பௌ – முதல் சொற்கள்


பௌவம்

(பெ) கடல், sea

1. கீழ்க்கடல்

மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின்
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை
கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் – கலி 142/41-43

களங்கமற்ற சுடரே! நீ மேற்கில் மலையில் சென்று மறைவாயானால்,
கிழக்கில் கடலில் தோன்றிப் பகலைச் செய்யும் வரை,
எனக்குக் கைவிளக்காக உன் கதிர்கள் சிவற்றைத் தருவாய்!

2. மேல்கடல்

குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – புறம் 6/4

மேல்கண்ணது பழையதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்

3. தென் கடல்

அர வழங்கும் பெரும் தெய்வத்து
வளை ஞரலும் பனி பௌவத்து
குண குட கடலோடு ஆயிடை மணந்த – பதி 51/13-15

பாம்புகள் நடமாடும் பெரும் தெய்வங்கள் உறையும் இமயமலை,
சங்குகள் ஒலிக்கும் குளிர்ந்த பெருங்கடல்,
கிழக்கிலும், மேற்கிலும் கடல்கள் ஆகிய இவற்றிடையே உள்ளோர் கூடிச் சேர்ந்த

மேல்