3. பாடல் 21 – வண்டுபடத் ததைந்த

புதுப் பூங்கொன்றை

        முன்னுரை: பொருள்தேடிவரச் சென்ற தலைவன் கார்காலத்தில் திரும்புவேன் என்று சொல்லிவிட்டுச் செல்கிறான். கார்காலம் வந்துவிட்டது. காட்டில் கொன்றை மரங்கள் நிறையப் பூக்க ஆரம்பித்துவிட்டன – ஆனால் தலைவன் வரவில்லை. எனவே, தலைவன் தன் வாக்குத் தவறிவிட்டான் என்று ஆகிவிடுமே என்பதற்காகத் தலைவி கார்காலமே தொடங்கவில்லை என்கிறாள். அதற்கு அவள் நான்கு காரணங்களைச் சொல்கிறாள். ஒரு காரணம் தன் தலைவன் பொய்யுரைக்கமாட்டான் என்பது. மற்ற மூன்று காரணங்களைப் பாடலுக்குள் நுண்மையாகப் பொதித்துவைத்திருக்கிறார் புலவர். பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றும் இப் பாடலில் அந்த மூன்று நுண்மைகளை நுழைத்து வைத்திருக்கும் புலவரின் பேரறிவு வியக்கத்தக்கது.

பொழுது விடியும் நேரம். வழக்கமாக பொன்னி எழுந்து வீடு வாசல் பெருக்கி, வாசலில் சாணம் தெளிப்பாள். அன்றென்னவோ முல்லை வெகு சீக்கிரத்தில் எழுந்துவிட்டாள். எல்லாவேலைகளையும் முடித்ததுமல்லாமல் குளித்து வேறு உடையும் மாற்றிக்கொண்டாள். பூக்காரி வந்து நாளாகின்றது – செடிகளிலும் கொடிகளிலும் பூக்கள் இருந்தால்தானே! பிச்சி, முல்லை போன்ற மணமுள்ள பூக்கள் இன்னும் பூக்கத் தொடங்கவில்லை. அன்றென்னவோ பூக்காரி வந்தாள். “பிச்சிப்பூ பூத்திருச்சு’க்கா” என்று இரண்டு முழம் அளந்து கொடுத்துவிட்டுப்போனாள். முல்லைக்குச் சந்தேகம். கார்காலம் வந்துவிட்டதா? கார்காலம் வந்தால்தான் காடே மணக்கும். சற்றே மகிழ்ச்சியுடனும் வெகுவாகக் கவலையுடனும் வீட்டுக்குள் நுழைந்த முல்லையைப் பொன்னி எதிர்கொண்டாள்.

“இந்த வேலையெல்லாம் நீ ஏன் பாக்குற? என்ன எழுப்பியிருக்கக்கூடாதா?” என்று உரிமையுடன் கோபித்துக்கொண்டாள். பொன்னி முல்லையின் நெருங்கிய தோழி. முல்லையின் கணவன் பொருள்தேடி வேறூர் சென்றிருக்கிறான். நீண்ட பயணம்.

“கார்காலத்தில் திரும்பி வருவேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். எனவே முல்லைக்குத் துணையாகப் பொன்னி வந்து உடன் தங்கியிருக்கிறாள்.

“என்ன பூக்காரி வந்தாளா? அப்ப அண்ணன் சீக்கிரம் வந்துரும்” என்று மகிழ்ச்சியாகக் கூறிய பொன்னி முல்லையின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

        “என்ன முல்ல? மொகம் ஒருமாதிரி இருக்கு?”

        “இல்ல, கார் வந்துருச்சுன்னா அவரு வந்திருக்கணுமே?”

        இதற்கு என்ன பதில் சொல்வதென்று பொன்னிக்குத் தெரியவில்லை.

        வாசல்பக்கம் சந்தடி கேட்டது. இருவரும் வெளியே வந்தனர். ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக ஒரு மங்கையர் கூட்டம் அங்கே குழுமியிருந்தது.

        “என்ன பொன்னி, முல்லை, நாங்க காட்டுக்குப் போகப்போறோம், வர்ரீங்களா?” என்று கேட்டாள் ஒருத்தி.

        “என்னாத்துக்கு இந்த நேரத்துல காட்டுக்கு?” பொன்னி இழுத்து இழுத்துக் கேட்டாள்.

        “என்னாங்கடீ, ஒண்ணும் தெரியாதா? காடே பூத்துக்கிடக்குதாம். அதுலயும் அந்த கொன்றப்பூ அப்படியே கொத்துக்கொத்தாத் தொங்குதாம். எவ்வளவு நாளாச்சு பூத்து? ஊரே போய்க்கிட்டு இருக்கு” என்றாள் ஒருத்தி.

        “நாங்க வரல்ல, இங்க கொள்ளச் சோலி கெடக்கு” என்று முல்லை சொல்ல, கூட்டம் அதே ஆரவாரத்துடன் காடு நோக்கிச் சென்றுவிட்டது.

ஊருக்கு வெளியே ஒரு பெரிய நந்தவனம். காடு மாதிரி மரங்கள் வளர்ந்து நிற்கும். மரங்களுக்குக் கீழே செடிகளும் கொடிகளுமாகப் பார்ப்பதற்கு இனிமையான காட்சியாக இருக்கும். அங்குத்தான் கொன்றை மரம் கொத்துக்கொத்தாய்ப் பூத்திருப்பதாகச் சொல்லிக்கொண்டு ஊரே வேடிக்கைபார்க்கச் சென்றுகொண்டிருக்கிறது.

        முல்லை யோசனையோடு நடையில் அமர்ந்தவாறு காய் நறுக்கிக்கொடுக்க, பொன்னி சமையலைக் கவனிக்க அடுப்படியில் நுழைந்தாள்.

அவர்கள் காலையுணவு உண்டு முடித்து வெளித்திண்ணையில் அமர்ந்து பல்லாங்குழி ஆட ஏற்பாடு செய்யும் வேளையில் போன தோழியர் கூட்டம் அதே சிரிப்பும் கும்மாளமுமாகத் திரும்பி வந்தது. ஒவ்வொருத்தர் கையிலும் ஒரு மஞ்சள் நிறக் கொன்றை மலர்க்கொத்து. மொட்டும் மலருமாகப் பார்ப்பதற்குப் பொற்காசுக் குவியல் போலத் தோற்றம் அளித்தன அந்தக் கொத்துகள். அவர்களுள் ஒருத்தி தன் கையில் இருந்த கொத்தைத் தூக்கிக் காண்பித்தாள்.

        “பாத்தியா? ஒவ்வொண்ணும் ஒரு காசுமால கெணக்கா”

        “ஏன்டீ, ஒன் வீட்டுக்கார்ரு கார் தொடங்கும்போதே வந்திருவேன்’னு சொன்னாரு’ன்னு சொன்னியே, இன்னும் வரல்லியே” என்று ஒருத்தி கேட்டதும் முல்லைக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

        “யார் சொன்னது கார் வந்துருச்சுன்னு?” என்று அவர்களைப் பார்த்து ஆவேசமாகக் கேட்டாள் முல்லை.

        சொன்னபடி வரவில்லையே என்று அவர்கள் தன் கணவனைப் பழிப்பதாக முல்லைக்குத் தோன்றியது.

        “அப்ப இதெல்லாம் என்னவாம்?” ஒருத்தி தன் கையிலிருந்த கொன்றை மலர்க் கொத்தைத் தூக்கிக் காண்பித்தாள்.

“இத்தன பூவும் பொய்யா?”

“எனக்குத் தெரியாது. அதொண்ணும் பூக்கவேயில்ல. இப்பத்தான் மொட்டுவிட்டுருக்கு. இத்தன நாளும் ஒண்ணும் கெடைக்காம இருந்த இந்த வண்டுக்கூட்டம்தான் போயி அந்த மொட்டையெல்லாம் மொச்சு மொச்சு பூக்கவச்சுருச்சு. அதுகூட ஒண்ணு ரெண்டுதான் வந்துருக்கு – அந்த எலைகளுக்கு நடுவுல நானும் வந்திருக்கேன்’னு சொல்லிக்கிட்டு. ஒங்க தலையில வச்சுருக்கிற அந்தத் தங்கச்சுட்டி, ராக்கொடி, திருகுவில்ல எல்லாமே ஒங்க கூந்தலுக்கு நடுவுல அங்க இங்க மின்னிக்கிட்டு இருக்கிறமாதிரி, அங்கொண்ணும் இங்கொண்ணுமா புதுசாக் கொஞ்சம் பூப் பூத்திருந்தா காரு வந்திருச்சுன்னு அர்த்தமா? இந்தக் கொன்றை என்னடீ, அந்தக் காடே வந்து சொன்னாலும் நானு ஏத்துக்கறமாட்டேன். இது கார் இல்ல. என் வீட்டுக்கார்ரு பொய்சொல்லமாட்டாரு”.

பாடல்: குறுந்தொகை 21 ஆசிரியர் : ஓதலாந்தையார் திணை : முல்லை

        வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு

        பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்

        கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்

        கானம் கார் எனக் கூறினும்

        யானோ தேறேன் அவர் பொய்வழங்கலரே.

அருஞ்சொற்பொருள்

ததைந்த = மலர்ந்த; இணர் = கொத்து; இடை இடுபு = தழைகளினிடையே இட்டு; கதுப்பு = கூந்தல்; தேறேன் = ஒத்துக்கொள்ளமாட்டேன்.

அடிநேர் உரை

        வண்டுகள் மொய்ப்பதால் மலர்ந்த நீண்ட கொத்துக்கள் (தழைகளினிடையே) விட்டுவிட்டு,

        பொன்னால் செய்யப்பட்ட தலைச்சுட்டி போன்ற அணிகள் அணிந்த பெண்களின்

        கூந்தலைப்போல் தோன்றும் புதிய பூக்களையுடைய கொன்றை மரமுள்ள

        (இந்த) நந்தவனம் (இது) கார்ப்பருவம் என்று தெரிவித்தாலும்

        நான் ஏற்கமாட்டேன்; அவர் பொய் சொல்லமாட்டார்.

        The forest –

        With the newly flowered  konRai trees with their interposing long bunches,

        Flowered  by the swarming of bees over them;

        Looking like the hairdo of damsels interposed with gold ornaments

        May say that the rains have come;

        But yet,

        I am not convinced, for, he wouldn’t utter a lie.