20. பாடல் 374 – எந்தையும் யாயும் உணரக் காட்டி

தூக்கணங்குருவிக் கூடு


	நந்தவனத்தில் பூப்பறித்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர் பொன்னியும் முல்லையும். தெருவில் நடந்துவரும்போது 
முன்பெல்லாம் அதிகமாகப் பேசாமல் வருவார்கள். இன்று அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிறையவே பூத்திருந்தது. முல்லை மிகவும் 
கலகலப்புடன் இருந்தாள். பொன்னியுடன் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டுவந்தாள். தெருவோரத்துக் கண்ணாத்தாள் அவர்களை 
நிறுத்தினாள்.

“என்னடீ கொமரிகளா! பொங்கிப் பூரிச்சுப்போயி இருக்கீக. எனக்கும் காத்துவாக்கில சங்கதி வந்துச்சுல்ல. என்ன முல்லை? ஒன்ன 
பொண்ணுபாக்க வந்திருந்தாங்களாமே? நிச்சயம் பண்ணியாச்சா?” என்றாள் கண்ணாத்தா.

கண்ணாத்தாளும் அவளைச் சேர்ந்தவர்களும் வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு முல்லையும் பொன்னியும் போக வர இருக்கும்போது 
சாடை பேசுவார்கள். 

“எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குமோ? பாக்குறதுக்கு அப்பிராணியாத் தெரிஞ்சாலும் பெரிய சோலி’ல்ல நடக்குது நந்தவனத்துல!”

இது தங்களைப் பற்றிய பேச்சுத்தான் என்றாலும் முல்லையும் பொன்னியும் பேசாமல் வேகமாக அவர்களைக் கடந்து செல்வார்கள். 
இத்தனைக்கும் நந்தவனத்துப்பக்கம் யாரும் போகாத வேளை பார்த்துத்தான் அவர்கள் பூப்பறிக்கச் செல்வார்கள். அங்கே அவன் 
காத்திருப்பான். ஒருவருமே இல்லையென்றால்தான் அவனும் முல்லையும் சிறிதுநேரம் பேசிக்கொள்வார்கள். யாராவது இருந்தால் 
அன்றைக்குப் பார்வையைப் பரிமாறிக்கொள்வதோடு அவன் சென்றுவிடுவான். இப்படி எத்தனையோ நாள்கள் நடந்திருக்கிறது. 

அப்படியிருந்தும் அவன் வருவதும் அவர்கள் பார்வையாலே பேசிக்கொள்வதும் வெறும் வாயை மெல்லுகிறவர்களுக்கு அவல் 
கிடைத்தாற் போல் இருந்தது. சாடைப் பேச்சினாலேயே அவர்களைத் தாளித்துக்-கொட்டிவிடுவார்கள். மேலும் பனை மரத்துத் 
தூக்கணங்குருவி இழை இழையாகப் பின்னிக் கூடுகட்டுவதுபோல், கற்பனையாகவே பல சங்கதிகளைச் சேர்த்து அந்தத் தெருக்காரர்கள் 
பலவிதக் கதைகளைப் பரப்பிவிடுவார்கள்.

“பல நாள் களவாணி ஒருநாளக்கி மாட்டிக்கிடாமலா இருக்கப்போறான். பாப்போம். என்னிக்குத்தான் இவக குட்டு ஒடையப்போகுது’ன்னு” 
என்று அவர்கள் பேசுவதைக் கேட்டு முல்லைக்குக் கோபங்கோபமாக வரும். பொன்னியிடம் தனியே குமுறுவாள்.

“ந்தா பாருடீ, இவளுக பேச்ச ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுரு. இவளுககிட்டப்போயி மல்லுக்கட்ட முடியுமா?  அதும் அந்த 
கண்ணாத்தா இருக்காளே, அவகிட்ட வாயக்கொடுத்து மீளமுடியாது. விட்டுத்தள்ளு. நாயுக கொறச்சிட்டுப் போகட்டும்” என்று சமாதானம் 
கூறுவாள் பொன்னி.

ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாய் மாறிவிட்டிருந்தது. உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூடமுடியாது என்பார்கள். ஆனால் 
பொன்னி அதைத் திறமையாக மூடிவிட்டாள். முல்லை எவனை நேசித்தாளோ அவனையே பெண்பார்க்க வரும்படி செய்துவிட்டாள். 
இனி யார் என்ன பேசமுடியும்?

பொன்னி செய்தது சாதாரணக் காரியம் அல்ல. முதலில் பொன்னி முத்தம்மாவிடம் மறைமுகமாக முல்லையின் காதல் பற்றிக் கூறினாள். 
முத்தம்மா முல்லையின் வளர்ப்புத்தாய். அவர்கள் வீட்டிலேயே இருப்பவள்.

“தாயி, ஒங்கிட்ட ஒரு விசயம் சொல்லணும், கோபிக்கக்கூடாது” என்று ஆரம்பித்தாள்.

“சொல்லுடீ, கோபத்த அப்புறம் பாக்கலாம்”

“முல்லைக்கு அவுக வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாகளா?”

“பாக்காம இருப்பாகளா, ஏதோ சொந்தத்துல சொல்லிவச்சுருக்காங்க”

“வரப்போற மாப்பிள்ள எப்படி இருப்பாரோ? முல்லைய நல்லா வச்சுக்கிறணும்”

“நல்ல மாப்பிள்ளயாத்தான் பாப்பாங்க”

“முல்ல ரொம்ப வெகுளி. பூஞ்ச மனசுக்காரி. அவ மனசுக்கேத்த மாப்பிள்ளயா இருந்தா நல்லது”

முத்தம்மா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மெல்லக் குனிந்து பொன்னியிடம் கேட்டாள்.

“ஏன்டீ, முல்ல மனசுல ஏதாவது நெனப்பு இருக்கா?”

இதுபோதவில்லையா பொன்னிக்கு. மிகவும் உற்சாகமாகிவிட்டாள். 

“ஒத்த ஆளு இருக்காரு. திருவிழாவுல பாத்தது. மொதல்ல முல்ல ரொம்ப மெரண்டுபோயித்தான் இருந்தா.”

“அவன் நம்ம ஊர்க்காரனா?”

“இல்ல, அடுத்த பட்டிக்காரரு. முல்ல மேல கொள்ள ஆச வச்சிருக்காரு. ரொம்ப நல்லவரு. அதுந்து பேசமாட்டாரு”

“முல்லக்கி அவனப் பிடிச்சுருக்கா?”

“ரொம்ப யோசிச்சா. அப்பா அம்மா என்ன சொல்லுவாகளோ’ன்னு பயப்பட்டா”

“அத நான் பாத்துக்கறேன். அவன் யாரு’ன்னு மட்டும் சொல்லு”

இவ்வளவு எளிதாக எடுத்த காரியம் முடிந்துவிடும் என்று பொன்னியேகூட எதிர்பார்க்கவில்லை. அப்புறம் என்ன? முத்தம்மா 
முதலில் முல்லையின் அம்மாவிடம் பேசினாள். பின்னர் இருவரும் சேர்ந்து முல்லையின் அப்பாவிடம் பேசினார்கள். மூவரும் 
பொன்னியிடம் தனியே தூண்டித்துருவி விசாரித்தார்கள். இத்தனை நாள் ஒளிவுமறைவாக இருந்த நடப்பு இப்போது அனைவருக்கும் 
தெரிந்துவிட்டது. முல்லையின் அப்பா முல்லையிடமே வந்து பேசினார். “ஒருவாரம் பொறும்மா. அப்புறம் சொல்றேன்” என்று 
சொன்ன அப்பா, அவரது ஆட்களைவிட்டு அடுத்த ஊருக்குச் சென்று அவனைப் பற்றி மறைமுகமாகச் செய்திகளைச் சேகரித்துவரச் 
செய்தார்.

அப்புறம் அவரே முல்லையிடம் கூறினார்.

“அவன வந்து பொண்ணு கேக்கச் சொல்லும்மா”

“அவருக்குச் சொந்தபந்தம்’னு ரொம்பக் கிடையாது … “, முல்லை இழுத்தாள். 

“பரவாயில்ல, யாராவது ஊர்ப்பெரிய மனுசங்களைக் கூட்டியாந்து பரிசம் போடச் சொல்லு. கல்யாணத்த முடிச்சுப்புடலாம்”.

முல்லையின் மனம் ஆடிப்பட்டமாய்ப் பறக்க ஆரம்பித்தது. பொன்னிக்குச் சொல்லிவிட்டாள். அவள் வந்ததும் அவளைக் 
கட்டிக்கொண்டு அழுதேவிட்டாள். “எல்லாம் ஒன்னாலதான்டீ. நீ இல்லாட்டி இது நடந்திருக்குமா?” என்று கேவினாள்.

“எங்க வீட்டு ஆளுகளுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லி, இத்தன நாளா நாம ஒளிச்சு வச்சிருந்ததப் பக்குவமாக வெளியில 
கொண்டாந்திருக்கயேடீ, நீ கெட்டிக்காரிதான்.” என்று பொன்னியைப் பாராட்டினாள் முல்லை.

“அத விடு. இவங்க நம்ம வீட்டுக்காரங்க. இந்த ஊருக்காரிக ஒண்ணு இல்லாட்டி ஒண்ணச் சொல்லி, நம்மளப் பத்தி, அந்தத் 
தூக்கணாங்குருவி கூடுகட்டுறது கணக்கா பொய் பொய்யாக் கதை திரிச்சுவிட்டிட்டு இருந்தாகளேடீ, இப்ப அவுக வாயயும் 
அடைச்சாச்சு. எல்லாரயும் நம்ம பக்கமே சேத்தாச்சு பாத்தியா, அதுதான்டீ உண்மையிலேயே பெரிய காரியம்”

பாடல் :குறுந்தொகை 374  ஆசிரியர் :உறையூர்ப் பல்காயனார் திணை :குறிஞ்சி

	எந்தையும் யாயும் உணர காட்டி
	ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின்
	மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப
	நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே
	முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ
	நீடு இரும் பெண்ணை தொடுத்த
	கூடினும் மயங்கிய மையல் ஊரே

அருஞ்சொற்பொருள்

கிளந்த பின் = கூறிய பின்; தலைவந்து = நம்மிடம் வந்து; இரப்ப = வேண்ட; முடங்கல் இறைய = வளைந்த சிறகுகளையுடைய

அடிநேர் உரை

	நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து
	மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர்
	மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட
	நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன;
	வளைந்த சிறகுகளையுடைய தூக்கணங்குருவி
	உயரமான கருத்த பனைமரத்தில் கட்டிய
	கூட்டைப் பார்க்கிலும் மயங்கிப்போய் நம்மைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்த இந்த ஊரும் நம்மோடு ஒன்றிப்போயிற்று.
		
	After unfolding the concealed story 
	By presenting convincingly to our parents,
	Resulting in the leader of the hills coming to us seeking wedlock,
	With the just intention of doing good,
	This blurred hometown –
	Which interweaved stories more complex
	Than the nest of the arch-winged weaver bird in the tall dark palmyra tree,
	Finally concurs with our stand.