலிப்பகையார்
முன் அணைந்தார் அறிவிப்ப வதுவை_வினை முடிப்பதன் முன்
மன்னவற்கு வட புலத்து ஓர் மாறு ஏற்க மற்றவர் மேல்
அன்னவர்க்கு விடைகொடுத்தான் அ வினை மேல் அவர் அகன்றார்
#26
வேந்தற்கு உற்று உழி வினை மேல் வெம் சமத்தில் விடைகொண்டு
போந்த வரும் பொரு படையும் உடன் கொண்டு சில நாளில்
காய்ந்த சின பகை புலத்தை கலந்து கடும் சமர் கடலை
நீந்துவார் நெடு நாள்கள் நிறை வெம் போர் துறை விளைத்தார்
#27
ஆய நாளிடை இப்பால் அணங்கு அனையாள்-தனை பயந்த
தூய குல புகழனார் தொன்று தொடு நிலையாமை
மேய வினை பயத்தாலே இ உலகை விட்டு அகல
தீய அரும் பிணி உழந்து விண் உலகில் சென்று அடைந்தார்
#28
மற்றவர்-தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்
சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்து
பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்
கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்
#29
தாதையாரும் பயந்த தாயாரும் இறந்ததன் பின்
மாதரார் திலகவதியாரும் அவர் பின் வந்த
காதலனார் மருண் நீக்கியாரும் மனக்கவலையினால்
பேதுறு நல் சுற்றமொடும் பெரும் துயரில் அழுந்தினார்
#30
ஒருவாறு பெரும் கிளைஞர் மனம் தேற்ற துயர் ஒழிந்து
பெரு வானம் அடைந்தவர்க்கு செய் கடன்கள் பெருக்கினார்
மருவார் மேல் மன்னவற்காய் மலைய போம் கலிப்பகையார்
பொருவாரும் போர் களத்தில் உயிர் கொடுத்து புகழ் கொண்டார்
#31
வெம் முனை மேல் கலிப்பகையார் வேல் வேந்தன் ஏவ போய்
அ முனையில் பகை முருக்கி அமர் உலகம் ஆள்வதற்கு
தம்முடைய கடன் கழித்த பெரு வார்த்தை தலம் சாற்ற
செம் மலர் மேல் திரு அனைய திலகவதியார் கேட்டார்
#32
எந்தையும் எம் அனையும் அவர்க்கு எனை கொடுக்க இசைந்தார்கள்
அந்த முறையால் அவர்க்கே உரியது நான் ஆதலினால்
இந்த உயிர் அவர் உயிரோடு இசைவிப்பன் என துணிய
வந்தவர் தம் அடி இணை மேல் மருள்நீக்கியார் விழுந்தார்
#33
அ நிலையில் மிக புலம்பி அன்னையும் அத்தனும் அகன்ற
பின்னையும் நான் உமை வணங்க பெறுதலின் உயிர் தரித்தேன்
என்னை இனி தனி கைவிட்டு ஏகுவீர் எனில் யானும்
முன்னம் உயிர் நீப்பன் என மொழிந்து இடரின் அழுந்தினார்
#34
தம்பியார் உளர் ஆக வேண்டும் என வைத்த தயா
உம்பர் உலகு அணைய உறு நிலை விலக்க உயிர் தாங்கி
அம் பொன் மணி நூல் தாங்காது அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி
இம்பர் மனை தவம் புரிந்து திலகவதியார் இருந்தார்
#35
மாசு_இல் மன துயர் ஒழிய மருள்நீக்கியார் நிரம்பி
தேச நெறி நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய்
காசினி மேல் புகழ் விளங்க நிதி அளித்து கருணையினால்
ஆசு_இல் அற சாலைகளும் தண்ணீர் பந்தரும் அமைப்பார்
#36
கா வளர்த்தும் குளம் தொட்டும் கடப்பாடு வழுவாமல்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்து அளித்தும் விருந்து அளித்தும்
நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் நால் நிலத்து உள்ளோர்
யாவர்க்கும் தவிராத ஈகை வினை துறை நின்றார்
#37
நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அற துறந்து சமயங்கள் ஆனவற்றின்
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்
#38
பாடலிபுத்திரம் என்னும் பதி அணைந்து சமண் பள்ளி
மாடு அணைந்தார் வல் அமணர் மருங்கு அணைந்து மற்று அவர்க்கு
வீடு அறியும் நெறி இதுவே என மெய் போல் தங்களுடன்
கூட வரும் உணர்வு கொள குறி பலவும் கொளுவினார்
#39
அங்கு அவரும் அமண் சமயத்து அரும் கலை நூல் ஆன எலாம்
பொங்கும் உணர்வுற பயின்றே அ நெறியில் புலன் சிறப்ப
துங்க முழு உடல் சமணர் சூழ்ந்து மகிழ்வார் அவர்க்கு
தங்களின் மேலாம் தருமசேனர் எனும் பெயர் கொடுத்தார்
#40
அ துறையின் மீக்கூரும் அமைதியினால் அகல் இடத்தில்
சித்த நிலை அறியாதாரையும் வாதின்-கண்
உய்த்த உணர்வினில் வென்றே உலகின் கண் ஒளி உடைய
வித்தகராய் அமண் சமய தலைமையினில் மேம்பட்டார்
#41
அ நெறியின் மிக்கார் அவர் ஒழுக ஆன்ற தவ
செம் நெறியின் வைகும் திலகவதியார் தாமும்
தொல் நெறியின் சுற்ற தொடர்பு ஒழிய தூய சிவ
நல் நெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார்
#42
பேராத பாச பிணிப்பு ஒழிய பிஞ்ஞகன்-பால்
ஆராத அன்பு பெற ஆதரித்த அ மடவார்
நீர் ஆர் கெடில வட நீள் கரையில் நீடு பெரும்
சீர் ஆர் திருவதிகை வீரட்டானம் சேர்ந்தார்
#43
சென்று திரு வீரட்டானத்து இருந்த செம் பவள
குன்றை அடி பணிந்து கோது_இல் சிவ சின்னம்
அன்று முதல் தாங்கி ஆர்வமுற தம் கையால்
துன்று திருப்பணிகள் செய்ய தொடங்கினார்
#44
புலர்வதன் முன் திரு அலகு பணி மாறி புனிறு அகன்ற
நலம் மலி ஆன் சாணத்தால் நன்கு திரு மெழுக்கிட்டு
மலர் கொய்து கொடு வந்து மாலைகளும் தொடுத்து அமைத்து
பலர் புகழும் பண்பினால் திருப்பணிகள் பல செய்தார்
#45
நாளும் மிகும் பணி செய்து அங்கு உறைந்து அடையும் நல் நாளில்
கேளுறும் அன்புற ஒழுகும் கேண்மையினார் பின் பிறந்தார்
கோளுறு தீ_வினை முந்த பரசமயம் குறித்து அதற்கு
மூளும் மனக்கவலையினால் முற்ற வரும் துயர் உழந்து
#46
தூண்டு தவ விளக்கு அனையார் சுடர் ஒளியை தொழுது என்னை
ஆண்டு அருளும் நீர் ஆகில் அடியேன் பின் வந்தவனை
ஈண்டு வினை பரசமய குழி-நின்றும் எடுத்து ஆள
வேண்டும் என பல முறையும் விண்ணப்பம் செய்தனரால்
#47
தவம் என்று பாய் இடுக்கி தலை பறித்து நின்று உண்ணும்
அவம் ஒன்று நெறி வீழ்வான் வீழாமே அருளும் என
சிவம் ஒன்று நெறி நின்ற திலகவதியார் பரவ
பவம் ஒன்றும் வினை தீர்ப்பார் திரு உள்ளம் பற்றுவார்
#48
மன்னு தபோ தனியார்க்கு கனவின்-கண் மழ_விடையார்
உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உன் உடன் பிறந்தான்
முன்னமே முனி ஆகி எனை அடைய தவம் முயன்றான்
அன்னவனை இனி சூலை மடுத்து ஆள்வாம் என அருளி
#49
பண்டு புரி நல் தவத்து பழுதின் அளவு இறை வழுவும்
தொண்டரை ஆள தொடங்கும் சூலை வேதனை-தன்னை
கண் தரு நெற்றியர் அருள கடும் கனல் போல் அடும் கொடிய
மண்டு பெரும் சூலை அவர் வயிற்றினிடை புக்கதால்
#50
அடைவில் அமண் புரி தருமசேனர் வயிற்று அடையும் அது
வட அனலும் கொடு விடமும் வச்சிரவும் பிறவுமாம்
கொடிய எலாம் ஒன்றாகும் என குடரின் அகம் குடைய
படர் உழந்து நடுங்கி அமண் பாழியறையிடை விழுந்தார்
#51
அ சமயத்திடை தாம் முன் அதிகரித்து வாய்த்து வரும்
விச்சைகளால் தடுத்திடவும் மேல்மேலும் மிக முடுகி
உச்சம் உற வேதனை நோய் ஓங்கி எழ ஆங்கு அவர்-தாம்
நச்சு அரவின் விடம் தலை கொண்டு என மயங்கி நவையுற்றார்
#52
அவர் நிலைமை கண்டதன் பின் அமண் கையர் பலர் ஈண்டி
கவர்கின்ற விடம் போல் முன் கண்டு அறியா கொடும் சூலை
இவர் தமக்கு வந்தது இனி யாது செயல் என்று அழிந்தார்
தவம் என்று வினை பெருக்கி சார்பு அல்லா நெறி சார்வார்
#53
புண் தலைவன் முருட்டு அமணர் புலர்ந்து செயல் அறியாது
குண்டிகை நீர் மந்திரித்து குடிப்பித்தும் தணியாமை
கண்டு மிக பீலி கொடு கால் அளவும் தடவி இடவும்
பண்டையினும் நோவு மிக பரிபவத்தால் இடர் உழந்தார்
#54
தாவாத புகழ் தருமசேனருக்கு வந்த பிணி
ஓவாது நின்றிடலும் ஒழியாமை உணர்ந்தாராய்
ஆ ஆ நாம் என் செய்கோம் என்று அழிந்த மனத்தினராய்
போவார்கள் இது நம்மால் போக்க அரிது ஆம் என புகன்று
#55
குண்டர்களும் கைவிட்டார் கொடும் சூலை மிசை கொண்டு
மண்டி மிக மேல் மேலும் பெருகுதலால் மதிமயங்கி
பண்டை உறவு உணர்ந்தார்க்கு திலகவதியார் உளராக
கொண்டு அவர்-பால் ஊட்டுவான்-தனை விட்டார் குறிப்பு உணர்த்த
#56
ஆங்கு அவன் போய் திருவதிகை-தனை அடைய அரும் தவத்தார்
பூம் கமழ் நந்தனவனத்தின் புறம்பு அணைய கண்டு இறைஞ்சி
ஈங்கு யான் உமக்கு இளையார் ஏவலினால் வந்தது என
தீங்கு உளவோ என வினவ மற்றவனும் செப்புவான்
#57
கொல்லாது சூலை நோய் குடர் முடக்கி தீராமை
எல்லாரும் கைவிட்டார் இது செயல் என் முன் பிறந்த
நல்லாள்-பால் சென்று இயம்பி நான் உய்யும்படி கேட்டு இங்கு
அல்லாகும் பொழுது அணைவாய் என்றார் என்று அறிவித்தான்
#58
என்று அவன் முன் கூறுதலும் யான் அங்கு உன் உடன் போந்து
நன்று அறியா அமண் பாழி நண்ணுகிலேன் எனும் மாற்றம்
சென்று அவனுக்கு உரை என்று திலகவதியார் மொழிய
அன்று அவனும் மீண்டு போய் புகுந்தபடி அவர்க்கு உரைத்தான்
#59
அ வார்த்தை கேட்டலுமே அயர்வு எய்தி இதற்கு இனி யான்
எவ்வாறு செய்வன் என ஈசர் அருள் கூடுதலால்
ஒவ்வா இ புன் சமயத்து ஒழியா இ துயர் ஒழிய
செவ்வாறு சேர் திலகவதியார் தாள் சேர்வன் என
#60
எடுத்த மன கருத்து உய்ய எழுதலால் எழும் முயற்சி
அடுத்தலுமே அயர்வு ஒதுங்க திருவதிகை அணைவதனுக்கு
உடுத்து உழலும் பாய் ஒழிய உறி உறு குண்டிகை ஒழிய
தொடுத்த பீலியும் ஒழிய போவதற்கு துணிந்து எழுந்தார்
#61
பொய் தரும் மால் உள்ளத்து புன் சமணர் இடம் கழிந்து
மெய் தருவான் நெறி அடைவார் வெண் புடைவை மெய் சூழ்ந்து
கை தருவார்-தமை ஊன்றி காணாமே இரவின்-கண்
செய் தவ மா தவர் வாழும் திருவதிகை சென்று அடைவார்
#62
சுலவி வயிற்று அகம் கனலும் சூலை நோயுடன் தொடர
குலவி எழும் பெரு விருப்பு கொண்டு அணைய குலவரை போன்று
இலகு மணி மதில் சோதி எதிர்கொள் திருவதிகையினில்
திலகவதியார் இருந்த திரு மடத்தை சென்று அணைந்தார்
#63
வந்து அணைந்து திலகவதியார் அடி மேல் உற வணங்கி
நம் தமது குலம் செய்த நல் தவத்தின் பயன் அனையீர்
இந்த உடல் கொடும் சூலை கிடைந்து அடைந்தேன் இனி மயங்காது
உய்ந்து கரை ஏறும் நெறி உரைத்து அருளும் என உரைத்து
#64
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார்-தமை நோக்கி
ஆள் உடைய தம் பெருமான் அருள் நினைந்து கைதொழுது
கோள்_இல் பரசமய நெறி குழியில் விழுந்து அறியாது
மூளும் அரும் துயர் உழந்தீர் எழுந்தீர் என மொழிந்தார்
#65
மற்று அ உரை கேட்டலுமே மருள்நீக்கியார்-தாமும்
உற்ற பிணி உடல் நடுங்கி எழுந்து தொழ உயர் தவத்தோர்
கற்றை வேணியர் அருளே காணும் இது கழல் அடைந்தோர்
பற்று அறுப்பார்-தமை பணிந்து பணி செய்வீர் என பணித்தார்
#66
என்ற பொழுது அவர் அருளை எதிர் ஏற்று கொண்டு இறைஞ்ச
நின்ற தபோதனியாரும் நின்மலன் பேர் அருள் நினைந்து
சென்று திரு வீரட்டம் புகுவதற்கு திரு கயிலை
குன்று உடையார் திருநீற்றை அஞ்சு_எழுத்து ஓதி கொடுத்தார்
#67
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்ப
பெரு வாழ்வு வந்தது என பெருந்தகையார் பணிந்து ஏற்று அங்கு
உரு ஆர அணிந்து தமக்கு உற்ற இடத்து உய்யும் நெறி
தருவாராய் தம் முன்பு வந்தார் பின் தாம் வந்தார்
#68
நீறு அணிந்தார் அகத்து இருளும் நிறை கங்குல் புறத்து இருளும்
மாற வரும் திருப்பள்ளி எழுச்சியினில் மா தவம் செய்
சீறடியார் திரு அலகும் திரு மெழுக்கும் தோண்டியும் கொண்டு
ஆறு அணிந்தார் கோயிலின் உள் அடைந்தவரை கொடு புக்கார்
#69
திரை கெடில வீரட்டானத்து இருந்த செம் கனக
வரை சிலையார் பெரும் கோயில் தொழுது வலம்கொண்டு இறைஞ்சி
தரை தலத்தின் மிசை வீழ்ந்து தம்பிரான் திருவருளால்
உரை தமிழ்_மாலைகள் சாத்தும் உணர்வு பெற உணர்ந்து உரைப்பார்
#70
நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை அன்பு உறு சிந்தையில் நேசம் மிக
மாற்றார் புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான்
கூற்று ஆயினவாறு விலக்ககிலீர் என நீடிய கோது_இல் திருப்பதிகம்
போற்றால் உலகு ஏழின் வரும் துயரம் போமாறு எதிர்நின்று புகன்றனரால்
#71
மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறு உற்று அடு சூலை மற பிணி-தான்
அ நின்ற நிலை-கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடு அருள் தந்தது எனா
செம் நின்ற பரம்பொருள் ஆனவர்-தம் திரு ஆர் அருள் பெற்ற சிறப்பு உடையோர்
முன் நின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணை கடல் மூழ்கினாரே
#72
அங்கங்கள் அடங்க உரோமம் எலாம் அடைய புளகம் கண் முகிழ்த்து அலர
பொங்கும் புனல் கண்கள் பொழிந்து இழிய புவி மீது விழுந்து புரண்டு அயர்வார்
இங்கு என் செயல் உற்ற பிழைப்பு அதனால் ஏறாத பெரும் திடர் ஏறிட நின்
தங்கும் கருணை பெரு வெள்ளம் இட தகுமோ என இன்னன தாம் மொழிவார்
#73
பொய் வாய்மை பெருக்கிய புன் சமய பொறியில் சமண் நீசர் புற துறையாம்
அ வாழ் குழியின் கண் விழுந்து எழுமாறு அறியாது மயங்கி அவம் புரிவேன்
மை வாச நறும் குழல் மா மலையாள் மணவாளன் மலர் கழல் வந்து அடையும்
இ வாழ்வு பெற தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என்-கொல் என தொழுவார்
#74
மேவுற்ற இ வேலையில் நீடிய சீர் வீரட்டம் அமர்ந்த பிரான் அருளால்
பாவுற்று அலர் செந்தமிழின் சொல் வள பதிக தொடை பாடிய பான்மையினால்
நாவுக்கு அரசு என்று உலகு ஏழினும் நின் நல் நாமம் நயப்புற மன்னுக என்று
யாவர்க்கும் வியப்புற மஞ்சு உறைவான் இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே
#75
இ தன்மை நிகழ்ந்துழி நாவின் மொழிக்கு இறை ஆகிய அன்பரும் இ நெடு நாள்
சித்தம் திகழ் தீ_வினையேன் அடையும் திருவோ இது என்று தெருண்டு அறியா
அ தன்மையன் ஆகிய இராவணனுக்கு அருளும் கருணை திறமான அதன்
மெய் தன்மை அறிந்து துதிப்பதுவே மேல் கொண்டு வணங்கினர் மெய்யுறவே
#76
பரசும் கருணை பெரியோன் அருள பறி புன் தலையோர் நெறி பாழ்பட வந்து
அரசு இங்கு அருள் பெற்று உலகு உய்ந்தது எனா அடியார் புடைசூழ் அதிகை பதி-தான்
முரசம் பட கந்துடி தண்ணுமை யாழ் முழவம் கிளை துந்துபி கண்டை உடன்
நிரை சங்கு ஒலி எங்கும் முழங்குதலால் நெடு மா கடல் என்ன நிறைந்துளதே
#77
மையல் துறை ஏறி மகிழ்ந்து அலர் சீர் வாகீசர் மனத்தொடு வாய்மையுடன்
மெய் உற்ற திருப்பணி செய்பவராய் விரவும் சிவ சின்னம் விளங்கிடவே
எய்துற்ற தியானம் அறா உணர்வும் ஈறு_இன்றி எழும் திருவாசகமும்
கையில் திகழும் உழவாரமுடன் கை கொண்டு கலந்து கசிந்தனரே
#78
மெய்ம்மை பணி செய்த விருப்பு-அதனால் விண்ணோர் தனி நாயகனார் கழலில்
தம் இச்சை நிரம்ப வரம் பெறும் அ தன்மை பதி மேவிய தாபதியார்
பொய்மை சமய பிணி விட்டவர் முன் போதும் பிணி விட்டு அருளி பொருளா
எம்மை பணி கொள் கருணை திறம் இங்கு யார் பெற்றனர் என்ன இறைஞ்சினரே
#79
இன்ன தன்மையில் இவர் சிவ நெறியினை எய்தி
மன்னு பேர் அருள் பெற்று இடர் நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையில் பாடலிபுத்திர நகரில்
புன்மையே புரி அமணர்-தாம் கேட்டு அது பொறாராய்
#80
தருமசேனர்க்கு வந்த அ தடுப்ப_அரும் சூலை
ஒருவராலும் இங்கு ஒழிந்திடாமையின் அவர் உய்ய போய்
பெருகு சைவராய் பெயர்ந்து தம் பிணி ஒழித்து உய்ந்தார்
மருவு நம் பெரும் சமயம் வீழ்ந்தது என மருள்வார்
#81
மலையும் பல் சமயங்களும் வென்று மற்றவரால்
நிலையும் பெற்ற இ நெறி இனி அழிந்தது என்று அழுங்கி
கொலையும் பொய்மையும் இலம் என்று கொடுமையே புரிவோர்
தலையும் பீலியும் தாழ வந்து ஒரு சிறை சார்ந்தார்
#82
இவ்வகை பல அமணர்கள் துயருடன் ஈண்டி
மெய் வகை திறம் அறிந்திடில் வேந்தனும் வெகுண்டு
சைவன் ஆகி நம் விருத்தியும் தவிர்க்கும் மற்று இனி நாம்
செய்வது என் என வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்
#83
தவ்வை சைவத்து நிற்றலின் தருமசேனரும் தாம்
பொய் வகுத்தது ஓர் சூலை தீர்ந்து_இலது என போய் இங்கு
எவ்வமாக அங்கு எய்தி நம் சமயலங்கனமும்
தெய்வ நிந்தையும் செய்தனர் என சொல தெளிந்தார்
#84
சொன்ன வண்ணமே செய்வது துணிந்த துன் மதியோர்
முன்னம் நாம் சென்று முறைப்படுவோம் என முயன்றே
இன்ன தன்மையில் இருள் குழாம் செல்வது போல
மன்னன் ஆகிய பல்லவன் நகரில் வந்து அணைந்தார்
#85
உடை ஒழிந்து ஒரு பேச்சு இடையின்றி நின்று உண்போர்
கடை அணைந்தவன் வாயில் காவலருக்கு நாங்கள்
அடைய வந்தமை அரசனுக்கு அறிவியும் என்ன
இடை அறிந்து புக்க வரும் தம் இறைவனுக்கு இசைப்பார்
#86
அடிகள்மார் எல்லாரும் ஆகுலமாய் மிக அழிந்து
கொடி நுடங்கு திருவாயில் புறத்து அணைந்தார் என கூற
வடி நெடு வேல் மன்னவனும் மற்றவர் சார்பு ஆதலினால்
கடிது அணைவான் அவர்க்கு உற்றது என்-கொல் என கவன்று உரைத்தான்
#87
கடை காவல் உடையார்கள் புகுத விட காவலன்-பால்
நடை ஆடும் தொழில் உடையார் நண்ணி தாம் எண்ணியவாறு
உடையார் ஆகிய தருமசேனர் பிணி உற்றாராய்
சடையானுக்கு ஆளாய் நின் சமயம் ஒழித்தார் என்றார்
#88
விரை அலங்கல் பல்லவனும் அது கேட்டு வெகுண்டு எழுந்து
புரை உடைய மனத்தினராய் போவதற்கு பொய் பிணி கொண்டு
உரை சிறந்த சமயத்தை அழித்து ஒழிய பெறுவதே
கரை_இல் தவத்தீர் இதனுக்கு என் செய்வது என கனன்றான்
#89
தலை நெறி ஆகிய சமயம்-தன்னை அழித்து உன்னுடைய
நிலை நின்ற தொல் வரம்பின் நெறி அழித்த பொறியிலியை
அலை புரிவாய் என பரவி வாயால் அஞ்சாது உரைத்தார்
கொலை புரியா நிலை கொண்டு பொய் ஒழுகும் அமண் குண்டர்
#90
அருள் கொண்ட உணர்வு இன்றி நெறி கோடி அறிவு என்று
மருள் கொண்ட மன்னவனும் மந்திரிகள்-தமை நோக்கி
தெருள் கொண்டோர் இவர் சொன்ன தீயோனை செறுவதற்கு
பொருள் கொண்டு விடாது என்-பால் கொடுவாரும் என புகன்றான்
#91
அரசனது பணி தலைநின்ற அமைச்சர்களும் அ நிலையே
முரசு அதிரும் தானையொடு முன் சென்று முகில் சூழ்ந்து
விரை செறியும் சோலை சூழ் திருவதிகை-தனை மேவி
பரசமய பற்று அறுத்த பான்மையினார்-பால் சென்றார்
#92
சென்று அணைந்த அமைச்சர் உடன் சேனை வீரரும் சூழ்ந்து
மின் தயங்கு புரிவேணி வேதியனார் அடியவரை
இன்று நுமை அரசன் அழைக்க எமை விடுத்தான் போதும் என
நின்றவரை நேர் நோக்கி நிறை தவத்தோர் உரை செய்வார்
#93
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் என்று எடுத்து நான்_மறையின்
கோமானை நதியின் உடன் குளிர் மதி வாழ் சடையானை
தே மாலை செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி
ஆமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள்செய்தார்
#94
ஆண்ட அரசருள் செய்ய கேட்ட வரும் அடி வணங்கி
வேண்டியவர் கொண்டு ஏக விடை உகைத்தார் திருத்தொண்டர்
ஈண்டு வரும் வினைகளுக்கு எம்பிரான் உளன் என்று இசைந்து இருந்தார்
மூண்ட சின போர் மன்னன் முன் அணைந்து அங்கு அறிவித்தார்
#95
பல்லவனும் அது கேட்டு பாங்கு இருந்த பாய் உடுக்கை
வல் அமணர்-தமை நோக்கி மற்று அவனை செய்வது இனி
சொல்லும் என அறம் துறந்து தமக்கு உறுதி அறியாத
புல் அறிவோர் அஞ்சாது நீற்று அறையில் இட புகன்றார்
#96
அருகு அணைந்தார்-தமை நோக்கி அவ்வண்ணம் செய்க என
பெருகு சின கொடுங்கோலான் மொழிந்திடலும் பெருந்தகையை
உருகு பெரும் தழல் வெம்மை நீற்று அறையின் உள் இருத்தி
திருகு கரும் தாள் கொளுவி சேமங்கள் செய்து அமைத்தார்
#97
ஆண்ட அரசு அதன் அகத்துள் அணைந்த பொழுது அம்பலத்து
தாண்டவம் முன் புரிந்து அருளும் தாள் நிழலை தலைக்கொண்டே
ஈண்டு வரும் துயர் உளவோ ஈசன் அடியார்க்கு என்று
மூண்ட மனம் நேர் நோக்கி முதல்வனையே தொழுது இருந்தார்
#98
வெய்ய நீற்று அறையது தான் வீங்கு இளவேனில் பருவம்
தை வரும் தண் தென்றல் அணை தண் கழுநீர் தடம் போன்று
மொய் ஒளி வெண் நிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருள் ஆகி குளிர்ந்ததே
#99
மாசு_இல் மதி நீடு புனல் மன்னி வளர் சென்னியனை
பேச இனியானை உலக ஆளுடைய பிஞ்ஞகனை
ஈசனை எம்பெருமானை எ உயிரும் தருவானை
ஆசை இல் ஆரா அமுதை அடி வணங்கி இனிது இருந்தார்
#100
ஓர் எழு நாள் கழிந்து அதன் பின் உணர்வு இல் அமணரை அழைத்து
பாரும் இனி நீற்று அறையை என உரைத்தான் பல்லவனும்
கார் இருண்ட குழாம் போலும் உரு உடைய கார் அமணர்
தேரும் நிலை இல்லாதார் நீற்று அறையை திறந்தார்கள்
#101
ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி அம்பலவர்
தேன் உந்து மலர் பாதத்து அமுது உண்டு தெளிவு எய்தி
ஊனம் தான் இலர் ஆகி உவந்து இருந்தார்-தமை கண்டே
ஈனம் தங்கியது இலதாம் என்ன அதிசயம் என்றார்
#102
அதிசயம் அன்று இது முன்னை அமண் சமய சாதகத்தால்
இது செய்து பிழைத்து இருந்தான் என வேந்தற்கு உரை செய்து
மதி செய்வது இனி கொடிய வல் விடம் ஊட்டுவது என்று
முதிர வரும் பாதகத்தோர் முடை வாயால் மொழிந்தார்கள்
#103
ஆங்கு அது கேட்டலும் கொடிய அமண் சார்பால் கெடு மன்னன்
ஓங்கு பெருமையினால் நஞ்சு ஊட்டும் என உரைப்ப
தேங்காதார் திருநாவுக்கரையரை அ தீய விட
பாங்கு உடைய பால் அடிசில் அமுது செய பண்ணினார்
#104
நஞ்சும் அமுது ஆம் எங்கள் நாதன் அடியார்க்கு என்று
வஞ்சம் மிகு நெஞ்சு உடையார் வஞ்சனையாம் படி அறிந்தே
செம் சடையார் சீர் விளக்கும் திறல் உடையார் தீ விடத்தால்
வெம் சமணர் இடுவித்த பால் அடிசில் மிசைந்து இருந்தார்
#105
பொடி ஆர்க்கும் திருமேனி புனிதர்க்கு புவனங்கள்
முடிவு ஆக்கும் துயர் நீங்க முன்னை விடம் அமுது ஆனால்
படியார்க்கும் அறி அரிய பசுபதியார் தம்முடைய
அடியார்க்கு நஞ்சு அமுதம் ஆவது தான் அற்புதமோ
#106
அ விடத்தை ஆண்ட அரசு அமுது செய்து முன் இருப்ப
வெவ் விடமும் அமுது ஆயிற்று என அமணர் வெரு கொண்டே
இ விடத்தில் இவன் பிழைக்கில் எமக்கு எல்லாம் இறுதி என
தெவ்விடத்து செயல் புரியும் காவலற்கு செப்புவார்
#107
நஞ்சு கலந்து ஊட்டிடவும் நம் சமயத்தினில் விடம் தீர்
தஞ்சம் உடை மந்திரத்தால் சாதியா வகை தடுத்தான்
எஞ்சும் வகை அவற்கு இலதேல் எம் உயிரும் நின் முறையும்
துஞ்சுவது திடம் என்றார் சூழ் வினையின் துறை நின்றார்
#108
மற்றவர்-தம் மொழி கேட்டு மதி கெட்ட மன்னவனும்
செற்றவனை இனி கடியும் திறம் எவ்வாறு என செப்ப
உற்றவரும் மந்திர சாதகம் நாங்கள் ஒழித்திட நின்
கொற்ற வய களிற்று எதிரே விடுவது என கூறினார்
#109
மா பாவி கடை அமணர் வாகீச திருவடியாம்
கா பாலி அடியவர்-பால் கட களிற்றை விடுக என்ன
பூ பாலர் செயல் மேற்கொள் புலை தொழிலோன் அவர்-தம் மேல்
கோ பாதி சயம் ஆன கொலை களிற்றை விட சொன்னான்
#110
கூடத்தை குத்தி ஒரு குன்றம் என புறப்பட்டு
மாடத்தை மறத்திட்டு மண்டபங்கள் எடுத்து எற்றி
தாடத்தில் பரிக்காரர் தலை இடறி கட களிற்றின்
வேடத்தால் வரும் கூற்றின் மிக்கது ஒரு விறல் வேழம்
#111
பாச தொடை நிகள தொடர் பறிய தறி முறியா
மீ சுற்றிய பறவை குலம் வெருவ துணி விலகா
ஊசல் கரம் எதிர் சுற்றிட உரறி பரி உழறா
வாச கட மழை முற்பட மத வெற்பு எதிர் வரும்-ஆல்
#112
இடி உற்று எழும் ஒலியில் திசை இபம் உட்கிட அடியில்
படி புக்கு உற நெளிய படர் பவன கதி விசையில்
கடிது உற்று அடு செயலில் கிளர் கடலில் படு கடையின்
முடிவு_இல் கனல் என முன் சினம் முடுகி கடுகியதே
#113
மாடுற்று அணை இவுளி குலம் மறிய செறி வயிர
கோடுஉற்று இரு பிளவு இட்டு அறு குறை கைக்கொடு முறிய
சாடுஉற்றிடு மதில் தெற்றிகள் சரிய புடை அணி செற்று
ஆடுஉற்று அகல் வெளியுற்று அது அ அடர் கைக்குல வரையே
#114
பாவ கொடு வினை முற்றிய படிறுஉற்று அடு கொடியோர்
நாவுக்கரசர் எதிர் முன்கொடு நணுகி கருவரை போல்
ஏவி செறு பொருகை கரியினை உய்த்திட வெருளார்
சேவின் திகழ்பவர் பொன் கழல் தெளிவுஉற்றனர் பெரியோர்
#115
அண்ணல் அரும் தவ வேந்தர் ஆணை தம் மேல் வர கண்டு
விண்ணவர்-தம் பெருமானை விடை உகந்து ஏறும் பிரானை
சுண்ண வெண் சந்தன சாந்து தொடுத்த திருப்பதிகத்தை
மண் உலகு உய்ய எடுத்து மகிழ் உடனே பாடுகின்றார்
#116
வஞ்சகர் விட்ட சின போர் மத வெம் களிற்றினை நோக்கி
செம் சடை நீள் முடி கூத்தர் தேவர்க்கும் தேவர் பிரானார்
வெம் சுடர் மூ_இலை சூல வீரட்டர்-தம் அடியோம் நாம்
அஞ்சுவது இல்லை என்று என்றே அரும் தமிழ் பாடி உறைந்தார்
#117
தண் தமிழ்_மாலைகள் பாடி தம் பெருமான் சரணாக
கொண்ட கருத்தில் இருந்து குலாவிய அன்புறு கொள்கை
தொண்டரை முன் வலமாக சூழ்ந்து எதிர் தாழ்ந்து நிலத்தில்
எண் திசையோர்களும் காண இறைஞ்சி எழுந்தது வேழம்
#118
ஆண்ட அரசை வணங்கி அஞ்சி அ வேழம் பெயர
தூண்டிய மேல் மற பாகர் தொடக்கி அடர்த்து திரித்து
மீண்டும் அதனை அவர் மேல் மிறை செய்து காட்டிட வீசி
ஈண்டு அவர் தங்களையே கொன்று அமணர் மேல் ஓடிற்று எதிர்ந்தே
#119
ஓடி அருகர்கள் தம்மை உழறி மிதித்து பிளந்து
நாடி பலரையும் கொன்று நகரம் கலங்கி மறுக
நீடிய வேலை கலக்கும் நெடும் மந்தரகிரி போல
ஆடி அ யானையும் மன்னற்கு ஆகுலம் ஆக்கியது அன்றே
#120
யானையின் கையில் பிழைத்த வினை அமண் கையர்கள் எல்லாம்
மானம் அழிந்து மயங்கு வருந்திய சிந்தையர் ஆகி
தானை நில மன்னன் தாளில் தனித்தனி வீழ்ந்து புலம்ப
மேன்மை நெறி விட்ட வேந்தன் வெகுண்டு இனி செய்வது என் என்றான்
#121
நங்கள் சமயத்தின் நின்றே நாடிய முட்டி நிலையால்
எங்கள் எதிர் ஏறு அழிய யானையால் இவ்வண்ணம் நின் சீர்
பங்க படுத்தவன் போக பரிபவம் தீரும் உனக்கு
பொங்கு அழல் போக அதன் பின் புகை அகன்றால் என என்றார்
#122
அல் இருள் அன்னவர் கூற அரும் பெரும் பாவத்தவன் தான்
தொல்லை சமயம் அழித்து துயரம் விளைவித்தவன்-தன்னை
சொல்லும் இனி செய்வது என்ன சூழ்ச்சி முடிக்கும் தொழிலோர்
கல்லுடன் பாசம் பிணித்து கடலிடை பாய்ச்சுவது என்றார்
#123
ஆங்கு அது கேட்ட அரசன் அ வினை மாக்களை நோக்கி
தீங்கு புரிந்தவன்-தன்னை சேமம் உற கொடு போகி
பாங்கு ஒரு கல்லில் அணைத்து பாசம் பிணித்து ஓர் படகில்
வீங்கு ஒலி வேலையில் எற்றி வீழ்த்து-மின் என்று விடுத்தான்
#124
அ வினை செய்திட போகும் அவருடன் போயர் உகந்த
வெம் வினையாளரும் சென்று மேவிட நாவுக்கரசர்
செவ்விய தம் திரு உள்ளம் சிறப்ப அவருடன் சென்றார்
பவ்வத்தில் மன்னவன் சொன்னபடி முடித்தார் அ பாதகர்
#125
அப்பரிசு அ வினை முற்றி அவர் அகன்று ஏகிய பின்னர்
ஒப்பு_அரும் ஆழ் கடல் புக்க உறைப்பு உடை மெய் தொண்டர் தாமும்
எப்பரிசு ஆயினும் ஆக ஏத்துவன் எந்தையை என்று
செப்பிய வண் தமிழ்-தன்னால் சிவன் அஞ்சு_எழுத்தும் துதிப்பார்
#126
சொல் துணை வேதியன் என்னும் தூய் மொழி
நல் தமிழ்_மாலை ஆம் நமச்சிவாய என்று
அற்றம் முன் காக்கும் அஞ்சு_எழுத்தை அன்பொடு
பற்றி உணர்வினால் பதிகம் பாடினார்
#127
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமலரோன் முதல் அமரர் வாழ்த்துதற்கு
அரிய அஞ்சு_எழுத்தையும் அரசு போற்றிட
கரு நெடும் கடலினுள் கல் மிதந்ததே
#128
அ பெரும் கல்லும் அங்கு அரசு மேல் கொள
தெப்ப மாய் மிதத்தலில் செறிந்த பாசமும்
தப்பியது அதன் மிசை இருந்த தாவு_இல் சீர்
மெய் பெருந்தொண்டனார் விளங்கி தோன்றினார்
#129
இருவினை பாசமும் மலக்கல் ஆர்த்தலின்
வருபவ கடலில் வீழ் மாக்கள் ஏறிட
அருளும் மெய் அஞ்சு_எழுத்து அரசை இ கடல்
ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ
#130
அருள் நயந்து அஞ்சு_எழுத்து ஏத்த பெற்ற அ
கருணை நாவரசினை திரை கரங்களால்
தெருள் நெறி நீர்மையின் சிரத்தில் தாங்கிட
வருணனும் செய்தனன் முன்பு மா தவம்
#131
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரை
சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்தருள்வித்தனன்
பூம் திருப்பாதிரிப்புலியூர் பாங்கரில்
#132
அ திரு பதியினில் அணைந்த அன்பரை
மெய் தவ குழாம் எலாம் மேவி ஆர்த்து எழ
எ திசையினும் அர என்னும் ஓசை போல்
தத்து நீர் பெரும் கடல் தானும் ஆர்த்ததே
#133
தொழும் தகை நாவினுக்கு அரசும் தொண்டர் முன்
செழும் திருப்பாதிரிப்புலியூர் திங்கள் வெண்
கொழுந்து அணி சடையாரை கும்பிட்டு அன்புற
விழுந்து எழுந்து அருள் நெறி விளங்க பாடுவார்
#134
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆகி என எடுத்து
தோன்றா துணையாய் இருந்தனன்-தன் அடியோம்கட்கு என்று
வான் தாழ் புனல் கங்கை வாழ் சடையானை மற்று எ உயிர்க்கும்
சான்றாம் ஒருவனை தண் தமிழ்_மாலைகள் சாத்தினாரே
#135
மற்றும் இணையன வண் தமிழ்_மாலைகள் பாடி வைகி
வெற்றி மழ விடை வீரட்டர் பாதம் மிக நினைவால்
உற்றது ஓர் காதலின் அங்கு-நின்று ஏகி ஒன்னார் புரங்கள்
செற்றவர் வாழும் திருவதிகை பதி சென்று அடைவார்
#136
தேவர் பிரான் திருமாணிக்குழியும் தினைநகரும்
மேவினர் சென்று விரும்பிய சொல் மலர் கொண்டு இறைஞ்சி
பூ அலர் சோலை மணம் அடி புல்ல பொருள் மொழியின்
காவலர் செல்வ திரு கெடிலத்தை கடந்து அணைந்தார்
#137
வெம் சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகள் எல்லாம்
எஞ்ச வென்று ஏறிய இன் தமிழ் ஈசர் எழுந்தருள
மஞ்சு இவர் மாட திருவதிகை பதி வாணர் எல்லாம்
தம் செயல் பொங்க தழங்கு ஒலி மங்கலம் சாற்றல் உற்றார்
#138
மணி நெடும் தோரணம் வண் குலை பூகம் மடல் கதலி
இணையுற நாட்டி எழு நிலை கோபுரம் தெற்றி எங்கும்
தணிவு_இல் பெருகு ஒளி தாமங்கள் நாற்றி செம் சாந்து நீவி
அணி நகர் முன்னை அணி மேல் அணி செய்து அலங்கரித்தார்
#139
மன்னிய அன்பின் வள நகர் மாந்தர் வயங்கு இழையார்
இன்னிய நாதமும் ஏழ் இசை ஓசையும் எங்கும் விம்ம
பொன் இயல் சுண்ணமும் பூவும் பொரிகளும் தூவி எங்கும்
தொல் நகரின் புறம் சூழ்ந்து எதிர்கொண்டனர் தொண்டரையே
#140
தூய வெண் நீறு துதைந்த பொன் மேனியும் தாழ் வடமும்
நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகி
பாய்வது போல் அன்பு நீர் பொழி கண்ணும் பதிக செம் சொல்
மேய செம் வாயும் உடையார் புகுந்தனர் வீதி உள்ளே
#141
கண்டார்கள் கை தலை மேல் குவித்து இந்த கருணை கண்டால்
மிண்டு ஆய செம் கை அமண் கையர் தீங்கு விளைக்க செற்றம்
உண்டாயின வண்ணம் எவ்வண்ணம் என்று உரைப்பார்கள் பின்னும்
தொண்டு ஆண்டு கொண்ட பிரானை தொழுது துதித்தனரே
#142
இவ்வண்ணம் போல எனை பல மாக்கள் இயம்பி ஏத்த
மெய் வண்ண நீற்று ஒளி மேவும் குழாங்கள் விரவி செல்ல
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும் வந்து எய்தி அம் பவள
செவ் வண்ணர் கோயில் திரு வீரட்டானத்தை சேர்ந்தனரே
#143
உம்பர் தம் கோனை உடைய பிரானை உள் புக்கு இறைஞ்சி
நம்புறும் அன்பின் நயப்புறு காதலினால் திளைத்தே
எம்பெருமான்-தனை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தது என்று
தம் பரிவால் திருத்தாண்டக செந்தமிழ் சாற்றி வாழ்ந்தார்
#144
அரி அயனுக்கு அரியானை அடியவருக்கு எளியானை
விரி புனல் சூழ் திருவதிகை வீரட்டானத்து அமுதை
தெரிவு_அரிய பெருந்தன்மை திருநாவுக்கரசு மனம்
பரிவுறு செந்தமிழ் பாட்டு பல பாடி பணி செயும் நாள்
#145
புல் அறிவில் சமணர்க்கா பொல்லாங்கு புரிந்து ஒழுகும்
பல்லவனும் தன்னுடைய பழவினை பாசம் பறிய
அல்லல் ஒழிந்து அங்கு எய்தி ஆண்ட அரசினை பணிந்து
வல் அமணர்-தமை நீத்து மழ_விடையோன் தாள் அடைந்தான்
#146
வீடு அறியா சமணர் மொழி பொய் என்று மெய் உணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்-கண் கண்_நுதற்கு
பாடலிபுத்திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்து கொணர்ந்து குண பரவீச்சரம் எடுத்தான்
#147
இ நாளில் திருப்பணிகள் செய்கின்ற இன் தமிழுக்கு
மன்னான வாகீச திரு முனியும் மதி சடை மேல்
பன்னாகம் அணிந்தவர்-தம் பதி பலவும் சென்று இறைஞ்சி
சொல் நாம தமிழ் புனைந்து தொண்டு செய்வான் தொடர்ந்து எழுவார்
#148
திருவதிகை பதி மருங்கு திருவெண்ணெய்நல்லூரும்
அருளும் திரு ஆமாத்தூர் திருக்கோவலூர் முதலா
மருவு திருப்பதி பிறவும் வணங்கி வள தமிழ் பாடி
பெருகு விருப்புடன் விடையார் மகிழ் பெண்ணாகடம் அணைந்தார்
#149
கார் வளரும் மாடங்கள் கலந்த மறை ஒலி வளர்க்கும்
சீர் உடை அந்தணர் வாழும் செழும் பதியின் அகத்து எய்தி
வார் சடையார் மன்னு திரு தூங்கானை மாடத்தை
பார் பரவும் திரு முனிவர் பணிந்து ஏத்தி பரவினார்
#150
புன் நெறியாம் அமண் சமய தொடக்குண்டு போந்தவுடன்
தன்னுடனே உயிர்வாழ தரியேன் நான் தரிப்பதனுக்கு
என்னுடைய நாயக நின் இலச்சினை இட்டு அருள் என்று
பன்னு செழும் தமிழ்_மாலை முன் நின்று பாடுவார்
#151
பொன் ஆர்ந்த திருவடிக்கு என் விண்ணப்பம் என்று எடுத்து
முன் ஆகி எ பொருட்கும் முடிவு ஆகி நின்றானை
தன் ஆகத்து உமை பாகம் கொண்டானை சங்கரனை
நல் நாம திருவிருத்தம் நலம் சிறக்க பாடுதலும்
#152
நீடு திரு தூங்கானை மாடத்து நிலவுகின்ற
ஆடக மேரு சிலையான் அருளால் ஓர் சிவபூதம்
மாடு ஒருவர் அறியாமே வாகீசர் திரு தோளில்
சேடு உயர் மூ_இலை சூலம் சின விடையின் உடன் சாத்த
#153
ஆங்கு அவர்-தம் திரு தோளில் ஆர்ந்த திரு இலச்சினையை
தாம் கண்டு மனம் களித்து தம் பெருமான் அருள் நினைந்து
தூங்கு அருவி கண் பொழிய தொழுது விழுந்து ஆர்வத்தால்
ஓங்கிய சிந்தையர் ஆகி உய்ந்து ஒழிந்தேன் என எழுந்தார்
#154
தூங்கானை மாடத்து சுடர் கொழுந்தின் அடி பரவி
பாங்காக திருத்தொண்டு செய்து பயின்று அமரும் நாள்
பூம் கானம் மணம் கமழும் பொருவு_இல் திரு அர துறையும்
தேன் காவின் முகில் உறங்கும் திருமுதுகுன்றமும் பணிந்து
#155
வண் தமிழ் மென் மலர் மாலை புனைந்து அருளி மருங்கு உள்ள
தண் துறை நீர் பதிகளிலும் தனி விடையார் மேவி இடம்
கொண்டு அருளும் தானங்கள் கும்பிட்டு குண திசை மேல்
புண்டரிக தடம் சூழ்ந்த நிவா கரையே போதுவார்
#156
ஆனாத சீர் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வான்_ஆறு புடை பரக்கும் மலர் சடையார் அடி வணங்கி
ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள நினைந்து
தேன் ஆரும் மலர் சோலை திருப்புலியூர் மருங்கு அணைந்தார்
#157
நாவுக்கரசரும் இருவர்க்கு அரியவர் நடம் ஆடிய திரு எல்லை-பால்
மேவி தலம் உற மெய்யில் தொழுத பின் மேல்மேல் எழுதரும் விரைவோடும்
காவில் களி மயில் மகிழுற்று எதிர்எதிர் ஆட கடி கமழ் கமலம் சூழ்
வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார்
#158
முருகில் செறி இதழ் முளரி படுகரில் முது மேதிகள் புது மலர் மேயும்
அருகில் செறி வனம் என மிக்கு உயர் கழை அளவில் பெருகிட வளர் இக்கு
பெருகி புடை முதிர் தரளம் சொரிவன பெரியோர் அவர் திருவடிவை கண்டு
உருகி பரிவுறு புனல் கண் பொழிவன என முன்பு உள வயல் எங்கும்
#159
அறிவில் பெரியவர் அயல் நெல் பணை வயல் அவை பிற்படும் வகை அணைகின்றார்
பிறவி பகை நெறி விடுவீர் இருவினை பெருகி தொடர் பிணி உறு பாசம்
பறிவுற்றிட அணையு-மின் என்று இரு புடை பயில் சூழ் சினை மிசை குயில் கூவும்
செறிவில் பல தரு நிலையில் பொலிவுறு திரு நந்தன வனம் எதிர் கண்டார்
#160
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணைவுற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலை தலைநின்று உயர் தமிழ் இறையோராம்
இவர்-தம் திருவடிவு-அது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர்கின்றன வளர் சிறை மென் கிளியொடு சிறு பூவை
#161
அம் சொல் திருமறை அவர் முன் பகர்தலும் அவரும் தொழுது முன் அளிகூரும்
நெஞ்சில் பெருகிய மகிழ்வும் காதலும் நிறை அன்பொடும் உரை தடுமாற
செம் சொல் திருமறை மொழி அந்தணர் பயில் தில்லை திரு நகர் எல்லை-பால்
மஞ்சில் பொலி நெடு மதில் சூழ் குட திசை மணி வாயில் புறம் வந்துற்றார்
#162
அல்லல் பவம் அற அருளும் தவ முதல் அடியார் எதிர்கொள அவரோடும்
மல்லல் புனல் கமழ் மாடே வாயிலின் வழி புக்கு எதிர்தொழுது அணைவுற்றார்
கல்வி துறை பல வரு மா மறை முதல் கரை கண்டு உடையவர் கழல் பேணும்
செல்வ குடி நிறை நல் வைப்பிடை வளர் சிவமே நிலவிய திரு வீதி
#163
நவ மின் சுடர் மணி நெடு மாலையும் நறு மலர் மாலையும் நிறை திரு வீதி
புவனங்களின் முதல் இமையோர் தட முடி பொருந்திய மணி போகட்டி
பவனன் பணி செய வருணன் புனல் கொடு பணி மாறவும் அவை பழுதாம் என்று
எவரும் தொழுது எழும் அடியார் திரு அலகு இடுவார் குளிர் புனல் விடுவார்கள்
#164
மேல் அம் பரதலம் நிறையும் கொடிகளில் விரி வெம் கதிர் நுழைவது அரிதாகும்
கோலம் பெருகிய திரு வீதியை முறை குலவும் பெருமையர் பணிவுற்றே
ஞாலம் திகழ் திரு மறையின் பெருகு ஒலி நலமார் முனிவர்கள் துதியோடும்
ஓலம் பெருகிய நிலை ஏழ் கோபுரம் உற மெய் கொடு தொழுது உள் புக்கார்
#165
வளர் பொன் கனக மணி திரு மாளிகையினை வலம் வந்து அலமரு வரை நில்லா
அளவில் பெருகிய ஆர்வத்திடை எழும் அன்பின் கடல் நிறை உடல் எங்கும்
புளக செறி நிரை விரவ திரு மலி பொன் கோபுரம் அது புகுவார் முன்
களனில் பொலிவிடம் உடையார் நடம் நவில் கனக பொது எதிர் கண்ணுற்றார்
#166
நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளி நிறை அம்பலம் நினைவுற நேரே
கூடும் படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெற வரு நிலை கூட
தேடும் பிரமனும் மாலும் தேவரும் முதலாம் யோனிகள் தெளிவு ஒன்றா
ஆடும் கழல் புரி அமுத திரு நடம் ஆரா வகை தொழுது ஆர்கின்றார்
#167
கையும் தலை மிசை புனை அஞ்சலியன கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும் உடன் உருகும் பரிவின பேறு எய்தும்
மெய்யும் தரை மிசை விழும் முன்பு எழுதரும் மின் தாழ் சடையொடு
ஐயன் திரு நடம் எதிர் கும்பிடும் அவர் ஆர்வம் பெருகுதல் அளவு இன்றால்
#168
இ தன்மையர் பல முறையும் தொழுது எழ என்று எய்தினை என மன்றாடும்
அத்தன் திருவருள் பொழியும் கருணையின் அருள் பெற்றிட வரும் ஆனந்தம்
மெய் தன்மையினில் விருத்த திருமொழி பாடி பின்னையும் மேல்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு திரு நேரிசை மொழி பகர்கின்றார்
#169
பத்தனாய் பாடமாட்டேன் என்று முன் எடுத்து பண்ணால்
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று
இ திறம் போற்றி நின்றே இன் தமிழ்_மாலை பாடி
கை திருத்தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்
#170
நீடிய மணியின் சோதி நிறை திரு முன்றின் மாடும்
ஆடு உயர் கொடி சூழ் பொன் தேர் அணி திரு வீதி உள்ளும்
கூடிய பணிகள் செய்து கும்பிடும் தொழிலர் ஆகி
பாடிய புனித வாக்கின் பணிகளும் பயில செய்வார்
#171
அருள் பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம் பாலிக்கும் என்னும்
திருக்குறுந்தொகைகள் பாடி திரு உழவாரம் கொண்டு
பெருத்து எழு காதலோடும் பெரும் திருத்தொண்டு செய்து
விருப்புறு மேனி கண்ணீர் வெண் நீற்று வண்டல் ஆட
#172
மேவிய பணிகள் செய்து விளங்கும் நாள் வேட்களத்து
சே உயர் கொடியார்-தம்மை சென்று முன் வணங்கி பாடி
காவியம் கண்டர் மன்னும் திருக்கழி பாலை-தன்னில்
நாவினுக்கு_அரசர் சென்று நண்ணினார் மண்ணோர் வாழ
#173
சின விடை ஏறு உகைத்து ஏறும் மணவாள நம்பி கழல் சென்று தாழ்ந்து
வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தான் அவனே என்கின்றாள் என்று
அனைய திருப்பதிகம் உடன் அன்புறு வண் தமிழ் பாடி அங்கு வைகி
நினைவு அரியார்-தமை போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார்
#174
மனை படப்பில் கடல் கொழுந்து வளை சொரியும் கழி பாலை மழுங்கு நீங்கி
நனை சினை மென் குளிர் ஞாழல் பொழில் ஊடு வழி கொண்டு நண்ணும் போதில்
நினைப்பவர் தம் மனம் கோயில் கொண்டு அருளும் அம்பலத்து நிருத்தனாரை
தினைத்தனையாம் பொழுது மறந்து உய்வேனோ என பாடி தில்லை சார்ந்தார்
#175
அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்-தம் சிந்தை
பிரியாத பெரிய திரு தாண்டக செந்தமிழ் பாடி பிறங்கு சோதி
விரியா நின்று எ உலகும் விளங்கிய பொன் அம்பலத்து மேவி ஆடல்
புரியா நின்றவர்-தம்மை பணிந்து தமிழால் பின்னும் போற்றல் செய்வார்
#176
செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் எனும் சிறந்த வாய்மை
அரும் சொல் வள தமிழ்_மாலை அதிசயம் ஆம்படி பாடி அன்பு சூழ்ந்த
நெஞ்சு உருக பொழி புனல்வார் கண் இணையும் பரவிய சொல் நிறைந்த வாயும்
தம் செயலின் ஒழியாத திருப்பணியும் மாறாது சாரும் நாளில்
#177
கடையுகத்தில் ஆழியின் மேல் மிதந்த கழுமலத்தின் இருந்த செம் கண்
விடை உகைத்தார் திருவருளால் வெற்பரையன் பாவை திரு முலை பாலோடும்
அடைய நிறை சிவம் பெருக வளர் ஞானம் குழைத்து ஊட்ட அமுது செய்த
உடை மறை பிள்ளையார் திரு வார்த்தை அடியார்கள் உரைப்ப கேட்டார்
#178
ஆழி விடம் உண்டவரை அம்மை திரு பால் அமுதம் உண்ட போதே
ஏழ் இசை வண் தமிழ்_மாலை இவன் எம்மான் என காட்டி இயம்ப வல்ல
காழி வரும் பெருந்தகை சீர் கேட்டலுமே அதிசயம் ஆம் காதல் கூர
வாழி அவர் மலர் கழல்கள் வணங்குவதற்கு மனத்து எழுந்த விருப்பு வாய்ந்த
#179
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற கழல் வணங்கி அருள் முன் பெற்று
பொய் பிறவி பிணி ஓட்டும் திரு வீதி புரண்டு வலம்கொண்டு போந்தே
எ புவனங்களும் நிறைந்த திருப்பதியின் எல்லையினை இறைஞ்சி ஏத்தி
செப்ப_அரிய பெருமையினார் திருநாரையூர் பணிந்து பாடி செல்வார்
#180
தொண்டர் குழாம் புடைசூழ தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம்
கண்டவர் தம் மனம் கசிந்து கரைந்து உருகும் கருணை புறம் பொழிந்து காட்ட
தெண் திரை வாய் கல் மிதப்பில் உகைத்து ஏறும் திருநாவுக்கரசர் தாமும்
வண் தமிழால் எழுது மறை மொழிந்த பிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்
#181
நீண்ட வரை வில்லியார் வெம் சூலை மடுத்து அருளி நேரே முன்னாள்
ஆண்ட அரசு எழுந்தருள கேட்டு அருளி ஆளுடையபிள்ளையாரும்
காண் தகைய பெரு விருப்பு கைம் மிக்க திரு உள்ள கருத்தினோடு
மூண்ட அருள் மனத்து அன்பர் புடைசூழ எழுந்தருளி முன்னே வந்தார்
#182
தொழுது அணை உற்று ஆண்ட அரசு அன்பு உருக தொண்டர் குழாத்திடையே சென்று
பழுது_இல் பெரும் காதலுடன் அடி பணிய பணிந்தவர்-தம் கரங்கள் பற்றி
எழுத_அரிய மலர் கையால் எடுத்து இறைஞ்சி விடையின் மேல் வருவார்-தம்மை
அழுது அழைத்து கொண்டவர்-தாம் அப்பரே என அவரும் அடியேன் என்றார்
#183
அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த
செம் பவள வாய் பிள்ளை திருநாவுக்கரசர் என சிறந்த சீர்த்தி
எம் பெரு மக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
உம்பர்களும் போற்றி இசைப்ப சிவம் பெருகும் ஒலி நிறைத்தார் உலகம் எல்லாம்
#184
பிள்ளையார் கழல் வணங்க பெற்றேன் என்று அரசு உவப்ப பெருகு ஞான
வள்ளலார் வாகீசர்-தமை வணங்க பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க
உள்ளம் நிறை காதலினால் ஒருவர் ஒருவரில் கலந்த உண்மையோடும்
வெள்ள நீர் திருத்தோணி வீற்றிருந்தார் கழல் வணங்கும் விருப்பின் மிக்கார்
#185
அருள் பெருகு தனி கடலும் உலகுக்கு எல்லாம் அன்பு செறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருள் சமய முதல் சைவ நெறி தான் பெற்ற புண்ணிய கண் இரண்டு எனவும் புவனம் உய்ய
இருள் கடு உண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்-தன் திருவருளும் எனவும் கூடி
தெருள் கலை ஞான கன்றும் அரசும் சென்று செம் சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே
#186
பண் பயில் வண்டு அறை சோலை சூழும் காழி பரமர் திரு கோபுரத்தை பணிந்து உள் புக்கு
விண் பணிய ஓங்கு பெரு விமானம்-தன்னை வலம்கொண்டு தொழுது விழுந்த எல்லை
சண்பை வரு பிள்ளையார் அப்பர் உங்கள் தம்பிரானாரை நீர் பாடீர் என்ன
கண் பயிலும் புனல் பொழிய அரசும் வாய்மை கலை பயிலும் மொழி பொழிய கசிந்து பாடி
#187
பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்று
பரிவுறு செந்தமிழ்_மாலை பத்தியோடும் பார் கொண்டு மூடி எனும் பதிகம் போற்றி
அரிய வகை புறம் போந்து பிள்ளையார் திரு மடத்தில் எழுந்தருளி அமுது செய்து
மருவிய நண்புறு கேண்மை அற்றை நாள் போல் வளர்ந்து ஓங்க உடன் பல நாள் வைகும் நாளில்
#188
அ தன்மையினில் அரசும் பிள்ளையாரும் அளவளாவிய மகிழ்ச்சி அளவு_இலாத
சித்த நெகிழ்ச்சியினோடு செல்லும் நாளில் திருநாவுக்கரசு திரு உள்ளம்-தன்னில்
மை தழையும் மணி மிடற்றர் பொன்னி மன்னிய தானங்கள் எல்லாம் வணங்கி போற்ற
மெய்த்து எழுந்த பெரும் காதல் பிள்ளையார்க்கு விளம்புதலும் அவரும் அது மேவி நேர்வார்
#189
ஆண்ட அரசு எழுந்தருள கோலக்காவை அவரோடும் சென்று இறைஞ்சி அன்புகொண்டு
மீண்ட அருளினார் அவரும் விடைகொண்டு இப்பால் வேத நாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடு திருக்குறுக்கை திருநின்றியூரும்
காண் தகைய நனி பள்ளி முதலா நண்ணி கண்_நுதலார் கழல் தொழுது கலந்து செல்வார்
#190
மேவு புனல் பொன்னி இரு கரையும் சார்ந்து விடை உயர்த்தார் திரு செம்பொன் பள்ளி பாடி
கா உயரும் மயிலாடுதுறை நீள் பொன்னி கரை துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி
பாவுறு செந்தமிழ்_மாலை பாடி போற்றி பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே
ஆவுறும் அஞ்சு ஆடுவார் கோடி காவில் அணைந்து பணைந்து ஆவடுதண்துறையை சார்ந்தார்
#191
ஆவடுதண்துறையாரை அடைந்து உய்ந்தேன் என்ற அளவில் திரு தாண்டகம் முன் அருளி செய்து
மேவு திருக்குறுந்தொகை நேர் இசையும் சந்த விருத்தங்கள் ஆனவையும் வேறுவேறு
பாவலர் செந்தமிழ்_தொடையால் பள்ளி தாமம் பல சாத்தி மிக்கு எழுந்த பரிவின் ஓடும்
பூ வயலத்தவர் பரவ பல நாள் தங்கி புரிவுறு கை தொண்டு போற்றி செய்வார்
#192
எறி புனல் பொன் மணி சிதறும் திரை நீர் பொன்னிஇடை மருதை சென்று எய்தி அன்பினோடு
மறி விரவு கரத்தாரை வணங்கி வைகி வண் தமிழ் பா_மாலை பல மகிழ சாத்தி
பொறி அரவம் புனைந்தாரை திருநாகேச்சுரத்து போற்றி அரும் தமிழ்_மாலை புனைந்து போந்து
செறி விரை நல் மலர் சோலை பழையாறு எய்தி திருச்சத்தி முற்றத்தில் சென்று சேர்ந்தார்
#193
சென்று சேர்ந்து திரு சத்தி முற்றத்து இருந்த சிவ கொழுந்தை
குன்ற_மகள்-தன் மன காதல் குலவும் பூசை கொண்டு அருளும்
என்றும் இனிய பெருமானை இறைஞ்சி இயல்பில் திருப்பணிகள்
முன்றில் அணைந்து செய்து தமிழ் மொழி மாலைகளும் சாத்துவார்
#194
கோவாய் முடுகி என்று எடுத்து கூற்றம் வந்து குமைப்பதன் முன்
பூவார் அடிகள் என்று அலை மேல் பொறித்து வைப்பாய் என புகன்று
நாவார் பதிகம் பாடுதலும் நாதன்-தானும் நல்லூரில்
வா வா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர்
#195
நன்மை பெருக அருள் நெறியே வந்து அணைந்து நல்லூரின்
மன்னு திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் பொழுதில்
உன்னுடைய நினைப்பு-அதனை முடிக்கின்றோம் என்று அவர்-தம்
சென்னி மிசை பாத மலர் சூட்டினான் சிவபெருமான்
#196
நனைந்து அனைய திருவடி என் தலை மேல் வைத்தார் என்று
புனைந்த திருத்தாண்டகத்தால் போற்றி இசைத்து புனிதர் அருள்
நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து ஒழியாத
தனம் பெரிதும் பெற்று வந்த வறியோன் போல் மனம் தழைத்தார்
#197
நாவுக்கு மன்னர் திருநல்லூரில் நம்பர்-பால்
மேவுற்ற திருப்பணிகள் மேவுற நாளும் செய்து
பாவுற்ற தமிழ்_மாலை பாடி பணிந்து ஏத்தி
தேவுற்ற திருத்தொண்டு செய்து ஒழுகி செல்லும் நாள்
#198
கருகாவூர் முதலாக கண்_நுதலோன் அமர்ந்து அருளும்
திருவாவூர் திருப்பாலைத்துறை பிறவும் சென்று இறைஞ்சி
பெருகு ஆர்வ திருத்தொண்டு செய்து பெரும் திருநல்லூர்
ஒருக்காலும் பிரியாதே உள் உருகி பணிகின்றார்
#199
ஆளுடைய நாயகன்-தன் அருள் பெற்று அங்கு அகன்று போய்
வாளை பாய் புனல் பழன திருப்பழனம் மருங்கு அணைந்து
காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணி கலன் பூண்டு
நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார்
#200
அ பதியை சூழ்ந்த திருப்பதியில் அரனார் மகிழும்
ஒப்பு அரிய தானங்கள் உள் உருகி பணிந்து அணைவார்
மெய்ப்பொருள் தேர் நாவினுக்கு வேந்தர் தாம் மேவினார்
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகள் ஊர் திங்களூர்
#201
அந்தணரின் மேம்பட்ட அப்பூதிஅடிகளார்
தம் தனயருடன் சாலை கூவல் குளம் தரு தண்ணீர்
பந்தர் பல ஆண்ட அரசு எனும் பெயரால் பண்ணினமை
வந்து அணைந்த வாகீசர் கேட்டு அவர்-தம் மனை நண்ண
#202
மற்றவரும் மனம் மகிழ்ந்து மனைவியார் மைந்தர் பெரும்
சுற்றமுடன் களிகூர தொழுது எழுந்து சூழ்ந்து மொழி
கொற்றவரை அமுது செய குறை கொள்வார் இறைகொள்ள
பெற்ற பெரும் தவ தொண்டர் திரு உள்ளம் பெற பெற்றார்
#203
காண் தகைமை இன்றியும் முன் கலந்த பெரும் கேண்மையினார்
பூண்ட பெரும் காதலுடன் போனகமும் கறி அமுதும்
வேண்டுவன வெவ்வேறு விதங்கள் பெற விருப்பினால்
ஆண்ட அரசு அமுது செய திரு அமுதாம் படி அமைத்து
#204
திருநாவுக்கரசு அமுது செய்து அருள மற்று அவர்-தம்
பெரு நாமம் சாத்திய அ பிள்ளை-தனை அழைத்து அன்பு
தரு ஞான திருமறையோர் தண்டலையின் வண் கதலி
குரு நாள குருத்து அரிந்து கொண்டு வர தனிவிட்டார்
#205
ஆங்கு அவனும் விரைந்து எய்தி அ மருங்கு தாழாதே
பூம் கதலி குருத்து அரிய புகும் அளவில் ஒரு நாகம்
தீங்கு இழைக்க அது பேணான் திரு அமுது செய்து அருள
ஓங்கு கதலி குருத்து கொண்டு ஒல்லை வந்து அணைந்தான்
#206
தீய விடம் தலை கொள்ள தெருமந்து செழும் குருத்தை
தாயர் கரத்தினில் நீட்டி தளர்ந்து தனை தழல் நாகம்
மேயபடி உரை செய்யான் விழ கண்டு கெட்டு ஒழிந்தோம்
தூயவர் இங்கு அமுது செய தொடங்கார் என்று அது ஒளித்தார்
#207
தம் புதல்வன் சவம் மறைத்து தடுமாற்றம் இலர் ஆகி
எம்பெருமான் அமுது செய வேண்டும் என வந்து இறைஞ்ச
உம்பர் பிரான் திருத்தொண்டர் உள்ளத்தில் தடுமாற்றம்
நம்பர் திருவருளாலே அறிந்து அருளி நவை தீர்ப்பார்
#208
அன்று அவர்கள் மறைத்த அதனுக்கு அளவு இறந்த கருணையராய்
கொன்றை நறும் சடையார்-தம் கோயிலின் முன் கொணர்வித்தே
ஒன்று-கொலாம் என பதிகம் எடுத்து உடையான் சீர் பாட
பின்றை விடம் போய் நீங்கி பிள்ளை உணர்ந்து எழுந்து இருந்தான்
#209
அரும் தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது
இருந்ததற்கு தளர்வு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க
வருந்தும் அவர் மனை புகுந்து வாகீச திரு முனிவர்
விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள்
#210
திங்களூர்-தனில்-நின்றும் திருமறையோர் பின் செல்ல
பைம் கண் விடை தனி பாகர் திருப்பழன பதி புகுந்து
தங்கு பெரும் காதலொடும் தம் பெருமான் கழல் சார்ந்து
பொங்கிய அன்புற வணங்கி முன் நின்று போற்றி இசைப்பார்
#211
புடை மாலை மதி கண்ணி புரி சடையார் பொன் கழல் கீழ்
அடை மாலை சீலம் உடை அப்பூதிஅடிகள்-தமை
நடை மாண சிறப்பித்து நன்மை புரி தீம் தமிழின்
தொடை மாலை திருப்பதிக சொல்_மாலை பாடினார்
#212
எழும் பணியும் இளம் பிறையும் அணிந்தவரை எ மருங்கும்
தொழும் பணி மேற்கொண்டு அருளி திரு சோற்று துறை முதலா
தழும்புறு கேண்மையில் நண்ணி தானங்கள் பல பாடி
செம்பழனத்து இறை கோயில் திருத்தொண்டு செய்து இருந்தார்
#213
சால நாள் அங்கு அமர்ந்து தம் தலை மேல் தாள் வைத்த
ஆலம் ஆர் மணி_மிடற்றார் அணி மலர் சேவடி நினைந்து
சேல் உலாம் புனல் பொன்னி தென் கரை ஏறி சென்று
கோல நீள் மணி மாட திருநல்லூர் குறுகினார்
#214
அங்கு அணைந்து தம் பெருமான் அடி வணங்கி ஆராது
பொங்கிய அன்பொடு திளைத்து போற்றி இசைத்து பணி செயும் நாள்
தங்கு பெரும் காதலினால் தாமரை மேல் விரிஞ்சனொடு
செம் கண் மால் அறிவு_அரியார் திருவாரூர் தொழ நினைந்தார்
#215
நல்லூரில் நம்பர் அருள் பெற்று போய் பழையாறை
பல் ஊர் வெண்தலை கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து
சொல் ஊர் வண் தமிழ் பாடி வலம் சுழியை தொழுது ஏத்தி
அல் ஊர் வெண் பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி
#216
நாலூர் தென் திருச்சேறை குடவாயில் நறையூர் சேர்
பாலூரும் இன் மொழியாள் பாகனார் கழல் பரவி
மேல் ஊர்தி விடை கொடியார் மேவும் இடம் பல பாடி
சேலூர் தண் பணை சூழ்ந்த தென் திருவாஞ்சியம் அணைந்தார்
#217
பெரு வாச மலர் சோலை பெரு வேளூர் பணிந்து ஏத்தி
முருகாரும் மலர் கொன்றை முதல்வனார் பதி பிறவும்
திருவாரும் விளமருடன் சென்று இறைஞ்சி வாகீசர்
மருவாரூர் எரித்தவர் தம் திருவாரூர் வந்து அடைந்தார்
#218
ஆண்ட அரசு எழுந்தருள ஆரூரில் அன்பர்கள்-தாம்
நீண்ட சடை முடியார் பால் நிறைந்த அருள் பெற்றுடையார்
காண் தகு மாளிகை மாடம் கவின் சிறந்து ஓங்கிட எங்கும்
சேண் திகழ் வீதிகள் பொலிய திரு மலி மங்கலம் செய்தார்
#219
வல் அமண் குண்டர் தம் மாயை கடந்து மறி கடலில்
கல்லே மிதப்பு ஆக போந்தவர் வந்தார் எனும் களிப்பால்
எல்லை_இல் தொண்டர் எயில் புறம் சென்று எதிர்கொண்ட போது
சொல்லின் அரசர் வணங்கி தொழுது உரைசெய்து அணைவார்
#220
பற்று ஒன்று இலா அரும் பாதகர் ஆகும் அமணர்-தம்-பால்
உற்ற பிணி ஒழிந்து உய்ய போந்தேன் பெறல் ஆவது ஒன்றே
புற்றிடம் கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியம் என்று
அற்ற உணர்வொடும் ஆரூர் திருவீதி உள் அணைந்தார்
#221
சூழும் திருத்தொண்டர் தம்முடன் தோரண வாயில் நண்ணி
வாழி திரு நெடும் தேவாசிரியன் முன் வந்து இறைஞ்சி
ஆழி வரை திரு மாளிகை வாயில் அவை புகுந்து
நீள் சுடர் மா மணி புற்று உகந்தாரை நேர் கண்டு கொண்டார்
#222
கண்டு தொழுது விழுந்து கர சரண் ஆதி அங்கம்
கொண்ட புளகங்களாக எழுந்து அன்பு கூர கண்கள்
தண் துளி மாரி பொழிய திருமூலட்டானர் தம்மை
புண்டரிக கழல் போற்றி திருத்தாண்டகம் புனைந்து
#223
காண்டலே கருத்தாய் நினைந்து என்னும் கலை பதிகம்
தூண்டா விளக்கு அன்ன சோதி முன் நின்று துதித்து உருகி
ஈண்டு மணி கோயில் சூழ வலம் செய்து இறைஞ்சி அன்பு
பூண்ட மனத்தொடு நீள் திரு வாயில் புறத்து அணைந்தார்
#224
செய்ய மா மணி ஒளி சூழ் திரு முன்றின் முன் தேவ ஆசிரியன் சார்ந்து
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூராரை
கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேன் என்று
எய்து அரிய கையறவால் திருப்பதிகம் அருள்செய்து அங்கு இருந்தார் அன்றே
#225
மார்பு ஆர பொழி கண்ணீர் மழை வாரும் திருவடிவும் மதுர வாக்கில்
சேர்வு ஆகும் திரு வாயில் தீம் தமிழின் மாலைகளும் செம்பொன் தாளே
சார்வான திரு மனமும் உழவார தனி படையும் தாமும் ஆகி
பார் வாழ திரு வீதி பணி செய்து பணிந்து ஏத்தி பரவி செல்வார்
#226
நீடு புகழ் திருவாரூர் நிலவு மணி புற்றிடம் கொள் நிருத்தர்-தம்மை
கூடிய அன்பொடு காலங்களில் அணைந்து கும்பிட்டு கோது_இல் வாய்மை
பாடு இளம் பூதத்தினான் எனும் பதிகம் முதலான பலவும் பாடி
நாடிய ஆர்வம் பெருக நைந்து மனம் கரைந்து உருகி நயந்து செல்வார்
#227
நான்_மறை நூல் பெருமை நமிநந்திஅடிகள் திருத்தொண்டின் நன்மை
பான்மை நிலையால் அவரை பரமர் திருவிருத்தத்துள் வைத்து பாடி
தேன் மருவும் கொன்றையார் திருவாரூர் அரன் நெறியில் நிகழும் தன்மை
ஆன திறமும் போற்றி அணி வீதி பணி செய்து அங்கு அமரும் நாளில்
#228
நீர் ஆரும் சடை முடியார் நிலவு திரு வலி வலமும் நினைந்து சென்று
வார் ஆரும் முலை மங்கை உமை பங்கர் கழல் பணிந்து மகிழ்ந்து பாடி
கார் ஆரும் கறை_கண்டர் கீழ்வேளூர் கன்றாப்பூர் கலந்து பாடி
ஆராத காதலினால் திருவாரூர்-தனில் மீண்டும் அணைந்தார் அன்றே
#229
மேவு திருவாதிரை நாள் வீதிவிடங்கப்பெருமாள் பவனி-தன்னில்
தேவருடன் முனிவர்கள் முன் சேவிக்கும் அடியார்களுடன் சேவித்து
மூவுலகும் களிகூர வரும் பெருமை முறைமை எலாம் கண்டு போற்றி
நாவினுக்கு தனி அரசர் நயக்கு நாள் நம்பர் திருவருளினாலே
#230
திருப்புகலூர் அமர்ந்து அருளும் சிவபெருமான் சேவடிகள் கும்பிட்டு ஏத்தும்
விருப்பு உடைய உள்ளத்து மேவி எழும் காதல் புரி வேட்கை கூர
ஒருப்படுவார் திருவாரூர் ஒருவாறு தொழுது அகன்று அங்கு உள்ளம் வைத்து
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பதி பிறவும் பணிந்து போந்தார்
#231
அந்நாளில் ஆளுடையபிள்ளையார் திருப்புகலி அதன்-கண்-நின்றும்
பன்னாக பூண் அணிவார் பயின்ற திருப்பதி பலவும் பணிந்து செல்வார்
புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி
மின் ஆரும் புரி முந்நூல் முருகனார் திருமடத்தில் மேவும் காளை
#232
ஆண்ட அரசு எழுந்தருளி அணி ஆரூர் மணி புற்றில் அமர்ந்து வாழும்
நீண்ட சுடர் மா மணியை கும்பிட்டு நீடு திருப்புகலூர் நோக்கி
மீண்டு அருளினார் என்று கேட்டு அருளி எதிர்கொள்ளும் விருப்பினோடும்
ஈண்டு பெருந்தொண்டர் குழாம் புடைசூழ எழுந்தருளி எதிரே சென்றார்
#233
கரண்டம் மலி தடம் பொய்கை காழியர் கோன் எதிர் அணையும் காதல் கேட்டு
வரன்று மணி புனல் புகலூர் நோக்கி வரும் வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டு வரும் திருநீற்று தொண்டர் குழாம் இரு திறமும் சேர்ந்த போதில்
இரண்டு நிலவின் கடல்கள் ஒன்று ஆகி அணைந்த போல் இசைந்த அன்றே
#234
திருநாவுக்கரசர் எதிர் சென்று இறைஞ்ச சிரபுரத்து தெய்வ வாய்மை
பெரு ஞானசம்பந்த பிள்ளையார் எதிர்வணங்கி அப்பரே நீர்
வரு நாளில் திருவாரூர் நிகழ் பெருமை வகுத்து உரைப்பீர் என்று கூற
அரு நாமத்து அஞ்சு_எழுத்தும் பயில் வாய்மை அவரும் எதிர் அருளி செய்தார்
#235
சித்தம் நிலாவும் தென் திருவாரூர் நகர் ஆளும்
மை தழை கண்டர் ஆதிரை நாளின் மகிழ் செல்வம்
இ தகைமைத்து என்று என் மொழிகேன் என்று அருள்செய்தார்
முத்து விதான மணி பொன் கவரி மொழி மாலை
#236
அ மொழி மாலை செந்தமிழ் கேளா அணி சண்பை
மைம் மலர் கண்டத்து அண்டர் பிரானார் மகனாரும்
கொய்ம் மலர் வாவி தென் திருவாரூர் கும்பிட்டே
உம்முடன் வந்து இங்கு உடன் அமர்வேன் என்று உரை செய்தார்
#237
மா மதில் ஆரூர் மன்னரை அங்கு வணங்க செம்
தாமரை ஓடை சண்பையர் நாதன் தான் ஏக
நாமரு சொல்லின் நாதரும் ஆர்வத்தொடு புக்கார்
பூ மலர் வாசம் தண் பணை சூழும் புகலூரில்
#238
அ திரு மூதூர் மேவிய நாவுக்கரசும் தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளி வெள்ளம்
மொய்த்து இழி தாரை கண் பொழி நீர் மெய் முழுது ஆர
பை தலை நாக பூண் அணிவாரை பணிவுற்றார்
#239
தேவர் பிரானை தென் புகலூர் மன்னிய தேனை
பா இயல் மாலை செந்தமிழ் பாடி பரிவோடு
மேவிய காலம்-தோறும் விருப்பில் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி செய்து அங்கு உறைகின்றார்
#240
சீர் தரு செங்காட்டம் குடி நீடும் திருநள்ளாறு
ஆர் தரு சோலை சூழ் தரு சாந்தை அயவந்தி
வார் திகழ் மென் முலையான் ஒரு பாகன் திருமருகல்
ஏர் தரும் அன்பால் சென்று வணங்கி இன்புற்றார்
#241
அப்படி சின்னாள் சென்ற பின் ஆரூர் நகர் ஆளும்
துப்பு உறழ் வேணி கண்_நுதலாரை தொழுது இப்பால்
மெய்ப்பொருள் ஞானம் பெற்றவர் வேணுபுரத்து எங்கள்
பொன் புரி முந்நூல் மார்பரும் வந்தார் புகலூரில்
#242
பிள்ளையார் எழுந்தருள பெரு விருப்பால் வாகீசர்
உள்ளம் மகிழ்ந்து எதிர்கொண்டு அங்கு உடன் உறையும் நாளின்-கண்
வள்ளலார் சிறுத்தொண்டர் மற்று அவர்-பால் எழுந்தருள
எள் அரும் சீர் நீலநக்கர் தாமும் எழுந்தருளினார்
#243
ஆங்கு அணையும் அவர்களுடன் அ பதியில் அந்தணராம்
ஓங்கு புகழ் முருகனார் திருமடத்தில் உடனாக
பாங்கில் வரும் சீர் அடியார் பலரும் உடன் பயில் கேண்மை
நீங்க அரிய திருத்தொண்டின் நிலை உணர்ந்து நிகழ்கின்றார்
#244
திருப்பதிக செழும் தமிழின் திறம் போற்றி மகிழ்வுற்று
பொருப்பு அரையன் மட பாவை இட பாகர் பொன் தாளில்
விருப்பு உடைய திருத்தொண்டர் பெருமையினை விரித்து உரைத்து அங்கு
ஒருப்படும் சிந்தையினார்கள் உடன் உறைவின் பயன் பெற்றார்
#245
அ நாளில் தமக்கு ஏற்ற திருத்தொண்டின் நெறி ஆற்ற
மின் ஆர் செம் சடை அண்ணல் மேவும் பதி எனை பலவும்
முன்னாக சென்று ஏத்தி முதல்வன் தாள் தொழுவதற்கு
பொன் ஆரும் மணி மாட பூம்புகலூர் தொழுது அகன்றார்
#246
திருநீலநக்கஅடிகள் சிறுத்தொண்டர் முருகனார்
பெரு நீர்மை அடியார்கள் பிறரும் விடைகொண்டு ஏக
ஒரு நீர்மை மனத்து உடைய பிள்ளையாருடன் அரசும்
வரும் சீர் செம் சடை கரந்தார் திருவம்பர் வணங்கினார்
#247
செம் குமுத மலர் வாவி திருக்கடவூர் அணைந்து அருளி
பொங்கிய வெம் கூற்று அடர்த்த பொன் அடிகள் தொழுது ஏத்தி
குங்குலியக்கலயனார் திருமடத்தில் குறை அறுப்ப
அங்கு அவர்-பால் சிவனடியாருடன் அமுது செய்தார்கள்
#248
சீர் மன்னும் திருக்கடவூர் திருமயானமும் வணங்கி
ஏர் மன்னும் இன்னிசைப்பா பல பாடி இனிது அமர்ந்து
கார் மன்னும் கறை_கண்டர் கழல் இணைகள் தொழுது அகன்று
தேர் மன்னும் மணி வீதி திருவாக்கூர் சென்று அணைந்தார்
#249
சார்ந்தார் தம் புகல் இடத்தை தான் தோன்றி மாடத்து
கூர்ந்து ஆர்வமுற பணிந்து கோது_இல் தமிழ்_தொடை புனைந்து
வார்த்து ஆடும் சடையார்-தம் பதி பலவும் வணங்கி உடன்
சேர்ந்தார்கள் தம் பெருமான் திருவீழிமிழலையினை
#250
வீழிமிழலை வந்து அணைய மேவும் நாவுக்கரசினையும்
காழி ஞான பிள்ளையையும் கலந்த உள்ள காதலினால்
ஆழி வலவன் அறியாத அடியார் அடியார் அவர்களுடன்
வாழி மறையோர் எதிர்கொண்டு வணங்க வணங்கி உள் புக்கார்
#251
மாட வீதி அலங்கரித்து மறையோர் வாயின் மணி விளக்கு
நீடு கதலி தழை பூதம் நிரைத்து நிறை பொன் குடம் எடுத்து
பீடு பெருகும் வாகீசர் பிள்ளையாரும் தொண்டர்களும்
கூட மகிழ்ந்து விண் இழிந்த கோயில் வாயில் சென்று அணைந்தார்
#252
சென்று உள் புகுந்து திருவீழிமிழலை அமர்ந்த செம் கனக
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் வலமா வந்து திரு
முன்றில் வணங்கி முன் எய்தி முக்கண் செக்கர் சடை மவுலி
வென்றி விடையார் சேவடி கீழ் விழுந்தார் எழுந்தார் விம்மினார்
#253
கைகள் குவித்து கழல் போற்றி கலந்த அன்பு கரைந்து உருக
மெய்யில் வழியும் கண் அருவி விரவ பரவும் சொல்_மாலை
செய்ய சடையார்-தமை சேரார் தீங்கு நெறி சேர்கின்றார் என்று
உய்யும் நெறி தாண்டகம் மொழிந்து அங்கு ஒழியா காதல் சிறந்து ஓங்க
#254
முன்னாள் அயனும் திருமாலும் முடிவும் முதலும் காணாத
பொன் ஆர் மேனி மணி வெற்பை பூ நீர் மிழலையினில் போற்றி
பல் நாள் பிரியா நிலைமையினால் பயில கும்பிட்டு இருப்பாராய்
அந்நாள் மறையோர் திருப்பதியில் இருந்தார் மெய்ம்மை அரும் தவர்கள்
#255
சீரின் விளங்கும் திருத்தொண்டர் இருந்து சில நாள் சென்று அதன் பின்
மாரி சுருங்கி வளம் பொன்னி நதியும் பருவம் மாறுதலும்
நீரின் இயன்ற உணவு அருகி நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம்
பாரின் மலிந்த இலம்பாட்டில் படர் கூர் வறுமை பரந்ததால்
#256
வையம் எங்கும் வற்கடம் ஆய் செல்ல உலகோர் வருத்தமுற
நையும் நாளில் பிள்ளையார்-தமக்கும் நாவுக்கரசருக்கும்
கையில் மானும் மழுவும் உடன் காண கனவில் எழுந்தருளி
செய்ய சடையார் திருவீழிமிழலை உடையார் அருள்செய்வார்
#257
கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டம் உறீர் எனினும்
ஏல உம்மை வழிபடுவார்க்கு அளிக்க அளிக்கின்றோம் என்று
கோலம் காண எழுந்தருளி குலவும் பெருமை இருவர்க்கும்
ஞாலம் அறிய படிக்காசு வைத்தார் மிழலை நாயகனார்
#258
விண்ணின்-நின்று இழிந்த விமானத்தின் கிழக்கும் மேற்கும் பீடத்தில்
அண்ணல் புகலி ஆண்தகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும்
நண்ணும் நாள்கள்-தொறும் காசு படி வைத்து அருள நானிலத்தில்
எண்_இல் அடியார் உடன் அமுது செய்து அங்கு இருந்தார் இருவர்களும்
#259
அல்லார் கண்டத்து அண்டர் பிரான் அருளால் பெற்ற படிக்காசு
பல்லாறு இயன்ற வளம் பெருக பரமன் அடியார் ஆனார்கள்
எல்லாம் எய்தி உண்க என இரண்டு பொழுதும் பறை நிகழ்த்தி
சொல்லால் சாற்றி சோறு இட்டார் துயர் கூர் வறுமை தொலைத்திட்டார்
#260
ஈசர் மிழலை இறையவர்-பால் இமைய பாவை திரு முலை பால்
தேசம் உய்ய உண்டவர் தாம் திரு மா மகனார் ஆதலினால்
காசு வாசியுடன் பெற்றார் கை தொண்டு ஆகும் படிமையினால்
வாசி இல்லா காசு படி பெற்று வந்தார் வாகீசர்
#261
ஆறு சடை மேல் அணிந்து அருளும் அண்ணல் வைத்த படி காசால்
ஈறு_இலாத பொருள் உடைய இருவர் உடைய திருமடங்கள்
சோறு நாளும் தொண்டர் மகிழ்ந்து உண்ணஉண்ண தொலையாதே
ஏறு பெருமை புவி போற்ற இன்புற்று இருக்கும் அ நாளில்
#262
காலம் தவறு தீர்ந்து எங்கும் கலி வான் பொழிந்த புனல் கலந்து
ஞாலம் எல்லாம் குளிர் தூங்கி உணவு பெருகி நலம் சிறப்ப
மூல அன்பர் இருவர்களும் மொழி மாலைகளும் பல சாத்தி
நீலகண்டர் உறை பதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார்
#263
வாய்ந்த மிழலை மா மணியை வணங்கி பிரியா விடைகொண்டு
பூம் தண் புனல் சூழ் வாஞ்சியத்தை போற்றி புனிதர் வாழ் பதிகள்
ஏய்ந்த அன்பினால் இறைஞ்சி இசை வண் தமிழ்கள் புனைந்து போய்
சேர்ந்தார் செல்வ திருமறைக்காடு எல்லை_இல்லா சீர்த்தியினார்
#264
மன்றல் விரவு மலர் புன்னை மணம் சூழ் சோலை உப்பளத்தின்
முன்றில்-தோறும் சிறு மடவார் முத்தம் கொழிக்கும் மறைக்காட்டு
குன்ற_வில்லியார் மகிழ்ந்த கோயில் புகுந்து வலம்கொண்டு
சென்று சேர்ந்தார் தென் புகலி கோவும் அரசும் திரு முன்பு
#265
பரவை ஓத கழி கானல் பாங்கு நெருங்கும் அ பதியில்
அரவ சடை அந்தணனாரை அகில மறைகள் அர்ச்சனை செய்து
உரவ கதவம் திரு காப்பு செய்த அந்நாள் முதல் இந்நாள்
வரையும் அடைத்தே நிற்கின்ற மணி நீள வாயில் வணங்குவார்
#266
தொல்லை வேதம் திரு காப்பு செய்த வாயில் தொடர் அகற்ற
வல்ல அன்பர் அணையாமை மருங்கு ஓர் வாயில் வழி எய்தி
அல்லல் தீர்ப்பார்-தமை அருச்சிப்பார்கள் தொழுவார் ஆம்படி கண்டு
எல்லை இல்லா பெரும் புகழார் இதனை அங்கு கேட்டு அறிந்தார்
#267
ஆங்கு அ பரிசை அறிந்து அருளி ஆழி தோணிபுரத்து அரசர்
ஓங்கு வேதம் அருச்சனை செய் உம்பர் பிரானை உள் புக்கு
தேங்காது இருவோம் நேர் இறைஞ்ச திரு முன் கதவம் திருக்காப்பு
நீங்க பாடும் அப்பர் என நீடும் திருநாவுக்கரசர்
#268
உள் நீர்மையினால் பிள்ளையார் உரை செய்து அருள அதனாலே
பண்ணின் நேரு மொழியாள் என்று எடுத்து பாட பயன் துய்ப்பான்
தெண் நீர் அணிந்தார் திருக்காப்பு நீக்க தாழ்க்க திருக்கடைக்காப்பு
எண்ணீர் இரக்கம் ஒன்று இல்லீர் என்று பாடி இறைஞ்சுதலும்
#269
வேத வளத்தின் மெய்ப்பொருளின் அருளால் விளங்கும் மணி கதவம்
காதல் அன்பர் முன்பு திருக்காப்பு நீங்க கலை மொழிக்கு
நாதர் ஞான முனிவருடன் தொழுது விழுந்தார் ஞாலத்துள்
ஓத ஒலியின் மிக்கு எழுந்து உம்பர் ஆர்ப்பும் மறை ஒலியும்
#270
அன்பர் ஈட்டம் களி சிறப்ப ஆண்ட அரசும் சிவ கன்றும்
இன்ப வெள்ளத்திடை மூழ்கி எழுந்து உள் புகுந்து தம் பெருமான்
முன்பு பணிந்து போற்றி இசைத்து பரவி மொழி மாலைகள் பாடி
என்பு கரைய உள் உருகி இறைஞ்சி அரிதில் புறத்து அணைந்தார்
#271
புறம்பு நின்று வாகீசர் புனிதர் அருளால் இ கதவம்
திறந்தும் அடைத்தும் செல்லும் நெறி திருந்த மலையாள் திரு முலையில்
கறந்த ஞானம் குழைத்த அமுது செய்த புகலி கவுணியரை
நிறைந்த கதவம் அடைக்கும் வகை நீரும் பாடி அருளும் என
#272
சண்பை ஆளும் தமிழ் விரகர் தாமும் திருநாவுக்கரசர்
பண்பின் மொழிந்த உரை கொண்டு பதிகம் பாடும் அவ்வளவில்
கண் பொற்பு அமைந்த நுதல் காளகண்டர் அருளால் கடிது உடனே
திண் பொன் கதவம் திருக்காப்பு செய்து எடுத்த திரு பாட்டில்
#273
அது கண்டு உடைய பிள்ளையார்-தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து
இது நம் பெருமான் அருள்செய்ய பெற்றோம் என்று அங்கு இறைஞ்சிய பின்
பதிகம் நிரம்ப பிள்ளையார் பாடி தொழுது பணிவுற்றார்
எதிர் பொன் திரு வாயிலின் வழக்கம் என்றும் நிகழ்ச்சி எய்தியது-ஆல்
#274
அங்கு நிகழ்ந்த அ செயல் கண்டு அடியார் எல்லாம் அதிசயித்து
பொங்கு புளகம் எய்திட மெய் பொழியும் கண்ணீர் பரந்து இழிய
எங்கும் நிகர் ஒன்று இல்லாத இருவர் பாதம் இறைஞ்சினார்
நங்கள் புகலி பெருந்தகையும் அரசும் மடத்தில் நண்ணிய பின்
#275
அரிதில் திறக்க தாம் பாட அடைக்க அவர் பாடிய எளிமை
கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்ந்தேன் என கவன்று
பெரிதும் அஞ்சி திரு மடத்தில் ஒரு-பால் அணைந்து பேழ் கணித்து
மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்
#276
மன்னும் செல்வ மறைக்காட்டு மணியின் பாதம் மனத்தின் கண்
உன்னி துயிலும் பொழுதின்-கண் உமை ஓர் பாகம் உடையவர்-தாம்
பொன்னின் மேனி வெண் நீறு புனைந்த கோல பொலிவினொடும்
துன்னி அவர்க்கு வாய்மூரில் இருப்போம் தொடர வா என்றார்
#277
போதம் நிகழ வா என்று போனார் என்-கொல் என பாடி
ஈது எம்பெருமான் அருள் ஆகில் யானும் போவேன் என்று எழுந்து
வேத வனத்தை புறகிட்டு விரைந்து போக அவர் முன்னே
ஆதி மூர்த்தி முன் காட்டும் அ வேடத்தால் எழுந்தருள
#278
சீர் ஆர் பதியின்-நின்று எழுந்து செல்லும் திருநாவுக்கரசர்
ஆரா அன்பில் ஆர் அமுதம் உண்ண எய்தாவாறே போல்
நீரார் சடையார் எழுந்தருள நெடிது பின்பு செல்லும் அவர்
பேராளரை முன் தொடர்ந்து அணைய பெறுவார் எய்தப்பெற்றிலர்-ஆல்
#279
அன்ன வண்ணம் எழுந்தருளி அணித்தே காட்சி கொடுப்பார் போல்
பொன்னின் கோயில் ஒன்று எதிரே காட்டி அதன் உள் புக்கு அருள
துன்னும் தொண்டர் அ மருங்கு விரைந்து தொடர போந்தபடி
மன்னும் புகலி வள்ளலார் தாமும் கேட்டு வந்து அணைந்தார்
#280
அழைத்து கொடு போந்து அணியார் போல் காட்டி மறைந்தார் என அயர்ந்து
பிழைத்து செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கே அல்லால்
உழைத்தாம் ஒளித்தால் கதவம் தொண்டு உறைக்க பாடி அடைப்பித்த
தழைத்த மொழியார் உப்பாலார் தாம் இங்கு எப்பால் மறைவது என
#281
மாட நீடு திருப்புகலி மன்னர் அவர்க்கு மால் அயனும்
நேடி இன்னம் காணாதார் நேரே காட்சி கொடுத்து அருள
ஆடல் கண்டு பணிந்து ஏத்தி அரசும் காண காட்டுதலும்
பாட அடியார் என்று எடுத்து பரமர்-தம்மை பாடினார்
#282
பாடும் தமிழ்_மாலைகள் கொண்டு பரமர்-தாமும் எழுந்தருள
நீடும் திருவாய்மூர் அடைந்து நிலவும் கோயில் வலம் செய்து
சூடும் பிறையார் பெருந்தொண்டர் தொழுது போற்றி துதி செய்து
நாடும் காதல் வளர்ந்து ஓங்க நயந்து அ நகரில் உடன் உறைந்தார்
#283
ஆண்ட அரசும் பிள்ளையாருடனே அங்கண் இனிது அமர்ந்து
பூண்ட காதல் பொங்கி எழ வாய்மூர் அடிகள் போற்றி
மூண்ட அன்பின் மொழி மாலை சாத்தி ஞான முனிவரொடு
மீண்டு வந்து திருமறைக்காடு எய்தி விமலர் தாள் பணிந்தார்
#284
ஆதி முதல்வர்-தமை பணிந்து அங்கு ஆன பணி செய்து அமரும் நாள்
சீத மதி வெண்குடை வளவர் மகளார் தென்னன் தேவியாம்
கோது_இல் குணத்து பாண்டிமாதேவியார் முன் குலச்சிறையார்
போத விட்டார் சிலர் வந்தார் புகலி வேந்தர்-தமை காண
#285
வந்து சிவனார் திருமறைக்காடு எய்தி மன்னு வேணுபுரி
அந்தணாளர் தமக்கு அறிவித்து அவர்-பால் எய்தி அடி வணங்க
சிந்தை மகிழ்ந்து தீது_இன்மை வினவ தீங்கும் உளவாமோ
இந்த உலகம் உய வந்தீர் இரு தாள் நினைவார்க்கு என்று உரைப்பார்
#286
சைவ நெறி வைதிகம் நிற்க சழக்கு நெறியை தவம் என்னும்
பொய் வல் அமணர் செயல்-தன்னை பொறுக்ககில்லோம் என கேட்டே
அ வன் தொழிலோர் செயல் மாற்றி ஆதிசைவ நெறி விளங்க
தெய்வ நீறு நினைந்து எழுந்தார் சீர் கொள் சண்பை திரு மறையோர்
#287
ஆய பொழுது திருநாவுக்கரசு புகலி ஆண்தகைக்கு
காய மாசு பெருக்கி உழல் கலதி அமணர் கடு வினை செய்
மாயை சாலம் மிக வல்லார் அவர் மற்று என்னை முன் செய்த
தீய தொழிலும் பல கெட்டேன் சொல்ல இசையேன் யான் என்றார்
#288
என்று கூற எல்லை இலா நீறு போற்றும் இருவரையும்
சென்று காணும் கருத்து உடையேன் அங்கு தீங்கு புரி அமணர்
நின்ற நிலைமை அழிவித்து சைவ நெறி பாரித்து அன்றி
ஒன்றும் செய்யேன் ஆணை உமது என்றார் உடையபிள்ளையார்
#289
போமா துணிந்து நீர் அங்கு போக போதா அ அமணர்
தீ மாயையினை யானே போய் சிதைத்து வருகின்றேன் என்ன
ஆமாறு எல்லாம் உரைத்து அவரை மறுக்க மாட்டாது அரசு இருப்ப
தாம் ஆதரவால் தமிழ் நாட்டில் போனார் ஞான தலைவனார்
#290
வேணுபுர கோன் எழுந்தருள விடைகொண்டு இருந்த வாகீசர்
பூணும் அன்பால் மறைக்காட்டில் புனிதர்-தம்மை போற்றி இசைத்து
பேணி இருந்து அங்கு உறையும் நாள் பெயர்வார் வீழிமிழலை அமர்
தாணுவின் தன் செய்ய கழல் மீண்டும் சார நினைக்கின்றார்
#291
சோலை மறைக்காட்டு அமர்ந்து அருளும் சோதி அருள் பெற்று அகன்று போய்
வேலை விடம் உண்டவர் வீழிமிழலை மீண்டும் செல்வன் என
ஞாலம் நிகழ்ந்த நாகை காரோணம் பிறவும் தாம் பணிந்து
சாலு மொழி வண் தமிழ் பாடி தலைவர் மிழலை வந்து அடைந்தார்
#292
வீழிமிழலை-தனை பணிந்து வேத முதல்வர் தாம் இருப்ப
ஆழி வலம் ஏந்திய அரியால் ஆகாசத்தின்-நின்று இழிந்த
வாழி மலர்ந்த கோயில்-தனில் மன்னும் பொருளை போற்றி இசைத்து
தாழும் நாளில் பிற பதியும் பணியும் காதல் தலை நிற்பார்
#293
பூவில் பொலியும் புனல் பொன்னி கரை போய் பணிவார் பொற்பு அமைந்த
ஆவுக்கு அருளும் ஆவடுதண்துறையார் பாதம் அணைந்து இறைஞ்சி
நாவுக்கரசர் ஞானபோனகர்க்கு செம்பொன் ஆயிரமும்
பாவுக்கு அளித்த திறம் போற்றி போந்து பிறவும் பணிகின்றார்
#294
செய்ய சடையார் பழையாறை எய்த அதனில் செல் பொழுதில்
மையல் அமணர் மறைத்த வடதளியின் மன்னும் சிவனாரை
கைகள் கூப்பி தொழுது அருள கண்டவாற்றால் அமணர்கள் தம்
பொய் கொள் விமானம் என கேட்டு பொறாத உள்ளம் மிக புழுங்கி
#295
அந்த விமானம் தனக்கு அருகா ஆங்கு ஓர் இடத்தின் பாங்கு எய்தி
கந்தம் மலரும் கடி கொன்றை முடியார் செய்ய கழல் உன்னி
மந்த அமணர் வஞ்சனையால் மறைத்த வஞ்சம் ஒழித்து அருளி
பந்தம் கொண்ட குண்டர் திறம் பாற்றும் என்று பணிந்து இருந்தார்
#296
வண்ணம் கண்டு நான் உம்மை வணங்கி அன்றி போகேன் என்று
எண்ண முடிக்கும் வாகீசர் இருந்தார் அமுது செய்யாதே
அண்ணலாரும் அது உணர்ந்து அங்கு அரசு-தம்மை பணிவதற்கு
திண்ணமாக மன்னனுக்கு கனவில் அருளி செய்கின்றார்
#297
அறிவு_இல் அமணர் நமை மறைப்ப இருந்தோம் என்று அங்கு அடையாள
குறிகள் அறிய செய்து அருளி நம்மை அரசு கும்பிடுவான்
நெறி_இல் அமணர்-தமை அழித்து நீக்கி போக்கு என்று அருள்புரிய
செறிவு_இல் அறிவுற்று எழுந்து அவனும் செம் கை தலை மேல் குவித்து இறைஞ்சி
#298
கண்ட வியப்பு மந்திரிகட்கு இயம்பி கூட கடிது எய்தி
அண்டர் பெருமான் அருள்செய்த அடையாளத்தின் வழி கண்டு
குண்டர் செய்த வஞ்சனையை குறித்து வேந்தன் குலவு பெரும்
தொண்டர் தம்மை அடி வணங்கி தொக்க அமணர் தூர் அறுத்தான்
#299
ஆனை இனத்தில் துகைப்புண்ட அமண் ஆயிரமும் மாய்ந்ததன் பின்
மேன்மை அரசன் ஈசர்க்கு விமானம் ஆக்கி விளக்கிய பின்
ஆன வழிபாட்டு அர்ச்சனைக்கு நிபந்தம் எல்லாம் அமைத்து இறைஞ்ச
ஞான அரசும் புக்கு இறைஞ்சி நாதர் முன்பு போற்றுவார்
#300
தலையின் மயிரை பறித்து உண்ணும் சாதி அமணர் மறைத்தாலும்
நிலை இலாதார் நிலைமையினால் மறைக்க ஒண்ணுமோ என்னும்
விலை_இல் வாய்மை குறுந்தொகைகள் விளம்பி புறம் போந்து அங்கு அமர்ந்தே
இலை கொள் சூல படையார் சேர் இடங்கள் பிறவும் தொழ அணைவார்
#301
பொங்கு புனலார் பொன்னியினில் இரண்டு கரையும் பொரு விடையார்
தங்கும் இடங்கள் புக்கு இறைஞ்சி தமிழ்_மாலைகளும் சாத்தி போய்
எங்கும் நிறைந்த புகழாளர் ஈறு_இல் தொண்டர் எதிர்கொள்ள
செம் கண் விடையார் திருவானைக்காவின் மருங்கு சென்று அணைந்தார்
#302
சிலந்திக்கு அருளும் கழல் வணங்கி செம் சொல்_மாலை பல பாடி
இலங்கு சடையார் எறும்பியூர் மலையும் இறைஞ்சி பாடிய பின்
மலர்ந்த சோதி திருச்சிராப்பள்ளி மலையும் கற்குடியும்
நலம் கொள் செல்வ திருப்பராய்த்துறையும் தொழுவான் நண்ணினார்
#303
மற்ற பதிகள் முதலான மருங்கு உள்ளனவும் கைதொழுது
பொன் புற்று அமைந்த திருப்பணிகள் செய்து பதிகம் கொடு போற்றி
உற்ற அருளால் காவிரியை ஏறி ஒன்னார் புரம் எரிய
செற்ற சிலையார் திருப்பைஞ்ஞீலியினை சென்று சேர்கின்றார்
#304
வழி போம் பொழுது மிக இளைத்து வருத்தமுற நீர் வேட்கையொடும்
அழிவாம் பசி வந்து அணைந்திடவும் அதற்கு சித்தம் அலையாதே
மொழி வேந்தரும் முன் எழுந்தருள முருகு ஆர் சோலை பைஞ்ஞீலி
விழி ஏந்திய நெற்றியினார் தம் தொண்டர் வருத்தம் மீட்பாராய்
#305
காவும் குளமும் முன் சமைத்து காட்டி வழி போம் கருத்தினால்
மேவும் திருநீற்று அந்தணராய் விரும்பும் பொதி சோறும் கொண்டு
நாவின் தனி மன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார் விண்ணின் மேல்
தாவும் புள்ளும் மண் கிழிக்கும் தனி ஏனமும் காண்பு_அரியவர்-தாம்
#306
அங்கண் இருந்த மறையவர்-பால் ஆண்ட அரசும் எழுந்தருள
வெம் கண் விடை வேதியர் நோக்கி மிகவும் வழி வந்து இளைத்து இருந்தீர்
இங்கு என்-பாலே பொதி சோறு உண்டு இதனை உண்டு தண்ணீர் இ
பொங்கு குளத்தில் குடித்து இளைப்பு போக்கி போவீர் என புகன்றார்
#307
நண்ணும் திருநாவுக்கரசர் நம்பர் அருள் என்று அறிந்தார் போல்
உண்ணும் என்று திருமறையோர் உரைத்து பொதி சோறு அளித்தலுமே
எண்ண நினையாது எதிர் வாங்கி இனிதாம் அமுது செய்து இனிய
தண்ணீர் அமுது செய்து அருளி தூய்மை செய்து தளர்வு ஒழிந்தார்
#308
எய்ப்பு நீங்கி நின்றவரை நோக்கி இருந்த மறையவனார்
அப்பால் எங்கு நீர் போவது என்றார் அரசும் அவர்க்கு எதிரே
செப்புவார் யான் திருப்பைஞ்ஞீலிக்கு போவது என்று உரைப்ப
ஒப்பு_இலாரும் யான் அங்கு போகின்றேன் என்று உடன் போந்தார்
#309
கூட வந்து மறையவனார் திருப்பைஞ்ஞீலி குறுகியிட
வேடம் அவர் முன் மறைத்தலுமே மெய்ம்மை தவத்து மேலவர்-தாம்
ஆடல் புரிந்தார் அடியேனை பொருளாய் அளித்த கருணை என
பாடல் புரிந்து விழுந்து எழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார்
#310
பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும் பரமர் கோயில் சென்று எய்தி
மைஞ்ஞீலத்து மணிகண்டர்-தம்மை வணங்கி மகிழ் சிறந்து
மெய்ஞ்ஞீர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ்_மாலைகள் பாடி
கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்
#311
நாதர் மருவும் திருமலைகள் நாடும் பதிகள் பல மிகவும்
காதல் கூர சென்று இறைஞ்சி கலந்த இசை வண் தமிழ் பாடி
மாது_ஓர்_பாகர் அருளாலே வட-பால் நோக்கி வாகீசர்
ஆதி தேவர் அமர்ந்த திருவண்ணாமலையை நண்ணினார்
#312
செம் கண் விடையார் திருவண்ணாமலையை தொழுது வலம்கொண்டு
துங்க வரையின் மிசை ஏறி தொண்டர் தொழும்புக்கு எதிர்நிற்கும்
அங்கண் அரசை தொழுது எழுந்து திளைத்து திருநாவுக்கரசர்
தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார்
#313
அண்ணாமலை மலை மேல் அணி மலையை ஆரா அன்பின் அடியவர்-தம்
கண்ணார் அமுதை விண்ணோரை காக்க கடலில் வந்து எழுந்த
உண்ணா நஞ்சம் உண்டானை கும்பிட்டு உருகும் சிந்தை உடன்
பண்ணார் பதிக தமிழ் பாடி பணிந்து பரவி பணி செய்தார்
#314
பணியார் வேணி சிவபெருமான் பாதம் போற்றி பணி செயும் நாள்
மணியார் கண்டத்து எம்பெருமான் மண் மேல் மகிழும் இடம் எங்கும்
தணியா காதலுடன் சென்று வணங்கி தக்க பணி செய்வார்
அணி ஆர் தொண்டை திருநாட்டில் அருளால் அணைவார் ஆயினார்
#315
காதல் செய்யும் கருத்தின் உடன் காடும் மலையும் கான்ஆறும்
சூதம் மலி தண் பணை பதிகள் பலவும் கடந்து சொல்லினுக்கு
நாதர் போந்து பெரும் தொண்டை நல் நாடு எய்தி முன் ஆக
சீத மலர் மென் சோலை சூழ் திருவோத்தூரில் சென்று அடைந்தார்
#316
செக்கர் சடையார் திருவோத்தூர் தேவர் பிரானார்-தம் கோயில்
புக்கு வலம்கொண்டு எதிர் இறைஞ்சி போற்றி கண்கள் புனல் பொழிய
முக்கண்பிரானை விரும்பும் மொழி திருத்தாண்டகங்கள் முதலாக
தக்க மொழி மாலைகள் சாத்தி சார்ந்து பணி செய்து ஒழுகுவார்
#317
செய்ய ஐயர் திருவோத்தூர் ஏத்தி போந்து செழும் புவனம்
உய்ய நஞ்சு உண்டு அருளும் அவர் உறையும் பதிகள் பல வணங்கி
தையல் தழுவ குழைந்த பிரான் தங்கும் தெய்வ பதி என்று
வையம் முழுதும் தொழுது ஏத்தும் மதில் சூழ் காஞ்சி மருங்கு அணைந்தார்
#318
ஞாலம் உய்ய திருவதிகை நம்பர்-தம் பேர் அருளினால்
சூலை மடுத்து முன் ஆண்ட தொண்டர் வரப்பெற்றோம் என்று
காலை மலரும் கமலம் போல் காஞ்சி வாணர் முகம் எல்லாம்
சால மலர்ந்து களி சிறப்ப தழைத்த மனங்கள் தாங்குவார்
#319
மாட வீதி மருங்கு எல்லாம் மணி வாயில்களில் தோரணங்கள்
நீடு கதலியுடன் கமுகு நிறைத்து நிறை பொன் குடம் தீபம்
தோடு குலவு மலர் மாலை சூழ்ந்த வாச பந்தர்களும்
ஆடு கொடியும் உடன் எடுத்து அங்கு அணி நீள் காஞ்சி அலங்கரித்தார்
#320
தொண்டர் ஈண்டி எதிர்கொள்ள எழுந்து சொல்லுக்கு அரசர்-பால்
கொண்ட வேட பொலிவினொடும் குலவும் வீதி பணி செய்யும்
அண்டர் அறிதற்கு அரிய திரு அலகு முதல் ஆம் அவை ஏந்தி
இண்டை புனைந்த சடை முடியார்க்கு அன்பர்-தம்மை எதிர்கொண்டார்
#321
எதிர்கொண்டு இறைஞ்சும் சீர் அடியார்-தம்மை இறைஞ்சி எழுந்தருளி
மதில் கொண்டு அணிந்த காஞ்சி நகர் மறுகு உள் போந்து வான_நதி
குதி கொண்டு இழிந்த சடை கம்பர் செம்பொன் கோயில் குறுகினார்
அதிர் கொண்டு அலை நேர் மணி மிடற்றார் ஆண்ட திருநாவுக்கரசர்
#322
திரு வாயிலினை பணிந்து எழுந்து செல்வ திரு முன்றிலை அணைந்து
கருவார் கச்சி ஏகம்பர் கனக மணி மாளிகை சூழ்ந்து
வருவார் செம்பொன் மலை_வல்லி தழுவ குழைந்த மணி மேனி
பெரு வாழ்வினை முன் கண்டு இறைஞ்சி பேரா அன்பு பெருக்கினார்
#323
வார்ந்து சொரியும் கண் அருவி மயிர்க்கால்-தோறும் வரும் புளகம்
ஆர்ந்த மேனி புறம்பு அலைப்ப அன்பு கரைந்து புள் அலைப்ப
சேர்ந்த நயன பயன் பெற்று திளைப்ப திருவேகம்பர்-தமை
நேர்ந்த மனத்தில் உற வைத்து நீடும் பதிகம் பாடுவார்
#324
கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை என்று எடுத்து
பரவு ஆய சொல்_மாலை திருப்பதிகம் பாடிய பின்
விரிவார் தம் புரம் எரித்த விடையவனார் வெள் எயிற்றின்
அரவு ஆரம் புனைந்தவர் தம் திரு முன்றில் புறத்து அணைந்தார்
#325
கை ஆர்ந்த திருத்தொண்டு கழிய மிகும் காதலோடும்
செய்யா நின்றே எல்லா செந்தமிழ்_மாலையும் பாடி
மை ஆர்ந்த மிடற்றர் திருமயானத்தை வலம்கொண்டு
மெய் ஆர்வமுற தொழுது விருப்பினோடு மேவு நாள்
#326
சீர் வளரும் மதில் கச்சி நகர் திருமேற்றளி முதலாம்
நீர் வளரும் சடையவர் தாம் நிலவி உறை ஆலயங்கள்
ஆர்வமுற பணிந்து ஏத்தி ஆய்ந்த தமிழ் சொல் மலரால்
சார்வுறு மாலைகள் சாத்தி தகும் தொண்டு செய்திருந்தார்
#327
அ நகரில் அவ்வண்ணம் அமர்ந்து உறையும் நாளின்-கண்
மன்னு திருமாற்பேறு வந்து அணைந்து தமிழ் பாடி
சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சி
துன்னினார் காஞ்சியினை தொடர்ந்த பெரும் காதலினால்
#328
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தான் என போற்றி
பாகம் பெண் உருவானை பைம் கண் விடை உயர்த்தானை
நாகம் பூண் உகந்தானை நலம் பெருகும் திருநீற்றின்
ஆகம் தோய் அணியானை அணைந்து பணிந்து இன்புற்றார்
#329
திருக்கச்சி ஏகம்பம் பணிந்து ஏத்தி திங்களார்
நெருக்க செம் சடைக்கு அணிந்தார் நீடு பதி தொழ நினைவார்
வருக்கை செம் சுளை பொழி தேன் வயல் விளைக்கும் நாட்டிடை போய்
பருக்கை திண் களிற்று உரியார் கழுக்குன்றின் பாங்கு அணைந்தார்
#330
நீடு திருக்கழுக்குன்றில் நிருத்தனார் கழல் வணங்கி
பாடு தமிழ்_தொடை புனைந்து பாங்கு பல பதிகளிலும்
சூடும் இளம்_பிறை_முடியார்-தமை தொழுது போற்றி போய்
மாடு பெரும் கடல் உடுத்த வான்மியூர் மருங்கு அணைந்தார்
#331
திருவான்மியூர் மருந்தை சேர்ந்து பணிந்த அன்பினொடும்
பெரு வாய்மை தமிழ் பாடி அ மருங்கு பிறப்பு அறுத்து
தருவார் தம் கோயில் பல சார்ந்து இறைஞ்சி தமிழ் வேந்தர்
மருவாரும் மலர் சோலை மயிலாப்பூர் வந்து அடைந்தார்
#332
வரை வளர் மா மயில் என்ன மாடம் மிசை மஞ்சு ஆடும்
தரை வளர் சீர் திருமயிலை சங்கரனார் தாள் வணங்கி
உரை வளர் மாலைகள் அணிவித்து உழவார படையாளி
திரை வளர் வேலை கரை போய் திருவொற்றியூர் சேர்ந்தார்
#333
ஒற்றியூர் வள நகரத்து ஒளி மணி வீதிகள் விளக்கி
நல் கொடி மாலைகள் பூகம் நறும் கதலி நிரை நாட்டி
பொன் குடங்கள் தூபங்கள் தீபங்கள் பொலிவித்து
மற்றவரை எதிர்கொண்டு கொடு புக்கார் வழி தொண்டர்
#334
திருநாவுக்கரசரும் அ திருவொற்றியூர் அமர்ந்த
பெரு நாகத்தின் சிலையார் கோபுரத்தை இறைஞ்சி புக்கு
ஒரு ஞான தொண்டர் உடன் உருகி வலம்கொண்டு அடியார்
கரு நாமம் தவிர்ப்பாரை கைதொழுது முன் வீழ்ந்தார்
#335
எழுதாத மறை அளித்த எழுத்து அறியும் பெருமானை
தொழுத ஆர்வமுற நிலத்தில் தோய்ந்து எழுந்தே அங்கம் எல்லாம்
முழுது ஆய பரவசத்தின் முகிழ்த்த மயிர்க்கால் மூழ்க
விழு தாரை கண் பொழிய விதிர்ப்புற்று விம்மினார்
#336
வண்டு ஓங்கும் செங்கமலம் என எடுத்து மனம் உருக
பண் தோய்ந்த சொல் திருத்தாண்டகம் பாடி பரவுவார்
விண் தோய்ந்த புனல் கங்கை வேணியார் திரு உருவம்
கண்டு ஓங்கு களி சிறப்ப கைதொழுது புறத்து அணைந்தார்
#337
விளங்கு பெரும் திருமுன்றில் மேவும் திருப்பணி செய்தே
உளம் கொள் திரு விருத்தங்கள் ஓங்கு திருக்குறுந்தொகைகள்
களம் கொள் திரு நேரிசைகள் பல பாடி கைதொழுது
வளம் கொள் திரு பதி-அதனில் பல நாள்கள் வைகினார்
#338
அங்கு உறையும் நாளின்-கண் அருகு உளவாம் சிவாலயங்கள்
எங்கும் சென்று இனிது இறைஞ்சி ஏத்தும் அவர் இறை அருளால்
பொங்கு புனல் திருவொற்றியூர் தொழுது போந்து உமையாள்
பங்கு உடையார் அமர்ந்த திரு பாசூர் ஆம் பதி அணைந்தார்
#339
திருப்பாசூர் நகர் எய்தி சிந்தையினில் வந்து ஊறும்
விருப்பு ஆர்வம் மேற்கொள்ள வேய் இடம் கொண்டு உலகு உய்ய
இருப்பாரை புரம் மூன்றும் எரித்து அருள எடுத்த தனி
பொருப்பார் வெம் சிலையாரை தொழுது எழுந்து போற்றுவார்
#340
முந்தி மூவெயில் எய்த முதல்வனார் என எடுத்து
சிந்தை கரைந்து உருகு திருக்குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தம் நிறை நேர் இசையும் முதலான தமிழ் பாடி
எந்தையார் திருவருள் பெற்று ஏகுவார் வாகீசர்
#341
அ மலர் சீர் பதியை அகன்று அயல் உளவாம் பதி அனைத்தின்
மைம் மலரும் களத்தாரை வணங்கி மகிழ்வொடும் போற்றி
மெய்ம்மை நிலை வழுவாத வேளாள விழு குடிமை
செம்மையினால் பழையனூர் திருவாலவனம் பணிந்தார்
#342
திருவாலங்காடு உறையும் செல்வர்-தாம் என சிறப்பின்
ஒருவாத பெரும் திருத்தாண்டகம் முதலாம் ஓங்கு தமிழ்
பெரு வாய்மை தொடை மாலை பல பாடி பிற பதியும்
மரு ஆர்வம் பெற வணங்கி வட திசை மேல் வழி கொள்வார்
#343
பல் பதியும் நெடும் கிரியும் படர் வனமும் சென்று அடைவார்
செல் கதி முன் அளிப்பார் தம் திருக்காரி கரை பணிந்து
தொல் கலையின் பெரு வேந்தர் தொண்டர்கள் பின் உம்பர் குழாம்
மல்கு திருக்காளத்தி மா மலை வந்து எய்தினார்
#344
பொன் முகலி திரு நதியின் புனித நெடும் தீர்த்தத்தில்
முன் முழுகி காளத்தி மொய் வரையின் தாழ்வரையில்
சென்னி உற பணிந்து எழுந்து செம் கண் விடை தனி பாகர்
மன்னும் மலை மிசை ஏறி வலம்கொண்டு வணங்குவார்
#345
காது அணி வெண் குழையானை காளத்தி மலை கொழுந்தை
வேத மொழி மூலத்தை விழுந்து இறைஞ்சி எழுந்து பெரும்
காதல் புரி மனம் களிப்ப கண் களிப்ப பரவசமாய்
நாதனை என்-கண் உளான் என்னும் திருத்தாண்டகம் நவின்றார்
#346
மலை சிகர சிகாமணியின் மருங்குஉற முன்னே நிற்கும்
சிலை தட கை கண்ணப்பர் திரு பாதம் சேர்ந்து இறைஞ்சி
அலைத்து விழும் கண் அருவி ஆகத்து பாய்ந்து இழிய
தலை குவித்த கையினராய் தாழ்ந்து புறம் போந்து அணைந்தார்
#347
சேண் நிலவு திருமலையில் திருப்பணி ஆயின செய்து
தாணுவினை அ மலை மேல் தாள் பணிந்த குறிப்பினால்
பேணி திருக்கயிலை மலை வீற்றிருந்த பெரும் கோலம்
காணும் அது காதலித்தார் கலை வாய்மை காவலனார்
#348
அங்கண் மா மலை மேல் மருந்தை வணங்கியார் அருளால் மிக
பொங்கு காதலின் உத்தர திசை மேல் விருப்போடு போதுவார்
துங்க மால் வரை கான்யாறு தொடர்ந்த நாடு கடந்த பின்
செம் கண் மால் விடை அண்ணல் மேவும் திரு பருப்பதம் எய்தினார்
#349
மான விஞ்சையர் வான நாடர்கள் வான் இயக்கர்கள் சித்தர்கள்
கான கின்னரர் பன்னகாதிபர் காமசாரிகளே முதல்
ஞான மோனிகள் நாளும் நம்பரை வந்து இறைஞ்சி நலம் பெறும்
தானம் ஆன திருச்சிலம்பை வணங்கி வண் தமிழ் சாற்றினார்
#350
அ மருங்கு கடந்து போம் அவர் ஆர் கொள் சூல அயில் படை
செம்மல் வெண் கயிலை பொருப்பை நினைந்து எழுந்த ஓர் சிந்தையால்
எம்மருங்கும் ஓர் காதல் இன்றி இரண்டு-பாலும் வியந்து உளோர்
கைம் மருங்கு அணையும் தெலுங்கு கடந்து கன்னடம் எய்தினார்
#351
கரு நடம் கழிவாக ஏகிய பின் கலந்த வனங்களும்
திரு நதி துறை யாவையும் பயில் சேண் நெடும் கிரி வட்டையும்
பெரு நலம் கிளர் நாடும் எண்_இல பின்பட செறி பொற்பினால்
வரு நெடும் கதிர் கோலு சோலைய மாளவத்தினை நண்ணினார்
#352
அங்கு முற்றி அகன்று போகி அரும் சுரங்கள் கடந்து சென்று
எங்கும் மிக்க அறங்கள் நீடும் இலாட பூமி இகந்து போய்
மங்குல் சுற்றிய வெற்பினோடு வனங்கள் ஆறு கடந்து அயல்
பங்கய பழனத்து மத்திய பைதிரத்தினை எய்தினார்
#353
அன்ன நாடு கடந்து கங்கை அணைந்து சென்று வலம்கொளும்
மின்னு வேணியர் வாரணாசி விருப்பினோடு பணிந்து உடன்
பின் அணைந்தவர்-தம்மை அங்கண் ஒழிந்து கங்கை கடந்து போய்
மன்னு காதல் செய் நாவின் மன்னவர் வந்து கல் சுரம் முந்தினார்
#354
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால்
போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழ
சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்த்து தனித்து நேர்
ஏகினார் இரவும் பெரும் கயிலை குலக்கிரி எய்துவார்
#355
ஆயவார் இருளின்-கண் ஏகும் அ அன்பர் தம்மை அணைந்து முன்
தீய ஆய விலங்கு வன் தொழில் செய்ய அஞ்சின நஞ்சு கால்
வாய நாக மணி பணம் கொள் விளக்கு எடுத்தன வந்து கால்
தோய வானவர் ஆயினும் தனி துன் அரும் சுரம் முன்னினார்
#356
வெம் கதிர் பகல் அ கடத்திடை வெய்யவன் கதிர் கை பரந்து
எங்கும் மிக்க பிளப்பில் நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன
பொங்கு அழல் தெறு பாலை வெம் நிழல் புக்க சூழல் புகும் பகல்
செம் கதிர் கனல் போலும் அ திசை திண்மை மெய் தவர் நண்ணினார்
#357
இங்ஙனம் இரவும் பகற்பொழுதும் அரும் சுரம் எய்துவார்
பங்கயம் புரை தாள் பரட்டளவும் பசை தசை தேயவும்
மங்கை பங்கர் தம் வெள்ளி மால் வரை வைத்த சிந்தை மறப்பரோ
தம் கரங்கள் இரண்டுமே கொடு தாவி ஏகுதல் மேவினார்
#358
கைகளும் மணி பந்து அசைந்துறவே கரைந்து சிதைந்த பின்
மெய் கலந்து எழு சிந்தை அன்பின் விருப்பு மீமிசை பொங்கிட
மொய் கடும் கனல் வெம் பரல் புகை மூளும் அத்தம் முயங்கியே
மை கொள் கண்டர்-தம் அன்பர் செல்ல வருந்தி உந்தினர் மார்பினால்
#359
மார்பமும் தசை நைந்து சிந்தி வரிந்த என்பு முரிந்திட
நேர்வரும் குறி நின்ற சிந்தையின் நேசம் ஈசனை நேடும் நீடு
ஆர்வம் அங்கு உயிர் கொண்டு உகைக்கும் உடம்பு அடங்கவும் ஊன் கெட
சேர் வரும் பழுவம் புரண்டு புரண்டு சென்றனர் செம்மையோர்
#360
அப்புறம் புரள்கின்ற நீளிடை அங்கம் எங்கும் அரைந்திட
செப்ப_அரும் கயிலை சிலம்பு அடி சிந்தை சென்று உறும் ஆதலால்
மெய் புறத்தில் உறுப்பு அழிந்த பின் மெல்ல உந்து முயற்சியும்
தப்புற செயல் இன்றி அ நெறி தங்கினார் தமிழ் ஆளியார்
#361
அன்ன தன்மையர் கயிலையை அணைவதற்கு அருளார்
மன்னும் தீம் தமிழ் புவியின் மேல் பின்னையும் வழுத்த
நல் நெடும் புனல் தடமும் ஒன்று உடன் கொடு நடந்தார்
பன்னகம் புனை பரமர் ஓர் முனிவர் ஆம்படியால்
#362
வந்து மற்றவர் மருங்குற அணைந்து நேர் நின்று
நொந்து நோக்கி மற்றவர் எதிர் நோக்கிட நுவல்வார்
சிந்தி இ உறுப்பு அழிந்திட வருந்திய திறத்தால்
இந்த வெம் கடத்து எய்தியது என் என இசைத்தார்
#363
மாசு_இல் வற்கலை ஆடையும் மார்பின் முந்நூலும்
தேசு உடை சடை மவுலியும் நீறும் மெய் திகழ
ஆசு_இல் மெய் தவர் ஆகி நின்றவர்-தமை நோக்கி
பேச உற்றதோர் உணர்வுற விளம்புவார் பெரியோர்
#364
வண்டு உலாம் குழல் மலை_மகளுடன் வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும் அ பரிசு அவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடும் காதலின் அடைந்தேன்
கொண்ட என் குறிப்பு இது முனியே என கூற
#365
கயிலை மால் வரை யாவது காசினி மருங்கு
பயிலும் மானுட பான்மையோர் அடைவதற்கு எளிதோ
அயில் கொள் வேல் படை அமரரும் அணுகுதற்கு அரிது-ஆல்
வெயில் கொள் வெம் சுரத்து என் செய்தீர் வந்து என விளம்பி
#366
மீளும் அத்தனை உமக்கு இனி கடன் என விளங்கும்
தோளும் ஆகமும் துவளும் முந்நூல் முனி சொல்ல
ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால்
மாளும் இ உடல் கொண்டு மீளேன் என மறுத்தார்
#367
ஆங்கு மற்றவர் துணிவு அறிந்து அவர்-தமை அறிய
நீங்கு மா தவர் விசும்பிடை கரந்து நீள் மொழியால்
ஓங்கு நாவினுக்கு அரசனே எழுந்திர் என்று உரைப்ப
தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு எழுந்து ஒளி திகழ்வார்
#368
அண்ணலே எனை ஆண்டு கொண்டு அருளிய அமுதே
விண்ணிலே மறைந்து அருள்புரி வேத நாயகனே
கண்ணினால் திரு கயிலையில் இருந்த நின் கோலம்
நண்ணி நான் தொழ நயந்து அருள்புரி என பணிந்தார்
#369
தொழுது எழுந்த நல் தொண்டரை நோக்கி விண் தலத்தில்
எழு பெரும் திருவாக்கினால் இறைவர் இ பொய்கை
முழுகி நம்மை நீ கயிலையில் இருந்த அ முறைமை
பழுது_இல் சீர் திருவையாற்றில் காண் என பணித்தார்
#370
ஏற்றினார் அருள் தலை மிசை கொண்டு எழுந்து இறைஞ்சி
வேற்றும் ஆகி விண் ஆகி நின்றார் மொழி விரும்பி
ஆற்றல் பெற்ற அ அண்ணலார் அஞ்சு_எழுத்து ஓதி
பால் தடம் புனல் பொய்கையில் மூழ்கினார் பணியால்
#371
ஆதி தேவர் தம் திருவருள் பெருமை யார் அறிந்தார்
போத மா தவர் பனி மலர் பொய்கையில் மூழ்கி
மாது_ஓர்_பாகனார் மகிழும் ஐயாற்றில் ஓர் வாவி
மீது தோன்றி வந்து எழுந்தனர் உலகு எலாம் வியப்ப
#372
வம்பு உலாம் மலர் வாவியின் கரையில் வந்து ஏறி
உம்பர் நாயகர் திருவருள் பெருமையை உணர்வார்
எம்பிரான் தரும் கருணை-கொல் இது என இரு கண்
பம்பு தாரை நீர் வாவியில் படிந்து எழும் படியார்
#373
மிடையும் நீள் கொடி வீதிகள் விளங்கிய ஐயாறு
உடைய நாயகர் சேவடி பணிய வந்து உறுவார்
அடைய அ பதி நிற்பவும் சரிப்பவும் ஆன
புடை அமர்ந்த தம் துணையொடும் பொலிவன கண்டார்
#374
பொன் மலை_கொடியுடன் அமர் வெள்ளி அம் பொருப்பில்
தன்மை ஆம்படி சத்தியும் சிவமுமாம் சரிதை
பன்மை யோனிகள் யாவையும் பயில்வன பணிந்தே
மன்னும் மா தவர் தம்பிரான் கோயில் முன் வந்தார்
#375
காணும் அ பெரும் கோயிலும் கயிலை மால் வரையாய்
பேணும் மால் அயன் இந்திரன் முதல் பெரும் தேவர்
பூணும் அன்போடு போற்றி இசைத்து எழும் ஒலி பொங்க
தாணு மா மறை யாவையும் தனித்தனி முழங்க
#376
தேவர் தானவர் சித்தர் விச்சாதரர் இயக்கர்
மேவு மா தவர் முனிவர்கள் புடை எலாம் மிடைய
காவி வாள் விழி அரம்பையர் கானமும் முழவும்
தா_இல் ஏழ் கடல் முழக்கினும் பெருகு ஒலி தழைப்ப
#377
கங்கையே முதல் தீர்த்தமாம் கடவுள் மா நதிகள்
மங்கலம் பொலி புனல் பெரும் தடம் கொடு வணங்க
எங்கும் நீடிய பெரும் கண நாதர்கள் இறைஞ்ச
பொங்கு இயங்களால் பூத வேதாளங்கள் போற்ற
#378
அம் தண் வெள்ளி மால் வரை இரண்டாம் என அணைந்து ஓர்
சிந்தை செய்திட செம் கண் மால் விடை எதிர்நிற்ப
முந்தை மா தவ பயன் பெறு முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடு விடை ஆடி முன் நணுக
#379
வெள்ளி வெற்பின் மேல் மரகத கொடி உடன் விளங்கும்
தெள்ளு பேர் ஒளி பவள வெற்பு என இடப்பாகம்
கொள்ளும் மா மலையாள் உடன் கூட வீற்றிருந்த
வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்
#380
கண்ட ஆனந்த கடலினை கண்களால் முகந்து
கொண்டு கை குவித்து எதிர் விழுந்து எழுந்து மெய் குலைய
அண்டர் முன்பு நின்று ஆடினார் பாடினார் அழுதார்
தொண்டனார்க்கு அங்கு நிகழ்ந்தன யார் சொல வல்லார்
#381
முன்பு கண்டு கொண்டு அருளின் ஆர் அமுது உண்ண மூவா
அன்பு பெற்றவர் அளவு_இலா ஆர்வம் முன் பொங்க
பொன் பிறங்கிய சடையாரை போற்று தாண்டகங்கள்
இன்பம் ஓங்கிட ஏத்தினார் எல்லை_இல் தவத்தோர்
#382
ஆயவாறு மற்று அவர் மனம் களிப்புற கயிலை
மேய நாதர் தம் துணையொடும் வீற்றிருந்து அருளி
தூய தொண்டரும் தொழுது எதிர்நிற்க அ கோலம்
சேயது ஆக்கினார் திருவையாறு அமர்ந்து அமை திகழ
#383
ஐயர் கோலம் அங்கு அளித்து அகன்றிட அடி தொண்டர்
மையல் கொண்டு உளம் மகிழ்ந்திட வருந்தி மற்று இங்கு
செய்ய வேணியர் அருள் இதுவோ என தெளிந்து
வையம் உய்ந்திட கண்டமை பாடுவார் மகிழ்ந்து
#384
மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் என்னும்
கோது_அறு தண் தமிழ் சொல்லால் குலவு திருப்பதிகங்கள்
வேத முதல்வர் ஐயாற்றில் விரவும் சராசரம் எல்லாம்
காதல் துணையொடும் கூட கண்டேன் என பாடி நின்றார்
#385
கண்டு தொழுது வணங்கி கண்_நுதலார்-தமை போற்றி
கொண்ட திருத்தாண்டகங்கள் குறுந்தொகை நேரிசை அன்பின்
மண்டு விருத்தங்கள் பாடி வணங்கி திருத்தொண்டு செய்தே
அண்டர் பிரான் திருவையாறு அமர்ந்தனர் நாவுக்கரசர்
#386
நீடிய அ பதி-நின்று நெய்த்தானமே முதலாக
மாடு உயர் தானம் பணிந்து மழபாடியாரை வணங்கி
பாடிய செந்தமிழ்_மாலை பகர்ந்து பணி செய்து போற்றி
தேடிய மாலுக்கு அரியார் திருப்பூந்துருத்தியை சேர்ந்தார்
#387
சேர்ந்து விருப்பொடும் புக்கு திரு நட மாளிகை முன்னர்
சார்ந்து வலம்கொண்டு இறைஞ்சி தம் பெருமான் திரு முன்பு
நேர்ந்த பரிவொடும் தாழ்ந்து நிறைந்து ஒழியா அன்பு பொங்க
ஆர்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறும் தன்மையர் ஆனார்
#388
திருப்பூந்துருத்தி அமர்ந்த செம் சடையானை ஆன் ஏற்று
பொருப்பு ஊர்ந்து அருளும் பிரானை பொய்யிலியை கண்டேன் என்று
விருப்புறு தாண்டகத்தோடு மேவிய காதல் விளைப்ப
இருப்போம் திருவடி கீழ் நாம் என்னும் குறுந்தொகை பாடி
#389
அங்கு உறையும் தன்மை வேண்டி நாம் அடி போற்றுவது என்று
பொங்கு தமிழ் சொல் விருத்தம் போற்றிய பாடல் புரிந்து
தங்கி திருத்தொண்டு செய்வார் தம்பிரானார் அருள் பெற்று
திங்களும் ஞாயிறும் தோயும் திரு மடம் ஆங்கு ஒன்று செய்தார்
#390
பல் வகை தாண்டகத்தோடும் பரவும் தனி தாண்டகமும்
அல்லல் அறுப்பவர் தானத்து அடைவும் திருத்தாண்டகமும்
செல் கதி காட்டிட போற்றும் திருஅங்கமாலையும் உள்ளிட்டு
எல்லை_இல் பன்மை தொகையும் இயம்பினர் ஏத்தி இருந்தார்
#391
பொன்னி வலம்கொண்ட திருப்பூந்துருத்தி அவர் இருப்ப
கல் மனத்து வல் அமணர்-தமை வாதில் கட்டு அழித்து
தென்னவன் கூன் நிமிர்த்தி அருளி திருநீற்றின் ஒளி கண்டு
மன்னிய சீர் சண்பை நகர் மறையவனார் வருகின்றார்
#392
தீம் தமிழ் நாட்டிடை நின்றும் எழுந்தருளி செழும் பொன்னி
வாய்ந்த வளம் தரு நாட்டு வந்து அணைந்தார் வாக்கினுக்கு
வேந்தர் இருந்தமை கேட்டு விரைந்தவர்-பால் செல்வன் என
பூந்துருத்தி வளம் பதியின் புறம்பு அணையில் வந்து அணைந்தார்
#393
சண்பை வரும் தமிழ் விரகர் எழுந்தருள தாம் கேட்டு
மண் பரவும் பெரும் கீர்த்தி வாகீசர் மனம் மகிழ்ந்து
கண் பெருகும் களி கொள்ள கண்டு இறைஞ்சும் காதலினால்
எண் பெருகும் விருப்பு எய்த எழுந்தருளி எதிர் சென்றார்
#394
காழியர் கோன் வரும் எல்லை கலந்து எய்தி காதலித்தார்
சூழும் இடைந்திடு நெருக்கில் காணாமே தொழுது அருளி
வாழி அவர்-தமை தாங்கும் மணி முத்தின் சிவிகையினை
தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் யான் என தரித்தார்
#395
வந்து ஒருவர் அறியாமே மறைந்த வடிவொடும் புகலி
அந்தணனார் ஏறி எழுந்தருளி வரும் மணி முத்தின்
சந்த மணி சிவிகையினை தாங்குவார் உடன் தாங்கி
சிந்தை களிப்புற வருவார் தமையாரும் தெளிந்து_இலர்-ஆல்
#396
திருஞான மா முனிவர் அரசு இருந்த பூந்துருத்திக்கு
அருகாக எழுந்தருளி எங்கு உற்றார் அப்பர் என
உருகா நின்று உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும்
பெரு வாழ்வு வந்து எய்த பெற்று இங்கு உற்றேன் என்றார்
#397
பிள்ளையார் அது கேளா பெருகு விரைவு உடன் இழிந்தே
உள்ளம் மிகு பதைப்பு எய்தி உடைய அரசினை வணங்க
வள்ளலார் வாகீசர் அவர் வணங்கா முன் வணங்க
துள்ளு மான் மறி கரத்தார் தொண்டர் எலாம் தொழுது ஆர்த்தார்
#398
கழுமலக்கோன் திருநாவுக்கரசருடன் கலந்து அருளி
செழு மதியம் தவழ் சோலை பூந்துருத்தி திரு பதியின்
மழுவினொடு மான் ஏந்தும் திரு கரத்தார் மலர் தாள்கள்
தொழுது உருகி இன்புற்று துதி செய்து அங்கு உடன் இருந்தார்
#399
வல் அமணர்-தமை வாதில் வென்றதுவும் வழுதி-பால்
புல்லிய கூன் நிமிர்த்ததுவும் தண் பொருந்த புனல் நாட்டில்
எல்லை_இலா திருநீறு வளர்த்ததுவும் இரும் தவத்தோர்
சொல்ல அது கேட்டு உவந்தார் தூய புகழ் வாகீசர்
#400
பண்பு உடைய பாண்டிமாதேவியார்-தம் பரிவும்
நண்பு உடைய குலச்சிறையார் பெருமையும் ஞான தலைவர்
எண் பெருக உரைத்து அருள எல்லை_இல் சீர் வாகீசர்
மண் குலவு தமிழ் நாடு காண்பதற்கு மனம் கொண்டார்
#401
பிரம புர திரு முனிவர் பெரும் தொண்டை நல் நாட்டில்
அரன் உறையும் தானங்கள் அணைந்து இறைஞ்சி பாடுதற்கு அங்கு
உரன் உடைய திருநாவுக்கரசர் உரை செய்து அருள
புரம் எரித்தார் திருமகனார் பூந்துருத்தி தொழுது அகன்றார்
#402
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்ற பதி-நின்றும்
பாண்டிநாட்டு எழுந்தருளும் பான்மையராய் தென் திசை போய்
காண் தகைய திருப்புத்தூர் பணிந்து ஏத்தி கதிர் மதியம்
தீண்டு கொடி மதில் மதுரை திருஆலவாய் சேர்ந்தார்
#403
சென்று அணைந்து மதுரையினில் திருந்திய நூல் சங்கத்துள்
அன்று இருந்து தமிழ் ஆராய்ந்து அருளிய அங்கணர் கோயில்
முன்றிலினை வலம்கொண்டு முன் இறைஞ்சி உள் புக்கு
வன் தனி மால் விடையாரை வணங்கி மகிழ்வொடும் திளைத்தார்
#404
எய்திய பேர் ஆனந்த இன்பத்தினிடை அழுந்தி
மொய் திகழும் சடையானை முளைத்தானை என்று எடுத்து
செய் தவத்தோர் தாண்டக செந்தமிழ் பாடி புறத்து அணைவார்
கைதொழுது பணிந்து ஏத்தி திரு உள்ளம் களி சிறந்தார்
#405
சீர் திகழும் பாண்டிமாதேவியார் திருநீற்றின்
சார்வு அடைய கூன் நிமிர்ந்த தென்னவனார் தம் உடனே
பார் பரவும் குலச்சிறையார் வாகீசர்-தமை பணிவுற்று
ஆரகிலா காதல் மிக அடி போற்ற அங்கு இருந்தார்
#406
திருஆலவாய் அமர்ந்த செம் சுடரை செழும் பொருள் நூல்
தருவானை நேர் இசையும் தாண்டகமும் முதலான
பெரு வாய்மை தமிழ் பாடி பேணு திருப்பணி செய்து
மருவார் தம் புரம் எரித்தார் பூவணத்தை வந்து அடைந்தார்
#407
கொடி மாடம் நிலவு திரு பூவணத்து கோயிலின் உள்
நெடியானுக்கு அறிவு_அரியார் நேர் தோன்ற கண்டு இறைஞ்சி
வடிவேறு திரிசூல தாண்டகத்தால் வழுத்தி போய்
பொடி நீடு திருமேனி புனிதர் பதி பிற பணிவார்
#408
தென் இலங்கை இராவணன்-தன் சிரம் ஈர்_ஐந்தும் துணித்த
மன்னவன் ஆம் இராமனுக்கு வரும் பெரும் பாதகம் தீர்த்த
பிஞ்ஞகரை தொழுவதற்கு நினைந்து போய் பெரு மகிழ்ச்சி
துன்னி மனம் கரைந்து உருக தொழுது எழுந்தார் சொல்_அரசர்
#409
தேவர் தொழும் தனி முதலை திரு இராமேச்சுரத்து
மேவிய சங்கரனை எதிர்நின்று விருப்புறு மொழியால்
பாவு திரு நேர் இசைகள் முதலான தமிழ் பாடி
நாவரசர் திருத்தொண்டு நலம் பெருக செய்து அமர்ந்தார்
#410
அங்கு உறைந்து கண்_நுதலார் அடி சூடி அகன்று போய்
பொங்கு தமிழ் திரு நாட்டு புறம் பணை சூழ் நெல்வேலி
செம் கண் விடையார் மன்னும் திருக்கானப்பேர் முதலாம்
எங்கும் நிகழ் தானங்கள் எல்லாம் புக்கு இறைஞ்சுவார்
#411
தொழுது பல வகையாலும் சொல் தொடை வண் தமிழ் பாடி
வழு_இல் திருப்பணி செய்து மனம் கசிவுற்று எப்பொழுதும்
ஒழுகிய கண் பொழி புனலும் ஓவாது சிவன் தாள்கள்
தழுவிய சிந்தையில் உணர்வும் தங்கிய நீர்மையில் சரித்தார்
#412
தேன் பொழியும் செந்தமிழ் நாட்டினில் எங்கும் சென்று இறைஞ்சி
பாம்பு அணிவார்-தமை பணிவார் பொன்னி நாடது அணைந்து
வாம் புனல் சூழ் வள நகர்கள் பின்னும் போய் வணங்கியே
பூம்புகலூர் வந்து அடைந்தார் பொய் பாசம் போக்குவார்
#413
பொய்கை சூழ் பூம்புகலூர் புனிதர் மலர் தாள் வணங்கி
நையும் மன பரிவினோடும் நாள்-தோறும் திரு முன்றில்
கை கலந்த திருத்தொண்டு செய்து பெரும் காதல் உடன்
வைகு நாள் எண்_இறந்த வண் தமிழ்_மாலைகள் மொழிவார்
#414
நின்ற திருத்தாண்டகமும் நீடு தனி தாண்டகமும்
மன்று உறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகமும்
கொன்றை மலர் சடையார்-பால் குறைந்த திருநேரிசையும்
துன்று தனி நேரிசையும் முதலான தொடுத்து அமைத்தார்
#415
ஆருயிரின் திருவிருத்தம் தசபுராணத்து அடைவும்
பார் பரவும் பாவ நாச பதிகம் பன்முறையும்
நேர் பட நின்று அறை கூவும் திருப்பதிகம் முதல் பிறவும்
பேர் அருளின் கடல் அளிக்கும் பெருமானை பாடினார்
#416
அ நிலைமையினில் ஆண்ட அரசு பணி செய்ய அவர்
நல் நிலைமை காட்டுவார் நம்பர் திரு மணி முன்றில்
தன்னில் வரும் உழவாரம் நுழைந்த இடம் தான் எங்கும்
பொன்னினொடு நவமணிகள் பொலிந்து இலங்க அருள்செய்தார்
#417
செம்பொன்னும் நவமணியும் சேண் விளங்க ஆங்கு எவையும்
உம்பர் பிரான் திருமுன்றில் உருள் பருக்கை உடன் ஒக்க
எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினில் ஏந்தி
வம்பு அலர் மென் பூம் கமல வாவியினில் புக எறிந்தார்
#418
புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்
சொல்லோடும் வேறுபாடு இலா நிலைமை துணிந்து இருந்த
நல்லோர் முன் திருப்புகலூர் நாயகனார் திருவருளால்
வில்லோடு நுதல் மடவார் விசும்பூடு வந்து இழிந்தார்
#419
வானகம் மின்னு கொடிகள் வந்து இழிந்தால் என வந்து
தான நிறை சுருதிகளில் தகும் அலங்கார தன்மை
கான அமுதம் பரக்கும் கனி வாயில் ஒளி பரப்ப
பானல் நெடும் கண்கள் வெளி பரப்பி இசை பாடுவார்
#420
கற்பக பூம் தளிர் அடி போம் காமரு சாரிகை செய்ய
உற்பலம் மென் முகிழ் விரல் வட்டணையோடும் கை பெயர
பொற்புறும் அ கையின் வழி பொரு கயல் கண் புடை பெயர
அற்புத பொன் கொடி நுடங்கி ஆடுவ போல் ஆடுவார்
#421
ஆடுவார் பாடுவார் அலர்_மாரி மேல் பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடை நுடங்க
ஓடுவார் மாரவேளுடன் மீள்வார் ஒளி பெருக
நீடு வார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்
#422
இ தன்மை அரம்பையர்கள் எவ்விதமும் செயல் புரிய
அத்தனார் திருவடி கீழ் நினைவு அகலா அன்பு உருகும்
மெய் தன்மை உணர்வு உடைய விழு தவத்து மேலோர்-தம்
சித்த நிலை திரியாது செய் பணியின் தலை நின்றார்
#423
இ மாய பவ தொடக்காம் இருவினைகள்-தமை நோக்கி
உம்மால் இங்கு என்ன குறை உடையேன் யான் திருவாரூர்
அம்மானுக்கு ஆள் ஆனேன் அலையேன்-மின் நீர் என்று
பொய்ம் மாய பெரும் கடலுள் எனும் திருத்தாண்டகம் புகன்றார்
#424
மாதர் அவர் மருங்கு அணைய வந்து எய்தி மதன வச
காதலவர் புரிந்து ஒழுகும் கை தவங்கள் செய்திடவும்
பேதம் இலா ஓர் உணர்வில் பெரியவரை பெயர்விக்க
யாதும் ஒரு செயல் இல்லாமையில் இறைஞ்சி எதிர் அகன்றார்
#425
இ நிலைமை உலகு ஏழும் எய்த அறிந்து இயல்பு ஏத்த
மன்னிய அன்புறு பத்தி வடிவு ஆன வாகீசர்
மின் நிலவும் சடையார்-தம் மெய் அருள் தான் எய்த வரும்
அ நிலைமை அணித்து ஆக சில நாள் அங்கு அமர்ந்து இருந்தார்
#426
மன்னிய அந்த கரணம் மருவுதலை பாட்டினால்
தன்னுடைய சரணான தமியேனை புகலூரன்
என்னை இனி சேவடி கீழ் இருத்திடும் என்று எழுகின்ற
முன் உணர்வின் முயற்சியினால் திருவிருத்தம் பல மொழிந்தார்
#427
மண் முதலாம் உலகு ஏத்த மன்னு திருத்தாண்டகத்தை
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் என புகன்று
நண் அரிய சிவ ஆனந்த ஞான வடிவே ஆகி
அண்ணலார் சேவடி கீழ் ஆண்ட அரசு அமர்ந்து இருந்தார்
#428
வானவர்கள் மலர்_மாரி மண் நிறைய விண் உலகின்
மேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்
யோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி
தான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில்
#429
அடியனேன் ஆதரவால் ஆண்ட அரசின் சரித
படியை யான் அறிந்தபடி பகர்ந்தேன் அ பர முனிவன்
கடி மலர் மென் சேவடிகள் கைதொழுது குலச்சிறையார்
முடிவு_இல் புகழ் திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்

மேல்

2 குலச்சிறை நாயனார் புராணம்

#1
பன்னு தொல் புகழ் பாண்டி நன் நாட்டிடை
செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல்
துன்னு பூக புறம்பணை சூழ்ந்தது
மன்னு வண்மையினார் மணமேற்குடி
#2
அ பதிக்கு முதல்வர் வன் தொண்டர்-தாம்
ஒப்பு_அரும் பெருநம்பி என்று ஓதிய
செப்ப_அரும் சீர் குல சிறையார் திண்மை
வைப்பினால் திருத்தொண்டில் வழாதவர்
#3
காரணங்கள் கண்_நுதற்கு அன்பர் என்னவே
வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
ஈர நல் மொழி எய்த இசைத்து உள்ளார்
#4
குறியின் நான்கு குலத்தினர் ஆயினும்
நெறியின் அ குலம் நீங்கினர் ஆயினும்
அறிவு சங்கரற்கு அன்பர் எனப்பெறில்
செறிவுற பணிந்து ஏத்திய செய்கையார்
#5
உலகர் கொள்ளும் நலத்தினர் ஆயினும்
அலகு_இல் தீமையர் ஆயினும் அம்புலி
இலகு செம் சடையார்க்கு அடியார் எனில்
தலம்உற பணிந்து ஏத்தும் தகைமையார்
#6
பண்பு மிக்கார் பலர் ஆய் அணையினும்
உண்ப வேண்டி ஒருவர் அணையினும்
எண் பெருக்கிய அன்பால் எதிர்கொண்டு
நண்பு கூர்ந்து அமுது ஊட்டும் நலத்தினார்
#7
பூதி கோவணம் சாதனத்தால் பொலிந்து
ஆதி தேவர் தம் அஞ்சு_எழுத்தாம் அவை
ஓது நா வணக்கத்தால் உரைப்பவர்
பாதம் நாளும் பரவிய பண்பினார்
#8
இன்ன நல் ஒழுக்கத்தினார் ஈறு_இல் சீர்
தென்னவன் நெடுமாறற்கு சீர் திகழ்
மன்னு மந்திரிகட்கு மேல் ஆகியார்
ஒன்னலர் செற்று உறுதி-கண் நின்று உளார்
#9
ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி
நாயனார் திரு பாதம் நவின்று உளார்
பாய சீர் புனை பாண்டிமாதேவியார்
மேய தொண்டுக்கு மெய் தொண்டர் ஆயினார்
#10
புன் நயத்து அருகந்தர் பொய் நீக்கவும்
தென்னர் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்
#11
வாதில் தோற்ற அமணரை வன் கழு
தீது நீங்கிட ஏற்றுவித்தார் திறம்
யாது போற்றினேன் மேல் இனி ஏத்துகேன்
வேத நீதி மிழலைக்குறும்பர் தாள்

மேல்

3 பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்

#1
சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய்
வீதி-தோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி
நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து
மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டு பெருமிழலை
#2
அன்ன தொன்மை திரு பதி-கண் அதிபர் மிழலைக்குறும்பனார்
சென்னி_மதியம்_வைத்தவர்-தம் அடியார்க்கு ஆன செய் பணிகள்
இன்ன வண்ணம் என்றவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று
முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார்
#3
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ண தொலையா அமுது ஊட்டி
கொண்டு செல்ல இருநிதியம் முகந்து கொடுத்து குறைந்து அடைவார்
வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும்
புண்டரீகம் அக மலரில் வைத்து போற்றும் பொற்பினார்
#4
இ தன்மையராய் நிகழும் நாள் எல்லை_இல்லா திருத்தொண்டின்
மெய் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார்
சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியை பணிந்து
நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியம தலைநின்றார்
#5
மை ஆர் தடம் கண் பரவையார் மணவாளன்-தன் மலர் கழல்கள்
கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்
செய்யாள் கோனும் நான்_முகனும் அறியா செம்பொன் தாள் இணை கீழ்
உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார்
#6
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே
ஆளும்படியால் அணிமாஆதி சித்தியான அணைந்ததன் பின்
மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு_எழுத்தும்
கேளும் பொருளும் உணர்வுமாம் பரிசு வாய்ப்ப கெழுமினார்
#7
இன்னவாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர்-தம்
பொன் அம் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து
மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர்
சென்னி மதி தோய் மாடம் மலி கொடுங்கோளூரை சேர்வுற்றார்
#8
அஞ்சை களத்து நஞ்சு உண்ட அமுதை பரவி அணைவுறுவார்
செம் சொல் தமிழ்_மாலைகள் மொழிய தேவர் பெருமான் அருளாலே
மஞ்சில் திகழும் வட கயிலை பொருப்பில் எய்த வரும் வாழ்வு
நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக்குறும்பனார்
#9
மண்ணில் திகழும் திருநாவலூரில் வந்த வன் தொண்டர்
நண்ணற்கு அரிய திருக்கயிலை நாளை எய்த நான் பிரிந்து
கண்ணின் கரிய மணி கழிய வாழ்வார் போல வாழேன் என்று
எண்ணி சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார்
#10
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடி வழி கருத்து செலுத்த கபால நடு
ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப
மூல முதல்வர் திரு பாதம் அணைவார் கயிலை முன் அடைந்தார்
#11
பயிலை செறிந்த யோகத்தால் பாவை கேள்வன் பாதமுற
கயிலை பொருப்பர் அடி அடைந்த மிழலைக்குறும்பர் கழல் வணங்கி
மயிலை புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும்
குயிலை பொருவும் காரைக்கால்அம்மை பெருமை கூறுவாம்

மேல்

4 காரைக்காலம்மையார் புராணம்

#1
மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனம்_இல் சீர் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழி
கானல் மிசை உலவு வளம் பெருகு திரு காரைக்கால்
#2
வங்க மலி கடல் காரைக்காலின்-கண் வாழ் வணிகர்
தங்கள் குல தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர்-பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிக புனிதவதியார் பிறந்தார்
#3
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளிய பின்
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடை பருவத்தே
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெற
தணிவு_இல் பெரு மன காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்
#4
பல் பெரு நல் கிளை உவப்ப பயில் பருவ சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திரு பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர்-பால்
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்
#5
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்ற துணை முலைகள்
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பத கொள்கையினில் குறுகினார்
#6
நல்ல என உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி
மல்கு பெரு வனப்பு மீக்கூர வரு மாட்சியினால்
இல் இகவா பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகள்_பேசுதற்கு தொடங்குவார்
#7
நீடிய சீர் கடல் நாகை நிதிபதி என்று உலகின்-கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்கு
தேட அரும் திரு மரபில் சே_இழையை மகன்_பேச
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்
#8
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து
தந்தையாம் தனதத்தன்-தனை நேர்ந்து நீ பயந்த
பைம்_தொடியை நிதிபதி மைந்தன் பரமதத்தனுக்கு
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்
#9
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இட சென்று
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்பு
பெற்றனன் போல் உவந்து தனி பெரு மகட்கு திரு மலியும்
சுற்றம் உடன் களிகூர்ந்து வதுவை_வினை தொழில் பூண்டான்
#10
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்
அணைய வதுவை தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி
பணை முரசம் எழுந்து ஆர்ப்ப காரைக்கால் பதி புகுந்தார்
#11
அளி மிடை தார் தனதத்தன் அணி மாடத்து உள் புகுந்து
தெளி தரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்து
தளிர் அடி மென் நகை மயிலை தாது அவிழ் தார் காளைக்கு
களி மகிழ் சுற்றம் போற்ற கலியாணம் செய்தார்கள்
#12
மங்கல மா மண_வினைகள் முடித்து இயல்பின் வைகும் நாள்
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தனதத்தன்
பொங்கு ஒலி நீர் நாகையினில் போகாமே கணவனுடன்
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான்
#13
மகள்_கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பு_இல் தனம் கொடுத்து அதன் பின்
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி-தன் குல மகனும்
தகைப்பு_இல் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி
மிக புரியும் கொள்கையினில் மேம்படுதல் மேவினான்
#14
ஆங்கு அவன்-தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற
பூம் குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடி கீழ்
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிக பெருக
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்
#15
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம்பொன்னும் நவமணியும் செழும் துகிலும் முதலான
தம் பரிவினால் அவர்க்கு தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடி கீழ் உணர்வு மிக ஒழுகு நாள்
#16
பாங்குடைய நெறியின் கண் பயில் பரமதத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்
#17
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கை கொண்டு
மணம் மலியும் மலர் கூந்தல் மாதரார் வைத்து அதன் பின்
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத்தொண்டர்
உணவின் மிகு வேட்கையினால் ஒருவர் மனையுள் புகுந்தார்
#18
வேதங்கள் மொழிந்த பிரான் மெய் தொண்டர் நிலை கண்டு
நாதன்-தன் அடியாரை பசி தீர்ப்பேன் என நண்ணி
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்து பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார்
#19
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன்-தன் அடியாரே
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்
#20
இல்லாளன் வைக்க என தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றை கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார்-தமை அமுது செய்வித்தார்
#21
மூப்புறும் அ தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கை
தீ பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத்தொண்டர்
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்தி
பூ பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்
#22
மற்று அவர்-தாம் போயின பின் மனை பதி ஆகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்தி
பொற்புற முன் நீர் ஆடி புகுந்து அடிசில் புரிந்து அயில
கற்புடைய மடவாரும் கடப்பாட்டில் ஊட்டுவார்
#23
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன் பின்
மன்னிய சீர் கணவன் தான் மனையிடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்
அன்ன மனையார்-தாமும் கொடுவந்து கலத்து அளித்தார்
#24
மனைவியார்-தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்
#25
அம்மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என் செய்வார்
மெய்ம்மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர்-தான்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்தது அதி மதுர கனி ஒன்று
#26
மற்று அதனை கொடுவந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேல்பட உளதாயிட இது தான்
முன் தரு மாங்கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிது-ஆல்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார்-தமை கேட்டான்
#27
அ உரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
கை வரு கற்பு உடை நெறியால் கணவன் உரை காவாமை
மெய் வழி அன்று என விளம்பல் விடமாட்டார் விதிர்ப்பு உறுவார்
#28
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு
மொய் தரு பூம் குழல் மடவார் புகுந்தபடி-தனை மொழிந்தார்
#29
ஈசன் அருள் என கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர் திரு அனையார்-தமை நோக்கி மற்று இது-தான்
தேசு உடைய சடைப்பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்
ஆசு_இல் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்
#30
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார்-தமை பரவி
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கை கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்
#31
வணிகனும் தன் கை புக்க மாங்கனி பின்னை காணான்
தணிவு_அரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு என கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வு இன்றி ஒழுகும் நாளில்
#32
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்
படு திரை பரவை மீது படர் கலம் கொண்டு போகி
நெடு நிதி கொணர்வேன் என்ன நிரந்த பல் கிளைஞர் ஆகும்
வடு_இல் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்
#33
கலம் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி
சலம் தரு கடவுள் போற்றி தலைமை ஆம் நாய்கன்-தானும்
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரை கடல் மேல் போனான்
#34
கடல் மிசை வங்கம் ஓட்டி கருதிய தேயம்-தன்னில்
அடைவுற சென்று சேர்ந்து அங்கு அளவு_இல் பல் வளங்கள் முற்றி
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அ கலத்தில் ஏறி
படர் புனல் கன்னிநாட்டோர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்
#35
அ பதி-தன்னில் ஏறி அலகு_இல் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பு_இல் மா நிதியம் எல்லாம் ஒருவழி பெருக உய்த்து
மெய் புகழ் விளங்கும் அ ஊர் விரும்ப ஓர் வணிகன் பெற்ற
செப்ப_அரும் கன்னி-தன்னை திரு மலி வதுவை செய்தான்
#36
பெறல் அரும் திருவினாளை பெரு மணம் புணர்ந்து முன்னை
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்
புறம் ஒரு வெளியுறாமல் பொதிந்த சிந்தனையினோடு
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்
#37
முருகு அலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இருநிதி கிழவன் என்ன எய்திய திருவின் மிக்கு
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி-தன்-பால்
பெருகு ஒளி விளக்கு போல் ஓர் பெண்_கொடி அரிதில் பெற்றான்
#38
மட மகள்-தன்னை பெற்று மங்கலம் பேணி தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவியாரை
தொடர்வு அற நினைந்து தெய்வ தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்து அவர்-தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்
#39
இ நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னி மா மதில் சூழ் மாட காரைக்கால் வணிகன் ஆன
தன் நிகர் கடந்த செல்வ தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக
#40
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரமதத்தன்
வளர் புகழ் பாண்டிநாட்டு ஓர் மா நகர்-தன்னில் மன்னி
அளவு_இல் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று
கிளர் ஒளி மணி கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே
#41
அ மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்
தம் உறு கிளைஞர் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார்
#42
மா மணி சிவிகை-தன்னில் மட நடை மயில் அன்னாரை
தாமரை தவிசில் வைகும் தனி திரு என்ன ஏற்றி
காமரு கழனி வீழ்த்து காதல் செய் சுற்றத்தாரும்
தே_மொழி அவரும் சூழ சேணிடை கழிந்து சென்றார்
#43
சில பகல் கடந்து சென்று செந்தமிழ் திரு நாடு எய்தி
மலர் புகழ் பரமதத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரை கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவு_இல் சீர் கணவனார்க்கு சொல்லி முன் செல்ல விட்டார்
#44
வந்து அவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன்-தானும்
சிந்தையில் அச்சம் எய்தி செழு மணம் பின்பு செய்த
பைம்_தொடி-தனையும் கொண்டு பயந்த பெண் மகவினோடு
முந்துற செல்வேன் என்று மொய் குழலவர்-பால் வந்தான்
#45
தானும் அ மனைவியோடும் தளிர் நடை மகவினோடும்
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இ இளம் குழவி-தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்
#46
கணவன் தான் வணங்க கண்ட காமர் பூம் கொடி அனாரும்
அணைவுறும் சுற்றத்தார்-பால் அச்சமோடு ஒதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி-தன்னை
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என்-கொல் என்றார்
#47
மற்று அவர்-தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நல் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இ மகவு-தன்னை பேர்இட்டேன் ஆதலாலே
பொன் பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்-மின் என்றான்
#48
என்றலும் சுற்றத்தாரும் இது என்-கொல் என்று நின்றார்
மன்றல் அம் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளா
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றி சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்
#49
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆக
தாங்கிய வனப்பு நின்ற தசை பொதி கழித்து இங்கு உன்-பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்கு
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்
#50
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேல் நெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்
#51
மலர்_மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்
உலகு எலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர்-தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற
தொலைவு_இல் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்
#52
உற்பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன்-தன்னை
அற்புத திருஅந்தாதி அப்பொழுது அருளி செய்வார்
பொற்பு உடை செய்ய பாத புண்டரீகங்கள் போற்றும்
நல் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி
#53
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்து பாடி
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளி கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூர வழிபடும் வழியால் வந்தார்
#54
கண்டவர் வியப்புற்று அஞ்சி கை அகன்று ஓடுவார்கள்
கொண்டது ஓர் வேட தன்மை உள்ளவாறு கூற கேட்டே
அண்டர் நாயகனார் என்னை அறிவரேல் அறியா வாய்மை
எண் திசை மக்களுக்கு யான் எ உருவாய் என் என்பார்
#55
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடை அவிழ் இதழி மாலை சூலபாணியனார் மேவும்
படர் ஒளி கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்கு காலின்
நடையினை தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்
#56
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்க
கலை இளம் திங்கள் கண்ணி கண்_நுதல் ஒரு பாகத்து
சிலை நுதல் இமய_வல்லி திரு கண் நோக்குற்றது அன்றே
#57
அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளி தாழ்ந்து
தம் பெருமானை நோக்கி தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம்பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன
நம் பெருமாட்டிக்கு அங்கு நாயகன் அருளி செய்வான்
#58
வரும் இவள் நம்மை பேணும் அம்மை காண் உமையே மற்று இ
பெருமை சேர் வடிவம் வேண்டி பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளி செய்தார்
#59
அங்கணன் அம்மையே என்று அருள்செய அப்பா என்று
பங்கய செம்பொன் பாதம் பணிந்து வீழ்ந்து எழுந்தார்-தம்மை
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர்நோக்கி நம்-பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்புகின்றார்
#60
இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்
#61
கூடும் ஆறு அருள் கொடுத்து குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான்
#62
அப்பரிசு அருளப்பெற்ற அம்மையும் செம்மை வேத
மெய்ப்பொருள் ஆனார் தம்மை விடைகொண்டு வணங்கி போந்து
செப்ப_அரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலங்காடாம்
நல் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே
#63
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு
மூலம் காண்பு_அரியார்-தம்மை மூத்த நல் பதிகம் பாடி
ஞாலம் காதலித்து போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்
#64
மட்டு அவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்
இட்டம் மிகு பெரும் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி
எட்டி இலவம் ஈகை என எடுத்து திருப்பதிகம்
கொட்ட முழவம் குழகன் ஆடும் என பாடினார்
#65
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி
கொடுத்து அருளப்பெற்றாரை குலவிய தாண்டவத்தில் அவர்
எடுத்து அருளும் சேவடி கீழ் என்றும் இருக்கின்றாரை
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவு ஆயினது அம்மா
#66
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர் தாள் போற்றி
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம்
போத மா முனிவர் செய்த திருத்தொண்டு புகலல்உற்றேன்

மேல்

5 அப்பூதி அடிகள் புராணம்

#1
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்
ஈண்டிய புகழின்-பாலார் எல்லை_இல் தவத்தின் மிக்கார்
ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னே
காண் தகு காதல் கூர கலந்த அன்பினராய் உள்ளார்
#2
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்
வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனை-பால் உள்ள
அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும்
உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அ ஒழுக்கல் ஆற்றார்
#3
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர்
அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால்
படி நிகழ் மடங்கள் தண்ணீர் பந்தர்கள் முதலாய் உள்ள
முடிவு_இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில்
#4
பொருப்பரையன் மட பிடியின் உடன் புணரும் சிவ களிற்றின்
திருப்பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர்
ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்
விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார்
#5
அளவு_இல் சனம் செலவு ஒழியா வழி கரை_இல் அருள் உடையார்
உளம் அனைய தண் அளித்தாய் உறு வேனில் பரிவு அகற்றி
குளம் நிறைந்த நீர் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்
வளம் மருவும் நிழல் தரு தண்ணீர் பந்தர் வந்து அணைந்தார்
#6
வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீத
பந்தர் உடன் அமுதம் ஆம் தண்ணீரும் பார்த்து அருளி
சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர்
சந்தம் உற வரைந்து அதனை எம்மருங்கும் தாம் கண்டார்
#7
இ பந்தர் இ பெயர்இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்கு
அ பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்
செப்ப_அரும் சீர் அப்பூதிஅடிகளார் செய்து அமைத்தார்
தப்பு இன்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார்
#8
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்று
நின்றவரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவ
துன்றிய நூல் மார்பரும் இ தொல் பதியார் மனையின்-கண்
சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்
#9
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதிஅடிகளார்
தங்கும் மனை கடை தலை முன் சார்வாக உள் இருந்த
திங்களூர் மறை தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார்
நங்கள் பிரான் தமர் ஒருவர் என கேட்டு நண்ணினார்
#10
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர்-தம்
அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார்
முடிவு_இல் தவம் செய்தேன்-கொல் முன்பு ஒழியும் கருணை புரி
வடிவு உடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார்
#11
ஒரு குன்ற வில்லாரை திருப்பழனத்து உள் இறைஞ்சி
வருகின்றோம் வழி கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம்
தருகின்ற நிழல் தண்ணீர் பந்தரும் கண்ட அ தகைமை
புரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் என புகல்வார்
#12
ஆறு அணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்த
ஈறு_இல் தண்ணீர் பந்தரில் நும் பேர் எழுதாதே
வேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்-கொல்
கூறும் என எதிர் மொழிந்தார் கோது_இல் மொழி கொற்றவனார்
#13
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்
நன்று அருளி செய்து இலீர் நாண் இல் அமண் பதகர் உடன்
ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத்தொண்டின் உறை-பாலே
வென்றவர்-தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார்
#14
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத்தொண்டாலே
இம்மையிலும் பிழைப்பது என என் போல் வாரும் தெளிய
செம்மை புரி திருநாவுக்கரசர் திரு பெயர் எழுத
வெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி
#15
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமை
அங்கணர்-தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே
மங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்
எங்கு உறைவீர் நீர்-தாம் யார் இயம்பும் என இயம்பினார்
#16
திரு மறையோர் அது மொழிய திருநாவுக்கரசர் அவர்
பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையில் நின்று ஏற
அருளும் பெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்த
தெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார்
#17
அரசு அறிய உரை செய்ய அப்பூதிஅடிகள் தாம்
கர கமலம் மிசை குவிய கண் அருவி பொழிந்து இழிய
உரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலிய
தரையின் மிசை வீழ்ந்து அவர்-தம் சரண கமலம் பூண்டார்
#18
மற்று அவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்து அருள
அற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு_மறையோர்
முற்ற உளம் களிகூர முன் நின்று கூத்தாடி
உற்ற விருப்பு உடன் சூழ ஓடினார் பாடினார்
#19
மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதே
ஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்
ஆண்ட அரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வமுற
பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீள புறப்பட்டார்
#20
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்
அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதலுடன்
முனைவரை உள் எழுந்தருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்
புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார்
#21
ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பின் உடன்
வாசம் நிறை திருநீற்று காப்பு ஏந்தி மனம் தழைப்ப
தேசம் உய்ய வந்தவரை திரு அமுது செய்விக்கும்
நேசமுற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார்
#22
செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கி
எய்திய பேறு நம்-பால் இருந்தவாறு என்னே என்று
மை திகழ் மிடற்றினான்-தன் அருளினால் வந்தது என்றே
உய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார்
#23
தூய நல் கறிகள் ஆன அறு வகை சுவையால் ஆக்கி
ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருள தங்கள்
சேயவர்-தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழை
மேய பொன் குருத்து கொண்டுவா என விரைந்து விட்டார்
#24
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்று
ஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்கு பெரிய வாழை
மல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்று
அல்லல் உற்று அழுங்கி சோர அங்கையில் தீண்டிற்று அன்றே
#25
கையினில் கவர்ந்து சுற்றி கண் எரி காந்துகின்ற
பை அரா உதறி வீழ்த்து பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்தி
கொய்த இ குருத்தை சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான்
#26
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்த
வருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்
அரும் தவர் அமுது செய்ய தாழ்க்க யான் அறையேன் என்று
திருந்திய கருத்தினோடும் செழு மனை சென்று புக்கான்
#27
எரி விடம் முறையே ஏறி தலை கொண்ட ஏழாம் வேகம்
தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகி தீந்து
விரி உரை குழறி ஆவி விட கொண்டு மயங்கி வீழ்வான்
பரி கல குருத்தை தாயார்-பால் வைத்து படி மேல் வீழ்ந்தான்
#28
தளர்ந்து வீழ் மகனை கண்டு தாயரும் தந்தையாரும்
உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனி
விளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்று
துளங்குதல் இன்றி தொண்டர் அமுது செய்வதற்கு சூழ்வார்
#29
பெறல் அரும் புதல்வன்-தன்னை பாயினுள் பெய்து மூடி
புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தே
அற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்று
விறல் உடை தொண்டனார்-பால் விருப்பொடு விரைந்து வந்தார்
#30
கடிது வந்து அமுது செய்ய காலம் தாழ்கின்றது என்றே
அடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்து
படியில் சீர் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம்
குடி முழுதும் உய்ய கொள்வீர் என்று அவர் கூற கேட்டு
#31
அரும் தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர்
திருந்தும் ஆசனத்தில் ஏறி பரிகலம் திருத்தும் முன்னர்
இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும்
பொருந்திய நீறு நல்கி புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்
#32
ஆதி நான்_மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கி
காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே
மேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மை
யாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார்
#33
அ உரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்
செவ்விய திரு உள்ளத்து ஓர் தடுமாற்றம் சேர நோக்கி
இ உரை பொறாது என் உள்ளம் என்று என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால்
மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி
#34
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோ
வருவது என்று உரையாரேனும் மா தவர் வினவ வாய்மை
தெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்து
பரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே
#35
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்
யாவர் இ தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே
ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்
பா இசை பதிகம் பாடி பணி விடம் பாற்றுவித்தார்
#36
தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்
மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானை போன்று
சே உகைத்தவர் ஆட்கொண்ட திருநாவுக்கரசர் செய்ய
பூ அடி வணங்க கண்டு புனித நீறு அளித்தார் அன்றே
#37
பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையை காண்பார் தொண்டின்
நெறியினை போற்றி வாழ்ந்தார் நின்ற அ பயந்தார் தாங்கள்
அறிவு_அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்கு
சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார்
#38
ஆங்கு அவர் வாட்டம்-தன்னை அறிந்து சொல்_அரசர் கூட
ஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்ற
பாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர்-தாமும்
தாங்கிய மகிழ்ச்சியோடும் தகுவன சமைத்து சார்வார்
#39
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியை பொலிய நீவி
திகழ்ந்த வான் சுதையும் போக்கி சிறப்பு உடை தீபம் ஏற்றி
நிகழ்ந்த அ கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்
மகிழ்ந்து உடன் விளக்கி ஈர் வாய் வலம் பெற மரபின் வைத்தார்
#40
திருந்திய வாச நல் நீர் அளித்திட திரு கை நீவும்
பெரும் தவர் மறையோர்-தம்மை பிள்ளைகள் உடனே நோக்கி
அரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்ன
விரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார்
#41
மைந்தரும் மறையோர்-தாமும் மருங்கு இருந்து அமுது செய்ய
சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்க
கொந்து அவிழ் கொன்றை வேணி கூத்தனார் அடியாரோடும்
அம் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே
#42
மா தவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்து
காதல் நண்பு அளித்து பல் நாள் கலந்து உடன் இருந்த பின்றை
மே தகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்
நாதர்-தம் பாதம் சேர்ந்து நல் தமிழ் பதிகம் செய்வார்
#43
அப்பூதிஅடிகளார்-தம் அடிமையை சிறப்பித்து ஆன்ற
மெய் பூதி அணிந்தார்-தம்மை விரும்பு சொல்_மாலை வேய்ந்த
இ பூதி பெற்ற நல்லோர் எல்லை_இல் அன்பால் என்றும்
செப்பு ஊதியம் கை கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்
#44
இ வகை அரசின் நாமம் ஏத்தி எ பொருளும் நாளும்
அ அரும் தவர் பொன் தாளை என உணர்ந்து அடைவார் செல்லும்
செவ்விய நெறியது ஆக திரு தில்லை மன்று உள் ஆடும்
நவ்வியம் கண்ணாள் பங்கர் நல் கழல் நண்ணினாரே
#45
மான் மறி கையர் பொன் தாள் வாகீசர் அடைவால் பெற்ற
மேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றி
கான் மலர் கமல வாவி கழனி சூழ் சாத்த மங்கை
நான்_மறை நீலநக்கர் திரு தொழில் நவிலல்உற்றேன்

மேல்

6 திருநீலநக்க நாயனார் புராணம்

#1
பூத்த பங்கய பொகுட்டின் மேல் பொரு கயல் உகளும்
காய்த்த செந்நெலின் காடு சூழ் காவிரி நாட்டு
சாத்தமங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதல் பதி வனப்பு
#2
நன்மை சாலும் அ பதியிடை நறு நுதல் மடவார்
மென் மலர் தடம் படிய மற்றவருடன் விரவி
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம்
பன் மறை கிடையுடன் பயிற்றுவ பல பூவை
#3
ஆய்ந்த மெய்ப்பொருள் நீறு என வளர்க்கும் அ காப்பில்
ஏய்ந்த மூன்று_தீ வளர்த்து உளார் இருபிறப்பாளர்
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அ தீயை
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்
#4
சீலம் உய்த்த அ திரு மறையோர் செழு மூதூர்
ஞாலம் மிக்க நான்_மறை பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்
நீலநக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்
#5
வேத உள்ளுறை ஆவன விரி புனல் வேணி
நாதர்-தம்மையும் அவர் அடியாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார்
#6
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
எ திறத்தன பணிகளும் ஏற்று எதிர்செய்வார்
#7
ஆய செய்கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்து
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்
#8
உறையுள் ஆகிய மனை-நின்றும் ஒருமை அன்புற்ற
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன
குறைவு அற கொண்டு மனைவியார்-தம்மொடும் கூட
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லை_இல் தவத்தோர்
#9
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்
துணை மலர் கழல் தொழுது பூசனை செய தொடங்கி
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்
#10
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்
மாடு சூழ் புடை வலம்கொண்டு வணங்கி முன் வழுத்தி
தேடு மா மறை பொருளினை தெளிவுற நோக்கி
நாடும் அஞ்சு_எழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார்
#11
தொலைவு_இல் செய் தவ தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற-காலை
நிலையின்-நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேரு
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி
#12
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போல
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக
#13
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செய பந்தம்
சிதைக்கு மா தவ திரு மறையவர் கண்டு தம் கண்
புதைத்து மற்று இது செய்தது என் பொறி இலாய் என்ன
சுதை சிலம்பி மேல் விழ ஊதி துமிந்தனன் என்றார்
#14
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனை திறத்தில்
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்
நினைவினால் அவர்-தம்மை விட்டு அகன்றிட நீப்பார்
#15
மின் நெடும் சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அணைந்து வந்து ஊதி வாய் நீர் பட முயன்றாய்
உன்னை யான் இனி துறந்தனன் ஈங்கு என உரைத்தார்
#16
மற்ற வேலையில் கதிரவன் மலை மிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்து
கற்றை வேணியார் தொண்டரும் கடி மனை புகுந்தார்
#17
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்
செம் சொல் நான்_மறை திருநீலநக்கர்-தாம் இரவு
பஞ்சின் மெல் அணை பள்ளியில் பள்ளிகொள்கின்றார்
#18
பள்ளிகொள் பொழுது தயவந்தி பரமர்-தாம் கனவில்
வெள்ள நீர் சடையொடு நின்று மேனியை காட்டி
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழிய
கொள்ளும் இ புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள
#19
கண்ட அ பெரும் கனவினை நனவு என கருதி
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்து
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையை போற்றி நின்று அழுதார்
#20
போது போய் இருள் புலர்ந்திட கோயில் உள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்-தம்
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார்
#21
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்து எய்த
இன்புறும் திறத்து எல்லை_இல் பூசனை இயற்றி
அன்பு மேம்படும் அடியவர் மிக அணைவார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்பமுடன் முடிப்பார்
#22
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாளில்
மன்னு பூந்தராய் வரு மறை பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார்
#23
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அ பருவ
மண் பெரும் தவ பயன் பெற மருவு நல் பதிகள்
விண் பிறங்கு நீர் வேணியார்-தமை தொழ அணைவார்
சண்பை மன்னரும் சாத்தமங்கையில் வந்து சார்ந்தார்
#24
நீடு சீர் திருநீலகண்ட பெரும்பாணர்
தோடு உலாம் குழல் விறலியார் உடன் வர தொண்டர்
கூடும் அ பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீலநக்கர்
#25
கேட்ட அப்பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து
தோட்டு அலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள்
நாட்டி நீள் நடை காவணம் இட்டு நல் சுற்றத்து
ஈட்டமும் கொடு தாமும் முன் எதிர்கொள எழுந்தார்
#26
சென்று பிள்ளையார் எழுந்தருளும் திரு கூட்டம்
ஒன்றி அங்கு எதிர்கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்
பொன் தயங்கு நீள் மனையிடை உடன் கொண்டு புகுந்தார்
#27
பிள்ளையார் எழுந்தருளிய பெருமைக்கு தக்க
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி
வள்ளலாரை தம் மனையிடை அமுது செய்வித்தார்
#28
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணைய
குமுத வாவியில் குளிர் மதி கதிர் அணை போதில்
இமய_மங்கை-தன் திரு முலை அமுது உண்டார் இரவும்
தமது சீர் மனை தங்கிட வேண்டுவ சமைத்தார்
#29
சீல மெய் திருத்தொண்டரோடு அமுது செய்து அருளி
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்
காலம் முன்பெற அழுதவர் அழைத்திட கடிது
நீலநக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார்
#30
நின்ற அன்பரை நீலகண்ட பெரும்பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்
#31
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர
தாங்கு நூலவர் மகிழுற சகோட யாழ் தலைவர்
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளிகொண்டார்
#32
கங்குலில் பள்ளிகொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்
அங்கு-நின்று எழுந்தருளுவார் அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீலநக்கரை சிறப்பித்தே
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத்தொடை புனைந்தார்
#33
பதிக நாள்_மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி
அதிக நண்பினை நீலநக்கருக்கு அளித்து அருளி
எதிர்கொளும் பதிகளில் எழுந்தருளினார் என்றும்
புதிய செந்தமிழ் பழ மறை மொழிந்த பூசுரனார்
#34
பிள்ளையார் எழுந்தருள அ தொண்டர் தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பு இல எனினும்
வள்ளலார் திருவருளினை வலிய மாட்டாமை
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்
#35
மேவு நாளில் அ வேதியர் முன்பு போல் விரும்பும்
தா_இல் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்ப
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறை சிறுவர்
பூ அடி தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார்
#36
சண்பை ஆளியார் தாம் எழுந்தருளும் எ பதியும்
நண்பு மேம்பட நாளிடை செலவிட்டு நண்ணி
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்
திண் பெருந்தொண்டர் ஆகிய திருநீலக்கர்
#37
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க
வரு பெரும் தவ மறையவர் வாழி சீகாழி
ஒருவர்-தம் திரு கல்லியாணத்தினில் உடனே
திருமண திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்
#38
தரு தொழில் திரு மறையவர் சாத்தமங்கையினில்
வரு முதல் பெரும் திருநீலநக்கர் தாள் வணங்கி
இருபிறப்பு உடை அந்தணர் ஏறு உயர்த்தவர்-பால்
ஒருமை உய்த்து உணர் நமிநந்தியார் தொழில் உரைப்பாம்

மேல்

7 நமிநந்தி அடிகள் புராணம்

#1
வையம் புரக்கும் தனி செங்கோல் வளவர் பொன்னி திருநாட்டு
செய்ய கமல தடம் பணையும் செழும் நீர் தடமும் புடை உடைத்தாய்
பொய் தீர் வாய்மை அரு_மறை நூல் புரிந்த சீல புகழ்-அதனால்
எய்தும் பெருமை எண் திசையும் ஏறு ஊர் ஏம பேர் ஊரால்
#2
மாலை பயிலும் தோரணங்கள் மருங்கு பயிலும் மணி மறுகு
வேலை பயிலும் புனல் பருகு மேகம் பயிலும் மாடங்கள்
சோலை பயிலும் குளிர்ந்த இருள் சுரும்பு பயிலும் அரும் பூகம்
காலை பயிலும் வேத ஒலி கழுநீர் பயிலும் செழு நீர் செய்
#3
பணையில் விளைந்த வெண் நெல்லின் பரப்பின் மீது பட செய்ய
துணர் மென் கமலம் இடைஇடையே சுடர் விட்டு எழுந்து தோன்றுவன
புணர் வெண் புரி நூலவர் வேள்வி களத்தில் புனைந்த வேதிகை மேல்
மணல் வெண் பரப்பின் இடைஇடையே வளர்த்த செம் தீ மானும்-ஆல்
#4
பெருமை விளங்கும் அ பதியில் பேணும் நீற்று சைவ நெறி
ஒருமை நெறி வாழ் அந்தணர்-தம் ஓங்கு குலத்தினுள் வந்தார்
இருமை உலகும் ஈசர் கழல் இறைஞ்சி ஏத்தப்பெற்ற தவத்து
அருமை புரிவார் நமிநந்திஅடிகள் என்பார் ஆயினார்
#5
வாய்மை மறை நூல் சீலத்தால் வளர்க்கும் செம் தீ என தகுவார்
தூய்மை திருநீற்று அடைவே மெய்ப்பொருள் என்று அறியும் துணிவினார்
சாம கண்டர் செய்ய கழல் வழிபட்டு ஒழுகும் தலைமை நிலை
யாம இரவும் பகலும் உணர் ஒழியா இன்பம் எய்தினார்
#6
அவ்வூர்-நின்றும் திருவாரூர்-அதனை அடைவார் அடியார் மேல்
வெவ் ஊறு அகற்றும் பெருமான்-தன் விரை சூழ் மலர் தாள் பணிவுறுதல்
எ ஊதியமும் என கொள்ளும் எண்ணம் உடையார் பல நாளும்
தெவ் ஊர் எரித்த வரி சிலையார் திரு பாதங்கள் வணங்கினார்
#7
செம்பொன் புற்றின் மாணிக்க செழும் சோதியை நேர் தொழும் சீலம்
தம் பற்று ஆக நினைந்து அணைந்து தாழ்ந்து பணிந்து வாழ்ந்து போந்து
அம் பொன் புரிசை திரு முன்றில் அணைவார் பாங்கு ஓர் அரன் நெறியின்
நம்பர்க்கு இடமாம் கோயிலின் உள் புக்கு வணங்க நண்ணினார்
#8
நண்ணி இறைஞ்சி அன்பினால் நயப்புற்று எழுந்த காதல் உடன்
அண்ணலாரை பணிந்து எழுவார் அடுத்த நிலைமை குறிப்பினால்
பண்ணும் தொண்டின் பாங்கு பல பயின்று பரவி விரவுவார்
எண்_இல் தீபம் ஏற்றுவதற்கு எடுத்த கருத்தின் இசைந்து எழுவார்
#9
எழுந்த பொழுது பகல் பொழுதின் அங்கு இறங்கு மாலை எய்துதலும்
செழும் தண் பதியினிடை அப்பால் செல்லின் செல்லும் பொழுது என்ன
ஒழிந்து அங்கு அணைந்தோர் மனையில் விளக்குறு நெய் வேண்டி உள் புகலும்
அழிந்த நிலைமை அமணர் மனை ஆயிற்று அங்கண் அவர் உரைப்பார்
#10
கையில் விளங்கும் கனல் உடையார்-தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை விளக்கு எரிப்பீராகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்கு உரைத்தார் தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள் மேற்கொள்ளும் புரை நெறியார்
#11
அருகர் மதியாது உரைத்த உரை ஆற்றார் ஆகி அப்பொழுதே
பெருக மனத்தில் வருத்தமுடன் பெயர்ந்து போந்து பிறை அணிந்த
முருகு விரியும் மலர் கொன்றை முடியார் கோயில் முன் எய்தி
உருகும் அன்பர் பணிந்து விழ ஒரு வாக்கு எழுந்தது உயர் விசும்பில்
#12
வந்த கவலை மாற்றும் இனி மாறா விளக்கு பணி மாற
இந்த மருங்கில் குளத்து நீர் முகந்து கொடுவந்து ஏற்றும் என
அந்தி மதியம் அணிந்த பிரான் அருளால் எழுந்த மொழி கேளா
சிந்தை மகிழ்ந்து நமிநந்திஅடிகள் செய்வது அறிந்திலர்-ஆல்
#13
சென்னி மிசை நீர் தரித்த பிரான் அருளே சிந்தை செய்து எழுவார்
நல் நீர் பொய்கை நடு புக்கு நாதர் நாமம் நவின்று ஏத்தி
அ நீர் முகந்து கொண்டு ஏறி அப்பர் கோயில் அடைந்து அகலுள்
முந்நீர் உலகம் அதிசயிப்ப முறுக்கும் திரி மேல் நீர் வார்த்தார்
#14
சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட்டு எழுந்தது அது நோக்கி
ஆதி முதல்வர் அரன் நெறியார் கோயில் அடைய விளக்கு ஏற்றி
ஏதம் நினைந்த அருகந்தர் எதிரே முதிரும் களிப்பினுடன்
நாதர் அருளால் திரு விளக்கு நீரால் எரித்தார் நாடு அறிய
#15
நிறையும் பரிசு திருவிளக்கு விடியும் அளவும் நின்று எரிய
குறையும் தகளிகளுக்கு எல்லாம் கொள்ள வேண்டும் நீர் வார்த்து
மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல்
உறையும் பதியின் அ இரவே அணைவார் பணிவுற்று ஒருப்பட்டார்
#16
இரவு சென்று தம் பதியில் எய்தி மனை புக்கு என்றும் போல்
விரவி நியம தொழில் முறையே விமலர்-தம்மை அருச்சித்து
பரவி அமுது செய்து அருளி பள்ளிகொண்டு புலர் காலை
அரவம் அணிவார் பூசை அமைத்து ஆரூர் நகரின் மீண்டு அணைந்தார்
#17
வந்து வணங்கி அரன் நெறியார் மகிழும் கோயில் வலம்கொண்டு
சிந்தை மகிழ பணிந்து எழுந்து புறம்பும் உள்ளும் திருப்பணிகள்
முந்த முயன்று பகல் எல்லாம் முறையே செய்து மறையவனார்
அந்தி அமையத்து அரிய விளக்கு எங்கும் ஏற்றி அடி பணிவார்
#18
பண்டு போல பல நாளும் பயிலும் பணி செய்து அவர் ஒழுக
தண்டிஅடிகளால் அமணர் கலக்கம் விளைந்து சார்வு இல் அமண்
குண்டர் அழிய ஏழ்_உலகும் குலவும் பெருமை நிலவியதால்
அண்டர் பெருமான் தொண்டர் கழல் அமரர் பணியும் மணி ஆரூர்
#19
நாத மறை தேர் நமிநந்திஅடிகளார் நல் தொண்டு ஆக
பூத நாதர் புற்று இடம் கொள் புனிதர்க்கு அமுது படி முதலாம்
நீதி வளவன் தான் வேண்டும் நிபந்தம் பலவும் அரியணையின்
மீது திகழ இருந்து அமைத்தான் வேத ஆகம நூல் விதி விளங்க
#20
வென்றி விடையார் மதி சடையார் வீதிவிடங்கப்பெருமாள்-தாம்
என்றும் திருவாரூர் ஆளும் இயல்பின் முறைமை திருவிளையாட்டு
ஒன்றும் செயலும் பங்குனி உத்திரம் ஆம் திரு நாள் உயர் சிறப்பும்
நின்று விண்ணப்பம் செய்தபடி செய்து அருளும் நிலைபெற்றார்
#21
இன்ன பரிசு திருப்பணிகள் பலவும் செய்தே ஏழ்_உலகும்
மன்னும் பெருமை திருவாரூர் மன்னர் அடியார் வழி நிற்பார்
அன்ன வண்ணம் திருவிளையாட்டு ஆடி அருள எந்நாளும்
நன்மை பெருக நமிநந்திஅடிகள் தொழுதார் நாம் உய்ய
#22
தேவர் பெருமான் எழுச்சி திருமணலிக்கு ஒரு நாள் எழுந்தருள
யாவர் என்னாது உடன் சேவித்து எல்லா குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்-தம்
காவலாளர் ஓலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார்
#23
பொழுது வைக சேவித்து புனிதர் மீண்டும் கோயில் புக
தொழுது தம் ஊர் மருங்கு அணைந்து தூய மனை உள் புகுதாதே
இழுதும் இருள் சேர் இரவு புறம் கடையில் துயில இல்லத்து
முழுதும் தருமம் புரி மனையார் வந்து உள் புகுத மொழிகின்றார்
#24
திங்கள் முடியார் பூசனைகள் முடித்து செய்யும் கடன் முறையால்
அங்கு இதனை வேட்டு அமுது செய்து பள்ளிகொள்வீர் என அவர்க்கு
தங்கள் பெருமான் திருமணலிக்கு எழுச்சி சேவித்து உடன் நண்ண
எங்கும் எல்லாரும் போத இழிவு தொடக்கிற்று எனை என்று
#25
ஆதலாலே குளித்து அடுத்த தூய்மை செய்தே அகம் புகுந்து
வேத நாதர் பூசனையை தொடங்க வேண்டும் அதற்கு நீ
சீத நல் நீர் முதலான கொண்டு இங்கு அணைவாய் என செப்ப
காதலால் மனையார்-தாமும் அவை கொணரும் அதற்கு கடிது அணைந்தார்
#26
ஆய பொழுது தம் பெருமான் அருளாலேயோ மேனியினில்
ஏயும் அசைவின் அயர்வாலோ அறியோம் இறையும் தாழாதே
மேய உறக்கம் வந்து அணைய விண்ணோர் பெருமான் கழல் நினைந்து
தூய அன்பர் துயில் கொண்டார் துயிலும் பொழுது கனவின்-கண்
#27
மேன்மை விளங்கும் திருவாரூர் வீதிவிடங்கப்பெருமாள்-தாம்
மான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்து அருளி
ஞான மறையோய் ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்று அருளி செய்து அங்கு எதிர் அகன்றார்
#28
ஆதி தேவர் எழுந்தருள உணர்ந்தார் இரவு அர்ச்சனை செய்யாது
ஏதம் நினைந்தேன் என அஞ்சி எழுந்தபடியே வழிபட்டு
மாதரார்க்கும் புகுந்தபடி மொழிந்து விடியல் விரைவோடு
நாதனார்-தம் திருவாரூர் புகுத எதிர் அ நகர் காண்பார்
#29
தெய்வ பெருமாள் திருவாரூர் பிறந்து வாழ்வார் எல்லாரும்
மை வைத்த அனைய மணிகண்டர் வடிவே ஆகி பெருகு ஒளியால்
மொய் வைத்து அமர்ந்த மேனியராம் பரிசு கண்டு முடி குவித்த
கைவைத்து அஞ்சி அவனி மிசை விழுந்து பணிந்து கண்சிறந்தார்
#30
படிவம் மாற்றி பழம்படியே நிகழ்வும் கண்டு பரமர்-பால்
அடியேன் பிழையை பொறுத்து அருள வேண்டும் என்று பணிந்த அருளால்
குடியும் திருவாரூர் அகத்து புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகும் திருத்தொண்டு நிகழ செய்து நிலவுவார்
#31
நீறு புனைவார் அடியார்க்கு நெடு நாள் நியதி ஆகவே
வேறுவேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால்
ஏறு சிறப்பின் மணி புற்றில் இருந்தார் தொண்டர்க்கு ஆணி எனும்
பேறு திருநாவுக்கரசர் விளம்பப்பெற்ற பெருமையினார்
#32
இன்ன வகையால் திருப்பணிகள் எல்லா உலகும் தொழ செய்து
நன்மை பெருகும் நமிநந்திஅடிகள் நயம் ஆர் திரு வீதி
சென்னி மதியும் திரு நதியும் அலைய வருவார் திருவாரூர்
மன்னர் பாத நீழல் மிகும் வளர் பொன் சோதி மன்னினார்
#33
நாட்டார் அறிய முன் நாளில் நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பில் சிறிய மறை புதல்வன்-தன்னை புக்கொளியூர்
தாள் தாமரையின் மடுவின்-கண் தனி மா முதலை வாய்-நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை மீளா வழியின் மீட்பனவே

மேல்