சீ – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்


சீ
சீத்தை
சீப்பு
சீர்த்தி
சீரை
சீறடி
சீறியாழ்

சீ

(வி) 1. கூர்மையாகச் சீவு, sharpen
2. பெருக்கித்தள்ளு, sweep off
3. அகற்று, விலக்கு, remove, expel
4. செம்மைசெய், correct

1

சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு – கலி 101/8,9

பிறரால் சீறுவதற்கு முடியாத வலிமையுடையோனாகிய இறைவனின் குந்தாலியைப் போல் கொம்புகள் சீவப்பட்ட
ஏறுகளை அவற்றின் தொழுவினுள் (வாடிவாசலுக்கு உள்ளே) ஒரு சேர அடைத்தனர்

2.

ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் – கலி 100/1

கடலில் தோன்றி, இந்த உலகத்து இருளைக் கூட்டித்தள்ளும் ஞாயிற்றைப் போல்,

3.

செது மொழி சீத்த செவி செறு ஆக – கலி 68/3

பொல்லாத சொற்கள் இடையில் புகாமல் விலக்கிய தம் செவிகளே விளைநிலமாக

4.

இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
தேறு நீர் பரப்பின் யாறு சீத்து உய்த்து – புறம் 400/19,20

கருமையான கழியின் வழியாக வந்து இறங்கும் கடலில் செல்லும் ஓடங்களை
தெளிந்த நீர் பரந்த ஆற்றைச் செம்மைசெய்து செலுத்தி,

மேல்


சீத்தை

(பெ) சீச்சீ – இகழ்ச்சிக்குறிப்பு, இழிந்தவன், low, base person

பிறன் பெண்டிர்
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை
செறு தக்கான் மன்ற பெரிது – கலி 84/17-19

யாரோ ஒருத்தனுடைய மனைவிமார்
அளித்ததை இவன் வாங்கிக்கொள்வானாம்; இவனொருத்தன்! சீ! சீ!
கோபிக்கத்தக்கவன் இவன் மிகவும்!


சீப்பு

(பெ) 1. காற்றால் அடித்துக்கொண்டு வரப்படுவது, That which is wafted, as fragrance by wind
2. கோட்டைக் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழவிடும் மரம்.
Wooden brace to a door, driven into the ground in bolting

1

துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம்
கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது
துனியல் நனி நீ நின் சூள் – பரி 8/53-55

பெரிதும் வருந்தாதே! மலர் போன்ற மையுண்ட கண்களையுடையவளே! நீ சொல்வது உண்மை அன்று; இந்த மணம்
பழங்களிலும், மலர்களிலும், வீசுகின்ற காற்றினால் அடித்துக்கொண்டுவந்ததாலும் உண்டானது,
வருந்தாதே மிகவும் நீ! உன் மீது ஆணை!”

2.

ஏணியும் சீப்பும் மாற்றி
மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/5,6

ஏணியையும், தாங்கு கட்டையையும் நீக்கி
போரில் மாட்சிமைப்பட்ட யானைகளின் மணிகள் நீக்கப்பட்டன.

மேல்


சீர்த்தி

(பெ) மிகுந்த புகழ், great reputation

சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா
கால்கோள் என்று ஊக்கி கதுமென நோக்கி – கலி 83/13-15

சாளரங்களின் வழியே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும் மகளிர், மிகுந்த புகழையுடைய
ஆலமரத்தின் கீழ் இருக்கும் இறைவனின் அழகு பொருந்திய மகனின் விழா
தொடங்கிவிட்டதோ என்று மனம் களித்து விரைந்து வெளியே வந்து பார்க்க,

மேல்


சீரை

(பெ) 1. மரவுரி, Bark of a tree, used as clothing
2. தராசுத்தட்டு, scale pan

1

சீரை தைஇய உடுக்கையர் – திரு 126

மரவுரியை உடையாகச் செய்த உடையவரும்

2.

கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ 5
தன் அகம் புக்க குறு நடை புறவின்
தபுதி அஞ்சி சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக – புறம் 43/5-8

கூர்மையான நகங்களையுடைய பருந்தின் தாக்குதலைக் கருதி, அதனைத் தப்பி
தன்னிடத்தில் அடைந்த குறிய நடையையுடைய புறாவின்
அழிவிற்கு அஞ்சி, தராசுத்தட்டினில் அமர்ந்த
குறையாத வள்ளல்தன்மையையுடைய வலியோனின் மரபில் வந்தவனே!

மேல்


சீறடி

(பெ) 1. சிறிய கால், short leg
2. சிறிய பாதம், small foot

1

செல்வ சிறாஅர் சீறடி பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி – குறு 148/1,2

செல்வர்களின் சிறுவர்களின் சிறிய கால்களில் அழகுற விளங்கிய
தவளையின் வாயைப் போன்ற பொன்னால் செய்த சதங்கையின்

2.

வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42

ஓடியிளைத்த நாயின் நாவைப்போன்ற பெருமை தக்கிருக்கும் சிறிய பாதங்களையும்

மேல்


சீறியாழ்

(பெ) சிறிய யாழ், 7 நரம்புகளைக் கொண்டது, small lute with 7 strings

களங்கனி அன்ன கரும் கோட்டு சீறியாழ் – புறம் 127/1

களாப்பழம் போன்ற கரிய கொம்பினையுடைய சிறிய யாழ்

மேல்