ஐந்திணை ஐம்பது

பாடல் எண் எல்லைகள்

*@1 முல்லை

#1
மல்லர் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து
செல்வ கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி நல்லாய்
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப ஈதோ
மயங்கி வலன் ஏரும் கார்

#2
அணி நிற மஞ்ஞை அகவ இரங்கி
மணி நிற மா மலை மேல் தாழ்ந்து பணிமொழி
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்
பீர் நீர்மை கொண்டன தோள்

#3
மின்னும் முழக்கும் இடியும் மற்று இன்ன
கொலை படை சால பரப்பிய முல்லை
முகை வென்ற பல்லினாய் இல்லையோ மற்று
நமர் சென்ற நாட்டுள் இ கார்

#4
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம் திறம்
வள் வார் முரசின் குரல் போல் இடித்து உரறி
நல்லார் மனம் கவர தோன்றி பணிமொழியை
கொல்வாங்கு கூர்ந்தது இ கார்

#5
கோடு உயர் தோற்ற மலை மேல் இரும் கொண்மூ
கூடி நிரந்து தலை பிணங்கி ஓடி
வளி கலந்து வந்து உறைக்கும் வானம் காண்தோறும்
துளி கலந்து வீழ்தரும் கண்

#6
முல்லை நறு மலர் ஊதி இரும் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய் நல்லாய் மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும் இருள் மாலை வந்து

#7
தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால்
சிறு குழல் ஓசை செறிதொடி வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு

#8
பிரிந்தவர் மேனி போல் புல்லென்ற வள்ளி
பொருந்தினர் மேனி போல் பொற்ப திருந்திழாய்
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத
கானம் கடந்து சென்றார்

#9
வருவர் வயங்கிழாய் வாள் ஒண் கண் நீர் கொண்டு
உருகி உடன்று அழிய வேண்டா தெரிதியேல்
பைம் கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன
வம்ப மழை உரற கேட்டு

#10
நூல் நவின்ற பாக தேர் நொவ்விதா சென்றீக
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி தான் நவின்ற
கற்பு தாள் வீழ்த்து கவுள் மிசை கை ஊன்றி
நிற்பாள் நிலை உணர்கம் யாம்
*@2 குறிஞ்சி

#11
பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய மென்முலையாய்
போயின சில் நாள் புனத்து மறையினால்
ஏயினர் இன்றி இனிது

#12
மால் வரை வெற்ப வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம் யாம் தூ அருவி
பூ கண் கழூஉம் புறவிற்றாய் பொன் விளையும்
பாக்கம் இது எம் இடம்

#13
கானக நாடன் கலவான் என் தோள் என்று
மான் அமர் கண்ணாய் மயங்கல் நீ நானம்
கலந்து இழியும் நல் மலை மேல் வால் அருவி ஆட
புலம்பும் அகன்று நில்லா

#14
புனை பூம் தழை அல்குல் பொன் அன்னாய் சாரல்
தினை காத்து இருந்தேம் யாம் ஆக வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டு
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு

#15
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து
மாம் தளிர் மேனி வியர்ப்ப மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக பணிமொழிக்கு
சேந்தனவாம் சேயரி கண்தாம்

#16
கொடு வரி வேங்கை பிழைத்து கோட்பட்டு
மடி செவி வேழம் இரீஇ அடி ஓசை
அஞ்சி ஒதுங்கும் அதர் உள்ளி ஆர் இருள்
துஞ்சா சுடர்த்தொடி கண்

#17
மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட
எஞ்சாது நீ வருதி என்று எண்ணி அஞ்சி
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர்
உரு ஒடுங்கும் உள் உருகி நின்று

#18
எறிந்து எமர்தாம் உழுத ஈர்ம் குரல் ஏனல்
மறந்தும் கிளி இனமும் வாரா கறங்கு அருவி
மா மலை நாட மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்து கொண்டு

#19
நெடு மலை நல் நாட நீள் வேல் துணையா
கடு விசை வால் அருவி நீந்தி நடு இருள்
இன்னா அதர் வர ஈர்ம் கோதை மாதராள்
என்னாவாள் என்னும் என் நெஞ்சு

#20
வெறி கமழ் வெற்பன் என் மெய்ம் நீர்மை கொண்டது
அறியாள் மற்று அன்னோ அணங்கு அணங்கிற்று என்று
மறி ஈர்த்து உதிரம் தூய் வேலன் தரீஇ
வெறியோடு அலம்வரும் யாய்
*@3 மருதம்

#21
கொண்டுழி பண்டம் விலை ஒரீஇ கொற்சேரி
நுண் துளை துன்னூசி விற்பாரின் ஒன்றானும்
வேறு அல்லை பாண வியல் ஊரன் வாய்மொழியை
தேற எமக்கு உரைப்பாய் நீ

#22
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு
தூதாய் திரிதரும் பாண்மகனே நீதான்
அறிவு அயர்ந்து எம் இல்லுள் என் செய்ய வந்தாய்
நெறி அதுகாண் எங்கையர் இற்கு

#23
யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல்
பாண பரிந்து உரைக்க வேண்டுமோ மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று

#24
கோல சிறு குருகின் குத்து அஞ்சி ஈர் வாளை
நீலத்து புக்கு ஒளிக்கும் ஊரற்கு மேல் எல்லாம்
சார்தற்கு சந்தன சாந்து ஆயினேம் இ பருவம்
காரத்தின் வெய்ய என் தோள்

#25
அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும் நோய் விழையின்
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய் கட்டுரையால்

#26
பெய் வளை கையாய் பெரு நகை ஆகின்றே
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப
கை புனை தேர் ஏறி செல்வானை சென்று இவன்
எய்தி இடர் உற்றவாறு

#27
தண் வயல் ஊரன் புலக்கும் தகையமோ
நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல்
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய
வண்ணம் உடையேம் மற்று யாம்

#28
ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம் வாட்கண்ணாய் நில் என்னாது
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப என்னானும்
நோக்கான் தேர் ஊர்ந்தது கண்டு

#29
ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும்
புல்லேன் யான் என்பேன் புனையிழையாய் புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ ஊரன்
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்

#30
குளிரும் பருவத்தேஆயினும் தென்றல்
வளி எறியின் மெய்யிற்கு இனிதாம் ஒளியிழாய்
ஊடி இருப்பினும் ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம் எனக்கு
*@4 பாலை

#31
உதிரம் துவரிய வேங்கை உகிர் போல்
எதிரி முருக்கு அரும்ப ஈர்ம் தண் கார் நீங்க எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்
துன்பம் கலந்து அழியும் நெஞ்சு

#32
விலங்கல் விளங்கிழாய் செல்வாரோ அல்லர்
அழல் பட்டு அசைந்த பிடியை எழில் களிறு
கல் சுனை சேற்றிடை சின்னீரை கையால் கொண்டு
உச்சி ஒழுக்கும் சுரம்

#33
பாவையும் பந்தும் பவள வாய் பைம் கிளியும்
ஆயமும் ஒன்றும் இவை நினையாள் பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல் காதலன் பின்
காய்ந்து கதிர் தெறூஉம் காடு

#34
கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி
வேட்ட முனைவயின் சேறிரோ ஐய நீர்
வாள் தடம் கண் மாதரை நீத்து

#35
கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய் நடுகல்
விரி நிழல் கண்படுக்கும் வெம் கானம் என்பர்
பொருள் புரிந்தார் போய சுரம்

#36
கடிது ஓடும் வெண்தேரை நீர் ஆம் என்று எண்ணி
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும்
வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய்
தொடி ஓடி வீழ துறந்து

#37
தோழியர் சூழ துறை முன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போல தளரும் கால் தாழாது
கல் அதர் அத்தத்தை காதலன் பின் போதல்
வல்லவோ மாதர் நடை

#38
சுனை வாய் சிறு நீரை எய்தாது என்று எண்ணி
பிணை மான் இனிது உண்ண வேண்டி கலைமா தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி

#39
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள் படர் கூர்ந்து
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ
நம்மின் பிரிந்த இடத்து

#40
இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா
நன்கு வதிந்தனை நல் நெஞ்சே நாளை நாம்
குன்று அதர் அத்தம் இறந்து தமியமாய்
என்கொலோ சேக்கும் இடம்
*@ நெய்தல்

#41
தெண் கடல் சேர்ப்பன் பிரிய புலம்பு அடைந்து
ஒண் தடம் கண் துஞ்சற்க ஒள்ளிழாய் நண்பு அடைந்த
சேவலும் தன் அருகில் சேக்குமால் என்கொலோ
பூம் தலை அன்றில் புலம்பு

#42
கொடும் தாள் அலவ குறை யாம் இரப்பேம்
ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர்
கடந்த வழியை எம் கண் ஆர காண
நடந்து சிதையாதி நீ

#43
பொரி புற பல்லி சினை ஈன்ற புன்னை
வரி புற வார் மணல் மேல் ஏறி தெரிப்புற
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல்
ஆழியால் காணாமோ யாம்

#44
கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம்
கண்டு அன்னை எவ்வம் யாது என்ன கடல் வந்து என்
வண்டல் சிதைத்தது என்றேன்

#45
ஈர்ம் தண் பொழிலுள் இரும் கழி தண் சேர்ப்பன்
சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை
மாம் தளிர் மேனியாய் மன்ற விடுவனவோ
பூம் தண் பொழிலுள் குருகு

#46
ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம்
பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும்
கானல் அம் சேர்ப்ப தகுவதோ என் தோழி
தோள் நலம் தோற்பித்தல் நீ

#47
பெரும் கடல் உள் கலங்க நுண் வலை வீசி
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன்
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர்
அணங்கு ஆகும் ஆற்ற எமக்கு

#48
எக்கர் இடு மணல் மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப
மிக்க மிகு புகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியாதார்

#49
கொடு முள் மடல் தாழை கூம்பு அவிழ்ந்த ஒண் பூ
இடையுள் இழுது ஒப்ப தோன்றி புடை எலாம்
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன்
செய்தான் தெளியா குறி

#50
அணி கடல் தண் சேர்ப்பன் தேர் பரிமா பூண்ட
மணி அரவம் என்று எழுந்து போந்தேன் கனி விரும்பும்
புள் அரவம் கேட்டு பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள் உருகு நெஞ்சினேன் ஆய்
*@6 சிறப்புப்பாயிரம்

#51
பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேராதவர்
*