புறநானூறு 251- 275

  
# 251 மாற்பித்தியார்# 251 மாற்பித்தியார்
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில்ஓவியம் போல் அழகான இடங்களுடைய மாளிகையில்,
பாவை அன்ன குறும் தொடி மகளிர்கொல்லிப்பாவை போன்ற, சிறிய வளயல்களை அணிந்த மகளிரின்
இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும்அணிகலன்களை அவற்றின் நிலையிலிருந்து நெகிழவைத்த இளைஞனை முன்பு கண்டுள்ளோம்.
கழை கண் நெடு வரை அருவி ஆடிமூங்கில் இருக்கும் இடத்தையுடைய நெடிய மலைகளிலிருந்து விழும் அருவிகளில் நீராடி,
கான யானை தந்த விறகின்                   5காட்டு யானைகள் கொண்டு வந்து தந்த விறகால் மூட்டிய
கடும் தெறல் செம் தீ வேட்டுமிகுந்த வெப்பமுள்ள சிவந்த தீயை மூட்டி
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனேதன் முதுகுவரை தாழ்ந்துள்ள திரண்டு சுருண்ட சடைமுடியை உலர்த்துபனும் அவனே.
                                     
# 252 மாற்பித்தியார்# 252 மாற்பித்தியார்
கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்துஓசையிடும் வெண்மையான அருவியில் நீராடுவதால், பழையநிறம் மாறி
தில்லை அன்ன புல்லென் சடையோடுதில்லை மரத் தளிர் போன்ற வெளிறிய சடையோடு கூடி நின்று,
அள் இலை தாளி கொய்யுமோனேசெறிந்த இலைகளுடைய தாளியைப் பறிக்கின்ற இவன்,
இல் வழங்கு மட மயில் பிணிக்கும்வீட்டில் நடமாடித்திரியும் இளம் மயிலை ஒத்த தன் மனைவியை வயப்படுத்தும்
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே                5சொற்களாலாகிய வலையையுடைய வேட்டுவனாக இருந்தான், முன்பு.
                                     
# 253 குளம்பாதாயனார்# 253 குளம்பாதாயனார்
என் திறத்து அவலம் கொள்ளல் இனியே“எனக்காக அவலம் கொள்ளாதே. இனி” என்று சொல்லி
வல ஆர் கண்ணி இளையர் திளைப்பநன்கு சுற்றப்பட்ட தலைமாலையையுடைய இளைஞர்கள் மகிழ்ந்திருக்க
நாகாஅல் என வந்த மாறே எழா நெல்நான் மகிழ்ந்திருக்கமாட்டேன் என்று போருக்கு வந்ததன் விளைவே இது; நெல் விளையாத
பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின்பச்சை மூங்கில் பட்டையை உரித்தது போன்ற வெளுத்திருந்த
வளை இல் வறும் கை ஓச்சி                  5வளையல் இல்லாத வறுங்கையைத் தலைக்குமேலே தூக்கிக்கொண்டு
கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையேஉன் சுற்றத்தாருடன் எப்படிச் செல்வேன்? நீயே வாய்திறந்து சொல்லிவிடு.
                                     
# 254 கயமனார்# 254 கயமனார்
இளையரும் முதியரும் வேறு புலம் படரஇளையவர்களும் முதியவர்களும் போர்க்களத்திலிருந்து வேறு இடங்களுக்குச் செல்ல,
எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்லநான் எழுப்பவும் எழாதவனாய், உனது மார்பு மண்ணைத் தழுவ,
இடை சுரத்து இறுத்த மள்ள விளர்த்தநடுக்காட்டில் இறந்துகிடக்கும் வீரனே! வெளுத்த
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள்வளையல்கள் இல்லாத வெறுங்கையைத் தூக்கி, உன் சுற்றத்தாரிடம்,
இன்னன் ஆயினன் இளையோன் என்று             5இப்படி ஆகிவிட்டான் இளையவன் என்று நான் சொல்ல
நின் உரை செல்லும் ஆயின் மற்றுஉன்னைப் பற்றிய செய்தி பரவுமானால், 
முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து”ஊரின் முன்னே உள்ள, பழுத்த கோளியாகிய ஆலமரத்தில்
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன்பறவைகள் ஆரவாரிக்கும் புதுவருவாயைப் போன்றது என் மகனுடைய
வளனும் செம்மலும் எமக்கு என நாளும்செல்வமும் தலைமையும் எனக்கு” என்று எப்போதும்
ஆனாது புகழும் அன்னை                     10விடாமல் புகழ்ந்து பேசும் உன் தாய்
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானேஎன்ன ஆவாளோ? அவள் இரங்கத்தக்கவள்.
                                     
# 255 வன்பரணர்# 255 வன்பரணர்
ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே’ஐயோ!’ என்று ஓலமிட்டு அழுதால் புலி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்;
அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்க அல்லேன்உன்னை அணைத்தவாறு எடுத்துச்செல்லலாம் எனில் உன் அகன்ற மார்பைத் தூக்க முடியவில்லை;
என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னைஎன்னைப்போல் பெரிய நடுக்கமுறுவான் ஆகுக, உனக்கு
இன்னாது உற்ற அறன் இல் கூற்றேஇவ்வாறு கொடுமை விளைவித்த அறமற்ற கூற்றுவன்; 
திரை வளை முன்கை பற்றி                   5என்னுடைய வளையல் அணிந்த முன்கையைப் பற்றிக்கொண்டு
வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதேமலையின் நிழலைச் சென்றடையலாம், மெல்ல நடப்பாயாக.
                                     
# 256 பெயர் தெரிந்திலது# 256 பெயர் தெரிந்திலது
கலம் செய் கோவே கலம் செய் கோவேமண்பாண்டங்கள் செய்யும் குயவனே! மண்பாண்டங்கள் செய்யும் குயவனே! 
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்தியஅச்சுடன் பொருந்திய வண்டியின் ஆரக்காலைப் பற்றிக்கொண்டு வந்த
சிறு வெண் பல்லி போல தன்னொடுசின்னஞ்சிறு வெள்ளைப் பல்லியைப் போல, என் கணவனுடன்
சுரம் பல வந்த எமக்கும் அருளிபல வழிகளையும் கடந்து வந்த எனக்கும் சேர்த்து, அருள் கூர்ந்து
வியல் மலர் அகன் பொழில் ஈம தாழி          5பெரிய பரப்பினையுடைய அகன்ற பூமியிலுள்ள இடுகாட்டில் புதைக்க, தாழியை
அகலிது ஆக வனைமோஅகலம் உள்ளதாகச் செய்வாயாக!
நனம் தலை மூதூர் கலம் செய் கோவேபெரிய இடங்களையுடைய பழைய ஊரின்கண் மண்பாண்டங்கள் செய்யும் குயவனே!
                                     
# 257 பெயர் தெரிந்திலது# 257 பெயர் தெரிந்திலது
செருப்பு இடை சிறு பரல் அன்னன் கணை கால்(பகைவர்க்குச்)செருப்பிடையே நுழைந்த சிறிய கல் போன்றவன், திரண்ட கால்களையும்,
அ வயிற்று அகன்ற மார்பின் பைம் கண்அழகிய வயிற்றையும், அகன்ற மார்பையும், குளிர்ந்த கண்களையும்,
குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்குச்சுப்புல்லை வரிசையாக வைத்தது போன்ற நிறம் பொருந்திய மயிரினையுடைய தாடியையும்,
செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடுகாதுக்கும் கீழே தாழ்ந்த கன்னமுடியையும் உடையவனாய், வில்லுடன் கூடியவன்
யார்-கொலோ அளியன் தானே தேரின்            5யாராய் இருப்பான்? இரங்கத்தக்கவன்தான். ஆராய்ந்து பார்த்தால்,
ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் எனஇவன் ஊரைவிட்டு அதிகம் எங்கும் போகாதவன். பாதுகாப்பிற்காகக்
காடு கைக்கொண்டன்றும் இலனே காலைகாட்டைப் பிடித்துக்கொண்டவனும் அல்லன்; இன்று காலை,
புல்லார் இன நிரை செல் புறம் நோக்கிபகைவர்களின் கூட்டமான ஆநிரை போகின்ற இடத்தைப் பார்த்து
கையின் சுட்டி பையென எண்ணிகையால் சுட்டிக்காட்டி, அவசரப்படாமல் மெல்ல எண்ணிப்பார்த்து
சிலையின் மாற்றியோனே அவை தாம்            10தன் வில்லால் பசுக்களை திருப்பிக் கொணர்ந்தான், அப் பசுக்கள்தான்
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும்மிகப் பல என்றாலும் அவனுக்கு என்ன பயன்? கொஞ்சங்கூட (தனக்கென வைத்துக்கொள்ளாததால்)
வெண் கோள் தோன்றா குழிசியொடுபாலின் வெண்மை தட்டுப்படாத பானையுடன்,
நாள் உறை மத்து ஒலி கேளாதோனேகாலைப் பொழுதில் துளிகள் தெறிக்கக் கடையும் மத்தின் ஒலியையும் கேட்காதவன்.
                                     
# 258 உலோச்சனார்# 258 உலோச்சனார்
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பதண்டில் முள்ளுடைய காரைச் செடியின் முதிர்ந்த பழத்தைப் போன்று
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்நன்கு முதிர்ந்த இனிய மதுவையுடைய கந்தாரம் என்னும் இடத்திலிருந்து தான் கொண்டுவந்து
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டுநிறுத்திய ஆநிரைகளுக்கு ஈடாகக் கள்ளை வாங்கிப் பருகி,
பச்சூன் தின்று பைம் நிணம் பெருத்தவளமான ஊனைத் தின்று, நன்றாகக் கொழுப்பு படிந்துள்ள
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி              5தன் ஈரமான எச்சில் கையை வில்லின் முதுகில் துடைத்துவிட்டு,
புலம் புக்கனனே புல் அணல் காளைவேறொரு இடத்திற்குச் சென்றிருக்கிறான், சிறிய தாடியையுடைய காளை போன்ற அந்த இளைஞன் 
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரைஇங்குள்ளவர்கள் அனைவரும் ஒருமுறை குடித்து முடிக்கும் முன்னே, பெரிய ஆநிரைகளைக் கவர்ந்து
ஊர் புறம் நிறைய தருகுவன் யார்க்கும்ஊரின் வெளியே நிறையக் கொணர்வான்; வேறு யாருக்கும் கள்ளினை ஊற்றாமல்
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடிதொடாமல் காத்துவையுங்கள், முதிர்ந்த கள் உள்ள சாடியை;
ஆ தர கழுமிய துகளன்                      10பசுக்களை ஓட்டிவரும் புழுதி படிந்த மேனியன்
காய்தலும் உண்டு அ கள் வெய்யோனேதாகத்துடனும் இருப்பான், அந்தக் கள்ளினை விரும்புவோன்..
                                     
# 259 கோடை பாடிய பெரும்பூதனார்# 259 கோடை பாடிய பெரும்பூதனார்
ஏறு உடை பெரு நிரை பெயர்தர பெயராதுஎருதுகளையுடைய பெரிய ஆநிரை முன்னே போக, அவற்றைக் கவர்ந்தவர்கள் அவற்றுடன் செல்லாது,
இலை புதை பெரும் காட்டு தலை கரந்து இருந்தஇலைகளால் மூடப்பட்ட பெரிய காட்டுக்குள் தலைமறைவாக இருந்த
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய்வலிய வில்லையுடைய வீரர்கள் மறைவிடத்தில் இருப்பதைக் காண்பாயாக.
செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்போகவே போகவேண்டாம், உன் எண்ணம் வெல்வதாக,
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல          5தெய்வம் உடலில் ஏறிய புலைத்தியைப் போல்
தாவுபு தெறிக்கும் ஆன் மேல்துள்ளிக் குதிக்கும் பசுக்களைத் தேடி – (போகவே போகவேண்டாம்)
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயேஇடுப்பில் ஒளிர்ந்து பிரகாசிக்கும் வாளையும், காலில் வீரக்கழலையும் அணிந்தவனே! 
                                     
# 260 வடமோதங்கிழார்# 260 வடமோதங்கிழார்
வளர தொடினும் வௌவுபு திரிந்துஓசை அதிகரிக்குமாறு இசைத்தாலும், ஓசையை உள்வாங்கித் திரிந்து,
விளரி உறுதரும் தீம் தொடை நினையாஇரங்கற் பண்ணாகிய விளரிப் பண்ணே இனிய யாழிலிருந்து வருகிறது என்பதை நினைத்து
தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்வருத்தம் அடையும் நெஞ்சத்துடன் புறப்பட்டுவரும் வழியில், ஒரு குடும்பப்பெண்
உளரும் கூந்தல் நோக்கி களரவிரித்துப் போட்டுக்கொண்டு வரும் கூந்தலைப் பார்த்து, இது தீயசகுனமாதலால் களர்நிலத்தில் இருக்கும்
கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி                     5கள்ளிமரத்தின் நிழலில் இருந்த கடவுளை வாழ்த்தி,
பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅபசியோடு கூடிய வயிற்றையுடையவனாய், வருந்தித் தொழுது,
காணலென்-கொல் என வினவினை வரூஉம்“நான் காண வந்த தலைவனைக் காண முடியாதோ?” என்று கேட்டு வருகின்ற
பாண கேள்-மதி யாணரது நிலையேபாணனே! நமது வருவாயின் நிலையை நான் கூறுகிறேன். கேள்!
புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்துதலைவன் நமக்கு அளித்தவற்றை வைத்து உண்டாய் என்றாலும், இரப்பதற்காக வேறிடம் புறப்பட்டு
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்          10வருத்தம் அடைந்தாய் என்றாலும், இவை இரண்டும்
கை உள போலும் கடிது அண்மையவேஉனது கையிலுள்ளன, மிக அருகில் உள்ள
முன் ஊர் பூசலின் தோன்றி தன் ஊர்ஊரில் முன்பு தோன்றிய பூசலால், தன்னுடைய ஊரில்
நெடு நிரை தழீஇய மீளியாளர்இருந்த ஆநிரைகளைக் கவர்ந்த வீரம் மிக்க பகைவர்கள்
விடு கணை நீத்தம் துடி புணை ஆகஎய்த அம்பு வெள்ளத்தைத் தன் வலிமையை மட்டுமே துணையாகக் கொண்டு
வென்றி தந்து கொன்று கோள் விடுத்து               15பகைவரைக் கொன்று, வெற்றியை ஈட்டி, ஆநிரைகளை விடுவித்து,
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்உலகம் வருந்துமாறு, தன்னை விழுங்கிய பாம்பின்
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர்கூர்மையான பற்களையுடைய வாயிலிருந்து திங்கள் மீண்டது போல், மறவருடைய
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன்கையிலிருந்து தப்பி வந்த கன்றுகளையுடைய பல பசுக்களைக்
நிரையொடு வந்த உரையன் ஆகிகூட்டத்துடன் கொண்டுவந்த பெரும்புகழ் பெற்றவன் ஆகி
உரி களை அரவம் மான தானே                  20தோலை உரித்துவிட்டுச் செல்லும் பாம்பு போல், தானே
அரிது_செல்_உலகில் சென்றனன் உடம்பேஅரிதாகச் செல்லப்படும் மேலுலகம் சென்றான்; அவன் உடல்
கான சிற்றியாற்று அரும் கரை கால் உற்றுகாட்டிலுள்ள சிறிய ஆற்றின் அரிய கரையில், காலூன்றி உறுதியாக நின்று
கம்பமொடு துளங்கிய இலக்கம் போலநடுக்கத்துடன் சாய்ந்த அம்பு ஏவும் இலக்குப் போல்
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றேஅம்புகளால் துளைக்கப்பட்டு அங்கே வீழ்ந்தது.
உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயரே          25உயர்ந்த புகழ் மிகவும் தோன்றிய தலைவனின் பெயர்,
மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டிமென்மையான, அழகிய மயிலின் அழகிய மயிராகிய பீலி சூட்டப்பட்டு,
இடம் பிறர் கொள்ளா சிறு வழிபிறர் இடம் கொள்ள முடியாத சிறிய இடத்தில்
படம் செய் பந்தர் கல் மிசையதுவேதிரைச் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தரின் கீழ் நடப்பட்ட கல்லின் மேலே பொறிக்கப்பட்டிருக்கிறது.
                                     
  
  
  
  
  
# 261 ஆவூர் மூலங்கிழார்# 261 ஆவூர் மூலங்கிழார்
அந்தோ எந்தை அடையா பேர் இல்ஐயோ! என் தலைவனின் கதவுகள் எப்பொழுதும் அடைக்கப்படாத பெரிய இல்லமே!
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடுவண்டுகள் மொய்க்கும் மது எப்பொழுதும் குறையாமல் இருக்கும் உண்கலத்துடன்,
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம்வந்தோர்க்குக் குறையாமல் அளிக்கும் மிகுந்த சோற்றையுடைய தேய்ந்த உயர்தளமுடைய முற்றம், 
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆகநீரின்றி வற்றிய ஆற்றில் உள்ள ஓடம் எப்படி இருக்குமோ அப்படியாக இருக்கப்
கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே           5பார்க்கவே பார்த்தேன், அதைப் பார்த்த என் கண்கள் ஓளி இழந்துபோகட்டும்.
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்உலகத்தைக் காக்கும் வேந்தருடைய செல்வம் மிக்க அழகிய அரண்மனையில்
மையல் யானை அயா உயிர்த்து அன்னமதத்தால் மயங்கிய யானை பெருமூச்சு விடுவதைப் போன்ற
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசைநெய் காய்கின்ற உலையில் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியின் ஓசையையுடைய பொரியலை
புது கண் மாக்கள் செது கண் ஆரபுதிய மாந்தர்கள் தம் ஓளிமழுங்கிய கண்களால் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து
பயந்தனை-மன்னால் முன்னே இனியே            10உண்ணத் தந்தாய் முன்பு; இப்பொழுது,
பல் ஆ தழீஇய கல்லா வல் வில்பல பசுக்களின் கூட்டத்தை கைப்பற்றிய வில்வித்தை கற்கத் தேவையில்லாத வலிய வில்வீரரை,
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டிபெருங்குரலைத் தன்னிடத்தே கொண்ட கூகைகள் தம் இனத்தைக் கூவி அழைக்க, அலைக்கழித்து,
நாகு முலை அன்ன நறும் பூ கரந்தைஇளம் பசுங் கன்றுகளின் முலை போன்ற தோற்றமுள்ள, மணமுள்ள கரந்தைப் பூவை,
விரகு அறியாளர் மரபின் சூட்டஅறிவிற் சிறந்தோர் சூட்ட வேண்டிய முறைப்படி சூட்ட,
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய                     15பசுக்களை மீட்டுவந்து, நடுகல்லாகிப்போய்விட்ட
வென் வேல் விடலை இன்மையின் புலம்பிவெற்றியையுடைய வேலையுடைய தலைவன் இல்லாததால், அழுது,
கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கியமயிர் கொய்யப்பட்ட தலையுடன், கைம்மை நோன்பை மேற்கொண்டு, கலக்கமுறும்
கழி_கல_மகடூஉ போலஅணிகலன்களை இழந்த அவன் மனைவியைப் போல்
புல்லென்றனையால் பல் அணி இழந்தேபொலிவிழந்து காணப்படுகிறாய், பல அழகும் இழந்து.
                                     
# 262 மதுரை பேராலவாயர்# 262 மதுரை பேராலவாயர்
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின்மதுவைப் பிழியுங்கள்; ஆட்டை வெட்டுங்கள்.
பாசுவல் இட்ட புன் கால் பந்தர்பசிய இலை, தழைகளால் வேயப்பட்ட சிறிய கால்களையுடைய பந்தலில்
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின்நீர் கொழித்துக் கொண்டுவந்த குறுமணலைப் பரப்புங்கள்;
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்றுபகைவரின் தூசிப்படையை முறித்துத் திரும்பிவரும் தனது படைக்குப் பின்னே நின்று,
நிரையோடு வரூஉம் என் ஐக்கு                       5ஆநிரையுடன் வரும் என் தலைவனுக்குப்
உழையோர் தன்னினும் பெரும் சாயலரேபக்கத்தில் துணையாக உள்ள மறவர்கள் அவனைவிட மிகவும் சோர்வுடன் இருப்பார்கள்.
                                     
# 263 திணை கரந்தை# 263 திணை கரந்தை
பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்பெரிய யானையின் காலடி போலத் தோன்றும் ஒரு கண்ணையுடைய
இரும் பறை இரவல சேறி ஆயின்பெரிய பறையை வைத்திருக்கும் இரவலனே! நீ அந்த வழியாகச் சென்றால்,
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாதுதொழாமல் செல்வதைத் தவிர்ப்பாயாக, தொழுது சென்றால், இடைவிடாமல்
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறேவண்டுகள் மேம்பட்டு வாழும் மலர்ச்சோலை ஆகும் இந்தக் கொடிய வழி;
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து             5பல பசுக்கள் கொண்ட திரளான கூட்டத்தைக் கவர்ந்துசெல்லும்போது மீட்டுக்கொண்டுவந்து,
கல்லா இளையர் நீங்க நீங்கான்போர்த்தொழில் தவிர வேறெதையும் கற்காத இளைஞர்கள் பயந்தோட, தான் ஓடாமல்
வில் உமிழ் கடும் கணை மூழ்கபகைவர்களின் வில்களிலிருந்து வந்த விரைவான அம்புகளால் மூழ்கப்பெற்று
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லேகரையை அரிக்கும் நீரில் அணை போல் தடுத்தவனின் நடுகல்லை-(தொழாமல் செல்வதைத் தவிர்ப்பாய்)
                                     
# 264 உறையூர் இளம்பொன் வாணிகனார்# 264 உறையூர் இளம்பொன் வாணிகனார்
பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்திபரல்கற்களையுடைய இடத்தில் உள்ள மேட்டுப்பகுதியைச் சேர்த்து,
மரல் வகுந்து தொடுத்த செம் பூ கண்ணியொடுபெருங்குரும்பையைக் கீறி எடுத்த நாரால் தொடுத்த சிவந்த பூக்களுடன் கூடிய தலைமாலையுடன்
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்துஅழகிய மயில் தோகையையும் சூட்டி, அவன் பெயர் பொறித்துத்
இனி நட்டனரே கல்லும் கன்றொடுதலைவனுக்கு இப்பொழுது நடுகல்லும் நட்டுவிட்டார்களே; கன்றுகளோடு
கறவை தந்து பகைவர் ஓட்டிய                        5பசுக்களையும் மீட்டு வந்து, பகைவரை விரட்டியடித்த
நெடுந்தகை கழிந்தமை அறியாதுதலைவன் இறந்ததை அறியாது
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பேபாணர்கள் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?
                                     
# 265 சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார்# 265 சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார்
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலைஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள முரம்பு நிலமாகிய பழைய சுடுகாட்டில்
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீஓங்கி உயர்ந்த வேங்கை மரத்தின் ஒளிபொருந்திய மணமுள்ள பூங்கொத்துகளை
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துஅழகிய பனங்குருத்துக்களோடு அலங்கரித்துத் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்டபல பசுக்களையுடைய இடையர்கள் இலைமாலையாகச் சூட்டி வழிபடும்
கல் ஆயினையே கடு மான் தோன்றல்            5நடுகல்லாயினாயே! விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே! 
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைமழையின் இடிபோன்ற வலிமையும், வண்மையும் உடைய உன் அடி நிழலில் வாழும் வாழ்க்கையையுடைய
பரிசிலர் செல்வம் அன்றியும் விரி தார்பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல் மலர்ந்த மலர்களாலாகிய மாலையணிந்த,
கடும் பகட்டு யானை வேந்தர்விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளையுடைய வேந்தர்களின்
ஒடுங்க வென்றியும் நின்னொடு செலவேகுறையாத வெற்றியும் உன் இறப்பால் உன்னுடன் மறைந்தனவே.
                                     
# 266 பெருங்குன்றூர் கிழார்# 266 பெருங்குன்றூர் கிழார்
பயம் கெழு மா மழை பெய்யாது மாறிபயன் பொருந்திய பெரிய மேகம் மழை பெய்யாமல் நீங்கிப்போக,
கயம் களி முளியும் கோடை ஆயினும்நீர்நிலைகள் களியாகி உலர்ந்துபோகும் கோடைக் காலத்திலும்
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல்துளையுள்ள தண்டினைக் கொண்ட ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில்
கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றைகதிர் போன்ற கூர்மையான கொம்புகளையுடைய நத்தையின் சுரித்த முகத்தையுடைய ஆண்
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்               5இளம் பெண்ணாகிய சங்குடன் பகலில் கூடுகின்ற
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்நீர் விளங்கும் வயல்களுள்ள நாட்டையுடைய பெரிய வெற்றி வீரனே!
வான் தோய் நீள் குடை வய_மான் சென்னிவிண்ணைத் தொடும் நெடிய குடையும் வலிய குதிரையும் உடைய சென்னியே!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்சான்றோர்கள் கூடியுள்ள அவைக்குச் சென்ற ஒருவன்,
ஆசு ஆகு என்னும் பூசல் போல“எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று ஓலமிட, அவர்கள் அதனை விரைவில் தீர்ப்பது போல
வல்லே களை-மதி அத்தை உள்ளிய              10நீ விரைவில் தீர்த்துவைப்பாய், என்னை நினைத்து வந்த
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைவிருந்தினரைக் கண்டதும் ஒளிந்துகொள்ளும் நன்மையில்லாத வாழ்க்கையையுடைய,
பொறி புணர் உடம்பில் தோன்றி என்ஐம்பொறிகளும் குறைவின்றி இருக்கும் என் உடலில் தோன்றி, என்
அறிவு கெட நின்ற நல்கூர்மையேஅறிவைக் கெடுத்து நிற்கும் வறுமையை – (நீ விரைவில் தீர்த்துவைப்பாய்)
                                     
# 267# 267
  
# 268# 268
                                         
# 269 ஔவையார்# 269 ஔவையார்
குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல்குயிலின் அலகு போன்ற கூர்மையான மொட்டுக்களையுடைய காட்டு மல்லிகைக் கொடியில்
பயிலாது அல்கிய பல் காழ் மாலைநெருக்கமில்லாமல் மலர்ந்த பல பூக்கள் மிகுந்த மாலையைக்
மை இரும் பித்தை பொலிய சூட்டிகரிய பெரிய தலைமுடியில் அழகுடன் சூடி,
புத்து அகல் கொண்ட புலி கண் வெப்பர்புதிய அகன்ற கலத்தில், புலியின் கண் போன்ற நிறத்தையுடைய வெம்மையான மதுவை
ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை                5ஓரிரு முறை இங்கே இருந்து நீ உண்ட பின்,
உவலை கண்ணி துடியன் வந்து எனஇலை, தழைகளைக் கலந்து தொடுத்த மாலை அணிந்த துடியன் வந்து “போர் வந்தது” என்று அறிவிக்க
பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இதுபிழிந்த மதுவாகிய உணவை உண்ணுமாறு உன்னை வேண்டியும், நீ அந்த
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திமதுவை வாழ்த்தி, அதனைக் கொள்ளவில்லை என்று கூறுவார்கள்,
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின்கரந்தை சூடியோர் மிகுதியாய்க் கூடி மறைந்திருத்தலை அறிந்து மாறிச் சென்று செய்த போரில்
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்          10அவர்களின் பலவான இனமான பசுக் கூட்டங்களைக் கவர்ந்துகொண்டு, வில் மறவர்களை,
கொடும் சிறை குரூஉ பருந்து ஆர்ப்பவளைந்த சிறகையும், நிறத்தையும் உடைய பருந்துகள் ஆரவாரிக்குமாறு
தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளேகொன்று மாறுபாட்டைப் போக்கியது உனது வலிய கையில் உள்ள இந்த வாள்தானே.
                                     
# 270 கழாத்தலையார்# 270 கழாத்தலையார்
பன் மீன் இமைக்கும் மாக விசும்பின்பல விண்மீன்கள் ஒளிரும் மாகமாகிய உயர்ந்த வானத்தில் முழங்கும் முகில் போல
இரங்கு முரசின் இனம் சால் யானைமுழங்கும் முரசினையும், கூட்டமாக அமைந்த யானையினையும் உடைய,
நிலம் தவ உருட்டிய நேமியோரும்நில உலகில் நெடுங்காலம் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும் வேந்தரும்
சமம் கண் கூடி தாம் வேட்பவ்வேபோர்க்களத்தில் ஒன்று கூடி அன்பால் வருந்தி நின்றனர்;
நறு விரை துறந்த நாறா நரை தலை            5நறுமணப் பொருள்களைத் துறந்தமையால் நறுமணம் கமழாத, நரைத்த தலையையுடைய 
சிறுவர் தாயே பேரில்_பெண்டேசிறுவர் தாயே! பெரிய குடும்பத்துப் பெண்ணே!
நோகோ யானே நோக்கு-மதி நீயேநான் வருந்துகிறேன், நீயே பார்ப்பாயாக;
மற படை நுவலும் அரி குரல் தண்ணுமைமறம் பொருந்திய வீரர்களைப் போர்க்கழைக்கும் அரித்த குரலையுடைய போர்ப்பறையின்
இன் இசை கேட்ட துன் அரும் மறவர்இனிய ஓசையைக் கேட்ட, பகைவர்களால் நெருங்குதற்கரிய மறவர்,
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார்   10வெற்றிபெறும் வேட்கையையுடையவராய், போர்க்களத்தின் நடு இடத்தைக் கைப்பற்ற எண்ணி
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலைபெரும் போரைச் செய்த அச்சம்தரும் போர்க்களத்தில்,
விழு நவி பாய்ந்த மரத்தின்பெரிய கோடரியால் வெட்டப்பட்டு விழுந்த மரம் போல்
வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்தேவாளின்மேல் கிடந்த, ஆண்மையுடைய உன் மகனின் ஆற்றலை எண்ணி – (வேந்தரும் வருந்தி நின்றனர்)
                                     
  
  
  
  
  
# 271 வெறி பாடிய காமக்கண்ணியார்# 271 வெறி பாடிய காமக்கண்ணியார்
நீர் அறவு அறியா நில முதல் கலந்தநீர் அற்றுப்போவதை அறியாத நிலத்தோடு ஒன்றி நிற்கும்
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழைகரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின் கண்ணுக்கு நிறைவான நிறமுடைய தழையை,
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்மெல்லிய அணிகலன்கள் அணிந்த பெண்கள் தம் அழகான அகன்ற இடையில்
தொடலை ஆகவும் கண்டனம் இனியேதழையுடையாக அணிவதையும் கண்டோம். இப்பொழுது,
வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து  5அச்சம்தரும் குருதியில் கலந்து, உருமாறி,
ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்துதுண்டிக்கப்பட்டுக் கிடந்த நொச்சி மாலையை ஊன்துண்டு என்று கருதிப்
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரே எழுவதை யாம் கண்டோம்.
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறேவீரத்தை விரும்பும் ஆண்மகன் ஒருவன் அணிந்திருப்பதால்.
                                     
# 272 மோசி சாத்தனார்# 272 மோசி சாத்தனார்
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சிமணிகளைக் கொத்துக்கொத்தாய்க் கோத்துவைத்தாற் போன்ற கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியே!
போது விரி பன் மரனுள்ளும் சிறந்தபூக்கள் மலரும் பலவிதமான மரங்களுக்குள்ளும் நீதான் மிகுந்த
காதல் நன் மரம் நீ நிழற்றிசினேஅன்பிற்குரிய நல்ல மரம், நீ ஒளிமிக்கதாய் இருக்கின்றாய்;
கடி உடை வியன் நகர் காண்வர பொலிந்தகாவலையுடைய பெரிய மாளிகைகளில் காண்பதற்கு இனிமையாய் அழகு மிக்க
தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி               5வளையல் அணிந்த இளமகளிர் இடுப்பில் தழையுடையாக இருப்பாய்;
காப்பு உடை புரிசை புக்கு மாறு அழித்தலின்பாதுகாவலுடைய மதிலில் நின்று பகைவர்களின் மாறுபாட்டை அழித்தலில்
ஊர் புறங்கொடாஅ நெடுந்தகைகைவிடாது ஊரைக் காக்கும் வீரர்களின்
பீடு கெழு சென்னி கிழமையும் நினதேபெருமைக்குரிய தலையில் அணியப்படும் உரிமையும் உன்னுடையதாகும்.
                                     
# 273 எருமை வெளியனார்# 273 எருமை வெளியனார்
மா வாராதே மா வாராதேகுதிரை வரவில்லையே! குதிரை வரவில்லையே!
எல்லார் மாவும் வந்தன எம் இல்மற்ற வீரர்கள் அனைவருடைய குதிரைகளும் வந்தன. எம் வீட்டில் உள்ள
புல் உளை குடுமி புதல்வன் தந்தசிறிதளவே குடுமியுள்ள இளமகனைத் தந்த
செல்வன் ஊரும் மா வாராதேஎன் கணவன் ஏறிச்சென்ற குதிரை வரவில்லையே!
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல்         5இரண்டு பெரிய ஆறுகள் கூடும் பெரிய சந்திப்பில்
விலங்கு இடு பெரு மரம் போலகுறுக்கே நின்ற பெருமரம் போல்,
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவேஅவன் ஏறிச்சென்று போரிட்ட குதிரை சாய்ந்ததோ?
                                     
# 274 உலோச்சனார்# 274 உலோச்சனார்
நீல கச்சை பூ ஆர் ஆடைநீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும்,
பீலி கண்ணி பெருந்தகை மறவன்மயில் தோகையால் தொடுக்கப்பட்ட தலைமாலையையும் உடைய பெரியோனாகிய வீரன்,
மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து இனியேதன்னைக் கொல்ல வந்த யானையின் நெற்றியில் வேலைச் செலுத்தி, இப்பொழுது,
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்தன் உயிரையும் செலுத்திப் போரிடுவான் போல் தோன்றுகிறது; பகைவர்
எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர          5தங்கள் வலக்கரங்களில் வேலை ஏந்தியவராய் யானைகளுடன் பரவி வர,
கையின் வாங்கி தழீஇஅவன் மீது வந்து தைத்த வேலைப் பிடுங்கி, அவர்களை இரு கைகளாலும் இறுகப் பற்றி,
மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனனேதன் வலிமையால் உயரத் தூக்கி, நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய உடலைப் பற்றிக்கொண்டு நிற்கின்றான்.
                                     
# 275 ஒரூஉத்தனார்# 275 ஒரூஉத்தனார்
கோட்டம் கண்ணியும் கொடும் திரை ஆடையும்வளையத் தொடுத்த மாலையைச் சூடுவதும், வளைத்துக் கட்டிய அலையலையான ஆடையை உடுத்துவதும்,
வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும்அரசன் விரும்புவதைக் கூறி அவனைத் தன் வசப்படுத்துவதும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றியஇவனுக்குப் பொருந்திவருகின்றன; மனவலிமையையுடன் போர்புரியும்
திணி நிலை அலற கூவை போழ்ந்து தன்போர்க்களத்தின் மையப்பகுதியினர் அலறக் கூட்டமான படையைப் பிளந்துகொண்டு, தன்னுடைய
வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி                5நன்கு செய்யப்பட்ட, சிறந்த வேலின் இலைமுகத்தைத் தான் செல்லும் திசைநோக்கி ஏந்தி,
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது“இவனை இங்கே தடுத்துநிறுத்துங்கள், தடுத்துநிறுத்துங்கள்.” என்று பகைவர் கூற, அதை மதியாமல்
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்பகால் சங்கிலியை இழுத்துச்செல்லும் யானைபோல், இறந்த வீரர்களின் குடல்கள் காலைத் தடுக்க,
கன்று அமர் கறவை மானதன் கன்றை விரும்பும் பசுவைப் போல்
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமேபகைவரின் முன்னணிப் படையை எதிர்த்து அவரால் சூழப்பட்டிருக்கும் தன் தோழனைக் காக்க வருகிறான்.