மி – முதல் சொற்கள்

மிகீஇ

(வி.எ) சொல்லிசை அளபெடை – மிகுந்து, (force) exceeding

வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன்
கால் முளை மூங்கில் கவர் கிளை போல
உய்தல் யாவது நின் உடற்றியோரே – பதி 84/11-13

நீண்ட மேகத்தின் முழக்கம் போல இளமையான களிறுகள் வன்மை மிக்கு, தன்
காலில் அகப்பட்ட முளையாகிய மூங்கிலின் கவர்த்த கிளையைப் போல,
தப்பிப்பிழைப்பது எவ்வாறு உன்னைச் சினமூட்டியவர்கள்?

மிகீஇ – மிக்கு – வலிமை மிகுந்து – முனைவர் அ. ஆலிஸ்

மேல்


மிகீஇயர்

(வி.எ) சொல்லிசை அளபெடை , மிகுந்து வரும் பொருட்டு, in order to be plentiful

அருவி அற்ற பெரு வறல் காலையும்
நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர்
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை
செம் நீர் பூசல் அல்லது – பதி 28/9-13

அருவிகள் வற்றிப்போன பெரும் வறட்சியான காலத்திலும்
– உயர்ந்து, கரையை மீறிக்கொண்டு இறங்கும் அகன்ற பரப்புள்ள பேரியாறு பாயும்
சிறப்புப் பொருந்திய அகன்ற நிலங்களில் இடங்கள்தோறும் பரந்து மிகும்பொருட்டு
காய்ந்த இலைதழைகளைச் சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் வருவதுபோன்ற மிகுந்துவரும் வெள்ளத்தின்
சிவந்த நீர் எழுப்பும் ஆரவார ஒலியை அன்றி

மேல்


மிகுப்ப

(வி.எ) மிகுதியாக்கிக்கொள்ள, to augment

தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப
வாள் அமர் உழந்த நின் தானையும்
சீர் மிகு செல்வமும் ஏத்துகம் பலவே – புறம் 161/30-32

நினது தாள் நிழற்கண் வாழ்வார் நல்ல ஆபரணத்தைப் பெருக்கிக்கொள்ள
வாளால் செய்யும்போரின்கண்ணே உழக்கப்பட்ட நினது படையையும்
நினது சீர்மிகு செல்வத்தையும் பலபடப் புகழ்வேம்

மேல்


மிகுபு

(வி.எ) மிகுந்து, செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், (with the elegance) increased

ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு
நம்_வயின் புரிந்த கொள்கை
அம் மா அரிவையை துன்னுகம் விரைந்தே – அகம் 154/13-15

ஓட்டுவாயாக தேரினை, பாகனே! சீர் மிக்கு
நம்மிடத்து விரும்பிய கொள்கையினையுடைய
அழகிய மாமை நிரத்தையுடைய நம் தலைவியைச் சென்று அடைவோம், விரைந்து

மேல்


மிகூஉம்

(வி.எ) மிகும் என்பதன் இன்னிசை அளபெடை, plentiful

எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து – நற் 46/9

துன்பம் மிகுதியாக இருக்கும் அரிய வறண்ட பாலை நிலத்தைக் கடந்து

மேல்


மிகை

(பெ) மிகுதி, அதிகம், excess

கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது – பட் 210

(தாம்)கொள்வனவற்றை அதிகமாகக் கொள்ளாது, கொடுப்பனவற்றைக் குறையாகக் கொடாமல்

மேல்


மிகைபடு

(வி) அதிகப்படு, increase, be excessive

கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து – பதி 63/9

பகைவர் நாட்டுக் கொள்ளைப்பொருள் மிகுந்திருக்க, அருளுள்ளம் கொண்ட தமிழ்வீரர்களை நிறையக் கொண்டு

மேல்


மிச்சில்

(பெ) 1. மீந்துபோனது, எஞ்சியிருப்பது, remainder, leftover
2. ஒருவர் உண்டபின் உண்ணாது விட்டுச்சென்ற உணவு, எச்சில்பட்ட உணவு,
leavings of a meal

1

விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது – குறி 206,207

விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே,
உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்

2

கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில்
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் – நற் 290/2,3

கன்றை உடைய அண்மையில் ஈன்ற பசு தின்றுவிட்டுப்போன மிச்சத்தை
ஓய்ந்துபோன நடையையுடைய முதிய காளை ஆவலுடன் தின்னும் ஊரைச் சேர்ந்தவனின்

புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை
குற குறு_மாக்கள் உண்ட மிச்சிலை
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் – நற் 168/3-5

தேனீக்கள் மொய்த்ததால் கசிந்த இனிய தேன், கீழே பாறையின் மேலுள்ள குழிகளில் வழிய,
அதனைக் குறவர்களின் சிறுவர்கள் உண்டபின் எஞ்சியதைப்
புல்லிய தலையைக் கொண்ட மந்தியின் வலிய குட்டிகள் நக்கும்

மேல்


மிசை

1. (வி) 1. உண்ணு, 2. பருகு, 3. தின்னு, eat, drink, eat away
– 2. (பெ 1. உணவு, food
2. உச்சி, உயரமான இடம், மேடான இடம், top, elevation, mound
3. மேலே, elevated place
4. வானம், sky
– 3. (இ.சொ) ஏழாம் வேற்றுமை உருபு, locative case marker

1.1

வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல்
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2

மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில்,
அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை

1.2

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262

கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

1.3

உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப – புறம் 160/1,2

உட்குப் பொருந்திய ஞாயிற்றினது ஒள்ளிய சுடர் தின்னப்பட்ட
முஇந்த புல்லையுடைய காடு தளிர்ப்ப

2.1

இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து – புறம் 384/8

பெரிய கெடிற்று மீனாகிய உணவுடனே இஞ்சி முதலிய பூ விரவிய கள் நிறைந்திருக்கும்

2.2

மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 172-175

மேன்மையான (ஆன்)பாலைத் தடவிய மயிரினையும், உயர்கின்ற உச்சிகளிலுள்ள
கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,
ஒன்றாய்ப் பொருந்தின உடையினையும் உடைய, கூழை உண்ணுகிற இடைமகன்

2.3

மிசை படு சாந்தாற்றி போல எழிலி
இசை படு பக்கம் இரு பாலும் கோலி
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட – பரி 21/30-32

மேலே எடுத்துவைக்கப்பட்ட விசிறியைப் போல, மேகங்களின்
முழக்கம் எழுகின்ற திசையில் இரு சிறகுகளையும் விரித்துக்கொண்டு
ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மயில் இடம்பெயர்ந்து ஒன்றாக ஆட,pl,

2.4

துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின்- கலி 46/20

மழைத்துளியை விரும்பிய வேட்கையால் வானத்தில் பாடித்திரியும் பறவையைப் போல

3

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109

செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை

மேல்

மிசைவு – (பெ) உணவு, food

கலை உண கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் – புறம் 236/1,2

முசுக்கலை கழித்துண்டலாற் பீறிய முழவு போலும் பெரிய பலாப்பழம்
வில்லையுடைய குறவர்க்கு அதன் பெருமையால் சில நாலைக்கு இட்டுவைத்துண்ணும் உணவாம்

மேல்


மிஞிலி

(பெ) ஒரு சங்ககால வீரன், A warrior of sangam period
இவனைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் ஐந்து இடங்களில் காணப்படுகின்றன.

1

வீளை அம்பின் வில்லோர் பெருமகன்
பூ தோள் யாப்பின் மிஞிலி காக்கும்
பாரத்து அன்ன – நற் 265/3-5

சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவனான,
பொலிவுள்ள தோளில் கச்சு மாட்டிய மிஞிலி என்பான் காவல்காக்கும்
பாரம் என்னும் ஊரைப் போன்ற

2

கறை அடி யானை நன்னன் பாழி
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்கு
ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர்
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/9-14

உரல் போலும் அடியினையுடைய யானையைஉடைய நன்னனது பாழியிலுள்ள
பலியிடற்கு அரிய தன்மையுடைய அஞ்சத்தக்க பேய்க்கு
ஊட்டுதலை ஏற்றுக்கொண்ட வாய்மை பொருந்திய மிஞிலி என்பான்
புட்களுக்குப் பாதுகாவல் ஆகிய பெரும் புகழினையுடைய
வெள்ளம் போன்ற சேனையினையுடைய அதிகன் என்பானைக் கொன்று மகிழ்ந்து
ஒள்வாள் அமலை என்னும் வென்றிக்கூத்தை ஆடிய போர்க்களப் பூசலைப்போல

3

ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என – அகம் 181/3-7

பகைவர்
பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிக்க பெரிய சேனைகளையுடைய
போர் அடுதல் வல்ல மிஞிலி என்பான் அழிக்கின்ற வேலைச் செலுத்தியதால்
முருகனைப் போன்ற வலிமையுடனே போரிட்டு, போர்க்களமெல்லாம் குருதியால் சிவந்துபோகுமாறு
ஆய் எயினன் என்பவன் தோற்று மடிய

4

வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள்வாள் மயங்கு அமர் வீழ்ந்து என – அகம் 208/5-9

வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான்
அருள் பொருந்தும் வாழ்கையினையுடைய பாழி என்னும் ஊரின்கண்ணதாகிய
ஓடையை அணிந்த யானையினையும் இயன்ற தேரினையும் உடைய மிஞிலி என்பானோடு
நண்பகற் பொழுதில்செய்த போரின்கண் புண் மிக்கு
ஒள்ளிய வாட்படை மயங்கிய போரினாலேயே வீழ்ந்தனனாக

5

கொடி தேர்
பொலம் பூண் நன்னன் புன்னாடுகடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் – அகம் 396/2-6

கொடியணிந்த தேரினையும்
பொன்னாலாய பூண்களையுமுடைய நன்னன் என்பான் புன்னாடு என்னும் நாட்டிலுள்ளாரை வெகுண்டெழுந்தானாக
யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் நகரிடத்தே நின்று
அஞ்சாதீர் என்று கூறிய ஆஅய் எயினன் என்பான்
போரில்வெல்லும் பயிற்சியையுடைய மிஞிலி என்பானோடு பொருது
தன் உயிரையும் தந்தான்.

அகம் 148-இல் சில பதிப்புகளில் மிஞிலியொடு என்பது ஞிமிலியொடு என்று காணப்படுகிறது.

கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/7,8

கடிய செலவினையுடைய குதிரைகளையுடைய ஆய் எயினன் என்பான்
நெடிய தேரையுடைய ஞிமிலி (மிஞிலி) என்பானோடு போர்புரிந்து களத்தில் இறந்தானாக

இவற்றினின்றும் நாம் பெறுவது:
மிஞிலி என்பவன் அரசன் நன்னனின் படைத்தலைவன். சங்ககாலத்தில் நன்னன் என்னும் பெயருடன் ஆங்காங்கே
அவ்வப்போது பல மன்னர்கள் இருந்தனர். அவர்களில் இந்த நன்னன் பெண்கொலை புரிந்த நன்னன் எனக் கொள்வது
பொருத்தமானது.
மிஞிலி பாரம் என்னும் நகரைக் காவல்புரிந்துவந்தான். அவன் வில்லோர் பெருமகன் என்று போற்றப்படுகிறான்.
மிஞிலி “வாய்மொழி மிஞிலி” என்று போற்றப்படுகிறான். சத்தியம் தவறாதவன் என்பது இதன் பொருள்.
இவன் ‘இகல் அடு கற்பு’க் கலையில் வல்லவன்..போரில்வெல்லும் பயிற்சியையுடையவன் என்பது இதன் பொருள்.
ஆய் எயினனைப் போலவே அதிகன் என்பவனும் பறவைகளைப் பாதுகாத்துவந்தான்.
மிஞிலி நன்னனுக்குத் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் பெரும்படையுடன் வந்து தாக்கிய அதிகனைப்
பாழி நகரில் இருந்த பேய்த்தெய்வத்துக்கு (காளிக்கு) உயிர்ப்பலி கொடுத்தான்.
இந்த அதிகன் என்னும் பெயர், ஆய் எயினனின் இன்னொரு பெயராதல் வெண்டும் என்பார் ந.மு.வே.நாட்டார்.
ஆய்-எயினன் என்பவன் வெளியன் வேள் என்பவனின் மகன். வேண்மான் என்பது வேள் மகன் என்னும்
பொருளைத் தரும். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் இந்த ஆய்-எயினன், மிஞிலியால்
கொல்லப்பட்டான். புன்னாட்டின் தலைநகரம் வாகை. இந்த வாகைநகரை மீட்கும் போர் இவ்வூரில் நடைபெற்றதால்
இதனை வாகைப்பறந்தலை என்றனர்.
புன்னாடு என்பது கொள்ளு விளையும் நாடு. இது புன்செய் நாடு ஆதலால் புன்னாடு எனவும் வழங்கினர்.
தேர்ப்படையுடன் வந்த பொலம்பூண் நன்னன் இதனைத் தனதாக்கிக்கொண்டான். புன்னாட்டு அரசனை
“அஞ்சவேண்டாம்” என்று கூறிக்கொண்டு ஆய்-எயினன் என்பவன் நன்னனின் படைத்தலைவனான மிஞிலியைத்
தாக்கினான். ஆனால் ஆய்-எயினன் போரில் மாண்டான்.

மேல்


மிஞிறு

(பெ) வண்டு, தேனீ, beetle, honey bee

1.

இது எழுப்பும் ஓசை சீறியாழின் இசையைப் போல் இருக்கும்.

பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின்
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் – புறம் 308/1,2

பொற்கம்பியினை ஒத்த முறுக்கடங்கின நரம்பினையும்
மின்னலைப்போலும் தோலினையும் வண்டிசை போலும் இசையினையுமுடைய சீறியாழ்

2.

சுவை மிக்க பழங்களின் நறுமணத்தால் அந்தப்பழங்களையும் மொய்த்திருக்கும்

மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி – பதி 60/4,5

வண்டுகள் புறத்தே மொய்த்துநிற்கவும், இனிய சுவையில் மாறுபடாது,
அரம்பத்தால் அறுக்கமுடியாத மரத்தில் உண்டாகிய சுவையான கனியாகிய

3.

தும்பி, வண்டு, மிஞிறு ஆகியவை வெவ்வேறானவை.

வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர – பரி 8/23

விரும்புகின்ற தும்பியும், வண்டும், மிஞிறும் ஆரவாரிக்க, சுனைகளில் பூக்கள் மலர்ந்து நிற்க,

நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத – கலி 33/22,23

யாழ் நரம்பின் இனிய இசையைத் தாளம் கெடாதவாறு நிறுத்த உதவும் குழலோசை போல்
இனிதாய் இசைக்கும் தேனீக்களோடு தும்பிகளும் ஒலித்தபடியே தேனை அருந்த,

4.

இது நிறத்தில் காமனை ஒத்தது. காமன் நிறம் கருமை.

மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் – கலி 26/3

சுறாமீன் கொடியைக் கொண்ட காமனின் நிறம் போன்ற வண்டுகள் மொய்க்கும் காஞ்சியும்,

5.

யானையின் கன்னத்தில் (கவுள்) வடியும் மத நீரை (கடாம்) இவை மொய்க்கும்.

மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை – அகம் 159/16
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள – அகம் 207/8
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து – புறம் 22/6

மேல்


மிடல்

(பெ) வலிமை, strength, might

தொடங்கல்_கண் தோன்றிய முதியவன் முதலாக
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் – கலி 2/1,2

உலகம் உருவாகும் காலத்தில் தோன்றிய முதியோனாகிய நான்முகன் முதலாக,
அடங்காத அவுணர்களின் வலிமையை அழிக்குமாறு, தேவர்கள் வந்து வேண்டியதால்

மேல்


மிடறு

(பெ) 1. கண்டம், தொண்டை, குரல்வளை, throat, larynx, trachea
2. கழுத்து, neck

1

கரும் தார் மிடற்ற செம் பூழ் சேவல் – அகம் 63/7

கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழின் சேவல்

அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி
காமரு தகைய கான வாரணம் – நற் 21/7,8

அரித்தெழும் குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான பொறிகளைக் கொண்ட
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்

2

படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/9

ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்

மேல்


மிடா

(பெ) பெரிய மண்பானை, large earthen vessel

சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி – குறி 201

விழா கொண்டாடினால் போன்று, பெரிய பானையில் (வைக்கப்பட்ட)சோற்றை

மேல்


மிடை

1. (வி) 1. அணிவகு, draw up in an array
2. முடை, பின்னு, சேர்த்துக்கட்டு, braid, tie together
3. நெருங்கு, செறி, be close together, dense
4. கல, be mingled, mixed
– 2. (பெ) 1. இடம், place
2. பரண், raised platform

1.1

நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு
புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி – மது 369,370

கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே(பகைவரை)
புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்து
மிடை தோல் – அணிவகுக்கப்பட்ட யானை – பொ.வே.சோ.உரை

1.2

ஒலி கா ஓலை முள் மிடை வேலி – நற் 38/8

ஒலிக்கின்ற காய்ந்த பனையோலையும், முள்ளும் சேர்த்துக்கட்டிய வேலியை ஒட்டி
பின்னத்தூரார் உரை, முடை < மிடை – பின்னுதல் – தமிழ்ப்பேரகராதி

கடவுள் மரத்த முள் மிடை குடம்பை – அகம் 270/12

தெய்வத்தினையுடைய மரத்திடத்தவாகிய முள்ளால் மிடையப்பெற்ற கூட்டில்
ந.மு.வே.நாட்டார் உரை

மென் கழை கரும்பின் நன் பல மிடைந்து
பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி – அகம் 346/7,8

மெல்லிய தண்டினையுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் கட்டிக் குறுக்கேவைத்து அடைத்து
பெரிய நெற்பயிரையுடைய செய்யாகிய பசிய பள்ளங்களில் நீரைத் தேக்கி
ந.மு.வே.நாட்டார் உரை

1.3

மடலே காமம் தந்தது அலரே

மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே – நற் 152/1,2

பனைமடலால் செய்யப்பட குதிரையைக் காமம் தந்தது; ஊரார் பேசும் பழிச்சொற்களோ
நெருங்கிய இதழ்களையுடைய எருக்கம்பூமாலையைத் தந்தது; – ஔவை.சு.து.உரை

கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட
பல் பூ மிடைந்த படலை கண்ணி – பெரும் 173,174

கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய
பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும்,

1.4

மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே – நற் 152/1,2

பனைமடலால் செய்யப்பட குதிரையைக் காமம் தந்தது; ஊரார் பேசும் பழிச்சொற்களோ
பல பூக்களைக் கலந்து கட்டிய எருக்கம்பூமாலையைத் தந்தது; – பின்னத்தூரார் உரை

2.1

நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமென தாக்கலின் – நற் 50/4,5

நெடிய நிமிர்ந்த தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில்
நமக்கு அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட
கொடு மிடை – வளைந்த இடம் – பின்னத்தூரார் உரை

2.2

நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை
பேணி நிறுத்தார் அணி – கலி 104/27,28

அன்றைக்குரிய விண்மீன்கள் அருகே சூழ்ந்திருக்கும் திங்களைப் போல, பரண் மீது
விரும்பி நிறுத்தினர் அழகாக;

மேல்


மிண்டு

(வி) நெம்பு, குத்திக்கிளப்பு, turn over with a lever, dig out

உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 92-94

உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் கீழ்மேலாகக் குத்திப் புரட்டி,
கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்

மேல்


மிதப்பு

(பெ) மிதந்து வருவது, that which comes floating

கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் – அகம் 224/5-7

காற்றின் வேகத்தை ஒத்த விரைந்த ஓட்டத்தினையுடைய குதிரைகளின்
பால் கடையுங்கால் நுரையைப் போல எழுந்து மிதந்துவரும் பெரிய வெண்ணெய் உருண்டையை ஒத்த
மிக்க வெள்ளியதான வாயின் தெவிட்டலாய பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை

மேல்


மிதவை

(பெ) 1. தெப்பம், float
2. ஒரு வகை உணவுப்பொருள், a kind of preparation of food

1

வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் – பரி 6/35

வெண்மையான சாரம் அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும்

2.1

செ வீ வேங்கை பூவின் அன்ன
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் – மலை 434-436

2.1.1

இதனைப் பலவாறாகத் திரித்தும், மாற்றி எழுதியும் நச்சினார்க்கினியர் பொருள்கொள்வார்.

செ வீ வேங்கை பூவின் அன்ன அவரை

– சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினையொத்த
நிறத்தையுடைய அவரை விதை

வேய் கொள் அரிசி

– மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசி

சுவல் விளை நெல்லின் அரிசி

– மேட்டுநிலத்தே விளைந்த நெல்லின் அரிசி

சொரிந்த மிதவை புளிங்கூழ்

– இவற்றைப் புளிக்கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங்கூழை
இவர் மிதவை என்பதற்குக் குழைவான (சோறு) என்று பொருள்கொள்கிறார்.

2.1.2

இதனை ஆற்றொழுக்காகவே, இருக்கிறபடியே, பொருள்கொள்வார் பொ.வே.சோமசுந்தரனார்

சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினை ஒத்த
மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசியினாலாய சோற்றின்கண் சொரிந்த
மேட்டு நிலத்தின் விளைந்த நெல்லின் அரிசியை விரவி அவரை விதையினாற் சமைத்த புளிக்கரைத்த
புளியங்கூழை
இவர் மிதவை என்பதற்குச் சோறு என்று பொருள்கொள்கிறார்

2.1.3

சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினைப்போன்ற மூங்கில் அரிசிச் சோற்றில், மேட்டு நிலத்தில் விளைந்த
நெல்லின் அரிசியை விரவி அவரை விதையாற் புளியைக் கரைத்துச் செய்த புளிங்கூழை –
ச.வே.சு – உரை
இவரும் மிதவை என்பதற்குச் சோறு என்றே பொருள்கொள்கிறார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்தப்பகுதி, ’

புல் வேய் குரம்பை

’-களில், அதாவது குடிசைகளில் வாழும்
முல்லைநில மக்களின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக்கூறும் வகையில் அவர்களின் வீட்டுக்கு இரவில் சென்றால்
கிடைக்கக்கூடியது என்று புலவர் குறிப்பிடுவது.

2.2

கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை – அகம் 37/12-14

2.2.1

கொள்ளும் பயறும் அழகு பொருந்தப் பாலுடன் கலந்து ஆக்கிய, வெள்ளிக்
கம்பியை ஓர் அளவாக நறுக்கிய வெள்ளிய அவிழ்க் கஞ்சியை
வளைத்துண்ட கை போதும் எனத் தடுத்த பின்னர்
– ந.மு.வே.நாட்டார் உரை.
இவர் மிதவை என்பதற்குக் கஞ்சி என்று பொருள்கொள்வார். பின்னர் மிதவை – கூழ் என்று விளக்குவார்.

2.2.2

கொள்ளும் பயறும் பாலோடு விரவிச் சமைத்த,
வெள்ளிக்கம்பியை ஓரளவாகத் துணித்துப்போகட்டாற் போன்ற வெள்ளிய பருக்கைகளைக் கொண்ட கூழையும்
வயிறாரப் பருகி, இனி வேண்டா என்று வளைந்த கையால் தடுத்த பின்றை
– பொ.வே.சோமசுந்தரனார் உரை
இவரும் மிதவை என்பதற்குக் கூழ் என்று பொருள்கொள்வார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இது பாலைத்திணைப் பாடலாயினும், உழவர்கள் ’வைகு புலர் விடியலாகிய’
அதிகாலையில் நெல் கதிரடிக்கும் களத்தில் வேலை செய்கையில், இந்தக் கஞ்சியை வாங்கிக் குடித்துவிட்டுத்
தம் பணியைத் தொடர்வர் என்று பாடல் கூறுகிறது.

2.3

உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
பெரும் சோற்று அமலை நிற்ப – அகம் 86/1,2

2.3.1

உழுத்தம் பருப்புடன் கூட்டிச்சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு
பெரிய சோற்றுத் திரளையுடைய உண்டல் இடையறாது நிகழ
– ந.மு.வே.நாட்டார் உரை

2.3.2

உழுத்தம் பருப்புப் பெய்து சமைத்த கொழுவிய களியாகிய மிதவையோடு மிக்க சோற்றினையும் சுற்றத்தாரும்
பிறரும் உண்ணுதலாலே உண்டாகும் ஆரவாரமும் இடையறாது நிற்பவும்
– பொ.வே.சோமசுந்தரனார் உரை
விளக்கம் –

உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை

என்பது ஒருவகைத் துணை உணவு; அஃதாவது உழுத்தம்
பருப்புப் பொங்கல் என்றவாறு.
எனவே இருவரும் மிதவை என்பதற்குப் பொங்கல் என்றேபொருள் கொண்டிருக்கின்றனர்.

இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்த நிகழ்ச்சி, பாடலில், ’கனை இருள் அகன்ற கவின்பெறு காலை’-யில்
நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

2.4

பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340/14,15

2.4.1

பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெல்லின் மாவைத்
தயிரிட்டுப் பிசைந்த கூழினைக் கொடுப்போம் உனக்கு
– ந.மு.வே.நாட்டார் உரை
இங்கு, தயிர் மிதி மிதவை மா ஆர்குநவே என்று பாடங்கொண்டு, கூழினை உன் குதிரைகள் உண்பனவாகும்
என்று பொருள்கொள்கிறார்.

2.4.2

தயிர் மிதி மிதவை

– gruel mixed with curds – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு

2,4.3

பச்சையான மீனை விற்றுப் பெற்ற வெண் நெல்லினது மாவைத் தயிர்விட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை
உன் குதிரைகள் உண்ணத் தருவோம்.
ச.வே.சு – உரை.
இவர்,

தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே

என்று பாடங்கொண்டும் ,குதிரைகளுக்கு என்று வலிந்து
பொருள்கொள்கிறார்.
இங்கும் மிதவை என்பதற்குக் கூழ் என்றே பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது.

இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, தலைவன் இரவில் தங்கினால் இரவு உணவாகத் தலைவன் தனக்கோ,
தன் குதிரைக்கோ தலைவியிடம் பெறும் உணவாகவே இந்த நெய்தல் திணைப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது.

2.5

கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் – புறம் 215/1-5

2.5.1

கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும்
தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த
வேளையினது வெள்ளிய பூவை வெள்ளிய தயிரின்கண் பெய்து,
இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும்
அவரை கொய்வார் நிறைய உண்ணும்
ஔவை.சு.து. உரை
விளக்கம் – வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத்
தாளிதம் செய்யப்பட்ட புளிங்கூழ் ஈண்டு

அம்புளி மிதவை

யெனப்பட்டது.

2.5.2

பிளவைக் கொண்ட வரகுக் கதிரின் அரிசியைக் குற்றி வடிக்கப்பெற்ற சோற்றையும் பூப்பொடி எருப்போலக்
கிடக்கும் தெருவில் புழுதியில் மலர்ந்த வேளைப் பூவினைத் தயிரில் கலந்து ஆயர்மகள் ஆக்கிய இனிய
புளிங்குழையும் அவரை பறிப்பார் நிரம்ப உண்ணும்
ச.வே.சு – உரை.

இங்கும் நாம் கவனிக்கவேண்டியது இந்த மிதவை ’ஆய்மகள்’ சமைத்தது, அதாவது, இடையர் வீட்டு மக்கள்
உண்ணுவது.

2.6

பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – மலை 416,417

2.6.1

பல ஆட்டினங்களையுடைய திரள்களிலே இராக்காலத்தையுடையிராய்ச் செல்லின்
பாலும் பாற்சோறும் நுமக்கு என்று சமையாமல் தமக்குச் சமைத்திருந்தவற்றைப் பெறுகுவீர்
– நச்சினார்க்கினியர் உரை.

2.6.2

. பொ.வே.சோமசுந்தரனாரும் இதனையே பொருளாகக் கொள்வார்.
பின்னர், விளக்கத்தில், மிதவை – பாற்சோறு, இனி, மிதவை வெண்ணெயுமாம் என்பார் அவர்.

இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, இந்த மிதவை இடைக்குல மக்களின் இரவு உணவு என்பதை. இரவில்
திடீரென்று அவர்கள் வீட்டுக்குப் போனாலும், உடனே கிடைப்பது.

மேற்கண்ட குறிப்புகளினின்றும் நாம் பெறுவது :
1. மிதவை என்ற உணவுப்பொருள் குறிப்பது: 1) சோறு, 2) கூழ் அல்லது கஞ்சி, 3) பொங்கல், 4) பால்சோறு,
5) வெண்ணெய்.
2. இது 1) அரிசியினால் செய்யப்படுவது, 2) கொள்ளும் பயறும் கலந்து செய்வது, 3) உழுந்தங்களியினால் ஆனது,
4) அரிசிமாவினால் ஆனது, 5) வரகுச்சோறு, வேளைப்பூ கடைந்தது ஆகியவை கலந்தது.
3. இது உழைப்பாளிகளான நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் (middle/lower middle class people) உணவு.
4. இந்த உணவு காலையிலோ, இரவிலோ உண்னப்படுகிறது.
5. எதிர்பாராமல் திடீரென்று வீட்டுக்கு வருகிற விருந்தாளிகட்கு உடனடியாக எடுத்து உண்ணக்கொடுப்பது.

எந்தவோர் உரையாசிரியரும் இந்த உணவுப் பொருள் ஏன் மிதவை எனப்படுகிறது என்பதற்கான விளக்கம்
அளிக்கவில்லை. மிதவை என்பதன் அடிச் சொல் மித (float). மிதப்பது மிதவை என்ற பொருளில் நீரின் மேல்
மிதக்கும் தெப்பம் போன்றவைகளை மிதவை எனலாம். பரிபாடலில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதைக் கண்டோம்.
ஆனால் இந்த உணவுப்பொருள் எதன் மீது மிதக்கிறது?
பொதுவாகச் சிற்றூர்களில் உள்ள உழைப்பாளிகள் வீட்டில் ஒருநேரம் மட்டும்தான் சமையல் நடக்கும். அவரவர்
தொழிலைப் பொருத்து, காலையிலோ, மாலையிலோ ஒருநேரம் சமைப்பர்கள். அவ்வாறு காலையில் சமைத்து
மீந்ததை மாலையிலோ, மாலையில் சமைத்து மீந்ததைக் காலையிலோ உண்பார்கள். ஆக்கிய சோறு
கெட்டுவிடாமல் இருக்க அதன்மேல் நீர் ஊற்றி வைப்பார்கள். சில இடங்களில் இதனை வெந்நிப்பழசு என்பார்கள்.
சில சமயங்களில் இந்தப் பழைய சோறும் கெட்டுப்போய்விடும்.
எனவே சோறைக் குழைவாக ஆக்கி, கைச்சூட்டில் உள்ளங்கையில் உருட்டி, உருண்டைகளாக ஆக்கி, ஒரு பெரிய
சட்டியில் மோரிலோ, புளிச்சதண்ணி எனப்படும் புளித்த நீரிலோ போட்டுவிடுவார்கள். தேவைப்படும்போது ஒரு
உருண்டை அல்லது ஒரு மிதவையை எடுத்து, பால், தயிர், மோர், புளிச்சதண்ணி அல்லது புளிப்பாகக் கடைந்த
கீரை ஆகியவற்றை ஊற்றிகூழாகப் பிசைந்துகொண்டு உண்பார்கள். அந்தக் காலத்தில் மிகவும் ஏழைமக்கள்
கேப்பைக் களியைக் கிண்டி, இவ்வாறு உருண்டைகளாக்கி ஏதாவது ஒரு நீர்மப்பொருளில் மிதக்கவிட்டு
வைத்திருப்பார்கள். அதுவும் இடையர் வீடுகளில் பாலுக்கா பஞ்சம்? திடீரென்று இரவில் விருந்தாளிகள்
வந்துவிட்டால், அந்த நேரத்தில் அடுப்புப் பற்றவைக்க மாட்டார்கள். இருக்கிறது பால், மிதக்கிறது களி மிதவை.
பாலும், மிதவையும் பண்ணாது கொடுத்துவிடுவார்கள். பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் என்ற
மலைபடுகடாம் வரிக்கு இதுதான் சிறந்த பொருளாகலாம்.
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற ஒரு பாடல் உண்டு. நெல்லை யாராவது சோறாக ஆக்குவார்களா? நெல்லைக்
குற்றி அரிசியாக்கி, அதனை நீரிலிட்டு வேகவைத்த சோறுதான் நெல்லுச்சோறு. கேப்பைக்களி என்கிறோம்.
கேப்பையைத் (கேழ்வரகு) திரித்து,மாவாக்கி, நீரில் கரைத்து, கிண்டிவிட்டு வேகவைத்து, சற்று இறுகிய பின்னர்
உருண்டையாக்கினால் அது கேப்பைக்களி. அதை மோரில் மிதக்கவிட்டால் களி மிதவை.

’வெண்ணெல் மாஅ தயிர் மிதி மிதவை

என்ற அகநானூறு அடிக்கு இவ்வாறுதான் பொருள்கொள்ளவேண்டும்.
எனவே, பச்சரிசிச் சோற்றைக் குழைய ஆக்கியோ, அரிசி அல்லது பயறுகளின் மாவைக் களியாகக் கிண்டியோ,
சூடாக முதலில் உண்டுவிட்டு, மீந்ததை உருண்டைகளாக்கி ஒரு நீர்ப்பொருளில் மிதக்கவிடுவதே மிதவை.
பின்னர் இதனைப் பாலிலோ, தயிரிலோ, புளித்தநீரிலோபுளிப்பான கீரைக்கடைசலிலோ கரைத்துக் கூழாகக்
குடிப்பது வழக்கம்.
இந்தப் பொருளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மிதவை என்றசொல் வரும் பாடல்வரிகளைப் படித்தால் பாடல்
அடிகளின் முழுப்பொருளையும் நுண்ணிதின் உணரலாம்.

மேல்


மிதி

1. (வி) 1. கால் பதி, அடி வை, tread on, walk, step
2. காலால் துவை, அழுத்து, tread down, trample on
– 2. (பெ) மிதித்துத் திரட்டப்பெற்ற கவளம், Food trampled and formed into a ball

1.1

மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன – பெரும் 207

மிதி(த்து ஊதுகின்ற) உலை(யைக் கொண்ட)கொல்லனுடைய முறிந்த கொறடை ஒத்த

மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23

மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே

1.2

நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394

நெடிய கைகளையுடைய யானைக்கு இடும் நெய்வார்த்து காலால் துவைத்த கவளத்தை

2

நெய்ம் மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை – அகம் 400/7

நெய் பெய்து மிதித்து இயற்றிய கவளத்தை வெறுத்த கொழுவிய சோற்றை உண்ணுதலையுடைய

மேல்


மிதுனம்

(பெ) மிதுனராசி, Gemini of the zodiac;

புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல்
அங்கி உயர் நிற்ப – பரி 11/6,7

புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில்
கார்த்திகை உச்சமாக நிற்க

மேல்


மிரியல்

(பெ) மிரியம், மிளகு, pepper

சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை – பெரும் 78-80

சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பலாப்பழத்தை ஒப்ப, மிளகின்
ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும்,
உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய

மேல்


மிலேச்சர்

(பெ) துருக்கர், people from Beluchisthan

உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக – முல் 65,66

உடம்பை ஆட்டிப் பேசும், (வாய்)பேசாத நாவினையுடைய (ஊமைகள்)
சட்டை போட்ட மிலேச்சர் அருகில் உள்ளோராக

மிலேச்சர் – துருக்கர். இவர் பெலுச்சித்தானத்தினின்றும் வந்தவர் என்றும் பெலுச்சர் என்பதே மிலேச்சர் எனத்
திரிந்து வழங்கிற்றென்றும் கூறுப என்பார் பொ.வே.சோ. அவர்கள்.
இவர்கள் போர்ப்பாசறையில் அமைக்கப்பட்ட மன்னனின் பள்ளியறைக் காவலர் என முல்லைப்பாட்டு கூறுகின்றது.
இவர்கள் பேசமுடியாதவர்களாக இருந்திருப்பர் போலும். எனவே சைகையினால் பேசுவதையே ‘உடம்பின்
உரைக்கும் உரையா நாவின்’ என்கிறார் புலவர் என்பர்.
ஆனால் இவர்கள் வெளிநாட்டினராதலால், தமிழ் மொழி தெரியாத காரணத்தால், சைகையில் பேசினர் என்பதால்
உடம்பின் உரைக்கும் என்று புலவர் கூறுகிறார் என்றும் கூறுவர்.

யவனர்களின் மேற்சட்டையை மெய்ப்பை என்பர்.

மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர் – முல் 60,61

என்று இதே முல்லைப்பாட்டு யவனர் சட்டை பற்றிக் கூறுகிறது. இந்த யவனரின் உடையினின்றும் மிலேச்சரின்
உடை வேறுபட்டதாக இருந்ததால் இதனைப் படம் என்கிறார் புலவர்.

இன்று நாம் சட்டை ‘போடுவது’ என்று சொல்கிறோம். அன்றைய நாளில் சட்டைக்குள் ‘புகுவதாக’ச்
சொல்லியிருக்கின்றனர்.

மெய்ப்பை புக்க யவனர் – படம் புகு மிலேச்சர்.

மேல்


மிலை

(வி) அணி. சூடு, wear, put on

மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் – புறம் 24/8

மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட தலைமாலையைச் சூடிய ஆடவர்

தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 115-116

தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,
அழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி

மேல்


மிழலை

(பெ) 1. மென்மையான/இனிமையான பேச்சு, soft/sweet talking
2. மிழலைக்கூற்றம், சோழநாட்டின் ஒரு பகுதி, a section of the chozha country

1

மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் – நற் 209/5

மழலைச் சொல் கொண்ட அழகிய இளமகளின் மென்மையான பேச்சான இனிய குரலை

2

ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு – புறம் 24/18,19

பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது
நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக்கூற்றத்துடனே

மிழலைக்கூற்றம் அல்லது மிழலைநாடென்பது சோழ நாட்டின் கடற்கரைப் பகுதியாம்.

மேல்


மிழற்று

(வி) மென்மையாகப்பேசு, speak softly and gently
இனிமையான குரலில் பேசு, speak with a sweet voice

புன் காழ் நெல்லி பைம் காய் தின்றவர்
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி – அகம் 54/15,16

புல்லிய விதைகளையும் கொண்ட நெல்லியின் பசுங்காயைத் தின்றவர்
நீர் குடிக்கும்போது பெறும் சுவையைப் போல, இனிய மொழிகளைக் கூறி,

மேல்


மிளிர்

(வி) 1. ஒளிர், பிரகாசி, சுடர்விடு, shine, gleam, glitter, sparkle
2. பிறழ், புரளு, turn, roll
3. கீழ்மேலாகு, be upset, turn topsy-turvy
4. புரட்டித்தள்ளு, roll, turn over

1

பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர
உருமு சிவந்து எறியும் பொழுதொடு – நற் 104/9,10

பாம்புகளை உடைய மலைப் பிளவுகளையுடைய உயர்ந்த மலைகள் ஒளிர்ந்து மின்னும்படியாக
இடியேறு சினந்து இடிக்கும் பொழுதோடு

2

மலங்கு மிளிர் செறுவின் – புறம் 61/3

விலாங்குமீன் பிறழ்கின்ற செய்யின்கண்ணே

3

உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 92-94

உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் கீழ்மேலாகக் குத்திப் புரட்டி,
கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்

4

காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே – நற் 2/9,10

காற்றோடு கலந்த பெருமழை பெய்யும்போது
பெரிய மலைப்பாறைகளைப் பெயர்த்துத்தள்ளும் பேரிடியினும் கொடியதாகும்

மேல்


மிளிர்ப்பு

(பெ) புரட்டிவிடுதல், rolling, turning over

பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல் – கலி 45/4

பெரிய மலையையே புரட்டிவிடுவதைப் போன்று காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்யும் நேரத்தில்

மேல்


மிளிர்வை

(பெ) குழம்பிலிடுங் கறித்துண்டு, Pieces of flesh and vegetables in sauce

கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு – நற் 60/4,5

கரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை
உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்

மீன்குழம்பில் கிடக்கும் மீன்துண்டுகளைத்தான் இங்கு மிளிர்வை என்கிறார் புலவர். மிளிர் என்றால்
சுழலு, புரளு என்ற பொருள் உண்டு. போர்க்களத்தில் வாள்கள் சுழலுவதை,

கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப – புறம் 371/10

என்கிறது புறநானூறு. கொதிக்கிற குழம்பில் புரண்டு புரண்டு சுழன்று வெந்த மீன்துண்டுகள் அல்லது
கறித்துண்டுகளே மிளிர்வை எனப்படுகின்றன.

மேல்


மிளை

(பெ) 1. காவற்காடு, Wood, forest, serving as a defence
2. குறுங்காடு, thicket, copse
3. காவல், watch, guard
4. ஒரு நாடு, a province

1

கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை
அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் – புறம் 21/5,6

வெயிற்கதிர் நுழையாத மரம் செறிந்த காவற்காட்டினையுடைத்தாய்
அணைதற்கரிய சிற்றரண்களால் சூழப்பட்ட கானப்பேர் என்னும் அரண்

2

சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று – அகம் 228/9

பிரம்பு காடாக வளர்ந்திருக்கும் சாரல் பொருந்திய வழியிலே

3

வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர்
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் – மலை 409,410

சங்கு (போன்ற வெண்மையான)பசுக்களின் இனிய பாலை, கிடையைக் காவல் சூழ்கின்ற இடையர்களின்,
வளையல்கள் அணிந்த பெண்கள், (நீவிர்)மகிழும்படி கொண்டுவந்து (உள்ளங்கையில்)ஊற்றுகையினால்

4

மிளை நாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த
வரி மரல் கறிக்கும் மட பிணை – அகம் 133/16,17

மிளை என்னும் நாட்டின் பாலை நெறியிலீரமுடைய மோட்டு நிலத்தே தழைத்த
வரிகளையுடைய மரலைக் கடித்துண்ணும் மடப்பத்தையுடைய பெண்மானுடன்

மேல்


மிறை

(பெ) வளைவைச் சரிசெய்யும் அமைப்பு, the structure for straightening a bent rod

அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக
திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/5-7

போரில்பகைவரை மேற்செல்லாதவாறு தடுத்து, தான் முன்னேநின்று வாளால் வெட்டி வீழ்த்தின
களிறாகிய பிணத்தினது கொம்புகளையே அமைப்பாகக் கொண்டு
கோணிய கூரிய வாளை நிமிர்த்துக்கொண்டு

வாள் திரிந்ததாயினும் அதன் வாய் மடியாமையின் எயிற்றின் இடையே தொடுத்து வளைவு போகத்
திருத்தினான் என்பர் என்கிறார் ஔவை.சு.து. அவர்கள்.
அதாவது, போரில் யானையின் துதிக்கையை வெட்டி யானையை வீழ்த்திய வீரனின் வாள் வளைந்துவிட்டது.
வளைந்த வாளை, விழுந்துகிடக்கும் யானையின் இரண்டு தந்தங்களுக்கு நடுவே செருகி, அந்த வாளின்
வளைவைச் சரிசெய்கிறான் அந்த வீரன். எயிறு என்பது இங்கே யானையின் தந்தங்கள்.
வளைந்து போன நீண்ட இரும்புக் கம்பிகளைச் சரிசெய்வதற்காக, நட்டுக்குத்தாக இறுக்கப்பட்ட இரண்டு சிறிய கம்பி
அல்லது முளைகளுக்கு நடுவே அந்தக் கம்பியைச் செருகி கம்பியின் வளைவினை நிமிர்ப்பார்கள்.இந்த அமைப்பே
இங்கு மிறை எனப்படுகிறது எனலாம்.

ச.வே.சு அவர்கள் மிறை என்பது தீட்டுப்பலகை என்பார். வாளைத் தீட்டிக் கூர்மையாக்குவது
தீட்டுப்பலகை. அந்தத் தீட்டுப்பலகையின்மீது வாளை வைத்து சம்மட்டி அல்லது சுத்தியலால் தட்டி வளைவை
எடுப்பார்கள்.
இங்கு யானையின் கொம்புகளின் மீது வாளை வைத்து எதனாலோ அடித்து வாளின் நெளிவைச் சரிவெய்வதாகக்
குறிப்பிடப்படவில்லை.
எனவே படத்தில் காட்டியவாறு, வளைவைச் சரிசெய்யும் இரண்டு சிறிய கம்பிகளைக் கொண்ட அமைப்பு என்பதே
மிறை என்பதற்கான பொருள் எனக் கொள்ளலாம்.

படத்தில் உள்ள யானையின் துதிக்கையை நீக்கிவிட்டுப் படத்தைப் பாருங்கள். அதுதான் வெட்டப்பட்டுவிட்டதே!
யானையின் தந்தங்களுக்கிடைய சிவப்பாகக் காட்டப்பட்டுள்ளதுதான் வீரனின் வாள்.

ஔவை.சு.து. அவர்கள் மிறை என்பதற்கு வளைவு என்று பொருள்கொள்வார். தமிழ்ப்பேரகராதியும் அவ்வாறே
கொள்கிறது.

ஒரு கை இரும்பிணத்து எயிறு மிறை ஆக திரிந்த வாய் வாள் திருத்தா

, என்பதில் மிறை என்பதனை எயிறு
என்ற சொல்லுடன் இணைத்து மேற்கூறிய விளக்கத்தில் பொருள்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் ஔ.சு.து. அவர்கள் இதனை,

ஒரு கை இரும் பிணத்து எயிறு,
மிறையாக திரிந்த வாய் வாள் திருந்தா

எனப் பிரித்து, மிறையாக என்பதனை வாளுக்கு ஏற்றிச் சொல்வார்.
அவர் கூற்றின்படி, களிறாகிய பிணத்தினது கோட்டிடையே
வளைவாகக் கோணிய கூரிய வாளை நிமிர்த்திக்கொண்டு
என்று அவரின் உரையில் காண்கிறோம்.

இனி,
கம்பராமாயணம், பாலகாண்டத்தில் மிறை என்பது ஒரு வினைச்சொல்லாக வருகிறது.

ஓடின அரக்கரை உருமின் வெங் கணை
கூடின; குறைத் தலை மிறைத்துக் கூத்து நின்று
ஆடின – கம்ப – பாலகாண்டம் – 43

பயந்து ஓடிய அரக்கர்களை; அவர்களைக் கொல்லுமாறு ராமபிரானால் ஏவப்பட்ட கொடிய அம்புகள்;
உரிய இலக்கைப் போய்ச் சேர்ந்தன; அவர்களது குறையுடல்களான கவந்தங்கள் விறைத்து நின்று ஆடலாயின;

இங்கே மிறைத்து என்ற சொல்லுக்கு விறைத்து என்று பொருள்கொள்ளப்பட்டுள்ளது. விறைத்தல் என்பது
வளைவு இல்லாமல் நேராக நிமிர்ந்திருத்தல். எனவே, மிறை என்ற பெயர்ச்சொல் வளைவு இல்லாமல் நேராக
நிமிர்த்தும் ஓரமைப்புக்குத்தான் பொருந்தி வரும்.

மிறை என்ற வினைச்சொல்லுக்கு, துன்புறுத்துதல், விறைத்தல். மிடுக்காயிருத்தல், துன்பப்படுதல். பாடுபடுதல்
என்ற பொருள்களே பேரகராதியில் உள்ளன. வளை(த்)தல் என்ற பொருளில்லை. ஆனால் மிறை என்ற
பெயர்ச்சொல்லுக்கு மட்டும் அச்சம், குற்றம், வருத்தம், வேதனை, அரசிறை ஆகிய பொருள்களோடு
வளைவு என்ற ஒரு பொருளையும் சேர்த்துக்கொள்கிறது. இது பொருத்தமானதாகத் தெரியவில்லை.

யானையின் துதிக்கையை வெட்டிய வாள் வளைந்தபோது, இறந்து விழுந்த யானைக் கொம்புகளிடையே வாளைக்
கொடுத்து நிமிர்த்திய காட்சியைப் போலவே சீவக சிந்தாமணியிலும் இரண்டு காட்சிகள் வருகின்றன. அங்கே
மிறைக்கொளி திருத்தினான் என்ற தொடருக்கு வளைவினைத் திருத்தினான் என்றே உரையாசிரியர்கள் பொருள்
கொள்கின்றனர். அவ்விடங்களிலும் மிறைக்கொளி என்ற தொடருக்கு மிறையாகக் கொண்டு என்று பொருள்
கொள்வது சிறப்பாகத்தெரிகிறது.

புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள் வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே – சிந்தாமணி – நாமகள் இலம்பகம் – 284

குஞ்சரம் குனிய நூறி தடாயின குருதி வாள் தன்
நெஞ்சகம் நுழைந்த வேலை பறித்து வான் புண்ணுள் நீட்டி
வெம் சமம் நோக்கி நின்று மிறைக்கொளி திருத்துவான் கண்டு
அஞ்சி மற்ற அரசர் யானை குழாத்தொடும் இரிந்திட்டாரே – சிந்தாமணி – மண்மகள் இலம்பகம் – 2293

மேல்


மின்

1. (வி) மின்னு, விளங்கு, ஒளிர், பிரகாசி, glitter, shine, gleam, sparkle
– 2. (பெ) 1. ஒளி, சுடர், பிரகாசம், light, flash, glitter
2. மின்னல், lightning
– 3. (இ.சொ) முன்னிலை ஏவல் பன்மை விகுதி, A verbal suffix of the imperative plural;

1

மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு – மலை 5

விளங்குகின்ற கரிய மயில் இறகுகளின் அழகிய கொத்து(கட்டப்பட்ட) கொம்பு வாத்தியமும் சேர்த்து
மின் இரும் பீலி – மின்னுகின்றதும், கருநிறமமைந்ததுமாகிய மயிலிறகு – பொ.வே.சோ. உரை

2.1

மின் அவிர்
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 168,169

ஒளி மின்னும்
நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலைப் பயின்ற யானையின்

2.2

மின் நேர் மருங்குல் குறு_மகள் – அகம் 126/21

மின்னலையொத்த இடையினையுடைய இளைய தலைவியின்

3

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 262

கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி 15/34,35

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே புறம் 97/25

எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14

மேல்


மின்மினி

(பெ) ஒளிவீசும் ஒருவகைப் பூச்சி, firefly

கயம் தலை மட பிடி இனன் ஏமார்ப்ப
புலி பகை வென்ற புண் கூர் யானை
கல்_அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி
சிறு பல் மின்மினி போல பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட – அகம் 202/2-8

மெல்லிய தலையினையுடைய இளைய பிடி இனத்துடன் இன்பமடைய
புலியாகிய பகையை வென்ற புண் மிக்க ஆண் யானை
கற்களை இடத்தே கொண்ட பக்க மலையில் கையை உயர்த்தி பெருமூச்செறிதலால்
வேங்கை மரத்தினது நல்ல கொத்துக்களிலுள்ள நறுமணமுடைய பூக்கள், கொல்லன்
துருத்தியை மிதித்து ஊதும் உலையில் பிதிர்ந்து எழும் தீப்பொறி போலப் பொங்கி எழுந்து
சிறிய பலவாய மின்மினிப்பூச்சிகளைப் போல பலவும் ஒருங்கே
நீலமணியின் நிறத்தின் ஒத்த பெரிய புதரில் பரவி விழும்

மேல்


மின்னு

1. (வி) 1 ஒளிவிடு, ஒளிர், சுடர், விளங்கு, shine, glitter, gleam, glisten, flash
2. மின்னல் அடி, emit lightning
– 2. (பெ) மின்னல், lightning

1.1

ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும்
கரும் கல் கான்யாற்று அரும் சுழி – நற் 292/6,7

ஒளிறுகின்ற வெள்ளைப் பளிங்குக்கற்களோடு, செம்பொன்னும் ஒளிரும்
கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும்

1.2

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மா மழை கடல் முகந்தனவே – நற் 329/10,11

பெரிய வானம் அதிரும்படியாக மின்னலடித்து
கூட்டமான பெரிய முகில்கள் கடல்நீரை முகந்துகொண்டுவருகின்றன

2

பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு – பெரும் 484

பகலில் பெய்கின்ற துளிமழையின்கண் மின்னல் ஓடினாற் போன்று,

மேல்


மின்னுக்கொடி

(பெ) மின்னல், lightning

கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 665,666

கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று
ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற (காலில் அணியும்)நகைகள் ஒலிக்க (வெளியே)வந்து

மேல்