4. அஞ்சுதல்

அச்சம் அல்லது அஞ்சுதல் என்பதற்கு உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

4.1 அச்சம்

நீதிமன்றத்தில் உங்கள் சார்பாக ஒரு வழக்கு நடக்கிறது. அன்றைக்குத் தீர்ப்பு நாள். தீர்ப்பு எவ்வாறு இருக்குமோ, நடுவுநிலையான
தீர்ப்பாக இல்லாமற்போய்விடுமோ என்ற உணர்வு உங்களுக்குள் தோன்றுமல்லவா! அதுதான் அச்சம்.

பாண்டியன் நெடுஞ்செழியனின் அவைக்கு இவ்வாறு வருவோரின் இத்தகைய உணர்வுகளை நீக்கி, தராசு முள்ளைப் போன்ற நடுவுநிலையுடன் பாண்டியனின் அறங்கூறவையம் இருக்கிறது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் கூறுகிறார்:-

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத்தாகி
சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மதுரைக்காஞ்சி 489-492

தலைவி ஒருத்தி காதல்கொள்கிறாள். இது தோழிக்கும் தெரியும். காதல் ஏக்கத்தால் தலைவி நோய்வாய்ப்படுகிறாள். இதைக் கண்ட செவிலி தோழியை விசாரிக்கிறாள். தலைவியின் நோயின் காரணம் கேட்கிறாள்.

இப்போது தோழியின் நிலை என்ன? செவிலியிடம் உண்மையைச் சொன்னால் அதனால் தலைவியின் காதலுக்கு ஊறு நேரலாமோ என்ற உணர்வு; தலைவிக்காகச் செவிலியிடம் உண்மையை மறைத்தால் தலைவியின் காதல்நோய் மிகுமே என்ற உணர்வு. யாருக்காகப்
பேசினாலும் கேடு வருமே என்கிற உணர்வு. இங்கே தோழிக்கு இரண்டு வகையான தீர்வுகளில் எதை எடுப்பது என்ற தடுமாற்றம் மேலிடுகிறது. பகைமையுணர்வு கொண்டு போரிட எதிர்த்து நிற்கும் இரு பெரு வேந்தரிடையே பேசிப் பகைமையைத் தீர்க்க முயலும் ஒரு சான்றோனைப் போல தோழி தவிக்கிறாள்.

இகல்மீக்கடவும் இருபெரும் வேந்தர்
வினையிடை நின்ற சான்றோர் போல
இருபேர் அச்சமொடு யானும் ஆற்றலென் – குறிஞ்சிப்பாட்டு 27 – 29

காதல்கொண்ட ஒரு தலைவன் மணமுடிக்கக் காலம் தாழ்த்துகிறான். இதனால் காதலி மனம் வருந்துகிறாள். அவளது தோழி இதனைத் தலைவனுக்கு உணர்த்த எண்ணுகிறாள். ஒருநாள் தலைவியைச் சந்திக்கக் காதலன் வரும் நேரம் பார்த்து, அங்கு இருக்கும் வண்டினைப் பார்த்துக்கூறுவதுபோல் உரக்கப் பேசுகிறாள்.

“ ஏ வண்டே, நீ போய்த் தலைவி இன்னும் தன் வீட்டாரிடம்தான் (உயிருடன்தான்) இருக்கிறாள் என்று சொல். அப்படிச் சொல்வதால் உனக்கு ஒன்றும் நேரிடாது. நல்ல சொல் சொல்ல அச்சம் தேவையில்லை அல்லவா!” என்கிறாள்.

அம்ம வாழியோ அணிச்சிறைத் தும்பி
நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர்நாட்டு
அண்ணல் நெடுவரை சேறியாயின்
—— —— —— —– –
தமரின் தீராள் என்மோ … குறுந்தொகை-392

அச்சம் என்பது ஏதேனும் தவறு அல்லது ஊறு நேர்ந்துவிடுமோ என்ற ஐயத்தினால் ஏற்படுவது.

4.2 உட்கு

தன் காதலியைச் சந்திக்கக் காதலன் ஒருவன் சென்றுகொண்டிருக்கிறான். குறுக்கே ஓர் ஆறு பெருவெள்ளத்துடன் ஓடுகிறது.
அதை எப்படிக்கடக்கலாம் என்று அவன் யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, சற்றுத்தள்ளி, ஒரு மதங்கொண்ட யானை சற்றும் அஞ்சாமல்
இறுமாப்புடன் நீருக்குள் இறங்குகிறது. ஆனால் ஆற்றுநீரின் வேகம் அந்தக் களிற்றியானையின் செருக்கை அழித்து அதனைப் புரட்டியெடுத்து
இழுத்துக்கொண்டு செல்கிறது. இதைப் பார்த்த அவன் மனம் துணுக்குறுகிறது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையைப் பார்த்த அவன்,
நீருக்குள் இறங்க எடுத்துவைத்த காலைச் ‘சட்’-டென்று பின்னிழுத்துக் கரையேறுகிறான். அவன் மனம் ‘படக் படக் என்று அடித்துக்கொள்கிறது.
அவன் உள்ளத்தை நடுங்கவைத்த அந்த வெள்ளம் அவனுக்குள் ஏற்படுத்தியதுதான் உட்கு.

மராஅ யானை மதம்தப ஒற்றி
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் :18/4,5

ஒரு நள்ளிரவு – கும்மிருட்டு. மழை ஓங்கி அடித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் திறந்த வெளியில் ஒரு மறைவில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். மேகங்கள் ‘கடமுட’- வென்று உருமிக்கொண்டிருக்கின்றன. அப்போது பளீரென்று ஒரு பெரிய மின்னல் கண்ணைக் கூசவைக்கிறது. அடுத்த நொடியில் ‘சடசட’-வென்று ஆரம்பித்த ஒலி, மிகப்பெரிய ஓசையுடன் ‘டமார்’-என்று ஒரு பேரிடியாய் முழங்குகிறது. உங்கள் உடம்பே ஒரு குலுங்கு குலுங்குகிறது. அந்த அதிர்வினால் ஏற்பட்ட மனக்கலக்கம் உண்டாக்கியதுதான் உட்கு.

பானாள்
உத்தி அரவின் பைத்தலை துமிய
உரவுரு முரறும் உட்குவரு நனந்தலை – அகம் 202/9-11

ஆக, உள்ளத்தை நடுக்கி, நிலைகுலைத்துக் கலக்கத்தை ஏற்படுத்தும் அச்சமே உட்கு

4.3 உரு

ஒரு குறுகலான சந்திற்குள் நுழைகிறீர்கள். சற்றும் எதிர்பாராதவண்ணம் ஒரு பெரிய யானை – பழக்கியதுதான் – அதன் பாகன் மேலே அமர்ந்திருக்க, உங்களை ஒட்டி விரைவாகக் கடந்துசெல்கிறது. சிலநொடிகள்தான். இருப்பினும் அந்த பிரமாண்ட உருவம் உங்களுக்கு
மிக அருகில் கடந்துசெல்லும்போது அந்தப் பேருருவம் உங்கள் இதயத்துடிப்பைச் சற்று அதிகரிக்கும் அல்லவா!

அந்தப் பேரளவு ஏற்படுத்திய திகைப்பினால் உண்டாகும் கலக்கம் கலந்த அச்சமே உரு.

ஒரு பேய்க்காட்சியை இவ்வாறு காட்டுகிறது திருமுருகாற்றுப்படை

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்
சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்க
50 பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் – திரு.47 – 51

ஒரு பேரளவைப் பார்த்துக் கொள்ளும் அச்சம் உரு. ஆனால் அந்தப் பேரளவு என்பது தோற்றத்தில்மட்டும்தான் இருக்கவேண்டும்
என்பதில்லை.

சோழப்பேரரசு எத்துணை வலிமை மிக்கது? எத்துணை மாண்புடையது? அதன் தலைமைப் பொறுப்பை வகிப்பதென்பது எளிதான செயல் அன்று. அதற்கு உரித்தானாய்ப் பிறந்த கரிகாலனைச் சிறுவயதில் வஞ்சனையால் சிறையிலடைத்தனர்.
சீறும் புலியாய்ச் சிறையினை உடைத்து, எதிர்த்தோரைக் கொன்று தன் உரிமைத் தாயத்தை அடைகிறான் கரிகாலன்.

அதனைப் பாட வந்த புலவர் கூறுகிறார்:

பிறர் பிணியகத்து இருந்து, பீடு காழ் முற்றி,
அரும் கரை கவியக் குத்தி, குழி கொன்று,
பெரும் கை யானை பிடி புக்காங்கு,
225 நுண்ணிதின் உணர நாடி, நண்ணார்
செறிவு உடை திண் காப்பு ஏறி, வாள் கழித்து
உரு கெழு தாயம் ஊழின் எய்தி – பட்டினப்பாலை 222 – 227

சோழப்பேரரசின் அரசுரிமையை உருகெழு தாயம் என்கிறார் புலவர். அதன் மாண்பு அத்துணை பெரிது.

காதல் கொண்ட ஒரு தலைவி தலைவனைச் சந்திக்கமுடியாமல் ஏங்குகிறாள். அந்த ஏக்கத்தில் நோய்பீடித்தவள் போல் ஆகிறாள்.
இதைக் கண்ட வீட்டார் அவளின் நோய் தீர்க்க வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்கின்றனர். குறித்த நாளின் வேலன் வந்து வெறியாட்டு எடுக்கிறான்.
அவன் சாமிவந்து ஆடும்போது பார்ப்போர் குலை நடுங்குகிறது. வீட்டுக்கு வந்திருப்பது முருகன் அன்றோ! அந்த முருகனின் பேராற்றலை எண்ணி
மக்கள் நடுக்கத்துடன் வணங்குகின்றனர். அந்த முருகு என்னும் தெய்வத்தைப் புலவர்,

உரு கெழு சிறப்பின் முருகு – அகநானூறு 138:10

என்கிறார்.

ஆக, ஒன்றன் பேரளவு நமக்குள் ஏற்படுத்தும் மலைப்பினால் ஏற்படும் அச்சமே உரு.

4.4 வெரு

ஆளரவமற்ற ஒரு காட்டுப்பாதையில் இருவர் ஓர் இருசக்கரவாகனத்தில் செல்கின்றனர். எதிரே ஒரு காட்டுயானை உருகெழு
தோற்றத்துடன் அஞ்சுவர நின்றுகொண்டிருக்கிறது. பதற்றத்தில் அவர்கள் சரிந்துவிழுகின்றனர். எழுந்து பின்னே சிறிது தொலைவு ஓடுகின்றனர்.
நின்று திரும்பிப் பார்த்தால் யானை அங்கேயே நின்றுகொண்டு இருக்கிறது. சற்றே துணிவு வந்து அந்த இருவரும் வண்டியை நோக்கி மெதுவாகச்
செல்கின்றனர். வெகுண்ட யானை அவர்களை நோக்கி விரைந்து வருகிறது. அவ்வளவுதான், அரண்டுபோய் அவர்கள் மீண்டும் பின் திரும்பி
ஓடுகின்றனர். அந்தப் பீதி கலந்த அச்சமே வெரு. இவ்வாறு வெருண்டு ஓடச் செய்யும் வேழத்தின் நடையை,

வெருவரு செலவின் வெகுளி வேழம் – பொரு 172
வேழத்து அன்ன வெருவரு செலவின் – மது 392

என்று கூறுகின்றன நம் இலக்கியங்கள்.

அக் காலத்து கிரேக்கர்களும் ரோமானியர்களும் நல்ல உடற்கட்டை உடையவர்களாய் இருந்தனர்.
கைகால்கள் எல்லாம் ‘கிண்’-ணென்று இருக்க, உடம்பெல்லாம் முறுக்கேறிய திண்மை கொண்டவர்கள் அவர்கள்.

பரேரெறுழ் திணிதோள் முடலை யாக்கை முழுவலி மாக்கள் என்பார் நக்கீரர் நெடுநல்வாடையில்.
பார்த்தாலேயே மிரண்டு பின்வாங்கத்தக்கதான அவர்களின் தோற்றத்தை,

மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் – முல்லைப்பாட்டு 59 – 61

என்று வருணிக்கிறது முல்லைப்பாட்டு.

வெறும் அச்சத்தைத் தோற்றுவிக்கும் தோற்றம் அல்ல.
உள்ளத்தில் உட்குவரச் செய்யும் தோற்றம் அல்ல.
பார்த்துப் பிரமித்துப்போய் நிற்கக்கூடிய உருகெழு தோற்றமும் அல்ல.

வெருண்டு பின்வாங்கவைக்கும் தோற்றம். அதுவே வெருவரு தோற்றம்.

இருங்கழி ஓரத்தில் அமர்ந்து நீண்ட தூண்டிலைப் போட்டு அமர்ந்திருக்கிறான் ஒரு மீனவன்.
நீருக்குள் நீந்திவந்த ஒரு பெரிய வாளைமீன் தூண்டிற்புழுவைக் கவ்வுகிறது. ‘சுருக்’-கென்று முள் தைக்க, ஒரே உதறு உதறி, தூண்டிற் கொக்கியின்
பிடியிலிருந்து தப்பிவிடுகிறது. பின் வேறோர் இடத்துக்குச் செல்கிறது. அங்கு கரையிலிருக்கும் ஒரு நீண்ட நாணலின் நிழல் நீரின் மேல் விழுந்திருக்கிறது. நீரின் அலையால் அந்த நிழல் மெதுவாக அசைய, அதனைத் தூண்டில் என்று எண்ணிய மீன் மிரண்டு பின்வாங்குகிறதாம்.
இந்த அழகிய நகைச்சுவைக் காட்சியைப் பெரும்பாணாற்றுப்படை இவ்வாறு கூறுகிறது.

கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
285 நெடும் கழை தூண்டில் நடுங்க, நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப,
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை
நீர் நணி பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் – பெரும்பாணாற்றுப்படை 284 – 288

இப்போது பேச்சுத்தமிழில் இதனை அரட்டி என்பார்கள்.

அச்சத்தைக் குறிக்கும் இந்த உட்கு, உரு, வெரு ஆகிய சொற்கள் சில பாடல் வரிகளில் அடுத்தடுத்தும் வருவதுண்டு.

உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி – புறம் 58/17
அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி/மெல்லிய இனிய மேவர கிளந்து – குறி 137,138
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/2
வேண்டாதார் நெஞ்சு உட்க வெரு வந்த கொடுமையும் – கலி 100/2
பிறந்த ஞான்றே நின்னை உட்கி/சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே – பரி 14/25,26

இந்தச் சொற்களுக்குள்ள நுண்ணிய வேறுபாட்டை உணர்ந்து இந்தப் பாடல் வரிகளைப் படிக்கும்போதுதான் சங்க இலக்கியங்களின் மாண்பு தெரியவரும்.

நடந்துவரும் பாதை அச்சம் தருவது என்பதைக் கூறவந்த புலவர்களும் அந்தந்தச் சூழ்நிலைகளுக்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவதைப் பாருங்கள்.

அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார் – அகம் 157/9
உதிர்த்த கோடை உட்கு வரு கடத்து இடை – அகம் 267/5
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் – அகம் 198/15
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12

பொருத்தமான இடங்களில் பொருத்தமான சொற்களைப்போட்டு மிகச் சரியான பொருளை உணர்த்தும் சங்கப் புலவர்களின் மாண்பும்,
அவர்களின் எண்ணத்திற்கேற்ப சொற்களை எடுத்து வழங்கும் சங்கத் தமிழின் திறமும் அவற்றை மிக உன்னிப்பாகக் கவனித்துப் படித்துப்போருக்குத்தான் தெரியவரும்.

சங்கச் செய்யுளின் சொல்வளத்தையும், சொல் திறத்தையும் படித்துச் சுவைத்துப்பாருங்கள்.