2. நகர்வுகள்

உயிர்கள் அல்லது பொருள்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு இடம்பெயர்வதையே நகர்வு (movement) என்கிறோம்.
இங்கு இவர்தல், இரிதல், ஊர்தல், இயலுதல் என்ற நான்குவிதமான நகர்வுகளைப் பற்றிக் காண்போம்.

1. இவர்தல்

இவர்தல் என்பதற்குப் பலவிதமான விளக்கங்களையும், எடுத்துக்காட்டுகளையும் தமிழ்ப் பேரகராதி குறிப்பிடுகிறது.

To rise on high, ascend; உயர்தல். விசும்பிவர்ந் தமரன் சென்றான் (சீவக. 959).

To go, proceed; செல்லுதல். இருவிசும் பிவர்தலுற்று (சீவக. 959).

To move about, pass to and fro; உலாவுதல். இரைதேர்ந்திவருங் கொடுந்தாண் முதலையொடு (மலைபடு. 90).

To spread, as a creeper; பரத்தல். தூவற்கலித்த விவர்நனை வளர்கொடி (மலைபடு. 514.)

To spring, leap, rush out; பாய்தல். குன்ற விறுவரைக் கோண்மா விவர்ந்தாங்கு (கலித். 86, 32).

எனவே, ‘இவர்’ என்பதற்கு, மேலே செல்(soar), உயர்(ascend), பர(spread), பாய்(leap) என்ற பொருள்கள் தரப்படுகின்றன.

சங்க இலக்கியங்களில் பன்முறை இச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவை அனைத்தும் அடிப்படையில் ஒரேவித நகர்வைத்தான்
குறிக்கின்றன.
முதலைகள் நடக்கும்போது, தம் நான்கு குறுங்கால்களையும் நிமிர்த்தித் தம் உடலை அவற்றுக்கு மேலே தூக்கி ஒவ்வொரு காலாக
எடுத்துவைக்கும். ஆனால், அவை இரையைப் பிடிக்கச் செல்லும்போது, நன்றாகத் தரையில் படுத்துக்கொண்டு, கால்களைப் பரப்பி, ஒரு
முன்னங்காலை முன்னெடுத்துவைத்து, அந்தக் காலால் தரையினைப் பற்றிக்கொண்டு, அடுத்த காலையும் எடுத்துவைத்து, அக்காலால்
தரையைப் பற்றிக்கொண்டு, என மாற்றி மாற்றி தன் உடம்பைத் தரையில் இழுத்துக்கொண்டு முன்னேறிச் செல்லும். இதுவே இவர்தல்.

இதனையே, இரை தேர்ந்து இவரும் கொடுந்தாள் முதலை என்கிறது மலைபடுகடாம் (90).

ஒரு குறிய மரம் அல்லது உயர்ந்த செடிகள் கொண்ட புதரின் அருகில் ஒரு அவரைக்கொடியோ, முல்லைக்கொடியோ கொடிவீசி எவ்வாறு படரும்?
முதலில் தனக்கு எட்டுகின்ற ஒரு சிறிய பிடிமானத்தை அது இறுகப்பிடிக்கும். பின்னர் அதைச் சுற்றி வளைக்கும்,
அதனை இறுக்கியவாறே தன் முனையை அக் கொடி உயர்த்தி நீட்டும். இதையே கொடி படர்கிறது என்கிறோம். இதனையே,

பனிப் புதல் இவர்ந்த பைம் கொடி அவரை – குறு 240/1
உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் – அகம் 289/2

என்கின்றன இலக்கியங்கள். இன்னும், பீர்க்கு, பாகல், புடலை, சுரை போன்ற கொடிகளில் இந்த நகர்வை வெளிப்படையாகவே பார்க்கலாம். இவ்வகைத் தாவரங்கள் முதலில் சிம்பு போன்ற ஒரு நீண்ட மெல்லிய இழையை வெளியில் நீட்டுகின்றன. அவை கிடைக்கும் பிடிமானத்தைக் கவ்விப் பிடித்துச் சுருட்டிக்கொள்கின்றன. இந்தப் பிடிமானத்தைக் கொண்டு கொடிகள் தம்மை இழுத்து நீட்டிக்கொள்கின்றன.
இதுதானே இவர்தல்.

இக் காட்சிகளைத்தான் நம் இலக்கியங்கள்,

பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10
சுரை இவர் பொதியில் அம் குடி சீறூர் – அகம் 287/5

என்று கூறுவதைப் பார்க்கிறோம்.

ஒரு ஆறு சில காலமாய் வறண்டுகிடக்கிறது எனக் கொள்வோம். ஒருநாள் தொலைவில் பெருமழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. வெள்ளம் வரவர வறண்ட ஆறு குடித்துக்கொண்டே இருக்கும். எனவே வெகு தொலைவுக்குப்பின் வெள்ளத்தின் வேகம் வெகுவாகக்
குறையும், நீரின் முன்பகுதி கொஞ்சம் கொஞ்சமாகத் திக்கித்திக்கி முன்னேறிவரும். இதுவும் இவர்தல்தான்.

குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி – மது 245
இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான் – பரி 16/27

என்பதனால் உயிரற்ற பொருள்களின் நகர்வும் இவர்-வகையைச் சேரும் என அறிகிறோம்.

காலையில் ஞாயிறு விரிகதிர் பரப்பியவண்ணம் எழுகின்றது. அந்தக் கதிர்களால் வானத்தை இறுகப்பிடித்தவண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக உன்னி உன்னி மேலே உயர்கின்றது. உச்சிக்கு வந்த ஞாயிறு மேற்கில் இறங்குகிறது. அப்போது மடமடவென்று
சரிந்துவிடாமல், மீண்டும் தன் கதிர்களால் வானத்தை இறுகக் கவ்விப்பிடித்த வண்ணம் மெல்ல மெல்ல இறங்கி மலைக்கும் பின்னால் மறைகிறது.
என்ன அருமையான கற்பனை பார்த்தீர்களா!

விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன – புறம் 228/8 (இது எழுஞாயிற்றின் இவர்தல்)
சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே – நற் 67/1,2 (இது விழுஞாயிற்றின் இவர்தல்)

ஞாயிறு இவர்கிறது என்ற சொல்லாட்சியினால் விளைந்த அழகுக் கற்பனை இது!

சிங்கங்கள் செங்குத்தான பாறைகளைப் பற்றிக்கொண்டு ஏறுமா? ஏறுவதைப் பார்த்திருக்கிறார் சங்கப் புலவர். தந்தை ஒருவன் தரையில் கால்நீட்டிச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கிறான். குழந்தையின் தாய், குழந்தையை அவன் மடியில் கிடத்துகின்றாள். குப்புறப் படுத்த குழந்தை அண்ணாந்து பார்த்து தந்தையின் கழுத்தில் கிடக்கும் முத்துமாலையைப் பிடிக்கத் தாவுகிறது. கைக்குழந்தைதானே! முடியாததால், அவன் மார்பின் மீது ஏற முயல்கிறது. தந்தை குறும்பாக முத்து மாலையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்கு இழுக்கிறான். தந்தையின் மார்பை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, ஒவ்வொரு கையாக மேலே தூக்கிப்போட்டுத் தந்தையின் மார்பில் ஏற முயலுகிறது குழந்தை. இதுதானே இவர்தல். இந்தக் காட்சியைக் கண்ட புலவர், குழந்தை தந்தையின் மார்பில் பாய்ந்து ஏறுவது, குன்றத்து இறுவரையில் கோள்மா இவர்ந்து ஏறுகிறதைப் போல் இருக்கிறது என்கிறார்.

இறுவரை என்றால் என்ன? ஒரு மலையின் சரிவில் இறங்கிக்கொண்டே வருகிறீர்கள். திடீரென்று மலையைக் காணோம்! மலை இற்றுவிட்டது. இறு என்பதற்கு அறு, முறி, முடிவுறு என்று பொருள். மலை அறுந்தது என்றால், எட்டிப்பாத்தால் அதலபாதாளம். ஆங்கிலத்தில் cliff என்போம். கொடைக்கானல் suicide point போல. இந்த இறுவரையின் கீழிருந்து ஒரு சிங்கம் ஏறுவதைப் போலிருந்ததாம்.
குழந்தை தந்தையின் மார்பில் ஊர்ந்துகொண்டு ஏறிச் செல்வது. கலித்தொகையில் இக் காட்சியைக் காண்கிறோம்.

குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு
தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பு இலி பெற்ற மகன் – கலி 86/32-34

ஆக, இவர்தலில் பலவகை இல்லை. அடிப்படையில் எல்லாம் ஒன்றே.

2. இரிதல்

இன்றைக்கு வழக்கிழந்துபோன அருமையான சங்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இரிதல் என்பதற்குத் தமிழ்ப்பேரகராதி தரும் பொருள் இதுதான்:

1. To be destroyed, ruined; கெடுதல். மாறிரியச்சீறி (பு. வெ. 2,9).

2. To retreat; to flee away, as a defeated army; to scamper away through fear; ஓடுதல். புனலொழுகப் புள்ளிரியும் (நாலடி. 212.)

3. To fall away, as a garment; to drop; to recede; விலகுதல். உத்தரியங்களு மிரிய வோடுவோர் (கம்பரா. ஊர்தேடு. 51.)

4. To drop, as perspiration; to ebb, as the tide; வடிதல்.

5.To fear, dread; அஞ்சுதல். (திவா.)

வழக்கம்போல் இச்சொல் இலக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று காண்போம்.

தொண்டைமான் இளந்திரையனின் வள்ளண்மையைப் பாடவந்த புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பாணன் ஒருவன் அந்த மன்னனைத் தேடிச் சென்று பரிசில் பெறுவதாகத் தனது பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் கூறுகிறார். பலவித நிலங்களைக் கடந்து சென்ற பாணன் அறுவடைக்குத் தயாராக இருக்கும் முல்லைநிலக் காடு ஒன்றன் வழியாகச் செல்கிறான். முல்லைநிலக் காடுகள் வானம்பார்த்த பூமியாதலால், விதைப்புக்குப் பின் பொதுவாக மக்கள் காட்டின் உள்ளே செல்லமாட்டார்கள். அப்போது, புதராய் வளர்ந்துகிடக்கும்
பயிர்களுக்கிடையே காடைக்கோழிகள் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்து வாழும். இவை மிக்க அச்சம் கொண்டவை. சிறிதளவு ஆளரவம் கேட்டாலேயே வெருண்டு ஓடுபவை. அறுவடைக்காரர்கள் திடீரென்று பயிருக்குள் நுழைந்தவுடன் இவை அச்சங்கொண்டு பதறியடித்துச் சிதறி ஓடுகின்றன. இதைக் கூறவந்த புலவர்:

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை
அரி புகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் – பெரும். 201-205

என்கிறார். குறும்பூழ் என்பது காடைப்பறவை. இதனை quail bird என்பர். இந்தப் பறவையைப் பற்றி விலங்கியலார் கூறுவதைப் பாருங்கள்:

Jungle bush quail bird is a terrestrial species, feeding on seeds and insects on the ground. It is notoriously difficult to see, keeping hidden in crops, and reluctant to fly, preferring to creep away instead. The natural habitat of the Jungle bush quails mostly consists of the Indian dry grasslands.

The bird is usually seen in small coveys and is quite shy by nature. One can get a glimpse of the Jungle bush quails of India mainly when they burst out into flight from under the vegetation.

இரிதல், இரியல்போகுதல், இரிவுறுதல் என்பதற்குரிய நேர்ப்பொருளை உணரவேண்டுமானால் இந்தக் காட்சியை மனக்கண்ணால் கண்டுணரவேண்டும்.
ஒரு பேருந்து நிறுத்தத்தில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருக்கின்றனர். ஒரு பேருந்து வருகிறது. நிறுத்தத்தில் நிற்காமல் கொஞ்சம் தள்ளிப்போய் நிற்கிறது. உடனே கூட்டம் அதன் நுழைவாயிலை நோக்கி விழுந்தடித்துக்கொண்டு ஓடுகிறது. உள்ளே நுழைய கூட்டம் அலை மோதுகிறது. ஒரு சிலரை மட்டும் ஏற்றிக்கொண்டு பேருந்து சென்ற பின்னர், கூட்டம் திரும்பி வந்து அடுத்த பேருந்துக்காகக்
காத்துக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு நிறைய இடங்களில் இது போன்ற காட்சிகளை நாம் பார்க்கிறோம். சில நேரங்களில் மெத்தப் படித்தவர்களும் கூட காத்திருக்கப் பொறுமை இல்லாமலோ அல்லது நேரம் இல்லாமலோ இவ்வாறு நடந்துகொள்வதைப் பார்க்கிறோம்.

கானக்கோழிகள் திடீரென்று வந்த பேரொலியைக் கேட்டு இவ்வாறு அலறிப்புடைத்துக்கொண்டு ஓடுவதைப் பெரும்பாணாற்றுப்படையில் பார்த்தோம். இவ்வாறு அச்சத்தினால் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடுவதையோ அல்லது ஆர்வத்தினால் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவதையோ
நமது இலக்கியங்கள் ‘இரியல் போகுதல்’ என்று சொல்கின்றன.

அப்படிப்பட்ட இன்னொரு காட்சியைக் கடியலூர்க்காரர் இளந்திரையனின் அரண்மனை வாயிலில் காண்கிறார். அவனது வாயில் பரிசிலர்க்கு அடையா வாயிலெனினும், ஏனையோர் அவனைப் பார்ப்பதற்குக் காத்திருக்கவேண்டும். திடீரென்று வாயில் கதவுகள் திறக்கும். அப்போது காத்திருக்கும் கூட்டம் விழுந்தடித்துக்கொண்டு வாயிலை நோக்கி ஓடும். ஒரு சிலரே உள்ளே அனுமதிக்கப்பட்ட பின்னர், கூட்டம் திரும்ப வந்து காத்திருக்கத் தொடங்கும். அப்படி ஓடிக் களைத்த கூட்டத்தில் யார் யார் இருந்தனர் தெரியுமா? இளந்திரையனின் நட்பை வேண்டியும், அவனிடம் அடைக்கலம் கேட்டும் வந்த மன்னர்கள் கூட்டமே அது என்று புலவர் கூறுகிறார்.

அந்தச் சூழ்நிலையில் புலவருக்குத் தான் முன்பு கண்ட ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

ஒரு முறை புலவர் வடநாட்டில் உள்ள காசிக்குச் சென்றிருந்தார். காசிக்குச் செல்வதற்குக் கங்கை நதியைக் கடக்கவேண்டும். அதற்குப் படகுத் துறைகள் உண்டு. இவர் போன சமயம் அங்கு ஒரே ஒரு படகு மட்டும்தான் இயங்கிக்கொண்டிருந்தது. படகுத்துறையில் ஒரு பெருங்கூட்டம் காத்துக்கொண்டிருந்தது. அப்பொழுது மறுகரையிலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு படகு வருவதை இவர் கண்டார். தூரத்தில் படகு வருவதைப் பார்த்த கூட்டம் ‘சட்’டென்று எழுந்து ஆற்றை நோக்கி ஓட ஆரம்பித்தது. ஒரே தள்ளுமுள்ளு – முண்டியடித்துக்கொண்டு
முதலில் ஏறுவதற்கு ஒருவரோடொருவர் போட்டி. இந்தக் களேபரத்தைக் கண்ட புலவர் சற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். படகு சிறியதுதான். எனவே கொஞ்சம் ஆட்களை மட்டும் ஏற்றிக்கொண்டு மீண்டும் மறுகரையை நோக்கி நகர ஆரம்பித்தது. ஏறமுடியாமல் திரும்பிய மக்கள் கூட்டம் படகின் அடுத்த வருகைக்காக மீண்டும் காத்திருக்க ஆரம்பித்தது. இளந்திரையனைப் பார்ப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு வந்த மன்னர்கள் கூட்டத்தைப் பார்த்த புலவருக்குத் தான் காசியில் பார்த்த நிகழ்ச்சிதான் நினைவுக்கு வந்தது. இதோ அவர் கூறிய அடிகள்:

நட்புக் கொளல் வேண்டி நயந்திசினோரும்
துப்புக் கொளல் வேண்டிய துணையிலோரும்
கல் வீழ் அருவி கடல் படர்ந்த ஆங்கு
பல் வேறு வகையின் பணிந்த மன்னர்
இமையவர் உறையும் சிமைய செவ் வரை
வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டு
பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை
பெரு நீர்ப் போகும் இரியல் மாக்கள்
ஒரு மரப் பாணியில் தூங்கி ஆங்கு

தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ
செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 425 – 435

அவனிடம் நட்புக் கொள்வதை வேண்டி விரும்பினவர்களும்,
அவன் வலிமையைத் துணையாகக்கொள்ளக் கருதிய உதவியில்லாதவர்களும்,
மலையிலிருந்து விழுகின்ற அருவி கடலில் படர்ந்ததைப் போல் பலவேறு வகைகளாலும் கீழ்ப்படிந்த அரசர்கள் –
தேவர்கள் இருக்கும் உச்சியையுடைய செவ்விய மலையின்கண்
வெண் நிற ஓடைகள் கிழித்தோடுவதால் பளபளக்கும் ஒளியுடைய நெடிய சிகரத்திலிருந்து
பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின்
பெரும் நீரைக் கடந்துபோக ஓடித் தவித்த மக்கள்
ஒரேயொரு தோணி அடுத்த முறை வரும் காலத்திற்காகக் காத்திருத்ததைப் போல
குறையாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு,
தக்க நேரத்தைப் பார்த்திருக்கும் வளம் மிகுந்த முற்றத்தினையுடைய;

அடுத்து ஓர் அருவிக்காட்சியைக் காண்போம். இது எப்போதும் நிதானமாக ஓடும் அருவி அல்ல. திடீர் மழையால் மலைச் சரிவில் பெருக்கெடுத்து ஓடிவரும் புனல்வெள்ளம். மரம் செடி கொடிகளைத் தாக்கி உருட்டிவிட்டு, விலங்கினங்களும்
பறவையினமும் வெருண்டு சிதறியோட, மலைச் சரிவில் பெரும் முழக்கத்தை உண்டாக்கி ஓடிவந்து ஒரு பெரும் பள்ளத்தில் ‘தடால்’
என்று விழும் புயலருவி. நக்கீரனார், திருமுருகாற்றுப்படையில் பழமுதிர்சோலை மலையில் புரண்டுவரும் அருவியைப் பற்றிக் கூறுவதைப் பாருங்கள்:

பல உடன்
வேறு பல் துகிலின் நுடங்கி, அகில் சுமந்து
ஆர முழு முதல் உருட்டி, வேரல்
பூ உடை அலங்கு சினை புலம்ப, வேர் கீண்டு
விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய, நன் பல
ஆசினி முது சுளை கலாவ, மீமிசை
நாக நறு மலர் உதிர, யூகமொடு
மா முக முசுக் கலை பனிப்ப, பூ நுதல்
இரும் பிடி குளிர்ப்ப வீசி, பெரும் களிற்று
முத்து உடை வான் கோடு தழீஇ, தத்துற்று,
நல் பொன் மணி நிறம் கிளர, பொன் கொழியா,
வாழை முழு முதல் துமிய, தாழை
இளநீர் விழுக் குலை உதிரத் தாக்கி,
கறிக் கொடி கரும் துணர் சாய, பொறிப் புற
மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇ,
கோழி வயப் பெடை இரிய, கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய, கரும் கோட்டு
ஆமா நல் ஏறு சிலைப்ப, சேணின்று
‘இழும்’-என இழிதரும் அருவி
பழமுதிர்சோலை மலை – திரு 295 – 317

பலவும் ஒன்றாகச் சேர்ந்த,
வேறு வேறான பல துகில் கொடிகளைப் போன்று அசைந்து, அகிலைச் சுமந்துகொண்டு,
சந்தனமரத்தின் முழு அடிமரத்தைப் புரட்டித் தள்ளிக்கொண்டு, சிறுமூங்கிலின்,
பூவையுடைய அசைகின்ற கொம்பு வருந்த, வேரைப் பிளந்து,
வானத்தை முட்டிநிற்கும் உயர்ந்த மலையில் சூரியனைப் போன்று (தேனீக்கள்)செய்த
குளிர்ச்சியானதும் மணக்கின்றதுமான விரிந்து பரந்த தேன்கூடு கெட, நல்ல பல
ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, (மலையின்)உச்சியில்
சுரபுன்னை மரத்தின் நறிய மலர்கள் உதிர, கருங்குரங்கோடு,
கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, புள்ளிகள் கொண்ட நெற்றியையுடைய,
கரிய பெண் யானை குளிரும்படி வீசி, பெரிய ஆண்யானையின்,
முத்தை உடைய வெண்மையான கொம்புகளைத் தழுவி, தத்துதல் அடைந்து
நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும்படி செய்து, (பொடியான) பொன்னைத் தெள்ளி,
வாழையின் பெரிய அடிமரம் துணிக்கப்பட, தென்னையின்
இளநீரையுடைய நன்கு பருத்த குலைகள் உதிர மோதி,
மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாய, பொறியையுடைய முதுகினையும்
மடப்பத்தினையுடைய நடையினையும் உடைய மயில்கள் பலவற்றோடே அஞ்சி,
கோழியின் வலிமையுடைய பேடைகள் விழுந்தடித்து ஓட, ஆண் பன்றியுடன்
கரிய பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறங்கொண்ட மயிரையுடைய உடம்பையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
பெரிய கல் வெடித்த முழைஞ்சில் சேர, கரிய கொம்பினையுடைய
ஆமாவினுடைய நல்ல ஏறுகள் முழங்க, உயரத்தினின்றும்
இழும் என்னும் ஓசைபடக் குதிக்கும் அருவி,

வாழை அடியோடு சாய்கிறது. தென்னைமரத்தைக் குலுக்கிய குலுக்கலில் இளநீர்க்காய்கள் கொத்துக்கொத்தாய் திடும் திடும்-என உதிர்கின்றன. மயில்கள் வெருண்டோடுகின்றன. கானக்கோழியின் வயப்படை இரிந்து ஓடுகிறது. கோழி வயப்பெடை இரிய என்கிறார் புலவர். வயப்பெடை என்பது வலிமையுள்ள விடைக்கோழி. வயதான கோழிகளும் வயதில்லாக் குஞ்சுகளும் குடுகுடு-வென்று ஓடியிருக்கும். இது வயப்பெடை அல்லவா? வெடித்துப் பறக்கிறது. இதுதான் இரிதல்.

3. ஊர்தல்

ஊர்தி என்பது வாகனம். வாகனத்தை நாம் ஏன் ஊர்தி என்கிறோம்? Very simple. அது ஊர்ந்து செல்கிறது, இல்லையா? ஆனால், உண்மையில் பாம்பு ஊர்வது போலவா வாகனம் ஊர்கிறது? சக்கரங்கள் உருளுவதால்தான் வாகனம் நகர்கிறது. அப்புறம் ஏன் அதனை ஊர்தி என்கிறோம்?

மிக மெதுவாகச் செல்வதையும் ஊர்வது என்கிறோம். எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பார்கள். வாகன நெருக்கடியில் அனைத்து வாகனங்களும் மிக மெதுவாகச் சென்றால், ஊர்ந்து ஊர்ந்து செல்வதாகச் சொல்கிறோம். ஆனால் வேகமாகச் செல்வதையும் ஊர்தி என்றுதான் சொல்கிறோம். ஊர்தல் என்பதற்கு இன்னொரு பொருள் சவாரி செய்தல் என்பது. ஊர்தல் என்பதற்கு to ride, as a horse; to drive, as a vehicle; என்று தமிழ்ப் பேரகராதி ஒரு பொருள் சொல்கிறது. காதலில் தோற்றவன் பனைமடலால் குதிரை போல் செய்து அதில் ஏறிச் செல்வது மடலேறுதல் அல்லது மடலூர்தல் எனப்படும். இது அகனைந்திணையில் அடங்காத பெருந்திணை ஒழுக்கம்.

ஞாயிறாகிய பகலவன் ஒரு சக்கரம் கொண்ட தேரின் மீது ஏறி உலகை வலம்வருகிறான் என்பது நம்பிக்கை.

ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன் – அகம் 360/2

என்ற அகப்பாடல் அடி கதிரவன் ஊர்ந்துசெல்லும் தேர் அதனுடைய ஊர்தி எனக் கூறுகிறது.

வலவன் ஏவா வான ஊர்தி/எய்துப என்ப – புறம் 27/8,9

எனப் புறப்பாடல் கூறுவதையும் பார்க்கலாம்.

விசும்பின், மீன் பூத்து அன்ன உருவ பன் நிரை ஊர்தியொடு நல்கியோனே – புறம் 399/30-32

என்ற புறப்பாடல் காளையை ஊர்தி என்கிறது. பசுக்கூட்டத்தை நடத்திச் செல்ல ஊர்ந்து செல்வதற்கு ஏற்ற காளையே இங்கு ஊர்தி எனப்படுகிறது.

முல்லைத் தலைவன் வினைமேற் சென்று, வினைமுடித்து மீண்டும் தேரில் வருகிறான். அவனுக்கு அவசரம். தேர் மெதுவாக ஓடுவது போல் தோன்றுகிறது அவனுக்கு. விரைந்து தேரை ஓட்டுமாறு தேர்ப்பாகனுக்குக் கட்டளையிடுகிறான் தலைவன். அதனை,

வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9

என்று தலைவன் கூறுவதாக அகப்பாடல் கூறுகிறது.

இருப்பினும், மெதுவாகச் செல்லுதல், பரவுதல் போன்ற வழக்கமான பொருளிலும் ஊர்தல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தலைவன் பிரிவை எண்ணி ஏங்கியிருக்கும் தலைவியின் நெற்றி வாட்டமுறுகின்றதாம். இதனைப் பசலை பிடித்தல் என்றும் பசப்பு ஊர்தல் என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.

பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே – நற் 197/2
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே – குறு 205/7
பிறை நுதல் பசப்பு ஊர பெரு விதுப்பு உற்றாளை – கலி 99/10
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பு ஊர – அகம் 205/6

இங்கெல்லாம் ஊர்தல் என்பது மெதுவாகப் பரவுதல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.

ஊர்தல் என்பதன் பொருளோடு தொடர்பு அற்றதாயினும், அச் சொல்லோடு தொடர்பு உள்ள ஓர் அழகிய சொல்லாக்கம் சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. சில சமயங்களில் வானத்தில் இலேசான மேக மூட்டம் காரணமாக, ஞாயிறோ அல்லது திங்களோ ஒரு பெரிய ஒளிவட்டத்துடன் (Halo) காணப்படுவதைப் பார்த்திருக்கிறோம். இதை நம் இலக்கியங்கள் ஊர்கொள்ளுதல் என அழைக்கின்றன.

தலைவனை இரவுக்குறிக்கண் வரச்சொல்லும் வண்ணம் தோழி அவனிடம் கூறுகிறாள்:

அரும் கடிக் காவலர் சோர்பதன் ஒற்றிக்
கங்குல் வருதலும் உரியை பைம் புதல்
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன
நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே – அகம் 2/14-17

நிறைமதிநாளன்றுதான் திங்கள் நீண்ட நேரம் வானில் இருக்கும். எனவே அது நெடு வெண் திங்கள் எனப்பட்டது. அது நள்ளிரவில் தலைக்கு நேர் மேலே நின்றிருக்கும். எனவே மிக அதிக ஒளி தரும். ஆனால் அது ஒளிவட்டம் போட்டிருந்தால்
மேக மூட்டத்தால் ஒளி மங்கித் தெரியும். எனவே அஞ்சாமல் தலைவியைச் சந்திக்க வரலாம் என்று குறிப்புக் கொடுக்கிறாள் தோழி.

மாட்டு வண்டியின் சக்கரத்தைப் பார்த்திருக்கிறீர்களா? நடுவில் அச்சுக்கோக்கும் இடம் சிறிய வட்டமாக இருக்கும். அதனைக் குறடு என்பர். அதில் சுற்றிவர ஆரங்கள் கோக்கப்பட்டு, அந்த ஆரங்களின் தலையில் சக்கரப் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.
அந்தச் சக்கர விளிம்பில் இரும்புப் பட்டை இருக்கும். இதனைத் திங்கள் ஊர்கொண்டதனோடு ஒப்பிடுகிறார் புலவர்.

பருவ வானத்து பால் கதிர் பரப்பி
உருவ வான் மதி ஊர்கொண்டாங்கு
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு- சிறு 250-253

4. இயலுதல்

இயல் என்ற வினைச்சொல்லுக்கு இப்போது கூடியதாகு (Be possible) என்ற பொருளே கொள்ளப்படுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் நட அல்லது உலாவு என்ற பொருளிலேயே இச் சொல் கையாளப்பட்டுள்ளது.
பெரும்பாலான இடங்களில் மயில்களும், இளம்பெண்களும் நடந்துவருவதையே இயல் என்ற சொல்லால் குறிக்கின்றனர்.

வரை பொலிந்து இயலும் மட கண் மஞ்ஞை - மலை 509
மெல்ல இயலும் மயிலும் அன்று - கலி 55/13
பீலி மஞ்ஞையின் இயலி கால - பெரும் 331
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி/ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு - குறு 264/2,3
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் - அகம் 82/9

என்பன மயிலின் நடையைக் குறிப்பன.

அன்னிமிஞிலியின் இயலும்/நின் நல தகுவியை முயங்கிய மார்பே - அகம் 196/12,13
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி/திண் சுவர் நல் இல் கதவம் கரைய - மது 666,667
நன் நுதல் அரிவையொடு மென்மெல இயலி/வந்திசின் வாழியோ மடந்தை - ஐங் 175/2,3
மை அணல் காளையொடு பைய இயலி/பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை - ஐங் 389/2,3
மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி/கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல - பதி 78/5,6
இன் நகை விறலியொடு மென்மெல இயலி/செல்வை ஆயின் செல்வை ஆகுவை - புறம் 70/15,16

என்பன இளமங்கையரின் நடையைக் குறிப்பன.

அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் - நற் 264/3,4

நன் மா மயிலின் மென்மெல இயலி
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது - மது 608,609

விரை வளர் கூந்தல் வரை வளி உளர
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி - புறம் 133/4,5

அன்ன மாண் பெடையின் மென்மெல இயலி
கையறு நெஞ்சினள் அடைதரும் - அகம் 279/15,16

என்பன மயில் போல் இயலும் இளமங்கையரின் நடையைக் குறிப்பன

தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது - நற் 260/3

வினை அமை பாவையின் இயலி நுந்தை - நற் 362/1

தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி / வெம் போர் செழியனும் வந்தனன் எதிர்ந்த - புறம் 79/3,4

கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் / வலன் உயர் மருப்பின் நிலம் ஈர் தட கை - நற் 194/3,4

கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் - கலி 52/6

கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி
செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால்
யாழிசைப் பறவை இமிரப் பிடிபுணர்ந்து - அகம் 332/6,7,8 

என்பன களிற்றின் நடையையும், களிறு போன்ற தகைமை உள்ளோரின் நடையையும் குறிக்கின்றன. இவை முரணாகத் தெரியவில்லையா?

இதனைப் புரிந்துகொள்ளவேண்டுமென்றால் முதலில் மயிலின் நடை எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்ளவேண்டும்.

மயில் நடக்கும்போது அதன் கால்களைக் கவனியுங்கள். உறுதியாக எட்டு எடுத்துவைப்பதைக் காணலாம். அதில் தயக்கம் இல்லை. தளர்வு இல்லை. உடல் நிமிர்ந்து இருக்கும். அதில் ஒரு தன்னம்பிக்கை இருக்கும். ஆக, தயக்கமோ, தளர்வோ, அச்சமோ, கூச்சமோ இல்லாமல் துணிச்சலுடன் கால்களை எடுத்துவைத்து நடப்பதே இந்த இயலுதல். இங்கே மெல்ல இயலும், மென்மெல இயலி என்று வரும் தொடர்கள் மெதுவாகச் செல்வதையே குறிக்கின்றனவேயொழிய தயக்கத்தைக் குறிக்கவில்லை. மை அணல் காளையொடு பைய இயலும் பாவையின்
நடையில் தயக்கமும் அச்சமும் இருக்கமாட்டா அன்றோ!

மதுரை மாநகரில், கணவரின் முயக்கத்தில் இனிது துஞ்சிய காதல் மனைவியர், காலையில் விழித்துத் தம் அன்றாடப் பணியைத் தொடங்க எழுந்து வந்து வாசலைத் திறக்கும் காட்சியை மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் விவரிக்கிறார்:

நயந்த காதலர் கவவு பிணி துஞ்சி
புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பி
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி
திண் சுவர் நல் இல் கதவம் கரைய – மதுரைக். 663-667

காலின் கொலுசுகள் ‘கலீர்-கலீர்’-என்று தெழிக்க அவர்கள் நடந்து வருகிறார்களாம். அத்துணை சுறுசுறுப்பு. அதுவே இயலுதல்.