பாடல் 6. மருதத் திணை பாடியவர் – பரணர்

துறை - பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது.

  மரபு மூலம் : “வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்”

	அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
	யரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை
	யிழையணி பணைத்தோ ளையை தந்தை
	மழைவளந் தரூஉ மாவண் டித்தற்
5	பிண்ட நெல்லி னுறந்தை யாங்கட்
	கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங்
	குழைமா ணெள்ளிழை நீவெய் யோளொடு
	வேழ வெண்புணை தழீஇப் பூழியர்
	கயநாடு யானையின் முகனமர்ந் தாஅங்
10	கேந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய
	நெருந லாடினை புனலே யின்றுவந்
	தாக வனமுலை யரும்பிய சுணங்கின்
	மாசிற் கற்பிற் புதல்வன் றாயென
	மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம்
15	முதுமை யெள்ளலஃ தமைகுந் தில்ல
	சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத்
	தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி
	வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய்
	முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும்
20	பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெ
	மிளமை சென்று தவத்தொல் லஃதே
	யினியெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே

 சொற்பிரிப்பு மூலம்

	அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை
	அரம் போழ் அம் வளை பொலிந்த முன்கை
	இழை அணி பணை தோள் ஐயை தந்தை
	மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்
5	பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
	கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்
	குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு
	வேழ வெண் புணை தழீஇ பூழியர்
	கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு
10	ஏந்து எழில் ஆகத்து பூம் தார் குழைய
	நெருநல் ஆடினை புனலே இன்று வந்து
	ஆக வன முலை அரும்பிய சுணங்கின்
	மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என
	மாய பொய் மொழி சாயினை பயிற்றி எம்
15	முதுமை எள்ளல் அஃது அமைகும்தில்ல
	சுடர் பூம் தாமரை நீர் முதிர் பழனத்து
	அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி
	வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்
	முள் அரை பிரம்பின் மூதரில் செறியும்
20	பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம்
	இளமை சென்று தவ தொல்லஃதே
	இனிமை எவன் செய்வது பொய் மொழி எமக்கே

அடிநேர் உரை 
	
	பரல்கள் இடப்பெற்ற சிலம்பினையும், ஆம்பல் மலரின் அழகிய மாலையையும்,
	அரத்தால் அறுக்கப்பட்ட அழகிய வளைகளால் அழகுபெற்ற முன்கையையும்,
	நகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய,
	மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின்,
5      	குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில்
	ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில்,
	குழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன்
	வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின்
	குளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று,
10     	உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மாலை குழைந்துபோகும்படி,
	நேற்று புனலாடினாய், இன்று (இங்கே) வந்து
	மார்பினில் அழகிய கொங்கைகளில் அழகுத்தேமலை உடையவளே,
	மாசற்ற கற்புடையவளே, என் மகனுக்குத் தாயே என்று
	மாய்மாலமான பொய்மொழிகளைப் பணிவுடன் பலமுறை கூறி, எனது
15    	முதுமையை இகழ வேண்டாம். அது எனக்குப் பொருந்தும்தானே!
	தீச்சுடர் போன்ற அழகிய தாமரை மலர்கள் உள்ள, நீர் நெடுநாள் நிற்கும் வயலில்
	அழகிய உள்துளையுள்ள வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி,
	வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
	முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
20     	பல வேல்களை உடைய மத்தி என்பானது கழார் என்ற ஊரைப் போன்று, என்
	இளமை கழிந்து மிகவும் பழையதானது,
	இனிக்கவா போகிறது (உன்) பொய்மொழி எனக்கு.

அருஞ்சொற்கள்:

அரி = கால் சிலம்பினுள் இடும் பரல்; தொடலை = தொடுக்கப்பட்டமாலை; போழ் = பிள; பிண்டம் = குவியல்; வேழம் = கெட்டிக் கரும்பு; 
புணை  = தெப்பம், மிதவை; கயம் = குளம்; ஆகம் = மார்பு; நெருநல் =  நேற்று; சுணங்கு =  அழகுத் தேமல், Yellow spreading spots on 
the body of women, regarded as beautiful; தூம்பு = உள்துளை, (like in tube); மூதரில் = முது + அரில்; 
அரில் = பின்னிப் பிணைந்த (அடர்ந்த)புதர்; 

பாடலின் சுருக்கம்

	அவன் மருதத்திணைத் தலைவன். தலைவியோ அழகுமிக்கவள். மாசற்ற கற்புடையவள். ஒரு குழந்தைக்கும் தாய். 
தாயின் கவனம் குழந்தை பக்கம் திரும்பிய பின், தலைவனின் கவனம் ‘வேறு’ பக்கம் திரும்புகிறது. வேலி தாண்டிப் பயிர்மேய்ந்துவிட்டு 
வீட்டுக்குத் திரும்புகிறான். மனைவியின் முகத்தைப் பார்த்தவுடனே அவனுக்குப் புரிந்துவிடுகிறது – அவளுக்குத் தெரிந்துவிட்டது என்று. 
அவளை மகிழ்விக்க புகழுரைகளைக் பொழிகிறான். அவளா மசிபவள்? “நீ எங்கே போய்விட்டுத் திரும்புகிறாய் என்று தெரியும். 
இந்த மாய்மாலமான பொய் மொழிகளால் என்ன மகிழ்விக்க முடியாது” என்று புலந்து கூறுகிறாள்.

	(அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த வீட்டு நாய் வீட்டுக்குள் வந்து முடங்கிப் படுத்தது போலும். தலைவனைப் பார்த்த 
அதே கோபத்தோடு தலைவி உள்ளே இருப்பவர்களிடம் கூறுகிறாள், “ இங்க பாரு, அங்கங்க வாய வச்சிட்டு, இங்க தூங்க வந்திரிச்சு பாரு 
இந்த நாயி – அது தலைல ரண்டு போடு போடு” என்றும் கூறுகிறாள்.)

	தலைவனுக்கு அது புரிந்திருக்குமா? பாடலின் கடைசி ஏழு அடிகளைப் படிக்கும் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

பரணரின் உளவியல் : 

	இது உண்மைச் சம்பவம். வெளியூரில் இருக்கும் என் நண்பனின் வீட்டுக்குப் போனேன். அவர்களுக்கும் நான் வரப்போவது தெரியும். 
அப்போது பார்த்து அவர்களுக்கு அவசர வேலையாக வெளியில் போகவேண்டியதாகப் போய்விட்டது. எனவே, வீட்டைப் பூட்டி, சாவியை 
அவர்கள் கார் ஓட்டுநரிடம் கொடுத்து, வாசலிலேயே உட்கார்ந்திருந்து, நான் வந்ததும் என்னிடம் சாவியைக் கொடுத்து உள்ளே சென்று 
காத்திருக்கச் சொல்லும்படி சொல்லியிருக்கிறான். எனக்கும் தெரிவித்துவிட்டான். நான் போனபோது, வீடு திறந்திருந்தது. தயக்கத்தோடு 
மெதுவாக உள்ளே நுழைந்தேன். ஹாலில், நீண்ட சாய்விருக்கையில், மின்விசிறியையும் போட்டுக் கால்நீட்டிப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார் 
அந்த ஓட்டுநர். தொண்டையைக் கனைத்து அவரை எழுப்பினேன். அவர் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே! ஒரு நொடியில் 
சமாளித்துக்கொண்டு, “வாங்க சார், எப்ப வந்தீங்க, உட்காருங்க, ரொம்ப நேரம் காத்திருந்தீங்களோ, என்ன சாப்பிடுறீங்க” என்று என்னென்னவோ 
சொல்லி, அங்கே இங்கே ஓடி, குளிர்ந்த நீர் கொண்டுவந்து தந்து, முகத்தில் தேவை இல்லாத ஒரு குழைவையும், உடம்பில் அளவுக்கு அதிகமான 
பணிவையும் காண்பித்து, அவர் பட்ட பாடு எனக்குள் சிரிப்பை வரவழைத்தது. இந்தப் பாடலைப் படிக்கும்போது எனக்கு அந்தக் காட்சிதான் 
மனதுக்குள் ஓடியது. பரணரும் இந்த ஓட்டுநரைப் போன்ற ஒரு மனிதரைப் பார்த்திருப்பாரோ? முதல் நாள் எல்லாம் வேற்று மகளிரோடு களிப்புடன் 
பொழுதைக் கழித்து, வைகறைப் பொழுதில் (வைகுறு விடியல் மருதம் – சிறுபொழுது) சுவடு தெரியாமல் பதுங்கிப் பதுங்கி வந்த தலைவன், 
படுக்கை அறைக்குள் முடங்கிக்கொள்ள முயலும்போது, “வாங்கய்யா வாங்க” என்ற குரல் கேட்கிறது. ஒரு நொடியில் சமாளித்துக்கொண்டு, 
“என்ன! உன் மேனி மினுமினுப்பு இன்று ரொம்ப தூக்கலாய் இருக்கிறதே!(அரும்பிய சுணங்கின்), முகம் அப்படியே ஜொலிக்கிறது, அகலிகை, 
அருந்ததி எல்லாம் தோத்துப் போகணும்(மாசு இல் கற்பின்), எங்க நம்ம குட்டிப் பய?( புதல்வன் தாய்))” என்று உளறிக்கொட்டுவதாகக் 
(மாயப் பொய் மொழி சாயினை பயிற்றி) கூறுகிறார் புலவர். தலைவன் முதலில் மனைவியின் புற அழகைப் பாராட்டுகிறான். இதில் மசியாதவர் 
அநேகமாக இல்லை எனலாம். ஆனால் நம் தலைவிக்கு இதெல்லாம் புரியாதா என்ன? அடுத்து, அவளின் அக அழகைப் போற்றுகிறான். தலைவி 
மசிவதாகத் தெரியவில்லை. இறுதியில் மகனைக் குறிப்பிட்டுப் பாசவலையை விரிக்கிறான். அப்போது அவன் குழைந்து - கூழைக் கும்பிடு 
போடுகிறவர்கள் வளைந்து நெளிந்து நிற்பதைப் போல – நிற்பதை, ‘சாயினை’ என்ற சொல்லால் அழகிதாகக் குறிப்பிடுகிறார் புலவர். 
மேலும் ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ளாமல், திரும்பத் திரும்பக் கூறி அவளை மகிழ்விக்க நினைக்கிறான் தலைவன் என்பதை, பயிற்றி என்ற 
சொல்லால் குறிப்பிடுகிறார் புலவர். பயிற்றுதல் என்பது திரும்பத் திரும்பச் செய்தல். இவையெல்லாம் புலவர் ஒரு கைதேர்ந்த உளவியல் அறிஞர் 
எனக் காட்டவில்லையா? 

உள்ளுறை உவமம்

“நீ கூறுவதெல்லாம் மாய்மாலப் பொய்கள்” என்று தலைவி கூறுவது அத்துணை கடுமையான சொற்கள் என்று சொல்லமுடியாது. 
அதற்குமேல் அவனைச் சாடுவதற்கு, அவள் கையாளும் முறை, நம் தமிழகப் பெண்களுக்கே உரித்தானது. அவள் சாடைபேசுகிறாள். 
“ஏண்டா நாய்ப்பயலே” என்று கூறாமல் கூறும் தலைவியின் (புலவரின்) சாமர்த்தியத்தைப் பாருங்கள். அவள் கூறுகிறாள்:

	தீச்சுடர் போன்ற அழகிய தாமரை மலர்கள் உள்ள, நீர் நெடுநாள் நிற்கும் வயலில்
	அழகிய உள்துளையுள்ள வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி,
	வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
	முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
      	பல வேல்களை உடைய மத்தி என்பானது கழார் என்ற ஊரைப் போன்று, என்
	இளமை கழிந்து மிகவும் பழையதானது,

	“என் மகனுக்குத் தாயே” என்று கூறிப் பிள்ளைப் பாசத்தை வலையாக அவன் விரிக்க, தலைவி எத்துணை எளிதாக அதனை அவன் வசமே 
திருப்புகிறாள் பார்த்தீர்களா! “ஆமாய்யா, நான் புள்ள பெத்தவதான், கோடிக்கு ஒரு வெள்ளை, குமரிக்கு ஒரு பிள்ளை-ன்னு சொல்லிக் காமிக்கிறயா?” 
என்று பதிலுக்கு விளாசுகிறாள். “நானும் ஒரு காலத்தில் உறந்தை நகரைப்போல் ஒய்யாரமாய் இருந்தவள்தான். இன்று, கழார் நகரைப் போலக் 
கழன்று போனேன் எனக்கு இதெல்லாம் இனி இனிக்காது” என்று அவன் புகழுரைகளை, அவனுடைய சொற்களை வைத்தே புறந்தள்ளும் தலைவியின் 
(புலவரின்)பேச்சுத்திறமை அபாரமானதன்றோ? ஆனால், இதற்கெல்லாம் உச்சமாக அமைந்திருக்கிறது கழாரைப் பற்றிய அவளின் வருணனை. 

	தீச்சுடர் போன்ற அழகிய தாமரை மலர்கள் உள்ள, நீர் நெடுநாள் நிற்கும் வயலில்
	அழகிய உள்துளையுள்ள வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி,
	வாளைமீனைத் தின்ற கூரிய பற்களை உடைய நீர்நாய்
	முட்கள் கொண்ட தண்டினை உடைய பிரம்பின் பழைய புதரில் தங்கும்,
    	பல வேல்களை உடைய மத்தி என்பானது கழார் என்ற ஊரைப் போன்று, 

	“கழார் பாழாகப் போனது. 
	அதன் வயல்களில் இன்று நெற்பயிர் இல்லை. 
	தாமரை பூத்துக்கிடக்கிறது. 
	வள்ளைக் கொடிகள் படர்ந்து கிடக்கின்றன. 
	வாளைமீன்கள் நெளிந்து திரிகின்றன. 
	அவற்றை நீர்நாய்கள் கவ்வித் தின்கின்றன. 
	உண்ட மயக்கம் தீர அந்த நாய்கள் பிரம்புப் புதருக்குள் உறங்கப் போகின்றன” 

	என்ற தலைவியின் கூற்று என்னமோ, கழாரைப் பற்றிய அவளின் கழிவிரக்கப் புலம்பலாகத் தோன்றுகிறது இல்லையா? 

	ஆனால் அவள் சொன்னது வேறு, சொல்ல வந்தது வேறு.  

	தீச்சுடர் போன்ற அழகிய தாமரை மலர்கள் உள்ள = அருமையான உறவும் சுற்றமும் உள்ள
	நீர் நெடுநாள் நிற்கும் வயலில் = வளமிக்க இந்த ஊரில்
	வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி = புறஞ்சேரியின் பொய்யான மறுப்புகளை மீறி,
	வாளை மீனைத் தின்ற = பரத்தையரிடம் இன்பம் துய்த்த
	கூரிய பற்களையுடைய நீர்நாய் = இன்னும் இளமை மாறாத (நாய்க்குணம் கொண்ட)தலைவன்
	முட்கள் கொண்ட தண்டினை உடைய = கட்டுப்பாடுகள் கொண்ட வாழ்க்கைமுறையை உடைய
	பிரம்பின் பழைய புதரில் தங்கும் = நல்மனையின் உள் அறையில் வந்து தூங்குவான்.

	என்னமாதிரி சாட்டையடி பார்த்தீர்களா! 

	அத்துணை அழகான தாமரை மலர்கள் பூத்திருக்க, அவற்றைக் கண்டு களிக்காமல், நாற்றமெடுத்த மீனைத்தானே 
நாய் உண்டு மகிழும்.

	வள்ளைக் கொடிகள் அழகாக இருக்கலாம். ஆனால் அவை தூம்பு உள்ளவை. எனவே வலிமை அற்றவை. உறுதியான 
அன்பு இல்லாதவை.

	பிரம்புத் தண்டுகள் முட்கள் கொண்டவை. எனினும் அவை இறுகியவை, பாதுகாப்பானவை. படுப்பதற்கு உறுதியானவை.

	இவ்வாறாக ஒவ்வொரு சொல்லுக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகள் எவ்வளவு ஆழமானவை என்பதை உணர்ந்து 
படியுங்கள். 

	தலைவன் புறஞ்சேரிக்குள் நுழையும்போது அங்கிருக்கும் முதியவர்கள், “ஐயா, நீங்க இங்க வரலாமா?” என்று பொய்யாக 
மறுப்புச் சொல்வார்களாம். ஆனால், தலைவன் அவர்களை எளிதில் விலக்கிவிட்டுச் செல்வானாம். இதனையும் ‘அழகிய உள்துளையுள்ள 
வள்ளையின் மெல்லிய கொடிகளை உழப்பி’ என்ற சொற்களால் நுட்பமாக உணர்த்தும் புலவரின் திறம் எண்ணி எண்ணி வியத்தற்குரியது. 

விளக்கம்

	வள்ளைக்கொடி என்பது Creeping bind weed, I-pomaea aquatic என்ற நீர்க்கொடியாகும். இந்தக் கொடி உள்துளை (tubular) 
உள்ளது. (I.aquatica grows in water or on moist soil. Its stems are 2–3 metres (7–10 ft) or more long, rooting at the nodes, 
and they are hollow and can float). 

		

	நீர்நாய் (otter) என்பது நீரிலும் தரையிலும் வாழக்கூடியது. மீன்களையும், நீர்ப்பறவைகளையும் வேட்டையாடி உண்ணும். 
வள் எயிற்று (கூரிய பற்கள்) என்பது எத்துணை உண்மை என்பதைப் படத்தில் பாருங்கள். வாளைமீன் (Scabbard-fish, silvery, attaining 16 in. 
in length, Trichiurus haumela) என்பது குளம் குட்டைகளில் வாழ்வது. வயல்களில் நெடுநாள் நீர் இருந்ததால் வாளைமீன்கள் வயலுக்கும் 
வந்திருக்கின்றன. உருவத்தில் அவை நீளமானவை. வள்ளைக் கொடிகளுக்கு இடையே அவை நெளிந்து வளைந்து திரியும் போது, 
வள்ளைக்கொடிகளை உழக்கிக்கொண்டு நீர்நாய்கள் அவற்றை வேட்டையாடி மகிழ்வதைப் புலவர் படம்பிடித்துக் காட்டியுள்ளார். 
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்  –  என்று புலவர் காவிரி ஆற்றின் வெள்ளப் பெருக்கை வியந்தோதுகிறார். ஒரு நீண்ட மிதவையின் மூலம் 
நீரைக் கடப்பவர்கள் துடுப்புகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, ஒரு நீண்ட கழியைப் பயன்படுத்துவார்கள். மிதவையில் காலூன்றி 
நின்றுகொண்டு, கழியை நீருக்குள் விட்டு, தரையில் அழுந்தப் பதிப்பார்கள். அவர்களின் கை-கால்கள் கொடுக்கும் விசையினால், ஊன்றப்பட்ட கழி 
பின்னோக்கிச் செல்ல, மிதவை முன் நோக்கி நகரும். இவ்வாறு செய்வது ஆழமற்ற நீர்ப்பகுதியில்தான் முடியும். அவ்வாறு கழைகள் ஆற்றின் 
தரையில் நிலைபெற முடியாத அளவுக்குக் காவிரியில் வெள்ளம் செல்வதாகப் புலவர் கூறுகிறார். 

		

	பூழியர் என்போர் சங்கப்பாடல்களில் பரவலாகப் பாடப்பட்டுள்ளனர். குறிப்பாக, பதிற்றுப்பத்து அவர்கள் சேரமன்னர்களின் கீழ் இருந்ததைப் 
பேசுகிறது. அவர்கள் ஆடுகள் மேய்ப்பவர்கள் என நற்றிணை 192/3, குறுந்தொகை 163/1 ஆகியவை கூறுகின்றன. 

	மிதி அல் செருப்பின் பூழியர் கோவே - பதி 21/23 
	புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை - பதி 73/12
	பூழியர் கோவே பொலம் தேர் பொறைய - பதி 84/6 
	எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை - பதி 90/27

	படத்தில் பூழியர் நாடு காட்டப்பட்டுள்ளது. மேலைக் கடல் பகுதியில், வட கேரள, தென் கர்நாடகப் பகுதியை உள்ளடக்கியது பூழியர் நாடு.

	பூழியர் நாடு மழைவளம் மிக்க பகுதியாதலால், அகன்ற நீர்நிலைகள் நிறைந்தது. அவற்றில் யானைகள் மகிழ்ச்சியுடன் நீராடி மகிழும் 
எனவும், அதைப் போல, தலைவன் பரத்தையரோடு காவிரி ஆற்றில் புனலாடினான் எனவும் தலைவி கூற்றாகக் கூறுகிறார் புலவர். 
“சின்னமனூரு சேலக்கெண்ட கெனக்கா, சிறுக்கி சிரிச்சி மழுப்பிட்டு போறா பாரு” என்று இன்றைய சிற்றூர்ப் பெண்கள் பேசுகிறது போல, 
அன்றைய பெண்கள், “பூழிநாட்டு யானயப் போலப் புனலாடி வந்திருக்காரு இந்த வூட்டு மாப்பிள்ள” என்று சொலவடை சொல்லுவார்கள் போலும்.  

		

	இதுவரை பரணர் கூறியது சரிதான். இனிமேல்தான் சிக்கல் ஆரம்பிக்கிறது. தலைவன் புனலாடியது காவிரியில் – அது உறந்தை நகர் 
வழியே செல்கிறது - அந்த நகர் நெல் வளம் மிக்கது – அதை ஆள்பவன் தித்தன் – அவன் வள்ளண்மை உடையவன் – அவன் மகள் ஐயை – 
பரல் நிறைந்த சிலம்புகளை அணிந்திருப்பவள் – ஆம்பல் தழையுடை அணிந்திருப்பவள் – அழகிய வளைகளைப் போட்டிருப்பவள் – 
பருத்த தோள்களில் வந்திகை அணிந்திருப்பவள் – என்றெல்லாம் கூறுகிறார் பரணர் – அதுவும் பாடலின் முதல் ஐந்து அடிகளில்.
பாடலை மீண்டும் படித்துப்பாருங்கள். பாடலின் மையக் கருத்துக்கு இது தேவைதானா? 

		

	அதற்கு முன், சில விளக்கங்கள். சிலம்பு என்பது பெண்கள் காலில் அணியும் அணி. உள்ளீடற்றது. அதனுள் விலையுயர்ந்த கற்களைப் 
போட்டிருப்பார்கள். (கண்ணகிக்குக் கிடைத்த ஒரே proof!!) அதனை அரி என்பர். நடக்கும்போது ‘சிலிங் சிலிங்’ என்று ஒலி எழுப்பி, வருவதைக் கூறி 
எச்சரிக்கும் – இன்றைய கொலுசு மாதிரி. ஏழை எளியவர்கள் வெறும் கம்பிகளை வளைத்துப் போட்டிருப்பார்களோ என்னவோ -  அரி பெய் சிலம்பின் 
என்று புலவர் கூறுகிறார். இங்கு கூறப்படுபவள் சோழ மன்னன் தித்தனின் மகள் ஐயை. அப்புறம் என்ன, அதில் மாணிக்கக் கற்கள் பரல்களாக 
இருந்திருக்கக்கூடும்.

	தொடலை என்பது தொடுக்கப்படுவது. வெறும் பூக்களால் ஆனது என்றால் அது மாலை ஆகும். சில வேளைகளில் அகலமான இலைகளைத் 
தொடுத்து இடுப்பில் அணிந்துகொள்ளும் வழக்கம் அன்றைக்கு இருந்திருக்கிறது. இங்கே ஆம்பல் அம் தொடலை என வருகிறது. ஆம்பல் மலர் 
உருவத்தில் பெரியது. அதைத் தொடுத்து கழுத்தில் போடுவார்களா? 

	ஒள் இலை தொடலை தைஇ மெல்லென - அகம் 105/2.
	பூவுடன் நெறிதரு தொடலை தைஇ - நற் 138/7
	தொடலைக்கு உற்ற சில பூவினரே - ஐங் 187/5
	தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் - புறம் 339/6
	அம் பூம் தொடலை அணி தழை அல்குல் - புறம் 341/2

	என்ற அடிகளால், தொடலை என்பது பூக்களாலும், இலைகளாலும், இரண்டும் விரவியும் தொடுக்கப்படும் என்றும், அது இடுப்பிலும் 
அணியப்படும் என்று காண்கிறோம். இன்றைக்கும் ஹவாய்த் தீவுகளில் பாரம்பரிய உடை உடுத்தும் பெண்கள் இலை, தழை, பூ ஆகியவற்றால் 
கழுத்திலும், இடுப்பிலும் மாலைகள் அணிந்துவருவதைக் காண்கிறோம். பண்டைய தமிழகத்துக்கும், தென்னமெரிக்க நாடுகளுக்கும் ஆஸ்திரேலிய 
கண்டத்தின் வழியே தொடர்பு இருந்திருக்கலாம் என்று சில கடல்அகழாய்வுகள் கூறுகின்றன. செல்லும் வழியில் அவர்கள் இந்தத் தீவுகளுக்கும் 
போயிருக்கலாம். 

		

	அரம் போழ் அம் வளை என்ற தொடர் அன்றைய சங்கு வளையல்களைக் குறிக்கிறது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர், தமிழகத்தில் 
கடல் சங்குகளை வட்டமாக அறுத்து, வளையல்கள் செய்யும் கலை முதிர்ச்சி பெற்றிருக்கிறது. சங்கு வளையல்கள் சாதாரண மக்களுக்குரியவை. 
ஆனால், விலையுயர்ந்த சங்குகளின்றும் அறுக்கப்பட்டு, அவற்றில் பல பூ வேலைப்பாடுகள் அமைந்த சங்கு வளையல்களை அரசகுலப் பெண்டிரும் 
அணிந்திருக்கின்றனர் என இதன் மூலம் தெரிகிறது. பார்க்க – கீழே உள்ள குறிப்பு.

	The wearing of chank bangles (shankha balara) by married Hindu women is now confined to Bengal 
(West Bengal and Bangladesh) and Bengali women living in the adjacent parts of Bihar, Orissa and Assam. Archaeological evidence, 
however, indicates that such bangles were worn and bangle-making workshops established in southern and central India, 
the Kathiawar area of Gujarat, and Sri Lanka as long as 2000 years ago, and apparently were cut in the same way as is done in 
the present day.
	Nowadays the main chank emporia are in Calcutta, depending chiefly on the material supplied from Tamil Nadu ….
The best shells are from the Tinnevelly coast and a similar quality but with more shells of a smaller size are those from Rameswaram. 
The sawn slices are also graded; the selected best, cut from Tuticorin shells (titkutti grade), are used for the highly ornamented bala 
and churi bangles which have a lustrous finish and therefore require fine-grained, hard and porcellaneous white shells.

நன்றி : http://princelystates.com/ArchivedFeatures/fa-03-03d.shtml

	இழை அணி பணைத்தோள் என்பது தோள்வந்திகை அணிந்த பருத்த தோள்கள்.

	இவற்றை எல்லாம் தொகுத்துப்பார்ப்போம். 

	முதலில் புலவர் காற்சிலம்பைக் கூறுகிறார் - பின்னர் தொடலை – பின்னர் வளையணிந்த முன்கை – 
அப்புறம் வந்திகை அணிந்த தோள். 

	புலவரின் வருணனை கீழிருந்து மேல் நோக்கிப் போகிறது. எனவே இங்கு தொடலை என்பது இடுப்பில் அணிந்த மாலை அல்லது 
தழையாடையைக் குறிக்கிறது என்று துணிய முடிகிறது.

	இனி நம் கேள்விக்கு வருவோம். அகம் சார்ந்த பாடலில் – அதுவும் தொடக்கத்தில் – இத்தனை புறக்குறிப்புகள் தேவையா? 
22 அடிகள் கொண்ட பாடலில் 5 அடிகள் வரலாற்றுக் குறிப்புகள் வருகின்றன. இதுதான் பரணரின் style எனக் கூறிவிடலாம். பரணரின் 
பல பாடல்களில் இந்தப் போக்கைக் காணலாம். இது போல் அமைந்த வேறு புலவர்களின் பாடல்களும் உண்டு. பட்டினப்பாலை என்ற 
நெடும்பாடல், 301 அடிகள் கொண்டது. முழுக்க முழுக்க புகார் நகரத்தைப் பற்றியும், சோழ நாட்டின் வளத்தைப் பற்றியும், கரிகாலன் 
ஆட்சித்திறம் பற்றியும் கூறிவிட்டு, 5 அடிகளில் இத்துணை சிறப்புகள் கொண்ட பட்டினத்தையே பெறுவதாயினும் என் தலைவியை விட்டுப் 
பிரிந்துவரமாட்டேன் எனத் தலைவன் கூறுவதாக அமைந்தது. இது அகப்பாடல் என்று கணக்கிடப்படுவது. இது அப்படியும் இல்லை. 

இதுபற்றிக் கூறவந்த உரையாசிரியர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் -

	‘மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே’ (தொல்காப்பியம் – புறத்திணை இயல்:32)  என்னும் சூத்திரத்து, புறத்திணையாற் 
கொண்ட மெய்ப் பெயரிடம் பற்றி அகத்திணைப் பொருள் நிகழவும் பெறும் எனக்கூறி, ‘அரிபெய் சிலம்பின்’ என்னும் அகப்பாட்டினுள் தித்தன் 
எனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லின் என நாடும், உறந்தை என ஊரும், காவிரி யாடினை எனயாறுங் கூறிப் பின்னர் 
அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க  - என்று பேராசிரியர் கூறுவதாகக் கூறுவார்.

	சங்க இலக்கியப் புலவர்களின் செய்யுள் நடை பற்றி ஆய்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.