எ – முதல் சொற்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எஃகம்
எஃகு
எக்கர்
எக்கி
எக்கு
எகினம்
எச்சம்
எச்சில்
எஞ்சு
எடுத்தேறு
எடுப்பு
எண்கு
எண்மை
எதிர்குதிர்
எதிர்ச்சி
எந்திரம்
எந்தை
எமர்
எமியம்
எமியேன்
எய்
எயில்
எயிற்றி
எயிறு
எயினர்
எயினன்
எருக்கம்
எருக்கு
எருத்தம்
எருத்து
எருந்து
எருவை
எல்
எல்லரி
எல்லி
எல்லு
எல்லை
எலுவல்
எவ்வம்
எவ்வி
எவ்வை
எழிலி
எழினி
எழினியாதன்
எழு
எள்
எள்ளு
எற்கு
எற்றம்
எற்று
எறி
எறும்பி
எறுழ்
எறுழம்
என்பு
என்றூழ்

எஃகம்

(பெ) 1. வேல், lance
2. வாள், sword

1.

ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு
காழ் எஃகம் பிடித்து எறிந்து – பதி 90/36,37

அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையும் உடைய பாய்ந்து செல்லும் குதிரையின் மேலேறி
காம்பையுடைய வேலினைப் பிடித்துப் பகைவர் மீது எறிந்து

2.

திண் பிணி எஃகம் புலியுறை கழிப்ப – பதி 19/4

திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட வாளினை அதன் புலித்தோல் உறையிலிருந்து உருவியவாறு

மேல்

எஃகு

(பெ) 1. கூர்மை, sharpness
2. அரிவாள், வாள், garden knife, sickle, swor
3. வேல்முனை, the front part of a lance
4. வேல், lance
5. இரும்பினாலான எதேனும் ஒரு கருவி, any instrumnet made of iron

1.

சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின்
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 299,300

நெடிய முழையாகிய இருப்பிடத்தில் வசிக்கும் கூர்மை பொருந்திய முள்ளுடைய
முள்ளம்பன்றி தாக்கியதால் தவறிவிழுந்த குறவருடைய அழுகையும்

2.

எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை – பதி 12/16

அரிவாளால் பிளந்து அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும்

3

புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர – பதி 50/9

உயர்ந்த தோலாகிய கேடகங்களுக்கு மேல்பக்கத்தில் வேல்முனைகள் மீன்களாய் மின்னியொளிர,

4.

ஒளிறு இலைய எஃகு ஏந்தி – புறம் 26/5

மின்னுகின்ற இலைப்பகுதியையுடைய வேலினை ஏந்தி

5.

எஃகு உறு பஞ்சி துய்ப்பட்டு அன்ன – அகம் 217/2

இரும்பினாலான கருவியால் கடையப்பட்ட பஞ்சு மென்மையுற்றாற்போன்று

மேல்

எக்கர்

(பெ) 1. இடுமணல், heaped up sand as by waves
2. மணற்குன்று, sand hill

1.

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம்_கொள – நற் 15/1,2

முழங்குகின்ற கடலலைகள் கொழித்துக் கொணர்ந்த பெரிதான மணல்மேடு
காற்றால் ஆடும் துகிலின் வளைவுகள் போலப் பெருமளவில் உருவாகும்படி

2.

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்தக்கால் – கலி 132/16

அடும்பங்கொடிகள் படர்ந்துள்ள அழகிய மணல்மேட்டில் இவளுடன் விளையாடி நீ ஒன்றாக இருந்தபோது

மேல்

எக்கி

(பெ) பீச்சாங்குழல், squirter

நெய்த்தோர் நிற அரக்கின் நீர் எக்கி யாவையும் – பரி 10/12

குருதிநிற அரக்கினைப்போன்ற நீரைப் பீய்ச்சியடிக்கும் குழல் யாவையும்,

மேல்

எக்கு

(வி) 1. எம்பு, உயர்த்து, stretch up
2. குழலாம் பீய்ச்சு, squirt

1.

எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்க – பரி 16/45

காற்றால் எடுக்கப்பட்ட காட்டுமூங்கில் எம்பி நிமிர்ந்து உயர்ந்து தாக்கியதால்

2.

துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/57

அறுக்கப்பட்ட சொரசொரப்பான கொம்பில் நீரைப் பாய்ச்சி வீசுவோரும்,

மேல்

எகினம்

(பெ) எகின் : அன்னம், swan, கவரிமா, yak, நாய், dog
இதன் பொருள் ஆய்வுக்குட்பட்டது.
இதன் தன்மைகள்:

1.

நீண்ட மயிரினைக் கொண்டது. வெண்மையான நிறத்தை உடையது.

நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91

2.

ஆட்டுக்கிடாயுடன் சுழன்று திரியும்

ஏழக தகரோடு எகினம் கொட்கும் – பெரும் 326

3.

கூர்மையான பற்களைக் கொண்டது

கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் – நற் 132/5

4.

வெண்மையான மயிரினைக் கொண்டது. தம் துணையுடன் விளையாடி மகிழும்.

தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் – அகம் 34/12,13

மேல்

எச்சம்

(பெ) 1. மறுபிறவி, next birth
2. பிறப்பிலே வரும் குறை,
Deformity at birth of whcih eight types are mentioned
3. சந்ததி, மகப்பேறு, posterity, offspring

1.

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/6,7

தனது வறுமைக் காலத்தில் தனக்கு உதவியோருக்கு, அவரது வறுமைக் காலத்தில் அவருக்கு உதவாதவன், அவன்
மறுபிறவி எடுத்தாலும் வந்து துன்புறுத்தாது போகாது.
– மா.இரா. உரை.
– செய்நன்றிக்கேடாகிய அது தன் உடம்பினை ஒழித்து உயிர்போனவிடத்தேயாயினும் நுகர்வியாமற் போகாது
– நச். உரை

2.

சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/1-4

மக்கட்பிறப்பில் சிறப்பில்லாத குருடும், வடிவில்லாத தசைப்பிண்டமும்
கூனும், குள்ளமும், ஊமையும், செவிடும்
விலங்குத்தோற்றமும், அறிவு மயங்கியிருப்பதும் உளப்பட உலகத்து வாழ்வார்க்கு
எட்டுவகைப்பட்ட பெரிய எச்சம் என்று சொல்லப்பட்ட இவை எல்லாம்
– எச்சம் – மக்கட்பிறப்புக்குரிய இலக்கணம் எஞ்ச உள்ளன. – ஔ.சு.து.உரை விளக்கம்

3.

வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/25,26

கொடையும், மாட்சிமையும், செல்வமும், மகப்பேறும்,
தெய்வ உணர்வும் ஆகிய யாவையும் தவப்பயன் பெறுவோர்க்கே என்று அறிவுறுத்தி

மேல்

எச்சில்

(பெ) 1. பலியுணவில் மீதம்,
Leavings of sacrificial oblation made of pounded rice and offered in potsherds.
2. உமிழ்நீர்பட்டு அசுத்தமானது, Anything defiled by contact with the mouth

1.

அவர் அவி
உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில்
வட_வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய
அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் – பரி 5/40-45

அந்த முனிவர்கள் வேள்வியுணவாக,
ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து; அந்த வேள்வி அவியைக்
குண்டங்களில் எழுந்த முத்தீயும் உண்ணுவதால் சேர்ந்த பெருமைக்குரிய எச்சத்தை,
வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள்
கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;

2.

பச்சூன் தின்று பை நிணம் பெருத்த
எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி
புலம் புக்கனனே புல் அணல் காளை – புறம் 258/4-6

செவ்வித் தசையைத் தின்று, செவ்வி நிணம் மிக்க
எச்சிலாகிய ஈரமுடைய கையை வில்லினது புறத்தே திமிர்ந்து
வேற்றுநாட்டின்கண் புக்கான் புல்லிய தாடியையுடைய காளை

மேல்

எஞ்சு

(வி) 1. மீதியாக இரு, மிஞ்சு, remain, be left over
2. கெடு, be marred, be impaired
3. நீங்கு, பிரி, leave, part with
4. குறை, குன்று, diminish, be deficient
5. வரம்புகட, transgress, go beyond, overstep
6. இற, die, ஒழி, முடிவுறு, cease
7. விலகியிரு, தவிர், refrain from doing something
8. தனக்குப் பின் உரிமையாக வை, leave behind, as to one’s heir
9. நிலை, நீடித்திரு, abide, survive

1.

விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது என்று – குறி 206,207

விருந்தினர் உண்டு மீந்துபோன உணவை, உயர்ந்த குணநலமுடைய பெண்ணே,
உன்னோடு (நான்)உண்பதும் உயர்ந்ததேயாம்”, என்று கூறி,

2.

உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் – கலி 60/6

உள்ளே இருக்கும் காமநோய் மிகும்படி அவரின் உயிர் போகும் துயரைச் செய்தல்

எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/6

பீலி இழந்து அழகு அழிந்த மயிலைப் போல் நடுங்கி,
1,

3.

மாலையும் அலரும் நோனாது எம்_வயின்
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி
உள்ளாது அமைந்தோர் உள்ளும்
உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/22-25

இந்த மாலைப்பொழுதையும், ஊராரின் பழிச்சொற்களையும் பொறுக்கமாட்டாமல் எம்மிடம்
நெஞ்சம் இன்னமும் எஞ்சியிருக்கிறதே! நம்மைப் பிரிந்து
நம்மை நினையாமல் பிரிந்திருப்போரை நினைத்துக்கொண்டிருக்கும்
உள்ளே உறுதியில்லாத உள்ளம் உள்ளுக்குள் உவந்துகொண்டு.
– நச். உரை; மா.இரா உரை
– எஞ்சி – ruined, leaving – Vaidehi Herbert

4.

தம் துணை
துறையின் எஞ்சாமை நிறைய கற்று – பதி 90/3,4

தமக்குரிய அளவாக வகுக்கப்பட்ட
கல்வித்துறையின்கண் கற்பன குறைவுபடாது நிரம்பக் கற்று

5.

இரக்கு வாரேன் எஞ்சி கூறேன் – பதி 61/11

உன்னிடன் இரந்து வரவில்லை; உன்னை மிகைபடக் கூறமாட்டேன்

6.

வெம் சின யானை வேந்தனும் இ களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என – புறம் 307/11,12

வெவ்விய சினமுள்ள யானையையுடைய வேந்தனும் இக்களத்தில்
இறத்தலினும் சிறந்த செயல் ஒன்று வேறு யாதும் இல்லை என்று கருதி
– ஔ.சு.து.உரை

7.

அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி – குறு 211/1-3

அழகிய, சிலவான முடிந்துவிட்ட கூந்தலையுடைய உனது ஆய்ந்தணிந்த வளைகள் நெகிழும்படி
வருந்தியும் நமக்கு அருளைச் செய்யாமல் பிரிந்துசென்றவரின் பொருட்டாக அஞ்சுதலைத்
தவிர்ந்தோம், வாழ்க தோழியே!,
எஞ்சினம் – தவிர்ந்தேம் – பொ.வே.சோ.உரை விளக்கம்
8,9

நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்
நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே
அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே – புறம் 213/14-18

நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்த
சூழ்ச்சியில்லாத அறிவுடைய நின் புதல்வர் தோற்பின்
நினது பெருன்ம் செல்வத்தை அவர்க்கொழிய யாருக்கு விட்டுச்செல்வாய்
போரை விரும்பிஅய செல்வனே! நீ அவர்க்குத் தோற்பின்
நின்னை இகழும் பகைவர் உவப்ப பழியை உலகத்தே நிலைநிறுத்துவை

மேல்

எடுத்தேறு

(பெ) 1. முன்னேறிப் படையினை எறிதல், advance and attack
2. எடுத்தெறிகை, beating as of a drum

1,2

எடுத்தேறு ஏய கடிப்பு புடை வியன்_கண் – பதி 41/23

எடுத்து எறிதலைத் தெரிவிக்கும் குறுந்தடியால் அடிக்கப்படுகின்ற அகன்ற முகப்பையுடைய முரசு,
– எடுத்தேறு – முன்னேறிப் படையினை எறிதல் – – ஔ.சு.து.உரைவிளக்கம்

எடுத்தேறு ஏய கடி புடை அதிரும் – பதி 84/1

போர்க்களத்தில் வீரரை முன்னேறிச் செல்ல ஏவுகின்ற வகையில் குறுந்தடியால் புடைக்கப்பட்டு அதிர்கின்ற
– வீரர்க்கு முரசு முழக்கித் தெரிவிக்கப்படுவது பற்றி, ‘எடுத்தேறு ஏய முரசம்’ என்றும்—
– ஔ.சு.து.விளக்கம்

மேல்

எடுப்பு

(வி) 1. தூக்கத்திலிருந்து எழுப்பு, awake
2. எழுப்பு, கிளப்பு, raise, rouse
3. (காற்று) சினந்து வீசு, (wind) blow ferociously
4. போக்கு, விரட்டு. dispel, drive away

1.

எருது எறி களமர்
நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை
மென் தினை நெடும் போர் புரி-மார்
துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/9-12

எருதுகளை ஓட்டும் உழவர்
போரடிக்கும் களத்தைப் பார்த்தாற்போன்ற அகன்ற இடத்தையுடைய பாறையில்
மென்மையான தினைக்கதிர்களை நெடுநேரம் போரடிக்கும்பொருட்டு
தூங்கியிருக்கும் களிறுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தம் பெரிய மலை நாட்டுக்கு

2.

கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை – குறு 398/3-5

கயல்மீனை ஒத்த மையுண்ட கண்களையுடைய பொன் குழைகளையுடைய மகளிர்
தம் கையினால் நெய்யை வார்த்து ஏற்றிய
விளக்குகள் துயரத்தைக் கிளப்புவதற்குக் காரணமான துன்பத்தையுடைய மாலைப்பொழுதில்

3.

கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ
நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 378,379

கடிய காற்று சினந்து வீசுகையினால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,
நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல
– வி. நாகராஜன் உரை – (NCBH)

4.

அமர் கண் ஆமான் அம் செவி குழவி
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து – குறு 322/1,2

அமர்த்த கண்களையுடைய ஆமானின் அழகிய செவிகளையுடைய குட்டி
குறவர்கள் விரட்டியதால் வெருண்டு, தன் கூட்டத்தைவிட்டு ஓடி

மேல்

எண்கு

(பெ) கரடி, bear

இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை – நற் 125/1

இரையைத் தேடித்திரியும் கரடியின் பிளந்த வாயையுடைய ஆணானது

மேல்

எண்மை

(பெ) எளிமை, Easiness, as of acquisition, of access

கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின்
எண்மை செய்தனை ஆகுவை நண்ணி – அகம் 288/8

கனிகள் முதிர்ந்த இந்தப் பக்கமலையில் நாங்கள் தனித்திருப்பதைக் காண்பதனால்
எங்களை எளிதாக அடைதற்குரியவர்கள் என்று நினைத்துவிட்டாய்

தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல்
இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் – புறம் 43/18,19

தமக்குப் பிழைசெய்தவரைப் பொறுத்துப்போகும் தலைமைப்பண்பு
இந்தக் குடியில் பிறந்தவர்க்கு எளிதாக வருவதாகும்

மேல்

எதிர்குதிர்

(பெ) எதிர் என்பதன் இரட்டைக்கிளவி, மறுதலை, obverse

முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை – பரி 8/17-21

முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;
அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;
அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் எதிர்க்குரலிட்டு அதிர முழங்கும்;
இந்த ஒலிகளுக்கு எதிரும் குதிருமாய் ஆனது திருப்பரங்குன்றத்து மலைக்குகைகளில் எழுகின்ற எதிரொலி.;
– எதிர்குதிர் – மறுதலை – பொ.வே.சோ உரை விளக்கம்.

மேல்

எதிர்ச்சி

(பெ) எதிர்ப்படல், appearing before, coming in front, meeting, encountering

ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர்
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி – நற் 30/4-6

நீ எழுந்தருளும் தெருவில் உன் எதிர்ப்பாடு நோக்கி, உனது
மார்பின் மாலையைப் பற்றிக்கொண்ட மாட்சிமைகொண்ட இழையணிந்த பெண்டிர்
கவலையினால் வருத்தப்பட்டதால் வெப்பமாக விழும் அரித்தோடும் கண்ணீருடன்
– எதிர்ச்சி – நேர்படுதல் – ஔவை.சு.து.உரை, விளக்கம்

மேல்

எந்திரம்

(பெ) 1. மதில்பொறி, Engine or other machinerry of war mounted over the battlements of a fort;
2. கரும்பு ஆலை, sugarcane press

1.

எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/7

எந்திரப் பொறிகளும் எய்யப்படும் அம்பும் அமைக்கப்பட்ட கோட்டை வாயில்

2.

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் – ஐங் 55/1

கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும்

மேல்

எந்தை

(பெ) 1. என் தந்தை, my father
2. என் தலைவன், my master, my lord

1.

எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/2

என் தந்தையும் உன் தந்தையும் எந்த வழியில் உறவினர்?

2.

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5

எனக்குப் பற்றுக்கோடாக இருக்கும் என் காதலனாகிய தலைவன் எங்கு உள்ளானோ?

இடுக்கண் இரியல் போக உடைய
கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் – புறம் 388/6.7

பசித்துன்பம் பறந்தோடிப்போக தான் உடைய பொருள்களைக்
கொடுத்தான், எங்கள் தலைவன், கொடையால் மேம்பட்ட தோன்றல்.

மேல்

எமர்

(பெ) எம்மவர், Our relatives; our friends; those like us;

கோள் சுறா குறித்த முன்பொடு
வேட்டம் வாயாது எமர் வாரலரே – நற் 215/11,12

கொலைவல்ல சுறாவை விரட்டிக்கொண்டு செல்லும் வலிமையுடன்,
தாம் மேற்கொண்ட வேட்டை வாய்க்காமல் எம் சுற்றத்தார் திரும்ப வரமாட்டார்

மேல்

எமியம்

(பெ) தமியேம், தனிமையுடையோம், We who are in solitude

வாவல்
பழு மரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்கு துறந்தோர்
தமியர் ஆக இனியர்-கொல்லோ – குறு 172/1-4

வௌவால்
பழுத்த மரத்தைத் தேடித்திரியும் துன்பந்தரும் மாலையில்
நாம் தமியேமாய் இருக்க இங்கு நம்மைவிட்டுச் சென்ற தலைவர்
தாம் அங்கு தனியராய் இருப்பது அவருக்கு இனிமையானதோ?
எமியம் என்றது தோழியையும் நினைந்து – உ.வே.சா விளக்கம்

யாமே எமியம் ஆக நீயே
ஒழிய சூழ்ந்தனை ஆயின் – அகம் 33/12,13

(இப்போது இங்கே)நான் தனியனாய் இருக்க, (என் நெஞ்சே!) நீ மட்டும்
(என்னை)விட்டுப் போக எண்ணுகிறாய் என்றால்,

மேல்

எமியேம்

(பெ) தமியேம், தனித்த நாங்கள், we (who took the decision) ourselves

எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை – குறி 32

நும்மையன்றித் தமியேமாய் யாங்களே துணிந்த உயிர்க்குப் பாதுகாவலாயமைந்த செய்தற்கரிய இந்தச் செயல்

மேல்

எமியேன்

(பெ) தனியேன், I, who dwell in solitude

பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் – அகம் 252/7,8

நீர் ஒழுகும் கண்ணினேண் ஆகிப் பிரிதல் துன்பம் வருத்த
தனியனாய் இருத்தலை யானும் ஆற்றுகிலேன்

மேல்

எய்

1. (வி) 1. (அம்பு) செலுத்து, (கவண்) வீசு, எறி, shoot (an arrow), shoot a stone(from a sling)
2. குன்று, குறைவுறு, be deficient
3. இளை, flag (as from want of food)
4. அறி, know, understand
– 2. (பெ) முள்ளம்பன்றி, Porcupine

1.1

வைகல்-தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து – நற் 46/1,2

ஒவ்வொரு நாளும் இன்பமும் இளமையும்
செலுத்திய அம்பின் நிழலைப் போலக் கழிகின்ற இந்த உலகத்தில்

1.2

கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் – குறு 112/1

ஊராரின் பழிமொழிகளுக்கு அஞ்சினால் விருப்பம் குன்றும்

எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 8

குறையாத மயக்கத்தையுடையளாய் நீயும் வருந்துகிறாய்;

1.3

இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம்
உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/12,13

இடைநில்லாமல் இளைத்துக்கொண்டுபோகும் இடையையுடைய உன் உடல்கட்டமைப்பை அறிந்தும், அதற்கு அழகூட்டி,
தம்முடைய
சொத்துச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?

எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி – பொரு 68

இளைத்த உடம்பையுடையேன் இளைப்பில்லாதவனாய் ஆகி,

1.4

எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப – பொரு 133

(முன்பு தன் வலிமை)அறியாத பகைவர் (பின்பு தன் வலிமை அறிந்து) ஏவின தொழிலைச் செய்ய,
எய்யா – அறியாத – எய்யாமையே அறியாமையே – தொல்/உரி/44 – பொ.வே.சோ விளக்கம்

2.

ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88

ஈந்தினுடைய இலையால் வேயப்பட்ட முள்ளம்பன்றியின் முதுகு போலும் புறத்தினையுடைய குடிலின்

மேல்

எயில்

(பெ) மதில், fortress, wall, fortification

நெடு மதில் நிலை ஞாயில்
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து – பதி 20/18,19

நெடிய மதில்களையும், நிலைபெற்ற கோட்டை வாயிலையும்,
அம்புகளையுடைய கடத்தற்கரிய அகமதிலையுமுடைய உள்புறத்தை அழித்து

மேல்

எயிற்றி

(பெ) எயினன் என்பதன் பெண்பால், female in the desert track tribe

எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு – சிறு 175

எயிற்றியர் ஆக்கிய இனிய புளிங்கறியிட்ட வெண்மையான சோற்றை,

மேல்

எயிறு

(பெ) 1. பல், tooth
2. ஈறு, gums
3. யானை, பன்றி இவற்றின் தந்தம், Tusk of the elephant, of the wild hog

1.

இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் – ஐங் 185/2

ஒளிவிடும் முத்தினைப் போன்றிருக்கும் பற்கள் பொருந்திய சிவந்த வாயினையும்

2.

வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/4

வெண்மையான ஈறுகளில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும்

3.

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117

போரிட்டு வீழ்ந்த யானையின், தானாக வீழ்ந்த கொம்புகளின் இரண்டுபுறங்களையும் சீவி,

மேல்

எயினர்

(பெ) பாலைநில மக்கள், tribe of the desert tract
இவர்கள் வில்லினை நம்பி வாழும் வேட்டுவர்கள்

கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் – குறு 12/3

வளைந்த வில்லையுடைய எயினர் தம் அம்புகளைத் தீட்டும்

மேல்

எயினன்

(பெ) 1. ஆய் குடி எயினன், ஓர் சிற்றரசன், a chieftain of Ay kudi
2. வாகை அரசன். chief of the citycalled vaakai near Madurai

1.

ஆய்-எயினன் அருள் உள்ளம் கொண்டவன். பறவைகளை பேணிப் பாதுகாத்துவந்தவன். இவன் ஆய் குடி என்னும் ஊரில்
தோன்றிய மன்னர்களில் ஒருவன்.
புன்னாட்டை நன்னனிடமிருந்து மீட்டு அந்நாட்டு மக்கள் வேளிர்க்கே தருவதற்காக மிஞிலி என்பவனோடு பாழிப்பறந்தலை
என்னுமிடத்தில் போரிட்டபோது மாண்டவன். இவன் போர்க்களத்தில் கிடந்தபோது இவன் வளர்த்த பறவைகள் வானில்
வட்டமிட்டுப் பறந்து அவனுக்கு நிழல் செய்தனவாம்

கடும் பரி குதிரை ஆஅய் எயினன்
நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என – அகம் 148/7,8

கடிய செலவினையுடைய குதிரையையுடைய ஆய் எயினன் என்பான்
நெடிய தேரையுடைய மிஞிலி என்பானொடுபோர்புரிந்துகலத்தில் இறந்தனனாக

அடு போர் மிஞிலி செருவிற்கு உடைஇ
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஒராங்கு
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு
விசும்பிடை தூர ஆடி – அகம் 181/5-10

போர் அடுதல் வல்ல மிஞிலி என்பான் செருவின்கண் தோற்று
முருகனை ஒத்த வலிமையுடன் நின்று குருதியால்களம் சிவப்புற
ஆய் எயினன் என்பான் வீழ்ந்தனனாக ஞாயிற்றின்
ஒள்ளிய கதிர்களின் வெப்பம் அவன் உடலில்படாது மறைய ஒன்றுகூடி
புதிய பறவைகளின் ஒலி பொருந்திய பெரிய கூட்டம்
விசும்பிடம் மறைய வட்டமிட்டு

நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளி இயல் வாழ்க்கை பாழி பறந்தலை
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி
நிழல் செய்து உழறல் காணேன் யான் என
படு_களம் காண்டல் செல்லான் சினம் சிறந்து
உரு வினை நன்னன் அருளான் கரப்ப – அகம் 208/3-14

சிறிய பிரப்ச்பங்கோலையுடைய பாடுநர் விரும்பின் வெள்ளிய கொம்பினையும்
தலைமையையுமுடைய யானையை வழங்கும் வண்மையாலாகிய மகிழ்ச்சியையுடைய
வெளியன் வேண்மான் ஆய் எயினன் என்பான் –
அருள் பொருந்தும் வாழ்க்கையினையுடையவன் – பாழி என்னும் ஊரின்கண்ணதாகிய போர்க்களத்தே
ஓடையை அணிந்த யானையினையும் இயன்ற தேரினையும் உடைய மிஞிலி என்பானோடு
நண்பகற் பொழுதிலே செய்த போரின்கண் புண் மிக்கு
ஒள்ளிய வாட்படை மயங்கிய போரினாலே வீழ்ந்தனனாக, புட்கள் பலவும் கூடி,
அழகிய இடத்தையுடைய வானில் விளங்கிய ஞாயிற்றினது
உள்ளிய கதிர் அவன் உடலைக் காய்தல் செய்யாது, தம் சிறகுகளால் பந்தரிட்டு
நிழலைச் செய்து சுழன்றுகொண்டிருத்தலை யான் காணேன் என்று
அவன் பட்ட களத்தைக் காண்டற்குச் செல்லானாய் கோபம் மிக்கு
அச்சம்தரும் போர்ச்செயலினைக் கொண்ட நன்னன் அருளின்றி மறைந்துகொள்ள

இதே போன்று இன்னொரு செய்தி, நன்னன், மிஞிலி, அதிகன் என்ற மன்னர்களை இணைத்தும், அதிகன் என்பான்
பறவைகளை நேசிப்பவன் என்றும் வருதலால் (அகம் 142) இந்த எயினனும், அதிகனும் ஒருவரே என்று
கருதுவார் நாட்டார் அகம் 142 உரையில். (”அதிகன் என்பது ஆய் எயினனுக்குரிய வேறு பெயர் போலும்”)

பொலம் பூண் நன்னன் புன்னாடு கடிந்து என
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்
அஞ்சல் என்ற ஆஅய் எயினன்
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி
தன் உயிர் கொடுத்தனன் – அகம் 396/2-6

பொன்னாலான பூண்களையுடைய நன்னன் என்பான் புன்னாடு என்னும் நாட்டிலுள்ளாரை வெகுண்டு எழுந்தானாக
யாழின் இசை பொருந்திய தெருக்களையுடைய பாழி என்னும் நகரிடத்தே நின்று
அஞ்சாதீர் என்று கூறிய ஆய் எயினன் என்பான்
போரில் வெல்லும் பயிற்சியையுடைய மிஞிலி என்பானோடு பொருது
தன் உயிரையும் கொடுத்தனன்

2.

வண் கை எயினன் வாகை அன்ன – புறம் 351/6

வள்ளன்மையுடையனாகிய எயினன் என்பானுக்குரிய வாகை என்னும் நகரத்தைப் போன்று
– இந்த வாகை என்பது வாகைப் பறந்தலை, வாகைப்பெருந்துறை என்பவற்றின் வேறு.
– இவ்வாகைக்குரிய எயினன் ஏனை ஆய் எயினனின் வேறாவான்.
– இந்த வாகை மதுரை நாட்டில் உள்ளதோரூர்
– ஔவை.சு.து.விளக்கம்

மேல்

எரி

1. (வி) தீயில் அழி, தீக்கு இரையாக்கு, burn, set on fire

2. (பெ)

1. நெருப்பு, தீச்சுவாலை, fire, burning flame
2. கார்த்திகை நட்சத்திரம், the constellation Pleiades
3. எரி மீன், எரிகல், meteor

1.

முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும்
இதழ் கவின் அழிந்த மாலையொடு – பதி 48/10,11

பகைவரின் ஊர்களைச் சுடுகின்ற மிகுதியான நெருப்பை எரிப்பதால், மிகவும்
பூவிதழ்கள் தம் அழகழிந்துபோன மாலையோடு

2.1

எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை
சுரி இரும் பித்தை பொலிய சூட்டி – பொரு 159,160

நெருப்புத் தழைத்தாற் போன்ற, இதழ் இல்லாத தாமரையை,
சுருண்ட கரிய மயிரில் பொலிவுபெறச் சூட்டி,

எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று – சிறு 196

மேனோக்கி எரிகின்ற நெருப்பு (தீச்சுவாலை) சாய்ந்தாலொத்த நாவினையும்

2.2

விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரி சடை எழில் வேழம் தலை என கீழ் இருந்து – பரி 11/1,2

விரிந்த ஒளிக்கதிர்களையுடைய திங்களுடன் அகன்ற வானத்தில் சேர்க்கப்படுவனவாகிய,
எரி என்னும் கார்த்திகை, சடை என்னும் திருவாதிரை, அழகிய யானை என்னும் பரணி ஆகிய நாள்கள் முதலாக

2.3

மிக வானுள் எரி தோன்றினும் – புறம் 395/34

வானகத்தே எரி மீன்கள் மிகுதியாகத் தோன்றிடினும்

மேல்

எருக்கம்

(பெ) எருக்கு, ஒரு வகைச் செடி, Calotropis gigantea

குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப – குறு 17/2

குவிந்த அரும்பினையுடைய எருக்கம்பூ மாலையையும் தலையில் சூடிக்கொள்வர்;

மேல்

எருக்கு

1. (வி)

1. வெட்டு, cut, hew
2. அழி, destroy
3. கொல், kill
4. அடி, strike

2. (பெ) எருக்கம், பார்க்க – எருக்கம்

1.1.

கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டு புழை அருப்பம் மாட்டி – முல் 24,25,26

காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி,
வேட்டுவரின் சிறு வாயில்களையுடைய அரண்களை அழித்து

1.2.

நாடு கெட எருக்கி நன் கலம் தரூஉம் நின் – பதி 83/7

பகைவரின் நாடுகள் கெடும்படி அழித்து, திறையாக நல்ல அணிகலன்களைக் கொண்டுவருகின்ற உன்

1.3

களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/16

யானைகள் மடியக் கொன்ற கல்லென்ற ஒலியையுடைய போரில்

1.4

ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் – புறம் 237/10

மாறி மாறி வெம்மையாகத் தம் மார்பினில் அடித்துக்கொண்ட மகளிர்

2.

குவி இணர் எருக்கின் ததர் பூ கண்ணி – அகம் 301/11

குவிந்த கொத்துக்களையுடைய எருக்கினது நெருங்கிய பூக்களால் ஆன தலைமாலை

மேல்

எருத்தம்

(பெ) கழுத்து, பிடரி, neck, nape

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 158,159

(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்
புறக்கழுத்தில் ஏறிய திருமகளின் விளக்கமுடைய இந்திரனும்

எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல் – மது 718

கழுத்திலிருந்து தாழ்ந்த (பல்விதமாய்)கலந்த பூக்களைத் தெரிவுசெய்து கட்டிய மாலையினையும்,

மேல்

எருத்து

(பெ) கழுத்து, பார்க்க – எருத்தம்

மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 103/59

மயில் கழுத்தைப் போன்ற நிறத்தையுடைய அணிகலன்கள், பவழம் போன்ற சிவந்த நிலத்தில் மாறுபட்டுக் கிடக்க,

மேல்

எருந்து

(பெ) கிளிஞ்சில், Bivalve sheel fish, as mussels, oysters;

நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி – சிறு 58

சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை,
வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து,

மேல்

எருவை

(பெ) 1. பஞ்சாய்க்கோரை, Species of Cyperus.
2. கொறுக்கச்சி, European bamboo reed
3. தலைவெளுத்து உடல்சிவந்திருக்கும் பருந்து, a kite whose head is white and whose body is brown;

1.

கேழல் உழுது என கிளர்ந்த எருவை
விளைந்த செறுவில் தோன்றும் நாடன் – ஐங் 269/1,2

கிழங்குகளை எடுக்கக் காட்டுப்பன்றி மண்ணைத் தோண்டிவிட அதில் செழித்து வளர்ந்த கோரைப்புல்
நன்றாக விளைந்த நெல்வயலைப் போலத் தோன்றும் நாட்டினையுடையவன்,

2.

எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் – மலை 224

கொறுக்கச்சியின் மெல்லிய கோலைப் பிடித்துக்கொண்டே கடந்துசெல்லுங்கள்

3.

ஊன் பதித்து அன்ன வெருவரு செஞ்செவி
எருவை சேவல் கரிபு சிறை தீய – அகம் 51/5,6

மாமிசத்துண்டைப் பதித்து வைத்ததைப் போன்ற அச்சம்தரும் சிவந்த செவியை உடைய
ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்துபோக,

மேல்

எல்

(பெ) 1. ஞாயிறு, சூரியன், sun
2. பகற்பொழுது, daytime
3. இரவு, night
4. ஒளி, ஒளிர்வு, lustre, splendour
5. திடம், வலிமை, Vehemence; strength

1.

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை
கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர்
அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 73 – 76

முள்ளிருக்கும் தண்டையுடைய தாமரைப் பூவில் துயில்கொண்டு, விடியற்காலத்தே,
தேன் நாறுகின்ற நெய்தல் பூவை ஊதி, ஞாயிறு வெளிப்பட
கண்ணைப்போன்று விரிந்த விருப்பம் மருவின சுனைப் பூக்களில்,
அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும் –

2.

பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி
எல் இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 65,66

பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழியில்
பகற்பொழுதில் வழிப்போவார்க்குப் பாதுகாவலாக இருக்க,

3.

மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய
எல்லை போகிய பொழுதின் எல் உற
பனி கால்கொண்ட பையுள் யாமத்து – நற் 241/7-10

மேகங்கள் நீங்கிச் செல்லுகின்ற விசும்பில் மாறிமாறி ஞாயிறு
விழித்து இமைப்பது போல தோன்றித்தோன்றி மறைய,
பகற்பொழுது சென்ற மாலைப்பொழுதில் இரவு வந்துசேர,
பனி பெய்யத்தொடங்கிய துன்பத்தைத் தரும் நடுயாமத்தில்,

4.

வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/5

வளைந்து இறங்கும், மூங்கிலைப் போன்ற தோள்களைக் கொண்ட ஒளியுடைய வளையணிந்த மகளிர்

5.

எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை – அகம் 77/14

வலிய பெருங் காற்று அலைக்கும் இருள் மிக்க மாலை

மேல்

எல்லரி

(பெ) ஒரு வகைப் பறை, a kind of drum

கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி
நொடி தரு பாணிய பதலையும் பிறவும் – மலை 10,11

அடிக்குரல் ஓசையில் (தாளத்துடன்)ஒத்து ஒலிக்கும் வலிமையான விளிம்புப் பகுதியையுடைய சல்லியும்,
காலவரை காட்டுவதற்கு ஒலிக்கும் ஒருகண் பறையும், இன்னும் பிற இசைக்கருவிகளும்

மேல்

எல்லி

(பெ) 1. பகல், daytime
2. இரவு, night

1.

வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த
புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு – நற் 90/3,4

வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த
சோற்றின் பழுப்புநிறக் கஞ்சி இட்ட சிறிய பூக்களைக் கொண்ட ஆடையுடன்

2.

நல்கூர் சீறூர் எல்லி தங்கி – அகம் 87/4

வறுமைப்பட்ட சிறிய ஊரில் இரவில் தங்கி

மேல்

எல்லு

(பெ) பகற்பொழுது, daytime

எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5

பகற்பொழுதில் மழையில் வருந்திய கூட்டமான பசுக்கூட்டத்துடன்

மேல்

எல்லை

(பெ) 1. ஒரு நிலப்பகுதியின் வரம்பு, limit, border, boundary
பகல், daytime

1.

நீர்ப்பெயற்று எல்லை போகி – பெரும் 319

நீரின் பெயர்கொண்ட நீர்ப்பாயல்துறை என்னும் ஊரின் எல்லையிலே சென்று

வட திசை எல்லை இமயம் ஆக – பதி 43/7

வடதிசையிலுள்ள இமயம் வடக்கு எல்லையாக

2.

எல்லை கழிய முல்லை மலர – குறு 387/1

பகற்பொழுது கழிய, முல்லை மலர,

கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே
எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி – பொரு 117,118

கொல்லை நிலத்தில் உழுத கொழுப் போன்று, (எம்)பற்கள்
பகலும் இரவும் இறைச்சியைத் தின்று (முனை)மழுங்கி,

மேல்

எலுவல்

(பெ) தோழன், male companion

யாரை எலுவ யாரே நீ எமக்கு – நற் 395/1

யார் நீ நண்பனே? யார்தான் நீ எங்களுக்கு?

மேல்

எவ்வம்

(பெ) துயரம், துன்பம், suffering, affliction, distress

எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் – நற் 273/2

துன்பம் மிகுந்து மயங்கிய துயரம்

மேல்

எவ்வி

(பெ) ஒரு வேளிர்குல அரசன், a chieftain of vELir lineage
எவ்வியை நேரில் கண்டு பாடிய புலவர் வெள்ளெருக்கிலையார் (புறம் 233, புறம் 234).
கபிலர் (புறம் 202), குடவாயிற் கீரத்தனார் (அகம் 366), நக்கீரர் (அகம் 126), பரணர் (குறுந். 19, அகம் 266),
மாங்குடி கிழார் (புறம் 24), மாமூலனார் (அகம் 115) ஆகிய புலவர்கள் இவனைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வி தன்னைத்தேடி வரும் பாணரின் தலையில் பொன்னாலான தாமரைப்பூ சூடி மகிழ்ந்தான்.

எவ்வி இழந்த வறுமை யாழ்_பாணர்
பூ இல் வறும் தலை போல – குறு 19/1,2

எவ்வி என்ற வள்ளலை இழந்ததால் வறுமையுற்ற யாழ்ப்பாணரின்
பொற்பூ இல்லாத வெறும் தலை போல

எவ்வி இறந்தபின் பாணர் தம் யாழை முறித்துப்போட்டனர்.

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்திடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன – அகம் 115/8-10

எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே பாணர்கள்
கையால் தொழும் முறைமையோடு முன்பெல்லாம் பராவிய யாழின்
வளம் பொருந்திய ஒலியையுடைய வளைந்த கோட்டினை ஒடித்துப்போகட்டால் ஒத்த

எவ்வி என்பானின் நண்பன் அன்னி. இவன் திதியனொடு பகை கொண்டிருந்தான். ஆனால் எவ்வி
அன்னியைத் திதியனுடன் போரிடாதவாறு அடக்க முயன்றான். அடங்காத அன்னி திதியனுடன்
போரிட்டு மடிந்தான்.

பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்
பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகி
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ நீயே – அகம் 126/13-17

வளம் மிக்க ஊர்களையுடைய பல வேற்படைகளையுடைய எவ்வி என்பான்
நீதியை உட்கொண்ட சிறந்த மொழிகளைக் கூறித் தணிக்கவும் தனியானாகி
பொன் போலும் கொத்துக்களாகிய நறிய மலர்களையுடைய காவல் மரமாகிய புன்னையைக் குறைக்க விரும்பி
திதியன் என்பானொடு போரிட்டு மடிந்த அன்னி என்பானைப் போல
நீ இறந்துபடுவை போலும்

எவ்வி நீடூர் என்னும் ஊரை உடையவன். அது இன்றைய நீடாமங்கலம் என்பர். எவ்வி வாட்போரில்
சிறந்தவன். அவனுடைய ஏவலைக் கேட்காத பகைவரை அரிமணவாயில் உறத்தூர் என்ற இடத்தில் பொருது
தோற்கடித்தான்.

யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடுமிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் – அகம் 266/9-12

யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவனான
வாள் வென்றிவாய்ந்த எவ்வி என்பான், தன் ஏவலை ஏற்றுக்கொள்ளாராகிய
பசிய பூணினை அணிந்த பகைவரது மிக்க வலிமையைக் கெடுத்த
அரிமணவாயில் உறத்தூராய அவ்விடத்தே

எவ்வியின் ஆட்சியின் கீழிருந்த நீழல் என்னும் ஊர் மிக்க வளமுடையதாக இருந்தது.

பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன
நலம் பெறு பணை தோள் நல் நுதல் அரிவை – அகம் 366/12,13

பொற்பூண் அணிந்த எவ்வி என்பானது நீழல் என்னுமூர் போன்ற
அழகுபெற்ற மூங்கில் போலும் தோளும் நல்ல நெற்றியும் உடைய அரிவையொடு
– எவ்வி என்பான் நீடூர் கிழவன் எனப்படுகிறான். எனவே நீழல் என்பது நீடல் என்பதன்
– திரிபாதலும் கூடும் என்பார் நாட்டார் தம் விளக்கத்தில்.

வேள் எவ்வியின் நாடு மிழலைக்கூற்றம் எனப்பட்டது. கூற்றம் என்பது அகநாடு அல்லது குறுநாடு.
இக் கூற்றம் வளம் மிக்க கடற்கரையைச் சார்ந்தும், பல ஊர்களை உடையதுமாய் இருந்தது

முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு – புறம் 24/16-19

(பனையின் குரும்பை நீர், பூங்கரும்பின் தீஞ்சாறு, தென்னையின் இளநீர் ஆகிய)
இம் மூன்று நீரையும் உண்டு, மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும்
பரிக்க வொண்ணாத பல மக்களும் வாழ்தலையுடைய நல்ல ஊர்கள் பொருந்திய
பொருளைப் பாதுகாவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது
நீர் வழங்கும் வாய்தலைகளையுடைய மிழலைக் கூற்றத்துடனே

கபிலரால், பாரிமகளிரை மணம்செய்துகொள்ளும்படி வேண்டப்பட்டு, மறுத்த இருங்கோவேள், இந்த
எவ்வி குடியில் வந்தவன்.

எவ்வி தொல் குடி படீஇயர் – புறம் 202/14

(உன் முன்னோர்)எவ்வியின் பழைய குடியிலே படுவார்கள்.

புலவர் வெள்ளெருக்கிலையார் என்பவர் வேள் எவ்வியைச் சந்தித்து அவனைப்
பாடியுள்ளார் – புறம் 233

இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண்
போர் அடு தானை எவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பல – புறம் 233/5-7

பெரியபாண் சுற்ரத்துக்கு முதல்வன், பேரணிகலத்தினையுடைய
போரின்கண் கொல்லும் படையினையுடைய எவ்வியது மார்பின்கண்
வேல் தைத்த சிறந்த புண் பல

மேல்

எவ்வை

(பெ) எம் தங்கை, our younger sister

தண் துறை ஊரனை எவ்வை எம்_வயின்
வருதல் வேண்டுதும் என்ப – ஐங் 88/2,3

தண்ணிய நீர்த்துறையுள்ள ஊரைச் சேர்ந்தவனை, எமது தங்கை என்னிடத்திற்கு
வரவேண்டும் என்று கூறுகிறாள்;

மேல்

எழிலி

(பெ) மழைபெய்யும்/பெய்த நிலையிலுள்ள மேகம், cloud ready to pour down, or just after rain

ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/2

பெருத்த முழக்கத்தையுடைய மேகம் கார்ப்பருவத்தைத் தொடங்கிவைத்தது.

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/5,6

பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய மேகங்கள்
தெற்குப்பக்கமாய் எழுந்து முழங்கும் முன்பனிக்காலத்திலும்

மேல்

எழினி

(பெ) 1. கடையெழு வள்ளல்களுளொருவன், Name of a chief noted for liberality
2. திரை, curtain

1.

நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல – குறு 80/5,6

நன்முறையில் வெல்லும் பெரிய வேற்படையை உடைய எழினி என்பானின்
போரில் கைப்பற்றப்பட்ட பெரிய பசுக்களின் கூட்டம்போல

2.

எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64

திரைச்சீலையை வளைத்த இரு அறைகள்(கொண்ட) படுக்கைக்கண்ணே சென்று

மேல்

எழினியாதன்

(பெ) சங்ககாலச் சிற்றரசன், வள்ளல், a chieftain, philanthropist of sangam period
எழினியாதன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். வாட்டாற்று எழினியாதன் எனப் போற்றப்படுகிறான்.
வேளிர் குடியைச் சேர்ந்தவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் வாட்டாறு என்னும் ஆற்றங்கரையில் இருந்த வாட்டாறு
என்னும் ஊரில் வாழ்ந்தவன் என விக்கிப்பீடியா கூறுகிறது.
இவன் பெயர் ஆதன் என்றும், இவன் தந்தை பெயர் எழினி என்றும் ஔவை.சு.து.அவர்கள் தம் உரையில் குறிப்பிடுகிறார்.
இந்த எழினி தலையாலங்கானதுப்போரில் நெடுஞ்செழியனுக்குத் தோற்றோடியவர்களுள் ஒருவன் என்பார் அவர். ஆனால்
எழினியாதன் நெடுஞ்செழியனோடு நட்புக்கொண்டு வாட்டாற்றில் அர்சுகட்டில் ஏறினான் என்பார் ஔவை.சு.து. இந்த
நெடுஞ்செழியனைப்பற்றி மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி கிழார்மருதனார் இந்த எழினியாதனைப் பற்றியும் பாடியுள்ளார்.

வள நீர் வாட்டாற்று எழினியாதன்
கிணையேம் பெரும – புறம் 396/13,14

நீர் வளம் சிறந்த வாட்டாறு என்னும் ஊர்க்குத் தலைவனான எழினியாதனுடைய
கிணைப்பொருநர் ஆவோம் பெருமானே

மேல்

எழு

1. (வி)

1. நிற்கும் நிலைக்கு வருதல், rise
2. உயர், மேலெழும்பு, rise up

2. (பெ) கணையமரம், கதவை உள்வாயிற்படியில் தடுக்கும் மரம், Cross-bar of wood set to a door;
3. (பெ.அ) ஏழு என்ற எண்ணின் பெயரடை, adjectival form of the number seven

1.1.

எழு எனின் அவளும் ஒல்லாள் – நற் 159/8

எழுந்து வருக என்று அழைத்தால் அவளும் அதற்கு உடன்படமாட்டாள்;

1.2

வென்று எழு கொடியின் தோன்றும் – மலை 582

வென்று உயரும் கொடியைப்போலத் தோன்றும்

2.

எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன் – சிறு 49

கணையமரத்தைப் போன்ற திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவன்

3.

கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி – மது 427

தீர்த்த நீரில் (திருவிழாவிற்குக் கால்)கொண்ட ஏழாம்நாள் அந்தியில்,

மேல்
,

எள்

(பெ) 1. நல்லெண்ணெய் எடுக்கப்பயன்படும் விதை / அதன் செடி,
Sesame, a plant cultivated for the oil obtained from its seed, Sesamum indicum
2. இகழ்ச்சி, ஏளனம், Reproach, censure, condemnation

1.

கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ்
நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 105,106

பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய் 105
நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்
2

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரை கொளீஇ – மலை 561,562

இழை இருக்குமிடம் தெரியாத அளவில் நுண்ணிய நூலால் நெய்த புடைவைகளை
இகழ்ச்சி அற்ற சிறப்பு உண்டாக உட்கூடுபாய்ந்த இடுப்பில் உடுத்தி,

மேல்

எள்ளு

(வி) 1. கேலிசெய், இகழ், despise, redicule

வெள் என்பு அணிந்து பிறர் எள்ள தோன்றி – குறு 182/3

வெள்ளை எலும்புகளை அணிந்துகொண்டு, பிறர் எள்ளி நகையாடத் தோன்றி

மரீஇ தாம் கொண்டாரை கொண்ட_கால் போலாது
பிரியும்_கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும்
திருவினும் நிலை இல்லா பொருளையும் நச்சுபவோ – கலி 8/12-14

விரும்பித் தான் சேர்ந்தாரைச் சேர்ந்திருக்கும்போது இன்புறச் செய்வதைப் போலல்லாமல்,
அவரை விட்டுச் செல்லும்போது மற்றவர் அவரை இகழ்ந்துபேசும்படி, தமக்கும் ஒரு பெருமையின்றிக் கைமாறிச் செல்லும்
செல்வத்தைக்காட்டிலும் விரைந்து அழியும் நிலையற்ற பொருளையா விரும்பிச் செல்கிறாய்?

சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக – அகம் 115/4

சேரிப்பெண்டிர் நம்மை இகழினும் இகழுக

மேல்

எற்கு

(பெ.அ) எனக்கு, to me

அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் – பரி 20/81

காட்டுமல்லிகையின் அழகுள்ள மாலையை அணிந்தவளே! உனக்குக் காதலன் எனக்கும் காதலன்

மேல்

எற்றம்

(பெ) மனத்துணிவு, determination

ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் – கலி 144/63

ஓ! கடலே! மனத்தில் துணிவில்லாத இவள் எதற்காகப் பித்துப்பிடித்தவளானாள்

மேல்

எற்று

1. (வி) 1. (காலால்) வேகமாக முன்னே தள்ளு, மோது, kick, dash against
2. பரிவுகாட்டு, be compassionate
3. நினை, think of
2. எத்தன்மையது, of what sort

1.1.

வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ
கூம்பு முதல் முருங்க எற்றி – மது 376,377

இறுகும் பிணிப்பினையுடைய வலிமையான (பாய் கட்டின)கயிற்றை அறுத்துப், பாயையும் பீறிப்
பாய்மரம் அடியில் முறியும்படி மோதித்தள்ளி,

1.2.

தம்மோன் கொடுமை நம்_வயின் எற்றி
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது – நற் 88/6,7

தனது தலைவன் நமக்குச் செய்த கொடுமைக்காக நம்மேல் பரிவுகாட்டி
நம்மீது அன்பு மிகவும் உடையதால், தன் வருத்தத்தைத் தாங்கிக்கொள்ளமாட்டாமல்

1.3.

கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி
ஆனா துயரமொடு வருந்தி – குறு 145/2,3

கடற்கரைச் சோலையையுடைய தலைவனது கொடுமையை எண்ணி
அடங்காத் துயரமொடு வருந்தி

2.

வார் கோல் எல் வளை உடைய வாங்கி
முயங்கு என கலுழ்ந்த இ ஊர்
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/10-12

நீண்ட திரட்சியான ஒளிவிடும் வளைகள் உடைந்துபோகுமாறு இறுக வளைத்துத்
தழுவினாய் என்று கண்ணீர்விட்ட இந்த ஊர் மக்கள்
எத்தன்மையர் ஆவார்கள்? நாம் உடன்போக்கு மேற்கொள்ளுதலான வேறொன்றைச் செய்துவிட்டால்.

மேல்

எறி

(வி) 1. விரலால் தெறி, finger the string of a musical instrument
2. இடி, strike against
3. பொங்கு, surge (as waves of the sea)
4. வீசு, throw, fling, hurl
5. வீசு, blow as windபொழி, as a shower
6. அழுத்து, பதி, press, inlay as a gem
7. சிதறு, இறை, disperse, scatter
8. தாக்கு, தகர், நொறுக்கு, smash
9. அடி, beat
10. (விலங்குகள்) பின்னங்கால்களைப் பின்புறமாக உதைத்துத் துள்ளு,
(animals frisking by springing their hind legs as though to kick)
11. தெறித்து விழு, splash up as spray, fly off, as sparks
12. பாய்ந்து பற்று, pounce upon as birds on prey
13. அறு, பறி, chop, pluck
14. வெட்டு, cut into pieces
15. உதிர், drop as tear drops
16. (பறை)முழக்கு, beat as a drum
17, (களைக்கொத்தால்) கொத்து, dig with a hoe
18. அழி, destroy
19. ஒளிவீசு, shine, glitter
20. வழி, smear

1.

வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும் 182

வில்யாழ் இசைக்கும் விரலாலே தெறித்து எழுப்பப்பட்ட குறிஞ்சிப்பண்ணை

2.

அவல் எறி உலக்கை பாடு விறந்து – பெரும் 226

அவலை இடிக்கும் உலக்கையின் ஓசை செறிகையினால்

3.

எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் – முல் 57

‘(திரை)எறிகின்ற கடல்(சூழ்ந்த) உலகத்தே (பகைவரை)வெல்வதற்குச் செல்கின்றவனே

4.

எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து – முல் 68

ஓங்கி வீசிய வாள் வெட்டுதலினால், புண் மிக்குப்

5.

இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180

கரிய சேற்றையுடைய தெருவில் (தம்மேலே)வீசும் துளிகளை உடல் குலுக்கி உதற

6.

பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்

பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி – குறி 59,60
தங்கத்தில் பதிக்கப்பட்ட (நீல)மணியைப் போல சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த எம்
பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து ஈரத்தைப் புலர்த்தி,

7.

முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் எறி பிரசமொடு ஈண்டி – குறி 188,189

பருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த

8.

நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா – குறி 247

பெரிய மழைத் துளிகள் தாக்கிய மலர் போல் அழகழிந்து, இமை சோர்ந்து,

9.

எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்
மருதம் பண்ணி அசையினிர் கழிமின் – மலை 469,470

எருதுகளை அடித்து ஓட்டும் உழவரின் (உழவுப்)பாட்டோடு இயையுமாறு (உமது)நல்ல யாழில்
மருதப்பண்ணை வாசித்து, (அங்கு)இளைப்பாறியவராய்ச் செல்வீர்

10,

அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/7,8

பாலைவழியில் இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு விளைந்த பழம்
துள்ளிக்குதிக்கும் இளைய மானுக்கு உணவு ஆகும்

11.

எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி – நற் 13/6,7

ஊதும்போது தெறிக்கும் பொன்போன்ற தீப்பொறிபோல சிறியவாகவும் பலவாகவும் பரவிவிழும்
வேங்கைமரத்தின் பூக்கள் உதிர்கின்ற உயர்ந்த மலையில் தங்கும்

12.

நீல் நிற பெரும் கடல் கலங்க உள் புக்கு
மீன் எறி பரதவர் மகளே – நற் 45/2,3

நீல நிறப் பெருங்கடல் கலங்குமாறு அதன் உள்ளே புகுந்து
மீனைப் பிடிக்கும் பரதவர் மகள் ஆவாள்!

சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை – நற் 31/2

சிவந்த இறால் மீனைப் பாய்ந்துபற்றித் தின்ற சிறிய கடற்காக்கை

13.

அயலோர் அம்பலின் அகலான்
பகலின் வரூஉம் எறி புனத்தானே – நற் 285/10,11

அயலோர் உரைக்கும் பழிச்சொற்களைக் கேட்டும் நம்மை விட்டு நீங்கான்,
பகலிலும் வருவான் தினை கொய்யப்பட்ட தினைப்புனத்துக்கு
எறி புனம் – தினை அறுக்கப்பட்ட கொல்லை – ஔவை.து.சு.உரை விளக்கம்

உண்-மின் கள்ளே அடு-மின் சோறே
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/1,2

உண்பீராக கள்ளை! சமைப்பீராக சோற்றை!
அறுப்பீராக, தின்பதற்கான ஊன்கறியை! உலையில் ஏற்றுவீர்களாக வேகவைக்கவேண்டியவற்றை!

14.

கரும்பின்
கால் எறி கடிகை கண் அயின்று அன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் – குறு 267/2-4

கரும்பின்
அடிப்பகுதியில் வெட்டிய துண்டினை உண்டது போன்ற
வெள்ளிய பற்களில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும்

எறி பிணம் இடறிய செம் மறு குளம்பின் – பதி 65/1

வெட்டப்பட்டு வீழ்ந்த பிணங்களை இடறிக்கொண்டு செல்வதால் சிவந்துபோன கறை படிந்த குளம்புகளையுடைய

15.

வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே
எறி கண் பேது உறல் – குறு 358/1,2

இறுக்கமான அணிகலன்கள் நெகிழ்ந்துபோக, அழுது இங்கே
நீர்த்துளி உதிர்க்கும் கண்களால் வருத்தமடையாதே!
– எறி கண் – துளி எறியும் கண் – பொ.வே.சோ.உரை, விளக்கம்.

16.

விசும்பு கண் புதைய பாஅய் வேந்தர்
வென்று எறி முரசின் நன் பல முழங்கி – குறு 380/1,2

வானத்தின் இடமெல்லாம் மறையப் பரவி, வேந்தர்கள்
வெற்றியடைந்து முழக்குகின்ற முரசைப்போன்று நன்றாகப் பலமுறை முழங்கி

17.

துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை – குறு 392/5

களைக்கொத்தால் கொத்துவதால் எழுந்த நுண்ணிய புழுதி படிந்த களையெடுப்போரின் தங்கை

18.

எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை
வானவரம்பன் என்ப – பதி 58/10-12

பகைவரின் மதில்களை அழிக்கும் வலிய வில்லும், அம்பும் விளங்குகின்ற பெரிய கையினையும்,
உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,
வானவரம்பனாகிய சேரமன்னன் என்று கூறுவர்;

19.

கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய – மது 665

கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று

திரு நிலைஇய பெரு மன் எயில்
மின் ஒளி எறிப்ப – பட் 291,292

செல்வம் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய (உறந்தையின்)மதிலில்,
பிரகாசமான விளக்குகள் ஒளிவீசுவதால்

20.

உள் அரக்கு எறிந்த உருக்கு_உறு போர்வை – சிறு 256

உள்ளே சாதிலிங்கம் வழித்த உருக்கமைந்த (மேற்)பலகையினையும்

சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை – பதி 42/11

சந்தனத்தை வெளியில் பூசிய கள்குடங்கள் சமைக்குக்கும்போது ஆடுகின்ற அடுப்புகளிலிருந்து

மேல்

எறும்பி

(பெ) எறும்பு, ant

எறும்பி அளையின் குறும் பல் சுனைய – குறு 12/1

எறும்பின் வளைகளைப் போன்ற சிறிய பல சுனைகளையுடைய

மேல்

எறுழ்

(பெ) வலிமை, strength, prowess

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – பெரும் 60

தழை விரவின மாலையையும், பருத்த அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்

மேல்

எறுழம்

(பெ) செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை, A hill tree with red flowers;
Paper flower climber, calycopteris floribunda

எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 66

நெருப்பை ஒத்த எறுழம்பூ, மராமரப்பூ, கூவிரப்பூ

மேல்

என்பு

(பெ) எலும்பு, bone

குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – அகம் 245/17,18

பாறையிடத்துக் காய்ந்துகிடக்கும் சுள்ளி போலும் வெள்ளிய எலும்புகள்
வேகம் வாய்ந்த கால்களையுடைய மிக்க பசியினைப் போக்கும்

மேல்

என்றூழ்

(பெ) 1. சூரியன், sun
2. வெயில், sunshine
3. வெம்மை, heat
4. கோடை, summer

1.

சுடரும்
என்றூழ் மா மலை மறையும் – குறு 215/1,2

ஒளிவிடும்
ஞாயிறும் பெரிய மலையில் சென்று மறையும்

2.

என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் – அகம் 21/14

வெயில் நிலைபெற்ற புல்லிய இடத்தையுடைய ஊர்களில்

3.

உள் இல்
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி – அகம் 42/9

உள்ளே நீர் அற்ற
வெப்பமுடைய அகன்ற குளம் நிறையும்படி மிகுதியாகக் கொட்டி

4.

என்றூழ் நீடிய குன்றத்து கவாஅன் – நற் 43/2

கோடை நீடிய மலையின் உச்சிச் சரிவில்