மொ – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொக்குள்
மொசி
மொய்
மொய்ம்பன்
மொய்ம்பு
மொழிபெயர்

மொக்குள்

(பெ) 1. உடலில் தோன்றும் நீர் அல்லது சீழ் நிரம்பிய கட்டி, blister, pustule, boil
. 2. நீர்க்குமிழி, bubble
3. மரல் எனப்படும் பெருங்குரும்பையின் பழம், the fruit of the plant called Bowstring hemp.

1

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி
அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின்
பரல் பகை உழந்த நோயொடு சிவணி
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் பொரு 42-45

ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்,(அப்பாதங்களில் ஏற்பட்ட)-
சாதிலிங்கத்தை உருக்கின தன்மையை ஒத்த சிவந்த நிலத்தே நடக்கையினால்
பரல் கல்லாகிய பகையால் வருந்தின நோயுடன் பொருந்தி,
மரல் பழுத்தாற் போன்ற துளும்பும் நீரையுடைய கொப்புளங்களையும்,

2

குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட – ஐங் 275/1-3

குரங்குகளின் தலைவனான, நிறமுள்ள மயிரினைக் கொண்ட ஆண்குரங்கு
பிரம்பின் அழகிய சிறிய கோலினைப் பற்றிக்கொண்டு, அகன்ற பாறையில் தேங்கியிருக்கும்
மழைநீர்க் குமிழிகளை அடித்து விளையாடும் நாட்டினைச் சேர்ந்தவனே!

3.

அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ – நற் 278/2

அடுத்து வளர்ந்த மரலின் பழம் போன்ற அரும்புகள் மலர்ந்து இதழ் விரிய
– மரல் பழம் நீர் மொக்குள் போறலின் மொக்குள் எனப்பட்டது – ஔவை.சு.து.உரை விளக்கம்

மேல்


மொசி

(வி) 1. மொய், swarm, throng
2. நெருங்கு, அடர்த்தியாகு, be demse, crowd
3. ஒன்றுகூடு, gather or assemble together
4. பரவலாகப் படர்ந்திரு spread all over
5. உண், தின்னு, eat

1

தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் – அகம் 257/8,9

தேன் பொருந்திய கூந்தலில் குறியனவாய்ப் பலவாக மொய்க்கும்
வண்டுகளை கடிந்து பாதுகாத்தலையும் அறியாயாய்

2

புது மணல் கானல் புன்னை நுண் தாது
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/7-9

புதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெள்ளையான முதுகில் நெருங்கத் தூர்க்காநிற்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
– பின்னத்தூரார் உரை,
புன்னையின் கொம்பும் குழையும் மேலே உரிஞுதலால் வெண்குருகின் முதுகிடம் முழுதும் நுண்ணிய தாது படிவது
விளங்க மொசிய வரிக்கும் என்றார் – ஔவை.சு.து.உரை

3.

வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9

வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,

4.

கூர் நுதி செம் வாய் எருவை சேவல்
படு பிண பைம் தலை தொடுவன குழீஇ
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் – அகம் 215/12-15

கூரிய அலகினைக் கொண்ட சிவந்த வாயினையுடைய ஆண் பருந்துகள்
இறந்துபட்ட பிணங்களின் பசிய தலையினைத் தோண்டுவனவாகக் கூடி
வலிய நெருங்கிய விரலால் தோண்டி, கண்மணியைப் பெயர்த்துக்கொண்டு
வலிய வாயினையுடைய தம் பேடைகட்குச் சொரியும் அவ்விடத்தே
– நாட்டார் உரை.
இங்கே ,மொசிய என்பதற்கு நெருங்கிய என்ற பொருள் ஒத்துவருமா என்று தெரியவில்லை.
பிணந்தின்னிக் கழுகுகளின் அல்லது பருந்துகளின் கால் விரல்கள் நெருக்கமாக இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு பொருளை நாலாபுறங்களிலும் நன்கு கவ்விப் பிடிப்பதற்காக, அவற்றின் விரல்கள் நாலாபுறத்திலும்
படர்ந்திருப்பதையே மொசி விரல் என்று புலவர் கூறுவதாகக் கொள்ளலாம்.

நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல்
அத்த எருவைச் சேவல் – அகம் 375/7,8

என்ற இடத்திலும் இதே பொருள் குறிப்பால் உணர்த்தப்படுவதையும் காணலாம்

5.

மை ஊன் மொசித்த ஒக்கலொடு – புறம் 96/7

செம்மறியாட்டுத் தசையைத் தின்ற சுற்றத்துடனே

மேல்


மொய்

1. (வி) 1. ஒரு பரப்பின் மீது கூட்டமாகச் சூழ்ந்து அமை, சுற்றிச்சூழ், swarm, throng
2. கூட்டமாக நெருங்கிச் சுற்று, swarm around, crowd around
3. மூடு, cover, enclose
– 2. (பெ) 1. திரள், தொகுதி, flock, mass
2. வலிமை, strength
3. நெருக்கம், இறுகுதல், closeness, tightness
4. பெருமை, மிகுதி, greatness, abundance

1.1

மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் – அகம் 72/3

மின்மினிகள் கூட்டமாய்ச் சூழ்ந்திருக்கும் முரிந்த இடத்தினையுடைய புற்றினை

1.2

களிறே, ————————- ——————————–
—————————- ————————-
சுறவு_இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8

களிறுதான் ————————- ——————————-
————————- —————————–
சுறவின் இனத்தை ஒத்த வாள் மறவர் சூழ
தன்னை மருவிய பாகரை அறியாது மதம்பட்டது

1.3

குளவி மொய்த்த அழுகல் சில் நீர் – குறு 56/2

காட்டுமல்லிகை இலைகள் மூடியதால் அழுகிப்போன சிறிதளவு நீரை

2.1

மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417

மை ஒழுகினாற் போன்ற திரளான கரிய கூந்தலினையுமுடைய

2.2

வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர்
வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி – பதி 49/7-9

வெல்கின்ற போரினையுடைய வேந்தரும், குறுநில மன்னரும், வஞ்சினம் கூறி,
மிகுந்த வலிமையால் மனம் செருக்கி, ஒன்றுகூடி வருகின்ற மோகூர் மன்னனின்
வெற்றிதரும் சேனையின் கூட்டம் கலைந்து சிதையும்படி நெருங்கித் தாக்கி,

2.3

மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் – பரி 18/18

அந்தப் பரத்தையரின் இறுகல் மிகுந்த முயக்கத்தை நாம் நன்கு அறிந்துகொண்டோம்,

2.4

இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய் வலி அறுத்த ஞான்றை – அகம் 246/11-13

மிக்க ஓசையையுடைய வீர முரசம் போர்க்களத்தே ஒழிந்துகிடக்க
வேளிர் பதினொருவருடன் இரு பெரு வேந்தரும் நிலை கெட
அவர்தம் மிக்க வலியைக் கெடுத்த நாளில்

மேல்


மொய்ம்பன்

(பெ) வீரன், warrior, hero

வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26

வேலினால் போர் செய்யும் வீரனான முருகனைப் போல, மணமுள்ள மலர்களை அம்பாகக் கொண்ட மன்மதனை

மேல்


மொய்ம்பு

(பெ) 1. வலிமை, strength, valour
2. தோள், shoulder

1

இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் – பட் 72

நீண்ட போர்(செய்யும்) போட்டிபோடும் வலிமையுடையோர்

2

ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக
தொடிய எமக்கு நீ யாரை – கலி 88/1-3

“அகன்று போ! கொடி போன்ற இயல்புடைய நல்ல பரத்தையரின் கூந்தலின் மணத்தை எடுத்துக்கொண்டு,
அவர் முடியிலிருந்து உதிர்ந்த பூந்தாதினைத் தோளிலே கொண்டவனாக
எம்மைத் தொடுவதற்கு எமக்கு நீ யாரோ?

மேல்


மொழிபெயர்

(பெ.அ) மொழி வேறுபட்ட, (place) where language is different

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் – குறு 11/7

மொழி வேறுபட்ட நாட்டிலுள்ளவராயினும்

மேல்