0. பாயிரம்


@1 கடவுள் வாழ்த்து
#1
உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்
அலகு_இல் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்
#2
ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியை சாரும்-ஆல்
தேன் அடைந்த மலர் பொழில் தில்லை உள்
மா நடம் செய் வரதர் பொன் தாள் தொழ
#3
எடுக்கும் மா கதை இன் தமிழ் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள்செய்திட
தட கை ஐந்து உடை தாழ் செவி நீள் முடி
கட களிற்றை கருத்து உள் இருத்துவாம்
#4
மதி வளர் சடைமுடி மன்றுள் ஆரை முன்
துதி செயும் நாயன்மார் தூய சொல் மலர்
பொதி நலன் நுகர் தரும் புனிதர் பேரவை
விதி முறை உலகினில் விளங்கி வெல்கவே
#5
அளவு_இலாத பெருமையர் ஆகி
அளவு_இலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்ப அரிது ஆயினும்
அளவு_இல் ஆசை துரப்ப அறைகுவேன்
#6
தெரிவு_அரும் பெருமை திருத்தொண்டர்-தம்
பொரு அரும் சீர் புகலல் உற்றேன் முற்ற
பெருகு தெண் கடல் ஊற்று உண் பெரு நசை
ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன்
#7
செப்பலுற்ற பொருளின் சிறப்பினால்
அ பொருட்கு உரை யாவரும் கொள்வர்-ஆல்
இ பொருட்கு என் உரை சிறிது ஆயினும்
மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர் மேன்மை-ஆல்
#8
மேய இ உரை கொண்டு விரும்பும் ஆம்
சேயவன் திரு பேரம்பலம் செய்யா
தூய பொன் அணி சோழன் நீடு ஊழி பார்
ஆய சீர் அநபாயன் அரசு அவை
#9
அருளின் நீர்மை திருத்தொண்டு அறிவரும்
தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம் எனின்
வெருள் இல் மெய் மொழி வான் நிழல் கூறிய
பொருளின் ஆகும் என புகல்வாம் அன்றே
#10
இங்கு இதன் நாமம் கூறின் இ உலகத்து முன்னாள்
தங்கு இருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனை புற இருள் போக்குகின்ற
செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர்புராணம் என்பாம்
மேல்