நளவெண்பா

பாடல் எண் எல்லைகள்

பாயிரம்

 1. 1 – 7
சுயம்வர காண்டம்(8-178)

 1. 8- 50
 2. 51- 100
 3. 101- 150
 4. 151- 178
கலிதொடர் காண்டம்(179-333)

 1. 179- 200
 2. 201- 250
 3. 251- 300
 4. 301- 333
கலிநீங்கு காண்டம்(334-427)

 1. 334- 350
 2. 351- 400
 3. 401- 427


#1 பாயிரம்
நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன்
மா சரிதம் கூற வரும் துணையாம் ஈசன்
கரியான் அனத்தான் கருது புகழ் பூண்ட
கரி ஆனனத்தான் கழல்

#2
நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன்
மா சரிதம் கூற வரும் துணையாம் பேசரிய
மா மகிழ் மாறன் புகழாம் வண் தமிழ் வேதம் விரித்த
மா மகிழ் மாறன் தாள் மலர்

#3
ஆதி தனி கோலம் ஆனான் அடியவற்கா
சோதி திரு தூணில் தோன்றினான் வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே என அழைப்ப
என் என்றான் எங்கட்கு இறை

#4
கலாப மயில் இருந்த பாகத்தார் கங்கை
உலாவு சடை மேல் உறையும் நிலாவை
வழிய வார்த்தால் அன்ன மா நீற்றார் நாகம்
கழிய ஆர்த்தார் நமக்கு ஓர் காப்பு

#5
நீல நெடும் கொண்மூ நெற்றி நிழல் நாறி
காலை இருள் சீக்கும் காய் கதிர் போல் சோலை
மணி தோகை மேல் தோன்றி மா கடல் சூர் வென்றோன்
அணி சேவடி எம் அரண்

#6
வெம் தறுகண் வேழத்தை வேரி கமலத்தின்
தந்துவினால் கட்ட சமைவது ஒக்கும் பைம் தொடையில்
தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை
யான் பாடலுற்ற இது

#7
பார் ஆர் நிடத பதி நளன் சீர் வெண்பாவால்
பேர் ஆர் புகழேந்தி பேசினான் தார் ஆர்
செழியனையும் சென்னியையும் சேர திறை கொள்
மொழியின் சுவையே முதிர்ந்து

#8 சுயம்வர காண்டம்
பாண்டவரின் முன்_தோன்றல் பார் முழுதும் தோற்று ஒரு நாள்
ஆண்டகையே தூதுவனாய் சென்று அவனி வேண்ட
மறுத்தான் இரும் தானை மண்ணொடும் போய் மாள
பொறுத்தான் இருந்தான் புலர்ந்து

#9
நாட்டின்-கண் வாழ்வை துறந்து போய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ இருந்தானை காட்டில்
பெருந்தகையை கண்டார்கள் பேர் எழில் தோள் வேந்தர்
வரும் தகையர் எல்லாரும் வந்து

#10
கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான்
எற்று நீர் ஞாலத்து இருள் நீங்க முற்றும்
வழிமுறையே வந்த மறை எல்லாம் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி

#11
மறை முதல்வன் நீ இங்கே வந்து அருள பெற்றேன்
பிறவி பெரும் துயரம் எல்லாம் அறவே
பிழைத்தேன் யான் என்றான் அ பேர்_ஆழியானை
அழைத்து ஏவல்கொண்ட அரசு

#12
மெய் திரு வந்து உற்றாலும் வெம் துயர் வந்து உற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத்து உரவோனே சித்தம்
வருந்தியவா என் என்றான் மா மறையால் உள்ளம்
திருந்தி அவாம் மெய் தவத்தோன் தேர்ந்து

#13
அம் பொன் கயிலைக்கே ஆகத்து அரவு அணிவார்
தம் பொன் படைக்கு தமியனா எம்பியை முன்
போக்கினேன் என்று உரைத்தான் பூதலத்து மீதலத்து
வாக்கில் நேர் இல்லாத மன்

#14
காண்டாவனம் தீ கடவுள் உண கை கணையால்
நீண்ட முகில் தடுத்து நின்றாற்கு மீண்டு அமரர்
தாள் இரண்டு நோவ தனித்தனியே ஓடிய நாள்
தோள் இரண்டும் அன்றோ துணை

#15
பேர் அரசும் எங்கள் பெரும் திருவும் கைவிட்டு
சேர்வு அரிய வெம் கானம் சேர்தற்கு காரணம் தான்
யாதோ அப்பா என்றான் என்றும் தன் வெண்குடை கீழ்
தீது ஓவ பார் காத்த சேய்

#16
கேடு இல் விழு செல்வம் கேடு எய்து சூதாடல்
ஏடு அவிழ் தார் மன்னர்க்கு இயல்பே காண் வாடி
கலங்கலை நீ என்று உரைத்தான் கா மருவு நாடற்கு
இலங்கு அலை நூல் மார்பன் எடுத்து

#17
கண் இழந்து மாய கவறு ஆடி காவலர் தாம்
மண் இழந்து போந்து வனம் நண்ணி விண் இழந்த
மின் போலும் நூல் மார்ப மேதினியில் வேறு உண்டோ
என் போல் உழந்தார் இடர்

#18
சேம வேல் மன்னனுக்கு செப்புவான் செம் தனி கோல்
நாம வேல் காளை நளன் என்பான் யாமத்து
ஒலி ஆழி வையம் ஒருங்கு இழப்ப பண்டு
கலியால் விளைந்த கதை

#19
காமர் கயல் புரள காவி முகை நெகிழ
தாமரையின் செம் தேன் தளை அவிழ பூ மடந்தை
தன் நாட்டம் போலும் தகைமைத்தே சாகரம் சூழ்
நல் நாட்டின் முன் நாட்டும் நாடு

#20
கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த
சீத களப செழும் சேற்றால் வீதி வாய்
மான கரி வழுக்கும் மா விந்தம் என்பது ஓர்
ஞான கலை வாழ் நகர்

#21
நின்று புயல் வானம் பொழிந்த நெடும் தாரை
என்று மகிழ் கமழும் என்பரால் தென்றல்
அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால்
புலர்த்தும் புகை வான் புகுந்து

#22
வெம் சிலையே கோடுவன மென் குழலே சோருவன
அம் சிலம்பே வாய்விட்டு அறற்றுவன கஞ்சம்
கலங்குவன மாளிகை மேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய் நெறியை விட்டு

#23
தெரிவன நூல் என்றும் தெரியாதனவும்
வரி வளையார் தம் கண் மருங்கே ஒருபோழ்தும்
இல்லாதனவும் இரவே இகழ்ந்து எவரும்
கல்லாதனவும் கரவு

#24
மா மனு நூல் வாழ வரு சந்திரன் சுவர்க்கி
தாமரையாள் வைகும் தடம் தோளான் காமரு பூம்
தாரான் முரணை நகர் தான் என்று சாற்றலாம்
பார் ஆளும் வேந்தன் பதி

#25
ஓடாத தானை நளன் என்று உளன் ஒருவன்
பீடு ஆரும் செல்வ பெடை வண்டோடு ஊடா
முருகு உடைய மாதர் முலை நனைக்கும் தண் தார்
அருகு உடையான் வெண்குடையான் ஆங்கு

#26
சீத மதி குடை கீழ் செம்மை அறம் கிடப்ப
தாது அவிழ் பூ தாரான் தனி காத்தான் மாதர்
அருகு ஊட்டும் பைங்கிளியும் ஆடல் பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு

#27
வாங்கு வளை கையார் வதன மதி பூத்த
பூம் குவளை காட்டு-இடையே போயினான் தேம் குவளை
தேன் நாடி வண்டு சிறகு உலர்த்து நீர் நாதன்
பூ நாடி சோலை புக

#28
வென்றி மத வேடன் வில் எடுப்ப வீதி எலாம்
தென்றல் மது நீர் தெளித்து வர நின்று
தளவு ஏனல் மீது அலரும் தாழ் வரை சூழ் நாடற்கு
இளவேனில் வந்தது எதிர்

#29
தேரின் துகளை திருந்து இழையார் பூ குழலின்
வேரி புனல் நனைப்ப வேய் அடைந்தான் கார் வண்டு
தொக்கி இருந்து ஆலித்து உழலும் தூங்கு இருள் வெய்யோற்கு ஒதுங்கி
புக்கு இருந்தால் அன்ன பொழில்

#30
நீள் நிறத்தால் சோலை நிறம் பெயர நீடிய தன்
தாள் நிறத்தால் பொய்கை தலம் சிவப்ப மாண் நிறத்தான்
முன் அப்பு உள் தோன்றும் முளரி தலை வைகும்
அன்ன புள் தோன்றிற்றே ஆங்கு

#31
பேதை மட அன்னம் தன்னை பிழையாமல்
மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி
கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாதன்
பிடித்து தா என்றான் பெயர்ந்து

#32
நாடி மட அன்னத்தை நல்ல மயில் குழாம்
ஓடி வளைக்கின்றது ஒப்பவே நீடிய நல்
பைம் கூந்தல் வல்லியர்கள் பற்றி கொடு போந்து
தம் கோவின் முன் வைத்தார் தாழ்ந்து

#33
அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய்
மன்னன் திரு முன்னர் வைத்தலுமே அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான் கிளையை தேடி
கலங்கிற்றே மன்னவனை கண்டு

#34
அஞ்சல் மட அனமே உன்றன் அணி நடையும்
வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது
காண பிடித்தது காண் என்றான் களி வண்டு
மாண பிடித்த தார் மன்

#35
செய்ய கமல திருவை நிகரான
தையல் பிடித்த தனி அன்னம் வெய்ய
அடு மாற்றம் இல்லா அரசன் சொல் கேட்டு
தடுமாற்றம் தீர்ந்ததே தான்

#36
திசை முகந்த வெண் கவிகை தேர் வேந்தே உன்றன்
இசை முகந்த தோளுக்கு இசைவாள் வசையில்
தமையந்தி என்று ஓதும் தையலாள் மென் தோள்
அமை அந்தி என்று ஓர் அணங்கு

#37
அன்னம் மொழிந்த மொழி புகாமுன் புக்கு
கன்னி மன கோயில் கைக்கொள்ள சொன்ன மயில்
ஆர் மடந்தை என்றான் அனங்கன் சிலை வளைப்ப
பார் மடந்தை கோமான் பதைத்து

#38
எழு அடு தோள் மன்னா இலங்கு_இழையோர் தூண்ட
கொழு நுதியில் சாய்ந்த குவளை உழுநர்
மடை மிதிப்ப தேன் பாயும் ஆடு ஒலி நீர் நாடன்
கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு

#39
நால் குணமும் நால் படையா ஐம்புலனும் நல் அமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணி முரசா வேல் படையும்
வாளுமே கண்ணா வதன மதி குடை கீழ்
ஆளுமே பெண்மை அரசு

#40
மோட்டு இளம் கொங்கை முடிய சுமந்து ஏற
மாட்டாது இடை என்று வாய்விட்டு நாள் தேன்
அலம்பு வார் கோதை அடி இணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு

#41
என்றும் நுடங்கும் இடை என்ப ஏழ் உலகு
நின்று கவிகை நிழல் வேந்தே ஒன்றி
அறு கால் சிறு பறவை அம் சிறகால் வீசும்
சிறு காற்றுக்கு ஆற்றாது தேய்ந்து

#42
செம் தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ்
இந்து முறி என்று இயம்புவார் வந்து என்றும்
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி
ஏ ஆளி தீட்டும் இடம்

#43
அன்னமே நீ உரைத்த அன்னத்தை என் ஆவி
உன்னவே சோரும் உனக்கு அவளோடு என்ன
அடைவு என்றான் மற்று அந்த அன்னத்தை முன்னே
நடை வென்றாள்-தன்-பால் நயந்து

#44
பூ மனை வாய் வாழ்கின்ற புல் குடங்கள் யாம் அவள் தன்
மா மனை வாய் வாழும் மயில் குலங்கள் காமன்
படைகற்பான் வந்து அடைந்தான் பைம் தொடியாள் பாதம்
நடை கற்பான் வந்தடைந்தோம் நாம்

#45
இற்றது நெஞ்சம் எழுந்தது இரும் காதல்
அற்றது மானம் அழிந்தது நாண் மற்று இனி உன்
வாயுடையது என்னுடைய வாழ்வு என்றான் வெம் காம
தீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து

#46
வீமன் திருமடந்தை மென் முலையை உன்னுடைய
வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன் சேம
நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம்
ஒடுங்கு இடையாள்-தன்-பால் உயர்ந்து

#47
இவ்வளவில் செல்லும்-கொல் உவ்வளவில் காணும்-கொல்
இவ்வளவில் காதல் இயம்பும்-கொல் இவ்வளவின்
மீளும்-கொல் என்று உரையா விம்மினான் மும்மத நின்று
ஆளும் கொல் யானை அரசு

#48
சேவல் குயில் பெடைக்கு பேசும் சிறு குரல் கேட்டு
ஆவி உருகி அழிந்திட்டான் பூவின்
இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன
நடை அன்னம்-தன்-பால் நயந்து

#49
அன்னம் உரைத்த குயிலுக்கு அலசுவான்
மென் மயில் தன் தோகை விரித்து ஆட முன் அதனை
கண்டு ஆற்றாது உள்ளம் கலங்கினான் காம நோய்
கொண்டார்க்கு இது அன்றோ குணம்

#50
வார் அணியும் கொங்கை மட வாள் நுடங்கு இடைக்கு
பேர் உவமையாக பிறந்து உடையீர் வாரீர்
கொடியார் என செம் கை கூப்பினான் நெஞ்சம்
துடியா நெடிதுயிரா சோர்ந்து

#51
கொங்கை இள நீரா குளிர்ந்த இளம் சொல் கரும்பால்
பொங்கு சுழி என்னும் பூம் தடத்தில் மங்கை நறும்
கொய் தாம வாச குழல் நிழல் கீழ் ஆறேனோ
வெய்து ஆம் அ காம விடாய்

#52
மன்னன் விடுத்த வடிவில் திகழ்கின்ற
அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும்
தன் ஆடல் விட்டு தனி இடம் சேர்ந்து ஆங்கு அதனை
என் நாடல் சொல் என்றாள் ஈங்கு

#53
செம் மனத்தான் தண் அளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம் அனத்தை வாங்கும் தடம் தோளான் மெய்ம்மை
நளன் என்பான் மேல் நிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளன் என்பான் வேந்தன் உனக்கு

#54
அறம் கிடந்த நெஞ்சும் அருள் ஒழுகு கண்ணும்
மறம் கிடந்த திண் தோள் வலியும் நிலம் கிடந்த
செம் கண் மால் அல்லனேல் தேர் வேந்தர் ஒப்பரோ
அம் கண் மா ஞாலத்தவற்கு

#55
புள்ளின் மொழியினொடு பூ வாளி தன்னுடைய
உள்ளம் கவர ஒளி இழந்த வெள்ளை
மதி இருந்ததாம் என்ன வாய்த்திருந்தாள் வண்டின்
பொதி இருந்த மெல் ஓதி பொன்

#56
மன்னன் மனத்து எழுந்த மையல் நோய் அத்தனையும்
அன்னம் உரைக்க மனம் இரங்கி முன்னம்
முயங்கினாள் போல் தன் முலை முகத்தை பாரா
மயங்கினாள் என் செய்வாள் மற்று

#57
வாவி உறையும் மட அனமே என்னுடைய
ஆவி உவந்து அளித்தாய் ஆதியால் காவின்-இடை
தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள்
பார் வேந்தன் பாவை பதைத்து

#58
மன்னன் புயம் நின் வன முலைக்கு கச்சு ஆகும்
என்ன முயங்குவிப்பேன் என்று அன்னம் பின்னும்
பொருந்த அன்பால் ஓதி மலர் பூம் கணைகள் பாய
இருந்தவன்-பால் போனது எழுந்து

#59
கொற்றவன்-தன் தேவிக்கு கோமகள்-தன் தோழியர்கள்
உற்றது அறியா உளம் நடுங்கி பொற்றொடிக்கு
வேறுபாடு உண்டு என்றார் வேந்தனுக்கு மற்று அதனை
கூறினாள் பெற்ற கொடி

#60
கரும் குழலார் செம் கையினால் வெண் கவரி பைம் கால்
மருங்கு உலவ வார் முரசம் ஆர்ப்ப நெருங்கு
புரி வளை நின்று ஏங்க போய் புக்கான் பெற்ற
வரி வளை கை நல்லாள் மனை

#61
கோதை சுமந்த கொடி போல் இடை நுடங்க
தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம்
காந்தாரம் பாடி களி வண்டு நின்று அரற்றும்
பூம் தார் அம் மெல் ஓதி பொன்

#62
பேர் அழகு சோர்கின்றது என்ன பிறை நுதல் மேல்
நீர் அரும்ப தன் பேதை நின்றாளை பாரா
குல வேந்தன் சிந்தித்தான் கோ வேந்தர்-தம்மை
மலர் வேய்ந்து கொள்ளும் மணம்

#63
மங்கை சுயம்வர நாள் ஏழ் என்று வார் முரசம்
எங்கும் அறைக என்று இயம்பினான் பைம் கமுகின்
கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன்
வேந்தர் மேல் தூது ஓட விட்டு

#64
மா முத்த வெண்குடையான் மால் களிற்றான் வண்டு இரைக்கும்
தாமத்து அரிச்சந்திரன் சுவர்க்கி நாமத்தார்
பா வேய்ந்த செந்தமிழாம் என்ன பரந்ததே
கோ வேந்தர் செல்வ குழாம்

#65
செந்து அடையும் வண்டு உறை தார் செய்யாள் வளர் மார்பன்
கந்து அடையும் வேழ கடைத்தலை-வாய் வந்து அடைந்த
பூ வேந்தர்-தங்கள் கிளை பொன் நகரில் ஈண்டிற்றே
கோ வேந்தன் மாதை குறித்து

#66
புள் உறையும் சோலைகளும் பூம் கமல வாவிகளும்
உள்ளும் புறமும் இனிது உறைந்தார் தெள் அரி கண்
பூ மகளை பொன்னை பொரு வேல் விதர்ப்பன்-தன்
கோமகளை தம் மனத்தே கொண்டு

#67
வழி மேல் விழி வைத்து வாள் நுதலாள் நாம
மொழி மேல் செவி வைத்து மோக சுழி மேல் தன்
நெஞ்சு ஓட வைத்து அயர்வான் கண்டான் நெடு வானில்
மஞ்சு ஓட அன்னம் வர

#68
முகம் பார்த்து அருள் நோக்கி முன் இரந்து செல்வர்
அகம் பார்க்கும் அற்றோரை போல மிகும் காதல்
கேளா இருந்திட்டான் அன்னத்தை கேளாரை
வாளால் விருந்திட்ட மன்

#69
அன்ன குலத்தின் அரசே அழிகின்ற
என் உயிரை மீள எனக்கு அளித்தாய் முன் உரைத்த
தே_மொழிக்கு தீது இலவே என்றான் திருந்தாரை
ஏம் ஒழிக்கும் வேலான் எடுத்து

#70
கொற்றவன்-தன் ஏவலினால் போய் அ குல கொடி-பால்
உற்றதுவும் ஆங்கு அவள் தான் உற்றதுவும் முற்றும்
மொழிந்ததே அன்ன மொழி கேட்டு அரசற்கு
அழிந்ததே உள்ள அறிவு

#71
கேட்ட செவி வழியே கேளாது உணர்வு ஓட
ஓட்டை மனத்தோடு உயிர் தாங்கி மீண்டும்
குழியில் படு கரி போல் கோமான் கிடந்தான்
தழலில் படு தளிர் போல் சாய்ந்து

#72
கோதை சுயம்வர நாள் கொற்றவனுக்கு உற்று உரைப்ப
ஏதம் இலா காட்சியர் வந்து எய்தினார் போதில்
பெடையொடு வண்டு உறங்கும் பேர் ஒலி நீர் நாடன்
அடையாத வாயில் அகம்

#73
காவலன் தன் தூதர் கடை காவலர்க்கு அறிவித்து
ஏவலில் போய் ஈது என்று இயம்புதலும் மாவில்
பொலிந்த தேர் பூட்டு என்றான் பூ வாளி பாய
மெலிந்த தோள் வேந்தன் விரைந்து

#74
கெட்ட சிறு மருங்குல் கீழ் மகளிர் நீள் வரம்பில்
இட்ட பசும் குவளை ஏர் அடித்த கட்டி
கரைய தேன் ஊறும் கடல் நாடன் ஊர்க்கு
விரைய தேர் ஊர் என்றான் வேந்து

#75
சடை செந்நெல் பொன் விளைக்கும் தன் நாடு பின்னா
கடல் தானை முன்னாக கண்டான் அடற்கு அமைந்த
வில்லியரும் பொன் தாம வீமன் திருமகளாம்
நல் உயிரும் வாழும் நகர்

#76
நெற்றி தனி கண் நெருப்பை குளிர்விக்கும்
கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான்
தேன் ஆடும் தெய்வ தருவும் திரு மணியும்
வான் நாடும் காத்தான் மருங்கு

#77
வீரர் விறல் வேந்தர் விண் நாடு சேர்கின்றார்
ஆரும் இலரால் என்று ஐயுற்று நாரதனார்
நன் முகமே நோக்கினான் நாகம் சிறகு அரிந்த
மின் முக வேல் கையான் விரைந்து

#78
வீமன் மடந்தை மணத்தின் விரை தொடுத்த
தாமம் புனைவான் சுயம்வரத்து மா மன்னர்
போயினார் என்றான் புரந்தரற்கு பொய்யாத
வாயினான் மா தவத்தோர் மன்

#79
அழகு சுமந்து இளைத்த ஆகத்தாள் வண்டு
பழகு கரும் கூந்தல் பாவை மழ களிற்று
வீமன் குலத்துக்கு ஓர் மெய் தீபம் மற்று அவளே
காமன் திருவுக்கு ஓர் காப்பு

#80
மால் வரையை வச்சிரத்தால் ஈர்ந்தானும் வானவரும்
கோல்_வளை-தன் மாலை குறித்து எழுந்தார் சால்புடைய
விண் நாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண் நாடு நோக்கி மகிழ்ந்து

#81
பைம் தெரியல் வேல் வேந்தன் பாவை-பால் போயின தன்
சிந்தை கெடுத்த அதனை தேடுவான் முந்தி
வருவான் போல் தேர் மேல் வருவானை கண்டார்
பெரு வானில் தேவர் பெரிது

#82
காவல் குடை வேந்தை கண்ணுற்று விண்ணவர் கோன்
ஏவல் தொழிலுக்கு இசை என்றான் ஏவற்கு
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினால் மற்று அதனை
இன்னது என ஓராது இசைந்து

#83
செம் கண் மத யானை தேர் வேந்தே தே மாலை
எங்களிலே சூட்ட இயல் வீமன் மங்கை-பால்
தூது ஆக என்றான் அ தோகையை தன் ஆகத்தால்
கோது ஆக என்றான் அ கோ

#84
தேவர் பணி தலைமேல் செல்லும் திரிந்து ஒருகால்
மேவும் இளம் கன்னி-பால் மீண்டு ஏகும் பாவில்
குழல் போல நின்று உழலும் கொள்கைத்தே பூவின்
நிழல் போலும் தண் குடையான் நெஞ்சு

#85
ஆவது உரைத்தாய் அதுவே தலை நின்றேன்
தேவர் கோனே அ திருநகரில் காவல்
கடக்கும் ஆறு என் என்றான் காம நீர் ஆழி
அடக்கும் ஆறு உள்ளத்தவன்

#86
வார் வெம் சிறை ஒழிய வச்சிரத்தால் மால் வரையை
போர் வெம் சிறகு அறுத்த பொன் தோளான் யாரும் உனை
காணார் போய் மற்றவளை காண் என்றான் கார் வண்டின்
பாண் நாறும் தாரானை பார்த்து

#87
இசை முகந்த வாயும் இயல் தெரிந்த நாவும்
திசை முகந்தால் அன்ன தெருவும் வசை இறந்த
பொன் நாடு போந்து இருந்தால் போன்றதே போர் விதர்ப்ப
நன் நாடர் கோமான் நகர்

#88
தேம் குவளை தன்னிலே செந்தாமரை மலர
பூம் குவளை தாமரைக்கே பூத்ததே ஆங்கு
மது நோக்கும் தாரானும் வாள்_நுதலும் தம்மில்
பொது நோக்கு எதிர் நோக்கும் போது

#89
நீண்ட கமலத்தை நீல கடை சென்று
தீண்டும் அளவில் திறந்ததே பூண்டது ஓர்
அற்பின் தாழ் கூந்தலாள் வேட்கை அகத்து அடக்கி
கற்பின் தாழ் வீழ்த்த கதவு

#90
உய்ஞ்சு கரை ஏற ஒட்டும்-கொல் ஒண்_தொடியாள்
நெஞ்சு தடவும் நெடும் கண்கள் விஞ்சவே
நீண்டதோ அங்ஙனே இங்ஙனே நீள் மலராள்
ஆண்ட தோள் மன்னன் அழகு

#91
மன் ஆகத்து உள் அழுந்தி வார் அணிந்த மென் முலையும்
பொன் நாணும் புக்கு ஒளிப்ப புல்லுவன் என்று உன்னா
எடுத்த பேர் அன்பை இடையே புகுந்து
எடுத்ததே நாணாம் தறி

#92
காவல் கடந்து எங்கள் கன்னி மாடம் புகுந்தாய்
யாவனோ விஞ்சைக்கு இறைவனோ தேவனோ
உள்ளவாறு சொல் என்றாள் ஊசல் குழை மீது
வெள்ள வாள் நீர் சோர விட்டு

#93
தீராத காம தழலை தன் செம்மை எனும்
நீரால் அவித்து கொடுநின்று வாராத
பொன் நாடர் ஏவலுடன் போந்தவா சொல்லி தன்
நல் நாடும் சொன்னான் நளன்

#94
என் உரையை யாதொன்று இகழாது இமையவர் வாழ்
பொன் உலகம் காக்கும் புரவலனை மென் மாலை
சூட்டுவாய் என்றான் தொடையில் தேன் தும்பிக்கே
ஊட்டுவான் எல்லாம் உரைத்து

#95
இயமரம் நின்று ஆர்ப்ப இன வளை நின்று ஏங்க
வய மரு தோள் மன்னா வகுத்த சுயம்வரம் தான்
நின் பொருட்டால் என்று நினைக என்றாள் நீள் குடையான்
தன் பொருட்டால் நைவாள் தளர்ந்து

#96
போது அரி கண் மாதராள் பொன் மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோடு அவை அகத்தே சோதி
செழும் தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்
எழுந்தருள்க என்றாள் எடுத்து

#97
வானவர் கோன் ஏவல் வழி சென்று வாள்_நுதலை
தான் அணுகி மீண்டபடி சாற்றவே தேன் முரலும்
வண் தார் நளன் போந்து வச்சிராயுதன் தொழுதான்
கண்டார் உவப்ப கலந்து

#98
விண்ணவர் தம் ஏவலுடன் வீமன் திருமகள்-பால்
நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின்
வன் மொழியும் தேவர் மனம் மகிழ தான் மொழிந்த
மென் மொழியும் சென்று உரைத்தான் மீண்டு

#99
அங்கி அமுதம் நீர் அம் பூ அணி ஆடை
எங்கு நீ வேண்டினை மற்று அ இடத்தே சங்கை அற
பெற்றாய் என வருணன் ஆகண்டலன் தருமன்
மற்றோனும் ஈந்தார் வரம்

#100
அங்கு அவர்கள் வேண்டும் வரம் கொடுக்க பெற்றவர்கள்
தங்களொடும் தார் வேந்தன் சார்ந்தனன் மேல் மங்கை
வய மருவுகின்ற மண காவலர்க்கு
சயம்வரம் தான் கண்டது ஓர் சார்பு

#101
தூது வந்த காதலனை சொல்லி செல விடுத்த
மாது உவந்து பின் போன வன் நெஞ்சால் யாதும்
அயிர்த்தாள் உயிர்த்தாள் அணி வதனம் எல்லாம்
வியர்த்தாள் உரை மறந்தாள் வீழ்ந்து

#102
உள்ளம் போய் நாண் போய் உரை போய் வரி நெடும் கண்
வெள்ளம் போய் வேகின்ற மென் தளிர் போல் பிள்ளை மீன்
புள் அரிக்கும் நாடன் திருமடந்தை பூ வாளி
உள் அரிக்க சோர்ந்தாள் உயிர்

#103
பூவின் வாய் வாளி புகுந்த வழியே என்
ஆவியார் போனாலும் அ வழியே பாவியேன்
ஆசை போகாது என்று அழிந்தாள் அணி யாழின்
ஓசை போல் சொல்லாள் உயிர்த்து

#104
வையம் பகல் இழப்ப வானம் ஒளி இழப்ப
பொய்கையும் நீள் கழியும் புள் இழப்ப பையவே
செம் வாய அன்றில் துணை இழப்ப சென்று அடைந்தான்
வெம் வாய் விரி கதிரோன் வெற்பு

#105
மா இரு ஞாலத்து உயிர் காண வான் அரங்கில்
பாய் இருள் என்னும் படாம் வாங்கி சேய் நின்று
அறைந்து ஆரணம் பாட ஆடி போய் வெய்யோன்
மறைந்தான் குட-பால் வரை

#106
மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத வான் கருப்பு
வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும்
மென் மாலை தோள் அசைய மெல்ல நடந்ததே
புன் மாலை அந்தி பொழுது

#107
புற்கு என்றார் அந்தி புனை மலர் கண் நீர் அரும்ப
நிற்கின்றது அந்தோ நிலம் காப்பான் முன் கொண்டு
அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டு அஞ்சினோர்க்கும்
இடைநின்ற காலம் போல் இன்று

#108
பைம் தொடியாள் ஆவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்ததாம் என்ன வந்ததால்
மை ஆர் வேல் கண்ணாள் வன முலை மேல் ஆர் அழலை
பெய்வான் அமைந்த பிறை

#109
கூட்டு மை போல் சிறந்த கூர் இருளை கூன் கோட்டால்
கோட்டு மண் கொண்ட குளிர் திங்கள் ஈட்டு மணி
பூண் இலா மென் முலை மேல் போத சொரிந்ததே
நீள் நிலா என்னும் நெருப்பு

#110
அன்னங்காள் நீங்களும் அ ஆதித்தன் தானும் போய்
மன்னும்படி அகலா வல் இரவில் மின்னும்
மழை தாரை வல் இருட்டும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால் வந்தேன் என்னும் பேர்

#111
செப்பு இளம் கொங்கைமீர் திங்கள் சுடர் பட்டு
கொப்புளம் கொண்ட குளிர் வானை இப்பொழுதும்
மீன் பொதிந்து நின்ற விசும்பு என்பது என்-கொலோ
தேன் பொதிந்த வாயால் தெரிந்து

#112
கானும் தடம் காவும் காமன் படைவீடு
வானும் தேர் வீதி மறி கடலும் மீன
கொடி ஆடை வையம் எல்லாம் கோதண்ட சாலை
பொடியாடி கொன்றது எல்லாம் பொய்

#113
கொள்ளை போகின்றது உயிர் என்னும் கோள் அரவின்
முள் எயிறோ மூரி நிலா என்னும் உள்ளம்
கொடிது இரா என்னும் குழையும் தழல் போல்
நெடிது இரா வாய் புலரா நின்று

#114
வெம் கதிரோன் தன்னை விழுங்கி புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ திங்கள்
விரிகின்ற வெண் நிலவால் வேகின்றதேயோ
எரிகின்றது என்னோ இரா

#115
ஊழி பல ஓர் இரவு ஆயிற்றோ என்னும்
கோழி குரல் அடைத்ததோ என்னும் ஆழி
துயிலாதோ என்னும் சுடர் மதியம் கான்ற
வெயிலால் உடல் உருகா வீழ்ந்து

#116
ஆடி வரி வண்டு அருகை பறக்கவே
வாடி மெலிவாள் வன முலை மேல் ஓடி
பொறையாக சோர்வாள் பொறுக்குமோ மோக
துறை-வாய் அடங்கா துயர்

#117
ஈர மதியே இள நிலவே இங்ஙனே
சோர் குழலின் மீதே சொரிவது எவன் மாரன்
பொர அளித்தான் கண்ணி உனக்கு புலரா
இரவு அளித்தான் அல்லனோ இன்று

#118
தாங்கு நிலவின் தழல் போய் தலைகொள்ள
தேம் குழல் சேர் வண்டு சிறை வெதும்ப ஓங்கு உயிர்ப்பின்
தாமம் கரியா தனியே தளர்கின்றாள்
யாமம் கரி ஆக இன்று

#119
மையிட்ட கண் அருவி வார வளை சோர
கையில் கபோல தலம் வைத்து மெய் வருந்தி
தேன் இருந்த பூம் கணையே தீ ஆக தே_மொழியாள்
தான் இருந்து செய்வாள் தவம்

#120
அள்ளி கொளலாய் அடைய திரண்டு ஒன்றாய்
கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய் உள்ளம்
புதையவே வைத்த பொது மகளிர் தங்கள்
இதையமே போன்றது இரா

#121
ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடி குரலர்
வீக்கிய கச்சையர் வேல் வாளர் காக்க
இடை யாமம் காவலர்கள் போந்தார் இருளில்
புடை-வாய் இருள் புடைத்தால் போன்று

#122
சேமம் களிறு புக தீம் பாலின் செவ்வழி யாழ்
தாமுள் உறை புகுந்த தார் வண்டு காமன் தன்
பூ வாளி ஐந்தும் புக துயில் புக்கதே
ஓவாது முந்நீர் உலகு

#123
ஊன் தின்று உவகையால் உள்ள உயிர் புறம்பே
தோன்றும் கழுதும் துயின்றதே தான் தன்
உரை சோரச்சோர உடல் சோர வாயின்
இரை சோர கை சோர நின்று

#124
அன்றில் ஒரு கண் துயின்று ஒரு கண் ஆர்வத்தால்
இன் துணை மேல் வைத்து உறங்கும் என்னும் சொல் இன்று
தவிர்ந்ததே போல் அரற்றி சாம்புகின்ற-போதே
அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு

#125
ஏழ் உலகும் சூழ் இருளாய் என் பொருட்டால் வேகின்ற
ஆழ் துயரம் ஏது என்று அறிகிலேன் பாழி
வரையோ எனும் நெடும் தோள் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான்

#126
கருவிக்கு நீங்காத கார் இருள் வாய் கங்குல்
உருவி புகுந்ததால் ஊதை பருகி கார்
வண்டு போகட்ட மலர் போல் மருள் மாலை
உண்டு போகட்ட உயிர்க்கு

#127
எழுந்திருக்கும் ஏமாந்து பூ மாம் தவிசின்
விழுந்திருக்கும் தன் உடம்பை மீள செழும் தரள
தூணோடு சேர்க்கும் துணை ஏதும் இல்லாதே
நாணோடு நின்று அழியும் நைந்து

#128
விரிகின்ற மெல் அமளி வெண் நிலவின் மீதே
சொரிகிற கார் இருள் போல் சோரும் புரி குழலை
தாங்கும் தளரும் தழலே நெடிது உயிர்க்கும்
ஏங்கும் துயரோடு இருந்து

#129
உடைய மிடுக்கு எல்லாம் என் மேலே ஓச்சி
விடிய மிடுக்கு இன்மையாலோ கொடியன் மேல்
மா காதல் வைத்ததோ மன்னவர்-தம் இன் அருளோ
ஏகாதது என்னோ இரா

#130
மயங்கும் தெளியும் மனம் நடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே உலாவும் வயங்கு இழை போய்
சோரும் துயிலும் துயிலா கரு நெடும் கண்
நீரும் கடை சோர நின்று

#131
விழுது பட திணிந்த வீங்கு இருள் வாய்ப்பட்டு
கழுதும் வழி தேடும் கங்குல் பொழுது-இடையே
நீர் உயிர்க்கும் கண்ணோடு நெஞ்சு உருகி வீழ்வார்-தம்
ஆர் உயிர்க்கும் உண்டோ அரண்

#132
பூசுரர்-தம் கை மலரும் பூ குமுதமும் முகிழ்ப்ப
காசினியும் தாமரையும் கண் விழிப்ப வாசம்
அலர்ந்த தேம் கோதையாள் ஆழ் துயரத்தோடு
புலர்ந்ததே அற்றை பொழுது

#133
வில்லி கணை இழப்ப வெண் மதியம் சீர் இழப்ப
தொல்லை இருள் கிழிய தோன்றினான் வல்லி
மண மாலை வேட்டிடு தோள் வாள் அரசர் முன்னே
குண வாயில் செம் கதிரோன் குன்று

#134
முரைசு எறிந்த நாள் ஏழும் முற்றிய பின் கொற்ற
வரை செறிந்த தோள் மன்னர் வந்தார் விரை செறிந்த
மாலை துவள முடி தயங்க வால் வளையும்
காலை முரசும் கலந்து

#135
மன்றல் அம் தார் மன்னர் நடு அணைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார் நீலம் முன்றில்
குறு விழிக்கு நேர் நாடன் கோதை பெரும் கண்
சிறு விழிக்கு நோற்றிருந்த சேய்

#136
நித்திலத்தின் பொன் தோடு நீல மணி தோடு ஆக
மை தடம் கண் செல்ல வய வேந்தர் சித்தம்
மருங்கே வர வண்டின் பந்தல் கீழ் வந்தாள்
அரும் கேழ் மணி பூண் அணங்கு

#137
பேதை மட மயிலை சூழும் பிணை மான் போல்
கோதை மட மானை கொண்டு அணைந்த மாதர்
மருங்கின் வெளி வழியே மன்னவர் கண் புக்கு
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து

#138
மன்னர் விழி தாமரை பூத்த மண்டபத்தே
பொன்னின் மட பாவை போய் புக்காள் மின் நிறத்து
செய்ய தாள் வெள்ளை சிறை அன்னம் செம் கமல
பொய்கை-வாய் போவதே போன்று

#139
வடம் கொள் வன முலையாள் வார் குழை மேல் ஆடும்
நெடும் கண்கடை பார்த்து நின்றான் இடம் கண்டு
பூ வாளி வேந்தன் தன் பொன் ஆவம் பின்னே இட்டு
ஏ வாளி நாணின் மேல் இட்டு

#140
மன்னர் குலமும் பெயரும் வள நாடும்
இன்ன பரிசு என்று இயல் அணங்கு முன் நின்று
தார் வேந்தன் பெற்ற தனி_கொடிக்கு காட்டினாள்
தேர் வேந்தர் தம்மை தெரிந்து

#141
பொன்னி அமுத புது கொழுந்து பூம் கமுகின்
சென்னி தடவும் திருநாடன் பொன்னில்
சுணங்கு அவிழ்ந்த பூண் முலையாய் சூழ் அமரில் துன்னார்
கணம் கவிழ்ந்த வேலன் இவன் காண்

#142
போர்-வாய் வடி வேலால் போழப்படாதோரும்
சூர் வாய் மதர் அரி கண் தோகாய் கேள் பார்-வாய்
பருத்தது ஓர் மால் வரையை பண்டு ஒருகால் செண்டால்
திரித்த கோ இங்கு இருந்த சேய்

#143
வென்றி நில மடந்தை மெல் முலை மேல் வெண் துகில் போல்
குன்று அருவி பாயும் குட நாடன் நின்ற புகழ்
மாதே இவன் கண்டாய் மான தனி கொடியின்
மீதே சிலை உயர்ந்த வேந்து

#144
ஆழி வடி அம்பு அலம்ப நின்றானும் அன்றொருகால்
ஏழ் இசை நூல் சங்கத்து இருந்தானும் நீள் விசும்பில்
நல் தேவர் தூது நடந்தானும் பாரத போர்
செற்றானும் கண்டாய் இ சேய்

#145
தெரியில் இவன் கண்டாய் செம் கழு நீர் மொட்டை
அரவின் பசும் தலை என்று அஞ்சி இரவு எல்லாம்
பிள்ளை குருகு இரங்க பேதை புள் தாலாட்டும்
வள்ளை குரு நாடர் மன்

#146
தேம் மரு தார் காளை இவன் கண்டாய் செம் மலர் மேல்
காமரு சங்கு ஈன்ற கதிர் முத்தை தாமரை தன்
பத்திரத்தால் ஏற்கும் படுகர் பழனம் சூழ்
மத்திரத்தார் கோமான் மகன்

#147
அம் சாயல் மானே இவன் கண்டாய் ஆலை-வாய்
வெம் சாறு பாய விளைந்து எழுந்த செம் சாலி
பச்சை தாள் மேதி கடை வாயில் பால் ஒழுகும்
மச்சத்தார் கோமான் மகன்

#148
வண்ண குவளை மலர் வௌவி வண்டு எடுத்த
பண்ணில் செவி வைத்து பைம் குவளை உண்ணாது
அரும் கடா நிற்கும் அவந்தி நாடு ஆளும்
இரும் கடா யானை இவன்

#149
விட கதிர் வேல் காளை இவன் கண்டாய் மீனின்
தொடக்கு ஒழிய போய் நிமிர்ந்த தூண்டில் மடல் கமுகின்
செம் தோடு பீறி தேன் செந்நெல் பசும் தோட்டில்
வந்து ஓடும் பாஞ்சாலர் மன்

#150
அன்னம் துயில் எழுப்ப அம் தாமரை வயலில்
செந்நெல் அரிவார் சினை யாமை வன் முதுகில்
கூன் இரும்பு தீட்டும் குல கோசல நாடன்
தேன் இருந்த சொல்லாய் இ சேய்

#151
புண்டரிகம் தீ எரிவ போல் விரிய பூம் புகை மேல்
வண்டு இரியும் தெள் நீர் மகதர் கோன் எண் திசையில்
போர் வேந்தர் கண்டு அறியா பொன் ஆவம் பின் உடைய
தேர் வேந்தன் கண்டாய் இ சேய்

#152
கூன் சங்கின் பிள்ளை கொடி பவள கோடு இடறி
தேன் கழியில் வீழ திரை கரத்தால் வான் கடல் வந்து
அந்தோ என எடுக்கும் அங்க நாடு ஆளுடையான்
செம் தேன் மொழியாய் இ சேய்

#153
வெள் வாளை காளை மீன் மேதி குலம் எழுப்ப
கள் வார்ந்த தாமரையின் காடு உழக்கி புள்ளோடு
வண்டு இரிய செல்லும் மணி நீர் கலிங்கர் கோன்
தண் தெரியல் தேர் வேந்தன் தான்

#154
அம் கை வரி வளையாய் ஆழி திரை கொணர்ந்த
செம் கண் மகரத்தை தீண்டி போய் கங்கை-இடை
சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல்
வேல் குளிக்க நின்றான் இ வேந்து

#155
மா நீர் நெடும் கயத்து வள்ளை கொடி மீது
தான் ஏகும் அன்னம் தனி கயிற்றில் போம் நீள்
கழை கோதையர் ஏய்க்கும் காந்தார நாடன்
மழை கோதை மானே இ மன்

#156
அங்கை நெடு வேல் கண் ஆய்_இழையாய் வாவியின்-வாய்
சங்கம் புடைபெயர தான் கலங்கி செம் கமல
பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ்
மா சிந்து நாட்டான் இ மன்

#157
காவலரை தன் சேடி காட்ட கண்டு ஈர் இருவர்
தேவர் நளன் உருவா சென்றிருந்தார் பூ வரைந்த
மாசு இலா பூம் குழலாள் மற்று அவரை காணா நின்று
ஊசலாடுற்றாள் உளம்

#158
பூணுக்கு அழகு அளிக்கும் பொன் தொடியை கண்ட-கால்
நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து
மற்றே எவர் வாராதார் வானவரும் வந்திருந்தார்
பொன் தேர் நளன் உருவாய் போந்து

#159
மின்னும் தார் வீமன்-தன் மெய் மரபில் செம்மை சீர்
கன்னி யான் ஆகில் கடி மாலை அன்னம் தான்
சொன்னவனை சூட்ட அருள் என்றாள் சூழ் விதியின்
மன்னவனை தன் மனத்தே வைத்து

#160
கண் இமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர் மாலை வாடுதலால் எண்ணி
நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள்
அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு

#161
விண் அரசர் எல்லாரும் வெள்கி மனம் சுளிக்க
கண் அகல் ஞாலம் களி கூர மண் அரசர்
வன்மாலை தம் மனத்தே சூட வய வேந்தை
பொன் மாலை சூட்டினாள் பொன்

#162
திண் தோள் வய வேந்தர் செந்தாமரை முகம் போய்
வெண் தாமரையாய் வெளுத்தவே ஒண் தாரை
கோ மாலை வேலான் குல மாலை வேல் கண்ணாள்
பூ மாலை பெற்று இருந்த போது

#163
மல்லல் மறுகின் மட நாகு உடனாக
செல்லும் மழ விடை போல் செம்மாந்து மெல் இயலாள்
பொன் மாலை பெற்ற தோளோடும் புறப்பட்டான்
நல் மாலை வேலான் நளன்

#164
வேலை பெறா அமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாது அகலும் வான் நாடர் வேலை
பொரும் கலி நீர் ஞாலத்தை புல் நெறியில் ஆக்கும்
இரும் கலியை கண்டார் எதிர்

#165
ஈங்கு வரவு என் என்று இமையவர்-தம் கோன் வினவ
தீங்கு தரும் கலியும் செப்பினான் நீங்கள்
விருப்பான வீமன் திருமடந்தையோடும்
இருப்பான் வருகின்றேன் யான்

#166
மன்னவரில் வை வேல் நளனே மதி வதன
கன்னி மண மாலை கைக்கொண்டான் உன்னுடைய
உள்ள கருத்தை ஒழித்து ஏகுதி என்றான்
வெள்ளை தனி யானை வேந்து

#167
விண் அரசர் நிற்க வெறி தேன் மண மாலை
மண் அரசற்கு ஈந்த மட மாதின் எண்ணம்
கெடுக்கின்றேன் மற்று அவள்-தன் கேள்வனுக்கும் கீழ்மை
கொடுக்கின்றேன் என்றான் கொதித்து

#168
வாய்மையும் செங்கோல் வளனும் மனத்தின்-கண்
தூய்மையும் மற்று அவன் தோள் வலியும் பூமான்
நெடும் கற்பும் மற்றவற்கு நின்று உரைத்து போனான்
அரும் கொற்ற வச்சிரத்தான் ஆங்கு

#169
செரு கதிர் வேல் கண்ணியுடன் தேர் வேந்தன் கூட
இருக்க தரியேன் இவரை பிரிக்க
உடனாக என்றான் உடனே பிறந்த
விட நாகம் அன்னான் வெகுண்டு

#170
வெம் கதிரோன்-தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கல நாள் காண வருவான் போல் செம் குமுதம்
வாய் அடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நல் நெஞ்சில்
தீ அடங்க ஏறினான் தேர்

#171
இன் உயிர்க்கு நேரே இள முறுவல் என்கின்ற
பொன் அழகை தாமே புதைப்பார் போல் மென் மலரும்
சூட்டினார் சூட்டி துடி சேர் இடையாளை
பூட்டினார் மின் இமைக்கும் பூண்

#172
கணி மொழிந்த நாளில் கடிமணமும் செய்தார்
அணி_மொழிக்கும் அண்ணல்-அவற்கும் பணி_மொழியார்
குற்றேவல் செய்ய கொழும் பொன் அறை புக்கார்
மற்ற எவரும் ஒவ்வார் மகிழ்ந்து

#173
செம் திருவின் கொங்கையினும் தேர் வேந்தன் ஆகத்தும்
வந்து உருவ வார் சிலையை கால் வளைத்து வெம் தீயும்
நஞ்சும் தொடுத்து அனைய நாம மலர் வாளி
அஞ்சும் தொடுத்தான் அவன்

#174
ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி
இருவர் எனும் தோற்றம் இன்றி பொரு வெம்
கனற்கு ஏயும் வேலானும் காரிகையும் சேர்ந்தார்
புனற்கே புனல் கலந்தால் போன்று

#175
குழை மேலும் கோமான் உயிர் மேலும் கூந்தல்
மழை மேலும் வாள் ஓடி மீள விழை மேலே
அல் ஓடும் வேலான் அகலத்தோடும் பொருதாள்
வல் ஓடும் கொங்கை மடுத்து

#176
வீரன் அகல செறுவின் மீது ஓடி குங்குமத்தின்
ஈர இள வண்டல் இட்டதே நேர் பொருத
கார் ஆரும் மெல் ஓதி கன்னி-அவள் காதல் எனும்
ஓர் ஆறு பாய உடைந்து

#177
கொங்கை முகம் குழைய கூந்தல் மழை குழைய
செம் கயல் கண் ஓடி செவி தடவ அம் கை
வளை பூசல் ஆட மடந்தையுடன் சேர்ந்தான்
விளை பூசல் கொல் யானை வேந்து

#178
தையல் தளிர் கரங்கள் தன் தட கையால் பற்றி
வையம் முழுதும் மகிழ்தூங்க துய்ய
மணந்தான் முடித்ததன் பின் வாள் நுதலும் தானும்
புணர்ந்தார் நெடும் காலம் புக்கு

#179 கலிதொடர் காண்டம்
முந்தை மறை நூல் முடி எனலாம் தண் குருகூர்
செந்தமிழ் வேத சிரம் எனலாம் நந்தும்
புழைக்கைக்கும் நேய பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கும் முன் செல் அடி

#180
செக்கர் நெடு வானில் திங்கள் நிலா துளும்பி
உக்கது என சடை மேல் உம்பர் நீர் மிக்கு ஒழுகும்
வெள்ளத்தான் வெள்ளி நெடும் கிரியான் மெய் அன்பர்
உள்ளத்தான் எங்கட்கு உளன்

#181
தவள தனி குடையின் வெண் நிழலும் தையல்
குவளை கரு நிழலும் கொள்ள பவள
கொழுந்து ஏறி செந்நெல் குலை சாய்க்கும் நாடன்
செழும் தேரில் ஏறினான் சென்று

#182
மங்கையர்கள் வாச மலர் கொய்வான் வந்து அடைய
பொங்கி எழுந்த பொறி வண்டு கொங்கோடு
எதிர் கொண்டு அணைவன போல் ஏங்குவன முத்தின்
கதிர் கொண்ட பூண் முலையாய் காண்

#183
பாவையர் கை தீண்ட பணியாதார் யாவரே
பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர்
பொன் அடியில் தாழ்ந்தனவே பூம் குழலாய் காண் என்றான்
மின் நெடு வேல் கையான் விரைந்து

#184
மங்கை ஒருத்தி மலர் கொய்வாள் வாள் முகத்தை
பங்கயம் என்று எண்ணி படி வண்டை செம் கையால்
காத்தாள் அ கை மலரை காந்தள் என பாய்தலுமே
வேர்த்தாளை காண் என்றான் வேந்து

#185
புல்லும் வரி வண்டை கண்டு புன மயில் போல்
செல்லு மடந்தை சிலம்பு அவித்து மெல்ல போய்
அ மலரை கொய்யாது அரும் தளிரை கொய்வாளை
செம் மலரில் தேனே தெளி

#186
கொய்த மலரை கொடும் கையினால் அணைத்து
மொய் குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள்
பாதாரவிந்தத்தே சூட்டினான் பாவை இடைக்கு
ஆதாரம் இன்மை அறிந்து

#187
ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும் புலவி
தோற்ற அமளி என தோற்றுமால் காற்று அசைப்ப
உக்க மலரோடு உகுத்த வளை முத்தமே
எக்கர் மணல் மேல் இசைந்து

#188
அலர்ந்த மலர் சிந்தி அ மலர் மேல் கொம்பு
புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த
புல்லென்ற கோலத்து பூவையரை போன்றதே
அல் என்ற சோலை அழகு

#189
கொங்கை முகத்து அணைய கூட்டி கொடும் கையால்
அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன்
வார்க்கின்ற கூந்தல் முகத்தை மதி என்று
பார்க்கின்றது என்னலாம் பார்

#190
கொய்த குவளை கிழித்து குறு நுதல் மேல்
எய்த தனி வைத்த ஏந்து_இழையாள் வையத்தார்
உண்ணா கடு விடத்தை உண்ட ஒரு மூன்று
கண்ணானை போன்றனளே காண்

#191
கொழுநன் கொழும் தாரை நீர் வீச கூசி
செழு முகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமிய அ
கோமகற்கு தான் இனைந்த குற்றங்கள் அத்தனையும்
பூ மகட்கு சொல்லுவாள் போல்

#192
பொய்தல் கமலத்தின் போது இரண்டை காது இரண்டில்
பெய்து முகம் மூன்று பெற்றாள் போல் எய்த
வருவாளை பார் என்றான் மாற்றாரை வென்று
செரு வாளை பார்த்து உவக்கும் சேய்

#193
பொன் உடைய வாச பொகுட்டு மலர் அலைய
தன்னுடனே மூழ்கி தனித்து எழுந்த மின் உடைய
பூணாள் திரு முகத்தை புண்டரிகம் என்று அயிர்த்து
காணாது அயர்வானை காண்

#194
சிறுக்கின்ற வாள் முகமும் செம் காந்தள் கையால்
முறுக்கு நெடு மூரி குழலும் குறிக்கின்
கரும் பாம்பு வெண் மதியை கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணை முலையாய் ஆம்

#195
சோர் புனலில் மூழ்கி எழுவாள் சுடர் நுதல் மேல்
வார் குழலை நீக்கி வரும் தோற்றம் பாராய்
விரை கொண்டு எழுந்த பிறை மேகத்திடையே
புரைகின்றது என்னலாம் பொற்பு

#196
செழு நீல நோக்கு எறிப்ப செம் குவளை கொய்வாள்
முழு நீலம் என்று அயிர்த்து முன்னர் கழுநீரை
கொய்யாது போவாளை கோல் வளைக்கு காட்டினான்
வையாரும் வேல் தடக்கை மன்

#197
காவி பொரு நெடும் கண் காதலியும் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்து ஆடி தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கை நதி ஆடி
ஒழியாது உறைந்தார் உவந்து

#198
நறை ஒழுக வண்டு உறையும் நல் நகர்-வாய் நாங்கள்
உறையும் இளம் மர கா ஒக்கும் இறை வளை கை
சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல்
பொன் தொடியாய் மற்று இ பொழில்

#199
கன்னியர்-தம் வேட்கையே போலும் களி மழலை
தன் மணி வாய் உள்ளே தடுமாற மன்னவனே
இ கடி கா நீங்கள் உறையும் இளம் மர கா
ஒக்குமதோ என்றாள் உயிர்த்து

#200
தொண்டை கனி வாய் துடிப்ப சுடர் நுதல் மேல்
வெண் தரளம் என்ன வியர்வு அரும்ப கெண்டை
கடை சிவப்ப நின்றாள் கழல் மன்னர் வெள்ளை
குடை சிவப்ப நின்றான் கொடி

#201
தங்கள் புலவி தலையில் தனித்து இருந்த
மங்கை வதன மணி அரங்கில் அங்கண்
வடி வாள் மேல் கால் வளைத்து வார் புருவம் என்னும்
கொடி ஆட கண்டான் ஓர் கூத்து

#202
சில் அரி கிண்கிணி மெல் தெய்வ மலர் சீறடியை
தொல்லை மணி முடி மேல் சூட்டினான் வல்லை
முழு நீல கோதை முகத்தே மலர்ந்த
செழு நீலம் மாறா சிவப்பு

#203
அம் கை வேல் மன்னன் அகலம் எனும் செறுவில்
கொங்கை ஏர் பூட்டி குறு வியர் நீர் அங்கு அடைத்து
காதல் வரம்பு ஒழுகி காம பயிர் விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு

#204
வேரி மழை துளிக்கும் மேக கரும் கூந்தல்
காரிகையும் தானும் போய் கண்ணுற்றான் மூரி
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை
கரை ஏறும் கங்கை கரை

#205
சூத கனி ஊறல் ஏற்ற சுருள் வாழை
கோது இல் நறவு ஏற்கும் குப்பி என மாதரார்
ஐயுற்று நோக்கும் அகல் பொழில் சென்று எய்தினான்
வை உற்ற வேல் தானை மன்

#206
வான் தோய நீண்டு உயர்ந்த மாட கொடி நுடங்க
தான் தோன்றும் ஆற்றின் தடம் பதி தான் வான் தோன்றி
வில் விளக்கே பூக்கும் விதர்ப்ப நாடு ஆளுடையான்
நல் விளக்கே எங்கள் நகர்

#207
பொய்கையும் வாச பொழிலும் எழில் அருவி
செய் குன்றும் ஆறும் திரிந்து ஆடி தையலுடன்
ஆறிரண்டு ஆண்டு எல்லை கழித்தான் அடையலரை
கூறு இரண்டா கொல் யானை கோ

#208
கோல நிறம் விளர்ப்ப கொங்கை முகம் கருக
நீல நிற மயிர்க்கால் நின்று எறிப்ப நூல் என்ன
தோன்றாத நுண் மருங்குல் தோன்ற சுரி குழலாள்
ஈன்றாள் குழவி இரண்டு

#209
ஆண்டு இரண்டாறு எல்லை அளவும் திரிந்தேயும்
காண் தகைய வெம் கலியும் காண்கிலான் நீண்ட புகழ்
செம் நெறியால் பார் காத்த செங்கோல் நில வேந்தன்
தன் நெறியால் வேறோர் தவறு

#210
சந்தி செய தாள் விளக்க தாளின் மறு தான் கண்டு
புந்தி மகிழ புகுந்து கலி சிந்தை எலாம்
தன் வயமே ஆக்கி தமையனுடன் இருந்தான்
பொன் அசல மார்பன் புகைந்து

#211
நாராயணாய நம என்று அவன் அடியில்
சேராரை வெம் துயரம் சேர்ந்தான் போல் பாராளும்
கொற்றவனை பார் மடந்தை கோமானை வாய்மை நெறி
கற்றவனை சேர்ந்தான் கலி

#212
நல் நெறியில் சூதால் நளன் களவு இயற்றி
தன் அரசு வாங்கி தருகின்றேன் மன்னவனே
போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு
ஏதுவாய் நின்றான் எடுத்து

#213
புன்னை நறு மலரின் பூம் தாது இடை ஒதுங்கும்
கன்னி இளம் மேதி கால் குளம்பு பொன் உரைத்த
கல் ஏய்க்கும் நாடன் கவறாட போயினான்
கொல் ஏற்றின் மேல் ஏறிக்கொண்டு

#214
வெம் கண் சின விடையின் மேல் ஏறி கால் ஏற
கங்கை திரை நீர் கரை ஏறி செம் கதிர் பைம்
பொன் ஒழிய போதும் புறம்பு அணை சூழ் நல் நாடு
பின் ஒழிய போந்தான் பெயர்ந்து

#215
அடல் கதிர் வேல் மன்னன் அவன் ஏற்றின் முன் போய்
எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடல் சூது
வெல்லும் கொடி என்றான் வெம் கலியால் அங்கு அவன் மேல்
செல்லும் கொடியோன் தெரிந்து

#216
ஏன்றோம் இது ஆயின் மெய்ம்மையே எம்மோடு
வான் தோய் மடல் தெங்கின் வான் தேறல் தான் தேக்கி
மீது ஆடி வாளை வயல் வீழ்ந்து உழக்கும் நல் நாடன்
சூதாட என்றான் துணிந்து

#217
காதல் கவறாடல் கள் உண்டல் பொய் மொழிதல்
ஈதல் மறுத்தல் இவை கண்டாய் போதில்
சினை ஆமை வைகும் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி

#218
அறத்தை வேர் கல்லும் அரு நரகில் சேர்க்கும்
திறத்தையே கொண்டு அருளை தேய்க்கும் மறத்தையே
பூண்டு விரோதம் செய்யும் பொய் சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து

#219
உரு அழிக்கும் உண்மை உயர்வு அழிக்கும் வண்மை
திரு அழிக்கும் மானம் சிதைக்கும் மருவும்
ஒருவரோடு அன்பு அழிக்கும் ஒன்று அல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து

#220
ஆயம் பிடித்தாரும் அல்லல் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே மாயம்
பிடித்தாரின் வேறு அல்லர் என்று உரைப்பது அன்றே
வடித்தாரின் நூலோர் வழக்கு

#221
தீது வருக நலம் வருக சிந்தையால்
சூது பொர இசைந்து சொல்லினோம் யாதும்
விலக்கலீர் நீர் என்றான் வரால் ஏற மேதி
கலக்கு அலை நீர் நாடன் கனன்று

#222
நிறை இல் கவறாடல் நீ நினைந்தாய்-ஆகில்
திறையில் கதிர் முத்தம் சிந்தும் துறையில்
கரும்பு ஒடியா மள்ளர் கடா அடிக்கும் நாடா
பொரும்படி யாது என்றான் இப்போது

#223
விட்டு ஒளிர் வில் வீசி விளங்கு மணி பூண் ஆரம்
ஒட்டினேன் உன் பணையம் ஏது என்ன மட்டு அவிழ் தார்
மல் ஏற்ற தோளானும் வான் பணையமாக தன்
கொல் ஏற்றை வைத்தான் குறித்து

#224
காரேயும் கூந்தலார் காரிகை மேல் காதலித்த
தாரேயும் தோளான் தனி மனம் போல் நேரே
தவறாய் புரண்ட தமையனொடும் கூடி
கவறாய் புரண்டான் கலி

#225
வைத்த மணி ஆரம் வென்றேன் மறு பலகைக்கு
ஒத்த பணையம் உரை என்ன வைத்த நிதி
நூறாயிரத்து இரட்டி நூறு_நூறு_ஆயிரமும்
வேறாக தோற்றான் அ வேந்து

#226
பல் ஆயிரம் பரியும் பத்து நூறு ஆயிரத்து
சொல்லார் மணி தேரும் தோற்றதன் பின் வில் ஆட்கள்
முன் தோற்று வானின் முகில் தோற்கு மால் யானை
பின் தோற்று தோற்றான் பிடி

#227
சாதுரங்கம் வென்றேன் தரும் பணையம் ஏது என்ன
மா துரங்கம் பூணும் மணி தேரான் சூது அரங்கில்
பாவையரை செவ்வழி யாழ் பண்ணின் மொழி பின்னு குழல்
பூவையரை தோற்றான் பொருது

#228
கற்பின் மகளிர்-பால் நின்றும் தமை கவட்டின்
விற்கும் மகளிர்-பால் மீண்டான் போல் நிற்கும்
நெறி யானை மெய்ம்மை-வாய் நின்றானை நீங்கி
சிறியானை சேர்ந்தாள் திரு

#229
மனைக்கு உரியார் அன்றே வரும் துயரம் தீர்ப்பார்
சினை சங்கின் வெண் தலையை தேனால் நனைக்கும்
குவளை பணை பைம் தாள் குண்டு நீர் நாடா
இவளை பணையம் தா இன்று

#230
இனி சூது ஒழிந்தோம் இன வண்டு கிண்டி
கனி சூத வார் பொழிலின் கண்ணே பனி சூத
பூம் போது அவிழ்க்கும் புனல் நாடன் பொன் மகளே
நாம் போதும் என்றான் நளன்

#231
மென் கால் சிறை அன்னம் வீற்றிருந்த மென் மலரை
புன் காகம் கொள்ளத்தான் போனால் போல் தன் கால்
பொடி ஆட தேவியொடும் போயினான் அன்றே
கொடியானுக்கு அ பார் கொடுத்து

#232
கடப்பார் எவரே கடு வினையை வீமன்
மட பாவை தன்னுடனே மன்னன் நடப்பான்
வனத்தே செல பணித்து மாயத்தால் சூழ்ந்தது
அனைத்தே விதியின் வலி

#233
ஆர் உயிரின் தாயே அறத்தின் பெரும் தவமே
பேர் அருளின் கண்ணே பெருமானே பாரிடத்தை
யார் காக்க போல்வது நீ யாங்கு என்றார் தம் கண்ணின்
நீர் வார்த்து கால் கழுவா நின்று

#234
வேலை கரை இறந்தால் வேத நெறி பிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடு இழந்தால் சீலம்
ஒழிவரோ செம்மை உரை திறம்பா செய்கை
அழிவரோ செங்கோலவர்

#235
வடி ஏறு கூர் இலை வேல் மன்னாவோ உன்றன்
அடியேங்கட்கு ஆதரவு தீர கொடி நகரில்
இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார்
வென்று இருந்த தோளான் தாள் வீழ்ந்து

#236
மன்றல் இளம் கோதை முக நோக்கி மா நகர் வாய்
நின்று உருகு வார் கண்ணி நீர் நோக்கி இன்று இங்கு
இருத்துமோ என்றான் இளம் குதலை வாயாள்
வருத்தமோ தன் மனதில் வைத்து

#237
வண்டு ஆடும் தார் நளனை மா நகரில் யாரேனும்
கொண்டாடினார் தம்மை கொல் என்று தண்டா
முரசு அறைவாய் ஆங்கு என்றான் முன்னே முனிந்து ஆங்கு
அரசு அறியா வேந்தன் அழன்று

#238
அறையும் பறை அரவம் கேட்டு அழிந்து நையும்
பிறை_நுதலாள் பேதமையை நோக்கி முறுவலியா
இ நகர்க்கு ஈது என் பொருட்டா வந்தது என உரைத்தான்
மன் அகற்றும் கூர் இலை வேல் மன்

#239
தன் வாயில் மென் மொழியே தாங்கினான் ஓங்கு நகர்
பொன் வாயில் பின்னாக போயினான் முன் நாளில்
பூ மகளை பாரினோடும் புல்லினான் தன் மகனை
கோ மகளை தேவியோடும் கொண்டு

#240
கொற்றவன்-பால் செல்வாரை கொல்வான் முரசு அறைந்து
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப முற்றும்
இழவு படுமாபோல் இல்லங்கள்-தோறும்
குழவி பால் உண்டிலவே கொண்டு

#241
சந்த கழல் தாமரையும் சதங்கை அணி
பைம் தளிரும் நோவ பதைத்து உருகி எந்தாய்
வடம் தோய் களிற்றாய் வழியானது எல்லாம்
கடந்தோமோ என்றார் கலுழ்ந்து

#242
தூய தன் மக்கள் துயர் நோக்கி சூழ்கின்ற
மாய விதியின் வலி நோக்கி யாதும்
தெரியாது சித்திரம் போல் நின்றிட்டான் செம்மை
புரிவான் துயரால் புலர்ந்து

#243
காதல் இருவரையும் கொண்டு கடும் சுரம் போக்கு
ஏதம் உடைத்து இவரை கொண்டு நீ மாதராய்
வீமன் திருநகர்க்கே மீள் என்றான் விண்ணவர் முன்
தாமம் புனைந்தாளை தான்

#244
குற்றம் இல் காட்சி குதலை வாய் மைந்தரையும்
பெற்றுக்கொளலாம் பெறலாமோ கொற்றவனே
கோ காதலனை குல மகளுக்கு என்று உரைத்தாள்
நோக்கான் மழை பொழியா நொந்து

#245
கைதவம் தான் நீக்கி கருத்தில் கறை அகற்றி
செய் தவம் தான் எத்தனையும் செய்தாலும் மை தீர்
மக பெறா மானிடர்கள் வானவர் தம் ஊர்க்கு
புக பெறார் மாதராய் போந்து

#246
பொன் உடையரேனும் புகழ் உடையரேனும் மற்று
என் உடையரேனும் உடையரோ இன் அடிசில்
புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய்
மக்களை இங்கு இல்லாதவர்

#247
சொன்ன கலையின் துறை அனைத்தும் தோய்ந்தாலும்
என்ன பயன் உடைத்தாம் இன் முகத்து முன்னம்
குறுகு தலை கிண்கிணி கால் கோ மக்கள் பால் வாய்
சிறு குதலை கேளா செவி

#248
போற்று அறிய செல்வம் புனல் நாட்டொடும் போக
தோற்றமையும் யாவர்க்கும் தோற்றாதே ஆற்றலாய்
எம் பதிக்கே போந்து அருளுக என்றாள் எழில் கமல
செம் பதிக்கே வீற்றிருந்த தேன்

#249
சின கதிர் வேல் கண் மடவாய் செல்வர்-பால் சென்றீ
எனக்கு என்னும் இ மாற்றம் கண்டாய் தனக்கு உரிய
தானம் துடைத்து தருமத்தை வேர் பறித்து
மானம் துடைப்பது ஓர் வாள்

#250
மன்னராய் மன்னர்-தமை அடைந்து வாழ்வு எய்தி
இன் அமுதம் தேக்கி இருப்பரேல் சொன்ன
பெரும் பேடிகள் அலரேல் பித்தரே அன்றோ
அரும் பேடை மானே அவர்

#251
செங்கோலாய் உன்றன் திருவுள்ளம் ஈது ஆயின்
எம் கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே நம் கோல
காதலரை போக்கி அருள் என்றாள் காதலருக்கு
ஏதிலரை போல எடுத்து

#252
பேதை பிரிய பிரியாத பேர் அன்பின்
காதலரை கொண்டுபோய் காதலி-தன் தாதைக்கு
காட்டு நீ என்றான் கலங்காத உள்ளத்தை
வாட்டு நீர் கண்ணிலே வைத்து

#253
தந்தை திரு முகத்தை நோக்கி தமை பயந்தாள்
இந்து முகத்தை எதிர் நோக்கி எம்-தம்மை
வேறு ஆக போக்குதிரோ என்றார் விழி வழியே
ஆறாக கண்ணீர் அழுது

#254
அஞ்சனம் தோய் கண்ணில் அருவி நீர் ஆங்கு அவர்க்கு
மஞ்சன நீர் ஆக வழிந்து ஓட நெஞ்சு உருகி
வல்லி விடா மெல் இடையாள் மக்களை தன் மார்போடும்
புல்லி விடாநின்றாள் புலர்ந்து

#255
இருவர் உயிரும் இரு கையால் வாங்கி
ஒருவன் கொண்டு ஏகுவான் ஒத்து அரு மறையோன்
கோ மைந்தனோடு இளைய கோதையை கொண்டு ஏகினான்
வீமன் நகர்க்கே விரைந்து

#256
காதலவர் மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை என நின்று உயிர்ப்பு ஓட யாதும்
உரையாடாது உள்ளம் ஒடுங்கினான் வண்டு
விரை ஆடும் தாரான் மெலிந்து

#257
சேல் உற்ற வாவி திருநாடு பின் ஒழிய
காலில் போய் தேவியொடும் கண்ணுற்றான் ஞாலம் சேர்
கள்ளி வேகத்து அரவின் கண்மணிகள் தாம் பொடியாய்
துள்ளி வேகின்ற சுரம்

#258
கல் நிறத்த சிந்தை கலியும் அவன் முன்பாக
பொன் நிறத்த புள் வடிவாய் போந்து இருந்தான் நல் நெறிக்கே
அஞ்சி பார் ஈந்த அரசனையும் தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து

#259
தேன் பிடிக்கும் தண் துழாய் செம் கண் கரு முகிலை
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க
பொன் புள்ளை பற்றி தா என்றாள் புது மழலை
சொல் கிள்ளை வாயாள் தொழுது

#260
பொன் புள்-அதனை பிடிப்பான் நலன் புகுத
கைக்கு உள் வருமா கழன்று ஓடி எய்க்கும்
இளைக்குமா போல இருந்தது கண்டு அன்றே
வளைக்கும் ஆறு எண்ணினான் மன்

#261
கொற்ற கயல் கண் கொடியே இருவோரும்
ஒற்றை துகிலால் உடை புனைந்து மற்று இந்த
பொன் துகிலால் புள் வளைக்க போதுவோம் என்று உரைத்தான்
பற்று அகலா உள்ளம் பரிந்து

#262
எற்றி திரை பொர நொந்து ஏறி இள மணலில்
பற்றி பவளம் படர் நிழல் கீழ் முத்து ஈன்று
வெள் வளைத்தாய் ஓடும் நீர் வேலை திருநாடன்
புள் வளைத்தான் ஆடையால் போந்து

#263
கூந்தல் இளம் குயிலும் கோமானும் கொண்டு அணைத்த
பூம் துகில் கொண்டு அந்தரத்தே போய் நின்று வேந்தனே
நல் நாடு தோற்பித்தோன் நானே காண் என்றதே
பொன் ஆடும் மால் நிறத்த புள்

#264
காவி போல் கண்ணிக்கும் கண்ணி அம் தோள் காளைக்கும்
ஆவி போல் ஆடையும் ஒன்று ஆனதே பூ விரிய
கள் வேட்டு வண்டு உழலும் கானத்து-இடை கனக
புள் வேட்டை ஆதரித்த போது

#265
அறம் பிழைத்தார் பொய்த்தார் அருள் சிதைத்தார் மான
திறம் பிழைத்தார் தெய்வம் இகழ்ந்தார் புறங்கடையில்
சென்றார் புகு நரகம் சேர்வாய்-கொல் என்று அழியா
நின்றாள் விதியை நினைந்து

#266
வையம் துயர் உழப்ப மாயம் பல சூழ்ந்து
தெய்வம் கெடுத்தால் செயல் உண்டோ மெய் வகையே
சேர்ந்து அருளி நின்ற தனி செங்கோலாய் இங்கு ஒழிய
போந்து அருளுக என்றாள் புலந்து

#267
அந்த நெடும் சுரத்தின் மீது ஏக ஆங்கு அழலும்
வெம் தழலை ஆற்றுவான் மேல் கடற்கே எந்தை
குளிப்பான் போல் சென்று அடைந்தான் கூர் இருளால் பாரை
ஒளிப்பான் போல் பொன் தேருடன்

#268
பானு நெடும் தேர் படு கடலில் பாய்ந்ததன் பின்
கான அடம்பின் கவட்டு இலைகள் மானின்
குளம்பு ஏய்க்கும் நல் நாடன் கோதையொடும் சென்றான்
இளம் பேய்க்கும் தோன்றா இருள்

#269
எங்காம் புகலிடம் என்று எண்ணி இருள் வழி போய்
வெம் கானகம் திரியும் வேளைதனில் அங்கே ஓர்
பாழ் மண்டபம் கண்டான் பால் வெண்குடை நிழல் கீழ்
வாழ் மண்டபம் கண்டான் வந்து

#270
மூரி இரவும் போய் முற்று இருளாய் மூண்டதால்
சாரும் இடம் மற்று தான் இல்லை சோர் கூந்தல்
மாதராய் நாம் இந்த மண்டபத்தே கண் துயில
போதராய் என்றான் புலர்ந்து

#271
வையம் உடையான் மகர யாழ் கேட்டு அருளும்
தெய்வ செவி கொதுகின் சில் பாடல் இ இரவில்
கேட்டவா என்று அழுதாள் கெண்டை அம் கண் நீர் சோர
தோட்ட வார் கோதையாள் சோர்ந்து

#272
பண்டை வினை பயனை பாரிடத்தில் ஆர் கடப்பார்
கொண்டல் நிழலில் குழை தடவும் கெண்டை
வழியல் நீர் என்றான் மன நடுங்கி வெய்துற்று
அழியல் நீ என்றான் அரசு

#273
விரை மலர் பூ மெல் அணையும் மெய் காவல் பூண்ட
பரிசனமும் பள்ளி அறையும் அரசே நான்
காணேன் இங்கு என்னா கலங்கினாள் கண் பனிப்ப
பூண் ஏர் முலையாள் புலர்ந்து

#274
தீய வனமும் துயின்று திசை துயின்று
பேயும் துயின்றதால் பேர் யாமம் நீயும் இனி
கண் மேல் துயில்கை கடன் என்றான் கைகொடுத்து
மண் மேல் திரு மேனி வைத்து

#275
புன்கண் கூர் யாமத்து பூமி மேல் தான் படுத்து
தன் கண் துயில்வாளை தான் கண்டு மென் கண்
பொடியாதால் உள் ஆவி போகாதால் நெஞ்சம்
வெடியாதால் என்றான் விழுந்து

#276
முன்றில்-தனில் மேல் படுக்க முன்றானையும் இன்றி
இன்று துயில இறைவனுக்கே என்றனது
கை புகுந்தது என்னுடைய கால் புகுந்தது என்று அழுதாள்
மை புகுந்த கண்ணீர் வர

#277
வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலா
தாமம் எனக்கு அளித்த தையலாள் யாமத்து
பாரே அணையா படை-கண் துயின்றாள் மற்று
ஆரே துயர் அடையார் ஆங்கு

#278
பெய் மலர் பூம் கோதை பிரிய பிரியாத
செம்மை உடை மனத்தான் செங்கோலன் பொய்ம்மை
விலக்கினான் நெஞ்சத்தை வேறு ஆக்கி நின்று
கலக்கினான் வஞ்ச கலி

#279
வஞ்ச கலி வலியான் மாகத்து அரா வளைக்கும்
செம் சுடரின் வந்த கரும் சுடர் போல் விஞ்ச
மதித்த தேர் தானை வய வேந்தன் நெஞ்சத்து
உதித்ததே வேறோர் உணர்வு

#280
காரிகை-தன் வெம் துயரம் காணாமல் நீத்து அந்த
கூர் இருள் போவான் குறித்து எழுந்து நேரே
இருவர்க்கும் ஓர் உயிர் போல் எய்தியதோர் ஆடை
அரிதற்கு அவன் நினைந்தான் ஆங்கு

#281
எண்ணிய எண்ணம் முடிப்ப இகல் வேந்தன்
கண்ணியதை அறிந்து காய் கலியும் பண்ணினுக்கு
கேள் ஆன தே மொழியை நீக்க கிளர் ஒளி சேர்
வாளாய் மருங்கு இருந்தான் வந்து

#282
ஒற்றை துகிலும் உயிரும் இரண்டு ஆக
முற்றும் தன் அன்பை முதலோடும் பற்றி
அரிந்தான் அரிந்திட்டு அவள் நிலைமை நெஞ்சில்
தெரிந்தான் இருந்தான் திகைத்து

#283
போய் ஒரு கால் மீளும் புகுந்து ஒரு கால் மீண்டு ஏகும்
ஆயர் கொணர்ந்த அடு பாலின் தோயல்
கடைவார் தம் கை போலும் ஆயிற்றே காலன்
வடிவு ஆய வேலான் மனம்

#284
சிந்துர தாள் தெய்வ முனி சீராய் தெரிந்து உரைத்த
மந்திரத்தால் தம்பித்த மா நீர் போல் முந்த
ஒலித்த தேர் தானை உயர் வேந்தன் நெஞ்சம்
வலித்ததே தீ கலியால் வந்து

#285
தீ கானகத்து உறையும் தெய்வங்காள் வீமன்-தன்
கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத
காதல் அன்பு மிக்காளை கார் இருளில் கைவிட்டு இன்று
ஏதிலன் போல் போகின்றேன் யான்

#286
ஏந்தும் இள முலையாள் இன் உயிரும் தன் அருளும்
பூம் துகிலும் வேறாக போயினான் தீம் தேன்
தொடை விரவு நாள் மாலை சூட்டினாள்-தன்னை
இடை இருளில் கானகத்தே இட்டு

#287
தாரு என பார் மேல் தரு சந்திரன் சுவர்க்கி
மேரு வரை தோளான் விரவார் போல் கூர் இருளில்
செம் கால் நகம் சிதைய தேவியை விட்டு ஏகினான்
வெம் கானகம்-தனிலே வேந்து

#288
நீலம் அளவே நெகிழ நிரை முத்தின்
கோல மலரின் கொடி இடையாள் வேல் வேந்தே
எங்கு உற்றாய் என்னா இன வளை கை நீட்டினாள்
அங்கு தான் காணாது அயர்ந்து

#289
உடுத்த துகில் அரிந்தது ஒண்_தொடியாள் கண்டு
மடுத்த துயிலான் மறுகி அடுத்தடுத்து
மன்னே என அழைத்தாள் மற்றும் அவனை காணாது
என்னே இஃது என் என்று எழுந்து

#290
வெய்ய தரை என்னும் மெல் அமளியை தடவி
கை அரிக்கொண்டு எ இடத்தும் காணாமல் ஐயகோ
என்ன போய் வீழ்ந்தாள் இன மேதி மெல் கரும்பை
தின்ன போம் நாடன் திரு

#291
அழல் வெம் சிலை வேடன் அம்பு உருவ ஆற்றாது
உழலும் களி மயில் போல் ஓடி குழல் வண்டு
எழுந்து ஓட வீழ்ந்தாள் இரும் குழை மேல் கண்ணீர்
கொழுந்து ஓட வீமன் கொடி

#292
வான் முகிலும் மின்னும் வறு நிலத்து வீழ்ந்தது போல்
தானும் குழலும் தனி வீழ்ந்தாள் ஏனம்
குளம்பால் மணி கிளைக்கும் குண்டு நீர் நாடன்
இளம் பாவை கை தலை மேல் இட்டு

#293
தையல் துயர்க்கு தரியாது தம் சிறகாம்
கையால் வயிறு அலைத்து கார் இருள்-வாய் வெய்யோனை
வாவு பரி தேர் ஏறி வா என்று அழைப்பன போல்
கூவினவே கோழி குலம்

#294
வான நெடு வீதி செல்லும் மணி தேரோன்
தான மடந்தைக்கு தார் வேந்தன் போன நெறி
காட்டுவான் போல் இருள் போய் கை வாங்க கான்-ஊடே
நீட்டுவான் செம் கரத்தை நின்று

#295
செய்த பிழை ஏது என்னும் தேர் வேந்தே என்று அழைக்கும்
எய்து துயர் கரை காணேன் என்னும் பையவே
என் என்னாது என் என்னும் இ கானின் விட்டு ஏகும்
மன் என்னா வாடும் அயர்ந்து

#296
அல்லி அம் தார் மார்பன் அடி தாமரை அவள்-தன்
நல் உயிரும் ஆசையும் போல் நாறுதலும் மல் உறு தோள்
வேந்தனே என்னா விழுந்தாள் விழி வேலை
சாய்ந்த நீர் வெள்ளத்தே தான்

#297
வெறித்த இள மான்காள் மென் மயில்காள் இந்த
நெறி கண் நெடிது ஊழி வாழ்வீர் பிறித்து எம்மை
போனாரை காட்டுதிரோ என்னா புலம்பினாள்
வான் நாடர் பெற்றிலா மான்

#298
வேட்ட கரியை விழுங்கி பெரும் பசியால்
மோட்டு வயிற்று அரவு முன் தோன்ற மீட்டு அதனை
ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல்
போர் ஆர் விழியாள் புலர்ந்து

#299
அம் கண் விசும்பின் அவிர் மதி மேல் சென்று அடையும்
வெம் கண் அரவு போல் மெல்_இயலை கொங்கைக்கு
மேல் எல்லாம் தோன்ற விழுங்கியதே வெம் கானின்
பால் எல்லாம் தீ உமிழும் பாம்பு

#300
வாள் அரவின் வாய்ப்பட்டு மாயா முன் மன்னவ நின்
தாள் அடைந்து வாழும் தமியேனை தோளால்
விலக்காயோ என்று அழுதாள் வெம் அரவின் வாய்க்கு இங்கு
இலக்கு ஆகி நின்றாள் எடுத்து

#301
வென்றி சின அரவின் வெம் வாய் இடைப்பட்டு
வன் துயரால் போய் ஆவி மாள்கின்றேன் இன்று உன்
திரு முகம் நான் காண்கிலேன் தேர் வேந்தே என்றாள்
பொரு முக வேல் கண்ணாள் புலர்ந்து

#302
மல் தொடுத்த தோள் பிரிந்து மாயாத வல் வினையேன்
பெற்றெடுத்த மக்காள் பிரிந்து ஏகும் கொற்றவனை
நீரேனும் காண்குதிரோ என்று அழுதாள் நீள் குழற்கு
காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து

#303
அடையும் கடும் கானில் ஆடு அரவின் வாய்ப்பட்டு
உடையும் உயிர் நாயகனே ஓகோ விடை எனக்கு
தந்தருள்வாய் என்னா தன் தாமரை கை கூப்பினாள்
செம் துவர் வாய் மென் மொழியாள் தேர்ந்து

#304
உண்டு ஓர் அழு குரல் என்று ஒற்றி வருகின்ற
வெண் தோடன் செம்பங்கி வில் வேடன் கண்டான்
கழுகு வாழ் கானகத்து கார் அரவின் வாயில்
முழுகுவாள் தெய்வ முகம்

#305
வெய்ய அரவின் விட வாயின் உட்பட்டேன்
ஐயன்மீர் உங்கட்கு அபயம் யான் உய்ய
அருளீரோ என்னா அரற்றினாள் அஞ்சி
இருள் ஈரும் பூணாள் எடுத்து

#306
சங்க நிதி போல் தரு சந்திரன் சுவர்க்கி
வெம் கலி வாய் நின்று உலகம் மீட்டால் போல் மங்கையை வெம்
பாம்பின் வாய்-நின்றும் பறித்தான் பகை கடிந்த
காம்பின் வாய் வில் வேடன் கண்டு

#307
ஆர் உயிரும் நானும் அழியாமல் ஐயா இ
பேர் அரவின் வாயில் பிழைப்பித்தாய் தேரில்
இதற்கு உண்டோ கைம்மாறு என உரைத்தாள் வென்றி
விதர்ப்பன்-தான் பெற்ற விளக்கு

#308
இந்து நுதலி எழில் நோக்கி ஏதோ தன்
சிந்தை கருதி சிலை வேடன் பைம் தொடி நீ
போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு
ஏதுவாய் நின்றான் எடுத்து

#309
வேடன் அழைப்ப விழி பதைத்து வெய்துயிரா
ஆடல் மயில் போல் அலமரா ஓடினாள்
தூறு எலாம் ஆக சுரி குழல் வேல் கண்ணின் நீர்
ஆறு எலாம் ஆக அழுது

#310
தீ கண் புலி தொடர செல்லும் சிறு மான் போல்
ஆக்கை தளர அலமந்து போக்கற்று
சீறா விழித்தாள் சிலை வேடன் அவ்வளவில்
நீறாய் விழுந்தான் நிலத்து

#311
வண் தமிழ்வாணர் பிழைத்த வான் குடி போல் தீ தழல் மீ
மண்டு கொடும் சுரத்து ஓர் மாடு இருந்து பண்டை உள
வாழ்வு எல்லாம் தான் நினைந்து மற்று அழுதாள் மன் இழைத்த
தாழ்வு எல்லாம் தன் தலை மேல் தந்து

#312
அவ்வளவில் ஆதி பெரு வழியில் ஆய் வணிகன்
இவ்வளவு தீ வினையேன் என்பாள்-தன் மெய் வடிவை
கண்டான் ஐயுற்றான் கமல மயிலே என்றான்
உண்டாயது எல்லாம் உணர்ந்து

#313
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர்
நெக்குருகி நீ அழுதற்கு என் நிமித்தம் மை குழலாய்
கட்டு உரைத்து காண் என்றான் கார் வண்டு காந்தாரம்
விட்டு உரைக்கும் தார் வணிகர் வேந்து

#314
முன்னை வினையின் வலியால் முடி மன்னன்
என்னை பிரிய இரும் கானில் அன்னவனை
காணாது அழுகின்றேன் என்றாள் கதிர் இமைக்கும்
பூண் ஆரம் பூண்டாள் புலர்ந்து

#315
சேதி நகர்க்கே திருவை செலவிட்டு அப்போதில்
கொடை வணிகன் போயினான் நீதி
கிடத்துவான் மன்னவர்-தம் கீர்த்தியினை பார் மேல்
நடத்துவான் வட்டை நடந்து

#316
அற்ற துகிலும் அறாது ஒழுகும் கண்ணீரும்
உற்ற துயரும் உடையவளாய் மற்று ஒருத்தி
நின்றாளை கண்டேம் நில வேந்தன் பொன் தேவி
என்றார் மடவார் எடுத்து

#317
போய் அகலா முன்னம் புனை_இழையாய் பூம் குயிலை
ஆய மயிலை அறியவே நீ ஏகி
கொண்டுவா என்றாள் தன் கொவ்வை கனி திறந்து
வண்டு வாழ் கூந்தல் மயில்

#318
ஆங்கு அவளும் ஏக அரசன் பெருந்தேவி
பூம் கழலின் மீதே புரண்டு அழுதாள் தாங்கும்
இன வளையாய் உற்ற துயர் எல்லாம் எனது
வினைவலி காண் என்றாள் மெலிந்து

#319
அம் தாமரையில் அவளே என்று ஐயுற்று
சிந்து ஆகுலம் எனக்கு தீராதால் பைம் தொடியே
உள்ளவாறு எல்லாம் உரை என்றாள் ஒண் மலரின்
கள்ள வார் கூந்தலாள் கண்டு

#320
என்னை தனி வனத்து இட்டு எம் கோன் பிரிந்து ஏக
அன்னவனை காணாது அலமருவேன் இ நகர்க்கே
வந்தேன் இது என் வரவு என்றாள் வாய் புலரா
செம் தேன் மொழி பதறா சேர்ந்து

#321
உன் தலைவன் தன்னை ஒருவகையால் நாடியே
தந்துவிடும் அளவும் தாழ் குழலாய் என்றனுடன்
இங்கே இருக்க இனிது என்றாள் ஏந்து_இழையை
கொங்கு ஏயும் தாராள் குறித்து

#322
ஈங்கு இவள் இவ்வாறு இருப்ப இன்னல் உழந்தே ஏகி
பூம் குயிலும் போர் வேல் புரவலனும் யாங்கு உற்றார்
சென்று உணர்தி என்று செலவிட்டான் வேதியனை
குன்று உறழ் தோள் வீமன் குறித்து

#323
ஓடும் புரவி தேர் வெய்யோன் ஒளி சென்று
நாடும் இடம் எல்லாம் நாடி போய் கூடினான்
போதில் திருநாடும் பொய்கை திருநாடாம்
சேதி திருநாடு சென்று

#324
தாமம் சேர் ஓதி தமயந்தி நின்றாளை
ஆம் என்று அறியா அருமறையோன் வீமன்
கொடி மேல் விழுந்து அழுதான் கொம்பும் அவன் செம்பொன்
அடி மேல் விழுந்தாள் அழுது

#325
மங்கை விழி நீர் மறையோன் கழல் கழுவ
அங்கு அவன்-தன் கண்ணீர் அவள் உடல் மேல் பொங்க
கடல் போலும் காதலார் கையற்றார் தங்கள்
உடல் போலும் ஒத்தார் உயிர்

#326
மாரி பொரு கூந்தல் மாதராய் நீ பயந்த
காரிகை தான் பட்ட துயர் கண்டாயோ சோர் குழலும்
வேணியாய் வெண் துகிலும் பாதியாய் வெம் துயருக்கு
ஆணியாய் நின்றாள் அயர்ந்து

#327
தன் மகள் ஆவது அறியா தடுமாறா
பொன் வடிவின் மேல் அழுது போய் வீழ்ந்தாள் மென் மலரை
கோதி போய் மேதி குருகு எழுப்பும் தண் பணை சூழ்
சேதி கோன் தேவி திகைத்து

#328
கந்தனையும் கன்னியையும் கண்டாயினும் சிறிது
தன் துயரம் தீர்ந்து தனி ஆற தந்தை
பதியிலே போக்கினான் சேதியர் கோன் பண்டை
விதியிலே போந்தாளை மீண்டு

#329
கோயிலும் அந்தப்புரமும் கொடி நுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியதே தீய கொடும்
கான் ஆள மக்களையும் கைவிட்டு காதலன் இன்
போனாள் புகுந்த பொழுது

#330
அழுவார் விழுவார் அயிர்ப்பார் உயிர்ப்பார்
தொழுவார் தமர் எங்கும் சூழ்வார் வழுவாத
காம நீர் ஓத கடல் கிளர்ந்தால் ஒத்ததே
நாம வேல் வீமன் நகர்

#331
தந்தையை முன் காண்டலுமே தாமரை கண்ணீர் சொரிய
சிந்தை கலங்கி திகைத்து அலமந்து எந்தாய் யான்
பட்டதே என்ன போய் வீழ்ந்தாள் படை நெடும் கண்
விட்ட நீர் மேலே விழ

#332
செம் வண்ண வாயாளும் தேர் வேந்தனும் மகளை
அ வண்ணம் கண்ட-கால் ஆற்றுவரோ மெய் வண்ணம்
ஓய்ந்து நா நீர் போய் உலர்கின்றது ஒத்த தமர்
நீந்தினார் கண்ணீரின்-நின்று

#333
பனி இருளில் பாழ் மண்டபத்திலே உன்னை
நினையாது நீத்து அகன்ற போது தனியே நின்று
என் நினைத்தா என் செய்தாய் என்னா புலம்பினாள்
பொன் இனை தாய் நோக்கி புலர்ந்து

#334 கலி நீங்கு காண்டம்
மூல பழ மறைக்கு முன்னேயும் காணலாம்
காலிக்கு பின்னேயும் காணலாம் மால் யானை
முந்து அருளும் வேத முதலே என அழைப்ப
வந்து அருளும் செந்தாமரை

#335
போதுவார் நீறு அணிந்து பொய்யாத ஐந்து_எழுத்தை
ஓதுவார் உள்ளம் என உரைப்பார் நீதியார்
பெம்மான் அமரர் பெருமான் ஒரு மான் கை
அம்மான் நின்று ஆடும் அரங்கு

#336
மன்னா உனக்கு அபயம் என்னா வன தீயில்
பல்_நாக_வேந்தன் பதைத்து உருகி சொன்ன
மொழி வழியே சென்றான் முரண் கலியின் வஞ்ச
பழி வழியே செல்கின்றான் பார்த்து

#337
ஆரும் திரியா அரை இருளில் அங்ஙனே
சோர் குழலை நீத்த துயரோடும் வீரன்
திரிவான் அ தீ கானில் செம் தீயின் வாய்ப்பட்டு
எரிவானை கண்டான் எதிர்

#338
தீ கடவுள் தந்த வரத்தை திரு மனத்தில்
ஆக்கி அருளால் அரவு அரசை நோக்கி
அடைந்தான் அடைதலுமே ஆர் அழலோன் அஞ்சி
உடைந்தான் போய் புக்கான் உவந்து

#339
வேத முனி ஒருவன் சாபத்தால் வெம் கானில்
ஆதபத்தின் வாய்ப்பட்டு அழிகின்றேன் காதலால்
வந்து எடுத்து கா என்றான் மாலை மணி வண்டு
சந்து எடுத்த தோளானை தான்

#340
சீரியாய் நீ எடுப்ப தீமை கெடுகின்றேன்
கூரும் தழல் அவித்து கொண்டுபோய் பாரில்
விடுக என்றான் மற்று அந்த வெம் தழலால் வெம்மை
படுகின்றான் வேல் வேந்தை பார்த்து

#341
என்று உரைத்த அவ்வளவில் ஏழு உலகும் சூழ் கடலும்
குன்றும் சுமந்த குல புயத்தான் வென்றி
அரவு அரசை கொண்டு அகன்றான் ஆரணியம் தன்னில்
இரவு அரசை வென்றான் எடுத்து

#342
மண்ணின் மீது என்றனை நின் வன் தாளால் ஒன்று முதல்
எண்ணி தச என்று இடுக என்றான் நண்ணி போர்
மா வலான் செய்த உதவிக்கு மாறாக
ஏவலால் தீங்கிழைப்பேன் என்று

#343
ஆங்கு அவன் தான் அவ்வாறு உரைப்ப அது கேட்டு
தீ கலியால் செற்ற திரு மனத்தான் பூம் கழலை
மண்ணின் மேல் வைத்து தச என்று வாய்மையால்
எண்ணினான் வைத்தான் எயிறு

#344
வீமன் மடந்தை விழி முடிய கண்டு அறியா
வாம நெடும் தோள் வறியோருக்கு ஏமம்
கொடாதார் அகம் போல் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திரு மேனி வெந்து

#345
ஆற்றல் அரவு அரசே ஆங்கு என் உருவத்தை
சீற்றம் ஒன்று இன்றி சின எயிற்றால் மாற்றுதற்கு இன்று
என் காரணம் என்றான் ஏற்று அமரில் கூற்று அழைக்கும்
மின் கால் அயில் முக வேல் வேந்து

#346
காயும் கட களிற்றாய் கார்க்கோடகன் என் பேர்
நீ இங்கு வந்தது யான் நினைந்து காயத்தை
மாறு ஆக்கிக்கொண்டு மறைந்து உறைதல் காரணமா
வேறு ஆக்கிற்று என்றான் விரைந்து

#347
கூன் இறால் பாய குவளை தவளை வாய்
தேன் இறால் பாயும் திரு நாடா கானில்
தணியாத வெம் கனலை தாங்கினாய் இந்த
அணி ஆடை கொள்க என்றான் ஆங்கு

#348
சாதி மணி துகில் நீ சாத்தினால் தண் கழு நீர்
போதின் கீழ் மேயும் புது வரால் தாதின்
துளிக்கு நா நீட்டும் துறை நாடர் கோவே
ஒளிக்கு நாள் நீங்கும் உரு

#349
வாகு குறைந்தமையால் வாகுகன் என்று உன் நாமம்
ஆக அயோத்தி நகர் அடைந்து மா கனக
தேர் தொழிற்கு மிக்கான் நீ ஆகு என்றான் செம் மனத்தால்
பார் தொழிற்கு மிக்கானை பார்த்து

#350
இணை ஆரும் இல்லான் இழைத்த உதவி
புணை ஆக சூழ் கானில் போனான் பணை ஆக
திண் நாகம் ஓர் எட்டும் தாங்கும் திசை அனைத்தும்
எண் ஆக வேந்தன் எழுந்து

#351
நினைப்பு என்னும் காற்று அசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனல் புகைய வேகின்றான் கண்டான் பனி குருகு
தண் படாம் நீழல் தனி படை பார்த்து இரவு
கண் படா வேலை கரை

#352
கொம்பர் இளம் குருகே கூறாது இருத்தியால்
அம்புயத்தின் போதை அறு காலால் தும்பி
திறக்க தேன் ஊறும் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக்கு ஒன்று

#353
புன்னை நறும் தாது கோதி பொறி வண்டு
கன்னி பெடை உண்ண காத்திருக்கும் இன் அருள் கண்டு
அஞ்சினான் ஆவி அழிந்தான் அற உயிர்த்து
நெஞ்சினால் எல்லாம் நினைந்து

#354
காதலியை கார் இருளில் கானகத்தே கைவிட்ட
பாதகனை பார்க்கப்படாது என்றோ நாதம்
அளிக்கின்ற ஆழி-வாய் ஆங்கு அலவ ஓடி
ஒளிக்கின்றது என்னா உரை

#355
பானலே சோலை பசும் தென்றல் வந்து உலவும்
கானலே வேலை கழி குருகே யானுடைய
மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால்
என் நினைக்கும் சொல்வீர் எனக்கு

#356
போவாய் வருவாய் புரண்டு விழுந்து இரங்கி
நாவாய் குழற நடுங்குறுவாய் தீ-வாய்
அரவு அகற்றும் என் போல ஆர்கலியே மாதை
இரவு அகற்றி வந்தாய்-கொல் இன்று

#357
முந்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப
நல் நீர் அயோத்தி நகர் அடைந்தான் பொன் நீர்
முருகு அடைக்கும் தாமரையின் மொய் மலரை தும்பி
அருகு உடைக்கும் நல் நாட்டு அரசு

#358
மான் தேர் தொழிற்கும் மடை தொழிற்கும் மிக்கோன் என்று
ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும்
தார் வேந்தற்கு என் வரவு தான் உரை-மின் என்று உரைத்தான்
தேர் வேந்தன் வாகுவனாய் சென்று

#359
அ மொழியை தூதர் அரசற்கு அறிவிக்க
செம் மொழியா தேர்ந்து அதனை சிந்தித்தே இ மொழிக்கு
தக்கானை இங்கே தரு-மின் என உரைப்ப
மிக்கானும் சென்றான் விரைந்து

#360
பொய் அடையா சிந்தை புரவலனை நோக்கி தன்
செய்ய முகம் மலர்ந்து தேர் வேந்தன் ஐயா நீ
எ தொழிலின் மிக்கனை-கொல் யாது உன் பெயர் என்றான்
கைத்தொழிற்கு மிக்கானை கண்டு

#361
அன்னம் மிதிப்ப அலர் வழியும் தேறல் போய்
செந்நெல் விளைக்கும் திருநாடர் மன்ன
மடை தொழிலும் தேர் தொழிலும் வல்லன் யான் என்றான்
கொடை தொழிலின் மிக்கான் குறித்து

#362
என்னை இரும் கானில் நீத்த இகல் வேந்தன்
தன்னை நீ நாடுக என தண் கோதை மின்னு
புரை கதிர் வேல் வேந்தன் புரோகிதனுக்கு இந்த
உரை பகர்வதானாள் உணர்ந்து

#363
கார் இருளில் பாழ் மண்டபத்தே தன் காதலியை
சோர் துயிலின் நீத்தல் துணிவு அன்றோ தேர் வேந்தற்கு
என்று அறைந்தால் நேர் நின்று எதிர்மாற்றம் தந்தாரை
சென்று அறிந்து வா என்றாள் தேர்ந்து

#364
மின் ஆடும் மால் வரையும் வேலையும் வேலை சூழ்
நல் நாடும் கானகமும் நாடினான் மன்னு
கடம் தாழ் களி யானை காவலனை தேடி
அடைந்தான் அயோத்தி நகர்

#365
கானகத்து காதலியை கார் இருளில் கைவிட்டு
போனதுவும் வேந்தற்கு போதுமோ தான் என்று
சாற்றினான் அந்த உரை தார் வேந்தன் தன் செவியில்
ஏற்றினான் வந்தான் எதிர்

#366
ஒண்_தொடி தன்னை உறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனே காண் தண் தரள
பூ தாம வெண்குடையான் பொன் மகளை வெம் வனத்தே
நீத்தான் என்று ஐயுறேல் நீ

#367
எங்கண் உறைந்தனை-கொல் எ திசை போய் நாடினை-கொல்
கங்கை வள நாட்டார்-தம் காவலனை அங்கு
தலைப்பட்டவாறு உண்டோ சாற்று என்றாள் கண்ணீர்
அலைப்பட்ட ஆகத்தாள் ஆங்கு

#368
வாக்கினால் மன்னவனை ஒப்பான் மறித்து ஒருகால்
ஆக்கையே நோக்கின் அவன் அல்லன் பூ கமழும்
கூந்தலாய் மற்று அ குல பாகன் என்று உரைத்தான்
ஏந்து நூல் மார்பன் எடுத்து

#369
மீண்டு ஓர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாள் என்று அந்தண நீ போய் உரைத்தால் நீண்ட
கொடை வேந்தற்கு இ தூரம் தேர் கோலம் கொள்வான்
படை வேந்தன் என்றாள் பரிந்து

#370
எம் கோன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரம் என்று
அங்கு ஓர் முரசம் அறைவித்தான் செங்கோலாய்
அந்நாளும் நாளை அளவு என்றான் அந்தணன் போய்
தென் ஆளும் தாரானை சேர்ந்து

#371
வேத மொழி வாணன் மீண்டும் சுயம்வரத்தை
காதலித்தாள் வீமன் தன் காதலி என்று ஓதினான்
என் செய்கோ மற்று இதனுக்கு என்றான் இகல் சீறும்
மின் செய்த வேலான் விரைந்து

#372
குறையாத கற்பினாள் கொண்டானுக்கு அல்லால்
இறவாத ஏந்து_இழையாள் இன்று பறி பீறி
நெல்லில் படு வரால் ஓடும் நெடு நாடா
சொல்லப்படுமோ இ சொல்

#373
என் மேல் எறிகின்ற மாலை எழில் நளன்-தன்
முன்னே விழுந்தது காண் முன் நாளில் அன்னதற்கு
காரணம் தான் ஈது அன்றோ என்றான் கடாம் சொரியும்
வாரணம் தான் அன்னான் மதித்து

#374
முன்னை வினையால் முடிந்ததோ மொய் குழலாள்
என்னை தான் காண இசைந்ததோ தன் மரபுக்கு
ஒவ்வாத வார்த்தை உலகத்து உரைப்பட்டது
எவ்வாறு-கொல்லோ இது

#375
காவலனுக்கு ஏவல் கடன் பூண்டேன் மற்று அவன்-தன்
ஏவல் முடிப்பேன் இனி என்று மாவை
குல தேரில் பூட்டினான் கோதையர்-தம் கொங்கை
மலர் தேன் துளிக்கும் தார் மன்

#376
ஒற்றை தனி ஆழி தேர் என்ன ஓடுவது ஓர்
கொற்ற நெடும் தேர் கொடுவந்தேன் மற்று இதற்கே
போந்து ஏறுக என்று உரைத்தான் பொம்மென்று அளி முரலும்
தீம் தேறல் வாக்கும் தார் சேய்

#377
முந்தை வினை குறுக மூவா மயல் கொண்டான்
சிந்தையினும் கடுக சென்றதே சந்த விரை
தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே
தேர்கின்றான் ஊர்கின்ற தேர்

#378
மேல் ஆடை வீழ்ந்தது எடு என்றான் அவ்வளவில்
நால்_ஆறு காதம் நடந்ததே தோலாமை
மேல் கொண்டான் ஏறிவர வெம்மை கலி சூதில்
மால் கொண்டான் கோல் கொண்ட மா

#379
இ தாழ் பணையில் இரும் தான்றி காய் எண்ணில்
பத்து ஆயிரம் கோடி பார் என்ன உய்த்து அதனில்
தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சவை நடுவே
தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான்

#380
ஏர் அடிப்பார் கோல் எடுப்ப இன் தேன் தொடை பீறி
கார் அடுத்த சோலை கடல் நாடன் தேர் அடுத்த
மா தொழிலும் இ தொழிலும் மாற்றுதியோ என்று உரைத்தான்
தேர் தொழிலின் மிக்கானை தேர்ந்து

#381
வண்டு ஆர் வள வயல் சூழ் மள்ளுவ நாட்டு எம் கோமான்
தண் தார் புனை சந்திரன் சுவர்க்கி கொண்டாடும்
பாவலன்-பால் நின்ற பசி போல நீங்கிற்றே
காவலன்-பால் நின்ற கலி

#382
ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும்
காமர் நெடு நாடு கைவிட்டு வீமன்-தன்
பொன் நகரி சென்று அடைந்தான் போர் வேட்டு எழும் கூற்றம்
அன்ன கரி ஒன்று உடையான் ஆங்கு

#383
வெற்றி தனி தேரை வீமன் பெரும் கோயில்
முற்றத்து இருத்தி முறைசெய்யும் கொற்றவற்கு
தன் வரவு கூற பணித்து தனி புக்கான்
மன் விரவு தாரான் மகிழ்ந்து

#384
கன்னி நறும் தேறல் மாந்தி கமலத்தின்
மன்னி துயின்ற வரி வண்டு பின்னையும் போய்
நெய்தற்கு அவாவும் நெடு நாட நீ என்-பால்
எய்தற்கு அவாவியவாறு என்

#385
இன்று உன்னை காண்பதோர் ஆதரவால் யான் இங்ஙன்
மன்றல் மலர் தாராய் வந்து அடைந்தேன் என்றான்
ஒளி ஆர் வேல் கண்ணாள் மேல் உள்ளம் துரப்ப
தெளியாது முன் போந்த சேய்

#386
ஆதி நெடும் தேர் பரி விட்டு அவை ஆற்றி
கோது இல் அடிசில் குறை முடிப்பான் மேதி
கடைவாயில் கார் நீலம் கண் விழிக்கும் நாடன்
மடை வாயில் புக்கான் மதித்து

#387
ஆதி மறை நூல் அனைத்தும் தெரிந்து உணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம் போல் யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொன் தேர்
வர பாகன் புக்க மனை

#388
இடை சுரத்தில் தன்னை இடை இருளில் நீத்த
கொடை தொழிலான் என்று அயிர்த்த கோமான் மடை தொழில்கள்
செய்கின்றது எல்லாம் தெரிந்து உணர்ந்து வா என்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து

#389
கோதை நெடு வேல் குமரனையும் தங்கையையும்
ஆதி அரசன் அருகாக போத
விளையாட விட்டு அவன்-தன் மேற்செயல் நாடு என்றாள்
வளை ஆடும் கையாள் மதித்து

#390
மக்களை முன் காணா மனம் நடுங்கா வெய்துயிரா
புக்கெடுத்து வீர புயத்து அணையா மக்காள் நீர்
என் மக்கள் போல்கின்றீர் யார் மக்கள் என்று உரைத்தான்
வன்ம களி யானை மன்

#391
மன்னு நிடதத்தர் வாழ் வேந்தன் மக்கள் யாம்
அன்னை-தனை கான் விட்டு அவன் ஏக இ நகர்க்கே
வாழ்கின்றோம் எங்கள் வள நாடு மற்று ஒருவன்
ஆழ்கின்றான் என்றார் அழுது

#392
ஆங்கு அவர் சொன்ன உரை கேட்டு அழிவு எய்தி
நீங்கா உயிரோடு நின்றிட்டான் பூங்காவில்
வள்ளம் போல் கோங்கு மலரும் திருநாடன்
உள்ளம் போல் கண்ணீர் உகுத்து

#393
உங்கள் அரசு ஒருவன் ஆள நீர் ஓடிப்போந்து
இங்கண் உறைதல் இழுக்கு அன்றோ செம் கை
வள அரசே என்று உரைத்தான் மா தவத்தால் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து

#394
நெஞ்சால் இ மாற்றம் நினைந்து உரைக்க நீ அல்லாது
அஞ்சாரோ மன்னர் அடு மடையா எஞ்சாது
தீமையே கொண்ட சிறு தொழிலாய் எம் கோமான்
வாய்மையே கண்டாய் வலி

#395
எந்தை கழல் இணையில் எ மருங்கும் காணலாம்
கந்து சுளியும் கடா களிற்றின் வந்து
பணி முடியில் பார் காக்கும் பார் வேந்தர் தங்கள்
மணி முடியில் தேய்த்த வடு

#396
மன்னர் பெருமை மடையர் அறிவாரே
உன்னை அறியாது உரை செய்த என்னை
முனிந்து அருளல் என்று முடி சாய்த்து நின்றான்
கனிந்து உருகி நீர் வார கண்

#397
கொற்ற குமரனையும் கோதையையும் தான் கண்டு
மற்று அவன் தான் ஆங்கு உரைத்த வாசகத்தை முற்றும்
மொழிந்தார் அ மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தாள் அழுது

#398
கொங்கை அளைந்து குழல் திருத்தி கோலம் செய்
அம் கை இரண்டும் அடு புகையால் இங்ஙன்
கருகியவோ என்று அழுதாள் காதலனை முன் நாள்
பருகிய வேல் கண்ணாள் பதைத்து

#399
மற்று இ திருநகர்க்கே வந்தடைந்த மன்னவற்கு
கொற்ற தனி தேரும் கொண்டு அணைந்து மற்றும்
மடை தொழிலே செய்கின்ற மன்னவன் காண் எங்கள்
கொடை தொழிலான் என்றாள் குறித்து

#400
போது அலரும் கண்ணியான் போர் வேந்தர் சூழ போய்
காதலி தன் காதலனை கண்ணுற்றான் ஓதம்
வரி வளை கொண்டு ஏறும் வள நாடன் தன்னை
தெரிவு அரிதா நின்றான் திகைத்து

#401
செம் வாய்மொழிக்கும் செயலுக்கும் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உரு என்னா எவ்வாயும்
நோக்கினான் நோக்கி தெளிந்தான் நுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து

#402
பைம் தலைய நாக பணம் என்று பூகத்தின்
ஐம் தலையின் பாளை-தனை ஐயுற்று மந்தி
தெளியாது இருக்கும் திரு நாடா உன்னை
ஒளியாது காட்டு உன் உரு

#403
அரவு அரசன் தான் கொடுத்த அம் பூ துகிலின்
ஒரு துகிலை வாங்கி உடுத்தான் ஒரு துகிலை
போர்த்தான் பொரு கலியின் வஞ்சனையால் பூண்டு அளிக்கும்
கோ தாயம் முன் இழந்த கோ

#404
மிக்கோன் உலகு அளந்த மெய் அடியே சார்வாக
புக்கோர் அரு வினை போல் போயிற்றே அ காலம்
கானகத்தே காதலியை நீத்து கரந்து உறையும்
மானக தேர் பாகன் வடிவு

#405
தாதையை முன் காண்டலுமே தாமரை கண் நீர் அரும்ப
போதல் அரும் குஞ்சியான் புக்கு அணைந்து கோது இலா
பொன் அடியை கண்ணீர் புனலால் கழுவினான்
மின் இடையாளோடும் விழுந்து

#406
பாதி துகிலோடு பாய்ந்து இழியும் கண்ணீரும்
சீத களப தனம் சேர் மாசும் போத
மலர்ந்த தார் வேந்தன் மலர் அடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீர் அவற்கு

#407
வெம் விடத்தோடு ஒக்கும் விழி இரண்டும் வீழ் துயில் கொள்
அ இடத்தே நீத்த அவர் என்றே இ இடத்தே
வார் ஆர் முலையாள் அ மன்னவனை காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று

#408
உத்தமரில் மற்று இவனை ஒப்பார் ஒருவர் இலை
இ தலத்தில் என்று இமையோர் எம்மருங்கும் கைத்தலத்தில்
தே மாரி பெய்யும் திரு மலர் தார் வேந்தன் மேல்
பூ மாரி பெய்தார் புகழ்ந்து

#409
தேவி இவள் கற்புக்கும் செங்கோல் முறைமைக்கும்
பூ உலகில் ஒப்பார் யார் போதுவார் காவலனே
மற்று என்-பால் வேண்டும் வரம் கேட்டுக்கொள் என்றான்
முற்று அன்பால் பார் அளிப்பான் முன்

#410
உன் சரிதம் செல்ல உலகு ஆளும் காலத்தும்
மின் சொரியும் வேலாய் மிக விரும்பி என் சரிதம்
கேட்டாரை நீ அடையேல் என்றான் கிளர் மணி பூண்
வாள் தானை மன்னன் மதித்து

#411
என் காலத்து உன் சரிதம் கேட்டாரை யான் அடையேன்
மின் கால் அயில் வேலாய் மெய் என்று நன் காவி
மட்டு இறைக்கும் சோலை வள நாடன் முன் நின்று
கட்டு உரைத்து போனான் கலி

#412
வேத நெறி வழுவா வேந்தனையும் பூம் தடம் கண்
கோதையையும் மக்களையும் கொண்டுபோய் தாது
புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி
விதைய கோன் செய்தான் விருந்து

#413
உன்னை யான் ஒன்றும் உணராது உரைத்த எலாம்
பொன் அமரும் தாராய் பொறுக்க என்று பின்னை தான்
மேல் நீர்மை குன்றா வெறும் தேர் மிசை கொண்டான்
மால் நீர் அயோத்தியார் மன்

#414
வில் தானை முன் செல்ல வேல் வேந்தர் பின் செல்ல
பொன் தேர் மேல் தேவியோடும் போயினான் முற்று ஆம்பல்
தே நீர் அளித்து அருகு செந்நெல் கதிர் விளைக்கும்
மா நீர் நிடதத்தார் மன்

#415
தானவரை வெல்ல தரித்த நெடு வை வேலாய்
ஏனை நெறி தூரம் இனி எத்தனையோ மானே கேள்
இந்த மலை கடந்து ஏழு மலைக்கு அப்புறமா
விந்தம் எனும் நம் பதி தான் மிக்கு

#416
இ கங்குல் போக இகல் வேல் நளன் எறி நீர்
செய்க்கு அங்கு பாயும் திருநாடு புக்கு அங்கு
இருக்குமா காண்பான் போல் ஏறினான் குன்றில்
செருக்கு மான் தேர் வெய்யோன் சென்று

#417
மன்றல் இளம் கோதையொடு மக்களும் தானும் ஒரு
வென்றி மணி நெடும் தேர் மேல் ஏறி சென்று அடைந்தான்
மா விந்தம் என்னும் வள நகரம் சூழ்ந்த ஒரு
பூ விந்தை வாழும் பொழில்

#418
மற்று அவனுக்கு என் வரவு சொல்லி மறு சூதுக்கு
உற்ற பணையம் உளது என்று கொற்றவனை
கொண்டு அணைவீர் என்று குல தூதரை விடுத்தான்
தண் தெரியல் தேர் வேந்தன் தான்

#419
மாய நெடும் சூதில் வஞ்சித்த வன் நெஞ்சன்
தூய நறு மலர் பூம் சோலை-வாய் ஆய
பெரும் தானை சூழ பெடை நடையாளோடும்
இருந்தானை கண்டான் எதிர்

#420
செங்கோல் அரசன் முகம் நோக்கி தேர்ச்சி இலா
வெம் கோல் அரசன் வினாவினான் அம் கோல
காவல் கொடை வேந்தே காதலற்கும் காதலிக்கும்
யாவர்க்கும் தீது இலவே என்று

#421
தீது தரு கலி முன் செய்ததனை ஓராதே
யாது பணையம் என இயம்ப சூதாட
மை ஆழியில் துயிலும் மால் அனையான் வண்மை புனை
கை ஆழி வைத்தான் கழித்து

#422
அ பலகை ஒன்றின் அருகு இருந்தார் தாம் மதிக்க
செப்பு அரிய செல்வ திருநகரும் ஒப்பு அரிய
வன் தானையோடும் வள நாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றான் அ வேந்து

#423
அந்த வள நாடும் அ அரசும் ஆங்கு ஒழிய
வந்தபடியே வழிக்கொண்டான் செந்தமிழோர்
நா வேய்ந்த சொல்லால் நளன் என்று போற்றி இசைக்கும்
கோ வேந்தற்கு எல்லாம் கொடுத்து

#424
ஏனை முடி வேந்தர் எத்திசையும் போற்றி இசைப்ப
சேனை புடை சூழ தேர் ஏறி ஆன புகழ்
பொன் நகரம் எய்தும் புரந்தரனை போல் பொலிந்து
நல் நகரம் புக்கான் நளன்

#425
கார் பெற்ற தோகையோ கண் பெற்ற வாள் முகமோ
நீர் பெற்று உயர்ந்த நிறை புலமோ பார் பெற்று
மாதோடு மன்னன் வர கண்ட மா நகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர்

#426
வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதை ஈது
என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை
மன்னா பருவரலை மாற்றுதி என்று ஆசி மொழி
பன்னா நடந்திட்டான் பண்டு

#427
வாழி அரு மறைகள் வாழி நல் அந்தணர்கள்
வாழி நளன் காதை வழுத்துவோர் வாழிய
மள்ளுவ நாட்டு ஆங்கண் வரு சந்திரன் சுவர்க்கி
தெள் உற மெய்க்கீர்த்தி சிறந்து