ஊ – முதல் சொற்கள்

ஊக்கு

1. (வி) 1. தீவிரமாகச் செயல்படு, act with energy
2. ஆடுகின்ற ஊஞ்சலை வேகமாக ஆட்டிவிடு, swing rapidly
3. தூண்டப்படு, spur
4. உயர்த்திவிடு, lift
2. (பெ) 1. குறிதப்புதல், missing the mark
2. ஊக்கம், உற்சாகம், மனஎழுச்சி, zeal, fervour

1.1

நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் – புறம் 302/8,9

தன்னைப் பகைத்துப் பார்க்கும் பகைவரைக் கொல்லும் காளையாகிய அவன் மனஎழுச்சிகொண்டு
தன் வேலால்கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப்பார்க்குமிடத்து

1.2

ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை
ஐய சிறிது என்னை ஊக்கி என கூற – கலி 37/15

ஊசலில் ஆடிக்கொண்டிருக்க, ஒரு சமயம் அங்கு வந்தவனை,
“ஐயனே! சிறிது என்னை வேகமாக ஆட்டிவிடு” என்று கூற,

1.3

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை – ஐங் 377/1

நீர் வேட்கையால் தூண்டப்பட்ட வருத்தங்கொண்ட யானை

1.4

வாழை மென் தோடு வார்பு_உறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/1,2

வாழையின் மெல்லிய இலை நீண்டு தாழ்ந்திருக்க,அதனை உயர்த்தும்
நெற்பயிர் விளையும் கழனியிலுள்ள நேரான இடம் பொருந்திய வயலில்

2.1

ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் – மது 647

ஊர்க் காவலர்கள், குறிதப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்;

2.2

உள்ளுநர் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை – அகம் 29/19

நினைப்போரை நடுங்கச்செய்யும் ஊக்கத்தை ஒழிக்கும் காட்டினிலே

மேல்


ஊகம்

(பெ) 1. கருங்குரங்கு, black monkey
2. ஒருவகைப் புல், கூரையில் வேய உதவுவது, a kind of grass, Broomstick-grass, Aristida setacca
1.
வலிமையான பற்களைக் கொண்டது, விரல்களில் கறை படிந்திருக்கும்

கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை – குறு 373/5
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய – மலை 208

கடிய பல்லினையும் கொண்ட கருங்குரங்கின் கறைவாய்ந்த கரிய நிற விரல்களையுடைய ஆண்குரங்கு

பசிய கண்களை உடையது

பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221

பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பிடித்தாற் போன்று,

முகம் வெளுத்திருக்கும்

நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப – குறு 249/2

வெள்ளிய முகத்தையுடைய கருங்குரங்குகள் குட்டிகளோடு குளிரால் நடுங்க,

2.

ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122

ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த நிலையையுடைய மதிலையும்,

மேல்


ஊகு

(பெ) ஊகம்புல், பார்க்க : ஊகம் -2

கான ஊகின் கழன்று உகு முது வீ
அரியல் – புறம் 307/5,5

காட்டிடத்து ஊகம் புல்லினின்றும் உதிர்ந்த பழைய பூ
அரியரியாகத் திரண்டவை

மேல்


ஊங்கண்

(வி.அ) உவ்விடத்து, yonder

இடூஉ ஊங்கண் இனிய படூஉம் – நற் 246/1

இது நடைபெறும் என்று சொன்ன இடங்களில் நல்ல நிமித்தங்கள் தோன்றுகின்றன;

ஆங்கண் – அவ்விடத்து, ஈங்கண் – இவ்விடத்து ஆகிய இவற்றுக்கு இடையில் இருப்பது
ஊங்கண் – உவ்விடத்து

மேல்


ஊங்கணோர்

(பெ) முன்னோர், மூதாதையர், Those who lived in former times; ancestors

தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் – புறம் 39/6

ஆகாயத்துத் தூங்கெயிலை அழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின்

மேல்


ஊங்கு

1. (வி)

1. ஊஞ்சலில் ஆடு, swing
2. முன்னும் பின்னும் அசை, move to an fro

2. (வி.அ)

1. அங்கு, yonder
2. முன்பு, prior to
3. அச்சமயத்தில், at that time

1.1.

பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும்- நற் 90/7,8

பூப்போன்ற கண்களையுடைய தோழியர் ஆட்டிவிட ஆடாள்,
அழுதுகொண்டே அவ்விடம்விட்டுப் போகின்றாள்

1.2.

கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்க_வாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/8,9,10

கடலில் மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து
பலரும் பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல,
அவரவரும் பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை

2.1

நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப – பரி 4/5

நீ சிரிப்பதற்கேற்றவற்றை இங்கும், அங்கும் நாங்கள் உன்னைப்பற்றிக் கூற

2.2

வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே – குறு 357/8

விண்ணைத்தொடும் மலைநாட்டைச் சேர்ந்தவன் மணப்பதற்கு முன்னே

2.3

காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் – நற் 145/4,5

அழகிய கடற்கரைநாடனிடம் நாம் விரும்பிக்கொண்ட நட்பு
இப்போது சிறிதளவும் இல்லாதிருந்த போதும்

மேல்


ஊசல்

(பெ) 1. அசைவு, முன்னும் பின்னுமான ஆட்டம், swinging to and fro
2. ஊஞ்சல், swing

1.

பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 30

பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும்

2.

பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி
கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி – நற் 368/1,2

பெரிய தினைப்புனத்தின் கதிர்களைக் கொத்திச் செல்லும் சிறிய கிளிகளை விரட்டி,
கரிய அடிமரத்தைக் கொண்ட வேங்கைமரத்தில் ஊஞ்சல் ஆடி,

மேல்


ஊண்

(பெ) உணவு, food

பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி – மது 503

பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று,

மேல்


ஊணூர்

(பெ) ஒரு சங்க கால ஊர், a city in sangam period
இந்த ஊணூர் பாண்டியநாட்டின் மருங்கூர்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஓர் ஊர்.
தழும்பன் என்பவன் இந்த ஊருக்குத் தலைவனாக இருந்தான். இவன் வாய்ச்சொல் தப்பாதவன்.

பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப்படப்பை மருங்கூர்ப் பட்டினத்து – அகம் 227/17-20

பிடி மிதித்தமையால் ஆகிய வழுதுணங்காய் போலும் தழும்பினையுடைமையால் அப்பெயர் கொண்ட தழும்பன் என்பானது
காவல் பொருந்திய மதில் எல்லையையுடைய ஊணூர்க்கு அப்பாலுள்ள
மிக்க பொருள் நிலைபெற்றிருக்கும் பெருமை கொண்ட அழகிய நகராகிய
பெரிய உப்பங்கழிப் பக்கங்களையுடைய மருங்கூர்ப்பட்டினத்து

மீன் சீவும் பாண் சேரி
வாய்மொழி தழும்பன் ஊணூர் அன்ன – புறம் 348/4,5

மீன்களைப் பிடித்துண்ணும் பாண் சேரியையுடைய
தப்பாத மொழியினையுடைய தழும்பன் என்பானது ஊணூரைப் போன்ற

இவ்வூரில் யானைகள் பிச்சைக்காக ஓட்டிக்கொண்டு வரப்படும்.

இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்
பிச்சை சூழ் பெரும் களிறு போல – நற் 300/9-11

பெரிய பாணர் சுற்றத்தாருக்குத் தலைவனே! பெரும் புண்பட்ட
அழகினைக் கொண்ட தழும்பனின் ஊணூர் என்னுமிடத்தில்
பிச்சைக்காக வந்த பெரிய களிறு போல

இவ் ஊரின் ஒரு பகுதி கடலை ஒட்டி இருந்தது. உள்நாட்டுப்பகுதி நெல்வளம் மிக்கது. இங்கே அன்றில் பறவைகள்
நிறைய வாழும்.

முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும்
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்
நோலா இரும்புள் போல – அகம் 220/12-14

முழங்கும் கடலின் திரைகள் காலையில் அலையும்
மிகுதியான பழைய நெல்லையுடைய ஊணூரிடத்து
ஒன்றையொன்று பிரிந்திருத்தலைப் பொறாத பெரிய மகன்றிலைப் போல

மேல்


ஊது

(வி) 1. வண்டுகள் மலரின் மீது பறந்து ஒலியெழுப்புதல்,
hum, as bees or beetles, in getting out honey from flowers;
2. (தேன்) குடி, feed on as bees honey
3. குழல் வாத்தியங்களை இசைத்தல், play instruments like flute
4. கொல்லனின் உலையில் காற்று எழுப்புதல், make air flow in smith’s furnace

1.

வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே – குறு 260/2

வரிகளையுடைய வண்டுகள் சுற்றிப் பறந்து ஒலிப்பதால் இதழ்கள் விரிந்திருக்கும்

2.

தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து – அகம் 170/6

குளிர்ந்த பூந்தாதினை உண்ட வண்டின் கூட்டம் களிப்பு மிக்கு

3.

ஊது சீர் தீம் குழல் இயம்ப – பரி 22/40

ஊதுதற்குரிய ஓசை இலயத்தைக் கொண்ட இனிய குழல் ஒலிக்க

4.

ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/7

உலைக்கண் ஊதும் துருத்தி போல வெய்துயிர்த்து உள் மெலிந்து

மேல்


ஊதை

(பெ) பனிக்காலக் காற்று, வாடைக்காற்று, cold biting wind in dewy season

ஊதை தூற்றும் கூதிர் யாமத்து – குறு 86/4

வாடைக்காற்றினால் தூறல்போடும் குளிர்நிறைந்த நள்ளிரவில்

மேல்


ஊம்

(பெ) ஊமை

கூனும் குறளும் ஊமும் செவிடும் – புறம் 28/2

மேல்


ஊமன்

(பெ) 1. ஊமை, பேசமுடியாதவன், dumb person
2. ஒரு ஆந்தை, ஊமைக்கோட்டான், brown fish owl, Bubo Zeylonensis Leschenault

1.

கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போல – குறு 58/4

கையும் இல்லாது வாயும் பேசாத ஒருவன் தன் கண்களாலேயே பாதுகாக்க நினைக்கும்
காய்கின்ற வெண்ணெய் உருண்டை போல

2.

கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போல – குறு 224/3-5

கிணற்றில் விழுந்த
கபிலைநிறப் பசு படுகின்ற துயரத்தை இரவில் கண்ட
ஊமை மகனைப் போல

இங்கே உயர்திணை ஊமன் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும்.
உயர்திணை ஊமன் என்பது ஒரு ஊமையான மனிதனைக் குறிக்கும். இதனால் உயர்திணை அல்லாத ஊமன்
என்பதுவும் உண்டு என்பது பெறப்படும். உயர்திணை அல்லாத ஊமன் என்பது ஒரு ஆந்தை. பேச்சு வழக்கில்
ஊமைக்கோட்டான் என்று அழைக்கப்படும். இது மீனை மட்டும் தின்று வாழும். எனவே இது brown fish owl
எனப்படுகிறது. “ஊம், ஊம்” என்று ஒலி எழுப்புதால் இது ஊமன் என்று அழைக்கப்படுகிறது போலும்.

ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை எனபன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள்.

பார்க்க : ஆண்டலை குடிஞை
குரால் கூகை

மேல்


ஊர்

1. (வி) 1. நகர், move; creep, as an infant; crawl, as a snak
2. பரவு, spread, circulate, as blood; to extend over a surface, as spots on the skin
3. மெல்லச் செல், move slowly
4. வண்டி, தேர் ஆகியன செல், (cart or chariots)run
5. ஏறிச்செல், ride
6. (வாகனத்தைச்) செலுத்து, drive a vehicle
7. அமைந்திரு, dwell, abide
8. (நீர்)பாய், flow as water
– 2. (பெ) 1. மனிதர் கூடிவாழும் இடம், dwelling place for people
2. ஊரில் வாழும் மக்கள், resident population

1.1

விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர – கலி 71/1

விரிகின்ற கதிர்களையுடைய இளஞாயிறு அகன்ற விசும்பில் எழுந்து மேலே நகர்ந்துவர

கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் – சிறு 168

கொல்லையிலுள்ள நெடிய வழியில் (இந்திர)கோபம்(என்னும் தாம்பலப்பூச்சி) ஊர்ந்து செல்லவும்

1.2

பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – நற் 128/2

பாம்பு படர்ந்த திங்களைப் போல நெற்றியின் ஒளி குன்றவும்

கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1

கைவளையல்கள் நெகிழ்ந்துபோதலையும், மேனியில் பசலை பரவுதலையும்

1.3

நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 190-194

(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
நீரென்று கருதிப் பருகிய மயில் — அகன்ற ஊர்களில்
விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் — தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்

1.4

நன்னராளர் கூடு கொள் இன்னியம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று தன் வீழ்வுறு பொருளே – அகம் 189/13-15

நல்ல பாணர்களது ஒன்றுகூடி ஒலிக்கும் வாச்சியங்கள்
தேர் ஓடும் தெருக்களில் அறாது ஒலிக்கும்
இவ் ஊரானது தனது விருப்பம் மிக்கதொரு பொருளை இழந்ததாயிற்று

1.5

விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி – பரி 8/67

வெற்றியையே விரும்பும் முருகப்பெருமான் ஏறிச் செல்லும் மயில், அவனது வேலின் ஒளி ஆகிய இவற்றைக் குறித்து,

வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/5

வேந்தன் ஏறிவந்த யானையின் உயர்ந்த முகத்தில் தைத்து

1.6

வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் – பரி 20/17

வண்டிக்குரிய மாடுகளைப் பூட்டிக்கொண்டு திண்ணிய தேரைச் செலுத்தவும்,

வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9

மிக விரைந்து செலுத்துவாயாக, தேர் செலுத்துதலில் நல்ல வெற்றியுடைய பாகனே!

1.7

சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் – நற் 23/7

சிறிய பசிய இலைகளைக் கொண்ட செப்பம் அமைந்த நெய்தலின்

1.8

நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/15

நீர் மோதிச்சென்று பாயும் அரவத்தால் உறக்கம் கலைந்து எழுந்து,

2.1

அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான் – பட் 269,270

அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் ஊர்கள் அழகு அழியவும்,
பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய்

ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/5,6

ஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
உலையில் மாட்டிய துருத்தியைப் போல

2.2

சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/1,2

சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு

மேல்
நின்


ஊர்தி

(பெ) 1. கட்டில், cot
2. வாகனம், vehicle
3. ஊர்ந்து நடத்தல், நடை

1.

இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் – கலி 13/15,16

வெண்மை ஒளிவீசும் மாட்சிமை விளங்கும் அன்னத்தூவி பரப்பிய மென்மையான படுக்கையில்,
சிறந்த விலங்காகிய சிங்கத்தின் அமைப்பினைக் கால்களாகக் கொண்ட கட்டிலின்மேல் படுத்துத் துயில்பவளே
– துலங்கு ஊர்தி – தூங்கு கட்டில் – நச் உரை விளக்கம்
– மான் மேல் ஊர்தி என்றது சிங்கம் சுமந்த படுக்கைக்கட்டிலை – பெ.விளக்கம்
– அக் கட்டில் சிங்கத்தின் மேல் ஏறி ஊர்ந்து போதல் போலச் செய்யப்பட்டிருத்தலின்
– அப்பெயர் பெற்றது.

2

நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது
ஊர்க பாக – அகம் 44/4-6

நின் தேராகிய
முற்படச் செல்லும் ஊர்தியினை, இனிப் பின்னில்லாதபடி
விரைந்து செலுத்துவாயாக, பாகனே!

ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன் – அகம் 360/2

ஒற்றைச் சக்கரம் பூண்ட தேரினையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வன்

மீன் பூத்து அன்ன உருவ பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே – புறம் 399/31,32

வானத்தே விண்மீன்கள் பூத்தாற் போல அழகிய நிறத்தையுடைய பலவாகிய ஆனிரைகளை
ஊர்ந்துசெல்லற்கேற்ற காளைகளோடே நல்கினான்

3.

உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/2

வருத்தத்தால் ஊர்ந்துசெல்வது போலும் நடையினையும் இளமையினையுமுடைய பார்ப்பான்
– ஊர்தி – ஊர்ந்து செல்வது – ஈண்டு நடைக்காயிற்று – ஔ.சு.து.விளக்கம்

மேல்


ஊரன்

(பெ) மருதநிலத்தலைவன், Chief of an agricultural tract

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி – நற் 100/3,4

ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன்
இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து,

மேல்


ஊழ்

1. (வி) 1. முற்று, முதிர்வடை, mature
2. மலர், blossom
3. உதிர், fall off
4. போடு, பெய், pour out
2. (பெ) 1. முறை, பொழுது, turn, occassion
2. முறைமை, வழக்கு, established usage
3. முதிர்வு, aging, maturity
4. தடவை, turn, number of times

1.1

மயில் அடி இலைய மா குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/6

மயிலின் காலடி போலும் இலைகளை உடைய கரிய கொத்துக்களோடு கூடிய நொச்சியும்
மனையில் நட்டு நொச்சியில் படரவிட்டிருக்கும் முல்லையும் முற்றிய அரும்புகள் மலர்ந்து மணம் கமழ

1.2

பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/3,4

பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன

1.3

மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/3,4,5

மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்
அழகுமிக்க மெல்லிய கிளைகளிலிருந்து உதிர்ந்த
நீல மணி போன்ற பூக்களின் ஓசையை மிகவும் கேட்டு –

1.4

இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 179, 180

மனதிற்குகந்த புளிப்பையும் கலந்து, விலங்கின் மோர் (உலைநீர்)ஆக,
மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் பெய்து,

2.1

தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி – குறி 43,44

கவணும், தட்டையும், குளிரும், ஏனையவும்(ஆகிய)
கிளிகளை விரட்டும் இயல்புடையவற்றை முறை முறையாகக் கையில் எடுத்து,

2.2

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்

வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும்,
(வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும்

2.3

கடுவன்
ஊழ்_உறு தீம் கனி உதிர்ப்ப – குறு 278/4,5

ஆண் குரங்கு
பழுத்து முதிர்வடைந்த இனிய பழங்களை உதிர்க்க

2.4

வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல் ஊழ் புக்கு பயன் நிரை கவரும் – அகம் 377/4,5

விதைத்து உண்டாக்காத உணவினைக் கொள்ளும் பெருத்த வில்லையுடைய மறவர்கள்
பல முறை புகுந்து பாற்பசுக் கூட்டங்களைக் கவர்ந்ததால்

மேல்


ஊழி

(பெ) 1. நெடுங்காலம், very long time
2. வாழ்நாள், life-time
3. யுகம், aeon
4. ஊழ்வினை, விதி, fate

1.

ஊழி வாழி பூழியர் பெருமகன் – புறம் 387/28

நெடுநாள் வாழ்வாயாக, பூழியர் தலைவனே!

2.

செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி – நற் 93/6

நாங்கள் செல்கின்றோம்! நீயும் எழுந்திருப்பாய்! சிறந்து விளங்குக உன் வாழ்நாட்கள்;

3.

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் – பரி 2/6

எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக்காலமும்,

4.

அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 130/4

அரசன் இறந்தபின் அவனோடு மாய்ந்துவிட்ட, நல்ல ஊழ்வசத்தால் உண்டான செல்வம் போல

மேல்


ஊற்றம்

(பெ) வலிமை, strength

நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/8

உனது வலிமையைப் பிறர் அறியாமலும்

மேல்


ஊறல்

(பெ) ஊற்றுநீர், spring water

பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின்
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் – நற் 333/3,4

பருக்கைக் கற்கள் உள்ள பள்ளத்தில் ஊறிய சிறிதளவு நீரின் பக்கத்தில்
பொலிவுள்ள நெற்றியையுடைய யானையோடு புலி போரிட்டு உண்ணும்

மேல்


ஊறு

1. (வி) 1. சுர, spring, as water in a well, secrete, as saliva in mouth
2. கசி, ooze, percolate
– 2. (பெ) 1. தீமை, தீங்கு, harm, evil
2. காயம், wound, injury
3. உறுதல், அடைதல், gaining access to, approaching
4. தொடு உணர்வு, பரிசம், Sense of touch

1.1

வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்
கோல் அமை குறும் தொடி குறு_மகள் – குறு 267/4,5

வெள்ளிய பற்களில் ஊறிய குற்றமற்ற இனிய நீரையும்
திரட்சி அமைந்த குறிய வளையலையும் கொண்ட இளையவள்

கணவர் உவப்ப புதல்வர் பயந்து
பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற
புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு – மது 600-602

தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று
பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,
புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு

சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல் – பதி 22/13

அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறிதளவு ஊறிய நீரைக் கொண்ட பள்ளத்தில்

1.2

மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136

(குடிப்பதற்கு)மாற்றுப்பொருளாக (நீர்)சொரிந்தன, கசிகின்ற நீரையுடைய உயவைக்கொடி

2.1

உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 41

உயர்ந்தோங்கிய (=மிக உயர்ந்த)பெரிய மலைகளை (எவ்விதத்)தீங்குமின்றி ஏறிவருதலால்

2.2

இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு
மலை தலைவந்த மரையான் கதழ் விடை
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி – மலை 330-332

(தன்)கூட்டத்தைவிட்டுப் பிரிந்துபோன (வலம் இடமாக)அசைந்தாடும் திமிலைக்கொண்ட காளையும், 330
மலையிலிருந்து புறப்பட்டுவந்த காட்டுமாட்டின் சீறியெழுந்த காளையும்,
குறையாத வலிமையுடன் (ஒன்றற்கொன்று) காயம் ஏற்படும்படியாகத் தாக்கி,

2.3

நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்ப – பதி 51/32

பகைவரின் இரத்தத்தால் நிறம் மாறிப்போன உன் தலைமாலையைப் பருந்துகள் உற்று அதனைக் கொத்திச் செல்ல
நேரம் பார்த்திருக்க

பருந்து ஊறு அளப்ப

– பருந்து உறுதற்கு அளப்ப – ஔ.சு.து.உரை விளக்கம்

விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப – பதி 74/15

விசும்பில் பறக்கும் வழக்கத்தையுடைய பருந்து ஊன் என்று கருதி அதனை உற்றுக் கவர்வதற்கு முனையும்படியாக

ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும்
செம் கால் அன்னத்து சேவல் அன்ன
குரூஉ மயிர் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் என கடுக்கும் கவின் பெறு தேரும் – மது 385-388

ஒள்ளிய கதிரையுடைய பகலவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும் 385
சிவந்த காலையுடைய அன்னத்தினது சேவலை ஒத்த,
நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிக்கு,
காற்றுப்போல் விரையும் அழகிய தேரும்,

2.4

சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு
அவையும் நீயே அடு போர் அண்ணால் – பரி 13/14,15

சுவை, ஒலி, ஒளி, நாற்றம், ஊறு ஆகிய
ஐம்புலன்களும் நீயே! பகைவரைக் கொல்லும் போரினையுடைய அண்ணலே!

மேல்


ஊன்

(பெ) இறைச்சி, தசை, meat, flesh

ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 177

இறைச்சியைப் பொரிக்கின்ற ஒலியை உடைய முன்பக்கம்.

மேல்


ஊனம்

(பெ) ஊனமர்குறடு, இறைச்சி கொத்தும் பட்டடைமரம்.,
Block of wood on which butchers mince meat

ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை – பதி 21/10

இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை

எஃகு உற சிவந்த ஊனத்து – பதி 24/21

வாளால் இறைச்சியை வெட்டும்போது சிவந்துபோன வெட்டுமரத்தையும்

மேல்