மீ – முதல் சொற்கள்

மீ

– (பெ) 1. மிகுதி, abundance
2. மேன்மை, உயர்வு, greatness, eminence
3. மேல், மேல்பரப்பு, upper side, surface
4. மிகுந்த உயரம், great height,

1

இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் – குறி 27

பகைமையை மிகுதியாகச் செலுத்தும் இரு பெரிய அரசர்களின்

2

வென்றி ஆடிய தொடி தோள் மீ கை
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/12-14

வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும்,
பகைவர் ஏழுபேரின் கிரீடப்பொன்னால் செய்த பதக்கம் அணிந்த வெற்றித்திருமகள் தங்கியிருக்கும் மார்பினையும் உடைய,
பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்

3

மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்
பண் அமை தேரும் மாவும் மாக்களும் – பதி 77/5,6

பகைவரின் பிணத்தின் மீது உருண்டோடியும் தேய்ந்துபோகாத சக்கரங்களையுடைய
சிறப்பாகச் செய்யப்பட்ட தேரினையும், குதிரைகளையும், காலாட்படையினரையும்

மீ பால் வெண் துகில் போர்க்குநர் – பரி 10/79

உடலின் மேல் வெண்துகிலைப் போர்த்திருந்தனர் சிலர்

காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9

“முத்துக்களும், மணிகளும் பரவலாகப் பதிக்கப்பட்ட மாலை மேலே கிடந்து அசையும் என் இளம் முலைகளைப்

அரி மலர் மீ போர்வை – பரி 11/26

அழகிய மலர்களான மேற்போர்வையினையும்

மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/40,41

நீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை
ஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட,

மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 396/2

நீரின் மேற்பரப்பில் குவளையும் தாமரையுமாகிய மகளிர் கண்போலும் பூக்கள் மலர்ந்திருக்கும்

4

ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை
வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப – பரி 17/30,31

முருகன் ஆவியாகக் கொள்கின்ற, அகிலிட்டு எழுப்பிய மணங்கமழும் புகை
இடங்கள்தோறும் மிகவும் மேலுயர்ந்து போவதால், கண்ணிமைக்காத வானவர்கள் கண்ணிமைத்து அகல,

கூம்பொடு
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது
புகாஅர்புகுந்த பெரும் கலம் – புறம் 30/11-13

கூம்புடனே
உயரத்தில் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல், அதன் மேல் பாரத்தையும் பறியாமல்
ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை

மேல்


மீக்கூர்

(வி) மிகு, அதிகமாகு, increase

தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு
பனி மீக்கூரும் பைதல் பானாள் – அகம் 305/3,4

மேகம் மழையைச் சொரிந்தமையால் குளிர்ந்து வருதலையுடைய வாடைக்காற்றால்
நடுக்கம் மிகும் வருத்தத்தையுடைய பாதியிரவில்

மேல்


மீக்கூற்றம்

(பெ) 1. புகழ்ச்சி, adoration, praise
2. மேலே கூறும் சொல், word said over and above (this)
3. மேலாகிய சொல், Speech or word which wins regard, word deserving praise, regard

1

வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/20-22

பகைவரது
மிக்க மாறுபாட்டை வென்ற வலியையுடைய
யாவரும் ஒப்பும் புகழ்ச்சியையுடைய நாட்டையுடையாய்

2

மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது
நாண் இலன் ஆயின் நலிதந்து அவன்_வயின்
ஊடுதல் என்னோ இனி
இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா
பாடு இல் கண் பாயல் கொள – கலி 87/11-16

“மான் போன்ற பார்வையை உடையவளே! நீ அழும்படியாக உன்னைப் பிரிந்தவன், பரத்தைமையில் அமையாமல்
வெட்கமற்று இருப்பவன் என்றால் உன்னை வருத்திக்கொண்டு அவன்மேல்
ஊடல் கொள்ளுதலால் என்ன பயன், இப்போது?”
“இனிமேல் ஒன்றும் இதற்குமேல் சொல்வதற்கு என்னிடம் இல்லை என்கிற
நிலைமையைக் காண்பாய் நெஞ்சே!, கண்ணீர் எல்லைகடந்த,
தூக்கம் இல்லாத கண்கள் சிறிதே படுத்துறங்கும்படி.”

மீக்கூற்றம் மேலே கூறும் சொல் – நச்.உரை

3

வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்த – சிறு 212

வாள் வலியாலே மேலாகிய சொல்லையுடைய மறவர் புகழ,

வாள் மீக்கூற்றத்து வயவர் என்றது வாள் வலியாலே ஒப்பிலா மறவர் எனத் தம்மை உலகம் புகழ்தற்குரிய
மறவர் என்க, மீக்கூற்றம் – மேலாகிய சொல்; அஃதாவது புகழ் – பொ.வே.சோ. உரை

மேல்


மீக்கூறு

(வி) போற்று, சிறப்பித்துக்கூறு, praise, adore, admire

இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் – பெரும் 34,35

விளங்குகின்ற நீரையுடைய கடலிடத்துப் பிறந்த சங்குகளில் மேலாகக்கூறப்படும்
வலம்புரி(ச் சங்கை) ஒத்த, குற்றம் தீர்ந்த தலைமையினையும்

பல் வெள்ளம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 22,23

பல வெள்ள காலத்திற்கு புகழ் மிகுந்து சொல்லப்பட,
உலகத்தை ஆண்ட உயர்ந்தவர் குடியில் தோன்றியவனே –

வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/6,7

இவர் நம்மில் வலியர் என்று கருதி அவரைப் பணிந்து பேசமாட்டான்
இவர் நம்மில் எளியர் என்று கருதி அவரிடம் தம்மைப் பெருமையாகப்பேசமாட்டான்

மேல்


மீகை

(பெ) 1. தோள் மேல் அணியும் சட்டை, a shirt put on shoulders
2. மேம்பட்ட கை, be great
3. மேலெடுத்தகை, மேலே தூக்கிய கை, uplifted arm

1

தோள் பிணி மீகையர் – பதி 81/11

தோளிடத்தே பிணிக்கப்பட்ட மீகையினையுடையராய்

மீகை – தோள்மேலணியும் சட்டை. சட்டையின் கை தோளை மூடி அதன்மேலே உயர்ந்து தோன்றலின் மீகை
எனப்பட்டது – ஔவை.சு.து. உரை – உரைவிளக்கம்

2,3

வென்றி ஆடிய தொடி தோள் மீகை
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/12-14

வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும்,
பகைவர் ஏழுவரின் முடிப்பொன்னால் செய்த ஆரம் அணிந்த திருமகள் தங்கியிருக்கும் மார்பினையும் உடைய,
பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின்
ஔவை.சு.து – உரை.
ஔவை.சு.து – விளக்கம் – மீ கை என்பதற்குப் பழையவுரைகாரர் ”மேலெடுத்தகை” யென்றும், வென்றியாடிய
என்னும் பெயரெச்சத்திற்கு மீ கை யென்னும் பெயரினை அவன் தான் வென்றியாடுதற்குக் கருவியாகிய கை
எனக் கருவிப்பெயராக்குக என்றும் கூறுவர்.

மேல்


மீட்சியும்

(வி.அ) மீண்டும் மீண்டும், repeatedly

பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து_உழி
செல்குவள் ஆங்கு தமர் காணாமை
மீட்சியும் கூஉ_கூஉ மேவும் மடமைத்தே
வாழ்த்து உவப்பான் குன்றின் வகை – பரி 19/58-66

தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்
வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
“ஏஎ ஓஒ” என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,
“ஏஎ ஓஒ” என்பதைக் கேட்காமல், அந்தக் கூவலின்
ஒலியைமட்டும் மலையின் பிளவுகள் ஏற்று எதிரொலிக்க, அந்த அழைப்பொலியைக் கேட்டு
அங்குச் சென்றவள், அங்கே தன் சுற்றத்தைக் காணாமல்
மீண்டும் மீண்டும் கூவுதலை மேற்கொள்ளும் மடமையை உடையது
அடியவரின் வாழ்த்தினைக் கேட்டு மகிழ்வானாகிய முருகனின் குன்றத்தின் தன்மை;

மேல்


மீட்டல்

(பெ) மீளச்செய்தல், திரும்பப்பெறுதல், bring pack, recover

கடும் கை கொல்லன் செம் தீ மாட்டிய
இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என – புறம் 21/7,8

வலிய கையையுடைய கொல்லனால் செந்தீயின்கண்ணே மாட்டப்பட்ட
இரும்பு உண்ட நீரினும் மீட்டற்கு அரிது எனக் கருதி

மேல்


மீட்டு

(வி.எ) மீளச்செய்து, திருப்பி, cause to turn back

விழையா உள்ளம் விழையுமாயினும்
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/9,10

எதனையும் விரும்பாத பெருந்தன்மையுடைய தம் உள்ளமானது ஒரோவழி மயங்கி ஒன்றை விரும்புமாயினும்
நாள்தோறும் தாம் கேட்ட அறிவுரைகளைத் அங்குசமாகக் கொண்டு உள்ளம் என்ற யானையை அதன் போக்கிலே
கட்டுமீறிச் செல்லாது திருப்பி.
அறமும் பொருளும் வழுவாமையை ஆராய்ந்து

இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு
தார் போல் தழீஇயவன் – கலி 103/33-35

“சின்னவளே! இது ஒன்றைப் பார்! இவன் ஒருத்தன்!
எருமைக் கூட்டத்தின் ஆயர்மகன் அல்லவா! இனி அதன் வலியை மீளப்பண்ணி அதனை நீங்கான்
போரிடுவதில் மிகவும் விருப்பமுள்ள காளையின் சொரசொரப்பான கழுத்தில் பாய்ந்து
அதற்கு இட்ட மாலையைப் போல அதனைத் தழுவிக்கொண்டவன்”

மேல்


மீமிசை

1. (வி.அ) 1. மேலே, above, over
2. உச்சியில், உயர்ந்த இடத்தில், on the top, on very high altitude
– 2. (வி.அ.இ.சொ) மேலாக, மீதாக, on, over

1.1

கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114

கீழ்நோக்கி நழுவி வீழும் தொடி என்ற அணிகலனோடு மேலே சுழல ஒரு கை

1.2

ஆசினி முது சுளை கலாவ மீமிசை
நாக நறு மலர் உதிர – திரு 301,302

ஆசினிகளுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க, (மலையின்)உச்சியில்
சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர,

பிறங்கு மலை
மீமிசை கடவுள் வாழ்த்தி கைதொழுது – குறி 208,209

பெரிய மலையின் உயர்ந்த இடத்தே உறைகின்ற இறையாகிய முருகனை வாழ்த்தி

2

பவ்வ மீமிசை பகல் கதிர் பரப்பி – பொரு 135

கடலின் மீதே பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி

மேல்


மீள்

(வி) 1. பழைய இடத்திற்கு அல்லது பழைய நிலைக்குத் திரும்பு, go back, return
2. திரும்பி வா, come back, return

1

காந்தள்
கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல்
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்_வயின்
மீள்குவம் போல தோன்றும் – நற் 313/6-9

காந்தளின்
கமழ்கின்ற பூங்கொத்துக்கள் மலர்ந்த விருப்பந்தரும் மலைச்சாரலின்
கூதளம் படர்ந்த நறிய சோலை நாமின்றித் தனித்திருக்க, ஊருக்குத்
திரும்பிச் செல்வோம் போலத் தோன்றுகிறது

2

ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின்
யாஅம் தளிர்க்குவேம்-மன் – கலி 143/29,30

ஆச்சாமரம் தளிர்க்கும் காட்டிடையே சென்றவர் திரும்பி வந்தால்
நானும் அவர்களைப் போல் மனம் மகிழ்வேன்

மேல்


மீளி

(பெ) 1. கூற்றம், யமன், God of death
2. தலைமை, சிறப்பு, distinction, superiority, greatness
3. தலைவன், chief, Lord, Master
4. திண்மை, உறுதி, hardness, firmness
5. வலிமை, strength
6. மறம், வீரம், courage, valour

ஆளி நன் மான் அணங்கு உடை குருளை
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி – பொரு 139,140

1.

ஆளியாகிய நல்ல மானினது வருத்துதலையுடைய குருளை
கூற்றுவனுடைய வலியிற்காட்டில் மிகுகின்ற வலியாலே கலித்து – நச் உரை

2.

ஆளியாகிய நல்ல மானினது வருத்துதலையுடைய குருளையினது
தலைமை சான்ற மிக்க வலிமை போன்ற வலிமையுடைமையாலே செருக்குக்கொண்டு – பொ.வே.சோ. உரை

3

சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானை கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி – பரி 16/20-23

பீச்சாங்குழலைக் கொண்ட தோழியர் சுற்றிலும் வளைத்துக்கொண்டு ஒரு பரத்தையின் மீது சாய நீரைப் பாய்ச்ச,
அதனால், சிறிய இளநீரைப் போன்ற முலைகளில் பட்ட அந்தச் சாயநீரைத் துடைக்காமலிருந்தவள்,
பெருந்தகையான தலைவன் வருவதனைக் கண்டு,
நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க,

4

அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப
தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள் – அகம் 373/5-9

அரிய சுரத்தைக் கடந்துவந்த வருத்தத்தால் செயலிழந்தவராக
பெரிய புற்கென்ற மாலைக்காலத்தே தனிமைத்துயரமும் வந்தடைய
திண்மையுடைய நம் உள்ளம் மேற்கொண்டு செல்லுதலை வலியுறுத்த

முழந்தாள்களைக் கையாற் பூட்டிய தனித்த நிலையினதாகிய இருப்புடன்
தனது நிலையினையே எண்ணியிருக்கும் நம் காதலி நம்முடைய இந்த நிலையினை உணரவேமாட்டாள்

5

நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே – அகம் 379/3,4

மிக்க வன்மையுடன் பொருளை விரும்பி
அதுபற்றி முயலுதற்கு முற்பட்ட வலிய நெஞ்சமே

6

மீளி முன்பின் ஆளி போல – புறம் 207/8

மறம் பொருந்திய வலியையுடைய யாளியை ஒப்ப

மேல்


மீளியாளர்

(பெ) மறம் மிகுந்தவர், persons with valour

தன்னூர்
நெடு நிரை தழீஇய மீளியாளர்
விடு கணை நீத்தம் துடி புணை ஆக
வென்றி தந்து – புறம் 260/12-15

தன்னுடைய ஊரின்கண்
மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர்
எய்யப்பட்ட அம்பு வெள்ளத்தைத் தன் துடியே புணையாகக் கடந்து
வெற்றியைத் தந்து

மேல்

மீன் – (பெ) 1. ஒரு நீர்வாழ் உயிரினம், fish
2. நாள்மீன், கோள்மீன் ஆகிய ஒரு விண் பொருள், a celestial object like a star or planet

1

மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி – அகம் 40/3

மீனை உண்ணும் கொக்குகளின் குறும்பறப்புக் கூட்டம்

2

பல் மீன் நாப்பண் திங்கள் போல – பதி 90/17

பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல

நாள்_மீன் விராய கோள்_மீன் போல – பட் 68

(அன்றைய)நாளுக்குரிய விண்மீனுடன் கலந்த கோள்களாகிய மீன்கள் போல

மேல்