திணைமாலை நூற்றைம்பது

பாடல் எண் எல்லைகள்


*@1 குறிஞ்சி

#1
நறை படர் சாந்தம் அற எறிந்து நாளால்
உறை எதிர்ந்து வித்திய ஊழ் ஏனல் பிறை எதிர்ந்த
தாமரை போல் வாள் முகத்து தாழ்குழலீர் காணீரோ
ஏ மரை போந்தன ஈண்டு

#2
சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி
இதணால் கடி ஒடுங்கா ஈர்ம் கடா யானை
உதணால் கடிந்தான் உளன்

#3
சாந்தம் எறிந்து உழுத சாரல் சிறு தினை
சாந்தம் எறிந்த இதண் மிசை சாந்தம்
கமழ கிளி கடியும் கார் மயில் அன்னாள்
இமிழ கிளி எழா ஆர்த்து

#4
கோடா புகழ் மாறன் கூடல் அனையாளை
ஆடா அடகினும் காணேன் போர் வாடா
கரும் கொல் வேல் மன்னர் கலம் புக்ககொல்லோ
மருங்குல் கொம்பு அன்னாள் மயிர்

#5
வினை விளைய செல்வம் விளைவது போல் நீடா
பனை விளைவு நாம் எண்ண பாத்தி தினை விளைய
மை ஆர் தடம் கண் மயில் அன்னாய் தீ தீண்டு
கையார் பிரிவித்தல் காண்

#6
மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து அருவி
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம்
காயும் வேல்கண்ணாள் கனை இருளில் நீ வர
ஆயுமோ மன்ற நீ ஆய்

#7
கறி வளர் பூம் சாரல் கைந்நாகம் பார்த்து
நெறி வளர் நீள் வேங்கை கொட்கும் முறி வளர்
நல் மலை நாட இர வரின் வாழாளால்
நல் மலை நாடன் மகள்

#8
அவட்குஆயின் ஐவனம் காவல் அமைந்தது
இவட்குஆயின் செம் தினை கார் ஏனல் இவட்குஆயின்
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல்
கண் உளவால் காமன் கணை

#9
வஞ்சமே என்னும் வகைத்தால் ஓர் மா வினாய்
தஞ்சம் தமியனாய் சென்றேன் என் நெஞ்சை
நலம் கொண்டு ஆர் பூம் குழலாள் நன்று ஆயத்து அன்று என்
வலம் கொண்டாள் கொண்டாள் இடம்

#10
கரு விரல் செம் முக வெண் பல் சூல் மந்தி
பரு விரலால் பைம் சுனை நீர் தூஉய் பெரு வரை மேல்
தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட வாரலோ
வான் தேவர் கொட்கும் வழி

#11
கரவு இல் வள மலை கல் அருவி நாட
உர வில் வலியாய் ஒரு நீ இரவின்
வழிகள்தாம் சால வர அரிய வாரல்
இழி கடா யானை எதிர்

#12
வேலனார் போக மறி விடுக்க வேரியும்
பாலனார்க்கு ஈக பழியிலாள்பாலால்
கடும் புனலின் நீந்தி கரை வைத்தாற்கு அல்லால்
நெடும் பணை போல் தோள் நேராள் நின்று

#13
ஒரு வரை போல் எங்கும் பல வரையும் சூழ்ந்த
அரு வரை உள்ளதாம் சீறூர் வரு வரையுள்
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால்
கை வாய நாகம் சேர் காடு

#14
வருக்கை வள மலையுள் மாதரும் யானும்
இருக்கை இதண் மேலேம் ஆக பரு கை
கடாஅம் மால் யானை கடிந்தானை அல்லால்
தொடாஅவால் என் தோழி தோள்

#15
வாடாத சான்றோர் வரவு எதிர்கொண்டிராய்
கோடாது நீர் கொடுப்பின் அல்லது கோடா
எழிலும் முலையும் இரண்டிற்கும் முந்நீர்
பொழிலும் விலை ஆமோ போந்து

#16
நாள் நாகம் நாறும் நனை குழலாள் நல்கி தன்
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது பூண் ஆகம்
என்றேன் இரண்டாவது உண்டோ மடல்மா மேல்
நின்றேன் மறுகிடையே நேர்ந்து

#17
அறிகு அவளை ஐய இடை மடவாய் ஆய
சிறிது அவள் செல்லாள் இறும் என்று அஞ்சி சிறிது அவள்
நல்கும்வாய் காணாது நைந்து உருகி என் நெஞ்சம்
ஒல்கும்வாய் ஒல்கல் உறும்

#18
என் ஆம்கொல் ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப
பொன் ஆம் போர் வேலவர்தாம் புரிந்தது என்னே
மருவி ஆம் மாலை மலை நாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி

#19
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி பல் பூ பெய்தால்
ஒத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து என்
நெஞ்சம் வாய் புக்கு ஒழிவு காண்பானோ காண் கொடா
அம் சாயற்கே நோவல் யான்

#20
நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட
கோள் வேங்கை போல் கொடியார் என் ஐயன்மார் கோள் வேங்கை
அன்னையால் நீயும் அரும் தழை யாம் ஏலாமைக்கு
என்னையோ நாளை எளிது

#21
பொன் மெலியும் மேனியாள் பூம் சுணங்கு மென் முலைகள்
என் மெலிய வீங்கினவே பாவம் என்று என் மெலிவிற்கு
அண் கண்ணி வாடாமை யான் நல்ல என்றால் தான்
உண்கண்ணி வாடாள் உடன்று

#22
கொல் யானை வெண் மருப்பும் கொல் வல் புலி அதளும்
நல் யானை நின் ஐயர் கூட்டுண்டு செல்வார்தாம்
ஓர் அம்பினான் எய்து போக்குவர் யான் போகாமல்
ஈர் அம்பினால் எய்தாய் இன்று

#23
பெரு மலை தாம் நாடி தேன் துய்த்து பேணாது
அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு
நாண் அழிந்து நல்ல நலன் அழிந்து நைந்து உருகி
ஏண் அழிதற்கு யாம் ஏயினம்

#24
நறும் தண் தகரம் வகுளம் இவற்றை
வெறும் புதல் போல் வேண்டாது வேண்டி எறிந்து உழுது
செம் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு
நொந்து இனைய வல்லளோ நோக்கு

#25
கொல் இயல் வேழம் குயவரி கோள் பிழைத்து
நல் இயல் தம் இனம் நாடுவ போல் நல் இயல்
நாம வேல் கண்ணாள் நடுநடுப்ப வாரலோ
ஏம வேல் ஏந்தி இரா

#26
கரும் கால் இள வேங்கை கான்ற பூ கல் மேல்
இரும் கால் வய வேங்கை ஏய்க்கும் மருங்கால்
மழை வளரும் சாரல் இர வரின் வாழாள்
இழை வளரும் சாயல் இனி

#27
பனி வரை நீள் வேங்கை பய மலை நல் நாட
இனி வரையாய் என்று எண்ணி சொல்வேன் முனி வரையுள்
நின்றான் வலியாக நீ வர யாய் கண்டாள்
ஒன்றாள் காப்பு ஈயும் உடன்று

#28
மேகம் தோய் சாந்தம் விசை திமிசு காழ் அகில்
நாகம் தோய் நாகம் என இவற்றை போக
எறிந்து உழுவார் தங்கை இரும் தடம் கண் கண்டும்
மறிந்து உழல்வானோ இ மலை

#29
பலா எழுந்தபால் வருக்கை பாத்தி அதன் நேர்
நிலா எழுந்த வார் மணல் நீடி சுலா எழுந்து
கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூம் தண் பொதும்பர்
தான் நாற தாழ்ந்த இடம்

#30
திங்களுள் வில் எழுதி தேராது வேல் விலக்கி
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால் இங்கண்
புனம் காக்க வைத்தார் போல் பூங்குழலை போந்து என்
மனம் காக்க வைத்தார் மருண்டு

#31
தன் குறை இது என்னான் தழை கொணரும் தண் சிலம்பன்
நின் குறை என்னும் நினைப்பினனாய் பொன் குறையும்
நாள் வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ
கோள் வேங்கை அன்னான் குறிப்பு
*@2 நெய்தல்

#32
பானல் அம் தண் கழி பாடு அறிந்து தன்னைமார்
நூல் நல நுண் வலையால் நொண்டு எடுத்த கானல்
படு புலால் காப்பாள் படை நெடும் கண் நோக்கம்
கடிபு ஒல்லா என்னையே காப்பு

#33
பெரும் கடல் வெண் சங்கு காரணமா பேணாது
இரும் கடல் மூழ்குவார் தங்கை இரும் கடலுள்
முத்து அன்ன வெண் முறுவல் கண்டு உருகி நைவார்க்கே
ஒத்தனம் யாமே உளம்

#34
தாமரைதான் முகமா தண் அடை ஈர் மா நீலம்
காமர் கண் ஆக கழி துயிற்றும் காமரு சீர்
தண் பரப்ப பாய் இருள் நீ வரின் தாழ் கோதையாள்
கண் பரப்ப காண் நீர் கசிந்து

#35
புலால் அகற்றும் பூம் புன்னை பொங்கு நீர் சேர்ப்ப
நிலா அகற்றும் வெண் மணல் தண் கானல் சுலா அகற்றி
கங்குல் நீ வாரல் பகல் வரின் மா கவ்வை ஆம்
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு

#36
முருகு வாய் முள் தாழை நீள் முகை பார்ப்பு என்றே
குருகு வாய் பெய்து இரை கொள்ளாது உருகி மிக
இன்னா வெயில் சிறகால் மறைக்கும் சேர்ப்ப நீ
மன்னா வரவு மற

#37
ஓத நீர் வேலி உரை கடியா பாக்கத்தார்
காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர்
அன்று அறியும் ஆதலால் வாராது அலர் ஒழிய
மன்று அறிய கொள்ளீர் வரைந்து

#38
மா கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர்
மா கடல் சேர் தண் பரப்பன் மார்பு அணங்கா மா கடலே
என் போல துஞ்சாய் இது செய்தார் யார் உரையாய்
என் போலும் துன்பம் நினக்கு

#39
தந்தார்க்கே ஆமால் தட மென் தோள் இன்ன நாள்
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம் வந்தார்க்கே
காவா இள மணல் தண் கழி கானல்வாய்
பூவா இள ஞாழல் போது

#40
தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா
இன் துணையோடு ஆட இயையுமோ இன் துணையோடு
ஆடினாய் நீஆயின் அ நோய்க்கு என் நொந்து என்று
போயினான் சென்றான் புரிந்து

#41
உருகுமால் உள்ளம் ஒரு நாளும் அன்றால்
பெருகுமால் நம் அலர் பேண பெருகா
ஒருங்கு வால் மின்னோடு உரும் உடைத்தாய் பெய்வான்
நெருங்கு வான் போல நெகிழ்ந்து

#42
கவள களிப்பு இயல் மால் யானை சிற்றாளி
தவழ தான் நில்லாதது போல் பவள
கடிகையிடை முத்தம் காண்தொறும் நில்லா
தொடி கையிடை முத்தம் தொக்கு

#43
கடல் கோடு இரு மருப்பு கால் பாகன் ஆக
அடல் கோட்டு யானை திரையா உடற்றி
கரை பாய் நீள் சேர்ப்ப கனை இருள் வாரல்
வரைவாய் நீ ஆகவே வா

#44
கடும் புலால் புன்னை கடியும் துறைவ
படும் புலால் புள் கடிவான் புக்க தடம் புல் ஆம்
தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில்
ஏழை மான் நோக்கி இடம்

#45
தாழை தவழ்ந்து உலாம் வெண் மணல் தண் கானல்
மாழை நுளையர் மட மகள் ஏழை
இணை நாடில் இல்லா இரும் தடம் கண் கண்டும்
துணை நாடினன் தோம் இலன்

#46
தந்து ஆயல் வேண்டா ஓர் நாள் கேட்டு தாழாது
வந்தால் நீ எய்துதல் வாயால் மற்று எந்தாய்
மறி மகர வார் குழையாள் வாழாள் நீ வாரால்
எறி மகரம் கொட்கும் இரா

#47
பண்ணாது பண் மேல் தேன் பாடும் கழி கானல்
எண்ணாது கண்டார்க்கே ஏர் அணங்கால் எண்ணாது
சாவார் சான்றாண்மை சலித்திலா மற்று இவளை
காவார் கயிறுரீஇவிட்டார்

#48
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழி கானல்
விரை மேவும் பாக்கம் விளக்கா கரை மேல்
விடுவாய் பசும் புற இப்பி கால் முத்தம்
படு வாய் இருள் அகற்றும் பாத்து

#49
எங்கு வருதி இரும் கழி தண் சேர்ப்ப
பொங்கு திரை உதைப்ப போந்து ஒழிந்த சங்கு
நரன்று உயிர்த்த நித்திலம் நள் இருள் கால் சீக்கும்
வரன்று உயிர்த்த பாக்கத்து வந்து

#50
திமில் களிறு ஆக திரை பறையா பல் புள்
துயில் கெட தோன்றும் படையா துயில் போல்
குறியா வரவு ஒழிந்து கோல நீர் சேர்ப்ப
நெறியால் நீ கொள்வது நேர்

#51
கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண்
படும் புலால் பார்த்தும் பகர்தும் அடும்பு எலாம்
சாலிகை போல் வலை சால பல உணங்கும்
பாலிகை பூக்கும் பயின்று

#52
திரை பாகன் ஆக திமில் களிறு ஆக
கரை சேர்ந்த கானல் படையா விரையாது
வேந்து கிளர்ந்து அன்ன வேலை நீர் சேர்ப்ப நாள்
ஆய்ந்து வரைதல் அறம்

#53
பாறு புரவியா பல் களிறு நீள் திமிலா
தேறு திரை பறையா புள் படையா தேறாத
மன் கிளர்ந்த போலும் கடல் சேர்ப்ப மற்று எமர்
முன் கிளர்ந்து எய்தல் முடி

#54
வாராய் வரின் நீர் கழி கானல் நுண் மணல் மேல்
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே ஓர் இலோர்
கோள் நாடல் வேண்டா குறி அறிவார் கூஉய் கொண்டு ஓர்
நாள் நாடி நல்குதல் நன்று

#55
கண் பரப்ப காணாய் கடும் பனி கால் வல் தேர்
மண் பரக்கும் மா இருள் மேற்கொண்டு மண் பரக்கு
மாறு நீர் வேலை நீ வாரல் வரின் ஆற்றாள்
ஏறு நீர் வேலை எதிர்

#56
கடல் கானல் சேர்ப்ப கழி உலாஅய் நீண்ட
அடல் கானல் புன்னை தாழ்ந்து ஆற்ற மடல் கானல்
அன்றில் அகவும் அணி நெடும் பெண்ணைத்து எம்
முன்றில் இள மணல் மேல் மொய்த்து

#57
வரு திரை தான் உலாம் வார் மணல் கானல்
ஒரு திரை ஓடா அளவை இரு திரை
முன் வீழும் கானல் முழங்கு கடல் சேர்ப்ப
என் வீழல் வேண்டா இனி

#58
மாயவனும் தம்முனும் போலே மறி கடலும்
கானலும் சேர் வெண் மணலும் காணாயோ கானல்
இடை எலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடை எலாம் புன்னை புகன்று

#59
பகல் வரின் கவ்வை பல ஆம் பரியாது
இர வரின் ஏதமும் அன்ன புக அரிய
தாழை துவளும் தரங்க நீர் சேர்ப்பிற்றே
ஏழை நுளையர் இடம்

#60
திரை அலறி பேர தெழியா திரியா
கரை அலவன் காலினால் காணா கரை அருகே
நெய்தல் மலர் கொய்யும் நீள் நெடும் கண்ணினாள்
மையல் நுளையர் மகள்

#61
அறிகு அரிது யார்க்கும் அரவ நீர் சேர்ப்ப
நெறி திரிவார் இன்மையால் இல்லை முறி திரிந்த
கண்டல் அம் தண் தில்லை கலந்து கழி சூழ்ந்த
மிண்டல் அம் தண் தாழை இணைந்து

#62
வில்லார் விழவினும் வேல் ஆழி சூழ் உலகில்
நல்லார் விழவகத்தும் நாம் காணேம் நல்லாய்
உவர்க்கத்து ஒரோ உதவி சேர்ப்பன் ஒப்பாரை
சுவர்க்கத்து உளராயின் சூழ்
*@3 பாலை

#63
எரி நிற நீள் பிண்டி இணர் இனம் எல்லாம்
வரி நிற நீள் வண்டர் பாட புரி நிற நீள்
பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் பூந்தொடி தோள்
என் அணிந்த ஈடு இல் பசப்பு

#64
பேணாய் இதன் திறத்து என்றாலும் பேணாதே
நாண் ஆய நல் வளையாய் நாண் இன்மை காணாய்
எரி சிதறி விட்டு அன்ன ஈர் முருக்கு ஈடு இல்
பொரி சிதறி விட்டு அன்ன புன்கு

#65
தான் தாயா கோங்கம் தளர்ந்து முலை கொடுப்ப
ஈன்றாய் நீ பாவை இரும் குரவே ஈன்றாள்
மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற
வழி காட்டாய் ஈது என்று வந்து

#66
வல் வரும் காணாய் வயங்கி முருக்கு எல்லாம்
செல்வர் சிறார்க்கு பொற்கொல்லர் போல் நல்ல
பவள கொழுந்தின் மேல் பொன் தாலி பாஅய்
திகழ கான்றிட்டன தேர்ந்து

#67
வெறுக்கைக்கு சென்றார் விளங்கிழாய் தோன்றார்
பொறுக்க என்றால் பொறுக்கலாமோ ஒறுப்ப போல்
பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம்
என் உள் உறு நோய் பெரிது

#68
சென்றக்கால் செல்லும் வாய் என்னோ இரும் சுரத்து
நின்றக்கால் நீடி ஒளி விடா நின்ற
இழைக்கு அமர்ந்த ஏய் ஏர் இள முலையாள் ஈடு இல்
குழைக்கு அமர்ந்த நோக்கின் குறிப்பு

#69
அத்தம் நெடிய அழல் கதிரோன் செம்பாகம்
அத்தம் மறைந்தான் இ அணியிழையோடு ஒத்த
தகையினால் எம் சீறூர் தங்கினிராய் நாளை
வகையினிராய் சேறல் வனப்பு

#70
நின் நோக்கம் கொண்ட மான் தண் குரவ நீழல் காண்
பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம்
கொண்ட சுணங்கு அணி மென் முலை கொம்பு அன்னாய்
வண்டல் அயர் மணல் மேல் வந்து

#71
அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும் மாறு இலா
வெம் சுடர் நீள் வேலானும் போதர கண்டு அஞ்சி
ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
இரு சுடரும் போந்தன என்றார்

#72
முகம் தாமரை முறுவல் ஆம்பல் கண் நீலம்
இகந்து ஆர் விரல் காந்தள் என்று என்று உகந்து இயைந்த
மாழை மா வண்டிற்கு ஆம் நீழல் வருந்தாதே
ஏழைதான் செல்லும் இனிது

#73
செம் வாய் கரிய கண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் அ ஆயம்
தார் தத்தை வாய் மொழியும் தண் கயத்து நீலமும்
ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து

#74
புன் புறவே சேவலோடு ஊடல் பொருள் அன்றால்
அன்பு உறவே உடையார்ஆயினும் வன்புற்றது
காண் அகன்ற வழி நோக்கி பொன் போர்த்து
இது காண் என் வண்ணம் இனி

#75
எரிந்து சுடும் இரவி ஈடு இல் கதிரான்
விரிந்து விடு கூந்தல் வெஃகா புரிந்து
விடு கயிற்றின் மாசுணம் வீயும் நீள் அத்தம்
அடு திறலான் பின் சென்ற ஆறு

#76
நெஞ்சம் நினைப்பினும் நெல் பொரியும் நீள் அத்தம்
அஞ்சல் என ஆற்றின் அஞ்சிற்றால் அஞ்சி
புடை நெடும் காது உற போழ்ந்து அகன்று நீண்ட
படை நெடும் கண் கொண்ட பனி

#77
வந்தால்தான் செல்லாமோ ஆர் இடையாய் வார் கதிரால்
வெந்தால் போல் தோன்றும் நீள் வேய் அத்தம் தந்து ஆர்
தகர குழல் புரள தாழ் துகில் கை ஏந்தி
மகர குழை மறித்த நோக்கு

#78
ஒரு கை இரு மருப்பின் மு மத மால் யானை
பருகு நீர் பைம் சுனையில் காணாது அருகல்
வழி விலங்கி வீழும் வரை அத்தம் சென்றார்
அழிவிலர் ஆக அவர்

#79
சென்றார் வருதல் செறிதொடி சேய்த்துஅன்றால்
நின்றார் சொல் தேறாதாய் நீடு இன்றி வென்றார்
எடுத்த கொடியின் இலங்கு அருவி தோன்றும்
கடுத்த மலை நாடு காண்

#80
உருவ வேல் கண்ணாய் ஒரு கால் தேர் செல்வன்
வெருவ வீந்து உக்க நீள் அத்தம் வருவர்
சிறந்து பொருள் தருவான் சேண் சென்றார் இன்றே
இறந்து கண் ஆடும் இடம்

#81
கொன்றாய் குருந்தே கொடி முல்லாய் வாடினீர்
நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு
என் உரைத்தீர்க்கு என் உரைத்தாட்கு என் உரைத்தீர்க்கு என் உரைத்தாள்
மின் நிரைத்த பூண் மிளிர விட்டு

#82
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்கு
பூண் கடனா போற்றி புரிந்தமையால் பூண் கடனா
செய் பொருட்கு செல்வரால் சின்மொழி நீ சிறிது
நை பொருட்கண் செல்லாமை நன்று

#83
செல்பவோ சிந்தனையும் ஆகாதால் நெஞ்சு எரியும்
வெல்பவோ சென்றார் வினை முடிய நல்லாய்
இதடி கரையும் கல் மா போல தோன்றும்
சிதடி கரையும் திரிந்து

#84
கள்ளிஅம் காட்ட கடமா இரிந்து ஓட
தள்ளியும் செல்பவோ தம்முடையார் கொள்ளும்
பொருள் இலர்ஆயினும் பொங்கென போந்து எய்யும்
அருள் இல் மறவர் அதர்

#85
பொருள் பொருள் என்றார் சொல் பொன் போல போற்றி
அருள் பொருள் ஆகாமை ஆக அருளான்
வளமை கொணரும் வகையினான் மற்று ஓர்
இளமை கொணர இசை

#86
ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது
செல்வார் என்றாய் நீ சிறந்தாயே செல்லாது
அசைந்து ஒழிந்த யானை பசியால் ஆள் பார்த்து
மிசைந்து ஒழியும் அத்தம் விரைந்து

#87
ஒன்றானும் நாம் மொழியலாமோ செலவு தான்
பின்றாது பேணும் புகழான் பின் பின்றா
வெலற்கு அரிதாம் வில் வலான் வேல் விடலை பாங்கா
செலற்கு அரிதா சேய சுரம்

#88
அல்லாத என்னையும் தீர மற்று ஐயன்மார்
பொல்லாதது என்பது நீ பொருந்தாய் எல்லார்க்கும்
வல்லி ஒழியின் வகைமை நீள் வாள் கண்ணாய்
புல்லி ஒழிவான் புலந்து

#89
நண்ணி நீர் சென்மின் நமர் அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ எண்ணிய
வெஞ்சுடர் அன்னானை யான் கண்டேன் கண்டாளாம்
தண்சுடர் அன்னாளை தான்

#90
வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தான்
கூறாயோ கூறும் குணத்தினனாய் வேறாக
என் மனைக்கு ஏற கொணருமோ எல்வளையை
தன் மனைக்கே உய்க்குமோ தான்

#91
கள்ளி சார் கார் ஓமை நார் இல் பூ நீள் முருங்கை
நள்ளிய வேய் வாழ்பவர் நண்ணுபவோ புள்ளி
பருந்து கழுகொடு வம்பலர் பார்த்து ஆண்டு
இருந்து உறங்கி வீயும் இடம்

#92
செல்பவோ தம் அடைந்தார் சீர் அழிய சிள் துவன்றி
கொல்ப போல் கூப்பிடும் வெம் கதிரோன் மல்கி
பொடி வெந்து பொங்கி மேல் வான் சுடும் கீழால்
அடி வெந்து கண் சுடும் ஆறு
*@ முல்லை

#93
கரும் கடல் மாந்திய வெண் தலை கொண்மூ
இரும் கடல் மா கொன்றான் வேல் மின்னி பெரும் கடல்
தன் போல் முழங்கி தளவம் குருந்து அணைய
என்கொல் யான் ஆற்றும் வகை

#94
பகல் பருகி பல் கதிர் ஞாயிறு கல் சேர
இகல் கருதி திங்கள் இருளை பகல் வர
வெண் நிலா காலும் மருள் மாலை வேய்த்தோளாய்
உள் நிலாது என் ஆவி ஊர்ந்து

#95
மேல் நோக்கி வெம் கதிரோன் மாந்திய நீர் கீழ் நோக்கி
கான் ஓக்கம் கொண்டு அழகா காண் மடவாய் மான்நோக்கி
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய
சாதாரி நின்று அறையும் சார்ந்து

#96
இருள் பரந்து ஆழியான்தன் நிறம் போல் தம்முன்
அருள் பரந்த ஆய் நிறம் போன்று மருள் பரந்த
பால் போலும் வெண் நிலவும் பை அரவு அல்குலாய்
வேல் போலும் வீழ் துணை இலார்க்கு

#97
பாழி போல் மாயவன் தன் பற்றார் களிற்று எறிந்த
ஆழி போல் ஞாயிறு கல் சேர தோழியோ
மால் மாலை தம்முன் நிறம் போல் மதி முளைப்ப
யான் மாலை ஆற்றேன் இனைந்து

#98
வீயும் வியன் புறவின் வீழ் துளியான் மா கடுக்கை
நீயும் பிறரொடும் காண் நீடாதே ஆயும்
கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய்
குழல் ஆகி கோல் சுரியாய் கூர்ந்து

#99
பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும்
என் வாளா என்றி இலங்கு எயிற்றாய் என் வாள் போல்
வாள் இழந்த கண் தோள் வனப்பு இழந்த மெல் விரலும்
நாள் இழந்த எண் மிக்கு நைந்து

#100
பண்டு இயைய சொல்லிய சொல் பழுதால் மா கடல்
கண்டு இயைய மாந்தி கால்வீழ்த்து இருண்டு எண் திசையும்
கார் தோன்ற காதலர் தேர் தோன்றாது ஆகவே
பீர் தோன்றி நீர் தோன்றும் கண்

#101
வண்டு இனம் வெளவாத ஆம்பலும் வார் இதழான்
வண்டு இனம் வாய் வீழா மாலையும் வண்டு இனம்
ஆராத பூம் தார் அணி தேரான்தான் போத
வாராத நாளே வரும்

#102
மான் எங்கும் தம் பிணையோடு ஆட மறி உகள
வான் எங்கும் வாய்த்து வளம் கொடுப்ப கான் எங்கும்
தேன் இறுத்த வண்டோடு தீ தா என தேராது
யான் இறுத்தேன் ஆவி இதற்கு

#103
ஒருவந்தம் அன்றால் உறை முதிரா நீரால்
கருமம்தான் கண்டு அழிவுகொல்லோ பருவம்தான்
பட்டின்றே என்றி பணை தோளாய் கண்ணீரால்
அட்டினேன் ஆவி அதற்கு

#104
ஐந்து உருவின் வில் எழுதி நால் திசைக்கும் முந்நீரை
இந்து உருவின் மாந்தி இரும் கொண்மூ முந்து உருவின்
ஒன்றாய் உரும் உடைத்தாய் பெய் வான் போல் பூக்கு என்று
கொன்றாய் கொன்றாய் என் குழைத்து

#105
எல்லை தருவான் கதிர் பருகி ஈன்ற கார்
கொல்லை தரு வான் கொடிகள் ஏறுவ காண் முல்லை
பெரும் தண் தளவொடு தம் கேளிரை போல் காணாய்
குருந்தம்அங்கு ஒடுங்கு அழுத்தம் கொண்டு

#106
என்னரே ஏற்ற துணை பிரிந்தார் ஆற்று என்பார்
அன்னரே ஆவர் அவரவர்க்கு முன்னரே
வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன்
கந்தாரம் பாடும் களித்து

#107
கரு உற்ற காயா கண மயில் என்று அஞ்சி
உரும் உற்ற பூம் கோடல் ஓடி உரும் உற்ற
ஐம் தலை நாகம் புரையும் அணி கார்தான்
எம்தலையே வந்தது இனி

#108
கண் உளவாயின் முலை அல்லை காணலாம்
எண் உளவாயின் இறவாவால் எண் உளவா
அன்று ஒழிய நோய் மொழி சார்வு ஆகாது உரும் உடை வான்
ஒன்று ஒழிய நோய் செய்தவாறு

#109
என் போல் இகுளை இரும் கடல் மாந்திய கார்
பொன் போல் தார் கொன்றை புரிந்தன பொன் போல்
துணை பிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார்
இணை பிரிந்து வாழ்வர் இனி

#110
பெரியார் பெருமை பெரிதே இடர்க்கண்
அரியார் எளியர் என்று ஆற்றா பரிவாய்
தலை அழுங்க தண் தளவம் தாம் நக கண்டு ஆற்றா
மலை அழுத சால மருண்டு

#111
கானம் கடி அரங்கா கைம்மறிப்ப கோடலார்
வானம் விளிப்ப வண்டு யாழாக வேனல்
வளரா மயில் ஆட வாட்கண்ணாய் சொல்லாய்
உளர் ஆகி உய்யும் வகை

#112
தேரோன் மலை மறைய தீம் குழல் வெய்து ஆக
வாரான் விடுவானோ வாள்கண்ணாய் கார் ஆர்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும்
விருந்தோடு நிற்றல் விதி

#113
பறி ஓலை மேலொடு கீழா இடையர்
பிறியோலை பேர்த்து விளியா கதிப்ப
நரி உளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய்
விரி உளை மான் தேர் மேல் கொண்டார்

#114
பாத்து படு கடல் மாந்தி பல கொண்மூ
காத்து கனை துளி சிந்தாமை பூத்து
குருந்தே பருவம் குறித்து இவளை நைந்து
வருந்தே என்றாய் நீ வரைந்து

#115
படும் தடம் கண் பல் பணை போல் வான் முழங்கல் மேலும்
கொடும் தடம் கண் கூற்று மின் ஆக நெடும் தடம் கண்
நீர் நின்ற நோக்கின் நெடும் பணை மென் தோளாட்கு
தேர் நின்றது என்னாய் திரிந்து

#116
குருந்தே கொடி முல்லாய் கொன்றாய் தளவே
முருந்து ஏய் எயிறொடு தார் பூப்பித்திருந்தே
அரும்பு ஈர் முலையாள் அணி குழல் தாழ் வேய்த்தோள்
பெரும் பீர் பசப்பித்தீர் பேர்ந்து

#117
கத நாகம் புற்று அடைய கார் ஏறு சீற
மத நாகம் மாறு முழங்க புதல் நாகம்
பொன் பயந்த வெள்ளி புறமாக பூங்கோதாய்
என் பசந்த மென் தோள் இனி

#118
கார் தோன்றி பூவுற்ற காந்தள் முகை விளக்கு
பீர் தோன்றி தூண்டுவாள் மெல் விரல் போல் நீர் தோன்றி
தன் பருவம் செய்தது கானம் தடம்கண்ணாய்
என் பருவம் அன்று என்றி இன்று

#119
உகவும் கார் அன்று என்பார் ஊரார் அதனை
தகவும் தகவு அன்று என்று ஓரேன் தகவேகொல்
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய்
வெண் குடை ஆம் தண் கோடல் வீந்து

#120
பீடு இலார் என்பார்கள் காணார்கொல் வெம் கதிரால்
கோடு எலாம் பொன் ஆய் கொழும் கடுக்கை காடு எலாம்
அத்தம் கதிரோன் மறைவதன் முன் வண்டொடு தேன்
துத்தம் அறையும் தொடர்ந்து

#121
ஒருத்தி யான் ஒன்று அல பல் பகை என்னை
விருத்தியா கொண்டன வேறா பொருத்தின்
மடல் அன்றில் மாலை படு வசி ஆம்பல்
கடல் அன்றி கார் ஊர் கறுத்து

#122
கானம் தலைசெய காப்பார் குழல் தோன்ற
ஏனம் இடந்த மணி எதிரே வானம்
நகுவது போல் மின் ஆட நாணா என் ஆவி
உகுவது போலும் உடைந்து

#123
இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண் நம்மை
எளியர் என நலிந்த ஈர்ங்குழலார் ஏடி
தெளிய சுடப்பட்டவாறு
*@5 மருதம்

#124
செவ்வழி யாழ் பாண்மகனே சீர் ஆர் தேர் கையினால்
இ வகை ஈர்த்து உய்ப்பான் தோன்றாமுன் இ வழியே
ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள்
கூடினான் பின் பெரிது கூர்ந்து

#125
மா கோல் யாழ் பாண்மகனே யானை பாகனார்
தூக்கோல் துடியோடு தோன்றாமுன் தூக்கோல்
தொடி உடையார் சேரிக்கு தோன்றுமோ சொல்லாய்
கடி உடையேன் வாயில் கடந்து

#126
விளரி யாழ் பாண்மகனே வேண்டா அழையேல்
முளரி மொழியாது உளரி கிளரி நீ
பூம் கண் வயல் ஊரன் புத்தில் புகுவதன்முன்
ஆங்கண் அறிய உரை

#127
மென் கண் கலி வயல் ஊரன்தன் மெய்ம்மையை
எங்கட்கு உரையாது எழுந்து போய் இங்கண்
குலம் காரம் என்று அணுகான் கூடும் கூத்து என்றே
அலங்கார நல்லார்க்கு அறை

#128
செந்தாமரை பூ உற நிமிர்ந்த செந்நெல்லின்
பைம் தார் புனல்வாய் பாய்ந்து ஆடுவாள் அம் தார்
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை
நயந்து அகன்று ஆற்றாமை நன்று

#129
வாடாத தாமரை மேல் செந்நெல் கதிர் வணக்கம்
ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய
புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன்
நல் அகம் சேராமை நன்று

#130
இசை உரைக்கும் என் செய்து இர நின்று அவரை
வசை உரைப்ப சால வழுத்தீர் பசை பொறை
மெய்ம் மருட்டு ஒல்லா மிகு புனல் ஊரன்தன்
பொய்ம் மருட்டு பெற்ற பொழுது

#131
மடங்கு இறவு போலும் யாழ் பண்பு இலா பாண
தொடங்கு உறவு சொல் துணிக்க வேண்டா முடங்கு இறவு
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய்
கேட்டு உற்ற கீழ் நாள் கிளர்ந்து

#132
எங்கையர் இல் உள்ளானே பாண நீ பிறர்
மங்கையர் இல் என்று மயங்கினாய் மங்கையர் இல்
என்னாது இறவாது இவண் நின் இகந்தேகல்
பின்னார் இல் அந்தி முடிவு

#133
பாலை யாழ் பாண்மகனே பண்டு நின் நாயகற்கு
மாலை யாழ் ஓதி வருடாயோ காலை யாழ்
செய்யும் இடம் அறியாய் சேர்ந்தாய் நின் பொய்ம்மொழிக்கு
நையும் இடம் அறிந்து நாடு

#134
கிழமை பெரியோர்க்கு கேடு இன்மைகொல்லோ
பழமை பயன் நோக்கிக்கொல்லோ கிழமை
குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா
அடி நாயேன் பெற்ற அருள்

#135
என் கேட்டி ஏழாய் இரு நிலத்தும் வானத்தும்
முன் கேட்டும் கண்டும் முடிவு அறியேன் பின் கேட்டு
அணி இகவா நிற்க அவன் அணங்கு மாதர்
பணி இகவான் சால பணிந்து

#136
எங்கை இயல்பின் எழுவல் யாழ் பாண்மகனே
தம் கையும் வாயும் அறியாமல் இங்கண்
உளர உளர உவன் ஓடி சால
வளர வளர்ந்த வகை

#137
கரும் கோட்டு செம் கண் எருமை கழனி
இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால்
ஆம்பல் மயக்கி அணி வளை ஆர்ந்து அழகா
தாம் பல் அசையின வாய் தாழ்ந்து

#138
கன்று உள்ளி சோர்ந்த பால் கால் ஒற்றி தாமரை பூ
அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான் சென்று உள்ளி
வந்தையா என்னும் வகையிற்றே மற்று இவன்
தந்தையார் தம் ஊர் தகை

#139
மருதோடு காஞ்சி அமர்ந்து உயர்ந்த நீழல்
எருதோடு உழல்கின்றார் ஓதை குருகோடு
தாரா தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே
ஊரா தேரான் தந்தை ஊர்

#140
மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று
உண்ணா பூம் தாமரை பூ உள்ளும் கண் ஆர்
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள்
மயல் ஊர் அரவர் மகள்

#141
அணி குரல் மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன
மணி குரல் மேல் மாதராள் ஊடி மணி சிரல்
பாட்டை இருந்து அயரும் பாய் நீர் கழனித்தே
ஆட்டை இருந்து உறையும் ஊர்

#142
தண் கயத்து தாமரை நீள் சேவலை தாழ் பெடை
புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம்
போலும் நின் மார்பு புளி வேட்கைத்து ஒன்று இவள்
மாலும் மாறா நோய் மருந்து

#143
நல் வயல் ஊரன் நறும் சாந்து அணி அகலம்
புல்லி புடை பெயரா மாத்திரைக்கண் புல்லியார்
கூட்டு முதல் உறையும் கோழி துயில் எடுப்ப
பாட்டு முரலுமாம் பண்

#144
அரத்தம் உடீஇ அணி பழுப்ப பூசி
சிரத்தையால் செங்கழுநீர் சூடி பரத்தை
நினை நோக்கி கூறினும் நீ மொழியல் என்று
மனை நோக்கி மாண் விடும்

#145
பாட்டு அரவம் பண் அரவம் பணியாத
கோட்டு அரவம் இன்னிவை தாம் குழும கோட்டு அரவம்
மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன மக சுமந்து
இந்திரன் போல் வந்தான் இடத்து

#146
மண் கிடந்த வையகத்தோர் மற்று பெரியராய்
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக பெண் கிடந்த
தன்மை ஒழிய தரள முலையினாள்
மென்மை செய்திட்டாள் மிக

#147
செம் கண் கரும் கோட்டு எருமை சிறுகனையா
அங்கண் கழனி பழனம் பாய்ந்து அங்கண்
குவளை அம் பூவொடு செம் கயல் மீன் சூடி
தவளையும் மேற்கொண்டு வரும்

#148
இருள் நடந்து அன்ன இரும் கோட்டு எருமை
மருள் நடந்த மா பழனம் மாந்தி பொருள் நடந்த
கல் பேரும் கோட்டால் கனைத்து தம் கன்று உள்ளி
நெல் போர்பு சூடி வரும்

#149
புண் கிடந்த புண் மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும்
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ பண் கிடந்து
செய்யாத மாத்திரையே செங்கயல் போல் கண்ணினாள்
நையாது தான் நாணுமாறு

#150
கண்ணுங்கால் என்கொல் கலவை யாழ் பாண்மகனே
எண்ணுங்கால் மற்று இன்று இவளொடு நேர் எண்ணின்
கடல் வட்டத்து இல்லையால் கல் பெயர் சேராள்
அடல் வட்டத்தார் உளரேல் ஆம்

#151
சேறு ஆடும் கிண்கிணி கால் செம் பொன் செய் பட்டத்து
நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா வேறு ஆய
மங்கையர் இல் நாடுமோ மா கோல் யாழ் பாண்மகனே
எங்கையர் இல் நாடலாம் இன்று

#152
முலையாலும் பூணாலும் முன்கண் தாம் சேர்ந்த
விலையாலும் இட்ட குறியை உலையாது
நீர் சிதைக்கும் வாய் புதல்வன் நிற்கும் முனை முலைப்பால்
தார் சிதைக்கும் வேண்டா தழூஉ

#153
துனி புலவி ஊடலின் நோக்கேன் தொடர்ந்த
கனி கலவி காதலினும் காணேன் முனிவு அகலின்
நாணா நடுக்கும் நளி வயல் ஊரனை
காணா எப்போதுமே கண்
*@6 சிறப்புப்பாயிரம்

#154
முனிந்தார் முனிவு ஒழிய செய்யுட்கண் முத்து
கனிந்தார் களவியல் கொள்கைக்கு அணிந்தார்
இணை மாலை ஈடு இலா இன் தமிழால் யாத்த
திணைமாலை கைவர தேர்ந்து
*