3. இலை மலிந்த சருக்கம்

அதிகாரங்கள்

  1. எறிபத்த நாயனார் புராணம் (87)
  2. ஏனாதிநாத நாயனார் புராணம் (42)
  3. கண்ணப்ப நாயனார் புராணம் (186)
  4. குங்கிலியக் கலய நாயனார் புராணம் (35)
  5. மானக்கஞ்சாறத் தொண்ட நாயனார் புராணம் (37)
  6. அரிவாள்தாய நாயனார் புராணம் (23)
  7. ஆனாய நாயனார் புராணம் (42)


1 எறிபத்த நாயனார் புராணம்

1 எறிபத்த நாயனார் புராணம்

#1
மல்லல் நீர் ஞாலம்-தன்னுள் மழ_விடை_உடையான் அன்பர்க்கு
ஒல்லை வந்து உற்ற செய்கை உற்று இடத்து உதவும் நீரார்
எல்லை_இல் புகழின் மிக்க எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லலாம் படித்து அன்றேனும் ஆசையால் சொல்லல்உற்றாம்
#2
பொன் மலை புலி வென்று ஓங்க புதுமலை இடித்து போற்றும்
அ நெறி வழியே ஆக அயல் வழி அடைத்த சோழன்
மன்னிய அநபாயன் சீர் மரபின் மா நகரம் ஆகும்
தொன் நெடும் கருவூர் என்னும் சுடர் மணி வீதி மூதூர்
#3
மா மதில் மஞ்சு சூழும் மாளிகை நிரை விண் சூழும்
தூ மணி வாயில் சூழும் சோலையில் வாசம் சூழும்
தே மலர் அளகம் சூழும் சில மதி தெருவில் சூழும்
தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ
#4
கட கரி துறையில் ஆடும் களி மயில் புறவில் ஆடும்
அடர் மணி அரங்கில் ஆடும் அரிவையர் குழல் வண்டு ஆடும்
படர் ஒளி மறுகில் ஆடும் பயில் கொடி கதிர் மீது ஆடும்
தடம் நெடும் புவி கொண்டாடும் தனி நகர் வளமை ஈதால்
#5
மன்னிய சிறப்பின் மிக்க வள நகர் அதனில் மல்கும்
பொன்னியல் புரிசை சூழ்ந்து சுரர்களும் போற்றும் பொற்பால்
துன்னிய அன்பின் மிக்க தொண்டர்-தம் சிந்தை நீங்கா
அந்நிலை அரனார் வாழ்வது ஆனிலை என்னும் கோயில்
#6
பொருள் திரு மறை கடந்த புனிதரை இனிது அ கோயில்
மருள் துறை மாற்றும் ஆற்றால் வழிபடும் தொழிலர் ஆகி
இருள் கடு ஒடுங்கு கண்டத்து இறையவர்க்கு உரிமை பூண்டார்க்கு
அருள் பெரும் தொண்டு செய்வார் அவர் எறிபத்தர் ஆவார்
#7
மழை வளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழல் அவிர் சடையான் அன்பர்க்கு அடாதன அடுத்த போது
முழை அரி என்ன தோன்றி முரண் கெட எறிந்து தீர்க்கும்
பழ மறை பரசும் தூய பரசு முன் எடுக்கப்பெற்றார்
#8
அண்ணலார் நிகழும் நாளில் ஆனிலை அடிகளார்க்கு
திண்ணிய அன்பு கூர்ந்த சிவகாமி ஆண்டார் என்னும்
புண்ணிய முனிவனார் தாம் பூ பறித்து அலங்கல் சாத்தி
உள் நிறை காதலோடும் ஒழுகுவார் ஒரு நாள் முன் போல்
#9
வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கி வாயும் கட்டி
மெய் மலர் நெருங்கு வாச நந்த வனத்து முன்னி
கையினில் தெரிந்து நல்ல கமழ் முகை அலரும் வேலை
தெய்வ நாயகருக்கு சாத்தும் திருப்பள்ளி தாமம் கொய்து
#10
கோல பூம் கூடை-தன்னை நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசம் கொண்டு மலர் கையில் தண்டும் கொண்டு அங்கு
ஆலயம் அதனை நோக்கி அங்கணர் அமைத்து சாத்தும்
காலை வந்து உதவ வேண்டி கடிதினில் வாராநின்றார்
#11
மற்றவர் அணைய இப்பால் வள நகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர்-தங்கள் குல புகழ் சோழனார்-தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும் பட்டவர்த்தனமாம் பண்பு
பெற்ற வெம் களிறு கோலம் பெருகு மா நவமி முன்னாள்
#12
மங்கல விழைவு கொண்டு வரு நதி துறை நீராடி
பொங்கிய களிப்பினோடும் பொழி மதம் சொரிய நின்றார்
எங்கணும் இரியல் போக எதிர் பரிகாரர் ஓட
துங்க மால் வரை போல் தோன்றி துண்ணென அணைந்தது அன்றே
#13
வென்றி மால் யானை-தன்னை மேல் கொண்ட பாகரோடும்
சென்று ஒரு தெருவின் முட்டி சிவகாமியார் முன் செல்ல
வன் தனி தண்டில் தூங்கும் மலர் கொள் பூ கூடை-தன்னை
பின் தொடர்ந்து ஓடி சென்று பிடித்து முன் பறித்து சிந்த
#14
மேல் கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்ட
கால் கொண்டு போவார் போல கடிது கொண்டு அகல போக
நூல் கொண்ட மார்பின் தொண்டர் நோக்கினர் பதைத்து பொங்கி
மால் கொண்ட களிற்றின் பின்பு தண்டு கொண்டு அடிக்க வந்தார்
#15
அப்பொழுது அணைய ஒட்டாது அடல் களிறு அகன்று போக
மெய்ப்பொருள் தொண்டர் மூப்பால் விரைந்து பின் செல்ல மாட்டார்
தப்பினர் விழுந்து கையால் தரை அடித்து எழுந்து நின்று
செப்பு_அரும் துயரம் நீடி செயிர்த்து முன் சிவதா என்பார்
#16
களி யானையின் ஈர் உரியாய் சிவதா
எளியார் வலியாம் இறைவா சிவதா
அளியார் அடியார் அறிவே சிவதா
தெளிவார் அமுதே சிவதா சிவதா
#17
ஆறும் மதியும் அணியும் சடை மேல்
ஏறும் மலரை கரி சிந்துவதே
வேறுள் நினைவார் புரம் வெந்து அவிய
சீறும் சிலையாய் சிவதா சிவதா
#18
தஞ்சே சரணம் புகுதும் தமியோர்
நெஞ்சு ஏய் துயரம் கெட நேர் தொடரும்
மஞ்சே என வீழ் மறலிக்கு இறை நீள்
செம் சேவடியாய் சிவதா சிவதா
#19
நெடியோன் அறியா நெறியார் அறியும்
படியால் அடிமை பணி செய்து ஒழுகும்
அடியார்களில் யான் ஆரா அணைவாய்
முடியா முதலாய் எனவே மொழிய
#20
என்று அவர் உரைத்த மாற்றம் எறிபத்தர் எதிரே வாரா
நின்றவர் கேளா மூளும் நெருப்பு உயிர்த்து அழன்று பொங்கி
மன்றவர் அடியார்க்கு என்றும் வழி பகை களிறே அன்றோ
கொன்று அது வீழ்ப்பன் என்று கொலை மழு எடுத்து வந்தார்
#21
வந்தவர் அழைத்த தொண்டர்-தமை கண்டு வணங்கி உம்மை
இந்த வல் இடும்பை செய்த யானை எங்கு உற்றது என்ன
எந்தையார் சாத்தும் பூவை என் கையில் பறித்து மண் மேல்
சிந்தி முன் பிழைத்து போகா நின்றது இ தெருவே என்றார்
#22
இங்கு அது பிழைப்பது எங்கே இனி என எரி வாய் சிந்தும்
அங்கையின் மழுவும் தாமும் அனலும் வெம் காலும் என்ன
பொங்கிய விசையில் சென்று பொரு கரி தொடர்ந்து பற்றும்
செம் கண் வாள் அரியில் கூடி கிடைத்தனர் சீற்றம் மிக்கார்
#23
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அ களிறே போலும்
அண்டரும் மண் உளோரும் தடுக்கினும் அடர்த்து சிந்த
துண்டித்து கொல்வேன் என்று சுடர் மழு வலத்தில் வீசி
கொண்டு எழுந்து ஆர்த்து சென்று காலினால் குலுங்க பாய்ந்தார்
#24
பாய்தலும் மிசை கொண்டு உய்க்கும் பாகரை கொண்டு சீறி
காய் தழல் உமிழ் கண் வேழம் திரிந்து மேல் கதுவ அச்சம்
தாய் தலை அன்பின் முன் நிற்குமே தகைந்து பாய்ந்து
தோய் தனி தட கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்
#25
கையினை துணித்த போது கடல் என கதறி வீழ்ந்து
மை வரை அனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த
வெய்ய கோல் பாகர் மூவர் மிசை கொண்டார் இருவர் ஆக
ஐவரை கொன்று நின்றார் அரு_வரை அனைய தோளார்
#26
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழிய மற்று உள்ளார் ஓடி
மட்டு அவிழ் தொங்கல் மன்னன் வாயில் காவலரை நோக்கி
பட்டவர்த்தனமும் பட்டு பாகரும் பட்டார் என்று
முட்ட நீர் கடிது புக்கு முதல்வனுக்கு உரையும் என்றார்
#27
மற்று அவர் மொழிந்த மாற்றம் மணி கடை காப்போர் கேளா
கொற்றவன்-தன்-பால் எய்தி குரை கழல் பணிந்து போற்றி
பற்றலர் இலாதாய் நின் பொன் பட்ட மால் யானை வீழ
செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர் என்றார்
#28
வளவனும் கேட்ட போதில் மாறு_இன்றி மண் காக்கின்ற
கிளர் மணி தோள் அலங்கல் சுரும்பு இனம் கிளர்ந்து பொங்க
அளவு_இல் சீற்றத்தினாலே யார் செய்தார் என்றும் கேளான்
இள அரி ஏறு போல எழில் மணி வாயில் நீங்க
#29
தந்திர தலைவர்-தாமும் தலைவன்-தன் நிலைமை கண்டு
வந்துற சேனை-தன்னை வல் விரைந்து எழ முன் சாற்ற
அந்தரத்து அகலம் எல்லாம் அணி துகில் பதாகை தூர்ப்ப
எந்திர தேரும் மாவும் இடைஇடை களிறும் ஆகி
#30
வில்லொடு வேல் வாள் தண்டு பிண்டி பாலங்கள் மிக்க
வல் எழும் முசலம் நேமி மழு கழுக்கடை முன் ஆன
பல் படை கலன்கள் பற்றி பைம் கழல் வரிந்த வன் கண்
எல்லை_இல் படைஞர் கொட்புஉற்று எழுந்தனர் எங்கும் எங்கும்
#31
சங்கொடு தாரை காளம் தழங்கு ஒலி முழங்கு பேரி
வெம் குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி
பொங்கு ஒலி சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொற்பின்
மங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க
#32
தூரிய துவைப்பும் முட்டும் சுடர் படை ஒலியும் மாவின்
தார் மணி இசைப்பும் வேழ முழக்கமும் தடம் தேர் சீரும்
வீரர்-தம் செருக்கின் ஆர்ப்பும் மிக்கு எழுந்து ஒன்றாம் எல்லை
காருடன் கடை_நாள் பொங்கும் கடல் என கலித்த அன்றே
#33
பண்ணுறும் உறுப்பு நான்கில் பரந்து எழு சேனை எல்லாம்
மண்ணிடை இறு கால் மேல்மேல் வந்து எழுந்தது போல் தோன்ற
தண் அளி கவிகை மன்னன் தானை பின் தொடர தான் ஓர்
அண்ணல் அம் புரவி மேற்கொண்டு அரச மா வீதி சென்றான்
#34
கடு விசை முடுகி போகி களிற்றொடும் பாகர் வீழ்ந்த
படு களம் குறுக சென்றான் பகை புலத்து அவரை காணான்
விடு சுடர் மழு ஒன்று ஏந்தி வேறு இரு தட கைத்து ஆய
அடு களிறு என்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்
#35
பொன் தவழ் அருவி குன்றம் என புரள் களிற்றின் முன்பு
நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளி
குன்றவர் அடியார் ஆனார் கொற்றவர் இவர் என்று ஓரான்
வென்றவர் இவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான்
#36
அரசன் ஆங்கு அருளி செய்ய அருகு சென்று அணைந்து பாகர்
விரை செய்தார் மாலையோய் நின் விறல் களிற்று எதிரே நிற்கும்
திரை செய் நீர் உலகின் மன்னர் யார் உளார் தீங்கு செய்தார்
பரசு முன் கொண்டு நின்ற இவர் என பணிந்து சொன்னார்
#37
குழை அணி காதினானுக்கு அன்பராம் குணத்தின் மிக்கார்
பிழை படின் அன்றி கொல்லார் பிழைத்தது உண்டு என்று உட்கொண்டு
மழை மத_யானை சேனை வரவினை மாற்றி மற்ற
உழை வய புரவி மேல் நின்று இழிந்தனன் உலக மன்னன்
#38
மை தடம் குன்று போலும் மத_களிற்று எதிரே இந்த
மெய் தவர் சென்ற போது வேறு ஒன்றும் புகுதா விட்ட
அ தவம் உடையேன் ஆனேன் அம்பலவாணர் அன்பர்
இத்தனை முனிய கெட்டேன் என்-கொலோ பிழை என்று அஞ்சி
#39
செறிந்தவர்-தம்மை நீக்கி அன்பர் முன் தொழுது சென்று ஈது
அறிந்திலேன் அடியேன் அங்கு கேட்டது ஒன்று அதுதான் நிற்க
மறிந்த இ களிற்றின் குற்றம் பாகரோடு இதனை மாள
எறிந்ததே போதுமோதான் அருள்செய்யும் என்று நின்றார்
#40
மன்னவன்-தன்னை நோக்கி வானவர் ஈசர் நேசர்
சென்னி இ துங்க வேழம் சிவகாமி ஆண்டார் கொய்து
பன்னக ஆபரணர் சாத்த கொடுவரும் பள்ளி தாமம்
தன்னை முன் பறித்து சிந்த தரை பட துணித்து வீழ்த்தேன்
#41
மாதங்கம் தீங்கு செய்ய வரு பரிக்காரர்-தாமும்
மீது அங்கு கடாவுவாரும் விலக்கிடாது ஒழிந்து பட்டார்
ஈது அங்கு நிகழ்ந்தது என்றார் எறிபத்தர் என்ன அஞ்சி
பாதங்கள் முறையால் தாழ்ந்து பரு வரை தடம் தோள் மன்னன்
#42
அங்கணர் அடியார்-தம்மை செய்த இ அபராதத்துக்கு
இங்கு இது-தன்னால் போதாது என்னையும் கொல்ல வேண்டும்
மங்கல மழுவால் கொல்கை வழக்கும் அன்று இதுவாம் என்று
செம் கையால் உடைவாள் வாங்கி கொடுத்தனர் தீர்வு நேர்வார்
#43
வெம் தழல் சுடர் வாள் நீட்டும் வேந்தனை நோக்கி கெட்டேன்
அந்தம்_இல் புகழான் அன்புக்கு அளவு_இன்மை கண்டேன் என்று
தந்த வாள் வாங்க மாட்டார்-தன்னை தான் துறக்கும் என்று
சிந்தையால் உணர்வுற்று அஞ்சி வாங்கினார் தீங்கு தீர்ப்பார்
#44
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது நின்றே
ஈங்கு எனை வாளினால் கொன்று என் பிழை தீர்க்க வேண்டி
ஓங்கிய உதவி செய்ய பெற்றனன் இவர்-பால் என்றே
ஆங்கு அவர் உவப்ப கண்ட எறிபத்தர் அதனுக்கு அஞ்சி
#45
வன் பெரும் களிறு பாகர் மடியவும் உடைவாளை தந்து
என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும் என்னும்
அன்பனார்-தமக்கு தீங்கு நினைந்தனன் என்று கொண்டு
முன்பு எனது உயிர் செகுத்து முடிப்பதே முடிவு என்று எண்ணி
#46
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்-தம் கழுத்தில் பூட்டி
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் பெரியோர் செய்கை
இருந்தவாறு என் கெட்டேன் என்று எதிர் கடிதில் சென்று
பெரும் தடம் தோளால் கூடி பிடித்தனன் வாளும் கையும்
#47
வளவனார் விடாது பற்ற மா தவர் வருந்துகின்ற
அளவு_இலா பரிவில் வந்த இடுக்கணை அகற்ற வேண்டி
கள மணி களத்து செய்ய கண்_நுதல் அருளால் வாக்கு
கிளர் ஒளி விசும்பின் மேல் வந்து எழுந்தது பலரும் கேட்ப
#48
தொழும் தகை அன்பின் மிக்கீர் தொண்டினை மண் மேற்காட்ட
செழும் திரு மலரை இன்று சின கரி சிந்த திங்கள்
கொழுந்து அணி வேணி கூத்தர் அருளினால் கூடிற்று என்று அங்கு
எழுந்தது பாகரோடும் யானையும் எழுந்தது அன்றே
#49
ஈரவே பூட்டும் வாள் விட்டு எறிபத்தர் தாமும் அந்த
நேரியர் பெருமான் தாள் மேல் விழுந்தனர் நிருபர் கோனும்
போர் வடி வாளை போக எறிந்து அவர் கழல்கள் போற்றி
பார் மிசை பணிந்தான் விண்ணோர் பனி மலர்_மாரி தூர்த்தார்
#50
இருவரும் எழுந்து வானில் எழுந்த பேர் ஒலியை போற்ற
அரு_மறை பொருளாய் உள்ளார் அணிகொள் பூங்கூடை-தன்னில்
மருவிய பள்ளி தாமம் நிறைந்திட அருள மற்று அ
திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்
#51
மட்டு அவிழ் அலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர்
உள் தரும் களிப்பினோடும் உறங்கி மீது எழுந்தது ஒத்து
முட்ட வெம் கடங்கள் பாய்ந்து முகில் என முழங்கி பொங்கும்
பட்டவர்த்தனத்தை கொண்டு பாகரும் அணைய வந்தார்
#52
ஆன சீர் தொண்டர் கும்பிட்டு அடியனேன் களிப்ப இந்த
மான வெம் களிற்றில் ஏறி மகிழ்ந்து எழுந்தருளும் என்ன
மேன்மைய பணி மேற்கொண்டு வணங்கி வெண்குடையின் நீழல்
யானை மேற்கொண்டு சென்றார் இவுளி மேற்கொண்டு வந்தார்
#53
அ நிலை எழுந்த சேனை ஆர்கலி ஏழும் ஒன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப மண் எலாம் மகிழ்ந்து வாழ்த்த
பொன் நெடும் பொதுவில் ஆடல் நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியில் கொண்டு சென்னி திருவளர் கோயில் புக்கான்
#54
தம்பிரான் பணி மேற்கொண்டு சிவகாமியாரும் சார
எம்பிரான் அன்பரான எறிபத்தர் தாமும் என்னே
அம்பலம் நிறைந்தார் தொண்டர் அறிவதற்கு அரியார் என்று
செம்பியன் பெருமை உன்னி திருப்பணி நோக்கி சென்றார்
#55
மற்றவர் இனைய ஆன வன் பெரும் தொண்டு மண் மேல்
உற்றிடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும்நாளும்
நல் தவ கொள்கை தாங்கி நலம் மிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார்
#56
ஆளுடை தொண்டர் செய்த ஆண்மையும் தம்மை கொல்ல
வாளினை கொடுத்து நின்ற வளவனார் பெருமை-தானும்
நாளும் மற்றவர்க்கு நல்கும் நம்பர் தாம் அளக்கிலன்றி
நீளும் இ தொண்டின் நீர்மை நினைக்கில் ஆர் அளக்க வல்லார்
#57
தேன் ஆரும் தண் பூம் கொன்றை செம் சடையவர் பொன் தாளில்
ஆனாத காதல் அன்பர் எறிபத்தர் அடிகள் சூடி
வான் ஆளும் தேவர் போற்றும் மன்று உளார் நீறு போற்றும்
ஏனாதிநாதர் செய்த திரு தொழில் இயம்பல்உற்றேன்

மேல்

2 ஏனாதிநாத நாயனார் புராணம்

#1
புண்டரிகம் பொன் வரை மேல் ஏற்றி புவி அளிக்கும்
தண் தரள வெண் கவிகை தார் வளவர் சோணாட்டில்
வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து
எண் திசையும் ஏறிய சீர் எயின் மூதூர் எயினன் ஊர்
#2
வேழ கரும்பினோடு மென் கரும்பு தண் வயலில்
தாழ கதிர் சாலி தான் ஓங்கும் தன்மையதாய்
வாழ குடி தழைத்து மன்னிய அ பொன் பதியில்
ஈழ குல சான்றார் ஏனாதிநாதனார்
#3
தொன்மை திருநீற்று தொண்டின் வழிபாட்டின்
நன்மை கண் நின்ற நலம் என்றும் குன்றாதார்
மன்னர்க்கு வென்றி வடி வாள் படை பயிற்றும்
தன்மை தொழில் விஞ்சையில் தலைமை சார்ந்து உள்ளார்
#4
வாளின் படை பயிற்றி வந்த வளம் எல்லாம்
நாளும் பெரு விருப்பால் நண்ணும் கடப்பாட்டில்
தாளும் தட முடியும் காணாதார் தம்மையும் தொண்டு
ஆளும் பெருமான் அடி தொண்டர்க்கு ஆக்குவார்
#5
நள்ளர்களும் போற்றும் நன்மை துறையின்-கண்
எள்ளாத செய்கை இயல்பின் ஒழுகு நாள்
தள்ளாத தங்கள் தொழில் உரிமை தாயத்தின்
உள்ளான் அதிசூரன் என்பான் உளன் ஆனான்
#6
மற்றவனும் கொற்ற வடி வாள் படை தொழில்கள்
கற்றவர்கள்-தன்னில் கடந்துள்ளார் இல்லை எனும்
பெற்றிமையான் மா நிலத்து மிக்க பெருமிதம் வந்து
உற்று உலகில் தன்னையே சால மதித்து உள்ளான்
#7
தான் ஆள் விருத்தி கெட தங்கள் குல தாயத்தின்
ஆனாத செய் தொழிலாம் ஆசிரிய தன்மை வளம்
மேல் நாளும் குறைந்து மற்றவர்க்கே மேம்படலால்
ஏனாதிநாதர் திறத்து ஏலா இகல் புரிந்தான்
#8
கதிரோன் எழ மழுங்கி கால் சாயும்-காலை
மதி போல் அழிந்து பொறா மற்று அவனும் சுற்ற
பதியோர் உடன் கூட பண்ணி அமர் மேல் சென்று
எதிர் போர் விளைப்பதற்கே எண்ணி துணிந்து எழுந்தான்
#9
தோள் கொண்ட வல் ஆண்மை சுற்றத்தொடும் துணையாம்
கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத்தொடும் சென்று
வாள் கொண்ட தாயம் வலியாரே கொள்வது என
மூள்கின்ற செற்றத்தான் முன்கடையில்-நின்று அழைத்தான்
#10
வெம் கண் புலி கிடந்த வெம் முழையில் சென்று அழைக்கும்
பைம் கண் குறுநரியே போல்வான் படை கொண்டு
பொங்கி புறம் சூழ்ந்து போர் குறித்து நேர் நின்றே
அங்கண் கடை-நின்று அழைத்தான் ஒலி கேளா
#11
ஆர்-கொல் பொர அழைத்தார் என்று அரி ஏற்றின் கிளர்ந்து
சேர்வு பெற கச்சில் செறிந்த உடை மேல் வீக்கி
வார் கழலும் கட்டி வடி வாள் பல கைகொடு
போர் முனையில் ஏனாதிநாதர் புறப்பட்டார்
#12
புறப்பட்ட போதின்-கண் போர் தொழில்கள் கற்கும்
விறல் பெரும் சீர் காளையர்கள் வேறு இடத்து நின்றார்
மற படை வாள் சுற்றத்தார் கேட்டு ஓடி வந்து
செறற்கு_அரும் போர் வீரர்க்கு இரு மருங்கும் சேர்ந்தார்கள்
#13
வந்து அழைத்த மாற்றான் வய புலி போத்து அன்னார் முன்
நம் தமது வாள் பயிற்று நல் தாயம் கொள்ளும்-கால்
இந்த வெளி மேல் கை வகுத்து இருவேம் பொரு படையும்
சந்தித்து அமர் விளைத்தால் சாயாதார் கொள்வது என
#14
என்று பகைத்தோன் உரைப்ப ஏனாதிநாதர் அது
நன்று உனக்கு வேண்டுமேல் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து
சென்றவன் முன் சொன்ன செரு_களத்து போர் குறிப்ப
கன்றி இரு படையும் கை வகுத்து நேர் மலைவார்
#15
மேக ஒழுங்குகள் முன் கொடு மின் நிரை தம்மிடையே கொடு
மாக மருங்கினும் மண்ணினும் வல் உரும் ஏறு எதிர் செல்வன
வாக நெடும் பல கைக்குலம் ஆள் வினை வாள் உடை ஆடவர்
காகம் மிடைந்த களத்து இரு கைகளின் வந்து கலந்தனர்
#16
கால் கழல் கட்டிய மள்ளர்கள் கைகளின் மெய்கள் அடக்கிய
வாள் ஒளி வட்டம் முளைத்திட வந்து இரு கைகளின் முந்தினர்
வேலொடு வேல் எதிர் நீள்வன மேவிய பாதலம் விட்டு உயர்
ஞாலம் உறும் பணி வீரர்கள் நா நிமிர்கின்றன ஒத்தன
#17
வெம் கண் விறல் சிலை வீரர்கள் வேறு இரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலை குலம் உந்தின தாவு_இல் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்து எரியில் புகை போகு கொடிகள் வளைத்து எதிர்
செம் கண் விழி கனல் சிந்திய சீறு பொறி செலவு ஒத்தன
#18
வாளொடு நீள் கை துடித்தன மார்பொடு வேல்கள் குளித்தன
தோளொடு வாளி நிலத்தன தோலொடு தோல்கள் தகைத்தன
தாளொடு வார் கழல் இற்றன தாரொடு சூழ் சிரம் அற்றன
நாளொடு சீறி மலைப்பவர் நாடிய போர் செய் களத்தினில்
#19
குருதியின் நதிகள் பரந்தன குறை உடல் ஓடி அலைந்தன
பொரு படை அறு துணி சிந்தின புடை சொரி குடர் உடல் பம்பின
வெருவர எருவை நெருங்கின வீசி அறு துடிகள் புரண்டன
இரு படை-தனினும் எதிர்ந்தவர் எதிர்எதிர் அமர் செய் பறந்தலை
#20
நீளிடை முடுகி நடந்து எதிர்நேர் இருவரில் ஒருவன் தொடர்
தாள் இரு தொடை அற முன் பெயர் சாரிகை முறைமை தடிந்தனன்
வாளொடு விழும் உடல் வென்றவன் மார்பிடை அற முன் எறிந்திட
ஆளியின் அவனும் அறிந்தனன் ஆயினர் பலர் உளர் எங்கணும்
#21
கூர் முனை அயில் கொடு முட்டினர் கூடி முன் உருவிய தட்டுடன்
நேர் உரம் உருவ உரப்புடன் நேர்பட எதிர்எதிர் குத்தினர்
ஆருயிர் கழியவும் நிற்பவர் ஆண்மையில் இருவரும் ஒத்தமை
போர் அடு படைகொடு அளப்பவர் போல்பவர் அளவு_இலர் பட்டனர்
#22
பொன் சிலை வளைய எதிர்ந்தவர் புற்று அரவு அனைய சரம்பட
வில் படை துணியவும் நின்றிலர் வெற்றி கொள் சுரிகை வழங்கினர்
முற்றிய பெரு வளன் இன்றியும் முற்படு கொடை நிலை நின்றிட
உற்றன உதவிய பண்பினர் ஒத்தனர் உளர் சில கண்டகர்
#23
அடல் முனை மறவர் மடிந்தவர் அலர் முகம் உயிர் உள வென்றுறு
படர் சிறை சுலவு கரும் கொடி படர்வன சுழல்வன துன்றலில்
விடு சுடர் விழிகள் இரும்பு செய் வினைஞர் தம் உலையின் முகம் பொதி
புடை மிடை கரியிடை தங்கிய புகை விடு தழலை நிகர்த்தன
#24
திண் படை வயவர் பிணம்படு செங்களம் அதனிடை முன் சிலர்
புண்படு வழி சொரியும் குடர் பொங்கிய கழுகு பருந்தொடு
கொண்டு எழு பொழுதினும் முன் செயல் குன்றுதல் இலர் தலை நின்றனர்
விண் படர் கொடி விடு பண் பயில் விஞ்சையர் குமரரை வென்றனர்
#25
இ முனைய வெம் போரில் இரு படையின் வாள் வீரர்
வெம் முனையில் வீடிய பின் வீடாது மிக்கு ஒழிந்த
தம்முடைய பல் படைஞர் பின்னாக தாம் முன்பு
தெம் முனையில் ஏனாதிநாதர் செயிர்த்து எழுந்தார்
#26
வெம் சின வாள் தீ உமிழ வீர கழல் கலிப்ப
நஞ்சு அணி கண்டர்க்கு அன்பர் தாம் எதிர்ந்த ஞாட்பின்-கண்
எஞ்சி எதிர்நின்ற இகல் முனையில் வேல்_உழவர்
தம் சிரமும் தோள் உரமும் தாள் உரமும் தாம் துணித்தார்
#27
தலைப்பட்டார் எல்லாரும் தனி வீரர் வாளில்
கொலைப்பட்டார் முட்டாதார் கொல்_களத்தை விட்டு
நிலைப்பட்ட மெய் உணர்வு நேர்பட்ட போதில்
அலைப்பட்ட ஆர்வம் முதல் குற்றம் போல் ஆயினார்
#28
இ நிலைய வெம் களத்தில் ஏற்று அழிந்த மானத்தால்
தன்னுடைய பல் படைஞர் மீண்டார்-தமை கொண்டு
மின் ஒளி வாள் வீசி விறல் வீரர் வெம் புலி ஏறு
அன்னவர்-தம் முன் சென்று அதிசூரன் நேர் அடர்ந்தான்
#29
மற்று அவர் தம் செய்கை வடி வாள் ஒளி காண
சுற்றி வரும் வட்டணையில் தோன்றா வகை கலந்து
பற்றி அடர்க்கும் பொழுதில் தானும் படை பிழைத்து
பொன் தடம் தோள் வீரர்க்கு உடைந்து புறகிட்டான்
#30
போன அதிசூரன் போரில் அவர் கழிந்த
மான மிக மீதூர மண் படுவான் கண் படான்
ஆன செயல் ஓர் இரவும் சிந்தித்து அலமந்தே
ஈனம் மிகு வஞ்சனையால் வெல்வன் என எண்ணினான்
#31
கேட்டாரும் கங்குல் புலர் காலை தீயோனும்
நாட்டாரை கொல்லாதே நாம் இருவேம் வேறு இடத்து
வாள் தாயம் கொள் போர் மலைக்க வருக என
தோட்டார் பூம் தாரார்க்கு சொல்லி செலவிட்டான்
#32
இவ்வாறு கேட்டலுமே ஏனாதிநாதனார்
அவ்வாறு செய்தல் அழகு இது என அமைந்து
கை வாள் அமர் விளைக்க தான் கருதும் அ களத்தில்
வெவ் வாள் உரவோன் வருக என மேல் கொள்வார்
#33
சுற்றத்தார் யாரும் அறியா வகை சுடர் வாள்
பொன் பலகையும் தாமே கொண்டு புறம் போந்து
மற்று அவன் முன் சொல்லி வர குறித்தே அ களத்தே
பற்றலனை முன் வரவு பார்த்து தனி நின்றார்
#34
தீங்கு குறித்து அழைத்த தீயோன் திருநீறு
தாங்கிய நெற்றியினார் தங்களையே எவ்விடத்தும்
ஆங்கு அவரும் தீங்கு இழையார் என்பது அறிந்தானாய்
பாங்கில் திருநீறு பண்டு பயிலாதான்
#35
வெண் நீறு நெற்றி விரவ புறம் பூசி
உள் நெஞ்சில் வஞ்ச கறுப்பும் உடன் கொண்டு
வண்ண சுடர் வாள் மணி பலகை கை கொண்டு
புண்ணிய போர் வீரர்க்கு சொன்ன இடம் புகுந்தான்
#36
வென்றி மடங்கல் விடக்கு வர முன் பார்த்து
நின்றால் போல் நின்ற நிலை கண்டு தன் நெற்றி
சென்று கிடப்பளவும் திண் பலகையான் மறைத்தே
முன் தன் வீரர்க்கு எதிரே மூண்டான் மறம் பூண்டான்
#37
அடல் விடை ஏறு என்ன அடர்த்து அவனை கொல்லும்
இடை தெரிந்து தாள் பெயர்க்கும் ஏனாதிநாதர்
புடை பெயர்ந்த மாற்றான் பலகை புறம் போக்க
கடையவன்-தன் நெற்றியின் மேல் வெண் நீறு தாம் கண்டார்
#38
கண்ட பொழுதே கெட்டேன் முன்பு இவர் மேல் காணாத
வெண் திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் வேறு இனி என்
அண்டர் பிரான் சீர் அடியார் ஆயினார் என்று மனம்
கொண்டு இவர் தம் கொள்கை குறி வழி நிற்பேன் என்று
#39
கை வாளுடன் பலகை நீக்க கருதி அது
செய்யார் நிராயுதரை கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு என்று இரும் பலகை
நெய் வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நின்றார்
#40
அ நின்ற தொண்டர் திரு உள்ளம் ஆர் அறிவார்
முன் நின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான்
இ நின்ற தன்மை அறிவார் அவர்க்கு அருள
மின் நின்ற செம் சடையார் தாமே வெளி நின்றார்
#41
மற்று இனி நாம் போற்றுவது என் வானோர் பிரான் அருளை
பற்று அலர் தம் கை வாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளி
பொன் தொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்
#42
தம் பெருமான் சாத்தும் திருநீற்று சார்பு உடைய
எம்பெருமான் ஏனாதிநாதர் கழல் இறைஞ்சி
உம்பர் பிரான் காளத்தி உத்தமர்க்கு கண் அப்பும்
நம் பெருமான் செய்த பணி நாம் தெரிந்தவாறு உரைப்பாம்

மேல்

3 கண்ணப்ப நாயனார் புராணம்

#1
மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மை
காவலர் திருக்காளத்தி கண்ணப்பர் திரு நாடு என்பர்
நாவலர் புகழ்ந்து போற்றும் நல் வளம் பெருகி நின்ற
பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு
#2
இ திருநாடு-தன்னில் இவர் திருப்பதி யாது என்னில்
நித்தில அருவி சாரல் நீள் வரை சூழ்ந்த பாங்கர்
மத்த வெம் களிற்று கோட்டு வன் தொடர் வேலி கோலி
ஒத்த பேர் அரணம் சூழ்ந்த முது பதி உடுப்பூர் ஆகும்
#3
குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யாத்த
வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்
#4
வன் புலி குருளையோடும் வய கரி கன்றினோடும்
புன் தலை சிறு மகார்கள் புரிந்து உடன் ஆடல் அன்றி
அன்புறு காதல் கூற அணையும் மான் பிணைகளோடும்
இன்புற மருவி ஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்
#5
வெல் படை தறுகண் வெம் சொல் வேட்டுவர் கூட்டம்-தோறும்
கொல் எறி குத்து என்று ஆர்த்து குழுமிய ஓசை அன்றி
சில் அரி துடியும் கொம்பும் சிறு கண் ஆகுளியும் கூடி
கல் எனும் ஒலியின் மேலும் கறங்கு இசை அருவி எங்கும்
#6
ஆறலைத்து உண்ணும் வேடர் அயல் புலம் கவர்ந்து கொண்ட
வேறு பல் உருவின் மிக்கு விரவும் ஆன் நிரைகள் அன்றி
ஏறு உடை வானம் தன்னில் இடி குரல் எழிலியோடு
மாறுகொள் முழக்கம் காட்டும் மத கை_மா நிரைகள் எங்கும்
#7
மை செறிந்து அனைய மேனி வன் தொழில் மறவர்-தம்-பால்
அச்சமும் அருளும் என்றும் அடைவிலார் உடை வன் தோலார்
பொச்சை இன் நறவும் ஊனின் புழுக்கலும் உணவு கொள்ளும்
நச்சு அழல் பகழி வேடர்க்கு அதிபதி நாகன் என்பான்
#8
பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால்
குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்றுள்ளான்
வில் தொழில் விறலின் மிக்கான் வெம் சின மடங்கல் போல்வான்
மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்
#9
அரும்_பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள்
இரும் புலி எயிற்று தாலி இடைஇடை மனவு கோத்து
பெரும் புறம் அலைய பூண்டாள் பீலியும் குழையும் தட்ட
சுரும்பு உறு படலை முச்சி சூர் அரி பிணவு போல்வாள்
#10
பொருவு_அரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு இனி புதல்வர் பேறே
அரியது என்று எவரும் கூற அதற்படு காதலாலே
முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று
பரவுதல் செய்து நாளும் பராய் கடன் நெறியில் நிற்பார்
#11
வாரண சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டு
தோரண மணிகள் தூக்கி சுரும்பு அணி கதம்பம் நாற்றி
போர் அணி நெடு வேலோற்கு புகழ்புரி குரவை தூங்க
பேர் அணங்கு ஆடல் செய்து பெரு விழா எடுத்த பின்றை
#12
பயில் வடு பொலிந்த யாக்கை வேடர்-தம் பதியாம் நாகற்கு
எயில் உடை புரங்கள் செற்ற எந்தையார் மைந்தர் ஆன
மயில் உடை கொற்ற ஊர்தி வரை உரம் கிழித்த திண்மை
அயில் உடை தட கை வென்றி அண்ணலார் அருளினாலே
#13
கானவர் குலம் விளங்க தத்தை-பால் கருப்பம் நீட
ஊனம்_இல் பலிகள் போக்கி உறு கடன் வெறி ஆட்டோடும்
ஆன அ திங்கள் செல்ல அளவு_இல் செய் தவத்தினாலே
பால் மதி உவரி ஈன்றால் என மக பயந்த போது
#14
கரி பரு மருப்பின் முத்தும் கழை விளை செழு நீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர் பொழி தரு மழையே அன்றி
வரி சுரும்பு அலைய வானின் மலர் மழை பொழிந்தது எங்கும்
அரி குறும் துடியே அன்றி அமரர் துந்துபியும் ஆர்த்த
#15
அரு_வரை குறவர் தங்கள் அகன் குடி சீறூர் ஆயம்
பெரு விழா எடுத்து மிக்க பெரும் களிகூரும்-காலை
கரு வரை காள மேகம் ஏந்தியது என்ன தாதை
பொரு வரை தோள்கள் ஆர புதல்வனை எடுத்துக்கொண்டான்
#16
கரும் கதிர் விரிக்கும் மேனி காமரு குழவி-தானும்
இரும் புலி பறழின் ஓங்கி இறவுளர் அளவே அன்றி
அரும்_பெறல் உலகம் எல்லாம் அளப்பு_அரும் பெருமை காட்டி
தரும் குறி பலவும் சாற்றும் தன்மையில் பொலிந்து தோன்ற
#17
அண்ணலை கையில் ஏந்தற்கு அருமையால் உரிமை பேரும்
திண்ணன் என்று இயம்பும் என்ன திண் சிலை வேடர் ஆர்த்தார்
புண்ணிய பொருளாய் உள்ள பொருவு_இல் சீர் உருவினானை
கண்ணினுக்கு அணியா தங்கள் கலன் பல அணிந்தார் அன்றே
#18
வரை உறை கடவுள் காப்பு மற_குடி மரபில் தங்கள்
புரை_இல் தொல் முறைமைக்கு ஏற்ப பொருந்துவ போற்றி செய்து
விரை இளம் தளிரும் சூட்டி வேம்பு இழைத்து இடையே கோத்த
அரை மணி கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்
#19
வருமுறை பருவம்-தோறும் வளம் மிகு சிறப்பில் தெய்வ
பெருமடை கொடுத்து தொக்க பெரு விறல் வேடர்க்கு எல்லாம்
திரு மலி துழனி பொங்க செழும் களி மகிழ்ச்சி செய்தே
அருமையில் புதல்வர் பெற்ற ஆர்வமும் தோன்ற உய்த்தார்
#20
ஆண்டு எதிர் அணைந்து செல்ல விடும் அடி தளர்வு நீங்கி
பூண் திகழ் சிறு புன் குஞ்சி புலி உகிர் சுட்டி சாத்தி
மூண்டு எழு சினத்து செம் கண் முளவு முள் அரிந்து கோத்த
நாண் தரும் எயிற்று தாலி நலம் கிளர் மார்பில் தூங்க
#21
பாசொளி மணியோடு ஆர்த்த பல் மணி சதங்கை ஏங்க
காசொடு தொடுத்த காப்பு கலன் புனை அரை_ஞாண் சேர்த்தி
தேசு உடை மருப்பில் தண்டை செறி மணி குதம்பை மின்ன
மாசு_அறு கோலம் காட்டி மறுகிடை ஆடும் நாளில்
#22
தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்
உள் நனைந்து அமுதம் ஊறி ஒழுகிய மழலை தீம் சொல்
வண்ண மென் பவள செவ் வாய் குதட்டியே வளரா நின்றார்
#23
பொரு புலி பார்வை பேழ் வாய் முழை என பொற்கை நீட்ட
பரி உடை தந்தை கண்டு பைம் தழை கைகொண்டு ஓச்ச
இரு சுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி
வரு துளி முத்தம் அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி
#24
துடி குறடு உருட்டி ஓடி தொடக்கு நாய் பாசம் சுற்றி
பிடித்து அறுத்து எயின பிள்ளை பேதையர் இழைத்த வண்டல்
அடி சிறு தளிரால் சிந்தி அருகுஉறு சிறுவரோடும்
குடி செறு குரம்பை எங்கும் குறு நடை குறும்பு செய்து
#25
அனையன பலவும் செய்தே ஐந்தின் மேல் ஆன ஆண்டின்
வனை தரு வடிவார் கண்ணி மற சிறு மைந்தரோடும்
சினை மலர் காவுள் ஆடி செறி குடி குறிச்சி சூழ்ந்த
புனை மருப்பு உழலை வேலி புற சிறு கானில் போகி
#26
கடு முயல் பறழினோடும் கான ஏனத்தின் குட்டி
கொடு வரி குருளை செந்நாய் கொடும் செவி சாபம் ஆன
முடுகிய விசையில் ஓடி தொடர்ந்து உடன் பற்றி முற்றத்து
இடு மர திரளில் கட்டி வளப்பன எண்_இலாத
#27
அலர் பகல் கழிந்த அந்தி ஐயவி புகையும் ஆட்டி
குல முது குறத்தி ஊட்டி கொண்டு கண் துயிற்றி கங்குல்
புலர ஊன் உணவு நல்கி புரி விளையாட்டின் விட்டு
சில முறை ஆண்டு செல்ல சிலை பயில் பருவம் சேர்ந்தார்
#28
தந்தையும் மைந்தனாரை நோக்கி தன் தடித்த தோளால்
சிந்தை உள் மகிழ புல்லி சிலை தொழில் பயிற்ற வேண்டி
முந்தை அ துறையில் மிக்க முதியரை அழைத்து கூட்டி
வந்த நாள் குறித்தது எல்லாம் மறவர்க்கு சொல்லிவிட்டான்
#29
வேடர்-தம் கோமான் நாதன் வென்றி வேள் அருளால் பெற்ற
சேடரின் மிக்க செய்கை திண்ணன் வில் பிடிக்கின்றான் என்று
ஆடு இயல் துடியும் சாற்றி அறைந்த பேர் ஓசை கேட்டு
மாடு உயர் மலைகள் ஆளும் மற_குல தலைவர் எல்லாம்
#30
மலை படு மணியும் பொன்னும் தரளமும் வரியின் தோலும்
கொலை புரி களிற்று கோடும் பீலியின் குவையும் தேனும்
தொலைவு_இல் பல் நறவும் ஊனும் பழங்களும் கிழங்கும் துன்ற
சிலை பயில் வேடர் கொண்டு திசை-தொறும் நெருங்க வந்தார்
#31
மல்கிய வளங்கள் எல்லாம் நிறைந்திட மாறு_இல் சீறூர்
எல்லையில் அடங்கா வண்ணம் ஈண்டினர் கொணர்ந்தார் எங்கும்
பல் பெரும் கிளைஞர் போற்ற பராய் கடன் பலவும் செய்து
வில் விழா எடுக்க என்று விளம்பினான் வேடர் கோமன்
#32
பான்மையில் சமைத்து கொண்டு படைக்கலம் வினைஞர் ஏந்த
தேன் அலர் கொன்றையார்-தம் திருச்சிலை செம்பொன் மேரு
வானது கடலின் நஞ்சும் ஆக்கிட அவர்க்கே பின்னும்
கான ஊன் அமுதம் ஆக்கும் சிலையினை காப்பு செய்தார்
#33
சிலையினை காப்பு கட்டும் திண் புலி நரம்பில் செய்த
நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகர்
குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி
மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்த எடுத்து இயம்பினார்கள்
#34
ஐவன அடிசில் வெவ்வேறு அமைந்தன புல்-பால் சொன்றி
மொய் வரை தினை மென் சோறு மூங்கில் வன் பதங்கள் மற்றும்
கைவினை எயினர் ஆக்கி கலந்த ஊன் கிழங்கு துன்ற
செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சின வில் வேடர்
#35
செந்தினை இடியும் தேனும் அருந்துவார் தேனில் தோய்த்து
வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார்
நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார் வெவ்வேறு
அந்தம்_இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு_இலார்கள்
#36
அயல் வரை புலத்தின் வந்தார் அரும் குடி இருப்பின் உள்ளார்
இயல் வகை உணவில் ஆர்ந்த எயிற்றியர் எயினர் எல்லாம்
உயர் கதிர் உச்சி நீங்க ஒழிவு_இல் பல் நறவு மாந்தி
மயலுறு களிப்பின் நீடி வரி சிலை விழவு கொள்வார்
#37
பாசிலை படலை சுற்றி பன் மலர் தொடையல் சூடி
காசு உடை வட தோல் கட்டி கவடி மெய் கலன்கள் பூண்டார்
மாசு_இல் சீர் வெட்சி முன்னா வரு துறை கண்ணி சூடி
ஆசு_இல் ஆசிரியன் ஏந்தும் அடல் சிலை மருங்கு சூழ்ந்தார்
#38
தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண் திறல் மறவர் ஆர்ப்பு சேண் விசும்பு இடித்து செல்ல
கொண்ட சீர் விழவு பொங்க குறிச்சியை வலம்கொண்டார்கள்
#39
குன்றவர் களி கொண்டாட கொடிச்சியர் துணங்கை ஆட
துன்றிய மகிழ்ச்சியோடும் சூர்_அரமகளிர் ஆட
வென்றி வில் விழவினோடும் விருப்பு உடை ஏழாம் நாளாம்
அன்று இரு மடங்கு செய்கை அழகுற அமைத்த பின்னர்
#40
வெம் கதிர் விசும்பின் உச்சி மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க மருங்கு பல்லியங்கள் ஆர்ப்ப
தங்கள் தொல் மரபின் விஞ்சை தனு தொழில் வலவர்-தம்-பால்
பொங்கு ஒளி கரும் போர் ஏற்றை பொரு சிலை பிடிப்பித்தார்கள்
#41
பொன் தட வரையின் பாங்கர் புரிவுறு கடன் முன் செய்த
வில் தொழில் களத்தில் நண்ணி விதிமுறை வணங்கி மேவும்
அற்றை நாள் தொடங்கி நாளும் அடல் சிலை ஆண்மை முற்ற
கற்றனர் என்னை ஆளும் கானவர்க்கு அரிய சிங்கம்
#42
வண்ண வெம் சிலையும் மற்ற படைகளும் மலர கற்று
கண் அகல் சாயல் பொங்க கலை வளர் திங்களே போல்
எண்_இரண்டு ஆண்டின் செவ்வி எய்தினார் எல்லை இல்லா
புண்ணியம் தோன்றி மேல்மேல் வளர்வதன் பொலிவு போல்வார்
#43
இவ்வண்ணம் திண்ணனார் நிரம்பு நாளில் இரும் குறவர் பெருங்குறிச்சிக்கு இறைவன் ஆய
மை வண்ண வரை நெடும் தோள் நாகன்-தானும் மலை எங்கும் வனம் எங்கும் வரம்பு_இல் காலம்
கை வண்ண சிலை வேட்டையாடி தெவ்வர் கண நிரைகள் பல கவர்ந்து கானம் காத்து
மெய் வண்ணம் தளர மூப்பின் பருவம் எய்தி வில்_உழவின் பெரு முயற்சி மெலிவன் ஆனான்
#44
அங்கண் மலை தடம் சாரல் புனங்கள் எங்கும் அடல் ஏனம் புலி கரடி கடமை ஆமா
வெம் கண் மரை கலையொடு மான் முதலாய் உள்ள மிருகங்கள் மிக நெருங்கி மீதூர் காலை
திங்கள் முறை வேட்டை வினை தாழ்த்தது என்று சிலை வேடர் தாம் எல்லாம் திரண்டு சென்று
தங்கள் குல முதல் தலைவன் ஆகி உள்ள தண் தெரியல் நாகன்-பால் சார்ந்து சொன்னார்
#45
சொன்ன உரை கேட்டலுமே நாகன்-தானும் சூழ்ந்து வரும் தன் மூப்பின் தொடர்வு நோக்கி
முன் அவர்கட்கு உரை செய்வான் மூப்பினாலே முன்பு போல் வேட்டையினில் முயலகில்லேன்
என் மகனை உங்களுக்கு நாதன் ஆக எல்லீரும் கைக்கொள்-மின் என்ற போதின்
அன்னவரும் இரங்கி பின் மகிழ்ந்து தம் கோன் அடி வணங்கி இ மாற்றம் அரைகின்றார்கள்
#46
இத்தனை காலமும் நினது சிலை கீழ் தங்கி இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம் இன்னும்
அத்த நினது அருள் வழியே நிற்பது அல்லால் அடுத்த நெறி வேறு உளதோ அதுவே அன்றி
மெய்த்த விறல் திண்ணனை உன் மரபில் சால மேம்படவே பெற்று அளித்தாய் விளங்கு மேன்மை
வைத்த சிலை மைந்தனை ஈண்டு அழைத்து நுங்கள் வரை ஆட்சி அருள் என்றார் மகிழ்ந்து வேடர்
#47
சிலை மறவர் உரை செய்ய நாகன்-தானும் திண்ணனை முன் கொண்டுவர செப்பி விட்டு
மலை மருவு நெடும் கானில் கன்னி_வேட்டை மகன் போக காடு பலி மகிழ்வு ஊட்ட
தலை மரபின் வழி வந்த தேவராட்டி-தனை அழை-மின் என அங்கு சார்ந்தோர் சென்று
நிலைமை அவள் தனக்கு உரைப்ப நரை மூதாட்டி நெடிது வந்து விருப்பினோடும் கடிது வந்தாள்
#48
கானில் வரி தளிர் துதைந்த கண்ணி சூடி கலை மருப்பின் அரிந்த குழை காதில் பெய்து
மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு
தான் இழிந்து இரங்கி முலை சரிந்து தாழ தழை பீலி மரவுரி மேல் சார எய்தி
பூ நெருங்கு தோரை மலி சேடை நல்கி போர் வேடர் கோமானை போற்றி நின்றாள்
#49
நின்ற முது குற கோல படிமத்தாளை நேர் நோக்கி அன்னை நீ நிரப்பு நீங்கி
நன்று இனிதின் இருந்தனையோ என்று கூறும் நாகன் எதிர் நலம் பெருக வாழ்த்தி நல்ல
மென் தசையும் ஈயலொடு நறவும் வெற்பில் விளை வளனும் வேண்டிற்று எல்லாம்
அன்று நீ வைத்தபடி பெற்று வாழ்வேன் அழைத்த பணி என் என்றாள் அணங்கு சார்ந்தாள்
#50
கோட்டம்_இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள் குல தலைமை யான் கொடுப்ப கொண்டு பூண்டு
பூட்டுறு வெம் சிலை வேடர்-தம்மை காக்கும் பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து வேறு புலம் கவர் வென்றி மேவுமாறு
காட்டில் உறை தெய்வங்கள் விரும்பி உண்ண காடு பலி ஊட்டு என்றான் கவலை இல்லான்
#51
மற்று அவன்-தன் மொழி கேட்ட வரை சூராட்டி மனம் மகிழ்ந்து இங்கு அன்போடு வருகின்றேனுக்கு
எற்றையினும் குறிகள் மிக நல்ல ஆன இதனாலே உன் மைந்தன் திண்ணனான வெற்றி வரி
சிலையோன் நின் அளவில் அன்றி மேம்படுகின்றான் என்று விரும்பி வாழ்த்தி
கொற்றவன் தெய்வங்கள் மகிழ ஊட்ட வேண்டுவன குறைவு இன்றி கொண்டு போனாள்
#52
தெய்வ நிகழ் குற முதியாள் சென்ற பின்பு திண்ணனார் சிலை தாதை அழைப்ப சீர் கொள்
மை விரவு நறும் குஞ்சி வாச கண்ணி மணி நீல ஒன்று வந்தது என்ன
கை விரவு சிலை வேடர் போற்ற வந்து காதல் புரி தாதை கழல் வணங்கும் போதில்
செய் வரை போல் புயம் இரண்டும் செறிய புல்லி செழும் புலித்தோல் இருக்கையின் முன் சேர வைத்தான்
#53
முன் இருந்த மைந்தன் முகம் நோக்கி நாகன் மூப்பு எனை வந்து அடைதலினால் முன்பு போல
என்னுடைய முயற்சியினால் வேட்டையாட இனி எனக்கு கருத்து இல்லை எனக்கு மேலாய்
மன்னு சிலை மலையர் குல காவல் பூண்டு மாறு எறிந்து மா வேட்டையாடி என்றும்
உன்னுடைய மரபு உரிமை தாங்குவாய் என்று உடை தோலும் சுரிகையும் கை கொடுத்தான் அன்றே
#54
தந்தை நிலை உட்கொண்டு தளர்வு கொண்டு தங்கள் குல தலைமைக்கு சார்வு தோன்ற
வந்த குறைபாடு அதனை நிரப்புமாறு மனம் கொண்ட குறிப்பினால் மறாமை கொண்டு
முந்தையவன் கழல் வணங்கி முறைமை தந்த முதல் சுரிகை உடை தோலும் வாங்கிக்கொண்டு
சிந்தை பரம் கொள நின்ற திண்ணனார்க்கு திரு தாதை முகம் மலர்ந்து செப்புகின்றான்
#55
நம்முடைய குல மறவர் சுற்றத்தாரை நான் கொண்டு பரித்து அதன் மேல் நலமே செய்து
தெம் முனையில் அயல் புலங்கள் கவர்ந்து கொண்ட திண் சிலையின் வளம் ஒழியா சிறப்பின் வாழ்வாய்
வெம் முனையின் வேட்டைகளும் உனக்கு வாய்க்கும் விரைந்து நீ தாழாதே வேட்டையாட
இ முரண் வெம் சிலை வேடர்-தங்களோடும் எழுக என விடைகொடுத்தான் இயல்பில் நின்றான்
#56
செம் கண் வய கோள் அரி ஏறு அன்ன திண்மை திண்ணனார் செய் தவத்தின் பெருமை பெற்ற
வெம் கண் விறல் தாதை கழல் வணங்கி நின்று விடைகொண்டு புறம் போந்து வேடரோடும்
மங்கல நீர் சுனை படிந்து மனையின் வைகி வைகு இருளின் புலர் காலை வரி வில் சாலை
பொங்கு சிலை அடல் வேட்டை கோலம் கொள்ள புனை தொழில் கை வினைஞரோடும் பொலிந்து புக்கார்
#57
நெறி கொண்ட குஞ்சி சுருள் துஞ்சி நிமிர்ந்து பொங்க
முறி கொண்ட கண்ணிக்கு இடை மொய் ஒளி பீலி சேர்த்தி
வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி
செறி கொண்ட வண்டின் குலம் சீர் கொள பின்பு செய்து
#58
முன் நெற்றியின் மீது முருந்திடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர் கயிறு ஆர சாத்தி
மின்னல் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
மன்னி புடை நின்றன மா மதி போல வைக
#59
கண்டத்திடை வெண் கவடி கதிர் மாலை சேர
கொண்ட கொடு பல் மணி கோத்து இடை ஏன கோடு
துண்ட பிறை போல்வன தூங்கிட வேங்கை வன் தோல்
தண்டை செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க
#60
மார்பில் சிறு தந்த மணி திரள் மாலை தாழ
தாரின் பொலி தோள் வலயங்கள் தழைத்து மின்ன
சேர் வில் பொலி கங்கண மீது திகழ்ந்த முன்கை
கார் வில் செறி நாண் எறி கை செறி கட்டி கட்டி
#61
அரையில் சரணத்து உரி ஆடையின் மீது பௌவ
திரையில் படு வெள் அலகு ஆர்த்து விளிம்பு சேர்த்தி
நிரையில் பொலி நீள் உடை தோல் கரிகை புறம் சூழ்
விரை_இல் துவர் வார் விசி போக்கி அமைத்து வீக்கி
#62
வீர கழல் காலின் விளங்க அணிந்து பாதம்
சேர தொடு நீடு செருப்பு விருப்பு வாய்ப்ப
பார பெரு வில் வலம்கொண்டு பணிந்து திண்ணன்
சார திருத்தாள் மடித்து ஏற்றி வியந்து தாங்கி
#63
அங்கு அப்பொழுதில் புவனத்து இடர் வாங்க ஓங்கி
துங்க பெரு மா மழை போன்று துண்ணென்று ஒலிப்ப
வெம் கண் சின நீடு விலங்கு விலங்கி நீங்க
செம் கை தலத்தால் தடவி சிறு நாண் எறிந்தார்
#64
பல்வேறு வாளி புதை பார்த்து உடன் போத ஏவி
வில் வேடர் ஆய துடி மேவி ஒலிக்கு முன்றில்
சொல் வேறு வாழ்த்து திசை-தோறும் துதைந்து விம்ம
வல் ஏறு போல்வார் அடல் வாளி தெரிந்து நின்றார்
#65
மான சிலை வேடர் மருங்கு நெருங்கும் போதில்
பானல் குல மா மலரில் படர் சோதியார் முன்
தேன் நல் தசை தேறல் சரு பொரி மற்றும் உள்ள
கான பலி நேர் கடவுள் பொறையாட்டி வந்தாள்
#66
நின்று எங்கும் மொய்க்கும் சிலை வேடர்கள் நீங்க புக்கு
சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி
உன் தந்தை தந்தைக்கும் இ நன்மைகள் உள்ள வல்ல
நன்றும் பெரிது விறல் நம்மளவு அன்று இது என்றாள்
#67
அ பெற்றியில் வாழ்த்தும் அணங்குடையாட்டி-தன்னை
செப்பற்கு அரிது ஆய சிறப்பு எதிர்செய்து போக்கி
கை பற்றிய திண் சிலை கார் மழை மேகம் என்ன
மெய் பொற்பு உடை வேட்டையின் மேல் கொண்டு எழுந்து போந்தார்
#68
தாளில் வாழ் செருப்பர் தோல் தழைத்த நீடு தானையர்
வாளியோடு சாபம் மேவு கையர் வெய்ய வன் கணார்
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண்_இலார்
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே
#69
வன் தொடர் பிணித்த பாசம் வன் கை மள்ளர் கொள்ளவே
வென்றி மங்கை வேடர் வில்லின் மீது மேவு பாதம் முன்
சென்று மீளுமாறு போல்வ செய்ய நாவின் வாயவாய்
ஒன்றோடு ஒன்று நேர் படாமல் ஓடு நாய்கள் மாடு எலாம்
#70
போர் வலை சிலை தொழில் புறத்திலே விளைப்ப
சார் வலை தொடக்கு அறுக்க ஏகும் ஐயர்-தம் முன்னே
கார் வலைப்படுத்த குன்று கானமா வளைக்க நீள்
வார் வலை திறம் சுமந்து வந்த வெற்பர் முந்தினார்
#71
நண்ணி மா மறை குலங்கள் நாட என்று நீடும் அ
தண் நிலா அடம்பு கொன்றை தங்கு வேணியார்-தமை
கண்ணில் நீடு பார்வை ஒன்று கொண்டு காணும் அன்பர் முன்
எண்_இல் பார்வை கொண்டு வேடர் எ மருங்கும் ஏகினார்
#72
கோடு முன்பு ஒலிக்கவும் குறும் கண் ஆகுளி குலம்
மாடு சென்று இசைப்பவும் மருங்கு பம்பை கொட்டவும்
சேடு கொண்ட கை_விளி சிறந்த ஓசை செல்லவும்
காடு கொண்டு எழுந்த வேடு கைவளைந்து சென்றதே
#73
நெருங்கு பைம் தரு குலங்கள் நீடு காடு கூட நேர்
வரும் கரும் சிலை தட கை மான வேடர் சேனை-தான்
பொரும் தடம் திரை கடல் பரப்பிடை புகும் பெரும்
கரும் தரங்க நீள் புனல் களிந்தி கன்னி ஒத்ததே
#74
தென் திசை பொருப்புடன் செறிந்த கானின் மான் இனம்
பன்றி வெம் மரை கணங்கள் ஆதியான பல் குலம்
துன்றி நின்ற என்று அடிச்சுவட்டின் ஒற்றர் சொல்லவே
வன் தட கை வார் கொடு எம்மருங்கும் வேடர் ஓடினார்
#75
ஒடி எறிந்து வார் ஒழுக்கி யோசனை பரப்பு எலாம்
நெடிய திண் வலை தொடக்கு நீளிடை பிணித்து நேர்
கடி கொள பரந்த காடு காவல் செய்து அமைத்த பின்
செடி தலை சிலை கை வேடர் திண்ணனார் முன் நண்ணினார்
#76
வெம் சிலை கை வீரனாரும் வேடரோடு கூடி முன்
மஞ்சு அலைக்கும் மா மலை சரி புறத்து வந்த மா
அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள்
செம் சரத்தினோடு குழல் செய்த கானுள் எய்தினர்
#77
வெய்ய மா எழுப்ப ஏவி வெற்பர் ஆயம் ஓடி நேர்
எய்யும் வாளி முன் தெரிந்து கொண்டு செல்ல எங்கணும்
மொய் குரல் துடி குலங்கள் பம்பை முன் சிலைத்து எழ
கை விளித்து அதிர்த்து மா எழுப்பினார்கள் கான் எலாம்
#78
ஏனமோடு மான் இனங்கள் எண்கு திண் கலை குலம்
கான மேதி யானை வெம் புலி கணங்கள் கான் மரை
ஆன மா அநேக மா வெருண்டு எழுந்து பாய முன்
சேனை வேடர் மேல் அடர்ந்து சீறி அம்பில் நூறினார்
#79
தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான்
வாளிகளொடு குடல் சொரிதர மறிவன சில மரை மா
நீள் உடல் விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா
மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே
#80
வெம் கணை படு பிடர் கிழிபட விசை உருவிய கயவாய்
செம் கனல் விட அதனொடு கணை செறிய முன் இரு கருமா
அங்கு எழும் சிரம் உருவிய பொழுது அடல் எயிறு உற அதனை
பொங்கிய சினமொடு கவர்வன புரைவன சில புலிகள்
#81
பின் மறவர்கள் விடு பகழிகள் பிற குற வயிறிடை போய்
முன் நடு முக மிசை உருவிட முடுகிய விசையுடன் அ
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவ
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள்
#82
கரு வரை ஒரு தனுவொடு விசை கடுகியது என முனை நேர்
குரிசில் முன் விடும் அடு சரம் எதிர் கொலை பயில் பொழுது அவையே
பொரு கரியொடு சின அரியிடை புரை_அற உடல் புகலால்
வரும் இரவொடு பகல் அணைவன என மிடையும் அ வனமே
#83
நீளிடை விசை மிசை குதி கொள நெடு முகில் தொட எழு மான்
தாளுறு கழல் மறவர்கள் விடு சரம் நிரை தொடர்வன தாம்
வாள் விடு கதிர் மதி பிரிவுற வரும் என விழும் உழையை
கோளொடு பயில் பணி தொடர் நிலை கொளவுள எதிர் பலவே
#84
கடல் விரி புனல் கொள விழுவன கரு முகில் என நிரையே
படர்வொடு செறி தழை பொதுளிய பயில் புதல் வனம் அதன் மேல்
அடலுறு சரம் உடலுற வரை அடி இடம் அலமரலால்
மிடை கரு மரை கரடிகளொடு விழுவன வன மேதி
#85
பல துறைகளின் வெருவரலொடு பயில் வலை அற நுழை மா
உலமொடு படர்வன தகையுற உறு சினமொடு கவர் நாய்
நிலவிய இருவினை வலையிடை நிலை சுழல் பவர் நெறி சேர்
புலனுறு மனனிடை தடைசெய்த பொறிகளின் அலவு உளவே
#86
துடி அடியன மடி செவியன துறு கயமுனி தொடரார்
வெடி பட விரி சிறு குருளைகள் மிசை படு கொலை விரவார்
அடி தளர்வுறு கரு உடையன அணைவுறு பிணை அலையார்
கொடியன எதிர் முடுகியும் உறு கொலை புரி சிலை மறவர்
#87
இ வகை வரு கொலை மற வினை எதிர் நிகழ்வுழி அதிர
கை_வரைகளும் வெருவுற மிடை கான் எழுவதோர் ஏனம்
பெய் கரு முகில் என இடியொடு பிதிர் கனல் விழி சிதறி
மொய் வலைகளை அற நிமிர்வுற முடுகிய கடு விசையில்
#88
போம் அது-தனை அடு திறலொடு பொரு மறவர்கள் அரி ஏறு
ஆம் அவர் தொடர்வுறும் விசையுடன் அடி வழி செலும் அளவில்
தாம் ஒருவரும் அறிகிலர் அவர் தனி தொடர்வுழி அதன் மேல்
ஏ முனை அடு சிலை விடலைகள் இருவர்கள் அடி பிரியார்
#89
நாடிய கழல் வயவர்கள் அவர் நாணனும் நெடு வரி வில்
காடனும் எனும் இருவரும் மலை காவலரொடு கடிதில்
கூடினர் விடு பகழிகளொடு கொலை ஞமலிகள் வழுவி
நீடிய சரி படர்வது தரு நீழலின் விரை கேழல்
#90
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி இட குரல் நீள்
பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடி
துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி குழல்
சென்று அதனிடை நின்றது வலி தெருமர மர நிரையில்
#91
அ தரு வளர் சுழலிடை அடை அதன் நிலை அறிபவர் முன்
கை தெரி கணையினில் அடுவது கருதலர் விசை கடுகி
மொய்த்து எழு சுடர் விடு சுரிகையை முனை பெற எதிர் உருவி
குத்தினர் உடல் முறிபட வெறி குல மறவர்கள் தலைவர்
#92
வேடர் தம் கரிய செம் கண் வில்லியார் விசையில் குத்த
மாடு இரு துணியாய் வீழ்ந்த வராகத்தை கண்டு நாணன்
காடனே இதன் பின் இன்று காதங்கள் பல வந்து எய்த்தோம்
ஆடவன் கொன்றான் அச்சோ என்று அடியில் தாழ்ந்தார்
#93
மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார் வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து எம்மை உதவிய இதனை காய்ச்சி
சற்று நீ அருந்தி யாமும் தின்று தண்ணீர் குடித்து
வெற்றி கொள் வேட்டை காடு குறுகுவோம் மெல்ல என்றார்
#94
என்று அவர் கூற நோக்கி திண்ணனார் தண்ணீர் எங்கே
நன்றும் இ வனத்தில் உள்ளது என்று உரை செய்ய நாணன்
நின்ற இ பெரிய தேக்கின் அப்புறம் சென்றால் நீண்ட
குன்றினுக்கு அயலே ஓடும் குளிர்ந்த பொன் முகலி என்றான்
#95
பொங்கிய சின வில் வேடன் சொன்ன பின் போவோம் அங்கே
இங்கு இது தன்னை கொண்டு போது-மின் என்று தாமும்
அங்கு அது நோக்கி சென்றார் காவதம் அரையில் கண்டார்
செம் கண் ஏறு உடையார் வைகும் திருமலை சாரல் சோலை
#96
நாணனே தோன்றும் குன்றில் நாணுவோம் என்ன நாணனா
காண நீ போதின் நல்ல காட்சியே காணும் இந்த
சேண் உயர் திருக்காளத்தி மலை மிசை எழுந்து செவ்வே
கோணம்_இல் குடுமித்தேவர் இருப்பர் கும்பிடலாம் என்றான்
#97
ஆவது என் இதனை கண்டு இங்கு அணை-தொறும் என் மேல் பாரம்
போவது ஒன்று உளது போலும் ஆசையும் பொங்கி மேல்மேல்
மேவிய நெஞ்சும் வேறு ஓர் விருப்புற விரையா நிற்கும்
தேவர் அங்கு இருப்பது எங்கே போகு என்றார் திண்ணனார்-தாம்
#98
உரை செய்து விரைந்து செல்ல அவர்களும் உடனே போந்து
கரை வளர் கழையின் முத்தும் கார் அகில் குறடும் சந்தும்
வரை தரு மணியும் பொன்னும் வயிரமும் புளினம்-தோறும்
திரைகள் முன் திரட்டி வைத்த திரு முகலியினை சார்ந்தார்
#99
ஆங்கு அதன் கரையின் பாங்கு ஓர் அணி நிழல் கேழல் இட்டு
வாங்கு வில் காடன்-தன்னை மர கடை தீ கோல் பண்ணி
ஈங்கு நீ நெருப்பு காண்பாய் இ மலை ஏறி கண்டு
நாங்கள் வந்து அணைவோம் என்று நாணனும் தாமும் போந்தார்
#100
அளி மிடை கரை சூழ் சோலை அலர்கள் கொண்டு அணைந்த ஆற்றின்
தெளி புனல் இழிந்து சிந்தை தெளிவுறும் திண்ணனார்-தாம்
களி வரும் மகிழ்ச்சி பொங்க காளத்தி கண்டு கொண்டு
குளிர் வரு நதி ஊடு ஏகி குல வரை சாரல் சேர்ந்தார்
#101
கதிரவன் உச்சி நண்ண கடவுள் மால் வரையின் உச்சி
அதிர் தரும் ஓசை ஐந்தும் ஆர்கலி முழக்கம் காட்ட
இது என்-கொல் நாணா என்றார்க்கு இ மலை பெரும் தேன் சூழ்ந்து
மது மலர் ஈக்கள் மொய்த்து மருங்கு எழும் ஒலி-கொல் என்றான்
#102
முன்பு செய் தவத்தின் ஈட்டம் முடிவு_இலா இன்பம் ஆன
அன்பினை எடுத்து காட்ட அளவு_இலா ஆர்வம் பொங்கி
மன் பெரும் காதல் கூர வள்ளலார் மலையை நோக்கி
என்பு நெக்கு உருகி உள்ளத்து எழு பெரு வேட்கையோடும்
#103
நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற தாமும்
பேணு தத்துவங்கள் என்னும் பெருகு சோபானம் ஏறி
ஆணையாம் சிவத்தை சாரா அணைபவர் போல ஐயர்
நீள் நிலை மலையை ஏறி நேர்பட செல்லும் போதில்
#104
திங்கள் சேர் சடையார்-தம்மை சென்று அவர் காணா முன்னே
அங்கணர் கருணை கூர்ந்த அருள் திரு நோக்கம் எய்த
தங்கிய பவத்தின் முன்னை சார்பு விட்டு அகல நீங்கி
பொங்கிய ஒளியின் நீழல் பொருவு_இல் அன்பு உருவம் ஆனார்
#105
மாகம் ஆர் திருக்காளத்தி மலை எழு கொழுந்தாய் உள்ள
ஏக நாயகரை கண்டார் எழுந்த பேர் உவகை அன்பின்
வேகம் ஆனது மேல் செல்ல மிக்கது ஓர் விரைவின் ஓடும்
மோகமாய் ஓடி சென்றார் தழுவினார் மோந்து நின்றார்
#106
நெடிது போது உயிர்த்து நின்று நிறைந்து எழு மயிர்க்கால்-தோறும்
வடிவு எலாம் புளகம் பொங்க மலர் கண்ணீர் அருவி பாய
அடியனேற்கு இவர் தாம் இங்கே அகப்பட்டார் அச்சோ என்று
படி இலா பரிவு தான் ஓர் படிவமாம் பரிசு தோன்ற
#107
வெம் மற_குலத்து வந்த வேட்டுவ சாதியார் போல்
கைம் மலை கரடி வேங்கை அரி திரி கானம்-தன்னில்
உம்முடன் துணையாய் உள்ளார் ஒருவரும் இன்றி கெட்டேன்
இ மலை தனியே நீர் இங்கு இருப்பதே என்று நைந்தார்
#108
கை சிலை விழுந்தது ஓரார் காளையார் மீள இந்த
பச்சிலையோடும் பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சு இது செய்தார் யாரோ என்றலும் மருங்கு நின்ற
அ சிலை நாணன்-தானும் நான் இது அறிந்தேன் என்பான்
#109
வன் திறல் உந்தையோடு மா வேட்டை ஆடி பண்டு இ
குன்றிடை வந்தோம் ஆக குளிர்ந்த நீர் இவரை ஆட்டி
ஒன்றிய இலை பூ சூட்டி ஊட்டி முன் பறைந்து ஓர் பார்ப்பான்
அன்று இது செய்தான் இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்
#110
உள் நிறைந்து எழுந்த தேனும் ஒழிவு_இன்றி ஆரா அன்பில்
திண்ணனார் திருக்காளத்தி நாயனார்க்கு இனிய செய்கை
எண்ணிய இவை-கொலாம் என்று இது கடைப்பிடித்துக்கொண்டு அ
அண்ணலை பிரிய மாட்டா அளவு_இல் ஆதரவு நீட
#111
இவர்-தமை கண்டேனுக்கு தனியராய் இருந்தார் என்னே
இவர்-தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை
இவர்-தமை பிரிய ஒண்ணாது என் செய்கேன் இனி யான் சால
இவர்-தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று
#112
போதுவர் மீண்டும் செல்வர் புல்லுவர் மீள போவர்
காதலின் நோக்கி நிற்பர் கன்று அகல் புனிற்று ஆ போல்வர்
நாதனே அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே
கோது_அற தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்
#113
ஆர் தமர் ஆக நீர் இங்கு இருப்பது என்று அகலமாட்டேன்
நீர் பசித்து இருக்க இங்கு நிற்கவும் இல்லேன் என்று
சோர் தரு கண்ணீர் வார போய் வர துணிந்தார் ஆகி
வார் சிலை எடுத்துக்கொண்டு மலர் கையால் தொழுது போந்தார்
#114
முன்பு நின்று அரிதில் நீங்கி மொய் வரை இழிந்து நாணன்
பின்பு வந்து அணைய முன்னை பிற துறை வேட்கை நீங்கி
அன்பு கொண்டு உய்ப்ப செல்லும் அவர் திரு முகலி ஆற்றின்
பொன் புனை கரையில் ஏறி புது மலர் காவில் புக்கார்
#115
காடனும் எதிரே சென்று தொழுது தீ கடைந்து வைத்தேன்
கோடு உடை ஏனம் உங்கள் குறிப்படி உறுப்பை எல்லாம்
மாடுற நோக்கி கொள்ளும் மறித்து நாம் போகைக்கு இன்று
நீட நீர் தாழ்த்தது என்னோ என்றலும் நின்ற நாணன்
#116
அங்கு இவன் மலையில் தேவர்-தம்மை கண்டு அணைத்துக்கொண்டு
வங்கினை பற்றி போதா வல் உடும்பு என்ன நீங்கான்
இங்கும் அ தேவர் தின்ன இறைச்சி கொண்டு ஏக போந்தான்
நம் குல தலைமை விட்டான் நலப்பட்டான் தேவர்க்கு என்றான்
#117
என் செய்தாய் திண்ணா நீ தான் என்ன மால் கொண்டாய் எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி-தன்னை எரியினில் வதக்கி மிக்க
இன்புறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு
#118
கோலினில் கோத்து காய்ச்சி கொழும் தசை பதத்தில் வேவ
வாலிய சுவை முன் காண்பான் வாயினில் அதுக்கி பார்த்து
சாலவும் இனிய எல்லாம் சருகு இலை இணைத்த கல்லை
ஏலவே கோலி கூட அதன் மிசை இடுவார் ஆனார்
#119
மருங்கு நின்றவர்கள் பின்னும் மயல் மிக முதிர்ந்தான் என்னே
அரும் பெறல் இறைச்சி காய்ச்சி அதுக்கி வேறு உமிழா நின்றான்
பெரும் பசி உடையன் ஏனும் பேச்சு_இலன் எமக்கும் பேறு
தரும் பரிசு உணரான் மற்றை தசை புறத்து எறியா நின்றான்
#120
தேவு மால் கொண்டான் இந்த திண்ணன் மற்று இதனை தீர்க்கல்
ஆவது ஒன்று அறியோம் தேவராட்டியை நாகனோடு
மேவி நாம் கொணர்ந்து தீர்க்க வேண்டும் அ வேட்டை கானில்
ஏவல் ஆட்களையும் கொண்டு போதும் என்று எண்ணி போனார்
#121
கானவர் போனது ஓரார் கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்து கொண்டு மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நல் நீர் தூய வாயினில் கொண்டு கொய்த
தூ நறும் பள்ளி தாமம் குஞ்சி மேல் துதைய கொண்டார்
#122
தனு ஒரு கையில் வெய்ய சரத்துடன் தாங்கி கல்லை
புனித மெல் இறைச்சி நல்ல போனகம் ஒரு கை ஏந்தி
இனிய எம்பிரானார் சால பசிப்பர் என்று இரங்கி ஏங்கி
நனி விரைந்து இறைவர் வெற்பை நண்ணினார் திண்ணனார்-தாம்
#123
இளைத்தனர் நாயனார் என்று ஈண்ட சென்று எய்தி வெற்பின்
முளைத்து எழு முதலை கண்டு முடி மிசை மலரை காலில்
வளைத்த பொன் செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர்-தன்னை
விளைத்த அன்பு உமிழ்வார் போன்று விமலனார் முடி மேல் விட்டார்
#124
தலை மிசை சுமந்த பள்ளி தாமத்தை தடம் காளத்தி
மலை மிசை தம்பிரானார் முடி மிசை வணங்கி சாத்தி
சிலை மிசை பொலிந்த செம் கை திண்ணனார் சேர்த்த கல்லை
இலை மிசை படைத்த ஊனின் திரு அமுது எதிரே வைத்து
#125
கொழுவிய தசைகள் எல்லாம் கோலினில் தெரிந்து கோத்து அங்கு
அழலுறு பதத்தில் காய்ச்சி பல்லினால் அதுக்கி நாவில்
பழகிய இனிமை பார்த்து படைத்த இ இறைச்சி சால
அழகிது நாயனீரே அமுது செய்து அருளும் என்றார்
#126
அன்ன இ மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
மன்னனார் திருக்காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு
பல் நெடும் கரங்கள் கூப்பி பகலவன் மலையில் தாழ்ந்தான்
#127
அ வழி அந்தி மாலை அணைதலும் இரவு சேரும்
வெவ் விலங்கு உள என்று அஞ்சி மெய்மையின் வேறு கொள்ளா
செவ்விய அன்பு தாங்கி திரு கையில் சிலையும் தாங்கி
மை வரை என்ன ஐயர் மருங்கு-நின்று அகலா நின்றார்
#128
சார்வு_அரும் தவங்கள் செய்து முனிவரும் அமரர்-தாமும்
கார் வரை அடவி சேர்ந்தும் காணுதற்கு அரியார்-தம்மை
ஆர்வம் முன் பெருக ஆரா அன்பினில் கண்டு கொண்டே
நேர் பெற நோக்கி நின்றார் நீள் இருள் நீங்க நின்றார்
#129
கழை சொரி தரள குன்றில் கதிர் நிலவு ஒரு-பால் பொங்க
முழை அரவு உமிழ்ந்த செய்ய மணி வெயில் ஒரு-பால் மொய்ப்ப
தழை கதிர் பரிதியோடும் சந்திரன் தலை உவாவில்
குழை அணி காதர் வெற்பை கும்பிட சென்றால் ஒக்கும்
#130
விரவு பன் மணிகள் கான்ற விரி கதிர் படலை பொங்க
மரகதம் ஒளி கொள் நீல மணிகளும் இமைக்கும் சோதி
பொர இரு சுடருக்கு அஞ்சி போயின புடைகள்-தோறும்
இரவு இருள் ஒதுங்கினாலே போன்று உளது எங்கும்எங்கும்
#131
செம் தழல் ஒளியில் பொங்கும் தீப மா மரங்களாலும்
மந்திகள் முழையில் வைத்த மணி விளக்கு ஒளிகளாலும்
ஐந்தும் ஆறு அடக்கி உள்ளார் அரும் பெரும் சோதியாலும்
எந்தையார் திருக்காளத்தி மலையினில் இரவு ஒன்று இல்லை
#132
வரும் கறை பொழுது நீங்கி மல்கிய யாமம் சென்று
சுருங்கிட அறிந்த புள்ளின் சூழ் சிலம்பு ஓசை கேட்டு
கரும் கடல் என்ன நின்ற கண் துயிலாத வீரர்
அரும் பெறல் தம்பிரனார்க்கு அமுது கொண்டு அணைய வேண்டி
#133
ஏறு கால் பன்றியோடும் இரும் கலை புன மான் மற்றும்
வேறுவேறு இனங்கள் வேட்டை வினை தொழில் விரகினாலே
ஊறு செய் காலம் சிந்தித்து உரு மிக தெரியா போதின்
மாறு அடு சிலையும் கொண்டு வள்ளலை தொழுது போந்தார்
#134
மொய் காட்டும் இருள் வாங்கி முகம் காட்டும் தேர் இரவி
மெய் காட்டும் அன்புடைய வில்லியர் தனி வேட்டை
எய் காட்டின் மா வளைக்க இட்ட கரும் திரை எடுத்து
கை காட்டும் வான் போல கதிர் காட்டி எழும் போதில்
#135
எய்திய சீர் ஆகமத்தில் இயம்பிய பூசனைக்கு ஏற்ப
கொய்த மலரும் புனலும் முதலான கொண்டு அணைந்தார்
மை தழையும் கண்டத்து மலை மருந்தை வழிபாடு
செய்து வரும் தவம் உடைய முனிவர் சிவகோசரியார்
#136
வந்து திருமலையின்-கண் வானவர் நாயகர் மருங்கு
சிந்தை நியமத்தோடும் செல்கின்றார் திரு முன்பு
வெந்த இறைச்சியும் எலும்பும் கண்டு அகல மிதித்து ஓடி
இந்த அனுசிதம் கெட்டேன் யார் செய்தார் என்று அழிவார்
#137
மேவ நேர் வர அஞ்சா வேடுவரே இது செய்தார்
தேவ தேவ ஈசனே திருமுன்பே இது செய்து
போவதே இ வண்ணம் புகுத நீர் திரு உள்ளம்
ஆவதோ என பதறி அழுது விழுந்து அலமந்தார்
#138
பொருப்பில் எழும் சுடர் கொழுந்தின் பூசனையும் தாழ்க்க நான்
இருப்பது இனி ஏன் என்று அ இறைச்சி எலும்புடன் இலையும்
செருப்பு அடியும் நாய் அடியும் திரு அலகால் மாற்றிய பின்
விருப்பினொடும் திருமுகலி புனல் மூழ்கி விரைந்து அணைந்தார்
#139
பழுது புகுந்தது அது தீர பவித்திரமாம் செயல் புரிந்து
தொழுது பெறுவன கொண்டு தூய பூசனை தொடங்கி
வழு_இல் திருமஞ்சனமே வரும் முதலாக வரும் பூசை
முழுது முறைமையின் முடித்து முதல்வனார் கழல் பணிந்தார்
#140
பணிந்து எழுந்து தனி முதலாம் பரன் என்று பன் முறையால்
துணிந்த மறை மொழியாலே துடி செய்து சுடர் திங்கள்
அணிந்த சடை முடி கற்றை அங்கணரை விடைகொண்டு
தணிந்த மன திருமுனிவர் தபோவனத்தினிடை சார்ந்தார்
#141
இ வண்ணம் பெரு முனிவர் ஏகினார் இனி இப்பால்
மை வண்ண கரும் குஞ்சி வன வேடர் பெருமானார்
கை வண்ண சிலை வளைத்து கான் வேட்டை தனி ஆடி
செய் வண்ண திறம் மொழிவேன் தீ_வினையின் திறம் ஒழிவேன்
#142
திருமலையின் புறம் போன திண்ணனார் செறி துறுகல்
பெரு மலைகளிடை சரிவில் பெரும் பன்றி புனம் மேய்ந்து
வருவனவும் துணி படுத்து மான் இனங்கள் கானிடை நின்று
ஒரு வழி சென்று ஏறு துறை ஒளி நின்று கொன்று அருளி
#143
பயில் விளியால் கலை அழைத்து பாடு பெற ஊடுருவும்
அயில் முக வெம் கணை போக்கி அடி ஒற்றி மரை இனங்கள்
துயிலிடையில் கிடை செய்து தொடர்ந்து கடமைகள் எய்து
வெயில் படு வெம் கதிர் முதிர தனி வேட்டை வினை முடித்தார்
#144
பட்ட வன விலங்கு எல்லாம் படர் வனத்தில் ஒரு சூழல்
இட்டு அருகு தீக்கடைகோல் இரும் சுரிகை-தனை உருவி
வெட்டி நறும் கோல் தேனும் மிக முறித்து தேக்கு இலையால்
வட்டமுறு பெரும் கல்லை மருங்கு புடை பட அமைத்தார்
#145
இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில்
வெம் தழலை பிறப்பித்து மிக வளர்த்து மிருகங்கள்
கொந்தி அயில் அலகு அம்பால் குட்டமிட்டு கொழுப்பு அரிந்து
வந்தன கொண்டு எழும் தழலில் வக்குன வக்குவித்து
#146
வாய் அம்பால் அழிப்பதுவும் வகுப்பதுவும் செய்து அவற்றின்
ஆய உறுப்பு இறைச்சி எலாம் அரிந்து ஒரு கல்லையில் இட்டு
காய நெடும் கோல் கோத்து கனலின்-கண் உற காய்ச்சி
தூய திரு அமுது அமைக்க சுவை காணலுறுகின்றார்
#147
எண்_இறந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்
வண்ண எரி வாயின்-கண் வைத்தது என காளத்தி
அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்கு
திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது
#148
நல்ல பதமுற வெந்து நாவின்-கண் இடும் இறைச்சி
கல்லையினில் படைத்து தேன் பிழிந்து கலந்து கொண்டு
வல் விரைந்து திருப்பள்ளி தாமமும் தூய் மஞ்சனமும்
ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார்
#149
வந்து திருக்காளத்தி மலை ஏறி வனவேடர்
தம் தலைவனார் இமையோர் தலைவனார்-தமை எய்தி
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார்
#150
ஊன் அமுது கல்லை உடன் வைத்து இது முன்னையின் நன்று-ஆல்
ஏனமொடு மான் கலைகள் மரை கடமை இவையிற்றில்
ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்
தேனும் உடன் கலந்து இது தித்திக்கும் என மொழிந்தார்
#151
இ பரிசு திரு அமுது செய்வித்து தம்முடைய
ஒப்பு_அரிய பூசனை செய்து அ நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல் வந்து எழும் அன்பால் காளத்தி
அப்பர் எதிர் அல் உறங்கார் பகல் வேட்டை ஆடுவார்
#152
மா முனிவர் நாள்-தோறும் வந்து அணைந்து வன வேந்தர்
தாம் முயலும் பூசனைக்கு சால மிக தளர்வு எய்தி
தீமை என அது நீக்கி செப்பிய ஆகம விதியால்
ஆம் முறையில் அர்ச்சனை செய்து அ நெறியில் ஒழுகுவார்-ஆல்
#153
நாணனொடு காடனும் போய் நாகனுக்கு சொல்லிய பின்
ஊணும் உறக்கமும் இன்றி அணங்கு உறைவாளையும் கொண்டு
பேணும் மகனார்-தம்-பால் வந்து எல்லாம் பேதித்து
காணும் நெறி தங்கள் குறி வாராமல் கைவிட்டார்
#154
முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள் நோக்கால்
இன்புறு வேதகத்து இரும்பு பொன் ஆனால் போல் யாக்கை
தன் பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற
அன்பு பிழம்பாய் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ
#155
அ நிலையில் அன்பனார் அறிந்த நெறி பூசிப்ப
மன்னிய ஆகம படியால் மா முனிவர் அருச்சித்து இங்கு
என்னுடைய நாயகனே இது செய்தார்-தமை காணேன்
உன்னுடைய திருவருளால் ஒழித்து அருள வேண்டும் என
#156
அன்று இரவு கனவின் கண் அருள் முனிவர்-தம்-பாலே
மின் திகழும் சடை மவுலி வேதியர்-தாம் எழுந்தருளி
வன் திறல் வேடுவன் என்று மற்று அவனை நீ நினையேல்
நன்று அவன்-தன் செயல்-தன்னை நாம் உரைப்ப கேள் என்று
#157
அவனுடைய வடிவு எல்லாம் நம் பக்கல் அன்பு என்றும்
அவனுடைய அறிவு எல்லாம் நமை அறியும் அறிவு என்றும்
அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியவாம் என்றும்
அவனுடைய நிலை இவ்வாறு அறி நீ என்று அருள்செய்வார்
#158
பொருப்பினில் வந்து அவன் செய்யும் பூசனைக்கு முன்பு என் மேல்
அருப்புறும் மென் மலர் முன்னை அவை நீக்கும் ஆதரவால்
விருப்புறும் அன்பு எனும் வெள்ளக்கால் பெருகிற்று என வீழ்ந்த
செருப்பு_அடி அ இளம் பருவ சேயடியின் சிறப்பு உடைத்து-ஆல்
#159
உருகிய அன்பு ஒழிவு இன்றி நிறைந்த அவன் உரு என்னும்
பெருகிய கொள்கல முகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால்
ஒரு முனிவன் செவி உமிழும் உயர் கங்கை முதல் தீர்த்த
பொரு புனலின் எனக்கு அவன்-தன் வாய் உமிழும் புனல் புனிதம்
#160
இ மலை வந்து எனை அடைந்த கானவன்-தன் இயல்பாலே
மெய் மலரும் அன்பு மேல் விரிந்தன போல் விழுதலால்
செம்மலர் மேல் அயனொடு மால் முதல் தேவர் வந்து புனை
எ மலரும் அவன் தலையால் இடு மலர் போல் எனக்கு ஒவ்வா
#161
வெய்ய கனல் பதம்கொள்ள வெந்துளதோ எனும் அன்பால்
நையும் மனத்து இனிமையினால் நைய மிக மென்றிடலால்
செய்யும் மறை வேள்வியோர் முன்பு தரும் திருந்து அவியில்
எய்யும் வரி சிலையவன்-தான் இட்ட ஊன் எனக்கு இனிய
#162
மன் பெரு மா மறை மொழிகள் மா முனிவர் மகிழ்ந்து உரைக்கும்
இன்ப மொழி தோத்திரங்கள் மந்திரங்கள் யாவையினும்
முன்பு இருந்து மற்று அவன்-தன் முகம் மலர அகம் நெகிழ
அன்பில் நினைந்து எனையல்லால் அறிவுறா மொழி நல்ல
#163
உனக்கு அவன்-தன் செயல் காட்ட நாளை நீ ஒளித்து இருந்தால்
எனக்கு அவன்-தன் பரிவு இருக்கும் பரிசு எல்லாம் காண்கின்றாய்
மனக்கவலை ஒழிக என்று மறை முனிவர்க்கு அருள்செய்து
புனல் சடில திருமுடியார் எழுந்தருளி போயினார்
#164
கனவு நிலை நீங்கிய பின் விழித்து உணர்ந்து கங்குலிடை
புனை தவத்து மா முனிவர் புலர் அளவும் கண் துயிலார்
மனம் உறும் அற்புதம் ஆகி வரும் பயமும் உடன் ஆகி
துனை புரவி தனி தேர் மேல் தோன்றுவான் கதிர் தோன்ற
#165
முன்னை நாள் போல் வந்து திரு முகலி புனல் மூழ்கி
பன் முறையும் தம்பிரான் அருள்செய்தபடி நினைந்து
மன்னு திருக்காளத்தி மலை ஏறி முன்பு போல்
பிஞ்ஞகனை பூசித்து பின்பாக ஒளித்திருந்தார்
#166
கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார்-தாம்
வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த-காலை
அரு_மறை முனிவனார் வந்தணைவதன் முன்னம் போகி
தரு முறை முன்பு போல தனி பெரு வேட்டை ஆடி
#167
மாறு_இல் ஊன் அமுதும் நல்ல மஞ்சன புனலும் சென்னி
ஏறு நாண் மலரும் வெவ்வேறு இயல்பினில் அமைத்துக்கொண்டு
தேறுவார்க்கு அமுதம் ஆன செல்வனார் திருக்காளத்தி
ஆறு சேர் சடையார்-தம்மை அணுக வந்து அணையா நின்றார்
#168
இத்தனை பொழுது தாழ்த்தேன் என விரைந்து ஏகுவார் முன்
மொய்த்த பல் சகுனம் எல்லாம் முறைமுறை தீங்கு செய்ய
இ தகு தீய புட்கள் ஈண்ட முன் உதிரம் காட்டும்
அதனுக்கு என்-கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில்
#169
அண்ணலார் திருக்காளத்தி அடிகளார் முனிவனார்க்கு
திண்ணனார் பரிவு காட்ட திரு நயனத்தில் ஒன்று
துண்ணென உதிரம் பாய இருந்தனர் தூரத்தே அ
வண்ண வெம் சிலையார் கண்டு வல் விரைந்து ஓடி வந்தார்
#170
வந்தவர் குருதி கண்டார் மயங்கினார் வாயில் நல் நீர்
சிந்திட கையில் ஊனும் சிலையுடன் சிதறி வீழ
கொந்து அலர் பள்ளி தாமம் குஞ்சி நின்று அலைந்து சோர
பைம் தழை அலங்கல் மார்பர் நிலத்திடை பதைத்து வீழ்ந்தார்
#171
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர் குருதி வீழ்வது
ஒழிந்திட காணார் செய்வது அறிந்திலர் உயிர்த்து மீள
அழிந்து போய் வீழ்ந்தார் தேறி யார் இது செய்தார் என்னா
எழுந்தனர் திசைகள் எங்கும் பார்த்தனர் எடுத்தார் வில்லும்
#172
வாளியும் தெரிந்து கொண்டு இ மலையிடை எனக்கு மாறா
மீளி வெம் மறவர் செய்தார் உளர்-கொலோ விலங்கின் சாதி
ஆளி முன்னாகி உள்ள விளைத்தவோ அறியேன் என்று
நீள் இரும் குன்றை சாரல் நெடிது இடை நேடி சென்றார்
#173
வேடரை காணார் தீய விலங்குகள் மருங்கு எங்கும்
நாடியும் காணார் மீண்டும் நாயனார்-தம்-பால் வந்து
நீடிய சோகத்தோடு நிறை மலர் பாதம் பற்றி
மாடுற கட்டிக்கொண்டு கதறினார் கண்ணீர் வார
#174
பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள் அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகிலேன் யான் என் செய்கேன் என்று பின்னும்
#175
என் செய்தால் தீருமோ-தான் எம்பிரான் திறத்து தீங்கு
முன் செய்தார் தம்மை காணேன் மொய் கழல் வேடர் என்றும்
மின் செய்வார் பகழி புண்கள் தீர்க்கும் மெய் மருந்து தேடி
பொன் செய் தாழ் வரையில் கொண்டு வருவன் நான் என்று போனார்
#176
நினைத்தனர் வேறுவேறு நெருங்கிய வனங்கள் எங்கும்
இனத்திடை பிரிந்த செம் கண் ஏறு என வெரு கொண்டு எய்தி
புனத்திடை பறித்து கொண்டு பூதநாயகன்-பால் வைத்த
மனத்தினும் கடிது வந்து தம் மருந்துகள் பிழிந்து வார்த்தார்
#177
மற்று அவர் பிழிந்து வார்த்த மருந்தினால் திருக்காளத்தி
கொற்றவர் கண்ணில் புண் நீர் குறைபடாது இழிய கண்டும்
இற்றையின் நிலைமைக்கு என்னோ இனி செயல் என்று பார்ப்பார்
உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரை முன் கண்டார்
#178
இதற்கு இனி என் கண் அம்பால் இடந்து அப்பின் எந்தையார் கண்
அதற்கு இது மருந்தாய் புண் நீர் நிற்கவும் அடுக்கும் என்று
மதர்த்து எழும் உள்ளத்தோடு மகிழ்ந்து முன் இருந்து தம்-கண்
முதல் சரம் அடுத்து வாங்கி முதல்வர்-தம் கண்ணில் அப்ப
#179
நின்ற செம் குருதி கண்டார் நிலத்தின்-நின்று ஏற பாய்ந்தார்
குன்று என வளர்ந்த தோள்கள் கொட்டினார் கூத்தும் ஆடி
நன்று நான் செய்த இந்த மதி என நகையும் தோன்ற
ஒன்றிய களிப்பினாலே உன்மத்தர் போல மிக்கார்
#180
வல திரு கண்ணில் தம் கண் அப்பிய வள்ளலார்-தம்
நலத்தினை பின்னும் காட்ட நாயனார் மற்றை கண்ணில்
உலப்பு_இல் செம் குருதி பாய கண்டனர் உலகில் வேடர்
குல பெரும் தவத்தால் வந்து கொள்கையின் உம்பர் மேலார்
#181
கண்ட பின் கெட்டேன் எங்கள் காளத்தியார் கண் ஒன்று
புண் தரு குருதி நிற்க மற்றை கண் குருதி பொங்கி
மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன் மருந்து கை கண்டேன் இன்னும்
உண்டு ஒரு கண் அ கண்ணை இடந்து அப்பி ஒழிப்பேன் என்று
#182
கண்_நுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு
எண்ணுவர் தம்பிரான்-தன் திரு கண்ணில் இட கால் ஊன்றி
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனி பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்ற தரித்திலர் தேவ தேவர்
#183
செம் கண் வெள் விடையின் பாகர் திண்ணனார்-தம்மை ஆண்ட
அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திரு கை அன்பர்
தம் கண் முன் இடக்கும் கையை தடுக்க மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்கு கண்ணப்ப நிற்க என்ற
#184
கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும்
ஊனமும் உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞான மா முனிவர் கண்டார் நான்_முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூ_மாரி பொழிந்தனர் மறைகள் ஆர்ப்ப
#185
பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திரு கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக்கொண்டு என் வலத்தில்
மாறு_இலாய் நிற்க என்று மன்னு பேர் அருள்புரிந்தார்
#186
மங்குல் வாழ் திருக்காளத்தி மன்னனார் கண்ணில் புண் நீர்
தம் கணால் மாற்ற பெற்ற தலைவர் தாள் தலை மேல் கொண்டே
கங்கை வாழ் சடையார் வாழும் கடவூரில் கலயனாராம்
பொங்கிய புகழின் மிக்கார் திருத்தொண்டு புகலல்உற்றேன்

மேல்

4 குங்கிலியக்கலய நாயனார் புராணம்

#1
வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின்
ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர் கங்கை
தோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றை
காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும்
#2
வயல் எலாம் விளை செம் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம்
அயல் எலாம் வேள்வி சாலை அணை எலாம் கழுநீர் கற்றை
புயல் எலாம் கமுகின் காடு அ புறம் எலாம் அதன் சீர் போற்றல்
செயல் எலாம் தொழில்கள் ஆறே செழும் திரு கடவூர் என்றும்
#3
குடம் கையின் அகன்ற உண்கண் கடைசியர் குழுமி ஆடும்
இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல்
வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கை
சடங்கு உடை இடங்கள்-தோறும் எழுவன சாமம் பாடல்
#4
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவி
செம் கயல் பாய்ந்து வாச கமலமும் தீம்_பால் நாறும்
மங்குல் தோய் மாட சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும்
அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும்
#5
மருவிய திருவின் மிக்க வளம் பதி அதனில் வாழ்வார்
அரு_மறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார்
பெரு_நதி அணியும் வேணி பிரான் கழல் பேணி நாளும்
உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார்
#6
பாலனாம் மறையோன் பற்ற பயம் கெடுத்து அருளும் ஆற்றால்
மாலும் நான்_முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்து
காலனார் உயிர் செற்றார்க்கு கமழ்ந்த குங்குலிய தூபம்
சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார்
#7
கங்கை நீர் கலிக்கும் சென்னி கண் நுதல் எம்பிரார்க்கு
பொங்கு குங்குலிய தூபம் பொலிவுற போற்றி செல்ல
அங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்
தங்கள் நாயகர்க்கு தாம் முன் செய் பணி தவாமை உய்த்தார்
#8
இ நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்ல
நல் நிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும்
பல் நெடும் தனங்கள் மாள பயில் மனை வாழ்க்கை-தன்னில்
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள்
#9
யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறி
பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி
காதல்செய் மனைவியார்-தம் கணவனார் கலயனார் கை
கோது_இல் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார்
#10
அப்பொழுது அதனை கொண்டு நெல் கொள்வான் அவரும் போக
ஒப்பு_இல் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்
இ பொதி என்-கொல் என்றார்க்கு உள்ளவாறு இயம்ப கேட்டு
முப்புரி வெண் நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனை சொன்னார்
#11
ஆறு செம் சடை மேல் வைத்த அங்கணர் பூசைக்கான
நாறு குங்குலியம் ஈதேல் நன்று இன்று பெற்றேன் நல்ல
பேறு மற்று இதன் மேல் உண்டோ பெறா பேறு பெற்று வைத்து
வேறு இனி கொள்வது என் என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார்
#12
பொன் தர தாரும் என்று புகன்றிட வணிகன்-தானும்
என் தர இசைந்தது என்ன தாலியை கலயர் ஈந்தார்
அன்று அவன் அதனை வாங்கி அ பொதி கொடுப்ப கொண்டு
நின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழும் களிப்பினோடும்
#13
விடையவர் வீரட்டானம் விரைந்து சென்று எய்தி என்னை
உடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில்
அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்க
சடையவர் மலர் தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு_இல்லார்
#14
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்
தன் பெரு நிதியம் தூர்த்து தரணி மேல் நெருங்க எங்கும்
பொன் பயில் குவையும் நெல்லும் பொருவு_இல் பல் வளனும் பொங்க
மன் பெரும் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட
#15
மற்று அவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடி
அற்றை நாள் இரவு-தன்னில் அயர்வுற துயிலும் போதில்
நல் தவ கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்க
தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார்
#16
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும்
அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ள
எம்பிரான் அருளாம் என்றே இரு கரம் குவித்து போற்றி
தம் பெரும் கணவனார்க்கு திரு அமுது அமைக்க சார்ந்தார்
#17
காலனை காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்
ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்
சால நீ பசித்தாய் உன்-தன் தட நெடு மனையில் நண்ணி
பால் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார்
#18
கலையனார் அதனை கேளா கைதொழுது இறைஞ்சி கங்கை
அலை புனல் சென்னியார்-தம் அருள் மறுத்து இருக்க அஞ்சி
தலை மிசை பணி மேற்கொண்டு சங்கரன் கோயில்-நின்று
மலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையை சார்ந்தார்
#19
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதி குவைகள் ஆர்ந்த
செல்வத்தை கண்டு நின்று திரு மனையாரை நோக்கி
வில் ஒத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்-கொல் என்ன
அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார்
#20
மின் இடை மடவார் கூற மிக்க சீர் கலயனார்-தாம்
மன்னிய பெரும் செல்வத்து வளம் மலி சிறப்பை நோக்கி
என்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன்
தன் அருள் இருந்த வண்ணம் என்று கை தலை மேல் கொண்டார்
#21
பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்தி கொண்டு
கதும்என கணவனாரை கண்_நுதற்கு அன்பரோடும்
விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்ட
அது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அரு_மறை கலயனார்-தாம்
#22
ஊர்-தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலே
பாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடி
சீர் உடை அடிசில் நல்ல செழும் கறி தயிர் நெய் பாலால்
ஆர் தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில்
#23
செம் கண் வெள் ஏற்றின் பாகன் திருப்பனந்தாளில் மேவும்
அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம்
பொங்கி தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமை
கங்குலும் பகலும் தீரா கவலைஉற்று அழுங்கி செல்ல
#24
மன்னவன் வருத்தம் கேட்டு மாசு_அறு புகழின் மிக்க
நல் நெறி கலயனார்-தாம் நாதனை நேரே காணும்
அ நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பி தாமும்
மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்
#25
மழு உடை செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்று
தொழுது போந்து அன்பினோடும் தொன்_மறை நெறி வழாமை
முழுது உலகினையும் போற்ற மூன்று எரிபுர போர் வாழும்
செழு மலர் சோலை வேலி திருப்பனந்தாளில் சேர்ந்தார்
#26
காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும்
தீது_இலா சேனை செய்யும் திருப்பணி நேர்படாமை
மேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கி
மா தவ கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி
#27
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி
யானும் இ இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்று
தேன் அலர் கொன்றையார் தம் திருமேனி பூங்க சேய்ந்த
மான வன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல்உற்றார்
#28
நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலே
திண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார்-தம் ஒருப்பாடு கண்ட போதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்
#29
பார் மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ_மாரி
தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்
கார் பெறு கானம் போல களித்தன கைகள் கூப்பி
வார் கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலை மேல் வைத்து
#30
விண் பயில் புரங்கள் வேவ வைதிக தேரில் மேரு
திண் சிலை குனிய நின்றார் செந்நிலை காண செய்தீர்
மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரே
பண்பு உடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார்
#31
என்று மெய் தொண்டர்-தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்கு
ஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்து
நின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகர்_இல் அன்பர்
மன்றிடை ஆடல் செய்யும் மலர் கழல் வாழ்த்தி வைகி
#32
சில பகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணி
நிலவு தம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகர்_இல் காழி
தலைவராம் பிள்ளையாரும் தாண்டக சதுரர் ஆகும்
அலர் புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருள கண்டு
#33
மாறு_இலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்தி
ஈறு_இலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்
ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றி
நாறு பூம் கொன்றை வேணி நம்பர்-தம் அருளும் பெற்றார்
#34
கருப்பு வில்லோனை கூற்றை காய்ந்தவர் கடவூர் மன்னி
விருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூர
ஒருப்படும் உள்ள தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார்
#35
தேன் நக்க கோதை மாதர் திரு நெடும் தாலி மாறி
கூனல் தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்த
பான்மை திண் கலயனாரை பணிந்து அவர் அருளினாலே
மானக்கஞ்சாறர் மிக்க வண் புகழ் வழுத்தல் உற்றேன்

மேல்

5 மானக்கஞ்சாறத் தொண்ட நாயனார் புராணம்

#1
மேல் ஆறு செம் சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூல் ஆறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது
கோல் ஆறு தேன் பொழிய கொழும் கனியின் சாறு ஒழுகும்
கால் ஆறு வயல் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர்
#2
கண் நீல கடைசியர்கள் கடும் களையில் பிழைத்து ஒதுங்கி
உள் நீர்மை புணர்ச்சி கண் உறைத்து மலர் கண் சிவக்கும்
தண்ணீர் மென் கழுநீர்க்கு தடம் சாலி தலை வணங்கும்
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள்
#3
புயல் காட்டும் கூந்தல் சிறுபுறம் காட்ட புன மயிலின்
இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கள்
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்ட கண் மூரி
கயல் காட்டும் தடங்கள் பல கதிர் காட்டும் தடம் பணைகள்
#4
சேறு அணி தண் பழன வயல் செழு நெல்லின் கொழும் கதிர் போய்
வேறு அருகு மிடை வேலி பைம் கமுகின் மிடறு உரிஞ்சி
மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர்
தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய உள தனி இடங்கள்
#5
பாங்கு மணி பல வெயிலும் சுலவு எயிலும் உள மாடம்
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம்
ஓங்கு நிலை தோரணமும் பூரணகும்பமும் உளவால்
பூம் கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு
#6
மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்த வளம் பெருகும்
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றி
புனை சாயல் மயில் அனையார் நடம் புரிய புகல் முழவம்
கனை சாறு மிடை வீதி கஞ்சாறு விளங்கியது-ஆல்
#7
அ பதியில் குல பதியாய் அரசர் சேனாபதியாம்
செப்ப வரும் குடி விளங்க திரு அவதாரம் செய்தார்
மெய்ப்பொருளை அறிந்து உணர்ந்தார் விழுமிய வேளாண் குடிமை
வைப்பு அனைய மேன்மையினார் மானக்கஞ்சாறனார்
#8
பணிவு உடைய வடிவு உடையார் பணியினொடும் பனி மதியின்
அணி உடைய சடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற
தணிவு_இல் பெரும் பேறு உடையார்-தம் பெருமான் கழல் சார்ந்த
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார்
#9
மாறு_இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம்
ஆறு உலவும் சடை கற்றை அந்தணர்-தம் அடியாராம்
ஈறு_இல் பெரும் திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர்
கூறுவதன் முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்
#10
விரி கடல் சூழ் மண்ணுலகை விளக்கிய இ தன்மையராம்
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளை பேறு இன்மையினால்
அரி அறியா மலர் கழல்கள் அறியாமை அறியாதார்
வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார்
#11
குழை கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனை கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினை பயன் சூழ்ந்த இ பிறவிக்கு கொடும் சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவ பெண்_கொடியை பெற்று எடுத்தார்
#12
பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்ப
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்க தேவர் பிரான்
அறம் தலை நின்று அவர்க்கு எல்லாம் அளவு_இல் வளத்து அருள் பெருக்கி
புறந்தருவார் போற்றி இசைப்ப பொன் கொடியை வளர்க்கின்றார்
#13
காப்பு அணியும் இளம் குழவி பதம் நீக்கி கமழ் சுரும்பின்
பூ பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ
யாப்புறும் மென் சிறு மணி மேகலை அணி சிற்றாடையுடன்
கோப்பு அமை கிண்கிணி அசைய குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி
#14
புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்
மனையகத்து மணி முன்றில் மணல் சிற்றில் இழைத்து மணி
கனை குரல் நூபுரம் அலைய கழல் முதலாய் பயின்று முலை
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அ பெண் அமுதம்
#15
உறு கவின் மெய் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த
முறுவல் புறம் மலராத முகில் முத்த நகை என்னும்
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர் சுருள் அம் தளிர் செம் கை
மறு_இல் குல_கொழுந்தினுக்கு மண பருவம் வந்து அணைய
#16
திரு_மகட்கு மேல் விளங்கும் செம் மணியின் தீபம் எனும்
ஒரு மகளை மண்ணுலகில் ஓங்கு குல மரபினராய்
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்
பெரு மகற்கு மகள்_பேச வந்து அணைந்தார் பெரு முதியோர்
#17
வந்த மூது அறிவோரை மானக்கஞ்சாறனார்
முந்தை முறைமையின் விரும்பி மொழிந்த மண திறம் கேட்டே
எம்-தமது மரபினுக்கு தரும் பரிசால் ஏயும் என
சிந்தை மகிழ்வுற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார்
#18
சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்ப
குன்று அனைய புயத்து ஏயர்கோனாரும் மிக விரும்பி
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்
#19
மங்கலமாம் செயல் விரும்பி மகள் பயந்த வள்ளலார்
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்ப
பொங்கிய வெண் முளை பெய்து பொலம் கலங்களிடை நெருங்க
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார்
#20
கஞ்சாறர் மகள் கொடுப்ப கைப்பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ் பெருமை ஏயர் குல பெருமானும்
தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய முரசு இயம்ப
மஞ்சு ஆலும் மலர் சோலை கஞ்சாற்றின் மருங்கு அணைய
#21
வள்ளலார் மணம் அ ஊர் மருங்கு அணையா முன் மலர் கண்
ஒள்_இழையை பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே
தெள்ளு திரை நீர் உலகம் உய்வதற்கு மற்றவர்-தம்
உள்ள நிலை பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார்
#22
முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்
கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி
பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த
வெண் தரளம் என காதின் மிசை அசையும் குண்டலமும்
#23
அ என்பின் ஒளி மணி கோத்து அணிந்த திரு தாழ் வடமும்
பை வன் பேர் அரவு ஒழிய தோளில் இடும் பட்டிகையும்
மை வந்த நிற கேச வட பூண் நூலும் மன
செவ் அன்பர் பவம் மற்றும் திருநீற்று பொக்கணமும்
#24
ஒரு முன் கை தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்
அரு_மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும்
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத_அரிய திருவடியும்
திருவடியில் திரு பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க
#25
பொடி மூடு தழல் என்ன திரு மேனி-தனில் பொலிந்த
படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையராய்
கொடு நீடு மறுகு அணைந்து தம்முடைய குளிர் கமலத்து
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார்
#26
வந்து அணைந்த மா விரத முனிவரை கண்டு எதிர் எழுந்து
சிந்தை களிகூர்ந்து மகிழ் சிறந்த பெரும் தொண்டனார்
எந்தை பிரான் புரி தவத்தோர் இ இடத்தே எழுந்தருள
உய்ந்து ஒழிந்தேன் அடியேன் என்று உருகிய அன்பொடு பணிந்தார்
#27
நற்றவராம் பெருமானார் நலம் மிகும் அன்பரை நோக்கி
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன்
பெற்றது ஒரு பெண்_கொடி-தன் வதுவை என பெரும் தவரும்
மற்று உமக்கு சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார்
#28
ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி
மானக்கஞ்சாறனார் மண_கோலம் புனைந்து இருந்த
தேன் நக்க மலர் கூந்தல் திரு மகளை கொண்டு அணைந்து
பானல் கந்தரம் மறைத்து வரும் அவரை பணிவித்தார்
#29
தம் சரணத்திடை பணிந்து தாழ்ந்து எழுந்த மட_கொடி-தன்
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர் கூந்தல் புறம் நோக்கி
அஞ்சலி மெய் தொண்டரை பார்த்து அணங்கு இவள்-தன் மயிர் நமக்கு
பஞ்ச வடிக்கு ஆம் என்றார் பரவ அடி தலம் கொடுப்பார்
#30
அருள்செய்த மொழி கேளா அடல் சுரிகை-தனை உருவி
பொருள் செய்தாம் என பெற்றேன் என கொண்டு பூம்_கொடி-தன்
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து எதிர்நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர் கரத்தினிடை நீட்ட
#31
வாங்குவார் போல் நின்ற மறை பொருளாம் அவர் மறைந்து
பாங்கின் மலை_வல்லியுடன் பழைய மழ விடை ஏறி
ஓங்கிய விண் மிசை வந்தார் ஒளி விசும்பின் நிலன் நெருங்க
தூங்கிய பொன் மலர்_மாரி தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்
#32
விழுந்து எழுந்து மெய்மறந்த மெய் அன்பர் தமக்கு மதி
கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடை கூத்தனார்
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்த
செழும் புவனங்களில் ஏற செய்தோம் என்று அருள்செய்தார்
#33
மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப வானவர்கள்
நெருங்க விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர் தாம்
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து ஐயர்
பெரும் கருணை திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார்
#34
தொண்டனார் தமக்கு அருளி சூழ்ந்து இமையோர் துதி செய்ய
இண்டை வார் சடை முடியார் எழுந்தருளி போயினார்
வண்டு வார் குழல் கொடியை கைப்பிடிக்க மண_கோலம்
கண்டவர்கள் கண் களிப்ப கலிக்காமனார் புகுந்தார்
#35
வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்த
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர்-பால் கேட்டருளி
புந்தியினில் மிக உவந்து புனிதனார் அருள் போற்றி
சிந்தை தளர்ந்து அருள்செய்த திருவாக்கின் திறம் கேட்டு
#36
மனம் தளரும் இடர் நீங்கி வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர் குழல் பெற்ற பூம்_கொடியை மணம் புரிந்து
தனம் பொழிந்து பெரு வதுவை உலகு எலாம் தலை சிறப்ப
இனம் பெருக தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார்
#37
ஒரு மகள் கூந்தல்-தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்றாமே
மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல்உற்றேன்

மேல்

6 அரிவாள்தாய நாயனார் புராணம்

#1
வரும் புனல் பொன்னி நாட்டு ஒரு வாழ் பதி
கரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென் கண் உடையவாய் விட்டு நீள்
கரும்பு தேன் பொழியும் கணமங்கலம்
#2
செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை
முன்னர் நந்து உமிழ் முத்தம் சொரிந்திட
துன்னு மள்ளர் கைம் மேல் கொண்டு தோன்றுவார்
மன்னு பங்கய மா நிதி போன்று உள்ளார்
#3
வளத்தில் நீடும் பதி-அதன் கண்வரி
உளர்த்தும் ஐம்பால் உடையோர் முகத்தினும்
களத்தின் மீதும் கயல் பாய் வயல் அயல்
குளத்தும் நீளும் குழை உடை நீலங்கள்
#4
அ குல பதி-தன்னில் அற_நெறி
தக்க மா மனை வாழ்க்கையில் தங்கினார்
தொக்க மா நிதி தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வத்து வேளாண் தலைமையார்
#5
தாயனார் எனும் நாமம் தரித்துள்ளார்
சேய காலம் தொடர்ந்தும் தெளிவு இலா
மாயனார் மண் கிளைத்து அறியாத அ
தூய நாள்_மலர் பாதம் தொடர்ந்து உளார்
#6
மின்னும் செம் சடை வேதியர்க்கு ஆம் என்று
செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும்
மன்னு பைம் துணர் மாவடுவும் கொணர்ந்து
அன்ன என்றும் அமுது செய்விப்பார்-ஆல்
#7
இந்த நல் நிலை இன்னல் வந்து எய்தினும்
சிந்தை நீங்கா செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வர் அவர் வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார்
#8
மேவு செல்வம் களிறு உண் விளங்கனி
ஆவது ஆகி அழியவும் அன்பினால்
பாவை பங்கர்க்கு முன்பு பயின்ற அ
தா_இல் செய்கை தவிர்ந்திலர் தாயனார்
#9
அல்லல் நல்குரவு ஆயிட கூலிக்கு
நெல் அறுத்து மெய் நீடிய அன்பினால்
நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு
ஒல்லை இன் அமுதா கொண்டு ஒழுகுவார்
#10
சாலி தேடி அறுத்து அவை தாம் பெறும்
கூலி எல்லாம் திரு அமுதா கொண்டு
நீல நெல் அரி கூலி கொண்டு உண்ணும் நாள்
மால் அயற்கு அரியார் அது மாற்றுவார்
#11
நண்ணிய வயல்கள் எல்லாம் நாள்-தொறும் முன்னம் காண
வண்ண வார் கதிர் செஞ்சாலி ஆக்கிட மகிழ்ந்து சிந்தை
அண்ணலார் அறுத்த கூலி கொண்டு இஃது அடியேன் செய்த
புண்ணியம் என்று போத அமுது செய்விப்பார் ஆனார்
#12
வைகலும் உணவு இலாமை மனை படப்பையினில் புக்கு
நை கரம் இல்லா அன்பின் நங்கை கை அடகு கொய்து
பெய் கலத்து அமைத்து வைக்க பெருந்தகை அருந்தி தங்கள்
செய் கடன் முட்டா வண்ணம் திருப்பணி செய்யும் நாளில்
#13
மனை மருங்கு அடகு மாள வட நெடு வான மீனே
அனையவர் தண்ணீர் வார்க்க அமுது செய்து அன்பனாரும்
வினை செயல் முடித்து செல்ல மேவு நாள் ஒருநாள் மிக்க
முனைவனார் தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது மொழியப்பெற்றேன்
#14
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க மூளும்
அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை
துன்பு போம் மனத்து தொண்டர் கூடையில் சுமந்து போக
பின்பு போம் மனைவியார் ஆன் பெற்ற அஞ்சு ஏந்தி சென்றார்
#15
போதரா நின்ற போது புலர்ந்து கால் தளர்ந்து தப்பி
மாதரார் வருந்தி வீழ்வார் மண் கலம் மூடும் கையால்
காதலால் அணைத்தும் எல்லாம் கமரிடை சிந்த கண்டு
பூதநாயகர் தம் தொண்டர் போவது அங்கு இனி ஏன் என்று
#16
நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்த
அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அ பேறு
எல்லை_இல் தீமையேன் இங்கு எய்திட பெற்றிலேன் என்று
ஒல்லை_இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்
#17
ஆட்கொள்ளும் ஐயர் தாம் இங்கு அமுது செய்திலர்-கொல் என்னா
பூட்டிய அரிவாள் பற்றி புரை அற விரவும் அன்பு
காட்டிய நெறியின் உள்ளம் தண்டு அற கழுத்தினோடே
ஊட்டியும் அரிய நின்றார் உறு பிறப்பு அரிவார் ஒத்தார்
#18
மாசு_அறு சிந்தை அன்பர் கழுத்து அரி அரிவாள் பற்றும்
ஆசு_இல் வண் கையை மாற்ற அம்பலத்து ஆடும் ஐயர்
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்
ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த அன்றே
#19
திருக்கை சென்று அரிவாள் பற்றும் திண் கையை பிடித்த போது
வெருக்கொடு தம் கூறு நீங்க வெவ் வினை விட்டு நீங்கி
பெருக்கவே மகிழ்ச்சி நீட தம்பிரான் பேணி தந்த
அருள் பெரும் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று
#20
அடியனேன் அறிவு இலாமை கண்டும் என் அடிமை வேண்டி
படி மிசை கமரில் வந்து இங்கு அமுது செய் பரனே போற்றி
துடி இடை பாகாம் ஆன தூய நல் சோதி போற்றி
பொடி அணி பவள மேனி புரி சடை புராண போற்றி
#21
என்று அவர் போற்றி செய்ய இடப_வாகனராய் தோன்றி
நன்று நீ புரிந்த செய்கை நல்_நுதல் உடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய் என்று அவர் உடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் மழ விடை உகைத்து சென்றார்
#22
பரிவு உறு சிந்தை அன்பர் பரம்பொருள் ஆகியுள்ள
பெரியவர் அமுது செய்ய பெற்றிலேன் என்று மாவின்
வரி வடு விடேல் எனா முன் வன் கழுத்து அரிவாள் பூட்டி
அரிதலால் அரிவாட்டாயர் ஆயினார் தூய நாமம்
#23
முன்னிலை கமரே ஆக முதல்வனார் அமுது செய்ய
செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை
அ நிலை கேட்ட தொண்டர் அடி இணை தொழுது வாழ்த்தி
மன்னும் ஆனாயர் செய்கை அறிந்தவாறு வழுத்தல்உற்றேன்

மேல்

7 ஆனாய நாயனார் புராணம்

#1
மாடு விரை பொலி சோலையின் வான் மதி வந்து ஏற
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பு ஏற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்து ஏற
நீடு வளத்தது மேன்மழநாடு எனும் நீர் நாடு
#2
நீவி நிதம்ப உழத்தியர் நெய் குழல் மை சூழல்
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரை கஞ்ச
பூவில் உறங்குவ நீள் கயல் பூ மலி தேமாவின்
காவின் நறும் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி
#3
வன் நிலை மள்ளர் உகைப்ப எழுந்த மர கோவை
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்கு உறை தண் துறை வாவி அதன் பாலை
கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை
#4
பொங்கிய மா நதி நீடு அலை உந்து புனல் சங்கம்
துங்க இலை கதலி புதல் மீது தொடங்கி போய்
தங்கிய பாசடை சூழ் கொடி ஊடு தவழ்ந்து ஏறி
பைம் கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளை என
#5
அல்லி மலர் பழனத்து அயல் நாகு இள ஆன் ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழ கன்று
கொல்லை மட குல மான் மறியோடு குதித்து ஓடும்
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கு ஓர்-பால்
#6
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லை
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடம் சாலி
பண்ணை எழும் கயல் பாய இருப்பன காயாவின்
வண்ண நறும் சினை மேவிய வன் சிறை வண்டானம்
#7
பொங்கரில் வண்டு புறம்பு அலை சோலைகள் மேல் ஓடும்
வெம் கதிர் தங்க விளங்கிய மேல் மழ நல் நாடு-ஆம்
அங்கு அது மண்ணின் அரும் கலமாக அதற்கே ஓர்
மங்கலம் ஆனது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்
#8
ஒப்பு_இல் பெரும் குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பு_இல் வளங்கள் பெருக்கி அறம் புரி சால்போடும்
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும்
அ பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்
#9
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
தூய சுடர் திருநீறு விரும்பு தொழும்பு உள்ளார்
வாயின் இன் மெய்யின் வழுத்து மனத்தின் வினை பாலில்
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்
#10
ஆன் நிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறி
கான் உறை தீய விலங்கு உறு நோய்கள் கடிந்து எங்கும்
தூ நறு மென் புல் அருந்தி விரும்பிய தூ நீர் உண்டு
ஊனம்_இல் ஆயம் உலப்பு_இல பல்க அளித்து உள்ளார்
#11
கன்றொடு பால் மறை நாகு கறப்பன பால் ஆவும்
புன் தலை மென் சிலை ஆனொடு நீடு புனிற்று ஆவும்
வென்றி விடை குலமோடும் இனம்-தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்து உள சூழல் உடன் பல தோழங்கள்
#12
ஆவின் நிரை குலம் அப்படி பல்க அளித்து என்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்
மேவு துளை கருவி குழல் வாசனை மேல் கொண்டார்
#13
முந்தை மறை நூல் மரபின் மொழிந்த முறை எழுந்த வேய்
அந்த முதல் நால்_இரண்டில் அரிந்து நரம்பு உறு தானம்
வந்த துளை நிரை ஆக்கி வாயு முதல் வழங்கு துளை
அந்தம்_இல் சீர் இடை ஈட்டின் அங்குலி எண்களின் அமைத்து
#14
எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து_அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து
அடுத்த சராசரங்கள் எலாம் தங்க வரும் தம் கருணை
அடுத்த இசை அமுது அளித்து செல்கின்றார் அங்கு ஒருநாள்
#15
வாச மலர் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த
தேசு உடைய சிகழிகையில் செறி கண்ணி தொடை செருகி
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறுவிலி புனைந்து
காசு உடை நாண் அதற்கு அயலே கரும் சுருளின் புறம் கட்டி
#16
வெண் கோடல் இலை சுருளில் பைம் தோட்டு விரை தோன்றி
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்க
திண் கோல நெற்றியின் மேல் திருநீற்றின் ஒளி கண்டோர்
கண் கோடல் நிறைந்து ஆரா கவின் விளங்க மிசை அணிந்து
#17
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கி
செறிந்த புனை வடம் தாழ திரள் தோளின் புடை அலங்கல்
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரை உடுத்த மரவுரியின்
புறம் தழையின் மலி தானை பூம் பட்டு பொலிந்து அசைய
#18
சேவடியில் தொடு தோலும் செம் கையினில் வெண் கோலும்
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும்
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழ
பூ அலர் தார் கோவலனார் நிரை காக்க புறம் போந்தார்
#19
நீல மா மஞ்ஞை ஏங்க நிரை கொடி புறவம் பாட
கோல வெண் முகை ஏர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட
ஆலும் மின்னிடை சூழ் மாலை பயோதரம் அசைய வந்தாள்
ஞாலம் நீடு அரங்கில் ஆட கார் எனும் பருவ நல்லாள்
#20
எ மருங்கும் நிரை பரப்ப எடுத்த கோல் உடை பொதுவர்
தம் மருங்கு தொழுது அணைய தண் புறவில் வரும் தலைவர்
அ மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மது உண்டு
செம்மரும் தண் சுரும்பு சுழல் செழும் கொன்றை மருங்கு அணைந்தார்
#21
சென்று அணைந்த ஆனாயர் செய்த விரை தாமம் என
மன்றல் மலர் துணர் தூக்கி மருங்கு தாழ் சடையார் போல்
நின்ற நறும் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர்-பால் மடை திறந்தார்
#22
அன்பு ஊறி மிசை பொங்கும் அமுத இசை குழல் ஒலியால்
வன் பூத படையாளி எழுத்து_ஐந்தும் வழுத்தி தாம்
முன்பு ஊதி வரும் அளவின் முறைமையே எ உயிரும்
என்பு ஊடு கரைந்து உருக்கும் இன் இசை வேய்ம் கருவிகளில்
#23
ஏழு விரல் இடையிட்ட இன் இசை வங்கியம் எடுத்து
தாழும் மலர் வரி வண்டு தாது பிடிப்பன போல
சூழும் முரன்று எழ நின்று தூய பெரும் தனி துளையில்
வாழிய நம் தோன்றலார் மணி அதரம் வைத்து ஊத
#24
முத்திரையே முதல் அனைத்தும் முறை தானம் சோதித்து
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி
ஒத்த நிலை உணர்ந்து அதன் பின் ஒன்று முதல் படி முறையாம்
அ தகைமை ஆர்_ஓசை அமர்_ஓசைகளின் அமைத்தார்
#25
மாறு முதல் பண்ணின் பின் வளர் முல்லை பண் ஆக்கி
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடும் தானம்
ஆறு உலவும் சடை முடியார் அஞ்சு_எழுத்தின் இசை பெருக
கூறிய பட்டு அடை குரலாம் கொடிப்பாலையினில் நிறுத்தி
#26
ஆய இசை புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையின்
சேய ஒளியிடை அலைய திருவாளன் எழுத்து_அஞ்சும்
தூய இசை கிளை கொள்ளும் துறை அஞ்சின் முறை விளைத்தார்
#27
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமம் கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்து இயக்கி
சுந்தர செம் கனி வாயும் துளைவாயும் தொடக்கு உண்ண
#28
எண்ணிய நூல் பெருவண்ணம் இடைவண்ணம் வனப்பு என்னும்
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்
நண்ணிய பாணியும் இயலும் தூக்கும் நடை முதல் கதியில்
பண் அமைய எழும் ஓசை எ மருங்கும் பரப்பினார்
#29
வள்ளலார் வாசிக்கும் மணி துளைவாய் வேய்ங்குழலின்
உள் உறை அஞ்சு_எழுத்து ஆக ஒழுகி மதுர ஒலி
வெள்ளம் நிறைந்து எ உயிர்க்கும் மேல் அமரர் தரு விளை தேன்
தெள் அமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது என தேக்க
#30
ஆன் நிரைகள் அறுகு அருந்தி அசை விடாது அணைந்து அயர
பால் நுரை வாய் தாய் முலை பால் பற்றும் இளம் கன்று இனமும்
தான் உணவு மறந்து ஒழிய தட மருப்பின் விடை குலமும்
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய
#31
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கு அணுக
ஊடு செவி இசை நிறைந்த உள்ளமொடு புள் இனமும்
மாடு படிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்
கூடிய வன் கோவலரும் குறை வினையின் துறை நின்றார்
#32
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்
மணி வரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்
தணிவு_இல் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்
அணி விசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்
#33
சுரமகளிர் கற்பக பூம் சோலைகளின் மருங்கு இருந்து
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன்
விரவு நறும் குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறி
பரவிய ஏழிசை அமுதம் செவிமடுத்து பருகினார்
#34
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால்
மலி வாய் வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்
புலி வாயின் மருங்கு அணையும் புல் வாய புல்வாயும்
#35
மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர் சினை சலியா
கரு வரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழிய புனல் சோரா
இரு விசும்பினிடை முழங்கா எழு கடலும் இடை துளும்பா
#36
இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய்
மெய் வாழும் புலன் கரணம் மேவிய ஒன்று ஆயினவால்
மொய் வாச நறும் கொன்றை முடி சடையார் அடி தொண்டர்
செம் வாயின் மிசை வைத்த திரு குழல் வாசனை உருக்க
#37
மெய் அன்பர் மனத்து அன்பின் விளைந்த இசை குழல் ஓசை
வையம்-தன்னையும் நிறைத்து வானம் தன்வயமாக்கி
பொய் அன்புக்கு எட்டாத பொன் பொதுவில் நடம் புரியும்
ஐயன்-தன் திரு செவியின் அருகு அணைய பெருகியது-ஆல்
#38
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை
தான் ஆய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன்
கான் ஆதி காரணராம் கண்_நுதலார் விடை உகைத்து
வான் ஆறு வந்து அணைந்தார் மதி நாறும் சடை தாழ
#39
திசை முழுதும் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி
மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே
அசைய எழும் குழல் நாதத்து அஞ்சு_எழுத்தால் தமை பரவும்
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர்நின்றார்
#40
முன் நின்ற மழ விடை மேல் முதல்வனார் எப்பொழுதும்
செம் நின்ற மன பெரியோர் திரு குழல் வாசனை கேட்க
இ நின்ற நிலையே நம்-பால் அணைவாய் என அவரும்
அ நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார்
#41
விண்ணவர்கள் மலர்_மாரி மிடைந்து உலகம் மிசை விளங்க
எண்_இல் அரு முனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்ல
புண்ணியனார் எழுந்தருளி பொன் பொதுவினிடை புக்கார்
#42
தீது கொள் வினைக்கு வாரோம் செம் சடை கூத்தர்-தம்மை
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்ல
தூது கொள்பவராம் நம்மை தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்
மேல்