நு – முதல் சொற்கள்

நுகம்

(பெ) 1. மாட்டுவண்டியில் காளைகள் பூட்டும் இடம், நுகத்தடி, Yoke
2. வண்டியின் பாரம், சுமை, burden, load
3. பொறுப்பு, stress, pressure
4. கணையமரம், protecting bar of the door
5. முன்னணிப்படை, தூசிப்படை, van of the army
6. வலிமை, power, strength

1.

தெண் கழி விளைந்த வெண்கல் உப்பின்
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை – அகம் 159/1,2

தெளிந்த கழியின்கண் விளைந்த வெண்மையான கல் உப்பின்
விலையைக் கூறி விற்ற வளைந்த நுகத்தையுடைய வண்டிகளின் வரிசை

2.

எருதே இளைய நுகம் உணராவே – புறம் 102/1

காளைகள் இளையன, வண்டியின் பாரத்தை உணரமாட்டா.

3.

எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்
எழுவர் பூண்ட ஈகை செம் நுகம்
விரி கடல் வேலி வியல்_அகம் விளங்க
ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் – சிறு 112-115

(தம்)மேலே வருகின்ற போர்களைக் கடந்த கணையத்துக்கு ஒப்பான திணிந்த தோளினையுடைய
எழுவரும், மேற்கொண்ட கொடையாகிய செவ்விய பாரமாகிய பொறுப்பைப்
பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி
ஒருவனாகத் தானே(தனியொருவனாகப்) பொறுத்த வலிமையையுடைய முயற்சியினையுடையவனும்

4.

வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை
கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை
நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் – பெரும் 126-128

உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சூழ்ந்த காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும்,
உருண்ட கணையமரம் குறுக்கிலிடப்பட்ட ஒட்டுக்கதவினையும், செம்மையான நிலையினையும்(கொண்ட),
நெடிய முனையினையுடைய வலிமையான கழுக்களை நிரைத்த ஊர்வாயிலையும் உடைய,

5.

இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம்
நுகம் பட கடந்து நூழிலாட்டி – மலை 86,87

வெகுதூரத்தில் உள்ளனவாயினும், பகைவர் நாட்டின்
(வண்டிக்கு நுகத்தடி போன்ற)முன்னணிப்படை வீழுமாறு மேற்சென்று (படையினரைக்)கொன்று குவித்து

6.

நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் – பதி 63/15

உன் வலிமையைக் கொண்டு மேலும் பல போர்களை வென்றாய்!

மேல்


நுகர்

(வி) 1. புலன்களால் உணர்ந்து அனுபவி, துய், enjoy through the senses, experience
2. அருந்து, eat and drink

1.

அஞ்சிலோதி அசையல் யாவதும்
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 180,181

“அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட
அஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைத் துய்த்து மகிழ்வேன்” என்று சொல்லி

2.

வசை இல் செல்வ வானவரம்ப
இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம்
தருக என விழையா தா இல் நெஞ்சத்து
பகுத்தூண் தொகுத்த ஆண்மை
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/12-16

உன்னிடமிருந்து இனியவற்றைப் பெறும்போது, ‘அவற்றைத் தனித்தனியே அருந்துவோம்,
கொண்டுவாருங்கள்’ என்று பெறுவோர் விரும்பாமல், மாசற்ற மனத்தினராய்
பகிர்ந்து உண்ணுவதற்காக உணவைத் திரளாகத் தருகின்ற ஆண்மைச் சிறப்பொடு
பிறர்க்கென்று வாழ்பவனாக நீ இருப்பதால்.

மேல்


நுகர்ச்சி

(பெ) 1. அனுபவம், அனுபவிப்பு, experience, enjoyment
2. வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்ளுதல்,
receiving as much as you require
3. உண்ணுகை, eating, feeding

1.

தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ பெரும நின் – ஐங் 368/3,4

குளிர்ச்சியான பக்குவம் கொண்ட வேனில் காலத்தின் இன்பத்தின் அனுபவிப்பை
எம்மோடும் கொள்வாயாக, பெருமானே!

2.

அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி
புரிந்து ஆர்க்கும் வண்டொடு – கலி 30/1-3

அரிய தவத்தைச் செய்தவர்கள் வேண்டியதை வேண்டிய அளவு பெற்றுக்கொள்வது போல, அழகாக
மலர்ந்து கொள்ளாத கிளைகள்தோறும் வேண்டிய அளவு தேனை அமர்ந்து உண்டு
களித்து ஆரவாரிக்கும் வண்டுகளோடு

3.

பருதி உருவின் பல் படை புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண்
வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் – புறம் 224/7-9

வட்டமாகிய வடிவினையுடைய பல படையாகச் செய்யப்பட்ட மதிலால் சூழப்பட்ட வேள்விச்சாலையுள்
பருந்து உண்பதற்காகச் செய்யப்பட்ட இடத்தில் நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து
வேதத்தில் சொல்லப்பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவும்

மேல்


நுகும்பு

(பெ) பனை, வாழை முதலியவற்றின் மடல்விரியாத குருத்து,
Unexpanded tender leaf of palmyra, plantain, etc.,

சோலை வாழை சுரி நுகும்பு – குறு 308/1

சோலை வாழையின் சுருண்ட குருத்து

புல் நுகும்பு எடுத்த நன் நெடும் கானத்து – அகம் 283/13

புற்கள் குருத்தினை விட்ட நல்ல நீண்ட காட்டில்

பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு – புறம் 249/5

பனையின் குருத்தை ஒத்த சினை முற்றிய வரால் மீனொடு

வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி – நற் 92/2,3

வேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
வரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி

மேல்


நுங்கு

1. (வி) விழுங்கு, swallow
– 2. (பெ) பனங்காய்க்குள் இருக்கும் இனிய மென்மையான சதைப்பகுதி
pulpy tender kernel of palmyra unriped fruit

1.

அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக
பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர – கலி 119/1,2

அகன்ற உலகத்தை வெளிச்சமாக்கும் தன் பல கதிர்களையே வாயாகக்கொண்டு
பகலை விழுங்கியது போல, மறைகின்ற ஞாயிறு மலையைச் சேர,

2.

வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின்
இன் சேறு இகுதரும் எயிற்றின் – சிறு 27,28

பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கில் உள்ள
இனிய சுவைநீர் (தன் சுவையால்)தாழ்ந்துபோகும் (ஊறலையுடைய)பற்களையும்

மேல்


நுங்கை

(பெ) உன் தங்கை, your younger sister

நுங்கை ஆகுவென் நினக்கு என- அகம் 386/12

உன் தங்கை ஆகுவேன் உனக்கு என்று

மேல்


நுசுப்பு

(பெ) பெண்களின் இடுப்பு, waist of women

ஒரு முகம்
குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே – திரு 100-102

ஒரு முகம்
குறவரின் இளமகளாகிய, கொடி போன்ற இடையையும்
மடப்பத்தையும் உடைய, வள்ளியோடே மகிழ்ச்சியைப் பொருந்திற்று;

மேல்


நுட்பம்

(பெ) அறிவுநுட்பம், Subtlety, acuteness

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகி
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – மலை 551-553

அகன்ற நாட்டினையும் குறைந்த அறிவினையும் உடையோராய்,
“எம்மிடம் இல்லை” என்று விரித்த கையினராய்,
தம் பெயரைத் தம்முடனேயே எடுத்துச்சென்று மாண்டோர்

மேல்


நுடக்கம்

(பெ) 1. வளைவு, bending, curving
2. வளைந்து வளைந்து ஆடும் ஆட்டம், dancing by bending
3. வளைந்தும் நெளிந்ததுமான அசைவுகள்,
short writhing movements by swaying and wriggling

1.

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள – நற் 15/1,2

முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி

2.

நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் – கலி 32/10

நல்ல கூத்தாடுபவரின் ஆட்டம் போன்று நயமாக ஆடும் மலர்க்கொடிகளோடும்,

3.

சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து
நின் வெம் காதலி தழீஇ நெருநை
ஆடினை என்ப புனலே – ஐங் 71/1-3

வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான
உனது விருப்பத்திற்குரிய காதலியைத் தழுவியவாறு நேற்று
மகிழ்ந்தாடியிருக்கிறாய் என்கிறார்கள் ஆற்றுவெள்ளத்தில்

மேல்


நுடக்கு

1. (வி) 1. மடக்கு, fold
2. கவிழ்த்து, turn upside down
-2. (பெ) மடிப்பு, fold

1.1.

உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும் – புறம் 384/20

உணவுண்ட நல்ல இலைகளில் உண்ணமாட்டாது ஒழித்த மிக்கவற்றை இலையிடையே வைத்து மடக்கவும்

1.2.

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 339,340

கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிக் கவிழ்த்த
வழிந்து சிந்தின கழுநீர் வழிந்த குழம்பிடத்து

2.

ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே – பரி 2/50,51

பகைவரை ஒருசேர அழிக்கும் கூற்றுவனைப் போன்றது உன் சக்கரப்படையின் உடல்;
பொன்னைப் போல ஒளிவிடும் நெருப்பின் (மடிப்பான)கொழுந்துதான் அதன் நிறம்

மேல்


நுடங்கு

(வி) 1. வளை, மடங்கு, bend, fold
2. அசை, ஆடு, அலை, wave, flutter

1.

வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல்
பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் அழல – நெடு 173-175

வாடையின் குளிர்ந்த காற்று அடிக்குந்தோறும் நெளிந்து வளைந்து,
தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்த தீச்சுடரையுடையவாய், நன்றாகிய பலவான
பாண்டில் விளக்கில் பருத்த தீக்கொழுந்து எரிய

2.

நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் – நற் 45/4

நெடிய கொடிகள் மடங்கி அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழைய ஊரின்

மேல்


நுணக்கம்

(பெ) நுண்மை, minuteness, நுரை, foam

கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி
பால கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம்
சிலம்பி நூலின் நுணங்குவன பாறி – அகம் 224/5-8

காற்றின் வேகத்தை ஒத்த விரைந்த ஓட்டத்தினையுடைய குதிரைகளின்
பால் கடையுங்கால் எழும் நுரையின் பெரிய மிதப்பினை ஒத்த
மிக்க வெண்மையான வாயின் தெவிட்டலாய பின்னே வழிந்திடும் மெல்லிய நுரை
சிலம்பியின் நூல் போல் நுணுகுவனவாய்ச் சிதறி

மேல்


நுணங்கு

(வி) 1. நுண்ணிதாகு, be subtle
2. சிறுத்துப்போ, be thin
3. மெல்லியதாகு, be fine
4. நுட்பமாகு, sharp
5. நுட்பமாகு, minute
6. நுட்பமாகு, Difficult to detect or grasp by the mind or analyze

1.

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கி
கடுத்தலும் தணிதலும் இன்றே – குறு 136/1-3

காமம் காமம் என்கிறார்களே; அந்தக் காமம்
வருத்தமும் நோயும் அன்று; நுண்ணிதாகி
மிகுவதும் குறைவதும் அன்று

2.

யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் – நற் 157/4

ஆற்றில் அரித்தோடும் நீரோட்டம் சிறுத்துப்போன பதமான இளவேனில் காலத்தில்

3.

செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின்
கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் – மது 432,433

செவ்வானத்தை ஒத்த, சிவந்து மெல்லிய வடிவில்,
கண்களை மயக்கி தெறித்துவிழப்பண்ணும் ஒள்ளிய பூவேலைப்பாடமைந்த ஆடைகளை

4.

நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 646,647

நூற்கள் (கூறும்)வழிமுறையைத் தப்பாத நுட்பமான நுணுகிய ஆராய்ச்சியின்)தெளிவினையுடையவராய்;(உள்ள)
ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;

5.

நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை – மலை 35

நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும்

6.

நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய
இனமழை தவழும் ஏழில்குன்றத்து – அகம் 345/6,7

நுட்பமான, நுண்ணிய செய்யுட்களை இயற்றிய புலவனால் பாடப்பெற்ற
கூட்டமான மேகங்கள் தவழும் எழில்குன்றத்து

மேல்


நுணல்

(பெ) 1. தேரை, toad
2. தவளை, frog

1.

உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து – நற் 59/1

உடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு

2.

வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட – ஐங் 468/1

வரிகளைக் கொண்ட தவளைகள் மிக்கு ஒலிக்க, தேரைகள் ஒன்றாய் ஒலிக்க

மேல்


நுணவம்

(பெ) மஞ்சணத்தி, மஞ்சள்நாறி மரம். Indian mulberry, Morinda citrifolia;

நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51

தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்

இது கரிய அடிப்பகுதியையும், பெரிய கிளைகளைகளையும், மிக்க நறுமணத்தையும் உடையது.

அவரோ வாரார் தான் வந்தன்றே
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை
கரும் கால் நுணவம் கமழும் பொழுதே – ஐங் 342

அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
வண்டினங்கள் களிப்புடன் பாடிக்கொண்டு சுற்றித்திரிகின்ற, பெரிய கிளைகளையும்
கரிய அடிப்பகுதியையும் கொண்ட நுணா மரங்கள் நறுமணத்தைப் பரப்புகின்ற இனிய பருவம்

இதன் பூக்கள்வெள்ளைநிறத்தில் இருக்கும்.

சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த
கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/15,16

மேல்


நுணவு

(பெ) பார்க்க : நுணவம்

கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூ – அகம் 345/16

மேல்


நுதல்

1. (வி) சொல், பேசு, குறிப்பிடு, tell, speak, denote
2. (பெ) நெற்றி, forehead

1.

மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/14,15

குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால் சொல்லப்பட்ட
குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர்

2.

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

மேல்


நுதால்

(வி.வே) விளிவேற்றுமை – நுதலையுடையவளே – vocative case – Oh, the lady with (a beautiful) forehead

நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/4

அவரின் போக்குப்படி நடந்துகொள்ளாமல் மிகவும் ஏங்கி நடுங்குகிறாயே, நறிய நெற்றியையுடையவளே

மேல்


நுதி

(பெ) நுனி, முனை, tip

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 78,79

கூரிய நுனி(யையுடைய தோட்டி) வெட்டின வடு அழுந்தின புகரையுடைய நெற்றியில்
வாடாத மாலையான பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய,

மேல்


நுந்தை

(பெ) நும் தந்தை, your father

எந்தை திமில் இது நுந்தை திமில் என – நற் 331/6

என் தந்தையின் படகு இது, உனது தந்தையின் படகு என்று சொல்லிக்கொண்டு

மேல்


நுமர்

(பெ) உன்னைச்சேர்ந்தவர்கள், உன்னுடைய உறவினர், your well-wishers, your relatives

நேர் இறை முன்கை பற்றி நுமர் தர
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள் – குறி 231,232

“நேர்த்தியாக (தோளின்)இருபக்கங்களிலும் அமைந்த கைகளின் முன்பக்கத்தைப் பிடித்து உன்வீட்டார் (எனக்குத்)தர
நாட்டில் உள்ளார் (எல்லாம்)அறியும் நன்மையுடைய திருமணத்தை நிகழ்த்துவேன், சில நாட்களில்,

மேல்


நுவ்வை

(பெ) உன் தங்கை, your younger sister

நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே – நற் 172/3-5

நெய் கலந்த இனிய பாலை ஊற்றி இனிதாக வளர்க்க,
உம்மைக்காட்டிலும் சிறந்தது இந்த உமது தங்கையானவள் என்று
அன்னை கூறினாள் இந்தப் புன்னையது சிறப்பைப்பற்றி;

மேல்


நுவணை

(பெ) இடித்த மாவு, flour

குற_மகள்
மென் தினை நுவணை உண்டு தட்டையின்
ஐவன சிறு கிளி கடியும் நாட – ஐங் 285/1-3

குறமகள்
மென்மையான் தினையின் மாவினை உண்டபடியே தட்டை என்னும் கருவியை ஓங்கி முழக்கி,
ஐவன நெல் கதிரை உண்ணும் சிறிய கிளிகளை விரட்டிவிடும் நாட்டினனே!

மேல்


நுவல்

(வி) சொல், say, speak, utter

இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு – மலை 60

புகழ் பாடுதல்(என்ற) விதையினையும் (பரிசில்மீது)விருப்பம் (என்ற)ஏரினையும் (கொண்ட)உழவர்க்கு(=பரிசிலர்க்கு)

சாறு என நுவலும் முது வாய் குயவ
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ – நற் 200/4,5

திருவிழா பற்றிய செய்திகளைக் கூறும் முதுமை வாய்க்கபெற்ற குயவனே!
இதனையும் அங்கு தெரிவிப்பாயாக

மேல்


நுவறல்

(பெ) சொல்லுதல், saying, uttering

அவனே பெறுக என் நா இசை நுவறல் – புறம் 379/2

அவன் ஒருவனே பெறுவானாக, என் நாவால் புகழ்ந்து சொல்லப்படுவதை

மேல்


நுவறு

(வி) – அராவு, file

நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் – மலை 35

நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும்

மேல்


நுளம்பு

(பெ) கொசு, mosquito, ஈ, fly

ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/5,6

பசுக்களின் (கழுத்திலணிந்த), ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும்
நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை

மேல்


நுளைமகள்

(பெ) மீனவப்பெண், fishermen lady

நுதி வேல் நோக்கின் நுளைமகள் அரித்த
பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 158,159

(கூர்)முனையுள்ள வேல்(போன்ற) பார்வையினையும் உடைய மீனவமகளால் அரிக்கப்பட்ட,
பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப் பரதவர் (கொணர்ந்து உம்மை)ஊட்ட

மேல்


நுளையர்

(பெ) பரதவர், fishermen

நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்
பொலம் பூண் எவ்வி – அகம் 366/11,12

முற்றிய தேனாகிய கள்ளின் தெளிவை பரதவர்க்கு அளிக்கும்
பொற்பூண் அணிந்த எவ்வி என்பானின்

மேல்


நுனை

(பெ) முனை, point, tip, end

அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/3

அம்பின் குப்பி முனையைப் போன்று அரும்பிய இலுப்பையின்

மேல்