நா – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்


நா
நாகம்
நாகர்
நாகரிகர்
நாகன்
நாகு
நாஞ்சில்
நாஞ்சிலான்
நாஞ்சிலோன்
நாட்டம்
நாட்டு
நாட்படு
நாட்பு
நாடல்
நாடு
நாண்
நாணு
நாதர்
நாப்பண்
நாம்
நாமம்
நார்முடிச்சேரல்
நாரிகை
நால்கு
நாலு
நாலை கிழவன்
நாவல்
நாவல் அம் தண் பொழில்
நாவாய்
நாழி
நாழிகை
நாள்
நாளும்
நாற்பெருங்குழு
நாற்றஉணவு
நாற்றம்
நாற்று
நாறு
நான்மறை
நான்மறையோர்
நான்மாடக்கூடல்
நான்முகன்
நானம்
நானிலம்

நா

(பெ) 1. நாக்கு, tongue
2. மணியின் நாக்கு, clapperof a bell
3. பேச்சுத்திறன், பாடும்திறன், ஓதும்திறன், ability to speak, sing or recite

1.

முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்
நன் நா புரையும் சீறடி – நற் 252/10,11

முயல் வேட்டைக்காகப் புறப்பட்டு விரைவாகும் வேகங்கொண்ட சினமுள்ள நாயின்
நல்ல நாவினை ஒத்த சிறிய பாதங்களையும்,

2.

நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50

நெடிய நாக்கினையுடைய ஒள்ளிய மணி ஒலித்துச் சிறிது சிறிதாக அடங்கிய நடுயாமத்தும்

3.

நா வல் அந்தணர் அரு மறை பொருளே – பரி 1/13

ஓதும்திறனில் வன்மை மிக்க அந்தணர்களின் அரிய வேதங்களின் பொருள்

மேல்


நாகம்

(பெ) 1. பாம்பு, snake
2. சுரபுன்னை, Long leaved two-sepalled gamboge
3. நாகமரம், Iron wood of Ceylon. Mesua ferrea;
4. யானை, elephant

1.

ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம்

பரி 12/4

ஒளி விளங்கும் படப்புள்ளிகளைக் கொண்ட, பார்ப்பதற்கு அச்சந்தரக்கூடிய பாம்பின்
பெயரைக்கொண்ட நாகமரமும்

2.

நறு வீ உறைக்கும் நாக நெடு வழி – சிறு 88

நறிய பூக்கள் (தேனைத்)துளிக்கும் சுரபுன்னை(யை உடைத்தாகிய) நெடிய வழியிலிருந்த

3.

நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி – குறி 94
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – மலை 520
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் – சிறு 116

4.

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117

போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,

மேல்


நாகர்

(பெ) 1. ஆதிசேடன், AthisEdan, the snake bed of Lord Krishna
2. தேவர், நாகலோகவாசிகள், celestials, the race of serpants in nagaloga

1.

பூ முடி நாகர் நகர் – பரி 23/59

பூமகளையும் தன் திருமுடியில் கொண்டுள்ள ஆதிசேடனின் கோயிலில்;

2.

நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார் – பரி 11/67

நாகர்களைப் போன்று நல்ல வளமையான அறச்செயல்களில் நாட்டம் மிக, நெருங்கிச் சேரும்பொருட்டு

மேல்


நாகரிகர்

(பெ) கண்ணோட்டமுள்ளவர், Persons possessing a kindly feeling for their friends;

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – நற் 355/6,7

முன்னதாக இருந்து நண்பர்கள் கொடுத்தால்
நஞ்சையும் உண்பர் மிகுந்த நாகரிகத்தையுடையவர்கள்

மேல்


நாகன்

(பெ) நாலை கிழவன் நாகன், a philanthropist of nAlUr in Sangam era, belonging to
Pandiyan kingdom

திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள் உதவியும்
வினை வேண்டுவழி அறிவு உதவியும்
————————————————–
தோலா நல் இசை நாலை கிழவன்
————————————— ————
திருந்து வேல் நாகன் கூறினர் பலரே – புறம் 179/5-12

திருமகள் விரும்பிய நுண்ணிய தொழில்பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன்
படை வேண்டியவிடத்து வாட்போரை உதவியும்
கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சியலோடு நின்று உதவியும்
——————————————————————
தோற்காத நல்ல புகழையுடய நாலை கிழவன்
———————————————————-
திருந்திய வேலையுடைய நாகனைப் பலரும் சொன்னார்.

மேல்


நாகு

(பெ) 1. இளமை, youthfulness, tenderness
2. பசுவின் பெண்கன்று, female calf, heifer
3. பெண் மீன், female fish
4. இளம் பசு, இளம் பெண் எருமை, young cow, young female buffallo

1.

நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து – சிறு 51

தேனை(ப் பூக்கள் தம்மிடத்திலிருந்து)துளிக்கும் இளமை முதிர்ந்த நுணா மரத்தின்

2.

எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165

எருமையையும், நல்ல ஆன்களையும், (அவற்றின்)கருவாகிய கன்றுகளையும் வாங்குகின்ற

3.

கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1

கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்

4.

நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை – ஐங் 445/3

நல்ல காளையைத் தழுவிக்கொண்டு இளம்பசுக்கள் வீடுதிரும்பும் நேரத்தில்

மட கண் எருமை மாண் நாகு தழீஇ – அகம் 146/3

மடப்பம் வாய்ந்த கண்ணினையுடைய மாண்புற்ற பெண் எருமையினை அணைந்து,

மேல்


நாஞ்சில்

(பெ) 1. கலப்பை, plough
2. நாஞ்சில் நாடு, The name of a country around the present Nagercoil

1.

உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/4,5

வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன
அழகையுடைய யானை,
வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க

2.

செம் வரை படப்பை நாஞ்சில் பொருந – புறம் 137/12

செங்குத்தான மலைப்பக்கத்தையுடைய நாஞ்சில் என்னும் மலையையுடைய பொருநனே

மேல்


நாஞ்சிலான்

(பெ) கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலதேவன்,
Baladev, who has a plough as weapon
இவன் பலராமன் எனப்படுவன். கிருஷ்ணரின் அண்ணன் ஆவான்.

கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/1,2

கொடிய ஆற்றல் வாய்ந்த கலப்பையை உடைய பலதேவன் மாலை அணிந்தது போல்
வெண்கடம்பமரத்தின் நீண்டுயர்ந்த உச்சியில் சூழ அமர்ந்திருக்கும் மயில்கள் ஆரவாரிக்கும்
அழகு உண்டாகவும்,

மேல்


நாஞ்சிலோன்

(பெ) பார்க்க : நாஞ்சிலான்

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34

பகைவரின் மார்பை உழுகின்ற வளைந்த வாயினையுடைய கலப்பைப் படையையும் உடைய
பலதேவனும்,

மேல்


நாட்டம்

(பெ) 1. சோதிடம், astrology
2. கண், பார்வை, eye, sight
3. ஆராய்ச்சி, examination, investigation
4. நாடுதல், விருப்பம்.நோக்கம், desire, intension, aim

1.

சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக
எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை – பதி 21/1-3

சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், சோதிடம், வேதம், ஆகமம் ஆகிய
ஐந்தினையும் சேர்ந்து கற்று, அவையே துணையாக,
எவ்வுயிருக்கும் துன்பம் சூழாமல் விளங்கும் கொள்கையுடன்,

2.

நுதலது இமையா நாட்டம் – அகம் 0/4

நெற்றியில் உள்ளது இமைக்காத கண்

3.

அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து
முறை வேண்டு பொழுதின் – புறம் 35/14,15

அறக்கடவுள் மேவி ஆராய்ந்தாற்போன்ற
செங்கோலால் ஆராயும் ஆராய்ச்சியையுடைய
நீதியைக் கேட்கவேண்டும்காலத்து

4.

புனிற்று புலால் நெடு வேல்
எழு பொறி நாட்டத்து எழாஅ தாயம்
வழு இன்று எய்தியும் அமையாய் – புறம் 99/6-8

நாள்தோறும் புதிய ஈரம் புலராத புலாலையுடைய நெடிய வேலையுமுடைய
ஏழிலாஞ்சனையும், நாடுதலையுடைய ஒருநாளும் நீங்காத அரசவுரிமையை
தப்பின்றாகப் பெற்றும் அமையாய்

மேல்


நாட்டு

(வி) 1. நிறுவு, நிலைநிறுத்து, establish, institute
2. ஊன்று, நடு, விளக்கேற்று, set up, instal
3. ஏற்படுத்து, உண்டாக்கு, form, create

1.

அறன்நிலை திரியா அன்பின் அவையத்து
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக – புறம் 71/7-9

அறமானது நிலை கலங்காத அன்பினையுடைய அவைக்களத்து
அறத்தின் திறப்பாடு இல்லாத ஒருவனை நிலைநிறுத்தி, முறை கலங்கி
கொடுங்கோல் செய்தேன் ஆகுக

2.

யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் – அகம் 114/10

இராபொழுதைக் காத்திருப்போர் ஏற்றிய நெருங்கிய விளக்குகள்

3.

மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை – அகம் 211/15

மத்தி என்பவனால் உருவாக்கப்பட்ட கல் பொருந்திய குளிர்ந்த துறைமுகத்தே

மேல்


நாட்படு

(வி) பழமையாகு, நீண்டகாலமாக இரு, become old, be long-standing

தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16

தேளினது கடுப்புப் போல் பலநாள் இருந்து புளிப்பேறிய கள்ளை

மேல்


நாட்பு

(பெ) போர், போர்க்களம், போர்க்களப்பூசல்,
பார்க்க : ஞாட்பு

விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/5

சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய

மேல்


நாடல்

(பெ) நாடுதல், விரும்பிவருதல், seeking with a desire

நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் – நற் 327/1

நம்மை விரும்பி வந்த சான்றோரான நம் தலைவரை நம்புதல் பழியைத் தருமென்றால்

நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் – பதி 86/7

அறத்தின் மீதான நாட்டம் மிகுந்த அன்புடைய நெஞ்சினையும்

மேல்


நாடு

1 (வி) 1. நினை, எண்ணு, think, consider
2. ஆராய், examine, investigate
3. தேடு, seek, pursue
4. விரும்பு, desire
5. அணுகு, செல், approach, seek access
– 2 (பெ) தேசம், ஆளுகைப்பகுதி, country, ruling area, kingdom

1.1

தமவும் பிறவும் ஒப்ப நாடி – பட் 209

தம்முடையவற்றையும் பிறருடையவற்றையும் ஒன்றாக எண்ணி

1.2.

பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/7-9

பெரியவர்கள்
முதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி,
நட்புச் செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து

1.3.

இன் துணை பிரிந்தோர் நாடி
தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/11,12

இனிய துணையைப் பிரிந்தவரை தேடிச் சென்று
அவரை மீண்டும் கொணர்வது போல் உள்ளது இந்தப் பெரிய மழையின் முழக்கம்

1.4.

அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது
இன்பமும் உண்டோ எமக்கு – கலி 6/9-11

நம்மிடையே உள்ள அன்பு அழிந்துவிட நினையாது, போகும் வழியில் உம்முடன்
துன்பகாலத்தில் துணையாக நான் கூட இருப்பதை விரும்பினால், அதைத் தவிர
இன்பமான செய்தி வேறு உண்டோ எனக்கு

1.5.

பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும்
நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல்
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/1-3

பாடிப் போற்றத்தக்க சிறப்பினையுடைய கிளைகளிலும், சுனைகளிலும்,
மிகுந்த சிரமப்பட்டு அணுகிக் கொய்யவேண்டாத அளவுக்கு விரும்பித் தாமே கொடுப்பவை போல்,
மலர்ந்த பூக்கள் மணக்கும் மாலைகளைக் கட்டிச் சூடிக்கொள்வாருக்காக,

2.

காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 248

காவிரியாறு பாதுகாக்கும் நாட்டை உரித்தவன்

மேல்


நாண்

(பெ) 1. நாணம், மளிர்க்குரிய கூச்சம், Bashfulness, modesty
2. மான உணர்வு, sense of honour and dignity
3. வெட்கம் உணர்வு, sense of shame
4. வில்லை வளைத்துக் கட்டியிருக்கும் கயிறு, bowstring
5. தூண்டிலில் கட்டிய கயிறு, rope in a fishing rod
6. நூல், string, thread

1.

நாண் அட சாய்ந்த நலம் கிளர் எருத்தின் – பொரு 31

நாணம் (தன்னை)அழுத்த (பிறரை நோக்காது)கவிழ்ந்த அழகு மிகுந்த கழுத்தினையும்

2.

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல் வழி கொடுத்த நாண் உடை மறவர் – மலை 386,387

(தன்னுடன்)ஒத்துப்போகாத பகைவரின் தோல்வியின்போது ஆரவாரித்ததைப் போன்று,
(வெற்றியாகிய)நல்ல தீர்வைக் கொடுத்த (இறந்துபட்ட)மான உணர்வு உள்ள வீரர்களின்

3.

உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம்
நாண் இலை மன்ற யாணர் ஊர – அகம் 226/1,2

மெய்ம்மையாகக் கொள்ளமாட்டேன், உன் வஞ்சனை பொதிந்த சொற்களைக் கூறாதே
உனக்கு நிச்சயமாக வெட்கம் இல்லை, புதுவருவாயையுடைய ஊரனே

4.

வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 119-121

கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
வார்த்த மணி (கட்டின)பலகைகளோடு வரிசையில் வைத்து, (தலையில்)முடிந்த நாணையுடைய
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்

5.

நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 285-287

நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
பொதிந்த இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,

6.

கிள்ளை
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/1–4

கிளியானது
தன் வளைந்த அலகில் கொண்டிருக்கும் வேம்பின் ஒளிவிடும் பழம்
புதிய நூலைக் கோக்கும்பொருட்டு முனை சிறந்த நன்றாக வளர்ந்த நகங்களில் கொண்ட
பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்

மேல்


நாணு

1. (வி) 1. நாணமடை, கூச்ச உணர்வுகொள், be bashful, be shy
2. வெட்கப்படு, மனம்குன்று, feel ashamed, be abashed
3. அஞ்சு, ஒடுங்கு, fear, shrink back
– 2. (பெ) நாணம், பார்க்க : நாண்

1.1

மறுகில்
நல்லோள் கணவன் இவன் என
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே – குறு 14/4-6

வீதியில்
நல்லவளின் கணவன் இவன் என்று
பலரும் கூற நான் சிறிதே நாணம்கொண்டேன்.

1.2.

வளை கை கிணைமகள் வள் உகிர் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம் வீட – சிறு 136-140

வளையல்(அணிந்த) கையினையும் உடைய கிணைமகள் பெரிய நகத்தால் கிள்ளின
குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
புறங்கூறுவோர் காணுதற்கு வெட்கப்பட்டு, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்,
அழிக்கின்ற பசியின் வருத்தங்கள் கெடுமாறு

1.3.

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்

அறஉணர்வு சிறிதும் இன்றி அயலார் தூற்றும் பழிச்சொற்களைக் கேட்க அஞ்சியும் – கலி 3/1

2.

மையல் வேழம் மடங்கலின் எதிர்தர
உய்விடம் அறியேம் ஆகி ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி
சூருறு மஞ்ஞையின் நடுங்க – குறி 165-169

மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்,
உயிர்பிழைப்பதற்குரிய இடத்தை (எங்கும்)அறியேமாய், சடுதியாக,
சீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
நடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,
தெய்வமகளிரேறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க

மேல்


நாதர்

(பெ) தலைவர்கள், chiefs

ஆதிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசை காப்போரும் – பரி 8/6,7

திருவாதிரை மீனுக்குரிய முதல்வனாகிய சிவபெருமானின் பெயரால் சொல்லப்பட்ட
தலைவர்கள் உருத்திரர் பதினொருவரும், நல்ல திசைகளைக் காப்பவராகிய திசைக்காவலர் எண்மரும்

மேல்


நாப்பண்

(பெ) நடு, middle, centre

குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண்
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு – பெரும் 441,442

கீழ்கடலை எல்லையாகக்கொண்டு, கடல்(அடிவானத்தின்) நடுவே
பகற்பொழுதைச் செய்யும் ஞாயிறு தன் கதிர்களைப் பரப்பித் தோன்றினாற் போல

பல் மீன் நாப்பண் திங்கள் போல
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை – பதி 90/17,18

பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல
மலர்ந்த சுற்றத்தாரோடு பொலிவுடன் திகழ்கிறாய்;

மேல்


நாம்

(பெ) 1. தன்மை,பன்மைச் சொல், we
2. அச்சம், fear, dread

1.

இருவேம் ஆய்ந்த மன்றல் இது என
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ – குறி 21,22

தலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று
நானும்,நீயும் (என் தாய்க்கு)அறிவுறுத்தலால் நமக்குப் பழியுமுண்டோ?(இல்லை)

2.

தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 115,116

தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,
அழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி,

மேல்


நாமம்

(பெ) அச்சம், fear, dread

பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்
நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/9,10

புலவர் பாடும் சிறப்பு மிக்க பயன்களைத் தரும் ஊர்களையுடைய
நாடுகள் தம் அழகு சிதைந்துபோக, அச்சத்தை உண்டாக்கி

மேல்


நார்முடிச்சேரல்

(பெ) சங்க காலத்துச் சேர மன்னர்களுள் ஒருவன், a cEra king of sangam period.
இவன் ஒரு சேரநாட்டு மன்னன். இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எனப்படுவான்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைப் பாடுகிறது.
இதனைப் பாடியவர், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்.
இவனது தந்தை சேரலாதன், தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி
இந்தக் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியை பொலம் பூண் நன்னன்
என்பவன் கைப்பற்றிக்கொண்டான். அவனை ப் பெருந்துறை என்னுமிடத்தில் போரிட்டு வென்று
இழந்த தன் தன் நாட்டை இவன் மீட்டுக்கொண்டான் என்று கல்லாடனார் அகநானூற்றின் பாடியுள்ளார்..

குடாஅது
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்து அன்ன – அகம் 199/18-23

இந்தக் கல்லாடனார், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும்
பாடியிருப்பதால் இவன் அந்த நெடுஞ்செழியன் காலத்தவன் ஆதல் வேண்டும்.

இவனது வெற்றிகளையும், பெருமைகளையும் பதிற்றுப்பத்துப்பாடல்கள் எடுத்தியம்புகின்றன.

மேல்


நாரிகை

(பெ) பெண், woman

நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/56

நாணுகின்றாளில்லை அவனைக்கண்டு இந்த மடந்தை என்று சொல்வோரும்

மேல்


நால்கு

(பெ) நான்கு என்னும் எண், the number four

பால் புரை புரவி நால்கு உடன் பூட்டி – பொரு 165

பாலை ஒத்த (நிறத்தினையுடைய)குதிரைகள் நான்கினைச் சேரப் பூட்டி,

மேல்


நாலு

(வி) தொங்கு, hang, be suspended

பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/6

பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்

மேல்


நாலை கிழவன்

(பெ) பார்க்க : நாகன்
மேல்


நாவல்

(பெ) ஒரு மரம்,அதன் கனி, Jaumoon-plum, Eugenia jambolana

காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் – மலை 135

காற்றால் உதிர்ந்தன, கரிய கனிகளான நாவல்பழங்கள்

மேல்


நாவல் அம் தண் பொழில்

(பெ) நாவலந்தீவு, ஜம்புத்தீவு, one of the seven islands
பண்டைக்காலத்தில், இந்த அண்டம் ஏழு தீவுகளைக் கொண்டது என்றும், அவை ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வகை நீர்மப் பொருளால் சூழப்பட்டது என்றும் நம்பினர். அவற்றுள் உப்புநீரால்
சூழப்பட்ட தீவு ஜம்புத்தீவு எனப்பட்டது. ஜம்பு என்பதற்கு நாவல் என்று பெயர். எனவே இது தமிழில்
நாவலந்தீவு எனப்பட்டது.

”தீங்கனி நாவல் ஓங்கும் இத் தீவினில்”

என்று
மணிமேகலை (9:17) குறிப்பிடுகிறது.
எனவே நாவலந்தீவைத் தமிழ் இலக்கியங்கள் நாவல் அம் தண் பொழில் என்று கூறுகின்றன.
இச் சொற்றொடரே நமது நாடான இந்தியாவையும் குறிக்கப் பயன்பட்டது.

நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க – பெரும் 465

நாவலால் பெயர்பெற்ற அழகிய குளிர்ந்த உலகமெல்லாம் கேடில்லாமல் விளங்கும்படி

நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை
குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 5/8,9

இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும்
பொழிலில் உள்ள கிரவுஞ்சம் என்கிற பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து

மேல்


நாவாய்

(பெ) மரக்கலம், ship

1.

பெரும் கடலில் பயணம்செய்து, வெளிநாட்டிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்ய உதவும்
பெரும் கப்பல் இது. எனவே நாவாய் என்பது ஒரு பெரிய பாய்மரக்கப்பல் ஆதல் வேண்டும்.

பால்கேழ்
வால்உளைப் புரவியொடு வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த நளிநீர்ப் படப்பை – பெரும் 319-321

பாலின் நிறமான
வெண்மையான தலைச்சிறகுகளையுடைய குதிரைகளுடன் வடதிசையின் வளங்களைக் கொணரும்
மரக்கலங்கள் சூழ்ந்த பெருமையையுடைய கடற்பக்கத்தினையும்,
பெரும்பாணாற்றுப்படை என்னும் நூல் தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர்
உருத்திரங்கண்ணனார் பாடியது. இங்கு குறிப்பிடப்படும் துறைமுகம் பாடலில் நீர்ப்பாயல்துறை
எனப்படுகிறது. எனவே இது தொண்டை நாட்டில் உள்ள மாமல்லபுரம் எனப்படும் கடல் மல்லை
என்னும் பட்டினத்தைக் குறிக்கும் எனலாம்.

2.

வான் இயைந்த இரு முந்நீர்
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து
கொடும் புணரி விலங்கு போழ
கடும் காலொடு கரை சேர
நெடும் கொடி மிசை இதை எடுத்து
இன் இசைய முரசம் முழங்க
பொன் மலிந்த விழு பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை
தெண் கடல் குண்டு அகழி
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ – மது 75-88

வானவெளியோடு ஒன்றுபட்டுத் தோன்றும் பெரிய மூன்று நீர்மையுடைய
அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,
வளையும் திரை குறுக்கே பிளவுபடுமாறு,
வேகமான காற்றால் (ஓடித்)துறையைச் சேரும்பொருட்டு,
நெடிய கொடியை உச்சியில் உடையவாய், பாய் விரித்து
இனிய இசையை உடைய முரசம் முழங்க,
பொன் மிகுதற்குக் காரணமான சீரிய சரக்குகளை
நாட்டிலுள்ளோர் நுகரும்படி நன்றாக இறக்குதலைச் செய்யும்
அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் –
மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறைகள் சூழ்ந்த – அசைகின்ற இருக்கையினையும்,
தெளிந்த கடலாகிய ஆழ்ந்த அகழியினையும்,
சிறப்புக்கள் அமைந்த உயர்ந்த நெல்லின் (பெயரைப்பெற்ற)
(சாலியூர் என்ற)ஊரைக் கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே

இந்த மதுரைக்காஞ்சி, பாண்டியன் தலையாலங்கானதுச் செருவென்ற நெடுஞ்செழியனை,
மாங்குடி மருதனார் பாடியது. இங்கு குறிப்பிடப்படும் சாலியூர் என்பது நெற்குன்றம்
எனப்படும் மேற்குக்கடற்கரைப் பட்டினம் என்ற கருத்து உள்ளது. தனது மேலைநாட்டு
வணிகத்துக்காகப் பாண்டியன் இப்பகுதியைக் கைப்பற்றி ஆண்டான் என்பதை மேலைநாட்டு
வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலைநாட்டுச் சரக்குகளை இறக்குமதி செய்யும்
நாவாய்கள் இங்கு வந்து சென்றன என்ற கிறிப்பினின்றும், நாவாய் என்பது நீண்ட கடற்பயணம்
மேற்கொள்ளும் பெரிய பாய்மரக்கப்பல் என்பது பெறப்படும்.

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலைத் தேஎத்து நன்கலன் உய்மார்
புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியோடு அனைத்தும் – மது 321- 323

சீரிய மரக்கலங்களைக் கடலில் இயக்கும் மாலுமிகள்
அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல
பலருடன் கூடி, தம்முடன் கொண்டுவந்த குதிரைகளோடே முழுவதும்

என்ற மதுரைக்காஞ்சி அடிகள் இதனை உறுதிப்படுத்தும்.

பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி காய்ந்து உடன்
கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 375 – 379

பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தில்,
இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்
கடிய காற்று எடுக்கையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
என்ற மதுரைக்காஞ்சி அடிகள் ஒரு நாவாயைப் பற்றி விளக்கமாக உரைப்பதைக் காணலாம்.

3.

மேலைநாடுகளுக்கு நாவாய் ஓட்டி, தமிழர் வாணிபம் செய்தனர் என்பதை நற்றிணை குறிப்பிடுகிறது.

எந்தை
வேறு பல் நாட்டு கால் தர வந்த 5
பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறை
கலி மடை கள்ளின் சாடி அன்ன – நற் 295/4-7

எமது தந்தையின்,
வேறுபட்ட பல நாடுகளிலிருந்து காற்றால் உந்தித்தள்ளப்பட்டு வந்த
பலவாறான வேலைப்பாடுகள் கொண்ட நாவாய்கள் வந்து நிற்கும், பெரிய துறைமுகத்தில் இருக்கும்
செருக்குத்தரும் உணவான கள் இருக்கும் சாடியைப் போன்ற.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இயல் யானைக் கரிகால் வளவ – புறம் 66-68

என்ற புறப்பாட்டு இதனை உறுதிப்படுத்தும்.

மேல்


நாழி

(பெ) 1. ஒரு முகத்தல் அளவைக் கருவி, 8 உழக்கு, a measure of capacity = eight uzhakku
2. ஆவநாழிகை, அம்பறாத்தூணி
3. நாழிகை, indian hour = 24 minutes

1.

நாழி கொண்ட நறு வீ முல்லை – முல் 9

பெரிய உழக்கில் கொண்டுபோன நறிய பூக்களையுடைய முல்லை

ஆழாக்கு, உழக்கு, நாழி, படி, குறுணி, பதக்கு, மரக்கால், கலம் போன்றவை பல்வேறு
முகத்தல் அளவுகள்.இவற்றுக்கிடையே உள்ள வாய்பாடு இடங்கள்தோறும் மாறுபடும்.
மாதிரிக்கு ஒன்று.
5 செவிடு – 1 ஆழாக்கு
2 ஆழாக்கு – 1 உழக்கு
2 உழக்கு – 1 உரி
2 உரி – 1 படி
8 படி – 1 மரக்கால் (குறுணி)
12 மரக்கால் – 1 கலம்
2 குறுணி – 1 பதக்கு
2 பதக்கு – 1 தூணி

2.

ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி
சூர் ததும்பு வரைய காவால் – பரி 18/30,31

அழகு ததும்பும் கூர்மையான அம்புகள் நிறைந்த அம்பறாத்தூணி யாக இருக்கிறது
தெய்வமகளிர் நிறைந்த மலையிலிருக்கும் சோலை

3.

அன்னையோ காண் தகை இல்லா குறள் நாழி போழ்தினான்
ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே – கலி 94/5,6

“அம்மாடியோ? காணச் சகிக்காத குள்ளனாய்ப் பிறப்பதற்குரிய நாழிகையான நல்லநேரத்தில்
ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே!

மேல்


நாழிகை

(பெ) 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு, indian hour = 24 minutes

சூதர் வாழ்த்த மாகதர் நுவல
வேதாளிகரொடு நாழிகை இசைப்ப – மது 670,671

நின்றேத்துவார் வாழ்த்த, இருந்தேத்துவார் புகழைச் சொல்ல,
வைதாளிகர் (தத்தம் துறைக்குரியனவற்றைப்)பாட, நாழிகை (அறிவிப்பு)இசைப்ப,

முன் நாட்களில் நாழிகை வட்டில் போன்ற கருவிகளை வைத்து, ஒரு நாளின்
பொழுதுகளை அளப்பர். அவ்வாறு அளந்து சொல்வோர் மன்னனின் அரண்மனையில் இருந்து
அவ்வப்போது மன்னனுக்கு நாழிகைக் கணக்கைத் தெரிவிப்பர்.

மேல்


நாள்

(பெ) 1. தினம், a day consisting of 24 hours
2. காலை, early morning
3. நேரம், time
4. பகல், daytime
5. அன்றைய நாளுக்குரியது, that belonging to that day
6. முற்பகல், forenoon
7. வாழ்நாள், lifetime

1.

ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் – நற் 129/2

ஒரு தினம் நம்மைவிட்டுப் பிரிந்திருந்தாலும் உயிரின் தன்மை வேறுபடும்

2.

நளி சினை வேங்கை நாள் மலர் நச்சி – சிறு 23

செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் (அன்றைய)காலை பூத்த மலர் (என நினைத்து)விரும்பி

3.

அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள்
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 111,112

நடுயாமத்து வேட்டையைச் செய்யாதுவிட்டால், பகற்பொழுதில்
பிளந்த வாயையுடைய நாய்களுடன் பசிய புதர்களை அடித்து,

4.

நாள் தர வந்த விழு கலம் அனைத்தும் – மது 695

நாட்காலத்தே (திறையாகக் கொண்டு)வந்த சீரிய கலங்களும், பிறவும்

5.

நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68

(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல

6.

வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் – மலை 76

நிற்காமல் கொடுக்கும் அவனது நாளோலக்கத்தையும் (முற்பகல் நேர அரசு வீற்றிருப்பு)

7.

வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழிய
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி
விண்டு சேர்ந்த வெண் மழை போல
சென்றாலியரோ பெரும
———————————————–
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே – பதி 55/14- 21

– நீ வேண்டும் கால அளவுக்கு, ஆண்டுகள் பல கழிய,
மழையைப் பெய்து உலகைக் காத்த பின்பு, பஞ்சுப் பிசிறுகளாய்ப் பொங்கி மேலெழுந்து,
மலை உச்சியை அடையும் வெண் மேகத்தைப் போல,
சென்று கெடாமல் இருப்பதாக, பெருமானே!
—————————————————————————-
எழுச்சிமிக்க உள்ளத்தினையும் கொண்ட வேந்தனே! உனது வாழ்நாள் –

மேல்


நாளும்

(வி.அ) 1. நாள்தோறும், everyday
2. (அந்த)நாள்கூட, even that day
3. நாட்களாக, for (many) days

1.

மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 780,781

மணம் நாறுகின்ற கள்தெளிவைத் தர அதனைப் பருகி, நாள்தோறும்
மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,

2.

தோளும் அழியும் நாளும் சென்று என
நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்று
கண்ணும் காட்சி தௌவின – நற் 397/1-3

என் தோள்கள் மெலிவடைந்து தம் நலம் அழிந்தன; குறித்துச் சென்ற நாளும் கடந்துவிட்டதாக,
நீண்ட பாலைநிலத்திடை அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளியிழந்து
கண்களும் பார்வை குன்றிப்போயின

3.

பல் நாளும் படர் அட பசலையால் உணப்பட்டாள்
பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ – கலி 48/16,17

பலநாட்களாக நினைவு வருத்துவதினால் பசலையால் விழுங்கப்பட்டவளின்
பொன் உரைக்கும் கல்லில் உரைக்கப்பட்ட மணியினைப் போன்ற இவளின் மாநிறத்தின் மேல்
தவறு உண்டோ?

மேல்


நாற்பெருங்குழு

(பெ) அரசரின் ஆலோசனைக் குழு, the four advisory bodies of a king

தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும் – மது 510

தாம் தமது ஒழுக்கத்தால் மேலாய் விளங்கிய நால்வகைப்பட்ட பெரிய குழுவினரும்

அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதர், ஒற்றர் என்ற ஐவரைக் கொண்ட குழு ஐம்பேராயம்
எனப்படும். இந்த ஐவரில் அமைச்சரைப் பற்றி ஏற்கனவே கூறிவிட்டதால், அவர் தவிர்த்த
நால்வரையும் இங்கு நாற்பெருங்குழு என்று மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.

மேல்


நாற்றஉணவு

(பெ) வேள்வித்தீயில் தேவர்க்குக் கொடுக்கும் உணவு,
Offerings made to the gods in sacrificial fire;

நாற்றஉணவின் உரு கெழு பெரியோர்க்கு – மது 458

அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,

மேல்


நாற்றம்

(பெ) 1. மணம், வாசனை, smell, scent, odour
2. நறுமணம், fragrance
3. ஒவ்வாத மணம், offensive smell

1.

அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 446,447

தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலினையுடைய மகளிரின்,
மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச,

கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து – புறம் 325/9,10

நெருப்பில்வேகவைத்த கொழுவிய நிணத்தின் மணம்
தெருவெல்லாம் மணக்கும் வலிய மன்றத்தில்

2.

வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம்
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம்
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை – பரி 20/8-11

மேகங்கள் வழங்கும் மழை தொடர்ந்து பெய்து, மரங்கள் தரும் மலர்களின் நறுமணமும்,
தேனைத் தரும் மலர்களின் நறுமணமும், சுடும் வெயிலால் காய்ந்து, மேலெழும் காற்றை உடைய
கானங்கள் எழுப்பும் புதுமழையின் மணமும், மரக்கிளைகள் உதிர்த்த கனிகளின் நறுமணமும்,
தான் இவ்வாறான மணங்களைக் ஒருசேரக் கலந்து கொணர்ந்து வந்து தருகின்றது வையை;

3.

செழும் கோள் வாங்கிய மா சினை கொக்கு_இனம்
மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது
துய் தலை மந்தி தும்மும் – நற் 326/2-4

செழுமையான குலைகளால் வளைந்த கரிய கிளையில், கொக்குகள்
மீனைக் குடைந்து உண்பதால் ஏற்படும் புலவுநாற்றத்தைத் தாங்க மாட்டாத
மெல்லிய பஞ்சுபோன்ற தலையையுடைய மந்தி தும்மும்

மேல்


நாற்று

1. (வி) தொங்கவிடு, hang, suspend
2. (பெ) பிடுங்கி நடக்கூடிய இளம்பயிர், Seedlings reared for transplantation

1.

மனை மணல் அடுத்து மாலை நாற்றி
உவந்து இனிது அயரும் என்ப – அகம் 195/4,5

மனையின் முற்றத்தே மணலைப் பெய்து மாலைகளைத் தொங்கவிட்டு
மகிழ்ந்து இனிதே மனையின் கண் கோலம் செய்யும் என்ப

2.

செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/1,2

பருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த
ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை

மேல்


நாறு

1 (வி) 1. மணம் வீசு, emit a smell
2. இனிய மணம்வீசு, emit a sweet smell
3. தீய மணம்வீசு, stink
4. முளை, sprout, shoot forth
5. தோன்று, வெளிப்படு, appear, manifest
6. தோன்று, பிற, come into being, be born
– 2. (பெ) நாற்று, பிடுங்கி நடக்கூடிய இளம்பயிர், Seedlings reared for transplantation

1.1

பசு முகை தாது நாறும் நறு நுதல் – குறு 323/5

பசிய மொட்டின் பூந்தாது மணக்கும் நறிய நெற்றியையுடைய

1.2.

நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் – மலை 182,183

நல்ல வாசனையுள்ள மலர்களைச் சூடிய இனிய மணம் வீசும் கரிய உச்சிக்கொண்டையையுடைய
குறமகள்

1.3.

நரந்தம் நாறும் தன் கையால்
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே – புறம் 235/8,9

நரந்தம்பூ மணக்கும் தன் கையால்
புலால் வீசும் என் தலையைத் தடவுவான்

1.4.

பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/6

பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த இடத்தில்

1.5.

சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து – பதி 52/13

ஒளிர்கின்ற பாண்டில் விளக்கின் இறைத்தன்மை இனிமையாக வெளிப்படும் வெளிச்சத்தில்,

1.6.

தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து – மது 3,4

தேனிறால் தொங்குகின்ற உயர்ந்த உச்சியையுடைய
மலைகள் தோன்றியுள்ள அகன்ற உலகத்தின்கண்

2.

முடி நாறு அழுத்திய நெடு நீர் செறுவில் – பெரும் 212

முடி(யாக வீசிய)நாற்றை அழுத்தி நட்ட நீண்டநாள் நிற்கும் நீரையுடைய வயலில்

மேல்


நான்மறை

(பெ) நான்கு வேதங்கள், சதுர்வேதம், the four vedas

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/7

அறத்தை விரும்பிய கோட்பாட்டையுடைய நான்கு வேதத்தையுமுடைய அந்தணர்

மேல்


நான்மறையோர்

(பெ) அந்தணர், the brahmins

நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 202

அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும்,

மேல்


நான்மாடக்கூடல்

(பெ) மதுரை, the city Madurai

நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் – கலி 92/65

மதுரைநகரின் பெண்களும் ஆண்களும்

மேல்


நான்முகன்

(பெ) பிரம்மன், Brahma

நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ்
தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி – பெரும் 402-404

நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தியாகிய
நான்முகனாகிய ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய
தாமரையின் பொகுட்டைப் போன்று அழகுவிளங்கத் தோன்றி,

மேல்


நானம்

(பெ) நறுமணப்பொருள், fragrant substance

நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் – கலி 93/21,22

நறிய, குளிர்ச்சியான, மயிரில் தேய்க்கும் நறுமணச் சாந்தும், புழுகும் மணக்கும்
அலையலையான முடித்த கூந்தலில்

மேல்


நானிலம்

(பெ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்னும் நான்கு வகை நிலமுடைய பூமி,
the earth consisting of the four types of lands, mullai, kuRinjci, marutham and neythal

நானிலம் துளக்கு அற முழு_முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/35-37

இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய
பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற
பூணினைக் கொண்ட
பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி

மேல்