கே – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்


கேண்மை
கேணி
கேழ்
கேழல்
கேள்வன்
கேள்வி
கேளிர்

கேண்மை

(பெ) நட்பு, உறவு, friendship, relationship

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5

சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு;

தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/5,6

குளிர்ந்த துறையையுடைய ஊரினைச் சேர்ந்த தலைவனின் உறவு
பிறர் அறிவதால் பழிச்சொல் எழுப்பாதிருக்கட்டும் என்று வேண்டினோம்

மேல்


கேணி

(பெ) 1. கிணறு, well
2. சிறிய குளம், small tank

1.

வேட்ட சீறூர் அகன் கண் கேணி
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/5,6

வேட்டுவர்களின் சிறிய ஊரில் உள்ள அகன்ற வாயையுடைய கிணற்றிலிருந்து
பயன்தரும் ஆநிரைகளுக்காக எடுத்து வைத்த தெளிந்த நீருள்ள தொட்டியில்

2.

ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை – குறு 399/1,2

ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்

மேல்


கேழ்

1. கெழு, சாரியை, An euphonic increment, இடைச்சொல், A connective expletive in poetry
2. (வி) ஒப்பாக இரு, be similar to
3. (பெ) ஒளிர்கின்ற நிறம், bright colour

1.

துறை கேழ் ஊரன் கொடுமை நாணி – ஐங் 11/2

துறையைப் பொருந்திய ஊரினைச் சேர்ந்த தலைவன் செய்த கொடுமைக்கு நாணி

2

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்த அன்ன இனம்
வீழ் தும்பி – பரி 8/22,23

ஏழு துளை, ஐந்து துளை கொண்ட குழல்கள், யாழ் ஆகியவற்றின் இசைக்கு ஒப்பானதைப் போன்று, தம் இனத்தை
விரும்புகின்ற தும்பியும்

3

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33

நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை


கேழல்

(பெ) பன்றி, hog, boar

புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/1,2

புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்

மேல்


கேள்வன்

(பெ) 1. காதலன், தோழன், lover, comrade
2. கணவன், husband

1.

ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ
நீருள் புகினும் சுடும் – கலி 144/61,62

இரக்கமற்ற காதலன் மூட்டிய காமத்தீ
நான் நீருக்குள் புகுந்துகொண்டாலும் நெருப்பாய்ச் சுடும்;

2.

நுனை இலங்கு எஃகு என சிவந்த நோக்கமொடு
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/21,22

நுனி ஒளிரும் வேலினைப்போன்ற சிவந்த பார்வையோடே,
தனக்குத் துணையாக அணைத்துக்கொண்டிருக்கும் தன் கணவனிடம் ஊடல்கொண்டவளின் நிலையும்

மேல்


கேள்வி

(பெ) 1. கேட்டறிந்து பெற்ற கல்வி, learning through listening
2. வேதம், scriptures
3. இசைச்சுருதி, pitch of a tune
4. யாழ், a string instrument
5. கேட்டல், hearing

1.

செறுத்த செய்யுள் செய் செந்நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/11,12

பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும்
மிக்க கேள்வி அறிவினையும் விளங்கிய புகழையுமுடைய கபிலன்

2.

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 186,187

ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,

3.

வேய்வை போகிய விரல் உளர் நரம்பின்
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 17,18

(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய, தொடர்ச்சியையும்,

4.

தொடை அமை கேள்வி இட_வயின் தழீஇ – பெரும் 16

கட்டமைந்த யாழை இடத்தோளின் பக்கத்தே அணைத்து

5.

கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/4

கேட்பதற்கு இனியவன், கண்ணுக்கு இனிமை இல்லாதவன்.

மேல்


கேளிர்

(பெ) சுற்றத்தார், relatives

யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறம் 192/1

எல்லா ஊரும் நமது ஊரே, எல்லாரும் நமது உறவினரே.

மேல்