ஐங்குறுநூறு 101-150

  
நெய்தல்         அம்மூவனார்நெய்தல்         அம்மூவனார்
  
# 11 தாய்க்கு உரைத்த பத்து# 11 தாய்க்கு உரைத்த பத்து
# 101# 101
அன்னை வாழி வேண்டு அன்னை உது காண்அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! அதோ பாருங்கள்!
ஏர் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபுஅழகிய கொடிகளையுடைய பசுமையான அடும்பு அற்றுப்போகும்படி ஏறி இறங்கி
நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள்நெய்தலையும் சிதைத்து வந்தது, உன் மகளின்
பூ போல் உண்கண் மரீஇயபூப் போன்ற மையுண்ட கண்களில் பொருந்திய
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரேநோய்க்கு மருந்தாகிய தலைவனின் தேர்.
# 102# 102
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாதுநீல நிறப் பெரும் கடலில் உள்ள பறவையைப் போல, இடைவிடாது
துன்புறு துயரம் நீங்கதுன்புறுதலாகிய துயரம் நீங்கிப்போகுமாறு
இன்புற இசைக்கும் அவர் தேர் மணி குரலேஇன்பம் எய்தும்படி ஒலிக்கிறது தலைவனின் தேரில் கட்டப்பட்டுள்ள மணியின் குரல்.
  
# 103# 103
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடுஅன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையோடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்ஞாழலும் பூக்கும் குளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன்
இவட்கு அமைந்தனனால் தானேஇவளுக்கு உரியவனாக அமைந்துவிட்டான்; எனவே
தனக்கு அமைந்தன்று இவள் மாமை கவினேஇவளிடம் நிலைத்துவிட்டது இவளது மாநிற மேனியழகு.
# 104# 104
அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நம் ஊரிலுள்ள
பலர் மடி பொழுதின் நலம் மிக சாஅய்பலரும் தூங்கும் பொழுதில் தன் சிறப்பெல்லாம் மிகவும் மங்கிப்போய்
நள்ளென வந்த இயல் தேர்நடு இரவில் வந்த பண்புநலன் மிக்க தேரின்
செல்வ கொண்கன் செல்வனஃது ஊரேசெல்வனாகிய தலைவனின் புதல்வனது ஊர் அதுவாகும்.
  
# 105# 105
அன்னை வாழி வேண்டு அன்னை முழங்கு கடல்அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! முழக்கமிடும் கடலின்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்அலைகள் கொண்டுவந்த முத்துக்கள் வெண்மணலில் கண்சிமிட்டிக்கிடக்கும்
தண்ணம் துறைவன் வந்து எனகுளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன் மணம்பேசி வந்தான் என்றதும்
பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலேபொன்னைக்காட்டிலும் அழகாகச் சிவந்துபோனது, இதோ பார், இவளின் நெற்றி
# 106# 106
அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டுஅன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! தலைவனின் நாட்டிலுள்ள
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்தோலுறை போன்ற கால்களையுடைய அன்னமானது தன் துணை என எண்ணி மேலேறும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்குளிர்ந்த கடலின் சங்கினைக் காட்டிலும் வெளுத்துப்போய்த் தோன்றுகிறது இவளின்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தேஅழகொழுகும் மேனி, இதோ பார், அவனை நினைத்து.
  
# 107# 107
அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழிஅன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! என் தோழியான தலைவி
சுடர் நுதல் பசப்ப சாஅய் படர் மெலிந்துதன் ஒளிவிடும் நெற்றி பசந்துபோக மெலிவடைந்து துன்பத்தால் வாடி
தண் கடல் படு திரை கேள்-தொறும்குளிர்ந்த கடலில் ஒலிக்கும் அலைகளைக் கேட்கும்போதெல்லாம்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானேஉறங்காமல் கிடக்கிறாள்; வருந்துகிறேன் நான்.
# 108# 108
அன்னை வாழி வேண்டு அன்னை கழியஅன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! கழியிலுள்ள
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்நீர்முள்ளிகள் மலர்ந்திருக்கும் குளிர்ந்த கடற்பகுதிக்குத் தலைவன்
எம் தோள் துறந்தனன் ஆயின்என் தலைவியின் தோளைப் பிரிந்துவிடுவானாயின்,
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளேஅந்த அளவுக்கு இளப்பமானவைகளா, அவன் விரும்பிய தோள்கள்?
  
# 109# 109
அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல்அன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! நெய்தலின்,
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன்நீரில் படர்ந்த உள்துளையுள்ள தண்டுகளில் பூக்கள் பொருந்தியிருக்கும் துறையைச் சேர்ந்தவன்
எம் தோள் துறந்த_காலை எவன்-கொல்என் தலைவியின் தோளைத் துறந்துசென்ற காலத்தில், எப்படி
பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தேபல நாள்களுக்கு நெஞ்சில் தோன்றுகிறது அவன் பரிவுடன் நம்மை இன்புறச் செய்த காலங்கள்?
# 110# 110
அன்னை வாழி வேண்டு அன்னை புன்னைஅன்னையே! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக! தாயே! புன்னையின்
பொன் நிறம் விரியும் பூ கெழு துறைவனைபொன்னின் நிறத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள் பொருந்திய துறையைச் சேர்ந்தவனை
என் ஐ என்றும் யாமே இ ஊர்என் தலைவிக்குரிய தலைவன் என்று கொண்டிருக்கிறோம் நாங்கள்; இந்த ஊரோ
பிறிது ஒன்றாக கூறும்வேறு விதமாகக் கூறுகிறது;
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலேஅப்படியே செய்துவிடுமோ, அந்த நல்ல ஊழ்.
  
# 12 தோழிக்கு உரைத்த பத்து# 12 தோழிக்கு உரைத்த பத்து
# 111# 111
அம்ம வாழி தோழி பாணன்கேட்பாயாக, தோழியே! பாணனானவன்
சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇஊரைச் சூழ்ந்துள்ள கழியின் பக்கத்திலிருந்து தூண்டிலில் இரையை மாட்டி
சினை கயல் மாய்க்கும் துறைவன் கேண்மைகருவுற்ற மீனைப் பிடித்துக்கொல்லும் துறையைச் சேர்ந்த தலைவனின் நட்பினைப்
பிரிந்தும் வாழ்துமோ நாமேபிரிந்தும் வாழ்வோமா? –
அரும் தவம் முயறல் ஆற்றாதேமேஅவ்வாறு பிரியாமல் வாழ்வதற்கான அரிய தவத்தை மேற்கொள்ள இயலாதவராகிய நாம்.
# 112# 112
அம்ம வாழி தோழி பாசிலைகேட்பாயாக, தோழியே! பசிய இலைகளைக் கொண்ட
செருந்தி தாய இரும் கழி சேர்ப்பன்செருந்தி மரங்கள் பரவிய கரிய கழியினையுடைய தலைவன்
தான் வர காண்குவம் நாமேதாமே மணம்பேச வருவதைக் காண்போம் நாம்!
மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சேஅவன் கூறிய உறுதிமொழிகளை மறந்துவிட்டோம், நாணம் நிறைந்த நெஞ்சினையுடைமையால்.
  
# 113# 113
அம்ம வாழி தோழி நென்னல்கேட்பாயாக, தோழியே! நேற்று,
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்குஉயர்ந்தெழும் கடலலைகள் வெள்ளிய மணல் மீது மோதி உடைக்கும் துறையைச் சேர்ந்தவனுக்கு
ஊரார் பெண்டு என மொழிய என்னைஇந்த ஊரார் நான் காதலி என்று கூற, என்னைப்பற்றி,
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னைஅதனைக் கேட்டு அப்படிப்பட்டவளா நீ என்றாள் தாய்;
பைபய எம்மை என்றனென் யானேமெதுவாக, என்னையா? என்றேன் நான்.
# 114# 114
அம்ம வாழி தோழி கொண்கன்கேட்பாயாக, தோழியே! நம் தலைவன்
நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோநேரில் எதிர்ப்படவில்லையெனினும், நாம் போகலாமா,
கடலின் நாரை இரற்றும்கடலோரத்திலுள்ள நாரை ஓங்கிக் குரலெழுப்பும்
மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டேமடல்கள் உள்ள அழகிய பனைகளைக் கொண்ட அவனுடைய நாட்டிற்கு?
  
# 115# 115
அம்ம வாழி தோழி பல் மாண்கேட்பாயாக, தோழியே! பல தடவை
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடியநுண்மணல் செறிந்த கரையில் நம்மோடு விளையாடிய
தண்ணம் துறைவன் மறைஇகுளிர்ந்த அழகிய துறையைச் சேர்ந்தவன், இப்போது மறைந்துகொண்டு
அன்னை அரும் கடி வந்து நின்றோனேஅன்னையின் அரிய காவலையும் மீறி இங்கு வந்து நிற்கின்றான்.
# 116# 116
அம்ம வாழி தோழி நாம் அழகேட்பாயாக, தோழியே! நாம் அழும்படியாக
நீல இரும் கழி நீலம் கூம்பும்கரிய பெரிய கழியின் நீலமலர்கள் கூம்பிநிற்க
மாலை வந்தன்று மன்றமாலைக்காலம் வந்துவிட்டது உறுதியாக,
காலை அன்ன காலை முந்துறுத்தேகாலைப் பொழுதைப் போன்ற ஒளிக்கதிர்களை முன்னால் அனுப்பிவிட்டு.
  
# 117# 117
அம்ம வாழி தோழி நலனேகேட்பாயாக, தோழியே! பெண்மை நலன்
இன்னது ஆகுதல் கொடிதே புன்னைஇவ்வாறு சிதைந்து போதல் கொடியதாம்; புன்னைமரத்தின்
அணி மலர் துறை-தொறும் வரிக்கும்அழகான மலர்கள் துறைகள்தோறும் கோலமிட்டுக்கிடக்கும்
மணி நீர் சேர்ப்பனை மறவாதோர்க்கேநீலமணி போன்ற நிறமுள்ள கடலையுடைய தலைவனை மறக்காமலிருப்போருக்கு –
# 118# 118
அம்ம வாழி தோழி யான் இன்றுகேட்பாயாக, தோழியே! நான் இன்று
அறன் இலாளன் கண்ட பொழுதில்அறநெறியில்லாத அந்தக் கொடியவனைக் காணும்பொழுது
சினவுவென் தகைக்குவென் சென்றனென்வெகுண்டு ஊடிக்கொள்வேன், இனி வரவேண்டாம் என்று சொல்வேன் என்று எண்ணிக்கொண்டு சென்றேன்;
பின் நினைந்து இரங்கி பெயர்தந்தேனேபின்னர் அவனை நினைந்து அவனுக்காக இரங்கி ஒன்றும் சொல்லாமல் மீண்டேன்.
  
# 119# 119
அம்ம வாழி தோழி நன்றும்கேட்பாயாக, தோழியே! திருமணத்திற்குரிய நல்ல வழிகளை
எய்யாமையின் ஏது இல பற்றிஅறியாமையினால், அதற்கு ஏதுவானவைகளைத் தவிர மற்ற வழிகளைப் பற்றிக்கொண்டிருப்பதால்
அன்பு இலன் மன்ற பெரிதேநம்மீது அன்பு இல்லாதவன், தெளிவாக, பெரிதும் –
மென்_புல கொண்கன் வாராதோனேமென்புலமாகிய நெய்தல் நிலத்துக்குரிய தலைவன் – நம்மை மணந்துகொள்ள இன்னும் வராதவன் –
# 120# 120
அம்ம வாழி தோழி நலம் மிககேட்பாயாக, தோழியே! நலம் மிகப் பெற்று
நல்ல ஆயின அளிய மென் தோளேநன்றாக ஆகிவிட்டன, இரங்கத்தக்க என் மென்மையான தோள்கள்!
மல்லல் இரும் கழி மல்கும்வளமிக்க பெரிய கழியில் நீர் நிறைந்திருக்கும்
மெல்லம்புலம்பன் வந்த மாறேநெய்தற்புலத்துத் தலைவன் வந்ததனால் –
  
# 13 கிழவற்கு உரைத்த பத்து# 13 கிழவற்கு உரைத்த பத்து
# 121# 121
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளேகண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
முண்டக கோதை நனையகழிமுள்ளிப் பூவால் தொடுத்த மாலை நனையும்படி,
தெண் திரை பௌவம் பாய்ந்து நின்றோளேதெளிந்த அலைகளையுடைய கடலில் பாய்ந்து நீராடியவளை –
# 122# 122
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளேகண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து எனதனது ஒளிரும் அணிகலன்கள் உயர்ந்த மணல்மேட்டில் விழுந்துவிட்டதாக
வெள்ளாங்குருகை வினவுவோளேவெள்ளாங்குருகைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்தவளை –
  
# 123# 123
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளேகண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்பஒளிவிடும் நெற்றியையுடைய தன் தோழிமார் ஆரவாரிக்கக்
தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளேசில்லென்ற பெரிய கடல் அலைகளில் பாய்ந்துகொண்டிருந்தவளை –
# 124# 124
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளேகண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
வண்டல் பாவை வௌவலின்மணற்பாவையைக் கடலலை கவர்ந்துசெல்ல
நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளேநுண்ணிய குறுமணலை வாரியெடுத்துக் கடலை நோக்கி வீசிக் கடலைத் தூர்க்க முயல்கின்றவளை –
  
# 125# 125
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளேகண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
தெண் திரை பாவை வௌவதெளிந்த அலைகள் மணற்பாவையை அடித்துச் செல்ல
உண்கண் சிவப்ப அழுது நின்றோளேமையுண்ட கண்கள் சிவந்துபோகுமாறு அழுதுகொண்டு நின்றிருந்தவளை –
# 126# 126
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளேகண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
உண்கண் வண்டு இனம் மொய்ப்பமையுண்ட கண்களை மலரென்று வண்டினம் மொய்க்க,
தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளேதெளிவான கடலின் பெரிய அலைகளில் மூழ்கிக்கொண்டவளை –
  
# 127# 127
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளேகண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
தும்பை மாலை இள முலைதும்பை மலரால் தொடுக்கப்பட்ட மாலையைத் தன் இளமையான முலைகள் அமைந்த
நுண் பூண் ஆகம் விலங்குவோளேநுண்ணிய பூண்கள் அணிந்த மார்பினில் குறுக்காகப் போட்டிருந்தவளை –
# 128# 128
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளேகண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
உறாஅ வறு முலை மடாஅநன்கு வளராத வறிய தன் முலையை வாயில் வைத்து,
உண்ணா பாவையை ஊட்டுவோளேஉண்ணாத பாவைக்கு ஊட்டிக்கொண்டிருந்தவளை –
  
# 129 கிடைக்காத பாடல்# 129 கிடைக்காத பாடல்
# 130 கிடைக்காத பாடல்# 130 கிடைக்காத பாடல்
  
# 14 பாணற்கு உரைத்த பத்து# 14 பாணற்கு உரைத்த பத்து
# 131# 131
நன்றே பாண கொண்கனது நட்பேநல்லதாக இருக்கும் பாணனே! தலைவனது நட்பு!
தில்லை வேலி இ ஊர்தில்லை மரங்களை வேலியாகக் கொண்ட இந்த ஊரில்
கல்லென் கௌவை எழாஅ_காலேகல்லென்று எங்களைப் பற்றிய வீண்பேச்சு எழாதவரையில்.
# 132# 132
அம்ம வாழி பாண புன்னைவாழ்க பாணனே நீ! புன்னை மரத்தின்
அரும்பு மலி கானல் இ ஊர்அரும்புகள் மிகுந்திருக்கும் கடற்கரைச் சோலையைக் கொண்ட இந்த ஊரில்
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறேஅனைவரும் தூற்றும் பழிச்சொல்லாகி நிற்கிறது அவர் நமக்கு அருளும் அழகு!
  
# 133# 133
யான் எவன் செய்கோ பாண ஆனாதுநான் என்ன செய்வேன் பாணனே? பொறுக்கமாட்டாமல்
மெல்லம்புலம்பன் பிரிந்து எனமென்னிலமான நெய்தல்நிலத் தலைவன் எம்மைவிட்டுப் பிரிந்துசென்றான் என்பதற்காக
புல்லென்றன என் புரி வளை தோளேசிறுத்துப்போய்விட்டன என் முறுக்குண்ட வளையைக் கொண்ட தோள்.
# 134# 134
காண்-மதி பாண இரும் கழி பாய் பரிஇங்கே பார் பாணனே! கரிய கழியோரத்தில் பாய்ந்து செல்லும் குதிரைகளைக் கொண்ட
நெடும் தேர் கொண்கனோடுநீண்ட தேரையுடைய தலைவன் வர, அவனோடு
தான் வந்தன்று என் மாமை கவினேதானும் வந்துவிட்டது என் மாநிற மேனியழகு.
  
# 135# 135
பைதலம் அல்லேம் பாண பணை தோள்வருத்தப்படமாட்டேன் பாணனே! மூங்கில் போன்ற தோள்களையும்,
ஐது அமைந்து அகன்ற அல்குல்மென்மையாக அமைந்து அகன்றிருக்கும் அல்குலையும் கொண்ட
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினேநெய்தல் போன்ற அழகிய கண்களையுடையவளை நேரிலே காண நேர்ந்தாலும் –
# 136# 136
நாண் இலை மன்ற பாண நீயேஉனக்கு வெட்கம் என்பது இல்லை, நிச்சயமாக, பாணனே! 
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்தஇறுகப்பிடித்த அழகிய ஒளிரும் வளையல்கள் நெகிழும்படி செய்த
கானல் அம் துறைவற்கு சொல் உகுப்போயேகடற்கரைச் சோலையையுடைய அழகிய துறையைச் சேர்ந்தவனுக்காக நீ பரிந்து பேசுகிறாயே!
  
# 137# 137
நின் ஒன்று வினவுவல் பாண நும் ஊர்உன்னை ஒன்று கேட்பேன் பாணனே! உன் ஊரைச் சேர்ந்த
திண் தேர் கொண்கனை நயந்தோர்திண்ணிய தேரைக் கொண்ட தலைவனை விரும்பிய மகளிர்
பண்டை தம் நலம் பெறுபவோ மற்றேமுன்பு தாம் கொண்டிருந்த அழகைத் திரும்பப் பெறுவார்களோ?
# 138# 138
பண்பு இலை மன்ற பாண இ ஊர்நல்ல குணம் இல்லை நிச்சயமாக, பாணனே! இந்த ஊருக்கு –
அன்பு இல கடிய கழறிஅன்பில்லாத, கடுஞ் சொற்களைக் கூறி
மென்_புல கொண்கனை தாராதோயேஅந்த மென்புல நாயகனை கூட்டிக்கொண்டு வராமலிருக்கின்ற உனக்கு –
  
# 139# 139
அம்ம வாழி கொண்க எம்_வயின்வாழ்க நீ தலைவனே! என்னிடம் உள்ள
மாண் நலம் மருட்டும் நின்னினும்சிறந்த அழகினைப் பாராட்டி மயக்குமொழி பேசும் உன்னைக் காட்டிலும்
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மேஉன் பாணன் நல்ல மகளிர் பலரின் பெண்மை நலத்தைச் சிதைக்கவல்லான்.
# 140# 140
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியைஇங்கே பார் பாணனே! இதை நீ சொல்லவேண்டியது உன் கடமை!
துறை கெழு கொண்கன் பிரிந்து எனதுறையைப் பொருந்திய தலைவன் பிரிந்து சென்றானாக,
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையேஎன் இறங்கும் தோள்களைப் பொருந்திய ஒளிவிடும் வளைகள் கழன்று போன நிலையை –
  
# 15 ஞாழ பத்து# 15 ஞாழ பத்து
# 141# 141
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழமணல் மேட்டினில் உள்ள ஞாழல் மரத்தின் பூ, செருந்திப்பூவுடன் கமழ்ந்திருக்க,
துவலை தண் துளி வீசிமழைத்தூவலாகக் குளிர்ந்த நீர்த்துளிகளை என் மேல் வீசி,
பயலை செய்தன பனி படு துறையேஎன்னைப் பசக்கும்படி செய்தன குளிர்ச்சியைத் தோற்றுவிக்கும் நீர்த்துறைகள்.
# 142# 142
எக்கர் ஞாழல் இறங்கு இணர் படு சினைமணல்மேட்டிலுள்ள தாழ்வான பூங்கொத்துகள் மலர்ந்த கிளையினில்
புள் இறை கூரும் துறைவனைபறவைகள் வந்து நெடும்பொழுது தங்கியிருக்கும் துறையைச் சேர்ந்தவனை
உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணேநினைத்துப்பார்க்கமாட்டேன் தோழி! உறங்கிப்போகட்டும் என் கண்கள்.
  
# 143# 143
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறைமணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பறவைகள் ஒலிக்கும் துறையானது
இனிய செய்த நின்று பின்முதலில் இன்பமானவற்றைச் செய்தன; சிறிது காலங்கழித்து, பின்னர்
முனிவு செய்த இவள் தட மென் தோளேவெறுப்பையும் தருகின்றன இவளின் பெரிய மென்மையான தோள்கள்.
# 144# 144
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் பூங்கொத்துள் தோன்றும் பொழிலில்
தனி குருகு உறங்கும் துறைவற்குதனியே ஒரு நாரை உறங்கும் துறையைச் சேர்ந்தவனை எண்ணி,
இனி பசந்தன்று என் மாமை கவினேஇப்போது பசந்துபோகிறது என் மாநிற மேனியழகு.
  
# 145# 145
எக்கர் ஞாழல் சிறியிலை பெரும் சினைமணல்மேட்டிலுள்ள ஞாழல் மரத்தின் சிறிய இலைகளைக் கொண்ட பெரிய கிளையைப்
ஓதம் வாங்கும் துறைவன்பெருகிவரும் கடல்நீர் உள்ளிழுத்து வளைக்கும் துறையைச் சேர்ந்தவன்
மாயோள் பசலை நீக்கினன் இனியேமாமை நிறத்தவளின் பசலையை நீக்கினான் இப்போது.
# 146# 146
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர்மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் அரும்புகள் முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துகள்
நறிய கமழும் துறைவற்குநறுமணத்தோடு கமழும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இனிய மன்ற என் மாமை கவினேஇன்பமானது, உறுதியாக,  என் மாநிற மேனியழகு.
  
# 147# 147
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் மலர்கள் இல்லாததால் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்ஒளிரும் தழையுடையை மட்டும் அணிந்து கடல்நீராடும் துறையைச் சேர்ந்தவன்
தண் தழை விலை என நல்கினன் நாடேஉனது குளிர்ச்சியான தழையுடைக்கு விலையாகத் தந்தான் தன் நாட்டையே!
# 148# 148
எக்கர் ஞாழல் இகந்து படு பெரும் சினைமணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தில் நீட்டிக்கொண்டு நிற்கும் பெரிய கிளையில்
வீ இனிது கமழும் துறைவனைமலர்கள் இனிமையாக மணங்கமழும் துறையைச் சேர்ந்தவனை
நீ இனிது முயங்குதி காதலோயேநீ இனிமையுடன் தழுவிக்கொள்வாய் காதல்கொண்டவளே!
  
# 149# 149
எக்கர் ஞாழல் பூவின் அன்னமணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் பொன்னிறப் பூவைப் போன்ற
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்குஅழகுத்தேமல் படர்ந்திருக்கும் இளமையான முலைகள் உள்ள தலைவிக்கு
அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோமுதலில் அழகைப் பெருகச் செய்து, பின்னர் பிரிந்து செல்லத் துணியாதீர்!
# 150# 150
எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினைமணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் நறிய மலரைகொண்ட பெரிய கிளையில்
புணரி திளைக்கும் துறைவன்ஆரவாரிக்கும் கடலைகள் மூழ்கியெழும் துறையைச் சேர்ந்தவன்
புணர்வின் இன்னான் அரும் புணர்வினனேசேர்ந்திருக்கும்போதும் பிரிவின் நினைவால் துன்பத்தைத் தருபவன், அதுவும் என்றோ ஒருநாள்தான் வருகிறான்.
  
  

Related posts