நி – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்


நிகர்
நிச்சம்
நிணம்
நிணன்
நித்தம்
நித்திலம்
நிதி
நிதியம்
நிமிர்
நிமிரல்
நியமம்
நிர
நிரப்பம்
நிரப்பல்
நிரப்பு
நிரம்பு
நிரயம்
நிரல்
நிரவு
நிரை
நிரையம்
நிலம்தருதிருவின்நெடியோன்
நிலவர்
நிலவரை
நிலவு
நிலியர்
நிலீஇயர்
நிவ
நிவப்பு
நிழத்து
நிழல்
நிழல்காண்மண்டிலம்
நிழற்று
நிறப்படை
நிறம்
நிறன்
நிறு
நிறை
நின
நினவ

நிகர்

1. (வி) ஒத்திரு, resemble
– 2. (பெ) ஒளி, brightness, splendour

1.

மடவள் அம்ம நீ இனி கொண்டோளே
தன்னொடு நிகரா என்னொடு நிகரி
பெரு நலம் தருக்கும் என்ப – ஐங் 67/1-3

அறியாமையுடையவள், நீ இப்பொழுது கொண்டிருப்பவள்;
தன்னோடு ஒப்பிடமுடியாத என்னைத் தனக்கு ஒப்பாகக் கூறிக்கொண்டு
தன்னுடைய பெண்மைநலம் பெரிது என்று பெருமைபேசிக்கொண்டிருக்கிறாள் என்கிறார்கள்

2.

தாது சேர் நிகர் மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே –
குறு 311/6,7

பூந்தாதுக்கள் சேர்ந்த ஒளிபொருந்திய மலர்களைக் கொய்துகொண்டிருந்த
தோழிகள் எல்லாரும் சேர்ந்து பார்த்தார்களே!

மேல்


நிச்சம்

(பெ) நித்தமும், எப்பொழுதும், daily, always

அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள்
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றி சுழலும் என் நெஞ்சு – கலி 110/8-11

உன் மீதுள்ள அச்சத்தால் உன்னை விட்டு என்னிடம் வந்து, இங்கும் இருக்கமாட்டாத வருத்தத்தால்
உன்னிடம் சென்று,
இவ்வாறாக நித்தமும் தடுமாறுகின்றது, மென்மையான இயல்பினையுடைய ஆயர்மகளே!
தயிர் கடையும் மத்தில் கட்டிய கயிற்றினைப்போல் உன் அழகைச்
சுற்றிச் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு;

மேல்


நிணம்

(பெ) 1. கொழுப்பு, fat
2. ஊன், தசை, மாமிசம், flesh

1.

இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி – மலை 244

வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்)மிகுதியாய் வெளிவர,

2.

நிணம் படு குருதி பெரும் பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இரும் களம்தோறும் – புறம் 392/7,8

தசையும் குருதியும் தோய்ந்த பெருக்கால் உண்டாகிய ஈரம் பொருந்திய,
துன்பம் தரும் தெய்வங்கள் உறையும் முறைமையினையுடைய பெரிய போர்க்களந்தோறும்

மேல்


நிணன்

(வி) பார்க்க : நிணம்

கருமறி காதின் கவை அடி பேய்மகள்
நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல – சிறு 197,198

வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
நிணத்தை தின்று சிரிக்கின்ற தோற்றத்தைப் போன்று,

மேல்


நித்தம்

(பெ) நடனம், dancing

ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர் இறை முன்கையால்
அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/42-44

தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய்
நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால்
அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்;

மேல்


நித்திலம்

(பெ) முத்து, pearl

நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் – சிறு 149

நெடிய தாளையுடைய புன்னை முத்துக்கள் (போல அரும்புகள்) வைக்கவும்

மேல்


நிதி

(பெ) பணம், செல்வம், money, wealth

வாணன் வைத்த விழு நிதி பெறினும்
பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி
ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே – மது 203-205

வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,
பழி நமக்கு வரட்டும் என்றுகூறாய், (மாறாக)சீரிய செல்வப் பெருக்கை
வழங்கும் எண்ணத்துடன் புகழைமட்டும் விரும்புவாய்;

மேல்


நிதியம்

(பெ) பொருள் தொகுதி, finance, treasure

நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின்
வதுவை மகளிர் கூந்தல் கமழ்கொள – அகம் 378/1,2

மிக்க பொருள் தங்கும் உயர்ந்தோங்கும் மனையகத்தே
கலியாணம் செய்த மகளிர்தம் கூந்தல் போல மணம் பொருந்துமாறு

மேல்


நிமிர்

(வி) 1. நேராகு, உயர், stand upright, become erect
2. வளையாமல் நேராகு, be straight
3. விறைப்பாக இரு, be stiff
4. முன் நோக்கிப் புடைத்துக்கொண்டிரு, projecting forward
5. அதிகமாகு, எல்லை மிகு, exceed the limit
6. நீட்டி உயர்த்து, be outstretched
7. இடையிடு, interpose
8. பரவு, spread out, expand

1.

பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி
அறுஅறு காலைதோறு அமைவர பண்ணி – நெடு 103,104

பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,
(நெய்)வற்றிப்போகும்போதெல்லாம் (நெய்வார்த்துத் திரிகளைத்) தூண்டி(ச் சரிப்படுத்தி),

2.

குழையன் கோதையன் குறும் பைம் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமென தாக்கலின் – நற் 50/2-5

நம் தலைவன் இளந்தளிர்களையும், மாலையையும், குறிய சிறிய வளையல்களையும்
கொண்டவனாய்
(சேரி)விழாவில் கொண்டாடும் துணங்கைக் கூத்தில் (பரத்தையரைத்)தழுவிக்கொள்ளுதலை
கையகப்படுத்தச் சென்றபோது
நெடிய நேரான தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில்
நமக்கு அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட

3.

முரவை போகிய முரியா அரிசி
விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 113,114

(தீட்டப்படாத அரிசியிலுள்ள)வரி நீக்கப்பெற்ற(தீட்டிய) உடையாத(முழு) அரிசியின்
விரல் என்னும்படி விறைப்பான, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும்

4.

சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் – புறம் 394/1

வில் பயிற்சியால் முன்னோக்கிப் புடைத்துக்கொண்டிருக்கும் சந்தனம் பூசப்பட்ட மார்பினையுடைய

5.

குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 387,388

நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,

6.

நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/9

நிலத்திற்கு அழகுசெய்யும் மரத்தின் மேலிருந்து ((கழுத்தை) நீட்டி உயர்த்தி கூவும் குயில்கள்
என்னை எள்ளி நகையாட,

7.

உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம்
பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம்
நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க
மணந்தவை போல வரை மலை எல்லாம்
நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும்
விடியல் வியல் வானம் போல பொலியும்
நெடியாய் – பரி 19/78-84

நிறம் மிகுந்த தோன்றியும், மலர்ந்த பூங்கொத்துக்களையுடைய நறவமும்,
பருவம் பாராமல் எப்போதும் பூக்கும் கோங்கமும், அதனோடு மாறுபட்ட நிறத்தையுடைய
இலவமலர்களும்,
செறிவாகக்கட்டியவை, கோத்தவை, நெய்யப்பட்டவை, தூக்கிக்
கட்டப்பட்டவை ஆகிய மாலைகளைப் போல மலைப்பக்கம் எங்கும்
நிறைந்தும், கலந்தும், இடையிட்டும், நெருங்கியும்
விடியற்காலத்து அகன்ற வானத்தைப் போன்று பொலிவுற்றுத் திகழும்
நெடியவனே!

8.

கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர
பாடல் சான்ற நெய்தல் நெடு வழி – சிறு 150,151

கரையிடத்துள்ள வெண்மையான மணற்பரப்பில் கடல் பரந்து ஏறிப்பரவ,
(புலவர்)பாடுதற்கு அமைந்த நெய்தல் நிலத்தே கிடந்த நீண்ட வழியில்,

மேல்


நிமிரல்

(பெ) விறைப்பான பருக்கைகள் உள்ள சோறு, stiff boiled rice

இந்த நிமிரல் என்ற சொல் சங்க இலக்கியத்தில் மூன்று முறை வந்துள்ளது.
அந்த மூன்று முறையும் அது

கொக்கு உகிர் நிமிரல்

என்றே சொல்லப்படுகிறது.
கொக்கின் கால் நகத்தைப் போன்று விறைப்பாக உள்ள பருக்கைகளை நிமிரல் எனலாம்.

1.

கதிர் கால் வெம்ப கல் காய் ஞாயிற்று
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்
பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறா கவர்ந்த பசும் கண் காக்கை – நற் 258/3-8

கதிர்கள் கால்களை வெம்பிப்போகச்செய்ய, பாறைகளைச் சூடேற்றும் ஞாயிற்றுப் பகலில்
செல்வம் மிக்க தம் பெரிய வீட்டில், வந்திருக்கின்ற விருந்தினரை உபசரிக்க,
பொன் வளையல் அணிந்த மகளிர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உதிர்த்துவிட்ட,
கொக்கின் நகம் போன்ற சோற்றை விரும்பி உண்டு, பொழுது மறைய
அகன்ற மீன்கடையில் நீண்டுசெல்லும் நிழலில் குவித்த
பசிய இறாமீனைக் கவர்ந்த பசுமையான கண்களைக்கொண்ட காக்கை,

2.

பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்

பசும் கண் கருனை சூட்டொடு மாந்தி – புறம் 395/36,37

3.

கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர – புறம் 398/25

மேல்


நியமம்

(பெ) 1. கடைத்தெரு, bazaar street
2. ஓர் ஊரின் பெயர், the name of a city

1.

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 70,71

திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும்,
மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில்

2.

கரும் கண் கோசர் நியமம் ஆயினும்
உறும் எனக் கொள்ளுநர் இல்லை – அகம் 90/12,13

கரிய கண்களையுடைய கோசர்கள் வாழும் நியமம் என்னும் ஊரினைக் கொடுப்பினும்
அமையும் எனக் கொள்வார் அல்லர்

மேல்


நிர

(வி) 1. வரிசையாக அமை, arrange in order
2. பரவு, spread, expand

1.

நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை – குறு 52/4

வரிசையாக அமைந்த மின்னுகின்ற வெள்ளைப் பற்களையும் உடையவளே!

2.

நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர்நிரந்து
ஏறுமாறு ஏற்கும் இ குன்று – பரி 18/3-6

நீரைப் பரந்து ஏற்ற நிலம் தாங்குகின்ற கடற்பரப்பில்
கொடுமையுடன் பரந்து சுற்றிய சூரபன்மாவை அழித்த வேலினையுடையவனே! உன்னுடைய
புகழைப் பரந்து பெற்று விளங்கும் இமயமலையுடன் நேர்நின்று
மாறுபடுதலை ஏற்கும் இந்தத் திருப்பரங்குன்றம்;

மேல்


நிரப்பம்

(பெ) முழுமை, பூரணம், fullness

போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி தொக்க
மர கோட்டம் சேர்ந்து எழுந்த பூ கொடி போல
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மை
புரப்பேம் என்பாரும் பலரால் – கலி 94/22-25

“போ! சீச்சீ! அரை மனிதனே! இனி நீ இந்நிலையைக் கைவிடு! திரண்ட
மரத்தின் வளைவான இடத்தைப் பற்றி எழுந்த பூங்கொடியைப் போல
முழு வளர்ச்சி இல்லாத தம் வடிவால் என்னைத் தழுவி, என்னைக்
காப்பாற்றுவோம் என்று கூறுபவர் பலர்

மேல்


நிரப்பல்

(பெ) நிரப்புதல், முழுமையாக்கல், make full

பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி – புறம் 360/13,14

உன்பால் பொருளை
நச்சி வருவார் வர அவர்கட்கு வேண்டும் பொருளை நிரம்ப நல்குதலைப் பாதுகாப்பாயாக

மேல்


நிரப்பு

1. (வி) 1. ஓர் இடத்தில் இட்டு நிறைவாக்கு, fill up, replenish
2. இல்லை என்று கூறு, இன்மையைக் கூறு, say ‘No’, express poverty
– 2. (பெ) வறுமை, poverty, destitution

1.1

வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம்
கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி
வென்றி ஆடிய தொடி தோள் – பதி 40/10-12

வெண்மையான பனந்தோட்டினை வரிசையாகத் தொடுத்து அணிந்தவராய் வரும்
வேந்தர்களையுடைய அரிய போரினை
அழித்து, அவரைப் புறமிடச் செய்து, அவ்விடங்களில் மக்களைக் குடியேறச் செய்த
(மக்களால் நிரப்பிய),
வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும்,

1.2.

நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே – புறம் 180/1

’இலன்’ என்னும் எவ்வம் உரையாவாறு கொடுக்கும் செல்வமும் உடையான் அல்லன்

2.

இரப்ப சிந்தியேன் நிரப்பு அடு புணையின் – புறம் 376/18

பிறர்பால் சென்று இரத்தலை நினையேனாயினேன், வறுமையாகிய கடலைக் கடக்கும்
தெப்பமாக அவன் இருத்தலால்

மேல்


நிரம்பு

1. (வி) 1. நிறை, முழுமையடை, become full, complete
2. முடிவுறு, end, terminate
3. நன்கு வளர்ச்சியடை, become fully grown
4. மிகுந்திரு, be copius, abundant
– 2. (பெ). நிரம்புதல், முழுதும் பொருந்துதல், being full

1.1.

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3

என்னுடைய மாண்புமிக்க மனைவியுடனே புதல்வரும் அறிவு நிறையப்பெற்றிருக்கின்றனர்

1.2.

நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை – நற் 99/1

ஈரப்பசை இல்லாமல் முற்றிலும் வறண்டுபோன முடிவே இல்லாத நீண்ட வெளியில்

1.3.

அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன்
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே – குறு 33/1-4

தோழியே! இந்தப் பாணன் ஓர் இளம் மாணாக்கன் போல் இருக்கிறான்.
தன் ஊர் மன்றத்தில் எப்படி இருப்பானோ?
இரந்து உண்ணும் உணவினையுடைய நன்கு வளர்ச்சி பெறாத மேனியோடு
இந்தப் புது ஊரிலும் பெரும் சிறப்புடையவனாயிருக்கிறான்.

1.4.

ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284

தீமைகள் மிகுந்த பாதையில் அவர் முன்னேசெல்ல

2.

நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி
நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர்
உண்டு என தவாஅ கள்ளின்
வண் கை வேந்தே – பதி 43/33-36

முழுதும் பொருந்துதலும், இடைவெளி மிக விடுதலும் இல்லாத, கோக்காலியின் மேல்
வைக்கப்பட்டுள்ள
நீண்ட நேரம் நிறைந்து இருப்பதை அறியாத குடங்களிலிருக்கும், கூத்தரும் பாடகரும்
உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய
வளமையான கொடையினையுடைய வேந்தனே! (பார்க்க: ஔவை – உரை விளக்கம்)

மேல்


நிரயம்

(பெ) நரகம், hell

அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது – புறம் 5/5,6

அருளையும் அன்பையும் நீக்கி, பாவம் செய்தாரை நீங்காத
நரகத்தைத் தமக்கு இடமாகக் கொள்பவரோடு பொருந்தாமல்

மேல்


நிரல்

(பெ) 1. வரிசை, row
2. ஒப்பு, ஒரே தன்மையில் இருத்தல், similarity, equality

1.

நிரல் இயைந்து ஒன்றிய செலவின் – அகம் 400/8

வரிசையாகப் பொருந்தி ஒரே மாதிரி செல்லும் (நான்கு குதிரைகள்)

2.

கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் – குறி 30

(நாமாக)மணந்தால் நன்கு அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக
இருக்குமோ என்பதையும்

மேல்


நிரவு

(வி) சமனாக்கு, level

கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 210,211

கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,
(தம்மால்)உழப்படாத (அந்த)நுண்ணிய சேற்றை(க் காலால்) சமப்படுத்திய உழவர்

மேல்


நிரை

1. (வி) 1. வரிசையாகு, be in a row
2. ஒழுங்குபடு, முறைப்படு, be orderly
– 2. (பெ) 1. வரிசை, row
2. கூட்டம், திரள், herd, collection
3. பசுக்கூட்டம், herd of cows

1.1

நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116

வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஓசையும்,

1.2.

சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/4

சிலவாய் ஒழுங்குபட்ட கூந்தலையுடைய என் நெற்றியில் பசலை பாய்ந்தது

2.1.

நீர் அயல் கலித்த நெரி முகை காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்
விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி பரி 14/13-15

நீர்நிலையின் அருகே தழைத்திருக்கும் சுருக்கங்களையுடைய அரும்புகளையுடைய காந்தளின்
நெடிய பூங்கொத்துக்கள் மலர்ந்த வளமையான இதழ்களின் வரிசைகள்தோறும்
கொழுந்துவிட்டுப் படர்ந்த கொடியில் தோன்றிய மென்மையான அழகுடைய தோன்றி

2.2.

நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 744

உயரமான யானைகளின் திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த

2.3.

பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8,9

இனிய தெளிந்த ஓசையையுடைய மணிகளைப் பூண்ட பயன் மிக்க பெரிய பசுக்கூட்டம்

மேல்


நிரையம்

(பெ) நரகம், பார்க்க : நிரயம்

வரையா நயவினர் நிரையம் பேணார் – நற் 329/1

அளவில்லாத அன்பினையுடையவர், நரகத்துள் உய்க்கும் தீயநெறிகளைக் கைக்கொள்ளாதவர்,

மேல்


நிலம்தருதிருவின்நெடியோன்

(பெ) 1. ஒரு பாண்டிய மன்னன், a Pandiya king
2. ஒரு சேர மன்னன், a cEra king

1.

தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவின்நெடியோன் போல – மது 761-763

தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்கள்
சேரும் சேர்க்கையை நுகர்ந்த புகழ் நிறைந்த சிறப்பினையுடைய
நிலந்தரு திருவில் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று

’செந்தமிழ் வழங்கும் காலமெல்லாம் தன் புகழ் நிறைந்து விளங்குவதற்குக் காரணமான தமிழ்ச்சங்கம்
நிறீஇ அதன்கண் மெய்ந்நூல் புலப்படுத்த சிறப்பினையுடைய மாகீர்த்தியாகிய’ என்று இவனைச்
சிறப்பித்துக் கூறுவார் பெருமழைப்புலவர்.

இந்த நிலந்தரு திருவில் பாண்டியன் அவைக்களத்தில் தொல்காப்பியம் அரங்கேறியது
என்பார் அந்நூலுக்குப் பாயிரம் எழுதிய பனம்பாரனார்.

’எல்லா நிலங்களையும் தன்னிடத்தே கட்டின பெருஞ்செல்வத்தையுடைய மாயோனைப் போல’
என்று பொருள்கொள்வார் நச்சினார்க்கினியர்.

2.

வண்மையும் செம்மையும் சால்பும் மறனும்
புகன்று புகழ்ந்து அசையா நல் இசை
நிலம்தருதிருவின்நெடியோய் – பதி 82/14-16

உனது கொடை, செங்கோன்மை, நற்பண்புகள், வீரம் ஆகிய இவற்றை
விரும்பிப் புகழ்வதால் கிடைக்கும் குன்றாத நல்ல புகழையும்
மாற்றார் நிலத்தைப் போரிட்டுச் சேர்த்துக்கொள்ளும் செல்வத்தையும் உடைய நெடியவனான சேரமானே

இந்தச் சேர மன்னன் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை எனப்படுவான். இவனை பதிற்றுப்பத்தில்
ஒன்பதாம் பத்தில் புலவர் பெருங்குன்றூர்க்கிழார் பாடியுள்ளார்.

மேல்


நிலவர்

(பெ) நிலத்தில் வாழ்வோர், residents of a land

குடி கெழீஇய நால் நிலவரொடு – மது 123

குடிகள் மிக்க நான்கு நிலங்களிலும் வாழ்வாரோடு

மேல்


நிலவரை

(பெ) நிலத்தின் எல்லை, the boundaries of a region/country

உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை – புறம் 72/15,16

உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் தலைமையையுடைய
புலவர் பாடாமல் நீங்குக என் நில எல்லையை.

மேல்


நிலவு

1. (வி) நிலைத்திரு, be permanent
– 2. (பெ) நிலா, moon

1.

நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369

கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே

2.

நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து – நெடு 95

நிலாவின் பயனை (அரசன்) நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள

மேல்


நிலியர்

(வி.மு) நிற்பாயாக, நிலைத்திருப்பாயாக, be steadfast

திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை – புறம் 2/19,20

வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு, ஒழியாது நெடுங்காலம் விளங்கி
மனக்கலக்கமின்றி நிற்பாயாக.

மேல்


நிலீஇயர்

(வி.மு) நிலியர் என்பதன் நீட்டம், பார்க்க : நிலியர், the extendd form of நிலியர்.

கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே – புறம் 166/33,34

மூங்கில் வளரும் இமயமலை போல
நிலைபெறுவாயாக நீ நிலத்தின் மேலே.

மேல்


நிவ

(வி) 1. உயர், மேலெழும்பு, rise, ascend vertically
2. நிமிர், be erect, hold head erect
3. நெடுக, உயரமான வளர், grow vertically high
4. வெள்ளம் உயர்ந்து கரைபுரளு, flood flow high and overflow

1.

மா கடல் நிவந்து எழுதரும்
செஞ்ஞாயிற்று கவினை மாதோ – புறம் 4/15,16

கரிய கடலின்கண்ணே ஓங்கி எழுகின்ற
செய்ய ஞாயிற்றினது ஒளியை உடையை

2.

கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/9

கழியிடமாகிய சேர்ப்பின்கண் தலை நிமிர்ந்துசெல்லும் விரைந்த செலவினையுடைய குதிரை

3.

மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் – திரு 12

பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,

4.

சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது
குண கடற்கு இவர்தரும் குரூஉ புனல் உந்தி
நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி – மது 244-246

சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,
கீழ்க்கடலுக்குப் பாயும் (கலங்கல்)நிறத்தையுடைய மழைநீர், முனைந்து
ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப

மேல்


நிவப்பு

(பெ) உயர்ச்சி, உயரம், height, elevation

வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி – மலை 92

மலையை ஒத்த உயர்ச்சியோடு வானை எட்டித் தொடும் மதிலினையுமுடைய

மேல்


நிழத்து

(வி) 1. சிறிது சிறிதாகத் தேய்ந்து இல்லையாகு, diminish gradually and vanish
2. சிறிது சிறிதாகத் தேய்த்து இல்லையாக்கு, diminish gradually and vanish

1.

நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50

நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்து

2.

விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 193

விளைந்த (தினைப்)புனத்தை (பன்றிகள்)சிறிது சிறிதாக அழித்து இல்லாமலாக்கிவிடுவதால்,
(அப்)பன்றிகளுக்குப் பயந்து,

மேல்


நிழல்

1. (வி) ஆதரவளி, புகலிடம் அளி, shelter, protect
– 2. (பெ) 1. ஒளிமறைவு, shade
2. ஒளிமறைப்பினால் ஏற்படும் உருவம், பிம்பம், shadow
3. பிரதி பிம்பம், image, reflection
4. அருள், grace, favour, benignity
5. ஒளி, lustre

ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் – சிறு 233,234

‘உழவர்க்குப் புலகிடம் அளித்த செங்கோலையுடையோய்’ எனவும்,
‘தேரினையுடையோர்க்கு வெம்மைசெய்த வேலினையுடையோய்’ எனவும்

2.1.

மனை நொச்சி நிழல் ஆங்கண்
ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 185,186

மனை(யைச் சூழ்ந்த) நொச்சியின் நிழலில்,
(மணலுக்குள் முட்டை)பொரித்து வந்த ஆமையின் குஞ்சைப் பாதுகாத்து வைப்பவும்

2.2.

இலை இல் மராத்த எவ்வம் தாங்கி
வலை வலந்து அன்ன மென் நிழல் மருங்கில் – பொரு 50,51

இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி,
வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில்

2.3.

பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும் 287,288

பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,
நீர் அருகிலுள்ள பிரம்பின் (நீரலையால்)நடுங்கு(வது போல் தோன்று)ம் நிழலைக் கண்டு அஞ்சும்,

2.4.

கண் ஆர் கண்ணி கரிகால்வளவன்
தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகி – பொரு 148,149

கண்-நிறைந்த ஆத்தி மாலையினை உடைய கரிகாற்சோழனின்,
(திருவடி நிழலின்)அருள் நிறைந்த பக்கத்தை அணுகிக் கிட்டே நெருங்கி

2.5.

மன் உயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே
நின் ஒக்கும் புகழ் நிழலவை – பரி 1/56-58

உலகத்து உயிர்களுக்கு முதல்வனாக இருப்பதனால்
உனக்கு நீயே ஒப்பாவாய்! உன் புகழோடும் பொலிவுற்று –
உன்னையே ஒக்கும் புகழாகிய ஒளியைக் கொண்டுள்ளாய்!

மேல்


நிழல்காண்மண்டிலம்

(பெ) உருவம் காணும் கண்ணாடி, mirror

எள் அற இயற்றிய நிழல்காண்மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/13,14

இகழ்ச்சி அற இயற்றப்பெற்ற உருவம் காணும் கண்ணாடியின்
அகத்த்தே ஊதிய ஆவி முதலில் பரந்து பின்னர் சுருங்கினாற் போன்று சிறிது சிறிதாகக் குறைந்து

மேல்


நிழற்று

(வி) 1. நிழல்செய், shade
2. காத்தளி, protect
3. ஒளிவீசு, shed radiance

1.

கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ வாழிய குடுமி – புறம் 9/7,8

கொல் யானை மேலே ஏற்றிய கொடிகள் ஆகாயத்தை நிழல்செய்யும்
எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக\

2.

நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின்
மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை – புறம் 51/1,2

நீர் மிகுமாயின் அதனைத் தாங்கும் அரணும் இல்லை, நெருப்பு மிகுமாயின்
உலகத்து நிலைபெற்ற உயிர்களைக் காக்கும் புகலிடமும் இல்லை

3.

விசும்பு இழி தோகை சீர் போன்றிசினே
பசும்_பொன் அவிர் இழை பைய நிழற்ற
கரை சேர் மருதம் ஏறி
பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே – ஐங் 74

வானத்திலிருந்து இறங்கும் மயிலின் தோகை அழகைப் போல இருந்தது
பைம்பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச,
கரையைச் சேர்ந்த மருதமரத்தில் ஏறி,
நீருக்குள் பாய்பவளின் குளிர்ந்த நறிய கூந்தல்

மேல்


நிறப்படை

(பெ) குத்துக்கோல், அங்குசம், elephant goad

நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் – புறம் 293/1

குத்துக்கோலுக்கு அடங்காத யானையின் மேல் இருப்போனாகிய வள்ளுவன்

மேல்

நிறம் – (பெ) 1. வண்ணம், colour
2. மார்பு, bosom, breast

1.

கான குமிழின் கனி நிறம் கடுப்ப
புகழ் வினை பொலிந்த பச்சையொடு – சிறு 225,226

காட்டுக் குமிழின் பழத்தின் நிறத்தை ஒப்ப,
புகழப்படும் தொழில்வினை சிறந்து விளங்கும் போர்வையோடு

2.

ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது – அகம் 71/11,12

மிக்க துன்பத்தை அடைந்திருப்பார் ஒருவரின் அரிய மார்பினைக் குறித்து
கூரிய வேலை எறிவார் போல வருந்துதலை ஒழியாது

மேல்


நிறன்

(பெ) பார்க்க : நிறம்

1.

தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி – நற் 309/2

மாந்தளிர் போன்ற அழகினை இழந்த என் மேனி நிறத்தையும் நோக்கி

2.

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34

பகைவரின் மார்பை உழுகின்ற வளைந்த வாயினையுடைய கலப்பைப் படையையும் உடைய
பலதேவனும்,

மேல்


நிறு

(வி) 1. நிலைநிறுத்து, establish
2. ஆற்றியிரு, be preserved with patience
3. அறுதிசெய், தீர்மானி, decide, determine
4. படை, உருவாக்கு, create, construct
5. நிறுத்து, போட்டியிடச்செய், field (as a candidate)
6. வை, place, put
7. முழக்கு, (வாச்சியங்களை) வாசிக்கச்செய், play (the musical instrument)

1.

அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலை வர – கலி 129/5,6

நல்லன அல்லாதவற்றை மேற்கொண்டு அற நெறிகளை நிலைநிறுத்தாத
ஆற்றல் குறைந்த மன்னனின் அரசாட்சியைப் போல மயக்கும் இருள் கவிய

2.

பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன்
நீ நல்கின் உண்டு என் உயிர் – கலி 94/11,12

பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்துக்கொண்டு ஆற்றியிருக்கமாட்டேன்,
நீ இரக்கப்பட்டால் என் உயிர் என்னிடத்தில் உண்டு”

3.

நாள் வரை நிறுத்து தாம் சொல்லிய பொய் அன்றி
மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் – கலி 33/29,30

தாம் குறித்த நாளின் எல்லையை அறுதிசெய்து, தாம் சொல்லியது பொய்யாகிப்போகாமல்
மாலை தொங்கும் அகன்ற மார்பினையுடைய அவர் விரைந்து வருகிறார்

4.

இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்
ஏதில் குறு நரி பட்டு அற்றால் – கலி 65/24,25

பெரிய புலியைப் பிடிப்பதற்கு உண்டாக்கிய வலையினில், ஒரு
ஒன்றிற்கும் உதவாத குள்ள நரி மாட்டிக்கொண்டதைப் போல்

5.

நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
ஆர்வு_உற்று எமர் கொடை நேர்ந்தார் – கலி 104/73-75

“அழகிய அணிகளை அணிந்தவளே! யாராலும் அணைக்கமுடியாது என்று நிறுத்தப்பட்ட
கொலைகாரக் காளையான
காரியின் சீற்றத்துக்கு அஞ்சாதவனாய்ப் பாய்ந்து அதை அடக்கிய அந்த இளைஞனுக்கே
மகிழ்ச்சியுடன் எம் வீட்டார் உன்னைக் கொடுப்பது என்று முடிவுசெய்தார்,

6.

வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ் பசும் குடை – அகம் 37/10

வெயிலில் குப்புற வைத்த மிக்க இதழ்களையுடைய பசிய (பனையோலைக்)குடையில்

7.

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க
உருவ பல் பூ தூஉய் வெருவர
குருதி செம் தினை பரப்பி குறமகள்
முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 240-244

முழங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடு இனிய இசைக்கருவிகளும் ஒலிக்க,
சிவந்த நிறத்தையுடைய பல பூக்களையும் தூவி, அச்சம் வரும்படி
குருதி அளைந்த சிவந்த தினையினையும் பரப்பி, குறமகள்
முருகன் உவக்கும் வாச்சியங்களை வாசிக்கச்செய்து, முரண்பட்டோர் அஞ்சும்படியாக,
முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற நகரின்கண்ணே –
வெ

மேல்


நிறை

1. (வி) 1. நிரம்பு, become full
2. நிரப்பு, make full
3. மிகு, be plenty, copious
4. முழுமையடை, be complete, full
– 2. (பெ) 1. எடை, weight
2. முழுமை, completeness
3. உறுதிப்பாடு, திண்மை, firmness of mind
4. மிகுதி, பெருக்கு, abundance
5. வெள்ளம், flood
6. மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல், maintain secrecy

1.1

ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர – குறி 217,218

பசுக்களின் கூட்டம்
(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிரம்புமாறு நுழைய

1.2.

கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர் – மது 92,93

குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய(நீரை முகந்து) வயலை நிரப்பும்
மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும்

1.3.

நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37

இரத்தம் தூவிய மிகுந்த கள்ளுடனான பெரிய பலியானது

1.4.

பிறை வளர் நிறை மதி உண்டி – பரி 3/52

பிறைகளாகி வளர்கின்ற முழுமையடைந்த திங்களான உணவினையும்

2.1.

செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514

செம்பின் எடையை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை நிறைவாக முடிவாரும்,

2.2.

செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் – மது 514

செம்பை நிறுத்துக் கொள்வாரும், கச்சுக்களை முழுமையாக முடிவாரும்,

2.3.

அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி – முல் 79-84

பகையரசு இருந்து நடுங்கும் முரசு முழங்கும் பாசறையில்
இனிய துயில்கொண்டு தங்குயிருப்பவனைக் காணாளாய், வருத்தமுற்று
நெஞ்சம் (ஆற்றியிரு என்று தலைவன் கூறியபடி)பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த
தனிமையோடு,
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,
மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும்,
அம்பு தைத்த மயில் போல நடுங்கி,

2.4.

இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு
புது நிறை வந்த புனல் அம் சாயல்
—————————- ———————————–
நன்னன் சேய் நன்னன் – மலை 60- 64

புகழ் பாடுதல்(என்ற) விதையினையும் (பரிசில்மீது)விருப்பம் (என்ற)ஏரினையும் (கொண்ட)
உழவர்க்கு(=பரிசிலர்க்கு)
புதுப் பெருக்காய் வந்த நீர் (போன்ற)அழகிய மேனியைக்கொண்ட,
——————————- —————————–
நன்னன் மகனான நன்னனை

2.5.

நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்று அற்று ஆங்கு – குறு 99/4,5

உயர்ந்த மரத்தின் உச்சிக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு சென்ற பெருவெள்ளம்
இறைத்து உண்ணும் அளவுக்குக் குறைந்து அற்றுப்போய்விடுவது போல

2.6.

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை – கலி 133/12

நிறை எனப்படுவது மறைத்துக் காக்கவேண்டிவற்றைப் பிறர் அறியாமல் காத்தல்

மேல்


நின

(பெ) உன்னுடையது, yours

நின யானை சென்னி நிறம் குங்குமத்தால்
புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா – பரி 19/85,86

உனது யானையின் நெற்றியின் நிறத்தைக் குங்குமத்தால்
கோலம் செய்து, மலருடன் நீரையும் ஊட்டி, காதுகளில் ஒப்பனை செய்வதற்குக் கவரிகளைச் சார்த்தி

மேல்


நினவ

(பெ) உன்னுடையன, yours (plural)

நினவ கூறுவல் எனவ கேள்-மதி – புறம் 35/13

நின்னுடையன சில காரியம் சொல்லுவேன், என்னுடைய சில வார்த்தைகளைக் கேட்பாயாக

மேல்