தி – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்


திகழ்
திகிரி
திகை
திங்கள்
திட்டை
திட்பம்
திடன்
திண்
திண்ணை
திணி
திணை
தித்தன்
தித்தன் வெளியன்
தித்தி
தித்தியம்
திதலை
திதி
திமிர்
திமில்
திரங்கு
திரி
திரிதரு(தல்)
திரிபு
திரிபுரம்
திரிமரம்
திரிவு
திரீஇ
திரு
திருகு
திருத்து
திருந்த
திருந்து
திருமருதமுன்துறை
திருமாவளவன்
திருமாவுண்ணி
திருவில்
திரை
திரைப்பு
திரையன்
தில்
தில்ல
தில்லை
திலகம்
திவலை
திவவு
திளை
திற்றி
திறம்
திறம்பு
திறல்
திறன்
திறை
தின்
தினை

திகழ்

(வி) 1.விளங்கு, ஒளிர், பிரகாசி, shine, glimmer, be lustrous
2. ஒன்றை வாய்க்கப்பெற்றிரு, be endowed with a distinguished trait

1.

உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 102

எப்பொழுதும் மாறாத சினம் நின்றெரியும், ஒளியால் விளங்கும் நெடிய வேலினையும்,

2.

வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் – அகம் 172/1

யானை முழங்கும் தன்மை வாய்ந்த பக்க மலையில்

மேல்


திகிரி

(பெ) 1. வட்டம், வட்ட வடிவம், circle, circular form
2. உருளை, சக்கரம், wheel
3. சக்கராயுதம், the discuss weapon
4. அரசாணை என்ற அரச சக்கரம்,royal authority
5. சூரியன், the sun
6. குயவர் சக்கரம், potter’s wheel

1.

செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான் – கலி 146/23

சிவந்த அழகிய புள்ளியைக் கொண்டு வட்டமாக இருக்கிற நண்டுகள் திரிகிற இடத்தில் நான்

2.

நெடும் தேர் திகிரி தாய வியன் களத்து – பதி 35/4

நெடிய தேர்களின் சக்கரங்கள் சிதறிப் பரவும் அகன்ற போர்க்களத்தில்,

3.

கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி – பதி 31/8,9

கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட
மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,

4.

இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/18,19

ஒளிர்கின்ற மணிகள் செறிந்த பொன்னால் செய்யப்பட்ட அரசாணையாகிய அரச சக்கரத்தைக் கொண்டு
கடல் சூழ்ந்த இந்த நிலவுலகின் இந்தத் தமிழகம் முழுவதையும் ஆண்ட உன்

5.

விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய – அகம் 53/2,3

வானம் முழுவதிலும் ஒளிவிட்டு, வேகமாகச் செல்லும் ஞாயிற்றின்
கடுமையான கதிர்கள் எறித்து உண்டாக்கிய வெடிப்புகள் நிறையும்படியாக,

6.

வனை கல திகிரியின் குமிழி சுழலும் – மலை 474

குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்

மேல்


திகை

1. (வி) செயலற்று நில், bewildered
2. (பெ) திசை, direction

1.

வாய் வாளா நின்றாள்
செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/46,47

வாய்பேச முடியாமல் நின்றாள்,
செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டுச் சித்தம் திகைத்து

2.

திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் – பரி 10/74

திசைகள் முழுதும் கமழ, முகிலின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளிவரும் திங்களைப் போல்

மேல்

திங்கள்

(பெ) 1. சந்திரன், moon
2. மாதம், month

1.

பன் மீன் நடுவண் திங்கள் போலவும் – மது 769

பல விண்மீன்களுக்கு நடுவே சந்திரனைப் போன்றும்

2.

நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்டு ஓர் அனைய ஆக – பதி 90/51,52

உனது ஒருநாள் ஒரு மாதத்தைப் போல் இருப்பதாக, உனது ஒரு மாதம்
ஓர் ஆண்டைப் போல் இருப்பதாக

மேல்


திட்டை

(பெ) திட்டு, மேட்டு நிலம், raised ground

வரி மணல் அகன் திட்டை
இரும் கிளை இனன் ஒக்கல்
கரும் தொழில் கலி மாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும் – பட் 60-63

அறல் சேர்ந்த மணல் கொண்ட அகன்ற திட்டுகளில்,
பெரும்குடும்பத்தவரும், ஓரே இனத்துச் சுற்றத்தவருமான,
வலிய தொழில் செய்யும் செருக்குள்ள ஆடவர்
கடல் இறால்களின் (தசை)சுடப்பட்டதைத் தின்றும்,

மேல்


திட்பம்

(பெ) திடம், உண்மை, உறுதி, solidity, substantiality, certainty

ஆகுவது அறியும் முதுவாய் வேல
கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் – அகம் 195/14,15

நடக்கப்போவதை அறிந்து கூறும் அறிவு வாய்ந்த வேலனே,
கூறுவாயாக, உனது கழங்கின் திண்ணிய குறியை

மேல்


திண்

(பெ.அ) 1. உறுதியான, hard, compact, firm
2. வலிமையான, strong, robust

1.

இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46

இரவைப் பகலாக்கும், திண்ணிய கைப்பிடியையுடைய ஒளிவிடும் வாளை

2.

திண் தேர் பிரம்பின் புரளும் தானை – மது 435

திண்ணிய தேரின் பிரம்பின்கண் புரளுகின்ற முன்றானையினையும்,

மேல்


திண்ணை

(பெ) வீட்டின் வேதிகை, a raised platform or veranda in a house

குறும் தொடை நெடும் படிக்கால்
கொடும் திண்ணை – பட் 142,143

ஒன்றற்கொன்று)நெருக்கமாய் அமைந்த படிகளையுடைய நீண்ட ஏணிச்சட்டங்கள்(சார்த்தின)
சுற்றுத் திண்ணையினையும்

மேல்


திணி

1. (வி) செறிவாகு, be dense
– 2.(பெ) திட்பம், திண்மை, Solidity, strength, firmness

1.

திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி – அகம் 280/3

செறிவான மணலையுடைய கடற்கரையில் நண்டினை ஓட்டி விளையாடி

2.

வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152

வலப்பக்கத்தே (வெற்றிக்கொடியாக)உயர்த்திய, பலரும் புகழ்கின்ற திண்மையுடைய தோள்களையும்,

மேல்


திணை

(பெ) 1. இடம், சூழல், place, region
2. குலம், tribe, race, clan
3. ஒழுக்கம், conduct, custom
4. வீடு, house
5. பூமி, earth
6. திண்ணை என்ற சொல்லின் இடைக்குறை, reduced form of the word ‘thiNNai’

1.

கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 220,221

முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்

தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5

துயரத்தருவது இந்த மருத நிலத்தில் பிறப்பது

ஐம் பால் திணையும் கவினி அமைவர – மது 326

ஐந்துவகை நிலங்களும் அழகுபெறப் பொருந்துதல் தோன்ற

2.

வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் – குறி 205,206

குற்றமில்லாத உயர்குடிப்பிறந்த உயர்ந்தோர் (தம்)சுற்றத்தோடு
விருந்தினராக உண்டு மீந்துபோன உணவை

3.

மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் – மலை 401

நலம்சிறந்து மிகுகின்ற அவனுடைய தொன்றுதொட்ட ஒழுங்குமுறைப்பட்ட தொன்மையான ஊர்களுக்கு

4.

திணை பிரி புதல்வர்
கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ – பரி 16/7,8

வீட்டைவிட்டுத் தனியே வந்து நீராடும் சிறுவரின்
மெல்லிய தலையுச்சியில் இருக்கும் முஞ்சம் என்னும் அணிகலனோடு சேர்ந்துகொள்ள

5.

அளக்கர் திணை விளக்கு ஆக – புறம் 229/10

கடலால் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக

6.

ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து – பட் 263

(சாந்து பூசி)அழகுமிக்க சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் உயர்ந்த திண்ணைகளிலேயிருந்து

மேல்


தித்தன்

(பெ) ஒரு சோழ மன்னன், a chozha king
இவன் உறந்தை எனப்படும் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சிபுரிந்த சோழமன்னன்.
இவனது மகன் வெளியன். இவனைத் தித்தன் வெளியன் என்பர்.
இவனுக்கு ஐயை என்ற ஓர் மகள் உண்டு.

இழை அணி பணைத்தோள் ஐயை தந்தை
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம்
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு
வேழ வெண் புணை தழீஇ பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு
ஏந்து எழில் ஆகத்து பூ தார் குழைய
நெருநல் ஆடினை புனலே – அகம் 6/3-11

நகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய,
மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின்,
குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில்
ஓடக்கோலும் நிலைத்து நில்லாத காவிரி ஆற்றின் நீர்ப்பெருக்கில்,
குழை முதலான சிறந்த அணிகளையுடைய நீ விரும்பியவளுடன்
வேழக் கரும்பினாலான வெண்மையான தெப்பத்தில் ஏறி, பூழியரின்
குளத்தை நாடிச் செல்லும் யானையைப் போன்று முகமலர்ச்சியுற்று,
உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மாலை குழைந்துபோகும்படி,
நேற்று புனலாடினாய்

என்ற அடிகளால், இவன் காலத்தில் உறையூர்க் காவிரியாற்றுத் துறையில் நீராட்டுவிழா
சீரும் சிறப்புமாக நடைபெற்றது என அறிகிறோம்.

மேல்


தித்தன் வெளியன்

(பெ) தித்தன் என்ற சோழ மன்னனின் மகனான வெளியன்.
a son of the chozha king thiththan.

சினம் கெழு தானை தித்தன் வெளியன்
இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை – அகம் 152/5,6

சினம் மிக்க படையினையுடைய தித்தன் வெளியன் என்பானது
ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானல் அம் பெருந்துறை என்னும் பட்டினத்தில்,

என்ற அடிகளிலிருந்து, இவன் தன் தந்தையின் காலத்தில் கானலம் பெருந்துறையில் ஆட்சி செய்தான்
என அறியலாம். கானலம் பெருந்துறை என்பது ஒரு கடற்கரைப்பட்டினம். இதனைப் புகார் என்பர்.

மேல்


தித்தி

(பெ) அழகுத்தேமல், நுண்ணிய மஞ்சள் நிறப் புள்ளிகள், fine yellow spots on the skin of the body

1.

குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி மாஅயோளே – நற் 157/8-10

சிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின்
அழகிய பூந்தாதுக்கள் உதிர்ந்ததைப் போல
நுண்ணிய பலவான தேமற்புள்ளிகள் பரந்த மாநிறத்தவளான நம் தலைவி

பெண்களின் மார்புப்பகுதியில் தோன்றும் சுணங்கு என்ற புள்ளிகள் வேங்கை மரத்துப் பூக்களைப்
போன்று சற்று பெரிதானவை.

தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் – கலி 57/17

என்ற அடி இதனை அறிவுறுத்தும். ஆனால் தித்தி என்ற புள்ளிகள் வேங்கை மலரின் நுண்ணிய
தாதுக்கள் போன்றவை என்பதை

வேங்கை
அம் பூ தாது உக்கு அன்ன
நுண் பல் தித்தி

என்ற சொற்கள் விளக்குகின்றன.

பார்க்க சுணங்கு

2.

கம்மென
எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை
விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் – நற் 160/3-5

மென்மையாக
மேன்மேலே தோன்றிய தித்தியையும், எழுச்சியையுடைய இளைய அழகிய கொங்கைகளின் மேலே
அள்ளித்தெளித்தாற்போன்ற அழகிய நுண்ணிய தேமலையும்

தித்தி என்பது வயிற்றின்மேலே தோன்றுவது என்பர் பின்னத்தூரார்.

ஆனால், ஔவை.துரைசாமி அவர்கள், இதற்கு

மெல்லென
முற்பட மேலே பரந்த தித்திபொருந்திய எழுகின்ற இளைய அழகிய முலைகளையும்
விரலால் தெறித்தாற் போல் பரவிய பொன் போலும் தேமலையும்

என்று உரை கூறுவார்.
இவர் தித்தி என்பது வரிவரியாகத் தோன்றுவது என்றும், சந்தனக் குழம்பைக் கைவிரலால்
தெறித்தாற்போலத் தோன்றுவது சுணங்கு என்றும் கூறுவார்.

எதிர்த்த தித்தி முற்றா முலையள் – நற் 312/7

என்ற நற்றிணை அடியும் எதிர்த்த தித்தி என்பதால், இது மேலேறிப் படரும் தன்மையுள்ளது
என்பது தெளிவாகிறது. எனவே தித்தி என்பது வயிற்றின் அடிப்பாகத்தில் சிலவாகவும்,
மேலே படர்ந்து விரிந்து பலவாகவும் இருக்கும் என்பது தெளிவாகிறது.

3.

அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப – குறு 293/5,6

நீரில் வளர்ந்த வெள்ளாம்பலின் அழகுக்குப் பகையாகிய முழு நெறிப்பையுடைய தழையுடை
தேமலையுடைய தொடையில் மாறிமாறி அலைக்க

தித்தி என்ற இவ்வகைத் தேமல், தொடைப்பகுதியிலும் காணப்படும் என்பதை மேலே கண்ட
அடிகள் நிறுவுகின்றன. குறங்கு என்பது தொடை.

அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ – அகம் 385/9,10

வழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது
தேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட

என்ற அடிகளும், தித்தி தொடைப்பகுதியிலும் படர்ந்திருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

4.

குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி மாஅயோயே – குறு 300/3,4

ஆழமான நீரில் உள்ள தாமரைமலரின் பூந்தாது போன்ற
நுண்ணிய பல தேமல் – இவற்றையுடைய மாநிறத்தவளே!

இந்தத் தித்தி என்பது வேங்கை மலரின் நுண்ணிய தாதுக்கள் போல் இருக்கும் என்று முன்பு கண்டோம்.
மேலே கண்ட இந்தக் குறுந்தொகை அடிகள், தித்தி என்பது தாமரைமலரின் பூந்தாதுக்கள் போன்று
நுண்ணியதாகவும்,பலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இவை மேனியில் எந்தவோர்
இடத்திலும் காணப்படும் என்றும் உணர்த்துகின்றன.

5.

உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை – பதி 52/17,18

அங்குமிங்கும் அலைப்பதால் வருந்தும் மாலையினையும், மேனியில் ஊர்ந்துநிற்கும் அழகிய தேமலையும்,
ஈரப்பசையுள்ள இதழ்களைக் கொண்ட குளிர்ந்த கண்களையும், பெருமை பொருந்திய இயல்பினையும்
உடைய உன் மனைவி

ஊரல் அம் வாய் உருத்த தித்தி – அகம் 326/1

ஊரலாகிய அழகுவாய்ந்த உருப்பெற்ற தேமல்.

என்ற அகநானூற்று அடிக்கு ஊரலாகிய தித்தி என்று பொருள்கொள்வர் வேங்கடசாமி நாட்டார்.
இவர் ஊரல் என்பதுவும் இரு தேமல் வகை என்பார்.

6.

நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/3

நுட்பமான அழகிய ஒளிவிடும் புள்ளிகளைக் கொண்ட மிகவும் சிறியதாக மெலிந்திருக்கும் இளமை ததும்பும்
இடையினையும்

என்ற கலித்தொகை அடி, தித்தி என்பது ஒளிவிடும் புள்ளி என்கிறது. இது இடைப்பகுதியிலும் காணப்படும்.

7.

மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர்
தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன
அம் கலுழ் மாமை கிளைஇய
நுண் பல் தித்தி மாஅயோளே – அகம் 41/13-16

மென் சிறகுடைய வண்டுகள் உள்ள குளிர்ந்த மணங்கமழும் பூங்கொத்துகளில் உள்ள
தாதுடன் கூடிய தேன்துளி தளிரில் ஒழுகியது போல
அழகு ததும்பும் மாநிறமேனியில் கிளைத்துத்தோன்றும்
நுண்ணிய பல தேமல் புள்ளிகளையுடைய நம் தலைவி

என்ற அகநானூற்று அடிகள் தித்தியைப் பற்றிய விளக்கமான குறிப்புகளைத் தருகின்றன.
பூங்கொத்துக்களில் உள்ள பூக்களின் மேல் வண்டுகள் மொய்க்கின்றன. அதனால், அந்தக்கொத்துக்களில்
உள்ள பூந்தாதுக்கள், தேனுடன் கலந்து கீழேயுள்ள செடியின் தளிர்களில் தெறித்துவிழுகின்றன. அதைப் போல
இருக்கிறதாம் பெண்களின் தளிர்மேனியில் பரவலாய்க் காணப்படும் நுண்ணிய பல தேமல் புள்ளிகளான தித்தி.

8.

வடித்து என உருத்த தித்தி – அகம் 176/23

என்கிற அகநானூற்று அடிக்கு, ‘பொன்னை உருக்கி வார்த்தாலொப்ப உருக்கொண்ட தேமலையும்’ என்று
பொருள்கொள்வார் வேங்கடசாமி நாட்டர்.
எனவே இது பொன்னிறம் கொண்டது என்பது தெளிவாகிறது.

மேலும்,

தித்தி ஒழுகிய மெத்தென் அல்குலர் – உஞ்ஞை 41/97

என்ற பெருங்கதை அடியால் தித்தி என்ற தேமல், இடுப்பைச் சுற்றி, இடுப்பிற்கும் சற்றுக் கீழான
அல்குல் பகுதியிலும் படர்ந்திருக்கும் எனத் தெரியவருகிறது.

எனவே, பெண்களின், இடைப்பகுதி, தொடைப்பகுதி மற்றும் மேனியின் பல பகுதிகளிலும்,
மிக நுண்ணியவாகவும், பலவாகவும் பொன் நிறத்தில் தோன்றும் ஒளிர்வுள்ள புள்ளிகளே தித்தி எனப்படும்.

மேல்


தித்தியம்

(பெ) வேள்விக்குண்டம், sacrificial pit

கரியாப் பூவின் பெரியோர் ஆர
அழல் எழு தித்தியம் மடுத்த யாமை
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டாங்கு – அகம் 361/9-11

வாடாத பூவினையுடைய தேவர்கள் உண்ணுவதற்காக
அழல் ஓங்கிய வேள்விக்குண்டத்தின்கண் இடப்பெற்ற யாமை
தான் முன்பிருந்த நிழல் பொருந்திய பெரிய பொய்கையின்கண் போதலை வைரும்புவது போல

மேல்


திதலை

(பெ)

1

முதலில் திதலை என்றால் என்னவென்று பார்ப்போம்.

வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு
இரை தேர் வெண்_குருகு அஞ்சி அயலது
ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன்
நீர் மலி மண் அளை செறியும் – அகம் 8-12

வேம்பின் அரும்பினைப் போன்ற நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டானது
இரையினைத் தேடித்திரியும் வெள்ளைக் கொக்குக்கு அஞ்சி, அருகிலிருக்கும்
தழைத்த பகன்றையினை உடைய கரிய சேறும் சகதியுமாய் இருக்கும் தரையில்
திதலையைப் போன்று வரிகள் உண்டாக ஓடி, விரைவாகச் சென்று, தன்
ஈரம் மிக்க மண் வளையுள் பதுங்கிக்கொள்ளும்.

இங்குள்ள ஒவ்வொரு சொல்லையும் உற்றுப்பார்க்கவேண்டும்.
நண்டுக்கு ஒரு பக்கத்துக்கு நான்கு என மொத்தம் எட்டுக்கால்கள் உண்டு. அவற்றைத்தவிர
இரண்டு கவட்டைபாய்ந்த முன்னங்கைகளும் உண்டு. இவற்றின் நுனியில் கூரான நகங்கள் உண்டு.
இந்த நண்டு, முன்னால், பின்னால், பக்கவாட்டில் என்று எத்திசையிலும் செல்லக்கூடியது.
இது நடப்பதோ சேற்று அள்ளல், அதாவது குழைசேறு. வைத்தவுடன் கூரான நகங்கள் பொதக்கென்று
ஆழ்ந்துவிடும். இது ஒரு இரைதேடும் கொக்கைக்கண்டு அஞ்சி ஓடுகிறது. எனவே வளைந்து வளைந்து
செல்லாமல் நேராக ஓடித் தன் வளைக்குள் புகுந்துவிடும். அப்போது அந்தக்கால்கள் ஏற்படுத்தும் தடத்தைக்
கற்பனை செய்து பாருங்கள். நகங்கள் சேற்றில் ஆழும்போது அவை ஏற்படுத்தும் பலவான புள்ளிகள். அந்த
நகங்களை விரைவாக எடுத்து முன்னே வைக்கும்போது ஏற்படும் சிறிய நேர்கோடுகள், அந்தப் புள்ளிகளை
இணைத்தவாறு செல்லும். அதுவே திதலை. இந்தப் படம் இதனை ஓரளவு விளக்கும்.

2.

இத்தகைய புள்ளிகளாகிய வரி போன்ற அமைப்பு பெண்களின் மேனியில் அரும்புகின்றது என்று
சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை
வார்ந்து இலங்கு வால் எயிற்று பொலிந்த தாஅர்
சில் வளை பல் கூந்தலளே அவளே – நற் 198/6-8

வரிகள் பொருந்திய உயர்ந்துநிற்கும் அல்குலில் அரும்பிய திதலையும்
நேராக விளங்கும் வெண்மையான பற்களும், அழகுள்ள மாலையும்,
ஒருசில வளையல்களும், நிறைந்த கூந்தலும் உடையவள் அவள்;

அரும்புதல் என்பது முகிழ்த்து உருவாதல்.

3.

இந்தத் திதலை பெண்களின் மேனியில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்று பார்ப்போம்.

3.1.

பொன் உரை கடுக்கும் திதலையர் – திரு 145

பொன்னை உரைத்துப்பார்க்குபோது ஏற்படும் தடம் போன்ற திதலையையுடையவர்;

பொன்னை எவரும் நேர்கோட்டில்தான் உரைத்துப்பார்ப்பர். அந்த உரைகல் சொரசொரப்பானது. அதில்
பொன்னைத் தேய்க்குப்போது புள்ளிகளாலாகிய ஒரு நேர்கோடு உருவாகும். மேலும் உண்மையான
தங்கமாயிருந்தால் மினுமினுக்கும். எனவே மினுமினுப்புடன் கூடிய புள்ளிகளாலான கோடுகளின்
அமைப்பே திதலை என்றாகிறது.

3.2.

மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் – மது 706-708

மாமரத்தின்
தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும், தளிரினது புறத்தில்
ஈர்க்குப்போலத் தோன்றிய திதலையையும் உடையர்

வெற்றிலையை நீளவாக்கில் மடித்தால் வெளிப்புறத்தில் ஒரு நீண்ட காம்பு தெரியுமல்லவா! அதுதான் ஈர்க்கு.
அதைப்போன்ற மாந்தளிரின் ஈர்க்குப் போன்றதாம் இந்தத் திதலை. பொதுவாக மாந்தளிரின் நிறத்தைப்
பெண்களின் மேனி நிறத்துக்கு ஒப்பிடுவர். அந்தத் தளிரின் ஈர்க்குப் போன்றதாம் பெண்களின் தளிர் மேனியில்
தோன்றும் திதலை. இந்த ஈர்க்கு, பொன்னிறத்தில் நீண்டு இருப்பதைப் படத்தில் பாருங்கள்.

3.3.

மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல்
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/7,8

மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல,
அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க,

மாநிற மகளிரின் மேனியில் திதலையானது, மாந்தளிரின் மேல் மாம்பூக்களின் மரந்தப்பொடிகள் உதிர்ந்துகிடப்பது
போன்று இருப்பதாகக் கலித்தொகை குறிப்பிடுகிறது.
எந்த மரத்தின் பூவாக இருந்தாலும் அதன் தாது பொன்னிறத்தில்தான் இருக்கும்.
இந்த மாந்தளிர்கள் தொங்கியபடி இருப்பதை மேலுள்ள படம் காண்பிக்கிறது. அதன் மீது உதிர்ந்த பூந்தாதுக்கள்
சரிந்து துகள்களாலான ஒரு நேர்கோடாகப் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருக்கும் அல்லவா! அதுவே திதலை.

4.

இந்தத் திதலை பெண்களின் மேனியில் எங்கெங்கு தோன்றுகின்றன என்பதையும் சங்க இலக்கியங்கள்
குறிப்பிடுகின்றன.

4.1

திதலையைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் 29 இடங்களில் காணப்படுகின்றன.
அவற்றில் 15 இடங்களில் திதலை என்பது அல்குலில் காணப்படுவதாகக் குறிப்புகள் உள்ளன.
அவற்றில் 13 இடங்களில் திதலை அல்குல் என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.
அவற்றில் சில.

திதலை அல்குல் முது பெண்டு ஆகி – நற் 370/6
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு 27/5
திதலை அல்குல் நின் மகள் – ஐங் 29/4
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் – ஐங் 72/2
திதலை அல்குல் எம் காதலி – அகம் 54/21

இங்கே அல்குல் என்பது பெண்குறி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அல்குல்
என்பது இடுப்புக்குச் சற்றே கீழ் உள்ள பகுதி.
அது இடுப்பைச் சுற்றி எந்த இடமாகவேண்டுமானாலும் இருக்கலாம்.

கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் – தேவா-சம்:582/2

(அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே)

என்கிற சம்பந்தர் தேவாரத்தில் அல்குலில் கோவணம் அணிந்தவராக இறைவனை விளிக்கிறார் சம்பந்தர்.
இடுப்பில் கயிறுகட்டி, அதில் கோவணத்தைச் செருகி, முன்பக்க மானத்தை மறைத்துப் பின்பக்கமாக இழுத்துப்
புட்டத்திற்கு மேலே செருகியிருப்பர். எனவே, அல்குல் என்பது அடிவயிறு, அல்லது அடிமுதுகு என்றாகிறது.

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் – ஐங் 72/2

என்ற அடி, அல்குலில் கூந்தல் கிடந்து அசையும் என்கிறது.
குட்டையான கூந்தல் முதுகில் கிடந்து அசைவதைப் பற்றி யாரும் பாராட்டிப்பேசமாட்டார்கள். நீண்ட கூந்தல்
முதுகுக்கும் கீழே தொங்கி, இடுப்புக்கும் கீழே எழுந்துநிற்கும் புட்டத்தின் மேல் பட்டு, நடக்கும்போது
முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் அசைவதே துயல்வருதல். இதைத்தான்

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை – நற் 198/6

என்கிறது நற்றிணை.
எனவே அல்குல் பெரும்பாலும் பெண்களின் இடுப்புக்குக்கீழான பின்பிறம் என்பதே சரி எனப்படுகிறது.

எனவே, மிகப்பெரும்பாலும் பெண்களின் அடிஇடுப்பைச் சுற்றி அல்குல் அரும்புவதாக அறிகிறோம்.

4.2

அடுத்து, திதலை என்பது பெண்களின் மார்புப்பகுதியிலும் காணப்படும் என்கின்றன இலக்கியங்கள்.

திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற
புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4

தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய
புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது;

புதல்வன் தடுத்த பாலொடு தடைஇ
திதலை அணிந்த தேம் கொள் மென் முலை – அகம் 26/12,13

புதல்வனுக்கே திகட்டும் பாலுடன் சரிந்து
அழகுத் தேமலை அணிந்த இனிமை கொண்ட மெல்லிய கொங்கைகள்

என்ற அடிகளால், பிள்ளைபெற்ற பெண்களின் மார்புப்பகுதியில் திதலை அரும்புவதாக அறிகிறோம்.

திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே – திருவா:6 41/4

என்ற திருவாசக அடியும் இதனை உறுதிப்படுத்தும்.

4.3

அடுத்து, பெண்களின் வயிற்றுப்பகுதியிலும் திதலை அரும்புவதாக அறிகிறோம்.

புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி – அகம் 86/11,12

மகனைப் பெற்ற திதலையையுடைய அழகிய வயிற்றினையுடைய
தூய அணிகலன்களையுடைய மகளிர் நால்வர் கூடிநின்று

வரி கிளர் பணை தோள் வயிறு அணி திதலை
அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் – அகம் 245/8,9

வரி விளங்கும் பருத்த தோளினையும், வயிற்றில் அணிந்த திதலையையும் உடைய
கள்விற்கும் மகளிர், இருக்கின்ற மனையகத்தில்

என்ற அகநானூற்று அடிகள் இதற்குச் சான்று பகர்கின்றன. இந்த மகளிர் பிள்ளைபெற்று பலநாட்கள்
ஆனவர்கள்.

பசலை பாய்ந்த திதலை தித்தி
அசைந்த அம் வயிறு அடைய தாழ்ந்த – உஞ்ஞை 43/128,129
திதலை அம் வயிறு அங்கையின் அதுக்கி – உஞ்ஞை 44/25

என்ற பெருங்கதை அடிகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.

5.

அடுத்து எவ்வகைப் பெண்களுக்கு இந்தத் திதலை அரும்பும் என்று காண்போம்.

5.1

முதலாவதாக, பேறுகாலத்துக்குச் சற்றுப்பிந்திய பெண்களுக்கு மார்பில் இந்தத்
திதலை அரும்பும் என்று முன்னர்க் கண்டோம்.

5.1

அடுத்து, பிள்ளை பெற்றுச் சில ஆண்டுகளான பெண்களுக்கு வயிற்றில் இந்தத்
திதலை அரும்பும் என்றும் முன்னர்க் கண்டோம்.

5.3.

புதல்வன் ஈன்று என பெயர் பெயர்த்து அம் வரி
திதலை அல்குல் முது பெண்டு ஆகி – நற் 370/5,6

புதல்வனை ஈன்றதனால் தாய் என்னும் வேறொரு பெயரைப் பெற்று, அழகிய வரிகளையுடைய
திதலையை உடைய அல்குலுடன் முதும்பெண் ஆகி

என்ற அடிகள் ஈன்று அண்மைத்தான பெண்களுக்கு அல்குலிலும் திதலை தோன்றும் என்று
உணர்த்துகின்றன. இங்கு, அம் வரி திதலை என்ற சொற்கள், திதலை என்பது (பொன்னைத் தேய்த்த)
அழகிய கோடு போன்றது என்று நாம் கண்டதை உறுதிசெய்கின்றது.

5.4.

திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு – நற் 6/4
திதலை அல்குல் குறு_மகள் – நற் 77/11
திதலை அல்குல் குறு_மகள் அவனொடு
சென்று பிறள் ஆகிய அளவை – அகம் 189/9,10

இங்கு, குறுமகள் என்பது இளம்பெண்ணைக் குறிக்கும். இவள் திருமணப்பருவத்து இளம்பெண்.
இவளது அல்குலிலும் திதலை தோன்றும் என அறிகிறோம்.

6.

அடுத்து, இந்தத் திதலை என்பது மகளிரின் மேனிக்கு அழகுசேர்ப்பது என்றும், பாராட்டப்படுவது என்றும்
இலக்கியங்கள் பகர்கின்றன.

கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும்
திதலை அல்குலும் பல பாராட்டி
நெருநலும் இவணர்-மன்னே – நற் 84/1-3

என் கண்ணையும், தோளையும், குளிர்ச்சியான நறிய கூந்தலையும்
திதலை படர்ந்த அல்குலையும் பலவாறு பாராட்டி
நேற்றுக்கூட இவ்விடம் இருந்தார், நிச்சயமாக

கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் – நற் 307/3-5

கடலாட்டுவிழா நடைபெறும் அகன்ற இடத்தில், பெருமைமிக்க அணிகளால் பொலிவுபெற்ற
உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு
வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன்!

காதல்கொண்ட தலைவர்களால், இந்தத் திதலை பாராட்டப்படுவது மட்டுமன்று. காதல்வயப்பட்டு,
பிரிவுத்துன்பத்தால் வாடும் தலைவிகளும் பிரிவால் வாடும் தம் கவின்பெறு திதலையை எண்ணிப்
பெருமூச்சு விடுவதும் உண்டு எனக் காண்கிறோம்.

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமை கவினே – குறு 27

கன்றும் உண்ணாமல், பாத்திரத்திலும் வீழாமல்
நல்ல பசுவின் இனிய பால் நிலத்தில் சிந்தியதைப் போல்
எனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும் இன்பம் செய்யாமல்,
பசலைநோய் உண்பதை விரும்பும்
திதலை படர்ந்த என் அழகிய பின்புறத்தின் மாந்தளிர் போன்ற அழகினை.

7.

அடுத்து, திதலை என்பது ஆகுபெயராகவோ, ஒப்புப்பொருளாகவோ பெண்களின் மேனி சார்ந்ததாக இல்லாமலும்
சங்க இலக்கியத்தில் ஓரிடத்தில் வருவதைக் காண்கிறோம்.

திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி – நற் 190/3,4

புள்ளிகள் படர்ந்த வேலையுமுடைய சேந்தன் என்பானின் தந்தையாகிய,
தேன் கமழ்கின்ற விரிந்த மலராலான மாலையையும், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையும் உடைய அழிசி

பற்பல காரணங்களால், பெண்களின் மேனியில் காணப்படும் பொன்னிற மாற்றம்தான் திதலை என்றிருக்க,
ஒரு வேலுக்கு எவ்வாறு திதலை அரும்பும்?

இங்கே, திதலை எஃகின் என்ற தொடரை தீத்தலை எஃகின் என்றுபாடம் கொள்வார் ஔவை துரைசாமியார்.
ஆனால், மிகப் பல ஆசிரியர்கள் திதலை எஃகின் என்றே பாடம் கொண்டு தேமல் படர்ந்த வேல் என்று பொருள்
கொள்கின்றனர். சிலவகை இரும்புகளைத் தேய்க்கும்போது புள்ளிகளோடு கூடிய வரிகள் தோன்றலாம். ஆனால்
அதனைப் புலவர் விதந்து குறிப்பிடுவது ஏன்? பகைவரைக் குத்தியதால் வேலில் பட்ட குருதி வழிந்த தடம்
துடைக்கப்படாமல் காய்ந்துபோய், பொன் உரை போலத் தோன்றுவதால் அதனையும் திதலை எஃகு என்கிறார்
புலவர் என்று ஓர் அருமையான விளக்கம் தருகிறார் புலியூர்க்கேசிகனார்.

இதுகாறும் கண்டவற்றால், திதலை என்பது பெண்களின் மேனியில் சின்னஞ்சிறு பொன்னிறப் புள்ளிகளால்
ஏற்பட்ட வரிவரியான அமைப்பு என்பது தெரிய வருகிறது.
இதனை,
1. தேமல்., Yellow spots on the skin, considered beautiful in women;
2. ஈன்ற பெண்களுக்குள்ள வெளுப்பு நிறம். Pale complexion of women after confinement;
என்கிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon).

மேல்


திதி

(பெ) காசியபன் என்பவனின் மனைவி, அசுரர், மருத்துக்கள் இவர்களின் தாய்
The wife of Kāšyapa and mother of Asuras and Maruts;

திதியின் சிறாரும் விதியின் மக்களும் – பரி 3/6

திதியின் சிறுவர்களாகிய அசுரர்களும், விதியின் மக்களாகிய சூரியன் பன்னிருவரும்

மேல்


திதியன்

(பெ) 1. சங்க காலத்துப் பொதியமலை அரசன்.
2. சங்க காலத்து அழுந்தூர் வேள்

1.1

திதியன் இன்றைக்குக் குற்றாலம் எனப்படும் பொதிகைமலைப் பகுதியை ஆண்டவன்

பொருநர்
செல் சமம் கடந்த வில் கெழு தட கை
பொதியின் செல்வன் பொலம் தேர் திதியன்
இன் இசை இயத்தின் கறங்கும்
கல் மிசை அருவிய காடு – அகம் 25/18-22

பகைவர்
எதிர்ந்துவரும் போரினை வென்ற வில்லினைக் கொண்ட பெரிய கையினை உடையானும்
பொதியில் மலைக்கு உரிய செல்வனும் பொன்னாலான தேரினை உடையவனுமான திதியன் என்பானின்
இனிய இசையை எழுப்பும் இசைக்கருவிகளிப் போல ஒலிக்கும்
மலையுச்சியிலிருந்து விழுகின்ற அருவிகளையுடைய காடு

1.2

இந்தத் திதியன் தலையாலங்கானத்துப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் போரிட்டுத் தோற்ற
எழுவரில் ஒருவன்.

கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன்
போர் வல் யானை பொலம் பூண் எழினி
நார் அரி நறவின் எருமையூரன்
தேம் கமழ் அகலத்து புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான் இயல் தேர் பொருநன் என்று
எழுவர் நல் வலம் அடங்க – அகம் 36/13-20

கொய்த பிடரிமயிரைக் கொண்ட குதிரைகள் பூட்டிய கொடி பறக்கும் தேர் உடைய நெடுஞ்செழியன்
தலையாலங்கானத்து அகன்ற போர்க்களம் செந்நிறம் அடைய –
சேரன், சோழன், சினம் மிக்க திதியன்,
போரில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,
நாரால் அரிக்கப்பட்ட கள்ளினையுடைய எருமையூரன்,
தேன் மணம் கமழும் மார்பினில் பூசிப் புலர்ந்த சந்தனத்தையுடைய
இருங்கோவேண்மான், சிறப்பாகச் செய்யப்பட்ட தேரையுடைய பொருநன் என்ற
எழுவரின் சிறந்த வெற்றிகள் அடங்கிப்போக

1.3

இந்தத் திதியன் வேல்படையும், தேர்ப்படையும் மிகுதியாகப் பெற்றிருந்தான்.

ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன் – அகம் 322/8

ஒளிவிடும் வேலினையுடைய சேனையினையும், விரைந்து செல்லும் தேரினையும் உடைய திதியன்.

1.4

இந்தத் திதியன் பாணர்களுக்குப் பல அணிகலன்களை நல்கி அவர்களுக்கு அறத்துறையாக விளங்கினான்

பாணர் ஆர்ப்ப பல கலம் உதவி
நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் – அகம் 331/11,12

பாணர்கள் மகிழ்ந்து ஆரவாரிக்க, பல அணிகலன்களை அளித்து
நாளோலக்கம் கொண்டிருந்த கள்ளின் மகிழ்வினையுடைய திதியன்

2.1

அழுந்தூர் என்னும் ஊர்ப்பகுதியினை ஆண்ட வேளிர் தலைவன் திதியன். இவன் கரிகால் சோழனின்
தாய்வழிப் பாட்டன். அன்னி ஞிமிலி என்பாளின் தந்தை செய்த ஒரு குற்றத்துக்காக கோசர்கள் என்பார் அவனின்
கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர். இந்த அன்னி கோசரைப் பழிக்குபழி வாங்குவதாகச் சபதம்
செய்துகொண்டாள். அரசன் திதியனிடம் தன் குறையைச் சொல்லி முறையிட, திதியன் தன் பெரும் படையுடன்
சென்று ஊர்முது கோசரைக் கொன்றான்.

தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய
கடும் தேர் திதியன் அழுந்தை கொடும் குழை
அன்னிமிஞிலி – அகம் 196/8-12

தன் தந்தையின்
கண்ணின் அழகைக் கெடுத்த தவற்றிற்காக, அச்சம் உண்டாக
நெடுமொழியினையுடைய கோசர்களைக் கொன்று மாறுபாடு தீர்ந்த
விரைந்த தேரினையுடைய திதியனின் அழுந்தூரைச் சேர்ந்த வளைந்த குழையினை அணிந்த
அன்னி மிஞிலி

2.2

அன்னி என்ற பெயர் கொண்ட ஓர் சிற்றரசன், இந்தத் திதியனுடன் பகைமை கொண்டு, திதியனின்
காவல் மரமான புன்னை மரத்தை வெட்டி வீழ்த்தினான். ஆனால் திதியன் அவனுடன் போரிட்டு
அவனைக் கொன்றான்.

பெரும் சீர்
அன்னி குறுக்கை பறந்தலை திதியன்
தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணிய
நன்னர் மெல் இணர் புன்னை போல – அகம் 145/10-13

பெரிய புகழையுடைய
அன்னி என்பவன் குறுக்கைப் பறந்தலை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பவனின்
பழைமை பொருந்திய பெரிய அடியை வெட்டித்துண்டாக்கிய
நன்றாகிய மெல்லிய பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தைப் போல்

பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ – அகம் 126/15-17

பொன் போன்ற கொத்துக்களாகிய நறிய மலர்களையுடைய (காவல் மரமான) புன்னையை வீழ்த்த விரும்பித்
திதியனுடன் போரிட்ட அன்னியைப் போல
நீ இறந்துபடுவாய் போலும்

மேல்


திமிர்

(வி) பூசு, தடவு, அப்பு, smear, rub, apply to

அவரோ வாரார் தான் வந்தன்றே
எழில் தகை இள முலை பொலிய
பொரி பூ புன்கின் முறி திமிர் பொழுதே – ஐங் 347/3

அவரோ வரவில்லை, ஆனால் இது வந்து நிற்கிறது –
அழகும் நலமும் சேர்ந்த என்னுடைய இளம் முலைகள் பொலிவுபெறும்படியாக
பொரியைப் போன்ற பூக்களைக் கொண்ட புன்கமரத்தின் இளந்தளிர்களை அரைத்துப் பூசிக்கொள்ளும் பொழுது

மேல்


திமில்

(பெ) மீன் படகு, Catamaran, small boat

பழம் திமில் கொன்ற புது வலை பரதவர் – அகம் 10/10

பழைய கட்டுமரத்தை அழித்துவிட்டுப் புதிய வலையைக் கொண்ட பரதவர்

மேல்


திரங்கு

(வி) 1. வற்றிச் சுருங்கு, be wrinkled, get shrunk
2. உலர்ந்துபோ, get dried up
3. தளர்ந்து வாடு, நலிவுறு, be fatigued, wearied

1.

கான வேம்பின் காய் திரங்க
கயம் களியும் கோடை ஆயினும் – புறம் 389/2,3

காட்டிலுள்ள வேம்பினுடைய காய்கள் வற்றிச் சுருங்கிப்போக
ஆழ்ந்த நீர்நிலை வற்றிப் பிளவுபட்டுக்கிடக்கும் கோடக்காலமாயினும்

2.

தளிரொடு மிடைந்த காமரு கண்ணி
திரங்கு மரல் நாரில் பொலிய சூடி – மலை 430,431

தளிர்களோடே இறுகக்கலந்த கட்டழகான மாலையை,
நன்கு காய்ந்த கற்றாழை நாரில் (கட்டி)அழகுபெறச் சூடி,

3.

பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு – புறம் 370/3

பசி நின்று வருத்த நலிவுற்ற மிகப்பெரிய சுற்றத்தாருக்கு

மேல்


திரி

1. (வி) 1. அலைந்துதிரி, wander
2. திருக்குறு, be twisted
3. வேறுபடு, change, vary
4. முறுக்கேற்று, twist as yarn
5. சுழல், go round, whirl
– 2. (பெ) 1. திரிகை, grinding tool
2. விளக்குத்திரி, Roll or twist of cloth or thread for a wick
3. முறுக்கு, twist

1.1

பல் வேறு பண்ணியம் தழீஇ திரி விலைஞர் – மது 405

பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு அலைந்து விற்பவரும்

1.2.

இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/6

கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,

1.3.

வசை இல் புகழ் வயங்கு வெண் மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும் – பட் 1,2

பழிச்சொல் இல்லாத புகழையுடைய, சுடர் வீசும் வெள்ளியாகிய மீன்
(தான் நிற்பதற்குரிய)வடதிசையினின்றும் மாறி தென்திசையில் சென்றாலும்

1.4.

வடி கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை – நற் 74/1

செம்மையாகச் செய்யப்பட்ட கதிர் என்னும் கருவியால் முறுக்கேற்றப்பட்ட வலிய கயிற்றால் பின்னிய
2:33 PM 12/2/2018பெரிய வலையை

1.5.

அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 370/17

கடாவிடும்போது சுற்றிவந்த காலாட்கள் வீழ்ந்த கடாவிடுமிடத்தில்

2.1.

களிற்று தாள் புரையும் திரி மர பந்தர் – பெரும் 187

யானையினது காலை ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும்

2.2.

நெய் உமிழ் சுரையர் நெடும் திரி கொளீஇ – முல் 48

நெய்யைக் காலுகின்ற திரிக்குழாயையுடையோராய் நெடிய திரியை (எங்கும்)கொளுத்தி

2.3.

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99

முறுக்குள்ள கொம்பினையுடைய புல்வாய்க்கலையோடே மடப்பத்தையுடைய மான் துள்ள,

மேல்


திரிதரு(தல்)

(வி) 1. அலைந்துதிரி, roam about, wander
2. சுழல், whirl, go round
3. சுற்று, rotate
4. நடமாடு, வழங்கு, be in use

1.

இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – நெடு 35

முன்னும் பின்னும் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு அலைந்துதிரிய

2.

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு – திரு 1,2

உயிர்கள் மகிழும் பொருட்டு வலமாக எழுந்து சுற்றிவரும்
பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று,

3.

மோரியர்
பொன் புனை திகிரி திரிதர குறைத்த
அறை இறந்து – அகம் 69/10-12

மோரியரின்
பொன்னால் செய்யப்பட்ட சக்கரங்கள் உருள்வதற்காக வெட்டிப் பாதையாக்கப்பட்ட
குன்றங்களைக் கடந்து

4.

நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார் – கலி 35/17

நிலத்தின் பெருமை உலகோர் நாவில் நடமாடும் நீண்ட மாடங்களைக் கொண்ட கூடல்மாநகரத்தவர்

மேல்


திரிபு

(பெ) வேறுபாடு, change, alteration

நன்று அல் காலையும் நட்பில் கோடார்
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் – அகம் 113/1,2

கேடுற்ற போதும் நட்பில் திரியாதவராய்
அந்த நண்பரிடம் சென்று அவர் குறிப்பில்படும் மாறுபாடு இல்லாத அறிவுடைமையால்

மேல்


திரிபுரம்

(பெ) பொன் வெள்ளி இரும்புகளால் செய்யப்பட்டு, விண்ணிற் சஞ்சரித்த
சிவபிரானால் எரிக்கப்பட்ட மூன்று நகரங்கள்
The three aerial cities of gold, silver and iron burnt by šiva;

தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2

தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,

மேல்


திரிமரம்

(பெ) திரிகை, grinding tool

திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல்
அலங்கு கதிர்த் திகிரி ஆழி போழ – அகம் 224/13,14

சுழலும் திரிகையின் குரலொலியைப் போல, வரிப்பட்ட மணலில்
சுழலும் கதிரினையுடைய வட்டச் சக்கரம் அறுத்துக்கொண்டு செல்ல

பார்க்க : சுழல்மரம்
மேல்


திரிவு

(பெ) 1. திருக்கு, முறுக்கு, twist
2. மாறுதல், வேறாகுதல், change, variation

1.

தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் – மலை 21

(கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும்,

2.

திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி – பரி 23/20

திறத்தால் சிறிதும் பிறழ்தல் இல்லாத அந்தணர் மிகுந்து வாழ்தலால்

மேல்


திரீஇ

(வி.எ) திரிந்து என்பதன் திரிபு, the changed form of the word ‘tirindhu’

ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ
சேரி இளையர் செல அரு நிலையர் – பரி 6/37,38

ஒரே ஒரு வழியில் நெருக்கியடித்துக்கொண்டு, ஊர்ந்து ஊர்ந்து இடமெல்லாம் திரிந்து,
புறச்சேரியிலிருக்கும் இளையர் வெளியே செல்வதற்கு முடியாத நிலையினராக,

மேல்


திரு

(பெ) 1.அழகு, beauty
2. இலக்குமி, Lakshmi, the Goddess of Wealth and Prosperity
3. செல்வம், wealth
4. பொலிவு, ஒளிர்வு, lustre, brilliance
5. சீர், சிறப்பு, eminence
6. தெய்வத்தன்மை, divinity

1.

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

2.

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து – திரு 70

திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும்

3.

திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 89, 90

செல்வம் நிலைபெற்ற குற்றமற்ற சிறப்பினையுடைய,
கொண்டுவந்த மணலைப் பாவி இறுக்கமாக்கப்பட்ட, அழகிய வீட்டின் — முற்றத்தில்

4.

கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் – மது 511

சங்கினை அறுத்துக் கடைவாரும், ஓளிர்வுள்ள மணிகளைத் துளையிடுவாரும்

5.

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/20,21

நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள், அந்தச் சீரினால்
அயலார் கூறும் இழிப்புரைகளை மாற்றத்தக்க ஒரு வழி இருந்தால் அதை உரைப்பாயாக

6.

திகழ் மலர் புன்னை கீழ் திரு நலம் தோற்றாளை – கலி 135/12

ஒளிவீசும் மலர்களையுடைய புன்னை மரத்தடியில் உன்னிடம் தன் தெய்வத் திருவழகை இழந்தவளை

மேல்


திருகு

(வி) 1. முறுகு, be intense, severe
2. பின்னிப்பிணை, be close together, interwine
3. இறுக்கக் கடி, bite hard

1.

காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் – பெரும் 3

சுடுகின்ற தீ(யின் வெப்பம்) தீவிரமாகிய கடுமையான வீரியமுடைய (முது)வேனில் காலத்தில்,

2.

பருகு அன்ன காதலொடு திருகி
மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து – அகம் 305/6,7

ஒருவரையொருவர் பருகுவது போன்ற காதலுடன் பின்னிப்பிணைந்து
ஒருவர் மெய்க்குள் ஒருவர் புகுந்துவிடுவதைப் போன்ற கைகளினால் அணைத்துக்கொள்ளும் தழுவலில்

3.

பல் ஊழ்
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு
கூர் நுனை மழுகிய எயிற்றள் – அகம் 176/23-25

பல முறை
முறித்துக்கொள்வதால் சிவந்த மெல்லிய விரலினையும், திருகிக் கடித்தலால்
கூரிய முனை மழுங்கிய பற்களையும் உடையளாய்

மேல்


திருத்து

(வி) 1. மேன்மைப்படுத்து, improve, elevate
2. சீர்ப்படுத்து, correct, rectify
3. செவ்விதாக்கு, reform
4. நன்கு அமை, order properly

1.

துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியும் – பதி 32/7

வருந்துகின்ற குடிமக்களை மேன்மைப்படுத்திய சிறந்த வெற்றியும்

2.

நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82

நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்

3.

வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய
களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/3,4

பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே!

4.

இவள் தான் திருத்தா சுமட்டினள் – கலி 109/13

இவள்தான், நன்கு அமைக்கப்படாத சும்மாட்டினை உடையவள்

மேல்


திருந்த

(வி.அ) நன்றாக, செம்மையாக, thoroughly

அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ – அகம் 385/9,10

வழியிலுள்ள ஆலமரத்தின் ஆடி அசைகின்ற நெடிய விழுது
தேமல் பொருந்திய தனது துடையில் நன்கு உராய்ந்திட

மேல்


திருந்து

(வி) 1. அழகுபெறு, be beautiful, lovely
2. சிறப்படை, செம்மையாகு, become perfect
3. நன்றாக அமை, be well completed
4. நன்கு செய்யப்படு, be finished artistically
5. மேன்மையடை, be worthy, honourable

1.

சுரும்பு உண தொடுத்த பெரும் தண் மா தழை
திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 203,204

சுரும்பு (தேன்)உண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை
அழகுபெற்ற வடங்களையுடைய அல்குலிடத்தே அசையும்படி உடுத்தி,

2.

பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 41,42

பொருந்தின மயிர் ஒழுங்குபட்ட செம்மையான கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த
ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களை

3.

கோதையின் பொலிந்த சேக்கை துஞ்சி
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து – மது 713,714

தூக்கு மாலைகளால் பொலிவுபெற்ற படுக்கையில் துயில் கொண்டு –
நன்றாக அமைந்த உறக்கத்தை (சூதர் இசை பாடி)த் துயிலுணர்த்த, இனிதாக எழுந்து,

4.

திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப – நற் 40/4

நன்குசெய்யப்பட்ட இழை அணிந்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க

5.

திறன் மாண்டு
திருந்துக மாதோ நும் செலவு என வெய்து_உயிரா – அகம் 299/18,19

செய்திறத்தில் மாட்சியுற்று
மேன்மையுறுக உமது பயணம் என்று கூறி, வெப்பமாகப் பெருமூச்சுவிட்டு

மேல்


திருமருதமுன்துறை

(பெ) சங்ககால மதுரையின் வையை ஆற்றுப் படித்துறை

திருமருதமுன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் – பரி 7/83

திருமருதமுன்துறை என்ற பெயர்கொண்ட துறையைச் சேரும் வையை நீரில் குளித்து இன்புறுவாரின்

மேல்


திருமாவளவன்

(பெ) சங்க காலச் சோழ மன்னன் கரிகாலனின் பட்டப்பெயர்,
nick name of chozha king Karikalan

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் – பட் 299,300

திருமாவளவவன் பகைவரைக் கொல்லுதற்கு உயர்த்தி ஓங்கிய
வேலினும் கொடியவாயிருந்தன, (தலைவியைப் பிரிந்து செல்லும் வழியிலுள்ள)காடு

மேல்


திருமாவுண்ணி

(பெ) ஒரு சங்ககாலப் பெண்ணின் பெயர், name of a woman of sangam period
இந்தப் பெண் கண்ணகி என்பார். இப்பாடலின் ஆசிரியர் மதுரை மருதன் இளநாகனார், சிலப்பதிகாரக்
காலத்துக்குப் பல நூறு ஆண்டுகட்கு முந்தையவர் என்பதால் இவள் கண்ணகி அல்ல என்றும் கூறுவர்.
கண்ணகியைப் பற்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தில், கண்ணகி ஒருமுறைகூட இப்பெயரால்
அழைக்கப்படவில்லை.

ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி
கேட்டோர் அனையர் ஆயினும்
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/9-11

ஒரு முலையை அறுத்த திருமாவுண்ணியின் கதையைக்
கேட்டவர்கள் அத் தன்மையராக ஆயினும்
நாம் விரும்புவோரைத் தவிர பிறர் நமக்கு இன்னாதரே ஆவர்.

மேல்


திருவில்

(பெ) இந்திரவில், வானவில், rainbow

திருவில் அல்லது கொலை வில் அறியார் – புறம் 20/10

வானத்தில் தோன்றும் இந்திரவில் அல்லது பகைவரது கொலை வில்லை அறியார்

மேல்


திரை

1. (வி) தன்னுள் அடக்கு, cover, contain
2. (பெ) 1. அலை, wave
2. சுருக்கம், Wrinkle, as in the skin through age

1.

நிலம் திரைக்கும் கடல் தானை – புறம் 97/14

நிலத்தைத் தன்னுள்ளே அடக்கும் கடல் போன்ற படையுடன்

2.1.

வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் – சிறு 155

மிகுகின்ற அலை கொண்டுவந்த மணத்தையுடைய (அகில்)மர விறகால்

2.2.

கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் – புறம் 195/2

மீனின் முள் போன்ற நரை முதிர்ந்த சுருங்கிப்போன கன்னத்தினையும்

மேல்


திரைப்பு

(பெ) 1. திரையால் மறைத்த இடம், Place screened by a curtain
2. தன்னுள் அடக்குதல், covering, containing

1.

வரைப்பில் மணல் தாழ பெய்து திரைப்பில்
வதுவையும் ஈங்கே அயர்ப அதுவேயாம் – கலி 115/19,20

முற்றத்தில் புது மணலைப் பரப்பி, திரைமறைவில்
திருமணமும் இங்கே நடத்துவர்,

2.

நிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கே – பதி 91/10

நிலத்தைத் தன்னுள் அடக்கியதைப் போன்ற படையினையுடையவனாகிய உனக்கே.

மேல்


திரையன்

(பெ) தொண்டைநாட்டு மன்னன், இளந்திரையன், An ancient chief of Toṇṭaināṭu

பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் – பெரும் 37

பல வேற்படையினையும் உடைய தொண்டைமான் இளந்திரையனிடம் செல்ல எண்ணுவீராயின்

மேல்


தில்

(இ.சொ) 1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.
particle signifying a desire, time or a suggestion

1.

வார்ந்திலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே – குறு 14/2,3

நேராக வளர்ந்து ஒளிரும் கூரிய பற்களையுடைய, சில சொல் சொல்லும் பெண்ணைப்
பெறுவேனாக நானே!

2.

பெற்றாங்கு
அறிக தில் அம்ம இ ஊரே – குறு 14/3,4

பெற்ற பின்பு
அறியட்டும் இந்த ஊரே!

3.

வருக தில் அம்ம எம் சேரி சேர- அகம் 276/7

வருவானாக, எம் சேரிக்கண் பொருந்த

மேல்


தில்ல

(இ.சொ) தில் என்ற இடைச்சொல்லின் நீட்சி, an elongated form of the word ’til’
1.விருப்பம், 2.காலம், 3.குறிப்பு என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்.
particle signifying a desire, time or a suggestion

1.

இடிக்கும் கேளிர் நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/1,2

என்னைக் கடிந்துரைக்கும் நண்பர்களே! உங்கள் கடிந்துரையானது என் உடம்பைக்
குலைந்துபோவதினின்றும் நிறுத்த முடிந்தால் அதைப் போன்று நல்லது வேறில்லை.

2.

நன் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும்
கொல் முரண் இரும் புலி அரும் புழை தாக்கி
செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல்
வாரற்க தில்ல தோழி- நற் 151/1-5

நல்ல நெற்றியில் பசலை பாய்ந்தாலும், பெருத்த தோள்கள் மெலிந்துபோனாலும்
கொல்லக்கூடிய பகையுணர்வுகொண்ட பெரிய புலியின் சேரற்கரிய சிறிய நுழைவிடத்தைத் தாக்கி
சிவந்த கறையினைக் கொண்ட வெண்மையான கொம்பினையுடைய யானை
அந்தக் கறையை மலைமேலிருந்து விழும் அருவிநீரில் கழுவும் மலைச்சாரல் நெறியில்
வராமலிருப்பானாக, தோழியே!

3.

நம் உறு துயரம் நோக்கி அன்னை
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல செறி எயிற்றோயே – ஐங் 241/1-4

நாம் படும் பாட்டைப் பார்த்து, அன்னை
வெறியாடும் வேலனை அழைத்து வந்தால், அந்த வேலன்
நறுமணம் கமழும் நாட்டினையுடைவனோடு நாம் கொண்டுள்ள நட்பை
அறிந்து சொல்வானோ? செறிவான பற்களைக் கொண்டவளே!

மேல்


தில்லை

(பெ) Blinding tree, Excoecaria agallocha

குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் – நற் 195/2,3

குட்டியான நீர்நாய் கொழுமையான மீன்களை நிறைய உண்டு
தில்லை மரப் பொந்தினில் படுத்துறங்கும்

மேல்


திலகம்

(பெ) 1. நெற்றிப்பொட்டு, a small circular mark on forehead
2. மஞ்சாடி மரம், Barbados pride, Caesalpinia gilliesii

1.

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

நெற்றிப்பொட்டு இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

2.

போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74

கோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ

மேல்


திவலை

(பெ) துவலை, சிதறிவிழும் துளி, spray

சிறு_வெண்_காக்கை செ வாய் பெரும் தோடு
எறி திரை திவலை ஈர்ம் புறம் நனைப்ப – குறு 334/1,2

சிறிய வெள்ளையான கடற்காக்கையின் சிவந்த வாயையுடைய பெரிய கூட்டம்
வீசுகின்ற அலைகளின் துளிகள் தம்முடைய ஈரமான முதுகை நனைப்பதால்

மேல்


திவவு

(பெ) யாழ்த்தண்டிலுள்ள நரம்புக்கட்டு, Bands of catgut in a yAzh

நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் – பெரும் 12,13

நீண்ட மூங்கில் (போன்ற)திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்கையில்(உள்ள)
குறிய வளையல்களைப் போன்ற, நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்;

மேல்


திளை

(வி) 1. களித்திரு, மகிழ்ச்சியில் மூழ்கு, be immersed in joy, rejoice
2. அசை, ஆடு, swing to and fro; move
3. மூழ்கு, be immersed
4. துய்,அனுபவி, enjoy, experience
5. விளையாடி மகிழ், play, disport
6. துளை, to perforate, bore

1.

கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
————– —————- —————- ———–
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் – நற் 334/1-5

கரிய விரல்களையுடைய மந்தியின், சிவந்த முகங்களையுடைய பெரிய கூட்டமானது,
————– —————- —————- ———–
பெரிய மலைகளின் சரிவில் அருவியில் குளித்து,
தம் ஆண்குரங்குகளோடு களித்திருக்கும் மலையக நாடன்,

2.

முது நீர்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல் – குறு 299/1,2

முதுமையான நீரையுடைய
அலைகள் வந்து தவழும் பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையிலுள்ள

3.

எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை
புணரி திளைக்கும் துறைவன் – ஐங் 150/1,2

மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் நறிய மலரைகொண்ட பெரிய கிளையில்
ஆரவாரிக்கும் கடலைகள் மூழ்கியெழும் துறையைச் சேர்ந்தவன்

4.

தொடுதர
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை
திளைத்தற்கு எளியமா கண்டை – கலி 110/3-5

என் மேனியைத் தொட
உன் கிட்டே வந்து உனக்கு இடங்கொடுத்தது ஒரு விளையாட்டுக்காக, நீ உடனே என்னைத்
துய்ப்பதற்கு எளியவளாய்க் கருதிவிட்டாய்!

5.

பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை
தோல் முலை பிணவொடு திளைக்கும் – அகம் 201/16-18

பெரிய கையினையும், பிளந்த வாயினையும் உடைய ஆண் கரடி
இருளை வெட்டிவைத்தாற் போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடனும்
வற்றிய முலையினையுடைய பெண்கரடியுடனும் விளையாடி மகிழ்ந்திருக்கும்.

6.

வேழம் வீழ்த்த விழு தொடை பகழி
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை
கேழல் பன்றி வீழ அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும்
கொலைவன் யார்-கொலோ கொலைவன் – புறம் 152/1-8

யானையைக் கொன்ற சிறந்த தொடையினைக்கொண்ட அம்பு
பெரிய வாயையுடைய புலியை சாகச்செய்து
துளையுள்ள கொம்புள்ள தலையையுடைய புள்ளிமான் கலையை உருட்டி, உரல் போன்ற தலையையுடைய
கேழலாகிய பன்றியை வீழ்த்தி, அதற்கு அயலதாகிய
ஆழமான புற்றில்கிடக்கின்ற உடும்பின்கண் சென்று செறியும்
வலிய வில்லாலுண்டான வேட்டையை வெற்றிப்படுத்தியிருந்தவன்
புகழ் அமைந்த சிறப்பினையுடைய அம்பு எய்தல் தொழிலில் சிறப்புற்று துளைத்துச் செல்கின்ற
கொலைவன் யாரோ அவன்தான் கொலைவன்

மேல்


திற்றி

(பெ) 1. கடித்துத் தின்பதற்குரிய உணவு,
Eatables that must be masticated before being swallowed
2. இறைச்சி, meat

1.

விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி – அகம் 113/16

விழா கொண்டாடியது போன்ற கொழுமையான பலவகை உணவுகளையும்

2.

நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற – அகம் 249/13

இளைய பசுவினைக் கொன்று அதன் ஊனைத் தின்ற

மேல்


திறம்

(பெ) 1. சார்பு, பக்கம், side, party
2. வகை, விதம், kind, sort
3. சிறப்பு, மேன்மை, greatness, excellence
4. ஆற்றல், சக்தி, power, strength
5. திறமை, skill, efficiency
6. தன்மை, இயல்பு, nature, quality
7. வழிமுறை, means, method
8. நல்லொழுக்கம், moral conduct, goodness of behaviour
9. வழி, way, path
10, காரணம், cause

1.

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 73-75

விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு,
(நாட்டப்பட்ட)இரண்டு கோல்களின் நிழல்கள் ஒன்றும்வகையில், (கிழக்கிலிருந்து)மேற்கே செல்வதற்காக,
ஒரு பக்கத்தைச் சாராத (உச்சியில் இருக்கும்)நண்பகல் நேரத்தில்,

2.

நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து
அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின்
பல திறம் பெயர்பவை கேட்குவிர்_மாதோ – மலை 289-291

பார்த்தாலே நடுங்கும் பயம் மிக்க மலைச்சரிவுகளில்,
மலர்ந்த பூக்கள் பரவிக்கிடக்கும் பட்டை பட்டையான நிழலில் களைப்பாறி இருப்பின்,
பலவிதமான நடமாட்டங்களை(உற்றுக்கேட்டால்) கேட்பீர்

3.

திண் தேர் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே – நற் 8/9,10

திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச்
சிறப்பெல்லாம் பெறுக இவளை ஈன்ற தாய்

4.

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/6,7

செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்

5.

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என – நற் 252/1-4

கிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு
சில்வண்டு ஓயாது ஒலிக்கும், தொலைவான நாட்டுக்குச் செல்லும் வழியில்
திறமையுடன் செயலாற்றும் கொள்கையுடன் சென்று பொருள்சேர்த்தால் அன்றி
அரிய பொருளைச் சேர்ப்பது சோம்பியிருப்போர்க்கு இல்லை என்று,

6.

வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2

பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து,
செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர்

7.

அறம் புரி அரு மறை நவின்ற நாவின்
திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று – ஐங் 387/1,2

அறத்தைச் சொல்லும் அரிய மறைகளைப் பலமுறை ஓதிப்பயின்ற நாவினையும்,
அந்த வேத முறைகளைக் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்களையும் உடைய அந்தணர்களே!
உங்களைத் தொழுகிறேன் என்று

8.

திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் – கலி 38/20

நல்லொழுக்கமுடையவனின் செல்வம் போல் நாளும் சீர்பெற்றுச் சிறப்புறுவாள்

9.

கடவுள் வாழ்த்தி பையுள் மெய் நிறுத்து
அவர் திறம் செல்வேன் – அகம் 14/16,17

கடவுளை வாழ்த்தி, துயரத்தை வெளிக்காட்டி,
அவர் வரும்வழியே சென்றேனாக,

10

பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு
நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம்
யானும் தெற்றென உணரேன் – அகம் 48/2-4

பாலையும் பருகாள், துன்பம் கொண்டு
மிகவும் மெலிவடைந்துள்ளாள்’ என்று (காரணம்)கேட்கிறாய், அதன் காரணத்தை
நானும் தெளிவாக அறியேன்

மேல்


திறம்பு

(வி) மாறுபடு, பிறழ், change, deviate from, swerve from

நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை – பரி 3/34

நடுவுநிலைமையிலிருந்து தவறிய நலமில்லாத ஒரு கை

மேல்


திறல்

– (பெ) 1. வலிமை, வீரியம், strength, vigour
2. ஓளி, பிரகாசம், Lustre, as of precious stones

1.

அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149

நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய

2.

திறல் விடு திரு மணி இலங்கு மார்பின் – பதி 46/3

மிகுந்த ஒளியை விடுகின்ற அழகிய மணிமாலை பளிச்சிடும் மார்பினையும்

மேல்


திறன்

(பெ) 1. சார்பு, side, party
2. இயல்பு, nature
3. நற்பண்பு, moral conduct
4. திறமை, ஆற்றல், சக்தி, skill, efficiency, power, strength
5. வழிமுறை, means

1.

அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – பொரு 230

அறத்தோடு பொருந்திய சார்பினை அறிந்த செங்கோலையும் உடைய

2.

சூழ் கழி இறவின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி – நற் 101/2,3

சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்
கூட்டமான குவியல் வெயிலில் காயும் தன்மையை ஆராய்ந்து

3.

திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/42,43

நற்பண்பு இல்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மறப்பண்பும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!

4.

மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி – பரி 13/31-33

வீரம் மிக்கு மிகுந்த முழக்கத்தோடு பகைவரைக் கொல்லுகின்ற படைகளுடன்,
தம் ஆற்றலையும் மீறி தன் மேல் படையெடுத்து வரும் பகைவரின் உயிரைப் போக்கும்
வெற்றி மிகுந்த ஆற்றலும்

5.

கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/12,13

மழையைப் பெற்ற நிலத்தைப் போல வனப்புறுவாள்; அந்த வனப்பு
இவளை விட்டு அகன்று போகாமல் காப்பதற்கு ஒரு வழிமுறை இருந்தால் அதை உரைப்பாயாக

மேல்


திறை

(பெ) கப்பம், tribute

பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் – கலி 31/17

பகைவரை வென்று, அவரின் திறைப்பொருளைக் கைக்கொண்டு, பாய்ந்துவரும் திண்ணிய தேரில் வருபவரின்

மேல்


தின்

(வி) 1. உண்ணு, சாப்பிடு, eat
2. தழும்பு ஏற்படுத்து, make a scar
3. தேய்வை ஏற்படுத்து, abrase
4. வற்றிப்போகச்செய், make dry
5. இற்றுப்போகச்செய், corrode
6. அராவு, file
7. எரி, burn, consume as fire
8. சிதைத்து அழி, impair, damage
9. அரி, eat away as white ants
10. வருத்து, afflict
11. மெல்லு, chew

1.

ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் – நற் 322/5

ஊனைத் தின்னுகின்ற பெண்புலியின் வருத்துகின்ற பசியைப் போக்குவதற்கு

2.

விழு தண்டு ஊன்றிய மழு தின் வன் கை – பெரும் 170

விழுமிய தடியை ஊன்றின கோடரித் தழும்பிருந்த வலிய கையினையும்

3.

நிற புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின்
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின்
இருள் துணிந்து அன்ன ஏனம் – மலை 245-247

மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத்தோண்டியதால் தேய்ந்துபோன)கொம்போடு,
வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய,
இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றி

4.

அத்த பலவின் வெயில் தின் சிறு காய் – ஐங் 351/1

காட்டு வழியிலுள்ள பலாமரத்தின், வெயில் வற்றிப்போகச் செய்ததால் வெம்பிப்போன சிறிய காயை

5.

நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை – பதி 12/20

மண்படிந்த கிழிந்த உடையைக் களைந்த பின்னால்

6.

அரம் தின் ஊசி திரள் நுதி அன்ன – அகம் 199/8

அரத்தால் அராவப்பட்டுத் தேய்ந்துபோன ஊசியின் திரண்ட முனைடைப் போல

7.

எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் – அகம் 288/5

தீயானது எரித்த கொல்லையில் விளைந்து கதிர் வளைந்த தினைப்புனத்தில்

8.

நிணம் தின்று செருக்கிய நெருப்பு தலை நெடு வேல் – புறம் 200/6

உடலைக் குத்தி நிணத்தைச் சிதைத்து அழித்துச் செருக்குக்கொண்ட நெருப்புப்போன்ற தலையைக் கொண்ட
நீண்ட வேல்

9.

நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும் – மலை 575

மண் அரிக்கக் கிடக்கும் பொருள்குவியலுடன், அனைத்தையும்

10

வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின அல்கும் பனி நீர் சேர்ப்ப – ஐங் 159/1-3

வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக
அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை
பசி தன்னை வாட்டவும் அங்கேயே தங்கியிருக்கும் குளிர்ந்த கடல்நீர்ப்பரப்பின் தலைவனே

11.

மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து – புறம் 159/7,8

இடுப்பில் வைத்திருந்த பல சிறு பிள்ளைகள்
பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினையுடையவளாய்

மேல்


தினை

(பெ) கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானிய வகை, foxtail millet

கரும் கால் வரகே இரும் கதிர் தினையே
சிறு கொடி கொள்ளே பொறி கிளர் அவரையொடு – புறம் 335/4,5

கரிய காலையுடைய வரகும், பெரிய கதிரையுடைய தினையும்
சிறிய கொடியாகிய கொள்ளும் பொறிகளையுடைய அவரையும்

மேல்