நற்றிணை 51-100

  
# 51 குறிஞ்சி# 51 குறிஞ்சி பேராலவாயர்
  
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழைஎதனை எவ்வாறு செய்வோம் தோழி! உயர்ந்த தண்டினையுடைய
காம்பு உடை விடர்_அகம் சிலம்ப பாம்பு உடன்றுமூங்கில்களை உடைய மலைப்பிளவுகளில் எதிரொலிக்க, பாம்புகள் வருந்தி
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்உயர்ந்த பாறைகளில் புரண்டு ஒளிரும்படி துடிக்கச்செய்து, விரைந்து செல்லும்
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇகடும் முழக்கமிடும் இடியேற்றினோடு மிகுந்த துளிகள் சொரிய
பெயல் ஆனாதே வானம் பெயலொடு       5மழையையும் நிற்காமல் பெய்கிறது வானம்; மழையோடு சேர்ந்த
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து எனமின்னல் நிமிர்ந்து நிற்றலைப்போல் (வேலினைக் கையில் மொண்டு) வேலன் வர,
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதேபின்னிய கூந்தலின் உச்சியில் உள்ள மலர்களைக் காத்தலும் இயலாமற்போயிற்று;
பெரும் தண் குளவி குழைத்த பா அடிபெரிய குளிர்ந்த காட்டுமல்லிகைக் கொடியை மிதித்துக் குழைத்த பரந்த அடியையுடையதும்,
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறுகரிய சேற்றைப் பூசிக்கொண்ட நெற்றியையுடையதுமான கொல்லவல்ல ஆண்யானை
பேதை ஆசினி ஒசித்த       10இளைய ஆசினிப் பலாவின் கிளையை வளைத்து முறித்து,
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கேமலர்கள் செறிந்த வேங்கைமரத்தின் நிழலில் தங்கியிருக்கும் மலையை உடைய நம் தலைவனுக்காக –
  
# 52 பாலை# 52 பாலை பாலத்தனார்
  
மா கொடி அதிரல் பூவொடு பாதிரிகரிய கொடியையுடைய காட்டுமல்லிகையின் மலரோடு, பாதிரியின்
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்தூய தகடு போன்ற மலரை எதிர்த்துக் கட்டிய சரத்தைச் சூடிய கூந்தலின்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்மணம் கமழும் நாற்றத்தை நுகர்ந்து, நாம் இவளின்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கிஅழகுத்தேமல் பரந்த மார்பினைச் சேர்த்துத் தழுவி,
வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம்     5மிக்க இனிமையுடைய கைகளின் அந்த அணைப்பை விட்டு நீங்கிச் செல்லமாட்டோம்;
நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்நீயோ, பொருளீட்டும் முயற்சியை மேம்பட்டதெனக் கருதி, ஒவ்வொருநாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையேபிரிந்து வாழும் வாழ்க்கையை விரும்பிச் சிறிதளவும் ஓயமாட்டாய்;
அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர்உனக்கு என்மீது அன்பு இல்லை, வாழ்க என் நெஞ்சே! கடுமையாகப் போரிடும்
மழவர் பெருமகன் மா வள் ஓரிவீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளண்மையுள்ள ஓரியின்
கைவளம் இயைவது ஆயினும்   10கையிற்கிடைக்கும் பெருஞ்செல்வம் கிடைக்கப்பெறினும்
ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளேஅது மிகவும் எளிமையானதாகும், உன்னுடன் கூடிப்பெறும் அப் பொருள், நீயே ஏகுவாய் –
  
# 53 குறிஞ்சி# 53 குறிஞ்சி நல்வேட்டனார்
  
யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃதுநான் உன் களவுக்காதல்பற்றி அச்சம்கொண்டு அதனை மறைக்கவும், தான் அதனை
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோஅறிந்திருந்தாளோ, இல்லை நம்மீது இரக்கம் கொண்டாளோ?
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியதுஎன்னவாக இருக்கும், தோழி! நமது அன்னை எண்ணியது?
வான் உற நிவந்த பெரு மலை கவாஅன்விண்ணைத்தொடும்படி உயர்ந்த பெரிய மலையின் உச்சிச் சரிவில்
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள்      5பெருத்த முழக்கமிடும் மேகங்கள் கூடிவந்து நள்ளிரவில்
கனை பெயல் பொழிந்து என கானல் கல் யாற்றுமிகுந்த மழையைப் பொழிந்ததாக, காட்டின் பாறைகளில் மோதி வரும் ஆற்றின்
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்காய்ந்த சருகுகளோடும், உதிர்ந்த மலர்க் கொத்துக்களோடும் வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்புதிய சுவையான நீர் மருந்தும் ஆகும்,
தண்ணென உண்டு கண்ணின் நோக்கிஅதனைக் குளிர்ச்சிபெறப் பருகி கண்ணுக்கினிய காட்சிகளைக் கண்டு
முனியாது ஆட பெறின் இவள் 10வெறுப்பின்றி நீராடினால், இவளின்
பனியும் தீர்குவள் செல்க என்றோளேநடுக்கமும் தீரும், செல்வீர்களாக என்ற நம் அன்னை – 
  
# 54 நெய்தல்# 54 நெய்தல் சேந்தங்கண்ணனார்
  
வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇசங்குகள் உள்ள கடல்நீரில் இரைதேடி, உன் சுற்றமுதலானவருடன் சென்று
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறைசிறகுகளை விரித்து உயரப் பறக்க எழும்புவதை விரும்பினாயெனினும், தூய சிறகுகளுடன்
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்துமிக்க புலவைத் தின்னும் உன் கிளையுடன் சற்றுத் தாமதித்து,
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதிகரிய காலைக் கொண்ட வெண்ணிறக் குருகே! நான் சொல்வதைக் கேட்பாயாக!
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை       5பெரும் தனிமைத்துயரத்தைத் தருகின்றது இந்தச் சிறிய புல்லிய மாலைப்பொழுது;
அது நீ அறியின் அன்பு-மார் உடையைஅதனை நீ அறிந்தால் என்மீது அன்புகொள்வாய்;
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறைஎன்னை அயலாள் என்று எண்ணாது, எனது குறையை
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர்இங்கே இருப்பது போல அவர் உணரும்படி சொல்வாயாக! தழையாடை அணிவோர்
கொய் குழை அரும்பிய குமரி ஞாழல்கொய்யக்கூடிய இலைகள் தழைத்த இளம் ஞாழல்
தெண் திரை மணி புறம் தைவரும்     10தெளிந்த அலைகளின் நீலநிற மேற்புறத்தைத் தடவிக்கொடுக்கும்,
கண்டல் வேலி நும் துறை கிழவோற்கேகண்டல்மரவேலிகளையுடைய உம்முடைய கடல்துறைத் தலைவருக்கு – 
  
# 55 குறிஞ்சி# 55 குறிஞ்சி பெருவழுதி
  
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மைஉயர்ந்த மலைநாட்டைச் சேர்ந்தவனே! ஒழிந்துபோகட்டும் உன் சொன்னசொல்தவறாமை!
காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறிமூங்கில்கள் பின்னிக்கிடக்கும் கற்பாறை நெறியாகிய சிறிய வழியில்,
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்நேரக்கூடிய தீங்குகளை எண்ணிப்பாராமல், இரவில் வந்து இவளின்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்புபுள்ளித்தேமல் படர்ந்த மார்பகத்தைத் தழுவிச்செல்ல, இவளின் தோளைச் சேர்த்து
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின்       5வண்டினங்கள் அளவில்லாதனவாய் மொய்க்க,
கண் கோள் ஆக நோக்கி பண்டும்கண்ணால் கொல்பவளைப் போல் பார்த்து, “இதற்கு முன்பும்
இனையையோ என வினவினள் யாயேஇவ்வாறு மொய்க்கப்பெற்றாயோ” எனக் கேட்டாள் தாய்;
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்துஅதற்கு மறுமொழி சொல்லாதவளாய் மனம்வருந்தி
என் முகம் நோக்கியோளே அன்னாய்என் முகத்தை நோக்கினாள் தலைவி; “அன்னையே”
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த 10எப்படி ஆராய்ந்து இதனின்றும் தப்பிப்பாள் என எண்ணி, அடுப்பிலிருந்த
சாந்த ஞெகிழி காட்டிசந்தனக் கொள்ளிக்கட்டையைக் காட்டி,
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே“இதனால்தான் இப்படி ஆயிற்று” என்றேன் நான்.
  
# 56 பாலை# 56 பாலை பெருவழுதி
  
குறு நிலை குரவின் சிறு நனை நறு வீகுட்டையாக நிற்கும் குரா மரத்தின் சிறிய அரும்புகளைக் கொண்ட நறிய மலர்களில்
வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈயவண்டுகள் மொய்ப்பதால் ஏற்படும் மணத்தைக் காற்று தன்னுடன் கலந்து கொண்டுவர,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலைகண்கள் மகிழ்ச்சியடையும் அழகுபெற்ற பொழுதில்
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇஒளிரும் என் வளையல்கள் கழன்றுபோகுமாறு பிரிந்து சென்ற தலைவர்க்காகத் துன்பமுற்று
சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா       5அவர்பால் சென்ற என் நெஞ்சம் அங்கு அவர் செய்யும் வினைக்குத் தளர்வு ஏற்படாவாறு
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோஅவரோடே சேர்ந்து திரும்பி வரும் விருப்பத்தோடு வருந்தியிருக்குமோ?
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்துஅவ்வாறு அவர் அருள்செய்யாமையினால் கலங்கி இங்கு வந்து
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கிமுன்பிருந்த என்னுடைய நலன்களை இழந்துபோன எனது பசலை பாய்ந்த பொன் நிறத்தைப் பார்த்து
ஏதிலாட்டி இவள் எனவேறு யாரோ இவள் என்று
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே  10போய்விட்டதோ துன்பம் மிகக் கொண்டு – 
  
# 57 குறிஞ்சி# 57 குறிஞ்சி பொதும்பில் கிழார்
  
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைவளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம் உள்ள
குன்ற வேங்கை கன்றொடு வதிந்து எனகுன்றிலுள்ள வேங்கை மரத்தடியில் தன் கன்றுடன் படுத்திருந்ததாக,
துஞ்சு பதம் பெற்ற துய் தலை மந்திஅது தூங்கும் நேரத்தில், பஞ்சுபோன்ற தலையையுடைய குரங்கு
கல்லென் சுற்றம் கை கவியா குறுகிகல்லென ஒலிக்கும் தன் சுற்றத்தைக் கையமர்த்தி, கிட்டே சென்று
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால்    5பருத்த பால்மடியை அமுக்கிப் பற்றி இழுத்து, இனிய பாலை
கல்லா வன் பறழ் கை நிறை பிழியும்தன் இளைய வலிய குட்டியின் கை நிறையப் பிழிந்துகொடுக்கும்
மா மலை நாட மருட்கை உடைத்தேபெரிய மலைநாடனே! என் மனம் மருட்சியடைகின்றது,
செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம்நிமிர்ந்த தண்டினையும் வளைந்த கதிர்களையும் கொண்ட சிறுதினையின் அகன்ற கொல்லைக்காடு
கொய் பதம் குறுகும்_காலை எம்கதிர் அறுக்கும் பருவத்தை அடையும் இந்த நேரத்தில், எமது
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே     10கருத்த நெய்ப்பசையுள்ள கூந்தலைக்கொண்டவளின் சிறப்பு மிக்க நலம் சிதைந்துவிடுமே என்று –
  
# 58 நெய்தல்# 58 நெய்தல் முதுகூற்றனார்
  
பெரு முது செல்வர் பொன் உடை புதல்வர்நிறைந்த பழமையான செல்வத்தைப் பெற்றவரின் பொன்தாலி அணிந்த புதல்வர்
சிறு தோள் கோத்த செ அரி_பறையின்தமது சிறிய தோளில் சேர்த்துக்கட்டிய செவ்வையாக அரித்து ஒலிக்கும் பறையின்
கண்_அகத்து எழுதிய குரீஇ போலமுகப்பில் எழுதப்பட்ட குருவி அடிக்கப்படுவதைப் போல
கோல் கொண்டு அலைப்ப படீஇயர் மாதோசாட்டைக் குச்சியால் அடிக்கப்படுவதாக –
வீரை வேண்மான் வெளியன் தித்தன்   5வீரை வேண்மானாகிய வெளியன் தித்தனது
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்முரசு முதலியவற்றோடு, மாலையில் ஏற்றப்படும் வரிசை விளக்குகளோடு
வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்பவெள்ளிய சங்குகள் முழங்க, நுண்ணிய பனி அரும்ப,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்துபிரிவுத்துயர்கொண்டோர் செயலற்றுப்போக, வந்துசேர்ந்த மாலைப் பொழுதில், மெய் சோர்ந்து
அவல நெஞ்சினம் பெயர உயர் திரைஅவலம் கொண்ட நெஞ்சத்தோடு யாம் இவ்விடம்விட்டுச் செல்ல, உயரும் அலைகளையுடைய
நீடு நீர் பனி துறை சேர்ப்பன்    10நெடுங்கடலின் குளிர்ந்த துறையை உடைய தலைவனின்
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவேஓடுகின்ற தேரின் நுண்ணிய நுகத்தில் பூட்டப்பட்ட குதிரைகள் – 
  
# 59 முல்லை# 59 முல்லை கபிலர்
  
உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்துஉடும்பைக் கொன்று எடுத்துக்கொண்டு, வரிகளையுடைய தேரையை மணலைத் தோண்டி எடுத்துக்கொண்டு
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டிஉயர்ந்த உச்சிகளையுடைய புற்றில் இருக்கும் ஈசலையும் கிளறித் தாழியில் பிடித்துக்கொண்டு,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவலபகல்நேரத்து முயலை தடியால் எறிந்து பிடித்துக்கொண்டு, வரும் வேட்டுவன் தன் தோள்களில் சுமந்துவந்த
பல் வேறு பண்ட தொடை மறந்து இல்லத்துபல்வேறு பண்டங்களின் தொகுதியை மறந்து, வீட்டிலிருக்கும்
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும்      5பெரிய கலத்தில் கள்ளைப் பருகி அதன் மயக்கத்தில் செருக்கியிருக்கும்
வன்_புல காட்டு நாட்டதுவே அன்பு கலந்துவன்புலமாகிய காடுகளைக் கொண்ட நாட்டில் உள்ளது, அன்பினால் உள்ளம் கலந்து
நம்_வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்துநம்மேல் விருப்பத்துடன் கொண்ட கொள்கையுடனே. தன் நெஞ்சில்
உள்ளினள் உறைவோள் ஊரே முல்லைஎம்மை நினைத்து வாழ்பவளின் ஊர்; முல்லையின்
நுண் முகை அவிழ்ந்த புறவின்நுண்ணிய மொட்டு மலர்ந்த அந்தக் காட்டுப்பகுதியில்
பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே     10பொறுமையுடன் ஆற்றியிருக்கிறாள் அவள், இனியும் தாமதித்தால் மிகவும் வருந்துவள்.
  
# 60 மருதம்# 60 மருதம் தூங்கலோரியார்
  
மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின்மலையைப் பார்த்தாற்போன்ற நிலையில் பொருந்திய உயர்ச்சியையுடைய
பெரு நெல் பல கூட்டு எருமை உழவமிக்க நெற்கதிர்களைப் பலபெரிய கூடுகளாகக் கட்டிவைத்திருக்கும், எருமையினால் உழவுசெய்யும் உழவனே!
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்கண்ணுறக்கம் இன்றி, குளிர்ந்த புலர்கின்ற விடியற்காலையில்,
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடுகரிய கண்களையுடைய வரால் மீனின் பெரும் துண்டங்கள் குழம்பிலே இட்டவற்றை
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு       5உண்ணுதற்குரிய அரிசியை வேகவைத்த மிக்க சோற்றுடன்
கவர் படு கையை கழும மாந்திகையகத்தில் ஏந்தி வாய் கொள்ள உண்டு,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்நீர் பாய்ச்சிய வயலில் நாற்றுக்களின் முடிகளை நடுவதற்காக, உன்னுடைய
நடுநரொடு சேறி ஆயின் அவணநாற்றுநடுவாருடன் சென்று சேர்ந்தால், அங்கிருக்கும்
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல்பைஞ்சாய்க்கோரைகளையும் நெய்தல்களையும் விட்டுவைப்பாயாக; எமது இல்லத்தில்
மா இரும் கூந்தல் மடந்தை 10கரிய செறிந்த கூந்தலையுடைய தலைவிக்கு
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையேஅவை அழகிய வளையாகவும் தழையாகவும் அணிதற்குரியனவாகும்.
  
# 61 குறிஞ்சி# 61 குறிஞ்சி சிறுமோலிகனார்
  
கேளாய் எல்ல தோழி அல்கல்கேட்பாயாக, ஏடீ, தோழி! நேற்று இரவு
வேணவா நலிய வெய்ய உயிராநான் மிகுந்த வேட்கையினால் வருந்திப் பெருமூச்சுவிட்டு
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆகஅம்புபட்ட பெண்மானைப் போல வருந்தினேனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னைஎனது துயரின் மிகுதியை அறிந்தவளைப் போல, என் அன்னை
துஞ்சாயோ என் குறு_மகள் என்றலின் 5தூங்கவில்லையோ என் இளைய மகளே என்று சொல்ல,
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்சொற்கள் வெளியே வராதவண்ணம் மெல்ல என் மனத்துள்
படு மழை பொழிந்த பாறை மருங்கில்மிகுந்த மழை பொழிந்த பாறையின் அருகில் பூத்த
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்மீன்கொத்திப் பறவையின் அலகு போன்ற தளவ முல்லையும், பரல் கற்களைக் கொண்ட பள்ளங்களும் உள்ள
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்குகாடு சூழ்ந்த நாட்டினனை எண்ணியிருப்போர்க்குக்
கண்ணும் படுமோ என்றிசின் யானே    10கண்ணும் உறங்குமோ என்றேன் நான்.
  
# 62 பாலை# 62 பாலை இளங்கீரனார்
  
வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசைவேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில் காற்றினால் மோதப்படும்போது எழும்பும் நரலும் ஓசை
கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்னதறியில் கட்டப்பட்ட யானை வருத்தத்துடன் பெருமூச்சு விட்டதைப் போன்றிருக்கும்
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்துவெம்மையான கோடைக்காலம் நீடிய மூங்கில்கள் மிகுந்த காட்டுவழியில்
குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்துகுன்றினை நோக்கி ஊர்ந்துசெல்லும் முழுநிலவை நோக்கி, நின்று, அவளை நினைந்து
உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்று     5மனத்துள் எண்ணிப்பார்த்தேன் அன்றோ நான்! முள் போல் கூர்மையான பற்களையும்,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்திலகமிட்ட இனிய மணமுள்ள சிறப்பான நெற்றியையும் கொண்ட ஒருத்தியாக
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள்எம்முடையவளும் உண்டு ஒரு நிறைநாள் திங்கள்,
உரறு குரல் வெம் வளி எடுப்ப நிழல் தபமுழங்கும் குரலையுடைய வெம்மையான காற்று வீசுவதால் இலைகளை இழந்து நிழல் இன்றி
உலவை ஆகிய மரத்தஉலர்ந்த கொம்புகளாக நிற்கின்ற மரங்களையுடைய,
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே      10கற்கள் விளங்கும் உயர்ந்த மலைக்கு அப்பால் என்று – 
  
# 63 நெய்தல்# 63 நெய்தல் உலோச்சனார்
  
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர்வலிமை மிக்க கடலில் சென்று வருந்திய, பெரிய வலைகளைக் கொண்ட பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில்
கல்லென் சேரி புலவர் புன்னைமிகுந்த ஆரவாரமுள்ள சேரியை அடுத்த புலால்நாறும் இடத்திலுள்ள புன்னையின்
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால்  5சந்தடி மிகுந்த ஊரினர் அறத்தின்பாற்படாதவராயினர்; அதனால்
அறன் இல் அன்னை அரும் கடி படுப்பஅறமற்ற அன்னை நம்மை அரிய காவலில் வைக்க,
பசலை ஆகி விளிவது-கொல்லோநம் மேனி பசலை பாய, அழியலாயிற்று –
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்பறவைகள் வந்து உட்கார வளைந்து உதிர்ந்த பூக்கள் கலந்த சேறு நிரம்பிய
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளிகழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை
திரை தரு புணரியின் கழூஉம்       10அலைகள் தருகின்ற கடல்நீர் கழுவிவிடும்
மலி திரை சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பேமிகுந்த அலைகளையுடைய நம் கடல்துறைத் தலைவனோடு அமைந்த நம் உறவு – 
  
# 64 குறிஞ்சி# 64 குறிஞ்சி உலோச்சனார்
  
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிகநம் காதலர் எப்படிப்பட்டவராயினும் இனி அவர் பற்றிய நினைவை விட்டுவிடு,
அன்ன ஆக இனையல் தோழி யாம்அப்படி இருப்பதற்காக வருந்தவேண்டாம் தோழியே! நாம்
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன்இப்படிப்பட்டவராய் ஆகிவிடும்படி நம்மைத் துறந்துசென்றோரின் நட்பு இனி நமக்கு எதற்கு?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்மரல் நாரினால் செய்த உடையினையுடைய, மலையில் வாழும் குறவர்கள்
அறியாது அறுத்த சிறியிலை சாந்தம் 5அறியாமல் அறுத்த சிறிய இலைகளைக் கொண்ட சந்தனமரம்
வறன்_உற்று ஆர முருக்கி பையெனகாய்ந்துபோய் மிகவும் கெட்டு மெல்லமெல்ல
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என்மரமே வெறுமையுற்று சோர்ந்து விழுவதைப் போல
அறிவும் உள்ளமும் அவர்_வயின் சென்று எனஅறிவும் உள்ளமும் அவரிடம் சென்றதாக
வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர்சுருங்கிப்போயிற்று தோழியே! என் உடம்பு; இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது      10வந்தாலும் நம் நோய்க்கு மருந்தாகமாட்டார், வராமல்
அவணர் ஆகுக காதலர் இவண் நம்அங்கேயே இருந்துவிடட்டும் நம் காதலர்; இங்கே நமது
காமம் படர் அட வருந்தியகாதலும் அதனால் உண்டான துன்பமும் நம்மைக் கொல்லும்படி வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரேநோய் மிக்க வருத்தத்தை காணாமலே போகட்டும் நம்மைச் சேர்ந்தோர்.
  
# 65 குறிஞ்சி# 65 குறிஞ்சி கபிலர்
  
அமுதம் உண்க நம் அயல் இலாட்டிஅமுதத்தை உண்பாளாக! நம் அயல்மனைக்கிழத்தி!
கிடங்கில் அன்ன இட்டு கரை கான்யாற்றுஅகழியைப் போன்று ஆழ்ந்த, சிறிய கரையை உடைய காட்டாற்றில்
கலங்கும் பாசி நீர் அலை கலாவகலங்கிக்கிடக்கும் பாசி நீர் அலைத்தலால் நீரில் ஒன்றுசேர்ந்து கலக்க,
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்துஒளிறுகின்ற வெள்ளிய அருவி வீழும் நீர்த்துறையிடத்தில் கொம்புகளால் ஊடுறுவக் குத்தி
புலியொடு பொருத புண் கூர் யானை   5புலியுடன் போரிட்ட புண்ணுற்று வருகின்ற யானையின்
நல் கோடு நயந்த அன்பு இல் கானவர்நல்ல தந்தங்களை விரும்பிய அன்பு இல்லாத கானவர்களின்
வில் சுழி பட்ட நாம பூசல்வில்லின் சுழிப்புக்கு இலக்கான யானையின் அச்சந்தரும் பேரொலி
உரும் இடை கடி இடி கரையும்குமுறுகின்ற இடிமுழக்கத்தினூடே தோன்றும் பெரிய இடியேற்றின் முழக்கத்தைப் போல் ஒலிக்கும்
பெரு மலை நாடனை வரூஉம் என்றோளேபெரிய மலையைச் சேர்ந்தவன் வருவான் என்று சொன்னதால் –
  
# 66 பாலை# 66 பாலை இனிசந்தநாகனார்
  
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்டஉலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,
புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன்தனித்திருந்த நீண்ட கிளையில் ஏறி, தன் பெடையை நினைத்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகிபுள்ளிகள் விளங்கும் பிடரிமயிர் மணங்கமழத் தேய்த்துவிடும்
புன் புறா உயவும் வெம் துகள் இயவின்      5புல்லிய புறா வருந்தும் வெம்மையான புழுதியையுடைய காட்டுவழியில்,
நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும்தான் விரும்பிய காதலனைச் சேர்ந்திருந்தாள் எனினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோசிவந்துபோய் ஒளி மழுங்கி கலக்கமடைந்தனவோ?-
கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும்கழுத்து மாலை முறுக்கிக்கொண்டிருப்பினும், கைவளையல்கள் நெகிழ்ந்துபோயிருப்பினும்,
காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும்உறுதியாகக் கட்டப்பெற்ற, அல்குலின் காசுமாலையில் உள்ள காசுகள் வரிசைமாறிக் கிடப்பினும்,
மாண் நலம் கையற கலுழும் என்      10தன் மாண்புமிக்க நலம் கெட்டழிய மனம் கலங்குகின்ற என்
மாய குறு_மகள் மலர் ஏர் கண்ணேஅழகிய இளைய மகளின் மலர் போன்ற கண்கள் –
  
# 67 நெய்தல்# 67 நெய்தல் பேரிசாத்தனார்
  
சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம்மிக்க தொலைவிலுள்ள வானத்தில் ஊர்ந்து சென்ற செழுமையான கதிர்களைக் கொண்ட ஞாயிறு
மால் வரை மறைய துறை புலம்பின்றேபெரிய மலையில் சென்று மறைய கடற்கரைத்துறையும் தனிமையுடையதாய் ஆயிற்று.
இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகுஇறா மீனை அருந்திவிட்டு எழுந்த கரிய காலைக்கொண்ட வெள்ளைக் குருகுகள்
வெண் கோட்டு அரும் சிறை தாஅய் கரையவெள்ளிய உப்புக் குவடுகளைத் தொட்டுக்கொண்டு தம் அரிய சிறகுகளை வீசிப் பறந்துசென்று, கரையிலுள்ள
கரும் கோட்டு புன்னை இறைகொண்டனவே 5கரிய கிளைகளையுடைய புன்னை மரங்களில் தங்கின;
கணை கால் மா மலர் கரப்ப மல்கு கழிதிரண்ட தண்டினையுடைய கரிய மலர்கள் மறைந்துபோகும்படி நீர் பெருகும் கழிகளில்
துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடைதுணையோடு சுறாமீன்கள் நீந்தவும் செய்யும்; அவ்விடத்தில்
எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇஇரவில் ஒலிக்கும் குளிர்ந்த கடலில் மிக்க விளக்குகளைக் கொளுத்திக்கொண்டு
எமரும் வேட்டம் புக்கனர் அதனால்எமது வீட்டாரும் மீன் பீடிக்கச் சென்றனர்; அதனால்,
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர்10இங்குத் தங்கிச் சென்றால் என்ன? பொங்கிச் சிதறும் துளிகளைக்கொண்டு,
முழவு இசை புணரி எழுதரும்முழவு போல் இசைக்கும் அலைகள் எழுந்து
உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கேஉடைந்து விழும் கடற்கரையிலுள்ள நிலத்தில் நாங்கள் உறையும் இனிய ஊரில் –
  
# 68 குறிஞ்சி# 68 குறிஞ்சி பிரான்சாத்தனார்
  
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாதுவிளையாட்டுத் தோழியருடன் ஓரை என்னும் ஆட்டத்தை ஆடாமல்
இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல்இள மங்கையர் தமது வீடுகளில் அடைத்துக்கிடத்தல்
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் எனஅறநெறி ஆகாது; வீட்டின் செல்வமும் குன்றும் என்று
குறு நுரை சுமந்து நறு மலர் உந்திசிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு, நறிய மலர்களை வீசியெறிந்துகொண்டு
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்   5பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்;
வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினேஇதனை விரைந்து சென்று அன்னையை வணங்கிச் சொல்லுபவரைப் பெற்றால்
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்துசெல்லுங்கள் என்று அனுப்பிவிடுவாளோ? ஒளியை உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்வலிய இடி முழங்கும் பாதி இரவாகிய நடுயாமத்தில்
கொடி நுடங்கு இலங்கின மின்னிகொடிபோல் வளைந்தனவாய் ஒளிர்ந்து மின்னி
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே10அசைகின்ற மேகங்கள் தங்கியிருந்தன, தலைவனின் உச்சி உயர்ந்த குன்றில் –
  
# 69 முல்லை# 69 முல்லை சேகம்பூதனார்
  
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிபல கதிர்களையுடைய ஞாயிறு பகற்பொழுதைச் செய்து
சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறையதொலைவில் உயர்ந்த பெரிய மலையில் சென்று அங்கே மறைய,
பறவை பார்ப்பு_வயின் அடைய புறவில்பறவைகள் தம் குஞ்சுகளிருக்கும் கூட்டிற்சென்று தங்க, காட்டில்
மா எருத்து இரலை மட பிணை தழுவகரிய பிடரியைக் கொண்ட இரலை மான்கள் தம் இளைய பெண்மானைத் தழுவ,
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின்       5முல்லை தம் மொட்டுகளின் வாய் திறக்க, பல இடங்களிலுமுள்ள
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅகாந்தள் மலர்ந்து புதர்களில் விளக்கேந்திநிற்க,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணிபெருமிதம் கொண்ட நல்ல பசுக்களின் குற்றமற்ற தெளிவான மணியோசை
கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றிவளைந்த கோலையுடைய கோவலரின் குழலோடு சேர்ந்து
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலைமெல்லிதாக வந்து ஒலிக்க, இவ்வாறான இரக்கமற்ற மாலைப்பொழுது
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்     10பொருளீட்டும் முயற்சியால் பிரிந்து சென்றோர் சென்ற நாட்டிலும்
இனைய ஆகி தோன்றின்இப்படியே தோன்றுமாயின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னேதன் செயலில் உறுதிகொண்டு தங்கியிருக்க அவரால் முடியாது.
  
# 70 மருதம்# 70 மருதம் வெள்ளிவீதியார்
  
சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகேசிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே!
துறை போகு அறுவை தூ மடி அன்னசலவைத்துறையில் மிதக்கும் வெள்ளை ஆடையின் தூய மடிப்பு போன்ற
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகேநிறம் விளங்கிய சிறகினை உடைய சிறிய வெள்ளைக் குருகே!
எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇஎமது ஊருக்கு வந்து எமது உண்துறையில் புகுந்து தேடி
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி  5சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்!
அனைய அன்பினையோ பெரு மறவியையோஅதற்கு நன்றியுள்ள அன்போடு இருப்பாயோ? இல்லை பெரிய மறதியைக் கொண்டிருப்பாயோ?
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்அங்குள்ள இனிய நீர் இங்கு வந்து பரந்து செல்லும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்வயல்களையுடைய நல்ல ஊரினையுடைய எனது காதலரிடம் சென்று என்னுடைய
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயேஅணிகலன்கள் கழன்றுபோகும் துன்பத்தை இதுவரை சொல்லாதிருக்கின்றாய்!
  
# 71 பாலை# 71 பாலை வண்ணப்புறக் கந்தரத்தனார்
  
மன்னா பொருள்_பிணி முன்னி இன்னதைநிலையில்லாத இந்தப் பொருளின் மீது கொண்ட ஆசையைக் கருத்தில்கொண்டு, அதனை
வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து எனவளை அணிந்த முன்னங்கைகளை உடைய உன் தோழிக்கு உணர்த்து என்று
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் எனபலமுறை வேண்டிக் கேட்டுக்கொள்கிறீர்; அவ்வாறே நான் சென்று கூறினால் செல்லுவீராக என்று
விடுநள் ஆதலும் உரியள் விடினேஉம்மை விடுதலும் செய்வாள்; அவ்வாறு விடுத்தால்,
கண்ணும் நுதலும் நீவி முன் நின்று5கண்களையும் நெற்றியையும் தடவிக்கொடுத்து அவள் முன் நின்று,
பிரிதல் வல்லிரோ ஐய செல்வர்அவளைவிட்டுப் பிரிந்துசென்றுவிடுவீரோ ஐய! செல்வருடைய
வகை அமர் நல் இல் அக இறை உறையும்வகைபட அமைந்த நல்ல வீட்டின் உள்ளே இருக்கும் கூரைச்சாய்ப்புகளில் வசிக்கும்
வண்ண புறவின் செம் கால் சேவல்அழகிய புறாவின் சிவந்த கால்களையுடைய ஆண்புறா
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல்தான் விரும்பும் தன் துணையைச் சேர்ந்துகொள்ள அழைக்கச் செயலற்றுப்போய் ஒலிக்கும் ஓசையை
நும் இலள் புலம்ப கேள்-தொறும்    10உம்மைப் பிரிந்திருப்போள் தனிமையில் கேட்குந்தோறும்
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவேபொலிவுபெற்ற கூந்தலையுடையவள் பேரவாவினால் நடுங்கி வருந்துமாறு –
  
# 72 நெய்தல்# 72 நெய்தல் இளம்போதியார் 
  
பேணுப பேணார் பெரியோர் என்பதுபேணவேண்டுபவற்றைப் பேணமாட்டார் பெரியோர் என்பது
நாணு_தக்கன்று அது காணும்_காலைவெட்கப்படத் தகுந்தது, அதனை ஆராய்ந்து பார்த்தால்;
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின்உயிர் ஒன்றினாற் போன்ற குற்றமற்ற நட்புடைய
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிதுஉன்னிடத்து நான் மறைத்துப்பேசுவது எவ்வளவு மிகப் பெரிய
அழி_தக்கன்றால் தானே கொண்கன்     5அழிவுதருவதாய்ப் போகும்! முன்பெல்லாம் தலைவன்
யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என்“நான் எமது தாய்க்கு அஞ்சுகிறேன்” என்று சொன்னாலும், தான் என்னைவிட்டுப்
பிரிதல் சூழான்-மன்னே இனியேபிரிந்துசெல்லுதலை எண்ணமாட்டான்; இப்பொழுதோ,
கானல் ஆயம் அறியினும் ஆனாதுகானலில் உள்ள விளையாட்டுத் தோழியருக்குத் தெரிந்தாலும், அதனைப் பொறுக்காமல்
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால்பழிச்சொல் வந்துவிடுமோ என்று கூறுகின்றான்; அதனால்
புலர்வது-கொல் அவன் நட்பு எனா    10குறைவுபட்டதோ அவன் காதல் என்று
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானேஅஞ்சுகிறேன் தோழி என் மனத்துக்குள் –
  
# 73 பாலை# 73 பாலை மூலங்கீரனார்
  
வேனில் முருக்கின் விளை துணர் அன்னவேனில்காலத்து முருக்க மரத்தில் நன்கு விளைந்து முற்றிய காய்களின் கொத்தினைப் போன்ற
மாணா விரல வல் வாய் பேஎய்அழகற்ற விரல்களைக் கொண்ட, வலிய வாயைக் கொண்ட பேய்,
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇயவளப்பமுடைய பழமையான ஊரில் மாலைநேரத்து மலர்ப்பலியை உண்பதற்காக,
மன்றம் போழும் புன்கண் மாலைமக்கள்கூடும் பொதுவிடத்தை ஊடுருவிக்கொண்டு வரும் புன்கண்மையுடைய மாலைப்பொழுதில்
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய 5தலைவரோடு இருப்பினும் அஞ்சுகின்ற நாம் இங்கு தனித்திருக்க,
செல்ப என்ப தாமே செ வரிசெல்வோம் என்கிறார் அவரே! சிவந்த வரிகளைக்கொண்ட
மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர்மயிரை வரிசையாக வைத்தது போன்ற நீண்டு திரண்டு வளைந்த கதிர்களையுடைய
செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும்செந்நெல் விளையும் அழகிய வயல்களில் அன்னம் துயிலும்
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என்பூக்கள் அழகிதாகக் கிடக்கும் கொல்லைப்புறத்தையுடைய சாய்க்காடு என்ற ஊரைப் போன்ற என்
நுதல் கவின் அழிக்கும் பசலையும்  10நெற்றியின் அழகினை அழித்துப்போடும் பசலையையும்,
அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தேஅயலவர் தூற்றும் பழிச்சொல்லையும் எனக்கு அளித்துவிட்டு – 
  
# 74 நெய்தல்# 74 நெய்தல் உலோச்சனார்
  
வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலைசெம்மையாகச் செய்யப்பட்ட கதிர் என்னும் கருவியால் முறுக்கேற்றப்பட்ட வலிய கயிற்றால் பின்னிய பெரிய வலையை
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்இடி போன்ற குரலையுடைய அலைகலுள்ள கடலில் இடுவதற்காக,
நிறைய பெய்த அம்பி காழோர்நிறைய ஏற்றப்பட்ட தோணியை, தாற்றுக்கோல் வைத்திருப்பவர்கள்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும்அடக்குதற்கு அரிய களிற்றினை பிணித்துச் செலுத்துவதைப் போல, பரதவர்கள் செலுத்தும் 
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை     5சிறிய பூக்களைக் கொண்ட ஞாழல் மரங்கள் இருக்கும் பெரிய கடற்கரைக்குத் தலைவனை,
ஏதிலாளனும் என்ப போது அவிழ்      நமக்கு அன்னியன் என்பர்; மொட்டுகள் மலர்கின்ற,
புது மணல் கானல் புன்னை நுண் தாதுபுதுமணற்பரப்பைக் கொண்ட கானலில் உள்ள புன்னை மரத்தின் நுண்ணிய தாதுக்கள்
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின்கிழக்கிலிருந்து வீசும் காற்று வந்து மோதும்போதெல்லாம், குருகின்
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல்வெள்ளையான முதுகில் மொய்ப்பதுபோல் உதிர்க்கும் தெளிந்த கடற்கரையிலுள்ள
கண்டல் வேலிய ஊர் அவன்   10கண்டல் மர வேலியையுடைய ஊரினர், பரத்தையை அவனது
பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதேமனைவி என்று கூறுகின்றனர்; அந்தச் சொற்களை மாற்றுவது இனி அரிதாகும்
   
# 75 குறிஞ்சி# 75 குறிஞ்சி மாமூலனார்
  
நயன் இன்மையின் பயன் இது என்னாதுஉன் உள்ளத்தில் இரக்கம் இன்மையால், விளையும் பயன் இது என்று எண்ணாமல்,
பூம் பொறி பொலிந்த அழல் உமிழ் அகன் பைஅழகிய புள்ளிகள் பெற்று விளங்குகின்ற நஞ்சைக் கக்கும் அகன்ற படத்தையுடைய
பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இதுபாம்பு உயிர்களைக் கொல்வது போன்று இங்கு நீ சிரிப்பது
தகாஅது வாழியோ குறு_மகள் நகாஅதுதகாதது, வாழ்க இளைய மகளே! சிரிக்காமல்
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல்5சொல்வாயாக! உடைந்துபோகும் என் உள்ளம்; மலைச் சாரலில்
கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சிவளைந்த வில்லையுடைய வேட்டுவன் கொம்புகளையுடைய பன்றியைக் கொன்று
பச்சூன் பெய்த பகழி போலஅதன் பசிய ஊனில் பாய்ந்த அம்பினைப் போல
சே அரி பரந்த மா இதழ் மழை கண்சிவந்த வரிகள் பரந்த கரிய இமைகளைக் கொண்ட குளிர்ந்த கண்களின்
உறாஅ நோக்கம் உற்ற என்குறிப்பில்லாத பார்வையைப் பெற்ற எனது
பைதல் நெஞ்சம் உய்யும் மாறே      10வருத்தமிக்க நெஞ்சம் உய்யுமாறு –
  
# 76 பாலை# 76 பாலை அம்மூவனார்
  
வரு மழை கரந்த வால் நிற விசும்பின்வருகின்ற மழையையும் மறைத்துக்கொண்ட வெள்ளைநிற மேகங்களின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டுநுண்ணிய துளிகளும் மாறிப்போன காற்றடிக்கும் காட்டுவழியில்
ஆல நீழல் அசைவு நீக்கிஆலமரத்தின் நிழலில் உன் தளர்ச்சியைப் போக்கி,
அஞ்சு_வழி அஞ்சாது அசை_வழி அசைஇஅஞ்சவேண்டியஇடத்தும் அஞ்சாமல், தங்கவேண்டிய நேரத்தில் தங்கி இளைப்பாறி
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள்    5வருந்தாது வருவாயாக, தூய அணிகலன்களை அணிந்த இளமங்கையே!
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னைஎடுத்ததற்கெல்லாம் பெரிய பழிச்சொல்லைக் கூறும் உன்னுடைய ஊரிலுள்ள புன்னையின்
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்காம்பற்ற மலர் உதிர்ந்ததால், தேன்மணம் கமழுகின்ற புலால் நாற்றமுடைய
கானல் வார் மணல் மரீஇகழிக்கரை சோலையின் நீண்ட மணலில் நடந்துவழக்கப்பட்ட,
கல் உற சிவந்த நின் மெல் அடி உயற்கேஇப்பொழுது கற்கள் குத்துவதால் சிவந்துபோன, உன் மென்மையான பாதங்கள் துன்பம் நீங்கப்பெற –
  
# 77 குறிஞ்சி# 77 குறிஞ்சி கபிலர்
  
மலையன் மா ஊர்ந்து போகி புலையன்மலையமான் தன் குதிரையின் மேல் செல்ல, முரசறைவோன்
பெரும் துடி கறங்க பிற புலம் புக்கு அவர்தன் பெரிய துடிப்பறையை முழக்க, வேற்று மன்னர் நாட்டில் புகுந்து அவரின்
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்குகடத்தற்கரிய காட்டரணை அழித்து நிம்மதிப்பெருமூச்சு விட்டாற்போன்று
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர்துன்பம் தீர்ந்தது என் நெஞ்சு! சிவந்த வேர்களைக் கொண்ட
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்   5கிளைகள்தோறும் தொங்கும் பழங்களையுடைய பலாவின்
சுளை உடை முன்றில் மனையோள் கங்குல்சுளைகளை உடைய முற்றத்தில் மனையோளான மனைவி இரவில்
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும்ஒலிக்கும் வெண்மையான அருவிநீரின் ஒலியைக்கேட்டுத் துயில்கின்ற
ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன்பெரிய ஊர் அல்லாத அழகிய சேரியாகிய சிற்றூரில், வளைசெய்வதில் வல்லவன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளைதன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்த நன்றாகப் பொருந்திய நேரிய ஒளிமிகுந்த வளையலையும்,
அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல்      10அகன்ற தொடியையும் செறித்த முன்கையையும், ஒளிவிடும் நெற்றியையும்,
திதலை அல்குல் குறு_மகள்அழகுத்தேமல் படர்ந்த அல்குலையும் கொண்ட இளமகளின்
குவளை உண்கண் மகிழ் மட நோக்கேகுவளைபோன்ற மையுண்ட கண்களின் மகிழ்ச்சி மிக்க மடப்பம் பொருந்திய பார்வையால் –
  
# 78 நெய்தல்# 78 நெய்தல் கீரங்கீரனார்
  
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழிகொல்லுகின்ற சுறாமீன்கள் திரியும் ஒள்ளிய நிறத்தையுடைய பெரிய கழியில் மலர்ந்த
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறையநீலமணி போலும் அழகிய நெய்தலின் கரிய மலர் நிறையும்படி
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்பொன் போன்ற நுண்ணிய தாதினைப் புன்னை மரங்கள் தூவும்,
வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல்விழுது ஊன்றிய தாழையின் மலர்கள் கமழ்கின்ற. கடற்கரைச் சோலையில்
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை      5துன்பம் வந்து வருத்தும் ஞாயிறு மறையும் மாலைப்பொழுதில்
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்காமநோய் மிகுந்த மிக்க துன்பத்திலிருந்தும் நாம் இங்கே தப்பித்தோம்;
கேட்டிசின் வாழி தோழி தெண் கழிகேட்டாயா தோழி! வாழ்க! தெளிந்த கழியில்
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்பெரிதாக அமையப்பெற்ற சக்கரப் பட்டையின் மேல் விளிம்பு அமுங்கப்பெறினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலி_மாபறவைகள் எழுந்து பறந்தாற்போன்ற பொன்னால் செய்யப்பட்ட கலன்களைக் கொண்ட செருக்குள்ள குதிரை,
வலவன் கோல் உற அறியா     10பாகனின் தாற்றுக்கோலால் தூண்டப்பெறுதலை அறியாத
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலேதொடர்ந்தியங்கும் கடல்நீர்ச் சேர்ப்பனின் தேரின் மணி ஒலிக்கும் குரலை – 
  
# 79 பாலை# 79 பாலை கண்ணகனார்
  
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீமூடியிருக்கின்ற, ஈங்கை மரத்தின் தேன்துளி மிகவும் திரண்டுள்ள அன்றைய மலர்கள்
கூரை நன் மனை குறும் தொடி மகளிர்கூரையையுடைய நல்ல வீட்டில் உள்ள குறிய தொடியையுடைய மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம்மணலில் ஆடும் கழங்கினைப் போல பாறையின் மேல் பரவிக்கிடக்கும்
ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலைஅழகு பொருந்திய மக்கள் நடமாடுவதற்கு அரிய கிளைத்த பாதையில்
பிரிந்தோர் வந்து நம் புணர புணர்ந்தோர்   5பிரிந்துசென்றோர் திரும்ப வந்து எம்மைச் சேருங்காலத்தில், சேர்ந்திருப்போர்
பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோபிரிந்து செல்ல எண்ணுவதைக் காட்டிலும் கொடியதும் ஒன்று உண்டோ?
என்று நாம் கூறி காமம் செப்புதும்என்று நாம் கூறி நமது ஆசையைச் சொல்லுவோம்;
செப்பாது விடினே உயிரொடும் வந்தன்றுஅவ்வாறு சொல்லாமல் விட்டுவிட்டால் எம் உயிருக்கே கேடு வரும்;
அம்ம வாழி தோழிவாழ்க தோழியே!
யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே       10வேறெந்தவகையில் தவிர்ப்போம் நம் காதலரின் பயணத்தை?
  
# 80 மருதம்# 80 மருதம் பூதன்தேவனார்
  
மன்ற எருமை மலர் தலை காரான்தொழுவத்திலுள்ள எருமையின் அகன்ற தலையையுடைய காரெருமையின்
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டுஇனிய சுவையுள்ள பாலாகிய பயனைக் கொள்வதற்காக, கன்றினைவிட்டுப் பின்னர் கறந்துகொண்டு,
ஊர் குறு_மாக்கள் மேற்கொண்டு கழியும்ஊரிலுள்ள இளஞ்சிறுவர்கள் அந்த எருமைகளின் மேல் ஏறிக்கொண்டு செல்லும்
பெரும் புலர் விடியலின் விரும்பி போத்தந்துபெரிய இருள் நீங்கும் விடியற்காலத்தில் விருப்பத்தோடு வந்து,
தழையும் தாரும் தந்தனன் இவன் என  5உடுக்கும் தழையும், சூடும் மாலையும் தந்தான் இவன் என்று
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇஅணிகலன் அணிந்த தோழியரோடு தகுந்த நாணம் தன்ன வளைக்க,
தைஇ திங்கள் தண் கயம் படியும்தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்
பெரும் தோள் குறு_மகள் அல்லதுபெரிய தோள்களைக் கொண்ட இளையோளே அன்றி
மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கேமருந்து வேறு இல்லை நான் அடைந்த இந்த நோய்க்கு –
  
# 81 முல்லை# 81 முல்லை அகம்பன் மாலாதனார்
  
இரு நிலம் குறைய கொட்டி பரிந்தின்றுபெரிய நிலம் பள்ளமாகும்படி தன் காலால் கொட்டி நடந்து விரைந்து
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்நேராக ஓடுகின்ற தளர்ச்சியுறாத வலிமையான கால்களையுடைய
மன்னர் மதிக்கும் மாண் வினை புரவிமன்னர்கள் மதிக்கும் மாட்சிமையான போர்வினையில் மேம்பட்ட குதிரைகளின்
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்பகொய்யப்பட்ட பிடரிமயிரில் கட்டப்பட்ட மணிகள் மிகுந்தொலிக்க,
பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ்      5பூட்டுக, பாகனே! உன் தேரை! பூண்கள் தாழ்ந்த
ஆக வன முலை கரை_வலம் தெறிப்பமார்பிலுள்ள அழகிய முலைகளின் முகட்டில் கண்ணீர் தெறித்துவிழ
அழுதனள் உறையும் அம் மா அரிவைஅழுதுகொண்டு இருக்கும் அழகிய மாமைநிறத்தையுடைய மனைவி
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇயஎமக்கு விருந்துசெய்யும் விருப்பத்தோடு சமைத்தலில் வருந்திக் களைப்புற்ற
முறுவல் இன் நகை காண்கம்மகிழ்ச்சியோடமைந்த இனிய நகையைக் காண்போம்;
உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே      10கொண்ட பகையைத் தணித்துவிட்டான், வலிமைமிக்க வாளையுடைய வேந்தன் –
  
# 82 குறிஞ்சி# 82 குறிஞ்சி அம்மள்ளனார்
  
நோயும் நெகிழ்ச்சியும் வீட சிறந்தஎன்னுடைய காமநோயும், அதனாலுண்டான தளர்ச்சியும் அற்றுப்போகுமாறு, சிறந்த
வேய் வனப்பு உற்ற தோளை நீயேமூங்கில்போல் அழகு பெற்ற தோளையுடையவள் நீ! நீயே
என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சிஎன்னுடைய வருத்தத்தை அறிவாயோ! நல்ல நடையழகைக் கொண்ட கொடிச்சியே!
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின்முருகனைச் சேர்ந்து ஒழுகிய வள்ளியைப் போல, உன்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே       5மேனி என் கண்ணை எறிக்க உன்னைப் பார்க்க இயலாதனானேன்;
போகிய நாக போக்கு அரும் கவலைஉயர்ந்த நாகமரங்களைக் கொண்ட செல்லுதற்கு அரிய பிரிவுபட்ட வழியினில்
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்சிறிய கண்களைக் கொண்ட பெரும் சினத்தைக் கொண்ட ஆண்பன்றி
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவணசேற்றில் ஆடிய கருத்த முதுகில் புழுதியோடு அதன் நிறத்தைப் பெற்று,
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇவெறுமையான பிளவினில் மாட்டிக்கொள்ள, அதனைச் சூழ்ந்த வார்களை அழித்து,
கோள் நாய் கொண்ட கொள்ளை  10வேட்டை நாய்கள் கொன்ற கொள்ளைப்பொருளை
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானேகானவர் எடுத்துக்கொண்டு செல்லும் சிறுகுடியில் –
  
# 83 குறிஞ்சி# 83 குறிஞ்சி பெருந்தேவனார்
  
எம் ஊர் வாயில் உண்துறை தடைஇயஎமது ஊரின் நுழைவாயிலில் உள்ள ஊருணியின் துறையில், பருத்த
கடவுள் முது மரத்து உடன் உறை பழகியதெய்வம் வீற்றிருக்கும் முதிய மரத்தில் இருப்பதனால் இவ்வூரில் என்னுடன் வசித்துப் பழகிய
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர்தேயாத வளைந்த அலகினையும், தெளிந்த கண்பார்வையையும், கூர்மையான நகங்களையும் கொண்ட,
வாய் பறை அசாஅம் வலி முந்து கூகைஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமை மிகுந்த கூகையே!
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்      5ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை,
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும்வெள்ளெலியின் சூட்டு இறைச்சியோடு நிறையத் தந்து உன்னைக் காப்பேன்,
எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇஅன்பில் குறைவுபடாத கொள்கையுடைய எனது காதலர் வருவதை விரும்பி
துஞ்சாது அலமரு பொழுதின்நநன் தூங்காது வருந்திக்கொண்டிருக்கும்வேளையில்,
அஞ்சு வர கடும் குரல் பயிற்றாதீமேஅச்சம் தோன்றும் வண்ணம் உன் கடுமையான குரலில் கூவாதிருப்பாயாக!
  
# 84 பாலை# 84 பாலை பாலைபாடிய பெருங்கடுங்கோ
  
கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும்
திதலை அல்குலும் பல பாராட்டிஅழகுத்தேமல் படர்ந்த அல்குலையும் பலவாறு பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே இன்றேநேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக! இன்றோ,
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர்பெரிய நீர்ப்பரப்பை ஒத்த வெண்மையான் பேய்த்தேராகிய கானல்நீரை
மரன் இல் நீள் இடை மான் நசை_உறூஉம்       5மரங்களற்ற நீண்ட வெளியில் இருக்கும் மான்கள் நீரென விரும்பி ஓடும்,
சுடு மண் தசும்பின் மத்தம் தின்றசுடுமண் பானையில் மத்தால் கடையும்போது
பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்னதிரண்டுவராத வெண்ணெய் வெப்பத்தால் சிதறித் தோன்றுவது போல
உவர் எழு களரி ஓமை அம் காட்டுஉப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம்வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில்
ஏகுவர் என்ப தாமே தம்_வயின்      10செல்வேன் என்கிறார் அவர்; தம்மிடத்தில்
இரந்தோர் மாற்றல் ஆற்றாஇல்லையென்று கேட்போரின் இன்மையை மாற்ற முடியாத
இல்லின் வாழ்க்கை வல்லாதோரேஇல்வாழ்க்கையை வாழமாட்டாதார்.
  
# 85 குறிஞ்சி# 85 குறிஞ்சி நல்விளக்கனார்
  
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும்ஆய்ந்தெடுத்த மலர் போன்ற குளிர்ந்த கண்களில் தெளிந்த நீர்த்துளிகள் துளிர்ப்பவும்,
வேய் மருள் பணை தோள் விறல் இழை நெகிழவும்மூங்கில் போன்ற பெரிய தோள்களில் உள்ள வெற்றிவாய்ந்த அணிகலன்கள் நெகிழ்ந்துபோகவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்அதனால் ஊராரின் பழிச்சொற்கள் அந்த ஊரில் பெரிதாய் ஒலித்தாலும்,
குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடைகுறுகிய வரிகளையுடைய பெரிய புலிக்கு அஞ்சி, குறு நடையுள்ள
கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும்   5கன்றினையுடைய யானை நின்று காத்துத் தங்கியிருக்கின்ற
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறிமிகுந்த இருள் பெருகிய அச்சம்தரக்கூடிய சிறிய நெறியில்
வாரற்க தில்ல தோழி சாரல்வரவேண்டாம், தோழியே! மலைச் சாரலின்
கானவன் எய்த முளவு_மான் கொழும் குறைவேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசையை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடுதேன் மணக்கும் கூந்தலையுடைய கொடிச்சி தான் அகழ்ந்தெடுத்த கிழங்குடன்
காந்தள் அம் சிறுகுடி பகுக்கும்  10காந்தள் மலர்ந்துகிடக்கும் அழகிய சிறுகுடியினருக்குப் பகுத்துக்கொடுக்கும்
ஓங்கு மலை நாடன் நின் நசையினானேஉயர்ந்த மலையைச் சேர்ந்தவன் – உன்மீது விருப்பம் கொண்ட அவன் –
  
# 86 பாலை# 86 பாலை நக்கீரர்
  
அறவர் வாழி தோழி மறவர்அறநெறியாளரே! வாழ்க! தோழி! படைவீரரின்
வேல் என விரிந்த கதுப்பின் தோலவேலின் இலை போல விரிந்த வெளிப்பகுதியாகிய மேல்தோலையுடைய,
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்பாண்டில் போன்று வெள்ளை வட்டமான, பகன்றை மலர்கின்ற
கடும் பனி அற்சிரம் நடுங்க காண்_தககடுமையான பனியையுடைய முன்பனிக்காலத்தில் நம்மைப் பிரிந்து நாம் நடுங்கிநிற்க, அழகு பொருந்தக்
கைவல் வினைவன் தையுபு சொரிந்த    5கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதக உருவின ஆகி பெரியசுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி, பெரிய
கோங்கம் குவி முகை அவிழ ஈங்கைகோங்கின் குவிந்த முகைகள் மலர, ஈங்கையின்
நல் தளிர் நயவர நுடங்கும்நல்ல தளிர்கள் கண்டோர் ஆசைப்படும்படி வளைந்து அசையும்
முற்றா வேனில் முன்னி வந்தோரேமுதிராத இளவேனில்காலத்தில் நம்மை நினைந்து வந்தவரான தலைவர் –
  
# 87 நெய்தல்# 87 நெய்தல் நக்கண்ணையார்
  
உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்நம் ஊரிலுள்ள மா மரத்தில் இருக்கும் முள் போன்ற பற்களைக் கொண்ட வௌவால்,
ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின்உயர்ந்த அழகிய கிளையில் தொங்கியவாறு துயிலும் பொழுதில்
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டுவெற்றியுள்ள போரையுடைய சோழர் குடியினனான அழிசி என்பானின் அழகிய பெரிய காட்டின்
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்குநெல்லிக்கனியின் அழகிய புளிச்சுவையைச் சுவைப்பதுபோல் கனவுகண்டாற்போன்று –
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு 5அது கழிகின்றது, தோழி! தலைவரின் நாட்டிலுள்ள
பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னைகுளிர்ச்சியான அரும்புகள் உடைந்த, பெரிய அடிமரத்தைக் கொண்ட புன்னையின் தாதுக்கள்
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்கடல்துறையில் மேயும் சிப்பியின் ஈரமான முதுகில் உதிர்ந்துவீழும்
சிறுகுடி பரதவர் மகிழ்ச்சியும்சிறுகுடியின் உள்ள பரதவரின் மகிழ்ச்சியையும்
பெரும் தண் கானலும் நினைந்த அ பகலேபெரிய குளிர்ந்த கானற்சோலையையும் நான் நினைத்த பகல் பொழுது – 
  
# 88 குறிஞ்சி# 88 குறிஞ்சி நல்லந்துவனார்
  
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனைநாம் என்றோ செய்த அந்தப் பழைய செயலுக்காக ஏன் கலக்கமுறுகின்றாய்?
வருந்தல் வாழி தோழி யாம் சென்றுவருந்தவேண்டாம்! வாழ்க தோழியே! நாம் சென்று
உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரைசொல்லிவிட்டு வருவோம்! எழுவாயாக! பொருந்திய அலைகளையுடைய
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்குகடலில் விளையும் அமுதமாகிய உப்பு மழைநீரை எதிர்கொண்டாற்போல
உருகி உகுதல் அஞ்சுவல் உது காண்  5நீ உள்ளம் உருகி உருக்குலைவதைக்கண்டு அஞ்சுகின்றேன்; அங்கே பார்!
தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றிதனது தலைவன் நமக்குச் செய்த கொடுமைக்காக நம்மேல் பரிவுகாட்டி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாதுநம்மீது அன்பு மிகவும் உடையதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ளமாட்டாமல்
கண்ணீர் அருவி ஆககண்ணீர் அருவியாகப் பெருகும்படி
அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றேஅழுகின்றது தோழி! அவரின் பழங்கள் முதிர்ந்த குன்று –
  
# 89 முல்லை# 89 முல்லை இளம்புல்லூர்க் காவிதி
  
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர்கீழைக் காற்றினால் செலுத்தப்பட்டு, விண்ணிடத்து ஒன்றுகூடிச் செறிந்து
திரை பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறிஅலைகளின் பிசிர் போல மலைமுகடுகளில் மகிழ்ந்து ஏறி
நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழைஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள்
அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள்மிக்க துளிகளைப் பெய்து ஒழிந்து, ஒழுக்கும் மழையைக் கொண்ட கார்காலத்தின் இறுதிநாளில்
இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்  5பெரும் பனிக் காலத்தில் காய்க்கும் மயிர்கள் அமைந்த காய்களைக் கொண்ட உழுந்தின்
அகல் இலை அகல வீசி அகலாதுஅகன்ற இலைகள் சிதையும்படி வீசி, நம்மை விட்டு நீங்காது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடைநாள்தோறும் நம்மைத் துன்புறுத்தும் அன்பில்லாத வாடைக்காற்று,
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்குமேல் அலங்காரம் கொண்ட யானை அயர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று
இன்னும் வருமே தோழி வாராஇப்பொழுதும் வருகின்றதே! தோழி! இதுவரை வராதிருந்த
வன்கணாளரோடு இயைந்த      10வன்கண்மையாளரான தலைவரோடு ஒத்த பண்புடைய
புன்கண் மாலையும் புலம்பும் முந்து_உறுத்தேதுன்பம் நிறைந்த மாலைப்பொழுதையும், தனிமைத்துயரையும் தன் முன்னால் எடுத்துக்கொண்டு –
  
# 90 மருதம்# 90 மருதம் அஞ்சிலஞ்சியார்
  
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்ஆட்டங்களைக் கொண்ட திருவிழாவின் ஆரவாரம் உள்ள பழமையான ஊரில்,
உடையோர் பான்மையின் பெரும் கைதூவாஉடைகளை ஆராயும் தன்மையில் பெரிதும் கைசோர்ந்துபோகாத
வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்தவறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடுசோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன்
வாடா மாலை துயல்வர ஓடி   5பொன்னாற்செய்த மாலை மார்பில் கிடந்து அசைய ஓடிவந்து,
பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள்பூப்போன்ற கண்களையுடைய தோழியர் ஆட்டிவிட ஆடாள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதிஅழுதுகொண்டே அவ்விடம்விட்டுப் போகின்றாள் அந்த அழகிய சிலவான கூந்தலையும்
நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள்வறுமைகொண்ட பெண்ணைப்போன்று ஒருசில வளையல்களைக் கொண்ட இளையவளான பரத்தை;
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா    10ஊசலாட்டமாகிய மேற்கொண்ட செயலின் ஆரவாரத்தில் கூட்டுச்சேர்க்காத
நயன் இல் மாக்களொடு கெழீஇஅன்பு இல்லாத மக்களைக் கொண்டு
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையேபயனற்றவராய் இருக்கின்றனரே, நம் தலைவனைச் சுற்றியிருப்போர் – 
  
# 91 நெய்தல்# 91 நெய்தல் பிசிராந்தையார்
  
நீ உணர்ந்தனையே தோழி வீ உகநீ உணர்ந்தாயன்றோ? தோழி! பூந்தாதுக்கள் உதிரும்படி
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைபுன்னை பூத்திருக்கும் இனிய நிழல் பரந்த உயர்ந்த கரையுள்ள
பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடுஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடலில் துழாவித் தன் பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரைசேர்ந்து இரையைத் தேடும் அகன்ற பாதங்களையுடைய நாரை 
ஐய சிறு கண் செம் கடை சிறு மீன்  5மெல்லிய சிறுகண்ணில் சிவந்த கடைக்கண்ணையுடைய சிறிய மீன்களைப் பிடித்து
மேக்கு உயர் சினையின் மீமிசை குடம்பைமேலே ஓங்கி உயர்ந்த கிளையின் மீதிருக்கும் கூட்டிலிருந்து
தாய் பயிர் பிள்ளை வாய் பட சொரியும்தாயை அழைக்கும் குஞ்சுகளின் வாய்க்குள் கொடுக்கும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்கடற்கரைச் சோலையையும் அழகிய கொல்லைப்புறத்தையும் கொண்ட, குறையாத வளமிக்க கள்ளைப்
பெரு நல் ஈகை நம் சிறுகுடி பொலியபெரிதும் நல்ல கொடையாகக் கொடுக்கும் நம் சிறுகுடி பொலிவுபெற,
புள் உயிர் கொட்பின் வள் உயிர் மணி தார்  10பறவைகள் ஒலித்துச் சுழல்வதுபோன்ற பேரொலி கொண்ட மணிகளையுடைய மாலை அணிந்த
கடு மா பூண்ட நெடும் தேர்விரைந்து செல்லும் குதிரை பூட்டிய நெடிய தேரில்
நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவேநீண்ட கடற்கரைத்தலைவனாகிய நம் தலைவன் பகலில் இங்கு வருவதனை –
  
# 92 பாலை# 92 பாலை பெருந்தேவனார்
  
உள்ளார்-கொல்லோ தோழி துணையொடுநம்மை நினைத்துப்பார்க்கமாட்டாரோ? தோழி! தன் துணையோடு
வேனில் ஓதி பாடு நடை வழலைவேனிற்காலத்து ஓந்தியின் வருத்தமான நடையைக்கொண்ட ஆண் ஓந்தி
வரி மரல் நுகும்பின் வாடி அவணவரிகள் உள்ள பெருங்குரும்பையின் குருத்துப்போல வாடி, அங்குள்ள
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்வறண்ட நிலத்தில் பொருந்திக்கிடக்கும் குன்றத்தின் உச்சியிலுள்ள சரிவில் உள்ள
வேட்ட சீறூர் அகன் கண் கேணி      5வேட்டுவர்களின் சிறிய ஊரில் உள்ள அகன்ற வாயையுடைய கிணற்றிலிருந்து
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர்பயன்தரும் ஆநிரைகளுக்காக எடுத்து வைத்த தெளிந்த நீருள்ள தொட்டியில்
புன் தலை மட பிடி கன்றோடு ஆரபுல்லிய தலையையுடைய இளைய பெண்யானை தன் கன்றுடன் வேட்கைதீர
வில் கடிந்து ஊட்டின பெயரும்பத்தரின் மூடியான வில்பொறியைத் தூக்கிப்போட்டு நீர்குடிக்கச்செய்து அகன்றுசெல்லும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரேகொல்லும் தொழிலையுடைய ஆண்யானைகளைக் கொண்ட வறண்ட நிலத்தின் வழிச் சென்றோர் –
  
# 93 குறிஞ்சி# 93 குறிஞ்சி மலையனார்
  
பிரசம் தூங்க பெரும் பழம் துணரதேனடைகள் தொங்க, பெரிய பழங்கள் குலைகுலையாய்ப் பழுக்க,
வரை வெள் அருவி மாலையின் இழிதரமலையிலுள்ள வெண்மையான அருவி மாலை போல இறங்கிவர,
கூலம் எல்லாம் புலம் புக நாளும்பயிர்மணிகள் எல்லாம் நிலங்களில் விதைக்கப்பெற, எந்நாளிலும்
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு எனவளப்பம் கொண்டது இந்த மலைகள் பொருந்திய மலைத்தொடர் என்று
பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட      5இதனை விட்டுப் பிரிந்தோர் எண்ணி வருந்தும் பெரிய மலைநாடனே!
செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழிநாங்கள் செல்கின்றோம்! நீயும் எழுந்திருப்பாய்! சிறந்து விளங்குக உன் வாழ்நாட்கள்;
மருங்கு மறைத்த திருந்து இழை பணை தோள்பக்கங்களை மறைத்த திருந்திய அணிகலன்களால் பெரிதாய்த் தோன்றும் தோள்களையும்,
நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறு_மகள்மெலிந்துபோன இடையையும், மெல்லிய இயல்பினையும் கொண்ட இளமகளின்
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்தியபூண்கள் தாழ்ந்த மார்பு நாணம் துன்புறுத்துவதால் வருத்தமுற்ற
பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல்      10மெலிவடைந்து நிறமாற்றம் பெற்றன; ஆதலால் ஒலிக்கின்ற குரலையுடைய
மயிர் கண் முரசினோரும் முன்மயிர்சீவாத தோல் போர்த்த கண்ணையுடைய மணமுரசின் ஒலியைக் கேட்பதற்கு முன்
உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தேஇவளிடம் உயிர் இருக்கும்படியான ஒரு குறிப்புத் தோன்றக் காணப்பெறுதல் அரிதே!
  
# 94 நெய்தல்# 94 நெய்தல் இளந்திரையனார்
  
நோய் அலை கலங்கிய மதன் அழி பொழுதில்காம நோய் அலைத்தலால் கலங்கிப்போய் வலிமை அழிந்த வேளையில்
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிநானோ எனது பெண்மையுணர்வு தடுக்க அந்நோயை வெளிப்படுத்தாதவாறு தாங்குகிறேன்;
கைவல் கம்மியன் கவின் பெற கழாஅகைத்தொழிலில் வல்ல கம்மியன் அழகுபெறக் கழுவாத
மண்ணா பசு முத்து ஏய்ப்ப குவி இணர்       5தூய்மைசெய்யாத பசுமுத்தைப் போல குவிந்த கொத்துக்களையுடைய
புன்னை அரும்பிய புலவு நீர் சேர்ப்பன்புன்னை மரம் அரும்புவிட்டிருக்கின்ற புலவுநாறும் கடற்கரைத் தலைவனான தலைவன்
என்ன மகன்-கொல் தோழி தன்_வயின்என்னவிதமான ஆண்மகனோ? தோழி! தன்பால்
ஆர்வம் உடையர் ஆகிபேரன்பு உடையவராகி,
மார்பு அணங்கு உறுநரை அறியாதோனேதன் மார்பைத் தழுவும் வேட்கையால் துன்பப்படுவோரை அறியாத அவன் –
  
# 95 குறிஞ்சி# 95 குறிஞ்சி கொட்டம்பலவனார்
  
கழை பாடு இரங்க பல் இயம் கறங்ககுழல்கள் பக்கத்தே இசைக்க, பலவகை இன்னிசைக் கருவிகள் முழங்க,
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்றுஆட்டக்காரியான கழைக்கூத்தி நடந்த வளைந்த முறுக்கேறிய வலிய கயிற்றில்
அதவ தீம் கனி அன்ன செம் முகஅத்தியின் இனிய கனி போன்ற சிவந்த முகத்தையும்,
துய் தலை மந்தி வன் பறழ் தூங்கபஞ்சுத்தலையையும் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க,
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து 5பெரிய பாறையின் கண்ணுள்ள மூங்கில் மீது ஏறி விசைத்து எழுந்து
குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அகுறவர்களின் சிறுவர்கள் தாளம் கொட்டும் அந்தக்
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர்குன்றின் அகத்தது கூட்டமான காவற்காடு சூழ்ந்த சிற்றூர்;    
சீறூரோளே நாறு மயிர் கொடிச்சிஅந்தச் சிற்றூரைச் சேர்ந்தவள் மணங்கமழும் கூந்தலையுடைய கொடிச்சியாகிய என் தலைவி;
கொடிச்சி கையகத்ததுவே பிறர்அந்தக் கொடிச்சியின் கையிலே உள்ளது வேறொருவர்
விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே    10விடுவிக்க முடியாதவாறு அவளால் பிணிக்கப்பட்ட என் நெஞ்சு.
  
# 96 நெய்தல்# 96 நெய்தல் கோக்குளமுற்றனார்
  
இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்இதோ இங்கிருப்பது, நறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் பெரிய மலர்கள் பரவி,
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறைபுன்னை மரங்கள் அடர்ந்துகிடக்கும் வெள்ளை மணலுக்கு ஒருபக்கமாக
புதுவது புணர்ந்த பொழிலே உதுவேமுதன்முதலாய் நாங்கள் சந்தித்துக்கொண்ட சோலை; இதற்குச் சற்று அப்பால் இருப்பது,
பொம்மல் படு திரை நம்மோடு ஆடிபொங்கியெழுந்து முழங்கும் கடல் அலையில் நம்மோடு கடலிற்குளித்து
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்       5முதுகில் தாழ்ந்து கருத்த ஒளிரும் திரண்ட கூந்தலைத்
துவரினர் அருளிய துறையே அதுவேதுவட்டி நமக்கு அருள்செய்த கடல்துறை; அதற்கும் அப்பால் அங்கே இருப்பது,
கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல்வளைந்த கழியினில் உயர்ந்த நீண்ட தண்டினைக் கொண்ட நெய்தல் மலரோடு
அம் பகை நெறி தழை அணி பெற தைஇஅழகிய மாறுபட்ட நெறிப்பையுடைய தழையை எனக்கு அழகுபெற உடுப்பித்து
தமியர் சென்ற கானல் என்று ஆங்குதனித்தவராய்ச் சென்றுவிட்ட கடற்கரைச் சோலை என்று அங்கு
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி     10நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் மனம் உருகி
பைஇ பைய பசந்தனை பசப்பேமெல்ல மெல்லப் பசலைபூத்தாய் பசப்பே!
  
# 97 முல்லை# 97 முல்லை மாறன் வழுதி
  
அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலராநெடுங்காலம் இருக்கும் விழுப்புண்ணின் மெல்லிய மேல்தோலையுடைய வாய் காய்ந்துபோகாத
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்குதுன்பத்தையுடைய மார்பினில் வேலை எறிந்தது போல்,
பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும்பிரியாமல் இருக்கும் நிலையிலும் தனித்திருந்து கூவும் குயிலைக் காட்டிலும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதேதெளிந்த நீர் பெருகிவரும் ஆறு மிகவும் கொடியது;
அதனினும் கொடியள் தானே மதனின்    5அதனைக் காட்டிலும் கொடியவள் அவள் – வலிமையற்ற
துய் தலை இதழ பைம் குருக்கத்தியொடுபஞ்சினை உச்சியில் கொண்ட இதழ்களைக் கொண்ட பைங்குருக்கத்தி மலருடன்
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ எனபிச்சிப்பூவையும் கலந்த மலரை விலைக்கு வேண்டுமா என்று கூவிக்கொண்டு
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்வண்டுகள் சூழ்ந்து மொய்க்கும் வட்டிலைக் கொண்டிருப்பவளாகிய, தெருவில் திரியும்
தண்டலை உழவர் தனி மட_மகளேபூந்தோட்டத்து உழவரின் தனித்த இளைய மகள் –
  
# 98 குறிஞ்சி# 98 குறிஞ்சி உக்கிரப்பெருவழுதி
  
எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்முள்ளம்பன்றியின் முள்ளைப்போன்ற பருத்த மயிருள்ள பிடரியைக் கொண்ட,
செய்ம்ம் மேவல் சிறு கண் பன்றிவயலில் மேயும் விருப்பமுள்ள, சிறிய கண்கள் உள்ள, பன்றியானது,
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறிஉயர்ந்த மலையிலுள்ள அகன்ற கொல்லையில் சென்று மேயும்பொருட்டு, விலங்குகளைப் பிடிக்கும் பெரிய பொறியின்
நூழை நுழையும் பொழுதில் தாழாதுசிறிய வாசலில் நுழையும் பொழுதில், விரைவாக
பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என 5அருகே பக்கத்திலிருக்கும் பல்லி ஒலியெழுப்பினதாக
மெல்ல_மெல்ல பிறக்கே பெயர்ந்து தன்மெல்ல மெல்ல பின்னே நகர்ந்துவந்து, தன்
கல் அளை பள்ளி வதியும் நாடன்கல் குகையான தங்குமிடத்தில் படுத்துக்கொள்ளும் மலைநாட்டைச் சேர்ந்தவனே!
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்எமது தந்தை பேணும் காவலுடைய அகன்ற மாளிகையின்
துஞ்சா காவலர் இகழ் பதம் நோக்கிதூங்காமல் காவல்காக்கும் காவலர் சோர்ந்துபோகும் வேளை நோக்கி
இரவின் வரூஉம் அதனினும் கொடிதே   10இரவில் வந்து என்னைச் சந்தித்துச் செல்வதைக் காட்டிலும் கொடுமையானவை,
வைகலும் பொருந்தல் ஒல்லாநாள்தோறும் உன் வரவை எண்ணிக் கண்ணிமைகள் ஒட்டாத
கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சேகண்களும், உன்னோடு சென்றுவிட்டுத் திரும்பி வராத என் அன்பற்ற நெஞ்சமும் –
  
# 99 முல்லை# 99 முல்லை இளந்திரையனார்
  
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைஈரப்பசை இல்லாமல் முற்றிலும் வறண்டுபோன கடக்கமுடியாத நீண்ட வெளியில்
துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின்வெள்ளை ஆடையை விரித்துவிட்டாற்போன்ற வெயில் தகிக்கும் வெப்பத்தால்
அஞ்சுவர பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்அச்சம் தரும்படி நடுக்குகின்ற கொடுமையான பாலைநிலக்காட்டில் சென்றோர்
தாம் வர தெளித்த பருவம் காண்வரதான் திரும்பி வருவேன் என்று தெளிவாகக் கூறிய பருவம் மிக்க அழகிதாக
இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று5வந்திருக்கும் இதுவோ என்று கேட்கிறாய் மடந்தையே! அறிவில்லாது
மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழைஇது கார்காலமென்பதனை மறந்து, கடல் நீரை முகந்த நிறைவான சூல்கொண்ட கரிய மேகங்கள்,
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்அதனைத் தாங்கமாட்டாது கொட்டித்தீர்த்த பெருமழையைக்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இலகார்காலத்து மழை என்று பிறழக்கருதிய உள்ளத்தோடு, தேர்ந்தறியும் அறிவு இல்லாதனவான
பிடவமும் கொன்றையும் கோடலும்பிடவமும், கொன்றையும், காந்தளும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே10மடமையுடையனவாதலால் மலர்ந்துவிட்டன பலவாக –
  
# 100 மருதம்# 100 மருதம் பரணர்
  
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்நினைத்து நினைத்துச் சிரிக்கின்றேன் தோழி! பெரிய நகங்களைக் கொண்ட
மாரி கொக்கின் கூரல் அன்னகார்காலத்துக் கொக்கின் கூம்பின நிலையைப் போன்று
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து, என் கையிலுள்ள
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்   5நீண்டு திரண்டு ஒளிபொருந்திய வளையல்களைக் கவர்ந்த தகராறினால்
சினவிய முகத்து சினவாது சென்று நின்வெளியில் கோபங்கொண்ட முகத்தோடு, உள்ளத்தில் கோபமில்லாது, சென்று உனது
மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்மனைவிக்கு உரைப்பேன் என்று சொன்னதினால், ஊர் முனையிலுள்ள
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்பல பசுக்களின் நீண்ட வரிசையை வில்லினால் போரிட்டுக் கவர்ந்து செல்லும்
தேர் வண் மலையன் முந்தை பேர் இசைதேர்களைக் கொடையாகக் கொடுக்கும் மலையன் என்பானின் முன்பு, பெரிய இசையையுடைய
புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின்   10வேற்றுநாட்டுக் கூத்தர்கள் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின்
மண் ஆர் கண்ணின் அதிரும்கரிய சாந்து பூசப்பட்ட முகப்பைப் போன்று அதிர்ந்துபோன
நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே   மேல்அந்த நல்லவன் நடுங்கிப்போய் துன்புற்ற நிலையினை –