குறிஞ்சிப்பாட்டு

சொற்பிரிப்பு-மூலம்அடிநேர்-உரை
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல்‘தாயே வாழ்க, (நான் கூறுவதை)விரும்பிக்கேள், அன்னையே, பளிச்சிடும் நெற்றியையும்
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனிசெழித்து வளர்ந்த மென்மையான கூந்தலையும் உடைய என்னுடைய தோழியின் உடம்பிலுள்ள
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய்தனிச்சிறப்புக் கொண்ட நகைகள் கழன்று விழப்பண்ணின, குணப்படுத்த முடியாத கொடிய நோய்(பற்றி)
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்அகன்ற உட்புறங்களையுடைய ஊரில் (அந் நோய்பற்றி)அறிந்தோரைக் கேட்டும்,
பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்     5(கடவுளரை)வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித பூக்களைத் தூவியும்,                     5
வேறு பல் உருவின் கடவுள் பேணிவேறுபட்ட பல வடிவங்களையுடைய தெய்வங்களை மனத்தில் எண்ணி,
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்றுநறுமணப்புகையும் சந்தனமும் படைத்தும், மனம்கலங்கி,
எய்யா மையலை நீயும் வருந்துதிகுறையாத மயக்கத்தையுடையளாய் நீயும் வருந்துகிறாய்;
நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும்(அவளுடைய)நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும்,
புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும்    10வளை (கழலுதலைப்)பிறர் அறியவும், தனிமைத் துயர் (அவள் உள்ளத்தில்)தோன்றி வருத்தவும்,        10
உள் கரந்து உறையும் உய்யா அரும் படர்(தன்)மனத்துள்ளே மறைந்து உறைந்து கிடக்கும் (ஆற்றுதற்கு)அரிய துன்பத்தை,
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்(என்னுடைய)பேச்சுச் சாதுரியத்தால் (அவளை)நெருக்கி விசாரிக்கையில் –
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை“முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், அவ்வளவு(மிகுந்த)
நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும்நேர்த்தியாக அமைந்த நகைகள் சீர்குலைந்துபோனால் (மீண்டும்)சேர்த்துக்கட்ட முடியும்;
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்    15(ஆனால் தமக்குரிய)நற்குணங்களின் தன்மையும், உயர்ந்த நிலையும், ஒழுக்கமும் சீர்குலைந்தால்,          15
மாசு அற கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்கறை போகும்படி கழுவி பொலிவுள்ள புகழை (மீண்டும்)நிறுவுதல்,
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலைகுற்றமற்ற அறிவையுடைய பெரியோர்களுக்கும், முன்புபோல இருந்த நிலை
எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர்எளிய காரியம் என்னார் தொன்மையான நூலை அறிந்தோர்;
மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப(என் பெற்றோரின்)விருப்பமும் (எனது)மடனும் ஒருசேர நீங்கிப்போக,
நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி        20நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலை(யும்) மீறி,                                    20
இருவேம் ஆய்ந்த மன்றல் இது எனதலைவனும் யானுமே ஆய்ந்துசெய்த மணம் இது என்று
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ(நாம் என் தாய்க்கு)அறிவுறுத்தலால் நமக்குப் பழியுமுண்டோ?(இல்லை)
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற(பெற்றோர் நம்)வழிக்கு வரவில்லை என்றாலும் (இறக்குவரை)பொறுத்திருக்க,
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு எனமறு பிறப்பிலாவது (எங்கள் மணம்)பொருந்திவரட்டும் நமக்கு” என்று கூறி,
மான் அமர் நோக்கம் கலங்கி கையற்று        25மான் போல் அமர்ந்த பார்வை(கொண்ட கண்கள்)கண்ணீர் மல்கி,    ஒன்றும் செய்ய இயலாமல்,  25
ஆனா சிறுமையள் இவளும் தேம்பும்அளவற்ற சிறுமையுணர்வால் இவளும் மெலிந்துபோனாள் –
இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர்பகைமை மேற்கொண்டு (ஒருவரோடொருவர்)மோத விரையும் இரு பெரிய அரசர்களின்
வினை இடை நின்ற சான்றோர் போலசெயல்களுக்கு நடுவே நின்ற அறிவுடையோரைப் போல,
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலேன்(உனக்கும் இவள் வருத்தத்திற்கும் அஞ்சும்)இரண்டு பெரிய அச்சத்தாலே நானும் வருந்துகின்றேன்;
கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் 30(நாமாக)மணந்தால் நன்கு அமையுமோ என்பதையும்,(தலைவனின்)குடும்பம் ஒத்ததாக இருக்குமோ என்பதையும்,30
வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது(தலைவன்)இனத்தாரையும் கூட்டாளிகளையும் (நம்மவருடன்)ஒப்பிட்டுப்பார்த்தும், யோசித்துப்பாராமல்,
எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினைநாங்களாக(வே) துணிந்துசெய்த (தலைவிக்கு)ஆபத்தற்ற (இந்த)சிறப்பான செயல்
நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர(முன்பு)நடந்தவிதத்தை நீ முழுதும் நன்றாகப் புரிந்துகொள்ளும்படியாக
செப்பல் ஆன்றிசின் சினவாதீமோசொல்லுதல் மேற்கொண்டேன், (அது கேட்டுக்)கோபிக்கவேண்டாம் –
நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை    35“நெல்லைக் கொண்ட நீண்ட மூங்கிலுக்காக (துதிக்கையை நீட்டி)அண்ணாந்து பார்த்த யானை,  35
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப(தளர்வுற்று)முத்து நிறைந்த (தன்)தந்தத்தின்மேல் இறக்கிப் போட்ட துதிக்கையைப் போன்ற,
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல்மெல்லிய பஞ்சை நுனியில் உடைய வளைந்த பிஞ்சுத்தன்மை நீங்கிய(முற்றிய) பெரிய கதிர்களை
நல் கோள் சிறு தினை படு புள் ஓப்பிநன்றாக(த் தன்னிடத்தில்) கொள்ளுதலையுடைய சிறுதினை(ப்பயிர்களின்மேல்) வீழ்கின்ற கிளிகளை ஓட்டி(விட்டு)
எல் பட வருதியர் என நீ விடுத்தலின்பொழுது சாய (நீர்)வருவீராக” என்று கூறி நீ (போக)விடுகையினால்,
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த                40(நெற்றுக்களின்)ஆரவாரம் பொருந்தின மரத்தின் உச்சியில் உயரத்திலிருப்பவன் செய்த             40
புலி அஞ்சு இதணம் ஏறி அவணபுலிகள் அஞ்சும் பரணில் ஏறி, அவ்விடத்திலிருக்கும்,
சாரல் சூரல் தகை பெற வலந்தமலைச்சரிவில்(விளைந்த) பிரம்பினால் அழகுபெறப் பின்னிய,
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்கவணும், தட்டையும், குளிரும், ஏனையவும்(ஆகிய)
கிளி கடி மரபின ஊழூழ் வாங்கிகிளிகளை விரட்டும் இயல்புடையவற்றை அடுத்தடுத்து கையில் எடுத்து,
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து        45(சூரியனின்)கடுமையான ஒளிக்கற்றைகள் சுட்டுப்பொசுக்கும் வெம்மை அனல்விடும் நேரத்தில் –      45
விசும்பு ஆடு பறவை வீழ் பதி படரவானத்தில் அலையும் பறவைகள் தாம் விரும்பும் இருப்பிடங்களுக்குச் செல்லும்படியாக,
நிறை இரும் பௌவம் குறைபட முகந்துகொண்டுநிறைந்த கரிய கடல் குறைவுறும்படி முகந்துகொண்டு,
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின்அகன்ற கரிய ஆகாயத்திடத்தில் வீசுகின்ற காற்று ஒன்றுசேர்வதினால்,
முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடுமுரசு முழங்கினாற் போன்ற இனிய குரலையுடைய இடியோடு,
நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி              50வரிசையாகச் செல்லுதலையுடைய உயர்ச்சியைக்கொண்ட மேகம் கலங்கி,                       50
இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய்இனிய ஓசை (உடைய)முரசினையும், ஒளிவிடும் அணிகலன்(களையும் உடைய) முருகன்
ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின்(தன்)பகைவர்க்காகத் தூக்கிய ஒளிர்கின்ற இலை (போன்ற அமைப்புகொண்ட)வேல் போல,
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்தெனமின்னல்கள் நெருக்கமாய் மின்னும் தொகுதிகளையுடையவாய் மலை மேல் பெய்தவாக,
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர்தலைவனின் உயரமான மலைச் சிகரத்திலிருந்து கீழிறங்கும் தெளிந்த நீரையுடைய —
அவிர் துகில் புரையும் அம் வெள் அருவி            55ஒளிவிடும் (வெண்மையான)ஆடையைப் போலிருக்கும் — அழகிய வெண்ணிற அருவியில்,   55
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிதணிதல் இல்லாத விருப்பமுடையவராய் இடைவிடாமல் விளையாடி,
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழிபளிங்கை (க் கரைத்துக்)கொட்டியதைப் போன்ற பரந்த சுனையில் மூழ்கி விளையாடுகின்றபொழுது,
நளி படு சிலம்பில் பாயம் பாடிஅடர்த்தி மிக்க மலைச்சாரலில் மனவிருப்பப்படி பாடி,
பொன் எறி மணியின் சிறு புறம் தாழ்ந்த எம்தங்கத்தில் பதிக்கப்பட்ட (நீல)மணியைப் போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம்
பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி               60பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,                                         60
உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ்உட்புறமெல்லாம் சிவந்த கண்ணையுடையோமாய் – பெரிய இதழையுடைய
ஒண் செம் காந்தள் ஆம்பல் அனிச்சம்ஒளிரும் சிவந்த கோடற்பூ, ஆம்பல், அனிச்சம்
தண் கயம் குவளை குறிஞ்சி வெட்சிகுளிர்ந்த குளத்து(ப்பூத்த) செங்கழுநீர்ப்பூ, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடுவேரி தேமா மணிச்சிகைசெங்கொடுவேரி, தேமா, செம்மணிப்பூ,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்         65(தனக்கே)உரித்தாக மணக்கும் விரிந்த கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ, வில்லப்பூ,              65
எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம்நெருப்பை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரப்பூ,
வடவனம் வாகை வான் பூ குடசம்வடவனம், வாகை, வெண்ணிறப் பூவுடைய வெட்பாலைப்பூ,
எருவை செருவிளை மணி பூ கருவிளைபஞ்சாய்க்கோரை, வெண்காக்கணம்பூ, (நீல)மணி(போலும்) பூக்களையுடைய கருவிளம்பூ,
பயினி வானி பல் இணர் குரவம்பயினி, வானி, பல இதழ்களையுடைய குரவம்பூ,
பசும்பிடி வகுளம் பல் இணர் காயா  70பச்சிலைப்பூ, மகிழம்பூ, பல கொத்துக்களையுடைய காயாம்பூ,                                    70
விரி மலர் ஆவிரை வேரல் சூரல்             விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ, சிறுமூங்கிற்பூ, சூரைப்பூ,
குரீஇப்பூளை குறுநறுங்கண்ணிசிறுபூளை, குன்றிப்பூ,
குருகிலை மருதம் விரி பூ கோங்கம்முருக்கிலை, மருதம், விரித்த பூக்களையுடைய கோங்கம்பூ,
போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரிகோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ,
செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம்      75செருந்திப்பூ, புனலிப்பூ, பெரிய குளிர்ந்த சண்பகப்பூ,                                                     75
கரந்தை குளவி கடி கமழ் கலி மாநாறுகரந்தை, காட்டுமல்லிகைப்பூ, விரை கமழும் தழைத்த மாம்பூ,
தில்லை பாலை கல் இவர் முல்லைதில்லப்பூ, பாலை, கல்லிலே படர்ந்த முல்லைப்பூ,
குல்லை பிடவம் சிறுமாரோடம்கஞ்சங்குல்லைப்பூ, பிடவம், செங்கருங்காலிப்பூ,
வாழை வள்ளி நீள் நறு நெய்தல்வாழைப்பூ, வள்ளிப்பூ, நீண்ட நறிய நெய்தற்பூ,
தாழை தளவம் முள் தாள் தாமரை      80தெங்கின் பாளை, செம்முல்லைப்பூ, முட்களைக்கொண்ட தண்டையுடைய தாமரைப்பூ,             80
ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடிஞாழல், மௌவல், நறிய குளிர்ந்த கொகுடிப்பூ,
சேடல் செம்மல் சிறுசெங்குரலிபவழக்கான் மல்லிகைப்பூ, சாதிப்பூ, கருந்தாமக்கொடிப்பூ,
கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழைவெண்கோடற்பூ, தாழம்பூ, தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ,
காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல்காஞ்சிப்பூ, நீலமணிபோலும் கொத்துக்களையுடைய தேன் மணக்கும் கருங்குவளை,
பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம்           85ஓமை, மரவம்பூ, பல பூக்களையுடைய தணக்கம்பூ,                                                        85
ஈங்கை இலவம் தூங்கு இணர் கொன்றைஇண்டம்பூ, இலவம்பூ, தூங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ,
அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரைஅடும்பம்பூ, பொருந்தின ஆத்திப்பூ, நீண்ட கொடியையுடைய அவரைப்பூ,
பகன்றை பலாசம் பல் பூ பிண்டிபகன்றை, பலாசம், பல பூக்களையுடைய அசோகப்பூ,
வஞ்சி பித்திகம் சிந்துவாரம்வஞ்சி, பிச்சிப்பூ, கருநொச்சிப்பூ,
தும்பை துழாஅய் சுடர் பூ தோன்றி  90தும்பை, திருத்துழாய்ப்பூ, விளக்குப்போலும் பூவினையுடைய தோன்றிப்பூ,                               90
நந்தி நறவம் நறும் புன்னாகம்நந்தியாவட்டை, நறைக்கொடி, நறிய புன்னாகம்,
பாரம் பீரம் பைம் குருக்கத்திபருத்திப்பூ, பீர்க்கம்பூ, பச்சையான குருக்கத்திப்பூ
ஆரம் காழ்வை கடி இரும் புன்னைசந்தனப்பூ, அகிற்பூ, மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ,
நரந்தம் நாகம் நல்லிருள்நாறிநாரத்தம்பூ, நாகப்பூ, இருவாட்சிப்பூ,
மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும்  95கரிய பெரிய குருத்தம்பூ, வேங்கைப்பூ (ஆகிய பூக்களுடன்), பிறபூக்களையும்,                   95
அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன்சாதிலிங்கத்தைப் பரப்பினாற் போன்ற பருத்த அழகினையுடைய மலையெருக்கம்பூவுடன்,
மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி(எதைப்பறிப்பது என்று)குழப்பம் உள்ளவராயும், அவா மிகுந்தவராயும் (பலகாலும்)திரிந்து (பறித்து),
வான் கண் கழீஇய அகல் அறை குவைஇமழை (பெய்து)தன்னிடத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தின அகன்ற பாறையில் குவித்து,
புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின்பறவைகளின் மிகுந்த ஓசைகளையுடைய, (ஒன்றற்கொன்று)குறுக்கிட்டுக்கிடக்கின்ற மலைச்சரிவில்,
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி     100பெருத்த ஓசையுடன் தெளிந்த சொற்களை நடுநடுவே சொல்லி,                                       100
கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியாகிளியை ஓட்டியும், புற இதழ்களைக் களைந்து,
பை விரி அல்குல் கொய் தழை தைஇபாம்பின் படத்தைப் போல பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி,
பல் வேறு உருவின் வனப்பு அமை கோதை எம்பற்பல வேறுபட்ட நிறத்தையுடைய அழகமைந்த மாலைகளை, எம்முடைய
மெல் இரு முச்சி கவின் பெற கட்டிமெல்லிய கரிய கொண்டைமுடியில் அழகுபெறச் சுற்றி,
எரி அவிர் உருவின் அம் குழை செயலை        105நெருப்பு ஒளிர்வது (போன்ற)தோற்றமுள்ள அழகிய தளிரையுடைய அசோக மரத்தின்              105
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆகமகரந்தம் உதிர்ந்து கிடக்கும் குளிர்ந்த நிழலில் இருந்தேமாக –                             
எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்எண்ணெய் தேய்த்து நீவிவிட்ட, சுருள்மயிர் வளர்ந்த — நல்ல கருநிறம் அமைந்த,
தண் நறும் தகரம் கமழ மண்ணிகுளிர்ந்த மணமுள்ள மயிர்ச்சாந்தை(நறுமணத்தைலம்) மணக்குமாறு பூசிமெழுகி,
ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழாஅந்த ஈரம் உலருமாறு விரலால் கோதிவிட்டு சிக்கு எடுத்து,
காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை      110வயிரம்பாய்ந்த அகிலின் அழகிய புகையை ஊட்டுதலால், யாழ் ஓசையைப் போன்று              110
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்துஅழகு மிகுகின்ற இசைப்பாட்டினையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும்படி, அகிலின் நெய்ப்புக் கலக்கப்பெற்று
மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின்(நீல)மணியின் நிறத்தைக் கொண்டுள்ள — கரிய பெரிய குடுமியின்கண்,
மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும்மலையிடத்தனவும், நிலத்திடத்தனவும், மரக்கிளைகளிற் பூத்தனவும், சுனைகளிற் பூத்தனவும் ஆகிய
வண்ணவண்ணத்த மலர் ஆய்பு விரைஇயபல நிறங்களையுடைய மலர்களை ஆராய்ந்து தொடுத்த
தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி       115தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,      115
நலம் பெறு சென்னி நாமுற மிலைச்சிஅழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி,                                  
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரிபசிய காம்பையுடைய பிச்சியின் அழகிய இதழ்களையுடைய பூவைத் தொடுத்த
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீஅழகிய தொடையாகிய ஒரு வடத்தைச் சுற்றி, சிவந்த நெருப்பைப் போன்று
ஒண் பூ பிண்டி ஒரு காது செரீஇஒளிரும் பூக்களையுடைய அசோகின் அழகிய தளிரை ஒரு காதில் செருகி,
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி  120(அந்த)அழகிய தளிர்கள் உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி,       120
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்துவலிமை தங்கியிருக்கும் அகன்று உயர்ந்த மார்பினில்,                                        
தொன்றுபடு நறும் தார் பூணொடு பொலியதொன்றுபட்டு வருகின்ற பேரணிகலன்களோடே நறிய மாலை பொலிவு பெற,
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின்செவ்விய இலக்கணமுடைய கோடுகளுடன் பொருந்திய பூண் இறுகின முன்கையையுடைய பெரிய கையில்
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்துவண்ணத்தையுடைய வரிந்து கட்டப்பட்ட வில்லை எடுத்து, அம்புகளைத் தெரிந்து பிடித்து   
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி         125நுண்ணிய வேலைப்பாடு கொண்ட கச்சை(க் கட்டின சேலை) தளர்வு இன்றிக் கட்டி,            125
இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல்இயற்கையான அழகால் பொலிவு பெற்ற பொன்னாலாகிய உயர்ந்த (வீரக்)கழல்
துயல்வரும்தோறும் திருந்து அடி கலாவ(அடி எடுத்துவைத்து)இயங்கும்போதெல்லாம் திருத்தமான கணுக்காலில் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய 
முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின்-பகைவர் நாட்டைப் பாழாக்கும் நெருங்குவதற்கு முடியாத வலிமையையுடைய,
பகை புறம்கண்ட பல் வேல் இளைஞரின்பகைவரின் புறமுதுகு கண்ட பல வேல்களையுடைய வீரரைப்போல                                      
உரவு சினம் செருக்கி துன்னுதொறும் வெகுளும்       130மிகுகின்ற சினத்தால் செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் வெகுண்டுவரும்,         130
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
திளையா கண்ண வளைகுபு நெரிதரஇமையாத கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே வருகையினால்,
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம்அஞ்சிநடுங்கியவராய் (இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட, யாங்கள்
இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படரவருத்தம் மிக்க மனத்தையுடையவராய் மிரண்டு (வேறு)இடத்திற்குச் செல்ல –
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து       135(தன்னுடன்)மாறுபட்ட காளைகளைப் பொருது விரட்டியடிக்கும் செருக்குடைய — (தானறியாத)வேறு நிலத்தில்135
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம்(புதிய)பசுவைக் காணும் — காளையைப் போல அழகுபெற வந்து, எமது
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சிகலக்கத்தினால் அப்போது (நாங்கள்)மிரண்டுபோனதற்காகத் (தான்)அஞ்சி,
மெல்லிய இனிய மேவர கிளந்து எம்மென்மையும் இனிமையுமுடைய சொற்களை (எமக்குப்)பொருத்தமாக இயம்பி, எம்
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடிஐந்து பிரிப்புள்ள பின்னலின் நுண்ணிய அழகைப் புகழ்ந்து, “ஒளிரும் வளையினையும்,
அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி         140தளர்ந்த மென்மையான சாயலினையும், அழகாக வளைந்திருக்கும் கொப்பூழினையும்,            140
மட மதர் மழை கண் இளையீர் இறந்தகபடமற்ற மதர்த்த குளிர்ந்த கண்களையும், உடைய இளம்பெண்களே, (இங்கு)தப்பி வந்த       
கெடுதியும் உடையேன் என்றனன் அதன் எதிர்இழப்பினையும் உடையேன்” என்று கூறினான், அதற்கு மறுமொழியாக
சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி(ஒன்றும்)சொல்லாதவராக (நாங்கள்)இருந்ததினால், ஏமாற்றமடைந்து, “(மனம்)கலங்கி
கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு(நான்)காணாமற்போக்கியதைக் காட்டித்தாரீராயின், எம்முடன்
சொல்லலும் பழியோ மெல்லியலீர் என          145(ஒரு வார்த்தை)சொல்லுதலும் (உமக்குப்)பழியாமோ, மெல்லிய இயல்புடையீரே”, எனச் சொல்லி145
நைவளம் பழுநிய பாலை வல்லோன்நட்டராகம் முற்றுப்பெற்ற பாலை யாழை வாசிப்பதில் வல்லவன்                                   
கை கவர் நரம்பின் இம்மென இமிரும்(தன்)கையால் வாசித்த நரம்பு போல, இம்மென்னும் ஓசைபட ஒலிக்கும்
மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்தகாதலையுடைய வண்டினத்தோடு, ஆண் வண்டு (புணர்ச்சியை)விரும்பித் தங்கிய,
தாது அவிழ் அலரி தா சினை பிளந்துதாது விரித்த பூக்களையுடைய கெட்டியான கிளையை முறித்து,
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி               150(பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி,           150
கல்லென் சுற்றம் கடும் குரல் அவித்து எம்கல்லென்னும் ஓசைபடக் கத்தும் நாய்களின் கடுமையான குரல்களை அடக்கி, எம்முடைய
சொல்லல் பாணி நின்றனனாகபதில் சொல்லின் காலத்தை எதிர்பார்த்து நின்றனனாக –
இருவி வேய்ந்த குறும் கால் குரம்பைதினையின் அரிதாளால் வேய்ந்த குட்டையான கால்களையுடைய குடிசையில் இருக்கும்,
பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்ப(மான்)பிணையைப் போன்ற பார்வையினையுடைய மனைவி எடுத்துக்கொடுப்ப,
தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து            155தேனால் சமைந்த கள் தெளிவை உண்டு, மகிழ்ச்சி மிக்கு,                                               155
சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்துகாவல்தொழிலில் சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் செலுத்தி(உண்டு)
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாதுபெரிய புனத்தை அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல்,
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்குபாம்பை ஒத்த அழகிய வில்லினை நாணேற்றி, வருத்த மிகுதியால்,
உரவு சின முன்பால் உடல் சினம் செருக்கிமிகுகின்ற சினத்தின் வலியோடே உடல் சினத்தால் நடுங்க,
கணை விடு புடையூ கானம் கல்லென            160அம்பை எய்து, தட்டையை அடித்து ஒலிஎழுப்பி, காடு(முழுவதும்) கல்லெனும் ஓசை பிறக்கும்படி,            160
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர(வாயை)மடித்து விடுகின்ற சீழ்க்கையராய், மிக்க ஓசையை உண்டாக்கி (அவ் வேழத்தை)எதிர்த்து நிற்க,
கார் பெயல் உருமின் பிளிறி சீர் தககார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக
இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்திகரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து,
சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்புகோபம் விளங்கும் மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து,
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர           165மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்,                 165
உய்விடம் அறியேம் ஆகி ஒய்யெனஉயிர்பிழைப்பதற்குரிய இடத்தை (எங்கும்)அறியேமாய், சடுதியாக,
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்துசீரான உருட்சியும் பளபளப்பும் உள்ள வளையல்கள் ஒலிக்குமாறு, வெட்கத்தை விட்டு,
விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்திநடுக்கமுற்ற மனத்தினையுடையவராய், விரைந்து (ஓடி)அவனை ஒட்டிநின்று,
சூருறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல்தெய்வமகளிரேறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க – நெடிய கோலையுடைய,
உடு உறும் பகழி வாங்கி கடு விசை          170இறகு சேர்ந்த அம்பினை வலிந்திழுத்து, கடும் வேகத்துடன்,                                   170
அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின்தலைமை யானையின் அழகிய முகத்தில் ஆழச்செலுத்துதலினால்,
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதர(அப்)புண் உமிழ்ந்த செந்நீர் (அதன்)முகத்தில் பரவி வழிந்துநிற்க,
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாதுபுள்ளிபுள்ளியானதும் வரிகளையுடையதுமான நெற்றியின் (அழகு)அழிந்து, (அங்கே)நிற்கமாட்டாமல்,
அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்(அக் களிறு)தளர்ந்து திரும்பி ஓடிய பின்னர் – முருகக்கடவுளான
அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப          175தெய்வம்தீண்டிய(சாமியாடும்) மகளிர் வெறியாட்டயரும் களத்தைப்போன்று(அவ்விடம் தோன்றிநிற்க),  175
திணி நிலை கடம்பின் திரள் அரை வளைஇயஉறுதியாக நிற்கும் கடப்பமரத்தின் திரண்ட அடிப்பகுதியைச் சுற்றிவளைத்து
துணை அறை மாலையின் கை பிணி விடேஎம்இறுக்கக் கட்டிச் சார்த்தப்பட்ட மாலையைப் போன்று, (நாங்கள்)கைகோத்தலை விடாதவர்களாய்,
நுரை உடை கலுழி பாய்தலின் உரவு திரைநுரையையுடைய (ஆற்றுப்)பெருக்கில் குதிப்பதினால், உயர்ந்தெழும் அலைகள்
அடும் கரை வாழையின் நடுங்க பெருந்தகைமோதும் கரையின் (நின்ற)வாழைபோலே நடுங்க, உயர்குணமுள்ள தலைவன்
அஞ்சிலோதி அசையல் யாவதும்                        180“அழகிய நுண்மையான கூந்தலையுடையவளே, கலங்கவேண்டாம், சிறிதளவுகூட            180
அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு எனஅஞ்சுவதை விலக்கவும், (நான்)உன் பேரழகைக் கண்டுமகிழ்வேன்” என்று சொல்லி,
மாசு அறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்துகளங்கமில்லாமல் ஒளிரும் (தலைவியின்)நெற்றியைத் துடைத்து, நீண்டநேரம் சிந்தித்து,
என் முகம் நோக்கி நக்கனன் அ நிலைஎன் முகத்தைப் பார்த்து முறுவல்பூத்தான் – அந்த நிலையில்,
நாணும் உட்கும் நண்ணு வழி அடைதரநாணமும் அச்சமும் (எய்துதற்குரிய இடம்பெற்று)அவ்வழி (வந்து)தோன்றியதால்,
ஒய்யென பிரியவும் விடாஅன் கவைஇ           185சட்டென்று (அவள்)விட்டுவிலகவும் விடாதானாய், (தன் கைகளால்)அணைத்து,                        185
ஆகம் அடைய முயங்கலின் அ வழி(இவள்)மார்பு (தன் மார்பில்)ஒடுங்குமாறு தழுவுதலினால், அப்பொழுது,
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனைபழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்ற கற்பாறை(சூழ்ந்த) நீண்ட சுனையில்,
முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தெனபருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்         190(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை         190
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்நீரென்று கருதிப் பருகிய மயில் — அகன்ற ஊர்களில்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்திவிழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் — தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்
வரை அரமகளிரின் சாஅய் விழைதக             195மலைவாழ் தெய்வப்பெண்டிர் ஆடுதலால் தம் நலம் சிறிது கெட்டு, கண்டோர் விரும்பும்படி  195
விண் பொரும் சென்னி கிளைஇய காந்தள்விசும்பைத் தீண்டுகின்ற சிகரங்களில் கிளைத்த செங்காந்தளின்
தண் கமழ் அலரி தாஅய் நன் பலகுளிர்ந்த மணம் கமழ்கின்ற பூக்கள் உதிர்ந்து பரவி, நன்றாகிய பற்பல
வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்தஅரைக்கச்சை விரிந்த களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல்மலைபொருந்தியதுமான நாட்டையுடையவன், எம்மை விரும்புகின்ற பெரிய வெற்றியையுடையவன் –
உள்ள தன்மை உள்ளினன் கொண்டு              200(இவள்)உள்ளத்தின் தன்மையை ஆய்ந்தவனாய் (அதனை)உட்கொண்டு,                           200
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி“விழா கொண்டாடினால் போன்று, பெரிய பானையில் (வைக்கப்பட்ட)சோற்றை
வருநர்க்கு வரையா வள நகர் பொற்பவருவார்க்கெல்லாம் வரைவின்றிப் படைக்கும், செல்வத்தையுடைய இல்லம் பொலிவுபெற,
மலர திறந்த வாயில் பலர் உணஅகலத் திறந்துகிடக்கின்ற வாயிலில் (வந்து)பலரும் உண்ணும்படி,
பைம் நிணம் ஒழுகிய நெய் மலி அடிசில்இளம் (மாமிசத்தைச் சேர்ந்த)கொழுப்பு ஒழுகுகின்ற நெய் மிக்க சோற்றை
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு    205குற்றமில்லாத உயர்குடிப்பிறந்த உயர்ந்தோர் (தம்)சுற்றத்தோடு                                       205
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகைவிருந்தினராக உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே,
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்குஉன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்”, என்று கூறி, அப்பொழுது
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை(சிறந்த)இல்லறமே (நல்ல)வாழ்க்கைப் படகாகும் என்று தெளிவித்து, நெருக்கமான மலைகளில்
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுதுமிக உயர்ந்த உச்சியின் (உறைகின்ற)இறையை வாழ்த்தி, கைகளைக் குவித்துத் தொழுது,
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி                210(இவள்)இன்பமுறும்படி உறுதிமொழிகளை உண்மையெனத் தெளிவித்து,                         210
அம் தீம் தெள் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்துஅழகிய இனிய தெளிந்த அருவி நீரைக் குடித்ததினால், மனம் அமைதியடைந்து,
அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சிபயங்கரமான பிளவுகள் நிறைந்த மலையில் நேர்ந்த களிறு தந்த (இந்த)இணைப்பு,
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்விசும்பில் தமக்குரிய இருப்பிடத்தையுடைய பொலிவு பெற்ற தேவர்களும் விரும்பும்
பூ மலி சோலை அ பகல் கழிப்பிபூக்கள் நிறைந்த சோலையில் அன்றைய பகற்பொழுதைக் கழித்து
எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சி           215மாலைப் பொழுது கழியும்படி, ஏழு குதிரைகளைப் பூட்டிய தேரைச் செலுத்தி (மேற்றிசையில்)கீழிறக்கி       215
பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறையபல கதிர்களையுடைய ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைய –
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம்மான் கூட்டம் மரத்தடிகளில் வந்து திரள, பசுக்களின் கூட்டம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர(தம்)கன்றுகளை அழைக்கும் குரலையுடையவாய் கொட்டில்கள் நிறையுமாறு நுழைய,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்ஊதுகின்ற கொம்பு(போன்ற) ஓசையையுடைய வளைந்த வாயையுடைய அன்றில் பறவை
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ          220உயர்ந்த பெரிய பனையின்கண் உள்ள உள்மடலில் (இருந்து தம் பெடையை)அழைக்க              220,
பாம்பு மணி உமிழ பல் வயின் கோவலர்பாம்பு தம் மணிகளை உமிழ, பற்பல இடங்களிலுள்ள இடையர்கள்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்றஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப,
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட வள மனைஆம்பல் மலரின் அழகிய இதழ்கள் தளையவிழவும், செல்வம் நிறைந்த இல்லங்களில்
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவிபொலிவுள்ள வளையல் அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி
அந்தி அந்தணர் அயர கானவர்                        225அந்திக்கடனை அந்தணர்(போல்) ஆற்ற, காட்டில் வாழ்வோர்                                       225
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்தவானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட,
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம்மேகங்கள் பெரிய மலையிடத்துச் சூழ்ந்து கறுப்ப, கானகம்
கல்லென்று இரட்ட புள் இனம் ஒலிப்பகல்லென்னுமாறு மாறிமாறி ஒலியெழுப்ப, பறவையினங்கள் ஆரவாரிக்க,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பசினங்கொண்ட மன்னன் படையெடுத்துச் செல்லும் போரைப் போன்று
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ             230விரைந்துவரும் மாலை நெருங்கிவருதலைக் கண்டு –                                             230
நேர் இறை முன்கை பற்றி நுமர் தர“நேர்த்தியாக (தோளின்)இருபக்கங்களிலும் அமைந்த கைகளின் முன்பக்கத்தைப் பிடித்து உன்வீட்டார் (எனக்குத்)தர
நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்நாட்டில் உள்ளார் (எல்லாம்)அறியும் நன்மையுடைய திருமணத்தை நிகழ்த்துவேன், சில நாட்களில்,
கலங்கல் ஓம்புமின் இலங்கு இழையீர் எனகலங்குவதை விலக்குவாயாக, ஒளிவிடும் நகையுடையீர்”, என்று
ஈர நன் மொழி தீர கூறிகனிவான நல்ல மொழிகளை நிச்சயித்துக் கூறி,
துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து                235துணையைச் சேர்ந்த காளையைப் போல், எம்முடனே வந்து,                                 235
துஞ்சா முழவின் மூதூர் வாயில்செயலற்று இராத(எப்போதும் ஒலிக்கும்) முழவினையுடைய பழைய (நம்)ஊர் வாயிலில்,
உண்துறை நிறுத்து பெயர்ந்தனன் அதற்கொண்டு(பலரும்)நீருண்ணும் துறையில் (எம்மை)நிறுத்தி மீண்டு சென்றான் – அன்று தொடங்கி,
அன்றை அன்ன விருப்போடு என்றும்அன்றைக்கு இருந்ததைப் போன்ற காதலோடு, எந்நாளும்
இர வரல் மாலையனே வருதோறும்இரவு வருதலைத் தனக்கு இயல்பாகவுடையவன், வரும்போதெல்லாம்,
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும்           240ஊர்க்காப்பாளர் கடுமையாகக் காவல்செய்தாலும், சினமிக்க நாய்கள் குரைத்தாலும்,               240
நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும்நீ துயில் நீங்கினாலும், திங்கள் வெளிவந்து ஒளிபரப்பினும்,
வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும்மூங்கிலைப் போன்ற மென்மையான தோளிடத்துப் பெறும் இனிய துயிலை என்றும்
பெறாஅன் பெயரினும் முனியலுறாஅன்பெறாதவனாய் (வறிதே) திரும்பிச் சென்றாலும், (அதனால்) வெறுப்படையான்,
இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின்(தன்)இளமைப்பருவத்தால் வரம்பு மீறியதும் இலன், (தன்)செல்வச்செருக்கால்
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர்            245தன் நிலையினின்றும் நீங்கியதும் இலன், அச்சம்தரும் இவ்வூருக்கு                            245
மாய வரவின் இயல்பு நினைஇ தேற்றிஒளித்து வருகின்ற தன் வரவின் தன்மையை எண்ணி, (அது நல்லதற்கே என்று தன்னைத்)தேற்றி,
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோராபெரிய மழைத் துளிகள் ஓங்கிப்பாய்ந்த மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து,
ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண்ஈரமுள்ளனவாய் கலங்கிநின்றன – (இவளின் பெரிய செழிப்பான குளிர்ந்த கண்கள்),
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும்மார்பினில் (கண்களிலிருந்து)அரித்துவிழும் நீர் சொட்ட, நாள்தோறும்,
வலை படு மஞ்ஞையின் நலம் செல சாஅய்                250வலையினில் அகப்பட்ட மயில் போல (தன்)நலம் போகும்படி மெலிந்து,                              250
நினைதொறும் கலுழுமால் இவளே கங்குல்(அவனை)எண்ணுந்தோறும் கலங்குகின்றாள் இவள் – இரவில்,
அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும்குகைகளில் தங்கும் புலிகளும், யாளிகளும், கரடிகளும்,
புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும்உள்ளீடற்ற கொம்பையுடைய ஆமான் ஏறும், யானையும்,
வலியின் தப்பும் வன்கண் வெம் சினத்துவலிமையோடு ஓங்கித்தாக்கும் இரக்கமற்ற,கடும் சினத்தையுடைய
உருமும் சூரும் இரை தேர் அரவமும்         255இடியும், பிசாசுகளும், இரை தேடித்திரியும் பாம்பும்,                                                      255
ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும்வாய்குறுகிய கரிய ஆழமான நீர்நிலையில் போதற்கரிய சுழிகளில் திரியும்
கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும்,
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்(வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும்
பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும்பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும்,                                                
வழுவின் வழாஅ விழுமம் அவர்                       260(நாம் சிறிது)தவறினாலும் (அவை உடனே கொல்லத்)தவறாத இடர்ப்பாடுகளை — (அவரின்        260
குழு மலை விடரகம் உடையவால் எனவேகூட்டமான மலைகளில் உள்ள பிளவுகள் உள்ள இடம்) — உடையன’ என்றாள் தோழி.