வெ – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃகு
வெக்கை
வெகுள்
வெகுளி
வெட்சி
வெடி
வெடிபடு
வெண்குடை
வெண்கூதாளம்
வெண்கை
வெண்ணி
வெண்ணிப்பறந்தலை
வெண்ணிவாயில்
வெண்ணெல்
வெண்பொன்
வெண்மணி
வெண்மறி
வெதிர்
வெதிரம்
வெப்பர்
வெப்பு
வெப்புள்
வெம்பல்
வெம்பு
வெய்
வெய்து
வெய்துயிர்
வெய்துறு
வெய்ய
வெய்யள்
வெய்யன்
வெய்யார்
வெய்யை
வெரிந்
வெரீஇ
வெரீஇய
வெரு
வெருக்கு
வெருகு
வெருவரு(தல்)
வெருவு
வெருவுறு
வெருள்
வெரூஉ
வெல்
வெலீஇய
வெலீஇயர்
வெலீஇயோன்
வெவ்
வெவ்வர்
வெவ்வெம்செல்வன்
வெள்
வெள்யாடு
வெள்ளம்
வெள்ளாங்குருகு
வெள்ளாம்பல்
வெள்ளி
வெள்ளில்
வெள்ளிவீதி
வெள்ளெலி
வெள்ளென
வெள்ளை
வெள்ளோத்திரம்
வெளிது
வெளிய
வெளியது
வெளியம்
வெளியன்
வெளில்
வெளிறு
வெற்பன்
வெற்பு
வெற்றம்
வெறி
வெறிக்களம்
வெறிது
வெறு
வெறுக்கை
வென்
வென்றி
வென்றியர்

வெஃகு

(வி) 1. மிகவும் விரும்பு, desire ardently
2. வேண்டாதவை மீது நாட்டம் கொள், covet

1

வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என – கலி 10/21

பொருள்தேடும் தொழிலை நாடி நீ பிரிந்து சென்றால் இவள் உயிரை விட்டுவிடுவாள் என்று,

2

பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் – அகம் 112/12

பழியுடன் கூடி வரும் இன்பினை விரும்பார்

மேல்


வெக்கை

(பெ) கதிரடிக்கும் களம், threshing-floor

செறு வினை மகளிர் மலிந்த வெக்கை
பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் – பதி 71/3,4

வயல்வேலை செய்யும் மகளிர் மிகுந்திருக்கும் நெற்களத்தில்
பெருத்த எருதுகள் போரடிக்குபோது மிதித்து உதிர்த்த மென்மையான செந்நெல்லின்

மேல்


வெகுள்

(வி) சினம்கொள், சீறியெழு, be angry, enraged

உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும்
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 130,131

மிகுகின்ற சினத்தால் செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் சீறிவரும்,
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்

பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 237

பாம்பு சீறியெழுவதைப் போல் (உண்டவரைத் துள்ளி எழச்செய்யும்)கள்ளின் தெளிவைக் கொடுத்து,
– அடங்கிக்கிடக்கும் அரவு ஞெரேரெனச் சீறியெழுவதைப் போன்று, உண்ணுமுன்னர் வாளாவிருந்த
தேறல் உண்டவுடன் உண்டார் உள்ளத்தே ஞெரேரென வெறித்தெழுதலான். – பொ.வே.சோ விளக்கம்

மேல்


வெகுளி

(பெ) கோபம், சீற்றம், Anger, wrath

வெருவரு செலவின் வெகுளி வேழம்
தரவு இடை தங்கல் ஓவு இலனே – பொரு 172,173

அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
(இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன்,

மேல்


வெட்சி

(பெ) ஒரு செடி வகை / அதன் பூ, Scarlet ixora, Ixora coccinea

1.இந்தப் பூவின் காம்பு சிவப்பாக இருக்கும்.

செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 21

சிவந்த காலையுடைய வெட்சியின் சிறிய பூக்களை நடுவே விடுபூவாகஇட்டு

2.காட்டில் இது தழைத்து வளரும், கிளைகள் வளைந்திருக்கும்.

கடற்றில் கலித்த முட சினை வெட்சி
தளை அவிழ் பல் போது கமழும் – குறு 209/5,6

காட்டில் தழைத்த வளைந்த கிளைகளையுடைய வெட்சியின்
முறுக்கவிழும் பல அரும்புகள் மணங்கமழும்

3.இதன் பூக்கள் குளிர்ச்சி பொருந்தியவை.

ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் – பரி 22/22

குளிர்ச்சி பொருந்திய வெட்சி மலரால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிய மகளிரும்,

4.இதன் இலை சிறிதாக இருக்கும்.

புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் – கலி 103/2

புன்மையான் இலையைக் கொண்ட வெட்சிப்பூவும், பிடவமும், செம்முல்லையும்

5.இதன் அரும்புகள் காடையின் கால் பின்னர் இருக்கும் முள் போல் இருக்கும்.

இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புன குருந்தொடு கல் அறை தாஅம் – அகம் 133/14,15

காடையின் காலிலுள்ள முள்ளை ஒத்த அரும்பு முதிர்ந்த வெட்சிப்பூக்கள்
கொல்லை நிலத்திலுள்ள குருந்த மலர்களோடு கற்பாரையிலே பரந்து கிடக்கும்

மேல்


வெடி

(பெ) 1. கேடு, ruin
2. ஓசை, noise
3. துள்ளி மேலெழுதல், leaping

1,2

பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை
படு கண் முரசம் காலை இயம்ப
வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் – மது 231-234

பருந்துகளும் பறக்கமுடியாத பார்வையைக் கொண்ட பாசறைகளில்
ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசுகள் காலையில் ஒலிப்ப,
பகைவர் படைக்குக் கேடு உண்டாகக் கடந்துசென்று, (அவர்தம் நாட்டில்)வேண்டிய இடத்தில் தங்கி,
பெருமைகொண்ட பெரிய வலிமையுள்ள, பல வேல்களைக் கொண்ட மன்னர்கள்,

வெடி பட கடந்து வேண்டு புலத்து இறுத்த – மது 233

வெடி – ஓசையுமாம் – நச்.உரை

2

மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர – குறி 161

(வாயை)மடித்து விடுகின்ற சீழ்க்கையராய், மிக்க ஓசையை உண்டாக்கி (அவ் வேழத்தை)எதிர்த்து நிற்க

3.

வெடி வேய் கொள்வது போல ஓடி
தாவுபு உகளும் மாவே – புறம் 302/1,2

வளைத்துவிட்ட மூங்கில் மேல்நோக்கி எழுவது போல ஓடி
பாய்ந்து திரியாநின்றன குதிரைகள்

மேல்


வெடிபடு

(வி) 1. சிதறு, scatter
2. பிளவுபடு, burst open

1

வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் – புறம் 93/2-4

நின்னோடு எதிர்ந்து வந்தோர்
நினது தூசிப்படையைப் பொறுத்தற்கும் மாட்டாராய், சிதறிக்
கெட்டுப் போதலிலேமருவிய பெருமையில்லாத அரசரது

2

இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப
வெடி படா ஒடி தூண் தடியொடு
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை – பரி 4/19-21

துன்பத்தைக் காட்டும் தீயசகுனங்களுடன் இடியைப் போன்ற முரசு ஒலிக்க,
பிளவுபட்டு ஒடிந்துபோன தூணின் துண்டங்களோடு,
இரணியனின் தசைத் துண்டங்களும் பலவாகக் கலந்து விழ, அவன் மார்பினை வகிர்த்ந நகத்தினையுடையவனே

மேல்


வெண்குடை

(பெ) வெண்கொற்றக்குடை, White umbrella of victory, one of the insignia of royalty

விசும்பு உற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே – புறம் 75/11,12

விண்ணின்கண்ணே பொருந்த உயர்ந்த வெண்குடையினையும்
முரசினையுமுடைய அரசரது அர்சாட்சியைப் பொருந்திய செல்வம்

மேல்


வெண்கூதாளம்

(பெ) வெண்டாளி, White catamaran tree, Givotia rottleri formis

குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192

காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய;

1.

இது நெய்தல் நில வீடுகளின் முற்றத்தில், தாழையின் விழுதருகே வளரும்.

வலை உணங்கும் மணல் முன்றில்
வீழ் தாழை தாள் தாழ்ந்த
வெண்கூதாளத்து தண் பூ கோதையர் – பட் 83-85

வலைகிடந்து உலரும் மணலையுடைய முற்றத்தைக்கொண்ட இல்லங்களில்,
விழுதையுடைய தாழையின் அடியில் இருந்த
வெண்டாளியின் குளிர்ந்த பூவால் செய்த மாலையையுடையோர்,

2.

இது கார்காலத்தே மலரும். மலர்கள் உள்துளையுடையனவாக இருக்கும். மலைச்சாரலிலும் வளரும்.
கூட்டம்கூட்டமாக மலரும்.

கார் எதிர் தண் புனம் காணின் கை வளை
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த
வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர்
ஆர் கழல்பு உகுவ போல
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/4-8

கார்ப்பருவத்தை எதிர்கொண்ட குளிர்ந்த புனத்தைக் காணும்போது, கை வளையல்கள்
நீர் விளங்கும் மலைச் சாரலில் மொத்தமாக மலர்ந்த
வெண்கூதாளத்தின் அழகிய உள் துளையுடைய புதிய மலர்கள்
தம் காம்பிலிருந்து கழன்று உதிர்தலைப் போன்று
கழன்று வீழ்வன அல்ல என்பாரோ நம் தலைவர்?

4.

இதன் செடி புதர்போல இருக்கும்.

பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண்கூதாளத்து – அகம் 178/8,9

பசிய புதரிலுள்ள செறிந்த கிளைகளில் வெண்ணாரை இருந்தாலொத்த
வெள்ளிய கூதளஞ்செடியின் அசையும் கொத்திலுள்ள வளம்பொருந்திய முகை விரிந்த மலரினைப் பொருந்தி

தமிழ்ப்பேரகராதி இதனை ஒரு மரம் என்று கூறும். ஆனால் இலக்கியச் சான்றுகளைப் பார்க்கும்போது இது
ஒரு புதர்ச்செடி அல்லது கொடி (Ipomoea sepiaria) என்றே தோன்றுகிறது. அகநானூற்று உரையில் நாட்டாரும்
இதைச் செடி என்றே கொள்கிறார்.

பார்க்க : கூதளம்
மேல்


வெண்கை

(பெ) 1. வெறும் கை, வளையணியாத கை, hand without bangles
2. யானைத்தந்தம், tusk of an elephant

1

வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும் – பதி 29/6

வெறும் கையாய் இருக்கும் மகளிர் அந்த வெள்ளைப் பறவைகளை விரட்டுகின்ற

2

புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து – மலை 28

புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து,
வெண்கை யாப்பு – யானைக் கோட்டாற் செய்த யாப்பு – பொ.வே.சா. விளக்கம்

மேல்


வெண்ணி

(பெ) சோழநாட்டிலிருந்த ஓர் ஊர், an ancienttown in chOLa land.

இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய
வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள்
கண் ஆர் கண்ணி கரிகால்வளவன் – பொரு 146-148

இரு பெரிய மன்னர்களும் ஒரே களத்தில் பட்டழியும்படி,
வெண்ணி என்கிற ஊரில் பொருத அச்சந் தோன்றுகின்ற வலிமையையுடைய முயற்சியையும்,
கண்-நிறைந்த ஆத்தி மாலையினையும் உடைய கரிகாற்சோழனின்

கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை
ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ – நற் 390/3-5

வள்ளல்தன்மை உடைய கிள்ளிவளவனின் வெண்ணி என்னும் ஊரைச் சூழவுள்ள
வயல்களிலுள்ள வெள்ளாம்பலின் அழகான மடிப்புகளையுடைய தழையை
மெல்லியதான அகன்ற அல்குலில் அழகுண்டாக உடுத்திக்கொண்டு

மேல்


வெண்ணிப்பறந்தலை

(பெ) வெண்ணி என்ற இடத்திலுள்ள போர்க்களம்

கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலை
பொருது புண் நாணிய சேரலாதன் – அகம் 55/10,11

கரிகால்வளவனோடு வெண்ணிப்பறந்தலையில்
போரிட்டு (முதுகில்) காயமடைந்த சேரலாதன்

மேல்


வெண்ணிவாயில்

(பெ) சோழநாட்டிலிருந்த ஓர் ஊர், an ancienttown in chOLa land.
வெண்ணிப்பறந்தலையில் நடந்தது போலவே வெண்ணிவாயில் என்னும் ஊரிலும் போர் நடந்தது

காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால்
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில்
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் – அகம் 246/8-10

மிக்க கள் வளமுடைய வெண்ணிவாயில் என்னுமிடத்தே, பெரிய புகழினைக் கொண்ட கரிகால் வளவன்
சிறப்பு மிக்க பகையரசர் மாறுபட்டெழுந்த போரின்கண்

மேல்


வெண்ணெல்

(பெ) ஒருவகை மலைநெல். Mountain paddy, wild rice, Oryza mutica, Oryza sativa

ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி – மது 288

ஐவன நெல்லென்னும் வெள்ளிய நெல்லோடே பிணக்கங்கொண்டு வளரப்பட்டு
– நச்.உரை
– ஐவனமும் வெண்ணெல்லும் ஒன்றென்பது தோன்ற, நச். உரை எழுதியுள்ளார் – உ.வே.சா.விளக்கம்

ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து – கலி 43/4

ஐவனமாகிய வெண்ணெல்லைப் பாறையாகிய உரலிலே சொரிந்து,
– நச். உரை.

வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் – மலை 115

நன்றாக விளைந்தன ஐவன நெல்லும் வெண்ணெல்லும்
– நச்.உரை

நச்சினார்க்கினியர் இரண்டு இடங்களில் ஐவனமும் வெண்ணெல்லும் ஒன்று என்று கூறி,
மூன்றாவது இடத்தில் இரண்டும் வெவ்வேறானவை என்று கூறுகிறார்.

முன்றில் பலவின் படு சுளை மரீஇ
புன் தலை மந்தி தூர்ப்ப தந்தை
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி
ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு – நற் 373/1-4

வீட்டு முற்றத்தில் உள்ள பலாமரத்தின் பழுத்துள்ள சுளைகளைக் கையால் வளைத்து,
புல்லிய தலையைக் கொண்ட மந்தி உண்டபின் கொட்டைகளைக் கீழே உதிர்க்க, தந்தையின்
முகில் தவழும் பெரிய மலையைப் பாடியவளாய்க் குறமகள்
ஐவனம் என்னும் மலைநெல்லைக் குற்றும் நாட்டைச் சேர்ந்த தலைவனோடு

சங்க இலக்கியங்களில் ஐவன வெண்ணெல் என்று வரும் மேற்கண்ட நான்கு இடங்களும் குறிஞ்சி நிலத்தைக்
குறிப்பதால் வெண்ணெல் வகையில் மலையில் விளைவது ஐவன வெண்ணெல் எனப்பட்டது எனலாம்.
மலைநாட்டில் அல்லாது மருதநிலப்பகுதியிலும் இந்த வெண்ணெல் விளைந்தது.

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழிமின் – மலை 471-477

வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து,
சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா,
உறுமிக்கொண்டு(வரும்) ஓட்டத்தின் வலிமையோடு (உம்மேல்)விரைவாக வரலாம் என்பதைக் கவனத்திற்கொண்டு,
(குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்,
வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்,
காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின்
புதுப்புதுச் செல்வம் தரும் ஒரு கரையை வழியாகக்கொண்டு போவீராக

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழன பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் – நற் 350/1-3

வெண்ணெல் கதிர்களை அறுப்பவர்களின் தண்ணுமைப் பறையின் ஒலிக்கு வெருண்டு
பழனத்தில் உள்ள பலவான பறவைகள் பறந்தோட, வயல்வெளியில்
வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற

எனவே வெண்ணெல் மலைநாட்டில் மட்டுமன்றி, உள்நாட்டிலும் விளைந்தது எனக் கூறலாம்.

மேல்


வெண்பொன்

(பெ) வெள்ளி, சுக்கிரன், (silver) venus

ஏலா வெண்பொன் போகு_உறு_காலை – புறம் 389/4

வெள்ளியாகிய மீன் தெற்கின்கண் சென்று வறம்செய்யும்காலையாயினும்

மேல்


வெண்மணி

(பெ) ஒரு சங்ககால ஊர், an ancient city

கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில் – அகம் 211/13,14

கல்லாத எழினியின் பல்லைப் பறித்துவந்து பதித்த
வன்மை பொருந்திய கதவினையுடைய வெண்மணி என்னும் ஊரின் வாயிலிடத்தே

யானைகளை அகப்படுத்தும் வேட்டைக்கு எழினி என்பான் வாராமையால், சினங்கொண்ட சோழமன்னன்
மத்தி என்னும் படைத்தலைவனை ஏவ, அவன் சென்று அவ் வெழினியைப் போரிலே அகப்படுத்த், அவன்
பல்லைப் பறித்துவந்து வெண்மணி என்னும் ஊரினது வாயிற் கதவிலே பதித்தனன். மத்தி என்பான் கழார்
என்னும் ஊருக்கு உரியவன்.
வெண்ணிவாயில் போல வெண்மணிவாயில் என்பதும் ஊரின் பெயர் என்பர்.

மேல்


வெண்மறி

(பெ) வெள்ளாட்டுக்குட்டி, young of goat

குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
நரை முக ஊகமொடு உகளும் – புறம் 383/18,19

குறுகிய முலையை உண்டற்கு தாயைச் சுற்றித்திரியும் பாலுண்ணும் வெள்ளாட்டுக்குட்டி
வெளுத்த முகத்தையுடைய குரங்குக்குட்டியுடனே தாவும்

மேல்


வெதிர்

(பெ) மூங்கில், bamboo

இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 302

பெரிய மூங்கிலின் பசிய புதரினை மிக்க நெருப்பு சுட்டுவதக்க,

மேல்


வெதிரம்

(பெ) மூங்கில், பார்க்க : வெதிர்

வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1

வேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில் காற்றினால் மோதப்படும்போது எழும்பும் நரலும் ஓசை

மேல்


வெப்பர்

(பெ) வெம்மையான உணவு, Hot food

புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர்
ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை – புறம் 269/4,5

புதிய அகலிடத்தே கொள்ளப்பட்ட புலியின் கண்ணைப்போலும் நிறத்தையுடைய வெம்மையான நறவினை
ஒன்று அல்லது இரண்டு முறை இங்கே இருந்து உண்ட பின்பு

மேல்


வெப்பு

(பெ) 1. வெம்மை, கடுமை, severity
2. துன்பம், கெடுதி, Misfortune, calamity

1

துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை
கறுத்த தெவ்வர் கடி முனை அலற – பதி 39/3,4

போர்த்தொழிலின் முழுமையையும் கற்றறிந்த, கடுமையையுடைய தும்பை மாலையைச் சூடிய,
சினங்கொண்டு வந்த பகைவர்கள், அச்சந்தரும் போர்முனையில் அலறியோடும்படி
– போர்வீரரது வெம்மையைப் போர் மேல் ஏற்றி, வெப்புடைத் தும்பை என்று கூறினார் – ஔவை.சு.து.விளக்கம்
– வெம்மை – கடுமை

2

வேனில் அன்ன என் வெப்பு நீங்க

அரும் கலம் நல்கியோனே – புறம் 397/17,18

வேனிற்காலத்து வெம்மை போல் வறுமையால் எனக்குண்டான துன்பமாகிய வெம்மை நீங்குமாறு
பெறற்கரிய கலன்கள்பலவும் கொடுத்தருளினான்

மேல்


வெப்புள்

(பெ) வெம்மை, heat

வெப்புள் விளைந்த வேங்கை செம் சுவல் – புறம் 120/1

வெம்மை முதிர்ந்த வேங்கை மரத்தையுடைய சிவந்த மேட்டு நிலத்து

மேல்


வெம்பல்

(பெ) 1. வெதும்புதல், வெம்மையாதல், becoming very hot
2. வெம்மை, மிகுந்த வெப்பம், tropical heat

1

வெயில் வீற்றிருந்த வெம்பலை அரும் சுரம் – நற் 84/9

வெயில் மிகுந்து வெதுப்பும் வெம்மையையுடைய அரிய சுரத்தின்கண்
– வெம்பல், வெதும்புதல்; ஐ சாரியை – ஔவை.சு.து உரை, விளக்கம்

2

வெயில் வீற்றிருந்த வெம்பலை அரும் சுரம் – நற் 84/9

வெயில் நிலைபெற்றிருந்த வெம்மையுடைய செல்லுதற்கு அரிய காட்டுவழியில்
– வெம்பல் – வெம்மை, ஐ-சாரியை – பின்னத்தூரார் உரை, விளக்கம்

வெம்பலை அரும் சுரம் – ஐங் 325/3

வெப்பம் பொருந்திய அரிய சுரம்
– வெம்பல் – வெப்பம், ஐ – சாரியை – ஔவை.சு.து உரை, விளக்கம்

மேல்


வெம்பு

(வி) 1. மிகுதியான சூடாகு, be very hot
2. வாடு, fade, be dried with heat
3. வெம்மைதோன்று, enraged
4. மனம் வெதும்பு, be distressed, anguished, grieve

1

மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க – கலி 13/5

கற்றாழைகளும் வாடிப்போக, மலைகள் மிகுந்த வெம்மையாக, மந்திகள் சோர்ந்துபோக,

2

வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின் – கலி 10/4

வேரோடு மரம் வாடிப்போகுமாறு ஞாயிற்றின் விரிந்த கதிர்கள் சுடுதலால்

3.

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி – நற் 287/1

வானத்தைத் தடவும்படியான கோட்டையைப் பகை வெம்மை தோன்ற முற்றுகையிட்டு
– ஔவை.சு.து.உரை

4.

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி – நற் 287/1

விசும்பிலே நீண்டுயர்ந்த மதிலை உள்ளிருப்பவர் நடுங்கும்படி முற்றுகைசெய்து
– பின்னத்தூரார் உரை

மேல்


வெய்

(பெ) வெய்து, துக்கம், Sorrow, distress

முத்து உறழ் மணல் எக்கர் அளித்த_கால் முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள்
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ – கலி 136/5-8

முத்துப்போன்ற வெண்மணலில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சூதாட்டத்தில் முதல் உருட்டில்
பத்து எண்ணிக்கையைப் பெற்றவன் மனத்தைப் போல் மகிழ்ந்து சிறந்தவள்
அவ்வாறு அன்புசெய்வதிலிருந்து நீ விலகிப்போக, தன் அழகெல்லாம் வாடிப்போய், அந்த உருட்டில்
சிறிய எண்ணிக்கையைப் பெற்றுத் தோற்றவனைப் போலக் கொடும் துயரில் வருந்தமாட்டாளோ?

வெய் துயர் உழப்பவோ

– வெய்தாகிய வருத்தத்திலேஅழுந்தவோ? – நச்.உரை

வெய் துயர் உழப்பவோ

– வெய்யது ஆகிய வருத்தத்தில் அழுந்திடவோ! – அ.மாணிக்கம் உரை

வெய் துயர் உழப்பவோ

– is it to cause her great distress, vaidehi Herbert translation

மேல்


வெய்து

(பெ) 1. வெம்மை, வெப்பம், heat
2. தீங்கு, துன்பம், sorrow, distress
3. சூடானது, that which is hot

1

காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை
ஊழின்_ஊழின் வாய் வெய்து ஒற்றி – பொரு 105,106

இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை
மாற்றி மாற்றி வாயின் (இடத்திலும் வலத்திலும்)(அத்தசைகளின்)வெப்பத்தை ஒற்றியெடுத்து

2

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி
வெய்து இடை உறாஅது எய்தி முன்னர் – அகம் 203/13,14

விலங்குகள் செல்லும் நெறிகள் பின்னிக்கிடக்கும் மலையடியிற் சிறிய நெறிகளில்
தீங்கு இடையே உண்டாகாதவாறு அவர்கட்கு முன்னரே சென்று சேர்ந்து

3.

நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/1,2

என் காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும்
நெருப்பு வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது

மேல்


வெய்துயிர்

(வி) பெருமூச்சுவிடு, heave a sigh

இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை
பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 403-405

இனிய உயிருக்கு அஞ்சி, இன்னாததாகப் பெருமூச்செறிந்து,
ஏங்குபவராயிருந்து, அப்படை சென்ற பின்னர்,
பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும்
– பொ.வே.சோ.உரை

மேல்


வெய்துறு

(வி) 1. வருத்தமுறு, be distressed
2. பெருமூச்சுவிடு, heave a sigh
3. வெம்மையுறு, be heated

1

நிணம் புரி முது நரி
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்று
தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/5-8

நிணத்தை விரும்பும் கிழட்டு நரி
புதிய ஊனை நிறைய உண்டு, நீர் வேட்கையால் வருத்தமுற்று
கானல்நீர் தெரியும் வறண்ட புலத்தில் தேடியலைந்து, நீரை விரும்பி,
பிணத்தை மூடியுள்ள கற்குவியலில் நிழலான ஒதுங்குமிடத்தைப் பெறாமல்

2

கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு
செம் கோல் பதவின் வார் குரல் கறிக்கும்
மட கண் மரையா நோக்கி வெய்துற்று
புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் – குறு 363/1-4

கண்ணிபோல் வளைந்த கொம்பினையுடைய தலைமைப் பண்புள்ள நல்ல காளை,
சிவந்த தண்டையுடைய அறுகம்புல்லின் நீண்ட கதிரைக் கொறித்துமேயும்
மடப்பமுடைய கண்களையுடைய மரையா என்னும் காட்டுப்பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு
புல்லிய அடியினைக் கொண்ட உகாய் மரத்தின் வரிவரியான நிழலில் தங்கும்

3.

பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்துற்று
வலம் இன்று அம்ம காலையது பண்பு என – பதி 26/6,7

காலத்தில் பெய்யும் மழை காக்காமல் போனதினால் வெப்பம் மிகுந்து
நலமற்றுப் போனது காலத்தின் பண்பு என்று

மேல்


வெய்ய

1. (வி.அ) 1. வெப்பமாக, hotly
– 2. (பெ.அ) 1. வெப்பமான, hot
2. விரும்பத்தக்க, desirable
– 3. (பெ) 1. வெப்பமானது, that which is hot
2. கொடியது, that which is fierce, cruel
3 .விரும்பத்தக்கது, that which is desirable
– 4. (வி.மு) 1. பெரிதாயுள்ளது, (it is)very big
2. கொடிதானவை (they are) very fierce / cruel

1.1

கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா – அகம் 224/2,3

கொல்லன்
வலித்து இழுக்கும் துருத்தியினைப் போல வெப்பமாகப் பெருமுச்சுவிட்டு

வெய்ய உயிர்க்கும் சாயல்
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே – நற் 29/10,11

வெம்மையாக உயிர்க்கினற மென்மையையும்
கரிய ஈரிய கூந்தலையும் பெரிய மடப்பத்தையுமுடைய தகுதிப்பாடுடைய என் புதல்வி

2.1

வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ – அகம் 55/8,9

தீயில் வேவது போன்ற வெம்மையான நெஞ்சமுடன்
கண்ணைமூடாமல் கனவு காண்கிறேன்;

2.2

வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும் – பரி 10/102

விரும்பத்தக்க படகுகளில் விரைகின்ற ஆற்றுநீரில் ஓய்ந்திருப்போர் சிலர்;

3.1

வேம்பின் பைம் காய் என் தோழி தரினே
தேம் பூம் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர்
தைஇ திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே – குறு 196

வேப்பமரத்தின் பசிய காயை என் தோழி தரும்போது
இனிப்பான நல்ல வெல்லக்கட்டி என்று சொன்னீர்; இப்பொழுதோ,
பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை
தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும்
இவை வெப்பமுடையன, மேலும் உவர்ப்பன என்று கூறுகின்றீர்;
தலைவனே! அப்படி ஆகிவிட்டது உம் அன்பின் தன்மை.

3.2

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தட மென் தோளே – பட் 299-301

திருமாவளவவன் பகைவரைக் கொல்லுதற்கு உயர்த்தி ஓங்கிய
வேலினும் கொடியவாயிருந்தன, (தலைவியைப் பிரிந்து செல்லும் வழியிலுள்ள)காடு, அவன்
செங்கோலினும் குளிர்ந்தன (தலைவியின்)பெரிய மெல்லிய தோள்கள்.

3.3.

அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர் – குறு 277/4

அற்சிரக் காலத்திலே விரும்பத்தக்கதாகிய வெப்பத்தையுடைய நீரை

4.1

என் ஐ மார்பில் புண்ணும் வெய்ய – புறம் 280/1

என் தலைவனுடைய மார்பிலுண்டான புண்களும் பெரியவாயுள்ளன

4.2

மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம்
வெய்ய மன்ற – அகம் 325/10,11

மலையின் அழகு ஒழிந்த செறிந்த காடாகிய பாலை வழிகள்
ஒருதலையாகக் கொடியன

மேல்


வெய்யள்

(வி.மு) விருப்பமுடையவள், She has the liking

பன் மணல் சேர்ப்பனை
யானும் காதலென் யாயும் நனி வெய்யள்

குறு 51/3,4

நிறைந்த மணலையுடைய கடற்கரைத்தலைவனை
நானும் காதல்கொண்டேன்; நம் தாயும் மிகுந்த விருப்புடையவள்;

மேல்


வெய்யன்

(வி.மு) விருப்பமுடையவன், He has the liking

புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின் – கலி 75/10

புதிய பரத்தைகளை சேர்த்துக்கொள்வதில் விருப்பமுடையவனாயின்,

மேல்


வெய்யார்

(பெ) விரும்புபவர், those who like (you)

வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக – கலி 78/25

உன்னை விரும்புபவரும், நீ விரும்புவரும் ஆகிய பரத்தையர் வெறுத்து மனம் மாறும்படியாக!

மேல்


வெய்யை

(வி.மு) 1. விரும்புதலுடையை, (நீ) விரும்புதலுடையவள், (you) have the liking
2. வெம்மையுடையை, (you) have the fervour

1

வெய்யை போல முயங்குதி – நற் 260/5

என்மேல் மிகவும் விருப்பமுள்ளவன் போல என்னைத் தழுவவருகிறாய்,

நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின்
அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் – கலி 107/20,21

உன்னை அவன் விரும்புகிறவன், அவனை விரும்புகிறவள் நீ, இப்படியிருக்க,
அன்னையைப்பற்றி நொந்துகொள்ளத் தேவையில்லை!

2

வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை – பரி 13/57

வேள்வியில் விருப்பமும், வீரத்தில் வெம்மையும் கொண்டிருக்கிறாய்;

மேல்


வெரிந்

(பெ) முதுகு, back

யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல்
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர்
ஈத்து இலை – பெரும் 86-88

ஆற்றின் அறலை ஒக்கும் முதுகினை உடையதும், கொழுவிய மடலினையுடையதும் ஆகிய,
வேலின் முனையைப் போன்ற கூர்மையான முனையைக்கொண்ட, நெடிய மேட்டில் உள்ள
ஈந்தினுடைய இலை

செ வெரிந் உறழும் கொழும் கடை மழை கண்
தளிர் ஏர் மேனி மாஅயோயே – அகம் 42/3,4

சிவந்த பின்புறத்தைப் போன்ற வளமையான, குளிர்ந்த கடைக்கண்ணையும்
தளிரைப் போன்ற அழகிய மேனியையும் உடைய மாநிறத்தவளே!

வேதின வெரிநின் ஓதி முது போத்து – குறு 140/1

பன்னரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய ஆண் ஓந்தியானது

உயவல் யானை வெரிநு சென்று அன்ன
கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி – அகம் 65/14,15

பட்டினியால் மெலிந்து வருந்திய யானையின்முதுகில் நடந்து செல்வது போலும்
பாறையில் ஏறியும் இறங்கியும் செல்லும் மூங்கில்கள் சாய்ந்த சிறு நெறிகளியுடைய

மேல்


வெரீஇ

(வி.எ) வெருண்டு – சொல்லிசை அளபெடை, being scared

மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ
கோழி வய பெடை இரிய – திரு 310,311

மடப்பத்தினையுடைய நடையினையும் உடைய மயில்கள் பலவற்றோடே அஞ்சிக்,
கோழியின் வலிமையுடைய பேடைகள் கெட்டோட,

மேல்


வெரீஇய

(வி.எ) வெருண்ட – சொல்லிசை அளபெடை, (that is) scared

சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 406

வில்லின் ஓசைக்குப் பயந்த சிவந்த கண்களையுடைய காட்டெருது

மேல்


வெரு

(பெ) அச்சம், fear, dread

வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/2

உனக்கு வேண்டாதவரின் நெஞ்சம் நடுங்க அச்சந்தரும் கொடுமையும்,

இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர் – அகம் 288/10,11

குறுகிய நெறியில் ஒலிக்கும் இடையிட்டு விளங்கும் அருவியானது
அரிய மலையினின்று வந்து விழும் இடமாகிய அச்சந்தோன்றும் சிறுதூறுகளிலிருக்கும்

இந்த வெரு என்ற சொல் எப்போதும் வருதல் என்ற சொல்லுடனே சேர்ந்தே இலக்கியங்களில்
பயின்று வரக் காண்கிறோம்

பார்க்க : வெருவரு(தல்)

மேல்


வெருக்கு

(பெ) வெருகினுடைய, wild cat’s
வெருகு + பல் = வெருக்குப்பல், வெருகு +அடி = வெருக்கடி, வெருகு+விடை = வெருக்கு விடை
மாடு + கொம்பு = மாட்டுக்கொம்பு; ஆடு + வால் = ஆட்டு வால், போல புணர்ச்சி விதியில் வெருகு,
வெருக்கு ஆனது.

வெருக்கு பல் உருவின் முல்லையொடு கஞலி – குறு 240/3

காட்டுப்பூனையின் பல் போன்ற தோற்றமுடைய முல்லைப்பூவுடன் கலக்கும்படியாக

வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை – அகம் 267/6

பூனையின் அடியினை யொத்த குவிந்த அரும்பினையுடைய இருப்பை

வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் – புறம் 324/1-3

காட்டுப்பூனையின் ஆணைப்போல வெருண்ட பார்வையினையும் பெரிய தலையினையும்
பறவைகளின் ஊனைத் தின்பதனால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வாயினையுமுடைய
வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின் தம்மில் ஒருவரையொருவர் விரும்பிநட்புக்கொள்ளும் சிறுவர்கள்

மேல்


வெருகு

(பெ) காட்டுப்பூனை, wild cat

எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை – அகம் 297/13,14

ஓவியத்து எழுதினாற் போன்று மெலிந்து நீண்ட பூனையின்
பூளைப் பூவினை யொத்த விளங்குகின்ற மயிரினையுடைய குட்டிகள்

மேல்


வெருவரு

(தல்) (வி) – அச்சம் உண்டாகு(தல்), arise fear

வென் வேல் பொறையன் என்றலின் வெருவர
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/3,4

வெற்றியுடைய வேலினைக் கொண்ட பொறையன் என்று எல்லாரும் சொல்லுவதால், உள்ளம் அஞ்சும்படியான
கடுமை மிகுந்த ஆண்மகன் என்று கருதிக்கொண்டிருந்தேன் நான்

வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 172

அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை

மேல்


வெருவு

(வி) அஞ்சு, be afraid of, be frightened

கரும் கால் வரகின்
அரி கால் கருப்பை அலைக்கும் பூழின்
அங்கண் குறு முயல் வெருவ – புறம் 384/3-5

கரிய தாளையுடைய வரகின்
அரிகாலின்கண் வாழும் எலியப் பிடிப்பதற்கு முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆரவாரத்தால்
அவ்விடத்தே வாழும் குறுமுயல் அஞ்சியோட

மேல்


வெருவுறு

(வி) அச்சமடை, get fright

கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற
செய் தொழில் கொள்ளாது மதி செத்து சிதைதர – பரி 10/46-48

கையால் புனையப்பட்ட பாயும் வேங்கைப் புலியைக் கண்டு, அச்சங்கொண்டு,
மை போன்ற கரிய அந்த இளம் பெண்யானை, அந்த இளைய பெண்கள் நடுக்கமெய்த
பாகரின் அடக்கும் தொழிலுக்கும் அடங்காது, தன் மதி கெட்டுச் சிதைந்து ஓட

மேல்


வெருள்

(வி) அஞ்சு, மிரளு, be scared, get frightened

வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய்
வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் – புறம் 324/1-3

காட்டுப்பூனையின் ஆணைப்போல வெருண்ட பார்வையினையும் பெரிய தலையினையும்
பறவைகளின் ஊனைத் தின்பதனால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வாயினையுமுடைய
வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின் தம்மில் ஒருவரையொருவர் விரும்பிநட்புக்கொள்ளும் சிறுவர்கள்

ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை
கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து
வெருள் ஏறு பயிரும் ஆங்கண் – அகம் 121/12-14

நெறியிலே செல்லும் சாத்தரது சோறு பொதிந்த வெள்ளிய பனையோலையாலான குடையினை
மிக்க விசையினையுடைய சூறாவளி தூக்கலின் எழுந்த ஒலியினை
தனது பிணையினது குரலென எண்ணி
அஞ்சிய மானேறு அப்பிணையை அழைத்திடும் இடங்களையுடைய

மேல்


வெரூஉ

1. (வி) வெருவு என்பதன் சொல்லிசை அளபெடை, அஞ்சு, be afraid of, be frightened
– 2. (பெ) வெருவு என்பதன் சொல்லிசை அளபெடை – அச்சம், fright –

1

உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி
கரும் கால் வெண்_குருகு வெரூஉம் – நற் 4/7-11

உப்பு வணிகர்
வெள்ளைக்கல்லான உப்பின் விலையைக் கூவிக்கூறிச்செல்வதால்
ஆநிரைகளை விலக்கிப் போகும் நீண்ட வரிசையான வண்டிகள்
மணலைத் தேய்த்து எழுப்பும் பேரொலியைக் கேட்டு, வயல்வெளிகளிலுள்ள
கரிய காலையுடைய வெள்ளை நாரைகள் அஞ்சி நீங்கும்

2

வெரூஉ பறை நுவலும் பரூஉ பெரும் தட கை
வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 171,172

அச்சத்தைப் பறைகள் சாற்றுவதற்குக் காரணமாகிய, பருத்த பெரிய வளைவினையுடைய கையினையும்,
அச்சம் தரும் ஓட்டத்தையும், சினத்தையும் உடைய யானைகளை
வெரூஉ பறை நுவலும் = பறை வெரூஉ நுவலும் – பறை எல்லார்க்கும் அச்சத்தைச் சாற்றுவதற்குக் காரணமாகிய
– நச். – உரை

மேல்


வெல்

(வி) வெற்றியடை, conquer, triumph, win

வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப – முல் 89-92

வென்று, பகையரசரின்
(தான்)விரும்பும் நிலங்களைக் கைக்கொண்ட, திரளுகின்ற பெரிய படையோடே,
வெற்றியால், வென்றெடுக்கின்ற கொடியை உயர்த்தி, வலப்பக்கம் உயர்த்தி
கொம்பும் சங்கும் முழங்க

மேல்


வெலீஇய

(வி.எ) வெல்ல – சொல்லிசை அளபெடை, to conquer

எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் – முல் 57

(திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே

மேல்


வெலீஇயர்

(வி.வி.மு) வெல்லட்டும் – சொல்லிசை அளபெடை, may (your spear) be victorious

விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே – புறம் 202/17

யான் உன்னை விடைகொண்டேன், வெல்வதாக நின் வேல்

மேல்


வெலீஇயோன்

(பெ) வெல்வித்தவன் – சொல்லிசை அளபெடை, the one who caused victory

குன்றத்து அன்ன களிறு பெயர
கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே
வெலீஇயோன் இவன் என – புறம் 125/9-11

மலை போலும் யானை பட
எதிர்நின்று கொன்று வென்றோனும், உன்னையே மகிழ்ந்து சொல்லும்
நம்மை வெல்வித்தவன் இவன் என

– The victor who slayed mountain-like elephants
says, that you gave him victory – Vaidehi Herbert

மேல்


வெவ்

(பெ.அ) 1. விரும்பப்படும், liked
2. வெம்மையையுடைய, hot
3. கொடிய, harsh, cruel
4. மிகுந்த, very

1

வெவ்_வெம்_செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு – பொரு 136

(எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று

2

ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் – குறு 58/3

சூரியன் காயும் வெம்மையுடைய பாறையின் ஒரு பக்கத்தில்

3.

வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும் – அகம் 50/3

கொடிய பேச்சைக்கொண்ட பெண்டிர் பழிசொல்லித் திரிந்தாலும்

4.

வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெம் களரி – அகம் 293/5

வெய்யில் விளங்கி அசையும் மிக்க வெப்பத்தையுடைய காட்டிடத்தே
– நாட்டார் உரை

மேல்


வெவ்வர்

(பெ) 1. வெப்பம், heat
2. விரும்பப்படுவோர், நட்புடையோர், Those who are liked, friends

1

வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/20,21

போர்வெம்மையின் மிகுதி பெருக, பகைவரை,
மிளகினை இடிக்கும் உலக்கையைப்போல் அவரின் பெரிய தலைகளைத் தோமரத்தால் இடித்து அழிக்க,
– நன்மை நன்னர் என வருதல் போல, வெம்மை வெவ்வர் என்று வந்தது என்பார் பழையவுரைகாரர். வெம்மை
என்னும் பண்பிற்கு வெவ்வர் என்பதும் ஒரு வாய்பாடு என்பர். போர்க்குரிய மறத்தீயின் வெம்மை மிக
என்பது அவர் கருத்தாதலை அறிக – ஔவை.சு.து.விளக்கம்.

2

வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/20,21

நட்பரசருடைய ஆக்கம் பெருகவும், பகையரசருடைய
பெரிய தலைகளை உலக்கையால் இடிக்கப்பட்ட மிளகு போல இடித்து
– ஔவை.சு.து.உரை
– வேண்டற்பொருட்டாக வெம்மை என்னும் பண்படியாகப் பிறந்த இவ் வெவ்வர் என்னும் பெயர், வெய்யர் என
வரற்பாலது, எதுகை நோக்கி வெவ்வரென வந்தது என்று கோடல் சீரிது.

மேல்


வெவ்வெம்செல்வன்

(பெ) ஞாயிறு, sun

வெவ்_வெம்_செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு – பொரு 136

(எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று

மேல்


வெள்

1. (பெ.அ) 1. வெண்மையான, white
2. வெண்மையாக ஒளிருகின்ற, bright, shining
3. வென்றிதரும், winning
– 2. (பெ) வெண்மை, whiteness

1.1

இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு – மது 117

பெரிய கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு

1.2

நிலவின் அன்ன வெள் வேல் பாடினி – பதி 61/16

நிலவின் ஒளியைப் போல வெள்ளொளி செய்யும் நின் வேற்படையைப் புகழ்ந்துபாடும் பாடினி

1.3

வயக்கு_உறு வெள் வேலவன் புணர்ந்து செலவே – ஐங் 379/4

விளக்கம் மிக்க வென்றிதரும் வேலையுடையவனோடு புணர்ந்துடன் சேறல்
– ஔவை.சு.து.உரை

2

ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈட்த யானையின் கரவின்று
வான மீன் பல பூப்பின் ஆனாது
ஒரு வழி கரு வழி இன்றி
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/5-9

ஆயாகிய அண்டிரன், கொல்லும் போரைச் செய்யும் தலைவன்
இரப்போர்க்குக் கொடுக்கப்பட்ட யானைத்தொகையைப் போல, மேகம் மறைத்தலின்றி
வானம் பல மீன்களையும் பூக்குமாயின், அமையாது
ஓரிடத்தும் கரிய இடம் இல்லையாக
பெருக வெண்மையைச் செய்யுமாயின் அம் மீன்தொகை அதனுக்குத் தப்பாது

மேல்


வெள்யாடு

(பெ) வெள்ளாடு, goat

வெள்ளை வெள்யாட்டு செச்சை போல – புறம் 286/1

வெள்ளிய நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்களைப் போல

மேல்


வெள்ளம்

(பெ) 1. நீர்ப்பெருக்கு, flood
2. மிகுதி, abundance, plentitude
3. ஒரு பேரெண், a large number

1

புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/52,53

பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்
வெள்ள நீர்ப் பெருக்கினுள் மேலும் மேலும் செலுத்தி நீரைக் கலக்குவோரும்,

2

வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த – அகம் 346/21

மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர்செய வந்து தங்கியிருந்த

3.

ஆயிர வெள்ள ஊழி
வாழி ஆத வாழிய பலவே – பதி 63/20,21

ஆயிரம் வெள்ளம் என்ற எண்ணளவும் சேர்ந்த ஊழிகள் பல
வாழ்க! வாழியாதனே! வாழ்க!

மேல்


வெள்ளாங்குருகு

(பெ) ஒரு நீர்ப்பறவை, a water bird, little egret
வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும்,
முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது. இது “உள்ளான் குருகு’ எனவும் வழங்கப்படும்.

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை – ஐங் 151/1,2

வெள்ளாங்குருகின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை

சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே
துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே – நற் 70/1-3

சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!
சலவைத்துறையில் மிதக்கும் வெள்ளை ஆடையின் தூய மடிப்பு போன்ற
நிறம் விளங்கிய சிறகினை உடைய சிறிய வெள்ளைக் குருகே!

மேல்


வெள்ளாம்பல்

(பெ) வெள்ளை ஆம்பல், white Indian water lily

அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை – குறு 293/5

நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை

மேல்


வெள்ளி

(பெ) 1. வெண்ணிற உலோகம், silver
2. சுக்கிரன், the planet Venus
3. வெண்மை, whiteness

1

வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 110

வெள்ளியைப் போன்ற ஒளிரும் சாந்தை வாரிப்பூசி

2

வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் – பொரு 72

வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே

3.

வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் – நெடு 36

வெண்சங்கு வளையல்களையும், புடைத்த இறையினை உடைய மூங்கில்(போன்ற) தோளினையும்,

மேல்


வெள்ளில்

(பெ) 1. விளாம்பழம், woodapple fruit
2. பாடை, bier

1

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா – திரு 37

விளவின் சிறிய தளிரைக் கிள்ளித் தெறித்துக்கொண்டு,

வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை – நற் 24/5

விளாம்பழங்களையே உணவாகக் கொண்ட வேற்று நாட்டு அரிய வழியில்

மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் – புறம் 181/1

மன்றத்தின்கண்ணே நிற்கப்பட்ட விளாவினது மனையிடத்து வீழ்ந்த விளாம்பழத்தை

2

கள்ளி போகிய களரி மருங்கில்
வெள்ளில் நிறுத்த பின்றை – புறம் 360/16,17

கள்ளிகள் ஓங்கியுள்ள பிணம்சுடு களத்தின்கண்
பாடையை நிறுத்திய பின்பு

மேல்


வெள்ளிவீதி

(பெ) ஒரு சங்ககாலப் புலவர், a poetess of sangam period
வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால்
பாடப்பட்டவை.
வெள்ளிவீதியார் பாடல்கள் : நற்றிணை 70, 335, 348, குறுந்தொகை 27, 44, 58, 130, 146, 149, 169, 386
அகநானூறு 45, 362
வெள்ளிவீதியார் கவிதைகளில் ஒரே ஒரு உணர்ச்சிதான் ஆழமாக வெளிப்படுகிறது.
காதலன் அல்லது தலைவன் கிடையாமை அடிப்படையில் பிறந்த ஆழ்ந்த சோகம்.

ஔவையார் வெள்ளிவீதியைப் பற்றி அகம் 147-இல் குறிப்பிடுகிறார்.
அப்பாடலில், தலைவன் பொருள்செயப் பிரியப்போவதைத் தோழி தலைவியிடம் சொல்கிறாள். தலைவி தானும்
தலைவனுடன் செல்ல விரும்புவதாகக் குறிப்பிடுகிறாள். அப்போது வெள்ளிவீதி போலச் செல்ல விரும்புகிறேன்
என்கிறாள்.

ஔவையார் குறிப்பிலிருந்து வெள்ளிவீதியார் பொருளீட்டச் சென்ற தன் கணவனுடன் தானும் சென்றார்
எனத் தெரியவருகிறது.

பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்
நெறி படு கவலை நிரம்பா நீள் இடை
வெள்ளிவீதியை போல நன்றும்
செலவு அயர்ந்திசினால் – அகம் 147/6-10

புள்ளிகள் விளங்கும் பிளந்த வாயையுடைய ஆண்புலி
அறல்பட்ட கொம்பினையுடைய ஆண் மானினது குரலினை உற்றுக்கேட்கும்
கவர்த்த நெறிகள்பொருந்திய செல்லத்தொலையாத நீண்ட காட்டிலே
தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதி என்பாளைப் போன்று
செல்லுதலை மிகவும் விரும்பியுள்ளாய்.

மேல்


வெள்ளெலி

(பெ) வெள்ளை எலி, Hamster – Cricetinae

குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்
புன் தாள் வெள்ளெலி மோவாய் ஏற்றை – அகம் 133/1,2

குன்றிமணி போன்ற கண்களையும், நல்ல நிறம் வாய்ந்த மயிரையும்
மெல்லிய கால்களையும் தாடியினையுமுடைய ஆண் வெள்ளெலி

மேல்


வெள்ளென

(வி.அ) 1. தெளிவாக, clearly
2. வெளிச்சம் இருக்கும்போதே, while there is still light

1

மீளி முன்பின் ஆளி போல
உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென
நோவாதோன்_வயின் திரங்கி
வாயா வன் கனிக்கு அலமருவோரே – புறம் 207/8-11

மறம் பொருந்திய வலியையுடைய யாளியை ஒப்ப
உள்ளம் உள்ளே புழுங்கித் தணியாது, யாவர்க்கும் தெரிய
தம்மைக்கண்டு இரங்காதவனிடத்தே நின்று திரங்கி
நமக்குக் கிடைக்காத கனியாத வலிய பழமாகிய பரிசிலின் பொருட்டு சுழல்வோர் யார்தாம்.

2

இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது
கொள் என விடுவை ஆயின் வெள்ளென
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்
ஈண்டு நீடு விளங்கு நீ எய்திய புகழே – புறம் 359/15-18

பொன் இழை அணிந்த நெடிய தேர்களை இரவலர்க்குக் குறைவறக்
கொடுத்துச் செல்லவிடுவாயாயின், உன் செல்வம் இருக்கும்போதே
நீ மேலுலகத்துக்குச் சென்ற பின்னரும்
இவ்வுலகில் நெடிது நிலைநிற்கும் நின் ஈகையால் உளதாகும் புகழ்

மேல்


வெள்ளை

(பெ) 1. வெண்மை, whiteness
2. வெள்ளாடு, goat
3. வெள்ளைநிறக்காளை, white bull
4. பலராமன், Balarama

1

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி – பட் 29

வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி

2

கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் – பெரும் 153

வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்

3.

செவிமறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை
கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனை சாடி – கலி 101/27,28

காதில் மச்சம் உள்ள, நேர்ந்துவிட்ட, மின்னும் நுண்ணிய சிவந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளைக்காளையின்
சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்த இடையனைத் துவட்டி

4.

செம் கண் காரி கரும் கண் வெள்ளை
பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் – பரி 3/81,82

சிவந்த கண்ணும் கரிய மேனியும் உடைய வாசுதேவனே! கரிய கண்ணும் வெள்ளை உடம்பும் உடைய பலதேவனே!
பொன்னிறக் கண்ணையும் பச்சைமேனியும் உடைய பிரத்தியும்நனே! பசிய கண்ணையுடைய திருமாலே!

மேல்


வெள்ளோத்திரம்

(பெ) வெள்ளிலோத்திரம், வெள்ளைப்பூ பூக்கும் மர வகை, a tree with white flowers
Lodhra, Symplocos Racemosa

மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்
அரும் சுரம் செல்வோர் சென்னி கூட்டும் – ஐங் 301/1,2

பெரிதான வெள்ளோத்திர மரத்தின் கறைபடியாத வெண்மையான பூங்கொத்துகள்
கடத்தற்கரிய பாலை வழியில் செல்வோர் தம் தலையுச்சியில் அணிந்துகொள்ளுகின்ற

சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடலைத்தவிர , வேறு இடங்களில் இப் பூ குறிப்பிடப்படவில்லை.
99 வகைப் பூக்களைக் குறிப்பிடும் குறிஞ்சிப்பாட்டிலும் இந்தப்பூ இடம்பெறவில்லை.
இந்த ஐங்குறுநூற்றுப்பாடல் பாலைத் திணைக்குரியது. எனவே, இம் மலர் பாலை நில மலர் எனலாம். இப்
பாடலிலும், சுரம் செல்வோர் இதனைத் தம் தலையில் அணிந்துகோல்வர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சுரம்
என்பது பாலை நில வழி. பாலயின் வெப்பத்தைத் தணிக்க இப்பூவைத் தலையில் அணிந்துகொள்வர் போலும்.
எனவே, இதனைக் குளிர்ச்சியுள்ள ஒரு பூ எனலாம். மால் வெள்ளோத்திரம் என இந்த மரம் குறிப்பிடப்படுவதால்,
இந்த மரம் மிகப் பெரியதாக வளரக்கூடியது என அறியலாம். இணர் என்று இங்கு குறிப்பிடப்படுவதால், இது
கொத்துக்கொத்தாகப் பூக்கும் என்றும் அறியலாம். வால் இணர் என்றும் மை இல் வால் இணர் என்றும் இது
குறிப்பிடப்படுவதால், இம்மலர் மிகத் தூய்மையான வெண்ணிறமுடையது என அறியலாம்.

சீவக சிந்தாமணியில் இந்த மலர் இரு இடங்களில் வெள்ளிலோத்திரம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மலர் மணமுள்ளது. இந்த மலர் காய்ந்து சருகானாலும் மணக்குமாம். இச்சருகைப் பொருக்கு’ என்பர்.
இப்பொருக்கை அரைத்துச் சாந்தாக்கிக் காந்தருவதத்தைக்குக் குவளை இதழின் தடிப்பு அளவில் பூசினார்களாம்.
பொருக்கு என்பதற்கு மரப்பட்டை என்றும் பொருள். எனவே இந்த மரத்தின் சன்னமான பட்டையை அரைத்துப்
பூசினார்கள் என்றுங்கொள்ளலாம்..

வாச நெய் வண்டு மூச மாந்தளிர் விரல்கள் சேப்ப
பூசி வெள்ளிலோத்திரத்தின் பூம் பொருக்கு அரைத்த சாந்தின்
காசு அறு குவளை காமர் அக இதழ் பயில மட்டித்து
ஆசு அற திமிர்ந்து மாதர் அணி நலம் திகழ்வித்தாரே – சிந்தா : 3 622

இந்தப்பூவை மாலையாகத் தொடுத்தும் அணிந்தனர் என்று சிந்தாமணி குறிப்பிடுகிறது.

வெள்ளிலோத்திரம் விளங்கும் வெண் மலர்
கள் செய் மாலையார் கண் கொளா துகில்
அள்ளி ஏந்திய அரத்த அல்குலார்
ஒள் எரி மணி உருவ பூணினார் – சிந்தா 13 :2685

இந்த மரத்தின் பல பாகங்கள், குறிப்பாக, இதன் மரப்பட்டை சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு
இது வெள்ளிலாதி, காயவிலை, தில்லகம் என்றும் அழைக்கப்படுகிறது

மேல்


வெளிது

(பெ) வெள்ளையானது, that which is white

வேல் கை கொடுத்து வெளிது விரித்து உடீஇ – புறம் 279/8

வேலைக் கையிலே தந்து, வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து அரையில் உடுத்தி

மேல்


வெளிய

(வி.அ) வெள்ளிதாக, being white in colour

ஆம்பல்
சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன
வெளிய விரியும் துறைவ – நற் 345/3-5

ஆம்பலின் மொட்டுக்கள்
சிறிய வெண்ணிறமுள்ள கடற்காக்கைகள் கொட்டாவி விட்டது போன்று
வெள்ளையாக விரிகின்ற துறையைச் சேர்ந்தவனே!

மேல்


வெளியது

(பெ) வெள்ளையானது, that which is white பார்க்க: வெளிது

நிலம் தின சிதைந்த சிதாஅர் களைந்து
வெளியது உடீஇ என் பசி களைந்தோனே – புறம் 385/6,7

மண் தின்னும்படி பழைதாய்க் கிழிந்திருந்த உடையை நீக்கி
வெள்ளிய ஆடை தந்து உடுப்பித்து என் பசித் துன்பத்தைப் போக்கினான்

மேல்


வெளியம்

(பெ) ஒரு சங்ககால ஊர், a city in sangam period
இந்த ஊரை வானவரம்பன் என்னும் மன்னன் ஆண்டான். வானவரம்பன் என்ப்து சேர மன்னர்களின்
சிறப்புப்பெயர்.

வானவரம்பன் வெளியத்து அன்ன நம்
மாண் நலம் தம்மொடு கொண்டனர் – அகம் 359/6,7

வானவரம்பனது வெளியம் எனுமிடத்தை ஒத்த நமது
சிறந்த அழகினைத் தம்மிடன் கொண்டுசென்றனர்.

மேல்


வெளியன்

(பெ) சங்ககாலச் சிற்றரசர் பெயர், names of chieftains of sangam period
வெளியன் என்ற பெயரைக் கொண்ட நான்கு பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றுள் இரண்டு பாடல்கள்
தித்தன் வெளியன் என்பானைப் பற்றியவை. எனவே வெளியன் என்ற பெயரின் மூன்று அரசர்கள்
இருந்திருக்கிறார்களென அறிகிறோம்.

1.

வெளியன் என்பானது மகன் தித்தன், வெளியன் தித்தன் எனப்படுகிறான்.
இவன் வீரை என்னும் ஊரை ஆண்டான்.

வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண் கோடு இயம்ப – நற் 58/5-8

வீரை வேண்மானாகிய வெளியன் தித்தனது
முரசு முதலியவற்றோடு, மாலையில் ஏற்றப்படும் வரிசை விளக்குகளோடு
வெள்ளிய சங்குகள் முழங்க

2.

தித்தன் என்பானது மகனான வெளியன், தித்தன் வெளியன் எனப்படுகிறான். இவன் சோழரின் கீழ் உறையூரில்
இருந்து காவல் புரிந்தான்.

நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை
சினம் கெழு தானை தித்தன்_வெளியன்
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/4-6

நுண்ணிய கோலையுடைய பாணரைப் புரந்த பெரிய புகழையும்
சினம் மிக்க படையினையுமுடைய தித்தன் வெளியன் என்பானது
ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம்பெருந்துறை என்னும் பட்டினத்தே

வலம் மிகு முன்பின் பாணனொடு மலிதார்
தித்தன்_வெளியன் உறந்தை நாள்_அவை
பாடு இன் தெண்கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/13-15

ஆற்றல் மிக்க வலிமையுடைய பாணன் என்பானொடு கூடி, தார் மலிந்த
தித்தன் வெளியன் என்பானது உறையூரின்கண்ணேயுள்ள நாளோலக்கத்தின்கண்ணே எழுந்த
ஒசி இனிய தெளிந்த கிணையினது ஒலியைக்கேட்டு அஞ்சி

3.

இவன் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் எனப்படுகிறான். இதற்கு வெளியன் என்ற வேளிர்குல
மன்னனின் மகனான ஆய் எயினன் என்று பொருள் கொள்வார் நாட்டார் தம் உரையில்.

நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/3-5

சிறிய பிரப்பங்கோலைக் கொண்ட பாடுநர் விரும்பின், வெள்ளிய கொம்பினையும்
தலைமையுமுடைய யானையை வழங்கும் வண்மை யாலாகிய மகிழ்ச்சியினையுடைய
வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான்

மேல்


வெளில்

(பெ) 1. யானைத்தறி, Post to which elephants are tied
2. தயிர் கடை தறி, churning rod
3. அணில், squirrel

1

நெடும் சுழி பட்ட கடுங்கண் வேழத்து
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 325-327

பெரிய நீர்ச்சுழலில் அகப்பட்ட கொடுங்குணமுள்ள யானையின்
மிகுகின்ற சினத்தைத் தணித்து, பெரிய கம்பங்களில் கட்டுவதற்கு,
(விலங்குமொழி கலந்த)கலப்பு மொழியால் பழக்கும் பாகருடைய ஆரவாரமும்

2

பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/2,3

தயிறு கடையும் கயிறு உராய்வதால் தேய்வுற்ற தண்டினையுடைய மத்தின்
வெண்ணெய் தோன்றச் சுழலும் சுழற்சியால் தறியின் அடிப்பகுதி முழக்கமிடும்

3.

கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/7

கிளிகள் (தம் இனத்தை)பலமுறை அழைத்துக்கூவும் அணில் ஆடும் பெரிய கிளைகளில்

மேல்


வெளிறு

(பெ) 1. இளமை, tenderness, youth
2. குற்றம், fault, defect
3. வயிரமின்மை, having no hard core

1

வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப
களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 35/22,23

இளைய பனையினது துண்டம் போல, வேரு வேறு கிடப்ப
களிற்றுத்திரளைப் பொருத இடம் அகன்ற போர்க்களத்தின்கண்

2

ஒளிறு வாள் தானை கொற்ற செழியன்
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும் – அகம் 106/10,11

விளங்கும் வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன்
குற்றம் இல்லாத படைப்பயிற்சியோடு கூடி நெருங்கிய போரில் அடுந்தோறும்

3.

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313

கரிய பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய

மேல்


வெற்பன்

(பெ) குறிஞ்சிநிலத் தலைவன், chief/Hero of kuRinjci tract

பெரு வரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய் கோடியர் முழவின் ததும்பி
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப – குறு 78/1-3

பெரிய மலையின் மேலுள்ள நீண்ட வெள்ளிய அருவி;
முதுமைவாய்க்கப்பெற்ற கூத்தரின் முழவைப் போலத் ததும்பி
மலைச் சரிவில் இறங்கும் ஒளிவிடும் மலைகளையுடைய தலைவனே!

மேல்


வெற்பு

(பெ) மலை, mountain, hill

சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம்
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில்
பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன் – ஐங் 214/1-3

மலைச் சாரலிலுள்ள பலாவின் கொழுத்த கொத்தான நறும் பழம்
பெரிய மலையின் பிளவுகளில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததாக, மலையில்
பெரிய தேன்கூடி சிதறிப்போகும் நாட்டினைச் சேர்ந்தவன்

மேல்


வெற்றம்

(பெ) வெற்றி, Victory, success, conquest, triumph

தென் குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கோன் ஆகுவை – மது 70-74

தெற்கே குமரியும், வடக்கே பெரிய இமயமும்,
கிழக்கிலும் மேற்கிலும் கடல்களும் எல்லையாக உள்ள (வேந்தர்கள்)
(தத்தம்)பழைமையான தொடர்புகளைக் கூறி, ஏவிய வழி ஒழுக,
வெற்றியோடே செறிந்து நடந்த
மன்னர்க்கும் மன்னர் ஆவாய்,

மேல்


வெறி

1. (வி) 1. மிரளு, வெருவு, be frightened
2. மதம்கொள், be frenzied
3. களிகொள், be intoxicated
– 2. (பெ) 1. நறுமணம், fragrance
2. அச்சம், fear
3. முறைமை, ஒழுங்கு, order, regularity
4. வெறியாட்டு, தெய்வ ஆவேசம் வந்து ஆவியால் பற்றப்பட்டு ஆடும் ஆட்டம்,
Dance of a priest possessed by a spirit or a deity
5. தெய்வம்ஏறுதல் (முருகன்), being possessed by a deity (mostly Lord Muruga)

1.1

மேனி மறைத்த பசலையள் ஆனாது
நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி – கலி 143/6-8

மேனி முழுக்கப் பரவிய பசலையையுடையவளாய், அமைதி இழந்து,
மனம் மருண்டு, எதையெதையோ நினைத்துக்கொண்டு, தலையைக் குனிந்துகொண்டு,
அஞ்சி, அழுது, அரற்றுகின்ற இவள் ஒருத்தி

1.2

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து – கலி 43/1

“புலியைக் கொன்ற, மதம் நிறைந்த, புள்ளிகளைக் கொண்ட யானையின்

1.3

சின மாந்தர் வெறி குரவை – புறம் 22/22

சினத்தையுடைய வீரர் களித்தாடும் குரவைக்கூத்தொலி

2.1

வெறி_உற விரிந்த அறுவை மெல் அணை – நற் 40/5

நறுமணம் கமழ விரிக்கப்பட்ட விரிப்பினைக் கொண்ட மென்மையான அணையில்

2.2

கானவன்
சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம்
வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ
அழுந்துபட விடர்_அகத்து இயம்பும் – நற் 228/5-8

வேட்டுவனின்
முதுகைப் போன்ற பெரும் துதிக்கையைக் கொண்ட வேழம்
அச்சங்கொண்ட வில்லானது எறிகின்ற அம்பினை அஞ்சி
ஆழ்ந்துபட மலைப்பிளவுகளில் பிளிறும்,

2.3

வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான்
செறி வளை நெகிழ்த்தான்_கண் சென்றாய் மற்று அவனை நீ
அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே – கலி 123/12-14

ஒழுங்குமுறையில் பறந்து செல்லும் பறவைக் கூட்டம் தம் இருப்பிடம் சேரும் மாலைப்பொழுதில்
செறிவான வளையல்கள் கழன்றோடுமாறு செய்தவனிடம் சென்றாய், அவன் உள்ளத்தை நீ
அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றாயோ, அல்லது அறியாமலேயே வந்துவிட்டாயோ அறிவுகெட்ட நெஞ்சமே?

2.4

வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222

வேலன் இழைத்த வெறியாட்டு ஆடும் களத்திலும்

2.5

அறியாமையின் வெறி என மயங்கி
அன்னையும் அரும் துயர் உழந்தனள் – ஐங் 242/1,2

அறியாமையினால், தெய்வம் ஏறியதாகத் தவறாக எண்ணி
அன்னையும் நீக்குதற்கரிய துயரத்தில் ஆழ்ந்தாள்;

மேல்


வெறிக்களம்

(பெ) வேலன் வெறியாடும் களம், Place where the priest’s dance takes place

வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப – மது 284

வல்லவன் ஒருவன் இழைத்த வெறியாடும் களம் போன்று

மேல்


வெறிது

(வி.அ) பயனில்லாமல், without any use

வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும்
அறிவு உடை அந்தணன் அவளை காட்டு என்றானோ – கலி 72/17,18

வீணாக, உன் புகழைக் கேட்க விரும்பாதவர் மனையிலும் போற்றிக் கூறும்
அறிவுடையோனாகிய அந்தணன் அவளுக்குக் காட்டு என்று சொன்னானோ

மேல்


வெறு

(வி) 1. விரும்பாமல்போ, பகை, dislike, hate
2. மிகு, abound
3. செல்வமுண்டாகு, flourish
4. செறிந்திரு, be dense

1

புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405

புலி வந்ததால், அதனை வெறுத்து ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமானபாதையில் சென்றுகடந்து,

2

உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் – மலை 93

புகழ் (எங்கும்)சென்று மிகுகின்ற அவனுடைய மூதூரின் இயல்பினையும்

வெறுத்த வய வெள் ஏற்று அம் புடை திங்கள்
மறு போல் பொருந்தியவன் – கலி 103/48,49

மிகுந்த வலிமையான வெள்ளைக் காளையின் அழகிய பக்கத்தில், திங்களில் இருக்கும்
மறுவைப் போல் ஒட்டிக்கிடக்கிறவன்”;

வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி – அகம் 33/1

பொருளீட்ட மேற்கொள்ளவிருக்கும் செயல் நல்லது என்பதை வெகுவாக உணர்த்தி

3.

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401

எல்லாவூர்களிலும் மேலாகும்படி செல்வமுண்டான நன்னனுடைய பழைதாகிய உயர்ந்த ஒழுக்கத்தினையுடைய
பழைய ஊர்கள்
நச்.உரை

4.

பெயினே விடு மான் உளையின் வெறுப்ப தோன்றி
இரும் கதிர் நெல்லின் யாணரஃதே – நற் 311/1,2

மழை பெய்தால், விடுபட்ட குதிரையின் பிடரிமயிரைப் போன்று செறிந்து தலை சாய்ந்து தோன்றும்,
பெரிய கதிர்களையுடைய நெல்லின் புது அறுவடையைக் கொடுக்கும்;

மேல்


வெறுக்கை

(பெ) 1. செல்வம், பொருள்திரள், wealth
2. வாழ்வின் ஆதாரப் பொருள், life-spring
3. வெறுப்பு, hatred, dislike

1

நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பதி 55/4

நிறைந்த அணிகலன்களாகிய செல்வம் தேங்கியிருக்கும் பண்டகசாலைகள்

நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் – மது 215,216

நிலம் சுமக்கமாட்டாத நல்ல பல பொருள்திரள்களையும் உடைய,
பயன் அற்றுப்போதலை அறியாத வளம் நிரம்பிய அரண்மனைகளில்

2

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263

அந்தணரின் வாழ்வின் ஆதாரப்பொருளே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே,

பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை – பதி 65/11

பாணர்களின் பாதுகாவலனே! பரிசிலர் வாழ்வின் ஆதாரப்பொருளே!

3.

தாது உண் வெறுக்கைய ஆகி இவள்
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – ஐங் 93/4,5

தேனுண்ணுவதை வெறுத்தனவாகி, இவளின்
அரும்பாக இருந்து அப்போதுதான் மலர்ந்த பூக்களுள்ள தலையுச்சியை மொய்க்கின்றன வண்டுக்கூட்டம்

மேல்


வென்

(பெ) வெற்றி, victory, success

பெரிது ஆண்ட பெரும் கேண்மை
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல்
அன்னோன் வாழி வென் வேல் குரிசில் – பொரு 229-231

நெடுங்காலம் ஆண்ட பெரிய நட்பையும்,
அறத்தோடு பொருந்திய சார்பினை அறிந்த செங்கோலையும் உடைய,
அத் தன்மையையுடையோனே (நீ)வாழ்வாயாக, வெற்றியையுடைய வேலையுடைய தலைவனே

மேல்


வென்றி

(பெ) வெற்றி, victory, triumph

பகைவர்
கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும்
வென்றி அல்லது வினை உடம்படினும்
ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை
கொண்டி உண்டி தொண்டையோர் மருக
மள்ளர் மள்ள மறவர் மறவ – பெரும் 450-455

பகைவருடைய
காவலமைந்த மதில்களை அழித்து (அவ்வரசரின்)கிரீடம்(முதலியவற்றை) கொள்ளும்
வெற்றியையே அல்லது (அவ்வரசர் உன்)வினைக்கு உடன்படினும்
மனம் பொருந்துதல் செல்லாத, வலிய வாளினையுடைய பெரிய கையினையும்,
(பகைப்புலத்துக்)கொள்ளையாகிய உணவினையும் உடைய தொண்டையோர் குடியிற் பிறந்தவனே,
மள்ளர்க்கு மள்ளனே, மறவர்க்கு மறவனே,

மேல்


வென்றியர்

(பெ) வெற்றிபெற்றவர், triumphant men

செரு மேம்பட்ட வென்றியர்
வரும் என வந்தன்று அவர் வாய்மொழி தூதே – கலி 26/24,25

போரில் மேலான ஆற்றல்காட்டி வெற்றிசூடியவராய்த்
திரும்பி வருகிறார் என்று வந்து கூறுகின்றனர் அவர் செய்தியைத் தாங்கிவரும் தூதுவர்.

மேல்