சி – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின் மேல்
சொடுக்கவும்


சிகழிகை
சித்தம்
சிதடன்
சிதடி
சிதடு
சிதர்
சிதர்வை
சிதரல்
சிதல்
சிதலை
சிதவலர்
சிதார்
சிந்துவாரம்
சிமயம்
சிமிலி
சிமை
சிமையம்
சிரகம்
சிரல்
சிரறு
சில்பதஉணவு
சில்கு
சில்லை
சிலதர்
சிலம்பி
சிலம்பு
சிலை
சிவணு
சிவல்
சிவலை
சிவிகை
சிவிறி
சிள்வீடு
சிற்றடிசில்
சிற்றில்
சிற்றினம்
சிறகர்
சிறார்
சிறுவித்தம்
சிறுவெண்காக்கை
சிறுகாரோடன்
சிறுகாலை
சிறுகு
சிறுகுடி
சிறுசெங்குரலி
சிறுபுறம்
சிறுமாரோடம்
சிறை
சினை
சினைஇ

சிகழிகை

(பெ) 1. தலைமயிர் முடிப்பு, hair knot
2. தலைமாலை, Arched wreaths of flowers over the head of an idol or a great person

1

பொலம் புனை மகர_வாய் நுங்கிய சிகழிகை
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் – கலி 54/6,7

பொன்னால் செய்யப்பட்ட மகரமீன் வடிவான தலைக்கோலத்தை விழுங்கிய கூந்தல் முடிப்பை
அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை

2.

பால் பிரியா ஐம்_கூந்தல் பல் மயிர் கொய் சுவல்
மேல் விரித்து யாத்த சிகழிகை செ உளை – கலி 96/9

ஐந்து வகையாகப் பிரித்துவிட்ட கூந்தலே பல மயிர்களைக் கொய்துவிட்ட பிடரி மயிராகவும்,
அதற்குமேல் விரித்துக் கட்டிய தலைமாலையே சிவந்த தலையாட்டமாகவும்,

மேல்


சித்தம்

(பெ) மனம். mind

செறி நகை சித்தம் திகைத்து – பரி 20/47

செறிவான பற்களைக் கொண்ட தலைவி, அதைக் கேட்டு மனம் திகைத்து

மேல்


சிதடன்

(பெ) குருடன், blind

துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/7

துயில்கின்ற புலியை இடறிய குருடன் போல

மேல்


சிதடி

(பெ) சிள்வண்டு, சுவர்க்கோழி, cricket

சிதடி கரைய பெரு வறம் கூர்ந்து – பதி 23/2

சிள்வண்டு ஒலிக்கும் அளவுக்குப் பெரிய வறட்சி உண்டாகி

மேல்


சிதடு

(பெ) 1. உள்ளீடற்றது, hollow
2. குருடு, blind

1

சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் – குறு 261/2

உள்ளீடற்ற காயையுடைய எள் பயிருக்கான சிறிதளவு மழைபெய்யும் கார்காலத்து இறுதிநாட்களில்

2.

சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் – புறம் 28/1

சிறப்பில்லாத குருடும், வடிவில்லாத தசைத் திரளும்

மேல்


சிதர்

1. (வி) 1. சிந்து, சிதறு, scatter, strew
2. பிரி, விலக்கு, split
3. கிளறு, scratch
4. நைந்துபோ, be worn out
2. (பெ) 1. மழைத்துளி, rain drop
2. வண்டு, beetle

1.1

சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254

சிந்துகின்ற அரும்புகளையுடைய முருக்கினுடைய மிகவும் வளர்ந்த நெடிய கிளையினில்

1.2

மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/1,2

மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,

1.3.

சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் – நற் 297/7

வண்டுகள் மொய்க்கும் அரும்புகளைக் கொத்தித் தூக்கியெறிந்த, கிளறுகின்ற கால்களையுடைய கோழி

1.4.

சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி – புறம் 381/12

துண்டித்த வார்களால் கட்டப்பட்ட நைந்துபோன வெளிப்பக்கத்தையுடைய தடாரிப்பறை

2.1

சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 52

துவலைத் தூறலுடன் மெல்ல வரும் காற்றிற்கு அசைந்தாற்போல

2.2

மிளகு பெய்து அனைய சுவைய புன் காய்
உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/1,2

மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை,
உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு,

மேல்


சிதர்வை

(பெ) நைந்துபோன துணி, worn out cloth

பாசி அன்ன சிதர்வை நீக்கி – பெரும் 468

பாசியின் வேரை ஒத்த நைந்துபோன கந்தையை அகற்றி,

மேல்


சிதரல்

(பெ) சிதறுதல், splashing

தளை பிணி அவிழா சுரி முக பகன்றை
சிதரல் அம் துவலை தூவலின் மலரும் – அகம் 24/3,4

கட்டுண்ட பிணிப்பு அவிழாத சுரிந்த முகத்தையுடைய பகன்றையின் போதுகள்
சிதறியடிக்கின்ற அழகிய மழைத்துளிகள் வீசுதலால் மலர்கின்ற

மேல்


சிதல்

(பெ) கறையான், termite

காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி – சிறு 133,134

(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கறையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான்:

மேல்


சிதலை

(பெ) சிதல், கறையான், பார்க்க: சிதல்

சிதலை செய்த செம் நிலை புற்றின் – அகம் 112/2

கறையான் எடுத்த சிவந்த நிலையினையுடைய புற்றினது

மேல்


சிதவலர்

(பெ) கிழிந்த ஆடையை அணிந்திருப்போர், சிதவல் = கிழிந்த ஆடை, rag

தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/3

தண்டினைப் பிடித்த கையினரும், நரைத்த தலையில் துகில்முடித்திருப்போரும்

மேல்


சிதார்

(பெ) கிழிந்துபோன துணி, ஆடை, worn out cloth

தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி – புறம் 393/16

மிகவும்பழையதாகிப்போன கிழிந்த ஆடையை முற்றிலும் நீக்கி

மேல்


சிந்துவாரம்

(பெ) கருநொச்சி, five-leaved chaste tree, vitex negundo

வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 89

மேல்


சிமயம்

(பெ) உச்சி, top

தேம் படு சிமய பாங்கர் பம்பிய
குவை இலை முசுண்டை வெண்பூ – அகம் 94/1,2

தேன் அடை பொருந்திய உச்சி மலையின் பக்கத்தில் செறிந்த
குவிந்த இலைகளையுடைய முசுண்டையின் வெண்மையான பூக்கள்

மேல்


சிமிலி

(பெ) உறி, Rope-loop for suspending pots

கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை
பல் புரி சிமிலி நாற்றி – மது 482,483

கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி

மேல்


சிமை

(பெ) உச்சி, top (of a mountain)

வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3

மலையில் ஓங்கியெழும் உயர்ந்த உச்சியில் காட்டுப்பன்றி உறங்கும்

மேல்


சிமையம்

(பெ) சிமை, உச்சி, பார்க்க : சிமை

வான் தோய் சிமையம் தோன்றலானே – அகம் 378/24

வானை அளாவிய உச்சி மலை காணப்பெறுதலின்

மேல்


சிரகம்

(பெ) தண்ணீர்ச்செம்பு, water-pot

உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கி – கலி 51/6,7

உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன்” என்று சொல்லி வந்தவனுக்கு, அன்னை
“பொன்னாலான கலத்தில் ஊற்றிக்கொடுத்து

மேல்


சிரல்

(பெ) மீன்கொத்திப்பறவை, kingfisher

புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181

புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்

மேல்


சிரறு

(வி) 1. பிணக்கம் கொள், feign anger
2. சிதறு, scatter

1

ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார்
சிரறுபு சீற சிவந்த நின் மார்பும் – கலி 88/12,13

ஒளிரும் மலர்கள் வாடிநிற்கும் உன் தலைமாலையும், நல்ல அந்த பரத்தையர்
பிணக்கம் கொண்டு சீற்றத்துடன் அடித்ததால் சிவந்துபோன உன் மார்பும்

2.

வரை_அகம் நண்ணி குறும் பொறை நாடி
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி
கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின்
புள்ளி_இரலை – பதி 74/7-10

பெரிய மலைகளின் சென்று, சிறிய குன்றுகளில் தேடி,
அலைந்துதிரிவோர் பிடித்துக்கொண்டு வந்த பரவலான பளிச்சென்ற புள்ளிகளையுடைய,
கிளைத்துப் பிரிந்த கோலைப் போன்ற பிளவுபட்ட கொம்பினையுடைய,
புள்ளி மானின்

மேல்


சில்பதஉணவு

(பெ) உப்பு, salt

சில்பதஉணவின் கொள்ளை சாற்றி
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 64,65

உப்பினுடைய விலையைக் கூறி,
பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி

மேல்


சில்கு

(வி) சிறிதளவாக ஆகு, குறைவுபடு, become fewer, dwindle

விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்
நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி
வைகுறு_மீனின் தோன்றும் – அகம் 17/19-21

திருவிழாவை மேற்கொண்ட பழமைச் சிறப்புவாய்ந்த முதிய ஊரில்
நெய்யைக் கக்கும் தீச்சுடர்கள் (ஒவ்வொன்றாக அணைவது)போன்று – காற்று மோதுவதால் மிகச்சிலவாகி,
வைகறைப் பொழுதின் வானத்து மீனைப் போன்று தோன்றும் –

மேல்


சில்லை

(பெ) முரட்டுத்தனம், Unruly mischievous disposition, as of a bull;

சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று-மன் – கலி 107/6-9

முரட்டுக்குணத்துடன், செவியில் மச்சத்தைக் கொண்ட காளையை அடக்கியவன் தலையில் இருந்த முல்லை அரும்பாலான
வளைவான தலைமாலையைத் தன் கொம்பினால் எடுத்துக்கொண்டு தலையை ஆட்டிய
பாவம், அந்தக் கரும் புள்ளிகளையுடைய காளை துள்ளிக்குதிக்க, அந்தப் பூ வந்து என்
சிலிர்த்த தலைமுடிக்குள் விழுந்தது;

மேல்


சிலதர்

(பெ) ஏவல்செய்வோர், subordinates

சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 324

ஏவல் செய்வோர் காக்கும் மிகவும் உயரமான பண்டசாலைகளையும்,

மேல்


சிலம்பி

(பெ) சிலந்தி, spider

சிலம்பி வலந்த வறும் சினை வற்றல்
அலங்கல் உலவை – அகம் 199/5,6

சிலந்தி தன் நூலால் பின்னிய இலையற்ற கிளைகளையுடைய காய்ந்துபோன
ஆடுகின்ற மரங்கள்

மேல்


சிலம்பு

1. (வி) 1. ஒலி எழுப்பு, make a tinkling sound
2. எதிரொலி, echo, resound
2. (பெ) 1. தண்டை போல் காலில் அணியும் அணி, anklet
2. மலைச் சரிவில் இருக்கும் ஏறக்குறைய சமதளமான பகுதி, mountain side with an almost plain land

1.1

நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி – புறம் 383/3

நுண்ணிய கோல் கட்டப்பட்ட தடாரிப்பறை ஒலிக்குமாறு கொட்டி

1.2

வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் – பதி 41/13

சுரபுன்னைகள் செறிந்து இருக்கின்ற அகன்ற காடு எதிரொலிக்கப் பிளிறுகின்ற

2.1

சேவடி

சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே – அகம் 117/8,9

சிவந்த அடிகளில் சிலம்புகள் விளங்க நடந்து சென்ற என் மகளுக்கு

2.2

கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில்
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 14,15

கடுக்காய் மரம் நெருங்கி வளர்ந்த இடம் பெரிதான மலைவெளியில்
பரப்பி வைத்ததைப் போன்றிருக்கும் பாறைகளின் பக்கத்தே,

இந்த மலைவெளியில் ஊர்கள் இருக்கும்.

நளி மலை சிலம்பில் நன் நகர் வாழ்த்தி – திரு 238

செறிந்த மலைப்பக்கத்திலுள்ள நல்ல ஊர்களை வாழ்த்தி,

மயில்கள் களித்து ஆடிக்கொண்டிருக்கும்.

மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்
பீலி மஞ்ஞையின் இயலி – பெரும் 330,331

பெருமையையுடைய மலையின் வெளிகளில் மனவெழுச்சி மிக்கு ஆரவாரிக்கும்
தோகையையுடைய மயில் போல் உலாவி

யானைகள் படுத்துக்கிடக்கும்.

காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு – பெரும் 372

காந்தளையுடைய அழகிய பக்கமலையில் யானை கிடந்தாற் போன்று

ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் நீர் தேங்கியிருப்பதால் வாழைகள் செழித்து வளரும்.

படு நீர் சிலம்பில் கலித்த வாழை – நற் 188/1

குறவர்கள் மலைநெல்லைப் பயிரிடுவர்.

மை படு சிலம்பின் ஐவனம் வித்தி – குறு 371/2

மேகங்கள் படியும் மலைவெளியில் மலைநெல்லை விதைத்து

மேற்கண்ட காரணங்களால், சிலம்பு என்பது ஒரு மலைச்சரிவில் அமைந்த
ஏறக்குறைய ஒரு சமவெளிப் பகுதி என்பது பெறப்படும்.

இருப்பினும், இது மலைப்பகுதியாதலால், சிகரங்கள் வானை முட்டும்படி இருக்கும்.
செங்குத்தான பகுதிகளில் அருவிகள் ஆர்ப்பரித்துக்கொட்டும்.

அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலை – நற் 365/7,8

அருவியில் ஆரவாரத்துடன் நீர் விழும் நீர்வளம் மிக்க மலைச் சரிவையுடைய
வானத்தை எட்டும் பெரிய மலை

மேல்


சிலை

1. – (வி)

1. முழங்கு, roar

2. – (பெ)

1. வில், bow
2. முழக்கம், big sound, roar
3. ஒரு மரம், இந்த மரத்திலிருந்து வில் செய்யப்படும், a tree from which a bow is made
4. இந்திரவில், வானவில், rainbow

1.1

கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு
எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின் – பெரும் 259-262

கூட்டமான யானைகள் கலங்கிக் கதறினாற் போன்று,
ஆலை ஆரவாரிக்கும் மாறாத ஓசையுடைய
கருப்பஞ்சாற்றைக் (கட்டியாகக்)காய்ச்சும் புகை சூழ்ந்த கொட்டில்தோறும்,
கரும்பினது இனிய சாற்றை விருப்பமுடையீராய் பருகுவீர்

2.1

சிலை உடை கையர் கவலை காப்ப – மது 312

வில்லையுடைய கையை உடையராய்ப் பல வழிகள் கூடுமிடத்தே காவல்காக்க

2.2

கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் – பதி 68/3

மிகுந்த முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது

2.3.

அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் – கலி 15/1

சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின்

2.4.

சிலை தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் – புறம் 61/14

இந்திரவில் போன்ற மாலையையுடைய மார்புடன் மாறுபடுவோர் உளர் எனின்

மேல்


சிவணு

(வி) 1. பொருந்து, go with
2. கல, mix

1

மணி புரை செ வாய் மார்பு_அகம் சிவண
புல்லி – அகம் 66/14,15

(புதல்வனின்) பவளமணியினை ஒத்த சிவந்த வாய் தனது மார்பகத்தே பொருந்த
எடுத்துத் தழுவி

2.

துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/11

துடுப்பினால் நன்கு கலக்கப்பட்ட களிப்பைத் தன்பால்கொண்ட வெள்ளிய சோற்றை

மேல்


சிவல்

(பெ) ஒரு பறவை, கௌதாரி, Indian partridge, Ortygorius ponticerianus

உறை கிணற்று புற சேரி
மேழக தகரொடு சிவல் விளையாட – பட் 76,77

உறைக் கிணறுகளையும் உடைய (ஊருக்குப்)புறம்பேயுள்ள சேரிகளில்
செம்மறி ஆட்டுக்கிடாயோடே கௌதாரிப் பறவை விளையாட

மேல்


சிவலை

(பெ) செந்நிறமான விலங்கு – காளை, Reddish animal, as a bull;

நெற்றி சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் – கலி 104/65

நெற்றியில் சிவந்த சுழியினைப் பெற்ற காளையின் ஆற்றலை அழித்தவனின் மார்பினை

மேல்


சிவிகை

(பெ) பல்லக்கு, Palanquin, covered litter;

சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17

வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டுும்
மேல்


சிவிறி

(பெ) நீரைப் பீய்ச்சியடிக்கும் குழல், a kind of syringe

நெய்ம் மாண் சிவிறியர் நீர் மண கோட்டினர் – பரி 6/34

நெய்பூசிச் சிறப்படைந்த துருத்தியை உடையோரும், உள்ளே மணக்கும் நீர் கொண்ட கொம்பினையுடையோரும்

மேல்


சிள்வீடு

(பெ) சுவர்க்கோழி, சிள்வண்டு, பார்க்க : சிதடி

வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் – அகம் 303/17,18

காய்ந்துபோன மரத்தினைப் பொருந்திய சுவர்க்கோழி எனப்படும் வண்டுகள், உப்பு வணிகரின்
கூட்டமான எருதுகளின் மணி ஒலி போல ஒலிக்கும் சுரம்

மேல்


சிற்றடிசில்

(பெ) விளையாட்டுச் சோறு, faked boiled rice used during play

மென் பாவையர்
செய்த பூ சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்
இடுவார் மறுப்பார் – பரி 10/104-106

மென்மை வாய்ந்த மகளிர்
தாம் செய்த அழகிய சிறுசோற்றைக் கைகளில் இடுவதுபோன்று வைக்க அதனை உண்பது போன்று ஏற்பாருக்கு
இடுவார் சிலர்; இட மறுப்பார் சிலர்;

மேல்


சிற்றில்

(பெ) 1. சிறிய வீடு, small house
2. சிறுமியர் கட்டி விளையாடும் மணல்வீடு, Toy house of sand built by little girls in play

1

சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ என்று வினவுதி – புறம் 86/1,2

சிறிய இல்லின்கண் நல்ல தூணைப் பற்றிக்கொண்டு, உன் மகன்
எவ்விடத்து உள்ளானோ என்று கேட்கிறாய்

2.

கானல்
தொடலை ஆயமொடு கடலுடன் ஆடியும்
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/5-7

கடற்கரைச் சோலையில்
மாலை போன்ற விளையாட்டுத் தோழியருடன் கடலில் சேர்ந்து விளையாடியும்,
சிறுவீடு கட்டியும், சிறுசோற்றை அட்டுக் குவித்தும்

மேல்


சிற்றினம்

(பெ) நல்லறிவில்லாத தாழ்ந்தோர் சேர்க்கை, Company of low people;

செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் – சிறு 207

மேல்


சிறகர்

(பெ) சிறகு, wing

கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ – குறு 46/2

கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி

மேல்


சிறார்

(பெ) சிறுவர், children

புலிப்பல்தாலி புன் தலை சிறாஅர் – புறம் 374/9

புலிப்பல் கோத்த சங்கிலியை(க் கழுத்தில்) அணிந்த புல்லிய தலையை உடைய சிறுவர்கள்

மேல்


சிறுகாரோடன்

(பெ) பார்க்க: காரோடன்

சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் – அகம் 356/9,10

சிறிய பணை செய்வான் அரக்கோடு சேர்த்து இயற்றிய
சாணைக் கல்லினைப் போல

மேல்


சிறுகாலை

(பெ) அதிகாலை, dawn

சிறுகாலை இல் கடை வந்து – கலி 97/3

விடியற்காலையில் எம் வாயிலில் வந்து

மேல்


சிறுகு

(வி) சிறிதாக ஆகு, சுருங்கு, become small, shrink

நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி
கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு – கலி 108/3,4

நெற்றி, அடி, இடை ஆகிய மூன்றும் சிறுத்து,
தனக்கு வேலை இல்லை என்ற கவலையால் காமனும் காமக்கணை வீசுவதை விட்டுவிட்ட வனப்பினோடு,

மேல்


சிறுகுடி

(பெ) 1. குறிஞ்சிநிலத்து ஊர், Village in a hilly tract
2. சிற்றூர், a small village

1

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர்
நீடு அமை விளைந்த தேம் கள் தேறல்
குன்றக சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து
தொண்டக சிறுபறை குரவை அயர – திரு 194-197

கொடிய தொழிலையுடைய வலிய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்
நெடிய மூங்கிலில் இருந்து முற்றின தேனால் செய்த கள்தெளிவை
மலையிடத்தேயுள்ள தம் ஊரில் இருக்கின்ற தம் சுற்றத்தோடு உண்டு மகிழ்ந்து
தொண்டகமாகிய சிறுபறை(யின் தாளத்திற்கேற்ப)க் குரவைக்கூத்தைப் பாட,

2.

கானல் அம் சிறுகுடி கடல் மேம் பரதவர் – நற் 4/1

கடற்கரைச் சோலையிடத்தே அமைந்த அழகான சிறிய ஊரில் வாழும் கடல்மேற்செல்லும் பரதவர்கள்

மேல்


சிறுசெங்குரலி

(பெ) ஒரு பூ, கருந்தாமக்கொடி, A mountain creeper, water chest nut, trapa bispinosa roxb

சேடல் செம்மல் சிறுசெங்குரலி – குறி 82

மேல்


சிறுபுறம்

(பெ) முதுகு, back

துளி தலை தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி குரல் பிழியூஉ – அகம் 8/15-16

மழைத்துளிகளைக் கொண்ட நீலமணி போன்ற அழகிய கூந்தலைப்
பின்புறம் மறையப் பின்னே கோதிவிட்டு. கூந்தலைக் கொத்தாகப் பிழிந்து

மேல்


சிறுமாரோடம்

(பெ) செங்கருங்காலி, Red catechu, Acaria catechu-sundra;

குல்லை பிடவம் சிறுமாரோடம் – குறி 78

மேல்


சிறுவித்தம்

(பெ) சிறுதாயம், A cast with small value in dice play;

சிறுவித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ – கலி 136/16

பெரிய எண் பெறவேண்டிய இடத்தில் சிறிய தாயம் இட்டவனைப் போல் மிகுந்த துயரில் வருந்தமாட்டாளோ?

மேல்


சிறுவெண்காக்கை

(பெ) ஒரு கடற்கரைப் பறவை, ஆலா, tern

பெரும் கடற்கரையது சிறுவெண்காக்கை
இரும் கழி துவலை ஒலியின் துஞ்சும் – ஐங் 163/1,2

பெரிய கடற்கரையில் உள்ள சிறிய வெண்ணிற நீர்க் காகம்
கரிய கழியில் அலைகள் நீர்திவலைகளைத் தெறிக்கும் ஒலியைக் கேட்டுத் தூங்கும்

மேல்


சிறை

1. (வி) சிறைப்பட்டிரு, மூடியிரு, confine, restrain
2. (பெ) 1. சிறகு, wing
2. வரப்பு, boundary
3. பிணிப்பு, holding
4. அடக்குதல், restraint
5. பக்கம், ஓரம், side, edge
6. அணை, தடுப்பு, dam, block
7. இரண்டு பக்கங்களிலும் வீடுகளைக் கொண்ட தெருவின் ஒரு பக்கம், one side of a street
8. சிறைச்சலை, prison
9 காவல், guard, watch

1

சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ – நற் 79/1

மூடியிருக்கின்ற, ஈங்கை மரத்தின் தேன்துளி மிகவும் திரண்டுள்ள அன்றைய மலர்கள்

2.1

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76

அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும்

2.2.

சாலி நெல்லின் சிறை கொள் வேலி – பொரு 246

செந்நெல் விளைந்துநின்ற, வரம்பு கட்டின ஒரு வேலி அளவுள்ள நிலம்,

2.3.

அள்ளல்
கழி சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி – நற் 63/8,9

சேறு நிரம்பிய
கழியின் வழியாக நிமிர்ந்து செல்லும் இறுகிய பிணிப்பை உடைய குதிரைகளை

2.4.

நிறைய பெய்த அம்பி காழோர்
சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் – நற் 74/3,4

நிறைய ஏற்றப்பட்ட தோணியை, தாற்றுக்கோல் வைத்திருப்பவர்கள்
அடக்குதற்கு அரிய களிற்றினை பிணித்துச் செலுத்துவதைப் போல, பரதவர்கள் செலுத்தும்

2.5.

யாரும் இல் ஒரு சிறை இருந்து
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே – நற் 193/8,9

யாருமில்லாமல் ஒரு ஓரத்தில் கிடந்து
பெரிய துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பவளை வருத்தவேண்டாம்.

2.6.

கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும்
சிறை அடு கடும் புனல் அன்ன – நற் 369/9,10

கங்கை எனும் பெரிய ஆற்றின் கரையைக் கடந்து இறங்கிவரும்
அணையை உடைத்துச் செல்லும் விரைவான வெள்ளப்பெருக்கைப் போல

2.7.

மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/5

ஊர்ப்பொதுவிடத்துக்குப் போய் தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற

2.8.

பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் – அகம் 122/5

பிணித்தலைக் கொண்ட அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினும்

2.9

வீங்கு சிறை வியல் அருப்பம் – புறம் 17/28

மிகுந்த காவலையுடைய அகன்ற அரணினையும்

மேல்


சினவு

1. (வி) கொதித்தெழு, rise in fury
2. (பெ) கோபித்தல், getting angry

1

இருளும் உண்டோ ஞாயிறு சினவின் – புறம் 90/5

இருளும் தங்கியிருக்குமோ, ஞாயிறு சினந்தெழுந்தால்

2.

சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட – அகம் 388/14

கோபித்தலைக் கொண்ட நாய் கறுவித் தன் பக்கலிலே தொடர

மேல்


சினை

(பெ) 1. கிளை, branch
2. கருக்கொண்ட நிலை, சூல், pregnancy in animals
3. சிலந்தி வாயினால் செய்யும் வலை, cobweb
4. முட்டை, egg

1

நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 23

செறிந்த கிளைகளையுடைய வேங்கை மரத்தின் அன்றைய மலர்களை விரும்பி

2.

சினை சுறவின் கோடு நட்டு – பட் 86

சினைப்பட்ட சுறா மீனின் கொம்பை நட்டு,

3.

கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கான புறவின் சேவல் வாய் நூல்
சிலம்பி அம் சினை வெரூஉம் – நற் 189/7-9

கொலைத்தொழிலில் வல்ல வேட்டுவன் விரித்த வலையினின்றும் தப்பிப் பறந்துபோன
காட்டுப்புறாவின் சேவல், வாயில் நூலைக்கொண்டு பின்னும்
சிலந்தியின் அழகிய வலையைக் கண்டு வெருண்டோடும்

4.

உகாஅத்து
இறவு சினை அன்ன நளி கனி உதிர – குறு 274/1,2

உகாய் மரத்தின்
இறால்மீனின் முட்டைகளைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படியாக

மேல்


சினைஇ

(வி.எ) சினந்து என்பதன் திரிபு, being angry

அரசு பகை தணிய முரசு பட சினைஇ
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/1,2

அரசனின் பகையுணர்வு தணியும்படியும், முரசின் ஒலிகள் ஓயும்படியும், சினங்கொண்டு
மிகுந்த முழக்கத்தோடு மேகங்கள் கார்காலத்தைத் தொடங்கிவிட்டன;

சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ – குறி 229,230

சினங்கொண்ட மன்னன் படையெடுத்துச் செல்லும் போரைப் போன்று
விரைந்துவரும் மாலை நெருங்கிவருதலைக் கண்டு

மேல்