10. கடல்சூழ்ந்த சருக்கம்

@1 கழற்சிங்க நாயனார் புராணம்

#1
படி மிசை நிகழ்ந்த தொல்லை பல்லவர் குலத்து வந்தார்
கடி மதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்ய
அடி மலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மை
கொடி நெடும் தானை மன்னர் கோ கழற்சிங்கர் என்பார்

#2
காடவர் குரிச்¢லார்-ஆம் கழல் பெரும் சிங்கனார்-தாம்
ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்று
கூடலர் முனைகள் சாய வட புலம் கவர்ந்து கொண்டு
நாடு அற_நெறியில் வைக நல் நெறி வளர்க்கும் நாளில்

#3
குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்று
தவல்_அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய் தொண்டு செய்வார்
சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்தி
பவம் அறுத்து ஆட்கொள்வார்-தம் கோயில் உள் பணிய புக்கார்

#4
அரசியல் ஆயத்தோடும் அங்கணர் கோயில் உள்ளால்
முரசு உடை தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல் இயலார்-தம்முள்
உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனி தேவி மேவி

#5
கோயிலை வலம்கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்
சாயல் மா மயிலே போல் வாள் தனித்தனி கண்டு வந்து
தூய மென் பள்ளி தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர்
மேயது ஓர் புது பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள்

#6
புது மலர் மோந்த போதில் செரு துணை புனித தொண்டர்
இது மலர் திரு முற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்று
கதும்என ஓடி சென்று கருவி கை கொண்டு பற்றி
மது மலர் திரு ஒப்பாள்-தன் மூக்கினை பிடித்து வார்ந்தார்

#7
வார்ந்து இழி குருதி சோர மலர் கரும் குழலும் சோர
சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் என துளங்கி மண்ணில்
சேர்ந்து அயர்ந்து உரிமை தேவி புலம்பிட செம்பொன் புற்றுள்
ஆர்ந்த பேர் ஒளியை கும்பிட்டு அரசரும் அணைய வந்தார்

#8
வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாச
பைம் தளிர் பூம் கொம்பு ஒன்று பார் மிசை வீழ்ந்தது என்ன
நொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இ அண்டத்து உள்ளோர்
இந்த வெவ் வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை

#9
அ நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர்
முன் உறு நிலைமை அங்கு புகுந்தது மொழிந்த போது
மன்னரும் அவரை நோக்கி மற்று இதற்கு உற்ற தண்டம்
தன்னை அ அடைவே அன்றோ தடிந்திட தகுவது என்று

#10
கட்டிய உடைவாள்-தன்னை உருவி அ கமழ் வாச பூ
தொட்டு முன் எடுத்த கையாம் முன்பட துணிப்பது என்று
பட்டமும் அணிந்து காதல் பயில் பெருந்தேவி ஆன
மட்டு அவிழ் குழலாள் செம் கை வளையொடும் துணித்தார் அன்றே

#11
ஒருதனி தேவி செம் கை உடைவாளால் துணித்த போது
பெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புலி மேல் பொங்க
இரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மி
மருவிய தெய்வ வாச மலர்_மழை பொழிந்தது அன்றே

#12
அரிய அ திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவு_இல் காலம்
மருவிய உரிமை தாங்கி மால் அயன் அரியார் மன்னும்
திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல்
பெருகிய உரிமை ஆகும் பேர் அருள் எய்தினாரே

#13
வையகம் நிகழ காதல் மா தேவி-தனது செய்ய
கையினை தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றி
எய்திய பெருமை அன்பர் இடம் கழியார் என்று ஏத்தும்
மெய்யருள் உடைய தொண்டர் செய் வினை விளம்பல் உற்றாம்
&10 கடழ் சூழ்ந்த சருக்கம்
@2 இடங்கழி நாயனார் புராணம்

#1
எழும் திரை மா கடல் ஆடை இரு நில மா மகள் மார்பில்
அழுந்துபட எழுதும் இலை தொழில் தொய்யில் அணியின ஆம்
செழும் தளிரின் புடை மறைந்த பெடை களிப்ப தேமாவின்
கொழும் துணர் கோதி கொண்டு குயில் நாடு கோனாடு

#2
முருகுறு செங்கமல மது மலர் துதைந்த மொய் அளிகள்
பருகுறு தெண் திரை வாவி பயில் பெடையோடு இரை அருந்தி
வருகுறு தண் துளி வாடை மறைய மாதவி சூழல்
குருகு உறங்கும் கோனாட்டு கொடி நகரம் கொடும்பாளூர்

#3
அ நகரத்தினில் இருக்கும் வேளிர் குலத்து அரசு அளித்து
மன்னிய பொன் அம்பலத்து மணி முகட்டில் பா கொங்கின்
பன்னு துலை பசும்பொன்னால் பயில் பிழம்பாம் மிசை அணிந்த
பொன் நெடும் தோள் ஆதித்தன் புகழ் மரபின் குடி முதலோர்

#4
இடங்கழியார் என உலகில் ஏறு பெரு நாமத்தார்
அடங்கு அலர் முப்புரம் எரித்தார் அடி தொண்டின் நெறி அன்றி
முடங்கு நெறி கனவினிலும் உன்னாதார் எந்நாளும்
தொடர்ந்த பெரும் காதலினால் தொண்டர் வேண்டிய செய்வார்

#5
சைவ நெறி வைதிகத்தின் தரும நெறியொடும் தழைப்ப
மை வளரும் திரு மிடற்றார் மன்னிய கோயில்கள் எங்கும்
மெய் வழிபாட்டு அர்ச்சனைகள் விதி வழி மேல்மேல் விளங்க
மொய் வளர் வண் புகழ் பெருக முறை புரியும் அந்நாளில்

#6
சங்கரன்-தன் அடியாருக்கு அமுது அளிக்கும் தவம் உடையார்
அங்கு ஒருவர் அடியவருக்கு அமுது ஒரு நாள் ஆக்க உடன்
எங்கும் ஒரு செயல் காணாது எய்திய செய் தொழில் முட்ட
பொங்கி எழும் பெரு விருப்பால் புரியும் வினை தெரியாது

#7
அரசர்-அவர் பண்டாரத்து அ நாட்டின் நெல் கூட்டின்
நிரை செறிந்த புரி பலவாம் நிலை கொட்டகாரத்தில்
புரை செறி நள்ளிருளின்-கண் புக்கு முகந்து எடுப்பவரை
முரசு எறி காவலர் கண்டுபிடித்து அரசன் முன் கொணர்ந்தார்

#8
மெய் தவரை கண்டு இருக்கும் வேல் மன்னர் வினவுதலும்
அத்தன் அடியாரை யான் அமுது செய்விப்பது முட்ட
இ தகைமை செய்தேன் என்று இயம்புதலும் மிக இரங்கி
பத்தரை விட்டு இவர் அன்றோ பண்டாரம் எனக்கு என்பார்

#9
நிறை அழிந்த உள்ளத்தால் நெல் பண்டாரமும் அன்றி
குறைவு_இல் நிதி பண்டாரம் ஆன எலாம் கொள்ளை முகந்து
இறைவன் அடியார் கவர்ந்து கொள்க என எம்மருங்கும்
பறை அறையப்பண்ணுவித்தார் படைத்த நிதி பயன் கொள்வார்

#10
எண்_இல் பெரும் பண்டாரம் ஈசன் அடியார் கொள்ள
உள் நிறைந்த அன்பினால் உறு கொள்ளை மிக ஊட்டி
தண் அளியால் நெடும் காலம் திருநீற்றின் நெறி தழைப்ப
மண்ணில் அருள்புரிந்து இறைவர் மலர் அடியின் நிழல் சேர்ந்தார்

#11
மை தழையும் மணிமிடற்றார் வழி தொண்டின் வழிபாட்டில்
எய்து பெரும் சிறப்பு உடைய இடங்கழியார் கழல் வணங்கி
மெய் தருவார் நெறி அன்றி வேறு ஒன்றும் மேல் அறியா
செய்தவராம் செருத்துணையார் திருத்தொண்டின் செயல் மொழிவாம்
&10 கடழ் சூழ்ந்த சருக்கம்
@3 செருத்துணை நாயனார் புராணம்

#1
உள்ளும் புறம்பும் குல மரபின் ஒழுக்கம் வழுக்கா ஒருமை நெறி
கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வ குல பதியாம்
தெள்ளும் திரைகள் மதகு-தொறும் சேலும் கயலும் செழு மணியும்
தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல்நாட்டு தஞ்சாவூர்

#2
சீரின் விளங்கும் அ பதியில் திருந்து வேளாண் குடி முதல்வர்
நீரின் மலிந்த செய்ய சடை நீற்றர் கூற்றின் நெஞ்சு இடித்த
வேரி மலர்ந்த பூம் கழல் சூழ் மெய் அன்பு உடைய சைவர் என
பாரில் நிகழ்ந்த செரு துணையார் பரவும் தொண்டின் நெறி நின்றார்

#3
ஆன அன்பர் திருவாரூர் ஆழி தேர் வித்தகர் கோயில்
ஞான முனிவர் இமையவர்கள் நெருங்கு நலம் சேர் முன்றிலின் உள்
மான நிலவு திருப்பணிகள் செய்து காலங்களின் வணங்கி
கூனல் இள வெண் பிறை முடியார் தொண்டு பொலிய குலவும் நாள்

#4
உலகு நிகழ்ந்த பல்லவர் கோ சிங்கர் உரிமை பெருந்தேவி
நிலவு திரு பூ மண்டபத்து மருங்கு நீங்கி கிடந்தது ஒரு
மலரை எடுத்து மோந்ததற்கு வந்து பொறாமை வழி தொண்டர்
இலகு சுடர் வாய் கருவி எடுத்து எழுந்த வேகத்தால் எய்தி

#5
கடிது முற்றி மற்று அவள்-தன் கரு மென் கூந்தல் பிடித்து ஈர்த்து
படியில் வீழ்த்தி மணி மூக்கை பற்றி பரமர் செய்ய சடை
முடியில் ஏறும் திரு பூ மண்டபத்து மலர் மோந்திடும் மூக்கை
தடிவன் என்று கருவியினால் அரிந்தார் தலைமை தனி தொண்டர்

#6
அடுத்த திருத்தொண்டு உலகு அறிய செய்த அடல் ஏறு அனையவர்-தாம்
தொடுத்த தாமம் மலர் இதழி முடியார் அடிமை தொண்டு கடல்
உடுத்த உலகில் நிகழ செய்து உய்ய செய்ய பொன் மன்றுள்
எடுத்த பாத நிழல் அடைந்தே இறவா இன்பம் எய்தினார்

#7
செம் கண் விடையார் திரு முன்றில் விழுந்த திருப்பள்ளி தாமம்
அங்கண் எடுத்து மோந்ததற்கு அரசன் உரிமை பெருந்தேவி
துங்க மணி மூக்கு அரிந்த செருத்துணையார் தூய கழல் இறைஞ்சி
எங்கும் நிகழ்ந்த புகழ்த்துணையார் உரிமை அடிமை எடுத்து உரைப்பாம்
&10 கடழ் சூழ்ந்த சருக்கம்
@4 புகழ்த்துணை நாயனார் புராணம்

#1
செருவிலிபுத்தூர் மன்னும் சிவ மறையோர் திருக்குலத்தார்
அரு_வரை வில்லாளி தனக்கு அகத்து அடிமையாம் அதனுக்கு
ஒருவர் தமை நிகர் இல்லார் உலகத்து பரந்து ஓங்கி
பொருவு_அரிய புகழ் நீடு புகழ்த்துணையார் எனும் பெயரார்

#2
தம் கோனை தவத்தாலே தத்துவத்தின் வழிபடு நாள்
பொங்கு ஓத ஞாலத்து வற்கடமாய் பசி புரிந்தும்
எம் கோமான்-தனை விடுவேன் அல்லேன் என்று இரா_பகலும்
கொங்கு ஆர் பல் மலர் கொண்டு குளிர் புனல் கொண்டு அர்ச்சிப்பார்

#3
மால் அயனுக்கு அரியானை மஞ்சனம் ஆட்டும் பொழுது
சாலவுறு பசி பிணியால் வருந்தி நிலை தளர்வு எய்தி
கோல நிறை புனல் தாங்கு குடம் தாங்கமாட்டாமை
ஆலம் அணி கண்டத்தார் முடி மீது வீழ்த்து அயர்வார்

#4
சங்கரன்-தன் அருளால் ஓர் துயில் வந்து தமை அடைய
அங்கணனும் களவின்-கண் அருள்புரிவான் அருந்தும் உணவு
மங்கிய நாள் கழிவு அளவும் வைப்பது நித்தமும் ஒரு காசு
இங்கு உனக்கு நாம் என்ன இடர் நீங்கி எழுந்திருந்தார்

#5
பெற்றம் உகந்து ஏறுவார் பீடத்தின் கீழ் ஒரு காசு
அற்றம் அடங்கிட அளிப்ப அன்பரும் மற்று அது கைக்கொண்டு
உற்ற பெரும் பசி அதனால் உணங்கும் உடம்பு உடன் உவந்து
முற்றும் உணர்வு தலை நிரம்ப முகம் மலர்ந்து களிகூர்ந்தார்

#6
அந்நாள் போல் எந்நாளும் அளித்த காசு அது கொண்டே
இன்னாத பசி பிணி வந்து இறுத்த நாள் நீங்கிய பின்
மின் ஆர் செம் சடையார்க்கு மெய் அடிமை தொழில் செய்து
பொன் நாட்டின் அமரர் தொழ புனிதர் அடி நிழல் சேர்ந்தார்

#7
பந்து அணையும் மெல் விரலாள் பாகத்தார் திரு பாதம்
வந்து அணையும் மன துணையார் புகழ்த்துணையார் கழல் வாழ்த்தி
சந்து அணியும் மணி புயத்து தனவீரராம் தலைவர்
கொந்து அணையும் மலர் அலங்கல் கோட்புலியார் செயல் உரைப்பாம்
&10 கடழ் சூழ்ந்த சருக்கம்
@5 கோட்புலி நாயனார் புராணம்

#1
நலம் பெருகும் சோணாட்டு நாட்டியத்தான் குடி வேளாண்
குலம் பெருக வந்து உதித்தார் கோட்புலியார் எனும் பெயரார்
தலம் பெருகும் புகழ் வளவர் தந்திரியராய் வேற்று
புலம் பெருக துயர் விளைவிப்ப போர் விளைத்து புகழ் விளைப்பார்

#2
மன்னவன்-பால் பெறும் சிறப்பின் வளம் எல்லாம் மதி அணியும்
பிஞ்ஞகர்-தம் கோயில்-தொறும் திரு அமுதின் படி பெருக
செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே
பல் நெடும் நாள் செய்து ஒழுகும் பாங்கு புரிந்து ஓங்கும் நாள்

#3
வேந்தன் ஏவலில் பகைஞர் வெம் முனை மேல் செல்கின்றார்
பாந்தள் பூண் என அணிந்தார் தமக்கு அமுது படியாக
ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல்
வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார்

#4
தம் தமர்கள் ஆயினார் தமக்கு எல்லாம் தனித்தனியே
எந்தையார்க்கு அமுது படிக்கு ஏற்றிய நெல் இவை அழிக்க
சிந்தை ஆற்றா நினைவார் திருவிரையா கலி என்று
வந்தனையால் உரைத்து அகன்றார் மன்னவன் மாற்றார் முனை மேல்

#5
மற்றவர் தாம் போயின பின் சில நாளில் வற்காலம்
உற்றலும் அ சுற்றத்தார் உணவு இன்றி இறப்பதனில்
பெற்றம் உயர்த்தவர் அமுது படி கொண்டாகிலும் பிழைத்து
குற்றம் அற பின் கொடுப்போம் என கூடு குலைத்து அழித்தார்

#6
மன்னவன்-தன் தெம் முனையில் வினை வாய்த்து மற்றவன்-பால்
நல் நிதியின் குவை பெற்ற நாட்டியத்தான் குடி தலைவர்
அந்நாளில் தமர் செய்த பிழை அறிந்தது அறியாமே
துன்னினார் சுற்றம் எலாம் துணிப்பன் எனும் துணிவினராய்

#7
எதிர்கொண்ட தமர்க்கு எல்லாம் இனிய மொழி பல மொழிந்து
மதி தங்கு சுடர் மணி மாளிகையின்-கண் வந்து அணைந்து
பதி கொண்ட சுற்றத்தார்க்கு எல்லாம் பைம் துகில் நிதியம்
அதிகம் தந்து அளிப்பதனுக்கு அழை-மின்கள் என்று உரைத்து

#8
எல்லாரும் புகுந்ததன் பின் இருநிதியம் அளிப்பார் போல்
நல்லார்-தம் பேரோன் முன் கடை காக்க நாதன்-தன்
வல் ஆணை மறுத்து அமுது படி அழைத்த மற கிளையை
கொல்லாதே விடுவேனோ என கனன்று கொலைபுரிவார்

#9
தந்தையார் தாயார் மற்று உடன்பிறந்தார் தாரங்கள்
பந்தம் ஆர் சுற்றத்தார் பதி அடியார் மதி அணியும்
எந்தையார் திரு படி மற்று உண்ண இசைந்தார்களையும்
சிந்த வாள் கொடு துணிந்தார் தீய வினை பவம் துணிப்பார்

#10
பின் அங்கு பிழைத்த ஒரு பிள்ளையை தம் பெயரோன் அ
அன்னம் துய்த்து இலது குடிக்கு ஒரு புதல்வன் அருளும் என
இ நெல் உண்டாள் முலை பால் உண்டது என எடுத்து எறிந்து
மின் நல்ல வடி வாளால் இரு துணியாய் விழ ஏற்றார்

#11
அ நிலையே சிவபெருமான் அன்பர் எதிர் வெளியே நின்று
உன்னுடைய கை வாளால் உறு பாசம் அறுத்த கிளை
பொன் உலகின் மேல் உலகம் புக்கு அணைய புகழோய் நீ
இ நிலை நம்முடன் அணைக என்றே எழுந்தருளினார்

#12
அத்தனாய் அன்னையாய் ஆர் உயிராய் அமிர்து ஆகி
முத்தனாம் முதல்வன் தாள் அடைந்து கிளை முதல் தடிந்த
கொத்து அலர் தார் கோட்புலியார் அடி வணங்கி கூட்டத்தில்
பத்தராய் பணிவார்-தம் பரிசினையாம் பகருவாம்

#13
மேவு_அரிய பெரும் தவம் யான் முன்பு விளைத்தன என்னோ
ஆவதும் ஓர் பொருள் அல்லா என் மனத்தும் அன்றியே
நாவலர் காவலர் பெருகு நதி கிழிய வழி நடந்த
சேவடி போது எப்போதும் சென்னியினும் மலர்ந்தன-ஆல்