க – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்


கங்கன்
கங்கு
கங்குல்
கச்சம்
கச்சு
கச்சை
கசடு
கஞ்சகம்
கஞல்
கட்குதல்
கட்சி
கட்டளை
கட்டி
கட்டூர்
கட்பு
கடகம்
கடம்
கடம்பன்
கடம்பு
கடமா
கடல்காக்கை
கடலை
கடவு
கடவை
கடறு
கடாம்
கடி
கடிகை
கடிப்பகை
கடு
கடுக்கை
கடுகு
கடுங்கண
கடுங்கோ
கடுப்பு
கடும்பு
கடுவன்
கடை
கடைஇ
கடைக்கூட்டு
கடைகொள்
கடைமுகம்
கடையல்
கண்கூடு
கண்டம்
கண்டல்
கண்டை
கண்ணி
கண்ணுள்வினைஞர்
கண்ணுறை
கண்பு
கண்மாறு
கண்வாங்கு
கண்விடு
கணவிரம்
கணி
கணிகாரம்
கணிச்சி
கணையன்
கதம்
கதழ்
கதி
கதுப்பு
கதுவாய்
கதுவு
கதூஉ
கதூஉம்
கந்தம
கந்தாரம்
கந்து
கபிலம்
கம்பலை
கம்புள்
கம்மியன்
கமண்டலம்
கமம்
கமுகு
கய
கயந்தலை
கயம்
கயமுனி
கயல்
கயவாய்
கயில்
கர
கரகம்
கரண்டை
கரந்தை
கரம்பை
கராம்
கருக்கு
கருப்பை
கரும்பனூரன்
கருவி
கருவிளை
கருனை
கலப்பை
கலவம்
கலவு
கலாபம்
கலாவம்
கலாவு
கலி
கலிங்கம்
கலிழ்
கலிழி
கலுழ்
கலுழி
கலை
கவ்வை
கவடு
கவண்
கவணை
கவர்
கவரி
கவலை
கவவு
கவழம்
கவற்று
கவறு
கவான்
கவிர்
கவுள்
கவை
கழகம்
கழங்கு
கழஞ்சு
கழல்
கழறு
கழனி
கழார்
கழால்
கழி
கழிகலமகளிர்
கழீஇ
கழு
கழுது
கழுந்து
கழுநீர்
கழுமலம்
கழுமு
கழுவாய்
கழுவுள்
கழூஉ
கள்ளி
களங்கனி
களங்காய்க்கண்ணி
களமர்
களர்
களரி
களவன்
களா
கறங்கு
கறவை
கறி
கறுத்தோர்
கறுவு
கறுழ்
கறைத்தோல்
கன்று
கன்னல்
கன்னிவிடியல்
கனம்
கனல்
கனலி
கனை

கங்கன்

(பெ) ஒருசங்ககாலச் சிற்றரசன், a chieftain of sangam period
சோழன் பெரும்பூண் சென்னியை எதிர்த்துப் போரிட்டவர் எழுவர் இந்த எழுவர் கூட்டணியில் கங்கன்
என்பவனும் ஒருவன். இக்கூட்டணி போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர்
பெரும்பூண் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி
ஒடியவர்களில் இந்தக் கங்கனும் ஒருவன். கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக்
கழுமலச்சிறையில் அடைக்கப்பட்டான். கங்கன் உட்பட சோழனை எதிர்த்த எழுவரும் சேரன் படைத்தலைவர்கள்
என்பார் நாட்டார் தம் உரையில்.

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/7-15

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய

மேல்


கங்கு

(பெ) எல்லை, வரம்பு, limit, border

அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
எம்மோர் ஆக்கம் கங்கு உண்டே – புறம் 396/24,25

தலையளித்து மீள மீள உவக்குமாறு கொடுத்தான் எங்கள் தலைவன்
எம்மனோராகிய இரவலர் அவன்பாற் பெற்ற செல்வத்துக்கு எல்லை உண்டோ?.

மேல்


கங்குல்

(பெ) 1. இரவு, 2. இருள், night, darkness

1.

அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி
கங்குல் வருதலும் உரியை – அகம் 2/14,15

கடும் காவலையுடைய காவலர்கள் சோர்ந்திருக்கும் தக்க சமயத்தை உளவறிந்து கண்டு
இரவில் வருவதுவும் (நினக்கு)உரியதே,

2.

பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப – குறு 355/4,5

பலரும் துயிலும் நள்ளிரவின் இருளில்
எப்படித்தான் வந்தாயோ? உயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே!

மேல்


கச்சம்

(பெ) ஆடைச்சொருக்கு,
the end piece of waist garment tucked up in folds,
such fold brought up from the front and tucked up behind;

கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி – மது 436

கச்சம் தேய்த்துத் தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் திருத்தமான கால்களையும்

மேல்


கச்சு

(பெ) அரைப்பட்டி, இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை, girdle, cloth belt
இது கச்சை என்றும் அழைக்கப்படும்

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரி கச்சின் பூண்ட மங்கையர் – முல் 46,47

இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை
விரவின நிறங்களையுடைய கச்சினால் பூண்ட மங்கையர்,

மேல்


கச்சை

(பெ) அரைப்பட்டி, இடுப்பில் இறுக்கிக் கட்டும் துணிப்பட்டை, girdle, cloth belt
இது கச்சு என்றும் அழைக்கப்படும்

விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரை செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ – நற் 21/1,2

விரைந்த ஓட்டத்தினால் வருந்திய நெடுந்தொலைவு பயணம்செய்த படைமறவர்
இடுப்பில் கட்டிய கச்சையை அவிழ்த்துவிட்டுத் தங்கியவாறு

மேல்


கசடு

(பெ) 1. அழுக்கு, dirtiness
2. குற்றம், blmish, fault

1.

கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி – பொரு 70

கை அழுக்கு இருந்த என் முகப்பு அகன்ற உடுக்கையில்

2.

களைக என அறியா கசடு இல் நெஞ்சத்து – பதி 44/6

என் துயரத்தைக் களைக என்று யாரிடமும் சொல்வதை அறியாத குற்றமில்லாத நெஞ்சத்தினையும்,

மேல்


கஞ்சகம்

(பெ) கறிவேப்பிலை மரம், Curry-leaf tree, Murraya koenegii

கஞ்சக நறு முறி அளைஇ – பெரும் 308

கறிவேப்பிலை மரத்தின் நறிய இலை(யைக் கிள்ளிக்)கலக்கிவிட்டு

மேல்


கஞல்

(வி) 1. நெருக்கமாக இரு, be densely packed
2. மிகுந்திரு, be in excess

1.

பன் மலர் காயாம் குறும் சினை கஞல
கார் தொடங்கின்றே காலை – நற் 242/4,5

பல மலர்களையுடைய காயா சிறிய கிளைகளில் நெருக்கமாய்ப் பூக்க,
கார்காலம் தொடங்கிவிட்டது இன்று காலையில்

2.

இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் – மலை 358
வியப்பு மிகுந்து விளங்கிய இனிய குரலையுடைய விறலியர்

மேல்


கட்குதல்

(வி) களையெடுத்தல், weeding out

பரு இலை குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என – குறு 100/2,3

பெரிய இலைகளைக் கொண்ட மலைமல்லிகையொடு பசிய மரல் கொடியைக் களையெடுக்கும்
காந்தள் செடிகளைக் கொண்ட அழகிய மலைச் சரிவில் உள்ள சிறுகுடியிலுள்ளோர் பசித்ததாக

மேல்


கட்சி

(பெ) 1. காடு, forest
2. புகலிடம், refuge
3. தங்குமிடம், dwelling place

1.

உச்சி நின்ற உவவு மதி கண்டு
கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த
சில்வளை விறலியும் நானும் – புறம் 60/3-5

உச்சியில் நின்ற முழு மதியத்தைக் கண்டு
காட்டு மயிலைப் போல சுரத்திடைப் பொருந்திய
சில வளையலையுடைய விறலியும் நானும்

2.

வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும் 204,205

வளரும் இளமையான (தம்)குஞ்சுப்பறவைகளைத் அணைத்தவாறு, குறிய காலினையும்,
கரிய கழுத்தினையும் உடைய காடைப்பறவை புகலிடத்தில் சென்றடையும்,

3.

கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் – மலை 235

தோகையையுடைய மயில்கள் தம்மிடங்களில் சோர்வுறும்வரை ஆடிக்கொண்டிருப்பினும்,

மேல்


கட்டளை

(பெ) 1. உரைகல், touchstone
2. முறைமை, way, method, manner

1.

பொன் காண் கட்டளை கடுப்ப – பெரும் 220

பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப

2.

வேனில் பள்ளி தென் வளி தரூஉம்
நேர் வாய் கட்டளை திரியாது – நெடு 61,62

இளவேனில் காலத்தில் (துயிலும்)படுக்கை அறைக்குத் தென்றல் காற்றைத் தரும்
நேருக்கு நேராக அமைந்த சாளரங்கள் திறக்கப்படாமல்

மேல்


கட்டி

(பெ) ஒருசங்ககாலச் சிற்றரசன், a chieftain of sangam period
சோழன் பெரும்பூண் சென்னியை எதிர்த்துப் போரிட்டவர் எழுவர் இந்த எழுவர் கூட்டணியில் கட்டி
என்பவனும் ஒருவன். இக்கூட்டணி போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர்
பெரும்பூண் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர். தப்பி
ஒடியவர்களில் இந்தக் கட்டியும் ஒருவன். கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக்
கழுமலச்சிறையில் அடைக்கப்பட்டான். கட்டி உட்பட சோழனை எதிர்த்த எழுவரும் சேரன் படைத்தலைவர்கள்
என்பார் நாட்டார் தம் உரையில்.

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/7-15

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய

மேல்


கட்டூர்

(பெ) பாசறை, military camp

வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/2

பகைவர் நாட்டினில் எழுப்பித் தங்கியிருக்கும் பாசறையின் நடுவே

மேல்


கட்பு

(பெ) களைபறித்தல், weeding

கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை – மது 258

கரும்பு ஆட்டும் ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும்,

மேல்


கடகம்

(பெ) கங்கணம், bracelet

மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/21

மூட்டுவாய் செறிந்த முனகையில் உள்ள கடகத்துடன் கொடுத்தான்

மேல்


கடம்

(பெ) 1. பாலைநிலவழி, difficult path in a barren tract
2. தெய்வக்கடன், religious obligation
3. கடமை, duty

1.

வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி – ஐங் 330/1

பொசுக்குகின்ற புழுதிக்காடாகிய வெயில் காயும் இந்தப் பாலைவழியைக் கடந்து

2.

நிலை உயர் கடவுட்கு கடம் பூண்டு – கலி 46/16

உயர்நிலைத் தெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டு

3.

இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12

இன்னமும் உன் விருப்பப்படி நடப்பதை தன் கடமையாகக் கொண்டு உனக்கு உடன்பட்டாள்

மேல்


கடம்பன்

(பெ) ஒரு பழமையான குடி, An ancient tribe

துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை – புறம் 335/7

மேல்


கடம்பு

(பெ) கடம்பம், Common cadamba, Anthocephalus cadamba;

1.

முருகப்பெருமானுக்குரிய மரம்

கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – பெரும் 75

கடம்பிடத்தே இருக்கும் நெடிய முருகனை ஒத்த தலைமைச்சிறப்பையும்

2.

பல அரசர்களுக்குக் காவல்மரமாக இருந்துள்ளது

வயவர் வீழ வாள் அரில் மயக்கி
இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்ப
கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே – பதி 12/1-3

வீரர்கள் தோற்றுவிழும்படியாக, வாளால் செய்யும் போரினால் அவரை நிலைகுலையச் செய்து
பகைவரின் நாட்டைக் கவர்ந்துகொள்ளும் சுற்றத்தாரையுடைய அரசர்கள் தலைநடுங்கி வணங்க,
அவரின் காவல்மரமான கடம்பரமரத்தை அடியோடு வெட்டிச் சாய்த்த கடும் சினத்தையுடைய வேந்தனே!

3.

மலர்கள் வண்ணமயமானவை. நறுமணம் மிக்கவை

வண்ண கடம்பின் நறு மலர் அன்ன – பெரும் 203

4.

அடிமரம் உறுதியானது, திரண்டு பருத்தது.

திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇய – குறி 176

உறுதியாக நிற்கும் கடப்பமரத்தின் திரண்ட அடிப்பகுதியைச் சுற்றிவளைத்து

5.

மலர்கள் உருண்டையானவை, குலைகுலையாய்ப் பூப்பவை

உருள் இணர் கடம்பின் நெடுவேட்கு எடுத்த – பரி 21/50

தேருருள் போன்ற பூங்கொத்துக்களையுடைய கடம்பின் பூவுடன் சேர்ந்து கமழ்கின்ற மாலை

மேல்


கடமா

(பெ) காட்டுமாடு, bison

கல்லென் கானத்து கடமா ஆட்டி
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/1,2

கல்லென்ற ஓசையிடும் காட்டினில் காட்டுமாடுகளை விரட்டி
பகற்பொழுதும் இருளாகிவிட்டது; வேட்டைநாய்களும் இளைத்துவிட்டன

மேல்


கடல்காக்கை

(பெ) நீர்க்காக்கை, Cormorant

கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம்
கடல்_சிறு_காக்கை – அகம் 170/9,10

தாழை மரத்தின் தாழ்ந்த கிளையில் வருத்தமுடன் தளர்ந்திருக்கும்
சிறிய கடற்காக்கை

மேல்


கடலை

(பெ) 1. கடல், sea
2. விதை, seed

1.

கார் மலர் பூவை கடலை இருள் மணி – பரி 13/43

கருமேகம், காயாமலர், கடல், இருள், நீலமணி

2.

நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு – புறம் 120/14

நறிய நெய்யிலே கடலை துள்ள, சோற்றை அட்டு
– அவரையின் உள்ளிருக்கும் பரலை ஈண்டுக் கடலை என்றார் – ஔ.சு.து.விளக்கம்

மேல்


கடவு

(வி) 1. செலுத்து, drive, ride on
2. தூண்டு, urge, egg on

1.

திண் தேர் வலவ கடவு என கடைஇ – அகம் 74/11

திண்ணிய தேரினை, பாகனே, விரைந்து செலுத்துவாயாக எனக்கூறிச் செலுத்திக்கொண்டு

2.

கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/25,26

கேள்விஞானமுள்ள அந்தணர் தூண்டிவிடும்
வேள்விப் புகையைப் போல் பெருமூச்செறிகிறது என் நெஞ்சம்.

மேல்

கடவை – (பெ) ஒரு வகை மான், a kind of deer
கடவை மிடைந்த துடவை அம் சிறுதினை – குறு 392/4
கடவை மான்கள் நெருங்கி இருக்கும் தோட்டத்திலுள்ள அழகிய சிறுதினையில்
– கடவை – மான்வகை – ச.வே.சு.உரை, விளக்கம்
– கடமை என்ற பாட பேதம் உண்டு – கடமையும் ஒரு வகை மான் (an elk) என்பர் – உ.வே.சா,
– பொ.வே.சோ உரை

மேல்


கடறு

(பெ) 1. காடு, jungle
2. பாலை நிலம், desert tract
3. மலைச்சாரல், mountain slop

1.

கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் – பெரும் 116

கடுமையான கானவர் காட்டில் (கூட்டாஞ்சோற்றைக்)கூடியுண்ணும்

2.

வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ – நற் 164/8

வெம்மையான பாலைவழியின் உலர்ந்த சருகுகளின் மேல் மிக்க முடைநாற்றம் சூழ்ந்திருக்க,

3.

கோடு காய் கடற்ற காடு இறந்தோரே – அகம் 395/15

உச்சி வெம்பிப்போன மலைச்சரிவிலுள்ள காடுகளைக் கடந்து சென்றவர்.

மேல்


கடாம்

(பெ) யானையின் மதநீர், secretion of a must elephant

ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3

ஓங்கி உயர்ந்த அழகிய யானையின் மிகுதியான மதநீரிலிருந்து கமழும் மணத்துடன்

மேல்


கடி

1. (வி) 1. துரத்து, ஓட்டு, scare away, drive away

2. (பெ)

1. காவல், guarding, protection
2. பேய், evil spirit
3. சிறப்பு, beauty, excellence
4. அச்சம், fear
5. வாசனை, நறுமணம், fragrance, scent
6. அடிக்குரல் ஓசை, sonorousness
7. மிகுதி, abundant, plenty
8. பூசை, தொழுதல், prayer, worship
9. திருமணம், wedding
10. புதுமை, newness, freshness
11. குறுந்தடி, short stick to beat drums
12. விரைவு, speed, swiftness

1.1

தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291

தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,

2.1.

.

அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் – சிறு 187

சான்றோர்(எண்ணிக்கை) குறைவுபடாததும், அரிய காவலினையுடையதும், அகன்ற மனையை உடையதும்

2.2

ஆடுற்ற ஊன் சோறு
நெறி அறிந்த கடி வாலுவன் – மது 35,36

துழாவிச் சமைத்த ஊனாலாகிய சோற்றை,
இடும்முறை அறிந்த பேய் மடையன் (சமையல் செய்வோன்)

2.3

அரும் கடி மா மலை தழீஇ – மது 301

பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்)

2.4

அரும் கடி வேலன் முருகொடு வளைஇ – மது 611

அரிய அச்சத்தைச் செய்யும் வேலன் வெறியாட்டமாடி வளைத்துக்கொண்டு,

2.5

கரந்தை குளவி கடி கமழ் கலி மா – குறி 76

நாறுகரந்தை, காட்டுமல்லிகைப்பூ, நறுமணம் கமழும் தழைத்த மாம்பூ,

2.6

கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி – மலை 10

அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,

2.7

மாரி கடி கொள காவலர் கடுக – ஐங் 29/1

மழையும் மிகுதியாகப் பெய்ய, காவலர்கள் தம் தொழிலில் விரைந்து செயல்பட

2.8

பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு
மெய்ம் மலி கழங்கின் வேலன் தந்தே – நற் 268/8,9

பரப்பி விட்ட புதுமணலைக் கொண்ட முற்றத்தில் பூசைக்குரிய ஏற்பாடுகளைச் செய்து
மெய்யை உரைக்கும் கழங்கினையுடைய வேலனை வருவித்து

2.9

சுடு பொன் அன்ன கொன்றை சூடி
கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே – ஐங் 432/2,3

நெருப்பில் சுட்ட பொன்னைப் போன்று ஒளிவிடும் கொன்றை மலர்களை அணிந்துகொண்டு
திருமண வீட்டில் நுழைபவரைப் போன்ற மள்ளரையும் கொண்டுள்ளது.

2.1.0

கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16

புதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கொன்றைப்பூவைச் சூடிக்கொள்ளவும்,

2.1.1

எடுத்தேறு ஏய கடி புடை அதிரும்
போர்ப்பு_உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு – பதி 84/1,2

போர்க்களத்தில் வீரரை முன்னேறிச் செல்ல ஏவுகின்ற வகையில் குறுந்தடியால் புடைக்கப்பட்டு அதிர்கின்ற
தோலால் போர்த்தப்பட்ட முரசின் முகப்பு அதிர்வதைப் போன்ற

2.1.2

எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5

எம்முடைய அம்பை விரைவாகச் செலுத்துவோம், உமக்குப் பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்துகொள்ளுங்கள்

மேல்


கடிகை

(பெ) 1. காப்பு, a string, one ties round one’s wrist as token of the fulfilment of a vow
2. சிறு துண்டம், piece cut off
3. கழுத்தணி, necklace
4. கைப்பிடி, காம்பு, handle; hilt, as of a spear

1.

வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து – நெடு 142

வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,

2.

கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன – குறு 267/2,3

கரும்பின்
அடிப்பகுதியில் வெட்டிய துண்டினை உண்டது போன்ற

3.

நீல மணி கடிகை வல்லிகை யாப்பின் – கலி 96/10

நீல மணிகள் கோத்த கழுத்தணியே வல்லிகையென்னும் கட்டப்பட்ட கழுத்துக்கயிறாகவும்

4.

தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் – அகம் 35/3,4

ஒப்பற்ற மணி மாறி மாறி ஒலிக்கும் கடையாணி இட்ட காம்பினையும்
கூரிய முனையையும் உடைய நெடிய வேலையுடைய கோட்டை மறவர்

மேல்


கடிப்பகை

(பெ வெண்கடுகு, white mustard

கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா – மலை 22

வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது

கடி என்பதற்குப் பேய் என்ற ஒரு பொருளுண்டு. பேயை ஓட்ட வெண்கடுகைப்பயன்படுத்துவர்.
எனவே இந்த வெண்கடுகு பேய்க்குப்பகை, அதாவது, கடிப்பகை எனப்பட்டது.

மேல்


கடு

1. (வி) 1. விரைந்து ஓடு, run fast
2. ஒத்திரு, resemble
3. ஐயப்படு, doubt
2. (பெ.அ) கடுமையான, விரைவான, intense, fast
3. (பெ) 1. கடுக்காய், Chebulic myrobalan
2. நஞ்சு, poison, venom

1.1

காலெனக் கடுக்கும் கவின் பெரு தேரும் – மது 388

காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,

1.2

சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் – நற் 228/6

முதுகை ஒத்திருக்கும் பெரும் துதிக்கையைக் கொண்ட வேழம்

1.3

நெஞ்சு நடுக்குற கேட்டும் கடுத்தும் தாம்
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/1,2

மனம் நடுங்குமாறு ஒரு செய்தியைக் கேட்டும், அதைப் பற்றி ஐயப்பட்டும், தாம்
அஞ்சிக்கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி உண்மையாகி நம்மைக் கொடுமைப்படுத்தும் என்று கூறும் பழமொழி,

2.

கல் காயும் கடு வேனிலொடு – மது 106

பாறைகள் சூடேறும் கடுமையான வேனிலால்

கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555

வேகமாகப் பாயும் வெள்ளத்தையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்

3.1

கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் – மலை 14

கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைச்சரிவில்

3.2

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148

நஞ்சுடன் மறைந்திருக்கும் உள்துளையுடைய வெண்மையான பல்லினையும்,

மேல்


கடுக்கை

(பெ) கொன்றை, indian laburnum

கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16

புதிய ஏரைப் பூட்டி உழும் உழவர் கொன்றைப்பூவைச் சூடிக்கொள்ளவும்

மேல்


கடுகு

(வி) 1. விரை, move fast, blow hard (as wind)
2. மிகு, increase

1.

துஞ்சா கண்ணர் காவலர் கடுகுவர் – அகம் 122/6

துயிலாத கண்களையுடையராய் ஊர்க்காவலர் விரைந்து சுழல்வர்

கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும்
உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் – நற் 201/8,9

காற்று மோதிவீசினாலும், சீறும் பெருமழை ஓங்கியடித்தாலும்
இடி சினந்து அறைந்தாலும், தீங்குகள் பல நேர்ந்தாலும்

2.

ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின் – கலி 8/3

ஞாயிறு
மிகுகின்ற அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்

மேல்


கடுங்கண்

(பெ) கடுமை, இரக்கமின்மை, cruelty, ferocity, savageness

இரும் கவின் இல்லா பெரும் புல் தாடி
கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என – அகம் 297/5,6

மிக்க அழகு இல்லாது பெரிய பொலிவற்ற தாடியினையும்,
இரக்கமின்மையையும் உடைய மறவரது அம்பு கொன்றதாக,

மேல்


கடுங்கோ

(பெ) ஒரு சேர மன்னன், a chEra king

நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம்
பொறையன் கடுங்கோ பாடி சென்ற
குறையோர் கொள்கலம் போல – அகம் 142/4-6

நிறுத்துதற்கரிய சேனையினையுடைய போர் வெல்லும் மாந்தரம்
பொறையன் கடுங்கோ என்னும் சேர மன்னனைப் பாடிச் சென்ற
வறியோரது பிச்சை ஏற்கும் கலம் போல

– இவன் பொறையன் எனப்படுவதால் இரும்பொறை மரபினன் ஆவான். பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம்
பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாக இருத்தல்கூடும். இவனது முழுப்பெயர் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
இவன் சேரமான் கடுங்கோ வாழியாதன், சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், கோ ஆதன்
செல்லிரும்பொறை எனவும் அழைக்கப்படுகிறான். சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன்
பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான
மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான்.

பார்க்க : மாந்தரம்
மேல்


கடுப்பு

(பெ) 1. தேள்,குளவி ஆகியவை கொட்டும்போது ஏற்படும் கடும் வலி,
Throbbing pain, burning sensation, as that caused by the sting of a wasp
2. வேகம், விரைவு, speed
3. சினம், violent anger

1.

தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் – புறம் 392/16

தேள் கொட்டும்போது ஏற்படும் வலியைப்போன்ற உணர்வைத் தருகின்ற நாள்பட்ட கள்

2.

கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி – அகம் 224/5

காற்றின் வேகத்தைப் போன்ற விரைந்த ஓட்டத்தையுடைய குதிரை

3.

கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் – பரி 4/49

மிகவும் துன்பம் உண்டாகும்படி வருத்தும் சினமும், அருள்புரிதலும்

மேல்


கடும்பு

(பெ) 1. சுற்றம், relations
2. கூட்டம், gathering multitude

1.

கொடும் பறை கோடியர் கடும்பு உடன் வாழ்த்தும் – மது 523

வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும்

2.

கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7

கூட்டமான வரையாடுகளுடன் சேர்ந்து தாவிக்குதித்து விளையாடும்

மேல்


கடுவன்

(பெ) பூனை, குரங்கு இவற்றின் ஆண், male of a cat or monkey

நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 237

நீண்ட மூங்கிலின் உச்சிக்கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்,

மேல்


கடை

1. (வி)

1. ஒரு குச்சியை மரப்பரப்பின் மீது சுழற்றித் தீ உண்டாக்கு, produce fire by fire drill
2. தயிரிலிட்டு மத்தைச் சுழற்று, churn with a churning rod
3. மரம் முதலியன சுழலவிட்டுச் செதுக்கி உருவாக்கு,
turn in a lathe; form, as moulds on a wheel
4. மிகுதியாகு, increase

2. (பெ)

1. கடைசிப்பகுதி, end, termination
2. கைப்பிடி, handle, hilt
3. தலைவாயில், entrance, gate
4. எல்லை, boundary, limit

1.1

கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/5

கடையும் கோலினின்று எழுந்த சிறு தீயை அது வளர்ந்திட விறகில் சேர்த்து

1.2.

நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/17

நெய்யைக் கடைந்து எடுத்துவிட்ட பாலைப் போலப் பயனொன்றும் இல்லையாகி

பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/6

பால் கடையுங்கால் எழும் வெண்ணெயின் பெரிய மிதப்பினை ஒத்த

தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் – அகம் 87/1

இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினையுடைய மத்து.

1.3

அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத
கை புனை செப்பம் கடைந்த மார்பின்
செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி – சிறு 52-56

வெட்டுண்ட வாயையுடைய குறிய மரக்கட்டையை கூர்மையான உளிகள் (உள்ளேசென்று)குடைந்த
கைத்தொழில் திறத்தால் செம்மைசெய்து கடைந்த (மாலையணிந்த)மார்பினையுடையதும்
(நெட்டி என்ற தாவரத்தின் தண்டால்)செய்த பூவின் மாலையை செவியடியில் (நெற்றிமாலையாகச்)
சூட்டப்பட்டதும்,
வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும்,
(அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி

1.4

காமம் கடையின் காதலர் படர்ந்து – குறு 340/1

காதல் மிக்கதாயின் காதலரை நினைத்துச் சென்று

2.1.

மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 164,165

கறுத்த கண்ணிமைகள் சுமந்த, (அவ்விமைகள்)நிரம்பி வழியும் நிலையிலுள்ள முத்து(ப்போன்ற) நீரை,
(தன்)சிவந்த விரலால் கண்ணின் கடைசியில் கொண்டு சேர்த்து (விரலில் மீந்த)சிலவற்றைச் சுண்டிவிட்டு,

கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண் – பொரு 26

கொலை செய்யும் வில் (போன்ற)புருவத்தினையும், அழகிய கடைசிப் பகுதியையுடைய குளிர்ச்சியுள்ள கண்

2.1., 2.2

மயிர்_குறை_கருவி மாண் கடை அன்ன
பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 29,30

மயிரைக் குறைக்கின்ற கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும்,
பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும், 30

2.3

குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் – சிறு 137-139

குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை,
புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து,
கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும்

அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 206

மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி

2.4

படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ – பெரும் 398,399

(பகைவரின்)படையின்கண் தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின்
எல்லையை மறைத்த, பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து

2.5

பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து
நொடை நவில் நெடும் கடை அடைத்து – மது 621,622

சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலை வாங்கிப்
பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து,

பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு_உறுப்ப – மது 661

பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட,

மேல்


கடைஇ

(வி.எ) 1. கடவி என்பதன் சொல்லிசை அளபெடை, செலுத்தி, drive, ride
2. கடவி என்பதன் சொல்லிசை அளபெடை, செலுத்தி,
அன்பு போன்றவற்றைப் பிறரிடம்காட்டி, showing (love)
3. கடவி என்பதன் சொல்லிசை அளபெடை, தேடி, seeking, searching for

1.

கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 440

காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி

திண் தேர் வலவ கடவு என கடைஇ
இன்றே வருவர் ஆன்றிகம் பனி – அகம் 74/11,12

பாகனே! திண்ணிய தேரினை இன்னும் விரைந்து செலுத்துவாயாக எனக்கூறிச் செலுத்திக்கொண்டு
இன்றே நம் தலைவர் வந்துறுவர் நாம் நடுக்கத்தை அமைவேம்

2.

சேயர் என்னாது அன்பு மிக கடைஇ
எய்த வந்தனவால் தாமே நெய்தல்
கூம்பு விடு நிகர் மலர் அன்ன
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனே – அகம் 83/11-14

சேய்மைக்கண் சென்றவர் என்று எண்ணாது அன்பு மிகச் செலுத்திட
தாம் நம்பால் அணுக வந்தன நெய்தலினது
முகை அவிழ்ந்த ஒளி பொருந்திய மலரை ஒத்த
அழகினை ஏந்திய குளிர்ந்த கண்ணினளாய நம் காதலியின் குணங்கள்

3.

புல் உளை குடுமி புதல்வன் பல்மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வறும் கலம் திறந்து அழ – புறம் 160/18-21

புல்லிய உளை மயிர் போலும் குடுமியையுடைய புதல்வன் பலமுறை
பால் இல்லாத வற்றிப்போன முலையைச் சுவைத்தும் பால் பெறானாய்
கூழும் சோறும் இருக்கிறதா என்று தேடிக்கொண்டு முறை முறையே
உள்ளே ஒன்றுமில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து அங்கும் ஒன்றும் காணாது அழ

மேல்


கடைக்கூட்டு

(வி) 1. (ஒன்றைச்)செய்துமுடி, நிறைவேற்று, carry out, execute a plan
2. இறுதியை (இறப்பை) அடையச்செய், cause death

1.

செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து
நில்லா உலகத்து நிலைமை தூக்கி
செல்க என விடுக்குவன் அல்லன் – பொரு 175-177

(உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு,
(ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து,
‘(நீயிர்)செல்வீராக’ என விடுவான் அல்லன்,
– செலவு கடைக்கூட்டுதல்

போதற்கு உறுதிகொள்ளல் – பொ.வே.சோ விளக்கம்

2.

மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்
கையாறு கடைக்கூட்ட கலக்கு_உறூஉம் பொழுது-மன் – கலி 31/6,7

மெய்யை நடுக்கும் பின்பனிக்காலப் பனியுடன், முன்பனிக்கால வாடையும் சேர்ந்து
நம்மைச் செயலிழக்கச் செய்து சாகும் நிலைக்குத் தள்ள, நெஞ்சத்தைக் கலக்கும் இளவேனில் இது
– கடைக்கூட்ட – இறப்பினைக் கொணர – நச்.உரை, பெ.விளக்கம்

காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை – கலி 99/13

காம நோய் இறந்துபாட்டைச் சேர்த்துகையினாலே, தான் வாழ்கின்ற நாளையே வெறுத்துவிட்டவளை
– நச். உரை, கடை – இறப்பு – பெ.விளக்கம்.

மேல்


கடைகொள்

(வி) முடிவுபெறு, be finished, come to an end

செல்வம் கடைகொள சாஅய் சான்றவர் – கலி 61/2

தம் செல்வம் எல்லாம் அழிந்துவிட்டமையால் வறுமையுற்ற பண்பு நிறைந்தவர்கள்

செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்
தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள்
இன் உயிர் தருதலும் ஆற்றுமோ – கலி 7/18-20

பிரிந்து செல்வது என்ற தவறான செய்கைக்கான ஏற்பாடுகளின்போதே இவ்வாறு வருந்துபவள், நீ
சென்றுவிட்டால்
இவளுடைய நலம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடுமாதலால், போய்விட்ட இவளின்
இனிய உயிரை மீட்டுத் தர இயலுமோ,
– நலம்கடைகொளப்படும் – இவள் இறந்துபடுவாள் – நச். உரை, பெ.விளக்கம்

மேல்


கடைமுகம்

(பெ) முன்றில், வீட்டின் முன்பக்கம், front yard of a house

காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகு பலி வெண் சோறு போல – புறம் 331/11,12

நாடு காத்தலைச் செய்யும் வேந்தரது பெருமனையின் முன்றிலில் வீசப்படும்
உயர்ந்த பலியாகிய வெள்ளிய சோற்றைப் போல
– கடைமுகம் என்பதை, புறக்கடை – வீட்டின் பின்பக்கம் என்று உரையில் குறிப்பிட்டு, பின்னர்
விளக்கத்தில் மன்னர் தம்முடைய முன்றிலில் பெருஞ்சோறு சமைத்து வாரி வழங்குவது போல
என்று குறிப்பிடுகிறார் உரையாசிரியர் ஔ.சு.து.அவர்கள்

மேல்


கடையல்

(பெ) (தயிர்) கடைதல், churning (of curd)

கடையல் அம் குரல வாள் வரி உழுவை – அகம் 277/5

தயிர் கடைவது போன்ற குரலையுடைய ஒளிபொருந்திய வரிகளையுடைய வேங்கயானது

மேல்


கண்கூடு

(வி) 1. ஒன்றுகூடு, திரள், join, come together
2. நெருங்கு, be crowded together

1.

களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் – அகம் 322/7

ஆண்யானைகள் திரண்ட வாட்கள் பின்னிய போர்க்கண்ணே

2.

கண்கூடு இருக்கை திண் பிணி திவவின்
ஆய் தினை அரிசி அவையல் அன்ன
வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் – பொரு 15-17

(ஒன்றோடொன்று)நெருங்கின இருப்பையுடையதும், திண்ணிய பிணிப்புடையதும் ஆகிய வார்க்கட்டினையும்;
ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்

மேல்


கண்டம்

(பெ) 1. கண்டத்திரை, பலவண்ணத்திரை, multi-colored curtain
2. துண்டம், துண்டு, piece, fragment

1.

நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு – முல் 44

நெடிய குத்துக்கோலுடன் பண்ணின கண்டத்திரையை வளைத்து, (அரசனுக்குரிய)இடமாகக் கொண்டு

2.

எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள
கரு பெற்று கொண்டோர் கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து
வசித்ததை கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறை_வயின் வசி தடி சமைப்பின்
சாலார் தானே தரிக்க என அவர் அவி
உடன் பெய்தோரே அழல் வேட்டு – பரி 5/34-41

நெருப்பு கனன்று தணியாமல் கொழுந்துவிட்டு எரியும் தன் மழுப்படையைக் கொண்டு அந்தக் கருவின்
உருவத்தைப்
பல கண்டங்களாகச் சிதைத்துக் கொடுத்துவிட்டான், இந்த உலகம் ஏழும் மருண்டுபோக,
இந்திரனிடமிருந்து இந்தக் கருவினைப் பெற்றுக்கொண்டோர், சிதைக்கப்பட்ட கருவாகிய குழந்தை உடலை,
எதிர்காலத்தை உணரும் ஆற்றல் பெற்ற ஏழு என்ற எண்ணை அடையாகக் கொண்ட முனிவர்கள் நன்றாகத்
தெளிந்து,
பிளவுபட்டதைத் துண்டங்களாக, அம் முனிவர்களின்
மனைவியர், தம் கற்புடைமையில், அந்தப் பிளக்கப்பட்ட துண்டுகளைத் தாங்கி வளர்த்தால்
அமைவுடையவராகமாட்டார் என்று எண்ணி, ‘தீயே அவற்றைத் தாங்குவதாக’ என்று அந்த முனிவர்கள்
வேள்வியுணவாக,
ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து;

மேல்


கண்டல்

(பெ) சதுப்பு நிலங்களில் காணப்படும் ஒருவகை மரம், Mangrove, Rhizophora mucronata
கண்டல் தாவரங்கள் (mangrove) அல்லது அலையாத்தித் தாவரங்கள் எனப்படுபவை கடலின் கரையோரங்களில்
உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும். இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும்
இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள்
நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு (Mangrove forest) எனப்படும். நிலமும் கடலும் சேரும் பகுதிகளில்,
சில இடங்கள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும், சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும்.
அலையாத்தித் தாவரங்கள் இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இவை வளரும் இடங்கள்
சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

என் குறை
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்
தெண் திரை மணி புறம் தைவரும்
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே – நற் 54/7-11

எனது குறையை
இங்கே இருப்பது போல அவர் உணரும்படி சொல்வாயாக! தழையாடை அணிவோர்
கொய்யக்கூடிய இலைகள் தழைத்த இளம் ஞாழல்
தெளிந்த அலைகளின் நீலநிற மேற்புறத்தைத் தடவிக்கொடுக்கும்,
கண்டல் மரவேலிகளையுடைய உம்முடைய கடல்துறைத் தலைவருக்கு

கானல் கண்டல் கழன்று உகு பைம் காய்
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என – நற் 345/1,2

கடற்கரைச் சோலையில் உள்ள கண்டல் மரத்திலிருந்து கழன்று விழுகின்ற பசுமையான காய்கள்
கரிய நிறமுள்ள பெரிய கழியினுள் விழுந்ததாக

மேல்


கண்டை

(ஏ.வி.மு) காண்பாயாக, see

விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு
பெரும் பொன் படுகுவை பண்டு – கலி 64/6,7

விரிந்து தழைத்த கூந்தலையுடையவளே! ஆராய்ந்து பார்! எனக்குப்
பெரும் பொன் கொடுக்கும் கடன்பட்டாய், முன்னொரு காலத்தில், அதாவது, என்னால் மிகவும் பொலிவு
பெற்றாய்!”
– கண்டை – காண் – நச்.உரை, பெ.விளக்கம்

மேல்


கண்ணி

(பெ) 1. தலைமாலை – பெரும்பாலும் ஆடவர் அணிவது, wreath worn on the head; chaplet
2. பூமாலை, garland

1.

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் – பட் 109

கணவர் (சூடும்)கண்ணியை மகளிர் (தலையில்)சூடிக்கொள்ளவும்,

2.

குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி
இணைத்த கோதை அணைத்த கூந்தல் – திரு 199,200

ஆழ்ந்த சுனையில் பூத்த மலர்(புனையப்பட்ட) வண்டு வீழ்கின்ற மாலையினையும்,
பிணைக்கப்பட்ட மாலையினையும், சேர்த்தின கூந்தலையும் உடையராய்,

மேல்


கண்ணுள்வினைஞர்

(பெ) ஓவியர், painter

எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள்வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518

பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி,

மேல்


கண்ணுறை

(பெ) 1. கண்ணால் கண்டு கொள்ளும் அச்சம், fear at the mere sight of a thing
2. கறி, curry, relish

1.

மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற
உத்தி ஒரு காழ் – கலி 96/12,13

கண்ணால் கண்டு அஞ்சும் சாட்டையாக, அழகு பெற்ற
தெய்வவுத்தியிலிருந்து ஒரு வடமாகத் தொங்கும் சுட்டி விளங்கவும்

2.

அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க – புறம் 15/18,19

எய்தற்கரிய மிக்க புகழையுடைய சமிதையும் பொரியும் ஆகிய பெரிய கண்ணுறையோடு
நெய் மிக்க புகை மேன்மேல் கிளற
– சமிதை – யாகத்துக்குரிய சுள்ளிகள்

பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக – புறம் 61/4,5

பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய துண்டத்தை
புதிய நெல்லினது வெள்ளிய சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு
– கண்ணுறை – வியஞ்சனம் – சோற்றுடன் துணையாய் உண்ணப்படுவது – ஔ.சு.து.விளக்கம்

வளை கை விறலியர் படப்பை கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினமாக – புறம் 140/3-5

வளை அணிந்த கையையுடைய விறலியர் மனைப்பக்கத்தின்கண் பறித்த
இலைக்குமேல் தூவுவதாக யாங்கள் சில
அரிசி வேண்டினேமாக
– கண்ணுறை – வியஞ்சனம் – துணைக்கறி – ஔ.சு.து.விளக்கம்

மேல்


கண்பு

(பெ) சம்பங்கோரை, Typha angustifolia
கண்பு, சண்பு, சம்பு (lesser bulrush, narrow leaf cattail அல்லது lesser reedmace) என்பது ஒரு சதுப்பு நில
அல்லது நீர்த் தாவரம் ஆகும். இது சண்பகங்கோரை, சம்பங்கோரை (elephant grass) என்றும் அழைக்கப்படும்.

களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர – மது 172

யானை(யும்) மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகங்கோரையும் நெருங்கி வளர

கண்பு மலி பழனம் கமழ துழைஇ – மலை 454

சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி,

மேல்


கண்மாறு

1. (வி) 1. இடம் மாறு, change one’s place
2. தோன்றி அக்கணமே மறை, appear and disappear in a twinkling
3. அசட்டையாயிரு, புறக்கணி, be indifferent to, neglect – Tamil Lexicon
– 2. (பெ) அருள், இரக்கம், கண்ணோட்டம், compassion

1.1.

விழவு மேம்பட்ட என் நலனே
——————— ——————–
தண்ணம் துறைவனொடு கண்மாறின்றே – குறு 125/4-7

திருவிழாவைப் போல் சிறந்த என் பெண்மை நலன்,
———————- ——————–
குளிர்ந்த அழகிய துறையையுடையவனோடு என்னைவிட்டுப் பிரிந்து இடம் மாறிப் போனது
கண்மாறுதல் – இடமாறுதல் – உ.வே.சா உரை விளக்கம்

1.2.

கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642

காட்சியினின்றும் (சடுதியில்)மறையும் கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து,

1.3.

கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன் – கலி 46/18

பெருமழை பெய்கின்ற நள்ளிரவில் நான் அசட்டையாய் இருந்துவிட்டதால் அவனுடைய சமிக்கையை நான்
கவனிக்காமல்விட

பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா ஏறி
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல்
நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் – கலி 61/22-24

பலரும் சிரித்து இகழ்கின்ற மடல்மாவில் ஏறி
செல்வம் கொழிக்கும் இவளின் ஊரின் நடுவில் வந்து நிற்பேன், நறிய நெற்றியையுடையவள்
எனக்கு அருள்தராமல் என்னைப் புறக்கணித்தால் என்று கூறிச் செல்கின்றவன்
கண்மாறிவிடின் – மறுத்துவிட்டால் – மறந்துவிடின் – மா.இராச. உரை, விளக்கம்
– அருளை மாறியேவிடின் – நச்.உரை

2.

அண்ணல் யானை வழுதி
கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே – புறம் 388/15,16

பெருமிதம் மிக்க யானையையுடைய வழுதி
என் பெரிய சுற்றத்தைப் பாதுகாக்கும் அருளைச் செய்யாதிருப்பானாக
– ச.வே.சு.உரை

தலைமைபொருந்திய யானைப்படையாற் சிறந்த வழுதி
என்னுடைய பெரிய சுற்றத்தாரைப் புரத்தற்குவேண்டும் கண்ணோட்டத்தினின்றும் ஒழிவானாக
– கு.வெ.பா.உரை (NCBH)

மேல்


கண்வாங்கு

(வி) கண்ணைக்கவர், attract attention, be inviting

காந்தள் கடி கமழும் கண்வாங்கு இரும் சிலம்பின் – கலி 39/16

காந்தள் பூவின் மணம் கமழும், கண்ணைப் பறிக்கின்ற அழகுடைய பெரிய மலைச்சரிவில்

மேல்


கண்விடு

(வி) 1. கணு தோன்று, சிம்புவிடு, shooting of bamboo splits
2. விழித்துப்பார், open the eyes;

1.

சிலம்பின் வெதிரத்து கண்விடு கழை கோல் – ஐங் 278/1

மலைச் சரிவிலிருக்கும் மூங்கிலின், கணுக்கள் விட்டுக் கழையாக வளர்ந்திருக்கும் கோலின் மேல்
– கண் – கணு – மூங்கிலின் கணுவினின்றும் சிறுசிறு கோல்கள் தோன்றி நீளுதல் இயல்பு

2.

கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 205

கடவுள் (வாழும்)- பெருமையுடைய (மேரு)மலை – (இமைக்காமல்)கண் விழித்திருப்பதைப் போன்ற

மேல்


கணவிரம்

(பெ) செவ்வலரி, செவ்வரளி, Red Oleander,

கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/9

செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்து கிடந்ததைப் போல

இது கணவிரி என்றும் கணவீரம் என்றும் அழைக்கப்படும்.

சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் – பரி 11/20
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 236

மேல்


கணி

(பெ) சோதிடன், astrologer

கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/6

கார்காலத்து அரும்பி மலர்ந்த, சோதிடனைப் போன்று காலங்கூறும் வேங்கை மரத்தின்

கணி வாய் பல்லிய காடு இறந்தோரே – அகம் 151/15

சோதிடம் கூறும் வாயையுடைய பல்லிகளையுடைய காட்டைக்கடந்து சென்ற நம் தலைவர்

மேல்


கணிகாரம்

(பெ) கோங்கு, Common caung, red cotton tree

மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல்
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/4,5

நீலமணியுடன் போட்டிபோடும் பசும்பொன்னோ, மாமரம் ஈன்ற இளம் தளிரின் மேல்
கோங்கின் பூந்தாது பரந்து ஒளிவீசுகிறதோ என்று இருந்த அழகு நீங்கிப்போக

மேல்


கணிச்சி

(பெ) 1. குந்தாலி, a kind of pick-axe
2. மழு, battle axe

1.

பொன் செய் கணிச்சி திண் பிணி உடைத்து
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/12,13

இரும்பால் செய்யப்பட்ட குந்தாலியால், திண்மையான பிணிப்புக்கொண்ட கட்டாந்தரையைப் பிளந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்

2.

மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் – புறம் 56/2

விலக்குதற்கரிய மழுவாகிய படைக்கலத்தை உடைய நீல மணி போலும் மிடற்றையுடையோனும்

மேல்


கணையன்

(பெ) ஒருசங்ககாலச் சிற்றரசன், a chieftain of sangam period
சோழன் பெரும்பூண் சென்னியை எதிர்த்துப் போரிட்டவர் எழுவர் இந்த எழுவர் கூட்டணியில் கணையன்
என்பவனும் ஒருவன். இக்கூட்டணி போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர்
பெரும்பூண் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓடிவிட்டனர்.
கணையன் மட்டும் அகப்பட்டுக்கொண்டான். அவன் சோழநாட்டுக் கழுமலச்சிறையில் அடைக்கப்பட்டான்.
சோழனை எதிர்த்த எழுவரும் சேரன் படைத்தலைவர்கள், கணையன் சேரன் தலைமைப் படைத்தலைவன்
என்பார் நாட்டார் தம் உரையில்.

நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி
துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு
அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர்
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என
கண்டது நோனான் ஆகி திண் தேர்
கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர் – அகம் 44/7-15

நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும்,
(பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும்,
பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக
முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில்,
பருந்துகள் மேலே சுற்றுமாறு போரிட்டுப் பழையன் இறந்தானாக,
அதனைக் கண்டு பொறுக்காதவனாகி, திண்ணிய தேரையுடைய
கணையன் என்பானை அகப்படுத்தி, கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய
பிணைப்புள்ள அழகிய கண்ணியையும், மிகுந்த அணிகலன்களையும் அணிந்த சென்னியின்
அழும்பில் என்ற ஊரை ஒத்த, குறையாத புதுவருவாயையுடைய

மேல்


கதம்

(பெ) சினம், anger

கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே – நற் 150/11

சினம் பெரிது உடையவளாய் என் தாய் வருந்துவாள் இல்லை.

மேல்


கதழ்

(வி) 1. விரைந்து செல், be swift and forceful
2. சீறியெழு, rage, be furious

1.

கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ – மது 440

காற்றின் இயக்கம் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி,

2.

மலை தலைவந்த மரையான் கதழ் விடை – மலை 331

மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,

மேல்


கதி

1. (வி) 1. விளையாடு, play
2. தோன்று, appear (புலியூர்க் கேசிகன் உரை)
3. வெறு, hate, detest
4. கோபி, சினம் கொள், be angry with
– 2. (பெ) 1. வழி, way, path
2. இயக்கம், motion, movement
3. இயல்பு, தன்மை, nature, characteristic

1.1.

நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி – நற் 352/5

தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடுகின்ற, நிணத்தை விரும்பும் கிழட்டு நரி
கதித்தல் – விளையாடுதல் – பின்னத்தூரார் உரை, விளக்கம்

1.2.

புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – நற் 329/4

அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகத் தோன்றிய புள்ளிகளையுடைய முதிய பருந்தானது
-புலியூர்க்கேசிகன் உரை, விளக்கம்

1.3.

புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – நற் 329/4

ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போன புள்ளிகளையுடைய முதிய பருந்து
– பின்னத்தூரார் உரை
கதித்த – வெறுத்த – கு.வெ.பா.உரை விளக்கம் (NCBH)

1.4.

அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன்
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு – கலி 91/6-8

“மெத்தை போன்ற மென்மையான தோள்களையுடையவளே! நான் செய்யாதவற்றைச் சொல்லிக் கோபிப்பது
இங்கு எதற்காக?
சந்தேகப்பட்டு என்மேல் சினங்கொள்ளாதே! என்னிடத்தில் தவறு இல்லை என்பதைத்
தெய்வத்தின் பேரில் தெளிவிக்கிறேன், காண்பாயாக!

2.1.

முட தாழை முடுக்கருள் அளித்த_கால் வித்தாயம்
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள்
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/9-12

வளைந்து கிடக்கும் தாழையின் குறுகிய வெளியில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சிறு தாயம் வேண்ட
உருட்டும்போது அதனையே கிடைக்கக் கண்டவனின் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
கொடுப்பதில் சிறந்தவனே! நீ பிரிய எண்ணினால், சிறு தாயம் வேண்டியபோது பெருக இட்டு வெல்லும்
நெறியல்லாத நெறியிலே சூது ஆடுவதினாலே,
கட்டிவைத்த பந்தயப் பொருளை இழந்தவனைப் போலப் பெரும் துயரில் வருந்தமாட்டாளோ?
– நச்.உரை.

2.2

கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21

காற்றுப்போலும் இயலையுடைய மனம் செருக்கிய குதிரைகள் இயக்கமின்றிக் கிடக்கவும்

2.3

முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல் – பரி 8/17,18

முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;

மேல்


கதுப்பு

(பெ) தலைமயிர், human hair

மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின்
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை – நற் 367/7,8

மென்மையான இயல்பையுடைய அரிவையே! உனது பலவாகிய கரிய கூந்தலில் இருப்பதைப் போன்று
குவளையோடு கலந்து தொடுத்த நறிய பூவான முல்லை

மேல்


கதுவாய்

(பெ) கொறுவாய், மூளியாதல், அடிபட்டு சிதைந்துபோதல், being scarred, distortion, ruin

எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் – புறம் 347/4

பகைவரை எறிந்து இலை முறிந்து வடுப்பட்ட வாயையுடைய வேலினையும்

மேல்


கதுவு

(வி) பற்று, sieze, grasp

பெரும் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்
பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் – அகம் 8/2-4

பெரிய கையை உடைய ஆண்கரடியின்
தொங்கும் தோலின் நுனியில் உள்ள பெரிய நகம் கவ்விப் பிடிப்பதால்
பாம்பு தன் வலிமையை இழக்கும் பாதிநாளாகிய இரவும்

மேல்


கதூஉ

(வி.அ) கதுவி என்பதன் விகாரம். பார்க்க கதுவு

கவை கதிர் இரும் புறம் கதூஉ உண்ட – அகம் 194/10

கவைத்த கதிர்களின் கரிய புறத்தினைப்பற்றி உண்ட

மேல்


கதூஉம்

(வி.எ) கதுவும் என்பதன் விகாரம். பார்க்க கதுவு

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2

வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை
பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்,

மேல்


கந்தம்

(பெ) கடவுள் உறையும் தூண், pillar in which a deity resides

கலி கெழு கடவுள் கந்தம் கைவிட – புறம் 52/12

(முழவு முதலாகிய) ஒலி பொருந்திய தெய்வங்கள் தூணைக் கைவிட

மேல்


கந்தாரம்

(பெ) 1. சங்கத் தமிழகத்தின் ஒரு பகுதி, a part of land in Sangam Tamil country
2. மது, a kind of intoxicating liquor

1.

தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு – புறம் 258/2,3

முற்ற விளைந்த இனிய மதுவையுடைய கந்தாரம் என்னும் வேற்றுப்புலத்து
தான் கொண்டுவந்து நிறுத்திய நிரையைக் கள் விலைக்கு நேராகக் கொடுத்து உண்டு
– கந்தாரம் என்பது காவிரிக்கரையைச் சார்ந்த ஓர் ஊர். – ஔவை.சு.து.உரை, விளக்கம்

2.

தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு – புறம் 258/2,3

– தீம்கந்தாரம் – இனிய கந்தாரம் என்னும் பெயரையுடைய மதுவையுடைய வேற்றுப்புலத்து

மேல்


கந்து

(பெ) 1. யானை கட்டும் தறி, post to tie an elephant to
2. தெய்வம் உறையும் தறி, post representing a deity which is worshipped
3. பற்றுக்கோடு, ஆதரவு, support

1.

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 383

கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;

2.

மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் – திரு 226

ஊர்ப்பொது மரத்தடியிலும், அம்பலத்திலும், திருவருள்குறியாக நடப்பட்ட தறியிடத்திலும்

3.

புலம் கந்து ஆக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நன்கலன் ஈயும் – அகம் 303/8,9

தம் அறிவையே நம்பி அதனை ஆதரவாகக் கொண்டு இரப்போர் சென்றால்
மலை போன்ற களிறுகளுடன் நல்ல அணிகலன்களைக் கொடுக்கும்

மேல்


கபிலம்

(பெ) கருஞ்சிவப்பு நிறம், tawny brown, dustiness, coffee brown colour

அகிலார் நறும் புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடு நகர் கமழும் நாற்றமொடு – புறம் 337/10,11

அகில் கட்டையினின்றெழுந்த நறிய புகையானது மெல்லச் சென்று படிந்த
கபில நிறம் பெற்ற நெடிய மனை முழுதும் கமழும் மணம் பொருந்திய
– புகை படிதலால் சுவர் கபிலநிறம் பெறுவதால் கபில நெடுநகர் என்றார்- ஔ.சு.து.உரை, விளக்கம்

மேல்


கம்பலை

(பெ) ஆரவாரம், din, clamour, roar

நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை – மது 116

வரிசையாக வருகின்ற படகின் மீன்பிடிப்போர் கரையில் இறங்கும் ஆராவார ஓசையும்,

மேல்


கம்புள்

(பெ) ஒரு நீர்ப்பறவை, சம்பங்கோழி, a water bird, Gallirallus striatus

பழன கம்புள் பயிர் பெடை அகவும் – ஐங் 60/1

நீர்நிலைகளில் வாழும் சம்பங்கோழி, விருப்பத்தோடு தன்னை அழைக்கும் தன் பெடையை நோக்கிக் கூவுகின்ற

இதனுடைய பேடைக்கு நெற்றி வெள்ளையாக இருக்கும். இதன் குரல் கரகரத்த ஓசையை உடையது.

வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை – ஐங் 85/1

மேல்


கம்மியன்

(பெ) கம்மாளன், smith, artisan

1.

செம்பினாலான பானையை வனைவர் கம்மியர் எனப்பட்டனர்.

மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி – நற் 153/2,3

மண் திணிந்த இந்த உலகம் ஒளிர்ந்துவிளங்க, கொல்லர் கடையும்போது
செம்புப்பொறிகளைச் சொரியும் பானையைப் போல மின்னலிட்டு,

2.

நெசவுத்தொழில் செய்வோரும் கம்மியர் எனப்பட்டனர்.

குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ – மது 520,521

சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,
சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,

3.

வேலைப்பாடு மிக்க விசிறிகளைச் செய்பவர்களும் கம்மியர் எனப்பட்டனர்

கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த
செம் கேழ் வட்டம் சுருக்கி – நெடு 57,58

கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த
சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு

4.

மரவேலை செய்யும் தச்சர்களும் கம்மியர் எனப்பட்டனர்

கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து
ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை – நெடு 85,86

கைத்தொழில் வல்ல தச்சன் (ஆணிகளை நன்றாக)முடுக்கியதனால் இடைவெளியற்று,
வெண்சிறுகடுகு அப்பிவைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய,

5.

முத்துக்களைக் கொண்டு அணி செய்வோரும் கம்மியர் எனப்பட்டனர்

கைவல் கம்மியன் கவின் பெற கழாஅ
மண்ணா பசு முத்து ஏய்ப்ப – நற் 94/4,5

கைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
தூய்மைசெய்யாத பசுமுத்தைப் போல

6.

பொற்கொல்லர்களும் கம்மியர் எனப்பட்டனர்

பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப – நற் 313/2

மேல்


கமண்டலம்

(பெ) முனிவர் முதலானோரின் நீர் வைக்கும் செம்பு,
The water vessel of a religious mendicant

செம் பூ முருக்கின் நன் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்து
படிவ உண்டி பார்ப்பன மகனே – குறு 156/2-4

சிவந்த பூக்களைக்கொண்ட புரச மரத்தின் கொப்பின் பட்டையை உரிந்து
தண்டாக்கி அதனுடன் பிடித்த தொங்கவிட்ட கமண்டலத்துடன்
நோன்பு உணவு உண்ணும் பார்ப்பன மகனே!

பார்க்க : கரகம்

மேல்


கமம்

(பெ) நிறைவு, fullness, entirety

1.

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7

கடலில் முகந்த நிறைத்த சூல் கொண்டமேகங்கள்,

2.

விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி – நற் 12/1

விளாம்பழம் கமழும், நிறைசூலியைப் போன்ற தயிர்ப்பானையில்

3.

கணை கோட்டு வாளை கமம் சூல் மட நாகு – குறு 164/1

கணைபோன்று திரண்ட கொம்பினையுடைய முதிர்ந்த கருக்கொண்ட பெண் வாளைமீன்

4.

கான மஞ்ஞை கமம் சூல் மா பெடை – அகம் 177/10

காட்டிலுள்ள மயிலின் நிறைந்த கருவினைக் கொண்ட கரிய பெடை

மேல்


கமுகு

(பெ) பாக்கு மரம், Areca-palm, Areca catechu

திரள் கால்
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன – பெரும் 380,381

திரண்ட தண்டினையுடைய
சோலையிடத்து நிற்கும் கமுகின் சூல்கொண்ட வயிற்றை ஒத்த

மேல்


கய

(பெ.அ) 1. பெரிய, great, big
2. மென்மையான, tender, delicate

1.

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை – சிறு 42

செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை

மேல்


கயந்தலை

(பெ) யானைக்கன்று, young elephant, having a tender head;

துடி அடி கயந்தலை கலக்கிய சில் நீரை – கலி 11/8

உடுக்கை போன்ற கால்களையுடைய கன்று கலக்கிய சிறிது நீரை

மேல்


கயம்

(பெ) 1. குளம், ஏரி, lake, tank
2. மென்மை, tenderness, softness

1.

பாசடை நிவந்த கணை கால் நெய்தல்
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/4-6

பசிய இலைகளுக்கு மேல் உயர்ந்த திரண்ட காம்பையுடைய நெய்தல்பூ
கூட்டமான மீன்களையுடைய கரிய கழியில், நீரோட்டம் மிகுந்தோறும்
குளத்தில் மூழ்கும் மகளிரின் கண்களை ஒக்கும்

2.

கயம் தலை மட பிடி பயம்பில் பட்டு என – அகம் 165/1

மெல்லிய தலையையுடைய இளைய பெண்யானை குழியில் அகப்பட்டதாக

மேல்


கயமுனி

(பெ) யானைக்கன்று, young elephant,

பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்ப – மலை 107

பொய்ச் சண்டைபோடும் யானைக்கன்றுகளின் (ஒன்றோடொன்று)பின்னிப்பிணைந்த துதிக்கைகள் போல,

மேல்


கயல்

(பெ) கெண்டை மீன், Cyprinus fimbriatus

கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/4

கயல் என்று கருதிய மைதீட்டிய கண்கள்

மேல்


கயவாய்

(பெ) கழிமுகம், estuary

குட மலை பிறந்த தண் பெரும் காவிரி
கடல் மண்டு அழுவத்து கயவாய் கடுப்ப – மலை 527,528

குடகு மலையில் பிறந்த குளுமையான பெரிய காவிரியாற்றைக்
கடல் (தாகத்துடன்)குடிக்கும் ஆழமான கழிமுகத்தைப் போன்று,

மேல்


கயில்

(பெ) மூட்டுவாய், கொக்கி, clasp of a necklace

கட்டிய கயில் அணி காழ் கொள்வோரும் – பரி 12/18

கட்டப்பட்ட கொக்கிகளையுடைய அணிகலன்களை வடங்களாகப் பூண்டுகொள்வோரும்

மேல்


கர

(வி) 1. கவர், steal, pilfer
2. மறை, conceal, hide

1.

உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலை 211

வலிமையுள்ள யானைகளை(யும்) வஞ்சகமாகக் கவரும் முதலைகள் சோம்பிக்கிடக்கும்

2.

கண் நிறை நீர் கொடு கரக்கும்
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/13,14

கண்ணில் நிறைந்து இருக்கும் கண்ணீரைக்கொண்டு தன் துயரை மறைப்பாள்
ஒளிபொருந்திய நெற்றியையுடைய தலைவி, இதற்கு யான் என்ன செய்வேன்?” என்று.

மேல்


கரகம்

(பெ) கமண்டலம், vessel for holding water, used by ascetics;

நீர் அறவு அறியா கரகத்து
தாழ் சடை பொலிந்த அரும் தவத்தோற்கே – புறம் 1/12,13

நீர் குறைந்து போகாத கமண்டலத்தாலும்
தாழ்ந்த திருச்சடையாலும் சிறந்த செய்தற்கரிய தவத்தை உடையவனுக்கு

பார்க்க : கமண்டலம்

மேல்


கரண்டை

(பெ) கமண்டலம், கரகம், vessel for holding water, used by ascetics;

பார்க்க : கரகம்

கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை
பல் புரி சிமிலி நாற்றி – மது 482,483

கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய கமண்டலத்தைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி,

மேல்


கரந்தை

(பெ) 1. ஒரு மரம், Iron-weed, Vernonia arborea
2. ஒரு செடி, திருநீற்றுப்பச்சை. Fragrant Basil, Ocinum basilicum.
3. வயல் புறத்தில் விளையும் ஒரு கொடி.

1.கொடிவகையைச் சேர்ந்த கரந்தை வயல்வெளியில் படரும்.

காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5

‘காய் காய்த்த கரந்தையின் கரிய கொடி விளைகின்ற வயலில்

2.கரந்தை சிவப்பு நிறத்தில் பூக்கும்.

செம் பூ கரந்தை புனைந்த கண்ணி – அகம் 269/11

சிவந்த கரந்தைப் பூவைத் தொடுத்து இயற்றிய கண்ணி.

3.கரந்தையின் பூ பசுவின் முலைக்காம்பு போல் இருக்கும். மணம் மிக்கது.

நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை – புறம் 261/13

இளைய பசுவின் மடிக்காம்பினைப் போன்ற நறிய பூவைக்கொண்ட கரந்தை

மேல்


கரம்பை

(பெ) வறண்ட களி மண் நிலம், hard clayey soil

வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை
செந்நெல் வல்சி அறியார் தத்தம் – பதி 75/11,12

உழுது விதைத்துப் பெற்ற வெள்ளை வரகும், கொள்ளும் உடைய களர்நிலம் ஆகி,
அங்குள்ளோர் செந்நெல் உணவினை அறியமாட்டார்

மேல்


கராம்

(பெ) இந்தியாவில் உள்ள மூன்று வகை முதலைகளில் ஒன்று.
The type 3 cococodile called gharial (Gavialis gangeticus)

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் – குறி 257

வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும்,

முதலை, இடங்கர், கராம் என்ற மூன்றும் முதலை வகைகள்.
கராம் இன முதலைகள் ஆறுகளிலும், குளங்களிலும் இருக்கும்.

கராஅம் கலித்த கண் அகன் பொய்கை – பட் 242
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – அகம் 18/3

பார்க்க : இடங்கர்
மேல்


கருக்கு

(பெ) பனை மட்டையின் பல்போன்ற கூரிய முனை, jagged edge of the palmyra leaf stalk

பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய – குறு 372/1

பனைமரத்தின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நெடிய மடல்கள் குருத்தோடு மறைந்துபோக

மேல்


கருப்பை

(பெ) எலி, rat

வரி புற அணிலொடு கருப்பை ஆடாது – பெரும் 85

வரியை முதுகிலே உடைய அணிலோடு, எலியும் திரியாதபடி,

மேல்


கரும்பனூரன்

(பெ) சங்ககாலத்து வள்ளல், a philanthropist of sangam age
கரும்பனூர் என்பது தொண்டைநாட்டு வேங்கடக் கோட்டத்தில் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்த கரும்பனூர்க்கிழான்
என்ற வள்ளலைப் போற்றிப் புறநானூற்றில் இரு பாடல்கள் (381,384) உள்ளன. அவற்றைப் பாடியவர்
புறத்திணை நன்னாகனார்.

கரும்பனூரன் கிணையேம் பெரும – புறம் 384/9

கரும்பனூர் கிழானுடைய கிணைவராவோம் பெருமானே

மேல்


கருவி

(பெ) 1. ஒரு பணிசெய்ய உதவும் பொருள், instrument, tool
2. கூட்டம், தொகுதி, மேகம், collection, group

1.

மயிர் குறை கருவி மாண் கடை அன்ன – பொரு 29

மயிரைக் குறைக்கின்ற கருவியான கத்தரிக்கோலின் சிறப்பாயமைந்த கைப்பிடியைப் போன்ற

2.

கருவி வானம் கடல் கோள் மறப்பவும் – பொரு 236

கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,

மேல்


கருவிளை

(பெ) காக்கணம், காக்கட்டான், உயவை, Mussel-shell creeper

1.இது கொடியாக புதர் போல் இருக்கும். இதன் பூ நீலநிற மணி போல் இருக்கும்.

மணி கண்டு அன்ன மா நிற கருவிளை
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற் 221/1,2

நீலமணியைக் கண்டாற்போன்ற கரிய நிறமுள்ள கருவிளை மலர்,
ஒள்ளிய பூவாகிய செங்காந்தளோடு குளிர்ச்சியுள்ள புதர்களை அழகுசெய்ய,

2.இதன் பூ கண் போல் இருக்கும்

தண் புன கருவிளை கண் போல் மா மலர் – நற் 262/1

குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது

3.இதன் பூ மயில் தோகையிலுள்ள கண் போல் இருக்கும்.

பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி – குறு 110/4

மயில்தோகையின் ஒளிரும் கண்ணினையுடைய கருவிளம்பூவை ஆட்டி

மேல்


கருனை

(பெ) பொரித்த பண்டம், any fried dish

கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு – நற் 367/3

கரிய கண்போன்ற பொறிக்கறியுடன், செந்நெல்லின் வெண்மையான சோற்றை

மேல்


கலப்பை

(பெ) 1. உழுவதற்குப்பயன்படும் மரத்தாலான கருவி, plough
2. இசைக்கருவிகள் போன்றவை வைக்கும் பை, hold-all for keeping musical instruments

1.

குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி – பெரும் 188

குறிய சகடத்தின் உருளையோடு கலப்பையையும் சார்த்தி வைக்கப்பட்டமையால்

2.

தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர்
இரும் பேர் ஒக்கல் கோடியர் – அகம் 301/22,23

தலையினைச் சேர்த்துக்க் கட்டிய பல தொகையாகிய இசைக்கருவிகளின் பையினராகிய
மிகப் பெரிய சுற்றத்தினையுடைய கூத்தர்

மேல்


கலவம்

(பெ) கலாபம், மயில்தோகை, peacock’s tail

கலவம் விரித்த மட மஞ்ஞை – பொரு 212

தோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில்

மேல்


கலவு

(பெ) உடல் எலும்பின் மூட்டு, bone joints in the body

புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை – அகம் 3/9

புலால் நாறும் புலி கைவிட்டுப்போன மூட்டுக்கள் கழன்றுபோன மிக்க முடை வீசும் புலாலை

மேல்


கலாபம்

(பெ) கலவம், மயில்தோகை, peacock’s tail

மணி மயில் கலாபம் மஞ்சு இடை பரப்பி – சிறு 264

(நீல)மணி (நிறமுடைய)மயிலின் தோகையை வெண்மஞ்சின் இடையே (அணையாக)விரித்து

பார்க்க : கலவம்
மேல்


கலாவம்

(பெ) பார்க்க : கலாபம்

கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன – புறம் 146/8

மேல்


கலாவு

(வி) 1. கல, mix, unite, join together
2. கலக்கமெய்து, get perplexed
3. மேலும் கீழும் அசை, move up and down

1.

கொழு மடல் அகல் இலை தளி தலை கலாவும்
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/5,6

கொழுத்த மடலில் உள்ள அகன்ற இலையில் மழைத்துளிகள் சேர்ந்து ஒன்றாயிருக்கும்
பெரிய மலையைச் சேர்ந்தவனுடைய நட்பு நமக்கு

2.

கோடல்
நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ – நெடு 5,6

காந்தளின் நீண்ட இதழ்களால் கட்டிய கண்ணி நீர் அலத்தலால் கலக்கமெய்த

3.

இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல்
துயல்வரும்-தோறும் திருந்து அடி கலாவ – குறி 126,127

இயற்கையான அழகால் பொலிவு பெற்ற பொன்னாலாகிய உயர்ந்த (வீரக்)கழல்
(அடி எடுத்துவைத்து)இயங்கும்போதெல்லாம் திருத்தமான கணுக்காலில் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய

மேல்


கலி

1 (வி)

1. பெருமையுணர்வு கொள், be lofty, elated
2. செழி, தழை, grow luxuriantly
3. வேகமாகு, be swift, quick
4. மகிழ், rejoice
5. செருக்கித்திரி, be arrogant

2. (பெ)

1. பெருக்கம், increasing, swelling
2. ஆரவார ஒலி, roaring sound
3. செருக்கு, pride, haughtiness

1.1

கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை – நெடு 99

செருக்கின மயில் ஆரவாரிக்கும், ஊது கொம்பின் ஓசையோ என்று எண்ணத்தோன்றும் இனிய ஓசை

1.2

அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த
வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 21,22

அழகிய வெளியையுடைய அகன்ற வயலில் நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த
வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய;

1.3

புள் இயல் கலி மா பூண்ட தேரே – ஐங் 481/4

பறவைகளின் தன்மை கொண்டு விரைந்துசெல்லும் குதிரைகள் பூட்டிய தேரை.

1.4

கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன – மது 304

மகிழ்ந்த இசைஞர்கள் (தம்)இசைக்கருவிகளை முழக்கினாற் போன்று

1.5

நெடு நீர் இரும் கழி கடு மீன் கலிப்பினும் – அகம் 50/2

நெடியவாய் நிறைந்த நீரைக்கொண்ட பெரிய கழியில் சுறாமீன்கள் செருக்கித் திரிந்தாலும்

2.1.

ஒலி ஓவா கலி யாணர் – மது 118

ஆரவாரம் ஒழியாத பெருக்கினையுடைய புதுவருவாய்

2.2

பணிலம் கலி அவிந்து அடங்க – மது 621

சங்குகள் தம் ஆரவார ஒலி குறைந்து அடங்கிப்போக,

2.3

புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18

புலி என்று உன்னை எண்ணிக்கொள்வர் இந்த செருக்கு பொருந்திய ஊர்மக்கள்

மேல்


கலிங்கம்

(பெ) ஆடை, cloth, garment

ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ – பெரும் 469,470

(பால்)ஆவியை ஒத்த ஒளிரும் நூலால் செய்த துகில்களை
(உன்)கரிய பெரிய சுற்றத்தோடு சேர உடல் முழுதும் உடுக்கச் செய்து,

மேல்


கலிழ்

1. (வி) 1. கண்ணீர் வடி,அழு, weep, shed tears
2. ஒழுகு shine forth (as beauty)
3. இடம்பெயர், change position
2. (பெ) கலிழி, கலங்கல் நீர், muddy water, puddle

1.1.

கண் கலிழ் உகு பனி அரக்குவோரே – குறு 398/8

கண்கள் கண்ணீர் வடிப்பதால் வீழ்கின்ற துளியைத் துடைப்போரை –

1.2.

தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே – ஐங் 106/3-4

குளிர்ந்த கடலின் சங்கினைக் காட்டிலும் வெளுத்துப்போய்த் தோன்றுகிறது இவளின்
அழகொழுகும் மேனி, இதோ பார், அவனை நினைத்து

1.3

காலொடு மயங்கிய கலிழ் கடல் என – பரி 8/31

காற்றினால் மோதி அடிக்கப்பட்டு, கரைக்கு இடம்பெயர்ந்து வரும் கடலின் முழக்கத்தைப் போலவும்,
2

கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே – ஐங் 45/1-3

குளிர் காலத்தில் குளிர்ந்த கலங்கல் நீரைத் தந்து
வேனில் காலத்தில் நீலமணி போன்ற நிறத்தைக் கொள்ளும்
ஆற்றினைக் கொண்டுள்ளது உனது ஊர்;

மேல்


கலிழி

(பெ) கலங்கல்நீர், muddy water, puddle

மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே – ஐங் 203/4

விலங்குகள் உண்டு எஞ்சிய கலங்கல் தண்ணீர்.

மேல்


கலுழ்

1. (வி) 1. ஒழுகு, shine forth, as beauty
2. கண்ணீர் சொரி, weep, shed tears
2. (பெ) 1. அழுகை, weeping
2. கலக்கம், pertubation
3. கலங்கல் நீர், muddy water, puddle
4. ஒழுகுதல், shining as beauty

1.1

அம் கலுழ் மேனி பாஅய பசப்பே – குறு 143/7

அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலைநோய்.

1.2

கையாறு செய்தானை காணின் கலுழ் கண்ணால்
பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் – கலி 147/48,49

என்னை இவ்வாறு செயலிழக்கச் செய்தவனைப் பார்த்தால், கண்ணீர் சொரியும் கண்களால்
மெதுவாக நோக்குவேன், தாழ்ந்து வரும் அவன் மேலாடையைப் பிடித்துக்கொள்வேன்,

2.1.

பருவரல் எவ்வம் களை மாயோய் என
காட்டவும்காட்டவும் காணாள் கலுழ் சிறந்து
பூ போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப – முல் 21-23

துன்பம் தீராமையைப் போக்கு, மாமை நிறத்தையுடையோளே’, என்று
காட்டியும் காட்டியும் உணராளாய், அழுகை மிக்கு,
பூப்போலும் மையுண்ட கண்கள் (தாரையாகச் சொரியாது)தனித்த கண்ணீர் முத்து துளிப்ப

2.2

கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி – கலி 134/13

கவலைகொண்ட நெஞ்சத்தினளாய் நான் மனம் கலக்கம்கொள்ள, கடலைப் பார்த்து

2.3

பெய்த குன்றத்து பூ நாறு தண் கலுழ் – குறு 200/1

மழைபெய்த குன்றத்தில் மலர் மணக்கின்ற குளிர்ந்த கலங்கல்நீரின்
2.4

அம் கலுழ் கொண்ட செம் கடை மழை கண் – அகம் 295/20

அழகு ஒழுகுதலைக் கொண்ட சிவந்த கடையினையுடைய குளிர்ந்த கண்

மேல்


கலுழி

(பெ) கலங்கல் நீர், muddy water, puddle

கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று – மலை 555

வேகமாகப் பாயும் கலங்கலையுடைய கண்ணுக்கு இனிய சேயாற்றின்

மேல்


கலை

1. (வி) குலை, disperse, derange
2. (பெ) 1. முசு என்ற குரங்கின் ஆண், male black monkey
2 மானின் ஆண், stag, buck
3. மேகலை, Woman’s girdle
1

குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே – குறு 291/6-8

ஆழமான நீரையுடைய பசிய சுனையில் பூத்த குவளையின்
வண்டுகள் அடிக்கடி மொய்க்கும் பல இதழ்கள் கலைந்து
குளிர்ந்த மழைத்துளியை ஏற்றுக்கொண்ட மலர்களைப் போலிருப்பன

2.1.

.

கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் – பெரும் 496

முசுக்கலைகள் பாய்ந்து உதிர்த்த மலர்கள் சிந்தின காட்டினையும் உடைய

2.2

புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி
கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து – மலை 404,405

புலி வந்ததால், (தன்னைக்)கைவிட்டு ஓடிப்போன தான் (இன்னும்)விரும்புகின்ற துணையை எண்ணி,
ஆண்மான் நின்று கூப்பிடும் (அக்)காட்டை வழக்கமான பாதையில் சென்று கடந்து,

2.3

பல் கலை சில் பூ கலிங்கத்தள் – கலி 56/11

பல இழைகள் கொண்ட மேகலையும், சிறிய பூத்தொழில் நிரம்பிய ஆடையும் உடைய இவள்

மேல்


கவ்வை

(பெ) 1. எள்ளின் இளங்காய், Green sesamum seed
2. பழிச்சொல், slander, scandal
3. ஒலி, sound, noise, din

1.

ஒருசார் சிறுதினை கொய்ய கவ்வை கறுப்ப – மது 271

சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்பட, எள்ளின் இளங்காய்கள் முற்றிக்கறுக்க,

2.

வெம் வாய் பெண்டிர் கவ்வை தூற்ற – நற் 133/6

கொடியனவற்றைப் பேசும் பெண்டிர் பழிச்சொற்களைத் தூற்ற,
3

செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/1,2

பருவத்தே வளர்ந்த வரகின் சிவந்த மேட்டுநிலத்தில் தழைத்த
ஒலி எழுப்பும் நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை

மேல்


கவடு

(பெ) பிரிந்து செல்லும் மரக்கிளைகள், forked brances of a tree

இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு – அகம் 31/5,6

இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின்
உச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு

மேல்


கவண்

(பெ) கல்லை வீசி எறியும், கயிற்றினால் ஆன கருவி, sling

கல் எறியும் கவண் வெரீஇ
புள் இரியும் புகர் போந்தை – பட் 73,74

கல்லை எறியும் கவணை அஞ்சி
பறவைகள் பறந்தோடும் கபிலநிறப் பனைமரங்கள் (கொண்ட பட்டினம்)

மேல்


கவணை

(பெ) கவட்டை, கல்லை வீசி எறியும் பொறி, catapult

1.இது ஒரு கல் வீசும் பொறியாகக் கோட்டையைத் தகர்க்கப் பயன்பட்டது

ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை
நார் அரி நறவின் கொங்கர் கோவே – பதி 88/18,19

பகைவரின் அரிய மதிலைச் சீர்குலைத்த கற்களை வீசியெறியும் கவணைப் பொறியையும்,
நார்க்கூடையால் வடிக்கப்பட்ட கள்ளையும் உடைய கொங்குநாட்டவர் அரசனே!

2.இது சிறுவர் பயன்படுத்தும் விளையாட்டுக்கருவி. விலங்குகளையும், பறவைகளையும் விரட்டப் பயன்படும்

ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர்
களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/13,14

தீயை உண்டாக்கும் தீக்கடைகோலையுடைய, கவணையும் வில்லையும் கையில் வைத்திருக்கிற
தினைப்புனக் காவலர் உன்னை யானை என்று எண்ணிக்கொண்டு கூச்சலிடுவர்;

3.இது கவண் என்றும் கருதப்படும். பார்க்க கவண்

மேல்


கவர்

1. (வி) 1. நுகர், அனுபவி, enjoy, experience
2. கிளைபடு, பிரிந்துசெல், bifurcate
3. தெறி, மீட்டு, fillip the strings of lute
4. பற்றிக்கொள், அகப்படுத்து, seize, grasp, catch
5. அழை, call, invite
6. பெற்றுக்கொள், take, receive
7. வசப்படுத்து, ஈர், attract, fascinate
8. விரும்பு, desire
9. கொள்ளையிடு, plunder, pillage
10. தழுவு, embrace
– 2. (பெ) 1. கவர்தல், seizing

1.1

முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது
கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184

முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்
தேனை நுகர்கின்ற நீல நிறத்தினையும் சிவந்த கண்ணையும் உடைய வண்டுகள்

1.2

கா எரி_ஊட்டிய கவர் கணை தூணி – சிறு 238

(காண்ட)வனத்தை நெருப்புண்ணச்செய்த கிளைபட்ட கணையைக் கொண்ட அம்பறாத்தூணியையுடைய

1.3

நைவளம் பழுநிய பாலை வல்லோன்
கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 146,147

நட்டராகம் முற்றுப்பெற்ற பாலை யாழை வாசிப்பதில் வல்லவன்
(தன்)கையால் தெறித்த நரம்பு போல, இம்மென்னும் ஓசைபட ஒலிக்கும்

1.4

மீமிசை கொண்ட கவர் பரி கொடும் தாள்
வரை வாழ் வருடை – மலை 502,503

மலையுச்சியில் பிடித்த (நிலத்தைப்)பற்றிக்கொண்டு ஓடும் வளைந்த கால்களையுடைய
மலையில் வாழும் மலையாடும்,

1.5

கான கோழி கவர் குரல் சேவல் – மலை 510

காட்டுக்கோழியை அழைக்கும் கூவலொலியுடைய சேவலும்,

1.6

புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு
கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/5,6

உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்
பெற்றுக்கொண்ட கையையுடையவராய் வாய் கொள்ள உண்டு,

1.7

காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த
கண் கவர் வரி நிழல் வதியும் – நற் 256/9,10

வயிரம் பாய்ந்த வேலமரத்தின் தாழ்ந்த கிளைகள் கொடுத்த
கண்ணை ஈர்க்கும் வரிகள்கொண்ட நிழலில் தங்கியிருக்கும்

1.8

கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும் – நற் 307/1

செல்லுதலை விரும்பும் குதிரை பூட்டிய நெடிய தேரின் மணியும் ஒலிக்கும்;

1.9

முனை கவர் முதுபாழ் உகு நெல் பெறூஉம் – நற் 384/5

போர் முனையில் கொள்ளையிட்டதால் முதிரப் பாழ்பட்டுப்போன நிலத்தில் சிந்திக்கிடக்கும்
நெல்மணியைக் கொத்திக்கொணரும்

1.10

மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/2

மெய்யோடு மெய் சேரும்படி விரும்பிக் கைகளினால் தழுவிக்கொண்ட அணைப்பைக் காட்டிலும்

2.

இரும்பு கவர் கொண்ட ஏனல் – நற் 194/9

இரும்பாலாகிய அரிவாளால் கவர்ந்துகொள்ளப்போகும் தினையின்

மேல்


கவரி

(பெ) 1. கவரி மான், Yak, Bos grunniens
2. சாமரை, Yak-tailfan, used for fanning idols and great personages

1.

கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி – பதி 11/21

முருக்க மரங்கள் செறிவாக வளர்ந்த மலைச்சரிவில் துயில்கொள்ளும் கவரிமான்கள்,

2.

புனையா பூ நீர் ஊட்டி புனை கவரி சார்த்தா – பரி 19/86

உதிரிப்பூக்களையும் நீரையும் கலந்து தூவி, அழகுபடுத்தப்பெற்ற சாமரையை வீசி

மேல்


கவலை

(பெ) 1. பல தெருக்கள் கூடுமிடம் /பிரியும் இடம், Place where several ways meet or diverge
2. ஒரு கிழங்கு, கிழங்குள்ள ஒரு கொடி, a rooted creeper
3. மனச் சஞ்சலம், distress, affliction

1.1

உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81

சுங்கம் கொள்ளுதலையுடைய பெரிய வழிகளில் பிரியும் வழியைப் பாதுகாக்கின்ற

1.2.

கவலை முற்றம் காவல் நின்ற – முல் 30

நாற்சந்தியான முற்றத்தில் காவலாக நின்ற

2.

கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப – மது 241

கவலைக்கிழங்கு எடுத்த குழிகளில் அருவிநீர் (விழுந்து)ஒலிக்க,

3.

பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/4

பேதை நெஞ்சம் மனச்சஞ்சலத்தால் வருந்த

மேல்


கவவு

1. (வி) தழுவு, embrace
2. (பெ) 1. தழுவுதல், முயக்கம், embracing
2. உள்ளீடு, the contents of something

1.

காதலர் புணர்ந்தவர் கவவு கை நெகிழாது – கலி 33/7

காதலர்கள் கூடிக்களித்தவராய், தழுவிய கைகளை நெகிழவிடாமல் இருக்க,

2.1.

நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி – மது 663

(தாங்கள்)விரும்பின (தம்)கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு

2.2

கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626

பூரணமாகிய உள்ளீட்டோடெ பிடித்த விதம்விதமான கொழுக்கட்டைகளையும்,

மேல்


கவழம்

(பெ) கவளம், உணவு, elephant fodder rolled into a ball, food

கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் – பரி 19/91

கொடியேற்றிய யானை உண்கின்ற கவளத்தின் மிச்சிலை

கரும்பு கவழம் மடுப்பார் – பரி 19/34

கரும்பினையும் சோற்றுக் கவழங்களையும் அந்த யானைகளுக்கு ஊட்டுவர்

கரும்பினை உணவாக ஊட்டாநிற்பர்
– பொ.வே.சோ.உரை

கவழம் அறியா நின் கை புனை வேழம் – கலி 80/6

கவளம் உண்பதை அறியாத கையால் செய்யப்பட்ட உன் பொம்மை யானையை

மேல்


கவற்று

(வி) கவலை உண்டாக்கு, cause anxiety or sorrow

பேதை நெஞ்சம் கவலை கவற்ற – நற் 144/4,5

பேதையின் நெஞ்சத்தை கவலை சஞ்சலப்படுத்த

மேல்


கவறு

(பெ) சூதாட்டம், சூதாடு கருவி, gambling, dice

கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு – நற் 243/5

“சூதாடுகருவியை உருட்டிவிட்டாற்போன்ற நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டுப

கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/4

மேல்


கவான்

(பெ) மலைச்சரிவு, mountain slope
கவான் என்பது மலைச்சரிவு என்றாலும், மலையின் உச்சியை ஒட்டிய சரிவான பகுதியையே
இது குறிக்கும்.

வான் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 3/6

விண்ணைத் தொடும் முகடுகளைக் கொண்ட பெருமை மிக்க மலைச் சரிவில்

எனவே இந்த மலைச்சரிவு மலையின் உச்சியை அடுத்தது என்பது விளங்கும்.
இதன் உச்சியில் மேகங்கள் தவழுகின்றனவாம்.

மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138

மழை என்பது மேகம், சிமையம் என்பது உச்சி.

வான் உற நிவந்த பெரு மலை கவாஅன் – நற் 53/4

நிவத்தல் என்பது உயர்ந்து நிற்றல்.

விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் – குறு 262/6
விண் பொரு நெடு வரை கவாஅன் – அகம் 173/17
விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – அகம் 179/1

விண்ணைத்தொட்டு நிற்கிறதாம் இந்தச் சரிவின் உச்சி.

மேல்


கவிர்

(பெ) முள்முருங்கை மரம், Indian coral tree, Erythrina variegata

பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்துக்
கவிர் பூ நெற்றி சேவலின் தணியும் – புறம் 326/5,6

பருத்தி நூற்கும் பெண்டினுடைய சிறிய விளக்கொளியில்
முருக்கம்பூவைப் போன்ற கொண்டையை உடைய சேவலைக் கண்டு அச்சம் தணியும்

மேல்


கவுள்

(பெ) கன்னம், cheek

மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன்
கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8

(தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக்
கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்களின் உட்புறம்(பற்கள்) அடித்துக்கொண்டு நடுங்க –

மேல்


கவை

(வி) 1. கிளைத்துப்பிரி, fork
2. சேர், join with
3. அணை, embrace
4. அகத்திடு, கொண்டிரு, contain within oneself

1.

புலி கோள் பிழைத்த கவை கோட்டு முது கலை – ஐங் 373/2

புலியின் பிடியிலிருந்து தப்பித்த கிளைப்பட்ட கொம்புகளையுடைய முதிய கலைமான்

2.

பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி
கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் – பெரும் 243,244

எருதுகளோடு கூடிய பசுக்கள் ஈன்ற வளைந்த அடிகளையுடைய கன்றுகளைச்
சேர்த்துக்கட்டின நெடிய தாம்புகள் கட்டிக்கிடக்கின்ற தறிகள் நட்ட பக்கத்தினையும்,

3.

தான் அவள் சிறுபுறம் கவையினன் – ஐங் 404/2

தான் அவளின் முதுகினைத் தழுவுவான்

4.

புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி – ஐங் 402/1

புதல்வனை அகத்திட்டுக்கொண்டிருக்கும் தாயின் முதுகைத் தழுவிக்கொண்டு

மேல்


கழகம்

(பெ) சூதாடு களம், gambling place

தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப – கலி 136/3

தடையின்றி விளையாடும் ஈரமான சூதாடு களத்தில் ஆர்வம் குறையாமல் சூதாட்டக்காயை உருட்ட,

மேல்


கழங்கு

(பெ) 1. கழற்சிக்காய், Molucca-bean
2. கழங்கினை வைத்து மகளிர் ஆடும் விளையாட்டு,Play among girls with Molucca-beans
3. வேலன் வெறியாட்டின்போது குறிபார்க்க உருட்டுவது
Divination with help of Molucca-beans by a soothsayer when possessed

1.

கழங்கு உறழ் முத்தமொடு நன் கலம் பெறூஉம் – அகம் 126/12

கழற்சிக்காயின் விதையினைப் போன்ற பெரிய முத்துக்களுடன் சிறந்த அணிகளையும் பெறும்.

2.

இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/2

தன்னை ஒத்த இளைய தோழிகளுடன் கழங்கு விளையாட்டைச் சேர்ந்து ஆடினாலும்
செல்வரின் வீட்டில் பொன்னால் ஆன கழங்கினைக் கொண்டு மகளிர் ஆடுவர்.

வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ
கை புனை குறும் தொடி தத்த பைபய
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் – பெரும் 333-335

வானத்தைத் தீண்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து,
கையில் புனைந்த குறுந்தொடி அசையும்படி, மெல்ல மெல்ல
முத்தை ஒத்த வார்ந்த மணலில் பொன்னாற் செய்த கழங்கைக் கொண்டு விளையாடும்,

3.

பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு
முருகு என மொழியும் வேலன் – ஐங் 249/1,2

புதிதாய் மணல் பரப்பிய வீட்டோரத்தில், கழங்குகளைப் போட்டுப்பார்த்து, அன்னையிடம்
இது முருகனால் உண்டானது என்று சொல்கிறான் வேலன்

மேல்


கழஞ்சு

(பெ) தங்கத்தை நிறுக்கும் ஓர் அளவு, A weight used for weighing gold (1.77 grams)

ஏர் உடைய விழு கழஞ்சின்
சீர் உடைய இழை பெற்றிசினே – புறம் 11/12,13

தோற்றப்பொலிவையுடைய சிறந்த பலகழஞ்சுகளால் செய்யப்பட்ட
நன்மையுடைய அணிகலத்தைப் பெற்றாள்.

மேல்


கழல்

1. (வி) 1. பிதுங்கு, bulge out, protrude
2. நெகிழ்ந்து நீங்கு, become loose
– 2. (பெ) 1. வீரக்கழல், Anklet given as a token of honour to a warrior
2. கழற்சிக்காய், molucca bean
3. கால் மோதிரம், toe ring
4. காற்சிலம்பு, anklet

1.1.

கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க – திரு 49

பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு, கொடிய பாம்பும் தூங்கும் அளவிற்குப் பெரிதான

1.2

கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின் – மலை 577

அணிகலன்களை அள்ளித்தரக் கவிழ்ந்த இறுக்கமாக இல்லாத தோளணியுடைய பெரிய கைகளில்

2.1.

தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் – மது 395

இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட வீரக்கழல் அணிந்த காலினையுடைய மழவரின்

2.2

கழல் கனி வகுத்த துணை சில் ஓதி – புறம் 97/23

கழற்சிக்காயின் விதையால் வகுக்கப்பட்ட இனமாகிய சிலவாகிய கூந்தல்

2.3

இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர்
கட்டுவட கழலினர் மட்டு மாலையர் – பரி 12/23,24

ஆணியிட்டுச் சேர்க்கப்படும் வளையல்களோடு, செறிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும்,
கட்டுவடத்தோடு, கால்விரலில் மோதிரம் அணிந்துகொண்டோரும், தேன் துளிக்கும் மாலையினரும்,
2.4

ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் – பதி 30/28

ஒளிவிடும் நெற்றியையுடைய மகளிர் காலில் தண்டையோடு திரியும்,

மேல்


கழறு

(வி) 1. இடி, thunder
2. இடித்துரை, rebuke
3. இகழ், dishonour, discrdit
4. கூறு. சொல், say, tell

1.

கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ – குறு 158/2

மிகுந்த வேகத்தையுடைய பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து

2.

நின்னை யான் கழறுதல் வேண்டுமோ – கலி 100/22

உன்னை நான் கடிந்துரைக்கவும் வேண்டுமோ?

3.

அவை புகு பொருநர் பறையின் ஆனாது
கழறுப என்ப அவன் பெண்டிர் – அகம் 76/5,6

அவையில் புகும் பொருநரின் பறையைப்போல ஒழியாமல்
என்னை இகழ்வர் என்று கூறுவர் அவன் பெண்டிர்

4.

எ வாய் சென்றனை அவண் என கூறி
அன்னை ஆனாள் கழற – நற் 147/4,5

எவ்விடத்துக்குச் சென்றாய் அங்கே? என்று கூறி
அன்னை மனம் அமையாதவளாய் நம்மிடம் கூற

மேல்


கழனி

(பெ) வயல்வெளி, an area containing fields

வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/17-20

என்ற அகநானூற்று அடிகளில் வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களும் கையாளப்பட்டுள்ளன, இதற்கு

வளம் மிக்க வயலில்
தீயின் கொழுந்தினை ஒத்த தோடுகளை ஈன்ற
வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலினிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அசைய

என்பது வே.நாட்டார் உரை. இங்கே வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களுக்கும் வயல் என்றே பொருள்
கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றுக்குள்ள நுட்பமான வேறுபாடு ஆய்விற்குரியது.

பொதுவாக, கழனி என்பதும் வயல் என்பதும் ஒன்றாகவே கருதப்படுகின்றன.
வயல் என்பது நான்கு வரப்புகளுக்கு உட்பட்ட விளைநிலம். இவ்வாறான பல
வயல்களைக் கொண்ட ஒரு பரந்த வெளியே கழனி எனப்படும்.

வயல் அமர் கழனி வாயில் பொய்கை – புறம் 354/4

வயல்கள் பொருந்திய கழனியின் வாயிலாகிய பொய்கைக்கண்

என்பதன் மூலம் இது பெறப்படும்.

விளைவு அறா வியன் கழனி
கார் கரும்பின் கமழ் ஆலை – பட் 8,9

என்ற அடிகளில் கழனி என்பது ஒரு வயலைமட்டுமா குறிக்கும்?

பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே – புறம் 387/35,36

என்பதற்கு
பல ஊர்களைச் சுற்றியுள்ள வயல்கள்
எல்லாவற்றிலும் விளையும் நெல்லினும் பலவாகிய
என்பது ஔவை.சு.து.உரை.
எனவே, கழனி என்பது பல வயல்களைக் கொண்ட ஒரு வெளி என்று இதனின்றும் பெறப்படும்.

கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் – நற் 280/7

வயல்வெளியைக் காப்பவர்கள் சுருக்கம் விழுந்த நத்தையை உடைக்கும்

ஒரு தனித்த வயலுக்குக் காவலர் இரார். காவலர்கள் ஒரு பரந்த வயல்வெளிக்குக் காவல் இருப்பர்.

நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/2,3

அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய

என்ற அடிகளால், செறு என்பது கழனி என்பதின் ஒரு பகுதி என்று பெறப்படும். அதாவது பல செறுக்களைக் கொண்டது கழனி.
எனவே, கழனி என்பதை வயல்பரப்பு அல்லது வயல்வெளி என்று கொள்வதே பொருத்தமுடையது என்று தோன்றுகிறது.

செறு, வயல் ஆகியவை அந்தச் சொற்களுக்குரிய இடங்களில் விளக்கப்படும்.

அவற்றைப் பார்க்க இங்கே சொடுக்கவும். செறு-2.(பெ)
வயல்

மேல்


கழார்

(பெ) ஒரு சோழநாட்டு ஊர், a city in chOzha country
கழார் என்னும் ஊர் சோழநாட்டுக் காவிரியின் வடகரையில் இருந்தது. இப்போது அது மறைந்து போயிற்று
ஒரு காலத்தே இவ்வூர் மத்தி என்னும் குறுநிலத்தலைவனுக்கு உரியதாய் இருந்தது. இக்கழார் காவிரியின்
வடகரைத் துறைகள் ஒன்றில் இருந்தமையின் இவ்வூர்ப் பெயரால் அத்துறை கழார் முன்துறை என்றும்
கழார்ப் பெருந்துறை என்றும் குறிக்கப்படுகின்றது. ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி பெருவெள்ளத்தால்
கொண்டுபோகப்பட்டது இந்ததுறையில்தான்.

வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும்
நல் வகை மிகு பலி – நற் 281/3,4

வெல்லுகின்ற போரையுடைய சோழரின் கழார் என்ற ஊரில் கிடைக்கும்
நல்ல வகையில் மிகுந்த பலியுணவு

கைவண் மத்தி கழாஅர் அன்ன – ஐங் 61/3
பல் வேல் மத்தி கழாஅர் அன்ன – அகம் 6/20
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் – அகம் 222/5
பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/8
ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை – அகம் 376/4

பார்க்க மத்தி
மேல்


கழால்

1. (வி) அரும்பு, முகிழ், bud, blossom
– 2. (பெ) கழுவுதல், washing

1.

கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் – சிறு 148

முதல் சூலையுடைய கழிமுள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கவும்
– கழாஅல் – கழுதல், அரும்புதல் – ச.வே.சு.விளக்கம்

2.

ஊர் குறு_மாக்கள் வெண் கோடு கழாஅலின்
நீர் துறை படியும் பெரும் களிறு போல – புறம் 94/1,2

ஊரின்கண் சிறுபிள்ளைகள் தனது வெள்ளிய கோட்டைக் கழுவுதல் காரணமாக
நீரையுடைய துறைக்கண் படியும் பெரிய களிற்றினைப் போல
– கழாஅலின் என்பதற்குக் கழுவப்படுதலான் எனினும் அமையும் – ஔ.சு.து.உரை, விளக்கம்

கலம் கழாஅலின் துறை கலக்கு_உற்றன – புறம் 345/4

படைக்கலங்களைக் கழுவுவதால் நீர்த்துறைகள் குழம்பிவிட்டன.

மேல்


கழி

1 (வி) 1. கடந்துபோ, முடிந்துபோ, pass,as time, elapse
2. உருவு, unsheath
3. நீங்கு, விலகு, be removed
4. விலக்கு, இல்லாமல் செய்
5. கட, pass through
6. கடன் போன்றவற்றைத் தீர், ஒழி, remove
7. நிகழ்ந்து முடி, proceed further
– 2. (பெ) 1. கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு, backwater
2. கம்பு, சிறியகுச்சி, stick, staff
– 3. (பெ.அ) மிகுந்த, excessive, extreme

1.1

சாறு கழி வழி நாள் சோறு நசை_உறாது – பொரு 2

விழா முடிந்துபோன அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது

1.2

உறை கழி வாளின் மின்னி – நற் 387/9

உறையிலிருந்து உருவிய வாளைப்போல மின்னி

1.3

கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/5

கடிய காற்றினால் பறிக்கப்பெற்ற காம்பினை விட்டு நீங்கிய தேக்கின் இலைகள்

1.4

புலிப்பால் பட்ட வாமான் குழவிக்குச்
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும் – புறம் 323/1,2

புலியிடம் அகப்பட்ட தாவும் மானின் கன்றுக்கு
சினம் இல்லாத முதிய கறவைப்பசு தன் கன்று எனச் சேர்த்து தன் பாலை ஊட்டிவிடும்

1.5

திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் – பரி 10/74

திசைகள் முழுதும் கமழும்படியாக மேகத்தின் அடிவயிற்றைக் கடந்துபோகும் திங்களின்

1.6

கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/2,3

ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை
நவ்வி மானின் குட்டி கவ்வி அன்றைய காலையுணவை முடி- க்கும்

1.7

நும் மனை சிலம்பு கழீஇ அயரினும்
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/1,2

உமது வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும்,
எமது வீட்டில் திருமணமாகிய நல்ல மணவிழா நடந்து முடியட்டும் என்று

2.1.

இரும் கழி செறுவின் வெள் உப்பு பகர்நரொடு – மது 117

பெரிய உப்பங்கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,

2.2

செற்றை வாயில் செறி கழி கதவின் – பெரும் 149

இலை தழைக் குப்பைகளையுடைய வாயிலையும், செறிக்கப்பட்ட சிறிய குச்சியினையுடைய கதவினையும்,

3.

கண் தொட்டு உண்ட கழி முடை கரும் தலை – திரு 53

கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை

மேல்


கழிகலமகளிர்

(பெ) அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர், widows who forsake wearing jewels

சிறு வெள்ளாம்பல் அல்லி உண்ணும்
கழிகலமகளிர் போல – புறம் 280/13,14

சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அர்ரி அரிசியை உண்ணும்
கழித்த அணிகலன்களையுடைய கைம்பெண்டிர் போல

மேல்


கழீஇ

(வி.எ) 1. கழுவி என்பதன் விகாரம்
2. கழித்து (நீக்கி) என்பதன் விகாரம்

1.

மண்ணா கூந்தல் மாசு அற கழீஇ
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய – நற் 42/8,9

நீர்விட்டுக் கழுவாத கூந்தலை மாசு நீங்கும்படியாகக் கழுவி
ஒருசில பூக்களைக் கொண்டு பலவாகிய தன் கூந்தலில் செருகிக்கொண்ட

2.

நும் மனை சிலம்பு கழீஇ அயரினும் – ஐங் 399/1
எம் மனை வதுவை நன் மணம் கழிக என – ஐங் 399/1,2

உமது வீட்டில் காலின் சிலம்பைக் கழற்றும் சடங்கினைச் செய்தாலும்,
எமது வீட்டில் திருமணமாகிய நல்ல மணவிழா நடந்து முடியட்டும் என்று

மேல்


கழு

(பெ) குற்றவாளிகளைக் கொல்லும் சாதனம், கழுமரம், Stake for impaling criminals

நெடு நுதி வய கழு நிரைத்த வாயில் – பெரும் 128

நெடிய முனையினையுடைய வலிமையான கழுமரங்கள் வரிசையாக நிற்கும் ஊர்வாயிலையும் உடைய

மேல்


கழுது

(பெ) 1. பேய், demon, spirit
2. காவற்பரண், watch tower

1.

கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் – நற் 171/9

பேய்கள் நிலைகொண்டு நடமாடும் பொழுதைக் கொண்ட நள்ளிரவில்

2.

கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய
நெடும் சுடர் விளக்கம் – அகம் 88/5,6

வலிய கையினையுடைய தினைப்புனம் காப்போன் பரண் மீது கொளுத்தி வைத்த
நீண்ட சுடரின் ஒளியினை

மேல்


கழுந்து

(பெ) உலக்கை, வில் ஆகியவற்றில் தேய்ந்து மழுங்கிய தழும்பு, bruise in a pestle or a bow

உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் – குறு 384/1

உழுந்தின் நெற்றினை உடைக்கும் தழும்பேறிய தடி போன்ற கரும்பெழுதிய பருத்த தோள்கள்

மேல்


கழுநீர்

(பெ) 1. செங்குவளை, Purple Indian water-lily, Numphaeu odorata
2. தீவினையைக் கழுவும் தீர்த்த நீர், holy water that dispels evil

1.

கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை – மது 171

செங்கழுநீர் மிக்க இடம் அகன்ற பொய்கைகளில்

2.

கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427

தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்

மேல்


கழுமலம்

(பெ) 1. ஒரு சேரநாட்டு ஊர், a city in chEra country
2. ஒரு சோழ நாட்டு ஊர், a cityin chOzha country

1.

சேரநாட்டில் ஒரு கழுமலம் இருந்தது. அதனை ஆண்டுவந்த அரசன் குட்டுவன். தலைவியின் மேனி இந்தக்
கழுமலம் என்னும் ஊரைப்போல அழகுடன் திகழ்ந்ததாக அகம் 270 குறிப்பிடுகிறது

நல் தேர் குட்டுவன் கழுமலத்து அன்ன
அம் மா மேனி தொல் நலம் தொலைய – அகம் 270/9,10

நல்ல தேரினையுடைய குட்டுவனது கழுமலம் என்னும் ஊரினைப் போன்ற
அழகிய மாமை நிறம் வாய்ந்த மேனியின் பழைய அழகு கெட

2.

சோழநாட்டிலுள்ள சீர்காழிக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று கழுமலம்
உறையூர் அரசன் செம்பியன் தான் போரில் வென்றவர்களின் குடைகளைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்தான்

குடையொடு
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு – நற் 234/5-7

பகைவரின் வெண்கொற்றக்குடையோடு
கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய நல்ல தேரையுடைய சோழனின்
பங்குனி விழாவின்போதான உறந்தைநகரோடு

அழும்பில் அரசன் பெரும்பூட் சென்னி தன் படைத்தலைவன் பழையனை வீழ்த்திய எழுவர் கூட்டணியோடு
தானே முன்னின்று போரிட்டு அகப்பட்ட கணையனைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்து சிறையிலிட்டான்

கணையன் அகப்பட கழுமலம் தந்த
பிணையல் அம் கண்ணி பெரும் பூண் சென்னி – அகம் 44/13,14

கணையன் உட்பட கழுமலம் என்னும் ஊரைக் கைப்பற்றிய
கட்டிய கண்ணியினை உடைய பெரும்பூண் சென்னி என்பானது

பார்க்க : கணையன்
மேல்


கழுமு

(வி) 1. நிறை, be full
2. கல, mix together

1.

குவளை உண்கண் குய் புகை கழும
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர் – குறு 167/3,4

குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய,
தானே முயன்று துழாவிச் சமைத்த சுவையான புளித்த மோர்க்குழம்பினை

2.

கழுமிய வென் வேல் வேளே – புறம் 396/12

பிற படையுடன் கலந்த வெல்லும் வேற்படையையுடைய வேளிர் தலைவன்

மேல்


கழுவாய்

(பெ) பரிகாரம், பிராயச்சித்தம், expiation from sin

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என – புறம் 34/4

அவர் செய்த பாதகத்தினை ஆராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள எனவும்

மேல்


கழுவுள்

(பெ) ஒரு சங்ககாலச் சிற்றரசன், வள்ளல், a chieftain of sangam period, a philanthropist
கழுவுள் என்பவன் ஆயர் தலைவன். இவன் ஏனை வேந்தருடன் பெரும் பகை கொண்டிருந்தான்
அவன் இருந்த நகரை முற்றி, அவனது கோட்டையின் தோட்டியைச் பெருஞ்சேரல் இரும்பொறை
என்ற சேரன் கவர்ந்துகொண்டதால், அவன் மதிற்குள் அடைபட்டுக் கிடப்ப, அவன் கீழ் வாழ்ந்த
இடையர்கள் வேறு புகல் காணாது தம்முடைய ஆனிரைகளைத் தாமே சேரனிடம் கொணர்ந்து
தந்து அருள்வேண்டி நின்றனர்
பெருஞ்சேரல் இரும்பொறையின் மகன் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடும் புலவரும் இதனைக்
குறிப்பிடுகிறார்

ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க
பதி பாழாக வேறுபுலம் படர்ந்து – பதி 71/17,18

ஆன் பயம் கொண்டு வாழும் இடையர்கள், கழுவுள் என்னும் இடையர் தலைவன் தலைவணங்கி நின்றதனால்
ஊர்கள் பலவும் பாழ்படும்படியாகவும் பகைவர் நாடு நோக்கிச்சென்று

அணங்குடை கடம்பின் முழுமுதல் தடிந்து
பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்று – பதி 88/7

தெய்வத்தன்மை பொருந்திய காவல்மரமாகிய கடம்பு மரத்தை வேரொடு தகர்த்தழித்து
சேரருடன் போருடற்றக்கூடிய மாறுபாட்டினைப் பெற்ற கழுவுள் என்பானைத் தொல்வியுறச்செய்து

கழுவுள் அரசன் காமூர் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இந்தக் காமூரை வேளிர்
மன்னர்கள் 14 பேர் ஒருங்கிணைந்து தாக்கினர். அப்போது அந்தக் காமூர் மக்கள் செய்வது அறியாமல்
கலங்கிநின்றனர்

அடு போர்
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை
ஈரெழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த
கழுவுள் காமூர் போல
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/10-14

அடும் போரினையும்
நீங்காத சிறந்த புகழினையும் வானை அளாவிய பெரிய குடையினையும் உடைய
பதினான்கு வேளிர் ஒருங்குகூடித் தாக்கியதுமாகிய
கழுவுள் என்பானது காமூரைப் போல
கலங்கா நின்றது அவரைப் பிரியாரென்று தெளிவுற்றிருந்த என் மனம்.

இவன் மாவண் கழுவுள் என்று போற்றப்படுவதால் சிறந்த கொடைவள்ளல் எனத் தெரிகிறது

வென்வேல்
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் – அகம் 365/11,12

வென்றி வேலினையும்
சிறந்த வண்மையினையுமுடைய கழுவுள் என்பானது காமூராகிய அவ்விடத்து

பார்க்க : காமூர்
மேல்


கழூஉ

1. (வி) கழுவு என்பதன் விகாரம்
– 2. (பெ) கழுவுதல் என்பதன் விகாரம்

1.

செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் – நற் 151/3,4

சிவந்த கறையினைக் கொண்ட வெண்மையான கொம்பினையுடைய யானை
அந்தக் கறையை மலைமேலிருந்து விழும் அருவிநீரில் கழுவும் மலைச்சாரல் நெறியில்

2.

மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/5

மழை கழுவுதலை மறந்த கரிய பெரிய குத்துப்பாறை

மேல்


கள்ளி

(பெ) ஒரு பாலைநிலச் செடி. Spurge, Euphorbia;
கள்ளியில் பலவகை உண்டு.
திருகுகள்ளி, (Milk-hedge), இலைக்கள்ளி (Five tubercled spurge), சதுரக்கள்ளி (Square spurge)
மண்டங்கள்ளி (Cement plant), சப்பாத்துக்கள்ளி (Common prickly pear) என்பவை அவை.

1.

பரல் தலைபோகிய சிரல் தலை கள்ளி – நற் 169/4

பரல்கற்கள் நீண்டு கிடக்கின்ற பாலை நிலத்தில், மீன்கொத்திப்பறவையின் தலையைப் போன்ற கள்ளிச் செடி

2.

நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி – நற் 314/9

விரல்களை நொடித்துவிட்டாற்போன்று காய்கள் வெடிக்கும் கள்ளி

3.

களரி ஓங்கிய கவை முள் கள்ளி – நற் 384/2

களர் நிலத்தில் உயரமாய் வளர்ந்த கவைத்த முள்ளைக் கொண்ட கள்ளி

4.

அம் கால் கள்ளி – குறு 16/5

அழகிய அடியைக் கொண்ட கள்ளி

5.

பொலம் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளி – குறு 67/4,5

பொன் அணிகலத்தின் ஒரு காசினைப் போன்றிருக்கும்
நிலம் கரிந்துள்ள கள்ளி

6.

பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு – குறு 154/5

பொரிந்த அடிமரத்தையுடைய கள்ளியின் வெடித்த காயையுடைய அழகிய கிளை

7.

கவை முள் கள்ளி பொரி அரை – புறம் 322/2

இரண்டாய்ப் பிளந்த முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப்பகுதி

கள்ளியின் வகைகள் :

மேல்


களங்கனி

(பெ) களாப்பழம், fruit of carissa spinarum

களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின்
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 36,37

களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும்,
வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை

இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/1,2

இளம்பிறையைப் போன்ற கொம்பினையுடைய காட்டுப்பன்றி
களங்கனியைப் போன்ற தன் பெண்பன்றியினைப் புணர்ந்திருக்கும்

களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் – புறம் 145/5

களாப்பழம் போன்ற கரிய கோட்டையுடைய சிறிய யாழை

பார்க்க : களா
மேல்


களங்காய்க்கண்ணி

(பெ) ஒரு சேரமன்னனின் பட்டப்பெயர், the title name of a chEra king
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைப் பாடுகிறது.
களாக்காய் போன்ற கருநிற மணிகளையும், முத்துக்களையும் பொன் இழைகளில் கோத்து பட்டுத்துணியில்
வைத்துத் தைத்துச் செய்த மாலையை இவன் தலைமுடியாக (தலைப்பாகை போன்ற மகுடம்)
அணிந்துகொண்டிருந்தான் என்று பதிற்றுப்பத்து 39 கூறுகிறது.

உலகத்தோரே பலர்-மன் செல்வர்
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/1-4
இந்த உலகத்தாரில் பலர் இருக்கிறார்கள் செல்வர்கள்,
அவர் எல்லாரிலும் உனது நல்ல புகழே மிகுந்திருக்கும்!
பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!

குடாஅது
இரும் பொன் வாகை பெருந்துறை செருவில்
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய
வலம்படு கொற்றம் தந்த வாய் வாள்
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
இழந்த நாடு தந்து அன்ன
வளம் பெறிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/18-24
மேற்கின்கண்ணதாகிய
பெரிய பொன்னினையுடைய வாகை மரம் நிற்கும் பெருந்துறை என்னுமிடத்து நிகழ்ந்த போரில்
பொற்பூண் அணிந்த நன்னன் என்பவன் போர்செய்து களத்தில் மடிய
வென்ற வெற்றியினைத் தந்த வாய்ந்த வாளினையுடைய
களங்காய்ச் சென்னி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னன்
தான் முன்பு இழந்த நாட்டைப் பெற்றால் ஒத்த
பெரிய செல்வத்தைப் பெறுவதாயினும் வருவேன் அல்லேன்

மேல்


களமர்

(பெ) 1. மருதநில மக்கள், Inhabitants of an agricultural tract
2. தொழில்செய்வோர், labourers

1.

வேங்கை கண்ணியர் எருது எறி களமர்
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை – நற் 125/9,10

வேங்கை மலர் மாலையைத் தலையில் சூடியவராய், எருதுகளை ஓட்டும் உழவர்
போரடிக்கும் களத்தைப் பார்த்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பாறையில்

2.

மென்புல வன்புல
களமர் உழவர் கடி மறுகு பிறசார் – பரி 23/26,27

மருதம் நெய்தலாகிய மென்புலத்திலும், குறிஞ்சி முல்லை ஆகிய வன்புலத்திலும்
தொழில்செய்வோர், உழவர்கள் வழ்கின்ற சிறந்த தெருக்கள் பிறிதொரு பக்கத்தில்.

மேல்


களர்

(பெ) 1. உவர் நிலம், Saline soil
2. சேற்று நிலம், bog

1.

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130

களர் நிலத்தே வளர்ந்த ஈந்தின் விதையைக் கண்டாற் போன்று

2.

கழி பெயர் களரில் போகிய மட மான் – நற் 242/7

கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான்

மேல்


களரி

(பெ) களர், உவர் நிலம், saline soil

1.வெண்மையான புழுதி படிந்தது இந்த நிலம்

வெண் புற களரி விடு நீறு ஆடி – நற் 41/2

வெண்மையான நிறத்தையுடைய களர் நிலத்தில் எழுந்த நுண்ணிய துகள் படிந்து

2.உவர்ப்பான இந்த நிலத்தில் ஓமை மரங்கள் நன்கு வளரும்

உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/8

உப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு,

3.ஈச்சை மரங்கள் இங்கு நன்கு வளரும்

கரும் களி ஈந்தின் வெண் புற களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/2,3

கரிய களிபோன்ற கனியாகும் ஈத்த மரங்கள் மிகுந்த வெண்மையான புறத்தினையுடைய களர்நிலத்தில்
படிந்திருக்கும் புழுதியைத் தன்மேல் தூவிக்கொண்ட கடிய நடையையுடைய ஒற்றை ஆண்யானை

4.உப்பு வணிகரான உமணர்கள் இங்கு வாழ்வர்.

ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி
களரி புளியின் காய் பசி பெயர்ப்ப – நற் 374/2,3

உயர்ந்து தோன்றும் உமணர்கள் நிறைந்திருக்கும் சிறிய ஊரினரின்
களர்நிலத்துப் புளிச்சுவைகொண்டு, அவரின் வருத்தும் பசியைப் போக்க,

5.இங்கு பிளந்த முள்களைக்கொண்ட கள்ளிகள் வளரும்

களரி ஓங்கிய கவை முட் கள்ளி – நற் 384/2

களர் நிலத்தில் உயரமாய் வளர்ந்த கவைத்த முள்ளுள்ள கள்ளியில்

6.இங்கு ஆவாரம் என்னும் ஆவிரைச் செடிகள் வளரும்.

களரி ஆவிரை கிளர் பூ கோதை – அகம் 301/14

களரி நிலத்து ஆவிரைச் செடியின் விளங்கும் பூக்களாலான மாலை

மேல்


களவன்

(பெ) நண்டு, crab

அள்ளல் ஆடிய புள்ளி களவன்
முள்ளி வேர் அளை செல்லும் – ஐங் 22/1,2

சேற்றில் துளாவித் திரிந்த புள்ளிகளையுடைய நண்டு
முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும்

மேல்


களா

(பெ) ஒரு சிறுமரம் low-spreading spiny evergreen shrub, carissa spinarum

தீம் புளி களாவொடு துடரி முனையின் – புறம் 177/9

இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப் பழத்தைத் தின்று வெறுத்தால்

மேல்


கறங்கு

(வி) ஒலி, sound

1.

பலவிதமான வாத்தியங்களைக் கொண்ட பல்லியம் எழுப்பும் ஒலி.

அந்தர பல் இயம் கறங்க – திரு 119

2.

பெரிய முகப்பைக் கொண்ட முரசம் இடைவிடாமல் ’டம டம டம’ என எழுப்பும் ஒலி

மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733

(ஓவு = இடையறவு)

3.

பசு மாடுகளின் கழுத்தில்கட்டப்பட்டிருக்கும் மணிகள் ‘கண கண கண’என எழுப்பும் ஒலி

கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573

(ஏறு = காளை, நிரை = பசுக்கூட்டம்)

4.

அருவி நீர் விழும்போது ’டம டம டம’ என எழுப்பும் ஒலி

கறங்கு இசை அருவி வீழும் – ஐங் 395/5

5.

மேகங்கள் ‘கட கட கட’ என உறுமும்போது எழும்பும் ஓசை

கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே – ஐங் 452/2

(எழிலி = மேகம்)

6.

சிள்வண்டுகள் ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என எழுப்பும் ஓசை

கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய – பதி 58/13

(சிதடி = சிள்வண்டு)

7.

ஊதுகொம்புகள் பூம்,பூம்,பூம் என்று எழுப்பும் ஓசை

கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப – பதி 92/10

(வயிர் = ஊதுகொம்பு, Large trumpet, horn, bugle)

8.

கிராமங்களில் விழாக்கொண்டாடும்போது எழும்பும் பல்வித ஓசை

கறங்கு இசை விழவின் உறந்தை குணாது – அகம் 4/14

(விழவு= விழா)

9.

இந்த ஓசையைக்கேட்டுப் பறவைகள் வெருண்டு ஓடும்

கறங்கு இசை வெரீஇ பறந்த தோகை – அகம் 266/18

(வெரீஇ=வெருண்டு)

10.

மழை பெய்து நின்றவுடன் தவளைகள் கூட்டமாய் எழுப்பும் ஒலி

வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட – ஐங் 468/1

(நுணல்= தவளை)

மேல்


கறவை

(பெ) பால் தரும் பசு, Milch cow

பறவை படிவன வீழ, கறவை
கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 10,11

(மரங்களில் தங்கும்)பறவைகள் (உறைந்துபோய் காலின் பிடியை விட்டுக் கீழே)வீழ, கறவை மாடுகள்
(தம்)கன்றை ஏற்றுக்கொள்ளுதலைத் தவிர்க்கக் கடுமையாய் உதைக்க,

மேல்


கறி

1. (வி) கொறி, கடித்துத்தின்னு, eat by biting or nibbling
2. (பெ) மிளகு, pepper

1.

திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை – குறு 338/1-4

முறுக்கேறிய கொம்புகளையுடைய இரலையாகிய தலைமைப்பண்புள்ள நல்ல ஆண்மான்
செழுமையான பயற்றுப் பயிரைக் கறித்துத்தின்னும் துன்பமுடைய மாலைப்பொழுதினையும்

2.

கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய – குறு 90/2

மிளகுக் கொடி வளரும் மலைப்பக்கத்தில் இரவில் முழங்கிய

மேல்


கறுத்தோர்

(பெ) பகைவர், enemies, foes

மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர்
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு
கதழ் பரி நெடும் தேர் அதர் பட கடைஇ
சென்றவர் தருகுவல் என்னும்
நன்றால் அம்ம பாணனது அறிவே – ஐங் 474

குற்றமற்ற என் ஒளிவிடும் நெற்றி முன்போல் விளங்க, பகைவர்கள்
கட்டிய அரண்களை அழித்த போர்வன்மை மிக்க படையுடன்
விரைவாக ஓடும் நெடிய தேரினைக் காட்டுவழிகள் வருந்துமாறு செலுத்திச்
சென்றவரை, அழைத்துவருவேன் என்று கூறும்
பாணனது அறிவு மிகவும் நன்றாய் இருக்கிறது!

மேல்


கறுவு

(வி) சினம்கொள், show anger,
மனத்தில் வஞ்சம் அல்லது பழியுணர்ச்சி கொள்ளுதல், nurse revenge feeling

கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை – கலி 38/7

சினங்கொண்டு அந்த மரத்தின் அடிப்பகுதியைக் குத்திய மதயானை

மேல்


கறுழ்

(பெ) கடிவாளம், bridle, வாய்க்கவசம், mouth cover

கறுழ் பொருத செம் வாயான் – புறம் 4/8

கடிவாளம் பொருத்தப்பட்ட சிவந்த வாயால்

மேல்


கறைத்தோல்

(பெ) கரிய தோலால் ஆன கேடயம், black leather shield

கழி பிணி கறைத்தோல் நிரை கண்டு அன்ன – அகம் 67/13

மேல்


கன்று

1. (வி) 1. பழி, சினம் முதலியவற்றால் முகம் கடுமை ஏறி இரு,
(of face) become hardened dut to anger or insult
2. முற்று, reach a critical stage
– 2. (பெ) பசு. யானை. எருமை, கழுதை, ஒட்டகம் போன்ற விலங்குகளின் குட்டி
calf, colt, young of certain animals

1.1.

ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு
ஈத்தை இவனை யாம் கோடற்கு சீத்தை யாம்
கன்றி அதனை கடியவும் கைநீவி
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/29-34

“அழகிய அணிகளை அணிந்தவளே! எத் துன்பமும் செய்யாத என்மேல் தவறுண்டோ? உன்னிடம்
வைத்துக்கொள்ளாமல் இங்கு
கொடு இவனை நான் கையிலெடுத்துக்கொள்வதற்கு”; “சீச்சீ என்று நான்
சினந்து அதனைக் கடிந்துரைக்கவும், என் கையை மீறி
குன்றின் செங்குத்தான பகுதி மீது சிங்கம் ஊர்ந்து ஏறுவது போல்
தந்தையின் அகன்ற மார்பில் பாய்ந்தான், அந்த அறவுணர்வு இல்லாத
அன்பற்றவன் பெற்ற மகன்”.

கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும்
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/13,14

சினத்தால் கன்றிப்போன முகத்தையுடைய பகைவரை வென்று அவரின் களத்தைத் தனதாக்கிக்கொள்ளும்
வெற்றிச் சிறப்பில் அவரைப் போன்றிரு, பெருமானே! ஆனால், அவரைப் போன்றிருக்கவேண்டாம்,

1.2.

சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்கு
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி
கன்றிடின் காமம் கெடூஉம் மகள் – பரி 6/96-98

“கோபங்கொள்ள வேண்டாம், உன் மையுண்ட கண்கள் கோபத்தினால் சிவப்பாவதைக் கண்டு அஞ்சுகின்ற
உன் தலைவனோடு
ஊடல் நீங்கி, நீரில் விளையாடுதலைத் தொடங்கு, ஊடல் மிகவும்
முற்றிப்போனால் உங்கள் காம இன்பத்தை அது கெடுத்துவிடும், மகளே!

2.

கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் – நற் 85/5
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2
கரும் தாள் எருமை கன்று வெரூஉம் – ஐங் 97/2

மேல்


கன்னல்

(பெ) 1. நாழிகை வட்டில், hourglass
2. நீர் வைக்கும் குறுகிய வாய் உள்ள பாத்திரம்

1.

பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறு நீர் கன்னல் இனைத்து என்று இசைப்ப – முல் 55-58

பொழுதை அளந்து அறியும், உண்மையே பேசுகின்ற மக்கள்
(அரசனை)வணங்கியபடி காணும் கையையுடையவராய், விளங்க வாழ்த்தி,
‘(திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே, உனது
சிறிதளவு நீரைக்கொண்ட கடிகைப் பாத்திரம் (காட்டும் நேரம்)இத்துணை’ என்று சொல்ல –

2.

கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் – நெடு 64,65

‘கல்’லென்கிற ஓசையுடன் தூறல் (நீர்த்திவலைகளைத்)தூவுவதால், ஒருவருமே
குவிந்த வாயையுடைய செம்புகளில் தண்ணீரைக் குடியாராய்

மேல்

கன்னிவிடியல் – (பெ) விடியலின் ஆரம்பம், early morning, dawn
கன்னிவிடியல் கணை கால் ஆம்பல்
தாமரை போல மலரும் ஊர – ஐங் 68/1,2
உதயத்திற்கு முற்பட்ட அதிகாலை வேளையில் திரண்ட தண்டினையுடைய ஆம்பல்
தாமரையைப் போல மலரும் ஊரினைச் சேர்ந்த தலைவனே!
– விடியல் தோன்றிய அணிமைக்காலம் கன்னிவிடியல் எனப்பட்டது- குமரியிருட்டு என்னும்
வழக்குப் போல – ஔ.சு.து. விளக்கம்
– கன்னிவிடியல் – இருள் நன்கு புலராத விடியற்காலம் – பொ.வே.சோ.விளக்கம்

மேல்


கனம்

(பெ) பொன், gold

கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர் – குறு 398/3

கயல்மீனை ஒத்த மையுண்ட கண்களையுடைய பொன் குழைகளையுடைய மகளிர்

மேல்


கனல்

1. (வி) கொதி, எரி, boil, be hot, தகி, burn with intense heat
– 2. (பெ) நெருப்பு, fire

1.

குவளை
மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/10-12

குவளையின்
கரிய இதழைப் போன்ற நீர் மிகுதல் கொண்ட குளிர்ந்த கண்ணிமைகள்
உள்ளம் கொதித்தலால் நினைக்குந்தோறும் வற்றி

2.

கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72

தீயில் வெந்த அகிலின் புகை அந்தச் சோலைமுழுக்கப் பரவ

மேல்


கனலி

(பெ) சூரியன், sun

நெருப்பு அவிர் கனலி உருப்பு சினம் தணிய – ஐங் 388/1

நெருப்பு தழலாய்த் தகிக்கும் சூரியனின் கொடுமையான சினம் தணியும்வரை

மேல்


கனை

(வி) 1. நெருக்கமாயிரு, be crowded
2. மிகு, be abundant
3. ஒலி எழுப்பு, sound
4. நிறைந்திரு, be full
5. திரட்சியாய் இரு, be stout

1

கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என – கலி 16/7

பாறைகளின் மேலுள்ள வெம்மை அற்றுப்போகும்படி செறிவாகத் துளிகளைப் பொழிவாயாக என்று

2

காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ – பரி 10/63

காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் வெறி தோன்ற,

3

ஆடுதொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13

ஆடும்பொழுதெல்லாம் ஒலிக்கும் அழகிய வாயினையுடைய கடிய துடியினையும்

4

மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு – மலை 370

(தோலில் பூசப்பட்ட கரிய)சாந்து நிறைந்த முரசின் (அதை எடுத்துச்செல்லக் கட்டிய)காவுமரத்தைக்
கையில் பிடித்து

5

சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ – குறு 35/2,3

கருவுற்ற பச்சைப்பாம்பின் சூல் முதிர்ச்சி போன்ற
பருத்திருந்த கரும்பின் குவிந்த அரும்பு மலரும்படி

மேல்