நோ – முதல் சொற்கள்

நோ

(வி) 1. துன்புறு, be grieved
2. வருந்து, be anguished
3. நொந்துபோ, வேதனைப்படு, feel pain, pain struck

1.

நோ இனி வாழிய நெஞ்சே
———————— ————– ———
வலை மான் மழை கண் குறு_மகள்
சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே – நற் 190

துன்புற்று நலிந்துபோவாய்! வாழ்க! நெஞ்சமே
———————- —————- ————
வலைப்பட்ட மானைப்போன்ற, குளிர்ச்சியான கண்களையுடைய சிறுமகளின்
சில சொற்களே பேசும் பவளம் போன்ற வாயினில் தோன்றும் சிரிப்பினால் மகிழ்ந்துபோன நீ! –

2.

நோ_தக்கன்றே காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே – குறு 78/4-6

வருந்தத்தக்கது காமம், ஒருசிறிதும்
நன்று என உணராதவரிடத்தும்
வலிந்து சென்று நிற்கும் பெரும் மடமையை உடையது.

3.

நோகோ யானே நோம் என் நெஞ்சே – நற் 312/1

நொந்துபோயிருக்கின்றேன் நான்! என்னை நொந்துகொள்ளும் என் நெஞ்சமே!

மேல்


நோக்கம்

(பெ) 1. கண்கள், eyes
2. பார்வை, sight, look
3. முகத்தோற்றம், தோற்றம், countenance, expression

1.

பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர
பூ கொடி போல நுடங்குவாள் – பரி 21/58,59

அழகிய ஆடையின் இறுக்கம் நெகிழ, கண்களில் சிவப்பு ஊர,
பூங்கொடியைப் போல வளைந்து ஆடுவாள்

2.

மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று – குறி 25

மான் போல் அமர்ந்த பார்வை(கொண்ட கண்கள்)கண்ணீர் மல்கி, ஒன்றும் செய்ய இயலாமல்

3.

அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு
தூ துளி பொழிந்த பொய்யா வானின்
வீயாது சுரக்கும் அவன் நாள் மகிழ் இருக்கையும் – மலை 74-76

தன் ஆட்சி முழுதையும் கொடுத்தாலும் மனநிறைவடையாத தோற்றத்துடன்,
தூய்மையான துளிகளை மிகுதியாகப் பெய்கின்ற பருவம் தவறாத வானத்தைப் போன்று,
நிற்காமல் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு),

மேல்


நோக்கல்

(பெ) பார்த்தல், seeing

சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும்
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 239,240

தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்,
‘படக்’என்று (அவற்றைத் திரும்பிப்) பார்ப்பதைத் தவிருங்கள், (அது உமக்கு)உரித்தான செயல் அன்று

மேல்


நோக்கு

1. (வி)

1. பார், see, look at
2. கனிவுடன் பார், look at kindly
3. எண்ணிப்பார், ஆராய், look into, consider
4. கவனத்தில் கொள், take to mind

2. (பெ)

1. பார்வை, sight
2. தோற்றப்பொலிவு, countenance
3. அறிவு, knowledge

1.1.

செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/10,11

பகைவரை வெகுண்டு பார்த்த கண் தன்னுடைய
புதல்வனைப் பார்த்தும் சிவப்பு அமையாவாயின

1.2.

அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே – ஐங் 290

அறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப்பெண்ணால்
கனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!

1.3.

புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை – புறம் 329/7,8

வேந்தராகிய செல்வர்கட்கு உண்டான துன்பத்தை எண்ணிப்பாராமல், இரவலர்க்கு
குறைவறக் கொடுக்கும் வள்ளன்மை

1.4.

அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1

அருள் முற்றிலும் அற்றுப்போன தோற்றமுடையவன், அறநெறியைக் கவனத்தில் கொள்ளாதவன், நல்லவற்றைச் செய்யாதவன்,

2.1.

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து
அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 82,83

பார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நன்கமைந்ததும்,
(மென்மையால்)பாம்பின் தோலை ஒத்ததும் ஆன துகிலை நல்கி,

2.2.

நோய் இகந்து நோக்கு விளங்க – மது 13

பிணிகள் நீங்கி அழகு விளங்க

2.3.

எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள்_வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518

பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி,

மேல்


நோதல்

(பெ) வருந்துதல், grieving

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன – புறம் 192/1-3

எமக்கு எல்லாம் ஊர், எல்லாரும் சுற்றத்தார்
கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது பிறர் தருவதால் வருவன அல்ல,
வருந்துதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன

மேல்


நோல்

(வி) 1. பொறுத்துக்கொள், endure
2. தவம்செய், practise austerities

1.

நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து
காதல் மாறா காமர் புணர்ச்சியின் – அகம் 220/14,15

ஒன்றையொன்று பிரிந்திருத்தலைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பெரிய பறவையாகிய மகன்றிலைப் போல
ஒருவர் நெஞ்சிலே ஒருவர் பொருந்தி
காதல் நீங்காத அழகிய புணர்ச்சியினாலே

2.

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59

இவ்வழிக்கண் (என்னை நீ)சந்தித்ததுவும் (நீ முற்பிறப்பில்)தவம்செய்ததன் பயனே,

மேல்


நோவல்

(வி.மு) 1. வருந்தவேண்டாம், don’t be sad
2. வருந்துகிறேன், I am grieved

1.

வாராமையின் புலந்த நெஞ்சமொடு
நோவல் குறு_மகள் நோயியர் என் உயிர் என – அகம் 25/15,16

(தலைவன்) “வராததினால் வெறுத்துப்போன நெஞ்சத்துடன்
வருந்த வேண்டாம், இளையோளே! வருந்துவதாக என் உயிர்” என

2.

நீர் இல் நீள் இடை
மடத்தகை மெலிய சாஅய்
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/16-18

நீர் இல்லாத நீண்ட நெறியில்
தனது மடப்பத்தையுடைய அழகு கெட மெலிந்து
நடப்பாளோ என்று நான் வருந்துகின்றேன்

மேல்


நோவு

(பெ) வலி, pain

விருந்தின் புன்கண் நோவு உடையர் – புறம் 46/7

முன்பு அறியாத புதியதொரு துன்பத்தின் வலியை உடையவர்

மேல்


நோற்றோர்

(பெ) தவம் செய்தவர், those who did penance

நோற்றோர் மன்ற தோழி – குறு 344
——————- ———————–
பிரிந்து உறை காதலர் வர காண்போரே

தவம் செய்தவர் ஆவர், நிச்சயமாக, தோழி!
——————- ———————–
பிரிந்து வாழும் காதலர் திரும்பிவரக் காண்போர் –

மேல்


நோன்

1. (வி) பொறுமைகாட்டு, endure
2. (பெ.அ) வலிய, strong, mighty

1.

நோனா செருவின் வலம் படு நோன் தாள் – மலை 163

(பகைவர் மேல்)பொறுமைகாட்டாத போர்களையும் (அவற்றில்)வெற்றிபெறும் தீவிர முனைப்பினையுமுடைய

2.1.

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4

தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்,

2.2.

நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55

வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்த

2.3.

கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252

கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில்

2.4.

வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு – நெடு 176

வேப்பம் பூ மாலையைத் தலையிலே கட்டின வலிய காம்பினையுடைய வேலோடே

2.5.

ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2

ஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்

2.6.

வரி மாண் நோன் ஞாண் வன் சிலை கொளீஇ – அகம் 61/7

வரியும் கொண்டு மாண்புற்று விளங்கும் வலிய நாண் பூட்டிய வலிய வில்லை ஏற்றி

மேல்


நோன்மை

(பெ) 1. பொறுமை, endurance
2. வலிமை, strength, vigour

1.

வாய்மை வயங்கிய வைகல் சிறந்த
நோன்மை நாடின் இரு நிலம் – பரி 2/54,55

வாய்மையோ தப்பாமல் ஒளிவிட்டு வரும் விடியற்காலை; உன் சிறந்த
பொறுமையை நோக்கினால் அது இந்த பெரிய நிலவுலகம்

2.

பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை
செரு மிகு சேஎய் – புறம் 14/17-19

போரிடுவோர்க்கு
நடுக்கமுறாத பெரிய நிலம் போன்ற வலிமையையும் கொண்டவனாய்
போரில் முருகவேளை ஒத்துத் தோன்றுவாய்

மேல்


நோன்றல்

(பெ) பொறுத்துக்கொள்ளுதல், enduring

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் – கலி 133/10

அறிவு எனப்படுவது பேதைகளின் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல்,

மேல்


நோனார்

(பெ) பகைவர், foes

நோனார் உயிரொடு முரணிய நேமியை – பரி 4/9

பகைவருடைய உயிரோடு மாறுபட்ட சக்கரப்படையையுடையவனே!

மேல்