அகநானூறு 76-100

#76 மருதம் பரணர்#76 மருதம் பரணர்
மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்கமார்ச்சனை என்ற சாந்து செறிவாகப் பூசப்பெற்ற மத்தளத்துடன், காண்போர் மிகுந்த மகிழ்ச்சியடைய நாங்கள் கூத்தினை நடத்த
தண் துறை ஊரன் எம் சேரி வந்து எனஅதனைக் காண, குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவன் எம் சேரிக்கு வந்ததற்கு
இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடுஇனிமையும் கடுப்பும் கொண்ட கள்ளினையுடைய அஃதை என்பானது, யானைகளுடன்
நன் கலன் ஈயும் நாள்_மகிழ் இருக்கைநல்ல அணிகலன்களையும் வாரி வழங்கும் நாளோலக்கம் என்னும் காலை அத்தாணி இருக்கையின்போது
அவை புகு பொருநர் பறையின் ஆனாதுஅவனுடைய மண்டபத்தில் நுழையும் பொருநர் முழங்குகின்ற பறையைப் போல, விடாமல்
கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில்இகழ்ந்து பேசுகிறார்கள் அவனுடைய வீட்டுப்பெண்கள் என்கிறார்கள்.
கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன்கச்சணிந்தவனும், கழல் கட்டியவனும், தேனொழுகும் மாலையணிந்த மார்பையுடையவனும்,
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்பல்வேறு வகைத் தொழில்திறம் அமைந்து பொலிவுற்ற மாலையினையுடையவனும்,
சுரியல் அம் பொருநனை காண்டிரோ எனசுருட்டை முடியினையுடையவனுமான அழகிய கூத்தனாகிய ஆட்டனத்தியைப் பார்த்தீர்களா என்று தேடிக்கொண்டு
ஆதிமந்தி பேது உற்று இனையஆதிமந்தி என்ற பெண் பித்துப்பிடித்து வருந்தி அலைய
சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்கரையினை மோதி உராய்ந்துகொண்டு நேர்கிழக்காகப் பாயும்
அம் தண் காவிரி போலஅழகிய குளிர்ந்த காவிரி (ஆட்டனத்தியை இழுத்துக்கொண்டு சென்றது) போல
கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே(நானும்)அந்தத் தலைவனை வளைத்துக் கைக்குள்போட்டுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
  
#77 பாலை மருதன் இள நாகனார்#77 பாலை மருதன் இள நாகனார்
நன் நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்நம் தலைவியின் நல்ல நெற்றி பசந்துபோகவும், முயற்சியால் பொருள் ஈட்டுவதற்கு
துன் அரும் கானம் துன்னுதல் நன்று எனநெருங்க முடியாத காட்டுவழியில் செல்லுதல் நல்லதென்று எண்ணி
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னாஎன் பின்னே நின்று நீ நினைத்தால், மிகுந்த கொடிய செயலைச்
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து_உறசெய்ய நினைக்கின்றாய், வாழ்க நெஞ்சமே! வெப்பம் மிகுந்திருக்கும்படி
இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும்இடிகளை உமிழும் மேகம் மழைபெய்யாமல் அகன்று செல்வதால், எங்கும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முதுபாழ்குடிமக்கள் தத்தம் ஊர்களைவிட்டு வெளியேறுகின்ற, பலரும் சுட்டிக்காட்டிக்கூறும் பழைய பாழிடத்தில்
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார்கயிற்றினால் சுற்றிக் கட்டப்பட்ட குடத்திலுள்ள ஒலையை வெளியே எடுப்பதற்கு
பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்குடத்தின் இலச்சினையை நீக்கும் ஆவணப்பெரியோர் (அந்த ஓலைகளை வெளியே எடுப்பது) போன்று
உயிர் திறம் பெயர நல் அமர் கடந்ததம் உயிர் தம்மைவிட்டுப் போக, நல்ல போரினை வென்று மடிந்த
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவரஅஞ்சாநெஞ்சரின் குடலை வெளியே எடுக்க, மிகவும் வலிந்து,
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும்சிவந்த செவியினைக் கொண்ட பருந்து காண்போர் அஞ்சும்படியாக இழுக்கும்
கல் அதர் கவலை போகின் சீறூர்பரல்கற்கள் நிறைந்த பலவாறாகப் பிரிந்துசெல்லும் வழியில் போனால், அங்குள்ள சிற்றூர்களின்
புல் அரை இத்தி புகர் படு நீழல்பொலிவற்ற அடியினையுடைய இத்தி மரத்தின் புள்ளி புள்ளியான நிழலில் 
எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலைபெருங்காற்று வீசும் இருள் மிக்க மாலை வேளையில் (ஓய்வெடுக்கக் கண்ணை மூடும்போது)
வானவன் மறவன் வணங்கு வில் தட கைசேரனின் படைத்தலைவனான, வளைந்த வில்லைப் பெரிய கையில் கொண்ட
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன்குறையாத கள்ளினது மிக்க மகிழ்ச்சியையுடைய பிட்டன் என்பவன்
பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்ததன்னோடு ஒத்துவராத மன்னர்களுடனான அரிய போரில் ஓங்கித்தூக்கிய
திருந்து இலை எஃகம் போலதிருத்தமான இலைத்தொழிலையுடைய வேல் (அப் பகை மன்னர்க்குத் தரும் துன்பத்தைப்) போல
அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணேதாங்க முடியாத துயரத்தைத் தரும் நம் தலைவியின் நீர் ஒழுகும் கண்கள் (நம் மனக்கண் முன் தோன்றி)
  
#78 குறிஞ்சி மதுரை நக்கீரனார்#78 குறிஞ்சி மதுரை நக்கீரனார்
நனம் தலை கானத்து ஆளி அஞ்சிஅகன்ற இடத்தையுடைய காட்டினிலிருக்கும் ஆளி என்ற விலங்கினை எண்ணி அஞ்சி,
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்தன் இனத்தைத் தன்னிடத்தே சேர்த்துக்கொள்ளும், வெளிப்படையாகத் தெரியும் பேராற்றலையும்,
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்துவரியினையுடைய வண்டுகள் ஒலிக்கும், வாயினுள் செல்லும் மதத்தினையும் உடைய
பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல்புள்ளிகள் நிறைந்த நெற்றியால் பொலிவுபெற்ற வலிமை பொருந்திய ஆண்யானைகளின் தலைவன்
இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவதன் கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையால் இன்பமுறத் தழுவ
கடும் சூல் மட பிடி நடுங்கும் சாரல்முதன்முதலாகக் கருவுற்றிருக்கும் இளம் பெண்யானை (ஆளியை எண்ணி) நடுங்குகின்ற மலைச்சாரலில்,
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்இனிமையாகப் பிழிந்தெடுத்த கள்ளினையுடைய குறவர்களின் முற்றத்தில்
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள்மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும், காந்தளின்
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணெனநீண்ட இதழ்களான நெடிய துடுப்புகள் முறியவும், குளிர்ச்சியாக
வாடை தூக்கும் வரு பனி அற்சிரம்வாடைக்காற்று வீசும் பனிவிழத்தொடங்கும் முன்பனிக்காலத்தில்
நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர்நாம் இல்லாத தனிமையில் தம் ஊரில் தனியாளாக இருக்கும் அவர்கள்
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் எனஎப்படி இருக்கிறார்களோ பாவம் அவர்கள் என்று
எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும்எம்மைவிட்டுப் பிரிந்திருந்த சில நாட்களில் சிறிதளவேனும்
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாடநினைந்திருந்தீரோ, ஓங்கிய மலை பொருந்திய நாட்டையுடையவனே –
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசைஉலகம் உள்ளளவும் வாழும் பலரும் புகழும் நல்ல புகழினையும்,
வாய்மொழி கபிலன் சூழ சேய் நின்றுவாய்மையே கூறுகின்ற மொழியையுமுடைய கபிலன் ஆலோசனை சொல்ல, நெடும் தொலைவிலிருந்து
செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டுவளம் பொருந்திய வயல்களில் விளைந்த நெற்கதிர்களைக் (கிளிகள்மூலம்) கொண்டுவந்து, அவற்றைப்
தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டிபெரிய தண்டுகளையுடைய ஆம்பல் மலரோடு சேர்த்து ஆக்கி உண்டு,
யாண்டு பல கழிய வேண்டு_வயின் பிழையாதுபல ஆண்டுகள் கழியவும் தான் விரும்பிய இடத்டைவிட்டு இடம்பெயராமல்
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கிபகைவரின் வாட்போரினைக் கலக்கி, முயற்சியால் வென்று
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டியநிமிர்ந்த கொம்புகளைக் கொண்ட யானைகளையுடைய மூவேந்தரையும் விரட்டியடித்த
கடும் பரி புரவி கைவண் பாரிமிகுந்த விரைவுடன் செல்லும் குதிரைப்படையை உடைய வள்ளல்தன்மை மிகுந்த பாரியின்
தீம் பெரும் பைம் சுனை பூத்தஇனிய பெரிய பசுமையான சுனைநீரில் பூத்த
தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலேதேன் மணக்கும் புதிய மலராக மணக்கும் இவளின் நெற்றியை – (சிறிதளவேனும் நினைந்திருந்தீரோ)
  
#79 பாலை குடவாயில் கீரத்தனார்#79 பாலை குடவாயில் கீரத்தனார்
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்தோளில் கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்ட வலிய கைகளையுடைய ஆடவர்கள்,
கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்துமிக்க தீப்பொறி உண்டாக (பாறைகளை உடைத்து) கிணறு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு
கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில்கல்லி எடுத்து உண்டாக்கிய மிக்க உவரையுடைய கிணற்றில்
பார் உடை மருங்கின் ஊறல் மண்டியமண்ணுள்ள பக்கத்தே ஊறிய நீரைப் பருகும் பொருட்டு,
வன்_புலம் துமிய போகி கொங்கர்கட்டாந்தரை துகள்படுமாறு நடந்து, கொங்கரின்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்ஒலிக்கும் மணிகளைக் கட்டிய பசுத்திரளுள் நீருக்காகத் தலைநிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செம் நில குரூஉ துகள்சிவந்த பசு கிளப்பிய செம்மண்ணின் சிவந்த புழுதி
அகல் இரு விசும்பின் ஊன்றி தோன்றும்அகன்ற பெரிய வானத்தில் மிகுந்து தோன்றும்
நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்பஅகன்ற இடத்தையுடைய காட்டில் நம் தலைவி நம்மோடு துணையாக
வல்லாங்கு வருதும் என்னாது அல்குவரமுடிந்த அளவில் செல்வோம் என்று அங்கேயே நினைக்காமல், இப்போது பயணத்தைக் கைவிடநேரும்படி
வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறைவருந்துகிறாய், வாழ்க, என் நெஞ்சமே! பெரிய சிறகுகளையும்,
வளை வாய் பருந்தின் வான் கண் பேடைவளைவான அலகினையும் உடைய பருந்தின் வெண்மையான கண்களையுடைய பேடை,
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடிஅசைந்து நடக்கும்போதெல்லாம் ஒலிக்கும், அழகிய வாயையும் கடும் ஓசையினையுடைய உடுக்கையையும்
கொடு வில் எயினர் கோள் சுரம் படரவளைந்த வில்லையும் உடைய மறவர்கள் வழிப்போக்கரின் பொருளைக் கொள்ளையிடும் வழியில் நடந்து செல்ல
நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை(பேடை)(உணவு கிட்டப்போகிறது என்று)நெடிதாக ஒலியெழுப்பித் தன் துணையை அழைக்கும் செல்லத் தொலையாத இடமான
கல் பிறங்கு அத்தம் போகிபரல்கற்கள் பரந்திருக்கும் காட்டில் நடந்து
நில்லா பொருள்_பிணி பிரிந்த நீயேநிலையில்லாத பொருளைச் சம்பாதிக்க அவளை விட்டுப் பிரிந்துவந்த நீ.
  
#80 நெய்தல் மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார்#80 நெய்தல் மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார்
கொடும் தாள் முதலையொடு கோட்டு_மீன் வழங்கும்வளைந்த காலினையுடைய முதலையோடு சுறாமீன்களும் நடமாடும்
இரும் கழி இட்டு சுரம் நீந்தி இரவின்கரிய உப்பங்கழியில் குறுகிய பாதையில் நடந்து, இரவிலே
வந்தோய் மன்ற தண் கடல் சேர்ப்பவருகின்றாய், குளிர்ந்த கடற்கரையையுடைய தலைவனே!
நினக்கு எவன் அரியமோ யாமே எந்தைநாங்கள் என்ன உனக்குக் காண்பதற்கு அரிதாகவாபோய்விட்டோம், எம் தந்தை
புணர் திரை பரப்பு_அகம் துழைஇ தந்தசேர்ந்துவரும் அலைகளையுடைய கடற்பரப்புக்குள் சென்று தேடித் தந்த
பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்நிறைய மீன்களின் வெயிலில் காயும் வற்றல்களைத் தின்ன வரும் பறவைகளை விரட்டிக்கொண்டிருப்போம்
முண்டகம் கலித்த முது நீர் அடைகரைநீர்முள்ளிச்செடிகள் தழைத்த கடலோரக் கரையில் உள்ள
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்ஒளிவிடும் பலவான மலர்களையுடைய பிளவுபட்ட இலைகளையுடைய அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்பசிவந்த நிறமுள்ள மெல்லிய கொடிகளை உன்னுடைய தேர்ச்சக்கரங்கள் ஏறித் துண்டிக்க
இன மணி புரவி நெடும் தேர் கடைஇபல மணிகளைப் பூண்ட குதிரைகள் பூட்டிய நெடிய தேரினைச் செலுத்தி
மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்மின்னுகின்ற இலைகளால் பொலிவுற்று விளங்கும் பூங்கொத்துக்கள் கட்டவிழ்ந்து பொன்னிறமுள்ள
தண் நறும் பைம் தாது உறைக்கும்குளிர்ந்த‌ மணமுள்ள பூந்துகள்க‌ளை உதிர்க்கின்ற‌
புன்னை அம் கானல் பகல் வந்தீமேபுன்னை மரங்கள் நிறைந்த அழ‌கிய‌ க‌ட‌ற்க‌ரைச் சோலையிலே ப‌க‌ற்பொழுதிலேயே வ‌ந்த‌ருள்வாயாக‌!
  
  
  
  
  
#81 பாலை ஆலம்பேரி சாத்தனார்#81 பாலை ஆலம்பேரி சாத்தனார்
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்விடியற்காலத்தில் இரையைத் தேடி உலாவுவதை மேற்கொண்ட, தன் இரையைக் கொள்ளுதலில் வல்ல கரடி
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின்உயர்ந்த கிளைகளையுடைய இலுப்பை மரத்தின் இனிய பழங்களைத் தின்று சலித்துப்போனால்
புல் அளை புற்றின் பல் கிளை சிதலைபொலிவற்ற துளைகளைக் கொண்ட மண்புற்றின், கூட்டமான கறையான்கள்
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடுஒன்றுகூடி முயன்று செய்த நனைந்த வாயையுடைய நெடிய உச்சியினை
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும்இரும்புலையில் ஊதும் துருத்தியைப் போல் பெரிதாய் வளைக்குள் மூச்சுவிட்டுப் புற்றாஞ்சோற்றை உண்ணும் –
மண் பக வறந்த ஆங்கண் கண் பொரநிலம் dddடிக்கும்படியாக வறண்டுபோன பாலை நிலமான – அந்த இடத்தில், கண்கள் கூசும்படியாக
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினைஞாயிறு காய்வதால், கவிழ்ந்து கிடக்கும் பரட்டைத் தலையையுடைய வலிமையான கிளைகளைக் கொண்ட
நெறி அயல் மராஅம் ஏறி புலம்பு கொளபாதை ஓரத்து வெண்கடம்பு மரத்தில் ஏறியிருந்து, ஒற்றையாக, 
எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடைபாய்ந்து இரையைப் பற்றும் பருந்து வருந்தியிருக்கும் வெப்பம் மிக்க நீண்ட இடங்களான
வெம் முனை அரும் சுரம் நீந்தி சிறந்தகடும்சண்டைகள் நடக்கும் கடந்துசெல்லக் கடினமான வழியினைத் தாண்டி – சிறந்த
செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர்தலைமைப் பண்புள்ள  உமது உள்ளம் தூண்டுவதால் – வெகுண்டெழுந்த பகைவரின்
ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும்ஒளிர்கின்ற வேல்படையுள்ள போர்க்களத்தை, யானைப்படைகளும் அழியுமாறு வெல்லும்,
மா வண் கடலன் விளங்கில் அன்ன எம்மிகுந்த வள்ளல்தன்மை நிறைந்த கடலன் என்பவனின் விளங்கில் என்னும் ஊரினைப் போன்ற, எமது
மை எழில் உண்கண் கலுழகருமையான அழகிய மையுண்ட கண்கள் கலங்கி அழ
ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கேஐயனே – செல்வீர்களா, எம்மைப் பிரிந்து சென்று பொருள்தேடுவதற்காக.
  
#82 குறிஞ்சி கபிலர்#82 குறிஞ்சி கபிலர்
ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின்அசைந்தாடும் மூங்கிலில் வண்டுகள் துளைத்த மின்னிடும் துளைகளின் பக்கத்தே
கோடை அம் வளி குழல் இசை ஆககோடை எனும் அழகிய மேற்காற்றினால் எழும் ஒலி குழலின் இசையாகவும்,
பாடு இன் அருவி பனி நீர் இன் இசைஓசை இனிய அருவியின் குளிர்ந்த நீரின் இனிய இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆகமொத்தமாகச் சேர்ந்த முழவுகளின் செறிவான இசையாகவும்,
கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடுகூட்டமான மான்கள் அடித்தொண்டையில் எழுப்பும் கடுங் குரல் பெருவங்கியம் என்னும் கொம்பிசையாகவும்
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆகஇவற்றுடன், பூக்களைக் கொண்ட மலைச் சாரலின் வண்டுகள் எழுப்பும் ஓசை யாழிசையாகவும்,
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்துஇவ்வாறாக, இனிய பல்விதமாக ஒலிக்கும் இசையினைக் கேட்டு ஆரவாரம் செய்து
மந்தி நல் அவை மருள்வன நோக்ககுரங்குகளாகிய நல்ல அவையோர் வியப்புடன் காண,
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்மூங்கில்கள் வளர்ந்த மலைச்சரிவினை ஒட்டிய நிலப்பகுதியில் உலாவி ஆடும் மயில்கள்
நனவு புகு விறலியின் தோன்றும் நாடன்விழாக்களத்தில் புகுந்தாடும் விறலியைப் போலத் தோன்றும் நாட்டையுடையவன்
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்துஅழகிய வலிமையான வில்லினை ஒரு கையில் கொண்டு, ஆய்ந்த அம்பினை அடுத்த கையில் கொண்டு
செரு செய் யானை செல் நெறி வினாஅய்தன்னால் அம்பு எய்யப்பெற்ற யானை சென்ற வழியினை விசாரித்துக்கொண்டு
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறைமுதிர்ந்த கதிரினையுடைய தினைப்புனத்தின் நுழைவிடத்தின் ஒரு பக்கத்தில்
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்மலர் மாலை அணிந்த மார்பினையுடையவனாய் நின்றுகொண்டிருந்தவனைக் கண்டவர்கள்
பலர் தில் வாழி தோழி அவருள்பலரே, வாழ்க தோழியே! அவர்களுள்
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்திநிறைந்த இருள் செறிந்த இரவினில் படுக்கையில் கிடந்து
ஓர் யான் ஆகுவது எவன்-கொல்நான் ஒருத்திமட்டுமே இவ்வாறு இருப்பதற்குக்காரணம் என்ன – 
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனேநீர் ஒழுகும் கண்ணோடு, மெலிந்த தோளினையுடையவளாய் –
  
#83 பாலை கல்லாடனார்#83 பாலை கல்லாடனார்
வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீவலப்பக்கமாக சுழித்திருக்கும், வெண்கடம்பின், பாலைவெளியெல்லாம் மணக்கும் புதிய பூக்களைச்
சுரி ஆர் உளை தலை பொலிய சூடிசுருட்டை நிறைந்திருக்கும் தலையாட்டம் போன்று அசையும்படி தம் தலை பொலிவுறச் சூடி,
கறை அடி மட பிடி கானத்து அலறஉரல் போன்ற பாதங்களையுடைய இளம் பெண்யானை காட்டினில் அலறிக்கொண்டிருக்க,
களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்துஅதன் ஆண்கன்றினைப் பிரித்துக் கொணர்ந்த மகிழ்ச்சியையுடையவராய், செருக்கு மிகுந்து
கரும் கால் மராஅத்து கொழும் கொம்பு பிளந்துகரிய அடிமரத்தையுடைய வெண்கடம்பின் திரண்ட கிளையினைப் பிளந்து
பெரும் பொளி வெண் நார் அழுந்துபட பூட்டிபெரிதாக உரித்த வெண்மையான நாரால் காலில் வடு உண்டாக இறுக்கிக்கட்டி,
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்உயரமான கொடிகள் அசையும் கடைத்தெருக்களைக் கொண்ட பழமையான ஊரில்
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும்கள்ளினை விற்கும் நல்ல இல்லத்தின் வாசற்கதவண்டைக் கட்டிப்போடும்,
கல்லா இளையர் பெருமகன் புல்லிதம் வேட்டைத் தொழிலன்றிப் பிறவற்றைக் கல்லாத இளைஞர்கட்குத் தலைவனான புல்லி என்பவனின்
வியன் தலை நன் நாட்டு வேங்கடம் கழியினும்விரிந்த இடத்தையுடைய நல்ல நாட்டிலுள்ள வேங்கடமலையினைத் தாண்டிச்சென்றாலும்
சேயர் என்னாது அன்பு மிக கடைஇவெகுதூரம் சென்றுவிட்டார் என்றிராமல், அன்பினை மிகவும் செலுத்தி
எய்த வந்தனவால் தாமே நெய்தல்நம்மை அடைய வந்தன – நெய்தலின்
கூம்பு விடு நிகர் மலர் அன்னமுறுக்கவிழ்ந்த ஒளியுடைய மலரைப் போன்ற
ஏந்து எழில் மழை கண் எம் காதலி குணனேஉயர்ந்த அழகமைந்த குளிர்ந்த கண்களையுடைய நம் காதலியின் குணங்கள் –
  
#84 முல்லை மதுரை எழுத்தாளன்#84 முல்லை மதுரை எழுத்தாளன்
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில்மலைக்கு மேலே குலைந்து தோன்றிய அச்சந்தரும் வானவில்லினையுடைய
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கிமுரசம் போன்று முழங்குகின்ற மேகம், கடல்நீரை முகந்துகொண்டு
தாழ் பெயல் பெரு_நீர் வலன் ஏர்பு வளைஇஇறங்கிப் பெய்யும் மிக்க மழையுடன் வலப்பக்கமாக எழுந்து உலகத்தை வளைத்துக்கொண்டு
மாதிரம் புதைப்ப பொழிதலின் காண்வரதிசையெல்லாம் மறைந்துபோகப் பொழிதலால், கண்ணுக்கினியதாக
இரு நிலம் கவினிய ஏமுறு காலைபெரிய நிலமெல்லாம் அழகுபெற்ற இன்பமான வேளையில்,
நெருப்பின் அன்ன சிறு கண் பன்றிதீக்கங்கு போன்ற சிறிய கண்ணினைக் கொண்ட பன்றி
அயிர்_கண் படாஅர் துஞ்சு புறம் புதையகுறுமணலில் முளைத்திருக்கும் சிறிய புதரில் முதுகு மறையத் தூங்க,
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும்நறுமணம் மிக்க பூக்களைக்கொண்ட முல்லைக்கொடியின் புதிய மலர்கள் உதிரும்
புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின்முல்லைநிலத்தை ஒட்டியிருக்கும் அரிய முகப்பினையுடைய வழியிலுள்ள
சீறூரோளே ஒண்_நுதல் யாமேசிற்றூரில் இருக்கிறாள் ஒளிவிடும் நெற்றியைக் கொண்ட நம் தலைவி, நானோ
எரி புரை பன் மலர் பிறழ வாங்கிதீப்பிழம்பு போன்ற தாமரை முதலிய பல மலர்களைத் தலைகீழாக வைத்து
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடுகதிர் அறுப்போர் இறுக்கக்கட்டிய, ஆடுகின்ற முகப்பைக் கொண்ட பெரிய நெற்கதிர்க்கட்டுகளை
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும்கள்ளைக் குடித்த வேலையாட்கள் களங்கள்தோறும் எடுத்துச்செல்லும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசைந்தாடும் அரிய கோட்டைமதிலைப்
அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்துபகை மன்னர் அரிய திறையாகக் கொடுக்கவும் , அதனை ஏற்றுக்கொள்ளாமல், மிகுந்த சினத்துடன்
வினை வயின் பெயர்க்கும் தானைமேன்மேலும் போரில் நடத்திச்செல்லும் படையினைக்கொண்ட
புனை தார் வேந்தன் பாசறையேமேமாலையை அணிந்த மன்னனின் பாசறைக்குள் இருக்கின்றேன்.
  
#85 பாலை காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்#85 பாலை காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும்நல்ல நெற்றி பசந்துபோகவும், பெரிய தோள்கள் மெலிந்திடவும்
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்உண்ணாமல் இருப்பதால் உண்டான வருத்தத்தால் உயிர் போகும்படி மெலிவுற்று
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர்நாம் இந்த நிலைக்கு ஆளாகவும் இங்கு நம்மைவிட்டுப் பிரிந்துசென்ற நம் தலைவர்
அறவர் அல்லர் அவர் என பல புலந்துஅறத்தின்பாற்பட்டவர் அல்லர் அவர் என்று பலவாறு மனம்வெறுத்துத்
ஆழல் வாழி தோழி சாரல்துயரத்தில் ஆழ்ந்துவிடாதே வாழ்க, என் தோழியே! மலைச் சாரலில்
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடிஈன்று நாட்பட்ட மெல்லிய நடை வாய்ந்த இளம் பெண்யானைக்கும்
கன்று பசி களைஇய பைம் கண் யானைஅதன் கன்றுக்கும் பசியைத் தீர்க்கும்பொருட்டு, பசிய கண்களையுடைய ஆண்யானை
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும்மூங்கிலின் முற்றாத இளம் முளையைக் கொண்டுவந்து ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரைவெற்றி பொருந்திய வேலினையுடைய திரையன் என்பவனின் வேங்கடமென்னும் நீண்ட மலையில்
நன்_நாள் பூத்த நாகு இள வேங்கைநல்ல நாள் காலையில் பூத்த மிகவும் இளைய வேங்கைமரத்தின்
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞைமணமுள்ள பூக்களினூடே நுழைவதால் அவற்றின்bb துகள்படியப்பெற்ற புள்ளியையும் கோடுகளையும் உடைய மயில்
நனை பசும் குருந்தின் நாறு சினை இருந்துஅரும்பிய பசிய குருந்த மரத்தின் நறுமணம் கமழுகின்ற கிளையின் மேல் இருந்து
துணை பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்தனது பெடையை அழைத்து அகவுகின்ற, விரைந்து வரும் குளிர்ந்த கார்ப்பருவமே
வருதும் யாம் என தேற்றியயாம் திரும்ப வருவோம் என்று அவர் தெளிவாகக் கூறிச்சென்ற
பருவம் காண் அது பாயின்றால் மழையேபருவம், இங்கே பார், மேகமும் பரவி வருகின்றது. 
  
#86 மருதம் நல்லாவூர் கிழார்#86 மருதம் நல்லாவூர் கிழார்
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவைஉழுந்தப்பருப்பைச் சேர்த்துச் செய்த குழைவான களி உருண்டையோடு
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால்அறுசுவை உணவை உண்ணும் ஆரவாரம் இடைவிடாமல் நிற்க, வரிசையான கால்களுடன்
தண் பெரும் பந்தர் தரு மணல் ஞெமிரிகுளிர்ச்சியான பெரிய பந்தலின் கீழ் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய மணலைப் பரப்பி,
மனை விளக்கு உறுத்து மாலை தொடரிவீட்டிலிருக்கும் குத்துவிளக்கை நடுவில்வைத்து ஏற்றி, அதன்மேல் மாலையினைத் தொங்கவிட்டு,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைகும்மிருட்டு நீங்கிய அழகு பொருந்திய விடியற்காலையில்
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்தீய கோள்கள் தன்னைவிட்டு நீங்கப்பெற்ற (இராகுகாலம் நீங்கிய) பிறைத் திங்களானது
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து எனகுற்றமற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் நாள்மீனை வந்து சேர,
உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்தலையில் (நிறை)குடத்தை உடையவரும், இடுப்பில் புதிய அகன்ற வாயுள்ள மண்பாண்டத்தை உடையவருமான
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்பொதுக்காரியங்களை எடுத்துச்செய்யும் ஆரவாரம் மிக்க முதிய மங்கல மகளிர்
முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தரமுன்னேயும் பின்னேயும் கொடுப்பனவற்றை முறையே கொணர்ந்து கொடுக்கக் கொடுக்க வாங்கி வைக்க,
புதல்வன் பயந்த திதலை அம் வயிற்றுமக்களைப்பெற்ற, தேமல் படர்ந்த அழகிய வயிற்றையும்,
வால் இழை மகளிர் நால்வர் கூடிசிறந்த அணிகலன்களையும் உடைய மங்கல மகளிர் ஒரு நால்வர் ஒன்றாகக் கூடி நின்று
கற்பினின் வழாஅ நன் பல உதவி”கற்பொழுக்கத்திலிருந்து சிறிதும் வழுவாமல் நல்ல பல பேறுகளையும் தந்து
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக எனஉன்னை மனைவியாகப்பெற்ற உன் கணவனை நீ பெரிதும் விரும்புகின்றவளாய் இருப்பாய்” என்று வாழ்த்தி
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரிநீருடன் சேர்த்துத் தலையில் சொரிந்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள்
பல் இரும் கதுப்பின் நெல்லொடு தயங்கநிறைந்த கருமையான கூந்தலில் நெல்லுடன் சிந்திக்கிடக்க,
வதுவை நன் மணம் கழிந்த பின்றைஇவ்வாறு மணமகளுக்குரிய நல்ல திருமணச் சடங்குகள் செய்து முடிந்த பின்னர்,
கல்லென் சும்மையர் ஞெரேரென புகுதந்துபெருத்த ஓசையுடன் விரைவாக அந்தக் கூட்டத்துக்குள் புகுந்து,
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர“பெரிய மனையாட்டி ஆவாய்” என்று தாய்தந்தையராகிய உறவினர் கைப்பிடித்துக்கொடுக்க,
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல்ஓர் அறையில் ஒன்றாய் இருப்பதற்கான இரவில்,
கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்துவளைவாக முதுகை வளைத்து, கோடிப் புடவைக்குள்
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇதன்னை முடக்கிக்கொண்டு தரையில் படுத்திருந்தவளின் முதுகினைத் தழுவி
முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்பஅவளை அணைத்துக்கொள்ளும் ஆசையுடன் மூடியிருந்த முகத்தைத் திறந்து பார்க்க,
அஞ்சினள் உயிர்த்த_காலை யாழ நின்அஞ்சினவளாய் மூச்ச்சினை இழுத்துப்பிடித்து நிறுத்திப் பின் மெதுவாக விட்டபோது, “உன் மனம்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை எனஎன்ன நினைத்துக்கொண்டிருந்தது என்று மறைக்காமல் என்னிடம் சொல்” என்று
இன் நகை இருக்கை பின் யான் வினவலின்இனிய மகிழ்ச்சியுடன் கூடிய இருக்கையிலே பின்னர் நான் கேட்கவும்,
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வரசிவந்த அணிகலனாகிய ஒளிவிடும் குழைகள் தனது வளமான செவிகளில் அசைந்தாடும்படி
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்துஉள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை உடையவளாய் நாணம்மிக்கு முகங்கவிழ்ந்து
ஒய்யென இறைஞ்சியோளே மாவின்விரைந்து தலைவணங்கினாள், மானின்
மடம் கொள் மதைஇய நோக்கின்மடப்பம் கொண்ட மதர்த்த பார்வையினையும்
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளேஇழுத்துச்சீவிய நெய்பூசிய கூந்தலையும் உடைய மாமை நிறத்தினையுடையவள்
  
#87 பாலை மதுரை பேராலவாயார்#87 பாலை மதுரை பேராலவாயார்
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்இனிமையான தயிரைக் கடைந்த திரட்சியான தண்டினையுடைய மத்து,
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும்கன்று தன் நாவினால் நக்கிச் சுவைக்கும்படி முற்றத்தில் தொங்கும்,
படலை பந்தர் புல் வேய் குரம்பைமரத்து நிழலே பந்தலாக உள்ள, புல்லால் வேயப்பட்ட குடில்களையுடைய
நல்கூர் சீறூர் எல்லி தங்கிவறுமைப்பட்ட சிற்றூரில் இரவிலே தங்கி,
குடுமி நெற்றி நெடு மர சேவல்கொண்டைப்பூவையுடைய நெற்றியையுடைய, உயரமான மரத்தில் அடைந்திருக்கும் சேவலின்
தலை குரல் விடியல் போகி முனாஅதுமுதற்கூவலில் எழுந்து விடியற்காலையில் புறப்பட்டுப்போய், முன்னே கிடக்கிற
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்கொடிய பார்வையுள்ள மறவரின் கற்கள் பொருந்திய காட்டரண்களில்
எழுந்த தண்ணுமை இடம் கள் பாணிஒலித்த தண்ணுமைப்பறையின் அகன்ற கண்ணிலிருந்து எழுகின்ற ஓசை
அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணெனஅரிய காட்டுவழியில செல்பவரின் நெஞ்சம் திடுக்கிட,
குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம்குன்றினை நோக்கிச் செல்லும் பலவாறான பாதைகளில் ஒலிக்கும் காட்டுவழியில்
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால்மிகவும் நீண்ட நேரம் வருந்தி வந்தாய், அதனால்
உவ இனி வாழிய நெஞ்சே மை அறஇனிமேல் மகிழ்ச்சிகொள் நெஞ்சே! வாழ்வாயாக! இருள் நீங்கும்படியாக
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்விடிவிளக்கு எரிகின்ற, வானளாவிய பெரிய மாளிகையில்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டிஅழகுத்தேமல் படர்ந்த அழகிய முலையினது அழகைப் பாராட்டி,
தாழ் இரும் கூந்தல் நம் காதலிதாழ்ந்த கருங்கூந்தலையுடைய நம் காதலியின்
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தேநீண்ட மூங்கில் போன்ற அழகினையுடைய தோள்களையும் அணைத்து – (மகிழ்ச்சிகொள் நெஞ்சே!)
  
#88 குறிஞ்சி ஈழத்து பூதன் தேவனார்#88 குறிஞ்சி ஈழத்து பூதன் தேவனார்
முதை சுவல் கலித்த மூரி செந்தினைபழங்கொல்லையாகிய மேட்டுநிலத்தில் செழித்து வளர்ந்த பெரிய செந்தினையின்
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர்உயரமாக வளைந்து நிற்கும் பெரிய கதிர்களைத் தின்பதற்காக, நல்ல திசையிலே
பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும்பிளந்த வாயையுடைய பல்லி சொல்லும் நிமித்தத்தை ஆராய்ந்து வருகிற இயல்பையுடைய
புருவை பன்றி வரு_திறம் நோக்கிஇளமை பொருந்திய பன்றி வருவதை எதிர்பார்த்து
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇயவலிமையான கையையுடைய குறவனாகிய தினைப்புனம் காப்போன் தனது பரண் மீது கொளுத்திவைத்த
நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம்நீண்ட சுடரின் வெளிச்சத்தைப் பார்த்து வந்து நமது
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்நடுக்கம் தரும் துயரத்தைக் களைந்துபோட்ட நல்லவனாகிய நம் தலைவன்
சென்றனன்-கொல்லோ தானே குன்றத்துநடந்துபோனான் போலும் தானாக! குன்றிலுள்ள
இரும் புலி தொலைத்த பெரும் கை யானைபெரிய புலியைக் கொன்ற பெரிய கையினையுடைய யானையின்
கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம்கன்னங்களில் பெருகி வழியும் அழகிய மதநீரில்
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்துகரிய சிறகினைக் கொண்ட வண்டுக்கூட்டம் ஆரவார ஒலியெழுப்ப,அதனை யாழிசை என்று எண்ணி
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்பெரிய மலையின் பிளந்துள்ள குகையினில் இருக்கும் அசுணம் என்னும் விலங்குகள் கூர்ந்துகேட்கும்
காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றிமூங்கில் நிறைந்த குறுங்காட்டில் பாம்புக‌ள் இற‌ந்தொழியும்ப‌டி நெருங்கி
கொடு விரல் உளியம் கெண்டும்வளைந்த‌ விரல்களையுடைய கரடி தோண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியேசுவ‌டுகள் ப‌திந்துள்ள‌ புற்றுக்க‌ளையுடைய‌, செல்லுதற்கு அரிய‌ வ‌ழியினில் – (நடந்துபோனான் போலும் தானாக!)
  
#89 பாலை மதுரைக்காஞ்சி புலவர்#89 பாலை மதுரைக்காஞ்சி புலவர்
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்சுட்டுப்பொசுக்கும் கதிர்களையுடைய ஞாயிறு உச்சியில் நின்று எரித்தலால்
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலைமிக்க மழைநீர் வற்றிப்போன பேய்த்தேர் என்னும் கானல்நீரையுடைய அகன்ற பாலைப் பரப்பினில்
உருத்து எழு குரல குடிஞை சேவல்சினத்தோடு எழுகின்ற குரலினையுடைய பேராந்தைச் சேவல்
புல் சாய் விடர்_அகம் புலம்ப வரையபுற்களும் இல்லாமற்போன வெடிப்பிடங்கள் தனித்திருக்க (அவற்றைவிட்டு)ப் பறந்துபோய், மலையிலுள்ள
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்கற்கள் உருண்டு விழும்போது எழும் ஓசை போல மாறி மாறிக் குழறுகின்ற அந்த இடத்தில்,
சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்துசிள் வண்டு ஒலிக்கும், சிறிய இலைகளைக் கொண்ட கருவேல மரத்தின்
ஊழ்_உறு விளை நெற்று உதிர காழியர்காய்ந்து முற்றிய நெற்றுகள் உதிர்ந்துவிழ, துணிவெளுப்போரின் 
கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழியதொழிலுக்குதவும் பரந்த வெளியிலுள்ள சூடான உவர்மண் எடுத்தது போக மீந்துள்ள
களரி பரந்த கல் நெடு மருங்கின்களர்மண் பரந்துள்ள மலைப்பக்கத்தே அமைந்த நீண்ட இடத்தில்,
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர்கொழுப்புள்ள ஊனைத் தின்ற விசைகொண்ட வில்லினரான மறவர்கள்
மை படு திண் தோள் மலிர வாட்டிகருமை பொருந்திய திண்ணிய தோள்கள் பூரிக்க, (துன்புறுத்தி)
பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇயசுமைமிக்க கழுதைகளின் நீண்ட வரிசையைத் தொடர்ந்து வருகின்ற
திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்தசெப்பமுடைய வாளினைக்கொண்ட வீரர்களான வணிகரை(துன்புறுத்தி) அவரின் அரிய தலையை வெட்டிய
படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்துமிக்க புலவு நாறும் சண்டைக்களத்தில், உடுக்கையினைத் தாழக் கொட்டி
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்அரிய கலன்களைத் திறையாகப் பெற்றுக்குவித்த பெரும் போர்விருப்பினைக் கொண்ட வெற்றியாளர்கள்
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்விற்கள் பொருந்திய அரணில் அவரவர் பங்கைப் பிரித்துக்கொள்ளும்
கொல்லை இரும் புனம் நெடிய என்னாதுகொல்லையினைக் கொண்ட பெரிய காடுகள் நீண்டு செல்வன என்று எண்ணாமல்
மெல்லென் சேவடி மெலிய ஏகமென்மையான சிவந்த பாதங்கள் வருந்தும்படி நடந்துசெல்லும்
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்துதிறம் கொண்டவளோ? அவள்தான், தேனை ஊற்றிக்
அளவு_உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்கலந்த இனிய பாலினைக் குடிக்கும்படி வருந்திவேண்டவும் உண்ணமறுத்து
இடு மணல் பந்தருள் இயலும்மணல் பரப்பிய பந்தலுக்குள் ஓடியாடித்திரியும்
நெடு மென் பணை தோள் மாஅயோளேநீண்ட மெல்லிய மூங்கில்போன்ற தோளினையுடைய மாமை நிறம்கொண்ட மகள்.
  
#90 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்#90 நெய்தல் மதுரை மருதன் இளநாகனார்
மூத்தோர் அன்ன வெண் தலை புணரிவயதானவர்களின் நரைத்த தலையைப் போல வெள்ளைத் தலையையுடைய கடலானது
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும்இளம்பெண்கள் விளையாட்டாய்ச் செய்யும் மணல்வீட்டை அழிக்கின்ற,
தளை அவிழ் தாழை கானல் அம் பெரும் துறைமுறுக்குவிட்டு மலர்கின்ற தாழையையுடைய கடற்கரைச் சோலையையுடைய பெரிய கடல்துறையில்,
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழஒருசிலரின் செவிகளில் மட்டுமே பட்டிருந்த உங்கள் சந்திப்பு, பின்னர் எல்லாரும் அறிய அலராக எங்கும் பரவ
இல் வயின் செறித்தமை அறியாய் பல் நாள்வீட்டில் அவளைப் பூட்டிவைத்துவிட்டதை அறியாதவனாய், பல நாள்கள்
வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின்வளர்கின்ற இளம் முலைகளையுடைவளை வருத்துகின்ற அழகிய பெருமைமிக்க மார்பினையுடைய,
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்_வயின்கலக்கம்கொண்ட உள்ளத்தோடு வருந்துகின்ற உன்னிடம்,
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோஇவ்வாறு சந்திப்பதை நிறுத்திக்கொள் என்று நான் எப்படிச் சொல்வேன்?
அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅதுஅரிய துடிப்பான தெய்வங்கள் இருக்கும் செல்லூரின் கிழக்கிலிருக்கும்,
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர்பெரிய கடல்போல முழக்கத்தையுடையதாகி, புதிய வருவாயினை உடைய,
இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர்இரும்பாற் செய்த ஆயுதங்கள் தம்மிடம் உண்டாக்கிய தழும்புகளை உடைய முகத்தை உடையவராகிய
கரும் கண் கோசர் நியமம் ஆயினும்அஞ்சாமையையுடைய கோசருடைய நியமம் என்னும் ஊரினைக் கொடுத்தாலும்
உறும் என கொள்குநர் அல்லர்சரியாகும் என்று கொள்ளமாட்டார் எம் வீட்டார்
நறு நுதல் அரிவை பாசிழை விலையேமணக்கும் நெற்றியினையுடைய பெண்ணான இவளின் அணிகலன்களுக்கு விலையாக.
  
  
  
  
  
#91 பாலை மாமூலனார்#91 பாலை மாமூலனார்
விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறுஒளி சிந்தும் பகலினைக் கொடுத்து உதவிய பல கதிர்களைக்கொண்ட ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின்வளம் பொருந்திய பெரிய மலையின் பயன்கள் எல்லாம் கெட்டுப்போகும்படி சுட்டுப்பொசுக்குவதால்
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்அருவிகள் இல்லையாகிப்போன பெரிய மலைச்சாரலில்
சூர் சுனை துழைஇ நீர் பயம் காணாதுதீண்டி வருத்தும் தெய்வங்கள் உறைகின்ற சுனையினைக் கையினால் துழாவியும் நீராகிய பயனைக் காணாமல்
பாசி தின்ற பைம் கண் யானைஅங்கு உலர்ந்து கிடக்கும் பாசியைத் தின்ற பசிய கண்ணையுடைய ஆண்யானையானது,
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்கஇயக்கம் ஓய்ந்து போகும்படியான பசியினையுடைய தனது பெண்யானையோடு ஒரு பக்கத்தே ஒடுங்கிக் கிடப்ப 
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலைமூங்கில்களின் கணுக்கள் உடையும்படி காய்கின்ற வெயில் தகிக்கின்ற அகன்ற பாலைப் பரப்பிலே
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்கிட்டுதற்கரிய பொருள்மீது கொண்ட ஆசையால் நம் தலைவர் நம்மைப் பிரிந்துசென்றாரெனினும்
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ்நம் மீது மிகவும் அதிகமான அன்பினையுடையவர், தோழியே! கரிய நிறமுடைய
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கைஆண்மான்கள் படுத்துக்கிடக்கும் பரற்கற்களையுடைய உயரமான கற்குவியலில்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்தகொடுமை நிறைந்த மழவர்கள் களவு செய்யும் தொழிலுக்காகக் கூடிய
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்நீண்ட அடிமரத்தைக் கொண்ட ஆசினிப்பலாவையுடைய ஒடுங்காடு என்னும் ஊருக்கு அப்பால்
விசி பிணி முழவின் குட்டுவன் காப்பஇழுத்துக் கட்டிய முழவினையுடைய குட்டுவன் என்பவன் பாதுகாத்தலால்
பசி என அறியா பணை பயில் இருக்கைபசி என்பதை அறியாத மருதவளம் மிக்க ஊர்களையுடைய,
தட மருப்பு எருமை தாமரை முனையின்வளைந்த கொம்பினையுடைய எருமை தான் மேய்ந்த தாமரையை வெறுக்குமானால்
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்முடத்தன்மை மிகுந்த பலாவினது கொழுவிய நிழலிலே தங்கும்
குடநாடு பெறினும் தவிரலர்குடநாட்டினையே பெறுவதாயிருந்தாலும் அங்குத் தங்கமாட்டார்,
மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தேஇளமை வாய்ந்த மான் போன்ற பார்வையையுடையவளே! உன்னுடைய  மாட்சிமைப்பட்ட அழகினை மறந்து
  
#92 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நற்றாமனார்#92 குறிஞ்சி மதுரை பாலாசிரியர் நற்றாமனார்
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னிஉயர்ந்த மலையின் சரிவை ஒட்டிய சமவெளியிடத்தில் பார்ப்போர் கண்கள் குருடாகும்படி மின்னி
படு மழை பொழிந்த பானாள் கங்குல்மிகுந்த மழையைப் பொழிந்த பாதி இரவாகிய இருள்நேரத்தில்
குஞ்சரம் நடுங்க தாக்கி கொடு வரியானையை அது நடுங்கும்படி தாக்கி, வளைந்த கோடுகளையும்
செம் கண் இரும் புலி குழுமும் சாரல்சிவந்த கண்களையும் உடைய பெரிய புலி முழங்கும் மலைச்சாரலுக்கு
வாரல் வாழியர் ஐய நேர் இறைவரவேண்டாம், வாழ்க நீர், ஐயனே! நேர்த்தியான முன்கையினையும்
நெடு மென் பணை தோள் இவளும் யானும்நீண்ட மெல்லிய மூங்கில் போன்ற தோளினையும் உடைய இவளும் நானும்
காவல் கண்ணினம் தினையே நாளைதினைப்புனத்தைக் காவல்காக்கக் கருதியுள்ளோம், நாளைப் பகலில்
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்மந்திகளும் ஏறி அறிந்திராத மரங்கள் செறிந்த (இருளடர்ந்த) காட்டில் 
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண்ஒளிவிடும் செங்காந்தள் மலர்ந்திருக்கிற அந்த இடத்தில்
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறைகுளிர்ச்சியாய் நிறைந்து அருவிகள் விழும் தாழ்வான சுனையின் ஒரு பக்கத்தில்
உருமு சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்இடி சினந்து முழங்குதலால் வலி அழிந்த பாம்பு உமிழ்ந்த
திரு மணி விளக்கின் பெறுகுவைசிறந்த மணியாகிய விளக்கொளியின் வெளிச்சத்தில் பெற்றிடுவாய்
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலேஇவளின் இருண்ட மெல்லிய கூந்தலே படுக்கையாகக்கொண்ட இன்பமான தூக்கத்தை.
  
#93 பாலை கணக்காயனார் மகனார் நக்கீரனார்#93 பாலை கணக்காயனார் மகனார் நக்கீரனார்
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்நம் உறவினர்களைத் துன்பம் போக்கித் தாங்கவும் மேலும் சுற்றத்தார்கள் நன்கு உண்ணவும்
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்சுற்றம் அல்லாதவர் சுற்றத்தார் போல நம்மொடு பொருந்தி நடக்கவும், 
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்துபொருளீட்டும் முயற்சிக்கு ஏற்றதான ஊக்கம் கொண்டு, ஆசை மிகுந்து,
ஆரம் கண்ணி அடு போர் சோழர்ஆத்திமாலை சூடிய பகைவரைக் கொல்லும் போர் வன்மை மிக்க சோழருடைய
அறம் கெழு நல் அவை உறந்தை அன்னஅறம் பொருந்திய நல்ல அரசவையினையுடைய உறையூரைப் போன்ற
பெறல் அரு நன் கலம் எய்தி நாடும்பெறுதற்கரிய நல்ல அணிகலன்களை எய்தி, யாவரும் விரும்பும்
செயல் அரும் செய்_வினை முற்றினம் ஆயின்செய்வதற்கரிய பொருளீட்டும் வினையை நாம் முடித்திருக்கிறோம், எனவே
அரண் பல கடந்த முரண் கொள் தானைபகை அரண்கள் பலவற்றையும் வென்ற வலிமையையுடைய படைகளையுடைய
வாடா வேம்பின் வழுதி கூடல்வாடாத வேப்ப மாலையைத் தரித்த பாண்டியனின் மதுரையின்
நாள்_அங்காடி நாறும் நறு நுதல்காலைக் கடைவீதியைப் போல் மணக்கும் நறிய நெற்றியினையும்
நீள் இரும் கூந்தல் மாஅயோளொடுநீண்ட கரிய கூந்தலையும் உடைய மாநிறத்தவளான நம் தலைவியை – 
வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர்மலையைக் குடைந்து செய்ததைப் போன்ற வானளாவிய நீண்ட மாளிகையில்
நுரை முகந்து அன்ன மென் பூ சேக்கைநுரையை முகந்து வைத்ததைப் போன்ற மென்மையான பூக்களாலான படுக்கையையுடைய,
நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்துஉயர்ந்து நிற்கும் கட்டிலில், உயரமான குத்துவிளக்கின் வெளிச்சத்தில்
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்பநன்மை பொருந்திய நம் மார்பினில் தலைவியின் மார்பகத்து பூண்கள் அழுந்தித் தடம்பொறிக்க –
முயங்குகம் சென்மோ நெஞ்சே வரி நுதல்தழுவிக்கொள்ளச் செல்வோமா, நெஞ்சே! வரி பொருந்திய நெற்றியினையும்
வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்துவேட்கை மிக, வடிந்து வாய்க்குள் புகும் மதநீரையும்,
மீளி மொய்ம்பொடு நிலன் எறியா குறுகிகூற்றுவனைப் போன்ற வலிமையோடு, நிலத்தின் மேல் சுருட்டி எறிந்து, நெருங்கிவந்து
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கைஆட்களைப் பிடித்துக்கொள்ளுதலில் தப்பாத அச்சம்தரும் நீண்ட கையினையும் உடைய
கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதைகடுமையான களிற்றியானைகளையும், நெடிய தேர்களையும் உடைய சேரனின்
திரு மா வியல் நகர் கருவூர் முன்துறைசெல்வம் மிக்க சிறந்த அகன்ற நகரனான கருவூரின் நீர்த்துறையின்
தெண் நீர் உயர் கரை குவைஇயதெளிந்த நீர் உயர்ந்த கரையின்கண் குவித்துள்ள
தண் ஆன்பொருநை மணலினும் பலவேகுளிர்ந்த ஆன்பொருநை ஆற்றின் மணலைக்காட்டிலும் பலமுறை -(தழுவிக்கொள்ளச் செல்வோமா, நெஞ்சே!)
  
#94 முல்லை நன்பலூர் சிறு மேதாவியார்#94 முல்லை நன்பலூர் சிறு மேதாவியார்
தேம் படு சிமய பாங்கர் பம்பியதேன் அடைகள் தொங்குகின்ற உச்சிமலையின் பக்கத்தில் அடந்து வளர்ந்த
குவை இலை முசுண்டை வெண் பூ குழையகுவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெண்மையான பூக்கள், செழிப்புடன்
வான் என பூத்த பானாள் கங்குல்வானத்தில் மீன்கள் பூத்ததைப் போலப் பூத்துக்கிடக்கும் நள்ளிரவாகிய இருளில்
மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன்ஆட்டுக்குட்டிகளை ஒன்றுசேர்த்த (மழைக்கு )ஓலைப்பாய் மறைப்பை முதுகுப்பக்கம் கொண்ட இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇகுளிர்ச்சியான, மணங்கமழும் முல்லைப்பூவைத் தோன்றிப்பூவுடன் கலந்து
வண்டு பட தொடுத்த நீர் வார் கண்ணியன்வண்டுகள் மொய்க்கும்படி தொடுத்த நீர் ஒழுகும் தலைமாலையை அணிந்தவனாய்
ஐது படு கொள்ளி அங்கை காயமெல்லிதாக எரியும் கொள்ளி உள்ளங்கையைப் பொசுக்க (மழையில் நனையாதபடி உள்ளங்கையால் மறைத்தலால்)
குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளிகுள்ளநரியை ஓட்டுவதற்கு மிக்க இருளினூடே செய்கின்ற நீண்ட ஒலியானது,
சிறு கண் பன்றி பெரு நிரை கடியசிறிய கண்களையுடைய பன்றிகளின் பெரிய கூட்டத்தை விரட்டுவதற்கு
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்முதிர்ந்த தினைப் புனத்துக் காவலாளிகள் பன்றிகள் வரும் காலத்தை எண்ணியிருந்து ஊதுகின்ற
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்கருமையான கொம்பின் ஓசையுடன் சேர்ந்து வந்து ஒலிக்கின்ற
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்துபுன்செய்க் காடுகள் உள்ள பகுதியில் இருக்கிறது, அன்பு கலந்த
ஆர்வம் சிறந்த சாயல்விருப்பம் மிக்க மென்மைத்தன்மையையும்
இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரேகரிய பலவாகிய கூந்தலையும் திருத்தமான அணிகலன்களையும் உடைய தலைவியின் ஊர்
  
#95 பாலை ஒரோடோகத்துகந்தரத்தனார்#95 பாலை ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
பைபய பசந்தன்று நுதலும் சாஅய்கொஞ்சம் கொஞ்சமாக என் நெற்றியும் பசந்துகொண்டுவருகிறது; மெலிந்து
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும்தேய்ந்துபோகிறது என்னுடைய மாந்தளிரைப் போன்ற உடம்பும்; 
பலரும் அறிய திகழ்தரும் அவலமும்ஊரிலுள்ளோர் பலரும் அறியும்படி விளங்குகின்ற எனது இந்த அவலமும்
உயிர் கொடு கழியின் அல்லதை நினையின்என்னுடைய உயிரைக் கொண்டு போவதில்லாமல், நினைத்துப்பார்க்கும்போது
எவனோ வாழி தோழி பொரி கால்வேறு என்ன செய்யும்? வாழ்க தோழியே! பொரிந்துபோன அடிமரத்தையும்,
பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்றகொப்புளம் போன்ற குமிழிகளையுடைய நடுமரத்தையும் கொண்ட இலுப்பை மரத்தின் குவிந்த குலையிலிருந்து கழன்ற
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீஆலங்கட்டியைப் போன்ற உள்ளே துளையுள்ள திரளான பூக்களை
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்கபாதையில் செல்கின்ற வழிப்போக்கர் நீண்ட வழியில் தடைப்பட்டுத் தங்கும்படி,
ஈனல் எண்கின் இரும் கிளை கவரும்குட்டிகளை ஈன்ற கரடிகளின் பெரிய கூட்டம் கவருகின்ற
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்கொடிய வழிகள் பலவற்றைக் கடந்துசென்ற நம் தலைவருக்காக நாம் மனம் இரங்குதல் இயல்பு என்று கருதாமல்
கௌவை மேவலர் ஆகி இ ஊர்பழி தூற்றுதலையே விரும்புவாராய், இந்த ஊரின்
நிரைய பெண்டிர் இன்னா கூறுவபாழாய்ப்போன பெண்கள் இன்னாத சொற்களைக் கூறுவது
புரைய அல்ல என் மகட்கு என பரைஇநல்லதல்ல என் மகளுக்கு என்று கடவுளை வேண்டித்தொழுது
நம் உணர்ந்து ஆறிய கொள்கைநமது நிலையையும் உணர்ந்துகொண்டு, யாதும் சொல்லாமல் அடங்கிய கோட்பாட்டினையுடைய
அன்னை முன்னர் யாம் என் இதன் படலேநம் அன்னைக்கு முன்னால் நாம் இந்தக் காதல்வாழ்க்கையில் ஈடுபடல் எவ்வாறு இயலும்?
  
#96 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ#96 மருதம் மருதம் பாடிய இளங்கடுங்கோ
நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்துகள்ளுண்ட மொந்தை என்ற மண்கலம் கழுவப்பட, அந்த நீரை உண்ட இறாமீன் செருக்குற்று
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்பூட்டிய நாண் அறுந்துபோன வில் தெறிப்பது போல் நெல்கூடுகளின் மீது துள்ளி விழுகின்ற
பழன பொய்கை அடைகரை பிரம்பின்வயலோரப் பொய்கையின் அடைகரையிலுள்ள பிரம்பினது
அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடிஅரத்தின் வாய் போன்ற அழகிய முட்களையுடைய நீண்ட கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கிஅருவியாய் வந்து விழும் நீரின்மேல் படர்ந்த ஆம்பலின் அகன்ற இலையைச் சுற்றிக்கொள்ள
அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலைஅசைந்து வரும் வாடைக்காற்று அதனை விட்டுவிட்டுத் தூக்குவதால், அந்த இலை கொல்லனின் ஊதுலையில்
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும்விசைத்து இழுத்துவிடும் தோலாலான துருத்தியைப் போன்று புடைத்துச் சுருங்கும்
கழனி அம் படப்பை காஞ்சி ஊரவயல்களையும் அழகிய தோட்டங்களையும் உடைய, காஞ்சிமரங்கள் மிக்க ஊரையுடைய தலைவனே!
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்துஒளிரும் வளையல் அணிந்த பரத்தை மகளிருள்ளே நீ பெரிதும் விரும்பி
கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவேமணந்து கொண்டாய் ஓர் இளையவளை என்கின்றனர், இந்தப் பேச்சு
செம் பொன் சிலம்பின் செறிந்த குறங்கின்செம்பொன்னாலான சிலம்பினையும், செறிவான தொடையினையும்
அம் கலுழ் மாமை அஃதை தந்தைஅழகு ஒழுகும் மாமை நிறத்தினையும் உடைய அஃதை என்பவளின் தந்தையாகிய
அண்ணல் யானை அடு போர் சோழர்பெருமை தங்கிய யானையையும், வெல்லும் போரினையும் உடைய சோழர்
வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலைவெண்ணெல் விளையும் இடங்களையுடைய பருவூர் என்ற ஊரின் போர்க்களத்தில்
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழியசேர, பாண்டிய மன்னராகிய இரண்டு பெரும் வேந்தர்களும் போர்செய்து களத்தில் மடிய,
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றைஒளிர்கின்ற வாளினால் செய்த நல்ல போரினை வென்ற அந்த நாளில்
களிறு கவர் கம்பலை போலஅம்மன்னருடைய களிற்றியானைகளைக் கைப்பற்றியபொழுது எழுந்த ஆரவாரம் போல
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டேஇவ்வூரில் பலர் வாயிலும்விழுந்து எங்கும் அலர் எழுகின்றது.
  
#97 பாலை மாமூலனார்#97 பாலை மாமூலனார்
கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறி கலைகள்ளிக்காட்டிலேயுள்ள, புள்ளிகளான பொறிகளையுடைய கலைமானை
வறன்_உறல் அம் கோடு உதிர வலம் கடந்துஅதன் வறண்டிருக்கும் அழகிய கொம்பு உதிர்ந்துபோகுமாறு, அதன் ஓட்டத்தை வென்று, (கொன்று தின்ற)
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடைபுலால் நாறும் புலி கைவிட்டுப்போன மூட்டுகள் கழன்ற கடும் முடைநாற்றமுள்ள தசை கிடக்குமிடத்தில்
இரவு குறும்பு அலற நூறி நிரை பகுத்துஇரவில் அரணிலுள்ளோர் அலறும்படி அவர்களைக் கொன்று, தாம் கைப்பற்றிய ஆநிரைகளைப் பகிர்ந்துகொண்டு
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும்பெரிய பாறைகளின் இடுக்கில் தசையினை அறுத்துத் தின்னும்
கொலை வில் ஆடவர் போல பல உடன்கொலைசெய்யும் வில்லினையுடைய ஆடவரைப் போல, பலவும் ஒன்றுசேர்ந்து
பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்பெரிய தலையையுடைய கழுகுகளுடன் பருந்துகளும் வந்து சூழ்ந்துகொள்ளும்
அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்கடத்தற்கரிய காட்டுவழியைக் கடந்துசென்ற கொடுமையாளரான நம்தலைவருக்காக, நாள்தோறும்
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்தபெரிய மூங்கில் புதரினூடே ஆராய்ந்து பார்த்து அறுத்தெடுத்துக் கொண்ட
நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடுநுணுகிய கணுக்களையுடைய சிறிய கோலைப் பிடித்த வளைந்து இறங்கும் கையையுடைய விறலியரோடு
அகவுநர் புரந்த அன்பின் கழல் தொடிபாணர்களைப் பாதுகாக்கும் அன்பினையும், கழலும் தொடியினையும்
நறவு_மகிழ் இருக்கை நன்னன் வேண்மான்கள்ளுண்டு மகிழும் இருக்கையினையும்  உடைய நன்னன் வேண்மானது
வயலை வேலி வியலூர் அன்ன நின்பசலைக்கொடி படர்ந்த வேலியினையுடைய வியலூர் என்னும் ஊரினைப் போன்ற உன்னுடைய
அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்துபரந்த முலையையுடைய மார்பகம் தனித்து வாட, பலவாறாக நினைத்துக்கொண்டு
ஆழல் என்றி தோழி யாழ என்துன்பத்திலாழ்ந்திட வேண்டாம் என்று சொல்கிறாய், தோழியே! என்னுடைய
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்துகண்ணின் நீரை நிறுத்துதல் அவ்வளவு எளியதோ? குரவமரங்கள் பூத்து,
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்பனிக்காலம் நீங்கிய அரிய பக்குவத்தையுடைய இளவேனில் காலத்தில்
அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரைஅறல் விளங்கும் நீண்ட மணலையுடைய அகன்ற ஆற்றின் கரையிலேயுள்ள
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கிதுறையை அழகுசெய்யும் மருதமரங்களோடு மாறுபாடு தோன்ற உயர்ந்து
கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்துநீண்டு தொங்குகின்ற தளிரால் அழகு செய்யப்பெற்ற பெரிய கிளைகளையுடைய மாமரங்களினது
இணர் ததை புது பூ நிரைத்த பொங்கர்பூங்கொத்துகள் செறிந்த புதிய மலர்கள் நெருங்கிய கிளைகளில்
புகை புரை அம் மஞ்சு ஊரபுகைபோன்ற அழகிய வெண்முகில்கள் தவழ,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கேஅவ்வின்பத்தை நுகரும் குயில்கள் கூவும் குரலைக் கேட்போருக்கு – கண்ணின் நீரை நிறுத்துதல் அவ்வளவு எளியதோ?
  
#98 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்#98 குறிஞ்சி வெறிபாடிய காமக்கண்ணியார்
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன்குளுமையுள்ள மலையில் உயர்ந்துநிற்கும் வளம் பொருந்திய உச்சிமலைச்சாரலில்
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்தவெறுப்பில்லாத கொள்கையுடன் நம் தலைவர் நமக்கு உவந்தளித்த
இனிய உள்ளம் இன்னா ஆகஅவரது இனிய உள்ளம் இப்பொழுது இன்னாதது ஆகிவிட்டதால்
முனி தக நிறுத்த நல்கல் எவ்வம்நாம் வாழ்க்கையை வெறுக்கத்தக்கதாக நம்மிடம் அவரால் நிறுத்தப்பட்ட அவர் தந்த வருத்தமானது
சூர் உறை வெற்பன் மார்பு உற தணிதல்அந்தத் தெய்வம் உறையும் மலையினையுடையவனின் மார்பினைச் சேர்வதால்மட்டுமே தணியுமென்பதை
அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல்அறியாதவளாயிருக்கிறாய் தாய், நீண்ட, திரட்சியான,
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கிசெறிவான, ஒளிருகின்ற பிரகாசமான வளையல்கள் கழன்றுவிழும் நிலையைப் பார்த்து
கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்செயலற்ற உள்ளத்தினளாய்க் குறிசொல்லும் பெண்களை விசாரித்ததினால், முதுமை வாய்ந்த
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇபொய்யுரைப்பதில் வல்ல அந்தப் பெண்கள் மூங்கிலரிசியைப் பரப்பி வைத்து
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்துஇந்நோய் முருகனால் ஏற்பட்ட அரிய வருத்தம் என்று சொல்ல, அதனை நம்பி,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்ஓவியம் போன்ற, சிறந்த தொழில்திறத்தால் புனையப்பட்ட நல்ல மனையில்
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின்பாவையைப் போன்ற பலராலும் ஆராயப்பெறும் சிறந்த அழகானது
பண்டையின் சிறக்க என் மகட்கு என பரைஇமுன்பு போல் சிறப்புறட்டும் என் மகளுக்கு எனத் தெய்வத்தைத் தொழுது போற்றி
கூடு கொள் இன் இயம் கறங்க களன் இழைத்துஒன்றாய்ச்சேர்ந்த பல இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, வெறியாடும் களத்தை அமைத்து
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர்ஆடுவதற்கேற்ற அழகுசெய்த அகன்ற பெரிய பந்தலில்
வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர்வெண்மையான பனந்தோட்டினைக் கடம்பமலருடன் சூடி, கேட்பதற்கினிய‌ பாட்டினை
ஐது அமை பாணி இரீஇ கைபெயராமெலிதாக அமைந்த‌ தாள‌த்தோடே கூட்டி, கையுயர்த்திக் கூப்பி
செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன்முருகக்கடவுளின் பெரும் புகழினை ஏற்றிப்புகழ்ந்து, வேலன்,
வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன்வெறியாடும் பெரிய களம் அழகுபெற, வல்ல‌வ‌னாலே
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின்ஆட்டப்ப‌டுகின்ற‌ பொறி அமைக்கப்பட்ட பாவையைப் போல ஆடுவதை விரும்பினால்
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கியஅப்பொழுது ந‌ம் நிலை என்ன ஆகுமோ? தோழியே! அறிவு மயங்கிப்
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆகபித்துப்பிடித்த இந்தப் பெண்களுக்கு மேலும் துன்பமே உண்டாகும்படி
ஆடிய பின்னும் வாடிய மேனிவேலன் வெறியாடிய பின்னரும்; எனது வாடிப்போன மேனி
பண்டையின் சிறவாது ஆயின் இ மறைமுன்பு போல் சிறப்புற விளங்காவிட்டால், இந்த மறைவான காதல் ஒழுக்கம்
அலர் ஆகாமையோ அரிதே அஃதான்றுபலரும் தூற்றும்படி அனைவருக்கும் தெரியாமற்போவது அரிதான காரியம், அல்லாமல்
அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளிநம் தலைவரான அறிவாளி நமக்குச் செய்வித்த இந்த அல்லலைக் கண்டு மனமிரங்கி
வெறி கமழ் நெடுவேள் நல்குவன் எனினேமணங்கமழும் நெடுவேளாகிய முருகன் நமது முந்தைய அழகைத் தந்தருளினால்
செறி தொடி உற்ற செல்லலும் பிறிது எனசெறிவாக வளையணிந்த தலைவிக்கு ஏற்பட்ட துயரம் தம்மாலேஅல்லாமல் வேறொன்றால் ஏற்பட்டது என்று
கான் கெழு நாடன் கேட்பின்காடுகள் பொருந்திய நாட்டினையுடையவன் கேள்விப்பட்டால்
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதேநான் உயிரோடிருப்பது அதனைக்காட்டிலும் அரிதானதாகும்.
  
#99 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ#99 பாலை பாலை பாடிய பெருங்கடுங்கோ
வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்னவாள் போன்ற வரிகளையுடைய புலியின், விலங்கினைக் கொன்ற குருதிபடிந்த நகத்தைப் போன்ற
செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின்இரத்தச் சிவப்பான மொட்டுகள் மலர்ந்த முள் நிறைந்த முருக்க மலரின்
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில்வண்டுகள் சூழ்ந்த வாடிய பூக்கள் பரவிக்கிடக்க, மதர்த்த அழகையும்
மாண் இழை மகளிர் பூண் உடை முலையின்சிறந்த அணிகலன்களையும் உடைய இளம்பெண்களின் பூண் அணிந்த முலையைப் போன்ற
முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனைஅரும்புகள் கட்டவிழ்ந்த கோங்க மலரோடு கூடி, அரும்பிய
அதிரல் பரந்த அம் தண் பாதிரிபுனலிப் பூக்கள் பரவப்பெற்று, அழகிய குளிர்ச்சியுடைய பாதிரியினது
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீஅழகிய கிளையிலிருந்து உதிர்ந்த மலர்களும் பரவப்பெற்று, பூக்கும் பருவத்தை எதிர்ந்த
மராஅ மலரொடு விராஅய் பராஅம்வெண்கடம்ப மலரொடு கலந்து, வழிபாடு செய்வதற்குரிய
அணங்கு உடை நகரின் மணந்த பூவின்தெய்வம் உறைகின்ற திருக்கோயில் போல மணம் கமழுகின்ற பல்வேறு மலர்களும் உள்ளதால்
நன்றே கானம் நயவரும் அம்மநாம் செல்லும் இக்காடு பெரிதும் விரும்பத் தக்கதாய் இருப்பதைக்
கண்டிசின் வாழியோ குறு_மகள் நுந்தைகாண்பாயாக, வாழ்க, இளம்பெண்ணே! உன் தந்தை
அடு_களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின்பகைவரைக் கொல்லும் போர்க்களத்தில் போரிட்டதால் பூண்கள் சிதைந்துபோன கொம்பினையுடையனவும்
பிடி மிடை களிற்றின் தோன்றும்பெண்யானைகள் சூழப்பெற்றனவும் ஆகிய களிறுகளைப் போலத் தோன்றும்
குறு நெடும் துணைய குன்றமும் உடைத்தேசிறிய, பெரிய அளவினையுடைய குன்றுகளையும் கொண்டிருக்கிறது – (காண்பாயாக).
  
#100 நெய்தல் உலோச்சனார்#100 நெய்தல் உலோச்சனார்
அரை_உற்று அமைந்த ஆரம் நீவிஅரைக்கப்பெற்று இனிதாக அமைந்த சந்தனத்தைப் பூசி
புரைய பூண்ட கோதை மார்பினைசிறப்புற அணியப்பட்ட மாலையினையுடைய மார்பினையுடையவனாய்
நல் அகம் வடு கொள முயங்கி நீ வந்துஉனது நல்ல மார்பில் தடம் உண்டாகும்படி தழுவி, நீ வந்து
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதேஇரவினில் போவது எனக்கும் இனிமையாகத்தான் இருக்கிறது;
பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்தபெரும் அலைகளின் முழக்கத்துடன் அதன் இயக்கமும் ஓய்ந்து இருந்த
கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்தமேகங்கள் சூழ்ந்த இரவில், கரிய கடலில் (தமது தோணிகளில்) கொளுத்திவைத்த
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர்நிரைய மீன்களைப் பிடிக்கும் பரதவரின் இருளை நீக்கும் ஒளிபொருந்திய விளக்குகள்,
ஓடா பூட்கை வேந்தன் பாசறைபுறங்கொடாத கொள்கையினைப் பூண்ட வேந்தனின் பாசறையில்
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்தஅசைகின்ற இயல்பையுடைய யானைகளின் அழகிய முகங்களில் கட்டிய
ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும்பொன்னாலான முகபடாங்களின் ஒளிவிடும் சுடர்களைப் போன்று தோன்றும்,
பாடுநர் தொடுத்த கைவண் கோமான்பாடிவருவோரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் வள்ளன்மை மிக்க கோமானாகிய
பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர்குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பவனின், விரிந்த மலர்க்கொத்துக்களையுடைய
புன்னை அம் கானல் புறந்தை முன்துறைபுன்னைமரங்களையுடைய அழகிய கடற்கரைச் சோலை சூழ்ந்த புறையாற்றின் கடல்துறையினில் உள்ள
வம்ப நாரை இனன் ஒலித்து அன்னபுதிதாய் வந்த நாரையின் கூட்டம் ஒலித்ததைப் போன்ற
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர்பழிச்சொற்கள் ஓங்கி எழுந்தன, குளிர்ச்சியாய்ப் புலர்ந்திடும்
வைகுறு விடியல் போகிய எருமைஇருள்தங்கிய விடியற்காலத்தில் சென்ற எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும்நெய்தலின் அழகிய புதுமலர்களை விருப்புடன் தின்னும்
கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரேதாழை வேலியையுடைய அழகிய தோட்டங்கள் அமைந்த எம்முடைய ஆரவாரமுடைய ஊரில் –